அரசியல் அலசல்

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

2 months 3 weeks ago

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

April 7, 2025

மேற்குலகின் தடைகளும் இலங்கையின் பொறுப்புக்கூறலும்

— வீரகத்தி தனபாலசிங்கம் — 

இலங்கை அரசியலில் அண்மைய நாட்களாக அடுத்தடுத்து இடம்பெற்றுவந்த   சர்ச்சைக்குரிய சம்பவங்கள் மனித உரிமை மீறல்கள்  மற்றும் பொறுப்புக்கூறலுடன் தொடர்புடைய பிரச்சினைகளை மீண்டும் முன்னரங்கத்துக்கு கொண்டு வந்திருக்கின்றன. 

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீரா செய்திச் சேவைக்கு வழங்கிய நேர்காணல், பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை  பாராளுமன்றத்தில் சமர்பிப்பித்த அரசாங்கத்தின் செயல், இரு வாரங்களாக தலைமறைவாக இருந்த இடைநிறுத்தம் செய்யப்பட்ட  பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னக்கோன் நீதிமன்றத்தில்  சரணடைந்த பிறகு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருக்கின்றமை, முன்னாள் இராணுவ தலைவர்கள் சிலர்  மீது பிரிட்டன் விதித்திருக்கும் தடைகள் ஆகியவையே அந்த சம்பவங்களாகும். 

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்க பெப்ரவரி மாதம் லண்டனில் வைத்து அல் ஜசீராவின் ‘ஹெட் ரு ஹெட்’ நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணல் மார்ச் 6 ஆம் திகதி ஒளிபரப்பானது. தனது அரசியல் அனுபவம்,  அறிவு மற்றும் சாதுரியத்தில் அதீத நம்பிக்கை கொண்டவரான  விக்கிரமசிங்கவை பொறுத்தவரை, அவருக்கு விரோதமான சபையோரின் முன்னிலையில் இடம்பெற்ற அந்த நிகழ்ச்சி உண்மையில் பெரிய அனர்த்தமாக போய்விட்டது. அல் ஜசீரா செய்தியாளர்  மெஹ்டி ஹசன் பிறப்பதற்கு முன்னரே தான் அரசியலுக்கு வந்து விட்டதாக அவரிடம் கூறவேண்டிய அளவுக்கு ஒரு நிர்ப்பந்த நிலை விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது பரிதாபமானதாகும். நேர்காணலைப்  பற்றி உள்நாட்டில் விமர்சனம் செய்தவர்களில் அனேகமாக சகலருமே அந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்கு அவர் இணங்கியிருக்கக் கூடாது என்றே கூறினார்கள். 

 மெஹ்டி ஹசன் விக்கிரமசிங்கவை நேர்காணல் செய்த விதம் பெருமளவுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை. கேள்விகளுக்கு பதிலளிப்பவர் தனது பதிலை நிறைவு செய்யவிடாமல் அட்டகாசமான முறையில் குறுக்கீடு செய்வதும் ஒரு எதிரியை நோக்கி கேள்வி கேட்பதைப் போன்ற தொனியில் மூத்த அரசியல் தலைவர்களுடன்  பேசுவதும் எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ளக்கூடிய  ஒரு  ஊடகத்துறைச் செயற்பாடாக இருக்க முடியாது. 

இரு மணித்தியாலங்கள் பதிவு செய்யப்பட்ட தனது நேர்காணலில் முக்கியமான பகுதிகளை திட்டமிட்டு நீக்கிவிட்டு அல் ஜசீரா ஒரு மணித்தியாலமே அதை ஒளிபரப்பியதாக விக்கிரமசிங்க குற்றஞ்சாட்டினார். ஆனால், ஜனதா விமுக்தி பெரமுனவின் (ஜே.வி.பி.) யின் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் (1988 — 1990 )  கம்பஹா மாவட்டத்தில் உள்ள  பட்டலந்த பிரதேசத்தில்  இயங்கிய தடுப்புக்காவல் மற்றும் சித்திரவதை முகாம் தொடர்பாக தொடுக்கப்பட்ட கேள்விக்கு முன்னாள் ஜனாதிபதி அளித்த நழுவல் போக்கிலான பதில்தான்  இறுதியில்  27 வருடங்கள் பழமையான  பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தூசி தட்டி  பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அரசாங்கத்துக்கு தைரியத்தைக்  கொடுத்தது. 

அல் ஜசீரா நேர்காணல் ஒளிபரப்பாகாமல் இருந்திருந்தால் ஆணைக்குழு அறிக்கை தற்போதைக்கு வெளியில் வந்திருக்குமா என்பது சந்தேகமே. ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவினால் 1995 செப்டெம்பரில் நியமிக்கப்பட்ட பட்டலந்த ஆணைக்குழு அதன் அறிக்கையை  1998 ஆம் ஆண்டில் அவரிடம் கையளித்தது. ஆனால், அதன் விதப்புரைகளை நடைமுறைப்படுத்துவதில்   திருமதி குமாரதுங்கவோ அல்லது அவருக்கு பிறகு ஜனாதிபதியாக பதவியில் இருந்தவர்களோ ஒருபோதும் அக்கறை காட்டவில்லை. 

ஆனால், ஆணைக்குழு அறிக்கையின் மென்பிரதிகள் ஆங்கிலத்திலும் சிங்களத்திலும் உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் ஆயிரக்கணக்கானவர்கள்  மத்தியில் ஏற்கெனவே பகிரப்பட்டிருந்தது என்கிற அதேவேளை, விக்கிரமசிங்க தன்னிடம் பட்டலந்த முகாம் பற்றி மெஹ்டி ஹசன் கேட்டபோது ” ஆணைக்குழுவின் அறிக்கை எங்கே ?” என்று பொருத்தமில்லாத வகையில்  பதில் கேள்வி எழுப்பினார். 

கொழும்பில் முன்னாள் பி.பி.சி. செய்தியாளராக பணியாற்றிய பிரான்சிஸ் ஹரிசன் ஆணைக்குழு  அறிக்கையின் பிரதி ஒன்றை அவருக்கு காண்பித்தபோது “அது பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை”  என்று விக்கிரமசிங்க கூறினார்.

பட்டலந்த விவகாரத்தில்  உரக் கூட்டுத்தாபனத்துக்கு சொந்தமான வீடமைப்பு தொகுதியை பொலிசார் பயன்படுத்துவதற்கு அனுமதித்ததில்,  அன்றைய கைத்தொழில்துறை அமைச்சர் என்ற வகையில், உரிய நடைமுறையை கடைப்பிடிக்கவில்லை என்று மாத்திரமே தன் மீது அறிக்கையில் குறை கூறப்பட்டிருப்பதாக ஊடக  அறிக்கை ஒன்றை வெளியிட்ட முன்னாள் ஜனாதிபதி இனிமேல் தான் பட்டலந்த விவகாரம் குறித்து எதுவும் பேசப் போவதில்லை என்று சில தினங்களுக்கு முன்னர் ‘அத தெரண’ வின் ஹைட் பார்க் 24 நேர்காணலில் கூறினார். அறிக்கை தொடர்பாக பாராளுமன்றத்தில் ஏப்ரில் 10  திகதியும் பிறிதொரு தினத்திலும் விவாதம் நடைபெறவிருக்கிறது..

ஆணைக்குழுவின் அறிக்கையில் இரண்டாவது கிளர்ச்சிக் காலத்தில் ஜே.வி.பி. யினர் செய்த அட்டூழியங்கள் பற்றியும் குறிப்பிடப்பட்டிருப்பதால் பாராளுமன்ற விவாதத்துக்கு பிறகு எத்தகைய  நடவடிக்கைகளை எடுப்பது என்பதில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஒரு சிக்கலை எதிர்நோக்கும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது.

விக்கிரமசிங்கவுக்கு பிரச்சினையைக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் தான் அரசாங்கம் பட்டலந்த ஆணைக்குழு அறிக்கையில் அவசரம் காட்டியிருக்கிறது என்பதில் சந்தேகமில்லை. அவரது குடியியல் உரிமைகளை பறிக்க முடியும் என்று கூட அரசாங்க அரசியல்வாதிகள் சிலர் பேசினார்கள். தென்னிலங்கையில் இடம்பெற்ற உரிமை மீறல்கள் குறித்து  விசாரணை செய்த ஆணைக்குழுவின் அறிக்கையில்  அக்கறை காட்டுகின்ற அரசாங்கம் வடக்கு, கிழக்கில் உள்நாட்டுப்போரின் போது இடம்பெற்ற உரிமை மீறல்கள் தொடர்பில் விசாரணைகளை நடத்திய பல்வேறு  ஆணைக்குழுக்களின் அறிக்கைகள் விடயத்தில் எத்தகைய நிலைப்பாட்டை எடுக்கப் போகிறது என்பது முக்கியமான ஒரு கேள்வி. 

உதாரணத்துக்கு கூறுவது என்றால், சர்வதேச சமூகத்தின் நெருக்குதலை அடுத்து  15 பிரத்தியேகமான உரிமைமீறல் சம்பவங்கள் குறித்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச 2006 ஆம் ஆண்டில் நியமித்த உடலாகம  ஆணைக்குழு அறிக்கை,  போரின் முடிவுக்கு பிறகு 2011 ஆம் ஆண்டில் அவர் நியமித்த கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு அறிக்கை,  காணாமல் போனோர் தொடர்பாக ஆராய்வதற்கு 2013 ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்ட மக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு அறிக்கை,  முன்னைய ஆணைக்குழுக்கள் சகலவற்றினதும் அறிக்கைகளை மீளாய்வு செய்வதற்கு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச 2021 ஆம் ஆண்டில் நியமித்த நவாஸ்  ஆணைக்குழு ரணில் விக்கிரமசிங்கவிடம்  கையளித்த அறிக்கை என்று போர்க்கால மீறல்கள் தொடர்பிலான பல அறிக்கைகள் கவனிக்கப்படாமல் இருக்கின்றன.

அரசியல் அனுகூலத்துக்காக ‘தெரிந்தெடுத்த முறையில்’ பட்டலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையில் எடுத்திருக்கிறது. உரிமை மீறல்கள் என்று வருகின்றபோது பாரபட்சமின்றி முன்னைய சகல ஆணைக்குழுக்களின் அறிக்கைகளையும் கவனத்தில் எடுக்கக்கூடிய அரசியல் துணிவாற்றல் அரசாங்கத்துக்கு வரும் என்று எதிர்பார்க்க முடியாது. 

அடுத்ததாக, பொலிஸ்மா அதிபர் தேசபந்து விவகாரத்தைப் பொறுத்தவரை, அவர் வீட்டில் இருந்து மூன்று வேளை உணவையும் வரவழைத்துக்கொண்டு விளக்கமறியலில் இருக்கிறார்.  முக்கியமான புள்ளிகள் விளக்கமறியலுக்கு அனுப்பப்படும்போது அவர்களை உடனே  தொற்றிக்கொள்ளும் ஒருவகை  “நோய்” தேசபந்துவை பீடிக்கவில்லை. இன்னமும் அவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்படவில்லை.  

அவரை பதவி நீக்குவதற்கான பிரேரணையை ஆளும் கட்சியின் 115 பாராளுமன்ற உறுப்பினர்கள் கடந்த வாரம் சபாநாயகரிடம் கையளித்திருக்கிறார்கள். அரசியலமைப்பு பேரவை  அங்கீகாரம் வழங்கியதை அடுத்து தேசபந்துவை பொலிஸ்மா அதிபராக  ஜனாதிபதி விக்கிரமசிங்க நியமித்தார். அந்த அங்கீகாரத்தை வழங்குவதற்கு நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் சபாநாயகர் நடந்துகொண்ட முறை குறித்து சர்ச்சை கிளம்பியது என்பதும் குறிப்பிடத்தக்கது.

ஆனால்,  அவரது நியமனத்தை ஆட்சேபித்து உயர்நீதிமன்றத்தில் ஒன்பது அடிப்படை உரிமைமீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் அவர் பொலிஸ்மா அதிபராக பதவி வகிப்பதற்கு தகுதியற்றவர் என்றும் அவர் பொலிஸ்மா அதிபராக பதவியில் இருப்பதற்கு எதிராக உயர்நீதிமன்றம் இடைக்காலத்தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்திருந்தது என்பதால் அவருக்கு எதிராக பூர்வாங்க சான்றுகள் இருப்பதாகவும் அந்த பிரேரணையில் கூறப்பட்டிருக்கிறது.

தேசபந்து தனது நடத்தைகள் மூலமாக பொலிஸ்மா அதிபர் பதவிக்கும் பொலிஸ் திணைக்களத்துக்கும் அவப்பெயரை ஏற்படுத்திவிட்டதாகவும் குற்றச்செயல்களில் ஈடுபட்ட குறிப்பிட்ட சில நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க தவறியமைக்காக அவர் மீது வழக்கு தொடுக்கப்பட வேண்டும் என்றும் பிரேரணையில் மேலும் குறிப்பிடப்பட்டிருக்கிறது. அவருக்கு எதிராக ஆளும் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் 23  குற்றச்சாட்டுக்களை சுமத்தியிருக்கிறார்கள். குற்றச்சாட்டுகள் குறித்து ஆராய்வதற்கு சபாநாயகர் குழுவொன்றை நியமித்து அதன் தீர்மானங்களை அடிப்படையாகக் கொண்டுதான் அவர்  அடுத்த கட்ட நடவடிக்கையை எடுக்கவேண்டும் என்பதே நடைமுறை.   

ஆனால், தேசபந்துவை பதவி நீக்குவதற்கான பிரேரணை ஏப்ரில் 8, 9 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது.  பொலிஸ்மா அதிபர்  ஒருவர் இரு வாரங்களாக தலைமறைவாகி இருந்து இறுதியில் ஆடம்பர வாகனம் ஒன்றில் வந்து  நீதிமன்றத்தில் சரணடைந்தது உலகிலேயே இலங்கையில்தான் முதற் தடவையாக நடந்திருக்கிறது எனலாம்.

இது இவ்வாறிருக்க, கடந்த வாரம் இலங்கையின் மூன்று முன்னாள் இராணுவ தலைவர்களுக்கும் விடுதலை புலிகள் இயக்கத்தின் முன்னாள் கிழக்கு தளபதி கருணா அம்மான்  என்ற விநாயகமூர்த்தி முரளிதரனுக்கும் எதிராக பிரிட்டன் தடைகளை விதித்திருக்கிறது. 

ஆயுதப் படைகளின் முன்னாள் பிரதானி சவேந்திர சில்வா, முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொட, முன்னாள் இராணுவத்தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோரே தடைகள் விதிக்கப்பட்ட இராணுவ தலைவர்களாவர். பிரிட்டனுக்கான பயணத்தடையும் சொத்துக்கள் முடக்கமும் இந்த தடைகளில் அடங்கும். “உள்நாட்டுப் போரின்போது இடம்பெற்ற மனித உரிமைமீறல்கள் மற்றும் துஷ்பிரயோகக்களுக்கு பொறுப்புக்கூற வைத்தல் உட்பட இலங்கையில் மனித உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதில் ஐக்கிய இராச்சிய  அரசாங்கம் பற்றுறுதி கொண்டிருக்கிறது” என்று மார்ச் 24 ஆம் திகதி தடைகள் விதிப்பை  அறிவித்த  வெளியுறவு, பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள் இணையமைச்சர் டேவிட் லாமி கூறினார். 

 வெளிநாடுகள் குறிப்பாக மேற்குலக நாடுகள் இலங்கை அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக  இவ்வாறு தடைகளை விதிப்பது இதுதான் முதற்தடவை அல்ல. ஏற்கெனவே சவேந்திர சில்வாவுக்கு எதிராக 2020 பெப்ரவரியில் அமெரிக்க இராஜாங்க திணைக்களம் தடைகளை விதித்தது. அதன் பிரகாரம் அவரும் உடனடிக் குடும்ப உறுப்பினர்களும் அமெரிக்காவிற்குள் பிரவேசிக்க முடியாது. 

அதே போன்றே முன்னாள் ஜனாதிபதிகளான சகோதரர்கள் மகிந்த ராஜபக்சவுக்கும் கோட்டாபய ராஜபக்சவுக்கும் 2023 ஜனவரி 10 ஆம் திகதி கனடா அதன் விசேட பொருளாதார நடவடிக்கைகள் சட்டத்தின் கீழ் தடைகளை விதித்தது.

தற்போது மூன்று இராணுவ தலைவர்களுக்கு எதிராக விதிக்கப்பட்ட தடைகளை ஆட்சேபித்திருக்கும்  இலங்கை வெளியுறவு அமைச்சு வெளிநாடுகளினால் இவ்வாறாக ஒருதலைப்பட்சமாக மேற்கொள்ளப்படுகின்ற நடவடிக்கைகள் இலங்கையில் முன்னெடுக்கப்படும் தேசிய நல்லிணக்கச் செயன்முறைகளுக்கு உதவப்போவதில்லை,  மாறாக அந்த செயன்முறைகளை சிக்கலாக்கும் என்று கூறியிருக்கிறது.  இது தொடர்பில் இலங்கையின் நிலைப்பாட்டை  வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத்  கொழும்பில் உள்ள பிரிட்டிஷ் உயர்ஸ்தானிகர் அன்ட்ரூ பட்ரிக்கிடம் தெரியப்படுத்தியிருக்கிறார். 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பிலான  உள்நாட்டுப் பொறிமுறைகளை வலுப்படுத்தும் செயன்முறைகளில் அரசாங்கம் ஈடுபட்டிருக்கிறது என்றும்  கடந்த காலத்தின் எந்தவொரு மனித உரிமைமீறலும் உள்நாட்டுப் பொறிமுறை மூலமாகவே கையாளப்பட வேண்டும் என்றும் ஹேரத் கூறியிருக்கிறார். 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்துக்கான  செயன்முறைகளைப் பொறுத்தவரை தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் நிலைப்பாடு முன்னைய அரசாங்கங்களின் நிலைப்பாடுகளில் இருந்து வேறுபட்டதாக அமையப்போவதில்லை.  சில வாரங்களுக்கு முன்னர்  ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடரில் ஹேரத் இதை திட்டவட்டமாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இலங்கையின் அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் வெளிநாடுகள் தடைகளை விதித்த முன்னைய சந்தர்ப்பங்களில் கிளம்பியதைப் போன்ற கண்டங்கள் சிங்கள தேசியவாத சக்திகளிடமிருந்து தற்போதும் கிளம்பியிருக்கின்றன. பயங்கரவாதத்துக்கு எதிரான போரை முடிவுக்கு கொண்டுவந்த இலங்கையின் முன்னாள் இராணுவத் தலைவர்களை ஐக்கிய இராச்சியம் எவ்வாறு தண்டிக்க முடியும் என்று மகிந்த ராஜபக்ச கேள்வி எழுப்பியிருக்கிறார். 

வழமை போன்று விமல் வீரவன்ச, சரத் வீரசேகர, உதய கம்மன்பில போன்ற கடும்போக்கு சிங்கள தேசியவாத அரசியல்வாதிகள் பிரிட்டனை கடுமையாக கண்டனம் செய்திருக்கிறார்கள். மூன்று வருடங்களுக்கு முன்னரான மக்கள் கிளர்ச்சியையும் கடந்த வருடத்தைய தேசிய தேர்தல்களையும் அடுத்து பெரும் பின்னடைவைக் கண்ட தேசியவாத சக்திகள் மீண்டும் அரசியலில் தலையெடுப்பதற்கு இத்தகைய சந்தர்ப்பங்களை பயன்படுத்தும் என்பது தெரிந்ததே. முன்னாள் இராணுவத் தலைவர்களுக்கு எதிராக தடைகளை விதித்த பிரிட்டனை தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கடுமையாக கண்டனம் செய்யவில்லை என்று விமல் வீரவன்ச குற்றம் சாட்டியிருக்கிறார். 

முன்னாள் ஜனாதிபதி விக்கிரமசிங்கவும் கூட அண்மைக்காலமாக சர்வதேச சமூகம் குறிப்பாக மேற்குலக நாடுகள் மனித உரிமைகள்  விவகாரத்தில் இலங்கையுடன் பாரபட்சமான முறையில் நடந்துவருவதாக குற்றம் சாட்டிவருகிறார். மத்திய கிழக்கில் காசா போர் மற்றும் உக்ரெயின் போரைப் பொறுத்தவரை ஒரு விதமாகவும் இலங்கை விவகாரத்தில்  வேறு வீதமாகவும் மேற்குலகம் இரட்டைத்தனமாக செயற்படுவதை சுட்டிக்காட்டும் விக்கிரமசிங்க ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் இருந்து இலங்கை வெளியேற வேண்டும் என்று  வலியுறுத்துகிறார்.  டொனால்ட் ட்ரம்ப் மனித உரிமைகள் பேரவையில் இருந்து வெளியேற முடியுமானால் இலங்கையினால் ஏன் முடியாது என்று  அவர் கேள்வியும்  வேறு எழுப்புகிறார். 

அரசியல் தலைவர்களுக்கும் இராணுவ அதிகாரிகளுக்கும் எதிராக வெளிநாடுகள் விதித்த முன்னைய தடைகளினால்  இலங்கையை பொறுப்புக்கூற வைப்பதில் எந்தளவுக்கு  நிர்ப்பந்திக்க முடிந்தது?  என்ற ஒரு கேள்வி இருக்கிறது. தேசியவாத சக்திகள் மீண்டும் தலையெடுப்பதற்கான வாய்ப்புக்களை தோற்றுவிப்பதை தவிர இந்த தடைவிதிப்புகளினால் வேறு எதையும் உருப்படியாகச் செய்ய முடியாமலும் போகலாம். ஏனென்றால், இலங்கையில் எந்தவொரு அரசாங்கமும் உள்நாட்டுப் போரின்போது உரிமை மீறல்களில் ஈடுபட்ட படையினர் தண்டிக்கப்படுவதை ஒருபோதும் அனுமதிக்கப் போவதில்லை. நெருக்குதல்கள் அதிகரிக்குமானால், தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மேலும் தீவிரமான தேசியவாத நிலைப்பாட்டை நோக்கிச் செல்லக்கூடிய சாத்தியமே இருக்கிறது. 

ஐக்கிய இராச்சியம்  கடந்தவாரம்  விதித்த தடைகளை தமிழ் அரசியல் கட்சிகள் வழமை போன்று வரவேற்றிருக்கின்றன. கடந்த பதினாறு வருடகால அனுபவங்களை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது  இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு மற்றும் உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் விவகாரங்களில் இலங்கை தமிழர்கள் நெடுகவும் கானல் நீரை விரட்டிக்கொண்டிருக்க வேண்டியதுதான் விதியோ என்ற கேள்வியைக் கேட்காமல் இருக்க முடியவில்லை.

https://arangamnews.com/?p=11926

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

2 months 3 weeks ago

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

April 7, 2025

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

— கருணாகரன் —

உள்ளுராட்சி சபைத் தேர்தலையொட்டி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் அரசியற் கூட்டுகள் சில புதிதாக உருவாகியுள்ளன. இந்தக் கூட்டுகளின் பிரதான நோக்கம் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியைத் தடுப்பதாகும். இரண்டாவது, தமிழ்த்தேசிய அரசியலை அல்லது பிராந்திய அரசியலை (சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics) மற்றும் புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) மேலும் தொடர்வது. பிராந்திய அரசியலைத் தக்க வைத்துக் கொள்வதன் மூலமே அரசியல் அரங்கில் தம்மை நிலைப்படுத்திக் கொள்ள முடியும் என்ற நம்பிக்கை. 

இதற்காக அவை தமது கொள்கை (அப்படி ஏதேனும் இருந்தால்) கோட்பாடு, உடன்பாடு, முரண்பாடு எல்லாவற்றையும் கடந்து கூட்டு வைத்துள்ளன; அணி சேர்ந்துள்ளன.

1.      தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அதிதீவிர நிலைப்பாட்டையுடைய அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் தலைமையில் ஒரு கூட்டணி ‘தமிழ்த்தேசியப் பேரவை’ என்ற பெயரில் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் காங்கிரஸோடு  ஸ்ரீகாந்தா – சிவாஜிலிங்கம் இரட்டையர்களின் தமிழ்த்தேசியக் கட்சி, தமிழரசுக் கட்சியின் அதிருப்தியாளர் தவராஜாவின் ஜனநாயகத் தமிழசுக் கட்சி, ஐங்கரநேசனின் தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம், அகில இலங்கைத் தமிழ்க்காங்கிரஸ் மற்றும் சாவகச்சேரி அருந்தவபாலன், புங்குடுதீவு நாவலன் எனச் சில உதிரியாட்களின் அணி  என இணைந்துள்ளன. 

2.      ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு. இதில் ஏற்கனவே உள்ள ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடு புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். ஈரோஸ் ஜனநாயக முன்னணி, தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி போன்றவையும் இந்தக் கூட்டில் இணையக் கூடும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், துரதிருஸ்டவசமாக அவை தனித்தே நிற்கும்படியாகி விட்டது. 

3.      கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு. இதில் பிள்ளையான் எனும் சிவநேசதுரை சந்திரகாந்தனின் தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள், சதாசிவம் வியாழேந்திரனின் தமிழர் முற்போக்குக் கழகம் ஆகியவை 15. 03. 2025 இல் ஒரு உடன்படிக்கையைச் செய்து இணைந்திருந்தன. பின்னர் 22.03.2025 அன்று கருணா என்றழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரனின் தமிழர் ஐக்கிய சுதந்திர முன்னணி இந்தக் கூட்டில் இணைந்துள்ளது. ஆனாலும் இந்தக் கூட்டுக்கு முன்னோடியாக இருந்தது, கிழக்குத் தமிழர் ஒன்றியமாகும். 2018 இல் செங்கதிரோன் என்றழைக்கப்படும் த. கோபாலகிருஸ்ணன், சட்டத்தரணி த. சிவநாதன் ஆகியோர் இணைந்து கிழக்கின் சமூக,  பொருளாதார, அரசியல் மேம்பாட்டுக்காக கிழக்குத் தமிழர் ஒன்றியத்தினை உருவாக்கினர். இதனுடைய அரசியற் பிரிவாக ‘கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு’ என்ற பெயரில் ஒரு கூட்டணி உருவாக்கப்பட்டது. இதில் இணைந்து  கொள்ளுமாறு அப்போது சம்மந்தப்பட்ட தரப்பினரால் தமிழ் மக்கள் விடுதலைப்புலிகளுக்கும் கருணா அணிக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது. அந்த அழைப்பைப் புறக்கணித்தவர்கள் இப்பொழுது அதே பெயரில் ஒரு கூட்டமைப்பை பிரகடனப்படுத்தியிருப்பது ஆச்சரியமளிக்கிறது. 

இப்படி ஒவ்வொரு கூட்டுக்கு உள்ளும் புறமுமாகப் பல சங்கதிகள் உண்டு. எப்படியோ வழமையைப்போல தேர்தற்காலத் திருவிழாவின் ஓரம்சமாகத் தமிழ்க் கட்சிகளின் அரசியற் கூட்டுகள் இந்தத் தடவையும் நிகழ்ந்திருக்கின்றன. இதொன்றும் ஆச்சரியமானதல்ல. ஆனாலும் ஆச்சரியமாக இருப்பது, இந்தக் கூட்டுகளின் பின்னாலுள்ள சில விடயங்கள்.

1.      தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்ற முகமூடியில் இயங்கும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ், இதுவரையிலும் வேறு எவரோடும் கூட்டு வைத்துக் கொள்ளாமல் தன்னைத் தனிமைப்படுத்தி வைத்திருந்தது. அதாவது தமிழ்த்தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறிய பிறகு ஏனைய தமிழ்க் கட்சிகள் எல்லாவற்றையும் முன்னணி துரோகிப் பட்டியலில் தள்ளி விட்டுத் தான் மட்டுமே சுத்தமான தங்கம் என்று தன்னைப் புனிதப்படுத்தி முயற்சித்துக் கொண்டிருந்தது. இப்பொழுது இதிலிருந்து படியிறங்கி தான் ஒதுக்கி வைத்த தரப்புகளோடு அரசியற் கூட்டொன்றை உருவாக்கியுள்ளது. இந்தக் கூட்டணிக்கு தமிழ்த்தேசியப் பேரவை என்று பெயரிடப்பட்டுள்ளது.

இதற்குக் காரணம், தேசிய மக்கள் சக்தி வடக்குக் கிழக்கில் வெற்றியடைவதைத் தடுப்பதும் ஏனைய தமிழ்த்தரப்புகளை விட, தமிழ்க் காங்கிரஸ் கட்சி பலமாக இருக்கிறது என்பதைக் காட்டுவதுமாகும். பாராளுமன்றத் தேர்தலில் ஒரேயொரு பிரதிநிதித்துவத்தைக் கொண்டிருக்கும் கட்சியாக (தரப்பாக) தமிழ்க் காங்கிரஸ் இருப்பதால், அரசியல் அரங்கில் முதன்மையிடத்தைப் பெற முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறார் கஜேந்திரகுமார். இதற்காகவே அவர் அரசியல் தீர்வைப் பற்றிப் பேசுவதற்கு பாராளுமன்றத்தில் பிரதிநிதித்துவத்தைக் கொண்ட தரப்புகளை ஒருங்கிணைத்து, அதற்குத் தலைமை தாங்குவதற்கு முயற்சித்தார். அதற்காகவே சிறிதரனின் வீடு தேடிச் சென்றதும் பின்னர் தமிழரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே. சிவஞானத்துடன் பேச்சுகளை கஜேந்திரகுமார் நடத்தியதுமாகும். ஆனாலும் கஜேந்திரகுமாரின் கனவுத்திட்டம் உருப்படாமல் சுமந்திரனால் சமயோசிதமாகத்  தடுக்கப்பட்டு விட்டது. இதையும் நிரப்பி, தன்னை எப்படியாவது முன்னிலைப்படுத்திக் கொள்வதற்காக விலக்கி வைத்த கனிகளையே புசிக்கத் தொடங்கியிருக்கிறார் கஜேந்திகுமார். 

இதுவரையிலும் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் கட்சி, தன்னைத் தமிழ்த்தேசிய மக்கள் முன்னணி என்றே அடையாளப்படுத்தி வந்தது. ஆனாலும் முன்னணியைப் பதிவு செய்யாமல் காங்கிரஸையே தேர்தலுக்குப் பயன்படுத்தி வந்தார் கஜேந்திரகுமார். காரணம், காங்கிரசுக்கு நீண்டகால அரசியற் பாரம்பரியம் உண்டு என்பதோடு கஜேந்திரகுமாரின் பேரன் ஜீ.ஜீ.பொன்னலம்பலம் உருவாக்கிய கட்சி. அதற்குப் பிறகு கஜேந்திரகுமாரின் தந்தை குமார் பொன்னம்பலம் தலைவராக இருந்தார் என்று ஒரு குடும்பப் பாரம்பரியமும் அதற்குண்டு என்பதேயாகும். ஆகவேதான் முன்னணி என்ற பெயரைத் தமிழ் மக்களின் அரசியலுக்கான ஒரு முகமூடியாகப் பயன்படுத்திக் கொண்டே காங்கிரஸில் கட்சியின் நடவடிக்கைகளை வலுவாக மேற்கொண்டு வந்தார் கஜேந்திரகுமார். அதாவது குடும்பத்தின் அரசியல் அடையாளத்தையும் முக்கியத்துவத்தையும் இழக்காமல் பேணுவதே முதன்மை நோக்கமாக இருந்தது.

இப்பொழுது இதற்கு மேலும் வலுச் சேர்ப்பதாக ஸ்ரீகாந்தா, சிவாஜிலிங்கம், ஐங்கரநேசன், அருந்தவபாலன், தவராஜா எல்லோரும் ஒருங்கிணைந்து உதவுகிறார்கள். 

இவர்கள் காங்கிரஸை நெருங்கக் காரணம், தமிழ் மக்களுடைய சமூக, அரசியல், பொருளாதார மேம்பாட்டுக்காகவோ நலனுக்காகவோ தமிழ்மக்களைப் பாதுகாப்பதற்காகவோ அல்ல.  தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியை – அதனுடைய வெற்றியைத் தடுப்பதற்காகவேயாகும். 

தேசிய மக்கள் சக்தியின் எழுச்சியானது, தமிழ்த்தேசியக் கட்சிகள் உட்பட ஏனைய தமிழ், முஸ்லிம், மலையகக் கட்சிகளையெல்லாம் நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளது. இதனால் தவிர்க்க முடியாமல் முடிந்தளவுக்கு விட்டுக் கொடுப்புகளோடு, இந்த நெருக்கடியை எதிர்கொள்வதற்கான அரசியற் கூட்டுகளை உருவாக்க வேண்டிய நிலை இந்தக் கட்சிகளுக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வகையிற்தான் முன்னணியின் அரசியற் கூட்டும் அமைந்திருக்கிறது. ஆனால், இதற்கு கஜேந்திரகுமார் கொடுக்கும் விளக்கம்தான் சிரிப்பூட்டுகிறது. கொள்கை வழியில் விட்டுக் கொடுப்புகளற்ற அணியாகத் தம்முடைய தமிழ்த்தேசியப் பேரவையே உள்ளதால், கொள்கையை ஆதரிக்கும் மக்கள் தமக்கே – தமது கூட்டுக்கே ஆதரவழிக்க வேண்டும் என்று கேட்டுள்ளார்.

தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் கொள்கை ஒன்றும் புதியதோ ஆச்சரியமானதோ  அல்ல. அது ஏட்டுச் சுரைக்காய் என்று சொல்வார்களே. அதுதான். அதாவது ஏட்டுச்சுரைக்காயில் கறியை வைக்க முடியாது. ஆகவே நடைமுறைக்குப் பொருந்தாத கற்பனாவாதக் கருத்தியலில் தன்னைக் கட்டி வைத்திருக்கும் தமிழ்க் காங்கிரஸ் – கஜேந்திரகுமார் அணி, இலங்கைத்தீவின் யதார்த்தத்துக்கு முரணாகச் சிந்திக்கும் அரசியற் கட்சிகளில் ஒன்றாகும். அதிதீவிரவாத நிலைப்பாடே இதனுடைய அடிப்படையாகும். இதைப்போன்ற சிங்களக் கட்சிகளும் உண்டு. உதாரணமாக விமல் வீரவன்சவின் தேசிய சுதந்திர முன்னணி, உதய கம்மன்பிலவின் பிவிதுரு ஹெலஉறுமய போன்றவை. தமிழ் மக்களுடைய அரசியல் உரிமைப்போராட்டத்துக்கும் தீர்வுக்கும் எந்த வகையிலும் பொருத்தமற்ற – நடைமுறைச் சாத்தியங்களற்ற அரசியல் நிலைப்பாட்டைத் தன்னுடைய தலையில் சுமந்து கொண்டிருக்கும் தமிழ்க் காங்கிரஸோடு, ஏனைய கட்சிகளும் அணிகளும் அரசியற் கூட்டுக்கு இணங்கியிருப்பது ஒரு வகையில் ஆச்சரியமானதே. முன்னணி படியிறங்கியதற்குக் காரணம், தன்னுடைய அரசியலை எந்த வகையிலாவது பலப்படுத்திக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலேயேயாகும்.

ஆனால், இலங்கைத்தீவின் யதார்த்தமோ அதிதீவிர நிலைப்பாட்டையும் இனவாதத்தையும் விட்டு விலகும் தன்மையைப் கொண்டுள்ளது என்பதால்தான் வடக்குக் கிழக்கு, மலையகம் உள்பட நாடுமுழுவதிலும் தேசிய மக்கள் சக்தி வெற்றியைப் பெறக் கூடியதாக இருந்தது. அதாவது சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றின் தேவையை அல்லது அதனுடைய போக்கை மக்கள் விட்டு விலகிச் செல்லத் தொடங்கியிருக்கின்றனர் எனலாம். இந்த இரண்டு வகையான அரசியலினாலும் குறித்த தமிழ், முஸ்லிம்,மலையகச் சமூகங்கள் பெற்றுக் கொண்டதை விட இழந்தது அதிகம் என்பதால்,அவை வேறு விதமாகச் சிந்திக்கத் தொடங்கியுள்ளன. ஆனால், அதற்காக இந்தச் சமூகங்களின் அக – புற அரசியல் பிரச்சினைகளை தேசிய மக்கள் சக்தியோ அல்லது தற்போதையை அரசாங்கமோ முழுமையாகத் தீர்த்து வைக்கும் என்றுமில்லை. எனிலும் மக்கள் வேறு வழியின்றி வேறு வகையான தெரிவுகளுக்கே முயற்சிக்கிறார்கள். இதை எப்படியாவது தடுத்து, மறுபடியும்  சமூகப் பிராந்திய அரசியல் (Socio-regional politics), புவியற் பிராந்திய அரசியல் 9 Geo-regional politics) போன்றவற்றிற்குள் திணித்து விடுவதற்கே கஜேந்திரகுமார் போன்றவர்கள் முயற்சிக்கிறார்கள். இதில் அதிதீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்கள் ஒருங்கிணைந்திருக்கிறார்கள். சிவாஜிலிங்கம், ஸ்ரீகாந்தா, நாவலன், அருந்தவபாலன், ஐங்கரநேசன், கஜேந்திரன், கஜேந்திரகுமார் போன்றவர்கள் எப்போதும் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர்களேயாகும். ஆனால், இது வடக்கிற்குள்தான். வடக்கிற்கு வெளியே இப்படித் தீவிர நிலைப்பாட்டைக் கொண்டவர் என்றால், அது அரியநேத்திரன் மட்டும்தான். இந்த அணியில் இன்னொருவர் மட்டும் இதுவரையில் சேராமல் இருக்கிறார். அது சிவஞானம் சிறிதரன். தமிழரசுக் கட்சியிலிருந்து சிறிதரன் வெளியேறும் நிலை வந்தால் நிச்சயமாக அவர் இந்தக் கூட்டில்தான் சேருவார். காரணம், அவரும் ஒரு கற்பனாவாத அரசியலை முன்னெடுத்து வருகின்றவர். 

ஆக இப்பொழுது அதிதீவிர தேசியவாதிகளின் அணி தமிழ்த்தேசியப் பேரவை என்ற கூட்டில் இணைந்துள்ளது. இதனை மக்கள் எப்படி நோக்கப்போகிறார்கள்? எவ்வாறான ஆதரவு  இந்தக் கூட்டுக்கு எதிர்காலத்தில் கிடைக்கப்போகிறது என்பதைப் பொறுத்தே தமிழ் அரசியலின் எதிர்காலமும் இலங்கைத்தீவின் எதிர்காலமும் இருக்கப்போகிறது. இப்போது இந்தக் கூட்டுக்குப் பாராளுமன்றப் பிரதிநிதித்துவம் ஒரு உறுப்பினரை மட்டும் கொண்டுள்ளது. அது காங்கிரஸைச் சேர்ந்த கஜேந்திரகுமார் பொன்னம்பலமாகும்.

2.      ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் அரசியற் கூட்டாகும். ஈ.பி.ஆர். எல்.எவ், புளொட், ரெலோ, ஜனநாயகப் போராளிகள் கட்சி ஆகியவற்றோடும்  புதிதாக இணைந்திருப்பது முருகேசு சந்திரகுமாரின் சமத்துவக் கட்சியாகும். இவை அனைத்தும் கடந்த கால ஆயுதப்போராட்ட அரசியலோடு ஒரு வகையில் சம்மந்தப்பட்டவை அல்லது அந்தப் பின்னணியைக் கொண்டவையாகும். முன்னணியின் தலைமையிலான கூட்டு, அதிதீவிரநிலைப்பாடும் முழுமையான மிதவாதப் பின்னணியைக் கொண்டது என்றால், இது ஆயுதப்போராட்ட அரசியலை வரலாறாகக் கொண்டது. ஆனால், ஒரு சிறிய வேறுபாடு இந்தக் கூட்டிற்கு உண்டு. அது என்னவென்றால், இது யதார்தத்த்தை – நடைமுறையைக் கவனத்திற் கொண்ட கூட்டாகும். அதாவது ஆயுதப்போராட்ட அரசியல் அனுபவத்தின் வழியாகவும் மிதவாத அரசியற் போராட்டத்தின் அனுபத்திற்கூடாகவும் கற்றுக் கொண்ட பாடங்களின் அடிப்படையில் தமிழ் மக்களுடைய எதிர்கால அரசியலை முன்னெடுக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டைக் கொண்ட தரப்பாகக் காணப்படுகிறது. ஆனால், இந்த அணிக்குப் பாராளுமன்றத்தில் ஒரே ஒரு உறுப்புரிமையே உண்டு. ரெலோ சார்பாக செல்வம் அடைக்கலநாதன் அதனைப் பிரதிநிதித்துவப்படுத்துகிறார்.  

உள்ளுராட்சி மன்றத் தேர்தலிற்கான இந்தக் கூட்டின் வேட்புமனுக்கள் அதிகமாக நிராகரிக்கப்பட்டுள்ளதால், இந்தக் கூட்டின் அரசியல் சிக்கலுக் குள்ளாகியுள்ளது. இந்தக் கூட்டின் தலைக்குள்ளும் இருப்பது தேசிய மக்கள் சக்திக்கு எதிரான சிந்தனையே. கூடவே தமிழ்த் தேசியப் பேரவையுடனும் இது மோதக் கூடிய அடிப்படைகளையும் இயல்பையும்  கொண்டுள்ளது. 

கூட்டுகளுக்கு எதிராகத்  தனித்த நிற்கும் தரப்பு. இலங்கைத் தமிழரசுக் கட்சியே இதுவாகும். தேசிய மக்கள் சக்தி, தமிழ்த்தேசியப் பேரவை என்ற கஜேந்திரகுமார் அணி மற்றும் ஜனநாயகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு, கிழக்குத் தமிழர் கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு எதிராக தன்னை நிறுத்தியிருக்கும் தனித் தரப்பாக இதை  நோக்கலாம். வடக்குக் கிழக்கில் அதிகமான பாராளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட பிராந்தியக் கட்சியும் இப்போது இதுதான். ஆகவே உள்ளுராட்சித் தேர்தலில் இதனுடைய செல்வாக்கு கூடுதலாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனாலும் அது எந்தளவுக்கு இருக்கும் என்று அறுதியிட்டுக் கூற முடியாது. அதனை அந்தக் கட்சியின் பேச்சாளரும் பதிற் செயலாளருமான திரு. ஆபிரகாம் சுமந்திரன் வெளிப்படையாகவே தெரிவித்துள்ளார். அதாவது NPP  அலை இன்னும் ஓயவில்லை. அதற்குள்தான் நாம் வெற்றியைப் பெற வேண்டியுள்ளது. அறுதிப் பெரும்பான்மையை யாரும் பெறப்போவதில்லை. ஆனாலும் தமிழ் மக்கள் தம்மை – தமிழரசுக் கட்சியை ஆதரிப்பார்கள் என்று தான் நம்புவதாக – எதிர்பார்ப்பதாக. 

ஆனால், தமிழரசுக் கட்சி என்பது எப்போதோ காலாவதியாகிப்போன ஒன்று. அதற்கு உயிரூட்ட முயற்சிப்பது இறந்த உடலுக்கு saline ஏற்றுவதைப்போன்றதாகும். அதனால் எந்தப் பயனும் ஏற்படாது.

ஆக, உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வடக்குக் கிழக்கில் தேசிய மக்கள் சக்தியோடு தமிழ்க் கட்சிகள் மோதப்போகின்றன. அதைப்போலத் தமிழ்க்கட்சிகளோடு தேசிய மக்கள் சக்தி மோதப்போகிறது. இதற்கிடையில் தேசிய மக்கள் சக்தியோடும் ஏனைய தமிழ்த் தரப்புகள் ஒவ்வொன்றும் மோதவுள்ளன. ஆக கடுமையான ஒரு போட்டிக்களமாகவே இருக்கப்போகிறது வடக்குக் கிழக்கின் உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தற்களம்.

மக்கள் யாருடைய பக்கம்? மக்களின் பக்கம் யார்?

https://arangamnews.com/?p=11923

வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை இலங்கை கைது செய்யக்கூடாதா?

2 months 3 weeks ago

07 APR, 2025 | 04:14 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ்

பாகம் 1

இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் வார இறுதி இலங்கை விஜயம் பெருமளவுக்கு வெற்றிகரமாக அமைந்ததாக பத்திரிகைகள் மற்றும் இலத்திரனியல் ஊடகங்கள் மூலமாக அறியக்கூடியதாக இருக்கிறது  ஏப்ரில் 4 வெள்ளிக்கிழமை தொடங்கி ஏப்ரில் 6 ஞாயிற்றுக்கிழமை வரையிலான அவரின் விஜயத்தின் முக்கிய அம்சங்களாக  இரு நாடுகளினதும் தேசிய பாதுகாப்புக்கு இடையிலான பிணைப்பின் தன்மையை அங்கீகரிக்கும் பாதுகாப்பு ஒத்துழைப்பு  தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை, இலங்கை மக்களின் சார்பில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்கவினால் இந்திய பிரதமருக்கு வழங்கப்பட்ட  'ஸ்ரீலங்கா மித்ர விபூஷண ' விருது ஆகியவை அமைந்தன.

இணக்கபூர்வமான ஒரு சூழ்நிலையில் முரண்பாட்டுக்குரியதாக அமைந்தது வடபகுதி கடற்பரப்பிற்குள் பெரும் எண்ணிக்கையில்  அத்துமீறிப் பிரவேசித்து தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மீனவர்கள் மீன்பிடிப்பிடிப்பதுடனும் இழுவைப்படகுகளை பயன்படுத்துவது போன்ற கெடுதியான நடைமுறைகள் மூலமாக கடல்வாழ் உயிரினங்களை நிர்மூலம் செய்து வருவதுடனும் தொடர்புடைய பிரச்சினை மாத்திரமேயாகும்.

இரு தலைவர்களும் எந்தளவுக்கு இந்த பிரச்சினை குறித்து விரிவாக ஆராய்ந்தார்கள் என்பது திட்டவட்டமாக தெரியவில்லை. ஆனால், அவர்களின் ஊடக அறிக்கைகள் இந்த பிரச்சினை தொடர்பில் வேறுபட்ட மனப்பான்மைகளைக் கொண்டிருப்பதை வெளிக்காட்டின.

இந்த பிரச்சினைக்கு "நிலைபேறான  தீர்வொன்றைக் காண்பதற்கு ஒத்துழைப்பு அணுகுமுறை ஒன்று தேவை என்று திசாநாயக்க வலியுறுத்தினார்." இழுவைப்படகுகளினால் சுற்றுச்சூழலுக்கு ஏற்படுகின்ற பாரதூரமான சேதத்தை தடுத்து  நிறுத்துவதற்கும் சட்டவிரோதமாக  மீன்பிடிப்பதை தடுப்பதற்கும் தீர்க்கமான நடவடிக்கைகள் தேவை என்று நாம் கோருகிறோம்" என்று அவர் மேலும் கூறினார்.

ஆனால், மறுபுறத்தில் இந்திய பிரதமர் மோடி பெருமளவுக்கு நம்பிக்கையுடனான ஒரு அணுகுமுறையை கடைப்பிடித்தார். இந்த பிரச்சினை வாழ்வாதாரத்துடன் தொடர்புடையது என்று வர்ணித்த அவர் மனிதாபிமான அணுகுமுறை ஒன்று கடைப்பிடிக்ககப்பட வேண்டும் என்று இலங்கை 

ஜனாதிபதியும் தானும் இணங்கியிருப்பதாக குறிப்பிட்டார். இலங்கையில் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் இந்திய மீனவர்களும் கைப்பற்றப்பட்ட அவர்களது படகுகளும் உடனடியாக விடுவிக்கப்பட வேண்டும் என்று  அவர் வலியுறுத்தினார்.

அதை தொடர்ந்து இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்றி  நிறுவன ரீதியான கலந்தாலோசனைகளை தீவிரப்படுத்துவதற்கும் அண்மைய எதிர்காலத்தில் இரு நாடுகளினதும் மீனவர் சங்கங்களுக்கு இடையில் பேச்சுவார்த்தைகளுக்கு வசதி செய்வதற்கும் இணக்கம் காணப்பட்டதாக ஊடகங்களுக்கு கூறினார்."இரு தரப்புகளுக்கும் இடையிலான உயர்மட்டங்கள் உட்பட சகல மட்டங்களிலும் பேச்சுவார்த்தைகளில் தொடர்ச்சியான ஒரு அம்சமாக இது இருந்து வருகிறது" என்று அவர் குறிப்பிட்டார்.

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் செய்தியாளர்கள் மகாநாட்டில் உரையாற்றிய இந்திய வெளியுறவு செயலாளர் இரு தரப்புகளினாலும் கணிசமானளவு விரிவாக மீன்பிடிப் பிரச்சினை ஆராயப்பட்டது என்று கூறினார். "இறுதியாக பார்க்கும்போது  இது மீனவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினை  என்றும் அண்மைக் காலத்தில் எடுக்கப்பட்ட குறிப்பிட்ட சில நடவடிக்கைகளை  மீள்பரிசீலனை செய்யமுடியும்  என்றும்  பிரதமர் வலியுறுத்தினார்." 

மீனவர் பிரச்சினை தொடர்பில் மனிதாபிமான அடிப்படையிலான ஒரு அணுகுமுறையைக் கடைப்பிடிப்பதை பற்றி வெளிப்படுத்தப்பட்ட உணர்வுகளுக்கு இணங்க இந்தியாவினாலும் இலங்கையினாலும் அடையாளபூர்வமான  பரஸ்பர நல்லெண்ண  சமிக்ஞை ஒன்று காண்பிக்கப்பட்டது.

சட்டமா அதிபரினால் எந்த குற்றச்சாட்டும் சுமத்தப்படாமல் தமிழ்நாடு இராமநாதபுரத்தைச் சேர்ந்த பதினொரு மீனவர்கள் இலங்கையினால் விடுதலை செய்யப்பட்டனர்.  வடபகுதி கடலில் அத்துமிறி மீன்பிடித்தமைக்காக இலங்கை கடற்படையினர் அவர்களை கைது செய்திருந்தனர். அதேபோன்றே யாழ்ப்பாணத்தின் குருநகரைச் சேர்ந்த இரு மீனவர்களை இந்திய அதிகாரிகள் விடுதலை செய்தனர். சீரற்ற காலநிலை காரணமாக  படகுகள்  திசைமாறி இந்திய கடற்பரப்புக்குள்  சென்றபோது அவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

பிரதமர் மோடி -- தமிழ்க் கட்சிகள் சந்திப்பு

இது இவ்வாறிருக்க, வட இலங்கையின் டற்பரப்பில் இந்திய மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பது மற்றும் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவது தொடர்பான பிரச்சினையை ஏப்ரில் 5 ஆம் திகதி இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது தமிழ் அரசியல் கட்சிகளின் ஒரு தூதுக்குழுவும் கிளப்பியது.

இலங்கை தமிழரசு கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம், பொதுச் செயலாளர் எம்.ஏ. சுமந்திரன், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், மட்டக்களப்பு பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கம், தமிழீழ மக்கள் விடுதலை கழகத்தின்  (புளொட் ) தலைவர் தருமலிங்கம் சித்தார்த்தன், அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் தலைவரும் யாழ்ப்பாண மாவடட பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமீழீழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) தலைவரும் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கலநாதன் ஆகிய எழுவர் அடங்கிய தூதுக்குழு மோடியைச் சந்தித்தது.

இவர்களது சந்திப்பு தொடர்பாக ' தி இந்து ' பத்திரிகையின் கொழும்பு செய்தியாளர் மீரா ஸ்ரீனிவாசன் அனுப்பிய செய்தி பின்வருமாறு ; 

"வட இலங்கையினதும் தமழ்நாட்டினதும் மீனவர்களைப் பாதிக்கும் மீன்பிடிப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வு காணுமுகமாக இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடை செய்யவேண்டும் என்று இந்தியாவிடம் இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைலர்கள் சனிக்கிழமை (ஏப்ரல் 5, 2025) வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.

"பாக்குநீரிணையில் வளங்களுக்காக நீண்டகாலமாக நிலவிவரும் இந்த தகராறு குறித்து கவனத்துக்கு கொண்டுவந்த இலங்கை தமிழ் அரசியல்வாதிகள் போரினால் பாதிக்கப்பட்ட வட இலங்கை மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் மோசமான பாதிப்புக்களையும் பாக்குநீரிணையில் கடல்சார் சூழல்தொகுதிக்கு ஏற்படுகின்ற அழிவுகளையும் விளக்கிக் கூறினர்.

"இந்த சந்திப்பின்போது தமிழரசு கட்சியின் பொதுச்செயலாளர் சுமந்திரன் இழுவைப் படகுகளை பயன்படுத்தும் நடைமுறையை சாத்தியமானளவு விரைவாக முடிவுக்கு கொண்டுவருவதை நோக்கி மாற்று நடைமுறையை துரிதப்படுத்துவதற்கு 2016  ஆம் ஆண்டில் இந்திய, இலங்கை அரசாங்கங்களுக்கு இடையில் கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கையை நினைவுபடுத்தினார். 2016 நவம்பரில் புதுடில்லியில் நடைபெற்ற அமைச்சர்கள் மட்ட  பேச்சுவார்த்தைகளில்  பங்கேற்ற இலங்கை தூதுக்குழுவின் ஒரு உறுப்பினரான சுமந்திரன்" ஆழ்கடல் மீன்பிடியை ஊக்குவிப்பதற்கு இந்திய அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்பட்ட முயற்சிகளை நாம் வரவேற்பதாக பிரதமர் மோடியிடம் கூறினோம். ஆனால் இழுவைப்படகுகளை பயன்படுத்தும் நடைமுறை இன்றுவரை தொடருவதை நாம் அவரிடம் சுட்டிக்காட்டினோம்" என்று கூறின்ர்.

"யாழ்ப்பாண மாவட்டத்தின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரான சுமந்திரனால் கொண்டு வரப்பட்ட தனிநபர் சட்டமூலம் ஒன்றையடுத்து 2017 ஆம் ஆண்டில் இலங்கை இழுவைப்படகுகள் மூலம் மீன்பிடிப்பதை தடைசெய்தது. மீன் இனப்பெருக்கத்தை அனுமதிப்பதற்காக ஒவ்வொரு வருடமும் ஏப்ரில் நடுப்பகுதிக்கும் ஜூன் நடுப்பகுதிக்கும் இடைப்பட்ட  சுமார் இரு மாதங்களில் இந்தியா அதன் கிழக்கு கிரையோரத்தில் மீன்பிடிப்பதற்கு பருவகால தடைவிதிக்கும் நடைமுறையை தற்போது பின்பற்றுகிறது." 

தமிழ்நாட்டு கரையோர மாவட்டங்கள்

தமிழ்நாட்டின் கரையோர மாவட்டங்கள் சிலவற்றைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் வட இலங்கையின் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிப்பது இலங்கை தமிழ் மீனவர்களை பாதிக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இது ஒரு சில படகுகள் அவ்வப்போது வந்து எமது கடலில் மீன்பிடித்துவிட்டுச் செல்லும் ஒரு விவகாரம் அல்ல. இந்த பிரச்சினையின் அம்சங்கள் மிகவும் பாரதூரமானவை.

மீன்பிடி படகுகள் தொகுதி 

பல வருடங்களாக தொடருவது இதுதான். பெருவாரியான மீன்பிடி படகுகளைக் கொண்ட தொகுதி ஒன்று (Flotilla of fishing boats) எமது கடற்பரப்பில் அத்துமீறிப் பிரவேசித்து வடகடலில் சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. படகுகளின் எண்ணிக்கை 500 க்கும் அதிகமானதாகவும்  அவற்றில் பல படகுகள் வசதியான உபகரணங்களைக் கொண்ட இழுவைப் படகுகளாக இருக்கின்றன.

இது முன்கூட்டியே திட்டமிட்ட ஒரு செயற்பாடாகும். இந்த படகுத் தொகுதியின  நடவடிக்கைகள் மன்னார் குடாவிலும் வங்காள விரிகுடாவிலும் இலங்கையின் கடற்பரப்பில் ஒரு கடற்படை வந்து மீன்பிடிப்பது போன்று இருக்கிறது. இந்திய மீன்பிடிப்படகுகள் இலங்கையின் கரையோரத்தில் யாழ்ப்பாணக் குடாநாடு மற்றும் கிளிநொச்சி, முல்லைத்தீவு , மன்னார் மாவட்டங்களில் மிகவும் நெருக்கமான பகுதிகளுக்கு வந்து மீன்பிடியில் ஈடுபடுகின்றன.

நெடுந்தீவு , கச்சதீவு போன்ற வடபகுதி தீவுகளுக்கு நெருக்கமாகவும் வந்து இந்திய மீனவர்கள் பெருமளவில் மீன்பிடிக்கிறார்கள். இந்திய படகுகள் நள்ளிரவுக்கு சற்று முன்னதாக எமது கடறபரப்புக்குள் வந்து பொழுது புலர்வதற்கு முன்னதாக திரும்பிச் சென்றுவிடுகின்றன.

இந்த இந்திய படகுகள் தொகுதி  தாக்குதல் மற்றும் தற்காப்பு நோக்கங்களுக்காக பெரும் எண்ணிக்கையில் சேர்ந்து செயற்படுகின்றன. இவற்றின் பெரும் எண்ணிக்கை காரணமாக  இலங்கை மீனவர்கள் அவற்றை எதிர்கொண்டு தடுக்க முடியாமல் இருக்கிறது. இந்த படகுகள் தொகுதியின் தோற்றமே இலங்கை மீனவர்களை அச்சுறுத்துகிறது. இந்திய மீனவர்களிடம் அகப்படுகின்ற சில இலங்கை மீனவர்கள் தாக்கப்பட்டு அவர்களது படகுகுகள் சேதப்படுத்தப்பட்டிருக்கின்றன. சிலர் மரணமடைந்த சம்பவங்களும் உண்டு.

இலங்கை கடற்படை 

இலங்கை கடற்படை கூட இந்திய மீன்பிடி படகுகள் தொகுதிக்கு நடுவில் நகருவதில்லை.  அவ்வாறு இலங்கை கடற்படை கப்பல்கள் செய்தால்  இந்திய படகுகள் அவற்றை சுற்றிவளைத்து மோதுகின்றன. அத்தகைய அண்மைய சம்பவம் ஒன்றில் இலங்கை கடற்படை வீரர் ஒருவருக்கு காயமேற்பட்டு இறுதியில் அவர் மரணமடைந்தார். இது சமாதான காலம். இந்தியாவுடன் இலங்கை போரில் ஈடுபட்டிருக்கவில்லை.

அதனால், இலங்கை கடற்படையினர் இந்திய மீன்பிடிப் படகுகளில் இருக்கும் " சிவிலியன் ஆக்கிரமிப்பாளர்களை " நோக்கி துப்பாக்கிப் பிரயோகம் செய்யமுடியாது. இத்தகைய சூழ்நிலையை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் அச்சுறுத்தி அட்டகாசம் செய்கிறார்கள்.

ஆனால், இலங்கை கடற்படையினரும் கைகட்டிப் பார்த்துக் கொண்டிருக்கவில்லை. சாத்தியமான வேளைகளிர் கடற்படை உஷாராகவே இருக்கிறது. அதனால் இந்திய மீனவர்கள் இலங்கைக் கரையோரத்துக்கு மிகவும் நெருக்கமாக வரமுடிவதில்லை. பெருவாரியான படகுகள் தொகுதியில் இருந்து விலகி தனியே வருகிற இந்திய படகை கடற்படை பாய்ந்து பிடித்து விடுகிறது. சந்தர்ப்பம் வாய்க்கும்போது தனியான படகுகளை கடற்படை சுற்றி வளைத்து பிடிக்கிறது. அந்நிய மீனவர்களின் கைதுசெய்யப்படுவதுடன் அவர்களின் படகுகளும் கைப்பற்றப்படுகின்றன. 

2024 ஆம் ஆண்டில் இலங்கை கடற்படை 550 இந்திய மீனவர்களைை கைது செய்ததாக அறிவிக்கப்பட்டது. அதேவேளை படகுகளின் சொந்தக்காரர்கள் என்று கூறப்படுகின்றவர்கள் உட்பட சிலர் குற்றவாளிகளாகக் காணப்படுவதுடன் ஏனையவர்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட தண்டனை விதிக்கப்பட்டு விடுதலை செய்யப்படுகிறார்கள். இந்த வருடம் இதுவரையில் நூறுக்கும் அதிகமான இந்திய மீனவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களில் 94 பேர் இன்னமும் இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார்கள். 

இழுவைப்படகு மூலம் மீன்பிடித்தல் 

மீன்பிடிப் படகுகள் தொகுதியாக எமது கடற்பரப்புக்குள் ஊடுருவி எமது மீன்களையும் இறால்களையும் நண்டுகளையும் இந்திய மீனவர்கள் பிடிப்பது இந்திய ஆக்கிரமிப்பின் ஒரு அம்சம் மாத்திரமே. அதை விடவும் படுமோசமான அம்சம் இயற்கைக்கு நிரந்தரமாக ஏற்படுத்தப்படுகின்ற அழிவாகும்.

இலங்கை கடற்பரப்புக்குள் ஊடுருவி சட்டவிரோதமாக மீன்பிடியில் ஈடுபடுகின்ற இந்திய படகுகளில் அனேகமானவை இழுவைப் படகுகளாகும். அவை கடல் படுக்கை ஓரமாக பெரிய மீன்பிடி வலைகளை ஒன்றாக இழுத்துக்கொண்டு வருகின்ற படகுகளாகும். அவை மீன் முட்டைகள், சிறிய மீன்வகைகள், கூனிஇறால்கள் மற்றும் சகல மீன்வகைகளையும் கடல் தாவரங்களையும் ஒருசேர இழுத்துக் கொண்டு வருகின்றன.

பல தசாப்தங்களாக தமிழ்நாடு உட்பட இந்தியாவின் பல்வேறு  கரையோர மாநிலங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்தியாவின் கடலுணவு ஏற்றுமதியை உயர்த்தி பெரும் இலாபத்தை கொடுக்கும் இந்த நடைமுறையை கடைப்பிடித்து வருகிறார்கள். மீன்வகைகள் இல்லாமல் போவதும் கூனி இறால்கள் குறைவடைந்து போவதுமே இதன் எதிர்மறையான விளைவாக இருந்து வருகிறது. தமிழ்நாடு கரையோரமாக உள்ள கடலில் குறிப்பாக பாக்கு நீரிணையின் இந்திய பக்கத்தில் இதுவே நிலைமையாக இருக்கிறது.

இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவி தமிழ்நாட்டு மீனவர்கள் சட்ட விரோதமாக மீன்பிடிப்பதில் அதீத நாட்டம் காட்டுவதற்கு  இந்த நிலைவரமே ஒரு மேலதிக காரணமாக இருக்கிறது. பெரியளவிலான இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் மூலம்க இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கடல்வாழ் உயிரினங்களை அழிக்கிறார்கள். இன்னும் சில வருடங்களில் நிலைபேறாக மீன்பிடிப்பது என்பது சாத்தியமாகாமல் போகக்கூடிய அளவுக்கு இலங்கையின் கடல்வளங்கள் படுமோசமாக குறைவடைந்து போகக்கூடும். ஆனால், தங்களது சொந்த கடல் வளத்துக்கு மீட்டெடுக்க முடியாத கெடுதியை விழைவித்த சுயநலவாதிகளான தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக்கும் அதே அழிவைச் செய்வதற்கு கங்கணம் கட்டி நிற்கிறார்கள்.

பகைமையும் வெறுப்பும் 

மேலும், தமிழ்நாடு மீனவர்கள் அவர்களது மொழியையே பேசுகின்ற இலங்கை மீனவர்கள் மீது நம்பமுடியாத அளவு பகைமையையும் வெறுப்பையும் வெளிக்காட்டுகிறார்கள். ஆக்கிரமிப்பாளர்களிடம் அகப்படுகின்ற இலங்கை மீனவர்கள் படுமோசமாக தாக்கப்படுவதுடன் அவர்களது படகுகளும் உபகரணங்களும் சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன.

இலங்கை மீனவர்களுக்கு சொந்தமான  வலைகள் இந்திய மீனவர்களினால் வேண்டுமென்றே சேதப்படுத்தப்படுகின்றன அல்லது நிர்மூலம் செய்யப்படுகின்றன. அண்மையில் சில இந்தியப் படகுகள் மாதகல் -- சுழிபுரம் கரையோரத்துக்கு நெருக்கமாக வந்து மீன்பிடி வலைகளை சேதப்படுத்தியிருக்கின்றன. ஒரு அரிதான சம்பவமாக  இலங்கையில் உள்ள இந்திய தூதரகம்  அதற்காக இழப்பீட்டை வழங்கியிருக்கிறது.

இவ்வாறாக, தமிழ்நாட்டு மீனவர்கள் ஈவிரக்கமின்றியும் பேராசைத்தனமாகவும் வட இலங்கையின் கடல் வளங்களைச் சுரண்டுவதுடன  மீட்சிபெறமுடியாத அளவுக்கு கெடுதியையும் விழைவித்துவிட்டுப் போவதை காணக்கூடியதாக இருக்கிறது. நீண்டகாலத்துக்கு நிலைபேறாக மீன்பிடிப்பதற்காக கடல் வளங்களைப் பேணிப்பாதுகாக்க வேண்டும் என்ற எந்த அக்கறையும் அவர்களுக்கு கிடையாது.

தமிழ்நாட்டில்  கடற்தொழில் இனிமேலும் ஒரு பாரம்பரியமான தொழிலாக இல்லாமல் போயிருப்பது இதற்கு பிரதான காரணமாகும். பல தலைமுறைகளாக கடற்தொழிலில் ஈடுபட்டுவந்த சாதிகளில் பல கிறிஸ்தவ மதத்தைத் தழுவிய பிறகு கல்வியின் மூலமாக வாழ்க்கையில் மேம்பட்டு விட்டன. கடற்தொழில் இன்னமும் கூட குடும்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு தொழிலாகவோ அல்லது உள்ளூர் முதலாளியின் படகுகளுடன் மட்டுப்படுத்தப்படுகின்ற ஒரு தொழிலாகவே இல்லை.

முலாளித்துவ தொழில் துறையாக  மாறிய மீன்பிடி

பதிலாக, கடற்தொழில் ஒரு முதலாளித்துவ தொழிற்துறையாக மாறிவிட்டது. மீன் வகைகளும் கூனி இறால்களும் நண்டுகளும் " பண்டங்களாக்கப்பட்டு விட்டன."  அவை வாழ்வாதார நீட்சிக்கான எந்த அக்கறையும் இன்றி சாத்தியமானளவுக்கு உற்பத்தி செய்யப்பட்டு விற்கப்படுகின்ற பண்டங்களாகி விட்டன.

பெரிய மீன்பிடி படகுகளும் இழுவைப் படகுகளும் பணக்கார முதலாளித்துவ வாதிகளுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. அவர்களில் பலர்  அரசியல்வாதிகளாக அல்லது அரசியல் தொடர்புகளைக் கொண்டவர்களாக இருக்கிற்ர்கள். பல படகுகள் மற்றவர்களுக்கு " பினாமிகளாக " இருக்கின்ற மீனவர்களுக்கு சொந்தமானவையாக இருக்கின்றன. பினாமி என்பதுை உண்மையில் இன்னொருவருக்கு சொந்தமாக இருக்கும் ஒரு சொத்தின் சட்டபூர்வமான உரிமையாளரைக் குறிப்பதாகும்.

தமிழ்நாட்டிலும் இந்தியாவின் பல மாநிலங்களிலும் நல உச்சவரம்பு  ஒன்று இருப்பதனால், பல நில உடைமையாளர்கள் தங்களது மேலதிகமான நிலங்களை படிப்பறிவில்லாத ஊழியர்களையும்  வேலைக்காரர்களையும் பினாமிகளாக வைத்து அவர்களின் பெயர்களில் பதிவு செய்திருக்கிறார்கள். அதேபோன்றே பல மீன்பிடி படகுகளும்  உண்மையில் பினாமிகளாக இருக்கின்ற மீனவர்களின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன.

இலங்கை -- இந்திய மீன்பிடித் தகராறுகளைப் பற்றி ஆய்வுசெய்த டச்சு ஆராய்ச்சியாளர்கள் இதை கண்டு பிடித்திருக்கிறார்கள்.  தமிழ்நாட்டில் மீன்பிடிப் படகுகளில் பணியாற்றுபவர்களில்  பெரும்பாலானவர்கள் பாரம்பரியமாக கடற்தொழிலில் ஈடுபடாத சாதிகளைச் சேர்ந்தவர்களாக இருக்கிறார்கள் என்றும் இந்த ஆராய்ச்சியாளர்கள் கண்டு பிடித்திருக்கிறார்கள். அவர்கள் தினச்சம்பள அடிப்படையில் வேலைக்கு அமர்த்தப்பட்டு அவர்களின் முதலாளிகளினால் இலங்கை கடற்பரப்பிற்குள் ஊடுருவ நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.

இந்திய அதிகாரிகள்

இவ்வளவு பெருந்தொகையான மீன்பிடிப்படகுகள் இந்திய அதிகாரிகளினால் கட்டுப்படுத்தப்படாமல் அல்லது பிடிக்கப்படாமல் இலங்கைக் கடற்பரப்பிற்குள் எவ்வாறு ஊடுருவக்கூடியதாக இருக்கிறது என்பது இந்த பிரச்சினையில் இன்னொரு முக்கியமான விடயம். நடப்பவை குறித்து இந்திய அதிகாரிகள் வேண்டுமென்றே கண்டும் காணாமல் இருக்கிறார்கள் அல்லது அவ்வாறு கண்டும் காணாமல் இருக்குமாறு தங்களது அரசியல் எசமானர்களினால் அறிவுறுத்தப்படுகிற்ர்கள் .

அவர்களுக்கு இலஞ்சம் வழங்கப்படுகின்ற சாத்தியத்தையும் நிர்கரிக்க முடியாது. காரணம் என்னவாக இருந்தாலும் பிரச்சினை கூர்மையடைந்துவிட்டது. முன்னர் இந்திய மீன்பிடிப்படகுகள் வாரத்தில் மூன்று நாட்கள் மாத்திரமே இலங்கைக் கடற்பரப்புக்குள் ஊடுருவின. இப்போது அவை பெரும்பாலும் தினமும் வருகின்ற என்று தமிழரசு கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கடந்த வாரம் நெடுந்தீவில் ஒரு கூட்டத்தில் கூறினார்.

கடற்தொழில் அமைச்சர் சந்திரசேகர் 

ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் புதிய அரசாங்கத்தின் கடற்தொழில், நீரியல்வள, சமுத்திரவியல் வள அமைச்சராக இராமலிங்கம் சந்திரசேகர் இருக்கிறார். ஊவா மாகாணத்தின் பண்டாரவளையைச் சேர்ந்தவரான அவர் ஜே.வி.பி. / தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளராகவும் இருக்கிறார்.

தமிழ்நாடடில் உள்ள தமிழ்பேசும் சகோதரர்களின் நடவடிக்கைகளினால் வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்குகின்ற பிரச்சினைகளுடன் நன்கு பரிச்சயமானவராக சந்திரசேகர் விளங்குகிறார். 2024 பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தின் கரையோரப் பகுதாகளைச் சேர்ந்த பெருமளவு மக்கள் தேசிய மக்கள் திசைகாட்டிச் சின்னத்துக்கே வாக்களித்தார்கள்.  வடகடலில் தமிழ்நாட்டு மீனவர்கள் அத்துமீறி மீன்பிடிப்பதை தடுத்து நிறுத்தவதாக தேசிய மக்கள் சக்தி அளித்த வாக்குறுதியே அதற்கு காரணமாகும்.

வடபகுதி மீனவர்களின் இந்த பிரச்சினை தொடர்பில் சந்திரசேகர் மிகவும் கடுமையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கிறார். கடந்த வருடம் டிசம்பரில் ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க புதுடில்லிக்கு செல்வதற்கு முன்னதாக சந்திரசேகர் கொழும்பில் " தி இந்து " வுக்கு ஒரு நேர்காணலை வழக்கியிருந்தார். மீரா ஸ்ரீனிவாசனுக்கு வழங்கிய அந்த நேர்காணல் அவர் நாசகாரத்தனமான இழுவைப்படகு முறையை இந்தியத்தரப்பு நிறுத்தினால் மாத்திரமே மீனவர்களின் இந்த நீண்டகாலப் பிரச்சினைக்கு தீர்க்கமான முறையில் தீர்வைக்காண முடியும் என்று குறிப்பிட்டார்.

" வடக்கு,  கிழக்கு மற்றும் மலையகம் உட்பட சகல இனக்குழுமங்களையும் சகல புவியியல் பிராந்தியங்களையும் சேர்ந்த மக்கள்  அண்மைய தேர்தல்களில் எமக்கு ( தேசிய மக்கள் சக்திக்கு ) வாக்களித்து பெரிய ஒரு ஆணையை வழங்கியிருக்கிறார்கள். அவர்களது அக்கறைகளை கவனிக்கவேண்டிய பொறுப்பு எமக்கு இருக்கிறது. தமிழ்நாட்டைச் சேர்ந்த இந்திய மீனவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்துவதன் விளைவான இந்த நீண்டகாலப் பிரச்சினையே எமது வடபகுதி மீனவர்களின் முக்கியமான கவலையாக இருக்கிறது" என்று அமைச்சர் சந்திரசேகர் கூறினார்.

" நவீன தொழில்நுட்பத்தையும் நிலைபேறான வழிமுறைகளையும் பயன்படுத்தி மீன் உற்பத்தியை மேம்படுத்துவதற்கான தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் விரிவான திட்டங்களில் இலங்கை -- இந்திய மீனவர் தகராறுக்கு தீர்வைக் காண்பதும் ஒரு அங்கமாகும். 2017 ஆம் ஆண்டால் 17.2 கிலோ கிராமாக இருந்த நாட்டின் ஆள்வீத மீன் பாவனை இப்போது 11. 07 கிலோ கிராமாக குறைந்து விட்டது.இது மக்கள் புரதத்தை உள்கொள்ளும் அளவின் ஒரு வீழ்ச்சியை பிரதிபலிக்கிறது என்று தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கூறப்பட்டிருக்கிறது.

" 2022 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வேதனைமிகு பொருளாதார வீழ்ச்சிக்கு பிறகு மந்தபோசாக்கு மிகுந்த கவனத்துக்குரிய பிரச்சினையாக இருக்கிறது. மக்கள் ஊட்டச்சத்தைப் பெறுவதை உறுதிசெய்வதற்கு கடலுணவு உற்பத்தியை மேம்படுத்த வேண்டியது அவசியமாகும். அவற்றை எல்லாம் செய்வதற்கு எமது கடல் மற்றும் கடல்சார் பல்வகைமையைப் பாதுகாகக்க வேண்டியது அவசியமாகும் " என்றும் அமைச்சர் சந்திரசேகர் அந்த நேர்காணலில் மேலும் கூறினார்.

இலங்கையின் நிலைப்பாடு 

மீன்பிடி நெருக்கடியில் இலங்கையின் நிலைப்பாடு மிகவும் தௌாவானது. தமிழ்நாட்டு மீனவர்கள் இலங்கைக் கடற்பிராந்தியத்தில் அத்துமீறி மீன்பிடிப்பதை நிறுத்த வேண்டும்.  வெறுக்கத்தக்க அந்த இழுவைப்படகு நடைமுறையை அவர்கள் நிறுத்த வேண்டும்.  நீணடகாலப் போரினால் பெரும் அவலங்களுக்கு உள்ளாகிய இலங்கை தமிழ் மீனவர்கள்  தங்களது வாழ்வைக் கட்டியெழுப்பவும் தங்களது வாழ்வாதாரங்களை மீட்டெடுக்கவும் அனுமதிக்கப்பட வேண்டும். இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறுவதை தமிழ்நாட்டு மீனவர்கள் தவிர்க்க வேண்டும்.

இந்தியாவின் " மனிதாபிமான " அணுகுமுறை 

ஆனால், இந்தியாவின் ஆதிக்க மனோபாவமும்  அணுகுமுறையும்  வேறுட்டதாக இருப்பது கவலைக்குரியது.  இந்த பிரச்சினை மனிதாபிமான முறையில் அணுகப்பட்டு பேச்சுவார்த்தைகள் மூலமாகத் தீர்க்கப்பட வேண்டும் என்பதே பிரதமர் மோடி தொடக்கம் தமிழ்நாடு முதலமைச்சர் முத்துவேல் கருணாநிதி ஸ்ராலின் வரையானவர்களின் பதிலாக இருக்கிறது. 

இந்த மனிதாபிமான அணுகுமுறை என்பது பாதிக்கப்படும் இலங்கை தமிழ் மீனவர்கள் மீதான அக்கறையை அடிப்படையாகக் கொண்டதல்ல. அது இலங்கை கடற்பரப்பில் அதுதுமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் மீதான அக்கறையின் விளைவானது.

தமிழ்நாட்டு மீனவர்களை பாதிக்கப்படும் ஒரு தரப்பாக தவறான முறையால் காண்பிக்கப்படுகிறது. இலங்கை கடற்படையையும் ஆக்கிரமிப்பாளர்களாக தவறான முறையில் கூறப்படுகிறது. இலங்கை கடற்படை அப்பாவி தமிழ்நாட்டு  கொடூரமான முறையில் கைதுசெய்து அவர்களின் படகுகளை பறிமுதல் செய்கிறது என்பதே இந்தியா கூறும் கதை.

இந்திய மீனவர்களை கைது செய்யப்படக்கூடாது எனபதும் அவர்களது படகுகள் கைப்பற்றப்படக்கூடாது என்பதுமே இந்தியா விரும்புகின்ற இரக்கமானதும் கண்ணியமாதுமான மனிதாபிமான அணுகுமுறை. சுருக்கமாகச் சொல்வதானால்,  மனிதாபிமான அணுகுமுறை என்ற பெயரில் இந்திய மீனவர்கள் எமது கடல் வளங்களை தொடர்ந்து சுரண்டுவதை அனுமதிக்க வேண்டும் என்றே அவர்கள் விரும்புகிறார்கள்  அனுதாபம் கொன்று தின்னும் விலங்கு மீதானதாக இருக்கிறதே தவிர அதன் இரை மீதானதாக இல்லை.

பேச்சுவார்த்தைகள் கொடுமையான பகிடி 

பேச்சுவார்த்தைகள் மூலமாக இந்த பிரச்சினையை தீர்ப்பது என்பது கொடுமையான ஒரு பகிடியாகும். இது வீட்டுக்குள் புகுந்து பொருட்களை கொள்ளையடிக்கும் கும்பல் ஒன்று பேச்சுவார்த்தை மூலம் பிரச்சினையை தீர்க்க விரும்புவதாக வீட்டுக்காரருக்கு கூறுவதை ஒத்ததாகும்.

இந்திய -- இலங்கை மீன்பிடி தகராறைப் பொறுத்தவரை,  வெவ்வேறு நேரங்களில் பல சுற்றுப் பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றுவிட்டன. உருப்படியாக எந்த பயனும் ஏற்படவில்லை. அதற்கு காரணம்  அந்த பேச்சுவார்த்தைகள் வெறுமனே காலத்தை இழுத்தடிக்கும் நோக்குடனான செயற்பாடுகளாக இருந்தமையேயாகும். அத்துமீறலும் இழுவைப்படகு பயன்படுத்தலும் முடிவுக்கு வருவதற்கான எந்த அறிகுறியும் இன்றி தொடருவதையே காணக்கூடியதாக இருக்கிறது.

கச்சதீவு 

மேலும், இந்தியாவில் குறிப்பாக, தமிழ்நாட்டில் புதியதொரு கருத்து முன்வைக்கப்படுகிறது. கச்சதீவை இந்தியா இலங்கைக்கு 1974  ஆம் ஆண்டில் விட்டுக் கொடுத்ததன் விளவாகவே தமிழ்நாட்டு மீனவர்கள் பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டியிருக்கிறது என்று கூறப்படுகிறது.

கச்சதீவுக்கு அண்மையான கடலில் மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்கள் அவ்வப்போது  பாதிக்கப்படுகிறார்கள் என்ற ஒரு பொய் பிரசாரப் படுத்தப்படுகின்றது. கச்சதீவை இந்தியா மீளப்பெற்றுக்கொண்டால்  தமிழ்நாட்டு மீனவர்களின் பிரச்சினை தீர்ந்துவிடும் என்று தவறாகக் கூறப்படுகிறது.

தமிழர்களின் இடர்பாடு இருட்டடிப்பு 

இந்திய  -- இலங்கை மீன்பிடித் தகராறு தொடர்பில் இந்தியாவில் இடம்பெறுகின்ற கதையாடல்களில் இலங்கையின் வடபகுதி தமிழ் மீனவர்களின் அவலங்கள் கவனத்தில் எடுக்கப்படுவதில்லை என்பது முக்கியமாக கவனிக்கப்பட வேண்டியதாகும். பிரச்சினை விரோத உணர்வைக் கொண்ட இலங்கை கடறனபடைக்கும் அப்பாவி தமிழ்நாட்டு மீனவர்களுக்கும் இடையிலான மோதலாகவே காண்பிக்கப்படுகிறது. இலங்கை தமிழ் மீனவர்களின் இடர்பாடுகள் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்படுகின்றன. கச்சதீவை மீளப்பெறுவதே  பிரச்சினைத் தீர்வுக்கு முக்கியமானதாக பேசப்டுகிறது.

எனவே இந்த பிரச்சினையின் தோற்றுவாய் என்ன ? ஏன்? எவ்வாறு இந்தப் பிரச்சினைக்குள் கச்சதீவு கொண்டுவரப்படுகிறது? இந்தியா கூறுவது போன்று இலங்கை "மனிதாபிமான " அணுகுமுறை ஒன்றைக் கடைப்பிடித்து வடபகுதி கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடிக்கும் தமிழ்நாட்டு மீனவர்களை கைதுசெய்யக்கூடாதா? இந்த கேள்விகளை  இந்த கட்டுரையின் இரண்டாம் பாகத்தில் அடுத்த வாரம் விரிவாக ஆராய்வோம்.

https://www.virakesari.lk/article/211400

இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்

2 months 3 weeks ago

இந்திய அரசியல் நாடகத்தை கவனித்தல்

இந்தியாவிடம் இருந்து தமிழர்கள் கற்றுக்கொள்ள வேண்டிய, கற்கத் தவறிய விடயங்கள் பற்றி பலரும் சிந்திக்கிறார்கள். இருந்தாலும், இப்போதும் இந்தியாவையே தங்களுடைய அரசியல் தீர்வுக்காக நம்பியும் இருக்கின்றனர்.  அதே நேரத்தில், சிங்களவர்களும் இந்தியாவிடமிருந்து கற்றுக்கொள்ள வேண்டிய விடயங்கள் பல இருக்கின்றன என்பதை மறந்தும் விடுகின்றனர். ஏனென்றால், தமிழர்களுடைய விடயத்தில் அவர்கள் இந்தியா தமக்குச் சார்பான நிலைப்பாட்டிலேயே இருக்கிறது .

என்பதால் அது மறுக்கப்படுவதாக இருக்கிறது என்பதே யதார்த்தம். 
உலக நடைமுறைகள், மாற்றங்களுக்கு ஏற்ப தமிழ்த் தேசிய அரசியல் கட்டமைக்கப்படாமையும், மாற்றங்களை ஏற்றுக் கொள்ளாமையும், அனுசரிக்காமையும்தான் தமிழர்களின் அரசியல் அபிலாஷைகள் இதுவரையில் நிறைவேறா ஒன்றாக இருந்து வருவதற்கு காரணமாகும். கடந்த வார இறுதியில் நடைபெற்ற இந்திய பிரதமரின் இலங்கை வருகை விட்டுச் சென்றிருப்பதும் 
இதனையே ஆகும். 

2024 செப்டெம்பர் மாதம் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இலங்கைக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட முதலாவது வெளிநாட்டுத் தலைவர் என்ற பெருமையைப் பிரதமர் நரேந்திர மோடி பெற்றுக்கொண்டார். அவருக்கு இலங்கை மித்ர விபூஷண் விருதை இலங்கை வழங்கியிருக்கிறது. அபிவிருத்தி ஒத்துழைப்பு, பொருளாதார உறவுகள், பாதுகாப்பு உறவுகள், நல்லிணக்கம்,  

இந்திய இலங்கை மீனவர் பிரச்சினைகள் உள்ளிட்ட துறைகளில்  ஒத்துழைப்பு 
குறித்து இரு நாட்டுத் தலைவர்களும் மீளாய்வு செய்து கொண்டனர். அதே நேரத்தில், இலங்கையின் பொருளாதார மீட்சிக்கும் ஸ்திரத்தன்மைக்கும் இந்தியா தொடர்ந்து  உதவுவதற்குப் பிரதமர் உறுதியளித்திருந்தார். அந்த வகையில் ஜனாதிபதி அனுரகுமார பொருளாதார ஸ்திரம் குறித்துப் பேசிய கருத்து இந்த இடத்தில் அடிபட்டுப் போனது. 

எரிசக்தி மின்சார துறைகளுக்கான உதவிகள், சம்பூர் சூரிய மின்சக்தி திட்ட நிர்மாணப் பணிகளின் ஆரம்பிப்பு மற்றும் பல்வேறு அபிவிருத்தி ஒப்பந்தங்களும் கைச்சாத்தாகியுள்ளன. 
இதற்கிடையில் இலங்கை ஜனாதிபதியின் இந்திய விஜயத்தின் போது விடுபட்டுப் போன இலங்கைத் தமிழர்கள் விவகாரம் குறித்து இந்தியப் பிரதமர் பேசியிருப்பது வரவேற்கத்தக்கதாக இருக்கிறது. இந்தியப் பிரதமரின் ஊடக அறிக்கையில், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றும் என்றும் இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துவதற்கு மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதற்கான வாக்குறுதியை நிறைவேற்றும் என்று நாங்கள் நம்புகிறோம் என்று குறிப்பிட்டிருக்கிறார்.

இந்தியப் பிரதமரின் அபிவிருத்தி, இந்திய மீனவர் பிரச்சினை போன்ற பல்வேறு கருத்துக்களுக்கு 
பதிலளித்திருக்கிற ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தமிழர்களுடைய அரசியல் அபிலாசை, மாகாண சபை; தேர்தல் போன்ற விடயங்கள் குறித்து ஒரு வார்த்தையேனும் பகரவில்லை என்பது கவனிக்கப்பட வேண்டும். 

இந்தியப் பிரதமர் வட கிழக்கு தமிழ் அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். மலையக அரசியல் தலைவர்களைச் சந்தித்திருக்கிறார். பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டிருக்கிறது. இருந்தாலும், தமிழரது அரசியல், தமிழ் அரசியல் தரப்பினருடைய நிலைப்பாடுகள் காரணமாக இறுக்கமான முடிவுகளுக்கு உரியதாக இல்லை என்ற குறைபாடே காணப்படுகிறது என்று கொள்ளலாம். 

ஜே.வி.பியைத் தலைமையாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தியின் மாற்றம் என்கிற அலையில் வடக்குக் கிழக்கு தமிழ் மக்களின் தமிழ்த் தேசிய அரசியல் அடிபட்டுப் போனது எல்லோருக்கும் வெளிப்படையானது. இந்த நிலையில், உள்ளூராட்சித் தேர்தல் நடைபெறவிருக்கிறது. கடந்த வருடத்தில் ஜனாதிபதி தேர்தல் நடைபெறுவதற்கு முன்பே அனுரகுமார திசாநாயக்கவை இந்தியா, புதுடெல்லிக்கு அழைத்துப் பேசியது.

அது அவர்களுக்கு மேலும் ஒரு சக்தியைக் கொடுத்திருந்தது. இதனையடுத்து, அனுரகுமார ஜனாதிபதியானதும் முதல் விஜயத்தை இந்தியாவுக்கு மேற்கொண்டார். இப்போது உள்ளூராட்சித் தேர்தல் நடக்கவுள்ள சூழலில் இந்தியப் பிரதமர் இலங்கைக்கு வந்திருக்கிறார். அது கூடவும் அவர்களுக்குச் சாதகமாகவே அமையும். அதில் சந்தேகம் கொள்ளத் தேவையில்லை. 

வடக்குக் கிழக்கில் உருவாகியிருக்கின்ற தமிழ்த் தேசிய அரசியல் வெறுப்பு என்கிற பாதகத்தை விளங்கிக் கொள்ளாத  தமிழ்த் தேசிய அரசியல் கட்சியினர் இப்போதும் தமது வெறுப்புணர்வுகளையும், வெப்பு சாரங்களையும் கோப தாபங்களையும், இறுமாப்புகளையும், வெட்டுக்குத்துக்களையுமே வெளிப்படுத்தியே வருகின்றனர். உள்ளூராட்சி தேர்தல் காலத்தில் கூட இவ்வாறான சிந்தனைகளும் செயற்பாடுகளும் தமிழ்த் தேசிய அரசியல் தரப்பினரிடம் காணப்படுவது நல்லவிதமான முன்னேற்றத்தைக் கொடுக்கப்போவதில்லை.

அது தமிழர்களின் அபிலாசை நிறைவேற்றத்துக்கு எதிரான நிலையைத் தொடர்ந்து வலுப்படுத்தும். இது தமிழ்த் தேசிய அரசியலுக்குப் பாதகமானது.வடக்கு கிழக்கு தமிழர்களின் அரசியல் அபிலாசைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கான போராட்டம் ஆரம்பிக்கப்பட்ட காலத்தில் போராட்ட இயக்கங்களிடையே இருந்த ஒற்றுமை சீர்குலைவை தமக்குச் சாதகமாக்கிக் கொண்ட இந்தியா விடுதலைப் புலிகளுக்கு எதிரான சக்திகளை உருவாக்கிக் கொண்டது. அதே நேரத்தில், அண்டை நாடான இலங்கையின் இனப்பிரச்சினை தமக்குச் சாதகமான மாற்றிக் கொண்டது. பயன்படுத்தவும் ஆரம்பித்தது. அது இந்தியாவுக்கு அதிக பயனையே 
கொடுத்தது எனலாம். 

எப்போதும் இந்தியா கைக்கொள்ளும் தமக்குச் சாதகமான ஆட்சிகளையே வைத்துக்கொள்ளல் நிலைப்பாடு ஒவ்வொரு நாட்டிலும் வாய்ப்பதில்லை. ஆனால், நாடி பிடிப்புக்காக அனுரகுமாரவை இந்தியாவுக்கு அழைத்ததன் காரணமாக இப்போது ஒரு சிறப்பான நட்பு அரசாங்கமாக அதனைப் பயன்படுத்துகிறது என்று கூறலாம்.

அது இலங்கை மித்ர விபூஷண் இந்தியப் பிரதமருக்கு வழங்கும் அளவுக்கு நிலைமை ஏற்படுத்தியிருக்கிறது. தாங்கள் தவறு செய்துவிட்டோமோ என்று தலையில் கை வைக்காமல் அதனையே தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொள்ளலே இப்போது நடைபெறுகிறது. இது இலங்கைக்கும் பொருந்தும். 

இந்த இடத்தில்தான், தமிழ்த் தேசிய அரசியலின் ஒற்றுமை முக்கியம் உடையதாக இருக்கிறது. இலங்கையில் புரையோடிப்போன இனப்பிரச்சினைக்கு வெறுமனே புதிய அரசியலமைப்போ, அரசியலமைப்புத் திருத்தம் தீர்வாக அமைந்து விடப் போவதிதில்லை. இதய சுத்தியுடனான அதிகாரப் பகிர்தல் ஒன்று நடைபெற வேண்டும்.

அதற்குச் சிங்கள அடிப்படைவாதம் இடம் கொடுக்க வேண்டும். அது ஒற்றையாட்சியை உடைய இலங்கையில் ஒருபோதும் சாத்தியமில்லை.இலங்கையின் உள்விவகாரங்களில் தலையிடா கொள்கையை கடைபிடித்து வரும் இந்தியா தம்முடைய முழுமையான பங்களிப்புடன் ஏற்படுத்தப்பட்ட 13ஆவது திருத்தத்தைக் கூட முழுமையாக அமல்படுத்துங்கள் என்று அழுத்தம் கொடுப்பதில்லை.

ஆனால், இலங்கை அரசு, தமிழ் மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றம், இலங்கை அரசியலமைப்பை முழுமையாக அமுல்படுத்துதல், மாகாணசபைத் தேர்தல்களை நடத்துதல் என்பவை 13ஆவது திருத்தத்தையே சுட்டி நிற்கிறது என்ற வகையில் இந்தியா ஒரு முடிவுக்கு வந்துவிட்டது என்பது தெரிகிறது. 

இலங்கை அரசாங்கம் புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிப் பேசிக்கொண்டிருக்கும் நேரத்தில் இந்தியப் பிரதமரின் இக்கருத்து தமிழ் மக்களுக்கு மகிழ்ச்சியானதாக இருக்க வேண்டும். இருந்தாலும் தமிழ் அரசியல் தலைவர்களிடம் இல்லாத ஒற்றுமை காரணமாக அதன் பயன் முழுமையாகத் தமிழர்களுக்குக் கிடைக்காது என்றே 
சொல்ல வேண்டும். 

ஈழத்தமிழர்களின் நியாயமான உரிமைகளை இந்தியா புரிந்துகொள்ள வேண்டும் என்று எதிர்பார்க்கிற தமிழர்கள் தமிழரின் பாரம்பரிய பூமியான வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தில் உள்ளக சுயநிர்ணய அடிப்படையிலேனும் குறைந்தது ஒரு சமஷ்டி முறையிலான 
ஆட்சி முறையை அமைப்பது தொடர்பில் இந்தியா முயற்சிகளை மேற்கொள்ளுமாக இருந்தால் சிறப்பு. 

அவ்வாறானால், ஒருமித்த தமிழர் நிலைப்பாடு ஒன்றுக்குத் தமிழ்த் தரப்பு வருதல் முக்கியமாகும்.  அதே நேரத்தில் தமிழ் மக்களின் நிலைப்பாடுகளைப் புரிந்து கொண்டு தமிழ்த் தேசிய அரசியலின் வீழ்ச்சிக்கான காரணங்களைக் கண்டறிந்து சரி செய்தல் உடனடியாக நடைபெற வேண்டும்.

அதற்குக் காலம் தாழ்த்துதல் கூடாது. பூனைக்கு மணி கட்டுவதற்கான சந்தர்ப்பம் கிடைக்கும் போது அதனைக் கட்டாது தவறவிட்டால் இறுதியில் பூனையைத் தேட வேண்டி ஏற்படலாம்.
இங்கு நடைபெற்ற யுத்தத்தை தமக்குச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டிருந்த இந்தியா தமிழீழ விடுதலைப் போரை நசுக்குவதிலும், இறுதிப்போரில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதற்கும் காரணமாக அமைந்திருந்தது,

அதனால் தான், போர்க்குற்றத்தில் ஈடுபட்டவர்களை ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் மூலம் சட்டத்தின் முன் நிறுத்தக் கோரி ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் புலம்பெயர் மக்களின் நீதிக்கான போராட்டங்கள் ஊடாக தீர்மானம் கொண்டு வரப்பட்டபோது, இந்தியா 
தான் அதை நீர்த்துப் போகச் செய்தது.  இன்னொரு விதத்தில். இந்தியா வல்லாதிக்கம் அரசியல் நாடகத்தை அரங்கேற்றுவதாக அமைந்துவிடாமல் பார்த்துக் கொள்ளல் முக்கியம்.

லக்ஸ்மன்

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/இந்திய-அரசியல்-நாடகத்தை-கவனித்தல்/91-355182

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன்

2 months 3 weeks ago

பிரித்தானியாவின் தடை உணர்த்துவது? - நிலாந்தன்

பிரித்தானியா இலங்கையில் போர்க் காலத்தில் இழைக்கப்பட்ட மனித உரிமை மீறல்களுக்கு எதிராக அதில் சம்பந்தப்பட்ட நான்கு பேருக்கு தடை விதித்திருக்கிறது. இதுவரை காலமும் கனடா அமெரிக்கா ஆகிய நாடுகள் தடை விதித்திருக்கின்றன. பிரித்தானியா இவ்வாறு தடை விதித்திருப்பது இதுதான் முதல் தடவை.

image_2623ce9593-2.jpg

முதலில் இந்த தடை வெளிவந்திருக்கும் பின்னணியைப் பார்க்கலாம். 58 ஆவது ஜெனிவா கூட்டத்தொடர் இன்று முடிவடைகிறது. அக்கூட்டத் தொடர் நடந்து கொண்டிருந்த காலகட்டத்திலேயே பிரித்தானியாவின் தடை அறிவிக்கப்பட்டிருக்கிறது. ஏற்கனவே இரு கிழமைகளுக்கு முன்பு ஜெனிவா கூட்டத் தொடரின் பின்னணியில்,அல்ஜசிராவின் “ஹெட் டு ஹெட்” நிகழ்ச்சி ஒளிபரப்பப்பட்டது. அந்த நிகழ்ச்சியும் இப்பொழுது வெளிவந்திருக்கும் பிரித்தானியாவின் தடையும் ஏறக்குறைய ஒரே நோக்கத்தை கொண்டவை. சீன இடதுசாரி மரபில் வந்த ஜேவிபியை அடித்தளமாகக் கொண்ட தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இரண்டு வரையறைகளை உணர்த்துவதே இந்தத் தடை மற்றும் அல்ஜசீராவின் நேர்காணல் இரண்டினதும் நோக்கம் எனலாம். முதலாவது வரையறை இந்த அரசாங்கம் சீனாவை நோக்கிச் சாய்வதில் உள்ள வரையறை. இரண்டாவது இனப்பிரச்சினை தொடர்பில் பொறுப்புக்கூறாமல் தப்புவதில் உள்ள வரையறை. இதை இன்னும் அறுத்துறுத்துச்  சொன்னால்,பொறுப்புக்கூறல் என்ற கவர்ச்சியான தலைப்பின் கீழ் இலங்கை அரசாங்கத்தை தமது செல்வாக்கு மண்டலத்துக்குள் வைத்திருப்பதற்கான அழுத்தங்கள்.

பிரித்தானியாவின் தடை நான்கு பேர்களுக்கு விதிக்கப்பட்டிருக்கிறது. இவர்களில் மூவர் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தை முன்னெடுத்த அரச படைப்பிரதானிகள். ஒருவர் தமிழ்த் தரப்பில் ஒரு தளபதியாகவிருந்து பின்னர் அரச தரப்புடன் இணைந்த கருணா. இந்த நால்வரும் இலங்கைத்தீவின் சிவில் யுத்தத்தில்  செய்த குற்றங்களுக்கு எதிராகவே மேற்படி தடை விதிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரித்தானிய அரசின்  வெளிவிவகார,பொதுநலவாய மற்றும் அபிவிருத்தி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ அறிக்கையில்,கருணாவுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் அவர் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்த காலமும் பின்னர் அரச தரப்போடு இணைந்து செயல்பட்ட காலமும்  உள்ளிட்ட சிவில் யுத்த  காலகட்டத்தில் செய்த குற்றங்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது. மேலும் அந்த உத்தியோகபூர்வ குறிப்பில் கருணா தொடர்பாக  கூறப்படுகையில் “பயங்கரவாதக் குழுவான விடுதலைப் புலிகள் இயக்கம்” என்ற சொற்பிரயோகம் உண்டு.

நாலாம் கட்ட ஈழப்போரில் கருணா அரச தரப்புடன் இணைந்து செயல்பட்டதை வைத்து இந்த தடை அரசு படைப்பிரதானிகளுக்கும் அரசாங்கத்தோடு இணைந்து செயல்பட்ட கருணாவுக்கும் எதிரானது என்றுதான் ஒரு பொதுவான தமிழ் விளக்கம் காணப்படுகின்றது. ஆனால் அது முழு உண்மையல்ல. இந்தத் தடைக்குள் விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான குற்றச்சாட்டுகளும் உண்டு. ஏற்கனவே ஐநாவின் அறிக்கைகளில் “போரில் ஈடுபட்ட இரண்டு தரப்புக்களுக்கும்” எதிராக என்று குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்க வேண்டும்.

அதுமட்டுமல்ல மேற்படி குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக பயன்படுத்தப்பட்ட வார்த்தைகளிலும்“மனித உரிமை மீறல்கள்,மனித உரிமைத் துஷ்பிரயோகங்கள்” போன்ற வார்த்தைகள்தான் காணப்படுகின்றன. இன அழிப்பு என்ற வார்த்தை இல்லை. அதாவது பிரித்தானியாவின் தடையானது நடந்தது இனஅழிப்பு என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. கடந்த 15ஆண்டுகளாக ஐநாவின் அறிக்கைகளிலும் அதுதான் காணப்படுகின்றது. அங்கேயும் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்றவை இனஅழிப்பு என்று உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை.

Screenshot-2025-04-05-193056-ccccc-e1743

இதில் ஒப்பீட்டளவில் கனடாவில் நிறைவேற்றப்பட்ட இரு தீர்மானங்கள் இன அழிப்பு என்பதனை ஏற்றுக்கொள்கின்றன. தீர்மானங்களில் இன அழிப்பு என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அது கனடாவின் இலங்கை தொடர்பான வெளியுறவு அணுகுமுறைகளில் வெளியுறவுக் கொள்கைத் தீர்மானமாக எடுக்கப்படவில்லை. அதாவது ஒரு ராஜதந்திர முடிவாக அது நடைமுறையில் இல்லை.

எனவே கடந்த 15 ஆண்டுகளாக மேற்கத்திய நாடுகளும் ஐநாவும் இலங்கை இனப்பிரச்சினை தொடர்பாக எடுக்கும் உத்தியோகபூர்வ நிலைப்பாடுகளைத் தொகுத்துப் பார்த்தால் அங்கே ஒரு பொதுத் தன்மையைத் தமிழர்கள் கண்டுபிடிக்கலாம். அது என்னவென்றால் இலங்கைத் தீவில் இடம்பெற்றது இன அழிப்பு என்பதனை உத்தியோகபூர்வ வெளியுறவுக் கொள்கை நிலைப்பாடாக மேற்கு நாடுகள் இதுவரை எடுத்திருக்கவில்லை. ஐநாவும் அது இனப்படுகொலை என்பதனை உத்தியோகபூர்வமாக ஏற்றுக்கொள்ளவில்லை. இது முதலாவது.

இரண்டாவது,கடந்த 15 ஆண்டுகளாக விடுதலைப் புலிகள் இயக்கத்துக்கு எதிரான தடைகளை எல்லா நாடுகளும் தொடர்ந்து பேணுகின்றன. தாயகத்தில் செயல்படாத ஒரு அமைப்புக்கு எதிராகத் தடையைத் தொடர்ந்து பேணுவதன் மூலம் அவர்கள் தமிழ் மக்களுக்கு உணர்த்த முற்படும் வரையறைகள் எவை?

மூன்றாவது, ஐநாவில் இலங்கை இனப்பிரச்சினையானது வரையறுக்கப்பட்ட ஆணையைக் கொண்ட ஐநாவின் உறுப்பாகிய மனித உரிமைகள் பேரவைக்குள்தான் பெட்டி கட்டப்பட்டிருக்கிறது. மனித உரிமைகள் பேரவையானது ஐநாவின் 8 உறுப்புகளில் ஒன்று. பாதுகாப்புச் சபை, பொதுச் சபை போன்று அதிகாரம் மிக்கதல்ல. ஒரு நாட்டுக்கு எதிராக படையினரை அனுப்புவதற்கோ அல்லது பொருளாதாரத் தடைகளை விதிப்பதற்கோ தேவையான ஆணை மனித உரிமைகள் பேரவைக்குக் கிடையாது. சம்பந்தப்பட்ட நாட்டின் அரசாங்கம் ஏற்றுக்கொண்டால் மட்டுமே மனித உரிமைகள் பேரவை அந்த நாட்டில் இறங்கி வேலை செய்யலாம்.

குறிப்பாக 2021 ஆம் ஆண்டிலிருந்து ஐநா மனித உரிமைகள் பேரவைக்குள் ஓர் அலுவலகம் இயங்கி வருகிறது.இலங்கைத்தீவின் போர்க்களத்தில் மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களுக்கு எதிரான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஓர் அலுவலகம் அது. அப்படி ஒரு பொறிமுறை வேண்டும் என்று 2021 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தமிழ்த்தேசியக் கட்சிகள் கூட்டாக ஒரு கடிதத்தை எழுதின.அந்தப் பொறிமுறையானது மனித உரிமைகள் பேரவைக்கு வெளியே பொறுப்பு கூறலைக் கொண்டு போகவேண்டும் என்பது கடிதத்தின் சாராம்சம் ஆகும். மேலும் அந்தப் பொறிமுறைக்கு ஒரு கால வரையறை உருவாக்கப்பட வேண்டும் என்றும் அந்தக் கூட்டுக் கடிதத்தில் கேட்கப்பட்டிருந்தது. ஆனால் இந்தக் கோரிக்கைகளில் பெரும்பாலானவை ஐநாவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை.2021ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட அந்தப் பொறிமுறையானது ஐநா மனித உரிமைகள் பேரவைக்கு உட்பட்ட ஓர் அலுவலகமாகத்தான் உருவாக்கப்பட்டது. அதாவது பலவீனமான ஆணையை கொண்டது.

இதுதான் ஐநாவில் தமிழ் மக்களுக்கு கிடைக்கக்கூடியவற்றின் வரையறை. இவ்வாறு கடந்த 15 ஆண்டு காலமாக மேற்கை மையமாகக் கொண்ட, அல்லது ஐநாவை மையமாகக் கொண்ட நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தின் விளைவுகளைத் தொகுத்துப் பார்த்தால் பின்வரும் சித்திரம் கிடைக்கும்.

மேற்கு நாடுகள் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தத்தைப் பிரயோகிக்கும் அதே சமயம் நீதிக்கான தமிழ் மக்களின் கோரிக்கைகளை முழுமையாக ஏற்றுக்கொள்ளவில்லை.அதோடு தமிழ் மக்களுக்கு அனைத்துலக அளவில் இருக்கக்கூடிய ராஜதந்திர வாய்ப்புகளின் வரையறைகளையும் அவை உணர்த்துபவைகளாகக் காணப்படுகின்றன.

s300_Sri_Lankan_War_Atrocities_SQUARE__0

எனினும் 15 ஆண்டுகளின் பின்னரும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்ட வழியில் தமிழ் மக்கள் மெதுமெதுவாக முன்னேறி வருகிறார்கள் என்பதனை பிரித்தானியாவின் தடை உணர்த்துகின்றது. குறிப்பாக நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் புலம்பெயர்ந்த தமிழர்கள் பெற்ற ஆகப்பிந்திய வெற்றியாகவும் அதைக் கூறலாம். அண்மையில் கனேடிய உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பும் அத்தகையதே.கனடாவில் நிறைவேற்றப்படட இனஅழிப்பு அறிவூட்டடல் தீர்மானத்திற்கு எதிரான வழக்கில்,கனேடிய உயர் நீதி மன்றத்தின் தீர்ப்பு தமிழ் மக்களுக்கு உற்சாகமூட்டுவது.

இவை யாவும் வரையறைக்குட்பட்ட வெற்றிகள்தான்.நீதிக்கான போராட்டத்தில் தமிழ் மக்கள் மேலும் நீண்ட தூரம் பயணிக்க வேண்டியுள்ளது.கனடா, அமெரிக்கா,பிரித்தானியா போன்ற நாடுகள் விதித்திருக்கும் தடைகளும் குறிப்பாக கனடாவில் நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு உற்சாகமூட்டுபவை.அதேசமயம் மேற்கு நாடுகளின் மேற்படி நகர்வுகள் யாவும் அந்தந்த நாடுகளின் பூகோள ராணுவ அரசியல் பொருளாதார நலன்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தான் என்பதையும் தமிழர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.அதை அவர்கள் தமிழ் மக்களின் பெயரால் “பொறுப்புக்கூறல்” என்ற தலைப்பின் கீழ் ராஜதந்திரமாக முன்னெடுக்கின்றார்கள்.

இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் மட்டுமல்ல இந்தியா,சீனா,ஐநா முதலாக உலகில் எந்த ஒர் அரசுக் கட்டமைப்பும் இலங்கைத் தமிழர்களின் விடயத்தில் அவ்வாறுதான் முடிவுகளை எடுக்கும்.அரசுகள் எப்பொழுதும் தங்களுடைய ராணுவப் பொருளாதார அரசியல் நோக்கு நிலைகளில் இருந்துதான் முடிவுகளை எடுக்கும்.ஏன் கடவுளுக்கு ஓர் அரசிருந்து அங்கு முடிவு எடுக்கப்பட்டாலும் அப்படித்தான் அமையும்.

இதில் தமிழர்கள்தான் தங்களுடைய நலன்களும் வெளி அரசுகளின் நலன்களும் இடை வெட்டும் ஒரு பொதுப் புள்ளியைக் கண்டுபிடித்து அங்கிருந்து தொடங்கி தமக்குக் கிடைத்திருக்கும் ராஜதந்திர வாய்ப்புகளை எப்படி முழு வெற்றியாக மாற்றுவது என்று திட்டமிட்டுச் செயற்பட வேண்டும்.அதாவது தமிழ் மக்கள் உலக அளவில் தங்களுக்குள்ள வரையறைகளையும்  வாய்ப்புகளையும்  நன்கு விளங்கி வைத்திருக்க வேண்டும்.கிடைத்திருக்கும் வாய்ப்புக்களைப் பயன்படுத்தி வரையறைகளை எப்படிக் கடப்பது அல்லது உடைப்பது என்று திட்டமிட்டுச்  செயற்பட வேண்டும்.

கடந்த 15 ஆண்டுகளாக நிறைவேற்றப்பட்ட தடைகளும் தீர்மானங்களும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்கு கிடைத்த உற்சாகமூட்டும் வெற்றிகளாகும். தமிழ் மக்கள் யாருக்கு எதிராக நீதியைக் கேட்டு போராடுகிறார்களோ அவர்கள் அங்கு தண்டிக்கப்படுகிறார்கள்.மேற்கு நாடுகளின் தடைகள் ஒருவிதத்தில் தமிழ் மக்களுக்கும் வரையறைகளை உணர்த்துபவைதான்.என்றாலும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்புக்கு எதிராக அதன் தலைக்கு மேல் தொங்கிக் கொண்டிருக்கும் கத்திகளாக அவை காணப்படுகின்றன.இந்த விடயத்தில் மேற்கு நாடுகள் தங்களோடு முழுமையாக இல்லை என்று கருதி தமிழ் மக்கள் அவற்றுக்கு எதிரான நிலைப்பாட்டை எடுக்கத் தேவையில்லை. தடைகள் விடயத்தில் மேற்கும் ஐநாவும் அரைவாசி அளவுக்கு தமிழ் மக்களுக்குச் சாதகமாக நிற்கின்றன.எனவே தமக்கு கிடைத்திருக்கும் பாதியளவு சாதகமான ராஜதந்திர வாய்ப்புகளை முழு அளவு சாதகமானவைகளாக எப்படி மாற்றுவது என்றுதான் தமிழ்த் தரப்பு சிந்திக்க வேண்டும்.

வெளியரசுகள் அவற்றின் நலன் சார்ந்து எடுக்கும் நகர்வுகளை எப்படி ஈழத் தமிழர்கள் தமது நலன் சார்ந்து வெற்றிகரமாகக் கையாளலாம் என்று சிந்திக்க வேண்டும். இதைத் தொகுத்துச் சொன்னால் தமிழ் மக்கள் ஓர் அரசு போல சிந்திக்க வேண்டும். ஒரு அரசு இன்னொரு அரசோடு கொள்ளும் உறவுகளில் இரண்டு தரப்புக்கும் பொதுவான நலன்கள் ஒன்றை ஒன்று வெட்டும் புள்ளியில்தான் உறவுகள் விருத்தி அடைகின்றன. எனவே ஈழத் தமிழர்கள் ஓர் அரசு போல சிந்தித்து முடிவெடுக்க வேண்டும். ராஜதந்திரத்தில் நலன்கள்தான் முக்கியம். அறம்;தர்மம்;நீதி போன்றவை அங்கே கிடையாது. தொப்புள்கொடி உறவு;இதயமும் இதயமும் கலக்கும் உறவு; என்பவையெல்லாம் கிடையாது. நலன்களும் நலன்களும் இடை வெட்டும் புள்ளிகளைத் தீர்க்க தரிசனமாகக் கையாள்வதுதான் ராஜதந்திரம். எனவே ஓர் அரசுபோலச் சிந்தித்து ஈழத் தமிழர்கள் முடிவெடுக்க வேண்டும்.பிரித்தானியாவின் தடை தமிழ் மக்களுக்கு அண்மையில் கிடைத்திருக்கும் ஒரு வெற்றி. அந்த வெற்றி முழுமையானது இல்லை. அதை எப்படி ஒரு முழுமையான ராஜதந்திர வெற்றியாக மாற்றுவது என்பது ஈழத் தமிழர்கள் ஓர் அரசுபோலச் சிந்தித்து முடிவெடுப்பதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் ஓர் அரசு போல் சிந்திப்பதென்றால் அதற்கு முதலில் தமிழ் மக்கள் ஒரு தேசமாகத் திரள வேண்டும்

https://www.nillanthan.com/7265/

திரியாய் மக்களின் நிலங்கள் ஆக்கிரமிப்பு : சொந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியவில்லையென காணி உரிமையாளர்கள் ஆதங்கம்!

2 months 3 weeks ago

01 APR, 2025 | 01:07 PM

image

துரைநாயகம் சஞ்சீவன்

திரியாய் கிராமமானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராம சேவகர் பிரிவுகளை உள்ளடக்கியதாக காணப்படுகிறது. இங்கு தமிழர்கள் 531 பேர், சிங்களவர்கள் 274 பேர், முஸ்லிம் ஒருவர் என 806 பேர் வசித்து வருகின்றார்கள். 

வன வள பாதுகாப்பு திணைக்களத்தினால் திரியாய் வட்டாரத்தில் 3000 ஏக்கருக்கு மேற்பட்ட மக்கள் விவசாயம் செய்த நிலங்கள் 1987 மற்றும் 2012ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் கையகப்படுத்தப்பட்டுள்ளன.

அந்த வகையில் பின்வரும் கிராம சேவகர் பிரிவுகளில் கையகப்படுத்தப்பட்டுள்ள, மக்கள் காலாகாலமாக பயன்படுத்திவந்த 2712 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தொடர்ச்சியாக கோரிக்கை விடுக்கப்பட்டு வருகின்றபோதும் இதுவரை எவ்வித முன்னேற்றமும் இல்லை.

செந்தூர் கிராம சேவகர் பிரிவில் 474 ஏக்கரும் கல்லம்பத்தை கிராம சேவகர் பிரிவில் 636 ஏக்கரும் கட்டுக்குளம் கிராம சேவகர் பிரிவில் 1080 ஏக்கரும் திரியாய் கிராம சேவகர் பிரிவில் 522 ஏக்கருமான காணிகளை விடுவிக்குமாறு கோரி விண்ணப்பிக்கப்பட்டு வருகின்றன.

இப்பகுதியில் உள்ள 4 இராணுவ முகாம்களுக்காகவும் 3 கடற்படை முகாம்களுக்காகவும் 55 ஏக்கருக்கு மேற்பட்ட மக்களுடைய காணிகள் வழங்கப்பட்டுள்ளதுடன் திரியாய் மக்கள் நீண்டகாலமாக சுடுகாடாக பயன்படுத்தி வந்த 80 ஏக்கர் காணியும் கடற்படையினரால் கையகப்படுத்தப்பட்டுள்ளது.

தொல்லியல் திணைக்களத்தினால் 466 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன். திரியாய் கிராமத்தில் உள்ள 2020.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட பத்மராஜ பபத புராண ரஜமகா விகாரைக்கு பூஜாபூமி மற்றும் அளிப்பு மூலமாக 44.325 ஹெக்டேயர் காணியும், திரியாய் கிராமத்தில் உள்ள 2018.05.30 அன்று பதிவு செய்யப்பட்ட சப்தநாக பபத வன செனசுந்த விகாரைக்கு 2019.07.06 அன்று அளவையிடப்பட்டு அளிப்பு மூலமாக 20.2343 ஹெக்டேயர் காணியும், கல்லறாவ கிராமத்தில் உள்ள 2022.08.20 அன்று பதிவு செய்யப்பட்ட தபசு பல்லுக வனசெனசுன விகாரைக்கு அளிப்பு மூலமாக 2020.12.30 அன்று 2.4598 ஹெக்டேயர் காணியும் ஒதுக்கப்பட்டு அளிக்கப்பட்டது. (2020.10.02 வர்த்தமானி) எனினும் இவற்றை விட மேலதிகமான காணிகளையும் கையகப்படுத்தியுள்ளனர்.

வனவள பாதுகாப்புத் திணைக்களத்தினர் திரியாய் பகுதியில் ஏறத்தாழ 2000 ஏக்கரில் எல்லைக் கற்களை போட்டு, அதற்குள் மக்களை செல்ல விடாத ஒரு சூழ்நிலையில், ஆத்திக்காடு பகுதியில் 349 ஏக்கரையும், திரியாய் குள வயலில் 107 ஏக்கரையும், குறுப்பிட்டி கண்டலில் 400 ஏக்கரையும், வேடன்குளத்தில் 310 ஏக்கர் நிலத்தையும் விடுவிப்பதற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டும் அதில் எவ்வித முன்னேற்றமும் இல்லை.

புல்மோட்டை அரிசிமலை விகாரையின் விகாராதிபதியான பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் ஆத்திக்காட்டு வெளிப் பகுதியில் உள்ள தமிழ் மக்கள் காலாகாலமாக விவசாயம் செய்துவந்த 64 ஏக்கரை தனியாகவும், 18 ஏக்கரை தனியாகவும் குச்சவெளி கமநல சேவை நிலையத்தில் தற்காலிகமாக பதிவு  செய்துகொண்டு, மொத்தமாக 82 ஏக்கர் காணியை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகிறார். இதில் வைத்தியநாதன் தமயந்திதேவி என்பவருக்கு 5 ஏக்கர் பிரித்தானியர் காலத்து உறுதிக் காணியும் காணப்படுகிறது.

நீண்டகாலமாக பௌத்த பிக்குவால் ஆக்கிரமிக்கப்பட்டு செய்கையிடப்பட்டு வருகின்ற விவசாய காணிகளை விடுவிக்குமாறு மாவட்ட அரசாங்க அதிபரிடம் மக்கள் முறையிட்டதையடுத்து 07.10.2024 அன்று அரசாங்க அதிபரின் தலைமையில் மாவட்ட செயலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின்போது ஆவணங்கள் உள்ள காணிகளில் விவசாயம் மேற்கொள்ளுமாறு அரச அதிபர் பணிப்புரை வழங்கியிருந்தார். 

இக்கலந்துரையாடலில் அரச அதிகாரிகள், அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் உட்பட பௌத்த மதகுருமார்கள், தமிழ், முஸ்லிம் மற்றும் சிங்கள விவசாயிகள் உட்பட 30க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.

7.jpeg

மறுநாள் அப்பகுதியில் விவசாயிகள் விவசாய நடவடிக்கைகளில் ஈடுபடச் சென்றபோது அந்த  விகாராதிபதி விவசாயப் பணிகளுக்கு தடை ஏற்படுத்தியிருந்தார். 

இந்நிலையில் கிழக்கு மாகாண ஆளுநரின் ஏற்பாட்டில் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச செயலாளர் அலுவலகத்தில் கலந்துரையாடல் ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இக்கலந்துரையாடலில் ஆளுநரின் பிரத்தியேக செயலாளரும் குச்சவெளி பிரதேச சபையின் செயலாளருமான ராஜசேகர், கிழக்கு மாகாண காணி ஆணையாளர், உதவி பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் உயர் அதிகாரிகள், அரிசி மலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் மற்றும் விவசாயிகள் உட்பட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பொதுமக்கள், தங்களுடைய உறுதி காணிகளை பௌத்த மதகுரு ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருவதாகவும் அதனை மீட்டுத் தருமாறும் கோரினர். 

அதனையடுத்து, கருத்து தெரிவித்த பௌத்த மதகுரு, தன்னிடம் 18 ஏக்கர் உறுதி காணியும் 50 ஏக்கர் பூஜா பூமிக்குரிய காணியும் இருப்பதாக கூறியதோடு, அதற்கு மேலதிகமாக இருக்கிற காணியில் பொதுமக்கள் விவசாயம் செய்வதில் தனக்கு எந்தவித ஆட்சேபனையும் இல்லை எனவும் தெரிவித்தார். 

அதன் பின்னர், காணி அளக்கும் நடவடிக்கையை முன்னெடுக்குமாறு சபையில் தெரிவிக்கப்பட்டது. 

வனவள பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர், தொல்லியல் துறையினர், கிராம உத்தியோகத்தர் உட்பட ஏனைய அரச அதிகாரிகள் முன்னிலையில் காணி அளவீடு செய்து பௌத்த பிக்குவுக்குரிய பகுதியை வழங்கி ஏனைய பகுதிகளில் மக்களை விவசாயம் செய்யுமாறு சபையில் முடிவு எட்டப்பட்டது. 

8.jpeg

அந்த வகையில் மறுநாள் 16.10.2024 அன்று நில அங்கீகாரம் பெற்ற நில அளவையாளரான கணபதிப்பிள்ளை சிவானந்தன் என்பவரினால் நில அளவை செய்யப்பட்டு பௌத்த மதகுருவுக்கு சொந்தமான காணி என கூறப்படுகின்ற 18 ஏக்கர் காணியும், பூஜா பூமி எனும் பெயரில் வழங்கப்பட்ட 50 ஏக்கர் காணியும் அளவீடு செய்து வழங்கப்பட்டு, ஏனைய பகுதிகள் மக்களுடைய விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்பட்டன. எனினும், அக்காணிகளில் மீண்டும் விவசாயப் பணிகளில் ஈடுபட பௌத்த மதகுரு தடையாக இருப்பதாக மக்கள் தெரிவிக்கின்றனர். அது மட்டுமன்றி, காலாகாலமாக வழிபட்டு வந்த நாகதம்பிரான் ஆலயத்துக்கு சென்று வழிபடவும் இந்த மதகுரு தடையாக இருப்பதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.

9.jpeg

திரியாய் பகுதியைச் சேர்ந்த விவசாயி நடராஜபிள்ளை மாணிக்கநடராசா இது தொடர்பாக கூறுகையில், 

“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எங்களுடைய வாழ்வாதார தொழில் விவசாயமும் கால்நடை வளர்ப்பும் ஆகும். எங்களுக்கு வளத்தாமலைப் பகுதியில் 28 ஏக்கர் உறுதிக் காணி இருக்கின்றது. இதனை அப்பா, அப்பாவின் அப்பா காலத்தில் இருந்து நாங்கள் செய்து வருகின்றோம். 1965ஆம் ஆண்டில் இருந்து அந்தக் காணியில் நான் விவசாயம் செய்து வருகின்றேன்.

10.jpeg

நாட்டில் ஏற்பட்ட யுத்தம் காரணமாக 1984ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து வன்னி பகுதிக்கும் இந்தியாவுக்கும் சென்றோம். 2002ஆம் ஆண்டு திரியாய் மீள்குடியேற்றப்பட்டபோது நான் இந்தியாவில் இருந்ததால் வர முடியாமல் போனது. பின்னர் 2010ஆம் ஆண்டளவில் நான் எமது கிராமத்துக்கு வந்து எமது காணிகளில் விவசாயம் செய்வதற்காக சென்றபோது வனவளத்துறையினர் எங்களை அப்பகுதிக்குள் செல்ல விடாது தடுத்தனர். இந்நிலையில் 2020ஆம் ஆண்டு அரிசிமலைப் பிக்கு வந்து எமது உறுதிக் காணிகளில் விவசாயம் செய்து வருகிறார். 

இது தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தெரியப்படுத்தியும் எவ்வித பலனும் இல்லை. எங்களுடைய உறுதிக் காணிகளில் விவசாயம் செய்யச் செல்லும் எம்மை தடுத்துக்கொண்டு பௌத்த பிக்கு காட்டைத் தள்ளி, விவசாயம் செய்ய ஆதரவாக வனவளத்துறையினர் செயற்படுகின்றார்கள். 

2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரைக்கும் எமது காணிகளை தனக்கு வேண்டிய சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு வழங்கி குத்தகை பெற்று வருகிறார். இன்னும் எமது காணியில் எம்மால் விவசாயம் செய்ய முடியாத சூழ்நிலையே காணப்படுகிறது. ஊழல் அற்ற புதிய அரசாங்கம் வந்திருக்கிறது என்கிறார்கள். ஆனால் எம்மைப் போன்ற ஏழை மக்களுக்கு நீதி என்பது எட்டாக்கனியாகவே இருக்கிறது.

11.jpeg

அதுமட்டுமல்லாமல் காலாகாலமாக எமது மக்கள் வழிபட்டு வந்த “வளத்தாமலையான்” என்று அழைக்கப்படுகின்ற நாகதம்பிரான் ஆலயத்தையும் அரிசிமலைப் பிக்கு தங்களுடைய நாக விகாரை என்று சொல்லிக்கொண்டு எமது மக்களை வழிபட விடாமல் தடுத்து வருகின்றார். 

இந்த ஆலயத்தில் எமது பரம்பரையினரே பூசை செய்து வருகின்றனர். எனது அப்பாவுக்குப் பிறகு நான்தான் பூசாரியாக கடமையாற்றி வருகின்றேன். அருகில் உள்ள புல்மோட்டையைச் சேர்ந்த முஸ்லிம் மக்களும் வளத்தாமலையானுக்கு நேர்த்திக்கடன் வைத்து, நூல் கட்டுவதற்கும் திருநீறு இடுவதற்கும் வருவார்கள். 

ஒவ்வொரு வருட ஆரம்பத்திலும் வளத்தாமலையானுக்கு பொங்கிப் படைத்துதான் எமது விவசாய நடவடிக்கைகளை தொடங்குவோம். மாடு கன்று போட்டால் முதல் கறக்கின்ற பாலை வளத்தாமலையானுக்கு பொங்கித்தான் நாங்கள் பாவனைக்கு எடுப்போம். இதை எமது மக்கள் எனக்கு நினைவு தெரிந்த காலத்தில் இருந்தே செய்து வருகின்றார்கள். எமது ஆலயத்தையும் சப்த நாக பபத விகாரை என சொல்லிக்கொண்டு அதையும் ஆக்கிரமித்து அதைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய காணிகளையும் ஆக்கிரமித்து வைத்துக்கொண்டிருக்கின்றார்கள். 

எமக்கு ஏதேனும் துன்பம் நேர்ந்தால் எமது வளத்தாமலையானுக்கு நேர்த்தி வைப்போம். ஆனால், எமது நேர்த்திக்கடனைக் கூட செலுத்த முடியாமல் பல வருடகாலமாக எமது மக்கள் தவித்து வருகின்றார்கள். சிலர் 2 கிலோமீற்றர் தூரத்தில் உள்ள பிரதான வீதியில் இருந்து நேர்த்திக்கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். எமது வளத்தாமலையானை வழிபடுவதற்கு எமது அனுமதி வழங்கப்பட வேண்டும். தற்போது இந்த பகுதியில் புதையல் தோண்டியிருப்பதாகவும் அறிகின்றோம்” என தெரிவித்தார். 

12.jpeg

12-1.jpeg

12-2.jpeg

மேலும், காணி பிரச்சினை தொடர்பாக திரியாய் விவசாய சம்மேளனத்தின் பொருளாளரும் விவசாயியும் ஆலய பூசகருமான மகாதேவஐயர் சாரங்கன் கூறுகையில்,

13.jpeg

“திரியாய் கிராமத்தில் நாங்கள் பரம்பரை பரம்பரையாக வசித்து வருகின்றோம். எமக்கு வளத்தாமலை கண்டப்பன் வயல் பகுதியில் எமது பாட்டனார் காலத்துக்கு முற்பட்ட காலத்தில் இருந்து 15 ஏக்கர் வயற்காணி இருக்கிறது. 

நாட்டில் ஏற்பட்ட யுத்த சூழ்நிலை காரணமாக இறுதியாக 1995ஆம் ஆண்டு காலப்பகுதியில் இடம்பெயர்ந்து 2009ஆம் ஆண்டில் மீள குடியமர்த்தப்பட்டோம். பின்னர் 2015ஆம் ஆண்டு காலப்பகுதியில் இருந்து எமது காணியை துப்புரவு செய்து விவசாயத்தில் ஈடுபட முயற்சி செய்தபோதும் வனவள பாதுகாப்புத் துறையினர், தொல்லியல் துறையினர் உட்பட அரச துறையினர் எமக்கு அனுமதி அளிக்கவில்லை.  

இந்நிலையில் எமது காணிகளை பௌத்த பிக்கு ஒருவர் அடாத்தாக பிடித்து அதை சிங்கள மக்களுக்கு குத்தகைக்கு கொடுத்து, அவர்கள் அங்கு விவசாயம் செய்து வருகின்றனர். இது தமிழ் மக்களுக்கும் சிங்கள மக்களுக்கும் இடையே சமூகப் பிரிவினையை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறது.

குறிப்பாக 80 தொடக்கம் 100 ஏக்கர் வரையான தமிழ் மக்களுக்குச் சொந்தமான காணிகளை பௌத்த பிக்குகள் அடாத்தாக பிடித்து விவசாயம் செய்து வருவதால் எமது மக்களுடைய வாழ்வாதாரம் மிகவும் பாதிக்கப்படுகிறது. 

முழுக்க முழுக்க விவசாயத்தை நம்பியே இந்த கிராம மக்கள் வாழ்ந்து வருகின்றார்கள். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இவர்களுடைய உறுதிக்காணிகளை பௌத்த பிக்குகளிடம் இருந்து மீட்டு காணி உரிமையாளர்களிடம் கையளிக்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்” என்றார். 

ஓய்வுபெற்ற அதிபர் கனகசுந்தரம் சௌந்தராசா கருத்து தெரிவிக்கையில், 

14.jpeg

“1985ஆம் ஆண்டுக்கு முன்னர் அதாவது திரியாயில் யுத்தம் இடம்பெறுவதற்கு முன்னர் எமது திரியாய் கிராமம் செல்வம் கொளிக்கும் ஊராக இருந்தது. எமது மக்கள் தன்னிறைவடைந்திருந்தனர். இதற்கு காரணம் விவசாயமும் கால்நடை வளர்ப்பும்தான். இதனால் அயல் கிராமங்களில் இருந்து குறிப்பாக திருகோணமலை நகரத்தில் இருந்து நிதி சேகரிக்க எமது கிராமத்துக்குத்தான் வருவார்கள். 

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக எமது மக்கள் இடம்பெயர்ந்து பல்வேறு இடங்களுக்குச் சென்று மீண்டும் 2002ஆம் ஆண்டு மீள குடியமர்த்தப்பட்டார்கள். நீண்டகாலமாக எமது மக்கள் கிராமத்தில் இல்லாததன் காரணமாக அவர்களுடைய பொருளாதாரம் மிகவும் பின்தங்கிய நிலையில் உள்ளது. 

இந்நிலையில் அவர்களுடைய பொருளாதாரத்தை கட்டியெழுப்பும் முகமாக தமது ஜீவனோபாயத் தொழிலான விவசாயத்தை மேற்கொள்வதற்கு வனவள திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களத்தினர் எல்லைக் கற்களை போட்டு அப்பகுதிக்குள் செல்ல விடாமல் தடுத்து  வருகின்றனர்.

தொடர்ச்சியாக விவசாயம் செய்யாததன் காரணமாக பற்றைக் காடுகள் வளர்ந்துள்ளன. எனினும் அப்பகுதியில் இன்னமும் வயல் வரம்புகள் காணப்படுகின்றன. குறிப்பாக ஆத்திக்காடு, கொம்பெடுத்தான்மடு, கல்லம்பத்தை உட்பட பல பகுதிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. 

ஆத்திக்காடு வளத்தாமலை பகுதியில் ஒரு மலை இருக்கிறது. இதில் நாகதம்பிரான் ஆலயம் ஒன்று இருக்கிறது. இதில் மாதாந்தம் மற்றும் வருடாந்தம் பொங்கல் மற்றும் பூசை நிகழ்வுகளை எமது மக்கள் செய்து வந்தார்கள். ஆனால், அது தற்போது பௌத்த பிக்குவால் கையகப்படுத்தப்பட்டுள்ளதுடன் அதனைச் சுற்றியுள்ள தமிழ் மக்களுடைய பிரித்தானிய உறுதிக் காணிகளையும் அத்துமீறி பிடித்து குத்தகைக்கு வழங்கி வருமானம் ஈட்டி வருகின்றார். எமது மக்கள் அங்கு சென்றால் அச்சுறுத்தப்பட்டு விரட்டியடிக்கப்படுகின்றார்கள்.

அத்துடன் நீலப்பனிக்கனுக்கு அப்பால் இருக்கின்ற கொம்பெடுத்தமடு பிரதேசத்தில் 1985ஆம் ஆண்டுக்கு முன்னர் விவசாயம் செய்த தமிழ் மக்களுடைய எல்லைக் காணிகளை தமது எல்லைகள் என கூறிக்கொண்டு சுமார் 700 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகளை ஆக்கிரமித்து,  சகோதர இன மக்கள் விவசாயம் செய்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் தற்போது விவசாயம் செய்யப்படுகின்ற பகுதிகளுக்கு அருகில் உள்ள பற்றைக்காடுகளை எமது மக்கள் துப்புரவு செய்தாலும், அவர்கள் கைது செய்யப்படுகின்றனர். எனவே மக்கள் பயிர்ச்செய்கையிட்ட காணிகளுக்கு அதிகாரிகள்  வந்து ஆராய்ந்து அவற்றை மீள பெற்றுக்கொடுக்க வேண்டியது அரசாங்கத்தின் கடமையாகும்” என குறிப்பிட்டார். 

ஆத்திக்காட்டு விவசாயி கிருஸ்ணபிள்ளை சதீஸ்வரன் தனது எண்ணக்கருத்தை வெளிப்படுத்துகையில், 

15.jpeg

“எங்களுக்கு ஆத்திக்காட்டு வெளியில் வயல்காணி இருக்கின்றது. இது என்னுடைய அப்பப்பா, அப்பா என பரம்பரையாக விவசாயம் செய்து வருகின்ற காணி. 10 ஏக்கர் அளவில் இந்த காணி காணப்படுகிறது. 

நாங்கள் 1985ஆம் ஆண்டு இடம்பெயர்ந்து மீண்டும் 1990ஆம் ஆண்டு வந்து இந்த வயற்காணியில் விவசாயம் செய்தோம். பின்னர்,  1990ஆம் ஆண்டில் மீண்டும் இடம்பெயர்ந்து 2002ஆம் ஆண்டில் மீள்குடியேறி எங்கள் கிராமத்துக்கு வந்தோம். 

அந்த யுத்த காலத்தில் காணியை துப்புரவாக்கி வயல் நிலமாக்க உரிய அனுமதி தரப்படவில்லை. நாங்கள் அனுமதி பெற்று இந்த காணிகளை சீரமைக்க முற்பட்டபோது வளத்தாமலை பகுதியில் பௌத்த பிக்கு ஒருவர் வந்திருந்து, இங்கு எவரையும் விவசாயம் செய்ய விடவில்லை. இதனால் நீதிமன்றத்துக்கு சென்றதையடுத்து, தீர்ப்பு எமக்கு சார்பாக வந்தது. அதன் பின்னரும் அந்த பிக்கு எம்மை விவசாயம் செய்ய விடவில்லை. அதன் பின்னரும் இந்த விடயத்தை பாராளுமன்ற உறுப்பினர், பிரதேச செயலாளர் உட்பட பலருக்கு தெரியப்படுத்தினோம். ஆனால், எந்த தீர்வும் எமக்கு கிடைக்கவில்லை.

தற்போது வந்திருக்கின்ற புதிய அரசாங்கத்தில் எமக்கு நல்லதொரு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கையில் மாவட்ட செயலகத்தில் வைத்து காணி பிரச்சினை தொடர்பாக முறையிட்டோம். அப்போது, ஆவணங்கள் இருப்பவர்கள் காணிகளில் விவசாயம் செய்யுங்கள் என கூட்டத்தில் கூறப்பட்டது. அதை நம்பி விவசாயம் செய்ய வந்தபோது மீண்டும் பிக்கு பொலிஸ் அதிகாரிகளை அழைத்து வந்து தடை விதித்தார். 

பின்னர் ஆளுநரின் தலைமையில் குச்சவெளி பிரதேச செயலகத்தில் கூட்டமொன்று ஒழுங்குபடுத்தப்பட்டது. அதன் ஊடாக, பிக்குவுக்கு உரிய காணியை அளந்து கொடுத்துவிட்டு, எமது காணிகள் அளிக்கப்பட்டதையடுத்து, அங்கு விவசாயம் செய்ய முற்படுகின்றவேளையிலும் பௌத்த பிக்கு மீண்டும் தடைவிதித்து வருகிறார். 

சொந்த வயற்காணிகளை வைத்துக்கொண்டு அரிசியை விலைக்கு வாங்கி சாப்பிடும் நிலைக்கு நாங்கள் தள்ளப்பட்டுள்ளோம். எனவே, திரியாய் விவசாயிகளான நாங்கள் தற்போது பதவி வகித்திருக்கும் ஜனாதிபதியை நம்புகின்றோம். இந்த அரசாங்கத்தில் எமது மக்களுக்கு நிரந்தர தீர்வு கிடைக்கும் என நம்புகின்றோம்” என தெரிவித்தார். 

திரியாய் விவசாய சம்மேளனத்தின் தலைவர் அற்புதராஜன் டனுர்சன் கூறுகையில், 

16.jpeg

“எமது திரியாய் மக்களுக்கு ஆத்திக்காடு – வளத்தாமலை பகுதியில் 125 வருட பழமை வாய்ந்த, பிரித்தானியரால் வழங்கப்பட்ட உறுதியுடைய காணி இருக்கிறது. எனினும், அந்த காணிகளை அரிசிமலை விகாரையின் விகாராதிபதி பானாமூரே திலகவன்ச நாயக்க தேரர் 2020ஆம் ஆண்டில் இருந்து இற்றை வரை அடாத்தாக பிடித்து ஆக்கிரமித்து வருகிறார். 

இந்நிலையில், புதிய அரசாங்கம் வந்த பின்னர் கிழக்கு ஆளுநரின் ஆலோசனைக்கு அமைய, 07.10.2024 அன்று மாவட்ட செயலகத்துக்கு எம்மையும் பௌத்த பிக்குவையும் மாவட்ட செயலாளர் அழைத்து, எங்களது ஆவணங்களை பரிசீலனை செய்து ஆவணங்கள் இருப்பவர்கள் விவசாயம் செய்யலாம் என தெரிவித்திருந்தார். ஆனால், மறுநாள் வயலுக்குச் சென்றபோது பௌத்த பிக்கு விவசாயிகளை விரட்டியடித்தார். பின்னர் 15.10.2024 அன்று குச்சவெளி பிரதேச சபையில் கூட்டம் நடைபெற்று, அதன் ஊடாக பௌத்த பிக்குவுக்குரிய காணி அளந்து கொடுக்கப்பட்டதோடு, மக்களுடைய காணிகளில் மக்கள் விவசாயம் செய்யலாம் என்றும் கூறப்பட்டது. எனினும் தொடர்ந்து அந்த பௌத்த பிக்கு எமது மக்களுடைய காணிகளில் விவசாயம் செய்வதற்கு தடையாக இருந்து வருகின்றார்.

பௌத்த பிக்கு எமது உறுதிக்காணிகளை அடாத்தாக பிடித்து குத்தகைக்கு கொடுத்து வருடாவருடம் இலட்சக்கணக்கில் சம்பாதித்து வருகின்றார். அத்துடன் மாடி வீடு கட்டி வசித்து வருகின்றார். ஆனால் எமது மக்கள் வாழ்வாதாரம் இன்றி வறுமையில் வாடி வருகின்றார்கள். எனவே எமது மக்களுக்கு புதிய அரசாங்கத்திலாவது நியாயமான தீர்வு கிடைக்க வேண்டும்” என்று குறிப்பிட்டார். 

விவசாயி அற்புதராஜன் கௌசலா கூறுகையில், 

17.jpeg

“எமது திரியாய் கிராமத்தில் ஆத்திக்காடு எனப்படுகின்ற வயல்பகுதி 880 ஏக்கர்களை கொண்டதாக காணப்படுகின்றது. இது எமது மூதாதையர் காலத்தில் இருந்து அதாவது 1900 ஆண்டுகளுக்கு முற்பட்ட காலத்தில் இருந்து செய்கை பண்ணப்பட்டு வருகின்றது. எனக்கு இங்கு பரம்பரைக் காணி 10 ஏக்கர் இருக்கிறது. இந்த காணிகளில் 1990ஆம் ஆண்டு வரை விவசாயம் செய்து வந்தோம். பின்னர் யுத்தம் காரணமாக இடம்பெயர்ந்து வெளிமாவட்டங்களுக்கு சென்றதால் இந்தக் காணிகளில் செய்கையிட முடியாமல் போனது. 2002ஆம் ஆண்டுக்கு பிற்பட்ட காலத்தில் மீள்குடியேற்றம் நடந்தது. தொடர்ந்தும் 2009ஆம் ஆண்டும் மீள்குடியேற்றம் நடந்தது. அதன் பின்னர், எமது ஜீவனோபாய தொழிலான விவசாயத்தை நம்பித்தான் நாங்கள் இந்த கிராமத்தில் மீள குடியேறி இருக்கிறோம். நீண்டகாலமாக பயிர் செய்யாமல் பற்றை வளர்ந்து கிடக்கும் காணிகளை துப்புரவு செய்வதற்காக எம்மிடம் இருக்கின்ற உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்களை காணிபித்தும் வனவள பாதுகாப்பு திணைக்கள அதிகாரிகள் எம்மை விடவில்லை. ஆனால், பௌத்த பிக்கு எமது காணிகளை துப்புரவு செய்து விவசாயம் செய்வதற்கு திணைக்கள அதிகாரிகளும் உடந்தையாக இருந்து வருகின்றார்கள். 

அரிசிமலை பிக்கு மக்களுடைய பெருமளவான காணிகளை ஆக்கிரமித்து விவசாயம் செய்து வருகின்றார். அதில் 82 ஏக்கர் காணியை குச்சவெளி கமநல சேவை நிலையத்தின் கீழ் பதிவு செய்து பசளை பெற்றுக்கொண்டும் இழப்பீடுகள் பெற்றுக்கொண்டும் விவசாயம் செய்து வருகின்றார். 

திரியாயின் ஏனைய பகுதிகளை விட இந்த பகுதியில் மாத்திரம் உறுதி மற்றும் அனுமதிப்பத்திரங்கள் கொண்ட 800 ஏக்கருக்கு மேற்பட்ட காணிகள் இருக்கின்றன. இவற்றை வனவள பாதுகாப்பு திணைக்களம், வன ஜீவராசிகள் திணைக்களம் உள்ளிட்ட திணைக்களங்கள் எம்மை விவசாயம் செய்ய விடாமல் தடுத்து வருகின்றன. 

இந்நிலையில் பௌத்த பிக்கு எமது காணிகளில் விவசாயம் செய்து வருகின்றார். ஆனால், நாங்கள் ஒரு நேரம் கூட ஒழுங்காக சாப்பிட முடியாமல் பட்டிணியால் வாடி வருகின்றோம்” என்றார். 

இவ்வாறாக, அப்பகுதி மக்கள் தமது காணிகளில் தமக்கு உரித்து இருந்தும், விவசாயம் செய்து வாழ்வாதாரத்தை பெற்றுக்கொள்ள முடியாத அவல நிலையை வேதனையுடன் பகிர்ந்துகொண்டனர். 

திரியாய் கிராமமும் அதன் வரலாறும்

திரியாய் கிராம சேவகர் பிரிவானது 11.26 சதுர கிலோமீற்றர் பரப்பளவு கொண்டதாகும். இங்கு 300 குடும்பங்களைச் சேர்ந்த 806 பேர் வசித்து வருகின்றார்கள். இதில் ஆண்கள் 442 பேர், பெண்கள் 364 பேர். 

திரியாய் கிராம சேவகர் பிரிவானது திரியாய், மரவடிச்சோலை, கல்லறாவ ஆகிய கிராமங்களை உள்ளடக்கியதாக காணப்படுகிறது.

திரியாய் கிராமம், திருகோணமலை மாவட்டத்தில் உள்ள ஒரு பழம்பெரும் கிராமமாகும். திருக்கோணேஸ்வரர் ஆலயத் திருப்பணிக்காக குளக்கோட்டு மன்னனால் திரியாயில் மக்கள் குடியேற்றப்பட்டு, 7 குளங்கள் அமைத்துக் கொடுக்கப்பட்டதோடு கால்நடைகளும் கொடுக்கப்பட்டதாக வரலாறுகள் கூறுகின்றன. 

இந்த வரலாற்றுப் பின்னணியை நோக்குகையில், திரியாயில் இருந்து திருக்கோணேஸ்வரர் ஆலயத்துக்கு திரி, நெய் வழங்கப்பட்டு வந்ததால் “திரி - ஆய் - திரியாய்” ஆகிய சொற்கள் இணைந்து “திரியாய்” எனும் பெயர் வந்ததாகவும் கூறப்படுகிறது. குறிப்பாக, தாமரைத் தண்டில் இருந்து தயாரிக்கப்பட்ட திரியும், பசு நெய்யும் ஆலயத்துக்கு வழங்கப்பட்டு வந்ததாகவும் கூறப்படுகின்றது. 

இங்கு 1825ஆம் ஆண்டு பாடசாலையொன்று கட்டப்பட்டதாகவும், 1875ஆம் ஆண்டு பிள்ளையார் ஆலயத்தின் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டதாகவும் வரலாற்று ஆவணங்கள் கூறுகின்றன. 

1985ஆம் ஆண்டு திரியாய் கிராமம் எரியூட்டப்பட்டது. அந்த சம்பவத்தில் 12 பேர் படுகொலை செய்யப்பட்டனர். 

அவ்வேளை, கிடைத்தவற்றை எடுத்துக்கொண்டு உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு திரியாய் மக்கள் இடம்பெயர்ந்தனர். அந்த சூழ்நிலையில் தங்கள் காணிகளுக்கான ஆவணங்களை இழந்த மக்கள் இன்று தங்கள் காணிகளை உரிமை கோர முடியாமலும், காணிகளில் விவசாயம் செய்ய முடியாமலும் தவிக்கின்றார்கள். 

எனவே, அரசாங்கம் திரியாய் மக்களுடைய காணிகளுக்கான ஆவணங்களை வழங்கி அவர்களுடைய நிலங்களை விடுவித்து, அந்த நிலங்களில் அவர்கள் விவசாயம் செய்ய உதவ வேண்டும். நல்லிணக்கம், சகவாழ்வை ஏற்படுத்த வேண்டுமாயின், இன மற்றும் மதங்களுக்கிடையே பிளவுகளை ஏற்படுத்தக்கூடிய செயற்பாடுகளையும் அரசு தடுக்க வேண்டும்.

8a8c7ddc-4b26-4ad5-8950-072d1f9d8fbf.jpg

https://www.virakesari.lk/article/210824

இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் மோதி இருநாட்டு மீனவர் பிரச்னை பற்றி பேசுவாரா?

2 months 4 weeks ago

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,X/NARENDRA MODI

கட்டுரை தகவல்

  • எழுதியவர், முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பதவி, பிபிசி தமிழ்

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோதி 3 நாள் அரசு முறைப் பயணமாக இலங்கை சென்றுள்ளார். அவரது இந்த பயணத்தில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டி மீன் பிடிப்பதாக இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்திருக்கிறது.

சிக்கலான இந்தப் பிரச்னைக்கு என்னதான் தீர்வு?

மோதிக்கு இலங்கையில் உற்சாக வரவேற்பு

தாய்லாந்து தலைநகர் பாங்காங்கில் பிம்ஸ்டெக் மாநாட்டில் பங்கேற்ற இந்திய பிரதமர் மோதி, அங்கிருந்து இலங்கை தலைநகர் கொழும்புவிற்கு ஏப்ரல் 4 இரவு சென்றார்.

3 நாள் பயணமாக இலங்கை சென்றுள்ள மோதி, அந்நாட்டு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் பிரதமர் ஹரினி அமரசூரிய ஆகியோருடன் இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்துகிறார். இது அவர் இலங்கைக்கு மேற்கொண்டுள்ள நான்காவது பயணமாகும்.

அநுர குமார திஸாநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு இலங்கைக்குச் செல்லும் முதல் வெளிநாட்டுத் தலைவர் மோதிதான். ஆகவே, அவரது இந்தப் பயணம் இருதரப்பாலும் மிகுந்த முக்கியத்துவத்துடன் கவனிக்கப்படுகிறது.

இந்தப் பயணத்தின்போது சில திட்டங்களைத் துவக்கி வைக்கும் மோதி, இரு நாடுகளுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தங்களிலும் கையெழுத்திடுகிறார்.

இருந்தபோதும், எல்லை தாண்டி மீன் பிடித்ததாக தமிழக மீனவர்கள் இலங்கைக் கடற்படையினரால் கைது செய்யப்படும் விவகாரம் குறித்து பேசப்படுமா என்பது குறித்து அதிகாரப்பூர்வ தகவல் ஏதும் இதுவரை இல்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் தமிழ்நாட்டைச் சேர்ந்த 1247 மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்

6 ஆண்டுகளில் 1,200 தமிழக மீனவர்கள் கைது

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் இந்திய கடல் எல்லையைத் தாண்டி, இலங்கையின் கடற்பரப்பிற்குள் சென்று மீன் பிடித்ததாக குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்படும் நிகழ்வுகள் தொடர்ந்து நடந்துவருகின்றன.

கடந்த 6 ஆண்டுகளில் மட்டும் ஆயிரத்து இருநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள் இலங்கைக் கடற்படையால் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்திய வெளியுறவு அமைச்சகம் கொடுத்த தகவல்களின்படி, 2020 முதல் 2025 ஜனவரி மாதம் வரையிலான காலகட்டத்தில் எல்லை தாண்டி மீன் பிடித்த குற்றச்சாட்டில் இலங்கை கடற்படையினரால் 1247 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

கடந்த ஆண்டில்தான் அதிகபட்சமாக 528 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையுடன் கடலில் நடந்த மோதல்களில் 7 பேர் வரை இறந்துபோயுள்ளனர்.

2025ஆம் ஆண்டு ஜனவரிக்குப் பிறகும் குறிப்பிடத் தகுந்த எண்ணிக்கையில் தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மார்ச் ஐந்தாம் தேதி கூட தமிழ்நாட்டைச் சேர்ந்த 14 மீனவர்களை இலங்கை கடற்படை கைதுசெய்தது. மார்ச் 26ஆம் தேதி 11 மீனவர்கள் கைதுசெய்யப்பட்டனர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

தமிழக மீனவர்கள் மீது இலங்கை மீனவர்கள் புகார்

இலங்கை கடற்பரப்பில் தமிழக மீனவர்கள் எல்லை தாண்டிவந்து மீன் பிடிக்கும் விவகாரம் நீண்ட காலமாகவே நீடிக்கும் ஒரு பிரச்னையாக இருந்து வருகிறது.

தமிழ்நாட்டின் நாகப்பட்டினம், மயிலாடுதுறை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் வட இலங்கையின் கடற்கரைக்கு அருகில் சென்று, தடை செய்யப்பட்ட மீன்பிடி முறைகளைப் பயன்படுத்துவதாக வட இலங்கையின் யாழ்ப்பாணம், மன்னார் மாவட்டங்களைச் சேர்ந்த மீனவர்கள் நீண்ட காலமாகவே குற்றம்சாட்டி வருகின்றனர்.

அவர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலை போன்றவற்றைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்.

இந்த விவகாரத்திற்கு தீர்வு காண நீண்ட காலமாகவே முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இது தொடர்பான இலங்கை மீனவர் பிரதிநிதிகள், தமிழக மீனவர் பிரதிநிதிகள், இந்திய அரசு அதிகாரிகள் இடையே 2014 - 2015 வாக்கில் முத்தரப்புப் பேச்சு வார்த்தைகள் நடைபெற்றன. இருந்தபோதும் இந்த விவகாரத்தில் ஒரு நிரந்தரத் தீர்வு எட்டப்படவில்லை.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,தமிழக மீன்வர்கள் தடைசெய்யப்பட்ட சுருக்குமடிவலையைப் பயன்படுத்துவதாக, இலங்கை வட பகுதியைச் சேர்ந்த மீனவர்கள் குற்றம்சாட்டுகின்றனர்

இந்நிலையில், இரு தரப்பு மீனவர்களுக்கும் இடையில் மீண்டும் பேச்சுவார்த்தையைத் தொடரச் செய்வதற்காக ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த மீனவ சங்க பிரதிநிதிகள் ஜேசுராஜா, ஜஸ்டின், சகாயம், ஆல்வின், ஜெர்மனியஸ் ஆகிய 5 பேர் மார்ச் 25ஆம் தேதி இலங்கை சென்றனர்.

மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது. பிரதமர் மோதி இலங்கைக்கு வரும்போது, அவரிடம் இது குறித்துப் பேச தங்களுடைய ஜனாதிபதிக்கு கோரிக்கை விடுக்கப்போவதாகவும், அதன் மூலம் இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வு எட்டப்படலாம் என்றும் இலங்கை பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இதற்குப் பிறகு, இலங்கையின் மீன்வளத் துறை அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகரை நேரில் சந்தித்து பல ஆண்டுகளாக நடத்தப்படாத இரு நாட்டு மீனவர் பேச்சுவார்த்தையை மீண்டும் துவக்க வேண்டுமென தமிழக மீனவர் சங்க பிரதிநிதிகள் கோரிக்கை விடுத்தனர். இதற்குப் பிறகு இலங்கையில் உள்ள சிறைச்சாலைகளில் அடைபட்டிருக்கும் மீனவர்களைச் சந்தித்துவிட்டு அவர்கள் தமிழகம் திரும்பினர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மார்ச் 26ஆம் தேதி வவுனியாவில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் இலங்கை மீனவர் பிரதிநிதிகளுடன் பேச்சுவார்த்தையும் நடைபெற்றது

தமிழக மீனவர்களின் எதிர்பார்ப்பு என்ன?

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய மீனவர் பிரதிநிதி ஜேசுராஜா, கைது செய்யப்பட்டு இலங்கைச் சிறையில் அடைக்கப்பட்டுள்ள தமிழக மீனவர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு இலங்கை அரசை மோதி வலியுறுத்த வேண்டும்.

அதேபோல, இலங்கை கடற்படை 2018ஆம் ஆண்டு முதல் சிறைபிடித்து வைத்துள்ள 200க்கும் மேற்பட்ட நல்ல நிலையில் உள்ள மீன்பிடி படகுகளை மீட்பதற்கும் இலங்கை அரசிடம் பேச வேண்டும்.

மேலும், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தில் உள்ள ஷரத்தின்படி கச்சத்தீவு பகுதியில் மீன் பிடிக்கும் உரிமையை பெற்றுத்தர இலங்கை ஜனாதிபதியுடன் பேச வேண்டும் என எதிர்பார்க்கிறோம்" என்று தெரிவித்தார்.

இலங்கை அமைச்சர் கூறியது என்ன?

ஆனால், இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குள் வந்து மீன்பிடிப்பதை நிறுத்துவது தான் ஒரே தீர்வு என்கிறார் இலங்கையில் கடற்றொழில், நீரியல்வள, கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன்.

இது தொடர்பாக சில நாட்களுக்கு முன்பாக பிபிசியிடம் பேசியிருந்த அவர், "இவர்கள் கச்சத்தீவுக்கு வருகின்றார்களா அதற்குப் பக்கத்தில் இருந்து மீன் பிடிக்கின்றார்களா என்பது அல்ல பிரச்னை. கச்சத்தீவு எங்களுக்குச் சொந்தமானது.

கச்சத்தீவுக்குக் கூட வந்து மீன் பிடிப்பதற்கான உரிமை இவர்களுக்குக் கிடையாது. அவர்கள் எங்களுடைய கரையையும் கூட அண்மிக்கின்ற அளவுக்கு வந்து மீன் பிடிக்கின்றவர்களாகவே இருக்கின்றார்கள்," என்கிறார் அவர்.

மோதி இலங்கை பயணம், தமிழக மீனவர் பிரச்னை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கோப்புப் படம்

ஆழ்கடல் மீன்பிடிப்பு தீர்வாகுமா?

தமிழக மீனவர்கள் ஆழ்கடல் மீன்பிடிப்பிற்குச் செல்வதுதான் இந்தப் பிரச்னைக்கு ஒரே தீர்வு என்கிறார் சென்னையைச் சேர்ந்த, சர்வதேச விவகாரங்களில் நிபுணரான என். சத்தியமூர்த்தி.

"கச்சத்தீவுக்கு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது கைதுசெய்ததாகவும் திசை மாறி இலங்கை கடற்பகுதிக்குள் சென்றுவிட்டதாகவும் சொல்வதெல்லாம் சரியானவையல்ல.

நம்முடைய மீனவர்கள் இலங்கை கடற்கரைக்கு 2-3 கி.மீ. அருகில் வரை செல்கிறார்கள். அவர்கள் எதிர்பார்க்கும் மீன் வகைகள், நம்முடைய கடற்பரப்பில் இல்லை. அவற்றைப் பிடிப்பதற்காகவே அவர்கள் இலங்கை கடற்பரப்பிற்குச் செல்கிறார்கள். அதனால், இந்தப் பிரச்சனைக்கு ஒரே தீர்வு, ஆழ்கடல் மீன் பிடிப்புத்தான்" என்கிறார் அவர்.

இந்தப் பிரச்னைக்கு ஒரு தீர்வாக, ஆழ்கடல் மீன்பிடிப்பிற்காக பெரிய படகுகளை வாங்கியளிக்கும் திட்டத்தை 2017-இல் இந்திய அரசு துவங்கியது. இதில் பத்து சதவீத நிதியை மீனவர்கள் கொடுத்தால் போதும். 20 சதவீதம் கடனாகவும் மீதமுள்ள தொகை மானியமாகவும் வழங்கப்படும்.

"ஆனால், இந்தத் திட்டம் மெதுவாக செயல்படுத்தப்படுகிறது. அதனை விரைவுபடுத்த வேண்டும். தற்போதைய பயணத்தின் போது பிரதமர் மோதி இது குறித்தும் இலங்கைத் தரப்பிடம் பேசுவார். கச்சத்தீவு தொடர்பாக அறிவிப்பு ஏதும் வருவது கடினம்" என்கிறார் என். சத்தியமூர்த்தி.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cvg9mn7dy3vo

மோதியின் இலங்கை பயணம் - தமிழர்களின் முக்கிய எதிர்பார்ப்பு என்ன?

3 months ago

மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,கடந்தாண்டு டிசம்பர் மாதம் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இந்தியாவுக்கு அரசமுறை பயணமாக வந்திருந்தபோது

கட்டுரை தகவல்

  • எழுதியவர்,ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி,பிபிசி தமிழுக்காக

  • 2 மணி நேரங்களுக்கு முன்னர்

இந்திய பிரதமர் நரோந்திர மோதி வரும் ஏப்ரல் 4-அம் தேதி முதல் 6-அம் தேதி வரை இலங்கைக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொள்ளவுள்ளார்.

இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, கடந்த டிசம்பர் மாதம் 15ம் தேதி முதல் 17ம் தேதி வரை இந்தியாவுக்கு அதிகாரப்பூர்வ பயணம் மேற்கொண்டிருந்தார்.

அப்போது, இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளுமாறு, இலங்கை ஜனாதிபதி இந்திய பிரதமருக்கு அழைப்பு விடுத்திருந்தார்.

இந்த நிலையில், இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் நரேந்திர மோதி, இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, பிரதமர் ஹரினி அமரசூரிய, வெளியுறவுத் துறை அமைச்சர் விஜித்த ஹேரத் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரை சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.

மேலும், இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தும் வடக்கு, கிழக்கு மற்றும் மலையக அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளும், இந்திய பிரதமருடன் சந்திப்புகளை நடத்துவதற்கான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிகிறது.

இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் இந்திய பிரதமர் நரேந்திர மோதி, பௌத்தர்களின் புனிதத் தலமாக போற்றப்படும் அநுராதபுரம் ஸ்ரீமகா போதிக்கு சென்று வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவித் திட்டத்தின் கீழ் இலங்கையில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களை திறந்து வைக்கும் நிகழ்வுகளிலும் மோதி கலந்துகொள்ள உள்ளதாக இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

குறிப்பாக, இந்திய நிதியுதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படவுள்ள சம்பூர் சூரிய மின் உற்பத்தி நிலையத்துக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்விலும் மோதி கலந்துகொள்ள உள்ளார்.

அத்துடன், இலங்கை மற்றும் இந்தியா ஆகிய நாடுகளுக்கு இடையில் சில புரிந்துணர்வு உடன்படிக்கைகளும் இந்த பயணத்தின் போது கையெழுத்திடப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்திய பிரதமர் நரேந்திர மோதியுடன், இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர், இந்திய பாதுகாப்பு ஆலோசகர், இந்திய வெளியுறவு துறை அமைச்சகத்தின் செயலாளர் உள்ளிட்ட இந்திய அரசாங்கத்தின் உயர் அதிகாரிகள் பலரும் பயணம் மேற்கொள்ளவுள்ளனர்.

இலங்கை தமிழர்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்னைகளுக்கான நிரந்தர தீர்வை இந்தியாவால் வழங்க முடியுமென இலங்கை தமிழர்கள் கருதுகின்றனர்.

குறிப்பாக இந்திய - இலங்கை நாடுகளுக்கு இடையில், 1987ம் ஆண்டு ஏற்படுத்தப்பட்ட அரசியலமைப்பின் 13வது திருத்தத்தின் ஊடாக, தமிழர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் முயற்சியை இந்தியா மேற்கொண்டிருந்தது.

எனினும், இந்தியாவின் தலையீட்டில் ஏற்படுத்தப்பட்ட இந்திய - இலங்கை உடன்படிக்கை, அரசியலமைப்பில் நடைமுறையில் இருக்கின்ற போதிலும், அதனை முழுமையாக அமல்படுத்த இலங்கை மத்திய அரசாங்கம் மறுத்து வருகின்றது.

நரேந்திர மோதி

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்த நிலையில், தமிழர்களுக்கான தீர்வாக 13வது திருத்தத்தையேனும் முழுமையாக அமல்படுத்துமாறு இலங்கை தமிழர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அத்துடன், இந்திய வம்சாவளித் தமிழர்கள் என அழைக்கப்படும் மலையக தமிழர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்தும் திட்டங்களையும் இந்தியா முன்னெடுத்து வருகின்றது.

மேலும், பௌத்த மத முன்னேற்றத்துக்காக இந்தியா பல்வேறு திட்டங்களை அமல்படுத்தி வருவதுடன், பல்வேறு அபிவிருத்தி திட்டங்களையும் இலங்கையில் முன்னெடுத்து வருகின்றது.

கடந்த 2014ல் மோதி முதன்முறையாக பிரதமராக பதவியேற்றதிலிருந்து, தற்போதுவரை மூன்று முறை இலங்கைக்கு பயணம் மேற்கொண்டுள்ளார்.

மோதி முதல் தடவையாக 2015, 2017 மற்றும் 2019 ஆகிய ஆண்டுகளில் இலங்கைக்கு பயணம் மேற்கொண்டிருந்தார்.

அநுர குமார திஸாநாயக்க

பட மூலாதாரம்,GETTY IMAGES

இந்தநிலையில், மோதி நான்காவது தடவையாக இலங்கைக்கு பயணம் மேற்கொள்கின்றார்.

தேசிய மக்கள் சக்தி கூட்டணியின் புதிய அரசாங்கம் இலங்கையில் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர், உலக அரசத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு பயணம் மேற்கொள்ளும் முதலாவது சந்தர்ப்பமாக இது பார்க்கப்படுகின்றது.

மோதியின் இம்முறை பயணத்தை இலங்கை வாழ் தமிழர்கள் எவ்வாறு பார்க்கின்றார்கள்?

தமிழ் அரசியல் கட்சிகளின் பார்வை

மோதி இலங்கைக்கு பயணம் செய்வது தொடர்பாக மலையக அரசியல் கட்சிகள் எவ்வாறான நிலைப்பாட்டை கொண்டுள்ளன என்பது குறித்து நாம் ஆராய்ந்தோம்.

இந்தியாவினால் இந்திய வம்சாவளி மக்களுக்கு வழங்கப்படுகின்ற ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை மோதியிடம் தாம் முன்வைக்க எதிர்பார்த்துள்ளதாக தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

மனோகணேசன்

படக்குறிப்பு,ஓ.சி.ஐ அந்தஸ்தை இலங்கைக்கு இலகுப்படுத்தி வழங்க நடவடிக்கை எடுக்க இந்திய பிரதமரிடம் கோர உள்ளதாக, மனோ கணேசன் தெரிவித்தார்

''இலங்கையின் இன்றைய நிலைமைக்கு பிரதானமான காரணம் பொருளாதார வீழ்ச்சி. அதிலிருந்து எழுந்து விடவில்லை. இன்னும் இரண்டு வருடங்களிலே மீள் திருத்தப்பட்ட கடன்களை கட்ட வேண்டிய நிலைமை இருக்கின்றது. ஐ.எம்.எஃப் பிரதான செயற்பாட்டில் அது பிரதானமான அங்கமாக இருக்கின்றது. ஆகவே, இந்தியா முன்னேறுகின்றது என்றால், பக்கத்தில் இருக்கின்ற நாமும் அவர்களோடு சேர்ந்து முன்னேற வேண்டும். தமிழர்களை பொறுத்தவரையில் இலங்கையின் அதிகாரப் பகிர்வு என்பது தேவையான விடயமாக இருக்கின்றது." என்கிறார் அவர்.

தற்போது ஆளும் கூட்டணியின் முதன்மையாக அங்கம் வகிக்கும் மக்கள் விடுதலை முன்னணி (ஜேவிபி), இந்திய - இலங்கை ஒப்பந்தம், 13வது திருத்தம், அதிகார பகிர்வு, மாகாண சபை ஆகியவற்றுக்கு எதிராக முன்னர் போராடியதாக அவர் கூறுகிறார்.

"மாகாண சபைத் தேர்தல்களில் போட்டியிட்டு தெரிவு செய்யப்பட்டாலும் கூட மாகாண சபைக்கு எதிராக அநுர குமாரவையும் மீறி, அதன் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முரணான கருத்துக்களை தெரிவித்துக்கொண்டு தான் இருக்கின்றார். உள்ளூராட்சி தேர்தல் நடத்தப்பட்டாலும், மாகாண சபைத் தேர்தலை நடத்துவார்களா என்ற சந்தேகம்தான் எங்களுக்கு இருக்கின்றது." என்கிறார் அவர்.

மாகாண சபை தேர்தலை நடத்த இந்தியா இலங்கை அரசிடம் வலியுறுத்த வேண்டும் என அவர் கோரிக்கை விடுக்கிறார்.

'ஓ.சி.ஐ முறையை இலகுப்படுத்துக'

"எங்களுடைய அரசியல் கோரிக்கைகள் தொடர்பாக எந்தவொரு கோரிக்கைகளையும் இந்தியாவிடம் முன்வைக்க விரும்பவில்லை. அரசாங்கம், எதிர்க்கட்சிகளிடம் அந்த கோரிக்கைகளை வைப்போம். ஏனெனில், இந்தியாவிடம் அக்கோரிக்கைகளை வலியுறுத்துவதன் மூலம் அவை நடக்காது என்று எங்களுக்கு தெரியும். " என்றும் கூறுகிறார் மனோ.

இந்தியாவிடம் அவர் முன்வைக்க உள்ள சில பொதுவான கோரிக்கைகளையும் அவர் பட்டியலிட்டார்.

  • பெருந்தோட்ட மலையக மக்களுக்கான பொருளாதார உதவிகள்

  • கல்வி உதவிகளை வழமை போன்று இந்தியா அதனை அதிகரிக்க வேண்டும்.

  • இந்திய நாட்டிலே ஓ.சி.ஐ என்ற முறை இருக்கின்றது. இந்திய வம்சாவளி மக்களுக்கு, கடல் கடந்த பிரதிகள் என்ற அந்தஸ்தை வழங்கினார்கள். அந்த அந்தஸ்து இலங்கைக்கும் வழங்கப்பட்டிருக்கின்றது. ஆனால், சமீப காலத்தில் அதனை பெற்றுக்கொள்வதில் சிரமம் காணப்படுகின்றது. அதை கவனத்தில் எடுத்துக்கொண்டு ஓ.சி.ஐ அந்தஸ்தை வழங்க வேண்டும்.

ஸ்ரீதரன்

படக்குறிப்பு,ஸ்ரீதரன்

கூட்டாட்சி தீர்வு

சமஷ்டி (கூட்டாட்சி) அடிப்படையிலான அரசியல் தீர்வொன்றை இலங்கை தமிழர்களுக்கு வழங்குவதற்கான ஒத்துழைப்புகளை இந்தியா வழங்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பே ஈழத் தமிழர்களுக்கு காணப்படுவதாக இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இலங்கை அரசியலமைப்பின் 13வது திருத்தத்தைக் கொண்டு வருவதற்கு காரணமாக இருந்த இலங்கை - இந்திய ஒப்பந்தத்தை ஈழத் தமிழர் சார்பான தரப்பாக இந்தியாவே அந்த ஒப்பந்தத்தில் கையொப்பமிட்டிருந்தது. ஆனால், அந்த ஒப்பந்தத்தில் என்ன எழுதப்பட்டிருக்கின்றது, அந்த ஒப்பந்தம் தொடர்பான விடயங்கள் தமிழர் தரப்புக்கு முழுமையாக இதுவரை தெரிய வந்ததில்லை." என கூறுகிறார் ஸ்ரீதரன்.

குறிப்பாக இந்தியாவின் பாதுகாப்பு நிலவரங்கள், இலங்கையின் இறையாண்மை, இந்தியாவின் இறையாண்மை தொடர்பாகவே அதில் அதிகமாக பேசப்பட்டிருப்பதாக கூறப்படுவதாக அவர் தெரிவிக்கிறார்.

"இந்திய பிரதமரின் வருகையால் தங்களுக்கு ஒரு அரசியல் தீர்வு அல்லது அரசியல் எதிர்காலம், நிரந்தரமான அரசியல் வாழ்வு கிடைக்கும் என்ற ஈழத் தமிழர்கள் நம்பிக்கை கொண்டிருக்கின்றனர். அந்த நம்பிக்கை வீண்போகாத வகையில் பிரதமரின் வருகை அமையும் என நம்புகின்றோம்." என்கிறார் அவர்.

" 2015ம் ஆண்டில் பாரத பிரதமர் இலங்கை வந்தபோது, அவர் இலங்கையின் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையில் சமஷ்டி (கூட்டாட்சி) முறை பற்றி கூறியிருந்தார். சமஷ்டி அரசியல் தீர்வுதான் தமிழர்களுக்கு பொருத்தமானது. அந்த வகையிலான அரசியல் தீர்வையே தமிழர்கள் எதிர்பார்க்கின்றனர்," என இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் ஸ்ரீதரன் தெரிவிக்கின்றார்.

செந்தில் தொண்டமான்

படக்குறிப்பு,மலையக மக்களுக்கான தொடர் உதவிகளை எதிர்பார்ப்பதாக, செந்தில் தொண்டமான் கூறுகிறார்

மலையக மக்களுக்கு இந்தியா இதுவரை பெரும் உதவிகளை வழங்கியுள்ளதுடன், அதே உதவிகளை தாம் தொடர்ந்தும் எதிர்பார்ப்பதாக இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமான் குறிப்பிடுகின்றார்.

''இந்தியாவுக்கும், இலங்கைக்கும் இடையில் அரசியலையும் தாண்டிய ஒரு கலாசார உறவு காணப்படுகின்றது. இரண்டு பேரும் சகோதரர்கள். இலங்கை பொருளாதார ரீதியாக பாதிக்கப்பட்டிருந்த நேரத்தில், இலங்கையுடன் முதன்முதலில் இருந்தது இந்தியா. பொருளாதார வீழ்ச்சியிலிருந்து மீண்டெழுவதற்காக இந்தியா பெரும் உதவிகளை வழங்கியது." என்றார்.

பொருளாதார நெருக்கடிக்கு பின்னர் இந்திய பிரதமர் முதல் தடவையாக இலங்கைக்கு வருகை தருகின்றார்.

"உலகிலேயே இந்தியாவின் பொருளாதாரம் பாரிய வளர்ச்சியை நோக்கி நகர்ந்து வருகின்றது. ஆசியாவில் மிகவும் வேகமாக வளர்ச்சியடையும் நாடாக இந்தியா உள்ளது. அப்படியிருக்கும் போது, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியுடன் இணைந்த வகையில் இலங்கை பயணிக்கும் போது பொருளாதார ரீதியில் வளர்ச்சியை எதிர்பார்க்க முடியும். இந்தியா அரசாங்கம் மலையக மக்களுக்காக பெரும் உதவிகளை வழங்கியுள்ளது. ஏனைய நாடுகளை விடவும் இந்தியா அதிக உதவிகளை வழங்கியுள்ளது. அதே உதவிகளையே நாங்கள் தொடர்ந்தும் எதிர்பார்க்கின்றோம்'' என செந்தில் தொண்டமான் தெரிவிக்கின்றார்.

சீன விவகாரம், அதானியின் காற்றாலை மின் உற்பத்தி திட்டம், தமிழர் பிரச்னை, பாதுகாப்பு தொடர்பான ஒப்பந்தம், ஒத்தி வைக்கப்பட்டுள்ள மாகாண சபைத் தேர்தல் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் குறித்து, இந்திய பிரதமர் நரேந்திர மோதியின் இலங்கை பயணத்தின் போது கவனம் செலுத்தப்படக்கூடும் என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா, பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

சிவராஜா

பட மூலாதாரம்,SIVARAJA

படக்குறிப்பு,மோதியின் பயணம் பல்வேறு விஷயங்களில் கவனத்தை செலுத்தும் என்கிறார் சிவராஜா

''இந்திய பிரதமரின் வருகையானது, மிக முக்கியத்துவமான காலக் கட்டத்தில் நடைபெறுகின்றது. இந்த அரசாங்கம் சீன சார்பான அரசாங்கம் என்ற ஒரு முத்திரை உள்ளது. அதையெல்லாம் பொருட்படுத்தாமல் இந்தியா தனது ராஜதந்திர உறவை வலுப்படுத்துவதற்காக அதன் பிரதமரே நேரடியாக வருகின்றார் என்பது இந்த அரசாங்கத்தின் மிக முக்கியமானதொரு வாய்ப்பாகும்." என்கிறார் அவர்.

"அதானி காற்றாலை திட்டம் கிடப்பில் இருக்கின்றது. எனவே, அது புத்துணர்ச்சி பெறுமா? அதேபோன்று, பாதுகாப்பு ஒப்பந்தமொன்றை இந்தியா செய்யவுள்ளதாக ஒரு தகவல் இருக்கின்றது. அந்த ஒப்பந்தம் கையெழுத்திடப்படுமா என்பதை பொருத்து இந்த பயணம் என்ன தாக்கத்தை ஏற்படுத்தியது என்பது தெரியும். தமிழர்கள் திட்டத்தில் இந்தியா நிச்சயம் வலியுறுத்தும். பிரதமர் மோதி இந்த விஜயத்தில் அதனை சொல்வார் என நான் நினைக்கின்றேன்." என்றார் அவர்.

13வது திருத்தத்துக்கு அமைய மாகாண சபைத் தேர்தல்கள் நடைபெற வேண்டும். அது நீண்ட காலம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

"ஆனால், இந்த பயணத்தின் போது இந்திய பிரதமர் தமிழர் பிரச்னை குறித்து நிச்சயம் பேசுவார் என்ற எதிர்பார்ப்பு இருக்கின்றது. இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு சென்றபோது கூட, இது தொடர்பான விடயத்தை இந்தியா பேசவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கின்றது. எனவே, இந்த பயணத்தில் மோதி அதனை வலியுறுத்துவார் என்பதே தமிழர்களின் எதிர்பார்ப்பாக இருக்கின்றது," என மூத்த பத்திரிகையாளர் ஆர்.சிவராஜா தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2delxgg9lyo

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!

3 months ago

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!

April 3, 2025

பிரித்தானிய தடை:  துள்ளிக்குதிப்பும் – ஒப்பாரியும்….!(வெளிச்சம்:048.)

  — அழகு குணசீலன் —

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு போரின் போது பாதுகாப்பு படையினர் தரப்பிலும், படையினருக்கு உதவியாக செயற்பட்ட  அரச ஆதரவு குழுவினர் தரப்பிலும் இடம்பெற்ற யுத்த மீறல்களுக்காக நான்கு பேருக்கு பிரித்தானியா பயணத் தடையையும், சொத்துமுடக்கத்தையும் அறிவித்திருக்கிறது.  பாதுகாப்பு படைகளின் முன்னாள் பிரதானி ஜெனரல் சவேந்திர சில்வா, கடற்படை முன்னாள் தளபதி அட்மிரல் வசந்த கரன்னா கொட, முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கும், தமிழீழ விடுதலைப்புலிகளின் கிழக்கு பிராந்திய தளபதியாக இருந்து 2004 இல் கருத்து முரண்பாடுகள் காரணமாக பிரிந்து சென்ற விநாயகமூர்த்தி முரளிதரன் என்ற கருணா அம்மானுக்கும் இந்த தடைவிதிப்பு அறிவிக்கப்பட்டிருக்கிறது.

 பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை இலங்கை படைகளுக்கும், விடுதலைப்புலிகளுக்கும் இடையிலான இறுதிப்போரில் இடம்பெற்ற யுத்த மீறல்களை அடிப்படையாகக்கொண்டது. இலங்கை இராணுவத்தின்  யுத்தமீறல்கள் போன்றே, விடுதலைப்புலிகளாலும் யுத்தமீறல்கள் செய்யப்பட்டுள்ளன என்பது சர்வதேசத்தின் பொதுவான பார்வை. தமிழ்த்தேசிய அரசியல்வாதிகளான எம்.ஏ.சுமந்திரன் மற்றும் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் போன்றவர்களும் இந்த கருத்திற்கு ஆதரவாகவே இருதரப்பும் விசாரணைக்கு உட்படுத்தப்படவேண்டும் என்று  கோரியிருக்கின்றனர் அல்லது ஏற்றுக்கொண்டுள்ளனர்.

உண்மையில் இந்த  நீதிக்கான அணுகுமுறை முழுமையானதும் சரியானதுமாக இருக்கவேண்டுமானால் 1970 களின் ஆரம்பத்தில் இருந்து 2009 வரையான காலப்பகுதிக்குள் சகல படைத்தரப்பும், சகல தமிழ் ஆயுதப்போராட்ட அமைப்புக்களும், இந்திய படைத்தரப்பும் , அவர்களுக்கு பின்னால் இருந்த  குழுக்களும் இந்த யுத்த மீறல்களுக்கு தனியாகவும், கூட்டாகவும் பொறுப்பானவர்கள்.” என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டு  தண்டிக்கப்பட வேண்டும்.

30 ஆண்டு காலத்திற்கும் மேலான உள்நாட்டு யுத்தத்தில் ஒரு குறிப்பிட்ட பிற்பகுதியை மட்டும் – இறுதியுத்த பகுதியை மட்டும் கருத்தில் கொண்டு யுத்த மீறல்களை கருத்தில் கொள்வது பொருத்தமற்றது. இதனால்தான் தமிழ்த்தேசிய தரப்பு இன அழிப்பு என்று வருகின்றபோது 1956 ம் ஆண்டில் இருந்து கணக்கு காட்டுகிறது. இவை அனைத்துமே ஏதோ ஒருவகையில் படையினருடன் தொடர்பு பட்ட  உரிமை மீறல்கள். ஆனால் இறுதி யுத்தத்தின் பின்னர் விடுதலைப்புலிகளும், மற்றைய ஆயுதப்போராட்ட குழுக்களும், இந்திய ஆதரவு குழுக்களும்  இந்த குற்றச்சாட்டுக்களில்  இருந்து தப்பிக்கொள்ள  அரச படையினரும், கருணா அணியினரும் குறிவைக்கப்பட்டிருப்பது ஒரு பக்கச்சார்பான செயற்பாடு.

தப்ப வைக்கப்பட்டுள்ள  விடுதலைப்புலிகளாலும், அவர்களால் தடைசெய்யப்பட்ட அமைப்புக்களாலும்  மனித உரிமை மீறல்கள், ஜனநாயக மறுப்புக்கள், பாலியல் வன்முறைகள், துஷ்பிரயோகங்கள் இடம்பெற்றுள்ளன. இவர்கள் தற்போது தப்பிப்பிழைத்தோம் என்று மூச்சு விடுகின்றனர். இவர்கள் தாங்கள் செய்த குற்றங்களுக்கும் சேர்த்து மாற்று தரப்பினருக்கு தண்டனை கோரும் அளவுக்கு புனிதர்களாக நிலத்திலும், புலத்திலும் தமிழ்த்தேசிய அரசியல் செய்கிறார்கள்.   சகல தரப்பிலும் இருந்து சம்பந்தப்பட்டவர்கள் நீதியின் முன் நிறுத்தப்பட்டு தண்டனை வழங்கப்படவேண்டும் என்பதில் இரு வேறு கருத்துக்களுக்கு இடமில்லை. 

ஆனால் அதுவல்ல இந்த பதிவின் பேசுபொருள். மாறாக  நான்கு தனிநபர்கள் மீதான பிரித்தானியாவின்  இந்த தடைகள் குறித்து துள்ளிக்குதித்து கொண்டாடவும், ஒப்பாரி வைக்கவும் என்ன இருக்கிறது? என்ற கேள்வியும், இன்றைய பூகோள அரசியல் இந்த தடையை  இப்போது ஏன் ? செய்திருக்கிறது என்பதுமே  பேசப்படவேண்டியவை. இலங்கையை பொறுத்த மட்டில் பிரித்தானியாவின் இந்த நடவடிக்கை வெறும் பூகோள அரசியல் “சமிக்ஞை விளைவு” (SIGNAL EFFECT) மட்டுமே என்பதை முதலில் தெரிந்து கொள்வது நல்லது.

அமெரிக்க வாஷிங்டன் டொனால்ட் ட்ரம்ப்  நிர்வாகத்தின் புதிய பாதுகாப்பு, பொருளாதார கொள்கை சர்வதேசத்தில் இருந்து அமெரிக்காவை தனிமைப்படுத்திகொண்டிருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியம் மட்டும் அல்ல இலங்கை போன்ற சிறிய வறியநாடுகள் கூட இந்த கொள்கைகளுக்கு எதிராக பேச ஆரம்பித்துள்ளன.  ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து ஒதுங்கி  இருக்கின்ற  பிரித்தானியாவுக்கு ஐரோப்பாவோடு  இணைந்து போவதா? அமெரிக்காவை திருப்திப்படுத்துவதா? என்ற நிலைமை  காணப்படுகிறது. பிரித்தானிய பொருளாதாரம் அகலபாதாளத்தில் வீழ்ந்து விட்டது. வரவு -செலவுத்திட்ட நிதி ஒதுக்கீடுகள்  வெட்டப்பட்டுள்ளன. ஆனாலும் அமெரிக்க புதிய பொருளாதார வரிக்கொள்கை பற்றி  அலட்டிக்கொள்ளாமல்  பிரித்தானியா இருப்பது, அது அமெரிக்காவுடன் முரண்பட விரும்பவில்லை என்பதையே காட்டுகிறது. 

உக்ரைன் ஜனாதிபதி ஷெலன்ஸ்கியை வெள்ளைமாளிகைக்கு அழைத்து காதைப்பிடித்து “திருகி” இருக்கிறார் ட்ரம்ப். மறுபக்கத்தில் ரஷ்ய, இஸ்ரேல் தலைவர்களுடன் தோளில் கை போடுகிறார். வரலாற்றில் பாலஸ்தீனத்தில் ஹாமாஸ் இயக்கத்தினருக்கு எதிராக சொந்த மக்கள் திரண்டெழுகிறார்கள். இது இதுவரை மேற்குலகில் ஹாமாஸ் ஒரு பயங்கரவாத இயக்கம் என்ற கருத்துக்கு  வலுச்சேர்க்கிறது .

முள்ளிவாய்க்கால் இறுதிப்போரிலும் இந்த நிலை ஏற்பட்டபோது புலிகள் மக்களுக்கு எதிராக ஆயதங்களை திருப்பினர். அதற்குள் யுத்தம் முடிவுக்கு வந்துவிட்டது. இந்த இடத்தில் வெள்ளைக்கொடி கொலைகள் பற்றி ஒரு பட்டியல் வெளியாகி இருக்கிறது. இதற்கு பிரித்தானிய தடைவிதித்த நான்கு நபர்கள் காரணம் என்றும் கதை சொல்கிறார்கள். வெள்ளைக்கொடியோடு சரணடையுங்கள் என்று புலிகளுக்கு சொன்னவர்கள் யார்? அதற்கான அனைத்து தொடர்பாடல்களையும் , பாதுகாப்பு உத்தரவாதங்களையும், செய்தவர்கள் புலிகளை பயங்கரவாத இயக்கமாக பிரகடனம் செய்து, தடைசெய்த மேற்குநாடுகள். பூகோள அரசியலில் புலிகளை சரணடையச்செய்து கூண்டோடு அழிப்பதே இந்த மேற்குலக அணியின் முக்கிய இலக்காக இருந்தது என்பதை அவர்களிடம் நீதி, நியாயம் கோருவோர்  இன்னும் அறியவில்லையா? ஆக, வெள்ளைக்கொடி கொலைகளுக்கு யார் பொறுப்பு…..?  

இனி……, 

இலங்கையின் இன்றைய அரசாங்கத்தின் போக்கு மேற்குலகை விட்டு விலகி நகர்வதாக உள்ளது. பாரம்பரிய மேற்கு உறவையும், காலனித்துவம் கட்டிப்போட்ட உறவையும் தவிர்த்து மாற்று பிராந்திய உறவை என்.பி.பி. அரசாங்கம் நாடுகிறது. இந்தியா, சீனா, மத்திய கிழக்கு, வியட்நாம் என்று இலங்கையின் பிராந்திய உறவு வலுவடைகிறது. இதனை அமெரிக்காவினால் சகித்துக்கொள்ள முடியவில்லை. இதனால்தான் பிரித்தானியா அமெரிக்க கையாளாக களத்தில் இறக்கப்பட்டுள்ளது. இலங்கை வெளியுறவு அமைச்சர் வாஷிங்டன் செல்வதற்கு முன்னர் தூரவைத்தே  அநுரவின் காதை திருகியிருக்கிறார் டொனால்ட் ட்ரம்ப். அதற்காக வெளியிடப்பட்ட பூகோள அரசியல் அறிவிப்பே இந்த நான்கு தனிநபர்கள் மீதான தடை. இதன் மூலம் இலங்கை தங்கள் கைகளில் இருந்து விலகிப்போவதை தடுத்து மூக்கணாங்கயிறுபோடும் முயற்சி இந்த தடைக்கு பின்னால் இருக்கிறது.

கனடா நீதியமைச்சர் ஹரி ஆனந்த சங்கரியும், பிரித்தானிய லேபர் எம்.பி. உமாகுமாரனும் இந்த பயண, சொத்து தடைகளை வரவேற்று இருக்கிறார்கள். வரவேற்பதை விடவும் இவர்களால் வேறு என்னத்தை செய்ய முடியும். நாட்டில் தமிழ்த்தேசிய அரசியலின் தொடர் அரசியலையே டயஸ்போராவை வைத்து இவர்கள்  புலம்பெயர்ந்த நாடுகளில் செய்கிறார்கள். புலம்பெயர்ந்த தமிழர்களின் வாக்குளுக்காக ஏங்குகின்ற கட்சிகள்  தங்கள் சொந்த அரசியலுக்காக இவர்களை பயன்படுத்துகிறார்கள். கனடிய, பிரித்தானிய அரசியல் வாதி ஒருவரை “யாழ்ப்பாணத்தமிழர்” என்று  பெருமையுடன் அழைப்பதன் மூலம் அடையாள அரசியல் அற்ற மேற்குலக கொள்கை அரசியலில் நம்மவர்கள் சாயம் பூசியே அரசியல் செய்ய முனைகிறார்கள் என்பது தெளிவாகிறது. சாயம் வெளிறினால் அரசியல் முடிந்து விடும். இது இதுவரை பல நாடுகளில் நடந்திருக்கிறது.

பிரித்தானியாவின் தடையை கண்டித்து விமல்வீரவன்ச, உதய கம்மன்வல, நாமல் ராஜபக்ச, மகிந்த ராஜபக்ச போன்றோர் இராணுவத்தரப்புக்கு ஆதரவாக கருத்துவெளியிட்டுள்ளனர். இவர்களின் இந்த “ஒப்பாரி ராகமும்”, தமிழ் அரசியல்வாதிகளின் “துள்ளிக்குதித்தல் நடன தாளமும்” வெறும் அரசியல் பூச்சாண்டி . இதனை பயன்படுத்தி  பாதிக்கப்பட்ட தரப்பும், பாதிப்பை செய்த தரப்பும் தங்கள் தங்கள் கட்சி அரசியலை செய்யப்பார்க்கிறார்கள். தடைவிதிக்கப்பட்டுள்ள நான்கு தனிநபர்களும் பிரித்தானியாவுக்கு பயணம் செய்யமுடியா விட்டால் அதனால் அவர்கள் எவற்றை இழந்தார்கள்? பிரித்தானியாவில் சொத்து முடக்கம் என்றால் இருந்தால்தானே முடக்கலாம் (?).  பிரித்தானியாவை விடவும் பயணம் செய்வதற்கும், சொத்து சேர்ப்பதற்கும் உலகில் வேறு நாடுகள் இல்லையா?  இவர்கள் இலங்கையில் சொத்துக்கள் சேர்க்க தடையிருக்கிறதா?  கனடா, அமெரிக்கா ராஜபக்சாக்களுக்கு விதித்த தடையின் செயற்றிறன் என்ன? அவர்களுக்கு ஏற்பட்ட இழப்பு என்ன?

ஆக, மொத்தத்தில் அமெரிக்க சார்பு ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராக அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் பட்டலந்த அறிக்கையை வெளிப்படுத்தியுள்ள நிலையில், அநுரகுமார அரசுக்கு அழுத்தத்தை கொடுக்கும் வகையில் எதிர்தரப்பை பிரித்தானியாவின் பெயரில் களத்தில் இறக்கி விட்டிருக்கிறது அமெரிக்கா.  போரின் பிராந்திய பங்காளர்களான  இந்தியாவும், சீனாவும் இந்த சிமிக்ஞை விளைவு  பழக்கப்பட்டு புளித்துப்போன ஒன்று என்று கொடுப்புக்குள் சிரித்துக்கொண்டு பார்த்துக்கொண்டிருக்கின்றன.

சர்வதேச  மேலாதிக்க அரசியல் இதுவரை நாடுகள், அவற்றின் தலைவர்களுக்கு எல்லாம் ஐ.நா.வின், பெயரிலும், அமெரிக்க அணியின் பெயரிலும் விதித்த தடைகள் 20 வீதம் இலக்கை கூட எட்டவில்லை என்பது சர்வதேச நிபுணர்களின் கருத்து. போயும்… போயும்..  இலங்கையைச் சேர்ந்த நான்கு தனிநபர்களுக்கு விதிக்கப்பட்டுள்ள இந்த தடை  சம்பந்தப்பட்டவர்களுக்கு எந்த பாதிப்பையும் ஏற்படுத்தப் போவதில்லை. வேண்டுமானால் அநுர அரசுக்கு மூக்கணாங்கயிறு குத்தவும், தென்னிலங்கை பேரினவாத சக்திகளை மேலும் வளர்த்து விடவுமே உதவும்.

 இந்த சிக்னல் தடையால் இராணுவத்தை காட்டிக்கொடுக்கமாட்டோம், உள்நாட்டு பொறிமுறையைத்தவிர வேறு எந்த பொறிமுறையும் நிராகரிக்கிறோம்  என்று இந்த போரின் பின்னணியில் இருந்து செயற்பட்ட ஜே.வி.பி/என்.பி.பி. யை, எந்த குற்றங்களுக்காக பிரித்தானிய அரசாங்கம் தடைவிதித்திருக்கிறதோ அந்த குற்றங்களை செய்திருக்கின்ற, உடந்தையாக இருந்த குற்றச்சாட்டுக்களை சுமந்து நிற்கின்றன ஜே.வி.பி.யை இவ்வாறான அழுத்தங்கள் மூலம் திருத்தலாம் என்று அமெரிக்காவும், பிரித்தானியாவும் நினைத்தால் அது போன்ற சிறுபிள்ளை அரசியல் உலகில் எங்கும் இல்லை.

 அநுரவுக்கு தலைவலியை  கொடுக்கலாம், ஆனால் அதைக் குணப்படுத்துவதற்கான மாத்திரயை இந்தியாவும், சீனாவும் ஏற்கனவே கொழும்புக்கு அனுப்பிவிட்டன. அதில் ஒரு பகுதியை தன்னோடு  எடுத்துக் கொண்டுதான் ஹேரத் அமெரிக்கா போகிறார். பட்டலந்தையை திசை திருப்ப விதிக்கப்பட்டுள்ள இந்த தடையில் நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் என்.பி.பி.க்கு தலையில் குட்டுவதும் , சேதாரத்தை ஏற்படுத்துவதும் திரைமறைவில் இடம் பெறுகிறது.

https://arangamnews.com/?p=11919

காங்கேசன்துறை தமிழர்கள் காணிகளில் புத்த விகாரை கட்டப்பட்டது சட்டவிரோதம் - இலங்கை விகாராதிபதி பிபிசிக்கு பேட்டி

3 months ago

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

3 மணி நேரங்களுக்கு முன்னர்

யாழ்ப்பாணம் - காங்கேசன்துறையில் தையிட்டி பகுதியில் அமைந்துள்ள திஸ்ஸ விகாரை விரிவாக்கப் பணிகள் தமிழ் மக்களின் காணிகளில் அமைக்கப்பட்டுள்ளது என்று தற்போது வெளியாகி வரும் தகவல்கள் இலங்கையில் தீவிரமாக விவாதிக்கப்பட்டு வருகிறது.

உள்நாட்டுப் போர் நடைபெற்ற காலத்தில் இங்கிருந்து சென்ற தமிழ் மக்கள் பலரும் அக்காலத்தில் அங்கே ஒரு விகாரை இருந்ததாக தெரிவிக்கின்றனர்.

உண்மையில் அப்படி ஒரு விகாரை இருந்ததா? அங்குள்ள பிக்குவும், ராணுவமும், நவதகல பதும கீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரரும் இந்த விவகாரம் குறித்து கூறுவது என்ன?

இந்த விகாரை சர்ச்சையாவது ஏன்?

"தற்போதுள்ள விகாரையை தமிழ் மக்களின் காணிகளிலேயே நிர்மாணித்துள்ளனர். இது தவறான விடயம் என நாங்கள் ஆரம்பத்திலிருந்தே கூறி வருகின்றோம். தமிழ் மக்களே இந்த இடத்தில் இருக்க வேண்டும்,'' என யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி (தலைமை தேரர்) நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

தையிட்டி பகுதியில் திஸ்ஸ ரஜமகா விகாரை அமைந்துள்ளது. இலங்கையில் மூன்று தசாப்த கால யுத்தத்தில் பெரிதும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஒன்றாக இந்த தையிட்டி பகுதி காணப்படுகின்றது.

இலங்கை ராணுவத்திற்கும், தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பிற்கும் இடையிலான யுத்தம் வலுப்பெற்ற 1990-ஆம் ஆண்டு காலப் பகுதியில் தையிட்டி பகுதியைச் சேர்ந்த தமிழ் மக்கள் அங்கிருந்து வெளியேறியதாக அந்த பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்.

இவ்வாறு தையிட்டி பகுதியிலிருந்து மக்கள் வெளியேறிய 90ஆம் ஆண்டு காலப் பகுதியிலும் அந்த இடத்திற்கு பௌத்த விகாரையொன்று காணப்பட்டுள்ளது. ஆனால் திஸ்ஸ விகாரை என்று அழைக்கப்படவில்லை என்று அந்த பகுதியைச் சேர்ந்த மக்கள் தெரிவிக்கின்றனர்.

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்

விடுதலைப் புலிகளின் முன்னாள் தளபதிகளான கருணா - பிள்ளையான் 21 ஆண்டுகளுக்கு பின்னர் இணைந்தது ஏன்?

இலங்கையில் அதிகரிக்கும் துப்பாக்கிச் சூடுகள் - தடுப்பு நடவடிக்கை குறித்து கூட்டம் நடத்திய ஜனாதிபதி

வரலாற்று சிறப்புமிக்கதா இந்த விகாரை?

''திஸ்ஸ ராஜமஹா விகாரை என்பது பழமையை வரலாற்று பெறுமதிமிக்க விகாரை என்பதுடன், சங்கமித்தை ஜயஸ்ரீ மஹாபோதிக்கு வருகை தரும்போது ஓய்வுக்கு தரித்திருந்த இடத்தில் நிர்மானிக்கப்பட்டுள்ளதாகவும், அந்த இடத்தில் விகாரையொன்றை அமைக்குமாறு தேவானப்பியதிஸ்ஸ மன்னனுக்கு அறிவித்துள்ளதாகவும் புராணக்கதைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், முதலாவது தமிழ் தம்ம பாடசாலை இந்த விகாரையிலேயே ஆரம்பிக்கப்பட்டமையும் விசேடமாகும்,'' என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்திருந்தார் என நாடாளுமன்ற அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் தேசிய பாதுகாப்பு பற்றிய துறைசார் மேற்பார்வைக் குழுவின் 2024-ஆம் ஆண்டு மார்ச் மாதம் 05ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் அதன் தலைவராக பதவி வகித்த போது இதை தெரிவித்ததாக அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், 1946ம் ஆண்டு காலப் பகுதியில் காணி உரிமையாளரினால் இந்த விகாரைக்குரிய காணி ஈடு வைக்கப்பட்ட நிலையில், அதனை மீட்க முடியாது, பின்னர் வேறொரு நபருக்கு குறித்த காணி விற்பனை செய்யப்பட்ட நிலையில், இந்த காணி பௌத்த அமைப்பொன்றுக்கு வழங்கப்பட்டதை அடுத்தே இங்கு பௌத்த விகாரை நிர்மாணிக்கப்பட்டதாக பிரதேசத்தில் வாழும் தமது மூதாதையர் கூறியதாக, அந்த பிரதேச தமிழ் மக்கள் தெரிவிக்கின்றனர்.

எவ்வாறாயினும், தற்போது திஸ்ஸ விகாரை அமைந்துள்ள அந்த இடத்தில் ஏற்கனவே ஒரு விகாரை இருந்தது என்பது உறுதியாகியுள்ள பின்னணியில், யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது.

இவ்வாறு ராணுவம் வசமிருந்த காணி விடுவிக்கப்பட்டதுடன், விடுவிக்கப்பட்ட தமிழர்களின் காணிகளை திஸ்ஸ விகாரையிலுள்ள பௌத்த மதகுருமார்கள் கைப்பற்றி, ராணுவத்தின் உதவியுடன் விகாரையை விஸ்தரிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக தமிழர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,யுத்த காலத்தில் விகாரையை அண்மித்து வாழ்ந்த மக்கள் அங்கிருந்து வெளியேறிய சூழ்நிலையில், அந்த காணிகள் ராணுவம் வசமிருந்துள்ளது.

காணிகளுக்கு செல்வதற்கான உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளது - உரிமையாளர்கள் கூறுவது என்ன?

காணியின் உரிமையாளர்களில் ஒருவரான பத்மநாதன் சாரூஜன் இது குறித்து பிபிசி தமிழிடம் பேசும் போது, ''யுத்தம் காரணமாக 90ம் ஆண்டு காலப் பகுதியில் ஒரே நாளில் நாங்கள் தையிட்டி பகுதியிலிருந்து வெளியேறியிருந்தோம். 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்ததன் பின்னர் இந்த காணிகள் பகுதி பகுதியாகவே விடுவிக்கப்பட்டது. குறிப்பாக தையிட்டி விகாரை பிரச்னை நடைபெறும் பகுதி 2015-ஆம் ஆண்டே விடுவிக்கப்பட்டது," என்று மேற்கோள்காட்டினார்.

"விகாரைக்கு பக்கத்திலுள்ள காணிகளை பிடித்துக்கொண்டு சற்று தொலைவிலுள்ள காணிகளே முதலில் விடுவிக்கப்பட்டது. விகாரைக்குரிய நிர்மாணங்கள் நடைபெறும் இடத்தில் தான் எங்களுடைய காணி சிக்குண்டுள்ளது. இதுவரை எங்களுடைய காணிகளுக்கு செல்வதற்கான அனுமதி மறுக்கப்பட்டு தான் இருக்கின்றது," என்றும் அவர் தெரிவித்தார்.

''காணி விடுவிக்கப்பட்டதை அடுத்து, அந்த விகாரைக்கு வருகைத் தந்த பௌத்த பிக்கு ஒருவர், நில அளவையாளர்களை அழைத்து வந்து அளவிட்டு, 24 பரப்பு காணிகளை அவர் எடுத்துக்கொண்டார். எங்களுடைய உறவினர் ஒருவரின் காணியும் அதில் இருந்துள்ளது. அவர் பிரச்னையை ஏற்படுத்தினார். பின்னர் எங்களுடைய நில அளவையாளர் மற்றும் அவர்களுடைய நில அளவையாளர் வந்து மறு அளவை செய்து பிரச்னையை முடித்து கொடுத்தார்கள். அதிலிருந்து அப்போது விலகி சென்றார்கள்.

அதன்பின்னர் பழைய விகாரையில் சிறு சிறு வேலைகள் நடந்துக்கொண்டிருந்தது. மைத்திரி - ரணில் ஆட்சி காலத்தில் பழைய விகாரையில் அபிவிருத்தி பணிகள் நடந்திருந்தன. எனினும், இடைநடுவில் விடுப்பட்ட அந்த பணிகள் இன்று வரை அப்படியே இருக்கின்றது. கோட்டாபய ராஜபக்ஸவின் ஆட்சி காலத்தில் கொரோனா பரவிய சந்தர்ப்பத்தில் பொதுமக்களின் காணிகளில் கொரோனா விதிமுறைகளில் பின்பற்றி அவர்கள் அத்திவார பணிகளை மேற்கொண்டிருந்தார்கள்.

விகாரை தான் கட்டுகின்றார்கள் என எங்களுக்கு தெரியாது. சுற்றி வர தகரங்களால் மூடி கட்டிடம் கட்டப்பட்டது. கொரோனா விதிமுறை காரணமாக எங்களால் வெளியில் போக முடியவில்லை. அப்போது இதனை கட்டினார்கள். இந்த இடத்தில் விகாரை கட்டவில்லை. ராணுவம் இருக்கின்றது. ராணுவம் வெளியேறும் போது முழு காணிகளையும் தந்து விடும் என அரசாங்க அதிபர் எங்களிடம் தெரிவித்தார்.

விகாரைக்குரிய காணி வேறொரு இடத்தில் இருக்கின்றது. அந்த இடத்தில் முதலிலேயே அத்திவாரம் போடப்பட்டுள்ளது என்பதனால் இந்த இடத்தில் விகாரை தான் கட்டப்படுகின்றது என்பதை நாங்கள் நம்பவில்லை. கொரோனா காலப் பகுதியை பயன்படுத்தி இதனை கட்டி முடித்து விட்டார்கள்.'' என அவர் மேலும் குறிப்பிட்டார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,PATHMANATHAN SARUJAN

படக்குறிப்பு,விகாரையை விரிவுபடுத்தும் நோக்கில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகளில் 16 நபர்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதாக புகார் அளிக்கின்றனர் அங்குள்ள தமிழ் மக்கள்

போராட்டத்தில் மக்கள்

இந்த நிலையிலேயே, தையிட்டி காணி விடுவிப்பு தொடர்பான போராட்டத்தை, காணி உரிமையாளர்கள் 2023ம் ஆண்டு ஆரம்பித்துள்ளனர்.

''குறித்த பகுதியில் சுமார் 16 பேரின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமித்தே இந்த கட்டிடம் கட்டப்பட்டுள்ளது என்பதை தென் பகுதியிலிருந்து வருகைத் தருகின்ற மக்களுக்கு உணர்த்துவதற்காகவே போராட்டங்களை நடத்துகின்றோம். உண்மையாக பௌத்த மதத்தை வழிபடுவோருக்கு உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்.

நயினை தீவு, யாழ்ப்பாணம் நகரம் போன்ற இடங்களில் பௌத்த விகாரைகள் இருக்கின்றன. அந்த இடங்களுக்கு சென்று போராட்டங்களை நடத்தவில்லை. இங்கு மாத்திரமே செய்கின்றோம். அநீதி இழைக்கப்பட்டுள்ளமையினாலேயே இந்த போராட்டத்தை நடத்துகின்றோம் என்பதை உணர்த்துவதற்காகவே இதனை செய்கின்றோம்'' என பத்மநாதன் சாரூஜன் குறிப்பிடுகின்றார்.

''பொதுமக்களின் காணிகளிலேயே இந்த விகாரை கட்டப்பட்டுள்ளது. இதில் 8 ஏக்கர் காணி பிடிப்பட்டுள்ளது. ஒரு விடயத்தை தெளிவூட்ட வேண்டும். ஒவ்வொரு இடத்திற்கு ஒவ்வொரு அளவு பிரமாணம் இருக்கின்றது. கொழும்பில் பச்சர்ஸ் என்றும் யாழ்பாணத்தில் பரப்பு என்றும் வெவ்வேறு அளவைகளில் நிலம் அளவிடப்படுகிறது.

10 பச்சர்ஸ் ஒரு பரப்பு. 16 பரப்புகளை உள்ளடக்கியது ஒரு ஏக்கர். ஏக்கர், பரப்பு, பச்சர்ஸ் என்பதிலும் ஒரு குழப்பம் இருக்கின்றது. அவர்களுக்கு இருந்த காணி 20 பரப்பு. அப்படியென்றால் 200 பச்சர்ஸ். பொதுமக்களுக்குரிய காணி 8 ஏக்கர். கிட்டத்தட்ட 150 பரப்பிற்குரிய காணி அதில் பிடிப்பட்டுள்ளது.'' என பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

இந்த விகாரையை அண்மித்து எந்தவொரு சிங்களவர்களும் காணி உறுதியுடன் இன்று வரை வசித்திருக்கவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தமிழர்களினால் வழங்கப்பட்ட காணியிலேயே விகாரை நிர்மாணிக்கப்பட்டதாகவும் தெரிவிக்கின்றனர்.

அதைவிடுத்து, இந்த விகாரையானது புராதன பெருமதிமிக்க விகாரை என கூற முடியாது எனவும் அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

காணி உறுதிப் பத்திரத்திற்கு அமைய விகாரை அமைந்துள்ள காணியில் விகாரை அவ்வாறு நடத்திச் செல்வதற்கு தாம் எந்தவிதத்திலும் எதிர்ப்பை வெளியிடவில்லை என கூறும் அந்த பிரதேச மக்கள், தனியார் காணிகளை ஆக்கிரமித்து விகாரையை விஸ்தரிக்கும் திட்டத்திற்கே எதிர்ப்பை வெளியிடுவதாகவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த விகாரையை நிர்மாணிக்கும் பணிகள் மற்றும் அதனை பாதுகாக்கும் நடவடிக்கைகளில் இன்றும் இலங்கை ராணுவம் ஈடுபட்டு வருவதாக பத்மநாதன் சாரூஜன் தெரிவிக்கின்றார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

பட மூலாதாரம்,NAVATHAGALA PATHUMAKEERTHI THISS THERO

படக்குறிப்பு,யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர்

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி என்ன சொல்கின்றார்?

யாழ்ப்பாணத்தில் பிரசித்திப் பெற்ற நயினா தீவு பௌத்த விகாரையின் விகாராதிபதியாக கடமையாற்றிய வரும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர், சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாகவும் செயற்பட்டு வருகின்றார்.

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதியாக நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் செயற்பட்டாலும், திஸ்ஸ விகாரைக்கான கண்காணிப்பு பொறுப்பு மற்றுமொரு பௌத்த பிக்குவிற்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு பொறுப்பு வழங்கப்பட்டுள்ள பௌத்த பிக்குவே, இவ்வாறான சட்டவிரோத செயற்பாடுகளை முன்னெடுத்து வருவதாக யாழ்ப்பாணம் திஸ்ஸ விகாரை மற்றும் நயினா தீவு விகாரையின் விகாராதிபதி நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் பிபிசி தமிழுக்கு தெரிவிக்கின்றார்.

''இந்த பௌத்த பிக்கு ராணுவத்துடன் இணைந்து விகாரையின் காணியில் இல்லாது, தமிழ் மக்களின் காணிகளில் தற்போதுள்ள விகாரையை கட்டியுள்ளார். இது தவறு என நான் முதலில் இருந்தே கூறி வருகின்றேன். விகாரைக்கு 18 ஏக்கர் இருக்கின்றது. இது திஸ்ஸ விகாரைக்கு சொந்தமானது என கூறுகின்றனர். திஸ்ஸ விகாரைக்கு என்று காணி உறுதிப்பத்திரம் இருக்கின்றது. அந்த காணிகள் அந்த மக்கள் இருக்க வேண்டும். நான் தானே அதற்கான அனுமதியை கொடுக்க வேண்டும்.

தமிழ் மக்களிடம் காணி உறுதிப்பத்திரங்கள் இருக்கின்றன. வெசாக் உற்சவத்திற்கு அரசாங்கத்தினால் விகாரைகளுக்கு பணம் வழங்கப்பட்டது. திஸ்ஸ விகாரைக்கும் பணம் வழங்கப்பட்டது. அந்த பிக்குவுடன் இணைந்து ராணுவம் பணத்தை பெற்று தமிழ் மக்களின் காணிகளில் அந்த நிர்மாண பணிகள் நிர்மாணிக்கப்பட்டுள்ளன. திஸ்ஸ விகாரைக்கு கிடைத்த பணத்தை கொண்டு, ஏனையோரின் காணிகளில் விகாரையை நிர்மாணித்தது சட்டவிரோதமானது. தமது காணிகளை கோரியே தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்,'' என நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

''தற்போதுள்ள நிர்மாணிக்கப்பட்டுள்ள விகாரையை உடைக்க முடியாது. அவ்வாறு உடைத்தால் வேறு பிரச்னை வரும். அதனால், எனது காணியை தருகின்றேன் என நான் தமிழ் மக்களிடம் கூறினேன்.'' எனவும் அவர் தெரிவித்தார்.

''நான் ஏனைய பௌத்த பிக்குகளுடன் கலந்துரையாடினேன். தற்போதுள்ள பிக்குவிடம் உறுதிப்படுத்துவதற்கான ஆவணங்கள் எதுவும் இல்லை. ஏனையோர் ஏற்றுக்கொண்டார்கள். ஆனாலும் காணி விடுவிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் போராட்டங்களை நடத்துகின்றனர். அது நியாயமான போராட்டம். நான் பௌத்தம் என்றாலும், எமது காணிகளில் விகாரையை கட்ட வந்தால் எமது மக்களும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டார்கள் அல்லவா?

அது தெளிவாகவே தமிழ் மக்களின் காணிகள். வேண்டுமென்றே ராணுவத்துடன் இணைந்து இதனை செய்கின்றனர். எங்களையே உள்ளே செல்ல அனுமதிக்கவில்லை. வீதி தடையை ஏற்படுத்தியே இந்த விகாரை நிர்மாணிக்கப்பட்டது.'' என அவர் குறிப்பிடுகின்றார்.

''மக்கள் தவறானவர்கள் இல்லை. பிக்குவே தவறிழைத்தவர். ராணுவம் தவறிழைத்துள்ளது. அந்த பிக்கு பலவந்தமாகவே விகாரையில் இருக்கின்றார்,'' எனவும் நவதகல பதுமகீர்த்தி திஸ்ஸ நாயக்க தேரர் குறிப்பிடுகின்றார்.

திஸ்ஸ ரஜமகா விகாரை விவகாரம், இலங்கை, முக்கிய செய்திகள்,

படக்குறிப்பு, விகாரையை விரிவுப்படுத்தும் பணிகள் நடைபெற்றது குறித்து அறிவிக்கப்படவில்லை என பொதுமக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்

திஸ்ஸ விகாரை பிக்குவின் பதில் என்ன?

சர்ச்சைக்குரிய திஸ்ஸ விகாரையில் தற்போதுள்ள பிக்கு தொடர்பில் முன்வைக்கப்படுகின்ற குற்றச்சாட்டுக்கள் குறித்து, அந்த பிக்குவை, பிபிசி தமிழ் தொடர்புக் கொண்டு வினவியது.

தாம் அமைதியை நிலைநாட்டும் பொறுப்பில் இருப்பதனால், தற்போதைக்கு எந்தவொரு ஊடகத்திற்கும் பதிலளிக்க முடியாது என அவர் கூறினார்.

இலங்கை ராணுவத்தில் பதில்

திஸ்ஸ விகாரையின் விகாராதிபதி மற்றும் பாதிக்கப்பட்டதாக கூறப்படும் தமிழ் மக்கள் ராணுவம் மீது சுமத்தி வரும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பிபிசி தமிழ், ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகேவிடம் வினவியது.

''ராணுவம் அனைத்து சந்தர்ப்பங்களிலும் பௌத்த, இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய என எந்தவொரு புனித தலத்திலிருந்தும் உதவிகளை கோரும் பட்சத்தில், அதற்கான உதவிகளை சட்டவிதிமுறைகளுக்கு அமைய நாங்கள் வழங்குவோம். சட்ட விதிமுறைகளுக்கு அமைவானது என்றால் நிச்சயம் நாங்கள் அதனை செய்துக்கொடுப்போம். அதைவிடுத்து, இனங்களுக்கு இடையில் அமைதியின்மையை ஏற்படுத்தும் வகையிலான எந்தவொரு செயற்பாடுகளிலும் ராணுவம் தொடர்புபடாது'' என ராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் வர்ண கமகே தெரிவித்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c7989181jgxo

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை

3 months ago

இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை - அரசுகள் தலையிடாக் கொள்கை

லக்ஸ்மன்

இழுவைப் படகுகள் மூலம் இழுத்தெடுக்கப்படுவது மீன்கள் மாத்திரமல்ல, எதிர்கால தலைமுறையையும், எதிர்கால வாழ்க்கையையுமாகும். இவ்வாறு அழிக்கப்படுமானால், இன்னும் 15, 20 வருடங்களுக்குப் பிறகு எங்களது கடலில் எதுவுமே இல்லாது போவதுடன், கடல் பாலைவனமாக மாறுகின்ற நிலை ஏற்படும். இந்திய மீனவர்களின் சட்டவிரோத மீன்பிடி நடவடிக்கைகளால் இந்நாட்டில் உள்ள ஐம்பதாயிரம் மீனவ குடும்பங்களைச் சேர்ந்த இரண்டு இலட்சம் மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று வட மாகாண கடற்றொழிலாளர் சங்கத்தினர் தெரிவிக்கின்றனர்.

இழுவைப் படகுகள் என்பது இந்தியாவிலும் தடை செய்யப்பட்டிருக்கின்ற காரணத்தினால், இந்தியாவில் இருக்கின்ற மீனவர்கள் கூட இதற்கு வன்மையான எதிர்ப்பை தெரிவித்திருக்கின்றார்கள். இந்த மீன்பிடி முறைமையை நிறுத்த வேண்டும். கடலுக்கு அடியில் வலைகளைப் பயன்படுத்தி மீன்களை அள்ளும் இழுவை மடி படகுகள் மூலம் இலங்கைக் கடலில் மீன் பிடியில் ஈடுபட அனுப்பப்படுவது இந்திய கூலித் தொழிலாளர்களே. அந்த செயற்பாடு தடுத்து நிறுத்தப்பட வேண்டிய ஒன்று.

இந்திய மீனவர்கள் நமது நாட்டுக் கடற்பரப்பில் ஆக்கிரமிப்பு செய்வது குறித்து இந்தியாவின் அனைத்து பொறுப்பு வாய்ந்த அதிகாரிகளும் அறிந்திருக்கின்றனர் என்று  அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அண்மையில் தெரிவித்திருந்தார்.
இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினை  புதிய அரசாங்கத்தின் காலத்தில் நடைபெற ஆரம்பித்ததல்ல. மிக நீண்டகாலமாகத் தொடர்ந்து வருகின்ற பிரச்சினையாகும்.

இந்திய மீனவர்கள் அத்துமீறி இலங்கைக் கடற் பரப்புக்குள் நுழைவதும், அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்படுவதும், அவர்களுடைய உடமைகள் பறிமுதல் செய்யப்படுவதும், நீதிமன்றத்தில் நிறுத்தப்படுவதும், தண்டனை வழங்கப்படுவதும், விடுவிக்கப்படுவதும் நடைபெற்றுக் கொண்டே இருக்கிறது.
இந்திய மீனவர்களால் ஏற்படும் பிரச்சினைகள் குறைந்தபாடுமில்லை.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்களுக்கு முற்றுப்புள்ளி வந்ததுமில்லை. இந்தநிலையில், கடந்த வாரத்தில் இந்திய இலங்கை மீனவர் சங்கத்தினர்களுக் கிடையிலான பேச்சுவார்த்தை வவுனியாவில் நடைபெற்றது. இந்த பேச்சுவார்த்தையில் இந்திய மீனவர்களால் இலங்கை மீனவர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் தொடர்பில் ஆராயப்படடுள்ளது. இருந்தாலும், இரு தரப்பினரும்  இப்பிரச்சினைக்கான தீர்வு அரசுகளுக்கிடையிலான பேச்சுவார்த்தை மூலமே தீர்வு காணப்படக்கூடியது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

இருந்தாலும், கடந்த வருடம் டிசெம்பர் மாதத்தில் ஜனாதிபதி அனுரகுமார திசநாயக்கவின் முதல் உத்தியோகபூர்வ விஜயத்தில் புதுடெல்லியில் இந்தியப் பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, இரு நாட்டுத் தலைவர்களும் மீனவர் பிரச்சினையை ‘முக்கியமானது’ என அடையாளம் கண்டிருந்தனர். மீனவர்களின் பிரச்சினைக்கு மனிதாபிமான முறையில் தீர்வுகாண வேண்டும் என்றும் அறிவித்திருந்தனர்.

ஆனால், மீனவர் பிரச்சினை விடயத்தில் மனிதாபிமான உதவிகளை வழங்குவது அல்லது பெறுவது தொடர்பில் இனி பேச்சுவார்த்தைகள் எதுவும் இல்லை என மீன்பிடி, நீரியல் மற்றும் கடல் வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் டிசெம்பர் இறுதியில் ஊடகங்களுக்குத் தெரிவித்திருந்தார். அதே நேரத்தில், கடற்றொழில் அமைச்சின் அதிகாரிகளுக்கும் இந்திய அதிகாரிகளுக்கும் இடையிலான கலந்துரையாடல்கள் நிறுத்தப்படமாட்டாது எனவும், தொழில்நுட்பம், தொழில்சார் மற்றும் ஏனைய விடயங்கள் தொடர்பில் மாத்திரமே கலந்துரையாடல் தொடரும் என்றும் அவர் தெரிவித்ததற்கமைய இந்திய இலங்கை மீனவர்களுக்கிடையில் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளதாகக் கொள்ளலாம்.

ஆனால், இந்திய-இலங்கை மீனவர் பிரச்சினைக்குத் தீர்வு காண்பது இராஜதந்திர மட்டத்தில் மாத்திரம் உள்ள பிரச்சினையல்ல. இராஜதந்திர ரீதியில் எவ்வளவு விவாதித்தாலும், இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியாது. இந்திய மீனவர்கள் வடக்குக் கடலில் மீன்பிடிப்பது குற்றவியல் ஆக்கிரமிப்பு போன்ற நிலைப்பாடுகள் இலங்கையின் அமைச்சு வட்டம் வரையில் இருக்கின்ற நிலையில் இரு நாட்டு அரசுகளுக்குமிடையிலான பேச்சுவார்த்தைக்குச் சாத்தியமிருக்கிறதா? என்பது கேள்வியானதே.

எது எவ்வாறானாலும், எங்களின் கடல் வளங்களையும், மீனவர்களையும் பாதுகாக்க இந்த விடயத்தில் எப்போதும் தலையீடு செய்து கொண்டுதான் இருப்போம் என்கிற நிலைப்பாட்டில் இலங்கை அரசும், ஏதோ நடப்பது நடக்கட்டும். நமது மீனவர்களைக் கட்டுப்படுத்தினால் அவர்களின் வாழ்வாதாரப் பிரச்சினையாகி அரசுக்கெதிரான சிந்தனையை ஏற்படுத்தி விடும் என்ற முடிவில் இந்திய அரசும், சுமுகமான மீன்பிடிக்கான சூழல் உருவாக்கப்பட வேண்டும் என்கிற நிலைப்பாட்டில் இந்திய மீனவர்களும் இருக்கையில் முரண்பாடே மிஞ்சும்.

இந்திய, இலங்கை மீனவர்களுக்கிடையில் இருக்கும் தாண்டிய மீன்பிடி காரணமாக ஏற்படும் பிரச்சினைகளுக்கு இந்திய மத்திய அரசும் தமிழ்நாட்டு அரசும் தீர்வைக் காண்பதற்கு  முயற்சிப்பதைத் தவிர வேறு வழியில்லை. அந்த முயற்சி இலங்கை நாட்டின் இறமை, ஆட்புல ஒருமைப்பாட்டினைப் பாதிக்காத வகையில் இருந்தால் சரி.

1921ஆம் ஆண்டு இந்திய - இலங்கை பிரிட்டிஷினால் செய்து கொள்ளப்பட்ட மீன்பிடி ஒப்பந்தத்தின்படி, இந்திய மீனவர்களுக்குப் பாக்கு நீரிணையில் அதிக கடல்பகுதியும், இலங்கை மீனவர்களுக்கு குறைவான கடல் பகுதியும் பிரிக்கப்பட்டது. அதில் கச்சத்தீவு உள்ளிட்ட 28 கடல் மைல் பகுதிகள் இந்தியாவுக்கும் நெடுந்தீவு உள்ளிட்ட 12 கடல் மைல் கடல் பகுதிகள் இலங்கைக்கும் என பிரிக்கப்பட்டன.

1974இல் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் காரணமாக கச்சத்தீவு இலங்கைக்கு வழங்கப்பட்டது. அதனால் இந்திய மீனவர்கள் பயன்படுத்தி வந்த 500 சதுர கி.மீ. கடல் இலங்கை வசமாகியது. இதனால், தமது பாரம்பரிய மீன்பிடி பகுதிகள் பறிபோனதாக இந்திய மீனவர்கள் எண்ணுகிறார்கள். ஆனால், 1974 கச்சத்தீவு ஒப்பந்தத்தின் 6ஆம் சரத்துப்படி, இந்த 500 சதுர கி.மீ. பரப்பளவில் இரு நாட்டு மீனவர்களும் மீன்பிடிக்க உரிமையுள்ளது.

இருந்தாலும், பாக்கு நீரிணைப் பகுதியில் இழுவைப் படகுகளைப் பயன்படுத்துவதும் இழுவை வலைகளைப் பயன்படுத்தி இந்திய மீனவர்கள் மீன்பிடியில் ஈடுபடுவதனாலேயுமே பிரச்சினைகள் எழுகின்றன. இந்திய இலங்கை மீனவர்களிடையே இருக்க வேண்டிய ஒற்றுமை சீர்குலைவுக்கும் இதுவே காரணம். பாக்கு நீரிணை கடல்பகுதியில் இந்திய மீனவர்கள் தடைசெய்யப்பட்ட இழுவை வலையைப் பயன்படுத்தக்கூடாது என்பது  இலங்கை மீனவர்களின் ஒரு கோரிக்கை.  

இழுவைப் படகுகளின் செயற்பாட்டினால், இலங்கைக் கடற்பரப்பிலுள்ள மீனும் பிற வளங்களும் அழிகின்றன. அதனால் இலங்கை மீனவர்களின் வாழ்வாதாரம் பெருமளவில் பாதிக்கப்படுகிறது. நீண்டகாலத்தில் எதிர்கால மீன்பிடியே அழியவேண்டி ஏற்படலாம் என்பது அச்சமே. ஒவ்வொருவரும் தம் பக்கமே நிற்பர் என்பது போல் இந்திய அரசும், தமிழ் நாட்டு அரசும் தமிழக மீனவர்களின் பக்கமாகவே இருந்து விடுகின்றன. இதனால், பாதிக்கப்படுவது இருதரப்புமே என்பதுதான் உண்மை.

கடந்த வாரத்தில் வவுனியாவில் நடைபெற்ற இந்திய-இலங்கை மீனவர் சங்க உறுப்பினர்களுக்கிடையிலான பேச்சுவார்த்தையும் கூட அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டவேளையில், கைது செய்யப்பட்டு வவுனியா சிறையில் வாடும் இந்திய மீனவர்களைப் பார்வையிடுதலுடன் தான் நடைபெற்றிருக்கிறது.

தீர்க்கப்படாமல் இழுபட்டுச் செல்லும் இலங்கை-இந்திய மீனவர் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வு ஏற்படவேண்டும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. இருந்தாலும், இழுவை மடிகளைக் கொண்ட ரோலர் படகுகள் கடல் வளத்தை நாசப்படுத்திக் கொண்டிருப்பதனை எந்த விதத்திலும் அனுமதிக்க முடியாது என்றிருக்கையில், தீர்வு எவ்வாறு கிடைக்கும் என்பதுதான் இந்த இடத்தில் சிக்கலானது. இந்தச் சிக்கல் பார்த்தும் பாராமல் தொடருமா? அல்லது ஓயுமா? என்பது பதிலில்லா தொடரே.

இந்திய இழுவை படகுகளுக்கு எதிரான கறுப்புக் கொடி போராட்டம், மீன்பிடிப் பகிஷ்கரிப்பு, ஆர்ப்பாட்டங்கள்,  போராட்டங்கள், அறிக்கைகள், ஊடக சந்திப்புக்கள் எனத் தொடர்ந்து கொண்டிருக்கும் எல்லை மீன்பிடிப் பிரச்சினை தீர்க்கப்படாதா என்ற சந்தேகம் ஏற்படுவதற்குத் தாமதிப்பும் இழுத்தடிப்புகளுமே காரணமாக இருக்கிறது.

இந்தியா இந்தப் பிரச்சினைக்கு நல்ல தீர்வை முன்வைக்கும் என்று எல்லோரும் எண்ணினாலும், தமிழக அரசும் பல வழிகளிலும் இந்திய மீனவர்களது பிரச்சினையைத் தீர்ப்பதற்கு மத்திய அரசை கோரினாலும் இந்திய மத்திய அரசாங்கமானது வருடத்தில் குறிப்பிட்ட அளவான நாட்கள் இலங்கைக் கடற்பரப்பில் மீன்பிடிக்க அனுமதிக்குமாறு கோருகிறதே தவிர ஏதும் நடைபெறவில்லை.

ஆனாலும், இந்தியா கைக்கொள்ளும் அரசுகள் தலையிடாது மீனவர்களே தம் பிரச்சினைக்கு சுமூகத் தீர்வுக்கு வரட்டும் என்ற நிலைப்பாட்டைதான் நாம் விளங்கி நடந்து கொள்ளவேண்டும். இல்லையேல் இப்பிரச்சினைக்குத் தீர்வு எட்டப்படப்போவதில்லை. அது தவிர, எல்லை தாண்டலை ஒரு குற்றமாகக் கொள்ளாது கைதுகளை விடுத்து ஏதோ நடக்கட்டும் என்ற நிலைப்பாட்டுக்கு இலங்கை வரவேண்டும்.

2025.03.31

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அரசுகள்-தலையிடாக்-கொள்கை/91-354740

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.

3 months ago

Questen.png?resize=750%2C375&ssl=1

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் என்ன நடக்கிறது? நிலாந்தன்.

மாவட்ட, பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்கள் எல்லாப் பிரச்சினைகளையும் தீர்க்கக்கூடியவை என்பதே ஒரு மாயை. அந்த மாயைக்குத் தூலமான ஓர் உதாரணம் தையிட்டி விகாரை. உலகம் முழுவதையும் பெருந் தொற்று நோய் கவ்விப் பிடித்த ஒரு காலகட்டத்தில் தையிட்டி விகாரைக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. அதாவது கொரோனா வைரஸ் மனிதர்களைத் தாக்கிய அந்தக் காலத்திலும் இலங்கைத் தீவின் இனவாத வைரஸ் உயிர்ப்புடன் பரவியது என்று பொருள். அப்பொழுது நடந்த அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அப்பொழுது இருந்த பிரதேச சபையின் நிர்வாகம் - அதாவது கூட்டமைப்பின் அதிகாரத்துக்குள் இருந்த பிரதேச சபை நிர்வாகம்-சிங்கள பௌத்த மயமாக்கலுக்குத் துணை போனது. விளைவாக இப்பொழுது விகாரை கட்டப்பட்டு விட்டது.

கடந்த சில ஆண்டுகளாக நடந்துவரும் அபிவிருத்திக் குழுக் கூட்டங்களால் அந்த விகாரை கட்டி எழுப்பப்படுவதைத் தடுக்க முடியவில்லை. மட்டுமல்ல, கடந்த வாரம் அங்கே ஒரு புதிய கட்டிடம் திறக்கப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அடுத்த பௌர்ணமிக்கு ஒரு போராட்டத்தைச் செய்வதற்கிடையில் மேலும் ஒரு கட்டடம் திறக்கப்படக்கூடும்.கடந்த வாரம் நடந்த அபிவிருத்திக் குழும் கூட்டத்தில் அது தொடர்பாக காணி உரிமையாளரான பாதிக்கப்பட்ட ஒரு பெண் எழுந்து நின்று கதைக்கிறார். அவருக்கு அங்கே தீர்வு வழங்கப்படவில்லை. அதுதான் மாவட்ட அபிவிருத்திகும் குழுக் கூட்டம்.

அப்படித்தான் கிளிநொச்சி மாவட்டத்திலும் கிட்டத்தட்ட ஒரு தசாப்த காலத்துக்கு மேலாக அங்கு நிகழும் சட்டவிரோத மண் அகழ்வு, சட்டவிரோத மது உற்பத்தி போன்றவைகள் தொடர்பாக தொடர்ச்சியாகக் கதைக்கப்பட்டு வருகிறது. ஆனால் மண் அகழ்வையும் கசிப்பு உற்பத்தியும் கசிப்பு வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. போதைப்பொருள் வலைப் பின்னலையும் கட்டுப்படுத்த முடியவில்லை. கசிப்பு உற்பத்தியை அம்பலப்படுத்திய ஊடகவியலாளர் தமிழ்ச்செல்வனை அதில் சம்பந்தப்பட்டவர்கள் நடுவீதியில், கண்டி வீதியில் வைத்துத் தாக்கினார்கள். எந்த மக்களுடைய நன்மைக்காக அவர் அந்தச் செய்தியை வெளியே கொண்டு வந்தாரோ,அதே மக்கள் அவர் தாக்கப்படுவதைப் பார்த்துக்கொண்டு தம் வழியே போனார்கள். யாரும் அதைத் தடுக்கவில்லை. குற்றம் சாட்டப்பட்டவர்கள் நீதிமன்றத்தின் முன் நிறுத்தப்பட்டு பின் பிணையில் விடுவிக்கப்பட்டிருக்கிறார்கள். இதுதான் கிளிநொச்சி மாவட்டத்தின் நிலைமை. கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக அங்கே நடக்கும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் எடுக்கப்பட்ட முடிவுகளின்படி முக்கியமான பிரச்சினைகளில் எத்தனைக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது ?

இப்படிப்பட்டதோர் பின்னணியில், அண்மை நாட்களாக நடந்துவரும் வெவ்வேறு மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் அர்ஜுனா மீண்டும் பேசுபொருளாக மாறியிருக்கிறார். அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்குவது குறிப்பிட்ட சில யுரியூப்களும் ஊடகங்களும்தான். இம்முறை ஆளும் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் அர்ஜுனாவை பேசுபொருள் ஆக்கியிருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் அர்ஜுனா பேசுவதற்கு விதிக்கப்பட்டிருக்கும் இடைக்காலத் தடையின் பின்னணியில்,அவர் தனக்கு கிடைக்கும் ஏனைய மேடைகளை நாடாளுமன்றம் போல பயன்படுத்தத் தொடங்கி விட்டார். தன்னைப் பேச விடாது தடுத்த அரசாங்கத்துக்கு எதிராக பேசுவதற்கு அவர் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களை பயன்படுத்துகின்றார். அக்கூட்டங்களில் பாவிக்க கூடாத வார்த்தைகளை அவர் பாவிக்கின்றார். அவரால் சீண்டப்படும் ஆளுங்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் அவ்வாறு பாவிக்கக்கூடாத வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். இந்தக் கோமாளிக் கூத்துக்குள் சிக்கி அவமானப்பட விரும்பாத அதிகாரிகள் எல்லாவற்றையும் அமைதியாகப் பார்த்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். சிறீதரன் இடையில் எழும்பி வெளிநடப்புச் செய்கிறார்.

அர்ஜுனாவுக்கு பதில்வினை ஆற்றும் அரசியல் தோல்விகரமானது. அவர் தானும் சிரிக்கிறார், மற்றவர்களுக்கும் சிரிப்புக் காட்டுகிறார். எந்த அதிகாரிகளை நோக்கி அவர் குற்றம் சாட்டுகிறாரோ அவர்களும் சேர்ந்து சிரிக்கிறார்கள். அதாவது அவர் வைக்கும் குற்றச்சாட்டுக்களும் அங்கே சீரியஸ் இழந்து போகின்றன. அதிகாரிகளுக்கு எதிரான அவருடைய விமர்சனங்கள் மட்டுமல்ல தமிழ்த் தேசிய அரசியலும் அவ்வாறு சீரியஸ் தனத்தை இழப்பதை; ஒரு நகைச்சுவையாக மாற்றப்படுவதை அனுமதிக்க முடியாது.

பொது வெளியில் அர்ஜுனாவை எதிர்ப்பதற்கு யாரும் தயாராக இல்லை. ஏனென்றால் அவரில் வாய் வைத்தால் அவர் திருப்பி எப்படி வாய் வைப்பார் என்ற பயம். கம்பன் கழகத்துக்கு அதுதான் நடந்தது. அதே சமயம் யாரை எதிர்த்ததன்மூலம் அர்ஜுனா மிக விரைவாக வைரல் ஆனாரோ, அந்த அதிகாரிகள் இப்பொழுது கூலாக இருந்து சிரித்துக் கொண்டிருக்கிறார்கள். ஏனென்றால் அர்ஜுனா தானே தன்னை தோற்கடிப்பார் என்று அவர்களுக்குத் தெரிகிறது.அவர் தன் வாயாலேயே கெட்டுவிடுவார் என்றும் எல்லாருக்கும் தெரிகிறது.

ஒருபுறம் அவர் புத்திசாலித்தனமாகக் கதைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் வாய் வைக்கத் தயங்கும் இடங்களில் வாய் வைக்கிறார். ஏனைய நாடாளுமன்ற உறுப்பினர்கள் கவனிக்கத் தவறிய விடயங்களை அவர் சுட்டிக்காட்டுகிறார். அபிவிருத்தி சம்பந்தப்பட்ட, திட்டமிடல் சம்பந்தப்பட்ட எல்லா உரையாடல்களிலும் அவர் மைக்கைத் தன்னிடமே வைத்துக் கொள்கிறார். நாடாளுமன்றத்திலும் அப்படித்தான். கிடைக்கின்ற எல்லாச் சந்தர்ப்பங்களிலும் அவர் கதைக்கிறார். எல்லாவற்றையும் பற்றிக் கதைக்கிறார். அவருடைய வார்த்தைகள் எல்லைமீறிப் போனதன் விளைவாக நாடாளுமன்றத்தில் அவர் பேசுவதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் தடைகளால் அவரைத் தடுக்க முடியாது. நாடாளுமன்றத்தில் தனக்குத் தடுக்கப்பட்ட வாய்ப்புகளை அவர் மாவட்ட,பிரதேச அபிவிருத்திக் குழுக் கூட்டங்களிலும் யூடியூப்பர்கள் மத்தியிலும் எடுத்துக் கொள்கிறார்.அவரை யாரும் கட்டுப்படுத்த முடியாது. அவர் தன் வாயாலேயே தன்னைக் கெடுத்துக் கொள்வார். தானே தன்னைத் தோற்கடித்துக் கொள்வார்.

ஆனால் அவருக்கு எதிர் வினையாற்றுகிறோம் என்று கூறிக்கொண்டு கடந்த கிழமை நடந்த யாழ்ப்பாண மாவட்டத்துக்கான அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் அரசு தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் அவரோடு வாக்குவாதப்பட்டு தங்களுடைய கொள்ளளவு இவ்வளவுதான் என்பதனை நிரூபித்திருக்கிறார்கள்.

அதையே தமிழ்த் தேசிய நாடாளுமன்ற உறுப்பினர்களும் செய்ய முடியாது. செய்யவும் கூடாது. அர்ஜுனா வெற்றிடத்தில் இருந்து தோன்றவில்லை. தமிழ்த் தேசிய அரசியலின் போதாமைகள், இயலாமைகள், தவறுகளில் இருந்துதான் அவர் தோன்றினார். தமிழ்த் தேசிய அரசியல் என்பதனை எதிரிக்கு எதிரான எதிர்ப்பு அரசியலாக மட்டும் குறுக்கியதன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. எதிரிக்கு எதிரான அரசியலை செயல்பூர்வமான அரசியலாக முன்னெடுக்காமல் வெறும் கோஷ அரசியலாக முன்னெடுத்ததன் விளைவுகளில் ஒன்றுதான் அர்ஜுனா. தமிழ்த் தேசியம் என்பது திருடர்களும் கபடர்களும் பொய்யர்களும் நபுஞ்சகர்களும் எடுத்தணியும் முகமூடியாக மாறியதன் விளைவாகத்தான் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் கட்சிகள் பின்னடைவைக் கண்டன.

எனவே அர்ஜுனாக்கள் எங்கிருந்து உற்பத்தியாகிறார்கள் என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக்கொள்ள வேண்டும். தொழில்நுட்பத்தின் கைதியாக உள்ள ஒரு தலைமுறையை எப்படி நெருங்கி செல்வது? அவர்கள் மத்தியில் எப்படி வேலை செய்வது? அதற்குத் தொழில்நுட்பத்தையே எப்படி ஒரு கருவியாகப் பயன்படுத்துவது? என்பதனை தமிழ்த் தேசியக் கட்சிகள் கற்றுக் கொள்ள வேண்டும். கோஷ அரசியல் மற்றும் வேஷ அரசியல் என்பவற்றின் சிவப்பு மஞ்சள் நிறங்கள் வெளுரத் தொடங்கிவிட்டன.

தேசியவாத அரசியல் என்பது அது தமிழ்த் தேசமாக இருந்தாலும் சரி, சிங்கள தேசமாக இருந்தாலும் சரி, எந்தத் தேசமாக இருந்தாலும் சரி, ஒரு மக்கள் கூட்டத்தை ஆகக்கூடிய பட்சம் பெரிய திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான். அந்தப் பெரிய திரட்சியின் நன்மை- தீமை; பெரியது- சிறியது; நல்லவை- கெட்டவை; பிரம்மாண்டமானது- அற்பமானது… என்ற எல்லாவற்றையும் கவனத்திலெடுத்து அரசியல் செய்வதற்குரிய கட்டமைப்புகளை உருவாக்கியிருந்திருந்தால் அர்ச்சுனாக்கள் மேலெழுவதற்கான வெற்றிடம் தோன்றியிருக்காது. நிதிப்பலமும் அரச அனுசரணையும் உடைய படித்த நடுத்தர வர்க்கம் அரசு அலுவலகங்களில் எப்படியோ சமாளித்துக் கொள்ளும். ஆனால் சாதாரண ஜனங்களின் நிலை அப்படியல்ல.அவர்களுக்குச் சின்னச்சின்னப் பிரச்சனைகள், சின்னச் சின்னக் குறைகள் உண்டு. இனப்பிரச்சினையைத் தீர்க்கும் வரையிலும் அந்தப் பிரச்சினைகளை ஒத்திவைக்க முடியாது. ஏனென்றால் அவை நாளாந்தப் பிரச்சினைகள்; உடன் பிரச்சினைகள். இந்தப் பிரச்சினைப் பரப்பின் மீது தமிழ்த் தேசியக் கட்சிகள் கவனத்தைக் குவிக்கவில்லை. அவ்வாறு கவனத்தைக் குவிப்பதற்கு என்ன வேண்டும்?

திட்டமிடல் துறையில் அடுக்கடுக்காகப் பட்டங்கள் வேண்டுமா? அல்லது நிர்வாகத் துறையில் பட்டங்கள் வேண்டுமா? அல்லது மக்கள் ஆணை வேண்டுமா? இல்லை. இவை எவற்றையும் விட அதிகமாகத் தேவைப்படுவது, பேரன்பு. தனது மக்களை நேசிக்கத் தெரிய வேண்டும். தன்னைப்போல் தன் மக்களையும் நேசிக்கத் தெரிய வேண்டும். மக்களில் அன்பு வைத்தால், அவர்களுடைய நன்மை தீமைகளில் பங்கெடுத்தால் மக்கள் வெற்றியைப் பெற்றுத் தருவார்கள். எனவே அர்ஜுனாவுக்கு பதில் வினையாற்றுவதை விடவும் அர்ஜுனாக்கள் தோன்றக் காரணமாக இருந்த தமது பலவீனங்களையும் போதாமைகளையும் எப்படி அகற்றலாம் என்றுதான் தமிழ்த் தேசியக் கட்சிகள் சிந்திக்க வேண்டும்.

https://athavannews.com/2025/1426843

சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன்

3 months ago

சரியான நேரத்தில் சரியான கூட்டு ? - நிலாந்தன்

12-1024x683.jpg

“அனுரவின் அரசாங்கத்தை வலுவான முறையில் எதிர்கொள்வதற்கும், தமிழ் மக்களின் உரிமைகளை வலியுறுத்துவதற்கும் நாடாளுமன்றத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒன்றுபடுவதைத் தவிர வேறு வழி இல்லை” என்று, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமார் இந்திய ஊடகவியலாளரான மீரா சிறீனிவாசனுக்கு வழங்கிய நேர்காணல் ஒன்றில் கூறியிருக்கிறார்.

புதிய யாப்பு ஒன்று உருவாக்கப்படுமிடத்து அந்த யாப்பை நோக்கி கட்சிகளை ஒருங்கிணைக்க வேண்டும் என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து கிடையாது. தமிழர்கள் ஒரு தரப்பாகத் திரண்டு நின்றால்தான் தங்களுக்கு என்ன வேண்டும் என்பதனை பலமாக வெளிப்படுத்தலாம். மிகக் குறிப்பாக சுமந்திரனும் அவருடைய கூட்டாளிகளும் இணைந்து முன்பு தாங்கள் தயாரித்த “எக்கிய ராஜ்ய” என்கிற இடைக்கால வரைவை மீண்டும் மேசைக்கு எடுப்பதைத் தடுப்பது என்றால் தமிழ்த் தரப்பு ஐக்கியப்படுவது தவிர்க்கமுடியாதது.

அதேசமயம் யாப்பை நோக்கி மட்டும் தமிழ்த் தரப்பு ஐக்கியப் படக்கூடாது, மாறாக தேர்தல்களை நோக்கியும் சமயோசிதமான,தந்திரோபாயமான கூட்டுக்களுக்குப் போகவேண்டும். அல்லது குறைந்த பட்சம் போட்டித் தவிர்ப்பு உடன்படிக்கைகளுக்காவது போகவேண்டும் என்பதனை நான் தொடர்ச்சியாகச் சுட்டிக்காட்டி வந்திருக்கிறேன்.

அதற்கு ஒரு அடிப்படைக் கோட்பாட்டு விளக்கம் உண்டு. தேர்தல் கூட்டுகள் பெரும்பாலும் தந்திரோபாயமானவை. ஆனாலும் தமிழ்மக்கள் ஒரு தரப்பாக தங்களை பலப்படுத்த வேண்டும் என்று சிந்தித்தால், தேர்தலுக்கும் அங்கே ஒரு பங்கு உண்டு. தேர்தலில் தமிழ் மக்கள் ஒரு தரப்பாகத் தோற்கும் பொழுது பின்னர் நாடாளுமன்றத்தில் இனப்பிரச்சினைக்கான தீர்வு தொடர்பில் தமிழ்த் தரப்பு பலமாக நின்று பேச முடியாது. எனவே ஒரு தரப்பாக தமிழ் மக்களைப் பலப்படுத்துவது என்று பார்த்தால் அது நாடாளுமன்றத்தில் மட்டுமல்ல, மாகாண சபைகள்,உள்ளூராட்சி சபைகள் என்று எல்லாத் தேர்தல் களங்களிலும் தமிழ் தரப்பை ஆகக்குறைந்த பட்சம் தந்திரோபாய நோக்கத்தோடாவது ஒருங்கிணைக்க வேண்டும்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாய கூட்டுக்களுக்குத் தயாராக இல்லை. அவர்கள் கொள்கை வழிக் கூட்டுக்களுக்கே தயாராக இருப்பதாகக் கூறிக்கொள்கிறார்கள்.கடைசியாக இயங்கிய உள்ளூராட்சி சபைகளின் கடைசி கட்டத்தில் காரைநகரில் ஒரு பிரச்சினை வந்தது. அங்குள்ள சுயேட்சைக் குழு தமிழ்த் தேசியக் கட்சிகளோடு இணைந்து ஆட்சி அமைக்க விரும்பியது. அது தொடர்பாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு நான் உரையாடினேன். அவர்கள் எந்தவிதமான நிபந்தனையும் இன்றி குறிப்பிட்ட சுயேட்சைக் குழுவுக்கு ஆதரவளிக்க முன்வந்தார்கள். அதேசமயம் அந்த உரையாடலின் போது, செல்வராசா கஜேந்திரன் என்னிடம் சொன்னார், “அண்ண இது போன்ற விடயங்களில் நீங்கள் என்ன கேட்டாலும் நாங்கள் செய்வோம். ஆனால் ஐக்கியத்தைப் பற்றி மட்டும் கேட்டு விடாதீர்கள்” என்று.

அந்தளவுக்கு அவர்களுக்கு ஐக்கியம் அலர்ஜிக்காக இருந்தது. இருக்கலாம். அரங்கில் நம்பிக் கூட்டுச்சேர முடியாத சக்திகளே அதிகமாக இருக்கலாம். ஆனால் இங்கே பிரச்சனை என்னவென்றால், ஒரு தரப்பாக தமிழ் மக்களை பலப்படுத்துவது என்று சொன்னால் அதனை தந்திரோபாயமாகத்தான் செய்யலாம். அதுவும் தேர்தல் வழியில் தந்திரங்கள்தான் அதிகம்.

நான் திரும்பத்திரும்பக் கூறும் ஒர்  உதாரணம் உண்டு. சுத்தமான தங்கத்தை வைத்து ஆபரணங்களைச் செய்ய முடியாது. தங்கத்தில் நகை செய்ய வேண்டுமானால் குறிப்பிடத்தக்க அளவுக்கு செப்பைக் கலக்க வேண்டும் வேண்டும். இந்த பூமியிலே பெரும்பாலான விடயங்கள் அப்படித்தான். அதிலும் அரசியலில், குறிப்பாக தேசியவாத அரசியலில்,அதுதான் நடைமுறைச் சாத்தியமானது.

அரசியலில் புதுமையானது,நீதியாயானது,புனிதமானது, சரியானது, பிழையானது…போன்ற அனைத்துமே சார்புக் கணியங்கள்தான். ஒப்பீட்டு முடிவுகள்தான். நடைமுறை வாழ்வில் முழுப் புனிதமானது எதுவும் இல்லை. முழுத் தூய்மையானது எதுவும் இல்லை. இரண்டாம் உலகப்போரில் ஹிட்லரையும் முசோலினியையும் தோற்கடிப்பதற்காக இரண்டு கொள்கை எதிரிகள்தான் கூட்டுச் சேர்ந்தார்கள். அதாவது முதலாளித்துவமும் கொம்யூனிசமும் கூட்டுச்சேர்ந்தே இரண்டாம் உலகப்போரை முடிவுக்கு கொண்டு வந்தன. கொள்கைப்படி பார்த்தால் அது ஒரு பிழையான கூட்டு. ஆனால் அது உலகப்போரை நிறுத்திய கூட்டு.

24-1-ccc-1024x476.jpg

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி இப்பொழுது உருவாக்கியிருக்கும் கூட்டில் இருப்பவர்களில் அநேகர் முன்பு வெவ்வேறு கூட்டுக்களில் இருந்தவர்கள்; வெவ்வேறு தரப்புகளோடு சேர்ந்து உழைத்தவர்கள். இறந்த காலத்தைக் கிண்டினால்  யாருமே புனிதரில்லை. ஏன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் தான். கஜேந்திரக்குமாரின் தகப்பனார் குமார் பொன்னம்பலம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் 1980களின் இறுதிக் கட்டத்தில் கொழும்பில் உள்ள தனது இல்லத்தின் பாதுகாப்புக்கு புளட், டெலோ ஆகிய இயக்கங்களின் ஒத்துழைப்பைப் பெற்றிருந்தார். அவருடைய வீட்டுக்கு பாதுகாப்பு பணிக்காகச் சென்ற தமது அனுபவத்தை ஏற்கனவே சிவாஜிலிங்கம் பகிரங்கமாகத் தெரிவித்திருக்கிறார்.புளொட் இயக்கத்தின் சிவநேசனும் அவ்வாறு கூறியுள்ளார். ஆனால் அதற்காக பின்னாளில் குமார் சிந்திய இரத்தத்தை யாரும் குறைத்து மதிப்பிட முடியாது. அதுதான் அரசியல்.

ஆனால் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி தந்திரோபாயமாகக் கூட்டுக்களை வைத்துக் கொள்வதற்குத் தயாராக இல்லை.கொள்கை வழிக் கூட்டுக்கே தங்கள் தயார் என்று திரும்பத்திரும்பக் கூறிவருகின்றது.தங்கள் கொள்கையில் வழுக்காதவர்கள் என்று கூறுவதன் மூலம் மற்றவர்களை கொள்கைகளில் வழுக்கியவர்கள் என்று முத்திரை குத்தி வந்தது.அதன் விளைவாக கடந்த 15 ஆண்டுகளாக அவர்களால் தாங்கள் முன்வைக்கும் இலட்சியத்தை நோக்கி அவர்களுடைய சொந்தக் கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை;தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.

இப்பொழுது யாப்புருவாக்க முயற்சியில் தமிழ் மக்கள் பேரவையின் முன் மொழிவின் அடிப்படையில் ஒன்றுசேர வேண்டும் என்று அவர்கள் கேட்கிறார்கள். ஆனால் தமிழ் மக்கள் பேரவையை செயல்படாத நிலைக்கு தள்ளியதில் அவர்களுக்குப் பொறுப்பு இல்லையா? அவர்கள் நினைத்திருந்தால் தமிழ் மக்கள் பேரவையை அதன் அடுத்தகட்டக் கூர்ப்புக்குக் கொண்டுபோய் இருந்திருக்கலாம்.பேரவை என்ற தாயின் முடிவுக்குக் காரணமாக இருந்து கொண்டு அந்தத் தாய் ஈன்ற பிள்ளையாகிய முன்மொழிவை இப்பொழுது காவுகின்றார்கள்.

அப்படித்தான் பொது வேட்பாளரின் விடயத்திலும் முன்னணி அந்த கூட்டுக்குள் இணைந்து இருந்திருந்தால் நிலைமை வேறு விதமாகப் போயிருக்கும். கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் நிகழ்ந்த அனர்த்தம் தவிர்க்கப்பட்டிருக்கும். ஆனால் தொடக்கத்தில் இருந்தே பொது வேட்பாளரை முன்னணி எதிர்த்தது. மட்டுமல்ல, பொது வேட்பாளருக்கு ஆதரவானவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள், முதுகெலும்பில்லாதவர்கள் என்று கூறியது.பொதுக் கட்டமைப்பை உருவாக்கும் சந்திப்புகளின்போது குடிமக்கள் சமூகத்தை சேர்ந்தவர்களை நோக்கி  கஜேந்திரன் பின்வருமாறு சொன்னார் “இந்த முயற்சியில் நீங்கள் வெற்றிபெற்றால் நாங்கள் இப்பொழுது வைத்திருக்கும் இரண்டு ஆசனங்களையும் இழந்து விடுவோம் என்று எங்களுக்குத் தெரியும்.அதை நன்கு தெரிந்து கொண்டுதான் உங்களை எதிர்க்கிறோம்” என்று.

04-1024x683.jpg

ஆனால் பொது வேட்பாளருக்கு முன்னணியின் தீவிர ஆதரவாளர்கள் பலரும் வாக்களித்தார்கள். தேர்தல் முடிவுகளின் பின் பொது வேட்பாளருக்குக் கிடைத்த வாக்குகளை கஜேந்திரக்குமார் தமிழ்த்தேசியத் தன்மை மிக்க வாக்குகள் என்று கூறினார். அதெப்படி வெளிநாட்டின் ஏஜென்ட்கள் தமிழ் தேசிய தன்மைமிக்க வாக்குகளைத் திரட்டலாம்? கெட்ட கூட்டு எப்படி நல்ல விளைவைத் தரும் ?

தமிழ் மக்கள் பேரவையின் சிதைவுக்குக் காரணமாக இருந்த ஒரு தரப்பு கிட்டத்தட்ட ஐந்தாண்டுகளின் பின் அதே பேரவையின் முன் மொழிவை கையில் எடுத்திருப்பது எதைக் காட்டுகின்றது? ஐந்து ஆண்டுகளுக்கு முன் அவர்கள் எடுத்த முடிவு தீர்க்கதரிசனமற்றது என்பதைத்தானே? பொது வேட்பாளரைத் தவறு என்று கூறிவிட்டு அவர் பெற்ற வாக்குகளைத் தேசியத் தன்மை மிக்கவை என்று கூறுவது எதைக் காட்டுகின்றது? எட்டு மாதங்களுக்கு முன்பு அவர்கள் எடுத்த முடிவு தவறானது என்பதைத்தானே?பொது வேட்பாளருக்காக முன்னணியில் நின்று உழைத்த ஒரு சிவில் சமூகச் செயற்பாட்டாளர் கூறுவதுபோல “முன்னணியானது சரியான வேளைகளில் பிழையான முடிவை எடுக்கிறது. பிழையான வேளைகளில் சரியான முடிவை எடுக்கின்றது” என்பது சரியா ? இப்பொழுது முன்னணி எடுத்திருக்கும் முடிவானது சரியான வேளையில் எடுக்கப்பட்ட சரியான முடிவா? கடந்த 15 ஆண்டுகால அனுபவத்திலிருந்தும் கற்றுக்கொண்ட பாடங்களின் அடிப்படையில் முன்னணி அப்படி ஒரு முடிவை எடுத்திருக்குமாக இருந்தால் அதை வரவேற்க வேண்டும்.

ஒப்பீட்டளவில் பெரிய கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது.அதை வளர்த்தெடுக்க வேண்டும்.ஒப்பீட்டளவில் யார் தேசத்தைத் திரட்டும் நம்பிக்கைகளை பலப்படுத்துகின்றார்களோ,அந்த நம்பிக்கைகளுக்காக உண்மையாக உழைக்கின்றார்களோ,அவர்களை தமிழ்மக்கள் ஆதரிக்க வேண்டும். பொது வேட்பாளருக்குப் பின் மீண்டும் ஒப்பீட்டளவில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய ஒரு கூட்டை முன்னணி உருவாக்கியிருக்கிறது. அது சரியான நேரத்தில் எடுக்கப்பட்ட சரியான முடிவு என்பதனை நிரூபிக்க வேண்டிய பொறுப்பு சம்பந்தப்பட்ட எல்லாக் கட்சிகளுக்கும் உண்டு.குறிப்பாக வாக்களிக்கப்  போகும் மக்களுக்கு உண்டு.

https://www.nillanthan.com/7257/#google_vignette

‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’

3 months ago

‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’

முருகானந்தம் தவம்

ஜே .வி.பியினரின் (மக்கள் விடுதலை முன்னணி) ஆயுதக் கிளர்ச்சியை அடக்கி  ஒடுக்கவென 1988, 1989களில் நடத்தி செல்லப்பட்டதாகக்  கூறப்படும் ‘பட்டலந்த வதை முகாம்’ தொடர்பான ‘பட்டலந்த அறிக்கை’ 

25 வருடங்களின் பின்னர், தூசி தட்டப்பட்டு வெளியே எடுக்கப்பட்டு தற்போதைய 
ஜே.வி.பி., என்.பி.பி. அரசினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் நாள் விவாதம் நடத்தப்படவுள்ள நிலையில், அந்த அறிக்கை தொடர்பில் இலங்கையில் மீண்டும்  ஒரு பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதியாக  ரணசிங்க  பிரேமதாச ஆட்சி  புரிந்த காலத்தில், இளைஞர் விவகார, தொழில் வாய்ப்புக்கள்  அமைச்சராகவும், பின்னர் கைத்தொழில் அமைச்சராகவும்  இருந்த ரணில் விக்ரமசிங்கவே இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ சூத்திரதாரியென்ற குற்றச்சாட்டுக்கள் மீண்டும் முன்வைக்கப்பட்டு, அவரைக் கைது செய்ய வேண்டும், குடியுரிமையைப் பறிக்க வேண்டும் என்ற குரல்கள் வெளிக் கிளம்பத் தொடங்கியுள்ளன. ஆட்சியாளர்களும் நாம் விசாரணை நடத்துவோம், நீதி வழங்குவோம் என உறுதிமொழிகளை வழங்கியுள்ளனர். 

கம்பஹா  மாவட்டத்தில் சபுகஸ்கந்த பொலிஸ் பிரிவில் கிரிபத்கொட- பியகம வீதியின் சந்தியிலிருந்து தெற்காக சுமார் 2 கிலோ மீற்றர் தொலைவில் உரத் தொழிற்சாலை ஒன்று உள்ள  பகுதியிலேயே இந்த பட்டலந்த வதை முகாம் இருந்தது. இந்த பட்டலந்த வதை முகாமில் வைத்தே  ஜே.வி.பி. ஆயுதக் கிளர்ச்சியில் ஈடுபட்ட சிங்கள இளைஞர்கள் தடுத்துவைக்கப்பட்டு,  சித்திரவதை செய்யப்பட்டு, பலர்   படுகொலை செய்யப்பட்டனர்.

இளைஞர், யுவதிகள் இவ்வாறு சித்திரவதை செய்யப்பட்டு, கொல்லப்படுவதை  இந்த வதை முகாமின் சூத்திரதாரியென குற்றம்சாட்டப்படும்  அப்போதைய  அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, ரசித்துப் பார்த்துக் கொண்டிருந்தார் என்ற குற்றச்சாட்டுகளும் உள்ளன.

இவ்வாறான நிலையில், அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க 1995இல் பிறப்பித்த உத்தரவுக்கு அமைய பட்டலந்த விசாரணை ஆணைக்குழு நியமிக்கப்பட்டதையடுத்து, 1988, 1989களில் பட்டலந்த உரத் தொழிற்சாலையில் அமைந்துள்ள வீட்டுத் தொகுதியில்  நடத்திச் செல்லப்பட்ட வதை முகாம் தொடர்பில் பல தகவல்கள் அம்பலமாகின. சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டு உயிர் தப்பியவர்கள் தாம் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட வீடுகளை ஆணைக்குழு முன்னிலையில் அடையாளப்படுத்தினர்.

இந்நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ படுகொலைகள் பற்றி  குற்றத்தடுப்பு பிரிவினராலும், ஜனாதிபதி ஆணைக் குழுவினராலும் ரணில் விக்ரமசிங்க விசாரணை செய்யப்பட்டிருந்தார். ஆனால், அந்த விசாரணை  அறிக்கை  பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவும் இல்லை. அதன் பரிந்துரைகள் வெளிப்படுத்தப்படவும் இல்லை. அறிக்கை சந்திரிகா அரசினால் இருட்டடிப்பு செய்யப்பட்டது.

இவ்வாறான நிலையில், ‘பட்டலந்த வதைமுகாம்’ சித்திரவதைகள், படுகொலைகளை, அதுதொடர்பிலான ஆணைக்குழு அறிக்கையினை மக்களும் இந்த நாடும் மறந்து விட்டன. ஏன்? பட்டலந்த வதைமுகாமில் தமது ஆயிரக்கணக்கான தோழர்களை இழந்த இன்றைய ஆட்சியாளர்களான
ஜே.வி.பியினர் கூட, பட்டலந்த அறிக்கையை மறந்து விட்டனர்.

இவ்வாறான நிலையில்தான், கடந்த  06-03-2025 அன்று அல்-ஜஸீரா தொலைக்காட்சிக்கு முன்னாள் ஜனாதிபதியும் ‘பட்டலந்த வதைமுகாம்’சூத்திரதாரியென குற்றம் சாட்டப்படுபவருமான  ரணில் விக்ரமசிங்க வழங்கிய பேட்டியும் அதில்  ஜே.வி.பி. ஆயுத கிளர்ச்சியாளர்கள் மீது மேற்கொள்ளப்பட்ட சித்திரவதை, மற்றும் படுகொலை பற்றிய கேள்விக்கு அவர் கூறிய பதில்களும்   மீண்டும் பட்டலந்த வதைமுகாமை மக்கள் முன் கொண்டு வந்துள்ளதுடன், அரசியலிலும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது.

இதன் வெளிப்பாடாக, அப்போது ஆயுத கிளர்ச்சியாளர்களாக இருந்தவர்களும் தற்போது ஆட்சியாளர்களாக உள்ளவர்களுமான ஜே.வி.பியினர், அந்த ‘பட்டலந்தை வதைமுகாம்’ தொடர்பான அறிக்கையை 25 வருடங்களின் பின்னர் ஜனாதிபதி மாளிகையிலிருந்து எடுத்து தூசு தட்டி, பாராளுமன்றத்தில்  சமர்ப்பித்துள்ளதுடன், சம்பந்தப்பட்டவர்கள் மீது சட்டம் பாயும் எனவும்  அறிவித்துள்ளனர். இதனால் தற்போது நாட்டில் உள்ள அனைத்து நெருக்கடிகளும் மறக்கடிக்கப்பட்டு ‘பட்டலந்த அறிக்கை’ முன்னிலைப்படுத்தப்படுகின்றது.

இதில் வேடிக்கை என்னவென்றால், இந்த ‘பட்டலந்த வதை முகாம்’ செயற்பட்ட காலத்தில் அந்த வதைமுகாமில் வைத்து படுகொலை செய்யப்பட்டவர்கள், ஆயுத  கிளர்ச்சியில் ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கானோரைப் படுகொலை செய்த தற்போதைய ஆட்சியாளர்களான ஜே.வி.பியினர். ‘பட்டலந்த அறிக்கை’யைத் தயாரிக்க உத்தரவிட்ட அப்போதைய  ஜனாதிபதி சந்திரிகா பண்டார நாயக்கவினரின் கட்சியினரும் இந்த ஜே.வி.பியினரால் ஆயிரக்கணக்கில் கொல்லப்பட்டுள்ளனர்.

இவ்வாறான நிலையில், 2005இல் இந்த ஜே.பி.யினர்   அப்போதைய  ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க அரசின் பங்காளிகளாக இருந்ததுடன்,  அமைச்சர்களாகவும் பதவி வகித்தனர். அப்போது ஜே.வி.பியினருக்கு இந்த ‘பட்டலந்த அறிக்கை’ தேவைப்படவில்லை.அதன்பின்னர் மஹிந்த  ராஜபக்‌ஷ ஆட்சிபீடம் ஏற இதே ஜே.வி.பியினர் பேராதரவு வழங்கியதுடன், பக்க பலமாகவும் இருந்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் இவர்கள் கிஞ்சித்தும் அக்கறை காட்டவில்லை.

அதன் பின்னர், 2015இல் ரணில் விக்ரமசிங்க  அரசுக்கும் ஆதரவளித்தனர். அப்போதும் இந்த ‘பட்டலந்த அறிக்கை’யை வெளியே கொண்டுவர வேண்டுமென்பதில் எந்த அக்கறையும் காட்டவில்லை. தற்போது தமது ஆட்சி அமைந்த நிலையில் கூட, அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பும் வரை அந்த அறிக்கை தொடர்பில் ஒரு துரும்பைக்கூட இந்த ஜே .வி.பியினர் நகர்த்தவில்லை.

அல்-ஜஸீரா தொலைக்காட்சி ‘பட்டலந்த அறிக்கை’ தொடர்பில் கேள்வி எழுப்பிய பின்னர்தான் ஏதோ அப்போதுதான் ‘பட்டலந்த வதைமுகாம்’ தொடர்பான அறிக்கை ஒன்று  இருப்பதனை அறிந்து கொண்டதுபோல, துடித்தெழுந்து அதை ஜனாதிபதி மாளிகையின் இருட்டறையிலிருந்து தேடிக் கண்டுபிடித்து எடுத்ததாகக் கூறி பாராளுமன்றத்தில் ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் சபை முதல்வரான அமைச்சர் பிமல் ரத்னாயக்க அந்த ‘பட்டலந்த அறிக்கை’யை சமர்ப்பித்து உணர்ச்சிகரமாக உரையாற்றியதும் சபாநாயகர் கண்கலங்கியதும் 

 ஜே.வி.பி.-என்.பி.பி. அரசின் அமைச்சர்கள் எம்.பிக்கள் இறுகிய, துயரம் தோய்ந்த முகங்களுடன்  அமர்ந்திருந்தது எல்லாம் அப்பட்டமான அரசியல் நாடகம். நடிப்பு
கடந்த காலங்களில் சந்திரிகா அரசாங்கம், ராஜபக்‌ஷ அரசாங்கம் ஆகியவற்றில் பங்காளிகளாக இருந்த போது, இந்த ‘பட்டலந்த  அறிக்கை’ தொடர்பில் வாய்திறக்காதவர்கள், பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டுமென வலியுறுத்தாதவர்கள், தற்போது இவர்கள்  சித்திரவதைக்காரர் என்று குறிப்பிட்ட ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளித்து. 

2015இல் அரசாங்கத்தை அமைத்த போது கூட,  ‘பட்டலந்த அறிக்கை’யைப் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க வேண்டுமென  வலியுறுத்தாதவர்கள் ஒருவருக்கும் தெரியாத இந்த அறிக்கையை அல்-ஜஸீரா தொலைக்காட்சி  கண்டுபிடித்து அறிவித்ததையடுத்தே அது தொடர்பில் தெரிந்து கொண்டவர்கள் போல, உணர்ச்சிவசப்படுவது, கண்கலங்குவது, துயரமடைவது ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்களின் அரசியல்  நாடகமின்றி, நடிப்பின்றி வேறு என்னவாக இருக்க முடியும்? 

அதேவேளை, ‘பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை’ தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கடந்த  16ஆம் திகதி விசேட அறிக்கை ஒன்றை வெளியிட்டார். அதில்,  முழுமையான அரசியல் அவதூறு பிரசாரத்தை நோக்கமாகக் கொண்டு ‘பட்டலந்த ஆணைக்குழு’ நியமிக்கப்பட்டது. ஆனால், அந்த முயற்சி வெற்றிபெறவில்லை.

அறிக்கையின் முடிவுகளில், ஒரு அமைச்சராக, பொலிஸ் கண்காணிப்பாளர் மூலம் பொலிஸாருக்கு வீட்டு வசதி வழங்குவது எனக்கு சரியாக இல்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது. வீடுகளை ஐ.ஜி.பியிடம் ஒப்படைத்து, அவர் மூலம் சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைப்பதே சரியான முறையாக இருக்க வேண்டும். இந்தச் செயலுக்கு நளின் டெல்கோடாவும் நானும் மறைமுகமாகப் பொறுப்பு என்று ஆணைய அறிக்கை கூறுகிறது.

ஆணைக்குழு அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள மற்ற விடயங்கள்  எதுவும் எனக்கு பொருந்தாது. 1988இல் ஜே.வி.பி. மேற்கொண்ட ஏராளமான பயங்கரவாதச் செயல்கள் தொடர்பான முடிவுகள் மற்றும் அவதானிப்புகள் ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ளன. பின்னணியும் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஆணைக்குழு அறிக்கையின் மூன்றாவது அத்தியாயம், ஜே.வி.பி. செய்த கொடூரமான பயங்கரவாதச் செயல்களை விரிவாக விவரிக்கிறது. முழு வரலாறும் அதில் சேர்க்கப்பட்டுள்ளது. மேற்கூறியவற்றைத் தவிர, வேறு எந்த குற்றச்சாட்டுகளும் எனக்கு பொருந்தாது. அந்த அறிக்கையை நான் முழுமையாக நிராகரிக்கிறேன் என்று கூறியுள்ளார்.

எனவே, ஆட்சிபுரிந்த அனுபவமற்ற ஜே .வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குற்றவாளியாக்க வேண்டும், நடைபெறவுள்ள உள்ளூராட்சி சபைகளுக்கான  தேர்தலில் அனுதாப வாக்குகளை அள்ள  வேண்டும் என்ற நோக்கத்தில், அவசரப்பட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த இந்த ‘பட்டலந்த அறிக்கை’ விவாதத்திற்கு வரும்போது, பட்டலந்த வதைமுகாமில் சித்திரவதைப்பட்ட, படுகொலை செய்யப்பட்ட  ஜே.வி.பியினரைப் பற்றி மட்டுமல்லாது, அப்போது ஆயுதக் கிளர்ச்சி என்ற பெயரில் ஜே.வி.பியினரால் படுகொலை செய்யப்பட்ட பல்லாயிரக்கணக்கானவர்களின்  படுகொலைகளையும் அம்பலப்படுத்தப் போகின்றது.

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை குறிவைத்து ஜே.வி.பி.-என்.பி.பி. ஆட்சியாளர்கள் வீசிய ‘பட்டலந்த அறிக்கை’ என்னும் ‘பூமராங்’  இறுதியில் ஜே.வி.பி. என்.பி.பி. ஆட்சியாளர்களையே மோசமாகத் தாக்கப் போகின்றது.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/பட்டலந்த-அறிக்கை-என்னும்-பூமராங்/91-354662

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

3 months 1 week ago

இலங்கை

படக்குறிப்பு, கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன்

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் முக்கிய நபர்கள் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையைத் தொடர்ந்து, உள்நாட்டு அரசியல் களத்தில் கடும் எதிர்ப்புகள் வெளியிடப்பட்டு வருகின்றன.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் முன்னாள் தளபதியான கருணா அம்மான் என அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் இலங்கை அரச பாதுகாப்பு பிரதானிகள் மூவருக்கு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

பாதுகாப்புப் படைகளின் முன்னாள் பிரதானி ஷவேந்திர சில்வா, இலங்கை கடற்படையின் முன்னாள் தளபதி அட்மிரல் ஒஃப் த பீல்ட் வசந்த கரணாகொட, இலங்கை ராணுவ முன்னாள் தளபதி ஜெனரல் ஜகத் ஜயசூரிய ஆகியோருக்கே இவ்வாறு பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறல் இடம் பெற்றுள்ளமைக்கு பொறுப்பு கூற வேண்டியவர்கள் என பிரிட்டனில் இந்த நால்வர் அடையாளப்படுத்தப்பட்டு, அவர்கள் மீது இவ்வாறு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த நால்வருக்கும் பிரிட்டனுக்குள் பிரவேசிக்க தடை விதிக்கப்பட்டுள்ளதுடன், அவர்களுக்கு பிரிட்டனில் சொத்துகளை வாங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், பிரிட்டனுக்குள் இந்த நால்வருக்கும் சொத்துகள் இருக்கும் பட்சத்தில், அவற்றைத் தடை செய்வதற்கும் அந்த நாட்டு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தத்தில் மனித உரிமை மீறப்பட்டுள்ளமை தொடர்பான குற்றச்சாட்டை அடுத்தே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாக பிரிட்டன் அரசின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.

இலங்கை உள்நாட்டு யுத்தம் முடிவடைந்த 15 வருடங்கள்

இலங்கை

பட மூலாதாரம்,SRI LANKA ARMY

படக்குறிப்பு,ஷவேந்திர சில்வா

இலங்கையில் இடம்பெற்ற உள்நாட்டு யுத்தம் 2009ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் தேதி முடிவுக்கு வந்தது.

முல்லைத்தீவு மற்றும் அதை அண்மித்த பகுதிகளில் இடம்பெற்ற இறுதிக்கட்ட யுத்தத்தில் பல லட்சக்கணக்கான மக்கள் கொல்லப்பட்டதாகப் பல்வேறு தரப்பினர் தொடர்ச்சியாக குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றனர்.

அத்துடன், ராணுவத்திடம் சரணடைந்த பெரும்பாலான தமிழர்கள் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

வலிந்து காணாமல் ஆக்கப்பட்டதாகக் கூறப்படும் தமிழர்களின் உறவினர்கள், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தொடர்ச்சியாக இன்றும் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்து 15 ஆண்டுகள் முடிவடைந்துள்ள பின்னணியிலும், தமக்கான நீதி இன்று வரை கிடைக்கவில்லை எனக் கோரி, வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் போராட்டங்களை நடத்துகின்றனர்.

இவ்வாறான பின்னணியிலேயே இந்தத் தடையை பிரிட்டன் விதித்துள்ளது.

எந்தெந்த நாடுகளில் யார் யாருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது?

  • கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 14ஆம் தேதி ஜெனரல் ஷவேந்திர சில்வா உள்ளிட்ட குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிப்பதற்கு அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • கடந்த 2021ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 10ஆம் தேதி கடற்படை புலனாய்வு அதிகாரியான சந்தன ஹெட்டியாராட்ச்சி, சிப்பாய் சுனில் ரத்நாயக்க உள்ளிட்டோர் மற்றும் அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கு அமெரிக்காவுக்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டது.

  • கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி மேஜர் பிரபாத் புலத்வத்த மற்றும் அவரின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்குத் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது. அவர்களின் சொத்துகளைத் தடை செய்யவும் தீர்மானம் எட்டப்பட்டது.

  • கோட்டாபய ராஜபக்ஸ, மஹிந்த ராஜபக்ஸ, சிப்பாய் சுனில் ரத்நாயக்க, லெப்டினன் கமாண்டர் சந்தன பிரசாத் ஹெட்டியாராட்ச்சி ஆகியோருக்கு, 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது. அந்த நாட்டிலுள்ள அவர்களின் சொத்துகளை முடக்கவும் தீர்மானம் எட்டப்பட்டது.

  • கடந்த 2023ஆம் ஆண்டு ஏப்ரல் 27ஆம் தேதி கடற்படைத் தளபதி வசந்த கரணாகொடவிற்கு தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • கடந்த 2024ஆம் ஆண்டு டிசம்பர் 10ஆம் தேதி ஸ்ரீலங்கா விமான சேவையின் முன்னாள் பிரதம நிறைவேற்று அதிகாரி கபில சந்திரசேன, ரஷ்யாவின் முன்னாள் இலங்கைக்கான தூதுவர் உதயங்க வீரதுங்க ஆகியோருக்கும், அவர்களின் நெருங்கிய குடும்ப உறுப்பினர்களுக்கும் தமது நாட்டிற்குள் பிரவேசிக்க அமெரிக்கா தடை விதித்திருந்தது.

  • ஷவேந்திர சில்வா, வசந்த கரணாகொட, ஜகத் ஜயசூரிய, விநாயகமூர்த்தி முரளிதரன் ஆகியோருக்கு 2025ஆம் ஆண்டு மார்ச் 24ஆம் தேதி பிரிட்டன் தடை விதித்துள்ளது.

இலங்கை அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு, கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 10ஆம் தேதி, கோட்டாபய ராஜபக்ஸ, தமது நாட்டிற்குள் பிரவேசிக்க கனடா தடை விதித்தது

இலங்கை உள்நாட்டுப் போரில் இடம்பெற்றதாகக் கூறப்படும் யுத்த குற்றங்களுடன் தொடர்புடையவர்கள் என்ற குற்றச்சாட்டின் கீழ் பிரிட்டனால் தடை விதிக்கப்பட்டுள்ள நால்வருக்கு ஆதரவு தெரிவித்து இலங்கை அரசியல்வாதிகள் கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர்.

யுத்தம் முடிவடைந்த தருணத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இந்த விடயம் தொடர்பில் கருத்து வெளியிட்டார்.

நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள் மீது இவ்வாறு தடை விதிப்பதானது, அசாதாரணமாக செயற்பாடு என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிரிழக்கும்போது தானே பதில் பாதுகாப்பு அமைச்சராக கடமையாற்றியதாகக் கூறிய அவர், இறுதித் தருணத்தில் என்ன நேர்ந்தது என்பதை தாம் நன்கு அறிவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

''இந்தப் பாதுகாப்புப் படைகளின் தலைவர்கள் தாய்நாட்டின் ஒற்றுமைக்காகவும், பிராந்திய ஒருமைப்பாட்டிற்காகவும் போராடினார்கள். அவர்கள் பொது மக்களைக் கொலை செய்யவில்லை. யுத்தத்தின் இறுதி இரண்டு வாரங்களும் நினைவில் இருக்கும். இனங்களை அடிப்படையாகக் கொண்டு யாரும் கொலை செய்யப்படவில்லை" என்று கூறினார் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன.

தொடர்ந்து பேசிய அவர், "நான் 5 சந்தர்ப்பங்களில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். பிரபாகரன் உயிரிழக்கும் சந்தர்ப்பத்திலும் நானே பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றியிருந்தேன். இறுதி இரண்டு வாரங்களில் என்ன நேர்ந்தது என்பதை நான் நன்கு அறிவேன். அதனால், எமது முப்படை அதிகாரிகளுக்கு இவ்வாறு தடை விதித்தமையானது அசாதாரணமான செயற்பாடாகும். அவர்கள் நாட்டிற்காக அர்ப்பணிப்புடன் செயற்பட்டவர்கள். எமது ராணுவத்தினர் தமது உயிர்களை எந்தளவுக்கு அர்ப்பணித்துள்ளார்கள் என்பதை அனைவரும் அறிவார்கள்.

அல்பிரட் துரையப்பா, அமிர்தலிங்கம் போன்றவர்களையும் விடுதலைப் புலிகள் அமைப்பு கொலை செய்தது. அவர்களை ஏன் கொலை செய்தாரகள்? இந்த விடயங்கள் குறித்தும் கதைக்க வேண்டும். எனினும், எமது ராணுவத்தினர் மீதான இந்த நடவடிக்கையானது ஒரு சூழ்ச்சியாகும். மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். யுத்தம் முடிவடையவில்லை என்றால், கொழும்பும், பொலன்னறுவையும் இருந்திருக்காது. இந்த நாட்டைக் காப்பாற்றிய வீரர்களுக்கு சர்வதேச ரீதியில் இழைக்கப்படும் அநீதிகள் தொடர்பில் நான் கவலையடைகிறேன்'' என யுத்தம் முடிவடையும் சந்தர்ப்பத்தில் பதில் பாதுகாப்பு அமைச்சராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவிக்கின்றார்.

பிரிட்டன் அரசாங்கத்தால் விதிக்கப்பட்டுள்ள தடையானது, மனித உரிமை மீறல் தொடர்பானது அல்லது எனக் கூறியுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, விடுதலைப் புலி அமைப்பிற்கு உதவி வழங்குவோரின் அழுத்தங்கள் காரணமாகவே இந்தத் தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.

யுத்தத்தை முடிவிற்குக் கொண்டு வந்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸவே இதைக் குறிப்பிட்டுள்ளார். இது நீதியான விடயம் அல்ல என்பதுடன், சில மேற்குலக நாடுகளின் அரசியல்வாதிகளுடைய நிதியின் ஊடாக விடுக்கப்படும் அழுத்தம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கை

பட மூலாதாரம்,PMD

படக்குறிப்பு, முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன

''நாட்டில் பயங்கரவாதம் முடிவுக்கு வந்துள்ள போதிலும், சர்வதேச ரீதியில் பிரிவினைவாதம் முடிவுக்கு வரவில்லை. விடுதலைப் புலிகளுக்குப் பின்னர் தற்போதுள்ள புலம்பெயர்ந்தோர் அரசியலில் ஆட்சி கவிழ்ப்புகளை மேற்கொள்வதற்கும், ஆட்சிகளை அமைப்பதற்குமான உதவிகளை வழங்கி வருகின்றனர். இதன்படி, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள அரசியல்வாதிகள் தமது அரசாங்கங்களின் ஊடாகவும், தமது நிர்வாக வியூகங்களின் ஊடாகவும் எமது நாட்டின் மீது மீண்டுமொரு முறை பிரிவினைவாதத்தை ஸ்தாபிப்பதற்கும், ஈழ அரசாங்க கனவை நனவாக்கிக் கொள்வதற்குமான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்" என்று கூறுகிறார் மஹிந்த ராஜபக்ஸவின் புதல்வரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஸ.

மேலும் பேசிய அவர், "இது இன்று நேற்று இடம்பெற்ற ஒன்றல்ல. இதைத்தான் நாங்கள் முதலில் இருந்தே கூறி வருகிறோம். தற்போதுள்ள இலங்கை அரசாங்கம் இதுதொடர்பான பதில் அறிவிப்பை வெளியிடவில்லை. முதலில் அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும். ராணுவத்தினர் இந்த நாட்டிற்காகவே யுத்தத்தை நடத்தினார்கள்.

அது அவர்களின் தனிப்பட்ட பிரச்னை கிடையாது. அதற்கான தலைமைத்துவத்தை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ வழங்கியிருந்தார். அதற்கு முன்னர் பல ஜனாதிபதிகள் இருந்துள்ளனர். அவர்கள் அரசியல் தலைமைத்துவத்தை வழங்கவில்லை. மக்களால் தெரிவு செய்யப்பட்ட அரசாங்கம், பயங்கரவாதத்தை இல்லாது ஒழிப்பதற்கான தீர்மானத்தை எடுத்துள்ளது. இந்த உத்தரவை நடைமுறைப்படுத்தியதை மாத்திரமே இந்த அதிகாரிகள் மேற்கொண்டிருந்தார்கள்" என்றார்.

"எனினும், தெரிவு செய்யப்பட்ட சில அதிகாரிகளை மாத்திரம் இலக்காகக் கொண்டு யுத்த குற்றங்களுக்கு குற்றவாளிகளாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றது. இது தமிழ் மற்றும் சிங்கள மக்களுக்கு இடையிலான பிரச்னை கிடையாது. இது விடுதலைப் புலிகள் மற்றும் இலங்கையர்களுக்கு இடையிலான பிரச்னை. நாங்கள் பயங்கரவாதிகளுடன் மோதினோம்.

இன்று புலம்பெயர்ந்தோரிடம் இருந்து பணத்தைப் பெற்றுக்கொள்ளும் சில உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு அரசியல்வாதிகள் என்ற இரு தரப்பினரும் இன்று தமிழ்-சிங்களப் பிரச்னையாக மாற்றுவதற்கான முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றனர். அவ்வாறு இடம்பெறுவதற்கு நாங்கள் ஒருபோதும் இடமளிக்க மாட்டோம். இந்த நாட்டு ராணுவ வீரர்களுக்காக நாங்கள் முன்னின்று குரல் எழுப்புவோம். அரசாங்கம் தமது நிலைப்பாட்டைக் கூற வேண்டும் என்பதுடன், மக்கள் ராணுவ வீரர்களுடன் இன்று ஒன்றுபட வேண்டும்," என்றார் நாமல் ராஜபக்ஸ.

யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த மஹிந்த ராஜபக்ஸவின் பதில்

இலங்கை

பட மூலாதாரம்,NAMAL RAJAPAKSA'S FACEBOOK

படக்குறிப்பு,நாமல் ராஜபக்ஸ

யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் பாரியளவிலான யுத்த குற்றங்கள் இடம்பெற்றதாக பிரிட்டன் அரசாங்கம் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகளை தாம் நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதியும், யுத்தத்தை நிறைவு செய்ய தலைமைத்துவம் வழங்கியவருமான மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

பிரிட்டன் அரசாங்கம் இலங்கைப் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது தடை விதித்த நிலையில், மஹிந்த ராஜபக்ஸ விசேட அறிக்கையொன்றை வெளியிட்டே இந்த விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார்.

''தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிராக யுத்தம் செய்வதற்கான தீர்மானத்தை இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியான நானே எடுத்தேன். இலங்கையின் ஆயுதப் படை அந்தத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்தியது'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

கடந்த 2002ஆம் ஆண்டு சமாதான உடன்படிக்கை அமல்படுத்தப்பட்டிருந்த காலப் பகுதியில், 2002ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் 2005ஆம் ஆண்டு செப்டம்பர் வரை தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பினால் 363 பேர் கொல்லப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

விடுதலைப் புலிகள் அமைப்பில் இருந்து 2004ஆம் ஆண்டு வெளியேறி, ஜனநாயக ரீதியில் அரசியல் நடவடிக்கைகளுக்குள் பிரவேசித்த விநாயகமூர்த்தி முரளிதரன் என அழைக்கப்படும் கருணா அம்மான் மீது பிரிட்டன் தடை விதித்துள்ளமையானது, விடுதலைப் புலிகளுக்கு எதிராகச் செயல்பட்ட தமிழர்களுக்கு தண்டனை வழங்கும் புலம்பெயர் தமிழர்களின் நடவடிக்கை என்பது தெளிவாகியுள்ளதாக அவர் கூறுகின்றார்.

''முப்பது ஆண்டுக் காலம் தமிழீழ விடுதலைப் புலிகள் பயங்கரவாத அமைப்பினால், 27,965 ராணுவ மற்றும் போலீஸ் அதிகாரிகள் கொல்லப்பட்டனர். அது மாத்திரமன்றி, அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என மேலும் பல்லாயிரக்கணக்கானோரின் உயிர்கள் காவு கொள்ளப்பட்டன'' என மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.

கடந்த 2009ஆம் ஆண்டு தோற்கடிக்கப்பட்ட விடுதலைப் புலிகள் அமைப்பை, உலகிலேயே மிகவும் கொடூரமான பயங்கரவாத அமைப்பு என அமெரிக்காவின் எஃப்.பி.ஐ அமைப்பு 2008ஆம் ஆண்டு பெயரிட்டதாகவும் அவர் கூறுகின்றார்.

அத்துடன், பல்வேறு தரப்பினரால் விடுக்கப்படுகின்ற சட்ட அழுத்தங்களில் இருந்து தமது ஆயதப் படையை பாதுகாத்துக் கொள்வதற்காக பிரிட்டன் அரசாங்கம் 2021 மற்றும் 2023ஆம் ஆண்டுகளில் விசேட சட்டங்களை இயற்றியதை நினைவு படுத்துவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

இலங்கையின் தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காகத் தமது கடமைகளை நிறைவேற்றிய ஆயுதப் படை அதிகாரிகளை இலக்கு வைத்து வெளிநாட்டு அரசுகள் மற்றும் அமைப்புகள் விடுக்கும் அழுத்தங்களுக்குத் தற்போதைய அரசாங்கம் நேரடியாக முன்நிற்க வேண்டும் என்று தாம் எதிர்பார்ப்பதாகவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நிலைப்பாடு

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,மஹிந்த ராஜபக்ஸ

இலங்கையில் தமிழர்கள் மீதான இன அழிப்பு யுத்தத்தில் ஈடுபட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடை ஈழத் தமிழர்களின் நீதிக்கான தேடலின் நம்பிக்கைக் கீற்று எனவும், அந்த அறிவிப்பை தாம் வரவேற்பதாகவும் நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் இலங்கைக்கான பிரிட்டனின் உயர்ஸ்தானிகரகத்துக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ள நாடாளுமன்ற உறுப்பினர், சிறீதரன் இவ்விடயம் சார்ந்து அனுப்பி வைத்துள்ள ஊடக அறிக்கையில், "எதிர்வரும் செப்டம்பரில் நடைபெறவுள்ள ஜெனீவா அமர்வுகளுக்கு முன்னதாக, இனப்படுகொலையின் பங்குதாரர்களான நால்வர் மீது பிரிட்டன் அரசு விதித்துள்ள பயணத்தடை, காலம் தாழ்த்தியாவது தமிழர்களுக்கு நீதி கிடைக்கும் என்ற நம்பிக்கையை மீள அரும்பச் செய்திருக்கிறது," என்று தெரிவித்துள்ளார்.

மேலும், "இலங்கையில், குறிப்பாக வடக்கு, கிழக்கு தமிழர்கள் மீது பேரினவாத அரசு வலிந்து நடத்திய போரின்போது மோசமான மனித உரிமை மீறல்கள், நீதிக்குப் புறம்பான கொலைகள், சித்திரவதைகள் மற்றும் பாலியல் வன்முறைகளில் ஈடுபட்ட இந்த நான்கு பேர் மீதும் பிரிட்டன் அரசு விதித்திருக்கும் தடையையும், சொத்து முடக்க அறிவிப்பையும், சர்வதேச நீதி கோரும் பயணத்தில் தமக்குக் கிடைத்திருக்கும் ஒரு சிறிய நம்பிக்கை ஒளிக்கீற்றாகவே ஈழத்தமிழர்கள் பார்க்கிறார்கள்'' எனவும் கூறியுள்ளார்.

எண்பது வருடங்களுக்கு மேலாகக் கேட்பாரற்றுப் படுகொலை செய்யப்பட்ட தமிழ்த்தேசிய இனத்தின் எண்ணங்களுக்கும் இறந்துபோன ஆத்மாக்களுக்கும் இந்தத் தடை அறிவிப்பு நீதியின் கதவு திறக்கும் என்ற நம்பிக்கையைக் கொடுத்திருப்பதாகக் குறிப்பிட்ட அவர், "காலனித்துவ ஆட்சி முடிவில், சுதேசிகளான தமிழர்களின் இறைமையை பிறிதோர் இனத்தவரிடம் ஒப்படைத்துச் சென்றமை வரலாற்றுத் தவறு என்பதை உலகம் இப்போதாவது உணரத்தலைப்பட்டிருப்பது வரவேற்கத்தக்கது" என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அரசாங்கத்தின் பதில்

இலங்கை

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான உள்நாட்டுப் பொறிமுறையை வலுப்படுத்தும் நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் தெரிவித்துள்ளார்.

பிரிட்டன் அரசாங்கத்தால் முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது விதிக்கப்பட்டுள்ள தடை குறித்து, இலங்கைக்கான பிரிட்டன் உயர்ஸ்தானிகருக்கு விடயங்களை தெளிவூட்டியபோதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

கடந்த காலங்களில் ஏதோவொரு வகையில் மனித உரிமை மீறல்கள் இடம்பெற்றிருக்குமானால், அது தொடர்பில் உள்நாட்டுப் பொறிமுறையின் ஊடாக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் கூறுகின்றார்.

தடை விதிக்கப்பட்ட நபர்களுக்கு அந்த நாட்டிலுள்ள சொத்துகள் முடக்கப்படும் மற்றும் அவர்களுக்கு அந்த நாட்டிற்குள் பிரவேசிக்கத் தடை விதிக்கப்பட்டமையானது, பிரிட்டனால் எடுக்கப்பட்ட ஒருதலைபட்ச நடவடிக்கை எனவும் அவர் கூறியுள்ளதாக வெளிவிவகார அமைச்சு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிநாடுகளால் இவ்வாறு எடுக்கப்படுகின்ற ஒரு தலைப்பட்ட நடவடிக்கைகள் குறித்து இலங்கை உள்நாட்டு நல்லிணக்க நடவடிக்கைகளுக்கு எந்தவித ஒத்துழைப்பும் வழங்காது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

பிரிட்டன் விதித்த தடையால் இலங்கைக்கு பாதிப்பு உள்ளதா?

இலங்கை

பட மூலாதாரம்,PRATHIBA MAHANAMAHEWA

படக்குறிப்பு, பிரதீபா மஹனாமஹேவா

இலங்கை முன்னாள் பாதுகாப்பு அதிகாரிகள் உள்ளிட்ட நால்வர் மீது பிரிட்டன் விதித்துள்ள தடையால் இலங்கைக்கு எவ்வாறான பாதிப்புகள் காணப்படுகின்றன என்பது தொடர்பில் இலங்கை மனித உரிமை ஆணைக் குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவாவிடம் பிபிசி தமிழ் வினவியது.

''இவ்வாறு விதிக்கப்பட்டுள்ள தடையானது, ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையினால் விதிக்கப்பட்ட தடை கிடையாது. அதை பிரிட்டனே விதித்துள்ளது. அமெரிக்கா, ஐநா மனித உரிமை பேரவையில் இருந்து விலகியதை அடுத்து, இலங்கை தொடர்பில் பிரிட்டனே அதிக அளவில் கவனம் செலுத்தி வருகிறது. இது நபர்களுக்கு பிரட்டனால் விதிக்கப்பட்ட விசா மற்றும் சொத்துகளுக்கான தடையாகும்.

எனினும், அரச அதிகாரிகள் என்ற வகையில் இலங்கைக்கு இதனூடாக பாதிப்பு காணப்படுகின்றது. 2022ஆம் ஆண்டு மனித உரிமை பேரவையால் நிறைவேற்றப்பட்ட பிரேரணையொன்று நிறைவேற்றப்பட்டது. அதில் 72 ஈ என்ற ஷரத்தில் ஒரு விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் யுத்தக் குற்றத்தில் ஈடுபட்ட ராணுவ அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என மிகவும் தெளிவாகக் கூறியுள்ளனர். எனினும், இது தண்டனை வழங்கும் நடவடிக்கை கிடையாது" என்று அவர் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய பிரதீபா மஹனாமஹேவா, "தேசிய ஒருமைப்பாடு, நல்லிணக்கம், பொறுப்புக்கூறல் தொடர்பாக நடவடிக்கை எடுக்குமாறு கூறப்பட்டுள்ளது. எனினும், 2025ஆம் ஆண்டாகும் போதும், நாம் அது தொடர்பில் எந்தவித நடவடிக்கைகளையும் எடுக்கவில்லை. எமது பக்கத்திலும் குறைப்பாடுகள் காணப்படுகின்றன. தேசிய பொறிமுறையொன்றை ஏற்படுத்தி, அதைச் செய்ய வேண்டியிருந்தது. இலங்கைக்குத் தற்போது அழுத்தங்களைப் பிரயோகிக்கின்றனர். 72வது ஷரத்திலுள்ள பரிந்துரைகளைச் செயற்படுத்தவில்லை எனக் கூறுகின்றனர்.

கருணா அம்மான் உள்பட 4 இலங்கையர்களுக்கு தடை விதித்த பிரிட்டன் - இதன் விளைவுகள் என்ன?

பட மூலாதாரம்,GETTY IMAGES

மேலும் அழுத்தங்கள் அதிகரிக்கக்கூடும். பொருளாதாரக் குற்றங்கள் இடம் பெற்றுள்ளதாக ஈ சரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது தொடர்பிலும் ஏதேனும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது. முறையற்ற விதத்தில் வேறு நாடுகளில் சொத்துகள் இருக்குமானால், அது தொடர்பிலும் தாம் உதவி செய்வோம் என அவர்கள் கூறுகின்றனர். பொதுநலவாய அமைப்பில் மனித உரிமை பிரிவுடன் இணைந்து பல வேலைகளை எம்மால் செய்திருக்க முடியும். நாங்களும் சிற்சில சந்தர்ப்பங்களில் பலவற்றைத் தவறியுள்ளோம். அதனாலேயே இவ்வாறான விடயங்கள் இடம்பெறுகின்றன'' என்றார்.

''இலங்கையில் ஐபிரிட் நீதிமன்றம் ஒன்றை ஸ்தாபிக்குமாறு பிரிட்டன் 2018ஆம் ஆண்டு முதல் கூறி வருகின்றது. ஐபிரிட் நீதிமன்றமொன்று ஸ்தாபிக்க முடியாத பட்சத்தில், அதற்குப் பதிலாக என்ன செய்ய முடியும் என்பதையேனும் நாம் கூறியிருக்க வேண்டும். பிரிட்டன் மீது முழுமையாக விரலை நீட்ட முடியாது. மனித உரிமைப் பேரவையின் ஊடாக நம்மை பிரிட்டனே கண்காணிக்கின்றது. எதிர்காலத்தில் நடைபெறுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும் என்பதே என்னுடைய கருத்து'' என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

எனினும், இந்த நிலைமை தொடருமாக இருந்தால், ஐரோப்பிய ஒன்றியத்தால் இலங்கைக்கு கிடைக்கப் பெறும் ஜி.எஸ்.பி பிளஸ் சலுகை இல்லாது போகுமோ என்ற அச்சம் எழுவதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

அத்துடன், தனி நாடொன்று என்ற விதத்தில் அவர்களால் நமக்கு எதிராக பொருளாதாரத் தடையைக்கூட ஏற்படுத்த முடியும் என அவர் கூறுகின்றார்.

வலையில் சிக்கும் விதத்தில் அல்லாமல், வலையில் சிக்காது அதைத் தவிர்த்துக் கொள்ளும் விதத்தில் இலங்கை செயல்பட வேண்டும் என இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் முன்னாள் ஆணையாளர் பிரதீபா மஹனாமஹேவா தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு.

https://www.bbc.com/tamil/articles/czed7j5k04po

அனுர போட்ட முடிச்சு

3 months 1 week ago

அனுர போட்ட முடிச்சு

லக்ஸ்மன்

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகைக்கும், நாட்டின் பொருளாதார ஸ்திரத் தன்மைக்கும் ஒரு முடிச்சைப் போட்டு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இவ்வாருடத்துக்கான வரவு-செலவுத் திட்ட  விவாதத்தை முடித்து வைத்தார். மிகவும் லாவகமான பேச்சுக்கள் மூலம் மக்களை தம்வசம் இழுத்து வைத்துக் கொள்வதில் அனுரவுக்கு நல்ல இயலுமை இருக்கிறது. அவருடைய ஒவ்வொரு பேச்சும் இலங்கை மக்களின் உள்ளிருக்கும் பல விடயங்களை வெளியே எடுத்து விடுவதைச் செய்து விடுகின்றன.

பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற வரவு-செலவுத் திட்டத்தின் நிதி திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுக்கான ஒதுக்கீடு மீதான இரண்டாம் நாள் குழுநிலை விவாதத்தின் இறுதியில் பதிலளித்து உரையாற்றிய ஜனாதிபதி, எதிர்க்கட்சிகள் தமது அரசு மீதுள்ள கோபத்திலும் வேதனையிலும் தான் விமர்சனங்களை முன்வைத்தன என்று கூறினார்.

தேர்தல் காலத்தில் பிரசாரங்களைச் செய்கின்ற போது, பலவாறு பலதையும் கூறிய ஜனாதிபதி இப்போது யதார்த்தத்திலும் உத்தியோகப்பூர்வமாகவும் வங்குரோத்து அடைந்த நாட்டையே நாங்கள் பொறுப்பேற்றோம் என்று கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் தேர்தல் கால வாக்குறுதிகளைக் கணக்கிலெடுக்காதீர்கள் என்பதாகக் கூட இருக்கலாம்.

2025ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத் திட்டத்தில் நாடு பெற்றுள்ள கடன்களின் வட்டிகளைச் செலுத்துவதற்காக 2950 பில்லியன் ரூபாவும், அரச சேவை சம்பளத்திற்காக 1352 பில்லியன் ரூபாவும், ஓய்வூதிய கொடுப்பனவைச் செலுத்துவதற்காக 442 பில்லியன் ரூபாவும் ஒதுக்கப்பட்டுள்ளது.

ஆனால், அரசின் செலவினத்தைக் குறைப்பதற்காக வருவாயை அதிகரிக்கவென அரச ஊழியர்களின்  கொடுப்பனவுகள் நீக்கப்பட்டு அடிப்படைச் சம்பளம் அதிகரிக்கப்பட்டு அதிலிருந்து கழிக்கப்படுகின்றவைகள் அதிகமாகியிருக்கின்றன. இது அரச ஊழியர்களுக்காக செலவிடப்படும் தொகையைக் குறைக்கும். இது ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாகவே இருக்கிறது.

அவ்வாறானால் அரச ஊழியர்களின் கைகளுக்குக் கிடைக்கும் பணத்தின் அளவு இப்போதைக்குக் குறைவாகவே இருக்கப்போகிறது. ஒவ்வொரு துறைக்கும் ஒதுக்கப்பட்ட நிதி போதாது, பிரதேசங்களுக்கான நிதிகள் குறைவு என பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கின்றன. இவ்வாறான நிலையில்தான் இவ்வருடத்துக்கான வரவு-செலவுத் திட்டம் நிறைவேறியிருக்கிறது.

அனுர ஜனாதிபதியாகப் பதவியேற்ற பின்னர் இந்தியாவுக்குச் சென்று வந்தார் பின்னர் சீனாவுக்குச் சென்றார். வேறு பல நாடுகளுக்கும் பயணமாக இருக்கிறார். அவரது பதவிக்காலத்தின் ஆறு மாத காலத்துக்குள் நாட்டு மக்களுக்காக அவர் செய்து முடித்திருக்கின்றார் என்று கேள்வி கேட்பதனை விடுத்து இவ்வாறு கதைகளை அடித்துவிடுவது தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தில் சாதாரணமாக இருக்கிறது.

ஒன்றுக்காக ஒன்றைப் பதிலீடாகக் கொடுக்கின்ற அல்லது காண்பிக்கின்ற சம்பவங்கள் வழமையாகவே நடைபெற்றுவருவதுதான். ஆனால் இங்கு வழமையைவிடவும் அதிகமாக நடைபெறுகிறதோ என்று சந்தேகிக்கத் தோன்றுகிறது.  நீண்ட காலமாகப் பின்பற்றப்பட்டு வந்த பொருளாதார கொள்கையை எடுத்த எடுப்பில் மாற்றிவிடுவது சாத்தியமற்ற ஒன்றே. இதற்குள் தேசிய மக்கள் சக்தி சொல்வதைப்போல் பொருளாதாரத்தை மக்களுக்கு ஏற்றால் மாற்றியமைப்பது மிகச் சிரமாகவே இருக்கும்.

வரவு-செலவுத் திட்ட முன்வைப்பின்போது, எதிர்ப்புகள்  தெரிவிக்கப்படுவதும், விமர்சனங்கள் முன்வைக்கப்படுவதும் வெறுமனே விலக்கி விடப்படாமல் சாதகமான விடயங்கள் பரிசீலிக்கப்படுதல் நாட்டுக்குச் சிறப்பானதாகும். இந்நிலையில் பொருளாதார நிலைப்பாட்டினை நோக்குகையில், தேசிய மக்கள் சக்தி தங்கள் தேர்தல் கால பிரசாரத்தில் முன்வைத்திருந்த, ரணில் விக்ரமசிங்கவினால் ஏற்படுத்தப்பட்ட சர்வதேச நாணயநிதியத்தின் கடன் வசதிக்காகக் காண்பித்த எதிர்ப்புகள் இப்போது எங்கே போயின என்பதுதான் இப்போதுள்ள கேள்வி. இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு இருக்கின்ற சர்வதேச நாணய நிதியத்தின் பரந்தளவிலான கடன் வசதிகளுடன் நாட்டைக் கொண்டுசெல்லுதல் என்ற வழியே அவர்களுக்கு இருக்கிறது என்பது மாத்திரமே நிலைமை.

இந்த நிலைமையில் இருந்து கொண்டு பொருளாதாரம் ஸ்திர நிலையை அடைந்து விட்டது என்ற கதையை எவ்வாறு அனுரவால் சொல்ல முடிகிறது என்பது தான் வேடிக்கை. ஆனால், பொருளாதார ஸ்திரத்தன்மையை ஏற்படுத்த முயற்சிகளை முன்னெடுத்துள்ளோம் என்று கூறமுடியும்.  இந்தியாவும் சீனாவும் மாத்திரமே ஏட்டிக்குப் போட்டியாக தங்களுடைய ஆதிக்கத்தை நிலைப்படுத்துவதற்காகவும், அதிகரித்துக் கொள்வதற்காகவும் மேற்கொள்ளும் வேலைகள் நாட்டில் நூறு வீதம் பொருளாதார ஸ்திரத் தன்மையை ஏற்படுத்தி விடாது என்பது மறக்கப்படக் கூடாதது.  

இந்நிலையில்தான், தன்னுடைய நாட்டு நலன்களைப் பிரதான நோக்காகக் கொண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி ஏப்ரல் 5ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்கிறார். அவ்வேளையில், பல்வேறு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட இருக்கின்றன. முக்கியமாக சம்பூர் மின் நிலையத்துக்கான நிர்மாணத்தை இந்தியப் பிரதமர் ஆரம்பித்து  வைப்பார். அதனை தவிர, வேறு ஒன்றும் நடைபெறப்போவதில்லை. அயல் நாட்டின் தலைவரின் வருகைக்குப் பொருளாதார ஸ்திரநிலையைக் கொண்டு முடிச்சிடுவது எந்தவகையில் பொருந்தும் என சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டியிருக்கிறது.

159 ஆசனங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டிருக்கின்ற ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி பெரும்பான்மையுடன் மக்களின் மகிழ்ச்சிக்கான, நிம்மதியான வாழ்வுக்கான தீர்மானங்களை நிறைவேற்றுவதே நல்லதாகும். அதனை விடுத்து, தேசபந்துவைக் கைது செய்வதே ஒரு பெரும் விடயமாகக் காண்பிக்கப்படுவதும் பாராளுமன்ற உறுப்பினர் முதல் ஜனாதிபதி வரையில் அதற்காகக் கருத்து வெளியிடுவதும். அதில், அவ்வளவு அக்கறையாக இருப்பது எந்தளவுக்கானது என்பது தெரியவில்லை.

தேசபந்து தேடப்பட்டார், தலைமறைவாக இருந்தார்.அவருக்காகப் பல பொலிஸ் குழுக்கள் அமைக்கப்பட்டன. இறுதியில் அவர் நீதிமன்றத்தில் அமர்ந்திருந்தார். இப்போது சிறைப்படுத்தப்பட்டிருக்கிறார். இதிலென்ன வேடிக்கையென்றால், அவர் கடமையாற்றிய பொலிஸ்த் துறையின் உத்தியோகத்தர்களாலேயே அவர் வேட்டையாடப்பட்டிருக்கிறார். நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற உள்ளூராட்சித் தேர்தல் பிரசாரத்துக்கு தேசபந்துவின் விளம்பரம் தேசிய மக்கள் சக்திக்குப் போதுமானதாக இருக்கலாம்.

ஆனால், மூன்று வாரங்களாக நாட்டின் உளவுத்துறையால் அவரை ஏன் கண்டுபிடிக்க முடியவில்லை. கைது செய்யத் திறந்த பிடியாணை உள்ள ஒருவர், ஒரு சொகுசு காரில் நீதிமன்றத்தில் தோன்றி எப்படி வந்தார்? அவர் எங்கே இருக்கிறார்? என்று காவல்துறைக்குத் தெரியாததா? அல்லது அவர் கண்டுபிடிக்க முடியாத இடத்தில் இருந்தாரா? அல்லது அவரைக் கைது செய்ய விரும்பவில்லையா? போன்ற பல கேள்விகள் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கின்றன.

அனுரகுமார திசாநாயக்க ஜனாதிபதியானதும், ஆட்சி கலைக்கப்பட்டு அமைக்கப்பட்ட காபந்து அரசாங்கம் முன்னைய ஜனாதிபதி முதல், அமைச்சர்கள், பிரதானிகள் கைவசம் வைத்திருந்த வாகனங்கள் மீளப் பெறப்பட்ட, துரத்திப் பிடிக்கப்பட்டுக் காட்சிப்படுத்தப்பட்டு ஒரு விளம்பரம் நடத்தப்பட்டது. அது சற்று ஓய்ந்து போகவே ஊழல் தொடர்பான விடயங்கள் வெளியே கொண்டு வரப்பட்டன. பாராளுமன்றத் தேர்தலின் பின்னர் அமைந்த புதிய அரசாங்கம் ஜனாதிபதி நிதியத்திலிருந்து பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்களால் மருத்துவச் செலவுக்கான பணம் பெறப்பட்டவைகள் வெளிப்படுத்தப்பட்டன.

பின்னர். ‘அரகலய’ போராட்டத்தில் பற்றவைக்கப்பட்ட சொத்துக்களுக்காக அப்போதைய பாராளுமன்ற உறுப்பினர்கள், அமைச்சர்கள் பெற்றுக்கொண்ட இழப்பீடுகள் வெளிக்கு வந்தன. பின் சுத்தமான இலங்கை ( கிளீன் சிறிலங்கா). அதன் பின்னர் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பில் பட்டலந்த ஆணைக்குழு விவகாரம் பூதாகாரமாக்கப்பட்டது.

இவ்வாறு நகரும் அரசு தனக்குரிய சந்தர்ப்பங்களைப் பயன்படுத்திக் கொள்ளவே முயற்சிக்கிறது என்பது மாத்திரம் தெளிவாகத் தெரிகிறது.அனுரகுமார ஜனாதிபதியானவுடன், பாராளுமன்றத்தைக் கலைத்து அந்தச் சூட்டுடனேயே பாராளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. ஆனால், அந்தச் சூட்டுடன் நடத்த முடியாது போன உள்ளூராட்சித் தேர்தல் அறிவிக்கப்பட்டிருக்கிறது.

அதற்கான சூடாக வரவு-செலவு திட்டம் பயன்படுத்தப்படப் போகிறது. இருந்தாலும், இன்னமும் இரண்டு மாதங்களில்தான் வரவு-செலவுத் திட்டத்தின் ஊடான பிரதிபலிப்பு தெரிய வரும். அதுவரையில் காலம் தாழ்த்தாது இத் தேர்தல் நடைபெறுகிறது.

தேர்தலின் பின்னரே மக்கள் நெருக்கடிகளை எதிர்கொள்வர்.இவ்வாறான நிலையில், “காகம் இருக்கப் பனம் பழம் விழுந்த” கதையாக நடைபெறுவனவற்றைக் கொண்டு ஒட்டுமொத்தமான முடிவுக்கு வருவதும் கருத்துக்களை வெளியிடுவதும் பொருத்தப்பாடற்றதாகவே தோன்றுகிறது. நாடு ஸ்த்திரநிலையை எட்டிவிட்டதா? இல்லையா? என்பதை மக்களிடமே கேட்க வேண்டும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அனுர-போட்ட-முடிச்சு/91-354307

படலந்த சித்ரவதை முகாமுக்கும் ரணில் விக்ரமசிங்கவுக்கும் என்ன தொடர்பு? ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை கூறும் தகவல்கள்

3 months 1 week ago

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க

கட்டுரை தகவல்

  • எழுதியவர், ரஞ்சன் அருண் பிரசாத்

  • பதவி, பிபிசி தமிழுக்காக, இலங்கை

  • 6 மணி நேரங்களுக்கு முன்னர்

கடந்த 1980ஆம் ஆண்டு காலப்பகுதியின் இறுதி ஓரிரு வருடங்களில், அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் சித்திரவதை முகாம் தொடர்பில் தற்போது பாரிய சர்ச்சை தோன்றியுள்ளது.

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவரும், முன்னாள் இலங்கை ஜனாதிபதியும், 6 தடவை பிரதமராகவும் பதவி வகித்த ரணில் விக்ரமசிங்க, அல் ஜசீரா தொலைக்காட்சியில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டிருந்தார்.

இந்த நிகழ்ச்சியில் படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் கலந்துரையாடல்கள் நடத்தப்பட்டதை அடுத்தே, படலந்த சித்திரவதை முகாம் பேசுபொருளாக மாறியது.

படலந்த சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையுடன் தொடர்புபட்ட கேள்விகள் எழுப்பப்பட்டதைத் தொடர்ந்தே இந்த விடயம் பாரிய சர்ச்சையை நாட்டில் தோற்றுவித்துள்ளது.

படலந்த அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்பிப்பு

படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான அறிக்கையை, அரசாங்கம் கடந்த மார்ச் 14ஆம் தேதி நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்தது.

சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்கவினால் இந்த படலந்த சித்திரவதை முகாம் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.

இந்த அறிக்கை குறித்து நடவடிக்கைகள் எடுப்பது தொடர்பில் ஜனாதிபதி தலைமையிலான அமைச்சரவையினால் கொள்கை தீர்மானமொன்று எடுக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.

''கடந்த 1988ஆம் ஆண்டின் தொடக்கம் 1990ஆம் ஆண்டில் சிவில் யுத்தம் இடம்பெற்ற காலப் பகுதியில் முன்னெடுக்கப்பட்ட ஆயிரக்கணக்கான குற்றச் செயல்களில் படலந்த பகுதியில் நடத்திச் செல்லப்பட்ட பாரிய சித்திரவதை முகாம் தொடர்பில் நடத்தப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணை குறித்து தற்போது உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் பேசப்பட்டு வருகின்றன" என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இது குறித்து தொடர்ந்து அவர் பேசுகையில், "1977ஆம் ஆண்டு முதல் 1994ஆம் ஆண்டு வரை ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியை முடிவுக்குக் கொண்டு வந்து, 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஆட்சி மாற்றத்தின் ஊடாக சட்டவிரோதமான, ஜனநாயக விரோதமான தன்னாட்சி அரசாங்கத்தை வீழ்த்தி 17 வருட சாபத்திலிருந்து நாட்டை மீட்டெடுத்து ஜனநாயகத்தை உறுதி செய்வதே நோக்கமாக அமைந்திருந்தது.

கடந்த 17 வருட காலப் பகுதியில் இடம்பெற்ற அரச பயங்கரவாதத்தில் கொலை செய்யப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களுக்கு நீதியை நிலைநாட்டுவதே நோக்கம். சூரியகந்த போன்ற மனித புதைகுழிகள் தொடர்பாகவும், படலந்த போன்ற சித்திரவதை முகாம்கள் தொடர்பாகவும் அப்போதைய தலைவர்கள் அந்தந்த இடங்களுக்குச் சென்று தகவல்களை வெளியிட்ட தருணத்தில் நியாயத்தை நிலைநாட்டிக் கொள்ளவே மக்கள் எதிர்பார்த்தார்கள்" என்றார்.

இதன்படி, 1995ஆம் ஆண்டு படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்ட சட்டவிரோத சித்திரவதை முகாம் குறித்த விசாரணைகளை நடத்த அப்போதைய ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் நிர்வாகத்தால் உத்தரவிடப்பட்டது.

இந்த விசாரணைக்கான ஜனாதிபதி ஆணைக்குழுவின் காலப் பகுதிகள் பல தடவை நீடிக்கப்பட்டன. இந்த விசாரணைக் குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு மே 21ஆம் தேதி அந்த ஆணைக்குழுவின் செயலாளர் ஜி.கே.ஜி.பெரேராவினால் சமர்ப்பிக்கப்பட்டது என்றும் அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

இலங்கை

பட மூலாதாரம்,GOVERNMENT PRESS

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் அமைக்கப்பட்ட படலந்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை 1998ஆம் ஆண்டு ஆணைக் குழுவினால் ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்ட போதிலும், அந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

இந்த நிலையிலேயே, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான பேச்சு மீண்டும் உருவெடுத்த பின்னணியில், இந்த அறிக்கையைத் தற்போதைய அரசாங்கம் நாடாளுமன்றத்தில் கடந்த 14ஆம் தேதி சமர்ப்பித்திருந்தது.

''இந்தச் சம்பவம் இடம்பெற்று 35 வருடங்கள் கடந்துள்ள நிலையிலும், ஜனாதிபதி ஆணைக்குழு அமைக்கப்பட்டு 30 வருடங்களும், ஆணைக் குழுவின் அறிக்கை வெளியிடப்பட்டு 25 வருடங்களும் கடந்துள்ள இந்தத் தருணத்தில் எமது கட்சி மற்றும் எமது அமைச்சரவையினால் இந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் அதை மக்கள் மயப்படுத்துவதற்குமான பொறுப்பு நம்மிடம் உள்ளது'' என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க கூறுகின்றார்.

இந்த அறிக்கையை சட்ட மாஅதிபருக்கு அனுப்பி வைக்கவும், இந்த அறிக்கை தொடர்பிலான எதிர்கால நடவடிக்கைகள் குறித்த தீர்மானங்களை எட்டுவதற்கு ஜனாதிபதியினால் விசேட குழுவொன்று நியமிக்கப்படவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் பிமல் ரத்நாயக்க குறிப்பிட்டார்.

நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள படலந்த சித்திரவதை முகாம் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு அறிக்கை தொடர்பான விவாதத்தை எதிர் வரும் ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி முற்பகல் 11.30 முதல் மாலை 5.30 வரை இந்த விவாதம் நடத்தப்பட இருப்பதுடன், இரண்டாம் கட்ட விவாதத்தை மே மாதத்தில் நடத்த தீர்மானம் எட்டப்பட்டுள்ளது.

படலந்த சித்திரவதை முகாம் - பின்னணி என்ன?

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க

படலந்த ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கைப்படி, 1980ஆம் ஆண்டு காலப் பகுதியின் இறுதிக் காலகட்டத்தில், அப்போதைய அரசாங்கத்தினால் நடத்தப்பட்டதாகக் கூறப்படும் கொலைகள், சித்திரவதை முகாம்கள், சட்டவிரோத தடுத்து வைப்புகள் இடம்பெற்ற பகுதியாக படலந்த சித்திரவதை முகாம் கூறப்படுகின்றது.

கடந்த 1987-1990ஆம் ஆண்டு காலப் பகுதியில் படலந்த வீடமைப்பு திட்டத்திலுள்ள வீடுகளில் இந்த முகாம்கள் நடத்திச் செல்லப்பட்டதாகவும், இந்தப் பகுதியில் சட்டவிரோதமாக போலீஸ் அதிகாரிகளின் தலையீட்டில் பல்வேறு நபர்கள் கடத்திச் செல்லப்பட்டு சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டதாகவும், கொலை செய்யப்பட்டதாகவும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவினால் 1995ஆம் ஆண்டு நியமிக்கப்பட்ட படலந்த ஆணைக் குழுவின் விசாரணை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

"ஐக்கிய தேசியக் கட்சியின் 17 வருட ஆட்சிக் காலத்தில் இடம் பெற்றதாகக் கூறப்படும் சித்திரவதைகள் மற்றும் கொலைகள் தொடர்பில் விசாரணைகளை நடத்தி மக்களுக்கான நியாயத்தைத் தமது அரசாங்கம் நிலைநாட்டும்" என்பது 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தல் பிரசாரத்தில் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் பிரதான தேர்தல் பிரசாரமாகக் காணப்பட்டது.

இதன்படி, படலந்த சித்திரவதை முகாம் மற்றும் சூரியகந்த மனித புதைகுழி தொடர்பில் அந்தக் காலப் பகுதியில் அதிக கவனம் செலுத்தப்பட்டது. 1994ஆம் ஆண்டு இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி பீடம் ஏறிய சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, தனது ஜனாதிபதி அதிகாரத்தைப் பயன்படுத்தி, படலந்த சித்திரவதை முகாம் தொடர்பான விசாரணைகளுக்காக ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை ஆட்சி பீடம் ஏறிய குறுகிய காலத்திலேயே ஆரம்பித்திருந்தார்.

இதன்படி, 1995ஆம் ஆண்டு இந்த ஜனாதிபதி ஆணைக்குழு, விசேட வர்த்தமானி அறிவித்தலின் ஊடாக ஸ்தாபிக்கப்பட்டது.

இந்த ஆணைக்குழுவின் ஆயுட்காலம் சுமார் 12 தடவைகளுக்கும் அதிக சந்தர்ப்பங்களில் நீடிக்கப்பட்டதுடன், இந்த ஆணைக்குழுவின் அறிக்கை 1998ஆம் ஆண்டு மே மாதம் 5ஆம் தேதி அப்போதைய ஜனாதிபதி செயலாளரிடம் கையளிக்கப்பட்டு இருந்தது.

ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் முன்னாள் அதிகாரியான சட்டத்தரணி எஸ்.குணவர்தன செயற்பட்டிருந்ததுடன், அவர் தனது பதவியை ராஜினாமா செய்த பின்னணியில் பதில் செயலாளராக டேவிட் கீதனகே பணியாற்றியிருந்தார்.

அதன் பின்னரான காலத்தில் இந்த ஆணைக்குழுவின் செயலாளராக இலங்கை நிர்வாக சேவையின் இரண்டாம் நிலை தரத்தைக் கொண்ட அதிகாரியான ஜீ.கே.ஜீ.பெரேரா பணியாற்றியுள்ளார்.

கடந்த 1998ஆம் ஆண்டு தனது பணிகளை நிறைவு செய்த ஆணைக்குழு, அந்த அறிக்கையை அதே ஆண்டு ஜனாதிபதியிடம் கையளித்திருந்த போதிலும், இந்த அறிக்கை கடந்த 14ஆம் தேதி வரை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கவில்லை.

"கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி 1ஆம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரை அரச உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான படலந்த வீடமைப்புத் திட்டத்தில் நடத்திச் செல்லப்பட்டதாகக் கூறப்படும் சட்டவிரோதமான சித்திரவதை முகாமில் நபர்கள் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டார்களா? சட்டவிரோதமாகத் தடுத்து வைக்கப்பட்டார்களா? அதற்குப் பொறுப்பு கூறவேண்டிய நபர்கள் யார்?" என்பவை உள்ளிட்ட ஐந்து விடயங்கள் குறித்து விசாரணை நடத்தும் பொறுப்பு இந்த ஆணைக்குழுவிடம் கையளிக்கப்பட்டிருந்தது.

இந்த ஆணைக்குழுவின் பகிரங்க விசாரணைகள் கொழும்பு புதுக்கடை நீதிமன்ற கட்டடத் தொகுதியின் 2ஆம் இலக்க மேல் நீதிமன்ற வளாகத்தில் 1996ஆம் ஆண்டு ஜனவரி 16ஆம் தேதி ஆரம்பிக்கப்பட்டதுடன், இந்தக் கூட்டம் தொடர்ச்சியாக 127 நாட்கள் இடம்பெற்றது.

இந்த விசாரணைகளில் ஐக்கிய தேசியக் கட்சியின் பிரபல தலைமைகளான ரணில் விக்ரமசிங்க, ஜோசப் மைக்கல் பெரேரா, ஜோன் அமரதுங்க உள்ளிட்ட 82 பேரிடம் சாட்சியங்கள் பதிவு செய்யப்பட்டன.

படலந்த சித்திரவதை முகாம் மற்றும் ரணில் விக்ரமசிங்க

இலங்கை

பட மூலாதாரம்,GOVERNMENT PRESS

படக்குறிப்பு,படலந்த ஆணைக்குழுவின் விசாரணைக் குழு உறுப்பினர்கள்

மேல் மாகாணத்தின் கம்பஹா மாவட்டத்தின் பியகம தேர்தல் தொகுதியில் படலந்த பகுதி அமைந்துள்ளது. இந்த படலந்த பகுதியில் இலங்கை உர கூட்டுத்தாபனத்திற்குச் சொந்தமான வீடமைப்பு திட்டமொன்று அமைக்கப்பட்டிருந்தது.

இந்த வீடமைப்புத் திட்டத்தில் 64 வீடுகள் அமைக்கப்பட்டு இருந்ததுடன், வீட்டின் வசதிகள் மற்றும் தரங்களுக்கு அமைய ஏ, பி, சி என அந்த வீடுகள் வகைப்படுத்தப்பட்டிருந்தன.

இந்த வீட்டுத் திட்டமானது, அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சுக்கு கீழ் காணப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகச் செயற்பட்ட அசோக்க சேனாநாயக்கவை தொலைபேசியூடாகத் தொடர்பு கொண்டு, படலந்த வீடமைப்புத் திட்டத்திலுள்ள வீடுகளில் சிலவற்றை போலீஸ் அதிகாரிகளுக்காக ஒதுக்கீடு செய்து தருமாறு கோரியுள்ளதாக ஆணைக் குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரச உர கூட்டுத்தாபனத்தின் ஊடாக இந்த வீடுகளைப் பொறுப்பேற்றுக் கொண்ட போலீஸ் அதிகாரியாக உதவி போலீஸ் அத்தியட்சராக அப்போது கடமையாற்றிய டக்ளஸ் பீரிஸ் ஆணைக்குழுவினால் அடையாளம் காணப்பட்டுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைகளின் பிரகாரமே, படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகளை வழங்கியதாகவும், அவர் ஆலோசனை வழங்காத பட்சத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டிருக்காது எனவும் அரச உர கூட்டுத்தாபனத்தின் தலைமை அதிகாரியாகக் கடமையாற்றிய அசோக்க சேனாநாயக்க, ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

இந்த வீடுகளை வழங்குவதற்காக எந்தவோர் உடன்படிக்கைகளும் கைச்சாத்து இடப்பட்டிருக்கவில்லை எனக் கூறப்படுகின்றது. இந்த ஜனாதிபதி ஆணைக்குழு முன்னிலையில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் எர்னஸ்ட் பெரேரா சாட்சி வழங்கியுள்ளார்.

'இந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்கப்பட்டமையானது, டக்ளஸ் பீரிஸ், அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகள் மற்றும் குறித்த அமைச்சர் ஆகியோருக்கு இடையில் இடம்பெற்ற தனிப்பட்ட கொடுக்கல் வாங்கல்' என அப்போதைய போலீஸ் மாஅதிபர், ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

குறித்த வீடமைப்புத் திட்டத்தில் A 2/2 என்ற இலக்கத்தைக் கொண்ட வீட்டில் 1983ஆம் ஆண்டு மார்ச் 2ம் தேதி முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வரை ரணில் விக்ரமசிங்க வசித்துள்ளதாகக் கூறப்படுகின்றது.

அந்தக் காலப் பகுதியில் அவர் பதவி வகித்த இளைஞர் விவகாரம் மற்றும் தொழில் பாதுகாப்பு அமைச்சரின் சுற்றுலா விடுதியாகவும், கைத்தொழில் அமைச்சரின் அதிகாரபூர்வ வீடாகவும் ரணில் விக்ரமசிங்க அந்த வீட்டைப் பயன்படுத்தியுள்ளார்.

சட்டவிரோதமான முறையில் நபர்களைத் தடுத்து வைத்து, அவர்களுக்கு சித்திரவதை வழங்கப்பட்டதாகக் கூறப்படும் வீடுகளின் இலக்கங்களையும் ஆணைக்குழு தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளது. இதன்படி, ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் பிரகாரம், 23 முதல் 26 வரையான இலக்கங்களைக் கொண்ட அறிக்கை பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 1989 முதல் 1994ஆம் ஆண்டு ஆகஸ்ட் வரை ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகம்.

இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கிய டி.எம்.பந்துல என்ற நபர் சாட்சியம் வழங்கியுள்ளார். ஆணைக்குழுவினால் வீட்டுத் தொகுதி ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட சந்தர்ப்பத்தில் குறித்த நபரினால் இந்த வீடு அடையாளம் காட்டப்பட்டுள்ளது.

அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்க வைக்கப்பட்டிருந்தனர். ரணில் விக்ரமசிங்கவின் பிரத்தியேக பாதுகாப்பு அதிகாரியான போலீஸ் பரிசோதகர் சுதத் சந்திரசேகர தங்கியுள்ளார். உதவி போலீஸ் அதிகாரியான டக்ளஸ் பீரிஸின் பாதுகாப்பு அதிகாரிகளும் தங்கியுள்ளனர்.

இந்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டு, தான் பல்வேறு சித்திரவதைகளுக்கு உட்படுத்தப்பட்டதாக சாட்சியமளித்த அர்ல் சுகி பெரேரா என்பவர் இந்த வீட்டை அடையாளம் காட்டியுள்ளார். சபுகஸ்கந்த போலீஸாரிடம் வீடொன்று கையளிக்கப்பட்டு இருந்ததும் இந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

குறித்த வீட்டில்தான் பலவந்தமாகத் தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக வாசல ஜயசேகர என்பவர் இந்த வீட்டை அடையாளம் கண்டுகொண்டுள்ளார்.

A 1/8 என்ற இலக்கத்தைக் கொண்ட வீடு எவருக்கும் கையளிக்கப்படாத பின்னணியில், அந்த வீட்டை அண்மித்து போலீஸ் அதிகாரிகளின் நடமாட்டம் காணப்பட்டுள்ளது. இந்த விடயம் தொடர்பில் உர கூட்டுத் தாபனத்தின் தலைமை அதிகாரி பேலியகொடை போலீஸாரிடமும், ரணில் விக்ரமசிங்கவிடமும் அறிவித்துள்ளார். ஆனால், இந்த விடயம் தொடர்பில் எவரும் நடவடிக்கை எடுக்கவில்லை. ரணில் விக்ரமசிங்கவின் பாதுகாப்பு அதிகாரிகள் தங்கியிருந்த A 1/7 என்ற வீட்டை அண்மித்து இந்த வீடு அமைந்துள்ளதுடன், அந்த வீடு பிரத்தியேக பாவனைக்காக வைக்கப்பட்டிருந்த இடம் என அஜித் ஜயசிங்க என்ற நபர் ஆணைக்குழுவிடம் சாட்சி வழங்கியுள்ளார்.

ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம்

அப்போதைய கைத்தொழில் அமைச்சரான ரணில் விக்ரமசிங்க, இந்த ஆணைக்குழுவில் சாட்சியம் வழங்கியுள்ளார். அதன்படி, கொலை செய்யப்பட்ட முன்னாள் பாதுகாப்பு அமைச்சரான ரஞ்ஜன் விஜேரத்னவின் கோரிக்கைக்கு அமையவே தான் முன்னெடுத்ததாக அவர் கூறியுள்ளார்.

எனினும், அது தொடர்பான எந்தவோர் ஆவணங்களையும் முன்வைக்கவில்லை என்பதுடன், அது தொடர்பில் அப்போதைய போலீஸ் மாஅதிபர் மற்றும் போலீஸ் திணைக்களம் இது தொடர்பில் அறிந்து இருக்காமையினால், ரணில் விக்ரமசிங்கவின் சாட்சியம் நிராகரிக்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சியின் மரணம்

வழக்கறிஞரான விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி என்பவர் 1988ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 25ஆம் தேதி காணாமல் போயிருந்தார். அவர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி வழக்கறிஞர் ரஞ்ஜித் அபேசூரிய, போலீஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

காணாமல் போன விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி கைது செய்யப்பட்டுள்ளாரா என அப்போதைய பாதுகாப்பு செயலாளர், அப்போதைய போலீஸ் மாஅதிபரிடம் வினவியுள்ளார்.

போலீஸ் மாஅதிபர் இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பிரதேசத்திற்குப் பொறுப்பான பிரதி போலீஸ் மாஅதிபரிடம் வினவியபோது, அவ்வாறு கைது செய்யப்படவில்லை என்று பதில் வழங்கப்பட்டுள்ளது.

வழக்கறிஞர் விஜயதாஸ, தங்காலை போலீஸாரினால் கைது செய்யப்பட்டிருக்கலாம் என அப்போதைய அரச பாதுகாப்பு அமைச்சின் ஆலோசகராகக் கடமையாற்றிய முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவின் புதல்வரான ரவி ஜெயவர்தன போலீஸ் மாஅதிபரிடம் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதைத் தொடர்ந்து, போலீஸ் மாஅதிபர் தங்காலை போலீஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட போலீஸ் அத்தியட்சர் கரவிட்ட தர்மதாஸவிடம் வினவியுள்ளதுடன், அவ்வாறான சம்பவமொன்று பதிவாகியுள்ளதை அதிகாரி மறைமுகமாக ஏற்றுக்கொண்டுள்ளார்.

ஜனாதிபதி ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 72வது பக்கத்தில் குறிப்பிடப்பட்டுள்ள முன்னாள் போலீஸ் மாஅதிபர் ஆர்னஸ்ட் பெரேராவின் சாட்சியத்தின் பிரகாரம், ரணில் விக்ரமசிங்க தன்னை தொலைபேசியூடாகத் தொடர்புகொண்டு சந்தேக நபரை (வழக்கறிஞர் விஜயதாஸ லியன்ன ஆராய்ச்சி) கொழும்புவுக்கு கொண்டு வந்து, ''களனி பிரிவில் செயற்படுகின்ற விசேட குழுவிடம்'' ஒப்படைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தாம் நம்புவதாகக் கூறப்பட்டுள்ளது.

இதன்படி, போலீஸ் மாஅதிபரின் ஆலோசனைகளின் பிரகாரம், வழக்கறிஞர் விஜயதாஸ லியக்க ஆராய்ச்சி கொழும்பிற்கு அழைத்து வரப்பட்டு, களனி பிரதேசத்திற்குப் பொறுப்பாகச் செயற்பட்ட குற்றச் செயல் தடுப்புப் பிரிவின் போலீஸ் பரிசோதகர் குலரத்னவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி முற்பகல் 11 மணியளவில் கடும் காயங்களுடன் வழக்கறிஞர் லியன்ன ஆராய்ச்சி மீட்கப்பட்டு, கொழும்பு பெரிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதுடன், அவர் நள்ளிரவு உயிரிழந்துள்ளார்.

ஆயுதங்களினால் தாக்குதல் நடத்தப்பட்டமையே மரணத்திற்கான காரணம் என பிரேத பரிசோதனை அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. அத்துடன், அவரின் உடலில் 207 இடங்களில் காயங்கள் காணப்பட்டதாகவும் கூறப்பட்டுள்ளது.

குறித்த வழக்கறிஞரை கொழும்பிற்குக் கொண்டு வரும்படி தான் போலீஸ் மாஅதிபருக்கு ஆலோசனை வழங்கவில்லை என ரணில் விக்ரமசிங்க ஆணைக்குழு முன்னிலையில் சாட்சியம் வழங்கியுள்ளார்.

போலீஸ் மாஅதிபருக்கு ரணில் விக்ரமசிங்க ஆலோசனை வழங்கியதாகக் கூறப்படும் சம்பவத்தை ரணில் விக்ரமசிங்க நிராகரித்த போதிலும், முன்னாள் போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேராவிடம் குறுக்குக் கேள்வி எழுப்புவதற்கு ரணில் விக்ரமசிங்க சார்பில் முன்னிலையான சட்டத்தரணி முன்வரவில்லை என்பது விசேடமான விடயமாக இந்த ஆணைக்குழுவினால் கருத்தில் கொள்ளப்பட்டது.

படலந்த அறிக்கையின் பிரகாரம் இதற்கு யார் பொறுப்பு?

இலங்கை

பட மூலாதாரம்,GETTY IMAGES

படக்குறிப்பு,ரணில் விக்ரமசிங்க

கடந்த 1988ஆம் ஆண்டு ஜனவரி மாதம் முதலாம் தேதி முதல் 1990ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் தேதி வரையான காலப் பகுதியில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் எவரேனும் ஒருவர் அல்லது நபர்கள் தடுத்து வைக்கப்பட்டு, அவர்கள் அமானுஷியமான முறையில் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டிருந்தால் அதற்கு நேரடியாகவும் மறைமுகமாகவும் பொறுப்பு கூற வேண்டியவர்கள் தொடர்பான தரவுகள் ஆணைக்குழுவின் ஆங்கில பிரதியின் 119 முதல் 122 வரையான பக்கங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன.

கடந்த 1986ஆம் ஆண்டு முதல் பல்வேறு சந்தர்ப்பங்களில் அப்போதைய கைத்தொழில் அமைச்சர் ரணில் விக்ரமசிங்கவினால் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் போலீஸ் அதிகாரிகளை நிறுத்துவதற்கு, அரச உர கூட்டுத்தாபனத்தின் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதுடன், அதனூடாக 13 வீடுகள் உதவி போலீஸ் அதிகாரி டக்ளஸ் பீரிஸிற்கு பொறுப்பாக வழங்கப்பட்டுள்ளது.

இவ்வாறு வீடுகளை வழங்க ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்தமையானது, தனது அமைச்சுப் பதவியின் அதிகாரங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியமை எனக் கூறப்படுகின்றது.

இந்த வீடுகளைப் பெற்றுக்கொள்வதற்கு போலீஸ் திணைக்கள சரத்துகளுக்கு அமைய அது முறையற்றது என்பதுடன், அது குறித்து நடவடிக்கை எடுக்காமை தொடர்பில் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூறவேண்டும் என்பதுடன், அங்கு சட்டவிரோதமாக எதேனும் நடந்திருக்குமானால் அதை நிறுத்துவதற்காக அவர் நடவடிக்கை எடுக்காமை குறித்துப் பொறுப்பேற்க வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் படலந்த வீடமைப்புத் திட்டத்தில் வரவழைக்கப்பட்டிருந்த போலீஸ் அதிகாரிகளுக்குக் கூட்டம் நடத்தியமையும், அவரால் அதிகார துஷ்பிரயோகம் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்க போலீஸாரின் செயற்பாடுகளுக்கும், சட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான செயற்பாடுகளுக்கும் தலையீடு செய்துள்ளார் எனக் கூறப்படுகின்றது.

ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய வழங்கப்பட்ட வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்களை ஸ்தாபிக்க வசதிகள் வழங்கப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்படுகின்றது.

B2, B8, B34, A1/8 ஆகிய படலந்த வீடுகளில் சட்டவிரோத தடுப்பு முகாம்கள் மற்றும் சித்திரவதை முகாம்களை நடத்த ரணில் விக்ரமசிங்க மற்றும் சிரேஷ்ட போலீஸ் அதிகாரி நலீன் தெல்கொட பொறுப்பு கூற வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

அத்துடன், இந்த சட்டவிரோத செயற்பாடுகள் தொடர்பில் அறிந்திருந்த போதிலும், அது குறித்து உரிய நடவடிக்கை எடுக்காமை குறித்து அப்போதைய பிரதி போலீஸ் மாஅதிபர் எம்.எம்.ஆர் (மெரில்) குணரத்ன, அப்போதைய போலீஸ் மாஅதிபர் அர்னஸ்ட் பெரேரா ஆகியோர் பொறுப்பு கூற வேண்டும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் பரிந்துரைகள் என்ன?

இலங்கை

பட மூலாதாரம்,BATALANDA COMMISSION REPORT

படக்குறிப்பு,படலந்த சித்திரவதை முகாம் வரைபடம்

நாட்டுப் பிரஜைகளின் அடிப்படை உரிமை தொடர்ச்சியாக மீறப்படும் நபர்கள் யார் என்பது அடையாளம் காணப்படும் பட்சத்தில், அவர்களின் பிரஜாவுரிமை ரத்து செய்யப்பட வேண்டும் என்பதே சரியான தண்டனை என்பதுடன், அதை வழங்குவதற்கான சட்ட அதிகாரத்தை உயர்நீதிமன்றத்திற்கு வழங்க வேண்டும் என பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

ஆணைக்குழுவின் ஆங்கில அறிக்கையின் 124, 125 ஆகிய பக்கங்களில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சட்டவிரோத விடயங்கள் இடம்பெறும் பகுதிகளுக்குச் சென்று அதுகுறித்து விசாரணைகளை நடத்தும் அதிகாரம் வழங்கும் வகையில், குற்றவியல் கோவை சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான குழுவொன்று நியமிக்கப்பட வேண்டும் என அந்தப் பரிந்துரைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த அனைத்து முறைப்பாடுகள் தொடர்பிலும் விசாரணைகளை நடத்துமாறு போலீஸ் மாஅதிபருக்கு உத்தரவிடுதல் உள்ளிட்ட மேலும் பல பரிந்துரைகள் முன்வைக்கப்பட்டுள்ளன.

ரணில் விக்ரமசிங்க தற்போது கூறுவது என்ன?

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கையை தான் முழுமையாகவே நிராகரிப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

படலந்த ஆணைக்குழுவின் அறிக்கை விவகாரம் தொடர்பில் தன்மீது எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதைக் குறிப்பிட்டுள்ளார்.

''கடந்த 1987ஆம் ஆண்டு இந்திய - இலங்கை உடன்படிக்கை கைச்சாத்து இடப்பட்டதைத் தொடர்ந்து, மக்கள் விடுதலை முன்னணி நாடு முழுவதும் வன்முறைகளைத் தோற்றுவிப்பதற்கு நடவடிக்கைகளை எடுத்திருந்தது. அந்தச் சந்தர்ப்பத்தில் நாட்டின் முக்கியமான இடங்களைப் பாதுகாக்கும் பொறுப்பு, அப்போதைய ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்தனவினால் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்டது" என அவர் கூறுகிறார்.

தொடர்ந்து பேசிய அவர், "பியகம பகுதியில் எரிபொருள் சுத்திகரிப்பு நிலையம், டீசல் மின் உற்பத்தி நிலையம், மாவெலியில் இருந்து கொழும்பிற்கு மின்சாரத்தைக் கடத்தும் மத்திய நிலையம் உள்ளிட்ட வர்த்தக மையங்களில் முக்கியமான பொருளாதார நிலையங்கள் காணப்பட்டன. அந்தப் பகுதியின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டது.

பாதுகாப்புப் பிரிவினர் தங்குவதற்காக இலங்கை உர கூட்டுத் தாபனத்திற்குச் சொந்தமான, அந்தச் சந்தர்ப்பத்தில் கைவிடப்பட்ட நிலையில் காணப்பட்ட கட்டடங்கள் மற்றும் வீடுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. அந்தச் சந்தர்ப்பத்திலும் இலங்கை மின்சார சபையின் அதிகாரிகள் சில வீடுகளில் தங்கியிருந்தனர். இந்த வன்முறை காலப் பகுதியில் சப்புகஸ்கந்த போலீஸ் நிலையத்தின் மீது தாக்குதல் நடத்தி போலீஸ் பொறுப்பதிகாரி கொலை செய்யப்பட்டார்," என்று தெரிவித்துள்ளார்.

அதோடு, "அப்போதைய பாதுகாப்புப் பிரதி அமைச்சர் ரஞ்ஜன் விஜேரத்ன என்னுடன் தொடர்பு கொண்டு பேசினார். ராணுவம் மற்றும் போலீஸ் அதிகாரிகளின் பாதுகாப்பிற்காக வீடமைப்புத் திட்டத்தில் கைவிடப்பட்ட நிலையில் இருந்த வீடுகளை அவர்களுக்கு வழங்குமாறு கேட்டுக்கொண்டார். அதன்படி, களனி போலீஸ் அதிகாரியான நலின் தெல்கொடவிடம் கையளிக்கப்பட்டது" என்றும் கூறியுள்ளார்.

மேலும், இந்த காலப் பகுதியில் உள்ளுராட்சி சபை உறுப்பினர் ஒருவர், கூட்டுறவு சங்கத் தலைவர், போலீஸ் அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கொலை செய்யப்பட்டதாகவும், சில வீடுகளின் மீது தாக்குதல்கள் நடத்தப்பட்டதாகவும் கூறியுள்ள ரணில் விக்ரமசிங்க, "சரிவை எதிர்நோக்கியிருந்த பொருளாதாரத்தையும், மக்களின் இயல்வு வாழ்க்கையையும் பாதுகாப்பையும் உறுதிப்படுத்துவதற்காக அதிகாரத்தில் இருந்த அரசாங்கத்தினால் நடவடிக்கை எடுக்கப்பட்டது'' எனத் தெரிவித்துள்ளார்.

அது மட்டுமின்ற், இந்த ஆணைக்குழு அரசியல் இலாபத்தை கருத்திற் கொண்டே செயற்பட்டதாகவும் ரணில் விக்ரமசிங்க குற்றம் சாட்டுகின்றார்.

''கடந்த 1994ஆம் ஆண்டு அதிகாரத்திற்கு வந்த சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, படலந்த பகுதியில் சித்திரவதை முகாமொன்று இருந்ததா என்பதைக் கண்டறிவதற்காக ஆணைக்குழுவொன்றை நியமித்திருந்தார். அதற்காகப் பலரை வரவழைத்திருந்தார். என்னை சாட்சியாளராக மாத்திரமே வரச் சொன்னார்கள். அந்தச் சந்தர்ப்பத்தில் நான் எதிர்கட்சித் தலைவராகச் செயற்பட்டேன்."

"படலந்த ஆணைக்குழு முழுமையாக அரசியல் சேறுபூசும் நடவடிக்கையை நோக்கமாகக் கொண்டது. எனினும், அந்த முயற்சி வெற்றியளிக்கவில்லை. அறிக்கையில் அமைச்சர் என்றே என்னைக் குறிப்பிட்டுள்ளனர். போலீஸ் அத்தியட்சகரினால் போலீஸ் அதிகாரிகளுக்கு வீடுகள் வழங்குவது சரியானது இல்லை எனக் கூறப்பட்டுள்ளது. போலீஸ் மாஅதிபருக்கு வீடுகளை வழங்கி, அதை போலீஸ் அதிகாரிகளுக்கு வழங்குவதே சரியான நடைமுறை எனக் கூறப்பட்டுள்ளது."

"இதில் நானும், தெல்கொடவும் பொறுப்பு கூற வேண்டும் என ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள ஏனைய விடயங்கள் என்னுடன் தொடர்புப்படவில்லை'' என அவர் பதிலளித்துள்ளார்.

இந்த அறிக்கையை பெரும்பாலானோர் ஏற்றுக்கொள்ளாத காரணத்தாலேயே நாடாளுமன்றத்தில் இந்த அறிக்கை குறித்து விவாதம் இடம்பெறவில்லை எனத் தான் நம்புவதாக ரணில் விக்ரமசிங்க குறிப்பிடுகின்றார்.

அத்துடன், நாடாளுமன்ற சபை அறிக்கையொன்றை 25 வருடங்களுக்குப் பின்னர் விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளும் சம்பிரதாயம் இலங்கை நாடாளுமன்றத்தில் மாத்திரமன்றி, உலகிலுள்ள எந்தவொரு நாடாளுமன்றத்திலும் கிடையாது என்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பதில் வழங்கியுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c2er00e9mkmo

“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.

3 months 1 week ago

Ilankai_Tamil_Arasu_Kachchi_Logo_1200px_

“நாடு அனுரவோடு ஊர் எங்களோடு” கட்சி யாரோடு? நிலாந்தன்.

சில கிழமைகளுக்கு முன்பு தமிழரசுக் கட்சியின் பதில் தலைவர் சிவிகே சிவஞானம் நடத்திய ஒரு ஊடகச் சந்திப்பில்,ஒரு வசனத்தைச் சொன்னார்.”நாங்கள் மட்டும் தோற்கவில்லை”. இதை அவர் எத்தகைய அர்த்தத்தில் சொன்னார் ? இது எல்லாருக்குமான தோல்வி என்ற அர்த்தத்தில் சொன்னாரா? அல்லது எல்லாருமே தோற்றிருக்கிறார்கள். எனவே இதில் எங்களை மட்டும் ஏன் கேட்கிறீர்கள்? என்ற அர்த்தத்தில் சொன்னாரா ?

எல்லாருக்குமே தோல்வி ஏற்பட்டிருக்கிறது என்பதை அதன் சரியான வார்த்தைகளில் சொன்னால்,தமிழ்த் தேசியத் தரப்பைச் சேர்ந்த கட்சிகள் எல்லாவற்றுக்குமே பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது என்று பொருள்.அந்த பின்னடைவுக்கு யார் பொறுப்பு? ஒரு மூத்த கட்சியாக, உள்ளதில் பெரிய கட்சியாக தமிழரசுக் கட்சி எடுத்த முடிவுகள் அதற்குக் காரணம் இல்லையா ? இந்தத் தோல்வியானது கடந்த 15 ஆண்டுகளாக ஏற்பட்டு வரும் தொடர்ச்சியான தோல்விகளில் ஆகப்பிந்தியது என்பதனை சிவிகே சிவஞானமும் தமிழரசுக் கட்சியும் ஏற்றுக்கொள்ளுமா? இந்தத் தொடர் தோல்விகளுக்கு காரணம் என்ன?

காரணம் மிகவும் எளிமையானது. தமிழரசுக் கட்சி தன்னை எல்லாக் கட்சிகளையும் விட உயர்வானது, பெரியது, தலைமைப் பொறுப்பில் இருப்பது என்றெல்லாம் கூறிக்கொள்கின்றது. ஆனால் அந்தக் கட்சி அந்தப் பொறுப்பை உணர்ந்து நடக்கவில்லை. கடந்த 15 ஆண்டுகளாக சம்பந்தர் அந்தக் கட்சியை கொழுப்பை நோக்கிச் சாய்த்துசெல்ல முற்பட்டார்.அதன் விளைவாக கட்சிக்குள் இரண்டு நிலைப்பாடுகள் பலமாக மேலெழுந்து விட்டன. ஒரு நிலைப்பாடு கொழும்பை நோக்கிச் சாய்வது. இன்னொரு நிலைப்பாடு, போரினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உண்மையாக இருப்பது. சம்பந்தர் நினைத்தது போல கட்சியை செங்குத்தாகக் கொழும்பை நோக்கித் திருப்ப முடியவில்லை. அதன் விளைவாக மேற்சொன்ன இரண்டு போக்குகளும் ஒன்று மற்றதற்கு எதிரானதாக மேல் எழுந்துவிட்டன. அதன் விளைவாகக் கட்சி இரண்டாகப் பிளந்து கிடக்கின்றது. கட்சி இப்பொழுதும் நீதிமன்றத்தில்தான் நிற்கின்றது.கட்சித் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவரும் நாடாளுமன்றத் தேர்தலில் நிராகரிக்கப்பட்டவருமாகிய சுமந்திரன் கட்சிக்குள் புத்திசாலித்தனமாக உள்நுழைந்து கட்சியைப் படிப்படியாக தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்து கொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டின் தொடக்கத்தில் கட்சிக்குள் நடந்த தேர்தலில் கட்சி உறுப்பினர்களால் தோற்கடிக்கப்பட்டவர். கடந்த ஆண்டின் இறுதியில் நாடு முழுவதும் நடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ் மக்களால் தோற்கடிக்கப்பட்டவர். அப்படிப்பட்ட ஒருவர் கட்சிக்குள் ஒரு பிரதானியாகத் தன்னைப் பலப்படுத்தி வருகிறார். தேர்தலில் தோற்ற ஒருவர் கட்சிக்குள் இவ்வளவு முக்கியத்துவத்தை பெறுவதை எப்படிப் பார்ப்பது?

தேர்தலில் வெற்றி பெறுவதை ஒரு பிரதான தகுதியாகக் கருதிய சம்பந்தர் அதைச் சொல்லித்தான் ஏனைய கட்சிகளை மட்டம் தட்டுவார்.சம்பந்தரின் வார்த்தைகளில் சொன்னால் தேர்தலில் வெல்லாத ஒருவர் கட்சிக்குள் தன்னுடைய பிடியைப் பலப்படுத்தி வருகிறார். இதை எப்படிப் பார்ப்பது?

கட்சியைப் பலப்படுத்துவதாகக் கூறிக்கொண்டு அவர் முன்னெடுக்கும் எல்லா நடவடிக்கைகளிலும் மற்றொரு உள்நோக்கமும் இருக்கும்.சிறீதரனை எப்படி கிளிநொச்சிக்குள் முடக்குவது? என்பதே அந்த உள்நோக்கம். சிறீதரனையும் அவருடைய அணியையும் முடக்குவதற்கு அவர் பயன்படுத்தும் பிரதான ஆயுதங்களில் ஒன்று பொது வேட்பாளரை ஆதரித்தமை.

பொது வேட்பாளர் என்ற கருத்துருவமே தமிழ் அரசியலில் புதுமையானது. அது கடந்த 15 ஆண்டு கால ரியாக்ரிவ்-பதில் வினையாற்றும் அரசியலில் இருந்து தமிழ் அரசியலை ப்ரோ ஆக்டிவாக – செயல்முனைப்பு உள்ளதாக மற்றும் நோக்கத்தைக் கொண்டது.அது கட்சி கடந்து ஒரு திரட்சியை ஏற்படுத்த முயற்சித்தது. கிழக்கிலிருந்து வந்த ஒரு வேட்பாளருக்கு வடக்கில் மட்டும் ஒன்றரை லட்சத்துக்கு மேலான வாக்குகள் கிடைத்தன. அது ஒரு சாதாரண தொகை அல்ல. தமிழ்த் தேசிய வரலாற்றில் ஒரு தனி அரசியல்வாதிக்கு இதுவரை கிடைத்த வாக்குகளில் அதிகமான தொகை வாக்குகள் அவை.

அந்த வாக்குகளைத் திரட்டும் குறியீடாக தேர்தலில் நின்றவர் அரியனேத்திரன். அவர் தமிழரசு கட்சியின் உறுப்பினர். நமது கட்சி உறுப்பினர் ஒருவருக்கு அவ்வாறு அதிக தொகை வாக்குகள் கிடைத்ததை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தாயக ஒருமைப்பாட்டுக்காக வாக்குகளை திரட்டும் ஒரு குறியீடாக தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தமிழ் அரசியலை செயலூக்கம் மிக்கதாக மாற்றும் உயர்வான நோக்கத்தோடு ஒரு தேர்தலில் நின்றமையை, தமது கட்சி உறுப்பினர் ஒருவர் தேசத்தைத் திரட்டும் குறியீடாக ஒரு சந்நியாசி போல தேர்தலில் நின்றதை, தமிழரசுக் கட்சி எப்படிப் பார்க்கின்றது? அதை ஒரு குற்றமாகக் கூறி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்து அவரை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறது. அதாவது அவர் செய்த குற்றம் தேசத்தைத் திரட்டியது. தமிழரசுக் கட்சிக்கு தனது கட்சிக்காரரின் மகிமையே தெரியவில்லை. தேசத்தைத் திரட்டிய குற்றத்துக்காக அரியநேத்திரனை கட்சியை விட்டு நீக்கலாமென்றால் அதே குற்றத்துக்காக பொது வேட்பாளரை ஆதரித்த ஏனையவர்களிடம் விளக்கம் கேட்கலாமென்றால், தமிழரசு கட்சி எங்கே நிற்கின்றது? தேசத் திரட்சிக்கு எதிராகவா நிக்கிறது?

இப்பொழுது ரணில் விக்கிரமசிங்காவின் அல்ஜசீரா பேட்டி தொடர்பாக எல்லாரும் பேசிக்கொள்கிறார்கள். அந்தப் போட்டியில் தமிழ் மக்களுக்கு கிடைத்திருக்கும் பிரதான செய்தி, ரணில் இறந்த காலத்துக்குப் பொறுப்புக் கூற மாட்டார் என்பதுதான்.ரணில் விக்கிரமசிங்கம் மட்டுமல்ல, கடந்த ஜனாதிபதித் தேர்தலில் தமிழரசுக் கட்சியின் ஆதரவைப் பெற்ற சஜித் பிரேமதாசவும் பொறுப்புக் கூறத் தயாரில்லை.

ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் ஐநா கூட்டத் தொடர் நடந்து கொண்டு இருந்தது.அப்பொழுது தமிழ் வாக்குகளில் தங்கியிருந்த சஜித் என்ன சொன்னார் ? பன்னாட்டுப் பொறிமுறைக்கு எதிராகத்தான் கருத்து தெரிவித்திருந்தார். எனவே ரணில் விக்கிரமசிங்க மட்டுமல்ல, மகிந்த மட்டுமல்ல, அனுர மட்டுமல்ல, சஜித்தும் தமிழ் மக்களுக்குப் பொறுப்புக் கூறத் தயார் இல்லை. ஆனால் சுமந்திரன் அவருக்கு ஆதரவாக பகிரங்கமாக மேடையில் தோன்றினார். பொது வேட்பாளருக்காக விழும் வாக்குகள் வீணாகப்போன வாக்குகள் என்று கூறினார். பொது வேட்பாளருக்கு ஆதரவாக நின்றவர்களுக்கு எதிராக பகிரங்கமாக பிரகடனங்களை வெளியிட்டார். பொது வேட்பாளரை ஆதரித்த தனது கட்சிக்காரர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்குமாறு தனக்கு விசுவாசமான கட்சியின் மத்திய குழுவைத் தூண்டி வருகிறார். அப்படி என்றால் சுமந்திரன் எங்கே இருக்கிறார்? தேசத் திரட்சிக்கு ஆதரவாகவா? தேசத் திரட்சிக்கு எதிராகவா? பொறுப்புக் கூறலுக்கு ஆதரவாகவா? பொறுப்புகு கூறலுக்கு எதிராகவா ? தேசத் திரட்சியை அவர் எப்படி விளங்கி வைத்திருக்கிறார்?

கட்சியை ஒரு கட்டுக்கோப்பான இறுக்கமான ஸ்தாபனமாகத் திரட்ட முடியாத ஒருவர் எப்படித் தேசத்தைத் திரட்ட முடியும்? தானே ஒரு திரண்ட கட்டமைப்பாக இல்லாத கட்சி தேசத்தைத் திரட்டும் என்று எப்படி எதிர்பார்க்கலாம்?

பொது வேட்பாளரின் விடயத்தில் தேசத் திரட்சிக்கு எதிராக நின்றவர்,கட்சிக்குள் தனது பிடியை படிப்படியாகப் பலப்படுத்தி வருகிறார். தேசத் திரட்சிக்கான குறியீடாக நின்ற அரியநேத்திரனை கட்சியிலிருந்து நீக்கியிருக்கிறார்கள். அரியநேத்திரனுக்கு எதிராகத் தமிழரசுக் கட்சி எடுத்த நடவடிக்கை என்பது அக்கட்சியின் மத்திய குழு எடுத்த முடிவுகளிலேயே பாரதூரமான ஒரு வரலாற்றுத் தவறு. தேசத் திரட்சியின் குறியீடாக நின்ற தன் கட்சிக்காரரின் மகிமை தமிழரசுக் கட்சிக்கே தெரியவில்லை.கட்சி அரசியலானது தேசிய உணர்வை மழுங்கடித்து விட்டதா?

தமிழ்த் தேசிய வரலாற்றில் கடந்த அரை நூற்றாண்டுக்கும் மேலான காலப்பகுதியில் ஒரு தனித்தமிழ் வேட்பாளர் பெற்ற ஆகக் கூடிய வாக்குகளை அரியநேத்திரன் பெற்றார்.அந்த மகத்துவத்தை விளங்கிக் கொள்ள முடியாத அளவுக்கு அவருடைய கட்சியின் மத்திய குழு அதன் தேசிய ஆன்மாவை இழந்து விட்டதா? கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழரசுக் கட்சிக்கு கிடைத்த மொத்த வாக்குகள் 257,813. அரியநேத்திரனுக்கு ஜனாதிபதி தேர்தலில் கிடைத்த வாக்குகள் 2,25,000. அவை தேசத்தைத் திரட்டலாம் என்ற நம்பிக்கைக்கு கிடைத்த அடிப்படை வாக்குகள். அவை பொதுக் கட்டமைப்புக்கு மட்டும் சொந்தமான வாக்குகள் அல்ல என்பதை கடந்த நாடாளுமன்ற தேர்தலில் தமிழ் மக்கள் நிரூபித்தார்கள். அவை கட்சி கடந்த தேசத் திரட்சிக்கு கிடைத்த வாக்குகள்.

ஆனால் அரியநேத்திரனின் மகத்துவத்தை அவருடைய சொந்தக் கட்சியே உணரத் தவறிவிட்டது மட்டுமல்ல அவரைக் கட்சிக்குள் இருந்து நீக்கியதன் மூலம் கட்சியின் மத்திய குழு தமிழ் மக்களுக்கு வெளிப்படுத்தும் செய்தி என்ன? தேசத் திரட்சிக்கு எதிராக நிற்கிறோம் என்பதா?

தேசத் திரட்சிக்காக ஒரு சன்னியாசியைப் போல குறியீடாக நின்ற அரியம் கட்சிக்கு வெளியே. தேசத் திரட்சிக்கு எதிராகவும் பொறுப்புக் கூறலுக்கு எதிராகவும் தமிழ் வாக்குகளை சஜித்திற்குச் சாய்த்துக் கொடுத்தவரும் அதை ஆதரிப்பவர்களும் கூறுகிறார்கள் “நாடு அனுரவோடு; ஊர் எங்களோடு” என்று. ஆனால் கட்சி யாரோடு?

https://athavannews.com/2025/1426184

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்? - நிலாந்தன்

3 months 1 week ago

கதாநாயகர்கள், கதாநாயகிகள் இல்லாத தமிழ்த்தேசிய அரசியல்?

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் பொது வேட்பாளரை நிறுத்திய மக்கள் அமைப்புக்கு புலம்பெயர்ந்த தமிழர் ஒருவர் ஒரு பல்கலைக்கழக மாணவரை அறிமுகப்படுத்தினார். அவர் பொது வேட்பாளருக்கான அணியுடன் இணைந்து இயங்குவார் என்றும் சொன்னார். அந்த மாணவர் எதிர்பார்க்கப்பட்ட அளவுக்குத் துடிப்பாகச் செயல்படவில்லை என்று சம்பந்தப்பட்டவர்கள் தெரிவிக்கிறார்கள். எனினும் அவர் பொது வேட்பாளருக்கு ஆதரவான நிலைப்பாட்டோடு காணப்பட்டார்.

இது பழைய கதை. அண்மையில் ஒரு வாட்ஸ் அப் குழுவில் மேற்படி மாணவர் ஒரு காணொளியைப் பகிர்ந்திருந்தார். அனுரவை ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் விதத்தில் கவர்ச்சியாகத் தயாரிக்கப்பட்ட ஒரு  காணொளி அது. அவர் ஏன் அதைப் பகிர்ந்திருக்கிறார் என்பதனை அறிவதற்கு பல்கலைக்கழகத்தில் அவருக்கு கற்பித்த ஓர் ஆசிரியரிடம் கேட்டேன். அவர் சொன்னார்,”அந்த மாணவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் அமைப்பாளர்களில் ஒருவர் போலத் தோன்றுகிறார்” என்று. “ஜனாதிபதித் தேர்தலில் அவர் பொது வேட்பாளரின் பக்கம் வந்தாரே?” என்று கேட்டேன். ”அது அப்பொழுது.இப்பொழுது அவர் தேசிய மக்கள் சக்திக்கு வந்து விட்டார். படிக்கும் காலங்களில் அவர் தீவிரமான தமிழ்த் தேசிய நிலைப்பாட்டை எடுத்து சக மாணவர்களோடு தர்க்கப்படுவார். ஆனால் படித்து முடிந்ததும் அவர் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் பக்கம் நிற்கிறார்” என்றும் அந்த ஆசிரியர் கூறினார்.

அந்த மாணவர் பகிர்ந்த காணொளியானது அனுரவை தமிழ் மக்கள் மத்தியில் ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கும் நோக்கத்தோடு தயாரிக்கப்பட்டிருக்கிறது. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்பிருந்தே அதுபோன்ற சிறிய காணொளித் துண்டுகள் பல வெளிவந்திருக்கின்றன. தேசிய மக்கள் சக்தியின் டிஜிட்டல் ப்ரோமோஷனக்கான அணி வினைத்திறனோடும் படைப்புத்திறனோடும் செயல்படுகின்றது. அனுரவை ஒரு கதாநாயக பிம்பமாகக் கட்டியெழுப்பும் நோக்கத்தோடு திட்டமிட்டு அவ்வாறான காணொளிகளை உருவாக்கி வருகிறது. அவற்றில் காணப்படும் தொழில்சார் திறன், கலை நயம் போன்றன அனுரவைச் சுற்றி ஓர் ஒளிவட்டத்தைக் கட்டமைக்கும் நோக்கமுடையவை.

ஒரு கதாநாயகராகக் கட்டியெழுப்பத் தேவையான முகம், உடல்வாகு, உடல் மொழி போன்றன அனுரவுக்கு உண்டு. அவற்றையும் சேர்த்து மாற்றத்தின் அலை ஒன்றுக்குத் தலைமை தாங்கும் கதாநாயக பிம்பமாக அவரைக் கட்டமைத்திருக்கிறார்கள்.

இந்த இடத்தில் தமிழ் நோக்கு நிலையில் ஒரு முக்கியமான கேள்வியைக் கேட்கலாம். அனுரவைப் போல ஒரு கதாநாயகராகக் கட்டமைக்கத்தக்க அம்சங்களைக் கொண்ட தமிழ் தலைவர்கள், தலைவிகள் யாருமே இப்பொழுது களத்தில் இல்லையா? அல்லது அவ்வாறு கதாநாயக பிம்பங்களைக் கட்டியெழுப்ப முடியாத ஒரு சமூக,உளவியல்,அரசியற் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா?

இந்தக் கேள்விகளுக்கான விடைகளுக்குள் இருக்கிறது தமிழரசியலின் சீரழிவும் சாபக்கேடும்.

கடந்த 15ஆண்டுகளாக ஈழத்தமிழ் கூட்டு உளவியலானது கொந்தளிப்பானதாகவே காணப்படுகின்றது.கடந்த 15ஆண்டு கால தலைமைத்துவ வெற்றிடத்தில் தன்னைத்தானே தின்னும் ஒரு சமூகமாக; தானே தன்னை நம்பாத; ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்துகின்ற; தன் பலம் எதுவென்று தெரியாமல் தூர்ந்து போகும் ஒரு சமூகமாக ஈழத் தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா?

உளவியலில் Pistanthrophobia – “பிஸ்டாந்ரோ ஃபோபியா” என்ற ஒர் ஆங்கிலப் பதம் உண்டு. அதன் பொருள், யாரையும் நம்புவதற்கு பயம். இறந்த காலத்தில் ஏற்பட்ட எதிர்மறையான, கசப்பான அனுபவங்களின் விளைவாக மற்றவர்களை நம்பத் தயாரற்ற எரிச்சலுடன் கூடிய பயம். (An irritating fear of trusting others, typically resulting from previous negative experiences) போருக்குப் பின்னரான கூட்டு மனவடுக்களின் போதும் இதுபோன்ற உளவியல் விளைவுகளைக் காண முடியும் என்று மருத்துவர்கள் கூறுகிறார்கள்.

421931823_122125375670138407_73558661184

இவ்வாறு கூட்டுக் காயங்கள்,கூட்டு மன வடுக்களுக்குள் அழுத்திக் கிடக்கும் ஒரு சமூகத்தின் கொந்தளிப்பான கூட்டு உளவியலுக்குத் தலைமை தாங்கும் அரசியலானது ஒரு விதத்தில் கூட்டுச் சிகிச்சையாக அமைய வேண்டும். அதை ஒருவிதத்தில் குணமாக்கல்  செயற்பாடு என்று கூடச் செல்லலாம். அவ்வாறு இறந்த காலத்தின் கூட்டுக் காயங்களுக்கும் கூட்டு மனவடுக்களுக்கும் கூட்டுச் சிகிச்சையாக அமையவல்ல ஒரு அரசியலுக்குத் தலைமை தாங்கும் சக்தி மிக்க தலைவர்கள் தமிழ் மக்கள் மத்தியில் இல்லையா? அல்லது இருப்பவர்களை மேலெழ விடாமல் ஒருவர் மற்றவரைக் கடித்துத்  தின்னும் அல்லது ஒருவர் மற்றவரை சிறுமைப்படுத்தும் அல்லது மேலெழ முயற்சிப்பவரின் காலைப் பிடித்து இழுத்து விழுத்துகின்ற ஒரு சமூகமாக தமிழ்ச் சமூகம் மாறி வருகின்றதா? அதனால்தான் தமிழ் அரசியலில் கதாநாயக பிம்பங்களைக் கட்டமைக்க முடியவில்லையா?

அரசியலில் கதாநாயக பிம்பங்களை கட்டமைப்பது என்பது தனிமனித துதிக்கும் தலைமை வழிபாட்டுக்கும் வழிவகுக்கும் என்ற விமர்சனங்களை இக்கட்டுரை ஏற்றுக்கொள்கிறது. ஆனால் வாக்கு வேட்டை அரசியலில் ஜனவசியம் மிக்க பிம்பங்களுக்கு முக்கியத்துவம் உண்டு. அதுவும் டிஜிட்டல் ப்ரோமோஷனின் காலத்தில் அந்த முக்கியத்துவம் பல மடங்கு அதிகம். அதைவிட முக்கியமாக,சுமார் 15 ஆண்டுகளாக தலைமைத்துவ வெற்றிடத்துள் அழுந்திக் கிடக்கும் ஒரு சமூகத்தை அதன் அடுத்த கட்ட அரசியலுக்கு பண்புரு மாற்றம் செய்வதற்கு அவ்வாறான தலைமைகள் அவசியம். ஆனால் அப்படிப்பட்ட தலைமைகள் மேலெழ முடியாத அளவுக்கு தமிழ்த் தேசிய அரசியலின் கூட்டு உளவியலானது சிதைந்து போய்க் கிடக்கின்றது.

ஐக்கியத்துக்காக உழைப்பவர்களை இந்தியாவின் ஏஜென்ட்கள் என்று கூறும் அளவுக்கு பிஸ்டாந்ரோ போபியா ஒரு சமூக அரசியல் நோயாக மாறிவிட்டது. ஐக்கியப்படுமாறு கேட்பவர்களை எதிரியின் ஆட்கள் என்று முத்திரை குத்தும் நோய் ஈழத் தமிழர்கள் மத்தியில் மட்டும்தான் உண்டா?

தமிழ்த் தேசிய அரசியலில் வெறுப்பர்களை அதிகம் உற்பத்தி செய்த ஒரு கட்சியாகிய தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியானது கடந்த தேர்தலில் ஏற்பட்ட தோல்விகளின் பின் ஞானம் பெற்று கொள்கை வழி ஐக்கிய முயற்சிகளில் இறங்கியிருப்பதை ஒரு திருப்பகரமான மாற்றம் என்றே வர்ணிக்க வேண்டும்.

ஆனால் கொள்கை எது? ஒரு மக்களை அவர்கள் மத்தியில் இருக்கக்கூடிய பலம், பலவீனங்களோடு ஒரு திரளாகக் கூட்டிக் கட்டுவதுதான் தேசியவாத அரசியல். ஒரு தேசம் என்பது புனிதர்களுக்கு மட்டுமல்ல. ஒரு தேசத்துக்குள் தியாகிகள் மட்டும் இருப்பதில்லை.நல்லவர்கள், கெட்டவர்கள், புனிதர்கள், கபடர்கள், நபுஞ்சகர்கள், மனம் திருந்தியவர்கள், மனம்திருந்தாதவர்கள், விலைபோனவர்கள், ஒத்தோடிகள், எதிர்த்தோடிகள் மறுத்தோடிகள் என்று எல்லா ஓட்டங்களும் ஒரு சமூகத்துக்குள் இருக்கும். அந்த எல்லா ஓட்டங்களையும் ஒரு பொது எதிரிக்கு எதிரான பேரோட்டமாக மாற்றுவதுதான் தமிழ்த் தேசிய அரசியல். கடந்த 15 ஆண்டுகளாக அதைச் செய்யத் தமிழ் தேசியக் கட்சிகளால் முடியவில்லை. அவர்களால் தமது கட்சிகளையும் கட்டியெழுப்ப முடியவில்லை மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை.

தங்களைக் கதாநாயகர்களாக அல்லது தியாகிகளாகக் கட்டமைப்பதற்காக தமது அரசியல் எதிரிகளை வில்லன்களாகச் சித்திரிக்கும் ஓர் அரசியல் பாரம்பரியமானது முடிவில் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளில் அநேகம் பேரை சொந்த மக்களே நம்ப முடியாத வில்லன்களாக பார்க்கும் ஒரு பரிதாபதாபகரமான இடத்தில் வந்து நிற்கின்றதா?

உள்ளதில் பெரிய கட்சியாகிய தமிழரசுக் கட்சி தலைமைப் போட்டிக்குள் சிக்கி ஏறக்குறைய தூர்ந்து போய்விட்டது. அந்தக் கெட்ட முன்னுதாரணமானது தமிழரசியலின் குறிகாட்டியும் கூட. சுமந்திரன்,சிறீதரன்,சாணக்கியன் போன்றவர்கள் தங்களுக்கென்று டிஜிட்டல் ப்ரோமோஷன் அணிகளை வைத்திருக்கிறார்கள். அவை அவர்களை கதாநாயகர்களாகக் கட்டமைக்கின்றன. ஆனால் கட்சியை நீதிமன்றத்திற்கு வெளியே கொண்டுவர முடியாத தலைவர்களை தமிழ் மக்கள் கதாநாயகர்களாகக் கருத மாட்டார்கள். சில சமயம் வில்லன்கள் ஆகத்தான் பார்ப்பார்கள்.

விக்னேஸ்வரன் அரசியலுக்கு வந்த புதிதில் ஜனவசியம் மிக்க ஒரு தலைவராகத் தோன்றினார்.தமிழ் மக்கள் பேரவையின் எழுச்சியோடு அவருக்கு இருந்த ஜனக் கவர்ச்சி மேலும் அதிகரித்தது. ஆனால் அவரே அதனைப் போட்டு உடைத்தார். இப்பொழுது அவருடைய ஜனவசிய முகம் பரிதாபகரமான விதத்தில் சுக்குநூறாகிவிட்டது. இது விக்னேஸ்வரனுக்கு மட்டுமல்ல கடந்த 15 ஆண்டுகளில் மேலெழுந்த பெரும்பாலான எல்லா தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுக்கும் பொருந்தும். தமிழ்த் தேசிய அரசியலில் மேல் எழுகின்ற எந்த ஒரு தலைவருமே தன் ஜனவசியத்தை ஏன் தொடர்ந்து தக்க வைக்க முடியவில்லை?

ஏனென்றால் யாருமே தாங்கள் முன்வைத்த இலட்சியத்தை நோக்கி தமது கட்சியையும் கட்டியெழுப்ப முடியவில்லை; தமிழ் மக்களையும் கட்டியெழுப்ப முடியவில்லை. தன் பலம் எதுவென்று தெரியாமல், தானே தன்னில் நம்பிக்கை இழந்து, ஒருவர் மற்றவரை நம்பாத, ஒருவர் மற்றவரை சந்தேகிக்கின்ற,ஒருவர் மற்றவரை வெறுக்கின்ற, ஒரு சமூகமானது தன்னை ஒரு தேசம் என்று அழைக்க முடியாது. தமிழ்த் தேசியக் கட்சிகள் தமிழ் மக்களையும் ஒரு தேசமாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.தங்களையும் கட்சிகளாகக் கட்டியெழுப்பத் தவறுகின்றன.

தமிழ் மக்களுக்கு ஆறுதலாகவும் நம்பிக்கை ஒளியாகவும் முன்னுதாரணமாகவும் நிற்கக்கூடிய தலைவர்கள் எத்தனை பேர் உண்டு? அல்லது அப்படிப்பட்ட தலைவர்கள் மேலெழு முடியாத ஒர் அரசியல் சூழல் தமிழ் மக்கள் மத்தியில் நிலவுகின்றதா? அதற்குக் கட்சிகள் பொறுப்பில்லையா?

இந்த சமூகப் பொருளாதார அரசியல் மற்றும் உளவியல் சூழல் தொடருமாக இருந்தால் அனுரவை நோக்கி ஆர்வத்தோடு பார்க்கின்ற;அவரை கதாநாயகராகக் கொண்டாடுகின்ற இளையவர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும்.அது இனி வரக்கூடிய தேர்தல்களிலும் பிரதிபலிப்புகளை ஏற்படுத்தும்.

https://www.nillanthan.com/7232/

தமிழர்களின் உரிமை சார்ந்த விடயங்களில் தேசிய மக்கள் சக்தியின் நிலைப்பாடு என்ன?

3 months 1 week ago

நடராஜா ஜனகன்

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பதவிக்கு வந்து ஆறு மாதங்கள் ஆகப்போகிறது. முன்னைய ஆட்சியாளர்கள் செய்த ஊழல் மோசடிகள், வீண் விரயம் போன்றவற்றை வெளிக்கொணர்வதில் புதிய அரசாங்கம் காட்டி வரும் வேகமான செயற்பாடுகள் நிச்சயம் பாராட்டப்படக்கூடிய நிலையிலேயே காணப்படுகின்றன .

இந்நிலையில், தற்போது பட்டலந்த ஆணைக்குழு அறிக்கை பாராளுமன்றத்துக்கு கொண்டுவரப்பட இருக்கிறது.

இதேபோன்று தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் அவர்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் அரசாங்கத்தின் செயற்பாடுகள் திருப்தி தரும் நிலையில் காணப்படவில்லை. தமிழ் பகுதிகளில் பொருளாதார நலன் சார்ந்த விடயங்கள் தொடர்பில் புதிய ஆட்சியாளர் காட்டி வரும் அக்கறை குறிப்பாக பரந்தன் இரசாயன கூட்டுத்தாபனத்தை மீள ஆரம்பிக்கும் முயற்சிகள் காங்கேசன்துறை சீமெந்து தொழிற்சாலையை பார்வையிட அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியின் கள விஜயம் பாராட்டப்படக்கூடியவையே .

ஆனாலும் தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் சுய கௌரவத்தை உறுதிப்படுத்த நிலை நிறுத்தும் அரசியல் உரிமை சார்ந்த நகர்வுகள் பின்நிலைக்கு தள்ளப்பட்டு வருவது கவலை தரும் நிலையாகும். குறிப்பாக அரசாங்கம் வாக்குறுதி வழங்கிய புதிய அரசியல்யாப்பு வருகை காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டிருப்பது புதிய ஆட்சியாளர் மீது தமிழ் மக்கள் கொண்டிருந்த எதிர்பார்ப்புகளை பலவீன நிலையை நோக்கி நகர வைத்துள்ளது.

மேலும் போர்க்காலத்தில் புரியப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பான விடயங்கள் பேசப்படாத விடயங்களாக மாறி வருகின்றன. உதாரணமாக திருகோணமலை மாணவர்களின் படுகொலை தொடர்பான விடயம் மற்றும் போரின் இறுதிக்காலத்தில் இராணுவத்திடம் சரணடைந்தவர்களின் நிலை தொடர்பான விடயம் போன்றவை காலம் கடத்தப்பட்டுக்கொண்டே இருக்கின்றது.

காணாமல் போன உறவுகளை தேடி தாய்மார்கள் நடத்தி வரும் தொடர் போராட்டங்கள் ஆயிரக்கணக்கான நாட்களைத் தாண்டி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றது. உள்ளூர் விசாரணைகளில் நம்பிக்கையிழந்து சர்வதேச விசாரணையை அவர்கள் கூறி வருகின்றனர். தமிழ அரசியல் கைதிகளின் நிலையும் தொடர் கதையாகவே மாறியிருக்கிறது. போர்க்கால மனித உரிமை மீறல்கள் தொடர்பில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஐக்கிய நாடுகள் சபையின் 58வது கூட்டத்தொடரில் முன் வைத்திருக்கும் நிஜங்கள் நீதி கோரி போராடிவரும் தமிழ் மக்களுக்கு நம்பிக்கையை வழங்கும் நிலையில் காணவில்லை.

பொறுப்புக் கூறலில் அவர்கள் எதனையும் வெளிப்படுத்துவதற்கு தயாரில்லாத நிலை உறுதி பெற்று வருகிறது. இதேநேரம் தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால்களுக்கும் அரசாங்கத்தின் அணுகுமுறை நிரந்தர தீர்வை வழங்கும் நிலை காணப்படவில்லை. வடபகுதியில் தையிட்டியில் தனியார் காணியில் அமைக்கப்பட்டிருக்கும் விஹாரை தொடர்பான போராட்டம் தொடர்ந்து கொண்டே இருக்கின்றது. இது தொடர்பில் புத்தசாசன சமய விவகார அமைச்சர் கனித்துவ சுனில் கெனவி நேரடியாக களத்தை பார்வையிட்டு தீர்வு வழங்கப்படும் என பாராளுமன்றத்தில் தனது முடிவை வெளிப்படுத்தியிருக்கிறார். அவரது உறுதிப்பாடு தமிழ் மக்கள் எதிர்பார்க்கும் நீதியை பெற்றுக் கொடுத்தால் சிறப்பாக அமையும். மேலும் முல்லைத்தீவு குருந்தூர் மலை ஆதி சிவன் தொடர்பான விடயத்தில் கடந்த சிவராத்திரி தினத்தில் மக்கள் அங்கே சென்று வழிபாட்டில் ஈடுபட மாற்றங்கள் உருவாக்கப்பட்டிருப்பது நல்ல மாற்றங்களாகவே பார்க்கப்படுகிறது.

இதேநேரம் வாகரைப் பகுதியில் சேனைப் பயிர் செய்கையில் ஈடுபட்டு வந்த விவசாயிகளின் உற்பத்தி முயற்சிகளை வன இலாகாவினர் எதுவித தயக்கமும் இன்றி அம்மக்களை அவர்களது பகுதிகளிலிருந்து வெளியேற்றியிருப்பது கண்டனத்துக்குரிய விடயமாக மாறியிருக்கிறது. மாதவனை மேய்ச்சல் தரை விவகாரம் தொடர்பில் நீதிமன்ற தீர்ப்பை அரசாங்கம் இன்று வரை நிலை நிறுத்தாதிருப்பது பெரும் கேள்வியாக மாறியிருக்கிறது. மேலும் பாதுகாப்பு அமைச்சுக்கான நிதி ஒதுக்கீடு விவகாரத்தில் வடக்கில் ராணுவத்தால் நிர்வகிக்கப்படும் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு முப்பதாயிரம் ரூபா வேதனமாக வழங்கப்பட்டிருக்கும் நிலை ராணுவம் அல்லாத தமிழ் முன்பள்ளி ஆசிரியர்களுக்கு வெறும் 6000 ரூபாய் வழங்கப்படுவதாக வெளியிடப்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் கவனயீர்ப்பு விடயத்துக்கு அரசாங்கத்தின் உரிய பதில் வழங்கப்படாத நிலை தொடர்கின்றது.

மேலும் நாயாறு பகுதியில் பாதுகாப்பு தரப்பினரின் ஒத்துழைப்புடன் தென்னிலங்கை மீனவர்கள் அப்பகுதியில் முகாமிட்டு நிரந்தரமாக தங்கி உள்ளூர் மீனவர்களின் தொழிலை பாதிக்கும் வகையில் செயற்படுவதாக தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்களின் குற்றச்சாட்டுக்கு இதுவரை பதில் கிடைக்காத நிலை தொடர்கிறது. இந்திய மீனவர்களின் செயற்பாடு காரணமாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கும் பாரிய இழப்புக்கள் போன்றே இந்த நிலை காணப்படுவதாக குற்றச்சாட்டுகள் மேல் வந்திருக்கிறது.

மேலும் வன்னி நிலப்பரப்பில் 2009 க்கு முன்பு விடுதலைப் புலிகள் கட்டுப்பாட்டில் இருந்த காலப்பகுதியில் காட்டு மரங்களை கனரக இயந்திரங்களைக் கொண்டு வெட்டுவது, அரிவது போன்ற செயற்பாடுகள் அது தொடர்பான ஓசைகள் கூட இல்லாதிருந்த நிலையில் தற்போது வன்னிப் பகுதியில் கனரக ஆயுதங்கள் மூலம் இயற்கை வளங்கள் அழிக்கப்படுவது தொடர்கின்றது என வன்னி பாராளுமன்ற உறுப்பினர் பாராளுமன்றத்தில் குறிப்பிட்டிருக்கிறார்.

கடந்த 75 வருடங்களுக்கு மேலாக தமிழ் மக்கள் தமது உரிமை சார்ந்த விடயங்கள் தொடர்பில் தேசிய நீரோட்டத்தில் இருந்து விலகி நிற்கும் நிலையில் தமிழ் மக்களின் அரசியல் கோரிக்கைகளை அவர்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களில் புதிய ஆட்சியாளர்கள் அவற்றை முன்னிலைப்படுத்தி அதற்கான தீர்வை வழங்கும் நிலையை நோக்கி நகர வேண்டும். 1970ல் உருவான இடதுசாரிக் கட்சிகளின் கூட்டரசாங்கத்தில் தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள் சார்ந்த விடயங்களை புறந்தள்ளிவிட்டு பொருளாதார விடயங்களுக்கு முக்கியத்துவம் வழங்கப்பட்டு பல செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

ஆனால் தமிழ் மக்களின் அரசியல் உரிமை சார்ந்த விடயங்கள் முதன்மை நிலை பெற அது இறுதியில் ஆயுதப் போராட்டமாக மாறி கடந்த 30 ஆண்டுகளுக்கு மேலாக இந்த நாடு உள்நாட்டு யுத்தத்தை சந்தித்ததுடன், இறுதியில் நாடே வங்குரோத்து நிலைக்கு சென்றது வரலாறாகும். இத்தகைய நிலைகள் தோற்றம் பெறாமல் இருப்பதற்கு புதிய ஆட்சியாளர் அதிக கவனத்தை இதன் மீது குவிப்பதுடன், தமிழ் மக்களின் அரசியல் உரிமைகள், அதற்கான புதிய அரசியல் யாப்பின் வெளிவருகை தமிழ் மக்கள் எதிர்நோக்கும் மரபுரிமை சார்ந்த சவால் நிலைமைகளுக்கு நிரந்தர தீர்வை வழங்கி தேசிய மக்கள் சக்தி எதிர்பார்க்கும் அழகிய இலங்கையை உருவாக்கும் முயற்சிகள் முதன்மை நிலை பெற வேண்டும்.

https://thinakkural.lk/article/316207

Checked
Thu, 07/03/2025 - 15:07
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed