ஒரு எச்சரிக்கை!
August 6, 2025

— கருணாகரன் —
ஈழத் தமிழர்களுடைய அரசியல், முன்னெப்போதையும் விட இப்பொழுது பல முனைப்பட்டுள்ளது. பல முனைப்பட்டுள்ளது என்றால், அது ஏதோ முன்னேற்றமான – நல்விளைவுகளை உருவாக்கக் கூடிய மாற்றம் என்று அவசரப்பட்டுக் கருதிவிட வேண்டாம். இது சிதைவை நோக்கிய – எதிர்மறை அம்சங்களை உருவாக்கக் கூடிய பல – முனைகளாகும். உண்மையில் பல கோணங்களில், பல முனைகளில் இயங்குவது என்பது ஜனநாயக அடிப்படையில், பல சிந்தனைகளைக் கொண்டதாக இருப்பதாகும். அப்படி இருக்குமானால், அதனால் நன்மைகள் விளையும். முன்னேற்றம் ஏற்படும். அத்தகைய பன்முனைகள், பன்மைத் தன்மையை உள்ளீடாகக் கொண்டவை. அவை அழகுடையவை. அது ஆரோக்கியமான ஒன்றாகும்.
இது அப்படியானதல்ல. இந்தப் பன்முனைகள் என்பது, பல துண்டுகளாக, அணிகளாகச் சிதைவது. முன்னையது ஆரோக்கியமானது என்றால், பிந்தியது, பின்னடைவைத் தரக்கூடியது. பாதகமானது.
ஏனென்றால், இங்கே நிகழ்ந்திருப்பது, சிந்தனையின் முதிர்வினாலான வெவ்வேறு நிலைப்பாடுகள், போக்குகள், பரிமாணங்கள், பரிணாமங்கள் அல்ல. இவை தனிநபர் மற்றும் அணி முரண்பாடுகளினால் உருவான முனைப்புகள். எனவே இதை நாம் சிதைவின் முனைப்பு என்றே சொல்ல வேண்டும்.
கடந்த முப்பது ஆண்டுகளாக ஈழத் தமிழரின் அரசியல் இப்படியிருக்கவில்லை. அப்பொழுதும் மாற்றுத் தரப்புகள், பிற அரசியற் போக்குகள் இருந்தன. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ், இடதுசாரிகள், தேசியக் கட்சிகளுக்கான ஆதரவு எனப் பல முனைகளும் முனைப்புகளும் இருந்தன. இருந்தாலும் தமிழரசுக் கட்சி பின்னாளில் அதனுடைய வழித்தோன்றலான தமிழர் விடுதலைக் கூட்டணி ஆகியவையே பெருந்திரள் மக்களின் ஆதரவைப் பெற்றிருந்தன. தமிழ்த்தரப்பாகவும் அவையே கருதப்பட்டன.
இன்னொரு நிலையில் 1980 களில் 30 க்கு மேற்பட்ட ஈழ விடுதலை இயக்கங்கள் இருந்ததையும் நினைவு கொள்ளலாம். ஆனால், அப்படியெல்லாம் இருந்தது பல சிந்தனைப் போக்கின் வெளிப்பாடாக வெளியே தோன்றினாலும், நடைமுறையில் அவை தம்முள் குறுகிச் சிறுத்து, சிதைவை உள்மையமாகவே கொண்டிருந்தன. என்பதால்தான் எந்த இயக்கமும் வரலாற்றில் நிலைகொள்ள முடியாமல் போனது.
மட்டுமல்ல அவை அனைத்தும் பெருந்திரள் மக்களிடம் செல்வாக்குச் செலுத்தவுமில்லை. அப்படித்தான் முன்னரும் பிற தரப்புகள் – மாற்று அரசியல் தரப்பினர் போன்ற சக்திகளும் மக்களிடம் பேராதரவைப் பெறவில்லை. நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் தேசங்களிலும் அத்தகைய மாற்று அரசியல் செல்வாக்குப் பெறவில்லை. அதாவது, அவற்றின் உள்ளடக்கச் செழுமைக்கு ஏற்றவிதத்தில் மக்களிடம் அவை செல்வாக்கைப் பெறத்தவறின. என்பதால், தமிழ்த்தேசிய நிலைப்பட்டிருந்த அல்லது ‘ஏகப்பிரதிநிதித்துவம்’ என்றுசொல்லப்பட்ட ‘தமிழ்த்தேசியவாத அரசியல்’தான் ஈழத்திலும் புலம்பெயர் தேசங்களிலும் செல்வாக்குப் பெற்றிருந்தது. புலிகளின் காலத்திலும் புலிகளுக்குப் பின்னும் கூட இந்த நிலைமையே நீடித்திருந்தது. ஆக, நீண்ட காலமாக ஒருமுகப்படுத்தப்பட்ட (ஏகநிலைப்பட்ட) அரசியலே ஈழத் தமிழர்களுடையதாக இருந்தது. அது முற்போக்கானதோ பிற்போக்கானதோ என்பதற்கு அப்பால் இதுதான் உண்மையான நிலைமையாகும்.
இந்த நிலையில் தற்போது மாற்றம் நிகழ்ந்திருக்கிறது. சரியாகச் சொன்னால் தளர்வு ஏற்பட்டுள்ளது. இதனால் தமிழ்த்தேசியவாத அரசியல் இப்பொழுது சிதறுண்டுள்ளது. சிதறுண்டுள்ளது என்பதன் பொருள், தலைமைத்துவக் கட்டுப்பாட்டை இழந்து விட்டது. அல்லது தலைமைத்துவக் கடப்பாட்டை இழந்து நிற்கிறது. அதனால் பல அணிகள்,குழுக்கள் எனப் பிளவுண்டு சிதைந்திருக்கிறது.
கருத்து நிலையில் மட்டுமல்ல, அணுகுமுறைகளில், செயற்பாடுகளில், கட்டமைப்புகளில் எல்லாம் இந்தப் பிரிவையும் பிளவையும் அவதானிக்கலாம்.
தமிழ் இனத்துவ அடையாள அரசியலை 1970 க்கு முன்னர் செல்வநாயகமும், அமிர்தலிங்கமும் அடுத்தடுத்துத் தலைமை தாங்கினர். சரி பிழைகளுக்கு அப்பால் இவர்கள் இருவரையும் ஏற்றுச் செல்கிற போக்கு அரசியற் தரப்பினரிடத்திலும் இருந்தது. தமிழ்ச்சமூகத்திடமும் இருந்தது.
பிறகு இதை விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் சுவீகரித்துக் கொண்டார். 2009 வரையில் தன்னைத் தமிழ்த் தேசியவாதத்தின் தலைமைச் சக்தியாக ஸ்தாபித்து வைத்திருந்தார் பிரபாகரன். 2009 க்குப் பிறகு, புலிகளின் வீழ்ச்சியோடு இந்த நிலை சிதையத் தொடங்கியது.
புலிகளின் வீழ்ச்சியோடு நாட்டில் மட்டுமல்ல, புலம்பெயர் நாடுகளிலும் புலிகளை ஆதரித்த சக்திகள் பிளவு பட்டன.
ஆனாலும் இலங்கைச் சூழலில் நிலவிய அரசியல் நெருக்கடிகள், ஆட்சித்தரப்பினரின் இறுக்கமான போக்குகளால் தமிழ்த்தேசியவாதம் என்ற அடையாளமும் அதற்கான கட்டமைப்பும் (தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு) மெல்லிய அளவிலேனும் பேணப்பட்டது. இதற்கு ஒரு எல்லைவரை, தளம்பல்களுடன் சம்மந்தன் தலைமை தாங்கினார். சிதைவுகளைக் கட்டுப்படுத்தி, மீளமைப்பை அல்லது ஒருங்கிணைப்பைச் செய்யக் கூடிய அளவுக்கு அவருடைய தலைமைத்துவம் கடப்பாட்டுச் சிறப்புகளைக் கொண்டிருக்கவில்லை. அதனால், அந்தக் கட்டமைப்பும் (கூட்டமைப்பும்) பின்னாளில் சிதைவடையத் தொடங்கியது.
இதனால் தமிழ் அரசியல் பரப்பில் வெவ்வேறு நிலைப்பாடுகளும் அணிகளும் படபடவெனத் தோற்றம் பெற்றன. எல்லா இடங்களிலும் பல அணிகளும் கட்சிகளும் உருவாகின. முன்னெப்போதும் இல்லாத ஒரு வளர்ச்சியாக கிழக்கில், கிழக்கு மைய அரசியற் சிந்தனையும் அரசியற் சக்திகளும் தலையெடுத்தன. வடக்கிலும் பல கட்சிகள் உதயமாகின.
இப்பொழுது தமிழ்த்தேசிவாத அடையாளத்தைச் சுமந்தபடி 12 க்கு மேற்பட்ட கட்சிகள் இலங்கையில் உண்டு. தமிழரசுக் கட்சி, தமிழ்க் காங்கிரஸ் (தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி) ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டணி என மூன்று பிரதான அணிகள் இருக்கின்றன.
புலம்பெயர் சூழலில் இதை விட அதிகமுண்டு. அங்கே இமாலயப் பிரகடத்தினர் ஒன்றாகவும் பிரபாகரன் உயிரோடு உள்ளார் என்போர் ஒன்றாகவும் பிரபாகரன் இறந்து விட்டார் என்போர் இன்னொன்றாகவும் நாடு கடந்த தமிழீழத்தினர் வேறொன்றாகவும் எனப் பல அணிகள்.
இவ்வாறு பல முனைகளில், பல நிலைப்பட்டதாக, பல அணிகளாக, குழுக்களாக சிதைவடைந்த தமிழ்த் தேசியவாத அரசியலில் மிஞ்சியிருப்பது வெறும் பிரகடனங்களும் வரட்சியான அரசியல் போக்குமே. இவற்றில் எந்த ஒரு தரப்பிடமும் செயற்திறனும் புத்தாக்கச் சிந்தனையும் இல்லை. எல்லாம் ஒன்றை ஒன்று நிராகரிப்பதிலும் அதற்கான காரணங்களைத் தேடுவதிலும் குறியாக உள்ளனவே தவிர, பாதிக்கப்பட்ட மக்களை மீள்நிலைப்படுத்துவதைப்பற்றிச் சிந்திப்பனவாக இல்லை. மட்டுமல்ல, தோற்கடிக்கப்பட்ட அரசியலை எத்தகைய அடிப்படையில் வெற்றியடையச் செய்யலாம் என்று முயற்சிப்பதாகவும் கடந்த காலப் படிப்பினைகளிலிருந்தும் உலக அரசியல் போக்கிலிருந்தும் எதையும் கற்றுக் கொள்ளக் கூடியனவாகவும் இல்லை.
இது எதிர்பார்க்கப்பட்ட ஒன்றே.
ஏனென்றால், சிதைவில் உருப்படியானவற்றை எதிர்பார்க்க முடியாது. சிந்தனையினால் வேறுபடும் நிலை இருந்தால்தான் வித்தியாசங்களும் ஒன்றை ஒன்று இட்டு நிரப்பும் வளர்ச்சிப் போக்கும் காணப்படும். இங்கே நிலவுவது தனிநபர் அல்லது அணி வேறுபாடுகள், போட்டிகள் என்பதால் இவற்றுக்கிடையே காழ்ப்பும் அதனடியான குழிபறிப்புகளும் அதற்கான பழித்துரைப்புகளுமே மிஞ்சியிருக்கும். இப்போது நடந்து கொண்டிருப்பது இதுதான்.
என்பதால்தான் ஒவ்வொரு அணியும் மறு அணியை நிராகரிக்கும் விதமாக நடந்து கொள்கிறது. ஒவ்வொரு கட்சியும் பிற கட்சிகளை இழக்காரம் செய்கிறது. அப்படித்தான் புலம்பெயர் சூழலிலும் ஏட்டிக்குப் போட்டியும் ஒன்றை ஒன்று நிராகரிப்பதும் நடக்கிறது.
ஒரு நீண்ட விடுதலைப் போராட்டத்தை நடத்திய சமூகம், அதற்காகப் பல்லாயிரக் கணக்கானோரைப் பலி கொடுத்த (தியாகம் செய்த) ஒரு இனக்குழாம், தன்னுடைய அரசியல் பின்னடைவைக் குறித்தோ, பாதிப்பைக் குறித்தோ, தோல்வியைக் குறித்தோ சிந்திக்காமல், வெற்றி பெறுவதைப்பற்றி எண்ணாமல், இப்படிச் சிதைந்து கொண்டிருப்பது அதனுடைய நிரந்தர அழிவுக்கே இட்டுச் செல்லும். அதுதான் நடந்து கொண்டுமிருக்கிறது.
இந்தப் போக்கின் உச்சமாகவே புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுக்கு சுவிற்சர்லாந்தில் இந்த ஓகஸ்ட் மாதத்தில் அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியும் அஞ்சலி செலுத்தக் கூடாது என்ற எதிர்ப்பும் வலுவடைந்துள்ளது. இரண்டு தரப்பும் பகிரங்கமாகவே மோதுகின்றன. இந்த மோதுகை அர்த்தமற்றது மட்டுமல்ல, காலம் கடந்த ஒன்றுமாகும். 16 ஆண்டுகளுக்கு முன்பே பிரபாகரன் இறந்து விட்டார் என்பது அனைவருக்கும் தெரியும். அதைத் தெரிந்து கொண்டே இவ்வளவு காலமும் இழுத்தடித்து வந்து இப்பொழுது சண்டையிடுகிறார்கள். இதை என்னவென்று சொல்வது?
அப்படித்தான் இலங்கையின் இனப்பிரச்சினைக்கான தீர்வு பற்றியும் உச்ச முரண்பாடு நிலவுகிறது.
ஒரு தரப்பு 13 ஆவது திருத்தம் – மாகாணசபையிலிருந்து மேலே போவோம் என்கிறது. இன்னொரு தரப்பு மாகாணசபையைப் பற்றிய பேச்சே எடுக்கக் கூடாது என்கிறது. இதனால் யாருக்கு லாபம்? எதிர்த்தரப்புக்குத்தானே!
இப்படியே பிளவுண்ட – எதிரெதிரான – முரண்பட்ட போக்கினால் பலமடைவது நிச்சயமாக எதிர்த்தரப்புகளேயாகும். நிச்சயமாக மக்களல்ல. எதிர்த்தரப்புகள் பலமடையும்போது இந்தத் தரப்புகள் பலவீனப்படுகின்றன. இந்தத் தரப்புகள் பலவீனப்படும்போது இவற்றை ஆதரிக்கும் மக்களும் பலவீனப்படுகிறார்கள். தமிழ் (தேசியவாத) அரசியலின் நிலையும் தமிழ் மக்களின் நிலையும் இன்று இதுதான்.
ஆனாலும் இதையிட்ட கவலைகளோ, மீள்பார்வையோ, குற்றவுணர்ச்சியோ இந்தத் தரப்புகள் எவற்றிடமும் இல்லை. தமிழ் ஊடகப்பரப்பு, சிந்தனைப் பரப்பு போன்றவற்றிலும் இல்லை. அல்லது போதாது. காரணம், மக்களுக்கான அரசியலை செய்வதைப் பற்றி எவரும் சிந்திப்பதில்லை. அப்படிச் சிந்தித்தால்தானே அதில் உள்ள சிக்கல்கள், தவறுகள், முரண்பாடுகள், போதாமைகள் பற்றியெல்லாம் தெரியும். இவை செய்து கொண்டிருப்பதோ தனிநபர் அல்லது அணி அல்லது குழு அல்லது கட்சி அரசியல் மட்டுமே. என்பதால் அதற்கான, அதற்கு அளவான அளவில்தான் இவை சிந்திக்கின்றன. அந்தளவில்தான் இவர்களால் – இவற்றில் சிந்திக்க முடிகிறது.
எனவேதான் தமிழ்த் தேசியவாத அரசியல் இன்று சிதைந்து பலவீனப்பட்டுள்ளது என்கிறோம். இதை மாற்றிப் புதிதாகச் சிந்திக்க வேண்டுமானால், உலகளாவிய அரசியல் மாற்றங்கள், தேசியவாத அரசியலில் ஏற்பட்டுள்ள நிலைமாற்றங்கள், அதனுடைய வளர்ச்சி, பிராந்திய அரசியல் சூழல், உலகளாவிய பொருளாதாரப் போக்குகள், உள்நாட்டு நிலைவரம், மக்களின் நிலைமை, பின்போர்க்காலச் சூழல், ஜனநாயக அடிப்படைகளைப் பேணும் அக்கறை எனப் பலவற்றிலும் விரிவு கொள்ள வேண்டும்.
அதற்கான உள நிலை முக்கியமானது.
தனிநபர் முதன்மைப்பாடு, கட்சி நலன், குழு மனோபாவம் போன்றவற்றைப் பேணிக் கொண்டு இவற்றைப் பற்றிச் சிந்திக்க முடியாது மக்கள் நலன் அரசியலை முன்னெடுக்கவும் ஏலாது. இரண்டும் எதிரெதிர் துருவங்களாலானது. ஆகவே, மக்களுக்கான அரசியலை முன்னெடுப்பதற்கான ஒழுக்கத்துக்கு – முறைமைக்கு – தம்மைத் தயார்ப்படுத்த வேண்டும். மாற்றிக் கொள்ள வேண்டும்.
இல்லையென்றால் இப்போதையும் விட மோசமான பின்னடைவையே தமிழ் அரசியலும் தமிழ்ச் சமூகமும் சந்திக்கும். இது எச்சரிக்கைதான்.
https://arangamnews.com/?p=12244