2 months 3 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கிறிஸ்டின் ரோ பதவி, 20 ஜூன் 2025, 02:05 GMT எச்சரிக்கை: இந்தக் கட்டுரையில் பாலியல் ரீதியான வெளிப்படையான வார்த்தைகள் மற்றும் கருப்பொருள்கள் உள்ளன. சிலருக்கு மனித உடல் தொடர்பான விஷயங்கள் மீது ஒவ்வாமை இருக்கும். ஆனால் இது எவ்வாறு செயல்படுகிறது என்ற மர்மம் இப்போதுதான் வெளிப்படத் தொடங்குகிறது. ஆணுறைகள் தான் தனது உயிரைக் காப்பாற்றியதாக மௌரா நம்புகிறார். அமெரிக்காவின் ஓஹியோவில் வசிக்கும் மௌராவுக்கு தற்போது 43 வயதாகிறது. இந்தப் பிரச்னை முதலில் தனது இருபதுகளில் தொடங்கியது என்றும், அது மெதுவாகத் தன்னைத் தாக்கியது என்றும் கூறுகிறார். "(பாதுகாப்பற்ற) பாலுறவுக்குப் பிறகு என் பிறப்புறுப்பில் எரிச்சல் ஏற்பட்டதை நான் கவனித்தேன்," என்று அவர் நினைவு கூர்ந்தார். மௌரா (தனியுரிமையைப் பாதுகாக்க அவரது பெயர் மாற்றப்பட்டுள்ளது) தனது துணையிடம் இதைப் பற்றிச் சொல்ல விரும்பவில்லை. எனவே, அவர் வெளியேறும் வரை காத்திருந்து, பின்னர் தன்னை நன்கு சுத்தப்படுத்திக் கொள்வார். சோப்பு முதல் லூப்ரிகன்ட் (Lubricant) வரை தான் பயன்படுத்தும் தனிப்பட்ட பராமரிப்புப் பொருட்களை மாற்ற முயன்றார். ஆனால் பிரச்னை தீவிரமடைந்தது, வீக்கம் மற்றும் சிவந்து போகுதல் என அது தொடர்ந்தது. குறிப்பாக, விந்துவுடனான தொடர்புக்கு பிறகுதான் இதெல்லாம் நடந்தது. விந்து ஒவ்வாமை என்றால் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கடைசியில் மௌரா அந்தத் துணையிடமிருந்து பிரிந்து, ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் உறுதியாக இருக்கும் இருக்கும் ஒருவரை விரும்பத் தொடங்கினார். "சில நாட்கள் எந்தப் பிரச்னையும் இல்லாமல் இருந்தது. ஒரு இரவில் உடலுறவுக்குப் பிறகு நாங்கள் படுக்கையில் படுத்திருந்தபோது, என் நாக்கு திடீரென்று வீங்கத் தொடங்கியது," என்று மௌரா நினைவு கூர்ந்தார். "என்ன நடக்கிறது என்பதைக் கண்ட என் துணை, 'உனக்கு மூச்சுத் திணறுகிறது!' என்று கத்தினார். என் இன்ஹேலரை தேடி எடுத்து, என் வாயில் திணித்து, அதை இயக்கினார். அதிர்ஷ்டவசமாக, மருந்து என் நுரையீரலுக்குள் செல்லும் அளவுக்கு நான் சுவாசித்துக் கொண்டிருந்தேன்." ஆஸ்துமா மற்றும் பல ஒவ்வாமைகளைக் கொண்ட மௌரா, ஆணுறையில் கசிவு ஏற்பட்டதாக நம்புகிறார். அவரும் அவருடைய நீண்டகால துணைவரும் இப்போது ஆணுறை பயன்பாட்டில் இன்னும் கவனமாக இருக்கிறார்கள். இத்தகைய அனுபவத்தை எதிர்கொள்ளும்வரை, விந்து ஒவ்வாமை ஏற்பட வாய்ப்புள்ளது என்பது தனக்குத் தெரியாது என்று அவர் கூறுகிறார். மிகவும் அரிதானவை என்றாலும், சிலருக்கு மற்றவர்களின் உடல்களுடன் தொடர்பு ஏற்படும்போது, கடுமையான நோயெதிர்ப்பு எதிர்வினைகளால் பாதிக்கப்படுகின்றனர். பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படும் இத்தகைய நிலைமைகள் ஒருவரின் ஆரோக்கியத்தை மட்டுமல்ல, வேலை, உறவுகள் மற்றும் பொதுவாக ஒருவர் உலகில் எவ்வாறு வாழ்கிறார் என்பதையும் பாதிக்கலாம். ஆனால் இந்த எதிர்வினைகள் எவ்வாறு வெளிப்படுகின்றன, அவற்றுக்கு சரியான காரணம் என்ன என்பது பெரும்பாலும் மர்மமாகவே உள்ளது. அவை உண்மையான ஒவ்வாமைகளா, அல்லது வேறு ஏதாவது? பட மூலாதாரம்,GETTY IMAGES இந்த விசித்திரமான எதிர்வினைகள், மனித நோயெதிர்ப்பு மண்டலத்தின் தனித்தன்மைகள் மற்றும் நமது உடலின் வேதியியல் பற்றிய நுண்ணறிவுகளை விஞ்ஞானிகளுக்கு வழங்குகின்றன. பெரும்பாலும், மற்றொரு நபரின் உடல் தொடர்பான உணர்திறன் (Sensitivity) என்பது, அந்த உடலில் இருக்கக்கூடிய வெளிப்புறப் பொருட்களுடன் தொடர்புடையது. உதாரணமாக, அது டியோடரன்ட்கள் மற்றும் ஆஃப்டர் ஷேவ் கிரீம்கள் உள்ளிட்ட செயற்கை வாசனை திரவியங்களாக இருக்கலாம். 150க்கும் மேற்பட்ட வாசனை திரவியங்கள் இத்தகைய ஒவ்வாமையுடன் தொடர்புடையவை என கண்டறியப்பட்டுள்ளது. காரணம் என்பது எப்போதும் தெளிவாக இருக்காது. ஒரு அமெரிக்கப் பெண், தனது கணவரின் வாசனை திரவியத்தால் கடுமையான ஒவ்வாமை எதிர்விளைவுகளுக்கு ஆளானார். அவருக்கு மாஸ்ட் செல் ஆக்டிவேஷன் சிண்ட்ரோம் என்ற நோய் ஏற்பட்டது. இந்த நிலையில், தொற்றுநோயை எதிர்த்துப் போராடும் செல்கள் செயலிழக்கத் தொடங்குகின்றன. ஆஸ்திரியாவில் உள்ள கெப்லர் பல்கலைக்கழக மருத்துவமனையின் மருத்துவர் சபீன் ஆல்ட்ரிச்டர் கூறுகையில், "இந்த இணைப்பு நிரூபிக்கப்படவில்லை என்றாலும், மாஸ்ட் செல் கோளாறுகள் உள்ள சில நோயாளிகள், மற்றவர்களின் இயற்கையான உடல் துர்நாற்றம் அல்லது தோலால் வெளிப்படும் ரசாயனங்களுக்கு உணர்திறன் கொண்டிருக்கலாம் என்று சந்தேகிக்கின்றனர்." என்கிறார். உடல் துர்நாற்றத்திற்கு பங்களிக்கும் பல சேர்மங்களை தோல் வெளியிடுகிறது. இந்த தோல் வாயுக்களில் டோலுயீன் போன்ற ரசாயனங்கள் அடங்கும். இவை கச்சா எண்ணெயில் காணப்படுகிறது. மேலும், வண்ணப்பூச்சுகள் (Paint), பிளாஸ்டிக் உள்ளிட்ட பொருட்களை தயாரிக்கப் பயன்படுகிறது. மக்கள் தெரிந்தோ தெரியாமலோ டோலுயீனை நுகரலாம், உதாரணத்திற்கு, புகையிலை புகையில் உள்ள ஏராளமான ரசாயனங்களில் டோலுயீனும் ஒன்றாகும். 'பீப்பிள் அலர்ஜி டு மீ' பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,மனித தோல் தொடர்ந்து தூசித் துகள்களை உதிர்த்து வாயுக்களை வெளியிடுகிறது. பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM- People Allergic To Me) எனப்படும் மர்மமான நோயால் பாதிக்கப்பட்டவர்கள், மனித உடல்கள் காரணமாக ஏற்படும் ஒவ்வாமை குறித்து சில கூடுதல் நுண்ணறிவுகளை வழங்க முடியும். சமீபத்திய ஆய்வுகள், சிலரின் சரும வாயுக்கள் அவர்கள் அருகில் உள்ளவர்களுக்கு ஒவ்வாமை போன்ற எதிர்வினைகளைத் தூண்டுவதாகக் கூறுகின்றன. அத்தகைய நிகழ்வு பீப்பிள் அலர்ஜி டு மீ (PATM) என்று அழைக்கப்படுகிறது. ஜப்பானில் உள்ள டோக்காய் பல்கலைக்கழகத்தின் வேதியியல் பேராசிரியரான யோஷிகா செகின் மற்றும் அவரது குழுவினர், 2023ஆம் ஆண்டில் PATM அறிகுறிகளைப் பற்றி புகார் அளித்தவர்களால் வெளியிடப்பட்ட சரும வாயுக்களை ஆராய்ந்தனர். குழு ஆய்வு செய்த 75 சரும வாயுக்களில், குறிப்பாக டோலுயீன் இருக்க அதிக வாய்ப்புள்ளது. PATM உள்ளவர்கள், இந்த நிலை இல்லாதவர்களை விட சராசரியாக 39 மடங்கு அதிகமாக இந்த வேதிப்பொருளை வெளியேற்றினர். "சுவாசத்தின் போது டோலுயீன் காற்றின் வழியாக உள்ளிழுக்கப்படுகிறது. ஒரு தீங்கு விளைவிக்கும் சேர்மமாக, இது பொதுவாக கல்லீரலால் வளர்சிதை மாற்றமடைந்து சிறுநீரில் வெளியேற்றப்படுகிறது," என்று செகின் விளக்குகிறார். "இருப்பினும், PATM நோயாளிகளுக்கு டோலுயீனை உடைக்கும் திறன் குறைந்து, ரத்த ஓட்டத்தில் அது குவிந்து, பின்னர் தோல் வழியாக வெளியிடப்படுகிறது," என்று அவர் கூறுகிறார். PATM என்ற கருத்தாக்கமே இன்னும் பரவலாக அங்கீகரிக்கப்படவில்லை என்றும், அதற்கான நோயறிதல் அளவுகோல்கள் எதுவும் இல்லை என்றும் செக்கின் குறிப்பிடுகிறார். மறுபுறம், வியர்வை ஒவ்வாமை என்பது பொதுவாக மற்றவர்களின் வியர்வையை விட ஒருவரின் சொந்த வியர்வைக்கான உணர்திறனுடன் தொடர்புடையது. முடியைப் பொறுத்தவரை, மனித முடி ஒவ்வாமை இருப்பதாக ஆவணப்படுத்தப்பட்ட சில சந்தர்ப்பங்களில், எதிர்வினைக்கான காரணம் முடியில் உள்ள ஒவ்வாமை அல்ல, மாறாக வெளிப்புறப் பொருளில் உள்ள ஒவ்வாமையாக இருந்தது. எடுத்துக்காட்டாக ஒரு பூனையை வளர்ப்பவரின் முடியில் நுழையும் பூனை புரதம் (Cat protein) அல்லது கெரட்டின் முடி சிகிச்சையில் மூலம் வரும் ஃபார்மால்டிஹைட் வகைகள். உடல் திரவங்களிலிருந்து ஏற்படும் பாதிப்பு பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,முத்தமிடுவதால் உமிழ்நீர் வழியாக ஒவ்வாமை பரவும். உடல் திரவங்களில் உள்ள குறிப்பிட்ட ஒவ்வாமையூக்கிகளால் (Allergen) ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படலாம். பிரிட்டனில் ஒரு பெண்ணுக்கு பிரேசில் கொட்டைகள் (Brazil nuts- மனிதர்கள் உண்ணக்கூடிய ஒரு விதை அல்லது பாதாம் போன்ற ஒரு கொட்டை) தொடர்பான ஒவ்வாமை இருந்தது. அந்தப் பெண்ணின் துணைவர், அவர்களது உடலுறவுக்கு சில மணிநேரங்களுக்கு முன்பு பிரேசில் கொட்டைகளை எடுத்துக்கொண்டார். இருப்பினும் இடைப்பட்ட நேரத்தில், அவர் தனது பற்கள், நகங்கள் மற்றும் கைகளை நன்றாக சுத்தம் செய்திருந்தார். ஆனால், அவருடனான உடலுறவுக்குப் பின், அந்தப் பெண்ணுக்கு தோல் அரிப்பு மற்றும் மூச்சுத் திணறல் ஏற்பட்டது. பொதுவாக முத்தமிடும்போது இத்தகைய ஒவ்வாமை ஏற்பட்டால், அதற்கு பாதாம், வேர்க்கடலை போன்ற கொட்டைகள் காரணமென கூறப்பட்டாலும், பழங்கள், காய்கறிகள், கடல் உணவுகள் மற்றும் பால் ஆகியவற்றை உட்கொண்ட பிறகு, உமிழ்நீர் மூலமாகவும் ஒவ்வாமை எதிர்வினைகள் தூண்டப்படுகிறது. ஆன்டிபயாடிக் ஒவ்வாமை உள்ள பெண்கள், அந்த மருந்துகளை உட்கொண்டவர்களுடன் உடலுறவு மற்றும் (சாத்தியமான) வாய்வழி உறவு கொண்டபிறகு, பாதகமான எதிர்விளைவுகளை அனுபவித்துள்ளனர். ஆனால் இந்த வெளிப்புற ஒவ்வாமைகளுக்கு அப்பால், சில உடல் திரவங்களுக்குள் இருக்கும் புரதங்களும் ஒரு எதிர்வினையைத் தூண்டும். ஒரு உதாரணம் விந்து, சில மருத்துவர்கள் இதுகுறித்து அறிந்திருந்தாலும், இந்த விஷயத்தில் இன்னும் அதிக தகவல்கள் தேவைப்படுகிறது. விந்து ஒவ்வாமையின் அறிகுறிகள் (செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி என்றும் அழைக்கப்படுகின்றது) என்பது, அதீத தோல் அரிப்பு முதல் ஆபத்தான ஒவ்வாமை எதிர்வினையான அனாபிலாக்ஸிஸ் (Anaphylaxis) வரை இருக்கலாம். இது குறிப்பாக 20 மற்றும் 30 வயதுடையவர்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது, ஆனால் ஒட்டுமொத்தமாக 100க்கும் குறைவான ஆவணப்படுத்தப்பட்ட வழக்குகளே உள்ளன என்று 2024இல் வெளியான ஒரு ஆய்வறிக்கை கூறுகிறது. செமினல் பிளாஸ்மா- விந்தணுவின் பெரும்பகுதியை உருவாக்கும் திரவம் இது. இதில் ஒவ்வாமை என்பது விந்தணுவை விட, அதனுள் இருக்கும் ஒரு புரதத்தின் காரணமாக ஏற்படுகிறது. 'கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னை' பட மூலாதாரம்,GETTY IMAGES அமெரிக்காவில் உள்ள சின்சினாட்டி பல்கலைக்கழக மருத்துவக் கல்லூரியில், ஒவ்வாமை மற்றும் நோயெதிர்ப்புத் துறையின் 'கிளினிக்கல் மெடிசின்' பேராசிரியரான ஜோனாதன் பெர்ன்ஸ்டீன் இது குறித்து விளக்கினார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி கொண்டவர்களின் உடலில் என்ன நடக்கிறது என்பது சரியாகத் தெரியவில்லை என்று அவர் கூறுகிறார். செமினல் பிளாஸ்மா ஹைபர்சென்சிட்டிவிட்டி குறித்த ஆராய்ச்சியை செயல்படுத்த நல்ல விலங்கு மாதிரிகள் இல்லை, அல்லது போதுமான அளவு பாதிக்கப்பட்ட மனிதர்கள் இல்லை என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். விந்து ஒவ்வாமை என்பது ஒரு குறிப்பிட்ட விஷயத்தைச் சார்ந்தோ அல்லது பரவலான முறையிலும் ஏற்படலாம். இது பொதுவாக யோனியுடன் அல்லது அதைச் சுற்றி உள்ள பகுதியில் ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால் ஸ்பெயினில், ஒரு பெண், யோனி வழி உடலுறவுக்குப் பிறகு எந்த ஒவ்வாமையையும் எதிர்கொள்ளவில்லை. குதவழி உடலுறவுக்குப் பிறகு, சுயநினைவை இழந்து, அனாபிலாக்ஸிஸின் பிற அறிகுறிகளையும் எதிர்கொண்டார். அவருக்கு, விந்து திரவத்திற்கு அதிக உணர்திறன் இருப்பது கண்டறியப்பட்டது. அமெரிக்காவில் ஒரு பெண்ணின் சருமம் விந்துடன் தொடர்பு கொண்டபோது (பாலியல் சாராத சூழ்நிலையில்) வீக்கம் மற்றும் தோல் அரிப்பு ஏற்பட்டது. உடலுறவுக்குப் பிறகான கடுமையான வலி மற்றும் எரிச்சல் உணர்வு ஆகியவை குறிப்பிட்ட அறிகுறிகளாக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். அவரது நோயாளிகளில் ஒருவர் அந்த உணர்வை, "யோனியில் ஆயிரம் ஊசிகள் கொண்டு குத்தப்படுவது போல இருந்தது" என்று விவரித்தார். ஒரு பெண், பல துணைவர்களின் விந்து அல்லது ஒருவரின் விந்துவுக்கு உணர்திறன் கொண்டவராக இருக்கலாம் என்று பெர்ன்ஸ்டீன் குறிப்பிடுகிறார். பொதுவாக இதில் நோயறிதல் (Diagnosis) என்பது ஒரு பாலியல் துணையிடமிருந்து சேகரித்த புதிய விந்து திரவ மாதிரியைப் பயன்படுத்தி செய்யப்படும் ஸ்கின் ப்ரிக் (Skin prick) சோதனையை உள்ளடக்கியது. பெர்ன்ஸ்டீனிடம் வழக்கமாக, ஒரு ஆண் துணைவருடன் வாழும் அல்லது ஒருதார மணம் செய்து கொண்ட பெண்களே சிகிச்சைக்கு வருகிறார்கள். பெரும்பாலும் அவர்கள் கர்ப்பமடைய முயற்சிக்கும்போது, இந்த பிரச்னையை எதிர்கொள்கிறார்கள். விந்து ஒவ்வாமை குறித்த சிகிச்சைக்கு அதிக நிபுணர்கள் இல்லாததால், சிலர் பெர்ன்ஸ்டீனுடன் கலந்தாலோசிக்க நீண்ட தூரம் பயணம் செய்து வருகிறார்கள். "மருத்துவ நிபுணர்களுக்கு அவ்வாறு வருபவர்களை எப்படி கையாள்வது என தெரியாததால், பல நோயாளிகள் ஒதுக்கப்படுகிறார்கள் அல்லது தீவிரமான ஸ்டீராய்டு சிகிச்சைகளைத் தொடங்குகிறார்கள்" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். ஆனால் பெர்ன்ஸ்டீனின் கூற்றுப்படி, விந்து ஒவ்வாமை உள்ள எவரும் அவரது நுட்பத்திலிருந்து பயனடையலாம். ஆண்களுடன் உடலுறவு கொள்ளும் ஆண்களிடையே விந்து ஒவ்வாமை பற்றிய தரவு குறிப்பிடத்தக்க அளவில் இல்லை. பெர்ன்ஸ்டீன் அது போன்ற ஒரு பாதிப்பை ஒருபோதும் பார்த்ததில்லை என்று கூறுகிறார், ஆனால் அது ஆண்களில் பாதிப்பு ஏற்படுத்துவதில்லையா என்பதும் தெளிவாகத் தெரியவில்லை. இந்த ஒவ்வாமையின் அறிகுறிகள் யோனிக்குள் உள்ள குறிப்பிட்ட நிலைமைகளுடன் தொடர்புடையதாக இருக்கக்கூடுமா என்று அவர் யோசித்தார். இருப்பினும் இது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையிலான குதவழி உடலுறவுக்குப் பிறகு ஏற்பட்ட ஒவ்வாமை குறித்த பதிலை அளிக்கவில்லை. சிகிச்சைகள் என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES பெர்ன்ஸ்டீன் பரிசோதித்த முந்தைய சிகிச்சையில், ஒரு நோயாளியின் உணர்திறனைக் குறைக்க, அவரது தோலுக்குள் ஒரு துணையின் விந்துவை ஊசி மூலம் செலுத்துவது அடங்கும். இது போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோமுக்கான (Post orgasmic illness syndrome) சிகிச்சையைப் போன்றது. (போஸ்ட் ஆர்கஸமிக் இல்னஸ் சிண்ட்ரோம்- இதில், ஆண்கள் தங்கள் சொந்த விந்தணுக்களுக்கே அதிக உணர்திறன் கொண்டவர்களாக இருப்பார்கள். இதுவொரு அரிய மற்றும் ஒருவரை பலவீனப்படுத்தும் நிலையாகும்.) ஆனால் இந்த சோதனை முறை விலை உயர்ந்தது. "மாதிரிகளைத் தயாரிப்பதில் நிறைய ஆய்வகப் பணிகள் இருந்ததால், நோயாளிகள் அதற்கு அதிக பணம் செலுத்த வேண்டியிருந்தது" என்று பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பெர்ன்ஸ்டீனும் அவரது குழுவினரும் இரண்டு மணி நேர அமர்வில் இந்த நிலைக்கு சிகிச்சையளிக்க ஒரு பாதுகாப்பான மற்றும் பயனுள்ள வழியைக் கண்டுபிடித்தனர். முதலில், அவர்கள் விந்தணுவிலிருந்து விந்து திரவத்தைப் பிரித்தனர். பின்னர், நோயாளி எவ்வளவு உணர்திறன் உடையவர் என்பதைப் பொறுத்து, திரவத்தை மிகவும் பலவீனமான நிலைக்கு - மில்லியனில் ஒரு பங்கு அல்லது பத்து மில்லியனில் ஒரு பங்கு என நீர்த்துப்போகச் செய்தனர். ஒவ்வொரு 15 நிமிடங்களுக்கும், அவர்கள் நீர்த்த திரவத்தை நோயாளியின் யோனியில் செலுத்தினர், ஒவ்வொரு முறையும் செறிவுகளை படிப்படியாக அதிகரித்தனர். இது நோயாளி சகிப்புத்தன்மையை வளர்க்க உதவியது. செயல்முறை முழுவதும், நோயாளி நெருக்கமாக கண்காணிக்கப்பட்டார். இதன் விளைவாக, "அதன் பிறகு, பெரும்பாலான நோயாளிகளுக்கு பெரிய ஒவ்வாமை எதிர்வினைகள் ஏற்படவில்லை. பின்னர் அந்த ஒரு துணையுடன் (விந்தணு மாதிரி அளித்த நபர்) அவர்களால் எந்த பிரச்னையும் இல்லாமல் பாதுகாப்பற்ற உடலுறவு கொள்ள முடிந்தது." என பெர்ன்ஸ்டீன் கூறுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பிற மனிதர்கள் தொடர்பான ஒவ்வாமை என்பது துன்பகரமான விளைவுகளை ஏற்படுத்தக்கூடும். உடலுறவுக்கு பிறகு ஆணின் பிறப்புறுப்பு சிவந்தது செமினல் பிளாஸ்மா மற்றும் விந்து தொடர்பான அதிக உணர்திறன் என்பது பெரும்பாலும் தவறாகப் புரிந்து கொள்ளப்படுகிறது அல்லது வேறு பிரச்னையாக கருதப்படுகிறது. உடலுறவின் போது பரவும் வேறு சில திரவங்கள் பற்றிய தகவல்கள் இன்னும் குறைவாகவே உள்ளன. கருப்பை வாய் மற்றும் யோனியின் செல்களால் சுரக்கப்படும் ஒரு திரவமான செர்விகோவஜினல் (Cervicovaginal) திரவத்திற்கு ஒவ்வாமை ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து, கிட்டத்தட்ட எந்த ஆராய்ச்சியும் இல்லை. இந்தத் திரவம் யோனி பகுதியின் வறண்ட தன்மையைக் குறைக்கவும், சில நோய்க்கிருமிகளிடமிருந்து பாதுகாப்பை வழங்கவும் உதவுகிறது. ஆனால் போலந்தில் உள்ள தோல் மருத்துவ நிபுணரான மாரெக் ஜான்கோவ்ஸ்கி, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமையால் பாதிக்கப்பட்ட ஒரு நோயாளியைக் தான் கண்டதாக கூறுகிறார். அந்த நோயாளி, ஒரு ஆண் பல மருத்துவர்களைச் சந்தித்த பிறகு அவரிடம் வந்தார். ஒரு பெண்ணுடன் யோனி உடலுறவு கொண்டு, சுமார் 30 நிமிடங்களுக்குப் பிறகு, அந்த ஆணின் பிறப்புறுப்பு பகுதி சிவந்து, தோல் அரிப்பு ஏற்பட்டுள்ளது. வாய்வழி உடலுறவு கொண்ட பிறகு அவரது முகத்திலும் அரிப்பு ஏற்பட்டுள்ளது. இது ஒரு ஒவ்வாமையாக இருக்கலாம் என்று அந்த நோயாளி நினைத்தார், ஆனால் மற்ற மருத்துவர்கள் அவர் கூறியதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை என்று ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி நேர்மறையான சிந்தனையுடன் இருந்தார். பாலியல் செயல்பாடுகளின் போது பெண்களால் சுரக்கப்படும் செர்விகோவஜினல் திரவத்திற்கு ஏற்படும் ஒவ்வாமைக்கான பிற சாத்தியமான நிகழ்வுகளையும் தேடினார். ஆண்டிஹிஸ்டமைன்களை எடுத்துக் கொண்ட பிறகு தன்னிடம் வந்த நோயாளி குணமடைந்ததாக அவர் கூறுகிறார். இந்த பாதிப்பு ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரை 2017இல் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வை மேற்கொள்ள வழிவகுத்தது. அவர்கள் தோல் மருத்துவர்கள் மற்றும் இந்த நிலை இருக்கக்கூடிய நபர்களை ஆய்வு செய்தனர். ஐந்து தோல் மருத்துவர்களில் ஒருவர் இதே போன்ற நிகழ்வுகளை நோயாளிகளிடம் கண்டதாகக் கூறினர். இருப்பினும் பல மருத்துவர்களால் இந்த ஒவ்வாமை உண்மையானதா என்பதை உறுதியாக கூறமுடியவில்லை. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு,பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வில், செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்கள், தொடர்புக்குப் பிறகு தோல் சிவந்து போவது, அரிப்பு, எரிச்சல், வீக்கம் ஆகியவை ஏற்பட்டதாகக் கூறினர். இந்த பதில்களின் அடிப்படையில், ஜான்கோவ்ஸ்கியும் அவரது குழுவினரும் இந்த ஒவ்வாமை அமெரிக்காவில் பல்லாயிரக்கணக்கான மக்களை பாதிக்கும் விந்து ஒவ்வாமையைப் போலவே பொதுவானதாக இருக்கலாம் என்று மதிப்பிட்டனர். இருப்பினும், இதுவரை கிடைத்த சான்றுகள் அவதானிப்புகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை என்றும், அதை உறுதிப்படுத்த கூடுதல் ஆராய்ச்சி தேவை என்றும் ஜான்கோவ்ஸ்கி கூறுகிறார். விந்து மற்றும் செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமைகளுக்கு இடையிலான ஒரு முக்கிய வேறுபாடு என்னவென்றால், ஆணுறைகள் பிந்தையவற்றுக்கு பெரிதும் உதவாது. காரணம், ஆணுறைகள் ஆணுறுப்பு மற்றும் விதைப்பையை முழுமையாக மூடாது என்பதால். இருப்பினும், ஜான்கோவ்ஸ்கி மற்றும் அவரது குழுவினரின் ஆய்வு முடிவுகளில், ஆண்டிஹிஸ்டமின்கள் மற்றும் மீண்டும் அந்தத் திரவத்திற்கு பழக்கப்படுவது, செர்விகோவஜினல் திரவ ஒவ்வாமை உள்ளவர்களுக்கு உதவியது என்று கண்டறியப்பட்டது. இதில் பாதிக்கப்பட்ட பெரும்பாலானோர், இளம் வயதினர்- அதாவது தங்கள் காதல் உறவுகளின் தொடக்க கட்டத்தில் இருப்பவர்கள் என்றும், துணையுடனான நெருக்கத்திற்கான அவர்களின் வலுவான ஆசை அவர்களுக்கு இந்த ஒவ்வாமையின் அசௌகரியத்தைத் தாங்க உதவியது என்றும் அவர் குறிப்பிட்டார். காலப்போக்கில், திரவத்துடன் மீண்டும் மீண்டும் தொடர்பு கொள்வது அவர்களின் அறிகுறிகளைக் குறைப்பதாகத் தோன்றியது. எனவே இது விந்து ஒவ்வாமையிலிருந்து வேறுபட்டது, பொதுவாக விந்து ஒவ்வாமை, தானாகவே போய்விடாது. தங்கள் துணையிடம் ஏதாவது ஒரு விஷயத்தால் ஒவ்வாமை உள்ளவர்களுக்கு, அதன் தாக்கம் தீவிரமாக இருக்கலாம். விந்து மற்றும் அது தொடர்புடைய ஒவ்வாமையைத் தவிர்ப்பதற்கு விலையுயர்ந்த மாற்று வழிகள் தேவைப்பட்டிருக்கலாம் என்பதால், தானும் தன்னுடைய துணையும், குழந்தைகள் பெற வேண்டாம் என்ற முடிவை எடுப்பதில், தனது விந்து ஒவ்வாமை பிரச்னை ஒரு பங்கு வகித்ததாக மௌரா நம்புகிறார். பாதிக்கப்பட்டவர்களுக்கும் அவர்களது துணைவர்களுக்கும், உணர்ச்சி ரீதியான தாக்கங்கள் சிக்கலானதாக இருக்கலாம். "எனது துணைவரின் விந்துவுக்கு எனக்கு ஒவ்வாமை இருப்பதாகக் கூறியதால், மனம் புண்பட்டதாக துணைவர் என்னிடம் கூறினார்," என்று மௌரா கூறுகிறார். ஆனால், அவரது காதல் உறவு பாதுகாப்பானதாக உள்ளது. அவரது துணைவர் ஆணுறைகளைப் பயன்படுத்துவதில் பிரச்னை இல்லை. "இந்த ஒவ்வாமைக்கு அவர் என்னை அல்ல, விதியையே குறை கூறுகிறார்." என்கிறார் மௌரா. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/clyl6p49330o
2 months 3 weeks ago
பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்கின் யாழ் விஜயமும் முக்கிய சந்திப்புக்களும்! Published By: PRIYATHARSHAN 20 JUN, 2025 | 12:01 PM யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக் அங்கு பல்வேறு தரப்பினர்களுடன் சந்திப்புக்களை மேற்கொண்டார். கடந்த 18 ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், தமிழரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளர் சுமந்திரன், வடமாகாண ஆளுநர், சுயதொழில் முயற்சியாளர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர்களை சந்தித்து கலந்துரையாடியுள்ளார். யாழுக்கான விஜயத்தின் முதல் நாளில் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், யாழ். கோட்டையை பார்வையிட்டார். இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பதில் பொதுச் செயலாளரை சந்தித்த இலங்கைக்கான பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் எதிர்வரும் செப்டெம்பர் மாதக் கூட்டத்தொடரின்போது இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் புதியதொரு தீர்மானம் கொண்டுவரப்படவிருப்பதாகவும் அப்பிரேரணையை நிறைவேற்றுவதற்கு ஆதரவு கோரி ஏனைய உறுப்பு நாடுகளுடன் இப்போதிருந்தே பேச்சுவார்த்தைகளை ஆரம்பிக்க வேண்டியிருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார். வடக்கு மாகாண ஆளுநர் நா. வேதநாயகனை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக்,தையிட்டி திஸ்ஸ விகாரை விவகாரம், செம்மணி மனிதப்புதைகுழி அகழ்வு, முதலீட்டுக்கான சந்தர்ப்பங்கள், கட்டுமான அபிவிருத்திகள், சுற்றுலாப் பயணிகளின் வருகை , விமான சேவை, கப்பல் சேவை, காணி உரித்து நிர்ணயத்திணைக்களத்தால் வெளியிடப்பட்ட வர்த்தமானி மற்றும் சமகால நிலைமைகள் தொடர்பில் கேட்டறிந்துகொண்டுள்ளார். இதேவேளை, காணாமலாக்கப்பட்டோரின் உறவினர்களின் சங்கப் பிரதிநிதிகளை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் வேதனைகளையும் துயரங்களையும் கேட்டறிந்தார். யாழ்ப்பாணத்திலுள்ள VVS விநியோகஸ்தார்களை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அவர்களின் பனை உற்பத்திப் பொருட்களின் பல்வகைப்பட்ட தயாரிப்புக்களை பார்வையிட்டதுடன், அங்கு தயாரிக்கப்படும் பாரிம்பரிய உள்ளூர் கூழை சுவைத்து மகிழ்ந்தார். இந்த சந்திப்பு நிலையான வாழ்வாதாரங்களை உருவாக்குவதற்கும் உள்ளுர் அடையாளத்தைப் பாதுகாப்பதற்கும் உள்ள ஆற்றலை எடுத்துக்காட்டுகின்றது. யாழ். பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பேராசிரியர் ஸ்ரீ சற்குணராசாவை சந்தித்து கலந்துரையாடிய பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், உயர்கல்வி, ஆராய்ச்சி ஒத்துழைப்பு மற்றும் பிராந்தியத்தில் உள்ள இளைஞர்களின் அபிலாஷைகள் குறித்து விரிவான கலந்துரையாடலை மேற்கொண்டதுடன் இந்த சந்திப்பு, கல்வியை ஆதரிப்பதற்கும், இரு நாடுகளுக்கும் இடையிலான கல்வி தொடர்புகளை வலுப்படுத்துவதற்கும் உறுதி பூண்டுள்ளது. யாழ். மாநகர மேயர் விவேகானந்தராஜா மதிவதானியை சந்தித்த பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், பிராந்திய மேம்பாடு, சேவை வழங்கல் மற்றும் இளைஞர்களுக்கான வாய்ப்புகள் குறித்து விவாதித்துள்ளார், இந்த ஆக்கபூர்வமான ஈடுபாடுகள், மாகாண மற்றும் நகராட்சி மட்டங்களில் உள்ளடக்கிய நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கான உள்ளூர் முன்னுரிமைகள் மற்றும் முயற்சிகள் பற்றிய மதிப்புமிக்க நுண்ணறிவுகளை வழங்கயுள்ளது. யாழில் உள்ள பிரிட்டிஷ் கவுன்சிலுக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர், அங்குள்ள ஊழியர்களை சந்தித்து ஆங்கில மொழி கற்றல் மற்றும் டிஜிட்டல் கல்வியை ஆதரிப்பதில் அவர்களின் பணிகளை அறிந்துகொண்டார். உலகளாவிய சூழலில் செழித்து வளர இளைஞர்களுக்கு திறன்கள் மற்றும் நம்பிக்கையை வழங்குவதில் பிரிட்டிஷ் கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. வட இலங்கையில் புதுமைகளை முன்னெடுத்துச் செல்லும் இளம் தொழில்நுட்ப தொழில்முனைவோரை Yarl IT Hub -இல் சந்தித்தார் பிரித்தாகிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், இந்த மையம் ஒரு செழிப்பான டிஜிட்டல் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கவும், உள்ளூர் திறமைகளை உலகளாவிய வாய்ப்புகளுடன் இணைக்கவும் உதவுகிறது. வளர்ச்சி, படைப்பாற்றல் மற்றும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் திறன்களை ஆதரிக்கிறது. தொழில்நுட்பம், தொழில்முனைவோரை உள்ளிடக்கிய வளர்ச்சியில் இளைஞர்களை வழிநடத்தும் முயற்சிகளை பிரித்தானிய மதிக்கிறதாக குறிப்பிட்டார். நாகதீப விகாரை மற்றும் நாகபூஷணி அம்மன் கோவில் ஆகியவற்றைப் பார்வையிட உயர் ஸ்தானிகர் ஆண்ட்ரூ பேட்ரிக் நைனாதீவுக்குச் சென்றிருந்தார். யாழ்ப்பாணத்திற்கான விஜயத்தை மேற்கொண்ட பிரித்தானிய உயர்ஸ்தானிகார் அன்று பற்றிக், உள்ளூர் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளைச் சந்தித்தார். இந்தக் கலந்துரையாடல் மனித உரிமைகள், நல்லிணக்கம் மற்றும் சமூக முன்னுரிமைகள் குறித்த மதிப்புமிக்க முன்னோக்குகளை வழங்கியது. பொறுப்புக்கூறலை ஊக்குவிப்பதிலும் அதனை நடைமுறைப்படுத்துவதிலும் சிவில் சமூகம் வகிக்கும் முக்கிய பங்கை பிரித்தானியா அங்கீகரிக்கிறது என்று குறிப்பிட்டுள்ளார். பொருளாதாரத்தில் மீனவர்களின் பங்கு மற்றும் அவர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து மீனவர் அமைப்புகளிடமிருந்து பல தகவல்களை கேட்டறிந்த பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், நிலையான கொள்கைகளை வடிவமைப்பதில் அவர்களின் நுண்ணறிவு முக்கியமானது என்று குறிப்பிட்டார். யாழ். பல்கலைக்கழக மருத்துவ பீடத்தின் பீடாதிபதி பேராசிரியர் ஆர். சுரேந்திரகுமாரன் மற்றும் ஆராய்ச்சியாளர்களை சந்தித்த, உயர் ஸ்தானிகர் அன்று பற்றிக், இலங்கையில் முதன்மை மருத்துவத்தில் நீண்டகால நிலைமைகள் மேலாண்மைக்கான ஆதரவு குறித்து யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும் பேர்மிங்காம் பல்கலைக்கழகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பு குறித்து கலந்துரையாடினார். இந்திய துணைத்தூதுவர் சாய் முரளியை யாழ்ப்பாணத்தில் சந்தித்து கலந்துரையாடியுள்ளார் பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்று பற்றிக். யாழ்ப்பாணத்திலுள்ள பழைமை வாய்ந்த உணவகமான மலாயன் கபேக்கு சென்ற பிரித்தானிய உயர்ஸ்தானிகர் அன்றூ பற்றிக், அங்கு உள்ளூர் செய்திகளை அறியும் முகமாக 94 வருட கால பழைமை வாய்ந்த வீரகேசரி பத்திரிகையில் செய்திகளை ஆராய்ந்தார். யாழ். தீபகற்பத்தில் சர்வதேச நீர் மேலாண்மை நிறுவன திட்டத்தின் முதலாம் கட்ட நிறைவுப் பயிற்சிப் பட்டறையில் கலந்து கொண்டார். நீர் மேலாண்மை, உணவுப் பாதுகாப்பு மற்றும் காலநிலை மீள்தன்மை ஆகியவற்றில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டது. நிலையான வளர்ச்சியை வலுப்படுத்தும், சமூகங்களை ஆதரிக்கும் மற்றும் இலங்கையில் நீண்டகால மீள்தன்மையை உருவாக்கும் ஆராய்ச்சி மற்றும் புதுமைகளுக்கு நிதியளிப்பதில் பிரித்தானிய பெருமை கொள்கிறது என உயர்ஸ்தானிகர் குறிப்பிட்டுள்ளார். https://www.virakesari.lk/article/217980