காஸாவில் பேரழிவுக்கு நடுவே ஹமாஸ் ஊழியர்களுக்கு சம்பளப் பணத்தை வழங்கும் 'ரகசிய நெட்வொர்க்'
பட மூலாதாரம், EPA
படக்குறிப்பு, காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது.
கட்டுரை தகவல்
ருஷ்டி அபுஅலூஃப்
காஸா செய்தியாளர்
9 ஆகஸ்ட் 2025, 03:56 GMT
புதுப்பிக்கப்பட்டது 5 மணி நேரங்களுக்கு முன்னர்
கிட்டத்தட்ட இரண்டு வருடப் போருக்குப் பிறகு, ஹமாஸ் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. அதன் ராணுவத் திறன் பலவீனமடைந்துள்ளது, அதன் அரசியல் தலைமை மிகுந்த அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளது.
ஆனால், போர் நடந்து கொண்டிருந்த போதிலும், ரகசிய முறையைப் பயன்படுத்தி, ஹமாஸ் தொடர்ந்து பணம் வழங்கி வந்துள்ளது. இதன் மூலம், 30,000 அரசு ஊழியர்களுக்கு, மொத்தமாக 7 மில்லியன் டாலர் (சுமார் 5.3 மில்லியன் யூரோ ) சம்பளமாக வழங்கப்பட்டுள்ளது.
காஸாவில் பிபிசி பேசிய 3 அரசு ஊழியர்கள் கடந்த வாரம் தலா 300 டாலர் பெற்றதை உறுதிப்படுத்தினர். இவ்வாறு சம்பளம் பெற்ற பல்லாயிரக்கணக்கான ஊழியர்களில் இவர்களும் அடங்குவர்.
இவர்கள் போர் தொடங்குவதற்கு முன் பெற்ற முழு சம்பளத்தில் 20% மட்டுமே ஒவ்வொரு 10 வாரங்களுக்கு ஒருமுறை பெறுகின்றனர்.
பணவீக்கம் அதிகரித்து வருவதால், இந்த குறைவான சம்பளம் ஹமாஸின் விசுவாசிகளிடையே அதிருப்தியை ஏற்படுத்துகிறது.
இஸ்ரேலிய கட்டுப்பாடுகளால் கடுமையான உணவுப் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக உதவி அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன. காஸாவில் ஊட்டச்சத்து குறைபாடு அதிகரித்து வருகிறது. சமீபத்திய வாரங்களில் ஒரு கிலோ மாவின் விலை 80 டாலர் வரையிலும் உயர்ந்துள்ளது.
பட மூலாதாரம், GETTY IMAGES
காஸாவில் வங்கி அமைப்பு செயல்படவில்லை என்பதால், சம்பளம் பெறுவது மிகவும் சிக்கலானதும், சில நேரங்களில் ஆபத்தானதுமாக இருக்கிறது.
இஸ்ரேல், ஹமாஸின் சம்பள விநியோகஸ்தர்களை அடையாளம் கண்டு தாக்குகிறது, இதனால் ஹமாஸின் ஆட்சித் திறனை சீர்குலைக்க முயல்கிறது.
காவல்துறை அதிகாரிகள் முதல் வருமான வரித்துறை ஊழியர்கள் வரை, பலரும் தங்கள் தொலைபேசியிலோ அல்லது தங்கள் துணைவரின் தொலைபேசியிலோ ரகசிய செய்தி பெறுகின்றனர். அந்த செய்தியில், ஒரு குறிப்பிட்ட நேரத்தில் குறிப்பிட்ட இடத்திற்கு "நண்பரைச் சந்தித்து தேநீர் அருந்த" செல்லுமாறு அறிவுறுத்தப்படுகிறது.
அந்த குறிப்பிடப்பட்ட இடத்தில், ஒரு ஆணோ, சில சமயங்களில் ஒரு பெண்ணோ அந்த ஊழியரிடம் வந்து, சீல் வைக்கப்பட்ட ஒரு உறையை அமைதியாக ஒப்படைத்துவிட்டு, எதுவும் பேசாமல் மறைந்து விடுகிறார். அந்த உறைக்குள் தான் சம்பளப் பணம் வைக்கப்பட்டுள்ளது.
ஹமாஸ் மத விவகார அமைச்சகத்தில் பணிபுரியும் ஒரு ஊழியர், பாதுகாப்பு காரணங்களுக்காக தனது பெயரை வெளியிட மறுத்தார். அவர், சம்பளம் வாங்கும் போது ஏற்படும் ஆபத்துகளைப் பற்றி விவரித்தார்.
"ஒவ்வொரு முறை சம்பளம் வாங்கச் செல்லும் போதும், என் மனைவி மற்றும் குழந்தைகளிடம் விடைபெற்றுச் செல்கிறேன். நான் திரும்பி வருவேனா என்பது தெரியாது," என்று கூறிய அந்த அதிகாரி,
"பல முறை, இஸ்ரேல் சம்பள விநியோக இடங்களைத் தாக்கியுள்ளது. காஸா நகரில் ஒரு பரபரப்பான சந்தையை குறிவைத்த தாக்குதலில் நான் உயிர் பிழைத்தேன்."என பகிர்ந்துகொண்டார்.
அலா (பாதுகாப்புக்காக அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) ஹமாஸ் நடத்தும் பள்ளியில் ஆசிரியராகப் பணிபுரிகிறார். ஆறு பேர் கொண்ட குடும்பத்தில் இவர் தான் பொருள் ஈட்டும் ஒரே நபர்.
"எனக்கு 1,000 ஷெக்கல்கள் (சுமார் 300 டாலர்) கிடைத்தன, ஆனால் எல்லாம் பழைய, கிழிந்த நோட்டுகள். வியாபாரிகள் இவற்றை ஏற்கவில்லை. 200 ஷெக்கல்கள் மட்டுமே பயன்படுத்தக்கூடிய வகையில் இருந்தன. மீதி பணத்தை என்ன செய்வது என தெரியவில்லை," என்று அவர் பிபிசியிடம் தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர், "இரண்டரை மாத கால காத்திருப்புக்குப் பிறகு, இப்படி கிழிந்த பணத்தில் சம்பளம் தருகிறார்கள்",
"என் குழந்தைகளுக்கு உணவளிக்க கொஞ்சம் மாவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில், உதவி விநியோக மையங்களுக்கு அடிக்கடி செல்ல வேண்டியிருக்கிறது. சில சமயங்களில் கொஞ்சம் மாவு கொண்டு வர முடிகிறது, ஆனால் பெரும்பாலும் வெறுங்கையுடன் திரும்புகிறேன்" என்றும் குறிப்பிட்டார்.
மார்ச் மாதம், இஸ்ரேல் ராணுவம், கான் யூனிஸில் உள்ள நாசர் மருத்துவமனையில் நடத்திய தாக்குதலில் ஹமாஸின் நிதித் தலைவர் இஸ்மாயில் பர்ஹூமை கொன்றதாக தெரிவித்தது. அவர் ஹமாஸின் ராணுவப் பிரிவுக்கு நிதி திரட்டியதாக குற்றம் சாட்டப்பட்டார்.
ஹமாஸின் நிர்வாக மற்றும் நிதி அமைப்புகள் பெருமளவு அழிக்கப்பட்டிருந்தாலும், அவர்களால் இன்னும் ஊழியர்களுக்கு எப்படி சம்பளம் வழங்க முடிகிறது என்பது குறித்து இன்னும் தெளிவாக தெரியவில்லை.
ஹமாஸின் பொருளாதார நடவடிக்கைகளை நன்கு அறிந்த, முன்னாள் உயர் அதிகாரி ஒருவர் பிபிசியிடம் இதுகுறித்து பேசினார்.
ஹமாஸின் நிதி நடவடிக்கைகளை நன்கு அறிந்த ஒரு மூத்த அதிகாரி, பிபிசியிடம் பேசுகையில், 2023 அக்டோபர் 7-ஆம் தேதி தெற்கு இஸ்ரேலில் ஹமாஸ் நடத்திய தாக்குதலுக்கு முன், அவர்கள் நிலத்தடி சுரங்கங்களில் சுமார் 700 மில்லியன் டாலர் ரொக்கமாகவும், நூற்றுக்கணக்கான மில்லியன் ஷெக்கல்களையும் சேமித்து வைத்திருந்ததாக தெரிவித்தார்.
இந்த நிதியை ஹமாஸ் தலைவர் யஹ்யா சின்வார் மற்றும் அவரது சகோதரர் முகமது ஆகியோர் நேரடியாக கண்காணித்ததாகக் கூறப்படுகிறது. பின்னர், இருவரும் இஸ்ரேலியப் படைகளால் கொல்லப்பட்டனர்.
பட மூலாதாரம், GETTY IMAGES
ஹமாஸின் செயலால் மக்கள் அதிருப்தி
ஹமாஸ் வரலாற்று ரீதியாகவே, காஸா மக்களுக்கு விதிக்கப்பட்ட அதிக இறக்குமதி வரிகள் மற்றும் பிற வரிகளின் மூலம் நிதி திரட்டியுள்ளது. கத்தாரிடமிருந்து மில்லியன்கணக்கான டாலர் நிதியைப் பெற்றுள்ளது.
ஹமாஸின் ராணுவப் பிரிவான கஸ்ஸாம் படை, தனி நிதி அமைப்பின் மூலம் செயல்படுகிறது, இதற்கு முக்கியமாக இரான் நிதியளிக்கிறது.
உலகில் மிகுந்த செல்வாக்கு கொண்ட இஸ்லாமிய அமைப்புகளில் ஒன்றான, எகிப்தை தளமாகக் கொண்ட (தடை செய்யப்பட்ட) இஸ்லாமிய சகோதரத்துவ அமைப்பின் ஒரு மூத்த அதிகாரி, தங்கள் பட்ஜெட்டில் சுமார் 10% ஹமாஸுக்கு வழங்கப்பட்டதாக தெரிவித்தார்.
போர்க்காலத்தில் வருவாய் ஈட்ட, ஹமாஸ் வணிகர்களிடம் வரி வசூலித்து, சிகரெட்டுகளை 100 மடங்கு அதிக விலையில் விற்று வருகிறது. போருக்கு முன் 20 சிகரெட்டுகள் கொண்ட பெட்டி 5 டாலராக இருந்தது, இப்போது 170 டாலருக்கும் மேல் விற்கப்படுகிறது.
ரொக்கமாக சம்பளம் கொடுப்பதுடன், ஹமாஸ் தனது உறுப்பினர்களுக்கும் அவர்களது குடும்பங்களுக்கும் உள்ளூர் அவசரக் குழுக்கள் மூலம் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது. இஸ்ரேலின் தாக்குதல்களால் இந்தக் குழுக்களின் தலைவர்கள் அடிக்கடி மாற்றப்படுகின்றனர்.
இது காஸாவில் பொதுமக்களிடையே கோபத்தைத் தூண்டியுள்ளது. ஹமாஸ் தனது ஆதரவாளர்களுக்கு மட்டுமே உதவி வழங்கி, மற்ற மக்களை புறக்கணிப்பதாக பலர் குற்றஞ்சாட்டுகின்றனர்.
இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏற்பட்ட போர் நிறுத்தத்தின் போது, காஸாவிற்கு வந்த உதவிகளை ஹமாஸ் திருடியதாக இஸ்ரேல் குற்றஞ்சாட்டியுள்ளது.
ஹமாஸ் இதை மறுத்தாலும், பிபிசிக்கு தகவல் அளித்த காஸா வட்டாரங்கள், அந்தக் காலகட்டத்தில் ஹமாஸ் கணிசமான அளவு உதவிகளை எடுத்ததாக உறுதிப்படுத்தியுள்ளனர்.
ஐந்து ஆண்டுகளுக்கு முன், புற்றுநோயால் கணவரை இழந்த பிறகு, தற்போது மூன்று குழந்தைகளைப் பராமரிக்கும் நிஸ்ரீன் கலீத் எனும் பெண்ணிடம் பிபிசி பேசியது.
"பசியால் வாடிய போது, என் குழந்தைகள் வலியால் மட்டுமல்ல, ஹமாஸ் ஆதரவு பெற்ற எங்கள் பக்கத்து வீட்டுக்காரர்கள் உணவுப் பொட்டலங்களையும் மாவுப் பைகளையும் பெறுவதைப் பார்த்தும் அழுதனர். நாங்கள் இப்போது அனுபவிக்கும் துன்பங்களுக்கு அவர்கள் காரணமல்லவா? அக்டோபர் 7 தாக்குதலுக்கு முன், ஏன் உணவு, தண்ணீர், மருந்து ஆகியவற்றை பாதுகாக்கவில்லை?" என்று அப்பெண் கேள்வி எழுப்புகிறார்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு