'அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்': அதிவேகமாக கப்பல் கட்டும் சீனா பெருங்கடல்களை ஆள தயாராகிறதா?

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனாவின் விமானந்தாங்கி போர்க்கப்பல் லியோனிங்
கட்டுரை தகவல்
"சோசலிசம் நல்லது..." என்று மைக்கைப் பிடித்து ஓய்வூதியதாரர் ஒருவர் பேசுகிறார். அவரது குரல், அவரது நண்பர்களின் அரட்டை சத்தத்தில் குறைவாக கேட்கிறது.
ஆனால் அவர்களும், அவருடன் சேர்ந்து, "கம்யூனிஸ்ட் கட்சி அதிகாரம் மற்றும் செல்வத்திற்கான பாதையில் சீனாவை வழிநடத்துகிறது!" என்று முழங்குகிறார்கள்.
இது பிரபலமான பாடல் அல்ல. ஆனால் அவர்கள் நின்று கொண்டிருக்கும் டாலியனின் சுயோயுவான் பூங்காவிலிருந்து பாடுவதற்கு பொருத்தமானது. டாலியன் சீனாவின் கப்பல் கட்டும் தளங்களில் மிக முக்கியமான ஒன்றாகும்.
வடகிழக்கு சீனாவில் மஞ்சள் கடலுக்குள் நீண்டிருக்கும் டாலியனில் உள்ள அந்த பூங்காவிலிருந்து, சீனாவின் மிகப்பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்றின் அற்புதமான காட்சிகளை காண முடியும். மக்கள் ஒன்றுகூடி மகிழ்வதற்கான இடமாகவும் அது அமைந்துள்ளது.
ஆனால் வாஷிங்டனில் ஆயிரக்கணக்கான மைல்களுக்கு அப்பால் உள்ள வெள்ளை மாளிகை ஆய்வாளர்களுக்கு, சீனா கப்பல் கட்டும் இந்த தொட்டில் வளர்ந்து வரும் அச்சுறுத்தலின் ஒரு பகுதியாகும்.
கடந்த இரண்டு தசாப்தங்களில் சீனா கப்பல் கட்டும் தொழிலில் முதலீட்டை அதிகரித்துள்ளது. அது பலனளித்துள்ளது. இந்த ஆண்டு உலகின் ஆர்டர்களில் 60% க்கும் அதிகமானவை சீன கப்பல் கட்டும் தளங்களுக்குச் சென்றுள்ளன. எளிமையாகச் சொல்வதானால், சீனா வேறு எந்த நாட்டையும் விட அதிகமான கப்பல்களைக் கட்டுகிறது, ஏனென்றால் வேறு எவரையும் விட வேகமாக சீனாவால் அதைச் செய்ய முடியும்.
சீனா "அசாதாரணமான அளவில் கப்பல்களை கட்டுகிறது " என்று லண்டனை தளமாகக் கொண்ட மூலோபாய ஆய்வுகளுக்கான சர்வதேச நிறுவனத்தின் கடல்சார் நிபுணர் நிக் சைல்ட்ஸ் கூறுகிறார். "சீனாவின் கப்பல் கட்டும் திறன் அமெரிக்காவை விட 200 மடங்கு அதிகம்."
கப்பல் கட்டுவதில் முன்னிலையில் இருக்கிறது என்றால், அதன் பலன் சீனாவின் கடற்படைக்கும் பொருந்தும். சீன கம்யூனிஸ்ட் கட்சி இப்போது உலகின் மிகப்பெரிய, 234 போர்க்கப்பல்களை இயக்குகிறது. அமெரிக்க கடற்படையில் 219 போர்க்கப்பல்களே உள்ளன.
சீனாவின் இந்த மாபெரும் எழுச்சிக்கு கடல் ஒரு முக்கிய காரணியாகும். உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமான சீனா உலகின் 10 பரபரப்பான துறைமுகங்களில் ஏழு துறைமுகங்களைக் கொண்டுள்ளது, அவை உலகளாவிய வர்த்தக விநியோகத்துக்கு முக்கியமான கடல் போக்குவரத்து பாதைகளில் அமைந்துள்ளன. சீனாவின் கடலோர நகரங்கள் வர்த்தகத்தால் செழித்து வளர்கின்றன.
சீனாவின் ஆசைகள் வளர்ந்துள்ள நிலையில், அதன் கப்பல் படையும் வளர்ந்துள்ளது - தென் சீனக் கடலிலும் அதற்கு அப்பாலும் உரத்த குரலில் உரிமை கோருவதற்கான அதன் நம்பிக்கையும் அதிகரித்துள்ளது.
அதிபர் ஜின்பிங்கின் சீனா நிச்சயமாக அலைகளை (அதாவது கடலை) ஆள விரும்புகிறது. அது நடக்குமா என்பதுதான் கேள்வி.

படக்குறிப்பு, 19-ம் நூற்றாண்டில் ரஷ்யர்களால் துறைமுகமாக கட்டப்பட்ட டாலியன் தற்போது சீனாவின் பெரிய கப்பல் கட்டும் தளங்களில் ஒன்று.
அடுத்த வாரம் ஒரு மாபெரும் ராணுவ அணிவகுப்பு அந்த இலக்குக்கு எவ்வளவு நெருக்கமாக சீனா உள்ளது என்பதை வெளிப்படுத்தக்கூடும். விளாடிமிர் புதின் மற்றும் கிம் ஜாங் உன் ஆகியோரை ஜின்பிங் இந்த நிகழ்வுக்கு அழைத்துள்ளார். இது அவர்களை புறக்கணித்த மேற்கத்திய நாடுகளுக்கு எதிர்ப்பை வெளிப்படுத்தும் செய்தியாகும்.
இந்த அணிவகுப்பில், கப்பலை தாக்கும் ஏவுகணைகள், ஹைப்பர்சோனிக் ஆயுதங்கள் மற்றும் நீருக்கடியில் இயங்கும் டிரோன்கள் உள்ளிட்ட ராணுவ வலிமையின் காட்சிப்படுத்தலை அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் உன்னிப்பாக கவனிக்கும்.
"அமெரிக்க கடற்படை, இன்னும் குறிப்பிடத்தக்க சாதகமான அம்சங்களைக் கொண்டிருந்தாலும், சீனாவுடனான அதன் திறன்களில் இடைவெளி காணப்படுகிறது. இதற்கான விடையை தேட அமெரிக்கா போராடுகிறது," என்று சைல்ட்ஸ் கூறுகிறார், "ஏனென்றால் கடந்த தசாப்தங்களில் அதன் கப்பல் கட்டும் திறன் கணிசமாகக் குறைந்துவிட்டது."
இதை சரிசெய்ய விரும்புவதாகக் கூறிய அதிபர் டிரம்ப், அமெரிக்க கப்பல் கட்டுமானத்திற்கு புத்துயிர் அளிக்கவும், அமெரிக்காவின் கடல்சார் சாதகங்களை மீண்டும் பெறவும் நிர்வாக உத்தரவு ஒன்றில் கையெழுத்திட்டுள்ளார்.
அது, "மிக சவாலான காரியமாக இருக்கும்" என்று சைல்ட்ஸ் மேலும் கூறுகிறார்.
'கசப்பான நினைவுகளை' முடிவுக்கு கொண்டு வரும் கடற்படை
2019 மற்றும் 2023 க்கு இடையில், சீனாவின் நான்கு பெரிய கப்பல் கட்டும் தளங்களான டாலியன், குவாங்சோ, ஜியாங்னன் மற்றும் ஹுடாங்-ஜோங்குவா ஆகியவை 39 போர்க்கப்பல்களை (மொத்தம் 550,000 டன்) தயாரித்ததாக , மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தின் (சிஎஸ்ஐஎஸ்) ஆய்வு தெரிவிக்கிறது.
550,000 டன் என்பது அந்த 39 போர்க்கப்பல்களும் கடலில் மிதக்கையில் இடப்பெயர்ச்சி செய்யும் நீரின் அளவு, இது ஒரு கப்பல் அல்லது கடற்படையின் வலிமையை அளவிடுவதற்கான வழக்கமான முறையாகும். அதன்படி பார்த்தால், ஒப்பீட்டளவில் பிரிட்டனின் ராயல் கடற்படையின் வலிமை (சுமார் 399,000 டன் ) குறைவு.
கப்பல்களின் எண்ணிக்கை அடிப்படையில், சீனா உலகின் மிகப்பெரிய கடற்படையை கொண்டிருந்தாலும், அமெரிக்க கடற்படையின் வலிமை அதிகமாகும். மிகப்பெரிய விமானந்தாங்கி போர்க்கப்பல்களுடன் மிகவும் சக்தி வாய்ந்ததாக அமெரிக்க கடற்படை திகழ்கிறது.
ஆனால் சீனா அமெரிக்காவை வேகமாக எட்டிப் பிடிக்கிறது.
"சீனர்கள் மெதுவாக செயல்படுவதற்கான எந்த அறிகுறியும் இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ் அமைப்பைச் சேர்ந்த அலெக்சாண்டர் பால்மர் கூறுகிறார்.
"ஹல் எண்ணிக்கை [கப்பல்களின் எண்ணிக்கை] நிச்சயமாக ஒரு கடற்படையின் செயல்திறனின் ஒரே அளவீடு அல்ல, ஆனால் போர்க்கப்பல்களை உற்பத்தி செய்யும் சீனாவின் திறன் மிகவும் அபாரமாக உள்ளது, இது ஒரு மூலோபாய வித்தியாசத்தை ஏற்படுத்தக் கூடும்."

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, "தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை சீன அதிபர் ஜி ஜின்பிங் வலியுறுத்துகிறார்.
சீனாவின் கடற்படை வளர்ச்சியில் சில குறைபாடுகள் தென்படுகின்றன. சீனாவிடம் அதிக கப்பல்கள் இருக்கலாம், ஆனால் அதனிடம் இரண்டு விமானந்தாங்கி கப்பல்கள் மட்டுமே உள்ளன. சீன கடற்படையில் அமெரிக்காவை விட மிகக் குறைவான நீர்மூழ்கிக் கப்பல்களே உள்ளன.
அவை பனிப்போர் காலத்திலிருந்தே அமெரிக்கா தொழில்நுட்ப சாதகத்தைக் கொண்டிருப்பதைப் போல அதிநவீனமானவை அல்ல என்று சில ஆய்வாளர்கள் வாதிடுகின்றனர்.
சீன நீர்மூழ்கிக் கப்பல்கள் பெரும்பாலும் ஆழம் குறைந்த தென் சீனக் கடலுக்காக கட்டமைக்கப்பட்டுள்ளன. அங்கு ஏற்கெனவே அமெரிக்காவும் சீனாவும் எலியும் பூனையுமாக விளையாடிக் கொண்டிருக்கின்றன. இப்போதைக்கு, சீனா தனது சொந்த கடற்கரையில் இருந்து வெகுதூரம் பயணிக்கும் திறன் குறைவாகவே உள்ளது.
ஆனால் இது வேகமாக மாறுவதற்கான அறிகுறிகள் உள்ளன.
தென் சீனக் கடலில் உள்ள ஒரு சீன தீவு மாகாணமான ஹைனானின் பிபிசி வெரிஃபை பெற்ற செயற்கைக்கோள் படங்கள், பெய்ஜிங் அதன் கடற்படை தளங்களை விரிவுபடுத்த கணிசமான நிதியை கொட்டி வருவதை சுட்டிக்காட்டுகின்றன.
யூலினில் உள்ள தளத்தில் ஐந்து புதிய கப்பல்கள் தென்படுகின்றன, அவை கடந்த ஐந்து ஆண்டுகளில் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. சீனா தனது மிகப்பெரிய நீர்மூழ்கிக் கப்பல்களான ஜின்-கிளாஸ் (அல்லது வகை 094) அனைத்தையும் இந்த துறைமுகத்தில் நிலைநிறுத்த திட்டமிட்டுள்ளதாக கருதப்படுகிறது. இந்த புதிய நீர்மூழ்கிக் கப்பல்கள் ஒவ்வொன்றும் 12 அணு ஆயுத ஏவுகணைகளை சுமந்து செல்ல முடியும்.
சீன சமூக ஊடகங்களில் பகிரப்பட்ட ஒத்திகைகளின் புகைப்படங்கள் மற்றும் காட்சிகள், குறைந்தது இரண்டு புதிய வகை ஆளில்லா நீருக்கடியில் இயக்கப்படும் டிரோன்கள் (நீர்மூழ்கி கப்பல்களிலிருந்து செலுத்தப்படும் குண்டுகளை போன்ற தோற்றம் கொண்டவை), அடுத்த வார அணிவகுப்பில் காட்சிக்கு வைக்கப்படும் புதிய அமைப்புகளில் ஒன்றாக இருக்கும் என்று தெரிவிக்கின்றன.
இதன் மூலம் சீனா நீருக்கடியில் ஆழமான கண்காணிப்பை மேற்கொள்ளவும், மற்ற நீர்மூழ்கிக் கப்பல்கள் அல்லது கடலுக்கடியில் கேபிள்களைக் கூட அதன் சொந்த கடற்படைப் படைகளுக்கு ஆபத்து இல்லாமல் கண்டுபிடிக்கக் கூடும்.
இந்த தொழில்நுட்பத்தின் பெரும்பகுதி இன்னும் "நிரூபிக்கப்படவில்லை மற்றும் அதன் திறன்களின் காலவரிசை இன்னும் தெளிவாக இல்லை" என்று சி.எஸ்.ஐ.எஸ்ஸின் சீனா பவர் திட்டத்தைச் சேர்ந்த மத்தேயு ஃபுனயோல் எச்சரிக்கிறார். "தொழில்நுட்பம் முதிர்ச்சியடைய எவ்வளவு காலம் ஆகும் என்பதுதான் பெரிய கேள்வி."
சீனாவின் கப்பல் கட்டுமானம் முன் வைக்கும் அச்சுறுத்தலை அமெரிக்கா புறக்கணிக்க முடியாது என்று அவர் மேலும் கூறுகிறார்.
நாட்டின் பரந்த கடற்படை கட்டமைப்பு, கடந்த காலத்தின் வலிகளில் இருந்து இன்னும் மீளாத ஒரு கட்சியால் உந்தப்படுகிறது - அதன் விசுவாசம், அதிகாரம் மற்றும் தேசப்பற்று பற்றிய செய்தியை வலுப்படுத்த அவர்களை வழிநடத்த விரும்புகிறது.
ஜப்பான் மீதான வெற்றியையும், ஜப்பான் ஆக்கிரமிப்பின் முடிவையும் நினைவுகூரும் வகையில் ஒரு ராணுவ அணிவகுப்பை நடத்துவது அதற்கு சான்றாகும்.

பட மூலாதாரம், Getty Images
படக்குறிப்பு, சீனாவின் விமானம் தாங்கி கப்பல் லியோனிங் 2024 பிப்ரவரி-ல் கடல் சோதனைக்கு உட்படுத்தப்பட்டது.
சீனாவின் எழுச்சி என்று உலகம் எதை பார்க்கிறதோ, அதனை சீனாவின் மறுமலர்ச்சியாக அதிபர் ஜி ஜின்பிங் பார்க்கிறார்.
"தேச நலனை பாதுகாக்க ஒரு வலுவான கடற்படையின்" முக்கியத்துவத்தை அவர் பெருமையாக பேசுகிறார். 1840 மற்றும் 1949 க்கு இடையில் நடைபெற்ற 470 படையெடுப்புகளை அவர் சுட்டிக்காட்டுகிறார். ஒரு காலத்தில் சக்தி வாய்ந்த கிங் பேரரசு உடைய தொடங்கியபோது, சீனா கொந்தளிப்பு, புரட்சி மற்றும் உள்நாட்டுப் போரில் மூழ்கி, "சொல்லமுடியாத துன்பத்தை" எதிர்கொண்டது.
தனது நாடு மீண்டும் ஒருபோதும் "அவமானப்படுத்தப்படாது" அல்லது "வெளிநாட்டு தாக்குதல்களின் கசப்பான நினைவுகளை" புதுப்பிக்காது என்று அவர் சபதம் செய்துள்ளார்.
சீனாவுக்கு மறுக்க முடியாத சாதகம் உள்ளது – அது அங்குள்ள கப்பல் கட்டும் தளங்களின் இரட்டை பயன்பாடு . அந்த தளங்களில் பல வணிக பயன்பாட்டுக் கப்பல்களை தயாரிக்கும் வேளையில், கடற்படைக்கான போர்க்கப்பல்களையும் உற்பத்தி செய்ய உதவும்.
ராணுவம் மற்றும் பொதுமக்கள் பயன்பாட்டுக்கான கப்பல் கட்டும் தளங்கள் சில இடங்களில் கைகோர்த்து செயல்படுகின்றன, இது "ராணுவ-சிவிலியன்(பொதுமக்கள்) இணைவு" என்று அரசு ஊடகங்கள் விவரிக்கின்றன. இந்த கருத்தை அதிபர் ஜின்பிங் வலிமையாக முன்வைக்கிறார்.
பெய்ஜிங் ஒரு "முதன்மை கப்பல் கட்டும் தளம்" என்று அழைக்கும் டாலியன் இதில் பெரும் பங்கு வகிக்கிறது.

படக்குறிப்பு, டாலியனில் உள்ள கப்பல் கட்டும் தளம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் உள்ளூர் மக்களிடையே பிரபலமானவை ஆகும்.
மைக் பிடித்து பாடல்களை பாடிக்கொண்டு, சுற்றுலா வந்திருக்கும் ஓய்வூதியதாரர்களின் முழு பார்வையில் படும்படி பெரிய வணிக கப்பல்கள் உள்ளன, சில மூன்று கால்பந்து மைதானங்கள் வரை நீளமானவை.
ஆனால் யாரும் புகைப்படம் எடுக்க முடியாத ஒரு மூலையில், ராணுவக் கப்பல்கள் நிறுத்தப்பட்டுள்ளன. அங்கு, ஒரு கிரேன் ஒரு ஹெலிகாப்டரை கப்பலின் பெரிய தளத்தில் இறக்குகிறது,
"இது வணிக மற்றும் ராணுவ நடவடிக்கைகளை ஒன்றிணைக்கும் அரசியல் நோக்கம் கொண்டதாகும் " என்று ஃபுனயோல் கூறுகிறார். "இரண்டையும் உருவாக்க தேவையான தொழில்நுட்பத்தை ஒரு மையப்படுத்தப்பட்ட இடத்திற்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் உள்ளன - டாலியன் அவற்றில் ஒன்று."
அதனால்தான் சக்திவாய்ந்த விமானம் தாங்கி போர்க்கப்பல்கள் அல்லது நீர்மூழ்கிக் கப்பல்கள் இல்லாமல் கூட, வணிகக் கப்பல்களை விரைவாக உருவாக்குவதில் சீனா பெறும் நிபுணத்துவம் ஒரு நெருக்கடியின் போது முக்கியமானதாக இருக்கும் என்று அவர் மேலும் கூறுகிறார்.

படக்குறிப்பு, டாலியனில் நிறுத்தப்பட்டுள்ள ராணுவக் கப்பலில் ஒரு ஹெலிகாப்டர் தரையிறங்குகிறது.
"எந்தவொரு நீடித்த மோதலிலும், புதிய கப்பல்களை விரைவாக உருவாக்கும் கப்பல் கட்டும் தளங்கள் உங்களிடம் இருந்தால், இது ஒரு பெரிய மூலோபாய நன்மை" என்று ஃபுனயோல் கூறுகிறார்.
"வணிகக் கப்பல்கள் எந்தவொரு மோதல் நடைபெறும் பகுதிக்கும் உணவு போன்றவற்றை கொண்டு செல்ல முடியும். இது இல்லாமல், அமெரிக்கா ஒரு நீண்டகால போர் முயற்சியைத் தொடர முடியாத நிலையில் உள்ளது."
இது ஒரு நேரடியான கேள்விக்கு இட்டுச் செல்கிறது என்கிறார், "யார் அதிக கப்பல்களை விரைவாகவும் எளிதாகவும் தண்ணீரில் இறக்க முடியும்?"
இதற்கான பதில், இப்போதைக்கு சீனாதான்.
"உன் வலிமையை மறைத்துக் கொண்டு, சரியான நேரத்திற்காக காத்திரு"
பேராசிரியர் ஹூ போ, "அதைப்பற்றி உலகம் கவலைப்பட தேவையில்லை. நாங்கள் மற்ற நாடுகளின் பிரச்னையில், குறிப்பாக ராணுவ ரீதியில் தலையிடுவதற்கான எந்த ஆர்வமும் கொள்ளவில்லை" என்கிறார்.
பெய்ஜிங் பல்கலைக் கழகத்தின் கடல்வெளி மூலோபாய ஆய்வுகள் மையத்தின் இயக்குநரான அவர் கூறும் செய்தி, பெரிய கப்பல்களை கட்டமைப்பதற்கான திறன்களை சீனா வளர்த்துக் கொண்டிருப்பது உலகைக் கைப்பற்றும் நோக்கத்துடன் அல்ல என்பதுதான்.
ஆனால், சீனாவுக்கு விருப்பமான ஒரு தீவு உண்டு. சீனா அதை வேறொரு நாடாகப் பார்க்கவில்லை. அதுதான் தைவான். பெய்ஜிங் நீண்ட காலமாக ஜனநாயக தைவானுடன் "மீண்டும் ஒன்றிணைவோம்" என உறுதியோடு உள்ளது. அதற்காக பலத்தை பயன்படுத்தும் வாய்ப்பையும் நிராகரிக்கவில்லை. சமீபத்திய ஆண்டுகளில், அமெரிக்காவின் உயர்மட்ட அதிகாரிகள், சீனா தைவானை 2027க்குள் ஆக்கிரமிக்கும் என்று கூறி வருகின்றனர். ஆனால் பெய்ஜிங் இதற்கு எந்த காலக்கெடுவும் இல்லை என்று மறுக்கிறது.
"தைவானை மீண்டும் கைப்பற்றும் திறன் சீனாவிடம் ஏற்கனவே உள்ளது," என்று பேராசிரியர் ஹு போ கூறுகிறார், "ஆனால் சீனா அதைச் செய்யவில்லை, ஏனென்றால் எங்களிடம் பொறுமை உள்ளது. சீனா அமைதியான ஒன்றிணைப்புக்கான வாய்ப்பை ஒருபோதும் கைவிடவில்லை. அதற்காக காத்திருப்பது சாத்தியமே"
தைவான் மீதான எந்தவொரு தாக்குதலும் பெரிய போருக்கு தூண்டுதலாக அமையலாம் என்பது பெரிய கவலை ஆகும். அதில் அமெரிக்காவும் இணையக்கூடும். வாஷிங்டன் தனது சட்டப்படி தைவானின் தற்காப்புக்கு ஆயுதங்களை வழங்க வேண்டும். இப்படிப்பட்ட ஆதரவை சீனா ஏற்காது, ஏனென்றால் அவர்கள் தைவானை, தன்னிடமிருந்து பிரிந்து சென்ற மாகாணமாக, சீனாவோடு இறுதியில் இணையும் வாய்ப்புள்ள ஒரு பகுதியாகவே கருதுகின்றனர்.
இந்த ஆண்டின் தொடக்கத்தில், அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்சேத், சீனா தைவானுக்கு "உடனடி" அச்சுறுத்தலாக இருப்பதாக எச்சரித்தார். ஆசிய நாடுகள் பாதுகாப்பு செலவுகளை அதிகரித்து போரைத் தடுக்கும் விதமாக அமெரிக்காவுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
பேராசிரியர் ஹு போ உறுதியாகச் சொன்ன போதிலும், சீனாவின் போர்க்கப்பல்கள் பெருங்கடல்களில் வெகுதொலைவில் பயணிக்கத் தொடங்கியுள்ளன என்ற உண்மையை புறக்கணிப்பது கடினம்.
பிப்ரவரியில் அவை ஆஸ்திரேலியாவின் கடற்கரையை மூன்று வாரங்களுக்கும் மேலாக சுற்றிவந்தன. அங்கு அவை முன்னெப்போதும் மேற்கொண்டிராத பயிற்சிகளை நடத்தின. மிக சமீபத்தில் சீன விமானந்தாங்கி கப்பல்கள் ஜப்பானுக்கு அருகில் கடற்படை பயிற்சிகளை நடத்தின. இந்த பயிற்சிகள் சர்வதேச கடல் எல்லையில் நடந்த போதிலும், இந்த நடவடிக்கை முன்னெப்போதும் இல்லாததாக இருந்தது.

படக்குறிப்பு, சீனாவின் கப்பல் கட்டும் செயல்பாடுகள் குறித்து உலகம் கவலை கொள்ள தேவையில்லை என்று பேராசிரியர் ஹு தெரிவிக்கிறார்.
பசிபிக் பிராந்தியத்தில் தனது சக்தியைக் காட்ட பெய்ஜிங் தைரியமாக முயற்சிக்கும் போது, தைவான் முதல் ஆஸ்திரேலியா வரையிலான சீனாவின் அண்டை நாடுகள் அதன் புகழ்பெற்ற மந்திரம் செயல்படுத்தப்படுவதாக கவலைப்படுகின்றன: "உன் வலிமையை மறைத்து வைத்து, சரியான நேரத்திற்காக காத்திரு."
ஆனால் பேராசிரியர் ஹு, இப்பிராந்தியத்தில் அமெரிக்காவின் நட்பு நாடுகளான ஜப்பான், தென் கொரியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் அச்சங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார், ஏனென்றால் அது பேரழிவை ஏற்படுத்தக்கூடும் என்பதை அவர்கள் எல்லோருமே அறிவார்கள் என்றார்.
"கடந்த மூன்று ஆண்டுகளில், இரு தரப்பிடமிருந்தும் சண்டையிட விரும்பவில்லை என்ற சமிஞ்ஞை மிகவும் தெளிவாக உள்ளது," என்று அவர் கூறுகிறார். "நாங்கள் அதற்குத் தயாராக இருக்கிறோம், ஆனால் நாங்கள் ஒருவருக்கொருவர் எதிராக சண்டையிட விரும்பவில்லை."
'நாங்கள் எங்கள் கடல் லட்சியங்களை பாதுகாக்கிறோம்'
சுறுசுறுப்பான நகரப் பகுதியிலிருந்து ஒருமணி நேர தூரத்தில், டாலியனில் மீண்டும் சுற்றுலா பேருந்துகள் லுஷுன்கௌ எனும் கடற்படை கோட்டை நகரத்திற்கு வருகின்றன, இங்கு விமானம் தாங்கி கப்பல் வடிவில் ஒரு ராணுவ செயல்பாடுகளை காட்சிப்படுத்தும் பூங்கா அமைக்கப்பட்டுள்ளது.
ஒலிபெருக்கிகளைக் கொண்ட வழிகாட்டிகள் தங்கள் குழுக்களை பூங்காவிற்கு அழைத்துச் செல்கின்றனர். பிறை வடிவ துறைமுகத்தில் நங்கூரமிட்டுள்ள ராணுவ கப்பல்களை புகைப்படம் எடுக்க வேண்டாம் என்று அவர்கள் கூறுகிறார்கள், மேலும் "தாய்நாட்டைப் பாதுகாக்க உதவியாக" உளவு பார்க்க வழிவகுக்கும் எந்த நடவடிக்கை குறித்தும் புகாரளிக்க வேண்டும் என்றும் எச்சரிக்கும் அதிகாரப்பூர்வ அறிவிப்புகளை சுட்டிக்காட்டுகின்றனர்.
பாலங்களிலும், சுவர்களிலும் ராணுவ அறிவிப்புகளில் "ஒன்றாக இணைந்து, நாம் நமது கடல் லட்சியத்தை பாதுகாக்கிறோம்" என்று எழுதப்பட்டுள்ளது.

படக்குறிப்பு, டாலியனில் உள்ள ராணுவப் பூங்கா சுற்றுலா பயணிகளிடையே பெரும் ஆர்வத்தை தூண்டுகிறது.
சீனா தனது கப்பல் கட்டும் திறமையில், குறிப்பாக இங்கு டாலியனில் தனது பெருமிதத்தை வெளிக்காட்டுகிறது.
கப்பல் கட்டும் தளத்தை நோக்கி அமைந்த ராணுவ பூங்காவில், உள்ளூர் பாணியில் பூ வடிவ சட்டை அணிந்த 50 வயதான ஒரு இணைய பிரபலம் , தனது சமூக ஊடக பக்கத்தில் இருந்து துறைமுகத்தில் கட்டப்படும் சமீபத்திய கப்பல்களின் தினசரி விவரங்களை அளிக்கிறார்.
"நான் மிகவும் பெருமைப்படுகிறேன் - உண்மையில், இந்த நகரம் நமக்கு என்ன தருகிறது என்று பாருங்கள்," என்று அவர் தனது சமூக ஊடக பக்கங்களில் அறிவிக்கிறார். அண்டை மாகாணத்திலிருந்து விடுமுறைக்கு வந்த ஒரு தாயும் அவரது ஏழு வயது மகளும் கப்பல்களைப் பார்த்து வியக்கின்றனர். "நான் வியந்து பார்த்தேன். இந்த கப்பல் மிகப் பெரியது. இது எப்படி கடலில் செல்கிறது என்று ஆச்சரியமாக இருக்கிறது?" என்றார்.
அமெரிக்காவிற்கும் அதன் நட்பு நாடுகளுக்கும் முக்கிய பிரச்சனை என்னவென்றால் - சீனாவின் போர்க் கப்பல்கள் எவ்வளவு தூரம் செல்ல முடியும், பெய்ஜிங் தனது கடற்கரையில் இருந்து எவ்வளவு தூரம் செல்லத் தயாராக இருக்கிறது என்பதுதான்.
"எந்த கட்டத்தில் அவர்கள் திடீரென முன்னேறி தங்கள் செல்வாக்கை காட்டுவார்கள், உதாரணமாக இந்தியப் பெருங்கடலிலும் அதற்கு அப்பாலும் செல்வார்களா, இது கவனிக்க வேண்டிய முக்கிய விஷயமாக இருக்கும்," என்று நிக் சைல்ட்ஸ் கூறுகிறார்.
"அவர்கள் இன்னும் நீண்ட தூரம் செல்ல வேண்டியுள்ளது, ஆனால் அவர்கள் நிச்சயமாக எல்லைகளைக் கடந்து முன்னேற்றிக் கொண்டிருக்கிறார்கள்."
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cp8z64gp5l0o