1 week 1 day ago
பட மூலாதாரம், GETTY IMAGES/BLOOMSBURY படக்குறிப்பு, 1977 ஆம் ஆண்டு பிரதமரான பிறகு, மொரார்ஜி தேசாய், ராமேஷ்வர் நாத் காவை உளவுத்துறை தலைவர் பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். கட்டுரை தகவல் ரெஹான் ஃபசல் பிபிசி இந்தி 23 செப்டெம்பர் 2025, 01:51 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் 1977-ஆம் ஆண்டு மார்ச் மாதத்தில், அவசர நிலைக்குப் பிறகு இந்திரா காந்தி மக்களவைத் தேர்தலை நடத்திய போது, அவரது கட்சி தோற்றது மட்டுமல்லாமல் அவரும் தனது மக்களவை தொகுதியை இழந்தார். அந்தத் தேர்தலில் புலனாய்வுப் பிரிவு (IB), உளவுத்துறை (RAW), சிபிஐ (CBI) ஆகிய இந்திய புலனாய்வு அமைப்புகள் அவசர நிலையில் வகித்த பங்கை எதிர்க்கட்சிகள் பெரிய அரசியல் பிரச்னையாக மாற்றின. பின்னர் பிரதமரான மொரார்ஜி தேசாய், உளவுத்துறை அமைப்பின் நிறுவனர் மற்றும் தலைவர் ராமேஷ்வர் நாத் காவை பதவியில் இருந்து நீக்க முடிவு செய்தார். "ஜனதா கட்சி அரசாங்கத்தில் மூத்த அமைச்சர்களும், பிரதமர் மொரார்ஜி தேசாயும், உளவுத்துறைக்கு எதிரான எண்ணம் கொண்டிருந்தனர். இந்திரா காந்தி அந்த அமைப்பை ஒரு அரசியல் ஆயுதமாக பயன்படுத்துவதாக அவர்கள் நினைத்தனர்" என காவுக்குப் பிறகு ரா தலைவராகப் பொறுப்பேற்ற கே. சங்கரன் நாயர், தனது சுயசரிதையான 'இன்சைட் ஐபி அண்ட் ரா'வில் குறிப்பிட்டுள்ளார். "காவ், மொரார்ஜி தேசாயை சந்திக்கும் போதெல்லாம், 'நான் உங்கள் மீது நம்பிக்கை இழந்துவிட்டேன்' என்று கூறி மொரார்ஜி தேசாய் அவரை அவமதிப்பார். இவ்வாறு மூன்றாவது முறை நடந்தபோது, காவ் நேராகவே, 'நான் முன்கூட்டியே ஓய்வு பெற விரும்புகிறேன்' என்று மொரார்ஜி தேசாயிடம் தெரிவித்தார்" என்று 'இன்சைட் ஐபி மற்றும் ரா'வில் கே. சங்கரன் எழுதியுள்ளார். அதோடு, "மொரார்ஜி என்னையும் இந்திரா காந்தியின் முகவராகவே கருதினார். ஆனால் அப்போது அமைச்சரவைச் செயலாளராக இருந்த நிர்மல் முகர்ஜி, நான் உளவுத்துறை நிறுவனர்களில் ஒருவர் என்பதால் என்னைத் தலைவராக்க வேண்டும் என்று சமாதானப்படுத்தினார்," எனவும் சங்கரன் நாயர் எழுதியுள்ளார். பட மூலாதாரம், MANAS PUBLICATION படக்குறிப்பு, கே. சங்கரன் நாயரின் சுயசரிதையான 'இன்சைட் ஐபி அண்ட் ரா' சங்கரன் நாயர் ராஜினாமா ஆனால் கே. சங்கரன் நாயர், உளவுத்துறை (RAW) அமைப்பின் தலைவராக மூன்று மாதங்கள் மட்டுமே பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் அரசாங்கம், உளவுத்துறை அமைப்பின் தலைமைப் பதவியை "செயலாளர் (Secretary, RAW)" என்பதிலிருந்து "இயக்குநர் (Director, RAW)" என மாற்றியது. இந்த மாற்றம் தனது அந்தஸ்தை குறைக்கும் முயற்சியாக உள்ளதாக நாயர் உணர்ந்தார். அரசாங்கத்திற்கு அத்தகைய நோக்கம் இல்லை என்று மொரார்ஜி தேசாயின் அலுவலகம் அவரை நம்ப வைக்க முயன்றது. இருந்தாலும் பல முக்கிய உளவுத்துறை நடவடிக்கைகளுக்கு தலைமை தாங்கிய நாயர், ராஜினாமா செய்ய முடிவு செய்தார். சங்கரன் நாயர் வெளியேறியது, உளவுத்துறை அமைப்பின் உயரதிகாரிகளுக்கு மிகுந்த வேதனையை ஏற்படுத்தியது. அவர் மிகவும் மதிக்கப்படும் அதிகாரியாகவும், எந்த அரசியல் தொடர்புகளும் இல்லாதவராகவும் இருந்தார். அவசரநிலை விதிக்கப்படுவதற்கு முன்பே, இந்திரா காந்தி அவரை உளவுத்துறைப் பணியகத்தின் (IB) தலைவராக நியமிக்க முடிவு செய்திருந்தார். "பதவி ஏற்கும் முன்பு பிரதமரின் இல்லத்தில் வந்து சந்திக்க வேண்டும் என்று, ஆர்.கே. தவான் மூலம் நாயருக்கு சஞ்சய் காந்தி ஒரு செய்தி அனுப்பினார். ஆனால் நாயர் மறுத்துவிட்டார். இதனால் சஞ்சய் காந்தி அவரது நியமனத்தை ரத்து செய்து, ஷிவ் மாத்தூரை தலைவராக நியமித்தார். நாயர் மீது அவர் அதீத கோபம் கொண்டதால், அவரை உளவுத்துறையில் இருந்தே நீக்கி, மாநில வட்டத்துக்கு திருப்பி அனுப்ப நினைத்தார்" என உளவுத்துறையின் முன்னாள் கூடுதல் செயலாளரான ராமன், தனது 'The Cow Boys of R&W' புத்தகத்தில் எழுதியுள்ளார். "காவ் இதற்குச் சம்மதிக்காமல், சஞ்சய் காந்தியின் தலையீட்டைப் பற்றி நேரடியாக இந்திரா காந்தியிடம் அதிருப்தி தெரிவித்தார். அதற்குப் பிறகு இந்திரா, சஞ்சயிடம் உளவுத்துறை விவகாரங்களில் தலையிட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார்" என்று பி. ராமன் தனது புகழ்பெற்ற புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார் . "அடுத்த நாள் காவ் என்னிடம் இரங்கல் தெரிவிக்க வேண்டுமா அல்லது எனக்கு வாழ்த்து தெரிவிக்க வேண்டுமா என்று தெரியவில்லை என்று கூறினார். நான் உடனடியாக, நீங்கள் என்னை வாழ்த்தலாம் என்று சொன்னேன்" என்றும் சங்கரன் நாயர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், MANAS PUBLICATION படக்குறிப்பு, முன்னாள் உளவுத் தலைவர் தலைவர் சங்கரன் நாயர் இரானிய இடைத்தரகருக்கு 6 மில்லியன் டாலர்கள் கொடுத்த வழக்கு மொரார்ஜி தேசாய் அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததும், இந்திரா காந்தி மற்றும் சஞ்சய் காந்தி உளவுத்துறையைத் தவறாக பயன்படுத்தியிருக்கிறார்களா என்பதைக் கண்டுபிடிக்க, ராவின் பழைய பதிவுகள் அனைத்தும் ஆராயப்பட்டன. ஆனால் ஒரு சம்பவத்தைத் தவிர, எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை. ஜனதா அரசு, நிதி அமைச்சகம் மற்றும் இந்திய ரிசர்வ் வங்கியின் சில கோப்புகளில் சில தகவல்களை கண்டுபிடித்தது. அவை, உளவுத்துறை, காவ், சங்கரன் நாயர் ஆகியோர் ஒரு வழக்கில் சிக்கக்கூடும் என்று கருத வைத்தன. "அவசரநிலையின் போது, நாயர் ஜெனீவாவுக்கு அனுப்பப்பட்டு, சுவிஸ் வங்கி கணக்கில் ரூ.60 லட்சம் அல்லது ஆறு மில்லியன் டாலர் டெபாசிட் செய்ததாக கோப்புகள் வெளிப்படுத்தின. ஜனதா அரசு, இந்தப் பணம் சஞ்சய் காந்தியின் ரகசியக் கணக்கில் செலுத்தப்பட்டது என சந்தேகித்தது. ஆனால் விசாரணையில், அந்த கணக்கு உண்மையில் இரானிய இடைத்தரகரான ரஷிடியனுக்குச் சொந்தமானது என்று தெரியவந்தது. அவர் இரான் ஷாவின் சகோதரி அஷ்ரப் பஹ்லவியின் நெருங்கிய நண்பர்." இந்திய அரசு, இரானிடமிருந்து மலிவான விலையில் கடன் பெறுவதற்காக அந்த இடைத்தரகரின் சேவைகளை பயன்படுத்தி, அவருக்கு கமிஷனாக ஆறு மில்லியன் டாலர் வழங்கியது. "இந்திரா காந்தி இந்த விஷயத்தை ரகசியமாக வைத்திருக்க விரும்பினார். அதனால், வெளியுறவு அமைச்சக அதிகாரிகளுக்கு பதிலாக உளவுத்துறை அமைப்பின் சேவைகள் பயன்படுத்தப்பட்டன. சுதந்திர இந்திய வரலாற்றில், ஒரு வெளிநாட்டு நபருக்கு கமிஷன் வழங்குவதற்கு பிரதமர் ஒப்புதல் அளித்தது இதுவே முதல் முறை. ஆனால், இந்த உண்மைகள் மொரார்ஜியின் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்ட போது, அவர் இதற்கு பெரிதாக முக்கியத்துவம் தரவில்லை" என்று பி ராமன் குறிப்பிட்டுள்ளார். இந்தச் சம்பவம் பற்றிய முழு விவரங்களையும் கே. சங்கரன் நாயர் தனது 'இன்சைட் ஐபி அண்ட் ரா' (Inside IB and RAW) புத்தகத்தில் எழுதியுள்ளார். பட மூலாதாரம், LENCER PUBLISHERS படக்குறிப்பு, பி.ராமனின் 'தி கவ் பாய்ஸ் ஆஃப் ஆர்&டபிள்யூ' புத்தகம் உளவுத்துறையின் பட்ஜெட் குறைப்பு அவசரநிலைக்கு எதிராக இருந்தவர்களைத் துன்புறுத்த இந்திரா காந்தி உளவுத்துறையைப் (RAW) பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தை, மொரார்ஜி தேசாய் ஒருபோதும் விடவில்லை. அதனால், அவர் உளவுத்துறை அமைப்புக்குள் பெரும் அளவில் ஆட்குறைப்பு செய்ய முடிவு செய்தார். இதை அறிந்த சங்கரன் நாயர் அதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்தார். இப்படிச் செய்வது உளவுத்துறைப் பணியாளர்களின் மன உறுதியை பாதிக்கும், பணத்திற்காக வேலை செய்யும் முகவர்களின் பார்வையில் அமைப்பின் நம்பகத்தன்மை குறைந்து விடும் என்று அவர் மொரார்ஜி தேசாயை நம்ப வைக்க முயன்றார். "ஆரம்பத்தில், ஜனதா அரசு, ராவின் பட்ஜெட்டை 50 சதவிகிதம் குறைத்தது. இதனால், பல உளவாளிகளின் சேவைகளை நிறுத்த வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பின்னர், மொரார்ஜி தேசாய் 50% குறைப்பை வலியுறுத்தவில்லை. ஆனால் அதற்குப் பிறகும், உளவுத்துறையின் பட்ஜெட் கணிசமாகக் குறைக்கப்பட்டது"என்று பி.ராமன் எழுதியுள்ளார். "புதிய உளவாளிகளை சேர்ப்பது முற்றிலுமாக நிறுத்தப்பட்டது. வெளிநாடுகளில் இருந்த பல பிரிவுகள் மூடப்பட்டன. "என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அவசரநிலையை எதிர்ப்பவர்களைத் துன்புறுத்த இந்திரா காந்தி ராவைப் பயன்படுத்தினார் என்ற சந்தேகத்தை மொரார்ஜி தேசாய் ஒருபோதும் கைவிடவில்லை. விசாரணையில் காவுக்கு எதிராக எந்த ஆதாரமும் கிடைக்கவில்லை மொரார்ஜி தேசாய்க்கு, ராவின் நிறுவனர் ஆர்.என். காவ் மீது மிகுந்த அவநம்பிக்கை இருந்தது. அதனால், காவ் தனது பொறுப்பை சங்கரன் நாயரிடம் ஒப்படைக்கும் முன், எந்த ஆவணங்களையும் அழிக்காமல் இருப்பதை உறுதி செய்ய, அமைச்சரவைச் செயலாளர் நிர்மல் முகர்ஜியை அவருடைய அலுவலகத்துக்கு அனுப்பினார். ஆனால், ஆட்சிக்கு வந்த சில நாட்களிலேயே காவின் மீது அரசின் பார்வை மாறத் தொடங்கியது. "உள்துறை அமைச்சராக இருந்தபோது விசாரணை நடத்திய பிறகு, காவ் சரியான முறையில் செயல்பட்டார் என்றும், அவர் மீது கூறப்பட்ட குற்றச்சாட்டுகள் ஆதாரமற்றவை என்றும் சரண் சிங் ஒப்புக்கொண்டார். பல ஆண்டுகளுக்குப் பிறகு, சரண் சிங்கின் இந்த நடத்தை தனது இதயத்தைத் தொட்டதாக காவ் கூறினார்"என்று முன்னாள் ரா அதிகாரி ஆர்.கே. யாதவ் தனது 'மிஷன் ரா' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, இந்தியாவின் முன்னாள் பிரதமர் சவுத்ரி சரண் சிங், காவின் பணி குறித்து திருப்தி தெரிவித்திருந்தார். உளவுத்துறை பொறுப்புகள் குறித்த முரண்பாடுகள் உளவுத்துறையின் எதிர்காலம் குறித்து அரசாங்கத்தின் உயர்மட்ட தலைமைக்குள் பெரும் கருத்து வேறுபாடு இருந்தது. மொரார்ஜி தேசாய், அந்த அமைப்பில் கடுமையான ஆள் குறைப்பைச் செய்ய வேண்டும் என்று நினைத்தார். ஆனால் சரண் சிங், அதில் எந்த மாற்றமும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தார். அதே நேரத்தில், வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், அதிக எண்ணிக்கையிலான இந்தியர்கள் வாழும் நாடுகளில் உளவுத்துறை அதிக கவனம் செலுத்த வேண்டும் என்ற கருத்தை முன்வைத்தார். "இதன் காரணமாக, அந்த நேரத்தில் அரசாங்கத்தில் யாருடைய கருத்துகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது என்பதைப் பொறுத்து, ராவின் எதிர்காலம் மற்றும் பொறுப்பு குறித்து உயர் தலைமையின் அறிவுறுத்தல்கள் தெளிவாக இல்லை" என்று ராமன் எழுதியுள்ளார். வாஜ்பாயின் நிலைப்பாட்டிலும் மாற்றம் ஜனதா அரசாங்கத்தில் வெளியுறவுத்துறை அமைச்சராக இருந்த அடல் பிஹாரி வாஜ்பாய், ஆரம்பத்தில் தன்னிடம் ஆக்ரோஷமாக நடந்து கொண்டார் என்று காவ் பின்னர் ஒரு நேர்காணலில் கூறினார். பதவியை விட்டு விலகும் நேரத்தில் காவ் அவரைச் சந்திக்கச் சென்றபோது, வாஜ்பாய் தன்னை உளவு பார்த்ததாகவும், தனது தனிப்பட்ட வாழ்க்கை குறித்த தகவல்களை இந்திரா காந்திக்கு வழங்கியதாகவும் குற்றம் சாட்டியுள்ளார். மொரார்ஜி தேசாயுடனான தனது கடைசி சந்திப்பில், வாஜ்பாயின் நடத்தை குறித்து காவ் புகார் கூறினார். காவ் சொல்வதைக் கேட்ட பிறகு, வாஜ்பாய் அவரிடம் அப்படிப் பேசியிருக்கக் கூடாது என்று தேசாய் கூறினார். இது குறித்து வாஜ்பாயிடம் பேசுவதாக உறுதியளித்த தேசாய், பிறகு அதனை பூர்த்தி செய்துள்ளார். சில நாட்களுக்குப் பிறகு, வாஜ்பாய் காவை அழைத்து, மொரார்ஜி தேசாய்க்கு அளித்த புகார் குறித்து தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனால் சிறிது காலத்திற்குப் பிறகு, காவைப் பற்றிய வாஜ்பாயின் கருத்து முற்றிலும் மாறியது. 1998 இல் பிரதமரான பிறகு, அவர் காவை நலம் விசாரித்தார். கார்கில் போர் குறித்த கார்கில் மறு ஆய்வுக் குழுவின் அறிக்கை வெளிவந்த பிறகு, வாஜ்பாய் காவை அழைத்து ஆலோசனை நடத்தினார். பட மூலாதாரம், Bloomsbury படக்குறிப்பு, முன்னாள் பிரதமர்கள் அடல் பிஹாரி வாஜ்பாய் மற்றும் ராம்நாத் கோவிந்த் சூழ்நிலையைக் கையாண்ட சாந்தூக் 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தபோது, மொரார்ஜி தேசாய் மற்றும் சரண் சிங்குக்கு நெருக்கமானவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில், உளவுத்துறையில் பணிபுரிந்த நான்கு இந்திய காவல் பணி அதிகாரிகளை அவர்களின் பதவிகளில் இருந்து நீக்கினார். உளவுத்துறைக்கு மிகவும் இருண்ட காலமாக அது அமைந்தது. புதிதாக நியமிக்கப்பட்ட தலைவர் நௌஷர்வான் எஃப். சாந்தூக் நிலைமையை கட்டுக்குள் கொண்டுவந்தார். அப்போது கூட்டுப் புலனாய்வுக் குழுவின் தலைவராக சாந்தூக் இருந்தார். அங்கு அனுப்பப்படுவதற்கு முன்பு, அவர் உளவுத்துறையில் காவ் மற்றும் சங்கரனுக்குப் பிறகு மூன்றாவது இடத்தில் இருந்தார். இந்திய கடற்படையில் தனது பணியைத் தொடங்கிய அவர், பின்னர் இந்திய காவல் பணியில் இணைந்தார். பின்னர் வடகிழக்கு மாநிலங்களை நிர்வகிப்பதற்காக உருவாக்கப்பட்ட இந்திய எல்லைப்புற நிர்வாகப் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, 1980 ஆம் ஆண்டு இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்தார். மூன்று பிரதமர்களுடன் பணியாற்றிய சாந்தூக் சாந்தூக்கை, காவ் முன்பே அறிந்திருந்தார். அவரை உளவுத்துறையில் சேரவும் சம்மதிக்க வைத்தார். "நாயரைப் போலவே, சாந்தூக்கும் மிகவும் தொழில்முறை மற்றும் அரசியல் சாராத அதிகாரியாக இருந்தார். ரா தலைவரான பிறகு, அவர் பிரிகேடியர் ஐஎஸ் ஹசன்வாலியாவை இரண்டாம் நிலை அதிகாரியாக தேர்வு செய்தார். ஓய்வு பெற்ற பிறகு, எஸ்பி கர்னிக் மற்றும் அவருக்குப் பிறகு சிவராஜ் பகதூர் ஆகியோர் அவரது அவரது இரண்டாம் நிலை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்" என்று பி ராமன் குறிப்பிட்டுள்ளார். "மொரார்ஜி தேசாய், சரண் சிங் மற்றும் இந்திரா காந்தி ஆகிய மூன்று பிரதமர்களுடன் பணிபுரியும் வாய்ப்பைப் பெற்ற ஒரே உளவுத்துறை அதிகாரி சாந்தூக் ஆவார்." மொரார்ஜியின் தீவிர எதிர்ப்பாளராக இருந்த இந்திரா காந்தி, 1980 இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகும் சாந்தூக்கைப் பதவியில் இருந்து நீக்கவில்லை. பட மூலாதாரம், Bloomsbury படக்குறிப்பு, ராம்நாத் காவ், ரா நிறுவனர் சாந்தூக் மற்றும் தேசாய் இடையே காணப்பட்ட ஒற்றுமை சாந்தூக்கிடம் தனக்கு முன்பிருந்தவர்களை பெருமையாகப் பேசும் அல்லது விமர்சிக்கும் பழக்கம் அவருக்கு இல்லை. "சாந்தூக், காவ் மற்றும் இந்திரா காந்தியின் ரகசியங்களை வெளிப்படுத்துவதன் மூலம் மொரார்ஜியுடன் நெருங்கிப் பழகியிருக்கலாம், ஆனால் அவர் அவ்வாறு செய்யவில்லை. அவர் தனிப்பட்ட முறையில் காவுக்கும் விசுவாசமாக இருந்தார்" என சஞ்சோய் கே. சிங் தனது 'மேஜர் ஆபரேஷன்ஸ் ஆஃப் ரா' புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார். "மொரார்ஜியின் பதவிக் காலத்தில், காவ் தவிர, வேறு எந்த மூத்த அதிகாரியையும் உளவுத்துறையில் இருந்து நீக்காததற்காக சாந்துக் பாராட்டப்பட வேண்டும். பதவியேற்ற சில மாதங்களுக்குள், அவர் தேசாய் உடன் நல்ல தனிப்பட்ட உறவை வளர்த்துக் கொண்டார்"என்றும் அதில் பதிவு செய்யப்பட்டுள்ளது. பட மூலாதாரம், Lenin's Media படக்குறிப்பு, சஞ்சய் கே. சிங் எழுதிய 'Major operations of R&AW' புத்தகம் சேத்னா மூலம் மொரார்ஜி தேசாய்க்கு கொடுக்கப்பட்ட அழுத்தம் 1977 ஆம் ஆண்டில், வெளியுறவுத் துறை அமைச்சகத்திற்குள் உள்ள சில வட்டாரங்களில், இந்தியா அணு ஆயுத பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவது குறித்து தீவிரமாக பரிசீலிக்கப்பட்டு வருவதாக நம்பகமான வட்டாரங்களிலிருந்து சாந்தூக் அறிந்து கொண்டார். மும்பையில் வசிக்கும் அணு விஞ்ஞானி முனைவர் ஹோமி சேத்னாவின் ஆலோசனையை பிரதமர் மொரார்ஜி தேசாய் புறக்கணிக்க மாட்டார் என்பதை அவர் அறிந்திருந்தார். "ராம்நாத் காவ் மட்டுமே சேத்னாவை மொரார்ஜி தேசாயுடன் பேச சம்மதிக்க வைக்க முடியும் என்பதை சாந்தூக் அறிந்திருந்தார்" என்று நிதின் கோகலே குறிப்பிட்டுள்ளார். இந்திரா காந்தி பிரதமராக இருந்த காலத்தில் சேத்னாவும், காவும் பல ஆண்டுகள் ஒன்றாகப் பணியாற்றினர். சேத்னாவைச் சந்திக்க ரா அதிகாரியான வி. பாலச்சந்திரனை காவ் அனுப்பினார். மொரார்ஜி தேசாய் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் (NPT) கையெழுத்திடுவது இந்தியாவின் நலனுக்கு எதிரானது என்பதை சேத்னா மூலம் அவரை நம்ப வைப்பது தான் அவருக்குக் கொடுக்கப்பட்ட பணி. சேத்னாவுக்கும் மொரார்ஜிக்கும் இடையே என்ன உரையாடல் நடந்தது என்பது குறித்த தகவல்கள் பொதுவில் கிடைக்கவில்லை, ஆனால் அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திட வேண்டும் என்ற சர்வதேச அழுத்தத்திற்கு இந்தியா அடிபணியவில்லை என்பதே உண்மை. "இந்தியா அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தால், பொக்ரான்-2 நடந்திருக்காது, இந்தியாவுக்கு அணு ஆயுதங்கள் இருந்திருக்காது, இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில் எந்த அணுசக்தி ஒப்பந்தமும் இருந்திருக்காது" என்று கோகலே குறிப்பிட்டுள்ளார். பட மூலாதாரம், PHOTO DIVISION படக்குறிப்பு, அணு விஞ்ஞானி முனைவர் ஹோமி சேத்னா பழைய நிலைக்குத் திரும்பிய உளவுத்துறை மொரார்ஜி தேசாய் பிரதமராகப் பணியாற்றிய போது, உளவுத்துறையிடம் இருந்து பெறப்படும் புலனாய்வுத் தகவல்களின் முக்கியத்துவத்தை உணர்ந்தார். 1979 ஆம் ஆண்டு வாக்கில், சாந்தூக் தலைமையில், மொரார்ஜி தேசாயின் மனதில் இருந்து எதிர்மறை பிம்பத்தை அகற்றுவதில் உளவுத்துறை வெற்றி பெற்றது. ஆனால், அவர் அந்த சேவைகளைப் பயன்படுத்துவதற்கு முன்பு, ஜனதா கட்சியில் பிளவு ஏற்பட்டு, அவர் தனது பதவியை ராஜினாமா செய்ய வேண்டியிருந்தது. 1980 இல் இந்திரா காந்தி மீண்டும் ஆட்சிக்கு வந்த பிறகு, உளவுத் துறையின் பழைய முக்கியத்துவம் வாய்ந்த சகாப்தம் திரும்பியது. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/crmex77kmr1o