புதிய பதிவுகள்2

டிரம்ப் - ஜெலன்ஸ்கி பேச்சுவார்த்தையில் யாருக்கு என்ன தேவை? : 4 தரப்பு , 4 கோணங்கள்

1 month 1 week ago
Trump says he is working to arrange meeting between Putin and Zelensky. Next steps on Ukraine: US President Donald Trump said he’s begun arranging a meeting between Ukrainian President Volodymyr Zelensky and Russian President Vladimir Putin after a summit today with Zelensky and European leaders. Trump said he discussed the plan with Putin in a call during his negotiations with the European leaders. https://www.cnn.com/politics/live-news/trump-ukraine-zelensky-russia-putin-08-18-25 Ukrainian President Volodymyr Zelensky said that the discussion with US President Donald Trump and European leaders at the White House on Monday included plans for Ukraine to purchase $90 billion in American weapons through European funding, as part of the country’s security guarantees. He said that another part of the guarantees would involve Ukraine manufacturing drones, some of which would be purchased by the US. Zelensky, who made his comments at a news conference following the White House meeting, noted that this remains under discussion and that no formal agreement has been reached. The agreement will be formalized over the next week or 10 days, he said. The Financial Times first reported the details of the proposal. https://www.cnn.com/politics/live-news/trump-ukraine-zelensky-russia-putin-08-18-25 திங்களன்று வெள்ளை மாளிகையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஐரோப்பிய தலைவர்களுடனான கலந்துரையாடலில், நாட்டின் பாதுகாப்பு உத்தரவாதங்களின் ஒரு பகுதியாக, ஐரோப்பிய நிதியுதவி மூலம் உக்ரைன் 90 பில்லியன் டாலர் அமெரிக்க ஆயுதங்களை வாங்குவதற்கான திட்டங்கள் உள்ளடக்கியதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி தெரிவித்தார். உத்தரவாதங்களின் மற்றொரு பகுதி, உக்ரைன் ட்ரோன்களை உற்பத்தி செய்வதையும், அவற்றில் சில அமெரிக்காவால் வாங்கப்படும் என்பதையும் உள்ளடக்கும் என்று அவர் கூறினார். வெள்ளை மாளிகை கூட்டத்தைத் தொடர்ந்து ஒரு செய்தியாளர் கூட்டத்தில் தனது கருத்துக்களை தெரிவித்த ஜெலென்ஸ்கி, இது இன்னும் விவாதத்தில் உள்ளது என்றும், முறையான ஒப்பந்தம் எதுவும் எட்டப்படவில்லை என்றும் குறிப்பிட்டார். அடுத்த வாரம் அல்லது 10 நாட்களில் இந்த ஒப்பந்தம் முறைப்படுத்தப்படும் என்று அவர் கூறினார். பைனான்சியல் டைம்ஸ் முதலில் திட்டத்தின் விவரங்களை வெளியிட்டது. பூட்டினுக்கு மகாவெற்றி. ரம்புக்கு நோபல் பரிசு நிச்சயம்.

கொத்துக் குண்டு பொதுமக்கள் மீது வீசப்பட்டது; ஒரு செய்தியாளரின் நேரடிச் சாட்சி!

1 month 1 week ago
மூலம்:- சுரேன் கார்த்திகேசு. இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு எண்டாங்கள். நான் செய்தி சேகரிக்கச் செல்லும்போதெல்லாம் பயந்து பயந்து தான் போவன். சாவது என்பது எனக்குச் சாதாரணம். ஆனால், காயமடையக்கூடாது, வலி தெரியாமல் குண்டுபட்ட உடனேயே செத்திடனும். காயப்பட்டா உயிரோட இருக்கக்கூடாது. அந்த வலியைத் தாங்கமுடியாது. ஏற்கெனவே காயமடைந்தவர்களோடு கதைக்கும் போது ஏற்பட்ட இந்த மனநிலையோடுதான் ஒவ்வொரு இடங்களுக்கும் செல்வது உண்டு. கிளிநொச்சியை அண்டிய பகுதிகளில் இலங்கை விமானப்படையினர் நடத்திய அனைத்துத் தாக்குதல் செய்திகளையும் நான் சேகரித்திருந்தேன். விமானங்கள், முதல் குண்டு போட்ட பின்னரே அவ்விடத்தினை நோக்கி உடனடியாகச் செல்வோம். தாக்குதல் இடம்பெறும் இடத்திற்குச் சுமார் மிகக் கிட்டிய தூரத்தில் இருந்துவிட்டே விமானங்கள் சென்ற மறுகணமே அந்த இடத்திற்குள் செல்வது வழமை. இந்தப் பதிவும் அப்படித்தான். நானும், சக ஊடகவியலாளர்களும் நேரில் பார்த்த கொத்துக்குண்டு தாக்குதல் பற்றிய பதிவு. இறுதி யுத்தக் காலப்பகுதியில் கொத்துக்குண்டுகளைப் பயன்படுத்தவில்லை எனத் தொடர்ச்சியாக நிராகரித்து வரும் அரசாங்கத்தின் பார்வைக்கு இவ் ஆதாரங்களை மீண்டும் கொண்டுவருவதோடு, சர்வதேச மனித உரிமை அமைப்புக்களின் கவனத்திற்கும் கொண்டு வருகின்றேன். சுண்டிக்குளம் – கல்லாறு கிராமத்தை அண்டிய பிரதேசம். சுமார் 30 குடியிருப்புக்களை தொண்டு நிறுவனம் ஒன்று இடம்பெயர்ந்தோருக்காக அமைத்துக் கொடுத்திருந்தது. பெரு மழையினை சந்தித்திருந்த அன்றைய நாட்களில் அந்த முகாமைச் சுற்றி வெள்ளக்காடாகி காட்சியளித்தது. “அன்றைக்கு 29 ஆம் திகதி நவம்பர் மாதம் 2008 ஆம் ஆண்டு. விடியவெள்ளன 1.35 மணியிருக்கும். சனங்கள் அந்த நேரத்திலயும் இடம்பெயர்ந்து வந்துகொண்டிருக்குதுகள். எங்கட வீடு விசுவமடுவில இருந்தது. நான் வீட்ட படுத்திருந்தனான். அந்த நேரம் திடீர் எண்டு வந்த மிக் விமானங்கள் எனக்கு நேர முன்னுக்கு சில மைல்கள் தூரத்தில் குண்டு போட்ட சத்தம் கேட்டது. திடீரெண்டு பெரிய குண்டுச்சத்தங்கள் கேட்க வீட்டில் எல்லாரும் எழும்பிற்றினம். மிக் விமானங்களின் சத்தம் அப்பிடி. வெளிச்சக்குண்டுகளை வீசினதால தருமபுரம், விசுமவடு எல்லாம் பகல் போல இருந்தது. அவ்வளவு வெளிச்சம். விமானங்கள் மிக கிட்டத்தில எங்கயோதான் குண்டுகள் போடுது எண்டத என்னால் ஊகிக்க முடிஞ்சது. அந்தளவுக்கு விமானங்களின் இரைச்சல் ஒருவித பயத்தை எனக்குள் ஏற்படுத்தியிருந்தது. பயம் இருந்தாலும் என்ர வேலையச் செய்யவேணும் எண்டு நினைச்சுக்கொண்டு, மோட்டர் சயிக்கிளில விசுவமடுவில் இருந்து சுண்டுக்குளம் சந்தி நோக்கிப் போனன். நான் போற திசையிலயே விமானங்கள் தாக்குதல்கள் நடத்துவது எனக்குத் தெரிஞ்சது. அதுமட்டுமல்லாம, தாக்குதல் நடக்கிற இடம், இடம்பெயர்ந்த மக்கள் அதிகமாக வாழ்ந்துவாற முகாம். இந்தத் தாக்குதலில சனங்களுக்குத்தான் அதிக பாதிப்புக்கள் வந்திருக்கும் என்றே என்ர மனம் சொல்லிக்கொண்டிருந்தது. ஆனால், அந்த இருட்டு நேரத்தில எவ்வளவு தூரத்தில் தாக்குதல் நடக்குது எண்டு எனக்குத் தெரியேல்ல. இரெண்டாவது முறை குண்டுத் தாக்குதல் நடக்கேக்க நான் சுண்டிக்குளம் சந்திக்குப் போயிற்றன். 'றோட்டில' ஒரு சனம் கூட இல்லை. இந்தத் தாக்குதலில யாரும் காயப்பட்டிருந்தால் கிளிநொச்சி – தருமபுரம் ஆஸ்பத்திரிக்குத்தான் கொண்டு வரவேணும். எனவே நான் தருமபுரம் ஆஸ்பத்திரிக்குப் போனன். ஆனால் அங்க காயப்பட்டவங்கள் யாரும் வரேல்ல எண்டு ஆஸ்பத்திரில வேலை செய்த ஆக்கள் எனக்கு சொல்லிச்சினம். அவையளும் ஆஸ்பத்திரி வாசலிலதான் நிற்கினம். நான் திரும்பி சுண்டிக்குளம் சந்தியால் கல்லாறு பக்கமா என்ர மோட்டர் சயிக்கிள்ல போய்க்கொண்டிருந்தன். அந்த நேரம் பார்த்து மோட்டர் சயிக்கிளுக்கு மண்ணெண்ணெய் முடிஞ்சுது. அப்பிடியே நிண்டிட்டுது. அந்த நேரத்தில யாரிட்ட உதவி கேட்கிறது..? உதவி செய்யிற மனமிருந்தாலும், மருந்துக்கு கூட மண்ணெண்ணெய் யாரிட்டயும் இருக்கேல்ல. மோட்டார் சயிக்கிள சரிச்சா கொஞ்சத்தூரம் ஓடலாம். நான் யோசிச்சிக்கொண்டு நிற்க, இன்னொரு மோட்டர் சயிக்கிள் தாக்குதல் நடந்த பக்கமிருந்து வேகமாக வந்தது. அந்த மோட்டார் சயிக்கிளில பின்னுக்கு இருந்தவர் கத்தி அழுதுகொண்டு போனார். நான் உடன அவயள பின்தொடர்ந்து போய், ”அண்ணை எங்க கிபிர் அடிச்சது? காயப்பட்ட ஆக்கள் இருக்கினமோ” என்று கேட்டன். ” எனக்கு தெரியேல்லை. ஆனா நிறைய சனம் கத்துற சத்தம் மட்டும் கேட்குது”. அதுக்குப் பிறகுதான் தெரிஞ்சது காயப்பட்டு, 'றோட்டால' ஓடிவந்த ஒராளைத்தான் அந்த மோட்டர் சயிக்கிளில ஏத்திக்கொண்டு வாறார் எண்டு. உடன ஆஸ்பத்திரிக்குப் போனால் காயமடைஞ்ச ஆக்களின்ர முழுவிபரத்தையும் எடுக்கலாம் எண்டு யோசிச்சு, அங்க போனன். “எனக்குப் பெரிய காயம் இல்லை. ஆனால் முகாமுக்குள்ள தான் குண்டுகள் விழுந்தது. அதில் நிறைய பேர் எங்க ஓடினாங்கள் எண்டும் தெரியாது. முகாமை சுற்றி வாய்க்கால் இருக்கு. கழுத்தளவு தண்ணிக்குள்ளால வரமுடியாமல் காயமடைஞ்ச ஆக்கள் அங்க இருக்கினம். நான் ஒருமாதிரி தப்பியோடி 'றோட்டுக்கு' வந்தே இந்த மோட்டார் சயிக்கிளில ஆஸ்பத்திரிக்கு வந்தன்,” என்றார் கத்திக்கொண்டு வந்தவர். நான் நினைக்கிறன், இந்தளவு நிகழ்வும் விமானங்கள் சென்று 15 நிமிடங்களுக்குள் நடந்திருக்கும். அதுக்குப் பிறகுதான் ரெண்டு அம்புலன்ஸ் அனுப்பி காயப்பட்ட ஆக்கள ஆஸ்பத்திரிக்குக் கொண்டுவந்தது. இரவு எங்களால மிக் அடிச்ச இடத்துக்குப் போக முடியேல்ல. நானும் லோகீசனும் ( இறுதிப் போர் வேளையில் பணியாற்றிய இன்னொரு பத்திரிகையாளர்) காலமதான் கல்லாறு பகுதிக்கு போனம். அது உழவனூர் எண்டுற கிராமத்தின்ர பின்பகுதி. அதுக்கு அடுத்த கல்லாறு கிராமம். இடம்பெயர்ந்த ஆக்களுக்கு அப்பத்தான் வீடுகள் கட்டிக் குடுத்திருக்கினம். சில ஆக்கள் கட்டிக்கொண்டிருக்கினம். அதுக்குள்ள தான் மிக் குண்டு போட்டது. சில குண்டுகள் வெடிச்சாலும் அதின்ர பகுதிகள் சிதறிப் போய் கிடந்தது. அதில ஒரு குண்டு கொட்டிலுக்கு முன்னால நிலத்துக்குள்ள அரைவாசி இறங்கியிருந்தது. மற்றது சிதறியிருந்தது. அதை நாங்கள் போட்டோ எடுக்கேக்கத்தான். அந்த இடத்தில் நிண்ட தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகங்களைச் சேர்ந்த போராளிகள், “இதுதான் 'க்ளஸ்டர்' குண்டு (cluster bomb) எண்டாங்கள். இது சண்டைகளில பயன்படுத்த தடை” எண்டும் சொல்லிக் கொண்டிருந்தாங்கள். கிளிநொச்சி ஜெயந்திநகர் அருகாமையில் அமைந்த தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் முக்கிய முகாம் மீதான தாக்குதலின்போது விமானப்படையினரின் தளபதியாக இருந்த றொசான் குணதிலகவே, சுண்டிக்குளம் – கல்லாறு பொதுமக்கள் மீதான தாக்குதலுக்கும் பொறுப்பு வகிந்திருந்தார் என்று பின்னர் அறிந்துகொண்டேன். இவர் ஏற்கனவே பிரித்தானிய விமானி ஒருவருடன் சேர்ந்து பிரமந்தனாறு கிராமப் படுகொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்றும் அறியக்கிடைத்தது. கொத்துக்குண்டுகள் பல நாடுகளிலும் தடைசெய்யப்பட்டிருக்கின்றன. 2008 ஆம் ஆண்டு மே மாதம் 30 திகதி டப்ளின் தீர்ப்பாயத்தில் கொண்டுவரப்பட்ட தீர்மானத்தின்படி (Convention on Cluster Munitions ) இரசாயன ஆயுதங்களைத் தயாரிக்கவோ, விற்பனைசெய்யவோ, களஞ்சியப்படுத்தவோ, பயன்படுத்தவோ தடையுத்தரவு அறிவிக்கப்பட்டது. அதனையும் மீறி இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்தினால், விநியோகம் செய்தால் மனித குலத்துக்கு எதிரான குற்றமாக அது கருதப்படும். இவ்வுடன்படிக்கையை ஏற்று உலகின் 108 நாடுகள் கையெழுத்திட்டுள்ளன. இந்த சர்வதேச சட்டங்களையெல்லாம் மீறித்தான் இலங்கை இராணுவம் இறுதிப் போரின்போது பொதுமக்கள் மீது கொத்துக் குண்டுகளைப் பொழிந்தது. மிதிவெடி அகற்றும் பிரிவினர் மீட்ட கொத்துக்குண்டின் பாகங்களை 'கார்டியன்' வெளியிட்ட ஆதாரம் இதுதான்: ( https://www.theguardian.com/…/cluster-bombs-used-sri-lanka-… ). இவ்வாதாரங்களை கடந்த காலங்களில் பல சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டிருந்தபோதும், “யுத்தத்தின் போது அரச படையினர் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் கொத்துக் குண்டுகளைப் பயன்படுத்தவில்லை. கொத்துக்குண்டுகளை பாவித்தமைக்கான சர்வதேச குற்றச்சாட்டுக்களை நாம் நிராகரித்திருந்தோம். கொத்துக்குண்டுகளை பயன்படுத்தியமைக்கான எந்தவித ஆதாரங்களும் இல்லை. கொத்துக்குண்டுகளை நாம் இனிவரும் காலங்களிலும் பயன்படுத்தப் போவதில்லை என்பதே எமது நிலைப்பாடாகும்," என அமைச்சரவை இணைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன ஊடகங்களிற்கு முன்னர் தெரிவித்திருந்தார். இவ்வளவு ஆதாரங்களை நாம் முன்வைத்தும், உலகிற்கு ஈழத்தில் இடம்பெற்றது சாட்சியமற்ற போர். இதுவே சிரியாவாக இருந்திருந்தால்…! சிரியா போல எங்கள் மீதான தாக்குதல்கள் சர்வதேசமயப்படவில்லை என்ற கவலையோடு அடுத்த பகுதியை எழுதத் தொடங்குகின்றேன். *** மூலம்:- சுரேன் கார்த்திகேசு. https://www.samaraivu.com/2018/05/blog-post_68.html

மாத்தளன் மருத்துவமனை விடுபட்டது குறித்து மருத்துவர் வரதராசா!

1 month 1 week ago
எழுத்து மூலம்:- செய்தியாளர், சுரேன் கார்த்திகேசு. (ஏப்பிரல்-20-2018 இல் எழுதப்பட்டது) வைத்தியர் வரதராசா துரைராசா அவர்களின் அர்ப்பணிப்புமிக்க அன்றையநாள்!(ஏப்பிரல்-20-2009) “மாத்தளனில் ஆமியாம்.” “ஆஸ்பத்திரியடியில நிக்கிறானாம்” “நிறைய சனம் செத்தும் போச்சாம், சனம் நிறைய உள்ளே (சிங்களப் படையினரிடம்) போயிட்டுதாம்,” என்று எம் செவிகளுக்குக் கிடைத்த அந்தச் செய்தியோடு 2009,ஏப்பிரல் 20 ஆம் திகதி விடிந்தது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலைக்கு நானும் மதியும் ஓடிப்போனோம். காயப்பட்டவர்களை கடலால் இறக்கி, அங்கிருந்து வாகனங்களில் கொண்டு வந்திருந்தார்கள். காயமடைந்தவர்களை இறக்கி இறக்கி என்னால ஏலாது. முள்ளிவாய்க்கால் வைத்தியசாலையில் இடம்போதாமையால் முன்பக்க காணியில் உள்ள மரங்களுக்குக் கீழே 'தறப்பாள்' விரிக்கப்பட்டு, அதில் காயமடைந்தவர்களைக் கிடத்தினோம். அன்று காலையில் எம்மால் எந்த விபரங்களையும் எடுக்கக்கூடிய நிலையில் நாங்கள் இல்லை. அன்று மாலையில் எம்மால் முடிந்த வரையில் காயமடைந்தவர்களின் விபரங்கள் மற்றும் இறந்தவர்களின் விபரங்களைச் சேகரித்தோம். முழுமையாக விபரங்களை பத்திரிகையில் வெளியிடமுடியவில்லை. முல்லைத்தீவு நகரப் பகுதிக்கு அருகருகே அமைந்துள்ள முள்ளிவாய்க்கால், இரட்டைவாய்க்கால், வலைஞர்மடம், அம்பலவன்பொக்கணை, புதுமாத்தளன் ஆகிய கடற்கரைக் கிராமங்களே 2009 ஆம் ஆண்டு இடம்பெற்ற இறுதி யுத்த காலப்பகுதியில் பெருமளவு தமிழ் மக்கள் படுகொலை செய்யப்பட்ட பிரதேசங்களாகும். இன்றைய நாளில் , ஏப்பிரல்-20,2009 அன்று 1983 இற்கு பின்னர் ஒரே நாளில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களை சிறிலங்காப் படையினர் படுகொலை செய்திருந்தனர். எறிகணைத் தாக்குதலில் காயமடைந்தவர்களை மீண்டும் சுட்டும், பதுங்கு குழிகளில் இருந்த மக்கள் மீது கைக்குண்டுகளை வீசியும் படுகொலை செய்த இன்றைய நாளில் நான் சந்தித்த முதலாவது மிகப்பெரிய அவலம் இதுவேயாகும். இன்று ஏப்பிரல்-20. அதன் நினைவுகளோடு தான் இன்று நான் வேலைக்குப் போனேன். ஏதாவது எழுதுவம் என்று நினைக்கும் பொழுது தான் “வைத்தியர் வரதராஜா துரைராசா அவர்களின் நினைவு வந்தது”. “படையினர் புதுமாத்தளன் வைத்தியசாலைக்கு மிகக்கிட்டிய தூரத்தில் நிற்கும் போது அவரும் இன்னொரு மருத்துவ பணியாளரும் வலைஞர்மடம் பகுதியில் இருந்து கடற்கரை வழியாக புதுமாத்தளன் வைத்தியசாலைக்குச் சென்று அங்கிருந்தவர்களையும் முக்கியமான மருந்துப்பொருட்களையும் மீட்டு வந்தவர். அவரிடம் இன்று பேசியபொழுது மருத்துவப் பணியாளர்களின் அர்ப்பணிப்பான பணிகளையும் அவர்கள் தங்கள் குடும்பங்களைப் பற்றி நினைக்காமல் காயமடைந்துவரும் மக்களுக்குச் சிகிச்சை அளித்த அத்தனை பேரும் மதிப்புக்குரியவர்கள் என்று சக மருத்துவப் பணியாளர்களின் பெயர்களைச் சொல்லி பல விடயங்களைப் பகிர்ந்து கொண்டார். அவருடைய முழுமையான பகிர்வு பிறிதொரு சமயத்தில் வெளிவரும். அன்றைய நாளில் நடந்தது என்ன? வைத்தியர் வரதாராசா பின்வருமாறு கூறுகின்றார்: “படையினர் எங்களைக் கண்டுவிட்டனர். எங்களை நோக்கி சுட்டுக்கொண்டிருந்தனர். நான் வாகனத்தில் இருந்து இறங்கி ஓடி, பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்தே புதுமாத்தளன் வைத்தியசாலைக்குள் ஓடினேன்.” இவ்வாறு இறுதி யுத்தகாலப்பகுதியில் மருத்துவப் பணிகளில் ஈடுபட்ட வைத்தியர் வரதராசா துரைராசா இன்று தெரிவித்துள்ளார். இவரே முல்லைத்தீவு மாவட்டப் பிராந்திய சுகாதாரசேவை பணிப்பாளராக அந்நேரத்தில் கடமையாற்றியவர். தற்பொழுது அமெரிக்காவில் வசித்து வரும் இவர் எம்முடன் அன்றைய நாட்களில் நடந்த கொடூர நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். வலைஞர்மடம் பகுதியில் தான் நாங்கள் தங்கியிருந்தோம். எங்களுக்கு அன்று காலை, "மாத்தளனில் ஆமி வந்திட்டான் என்றும் நடக்கக்கூடிய நோயாளர்கள் மற்றும் பல மருத்துவ பணியாளர்களும் ஆமிக்குள்ள போயிட்டினமாம்” என்று தகவல் வந்தது. "நான் வெளிக்கிட்டன். அங்க ஒருக்கா போவம் என்று. என்னை ஒருத்தரும் விடவில்லை. காலை 9.30 மணிக்குத் தான் எப்படியாவது போய்ப்பார்ப்பம் என்று நானும் இன்னொரு மருத்துவ பணியாளரும் கடற்கரை வழியாகப் புதுமாத்தளன் பகுதிக்குச் சென்றோம். வைத்தியசாலைக்கு அருகில் உள்ள ஒழுங்கையில் வாகனத்தைச் செலுத்திக்கொண்டிருக்கும் பொழுது திடீரென்று படையினர் எம்மை நோக்கிச் சரமாரியாகச் சுட்டனர்.” “நாங்கள் வாகனத்தை விட்டு இறங்கி அருகில் உள்ள பனைமரங்களுக்குள் ஒளித்து ஒளித்து வைத்தியசாலைக்குள்ளே ஓடிட்டம். அங்கே பலரது உயிரற்ற உடல்களுக்கு மத்தியில் காயப்பட்டவர்களின் முனகல் சத்தங்கள் ஒருபுறம், மறுபுறத்தே இடையிடையே சண்டையும் நடைபெறுகிறது. வைத்திசாலை சன்னலால் எட்டிப்பார்த்தால் நூறு மீற்றரில் ஆமி நிக்கிறான். வைத்தியசாலையில் இருந்த காயமடைந்தவர்களுக்குச் சரியாகச் சிகிச்சை அவ்விடத்தில் வழங்க முடியவில்லை. அவர்களை எம்முடன் வரவிரும்பியவர்களையும் முக்கியமான மருந்துப் பொருட்களையும் வைத்தியசாலையில் இருந்த பிறிதொரு வாகனத்தில் ஏற்றினோம். வாகனம் வெளியே எடுத்தால் ஆமி தாக்குதல் நடத்துவானோ அல்லது இல்லையோ எங்களுக்குத் தெரியாது. ஏதோ! கண் இமைக்கும் நேரத்தில் வாகனத்தை வைத்தியசாலை முன்புறமாக செலுத்தி அருகில் உள்ள ஒழுங்கை ஊடாக கடற்கரைக்குச் சென்று முள்ளிவாய்க்கால் சென்றடைந்தோம். அன்றைய நாளில் மக்களுடைய இழப்புத்தொகையை என்னால் சரியாகச் சொல்லமுடியாமல் இருக்கிறது. எல்லா இடமும் காயமடைந்தவர்கள் மற்றும் இறந்தவர்கள். அன்று எங்களுக்கு ஏற்பட்ட நெருக்கடி நிலையிலும் மிகுந்த சிரமப்பட்டு பலரது உயிர்களைக் காப்பாற்றியிருப்பது மனதிற்கு ஆறுதல் அளிக்கிறது." இவ்வாறு மருத்துவர் பதிவுசெய்தார். https://www.samaraivu.com/2018/05/blog-post_4.html

இந்தக் காணொளிச் சான்று எடுக்கும்போது ஏற்பட்ட அழிவுகளின் சாட்சி!

1 month 1 week ago
இந்தக் கானொளியை 02.02.2009அன்று புதுக்குடியிருப்பு வைத்திய சாலை முன்பாக காலை 10.00 மணிக்கும் 11.00 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் எனது Sony170 Camera மூலம் ஒளிப்பதிவு செய்தேன். எனது ஊடக வாழ்க்கையில் மிகவும் ஆபத்தானதும் எனது வாழ் நாளில் மறக்க முடியாததும் தெய்வாதீனமாக நான் உயிர் தப்பியதுமான இந்தக் காணொளியை இன்றைய நாளில் நினைத்துப் பார்க்கிறேன். ஏற்கெனவே உடையார்கட்டு, சுதந்திரபுரம், வள்ளிபுனம் போன்ற பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதல்களில் காயமடைந்த பொதுமக்கள் புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் சிகிற்சை பெற்றுக்கொண்டிருந்தனர். 06.02.2007 அன்று நள்ளிரவு புதுக்குடியிருப்பு வைத்தியசாலை நோக்கி சிறிலங்காப் படையினர் எறிகணைத் தாக்குதலை நடத்தியிருந்தனர். இதன்போது வைத்திய சாலையின் நோயாளர் விடுதிகளில் வீழ்ந்து வெடித்த எறிகணைகளால் ஏற்கனவே காயமடைந்திருந்த பொதுமக்கள் 9 பேர் வைத்திய சாலைக்குள்ளேயே கொல்லப்பட்டதுடன், பலர் மீண்டும் பாரிய காயங்களுக்கு உள்ளாகினர். இந்தக் காலப்பகுதியில் புதுக்குடியிருப்பு வைத்தியசாலை ஒன்று மட்டுமே இயங்கிக்கொண்டிருந்தது. அப்போது ஒட்டுசுட்டான் புதுக்குடியிருப்பு தரைவழிப்பாதை நோயாளர் காவுவண்டிகளுக்காகத் திறந்து விட்டிருந்தது. பின்னர் அது ஓரிரு நாட்களில் மூடப்பட்டது. இவ்வாறான சூழ்நிலையில் எனது ஊடகப்பணி தொடர்கிறது. 6 ஆம் திகதி நள்ளிரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட மக்களையும் காயமடைந்தவர்களையும், சேதமடைந்த வைத்தியசாலையையும் 7ஆம் திகதி காலை ஒளிப்பதிவு செய்து, அங்கே காயமடைந்த மக்களிடம் சில செவ்விகளையும் எடுத்துக்கொண்டு, வைத்தியசாலைக்கு வெளியில் வைத்தியசாலை நுழைவாயிலில் நின்று கொண்டிருந்தேன். புதுக்குடியிருப்பு - முல்லை வீதி வெறிச்சோடி காணப்படுகிறது. வைத்தியசாலைக்கு அருகிருந்த வர்த்தக நிலையங்கள் பல மூடப்பட்டிருக்கின்றன. வீதிகளில் மக்கள் நடமாட்டம் மிகக்குறைவாக இருக்கிறது. தொடர் எறிகணைத் தாக்குதல்களால் வேறு இடங்களில் காயமடையும் பொது மக்களை மீட்டு வரும் தமிழர் புனர்வாழ்வுக் கழகப் பணியாளர்களும் ICRC தொண்டு நிறுவனப் பணியாளர்களும் வீதிகளில் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். இரவு மேற்கொள்ளப்பட்ட எறிகணைத் தாக்குதலால் வைத்தியசாலைக்கு ஏற்பட்ட சேதத்தைப் பார்வையிட ICRC தொண்டு நிறுவன பிரதிநிதிகள் வைத்தியசாலைக்குள் நின்றுகொண்டிருக்கின்றனர். அந்த வேளை எனது நண்பன் அலைமகன் என்னிடம் ஒரு ஆவணத்தை தருவதற்காக வைத்தியசாலை நோக்கி என்னைத்தேடி வந்து என்னைச் சந்தித்து இருவரும் வைத்தியசாலை நுழைவாயிலில் கதைத்துக்கொண்டிருக்கிறோம். நீண்ட நாடகள் நாம் இருவரும் சந்திப்பதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை. அன்று இருவரும் சந்தித்தவுடன் ஒருவரை ஒருவர் நலம் விசாரித்துக்கொண்டு, அவர் நின்ற இடங்கள் பற்றி அவரிடம் விசாரிக்கிறேன். அவரும் அதற்கான விளக்கத்தைச் சொல்லிக்கொண்டு என்னுடைய பக்கம் எப்படி என விசாரித்தவர்களாக இருவரும் கதைத்துக் கொண்டிருக்கிறோம். அப்போது வைத்தியசாலைக்கு எதிராக இருந்த தீபன் மருந்தகத்திலிருந்து என்னுடன் கதைத்துக்கொண்டிருக்கும் எனது நண்பனை இன்னொருவர் அழைக்கிறார். அப்போது அலைமகன் என்னிடத்தில், "அண்ண இவன் தீபன், என்னைக் கூப்பிடுறான். நாங்கள் இரண்டு பேரும் வித்தியானந்தா கல்லூரியில் ஒரே வகுப்பில் படித்தோம், கண்டு கனகாலம். கூப்பிடுறான் நான் ஒருக்கால் கதைச்சுப்போட்டு வாறன்," என்ற படி வைத்தியசலை நுழைவாயிலில் இருந்து வீதியைக் கடக்கிறான். நானும் சரி நீங்கள் கதைச்சுப்போட்டு வாங்கோ நான் உள்ளுக்குத்தான் நிற்பேன் என்றவாறு என்னுடைய ஒளிப்பதிவு கருவியை எடுத்து வெறிச்சோடிக்கிடக்கும் முல்லை - புதுக்குடியிருப்பு வீதியை Zoom செய்து படமெடுத்துக் கொண்டிருக்கிறேன். வைத்தியசலை நுழைவயிலில் இருக்கின்ற மதவு மேலே ஏறி நின்று ஒளிப்பதிவு செய்து கொண்டிருக்கிறேன். கண்ணிமைக்கும் நேரத்திற்குள் பளீர் என்ற சத்தம் வீதியின் மதவில் நின்ற என்னை தூக்கி எறிந்ததைப்போன்ற உணர்வு. என்ன நடந்தது என ஊகிக்க முன்னர் அடுத்த எறிகணையும் அதே இடத்தில் வீழ்ந்து வெடிக்கிறது. எங்கும் புகை மூட்டம். நான் வீதியின் அருகிருந்த கழிவு வாய்க்காலுக்குள் குந்திக்கொண்டிருக்கிறேன். வீழ்ந்து வெடித்த எறிகணை சிதறல்கள் அருகிலிருந்த மதில் சுவர்களிலும் மரங்களிலும் பட்டு என்மீது விழுகின்றன. ஒரு கணப்பொழுது என்ன நடக்கிறது என்றே தெரியவில்லை. இரண்டு செல்களும் வீழ்ந்து வெடித்து மூன்று நிமிடங்கள் கழித்து எழுந்து பார்க்கிறேன். நான் நின்ற வீதியின் மறுபக்கத்தில் எறிகணை வீழ்ந்து வெடித்ததில் பல வர்த்தகநிலையங்கள் புகை மூட்டத்துக்குள் எரிந்து கொண்டிருக்கின்றன. எறிகணை வீழ்ந்து வெடித்த இடத்திற்கும் நான் நின்றதற்குமான தூரம் 10 மீற்றருக்கும் குறைவு. எந்தச் சத்தமும் இல்லை எனது ஒளிப்பதிவுக்கருவி ஒளிப்பதிவு செய்தபடியே இருக்கிறது. கழிவுவாய்க்காலிற்குள் இருந்து எழுந்து வைத்தியசாலைக்குள் ஓடுகிறேன். வைத்தியசலைக்குள் நின்றவர்கள் எல்லோரும் தரையில் படுத்துக்கிடக்கின்றனர். அதையும் ஒளிப்படம் எடுக்கிறேன். அப்போது வைத்தியசாலைக்குள் தரைகளில் படுத்து பாதுகாப்புத் தேடிக்கொண்ட தொண்டு நிறுவனப் பணியாளர்கள் எழுந்து எறிகணை வீழ்ந்த திசை நோக்கி ஓடுகின்றனர். வைத்தியசாலை பரபரப்பாகிறது. சம்பவங்களைத் தொடர்ந்து ஒளிப்பதிவு செய்துகொண்டே இருக்கிறேன். ஒளிப்பதிவு செய்தபடி எறிகணை வீழ்ந்த இடத்துக்கு ஓடுகிறேன். தீபன் மருந்தகத்தில் இருந்த தீபனின் தாயார் படுகாயத்துடன் பாய் ஒன்றில் வைத்து தூக்கிவரப்படுகிறார். தீபனின் தந்தை கால் முறிந்தபடி கிடக்க அவரையும் தூக்கிவருகின்றனர். மருந்தகத்திற்கு அருகிலிருந்த சிகை அலங்கரிப்பு நிலையத்தில் சிகை அலங்கரிப்புப் பணியில் ஈடுபட்டிருந்த ஒருவரும் சிகை அலங்கரிக்க வந்த ஒருவரும் இறந்து கிடக்கின்றனர். காயமடைந்தவர்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்து வைத்தியசாலையின் வாயிலில் வைத்து மருத்துவம் நடக்கிறது. இறந்தவர்களின் உடல்களையும் அடையாளம் காட்டி சிலர் கதைக்கின்றனர். இறந்த உடல்களை வைத்தியசாலைக்குள் எடுத்து வந்ததன் பின்னர் ஒருவர் எறிகணை வீழ்ந்து வெடித்த இடதிலிருந்து, "அண்ணை, இன்னொன்றும் கிடக்கு," என்றவாறு கட்டிட இடிபாடுகளை நீக்குகிறார். யாருடைய உடல் உன்று ஊகிக்க முடியாத அளவுக்கு அந்த உடல் சிதைந்து போயிருக்கிறது. அப்போது எல்லோரும் இது யார் என வினவுகின்றனர். நானும் எனது ஒளிப்பதிவு கருவியை நிறுத்திவிட்டு உடலின் அருகில் சென்று பார்க்கிறேன். அது நீண்ட நாட்களின் பின்னர் என்னை சந்திக்க வந்த எனது நண்பன் அலைமகன். அவன் இறுதியாக அணிந்திருந்த பச்சை நிற சேட் அவனை அடையாளப்படுத்தியது. அதன் பின்னர் அவனது உடலை வீட்டாருக்கு அனுப்பிவிட்டு நண்பனை பிரிந்த சோகத்தோடும் எனது வாழ் நாளில் மறக்கமுடியாத அனுபவத்தோடும் அலுவலகம் திரும்பினேன். நாங்கள் முள்ளிவாய்க்காலுக்குள் முடக்கப்பட்டபோது எந்த வெளிநாட்டு ஊடகங்களும் முள்ளிவாய்க்காலை எட்டிப்பார்க்கக் கூட இல்லை. *** குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. மூலப்பதிவு:- திரு.சிவகரன். https://www.samaraivu.com/2018/05/blog-post_41.html

வாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...

1 month 1 week ago
வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்பின்னர் இறுதியாக எனது போர்க்கால ஊடகப்பணிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய தருணம். வழமை போலவே மக்கள் மீதான தாக்குதல்களையும் பாதிக்கப்பட்ட மக்களையும் வீடியோ எடுத்துவிட்டு, அதனை வெளியில் அனுப்புவதற்காக முகாமுக்குச் செல்கிறேன். மக்கள் மணித்தியாலயத்திற்கு மணித்தியாலம் எவ்வாறு தமது பதுங்கு குழிகளை எப்படி இடம் மாற்றினார்களோ அதே போலத்தான் விடுதலைப்புலிகளும் தமது இடங்களை மாற்ற வேண்டிய நிலை. ஒவ்வொரு நாளும் நெருக்கடிகள் அதிகரித்துக்கொண்டே செல்கின்றன. 13ஆம் திகதி இடம்பெற்ற எறிகணைக் களஞ்சிய வெடி விபத்தில் என்னுடைய வீடும் அதில் இருந்த பெறுமதிமிக்க ஆவணங்களும் எரிந்துபோயின. அதை இந்த இடதில் சொல்வது விடயத்தை நீட்டிச்செல்லும் என்பதால் அதனை இதில் சொல்லவில்லை. எனது வீடு எரிந்ததால் எனக்கு மாற்றி உடுத்துவதற்கு எந்த உடையும் இல்லை. ஒரு சறம் மட்டுமே மிச்சம். அந்த சாறத்துடன் முகாமுக்கு செல்கிறேன். முகாமில் (புலிகளின் குரல் பொறுப்பாளர்) யவான் அண்ணர் என்னைப் பார்த்ததும், "என்னடா காயப்பட்டிட்டியோ?.. என்ன?.." என்றார். நான், "இல்லை அண்ணை, என்ர வீடு நேற்று எரிஞ்சு போச்சு," என்றேன். "அப்ப வீட்ட யாருக்கும் பிரச்சினையோ? அம்மா எப்படி இருக்கிறா?" "இல்லை அண்ணை, ஆட்களுக்கு ஒண்டும் பிரச்சினை இல்லை. வீடு தான் எரிஞ்சுபோச்சு..." என்றவாறு நான் வேலையை கவனிக்கத் தொடங்கினேன். அப்போது யவான் அண்ணர் அருகிலிருந்த புலித்தேவன் அண்ணர் அவர்களைப்பார்த்து, "புலித்தேவன், புவியரசனுக்கு ஏதாவது ஒழுங்கு செய்து கொடுங்கோ," என்கிறார். அவரும் அதற்கு, "சரி, பார்ப்போம்," என்று தலை அசைக்க... என்னுடைய இறுதி நாள் வேலையை தொடங்குகிறேன்... *** குறிப்பு:- திரு.சிவகரனின் (Siva Karan) முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. சமராய்வுவாழ்க்கையில் மறக்கமுடியாத மனிதர்களை 2009 இதே நாளில்...வாழ்க்கையில் மறக்க முடியாத மனிதர்களை 2009 இதே நாளில் தான் இறுதியாக சந்தித்தேன். மூலம்:- புவியரசன். 2009 மே 14 மதியம் ஒரு மணிக்குப்...

அவள் எனது செஞ்சோலைச் சகோதரி: முள்ளிவாய்க்கால் நினைவுப் பகிர்வு!

1 month 1 week ago
வருடங்கள் கடந்தாலும் குத்திக்கிழிக்கும் ரணங்களாக ஈழத்தின் இறுதிப்போர் அமைந்து விட்டது. வன்முறையால் பறிக்கப்பட்ட உயிர்களுக்கான நிரந்தரத் தீர்வுக்காய் இரவும் பகலும் தனிமையில் விம்மும் எங்கள் கண்ணீரின் நிறுவைகள் இன்னும்? போதவில்லையா? எப்படிக் கடந்து போகமுடியும்? இழந்துபோனவை இரத்தமும் சதையுமாய் உயிரோடு உயிரூட்டிய உயிர்களல்லவா? எத்தனை விதமான சாவுகள் கண்டோம். பதுங்குகுழியை மூடியது குண்டுகள். குற்றிகள் பாறிண்டு பிரண்டன. பாதுகாப்பு வலையங்கள் என அறிவித்த இடங்களில் தானே பதுங்குகுழிகளை அமைத்தோம். பிறகெப்படி குண்டுகளை கிபீர் விமானங்கள் கொட்டின? பாதுகாப்பு இடங்களை நோக்கி ஏன் ஆட்டிலெறித் தாக்குதல்கள்? பதுங்குகுழிகளுக்குள் சமாதியாகியோர் ஆயிரமாயிரம். மூடிய குழிகளைக் கிண்டிக்கிளறி எடுத்து மீட்கப்பட்ட, மூச்சுத் திணறியோரில் நானும் ஒருத்தி. எந்த ஒரு காயமும் இல்லாமல் மயக்கத்தில் கிடந்த என் மகன் மயக்கம் தெளிந்து எழுந்தபோது மகிழ்ச்சி மேலீட்டால் “அப்பா ” என்ற ஒற்றைச் சொல்லுடன் ஏன் உயிர் விட்டான்? தீராத வேதனையை ஏன் எனக்குள் தந்தான்? நடமாடும் பிணமானதே என் வாழ்வு. அக்கினிக் குஞ்சுகளில் சிறிது பெரிது உண்டோ? உயிரிலும் சின்ன உயிர் பெரிய உயிருண்டோ? காலங்கள் ஓடினாலும் வளராத தளிர்முகத்தின் கெஞ்சல்களும் குறும்புகளும் இரத்தத்தை சாகடிக்குதே. பதுங்குகுழி அமைக்க முன்னரே வெறும் பதுங்குகுழிக்குள் இறந்தவர் தொகை மடங்கு. மரங்களில் பறவைகள் தொங்குவது போல மனித அங்கங்கள் தசைத் துண்டங்கள் தொங்கியதை எப்படி மறப்பது. பாதுகாப்புக்காய் எழுந்து ஓடும்போது “சலுக் சலுக்” என கால்களைப் புதைத்த தசைத் துண்டங்கள் யாருடையவை? சாணியை மிதித்தது போல் தசைத்துண்டங்களை மிதித்து ஓடினோம். உடலில் உயிர் சுமந்த பிணங்களாய் ஆயிரம் ஆயிரம் அவலங்களை மன மயானத்தில் திரும்பத் திரும்ப தகனம் செய்யும் நடமாடும் சுடலையர் ஆனோம். இறந்தவரோடு இறக்காமல் எஞ்சிய எச்சங்களாய் நடந்தவற்றை சொல்லி இறந்தவரிற்கு நீதிகோரி நீதியை நிலைநாட்ட எஞ்சினோமா? தலைபாறி விழுந்த தென்னைகளும் வேரோடு சாய்ந்த விருட்சங்களும் கணப்பொழுதில் உருக்குலைந்த காட்சிகளும் கண்ட சாட்சியர் நாங்கள். முள்ளிவாய்க்கால் கரையோர வீதியால் இறப்பர் சிலிப்பருடன் கொதிகொதிக்கும் வெயிலில் நடந்தொருநாள் வந்தேன். என்னுடன் முன்னும் பின்னும் பலர் வந்தனர். சிலர் தெரிந்தவர்கள். எங்களைக் கடந்து ஒரு உழவு இயந்திரத்தில் காயப்பட்ட பலரை ஏற்றியபடி சென்று கொண்டிருந்தது. பின்னால் காயப்பட்ட சிலர் விழுவதுபோல் தொங்கிக் கொண்டிருந்தார்கள். கைக்குழந்தையையும் அணைத்தபடி “அண்ணோய்…. அண்ணோய்…." எனக் கத்திக்கொண்டு என்னை மறந்து ஓடினேன். என்னுடன் இன்னொரு பெண்ணும் கத்தியபடி என்னருகில் ஓடி வந்தாள். எறிகணைகள் தலையை உரசுவது போல் கூவிக்கொண்டு கடற்கரைகளில் வெடித்தன. பிரக்ஞை அற்று ஓடினோம், கத்தியபடி. எங்கள் கூவல்கள் கதறல்கள் ஓட்டுநருக்குக் கேட்க வாய்ப்பில்லை. அவன் ஓட்டுநர் அவதானிப்புக் கண்ணாடியில் பார்த்துவிட்டு உழவியந்திரத்தை நிறுத்தினான். ”அண்ணா, இஞ்ச பின்னுக்கு ஆட்கள் கீழ விழப்போகினம்,” எனக் கத்தினேன். என்னோடு வந்த பெண்ணும் கத்தினாள். “நீங்களும் சாகப் போறியளோ? நானும் எத்தினை பேரைத்தான் செத்தபின் தூக்குவது? இதெல்லாம் செத்த பிணங்கள். ஓடிப்போய் உயிர் தப்புங்கோ,” எனக்கத்திப் பேசிவிட்டு உழவியந்திரத்தை நகர்த்தினான். 'ஆமி' சரமாரியாகப் பொதுமக்கள் நடமாடும் இடங்கள் மீது எறிகணைகளை ஏவத் தொடங்கினான். "அக்கா இஞ்ச வா…,” எனக் கையில் பிடித்திழுத்து பதுங்குகுழிக்குள் இறக்கினாள் ஆரணி. அவள் எனது செஞ்சோலைச் சகோதரி. முழக்கங்கள் குறைந்ததும் தேனீரூற்றித் தந்தாள். "வேண்டாமடா, இப்ப தான் குடிச்சனான்," எனப் பொய் உரைத்தேன். "என்ர அக்காவுக்குப் பொய் சொல்லத் தெரியாது," எனச் சொல்லி, தேனீருடன் ரொட்டியும் தந்தாள். அமிர்தமாய் இருந்தது. எனது பையில் இருந்து எனக்கு சலுகை அடிப்படையில் கிடைத்த திரிபோசா பைகளில் ஒன்றை அவள், "வேண்டாம், வேண்டாம்," என்று மறுத்தபோதும் கொடுத்துவிட்டு நகர்ந்தேன். சாப்பிட்டது உற்சாகமாக இருந்தது. என் வரவுக்காய் காத்திருக்கும் எனக்காக எஞ்சியிருந்த இரண்டு உயிர்களின் முகங்களைக் காண ஓட்டமும் நடையுமாக இருப்பிடம் நோக்கி நகர்ந்தேன். - வன்னிமகள், எஸ்.கே.சஞ்சிகா. - குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/blog-post_26.html

வலிகளைச் சுமந்த அந்த நாட்கள்: நினைவுப் பகிர்வு!

1 month 1 week ago
வீரம் விளைந்த வன்னி மண்ணில் வலிகள் சுமந்த அந்த நாட்களை, அந்த ஒவ்வொரு மணித் துளிகளையும் என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை. வெள்ளையரிடம் அடிபணிய மறுத்த பண்டாரவன்னியன் காக்கை வன்னியனின் காட்டிக் கொடுப்பினால் வெள்ளையரால் தோற்கடிக்கப்பட்டதுதான் வன்னிராச்சியம் என்கின்றது வரலாறு. தங்களிடம் அடிபணிய மறுத்த தமிழர் சேனையை உலக நாடுகளின் ஆதரவோடும் ஒத்துழைப்போடும் காட்டிக்கொடுக்கும் எட்டப்பர்களின் துணையோடும் வெற்றிகொண்டதாக சிங்களம் மமதையில் துள்ளுகின்றது. இந்த வெற்றியைப் பெறுவதற்காக சிங்களம் அரங்கேற்றிய கொடூரம், மனித இனம் என்றுமே சந்தித்திருக்காதது. அந்த அவலங்களின் கதையினை உங்களிடம் சொல்லவும் என்னிடம் சொற்கள் இல்லை. அந்த நாட்களை நினைவு மீட்கையில் நெஞ்சம் உறைகிறது. தமிழன் குருதி உறைந்த அந்த மண்ணில் எத்தனை தமிழர்களின் உயிர்கள் உறைந்து போயின. வன்னியெங்கும் இப்போது தமிழர்களின் உடலங்கள் விதைக்கப்பட்ட பூமியாக மாறியிருக்கின்றது. எங்களின் குருதி தோய்ந்த அந்த மண்ணில் இன்று சப்பாத்துக் கால்கள் சுதந்திரமாக நடமாடித் திரிகையில் நெஞ்சு இன்னும் வெடிக்கிறது. மன்னாரில் தொடங்கிய தமிழர்களின் ஓட்டம் கிளிநொச்சியையும் தாண்டித் தொடரும் என்று யாரும் எதிர்பார்த்திருக்கவில்லை. கிளிநொச்சியுடன் முடிந்ததடா தமிழன் கதை என்று பரந்தன், தர்மபுரம், விசுவமடு, உடையார்கட்டு, தேவிபுரம், புதுக்குடியிருப்பு, இரணைப்பாலை, மாத்தளன் முள்ளிவாய்க்கால் வரை நடந்தன தமிழரின் கால்கள். இந்த அழிவிற்குத்தான் இவ்வளவுதூரம் நடந்து வந்தோமா? என்று நினைத்துப் பார்க்க முடியவில்லை. 2008ம் ஆண்டு நவம்பர் மாதம் அளவில் கிளிநொச்சியினை விட்டு நடக்க வெளிக்கிட்டோம். 2009 மே-17 முள்ளிவாய்க்கால் வரை நடந்துகொண்டே இருந்தோம். இந்த நெடும் பயணத்தில் எத்தனை எத்தனை அழிவுகளை நாம் சந்தித்தோம்! கிளிநொச்சியில் இருந்து எனது குடும்பமும் இடப்பெயர்வினைத் தொடங்கியது. கிளிநொச்சி நகரின் ஒரு பகுதியில் ஓலைக் குடிசையில் வசித்துவந்தது என் குடும்பம். நாளாந்தம் கூலி வேலையினைச் செய்து எனது குடும்பத்தினை பார்க்கவேண்டிய கட்டாயத்தில் நான். போர் தொடங்கியதன் பின்னர் கூலிவேலை கிடைப்பது கூட மிகக் கடினமாக மாறியிருந்தது. குடும்பத்தை நான்தான் காப்பாற்ற வேண்டும் என்ற நிலையில் ஆபத்தான கூலிவேலைகளை நான் செய்யமுற்பட்டேன். அதாவது, அன்று அக்கராயன் பகுதியில் இருந்து இடம்பெயர்ந்து கிளிநொச்சி பகுதிகளுக்குள் தங்கியுள்ள மக்கள் சூனியப்பிரதேசமாகக் காணப்படும் அவர்களின் வாழ்விடங்களுக்கு உழவு இயந்திரங்கள், இருசக்கர உழுபொறிகள் (லான்ட்மாஸ்ரர்) பேன்றவற்றில் சென்று அவர்களின் வீட்டுக்கூரை, யன்னல்கள், ஓடுகள், 'சீற்' போன்றவற்றை கழட்டி ஏற்றுவதற்காக நானும் செல்கின்றேன். நாள் ஒன்றிற்கு 150 ரூபா அல்லது 200 ரூபாதான் தருவார்கள். இவ்வாறு இருக்கும்போதுதான் எனது குடும்பம் கிளிநொச்சியினை விட்டு இடம்பெயரவேண்டிவந்தது. கிளிநொச்சியும் அரச படையினரின் எறிகணைத் தாக்குதலின் நகரமாக மாறுகின்றது. ஒரு மாட்டுவண்டிலில் ஏற்றும் பொருட்களை மிதிவண்டியில் முன்னும் பின்னுமாக கட்டிக்கொண்டு நானும் எனது குடும்பமும் தருமபுரம் பகுதி நோக்கி நகர்கின்றோம். அங்கு இருப்பதற்கு இடம் இல்லை. இரவிரவாக எறிகணைகள் வீழ்ந்துவெடிக்கும்சத்தங்கள் காதைப்பிளக்கின்றன. இந்நிலையில் எனது குடும்பத்திற்காக நான்கு தடிகள், ஒரு யு.என்.எச்.சி.ஆர் வழங்கிய 'தறப்பாள்' ஒன்றினையும் எடுத்துச் சென்றிருந்தேன். ஒரு வீதியின் ஓரத்தில் தடிகளை நட்டு 'தறப்பாளினை' இழுத்துக்கட்டினேன். எங்களிடம் கிடந்த அரிசியை, அன்று காலை அம்மா கஞ்சி காச்ச அதுதான் அன்றைய உணவானது. ஓரிரு வாரங்கள் நகர்ந்தன. அடுத்தகட்ட உணவிற்கு கையில் பணம் இல்லை. அப்போது தருமபுரம் - பரந்தன் வீதியால் 'கன்டர்', உழவு இயந்திரங்கள் சென்று வந்தன. கிளிநொச்சி மக்களின் வீடுகளைக் கழட்டுவதற்காக அந்த வீட்டு உரிமையாளர்கள் கூலிக்கு ஆட்களைக் கேட்கின்றார்கள் என்று அறிந்தேன். அந்த வேலையைச் செய்வதற்காகச் சென்றேன். அப்போதுதான் நான் கிளிநொச்சியைப் பார்க்கமுடிந்ததது. எப்படி இருந்த கிளிநொச்சி இப்படியாகிக் கிடக்கின்றதே என்று வியப்பில் விழுந்தேன். கிளிநொச்சி நகரில் வாழ்ந்த ஒரு முதலாளியின் வீடு அது. அந்த வீட்டின் 'சீற்' மற்றும் வீட்டுப் பொருட்களை ஏற்றுவதற்காத்தான் நான்வந்தேன். அவரின் வீட்டில் இருந்த அனைத்துப் பொருட்களையும் பத்திரமாகக் கழற்றி, ஏற்றிவிட்டு கிளிநொச்சியின் நகர்ப்பகுதி ஏ.9 வீதிக்கு ஊர்தி ஏறுகின்றது. அப்போது, அது சிங்கள மகாவித்தியாலயம் அமைந்த பகுதி. அதில் நின்று பார்க்கும் போது இரண்டாம் உலக யுத்தத்தின் காட்சிப் படங்கள்தான் என் நினைவிற்கு வந்தன. நகரின் பெரு விளையாட்டுத் திடல்வரை மயானம் போல் காட்சி அளிக்கின்றது. மக்கள் நடமாட்டங்கள் இல்லை. எறிகணைத் தாக்குதலில் மரங்கள் ஆங்காங்கே விழுந்து கிடக்கின்றன. வீதியின் ஓரங்களில் உள்ள வீடுகள், கட்டடங்கள் அனைத்தும் எறிகணை மற்றும் வான் தாக்குதல்களால் சிதறிக்கிடக்கின்றன. இவற்றை எல்லாம் பார்த்துக்கொண்டு விழுந்துகிடந்த தென்னைமரம் ஒன்றில் நான்கு தேங்காயினை எனது வீட்டுத் தேவைக்காகப் பிடிங்கிகொண்டு ஊர்தியில் ஏறினேன். இதுதான் நான்கண்ட இறுதிக் கிளிநொச்சி நகரம். நகரமாக இருந்தது அப்போது நரகமாக மாறியிருந்தது. பரந்தன் - புதுக்குடியிருப்பு வீதியின் கரை ஓரங்கள் எங்கும் மக்களின் குடில்களும், 'தறப்பாள்' கொட்டில்களும் நிறைந்து கிடந்தன. தண்ணிக்காகவும் உணவுக்காகவும் காத்திருக்கும் மக்களை வீதிகளில் பாக்கக்கூடியதாக இருந்தது. வீதிகள், மரங்களின் கீழ் எல்லாம் மக்கள் வெள்ளம். மக்கள் செல்லும் இடங்களில், முதலில் செய்வது பதுங்ககழி வெட்டுவதுதான். அதன்பின்னர், அதற்கு மேல் கொட்டில்போட்டு அதற்குள் இருப்பதுதான். இவ்வாறுதான் எனது குடும்பத்தை நான் மண் அணைசெய்து, குண்டு விழுந்தாலும் சிதறுதுண்டுகள் அடிக்காத வண்ணம் பாதுகாக்க முயற்சிக்கின்றேன். ஆனால், மண்வெட்டி இல்லை. மண்ணைப் பக்கத்தில் இருந்து வெட்டிப்போட முடியாது. அருகில் எல்லாம் குடும்பங்கள் குடியேறிவிட்டன. இவ்வாறு மக்களின் செறிவு அதிகரிக்கத் தொடங்குகின்றது. ஆங்காங்கே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. தொலைதூர எறிகணைகள் கூவி வரும்போது மக்கள் அலறியடித்து ஓடிப்பதுங்கும் காட்சிகள் என் கண்முன்னே நிழலாடுகின்றது. அதைவிடக் கொடுமை, மிகை ஒலி விமானங்கள் தாழப்பறந்து வீசும் குண்டுகள். அதன் சிதறு துண்டுகள் ஒரு கிலோ மீற்றர் தூரம்வரை பாதிப்பினை உண்டுபண்ணும். தருமபுரம் பகுதி எதிரியின் எறிகணைத் தாக்குதலின் முழுமையான பகுதியாக மாறுகின்றது. நாங்கள் விசுவமடு நோக்கி நகரலாம் என்று எண்ணி வெளிக்கிட்டோம். ஒருநாள் இரவு நகரவெளிக்கிட்டால் எங்கு செல்வது? வீதியால் விலத்தமுடியாத மக்கள் நெரிசல். அந்தவேளையில் எனக்கு நினைவிற்கு வந்தது, யாழ்ப்பாண இடப்பெயர்வை முன்னிட்டு புதுவை இரத்தினதுரை அவர்கள் எழுதிய அந்தப் பொன்னான பாடல் வரிதான். "பூவும் நடக்குது பிஞ்சும் நடக்குது போகுமிடம் தெரியாமல்..." என்ற வரி என்னை நினைக்க வைத்தது. சிறியவர்கள், பெரியவர்கள், வயது முதிர்ந்தவர்கள் எல்லாம் தங்களால் இயன்ற பொருட்களை ஏற்றிக்கொண்டும், எடுத்துக்கொண்டும் எங்குபோவது என்று தெரியாமல் இப்போதும் நகர்ந்துகொண்டிருந்தார்கள். எறிகணைகள் விழும் சத்தம் தொலைவில் கேட்பதாக இருந்தால் அந்த இடத்தில் தங்குவதாக எனது நிலைப்பாடு இருந்தது. இவ்வாறு நகர்ந்து வந்த மக்கள் விசுவமடு, தொட்டியடிப் பகுதியின் விளையாட்டுத் திடலில் மக்கள் குடியேறுகின்றார்கள். அவர்களுடன் நானும் எனது குடும்பமும் அன்று இரவு 'தறப்பாளை' விரித்துவிட்டுப் படுத்து உறங்கினோம். அவசரத்திற்கு செல்வதற்கு அருகில் பற்றைக்காடுகள் உள்ள இடமும் தண்ணீர் வசதிகள் கொண்ட இடத்தினையும் தான் பார்த்துப் பார்த்து மக்கள் தங்கிக்கொள்கின்றார்கள். இந்த நிலையில் மழையும் பெய்யத் தொடங்குகின்றது. இழுத்துக் கட்டின தறப்பாள் கொட்டிலுக்குள் வெள்ளம் வருகின்றது. மண்ணைவெட்டி அணையாகக் கட்டி அதற்குள்தான் எனது குடும்பம் உறங்கிக்கொண்டிருக்கிறது. எங்களிடம் ஒருதொகை நெல் கிடந்தபடியால் அதனைக் குற்றி அரிசியாக்கி கஞ்சியும் சோறுமாகச் செய்து சாப்பிட்டுக் கொண்டிருந்தோம். சாவுகளும் மலிந்துகொண்டிருந்தன. ஒவ்வொரு வீடும் இழப்புக்களைச் சந்தித்துக்கொண்டே இருந்தது. கொட்டும் மழையில் மக்கள் ஒருபுறம், விடுதலைக்காகப் போராடிக்கொண்டிருக்கும் போராளிகள் மறுபுறம் என்று இழப்புக்கள் அதிகரித்துக்கொண்டு இருந்ததேதவிர குறையவில்லை. மருத்துவமனைகள் உள்ளிட்ட அரச செயலகங்கள் அனைத்தும் இடம்பெயர்ந்து, இடந்தெரியாத இடங்களில் இயங்கிக் கொண்டிருக்கின்றன. நிவாரணம் கொடுப்பதாக ஒர் இடத்தில் வானொலி ஊடாக அறிவித்தால், அந்த இடம் தேடிப்பிடிக்கப் போகும்போது எறிகணை வீழ்ந்து அதில் மடிந்த மக்கள்தான் இருப்பார்கள். இவ்வாறுதான் அன்றும் பல நிகழ்வுகள் நடந்தேறிக் கொண்டிருக்கையில், படையினரின் நகர்வும் வேகமாக இடம்பெற்றுக் கொண்டிருக்கின்றது. மக்கள் நெரிசலாகிக் கொண்டிருந்தார்கள். இதனால் உயிரிழப்புகளும் அதிகரித்துக்கொண்டே இருந்தன. தற்போது விசுவமடுவினை விட்டும் வெளியேறவேண்டிய நிலை. அடுத்து எங்கு செல்வது என்று தெரியாது. ஆனாலும் நடந்துகொண்டே இருக்கின்றோம். அங்கங்கே வீதிகளிலும் எறிகணைகள் வீழ்ந்து வெடித்துக்கொண்டிருக்கின்றன. நீண்டதூர எறிகணைகள் மக்கள் வாழ்விடங்களில் வீழ்கின்றன. குறிப்பாக அன்று அனைத்துப் பகுதிகளிலும் மக்கள் வாழ்கின்றார்கள். காடுகள், புற்தரைகள், சுடலைகள், வீதி ஓரங்கள் போன்ற அனைத்துப் பகுதிகளிலும் மக்களின் 'தறப்பாள்' கொட்டில்கள் காணப்படுகின்றன. இதற்கிடையில் அரசவானொலியில் வெள்ளைக்கொடி கட்டி இருங்கள் என்று அறிவித்ததாகச் சொன்னார்கள். அதனையடுத்து 'தறப்பாள்' கொட்டில்களின் மேல் வெள்ளைக்கொடிகளைக் கட்டிப் பாத்தோம். ஆனால், அதன் மீதும் எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. மழை பெய்துகொண்டிருக்கின்றது. வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றது. இவற்றை எல்லாம் பொருட்படுத்தாமல் மக்களின் இடப்பெயர்வு நடந்துகொண்டிருக்கின்றது. எங்காவது சென்று இருந்தால் போதும் என்ற நிலையில் மக்கள் நகர்ந்துகொண்டிருந்தார்கள். நகர்கின்றோம், நகர்கின்றோம் நகர்ந்துகொண்டே இருந்தோம். தேராவில் குளம் நிரம்பிவிட்டது. அதனால் அதன் குளக்கட்டால் செல்லமுடியாது. மாற்றுவழிப் பாதை அமைத்து அதன் ஊடாகத்தான் மக்களும் ஊர்திகளும் நகர்ந்துகொண்டிருக்கின்றன. இவ்வாறு நகர்ந்து சென்றால் மறுபக்கத்தால், அதாவது ஒட்டுசுட்டானில் இருந்து முன்னேறும் படையினர் எறிகணைத் தாக்குதல்களை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். தேவிபுரப் பகுதியில் இருப்பதாக இருந்தால் அங்கும் இடம்இல்லை. தேவிபுரம் ஊடாக இரணைப்பபாலை பகுதி நோக்கி நகர்ந்து அங்கு ஒரு தென்னந்தோப்பில் எனது குடும்பம் இடம்பிடித்துக்கொண்டது. ஆனாலும், இடங்கள் சுருங்கச் சுருங்க வாழ்வதற்கு இடமில்லை. மலம் கழிக்க இடமில்லை. குடிக்க நீர் இல்லை. ஒழுங்கான குளிப்பில்லை. இரவில் இருக்கும் இடத்திற்கு அருகில் கிடங்குகிண்டித்தான் மலம் கழித்துவிட்டுப் புதைப்பது. இது ஒருபுறம், மறுபுறம் உணவுப்பொருட்களுக்குப் பெருந் தட்டுப்பாடு. அதற்காக அலைந்துதிரிவது என்றால் அதனைவிடத் துன்பம் வேறெதுவும் இல்லை. கடைகளில் ஒரு கிலோ அரிசியின் விலை 300 ரூபாவிற்கு மேல் வந்துவிட்டது. ஒரு கிலோ சீனி 500 ரூபாவைக் கடந்துவிட்டிருந்தது. குழந்தைகளுக்கான பால்மா இல்லை. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பெற்றோர்கள். பணம் இருப்பவர்கள் பணத்தைக் கொடுத்து வாங்குகின்றார்கள். மற்றவர்களின் நிலை? வன்னியைப் பொறுத்தமட்டில், மூன்று இலட்சம் மக்களில் குறைந்தது ஒரு இலட்சம் மக்கள்தான் இவ்வாறான நிலையை ஈடுசெய்யக் கூடியவகையில் இருப்பார்கள். விவசாயத்தையே நம்பி வாழ்ந்த மக்களிடம் நெல்லைத் தவிர வேறு எதுவும் இல்லை. இப்போது அதுவும் இல்லாத நிலையில்தான் நகர்ந்துகொண்டிருக்கின்றது வாழ்வு. கப்பலில் சாமான் வருகிறதாம் என்று அரசாங்க அதிபர்கள் கதைக்கின்றார்கள். இரண்டாம் மாதம் அளவில் மாத்தளன் பகுதியில் சாமான்களுடன், அதுவும் குறைந்த அளவு உணவுப் பொருட்களுடன் கப்பல் வந்தது. ஆனால், யானைப் பசிக்கு அது சோளப்பொரிதான் வந்தது. உணவுப்பொருட்கள் கொண்டுவந்த கப்பல் காயமடைந்த மக்களை ஏற்றிக்கொண்டு சென்றதுதான் ஒரு ஆறுதல். இப்போது இரணைப்பாலையில் இருந்தது எனது குடும்பம். அங்கும் இடம் இல்லாத நிலையில் சுழன்று சுழன்று ஐந்திற்கும் மேற்பட்ட இடங்களில் இருந்தேன். இன்று ஓர் இடத்தில் இருந்தால் அதற்குப் பக்கத்தில் 'கிபீர்' விமானங்கள் தொடராகத் தாக்குகின்றன என்று மாற்று இடத்தில் இருந்தால், அங்கு தொடராக எறிகணைகள் வந்து வீழ்கின்றன. இவ்வாறான நிலையில் எங்கு செல்வது என்று தெரியாமல் வீதியின் வாய்க்கால் பகுதி பள்ளமாகக் காணப்படுகின்றது. செல்வீழ்ந்து வெடித்தால் சிதறுதுண்டுகள் பறக்காதுதான். ஆனால், தலைக்குமேல் விழுந்தால் அது காலம் என்று என் உறவுகளுக்குச் சொல்லிக்கொண்டு, அந்த வாய்க்காலில் தறப்பாளினை இழுத்துக் கட்டியபடி அதற்குள் இரவுப் பொழுதினைக் கழித்தோம். மக்கள் எல்லாம் பொக்கணை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றார்கள். பொக்கணைப் பகுதியில் இருந்துவரும் மக்களைக் கேட்டேன், "அங்கு இடம் இருக்கிறதா," என்று. ஒருவர் சென்னார் “இவ்வளவு நாளும் இடம்பார்த்தா வந்தனாங்கள். போறபோற இடங்களிலை இருக்கத்தான் வேண்டும். போ, நீ அங்க போ! இங்க இருக்காத. செல் வந்தோண்டு இருக்கு,” என்று அவசர அவசரமாகச் சொல்லிவிட்டு அவர் தனது குடும்பத்தை அழைத்துக்கொண்டு செல்லப்போனார். அவர் சென்று ஐந்து நிமிடங்கள் கழியவில்லை, இரணைப்பாலைச் சந்திக்கு அருகில் தொடராக எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. என்னுடன் இவ்வாறு கதைத்துவிட்டுச் சென்றவர் செல்லில் காயம் அடைந்துவிட்டார். யாரையும் யாரும் காப்பாற்ற முடியாத ஒரு நிலை. காயம் அடைந்தாலும் அவனை வந்து தூக்குபவன் அடுத்த எறிகணையில் இறந்துவிடுவான். இதுதான் அன்று மக்களின் கண்முன் நடக்கும் நிகழ்வு. இதனைவிடக் காயம் அடைந்தவர்களுக்கு மருந்து இல்லை. மருத்துவமனைகள் காயமடைந்த மக்களால் நிரப்பிவழிகின்றன. இவ்வாறான நிலையில் மக்கள் எல்லாம் அந்த குடாப்பகுதியான பழைய மாத்தளன், புதுமாத்தளன், அம்பலவன் பொக்கணை, வலைஞர்மடம், இரட்டைவாய்க்கால், ஒற்றைப்பனையடி, சாளம்பன், கரையாம்முள்ளிவாய்க்கால், வெள்ளாம் முள்ளிவாய்க்கால் ஆகிய பகுதிகளை நோக்கிச் செறிவாக நகர்ந்துவிட்டார்கள். 05.04.2009 அன்று புதுக்குடியிருப்புப் பகுதி முழுவதும் படையினர் தங்கள் வசப்படுத்திவிட்டார்கள். மக்கள் அனைவரும் அந்த முள்ளிவாய்க்கால் குடாவிற்குள் அடைக்கப்பட்டு விட்டார்கள் என்பது தெட்டத்தெளிவாகக் காணக்கூடியதாக இருக்கின்றது. நான் எனது குடும்பத்துடன் கடற்கரையை அண்டிய இடத்தைத் தெரிவு செய்தேன். அங்கெல்லாம் எறிகணை வீழ்ந்துவெடிக்காது என்ற நினைப்பு எனக்கு. ஆனால், அதற்குமாறாக கடலில் இருந்து கப்பல்கள் பீரங்கித் தாக்குதல்களைத் தொடுத்தன. அதிலும் 'கிளஸ்ரர்' எனப்படும் கொத்துக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டதை நான் கண்ணூடாக அப்போதுதான் கண்டேன். இதற்குள்தான் ஒரு கிலோ அரிசியின் விலை ஆயிரம் ரூபாயினைத் தாண்டிவிட்டது. ஒரு கிலோ சீனியின் விலை 1500 ரூபாவினைத் தாண்டிக்கொண்டிருக்கின்றது. சமைப்பதற்கு உரிய உணவுப் பொருட்கள் இல்லை. ஒரு தேங்காயைக் காணமுடியாது. என்னசெய்வது என்று தெரியாத நிலையில் மக்கள் அங்கலாய்த்துக் கொண்டிருக்கின்றார்கள். சில கடைகளின் உரிமையாளர்கள் அந்தக் கொட்டில்களில் வைத்துக்கொண்டு மிகமிக உயர்ந்த விலைக்குப் பொருட்களை விற்பனை செய்துவருகின்றார்கள். கடலில் தொழில்செய்ய முடியாது. ஆனால், வலையினை வீசி மீன் பிடிக்கின்றார்கள். எதிரியின் குண்டுகள் கடலிலும் வீழ்ந்துவெடிக்கின்றன. அதற்கும் அஞ்சாமல் ஒருநேரமாவது சாப்பிடவேண்டும், தங்களின் பிள்ளைகளுக்கு உணவு கொடுக்க வேண்டும் என்பதற்காக உயிரைக்கூடப் பொருட்படுத்தாமல் நந்திக்கடல் பகுதியிலும் பெருங்கடல் பகுதியிலும் மீன்பிடிக்கின்றார்கள். அதனை விற்பனை செய்கின்றார்கள். அதனைவைத்து உணவுத் தேவையைப் பூர்திசெய்கின்றார்கள். வெற்றிலை சாப்பிடுபவர்கள் ஆலம்விழுதினைச் சாப்பிடுகின்றார்கள், தேனீர் குடிப்பவர்கள் சுடுதண்ணீர் குடிக்கின்றார்கள். மில்லில் இருந்து வெளிவரும் உமியைப் புடைத்து, அதன் குறுநலை எடுத்துக் கஞ்சி காய்ச்சிக் குடிக்கின்றார்கள். ஏன், அங்கு பற்றைகளில் காணப்படும் அடம்பன் கொடியின் கிழங்கினை அவித்து சாப்பிட்டுக் கூட மக்கள் இருக்கின்றார்கள். இவற்றுக்கு மத்தியில் எறிகணைத் தாக்குதல்கள், நாள் ஒன்றிற்கு இருபதிற்கு மேற்பட்டதடவை மிகையொலி விமானங்கள் நடத்தும் தாக்குதல்கள், இதனைவிட கடலில் இருந்து நடத்தப்படும் தாக்குதல்கள் என முழுமையான கொலை வலயத்திற்குள் மக்கள் இருந்தார்கள். எறிகணைகளில் இருந்து தங்களைத் தற்காத்துக்கொள்ள கைவசம் எஞ்சியிருந்த சாறிகள், சாறங்களை எல்லாம் சிறுசிறு பைபோல் தைத்துவிட்டு அதற்குள் மண்ணைப்போட்டுச் சுற்றிவர அடுக்கிவிட்டுத்தான் படுத்துறங்க வேண்டியிருந்தது. விழுந்து வெடித்துக்கொண்டிருக்கும் எறிகணைகளுக்கு மத்தியில் விடியுமுன்னரே கடற்கரைக்குச் சென்று மலம் கழித்துவிடவேண்டும். விடிந்துவிட்டால் அதற்கு வழியில்லை. இதனால், ஆண், பெண் அடையாளம் தெரியாத அந்த அதிகாலைப் பொழுதில் எல்லோரும் கடற்கரையை முற்றுகையிட்டார்கள். எனது கொட்டிலுக்கு முன்னால் ஐம்பது மீற்றர் தூரத்தில் நின்ற நாவல்மரத்தின் கீழ் விளையாடிக்கொண்டிருந்த சிறுவர்களைப் பார்த்துக்கொண்டிருந்தேன். நடக்கப்போகும் விபரீதத்தை அறியாத அந்த சிறுவர்கள் விளையாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது அந்த இடத்தில் திடீரென எறிகணைகள் வந்து வீழ்ந்து வெடிக்கத் தொடங்கின. அந்தச் சிறுவர்கள் பதுங்குகுழிகளுக்குள் செல்வதற்கு முன் கண்முன்னாலேயே வீழ்ந்து மடிந்தார்கள். என் கண்முன்னாலேயே மூன்று சிறுமிகள் துடிதுடித்து மடிந்ததை இன்னும் கண்கள் மறக்கவில்லை. இறந்தவர்களைப் புதைப்பதற்குக் கூட இடமில்லாது மக்கள் செறிந்திருந்தார்கள். தங்கள் தறப்பாளுக்கு அருகிலேயே அவர்களைப் புதைத்துவிட்டு அதற்கு அருகிலேயே அவர்களும் படுத்திருந்தார்கள். சில இடங்களில் மக்கள் இராணுவத்தின் பிடிக்குள் அகப்பட்டிருந்தார்கள். எஞ்சியிருந்த மக்கள் சிலரும் இராணுவத்தின் கட்டுப்பாட்டிற்குள் போவோமா என்று சிந்தித்துக் கொண்டிருந்தார்கள். இந்நிலையில்தான், 20.04.2009 அன்று புதுமாத்தளன் பகுதியில் ஊடறுத்து வந்தேறிய படையினர் ஒரு இலட்சம் வரையான மக்களைச் சிறைப் பிடிக்கின்றார்கள். இதன்போது பெருமளவான மக்கள் படுகொலை செய்யப்படுகின்றார்கள். இவ்வாறு இருக்க மக்கள் பண்டமாற்று செய்யும் காலகட்டமாக அந்தக்காலகட்டம் மாற்றமடைந்திருந்தது. ஒரு 'பொயின்ட்' இரத்தம் கொடுத்துவிட்டு ஒரு பால்மா பை வாங்கியது, ஒரு கிலோ அரிசி கொடுத்துவிட்டு அரைக் கிலோ மீன் வாங்கியது, ஒரு கிலோ செத்தல்மிளகாய் கொடுத்து, ஒரு கிலோ சீனி வாங்கியது, ஒரு மூட்டை சீனி கொடுத்து ஒரு உழவு இயந்திரம் மற்றும் உந்துருளி வாங்கியவர்களும், ஒருபவுண் நகைகொடுத்துவிட்டு நெல் மற்றும் பணம் வாங்கியவர்களுமாக அன்று பண்டமாற்று முறைக்கு மக்கள் மாற்றமடைந்திருந்தார்கள். இடையிடை மக்களுக்குக் கஞ்சிகொடுக்கும் கொட்டில்களில் மக்கள் எறிகணைகள் விழுமோ என்ற அச்சத்துடன் குவிந்திருந்தார்கள். கரையாம்முள்ளிவாய்கால் பகுதியில் நான் எனது குடும்பத்துடன் கஞ்சி எடுத்துவிட்டு வந்துகொண்டிருக்கின்றேன். அப்போது அந்தக் கொட்டிலின் அருகில் எறிகணை வீழ்ந்து வெடிக்கின்றது. அதில் இருபதிற்கு மேற்பட்ட மக்கள் கொல்லப்படுகின்றார்கள். அவர்கள் அனைவரும் கஞ்சிக்காக காத்துநின்றவர்கள். உயிரிழக்கும் மக்களைப் புதைப்பதற்குக் கூட வழியில்லாமல் போனது நிலைமை! நாள் 03.05.2009 வலைஞர்மடம் பகுதியில் இயங்கிக்கொண்டிருந்த முல்லைத்தீவு மருத்துவமனை மீதும் தொடர் தாக்குதல்கள் நடத்தப்பட்டு, அதில் காயமடைந்து சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த மக்கள் உயிரிழக்கின்றார்கள். அடுத்த சில நாட்களில் உயிரிழந்தவர்கள் போக எஞ்சியவர்கள் இராணுவத்தின் முழுமையான ஆக்கிரமிப்பிற்குள் செல்லவேண்டிய நிலை. முள்ளிவாய்க்கால் பக்கமான இரட்டைவாய்க்கால் மற்றும் வட்டுவாகல் பகுதிகள் ஊடாக நகர முற்படுகின்றார்கள். நந்திக்கடல் பகுதியில் ஏரியால் கடந்து சென்று வற்றாப்பளை பகுதியிலும் கரை ஏறுகின்றார்கள். போகும் வழியெங்கும் மனித உடலங்கள். வழியில் கிடந்த உடலங்கள் எண்ணில் அடங்காதவை. நாங்கள் வட்டுவாகல் பாலத்தினை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றோம். அந்தப் பகுதியால் வந்த படையினரின் 'ராங்கிகள்' பல அடுக்கடுக்காக நகர்ந்துகொண்டிருக்கின்றன. அந்த 'ராங்கிகள்' பார்ப்பதற்குப் புதிதாக இருந்தன. சீனாவின் சின்னங்கள் பொறிக்கப்பட்டிருந்ததை அந்த உயிர் போகும் நேரத்திலும் காணமுடிந்தது. கண்முன்னே செத்துக்கிடக்கும் உடலங்கள் மீது அந்த டாங்கிகள் ஏறி செல்கையில் மனம் விம்மி வெடிக்கின்றது. இவற்றை எல்லாம் தாண்டித்தான் எங்கள் உயிர்கள் படையினரின் கட்டுப்பாட்டுக்குள் செல்கின்றது. படையினரின் கட்டுப்பாட்டுக்குள் வந்த நாங்கள் படையினரின் சப்பாத்துக் கால்களால் உதைவாங்கிக்கொண்டு நகர்கின்றோம். பிச்சைக்காரர்களுக்குப் பிச்சை போடுவதுபோல அவர்கள் எங்களின் பசிக்கு உணவுகளை வீசி எறிந்தார்கள். அதிலும் `போலி’ 'போலி' என்று சிங்களத்தால் சொல்லும் வார்த்தைகள் எங்களை நிலைகுலையவைத்தன. இவை அனைத்தையும் தாங்கிக்கொண்டு நகர்ந்துகொண்டிருந்தன, வலுவிழந்த எங்களின் கால்கள். இத்தனை அவலங்களைக் கடந்துவந்தபின்பும் மீண்டும் மக்களைச் சோதனைகளுக்கு உள்ளாக்கியது சிங்களத்தின் வதைமுகாம் வாழ்க்கை. உயிர்தப்பிய பலரின் உயிர்கள் இங்குவைத்தும் பிடுங்கப்பட்டன. முகாங்களுக்குள் இருந்தும் காணாமல் போகத் தொடங்கினார்கள் தமிழர்கள். இளைஞர்களும், யுவதிகளும் கைதுசெய்து, கொண்டு செல்லப்பட்டார்கள். இவ்வாறு வதைமுகாம் வாழ்கை பற்றி இதற்கு மேலும் சொல்லத் தேவையில்லை. மரத்தால் விழுந்தவனை மாடு ஏறி மித்த கதைதான் அதுவென்பது எல்லோருக்கும் தெரிந்ததே. இந்த வாழ்வு வாழ்வதற்காகவா அன்று உயிர் தப்பினோம் என்று இன்று தங்களுக்குள் வெந்துகொண்டிருக்கின்றார்கள் அந்த மக்கள். - எல்லாளன் - குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/blog-post_61.html

போரின் இறுதி நாட்களில் நடந்தவற்றை விவரிக்கும் ஒரு மதகுருவின் வாக்குமூலம்!

1 month 1 week ago
முள்ளிவாய்க்கால் கொடூர நிகழ்வின்போது அதில் சிக்கி தப்பித்து வாழ்பவர்களின் உண்மைக் கதைகளை ‘சமூக சிற்பிகள்‘ அமைப்பினர் [The Social Architects -TSA]* கேட்டு தங்கள் வலைப்பதிவில் ஆங்கில மொழியில் பதிவேற்றம் செய்துள்ளனர். அவ்வாறு வெளியிடப்பட்டிருக்கின்ற 09 உண்மைக்கதைகளில் ஒரு கதையின் மொழியாக்கம் இங்கு மீள்பிரசுரம் செய்யப்படுகின்றது.[சிறிலங்காவில் இடம்பெற்ற யுத்தத்தின் இறுதிக்கட்டத்தில் அறிவிக்கப்பட்டிருந்த 'போர் வலயமற்ற' பகுதியில் தாய் தந்தையரை இழந்த சிறுவர்களைப் பராமரிக்கும் விடுதியைச் சேர்ந்த சில எண்ணிக்கையான சிறார்களை பராமரிக்கும் பணியில் இராசதுரை ஈடுபட்டிருந்தார். அவர் கூறுகிறார், நாங்கள் கிளிநொச்சியை விட்டு இடம்பெயர்த்தப்படுவதற்கு முன்னர் தேவாலய வளாகத்தில் நான் ஆறு பதுங்குகுழிகளை அமைத்திருந்தேன். இதேபோல் வன்னி முழுவதிலும் பல பதுங்குகுழிகளை நாங்கள் அமைத்திருந்தோம். ஒவ்வொரு தடவையும் நாங்கள் இடம்பெயர்த்தப்படும் போதும் முதலில் பதுங்குகுழிகளை அமைப்பதே எமது பிரதான பணியாக இருந்தது. கிளிநொச்சி வைத்தியசாலை மீது தாக்குதல் மேற்கொண்டிருந்த வேளையில், அங்கே நான் நான்கு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தேன். மருத்துவமனைகளை குறிவைத்து தாக்குதல் நடாத்துவதானது யுத்த தந்திரோபாயமாகும். வன்னியில் யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில், மக்கள் வேறிடங்களுக்கு இடம்பெயர்ந்து சென்றபோதெல்லாம், சிறிலங்கா இராணுவத்தினர் முதலில் வைத்தியசாலைகளைக் குறிவைத்தே தாக்குதல் நடாத்தினர். புதுக்குடியிருப்பு பிரதேசத்தில், பல ஆயிரக்கணக்கானவர்கள் காயமடைந்தனர். ஆனால் அவர்களுக்கு கொடுப்பதற்குத் தேவையான மயக்க மருந்து இல்லாததால் அங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் மயக்க மருந்து வழங்காமலேயே காயமடைந்தவர்களின் உடல் உறுப்புக்களை வெட்டி அகற்ற வேண்டிய இக்கட்டான நிலைக்குத் தள்ளப்பட்டனர். உண்மையில் இங்கு கடமையாற்றிய வைத்தியர்கள் ‘இயந்திரங்கள்’ போலவே செயற்பட்டனர். காயமடைந்த மக்கள் ஆகக் கூடியது ஒரு சில நிமிடங்களே சத்திரசிகிச்சை அறைக்குள் அனுமதிக்கப்பட்டனர். இதன் பின்னர் காயமடைந்த பிற நோயாளிகளுக்கு தொடர்ந்து சத்திரசிகிச்சை வழங்கப்பட்டது. உடையார்கட்டு என்ற இடத்தில் தஞ்சம் புகுந்திருந்த மக்கள் மீது ‘பொசுபரசுக் குண்டுகள்’ வீசப்பட்டன. இந்த வகைக் குண்டுகள் வீசப்பட்டதும் கறுப்பு நிறப் புகை வெளியேறும். அத்துடன் இந்தக் குண்டு எங்கு வீசப்படுகின்றதோ அங்கே உள்ள அனைத்தும் எரிந்து கருகிவிடும். இந்த வகைக் குண்டு வீசப்பட்டவுடன் அதன் சுவாலை ‘தறப்பாலில்’ பற்றி அதன் பகுதிகள் மக்கள் மீது விழுந்தவுடன் மக்கள் எரிகாயங்களுக்கு உள்ளாகினர். பொசுபரசுக் குண்டொன்று வீசப்பட்ட போது அதன் சுவாலைகள் வாழை இலைகள் மீது படர்ந்து பின் அங்கிருந்த மனிதர் ஒருவரின் உடலிலும் பற்றிக் கொண்டது. இதனால் மிக மோசமான முறையில் குறிப்பிட்ட மனிதர் எரிகாயங்களுக்கு உள்ளாகினார். இதனை நான் நேரில் பார்த்தேன். பொசுபரசுக் குண்டுத் தாக்குதலுக்கு உள்ளாகி மிக மோசமான எரிகாயங்களுக்கு உள்ளான பலர் யுத்த வலயத்திலிருந்து அகற்றப்பட்டு, கப்பல் மூலம் மேலதிக மருத்துவத்திற்காக கொண்டு செல்லப்பட்டனர். கொத்துக் குண்டுகள் முதலில் பரந்தன் பகுதியிலேயே வீசப்பட்டன. பல வகையான கொத்துக் குண்டுகளை சிறிலங்கா இராணுவத்தினர் பயன்படுத்தினர். கொத்துக் குண்டொன்றின் பிரதான குண்டு வானில் வெடித்துச் சிதறி பல சிறிய துண்டுகளாக உடைகின்றது. இரணைப்பாலை என்ற பிரதேசத்தில் வீசப்பட்ட கொத்துக் குண்டொன்று பல வர்ண நாடாக்களைக் கொண்டிருந்தது. இதனால் இவ்வகைக் குண்டானது சிறுவர்களின் கவனத்தை அதிகம் ஈர்த்துக் கொண்டது. சிறுவர்கள் பல வர்ண நிறங்களால் கவர்ச்சிமிக்க வகையில் உருவாக்கப்பட்டிருந்த இக் கொத்துக் குண்டின் பகுதிகளை தொட்ட போது அவை வெடித்துச் சிதறிய சம்பவங்களும் உண்டு. ஜனவரி 25, 2009 அன்று ஒரு நிமிடத்தில் வெடித்த எறிகணைகள் எத்தனை என்பதை நாம் எண்ணிக்கொண்டோம். நாங்கள் ஐந்து மதகுருமார்கள், அருட்சகோதரிகளைக் கொண்ட ஒரு குழு, பெற்றோரை இழந்த பிள்ளைகள் ஆகியோர் ஒன்றாக பதுங்குகுழிக்குள் இருந்தோம். அந்த வேளையில் நாம் இருந்த பகுதியை நோக்கி பல் குழல் எறிகணைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன. அப்போது ஒரு நிமிடத்தில் 60 குண்டுகள் வெடித்ததை நாம் அவதானித்தோம். நான் உண்மையில் மிகப் பயங்கரமான, கோரமான நாட்கள் சிலவற்றைப் பற்றி எடுத்துக் கூறவேண்டும். மே 17,2009 அன்று யுத்தம் முடிவுற்றதாக சிறிலங்கா அரசாங்கத் தரப்பினர் வானொலிச் செய்திகள் மூலம் அறிவித்துக் கொண்டிருந்தனர். அத்துடன் சிறிலங்கா இராணுவம் தொடர்ந்தும் எஞ்சியுள்ள புலி உறுப்பினர்களை தேடி அழிக்கும் நடவடிக்கையில் ஈடுபடுவதாகவும் சிறிலங்கா அரசாங்கத் தரப்பு அறிவித்துக் கொண்டிருந்தது. மிகக் கோரமான அந்த யுத்தத்தின் இறுதி நாட்களில் முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டிருந்த பதுங்குகுழியில் எம்மில் ஐந்து மதகுருமார்கள், பெற்றோரை இழந்த 40 சிறார்கள் மற்றும் அருட்சகோதரிகள் சிலரும் தஞ்சம் புகுந்திருந்தோம். எம்மிடம் CDMA தொலைபேசி ஒன்றும், சற்றலைற் தொலைபேசி ஒன்றும் இருந்தன. நாம் முதலில் எமது ஆயர் அவர்களை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டோம். பின்னர் இறுதி யுத்த நடவடிக்கைக்கு பொறுப்பாக இருந்த பிரிகேடியர் சவீந்திர டீ சில்வாவுடன் தொடர்பை ஏற்படுத்திக் கொண்டோம். சவீந்திர டீ சில்வா தற்போது ஐ.நாவுக்கான சிறிலங்காத் தூதராகக் கடமையாற்றுகிறார். வெள்ளைக் கொடிகளை உயர்த்திப் பிடித்தவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறுமாறு பிரிகேடியர் எம்மைக் கேட்டுக் கொண்டார். இந்நிலையில் 2009 மே 17 பிற்பகல் வேளையில் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு நாம் எமது பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். ஆனால் இராணுவத்தினர் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். யுத்த வலயத்தை விட்டு நாம் வெளியேறுவதற்கு முன்னர் இறுதி நான்கு நாட்களாக நாம் எதையும் சாப்பிடவுமில்லை. அத்துடன் நீர் கூட அருந்தவில்லை. யுத்தத்தின் இறுதிக் கட்டத்தில் ஒரு பிஸ்கட்டைப் பெற்றுக் கொள்வதே மிகவும் கடினமாக இருந்தது. கைவிடப்பட்ட பதுங்குகுழி ஒன்றில் விடுதலைப் புலிகளின் மிகவும் சக்தியை வழங்கவல்ல 10 உணவுப் பொதிகளை நாம் பெரும் போராட்டத்தின் பின் பெற்றுக் கொண்டோம். அப் பொதிகளை நாம் அறுபது பேரும் பகிர்ந்து உண்டோம். மே 17 இரவு, நான் கிட்டத்தட்ட 50 தடவைகள் வரை ஜெபமாலை செபம் செய்திருப்பேன். நாங்கள் கடற்கரைக்கு மிக அருகில் இருந்ததால் எமது பதுங்குகுழிகள் ஆழமற்றதாக காணப்பட்டன. இந்த இரவு முழுவதும் இராணுவச் சிப்பாய்கள் பதுங்குகுழிகளுக்குள் கைக்குண்டுகளை வீசி மக்களைக் கொலை செய்தனர். அந்த இரவு என்னுடன் இருந்த பெற்றோரை இழந்த சிறார்கள் “பாதிரியாரே, நாம் இங்கே சாகப் போகின்றோம்” எனக் கூறினார்கள். அடுத்த நாட் காலை அதாவது மே 18, இராணுவ வீரர்கள் எம்மை நெருங்கி வந்துகொண்டிருந்த போது, நாம் இரண்டாவது தடவையாகவும் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேற முயற்சித்தோம். நாம் எம்மை அருட்சகோதரர்கள் என இனங் காண்பிப்பதற்காக அருட் சகோதர, சகோதரிகளின் அடையாளம் காட்டும் எமது வெள்ளைச் சீருடைகளை அணிந்திருந்தோம். மூன்று தடவைகள் நாம் வெளியேற முயற்சித்தோம். ஆனால் இந்த மூன்று தடவைகளும் சிறிலங்கா இராணுவச் சிப்பாய்கள் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். அவர்கள் கிட்டத்தட்ட 115 மீற்றர் தூரத்தில் நின்றவாறு துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொண்டனர். இராணுவச் சிப்பாய்கள் எம்மை நோக்கி பெரிய குரலில் கத்தினார்கள், “நீங்கள் விடுதலைப் புலிகள், நாங்கள் உங்களைச் சுடப்போகிறோம்” என்றார்கள். அதன்பின்னர் அவர்கள் எம்மை வெளியே வருமாறு கட்டளையிட்டார்கள். அதனைத் தொடர்ந்து அருட்சகோதரிகள் மற்றும் பெற்றோரை இழந்த 40 சிறார்கள் ஆகியோருடன் நாம் வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு பதுங்குகுழிகளை விட்டு வெளியேறினோம். வெள்ளைக் கொடிகளை ஏந்தியவாறு முழங்கால்களில் இருக்குமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதில் நின்ற சிறிலங்கா இராணுவ வீரன் ஒருவன் சிங்கள மொழியில், “ஒவ்வொருவரையும் கொலை செய்யுமாறு எமது கட்டளைத் தளபதி எமக்கு கட்டளையிட்டுள்ளார்” எனக் கூறினான். எமது மேலாடைகளைக் களையுமாறு அவர்கள் எமக்கு கட்டளையிட்டனர். அதன் பின்னர் “நாம் அருட்சகோதரர்கள் எனவும் இவர்கள் சிறார்கள்” எனவும் வாதிட்டோம். அத்துடன் நாம் ஏற்கனவே பிரிகேடியருடன் தொலைபேசியில் உரையாடியதாகவும் குறிப்பிட்டோம். அதன் பின்னர் நாம் பிரிகேடியரிடம் தொடர்பு கொண்ட CDMA தொலைபேசி இலக்கத்தை அந்த இராணுவ வீரர்களிடம் கொடுத்தோம். உடனே அவர்கள் தொடர்பு கொண்டு நாம் ஏற்கனவே தொடர்பு கொண்ட விடயத்தை உறுதிப்படுத்திக் கொண்டனர். நாம் கிட்டத்தட்ட ஓரிரு மணித்தியாலங்கள் வரை இராணுவத்திடம் வாதாட்டம் மேற்கொண்டோம். எமக்கு முன் நின்ற அந்த இராணுவத்தினர் தமது முகத்தைச் சுற்றி கறுப்பு நிறத் துணியால் இறுகக் கட்டியிருந்தனர். கொலை செய்வதற்கு தருணம் பார்த்துக் காத்திருக்கும் மிருகங்கள் போல அவர்கள் காணப்பட்டனர். CDMA தொலைபேசியில் பிரிகேடியருடன் தொடர்பு கொண்ட பின்னரே எம்முடன் வாதாடிய குறித்த வீரனின் கோபம் தணிந்திருந்தது. இது ஒருபுறமிருக்க, எம்மிலிருந்து சற்று தூரம் தள்ளி இராணுவ வீரர்களால் சுற்றி வளைக்கப்பட்ட நிலையில் மக்கள் சிலர் நிற்பதை நாம் கண்ணுற்றோம். இவர்கள் எம்மைப் போன்று இறுதி வரை பதுங்குகுழிகளுள் ஒழிந்திருந்தவர்கள் ஆவர். அந்த மக்களில் பலர் காயமடைந்திருந்தனர். இறுதியில், எம்மை அவ் இராணுவத்தினர் துருவித் துருவி சோதனை செய்தனர். எங்கள் ஒவ்வொருவரும் ஒரு கைப்பையை மட்டுமே எடுத்துச் செல்வதற்கான அனுமதி வழங்கப்பட்டது. இதில் நின்ற இராணுவ வீரன் ஒருவர் எமது அருட்சகோதரர்களில் ஒருவரை காலால் உதைத்தான். உடனே அவர் கீழே விழுந்துவிட்டார். அவர்கள் எம்மை இரு பிரிவுகளாகப் பிரித்தனர். ஒவ்வொரு குழுவிலும் 30 பேர் இருந்தோம். இதனால் நாம் கொஞ்சம் வேகமாக நகர முடிந்தது. வீதியோரங்களில் எரிந்து கொண்டிருந்த வாகனங்கள் மற்றும் அந்த வாகனங்களின் கீழ் இறந்தபடி கிடந்த மக்களின் உடலங்களைக் கடந்தவாறு நாம் சென்றுகொண்டிருந்தோம். நரகத்தைப் போன்று அந்த இடம் காட்சி தந்தது. “நாங்கள் பிரபாகரனை, பொட்டு அம்மானை, ஏனைய எல்லாத் தலைவர்களையும் கொலை செய்துவிட்டோம். இப்போது நீங்கள் எமது அடிமைகள்” என சிரித்தவாறு கூறினார்கள். காயமடைந்த மக்களுக்கு உதவுமாறு நாம் சிறிலங்கா இராணுவத்திடம் கேட்டுக்கொண்டோம். அத்துடன் காலால் உதைக்கப்பட்ட குறித்த அருட்சகோதரருக்கும் உதவுமாறு கேட்டுக்கொண்டோம். அவர்கள் காயப்பட்ட மக்களை சாலம்பன் என்ற இடத்துக்கு கூட்டிச் சென்றார்கள். ஆனால் அவர்கள் இதய வருத்தமுடைய அந்த அருட்சகோதரனைத் தம்முடன் கூட்டிச் செல்லவில்லை. இதய வருத்தத்தால் அவதிப்பட்ட அந்த அருட்சகோதரனுக்கு எவ்வித மருத்துவ சிகிச்சையும் வழங்கப்படவில்லை. அவருக்கு அப்போது 38 வயதாகவே இருந்தது. அவரை அந்த இடத்திலேயே விட்டு விட்டு இராணுவத்தினர் வெளியேறினர். நாம் பின்னர் பேருந்து ஒன்றில் சாலம்பன் என்ற இடத்துக்கு கொண்டு செல்லப்பட்டோம். அவர்கள் எமது ஆடைகளைக் களைந்து எம்மை நிர்வாணப்படுத்திய பின்னரே சோதனைகளை மேற்கொண்டனர். இதன் பின்னர் அவர்கள் எம்மை மண்டபம் ஒன்றுக்குள் கொண்டு சென்றனர். அங்கே “நாங்கள் உங்களது தலைவர்களைக் கொன்றுவிட்டோம். ஆனால் அவர்களில் சிலர் தற்போதும் உயிருடன் உள்ளனர். உங்ளுக்குள்ளேயே அவர்கள் இருக்கிறார்கள். ஆகவே விடுதலைப் புலிகள் யாராவது இருந்தால் உடனடியாக எம்மிடம் வந்து உங்களது பெயர்களைப் பதிவு செய்து கொள்ளுங்கள்” என இராணுவத்தினர் அறிவித்தல் விடுத்தனர். ஆனால் தமது பெயரைப் பதிவதற்கு எவரும் முன்வரவில்லை. அதன் பின்னர் அருட்சகோதரர்கள் எல்லோரையும் விடுதலைப் புலிகள் என முத்திரை குத்திய அவர்கள் எமது பெயர்களைப் பலாத்காரமாக பதிவு செய்து கொண்டனர். இந்த நேரத்தில், “நாங்கள் மதகுருமார்கள்” என உறுதியாகக் கூறியதுடன் எமது அடையாள அட்டைகளையும் அவர்களிடம் காண்பித்தோம். கருணா குழுவைச் சேர்ந்த பலர் யுத்தத்தின் இறுதியில் எமது மக்களுடன் கலந்திருந்தனர். அவ்வாறு அங்கு இருந்தவர்களுள் ஒருவரை நான் முதலில் வன்னியில் சந்தித்திருந்தேன். இவர் என்னை மதகுரு என அடையாளப்படுத்திக் கொண்டார். நாம் நான்கு அருட்சகோதரர்களும் பிரிகேடியரைச் சந்திப்பதற்காக முள்ளிவாய்க்காலுக்கு அழைத்துச் செல்லப்பட்டோம். எம்முடன் சேர்ந்து பயணித்த அந்தச் சிறார்களை அங்கேயே விட்டுவிட்டுச் செல்வதைத் தவிர எமக்கு வேறு வழி தெரியவில்லை. நாம் அதே இடத்துக்கு திரும்பி வந்தபோது, எம்முடன் வந்த அந்தச் சிறார்கள் மிகக் கொடூரமான முறையில் தாக்கப்பட்டிருந்தனர். அத்துடன் புலிகள் உறுப்பினர்கள் என அவர்களின் பெயர்கள் பலாத்காரமாக பதியப்பட்டன. இதன் பின்னர், நாம் செட்டிக்குளம் என்ற இடத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டோம். அந்த இடத்தை அடைவதற்காக நாம் இரு நாட்கள் வரை உணவின்றி பேருந்திலேயே தங்கியிருக்க வேண்டியிருந்தது. நாங்கள் பேருந்தில் புதுக்குடியிருப்பு வீதியால் கூட்டிச் செல்லப்பட்ட போது, மணி பிற்பகல் 6.30 ஆக இருந்தது. புதுக்குடியிருப்புக்கு அருகிலுள்ள மந்துவில் என்ற இடத்தை நாம் கடந்து சென்ற போது மிகப் பயங்கரமான காட்சியைக் காணவேண்டியிருந்தது. கிட்டத்தட்ட 300 வரையான இறந்த நிர்வாணமாக்கப்பட்ட உடலங்களை சிறிலங்கா இராணுவத்தினர் ஒன்றுகுவித்துக் கொண்டிருந்தனர். இதனை மக்கள் பார்க்க வேண்டும் என்பதற்காக அந்த உடலங்கள் குவிக்கப்பட்டிருந்த இடத்தில் ‘ரியூப் லைற்றுக்கள்’ பொருத்தப்பட்டிருந்தன. அத்துடன் இதனைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்த இராணுவ வீரர்கள் அந்த உடலங்களை படம் பிடித்தனர். பார்ப்பதற்கு அது ஒரு கொண்டாட்டம் போல் காணப்பட்டது. அங்கே குவிக்கப்பட்ட்டிருந்த அந்த மக்கள் அந்தப் பிரதேசத்தில் கொல்லப்பட்டிருப்பார்கள் என நான் கருதுகிறேன். நாம் மெனிக்பாம் முகாமில் குடியேற்றப்பட்டு முதல் ஒரு வாரமும் குடிப்பதற்கான நீரைப் பெற முடியவில்லை. பசி போக்க உணவு கிடைக்கவில்லை. மலசலகூடவசதிகள் செய்து கொடுக்கப்படவில்லை. எமது முகாமுக்குள் வெளி ஆட்கள் வருவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை. இதனை ‘விடுதலைப் புலிகளின் முகாம்’ எனவும் ‘வலயம் 04′ எனவும் அழைத்தனர். எமது முகாமிலிருந்த மக்கள் கொலை செய்யப்படுவார்கள் என கருதப்பட்டது. எமது வாழ்வு ஆபத்தில் உள்ளதாக நாம் கருதினோம். எமது முகாமில் கிட்டத்தட்ட 40,000 பேர்வரை தங்கவைக்கப்பட்டனர். 16 பேர் படுத்து உறங்குவதற்காக சீனாத் தயாரிப்பான நீல நிறத் தறப்பாள் ஒன்று வழங்கப்பட்டது. இதனால் பெண்கள் கூடாரத்திற்குள்ளும், ஆண்கள் அதற்கு வெளியேயும் படுத்து உறங்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டனர். அவர்கள் எம்மை மிருகங்கள் போல் நடாத்தினர். யாழ்ப்பாணத்தைப் பொறுத்தளவில் சிறிலங்கா அரசாங்கமும், இராணுவப் புலனாய்வுத் துறையும் மக்கள் மத்தியில் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளனர். யாழ்ப்பாண வீதிகளில் உள்ள விளம்பரப் பலகைகளில் ‘ஒரு நாடு ஒரு மக்கள்’ என்ற வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது. இத மக்களைப் பெரிதும் கோபத்துக்கு உள்ளாக்கியுள்ளது. சிறிலங்கா அரசாங்கப் படையினர் அக்கராயன், முருகண்டி, வற்றாப்பளை ஆகிய மூன்று இடங்களிலும் பல மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளனர். இவ்விடங்களில் சிங்கள மக்களுக்கான வீடுகள் கட்டப்படுகின்றன. வடக்கு மாகாணத்தின் மையமாக மாங்குளம் அமைக்கப்படவுள்ளது. இங்கு கிட்டத்தட்ட 300,000 மக்களைக் குடியேற்ற சிங்கள அரசாங்கம் திட்டமிடுகிறது. ஒவ்வொரு பட்டினத்திலும் இன விகிதாசாரத்தை பேண அரசாங்கம் முயற்சிக்கிறது. இதனால் வடக்கில் உள்ள குடிசன பரம்பலில் மாற்றத்தைக் கொண்டு வர அரசாங்கம் திட்டமிடுகிறது. ஏற்கனவே நாவற்குழியில் சிங்களவர்கள் குடியேறுவதற்கான அனுமதிகள் வழங்கப்பட்டுள்ளன. தமிழில் மொழியாக்கம் – நித்தியபாரதி https://www.samaraivu.com/2018/05/blog-post_85.html

மே-16: பிணக்கிடங்கில் இருந்து மீண்டவரின் நினைவுப் பகிர்வு!

1 month 1 week ago
நான்கு பக்கமும் இராணுவம் முன்னேறி வந்துகொண்டிருந்தான். சிறிய நிலப்பரப்பில் பல்லாயிரக் கணக்காக மக்கள் நிரம் பிவழிந்தார்கள். நடப்பதற்குக் கூட முடியாது தள்ளுப்பட்டு ஒருவர்பின் ஒருவர் சென்றுகொண்டிருந்தோம். முள்ளிவாய்க்கால்போல் வட்டுவாகல் எமக்கு சாதகமாய் அமைந்திருக்கவில்லை. காடும் சேறும் சகதியுமாகவே இருந்தது. ஈரநிலத்தில் சிறுவர்கள் பெரியவர்கள் என படுத்திருந்தார்கள். இராணுவம் முன்னேறிவர எமது பொருட்களையும் முன்னகர்த்திக் கொண்டே சென்று கொண்டிருந்தோம். விடுபட்ட பொருட்கள் எடுப்பதற்கென்று மீண்டும் திரும்பிச் சென்று எடுத்துவருவதும், மீண்டும் போவதுமாக இருந்தோம். இரண்டு கால்களிலும் காயப்பட்டு நடக்கமாட்டாத எம் உறவொருவரை தூக்கிச் சென்றுகொண்டிருந்தோம். ஆனால், எம்மால் அவரைத் தூக்கிச்செல்ல முடியாமலே இருந்தது. ஏனென்றால், எமது உடல்நிலை திடமாக இல்லை. காய்ஞ்ச மாடு கம்பில பட்டு விழுந்த நிலைதான் எமது நிலையும். அவரை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டும் என்ற எண்ணத்தில் சனநெரிசலில் பல மணிநேரப் போராட்டத்தோடு கொண்டுவந்து சேர்த்துவிட்டு, மீண்டும் செல்ல ஆயத்தமானோம், எறிகணைகள் விழ ஆரம்பித்திருந்தது. எப்படியாவது திரும்பிச்சென்று பொருட்கள் எடுத்துவரப் புறப்பட்டோம். எமக்கருகில் பல எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கத்தொடங்கியன. ஓடிச்சென்று பதுங்ககழிக்குள் குதிப்பதும் ஓடுவதுமாக இருந்தோம். அவ்வாறு ஓடிச்சென்று கொண்டிருக்கும்போது எறிகணை ஒன்று எம் அருகில் விழுவதுபோல் உணர்ந்தோம். பெரிய ஆலமரம் ஒன்றின்கீழே 'வக்கோ' எனப்படும் இயந்திரத்தால் வெட்டப்பட்ட பெரிய கிடங்கு ஒன்று இருந்தது. சரி, அதற்குள் குதிப்போம் என்று ஓடினோம். மரத்தில் கொழுவியபடி 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் போராளி ஒருவர் படுத்திருப்பதைக் கண்டேன். ஓடிச்சென்று, "அண்ணா, எறிகணை வருகுது. பங்கருக்க போவம், வாங்கோ," என்று கையைப்பிடித்து இழுத்து எழுப்பினேன். அவர் எழும்பமுடியாது கிடந்தார். என்னாலும் தூக்கமுடியாமல் இருந்தது. அதன்பின்னர்தான் பார்த்தேன், அவர் காயத்தால் 'சேலன்' ஏறிக்கொண்டிருந்த நிலையில் இறந்துகிடப்பதை. எமக்கு அருகில் எறிகணைச் சிதறுதுண்டுகள் பறந்தடித்தன. எறிகணைகளுக்குப் பயத்தில அகழிக்குள்ள குதிச்சிட்டம். குதிச்ச பிறகுதான் தெரிஞ்சது, அது பிணக்கிடங்கென்று. போராளிகளின் உடல்கள், பொதுமக்களின் உடல்கள் என்று 15 உடல்கள் அளவில் அந்தக் கிடங்கில் இருந்தன. இலையான்கள் மொய்த்தபடி காணப்பட்டன. பாரிய காயப்பட்ட உடல்களின் இரத்தவாடை குமட்டலை ஏற்படுத்தியது. கிடங்கிலும் இருக்கமுடியாது. வெளியிலும் வரமுடியாது. எறிகணைகள் நின்றால்மட்டுமே வரமுடியும் என்ற நிலை. எனினும் நான் கிடங்கைவிட்டு மேலே ஏறிவிட்டேன். மனமெல்லாம் வேதனையில் துடித்தது. இப்படியே விட்டுட்டு, இந்தக் கிடங்கைக் கூட மூடாமல் உடல்களை போட்டுவிட்டுச் சென்றுவிட்டார்களே என்று மனம் எண்ணியது. இராணுவம் நெருங்கி வந்துகொண்டிருந்ததால் நாம் பொருட்கள் எடுக்கச் செல்வதைக் கைவிட்டு, திரும்பிவந்துவிட்டோம். நாம் திரும்பி வரும்போது எறிகணைகள் வெடித்து இறந்த உடல்கள் அப்படியே ஆங்காங்கே பரவிக் கிடந்தன. காயத்திற்கு மருந்துகட்டுவதற்கே ஒருவரும் இல்லை என்ற நிலை. இது நடந்தது இறுதி நாளான மே-16 என்பதால் பாரிய காயக்காரர்கள் முறையான சிகிச்சைகள் இன்றி, இரத்தம்போயே இறந்துகொண்டிருந்தார்கள். எம்மவர்களைப் புதைப்பதற்குக் கூட முடியாமல் அப்படியே விட்டுட்டு வந்தோம் என்று நினைக்கும்போது மனம் வேதனையில் துடிக்கிறது. *** குறிப்பு: முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/16.html

மே-12, பெருங்கடல் கரையை அண்டிய மறிப்புவரிசை: ஒரு நினைவுப் பகிர்வு!

1 month 1 week ago
இறுதி நாட்களில்...2009:மே:12 கப்பல் ரோட்டு எனப்படும் ஜோர்தான் கப்பல் கரையொதுங்கிய இடத்திற்குச் செல்லும் வீதியை அண்மித்தே எமது நிலைகள் அன்று பின்னகர்த்தப்பட்டிருந்தன. இரவுபகல் பாராது சண்டை நடந்தவண்ணமிருந்தது. அன்று மாலைதான் தெரிந்தது காலையில் நாம் இருந்த இடத்தையும் இராணுவம் கைப்பற்றிவிட்டதென்று. பரந்தன் முல்லை பிரதான வீதியில் நந்திக்கடலை அண்மித்த பகுதியை ஒட்டியிருந்த மக்களும் கடுமையான ஷெல்வீச்சின் காரணமாகவும் ரவைகளின் சூடுகள் அதிகமாக இருந்ததாலும் வட்டுவாகல் நோக்கி நகர்ந்து செல்வது ஓய்ந்துகொண்டிருந்தது. நாம் இருந்த இடத்தின் தரையமைப்பு மேட்டுப்பகுதி என்பதனால் எவரும் வெளியே நடமாடக்கூடாது என்று பொறுப்பாளர் சொன்னதால் எங்கும் போகாது பதுங்ககழிக்கு உள்ளேயே முடங்கினோம். சண்டை நடந்துகொண்டிருந்த முன்னரங்கு சில மீற்றர் தொலைவில் தான் இருந்தது. நாம் இருந்த பகுதிக்கு கிழக்குப் பக்கமாக நூறு நூற்றைம்பது மீற்றர் தள்ளி சில கல்வீடுகள் இருந்தன. இரண்டு நாட்கள் குளிப்பு இல்லாததால் பகுதிப் பொறுப்பாளரிடம் சொல்லிவிட்டு பக்கத்தில் இருந்த கிணற்றடியில் குளிக்கச் சென்று இரண்டு மூன்று வாளிகள் வார்த்திருப்பேன், பகல் சாப்பிட்ட புழுங்கல் அரிசி சோறும் அரைவேகல் பருப்பும் தன்வேலையைக் காட்டியது... சடுதியான வயிற்றுழைவு! அந்த நாட்களில் மலம்கழிப்பது என்பது ஓர் மரணப்போராட்டம். ஏப்பிரல் மாதம் நின்ற இடத்தில் இருந்து கூப்பிடு தூரம்தான் கடற்கரை. அதிகாலையில் சென்றால் கடற்கரை மணலில் ஓர் குழியைத் தோண்டி காலைக் கடனை முடித்துவிடுவோம். சில நாட்கள் போக அங்கும் மக்களின் பெருக்கம் அதிகரித்தது. சிலவேளைகளில் எதிரியின் பராவெளிச்சம் எங்களை எழுந்து ஓடவைத்துவிடும். ஆனால், அந்த இடத்தில கடற்கரையும் இல்லை மலசலகூடங்களும் இல்லை. எங்கட போராளிகள் பி.வி.சி குழாயை சூடுகாட்டி விரித்து மலசலகூட கோப்பை போல் செய்துவைத்திருந்தனர். சுவருக்குப் பதிலாய் தறப்பாள் நான்கு பக்கமும் மறைத்திருந்தது. கிணறு இருந்த இடம் அந்த தற்காலிக மலசலகூடத்தில இருந்து ஒரு பத்துமீற்றர் தான் இருக்கும். ஒருமாதிரி வயிற்றோட்டத்தோடு போராடிமுடிந்தது. வெளியே வந்து கிணறு நோக்கி நடந்துபோனபோது ஷெல் கூவிற சத்தம் வரவர அண்மித்தது. என்னையறியாமலே நிலத்தில் வீழ்ந்து படுத்துவிட்டேன். சத்தத்தோடு அதிர்வு ஒருமுறை என்னை உலுப்பியது. மணலைத் தட்டிவிட்டு எழுந்து பார்த்தால் கிணறு இருந்த இடத்தில் எவ்வித தடயமும் இல்லை. ஆட்டிலெறி எறிகணை என்பதால் உயிர்பிழைத்தேன். வயிற்றோட்டம் என்னைக் காப்பாற்றிவிட்டது என்று நண்பர்களுக்கு கூறி சிரித்தது தான் மிச்சம். இது நான் உயிர்தப்பிய இரண்டாவது தருணம். இரவானது. எமது பதுங்ககழிக்குள் வெளிச்சம் இல்லை. அருகே எறிகணை விழுத்து வெடித்து வெளிச்சம் ஏற்படுத்தும் போதுதான் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்க முடிந்தது. மூன்றுபேர் இருந்தோம். மெல்லிய குரலில் பேசியபடி, இரவில் வேவுக்காரன் வருவான், இருக்கிறதை காட்டிக்கொள்ளக்கூடாது என்று பேசிக்கொண்டோம். இடைவிடாத ஷெல்லடியால் அன்று வழங்கல் எடுக்க எவரும் போகவில்லை. பக்கத்து பதுங்ககழிக்குள் இருந்த சக பெண் போராளிகள் மாவில் சுட்ட ரொட்டியோடு தேநீரும் தந்துவிட்டு, "அண்ணையாக்கள், இனி எப்ப தேநீர் கிடைக்குமோ தெரியாது," என்றுவிட்டு தமது பதுங்ககழிக்குள் சென்றுவிட்டனர். *** -வன்னியூரான்- குறிப்பு:- முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/12.html

"நாளை இரவுக்கு இறங்கப்போறம்; நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ!" - லெப். கேணல் சிறிராம்

1 month 1 week ago
ஆண்டு 2009 இன் இறுதி யுத்த காலத்தில் சிறிலங்காப் படையினர் பொதுமக்கள் மீது தாக்குதல் நடாத்துவதை (வீடியோ) ஒளிப்பதிவு செய்த ஊடகவியலாளர்களில் அன்பரசனும் முக்கியமானவர். "சனல்-4" தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆவணப்படத்தில் “எறிகணைத்தாக்குதல் இடம்பெறும் சமயத்தில் நீங்கள் 'வீடியோ' எடுக்கவேண்டாம், படுங்கோ” என்று சொல்வதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். அந்த ஒளிப்பதிவுக் காட்சியை அன்பரசனே எடுத்திருந்தார். அன்பரசனின் அனுபவங்களை இங்கே பதிவுசெய்கின்றேன். அன்றைய நாட்களில் ஒரு வீடியோவை தரவேற்றுவது என்பது மிகவும் கடினமான காரியமாக இருந்தது. உழவு இயந்திரத்தின் மேல் மண் மூட்டைகள் அடுக்கி, அதற்கு கீழே படுத்துக்கொண்டு ஒரு மடிக்கணனியில் தான் எல்லா ஒளிப்பதிவுக் காட்சிகளையும் நான் வெளிநாடுகளுக்கு அனுப்பினேன். ஒரு கட்டத்துக்குப் பிறகு எங்களால் ஒளிப்பதிவு எடுக்கமுடியாமல் போய்விட்டது. எடுத்த ஒளிப்பதிவுகளையும் வெளிநாடுகளுக்கு அனுப்ப முடியாதென்றாகிவிட்டது. இரத்தமும் சதையுமாக அழுகுரல்களோடு சேர்ந்த குண்டுச்சத்தங்களையும் காட்சிப்படுத்திய என் ஒளிப்படக் கருவியும் (கமரா) ஓய்ந்து போனது. இனி என்ன செய்யலாம் என்று யோசித்தேன். இனியாவது குடும்பத்திற்கு சாப்பாடு ஏதும் கிடைக்குமோ என்று தேடி அலைவோம் என முடிவெடுத்தேன். எனது நண்பன், "ஒரு களஞ்சியத்துக்குள் அரிசி கிடக்காம், போய் எடுப்பமா?" என்றவுடன் நானும் அவனும் அவ்விடத்திற்குப் புறப்பட்டுப் போனம். சரியான எறிகணை வீச்சு. அங்கயும் இங்கயும் ஒரே பிணங்கள். எல்லாவற்றையும் கடந்து, சாப்பாட்டுக்காக அங்கே போய்ப் பார்த்தபோது மூன்று பேர் இறந்து கிடந்தார்கள். அவர்களைத் தூக்கி ஓரமாக வைத்துவிட்டு நெல்லு மூட்டை ஒன்றைத் தோளில் போட்டுக்கொண்டு வேகமாகத் திரும்பி வந்துகொண்டிருந்தேன். மிக அருகில் ஆமி நிக்கிறான். இருந்தாலும் பசி எங்களுக்கு ஒரு துணிவைத் தந்திருந்தது. நானும் நண்பனும் நெல்லைத் தூக்கிவருவதைப் பார்த்த சனங்களும் அந்த களஞ்சியத்துக்கு ஓடிப்போனார்கள். திடீர் என எறிகணைகள் தொடர்ச்சியாக வீழ்ந்து வெடித்து அந்த உணவுக் களஞ்சியம் ஒரே புகைமண்டலமாக மாறியது. அவ்விடத்துக்குப் போனவர்கள் ஒருவரும் தப்பவில்லை. என்னுடன் வந்த நண்பன், “இன்னும் கொஞ்சம் நல்லகாலம் (அதிர்ஸ்ரம்) இருக்கு” என்று சொல்லிக்கொண்டே எமது வீட்டுக்காரர் இருந்த இடத்திற்கு ஓடினோம். பசிக்கொடுமை, தண்ணீர் பற்றாக்குறை இவற்றைத் தேடிப் போயே பலர் எறிகணைத் தாக்குதலில் மாண்டிருக்கிறார்கள். மரணகளத்தில் நின்று மனிதத்தைக் காக்கத் துடித்தோம். அன்றைய நாட்களின் மீள்நினைவுகள் வரும் போது மனம் பதறுகிறது. எல்லாம் கைமீறிப்போய்விட்டதே…! இனி என்ன நடக்கப்போகிறது என்றே விளங்வில்லை. எனது கையில் இருந்தபடியே சிறுவன் ஒருவனின் உயிர் பிரிந்தது. என்னால் அந்தப் (யதுசன்) 13 வயதுப் பாலகனை மறக்கமுடியாமல் இருக்கின்றது. இறுதியாக இயங்கிய வைத்தியசாலை ஒன்றில் இறந்து கிடந்தவர்களை ஒளிப்பதிவாக்கி விட்டு திரும்பும்போது இறந்த உடல் ஒன்றில் என் கால் இடறிவிழப்பார்த்தேன். நிதானித்து நின்று யாரோ தெரிந்தவர் போல என்று உற்றுப்பார்த்த்தேன். அது “கணேசு மாமா”. “என்ர முகத்தை கடைசியாகப் பார்த்திட்டு போ,” என்று சொல்வதைப் போலக் கிடந்தார். அப்பொழுது இறந்தவர்களின் உடலங்களை ஓரமாக அடுக்கிக்கொண்டிருந்த காவல்துறை உறுப்பினர் ஒருவர், “இவர்தான் கணேசு மாமா, தெரியுமா,” எனக் கேட்டார். அவருக்கு அந்த நேரம் சொல்வதற்கு வார்த்தைகள் ஒன்றும் என்னிடம் இருக்கவில்லை. கணேசு மாமா வன்னியின் சிறந்த நகைச்சுவை நடிகர். இவரைத் தெரியாதவர்கள் எவரும் இருக்கமாட்டார்கள். எனது உற்ற நண்பன் சிறிராமுடன் (இசைப்பிரியாவின் கணவர்) 15 ஆம் திகதி இரவு கதைத்தேன். “நாளை இரவுக்கு இறங்கப்போறம். நான் தான் கொமாண்டர் மச்சான். ஒரு கை பாப்பம். இரும்புக் கோட்டைக்குள்ள போகப்போறம். வெற்றியெண்டா சந்திப்பம். இல்லாட்டி அலுவல் முடிந்தது மச்சான்”. “நீ, இசைப்பிரியாவை கூட்டிக்கொண்டு போ,” என்று சொன்னது காதுக்குள் இன்றும் ஒலித்துக்கொண்டிருக்கின்றது. சிறீராம் என்னிடம் சொன்னவற்றை எப்படி மறப்பது? இசைப்பிரியாவின் இறுதிச்சந்திப்பும் இறுதி வார்த்தைகளும் இப்போதும் நினைத்தால் மனதை வாட்டுகின்றது. மே-14ஆம் நாள் எமது பதுங்ககழிக்குள் விழுந்த எறிகணை வெடித்திருந்தால் இத்தனை துயரங்களையும் பார்த்திருக்கமாட்டேன். ஆனால், நான்கு குடும்பங்கள் இன்று இல்லாமல் போயிருக்கும். 16 ஆம் நாள் மாலை 6 மணியளவில் தளபதி பானு அண்ணனின் இறுதி வார்தைகள் இன்னமும் கேட்கின்றன. “இன்னும் ஏன்ரா நிக்கிறாய்? கூட்டிக்கொண்டு போகக் கூடியவர்கள் கூட்டிக்கொண்டு போங்கோ. எல்லாம் முடிஞ்சிது”. ஆனால், அந்த மாலைப் பொழுதில் அவரும் இன்னும் மூன்று போராளிகளும் எதிர்த் திசையாக நடந்தார்கள். 'நாங்களும் படையினர் பக்கம் போகப்போறம்,' என்ற பயத்துடன் அன்றைய இரவினை வெடிச்சத்தங்களுடன் நகர்த்தினோம். நள்ளிரவினைத் தாண்டி, அதாவது நாள்-17 அதிகாலை பாரிய குண்டுச்சத்தங்கள் நந்திக்கடல் பக்கமாகக் கேட்டது. கேப்பாப்புலவுப் பக்கமாக முல்லைத்தீவில் இருந்து பல்குழல் எறிகணைகள் தொடச்சியாக விழுந்து வெடிப்பதில் தூரத்தை கணிக்கமுடிந்தது. நான் மனைவிக்கு, “சிறிராமாக்கள் அங்கால போய்ற்றாங்கள் போல, தூரத்தில சத்தங்கள் கேட்குது," என்று சொன்னவாறே அன்றைய இரவுப் பொழுதினைக் கழித்தேன். எனக்கு ஒரே யோசினையாக இருந்தது. “டேய், நீ இசைப்பிரியாவைக் கூட்டிக்கொண்டு போ,” என்று சிறிராம் சொன்னவன். நான் எவ்வளவு கேட்டும் அவா வருவதாக இல்லை. “அண்ணை, உங்களோட இன்னொரு போராளியும் வாறா, நானும் வந்தால் உங்களையும் பிடிப்பான். வந்தால் சிறிராமுடன் தான் வருவன். இல்லாட்டில் வரமாட்டன்,” என்று கூறிய அவளின் வார்த்தைகளின் கனதி அப்போது அந்தச் சூழலில் எனக்குத் தெரியவில்லை. இப்போது வலிக்கிறது. *** குறிப்பு:- 'பதிவு' இணையத்தில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/16.html

லெப். கேணல் கடாபி: பல கடற்சமர் வெற்றிகளுக்கு நங்கூரமாக விளங்கிய செயல்வீரன்!

1 month 1 week ago
தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில், எந்தவிதமான படைக்கலங்களெனினும் அவற்றின் இயங்குநிலைகள் தடைப்பட்டுப் போகும் வேளைகளில் அவற்றை மறுசீரமைத்து, பூச்சியவழுத் திருத்தம் செய்து, நேர்த்தியான சுடுநிலைக்குக் கொண்டுவரும் சிறந்த போரியல் ஆசானாகவும் எமது விடுதலை இயக்கத்தின் மிகச்சிறந்த முதல்தரக் குறிச் சூட்டாளராகவும் பெருந் தளபதிகளில் ஒருவராகவும் விளங்கியவர் பிரிகேடியர் கடாபி அவர்கள். (மேலதிக குறிப்புகளுக்கு இந்த இணைப்புக்குச் செல்லவும்) அதேபோல், எமது விடுதலை இயக்கத்தின் கடற்புலிகள் அணியில் எந்தவொரு வெளியிணைப்பு இயந்திரமும் இயங்குநிலைத்தடை ஏற்படும்போது, அதனைத் திருத்தம் செய்து, மறுபடியும் இயங்குநிலைக்குக் கொண்டுவரும் வகையில் மிகத் திறமையான வெளியிணைப்பு இயந்திரப் பொறியியலாளனாகச் செயற்பட்டவர் கடற்புலி லெப். கேணல் கடாபி ஆவார். கடற் போரியலில் கடற்புலிகளின் வளர்ச்சியென்பது, அமெரிக்காவின் ''சீல்'' கடற் கொமாண்டோக்களுக்கு நிகரான வளர்ச்சியை எட்டிக்கொண்டிருந்த நாட்கள் அவை. அப்போது, புதியவகை விசைப் படகுகளை அதிகூடிய வேகத்தில் சென்று கடற் தாக்குதல்களை மேற்கொள்வதற்காக நாம் பயன்படுத்திக் கொண்டிருந்த காலம். அந்தவேளையில், எமக்குப் பெரும் சவாலாக இருந்துவந்தது வெளியிணைப்பு இயந்திங்களின் கோளாறுகளே. அநேகமான தாக்குதல்களில் பெரும் பின்னடைவைச் சந்தித்த கடற் சமர்களெல்லாம் அதிகம் இயந்திரக் கோளாறுகளாலேயே ஏற்பட்டன. உண்மையில் கடற்புலி கடாபியைப் பொறுத்தளவில் சாதாரணப் பொதுத் தராதரப் படிப்பை (O/L) படித்துவிட்டு 1995 காலப்பகுதியில் விடுதலைப் போராட்டத்தில் இணைந்தவர். அடிப்படைப் பயிற்சி முடிந்ததுமே கடற்புலிகளின் இயந்திரப் பொறியியற் பயிற்சிக் கல்லூரியிலேதான் தனது அனுபவத்தினூடான படிப்பை மேற்கொண்டார். அங்கு படிக்கும்போதே அந்த அணியின் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருந்தார். இயக்கம் மீதான விசுவாசமும், தமிழீழ விடுதலையின்பால் தன்னை அர்ப்பணிக்கத் துணிந்திருந்த தியாக உணர்வுமே அவனைப் பொறுப்பாளனாக அடையாளப் படுத்தியிருந்தது. சண்டைப் படகுகளிலும் விநியோகப் படகுகளிலும் இயந்திரப் பொறியியலாளனாக வலம்வந்து கொண்டிருந்தார், லெப்.கேணல் கடாபி. தனது திறமையால், தான் செல்லும் படகின் இயந்திரங்களைத் தொடர் செயற்பாட்டில் வைத்திருந்து மிக நேர்த்தியாகப் பராமரித்தார்; மோசமான காலநிலைகளில் கடற் கொந்தளிப்புகளுக்கு மத்தியிலும் இறுக்கமான கடற் சண்டைகளின் போதும் அதற்கு ஈடுகொடுத்துச் செயற்பட மறுக்கும் இயந்திரங்களையும், வெடிபட்டுச் செயலிழந்த இயந்திரங்களையும் இருள்சூழ்ந்த அந்தக் கடலில் தனது விடாமுயற்சியால் திருத்தி, ஓடவைத்து, படகுகளைக் கரைக்குக் கொண்டுவந்து சேர்த்த பல சாதனைகளுக்குக் கடாபியே காரணமாயிருந்தான். வெள்ளோட்டம் விடப்படும் படகுகளில் தேசியத் தலைவர் வந்து ஏறும் பொழுதெல்லாம் அந்தப் படகின் இயந்திரப் பொறியியலாளனாகக் கடாபியும் நின்றிருப்பான். ”என்னிடமும் ஒரு கடாபி இருக்கு, நீயும் ஒரு கடாபியை வச்சிருக்கிறாய், சூசை,” என எமது சிறப்புத் தளபதி பிரிகேடியர் சூசையிடம் தலைவர் அவர்களே குறிப்பிட்டுக் கூறும் அளவிற்குத் தனது திறமையை (கடற்புலி) கடாபி வெளிப்படுத்தியிருந்தார். தலைவரின் உதடுகள் கடாபி என்று அவனது பெயரை உச்சரிக்கும் நிலைக்குத் தன்னை உயர்த்திக்கொண்ட மிகவும் திறமைவாய்ந்த ஒருவன். கடற்புலி மேஜர் கண்ணன் அவர்களின் வீரமரணத்துடன் கடற்புலிகளின் வெளியிணைப்புப் பகுதிப் பொறுப்பாளராக லெப்.கேணல் கடாபி அவர்கள் நியமிக்கப் பட்டிருந்தார் என்பதை இங்கே பதிவுசெய்யத் தக்கது. கடலிலும் தரையிலும் இனத்தின் விடுதலைக்காய் ஓய்வுறக்க மின்றிச் சுழன்றடித்த எங்கள் கடற்புலிக் கடாபி இதே நாளன்று (8.5.2008), சிங்களத்தின் ஆழ ஊடுருவும் அணியின் ''கிளைமோர்'' கண்ணிவெடித் தாக்குதலொன்றில் வீரமரணத்தைத் தழுவிக்கொண்டார். *** ஒவ்வொரு வெற்றிச் சண்டைகளுக்குப் பின்னாலும் எங்களோடு நீயிருந்தாய் கடாபி! உனது உடலிற்கும் உள்ளத்திற்கும் உள்ள வேறுபாட்டை எங்களோடு வாழ்ந்து நிரூபித்துக் காட்டினாய்! தொட்டுக் கதைப்பதுகூட உனக்குப் பிடிக்காது, அந்த அளவிற்குக் கூச்ச சுபாவமுடையவன் நீ! ஆனாலும், "கிளைமோர்" குண்டுகள் உன் உடல் துளைத்த போதினில் மகிழ்வோடு ஏற்றிருப்பாய்! ஆனால், உந்தன் இழப்பு எமக்கு மிக வலிக்கிறது! *** நினைவுகளுடன், புலவர்/தும்பன் கடற்புலிகள். *** குறிப்பு:- முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/blog-post_8.html

"எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம்!" முள்ளிவாய்க்காலில் கரும்புலி

1 month 1 week ago
அவன் முகம் எனக்கு நினைவில்லை. அவன் தன்னுடைய முகத்தைக்கூட காட்ட விரும்பவில்லை என்றே நினைக்கிறேன். 2009 மே 18 அதிகாலை 2.45. முள்ளிவாய்க்காலின் இறுதி அத்தியாயங்கள் உன்னத உயிர்த்தியாகங்களின் மத்தியில் எழுதப்பட்டுக்கொண்டிருக்கும் அந்தக் கணப்பொழுது. எங்கும் பிணக்குவியல் பிணங்களைப் பார்ப்பதற்கு கூட வெளிச்சம் இல்லை. ஆங்காங்கே வீழ்ந்து வெடிக்கும் எறிகணைகளின் கந்தகத்தீயின் வெளிச்சத்தில் பிணங்களை மக்கள் கடந்து கொண்டிருக்கின்றனர். எனது குடும்பமும், இன்னும் மூன்று குடும்பங்களையும் நான் ஓரிடத்தில் வைத்துக்கொண்டிருக்கிறேன். மக்கள் கூட்டமாக எங்களை கடந்து சென்று கொண்டிருக்கின்றனர். புதுக்குடியிருப்பு முல்லை வீதி மக்கள் கூட்டத்தால் நிரம்பி வழிகிறது. அடிக்கு மேல் அடி வைத்து நகரும் மக்கள் கூட்டத்தின் நடுவே எறிகணைகள் வீழ்ந்து வெடிக்கின்றன. எங்கும் கூக்குரல். வெடிச்சத்தம் மிக அண்மையில் கேட்கத்தொடங்குகிறது. இராணுவம் எமக்கு அருகில் வந்துவிட்டான் என்பதை துப்பாக்கி வெடிகளின் சத்தம் உறுதிப்படுத்துகிறது. இந்த நிலையில் தொடர்ந்தும் அந்த இடத்தில் இருக்க முடியாது என உணர்கிறேன். ஆனாலும் மக்கள் செல்லும் வீதி இராணுவத்தின் எறிகணைத்தாக்குதலால் அதிர்ந்து கொண்டிருக்கிறது. வீதிக்கும் இறங்க முடியாது தொடர்ந்து அந்த இடத்தில் இருக்கவும் முடியாது விரைவாக நான் முடிவெடுக்க வேண்டிய நேரம். இராணுவத்தால் சுடப்படும் துப்பாக்கி ரவைகள் எனது குடும்பம் மறைந்திருக்கின்ற இருசக்கர உழவு இயந்திரப்பெட்டியில் பட்டுத் துழைக்கின்றன. இனி வேறு வழியில்லை அந்த இடத்திலிருந்து வெளியேறியே தீரவேண்டும். எனது குடும்ப அங்கத்தவர்களையும் எனது பாதுகாப்பிலிருந்தவர்களையும் வெளியேறுமாறு உத்தரவிடுகிறேன். அப்போது ஒரு கரும்புலி வீரன், இராணுவம் தாக்குதல் நடாத்திக்கொண்டிருக்கும் பக்கமாக நான் இருக்கும் இடத்திற்கு எதிர்ப்பக்கமாக புழுதி படிந்த சேட்டுடன் - ஒரு மெல்லிய உருவம், போராளிகள் வழமையாக நீழக்காற்சட்டைக்கு மேலாக இடுப்பில் மடித்துக்கட்டியிருக்கும் சறம், கையில் PK L.M.G., தன்னால் எவ்வளவுக்கு சுமக்க முடியுமோ அவ்வளவு LMG ரவைகளுடன் - நாங்கள் பதுங்கியிருப்பதை உணர்ந்த அந்தக் கரும்புலி வீரன் கட்டளை இடுகிறான். "எல்லோரும் போங்கோ!... இங்கை இருக்காதிங்கோ!... இனி ஒருவரும் இங்க இருக்க வேண்டாம். பாதை திறந்தாச்சு, எல்லோரும் போங்கோ! தயவு செய்து இருக்காதையுங்கோ...." அந்த கரும்புலி வீரனின் கையில் இருக்கும் PK L.M.G இராணுவத்தை நோக்கி தீச்சுவாலையை ஊமிழ்கிறது. அதன் மங்கலான ஒளியில் அந்த வீரனின் முகம் என் கண்ணுக்கு புலப்படவில்லை. அவன் உருவம் மட்டுமே தெரிகிறது. மீண்டும் கரும்புலி வீரன் "எல்லோரும் போங்கோ, எங்களைப் பற்றி யோசிக்க வேண்டாம், நாங்கள் வரமாட்டம். நீங்கள் போங்கோ. உங்களுக்காகத்தான் நாங்கள் வெடிக்கப்போகிறோம். எங்களைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், எல்லோரும் போங்கோ...," என்கிறான். இராணுவத்தின் துப்பாக்கிச்சூடு எமக்குப்படாதவாறு பாதுகாப்புக்கொடுத்து எதிரிக்குத் தாக்குதல் நடத்திக்கொண்டிருக்கிறான் அந்த கரும்புலி வீரன். எனது குடும்பமும் ஏனையவர்களும் பாதுகாப்பாக அந்த இடத்திலிருந்து வெளியேறுகிறோம். நாங்கள் நான்கு குடும்பங்கள் தான் அந்த இடத்திலிருந்து இறுதியாக வெளியேறியிருக்க வேண்டும். அந்தப்பகுதியில் பொது மக்கள் இல்லை என்பதை ஊகித்த அந்தக் கரும்புலி வீரன் தனது கடமையை அந்த இடத்திலிருந்து முடித்துக்கொண்டு இராணுவம் முன்னேறிக்கொண்டிருக்கும் திசை நோக்கித் தனது துப்பாக்கியால் சுட்டபடி நகர்கிறான். அந்த வீரனை நான் திரும்பித்திரும்பிப் பார்த்தவாறு நடக்கிறேன். என் கண்ணுக்கு எட்டியவரை அவனது துப்பாக்கி ஓயவில்லை. முள்ளிவாய்க்கால் மண் வெறுமனே சோகத்தை மட்டும் சுமக்க வில்லை. உலகில் எந்த இனத்திற்கும் கிடைக்காத உன்னத புருசர்களையும் எமது மக்களுக்கு அடையாளமிட்டது. *** குறிப்பு:- சிவகரன் (Siva Karan) என்னும் முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது. https://www.samaraivu.com/2018/05/blog-post_14.html

மேஜர் கடலரசன், பூநகரிக் கட்டளைப் பணியகம்: மன்னார் அடம்பன் களமுனை!

1 month 1 week ago
மன்னார் களமுனையின் அடம்பன் பகுதி. ''KP 02'' எனக் குறிக்கப்பட்ட காவலரண் பகுதியில் எதிரியின் தாக்குதல் முன்னகர்வொன்று திடீரென ஆரம்பிக்கிறது. 'ராங்கி' மற்றும் கடுமையான எறிகணைச் சூட்டாதரவு என்பவற்றுடன் அந்த முன்னகர்வு ஆரம்பமாகிறது. ஒரு குளத்தின் மண்தடுப்பணையில் அமைக்கப்பட்டிருந்த அந்தக் காப்பரண் எமக்கு முக்கியமானதொன்று. அந்தக் காப்பரண் விடுபட்டால் அந்தப் பகுதியையே நாம் இழக்க வேண்டிவரும். நிலைமைகள் கட்டளைப் பீடத்திற்கு அறிவிக்கப்படுகிறது. சூட்டாதரவு, மீள்வலுவூட்டல் நடவடிக்கைகளுக்குத் தேவையான கால அவகாசம்வரை தாக்குப் பிடிக்க உடனடி ஆதரவு அவசியமாகிறது. ''KP 02' இற்கு உடனே இரும்பை அனுப்புங்கோ," என்று கட்டளைப்பீடத்தில் இருந்த கேணல் கீதன் மாஸ்ரரிடமிருந்து பகுதிப்பொறுப்பாளருக்கு தகவல் பரிமாறப்படுகிறது... "நான் அங்கேதான் நிக்கிறன் K7, சரமாரியான சூட்டொலிகள்.. எறிகணை வெடிப்புகளுக்கிடையே அவனது குரல் தொலைத்தொடர்புக் கருவியூடாகத் தெளிவாகக் கேட்கிறது." இவ்வளவு வேகமாய் எப்படிப் போனான்.. இப்படி கள நிலைமையை புரிந்துகொண்ட அவன் விரைந்து செயற்படுவது இது முதல்தடவை அல்ல என்பதை தளபதி அறிந்தே இருந்தார். அவர் மட்டுமல்ல; அங்கிருந்த அனைத்துப் போராளிகளும் அறிந்தே இருந்தனர். நாங்கள் அவனை இரும்பு என்றுதான் அழைப்போம். எனக்கு இவன் முதலில் அறிமுகமானது 2008இன் ஆரம்பப் பகுதியிலேயே. பூநகரிப் படையணி ஆரம்பிக்கப் பட்டபின் தனது கன்னிக் கள நடவடிக்கைகளுக்காக அடம்பன், பாலைக்குளி ஆகிய பகுதிகளில் நிலைகொள்ளத் தயாரானது. இந்த அணியில் அவனும் உள்ளடங்கியிருந்தான். நல்ல உயரம்... உறுதியான உடலமைப்பு... குத்து வரியில் தனது கனரக ஆயுதத்துடன் கம்பீரமாக நின்றிருந்தான். சித்திரை மதம் 2008 அதிகாலை 'வேட்டையா முறிப்புப்' பகுதியில் எதிரியின் முன்னேற்ற நடவடிக்கை தொடங்கியது. எமது கட்டளைத் தளபதி லெப்.கேணல் ரகு (இப்போது மாவீரர்) அவர்களால் அழைக்கப்பட்டேன். "சுருதியின் காப்பரண் பகுதியில் தொடர்பில்லை.. இரும்பை உடனடியாக 'மோட்டார் சைக்கிளில்' கொண்டு அங்கு இறக்கிவிட்டு வா," என்று எனக்குக் கட்டளை வழங்கப்பட்டது. அவன் தனது முழு ஆயத்தநிலையில் அங்கு நின்றிருந்தான். அவனையும் மற்றுமொரு போராளியையும் ஏற்றிக்கொண்டு சண்டை நடக்குமிடத்திற்கு விரைகிறேன். "வேகமாப்போ ...! வேகமாப் போ..!" என சத்தமிட்டபடி வருகிறான். சண்டை நடக்கும் பகுதியை அண்மித்ததும் நிறுத்தும்படி கூறியவன் '"இஞ்ச விட்டுட்டு நீ போ" என்கிறான். "நானும் உங்களோட வாறன் கடல்," என்று நானும் அவனுடன் புறப்பட, "அங்க 'ரோமியோ-2' இன் இடத்தில அவசரத்துக்கு ஆக்கள் இல்ல, நீ திரும்பிப் போ, கவனம்," என்று கூறிவிட்டு, எதிரியை மறித்துத் தாக்குவதற்காக விரைகிறான். நெடுநேரம் இடம்பெற்ற இச் சண்டை முடிவுக்கு வந்தபோது எமது காப்பரண் பகுதிகள் மீட்கப்பட்டதுடன், எதிரியின் படைக்கலன்களும் கைப்பற்றப்பட்டன. இச்சண்டையில் கடலரசனின் பங்கு முக்கியமானதாக இருந்தது. இப்படித்தான் முன்னணிக் காப்பரண் வரிசையில் கடலும் அவனது PKLMG உம் எதிரியை மறித்துத் தாக்குதல் நடத்துவதிலும் விடுபட்ட நிலைகளை மீட்பதிலும் மிகவும் காத்திரமான பங்களிப்பைச் செய்தன. கடலைப் பொறுத்தவரை PK இனை மட்டுமல்ல, RPG எனப்படும் உந்துகணைச் செலுத்தியையும் மிகத் துல்லியமாகக் கையாளக்கூடிய திறமையைக் கொண்டிருந்தான். பலமுறை அவனது RPG தாக்குதலும் எதிரியின் நகர்வுகளை முறியடிப்பதற்கு உதவியாய் அமைந்திருந்தத. மல்லாவி களமுனைக்கு எமது அணிகள் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. மல்லாவி மத்திய கல்லூரியை அண்டிய பகுதியில் படையினரின் பெருமெடுப்பிலான நடவடிக்கை ஒன்று இடம்பெற்றது. மிகவும் கடுமையான சண்டை மூண்டது. "ஒரு ரீமோட கடலை உடனே அனுப்புங்கோ," என்று பிரிகேடியர் பானுவிடமிருந்து கட்டளை பறந்தது. கடலரசன் அந்தச் சிறு அணியுடன் விரைகிறான். எதிரிகளை முறியடித்து அவனது அணி முன்னேறுகின்றது. எதிரியிடமிருந்து அங்கு கைப்பற்றிய RPG இனை அவன் எதிரிகளை நோக்கி இயக்குகிறான்... இன்னுமொரு இலக்கு... விரைந்து முன்னேறி இலக்குப் பார்த்தவனின் தொடைப் பகுதியில் எதிரியின் குண்டொன்று ஆழத் துழைத்தது! இச்சமரில் பல ஆயுதங்களும் எதிரியின் வாகனங்களும் கைப்பற்றப்படுகின்றன. ஆனால் எங்கள் கடலை எங்களால் காப்பாற்ற முடியவில்லை. களமெங்கும் கனன்று, விழுப்புண் பலதாங்கி, வீரம் விதைத்த இம் மாவீரன் மல்லாவி மண்ணில் விதையாகிப் போனான். "தம்பி டேய், நான் வீரச்சாவடஞ்சா என்னப்பத்தி நாலுவரி எழுதுவியா.." அவனின் குரல் இன்றும் என்னுள் ஒலிக்கிறது... *** குறிப்பு:- (Sulaxsan Mano) சுலக்சன் மனோ என்னும் முகநூலில் இருந்து எடுத்துத் தொகுக்கப்பட்டது. மேஜர் கடலரசன் குறித்த மேலதிக தகவல் தெரிந்தோர், அவர் குறித்த தகவல்களைத் தந்துதவுமாறு அன்புடன் வேண்டப்படுகின்றீர்கள். https://www.samaraivu.com/2018/05/blog-post_79.html

ஒரு சோறு

1 month 1 week ago
ஒரு சோறு --------------- 'இந்தியாவா ...................' என்றனர் அவர்கள். வீதியின் அடுத்த பக்கத்தில் நின்று கொண்டிருந்தார்கள். ஒரு வயதான தம்பதிகள் போன்றே தெரிந்தார்கள். 'இல்லை......... ஶ்ரீலங்கா..........' என்றேன். 'சிங்கப்பூரா ................' என்று திருப்பிக் கேட்டார்கள். இதுவரை எவரும் கேட்டிராத கேள்வி அது. நான் யாரோ இருவருக்கு ஒரு சிங்கப்பூர் குடிமகன் போல தோன்றுவேன் என்ற நினைப்பு இதுவரையில் எனக்கு ஒரு கணமேனும் வந்தது கிடையாது. அவர்கள் வீதியைக் கடந்து என் பக்கம் வர முயன்றார்கள். நீங்கள் அங்கேயே இருங்கள், நானே வருகின்றேன் என்று சொல்லி விட்டு, கையில் இருந்த தும்புக்கட்டையை சுழற்றி புல்லுக்குள் எறிந்து விட்டு வீதியைக் கடந்து அவர்களிடம் போனேன். ஶ்ரீலங்கா தெரியும் என்றார்கள். அழகிய தீவு என்றார்கள். அவருடைய பெயர் போல் என்றார் அந்த முதியவர். போல் என்னும் பெயர் எனக்கு மிகவும் பரிச்சயமானது, ஶ்ரீலங்காவில் இந்தப் பெயரில் பலர் இருக்கின்றார்கள் என்றேன். அவருடைய மனைவியின் பெயர் எஸ்தர் என்றார். சொல்லி விட்டு என்னையே பார்த்துக்கொண்டு நின்றார். எத்தனை எஸ்தர்கள் வந்து கொண்டேயிருக்கின்றார்கள். வண்ணநிலவன் அவர்கள் எழுதிய 'எஸ்தர்' என்னும் சிறுகதை தான் தமிழின் ஆகச் சிறந்த சிறுகதை என்று சில கவனிக்கத்தக்க பட்டியல்களில் உள்ளது. அந்தக் கதையில் வரும் எஸ்தர் என்னும் பாத்திரமும், அந்தக் கதையும் மனதை விட்டு அகல்வதேயில்லை. பின்னர் பல தமிழ் சினிமாக்களில் கதாநாயகிகளின் பெயர்கள் எஸ்தர் என்று ஆகியிருக்கின்றது. அவற்றில் சில படங்கள் பரவாயில்லை என்று சொல்லலாம். 'நீர்ப்பறவை' படத்தில் எஸ்தர் வருகின்றார். விஜய் ஆண்டனியின் ஒரு படத்திலும் எஸ்தர் வந்தார். அந்தப் படம் மறந்துவிட்டது, அதில் வந்த எஸ்தர் என்ற பெயர் மட்டும் நினைவில் நிற்கின்றது. பல படங்களில் உதவி இயக்குனர்களில் ஒருவர் தான் கதாநாயகிக்கு இந்தப் பெயரை சிபாரிசு செய்திருப்பார் போல. எஸ்தரையும் எனக்கு மிகவும் நல்லாகவே தெரியும் என்றேன். 'எஸ்தர் பைபிளில் வருகின்றாரே........... அதனால் எல்லோருக்கும் நன்றாகவே தெரியும்.........' என்றார்கள் அவர்கள் இருவரும். இவர்கள் சொல்லும் எஸ்தரை எனக்குத் தெரியாது. முன்னால் நின்று கொண்டிருந்த வயதான எஸ்தர் அம்மாவின் முகத்தில் புன்னகை நீண்டு அழகாக தெரிய ஆரம்பித்தார். அந்தப் பக்கத்தில் இருக்கும் வீட்டில் குடியிருப்பவர் தங்களின் பெறாமகள் என்றனர். வேலையில் இருந்து அவர் வந்து கொண்டிருப்பதாகவும் சொன்னார்கள். 'அவர்களைத் தெரியுமா................' 'ஆ............... தெரியும். சமீபத்தில் தானே குடிவந்தார்கள். பேசியிருக்கின்றோம். அவர்கள் சாக்லேட் கூட கொடுத்தார்கள்..................' 'சாக்லேட்டா............... எதுக்கு சாக்லேட்........' 'எதற்கென்று தெரியவில்லை. அவர்கள் கொடுத்தார்கள், நான் வாங்கினேன்...............' '' இந்த தெரு மிகவும் அமைதியாக இருக்கின்றது என்றனர். வீட்டுக்கு முன் இருக்கும் தெருவே இவ்வளவு அகலமாகவும், சுத்தமாகவும் இருக்கின்றதே என்றனர். சுழற்றி எறிந்து விட்டு வந்த தும்புக்கட்டையின் ஞாபகம் வந்தது. திரும்பிப் பார்த்தேன். விழுந்த இடத்திலேயே அது அப்படியே மல்லாக்காகக் கிடந்தது. 'இங்கு எவ்வளவு வருடங்களாக குடியிருக்கின்றீர்கள்............' '25 வருடங்கள் ஆகிவிட்டது............' என்றேன். 'என்னது 25 வருடங்களாகவா............ பிறந்ததில் இருந்து இங்கேயே இருக்கின்றீர்களா.............' இரண்டு வாரங்களிற்கு முன்னால் ஒரு நிகழ்விற்காக தலைக்கு கறுப்பு நிறம் அடித்திருந்தேன். இப்பொழுது அமோனியா இரசாயனம் இல்லாமல் மூலிகைகள் மட்டுமே கொண்டு தயாரிக்கப்படும் ஒன்றை இங்கிருக்கும் இந்தியர்களின் கடைகளில் விற்கின்றார்கள். அந்தப் பொடியை நீரில் கலந்தவுடன் அதில் இருந்து வரும் வாசனை ஒரு கெட்ட வாசனை போன்றே எனக்கு இருக்கின்றது. சில பொழுதுகளில், இருமல் மருந்தைக் குடிப்பது போல, இந்தப் பொடியை தலையில் பூச வேண்டியிருக்கின்றது. 'முண்டாசுப்பட்டி' படத்தில் வருவது போல கமராவின் உபயோகம் தடைசெய்யப்பட்ட ஒரு ஊருக்கு குடிபெயர்ந்தால் நன்றாக இருக்கும். அது முடியா விட்டால், அதிபர் ட்ரம்பிடம் சொல்லி இந்தக் கலர் மாற்றும் பொருட்களுக்கு ஒரு 500 வீத வரி போடச் சொல்லவேண்டும். அவரே சிவப்புக் கலர் தலைமுடியுடன் இருப்பதால், சிவப்புக் கலருக்கு மட்டும் வரி விலக்கு கொடுத்துவிடலாம். மூலிகைப் பொடி போட்டு இரண்டு வாரங்களில் என்னுடைய தலைமுடி உடைந்த செங்கல் நிறத்தில் திட்டுத் திட்டுகளாக பல இடங்களில் ஆகியிருந்தது. எனக்கே கண்ணாடியில் சகிக்க முடியவில்லை. கமரா தடைசெய்யப்பட்ட முண்டாசுப்பட்டி கதை போல, கண்ணாடி தடைசெய்யப்பட்ட ஒரு ஊர் பற்றியும் ஒரு சினிமா எடுக்கலாம். நல்ல சிரிப்பு படங்கள் என்று எதுவும் வருவதாகத் தெரியவில்லை. கமல், ரஜனி படங்களே இப்பவும் வருவதை நம்ப முடியாமல் இருக்கின்றது. 'காளி' மற்றும் 'குரு' படங்கள் புதிதாக வந்த போது, என்னுடைய காற்சட்டையில் ஒரு பொத்தான் குறைவாக இருந்த காலங்கள் அவை. மூன்று தலைமுறைகள் ஆகிவிட்டது............... எப்பொழுது நாங்கள் வல்லரசாவது........... போலும், எஸ்தரும் என்னை 25 வயதுகள் என்று மதிப்பிட்டது ஒரு பகிடியாக இருக்குமோ என்று இருவரையும் உற்றுப் பார்த்தேன். அவர்கள் பகிடி விடுவதற்கு முயற்சி எதுவும் செய்ததற்கான அடையாளம் ஒன்றும் அவர்களின் முகங்களில் தெரியவில்லை. கண் பார்வை மங்கிப் போவதும் வயதுடனேயே வரும் ஒரு பொதுவான போக்குத்தான். இது ஒன்றும் பெரிய விசயம் இல்லை. நாற்பது வருடங்கள் சிகாகோவில் இருந்ததாகச் சொன்னார்கள். இனிமேல் வீட்டின் முன் விழும் பனியை அள்ளிக் கொட்ட உடம்பில் பலமில்லை. அதனால் இந்தப் பகுதிக்கு இடம்பெயர்ந்து வந்து விட்டதாகச் சொன்னார்கள். சிகாகோவிற்கு முன்னர் சிங்கப்பூரில் இருந்தீர்களா என்று கேட்டேன். தாங்கள் பிலிப்பைன்ஸ் நாட்டைச் சேர்ந்தவர்கள் என்றார்கள். அமெரிக்காவின் மிகப் பெரிய இராணுவத்தளம் ஒன்று அந்த நாட்டில் இருந்தது. அமெரிக்காவிற்கு வெளியே இருந்த அமெரிக்காவின் மிகப்பெரிய இராணுவத்தளம் என்று அதை ஒரு காலத்தில் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அந்த நாட்டைச் சேர்ந்தவர்கள் இங்கு ஏராளமாக இருக்கின்றார்கள். வியட்நாமியர்களும் இருக்கின்றார்கள். கம்போடியர்கள் இருக்கின்றார்கள். அமெரிக்கா ஒரு காலத்தில் சண்டைக்கு போன இடங்களில் இருந்து பல நாட்டவர்களை கூட்டி வந்து இங்கு குடியேற்றி இருக்கின்றார்கள். இப்பொழுது எவரும் உள்ளே வராதே, வராதே என்கின்றார்கள். 'இந்த வீட்டின் விலை என்ன..............' என்று அவர்களின் பெறாமகளின் வீட்டைக் காட்டி என்னிடம் கேட்டார்கள். அவர்களை நன்றாகப் பார்த்தேன். 'தெரியாது................ அவர்கள் எனக்கு சாக்லேட் கொடுக்கும் போது நான் எதையுமே கேட்கவில்லை............. நல்வரவு என்று மட்டுமே சொன்னேன்.....' என்றேன். போலும், எஸ்தரும் தெரிந்து கொள்ள விரும்பிய ஒரேயொரு விடயத்தை நான் கடைசிவரை சொல்லவேயில்லை.

பிசுபிசுத்துப் போன ஹர்த்தால் – முல்லைத்தீவு, அம்பாறையிலும் வழமைப் போன்று செயற்பாடுகள்

1 month 1 week ago
யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் வெற்றி - சுமந்திரன் Monday, August 18, 2025 செய்திகள் யாழ்ப்பாணத்தைத் தவிர, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள ஏனைய பகுதிகளில் ஹர்த்தால் வெற்றிகரமாக அமைந்ததாக தமிழரசு கட்சியின் பதில் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் மற்றும் பதில் தலைவர் சி.வி.கே. சிவஞானம் ஆகியோர் கூட்டாக அறிவித்தனர். யாழ்ப்பாணத்தில் இன்று (18) நடைபெற்ற ஊடகச் சந்திப்பில் அவர்கள் இதனை அறிவித்தனர். இந்த ஊடகச் சந்திப்பில், வடக்கு-கிழக்கு மாகாணங்களில் உள்ள இராணுவ முகாம்களை அகற்றக் கோரி தமிழரசு கட்சி ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்திருந்ததாகவும், இதற்கு பெரும்பாலான பகுதிகளில் ஆதரவு கிடைத்தது. யாழ்ப்பாண நகரப் பகுதியில் மட்டுமே வர்த்தக நிலையங்கள் திறந்திருந்தன. இந்தப் பகுதியில் ஆதரவு கிடைக்காதது மனவருத்தம் அளிப்பதாக சுமந்திரன் குறிப்பிட்டார். ஹர்த்தால் அறிவிப்பு வெளியான உடனே, ஜனாதிபதி மற்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க உள்ளிட்டோர் தமிழரசு கட்சியைத் தொடர்பு கொண்டு பேச்சுவார்த்தை நடத்தியதாகவும், முல்லைத்தீவு முத்தையன்கட்டு இராணுவ முகாமை அகற்ற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் உறுதியளித்ததாகவும் சுமந்திரன் தெரிவித்தார். - பிரதீபன் -

சிரிக்கவும் சிந்திக்கவும் .

1 month 1 week ago
இதே போல் நேற்று ஒன்று பார்த்தேன் . பில்லிங் கவுண்டரில் ஒருத்தி தோலை உரித்துவிட்டு எடைபோட சொன்னாள் அவள் . அவள் வைத்திருந்த முடடைகளை ஒருபையில் உடைத்து ஊற்றி எடைபோடவா என்றாரே பார்க்கலாம். 😁
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed