ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது - தமிழ்நாட்டில் எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?

பட மூலாதாரம், IMD website
படக்குறிப்பு, வங்கக்கடலில் காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதை காட்டும் வரைபடம் (இந்திய வானிலை ஆய்வு மையத்தின் இணையதளத்தில் இருந்து)
21 அக்டோபர் 2025, 03:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 32 நிமிடங்களுக்கு முன்னர்
வங்கக் கடலில் இன்று (அக்டோபர் 21) காலை 5.30 மணிக்கு உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி தற்போது வலுப்பெற்று, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறியுள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது மேற்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மேலும் வலுப்பெறும். நாளை (அக்டோபர் 22) மதியம் வேளைக்குள் இது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இது தென்மேற்கு மற்றும் அதை ஒட்டியுள்ள மேற்கு மத்திய வங்கக் கடல் பகுதியில் வட தமிழ்நாடு மற்றும் தெற்கு ஆந்திர கடலோரப் பகுதிகளில் நிலை கொண்டிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன் பின், மேற்கு-வடமேற்கு திசையில் வட தமிழ்நாடு, புதுச்சேரி, தெற்கு ஆந்திராவை நோக்கி நகர்ந்து, அதற்கு அடுத்த 24 மணி நேரத்தில் மேலும் தீவிரமடையும்.
இந்நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களைச் சந்தித்த வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா, "வங்கக்கடலில் உருவாகியுள்ள இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயலாக உருவாகுமா என்பது நாளை (அக்டோபர் 22) தெரியும்" என கூறியுள்ளார்.
தீவிரமடையும் வடகிழக்கு பருவமழை

படக்குறிப்பு, வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா
"கடந்த 24 மணிநேரத்தில் தமிழகத்தில் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்துள்ளது. தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. அதிகபட்சமாக ராமேஸ்வரம் தங்கச்சி மடம் பகுதியில் 17 செ.மீ கனமழை பெய்துள்ளது. தமிழ்நாட்டின் 22 இடங்களில் கனமழை பதிவாகியுள்ளது" என்று வானிலை மைய தென்மண்டல தலைவர் அமுதா கூறியுள்ளார்.
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 59 சதவீதம் அதிகமாக மழை பதிவாகியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அடுத்த ஏழு நாட்களுக்கான வானிலை முன்னறிவிப்பு குறித்துப் பேசிய அமுதா, "அக்டோபர் 21 மற்றும் 22, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் பெரும்பாலான பகுதிகளில் இடி, மின்னலுடன் கூடிய மழை பெய்ய வாய்ப்புள்ளது. அதேபோல 23ஆம் தேதி, தமிழகத்தின் அநேக இடங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது. 24 முதல் 27 வரை தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியின் ஒருசில இடங்களில் மழை பெய்யும்." என்று கூறினார்.
இன்று காலை முதல் நாளை காலை வரை, தமிழ்நாட்டின் 8 கடலோர மாவட்டங்கள் (விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, இராமநாதபுரம்) மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் அதி கனமழை பெய்யும் என்றும் அவர் கூறினார்.
மேலும், 10 மாவட்டங்களில் மிக கனமழை, 7 மாவட்டங்களில் கனமழை பெய்யும் என்று அமுதா கூறினார்.
ஆழ்கடலில் உள்ள மீனவர்கள் உடனடியாக கரை திரும்ப வேண்டும் என்றும், சென்னை வானிலை ஆய்வு மைய தென் மண்டல தலைவர் அமுதா அறிவுறுத்தினார்.
எந்தெந்த மாவட்டங்களுக்கு ரெட் அலெர்ட்?
வங்கக் கடலில் ஆழந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியுள்ள நிலையில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களுக்கு இன்றும் நாளையும் இந்திய வானிலை ஆய்வு மையம் ரெட் அலெர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. அதாவது, 20 செ.மீக்கு அதிகமான அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 21
ரெட் அலெர்ட் : கடலூர் மாவட்டத்துக்கு மட்டும் அதிகனமழை பெய்யலாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, செங்கல்பட்டு, அரியலூர், மயிலாடுதுறை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை ( 11.5 செ.மீ முதல் 20.4 செ.மீ அளவிலான மழை) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டின் பிற மாவட்டங்களில் கனமழைக்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 22
ரெட் அலெர்ட் : செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை ஆகிய மாவட்டங்களுக்கு அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆரஞ்ச் அலெர்ட் : சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டை, காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், அரியலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மிக கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலூர், திருப்பத்தூர், தருமபுரி, சேலம், திருச்சி, புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் கனமழை எச்சரிக்கை வழங்கப்பட்டுள்ளது. இவை தவிர பிற மாவட்டங்களில் மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
அக்டோபர் 23
ரெட் அலெர்ட் : எந்த மாவட்டத்துக்கும் ரெட் அலெர்ட் விடுக்கப்படவில்லை.
ஆரஞ்ச் : சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், ராணிப்பேட்டை ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழைக்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவை தவிர பிற மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்படவில்லை.
(கனமழை என்பது 6.4 செ.மீ முதல் 11.5 செ.மீ அளவிலான மழை அளவை குறிக்கும். மிக கனமழை என்பது 11.5 செ.மீ முதல் 20 செ.மீ வரையிலான மழை அளவை குறிக்கும். அதிகனமழை என்பது 20 செ.மீக்கு அதிகமான மழைப்பொழிவைக் குறிக்கும்.)
சென்னைக்கு மாலை 4 மணி வரை ரெட் அலெர்ட்
சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த மாவட்டங்களில் ஒரு மணி நேரத்தில் 15 மி.மீக்கு அதிகமான மழை இடி மின்னலுடன் பெய்யக் கூடும் என்று எச்சரிக்கப்பட்டுள்ளது. மேலும் தரைக் காற்று மணிக்கு 62கி.மீ முதல் 87 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே போன்று கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம், ராணிப்பேட்டை, தஞ்சாவூர், திருவாரூர், திருவண்ணாமலை, விழுப்புரம் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணி வரை 5 மி.மீ முதல் 15 மி.மீ அளவிலான மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மாவட்டங்களில் தரைக்காற்று மணிக்கு 41 கி.மீ முதல் 61 கி.மீ வேகத்தில் வீசக்கூடும்.
அரியலூர், கோவை, திண்டுக்கல், கள்ளக்குறிச்சி, குமரி, கரூர், மதுரை, நாமக்கல், பெரம்பலூர், சேலம், சிவகங்கை, தென்காசி, தேனி, தூத்துக்குடி, திருச்சி, நெல்லை, திருப்பத்தூர், திருப்பூர், வேலூர், விருதுநகர் ஆகிய மாவட்டங்களில் மாலை 4 மணிக்குள் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம், IMD website
படக்குறிப்பு, மாவட்ட வாரியாக மழை எச்சரிக்கையை குறிக்கும் இந்திய வானிலை ஆய்வு மைய வரைபடம். (மஞ்சள் - மிதமான மழை, ஆரஞ்சு - மிக கனமழை)
ராமநாதபுரம் மாவட்டத்தில் கனமழை - வீடுகளை சூழ்ந்த மழைநீர்
ராமநாதபுரம் மாவட்டத்தில் ராமேஸ்வரம், பாம்பன், மண்டபம், உச்சிப்புளி, ராமநாதபுரம், அச்சுந்தன்வயல், பரமக்குடி, உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்றிரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
தொடர் மழையால் மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் வீட்டை விட்டு வெளியே வர முடியாமல் சிரமத்துக்கு ஆளாகியுள்ளனர்.
தங்கச்சிமடத்தில் ஒரே நாளில் 17 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.

படக்குறிப்பு, மண்டபத்தை அடுத்துள்ள கலைஞர் நகர் பகுதியில் வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
பாலாற்றில் வெள்ளம் - மக்களுக்கு எச்சரிக்கை
ஆந்திரா மாநிலம் பெரும்பள்ளம் என்ற இடத்தில் 22 அடி உயர தடுப்பணை நிரம்பி அதன் உபரி நீர் பாலாற்றில் வெளியேறி வருகிறது. தமிழகத்தில் புல்லூர், திம்மம்ப்பேட்டை, ஆவாரங்குப்பம், இராமநாயக்கன்பேட்டை, அம்பலூர், கொடையாஞ்சி, வாணியம்பாடி வழியாக பாலாறு சுமார் 222 கிலோமீட்டர் பயணம் செய்து இறுதியாக வங்கக் கடலில் கலக்கின்றது.
வெள்ளப்பெருக்கு காரணமாக பாலாற்றில் யாரும் இறங்குவோ, குளிக்கவோ கூடாது என்று திருப்பத்தூமாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது. கர்நாடகா மற்றும் ஆந்திரா மாநிலங்களில் மேலும் அதிக மழை பெய்தால் பாலாற்றில் வெள்ளம் ஏற்பட வாய்ப்பிருப்பதால் கரையோரம் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்தினர் ஒலிபெருக்கி மூலமாக எச்சரிக்கை விடுத்து வருகின்றனர்.
வெள்ள அபாய எச்சரிக்கை
பவானி சாகர் அணையின் நீர்மட்டம் நேற்று 101.36 அடியை எட்டியது. வடகிழக்கு பருவமழை காரணமாக அணைக்கு நீர்வரத்து அதிகரித்து வருகிறது. எனவே அணையின் நீர் மட்டம் விரைவில் 102 அடியை எட்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அணையிலிருந்து உபரி நீர் பவானி ஆற்றில் 5 ஆயிரம் முதல் 10 ஆயிரம் கன அடி வரை திறந்துவிடப்படலாம் என்றும் அப்படி திறந்துவிடப்படும் நீரின் அளவு படிப்படியாக அதிகரிக்கப்படும் என்றும் தமிழக அரசின் நீர்வளத்துறை சார்பாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே பவானி ஆற்றின் கரையோரம் மற்றும் தாழ்வான பகுதிகளில் வசிப்பவர்கள் பாதுகாப்பான இடங்களுக்கு செல்லுமாறும், அவர்களின் உயிர் மற்றும் உடைமைகளின் பாதுகாப்புக்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் எடுக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை
இன்று தமிழக கடலோரப் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் குமரிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 கி.மீ முதல் 45 கி.மீ வேகத்திலும் இடையிடையே 55 கி.மீ வேகத்தில் வீசக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே மீனவர்கள் இந்தப் பகுதிகளில் கடலுக்குள் செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கப்பட்டுள்ளனர்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
