உலக நடப்பு

பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

2 months 1 week ago

பிரான்சில் மக்கள் போராட்டம் : 250 பேர் கைது, 80 ஆயிரம் பொலிஸார் குவிப்பு

11 Sep, 2025 | 10:19 AM

image

பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் தலைமையிலான அரசுக்கு எதிராக மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 

புதன்கிழமை (10), பிரான்ஸின் தலைநகர் பாரிஸ் உட்பட நாட்டின் பல்வேறு நகரங்களில் மக்கள் வீதிகளில் இறங்கி, மறியல் போராட்டத்தில் ஈடுபட்டதுடன் வாகனங்கள் மற்றும் கட்டிடங்களுக்கு தீ வைத்துள்ளனர்.

பொது விடுமுறை நாட்களைக் குறைத்தல், ஓய்வூதியத் தொகையை உயர்த்தாமை மற்றும் கல்வி, மருத்துவம் போன்ற அத்தியாவசியத் துறைகளுக்கான நிதியைக் குறைப்பது போன்ற கடுமையான விடயங்கள் அடங்கிய வரவு - செலவுத்திட்டத்தை பிரான்ஸ் அரசு நிறைவேற்ற முயற்சிப்பது மக்களிடையே பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.

மெக்ரோன் அரசின் 'ரினைசன்ஸ்' கட்சிக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை இல்லாததால், கடந்த ஒன்பது மாதங்களில் நான்கு பிரதமர்கள் மாறியுள்ளனர். அண்மையில், வரவு செலவுத்திட்டத்தை நிறைவேற்ற முடியாததால், பிரதமர் பிராங்காய்ஸ் பாய்ரு பதவி விலகினார்.

இந்த அரசியல் குழப்பங்களுக்கு மத்தியில், செபஸ்டியன் லெகோர்னு புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். ஆனால், இதுவும் மக்கள் மத்தியில் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில், மக்கள் வீதிக்கிறங்கி போராட்டத்தில் ஈடுபட்ட நிலையில், போராட்டக்காரர்கள் பொலிசாருடன் மோதலில் ஈடுபட்டனர். போராட்டக்காரர்களைக் கலைக்க பொலிஸார் கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசினர்.

வன்முறையைக் கட்டுப்படுத்த நாடு முழுவதும் சுமார் 80 ஆயிரம் பொலிஸார் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டனர். வன்முறையில் ஈடுபட்ட 250க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த வரவு செலவுத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து, எதிர்வரும் 18 ஆம் திகதி அனைத்து தொழிற்சங்கங்களும் வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. இதனால் பிரான்சில் மேலும் போராட்டங்கள் தீவிரமடையக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

541972946_1542160723863410_4829917892319

546843924_1321512489315953_3327159823400

547315015_1074527644458937_3074777169177


https://www.virakesari.lk/article/224787

செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

2 months 1 week ago

செப்டம்பர் 11 தாக்குதல்களின் 24வது ஆண்டு நிறைவு

11 September 2025

1757566327_7797468_hirunews.jpg

அமெரிக்காவில் உலக வர்த்தக மையம் மற்றும் பென்டகன் மீதான பயங்கரவாதத் தாக்குதல்கள் நடந்து இன்றுடன் 24 ஆண்டுகள் நிறைவடைகின்றன. 

செவ்வாய்க்கிழமை, செப்டம்பர் 11, 2001 அன்று, தற்கொலை குண்டுதாரிகள் அமெரிக்க பயணிகள் ஜெட் விமானங்களைக் கடத்திச் சென்று நடத்தப்பட்ட தாக்குதலில் ஆயிரக்கணக்கானோர் கொல்லப்பட்டனர். 

அமெரிக்கா மீது பறந்து கொண்டிருந்த நான்கு விமானங்கள் ஒரே நேரத்தில் கடத்தல்காரர்களால் கடத்தப்பட்டன. 

பின்னர் இரண்டு விமானங்கள் நியூயார்க்கில் உள்ள உலக வர்த்தக மையத்தின் இரட்டைக் கோபுரங்கள் மீது மோதியது, முதல் தாக்குதல் நடந்த 17 நிமிடங்களுக்குப் பிறகு இரண்டாவது தாக்குதல் நடந்தது. 

கட்டிடங்கள் தீப்பிடித்து எரிந்தன, மக்கள் மேல் தளங்களில் சிக்கிக் கொண்டனர், நகரம் புகையால் மூடப்பட்டிருந்தது என்று வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

இரண்டு மணி நேரத்திற்குள், 110 மாடி கோபுரங்கள் இரண்டும் பெரிய தூசி மேகங்களுடன் இடிந்து விழுந்தன. 

மூன்றாவது விமானம் வாஷிங்டன் டி.சி.க்கு வெளியே அமெரிக்க இராணுவத்தின் தலைமையகமான பென்டகனின் மேற்கு முகப்பை அழித்தது. 

பயணிகள் எதிர்த்துப் போராடிய பிறகு, நான்காவது விமானம் பென்சில்வேனியாவில் விபத்துக்குள்ளானது. 

கடத்தல்காரர்கள் வாஷிங்டனில் உள்ள கட்டிடத்தைத் தாக்கத் திட்டமிட்டதாக நம்பப்படுகிறது. 

மொத்தத்தில், 2,977 பேர் உயிரிழந்தனர், அவர்களில் பெரும்பாலோர் நியூயார்க் நகரைச் சேர்ந்தவர்கள். 

நான்கு விமானங்களில் இருந்த 246 பயணிகள் மற்றும் பணியாளர்கள் அனைவரும் இறந்தனர். 

மேலும் இரட்டைக் கோபுரங்கள் மீதான தாக்குதல்களின் போது ஏற்பட்ட காயங்களால் 2,606 பேர் அந்த நேரத்தில் அல்லது அதற்குப் பிறகு இறந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. 

மேலதிகமாக பென்டகனில் 125 பேர் உயிரிழந்திருந்தனர். 

முதல் விமானம் மோதியபோது, இரண்டு கோபுரங்களிலும் 17,400 பேர் இருந்ததாக மதிப்பிடப்பட்டுள்ளது.

https://hirunews.lk/tm/419538/24th-anniversary-of-the-september-11-attacks

உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்

2 months 1 week ago

Elon-musk-Uranus.webp?resize=750%2C375&s

உலகின் மிகப் பெரும் செல்வந்தர் பட்டத்தை இழந்தார் ஈலோன் மஸ்க்.

டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் உரிமையாளரான ஈலோன் மஸ்க், உலகின் மிகப் பெரும் செல்வந்தர் என்ற பட்டத்தை இழந்துள்ளார். ஒரக்கிள் மென்பொருள் நிறுவனத்தின் இணை நிறுவனர் லாரி எலிசன், அவரை முந்தி முதலிடத்தைப் பிடித்துள்ளார்.

இது குறித்து ப்ளூம்பெர்க் பில்லியனர்கள் குறியீட்டு எண் தெரிவித்ததாவது, புதன்கிழமை காலை நிலவரப்படி எலிசனின் சொத்து மதிப்பு 393 பில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்துள்ளது. இதேவேளை மஸ்க்கின் சொத்து மதிப்பு 385 பில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது. ஒரக்கிள் பங்குகள் 40 சதவீதத்திற்கும் மேல் உயர்ந்ததே எலிசன் 1 ஆவது இடத்தைப் பிடிப்பதற்குக்  காரணமாகும்.

இவ்வாண்டு டெஸ்லா பங்குகள் சரிவு கண்டுள்ளமையும் எலோன் மஸ்கின் வீழ்ச்சிக்குக் காரணம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446745

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

2 months 1 week ago

New-Project-146.jpg?resize=750%2C375&ssl

டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பர் துப்பாக்கிச் சூட்டில் உயிரிழப்பு!

அமெரிக்காவின் மிக உயர்ந்த பழமைவாத ஆர்வலர்கள் மற்றும் ஊடக பிரமுகர்களில் ஒருவராகவும், ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நம்பகமான நண்பராகவும் இருந்த சார்லி கிர்க் (Charlie Kirk) துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்துள்ளார்.

31 வயதான கிர்க் புதன்கிழமை (10) உட்டா பல்கலைக்கழகத்தில் நடந்த ஒரு நிகழ்வின் போது நடந்த துப்பாக்கிச் சூட்டில் கழுத்தில் காயமடைந்த நிலையில் உயிரிழந்தார்.

அதேநேரம், துப்பாக்கிச் சூடு நடந்து ஆறு மணி நேரத்திற்குப் பின்னரும் அதிகாரிகள் இன்னும் ஒரு சந்தேக நபரைகூட பகிரங்கமாக அடையாளம் காணவில்லை.

எந்த சந்தேக நபரும் காவலில் இல்லை என்று சட்ட அமுலாக்க வட்டாரங்களை மேற்கோள் காட்டி அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

பெயர் குறிப்பிடப்படாத ஒருவர் விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டு, பின்னர் விடுவிக்கப்பட்டதாக அமெரிக்க புலன் விசாரணை கூட்டாட்சிப் பணியகம் தெரிவித்துள்ளது.

18 வயதில் அவர் நிறுவிய “Turning Point USA” அமைப்பு – இப்போது நூற்றுக்கணக்கான கல்லூரிகளுக்கு விரிவடைந்துள்ளது – இது தாராளவாத சார்பு கொண்ட அமெரிக்க கல்லூரிகளில் பழமைவாத கொள்கைகளைப் பரப்புவதை நோக்கமாகக் கொண்டது.

கிர்க்கின் அதிர்ச்சியூட்டும் மரணத்தை அறிவித்த ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், “மாபெரும், மற்றும் புகழ்பெற்ற சார்லி கிர்க் இறந்துவிட்டார்.

அமெரிக்காவில் சார்லியை விட வேறு யாரும் இளைஞர்களின் இதயத்தைப் புரிந்து கொள்ளவில்லை என்று கூறி இரங்கல் தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1446727

ஆஸ்திரேலியாவில் 'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு 1980 டாலர்'; அபராதம்

2 months 1 week ago

'அரை முழம் மல்லிகைப் பூவுக்கு ரூ. 1 லட்சம்'; விமான நிலையத்தில் நடிகை நவ்யா நாயருக்கு அபராதம்

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

Navya nair/Facebook நடிகை நவ்யா நாயர்

கட்டுரை தகவல்

  • விஜயானந்த் ஆறுமுகம்

  • பிபிசி தமிழ்

  • 4 மணி நேரங்களுக்கு முன்னர்

ஆஸ்திரேலிய விமான நிலையத்தில் மல்லிகைப் பூவை கொண்டு சென்றதற்காக கேரள நடிகை நவ்யா நாயருக்கு அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் 1.14 லட்ச ரூபாய் அபராதம் விதித்துள்ளனர்.

அபராதத்தைச் செலுத்துவதற்கு 28 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளதாகவும் நடிகை நவ்யா நாயர் தெரிவித்துள்ளார். விமானத்தில் மல்லிகைப் பூவை அணிந்து செல்வதில் என்ன சிக்கல்? ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் என்ன சொல்கிறது?

ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது.

இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார். முன்னதாக, கொச்சி விமான நிலையத்தில் இருந்து சிங்கப்பூர் சென்று அங்கிருந்து மெல்போர்ன் சென்றதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார்.

அதில், 'நான் மெல்போர்ன் வருவதற்கு முன்பு என் தந்தை மல்லிகைப் பூவை வாங்கித் தந்தார். அதை இரண்டு துண்டுகளாக வெட்டிக் கொடுத்தார்' எனக் கூறியுள்ளார்.

'15 செ.மீ மல்லிகைப் பூ, 1.14 லட்ச ரூபாய்'

கேரள நடிகை நவ்யா நாயர்

Navya nair/Facebook ஆஸ்திரேலியாவின் விக்டோரியா மாகாணத்தில் வசிக்கும் மலையாளிகள் கூட்டமைப்பு சார்பில் கடந்த 6 ஆம் தேதி ஓணம் பண்டிகையைக் கொண்டாட திட்டமிடப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கேரள நடிகை நவ்யா நாயர் பங்கேற்றார்.

கொச்சியில் இருந்து சிங்கப்பூர் செல்லும் நேரத்தில் மல்லிகைப் பூ வாடிவிடும் என்பதால் ஒன்றை தலையிலும் இரண்டாவது பூவை கைப்பையில் உள்ள கேரி பேக்கிலும் வைக்குமாறு தனது தந்தை கூறியதாக, நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

"15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

"நான் அறியாமையில் செய்திருந்தாலும் அதை ஒரு காரணமாக முன்வைக்க முடியாது. பூ கொண்டு வந்தது சட்டத்துக்கு எதிரானதாக உள்ளது. இதை வேண்டும் என்றே செய்யவில்லை. இதற்கான அபராதத்தை 28 நாட்களுக்குள் செலுத்துமாறு அதிகாரிகள் கூறினர்" எனவும் நவ்யா நாயர் கூறியுள்ளார்.

விக்டோரியா மாகாணத்தில் நடந்த ஓணம் திருவிழாவில் பேசியபோது இதனைக் குறிப்பிட்ட நவ்யா நாயர், "ஒரு லட்ச ரூபாய் மதிப்பிலான மல்லிகைப் பூவை தலையில் அணிந்திருக்கிறேன்" என நகைச்சுவையாக குறிப்பிட்டார்.

பூ, பழங்களுக்கு தடை ஏன்?

நவ்யா நாயர்

Navya nair/Facebook "15 சென்டிமீட்டர் அளவுள்ள மல்லிகைப் பூவை கைப்பையில் கொண்டு வந்ததற்காக ஆஸ்திரேலிய விமான நிலைய அதிகாரிகள், 1980 ஆஸ்திரேலிய டாலரை (இந்திய ரூபாயின் மதிப்பில் 1.14 லட்ச ரூபாய்) அபராதமாக செலுத்துமாறு கூறினர்" என நவ்யா நாயர் தெரிவித்துள்ளார்.

"ஆஸ்திரேலியாவுக்கென்று தனித்தன்மை வாய்ந்த சூழலியல் உள்ளது. வெளிநாட்டைச் சேர்ந்த பூ, பழம், விதைகள் உள்ளே நுழைந்துவிட்டால் தங்கள் நாட்டின் சூழல் மாறிவிடும் எனக் கருதுகின்றனர்" எனக் கூறுகிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு. இவர் கடந்த 22 ஆண்டுகளாக ஆஸ்திரேலியாவில் வர்த்தகம் செய்து வருகிறார்.

பிபிசி தமிழிடம் பேசிய அவர், "விமானம் மூலம் பழங்கள் (Fresh Fruits) மற்றும் காய்கறிகளைக் கொண்டு வர அனுமதியில்லை. பூ கொண்டு வருவதை அனுமதிப்பதில்லை. நெய்யால் தயாரிக்கப்பட்ட பொருள் எதையும் கொண்டு வரக் கூடாது என்பது விதியாக உள்ளது" எனவும் குறிப்பிட்டார்.

"ஆஸ்திரேலியா வருவதற்கு முன்பு சிங்கப்பூர் விமான நிலையத்தில் உணவு வாங்கி சாப்பிட்டாலும் மீதமான உணவை விமானத்தில் கொண்டு வரலாம். ஆனால், குடியுரிமை அதிகாரிகளின் சோதனைக்குச் செல்வதற்கு முன்பாக அதனை குப்பைத் தொட்டியில் எறிந்துவிட வேண்டும்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.

ஆஸ்திரேலிய நாட்டின் சுங்கத்துறை அதிகாரிகளை எல்லைப் படை அதிகாரிகள் (Australian Border Force) எனக் கூறுகின்றனர். இவர்கள், ஆஸ்திரேலியாவுக்குள் நுழையும் பயணிகளின் உடைமைகைளை ஆய்வு செய்கின்றனர்.

ஜெயச்சந்திரன் தங்கவேலு.

Jayachandran Thangavelu Handout ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு.

ஆஸ்திரேலிய நாட்டின் சட்டம் சொல்வது என்ன?

தங்கள் நாட்டுக்குள் வரும் வெளிநாட்டு பயணிகள், தண்டனைகளை தவிர்ப்பதற்காக கொண்டு வரக் கூடிய மற்றும் கொண்டு வரக் கூடாத பொருட்கள் குறித்த பட்டியலை (studyaustralia.gov.au) அந்நாட்டு அரசு வெளியிட்டுள்ளது. அதன்படி,

* அனைத்து உணவு, தாவரப் பொருட்கள் மற்றும் விலங்கு பொருட்கள்

*துப்பாக்கிகள், ஆயுதங்கள் மற்றும் வெடிமருந்துகள்

* சில வகையான மருந்துகள்

* ஆஸ்திரேலிய நாணயத்தின் மதிப்பில் 10 ஆயிரம் டாலர்கள்

- இதனை வருகை அட்டையில் (incoming passengers Arrival card) தெரிவிக்க வேண்டும் என அந்நாட்டு அரசின் இணையதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உயிரி பாதுகாப்பு (bio security) என்ற பெயரில் கொண்டு வரக் கூடாத பொருட்களையும் ஆஸ்திரேலிய அரசு பட்டியலிட்டுள்ளது. அதன்படி,

* புதிய பழங்கள் மற்றும் காய்கறிகள்

* கோழி இறைச்சி, பன்றி இறைச்சி

*முட்டை, பால் பொருட்கள்

* தாவரங்கள் அல்லது விதைகள்

- 'இவை ஆஸ்திரேலியாவில் பூச்சிகள் மற்றும் நோய்களை அறிமுகப்படுத்தி தனித்துவமான சூழலை அழிக்கக் கூடும்' என அந்நாட்டு அரசு கூறியுள்ளது. 'நாட்டின் உள்ளே வரும் பயணிகள் பட்டியலிடப்பட்டுள்ள எந்தவொரு பொருளையும் அறிவிக்க (Declare) வேண்டும்' எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

'அவ்வாறு அறிவிக்கவில்லையென்றால் 5,500 ஆஸ்திரேலிய டாலர் வரையில் அபராதம் விதிக்கப்படலாம்' எனக் கூறியுள்ள அந்நாட்டு அரசு, 'விசா ரத்து செய்யப்பட்டு தங்கள் நாட்டில் இருந்து புறப்படும் வரை காவலில் வைக்கப்படலாம்' எனவும் கூறியுள்ளது.

இதனைத் தவிர்க்கும் வகையில், 'தங்களின் உடைமைகள் குறித்து எல்லைப் படை அதிகாரிகளிடம் ஆலோசனை கேட்கலாம்' எனவும் ஆஸ்திரேலிய அரசு தெரிவித்துள்ளது.

'பூ கொண்டு வரத் தடை...ஆனால்?'

"ஆஸ்திரேலியாவுக்குள் விமானம் மூலம் கொண்டு வருவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆஸ்திரேலியாவில் மல்லிகைப் பூ விற்கப்படுகிறது" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.

"ஒரு முழம் மல்லிகைப்பூ 40 டாலர் வரை விற்கப்படுகிறது. அதையும் தமிழர் ஒருவர் தான் இறக்குமதி செய்து விற்று வருகிறார்" எனவும் அவர் பிபிசி தமிழிடம் குறிப்பிட்டார்.

தொடர்ந்து பேசிய அவர், "பூக்களை இறக்குமதி செய்யும்போது தனிமைப்படுத்தப்பட்டு ஆய்வு செய்யப்படுகிறது. பூவின் தன்மை, சாகுபடி விவரம், பயன்படுத்தப்பட்ட உரம் என அனைத்து விவரங்களும் ஆய்வு செய்யப்பட்டு சான்றிதழுடன் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது" எனத் தெரிவித்தார்.

'மோப்ப நாய்கள் மூலம் சோதனை'

'கஞ்சா, ஹெராயின் உள்ளிட்ட போதைப் பொருட்களை நாட்டின் உள்ளேயும் வெளியேயும் கொண்டு செல்வது சட்டவிரோதம்' என அறிவித்துள்ள ஆஸ்திரேலிய அரசு, 'போதைப் பொருள் அல்லது இறக்குமதி செய்யப்படும் பொருட்களின் தன்மையைக் கண்டறிய பயிற்சி பெற்ற நாய்கள் பயன்படுத்தப்படுகின்றன' எனக் கூறியுள்ளது.

இதைப் பற்றி பிபிசி தமிழிடம் குறிப்பிட்ட ஆஸ்திரேலியா வாழ் இந்தியர் ஜெயச்சந்திரன் தங்கவேலு, "சில பொருட்களை அறிவிக்காமல் கொண்டு வரும்போது மோப்ப நாய்கள் மூலம் சோதனை நடத்துவார்கள். இதற்காக பயணிகளை வரிசையாக நிற்க வைப்பது வழக்கம். தற்போது இதை அனைவருக்கும் செய்வதில்லை" எனக் கூறுகிறார்.

தொடர்ந்து, விமான நிலையத்துக்குள் நுழைந்த பிறகு மேற்கொள்ளப்படும் நடைமுறைகளை அவர் பட்டியலிட்டார்.

சோதனை நடைமுறைகள் என்ன?

"ஆஸ்திரேலிய அரசால் தடை செய்யப்பட்ட பொருட்களைக் கொண்டு வரலாம். ஆனால், அதற்கான விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்யும்போது அவற்றை அறிவிக்க வேண்டும்" எனக் கூறுகிறார்.

"விமான நிலையத்தில் இருந்து வெளியில் வரும்போது கிரீன் சேனல், ரெட் சேனல் என இரண்டு நுழைவாயில்கள் இருக்கும். பயணிகள், அனுமதிக்கப்பட்டுள்ள பொருட்களைக் கொண்டு வருவதைப் பொறுத்து அதிகாரிகள் சேனலை முடிவு செய்கின்றனர்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.

"கிரீன் சேனல் என்றால் எந்தவித சோதனையும் இல்லாமல் வெளியில் சென்றுவிடலாம்" எனக் கூறும் அவர், "ரெட் சேனலாக இருந்தால் கொண்டு சென்றுள்ள அனைத்து பொருட்களையும் சோதனை செய்வார்கள். அதில், திருப்தியடைந்தால் மட்டுமே வெளியில் செல்ல அனுமதிப்பார்கள்" என்கிறார்.

தடை செய்யப்பட வேண்டிய பொருளாக இருந்தால் பயணியின் அனுமதியுடன் அதை குப்பைத் தொட்டியில் எறிந்துவிடுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

"அவ்வாறு எறிவதற்கு பயணி எதிர்ப்பு தெரிவித்தால், அந்தப் பொருளை தனிமைப்படுத்தி (quarantine) செய்து வேறொரு துறைக்கு அனுப்புவார்கள். பிறகு ஒருநாள் அதற்குரிய அதிகாரியை சந்திப்பதற்கான நேரத்தை ஒதுக்கித் தருவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயச்சந்திரன் தங்கவேலு.

அப்போதும் உரிய விளக்கம் அளிக்காவிட்டால் அந்தப் பொருள் குப்பைத் தொட்டிக்கு சென்றுவிடும் என்றும் அதற்குரிய அபராதத்தை செலுத்த வேண்டும் என்பது நடைமுறையாக உள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

'மண் ஒட்டியிருந்தால் கூட அபராதம் தான்'

அசோக் ராஜா.

Ashok Raja Handout

திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா.

ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து என இரண்டு நாடுகளும் ஒரே மாதிரியான விதிகளைப் பின்பற்றி வருவதாகக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா.

உயிரி பாதுகாப்பு என்பதை மிக முக்கியமானதாக ஆஸ்திரேலிய அரசு கருதுவதாகக் கூறும் அவர், "மாறுபட்ட புவியியல் மற்றும் உயிரினங்கள் உள்ளதால் எந்தவித உயிரினங்களோ பொருட்களோ ஊடுருவிவிடக் கூடாது என்பதில் உறுதியாக உள்ளனர்" என்கிறார்.

ஆஸ்திரேலியாவில் தனது உறவினர் ஒருவர் கிரிக்கெட் மட்டையை எடுத்துச் சென்றபோது அதற்கு அனுமதி மறுக்கப்பட்டதாகக் கூறும் அசோக் ராஜா, "கிரிக்கெட் மட்டையில் மண் ஒட்டிக் கொண்டிருந்ததை காரணமாக கூறினர். எந்த நாட்டின் மண்ணும் தங்கள் நாட்டுக்குள் வந்துவிடக் கூடாது என்பதால் கடுமையான விதிமுறைகள் பின்பற்றப்படுகின்றன" எனவும் தெரிவித்தார்.

"செருப்பு அணிந்து செல்லும்போது அதில் மண் எதுவும் ஒட்டியிருக்கக் கூடாது. தங்கள் நாட்டு மண்ணை வெளிநாட்டு மண் கெடுத்துவிடக் கூடாது என்பது தான் அடிப்படையான நோக்கம்" என்கிறார், ஆஸ்திரேலியாவாழ் இந்தியரான ஜெயச்சந்திரன் தங்கவேலு.

தற்காத்துக் கொள்வது எப்படி?

"ஒரு நாட்டில் பின்பற்றப்படும் விதிமுறைகளைப் பற்றி ஏர்லைன்ஸ் நிர்வாகத்தில் கூற மாட்டார்கள். விமான நிலையத்தில் இறங்கியதும் உறுதிமொழி படிவத்தில் அனைத்து விவரங்களும் குறிப்பிடப்பட்டிருக்கும். அதில் தகவல்களைத் தெரிவித்துவிட்டால் தண்டனை கிடைப்பதற்கு வாய்ப்பில்லை" எனக் கூறுகிறார், முன்னாள் விமானி அசோக் ராஜா.

"ஒரு பொருளை அறிவிக்காமல் கொண்டு வந்தால் முதல்முறையான தவறாக இருந்தால் மன்னிப்பு அல்லது அபராதம் விதிப்பார்கள்" எனக் கூறும் ஜெயசந்திரன் தங்கவேலு, "இது அந்தந்த அதிகாரிகளைப் பொறுத்தது. சிலர் மன்னிப்பு மட்டும் வழங்குவார்கள். தொடர்ந்து தவறு நடந்தால் சிறையில் அடைப்பதற்கான நடைமுறைகள் வரை செல்லும்" என்கிறார்.

" உடைமைகளைக் கொண்டு செல்வதில் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். எதைக் கொண்டு சென்றாலும் நூறு சதவீதம் அதனை வெளிப்படையாக அறிவித்துவிட வேண்டும். இதில் ஏதேனும் சந்தேகம் எழுந்தால் எல்லைப் படை அதிகாரிகள் உதவுவார்கள்" எனக் கூறுகிறார், ஜெயசந்திரன் தங்கவேலு.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c98el8jj8pro

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

2 months 1 week ago

பிரான்சின் புதிய பிரதமராக செபாஸ்டியன் லெகோர்னு நியமனம்

10 Sep, 2025 | 09:52 AM

image

பிரான்ஸ் ஜனாதிபதி எம்மானுவேல் மக்ரோன், பிரதமர் பிரான்சுவா பய்ரூ அரசாங்கம் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்த 24 மணி நேரத்துக்குள், தனது நெருங்கிய கூட்டாளி செபாஸ்டியன் லெகோர்னுவை (39) புதிய பிரதமராக நியமித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளாக பாதுகாப்புத் துறையை கவனித்த லெகோர்னு, மக்ரோனின் ஏழாவது பிரதமர் ஆவார். அவருக்கு அரசியல் கட்சிகளுடன் ஆலோசித்து அடுத்த வரவு செலவு திட்டத்தை நிறைவேற்றும் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.

பய்ரூ முன்வைத்த 44 பில்லியன் யூரோ செலவு குறைப்புத் திட்டம் நம்பிக்கை வாக்கெடுப்பில் 364–194 வாக்குகள் வித்தியாசத்தில் நிராகரிக்கப்பட்டது. இதனையடுத்து அவர் இராஜினாமா செய்தார்.

லெகோர்னுவின் நியமனத்தை மத்தியவரிசைக் கட்சிகள் வரவேற்றுள்ளன. ஆனால் இடதுசாரி மற்றும் வலதுசாரிகள் கடுமையாக எதிர்த்துள்ளனர். ஜான்-லூக் மெலன்சன் (இடதுசாரி) மாற்றமே இல்லை என விமர்சித்தார். மரீன் லெ பென் (வலதுசாரி) “மக்ரோனின் இறுதி முயற்சி” எனக் கூறினார்.

பிரான்ஸ் தற்போது மூன்று முக்கிய அரசியல் பிளாக்குகளால் (இடது, வலது, மையம்) பிளவுபட்டுள்ளது. புதிய பிரதமரின் முதன்மைப் பணி, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 114% ஆக உயர்ந்துள்ள 3.3 டிரில்லியன் யூரோ கடனை கட்டுப்படுத்துவதாகும்.

இதற்கிடையில், “பிளோக்கோன் டூட்” (எல்லாவற்றையும் முடக்கு) என்ற பொதுமக்கள் இயக்கம் புதன்கிழமை பெரிய அளவில் போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளது. இதற்காக 80,000 பொலிஸார் பணியில் ஈடுபடுத்தப்படவுள்ளனர்.

மேலும், வெள்ளிக்கிழமை ஃபிட்ச் நிறுவனம் பிரான்ஸ் கடன் மதிப்பீட்டை மறுபரிசீலனை செய்ய உள்ளது. அது குறைக்கப்பட்டால் நாட்டின் கடன் செலவுகள் அதிகரிக்கும் அபாயம் உள்ளது.

https://www.virakesari.lk/article/224690

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

2 months 1 week ago

552366-trump-modi-putin.jpg?resize=750%2

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்கா வலியுறுத்தல்!

இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கி வருவதால் இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்தது. இந்தியா எண்ணெய் வாங்குவதன் மூலம் அந்த நிதியை உக்ரேன் போரில், ரஷ்யா பயன்படுத்துவதாக, அமெரிக்க ஜனாதிபதி  ட்ரம்ப் குற்றம் சாட்டி வருகிறார்.

அமெரிக்காவின் இந்த நடவடிக்கையால் இந்தியாவுடனான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிலிருந்து அமெரிக்காவுக்கு ஏற்றுமதியும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், அமெரிக்காவின் இந்த மிரட்டலுக்கு அடிபணியாத இந்தியா தொடர்ந்து ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெய்யை வாங்கி வருகின்றது.

இந்த நிலையில், இந்தியா, சீனாவுக்கு அதிக வரியை விதிக்குமாறு ஐரோப்பிய கூட்டமைப்புக்கு அமெரிக்க ஜனாதிபதி  டொனால்ட் ட்ரம்ப் வலியுறுத்தியுள்ளார்.

அந்தவகையில் ரஷ்ய ஜனாதிபதி புடினுக்கு அழுத்தம் தர இந்திய மற்றும் சீன பொருட்களுக்கு அதிக வரி விதிக்க வேண்டும் எனவும் குறிப்பாக  சீனாவுக்கு 100% வரி, இந்தியாவுக்கு அதிகபட்ச வரி விதிக்க வேண்டும் என்றும் அவர்  கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1446609

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது

2 months 1 week ago

இஸ்ரேல் கத்தார் நாட்டில் உள்ள ஹமாஸ் தலைவர்களை இலக்கு வைத்து தாக்கியுள்ளது என பிபிசி தெரிவித்துள்ளது.

மேலும்.....

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital

  • Israel has carried out a strike on senior Hamas leaders in Qatar's capital Doha

  • A Hamas official says its negotiating team was targeted during a meeting

  • Explosions are heard and smoke is rising above Doha

Israel carries out strike on senior Hamas leaders in Qatari capital - BBC News

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!

2 months 1 week ago

New-Project-115.jpg?resize=750%2C375&ssl

தாய்லாந்தின் முன்னாள் பிரதமருக்கு ஒரு வருடம் சிறைத் தண்டனை!

தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் ஷினவத்ரவுக்கு (Thaksin Shinawatra) அந்நாட்டு உயர் நீதிமன்றம் ஒரு வருடம் சிறைத் தண்டனை விதித்துள்ளது.

இது செல்வாக்கு மிக்க அரசியல் வம்சத்திற்கு மற்றொரு அடியாகும்.

அவர் முன்பு ஒரு மருத்துவமனையில் சிறைத்தண்டனை அனுபவித்ததால், அதன் ஒரு பகுதியை அவர் சிறையில் கழிக்க வேண்டும் என்றும் தீர்ப்பில் சுட்டிக்காட்டப்பட்டது.

இந்த உயர்மட்ட வழக்கு, முந்தைய ஊழல் தண்டனையுடன் தொடர்புடையது.

2001 ஆம் ஆண்டு முதன்முதலில் பிரதமராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதிலிருந்து தாக்சினும் அவரது குடும்பத்தினரும் தாய்லாந்து அரசியலில் ஆதிக்கம் செலுத்தி வருகின்றனர்.

அவரது மகள் பேடோங்டார்ன் முன்பு பிரதமராகப் பணியாற்றினார்.

ஆனால் கம்போடியாவின் ஹுன் சென்னுடனான கசிந்த தொலைபேசி அழைப்புடன் தொடர்புடைய வழக்கில், அரசியலமைப்பு நீதிமன்றம் நெறிமுறைத் தரங்களை மீறியதாகத் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து கடந்த மாதம் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.

இந்த நிலையில், 76 வயதான தாக்சினின் அண்மைய வழக்கு அவரது பிரதமர் பதவியுடன் தொடர்புடைய முந்தைய தண்டனையிலிருந்து உருவாகிறது.

முன்னாள் பிரதமர் 2006 இல் ஒரு இராணுவ சதியில் பதவி நீக்கம் செய்யப்பட்டு, பல ஆண்டுகள் சுயமாக நாடுகடத்தப்பட்டார்.

2023 ஆம் ஆண்டு அவர் தாய்லாந்துக்குத் திரும்பியபோது, அவர் உடனடியாக விசாரணைக்கு உட்படுத்தப்பட்டு, பதவியில் இருந்த காலத்தில் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகம் செய்ததற்காக குற்றவாளி எனக் கண்டறியப்பட்டார்.

அவருக்கு எட்டு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது.

தாக்சின் அரச மன்னிப்பு கோரியதைத் தொடர்ந்து, தாய் மன்னர் அவரது தண்டனையை ஒரு வருடமாக குறைத்தார்.

ஆனால் இதய பிரச்சினைகள் குறித்து முறைப்பாடு அளித்த பின்னர் அவர் விரைவாக பொலிஸ் பொது மருத்துவமனையின் சொகுசுப் பிரிவுக்கு மாற்றப்பட்டதால், அவர் ஒரு நாளுக்கும் குறைவான நேரத்தை மட்டுமே சிறைச்சாலையில் கழித்தார்.

அவர் ஆறு மாதங்கள் அங்கேயே இருந்தார், பின்னர் பிணை பெற்று போங்கொக்கில் உள்ள அவரது வீட்டிற்குச் சென்றார்.

https://athavannews.com/2025/1446479

காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

2 months 1 week ago

காசாவுக்கு கிரேட்டா துன்பெர்க் சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல்

09 Sep, 2025 | 09:57 AM

image

காசாவிற்கு உதவிப் பொருட்களை அனுப்பும் குளோபல் சுமுத் புளோட்டிலா என்ற கப்பல், துனிசியா கடற்கரையில் செவ்வாய்க்கிழமை (09)  ட்ரோன் மூலம் தாக்கப்பட்டுள்ளது.

காசா பகுதியில் இஸ்ரேலிய முற்றுகையை முறியடிக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக, காலநிலை தொடர்பான சமூக செயற்பாட்டாளர் கிரேட்டா தன்பெர்க் உட்பட 44 நாடுகளைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் பொதுமக்களை இந்த கப்பல் ஏற்றிச் சென்றுள்ளது.

ஆக்கிரமிக்கப்பட்ட பாலஸ்தீனப் பிரதேசங்களுக்கான ஐ.நா. சிறப்பு அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பானீஸ் அவர்களும் இந்த கப்பலில் சென்றுள்ளார்.

“குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா வழிகாட்டுதல் குழு உறுப்பினர்களை ஏற்றிச் சென்ற “குடும்ப கப்பல்” என அழைக்கப்படும் முக்கிய கப்பல்களில் ஒன்று ட்ரோன் மூலம் தாக்கப்பட்டதை குளோபல் சுமுத் ஃப்ளோட்டிலா (GSF) உறுதிப்படுத்துகிறது. 

போர்த்துகீசியக் கொடி ஏந்திய கப்பலில் அனைத்து பயணிகளும் பணியாளர்களும் பாதுகாப்பாக உள்ளனர். தற்போது விசாரணை நடந்து வருகிறது. மேலும் தகவல்கள் கிடைத்தவுடன் அது உடனடியாக வெளியிடப்படும்” என அந்த அமைப்பு வெளியிட்ட உத்தியோகபூர்வ அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224597

பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

2 months 1 week ago

பிரான்ஸ் பிரதமர் நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வி

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

பிரான்ஸ் பிரதமர் பிரான்சுவா பெய்ரூ தமது அரசாங்கத்தின் மீது கொண்டு வந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் தோல்வியடைந்துள்ளார். 

பிரான்சின் தேசிய சட்டமன்றம் 364 வாக்குகள் வித்தியாசத்தில் அவரை பதவியில் இருந்து நீக்கி அவரது சிறுபான்மை அரசாங்கத்தை வீழ்த்த வாக்களித்தது. 

மேலும் 25 பாராளுமன்ற உறுப்பினர்கள் வாக்களிக்கவில்லை. 

இதேவேளை எதிர்வரும் நாட்களில் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மெக்ரோன் ஒரு புதிய பிரதமரை நியமிப்பார் என்று எலிசே அரண்மனை தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் பதவி விலகலை ஏற்றுக்கொள்ள நாளைய தினம் பிரதமர் பிரான்சுவா பேய்ரூவை அந்த நாட்டு ஜனாதிபதி மெக்ரோன் சந்திப்பார் என்பதை அந்த அறிக்கை உறுதிப்படுத்துகிறது. 

எவ்வாறாயினும் பிரான்ஸ் ஜனாதிபதியும் உண்மையை புரிந்து கொண்டு பதவி விலக வேண்டும் என நம்பிக்கை வாக்கெடுப்பை தோல்வியடைய செய்த எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன. https://adaderanatamil.lk/news/cmfbfuptp00b7o29nlq605s94

விசா விதிகளை மாற்றும் டிரம்ப்: அமெரிக்காவில் இந்திய மாணவர்களுக்கு புதிய சிக்கல்

2 months 1 week ago

அமெரிக்கா, இந்தியர், மாணவர் விசா

பட மூலாதாரம், Getty Images

8 செப்டெம்பர் 2025

அமெரிக்காவில் படித்துக் கொண்டிருக்கும் மற்றும் அங்கு செல்லத் திட்டமிடும் இந்திய மாணவர்கள், எதிர்காலத்தில் அதிக சிரமங்களைச் சந்திக்க நேரிடலாம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எஃப் 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

முன்மொழியப்பட்ட மாற்றங்கள் என்னென்ன? அவை இந்திய மாணவர்களை எவ்வாறு பாதிக்கும்? என்பதைத் தெரிந்துகொள்வோம்.

அமெரிக்க உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை, எப்ஃ 1 (F1) மாணவர் விசாக்களுக்கு விதிகளை மாற்ற முன்மொழிந்திருப்பது தான் இதற்குக் காரணம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

புதிய மாற்றங்கள் என்னென்ன ?

பிற நாடுகளைச் சேர்ந்த மாணவர்கள் விசாவைத் தவறான முறையில் பயன்படுத்துவதைத் தடுக்க, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் நிர்வாகம் புதிய விதிகளை முன்மொழிந்துள்ளதாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை தெரிவித்துள்ளது.

பொதுவாக, அமெரிக்காவில் படிக்கச் செல்லும் மாணவர்களுக்கு எஃப் 1 (F1) விசா வழங்கப்படுகிறது. பரிமாற்றத் திட்டங்கள் மூலம் செல்லும் மாணவர்களுக்கு ஜே1 (J1) விசா வழங்கப்படுகிறது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

இப்போது, அந்த முறையை நீக்க ஒரு திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. மாணவர் விசாவின் காலம் 4 ஆண்டுகளாக குறைக்கப்படவேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.

இதுவரை, இந்த மாணவர் விசாக்கள் 'படிப்பு தொடரும் வரை அனுமதி' (duration of status) என்ற முறையில் இருந்தன. அதாவது, ஒரு மாணவர் அமெரிக்காவில் படிப்பைத் தொடரும் வரை, அவர்களின் நிலை 'மாணவர்' என்றே இருக்கும். அவர்கள் அனைத்து விசா விதிகளையும் பின்பற்றும் வரை அமெரிக்காவில் தங்கலாம்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

குறிப்பிட்ட அந்த கால அளவுக்குப் பிறகு, ஒரு மாணவர் அமெரிக்காவில் தொடர்ந்து தங்க விரும்பினால், 'படிப்பு தொடரும் வரை அனுமதி' எனும் நிலையை நீட்டிக்க விண்ணப்பிக்க வேண்டும்.

இல்லையெனில், அமெரிக்காவை விட்டு வெளியேறி, மீண்டும் விசாவுக்கு விண்ணப்பிக்க வேண்டியிருக்கும்.

இதனால், இளங்கலைப் பட்டம் முடித்து, முதுகலை அல்லது முனைவர் பட்டத்தைத் தொடர விரும்பும் மாணவர்கள், புதிய விசா செயல்முறையைத் தொடங்க வேண்டியிருக்கும்.

மற்றொரு முக்கிய மாற்றம் என்னவென்றால், இளங்கலை மாணவர்கள் சேர்க்கைக்குப் பிறகு உடனடியாக வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியாது.

அதாவது, எஃப் 1 விசா பெற்ற மாணவர்கள், முதல் ஆண்டு முடிந்த பிறகே வேறு பல்கலைக்கழகத்திற்கு மாற முடியும்.

பட்டதாரி மாணவர்கள் அமெரிக்காவிற்குள் நுழைந்தவுடன், தங்கள் பாடத்திட்டத்தையோ அல்லது பல்கலைக்கழகத்தையோ உடனடியாக மாற்ற முடியாது.

அவர்களுக்கு விசா வழங்கப்பட்ட போது, I-20 படிவத்தில் குறிப்பிடப்பட்டுள்ள இடத்திற்குச் செல்லவேண்டும்.

டொனால்ட் டிரம்ப்

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஒரே மட்டத்தில் பல பட்டங்களைப் பெறுவது இனி எளிதல்ல. அதாவது, அமெரிக்காவை விட்டு வெளியேறி புதிய விசாவிற்கு விண்ணப்பிக்காமல், ஒரு பாடத்தில் முதுகலைப் பட்டம் முடித்து, பின்னர் வேறு பாடத்தில் முதுகலைப் பட்டத்தை தொடருவது இனி சாத்தியமில்லை.

மேலும், விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு மாணவர்கள் தங்கக்கூடிய காலமும் குறைக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, விருப்ப செயல்முறை பயிற்சி (OPT) முடிந்த பிறகு, மாணவர்கள் 60 நாட்கள் அமெரிக்காவில் தங்க அனுமதிக்கப்பட்டனர். இப்போது, அந்த காலத்தை 30 நாட்களாகக் குறைக்க முன்மொழியப்பட்டுள்ளது.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

மொழிப் படிப்புகளுக்கான அனுமதி 24 மாதங்களுக்கு மட்டுமே வழங்கப்படும்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, மாதிரி படம்

இந்திய மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்பு என்ன?

ஓபன் டோர்ஸ் தரவுகளின்படி, தற்போது அமெரிக்காவில் 1.1 மில்லியனுக்கும் அதிகமான சர்வதேச மாணவர்கள் உள்ளனர். இவர்களில் 3,30,000 க்கும் மேற்பட்டோர் இந்தியர்கள்.

டிரம்ப் நிர்வாகம் முன்மொழிந்த விதிகள் அங்கீகரிக்கப்பட்டு செயல்படுத்தப்படும் வரை, மாணவர்களுக்கு எந்தவிதமான பிரச்னையும் ஏற்படாது.

ஆனால், அந்த விதிகள் அமலுக்கு வந்தவுடன், மாணவர்களின் விசா காலம் குறைக்கப்படலாம். பல்கலைக் கழகங்களை மாற்ற முடியாது என்ற விதி, இந்த ஆகஸ்ட் மாதம் சேர்க்கை பெறும் (இலையுதிர்கால சேர்க்கை) மாணவர்களுக்கு பொருந்தும்.

அமெரிக்காவில் முதுகலைப் பட்டம் முடித்த பிறகு வேலைவாய்ப்பு அல்லது ஹெச்-1பி (H-1B) விசா கிடைக்காத மாணவர்கள் பலரும் 'இரண்டாவது முதுகலைப் படிப்பு' படிப்பதன் மூலம் அமெரிக்காவில் தொடர்ந்து வசிக்கும் வாய்ப்பை பெறுகிறார்கள். புதிய மாற்றங்கள் அமலாகும் பட்சத்தில், அவ்வாறு செய்ய முடியாது.

5–6 ஆண்டுகள் ஆகும் பிஎச்டி (முனைவர் பட்ட படிப்பு) போன்ற படிப்புகளுக்கு, எப் -1 (F-1) விசா பெற்ற மாணவர்கள் 4 ஆண்டுகள் கழித்து மீண்டும் விசா செயல்முறையை மேற்கொள்ள வேண்டியிருக்கும். இதில், விசா கட்டணம் செலுத்துதல், பயோமெட்ரிக்ஸ் முறையில் பதிவு செய்தல் மற்றும் நிதி ஆதாரத்தை உறுதி செய்யும் ஆவணங்களை சமர்ப்பித்தல் ஆகியவை அடங்கும்.

இந்த மாற்றங்கள் முதலில் 2020-ல் டிரம்ப் அதிபராக இருந்தபோது முன்மொழியப்பட்டன.

பைடன் நிர்வாகம் 2021-ல் அதனைத் திரும்பப் பெற்றது.

ஆனால் இப்போது, டிரம்ப் நிர்வாகம் அதை மீண்டும் கொண்டு வருகிறது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly12513yqeo

அவுஸ்திரேலியாவில் விஷக்காளான் உணவைக் கொடுத்து மூவரை கொன்ற பெண்! - 33 ஆண்டுகள் பிணையில்லாத ஆயுள் தண்டனை!

2 months 1 week ago

Published By: Digital Desk 1

08 Sep, 2025 | 01:23 PM

image

அவுஸ்திரேலிய பெண் எரின் பேட்டர்சனுக்கு 33 ஆண்டுகள் பிணை இல்லாத ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

2023ஆம் ஆண்டு நச்சுத்தன்மையான மதிய உணவினை பரிமாறி மூன்று உறவினர்களைக் கொன்றதாகவும், மற்றொருவரைக் கொல்ல முயன்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டு வழக்கு தொடுக்கப்பட்டது.

அதனைத் தொடர்ந்து, மதிய உணவின்போது அவர் நச்சுத்தன்மை வாய்ந்த காளான்கள் கலந்த மாட்டிறைச்சியை தனது உறவினர்களுக்கு பரிமாறியுள்ளதாக அவர் மீது சுமத்தப்பட்ட குற்றம் நிரூபிக்கப்பட்டு, எரின் பேட்டர்சன் குற்றவாளி என கடந்த ஜூலை மாதம் நீதிமன்றத்தால் தீர்ப்பளிக்கப்பட்டது.

50 வயதான எரின் விசாரணைகளின்போதும் எந்த விதத்திலும் உணர்ச்சிவசப்படவில்லை என்றும் நீதிமன்றத்தில் கண்களை மூடிக்கொண்டு நின்ற எரின், நீதிபதி தீர்ப்பினை அறிவிக்கையில் குற்றத்துக்கான தண்டனையை வாசிக்கும்போது மட்டுமே கண்களைத் திறந்தார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.

2023ஆம் ஆண்டு ஜூலை 29ஆம் திகதி எரின் பரிமாறிய உணவினை உட்கொண்டவர்களில் எரினின் முன்னாள் மாமனார் டான் பேட்டர்சன், மாமியார் கெயில் பேட்டர்சன் மற்றும் கெயிலின் சகோதரி ஹீதர் வில்கின்சன் ஆகியோர் அந்த உணவை உட்கொண்ட பின்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சில நாட்கள் கழித்து உயிரிழந்தனர்.

அத்துடன், நச்சுத்தன்மையான உணவினை உட்கொண்ட மற்றுமொருவரான, ஹீதர் வில்கின்சனின் கணவர் இயன் வில்கின்சன் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று, உயிர் பிழைத்த நிலையில், நீதிமன்ற அறைக்கு வெளியே செய்தியாளர்களிடம் தமது கருத்துக்களை வெளியிட்டுக்கொண்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/224495

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

2 months 1 week ago

New-Project-1-3.jpg?resize=600%2C300&ssl

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது.

சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார்.

பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார்.

இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1446390

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

2 months 1 week ago

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

ukraine-780x470.webp

உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார்.

மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.

ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார்.

உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு 2022 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சுமார் $985 பில்லியன் (£729 பில்லியன்) எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

மிகப்பெரிய கொள்முதல் நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும்.

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிசக்தி கொள்முதலை வியத்தகு முறையில் குறைத்துள்ளது – ஆனால் முழுமையாக நிறுத்தப்படவில்லை.

ஜூன் மாதத்தில், 2027 ஆம் ஆண்டுக்குள் பிரஸ்ஸல்ஸ் அனைத்து கொள்முதலையும் நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது.

கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான பதிலடியாக, இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது.

எனினும் இந்திய அரசாங்கம், தனது மக்களின் பொருளாதார நலன்களுக்காக எண்ணெய் வாங்குவதில் “சிறந்த ஒப்பந்தத்தை” தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியுள்ளது.

கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவிற்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதாக ரஷ்யா கூறியது.

இதனிடையே, கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் உச்சிமாநாடு நடத்தியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

https://akkinikkunchu.com/?p=340055

"படைகளை அனுப்பினால் அழிப்போம்": ஐரோப்பிய நாடுகளை எச்சரிக்கும் புதின்

2 months 2 weeks ago

ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, ரஷ்ய அதிகாரிகள் மேற்கத்திய படைகளை அழிக்கும் புதினின் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

கட்டுரை தகவல்

  • ஸ்டீவ் ரோசென்பெர்க்

  • பிபிசி ரஷ்யா

  • 5 மணி நேரங்களுக்கு முன்னர்

சில சமயங்களில் வாய் வார்த்தை மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்துவதில்லை. எதிர்வினைதான் தாக்கத்தை ஏற்படுத்தும்.

ரஷ்யாவின் தூரக்கிழக்கில் நடைபெற்ற சந்திப்பு ஒன்றில் பேசிய விளாடிமிர் புதின், "யுக்ரேனுக்கு அமைதி காக்கும் படையினரையும், வீரர்களை அனுப்புவது பற்றி யோசிக்கவே வேண்டாம்" என மேற்கு நாடுகளுக்கு எச்சரிக்கை ஒன்றை விடுத்தார்.

"அங்கு சில படைகள் தென்பட்டால் அதிலும் குறிப்பாக சண்டை நடந்துகொண்டிக்கும்போது தென்பட்டால், இவை அழிவுக்கான சரியான இலக்குகளாக இருக்கும்" என ரஷ்ய அதிபர் புதின் கூறினார்.

அதன்பிறகுதான் எதிர்வினை தொடர்ந்தது.

விளாடிவோஸ்டாக்கில் நடந்த பொருளாதார மன்றத்தில் பார்வையாளர்கள் கைதட்டல்களால் ஆரவாரம் செய்தனர். ரஷ்ய அதிகாரிகளும் வணிகத் தலைவர்களும் மேற்கத்திய படைகளை அழிக்கும் அச்சுறுத்தலை வரவேற்றனர்.

அந்த அரங்கத்தில் நடந்த காட்சியை பார்கையில் அந்த கைத்தட்டல் சற்று நடுங்க வைத்தது.

'விருப்பக் கூட்டணி' என்று அழைக்கப்படும் யுக்ரேனின் நட்பு நாடுகள், யுக்ரேனுக்கு போருக்குப் பிந்தைய பாதுகாப்புப் படையை உருவாக்குவதாக உறுதியளித்த மறுநாளே இது நடந்தது.

"யுக்ரேன் அதிபர் ஸெலென்ஸ்கியை சந்திக்க தயாராக இருக்கிறேன். ஆனால் அது ரஷ்யாவில் மட்டுமே" என ரஷ்ய அதிபர் புதின் கூறியதும் பார்வையாளர்கள் மீண்டும் கைதட்டினர்.

"இந்த சந்திப்புக்கான சிறந்த இடம் ரஷ்யா தலைநகரான மாஸ்கோதான்" என அவர் கூறினார்.

ரஷ்யாவிற்கு வெளியே புதினின் இந்த முன்மொழிவு பெரிதாக எடுத்துக்கொள்ளப்படவில்லை. மாறாக அது நகைச்சுவையாக கருதப்பட்டு நிராகரிக்கப்பட்டது.

ஆனால் பல வழிகளில் யுக்ரேன் உடனான போர் மீதான புதினின் நிலைப்பாட்டை இது எடுத்துரைக்கிறது. "ஆம் எங்களுக்கு அமைதி வேண்டும். ஆனால் அது எங்கள் விதிகளுக்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். இதை நீங்கள் நிராகரித்தால் பின் அமைதி இருக்காது" என்பதுதான் அது.

புதினின் இந்த சமரசமற்ற நிலைப்பாடு, பல்வேறு விஷயங்களுக்கு வழிவகுக்கிறது.

புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார்.

முதலாவதாக, யுக்ரேனில் ரஷ்யப் படைகள் தற்போது ஆதிக்கம் செலுத்தி வருவதாக புதின் நம்புகிறார்.

2வது ராஜதந்திர வெற்றி. இந்த வாரத்தில் புதின் சீனாவில் உலக தலைவர்களை சந்தித்து கைகுலுக்கிக்கொண்டார். இவர்கள் புன்னகையுடன் உரையாடிக்கொண்டார்கள். சீனா, இந்தியா மற்றும் வட கொரியா உடன் ரஷ்யா நல்ல உறவுடன் இருக்கிறது என்பதை காண்பிப்பதே இதன் நோக்கமாகும்.

அதன்பிறகு அமெரிக்கா. கடந்த மாதம் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் புதினை அலாஸ்காவில் நடைபெறும் உச்சி மாநாட்டுக்கு அழைப்பு விடுத்தார்.

யுக்ரேன் போரில் ரஷ்யாவை தனிமைப்படுத்தும் முயற்சியில் மேற்கு நாடுகள் தோல்வியடைந்துவிட்டன, என்பதற்கான ஆதாரமாக இந்த நிகழ்வை உள்நாட்டில் புதினின் ஆதரவாளர்கள் விவரித்தனர்.

முன்னதாக இந்த போரை முடிவுக்கு கொண்டுவர டிரம்ப், புதினுக்கு நிறைய எச்சரிக்கைகள் மற்றும் காலக்கெடுக்களை விதித்தார். ரஷ்யா அமைதியை நிலைநாட்டவில்லை என்றால் நிறைய தடைகள் விதிக்கப்படும் எனவும் எச்சரித்தார்.

ஆனால் டிரம்ப் அந்த எச்சரிக்கைகளை தொடரவில்லை. இதுவே ரஷ்யாவிற்கு நம்பிக்கை ஏற்படுத்த மற்றொரு காரணமாக அமைந்தது.

டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை புதின் நிராகரித்தார்.

டிரம்பின் அமைதியை நிலைநாட்டும் முயற்சியை புதின் பொதுமேடையிலேயே பாராட்டியுள்ளார். எனினும் அவர் டிரம்பின் சண்டை நிறுத்த ஒப்பந்தத்திற்கான அழைப்பை நிராகரித்தார். மேலும் யுக்ரேன் மீதான போரில் சமரசம் செய்வதற்கான எந்த முனைப்பையும் அவர் காட்டவில்லை.

அப்படியானால் இதில் அமைதிக்கான வாய்ப்பு எங்கே இருக்கிறது?

புதின் சமீபத்தில் தன்னால் பாதையின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக குறிப்பிட்டார்.

அதாவது ரஷ்யா ஒருபுறமும் யுக்ரேன் மற்றும் ஐரோப்பா (ஓரளவுக்கு அமெரிக்காவும்) வெவ்வேறு பாதைகளில், வெவ்வேறு சாலைகளில், வெவ்வேறு நிலைப்பாடுகளுடன் இருப்பதாக தோன்றுகிறது.

யுக்ரேனும் ஐரோப்பாவும் பாதுகாப்பு உத்தரவாதத்துடன் சண்டையை நிறுத்துவதில் கவனம் செலுத்துகிறது. மேலும் போருக்கு பிந்தைய ஊடுருவலை எதிர்கொள்ளும் அளவிற்கு யுக்ரேனிய ராணுவம் பலமாக இருப்பதிலும் கவனம் செலுத்துகிறது.

சுரங்கத்தின் முடிவில் வெளிச்சத்தை பார்க்க முடிவதாக புதின் கூறியது, என்னைப் பொறுத்தவரை யுக்ரேனில் ரஷ்யாவின் வெற்றியைதான் அவர் குறிப்பிடுகிறார் என்கிறார் ரோசென்பெர்க். இன்னும் சொல்லப்போனால் ரஷ்யாவுக்கு சாதகமான புதிய உலகளாவிய கட்டமைப்பை உருவாக்குவதை அவர் குறிப்பிடுகிறார் என்றார்.

அமைதியை பொறுத்தவரை இந்த இருவேறு பாதைகளும் எங்கு, எப்போது ஒன்றிணையும் என்பது பற்றி சொல்ல முடியாது.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2kndwv411wo

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

2 months 2 weeks ago

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவிப்பு

07 Sep, 2025 | 04:05 PM

image

ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலகுவதாக அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜூலை மாதம் நடைபெற்ற தேர்தலில் லிபரல் ஜனநாயக கட்சியின் பிளவை தடுக்கும் நோக்கில் தாம் பதவி விலகுவதாக அறிவித்துள்ளார்.

68 வயதான ஷிகெரு இஷிபா, கடந்த ஆண்டு ஒக்டோபர் மாதம் ஜப்பான் நாட்டின் பிரதமராக பொறுப்பேற்றார். எல்டிபி கட்சியின் தலைவர் பொறுப்பிலும் அவர் உள்ளார். இந்நிலையில், கடந்த ஜூலை மாதம் ஜப்பான் பாராளுமன்றத்தின் மேலவையில் அவருக்கு பின்னடைவு ஏற்பட்டது.

அவரது எல்டிபி கட்சி மற்றும் அதன் கூட்டணி மேலவையில் பெருபான்மையை பெறவில்லை. முன்னதாக, கடந்த ஆண்டு நடைபெற்ற ஜப்பான் தேர்தலில் மக்களவையில் அவரது எல்டிபி கூட்டணி பெரும்பான்மை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில மாதங்களாக தேர்தல் தோல்விக்கு பொறுப்பேற்று பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி விலக வேண்டுமென அவரது கட்சியின் உறுப்பினர்கள் வற்புறுத்தி வந்தனர். 

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதத்தில் நடந்த கூட்டத்தில் அவருக்கு எதிராக கருத்து எழுந்தது. இருப்பினும் ஜப்பானுக்கு அமெரிக்கா விதித்துள்ள வரி, அதனால் நாடு எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலை உள்ளிட்டவற்றை சுட்டிக்காட்டி பதவி விலக அவர் மறுத்து விட்டார்.

இந்த சூழலில் ஜப்பான் நாடாளுமன்ற மேலவையில் 141 என இருந்த எல்டிபி கூட்டணியின் எண்ணிக்கையை 122 ஆக குறைந்தது. மேலவையில் மொத்த எண்ணிக்கை 248. பெரும்பான்மையை நிரூபிக்க 3 ஆசனங்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் அதில் தோல்வி கண்டுள்ளது எல்டிபி கூட்டணி. இந்த நிலையில் தான் பிரதமர் பொறுப்பில் இருந்து விலக ஷிகெரு இஷிபா முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

https://www.virakesari.lk/article/224456

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

2 months 2 weeks ago

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக முஸ்லிம் பெண் ஒருவர் உள்துறைச் செயலாளராக நியமனம்

07 Sep, 2025 | 03:51 PM

image

பிரிட்டன் அரசியல் வரலாற்றில் முதல் முறையாக, ஒரு முஸ்லிம் பெண் உள்துறைச் செயலாளராகப் பதவி ஏற்றுள்ளார். 

பிரிட்டன் பிரதமர் கெய்ர் ஸ்டார்மரின் அமைச்சரவை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த ஷபானா மஹ்மூத் இந்த முக்கியப் பதவிக்கு நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்தின் மூலம், பிரிட்டனின் உள்நாட்டுப் பாதுகாப்பு, குடியேற்றக் கொள்கைகள் மற்றும் காவல் துறையின் மிக முக்கியமான துறைகளை ஷபானா மேற்பார்வையிடுவார்.

பாகிஸ்தானில் இருந்து இங்கிலாந்தின் பர்மிங்காமுக்குக் குடிபெயர்ந்த பெற்றோருக்கு 1980 இல் பிறந்த ஷபானா, புகழ்பெற்ற ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்று சிறிது காலம் வழக்கறிஞராகப் பயிற்சி பெற்றார்.

2010 இல், பர்மிங்காம் லேடிவுட் தொகுதியிலிருந்து தொழிலாளர் கட்சியின் எம்.பி.யாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட அவர், இங்கிலாந்து நாடாளுமன்றத்தில் நுழைந்த முதல் முஸ்லிம் பெண் எம்.பி.க்களில் ஒருவரானார்.

கட்சியில் பல முக்கிய நிழல் பதவிகளை வகித்த ஷபானா, 2024 தேர்தலில் தொழிலாளர் கட்சி ஆட்சிக்கு வந்த பிறகு, நீதித்துறை செயலாளராகவும், லார்ட் சான்சலராகவும் நியமிக்கப்பட்டார். தற்போது, உள்துறைச் செயலாளராகப் பதவி உயர்வு பெற்றுள்ளார்.

https://www.virakesari.lk/article/224459

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

2 months 2 weeks ago

உக்ரேன் மீது 800 ட்ரோன்களை ஏவிய ரஷ்யா

image_09a35fa73e.jpg

உக்ரேன் - ரஷ்யா மோதல் தொடங்கியதில் இருந்தே இதுதான் மிகப் பெரிய ட்ரோன் தாக்குதல் என்று கூறப்படுகிறது. இத்தாக்குதலில் உக்ரேன் அரசு தலைமை அலுவலக கட்டிடத்தின் மேல்தள பகுதியில் தீப்பிடித்து, புகை எழுந்தது. இதை சர்வதேச ஊடகவியலாளர்கள் உறுதி செய்துள்ளனர். 800 ட்ரோன்களை ஏவி தாக்குதல் நடத்தியுள்ளது ரஷ்யா. இந்த தாக்குதல் ஞாயிற்றுக்கிழமை (செப்.7) நடந்துள்ளது.

இதுநாள் வரையில் கீவ் நகரில் அரசு கட்டிடங்கள் மீதான தாக்குதலை ரஷ்யா தவிர்த்து வந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

ஞாயிற்றுக்கிழமை (07) அன்று ரஷ்யாவின் ட்ரோன் மற்றும் ஏவுகணை தாக்குதலில் கீவ் நகரில் ஒரு வயது குழந்தை உட்பட இரண்டு பேர் உயிரிழந்ததாக தகவல் கிடைத்துள்ளது. இந்த தாக்குதலில் கர்ப்பிணி உட்பட 11 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரேன் அதிகாரிகள் உறுதி செய்துள்ளனர். இதை கீவ் நகரின் நிர்வாக தலைவரும் உறுதி செய்துள்ளார். ரஷ்யாவின் தாக்குதலில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று சேதமடைந்துள்ளது. அதில் உள்ள மக்கள் வெளியேற முடியாமல் தவித்து வருவதாக தகவல் கிடைத்துள்ளது.

கடந்த இரண்டு வார காலத்தில் உக்ரேன் மீது ரஷ்யா மேற்கொண்ட மிக தீவிர ட்ரோன் தாக்குதலில் இது இரண்டாவதாக அமைந்துள்ளது. தீ பற்றிய அரசு தலைமையக அலுவலக கட்டிடத்தில் உக்ரேன் அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகள் வசிப்பதாக தகவல்.

இந்த தாக்குதலுக்கு பதிலடி தரும் வகையில் ரஷ்யாவில் உள்ள பிரையன்ஸ்க் பகுதியில் அமைந்துள்ள எரிசக்தி உள்கட்டமைப்பை சிதைக்கும் வகையில் எண்ணெய் குழாய் வழிதடத்தை ட்ரோன் மூலம் உக்ரேன் தாக்கியது. இதை உக்ரைனின் ட்ரோன் படை தளபதி ராபர்ட் ப்ரோவ்டி உறுதி செய்துள்ளார்.

அண்மையில் உக்ரேன் நாட்டின் மிகப் பெரிய போர்க்கப்பலை, ட்ரோன் மூலம் ரஷ்யா தகர்த்தது. இதில் உக்ரேன் வீரர்கள் உயிரிழந்தனர். கடந்த 2022-ல் தொடங்கிய ரஷ்யா - உக்ரேன் இடையேயான போரை நிறுத்த அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முயற்சி எடுத்தார். ஆனால், ரஷ்ய ஜனாதிபதி புட்டின், உக்ரேன் மீதான தாக்குதலை இன்னும் நிறுத்தவில்லை. இந்த சூழலில் உக்ரேன் மீது ரஷ்யா தீவிர தாக்குதலை தொடர்கிறது.

https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/உக்ரேன்-மீது-800-ட்ரோன்களை-ஏவிய-ரஷ்யா/50-364136

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

2 months 2 weeks ago

250906-gaza-displaced-ha-dea87e.webp?res

காசா நகரிலுள்ள பாலஸ்தீனிய மக்களை வெளியேற்ற நடவடிக்கை!

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை உடனடியாக அங்கிருந்து வெளியேறுமாறு இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் அறிவித்துள்ளார்.

குறிப்பாக காசா நகரை நோக்கி வேகமாக முன்னேறி வருகின்ற நிலையில் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் உள்ள பாலஸ்தீனிய மக்களை தெற்கு பகுதி நோக்கி செல்லுமாறு இன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரை முழுமையாக கைப்பற்றுமாறு இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு இரணுவத்திற்கு உத்தரவிட்டுள்ள நிலையில் இஸரேல் இராணுவம் வேகமாக முன்னேறி வருகின்றது.

இஸ்ரேலிய இராணுவத்தினர் கடந்த பல வாரங்களாக காசாவின் வடக்கு நகரத்தின் புறநகர்ப் பகுதிகளில் தாக்குதலை நடத்தி வருகின்றன.

காசா நகரம் ஒரு ஹமாஸ் கோட்டை என்றும், அதைக் கைப்பற்றுவது மிகவும் அவசியம் என இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த 2023ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட யுத்தம் தற்போது மேலும் தீவிரமடைந்துள்ளது.

யுத்ததிற்கு முன்னதாக காசா நகரில் சுமார் ஒரு மில்லியன் மக்கள் வசித்துவந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது எஞ்சியுள்ள மக்களை காசாவில் உள்ள கான் யூனிஸின் நியமிக்கப்பட்ட கடலோரப் பகுதிக்கு செல்லுமாறும் அவ்வாறு அங்கு தப்பி செல்லும் மக்களுக்கு உணவு, மருத்துவ பராமரிப்பு மற்றும் தங்குமிட வசதிகளை பெற முடியும் என்று இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் உறுதியளித்தார்.

காசா மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதல்களில் நேற்று முன்தினம் மாத்திரம் 50க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.

காசா நகரத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களின் போது ஏழு குழந்தைகள் உட்பட 50க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

வடக்கு நகர்ப்புற மையத்தின் மீதான இஸ்ரேலின் தாக்குதல் இன்று அதிகாலை வரை தொடர்ந்த வண்ணம் இருந்தாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

காசா நகரத்தில் அதிகளவான மக்கள் தொகை கொண்ட பகுதியில் ஒரு உயரமான கோபுரத்தை இராணுவம் அழித்ததால், காசாவில் “நரகத்தின் வாயில்கள்” திறக்கப்படுவதாக இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

https://athavannews.com/2025/1446288

Checked
Fri, 11/21/2025 - 16:47
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe