உலகச் செய்திகள்

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க விஜயம்

Fri, 06/10/2017 - 09:55
சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க விஜயம்

 

 

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் ரஷ்­யா­வுக்கு தனது முத­லா­வது முக்­கி­யத்­துவம் மிக்க  உத்­தி­யோ­க­பூர்வ விஜ­யத்தை மேற்­கொண்டு சென்­றுள்ளார்.

Saudi-king-Putin.jpg

நேற்று முன்­தினம் புதன்­கி­ழமை மாலை  மொஸ்கோ நக­ரி­லுள்ள வனு­கொவோ- – 2 விமா­ன­நி­லை­யத்தில்  தரை­யி­றங்­கிய மன்ன ரது விமா­னத்தின் நகரும் படிக்­கட்­டுகள் இடை­ந­டுவில்  செயற்­பட மறுத்­ததால் 81  வய­தான அவர், ஊன்­று­கோலின் உத­வி­யுடன் சுய­மாக படிக்­கட்­டு­களில் சிர­மப்­பட்டு இறங்க நேர்ந்­துள்­ளது.

சிரிய பிரச்­சினை குறித்து இரு நாடு­க­ளுக்­கு­மி­டையே முரண்­பா­டுகள் நிலவி வரு­கின்ற  போதும் அவர்  ரஷ்ய ஜனா­தி­பதி  விளா­டிமிர் புட்­டினை சந்­தித்து   சக்தி வள உடன்­ப­டிக்­கைகள் குறித்து கலந்­து­ரை­யாட எதிர்­பார்த்­துள்­ள­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது.

அவரை ரஷ்ய பிரதிப் பிர­தமர்  திமித்ரி ரொகோ­ஸின்னும் இரா­ணுவ  குழு­வி­னரும் எதிர்­கொண்டு வர­வேற்­றனர். மன்­ன­ருடன்  இந்தப் பய­ணத்தில் 1,000 க்கு மேற்­பட்­ட­வர்­களைக் கொண்ட தூதுக் குழு­வொன் றும் பங்­கேற்­ற­தாக  கூறப்­ப­டு­கி­றது.

எண்ணெய் சந்­தையில் சவூ­தி ­அ­ரே­பி­யாவும் ரஷ்­யா வும் பங்­கா­ளர்­க­ளாக இருந்த போதும்  சிரி­யா­வி­லான போரில் இரு நாடு­களும் இரு துரு­வங்­க­ளாக செயற்­பட்டு வரு­கின்­றன.  

ரஷ்யா, சிரிய ஜனா­தி­பதி பஷார் அல் அஸாத்­திற்கு ஆத­ர­வ­ளித்து வரு­கின்ற  நிலையில் சவூதி அரே­பியா எதிர்க்­கு­ழு­வி­ன­ருக்கு ஆத­ர­வ­ளித்து வரு­கி­றது.

இந்­நி­லையில் மொஸ்கோ நகரில்   விளா­டிமிர் புட்­டி­னுக்கும் சல்­மா­னுக்­கு­மி­டையில் இடம்­பெறும்  விசேட சந்­திப்பின் போது பாது­காப்பு மற்றும்  சக்தி வள உடன்­ப­டிக்­கை­க­ளுடன்  எதிர்­வரும் நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஒபெக் நாடுகளின்  கூட் டத்தையொட்டி  எண்ணெய் உற்பத்திகளி லான  குறைப்பை விரிவுபடுத்த நடவடி க்கை எடுக்கப்படலாம் என எதிர்பார்க் கப்படுகிறது.

விளாடிமிர் புட்டின் சவூதி அரே பியாவுக்கு 2007 ஆம் ஆண்டில் விஜயம் செய்திருந்தார்.  அவருக்கும் சவூதி அரேபிய மன்னருக் குமிடையிலான  இதற்கு முன்னரான சந் திப்பு 2015  ஆம் ஆண்டில்  இடம்பெற் றிருந்தது.

http://www.virakesari.lk/article/25380

Categories: merge-rss, yarl-world-news

கேடலோனியா மக்களின் சுதந்திர தாகம்!

Fri, 06/10/2017 - 05:17
கேடலோனியா மக்களின் சுதந்திர தாகம்!

 

 
06CHVCM-EDIT1-CATALONIA%202

ஸ்பெயினின் தன்னாட்சிப் பிரதேசமான கேடலோனியாவைச் சேர்ந்த மக்கள் தனி நாடாகப் பிரிந்து செல்ல கடந்த ஞாயிற்றுக்கிழமை கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பில் பங்கேற்றனர். கேடலோனியா பிரிவதை விரும்பாத ஸ்பானிய அரசு, அந்த கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பையே தேசிய காவல் துறை உதவியுடன் தடுத்து நிறுத்தியதுடன் கேடலோனியா பகுதிகளில் மக்கள் மீது தடியடி நடத்தியும் வாக்குப் பெட்டிகளைப் பறித்தும் அடக்குமுறையைக் கையாண்டது.

எதிர்ப்பேதும் தெரிவிக்காத மக்களைக் காவல் படையினர் குண்டாந்தடிகளால் சகட்டு மேனிக்குத் தாக்கினர். பெண்களைக் கைகளைப் பிடித்தும் தலைமுடியைப் பிடித்தும் இழுத்து அப்புறப்படுத்தினர். 800-க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்தனர். அதேசமயம், கேடலோனியா பகுதி காவலர்கள், மக்களோடு மக்களாக நின்றுகொண்டனர். அவர்கள் மக்களையும் அடிக்கவில்லை, தேசியக் காவல் படையினருடனும் சேர்ந்துகொள்ளவில்லை.

ஸ்பெயினின் அடக்குமுறை

தொழில்வளம் மிக்க கேடலோனியா பகுதி மக்களின் மனக்குறைகளைத் தீர்க்காமல் அலட்சியப்படுத்தி வந்த ஸ்பானிய அரசு, தனது அடக்குமுறையால் நிலைமையை மேலும் சிக்கலாக்கிவிட்டது. ஐரோப்பிய ஒன்றியத்திலேயே ஐந்தாவது பெரிய நாடான ஸ்பெயினில் இப்போது சமூக, அரசியல் கொந்தளிப்பு ஏற்பட்டிருக்கிறது. கேடலோனியா பகுதி தனி நாடாகப் போகலாமா, ஸ்பெயினுடனேயே சேர்ந்து இருக்கலாமா என்று கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்த கேடலோனியா பிரதேச நாடாளுமன்றம் முடிவு செய்தது.

அதை கேடலோனியா பிரதேச அரசு நிர்வாகம் ஆதரித்தது. இதையடுத்து ஸ்பெயின் அரசு எதிர் நடவடிக்கைகளைத் தொடங்கியது. இப்படிக் கருத்தறியும் வாக்கெடுப்பு நடத்துவதே சட்டவிரோதம் என்று அறிவித்தது ஸ்பெயின் உச்ச நீதிமன்றம். பிரதமர் மரியானோ ரஜாய் தலைமையிலான ஸ்பெயின் அரசு தனிநாடு பிரச்சாரத்தை முழு மூச்சாக ஒடுக்க முற்பட்டது. கருத்தறியும் வாக்கெடுப்பு இயந்திரங்களையும் பிற சாதனங்களையும் பறிமுதல் செய்தது. சுதந்திரத்தை வலியுறுத்திய இணைய தளங்களை முடக்கியது. பிரிவினையை முழு பலத்தோடு ஒடுக்குவோம் என்று எச்சரித்தது.

 

பதற்றங்களின் வரலாறு

ஸ்பெயினிலேயே பிரிவினை கோரி வன்செயல்களில் ஈடுபடும் ‘பாஸ்க்’ அமைப்பு குறித்து உலகம் அறியும். ஆனால் கேடலோனியா பிரதேசத்துக்கும் ஸ்பெயினுக்குமான உரசல்கள் வெளியுலகின் கவனத்தை ஈர்த்ததில்லை. ஸ்பெயினின் வட கிழக்கில் உள்ள கேடலோனியா தொழில்வளம் மிக்க பகுதியாகும். ஸ்பெயினின் பொருளாதார வலிமைக்கு இந்தப் பிரதேசத்தின் பங்களிப்பு இன்றியமையாதது. ஆனால் பொருளாதார, கலாச்சார, சமூக, மொழி அடிப்படையிலான உரசல்கள் பல பத்தாண்டுகளாகத் தொடர்ந்து வந்துள்ளன.

கேடலோனியாவின் சுயாட்சி மாகாண கோரிக்கையை ஸ்பெயின் நாடாளுமன்றமே 1932-ல் ஏற்றுக் கொண்டது. ஆனால் ஸ்பெயினில் ஆட்சிக்கு வந்த சர்வாதிகாரி ஜெனரல் பிரான்சிஸ்கோ பிராங்கோ காலத்தில் கேடலோனியாவின் தனி நாடு கோரிக்கையாளர்கள் கடுமையான அடக்குமுறைக்கு ஆளானார்கள். அதன் பிறகு ஆட்சிக்கு வந்த ஜனநாயக அரசு, கேடலோனியாவுக்கு அதிக சுயாதிகாரம் தேவை என்பதைக் கருத்தளவில் ஏற்று ஒப்புக்குச் சில அதிகாரங்களைப் பிரித்து வழங்கியது.

கேடலோனியாவின் சுதந்திரக் கிளர்ச்சியில் இடதுசாரிகளுடன் வலதுசாரிகளும் கைகோத்துச் செயல்படுகின்றனர். சுதந்திரம் கிடைக்குமா என்ற சந்தேகம் நிலவியபோதிலும் கருத்துக் கணிப்பு நடத்தியே தீர வேண்டும் என்று அனைத்துத் தரப்பும் உறுதியாக இருந்தன. 2007-ல் ஸ்பெயின் மிகப்பெரிய நிதி நெருக்கடியைச் சந்தித்தது. அப்போது கடுமையான சிக்கன நடவடிக்கைகளை அரசு எடுத்தது.

அப்போது கேடலோனியாவில் கிடைக்கும் நிதியைக் கொண்டு பிற பகுதிகளை ஸ்பெயின் அரசு வாழவைக்கிறது என்ற குறை கேடலோனிய மக்களுக்கு ஏற்பட்டது. 2011, 2014 ஆகிய ஆண்டுகளிலும் சுதந்திரம் கோரி மக்களிடையே அதிகாரப்பூர்வமற்ற வகையில் இரு கருத்துக் கணிப்புகள் நடத்தப்பட்டன. இரண்டிலும் சுதந்திரத்துக்கு ஆதரவாகத்தான் மக்கள் வாக்களித்தனர்.

பிரிவினைக்கு எதிர்ப்பு

இந்நிலையில், பார்சிலோனாவில் வாக்களிக்கக் கூடியிருந்த மக்கள் மீது தேசிய போலீஸ் படையினர் நடத்திய தாக்குதலைக் கண்டு ஐரோப்பிய நாடுகள் அதிர்ச்சி அடைந்துள்ளன. ஒரு ஜனநாயக நாட்டின் பிரதமர் இப்படியா அடக்குமுறையை ஏவுவார் என்று பல ஐரோப்பிய நாடுகள் வியப்பு தெரிவித்துள்ளன. ஆனால் ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட்டில், கேடலோனியா பிரிந்து செல்லக் கூடாது என்று வலியுறுத்தி ஏராளமானோர் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டனர்.

ஸ்பானிய அரசு பிரிவினைவாதிகளை ஒடுக்க வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தினர். ஸ்பெயினின் தேசியப் பத்திரிகைகளும்கூட பிரிவினைக்கு எதிராகவே எழுதின. தங்களுடைய கருத்துக்கு ஆதரவாக அரசியல் சட்டத்தை அவை மேற்கோள் காட்டின. பிரிவினைவாதிகளுடன் அரசு பேச வேண்டும் என்ற நடுநிலையாளர்களின் கோரிக்கைகளை நிராகரித்த தேசியப் பத்திரிகைகள், ஆட்சியைக் கவிழ்க்க நினைப்பவர்களுடன் அரசால் பேச முடியாது என்று எழுதின.

சுதந்திர நாடு கோரிக்கைக்கு 90% மக்களுடைய ஆதரவு இருப்பதாக கேடலோனிய அரசு அறிவித்துள்ளது. கேடலோனியர்களின் கோரிக்கையை மத்திய ஸ்பானிய அரசு ஏற்பதற்குத் தயாரில்லை என்பதால் இனி மோதல்களும் போராட்டங்களும் வேலைநிறுத்தங்களும் வழக்கமாகிவிடும் என்று தெரிகிறது. இது ஸ்பெயினின் பொருளாதாரத்துடன் ஐரோப்பியப் பொருளாதாரத்தையும் பாதிக்கும்.

சுமுகமாகக் கையாள வேண்டிய இந்த விவகாரத்தை இரும்புக்கரம் கொண்டு அடக்க விரும்புகிறார் பிரதமர் ரஜோய். ஸ்பெயின் நாட்டு அரசியல் சட்டத்தின் 155-வது பிரிவின் கீழ் நெருக்கடி நிலையை அறிவித்து, கேடலோனிய பிரதேச அரசின் நிர்வாகத்தை ஸ்பெயினின் மத்திய அரசே தன்னுடைய கைகளில் எடுத்துக்கொண்டுவிடும் என்று தெரிகிறது. பெல்ஜியம், ஸ்காட்லாந்து நாடுகளிலிருந்து மட்டும் ரஜோயின் நடவடிக்கைக்குக் கண்டனங்கள் எழுந்துள்ளன. பெரும்பாலான ஐரோப்பிய நாடுகள் இதை ஸ்பெயினின் உள்நாட்டு விவகாரம் என்று கூறி வருகின்றன. ரஜோய் இன்னொரு பிராங்கோவாக உருவாகி வருகிறார் என்கிறார்கள் கேடலோனிய ஆதரவாளர்கள்!

தமிழில்: சாரி, © தி இந்து ஆங்கிலம்

http://tamil.thehindu.com/opinion/columns/article19806810.ece

Categories: merge-rss, yarl-world-news

'நேட்' புயல்: மத்திய அமெரிக்க நாடுகளில் 20 பேர் பலி; யு.எஸ்.சையும் தாக்கும்

Fri, 06/10/2017 - 05:03
'நேட்' புயல்: மத்திய அமெரிக்க நாடுகளில் 20 பேர் பலி; யு.எஸ்.சையும் தாக்கும்

கோஸ்டா ரிகா, நிகரகுவா, ஹோண்டுராஸ் ஆகிய மத்திய அமெரிக்க நாடுகளில் 'நேட்' என்று பெயரிடப்பட்ட வெப்ப மண்டலப் புயலால் 20 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.

கோஸ்டா ரிகாவில் புயலால் கரைபுரண்டு ஓடும் ஓர் ஆறு.படத்தின் காப்புரிமைREUTERS Image captionகோஸ்டா ரிகாவில் புயலால் கரைபுரண்டு ஓடும் ஓர் ஆறு. இந்நாட்டில் உள்ள பல நகரங்கள் இப் புயலால் பாதிக்கப்பட்டுள்ளன.

இப்புயல் வலுவடைந்து ஒன்றாம் நிலை சூறாவளியாக மாறி, அமெரிக்காவின் தெற்குக் கடற்கரையை ஞாயிற்றுக்கிழமையைக் கடக்கும் என்று தட்பவெட்ப ஆய்வாளர்கள் கணித்துள்ளனர்.

குறிப்பிட்ட மத்திய அமெரிக்க நாடுகளில் இந்தப் புயலால் கடும் மழை, நிலச்சரி, வெள்ளம் ஆகியவை ஏற்பட்டு வீடுகள், பாலங்கள், சாலைகள் சேதமடைந்துள்ளன.

கோஸ்டா ரிகாவில் சுமார் 5,000 மக்கள் அவசரகால முகாம்களில் உறங்குகின்றனர். அந்நாட்டில் எல்லா ரயில் பயணங்களும், ஏராளமான விமானங்களும் வியாழக்கிழமை ரத்து செய்யப்பட்டுள்ளன.

வீடுகளுக்கு பலத்த சேதம்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionகோஸ்டா ரிகாவில் வீடுகளுக்கு பலத்த சேதம்.

சுற்றுலாப் பயணிகள் அதிகம் வரும் ஒரு டஜனுக்கும் மேற்பட்ட தேசியப் பூங்காக்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக இந்நாட்டில் மூடப்பட்டுள்ளன.

நிகரகுவாவில் கட்டமைப்பு வசதிகளில் பரவலான சேதத்தை ஏற்படுத்தியுள்ளது இப் புயல்.

புயலின் பாதையில் அமைந்துள்ள தங்கள் தளங்களில் இருந்து ஊழியர்களை திரும்ப அழைத்துவருவதாக மெக்சிகோ வளைகுடாவில் இயங்கிவரும் பெட்ரோலிய நிறுவனங்கள் கூறுகின்றன.

http://www.bbc.com/tamil/global-41521490

Categories: merge-rss, yarl-world-news

உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்­ளையை நடத்­து­வ­தற்­காக 600 மீற்றர் நீள­மான சுரங்கம் அமைத்த கொள்­ளை­யர்கள் – பிரேஸில் பொலி­ஸா­ரினால் கொள்ளை முயற்சி முறி­ய­டிப்பு

Thu, 05/10/2017 - 18:51
உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்­ளையை நடத்­து­வ­தற்­காக 600 மீற்றர் நீள­மான சுரங்கம் அமைத்த கொள்­ளை­யர்கள் – பிரேஸில் பொலி­ஸா­ரினால் கொள்ளை முயற்சி முறி­ய­டிப்பு

உலகின் மிகப் பெரிய வங்கிக் கொள்­ளையை நடத்­து­வ­தற்­காக 600 மீற்றர் (2000 அடி) நீள­மான சுரங்­க­மொன்றை தோண்­டிய கொள்­ளை­யர்­களை பிரேஸில் பொலிஸார் கைது செய்­துள்­ளனர்.

Brazil12.jpg
பிரேஸில் அர­சுக்குச் சொந்­த­மான பேங்கோ டோ பிரேஸில் (பிரேஸில் வங்கி) எனும் வங்­கியின் சாவோ பௌலோ நகர கிளை­யொன்றில் இக்­கொள்­ளையை நடத்­து­வ­தற்கு இக்­கு­ழு­வினர் திட்­ட­மிட்­டி­ருந்­த­தாக பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.

Brazil15.jpg
100 கோடி பிரேஸில் றியால்­களை (சுமார் 4877 கோடி இலங்கை ரூபா) அவ்­வங்­கியில் கொள்­ளை­ய­டிப்­பதே இக்­கு­ழு­வி­னரின் திட்­ட­மாக இருந்­தது எனவும் பிரேஸில் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர்.திட்­ட­மிட்­ட­படி இக்­கொள்ளை நடை­பெற்­றி­ருந்தால் அது உலகின் மிகப் பெரிய வங்­கிக்­கொள்­ளை­யாக இருந்­தி­ருக்கும்.

Brazil1.jpg
ஆனால், பிரேஸில் பொலி­ஸாரின் நட­வ­டிக்­கை­யினால் இக்­கொள்ளை முயற்சி முறி­ய­டிக்­கப்­பட்­டுள்­ளது. இக்­கொள்ளை முயற்சி தொடர்­பாக 16 பேர் கைது செய்­யப்­பட்­டுள்­ளனர்.

Brazil14.jpg
கொள்­ளையர் குழு­வினர் வங்கிக் கொள்­ளைக்­காக 4 மாத கால­மாக 600 மீற்றர் நீள­மான சுரங்­கப்­பா­தை­யொன்றை தோண்­டி­யதை பொலிஸார் கண்­டு­பி­டித்­துள்­ளனர். இக்கொள்ளை நடவடிக்கைக்காக 10 லட்சம் றியால்களை (சுமார் 4.88 கோடி ரூபா) செலவிட்டதாகவும் தெரியவந்துள்ளது.

http://metronews.lk/?p=14915

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 05/10/17

Thu, 05/10/2017 - 17:19

 

 

நீடிக்கும் போராட்டங்களுக்கு இடையே பேச்சுவார்த்தைக்கு அழைக்கும் கெடலோனிய அதிபர்! ஆனால் சமாதானத்துக்கு முன் கெடலோனியா சட்டத்தை மதிக்கவேண்டும் என்கிறது ஸ்பெய்ன்! தீவிரவாத கருத்துக்களை இணையம் மட்டுமே விதைக்கிறதா? பாரம்பரிய ஊடகமும் அதையே செய்கிறதா? ஆராயும் செய்தித் தொகுப்பு மற்றும் தண்ணீருக்கு நடுவே தனித்தீவில் வாழத்தயாரா?ஆளில்லா தீவில் குடியேற ஆள் தேடும் பிரான்ஸ் அரசு குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்

Thu, 05/10/2017 - 16:28
6 மாதத்தில் உத்தரப்பிரதேசத்தில் 433 என்கவுண்டர்கள்

உத்தரப்பிரதேச மாநில அரசு நூற்றுக்கணக்கான சட்டவிரோத கொலைகளை செய்துள்ளதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது. பத்திரிக்கையாளர் சரத் பிரதான் இதுகுறித்து விவரிக்கிறார்.

ஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி அளித்திருந்ததுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஆட்சிக்கு வந்தால் குற்றச் சம்பவங்களைக் குறைப்போம் என்று ஆதியநாத்தின் பா.ஜ.க உறுதி அளித்திருந்தது

பாரதிய ஜனதா கட்சியைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராகப் பதவியேற்ற மார்ச் 2017-க்குப் பிறகு, 433 என்கவுண்டர்கள் நடைபெற்றுள்ளதாக அந்த மாநில அரசின் அதிகாரபூர்வப் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

அநாமேதேயமாக பிபிசியிடம் பேசிய அதிகாரிகள், மாநிலத்தில் அதிகரித்து வரும் குற்றச் செயல்களின் எண்ணிக்கையே முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் இப்படி ஒரு முடிவை எடுக்கத் தூண்டியது என்று கூறினர்.

  •  

அரசாங்கம் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பு அவற்றை ஒரு 'சாதனை' என்று குறிப்பிட்டுள்ளதுடன் மாநிலத்தின் 'சட்டம் - ஒழுங்கு நிலை முன்னேறி வருவதற்கான ஆதாரம்' என்றும் கூறுகிறது.

இந்தியாவிலேயே அதிக மக்கள் தொகையை உடைய அந்த மாநிலத்தில் 22.2 கோடி பேர் வசிக்கின்றனர். கொடுமையான வன்முறை, கிளர்ச்சி மற்றும் பாலியல் வன்புணர்வு சம்பவங்களுக்காக உத்தரபிரதேசம் பெரும்பாலான நேரங்களில் செய்திகளில் இடம்பெற்றுள்ளது.

80 நாடாளுமன்ற உறுப்பினர்களை மக்களைவைக்கு அனுப்பும் இந்த மாநிலம் அரசியல் செல்வாக்கு மிக்கதும்கூட. மாநிலத்தில் குற்றங்களின் எண்ணிக்கையை குறைக்கப்போவதாக தேர்தல் சமயத்தில் பா.ஜ.க உறுதி அளித்தது.

உத்திரப்பிரதேச காவல் துறைபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறது

ஆனால், பா.ஜ.க மத்தியில் ஆட்சிக்கு வந்த 2014-ஆம் ஆண்டுக்குப் பின்னர் அங்கு குற்றச் சம்பவங்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

அம்மாநில அரசின் குற்ற ஆவணங்களின்படி, 2017-இல் ஜனவரி முதல் ஆகஸ்ட் வரையிலான காலகட்டத்தில் அங்கு 3,000 பாலியல் வல்லுறவு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. 2016-இல் அதே காலகட்டத்தில் அந்த எண்ணிக்கை 2,376 ஆக இருந்தது.

கொலைச் சம்பவங்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ளது. ஆனால், வன்முறை மற்றும் திருட்டு சம்பவங்கள் கணிசமாக உயர்ந்துள்ளன. பெண்கள் மற்றும் தலித்துகளுக்கு எதிரான குற்றங்களும் அதிகரித்துள்ளன.

தான் ஆட்சிக்கு வந்ததும், பொது இடங்களில் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களைக் குறைக்க காவல் துறையினரைக் கொண்டு 'ஆன்டி-ரோமியோ' குழுக்களை (anti-romeo squads) அமைத்தார் ஆதித்யநாத். ஆனாலும், பாலியல் குற்றங்கள் அவர் பதவியேற்றபின் அதிகரித்துள்ளன.

இது ஆதியநாத்தை தடுமாற வைத்தது என்று அதிகாரிகள் கூறுகின்றனர். அறிவிப்புகள் அம்மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றாது என்பதை அவர் உடனடியாக உணர்ந்தார் என்றும் அவர்கள் மேலும் தெரிவித்தனர்.

கூட்டுப் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகூட்டுப் பாலியல் வல்லுறவால் பாதிக்கப்பட்ட உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த ஒரு பெண்

அரசாங்கத்தின் உயர் பொறுப்பில் இருந்த அதிகாரிகள் இப்பிரச்னையைத் தீர்க்க வியூகம் வகுத்துக்கொண்டிருந்த நிலையில், என்கவுண்டர்கள் செய்வது தீர்வாக அமையும் என்றும், தற்போதைய தேவையாக இருக்கும் தன் அரசின் மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கவும் இது உதவும் என்றும் அவர் நம்பியதாக அதிகாரிகள் கூறினர்.

முன்னாள் பிரதமர் வி.பி. சிங் உத்தரபிரதேச முதலமைச்சராக 1980களில் இருந்தபோது, வழிப்பறிக் கொள்ளையர்களைக் குறிவைத்து பல என்கவுண்டர்கள் நிகழ்த்தப்பட்டதன் பின் எழுந்த பரவலான விமர்சனங்களால் அவர் பதவி விலகினார்.

45 வயதாகும் யோகி ஆதியநாத்துக்கு சர்ச்சைகள் ஒன்றும் புதிதல்ல. ஐந்து முறை மக்களவைக்கு தேர்வு செய்யப்பட்ட இந்து சாமியாரான அவர் சமூகப் பிரிவினையைத் தூண்டக்கூடிய இந்திய அரசியல்வாதிகளில் ஒருவராகப் பார்க்கப்படுகிறார். பல சமயங்களில், குறிப்பாக தேர்தல் பொதுக்கூட்டங்களில் இஸ்லாமியர்களுக்கு எதிராக பேசியதற்காக அவர் கண்டனத்துக்கு உள்ளாகியுள்ளார்.

உத்தரபிரதேசத்தில் நிகழும் குற்றச்சம்பவங்கள் பற்றிய கவலை அண்டை மாநிலமான டெல்லிக்கும் பரவி வருவதால், 2019-இல் நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் பா.ஜ.கவைப் பாதிக்கும் என்ற கவலை எழுந்துள்ளது.

பிபிசியிடம் பேசிய உயர் அதிகாரிகளும், காவல் துறையினரும் அந்த நடவடிக்கைகள் உத்தரபிரதேச அரசு மீதான நம்பகத்தன்மையை அதிகரிக்கத் தவறியுள்ளதாகத் தெரிவித்தனர்.

"இந்த என்கவுண்டர்களால் காவல் துறையினருக்கு ஒரு கற்பனையான மகிழ்ச்சி கிடைத்ததே ஒழிய, அரசு மீது எந்த நம்பிக்கையையும் ஏற்படுத்தவில்லை. சொல்லப்போனால், அவை மாநிலத்தில் சட்டத்தின் ஆட்சியை சிறுமைப்படுத்தியுள்ளன," என்று அநாமதேயமாக பிபிசியிடம் பேசிய ஒரு இளம் காவல் அதிகாரி தெரிவித்தார்.

சட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறதுபடத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionசட்டம் - ஒழுங்கு நிலையை முன்னேற்றவே 433 என்கவுண்டர்கள் செய்யப்பட்டதாக உத்திரப்பிரதேச காவல் துறை கூறுகிறது

433 நபர்கள் உயிரிழந்ததற்கு தனது அரசு பதில் சொல்லியாக வேண்டும் என்று ஆதியநாத் உணர்ந்தபோது, எல்லா என்கவுண்டர்களும் 'கொலைகள்' அல்ல என்று அதிகாரிகள் கூற ஆரம்பித்தனர்.

"காவல் துறையினரை எதிர்த்தவர்களும், தப்பியோட முயன்றவர்களுமே சுட்டுக்கொல்லப்பட்டனர்," என்று ஒரு மூத்த காவல் அதிகாரி கூறினார்.

அந்த 433 என்கவுண்டர் சம்பவங்களில் 19 குற்றவாளிகள் மட்டுமே கொல்லப்பட்டனர் என்றும் 89 பேர் காயமடைந்தனர் என்றும் அவர்கள் இப்போது கூறுகின்றனர்.

காவல் துறையைச் சேர்ந்த ஒருவர் உயிரிழந்ததாகவும், 98 பேர் காயமடைந்ததாகவும் அரசின் ஆவணங்கள் தெரிவிக்கின்றன.

இந்தக் கூற்றுக்கள், மாநிலத்தின் சட்டம் - ஒழுங்கு நிலை பற்றிய கண்ணோட்டத்தை மாற்ற விரும்பும் உத்தரப்பிரதேச அரசின் நோக்கத்தை நிறைவேற்ற உதவுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும்.

http://www.bbc.com/tamil/india-41514141

Categories: merge-rss, yarl-world-news

'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி

Thu, 05/10/2017 - 10:08
'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' ஸ்டீபனின் திட்டம் தெரியாது: காதலி
 
பேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி Image captionபேடக் உடன் நவேடாவில் வசித்து வருகிறார் டான்லி

கடந்த ஞாயிறன்று அமெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த இசை நிகழ்ச்சியில் துப்பாக்கிச்சூடு நடத்தி 58 நபர்களை கொன்ற ஸ்டீப் பேடக்கின் காதலி, தன் 'அன்பான, அக்கறையுள்ள, அமைதியான' காதலர் என்ன திட்டமிட்டுக் கொண்டிருந்தார் என்பது குறித்து தனக்கு ஒன்றுமே தெரியாது என கூறியுள்ளார்.

ஸ்டீபன் பேடக் ஓர் ரகசிய வாழ்க்கை வாழ்ந்து வந்ததாக போலீஸார் தெரிவிப்பதற்கு சிலமணி நேரங்கள் முன்னதாக மரிலோ டான்லியின் இந்த கருத்துக்கள் வெளியாயின.

  •  
  •  

தன்னைத்தானே சுட்டுக்கொல்வதற்கு பதிலாக துப்பாக்கிச் சூட்டிற்குபின் தப்பிவிட பேடக் திட்டமிட்டிருக்கலாம் என்று தெரிவித்துள்ள போலீஸார் தொடர்ந்து மேலதிக தகவல்களை கூற மறுத்துவிட்டனர்.

திறந்தவெளி இசைக்கச்சேரி நிகழ்வில் பேடக் எதற்காக கொடூரமான துப்பாக்கிச்சூட்டை நடத்தினார் என்பதற்கான காரணம் இதுவரை தெளிவாகப் புலப்படவில்லை.

அமெரிக்காவின் நவீன வரலாற்றில் மிக மோசமான துப்பாக்கிச்சூடு சம்பவமாக இது பார்க்கப்படுகிறது.

புதன்கிழமையன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய கிளார்க் கவுண்ட்டியின் ஷெரிஃப் ஜோ லொம்பார்டோ, விடுதியில் பேடக்கின் காரில் நிறைய வெடி பொருட்களை போலீஸ் கண்டுபிடித்ததாகவும், அதனோடு சுமார் 1,600 சுற்று துப்பாக்கித் தோட்டாக்களைக் கைப்பற்றியதாகவும் அவர் தெரிவித்தார்.

துப்பாக்கிச்சூடு நடத்துவதற்கு சில மணி நேரம் முன்பு பேடக் சூதாட்டம் விளையாடியுள்ளார்.

ஒருவாரத்திற்கு முன்புதான் லாஸ் வேகஸில் உள்ள ஒக்டென் விடுதியில், வேறொரு திறந்தவெளி இசை நிகழ்ச்சியை மேலிருந்து பார்க்கும் வகையில் ஓர் அறையை முன்பதிவு செய்திருந்தார் பேடக்.

அவருக்கு தீவிரவாதத் தொடர்பு இருப்பதாக எந்த ஆதாரமும் இதுவரை கண்டறியப்படவில்லை என்று எஃப் பி ஐ தெரிவித்துள்ளது.

நேற்று (புதன்கிழமை) பிலிப்பைன்ஸ் விடுமுறை ஒன்றை முடித்துவிட்டு தானாகவே நாடு திரும்பிய டான்லி எஃப் பி ஐயிடம் பேசிய போது,பேடாக் இழைத்தது சொற்களால் வர்ணிக்க முடியாத கொடூரமான வன்செயல் என்று கூறியுள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41508265

Categories: merge-rss, yarl-world-news

அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை!

Thu, 05/10/2017 - 05:43
அமெரிக்காவின் துப்பாக்கிக் கலாச்சாரம்: ஒரு வரலாற்றுப் பார்வை!

 

 
05CHVCM-EDIT1-LASVEGAS-SHOOTING

மெரிக்காவின் லாஸ் வேகாஸ் நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் 58 பேர் கொல்லப்பட்ட சம்பவம் இதுவரை நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்களிலேயே மிக மோசமானது என்று கருதப்படுகிறது. உலகின் மக்கள் தொகையில் அமெரிக்க மக்களின் பங்கு 5%-க்கு சற்றே குறைவு. ஆனால், சொந்தமாக வைத்திருக்கும் துப்பாக்கிகளில் கிட்டத்தட்ட பாதி அமெரிக்கர்கள் கைகளில். கடந்த ஐந்து ஆண்டுகளில் 1,500- க்கும் அதிகமான துப்பாக்கிச் சூட்டு நிகழ்வுகள் நடந்திருக்கின்றன; கிட்டத்தட்ட நாளுக்கொன்று ஒரு துப்பாக்கிச் சூடு. ஜெர்மனி, பிரான்ஸ், கனடா போன்ற நாடுகளில் துப்பாக்கிச் சூட்டினால் நடக்கும் கொலைகளின் மொத்த எண்ணிக்கையை விட அதிக உயிர்ப் பலிகள் நடப்பது அமெரிக்காவில்தான்.

துப்பாக்கி மீதான கட்டுப்பாடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் துப்பாக்கிச் சூட்டுக் கொலைகள் குறைவாக இருப்பது தெளிவாகத் தெரிகிறது. அப்படியானால், துப்பாக்கிக் கட்டுப்பாட்டைக் கொண்டுவந்துவிட வேண்டியதுதானே; ஒரு வல்லரசு தேசத்தால் இதைச் செய்ய முடியாதா எனும் கேள்வி தோன்றலாம். எளிதாகச் செய்ய முடியாது என்பதே உண்மை. அதை அறிந்துகொள்ள அமெரிக்காவின் துப்பாக்கி மீதான காதலின் வரலாற்றைப் பார்க்க வேண்டியது அவசியம்.

 

ஆயுத உரிமை

18-ம் நூற்றாண்டில் பிரிட்டிஷ் அரசிடமிருந்து விடுதலை பெறுவதற்கான அமெரிக்க புரட்சிப் போர் நமக்குத் தெரியும். விடுதலைக்காக போராடிய அமெரிக்கத்த் தரப்பு அரசியல் ரீதியாகத் தங்களைக் கட்டமைத்துக்கொள்ள முடிந்தாலும், ஒட்டு மொத்த ராணுவத்தை உருவாக்கி, பேணிக்காக்க முடியவில்லை. எனவே, ‘மிலிஷியா’ எனப்படும் தனியார் ராணுவக் குழுக்களைக் கொண்டே போர் நடத்தப்பட்டது. விடுதலைக்குப் பிறகும் குழுக்கள் தொடர்ந்து அமெரிக்காவின் அங்கமாகவே கருதப்பட்டன. இதற்கு மிக முக்கிய காரணம் உண்டு. அமெரிக்காவின் பிதாமகர்களாகக் கருதப்படும் பலரும் மன்னராட்சியின் கீழ் இருந்தவர்கள். கிறிஸ்தவ மதம் மன்னராட்சிகளை எப்படிக் கட்டுப்படுத்தியது என்பதன் அவலத்தை நன்குணந்தவர்கள். எனவே, அரசு என்பது கட்டுப்பட்டதாகவும், மதத்தை விட்டு பிரிக்கப்பட்டதாகவும் இருக்க வேண்டும் என்பதையும் முழுமையாக நம்பினார்கள். அதன் அடிப்படையில், தனித்தியங்கும் ராணுவக் குழுக்கள் சமூகத்தின் பாதுகாப்புக்கு அவசியம் என்ற எண்ணம் அரசியலமைப்புச் சட்டத்தை எழுதியவர் களுக்கு இருந்தது. அடிப்படையான அமெரிக்க அரசியலமைப்புச் சட்டம் எழுதப்பட்டு, அதைத் தொடர்ந்து 10 சீர்திருத்த மேம்பாடுகள் கொண்டுவரப்பட்டன. உரிமைகளுக்கான மசோதா என அழைக்கப்படும் இந்த அடிப்படை உரிமைகள் சார்ந்த சீர்திருத்தங்களின் இரண்டாவது இடத்தில் இருப்பது துப்பாக்கி வைத்துக்கொள்ளும் உரிமை.

“நன்றாக ஒழுங்கமைக்கப்பட்ட மிலிஷியா, ஒரு சுதந்திர அரசின் பாதுகாப்பிற்கு அவசியம், ஆயுதங்களை மக்கள் வைத்திருப்பதற்கான உரிமை மீறப்படலாகாது” என்கிறது அந்த இரண்டாம் சட்டத் திருத்தம்.

18-ம் நூற்றாண்டின் கடைசியில் எழுதப்பட்ட இந்த அடிப்படை உரிமை இன்று வரை அப்படியே நீடிக்கிறது. அமெரிக்கர்களின் ஊனிலும் உயிரிலும் கலந்திருக்கும் இந்த உரிமை இந்த சமூக ஆன்மாவின் இருளாக மாறிவிட்டது பெரும் சோகம். பெரும்பாலான மாகாணங்களில் சாதாரணப் பொருட்கள் வாங்கும் ‘வால்மார்ட்’ போன்ற வணிகத் தளங்களில் துப்பாக்கி மற்றும் தோட்டாக்களை எளிதாக வாங்க முடியும்.

துப்பாக்கி உரிமையைக் கட்டுப்படுத்தியாக வேண்டும் என்று விரும்புபவர்கள் எடுத்து வைக்கும் கருத்துக்கள் :

1. 150 ஆண்டுகளுக்கு முன்னால் துப்பாக்கி என்ற ஆயுதத்தின் தொழில்நுட்பம் மிகவும் பின்தங்கியிருந்தது. இன்றைய நாட்களில் நொடிக்கு நூறு தோட்டாக்கள் தானாகவே பாயும் தானியங்கும் துப்பாக்கிகள் வந்துவிட்டன. ராணுவத்தினருக்கு இந்த வகை ஆயுதங்கள் தேவையே. ஆனால், பொது மக்களுக்கு இது போன்ற கன ரக ஆயுதங்கள் தேவையேயில்லை.

2. அடிப்படை உரிமை என்பதால் வாங்குபவர் யார், அவரது பின்னணி என்ன, மனச்சிக்கல்/நோய் ஏதேனும் இருக்கிறதா என்பதையெல்லாம் ஆராய்ந்து அறிய முடியவதில்லை. இது முற்றிலும் தவறானது. காரணம், பல துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடத்தியவர்கள் மனப்பிறழ்வு நோய் உள்ளவர்கள் என்பது கண்டறியப்பட்டுள்ளது. இப்படிப் பல.

துப்பாக்கி உரிமையில் கை வைக்க யாருக்கும் உரிமையில்லை என்பவர்களின் ஒரே வாதம் - “துப்பாக்கி மனிதர்களைக் கொல்வதில்லை; மனிதர்களே மனிதர்களைக் கொல்கிறார்கள்”. வீடு புகுந்து நடத்தப்படும் கொள்ளைச் சம்பவங்களில் வீட்டு உரிமையாளர் துப்பாக்கியின் உதவியுடன் தங்களைத் தற்காத்துக்கொண்ட சம்பவங்களைத் தங்கள் வாதத்தில் முன்வைக்கிறார்கள் இவர்கள்.

துப்பாக்கி உரிமைக்காகக் குரலெழுப்புவதில் மிக முக்கிய நிறுவனம் ‘தேசிய துப்பாக்கி சங்கம்’ (என்.ஆர்.ஏ.) பண பலம் மிகுந்த இந்த நிறுவனம் தேர்தல்களின்போது, தங்களது கொள்கைகளுக்குச் சாதகமாக இருக்கும் வேட்பாளர்களை ஆதரித்து அவர்களது தேர்தல் பணிக்கு நிதி கொடுக்கிறது. குறிப்பாக, அதிபர் தேர்தலில் இந்த நிறுவனத்தின் சார்பு மிகக் கூர்மையாக உற்றுநோக்கப்படும். சென்ற தேர்தலில், ஹிலாரி கிளிண்டனுக்கு மிகக் கடுமையான எதிர்ப்பு நிலைப்பாட்டை எடுத்தது என்.ஆர்.ஏ. வெளியுறவுத் துறைச் செயலாளராக ஹிலாரி பதவி வகித்தபோது துப்பாக்கிக் கட்டுப்பாடுகளுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவித்ததுதான் காரணம்.

 

இஸ்லாமிய வெறுப்பு

அமெரிக்கா பூகோளரீதியில் ஆசிர்வதிக்கப்பட்ட நாடு. இரு புறமும் நீண்ட கடல்பரப்பு. மேலும், கீழும் நட்புத்தோழமை பாராட்டும் அண்டை நாடுகள் என இயற்கையாகப் பாதுகாக்கப்பட்டிருக்கும் நாடு. இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் தெரிந்தோ தெரியாமலோ உலகின் சச்சரவுகளில் இடைபட்டுக் கொண்டே இருக்க வேண்டிய நிர்பந்தம் என்பதால், இந்த நாட்டின் எல்லைகளுக்கு வெளியே எதிரிகள் உண்டு. குறிப்பாக, ஐஎஸ் போன்ற அமைப்புகள். “ லாஸ் வேகாஸ் சம்பவத்தில் துப்பாக்கிச் சூட்டை நடத்தியது ஒரு இஸ்லாமியராக என்ன நடந்திருக்கும்? அதிபர் ட்ரம்ப் தொடந்து உறுமியபடி இருப்பார்; காங்கிரஸ் கூட்டப்பட்டுத் தீவிர விசாரணைகள் ஆரம்பித்திருக்கும். இஸ்லாமிய சமூகம் மீது வெறுப்புச் சம்பவங்கள்கூட நடந்திருக்கும்” என்று தாமஸ் எல். ஃப்ரீட்மேன் ‘தி நியூயார்க் டைம்ஸ்’ இதழில் எழுதியிருக்கிறார். ஆனால், இந்தச் சம்பவத்தில் ஈடுபட்டவர் ஸ்டீபன் பேடாக் என்ற சராசரி கிறிஸதவ வெள்ளையின அமெரிக்கர். “சம்பவம் துயரமளிக்கிறது” என்ற ‘ட்வீட்’டோடு முடித்துக்கொண்டுவிட்டார் ட்ரம்ப்.

ஆக, மீண்டும் ஒரு துப்பாக்கிச் சூடு. மீண்டும் ஒரு துர் மரணக் கொலை வைபவம். இரண்டு நாட்கள் ஊடகங்களும் மக்களும் பரபரப்பாகப் பேசுவார்கள். பின்னர் கலைந்து சென்றுவிடுவார்கள். அதிபரே சம்பிரதாயத் துக்கத்தை ட்விட்டரில் அனுப்பி கால்ஃப் விளையாடச் சென்றுவிட்டார். மீண்டும் இது போன்றே சம்பவம் ஒன்று நடக்கும். மீண்டும் பேசுவார்கள்; கலைவார்கள். இஸ்லாமியர் ஒருவர் சம்பந்தப்படாதவரை அதிபரும் நாடாளுமன்றமும் சம்பிரதாய துக்கங்களை ஒற்றை வரிகளில் சொல்லி தங்கள் வேலைகளில் மூழ்குவார்கள். இது அமெரிக்காவின் சமகால வரலாறு!

http://tamil.thehindu.com/opinion/columns/article19800731.ece

Categories: merge-rss, yarl-world-news

அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்

Thu, 05/10/2017 - 05:12
அதிபர் டிரம்புடன் மோதலா?; மறுக்கும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர்
அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன்படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை - அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஒரு முட்டாள் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை செயலர் ரெக்ஸ் டில்லர்சன் கூறியதாக ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த நிலையில், டிரம்புடன் உரசல் ஏற்பட்டுள்ளதாக கூறப்படும் வதந்தியை டில்லர்சன் மறுத்துள்ளார்.

தான் தெரிவித்ததாக கூறப்படும் கருத்துக்களுக்கு மறுப்பு தெரிவிக்காத ரெக்ஸ் டில்லர்சன், ''இதுபோன்ற சில்லறை விஷயங்களில் தான் தலையிடப்போவதில்லை,'' என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து ரெக்ஸ் டில்லர்சன் பரிசீலித்ததாக என் பி சி நிறுவனம் செய்தி வெளியிட்டதை தொடர்ந்து, செய்தியாளர் சந்திப்பு ஒன்றுக்கு டில்லர்சன் அழைப்பு விடுத்தார்.

டிரம்பின் நிர்வாகத்திற்கு தான் அளித்துள்ள கடமை எப்போதும் உறுதியாக இருக்கும் என்றும், தனது தேவை இருக்கும்வரை டிரம்ப் நிர்வாகத்தில் தான் தொடர்ந்து இருப்பேன் என்றும் அந்த சந்திப்பின்போது ரெக்ஸ் டில்லர்சன் திட்டவட்டமாக கூறினார்.

முன்னர், என் பி சி செய்தி நிறுவனம், வெள்ளை மாளிகையிலிருந்து பெறப்பட்ட தகவல்கள் என்று குறிப்பிட்டு வெளியிட்ட செய்தியில், கடந்த ஜூலை மாதம் ரெக்ஸ் டில்லர்சன் தனது பதவியை ராஜினாமா செய்வது குறித்து பேச்சுவார்த்தை நடத்தியதாக கூறியிருந்தது.

மேலும், அதிபர் டொனால்ட் டிரம்புடனான உரசல் நிலையிலுள்ள பதற்றத்தை தணிக்கும் நோக்கில், ரெக்ஸ் டில்லர்சனுக்கு துணை அதிபர் மைக் பென்ஸ் அறிவுரை வழங்கியதாகவும் என் பி சி வெளியிட்ட செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டிருந்தது.

ஆனால், இந்த செய்தியை ரெக்ஸ் டில்லர்சன் மறுத்துள்ளார்.

http://www.bbc.com/tamil/global-41508260

Categories: merge-rss, yarl-world-news

`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்'

Wed, 04/10/2017 - 19:41
`சில தினங்களில் கேட்டலோனியா சுதந்திரம் குறித்து அறிவிக்கப்படும்'
ஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பேபடத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES Image captionஸ்பேனிஷ் ஒற்றுமையை வலியுறுத்திய அரசர் ஆறாம் ஃபெலிப்பே

கேட்டலோனியா இன்னும் சில தினங்களில் தன் சுதந்திரத்தை அறிவிக்கும் என்று, தன்னாட்சி அதிகாரம் கொண்ட அந்த மாகாணத்தின் தலைவர் பிபிசியிடம் தெரிவித்தார்.

ஸ்பெயினிலிருந்து பிரிந்து சென்று தனி நாடு அமைத்துக் கொள்வதற்கான வாக்கெடுப்பு ஞாயிற்றுக்கிழமை நடந்தது.

அந்த வாக்கெடுப்பிற்கு பின் முதன்முதலாக பிபிசி-க்கு பேட்டி அளித்த கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன், சுதந்திரத்தை அறிவிப்பது தொடர்பான விஷயத்தில் இந்த வார இறுதி அல்லது அடுத்த வாரத் தொடக்கத்திற்குள் எமது அரசு செயலில் இறங்கும் என்றார்.

ஸ்பேனிஷ் அரசாங்கம் தலையிட்டு தன்னுடைய கட்டுப்பாட்டில் கேட்டலோனியா அரசாங்கத்தை கொண்டு வந்தால் என்ன செய்வீர்கள் என்ற நம் கேள்விக்கு பதிலளித்த பூஜ்டிமோன், "அது எல்லாவற்றையும் மாற்றும் பெரும் பிழையாக இருக்கும்" என்றார்.

மேலும் அவர், தற்சமயம் கேட்டலோனியா நிர்வாகத்திற்கும், மேட்ரிடில் இயங்கும் மைய அரசிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்றார்.

சட்டத்திற்கு புறம்பான செயல்

அதே சமயத்தில், இந்த வாக்கெடுப்பு குறித்து கருத்து தெரிவித்த ஸ்பெயினின் அரசர் ஆறாம் ஃபெலிப்பே , இந்த வாக்கெடுப்பை ஒருங்கிணைத்தன் மூலம் அவர்கள் சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டு இருக்கிறார்கள் என்றார்.

தொலைக்காட்சியில் உரை நிகழ்த்திய அரசர், வாக்கெடுப்பின் ஒருருங்கிணைப்பாளர்கள் அரசின் அதிகாரத்திற்கு அவமரியாதை செய்திருக்கிறார்கள். சட்டத்தின் ஆட்சிக்கான ஜனநாயக கோட்பாடுகளை மீறி இருக்கிறார்கள் என்றார்.

  •  

மேலும் அவர், இந்த வாக்கெடுப்பானது வளமான வடகிழக்கின் பொருளாதாரம் உட்பட மொத்த ஸ்பெயினின் பொருளாதாரத்திற்கே சேதங்களை ஏற்படுத்தலாம் என்றார். அதே நேரம், இந்த கடினமான காலத்திலிருந்து ஸ்பெயின் மீண்டு வரும் என்பதை அழுத்தமாக தெரிவித்தார்.

ஸ்பெயினின் நிலை மிகவும் மோசமாக இருக்கிறது என்ற அவர், ஒற்றுமைக்காக அழைப்பு விடுத்தார்.

ஸ்பெயினின் மத்திய அரசு இந்த வாக்கெடுப்பையே சட்டவிரோதமானது என்று விவரித்து இருக்கிறது.

மக்கள் ஆர்ப்பாட்டம்

வாக்கெடுப்பு நாளன்று ஸ்பேனிஷ் போலீஸ் தாக்கியதில் 900-க்கும் அதிகமானோர் காயமடைந்தனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது.

கேட்டலோனியா முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் செவ்வாய்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்படத்தின் காப்புரிமைREUTERS Image captionஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்ட மக்கள்

பார்சிலோனாவில் மொத்தவிலை கடைகள் மூடப்பட்டன. அந்த பகுதியிலிருந்த 770 உணவகங்கள் மூடப்பட்டதால், அந்த பகுதியே ஆள் அரவமற்று காணப்பட்டது.

கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் மற்றும் மருத்துவ நிலையங்கள் மூடப்பட்டு இருந்தன அல்லது குறைந்த அளவில் இயங்கின.

மூடப்பட்ட கடைகள்படத்தின் காப்புரிமைEPA Image captionமூடப்பட்ட கடைகள்

ஆனால், எல் பிராட் விமான நிலையம் வழக்கம் போல இயங்கியது.

 

http://www.bbc.com/tamil/global-41494800

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 04/10/17

Wed, 04/10/2017 - 17:05

 

கேட்டலான் பிராந்திய காவல்துறைத் தலைவர் சந்தேகநபராக நேரில் வந்து ஆஜராகும்படி ஸ்பெய்ன் உச்சநீதிமன்றம் உத்தரவு! கேட்டலான் பிரிவினைக்கான சர்ச்சைக்குரிய வாக்கெடுப்பால் உருவான மோதல் முற்றுகிறது!! இலக்குவைக்கப்படும் அமெரிக்க துப்பாக்கிச் சட்டங்கள்! லாஸ் வேகாஸில் நடந்த கொடூர துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியானதால் சூடுபிடிக்கும் விவாதம்!! மற்றும் பிரிட்டனின் தேசத்துரோகி; ரஷ்யாவிலோ அவர் கதாநாயகன்! அமெரிக்க பிரிட்டன் ரகசியங்களை தனக்களித்த பிரிட்டன் உளவாளியை போற்றி மாஸ்கோவில் கண்காட்சி!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர்

Wed, 04/10/2017 - 16:44
பிரெக்சிற்றுக்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் – ஸ்கொட்லாந்து அமைச்சர்

scot.png

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
உடன்படிக்கை எதுவும் ஏற்படாத நிலையிலேயே  பிரித்தானியா  ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் என தெரிவித்துள்ள ஸ்கொட்லாந்தின் அமைச்சர் பிரித்தானியா   வெளியேறுவதற்கு முன்னர் தற்போதைய அரசாங்கம் கவிழக்கூடும் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்கொட்லாந்தின் , பிரித்தானியா   ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விவகாரத்திற்கான அமைச்சர் மைக்கல் ரசல் இதனை தெரிவித்துள்ளார்.

உடன்பாடு எதுவும் ஏற்படாத நிலையில்  பிரித்தானியா     வெளியேறுவதற்கான வாய்ப்புகள் அதிகளவிற்கு காணப்படுகின்றன என அவர் தெரிவித்துள்ளார் அதற்கு முன்னர் இந்த அரசாங்கம் கவிழ்வதற்கான வாய்ப்புகளும் புதிய அரசாங்கம் பதவியேற்பதற்கான வாய்ப்புகளும் உள்ளன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய அரசாங்கம் ஓன்று ஆட்சிக்குவந்தால் அது எவ்வாறான நிலைப்பாட்டை பின்பற்றும் என்பது தெரியவில்லை எனத் தெரிவித்துள்ள அவர் பிரித்தானியா   வெளியேறுவது ஸ்கொட்லாந்தின் எதிர்காலத்திற்கு ஆபத்தான விடயம் எனவும் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/43890

Categories: merge-rss, yarl-world-news

இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

Wed, 04/10/2017 - 07:16
இந்திய-சீன எல்லை சர்ச்சை: சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை
 
இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

இந்தியாவும், சீனாவும் உலகின் சக்தி வாய்ந்த நாடுகள் மட்டுமல்ல, அண்டை நாடுகளும்கூட.

இரு நாடுகளுக்கு இடையில் எல்லை தொடர்பான சர்ச்சை தொடர்கிறது. உதாரணமாக டோக்லாமை கூறலாம்.

ஆனால், இந்திய-சீன எல்லையில் இருக்கும் இந்த இடத்தின் வழியாக சீன ராணுவத்தினர் இந்தியப் பகுதிக்கும், இந்தியர்கள் சீனப்பகுதிக்கும் சென்று வருவதை பார்க்க முடியும்.

இதுபற்றி விரிவாக தெரிந்துகொள்வதற்காக அருணாச்சல பிரதேசத்திற்கு சென்றோம்.

விடுதியோ தங்குவதற்கு சத்திரமோ இல்லை

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

அசாம் மாநிலத் தலைநகர் கெளஹாத்தியிலிருந்து இரவு முழுவதும் பயணம் செய்து திப்ருகர் வழியாக தின்சுக்கியாவை அடைந்தோம்.

அருணாச்சல பிரதேசத்தின் எல்லை இங்கிருந்து இரண்டு மணி நேர பயணத் தொலைவில் உள்ளது. இங்கேயே மலைப்பகுதிகள் தொடங்கிவிடுகின்றன. அருணாச்சல பிரதேசத்தின் எந்த பகுதிக்கும் அனுமதி இல்லாமல் செல்லமுடியாது.

மலையுச்சியில் இருக்கும் ஹாயோலாங் நகரை அடைவதற்கு பத்து மணி நேரம் ஆனது. இங்கு தங்கும் விடுதிகளோ, சத்திரங்களோ எதுவுமே இல்லை. பல இடங்களில் அலைந்த பிறகு, அரசினர் விடுதியில் தங்க இடம் கிடைத்தது.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

ஆபத்தான மலையேற்றம்

"நீங்கள் மலைப்பாதை வழியாக சீன எல்லைக்கு செல்லப்போகிறீர்களா? இது நிலச்சரிவு அடிக்கடி ஏற்படும் பகுதி" என்று அங்கிருந்த வழிகாட்டி சொன்னார்.

மனதில் பலவிதமான கேள்விகளை சுமந்துகொண்டு கரடுமுரடான பாதையில் மலையில் ஏறத் தொடங்கினோம். மலையேற்றம் அச்சமளிப்பதாக இருந்தது. ஒருபக்கம் விண்ணை முட்டும் மலைமுகடு என்றால், மறுபுறமோ அதல பாதாளம் வரை தென்படும் பள்ளத்தாக்கு.

பலமணி நேர பயணித்திற்கு பிறகு, ஒரு சில மனிதர்களை பார்த்தோம், அவர்கள் எங்களை விசித்திரமாக பார்த்தார்கள்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

சீனா செல்வது எளிது

சீன எல்லையில் அமைந்திருக்கும் இந்தியாவின் கடைசி கிராமத்தை சென்றடைந்தோம். சஹல்காமில் வசிக்கும் ஐம்பது குடும்பங்களில் அல்லிம் டேஹாவின் குடும்பமும் ஒன்று.

இங்கு வசிக்கும் மக்களின் வருவாய்க்கு ஏலக்காய் விவசாயம் கைகொடுத்தாலும், இங்கு வசிப்பவர்கள் நாட்டின் பிற பகுதிகளை தொடர்பு கொள்வது மிகவும் சிரமம். உணவுப்பொருட்களை வாங்குவதற்காக ஐந்து மணி நேரம் பயணம் செய்யவேண்டும்!

இந்த கிராமத்தில் வசிப்பவர்களின் உறவினர்கள் சீனாவிலும், இந்தியாவிலும் வசிக்கின்றனர்.

சீனாவில் இருக்கும் உறவினர்களின் வீட்டிற்கு இந்த இந்திய கிராமத்தினர் சுலபமாக செல்லமுடியும் என்கிறார் அல்லிம் டேஹா.

அவர் சொல்கிறார், "மிஷ்மி பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள் நாங்கள். எங்கள் குடும்பத்தில் பலர் சீன எல்லைக்குட்பட்ட பகுதிகளில் வசிக்கிறார்கள், வனங்களில் மூலிகைகளை பறிக்கச் செல்லும்போது, அந்தப்புறத்தில் இருக்கும் எங்கள் உறவினர்களையும் சந்தித்து வருவோம். இங்கிருந்து ஒன்று அல்லது இரண்டு மணி நேர பயணத்தில் அங்குள்ள உறவினர்களைப் பற்றிய தகவல்களை தெரிந்துக்கொள்வோம்".

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

கிராமத்தில் இந்திய ராணுவத்தின் ஒரு முகாம் இருக்கிறது. அங்கு புகைப்பிடித்துக் கொண்டிருந்த சில சிப்பாய்களை பார்த்தோம்.

ஜம்முவை சேர்ந்த ஒரு சிப்பாய் சொல்கிறர், "உங்களை இங்கு பார்க்கும்போது மகிழ்ச்சியாக இருக்கிறது. மொபைல், டி.வி எதுவுமே இங்கு கிடையாது. மலையில் ஏறிவிட்டால் அவ்வளவுதான். இங்கு வானிலை எப்படி இருக்கிறது பாருங்கள்."

சஹல்காம் மற்றும் அதன் அருகிலுள்ள இடங்களில் வசிக்கும் மக்களில் பலர், ராணுவத்தினருக்கு வழிகாட்டிகளாகவும், மொழிபெயர்ப்பாளர்களாகவும் பணிபுரிகின்றனர். வழிகாட்டியாக பணிபுரிந்த 24 வயது ஆயண்ட்யோ சோம்பேபோ இப்போது வேலை தேடி வருகிறார்.

சீன வீரர்கள் நேருக்கு நேர் சந்திக்கிறார்கள்

எல்லை தாண்டும்போது மட்டுமல்ல, வேறு பல சமயங்களிலும் சீனப் படையினர் இவர்களை தாக்குகின்றனர்.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை Image captionஆயண்ட்யோ சோம்பேபோ

ஆயண்ட்யோ சோம்பேபோ சொல்கிறார், "அன்று மதியம், நான் எல்லைக்கு மிக நெருக்கமாக நடந்து கொண்டிருந்தேன். எல்லைக்குள் நூறு மீட்டர் தொலைவிற்குள் என்னை பிடித்துவிட்டார்கள். என்னை பிடித்து வைத்துக் கொண்ட அவர்கள், கிராமத்தில் எத்தனை இந்திய வீரர்கள் இருக்கிறார்கள் என்று கேட்டார்கள். எங்கள் ராணுவத்தில் 300 வீரர்கள் இங்கே இருக்கிறார்கள் என்று சொன்னேன். சிறிது நேரத்தில் அவர்கள் திரும்பிச் சென்றுவிட்டார்கள்."

இங்கு வசிக்கும் பெரும்பாலானோர் சீன எல்லையை கடந்து சென்றுள்ளனர். மெக்கிக்கேம் டெஹாவின் கருத்துப்படி, "அங்கு வளர்ச்சி மிகவும் அதிகமாக இருக்கிறது, மூன்று அடுக்கு மாடி கட்டடங்களையும் சிறப்பான சாலைகளையும் அங்கு பார்க்கமுடிகிறது. இந்தியாவில் அங்கிருக்கும் வளர்ச்சியில் மூன்றில் ஒரு பங்கு வளர்ச்சிகூட ஏற்படவில்லை".

இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையே நீண்ட காலமாக எல்லை தொடர்பான முரண்பாடுகளும், சர்ச்சைகளும் நிலவி வருகின்றன. எல்லை பிரச்சனையில் 1962ஆம் ஆண்டில் இருநாடுகளும் போரில் ஈடுபட்டன.

இந்தியாவுக்கும், சீனாவுக்கும் இடையே டோக்லாமில் சர்ச்சைக்குரிய பகுதி தொடர்பாக மோதல் போக்கு சில மாதங்கள் தொடர்ந்தது. இந்தியாவின் ஐந்து மாநிலங்களில் உள்ள கிராம எல்லைகள் சீனாவை ஒட்டியிருக்கின்றன.

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை

நிலையான எல்லை இல்லை

ஆனால், சிக்கிமைத் தவிர வேறு எந்த மாநிலங்களிலும் எல்லைகள் முறையாக வரையறுக்கப்படவில்லை.

இந்த பிரச்சினையை நேர்மறையான சிந்தனையுடன் அணுகினால் தீர்க்கப்பட முடியும் என இந்திய ராணுவத்தின் முன்னாள் தளபதி ஜெனரல் வி.பி. மாலிக் கருதுகிறார்.

அவர் கூறுகிறார், " எல்லைக் கட்டுப்பாட்டு பகுதி என்று இந்திய தரப்பு ஒப்புக்கொள்ளும் அல்லது சீனா ஒப்புக்கொள்ளும் பகுதிகளில் ஏதாவது ஒன்றையாவது குறிக்கவேண்டும். அப்படி எல்லை குறிக்கப்பட்டால், குறைந்தபட்சம் நாம் எந்தப் பகுதியில் இருக்கிறோம் என்பதை ஜி.பி.எஸ் மூலம் தெரிந்துக்கொள்ளலாம். சீனா இதுவரை எல்லைக் கோட்டை குறிக்க அனுமதிக்கவில்லை. எனவே சீன வீரர்கள் அவ்வப்போது இந்தியப் பகுதிக்குள் வந்து செல்கின்றனர்".

இந்திய-சீன எல்லை சர்ச்சையில் சாட்சியாக வாழும் மக்கள் சொல்லும் கதை Image captionஜெனரல் வி.பி. மாலிக்

இரண்டு சக்திமிக்க அண்டை நாடுகளுக்கு இடையிலான அரசியல் முரண்பாடுகளால் எல்லை விவகாரம் அந்தரத்தில் ஊசலாடுகிறது.

ஆனால், இந்திய எல்லையில் வசிக்கும் நூற்றுக்கணக்கான மக்களுக்கு எல்லை என்பது பெயரளவில்தான்.

சஹல்காமில் தனது வீட்டின் திண்ணையில் அமர்ந்திருக்கும் அல்லிம் டேஹா உதிக்கும் சூரியனை பார்த்துக்கொண்டே கூறுகிறார், "நாங்கள் இந்தியாவில் இருக்கிறோம், ஆனால் எங்களுக்கு நலனை விரும்புவது யார் என்றே தெரியவில்லை."

http://www.bbc.com/tamil/global-41492314

Categories: merge-rss, yarl-world-news

பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

Tue, 03/10/2017 - 17:49
பிரெக்சிற் குறித்த இரண்டாம் சுற்று பேச்சுக்களை தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள்

map.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்து பிரித்தானியாவுடன்  இடம்பெறவுள்ள இரண்டாம் சுற்று பேச்சுக்களை  தாமதிக்குமாறு ஐரோப்பிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். பிரித்தானியாவுடனான வர்த்தக பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்துவது குறித்த தீர்மானமொன்று ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்டவேளை அதற்கு ஆதரவாக 557 உறுப்பினர்கள் வாக்களித்துள்ளனர்.

இதன் மூலம் தற்போதைய பேச்சுவார்த்தைகளில் பாரிய முன்னேற்றம் ஏற்படாத பட்சத்தில் அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகளை தாமதப்படுத்தவேண்டும் என்ற கோரிக்கைக்கு ஐரோப்பிய நாடாளுமன்றம் ஆதரவு வழங்கியுள்ளது
பிரித்தானிய அரசாங்கத்திற்குள் காணப்படும் பல்வேறு விதமான நிலைப்பாடுகள் காரணமாக பேச்சுவார்த்தைகள் பாதிக்கப்படுவதாக ஐரோப்பி யஓன்றிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர்.

பிரித்தானியாவிற்கே முதலிடம் என்ற தனது நிலைப்பாட்டை தெரேசா மே கைவிடவேண்டும் எனவும் தனது அரசாங்கத்திற்குள் காணப்படும் நெருக்கடிகளிற்கு அவர் தீர்வை காணவேண்டும் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின் போது பல உறுப்பினர்கள் பிரித்தானியாவின் கொன்சவேர்ட்டிவ் கட்சிக்குள் காணப்படும் முரண்பாடுகள் குறித்து சுட்டிக்காட்டியுள்ளனர்.

லண்டனில் யாரை நான் தொடர்புகொள்வது தெரேசா மேயை தொடர்புகொள்வதா அல்லது பொறிஸ் ஜோன்சனை தொடர்புகொள்வதா என ஜேர்மனியை சேர்ந்த உறுப்பினர் ஓருவர் கேள்வி  எழுப்பியுள்ளார். பிரித்தானியாவின் ; நிலைப்பாட்டிற்கு யார் பொறுப்பு என்பது குறித்து எங்களிற்கு தெரியவேண்டும்  என அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/43769

Categories: merge-rss, yarl-world-news

பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன்

Tue, 03/10/2017 - 17:47
பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இது – பொறிஸ் ஜோன்சன்

boris.png
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பிரிட்டிஸ் சிங்கம் கர்ஜிப்பதற்கான தருணம் இதுவென பிரித்தானிய  வெளிவிவகார அமைச்சர் பொறிஸ் ஜோன்சன் தெரிவித்துள்ளார். கொன்சவேர்ட்டிவ் கட்சியின் மாநாட்டில் உரையாற்றுகையிலேயே அவர் இந்த கருத்தை வெளியிட்டுள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து பிரித்தானியா வெளியேறுவது தேசிய எழுச்சிக்கான தருணம் என அவர் குறிப்பிட்டுள்ளார். ஐரோப்பா குறித்த விவகாரத்தில் உறுதியான தலைமையை வழங்குவதற்காக பிரதமர் தெரேசா மேயை அவர் பாராட்டியுள்ளார்.
ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறும் விடயத்தில் முழு அமைச்சரவையும் பிரதமரிற்கு ஆதரவாக உள்ளது என்றும் அவர் குறி;ப்பிட்டுள்ளார்.

சமீபத்தில் இத்தாலியில் பிரதமர் ஆற்றிய உரையின் ஓவ்வொரு வரியையும் தாங்கள் ஏற்றுக்கொண்டுள்ளோம் எனவும்  ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னரே பிரித்தானியாவின்  சிறந்த நாட்கள் வரப்போகின்றன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். நாங்கள் பிரித்தானியாவினையும் அதன் மக்களின் ஆற்றலை நம்புகின்றோம் எனவும்  அவர் தெரிவித்துள்ளார்.

http://globaltamilnews.net/archives/43774

Categories: merge-rss, yarl-world-news

பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கை 03/10/17

Tue, 03/10/2017 - 17:05

லாஸ் வேகஸ் துப்பாக்கிதாரி வீட்டில் மேலதிக ஆயுதங்கள் கண்டுபிடிப்பு! தாக்குதலின் நோக்கத்தை ஆராய்கிறது காவல்துறை!! மீண்டும் விவாதிக்கப்படும் துப்பாக்கி கட்டுப்பாட்டு நடைமுறைகள்!!! முப்பதாண்டுகளுக்குப்பின் யாழ்ப்பாணம் சென்ற இந்திய அமைதிப்படையின் முன்னாள் இராணுவ உயரதிகாரி! உடன் சென்ற பிபிசியின் நேரடி செய்தித்தொகுப்பு!! மற்றும் மனிதனுக்கும் மாட்டுக்கும் இடையே மடகாஸ்கரில் நடக்கும் மல்லுக்கட்டு! காதலியை கைபிடிக்க காளையை அடக்கும் இளைஞர்கள் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

Categories: merge-rss, yarl-world-news

தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது

Tue, 03/10/2017 - 16:11
தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது

 

 

இந்தியாவில் பல வங்கிகளில் சுமார் 9,000 கோடியை கடனாக பெற்று ஏமாற்றியதாக  தொடரப்பட்ட வழக்கில் தொழிலதிபர் விஜய் மல்லையா மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார்.

Local_News.jpg

கிங்ஃபிஷர் நிறுவனத்தின் உரிமையாளரான தொழிலதிபர் விஜய் மல்லையா இந்தியாவில் உள்ள பொதுத்துறை வங்கிகளிடம் இருந்து 9,000 கோடிக்கு மேல் கடனாகப் பெற்று திருப்பிச் செலுத்தாத பட்சத்தில்  வங்கிகள் நெருக்கடி கொடுக்க கடந்த 2016ஆம் ஆண்டு மார்ச் மாதம் இங்கிலாந்துக்கு தப்பி ஓடிவிட்டார்.

விஜய் மல்லையா மீது அமலாக்கப்பிரிவு மற்றும் சி.பி.ஐ. சார்பில் பல்வேறு வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும் அவரை இந்தியா கொண்டு வருவதற்கான நடவடிக்கைகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. இதனிடையே இந்திய பொதுத்துறை நிறுவனங்கள் மல்லையாவுக்கு எதிராக நீதிமன்றத்தை நாடியுள்ளன.

இந்திய அரசின் வேண்டுகோளை ஏற்று இங்கிலாந்தில் தலைமறைவாக இருந்த மல்லையாவை கடந்த ஏப்ரல் 18ஆம் திகதி லண்டன் ஸ்காட்லார்ந்து பொலிஸார் கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட மல்லையாவை  லண்டன் நீதிமன்றத்தில் அவர் ஆஜர்படுத்தப்பட்டு சில மணி நேரங்களில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

இந் நிலையில் மல்லையா  இன்று மீண்டும் லண்டனில் கைது செய்யப்பட்டுள்ளார். அவரை பிணையில் எடுப்பதற்கான நடவடிக்கைகளில் அவரது வழக்கறிஞர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.

அவரை இந்தியாவுக்கு நாடு கடத்தும் வழக்கு எதிர் வரும் டிசம்பரில் விசாரணைக்கு வரும் என்று புலனாய்வுத்துறை தகவல் கிடைக்கப்பெற்றுள்ளது.

http://www.virakesari.lk/article/25270

Categories: merge-rss, yarl-world-news

விம்பிள்டன் நிலையத்தில் "பைபிள்" வாசிக்கப்பட்டதால் பீதியடைந்து ரயிலைவிட்டு ஓடிய பயணிகள்

Tue, 03/10/2017 - 11:52
விம்பிள்டன் நிலையத்தில் "பைபிள்" வாசிக்கப்பட்டதால் பீதியடைந்து ரயிலைவிட்டு ஓடிய பயணிகள்

ரயிலில் பயணம் மேற்கொண்டிருந்தபோது, பீதியடைந்த பயணிகள், மக்கள் நிறைந்திருந்த ரயிலின் கதவுகளை உடைத்து திறந்து, தண்டவாளத்தின் மீது ஏறிய சம்பவம் லண்டனில் விம்பிள்டன் ரயில் நிலையத்தில் நடைபெற்றுள்ளது.

ரயிலுக்கு அருகில் விசாரணைபடத்தின் காப்புரிமை@CYCLINGBETTING

பிரிட்டன் நேரப்படி நேற்று காலை 8.30 மணிக்கு லண்டனின் தென் மேற்கிலுள்ள விம்பிள்டன் ரயில் நிலையத்தில், ஒருவர் பைபிள் வசனங்களை உரக்க வாசிக்க தொடங்கியபோது இவ்வாறு நிகழ்ந்துள்ளது.

"இறப்பு முடிவல்ல" என்று அந்த மனிதர் சொல்ல தொடங்கியபோது, பயணிகள் பீதியடைந்தனர் என்று பயணிகளில் ஒருவர் தெரிவித்தார்.

பயணிகள் தாங்களாகவே வெளியேறியதில் ரயில் மின்னிணைப்புகள் துண்டிக்கப்பட்டன என்று போலீஸ் தெரிவித்துள்ளது.

இந்த தடத்திலான ரயில்கள் ஏறக்குறைய 12 மணிநேரம் பாதிப்புக்குள்ளாயின. ஆனால், இப்போது இயல்பாக இயங்க தொடங்கியுள்ளன.

இந்த ரயிலில் பயணித்த இயன் என்பவர் கூறுகையில், அந்த மனிதரின் பைபிள் வாசிப்பு குழப்பத்திற்கும், நெருசலுக்கும் வழிவகுத்தது என்றார்.

"அவர் மக்களை பீதியடைய செய்ததால்", ஒருவர் அந்த மனிதரை நிறுத்த சென்னார். பைபிள் வாசிப்பதை நிறுத்திய அந்த மனிதர் தலைகீழாக நின்றார் என்று அவர் கூறினார்.

இந்த ரயில் ஷிப்பெர்டன் மற்றும் லண்டன் வாட்டர்லூலுக்கு இடையில் சென்று கொண்டிருந்தது. இதுவரை யாரையும் கைது செய்யவில்லை என்று பிரிட்டஷ் போக்குவரத்து போலீஸ் தெரிவித்திருக்கிறது.

பயணிகளோ, ரயில் ஊழியர்களோ யாரும் காயமடையவில்லை என்று தெரிவித்த ரயில் வலையமைப்பின் செய்தி தொடர்பாளர், வாட்டர்லூவுக்கு உள்ளேயும், வெளியேயும் காலதாமதங்கள் தொடரலாம் என்று தெரிவித்திருக்கிறார்.

http://www.bbc.com/tamil/global-41480340

Categories: merge-rss, yarl-world-news

கனடாவின் இடதுசாரிக் கட்சித் தலைவராக சீக்கியர் தேர்வு

Tue, 03/10/2017 - 11:51
கனடாவின் இடதுசாரிக் கட்சித் தலைவராக சீக்கியர் தேர்வு
சீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டி.பி) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இவர் கட்சியை வழிநடத்துவார்.படத்தின் காப்புரிமைREUTERS Image captionசீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின்(என்.டி.பி) தலைவராக தேர்வு.

சீக்கியரான ஜக்மீட் சிங் கனடாவின் புதிய ஜனநாயக கட்சியின் (என்.டி.பி) தலைவராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். அடுத்த பொதுத் தேர்தலில் இவர் கட்சியை வழிநடத்துவார்.

இடதுசாரி கட்சியான இந்தக் கட்சியில் நடந்த தலைவருக்கான தேர்தலில், தன்னை எதிர்த்துப் போட்டியிட்ட மூவரை வென்று உறுதியான வெற்றி பெற்ற முப்பது எட்டு வயதான ஜக்மீட் சிங்தான், கனடாவில் ஒரு பெரிய கட்சியை வழிநடத்தும் முதல் சிறுபான்மை இனத்தவர் ஆவார்.

ஞாயிற்றுக்கிழமை நடந்த கட்சித் தலைவருக்கான தேர்தலில் ஜக்மீட் சிங் 53.6 சதவிகித வாக்குகளை பெற்றார்.

இந்தப் போட்டி எங்கள் கட்சியின் உற்சாகத்தை புதுப்பித்துள்ளது என்ற கூறிய சிங், இந்த வெற்றியை தனக்கான நம்பமுடியாத பெரும் மரியாதை என்று வர்ணித்துள்ளார்.

2015-ம் தேர்தலில் இந்த கட்சி 59 தொகுதிகளை இழந்தது. வலுவிழந்திருக்கும் இந்தக் கட்சியை மீண்டும் ஸ்திரப்படுத்துவதுதான் சிங்கின் முன்னால் இருக்கும் பெரும் சவால்.

பரவிய வீடியோ... வென்ற சிங்

வைரலாக பரவிய ஒரு வீடியோதான் ஜக்மீட்டின் இந்த வெற்றிக்கு காரணமாக கூறப்படுகிறது.

பிரசாரத்தின் போது கோபமாக இடையூறு செய்த ஒருவருக்கு எதிர்வினையாற்றினார் சிங். இது வீடியோ வடிவில் பரவலாக பரவி ஜக்மீட்டுக்கு நற்பெயர் வாங்கி தந்தது.

கனடா நாடாளுமன்றத்தில் அவரது கட்சி மூன்றாவது இடத்தில் இருக்கிறது. 338 உறுப்பினர்களைக் கொண்ட கனடா நாடாளுன்றத்தில், புதிய ஜனநாயக கட்சி உறுப்பினர்களின் எண்ணிக்கை 44.

கனடாவில் ஆட்சியை இந்தக் கட்சி என்றுமே கைப்பற்றியதில்லை என்றாலும், 2011-ம் ஆண்டு பொதுத் தேர்தலில் பெரும் எண்ணிக்கையிலான தொகுதிகளை கைப்பற்றி, வரலாற்று வெற்றியை பெற்று நாடாளுமன்றத்தில் எதிர்கட்சியாக அமர்ந்தது.

ஆனால், அடுத்துவந்த 2015-ம் ஆண்டு பொதுத்தேர்தலில் ஏறத்தாழ ஒரு மில்லியன் வாக்குகளை இழந்து பெரும் பின்னடைவைச் சந்தித்தது.

பருவநிலை மாற்றம், பூர்வகுடி மக்களுடனான இணக்கம், தேர்தல் சீர்திருத்தம் ஆகியவற்றில் அதிகம் கவனம் செலுத்துவார் என்று மாகாண அரசியல்வாதிகள் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தனர்.

சிங் முன்னாள் குற்றவியல் அரசு வழக்கறிஞராவார். அவர் அவருடைய சிகை அலங்காரத்துக்காக, குறிப்பாக கண்ணைப் பறிக்கும் வண்ணத்துடன கூடிய தலைப்பாகை, இறுக்கமான சூட் உள்ளிட்டவற்றுக்காக பரவலாக அறியப்பட்டவர்.

புதிய ஜனநாயக கட்சியின் தலைவருக்கான தேடல் படலம், 2016- ஆம் ஆண்டு ஏப்ரலில் அந்த கட்சிக்கான நம்பிக்கையான தலைவர் டாம் முல்கையர் வெளியேறியதிலிருந்து தொடங்கியது.

கனடாவில் அடுத்த பொது தேர்தல் 2019-ம் ஆண்டு நடக்கவுள்ளது.

http://www.bbc.com/tamil/global-41468248

Categories: merge-rss, yarl-world-news

காஷ்மீரிலுள்ள இந்திய இராணுவ முகாம் மீது தற்கொலைத் தாக்குதல் ; இரு தற்கொலைதாரிகள் பலி

Tue, 03/10/2017 - 08:18

இந்திய நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள காஷ்மீரின் ஸ்ரீநகர் நகரத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்திய இராணுவ முகாம் மீது தீவிரவாதிகள் என்று சந்தேகிக்கப்போரால் தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

india-kashmeer-sucide.jpg

ஸ்ரீநகரில் அதி உயர் பாதுகாப்பு வலயத்திலேயே குறித்த தற்கொலைத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

இன்று செவ்வாய்க்கிழமை காலை 4 மணிக்கு ஆரம்பமாகிய குறித்த இந்த தாக்குதலில் மூன்று இந்திய எல்லை பாதுகாப்பு படையினர் காயமடைந்துள்ளனர்.

தற்கொலை தாக்குதால்தாரிகளுடன் இந்திய பாதுகாப்பு படையினர் தொடந்தும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

ஸ்ரீநகர் சர்வதேச விமான நிலையத்துக்கு வெளியே மிகவும் அதியுயர் பாதுகாப்பு வலயத்தில் இந்திய இராணுவபடையின் பிஎஸ். எஃப். 182 ஆவது படைப்பிரிவின்   முகாம் அமைந்துள்ளது.

 

குறித்த இராணுவ முகாமிற்குள் அதிகாலை 4 தற்கொலைதாரிகள் இணைந்து தாக்குதல் நடத்தினர்.

இதனை சுதாரித்துக் கொண்ட இந்திய எல்லைப் பாதுகாப்பு படையினர் பதில் தாக்குதல் நடத்தினர். 

இதனையடுத்து முகாமில் உள்ள கட்டடம் ஒன்றில் பதுங்கியடி அவர்கள் தாக்குதல் நடத்தினர். தீவிரவாதிகள் பதுங்கியிருந்த கட்டடத்தை சுற்றிவளைத்து பாதுகாப்பு படையினர் தாக்குதலில் ஈடுபட்டனர். 

 

ஹெலிகாப்டர் மூலம் வான்வழி தாக்குதலும் நடத்தப்பட்டது. இதில் தீவிரவாதிகள் இருவர் சுட்டுக் கொல்லப்பட்டதாக இந்திய இராணுவத் தரப்பு தெரிவிக்கின்றது.

இதனையடுத்து அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. ஸ்ரீநகர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. ஸ்ரீநகர் விமான நிலையம் மூடப்பட்டுள்ளதால் வீதியோரம் பயணிகள் காத்திருக்கின்றனர். மேலும் அப்பகுதியில் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.

http://www.virakesari.lk/article/25242

Categories: merge-rss, yarl-world-news