15 AUG, 2025 | 03:40 PM

டி.பி.எஸ். ஜெயராஜ்
இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சர் லக்ஸ்மன் கதிர்காமர் சூதறியாத அவரின் அயலவர் ஒருவரின் வீட்டுக்குள் மறைந்திருந்து விடுதலை புலிகள் நடத்திய சினைப்பர் தாக்குதலில் 2005 ஆகஸ்ட் 12 ஆம் திகதி கொல்லப்பட்டார். தனது வீட்டில் உள்ள நீச்சல் தட்கத்தில் வழமையான 1000 மீட்டர்கள் நீச்சலை அவர் முடித்துக்கொண்டு வெளியேறியபோது கொலைஞர் தாக்குதலை நடத்தினார். விதிவசமான அந்த தினத்துக்கு பிறகு இரு தசாப்தங்கள் கடந்து விட்டன. ஆனால், அவர் பற்றிய நினைவுகள் இன்னமும் நீடிக்கின்றன. இலங்கையின் தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் என்று பலராலும் கருதப்பட்ட அந்த மனிதரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இந்த கட்டுரை எழுதப்படுகிறது.
அவரது ஒரேயொரு மகள் அஜிதா தனது தந்தையாரைப் பற்றி வேறு எந்த பத்திரிகையாளரை விடவும் டி.பி.எஸ். ஜெயராஜே மிகவும் கூடுதலாக எழுதியிருக்கிறார் என்று தந்தையார் குறித்த தனது நூலில் குறிப்பிடுகின்ற அளவுக்கு லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி பல வருடங்களாக நான் விரிவாக எழுதியிருக்கிறேன்.
லக்ஸ்மன் கதிர்காமரை பற்றி சிறந்த வாசிப்புக்குரிய அஜிதா கதிர்காமரின் நூலுக்கு " The Cake That Was Baked At Home " என்று தலைப்பிடப்பட்டிருந்தது. அதன் புதிய பதிப்பு கதிர்காமரின் 20 வது நினைவு தினத்தை முன்னிட்டு இவ்வருடம் வெளியிடப்பட்டது.
எனது கட்டுரைகளில் இருந்து வரிகளும் பந்திகளுமாக 78 குறிப்புகளை அஜிதாவின் நூல் கொண்டிருக்கிறது. அதன் ஒரு பக்கத்தில் அவர் ' லக்ஸ்மன் கதிர்காமரின் உத்தியோகபூர்வமற்ற சுயசரிதையாளர் " என்று என்னை பெரும்பாலும் குறிப்பிடலாம் என்று கூறியிருக்கிறார். அதனால், இந்த பின்புலத்தில் எனது முன்னைய எழுத்துக்களையும் அடிப்படையாகக் கொண்டு உதவியுடன் லக்ஸ்மன் கதிர்காமர் என்ற பன்முக ஆளுமை பற்றி எழுதுகிறேன்.
யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக்கொண்ட புரட்டஸ்தாந்து கிறிஸ்தவ பெற்றோருக்கு 1932 ஏப்ரில் 12 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். ஆனால், அந்த முத்திரையுடன் ஒத்துப்போவதற்கு அவர் தனது பிற்கால வாழ்வில் மறுத்தார். தான் ஒரு தமிழன் என்பதை அவர் ஒருபோதும் மறுத்ததில்லை. ஆனால், அத்தகைய முத்திரைகளுக்கு அப்பாற்பட்டவராக தன்னை அவர் கூறிக் கொண்டார்.
தமிழராக இருப்பது என்பதை புலிகளின் ஆதரவாளராக இருப்பதுடன் சமப்படுத்த விடுதலை புலிகளும் அவர்களின் பரிவாரங்களும் முயற்சித்துக் கொண்டிருந்த ஒரு நேரத்தில், அந்த கும்பலில் இருந்து வேறுபட்டவராக நின்றார் லக்ஸ்மன் கதிர்காமர். அதற்காக அவர் ' அடையாளத் தமிழர்' என்று கேலி செய்யப்பட்டதுடன் ஒரு துரோகி என்றும் அழைக்கப்பட்டார். இறுதியில் கொலை செய்யப்பட்டார்.
கதிர்காமர் அவரது மரணத்துக்கு சில வாரங்கள் முன்னதாக பி.பி.சி.யின் " ஹாட் ரோக் " ( Hard Talk) நிகழ்ச்சிக்கு வழங்கிய நேர்காணலில் துரோகி என்று அழைக்கப்படுவது பற்றி அவரிடம் கேட்கப்பட்டபோது அற்புதமான முறையில் அதற்கு பதிலளித்தார். " பிறப்பின்போது எம்மெல்லோருக்கும் பெயர்கள் வழங்கப்படுகின்றன.
எனக்கும் அவ்வாறு ஒரு பெயர் வழங்கப்பட்டது. சிறுவர்களை படையணிக்கு சேர்ப்பது, எதிராளிகளை கொலை செய்வது, ஜனநாயகத்தையும் தாராளவாதத்தையும் நிராகரிப்பது போன்ற விடுதலை புலிகளின் நடவடிக்கைகளை ஆதரிப்பதவர் தான் தமிழர் என்று அர்த்தப்படுவதாக இருந்தால், அவ்வாறு செய்வதற்கு நான் தயாராக இல்லை. அதற்காக என்னை துரோகி என்று அழைப்பதாக இருந்தால், அதை முற்றுமுழுதான மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வேன்" என்று கதிர்காமர் குறிப்பிட்டார்.
யாழ்ப்பாணத்தின் மானிப்பாயில் ஆறு பிள்ளைகளைக் கொண்ட குடும்பத்தில் கடைசிப் பிள்ளையாக லக்ஸ்மன் கதிர்காமர் பிறந்தார். தந்தையார் சாமுவேல் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் கதிர்காமர் (எஸ்.ஜே.சி.) சீனியர் ஒரு சட்டத்தரணி. அவர் மானிப்பாயின் எட்வேர்ட் மேதரின் மகளான எடித் றோஸ்மண்ட் பரிமளம் மேதரை திருமணம் செய்தார். அவர்களுக்கு ஐந்து ஆண் பிள்ளைகளும் ஒரு பெண் பிள்ளையும் பிறந்தனர்.
எல்லோருக்கும் மூத்தவரான எஸ்.ஜே.சி. ஜூனியர் அல்லது சாம் கதிர்காமர் நன்கு பிரபல்யமான இராணி அப்புக்காத்து (கியூ.சி.). செல்வநாதன் அல்லது பாய் கதிர்காமர் இராணுவத்தில் மேஜர் தரத்தில் பணியாற்றி பிறகு அமெரிக்காவுக்கு சென்றுவிட்டார். ராஜன் கதிர்காமர் இலங்கை கடற்படையின முன்னாள் தளபதி. திருமலன் அல்லது மானா கதிர்காமர் ஒரு தோட்டத்துரை. அவர் டிக்கோயாவில் வாகன விபத்து ஒன்றில் இளவயதில் மரணமடைந்தார். லக்ஸ்மனுக்கு மூத்தவரான சகோதரி ஈஸ்வரி டொக்டர் ஏ.எம்.டி. றிச்சர்ட்ஸை திருமணம் செய்தார்.
சகோதரர்கள் சகலரும் கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற அதேவேளை லக்ஸ்மன் மாத்திரம் கண்டி திரித்துவக் கல்லூரிக்கு சென்றார். இரண்டாவது உலகப்போர் அதற்கு காரணமாக இருந்திருக்கலாம். திரித்துவக் கல்லூரியில் படித்த காலத்தில் (1942 -- 1950 ) இலங்கை வரலாற்றுக்காக டொக்டர் அந்திரெஸ் நெல் நினைவுப் பரிசையும் ஆங்கிலத்துக்காக நேப்பியர் கிளேவெறிங் பரிசையும் சிறந்த சகலதுறை மாணவன் என்பதற்காக றைட் தங்கப்பதக்கத்தையும் அவர் 1950 ஆண்டில் பெற்றார். விளையாட்டுக்களிலும் லக்ஸ்மன் சிறந்து விளங்கினார்.
1950 ஆம் ஆண்டில் கல்லூரியின் கிரிக்கெட் அணியின் காப்டனாகவும் அவர் இருந்தார். றகர் விளையாட்டிலும் சிறந்து விளங்கிய அவர் 1949 ஆம் ஆண்டில் பாடசாலைகளுக்கு இடையிலான விளையாட்டுப் போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் (15.7 செக்கன்கள்) முன்னைய சாதனையை முறியடித்தார். அதே ஆண்டில் டக்கன் வைற் சவால் கிண்ணத்தையும் டி சொய்சா சவால் கிண்ணத்தையும் பெற்ற லக்ஸ்மன் சிரேஷ்ட மாணவர் தலைவராகவும் வந்தார்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் பிரவேசித்த அவர் சட்டத்துறைப் பட்டதாரியாக ( எல்.எல்.பி.) வெளியேறினார். பல்கலைக்கழகத்தில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் 1951 , 1952 ஆண்டுகளில் அகில இலங்கை ரீதியான போட்டியில் 110 மீட்டர்கள் தடைதாண்டும ஓட்டத்தில் வெற்றி பெற்றார். அகில இந்திய பல்கலைக் கழகங்களுக்கு இடையில் அஹமதாபாத்திலும் (1951) அலகாபாத்திலும் ( 1952) நடைபெற்ற விளையாட்டுப் போட்டிகளில் 110 மீட்டர்கள் தடைதாண்டும் ஓட்டத்தில் வெற்றி பெற்று சாதனை படைத்தார். இலங்கை பல்கலைக்கழக கிரிக்கெட் அணியிலும் பிறகு ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியின் கிரிக்கெட் அணியிலும் உறுப்பினராக இருந்த லக்ஸ்மன் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக அணியுடன் நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் ஒக்ஸ்போர்ட் அணியில் இடம்பெற்று " ஒக்ஸ்போர்ட் நீல உறுப்பினராகவும் ( Oxford Blue ) வந்தார்.
ஒக்ஸ்போர்ட்
சட்டத்தில் இளமாணி பட்டத்தைப் பெற்றுக்கொண்ட பிறகு கதிர்காமர் அட்வக்கேற் இறுதிப் பரீட்சைக்கு தோற்றி மூதல் தரத்தில் சித்தியெய்தினார். ஈ.என்.ஏ. கிறேசியனுக்கு செயலாளராகப் பணியாற்றிய அவர் பிறகு இங்கிலாந்துக்கு சென்று இன்னர் ரெம்பிளின் பாரிஸ்டராக வந்து ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் பலியோல் கல்லூரியில் பிரவேசித்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக தெரிவாகி அவர் வரலாறு படைத்தார்.
நான்கு இலங்கையர்கள் அந்த ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவர்களாக பதவி வகித்திருக்கிறார்கள். கதிர்காமர் ( திரித்துவக் கல்லூரி ), லலித் அத்துலத் முதலி (றோயல் கல்லூரி ), நூர்தீன் (சென். தோமஸ் கல்லூரி), ஜெயசுந்தரி வில்சன் ( மெதடிஸ்ற் கல்லூரி) ஆகியோரே அவர்கள். வில்சன் மாத்திரமே ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்த ஒரேயொரு இலங்கைப் பெண்மணி என்பது குறிப்பிடத்தக்கது.
1958 இனக்கலவர நாட்களில் ஐக்கிய இராச்சியத்தில் ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் லக்ஸ்மன் கதிர்காமர் அந்த வன்செயல்கள் எஸ்.டபிள்யூ. ஆர்.டி. பண்டாரநாயக்க ஒரு அரசியல்வாதியே தவிர அரசியல்மேதை அல்ல என்பதை காட்டுகின்றன என்று குறிப்பிட்டிருந்தார்.
அடுத்த வருடம் ஒக்ஸ்போர்ட்டில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் உருவப்படம் தொங்கவிடப்படவதற்கு காரணமாக லக்ஸ்மன் இருந்தார். ஒக்ஸ்போர்ட் யூனியனின் தலைவராக இருந்தவர்கள் அரச தலைவர்களாக வந்தால் அவர்களது படங்களை அங்கு தொங்கவிடுவது ஒரு பாரம்பரியமாகும். அந்த யூனியனின் செயலாளராக இருந்தவர்களில் எஸ்.டபிள்யூ. ஆர்.டி.யின் படம் மாத்திரமே அங்கு தொங்கவிடப்பட்டது. ஆனால், அது தொடர்பான நிகழ்வில் பங்கேற்பதற்காக ஒக்ஸ்போர்ட்டுக்கு விஜயம் செய்வதற்கு சில வாரங்கள் முன்னதாக அவர் கொல்லப்ப்டார்.
பல வருடங்களுக்கு பிறகு 2005 மார்ச் 15 ஆம் திகதி ஒக்ஸ்போர்ட் யூனியனில் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தின் வேந்தரான கிறிஸ் பற்றன் பிரபு லக்ஸ்மன் கதிர்காமரின் இருவப்படத்தை திரைநீக்கம் செய்து வைத்தார். அந்த நிகழ்வில் தான் கதிர்காமர் ' The cake was baked at home ' என்று குறிப்பிட்டார்.
ஒக்ஸ்போர்ட் யூனியனின் வரலாற்றில் அதன் கட்டிடத்தில் உருவப்படம் அல்லது மார்பளவு சிலை வைக்கப்பட்ட பதினைந்தாவது உறுப்பினராக கதிர்காமர் விளங்கினார். அவர் 1995 ஆம் ஆண்டில் இன்னர் ரெம்பிளின் கௌரவ முதுமாணியாகவும் ( Hon.Master of Inner Temple) பெருமைப்படுத்தப்பட்டார். முன்னாள் மலேசிய பிரதமர் துங்கு அப்துல் ரஹ்மானுக்கு பிறகு அந்த கொளரவத்தைப் பெற்ற இரண்டாவது ஆசியர் கதிர்காமர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஞ்ஜெலா மாலிக்
பலியோல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்த நாட்களில் கதிர்காமர் பிரெஞ்சு -- பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த கலைஞரான அஞ்ஜெலா மாலிக்கை திருமணம் செய்தார். அவர்களுக்கு இரு பிள்ளைகள். மகள் அஜிதா கதிர்காமர் பிரபல்யமான ஊடக ஆளுமை. ஸ்ரீராகவன் ஜெபரத்தினம் கிறிஸ்ரியன் என்ற பெயர்கொண்ட மகன் ஒரு கட்டிடக் கலைஞர். அவர் ராகீ என்றே பரவலாக அறியப்படுகிறார்.
யாழ்ப்பாணத்துக்கு விஜயம்
ஒக்ஸ்போர்ட்டில் இருந்து அறுபதுகளில் இலங்கை திரும்பிய பிறகு லக்ஸ்மன் யாழ்ப்பாணத்துக்கு பல தடவைகள் விஜயம் செய்தார். தனது வேர்களை கண்டறிவது அதன் ஒரு குறிக்கோள். தேர்தலில் போட்டியிடுவதற்கு பொருத்தமான தொகுதி ஒன்றை தெரிவு செய்வது அடுத்த குறிக்கோள்.
மிகுந்த ஆர்வமுடைய சரித்திர மாணவரான கதிர்காமர் யாழ்ப்பாண இராச்சியம் குறித்து அறிவதில் பெரும் அக்கறை காட்டினார். வரலாற்றையும் யாழ்ப்பாணத்தின் பாரம்பரியங்களையும் அறியாத ஒருவர் என்று அவரை விடுதலை புலிகளுக்கு ஆதரவான விமர்சகர்கள் ஏளனம் செய்தபோதிலும், அந்த விடயங்கள் குறித்து அவர் பேசுவதைக் கேட்டவர்கள் அவரது அறிவு மற்றும் நுண்ணறிவுத்திறத்தை கண்டு வியப்படைந்தனர்.
அறுபதுகளில் யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயங்கள் ஒன்றின்போது கதிர்காமர் யாழ்ப்பாணம் வை.எம்.சி.ஏ. மண்டபத்தில் மிகவும் சுவாரஸ்யமான ஒரு தலைப்பில் உரையாற்றினார்." பிளேட்டோவில் இருந்து சிறிமாவோ வரை " என்பதே அந்த தலைப்பாகும்.
அவரது அந்த உரை பத்திரிகைகளில் செய்தியாக வெளியானபோது திருமதி பண்டாரநாயக்க ஆத்திரமடைந்ததாக கூறப்பட்டது. பல வருடங்களுக்கு பிறகு அதே திருமதி பண்டாரநாயக்க கதிர்காமருடன் தொலைபேசியில் தொடர்புகொண்டு தனது மகள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவின் அமைச்சரவையில் இணையுமாறு அழைப்பு விடுத்தார். அந்த அமைச்சரவையின் பிரதமராக திருமதி பண்டாரநாயக்கவே பதவியேற்றார்.
ஏற்கெனவே குறிப்பிட்டதை போன்று அறுபதுகளின் முற்பகுதியில் யாழ்ப்பாணத்துக்கு சென்ற வேளைகளில் கதிர்காமர் தேர்தலில் போட்டியிடுவதற்காக தொகுதியொன்றை கண்டறிவதில் ஈடுபட்டார். ஆனால், ஒரு வேட்பாளராகும் அவரது ஆர்வம் இரு காரணங்களினால் நீண்டநாட்கள் நிலைக்கவில்லை.
முதலாவது காரணம் வடக்கு அரசியல் நிலைவரம். தமிழ்த் தேசியவாதம் முன்னரங்கத்துக்கு வந்திருந்த நிலையில், தேர்தல் களத்தில் குதிக்க விரும்பும் எவரும் அந்த கோட்பாட்டை ஆதரிக்க வேண்டியிருந்தது. குறுகிய தேசியவாதத்தை கதிர்காமர் விரும்பவில்லை. இரண்டாவதாக, அரசியல் பேச்சுக்களை நிகழ்த்தக்கூடிய அளவுக்கு தமிழில் பேசக்கூடியவராகவும் கதிர்காமர் இருக்கவில்லை.
கதிர்காமர் யாழ்ப்பாணப் பூர்வீகத்தைக் கொண்டிருந்த போதிலும், அங்கு அவருக்கு உறுதியான வேர்கள் இருக்கவில்லை. தேர்தலில் வெற்றி பெறுவது என்பது மாத்திரமல்ல, யாழ்ப்பாண அரசியலின் கூச்சலுக்கும் குழப்பத்துக்கும் கதிர்காமரினால் முகங்கொடுக்க முடியும் என்பதும் சந்தேகமாக இருந்தது. யாழ்ப்பாணத்தில் அவரது அரசியல் வாய்ப்புகள் குறித்து அங்கு இருந்த அவரது ஒன்றுவிட்ட சகோதரர்கள் நேர்மையான ஆலோசனையை வழங்கினார்கள். குடாநாட்டில் தனது அரசியல் வாய்ப்புக்கள் ஆனையிறவு கடவையை விடவும் குறுகலானது என்பதை கதிர்காமர் விளங்கிக்கொண்டார்.
கொழும்பில் இருந்த லக்ஸ்மனின் மூத்த சகோதரர்களான சட்டத்தரணி சாம் ஜே.சி. கதிர்காமரும் கடற்படைத்தளபதி இராஜநாதன் (ராஜன் ) கதிர்காமரும் அவரின் அரசியல் ஆசைக்கு ஊக்கமளிக்கவில்லை. அந்த ஆசையைக் கைவிடுமாறு அவர்கள் அவரை வலியுறுத்திக் கேட்டுக்கொண்டனர்.
அவர்களது தந்தையார் எஸ்.ஜே சி. ( சீனியர்) கொழும்பில் வளமான வருமானம் தரும் சட்டத்தொழிலை நிறுவியிருந்தார். அத்துடன் அவர் இலங்கை சட்ட சங்கத்தின் ( Ceylon Legal Society ) தாபக உறுப்பினராகவும் இருந்தார். தனது சகோதரர்களினதும் உறவினர்களினதும் ஆலோசனைகளை செவிமடுத்த லக்ஸ்மன் சட்டத்துறையில் கவனத்தைக் குவிக்க ஆரம்பித்தார். லக்ஸ்மனின் இரு மூத்த சகோதரர்களும் உயிருடன் இருந்திருந்தால், அவர் ஒருபோதும் அரசியலில் பிரவேசம் செய்திருக்கமாட்டார் என்று நம்பிய உறவினர்கள் இருந்தார்கள். 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அரசியலில் பிரவேசிப்பதற்கு முன்னதாக ராஜனும் சாமும் இறந்து விட்டார்கள்.
ஜே.வி.பி. கிளர்ச்சி
லக்ஸ்மன் கதிர்காமர் கொழும்பில் உறுதியான முறையில் சட்டத் தொழிலை ஆரம்பித்தார். அவர் வர்த்தக, கைத்தொழில், தொழில் மற்றும் நிருவாக சட்டங்களில் திறமை மிக்கவராக இருந்தார். 1971 ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி.) கிளர்ச்சி லக்ஸ்மனின் மீது பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. அந்த கிளர்ச்சியில் நேரடியாக அவர் பாதிக்கப்படாவிட்டாலும், வெளிநாட்டுக்கு போய்விட வேண்டும் என்ற உணர்வை அது அவருக்கு ஏற்படுத்தியது.
ஜே.வி.பி.யின் தோற்றத்தை அடுத்து இலங்கையி் வாழ்வு மோசமடையப் போகின்றது என்று அவர் உணர்ந்தார். எவ்வளவு தீர்க்கதரிசனம் பாருங்கள். ஆனால், ஜே.வி.பி. காரணமாக இலங்கையில் இருந்து வெளியேறிய அதே கதிர்காமர் 33 வருடங்களுக்கு பிறகு ' செஞ்சகோதரர்களுடன்' நல்லுறவைக் கொண்டிருந்தார் என்பது ஒரு விசித்திமாகும். லக்ஸ்மனை நேர்மையான ஒரு நண்பர்கவும் வழாகாட்டியாகவும் ஜே.வி.பி.யினர் கருதிய அதேவேளை, அவரும் சில பிரச்சினைகளில் அவர்களின் நிலைப்பாடுகளை ஏற்றுக்கொண்டார். லக்ஸ்மன் இன்று உயிருடன் இருந்திருந்தால், ஜே.வி.பி. தலைமையிலான தேசிய மக்கள் சக்தி இலங்கையை ஆட்சிசெய்கின்ற அளவுக்கு அண்மைக்காலத்தில் ஏற்பட்ட திருப்பங்களைக் கண்டு மகிழ்ச்சியடைந்திருக்கக்கூடும்.
புலமைச்சொத்து
லக்ஸ்மன் மீண்டும் பிரிட்டனுக்குச் சென்றார். 1971 ஆம் ஆண்டு தொடக்கம் 1974 ஆம் ஆண்டு வரை அங்கு சட்டத்துறை வாழ்வை தொடர்ந்த அவர் அந்தக் காலப்பகுதியில் மனித உரிமைகள் விவகாரங்களில் மிகுந்த அக்கறை செலுத்தினார். 1973 ஆம் ஆண்டில் வியட்நாமில் பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான வன்செயல்களை விசாரணை செயவதற்கான சர்வதேச மன்னிப்புச்சபையின் விசேட பிரதிநிதியாக அவர் செயற்பட்டார்.
1976 ஆம் ஆண்டில் ஜெனீவாவில் சர்வதேச தொழிலாளர் அமைப்புக்கு (International Labour Organization) ஆலோசகராக இருந்த அவர் 1978 ஆம் ஆணடில் உலக புலமைச்சொத்து அமைப்பில் ( World Intellectual Property Organization) இணைந்து அதன் பணிப்பாளராக 1988 ஆம் ஆண்டு வரை பணியாற்றினார். ஆசிய -- பசுபிக் பிராந்தியத்தின் வளர்முக நாடுகளுக்கு புலமைச்சொத்து விவகாரங்களில் ஆலோசகராகவும் அவர் செயற்பட்டார்.
உலகின் பெருவாரியான நாடுகளுக்கு பயணம் செய்த அனுவத்தைக் கொண்டவராகவும் லக்ஸ்மன் விளங்கினார். 1980 களின் முற்பகுதியில் கிரேக்கத்தின் ஏதென்ஸ் நகரில் விபத்துக்குள்ளான விமானத்திற்குள் இருந்த அவர் அவசரகால கதவின் ஊடாகப் பாய்ந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். அந்த சம்பவத்தில் எலும்பு முறிவுக்கு உள்ளான அவர் மூன்று மாதங்கள் படுக்கையில் இருந்து சிகிச்சை பெற்று தேறினார்.
1988 ஆம் ஆண்டில் கொழும்பு திரும்பிய கதிர்காமர் சடடத்தொழிலை மீணடும இங்கு ஆரம்பித்தார். முன்னரைப் போன்றே அவர் கைத்தொழில், தொழில் மற்றும் வர்த்தக சட்டங்களிலும் புலமைச்சொத்து சட்டத்திலும் கூடுதல் கவனத்தைச் செலுத்தினார். தமிழ்த் தடுப்புக்காவல் கைதிகள் சம்பந்தப்பட்ட வழக்குகள் பலவற்றில் மிகவும் விவேகமான ஒரு ஆலோசகராக பரபரப்பு காட்டாமல் கதிர்காமர் செயற்பட்டார் என்பது அவரைப் பற்றி பெரிதாக தெரியாத இன்னொரு விடயம். வன்செயல்களில் பாதிக்கப்பட்ட சில தமிழர்கள் இழப்பீடுகளைப் பெறுவதற்கு சட்ட ஆலோசனையையும் அவர் வழங்கினார்.
சந்திரிகா குமாரதுங்க
கடந்த நூற்றாண்டின் தொண்ணூறுகளின் முற்பகுதியில் சந்திரிகா குமாரதுங்கவின் இரண்டாவது இலங்கை வருகை நாட்டின் இனத்துவ அரசியலில் ஒரு புதிய விடியலுக்கு கட்டியம் கூறியது. இனநெருக்கடிக்கு பேச்சுவார்த்தை மூலமான இணக்கத் தீர்வொன்று விரைவில் கிடைக்கும் என்று உயர்ந்த எதிர்பார்ப்புகள் காணப்பட்டன. இலட்சியவாத உணர்ச்சி வேகம் கொண்ட ஒரு காலப்பகுதியாக அது விளங்கியது.
அத்தகைய ஒரு சூழ்நிலையில்தான் குமாரதுங்கவுக்கு ஆதரவாக அரசியலில் இறங்குவதற்கு கதிர்காமர் தீர்மானித்தார். ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இணைவதற்கு 1994 ஆம் ஆண்டில் அவர் தீர்மானித்தது முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வாக நோக்கப்பட்டது. ஏனென்றால் அவரின் குடும்ப உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய கட்சியின் தீவிரமான ஆதரவாளர்கள்.
அரசியலில் இறங்குமாறு ஆரம்பத்தில் கதிர்காமருக்கு தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் கலாநிதி நீலன் திருச்செல்வம் தான் ஊக்கம் கொடுத்தார். அந்த முயற்சியில் அவருக்கு இலங்கை கம்யூனிஸ்ட் கட்சியைச் சேர்ந்த சரத் முத்தெட்டுவேகமவின் மனைவியும் லங்கா சமசமாஜ கட்சியின் கலாநிதி கொல்வின் ஆர்.டி சில்வாவின் புதல்வியுமான சட்டத்தரணி மனோரி முத்தெட்டுவேகமவும் பெருமளவில் உதவினார்.
சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியல்
1994 ஆம் ஆண்டில் சுதந்திர கட்சியின் தேசியப்பட்டியலில் லக்ஸ்மனின் பெயர் இடம்பெற்றது. சுதந்திர கட்சியின் சார்பில் தேர்தலில் போட்டியிட்ட தமிழ் வேட்பாளர்களில் வன்னியில் வெற்றி பெறுவதற்காக வாய்ப்பைக் கொண்ட ஒரேயொருவராக சட்டத்தரணி கேதீஸ்வரனே விளங்கினார். அவர் முன்னர் வவுனியா நகரசபையின் தவைராக தமிழர் ஐக்கிய விடுதலை கூட்டணியின் சார்பில் பதவியில் இருந்தார். ஆனால், அவர் வெற்றி பெறவில்லை. அதனால் தேசியப்பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக தமிழர் ஒருவரை குமாரதுங்க நியமிக்க வேண்டியிருந்தது.
மலையக மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினரான பெரியசாமி சந்திரசேகரனின் ஆதரவுடன் புதிய அரசாங்கத்துக்கு ஒரு ஆசனப் பெரும்பான்மையே இருந்தது. குமாரதுங்கவின் அரசாங்கத்தில் தொடக்கத்தில் அவரும் கதிர்காமருமே தமிழ்ப் பிரதிநிதிகள். தனது அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை இருபதாக மட்டுப்படுத்த விரும்பிய குமாரதுங்க அவர்கள் இருவருக்கும் பிரதியமைச்சர் பதவிகளை வழங்க முன்வந்தார். சந்திரசேகரன் அதை ஏற்றுக்கொண்டார். ஆனால், கதிர்காமர் மறுத்துவிட்டார்.
தன்னை ஒரு தமிழர் என்று அரிதாக காட்டிக்கொள்ளாதவர் என்ற போதிலும் லக்ஸ்மன் அப்போது அவ்வாறு செய்தார். தனக்கு ஒரு பிரதியமைச்சர் பதவியை மாத்திரம் தந்தால் அதை தனது சமூகம் ஒரு நிந்தனையாக கருதும் என்று அவர் சுட்டிக் காட்டினார். சந்திரிகா அதை விளங்கி ஏற்றுக் கொண்டார். நீதியமைச்சையா அல்லது வெளியுறவு அமைச்சையா பொறுப்பேற்பது என்று தீர்மானிக்க வேண்டியிருந்தது. லக்ஸ்மன் வெளியுறவு அமைச்சை விரும்பினார். அதற்கு பெருமளவுக்கு பொருத்தமானவராக அவர் தன்னை உணர்ந்தார்.
வெளியுறவு அமைச்சர்
வெளியுறவு அமைச்சராக இருப்பதற்கு மிகச் சிறந்த மனிதர் என்று கதிர்காமர் தன்னை நிரூபித்துக் காட்டினார். இலங்கையின் சுதந்திரத்துக்கு பின்னரான வருடங்களில் பாதுகாப்பு அமைச்சும் வெளியுறவு அமைச்சும் பிரதமருக்கென்றே பிரத்தியேகமான பொறுப்புக்களாக இருந்தன. அந்த நடைமுறையை 1977 ஆம் ஆண்டில் மாற்றிய ஜே.ஆர். ஜெயவர்தன தனது அரசாங்கத்தில் ஏ.சீ.எஸ். ஹமீதை வெளியுறவு அமைச்சராக நியமித்தார்.
இலங்கை இதுவரையில் கண்ட தலைசிறந்த வெளியுறவு அமைச்சர் கதிர்காமரே என்பது பரவலாக ஏற்றுக் கொள்ளப்படுகிறது. விடுதலைப் புலிகளுக்கு எதிரான செயற்பாடுகளை முன்னெடுத்த காரணத்தினால் பலருக்கு கதிர்காமர் சிறந்த வெளியுறவு அமைச்சராக தெரிந்தார். ஆனால், முன்னைய வெளியுறவு அமைச்சர்கள் தங்களது உறவினர்களையும் நெருங்கிய நட்பு வட்டங்களைச் சேர்ந்தவர்களையும் பதவிகளுக்கு நியமித்து மோசமாக்கி வைத்திருந்த வெளியுறவு அமைச்சை துப்பரவு செய்ததில் தான் கதிர்காமரின் மகத்துவம் தெரிந்தது.
இன்னொரு தமிழரான சேர் கந்தையா வைத்தியநாதன் நிரந்தரச் செயலாளராக சுதந்திரத்துக்கு பிறகு வெளியுறவுச்சேவையை நவீனமயப்படுத்தினார். லக்ஸ்மன் கதிர்காமர் தான் வெளியுறவுச் சேவையை மறுசீரமைத்து துறைசார் நிபுணத்துவமுடையதாக மாற்றியமைத்தார். நிரந்தரச் செயலாளர் தொடக்கம் அலுவலக உதவியாளர் வரை அவருடன் பணியாற்றியவர்கள் இதற்கு சான்று பகர்வர்.
ஜே.ஆர். ஜெயவர்தன மற்றும் பிரேமதாச ஆகியோரின் ஆட்சிகளின் கீழ் பெருமளவுக்கு சீர்குலைக்கப்பட்டிருந்த இந்தியாவுடனான உறவுகளை மீட்டெடுத்தது நல்லுறவைப் பேணியது வெளியுறவு அமைச்சர் என்ற வகையில் கதிர்காமரின் சாதனைகளில் முக்கியமான ஒன்று. உண்மையில், பண்டாரநாயக்க குடும்பத்தின் ஆட்சியில் இந்தியாவுடனான இலங்கையின் உறவுகள் நல்ல நிலையிலேயே இருந்து வந்தன. ஆனால், உறவுகளை மீட்டெடுத்ததில் கதிர்காமரின் பாத்திரத்தை எளிதாக எண்ணிவிட முடியாது.
இந்தியாவுடனான உறவுகள்
இந்தியா நோக்கிய கதிர்காமரின் நெருக்கமும் பிராந்தியத்தில் இந்தியாவின் முக்கியத்துவத்துக்கு அவர் கொடுத்த அங்கீகாரமும் உணர்ச்சிபூர்வமான அடித்தளத்துடன் கூடிய அறிவார்ந்த தன்னலத்தை அடிப்படையாகக் கொண்டது என்பதை சுட்டிக்காட்ட வேண்டியது அவசியமாகும். அரசியல் அம்சங்களுக்கு அப்பால் தனிப்பட்ட முறையிலான ஆன்மீக அம்சங்களும் அதில் இருந்தன. லக்ஸ்மனின் தந்தையார் மகாத்மா காந்தியின் ஒரு தீவிர அபிமானி. லக்ஸ்மன் பிறப்பதற்கு முன்னர் மகாத்மா காந்தி இலங்கைக்கு வருகை தந்தபோது அவரை வரவேற்ற குழுவின் தலைவராக இருந்த தந்தையார் காந்தி கலந்துகொண்ட கூட்டத்துக்கு தலைமை தாங்கினார்.
லக்ஸ்மனின் தாயார் பரிமளம் தனது ஆட்டாகிராஃபில் கையெழுத்திடுமாறு காந்தியிடம் வேண்டினார். பரிமளம் பளபளப்பான பட்டுச்சேலையை அணிந்திருந்ததை பார்த்த காந்தி அவர் கதர் ஆடை அணிந்துவந்தால் மாத்திரமே கையெழுத்திடுவதாக கூறினார். பரிமளத்தினால் காந்தியின் கையழுத்தைப் பெறமுடியவில்லை.
மகாத்மா காந்தியுடனான இந்த பிணைப்புக்கு அப்பால், லக்ஸ்மனின் உறவினர்களில் ஒருவர் சபர்மதி ஆச்சிரமத்தில் மகாத்மா காந்தியின் சீடராக இருந்தார் என்பதுடன் இன்னொரு உறவினர் சாந்திநிகேதனில் ரபீந்திரநாத் தாகூரின் மாணவராக இருந்தார். அந்த வகையில் லக்ஸ்மனும் கூட இந்தியாவுடன் இந்த வரலாற்றுப் பிணைப்பை தொடர்ந்தார். லக்ஸ்மன் தனது அறிவு மற்றும் ஆன்மீகப் பயணத்தில் இந்திய தத்துவ ஞானத்தின் கடுமையான செல்வாக்கிற்கு ஆளானார். லக்ஸ்மன் ஒரு பலமத மனிதராக வளர்ச்சியடைந்தார். இந்தியாவின் மகத்தான புதல்வரான கௌதம புத்தரினால் அவர் பெரிதும் ஈர்க்கப்பட்டார். அவ்வாறு நேர்ந்தது சமகால அரசியல் நிர்ப்பந்தங்களின் விளைவான ஒரு பாசாங்கு அல்ல.
செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப்பேருரை
பல வருடங்களுக்கு முன்னர் 1992 அக்டோபர் 9 ஆம் திகதி லக்ஸ்மன் கதிர்காமர் வண. செலஸ்ரின் பெர்னாண்டோ நினைவுப் பேருரையை நிகழ்த்தினார். ' கிறிஸ்தவம் அல்லாத சமூகமொன்றில் எமது காலத்தில் பைபிளின் சமூகப் பொருத்தப்பாடு ' (The Sicial.Relevance of Bible for, our times in a non - Christian society) என்பதே அதன் தொனிப் பொருளாகும். "உருவமற்ற உண்மைகளின் வரலாற்று ரீதியான உருவாக்கங்களே வெவ்வேறு மதங்கள். புதையல் ஒன்றே, அது மாற்றமுடியாததுமாகும். ஆனால், அந்த புதையலைக் கொணடிருக்கும் கொள்கலன் அதன் காலத்தினதும் சுற்றாடலினதும் வடிவத்தையும் வரணத்தையும் எடுக்கிறது" என்று அவர் கூறினார்.
செலஸ்ரின் பெர்னாண்டா நினைவுப்பேருரை கிறிஸ்தவ வட்டாரங்களில் சில சர்ச்சைகளை தோற்றவித்தது. புத்தபிரான் குறித்து மிகவும் பிரகாசமான கருத்துக்களை கதிர்காமர் கூறியதே அதற்கு காரணம். "உத்வேகம் தரும் மனித உணர்வுப் புதையல்களில் ஒன்று கௌதம புத்தர் பற்றிய நினைவாகும். கோடிக்கணக்கான எமது மக்களின் சிந்தனை மீது அவர் மாபேரளவு செல்வாக்கைக் கொண்டிருக்கிறார்.
துணிச்சலும் மேன்மையும் கொண்ட பிறவிகள் மீது நூற்றாண்டுகளாக அவர் ஏற்படுத்திவரும் உத்வேகம் கணக்கிட முடியாததாகும். மனித உணர்வுகளை வரையறை செய்வதிலும் மனித உறவுகளுக்கு மனித நேயப்பண்பை ஊட்டுவதிலும் அவரது பங்களிப்பு அளவிடமுடியாததாகும். என்றாலும் கூட, அந்த மகத்தான ஆன்மாவின் நினைவை நிர்மூலம் செய்வதற்கும் அவரது செல்வாக்கை இல்லாமல் செய்வதற்கும் வேறு கொடிகளின் கீழ் போரிட்ட மனிதர்கள் முயற்சிகளை மேற்கொண்டார்கள். அந்த முயற்சிகளுக்கு எல்லாம் தப்பிப்பிராயங்களும் அறியாமையுமே காரணம் என்றே எம்மால் கூறமுடியும்."
பௌத்தத்தின் பொதுவான விழுமியங்களையும் போதனைகளையும் கிறீஸ்துவம் கொண்டிருக்கிறது என்பதும் புத்தரின் போதனைகளின் செல்வாக்கிற்கு யேசுபிரான் ஆளாகியிருந்தார் என்பதுமே கதிர்காமரின் ஆய்வாக இருந்தது என்று அந்த நினைவுப் பேருரை நிகழ்வில் கலந்துகொண்டர்கள் சிலர் கூறினார்கள். இந்த கருத்துக்கள் "யேசு இந்தியாவில் வாழ்ந்தார் -- சிலுவையேற்றத்துக்கு முன்னரும் பின்னரும் அவரது எவரும் அறியாத வாழ்வு" ( Jesus lived in India -- His Unknown life before and after the Crucification ) என்ற தலைப்புடனான ஜேர்மன் வேதவியலாளர் ஹொல்கர் கேர்ஸ்ரினின் பிரபல்யமான நூலில் உள்ள ஆய்வை ஒத்திருந்தன. அதனால் கதிர்காமர் புத்தரின் போதனைகளினால் பெரிதும் கவரப்பட்டிருக்கக்கூடியது சாத்தியமே. ஆனால், அறிவுஜீவிப் பயணத்தில் ஒரு மைல்கல் என்பதை விடவும் அதிகமானது என்றே தோன்றுகிறது. கதிர்காமர் அவரது மத நம்பிக்கையை பொறுத்தவரை பெருமளவுக்கு ஒரு தனிப்பட்ட மனிதராகவே இருந்தார்.
தனியாகப் பிரார்த்தனை
1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் அமைச்சராக பதவியேற்ற தினம் அதிகாலையில் கொழும்பு புல்லேர்ஸ் வீதியில் அமைந்திருக்கும் அங்கிளிக்கன் தேவாலயத்தில் தனியாக ஒருவர் பிரார்த்தனையில் ஈடுபட்டிருக்கக் காணப்பட்டார். அன்றைய ஆயர் கென்னத் பெர்னாண்டோ தேவாலயத்திற்குள் நடந்து சென்றபோது அதை அவதானித்தார். அது வேறுயாருமல்ல, லக்ஸ்மன் கதிர்காமரே தான். கிறிஸ்தவ கோட்பாட்டுப் பிடிவாதக்காரர்கள் மறுதலிப்பாளர்கள் என்ற போதிலும், கதிர்காமர் அடிப்படைக் கிறிஸ்துவத்தில் தொடர்ந்தும் நம்பிக்கையுடையவராக இருந்த அதேவேளை, மதத்தின் பொதுமையை அல்லது உலகளாவிய தன்மையை ஏற்றுக் கொண்ட ஒருவராக மாறியிருந்தார்.
"லங்கா அக்கடமிக்"
பல வருடங்களுக்கு முன்னர் லக்ஸ்மன் கதிர்காமரினால் வழங்கப்பட்ட நேர்காணல் ஒன்றில் இருந்து சில பகுதிகளுடன் இந்த கட்டுரையை நிறைவுசெய்ய விரும்புகிறேன். "லங்கா அக்கடமிக்" இணையத்தளம் அவருடன் கேள்வி -- பதில் தொடர் ஒன்றை நடத்தியிருந்தது. அன்று அவர் கூறிய சில கருத்துக்கள் முக்கியமான சில பிரச்சினைகள் தொடர்பில் அவரது சிந்தனையை வெளிப்டுத்தின. சில கருத்துக்கள் போரின் முடிவுக்கு பின்னரான இன்றைய காலப் பகுதிக்கு பொருத்தமில்லாதவையாக இருக்கலாம். ஆனால், மற்றைய கருத்துக்கள் -- கதிர்காமரின் அனுதாபிகளாக ஒரு காலத்தில் விளங்கிய சிவப்பு தோழர்கள் அதிகாரத்தில் இருப்பதுடன் புதிய அரசியலமைப்பு ஒன்று குறித்து பேசுகின்ற இன்றைய பின்புலத்தில் மிகவும் பொருத்தமானவையாக இருக்கும்.
சமஷ்டி முறை பற்றி -- "இலங்கை அரசை சிதைப்பதற்கு அல்லது பிரிப்பதற்கு அனுமதிக்காத வகையில் சிறுபான்மை இனத்தவர்கள் குறிப்பாக,தமிழர்கள் தங்களது பிராந்திய விவகாரங்களில் போதுமானளவு சுயாட்சியை வழங்கக்கூடிய சமஷ்டி முறையிலான கட்டமைப்பு ஒன்றை பொதுஜன முன்னணி ஆதரிக்கிறது.
அதனால், இரு கோட்பாடுகள் முக்கியமானவை ;
(1) அவசியமான அளவுக்கு சுயாட்சியை அனுமதிப்பது,
(2) நாட்டின் எந்த வகையான சிதைவுக்கும் அல்லது பிரிவினைக்கும் எதிரான பாதுகாப்புக்களை உறுதிப்படுத்துவது."
"தற்போதைய சர்வதேச நிகழ்வுப் போக்குகளையும் சவால்களையும் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது மத்தியிலும் மிகவும் பலம்பொருந்திய முறைமை ஒன்று இருக்க வேண்டியது அவசியம் என்று நாம் நம்புகிறோம்."
"எனவே, பிராந்தியங்களுக்கு அதிகாரப் பரவலாக்கத்தை செய்வதற்கு மேலதிகமாக மத்தியிலும் கணிசமான அதிகாரப்பகிர்வு தேவை என்று நாம் பிரேரிக்கிறோம். நாட்டில் பல சிறுபான்மைச் சமூகங்கள் இருக்கின்றன. அவர்கள் புவியியல் ரீதியில் பரந்து வாழ்கிறார்கள். பிராந்தியங்கள் தொடக்கம் மத்தி வரை சகல மட்டங்களிலும் அவர்களது பங்கேற்பையும் மனித உரிமைகளையும் முழு அளவில் நாம் உறுதிப்படுத்துவது அவசியமாகும்."
"நாம் கருத்தில் எடுக்க வேண்டிய இன்னொரு காரணியும் இருக்கிறது. இந்தியாவில் ஒரு சமஷ்டி முறை இருக்கிறது. அது பல மேற்குலக நாடுகளில் இருப்பதைப் போன்று பரந்த ஒரு முறை அல்ல. இந்திய அரசியலமைப்பை வரைந்தவர்கள் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றை வகுத்தபோது நாட்டைச் சிதைப்பதற்கு அனுமதிக்காத வகையில் ஐக்கியத்தையும் ஒருமைப்பாட்டையும் பேணவேண்டும் என்பதை பிரதானமாக மனதிற்கொண்டு செயற்பட்டார்கள்."
"எம்மத்தியில் பல்வேறு பிரிவினைவாத இயக்கங்கள் இருப்பதை கருத்திற்கொண்டு பார்க்கும்போது இந்த கோட்பாடு பொதுவில் தெற்காசியாவுக்கு பிரயோகிக்கப்படக் கூடியதாகும். 1987 ஆம் ஆண்டில் அரசியலமைப்புக்கான 13 வது திருத்தம் கொண்டுவரப்பட்ட பிறகு ஒரு வகை சமஷ்டி முறை நோக்கிய எமது படிமுறை வளர்ச்சி பற்றியும் நாம் கருத்தில் எடுக்க வேண்டியிருக்கிறது. எம்மிடம் ஓரளவு விரிவான அதிகாரப்பரவலாக்கல் முறை ஏற்கெனவே இருக்கிறது. அதில் கட்டமைப்பு ரீதியான முக்கியமான குறைபாடுகள் இருப்பதும் உண்மை....... ஆனால், வடக்கு, கிழக்கில் கட்டவிழ்கின்ற நிகழ்வுகளின் பின்புலத்தில் தேசிய அளவில் முழுமையான கலந்தாலோசனைகளை மேற்கொள்ள வேண்டியதே முக்கியமானதாகும். விடுதலை புலிகள் வெளிப்படையாக அறிக்கைகளை விடுக்கின்ற போதிலும் கூட, அவர்களுக்கு உண்மையில் சமஷ்டி முறை அரசாங்கம் ஒன்றில் விருப்பம் இருக்கிறதா என்ற சந்தேகத்தை நிகழ்வுகள் தோற்றுவிக்கின்றன."
தமிழர்கள் மீதான பாகுபாடு பற்றி....
"உதாரணமாக, உத்தியோகபூர்வ நோக்கங்களுக்காக தமிழ் அக்கீகரிக்கப்படாத, தமிழ்பேசும் சமூகங்களுக்கு கல்வியிலும் வேலை வாய்ப்புக்களிலும் பாகுபாடுகள் காட்டப்பட்ட காலம் ஒன்று இருந்தது. தமிழர்களுக்கு மனக்குறைகள் இருந்தன. அதை மறுதலிக்க முடியாது. நிலைவரம் இப்போது பெருமளவுக்கு மேம்பட்டு விட்டது. ஆனால், சுதந்திரத்துக்கு பின்னர் பதவிக்கு வந்த அரசாங்கங்களிடம் தொலைநோக்கு இருக்கவில்லை. முகாமைத்துவமும் தவறானதாக இருந்தது. வாக்குறுதிகளும் மீறப்பட்டன. பண்டாரநாயக்க / செல்வநாயகம், டட்லி சேனநாயக்க / செல்வநாயகம் உடன்படிக்கைகளை உதாரணமாக கூறலாம்.
விடுதலை புலிகளின் ஆயுதப் போராட்டம்
"விடுதலை புலிகள் நாட்டை உள்நாட்டுப் போருக்குள் இழுத்துச் செல்லாமல் இருந்திருந்தால் இலங்கை தமிழர்களின் நிலைவரம் மேம்பட்டதாக இருந்திருக்குமா என்ற உங்கள் கேள்விக்கு எனது தனிப்பட்ட பதில் சமூக - பொருளாதார மற்றும் அரசியல் பிரச்சினைகளுக்கு போரின் மூலம் ஒருபோதுமே தீர்வைக் காணமுடியாது என்பதேயாகும். ஆனால், தங்களது பிரச்சினைகளுக்கு தீர்வைக் காண்பதற்கு முன்னெடுக்கப்பட்ட சத்தியாக்கிரக இயக்கங்களும் அமைதிவழியிலான வேறு முயற்சிகளும் தோல்வியடைந்ததை கண்ட தமிழ் இளைய தலைமுறை ஒன்று ஆயுதமேந்துவதை தவிர வேறு மார்க்கம் இல்லை என்ற முடிவுக்கு ஏன் வந்தது என்பதை விளக்கிக்கொள்ள முயற்சிக்க வேண்டும்."
"ஆனால், ஆயுதமோதல் தொடர்ந்து கொண்டிருந்த நிலையில், போருக்கு வழிவகுத்த பிரச்சினைகளுக்கு போரினால் தீர்வைக் காணமுடியாது என்பது தெளிவாகத் தெரியத் தொடங்கிவிட்டது. விடுதலை புலிகள் ஆயுதமேந்தாமல் இருந்திருந்தால், தெற்கில் உள்ள எந்த அரசாங்கமும் இனப்பிரச்சினைக்கு பேச்சுவார்த்தை மூலமாக தீர்வு காணவேண்டிய அவசியம் குறித்து ஒருபோதும் சிந்தித்திருக்காது என்ற கருத்தை பல தமிழர்கள், மிதவாதச் சிந்தனை கொண்டவர்களும் கூட கொண்டிருக்கிறார்கள். அதே மிதவாதத் தமிழர்கள் போரினால் இப்போது அவலங்களைச் சந்தித்துவிட்டோம்; ஆயுத மோதல்களை முடிவுக்கு கொண்டு வரப்பட வேண்டும்; பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்வொன்று காணப்பட வேண்டும் என்று கூறுவார்கள் என்பது எனக்கு நிச்சயம்."
"தாயக விவகாரத்தைப் பொறுத்தவரை, இலங்கையில் தற்போது இருக்கின்ற தமிழர்களாக இருந்தாலென்ன அல்லது வெளிநாடுகளுக்கு சென்றுவிட்ட தமிழர்களாக இருந்தாலென்ன பெரும்பான்மையான தமிழர்கள் பிரபாகரனின் ஆட்சியின் கீழ் வாழ விரும்புவார்கள் என்று நான் நினைக்கவில்லை. சிறுபானமைச் சமூகங்களின் உரிமைகள் போதுமானளவுக்கு உத்தரவாதப்படுத்தப்படுகின்ற சுதந்திரமானதும் ஐக்கியப்பட்டதுமான ஜனநாயக இலங்கை ஒன்றில் வாழ்வதற்கே அவர்கள் விரும்புவார்கள்."
தனிப்பட்ட குறிப்பு
எனது தனிப்பட்ட குறிப்புடன் கட்டுரையை நிறைவு செய்கிறேன். எனது தந்தையார் லக்ஸ்மனை விடவும் வயதில் மூத்தவராக இருந்த போதிலும், 1954 ஆம் ஆண்டில் சட்டக்கல்லூரியில் அவர்கள் இருவரும் சமகாலத்தவர்கள். நான் 1954 ஆம் ஆண்டில் பிறந்தேன். புதிதாக பிறந்த இந்த குழந்தையைப் பார்க்க லக்ஸ்மன் வைத்தியசாலைக்கு வந்தார். அது மாத்திரமல்ல, எனது ஞானஸ்நானத்துக்கும் அவர் வந்தார்.
அறுபதுகளில் எனது தந்தையாருக்கு லக்ஸ்மனுடனான தொடர்புகள் இல்லாமல் போய்விட்டன. ஆனால், அவரின் விவேகத்தைப் பற்றி தந்தையார் எப்போதும் உயர்வாகப் பேசுவார். தமிழைப் பேசமுடியாதவர் என்றாலும், 1956 ஆம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட தனிச்சிங்களச் சட்டம் குறித்தும் 1958 இனவன்செயல் மற்றும் 1961 சத்தியாக்கிரகப் போராட்டம் ஒடுக்கப்பட்டது குறித்தும் லக்ஸ்மன் ஆழமான கவலைகொண்டிருந்தார் என்றும் தந்தையார் கூறினார். தமிழர்களின் அவலங்கள் கதிர்காமருக்கு தெரியாது என்ற விடுதலை புலிகளின் குற்றச்சாட்டை தந்தையார் ஒருபோதும் ஏற்றுக்கொண்டதில்லை.
தமிழ்த் தேசியப்பிரச்சினை
காலஞ்சென்ற கலாநிதி நீலன் திருச்செல்வத்தின் முயற்சிகளின் விளைவாக, ஒரு பத்திரிகையாளன் என்ற தொழில்சார் அந்தஸ்தில் நான் 1994 ஆம் ஆண்டில் லக்ஸ்மன் கதிர்காமருடன் நான் தொடர்புகொண்டேன். அப்போது ரொறண்டோவில் எனது சொந்த தமிழ் வாரப்பத்திரிகையின் ஆசிரியராக இருந்தேன். கதிர்காமர் அமைச்சராக வந்து தேசியப் பிரச்சினைக்கு தீர்வகை்காண உதவுவதில் அக்கறை கொண்டிருந்தார்.
புதிய அமைச்சர் என்ற வகையில் கதிர்காமர் தமிழ்த் தேசியப் பிரச்சினை குறித்து உள்நோக்குகளை அறிந்துகொள்வதில் ஆர்வமாக இருப்பதால் அவருடன் பேசுமாறு நீலன் என்னைக் கேட்டுக் கொண்டார். தொலைபேசி மூலமாக அவருடன நான்கு அல்லது ஐந்து தடவைகள் பேசியதாக நினைக்கிறேன். குறிப்பாக, ஒரு தடவை சுமார் 90 நிமிடங்கள் அவருடன் பேசினேன்.
தமிழர் பிரச்சினையில் கதிர்காமர் மிகுந்த அக்கறை கொண்டிந்ததை நான் கண்டேன். அவர் ஆர்வத்துடன் கிரகிக்கும் பழக்கமுடையவர். நாங்கள் கூறுகின்ற சில விடயங்களை அவரால் ஏற்றுக்கொள்ள முடியாவிட்டாலும், அதை மிகவும் கண்ணியமான முறையில் வெளிப்படுத்தும் பண்பு இருந்தது. நான் அப்போது விடுதலை புலிகளின் நல்லெண்ணத்தில் நம்பிக்கை கொண்ட ஒரு தீவிரமான தமிழ்த் தேசியவாதி. விடுதலை புலிகள் தங்களின் தலைமைத்துவத்தின் நலன்களுக்காக அன்றி, தமிழ் மக்களின் நல்வாழ்வுக்காகவே போராடுகிறார்கள் என்று அபாபாவித்தனமாக நினைத்தவர்களில் நானும் ஒருவன். அதேபோன்ற சிந்தனைகொண்ட பல தமிழர்களைப் போன்று, ஐக்கியப்பட்ட ஆனால் ஒற்றையாட்சியாக இல்லாத இலங்கை ஒன்றிற்குள் நீதியானதும் சமத்துவமானதும் கௌரவமானதுமான இணக்கத்தீர்வு ஒன்றுக்கு விடுதலை புலிகள் தயாராக இருந்தார்கள் என்று நானும் நினைத்தேன்.
சமஷ்டி முறைக்கு வரவேற்பு
சமஷ்டி முறை ஒரு அசலான தீர்வாக இருக்கும் என்று கதிர்காமர் இணங்கிக் கொண்டார். இரு விடயங்களில் மாத்திரம் அவருக்கு ஐயுறவு இருந்தது. எந்தவொரு நடைமுறைச் சாத்தியமான தீர்வும் பெரும்பான்மை இனத்தவர்களுக்கு ஏற்புடையதாக இருக்க வேண்டும் என்றும் அல்லாவிட்டால் அது நடைமுறைப்படுத்தப்படக் கூடியதாக இருக்காது என்று அவர் உணர்ந்தார்.
அதனால், கோட்பாட்டு சமஷ்டிமுறையை தவிர்த்து அதற்கு பதிலாக உச்சபட்ச அதிகாரப் பரவலாக்கம் என்ற பதம் பயன்படுத்தப்பட வேண்டும் என்ற அபிப்பிராயத்தை கதிர்காமர் கொண்டிருந்தார். இரண்டாவதாக, எந்தவொரு இணக்கத் தீர்வும் இந்தியாவுக்கு ஏற்புடையதான வழியில் இருக்கவேண்டும் என்று அவர் கூறினார். அதனால், பிராந்தியங்களுக்கு பரவலாக்கப்படுகின்ற அதிகாரங்கள் இந்தியாவில் மத்திய அரசுக்கும் மாநிலங்களுக்கு இடையில் உள்ள உறவுமுறையின் வீச்செல்லைக்கு அப்பால் செல்லக்கூடாது என்று கதிர்காமர் உணர்ந்தார்.
புலிகளுடன் அரசியல் நல்லிணக்கம்
இவற்றுக்கு அப்பால், தமிழர் தரப்பில் விடுதலைப் புலிகளை மாத்திரம் ஈடுபடுத்தியதாக இணக்கத்தீர்வு அமைய வேண்டும் என்ற சிந்தனையை ஆரம்பத்தில் கதிர்காமர் ஏற்றுக்கொண்டார். எம்மை வேறுவிதமாக நம்பவைக்க விடுதலைப் புலிகள் முயற்சித்தாலும் கூட 1994 ஆம் ஆண்டில் அவர்களுடன் அரசியல் நல்லிணக்கதில் கதிர்காமர் உறுதியான நம்பிக்கை கொண்டிருந்தார்.
நிலைவரத்தை மதிப்பிடு செய்வதற்காக கதிர்காமர் பெருமளவு தமிழர்களுடன் பேசினார். அவர் மிகவும் ஆழமாகவும் வெளிப்படையாகவும் பேசியவர்களில் ஒருவர் தென்னிந்திய திருச்சபையின் யாழ்ப்பாண ஆயர் காலஞ்சென்ற அதிவண. டி.ஜே.அம்பலவாணர். விடுதலைப் புலிகள் இணக்கத்தீர்வு ஒன்றில் அக்கறையாக இருக்கிறார்கள், ஆனால் நிலைமாறு பாதையில் அவர்கள் மிகுந்த எச்சரிக்கையுடனும் ஆறுதலாகவுமே அடியெடுத்து வைப்பார்கள் என்னைப் போன்ற பெரும்பாலான தமிழர்கள் அவருக்கு சொல்லியிருந்தோம் என்று நினைக்கிறேன்.
அதை ஏற்றுக்கொண்டு கதிர்காமர் தனது அந்த 1994 ஆம் ஆண்டிலும் 1995 ஆம் ஆண்டின் முற்பகுதியிலும் அரசாங்கத்திற்குள் அதை வலியுறுத்தினார். விடுதலைப் புலிகள் அந்த நம்பிக்கையை தகர்த்து 1995 ஏப்பில் 18 ஆம் திகதி மோதல்களை மீண்டும் தொடங்கியபோது அவருக்கு முற்றிலும் ஏமாற்றமாகப் போய்விட்டது. அதற்கு பிறகு சில நாட்கள் கழித்து இறுதியாக நான் அவருடன் பேசினேன்.
வழமையான மனச் சமநிலைக்கு மத்தியிலும் அவர் ஆத்திரமடைந்தார். விடுதலை புலிகளைப் பற்றி நேர்மறையாகப் பேசிய என்னையும் மற்றவர்களையும் அவர் விமர்சித்தார். நான் மறுத்துரைத்தேன். வாக்குவாதம் நீண்டுகொண்டு போகும் அறிகுறி தெரிந்தபோது அவர் திடீரென்று சம்பாஷணையை முடித்துக்கொணாடார். அதற்கு பிறகு நாம் நேரடியாக ஒருபோதும் பேசிக்கொண்டதில்லை.
https://www.virakesari.lk/article/222620