புதிய பதிவுகள்2
இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும்
இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணை: புதிய அரசியலமைப்பு, பயங்கரவாதத்தடைச்சட்ட நீக்கம், மாகாணசபைத்தேர்தல் நடைமுறை என்பன உள்வாங்கப்படும் 17 Aug, 2025 | 09:53 AM (நா.தனுஜா) ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் செப்டெம்பர் மாதக்கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகளால் இலங்கை தொடர்பில் கொண்டுவரப்படவுள்ள புதிய பிரேரணையில் புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை ஆரம்பித்தல், பயங்கரவாத்தடைச்சட்டத்தை நீக்குதல், மாகாணசபைத்தேர்தல்களை விரைந்து நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 8 ஆம் திகதி ஆரம்பமாகி, ஒக்டோபர் மாதம் 8 ஆம் திகதி வரை நடைபெறவிருக்கிறது. தற்போது நடைமுறையில் இருக்கும் 'இலங்கையில் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகளை மேம்படுத்தல்' என்ற தீர்மானத்தின் ஊடாக வழங்கப்பட்டுள்ள ஆணைக்கு அமைவாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் 'இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டம்' முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. அதற்கமைய உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் தயாரிக்கப்பட்டுள்ள இலங்கை தொடர்பான விரிவான எழுத்துமூல அறிக்கை, கூட்டத்தொடரின் ஆரம்ப நாளான 8 ஆம் திகதி உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் பேரவையில் சமர்ப்பிக்கப்படும். இது இவ்வாறிருக்க பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடரில் பிரிட்டன் தலைமையிலான இணையனுசரணை நாடுகள் இலங்கை தொடர்பில் புதிய பிரேரணையொன்றை சமர்ப்பிக்கவுள்ளன. அப்பிரேரணையில் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையிலான அரசாங்கம் வாக்குறுதி அளித்தவாறு புதிய அரசியலமைப்பு உருவாக்கப்பணிகளை விரைவில் ஆரம்பிக்கவேண்டும், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குதல் மற்றும் அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தின் பிரகாரம் மாகாணசபைத்தேர்தல்களைத் தொடர்ந்து காலந்தாழ்த்தாமல் விரைவாக நடாத்துதல் ஆகிய விடயங்கள் உள்வாங்கப்படவுள்ளன. அதேவேளை செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழி விவகாரம் சர்வதேச கவனம் பெற்றிருக்கும் நிலையில், மனிதப்புதைகுழிகளுடன் தொடர்புடைய விடயங்களும் இணையனுசரணை நாடுகளின் புதிய பிரேரணையில் உள்ளடக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/222708
இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி
இலங்கையில் மாறாத கட்டமைப்பு மீறல்கள்: பொறுப்புக்கூறல் பொறிமுறையின் அவசியத்தை உணர்த்துகிறது - மீனாட்சி கங்குலி 17 Aug, 2025 | 10:03 AM (லியோ நிரோஷ தர்ஷன்) இலங்கையில் கடந்தகால மனித உரிமை மீறல்களுக்கு வழிவகுத்த கட்டமைப்பு ரீதியான காரணிகள் இன்றும் தொடர்வதை ஐக்கிய நாடுகள் சபையின் சமீபத்திய மனித உரிமைகள் அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளதாக மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவித்துள்ளார். இந்த அறிக்கை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கண்காணிப்பு மற்றும் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தின் அவசியத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் செப்டெம்பர் மாதம் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரை முன்னிறுத்தி வெளியிடப்பட்டுள்ள இந்த அறிக்கை, இலங்கையின் மனித உரிமைகள் நிலை குறித்த ஒரு கவலைக்குரிய சித்திரத்தை முன்வைப்பதுடன், சர்வதேச சமூகம் ஏன் இலங்கை விடயத்தில் தனது கண்காணிப்பைத் தளர்த்தக்கூடாது என்பதற்கான ஒரு எச்சரிக்கை மணியாகவும் உள்ளது. ஐ.நா. அறிக்கை குறிப்பிடும் கட்டமைப்பு ரீதியான காரணிகள் என்பது தற்காலிகப் பிரச்சினைகள் அல்ல மாறாக, அவை நாட்டின் நிர்வாக, சட்ட மற்றும் பாதுகாப்பு இயந்திரங்களில் ஆழமாக வேரூன்றியுள்ள நீண்டகாலப் பிரச்சினைகளாகும். சர்வதேச கண்டனங்கள் இருந்தபோதிலும், தன்னிச்சையான கைதுகளுக்கும், சித்திரவதைகளுக்கும் வழிவகுக்கும் பயங்கரவாதத் தடைச் சட்டம் இன்னும் முழுமையாக நீக்கப்படவில்லை. போர்க்குற்றங்கள் மற்றும் பாரிய மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டதாகக் குற்றஞ்சாட்டப்பட்ட இராணுவ மற்றும் பொலிஸ் அதிகாரிகள் மீது நம்பகரமான விசாரணைகள் இன்றி, அவர்கள் தொடர்ந்தும் பதவிகளில் நீடிக்கப்பட்டுள்ளனர். மேலும் கடந்தகால மீறல்களுக்குப் பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவதற்கான முயற்சிகள் இல்லாமை மற்றும் உள்நாட்டு நீதிப் பொறிமுறைகள் தோல்வியடைந்தமை என்பன சர்வதேசத்தின் தலையீட்டை வலியுறுத்துகிறது. மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் குறிப்பிடும் ஐ.நா. உயர்ஸ்தானிகரின் பொறுப்புக்கூறல் செயற்றிட்டம் என்பது, இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் பாரிய மீறல்கள் தொடர்பான ஆதாரங்களைச் சேகரித்து, பாதுகாத்து, பகுப்பாய்வு செய்யும் ஒரு சர்வதேசப் பொறிமுறையாகும். இலங்கை இத்தகைய சர்வதேசப் பொறிமுறைகளைத் தொடர்ச்சியாக நிராகரித்து, நாட்டின் இறைமையில் தலையிடுவதாகக் குற்றம் சுமத்துகிறது. ஆகவே, எதிர்வரும் ஜெனீவா கூட்டத்தொடரில் இலங்கைக்கு எதிரான ஒரு புதிய தீர்மானத்தின் மூலம் பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்தை மேலும் வலுப்படுத்தவும், அதன் ஆயுட்காலத்தை நீட்டிக்கவும் சர்வதேச சமூகம் முன்வர வேண்டும் என்ற கோரிக்கையை வலுப்படுத்துகிறது. இலங்கையின் கட்டமைப்பு மாறாத வரை, சர்வதேசத்தின் கண்காணிப்பும் தளரக்கூடாது என மனித உரிமைகள் கண்காணிப்பகத்தின் ஆசியப் பிராந்தியத்துக்கான பிரதிப் பணிப்பாளர் மீனாட்சி கங்குலி வலியுறுத்தியுள்ளார். https://www.virakesari.lk/article/222709
இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி
இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திர தமிழர் தாயகம் வேண்டுமென்ற அடிப்படையில் அனைவரும் ஹர்த்தாலுக்கு ஆதரவை வழங்குங்கள் - ரவிகரன் எம்.பி 17 Aug, 2025 | 10:09 AM வடக்கு, கிழக்கு தமிழர் தாயகத்தில் அதிகரித்துள்ள்இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை (18) இடம்பெறவுள்ள பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் ஒத்துழைப்பு நல்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அழைப்பு விடுத்துள்ளார். அதேவேளை இராணுவப் பிரசன்னமற்ற சுதந்திரமான வடக்கு, கிழக்கு தமிழர் தாயகம் வேண்டுமென்ற எமது அடிப்படை மனித உரிமைக் கோரிக்கையினை சர்வதேச மட்டத்தில் ஓங்கி ஒலிக்கச்செய்வதற்காக அனைவரும் இக் ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்கவேண்டுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் வலியுறுத்தியுள்ளார். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப்பரப்பில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கெதிராக எதிர்வரும் 18ஆம் திகதி இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்கு தழுவிய ஹர்த்தாலுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்கக்கோரி வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் வெளியிடப்பட்ட அறிக்கையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவ்வறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் பிரதேசசெயலாளர் பிரிவிலுள்ள முத்துஐயன்கட்டு இடதுகரை ஜீவநகர் பகுதியைச்சேர்ந்த ஐந்து இளைஞர்கள் கடந்த 07.08.2025அன்று, முத்துஐயன்கட்டு பகுதியிலுள்ள 63ஆவது இராணுவமுகாமைச்சேர்ந்த இராணுவத்தினரால் அழைக்கப்பட்டு மிகக் கொடூரமாகத் தாக்கப்பட்டுள்ளனர். இராணுவத்தின் குறித்த தாக்குதல் சம்பவத்தையடுத்து, இராணுவமுகாமிற்குச் சென்ற ஐவரில் ஒருவரான 32வயதுடைய ஒரு பிள்ளையின் தந்தை எதிர்மன்னசிங்கம் கபில்ராஜ் காணாமல்போயிருந்தார். இந்நிலையில் இவ்வாறு காணாமல்போயிருந்தவர் கடந்த 09.08.2025அன்று முத்துஐயன்கட்டுக்குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து இடம்பெற்ற விசாரணைகளையடுத்து, கடந்த 09.08.2025அன்று மேஜர் தரத்திலான இராணுவ அதிகாரி ஒருவர் உட்பட ஐந்து இராணுவத்தினர் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து இரு இராணுவத்தினர் விடுவிக்கப்பட்டுள்ளதுடன் மூன்று இராணுவத்தினர் எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். குறித்த இராணுவத்தின் தாக்குதல் சம்பவமும், அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் காணாமல்போய் குளத்திலிருந்து சடலமாக மீட்கப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் இராணுவத்தின் முறையற்ற செயற்பாடுகளும், முல்லைத்தீவு மாவட்டத்தில் மிதமிஞ்சிய இராணுவமயமாக்கமுமே காரணமாக அமைந்துள்ளது. குறிப்பாக இராணுவத்தினர் தேவையற்றவிதத்தில் அப்பகுதி இளைஞர்களுடன் நெருக்கமான தொடர்புகளைப்பேணிவந்துள்ளனர். அத்தோடு அப்பகுதி மக்களின் வறுமைநிலையைப் பயன்படுத்தி இளைஞர்களை முறைகேடான, சட்டவிரோத செயற்பாடுகளுக்கு இராணுவத்தினர் தூண்டிவிட்டுள்ளதுடன், சட்டவிரோத செயற்பாடுகளுக்கும் பயன்படுத்திவந்துள்ளனர். அந்தவகையில் இராணுவத்தினரால் அப்பகுதி இளைஞர்களுக்கு இராணுவமுகாமிலுள்ள பொருட்கள், தளபாடங்கள், எரிபொருள் என்பவற்றுடன் இராணுவத்தினரால் காட்டுமிருகங்கள் வேட்டையாடப்பட்டு இப்பகுதி இளைஞர்களிடம் விற்பனைக்காக வழங்கப்பட்டுவந்ததாகவும் அப்பகுதி மக்களாலேயே எமக்கு முறையிடப்பட்டது. இவ்வாறு இளைஞர்களுக்கு வழங்கப்படும் பொருட்களுக்கு மாற்றீடாக போதைப்பொருட்களைப் பெற்றுத்தருமாறு 63ஆவது இராணுவமுகாம் இராணுவத்தினர் அப்பகுதி இளைஞர்களைத் தூண்டிவிட்டுள்ளனர். இவ்வாறாக இராணுவத்தினரின் முறையற்ற செயற்பாடுகள், தொடர்பாடல்களின் பின்னணியிலேயே இந்த தாக்குதல் சம்பவமும் அதன்பின்னர் குடும்பஸ்தர் ஒருவர் படுகொலைசெய்யப்பட்ட சம்பவமும் பதிவாகியிருக்கின்றது. இவ்வாறாக அப்பகுதி இளைஞர்களுடன் முறையற்றவிதத்தில் தொடர்பினைப் பேணிவந்தார்கள் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையிலேயே இராணுவத்தினர் மூவரை எதிர்வரும் 19ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றமும் உத்தரவிட்டுள்ளது. ஆகவே இந்தச் சம்பவத்திற்கு இராணுவத்தினரே முற்றுமுழுதான பொறுப்பாளிகளாகக் காணப்படுகின்றனர். மேலும் அதிகரித்த இராணுவப் பிரசன்னமென்பது முல்லைத்தீவு மாவட்டத்தில் மாத்திரமின்றி வடக்கு, கிழக்கு தமிழர் தாயகப் பரப்பெங்கும் அதிகரித்துள்ள நிலையே காணப்படுகின்றது. யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகளாகியுள்ளநிலையில் வடக்கு, கிழக்கில் இவ்வாறான அதிகரித்த இராணுவப்பிரசன்னம் தேவையற்ற ஒன்றாகும். இவ்வாறாக யுத்தம் மௌனித்து ஒன்றரைத் தசாப்தகாலம் கடந்துவிட்ட சூழலில் வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்தில் தொடர்ந்து இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதை ஒருபோதும் எம்மால் ஏற்றுக்கொள்ளமுடியாது. அதேவேளை இவ்வாறு வடக்கு,கிழக்கு தமிழர் தாயகப்பரப்பில் இராணுவப் பிரசன்னம் அதிகரித்திருப்பதன் பின்னணியில் இடம்பெறக்கூடிய கொடூரமான சம்பவங்களையும் தொடர்ந்தும் எம்மால் அனுமதிக்கமுடியாது. எனவேதான் வடக்கு, கிழக்கில் இவ்வாறு அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக திங்கட்கிழமை(18) வடக்கு, கிழக்கு தமிழர்தாயகம் தழுவியரீதியில் பூரணகர்த்தாலுக்கு இலங்கைத் தமிழ் அரசுக்கட்சி அழைப்புவிடுத்துள்ளது. இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியால் எனக்கு பொறுப்பளிக்கப்பட்டவகையில் முல்லைத்தீவு மாவட்டத்திலுள்ள வர்த்தக சங்கங்கள், தனியார் பேருந்து உரிமையாளர்கள் சங்கம், முச்சக்கரவண்டி உரிமையாளர்கள் சங்கம் உள்ளிட்ட தரப்பினர்களுக்கு நேரடியாகவும், தொலைபேசியூடாகவும் கர்த்தாலுக்கான ஆதரவைநல்குமாறு கோரியுள்ளேன். அதேவேளை வன்னி மக்களின் பாராளுமன்ற பிரதிநிதிஎன்ற வகையில் வன்னியிலுள்ள அனைத்துத் தரப்பினரும் இந்த ஹர்த்தாலுக்கு பூரண ஆதரவினை வழங்குமாறு கேட்டுக்கொள்வதுடன், வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பிலுள்ள அனைவரும் இந்த பூரண ஹர்த்தாலுக்கு ஆதரவுநல்கி வடக்கு, கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னத்திற்கு எதிராக எமது முழுமூச்சான எதிர்ப்பினை காண்பிக்குமாறு அனைத்துத் தரப்பினருக்கும் அழைப்புவிடுக்கின்றேன். மேலும் யுத்தம் மௌனிக்கப்பட்டு 16ஆண்டுகள் ஆகியுள்ளசூழலில் வடக்கு,கிழக்கில் தொடர்ந்தும் இராணுவக் கெடுபிடிக்குள் எமது மக்களை வைத்திருப்பது அடிப்படை மனித உரிமை மீறலாகும். வடக்கு, கிழக்கு தமிழர்தாயகத்திலுள்ள எமது மக்கள் வீட்டுக்காவலில் உள்ள குற்றவாளிகளைப்போல தொடர்ந்தும் இராணுவக் கண்காணிப்பில், அதிகரித்த இராணுவ பிரசன்னத்திற்கு மத்தியில் ஓர் அவல வாழ்வினையே வாழ்கின்றார்கள். எனவே வடக்கு, கிழக்குத் தமிழர் தாயகப்பரப்பிலுள்ள எமது மக்கள் நாட்டின் ஏனைய பாகங்களில் உள்ள மக்களைப்போல இராணுவப் பிரசன்னமில்லாது சுதந்திரமாக வாழவேண்டுமென்ற அடிப்படை மனித உரிமையினையே நாங்கள் கோருகின்றோம். அதற்காகவே இந்த வடக்கு, கிழக்குரீதியிலான பூரண கர்த்தாலுக்கு அழைப்பு விடுக்கின்றோம். இந்நிலையில் ஐக்கியநாடுகள் மனிதஉரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் செப்டெம்பர்மாதம் 08ஆம் திகதி இடம்பெறவுள்ளது. எனவே எதிர்வரும் 18.08.2025அன்று இடம்பெறவுள்ள வடக்கு, கிழக்குத்தழுவிய பூரண ஹர்த்தாலுக்கு அனைவரும் முழுஆதரவினை நல்குவதன் ஊடாக, வடக்கு கிழக்கில் அதிகரித்துள்ள இராணுவப் பிரசன்னம் உடனடியாக அகற்றப்படவேண்டும் என்ற எமது அடிப்படை மனிதஉரிமைக் கோரிக்கையினை முழுசர்வதேசத்திற்கும் வலுவாக முன்வைப்போம் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/222715
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள்
வட, கிழக்கில் எதிர்வரும் 30 ஆம் திகதி மாபெரும் கவனயீர்ப்புப் போராட்டங்கள் 17 Aug, 2025 | 11:08 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமான எதிர்வரும் 30 ஆம் திகதி வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் ஏற்பாட்டில் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இவ்வருடமும் எதிர்வரும் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் வடக்கிலும், கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இவ்விரு போராட்டங்களும் நடைபெறவிருக்கும் இடங்கள் தொடர்பான விபரங்கள் பின்னர் அறிவிக்கப்படும். அதேவேளை எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 22 ஆம் திகதி ஜெனீவாவில் ஆரம்பமாகவுள்ள வலிந்து காணாமலாக்கப்படல்கள் தொடர்பான குழுவின் 29 ஆவது கூட்டத்திலும் வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தின் சார்பில் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர். https://www.virakesari.lk/article/222724
பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு
பிள்ளையானின் கீழ் செயற்பட்ட மேலும் 6 துப்பாக்கிதாரிகளுக்கு சிஐடி வலைவீச்சு 17 August 2025 பல குற்ற சம்பவங்களில், பிள்ளையான் எனப்படும் முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனின் கீழ் பணியாற்றியதாக கூறப்படும் மேலும் ஆறு துப்பாக்கிதாரிகளை கைது செய்வதற்கு குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக அரச ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. அந்த திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக தடுத்து வைக்கப்பட்டுள்ள,பிள்ளையான் மற்றும் இனியபாரதி எனப்படும் கிழக்கு மாகாண சபை முன்னாள் உறுப்பினர் கே.புஷ்பகுமார் ஆகியோரிடம் நடத்தப்பட்ட நீண்ட விசாரணைகளின் போது இந்தக் குழு பற்றிய தகவல்கள் தெரியவந்துள்ளன. இந்த இருவரும் வெளிப்படுத்திய தகவல்களின் அடிப்படையில், துப்பாக்கிச் சூட்டில் ஈடுபட்ட இரண்டு நபர்கள் கடந்த வாரம் மட்டக்களப்பு மற்றும் கொழும்பின் வாழைத்தோட்டம் ஆகிய பகுதிகளில் வைத்து கைது செய்யப்பட்டனர். 2007-2008 ஆம் ஆண்டு காலகட்டத்தில் பிள்ளையானின் தலைமையிலான ஆயுதக் குழு, மட்டக்களப்பு மாவட்டம் மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசியல்வாதிகள், அரச அதிகாரிகள் மற்றும் பொதுமக்களை கொலைசெய்தமை, கடத்தியமை மற்றும் காணாமல் போகச் செய்தமை தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டமை தொடர்பான தகவல் தற்போது வெளியாகியுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்கள தகவல்களை மேற்கோள் காட்டி குறித்த அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. https://hirunews.lk/tm/415017/cid-nets-6-more-gunmen-who-operated-under-pillayan
முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம்
முத்தையன்கட்டு சம்பவம்: அரசாங்க தரப்பு விரிவான விளக்கம் 17 August 2025 முல்லைத்தீவு - முத்தையன்கட்டு பகுதியில் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பான தகவல்களை திரிபுபடுத்தி சில தரப்புகள் அரசியல் லாபம் பெற முயற்சிப்பதாகவும், இதனை அரசு வன்மையாக கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளர் அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளிக்கும் வகையில் அரசாங்கம் தகவல் திணைக்களத்தில் இன்று (17) இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு அவர் இதனை தெரிவித்தார். ஒட்டுச்சுட்டான் - முத்தையன்கட்டு பகுதியிலுள்ள இராணுவ முகாமுக்குள் கடந்த 7 ஆம் திகதி 5 பேர் அத்துமீறி நுழைய முயன்றுள்ளனர். அதன்போது, அங்கிருந்த சில சிப்பாய்கள் அவர்களை தாக்கி, அங்கிருந்து விரட்டியுள்ளனர். குறித்த நபர்களை அங்கிருந்த தப்பியோடியபோது, ஒருவர் நீரில் மூழ்கி காணாமல் போயிருந்த நிலையில் பின்னர் உடலமாக மீட்கப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில் 3 இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். இந்தநிலையில், இந்த சம்பவத்தை திரிபுபடுத்தி தவறான தகவல்களை வழங்கி, சில அரசியல் குழுக்கள் வடக்கு மற்றும் தென்னிலங்கை மக்களிடையே குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிப்பதை அவதானிக்க முடிகிறது. இந்த சம்பவத்தை அவர்கள், இராணுவத்தினரால் தாக்கப்பட்டு பொதுமகன் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார் என காண்பிப்பதற்கு முயற்சிக்கின்றனர். சிலர் தங்களது அரசியல் நோக்கங்களை நிறைவேற்றிக்கொள்வதற்கு தவறான தகவல்களை மக்கள் மத்தியில் கொண்டு சேர்த்து அமைதியை சீர்குலைக்க முயல்கின்றனர். இந்த சம்பவம் தொடர்பில் முறையாக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன இதனிடையே, இராணுவ முகாமில் திருட்டில் ஈடுபட்டதாகக் கூறப்படும் சந்தேகநபர்கள் தொடர்பான பீ அறிக்கையையும் ஒட்டுச்சுட்டான் காவல்துறையினர் தயாரித்துள்ளனர். சந்தேகநபர்களுக்கு தற்போது, அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதுடன் அவர்கள் விரைவில் மன்றில் முன்னிலைப்படுத்தப்படுவர். இந்தநிலையில், கடந்த கால சம்பவங்களை மனதில் வைத்துக் கொண்டு இந்த சம்பவத்தை அதனுடன் தொடர்புபடுத்தி மக்கள் மனதில் ஆத்திரத்தை ஏற்படுத்துவதற்கு, சில குழுக்கள் முன்னெடுக்கும் முயற்சிகளை அரசாங்கம் கண்டிக்கிறது எனவும் அமைச்சரவை பேச்சாளரும் அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இதனிடையே, உயிரிழந்த இளைஞரின் மரணத்துக்கு எந்தவித பாரிய காயங்களுக்கு நேரடியாக பங்களிக்கவிலலை என அவரது பிரேத பரிசோதனையில் தெரியவந்துள்ளது எனவும் எச்சங்கள் உடற்கூறாய்வுக்கும் அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். இராணுவ பேச்சாளரின் விளக்கம் இந்த ஊடக சந்திப்பில் கலந்துகொண்டு இராணுவ பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, இராணுவம் சார்பில் இந்த சம்பவம் தொடர்பில் விளக்கமளித்தார். முத்தையன்கட்டு முகாமிற்குள், நுழைந்ததாக சந்தேகிக்கப்படும் சந்தேகநபர்களில் ஒருவர் இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்டு, காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டார். முன்னதாகவும்,இராணுவ முகாமுக்குள் நுழைந்து திருட முயன்றமை தொடர்பில், அவருக்கு எதிராக நீதிமன்றில் வழக்கு தொடரப்பட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. எனினும், மற்றொரு இளைஞர் உயிரிழந்த சம்பவத்துக்கு இராணுவத்தினருக்கு எவ்வித தொடர்பும் இல்லை என விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இராணுவத்தினரின் பொறுப்பில் எடுக்கப்பட்ட நபரே இராணுவ சிப்பாய் ஒருவரால் தாக்கப்பட்டார் என விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும், உயிரிழந்ததாக கூறப்படும் நபரை அவர் தாக்கியிருக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார். எனவே, காவல்துறை முன்னெடுக்கும் விசாரணைக்கு பக்கசார்பின்றி இராணுவம் ஆதரவளிக்கும் எனவும் இராணுவ பேச்சாளர் தெரிவித்துள்ளார். காவல்துறை பேச்சாளரின் விளக்கம் இதேவேளை, இந்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் தொடர்பில் காவல்துறை பேச்சாளர், சிரேஷ்ட காவல்துறை அத்தியட்சகர் எவ்.யூ.வுட்லர் விளக்கமளித்தார். இந்த சம்பவம் தொடர்பான ஒட்டுச்சுட்டான் காவல்நிலையத்தினால் இரண்டு விசாரணைக்குழுகள் நியமிக்கப்பட்டுள்ளன. 13 இராணுவம் சிப்பாய்கள் உட்பட மேலும் பலரிடம் இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அடுத்தகட்ட சட்டநடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். சம்பவம் தொடர்பில், முகாமுக்குள் திருட வந்தவர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கிய குற்றச்சாட்டில் 2 இராணுவ சிப்பாய்களும், மற்றையவர் தாக்குதல் தொடர்பில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். முகாமுக்குள் சந்தேகநபர்களை அனுமதித்ததாக சந்தேகிக்கப்படும் குற்றச்சாட்டிலேயே இரு இராணுவ சிப்பாய்கள் கைதுசெய்யப்பட்டனர். சிவிலியன்கள் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேய மற்றைய சிப்பாய் தாக்குதல் தொடர்பில் செய்யப்பட்டதாகவும், அவர் அடையாள அணிவகுப்புக்கு உட்படுத்தப்படுவார் எனவும் காவல்துறை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார். https://hirunews.lk/tm/415018/muthaiyankattu-incident-detailed-explanation-from-the-government#google_vignette
இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை
இந்தியாவில் இருந்து கப்பலில் வரும் பயணிகளுக்கு விசேட சலுகை இந்தியாவில் இருந்து கப்பலில் இலங்கை வரும் பயணிகளுக்கு விசேட அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்திய பாடசாலை மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு இலங்கையில் தங்குவதற்கு சிறப்புச் சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. கப்பல் பயணச்சீட்டு கட்டணம் மற்றும் பயணச் செலவு என அனைத்தையும் சிறப்புச் சலுகையாக 9,999 இந்திய ரூபாயாகக் கப்பல் நிறுவனம் அறிவித்துள்ளது. மாணவர்களை ஒருங்கிணைத்து அழைத்து வரும் 2 ஆசிரியர்களுக்கு இலவச பயணச்சீட்டு வழங்கப்படும் என கப்பல் நிறுவன உரிமையாளர் சுந்தர்ராஜன் தெரிவித்துள்ளார். https://www.samakalam.com/இந்தியாவில்-இருந்து-கப்ப/
மலரும் நினைவுகள் ..
கொஞ்சம் ரசிக்க
களைத்த மனசு களிப்புற ......!
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
சிந்திக்க வைக்கும் சில பதிவுகள் .. இங்கே என்ன சொல்கிறது
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
வடக்கு & கிழக்கு மாகாணங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் வெறும் 10% மட்டுமே பங்களிப்பு வழங்குகின்றன. அதில் பெரும்பாலானவை முஸ்லிம்களுக்கும், சிங்களவர்களுக்குமே சொந்தமானவை. வடக்கு-கிழக்கு தமிழர்கள் நமது நாட்டுப் பொருளாதாரத்தில் வழங்கும் பங்களிப்பு மிகக் குறைவாகும். வடக்கு கிழக்கில் தமிழர்கள் ஹர்த்தால் நடத்துவதால் அது நாட்டின் பொருளாதாரத்தில் எந்தப் பாதிப்பையும் கொடுக்கப் போவதில்லை. ஐக்கிய நாடுகள் சபைக் கூட்டம் அடுத்த மாதம் நடைபெறுறதாலதான் இந்த ஹர்த்தால் என்று உருளுறீங்களே. ஐக்கிய நாடுகள் சபை என்பது எவ்வளவு பெரிய டம்மிப் பீஸ் என்று இப்ப காஸால நடக்குற அழிவைப் பார்த்தாலே உங்களுக்குத் தெரியுறல்லயா? வர்த்தக சங்கங்கள் ஹர்த்தால் அன்றைக்கு கடைய முடிடுவானுகள். கடைகள்ல இருக்கிற பொருள் அன்றைக்கு விற்காட்டி அடுத்த நாள் விற்கலாம். ஆனால் அந்தக் கடைகள்ல வேலை செய்யுற ஆட்களுக்கு அன்றைய நாள் சம்பளம் கிடைக்காது. அதே மாதிரி தினக்கூலி வேலை செய்யுற எவருக்குமே அன்றைய நாள் வருமானம் கிடையாது. வடக்கு கிழக்கில் இருக்குறதுல 50%க்கு மேற்பட்ட மக்கள் தினக்கூலிகள்தான். ஒவ்வொருத்தனுக்கும் கட்ட வேண்டிய லீசிங் காசு, லோன் காசு, வட்டிக் காசு, சேமிக்க வேண்டிய காசு என்று எல்லாத்துலயும் துண்டு விழும். அரசாங்கத்துக்கு எதிராக போராட்டம் நடத்த வேண்டும் என்றால் மக்களை ஒன்றாகத் திரட்டி பேரணியாகச் சென்று ஆர்ப்பாட்டம் பண்ணுங்க. ஆர்ப்பாட்டம் பண்ண விரும்புறவன் வருவான். அதுல மக்கள் ஆதரவு உங்களுக்கு எந்த அளவு இருக்குது எண்டு தெரியும். இதுவரைக்கும் பல ஹர்த்தால்கள் நடத்தியிருக்கிறீங்க, அதனால ஏதாவது பயன் வந்திருக்குதா? அத விட்டுப்போட்டு Elite குரூப் நீங்க எல்லாம் ஹர்த்தால் என்ற பெயர்ல ஒருநாள் லீவு போட்டு குடும்பத்தோட இருக்கிறதுக்கு எதுக்கு தினக்கூலிகள் பாதிக்கப்படனும்? உண்மை உரைகல்
இரசித்த.... புகைப்படங்கள்.
பிரபல சத்திர சிகிச்சை நிபுணர் சுதர்சன் காலமானார்!
குழாய் வழி சத்திர சிகிச்சைகளின் இமயம் சத்திர சிகிச்சை நிபுணர் அவர்களின் இறுதிக்கிரியைகள் இன்று காலை 11.00 க்கு கோண்டாவிலில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும். Shanmuganathan Piratheepan Theepan
ஆடி மாத சிரிப்புகள்.
ஆடி மாசம் முடிந்தது. இனி புது மாப்பிளைகள்... மனைவியை தாய் வீட்டில் இருந்து கூட்டிக் கொண்டு போகலாம். 😂
சிரிக்கவும் சிந்திக்கவும் .
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் இராணுவ பிரசன்னத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து வெள்ளிக்கிழமை முழு ஹர்தால் அறிவிப்பு - எம்.ஏ.சுமந்திரன்
நல்லாட்சி (?) அரசாங்கம் பதவியிலிருந்த போது யாழ்ப்பாண பல்கலை கழக துணைவேந்தர் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் இராணுவத்தினரின் அழுத்தத்தின் கீழ் பதவி நீக்கம் செய்யப்பட்டு இருந்தார் அதாவது உயர் கல்வி நிறுவனமொன்றின் தலைவர் ஒருவரை தன் எண்ணத்திற்கேற்ப இராணுவம் பதவி நீக்கியிருந்தது இந்நிலையில் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் தான் பதவி நீக்கப்பட்டமை தொடர்பில் உயர் நீதிமன்றத்தில் அடிப்படை மனித உரிமை மீறல் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார் . குறித்த வழக்கின் போது அப்போதைய பல்கலைக்கழக மானிய ஆணைக்குழு தலைவர் உயர் நீதிமன்றிற்கு வழங்கிய சத்தியக் கூற்றில் 'தமிழமுதம்' என்ற நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டமை, தமிழ் அரசியல் கோரிக்கைகள் உள்ளடங்கிய நினைவு தூபி அமைக்கப்படுவதை தடுக்கத் தவறியமை ஆகியன தொடர்பில் இராணுவப் புலனாய்வு தனக்களித்த முறைப்பாட்டின் அடிப்படையிலேயே அவர் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக கூறியிருந்தார். இந்த மோசமான விளக்கத்தையும் ஏற்று உயர் நீதிமன்றம் பேராசிரியர் விக்கினேஸ்வரனின் பதவி நீக்கத்தை சவாலுக்கு உட்படுத்திய மனுவை விசாரணை கூட இன்றி தள்ளுபடி செய்திருந்தது எந்த குற்றமும் செய்யாத துணைவேந்தரான தன்னை இராணுவ மேலாதிக்கம் பதவி நீக்கம் செய்தமை , அதனை ஏற்று தன் வழக்கை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தமை உட்பட்ட மன அழுத்தங்களால் பேராசிரியர் விக்கினேஸ்வரன் அவர்கள் மாரடைப்பினால் இறந்து போயிருந்தார் ஆனால் நல்லாட்சி அரசங்கத்தில் அதிகாரமிக்கவர்களாகவிருந்த திரு சுமந்திரன் அவர்கள் உட்பட எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் இராணுவமேலாதிக்கம் குறித்து ஒரு மூச்சு கண்டனம் தானும் விடவில்லை. மாறாக திரு சுமந்திரன் உட்பட எங்கள் பாராளமன்ற உறுப்பினர்களே இராணுவத்தை மக்கள் மத்தியில் இயல்பாக்கம் (normalisation of the military) செய்யும் வேலையை செய்தார்கள் இது போதாதென்று திரு ரணில் விக்ரமசிங்கேவின் பங்காளிகளாக உயர் கல்வி அமைச்சராகவிருந்த திரு ரவூப் ஹக்கீம் முதல் அமைச்சராகவிருந்த திரு மனோ கணேசன் யாருமே இராணுவ அதிகாரத்தின் அத்துமீறல்கள் குறித்தோ இராணுவமயமாக்கல் குறித்தோ ஒரு போதும் பேசவில்லை இது போதாதென்று நல்லாட்சியில் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் அதிகாரமிக்கவர்களாகவிருந்த போது தான் நாவற்குழி காணாமல்போனோர் ஆட்கொணர்வு வழக்கின் விசாரணையின் போது நீதிமன்ற வளாகத்தில் வைத்தே மனுதாரர்கள் , அவர்களின் சட்டத்தரணிகளை அச்சுறுத்துமளவிற்கு எல்லை மீறியிருந்தது ஆனால் எல்லா அக்கிரமங்கள் போதும் எங்கள் பாராளமன்ற உறுப்பினர்கள் மிக மௌனமாகவே கடந்து இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள் இங்கே இராணுவமயமாக்கலை எதிர்ப்பது ஓர் அரசியல் சித்தாந்த நிலைப்பாடக மட்டும் இருக்க முடியாது இது சமூகத்தின் இருத்தல் (existentialist) பிரச்சனை. தனி நபர்களின், சமூகத்தின் கூட்டு உளவியல் எதிர்காலம் தொடர்பான பிரச்சனை. ஆனால் சாதாரண மக்கள் (கேப்பாப்பிலவு. இரணைதீவு, காணாமல் போனோர் உறவுகள் இன்னும் வேறு பல) துணிந்து இராணுவத்திற்கு எதிராகப் போரிட தேர்தல் அரசியலால் பதவிக்கு வந்தோர் இராணுவமயமாக்கலை இயல்பாக்க துணை போனார்கள் இப்போது எந்தவித அதிகாரமும் அற்ற நிலையில் இருக்கும் எமது அரசியல் வாதிகள் இப்போதாவது தங்களின் நடவடிக்கைகளால் மக்களுக்கு சோர்வை கொடுக்காமல் இருக்க நேர்மையாக முயற்சிக்க வேண்டும். இனமொன்றின் குரல்
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன்.
மனித உரிமைகள் ஆணையாளருடைய இறுதி செய்யப்படாத அறிக்கை! நிலாந்தன். மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையின் முதல் வடிவம் வெளியிடப்பட்டிருக்கிறது. எதிர்பார்க்கப்பட்டதை போல தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்கும் நோக்கம் அந்த அறிக்கையில் உண்டு. மூன்று இனங்களுடையதும் ஆணையைப் பெற்று வந்திருக்கும் இந்த அரசாங்கம் பொறுப்புக்கூறும் விடயத்தில் “இறந்த காலத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வருவதற்கான வாய்ப்புக்களைப் பயன்படுத்த வேண்டும்” என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பதாகத் தெரிகிறது. அது ஐநாவின் எதிர்பார்ப்புத்தான். நிச்சயமாக யதார்த்தமல்ல. இது ஏறக்குறைய 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின் வந்த நிலைமையை நினைவுபடுத்துவது.2015 ஆட்சி மாற்றத்தின் போதும் மூவினங்களும் இணைந்து ரணில் மைத்திரி அரசாங்கத்தை கொண்டு வந்தன.எனவே புதிய அரசாங்கத்துக்கு கால அவகாசத்தை கொடுக்கும் நோக்கத்தோடு ஜெனிவா கூட்டத்தொடர் செப்டம்பர் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டு, தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.அதுவரையிலும் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் இலங்கை அரசாங்கங்களுக்கு எதிரானவை.எனவே இலங்கை அரசாங்கங்களும் அதன் நட்பு நாடுகளும் அந்த தீர்மானத்தை எதிர்த்து வாக்களித்துவந்தன. ஆனால் 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட பொறுப்புக் கூறலுக்கான ,அதாவது நிலை மாறு கால நீதிக்கான தீர்மானம் எனப்படுவது இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்டது. இலங்கை அரசாங்கத்தின் இணை அனுசரணையோடு நிறைவேற்றப்பட்ட முதலாவது தீர்மானம் அது.அந்த தீர்மானத்தின் பிரகாரம் இலங்கை அரசாங்கம் நிலைமாறு கால நீதியை இலங்கைத் தீவில் ஸ்தாபிப்பதற்கு ஒப்புக்கொண்டது. அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்தின் பங்காளியாக மாறி அந்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்காக உழைத்தது. இது பழைய கதை. இப்பொழுது அதே கதை திரும்பி வருகிறது. ஆனால் அரசாங்கம் வித்தியாசமானது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை பகை நிலைக்கு தள்ளாத விதத்தில் மீண்டும் ஐநா மனித உரிமைகள் பேரவை நகர்வுகளை முன்னெடுப்பதாக தெரிகிறது. இது அண்மையில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வந்து போனபோது ஊகிக்கப்பட்டது.அவர் தன்னுடைய இலங்கைப் பயணத்தின் முடிவில் தெரிவித்த கருத்துக்களில் இருந்து அதை உணரக்கூடியதாக இருந்தது. இப்பொழுது அவருடைய வருகைக்குப் பின்னரான திருத்தப்படாத அறிக்கை வெளிவந்திருக்கிறது.அந்த அறிக்கையின்படி புதிய அரசாங்கத்துக்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஐநாவிடம் இருப்பது தெரிகிறது. அந்த அடிப்படையில்தான் வரும் செப்டம்பர் மாதம் நடக்கவிருக்கும் ஐநா மனித உரிமைகள் கூட்டத் தொடரிலும் முடிவுகள் எடுக்கப்படலாம் என்பதனை இப்பொழுதே ஊகிக்கத்தக்கதாக உள்ளது. இது ஏற்கனவே எதிர்பார்க்கப்பட்ட ஒன்று.சில கிழமைகளுக்கு முன் யாழ்ப்பாணம் ரில்க்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பின்போது அதாவது ஐநாவுக்கு கடிதம் எழுதுவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பின்போது இது சுட்டிக்காட்டப்பட்டது. ஐநா பல விடயங்களை ஏற்கனவே இறுதி செய்து விட்டது. அதன்படி புதிய அரசாங்கத்திற்கு வாய்ப்புகளை வழங்கும் நோக்கம் ஐநாவிடம் உண்டு என்ற விளக்கம் அந்த சந்திப்பில் இருந்தது. ஒரு புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்திருப்பதனால் அதற்கு ஒரு வாய்ப்பை வழங்க வேண்டும் என்று ஐநா சிந்திக்கின்றதா?ஆனால் ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அறிக்கைகள் ஒரு விடயம் சுட்டிக்காட்டப்பட்டிருக்கிறது. தொடர்ச்சியாக வந்த அரசாங்கங்கள் முழுமையாக பொறுப்பு கூறவில்லை என்பதுதான் அது.அவ்வாறு இலங்கையின் சிங்கள பௌத்த அரசாங்கங்கள் கடந்த 16 ஆண்டுகளுக்கு மேலாக பொறுப்புக் கூறத் தவறியிருக்கும் ஒரு வரலாற்று பின்னணியில், புதிய அரசாங்கம் மட்டும் பொறுப்பு கூறும் என்று ஐநா எப்படி எதிர்பார்க்கலாம்? ஏற்கனவே 2015 இல் இருந்து 18 வரையிலும் ரணில் மைத்திரி அரசாங்கம் பொறுப்புக் கூறும் என்று ஐநா எதிர்பார்த்தது. ஆனால் அந்த அரசாங்கத்தின் தமிழ்ப் பங்காளியாக இருந்து பொறுப்பு கூறுவதற்காக உழைத்த சுமந்திரன் கிட்டத்தட்ட ஆறு ஆண்டுகளின் பின் வவுனியாவில் வைத்துச் சொன்னார்.அது ஒரு தோல்வியுற்ற பரிசோதனை என்று. அதாவது ஆட்சி மாற்றத்தின் மூலம் அரசு கட்டமைப்பில் மாற்றம் வரும் என்ற கருதுகோள்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட நிலைமாறு கால நீதிச் செயற்பாடுகளில் பாதிக்கப்பட்ட தரப்பாகிய தமிழர் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சுமந்திரன் கூறுகிறார் அது தோல்வியுற்ற பரிசோதனை என்று. இப்பொழுது அதே தோல்விகண்ட பரிசோதனையை மற்றொரு புதிய அரசாங்கத்தோடு இணைந்து முன்னெடுக்க ஐநா தயாராகி வருகிறதா? ஏற்கனவே ரணில் மைத்திரி அரசாங்கத்துக்கு அதாவது நல்லாட்சி அரசாங்கத்துக்கு ஐ நா வாய்ப்புகளை வழங்கியது.ஆனால் அந்த வாய்ப்புகளை நிலை மாறுகால நீதியின் பெற்றோரில் ஒருவராகிய மைத்திரிபால சிறிசேனவே தோற்கடித்தார். இப்பொழுது மீண்டும் ஒரு தடவை தேசிய மக்கள் சக்திக்கு ஐநா வாய்ப்பை வழங்கக் கூடுமா? நிலைமாறு கால நீதிக்கான தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் நிறைவேற்றத் தவறிய ஒரு பின்னணிக்குள்தான் 46/1 தீர்மானம் 2021ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்டது.அத் தீர்மானத்தின் பிரகாரம் ஸ்ரீலங்காவை பொறுப்புக் கூற வைப்பதற்கான அலுவலகம் என்ற பெயரில் சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு உருவாக்கப்பட்டது. ஆனால் அந்தக் கட்டமைப்பைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.அதேசமயம்,அந்த அலுவலகம் அமைந்திருக்கும் ஐநா மனித உரிமைகள் ஆணையகத்தின் பொறுப்பதிகாரியான மனித உரிமைகள் ஆணையாளருக்கு இலங்கைக்கு வர விசா வழங்கப்பட்டதால் அவர் அண்மையில் இங்கு வந்து சென்றிருக்கிறார். இப்படித்தான் இருக்கிறது ஐநா தீர்மானங்களை இலங்கை அரசாங்கம் எப்படி நிறைவேற்றுகிறது மதிக்கிறது என்று அனுபவம்.இப்படிப்பட்டதோர் பின்னணியில் புதிய அரசாங்கத்துக்கு ஐநா வாய்ப்புகளை வழங்க கூடுமா? கடந்த 16 ஆண்டு கால ஐநா அனுபவத்தை தொகுத்து பார்க்கும் பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கின்றது. அதன்படி இலங்கையை எதிர் நிலைக்குத் தள்ளும் விதத்தில் இலங்கைக்கு எதிரான நடவடிக்கைகளை எடுப்பதற்கோ அல்லது இலங்கையை பாதிக்கக்கூடிய அழுத்தங்களை பிரயோகிப்பதற்கோ ஐநா தயார் இல்லை. மாறாக ஆட்சி மாற்றங்களின் போது ஏற்படக்கூடிய புதிய வாய்ப்புகளை கையாண்டு எப்படி புதிய இலங்கை அரசாங்கத்தை ஐநாவின் பொறுப்புக்கூறும் செய்முறைக்கு கடப்பாடு உடையதாக மாற்றலாம் என்றுதான் ஐநா முயற்சித்து வருகின்றது. அதாவது ஆட்சி மாற்றங்களின் மூலம் தமக்கு சாதகமான அரசியல் சூழல்கள் உருவாக்கும் பொழுது அவற்றைக் கையாள்வது. 2015-லும் அதைத்தான் செய்தார்கள்.இப்பொழுது 2025லும் அதைத்தான் செய்ய முயற்சிக்கின்றார்களா? அதாவது அரசாங்கங்கள் மாறும் பொழுது பொறுப்பு கூறுவதற்கான வாய்ப்புகள் மாறும் என்று ஐநா நம்புகிறதா? மேற்கு நாடுகள் நம்புகின்றனவா? ஆனால் இலங்கைத் தீவில் பொறுப்புக் கூறாமை என்பது அரசாங்கத்தின் கொள்கை மாற்றங்கள் சம்பந்தப்பட்ட ஒரு விடயம் அல்ல. அது சிங்கள பௌத்த அரசுக் கொள்கை. தேசிய மக்கள் சக்தி மட்டுமல்ல யார் அங்கே பொறுப்பில் இருந்தாலும் ஒரு கட்டத்துக்கு மேல் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூற மாட்டார்கள். பொறுப்புக் கூறுமாறு மூன்றாவது தரப்பு ஒன்று கடுமையான பயன் பொருத்தமான அழுத்தங்களைப் பிரயோகித்தால் தவிர சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு என்றைக்குமே முழுமையாகப் பொறுப்புக் கூறாது. இப்போது இருக்கும் தேசிய மக்கள் கட்சி அரசாங்கம் முழு அளவுக்கு பொறுப்பு கூறாது என்பதற்கு இரண்டு நடைமுறை உதாரணங்களைக் காட்டலாம். முதலாவது, அனுர ஜனாதிபதியாக தெரிவு செய்யப்படுவதற்கு முன்பு அசோசியேட்டட் நியூஸ் பிரஸ் ஊடகத்துக்கு வழங்கிய ஒரு பேட்டியில் கூறியது. “பாதிக்கப்பட்ட மக்கள் உண்மையை கண்டறிவதற்குத்தான் விரும்புகிறார்கள். குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்று அவர்கள் கேட்கவில்லை” என்ற பொருள்பட அந்த பேட்டியில் அவர் கூறுகிறார்.அதாவது அவர் குற்றவாளிகளைத் தண்டிக்க மாட்டார். இதைத்தான் முன்னைய அரசாங்கத்தில் நீதி அமைச்சராக இருந்த விஜய்தாச ராஜபக்சவும் வேறு வார்த்தைகளில் சொன்னார். நீதி விசாரணையும் இனப்பிரச்சினைக்கான தீர்வும் சமாந்தரமாகச் செல்ல முடியாது என்று. இரண்டாவது எடுத்துக்காட்டு, அனுரவின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த ஐநா கூட்டத் தொடரில் என்ன சொன்னார் என்பது. அங்கே அவர் பன்னாட்டு விசாரணைப் பொறிமுறையை நிராகரித்துப் பேசியிருந்தார். ஏன் அதிகம் போவான்? ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய திருத்தப்படாத அறிக்கையிலும் இலங்கை என்னென்ன விடயங்களில் ஐநா தீர்மானங்களை ஏற்றுக்கொள்ளவில்லை என்று கூறப்படுகிறது. எனவே ஐநா தீர்மானங்களில் ஒரு பகுதியை ஏற்றுக்கொள்ளாத, ஐநாவில் இயங்கும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான அலுவலகத்தைச் சேர்ந்தவர்களை இலங்கைக்குள் வரவிடாத ஓர் அரசியல் ராஜதந்திரப் பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்க வேண்டும் என்று ஐநா கருதுகின்றதா? ஐநா இந்த விடயத்தில் தன்னை பெருக்கடிக்கு உள்ளாக்காது என்பது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு தெரிகிறது.உள்நாட்டு விசாரணைப் பொறிமுறையைப் பலப்படுத்தலாம் என்ற கருத்தை ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் கொண்டிருப்பது தனக்குச் சாதகமானது என்று அனுர கருதுகிறார்.எனவே உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைக்கு எப்படி அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்றுக் கொடுக்கலாம் என்றுதான் அவர் சிந்திக்கின்றார். ஏறக்குறைய ரணில் சிந்தித்தது போல. அந்த அடிப்படையில் தான் செம்மணி விவகாரத்தை அரசாங்கம் கையாண்டு வருகிறது. மேலும் ஊழலுக்கு எதிராக அரசாங்கம் தொடர்ச்சியாக முன்னெடுத்து வரும் நடவடிக்கைகள் ஐநாவின் ஆர்வத்தை தூண்டக்கூடியவை. முன்னாள் கடற்படை தளபதி போன்றவர்கள் கைது செய்யப்பட்டு இருப்பதும் உள்நாட்டு நீதியின் மதிப்பை கூட்டும் முயற்சிகள்தான்.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் படைப்பிரதானிகளுக்கு எதிராகவும் எதுவரை போகலாம் என்பதில் அரசாங்கத்துக்கு வரையறைகள் உண்டு. சிங்கள பௌத்த உயர் குழாமானது ஒரு கட்டத்துக்கு மேல் ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை நகர விடாது. அதுபோலவே யுத்த வெற்றி நாயகர்கள் ஆகிய படைத்தரப்பையும் ஒரு கட்டத்துக்கு மேல் விசாரிக்க விடாது. அப்படி விசாரித்தாலும் தண்டிப்பதற்கு அனுரவே தயாராக இல்லை. எனவே பொறுப்புக் கூறல் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் என்ன செய்யலாம் என்பதில் அடிப்படையான வரையறைகள் உண்டு. கடந்த 16 ஆண்டு கால அனுபவத்தின் அடிப்படையில் அதைத் தொகுத்துக் கண்டுபிடிப்பது ஐநாவுக்கு கடினமான விடயம் அல்ல. ஆனாலும் ஐநா இலங்கையில் ஆட்சி மாற்றங்கள் நிகழும் பொழுது குறிப்பாக புதிய அரசாங்கம் ஐநாவை அனுசரித்துப் போவதான ஒரு தோற்றத்தை காட்டும் பொழுது அந்த அரசாங்கத்துக்கு வாய்ப்புகளை வழங்கி வருகிறது. ஏன்? புதிய அரசாங்கம் ஏதாவது மாற்றத்தை காட்டும்; பொறுப்புக் கூறும் என்ற நம்பிக்கையினாலா? எதிர்பார்ப்பினாலா? இரண்டுமே இல்லை. முழுக்க முழுக்க புவிசார் அரசியல் நிலைப்பாடு அது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கைக்கு வர இருந்த பின்னணியில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் இதயமாக கருதப்படுபவர்களில் ஒருவராகிய ரில்வின் சில்வா சீனாவுக்கு போயிருந்தார். சீன சார்பு இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியானது இலகுவாக சீனாவின் செல்வாக்குக்குள் விழுந்து விடலாம் என்ற பயம் மேற்கு நாடுகளுக்கும் இந்தியாவுக்கும் உண்டு. நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் வந்ததும் வடக்குக்கு முதலில் வந்த தூதுவர் சீன தூதுவர்தான்.தமிழ் மக்கள் தேசிய மக்கள் சக்தி வழங்கிய ஆதரவை அவர் சிலாகித்துப் பாராட்டி இருந்தார். எனவே சீனா தெளிவான செய்தியை ஐநாவுக்கும் இந்தியாவுக்கும் மேற்கு நாடுகளுக்கும் ஏற்கனவே வழங்கி விட்டது. சீனாவை நோக்கி இலகுவாகச் சாயக்கூடிய, சீன இடது சாரிப் பாரம்பரியத்தில் வந்த அரசாங்கத்தை அதிகம் பகை நிலைக்குத் தள்ளக் கூடாது என்று மேற்கும் ஐநாவும் இந்தியாவும் சிந்திக்கின்றன. ஒரு கட்டத்துக்கு மேல் நிர்பந்தித்தால் தேசிய மக்கள் சக்தி சீனாவை நோக்கி அதிகமாகப் போய்விடும். எனவே ஐநா இலங்கை அரசாங்கத்தை பொறுப்பு கூறுமாறு நிர்பந்தித்தால்,நெருக்கினால் சீனா இலங்கை அரசாங்கத்தைத் தத்தெடுத்து விடும் என்ற பயம் அவர்களுக்கு உண்டு. இதுதான் பிரச்சினை. இதுதான் பிரதான காரணம். பொறுப்புக் கூறலை இலங்கை அரசுக் கட்டமைப்பின் தலைக்கு மேல் நிரந்தரமாகத் தொங்கும் ஒரு கத்தி போல வைத்திருப்பதன் மூலம், ஏற்கனவே சீனாவின் செல்வாக்கு வலையத்துக்குள் சென்றுவிட்ட இச்சிறிய தீவின் மீது தமது பிடியை உறுதிப்படுத்துவதுதான் மேற்கத்திய,ஐ நா வியூகங்களின் நோக்கம். இந்தியாவின் நோக்கமும் அதுதான். இப்படிப்பட்ட ஒரு பின்னணிக்குள் இந்த இடத்தில் தேசிய மக்கள் சக்தி அல்ல எந்த புரட்சிகரமான அரசாங்கம் வந்தாலும் இதுதான் நடக்கும். அதாவது பொறுப்பு கூறல் என்ற விடயம் ஒரு ராஜதந்திரக் கருவியாக மாறிவிட்டது என்பதுதான் கசப்பான உண்மை. https://athavannews.com/2025/1443298
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed