உலக நடப்பு

ஒரு விநாடிக்கு 3.2 கி.மீ. பாயும்: அமெரிக்காவையே அச்சுறுத்தும் ரஷ்ய ஏவுகணை - சீனா என்ன செய்கிறது?

1 month 2 weeks ago

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், EPA-EFE/KCNA

கட்டுரை தகவல்

  • ஃப்ராங்க் கார்ட்னர்

  • பாதுகாப்பு செய்தியாளர்

  • 23 ஆகஸ்ட் 2025, 02:50 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

பெய்ஜிங்கில் அணிவகுப்பு மைதானத்தில் இலையுதிர்கால வெயிலில் பளபளக்க, சீனாவின் மக்கள் விடுதலை ராணுவ ஏவுகணைகள் ராட்சத லாரிகளின் வரிசையில் மக்கள் கூட்டத்தைக் கடந்து மெதுவாக நகர்ந்தன.

11 மீட்டர் நீளமும் 15 டன் எடையும் கொண்ட ஊசி-கூர்மையான உருவம் ஒவ்வொன்றிலும் "டி.எஃப்-17" (DF-17) என்ற எழுத்துகளும் எண்களும் பொறிக்கப்பட்டிருந்தன.

சீனா அப்போதுதான் தனது டாங்ஃபெங் ஹைபர்சோனிக் ஏவுகணை இருப்பை உலகிற்கு அறிவித்தது.

அது அக்டோபர் 1, 2019 அன்று தேசிய தின அணிவகுப்பில் நடந்தது. இந்த ஆயுதங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன என்பதை அமெரிக்கா ஏற்கனவே அறிந்திருந்தது, ஆனால் அதன் பின்னர் சீனா அவற்றை மேம்படுத்துவதில் முன்னேறியுள்ளது.

அவை வேகமாக செல்லக்கூடியவை, அவற்றை இலகுவாக இயக்கலாம் - ஒலியை விட ஐந்து மடங்கு வேகத்தில் பயணிக்கும் அவை, வலிமையான ஆயுதங்கள் என்பதால் போர்கள் நடத்தப்படும் முறையை மாற்றக்கூடும்.

அதனால்தான் அவற்றை உருவாக்குவதில் உலகளாவிய போட்டி சூடுபிடித்து வருகிறது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, 2019-ம் ஆண்டு நடைபெற்ற ராணுவ அணிவகுப்பில் DF-17 ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா அறிமுகப்படுத்தியது.

"இது அரசுகளுக்கு இடையில் நாம் காணும் வளர்ந்து வரும் புவிசார் அரசியல் போட்டியின் ஒரு கூறு மட்டுமே" என்று புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவின் தேசிய பாதுகாப்பு ஆய்வாளர் வில்லியம் ஃப்ரீர் கூறுகிறார்.

"[இது] பனிப்போருக்குப் பிறகு நம்மிடம் இல்லாத ஒன்று."

ரஷ்யா, சீனா, அமெரிக்கா இடையே ஒரு உலகளாவிய போட்டி

ஹைபர்சோனிக் தொழில்நுட்பத்தில் சீனாவின் முன்னேற்றங்களால் அதிகரித்து வரும் அச்சுறுத்தல் குறித்த ஊகங்களை பெய்ஜிங் அணிவகுப்பு எழுப்பியது. இன்று ஹைபர்சோனிக் ஏவுகணைகளில் சீனா முன்னணியில் உள்ளது, அதைத் தொடர்ந்து ரஷ்யா உள்ளது. அமெரிக்காவும் முன்னேறி வருகிறது, பிரிட்டனிடம் எதுவும் இல்லை.

பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்கள், பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் பிறரிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்ற புவிசார் மூலோபாய சிந்தனைக் குழுவைச் சேர்ந்த ஃப்ரீர், சீனாவும் ரஷ்யாவும் முன்னணியில் இருப்பதற்கான காரணம் மிக எளிமையானது என்கிறார்.

"சில ஆண்டுகளுக்கு முன்பு இந்த திட்டங்களில் நிறைய பணத்தை முதலீடு செய்ய அவர்கள் முடிவு செய்தனர்."

இதற்கிடையில், இந்த நூற்றாண்டின் முதல் இரண்டு தசாப்தங்களில், பல மேற்கத்திய நாடுகள் உள்நாட்டில் ஜிஹாதிகளால் ஈர்க்கப்பட்ட பயங்கரவாதம் மற்றும் வெளிநாடுகளில் கிளர்ச்சி எதிர்ப்பு போர்கள் இரண்டையும் எதிர்த்துப் போராடுவதில் கவனம் செலுத்தின.

அப்போது, ஒரு நவீன, அதிநவீன எதிரிக்கு எதிராக போராட வேண்டிய வாய்ப்பு தொலைதூர ஒன்றாகத் தோன்றியது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், SHUTTERSTOCK

"அதன் ஒட்டுமொத்த விளைவு என்னவென்றால், சீனா ஒரு ராணுவ சக்தியாக உருவெடுத்ததை நாம் கவனிக்கத் தவறிவிட்டோம்" என்று 2020 -ல் பிரிட்டனின் ரகசிய புலனாய்வு சேவையின் தலைவராக ஓய்வு பெற்ற உடனேயே சர் அலெக்ஸ் யங்கர் ஒப்புக்கொண்டார்.

மற்ற நாடுகளும் முன்னேறி வருகின்றன. இஸ்ரேலிடம் ஆரோ 3 (Arrow 3) என்ற ஹைபர்சோனிக் ஏவுகணை உள்ளது, இது ஒரு இடைமறிப்பு கருவியாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

தன்னிடம் ஹைபர்சோனிக் ஆயுதங்கள் இருப்பதாகக் கூறிய இரான், ஜூன் மாதம் இஸ்ரேல் மீது 12 நாள் போரின் போது ஹைபர்சோனிக் ஏவுகணையை ஏவியதாகக் கூறியது.

(அந்த ஆயுதம் உண்மையில் மிக அதிக வேகத்தில் பயணித்தது, ஆனால் இது ஒரு உண்மையான ஹைபர்சோனிக் ஏவுகணை என்று கூறும் அளவு பறக்கும் போது இலகுவாக இயங்கியதாக கருதப்படவில்லை).

இதற்கிடையில், வட கொரியா 2021 முதல் தனது சொந்த ஏவுகணைகளை உருவாக்குவதில் பணியாற்றி வருகிறது. தன்னிடம் ஒரு சாத்தியமான ஆயுதம் இருப்பதாக அந்த நாடு கூறுகிறது.

பிரான்ஸ், ஜப்பான் உள்ளிட்ட பிற நாடுகளைப் போலவே அமெரிக்காவும் பிரிட்டனும் இப்போது ஹைபர்சோனிக் ஏவுகணை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்கின்றன.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், MORTEZA NIKOUBAZL/NURPHOTO VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ஜூன மாதம் நடைபெற்ற 12 நாள் போரில் ஹைபர்சோனிக் ஏவுகணையை இஸ்ரேல் மீது ஏவியதாக இரான் கூறியது.

அமெரிக்கா தனது தடுப்பு சக்தியை வலுப்படுத்தி வருவதாக தெரிகிறது, அமெரிக்கா "டார்க் ஈகிள்" ஹைபர்சோனிக் ஆயுதத்தை அறிமுகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறையின் கூற்றுப்படி, டார்க் ஈகிள் "ராணுவம் மற்றும் நாட்டின் சக்தியையும் உறுதியையும் நினைவுப்படுத்துகிறது. ஏனெனில் இது ராணுவம் மற்றும் கடற்படையின் ஹைபர்சோனிக் ஆயுத முயற்சிகளின் வீரியத்தை பிரதிபலிக்கிறது".

ஆனால் சீனாவும் ரஷ்யாவும் தற்போது வெகு தொலைவில் முன்னேறியுள்ளன - இது ஒரு கவலைக்குரிய விஷயமே என்று சில நிபுணர்கள் கூறுகின்றனர்.

அதிவேகம் மற்றும் கணிக்க முடியாத போக்கு

ஹைபர்சோனிக் என்றால் மேக் 5 (Mach 5) அல்லது அதற்கும் அதிகமான வேகமான வேகத்தில் பயணிக்கும் ஒன்று. (அதாவது ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது மணிக்கு 3,858 மைல் பயணிக்கக் கூடியது.) இதனால் தான் ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் ஏவுகணைகளை விட வேறுபட்டதாக உள்ளது. சூப்பர்சோனிக் ஏவுகணைகள் ஒலியின் வேகத்தை விட சற்றே அதிகமாக (மணிக்கு 767 மைல்) மட்டுமே பயணிக்கும்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள் அத்தகைய அச்சுறுத்தலாகக் கருதப்படுவதற்கான காரணங்களில் ஒன்று அவற்றின் வேகம்.

இன்றுவரை மிக வேகமானது ரஷ்யாவின் - அவன்கார்ட் - மேக் 27 (தோராயமாக 20,700 மைல்) வேகத்தை எட்ட முடியும் என்று கூறப்படுகிறது - இருப்பினும் மேக் 12 (9,200 மைல்) என்ற வேகமே பெரும்பாலான இடங்களில் குறிப்பிடப்படுகிறது. இது வினாடிக்கு இரண்டு மைல்களுக்கு (அதாவது விநாடிக்கு 3.2 கி.மீ.) சமம்.

இருப்பினும், முற்றிலும் அழிக்கும் சக்தியைப் பொறுத்தவரை, ஹைபர்சோனிக் ஏவுகணைகள் சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் க்ரூஸ் ஏவுகணைகளிலிருந்து பெரிதும் வேறுபட்டவை அல்ல என்று ஃப்ரீர் கூறுகிறார்.

"அவற்றைக் கண்டறிவது, கண்காணிப்பது மற்றும் இடைமறிப்பதில் உள்ள சிரமம்தான் உண்மையில் இந்த ஏவுகணைகளை மற்றவைகளிலிருந்து வேறுபடுத்துகிறது."

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், REUTERS

அடிப்படையில் இரண்டு வகையான ஹைபர்சோனிக் ஏவுகணைகள் உள்ளன: பூஸ்ட்-கிளைட் ஏவுகணைகள் (சீனாவில் உள்ள டி.எஃப் -17 போன்றவை) பூமியின் வளிமண்டலத்தை நோக்கியும் சில நேரங்களில் மேலேயும் உந்தி செல்ல ஒரு ராக்கெட்டை நம்பியுள்ளன. அங்கிருந்து அவை இந்த நம்பமுடியாத வேகத்தில் கீழே வருகின்றன.

மிகவும் கணிக்கக்கூடிய வளைவில் (பரவளைய வளைவு) பயணிக்கும் மிகவும் பொதுவான பாலிஸ்டிக் ஏவுகணைகளைப் போலல்லாமல், ஹைபர்சோனிக் கிளைட் வாகனங்கள் ஒழுங்கற்ற வழியில் நகர முடியும், பறக்கும் போதும் தங்கள் இலக்கை அவற்றை இயக்க முடியும்.

பின்னர் ஹைபர்சோனிக் க்ரூயிஸ் ஏவுகணைகள் உள்ளன, அவை உயரம் குறைவாக, எதிரிகளால் கண்டுபிடிக்கப்படுவதைத் தவிர்ப்பதற்காக ரேடார் வீச்சுக்கு வெளியே இருக்க முயற்சிக்கின்றன.

ராக்கெட் பூஸ்டரைப் பயன்படுத்தி அவை இதேபோல் ஏவப்பட்டு துரிதப்படுத்தப்படுகின்றன, பின்னர் அவை ஹைபர்சோனிக் வேகத்தை அடைந்தவுடன், அவை "ஸ்கிராம்ஜெட் என்ஜின்" எனப்படும் ஒரு அமைப்பை செயல்படுத்துகின்றன, அது பறக்கும் போது காற்றை எடுத்து, அதன் இலக்கை நோக்கி உந்துகிறது.

இவை "இரட்டை பயன்பாட்டு ஆயுதங்கள்", அதாவது அவற்றிலிருந்து அணு ஆயுதங்களையும் செலுத்தலாம், அல்லது வழக்கமான உயர் வெடிபொருள் கொண்ட ஆயுதங்களையும் செலுத்தலாம். ஆனால் இந்த ஆயுதங்களுக்கு வேகத்தை விட வேறு சில விசயங்களும் உள்ளன.

ஓர் ஏவுகணை ராணுவ தரங்களின் அடிப்படையில் உண்மையிலேயே "ஹைபர்சோனிக்" என்று வகைப்படுத்தப்படுவதற்கு, அது பறக்கும் போது இயக்கப்படக் கூடியதாக இருக்க வேண்டும். அதாவது, அதன் இலக்கை நோக்கி அதீத வேகத்தில் சென்றுக் கொண்டிருக்கும் போது, அதை ஏவிய ராணுவத்தினர் நினைத்தால் அந்த ஏவுகணையை திடீரென கணிக்க முடியாத வகையில் பாதையை மாற்றக்கூடியதாக இருக்க வேண்டும்.

இது இடைமறிப்பதை மிகவும் கடினமாக்கும். ஹைபர்சோனிக் ஏவுகணைகளைக் கண்டறிய பெரும்பாலான, நிலத்தில் நிறுவப்பட்டுள்ள ரேடார்களால் முடியாது.

"ரேடாரின் வீச்சுக்கு வெளியே பறப்பதன் மூலம் அவை முன்கூட்டியே கண்டறிவதைத் தவிர்க்க முடியும் மற்றும் அவற்றின் இறுதி கட்டத்தில் சென்சார்களில் மட்டுமே தோன்றக்கூடும். இது அந்த ஏவுகணை இடைமறிக்கப்படும் வாய்ப்புகளை குறைக்கிறது" என்று வாஷிங்டன் டி.சி.யில் உள்ள மூலோபாய மற்றும் சர்வதேச ஆய்வுகள் மையத்தில் ஏவுகணை பாதுகாப்பு திட்டத்தின் ஆராய்ச்சி கூட்டாளர் பாட்ரிக்ஜா பாசில்சிக் கூறுகிறார். இந்த மையம் அமெரிக்க அரசாங்க நிறுவனங்களிடமிருந்தும் பாதுகாப்பு தொழில்துறை நிறுவனங்களிடமிருந்து அதன் நிதியுதவியில் சிலவற்றைப் பெற்றுள்ளது.

இதற்கான பதில், மேற்கத்திய நாடுகளின் வான்வெளி அடிப்படையிலான சென்சார்களை வலுப்படுத்துவதாகும், இது தரையில் உள்ள ரேடார்களின் வரம்புகளை சமாளிக்கும் என்று அவர் நம்புகிறார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

படக்குறிப்பு, நவம்பர் 2024 இல் கியவ் நகரில் சுட்டு வீழ்த்தப்பட்ட ரஷ்ய ஹைபர்சோனிக் ஏவுகணை சிர்கானின் எச்சங்களை மக்கள் பார்க்கிறார்கள்.

நிகழ்நேர போர் சூழ்நிலையில், குறிவைக்கப்படும் நாட்டின் முன் ஒரு பயங்கரமான கேள்வியும் உள்ளது: இது அணுசக்தி தாக்குதலா அல்லது வழக்கமான தாக்குதலா?

"ஹைபர்சோனிக் ஏவுகணைகள் போரின் தன்மையை மாற்றவில்லை, நீங்கள் செயல்படக்கூடிய வேகத்தை மாற்றியுள்ளது" என்று முன்னாள் ராயல் கடற்படை தளபதியும் விமான போர் எதிர்ப்பு நிபுணருமான டாம் ஷார்ப் கூறுகிறார்.

"சில அடிப்படை விசயங்கள் - உங்கள் எதிரியைக் கண்காணிக்க வேண்டும், அவர்களை சுட வேண்டும், பின்னர் நகரும் இலக்கை நோக்கி ஏவுகணையை கையாள வேண்டும் -இவை முந்தைய ஏவுகணைகளிலிருந்து வேறுபட்டதல்ல, அது பாலிஸ்டிக் ஏவுகணைகளானாலும் சரி, சூப்பர்சோனிக் அல்லது சப்சோனிக் ஆனாலும் சரி" என்கிறார் ஷார்பு.

"அதேபோல், குறிவைக்கப்படும் நாடு உள்வரும் ஹைபர்சோனிக் ஏவுகணையை கண்காணித்து அழிக்க வேண்டும் என்கிற தேவை இப்போதும் மாறப்படவில்லை, ஆனால் இப்போது உங்களுக்கு குறைந்த நேரமே உள்ளது".

இந்த தொழில்நுட்பம் வாஷிங்டனை கவலையடையச் செய்கிறது என்பதற்கான அறிகுறிகள் தென்படுகின்றன. இந்த ஆண்டு பிப்ரவரியில் அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஆராய்ச்சி சேவை வெளியிட்ட ஓர் அறிக்கை, "ஹைபர்சோனிக் ஆயுதங்களைக் கண்டறிந்து பின்தொடர நிலப்பரப்பு மற்றும் தற்போதைய வான்வெளி அடிப்படையிலான சென்சார் கட்டமைப்புகள் இரண்டுமே போதுமானதாக இல்லை என்று அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியுள்ளனர்." என எச்சரிக்கிறது.

இன்னும் சில வல்லுநர்கள் ஹைபர்சோனிக் ஏவுகணையை சுற்றியுள்ள சில விசயங்கள் மிகைப்படுத்தப்பட்டவை என்று நம்புகிறார்கள்.

கூடுதலாக மிகைப்படுத்துகிறார்களா?

ராயல் யுனைடெட் சேவை நிறுவனத்தின் பாதுகாப்பு சிந்தனைக் குழுவைச் சேர்ந்த டாக்டர் சித்தார்த் கௌஷல், இவை அவசியம் போக்கை மாற்றியமைக்கக் கூடியவை அல்ல என்று நினைக்கிறார்.

"வேகமும் இலகுவாக இயக்கப்படக் கூடிய திறனும் இவற்றை உயர் மதிப்பு இலக்குகளை தாக்குவதற்கான எளிதான தேர்வுகளாக்குகின்றன. தாக்குதல் சமயத்தில் அவற்றின் இயக்க ஆற்றல் கடினமான, மிக ஆழமாக புதைக்கப்பட்ட இலக்குகளை குறிவைக்க பயனுள்ள வழிமுறையாக அமைகிறது, இந்த இலக்குகளை முன்பு பெரும்பாலான வழக்கமான ஆயுதங்களால் அழிப்பது கடினமாக இருந்தது." என்று கௌஷல் கூறுகிறார்.

ஆனால் அவை ஒலியின் வேகத்தை விட ஐந்து மடங்கு அல்லது அதற்கு மேல் பயணித்தாலும், அவற்றை எதிர்த்து தற்காத்துக் கொள்வதற்கான ஏற்பாடுகள் உள்ளன - அவற்றில் சில "திறனுள்ளவை" என்று ஷார்ப் வாதிடுகிறார்.

முதலாவது, கண்காணிப்பையும் கண்டறிதலையும் மிகவும் கடினமாக்குவது. "ஏவுகணைகள் தங்கள் நிலையைப் பாதுகாக்க பெரும் முயற்சிகளை எடுக்கலாம்," என்று அவர் கூறுகிறார்.

"வணிக செயற்கைக்கோள்களில் இருந்து கிடைக்கும் தெளிவற்ற செயற்கைக்கோள் படம் சில நிமிடங்கள் பழையதாக இருந்தால் போதும், அதை நம்பி இலக்கு வைக்கப் பயன்படாது."

"குறிவைக்கப் பயன்படுத்துவதற்கு போதுமான அளவு நிகழ்நேர, துல்லியமான செயற்கைக்கோள் படங்களைப் பெறுவது கடினமானது மற்றும் விலை உயர்ந்தது." என்கிறார்.

ஆனால் செயற்கை நுண்ணறிவும் பிற வளர்ந்து வரும் தொழில்நுட்பங்களும் காலப்போக்கில் இதை மாற்றக்கூடும் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

படக்குறிப்பு, ஆதாரம் : பாதுகாப்பு உளவு நிறுவனம், ஆயுதக் கட்டுப்பாட்டு அமைப்பு

ரஷ்யா அச்சுறுத்தல் குறித்த எச்சரிக்கை

ரஷ்யாவும் சீனாவும் இந்த ஆயுதங்களை உருவாக்குவதில் முன்னணியில் இருப்பது உண்மைதான். "சீன ஹைபர்சோனிக் திட்டங்கள்...கவர்ச்சிகரமானதாகவும் அதே நேரம் கவலைக்குரியவையாகவும் உள்ளன என்று நான் நினைக்கிறேன்," என்று ஃப்ரீர் கூறுகிறார்.

ஆனால் "ரஷ்யர்களைப் பொறுத்தவரை, அவர்கள் எதைக் கூறினாலும் அதுகுறித்து நாம் அதிக எச்சரிக்கையாக இருக்க வேண்டும்." என்றும் சொல்கிறார்.

நவம்பர் 2024-ல், ரஷ்யா யுக்ரேனின் நிப்ரோவில் உள்ள ஒரு தொழிற்சாலை தளத்தில் சோதனைக்காக நடுத்தர தூர பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவியது, அதை நேரடி சோதனைக் களமாகப் பயன்படுத்தியது.

இந்த ஏவுகணை மேக் 11 (அல்லது மணிக்கு 8,439 மைல்) ஹைபர்சோனிக் வேகத்தில் பயணித்ததாக யுக்ரேன் தெரிவித்தது, இந்த ஏவுகணைக்கு 'ஒரெஷ்னிக்' என்று பெயரிடப்பட்டது, இது ரஷ்ய மொழியில் ஹேசல் மரம் (Hazel tree/ஜாதி பத்திரி மரம்) என்பதாகும்.

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் மேக் 10 வேகத்தில் பயணித்ததாக கூறினார்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

ஏவுகணை இலக்கை நெருங்கியதும் அதன் ஆயுத முனை பல தனித்தனி பாகங்களாக பிரிந்து சென்று தாக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டிருத்தாக தகவல் கிடைத்துள்ளது. இவை ஒவ்வொன்றும் தனித்தனி இலக்குகளை கொண்டிருந்தன. இது பனிப்போர் காலத்து நடைமுறையாகும். அது சோதனை என்பதால், அப்போது அவற்றில் செயலற்ற எரிபொருள்களே இருந்தன.

அது தரையிறங்கியதைக் கேட்ட ஒருவரிடம் பேசிய போது, " அது மிக சத்தமாக இல்லை, ஆனால் பல இடங்களை அது தாக்கியிருந்தது: 6 ஏவுகணை முனைகள் தனித்தனி இலக்குகளில் விழுந்தன. ஆனால் அவை செயலற்றவையாக இருந்ததால், அதனால் ஏற்பட்ட சேதம், யுக்ரேன் நகரங்களில் ரஷ்யாவின் இரவுக் குண்டுவீச்சால் ஏற்படும் சேதத்தை விட மிக அதிகமாக இல்லை.

ஐரோப்பாவைப் பொறுத்தவரை, நேட்டோ நாடுகளுக்கு நிலவும் அச்சுறுத்தல் பிரதானமாக ரஷ்யாவின் ஏவுகணைகளால் ஏற்படுகிறது. அவற்றில் சில ஏவுகணைகள் ரஷ்யாவின் பால்டிக் கடற்கரையில் உள்ள காலினின்கிராட் பகுதியில் நிலைநிறுத்தப்பட்டுள்ளன. இம்முறை முழு உயர் வெடிகுண்டுகளை ஏற்றி புதின் கியவ் நகரத்தின் மீது ஒரெஷ்னிக் மூலம் தாக்குதல் நடத்த உத்தரவிட்டால் என்னவாகும்?

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

ரஷ்ய அதிபர் புதின் இந்த ஆயுதம் தொடர் உற்பத்தி செய்யப்பட போவதாகவும், இலக்குகளை "தூளாக்கும்" திறன் தங்களிடம் உண்டு என்றும் கூறினார்.

ரஷ்யாவிடம் ஹைபர்சோனிக் வேகத்தில் பயணிக்கும் பிற ஏவுகணைகளும் உள்ளன.

புதின் தனது வான்படையின் கின்ஜால் (Kinzhal) ஏவுகணைகளைப் பற்றி அதிகம் பேசினார், அவை மிக வேகமாக செல்லும் அவற்றை இடைமறிப்பது சாத்தியமில்லை என்று கூறினார். அதன்பின், அவர் அவற்றில் பலவற்றை யுக்ரேன் மீது ஏவியுள்ளார் - ஆனால் கின்ஜால் உண்மையில் ஹைபர்சோனிக் அல்லாமல் இருக்கலாம் என்றும், பலவும் இடைமறிக்கப்பட்டுள்ளன என்றும் தெரிய வந்துள்ளது.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, ஹைபர்சோனிக் ஏவுகணைத் துறையில் சீனாவும் ரஷ்யாவும் மற்ற நாடுகளை விஞ்சி உள்ளன.

மேற்கத்திய நாடுகளுக்குக் கவலை தருவது ரஷ்யாவின் அதிவேகமான, மிக இலகுவாக இயக்கப்படக்கூடிய ஆயுதமான அவன்கார்ட் ஆகும். 2018 -ல் வேறு ஐந்து 'சூப்பர் ஆயுதங்களுடன்' அறிமுகமானது, அதனை புதின் தடுக்க முடியாதது என்று கூறினார்.

டாக்டர் சித்தார்த் கௌஷல் அதன் முதன்மையான பங்கு உண்மையில் "அமெரிக்க ஏவுகணைப் பாதுகாப்பு முறைகளை விஞ்சுவதுதான்" என்று கூறுகிறார்.

"ரஷ்யாவின் அரசு ஆயுதத் திட்டங்கள் அவன்கார்ட் போன்ற அமைப்புகளை உற்பத்தி செய்யும் திறன் ரஷ்யாவிடம் போதிய அளவு இல்லை என்பதையும் காட்டுகின்றன," என்று அவர் வாதிடுகிறார்.

மேற்கு பசிபிக்கில் அமெரிக்கா மற்றும் சீனாவுக்கு இடையே மூலோபாய மேலாதிக்கத்திற்கான போட்டி தீவிரமடைந்து வருவதால், சீனாவின் பாலிஸ்டிக் ஏவுகணை ஆயுதக் கிடங்கின் பெருக்கம் தென் சீனக் கடல் மற்றும் அதற்கு அப்பால் அமெரிக்க கடற்படை நிலைப்பாட்டிற்கு தீவிரமான அச்சுறுத்தலாக இருக்க வாய்ப்புள்ளது.

சீனாவிடம் உலகின் மிகவும் சக்திவாய்ந்த ஹைபர்சோனிக் ஆயுதக் கிடங்கு உள்ளது. 2024-ன் பிற்பகுதியில், சீனா தனது சமீபத்திய ஹைபர்சோனிக் கிளைட் வாகனமான GDF-600ஐ வெளியிட்டது. 1,200 கிலோ பேலோடுடன், இது துணை ஆயுதங்களைச் சுமந்து மேக் 7 (மணிக்கு 5,370 மைல்) வேகத்தை எட்ட முடியும்.

பிரிட்டனின் அவசர முயற்சியில் வெற்றி

பிரிட்டன் இந்தப் பந்தயத்தில் பின்தங்கியுள்ளது, குறிப்பாக அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சிலின் ஐந்து அணு ஆயுத நிரந்தர உறுப்பினர்களில் ஒன்றாக இருப்பதால் இது குறிப்பிடத்தக்க பிரச்னையாகிறது. ஆனால் தாமதமாக முயன்றாலும், அது விரைந்து எட்டிப்பிடிக்க முயற்சி செய்கிறது, அல்லது குறைந்தபட்சம் பந்தயத்தில் சேர முயற்சி செய்கிறது.

ஏப்ரலில், பாதுகாப்பு அமைச்சகமும் பாதுகாப்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப ஆய்வகமும் ஒரு முக்கிய சோதனைத் திட்டத்தின் வெற்றிகரமான முடிவுக்குப் பிறகு பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் "ஒரு முக்கிய தருணத்தை" எட்டியுள்ளனர் என்று அறிவித்தன.

பிரிட்டனின் உந்துசக்திச் சோதனை பிரிட்டிஷ் அரசு, தொழில்துறை மற்றும் அமெரிக்க அரசு ஆகியவற்றுக்கு இடையேயான மூன்று தரப்பு ஒத்துழைப்பின் விளைவாகும். ஆறு வாரங்களில் அமெரிக்காவின் வர்ஜீனியாவில் உள்ள நாசா லாங்லே ஆராய்ச்சி மையத்தில் மொத்தம் 233 "வெற்றிகரமான நிலையான சோதனை ஓட்டங்கள்" மேற்கொள்ளப்பட்டன.

பிரிட்டனின் பாதுகாப்பு அமைச்சர் ஜான் ஹீலி இதை "ஒரு மைல்கல் தருணம்" என்று அழைத்தார்.

ஆனால் இந்த ஆயுதம் தயாராக இன்னும் பல ஆண்டுகள் ஆகும்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகள்

பட மூலாதாரம், REUTERS/VALENTYN OGIRENKO

படக்குறிப்பு, ரஷ்யாவின் 'கின்ஜால்' ஏவுகணை உண்மையில் ஹைபர்சோனிக் திறன் கொண்டதாக இருக்காது, அவற்றில் பல யுக்ரேனின் தடுப்பு‌ அமைப்புகளால் சுட்டு வீழ்த்தப்பட்டிருக்கலாம்.

ஹைபர்சோனிக் ஏவுகணைகளை உருவாக்குவதுடன், மேற்கத்திய நாடுகள் அவற்றிற்கு எதிரான வலுவான பாதுகாப்பையும் உருவாக்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று ஃப்ரீர் வாதிடுகிறார்.

"ஏவுகணைப் போர் என்று வரும்போது, இது ஒரே நாணயத்தின் இரண்டு பக்கங்கள் பற்றியது. நீங்கள் சேதத்தைக் குறைக்கவும் முடிய வேண்டும், அதே நேரத்தில் எதிரியின் ஏவுதள அமைப்புகளைத் தாக்கும் திறனும் கொண்டிருக்க வேண்டும்."

"உங்களுக்கு இரண்டு கைகளும் இருந்தால், நீங்கள் ஒரு அளவிற்கு உங்களைப் பாதுகாத்துக் கொள்ளவும் எதிர்த் தாக்குதல் நடத்தவும் முடிந்தால்... அப்போது ஒரு எதிரி மோதலைத் தொடங்க முயற்சிக்கும் வாய்ப்பு மிகக் குறைவு."

எனினும், இந்த நேரத்தில் நாம் எந்த அளவிற்குக் கவலைப்பட வேண்டும் என்பது குறித்து டாம் ஷார்ப் இன்னும் எச்சரிக்கையாக உள்ளார்.

அவர், "ஹைபர்சோனிக்ஸ் குறித்த முக்கிய விஷயம், இந்தச் சமன்பாட்டின் இரு பக்கங்களும் ஒன்றைப் போலவே மற்றொன்றும் கடினமானவை - இரண்டும் இன்னும் கச்சிதமாக வடிவம் பெறவில்லை" என்கிறார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgypz9j564o

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

1 month 2 weeks ago

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

August 23, 2025 7:43 am

காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு

மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.

சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.

” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார்.

இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.

மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது.

கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.

காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது.

கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது.

அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/

அமெரிக்காவின் பிரபல நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ காலமானார்

1 month 2 weeks ago

21 AUG, 2025 | 10:57 AM

image

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ (Frank Caprio) நேற்று புதன்கிழமை (20) காலமாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ தனது 88 ஆவது வயதில் காலமாகியுள்ளார்.

இவர் நீண்ட நாட்களாக கணையப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேற்றைய தினம் காலமாகியுள்ளார்.

நீதிமன்றத்தில் சிறந்த முறையில் பணியாற்றிய அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ, தனது நற்குணங்களால் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளார்.

அமெரிக்க நீதிபதி ஃபிராங்க் கப்ரியோ உலகளாவிய ரீதியில் மிகவும் பிரபலமானவர் என்பது குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222988

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

1 month 2 weeks ago

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

gaza-2-770x470.jpg

காசா நகர் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்டுள்ள தரைவழித் தாக்குதலின் ஆரம்பகட்ட நடவடிக்கைகளை இஸ்ரேல் இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், நகரின் புறநகர் பகுதிகளை ஏற்கெனவே தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளது.

தாக்குதலுக்கான களத்தை அமைப்பதற்காக, செய்தூன் மற்றும் ஜபலியா பகுதிகளில் படைகள் ஏற்கெனவே செயல்பட்டு வருவதாக இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் தெரிவித்தார். இந்தத் தாக்குதல் நடவடிக்கைக்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாய்க்கிழமை ஒப்புதல் அளித்துள்ளார்.

இந்த நடவடிக்கைகளுக்காக, செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 மேலதிக வீரர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது, இது களப்பணிக்குத் தேவையான வீரர்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தப்படும்.

அப்பாவி பொதுமக்களுக்கு எதிரான கொடூரமான போரைத் தொடர்வதற்கு ஆதரவாக இஸ்ரேல் போர் நிறுத்த ஒப்பந்தத்திற்குத் தடையாக இருப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இஸ்ரேலின் தாக்குதல் திட்டத்திற்கான ஏற்பாடுகள் துவங்கியுள்ள நிலையில், காசா நகரில் வசிக்கும் லட்சக்கணக்கான பாலஸ்தீன மக்கள் காசாவின் தெற்குப் பகுதிகளில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்லுமாறு உத்தரவிடப்படுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இஸ்ரேலின் திட்டத்தை அதன் பல நட்பு நாடுகள் கண்டித்துள்ளன. இது “இரண்டு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும். மேலும், நிரந்தரப் போர்ச் சுழற்சியில் இப்பகுதி முழுவதையும் தள்ளிவிடும்” என்று பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மக்ரோன் புதன்கிழமை எச்சரித்துள்ளார்.
இதற்கிடையில், மேலும் அதிகமான மக்கள் இடம்பெயர்வதும், தாக்குதல்கள் தீவிரமடைவதும், காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கான ஏற்கெனவே பேரழிவுகரமான சூழ்நிலையை மோசமாக்கும் என்று செஞ்சிலுவைச் சங்கத்தின் சர்வதேசக் குழு (ICRC) தெரிவித்துள்ளது.

https://akkinikkunchu.com/?p=337727

வாரத்தில் 4 நாள் வேலை, 3 நாள் விடுப்பு : புதிய கலாசாரத்தை இளைஞர்கள் விரும்புவது ஏன்?

1 month 2 weeks ago

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES/SKYNESHER

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரம் என்பது உற்பத்தித்திறனை பாதிக்காமல் நல்வாழ்வை மேம்படுத்துவது புதிய ஆய்வில் நிரூபணமாகியுள்ளது

கட்டுரை தகவல்

  • சோஃபியா பெட்டிஸா, பிபிசி உலக சேவை

  • 20 ஆகஸ்ட் 2025

வாரத்தில் ஐந்து நாட்கள் வேலை செய்து, வார இறுதியை கொண்டாடுவோம். அதன் பின் மீண்டும் வேலைக்குத் திரும்பும் சோகத்திற்கு தயாராவோம். ஆனால் இந்த நடைமுறை இனியும் அவ்வாறு இருக்க வேண்டியதில்லை என்றால் எப்படி உணர்வீர்கள்?

நேட்ஷர் ஹியூமன் பிஹேவியர் இதழில் வெளியான பெரிய அளவிலான ஆய்வு ஒன்று வேலை நாட்களை ஐந்திலிருந்து நான்காக குறைத்தால் மனிதர்களில் நல்வாழ்வு கணிசமாக மேம்படுவதாகக் கூறுகிறது.

பாஸ்டன் கல்லூரியைச் சேர்ந்த ஆய்வாளர்கள் அமெரிக்க, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, அயர்லாந்து மற்றும் நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகளில் உள்ள 141 நிறுவனங்களில் சோர்வு, வேலை திருப்தி, உடல் மற்றும் மன ஆரோக்கியம் உள்ளிட்ட நான்கு முக்கிய குறியீடுகளை கண்காணித்தனர்

"ஊழியர்களின் நல்வாழ்வில் நல்ல முன்னேற்றங்கள் ஏற்பட்டதை நாங்கள் கண்டோம்" என முன்னணி ஆசிரியர் வென் ஃபேன் பிபிசியிடம் தெரிவித்தார்.

"நிறுவனங்கள் உற்பத்தித்திறன் மற்றும் வருவாயிலும் லாபம் கண்டன. தற்போது ஆய்வு முடிந்த பிறகு 90 சதவிகிதமானோர் நான்கு நாள் வேலை முறையையே தேர்வு செய்கின்றனர்" என்றார்.

இது குறைந்த வேலைவாரத்தை நல்ல ஆரோக்கியம், மேம்பட்ட வேலை-வாழ்க்கை சமநிலை மற்றும் ஒட்டுமொத்த மேம்பட்ட வேலை திருப்தியுடன் தொடர்புபடுத்தும் ஆய்வுகளோடு சேர்கிறது. சமீபத்திய ஆய்வு ஒன்று நீண்ட வேலை நேரங்கள் மூளை கட்டமைப்பை மாற்றுவதாக கண்டறிந்துள்ளது, அதன் வரிசையிலே இந்த ஆய்வும் வந்துள்ளது.

எனவே இதன் ஆரோக்கிய நலன்கள் வெளிப்படையான பிறகு எது நம்மைத் தடுக்கிறது என்கிற கேள்வியும் உள்ளது.

அதிகவேலை மரியாதையின் சின்னமா?

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, பல கலாச்சாரங்களில் கூடுதல் வேலை என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது

சீனா '996' வேலை கலாச்சாரத்திற்காக அறியப்படுகிறது. அங்கு தொழிலாளர்கள் வாரத்தில் ஆறு நாட்கள் காலை 9 மணியிலிருந்து இரவு 9 மணி வரை வேலை செய்கிறார்கள்.

இந்தியாவில் வளர்ந்து மற்றும் தொழில்நுட்பம் மற்றும் நிதித்துறையில் உலகளாவிய தேவைகளைப் பூர்த்தி செய்ய ஊழியர்கள் நீண்ட, ஒழுங்கற்ற நேரம் வேலை செய்ய வேண்டும் என்கிற இடைவிடாத அழுத்தத்தை அடிக்கடி சந்திக்கின்றனர்.

"சீனா, இந்தியா, அமெரிக்கா, பிரிட்டன் போன்ற நாடுகளில் நீண்ட வேலை நேரம் என்பது மரியாதையின் சின்னமாகப் பார்க்கப்படுகிறது என்கிறார் பேராசிரியர் ஃபேன்.

ஜப்பானில் சம்பளமில்லாத கூடுதல் வேலை நேரம் மிகவும் சகஜமானது. எந்த அளவிற்கு என்றால் கூடுதல் வேலையால் ஏற்படும் மரணத்திற்கு 'கரோஷி' என தனி வார்த்தையே உள்ளது.

"ஜப்பானில் வேலை என்பது வேலை மட்டுமல்ல, அது ஒரு சமூக சடங்கு போல உள்ளது" என்கிறார் ஹிரோஷி ஓனோ. இவர் ஜப்பானில் உள்ள வேலையிட கலாச்சாரம் மற்றும் தொழிலாளர் சந்தைகளின் வல்லுநர் ஆவார்.

"மக்கள் சீக்கிரமாக வந்து, வேலையே இல்லையென்றாலும் தங்களின் உறுதிபாட்டை காண்பிப்பதற்கு என்றே தாமதமாக செல்வார்கள். இது தற்காப்பு கலைகள் போன்று செயல்திறன் சார்ந்தது, அதைச் செய்வதற்கு வழி உள்ளது" எனத் தெரிவிக்கிறார் ஹிரோஷி

இதனை ஜப்பானின் கூட்டு கலாச்சாரம் எனக் கூறிய ஹிரோஷி தொடர்ந்து விளக்குகிறார். " ஜப்பானில் 'வேலையில் சமாளிப்பவர்களுக்கு (ஃப்ரீ ரைடர்ஸ்) எதிராக ஒரு வலுவான களங்கம் உள்ளது. ஒரு வெள்ளிக்கிழமை விடுப்பு எடுத்தால் மற்றவர்கள் 'அவர் ஏன் இன்று வேலையைத் தவிர்த்துவிட்டார்' என யோசிப்பார்கள்" என்றார்.

இது பலருக்கும் ஆச்சரியமாக இருக்கலாம். ஆனால் ஜப்பானில் சட்டப்பூர்வமான பலன்களான பேறுகால விடுப்பு பெரும்பாலும் பயன்படுத்தப்படுவதில்லை.

"ஆண்கள் ஒரு ஆண்டு வரை விடுப்பு எடுக்கலாம், ஆனால் வெகு சிலர் மட்டுமே அவ்வாறு செய்கின்றனர் - விடுப்பு தங்கள் உடன் வேலை செய்பவர்களுக்கு அசௌகரியம் ஏற்படுத்தும் என நினைப்பார்கள்" எனத் தெரிவித்தார் ஹிரோஷி.

எனினும் இது போன்ற ஆய்வுகள் கூடுதல் வேலை செய்யும் வலுவான பாரம்பரியம் உள்ள இடங்களிலும் பார்வையை மாற்றி வருகிறது என்கிறார் வென் ஃபேன்.

ஐஸ்லாந்தில் 90 சதவிகிதமானோர் தற்போது குறைவான நேரங்களே வேலை செய்கின்றனர் அல்லது அவர்களின் வேலை நாட்களை குறைத்துக் கொள்ளும் உரிமை பெற்றுள்ளனர்.

தென் ஆப்ரிக்கா, பிரேசில், பிரான்ஸ், ஸ்பெய்ன், டொமினிகன் குடியரசு, போட்ஸ்வானா உள்ளிட்ட பல நாடுகளில் இது போன்ற ஆய்வுகள் நடைபபெற்று வருகின்றன.

இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஜப்பான் அரசு ஊழியர்களுக்கு நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சி செய்யத் தொடங்கியது. துபாயிலும் அரசு ஊழியர்களுக்கு இதே போன்றதொரு கோடைக்கால முன்னெடுப்பு தொடங்கப்பட்டது. இந்நிலையில் தென் கொரியா அக்டோபர் 2025-இல் 67 நிறுவனங்களில் 4.5 நாள் வேலைவாரத்தை பரிசோதிக்க உள்ளது.

வேலை என்பது வாழ்க்கையுடன் தொடர்பில்லாமல் உள்ளது

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாசாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், CITY OF GOLDEN PD

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறிய பிறகு கொலராடோ காவல்துறை ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.

"கொரோனாவுக்குப் பிறகு பலரும் தங்களின் வேலையும் வாழ்க்கையும் தொடர்பில்லாமல் இருப்பதாக உணர்கின்றனர். இந்தப் போக்கை உங்களால் திருப்ப முடியும்" என்கிறார் 4 டே வீக் குளோபல் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான கேரன் லோவ்.

அவரின் அமைப்பு பிரேசில், நமிபியா, ஜெர்மனி உள்ளிட்ட உலகம் முழுவதும் உள்ள நாடுகளின் நிறுவனங்கள் நான்கு நாள் முறையை சோதிக்க உதவுகின்றன.

அவரின் வெற்றிகரமான முயற்சிகளில் ஒன்று கொலராடோவின் கொல்டன் நகர காவல்துறையில் 250 பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டது தான். நான்கு நாள் வேலை வாரத்தை அறிமுகப்படுத்திய பிறகு கூடுதல் வேலை நேர செலவுகள் 80% வரை குறைந்துள்ளது, ராஜினாமாக்கள் பாதியாக குறைந்துள்ளது.

"அவசர காலங்களில் வேலை செய்யும், ரோந்து செய்யும் காவல்துறையில் இது வேலை செய்கிறது என்றால் வேறு எங்கு வேண்டுமானாலும் வேலை செய்யும்" என்கிறார் லோவ்.

"நாங்கள் 2019-இல் இந்த ஆய்வை தொடங்கியபோது ஒரு சில நிறுவனங்கள் மட்டுமே ஆர்வம் காட்டின. தற்போது ஆயிரக்கணக்கான நிறுவனங்கள் இதைச் செய்து வருகின்றன. ஆதாரம் உள்ளது, ஆனால் இல்லாத ஒரு விஷயம் புரிதல் தான்" என்றார்.

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், KAREN LOWE

படக்குறிப்பு, நான்கு நாள் வாரம் என்பது தேவையற்றவைகளை குறைப்பது என்கிறார் கேரன் லோவ்

குறைந்த வேலை நாட்கள் என்றால் குறைவான செயல்திறன் ஒரு பொதுவான தவறான புரிதல் இருக்கிறது என்கிறார் லோவ். ஆனால் அதற்கு மாறானது தான் உண்மை என அவர் வாதிடுகிறார்.

2019-இல் மைக்ரோசாஃப்ட் ஜப்பானில் நான்கு நாள் வேலை வாரத்தை பரிசோதித்தபோது முந்தைய ஆண்டை காட்டிலும் ஒவ்வொரு ஊழியரிடமும் 40% விற்பனை அதிகரித்தது. எனினும் அதனை நிரந்தரமாக அமல்படுத்த வேண்டாம் என அந்நிறுவனம் முடிவு செய்துவிட்டது.

பெருநிறுவனங்களில் பல துறைகள் இருப்பதாலும் பல்வேறு நாடுகளில் வெவ்வேறு நேர மண்டலங்களில் செயல்படுவதாலும் அவை மிகவும் சிக்கலான பிரச்னைகளைச் சந்திக்கின்றன என்கிறார் லோவ்.

ஃபேனின் ஆய்வில் உற்பத்தித்திறன் பெரும்பாலும் தக்கவைப்பது, ஏனென்றால் நிறுவனங்கள் குறைந்த மதிப்புள்ள பணிகளை குறைத்துவிட்டன. தேவையில்லாத மீட்டிங் செல்போன் அழைப்பு அல்லது குறுஞ்செய்தியில் முடிக்கப்பட்டன.

மற்றுமொரு தவறான புரிதல் இருப்பதாக கூறுகிறார் லோவ். அது ஊழியர்கள் விடுப்பு எடுத்த நாளுக்கு ஈடு செய்ய கூடுதல் கடினவேலை செய்ய வேண்டும் என்பது தான்.

"ஐந்து நாள் வேலைகளை நான்கு நாட்களுக்கு சுருக்குவது அல்ல, தேவையற்ற வேலைகளை குறைப்பது தான் முக்கியமானது" என்கிறார்.

தற்போது ஏஐ மூலம் பல பணிகளும் தானியங்கிமயமாகின்றன. நம்மால் அத்தகைய பணிகளை எளிதாக அடையாளம் காண முடியும் என்றும் தெரிவித்தார்.

ஆரோக்கியத்தில் வேலை ஏற்படுத்தும் பாதிப்பு

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், CHARL DAVIDS

படக்குறிப்பு, நான்கு நாள் வேலை வாரத்திற்கு மாறியது தன் குழுவிற்கு உயிர்நாடியாக உள்ளதாகக் கூறும் சார்ல் டேவிட்ஸ், முடிவுகள் சிறப்பாக இருந்தது என்கிறார்.

கேப் டவுனில் உள்ள ஸ்டெல்லன்போஸ் பல்கலைக்கழகத்தின் உளவியல் மையத்தின் இயக்குநரான சார்ல் டேவிட்சுக்கு நான்கு நாள் வாரம் என்பது மாற்றம் மட்டுமல்ல, அது ஒரு உயிர்நாடி.

அவரின் குழு 30 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்களுக்கு மனநல உதவிகள் வழங்கி வருகின்றன. இந்த மாற்றத்திற்கு முன்பாக பணியாளர்கள் மிகவும் சோர்வாக இருந்ததாகக் கூறுகிறார்.

"அதிக அளவில் வேலையைத் தவிர்த்துவந்தனர். மக்கள் அடிக்கடி சுகாதார விடுப்பு எடுத்தனர். அவர்கள் சோம்பேறியாக இருந்ததால் அல்ல, அவர்கள் ஆற்றலே இல்லாமல் ஓடிக்கொண்டிருந்தனர்" என்றார்.

தென் ஆப்ரிக்கா உலகின் மிக மன அழுத்தம் மிகுந்த நாடுகளின் பட்டியலில் உள்ளது.

சார்லின் குழுவில் 56 பேர் உள்ளனர். அவர்கள் அதிர்ச்சியில் உள்ளவர்களை அதிகம் சந்திப்பது, அதிக பணிச்சுமை மற்றும் வளங்கள் பற்றாக்குறை போன்றவற்றால் உணர்வு ரீதியாக மிகவும் சோர்வுற்று இருந்தனர்.

நிறுவனத் தலைமையின் ஆட்சேபனை மற்றும் தனது சொந்த குழுவின் அவநம்பிக்கை காட்டிலும் அவர் நான்கு நாள் வேலை வாரத்தை முயற்சித்தார்.

"அவர்கள் இது வேலை செய்யாது என நினைத்தார்கள். ஆனால் வேலை செய்தது, அதன் முடிவுகள் மிகவும் சிறப்பாக இருந்தது" எனத் தெரிவித்தார்.

இந்த முயற்சிக்கு முந்தைய ஆண்டு இவரின் குழு 51 சுகாதார விடுப்பு எடுத்தனர். இந்த முயற்சி அமலில் இருந்த ஆறு மாதத்தில் இது 4 நாட்களாக குறைந்தது.

பணியாளர்கள் நல்ல உறக்கம், கூடுதல் உடற்பயிற்சி மற்றும் அவர்களின் பொழுதுபோக்குகளைப் பின் தொடர முடிந்தது. "வார இறுதி நாட்களில் பணி செய்யாமல் அவர்களால் குடும்பத்துடன் செலவிட முடிந்தது" என்கிறார் சார்ல்.

"அவர்களின் பெரும்பாலானவர்கள் கூடுதல் நேரத்தைப் பயன்படுத்தி தனியாக வேலை செய்து கூடுதலாக சம்பாதிப்பார்கள் என நான் நினைத்தேன். ஆனால் ஒருவர் மட்டுமே அவ்வாறு செய்தார்" என்றார்.

ஊழியர்கள் மேம்பட்ட நல்வாழ்வு அவர்களை பணியில் சிறப்பாக்கியது என சார்ல் நம்புகிறார்.

"அவர்கள் கூடுதல் கவனத்துடனும் அககறையுடனும் இருந்தனர். இது மாணவர்களுக்கு சிறந்த பராமரிப்பு வழங்கக்கூடியதாக மாறியது"

அனைவருக்கும் பொருந்தாத ஒற்றை அணுகுமுறை

இவ்வகையான மாற்றங்கள் எல்லா இடங்களிலும் சாத்தியமில்லை.

"ஒருநாட்டின் தொழில்துறை அமைப்பு, அதன் வளர்ச்சி கட்டமும் இதில் முக்கியமாகிறது" என்கிறார் ஃபேன்.

"ஆப்ரிக்காவில் பல தொழிலாளர்கள் வேளாண்மை, சரங்கம் அல்லது முறைசாரா துறைகளில் உள்ளனர்" என்கிறார் கேரன்.

"இவர்கள் வேலை நெகிழ்வுத்தன்மை பற்றிய உரையாடலை சிந்திக்கவே முடியாது" என்றும் தெரிவித்தார்.

குறைந்த திறன் கொண்ட மனிதனால் செய்யப்படும் வேலைகளை மாற்றியமைப்பது கடினமானது. இந்த துறைகளில் உள்ள முதலாளிகள், வேலை நேரத்தை மாற்ற யோசிப்பதை விட பெரும்பாலும் லாபத்தை அதிகரிக்கவே பார்ப்பார்கள்" என்கிறார் லோவ்.

ஆனால் சில முன்னேற்றம் ஏற்பட்டு வருகிறது.

ஃபேனின் ஆய்வில் கட்டுமானம், உற்பத்தி மற்றும் சுற்றுலா துறையில் உள்ள நிறுவனங்களும் இடம்பெற்றுள்ளன. அதில் சில வெற்றிகளும் உள்ளன.

"இவை பல துறைகளில் வேலை செய்ய முடியும். ஆனால் நான்கு நாள் வேலை வாரத்தை நான் ஒரு சர்வரோக நிவாரணி என கூற மாட்டேன்" என்கிறார் அவர். இது அனைவருக்கும் பொருந்தும் ஒற்றைத் தீர்வு கிடையாது என்றும் தெரிவித்தார்.

இளம் தலைமுறையினர் மாற்றத்தை முன்னெடுத்து வருகின்றனர்.

நான்கு நாள் வேலை, வேலை-வாழ்க்கை சமநிலை, வேலை கலாச்சாரம், நல்வாழ்வு, மனநலம்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.

இந்த மாற்றத்தின் மிகப்பெரிய விசை இளைஞர்களிடமிருந்து வரும் என வல்லுநர்கள் ஒப்புக்கொள்கின்றனர்.

2025-இல் நடத்தப்பட்ட ஒரு உலகளாவிய கருத்துகணிப்பில் முதல் முறையாக சம்பளத்தை விட வேலை-வாழ்க்கை சமநிலை தான் மிகவும் முக்கியமானது என்பது தெரியவந்துள்ளது.

தென் கொரியாவில் பல இளம் தொழிலாளர்கள் குறைவான வேலை வாரத்திற்காக சம்பளக் குறைப்பையும் ஏற்றுக்கொள்ள தயாராக உள்ளார்கள்.

"இளம் தலைமுறையிடம் அதிகரித்து வரும் எதிர்ப்பை நாம் பார்க்க முடிகிறது. வேலையின் நோக்கம் மற்றும் வாழ்க்கையிடமிருந்து தங்களுக்கு என்ன வேண்டும் என்பதில் அவர்கள் அடிப்படையிலே வேறான எண்ணங்கள் உள்ளன" என்கிறார் ஃபேன்.

"கிரேட் ரெசிக்னேஷன் (Great resignation, பேரிடருக்குப் பிறகு கூட்டாக ராஜினாமா செய்வது , கொயட் க்வுட்டிங் (Quiet quitting, வேலையில் என்ன தேவையோ அதை மட்டும் செய்வது) போன்ற இயக்கங்கள் இளம் தொழிலாளர்கள் அவர்களின் அதிருப்தியை பதிவு செய்ய வழிகளைத் தேடி வருவதையும் சோர்வு கலாசாரத்தை நிராகரிப்பதையும் காட்டுகின்றன என்கிறார். காலப்போக்கில் இந்த மாற்றங்கள் வேலையிட விதிமுறைகளை மாற்றி அமைக்கலாம் என்றும் தெரிவித்தார்.

ஜப்பானில் சில மாற்றங்களைப் பார்ப்பதாகக் கூறுகிறார் ஹிரோஷி ஓனோ.

"30% ஜப்பான் ஆண்கள் தற்போது பேறுகால விடுப்பை எடுக்கின்றனர். இது முன்னர் பூஜ்ஜியமாக இருந்தது. இது மக்கள் நல்வாழ்விற்கு கூடுதல் முக்கியத்துவம் கொடுப்பதை காட்டுகிறது" என்றார்.

முதல்முறையாக பணியாளர்கள் உண்மையில் எதிர்க்க தொடங்குகின்றனர் என்பதை ஒப்புக்கொள்ளும் கேரன் வயது குறைய குறைய கூடுதல் மாற்றங்களைக் கேட்கின்றனர் என்றார். அதற்கான உத்வேகம் உருவாகி வருவதாக அவர் நம்புகிறார்.

"கொரோனா முதல் திருப்புமுனையை வழங்கியது. நான்கு நாள் வாரம் அடுத்த திருப்புமுனையாக இருக்கும் என நம்புகிறேன்" என்று தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cz71g1dl7j5o

ரஷ்யா - உக்ரைன் போரை நிறுத்தவே இந்தியா மீது வரி விதிப்பு : வெள்ளை மாளிகை

1 month 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

20 AUG, 2025 | 04:59 PM

image

உக்ரைன் மீது ரஷ்யா தொடுத்துள்ள போரை முடிவுக்குக் கொண்டு வர ரஷ்யா மீது மறைமுக அழுத்தம் கொடுக்கும் முயற்சிகளின் ஒரு பகுதியாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் இந்தியாவின் மீது கடுமையான வரிகளை விதித்ததாக வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் கரோலின் லீவிட் தெரிவித்துள்ளார்.

யுத்தத்தை நிறுத்த மிகப் பெரிய அழுத்தத்தை டிரம்ப் அளித்துள்ளார். இதில் இந்தியா மீதான தடைகள் மற்றும் பிற நடவடிக்கைகளையும் அவர் எடுத்து உள்ளார். ரஷ்யா - உக்ரைன் போர் முடிவுக்கு வர வேண்டும் என்று டிரம்ப் மிகவும் தெளிவாக கூறி உள்ளார்.

ரஷ்யா - உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான அனைத்து வழிகளையும் அமெரிக்கா ஆராய்ந்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, ரஷ்யாவுடன் இராணுவ வர்த்தக உறவுகளை வைத்திருக்கும் நாடுகளுக்கு அழுத்தம் கொடுக்க தீர்மானித்தோம். 

ரஷ்யாவிடம் இருந்து S-400 ஏவுகணை அமைப்பை வாங்குவதற்கான இந்தியாவின் முடிவு, இந்தப் போருக்கு மறைமுகமாக ஆதரவளிப்பதாகவே நாங்கள் கருதுகிறோம். இந்தியாவுக்கு எதிராக இந்த கூடுதல் வரி விதிப்பு, ரஷ்யாவுடனான அதன் இராணுவ வர்த்தகத்தை நிறுத்துமாறு வலியுறுத்துவதற்கே.

ரஷ்யாவும் உலகெங்கிலும் உள்ள அனைத்து நாடுகளும் அமெரிக்காவை மீண்டும் மதிக்கின்றன. இது ரஷ்யா- உக்ரைனுடன் முன்னேற்றத்திற்கு வழி வகுத்தது மட்டுமல்லாமல், உலகெங்கிலும் உள்ள 7 மோதல்களை முடிவுக்குக் கொண்டுவந்தது.

இந்தியா-பாகிஸ்தான் மோதலை தடுத்து நிறுத்தினோம். இந்த இரு நாடுகளின் மோதலை முடிவுக்குக் கொண்டுவர டிரம்ப் வர்த்தகத்தை மிகவும் சக்திவாய்ந்த முறையில் பயன்படுத்தியுள்ளார் என வெள்ளை மாளிகையின் செய்திதொடர்பாளர் கரோலின் லீவிட்  மேலும் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யும் பொருள்களுக்கு 25 வீத பரஸ்பர வரி விதிக்கப்பட்ட நிலையில், எச்சரிக்கையை மீறி ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்வதாக குற்றச்சாட்டை முன்வைத்து வரியை 50 சதவிகிதமாக டிரம்ப் உயர்த்தினார்.

இதனிடையே, ரஷ்யா மற்றும் உக்ரைன் ஜனாதிபதிகளை அடுத்தடுத்து டிரம்ப் சந்தித்து அமைதிப் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இரு தலைவர்களுடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தையில் எந்த ஒப்பந்தமும் இறுதி செய்யப்படவில்லை என்றாலும் முன்னேற்றம் ஏற்பட்டதாக தெரிவித்த டிரம்ப், போர் நிறுத்தத்துக்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.

இதேவேளை, ரஷ்யா - உக்ரைன் போரில் நடுநிலையான நிலைப்பாட்டை கடைப்பிடித்து வருகிறது. பேச்சுவார்த்தைகள் மூலம் இப்பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

https://www.virakesari.lk/article/222964

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month 2 weeks ago

New-Project-175.jpg?resize=750%2C375&ssl

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

காசா நகரைக் கைப்பற்றுவதற்கான திட்டத்திற்கு இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் ஒப்புதல் அளித்துள்ளார்.

அதைச் செயல்படுத்த சுமார் 60,000 ரிசர்வ் வீரர்களை அழைக்கவும் அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளதாக அவரது அமைச்சு புதன்கிழமை (20) உறுதிப்படுத்தியது.

இந்த உத்தரவுகள் உடனடியாக வழங்கப்படவில்லை, மாறாக பல கட்டங்களாக நிறைவேற்ற திட்டமிடப்பட்டன.

அவற்றுள் சுமார் 40,000-50,000 வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் 2 ஆம் திகதி பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

நவம்பர்-டிசம்பர் மாதங்களில் மற்றொரு கட்டத்தின் கீழும், 2026 பிப்ரவரி-மார்ச் இல் மூன்றாவது கட்டத்தின் கீழும் வீரர்கள் பணிக்கு வர உத்தரவிடப்படுவார்கள்.

தற்போது பணியில் இருக்கும் பல வீரர்களுக்கான ரிசர்வ் கடமையை 30-40 நாட்கள் நீட்டிப்பதாகவும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தாக்குதலின் போது ஒரு குறிப்பிட்ட நேரத்தில் மொத்த ரிசர்வ் வீரர்களின் எண்ணிக்கையை சுமார் 130,000 ஆகக் கொண்டுவரும்.

https://athavannews.com/2025/1443887

புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின்

1 month 2 weeks ago

புடின் - செலென்ஸ்கி இடையேயான சந்திப்பு சாத்தியமானதாக இல்லை - கிரெம்ளின்

20 August 2025

1755654863_4378342_hirunews.jpg

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினுக்கும், யுக்ரைனின் வோலோடிமிர் செலென்ஸ்கிக்கும் இடையே விரைவில் ஒரு உச்சிமாநாடு நடைபெறுவதை கிரெம்ளின் இன்னும் சாத்தியமான விடயமாக அறிவிக்கவில்லை. 

எனினும், யுக்ரைனில் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்து விவாதிக்க இரண்டு தலைவர்களும் சந்திக்க வேண்டும் என்ற தனது அழைப்பை டொனால்ட் ட்ரம்ப் மீண்டும் விடுத்துள்ளார். 

அமெரிக்க ஜனாதிபதி கடந்த வாரம் அலஸ்காவில் புடினைச் சந்தித்தார் பின்னர், ஏழு ஐரோப்பியத் தலைவர்களையும், செலென்ஸ்கியையும் வெள்ளை மாளிகையில் சந்தித்த பின்னரே, ரஷ்ய-யுக்ரைன் தலைவர்களுக்கு இடையிலான சந்திப்பு குறித்த அழுத்தம் வந்துள்ளது. 

இந்தநிலையில், "இந்த பிரச்சினை கடினமானது" என்று ட்ரம்ப் ஒப்புக் கொண்டார், அத்துடன், ரஷ்ய ஜனாதிபதி விரோதங்களை முடிவுக்குக் கொண்டு வருவதில் ஆர்வம் காட்டவில்லை என்பதையும் அவர் ஒப்புக் கொண்டுள்ளார். 

இதேவேளை, யுக்ரைனுக்கான, அமெரிக்கா அனுசரணையிலான பாதுகாப்பு உத்தரவாதங்களின் அடிப்படையில் சில முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளன. 

ஒரு அமைதி ஒப்பந்தம் ஏற்பட்டால், அத்தகைய உறுதிமொழிகள் கியேவின் இறையாண்மைக்கு மிக முக்கியமானதாக இருக்கும் என்று செலென்ஸ்கியும், ஐரோப்பியத் தலைவர்களும் ட்ரம்பை நம்ப வைத்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/415506/putin-zelensky-meeting-unlikely-kremlin

சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு!

1 month 2 weeks ago

Published By: PRIYATHARSHAN

19 AUG, 2025 | 07:18 AM

image

உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பில்,  உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். 

டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், 

"பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன்.

மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார்.

இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார்.

உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து புட்டினுடன் கலந்துரையாட விரும்புவதாக டிரம்ப் கூறினார்.

வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர்  கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான ஒரு "வரலாற்று படி" என்று பிரித்தானிய பிரதமர்  கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.

இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

டிரம்ப் – புட்டின் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச சமூகம் இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/222834

உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!

1 month 2 weeks ago

உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் – ட்ரம்ப் உறுதி!

3eea147e-e6a4-494e-9414-bb62959ab0e9.jpg

உக்ரேனில் ரஷ்யாவின் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான எந்தவொரு ஒப்பந்தத்திலும் உக்ரேனின் பாதுகாப்பை உறுதி செய்ய அமெரிக்கா உதவும் என்று ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் திங்களன்று (18) ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியிடம் தெரிவித்தார்.

இருப்பினும் எந்த உதவியின் அளவு உடனடியாகத் தெளிவாகத் தெரியவில்லை.

கடந்த வெள்ளிக்கிழமை (15) அலாஸ்காவில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை ட்ரம்ப் சந்தித்த சில நாட்களுக்குப் பின்னர், ஜெலென்ஸ்கி மற்றும் ஐரோப்பிய நட்பு நாடுகளின் குழுவை வரவேற்ற வெள்ளை மாளிகையில் நடந்த ஒரு அசாதாரண உச்சிமாநாட்டின் போது ட்ரம்ப் இந்த உறுதிமொழியை அளித்தார்.

சந்திப்பின் பின்னர், “பாதுகாப்பைப் பொறுத்தவரை, நிறைய உதவிகள் இருக்கும்,” என்று ட்ரம்ப் செய்தியாளர்களிடம் கூறினார்.

ஐரோப்பிய நாடுகள் இதில் ஈடுபடும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த வாக்குறுதியை “ஒரு பெரிய முன்னேற்றம்” என்று ஜெலென்ஸ்கி பாராட்டினார்.

திங்கட்கிழமை சந்திப்புகளுக்குப் பின்னர் ஒரு செய்தியாளர் சந்திப்பில், பாதுகாப்பு உத்தரவாதத்தின் ஒரு பகுதி அமெரிக்காவிற்கும் உக்ரேனுக்கும் இடையே $90 பில்லியன் (£67 பில்லியன்) ஆயுத ஒப்பந்தத்தை உள்ளடக்கும் என்றும் ஜெலென்ஸ்கி கூறினார்.

இதில் உக்ரேனிடம் இல்லாத அமெரிக்க ஆயுதங்களும் அடங்கும், அவற்றில் விமான அமைப்புகள், ஏவுகணை எதிர்ப்பு அமைப்புகள் உள்ளடங்கும்.

கியேவிற்கான பாதுகாப்பு உத்தரவாதங்கள் 10 நாட்களுக்குள் செயல்படுத்தப்படும் என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1443584

டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் யாருக்கு என்ன தேவை? : 4 தரப்பு , 4 கோணங்கள்

1 month 2 weeks ago

டொனால்ட் டிரம்ப் - வொலோதிமிர் ஜெலன்ஸ்கி

பட மூலாதாரம், AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • லாரா கோஸி மற்றும் டாம் கோகெகன்

  • பிபிசி

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

யுக்ரேன் தொடர்பாக முக்கியமான பேச்சுவார்த்தைக்காக வெள்ளை மாளிகையில் உலகத் தலைவர்கள் அரிதாக ஒன்றுகூடும்போது நிச்சயம் அது வழக்கமான நாளாக இருக்காது.

ஆரம்பத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் யுக்ரேன் அதிபர் வொலோதிமிர் ஜெலன்ஸ்கிக்கு இடையேயான சந்திப்பாக அறிவிக்கப்பட்டது, தற்போது ஒரு மாநாடு போன்று மாறியுள்ளது.

பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பின்லாந்து, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ தலைவர்கள், மூன்று ஆண்டுகளாக ரஷ்யாவுடன் நீடித்துவரும் போரை முடிவுக்குக் கொண்டு வருவது குறித்தும் அதற்கான நிபந்தனைகள் குறித்தும் தங்கள் கருத்துகளை தெரிவிக்க ஒன்றுகூடியுள்ளனர்.

அமெரிக்கா தனது நிலைப்பாட்டை யுக்ரேனுக்கு சாதகமாக இல்லாத ஒன்றாக மாற்றியுள்ளது என்பது, வளர்ந்து வரும் ஐரோப்பிய கவலைகளுக்கு காரணமாக உள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துகொள்பவர்கள் மற்றும் கலந்துகொள்ளாத ஒருவருக்கு (ரஷ்யா) நீண்ட விவாதங்களுக்குப் பிறகு வெற்றிகரமான முடிவு என்பது என்னவாக இருக்கும் என்பது குறித்து நாங்கள் விவாதித்திருக்கிறோம்.

"ஒப்பந்தம் வந்தால் போதும்" - அமெரிக்கா

டிரம்ப் தன்னுடைய தேர்தல் பிரசாரத்தின்போது, தான் ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே இந்த மோதலுக்கு தீர்வு காண்பதாக கூறியிருந்தார், ஆனால் ஆறு மாதங்கள் கழிந்தும் அதை அவரால் எட்ட முடியவில்லை.

காலப்போக்கில், எந்தவொரு ஒப்பந்தத்தின் விதிமுறைகளையும் விட இந்த ஒப்பந்தத்தில் டிரம்ப் அதிக ஆர்வம் காட்டியதால், விதிமுறைகள் மாறிவிட்டன.

வெள்ளிக்கிழமை அலாஸ்காவில் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினை சந்தித்ததிலிருந்து, டிரம்ப் மாஸ்கோ மீதான தனது விமர்சனத்தையும், பொருளாதாரத் தடைகள் அச்சுறுத்தலையும் கைவிட்டு, அதற்கு பதிலாக ஜெலன்ஸ்கி மீது அழுத்தத்தைக் குவிக்க முடிவு செய்ததாகத் தெரிகிறது.

ஞாயிற்றுக்கிழமை இரவு சமூக ஊடகப் பதிவில், யுக்ரேன் நேட்டோ அமைப்பில் இணைய வேண்டும் என்ற நம்பிக்கையை அந்நாட்டு அதிபர் கைவிட வேண்டும் என்றும், 2014 இல் புதின் சட்டவிரோதமாக க்ரைமியாவை இணைத்ததை ஒப்புக்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எச்சரித்தார்.

ரஷ்யாவின் மேலதிக ஆக்கிரமிப்பைத் தடுக்கும் நோக்கில் ஐரோப்பாவுக்கு பாதுகாப்பு உத்தரவாதங்களை அமெரிக்கா வழங்கும் என்று டிரம்பின் தூதர் ஸ்டீவ் விட்காஃப் ஞாயிற்றுக்கிழமை தெரிவித்தார். ஆனால் அதுகுறித்த விவரங்கள் தெளிவாக இல்லை.

இதுவரை, யுக்ரேனின் எதிர்கால பாதுகாப்புக்கு அமெரிக்கா உறுதியளிக்க வேண்டும் என்ற ஐரோப்பிய கோரிக்கைகளை அமெரிக்கா எதிர்த்தது. அது உண்மையில் மாறிவிட்டதா என்பதை அறிய அனைவருடைய கவனமும் வெள்ளை மாளிகையை நோக்கி உள்ளது.

விட்டுக்கொடுக்க மறுக்கும் யுக்ரேன்

பொறுமையிழந்து காணப்படும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் முன்னிலையில், தனது நிலைப்பாட்டை தெரிவிக்க வேண்டிய கட்டாயத்தில் யுக்ரேன் அதிபர் ஜெலன்ஸ்கி இருக்கிறார். தற்போதைய நிலையில் டிரம்ப் புதினின் கருத்துக்களால் தூண்டப்பட்டவராக அறியப்படுகிறார். ஏற்கெனவே அமைதிக்கு இடையூறாக ஜெலன்ஸ்கி இருப்பதாக டிரம்ப் குற்றம் சாட்டியிருக்கிறார்.

ஜெலென்ஸ்கியிடம் ரஷ்யாவுக்கு நிலத்தை விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள வேண்டும் என்று டிரம்ப் கூறலாம். 2022 முதல் ஆயிரக்கணக்கான யுக்ரேனிய வீரர்கள் உயிரைக் கொடுத்து போராடிய பகுதிகளான டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பகுதிகளிலிருந்து பின் வாங்குவது என்பது யுக்ரேனுக்கு கடினமான முடிவாக இருக்கும்.

இது புதிய நிலப்பகுதிகளை ஆக்கிரமிப்புக்கான ஏவுதளமாக ரஷ்யா பயன்படுத்த வழிவகுக்கும். எனவே ரஷ்யா மீண்டும் தாக்கினால், பதிலடி கொடுக்கும் வலுவான பாதுகாப்பு உத்தரவாதங்கள் இல்லாமல் நிலச் சலுகைகளை வழங்க ஜெலன்ஸ்கி ஒப்புக்கொள்ள முடியாது. பாதுகாப்பு உத்தரவாதங்கள் நேட்டோவால் வழங்கப்பட்டிருக்கலாம், ஆனால் யுக்ரேன் நேட்டோ கூட்டணியில் சேராது என்று டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளார்.

எந்த மாற்று பாதுகாப்பு உத்தரவாதங்களின் விவரங்களும் இன்னும் உருவாக்கப்படவில்லை, ஆனால் அவை இல்லாமல் ஜெலன்ஸ்கி எந்த உறுதிமொழிகளையும் எடுப்பது கடினமாக இருக்கும்.

உடனடி போர் நிறுத்தத்தை விரும்புவதிலிருந்து முழு அமைதி ஒப்பந்தத்தை நோக்கி டிரம்ப் நகர்ந்துவிட்டதாகத் தோன்றுவதும் யுக்ரேனை கவலையடையச் செய்கிறது. இதனால் ஏற்படும் தாமதத்தால், ரஷ்யாவின் தாக்குதல்கள் மற்றும் பொதுமக்களின் உயிரிழப்புகளும் தொடரலாம்.

பாதுகாப்புக்கான உத்தரவாதம் - ஐரோப்பாவின் கோரிக்கை

ஐரோப்பியத் தலைவர்கள் யுக்ரேனுக்கான அமெரிக்காவின் பாதுகாப்பு உத்தரவாதங்கள் எப்படி இருக்கும் என்பதை டிரம்ப் தெளிவுபடுத்த வேண்டும் எதிர்பார்ப்பார்கள்.

இந்த விஷயத்தில் அமெரிக்கா வெளியிடும் அறிக்கைகளில் இருக்கும் தெளிவின்மை, ஐரோப்பியர்களுக்கு கவலை அளிக்கிறது.

ரஷ்யாவிற்கு நிலத்தை விட்டுக்கொடுக்க யுக்ரேனை அமெரிக்கா வலியுறுத்தக்கூடும் என்ற கருத்து குறித்த பதற்றமும் உள்ளது. ஐரோப்பிய கண்டம் ரத்தம் தெறிக்கும் போர்களின் நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும் ஒரு இறையாண்மை கொண்ட நாட்டின் எல்லைகள் பலவந்தமாக மறுவரையறை செய்யப்படும் சூழ்நிலையைத் தவிர்க்க தலைவர்கள் விரும்புகிறார்கள்.

இந்த கவலைகளின் விவாதத்தின் ஐரோப்பாவின் இத்தனைத் தலைவர்களும் வெள்ளை மாளிகைக்கு செல்லும் திடீர் முடிவை எடுத்துள்ளனர். கடந்த வாரம் டிரம்ப் - புதின் சந்திப்பு நடைபெற்ற, அலாஸ்கா உச்சிமாநாட்டிற்கு முன்னதாக நடந்த ஒரு மெய்நிகர் அமெரிக்க-ஐரோப்பிய ஒன்றியக் கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தின் விளைவாக ரஷ்யா மீதான டிரம்பின் விமர்சனத்தை கடுமைப்படுத்த முடிந்தது. ஆனால்,புதினை சந்தித்த பின்னர், அவர் மீண்டும் ரஷ்யாவின் பக்கம் சாய்வது போல் தோன்றுவதால், ஐரோப்பியத் தலைவர்கள் கண்டத்தின் நீண்டகால பாதுகாப்பு குறித்த தங்கள் கவலைகள் மாறவில்லை என்பதை அவருக்கு உணர்த்த முயற்சிப்பார்கள்.

ரஷ்யா எதிர்பார்ப்பது என்ன?

இன்று வெள்ளை மாளிகையில் நடைபெறும் சந்திப்பில் ரஷ்ய பிரதிநிதிகள் யாரும் இருக்க மாட்டார்கள். ஆனாலும்,அதனை ஒரு பொருட்டாக கருதாத அளவுக்கு,கடந்த வாரம் டிரம்ப் மீது புதின் போதுமான அளவு தாக்கத்தை ஏற்படுத்தியதாகத் கருதப்படுகிறது. இதனால் ரஷ்யா தனது பார்வை போதுமான அளவு பிரதிநிதித்துவப்படுத்தப்படும் என்று நம்பலாம்.

யுக்ரேன் நேட்டோவில் சேராது என்று டிரம்ப் ஏற்கெனவே கூறியுள்ளார்.மேலும் அந்த உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தவும் அங்கீகரிக்கவும் ரஷ்யா விரும்புகிறது. டான்பாஸ் மீதான முழு கட்டுப்பாட்டையும் அது விரும்புகிறது, இது டொனெட்ஸ்க் மற்றும் லுஹான்ஸ்க் பிராந்தியங்களில் இன்னும் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் நிலத்தை யுக்ரேன் விட்டுக்கொடுக்க வழிவகுக்கும்.

மிக முக்கியமாக, போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒப்பந்தம் இப்போது ஜெலன்ஸ்கியின் கையில் உள்ளது என்பதை டிரம்ப் மூலமாக ரஷ்யா பேசவைத்திருக்கிறது. அதே நேரத்தில் ஜெலன்ஸ்கி டான்பாஸ் பிராந்தியத்தை முழுவதுமாக விட்டுக்கொடுக்க ஒப்புக்கொள்ள மாட்டார் என்பதை ரஷ்யா அறிந்திருக்கிறது. இந்த முண் டிரம்ப் நிரந்தரமாக பேச்சுவார்த்தை மேசையிலிருந்து விலகி, யுக்ரேனையும் ஐரோப்பியர்களையும் தங்களைத் தற்காத்துக் கொள்வதற்கான வழியைத் தேட வழிவகுக்கும் என்பதே ரஷ்யாவின் வெற்றியாக இருக்கும்.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c80d1n11vy5o

ரஷ்யா மீது மேலும் பொருளாதாரத் தடைகளை விதிப்போம் : இங்கிலாந்து பிரதமர் எச்சரிக்கை

1 month 2 weeks ago

18 AUG, 2025 | 03:36 PM

image

உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்தார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மேற்கொண்ட முயற்சிகள், உக்ரைன் மீதான ரஷ்யாவின் சட்டவிரோத போரை முடிவுக்கு கொண்டு வருவதில் முன் எப்போதையும் விட நம்மை நெருக்கமாக ஒன்று சேர்த்துள்ளன.

கொலைகள் நடப்பதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் அவரது தேடலை நாம் பாராட்ட வேண்டும். அதில் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. அடுத்தகட்டமாக உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை இணைத்து பேச்சுவார்த்தை நடத்தப்பட வேண்டும். அவர் இல்லாமல் உக்ரைன் பிரச்சனைக்கான அமைதி தீர்வை முடிவு செய்ய முடியாது.

உக்ரைனுக்கு வலுவான பாதுகாப்பு உத்தரவாதம் அளிக்கும் அமெரிக்காவின் வெளிப்படைத் தன்மையை ஐரோப்பாவுடன் இணைந்து வரவேற்கிறேன். ரஷ்ய ஜனாதிபதி புட்டினை தடுப்பது முக்கியம், உக்ரைன் மீதான கொடூர தாக்குதலை புட்டின் நிறுத்தும் வரை, ரஷ்யா மீது மேலும் பல பொருளாதார தடைகளை நாங்கள் விதிப்போம். அவை ரஷ்ய பொருளாதாரத்துக்கும், அதன் மக்களுக்கும் ஏற்கனவே தண்டனையாக அமைந்துள்ளன என மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, உக்ரைன் - ரஷ்யா இடையே 3 ஆண்டுக்கு மேலாக யுத்தம் இடம்பெற்றுவரும் நிலையில், யுத்தத்தை நிறைவுக்கு கொண்டு வருவது குறித்து  அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும் ரஷ்ய ஜனாதிபதி புட்டினும் அலாஸ்காவில் பேச்சுவார்த்தை நடத்தினர். குறித்த பேச்சுவார்த்தையில் எவ்வி முடிவும் எட்டப்படாத நிலையில், டிரம்புடன் பேச்சுவார்த்தை நடத்த அமெரிக்க வெள்ளை மாளிகைக்கு உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி செல்கிறார்.

இந்நிலையில், 'விருப்ப கூட்டணி' என்ற பெயரில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவல் மெக்ரோனும் ஜேர்மன் ஜனாதிபதி பிரைட்ரிச் மெர்சும் காணொளி மூலம் பேசினர். அதில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மரும் கலந்துகொண்டார். இதன்போதே இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222806

ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி

1 month 2 weeks ago

ட்ரம்பை சந்திக்கவுள்ள ஷெலன்ஸ்கி

MediaFile-6-1-780x470.jpeg

உக்ரைன் ஜனாதிபதி வொளொடிமிர் ஷெலன்ஸ்கி (Volodymyr Zelenskyy) அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பை எதிர்வரும் திங்கட்கிழமை சந்திக்கவுள்ளார்.

இந்த சந்திப்பானது வொஷிங்டன் டிசியில் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை உக்ரைன் ஜனாதிபதியும் தமது டெலிகிராம் கணக்கில் உறுதிப்படுத்தியுள்ளார்.

உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையில் இடம்போரை நிறுத்துவதற்கான அமைதிப் பேச்சுவார்த்தை டொனால் ட்ரம்பின் தலைமையில் இடம்பெற்று வருகின்றது.

இது தொடர்பான பேச்சுவார்த்தை இலங்கை நேரப்படி இன்று இடம்பெற்றிருந்த நிலையில், அது எவ்வித இணக்கப்பாடும் இன்றி நிறைவடைந்தது.

இன்றைய பேச்சுவார்த்தையில் எவ்வித உடன்பாடும் எட்டப்பட்டிருக்கவில்லை என அமெரிக்க ஜனாதிபதி தெரிவித்திருந்தார்.

அத்துடன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான சிறந்த வழி ஒரு சமாதான ஒப்பந்தம்தான் என்றும் அவர் கூறியுள்ளார்.

எல்லாம் சரியாக நடந்தால், ஜனாதிபதி புட்டினுடன் ஒரு சந்திப்பை நாங்கள் திட்டமிடுவோம்.

அதன்மூலம் மில்லியன் கணக்கான மக்களின் உயிர்கள் காப்பாற்றப்படும் என்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.


https://akkinikkunchu.com/?p=337156

சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் மவுண்ட்பேட்டன் குண்டு வைத்து கொல்லப்பட்டது ஏன்?

1 month 3 weeks ago

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, 1947 ஆம் ஆண்டு பிப்ரவரி 20ஆம் தேதி, பிரிட்டிஷ் பிரதமர், லார்ட் மவுண்ட்பேட்டனை இந்தியாவின் வைஸ்ராயாகவும் கவர்னர் ஜெனரலாகவும் நியமித்தார்

கட்டுரை தகவல்

  • ரெஹான் ஃபசல்

  • பிபிசி செய்தியாளர்

  • 15 ஆகஸ்ட் 2025

தனக்கு வயதாகும் என்று மவுண்ட்பேட்டன் ஒருபோதும் நினைத்ததில்லை. சளி போன்ற சாதாரண உபாதையைத் தவிர, அவர் தனது வாழ்நாள் முழுவதும் வேறு எந்த நோயாலும் அவதிப்பட்டதேயில்லை.

70 வயதைத் தாண்டிய போதிலும், அவர் பிராட்லேண்டில் இருக்கும் போதெல்லாம், காலையில் இரண்டு மணி நேரம் குதிரை சவாரி செய்வார்.

வாழ்க்கையின் இறுதிக் கட்டத்தில், அவரது சுறுசுறுப்பு சற்று குறைந்ததால், தனக்குப் பிடித்தமான போலோ விளையாட்டை விளையாடுவதைத் தவிர்த்தார் என்பதைத் தவிர, அவர் ஆரோக்கியமாகவே இருந்தார்.

சோர்வடையும்போதும் அல்லது சலிப்படையும்போதும் உறங்குவது அவர் வழக்கம். ஆனால், வாழ்க்கையை மகிழ்ச்சியாக வாழ்வதற்கான அவரது விருப்பம் ஒருபோதும் குறையவில்லை.

குடும்பத்திற்கு எப்போதும் முன்னுரிமை அளித்துவந்த மவுண்ட்பேட்டன், ஒவ்வொரு கிறிஸ்துமஸையும் தனது மகள்கள் மற்றும் பேரக்குழந்தைகள் உட்பட குடும்பத்தினருடன் பிராட்லேண்ட்ஸில் கொண்டாடினார்.

ஈஸ்டருக்கு பிராபோர்னில் ஒன்றுகூடி மகிழும் மவுண்ட்பேட்டனின் குடும்பத்தினர், பெரும்பாலும் தங்கள் கோடைகாலத்தை அயர்லாந்தில் உள்ள கிளாசிபானில் கழித்தனர்.

மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்

"மவுண்ட்பேட்டன் தனது பேரக்குழந்தைகளின் நண்பர்கள் மற்றும் அவர்களின் காதல் வாழ்க்கையைப் பற்றி அறிந்து கொள்வதில் ஆர்வமாக இருந்தார்" என்று பிரையன் ஹோய் 'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தின் ஒவ்வொரு விஷயத்திலும் அக்கறைக் காட்டுவார் என்று அவரது பேரனின் தோழிகளில் ஒருவர் கூறுகிறார். அவர் தற்போதும் குடும்பத்தினர் அனைவராலும் நேசிக்கப்படுவராகவும், மதிக்கப்படுபவராகவும் இருப்பதாக அவர் என்னிடம் கூறினார்" என்று பிரையன் ஹோய் எழுதுகிறார்.

"அவருடன் இருப்பது ஜாலியாக இருக்கும். அவர் உல்லாசமாக இருப்பார், ஆனால் யாரும் அதைப் பொருட்படுத்தவில்லை."

குழந்தைகளுடனான அவரது தொடர்புக்கு ஒரு காரணம், அவரே குழந்தையைப் போன்ற இயல்பைக் கொண்டவர் என்று கூறப்படுகிறது.

மவுண்ட்பேட்டனின் பேரன் மைக்கேல் ஜான், "அவருக்கு அற்புதமான நகைச்சுவை உணர்வு இருந்தது. அவர் எங்களுடன் அமர்ந்து சார்லி சாப்ளின் படங்களைப் பார்க்கும்போது விழுந்து-விழுந்து சிரிப்பார்" என்று தெரிவித்தார்.

"அவர் அந்தப் படத்தை இதற்கு முன்பு பலமுறை பார்த்திருந்தாலும், மீண்டும் புதிதாக பார்ப்பதுபோலவே ரசித்து சிரிப்பார்."

மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், BLINK

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டன் தனது குடும்பத்தை மிகவும் நேசித்தார்

ஐஆர்ஏவின் இலக்கான மவுண்ட்பேட்டன்

பணி ஓய்வுக்குப் பிறகு மவுண்ட்பேட்டன் சாதாரண வாழ்க்கையை வாழ்ந்து வந்தாலும், அவரது உயிருக்கு ஆபத்து இருப்பதை அரசு அறிந்திருந்தது.

1971ஆம் ஆண்டிலேயே, அவரது பாதுகாப்பிற்காக 12 போலீசார் பணியமர்த்தப்பட்டனர்.

தனது வாழ்க்கை வரலாற்றை எழுதிய பிலிப் ஜீக்லருக்கு அளித்த பேட்டியில், "வடக்கு அயர்லாந்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தங்கள் தோழர்கள் சிலரை விடுவிக்க அயர்லாந்து குடியரசுப் படை (ஐ.ஆர்.ஏ) என்னைக் கடத்திச் செல்லக்கூடும் என்று அரசாங்கம் அஞ்சுகிறது" என்று மவுண்ட்பேட்டன் கூறியிருந்தார்.

"ஒரு சோதனையில், ஐஆர்ஏ கொல்ல விரும்பிய 50 பேர் கொண்ட பட்டியலில் மவுண்ட்பேட்டனும் இருப்பது தெரியவந்தது," என்று ஆண்ட்ரூ லூனி தனது "The Mountbattens: Their Lives and Loves" என்ற புத்தகத்தில் எழுதியுள்ளார்.

"70களின் முற்பகுதியில் க்ளோசிபனில் மவுண்ட்பேட்டனைக் கொல்ல ஒரு திட்டம் இருந்ததாக ஒரு மூத்த ஐ.ஆர்.ஏ உறுப்பினர் உறுதிப்படுத்தினார், ஆனால் பொதுமக்களுக்கு உயிராபத்து ஏற்படலாம் என்ற அச்சம் காரணமாக அது செயல்படுத்தப்படவில்லை." என ராயல் மிலிட்டரி காவல்துறை அதிகாரியான கிரஹாம் ஜோயல், ஆண்ட்ரூ லூனியிடம் கூறினார்

"ஆகஸ்ட் 1976இல் மவுண்ட்பேட்டனை சுடுவதற்கான முயற்சி கைவிடப்பட்டது, ஏனெனில் அலைபாயும் கடல் பகுதியில் ஐ.ஆர்.ஏ ஆயுததாரிகளால் துல்லியமாக குறிவைத்து சுடமுடியவில்லை."

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, சுதந்திர இந்தியாவின் முதல் கவர்னர் ஜெனரல் லார்டு மவுண்ட்பேட்டன்

தொடர்ந்து கண்காணிக்கப்பட்ட மவுண்ட்பேட்டன்

1979 மார்ச் மாதத்தில், நெதர்லாந்திற்கான பிரிட்டன் தூதர் சர் ரிச்சர்ட் சைக்ஸ் மற்றும் எம்.பி. எரிக் நீவ் ஆகியோர் ஐ.ஆர்.ஏ-வால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

அதே ஆண்டு ஜூன் மாதத்தில் நேட்டோ தலைவர் ஜெனரல் அலெக்சாண்டர் ஹெய்கை பெல்ஜியத்தில் படுகொலை செய்ய ஐ.ஆர்.ஏ முயற்சித்தது, ஆனால் அவர் மயிரிழையில் மரணத்திலிருந்து உயிர் தப்பினார்.

இந்த சம்பவங்களுக்குப் பிறகுதான், தலைமை காவல்துறை கண்காணிப்பாளர் டேவிட் பிக்னெல், அயர்லாந்துக்கு செல்ல வேண்டாம் என்று மவுண்ட்பேட்டனுக்கு அறிவுறுத்தினார். ஆனால் அவர், 'அயர்லாந்து மக்கள் எனது நண்பர்கள்' என்று கூறினார்.

இதற்கு எதிர்வினையாற்றிய பிக்னெல், 'எல்லா அயர்லாந்து மக்களும் உங்கள் நண்பர்கள் அல்ல' என்று சொன்னார்.

எனவே, பிக்னெலின் அறிவுரையின்படி, குண்டுகள் நிரப்பப்பட்ட துப்பாக்கியை இரவில் உறங்கும்போதும் அருகில் வைத்துக் கொள்ளும் பழக்கத்தை கடைபிடிக்கத் தொடங்கினார் மவுண்ட்பேட்டன்

"ஜூலை 1979 இல், அவருக்கு ஏற்படவுள்ள ஆபத்தை மதிப்பிட்ட கிரஹாம் ஜோயல், 'ஷேடோ ஃபைவ்' சொகுசு படகில் பயணிப்பது மவுண்ட்பேட்டனுக்கு ஆபத்தை அதிகரிக்கும், ஏனெனில் இரவில் யாரும் சப்தமில்லாமல் அதில் ஏறிவிடமுடியும் என்று கூறினார்'' என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"பெல்ஃபாஸ்டில் பதிவுசெய்யப்பட்ட ஒரு கார் பல முறை கடற்கரையை நெருங்கி வருவதைக் கண்டதால் அவர்களுக்கு கவலை ஏற்பட்டது. ஒரு முறை, காரில் உள்ளவர்களை பைனாகுலரைப் பயன்படுத்தி பார்க்க ஜோயல் முயன்றார்."

''மவுண்ட்பேட்டனின் படகை ஒரு மனிதன் தொலைநோக்கி மூலம் பார்த்துக் கொண்டிருப்பதை ஜோயல் கண்டார். படகிலிருந்து சுமார் 200 கெஜம் தொலைவில் சந்தேகத்திற்குரிய நபர் இருந்திருக்க வேண்டும்."

லார்டு மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், SIDJWICK & JACKSON

படக்குறிப்பு, பிரிவினையை அடிப்படையாகக் கொண்ட புத்தகங்கள், ஆவணப்படங்கள் மற்றும் திரைப்படங்களில் லார்ட் மவுண்ட்பேட்டன் அடிக்கடி நினைவுகூரப்படுகிறார்

மவுண்ட்பேட்டனின் படகில் பாதுகாப்பு காவலர்கள் யாரும் இல்லை

ஜோயலின் எச்சரிக்கைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்படவில்லை. அவரது அறிக்கை புறக்கணிக்கப்பட்டு மவுண்ட்பேட்டனின் பாதுகாப்பு அயர்லாந்து போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டது. 1979 ஆகஸ்ட் 27ஆம் நாள் பிரிட்டன் முழுவதும் விடுமுறை நாளாக இருந்தது.

பல நாட்கள் மழைக்குப் பிறகு சூரியனைப் பார்த்த மவுண்ட்பேட்டன், காலை உணவின் போது தனது குடும்பத்தினரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அவர்,'ஷேடோ ஃபைவ்' படகில் சவாரி செய்ய தன்னுடன் யாரெல்லாம் வரப்போகிறார்கள் என்று அவர் கேட்டார்.

படகுத்துறைக்குச் செல்வதற்கு முன், மவுண்ட்பேட்டன் பயணத்திட்டத்தை தனது பாதுகாப்புப் பணியாளர்களிடம் விளக்கினார்.

பைனாகுலர் மற்றும் துப்பாக்கிகளுடன் ஆயுதம் ஏந்திய பாதுகாப்புப் பணியாளர்கள், தங்கள் காரை படகுத்துறையில் கொண்டுவந்து நிறுத்தினார்கள்.

மவுண்ட்பேட்டனுக்கு பாதுகாவலாக வந்த காவலர்களில் ஒருவர் கடல் அலைகளினால் வாந்தி எடுக்கத் தொடங்கினார். எனவே, பாதுகாவலர்கள் யாரும் தங்களுடன் படகில் வரத் தேவையில்லை என்று மவுண்ட்பேட்டன் கூறிவிட்டார்.

'மவுண்ட்பேட்டன்: தி பிரைவேட் ஸ்டோரி' என்ற தனது புத்தகத்தில், ''படகில் அமர்ந்தவுடன் மவுண்ட்பேட்டன் படகின் கட்டுப்பாட்டை எடுத்துக் கொண்டார்'' என்று பிரையன் ஹோய் எழுதியுள்ளார்

படகின் அடிப்பாகத்தில் ஒரு குண்டு வைக்கப்பட்டிருந்தது என்றும், அதில் சுமார் 20 கிலோ பிளாஸ்டிக் வெடிபொருட்கள் இருந்ததாகவும் பின்னர் ஐ.ஆர்.ஏ கூறியது.

ஆயுதமேந்திய ஐரிஷ் அமைப்பு ஐஆர்ஏ

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, அயர்லாந்தை பிரிட்டன் ஆட்சியிலிருந்து முழுமையாக விடுவிக்கும் நோக்கத்தை முக்கியமாக கொண்டிருந்த அமைப்பு ஐஆர்ஏ ஆகும்

மவுண்ட்பேட்டனின் படகு 'ஷேடோ ஃபைவ்'

காலை 11:30 மணிக்கு 'ஷேடோ ஃபைவ்' படகு நகரத் தொடங்கியது. படகு சென்றுக் கொண்டிருந்தபோது, கடற்கரையோர சாலையில் பாதுகாப்புப் பணியாளர்கள் தங்கள் காரில் பயணித்துக் கொண்டே பைனாகுலர் மூலம் கண்காணிப்புப் பணியில் ஈடுப்பட்டிருந்தனர்.

சிறிது தூரம் சென்றதும், மேலும் இரண்டு ஜோடி கண்கள் படகை உற்று நோக்கிக் கொண்டிருந்தன. அவை, ஐ.ஆர்.ஏ உறுப்பினர்களுடையவை.

அந்த தருணத்தைப் பற்றி பிரையன் ஹோய், "ஷேடோ ஃபைவ் படகின் நடுவில் மூன்று இளைஞர்கள் அமர்ந்திருந்தனர், லார்ட் மவுண்ட்பேட்டன் படகை ஓட்டிக்கொண்டிருந்தார், படகில் ஒரு வயதான பெண்மணி அமர்ந்திருப்பதை ஐ.ஆர்.ஏஆட்களால் தெளிவாகக் காண முடிந்தது." என எழுதியுள்ளார்

"படகில் வைக்கப்பட்டிருந்த குண்டை வெடிக்கச் செய்யும் ரிமோட் கண்ட்ரோல் சாதனம், கொலையாளிகளில் ஒருவரிடம் இருந்தது."

லார்ட் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, வெடிப்பினால் சேதமடைந்த மவுண்ட்பேட்டனின் படகு

வெடித்தது படகு

'ஷேடோ ஃபைவ்' படகு, படகுத்துறையிலிருந்து கிளம்பிய 15 நிமிடங்களில் சரியாக காலை 11:45 மணிக்கு, கொலையாளிகளில் ஒருவர் ரிமோட் கண்ட்ரோல் பொத்தானை அழுத்தினார்.

படகில் வைக்கப்பட்டிருந்த சுமார் 20 கிலோ வெடிபொருட்கள் பெரும் ஓசையுடன் வெடித்தன, படகு துண்டு துண்டாகச் சிதறியது.

அந்த நாளை நினைவுகூர்ந்த மவுண்ட்பேட்டனின் மகள் பாட்ரிசியா, "நான் என் மாமியார் லேடி பிராபோர்னைப் பார்த்தபடி அமர்ந்திருந்தேன்,அப்போது நியூ ஸ்டேட்ஸ்மேனின் சமீபத்திய இதழைப் படித்துக்கொண்டிருந்தேன்."

"கையிலிருந்த நியூ ஸ்டேட்ஸ்மேனை படிப்பதற்காக என்னுடைய தலை குனிந்திருந்தது. ஒருவேளை அதனால்தான் குண்டு வெடித்தபோது, என் கண்களுக்கு சேதம் குறைவாக ஏற்பட்டதோ என்று நினைக்கிறேன்."

"என் தந்தையின் கால்களுக்கு அருகில் டென்னிஸ் பந்து ஒன்றின் அளவுள்ள ஏதோ ஒன்று இருந்ததாக எனக்கு தோன்றியது, அது மிகவும் பிரகாசமான ஒளியை வெளியிட்டது. அடுத்த கணம் நான் தண்ணீரில் விழுந்து மூழ்கிக் கொண்டிருந்தேன் என்பது மட்டுமே எனக்கு நினைவிருக்கிறது" என்று அவர் கூறுகிறார்.

மவுண்ட்பேட்டனின் மருமகன் லார்ட் பிராபோர்ன் படகின் நடுவில் நின்று கொண்டிருந்தார். குண்டு வெடித்தபோது, அவரது உடலின் ஒரு பகுதி சேதமடைந்தாலும், அவரது முகத்திற்கு பாதிப்பு ஏற்படவில்லை.

குண்டு வெடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன்பு அவர் தனது மாமனாரிடம் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "நீங்கள் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் தானே?" என்று கேட்டார்.

இந்த வார்த்தைகள்தான் மவுண்ட்பேட்டன் கேட்ட கடைசி வார்த்தைகளாக இருக்கலாம்.

"மாமாவிடம் இந்தக் கேள்வியை கேட்ட அடுத்த கணம் நான் தண்ணீரில் மூழ்கிக் கொண்டிருந்தேன், மிகவும் குளிராக இருந்தது. என்னை எப்படி மீட்டார்கள் என்பது கூட எனக்கு நினைவில் இல்லை" என்று லார்ட் பிராபோர்ன் நினைவு கூர்ந்தார்.

பிரிவினை, லார்ட் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனின் உடலை கரைக்கு கொண்டு வரும் பாதுகாப்புப் பணியாளர்கள்

மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது

படகின் இடிபாடுகளிலிருந்து சிறிது தொலைவில் மவுண்ட்பேட்டனின் உடல் கண்டெடுக்கப்பட்டது.

"மவுண்ட்பேட்டனின் கால்கள் அவரது உடலில் இருந்து கிட்டத்தட்ட துண்டிக்கப்பட்டுவிட்டன. அவர் அணிந்திருந்த 'HMS கெல்லி' என்று எழுதப்பட்டிருந்த முழுக் கை ஜெர்சியைத் தவிர, அவரது உடலில் இருந்த அனைத்து ஆடைகளும் கிழிந்திருந்தன." என ஆண்ட்ரூ லூனி எழுதுகிறார்

"அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டார். பொதுமக்களின் கவனத்தைத் தவிர்ப்பதற்காக, ஆம்புலன்ஸ் வரும் வரை அவரது உடலை படகு ஒன்றில் வைத்திருந்தோம்" என்று அவர் எழுதுகிறார்.

அந்த நேரத்தில் அங்கு இருந்த டாக்டர் ரிச்சர்ட் வாலஸ், இந்த சம்பவத்தை நினைவு கூர்ந்தார், "வெடிப்புச் சத்தத்தைக் கேட்டபோது, அது ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் என்று எங்களுக்குத் தோன்றவில்லை."

"நாங்கள் அந்த இடத்தை அடைந்தபோது, தண்ணீரில் பலர் விழுந்திருந்ததைக் கண்டோம். எங்கள் முதல் பணி உயிருள்ளவர்களிடமிருந்து இறந்தவர்களைப் பிரிப்பதாகும்."

"மருத்துவர்களாக, இறந்தவர்களை விட உயிர் பிழைத்தவர்கள் மீது கவனம் செலுத்துவதே எங்களது கடமையாக இருந்தது. மவுண்ட்பேட்டனின் சடலத்துடன் நாங்கள் படகுத்துறையை அடைந்தபோது, எங்களுக்கு உதவ பலர் முன்வந்தனர்" என்று அவர் கூறுகிறார்.

"ஒரு கதவை உடைத்து தற்காலிக ஸ்ட்ரெச்சர் ஒன்று உருவாக்கப்பட்டது. காயமடைந்தவர்களுக்கு கட்டுப் போடுவதற்காக பெண்கள் துணிகளைக் கிழித்துக் கொடுத்தனர்," என்று டாக்டர் வாலஸ் கூறினார்.

"நாங்கள் மவுண்ட்பேட்டனின் உடலைக் கரைக்குக் கொண்டு வந்தபோது, அவரது உடலின் பல பகுதிகளில் வெட்டுக் காயங்களும் காயங்களும் இருந்தன, ஆனால் அவரது முகம் சிதைவடையாமல் சாதாரணமாக இருந்தது."

IRA

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, IRA 1990களில் பேச்சுவார்த்தைகளைத் தொடங்கியது

மவுண்ட்பேட்டனுக்கு பிரியாவிடை

மவுண்ட்பேட்டன் இறந்த செய்தி கிடைத்தவுடன், டெல்லியில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களும் கடைகளும் மூடப்பட்டன. அவரது மறைவையொட்டி இந்தியாவில் ஏழு நாட்களுக்கு 'அரசு துக்கம்' அறிவிக்கப்பட்டது.

1979 செப்டம்பர் 5ஆம் நாளன்று, அவரது இறுதிச் சடங்கு வெஸ்ட்மின்ஸ்டர் அபேயில் 1400 பேர் முன்னிலையில் நடைபெற்றது. பிரிட்டன் ராணி, இளவரசர் சார்லஸ், ஐரோப்பிய மன்னர்கள் பலர், பிரதமர் மார்கரெட் தாட்சர் மற்றும் நான்கு முன்னாள் பிரதமர்கள் என பல முக்கிய பிரமுகர்கள் மவுண்ட்பேட்டன் இறுதிச் சடங்கில் கலந்துக் கொண்டனர்.

ராணி இரண்டாம் எலிசபெத், இளவரசர் பிலிப், லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

பட மூலாதாரம், PHOTO BY TIM GRAHAM PHOTO LIBRARY VIA GETTY IMAGES

படக்குறிப்பு, ராணி இரண்டாம் எலிசபெத் மற்றும் லார்ட் லூயிஸ் மவுண்ட்பேட்டன்

ஐ.ஆர்.ஏ பொறுப்பேற்பு

மவுண்ட்பேட்டனின் கொலைக்கு பொறுப்பேற்ற அயர்லாந்து குடியரசுப் படை (Provisional IRA) ஒரு அறிக்கையை வெளியிட்டது.

79 வயது முதியவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் கொலையை எவ்வாறு நியாயப்படுத்த முடியும் என்பதற்கான விளக்கத்தை ஐ.ஆர்.ஏ ஒருபோதும் தரவில்லை.

மவுண்ட்பேட்டனின் வாழ்க்கை வரலாற்றாசிரியர் பிலிப் ஜீக்லர், "மவுண்ட்பேட்டனின் கொலை நடந்த அதே நாளில் அயர்லாந்தில் 18 பிரிட்டிஷ் வீரர்கள் கொல்லப்பட்டதும், இந்த முடிவு ஐஆர்ஏவின் உயர் மட்டங்களில் எடுக்கப்பட்டதை உணர்த்துகிறது" என எழுதுகிறார்

"நமது நாட்டை தொடர்ந்து ஆக்ரமித்திருப்பது தொடர்பாக பிரிட்டிஷ் மக்களின் கவனத்தை ஈர்ப்பதே இதன் நோக்கமாகும்" என்று ஐஆர்ஏ தனது செய்திக்குறிப்பில் கூறியிருந்தது.

மவுண்ட்பேட்டனின் படுகொலைக்குப் பிறகு, ஐஆர்ஏவின் பிரசாரத்திற்கான பொதுமக்களின் ஆதரவு குறைந்தது.

அதே நேரத்தில், பிரிட்டனின் பிரதமரான மார்கரெட் தாட்சர், ஒரு அரசியல் அமைப்பு என்ற நிலையில் இருந்து ஐ.ஆர்.ஏவை நீக்கி, அதை குற்றவியல் அமைப்பாக அறிவித்தார். மேலும், அவர் ஐ.ஆர்ஏ போராளிகளுக்கு வழங்கப்பட்ட போர்க் கைதி என்ற அந்தஸ்தையும் திரும்பப் பெற்றார்.

மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது

தாமஸ் மெக்மஹோன்

பட மூலாதாரம், GETTY IMAGES

படக்குறிப்பு, மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததற்காக ஆயுள் தண்டனை விதிக்கப்பட்ட தாமஸ் மெக்மஹோன்

குண்டுவெடிப்பு நடந்த சில மணி நேரங்களுக்குள், கொலையாளிகளைப் பிடிக்க அயர்லாந்து காவல்துறையினர் விசாரணையைத் தொடங்கினார்கள், இது அவர்களுடைய வரலாற்றில் மிகப்பெரிய விசாரணை என்று கூறப்படுகிறது.

விசாரணைக்குப் பிறகு, பிரான்சிஸ் மெக்கேர்ல் (24), தாமஸ் மெக்மஹோன் (31) ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

1979 நவம்பர் 23ஆம் நாளன்று, மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, சந்தேகத்தின் பலனை மெக்கேர்லுக்கு வழங்கி அவரை விடுவித்தது. இரண்டு ஆதாரங்களின் அடிப்படையில் மவுண்ட்பேட்டனைக் கொலை செய்ததாக மெக்மஹோன் குற்றவாளி என முடிவு செய்யப்பட்டது.

தாமஸ் மெக்மஹோனுக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால் அவர் 1998இல் 'குட் ஃப்ரைடே' ஒப்பந்தத்தின் கீழ் விடுவிக்கப்பட்டார். அவர் மவுண்ட்பேட்டனை கொலை செய்ததற்காக மொத்தம் 19 ஆண்டுகள் பிரிட்டன் சிறையில் கழித்தார்.

- இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvgpdgl21qlo

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

1 month 3 weeks ago

ரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின் சந்திப்பு

Published By: Vishnu

16 Aug, 2025 | 03:24 AM

image

ரஷ்ய-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில், அமெரிக்க ஜனாதிபதிக்கும் ரஷ்ய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பு  அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் இராணுவத் தளத்தில் நடைபெற்றது.

பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் அலாஸ்கா வந்தடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடினை, அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் அன்புடன் வரவேற்றார்.

மேலும், 6 ஆண்டுகளுக்குப் பிறகு சந்தித்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினும், பேச்சுவார்த்தை நடைபெறும் எல்ம்ஹர்ஸ்ட்-ரிச்சர்ட்சன் அமெரிக்க ராணுவ தளத்திற்கு ஒரே வாகனத்தில் புறப்பட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த ராணுவ தளம் அமெரிக்காவிற்கு சொந்தமானது, மேலும் அமெரிக்க ரகசிய சேவை மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கூட்டாக டிரம்ப் மற்றும் புதின் சந்திப்புக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்கியுள்ளன.

வான்வெளி தடைசெய்யப்பட்ட மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது, மேலும் நகரம் முழுவதும் பொலிஸ் சோதனைச் சாவடிகள் மற்றும் சிறப்புத் தேடல் நடவடிக்கைகளும் செயல்பாட்டில் உள்ளன.

அமெரிக்க மற்றும் ரஷ்ய அதிபர்களுக்கு இடையே ஒரு சுற்று நேரடிப் பேச்சுவார்த்தை 16ஆம் திகதி சனிக்கிழமை உள்ளூர் நேரப்படி அதிகாலை 1:15 மணியளவில் நடைபெற்றது.

மேலும் இரு நாடுகளின் பிரதிநிதிகளுடன் மற்றொரு சுற்று பேச்சுவார்த்தை நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது. 

Virakesari.lk
No image previewரஷ்ய-உக்ரைன் போர் முடிவுக்காக அலாஸ்காவில் டிரம்ப் – புடின...
US President Joe Biden and Russian President Vladimir Putin held a meeting at the Elmhurst-Richardson military base in Alaska to discuss ways to end the Russia-Ukraine war.

'ஒரு பேரழிவு நிகழக் காத்திருக்கிறது' - காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு பிரான்ஸ் எதிர்ப்பு

1 month 3 weeks ago

15 AUG, 2025 | 03:07 PM

image

காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு என்று விமர்சித்துள்ள பிரான்ஸ் ஜனாதிபதி  இம்மானுவேல் மக்ரோன் இது முடிவில்லாத போரை நோக்கி நகர்த்தும் என்றும் தெரிவித்துள்ளார்.

ராணுவ நடவடிக்கை மூலம் காசா நகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டத்துக்கு அதன் பாதுகாப்பு அமைச்சரவை கடந்த வாரம் ஒப்புதல் அளித்தது. ஏற்கெனவே காசா பகுதியில் சிக்கி உள்ள அப்பாவி மக்கள் உணவுப் பஞ்சத்தாலும் இஸ்ரேல் ராணுவத்தின் தாக்குதலாலும் கடும் பேரழிவை சந்தித்து வருகிறார்கள். இந்நிலையில் காசாவின் முக்கிய பகுதியான காசா சிட்டியை கைப்பற்ற இஸ்ரேல் திட்டமிட்டிருப்பது சர்வதேச அளவில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இந்நிலையில் இது தொடர்பாக அறிக்கை வெளியிட்டுள்ள பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் "காசாவை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் என்பது நடக்க இருக்கும் ஒரு பேரழிவு. நிரந்தர போர் நிறுத்தத்துடன் இந்த போர் முடிவடைய வேண்டும். காசா மாநகரை கைப்பற்றும் இஸ்ரேலின் திட்டம் முன் எப்போதும் இல்லாத பேரழிவுக்கும் நிரந்தர போருக்கும் வழி வகுக்கும். இதனால் பெரிதும் பாதிக்கப்படப்போவது இஸ்ரேலிய பணயக்கைதிகளும் காசா மக்களும்தான்.

காசாவை பாதுகாப்பதற்கான திட்டத்தை ஐநா முன்னெடுக்க வேண்டும். இதற்கான அமைப்பை காசாவில் நிறுவ வேண்டும். ஐநா பாதுகாப்பு கவுன்சில் இதற்கான நடவடிக்கைகளை விரைவாக எடுக்க வேண்டும். இது தொடர்பாக மற்ற உறுப்பு நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்த எனது குழுக்களை நான் கேட்டுக் கொண்டிருக்கிறேன்.

ஐ.நா.வால் முன்மொழியப்படும் இந்த அமைப்பு காசாவை பாதுகாப்பது அப்பாவி மக்களை பாதுகாப்பது பாலஸ்தீன அரசுக்கு ஆதரவாக பணியாற்றுவது ஆகிய பணிகளை மேற்கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தியுள்ளார்.

பாலஸ்தீனத்தை ஒரு நாடாக பிரான்ஸ் கடந்த மாதம் அங்கீகரித்தது. அதன் தொடர்ச்சியாக பாலஸ்தீனத்துக்கு ஆதரவான நிலைப்பாட்டில் தனக்கு உள்ள உறுதியை இம்மானுவேல் மேக்ரான் வெளிப்படுத்தி உள்ளார்.

https://www.virakesari.lk/article/222616

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

1 month 3 weeks ago

பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக குழிதோண்டிபுதைப்பதற்காக புதிய யூதகுடியேற்றங்கள் - இஸ்ரேலிய அமைச்சர் அறிவிப்பு

Published By: Rajeeban

15 Aug, 2025 | 11:28 AM

image

ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குகரையில் யூதகுடியேற்றவாசிகளிற்கான 3000க்கும் வீடுகளை அமைக்கவுள்ளதாக தெரிவித்துள்ள இஸ்ரேலின் தீவிரவலதுசாரி நிதியமைச்சர்  பெசெலெல் ஸ்மோட்டிரிச் இதன் மூலம் பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக புதைத்துவிடமுடியும் என தெரிவித்துள்ளார்.

சர்வதேசத்தின் கடும் எதிர்ப்பு காரணமாக பல வருடங்களாக இடைநிறுத்தப்பட்டிருந்த ஜெரூசலேம் மற்றும் மாலே அடுமின் பகுதிகளிற்கு இடையிலான குடியேற்ற திட்டத்தை மீண்டும் முன்னெடுக்கவுள்ளதாக இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இந்த பகுதியில் வீடுகளை அமைப்பது மேற்கு கரையை ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலேத்திலிருந்து முற்றாக துண்டிக்கும்.

இது பாலஸ்தீன அரசு என்ற எண்ணக்கருவை முற்றாக இல்லாமல் செய்யும் என தெரிவித்துள்ள இஸ்ரேலின் நிதியமைச்சர் அங்கீகரிப்பதற்கும் எதுவும் எவருமில்லை என தெரிவித்துள்ளார்.

சர்வதேச சட்டங்களின் கீழ் குடியேற்றம் என்பது சட்டவிரோதமானதாக காணப்படுகின்றது. மேலும் இஸ்ரேல் பாலஸ்தீனத்திற்கு இடையிலான விவகாரத்தில் மிகவும் சர்ச்சைக்குரிய விடயமாக இது காணப்படுகின்றது.

மேற்குகரையிலும் கிழக்குஜெரூசலேத்திலும் உள்ள 160 குடியேற்றங்களில் ஏழு இலட்ச்சம் யூதர்கள் வசிக்கின்றனர்.

இது பாலஸ்தீனியர்கள் எதிர்கால சுதந்திர தேசத்திற்கான கோருகின்ற நிலம்.

பலவருடகால சர்வதேச அழுத்தம் மற்றும் முடக்கங்களிற்கு பின்னர் நாங்கள் மரபுகளை மீறி மாலே அடுமிமை ஜெரூசலேத்துடன் இணைக்கின்றோம் என இஸ்ரேலின் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.

இது சியோனிசத்தின் சிறந்த வடிவம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222596

காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்!

1 month 3 weeks ago

Benjamin-netanyahu.jpg?resize=750%2C375&

காசா போர்; பணயக் கைதிகளை ஒரே நேரத்தில் விடுவிப்பது தொடர்பாக கவனம் செலுத்தும் இஸ்ரேல்!

காசாவின் போர் நிறுத்த பேச்சுவார்தையின்போது, எஞ்சியுள்ள அனைத்து பணயக் கைதிகளையும் ஒரே நேரத்தில் விடுவிப்பதற்கான ஒப்பந்தம் தொடர்பாக, கவனம் செலுத்தவுள்ளதாக இஸ்ரேலின் பிரதமர் பெஞ்சமின் நெத்தான்யாகு தெரிவித்துள்ளார்.

இதேவேளை இது தொடர்பான எகிப்திய அதிகாரிகளுடன் முதற்கட்ட பேச்சுவார்த்தைகளுக்காக, தமது குழு கெய்ரோவுக்கு சென்றுள்ளதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் இஸ்ரேலுக்கும், ஹமாஸூக்கும் இடையிலான மறைமுக பேச்சுவார்த்தைகள் முறிந்த பின்னர்,
இஸ்ரேல் தனது இராணுவத் தாக்குதலை விரிவு படுத்தியதுடன், காசா பகுதியைக் கைப்பற்றுவதற்கான சர்ச்சைக்குரிய திட்டத்தையும் இஸ்ரேல் அறிவித்தது.

இருப்பினும், காசாவை கைப்பற்றும் புதிய நடவடிக்கை ஒக்டோபர் மாதம் வரையில் தொடர்வதற்கு இஸ்ரேல் இராணுவம் தயாராக இல்லை என்றும் இஸ்ரேலிய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. இராணுவத் தயாரிப்புகளுக்கு நேரம் ஒதுக்குவது மற்றும் துணை படையினரை இணைத்துக் கொள்வது போன்ற செயற்திட்டங்களை இஸ்ரேல் அரசாங்கம் மேற்கொள்ளவுள்ளமையே இதற்கான காரணமாகும் என்று, இஸ்ரேலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

எனினும் காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்கள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றது. நேற்றையதினத்தில் மட்டும், சுமார் 123 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளதாக ஹமாசின் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

அத்துடன் நேற்று காசாவில் மூன்று குழந்தைகள் உட்பட மேலும் எட்டு பேர் பட்டினியால் உயிரிழந்துள்ளனர். இதன் மூலம் காசாவில் பட்டினியால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 235 ஆக உயர்ந்துள்ளது. இதில் 106 குழந்தைகள் அடங்குவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1443020

இத்தாலியில் அகதிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்து; 26 பேர் உயிரிழப்பு

1 month 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

14 AUG, 2025 | 09:38 AM

image

இத்தாலியின், லம்பேடுசா தீவுக்கு அருகே அகதிகள் சென்ற படகு கவிழ்ந்ததில் குறைந்தது 26 பேர் உயிரிழந்துள்ளனர்.

மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதால், உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கக்கூடும் என இத்தாலிய கடற்படை தெரிவித்துள்ளது.

லிபியாவில் இருந்து இரண்டு படகுகளில் அகதிகள் பயணித்துள்ளனர். ஒரு படகில் நீர் கசியத் தொடங்கியதால், அனைவரும் மற்றொரு படகிற்கு மாறியுள்ளனர்.

ஆனால், அந்தப் படகு கடல் சீற்றம் காரணமாக கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இத்தாலிய கடற்படையினர் ஐந்து கப்பல்கள், இரண்டு விமானங்கள் மற்றும் ஒரு ஹெலிகொப்டர் மூலம் மீட்புப் பணிகளில் ஈடுபட்டுள்ளனர்.

ஐ.நா. அகதிகள் முகமையின் (UNHCR) தகவல்படி, படகில் சுமார் 92 முதல் 97 பேர் இருந்ததாகக் கூறப்படுகிறது. இதுவரை 60 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.

இந்த ஆண்டு மத்தியதரைக் கடலைக் கடக்க முயன்றதில் இதுவரை 675 பேர் உயிரிழந்துள்ளதாக UNHCR-ன் இத்தாலிய ஊடகப் பேச்சாளர் பிலிப்போ உங்காறோ தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222540

ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவதாக தகவல்கள் - ஐ.நா செயலாளர் நாயகம் கடும் எச்சரிக்கை

1 month 3 weeks ago

Published By: RAJEEBAN

13 AUG, 2025 | 12:28 PM

image

ரஸ்ய, இஸ்ரேலிய படையினர் பாலியல் வன்முறைகளில் ஈடுபடுவது குறித்து ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அன்டோனியோ குட்டேரஸ் எச்சரித்துள்ளார்.

மோதல்களில் நடைபெறும் பகுதிகளில் பாலியல் வன்முறைகளில் ஈடுபடும் தரப்பினர் பட்டியலில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் சேர்க்கப்படலாம் என அவர் எச்சரித்துள்ளார்.

ஐக்கிய நாடுகளால் தொடர்ந்து ஆவணப்படுத்தப்பட்டுள்ள சிலவகையான பாலியல் வன்முறைகளின் வடிவங்கள் குறித்த குறிப்பிடத்தக்க கவலையின் விளைவு இதுவாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

மோதல்களின் போது இடம்பெறும் பாலியல் வன்முறைகள் குறித்த ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கான தனது அறிக்கையில் இதனை தெரிவித்துள்ள அவர், பாலியல் வன்முறை மற்றும் ஏனைய பாலியல் ன்வன்முறை வடிவங்களில் ஈடுபடுவதாக நம்பகதன்மை மிக்க விதத்தில் சந்தேகிக்கப்படுபவர்கள் அல்லது அவற்றில் ஈடுபடுபவர்கள் குறித்த அடுத்த வருட அறிக்கையில் ரஸ்ய, இஸ்ரேலிய படையினரும் இணைத்துக்கொள்ளப்படலாம் என தெரிவித்துள்ளார்.

"ஐக்கிய நாடுகள் சபையால் ஆவணப்படுத்தப்பட்ட சம்பவங்கள்  பிறப்புறுப்பு வன்முறை, நீடித்த கட்டாய நிர்வாணம் மற்றும் துஷ்பிரயோகம் மற்றும் இழிவான முறையில் நடத்தப்படும் தொடர்ச்சியான ஆடைகளை அவிழ்க்கும் தேடல்கள் போன்ற பாலியல் வன்முறையின் வடிவங்களைக் குறிக்கின்றன" என ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

அனுமதிக்க மறுத்துள்ளதால் இஸ்ரேலிய படையினர் பயன்படுத்தும் முறைகள் போக்குகள் மற்றும் மற்றும் திட்டமிடப்பட்ட பாலியல் வன்முறைகள் குறித்து உறுதியாக உறுதிப்படுத்த முடியாமலுள்ளது என தெரிவித்துள்ள ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகம் அனைத்து வகையான பாலியல் வன்முறைகளும் உடனடியாக நிறுத்தப்படுவதை உறுதி செய்வதற்கான நடவடிக்கைகளை இஸ்ரேலிய அரசாங்கம் எடுக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://www.virakesari.lk/article/222475

Checked
Mon, 10/06/2025 - 20:03
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe