உலக நடப்பு

11 வயதில் மதகுரு, மன்னருக்கு எதிராக கலகம் - இரானின் உச்ச தலைவர் காமனெயி குறித்து அறியப்படாத தகவல்கள்

3 months 2 weeks ago

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,IRANIAN LEADER PRESS OFFICE / HANDOUT/ANADOLU VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பிபிசி பெர்சியன் சேவை

  • பதவி,

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இரானின் அதி உயர் தலைவர் ஆயதுல்லா அலி காமனெயியை தற்போதைய மோதலில் கொல்வதற்கான இஸ்ரேலின் திட்டத்தை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், "அதுவொரு சிறந்த யோசனை இல்லை" எனகூறி நிராகரித்ததாக, அமெரிக்க ஊடகங்களில் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இரான் மீதான சமீபத்திய தாக்குதல்கள் மூலம் இரானின் அணுசக்தி திறன்களால் ஏற்பட்டுள்ள "இருப்பியல் அச்சுறுத்தலை" அழிப்பதை தங்களுடைய இலக்கு என இஸ்ரேல் கூறியுள்ளது. ஆனால், அதை தாண்டியும், இரானில் ஆட்சி மாற்றம் ஏற்படுவது, இஸ்ரேலிய ராணுவ தாக்குதல்களின் விளைவாக இருக்கலாம் என, அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்தார்.

இரானின் அதி உயர் தலைவர் குறித்தும் நாட்டில் அவருடைய அதிகாரங்கள் மற்றும் அவருடைய குடும்பத்தினருக்கு அரசியலில் உள்ள பங்கு குறித்தும் இங்கே ஆராயப்பட்டுள்ளது.

1979ம் ஆண்டில் நடந்த இஸ்லாமிய புரட்சிக்குப் பிறகு நாட்டின் அதி உயர் தலைவராக ஆன இரண்டாவது நபர் ஆயதுல்லா அலி காமனெயி. மேலும் 1989ம் ஆண்டிலிருந்து அவர் இப்பதவியில் உள்ளார். அவர் பதவியில் இல்லாத வாழ்நாளை இரானிய இளைஞர்கள் ஒருபோதும் கண்டதே இல்லை.

அதிகார மையங்களுக்கு இடையே நடக்கும் போட்டி வலையின் மையத்தில் இருக்கிறார் காமனெயி. எந்தவொரு பொது கொள்கை சார்ந்த விவகாரங்களிலும் தன் அதிகாரத்தை அவர் பயன்படுத்த முடியும், பொது அலுவலகங்களுக்கான பதவிகளுக்கு அவரால் ஒருவரை தேர்ந்தெடுக்கவும் முடியும்.

ஒரு நாட்டின் தலைவராகவும் இரானின் புரட்சிகர காவல் படை உட்பட ராணுவத்தின் தலைமைத் தளபதியாகவும் அவர் ஒட்டுமொத்த அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

பட மூலாதாரம்,ANADOLU/GETTY IMAGES

படக்குறிப்பு, ஆயதுல்லா அலி காமனெயி, இரானின் அதிகார கட்டமைப்பின் மையமாக இருக்கிறார்.

இரானின் இரண்டாவது பெரிய நகரமான மஷாட்டில் 1939ம் ஆண்டில் அவர் பிறந்தார்.

மத நம்பிக்கைகள் கொண்ட ஒரு குடும்பத்தின் எட்டு குழந்தைகளுள் இரண்டாவது குழந்தையாக பிறந்தவர் இவர். இரானில் ஆதிக்கம் செலுத்தும் ஷியா பிரிவு முஸ்லிம்களுக்கு மத குருவாக காமனெயியின் தந்தை இருந்தார்.

காமனெயிக்கு கல்வியையும் தாண்டி குரான் குறித்து படிப்பதிலேயே ஆர்வம் இருந்தது. தன் 11 வயதிலேயே அவர் மத குருவாக தகுதி பெற்றார்.

ஆனால், அந்த சமயத்தில் இருந்த மத தலைவர்களை போலவே அவருடைய பணிகள் ஆன்மிகத்தை விட அரசியலை சார்ந்தே அதிகம் இருந்தது.

சிறந்த பேச்சாளரான காமனெயி, இரான் மன்னர் ஷா-வை விமர்சிக்கும் நபராக ஆனார், அதைத் தொடர்ந்து இஸ்லாமிய புரட்சியால் அந்த மன்னர் ஆட்சியிலிருந்து தூக்கியெறியப்பட்டார்.

பல ஆண்டுகளாக அவர் பதுங்குகுழியிலேயே இருந்தார் அல்லது சிறையிலேயே அடைக்கப்பட்டார். ஷாவின் ரகசிய காவல் துறையால் காமனெயி ஆறு முறை கைது செய்யப்பட்டிருந்தார், சித்ரவதை மற்றும் உள்நாட்டுக்குள்ளேயே நாடு கடத்தப்படுதல் போன்றவற்றுக்கு ஆளானார்.

1979 இஸ்லாமிய புரட்சிக்கு அடுத்த ஆண்டே ஆயதுல்லா ருஹொல்லா கோமினி (Ayatollah Ruhollah Khomeini), அவரை தலைநகர் டெஹ்ரானில் வெள்ளிக்கிழமை பிரார்த்தனைக்கான தலைவராக்கினார். அதன்பின், 1981ம் ஆண்டில் காமெனெயி அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர், 1989ம் ஆண்டு ஆயதுல்லா ருஹொல்லா கோமினிக்கு அடுத்த தலைராக, மதத் தலைவர்களால் தேர்ந்தெடுக்கப்பட்டார். ருஹொல்லா கோமினி தன்னுடைய 86வது வயதில் காலமானார்.

மகன் மோஜ்தாபாவுக்கு உள்ள அதிகாரம் என்ன?

அலி காமனெயி அரிதாகவே வெளிநாடுகளுக்கு பயணிப்பார். அவர், மத்திய டெஹ்ரானில் உள்ள வளாகத்தில் தன் மனைவியுடன் வசித்து வருவதாக தகவல் உள்ளது.

தோட்டக்கலை மற்றும் கவிதைகள் மீது அவருக்கு ஆர்வம் இருப்பதாக கூறப்படுகிறது; தன்னுடைய இளம் வயதில் அவருக்கு புகைப்பழக்கம் இருந்ததற்காக அவர் அறியப்பட்டார், இரானில் மதத்தலைவர் ஒருவர் புகைப்பிடிப்பது வழக்கத்துக்கு மாறானது. 1980களில் நடந்த ஒரு கொலை முயற்சியில் அவருடைய வலது கை செயலிழந்தது.

அவருக்கும் அவருடைய மனைவிக்கும் மன்சோரே கோஜஸ்டே பேகெர்ஸாடேவுக்கும் (Mansoureh Khojasteh Baqerzadeh) ஆறு குழந்தைகள் உள்ளனர், அவர்களுள் 4 மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் ஆவர்.

காமனெயி குடும்பத்தினர் பொதுவெளியிலோ அல்லது ஊடகத்திலோ அரிதாகவே தோன்றியுள்ளனர். மேலும், அவருடைய குழந்தைகளின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த அதிகாரபூர்வ அல்லது சரியான தகவல்கள் மிகவும் குறைவாகவே உள்ளன.

அவருடைய நான்கு மகன்களுள் இரண்டாவது மகனான மோஜ்தாபா, அவருடைய செல்வாக்கு காரணமாக, நன்கு அறியப்பட்ட நபராக உள்ளார், அவருடைய தந்தையின் நெருக்கமான வட்டாரத்தில் அவர் குறிப்பிடத்தக்க பங்கு வகிக்கிறார்.

மோஜ்தாபா காமனெயி, இரான்

பட மூலாதாரம்,NURPHOTO/GETTY IMAGES

படக்குறிப்பு, உச்ச தலைவரின் மகனான மோஜ்தாபா, இஸ்லாமிய குடியரசின் மிகவும் அதிகாரமிக்க நபராக கருதப்படுகிறார்

டெஹ்ரானில் உள்ள அலாவி உயர்நிலை பள்ளியில் மோஜ்தாபா படித்தார், பாரம்பரியமாக இஸ்லாமிய குடியரசின் மூத்த அதிகாரிகளின் குழந்தைகள் படிக்கும் பள்ளியாக இது அறியப்படுகிறது.

பிரபலமான பழமைவாத தலைவரான கோலம்-அலி ஹதாத்-அடெலின் மகளை அவர் திருமணம் செய்தார், மதகுருவாக அவர் ஆகாத காலகட்டத்தில் இந்த திருமணம் நடைபெற்றது. அச்சமயத்தில் கோம் (Qom) நகரில் இறையியல் படிப்பை தொடங்க அவர் திட்டமிட்டிருந்தார். அவர் தன்னுடைய 30வது வயதில் இரானின் மிகவும் பிரபலமான, கோமில் உள்ள ஷியா இறையியல் பள்ளியில் தன் படிப்பை தொடங்கினார்.

2000ம் ஆண்டுகளுக்கு மத்தியில் அரசியல் வட்டாரத்தில் மோஜ்தாபாவின் செல்வாக்கு குறித்து ஊடகத்தில் அரிதாகவே பேசப்பட்டாலும் பொதுவெளியில் அது அதிகமாக தெரிந்தது.

2004ம் ஆண்டு அதிபர் தேர்தலில் ஏற்பட்ட சர்ச்சையின் போது மோஜ்தாபா மிகுந்த கவனம் பெற்றார். அப்போது பிரபலமான வேட்பாளரான மெஹ்தி கரௌபி (Mehdi Karroubi) ஆயதுல்லா காமனெயிக்கு வெளிப்படையாக கடிதம் எழுதினார். மஹ்மௌத் அஹ்மதினெஜத்-க்கு (Mahmoud Ahmadinejad) ஆதரவாக மோஜ்தாபா பின்னணியில் செயல்பட்டதாக அவர் குற்றம்சாட்டியிருந்தார்.

ஆயதுல்லா அலி காமனெயி, இரான்

2010ம் ஆண்டிலிருந்து இஸ்லாமிய குடியரசில் மிகுந்த அதிகாரமிக்க நபர்களுள் ஒருவராக பரவலாக அறியப்பட்டார். தன்னுடைய பதவிக்கு மோஜ்தாபாவையே காமனெயி விருப்ப வேட்பாளராக கொண்டிருப்பதாக, சில உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் கூறுகின்றன. எனினும், இந்த தகவலை அதிகாரபூர்வ வட்டாரங்கள் மறுத்துள்ளன.

மேலும், அலி காமனெயி ஓர் அரசர் அல்ல, அவரால் எளிதாக ஆட்சியை அவருடைய மகனுக்கு வழங்க இயலாது. தன் தந்தையின் பழமைவாத வட்டாரத்துக்குள்ளும் குறிப்பிடத்தக்க அதிகாரத்தைக் கொண்டவராக மோஜ்தாபா உள்ளார். அரசியலமைப்பை விட அதிகாரம் மிக்கதாக உள்ள உச்ச தலைவரின் அலுவலகத்திலும் மோஜ்தாபா அதிகாரம் கொண்டவராக உள்ளார்.

முஸ்தஃபா, காமனெயி குடும்பத்தின் மூத்த மகனாவார். இவர், தீவிர பழமைவாத மதகுருவான அஸிஸொல்லா கோஷ்வக்டின் (Azizollah Khoshvaght) மகளை திருமணம் செய்துள்ளார்.

1980களில் நடந்த இரான் - இராக் போரில் முஸ்தஃபா மற்றும் மோஜ்தாபா இருவரும் முன்னணியில் செயல்பட்டுள்ளனர்.

ஆயதுல்லா அலி காமனெயி, மேசம், இரான்

பட மூலாதாரம்,AFP/GETTY IMAGES

படக்குறிப்பு,காமனெயி மகன்களுள் இளையவர் மேசம் (Meysam)

அலி காமனெயியின் மூன்றாவது மகன் மசௌத், 1972ம் ஆண்டு பிறந்தார். கோம் செமினரி பழமைவாத ஆசிரியர்கள் சங்கத்துடன் இணைந்த, மிகவும் அறியப்பட்ட மத குருவான மோஹ்சென் கராஸியின் (Mohsen Kharazi) மகளான சூசன் கராஸியை இவர் திருமணம் செய்துள்ளார். சூசன் கராஸி, சீர்திருத்தவாத முன்னாள் ராஜதந்திரியான முகமது சதெக் கராஸியின் சகோதரி ஆவார்.

மசௌத் காமனெயி அரசியல் வட்டாரத்திலிருந்து விலகியே உள்ளார், அவர் குறித்து பொதுவெளியில் அதிக தகவல்கள் இல்லை.

தன் தந்தையின் பணிகள் மற்றும் நடவடிக்கைகளை, கண்காணித்து காமனெயியின் பரப்புரை அமைப்பாக செயல்படும் அலுவலகத்துக்கு மசௌத் தலைமை தாங்கினார்; தன் தந்தையின் வாழ்க்கை வரலாறு மற்றும் நினைவுக்குறிப்புகளை தொகுக்கும் பொறுப்பும் அவரிடம் உள்ளது.

காமனெயியின் இளைய மகனான மேசம், 1977ம் ஆண்டில் பிறந்தார். அவருடைய மூன்று அண்ணன்களை போலவே, இவரும் ஒரு மதகுருவாக உள்ளார்.

1979ம் ஆண்டு நிகழ்ந்த புரட்சிக்கு முன்னதாக, புரட்சிகர மதகுருக்களுக்கு நிதி ரீதியாக ஆதரவளித்ததற்காக அறியப்படும் பணக்கார, செல்வாக்குமிக்க வணிகரான மஹ்மௌத் லோலாசியனின் (Mahmoud Lolachian) மகளை இவர் திருமணம் செய்துள்ளார். மேசம் மனைவியின் பெயர் ஊடகங்களில் குறிப்பிடப்படவில்லை.

தன் தந்தை மேற்கொள்ளும் பணிகளை பாதுகாத்து அவற்றை வெளியிடுவதற்கான அலுவலகத்தில் மசௌத்துடன் இணைந்து மேசம் பணியாற்றுகிறார்.

இரு மகள்கள்

காமனெயியின் மகள்கள் குறித்து பொதுவெளியில் அதிகம் அறியப்படவில்லை.

குடும்பத்தில் மிகவும் இளையவர்களாக புஷ்ரா மற்றும் ஹோடா உள்ளனர், 1979 புரட்சிக்குப் பிறகே அவர்கள் பிறந்தனர்.

1980ம் ஆண்டு பிறந்த புஷ்ரா, காமனெயி அலுவலகத்தில் தலைமை அலுவலராக உள்ள கோகம்ஹோசெயின் (முகமது) மொஹம்மதி கோல்பயெகனியின் (Gholamhossein (Mohammad) Mohammadi Golpayegani) மகனான மொஹம்மது-ஜாவத் மொஹம்மதி கோல்பயெகனியை திருமணம் செய்துள்ளார்.

காமனெயியின் இளைய மகளான ஹோசா, 1981ம் ஆண்டு பிறந்தார். இமாம் சாதிக் பல்கலைக்கழகத்தில் மார்க்கெட்டிங் படித்து அங்கேயே கற்பித்த, மெஸ்பா அல்-ஹோடா மகேரி கனியை அவர் திருமணம் செய்துள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g8egxy9g1o

இரானை தாக்க அமெரிக்கா தயாராகிறதா? போர்க்கப்பல், போர் விமானங்கள் நகர்வு

3 months 2 weeks ago

இரான், அமெரிக்கா, இஸ்ரேல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், மட் மர்ஃபி, தாமஸ் ஸ்பென்சர் & அலெக்ஸ் முர்ரே

  • பதவி, பிபிசி வெரிஃபை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

கடந்த 3 நாட்களில் அமெரிக்க தளங்களில் இருந்து குறைந்தது 30 அமெரிக்க ராணுவ விமானங்கள், ஐரோப்பாவுக்கு இட மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக, பிபிசி வெரிஃபையால் ஆராயப்பட்ட விமான கண்காணிப்பு தரவுகள் தெரிவிக்கின்றன.

இந்த விமானங்கள் அனைத்தும் போர் விமானங்கள் மற்றும் வானிலிருந்து குண்டுகளை வீச பயன்படுத்தப்படும் விமானங்களுக்கு (bombers) வானிலேயே எரிபொருளை நிரப்புவதற்கு பயன்படுத்தப்படும் டேங்கர் விமானங்களாகும். இவற்றில் கேசி-135 (KC-135) வகையை சேர்ந்த குறைந்தது 7 விமானங்கள், ஸ்பெயின், ஸ்காட்லாந்து மற்றும் இங்கிலாந்து ஆகியவற்றில் உள்ள அமெரிக்க தளங்களில் சிறிது நேரம் நின்று சென்றன.

கடந்த வெள்ளிக்கிழமை இஸ்ரேல் இரான் மீது தாக்குதல் நடத்திய பிறகு, இரு நாடுகளும் பரஸ்பரம் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றன. இரானின் அணுசக்தி திட்டத்தை அழிப்பதற்காக இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இஸ்ரேல் கூறிவருகிறது. இந்த பின்னணியில் தான் அமெரிக்க போர் விமானங்களின் நகர்வு நடந்துள்ளது.

அமெரிக்க போர் விமானங்கள் இடம்பெயர்ந்துள்ளதற்கும் இந்த மோதலுக்கும் நேரடியாக தொடர்பு உள்ளதா என்பது தெளிவாக தெரியவில்லை. ஆனால், பிபிசி வெரிஃபையிடம் பேசிய நிபுணர் ஒருவர், டேங்கர் விமானங்களின் இடப்பெயர்வு "மிகவும் வழக்கத்துக்கு மாறானது" என்றார்.

எதற்காக இந்த நடவடிக்கை?

ராயல் யுனைடெட் சர்வீசஸ் இன்ஸ்டிட்யூட் (Rusi) எனும் சிந்தனை மையத்தை சேந்த மூத்த ஆய்வாளர் ஜஸ்டின் பிராங்க் கூறுகையில், அப்பிராந்தியத்தில் வரும் வாரங்களில் ஏற்படும் "தீவிரமான எதிர் நடவடிக்கைகளுக்கான" அவசரகால திட்டங்களை தயார் நிலையில் வைப்பதற்காக அமெரிக்கா இந்த நடவடிக்கையை மேற்கொண்டிருக்கலாம் என தோன்றுவதாக தெரிவித்தார்.

பிபிசி வெரிஃபையால் கண்காணிக்கப்பட்ட 7 விமானங்களும் இடமாற்றம் செய்யப்பட்டதற்கு பின்னர், செவ்வாய்க்கிழமை பிற்பகல் நிலவரப்படி சிசிலிக்கு கிழக்கே பறந்ததை விமான கண்காணிப்பு தரவுகள் காட்டுகின்றன. அவற்றில், 6 விமானங்கள் எங்கு சென்றன என்பது தெரியவில்லை, ஒரு விமானம் கிரேக்கத் தீவான க்ரீட்டில் தரையிறங்கியது.

அயர்லாந்து பாதுகாப்புப் படைகளின் முன்னாள் தலைவர், வைஸ் அட்மிரல் மார்க் மெல்லெட் கூறுகையில், "இரானுடனான அணுசக்தி பேச்சுவார்த்தைகளில் தனக்கு அனுகூலத்தை ஏற்படுத்துவதற்கான வியூக ரீதியான விரிவான திட்டத்தின் ஒரு பகுதியாக அமெரிக்காவின் இந்த நடவடிக்கை இருக்கலாம்" என்றார்.

கடந்த வெள்ளிக்கிழமை, இரானிய அணுசக்தி கட்டமைப்பின் மீது இஸ்ரேல் தாக்குதலை தொடங்கியது. அணுசக்தித் திட்டத்தை நிறுத்தி வைப்பதற்கான ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதற்கு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இரானுக்கு வழங்கிய காலக்கெடுவுக்கு மறுநாள் இந்த தாக்குதல் தொடங்கியது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,GETTY IMAGES

மத்திய கிழக்கு நோக்கி இடம்பெயர்ந்த போர்க்கப்பல்

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் (USS Nimitz) எனப்படும் தன்னுடைய விமான தாங்கிக் போர்க்கப்பலை தென் சீனக் கடலில் இருந்து மத்திய கிழக்கு நோக்கி அமெரிக்கா இடம்பெயரச் செய்துள்ளதாக வெளியான தகவலையடுத்து, போர் விமானங்களின் இடம்பெயர்வு நிகழ்ந்துள்ளது.

இந்த விமான தாங்கிக் போர்க்கப்பல் சார்ந்து வியட்நாமில் திட்டமிடப்பட்ட நிகழ்வு ஒன்று ரத்து செய்யப்பட்டது, "அவசர நடவடிக்கை தேவைகளுக்காக" அந்நிகழ்வு ரத்து செய்யப்பட்டதாக ஹனோயில் உள்ள அமெரிக்க தூதரகம் கூறியதாக, ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்துள்ளது.

யுஎஸ்எஸ் நிமிட்ஸ் கடைசியாக, செவ்வாய்க்கிழமை அதிகாலையில் மலாக்கா நீரிணையில் சிங்கப்பூர் நோக்கி சென்று கொண்டிருந்ததை கப்பல் கண்காணிப்பு இணையதளமான மெரைன்டிராஃபிக் காட்டுகிறது. நிமிட்ஸ் கப்பலில் அதிநவீன போர் விமானங்கள் உள்ளன, ஏவுகணை தாக்குதல் நடத்துவற்கென வடிவமைக்கப்பட்ட போர்க் கப்பல்களும் அதன் பாதுகாப்புக்காக உடன் செல்கின்றன.

F-16, F-22 மற்றும் F-35 ஆகிய போர் விமானங்களையும் மத்திய கிழக்கில் உள்ள தளங்களுக்கு அமெரிக்கா அனுப்பியுள்ளதாக, பாதுகாப்பு அதிகாரிகள் 3 பேர் கூறியதாக, செவ்வாய்க்கிழமை ராய்ட்டர்ஸ் செய்தி முகமை தெரிவித்தது. ஐரோப்பாவுக்கு கடந்த சில தினங்களாக இட மாற்றம் செய்யப்பட்ட டேங்கர் விமானங்கள், இந்த போர் விமானங்களுக்கு எரிபொருள் நிரப்புவதற்காக பயன்படுத்தப்படலாம்.

இஸ்ரேலுக்கு அதரவாக இந்த மோதலில் அமெரிக்கா தலையிடலாம் என, அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் செவ்வாய்கிழமை தெரிவித்தார். இரானின் அணுசக்தி திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான "அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து டிரம்ப் முடிவு செய்யலாம்" என தன் சமூக ஊடக பக்கத்தில் வான்ஸ் தெரிவித்தார்.

பூமிக்கடியில் ஆழமாக சென்று தாக்கும் பங்கர் பஸ்டர் குண்டு

இரானில் யுரேனியத்தை செறிவூட்டுவதற்காக நிலத்தடியில் இரண்டு தளங்கள் இயங்குவதாக நம்பப்படுகிறது. இதில், நடான்ஸ் இஸ்ரேலால் ஏற்கெனவே தாக்கப்பட்டுள்ளது. கோம் (Qom) நகருக்கு அருகிலுள்ள ஒரு மலையில் அமைத்துள்ள ஃபோர்டோ தளம் பூமிக்கடியில் மிகவும் ஆழமாக அமைக்கப்பட்டுள்ளது.

ஃபோர்டோ கட்டமைப்பை ஊடுருவ GBU-57A/B எனப்படும் பெரியளவிலான குண்டை (Massive Ordnance Penetrator - MOP) அமெரிக்கா பயன்படுத்த வேண்டியிருக்கும் என்று மூத்த மேற்கத்திய ராணுவ அதிகாரிகள் இரண்டு பேர் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தனர். 13,600 கிலோ எடையுள்ள இந்த வெடிகுண்டு, நிலத்தடியில் உள்ள அணுசக்தி தளங்களை தாக்கக்கூடியது என்பதால் "பங்கர் பஸ்டர்ஸ்" என்றும் அழைக்கப்படுகிறது.

இரான் - இஸ்ரேல் தாக்குதல்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு, இஸ்ரேல் மீது திங்கட்கிழமை இரான் நடத்திய தாக்குதலை காட்டும் படம்

இந்த குண்டு மட்டுமே 200 அடி (60 மீ) கான்கிரீட்டை கூட உடைக்கும் திறன் கொண்டதாக கருதப்படும் ஒரே ஆயுதமாகும். வழக்கமான ரேடார்களால் எளிதில் கண்டுபிடிக்க முடியாத பி-2 ஸ்டெல்த் போர் விமானங்களால் மட்டுமே இந்த குண்டை வீச முடியும்.

டியாகோ கார்சியா தீவில் உள்ள தன்னுடைய தளத்தில் அமெரிக்கா சமீபத்தில் பி-2 விமானங்களை நிறுத்தியது. இரானின் தெற்கு கடற்கரையிலிருந்து இந்த தீவு சுமார் 2,400 மைல் தொலைவில் இருந்தாலும், அந்த விமானங்கள் இருக்கும் இடமானது, இரானின் தாக்குதல் எல்லைக்குள் அவற்றை வைக்கக்கூடும்.

"[டியாகோ கார்சியாவிலிருந்து) ஒரு நிலையான நடவடிக்கையை மிகவும் திறமையாக இதன் மூலம் மேற்கொள்ள முடியும். அவற்றை எந்நேரமும் செயல்பாட்டில் வைத்திருக்க முடியும்." என, பிரிட்டனின் ராயல் விமானப்படையின் (RAF) முன்னாள் துணை தலைவரான (ஆபரேஷன்ஸ்) ஏர் மார்ஷல் கிரெக் பேக்வெல் பிபிசி வெரிஃபையிடம் தெரிவித்தார்.

மார்ச் மாத இறுதியில் டியாகோ கார்சியாவில் பி-2 விமானங்கள் நிறுத்தப்பட்டதை செயற்கைக்கோள் படங்கள் ஆரம்பத்தில் காட்டின. ஆனால், சமீபத்தில் வெளியான படங்களில் அந்த தீவில் பி-2 விமானங்கள் இல்லை.

வைஸ் அட்மிரல் மெல்லெட் கூறுகையில், இரானை இலக்கு வைத்து நடத்தப்படும் எவ்வித நடவடிக்கைக்கும் முன்னதாக, அந்த தீவில் பி-2 விமானங்களை பார்க்கலாம் என்று எதிர்பார்ப்பதாக கூறினார். தீவில் தற்போது அந்த விமானங்கள் இல்லாதது, குழப்பமாக உள்ளதாகவும் அவர் கூறினார்.

இதை ஏர் மார்ஷல் கிரேக் பேக்வெல்லும் ஒப்புக்கொள்கிறார். வெள்ளை மாளிகை தாக்குதலை தொடங்க முடிவெடுத்தால், அமெரிக்க கண்டத்திலிருந்தும் கூட பி2 விமானங்கள் செலுத்தப்படலாம் என்றும் அவர் கூறினார்.

"இரானின் தற்காப்புத் திறனை இஸ்ரேல் அழித்துவிட்டதால், எந்தவொரு ராணுவ அல்லது அணுசக்தி இலக்குகளும் கூட இஸ்ரேலின் விருப்பத்தின் பேரிலேயே விடப்படும்."

மெர்லின் தாமஸ் வழங்கிய கூடுதல் தகவல்களுடன்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c4g2d1lz6q0o

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

3 months 2 weeks ago

இந்தோனேசியாவில் எரிமலை வெடிப்பு ; பாலி தீவுக்கான விமான சேவைகள் இரத்து 

Published By: DIGITAL DESK 3

18 JUN, 2025 | 10:49 AM

image

இந்தோனேசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தளமான பாலி தீவுக்குக் கிழக்கே எரிமலை வெடித்ததைத் தொடர்ந்து பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.

பாலி தீவின் கிழக்குப் பகுதியிலுள்ள புளோரஸ் தீவில் 1,703 மீட்டர் உயமுடைய இரட்டை சிகரங்களைக் கொண்ட “மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி” (Mount Lewotobi Laki-Laki) எரிமலை செவ்வாய்க்கிழமை (18)  முதல் வெடித்து சிதற ஆரம்பித்துள்ளது.

எரிமலை வெடித்து சிதறி வானத்தில் கோபுரம் போன்று 10 கிலோ மீற்றர் உயரத்துக்கு அதன் சாம்பல்  வெளியேறியுள்ளது. இதனால் பல விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன. இரத்து செய்யப்பட்டுள்ள விமானங்களில் அவுஸ்திரேலியாவுக்கான ஜெட்ஸ்டார் மற்றும் விர்ஜின் விமான சேவைகளும் அடங்கும்.

ஏர் இந்தியா, ஏர் நியூசிலாந்து, சிங்கப்பூரின் டைகர் ஏர் மற்றும் சீனாவின் ஜுன்யாவோ ஏர்லைன்ஸ் ஆகியவையும் விமான சேவைகளை இரத்து செய்துள்ளதாக பாலியின் சர்வதேச விமான நிலைய வலைத்தளம் தெரிவித்துள்ளது.

புளோரஸில் உள்ள லாபுவான் பாஜோவிற்கு புறப்படும் பல உள்நாட்டு விமானங்களும் இரத்து செய்யப்பட்டன.

லெவோடோபி லக்கி-லக்கி எரிமலையைச் சுற்றியுள்ள பல கிராமங்களில் எரிமலை சாம்பல் மழை பொழிந்துள்ளது.

மேலும், செவ்வாய்க்கிழமை ஒரு கிராமத்திலுள்ள மக்களை வெளியேற்ற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாக அந்நாட்டு  அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.

சேதங்கள் அல்லது உயிரிழப்புகள் குறித்து உடனடியாக  தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. கடந்த வருடம் நவம்பர் மாதம் மவுண்ட் லெவோடோபி லக்கி-லக்கி பல முறை வெடித்து சிதறியது.இதன்போது ஒன்பது பேர் உயிரிழந்தனர். இதனால் சுற்றுலாத் தளமான பாலிக்கான ஏராளமான சர்வதேச விமான வேகைள் இரத்து செய்யப்பட்டன. ஆயிரக்கணக்கானோர் வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்தோனேசிய மொழியில் "ஆண்" என்று பொருள்படும் லக்கி-லக்கி, அமைதியான எரிமலையுடன் "பெண்" என்பதை குறிக்க இந்தோனேசிய வார்த்தையான லக்கி இரண்டு முறை சேர்க்கப்பட்டுள்ளது.

இந்தோனேசியா, ஒரு பரந்த தீவுக்கூட்ட நாடானது, பசிபிக் "நெருப்பு வளையத்தில்" அதன் நிலை காரணமாக அடிக்கடி நிலநடுக்கம் மற்றும் எரிமலை வெடிப்பு ஏற்படுகிறது.

https://www.virakesari.lk/article/217777

பிரித்தானிய புலானாய்வு அமைப்பான “MI6” ஐ வழி நடத்த முதல் முறையாக பெண் நியமனம்

3 months 2 weeks ago

Published By: DIGITAL DESK 3

17 JUN, 2025 | 12:22 PM

image

“MI6” எனப்படும் பிரித்தானியாவின் வெளிநாட்டு புலானாய்வு அமைப்பை முதல் முறையாக பெண்ணொருவரால் வழிநடத்தப்படும் என அந்நாட்டு பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் அறிவித்துள்ளார்.

அதன்படி, 1999 ஆம் ஆண்டு முதல் MI6 புலானாய்வு அமைப்பில் பணியாற்றிவரும் புலானாய்வு அதிகாரியான பிளேஸ் மெட்ரூவெலி தலைவராக நியமனமிக்கப்பட்டுள்ளார்.

MI6 புலானாய்வு அமைப்பின் தற்போதைய தலைவர் சர் ரிச்சர்ட் மூரிடமிருந்து 18 ஆவது தலைவராக பதவியை பொறுப்பேற்கவுள்ளார்.

47 வயதுடைய பிளேஸ் மெட்ரூவெலி தற்போது MI6 புலானாய்வு அமைப்பின் Q பிரிவின் பணிப்பாளர் நாயகமாக உள்ளார். 

தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுப்பிடிப்புகளுக்கும் பொறுப்பாகவுள்ளார்.

MI6 மற்றும்  MI5 ஆகிய உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் எதிர் - புலனாய்வு அமைப்புகளில் பணிப்பாளராகவும் இருந்துள்ளார்.

பிளேஸ் மெட்ரூவெலி கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மானுடவியலில் பட்டம் பெற்றுள்ளார். தனது தொழில் வாழ்க்கையின் பெரும்பாலான பகுதிகளை மத்திய கிழக்கு மற்றும் ஐரோப்பாவில் பணியாற்றினார்.

மெட்ரூவெலி தலைவராக நியமிக்கப்பட்டள்ளமை தொடர்பில் பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர்,

“MI6 புலானாய்வு அமைப்பின் தலைவராக பிளேஸ் மெட்ரூவெலி நியமிக்கப்பட்டுள்ளமை வரலாற்று சிறப்பு மிக்க ஒரு விடயமாகும். நமது உளவுத்துறை சேவைகளின் பணி முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கும். தமது நீர்நிலைகளுக்குள் தங்கள் உளவு கப்பல்களை அனுப்பும் ஆக்கிரமிப்பாளர்களாலும், நமது பொது சேவைகளை சீர்குலைக்க முயலும் அதிநவீன சைபர் - சதித்திட்ட ஹேக்கர்களாலும் பிரித்தானியா முன்னொரு போதும் இல்லாத அளவுக்கு அச்சுறுதல்களை எதிர்கொள்கின்றது எனத் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆண்டு செயிண்ட் மைக்கேல் மற்றும் செயிண்ட் ஜோர்ஜ் ஆணை (Order of St Michael and St George) எனப்படும் பிரித்தானிய ஆணையை தனது சேவைக்கான அங்கீகாரமாக பெற்ற மெட்ரெவெலி,

“எனது சேவையை வழிநடத்தும்படி கோரப்பட்டதில் நான் பெருமைப்படுகிறேன். பிரித்தானிய மக்களைப் பாதுகாப்பாக வைத்திருப்பதிலும், வெளிநாடுகளில் பிரித்தானிய நலன்களை மேம்படுத்துவதிலும் MI6 - MI5 மற்றும் GCHQ உடன் - முக்கிய பங்கு வகிக்கிறது. MI6 இன் துணிச்சலான அதிகாரிகள் மற்றும் முகவர்கள் மற்றும் எங்கள் பல சர்வதேச கூட்டாளர்களுடன் இணைந்து அந்தப் பணியைத் தொடர நான் எதிர்பாக்கிறேன்.”எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/217693

இஸ்ரேல் - இரான் சண்டை வல்லரசுகளின் மோதலாக வாய்ப்பு: அமெரிக்கா, ரஷ்யா என்ன செய்கின்றன?

3 months 2 weeks ago

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,AFP VIA GETTY IMAGES

கட்டுரை தகவல்

  • எழுதியவர், பௌயான் கலானி

  • பதவி, செய்தியாளர்

  • 17 ஜூன் 2025, 01:28 GMT

    புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த மூன்று நாட்களுக்கும் மேலாக வல்லரசு நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும், இரானின் அண்டை நாடுகளின் வெளியுறவு அமைச்சர்களும் இஸ்ரேல் மற்றும் இரானின் வெளியுறவு அமைச்சர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த விரும்புகின்றனர்.

தற்போது இஸ்ரேல் மற்றும் இரானுக்கு இடையிலான மோதலை நிறுத்த இந்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

கனடாவில் நடைபெற்ற ஜி7 மாநாட்டின் கருப்பொருளில் மாற்றம் ஏற்பட்டது. யுக்ரேன் மற்றும் ரஷ்யாவுக்கு இடையேயான பிரச்னை மற்றும் அமெரிக்கா விதித்த புதிய வரிகள் குறித்து பேச்சுவார்த்தை நடைபெற இருந்த நிலையில் தற்போது இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரிட்டிஷ் பிரதமர் கியர் ஸ்டார்மர் கனடிய பிரதமர் மார்க் கார்னேவை, மாநாட்டிற்கு முதல் நாள் சந்தித்துப் பேசினார். அப்போது இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே ஏற்பட்டுள்ள பதற்றத்தைக் குறைக்கும் வழிகள் குறித்து மாநாட்டில் பேசலாம் என்று முடிவெடுத்தனர்.

இஸ்ரேல் - இரான் மோதல் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் பெரிய அளவிலான போராக மாறுவதற்கான சாத்தியங்களைக் கொண்டுள்ளது. அண்டை நாடுகள் மட்டுமின்றி அமெரிக்கா, பிரிட்டன், ஃபிரான்ஸ், ரஷ்யா போன்ற வல்லரசுகளையும் உள்ளே இழுத்து பெரிய அளவிலான போராக மாறுவதற்கான வாய்ப்புகளையும் உள்ளடக்கியுள்ளது.

இதுவரை மத்தியஸ்தம் நடத்த மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளால் எந்த பலனும் கிட்டவில்லை. இஸ்ரேல் இரான் மீதான தாக்குதலை விரிவுபடுத்தியுள்ளது. இரானிய ஏவுகணைகள் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா போன்ற இஸ்ரேலிய நகரங்களை தாக்கியுள்ளன.

சமீபத்திய செய்திகளின் படி, இரானில் அமைந்திருக்கும் ராணுவ உள்கட்டமைப்புகளுக்கு அருகே மக்கள் யாரும் செல்ல வேண்டாம் என்றும், அப்பகுதிகளில் தாக்குதல் நடத்தப்படலாம் என்றும் இஸ்ரேல் ராணுவம் எச்சரிக்கை செய்துள்ளது.

இதுபோன்ற சூழலில் சண்டை நிறுத்தத்திற்கான நம்பிக்கை எங்கே உள்ளது? உலகத் தலைவர்கள் இதில் எத்தகைய பங்காற்ற இயலும்?

தற்போது நம்பிக்கை அளிப்பது இரானின் வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அரக்சியின் அறிக்கை மட்டுமே. அவர் "இஸ்ரேல் தன்னுடைய தாக்குதல்களை நிறுத்தினால், இரானும் தாக்குதலை நிறுத்தும். இரானின் தற்போதைய செயல்பாடுகள் அனைத்தும் பாதுகாப்பு நடவடிக்கை மற்றும் இஸ்ரேல் தாக்குதலுக்கான எதிர்வினையே," என்று தெரிவித்தார்.

இருப்பினும், இஸ்ரேல் தனது நோக்கத்தை இன்னும் அடையவில்லை என்றே அதன் நடவடிக்கைகள் காட்டுகின்றன. இரானில் அணு ஆயுதங்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணைகளை உருவாக்குவதற்கான செயல்திறனை அழித்து, இது இஸ்ரேலின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருப்பதை நீக்குவதே அதன் நோக்கம் என்று இஸ்ரேல் தெரிவிக்கிறது.

p0ljjwxy.jpg.webp

காணொளிக் குறிப்பு,இஸ்ரேல் - இரான் மோதல் மோசமடைந்தால் நிலைமை எப்படியெல்லாம் மாற வாய்ப்புள்ளது?

அமெரிக்கா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், மத்தியஸ்தம் செய்வதில் கை தேர்ந்தவர் என்று கூறிக் கொள்வதுண்டு. அவர் தற்போது அணுசக்தி தொடர்பான ஒப்பந்தத்தில் தலையிடுவதற்கு பதிலாக இரான் இஸ்ரேல் இடையே போர் நிறுத்தம் குறித்து அவர் பேசுகிறார்.

"எளிமையாக இரான் மற்றும் இஸ்ரேலுக்கு இடையே உடன்படிக்கை ஏற்படுத்தி இந்த மோதலை உடனே முடிவுக்குக் கொண்டு வர நம்மால் இயலும்," என்று ட்ரூத் சோசியல் சமூக வலைதளத்தில் கருத்து ஒன்றை பதிவிட்டுள்ளார்.

ஆனால் இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதலுக்கு அமெரிக்கா துணை போகிறது என்று அந்த நாட்டின் மீது இரான் குற்றம் சுமத்துகிறது. அணுசக்தி ஒப்பந்தம் தொடர்பான பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில் டிரம்ப், இரான் மீதான சாத்தியமான தாக்குதலுக்கு இஸ்ரேலுடன் துணை நிற்கிறார் என்ற விமர்சனமும் முன்வைக்கப்பட்டது.

இருப்பினும் இந்த விவகாரத்தில் தலையிடவில்லை என்று அமெரிக்கா கூறுகிறது. ஆனால் இரான் மீதான தாக்குதல் தொடர்பாக டிரம்பிற்கு ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்தது என்றும் அமெரிக்கா ஒப்புக் கொண்டது. இரானின் ஏவுகணைகள் மற்றும் டிரோன்களை கண்காணிக்க இஸ்ரேலுக்கு அமெரிக்கா உதவியதாக செய்திகள் வெளியாகி வருகின்றன.

டிரம்ப் தொடர்ந்து இஸ்ரேலின், குறிப்பாக பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வருகிறார். நெதன்யாகுவிடம் இந்த தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும் என்பதை அறிவுறுத்த, மற்ற உலகத் தலைவர்களைக் காட்டிலும், டிரம்பிற்கு கூடுதல் அனுகூலத்தை வழங்குகிறது இந்த நட்புறவு.

டிரம்பும், நெதன்யாகுவும் இரானின் அணு செறிவுத் திட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும் என்று விரும்புகின்றனர். ஆனால் அதில் வெற்றி காண்பதற்கு இருவரும் வெவ்வேறு வழியை பின்பற்றுகின்றனர்.

ஞாயிறு அன்று அமெரிக்காவுடனான அணுசக்தி திட்ட பேச்சுவார்த்தை ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து அப்பாஸ் அரக்சி தன்னுடைய வருத்தத்தை பதிவு செய்தார். "எங்களின் அணுசக்தி திட்டத்திற்கான முன்மொழிவை அமெரிக்கர்களிடம் இன்று நாங்கள் வழங்கியிருக்க வேண்டும். அது ஒப்பந்தத்தை உருவாக்க வழி வகுத்திருக்கும்," என்று கூறினார். ஆனால் இரான் முன்மொழிந்த திட்டம் தொடர்பான தகவல்கள் எதையும் அவர் வழங்கவில்லை.

டிரம்ப் இரண்டாம் முறையாக ஆட்சிக்கு வந்த பிறகு, அமெரிக்கா (போர்) தடுப்பு நடவடிக்கைகளில் மட்டுமே ஈடுபட்டு வருகிறது. மத்தியஸ்தம் செய்ய முன்வந்து இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு எதிரான நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதை காட்டிக்கொள்ள விரும்புகிறது அமெரிக்கா.

இந்த நிலைப்பாடு, இரான் மீதான இரு நாடுகளின் அணுகுமுறையில் யார் நல்லவர் யார் கெட்டவர் என்று தீர்மானிக்கும் ஒரு சூழலை உருவாக்கியுள்ளது. அமெரிக்காவின் இந்த போக்கு நீடிக்கும் பட்சத்தில், இஸ்ரேலுக்கும் இரானுக்கும் இடையே நீடிக்கும் பதற்றத்தை தணிப்பதில் குறிப்பிடத்தக்க பங்கை வகிக்க அந்த நாட்டிற்கு மேலும் ஒரு வாய்ப்பு கிடைக்கும்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,அமெரிக்க அதிபருடன் இஸ்ரேல் பிரதமர்

ஐரோப்பா

இரானுக்கு எதிரான இஸ்ரேலின் தாக்குதலை ஐரோப்பிய நாடுகள் கண்டிக்கவில்லை. இரான் பதில் தாக்குதலில் ஈடுபட வேண்டாம் என்று கேட்டுக் கொண்டன.

இருப்பினும், இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தைகளை உடனடியாக நடத்தி மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள பதற்ற சூழலை தணிக்க ஜெர்மனி, ஃபிரான்ஸ் மற்றும் பிரிட்டன் தயாராக உள்ளதாக ஜெர்மனி வெளியுறவு அமைச்சர் ஜோஹன் வாட்ஃபுல் அறிவித்தார்.

இந்த பிராந்தியத்தில் அமைதியை உருவாக்க இரானின் அணுசக்தி திட்டம் தொடர்பான பேச்சுவார்த்தை ஒரு முக்கிய நிபந்தனை என்று கருதுகிறார் அவர். மத்தியக் கிழக்கு பிராந்தியத்திற்கும் ஐரோப்பாவுக்கும் இரான் அச்சுறுத்தலாக இருக்காது என்பதை இரான் நிரூபித்தால் மட்டுமே அமைதி சாத்தியமாகும் என்று தெரிவித்தார் அவர்.

மத்திய கிழக்கில் நிலையற்ற தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார். தற்போது நியாயப்படுத்த இயலாத வகையில் உருவாக்கப்பட்டிருக்கும் அணுசக்தி திட்டத்தில் முன்னேறுவது அந்த சூழலை மேலும் மோசமாக்கியுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார். இருப்பினும், தாக்குதல் நடத்துவதை இரண்டு நாடுகளும் நிறுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துக் கொண்டார்.

சமீபத்திய மாதங்களில், ஃபிரான்ஸ் இரானின் அணுசக்தி திட்டத்திற்கு எதிரான கடுமையான நிலைப்பாட்டை எடுத்திருக்கிறது.

ஃபிரான்ஸின் வெளியுறவு அமைச்சர் ஜீன்-நோயல் பாரோட், இரு தரப்பினரும் தாக்குதல் நடத்துவதை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொண்டார். அந்த பிராந்தியத்தில் தன்னுடைய சொந்த மக்கள் மற்றும் நலனுக்காக ஃபிரான்ஸ் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என்றும் கூறினார்.

அதிபர் மக்ரோன், இரானுக்கு எதிரான தாக்குதலில் ஃபிரான்ஸ் பங்கேற்காது என்பதை திட்டவட்டமாக தெரிவித்தார். ஆனால் இஸ்ரேலுக்கு எதிராக இரான் பதில் தாக்குதல் நடத்தும் போது இஸ்ரேலை ஃபிரான்ஸ் பாதுகாக்கும் என்றும் அவர் கூறினார். அமெரிக்கா முன்மொழிந்த அணுசக்தி ஒப்பந்தத்தை இரான் ஏற்றுக் கொள்ளவில்லை என்ற வருத்தத்தையும் அவர் பதிவு செய்தார்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மத்திய கிழக்கில் ஸ்திரமற்றத் தன்மை நிலவ இரானே காரணம் என்று முன்னதாக ஃபிரான்ஸ் அதிபர் இமானுவேல் மக்ரோன் தெரிவித்திருந்தார்

ஜெர்மனி மற்றும் ஃபிரான்ஸ் நாடுகளைக் காட்டிலும் எதார்த்தமான அணுகுமுறையை இந்த விவகாரத்தில் கையாண்டுள்ளது பிரிட்டன். மத்தியக் கிழக்குக்கு கூடுதலாக போர் விமானங்களை அனுப்பியுள்ளது. சமீபத்திய நிகழ்வுகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ஸ்டார்மர், டைஃபூன் போர் விமானங்களும் வானில் இருந்தபடியே போர் விமானங்களுக்கு எரிபொருளை நிரப்பும் விமானமும் அனுப்பப்பட்டிருப்பதை அவர் உறுதி செய்தார்.

இதற்கு முந்தைய காலகட்டத்தில் இஸ்ரேல்-இரான் இடையே நடைபெற்ற மோதல்களின் போது, இஸ்ரேலை பாதுகாக்க போர் விமானங்கள் பயன்படுத்தப்பட்டதைப் போன்று இதுவும் பயன்படுத்தப்படுமா என்பது குறித்து தெளிவாக அவர் குறிப்பிடவில்லை.

சனிக்கிழமை பிபிசியில் வெளியான செய்தி ஒன்றில், அங்கு நிலைமை வேகமாக மாறிவருகிறது என்று கியர் ஸ்டார்மர் கூறியதாக குறிப்பிட்டிருந்தது. பிரிட்டன் அதன் நட்பு நாடுகளுடன் தொடர்ச்சியாக பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுவருவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. இரான் - இஸ்ரேல் இடையே நீடித்து வரும் பதற்றமான சூழலை "தணிப்பதே" அவரின் முதன்மை செய்தி என்பது தெளிவானது.

கனடாவில் ஜி7 உச்சி மாநாட்டின் போதும் அவர் இந்த பிரச்னை குறித்து பேசினார்.

மத்தியஸ்தம் செய்வதற்கு பதிலாக, இரான் தன்னுடைய அணு சக்தி செறிவூட்டும் திட்டத்தை கைவிட வேண்டும் என்று அழுத்தம் தரும் நாடுகளுடன் சேர்ந்து செயல்படுகிறது பிரிட்டன் என்பது தெளிவாகிறது.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,REUTERS

படக்குறிப்பு,பிரிட்டன் பிரதமர் கியர் ஸ்டார்மர்

அரபு நாடுகள்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கடந்த மாதம் சௌதி அரேபியா மற்றும் சில வளைகுடா நாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார். அவர் வந்து சென்ற ஒரே மாதத்தில் மத்திய கிழக்கில் புதிய போர் சூழல் உருவாவதை அவர்கள் யாருமே எதிர்பார்த்திருக்கமாட்டார்கள்.

பாரிய அளவிலான முதலீடு, இந்த பிராந்தியத்தில் மிகவும் நிலைத்தன்மையற்று இருக்கும் சிரியா மீதான பொருளாதார தடையை நீக்குதல் போன்ற பல முன்னெடுப்புகளை கொண்டிருந்தது அவரின் வருகை.

ஐரோப்பிய தேசங்களைப் போன்றில்லாமல், அனைத்து வளைகுடா நாடுகளும், இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு கண்டனத்தை பதிவு செய்தன.

மிகவும் வலிமையான கருத்தை பதிவு செய்திருந்தது சௌதி அரேபியா. அந்த நாட்டின் வெளியுறவு அமைச்சர் எக்ஸ் தளத்தில், "சௌதி அரேபியா, எங்களின் சகோதர நாடான இரான் இஸ்லாமியக் குடியரசின் மீது நடத்தப்பட்டிருக்கும் கண்மூடித்தனமான தாக்குதல்களை கடுமையாக கண்டிக்கிறது. இரானின் பிராந்திய இறையாண்மையை மீறும் இந்த தாக்குதல் சர்வதேச சட்டங்களை மீறுவதாகவும் உள்ளது," என்று தெரிவித்தது.

இந்த கண்டனம் மட்டுமின்றி மத்திய கிழக்கில் உள்ள அரசியல் நிபுணர்களின் மதிப்பீடுகளும் வெளிவந்தன. இந்த நாடுகள் மறைமுகமாக பலவீனமான இரானை தங்களின் அண்டை நாடாக கொண்டிருக்க விரும்புகின்றன என்றும் அதேநேரத்தில் அவர்களின் சொந்த பிராந்தியங்களில் போர் பரவும் சூழலோ அல்லது அதன் பின்விளைவுகளோ தங்களை பாதிக்கக் கூடும் என்றும் அவர்கள் அஞ்சுவதாகவும் குறிப்பிடுகிறது அவர்களின் மதிப்பாய்வுகள்.

இந்த பிராந்தியத்தில் இருக்கும் ஏதேனும் ஒரு அமெரிக்க ராணுவ தளத்தை இரான் தாக்க முடிவெடுத்துவிட்டால் ஒரு பேராபத்து ஏற்படுவதற்கான சாத்தியங்கள் உருவாகின்றன.

இஸ்ரேலிடம் இருந்து விலகிக் கொண்ட சௌதி அரேபியா, இஸ்ரேல் தாக்குதல்களுக்கு கண்டனம் தெரிவிக்கும் நாடுகளுடன் கை கோர்த்துக் கொண்டது.

அரபு வளைகுடா நாடுகளுடனான இரானின் உறவு, கடந்த காலத்தில் இருந்ததைப் போல் இல்லாமல், மேம்பட்டு வருகின்ற சூழலில் இஸ்ரேலின் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது. இருப்பினும், பிரிட்டன் மற்றும் ஃபிரான்ஸ் இஸ்ரேலுக்கு நேரடியாக ஆதரவு வழங்கியது போன்று இரானுக்கு ஆதரவாக எந்த நாடுகளும் நேரடியாக செயலில் ஈடுபட வெளிப்படையாக விருப்பம் தெரிவிக்கவில்லை.

அதற்கு மாறாக இரான் பதில் தாக்குதல் நடத்துவதை நிறுத்த வேண்டும் என்றும் இதில் சம்பந்தப்பட்ட நாடுகள் பேச்சுவார்த்தைகள் மூலமாக தீர்வை எட்ட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளன.

அவர்களின் கண்ணோட்டத்தில் இருந்து பார்க்கும் போது, அவர்களின் நாடுகளுக்கு தேவையான உள்கட்டமைப்பு, கோடிக்கணக்கிலான நிதி முதலீடு மற்றும் எண்ணெய் பொருட்களை வாங்கும் முக்கிய நாடுகளாக இருக்கும் முதன்மை நட்பு நாடுகளான அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு சம ஆதரவை வளைகுடா நாடுகள் வழங்க வேண்டும். அதே நேரத்தில் அழிவை ஏற்படுத்தும் ஒரு போர் சூழல் அவர்களின் நாடுகளுக்குள் நிகழ்வதை தடுப்பதையும் உறுதி செய்ய வேண்டும்.

இந்த சூழலில், சௌதி அரேபியா பன்முக அரசியல் விளையாட்டை விளையாடுவது போன்று தோன்றும். இஸ்ரேலுடனான சௌதியின் சமகால உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றமும் இதில் அடங்கும். ஆனால் முழுமையாக அதில் வெற்றி பெற இயலவில்லை. அது மட்டுமின்றி, ஏமனின் ஹூத்திகளுடனான மற்றொரு பதற்றமான சூழல் ஏற்படுவதை தடுக்க சௌதி மேற்கொள்ளும் முயற்சிகளும் இதில் அடங்கும்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சௌதியின் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானுடன் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்

ரஷ்யா

ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் இரானுடன் நல்ல உறவைக் கொண்டுள்ளது. இரான் மீதான இஸ்ரேலின் தாக்குதல் ரஷ்யாவை சிக்கலான இடத்தில் நிறுத்தியுள்ளது. இவ்விரு நாடுகளுடன் நல்ல உறவைத் தொடர்வதை கேள்விக்குறியாக்கும் வகையில் உள்ளது தற்போதைய சூழல்.

இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றமான சூழலை தணிக்க ரஷ்யாவால் மத்தியஸ்தம் செய்ய இயலும் என்று சிலர் நம்புகின்றனர்.

ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவுடனும், இரானின் அதிபர் மசூத் பெசெஷ்கியனுடம் பேசினார். சூழலை இயல்பு நிலைக்குக் கொண்டு வர தேவையான உதவிகளை அளிக்க விரும்புவதாகவும் அவர் கூறினார். இவ்விரு நாட்டுத் தலைவர்களுடனும் அவர் தொடர்ந்து பேசி வருகிறார்.

இரான் மற்றும் அமெரிக்காவுக்கு இடையே அணுசக்தி ஒப்பந்தத்தை ஏற்படுத்த உள்ள வழிகளை அவர் பரிந்துரை செய்ததாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மேற்கத்திய நாடுகளைப் போன்றே, ரஷ்யாவும் அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் இரானின் அணுசக்தி திட்டத்தை எதிர்க்கிறது.

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பை சனிக்கிழமை அலைபேசியில் அழைத்து இஸ்ரேலின் தாக்குதல் குறித்து விவாதித்துள்ளார் புதின்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரஷ்ய அதிபர் விளாதிமிர் புடின்

சீனா

இரானின் நட்பு நாடுகளில் ஒன்றான சீனா இஸ்ரேலின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளது. தன்னுடைய நடவடிக்கைகளை நிறுத்திக் கொள்ளுமாறு சீனா இஸ்ரேலிடம் கேட்டுக் கொண்டது.

சௌத் சீனா மார்னிங் போஸ்ட் செய்திப் படி, சீனாவின் வெளியுறவு அமைச்சர் வாங் யீ மற்றும் இஸ்ரேல் வெளியுறவு அமைச்சர் ஜியோடன் சாருக்கும் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, இரு நாடுகளுக்கும் இடையே சண்டையை தொடராமல் அரசியல் ரீதியாக தீர்வு காண இயலும் என்று வாங் கூறியுள்ளார்.

சர்வதேச அமைப்புகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டிருக்கின்ற சூழலில் இஸ்ரேலின் நடவடிக்கை ஏற்புடையதல்ல என்று வாங் உறுதியாகக் கூறியுள்ளார்.

சமீபத்திய ஆண்டுகளில் சீனா, இரானின் ராணுவ திட்டங்களுக்கு உதவி செய்துள்ளது.

ஒரு முழுமையான போர் வெடித்தால் என்னவாகும்?

கிட்டத்தட்ட அனைத்து அரசியல் நிபுணர்களும், இரான் - இஸ்ரேலுக்கு இடையேயான மோதல் கட்டுப்பாட்டை மீறிச் சென்று முழு அளவிலான போராக மாறும் என்று கூறுகின்றனர்.

"மோசமான சாத்தியக்கூறாக இது இந்த பிராந்தியத்தில் இருக்கலாம். போர் பரவுவதை தடுக்க பல நாடுகளின் தலைவர்களும் வழி கண்டறிய முயற்சி செய்து வருகின்றனர்.

ஒரு சாத்தியமான வாய்ப்பு என்னவென்றால் இரானின் கூட்டாளிகளான, பலவீனம் அடைந்த லெபனானின் ஹெஸ்பொலா, ஏமனின் ஹூத்திகள், இராக்கில் உள்ள இரானின் ஆதரவுக் குழுக்கள் போன்றவை இந்த மோதலில் ஈடுபடலாம். இவர்கள் இந்த பிராந்தியத்தில் இருக்கும் அமெரிக்க தளங்கள் மீது தாக்குதல் நடத்தி அமெரிக்காவை இந்த மோதலுக்குள் இழுக்கலாம்.

அப்படியான சூழலில் போர் புதிய திசை நோக்கி நகரும். அமெரிக்கா மற்றும் இஸ்ரேலுடன் சேர்ந்து பிரிட்டனும் ஃபிரான்ஸும் இரான் மீது தாக்குதல் நடத்தலாம். இத்தகைய சூழலில், பல ஆண்டுகளாக கயான் செய்தித்தாளின் ஆசிரியர்கள் கூறுவது போன்று இரான் ஒரு முக்கிய முடிவை எடுக்கும். அது ஹோர்முஸ் நீரிணை வழியே சரக்கு போக்குவரத்தை மூடுவது. உலக நாடுகள் பலவற்றிற்கும் ஏற்றுமதி செய்யப்படும் கச்சா எண்ணெய் இந்த நீரிணை வழியாக கொண்டு செல்லப்படுகிறது.

இது போன்ற சூழலில், அமெரிக்க தளங்களை இரான் தாக்குமானால், அமெரிக்காவின் செல்வாக்குட்பட்ட அரபு நாடுகள் இரானுக்கு எவ்வாறு எதிர்வினையாற்றும் என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.

இந்த மோதலின் மற்றொரு பின்விளைவாக சைபர் போர் இருக்கும். எரிசக்தி உற்பத்தி நிலையங்கள், மின்சாரம் மற்றும் நீர் ஆதார கட்டமைப்புகள் உள்ளிட்டவையையும் போர் சேதமாக்கலாம்.

இரான் இஸ்ரேல் தாக்குதல், அமெரிக்கா, நெதன்யாகு, டொனால்ட் டிரம்ப், முக்கியச் செய்திகள், உலகச் செய்திகள்

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,இது போராக நீடித்தால் நாட்டில் இருந்து மக்கள் அதிகப்படியாக இடம் பெயர்வார்கள்

இஸ்லாமிய புரட்சிகர காவல்படையின் எல்லை தாண்டிய படைப்பிரிவினர் , "ஐரோப்பிய எல்லைகளில் தங்களின் தாக்குதல்களை நடத்தலாம்," என்று மேற்கத்திய நிபுணர்கள் பலர் கணித்துள்ளனர்.

பதற்றம் நீடித்து, உள்கட்டுமானம் சீர்குலையும் எனில் இரானியர்கள் கூட்டம்கூட்டமாக பெரிய நகரங்களில் இருந்தும், நாட்டில் இருந்தும் மொத்தமாக வெளியேறுவார்கள். இது இடைக்கால இடம் பெயர்தலை உள் நாட்டிலும் அண்டை நாட்டிலும் ஏற்படுத்த வழிவகை செய்யும்.

சிரியப் போருக்குப் பிறகு தங்களின் நாடு மீண்டும் ஒரு சிறை போன்று மாறுவதை விரும்பவில்லை என்று துருக்கி அதிபர் ரிசெப் தயிப் எர்துவான் தன்னுடைய அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்.

மோதல் நீடிப்பது இஸ்ரேலுக்கும் பல பிரச்னைகளை ஏற்படுத்தும். தற்போது வான்வழி தாக்குதல் குறித்த ஒவ்வொரு எச்சரிக்கை ஒலியின் போதும் லட்சக்கணக்கான மக்கள் அவர்களின் பணியிடங்களில் இருந்து வெளியேறி பாதுகாப்பான இடங்களில் தஞ்சம் அடைகின்றனர்.

இஸ்ரேல் மீது தொடர்ந்து நடத்தப்படும் தாக்குதல் அங்குள்ள எண்ணெய் சுத்தகரிப்பு மையங்களை அழிக்கும். மின்சாரம் தடைபடும். இதர சேவைகளில் தடை ஏற்படும். பொருளாதாரம் மற்றும் தினசரி வாழ்க்கை பாதிக்கப்படும். பொதுமக்களின் உயிரிழப்புகளை அதிகரிக்கும்.

மோதலின் போது பாரசீக வளைகுடாவில் ஒரு அமெரிக்க கப்பல் நீரில் மூழ்கினாலோ அல்லது ஒரு ஏவுகணை மோதி பயணிகள் விமானம் விபத்துக்குள்ளானாலோ பேரழிவு தரும் பின்விளைவுகளையும் ஏற்படுத்தக் கூடும்.

இதனால் தான் அமெரிக்கா, ஐரோப்பா, அரபு நாடுகள், சீனா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளின் தலைவர்கள் முழு அளவிலான போரை தடுக்க முயன்று வருகின்றனர்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ceqgq403wylo

Checked
Mon, 10/06/2025 - 20:03
உலக நடப்பு Latest Topics
Subscribe to உலக நடப்பு feed
texte-feed
svsv dfde fe