உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி!
உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா பச்சைக் கொடி!
உக்ரேனுடனான அமைதிப் பேச்சு வார்த்தைக்கு ரஷ்யா சம்மதம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
உக்ரேன் மீது அண்மையில் ரஷ்யா நடத்திய தாக்குதலுக்கு அமெரிக்க ஜனாதிபதி கண்டனம் தெரிவித்திருந்த நிலையிலேயே உக்ரேனுடனான அமைதிப் பேச்சுவார்த்தைக்கு ரஷ்யா இணக்கம் தெரிவித்துள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
கடந்த 25 ஆம் திகதி உக்ரேன் மீது ரஷ்யா நடத்திய வான் தாக்குதலில் 12 பேர் கொல்லப்பட்டனர். குறித்த சம்பவம் உலகளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்த நிலையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ரஷ்ய ஜனாதிபதி புட்டின் மீது கடும் கண்டனம் தெரிவித்திருந்தார்.
குறிப்பாக புடினின் செயற்பாடுகள் கவலை அளிக்கின்றன எனவும், புடினுக்கும் தனக்கு நல்ல உறவு காணப்பட்டது எனவும், ஆனால் அவருக்கு தற்போது ஏதோ நடந்துள்ளது எனவும் அவர் முற்றிலும் பைத்தியமாகிவிட்டார் எனவும்” ட்ரம்ப் விமர்சித்துள்ளார்.
அத்துடன் புடின் தேவையில்லாமல் பலரைக் கொன்று வருகின்றார் எனவும், எந்த காரணமும் இல்லாமல் உக்ரேனில் உள்ள பல பகுதிகள் தரைமட்டமாக்கப்பட்டுள்ளன” எனவும் ட்ரம்ப் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில் ட்ரம்பின் விமர்சனத்தைத் தொடர்ந்து புடினின் முக்கிய ஆலோசகர் மற்றும் பேச்சுவார்த்தை குழுத் தலைவர் வ்லாடிமிர் மெடின்ஸ்கி(Vladimir Medinsky), உக்ரைன் பாதுகாப்புத் துறை அமைச்சர் ரஸ்டென் உமெரோவுடன் Rusten Umerov தொலைபேசி மூலம் கலந்துரையாடியுள்ளார் எனவும், இதன்போது இரு நாடுகளுக்கும் இடையில் மீண்டும் அமைதிப் பேச்சுவார்த்தை நடத்துவதற்கு இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அந்தவகையில் எதிர்வரும் திங்கட் கிழமை துருக்கியின் இஸ்தான்புல் நகரில் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் அமைதிப்பேச்சு வார்த்தை நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.