தமிழரசுக் கட்சியின் கடிதம்.பத்திரிகை ஆசிரியர் நிக்ஸன்
தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதம்!
------- --- ----------
*சமகால அரசியல் புத்துணர்ச்சி
*செம்மணியை உள்ளடக்கிய இன அழிப்பு விசாரணைக்கு முக்கியத்துவம்...
*சர்வதேச நீதிமன்றத்தை நோக்கி...
*"on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டதா?
--- --- --- -----
ஜெனீவா மனித உரிமைச் சபையின் கூட்டத் தொடர் ஆரம்பிக்கவுள்ள நிலையில், ஆணையாளருக்கு தமிழரசுக் கட்சி நான்கு விடயங்களை பிரதானப்படுத்தி கடிதம் ஒன்றை அனுப்பி இருக்கிறது.
இக் கடிதத்தின் ஆங்கில பிரதி ஒன்றை கிழக்கு மாகாணத்தில் உள்ள கட்சியின் மூத்த உறுப்பினர் ஒருவர் எனக்கு அனுப்பியிருந்தார்.
ஆச்சரியம் என்னவென்றால்...
”இன அழிப்பு” என்ற விடயத்தை மற்றும் சில அரசியல் காரணிகளின் அடிப்படையிலும், கட்சிக்குள்ளேயே முரண்பட்டுக் கொண்டிருந்த ஒரு பின்னணியில், இக் கடிதத்தின் உள்ளடகத்தை நோக்கினால், ஏதோ ஒரு புள்ளியில் ஈழத்தமிழர்கள் சார்ந்து இவர்கள் ஒன்றிணைந்திருக்கின்றனர் என்பது புரிகிறது.
என்னைப் போன்ற பத்திரிகையாளர்கள் சிலரின் ஆக்கப்பூர்வமான விமர்சனங்களும் இவர்களை மாற்றியிருக்கலாம்.
இன அழிப்பு என்பது ஈழத்தமிழர்களுக்கு நேர்ந்த தொடர்ந்தும் நடந்து கொண்டிருக்கிற பேரவலம். இதை, உட்கட்சிப் பூசலுக்கும் கட்சிகளுக்கிடையிலான மோதல்களுக்கும் உட்படுத்தி அரசியல் ஆக்க வேண்டாம் என்று எழுதி வந்துள்ளோம்.
இது எங்கோ சுவறியுள்ளது போல் தெரிகிறது.
கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை ஆணையாளருக்கு அனுப்பிய கடிதம் தொடர்பான ஆக்கபூர்வமான விமர்சனங்களும், தமிழரசுக் கட்சியின் அரசியல் போக்கில் மாற்றத்தைத் தூண்டியிருக்கலாம்.
“வரவேற்க வேண்டியது“ - “குறை கூற வேண்டியது” என்ற இரண்டு விடயங்கள் கடிதத்தில் உண்டு.
முதலில் வரவேற்பது என்றால்---
A) ”இன அழிப்பு” என்பதை போர்க் குற்றங்கள் - மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்கள் என்ற இரு வகைக் குற்றங்களில் இருந்தும் வேறுபடுத்திக் காண்பித்துள்ளமை என்பது, தமிழரசுக் கட்சியின் சமகால அரசியல் புத்துணர்ச்சி.
B) ஒஸ்லாப் எனப்படும் (OHCHR Sri Lanka Accountability Project - OSLAP) விசாரணைப் பொறிமுறையை விரைவாக முடிவுறுத்த வேண்டும் என்பதுடன், அதற்கு முன்னதாக இனப் படுகொலை மற்றும் இனப் படுகொலை நோக்கத்தைச் சுட்டிக்காட்டும் ஆதாரங்கள் சேகரிப்பதை விரைந்து செய்ய செய்வது பற்றி ஆராயத் தலைப்பட வேண்டும் என கேட்டிருப்பது...
குறைபாடுகள் - மன்னிக்க முடியாத விடயங்கள் என்பது----
1) (International, Impartial and Independent Mechanism - IIIM) என்ற விசாரணைப் பொறிமுறை கோரவில்லை.
2) ரோம் சாசனத்தில் இலங்கை கைச்சாத்திட்டால் போதும் என்ற மன நிலை...
3) புதிய யாப்பு தொடர்பான மயக்கமான விளக்கம்
இம் மூன்றும் தமிழரசுக் கட்சியின் பழைய போக்கையும் ஞாபகப்படுத்தியுள்ளது என்ற முடிவுக்கும் வரலாம்..
எவ்வாறாயினும் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்தை மையப்படுத்திய தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்துக்கும், தமிழரசுக் கட்சி அனுப்பிய கடிதத்துக்கும் “இன அழிப்பு” என்ற விடயத்தில் கணிசமான வேறுபாடு உண்டு.
அதாவது, இன அழிப்புக்கான அரச பொறுப்பு சர்வதேச நீதிமன்றில் (International Court of Justice - ICJ) விசாரிக்கப்பட வேண்டும் என்பதை மியான்மார் அரசுக்கு செய்ததைப் போன்று ”தீவிரமாக பரிசீலித்தல்” என்பதை கடித்தின் முதலாவது கோரிக்கையாக தமிழரசுக் கட்சி வலியுறுத்தியுள்ளது.
இக் கோரிக்கையை 2021 ஆம் ஆண்டில் இந்த இரண்டு கட்சிகளும் அனுப்பிய கடிதத்தில் வலியுறுத்தவில்லை.
ஆனால், இம் முறை தமிழரசுக் கட்சி இதை வலியுறுத்தியுள்ளது. தமிழ்த் தேசியப் போரவை முதலாவது கோரிக்கையின் இறுதி வரியில், பட்டும் படாமலும் சொல்லிச் சென்றிருக்கிறது.
குறிப்பாக செம்மணியை மையப்படுத்தி தமிழரசுக் கட்சி மாத்திரமே, இன அழிப்புக்கான நோக்கம் என்ற சொற் பிரயோகத்தை பயன்படுத்தி அதற்கான ஆதாரங்களை ஒஸ்லாப் பொறிமுறை திரட்ட வேண்டும் என வலியுறுத்தியுள்ளது.
ஆனால், தமிழ்த் தேசிய பேரவையோ, ஒஸ்லாப் எல்லாம் போதும், தனி நபர் குற்றவியல் விசாரணையை பாதுகாப்புச் சபை ஊடாக ஐசிசிக்கு பாரப்படுத்தினால் போதும் என்று மிகவும் பலவீனமாக கடிதத்தில் கையாண்டுள்ளது.
புதிய அரசியல் யாப்பு தொடர்பாகவும் தமிழ்த் தரப்புடன் பேசிய விடயங்கள் என்றும் கடிதத்தில் கூறப்பட்டுள்ள நான்காவது கோரிக்கை மயக்கமாகவுள்ளது.
அதாவது, தமிழ்த் தரப்புடன் ஏற்கனவே பேசப்பட்ட விடயங்களா? அல்லது இனிமேல்தான் தமிழ்த்தரப்புடன் பேசி முடிவெடுக்கவுள்ள விடயங்களா? என்பது குழப்பமாகவுள்ளது.
அதன் ஆங்கில மூலப் பிரதி-----
Continue to persuade Sri Lanka to enact a new federal constitution with extensive power sharing in the North-East on newly negotiated agreement with the Tamil People as a measure of non – recurrence. As an immediate step urge the Sri Lankan state to hold the provincial council elections without any further delay.
இதற்கு தமிழரசுக் கட்சியின் செய்திகளை பிரத்தியேகமாகவும், உடனுக்குடனும் வழங்கும் ”மாலை முரசு என்ற மின் இதழில் நேற்று புதன்கிழமை வெளிவந்த தமிழாக்கம் பின்வருமாறு உள்ளது---
“மீண்டும் நிகழாமல் இருப்பதற்கான ஒரு நடவடிக்கையாக தமிழ் கட்சிகளுடன் புதிதாக பேச்சு நடத்தி இணக்கம் கண்டு வடக்கு கிழக்கில் விரிவான அதிகாரப்பரவலாக்கலுடன் கூடிய புதிய சமஷ்டி அரசியல் யாப்பை உருவாக்க இலங்கைக்கு தொடர்ந்து வலியுறுத்த வேண்டும்”
”உடனடி நடவடிக்கையாக மாகாண சபைத் தேர்தல்களை மேலும் தாமதமின்றி நடத்த இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்த வேண்டும்”
இங்கே பிரச்சினை என்னவென்றால்----
தமிழில் இனிமேல்தான் புதிதாக உடன்படிக்கை செய்ய வேண்டும் என தெளிவாக சொல்லப்படுகின்றது. ஆனால், ஆங்கிலத்தில் ”Power sharing in the North-East on newly negotiated agreement” என்று சொல்லப்பட்டுள்ளது.
இந்த ஆங்கிலத்தில் "on" - "newly" என்பதற்கும் இடையில் "a" வேண்டும் என்றே தவிர்க்கப்பட்டுள்ளதா என்ற வினர எழுகிறது...
கடிதத்தின் முகவுரையில்-----
*ஈழத்தமிழர்களின் அரசியல் விவகாரங்களை குறிப்பாக ஐரோப்பிய இனவத்தவர்களின் ஆட்சிக்காலத்துக்கு முன்னர் இலங்கைத்தீவில் மூன்று இராஜ்ஜியங்கள் இருந்ததன.
*தமிழர்களுக்கு தனி இராஜ்ஜியம் இருந்தது என்பதை மையப்படுத்தி தொலைந்துபோன இறைமையை (Sovereignty) தான் தமிழர்கள் மீள் உருவாக்கம் செய்வது தமிழர்களுக்கான பாதுகாப்பு என்ற நல்ல கருத்து வெளிப்படுகிறது.
அதாவது, 1976 இல் தமிழர் விடுதலைக் கூட்டணி முன்வைத்த வட்டுக்கோட்டை தீர்மானம் என்று நேரடியாக சுட்டிக்காட்டாமல், 1976 இல் இருந்து என்று அந்த ஆண்டைக் குறிப்பிட்டு, தமிழர்கள் தொலைந்து போன இறைமையை தேடுகிறார்கள் என்று கடிதத்தில் பொருள் கோடல் செய்யப்பட்டிருக்கிறது. இது வரவேற்புக்குரியது---
அதேநேரம்----
இன அழிப்பு நோக்கத்தின் அடிப்படையில் அமைந்துள்ளது என்பதையும் கடிதம் கனதியாகக் காண்பிக்கிறது.
இலங்கையை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரிக்க ஐநா பாதுகாப்புச் சபை ஊடாக மாத்திரமே போக வேண்டும் என, தமிழ்த் தேசிய பேரவை அனுப்பிய கடிதத்தில் கோரப்பட்டிருந்தது.
அதேநேரம், ஆயர்கள் - சைவ மதத் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள், பொது நிலையினர் ஆகியோர் இணைந்து அனுப்பிய கடிதத்தில் IIIM என்ற விசாரணைப் பொறிமுறை முதன்மையாக இருந்தது.
அக் கடிதத்தில் 2002 ஆம் ஆண்டுக்கு முற்பட்ட குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் எனவும் கூறப்பட்டிருந்தது.
ஆணையாளர் அரசாங்கத்துக்கு அனுப்பியுள்ள முன்னோடி அறிக்கையில் இலங்கை மீதான சர்வதேச விசாரணைக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டவில்லை.
ஓகஸ்ட் 4 ஆம் திகதி தமிழ்த் தேசியப் பேரவை அனுப்பிய கடிதத்துக்கு அதற்கு அடுத்த நாளே ஆணையாளர் பதில் வழங்கியிருந்தார்.
அவரது பதில் கடிதத்திலும் அவர் உள்ளக விசாரணைக்கு முக்கியத்துவம் கொடுத்திருந்தார்.
ஆனால், தமிழ்த் தேசியப் பேரவை இன்று வரை, அவரது பதிலுக்கு எந்தவித மறுப்போ கவலையோ தெரிவித்து பதில் கடிதம் எழுதவில்லை. இது ஏன் என்ற கேள்வி எழுகின்றது...
அதேபோன்று----
தமிழரசுக் கட்சியின் கடிதத்தில் எந்த ஒரு இடத்திலும் ஆணையாளரின் கடிதத்தில் உள்ள குறைபாடுகள் சுட்டிக் காண்பிக்கப்படவில்லை.
2015 ஆம் ஆண்டு தீர்மானத்தின் மூலம் கொண்டு வரப்பட்ட ஓஎம்பி (Office on Missing Persons -OMP) எனப்படும் காணாமல் போனோர் அலுவலகத்தை, காணாமல் ஆக்கப்பட்டவர்களின் பெற்றோரும் உறவினர்களும் நிராகரித்துள்ளனர்.
ஆனால், ஆணையாளரின் கடிதத்தில் அந்த அலுவலக செயற்பாடுகளுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டுள்ளது - இதனை தமிழரசுக் கட்சியின் கடிதமும் ஏற்றுக் கொள்கிறது. இந்த ஏற்பு வேடிக்கையானது.
*ரோம் சாசன கையொப்பம் சாத்தியமா?
சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் அங்கத்துவம் பெறுவதற்கான ரோம் சாசனத்தில் கைச்சாத்திட வேண்டும் என ஆணையாளரின் அறிக்கையும் தமிழரசுக் கட்சியின் அறிக்கையும் கேட்கப்பட்டுள்ளன.
ஆனால், இலங்கை அவ்வாறு கைச்சாத்திட்டாலும், 2002ஆம் ஆண்டுக்கும் 2025 ஆம் ஆண்டுக்கும் இடையில் நடைபெற்ற எந்தக் குற்றங்களும் விசாரணைக்கு உள்ளாக்கப்படுவதற்கான வாய்ப்பு இருக்காது.
அதற்கான விசேட ஒழுங்கு ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும். அதை ஆணையாளரும் சொல்லவில்லை, தமிழரசுக் கட்சியின் கடிதமும் சொல்லவில்லை.
இது கவலைக்குரியது...
இந்தியா கூட இதுவரை இணையாமல் இருக்கும் ரோம் சாசனத்தில் இலங்கை இணையும் என்று எதிர்பார்க்க முடியுமா?
பொருளாதார நெருக்கடிகளை சமாளிக்க IMF எனப்படும் சர்வதேச நாணய நிதியம், உலக வங்கி போன்ற அமைப்புகளிடம் இருந்து நிதிகளை பெறும் நோக்கில், சிலவேளை இலங்கை ரோம் சாசனத்தில் கைச்சாத்திடலாம்.
அவ்வாறு இலங்கை இணைந்துவிட்டால், அந்த மகிழ்ச்சியில் மனித உரிமைச் சபையும் உறுப்பு நாடுகளும் அமைதியாகிவிடும் ஆபத்தும் உண்டு...
இரு கட்சிகள் பற்றிய விளக்கக் குறிப்புகள்---
1) ஒட்டுமொத்தமாக இன அழிப்புக்கான அரச பொறுப்புக் கூறலுக்கான நீதியை குறிப்பாக கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி மேலே சென்றுள்ளது...
2) தனிநபா் பொறுப்புக் கூறலை கோருவதில் தமிழரசுக் கட்சி தமிழ்த் தேசிய பேரவையை விட ஒருபடி கீழே இறங்கியுள்ளது.
3) எப்போது இந்த இரண்டு கட்சிகளும் ஒத்திசைந்து உயர்வான பணியில் ஒன்றாக ஏறி நிற்கப் போகின்றன என்ற கேள்வி தொக்கி நிற்கின்றது...
அ.நிக்ஸன்-
பத்திரிகையாளர்-
https://www.facebook.com/share/p/1JZNefTxvF/?mibextid=wwXIfr