புதிய பதிவுகள்2

தடகள வீரர் அருந்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை

1 month 1 week ago
இலங்கை இராணுவ தடகள வீரர் அருன்தவராசா புவிதரன் கோலூன்றி பாய்தல் போட்டியில் தேசிய சாதனை 19 AUG, 2025 | 06:16 PM தியகம மஹிந்த ராஜபக்ஷ மைதானத்தில் திங்கட்கிழமை 18ஆம் திகதி முதல் 20ஆம் திகதி வரை நடைபெறும் இராணுவ தடகள சம்பியன்ஷிப் போட்டியில், இலங்கை இராணுவ மின்சார மற்றும் இயந்திர பொறியியலாளர் படையணியைச் சேர்ந்த லான்ஸ் கோப்ரல் ஏ. புவிதரன் செவ்வாய்க்கிழமை (19) கோலூன்றிப் பாய்தல் போட்டியில் 5 மீட்டர் மற்றும் 18 சென்டிமீட்டர் உயரம் தாண்டி புதிய இலங்கை சாதனையைப் படைத்தார். இந்த வெற்றியின் மூலம் கோலூன்றிப் பாய்தல் போட்டியில் இலங்கை இராணுவ சாதனை மற்றும் இலங்கை இராணுவ தடகள சம்பியன்ஷிப் சாதனை இரண்டையும் புவிதரன் தக்கவைத்துக்கொண்டார். https://www.virakesari.lk/article/222900

வேலை நிறுத்த போராட்டத்தினால் ஸ்தம்பிதமடைந்த தபால் பரிமாற்ற சேவைகள்

1 month 1 week ago
தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடர்கிறது ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தை வெற்றிகரமாக நிறைவடைந்த போதிலும், தபால் ஊழியர்களின் பணிப்புறக்கணிப்பு தொடரும் என்று தபால் தொழிற்சங்கங்கள் இன்று (19) பிற்பகல் அறிவித்துள்ளன. ஜனாதிபதியின் பொதுமக்கள் தொடர்பு பணிப்பாளர் நாயகம் தர்மசிறி கமகேவுடன் இடம்பெற்ற கலந்துரையாடலுக்குப் பிறகு, தபால் தொழிற்சங்கங்கள் ஊடகங்களுக்கு இந்த அறிக்கையை வெளியிட்டுள்ளன. 19 கோரிக்கைகளை முன்வைத்து, தபால் தொழிற்சங்கங்கள் நேற்று (18) பிற்பகல் முதல் தொடர்ச்சியான பணிப்புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளன. இதன் காரணமாக, நாடு முழுவதும் உள்ள அனைத்து தபால் நிலையங்களின் பணிகளும் பாதிக்கப்பட்டுள்ளன. இந்த விடயம் தொடர்பில், தபால் மற்றும் தொலைத்தொடர்பு அதிகாரிகள் சங்கத்தின் தலைவர், இ.ஜி.சி. நிரோஷன் தெரிவிக்கையில், "உடனடியாக அமைச்சருடன் ஒரு கலந்துரையாடலுக்கு ஏற்பாடு செய்ய வேண்டும். அந்த கலந்துரையாடலுக்குப் பிறகு, தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வரும் பணிப்புறக்கணிப்பை முடிவுக்குக் கொண்டுவர நாங்கள் தயாராக உள்ளோம். அதுவரை தொடர்ச்சியாக இந்த பணிப்புறக்கணிப்பை தொடருவதற்கு தீர்மானித்துள்ளதாக தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmeicxsk302qlqp4kf6890pkz

பேலியகொடை துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் வௌியானது

1 month 1 week ago
பேலியகொடை மீன் சந்தையின் ஊழியர் ஒருவர் இன்றைய (19) துப்பாக்கிச் சூட்டில் கொல்லப்பட்டார். இந்த துப்பாக்கி பிரயோகத்தின் போது, துப்பாக்கி சூட்டுக்காக இலக்கு வைக்கப்பட்டவர் மாத்திரம் இன்றி, அங்கு வீதியில் சென்ற ஒருவரும் காயமடைந்தார். பேலியகொடை ஞானரதன மாவத்தை பகுதியில் இன்று காலை 9:30 மணியளவில் இந்த துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் பிரவேசித்த இருவர் T - 56 ரக துப்பாக்கியில் இந்த துப்பாக்கிச் சூட்டை நடத்தியுள்ளனர். துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த இருவரும் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களில் சந்தேகநபரால் இலக்கு வைக்கப்பட்டவர் இன்று பிற்பகல் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். காயமடைந்த மற்றையவர் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வரும் நிலையில், அவரது நிலை கவலைக்கிடமாக இல்லை என்று பொலிஸார் தெரிவிக்கின்றனர். உயிரிழந்தவர் ஐயப்பன் பிரபு என்ற 40 வயதுடையவர் என தெரியவந்துள்ளது. பேலியகொடை மீன் சந்தையில் வேலை முடித்து வீடு திரும்பிய சந்தர்ப்பத்திலேயே அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது. கொலை செய்யப்பட்ட நபர் முகத்துவாரம் பகுதியைச் சேர்ந்தவர் என்பதுடன் வெல்லே சாரங்க என்ற குற்றங்களில் ஈடுபடும் நபர் ஒருவரினால் உயிர் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டிருந்த நிலையில் அவர் பேலியகொடவிற்கு மாறியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சாரங்கவின் சகோதரனைக் கொலை செய்ய முற்பட்டதாக குற்றச்சாட்டுகள் எழுந்ததை அடுத்தே, வெல்லே சாரங்கா அவரைக் கொலை செய்வதாக மிரட்டியதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். கொலை செய்யப்பட்ட நபர் பூங்கொடி கண்ணா என்ற குற்றவாளியின் நெருங்கிய நண்பர் என்றும் பொலிஸார் கூறுகின்றனர். பழனி ரிமோஷன் மற்றும் கஞ்சிபாணி இம்ரான் ஆகியோர் இந்தக் கொலைக்கு உதவியிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர். https://adaderanatamil.lk/news/cmeiqh5m902r7qp4ket7a6qvf

சந்திப்பு "மிகவும் சிறந்தது" : புட்டினுக்கும் ஜெலென்ஸ்கிக்கும் இடையிலான சந்திப்பை ஏற்பாடு செய்யவுள்ளதாக டிரம்ப் தெரிவிப்பு!

1 month 1 week ago
Published By: PRIYATHARSHAN 19 AUG, 2025 | 07:18 AM உக்ரைன் ஜனாதிபதி வொலோடிமிர் செலன்ஸ்கி மற்றும் ஏனைய ஐரோப்பிய தலைவர்களுடன் முன்னெடுக்கப்பட்ட சந்திப்பு "மிகவும் சிறந்ததாக" இருந்தது என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில், உக்ரைன் பாதுகாப்பு நிலைமை, ஐரோப்பிய நட்டு நாடுகளுடன் இணைந்த ஒத்துழைப்பு, உக்ரைன் மற்றும் ரஷ்யாவுக்கிடையிலான தற்போதைய பதற்றங்கள் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடன் தாம் தொலைபேசியில் உரையாடியதாகவும், இரு நாடுகளுக்கிடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் நேரடி சந்திப்பு ஒன்றை ஏற்பாடு செய்ய ஆரம்ப கட்ட பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுள்ளதாகவும் அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் தெரிவித்துள்ளார். டிரம்ப் இந்த சந்திப்பு குறித்து கூறுகையில், "பல நல்ல விவாதங்களையும், நல்ல பேச்சுவார்த்தைகளையும் முன்னெடுத்தோம். பல வழிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்பட்டுள்ளதாக நான் நினைக்கிறேன். மேலும், உக்ரைன் போரை முடிவுக்கு கொண்டுவரும் முயற்சியில் "குறிப்பிடத்தக்க முன்னேற்றம்" ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் தெரிவித்தார். இந்நிலையில், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினை தொலைபேசியில் தொடர்பு கொண்டதாகவும், இரு தலைவர்களுக்கு இடையேயான சந்திப்பிற்கான ஏற்பாடுகளைத் ஆரம்பிக்குமாறு கூறியதாகவும் டிரம்ப் தெரிவித்தார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து புட்டினுடன் கலந்துரையாட விரும்புவதாக டிரம்ப் கூறினார். வெள்ளை மாளிகையில் இடம்பெற்ற இந்த சந்திப்பில், பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர், பின்லாந்து ஜனாதிபதி அலெக்சாண்டர் ஸ்டப், ஜேர்மன் சான்சிலர் பிரீட்ரிக் மெர்ஸ் மற்றும் பிரான்ஸ் ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன், இத்தாலியின் பிரதமர் ஜியோர்ஜியா மெலோனி, நேட்டோ பொதுச் செயலாளர் மார்க் ரூட், உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களும் கலந்துகொண்டனர். இந்த சந்திப்பு உக்ரைன் மற்றும் ஐரோப்பாவின் பாதுகாப்புக்கான ஒரு "வரலாற்று படி" என்று பிரித்தானிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பின் மூலம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான ஒத்துழைப்பு மேலும் வலுப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. டிரம்ப் – புட்டின் சந்திப்பு எப்போது, எங்கு நடைபெறும் என்பதற்கான விபரங்கள் இதுவரை அறிவிக்கப்படாத நிலையில், சர்வதேச சமூகம் இந்தச் சந்திப்பை ஆர்வத்துடன் எதிர்நோக்கி இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222834

ஒரு சோறு

1 month 1 week ago
வழமைபோல் உங்களின் பாணியில் கதை நன்றாகவே இருக்கின்றது . ........ ! வீட்டின் விலையை சொன்னாலும் பரவாயில்லை , உங்களின் வயதை மட்டும் ....ம்கூம் ......... ! 😀

திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர்

1 month 1 week ago
திருப்பதி கோயிலுக்கு 121 கிலோகிராம் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்த தொழிலதிபர். திருப்பதி கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை பக்தர் ஒருவர் நன்கொடையாக அளிக்க முன்வந்து இருப்பதாக சந்திரபாபு நாயுடு தெரிவித்தார். திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க தொழில் அதிபர் ஒருவர் முன்வந்து இருப்பதாக ஆந்திர முதல் மந்திரி சந்திரபாபு நாயுடு கூறியுள்ளார். இது தொடர்பாக சந்திரபாபு நாயுடு கூறியிருப்பதாவது ”தொழிலதிபர் ஒருவர் திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு 121 கிலோ தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்துள்ளார். இதன் மதிப்பு இந்திய மதிப்பில் 140 கோடியாகும். புதிதாக தொடங்கிய நிறுவனம் வெற்றிகரமாக இயங்குவதால் தங்கத்தை நன்கொடையாக அளிக்க முன்வந்து இருக்கிறார். தனது நிறுவனத்தின் 60 சதவீத பங்குகளை விற்பனை செய்ததன் முலம் அவருக்கு 7 ஆயிரம் கோடி லாபம் கிடைத்துள்ளது. எனவே அதில் ஒரு பங்கை ஏழுமலையானுக்கு அளிக்க முடிவு செய்திருப்பதாக இருக்கிறார்” என்றார். எனினும், அந்த தொழில் அதிபர் யார் என்ற விவரத்தை வெளியிட சந்திரபாபு நாயுடு மறுத்துவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443765

முத்தையன்கட்டில் இராணுவத்தால் தாக்கப்பட்டு காணாமல்போனவர் சடலமாக மீட்பு : விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொலிஸாருக்கு ரவிகரன் வலியுறுத்து

1 month 1 week ago
இலங்கை ராணுவ முகாமில் தமிழ் இளைஞர் அடித்துக் கொலையா? வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஹர்த்தால் கட்டுரை தகவல் ரஞ்சன் அருண் பிரசாத் பிபிசி தமிழுக்காக 8 மணி நேரங்களுக்கு முன்னர் இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் திங்கட்கிழமை அனுஷ்டிக்கப்பட்ட ஹர்த்தாலானது, யாழ்ப்பாணம் தவிர்ந்த ஏனைய பகுதிகளில் வெற்றியளித்துள்ளதாக இலங்கை தமிழரசு கட்சி அறிவித்துள்ளது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அதிகளவான இராணுவத்தினரை நிலைநிறுத்துவதற்கு எதிராகவும், முல்லைத்தீவு பகுதியில் தமிழ் இளைஞர் ஒருவர் இராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாகவும் கூறப்படும் சம்பவத்திற்கு எதிராகவும் இந்த ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது. கடந்த 9ம் தேதி சடலமாக மீட்கப்பட்ட அந்த இளைஞர் ராணுவத்தினரால் கொலை செய்யப்பட்டதாக குற்றம் சாட்டப்படுகிறது. ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக கூறப்படும் ஒருவரும் உயிரிழந்துள்ளார். ஹர்த்தால் வெற்றி அடைந்ததா? யாழ்ப்பாணம் நகரம் திங்கட்கிழமை முழுமையாக வழமை போன்று இயங்கி வந்ததை, அங்கு சென்ற பிபிசி குழுவினால் அவதானிக்க முடிந்தது. எனினும், வவுனியா, கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற பகுதிகளில் ஓரளவு இயல்பு வாழ்க்கை முற்பகல் வேளையில் பாதிக்கப்பட்டிருந்ததையும் அவதானிக்க முடிந்தது. அதேபோன்று, கிழக்கு மாகாணத்திலும் ஹர்த்தால் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகவும், அந்த ஹர்த்தால் நடவடிக்கை முழுமையாக வெற்றியளித்துள்ளதாகவும் இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். யாழ்ப்பாணம் உள்ளிட்ட வட மாகாணத்தின் பெரும்பாலான பகுதிகளில் பொது போக்குவரத்துக்கள் வழமை போன்று இயங்கியதுடன், பள்ளிகள், வர்த்தக நிலையங்கள், வங்கிகள் உள்ளிட்டமையும் வழமை போன்று இயங்கியதை அவதானிக்க முடிந்தது. தமிழ் இளைஞனின் சடலம் மீட்பு முல்லைத்தீவு - முத்தையன்கட்டுக் குளத்தில் ஆண் ஒருவரின் சடலமொன்று கடந்த 09ம் தேதி கண்டெடுக்கப்பட்டது. குறித்த பகுதியிலுள்ள ராணுவ முகாமொன்றிற்குள் ராணுவத்தினால் வரவழைக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து நபர்களில் ஒருவரின் சடலமே இவ்வாறு கண்டெடுக்கப்பட்டிருந்தது. ராணுவ முகாமில் ஒதுக்கப்பட்டதாக கூறப்படுகின்ற இரும்பு பொருட்களை பெற்றுத் தருவதாக ராணுவ அதிகாரிகள் கூறியே, இந்த இளைஞர்கள் சென்றுள்ளதாக போலீஸ் ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. அதன்பின்னர், ராணுவ முகாமிற்கு இந்த ஐந்து இளைஞர்கள் வரவழைக்கப்பட்டு கடுமையாக தாக்கப்பட்டதாக கூறப்படுகின்றது. இவ்வாறு தாக்கப்பட்டதாக கூறப்படும் ஐந்து இளைஞர்களில் நால்வர் தப்பித்துள்ளதாகவும், ஒருவரின் சடலமே இரண்டு தினங்களுக்கு பின்னர் இவ்வாறு குளத்திலிருந்து கண்டெடுக்கப்பட்டது. சம்பவத்தில் 32 வயதான ஒரு குழந்தையின் தந்தையான எ.கபில்ராஜ் என்ற இளைஞனே உயிரிழந்திருந்தார். மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது முல்லைத்தீவு குளமொன்றிலிருந்து தமிழ் இளைஞன் ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மூன்று இராணுவ சிப்பாய்கள் ஒட்டுச்சுட்டான் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். இவ்வாறு கைது செய்யப்பட்ட மூன்று ராணுவ சிப்பாய்களையும் எதிர்வரும் 19ம் தேதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு முல்லைத்தீவு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. இந்த நிலையில், சம்பவம் தொடர்பில் ஒட்டுச்சுட்டான் போலீஸார் விசாரணைகளை ஆரம்பித்து முன்னெடுத்து வருகின்றனர். ராணுவத்தின் பதில் ராணுவத்தின் முகாமிற்குள் இரவு வேளையில் சட்டவிரோதமான முறையில் சிலர் பிரவேசித்துள்ளதாகவும், அது தொடர்பில் விசாரணைகளை நடத்த முயற்சித்த சந்தர்ப்பத்தில் அவர்களில் சிலர் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். இவ்வாறு சட்டவிரோதமாக ராணுவ முகாமிற்குள் பிரவேசித்த ஒருவரை தமது தரப்பினர் பிடித்துக் கொண்டதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ராணுவத்தினால் அந்த சந்தர்ப்பத்தில் பிடிக்கப்பட்ட சந்தேக நபர், பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறுகின்றார். பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்ட நபர், ஏற்கனவே ராணுவ முகாமிற்குள் பிரவேசித்து திருட்டு சம்பவமொன்றில் ஈடுபட்டமை குறித்த வழக்கொன்று முல்லைத்தீவு நீதிமன்றத்தில் உள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். ''ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்றதாக சொல்லப்படும் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பின்னர் எமக்கு அறிய கிடைத்தது. அது தொடர்பில் எமக்கு சரியாக கூற முடியாது. ஏனென்றால், அவர்கள் தப்பிச் சென்றவர்கள். அந்த நபர் முகாமிற்குள் வந்தாரா என்பது தொடர்பில் கூட நாம் அறிந்திருக்கவில்லை. ராணுவம் சோதனை செய்யும் போது தப்பிச் சென்றுள்ளதாக தப்பி சென்றவர்கள் போலீஸாருக்கு வாக்கு மூலம் வழங்கியுள்ளனர். அதில் ஒருவரே குளத்திற்குள் குதித்து இறந்துள்ளார். அதற்கான பொறுப்பை எம்மால் ஏற்றுக்கொள்ள முடியாது.'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறினார். குறித்த இளைஞர்கள் இரவு 11.30 மணிக்கு ராணுவ முகாமின் பின்புறத்தின் ஊடாக ராணுவ முகாமிற்குள் சட்டவிரோதமாக பிரவேசித்துள்ளதாகவும் அவர் தெரிவிக்கின்றார். ''ராணுவ முகாமிற்கு வருகைத் தருமாறு கூறி, பின்னர் தாக்குதல் நடத்தியுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது. அவ்வாறு வருகைத் தர சொல்லப்படுமாக இருந்தாலும், இரவு 11.30க்கு திருட்டுத்தனமாக பின்புறத்தில் வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம் அல்லவா?. அப்படி வருகைத் தருமாறு கூறப்படுமாக இருந்தால், நாங்கள் பகல் வேளையில் முன் வழியாக பொறுப்பான அதிகாரி ஒருவர் அழைத்து வந்திருப்பார். இரவு 11.30க்கு வருகைத் தருமாறு நாங்கள் சொல்ல மாட்டோம்.'' என அவர் குறிப்பிடுகின்றார். பட மூலாதாரம், VARUNA GAMAGE படக்குறிப்பு, ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே மூன்று ராணுவ சிப்பாய்கள் கைது செய்யப்பட்டமைக்கான காரணம் என்ன? ராணுவ முகாமிலிருந்து தப்பிச் சென்ற நபர் ஒருவர் உயிரிழந்தமை குறித்த சம்பவம் தொடர்பில் இந்த மூன்று சிப்பாய்களும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே, பிபிசி தமிழுக்கு தெரிவித்தார். ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து பொருட்களை திருடுவதற்கு உதவி வழங்கியமை தொடர்பில் இருவர் போலீஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிடுகின்றார். அத்துடன், முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து தப்பிச் சென்றவர்களின் வழக்கிய வாக்குமூலத்திற்கு அமைய, ராணுவ சிப்பாய் ஒருவர் தம் மீது தாக்குதல் நடத்தியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மற்றைய ராணுவ சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறுகின்றார். அதைத் தவிர்த்து, இளைஞர் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் எந்தவொரு சிப்பாயும் கைது செய்யப்படவில்லை என ராணுவ ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவிக்கின்றார். ராணுவ முகாமிற்குள் அத்துமீறி பிரவேசித்து, பொருட்களை திருட முயற்சித்த சம்பவமே இந்த இடத்தில் நேர்ந்துள்ளதாகவும், அதை விடுத்து, தமது தரப்பினர் யார் மீதும் தாக்குதல் நடத்தவில்லை எனவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே கூறுகின்றார். வடக்கு, கிழக்கில் ஏன் ராணுவ முகாம்கள் அதிகம்? வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் போர் முடிவுக்கு கொண்டு வரப்பட்ட 2009ம் ஆண்டு ராணுவம் வசம் 8 சதவீத நிலப் பரப்பு காணப்பட்டதாகவும், இன்றைய தினத்தில் 0.38 சதவீத நிலப்பரப்பே காணப்படுவதாகவும் ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வருண கமகே தெரிவிக்கின்றார். ஏனைய அனைத்து நிலப்பரப்புகளையும் ராணுவம் விடுவித்து, பொதுமக்களுக்கு கையளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார். காணி உரிமையாளர்களிடம் காணி தொடர்பான சட்ட ஆவணங்கள் இல்லாமை உள்ளிட்ட காரணங்களினாலேயே தற்போது எஞ்சியுள்ள காணிகளை விடுவிக்க முடியாத நிலைமை காணப்படுவதாகவும் அவர் கூறுகின்றார். ராணுவம் உண்மையிலேயே பெருமளவான காணிகளை விடுவித்துள்ளதா? போர் முடிவடைந்த தருணத்தில் 8 சதவீதமாக காணப்பட்ட பொதுமக்களின் காணிகள் பெருமளவு விடுவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ ஊடகப் பேச்சாளர் கூறும் கருத்தை, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் மறுக்கின்றார். யாழ்ப்பாணத்தில் இன்று பிபிசி தமிழுக்கு வழங்கிய பிரத்தியேக பேட்டியிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார். ''அவர் முற்று முழுதான விடயம் தெரியாதவராக இருக்க வேண்டும். 2003ம் ஆண்டிலிருந்து இது சம்மந்தமான வழக்குகளை நான் செய்துக்கொண்டிருக்கின்றேன். 22 வருடங்கள் செய்துக் கொண்டிருக்கின்றேன். இப்போதும் பலாலி நிலப்பகுதியை சூழவுள்ள காணிகள் தொடர்பாக 2176 வழக்குகளை நான் மட்டும் கையாண்டுக்கொண்டிருக்கின்றேன். எல்லாம் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்ற வழக்குகள். அத்தனைக்கும் உறுதிப் பத்திரங்கள் இருக்கின்றன. அவர் சொல்கின்ற நிலப் பரப்பு சதவீதமானது, மற்றைய மாகாணங்களை ஒப்பிட்டு சொல்கிறாரா? மற்றைய மாகாணங்களில் ராணுவ பிரசன்னம் எத்தனை சதவீதம் இருக்கின்றது என்று சொன்னாரா? இல்லை. அதைத் தானே பார்க்க வேண்டும். இது ஒரு நாடு. எல்லோரும் சமம் என்று எல்லாம் சொன்னால், எல்லா பிரதேசங்களிலும் சமமான வீதத்திலேயே ராணுவ பிரசன்னம் இருக்க வேண்டும். இது அப்படி இல்லையே. வடக்கு கிழக்கில் மிகப் பெரிய அளவில் ராணுவ பிரசன்னம் இருக்கின்றது. மக்களின் குடியிருப்புக்களுக்கும் மக்களின் வாழ்க்கைக்குள் இணைந்த வகையில் ராணுவம் பிரசன்னம் இருக்கின்றது. ராணுவ மயமாக்கல் என்பது அது தான். அது எந்த காலத்திலும் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாத விடயம்.'' என எம்.ஏ.சுமந்திரன் தெரிவிக்கின்றார். ஏனைய மாகாணங்களில் ராணுவ இருப்பு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் எழுப்பிய குற்றச்சாட்டு குறித்து, பிபிசி தமிழ் ராணுவ ஊடகப் பேச்சாளரிடம் வினவியது. நாட்டின் தேசிய பாதுகாப்பு காரணமாக ராணுவ முகாம்களில் எண்ணிக்கை மற்றும் ராணுவ அதிகாரிகளின் தகவல்கள் குறித்த விடயங்களை வெளியிட முடியாது என அவர் பதிலளித்தார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cvg35n2yng1o

மன்னார் மறைமாவட்ட ஆயர் ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு - பேசிய விடயம் என்ன?

1 month 1 week ago
Published By: DIGITAL DESK 3 19 AUG, 2025 | 04:32 PM மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும், இலங்கை ஜனாதிபதிக்கும் இடையில் இடையில் நேற்று திங்கட்கிழமை (18) மாலை இடம்பெற்ற விசேட சந்திப்பு குறித்து மன்னார் மறைமாவட்ட குருமுதல்வர் அருட்திரு. தமிழ் நேசன் அடிகளார் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், நேற்று திங்கள் கிழமை மன்னார் ஆயர் மேதகு அந்தோனிப்பிள்ளை ஞானப்பிரகாசம் ஆண்டகைக்கும் இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிற்கும் இடையிலான சந்திப்பு இடம்பெற்றது. கொழும்பில் உள்ள ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது மன்னார் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக மன்னார் ஆயர் அவர்கள் ஜனாதிபதியுடன் கலந்துரையாடினார். மன்னாரில் முன்னெடுக்கப்படவுள்ள கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினை, மின்சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புக்கள், வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியம் போன்ற விடயங்கள் இச்சந்திப்பின்போது கலந்துரையாடப்பட்டன. கனிய மணல் அகழ்வு தொடர்பான பிரச்சினைகளையும் அதனால் மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பாதிப்புக்களையும் ஆயர் ஜனாதிபதிக்கு எடுத்து விளக்கியபோது அச்செயற்பாடு முற்றாக நிறுத்தப்படும் என ஜனாதிபதி வாக்குறுதி வழங்கியுள்ளார். மின் சக்தியை பெறுவதற்காக மன்னாரில் காற்றாலை அமைக்கும் செயற்பாடுகளால் எழுந்துள்ள பாரிய பாதிப்புகள், இத்திட்டத்திற்கு எதிராக மக்கள் தொடர்ச்சியாக முன்னெடுத்துவரும் போராட்டங்கள் தொடர்பாக ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட தரப்பினருடன், குறிப்பாக மக்களுடன் பேச்சுவார்த்தை முன்னெடுக்கப்பட்டு இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண அரசாங்கத்தின் கீழ் உள்ள மன்னார் பொது வைத்தியசாலையை மத்திய அரசாங்கத்தின் கீழ் கொண்டு வர வேண்டியதன் அவசியத்தை ஆயர் வலியுறுத்திய போது இது தொடர்பாக உரிய அமைச்சர்களுடன் பேசி நடவடிக்கை எடுப்பதாக ஜனாதிபதி உறுதி அளித்துள்ளார் என அவர் மேலும் தெரிவித்தார். https://www.virakesari.lk/article/222892

ஜெயலலிதாவை கொல்ல சிவராசன் திட்டமிட்டாரா? - 'தி ஹண்ட்' தொடரால் எழும் கேள்விகள்

1 month 1 week ago
படக்குறிப்பு, ராஜீவ் காந்தி, சிவராசன் (வலது) கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலையில் தீவிரமாகத் தேடப்பட்டுவந்த சிவராசன், சுபா உள்ளிட்டோர் 1991 ஆகஸ்ட் மாதம் 19ஆம் தேதி பெங்களூருக்கு அருகில் சடலங்களாக மீட்கப்பட்டனர். இந்தத் தேடுதல் வேட்டையின்போது என்னவெல்லாம் நடந்தது? அவர்கள் வேறு கொலைகளைத் திட்டமிட்டிருந்தனரா? கடந்த 1991ஆம் ஆண்டு தேர்தல் பிரசாரத்திற்காக தமிழ்நாட்டிற்கு வந்த முன்னாள் பிரதமரும் காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளருமான ராஜீவ்காந்தி ஸ்ரீபெரும்புதூரில் கொல்லப்பட்டார். இவரது கொலை குறித்து விசாரிப்பதற்காக டி.ஆர். கார்த்திகேயன் தலைமையில் அமைக்கப்பட்ட சி.பி.ஐயின் சிறப்புப் புலனாய்வுக் குழு, தனது தேடுதல் வேட்டையில் கொலையில் தொடர்புடைய ஒவ்வொருவராகக் கைது செய்ய ஆரம்பித்தது. இந்தக் கொலையைத் திட்டமிட்டுச் செயல்படுத்தியதாகக் கருதப்பட்ட சிவராசனை சி.பி.ஐ. தீவிரமாகத் தேடிவந்தது. ஆனால், அந்தத் தேடுதல் வேட்டையில் பலன் கிடைக்கவில்லை. ஒரு கட்டத்தில் சிவராசனை சி.பி.ஐ. நெருங்கியபோது, அவர்கள் தாக்குதலில் ஈடுபட்டனர். முடிவில் அவர்கள் சடலமாகவே மீட்கப்பட்டனர். இந்தச் சம்பவத்தை பின்னணியாக வைத்து சமீபத்தில் The Hunt: The Rajiv Gandhi Assassination Case என்ற பெயரில் வெப் சீரிஸ் ஒன்று வெளியானது. அந்தத் தொடரில், ராஜீவ் காந்தி கொல்லப்படுவதிலிருந்து சிவராசன் மரணம் வரையிலான பகுதிகள் இடம்பெற்றிருக்கின்றன. இந்தத் தொடர் வெளியான பிறகு, இதில் இடம்பெற்ற சில அம்சங்கள் குறித்து சர்ச்சை எழுந்தது. குறிப்பாக, ராஜீவ் காந்தியின் கொலைக்குப் பிறகு சிவராசன் தேடப்பட்டுவந்தபோது, அவர் வேறு சில தலைவர்களை, குறிப்பாக முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதாவை கொலை செய்ய திட்டமிட்டிருப்பதாக அந்தத் தொடரில் காட்டப்படுவது சலசலப்பை ஏற்படுத்தியது. பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, தி ஹண்ட் தொடரில் இடம்பெற்ற சிவராசன் கதாபாத்திரம். அந்தத் தருணத்தில் உண்மையில் என்ன நடந்தது? 1991ஆம் ஆண்டு மே மாதம் 21ஆம் தேதி இரவு ஸ்ரீபெரும்புதூரில் நடக்கவிருந்த தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக வருகை தந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி, மனித வெடிகுண்டு தாக்குதலில் கொல்லப்பட்டார். ஒன்பது காவல்துறையினர் உட்பட மொத்தம் 16 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு அடுத்த நாளே, மத்திய ரிசர்வ் காவல் படையின் தென் பிராந்திய இன்ஸ்பெக்டர் ஜெனரலாக இருந்த டி.ஆர். கார்த்திகேயன் இந்த விசாரணைக்குத் தலைமை தாங்குவார் என முடிவுசெய்யப்பட்டது. அவர் பொறுப்பேற்றுக்கொண்டவுடன் இது தொடர்பான விசாரணைக்காக சி.பி.ஐயின் சென்னைக் கிளை, தமிழ்நாடு காவல்துறை, சிஆர்பிஎஃப், மத்திய - மாநில அரசுகளின் சில நிறுவனங்களில் இருந்து அதிகாரிகளைத் தேர்வுசெய்து சிறப்புப் புலனாய்வுக் குழு அமைக்கப்பட்டது. ராஜிவ் காந்தி கொல்லப்பட்ட சிறிது நேரத்திலேயே அங்கு வந்த காவல்துறை ஐ.ஜி. ஆர்.கே. ராகவன் அங்கிருந்த தடயங்களை சேகரித்தார். அதில், இறந்துபோன புகைப்படக்காரர் ஹரிபாபுவின் உடல் மீதிருந்த கேமராவும் இருந்தது. அதனை காவல்துறை போட்டோகிராபர் ஒருவரிடம் கொடுத்து, அதனை டெவலப் செய்து கொண்டுவரச் சொன்னார். ஆனால், கலர் பிலிம் என்பதால் உள்ளூரில் அதைச் செய்ய முடியவில்லை. இதற்குப் பிறகு, சட்டம் - ஒழுங்கு பிரசனை ஏற்பட்டதால் மே 23ஆம் தேதியன்று முன்னிரவில்தான் அதிலிருந்த புகைப்படங்கள் ப்ரிண்ட் செய்யப்பட்டன. மொத்தம் பத்து புகைப்படங்கள். அதில் ஒன்றில் கையில் சந்தன மாலையுடன் நின்று கொண்டிருந்த சல்வார் கம்மிஸ் அணிந்த பெண், காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த லதா கண்ணன், அவர் மகள் கோகிலா ஆகியோர் இடம்பெற்றிருந்தனர். இவர்களுக்குச் சற்றுத் தள்ளி குர்தா - பைஜாமா அணிந்த ஒருவர் நின்றுகொண்டிருந்தார். பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு. சிறப்புப் புலனாய்வுக் குழு அந்த மனிதர் யார் எனத் தேட ஆரம்பித்தது. தொடர்ந்து நடந்த விசாரணை, "புகைப்படக் கலைஞர் ஹரிபாபு, இறந்த மனித வெடிகுண்டு, என்ன ஆனார் எனத் தெரியாத குர்தா பைஜாமா மனிதர் ஆகியோருக்கு இடையிலான தொடர்பை உறுதிப்படுத்தியது" என்கிறது 'ராஜீவ் காந்தி படுகொலை - ஒரு புலனாய்வு' என்ற புத்தகம். இந்த நூல், சிறப்பு புலனாய்வுக் குழுவின் தலைவராக இருந்த டி.ஆர். கார்த்திகேயனாலும் மற்றொரு உயரதிகாரியான ராதா வினோத் ராஜுவாலும் இணைந்து எழுதப்பட்டது. இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுக் குழு, சந்தேகத்திற்குரிய கொலையாளி, குர்தா - பைஜாமா நபர் ஆகியோரின் படங்களை வெளியிட்டு, அவர்களைப் பற்றி தகவல் தெரிந்தால் தெரிவிக்கும்படி கூறியது. இதற்கிடையில் தஞ்சாவூரில் தமிழ்நாடு காவல்துறை ரூசோ என்ற சங்கரைக் கைதுசெய்தது. அவரிடம் நளினி, தாஸ் ஆகிய இருவரின் தொலைபேசி எண்கள் கிடைத்தன. அவர் அளித்த கூடுதல் தகவலின் பேரில், திருத்துறைப்பூண்டியில் ஒரு கடத்தல் புள்ளி கைதுசெய்யப்பட்டார். அவரை விசாரித்தபோதுதான், குர்தா - பைஜாமா நபரின் பெயர் சிவராசன் என்பதும் அவர் விடுதலைப் புலிகள் அமைப்பைச் சேர்ந்தவர் என்பதும் தெரியவந்தது. இதற்கிடையில், இது குறித்து விசாரிப்பதற்காக கொழும்பு சென்றிருந்த குழு ஒன்று சென்னைக்குத் திரும்பியது. அந்தக் குழுவினரும் குர்தா - பைஜாமா நபர் விடுதலைப் புலிகள் இயக்கத்தைச் சேர்ந்த சிவராஜா மாஸ்டர் தான் எனக் குறிப்பிட்டனர். இதற்குப் பிறகு, நளினியின் சகோதரர் பாக்கியநாதனை விசாரித்தபோது அவரும் இந்தத் தகவலை உறுதிப்படுத்தினார். மேலும், மனித வெடி குண்டு பெண்ணின் பெயர் தணு, அவரது தோழியின் பெயர் சுபா, புலிகள் இயக்கத்தில் சிவராசனின் பெயர் ரகு ஆகிய தகவல்களும் கிடைத்தன. இதற்கிடையில் ராபர்ட் பயஸ், ஜெயக்குமார், பேரறிவாளன் உள்ளிட்டோர் கைதுசெய்யப்பட்டனர். ஜூலை மாத இறுதியில் கோவையில் பதுங்கியிருந்த டிக்ஸன், குணா ஆகிய புலிகளைப் பிடிக்க முயற்சி செய்தபோது அவர்கள் இருவரும் சயனைட் அருந்தி உயிரிழந்தனர். பெங்களூரில் நடந்த தேடுதல் வேட்டையிலும் இருவர் உயிரிழந்தனர். படக்குறிப்பு, முருகனுடன் நளினி பெங்களூருவில் சுற்றி வளைக்கப்பட்ட குழுவினர் இதற்கிடையில் பெங்களூருக்குத் தப்பிச் சென்ற சிவராசனும் சுபாவும் லேத் ஒன்றை நடத்திவந்த ரங்கநாதன் என்பவரது வீட்டின் ஒரு அறையில் தங்கினர். பிறகு பெங்களூரின் கோனனகுண்டேவில் இருந்த இன்னொரு வீட்டிற்கு ஆகஸ்ட் 16ஆம் தேதியன்று சிவராசனும் அவரது குழுவினரும் இடம்மாறினர். தேடுதல் வேட்டைத் தீவிரமடைந்தபோது மற்றொரு சம்பவமும் நடந்தது. கர்நாடக மாநிலம் மூதாடி, பிரூடா ஆகிய இடங்களில் புலிகள் தங்கியிருந்த இடத்தை காவல்துறை சுற்றிவளைக்க அந்த இரு வீடுகளில் தங்கியிருந்த 17 பேர் சயனைடு அருந்தி உயிரிழந்தனர். இந்தச் செய்தி சிவராசன் குழுவினருக்குத் தெரிந்ததும், ரங்கநாதனின் மனைவி மிருதுளா பதற்றமடைந்தார். ஆஸ்துமாவால் பாதிக்கப்பட்ட மிருதுளா சிகிச்சைக்காக எனக் கூறி வீட்டை விட்டு வெளியேறி தன் சகோதரர் வீட்டில் சென்று தங்கினார். விரைவிலேயே காவல்துறை மிருதுளாவைப் பிடித்தது. ஆகஸ்ட் 18ஆம் தேதி பிடிபட்ட அவர் கடந்த 16 நாட்களில் புலிகளுடனான தனது அனுபவத்தை விரிவாக காவல்துறையிடம் தெரிவித்தார். கோனன குண்டேவில் அவர்கள் தங்கியருந்த வீட்டையும் காட்டினார். அந்த வீட்டில் அந்தத் தருணத்தில் சிவராசன், சுபா ஆகிய இருவருடன் மேலும் ஐந்து பேரும் தங்கியிருந்தனர். இதற்குப் பிறகு சிறப்புப் புலனாய்வுப் பிரிவினர் அந்த வீட்டை சுற்றி வளைத்தனர். என்ன நடவடிக்கை எடுப்பதென டி.ஆர். கார்த்திகேயன், சி.பி.ஐயின் இயக்குநரிடம் கேட்டபோது, தான் அங்கே வரும்வரை காத்திருக்கும்படி சொன்னார் அவர். பட மூலாதாரம், SONY LIV மருத்துவருடன் வந்த சி.பி.ஐ இயக்குநர் சி.பி.ஐயின் இயக்குநர் அங்கு வந்து சேரும்போது, தன்னுடன் டாக்டர் ராமாச்சாரி என்ற சயனைடு விஷ நிபுணரையும் அழைத்துவந்தார். ராமாச்சாரி, வேறொரு விஷ முறிவு மருந்து தேவை என்று குறிப்பிட்டார். அந்த மருத்து குவாலியரிலிருந்து வர வேண்டியிருந்தது. இதில் சில மணி நேரங்கள் கடந்தன. இதற்கிடையில், ரங்கநாத்தும் கைது செய்யப்பட்டார். ஆகஸ்ட் 19ஆம் தேதி காலையில் சிவராசன் தங்கியிருந்த வீட்டிற்கு சற்று தூரத்தில் லாரி ஒன்று பழுதாகி நிற்க, அதிலிருந்த டிரைவர் லாரியைப் பழுது பார்க்க கீழே இறங்கினார். அவர்களை காவல்துறையினர் என நினைத்து சிவராசனும் குழுவினரும் சுட ஆரம்பித்தனர். காலை ஐந்து மணியளவில் குவாலியரிலிருந்து விஷ முறிவு மருந்து வந்தது. ஆறு மணியளவில் கறுப்புப் பூனைப் படையினர் உள்ளே புகுந்தனர். ஆனால், உள்ளே போய் பார்த்தபோது ஏழு பேருமே இறந்து போயிருந்தனர். அந்த ஏழு பேரும் சிவராசன், சுபா, நேரு, சுரேஷ் மாஸ்டர், அம்மன், டிரைவர் அண்ணா, முந்தைய நாள் அந்த வீட்டிற்கு வந்து சேர்ந்திருந்த ஜமுனா ஆகியோர் என அடையாளம் காணப்பட்டனர். இவர்களில் சிவராசன் மட்டும் நெற்றிப்பொட்டில் சுட்டுக்கொண்டு இறந்து போயிருக்க, மற்றவர்கள் சயனைடு அருந்தி உயிரிழந்திருந்தனர். "மறுநாள் காலை வரை காத்திருந்திருக்காமல் முந்தைய இரவே அதிரடி நடவடிக்கை எடுத்திருக்க வேண்டுமென நாங்கள் கருதினோம்" என இந்தச் சம்பவத்தைக் குறிப்பிடுகிறார் டி.ஆர். கார்த்திகேயன். "முடிவு எங்களிடமே விடப்பட்டிருந்தால் ஆகஸ்ட் 18ஆம் தேதியன்று நாங்கள் அந்த இடத்தை புயலென புகுந்து தாக்கியிருப்போம். சையனைடு நச்சு முறிப்பு ஊசியோடு ஒரு மருத்துவரும் இருந்தும்கூட நாங்கள் பொறுப்பின்றி செயல்பட்டதாக விமர்சனத்திற்கு உள்ளானோம்" என தன் நூலில் குறிப்பிடுகிறார் அவர். ராஜீவ் படுகொலை செய்யப்பட்டு மூன்று மாதங்கள் கழித்து இந்த சம்பவம் நடந்ததாலும் தற்செயலாக ஆகஸ்ட் 20ஆம் தேதி ராஜீவ் காந்தியின் பிறந்த நாளாக இருந்தாலும் பல்வேறு விமர்சனங்கள் எழுந்தன என்றும் இந்த மரணங்கள் முன்னாள் பிரதமரின் பிறந்த நாள் பரிசுபோல திட்டமிடப்பட்டதா என சில பத்திரிகைகள் விமர்சித்தன என்றும் டி.ஆர். கார்த்திகேயனின் நூல் குறிப்பிடுகிறது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, தேர்தல் பிரசாரப் பொதுக்கூட்டத்திற்காக ஸ்ரீபெரும்புதூர் வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொல்லப்பட்டார். வேறு திட்டமா? The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது. அதில் ஒன்று, சிறப்புப் புலனாய்வுக் குழுவின் தலைமையகமான மல்லிகையைத் தாக்குவது. இரண்டாவது, அப்போது தமிழ்நாடு முதலமைச்சராக இருந்த ஜெ. ஜெயலலிதா உள்ளிட்ட சில முக்கியத் தலைவர்களை கொல்வது. இதனை சிவராசனை மற்றொரு கூட்டாளியிடம் சொல்வதாகக் காட்டப்படுகிறது. The Hunt தொடரைப் பொறுத்தவரை, பத்திரிகையாளர் அனிருத்ய மித்ரா எழுதிய Ninety Days: The True Story of the Hunt for Rajiv Gandhi's Assassins நூலை அடிப்படையாக வைத்து உருவாக்கப்பட்டிருந்தது. அந்த நூலில், இது போன்ற ஒரு திட்டத்தை சிவராசன் சொல்வதாக அல்லாமல், உளவுத் துறையின் கருத்தாக இடம்பெறுகிறது. "ஐ.பியிலிருந்து வந்த தகவல்களின்படி, புலிகள் இயக்கம் தீர்த்துக்கட்ட வேண்டிய நீண்ட பட்டியலுடன் மிகப் பெரிய இலக்குகளை வைத்திருக்கிறது. இந்தக் கொலைப் படையினர், குறைந்தது மூன்று வி.ஐ.பிகளைத் தீர்த்துக் கட்ட நினைக்கின்றனர் - தமிழ்நாடு முதலமைச்சர் ஜெயலலிதா, மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் வாழப்பாடி கே. ராமமூர்த்தி, தமிழக காவல்துறை டிஜிபி எஸ். ஸ்ரீபால்" என அந்த நூல் குறிப்பிடுகிறது. இந்த நூலை எழுதிய அநிருத்ய மித்ரா, இந்தியா டுடே இதழுக்காக ராஜீவ் கொலை தொடர்பான சிறப்பு புலனாய்வுப் பிரிவின் நடவடிக்கைகள் குறித்த செய்திகளை தொடர்ந்து சேகரித்துவந்தவர். ஆக்ஸட் 21, 1991ஆம் தேதியிட்ட இந்தியா டுடே தமிழ் இதழில் இந்தத் தகவலை விரிவாகப் பதிவு செய்திருக்கிறார் அவர். "ராஜீவைக் கொன்ற பிறகு சிவராசன் தப்பிக்கவில்லை, கொலைப் பட்டியலில் இருந்த அடுத்த இரண்டு வி.ஐ.பிக்களைத் தாக்கத் தயாரானார் என்று கண்டுபிடிக்கப்பட்டிருப்பது எஸ்.ஐ.டியை உலுக்கியிருக்கிறது. இந்த முறை டெல்லியில் கொலையை நடத்த திட்டமிட்டார். ஜூலை மாத மத்தியில் ஜெயலலிதா, ராமமூர்த்தியுடன் பி.பி. நரசிம்மராவைப் பார்க்கப் போவதாக இருந்தது. ராஜீவைக் கொலைசெய்ததைப் போன்ற ஜெயலலிதாவையும் கொலை செய்ய இருந்ததாக கனகசபாபதியும் ஆதிரையும் சி.பி.ஐயால் கைது செய்யப்பட்டபோது தெரிவித்தார்கள்" என தனது கட்டுரையில் குறிப்பிடுகிறார் அனிருத்ய மித்ரா. பட மூலாதாரம், SONY LIV படக்குறிப்பு, The Hunt தொடரில், ராஜீவ் காந்தியின் கொலை முடிந்த பிறகு சிவராசன் இலங்கைக்குத் திரும்பிச் செல்லாமல் வேறு சில திட்டங்களையும் தீட்டுவதாக காட்டப்படுகிறது வாழப்பாடி கே. ராமமூர்த்தியின் மகன் ராமசுகந்தனிடம் கேட்டபோது, "அந்தத் தருணத்தில் அவர் விடுதலைப் புலிகளைக் கடுமையாக எதிர்த்துவந்ததால், அவருக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்தது உண்மைதான். இதனால், சேலம் வீட்டிலும் சென்னை வீட்டிலும் 24 மணி நேரமும் போலீஸ் காவல் போடப்பட்டிருந்தது" என்பதை மட்டும் அவர் நினைவுகூர்ந்தார். ஆனால், டி. கார்த்திகேயனின் நூல் இது குறித்து எதையும் குறிப்பிடவில்லை. கனகசபாபதியையும் ஆதிரையையும் கைதுசெய்தபோது விடுதலைப் புலிகளுக்கு என டெல்லியில் ஒரு இடத்தை ஏற்படுத்தித் தர வேண்டும் என்பதுதான் சிவராசன் உத்தரவாக இருந்தது என்று குறிப்பிட்டார்கள். டெல்லியில் ஒரு இடம் ஏற்படுத்திக்கொண்டால் இந்தியா முழுவதும் புலிகளின் நடவடிக்கைகளை மேற்பார்வையிடவும் வெளிநாடுகளுக்குத் தப்பிச்செல்லவும் சௌகர்யமாக இருக்கும் என்பதுதான் அவர்களது திட்டம் என்கிறது கார்த்திகேயனின் நூல். அந்தத் தருணத்தில் இது குறித்து தொடர்ந்து செய்தி சேகரித்துவந்த மூத்த பத்திரிகையாளர் பகவான் சிங்கும் பிற தலைவர்களைக் கொல்லும் திட்டம் ஏதும் புலிகளுக்கு இருந்ததாகத் தெரியவில்லை என்கிறார். "சிவராசன் உயிரோடு பிடிபடவில்லை. அவர் உயிரோடு பிடிபட்டு இதைச் சொல்லியிருந்தால் அதை ஏற்கலாம். அவர் யாரிடமோ இதைச் சொல்லி, அவர்கள் அதை வெளியில் சொன்னார்கள் என்பது ஏற்கக்கூடியதாக இல்லை. புலிகளைப் பொறுத்தவரை, யாருக்கு எவ்வளவு தகவல்கள் தெரிய வேண்டுமோ அந்த அளவுக்கு மட்டுமே சொல்வார்கள். தவிர, அந்த நேரத்தில் அவர்கள் ஜெயலலிதாவைக் கொல்வதற்குக் காரணமே இல்லை. அவர் புலிகள் எதிர்ப்பாளராக இருப்பதுதான் காரணம் என்றால், ராஜீவ் கொலைக்குப் பிறகு பலருக்கும் அந்த மனநிலைதான் இருந்தது. தவிர, அந்நிய மண்ணில் இதுபோல செய்வதன் விளைவுகள் அவர்களுக்குத் தெரியும். ஆகவே, ராஜீவ் கொலைக்குப் பிறகு அப்படி எந்தத் திட்டமும் அவர்களிடம் இருந்ததாகச் சொல்ல முடியாது" என்கிறார் அவர். அதே சமயத்தில் தி ஹிந்து நாளிதழுக்காக இது தொடர்பான செய்திகளைச் சேகரித்துவந்த டி.எஸ். சுப்பிரமணியனும் இது போல தான் கேள்விப்படவில்லை என்கிறார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1mpjge9r1lo

ஒரு சோறு

1 month 1 week ago
🤣................... அவர்களும், பல பிற நாட்டவர்களும், எங்களைப் போலவே அடுத்தவர்கள் விவகாரத்தில் அளவுக்கு அதிகமாக ஆர்வமாக இருக்கின்றார்கள் என்ற பார்வையையே இந்தச் சம்பவம் எனக்கு கொடுத்தது..............👍. 'ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு..............' என்பது போல அந்த ஒரு கேள்வி தான் அவர்கள் என்று தோன்றியது. நான் பிழையாகக் கூட இருக்கலாம்............... அந்த வீட்டில் முன்னர் இருந்தவர்கள், அவர்களின் மறைவு, பின்னர் அந்த வீடு விலைக்கு வந்தது.......... இவற்றை ஒரு கதையாகவே எழுதலாம்.

ஒரு சோறு

1 month 1 week ago
🤣............... சமீபத்தில் கூட விடுமுறையைக் கழிக்க உலகில் மிகச் சிறந்த இடமாக இலங்கை தெரிவு செய்யப்பட்டிருந்தது. உலகத்தின் தேவைகளும் தெரிவுகளும் வேறு, எங்களின் தேவைகளும் தெரிவுகளும் வேறு போல, அல்வாயன்..................... நன்றி யாயினி. குறிப்பாக ஓரிரு சொற்களை குறிப்பிடுகின்றீர்கள் என்று நினைக்கின்றேன். இதை இன்னொரு முறை எழுதினால், அங்கிருக்கும் சில சொற்களையும், வசனங்களையும் மாற்றி விடுகின்றேன்......................👍.

ஒரு சோறு

1 month 1 week ago
அவர் பக்கத்தில் நின்றிருந்தால், மூன்று பேரையும் பக்கத்தில் இருக்கும் கண் மருத்துவமனைக்கு ஏற்றிக் கொண்டு போய் இறக்கி விட்டிருப்பார், அண்ணா................🤣. நன்றி அக்கா. வரலாற்றில், பைபிளில் இருக்கும் எஸ்தரை நான் இதுவரை வாசிக்கவில்லை, அக்கா. வண்ணநிலவனின் எஸ்தரே எனக்கு தெரிந்த முதல் எஸ்தர். அதுவே மறக்க முடியாததும் ஆகிவிட்டது. பைபிள் எஸ்தரை நேரம் கிடைக்கும் போது வாசிக்கின்றேன்...............👍.

வீரமுனை பெயர்ப்பலகை அமைக்க தடுத்த சம்மாந்துறை பிரதேசசபை உறுப்பினர்கள்; அதிகாரிகளுக்கு சாதகமாக செயற்பட்ட பொலிஸார் - வீரமுனை மக்கள் குற்றச்சாட்டு

1 month 1 week ago
இங்கை ஒரு பார் வருவார்.....அவர் இதுக்கு என்ன சொல்லுவார்..

முன்னாள் இராஜாங்க அமைச்சர் லொஹான் ரத்வத்த காலமானார்!

1 month 1 week ago
🔴 ராஜபக்‌ஷ குடும்பத்தினரால் முன்னின்று நடாத்தப்பட்ட லொஹான் ரத்வத்தவின் இறுதிச்சடங்கு! சுகயீனம் காரணமாக மறைந்த முன்னாள் பிரதி அமைச்சர் லொஹான் ரத்வத்தவின் இறுதி சடங்கு நேற்று கண்டியில் நடைபெற்றது. இதன்போது மஹிந்த ராஜபக்ஷ மற்றும் அவருடைய மகன் நாமல் ராஜபக்ஷ ஆகியோர் முன்னின்று குறித்த இறுதிச்சடங்கை நடத்தி வைத்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Vaanam.lk

குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அனுமதி

1 month 1 week ago
குறிஞ்சாத்தீவு உப்பளத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தீர்மானம் 19 AUG, 2025 | 04:37 PM (எம்.மனோசித்ரா) வடக்கு கிழக்கு மாகாணங்களில் இடம்பெற்ற போர்ச்சூழல் காரணமாக இடைநிறுத்தப்பட்டிருந்த குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி மற்றும் தொழிற்பாடுகளை மீண்டும் ஆரம்பிப்பதற்கான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. குறித்த உப்பளத்தின் செயற்பாடுகளை அரச - தனியார் பங்குடமை முறைமையின் கீழ் ஆரம்பிப்பதற்காக உள்நாட்டு முதலீட்டாளர்களிடம் முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பினும், அதன்மூலம் எதிர்பார்க்கப்பட்ட பெறுபேறுகளை அடைவதற்கு இயலாமல் போயுள்ளது. அதனால், குறிஞ்சாத்தீவு (ஆனையிறவு வடக்கு) உப்பளத்தின் உற்பத்தி நடவடிக்கைகளை அரச தனியார் பங்குடமை முறைமையின் கீழ் மீண்டும் ஆரம்பிப்பதற்காக சர்வதேச முன்மொழிவு விருப்பக் கோரல்களைப் பெற்றுக் கொள்வதற்காக கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. https://www.virakesari.lk/article/222891

மன்னார் தீவுப் பகுதியில் புதிதாக காற்றாலை மின் கோபுரங்கள் அமைக்க மக்கள் எதிர்ப்பு

1 month 1 week ago
மன்னாரில் காற்றாலை, கணிய மணல் அகழ்வுக்கு எதிராக 17 வது நாளாக தொடரும் போராட்டம்; பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள், மீனவர்கள் பங்கேற்பு 19 AUG, 2025 | 03:02 PM மன்னாரில் காற்றாலை கோபுரங்கள் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவற்றுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வரும் கவனயீர்ப்பு போராட்டம் செவ்வாய்க்கிழமை (19) 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையில் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த போராட்டத்தில் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் மற்றும் மீனவர்கள் கலந்து கொண்டு ஆதரவு வழங்கி வருகின்றனர். மன்னார் மக்கள் மற்றும் இளையோர் ஒன்றிணைந்து முன்னெடுத்து வருகின்ற போராட்டத்திற்கு ஆதரவு வழங்கும் வகையில் பனங்கட்டிக்கொட்டு, ஜிம் பிரவுன் நகர், எமில் நகர், இத்திக்கண்டல், தலைமன்னார் கிராமம் ஆகிய கிராம மக்களும், மீனவர்களும் கலந்து கொண்டு ஆதரவு வழங்கியுள்ளனர். குறித்த போராட்டமானது மன்னார் நகர சுற்றுவட்ட பகுதியில் இடம் பெற்று வருகிறது. போராட்டத்தில் ஈடுபட்ட மக்கள் பல்வேறு வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தியவாறு கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். மன்னாரில் புதிதாக முன்னெடுக்கப்படவுள்ள காற்றாலை மின் கோபுரம் அமைத்தல் மற்றும் கனிய மணல் அகழ்வு ஆகியவை முழுமையாக நிறுத்தும் வரை தமது போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். ஜனாதிபதி ஒரு மாத கால அவகாசம் கோரியுள்ள நிலையில் மக்களுக்கு நிரந்தரமான ஒரு தீர்வு கிடைக்க வேண்டும் என்ற கோரிக்கையும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் முன் வைத்துள்ளதோடு, ஜனாதிபதி உரிய தீர்வை வழங்காது விட்டால் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் எச்சரித்துள்ளனர். https://www.virakesari.lk/article/222876
Checked
Mon, 09/29/2025 - 21:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed