அரசியல் யாப்பை மீறும் மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழு தீர்மானம்
இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா?
கலாநிதி கந்தையா சர்வேஸ்வரன்
28.5.2025 அன்று நடைபெற்ற மன்னார் மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்தில் மன்னார் வைத்தியசாலையை மத்திய சுகாதார அமைச்சிடம் கையளிப்பது என்ற தீர்மானம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டு தீர்மானங்கள் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் விரைவான நடவடிக்கைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன.
மாவட்ட அபிவிருத்தி குழுக் கூட்டத்திற்கு தலைமை தாங்குபவர் இலங்கை நிர்வாக சேவையின் சிரேஷ்ட அதிகாரி. பங்குபற்றுபவர்கள் மத்திய மற்றும் மாகாண அரசுகளின் உயர் அதிகாரிகள். இவை தவிர முக்கிய சமூக அமைப்புகளின் முக்கியஸ்தர்கள்; அனைத்துக்கும் மேலாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள். இவர்கள் அனைவரும் சேர்ந்து அரசியல் யாப்பு விதிகளை மீறுகின்ற சட்டவிரோத தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளமை அதிர்ச்சி அளிக்கும் – வெட்கக்கேடான செயல் ஆகும்.
1. ஒன்று இத்தீர்மானத்தின் அடிப்படை தவறுகள்.
2. இத் தீர்மானம் செயற்படுத்த முடியாத ஒன்று.
இலங்கை அரசியல் யாப்பின் ஒன்பதாம் அட்டவணை நிரல் ஒன்று மாகாண சபை நிரல். ஒன்பதாம் அட்டவணையின் 11ஆம் பிரிவின் முதல் (11.1) பகுதியின் பிரகாரம்;
‘போதனா வைத்தியசாலைகளும் விசேட நோக்கங்களுக்காக தாபிக்கப்பட்ட மருத்துவமனைகளும் தவிர, பொது மருத்துவமனைகள் யாவையும், கிராமிய மருத்துவமனைகளையும் மகப்பேற்று மருத்துவமனைகளையும் தாபித்தலும் பேணுதலும்’ மாகாண சபைக்கு உரித்தானது.
இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயரதிகாரிகள் எவருக்கும் இத் தீர்மானம் அரசியல் யாப்பை மீறும் தீர்மானம் என்பது தெரியாதா?; அரசியல் யாப்பை மீறும் தீர்மானத்தை எடுப்பது சட்டவிரோதம் என்பது தெரியாதா?; அல்லது அரசியல் யாப்பே தெரியாதா? இக்கூட்டத்தில் ஒருவர் கூட இது அரசியல் யாப்பை மீறும் செயல். இது மாகாண சபை அதிகாரத்திற்குட்பட்டது. இத்தகைய தீர்மானத்தை இயற்றுவது சட்டவிரோதமானது என கருத்து தெரிவித்ததாக தகவல் இல்லை.
மேலும் இத்தீர்மானத்தை வேகமாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்றளவில் உடனடியாகவே மத்திய சுகாதார அமைச்சருக்கும் ஆளுநருக்கும் இத் தீர்மானங்கள் அனுப்பி வைக்கப்பட்டதாக செய்திகள் கூறுகின்றன. அரசியல் யாப்புக்கு முரணாக ஜனாதிபதியால் கூட செயல்பட முடியாது. எனவே இத்தீர்மானம் நடவடிக்கைக்குதவாத ஒன்று என்பதை கூட இங்கிருந்த அதிகாரிகள் புரிந்து கொள்ளாமை அவர்களது ஆற்றல், ஆளுமையை கேள்விக்குள்ளாக்குகிறது.
விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது
இவை அனைத்துக்கும் மேலாக இக்கூட்டத்தில் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டுள்ளனர். கிடைக்கப்பெறும் தகவல்களின்படி செல்வம் அடைக்கலநாதன் இங்கிலாந்தில் இருப்பதனால் அவர் கூட்டத்தில் பங்கேற்கவில்லை; மருத்துவரும் முன்னாள் மாகாண சுகாதார அமைச்சரும் நாடாளுமன்ற உறுப்பினருமாகிய சத்தியலிங்கம் கலந்து கொள்ளவில்லை; ரவிகரன் மட்டுமே கலந்து கொண்டதாக அறியப்படுகிறது. ஏனையோர் தமிழ் தேசியப் பரப்பு சாராத ஜே.வி.பி. நாடாளுமன்ற உறுப்பினர்களும், சுயேட்சை நாடாளுமன்ற உறுப்பினர்களும், மஸ்தானுமே.
இங்கு இத்தீர்மானத்தை எதிர்த்து, மாகாண அதிகாரங்களை மத்தியிடம் தாரை வார்க்கும் இத்தீர்மானம் தமிழ்த் தேசியப் போராட்டத்தினால் பெறப்பட்ட அதிகாரங்களை வேண்டாம் என்று மீழளிக்கும், வெட்கம் கெட்ட செயற்பாடு என்பதை அறைந்து சொல்லி இருக்க வேண்டியவர் முன்னாள் வடக்கு மாகாண சபை உறுப்பினரும் வன்னி நாடாளுமன்ற உறுப்பினருமாகிய ரவிகரனே.
ஆனால் ‘இத்தீர்மானத்தை ஏற்றுக்கொள்வதில் சிக்கல் ஏதுமில்லை. எனினும் இது மாகாண சபைகளின் அதிகாரங்களை விட்டுக் கொடுக்கும் ஓர் செயல்பாடாக பார்க்கப்படக்கூடும்’ என்று அச்சம் வெளியிட்டதாக செய்திகள் கூறுகின்றன.
அதாவது, மிகப்பெரும் போராட்டத்தால் பெறப்பட்ட மாகாண அதிகாரங்களை மத்திக்கு மீண்டும் வழங்குவதில் எனக்கு சிக்கல் ஏதும் இல்லை எனக் கூறும் இவர், எதைப் பெறுவதற்காக நாடாளுமன்றம் சென்றிருக்கிறார் என்பதற்கு மக்களுக்கு பதிலளிக்க வேண்டும். மேலும் ‘இது மாகாணங்களின் அதிகாரங்களை விட்டுக் கொடுப்பதாக பார்க்கப்படக்கூடும்’ என்று கருத்து தெரிவித்திருக்கிறார். பார்க்கப்படக்கூடும் அல்ல இது மிகப்பெரும் தியாகங்களால் கிடைத்த அதிகாரம். இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுப்பதுதான் என்பதில் அவருக்கு ஐயம் இருப்பது போல் உள்ளது. மேலும் இது மாகாண அதிகாரத்தை விட்டுக் கொடுக்கும் வெட்கம் கெட்ட செயல் என்பது அவருக்குமே புரியவில்லையா? இவற்றை புரியாமல் நாடாளுமன்றத்தில் என்ன உரிமை கேட்பார்?
இந்த அரசியல் யாப்பு மற்றும் சட்டவிரோத செயற்பாட்டுக்கு மேலாக இங்கிருந்த உயர் மட்டத்தினர் எவருக்கும் 75 ஆண்டு காலத்துக்கு மேலாக தமிழ் மக்களும் தலைமைகளும் அதிகார பகிர்வுக்காகவே போராடினார்கள் என்பது தெரியாதா? அதற்காக எத்தனை லட்சம் உயிர்கள் தியாகம் செய்யப்பட்டது என்பது தெரியாதா? இன்றும் 13-வது திருத்தத்தில் குறிப்பிடப்பட்ட அனைத்து அதிகாரங்களும் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்ற அழுத்தங்கள் தமிழ் தலைமைகளாலும் இந்தியாவாலும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்பது தெரியாதா? இத்துணை தியாகங்கள் மத்தியில் பெறப்பட்ட அதிகாரத்தை மீண்டும் மத்தியிடம் வழங்குவது எமது கையாலாகத் தனத்தை எதிரியிடம் காண்பிக்கும் செயல் என்பது புரியாதா?
அதிகாரப் பகிர்வு பற்றி தமிழ் தலைமைகளோ இந்தியாவோ ஆட்சியாளரிடம் பேசும்போது; வழங்கப்பட்டதையே திருப்பித் தருகிறார்கள். அவர்களுக்கு (மக்களுக்கு) அதிகாரப் பகிர்வு தேவையில்லை. சில அரசியல்வாதிகள் வாக்குகளுக்காகவே அதிகாரப் பகிர்வு பற்றி பேசுகின்றனர் என்ற சிங்கள இனவாத ஆட்சியாளர்களின் பொய்யான – போலியான பிரசாரங்களுக்கு இது தீனி போடுவதாகும்.
சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
விடுதலைக்கு, அதிகாரப்பகிர்வுக்கு போராடிய இனம் அதிகாரங்களை வேண்டாம் என்று மீளளிப்பது நீண்ட நெடிய தமிழ் மக்களின் போராட்டத்தை காட்டிக்கொடுப்பதாக- கொச்சைப்படுத்துவதாக ஆகாதா? இதை புரிந்து கொள்ளும் பக்குவம் இக்கூட்டத்தில் பங்குபற்றிய உயர் அதிகாரிகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எவருக்குமா இல்லை? இத்த தீர்மானம் சட்டவிரோதமானது மட்டுமல்ல, முழு இனத்திற்கும் வெட்கக்கேடானது ஆகும். யாப்புக்கு முரணான சட்டவிரோதமான இத்தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் அதிகாரம் எவருக்கும் இல்லை. மீறி அதனை நடைமுறைப்படுத்துவதாக இருந்தால் ஆயிரம் பாடசாலை திட்டத்தின் கீழ் 650 வரையிலான பாடசாலைகள் தேசிய பாடசாலைகளாக்க மத்திய அரசு முனைந்த போது இது 13 வது திருத்தத்திற்கு முரணானது- சட்டவிரோதமானது என வழக்குத்தாக்கல் செய்து அவை நிறுத்தப்பட்டது போல் இதுவும் தடுக்கப்படும்.
வடக்கிலிருந்து 50 பாடசாலைகளை தேசிய பாடசாலைகளாக மத்திய அரசு கையகப்படுத்த முனைந்தது. பல பாடசாலைகளின் அபிவிருத்தி குழுக்கள் இதற்காக செயல்பட்டனர். இது சட்டவிரோதமானது என்பது தெரிந்தே மத்திய அமைச்சர்கள் இதனை செயல்படுத்த முற்பட்டனர். ஆனால் இக்கட்டுரையாளர் 2022 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வழக்கு தாக்கல் செய்ததுடன், இத்திட்டம் கிடப்பில் போடப்பட்டது. கடந்த ஆண்டு ஜனவரியில் அனைத்து மாகாண கல்வி அமைச்சு செயலாளர்கள், மாகாண பணிப்பாளர்களுக்கு இவ்வனைத்து பாடசாலைகளிலும் உள்ள தேசிய பாடசாலை பெயர் பலகைகளை அகற்றுமாறு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இத்திட்டமும் கைவிடப்பட்டது.
மத்திய ஆட்சியாளர்கள் எவருக்கும் தமிழ் மக்களுக்கு அல்லது வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்கு அதிகாரத்தை பகிர்வது அறவே விருப்பம் இல்லாத ஒன்று. எவ்வாறு மாகாண சபையை ஒழித்துக் கட்டலாம் என திட்டங்கள் தீட்டும் இனவாத ஆட்சியாளர்களுக்கு நாமே வலிந்து உதவும் மோசமான செயற்பாடே இத்தீர்மானம். நெருப்பு வைக்கும் ராசாவுக்கு கொள்ளி எடுத்துக் கொடுக்கும் மந்திரிகள் செயல்பாடு போன்றது இத் தீர்மானம். அடுத்து வரும் கூட்டத்தில் இத் தீர்மானத்தை மீள பெறுவது மட்டுமே ஓரளவான பிராயச்சித்தமாக அமையும்.
வைத்தியசாலையின் அபிவிருத்தி வசதிகளை ஏற்படுத்தல் என்பது அவசியம் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. கடந்த மைத்திரிபால சிறிசேன ஆட்சியின் கீழ் அன்றைய சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி கிளிநொச்சி, வவுனியா, முல்லைதீவு, மன்னார் வைத்தியசாலைகளை தேசிய வைத்தியசாலைகளாக (தேசிய பாடசாலை போல்) பெயர் பலகை மாற்றி தமது கட்டுப்பாட்டில் கொண்டுவரப் போவதாக அறிவித்தார். அன்றைய தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதனை எதிர்த்தபோது அப்படியானால் நீங்களே அபிவிருத்தி செய்து கொள்ளுங்கள் என ஏதோ தனது வீட்டு பணத்தில் செலவு செய்வது போல் பதிலளித்திருந்தார். இதற்கு பதிலளித்த முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்; வடக்குக் கிழக்கில் வரிகளை வசூலிப்பதை மாகாண அரசிடம் விடுங்கள், எமது வைத்தியசாலைகளை நாமே பார்த்து கொள்கிறோம் என பதிலளித்திருந்தார்.
இவ்வாறு மத்திய மாகாணத்து குறித்தான அதிகாரங்களை பறிக்கும் நோக்கத்தோடு செயல்படும் போது தொடர்ச்சியான போராட்டங்கள் மூலமே தக்கவைக்கப்படுகின்றன. ஆனால் இத்தீர்மானம் ‘நீங்கள் பறிக்க வேண்டாம்; நாங்களே தங்கத் தாம்பாளத்தில் வைத்து தருகிறோம்’ என்பதாக அமைந்துள்ளது. மாகாணத்திற்கு உரித்தான கல்வி அதிகாரத்தை தேசிய பாடசாலை என்கிற சட்டவிரோத யாப்பு விரோத கருத்துருவாக்கத்தின் ஊடாக பறிக்க முனைந்து சட்டப் போராட்டத்தின் மூலம் தடுத்து நிறுத்தப்பட்டது.
அதேபோன்று சுகாதாரமும் மாகாணத்திற்குரியது. இதனை வலுப்படுத்த உரிய வழி வகைகளை கையாள்வதை விடுத்து மத்தியிடம் மீளளிப்பது ஓர் மருத்துவமனையை நிர்வகிக்க தெரியாதவர்களால் மாகாணத்தை நிர்வகிக்க முடியுமா? என்ற சிங்கள இனவாதிகளின் நையாண்டிக்கு வழிவகுக்கும். தீர்மானமானது அதிகாரிகள் மத்தியில் இன உணர்வும் கடமை உணர்வும் அருகிப்போகிறதா? என்ற கேள்வியை எழுப்புகிறது.
மேலும் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்கு வாக்களித்த வன்னி மக்களின் தமிழ்த் தேசிய உணர்வை மதிக்கிறார்களா? என்ற கேள்வியையும் எழுப்புகிறது. அதிகாரப் பகிர்வுக்கான அரசியல் போராட்டத்தை வலுப்படுத்தும் வகையிலேயே அதிகாரிகளும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் செயல்பட வேண்டும் என்பதே தமிழ்த் தேசிய உணர்வாளர்களான தமிழ் மக்களின் எதிர்பார்ப்பாகும். அதனை மனதில் நிறுத்தி எதிர்கால செயற்பாடுகள் அமைந்தால் மட்டுமே தமிழினம் உரிமைகளுடனும் அதிகாரத்துடனும் வாழ முடியும். அதிகாரத்துடன் வாழ்வதா? அடிமையாக வீழ்வதா? தேவை சிந்தனைத் தெளிவு.