புதிய பதிவுகள்2

இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்!

2 months ago
இன்று முதல் காங்கேசன்துறை மற்றும் மட்டக்களப்புக்கு தொடருந்தில் பயணிக்கலாம்! 24 December 2025 நாட்டின் வடக்கு தொடருந்து மார்க்கம் இன்று (24) முதல் பயணிகள் தொடருந்து போக்குவரத்துக்காக முழுமையாகத் திறக்கப்படுவதாக தொடருந்து திணைக்களம் அறிவித்துள்ளது. இதன்படி, கொழும்பு கோட்டையிலிருந்து காங்கேசன்துறை வரையான யாழ்தேவி கடுகதி தொடருந்து சேவை இன்று முதல் அதன் வழக்கமான கால அட்டவணைப்படி மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதற்கமைய, கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்திலிருந்து காலை 6:40 க்குப் புறப்படும் தொடருந்து, பிற்பகல் 2:32 க்குக் காங்கேசன்துறை நிலையத்தைச் சென்றடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், காங்கேசன்துறையிலிருந்து முற்பகல் 10:30 க்குப் புறப்படும் தொடருந்து, மாலை 6:54 க்குக் கொழும்பு கோட்டை தொடருந்து நிலையத்தை வந்தடையும் என தொடருந்து கட்டுப்பாட்டு அறை தெரிவித்துள்ளது. இந்த தொடருந்தின் முதலாம் வகுப்பு (குளிர்சாதன வசதி) மற்றும் இரண்டாம் வகுப்புப் பெட்டிகளுக்கான ஆசன முன்பதிவு வசதிகளையும் பயணிகள் பயன்படுத்திக் கொள்ள முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேவேளை, மட்டக்களப்பு வரையான கிழக்கு தொடருந்து மார்க்கத்தின் சேவைகளும் இன்று முதல் மீள ஆரம்பிக்கப்பட்டுள்ளன. கொழும்பிலிருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணிக்கும் பயணிகள், காலை 6 மணிக்கு திருகோணமலை நோக்கிப் புறப்படும் தொடருந்தில் பயணித்து, கல் ஓயா சந்தி தொடருந்து நிலையத்தை அடைய வேண்டும். பின்னர் அங்கிருந்து மதியம் 12:40 க்குப் புறப்படும் இலக்கம் 6011 ஐ கொண்ட தொடருந்து ஊடாக மட்டக்களப்பைச் சென்றடைய முடியும். அதேநேரம், மட்டக்களப்பிலிருந்து காலை 5 மணிக்குப் புறப்படும் தொடருந்தில் கல் ஓயா சந்தி நிலையத்தை வந்தடைந்து, அங்கிருந்து கொழும்பு நோக்கிய தொடருந்தில் பயணிகள் தமது பயணத்தைத் தொடரலாம் என தொடருந்து திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. வடக்கு நோக்கிய தொடருந்து சேவை மட்டக்களப்புக்கான தொடருந்து சேவை https://hirunews.lk/tm/437350/from-today-you-can-travel-by-train-to-kankesanthurai-and-batticaloa

தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை

2 months ago
தமிழீழத்துக்கு பொது வாக்கெடுப்பு: தமிழக அரசியல் கட்சிகள் கூட்டறிக்கை 24 December 2025 இனப்படுகொலைக்கான நீதிவிசாரணையை நடத்தி தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் என தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ எனப்படும் வை.கோபால்சாமி, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன், மனிதநேய மக்கள் கட்சி பேராசிரியர் ஜவாஹிருல்லா, திராவிட தமிழர் பேரவையின் பேராசிரியர் சுப.வீரபாண்டியன், திராவிடர் விடுதலைக் கழகத்தின் தலைவர் கொளத்தூர் மணி, தந்தை பெரியார் திராவிட கழகத்தின் கோவை இராமகிருஷ்ணன், மே-17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் தியாகு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் மணியரசன், விடுதலை தமிழ்ப் புலிகளின் குடந்தை அரசன், தற்சார்பு விவசாயிகள் சங்கத்தின் ஈரோடு பொன்னையன், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், தமிழ்ப் புலிகள் கட்சி நாகை திருவள்ளுவன், இந்திய சமூக ஜனநாயகக் கட்சி கட்சித் தலைவர் நெல்லை முபாரக், மனிதநேய ஜனநாயகக் கட்சியின் தமிமுன் அன்சாரி, முக்குலத்தோர் புலிப்படையின் கருணாஸ் ஆகியோர் இந்த கூட்டறிக்கையை வெளியிட்டுள்ளனர். தமிழினப் படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை ஐக்கிய நாடுகள் சபை நடத்த வேண்டும் என்று வடக்கு மாகாணத்தின் முன்னாள் முதல்வரான சி.வி விக்னேஷ்வரன் தீர்மானம் நிறைவேற்றினார். அத்துடன், தமிழக சட்டமன்றத்தில், சுதந்திரத் தமிழீழத்துக்கான பொதுவாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும், தமிழீழ இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பபட்டது. ஈழத் தமிழர் படுகொலையைத் தடுத்து நிறுத்தும் நடவடிக்கையை இந்திய அரசும், உலக நாடுகளும் மேற்கொள்ள வேண்டும் என்று முத்துக்குமார் உள்ளிட்ட 19 தமிழர்கள் தீக்குளித்து மாண்டார்கள். இந்தப் பின்னணியை தமிழ்நாட்டில் உள்ள தமிழர்களும், இந்திய நாட்டில் உள்ள அரசியல் கட்சிகளும், உலக நாடுகளும் உணர்ந்து ஈழத்தமிழர் இனப்படுகொலைக்கான நீதி விசாரணையை நடத்த முன்வர வேண்டும் என்றும், சுதந்திரத் தமிழீழத்துக்கு ஐக்கிய நாடுகளின் மேற்பார்வையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்றும் அந்த அறிக்கையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. அத்துடன், தமிழர் காணிகளில் குடியேற்றப்பட்டுள்ள அத்துமீறிய குடியேற்றங்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், ஈழத்தமிழர் தாயகத்திலிருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும் அதற்கான ஆயத்த வேலைகளைச் செய்ய தமிழகத்தில் உள்ள தமிழர்களும், புலம்பெயர் வாழ் தமிழர்களும் கடமையாற்ற வேண்டும் என்று இந்தக் கூட்டறிக்கையின் வாயிலாக வலியுறுத்தப்பட்டுள்ளது. https://hirunews.lk/tm/437352/referendum-for-tamil-eelam-joint-statement-by-tamil-nadu-political-parties

விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு

2 months ago
துருக்கியில் விமான விபத்து; லிபியாவின் இராணுவத் தலைவர் உட்பட 7 பேர் உயிரிழப்பு துருக்கியில் நடந்த விமான விபத்தில் லிபியா ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். உள்நாட்டுப் போர் நடந்து வரும் லிபியாவில், ஐநா சபை மற்றும் அமெரிக்கா, துருக்கி உள்ளிட்ட நாடுகளால் அங்கீகரிக்கப்பட்ட அரசு, தலைநகர் டிரிப்போலியை தலைமையிடமாக கொண்டு செயல்படுகிறது. இதை எதிர்க்கும் போட்டி அரசு, நாட்டின் கிழக்குப் பகுதியை மையமாகக் கொண்டு செயல்படுகிறது. இந்த அரசுக்கு ஆதரவாக ரஷ்யா, எகிப்து மற்றும் சில இஸ்லாமிய நாடுகள் உள்ளன. இந்த சூழலில், துருக்கியின் தலைநகரான அங்காராவிலிருந்து புறப்பட்ட சிறிது நேரத்திலேயே, லிபியாவின் ராணுவ தலைவர், நான்கு அதிகாரிகள் மற்றும் மூன்று பணியாளர்களை ஏற்றிச் சென்ற தனியார் ஜெட் விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில், லிபிய ராணுவத் தலைவர் முகமது அலி அகமது அல் ஹதாத் உட்பட 7 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறே விபத்துக்கு காரணம் என லிபியா அதிகாரிகள் தெரிவித்தார். விமானம் புறப்பட்ட 40 நிமிடங்களில் தொடர்பை இழந்தது. பின்னர் அவசரமாக விமானத்தை தரையிறக்க முயற்சித்த போது தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டு கீழே விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது என துருக்கி உள்துறை அமைச்சர் அலி யெர்லிகாயா தெரிவித்தார். https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/துருக்கியில்-விமான-விபத்து-லிபியாவின்-இராணுவத்-தலைவர்-உட்பட-7-பேர்-உயிரிழப்பு/50-370056

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2 months ago
அர்ச்சுனா எம்.பி. கைது யாழ்ப்பாண மாவட்ட சுயேச்சைக்குழு பாராளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா இன்று புதன்கிழமை (24) கோட்டை பொலிஸ் நிலையத்தில் சரணடைந்ததை அடுத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ராமநாதன் அர்ச்சுனா, நீதிமன்றில் ஆஜராகத் தவறியமைக்காக கொழும்பு நீதவான் நீதிமன்றினால் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துமாறு கோட்டை நீதவான் செவ்வாய்க்கிழமை (23) அன்று பிடியாணை பிறப்பித்தார். பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்ததாகக் கூறப்படும் வழக்கின் விசாரணைக்கு நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறியதால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன், பொலிஸாரின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை, பொலிஸ் அதிகாரிக்கு மிரட்டல் விடுத்தமை மற்றும் சட்டவிரோதமாக வாகனத்தை நிறுத்தியமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுகளின் கீழ் செப்டெம்ப மாதம் 29ஆம் திகதி கைது செய்யப்பட்ட இராமநாதன் அர்ச்சுனா எம்.பி. பிணையில் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/செய்திகள்/அர்ச்சுனா-எம்-பி-கைது/175-370065

அலெக்ஸ் கேரி - பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்

2 months ago
தோனிக்கு பின் விக்கெட் கீப்பிங் இலக்கணங்களை மாற்றி எழுதும் 'கேரி' - இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் பட மூலாதாரம்,Getty Images கட்டுரை தகவல் பிரதீப் கிருஷ்ணா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் "அலெக்ஸ் கேரி அபூர்வமானவர். வேகப்பந்துவீச்சாளர்களுக்கு ஸ்டம்புகளுக்கு நெருக்கமாக நின்று சிறப்பாக செயல்பட்டார். பந்து அவர் கையில் எப்படியோ ஒட்டிக்கொள்கிறது. கொஞ்சம் கூட பயமேயில்லை" பிரிஸ்பேனில் நடந்த இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டியின் பரிசளிப்பின் போது அந்தப் போட்டியின் ஆஸ்திரேலிய கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் இப்படிக் கூறியிருந்தார். காரணம், நடந்துவரும் ஆஷஸ் டெஸ்ட் தொடரில், தன்னுடைய பயமற்ற, சிறப்பான விக்கெட் கீப்பிங்கால் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறார் அலெக்ஸ் கேரி. அதனால், ஸ்மித் போல் பலரையும் ஆச்சர்யப்படுத்தியிருக்கிறார். அதனால் கடந்த சில நாள்களாகவே, ஸ்டம்புக்கு அருகே நின்று வேகப்பந்துவீச்சாளர்களின் பந்துகளை அவர் பிடிக்கும் வீடியோக்கள் பெருமளவு பகிரப்பட்டுவருகின்றன. அவரது இந்த கீப்பிங் அணுகுமுறை பற்றி கிரிக்கெட் வட்டாரத்தில் தொடர்ந்து பல விவாதங்கள் நடந்துகொண்டிருக்கின்றன. பேட்டிங்கிலும் அசத்தி, மூன்றாவது ஆஷஸ் போட்டியில் ஆட்ட நாயகன் விருதே வாங்கியிருந்தாலும், அவருடைய கீப்பிங் பற்றிய பேச்சே அதிகமாக இருக்கிறது. பொதுவாக சுழற்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது தான் கீப்பர்கள் ஸ்டம்புக்குப் பின்னாலேயே நிற்பார்கள். வேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசும்போது பின்னே சற்று தள்ளியே நிற்பார்கள். அவ்வப்போது மட்டுமே மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் ஸ்பின்னர்களுக்கு நிற்பதுபோல் வந்து நிற்பார்கள். அது அரிதாகவே நடக்கும் ஒரு விஷயம். ஆனால், அந்த பிரிஸ்பேன் ஆட்டத்தில் அதை அடிக்கடி செய்தார் கேரி. அதுவும் மைக்கேல் நெஸர், ஸ்காட் போலாண்ட் போன்றவர்கள் பந்துவீசும்போது, மணிக்கு சுமார் 135 கிலோமீட்டர் வேகத்துக்கும் மேலாக வந்த பந்துகளுக்கு அப்படி நின்றார். அந்த வேகத்தில் வரும் பந்துகளை மிகவும் பக்கத்தில் நின்றுகொண்டு பிடிப்பது மிகவும் கடினம். ஆனால், கேரி அதை எளிதாகச் செய்வதுபோல் தெரிந்தது. லெக் சைட் செல்லும் பந்துகளைக் கூட சிறப்பாகப் பிடித்துக் கொண்டிருந்தார் அவர். இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸின் கேட்சையும் அவர் சிறப்பாகப் பிடித்தார். நெஸர் பந்துவீச்சில் ஸ்டோக்ஸுக்கு எட்ஜாக, எந்தவித தடுமாற்றமும் இல்லாமல் அதை எளிதாகப் பிடித்தார் கேரி. இது கிரிக்கெட் வட்டாரத்தில் பெருமளவு பாராட்டப்பட்டது. பிரிஸ்பேனோடு நிற்காமல், தெற்கு ஆஸ்திரேலியாவில் (அடிலெய்ட் ஓவல் மைதானம்) நடந்த மூன்றாவது ஆஷஸ் போட்டியிலும் அந்த அணுகுமுறையைத் தொடர்ந்தார் அவர். போலாண்ட் பந்துவீசியபோது ஸ்டம்புக்கு அருகிலேயே நின்றிருந்த அவர், வில் ஜேக்ஸ் உடைய கேட்ச்சை டைவ் அடித்துப் பிடித்தார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பிரிஸ்பேன் டெஸ்ட் போட்டியில் மைக்கேல் நெஸர் பந்துவீச்சில், ஸ்டோக்ஸை கேட்ச் பிடித்தார் கேரி "தைரியமான செயல்பாடு" இதுபற்றி பிபிசி தமிழிடம் பேசிய தமிழ்நாடு வீரரும் விக்கெட் கீப்பருமான பாபா இந்திரஜித், "ஸ்டம்புகளுக்குப் பின்னால் ஸ்தம்பிக்க வைக்கும் ஒரு செயல்பாட்டை கேரி கொடுத்தார்" என்று கூறினார். "இந்தியா போன்ற ஆடுகளங்களில் இதுபோல் வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று கீப்பிங் செய்வது சற்றே எளிதாக இருக்கும். ஆனால், வேகமும், பௌன்ஸும் நிறைந்த ஆஸ்திரேலிய ஆடுகளங்களில் அப்படிச் செய்வது சாதாரண விஷயம் இல்லை. அங்கு கூடுதல் பௌன்ஸ் இருக்கும். அவர் அதை அசாதாரணமாகச் செய்திருக்கிறார். அதைப் பார்க்கும்போது, அவர் முதல் முறையாக அப்படிச் செய்வதுபோல் தெரியவில்லை" என்று கூறினார். டிரிபிள் எம் ரேடியோவில் அதுபற்றிப் பேசிய ஆஸ்திரேலிய அணியின் முன்னாள் விக்கெட் கீப்பர் பிராட் ஹாடின், "இதைவிட சிறந்த, இதைவிட தைரியமான விக்கெட் கீப்பிங் செயல்பாட்டைப் பார்க்க முடியாது" என்று கூறினார். இயான் ஹீலி, அலீஸா ஹீலி என ஆஸ்திரேலியாவின் முன்னாள், இந்நாள் கீப்பர்கள் பலரும் கேரியின் செயல்பாட்டை வெகுவாகப் பாராட்டினார்கள். அனைத்து கீப்பர்களும் இப்படி அதைப் புகழ்வதற்குக் காரணம், வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக அவர் ஸ்டம்புகளுக்கு அருகே நின்றார் என்பது மட்டுமல்ல. பிரிஸ்பேன் போன்ற ஒரு ஆடுகளத்தில், பகலிரவு போட்டி ஒன்றில் அவர் அப்படியொரு செயல்பாட்டைக் கொடுத்திருக்கிறார் என்பதுதான் அவருக்கு அதிக பாராட்டுகளைப் பெற்றுக்கொடுத்திருக்கிறது. இந்திரஜித் சொல்வதுபோல் கூடுதல் பௌன்ஸ் கொண்ட ஒரு ஆடுகளத்தில் கேரி அப்படி செயல்பட்டிருக்கிறார். பகலிரவு போட்டியில், செயற்கை விளக்குகளுக்கு நடுவே அப்படி செயல்படுவது கூடுதல் சவால். அதிக ஆபத்தும் கூட. இருந்தாலும், அவர் அந்த இடத்தில் நின்று சிறப்பாக செயல்பட்டதால்தான் அதை 'தைரியமான செயல்பாடு' என்றிருக்கிறார் ஹாடின். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,அடிலெய்டில் வில் ஜேக்ஸின் கேட்ச்சை டைவ் அடித்துப் பிடிக்கும் அலெக்ஸ் கேரி ஸ்டம்புக்கு அருகே நிற்பதன் காரணம் என்ன? அது ஏற்படுத்தும் தாக்கம் என்ன? வேகப்பந்துவீச்சாளர்களுக்கு எதிராக கீப்பர்கள் பின்னால் நிற்பார்கள் என்பதால், அது நன்றாக நகர்வதற்கான சுதந்திரத்தை பேட்டர்களுக்கு தரும். ஸ்விங்கை சமாளிக்க, பெரிய ஷாட் அடிக்க, சில சமயம் பௌலர்களைக் குழப்பவும் கிரீசுக்கு வெளியே பேட்டர்கள் நகர்வார்கள். பேட்டர்களின் இந்த நகர்வுகளைத் தடுக்கவே சில சமயம் மிதவேகப்பந்துவீச்சாளர்கள் பந்துவீசுகையில் கீப்பர்கள் முன்னால் வருவார்கள். இங்கிலாந்து பேட்டர்கள் அவர்களின் 'பாஸ்பால்' (Bazball) அணுகுமுறையின் காரணமாக அதீதமாக நகர்கிறார்கள். அவர்கள் ஒவ்வொரு பந்திலுமே ரன் அடிக்கப் பார்ப்பதால், தொடர்ந்து அவர்கள் நகர்வதைக் காணமுடியும். அவர்களின் அந்த 'அட்டாக்கிங்' அணுகுமுறையை கட்டுப்படுத்த, கேரி கீப்பிங்கில் 'அட்டாக்' செய்தார். அவர் ஸ்டம்புக்கு அருகே நின்றது, இங்கிலாந்து பேட்டர்களின் நகர்வுக்குப் பெருமளவு முட்டுக்கட்டை போட்டது. "வேகப்பந்துவீச்சுக்கு கீப்பர்கள் 'upto the stumps' (ஸ்டம்புகளுக்கு அருகே) வந்து நிற்பது பொதுவாகவே பேட்டர்களிடையே உளவியல் தாக்கத்தை ஏற்படுத்தும். பாஸ்பால் உத்தி காரணமாக இங்கிலாந்து பேட்டர்கள் ஸ்கூப், பேடில் போன்ற ஷாட்கள் ஆட தொடர்ச்சியாக நகர்வார்கள். ஆனால், கேரி இப்படி முன்னாள் வந்து நிற்பது அவர்களின் நகர்வுகளுக்கு முட்டுக்கட்டை போடும்" என்று கூறினார் இந்திரஜித். மேலும் பேசிய அவர், "இது ஷாட்கள் ஆடுவதில் மட்டுமல்ல, பந்துகளை விடுவதற்குமே யோசிக்கவைக்கும். நீங்கள் பந்தை 'well left' (ஆடாமல் விடுவது) செய்யும்போது உங்கள் கால்கள் சற்று மேலே எழும்ப வாய்ப்புள்ளது. அப்போது கீப்பர் ஸ்டம்ப் அருகே நின்றால், அங்கு ஸ்டம்பிங் ஆகும் வாய்ப்பும் உள்ளது. இதுவும் பேட்டர்களின் மனதில் ஓடிக்கொண்டே இருக்கும்" என்றும் கூறினார். அதுமட்டுமல்லாமல், கேரி ஒரே ஓவரில் தன் இடத்தை அடிக்கடி மாற்றுகிறார். ஒரு பந்து ஸ்டம்புக்கு அருகே இருப்பவர், அடுத்த பந்தே பின்னால் சென்று நிற்கிறார். இப்படிச் செய்வது, பந்தில் லென்த் குறித்து பேட்டர்கள் மனதில் கேள்விகள் எழுப்பலாம் என்கிறார் இந்திரஜித். அதேசமயம், இது வேகப் பந்துவீச்சாளர்களுக்குமே ஒருசில சவால்களைக் கொடுக்கும். கீப்பர்கள் முன்னே நிற்கும்போது 'ஷார்ட் லென்த்' பந்துகள் வீசமுடியாது. பந்து கொஞ்சம் லெக் திசையில் வெளியே சென்றால் பவுண்டரி ஆவதற்கான வாய்ப்பு அதிகமிருக்கும். அதனால், அவர்களுக்கு இயல்பாகவே சில கட்டுப்பாடுகள் ஏற்பட்டுவிடும். இதன் காரணமாக கீப்பர்கள் முன்னால் வந்து நிற்க சில சமயங்களில் வேகப் பந்துவீச்சாளர்கள் ஒத்துக்கொள்ள மாட்டார்கள் என்று சொல்லும் இந்திரஜித், ஆஸ்திரேலிய பௌலர்கள் ஒருமித்த கருத்தோடு இந்தத் திட்டத்தை ஏற்றுக் கொண்டிருக்க வேண்டும் என்று குறிப்பிட்டார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்கள் வீசும்போது கீப்பர்கள் ஸ்டம்புக்கு அருகே வந்து நிற்பது, பேட்டர்களின் நகர்வை பாதிக்கும் என்கிறார் பாபா இந்திரஜித் இதை கேரி எப்படி சாத்தியப்படுத்துகிறார்? பெரும் பேசுபொருளாக மாறியிருக்கும் இந்த கீப்பிங் அணுகுமுறைக்குத் தான் சிறப்பான பயிற்சிகள் எதுவும் மேற்கொள்ளவில்லை என்கிறார் அலெக்ஸ் கேரி. "வேகப் பந்துவீச்சுக்கு எதிராக நான் ஸ்டம்புகளுக்கு அருகே நின்று பயிற்சி செய்வதில்லை. சில சமயங்களில் அது கொஞ்சம் ஆபத்தானதாக இருக்கலாம் என்று நான் நினைக்கிறேன். விளையாட்டின் அடிப்படைகள் மற்றும் விக்கெட் கீப்பிங்கில் கவனம் செலுத்தவேண்டும் அவ்வளவே - அது நாதன் லயானின் பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நின்று நிறைய கீப்பிங் செய்திருப்பது" என்று சொல்லும் கேரி, "நான் இருக்கும் பொசிஷன்களை நம்புகிறேன். பின்னர் என் உள்ளுணர்வு, பந்தைப் பிடிப்பதற்கு ஏற்ற சரியான இடத்துக்கு என்னைக் கொண்டுசெல்லும் என்று நம்புகிறேன்" என்றும் கூறினார். சிறப்பான பயிற்சிகள் எதுவும் செய்வதில்லை என்று சொல்லும் அவர், வலது கை பேட்டர்களுக்கு எதிராக ஒரு வித்தியாசமான அணுகுமுறையைக் கையாள்கிறார். வேகப்பந்துவீச்சாளர்கள் வலது கை பேட்டர்களுக்கு வீசும்போது, அவர் நேராக நிற்பதில்லை. ஸ்டம்பில் இருந்து இரண்டு அடி பின்னால் நின்று, தன் இடது காலை ஆஃப் ஸ்டம்புக்கு நேராக வைத்திருக்கும் அவர், வலது காலை சற்று பின்னே வைத்துக்கொள்கிறார். பந்தைப் பிடிப்பதற்கு ஏதுவாக வலது பக்கம் இடுப்பை நகர்த்த அது உதவுவதாகக் கூறுகிறார் அவர். அவரது இந்த அணுகுமுறை பற்றி பேட்டிங் மற்றும் விக்கெட் கீப்பிங் பயிற்சியாளரான ஆர்த்தி சங்கரன் பிபிசி தமிழிடம் பேசினார். அப்போது, "கீப்பர்கள் பந்தைப் பிடிக்கும்போது கைகள் இலகுவாக (soft hands) இருக்கவேண்டும். 'Hard hands' ஆக இருக்கக்கூடாது. அப்போதுதான் பந்து கிளவுஸில் தங்கும். கைக்கும் அடிபடாது. அதற்காகத்தான் பொதுவாக பந்தைப் பிடித்து கையை சற்றுப் பின்னே கொண்டுசெல்வார்கள். வேகப்பந்துவீச்சுக்கு எதிராக அப்படி கைகளை இலகுவாக வைத்துப் பிடிக்க உடலை நன்கு நகர்த்தவேண்டும். அது கடினமான விஷயம். அதனால், தன் வலதுபக்க இடுப்பை நன்கு நகர்த்துவதற்காக கேரி அப்படி நிற்கிறார்" என்று அவர் கூறினார். வேகப்பந்துவீச்சுக்கு ஸ்டம்புக்கு அருகே நிற்பதற்கு பயிற்சி எடுப்பதில்லை என்று சொல்லும் கேரி, எதேச்சையாக இந்த முறையைக் கண்டறிந்திருக்கக் கூடும் என்று சொல்லும் ஆர்த்தி சங்கரன், அவர் இடது கை பேட்டர்களுக்கு அப்படி நிற்பதில்லை என்பதையும் குறிப்பிடுகிறார். "ஒருவேளை அவரது இடதுபக்க இடுப்பு எளிதாக நகர்வதாகவும், வலதுபுறம் நகராமலும் இருக்கலாம். அதனால், அவர் வலது காலைப் பின்னால் வைத்து, அந்தப் பக்கம் நகர்வதை எளிமையாக்க நினைத்திருக்கலாம்" என்றார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,வேகப் பந்துவீச்சாளர்களுக்கு இப்படி ஸ்டம்புக்கு அருகே வந்து கீப்பிங் செய்வதற்காக தான் தனியாக பயிற்சி எடுப்பதில்லை என்கிறார் கேரி தோனி - கேரி இருவரின் ஒற்றுமையும் வேறுபாடும் கேரியின் இந்த அணுகுமுறை ஒருவகையில் தோனிக்கு நேர்மாறாக இருக்கிறது என்றும், இன்னொரு வகையில் தோனியின் மனநிலையோடு ஒத்துப்போகிறது என்றும் ஆர்த்தி சங்கரன் கூறுகிறார். தோனியின் சிறப்பம்சங்களில் ஒன்று அவரது மின்னல்வேக ஸ்டம்பிங். அவர் அதை வேகமாகச் செய்வதற்கான காரணம் - பெரும்பாலான கீப்பர்கள் போல், பந்தைப் பிடித்தவுடன் அதன் தாக்கத்தைக் குறைக்க தோனி தன் கையை பின்னால் எடுத்துச் செல்லமாட்டார். கைகளை உறுதியாக வைத்திருப்பார் (Firm Hands). அதனால், கையை பின்னால் எடுத்துச்சென்று மீண்டும் ஸ்டம்ப் நோக்கி கொண்டுவருவதற்கான நேரம் அவருக்கு மிச்சமாகும். இதுதான் அவருடைய அதிவேக ஸ்டம்பிங்குகளின் ரகசியம். இது வழக்கமான கீப்பிங் இலக்கணத்துக்கு எதிரானது என்றாலும், அதுதான் அவரது பலமாக இருக்கிறது. இந்த இடத்தில்தான் தோனியிடமிருந்து கேரி வித்தியாசப்படுகிறார் என்கிறார் ஆர்த்தி சங்கரன். "கேரி பந்தைப் soft hands-ஓட பிடிக்கப் பார்க்கிறார். அதற்காக நகரத் தயாராக இருக்கிறார். அதனால், அவர் ஸ்டம்பிங் விஷயத்தில் இதே அளவு தாக்கத்தை ஏற்படுத்த முடியாது" என்று கூறினார் அவர். இருவரும் வெவ்வேறு விதமான பௌலர்களுக்கு அப்படி நிற்கிறார்கள் என்றாலும், அவர்கள் பிரதானப்படுத்தும் விஷயம் மாறுபடுகிறது என்கிறார் அவர். அதேசமயம், "தன்னுடைய உடல் எப்படி வேலை செய்கிறது என்பதை உணர்ந்து, அதை தன்னுடைய ஆட்டம் மேம்படுவதற்குப் பயன்படுத்திக் கொள்வதற்கு கேரி ஒரு நல்ல உதாரணம். இந்த எண்ணம் தான் அவரை வேறுபடுத்திக் காட்டுகிறது" என்று சொல்கிறார் ஆர்த்தி. தோனி தன்னுடைய 'firm hands'-ஐ பயன்படுத்துவதுபோல், கேரி தன் வலதுபக்க இடுப்பைப் பயன்படுத்துகிறார் என்றும் அவர் கூறினார். பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,பந்தைப் பிடிக்கும் விஷயத்தில் தோனிக்கும், அலெக்ஸ் கேரிக்கும் இடையே வித்தியாசம் இருக்கிறது. ஆனால், இருவருமே கீப்பிங் இலக்கணத்திலிருந்து சற்று மாறுபடவே செய்கிறார்கள். மூன்று ஆண்டுகளுக்கு முன்பே! பிரிஸ்பேன் ஆஷஸ் (2025) டெஸ்ட் போட்டியிலிருந்து கேரியின் இந்த கீப்பிங் பரவலாகப் பேசப்படுவருகிறது. ஆனால், இதேபோன்ற செயல்பாட்டை அவர் மூன்று ஆண்டுகளுக்கு முன்பே செய்திருக்கிறார். 2022 டிசம்பரில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக அடிலெய்டில் நடந்த பகலிரவு டெஸ்ட் போட்டியில் இதேபோல் இரண்டு கேட்சுகளைப் பிடித்தார் அவர். மைக்கேல் நெஸர் பந்துவீச்சில் ஸ்டம்புக்கு அருகில் நின்று கீப்பிங் செய்த அவர், ராஸ்டன் சேஸ் மற்றும் ஜாஷுவா டா சில்வா ஆகியோரின் கேட்சுகளைப் பிடித்தார். அந்த இரண்டு பந்துகளுமே மணிக்கு சுமார் 130 கிமீ வேகத்தில் வீசப்பட்டிருந்தன. அந்தப் போட்டி முடிந்த பிறகு பேசிய கேரி, "முதல் இன்னிங்ஸில் பந்தின் நகர்வைத் தடுக்க ராஸ்டன் சேஸ் தொடர்ந்து கிரீஸிலிருந்து வெளியே சென்று ஆடினார். அதனால், முன்னாள் வந்து நிற்கும் திட்டத்தை அப்போதே சொன்னேன். ஆனால், முதல் இன்னிங்ஸில் அதை செயல்படுத்த முடியவில்லை. இரண்டாவது இன்னிங்ஸில் அதற்குப் பலன் கிடைத்தது" என்று கூறினார். பட மூலாதாரம்,Getty Images இதுவரை 46 டெஸ்ட் போட்டிகளில் 177 கேட்ச், 19 ஸ்டம்பிங் என 196 எதிரணி பேட்டர்களை அவர் ஆட்டமிழக்கச் செய்திருக்கிறார். இது ஆஸ்திரேலியாவின் மிகச் சிறந்த கீப்பர்களாகக் கருதப்படும் ராட் மார்ஷ், இயான் ஹீலி, ஆடம் கில்கிறிஸ்ட், பிராட் ஹாடின் ஆகியோரை விடவும் அதிகம். அதனால் தான் இன்று சிறந்த கீப்பர்கள் பற்றிய விவாதத்தில் கேரியின் பெயரும் இடம்பெற்றிருக்கிறது. இரண்டாவது ஆஷஸ் டெஸ்ட் போட்டிக்குப் பின் எஸ்இஎன் ரேடியோவுக்குப் பேசிய ஆஸ்திரேலிய முன்னாள் வீரர் இயான் ஹீலி, "அவர் தான் தற்போதைக்கு உலகின் சிறந்த கீப்பர் என்று நினைக்கிறேன். அதுவும், இந்த டெஸ்ட் போட்டிக்கு முன்னதாகவே..." என்று கூறியிருந்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cx237lyzp0jo

மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2 months ago
மாகாணசபைத் தேர்தலை நடத்த அழுத்தம் கொடுக்குமாறு ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! http://www.samakalam.com/wp-content/uploads/2025/12/Capture-2-300x201.jpg இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது https://www.samakalam.com/மாகாணசபைத்-தேர்தலை-நடத்த/

வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட்

2 months ago
வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த பாகுபலி ரொக்கெட் Published By: Digital Desk 2 24 Dec, 2025 | 11:54 AM இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO) இன்று புதன்கிழமை (24) அமெரிக்காவின் ASD தொலை தொடர்பு நிறுவனத்திற்கு சொந்தமான புளூபேர்ட்-6 தகவல் தொடர்பு செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவியுள்ளது. இந்த செயற்கைக்கோளின் பிரதான நோக்கம், விண்வெளியிலிருந்து நேரடியாக ஸ்மார்ட் தொலைபேசிகளுக்கு அதிவேக இணைய சேவையை வழங்குவதாகும். இதன் மூலம் தொலைபேசி சிக்னல் கோபுரங்கள் இல்லாத அடர்ந்த காடுகள், மலைப்பகுதிகள் போன்ற இடங்களிலும் 5ஜி வேகத்தில் இணையம், வீடியோ அழைப்புகள் மற்றும் குறுஞ்செய்தி சேவைகளைப் பெற முடியும். புளூபேர்ட்-6 செயற்கைக்கோள் 6,100 கிலோகிராம் எடை கொண்டது. இந்த செயற்கைக்கோள் பாகுபலி ராக்கெட் LVM3-M6 மூலம் விண்ணில் ஏவப்பட்டது. விண்ணில் ஏவுதல் ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தின் 2வது ஏவுதளம் மூலம் காலை 8.55 மணிக்கு நடைபெற்றது. ISRO இதன்மூலம், 6,100 கிலோ எடையுள்ள செயற்கைக்கோளை வெற்றிகரமாக விண்ணில் ஏவிய முதல் இந்திய நிறுவனம் என்ற சாதனையை படைத்துள்ளது. இதற்கு முன்னர், இதே அளவிலான எடையுள்ள செயற்கைக்கோள்களை அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகள் பிரெஞ்சு கயானா எனும் இடத்திலிருந்து ஏவியுள்ளன. இவ்வளவு எடையுள்ள செயற்கைக்கோளை இஸ்ரோ முதன் முறையாக வெற்றிகரமாக ஏவியுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/234288

தையிட்டி அமைதி வழி போராட்டத்தில் பொலிஸாரின் சித்திரவதை தொடர்பில் சர்வதேச தூதுவராலயங்களுக்கு முறையிட்டுள்ளேன் - தவிசாளர் தியாகராஜா நிரோஷ்

2 months ago
தையிட்டியில் பொலிஸ் சித்திரவதை: நிரோஷ் வைத்தியசாலையில் அனுமதி Dec 24, 2025 - 08:44 AM தையிட்டியில் அமைக்கப்பட்ட சட்டவிரோத விகாரைக்கு எதிர்ப்புத் தெரிவித்து இடம்பெற்ற அகிம்சை வழிப் போராட்டத்தில் ஈடுபட்டபோது கைது செய்யப்பட்ட, வலிகாமம் கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் தியாகராஜா நிரோஷ், சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேற்குறிப்பிட்ட போராட்டம் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றபோது, வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் மற்றும் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்ட ஐவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு, பின்னர் மல்லாகம் நீதிமன்றால் பிணையில் விடுவிக்கப்பட்டனர். இவர்கள் கைது செய்யப்பட்டபோது, பொலிஸாரால் கடும் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டே கைது செய்யப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. தாக்குதல்களுக்கு உள்ளான வேலன் சுவாமிகள் ஏற்கனவே யாழ். போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஆண்கள் விடுதி இலக்கம் 09 இல் சிகிச்சை பெற்று வருகின்றார். இந்நிலையில், வலிகாமம் கிழக்கு பிரதேச சபைத் தவிசாளர் தியாகராஜா நிரோஷ் தற்போது 24 ஆம் விடுதியில் அனுமதிக்கப்பட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmjjfwlyt0328o29nk79qoqs1

'ஒன்டன் செட்ரோன்' எனப்படும் வாந்தி ஏற்படுவதை தூண்டுவதை தடுக்கும் மருந்து பாவனையிலிருந்து முற்றாக நீக்கம்

2 months ago
ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து விவகாரம் : விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழு நியமனம் எவரேனும் குற்றமழைத்திருந்தால் கடும் சட்ட நடவடிக்கை - அரசாங்கம் Published By: Vishnu 24 Dec, 2025 | 03:53 AM (எம்.மனோசித்ரா) ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. அதற்காக விசேட வைத்திய நிபுணர் தலைமையில் பிரத்தியேக குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவினால் சமர்ப்பிக்கப்படும் அறிக்கைக்கமைய இந்த விவகாரத்தில் எவரேனும் குற்றமிழைத்திருந்தால் அவர்களுக்கெதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் செவ்வாய்கிழமை (23) இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து தொடர்பில் தேசிய தொற்று நோய் வைத்தியசாலையில் இரு மரணங்கள் பதிவாகியுள்ளன. உயிரிழந்த இரு பெண்களும் காய்ச்சலுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மரணம் ஏற்படக் கூடியளவுக்கு நோய் அறிகுறிகள் காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே தான் இவர்களுக்கு வழங்கப்பட்ட ஒன்டன் செட்ரோம் தடுப்பு மருந்து வழங்கியதால் ஏற்பட்ட ஒவ்வாமையால் அவர்கள் உயிரிழந்தனரா என்ற சந்தேகம் ஏற்பட்டது. இந்த மரணங்கள் தொடர்பில் எமது கவலையைத் தெரிவித்துக் கொள்கின்றோம். இவை இடம்பெற்றிருக்கக் கூடாத மரணங்கள் ஆகும். அந்த அடிப்படையில் இவை குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இந்த மருந்தினால் தான் குறித்த இரு பெண்களும் உயிரிழந்துள்ளனரா என்பதை உறுதிப்படுத்திக் கொள்வதற்கான வெ வ்வேறு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இது குறித்து ஆராய்வதற்காக விசேட வைத்திய நிபுணர் தேதுரு டயஸ் தலைமையில் குழுவொன்றும் நியமிக்கப்பட்டுள்ளது. அந்த குழுவிடம் இரு வாரங்களுக்குள் அறிக்கை கோரப்பட்டுள்ளது. அந்த அறிக்கைக்கமைய இந்த மருந்தில் பிரச்சினை இருப்பது உறுதிப்படுத்தப்பட்டால் குறித்த மருந்து தயாரிப்பு நிறுவனம் மற்றும் அதன் தேசிய முகவர் நிறுவனத்துக்கு எதிராக நீதிமன்றத்தின் ஊடாக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அது மாத்திரமின்றி இவ்வாறு மருந்துகளை பாவிப்பதால் ஒவ்வாமை ஏற்படும் போது அவற்றை பாவனையிலிருந்து நீக்குவதில் ஏதேனும் கால தாமதம் ஏற்படுகின்றதா என்பது குறித்தும் ஆராயப்படுகிறது. டிசம்பர் 12ஆம் திகதி முற்பகல் 10 மணியளவில் கண்டி வைத்தியசாலையிலிருந்து கிடைக்கப் பெற்ற தகவல்களுக்கமைய இந்த மருந்தை பாவனையிலிருந்து நீக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டது. அதற்கமைய செயற்படாமை தொடர்பில் ஏதேனும் சம்பவங்கள் பதிவாகியுள்ளதா என்பது குறித்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. இந்த விடயத்தில் ஏதேனும் குற்றமிழைக்கப்பட்டிருந்தால், அதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்ற நிலைப்பாட்டில் எந்த தளர்வுகளும் இல்லை. இதனைக் கொண்டு அரசியல் இலாபமீட்ட முயற்சிப்பவர்களுக்கு அதற்கு இடமளிப்பதற்கும் அரசாங்கம் தயாராக இல்லை என்றார். https://www.virakesari.lk/article/234262

விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு

2 months ago
விமான விபத்தில் லிபிய இராணுவ தளபதி உயிரிழப்பு Published By: Digital Desk 3 24 Dec, 2025 | 09:16 AM துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க சென்ற லிபியா இராணுவ தளபதி முகம்மது அல் ஹதாத் விமான விபத்தில் உயிரிழந்துள்ளார். துருக்கி தலைநகர் அங்கராவில் இருந்து புறபட்ட தனியார் விமானம் புறப்பட்ட சிறிது நேரத்தில் விபத்தில் சிக்கியுள்ளது. துருக்கியில் நடைபெற்ற உயர் மட்ட பாதுகாப்பு குழு கூட்டத்தில் பங்கேற்க லிபியா இராணுவ தளபதி சென்ற நிலையில், பங்கேற்றுவிட்டு திரும்பும் போது விபத்து ஏற்பட்டுள்ளது. லிபியா பிரதமர் அப்துல் ஹமித் டெபிபா இந்த தகவலை உறுதி செய்துள்ளார். தனது பேஸ்புக்கில் லிபிய பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில், அங்காராவிற்கு உத்தியோகபூர்வ பயணம் மேற்கொண்டு விட்டு லிபியா திரும்பிய போது இராணுவ தளபதி உள்ளிட்டோர் பயணித்த விமானம் விபத்தில் சிக்கியுள்ளது. இந்த சோகமான விபத்தில், இராணுவ தளபதி உட்பட 04 பேர் உயிரிழந்தனர். லிபியாவிற்கு இது மிகப்பெரும் பேரிழப்பு” என்று பதிவிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/234271

மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்!

2 months ago
மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ ஜெய்சங்கரிடம் தமிழ்த்தலைவர்கள் வலியுறுத்தல்! இருநாள் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு நேற்று முன்தினம் (திங்கட்கிழமை) நாட்டை வந்தடைந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி எஸ்.ஜெய்சங்கருக்கும் தமிழ்த்தேசிய அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும் இடையிலான சந்திப்பு நேற்று கொழும்பிலுள்ள இந்திய இல்லத்தில் நடைபெற்றது. இச்சந்திப்பில் ‘தித்வா’ சூறாவளியினால் வட, கிழக்கு மாகாணங்களில் ஏற்பட்டிருக்கும் பாதிப்புக்கள் மற்றும் நிவாரண வழங்கல் செயற்பாடுகள் தொடர்பில் வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் கேட்டறிந்தார். அதற்குப் பதிலளித்த தமிழ்ப்பிரதிநிதிகள் மன்னார் மாவட்டத்தில் மாத்திரம் 3000 க்கும் மேற்பட்ட கால்நடைகள் அழிவடைந்திருப்பதாகவும், திருகோணமலையிலும் இதனையொத்த நிலை பதிவாகியிருப்பதாகவும் சுட்டிக்காட்டியிருந்தார். அதேபோன்று மாகாணசபைத்தேர்தல்களை நடாத்துவதாக வாக்குறுதி அளித்திருந்த அரசாங்கம், இன்னமும் அதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என ஜெய்சங்கரிடம் சுட்டிக்காட்டிய தமிழ்ப்பிரதிநிதிகள், மாகாணசபைத்தேர்தலைப் பழைய முறைமையில் நடாத்துவதற்கு ஏதுவாக இரா.சாணக்கியனால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட தனிநபர் பிரேரணை குறித்தும் எடுத்துரைத்தனர். அதுமாத்திரமன்றி மாகாணசபை முறைமையை நீக்கிவிட்டு, நிறைவேற்றதிகாரமுள்ள ஆளுநர் முறைமை உள்ளிட்ட வேறு முறைமைகளை அறிமுகப்படுத்துவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர். எனவே இப்பேரனர்த்த சூழ்நிலையைக் காரணமாகக் குறிப்பிட்டு, அரசாங்கம் மாகாணசபைத்தேர்தல்களைப் பிற்போடுவதற்கு இடமளிக்கக்கூடாது என வேண்டுகோள்விடுத்த அவர்கள், ‘மாகாணசபைகள் என்பது இந்தியா பெற்ற பிள்ளை. நாங்கள் அதனை வளர்ப்பவர்கள் மாத்திரமே. எனவே அதனைப் பாதுகாக்கவேண்டிய கடப்பாடு இந்தியாவுக்கு இருக்கின்றது. ஆகவே மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துமாறு அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகியுங்கள்’ என்று வலியுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1457101

இந்தியா இலங்கை மகளிர் சர்வதேச ரி20 தொடர்

2 months ago
இலங்கையுடனான 2ஆவது மகளிர் ரி20 போட்டியிலும் இந்தியா வெற்றி Published By: Vishnu 24 Dec, 2025 | 03:34 AM (நெவில் அன்தனி) இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் விசாகப்பட்டினத்தில் செவ்வாய்க்கிழமை (23) இரவு நடைபெற்ற இரண்டாவது மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியிலும் இந்தியா இலகுவாக 7 விக்கெட்களால் வெற்றியீட்டிது. ஸ்ரீ சரணியின் துல்லியமான பந்துவீச்சம் ஷபாலி வர்மாவின் ஆட்டம் இழக்காத அரைச் சதமும் இந்தியாவை இலகுவாக வெற்றி அடையச் செய்தன. இந்த வெற்றியுடன் 5 போட்டிகள் கொண்ட மகளிர் சர்வதேச ரி20 கிரிக்கெட் தொடரில் இந்தியா 2 - 0 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலையில் இருக்கிறது. இதுவரை இரண்டு அணிகளுக்கும் இடையில் நடைபெற்ற 28 மகளிர் சர்வதேச ரி20 போட்டிகளில் இந்தியா 22 - 5 என்ற ஆட்டங்கள் வித்தியாசத்தில் முன்னிலை வகிப்பதுடன் அதன் ஆதிக்கம் தொடர்ந்த வண்ணம் இருக்கிறது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாட அழைக்கப்பட்ட இலங்கை 20 ஓவர்களில் 9 விக்கெட்களை இழந்து 128 ஓட்டங்களைப் பெற்றது. முதலாவது போட்டியில் போன்றே இந்தப் போட்டியிலும் இலங்கை 130 ஓட்டங்களுக்குள் கட்டுப்படுத்தப்பட்டதுடன் மூவர் மாத்திரமே 20 ஓட்டங்களுக்கு மேல் பெற்றனர். முதலாவது போட்டியில் சிறப்பாக துடுப்பெடுத்தாடிய விஷ்மி குணரட்ன இன்றைய ஆட்டத்தில் முதல் ஓவரிலேயே ஓரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்து வெளியேறினார். இந்தப் போட்டியில் அணித் தலைவி சமரி அத்தபத்து அதிரடியாகத் துடுப்பெடுத்தாடிய போதிலும் அளவுக்கு அதிகமாக பந்தை சுழற்றி அடிக்க முயன்று 31 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். (38 - 2 விக்.) இதனைத் தொடர்ந்து ஹசினி பெரேரா, ஹர்ஷித்தா சமரவிக்ரம ஆகிய இருவரும் 3ஆவது விக்கெட்டில் இணைப்பாட்டத்தைக் கட்டியெழுப்ப முயற்சித்தனர். ஆனால், அவர்கள் இருவரும் 44 ஓட்டங்களைப் பகிர்ந்த நிலையில் ஹசினி பெரேரா 22 ஓட்டங்களுடன் களம் விட்டகன்றார். மொத்த எண்ணிக்கை 104 ஓட்டங்களாக இருந்தபோது ஹர்ஷித்தா சமரவிக்ரம 33 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். அவர்களைவிட கவிஷா டில்ஹாரி 14 ஓட்டங்களையும் கௌஷினி நுதியங்கனா 11 ஓட்டங்களையும் பெற்றனர். பந்தவீச்சில் ஸ்ரீ சரணி 23 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வைஷ்ணவி ஷர்மா 32 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்தியா 11.5 ஓவர்களில் 3 விக்கெட்களை இழந்து 129 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஸ்ம்ரித்தி மந்தனா, ஷபாலி வர்மா ஆகிய இருவரும் 19 பந்துகளில் 29 ஓட்டங்களைப் பகிர்ந்தனர். மந்தனா இந்தப் போட்டியிலும் பிரகாசிக்கத் தவறி 14 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். தொடர்ந்து ஷபாலி வர்மாவும் ஜெமிமா ரொட்றிகஸும் 2ஆவது விக்கெட்டில் 27 பந்துகளில் 58 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினர். ஜெமிமா ரொட்றிகஸ் 26 ஓட்டங்களுடன் ஆட்டம் இழந்தார். ஷபாலி வர்மாவும் ஹாமன்ப்ரீத் கோரும் 3ஆவது விக்கெட்டில் 41 ஓட்டங்களைப் பகிர்ந்து இலங்கையின் மொத்த எண்ணிக்கையை சமப்படுத்திய நிலையில் ஹாமன்ப்ரீத் கோர் 10 ஓட்டங்களுடன் வெளியேறினார். (128 -3 விக்.) அதன் பின்னர் வெற்றிக்கு தேவைப்பட்ட ஒரு ஓட்டத்தை ரிச்சா கோஷ் பெற்றுக்கொடுத்தார். ஷபாலி வர்மா 34 பந்துகளில் 11 பவுண்டறிகள், ஒரு சிக்ஸ் உட்பட 69 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார். பந்துவீச்சில் கவிஷா டில்ஹாரி 15 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் மல்கி மதாரா 22 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் காவியா காவிந்தி 32 ஓட்டங்களுக்கு ஒரு விக்கெட்டையும் கைப்பற்றினர். ஆட்டநாயகி: ஷபாலி வர்மா. இரண்டு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது போட்டி திருவனந்தபுரத்தில் வெள்ளிக்கிழமை (26) நடைபெறவுள்ளது. https://www.virakesari.lk/article/234255

ராமநாதன் அர்ச்சுனாவுக்கு பிடியாணை!

2 months ago
பொலிஸ் நிலையத்தில் சரணடைந்தார் அர்ச்சுனா எம்.பி! நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா கோட்டை பொலிஸில் சரணடைந்துள்ளார். கடமையில் இருந்த பொலிஸ் அதிகாரி ஒருவருக்கு அழுத்தம் கொடுத்த சம்பவம் தொடர்பான வழக்கில், நீதிமன்றத்தில் முன்னிலையாகத் தவறியமைக்காக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்றையதினம்(24.12.2025) சரணடைந்துள்ளார். பொலிஸில் சரண் குறித்த வழக்கு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நேற்று 23ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அர்ச்சுனா எம்.பி. நீதிமன்றத்தில் முன்னிலையாகவில்லை. இதனையடுத்து அவருக்கு எதிராக நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்திருந்தது. நீதிமன்றினால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையிலேயே அவர் தற்போது சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. https://athavannews.com/2025/1457164

பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்!

2 months ago
பனியால் சூழப்பட்ட சவுதி அரேபியாவின் பாலைவன நிலப்பரப்புகள்! கடுமையான வெப்பம் மற்றும் பரந்த பாலைவன நிலப்பரப்புகளுக்கு பெயர் பெற்ற நாடான சவுதி அரேபியா அசாதாரண குளிர்கால அத்தியாயத்தை அனுபவித்து வருகின்றது. பனிப்பொழிவு, கனமழை மற்றும் கடுமையாக வீழ்ச்சியடைந்த வெப்பநிலை நாட்டின் பெரும்பகுதிகளை தற்சமயம் ஆக்கிரமித்து உள்ளது. இது குடியிருப்பாளர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது வேளையில் பாதுகாப்பு ஆலோசனைகளைத் தூண்டுவதற்கும் வழிவகுத்தது. இந்த அசாதாரண நிகழ்வு, காலநிலை மாற்றத்தைக் கையாளத் தயாராக இல்லாத பகுதிகளில் அசாதாரண வானிலையை எவ்வாறு ஏற்படுத்துகிறது என்பதை மீண்டும் ஒருமுறை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. பனிப்பொழிவானது சவுதி அரேபியாவின் தபூக் மாகாணத்தில் உள்ள மலைத்தொடர்களின் தோற்றத்தை வியத்தகு முறையில் மாற்றியுள்ளது. குறிப்பாக ஜெபல் அல்-லாஸில் உள்ள ட்ரோஜெனா உட்பட, சுமார் 2,600 மீட்டர் உயரம் கொண்ட மலைப்பகுதிகள் பனியால் மூடப்பட்டிருந்தன. ஹெயில் நகரைச் சுற்றியுள்ள பகுதிகள் உட்பட ஹெயில் பிராந்தியத்தின் சில பகுதிகளிலும் பனிப்பொழிவு ஏற்பட்டது – இது மத்திய கிழக்கு நாட்டில் அரிதான நிகழ்வு. அதிகாலை நேரங்களில் சில இடங்களில் வெப்பநிலை 0 டிகிரி செல்சியஸுக்குக் கீழே குறைந்தது, இதனால் உயர்ந்த நிலங்களில் பனி குவிவதற்கு சாதகமான சூழ்நிலைகள் உருவாக்கப்பட்டன. குளிர் காற்றுடன் பல பகுதிகளில் பரவலான மழைப் பொழிவு பதிவானது. பிர் பின் ஹெர்மாஸ், அல்-அய்னா, அம்மார், அல்உலா கவர்னரேட், ஷக்ரா மற்றும் அதன் புறநகர்ப் பகுதிகளில் லேசானது முதல் மிதமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. அதே நேரத்தில் ரியாத், காசிம் மற்றும் கிழக்குப் பகுதியின் சில பகுதிகளில் மிதமானது முதல் கனமழை வரை பெய்தது. தேசிய வானிலை ஆய்வு நிலையத்தின் தகவலின்படி, ரியாத்தின் வடக்கே உள்ள அல்-மஜ்மா மற்றும் அல்-காட் ஆகிய இடங்களிலும் பனிப்பொழிவு காணப்பட்டது – அங்கு திறந்தவெளி பகுதிகளிலும் உயரமான நிலப்பரப்பிலும் பனி படிந்துள்ளது. இதேவேளை குடியிருப்பாளர்கள் அவதானமாக வாகனம் செலுத்துமாறும் வெள்ளம் ஏற்படக்கூடிய தாழ்வான பகுதிளில் வசிப்பதை மற்றும் செல்வதை தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இது சவுதி அரேபியாவின் காலநிலை வரலாற்றில் ஒரு அரிய மற்றும் மறக்க முடியாத தருணத்தைக் குறிக்கிறது. இதேவேளை, ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (UAE) எதிர்பாராத குளிர்கால மழை, தெற்காசியாவில் வரலாறு காணாத வெப்ப அலைகள், பொதுவாக வறண்ட மத்திய கிழக்குப் பகுதிகளில் ஏற்பட்ட திடீர் வெள்ளம் மற்றும் ஐரோப்பா மற்றும் வட ஆபிரிக்காவின் சில பகுதிகளில் ஏற்பட்ட அசாதாரண பனிப்பொழிவு நிகழ்வுகள், காலநிலை மாற்றத்தால் உலகம் முழுவதும் வானிலை எவ்வாறு அடையாளம் காண முடியாததாக மாறி வருகிறது என்பதைக் காட்டுகின்றன. https://athavannews.com/2025/1457130

வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள்

2 months ago
வாட்ஸ்அப் பயன்படுத்தி புதுவித மோசடி - எப்படி நடக்கிறது? தவிர்ப்பதற்கான 3 வழிகள் பட மூலாதாரம்,Getty Images/EPA கட்டுரை தகவல் அமரேந்திர யார்லகடா பிபிசி செய்தியாளர் 24 டிசம்பர் 2025, 02:55 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் நீங்கள் வாட்ஸ்அப் பயன்படுத்துகிறீர்களா? அப்படியானால் கண்டிப்பாக இதைப் பற்றித் தெரிந்துகொள்ள வேண்டும். ஏனென்றால், சைபர் குற்றவாளிகள் வாட்ஸ்அப் மூலம் ஒரு புதிய வகை மோசடியைச் செய்து வருவதாகத் தெலங்கானா காவல்துறை தெரிவித்துள்ளது. இந்தப் புதிய மோசடி 'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' (WhatsApp Ghost Pairing) என்று அழைக்கப்படுகிறது. இந்நிலையில், மத்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகமும் (MeitY) இது தொடர்பாக நாட்டு மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. வாட்ஸ்அப் மூலம் நடக்கும் இந்த மோசடியில் சிக்கி விடாமமல் மக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் மற்றும் தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஆகியோர் அறிவுறுத்தியுள்ளனர். X பதிவை கடந்து செல்ல எச்சரிக்கை: வெளியார் தளங்களில் உள்ள பதிவுகளுக்கு பிபிசி பொறுப்பேற்காது X பதிவின் முடிவு 'வாட்ஸ்அப் கோஸ்ட் பேரிங்' மோசடி எப்படி நடக்கிறது? சைபர் குற்றங்கள் குறித்து மக்களிடையே விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், குற்றவாளிகளும் மோசடி செய்ய புதிய வழிமுறைகளைக் கையாண்டு வருகின்றனர். கடந்த காலங்களில், தொலைபேசி அழைப்புகள் மூலமாகவோ அல்லது குறுஞ்செய்திகள் அனுப்பி மால்வேர்களை புகுத்தியோ மோசடிகள் செய்யப்பட்டன. தற்போது வாட்ஸ்அப் 'பேரிங்' மூலம் மோசடி செய்யப்படுவதை காவல்துறை கண்டறிந்துள்ளது. "ஹேய்...என் புகைப்படத்தைப் பார்த்தாயா?" என்று ஒரு லிங்க் அனுப்புவதன் மூலம் இந்த மோசடி தொடங்குகிறது என்று ஹைதராபாத் மாநகர காவல் ஆணையர் வி.சி. சஜ்ஜனார் தெரிவித்தார். "இந்த லிங்க் உங்களுக்குத் தெரியாத நபரிடமிருந்து மட்டுமல்ல, உங்களுக்குத் தெரிந்தவர்களிடமிருந்து வந்தாலும், தவறுதலாகக் கூட அதைக் கிளிக் செய்ய வேண்டாம்" என்று அவர் அறிவுறுத்தினார். இதுபோன்ற லிங்க்கை கிளிக் செய்தால், போலியான வாட்ஸ்அப் வெப் பக்கம் திறக்கப்படும் என்றும், எந்தவிதமான ஒடிபி அல்லது ஸ்கேனிங்கும் இல்லாமலே உங்கள் வாட்ஸ்அப் கணக்கு ஹேக்கரின் சாதனத்துடன் (கணினி, லேப்டாப் அல்லது மொபைல்) இணைக்கப்பட்டுவிடும் என்றும் சஜ்ஜனார் குறிப்பிட்டார். அந்த சமயத்தில், பயனர்கள் தங்கள் சொந்தக் கணக்கைப் பயன்படுத்த முடியாதவாறு லாக் செய்யப்படுவார்கள் என்றும் அவர் விளக்கினார். ஒருமுறை அந்த லிங்கில் இணைந்தவுடன் என்ன நடக்கும்? இதுகுறித்து தெலங்கானா சைபர் பாதுகாப்புப் பிரிவு இயக்குநர் ஷிகா கோயல் கூறுகையில், சைபர் குற்றவாளிகள் பயனர்களின் தனிப்பட்ட வாட்ஸ்அப் கணக்கை தங்கள் சாதனங்களுடன் இணைத்த பிறகு, தகவல்களைத் திருடுகின்றனர் என்று தெரிவித்தார். "வங்கி கணக்கு விபரங்கள், தனிப்பட்ட உரையாடல்கள், புகைப்படங்கள், வீடியோக்கள் போன்ற விபரங்கள் அனைத்தும் சைபர் குற்றவாளிகளின் கைகளில் சிக்கிக்கொள்கின்றன. அவர்கள் அந்தப் பயனரின் பெயரைப் பயன்படுத்தி மற்றவர்களுக்குச் செய்திகளை அனுப்பி மோசடியில் ஈடுபடுகின்றனர்" என்று அவர் விளக்கினார். பட மூலாதாரம்,UGC 'இந்திய மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம்' என்ன கூறியது? ஆகாசவாணி நியூஸ் வெளியிட்ட தகவலின்படி, 'கோஸ்ட் பேரிங்' தொடர்பாக பொதுமக்களுக்கு மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) எச்சரிக்கைகள் மற்றும் வழிகாட்டுதல்களை வெளியிட்டுள்ளது. "வாட்ஸ்அப்பில் உள்ள டிவைஸ் லிங்கிங் வசதியை பயன்படுத்தி குற்றவாளிகள் வாட்ஸ்அப் கணக்குகளை ஹேக் செய்து வருகின்றனர். பேரிங் கோட் உதவியுடன், எந்த கூடுதல் அங்கீகாரமும் இல்லாமல் வாட்ஸ்அப் கணக்குகள் ஹேக் செய்யப்படுகின்றன" என்று மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம்,UGC மோசடியில் சிக்காமல் தவிர்க்க என்ன செய்ய வேண்டும்? மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் (MEIT) சந்தேகத்திற்கிடமான இணைப்புகளை (links) எப்போதும் கிளிக் செய்யக் கூடாது என்று எச்சரித்துள்ளது. இதையே ஷிகா கோயல் பிபிசியிடமும் தெரிவித்துள்ளார். அவர் வழங்கியுள்ள முக்கிய 3 அறிவுரைகள் பின்வருமாறு: வாட்ஸ்அப் செட்டிங்ஸ் பகுதியில் உள்ள "இணைக்கப்பட்ட சாதனங்கள்" (Linked Devices) என்ற ஆப்ஷனை அடிக்கடி சரிபார்க்க வேண்டும். அறிமுகமில்லாத அல்லது தெரியாத சாதனங்கள் இணைக்கப்பட்டிருப்பதாக இருந்தால், உடனடியாக லாக் அவுட் (Log out) செய்ய வேண்டும். வாட்ஸ்அப் செட்டிங்ஸ் அக்கவுண்டுக்குச் சென்று "இரண்டு அடுக்கு சரிபார்ப்பு" (Two Step Verification) வசதியை கட்டாயமாக செயல்படுத்த வேண்டும். பட மூலாதாரம்,UGC உங்கள் கணக்கு ஹேக் செய்யப்பட்டால் என்ன செய்ய வேண்டும்? எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்தாலும், ஹேக்கிங் சம்பவங்கள் நடைபெற வாய்ப்புள்ளது என்று போலீசார் எச்சரிக்கின்றனர். வாட்ஸ்அப் அல்லது இணைய பிரௌசர் (browser) ஹேக் செய்யப்பட்டதாக சந்தேகம் ஏற்பட்டால், அதை உடனடியாக பயன்படுத்துவதை நிறுத்த வேண்டும் என்று ஷிகா கோயல் கூறுகிறார். ஹேக்கிங் நடந்த போது தோன்றக் கூடிய செய்திகள், லிங்குகள், பாப்-அப் அறிவிப்புகள் ஆகிய அனைத்தையும் ஸ்கிரீன்‌ஷாட் எடுத்து பாதுகாத்து வைக்க வேண்டும். பரிவர்த்தனை ஐடிகள் (Transaction ID), யுடிஆர் எண்கள்(UTR), அழைப்பு பதிவுகள் (call logs) போன்ற விபரங்களை சேமித்து வைத்திருக்க வேண்டும். மின்னஞ்சல், வங்கி, சமூக வலைதள கணக்குகளின் கடவுச்சொற்களை உடனடியாக மாற்ற வேண்டும். வங்கிக் கணக்கு அல்லது கட்டண செயலியில் பணம் காணாமல் போயிருந்தால், உடனே சம்பந்தப்பட்ட வங்கி அல்லது செயலி நிறுவனத்தை தொடர்புகொண்டு புகார் அளிக்க வேண்டும். கூகுள் குரோம் மற்றும் பிற செயலிகளை அதிகாரப்பூர்வமான புதிய பதிப்புகளுக்கு (latest versions) உடனடியாக புதுப்பிக்க வேண்டும். எப்படி புகார் செய்வது? எந்தச் சூழ்நிலையிலும் ஓடிபி (OTP), பிஐஎன் (PIN), சிவிவி (CVV), வாட்ஸ்அப் குறியீடுகள் (codes) போன்ற தனிப்பட்ட தகவல்களை யாருடனும் பகிரக்கூடாது என்று தெலங்கானா காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளனர். சைபர் குற்றங்களால் பாதிக்கப்பட்டிருந்தாலோ அல்லது சைபர் குற்றங்கள் தொடர்பான ஏதேனும் தகவல் இருந்தாலோ, உடனடியாக 1930 என்ற உதவி எண்ணில் அல்லது cybercrime.gov.in என்ற இணையதளத்தில் புகார் அளிக்க வேண்டும் என்று ஷிகா கோயல் அறிவுறுத்தியுள்ளார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c93n53r0nglo

கொக்கிளாயில் குடியேறியுள்ள சிங்களவர்களுக்கு கொக்குத்தொடுவாயில் காணி வழங்க இடமளிக்க முடியாது! ; ரவிகரன் கடும் எதிர்ப்பு

2 months ago
புலம்பெயர்ந்தோர் சிலர், மலையக மக்களுக்கு காணி, வீடு வழங்க இருப்பதாக சிலர் கூறிக்கொள்கின்றனர். அவர்களை காணி வங்கி என்கிற அமைப்பின் கீழ் பதியுமாறும் அவ்வாறான காணிகளை காணி தேவையானவர்களுக்கு அளிக்கப்படுமாம் அதிலும் பாதிக்கப்பட்டவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படுமாம் என்று கூறிக்கொள்கின்றனர். அப்படியானால் சிங்களவரும் விண்ணப்பிக்கலாம் அல்லவா? அப்படி விண்ணப்பித்து அவர்களுக்கு மறுக்கப்பட்டால் அதன் விளைவு என்னவாக அமையும்? உண்மையிலேயே வடக்கிலேயே பலர் காணியின்றி, வீடின்றி, குடிசைகளிலும், ஓட்டை வீடு, ஒழுகும் கூரை, பெண் தலைமைத்துவம் கொண்ட குடும்பங்கள் வாழ்கின்றன, காணி இருந்தும் வீடு கட்ட இயலாத நிலைமையிலும் வாழ்கிறார்கள். அவர்களை கவனிக்க யாரும் நினைப்பதில்லை.

தையிட்டியில் பதற்றம்: வேலன் சுவாமிகள் உள்ளிட்டோர் கைது

2 months ago
மிக பிந்திய செய்தி ஒன்று அனுர தொய் பபா… அவருக்கு மூக்கை பிடித்தால் வாயை திறக்கத்யெரியாது…. பிகு காவடியில்தான் எத்தனை எத்தனை வகைகளடா சாமி😂
Checked
Tue, 02/24/2026 - 19:36
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed