அரசியல் அலசல்

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

1 month 4 weeks ago

நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டு நினைவு நாட்கள் - நிலாந்தன்

590766592_824918727098699_52485070505619

வெள்ளம்,மழை,புயல் எச்சரிக்கை… எல்லாவற்றையும் மீறி மாவீரர் நாள் பரந்த அளவில்,பெரியளவில் அனுஷ்டிக்கப்பட்டிருக்கிறது. ஆயுதப் போராட்டம் முடிவுக்கு வந்த பின்னரான 17ஆவது மாவீரர் நாள் இது. நொவம்பர் மாதத்தில் வரும் இரண்டாவது தியாகிகளின் நினைவு நாள் இது.

இம்மாதம் 13ஆம் திகதி,ஜேவிபி அதனுடைய  தியாகிகளின் நாளை அனுஷ்டித்தது. அதே மாதத்தில் மாவீரர் நாளும் அனுஷ்டிக்கப்படுவது ஒரு நூதனமான ஒற்றுமை. இச்சிறிய தீவில் ஆயுதப் போராட்டத்தை முன்னெடுத்த இரண்டு பெரிய அமைப்புகளின் தியாகிகள் தினம் இவ்வாறு ஒரே மாதத்தில் வருவது ஒரு நூதனமான ஒற்றுமைதான்.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முதலாவது மாவீரர் தன் உயிரைத்  தியாகம் செய்த நாள் மாவீரர் நாளாக அனுஷ்டிக்கப்படுகிறது. ஜேவிபியின் தலைவர் ரோகண விஜயவீர அரச படைகளால் கைது செய்யப்பட்டு, குரூரமாகக் கொல்லப்பட்ட நாள் அந்த அமைப்பின் தியாகிகள் நாளாகக் கொண்டாடப்படுகிறது.

ஜேவிபியின் நினைவு நாள் கொழும்பு விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது. இலங்கைத் தீவில் இரண்டு ஆயுதப் போராட்டங்களை முன்னெடுத்து, இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட, இரண்டு தடவைகள் நசுக்கப்பட்ட, ஓர் அரசியல் இயக்கம் ஜேவிபி. ஆனால் தன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழ முடியும் என்பதற்கு இந்தப் பிராந்தியத்தில்  மட்டுமல்ல முழு உலகத்திலும் மிக அரிதான முன்னுதாரணங்களில் ஒன்று.

அன்றைய நிகழ்வில் விகாரமகாதேவி பூங்காவின் வெளியரங்கம் சிவப்பு நிறச் சட்டைகளாலும் முதிய பெண்களின் கண்ணீராலும் பிரகடனங்களாலும் நிறைந்திருந்தது. பெரும்பாலானவர்கள் சிவப்பு நிற மேலாடைகளோடு வந்திருந்தார்கள். அரங்கின் முன்வரிசையில் வயதான முதிய பெண்கள் சிலர் காணப்பட்டார்கள். மெலிந்த சதைப்பிடிப்பில்லாத முகங்கள். எடுப்பில்லாத உடுப்புகள். மென்மையான சோக இசையின் பின்னணியில் அவர்களில் சிலர் அழுதார்கள். அவர்களுடைய கண்ணீர் உண்மையானது. அன்னையரின் கண்ணீர் பொய்யானது அல்ல. அன்னையரின் கண்ணீர் எல்லா நினைவு நாட்களிலும் ஒன்றுதான். அதில் உள்ள உப்புச் சுவையும் ஒன்றுதான்.

அந்த நிகழ்வின் ஒளிப்படங்களை என்னோடு பகிர்ந்த ஒரு நண்பர், என்னிடம் கேட்டார், “நீங்கள் சொல்வது போல ஜேவிபி அதன் சொந்தச் சாம்பலில் இருந்து மீண்டெழுந்த ஓர் இயக்கம். இப்பொழுது அரசாங்கமாக அந்த நிகழ்வை பெருமெடுப்பில் ஒழுங்குப்படுத்தியிருக்கிறது” என்று.

நான் அவரிடம் கேட்டேன் “அது ஒரு அரச நிகழ்வா அல்லது ஒரு இயக்கத்தின் அல்லது கட்சியின் நினைவு நிகழ்வா?” என்று. அதில் நாட்டின் அரசுத் தலைவரும் உட்பட பிரதான அமைச்சர்கள் பங்குபற்றினார்கள். அந்த அடிப்படையில் பார்த்தால் அது ஒரு அரசு நிகழ்வு போலத் தோன்றும். ஆனால் அது பெருமளவுக்கு ஓர் இயக்க நிகழ்வுதான்; ஒரு கட்சி நிகழ்வுதான். அங்கே அரசுத் தலைவருக்கும் அமைச்சருக்கும் பாதுகாப்பாக படையினர் ஆங்காங்கே காணப்பட்டார்கள். எனினும் வழமையான அரசு நிகழ்வுகளைப்போல சீருடை அணிந்த படையினரின் பிரசன்னம் தூக்கலாக வெளித்தெரியவில்லை. அந்தப் படையினரின் சீருடைக்கும் அங்கு வந்திருந்த பெரும்பாலானவர்களின் சிவப்பு உடுப்புகளுக்கும் பொருந்தவேயில்லை. விறைப்பாக நின்ற அந்தப் படையினரின் துப்பாக்கிகளும் அழுது கொண்டிருந்த முதிய பெண்களின் கண்ணீரும் ஒன்றுக்கொன்று எதிரானவை.

AKD-JVP-commemoration.jpg

இப்பொழுது ஜேவிபி ஆளுங்கட்சி.அதுதான் அரசாங்கம். அப்படிப் பார்த்தால் அரசாங்கத்தின் தியாகிகள் நாட்டுக்கும் தியாகிகள்தானே?அந்த அடிப்படையில் அது ஓர் அரச நிகழ்வாகத்தான் அமைய வேண்டும். ஆனால் அப்படியல்ல.

அங்கே இறந்தவர்களுக்காக மலர்கள் வைக்கப்பட்டன. பாடல்கள் இசைக்கப்பட்டன. உரைகள் நிகழ்த்தப்பட்டன. ஆனால் படையினரின் ராணுவ அணிவகுப்போ,மரியாதை வேட்டுக்களோ தீர்க்கப்படவில்லை. அரசாங்கத்தின் தேசிய தியாகிகளின் நாளில் படையினரின் அணிவகுப்பு இருக்கும்; பீரங்கிகளில் முழங்கும்; முப்படை தளபதிகளும் பிரசன்னமாகியிருப்பர்.

ஆனால் 13-ஆம் தேதி விகார மகாதேவி பூங்காவின் வெளியரங்கில் நடந்தது ஒரு அரச நிகழ்வு அல்ல. நாட்டை ஆளுங்கட்சி அதன் தியாகிகள் நாளை தேசிய விழாவாகக் கொண்டாடவில்லை. அது தனக்கென்று தனியாக ஒரு தியாகிகள் நாளை அனுஷ்டிக்கின்றது. அதிலும் குறிப்பாக, ஜேவிபியிலிருந்து பிரிந்து சென்றவர்கள் தனித்தனியாக நினைவு நாட்களை அனுஷ்டிக்கிறார்கள். ஜேவிபியின் முதலாவது ஆயுதப் போராட்டம் நடந்த ஏப்ரல் ஐந்தாம் திகதியை ஒரு பகுதியினர் அனுஷ்டிக்கிறார்கள். நவம்பர் 13 ஐ ஜேவிபியிடமிருந்து பிரிந்து  சென்றவர்கள் தனியாக அனுஷ்டிக்கிறார்கள். தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்ட இயக்கங்கள் ஒவ்வொன்றும் தங்களுக்கு என்று தனித்தனியாக தியாகிகள் நாளை அனுஷ்டிப்பது போல.

ஆனால் இங்கு கவனிக்கப்பட வேண்டிய வேறுபாடு என்னவென்றால், ஆளுங்கட்சியாக உள்ள ஜேவிபியின் நினைவு நாள் ஒர் அரசு நிகழ்வாக கொண்டாடப்படவில்லை என்பதுதான். சிங்களபௌத்த அரசின் தேசியத் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் ஜேவிபி அரசாங்கத்தின் தியாகிகள் நினைவு நாள் வேறாகவும் இருக்கின்றன என்பதுதான்.

சிறிய இலங்கை தீவு தன்னகத்தே பல தியாகிகளின் நாட்களைக் கொண்டிருக்கிறது. படையினரின் தியாகிகள் நாள்,ஜேவிபியின் தியாகிகள் நாள்,விடுதலைப் புலிகள் இயக்கத்தின் மாவீரர் நாள், ஏனைய தமிழ் இயக்கங்களின் தியாகிகள் நாள், என்று பல தியாகிகளின் நாட்கள் இச்சிறிய தீவில் உண்டு.

589343022_1305779798257307_1048150586159

ஜேவிபி இப்பொழுது அரசாங்கமாக இருந்த போதிலும், அதன் தியாகிகள் தினம் தனியே கொண்டாடப்படுகிறது. ஜேவிபியின் பிரதானியான அனுர ஒரு ஜனாதிபதியாக, முப்படைகளின் தளபதியாக இருக்கிறார். ஆனால் அவருடைய தோழர்களை நினைவு கூரும் நாளில் முப்படைகளின் அணிவகுப்பு இல்லை. அது இப்பொழுதும் ஓர் அரச நிகழ்வு அல்ல.

விகாரமாதேவி பூங்காவில் கூடிய ஜேவிபியினர் சிவப்புச்சட்டை அணிந்திருந்தார்கள். விகார மகாதேவி பூங்காவில் அமைக்கப்பட்டிருந்த தற்காலிக நினைவுச் சின்னத்திலும்  சிவப்பு நிறம் இருந்தது. ஆனால் அந்த சிவப்பு கம்யூனிச சிவப்பு அல்ல. நாட்டில் தற்பொழுது நடப்பது கம்யூனிச ஆட்சியும் அல்ல. பன்னாட்டு நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யும் பொருளாதாரக் கொள்கைகளைக் கொண்ட ஓர் ஆட்சி.

ஆனால் லண்டனில் உரை நிகழ்த்திய ரில்வின் சில்வா, “வீரர்கள் சிந்திய குருதியை ஏற்று சிவப்பு மலர்கள் மலரட்டும்” என்று கூறினார். அந்தச் சிவப்பு மலர்கள்  நிச்சயமாக மார்க்சிய சித்தாந்தத்தை பிரதிபலிக்கவில்லை. அவ்வாறு ஜேவிபி ஒரு மெய்யான மார்க்சிஸ்ட் அமைப்பாக இருந்திருந்தால் தமிழ் மக்களுக்கு சுயநிர்ணய உரிமை உண்டு என்பதை ஏற்றுக் கொண்டிருந்திருக்கும்.

ரில்வின் உரை நிகழ்த்திய அதே கூட்டத்தில் ஜேவிபியின் பிரதித் தலைவராக இருந்த உபதிச கமநாயக்கவின் மனைவி உரை நிகழ்த்தும்போது, மூன்றாவது தலைமுறை ஜேவிபியினர் நாட்டை ஆளும் வளர்ச்சிக்கு வந்திருப்பதை பெருமையோடு சுட்டிக்காட்டினார். சிறு ஓடையாக இருந்த இயக்கம் இப்பொழுது பெரும் நதியாக மாறிவிட்டது என்றும் சொன்னார்.

ரில்வின் சில்வா லண்டனில் சிவப்பு மலர்களைப்பற்றி பேசிய அதே காலப்பகுதியில் கொழும்பில் அவர்களுடைய அரசாங்கத்தின் வெளிவிவகார அமைச்சர் புதிதாக வந்திருக்கும் கனேடிய தூதுவருக்கு என்ன சொன்னார்? கனடாவில் உள்ள தமிழ் அரசியல் செயற்பாட்டாளர்கள் இலங்கையில் பிரிவினைவாதத்தை ஊக்குவிக்கும் கருத்துக்களை முன்னெடுப்பதற்கு எதிராகவும் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் சின்னம் போன்றவற்றை பகிரங்கமாக பயன்படுத்துவதற்கு எதிராகவும் கனேடிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். கனடாவில் வாழும் சில செயற்பாட்டாளர்களின் நடவடிக்கைகள்,இலங்கையின் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிகளுக்குப் பாதகமாக அமைந்துள்ளன என்றும் அமைச்சர் ஹேரத் கூறியுள்ளார்.

அதாவது நாட்டில் தடை செய்யப்பட்ட இயக்கத்தின் சின்னங்களை கனடாவில் உள்ள தமிழர்கள் உயர்த்திப் பிடிப்பதை அவர் கனேடியத் தூதுவருக்குச் சுட்டிக்காட்டுகிறார். கனடாவிலும் விடுதலைப்புலிகள் இயக்கம் தடை செய்யப்பட்ட அமைப்பு என்ற அடிப்படையில் மேற்சொன்ன செயற்பாட்டாளர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

ஆனால்  கடந்த அரை நூற்றாண்டு காலப்பகுதிக்குள் ஜேவிபி நாட்டில் இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்டது. அவ்வாறு இரண்டு தடவைகள் தடை செய்யப்பட்ட ஓர் இயக்கம் கனடாவில் தடை செய்யப்பட்ட சின்னங்களை தமிழ் மக்கள் முன்னிறுத்துவதைத் தடுக்க வேண்டும் என்று கேட்கின்றது.

தனது இயக்கத்தின் தியாகிகளின் நாளும் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பின் தியாகிகளின் நாளும் ஒன்று அல்ல என்பது தெளிவாகத் தெரியும் ஒர் அரசியல் சூழலில், அமைச்சர் விஜித ஹேரத் கனேடிய தூதுவரிடம் அவ்வாறு கூறியுள்ளார். கார்த்திகை மாதத்தில் நாட்டில் இனரீதியாக இரு வேறு நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்படும் ஓர் அரசியல் யதார்த்தத்தை தடைகளின் மூலம் மாற்ற முடியாது.

இந்த நாட்டில் ஏன் இனரீதியாக இரு வேறு நினைவு நாட்கள்? எல்லாத் தடைகளையும் மீறி தமிழ் மக்கள் கடந்த 17 ஆண்டுகளாக ஏன்  மாவீரர் நாளை தொடர்ந்து அனுஷ்டித்து வருகிறார்கள்? இனரீதியாக இரண்டு வேறு தியாகிகள் தினங்களைக் கொண்ட ஒரு  நாட்டின் வெளி விவகார அமைச்சராகிய விஜித ஹேரத்   கனேடிய  தூதுவருக்கு கூறுகிறார், அரசாங்கம் தேசிய ஐக்கியத்தையும் நல்லிணக்கத்தையும் கட்டியெழுப்புவதாக. விகாரமகாதேவி பூங்காவில் தற்காலிகமாக உருவாக்கப்பட்டிருந்த நினைவுச் சின்னத்தில் பூசப்பட்டிருந்த சிவப்பு நிறம் வெளிறும் இடம் இதுதான்.

https://www.nillanthan.com/7959/

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

1 month 4 weeks ago

இலங்கையின் மத சுதந்திர நிலைப்பாட்டை ஆராய்தல்

February 11, 2015

sri_lanka_guards.jpg?resize=1200%2C550&s

Photo, AP Photo/Eranga Jayawardena

வரலாற்றை நோக்கினால் சட்ட ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் இன, மதக் குழுக்களுக்கு இணக்கமாகவே இலங்கை செயற்பட்டு வருகின்றது. அரசியலமைப்புச் சட்டத்தின் உறுப்புரை 9 இன் கீழ் பௌத்த மதத்திற்கு “முதன்மையான இடம்” அளிக்கப்பட்டாலும், உறுப்புரைகள் 10 மற்றும் 14(1)(உ) ஊடாக மதம் மற்றும் நம்பிக்கை சுதந்திரத்திற்கான உரிமை பாதுகாக்கப்படுகின்றது. இலங்கை உச்ச நீதிமன்றம் மத சுதந்திரத்தை முழுமையான உரிமையாக அடையாளம் கண்டுள்ளது (உறுப்புரை 10). மேலும், பௌத்தத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டாலும் கூட அனைவருக்கும் சமத்துவத்தையும் மத சுதந்திரத்தையும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பு அரசாங்கத்திற்கு உள்ளது. மத சுதந்திரத்திற்கு அரசியலமைப்பு உத்தரவாதம் காணப்படுகின்றபோதும், தேசியப் பாதுகாப்பு, பொது ஒழுங்கு, பொது சுகாதாரம், ஒழுக்கம் அல்லது மற்றவர்களின் உரிமைகள் மற்றும் சுதந்திரத்தைப் பாதுகாத்தல் போன்றவை காரணமாக ஒருவர் தனது மதத்தை வெளிப்படுத்துவதற்கான சுதந்திரமானது (உறுப்புரை 14(1)(உ) பல சட்டக் கட்டுப்பாடுகளுக்கு உட்படுகின்றது.

இருப்பினும், நீண்டகாலமாக நிலவிவரும் பல்வேறு போக்குகள் தொடர்ந்தும் மத சுதந்திரத்தைக் குறைத்து மதிப்பிட்டு, சட்டக் கொள்கை, அரச நடவடிக்கை என இரண்டையும் கையாள்கின்றன. சமூகத்தின் பிரச்சினைகளைத் தமது நன்மைக்காகப் பயன்படுத்தும் அரசியல் மற்றும் மத ரீதியான கடும்போக்குவாதக் குழுக்கள் மற்றும் அதிகரித்து வரும் மத உணர்வுகள் போன்றவை அதேயளவு தாக்கம் செலுத்தும் ஏனைய காரணிகளாக உள்ளன. தீவிர தேசியவாத பௌத்த இயக்கங்கள், சுவிசேஷ அமைப்புடன் அடையாளம் காணப்படும் குறிப்பிட்ட கிறிஸ்தவக் குழுக்களின் நடைமுறைகள், தீவிர இஸ்லாமிய மற்றும் இந்து குழுக்கள் மத சுதந்திரத்தையும் பன்மைத்துவத்தையும் குறைத்து மதிப்பிடும் சூழலுக்குக் காரணமாகின்றன. அரச மற்றும் அரசு சாரா பங்காளர்களிடையே வேரூன்றிக் காணப்படும் இத்தகைய போக்குகளின் வடிவங்கள் குறித்த “இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு: ஆண்டறிக்கை 2024” என்ற தலைப்பில் இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணியின் அண்மைய அறிக்கையின் முடிவுகளை இக்கட்டுரை சுருக்கமாக முன்வைக்கின்றது. மேலும், இலங்கையில் மத சுதந்திரத்தை நிலைநிறுத்துவதற்கான சூழலை ஆதரிக்கும் அல்லது குறைத்து மதிப்பிடும் சம்பவங்களையும் முன்னேற்றங்களையும் இக்கட்டுரை ஆராய்கின்றது. 2024 முதல் 2025 வரை இடம்பெற்ற முன்னேற்றங்களில் கவனம் செலுத்தும் அதேநேரம் எதிர்காலத்திற்கான கண்ணோட்டத்தையும் தருகின்றது.

தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் மத சுதந்திரத்திற்கு முன்னுரிமை அளித்து, அதன் பாதுகாப்பை நிர்வாகம் மற்றும் கொள்கை முடிவுகளில் ஒருங்கிணைப்பதற்கு முந்தைய நிர்வாகங்களுடன் ஒப்பிடும்போது அதிக சாத்தியக்கூறுகள் இருப்பதாகத் தெரிகின்றது. தீவிரமான குழுக்களால் முன்வைக்கப்படும் தவறான மத விளக்கங்களுக்கு எதிரான ஆலோசனைக் குழுக்களை புத்தசாசன, மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சின் ஊடாக 2025 அக்டோபரில் அரசாங்கம் நியமித்தது. “நான்கு முக்கிய மதங்கள் பற்றிய திரிவுபடுத்தப்பட்ட மற்றும் தவறாக வழிநடத்தப்படும் கருத்துகளைப் பரப்புவது குறித்து அதிகரித்து வரும் கவலைகளுக்கு” பதிலளிக்கும் விதமாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டது. இவ்வாறான சமீபத்திய முன்னேற்றங்களின் பின்னணியில், தற்போதைய இந்த அரசியல் சூழல் இவ்வாறான விவாதங்களை முன்னெடுப்பதற்குப் பொருத்தமானதாகவும் நேரத்திற்கேற்றதாகவும் உள்ளது என்ற புரிதலுடன் இக்கட்டுரை எழுதப்பட்டுள்ளது.

அரசியல் சூழலை மேம்படுத்துதல்

ஜனாதிபதி மற்றும் நாடாளுமன்றத் தேர்தல்களின்போது பௌத்த மதத்தின் பங்கு குறித்த அரசியல் செய்திகளில் NPP கொண்டிருந்த மாற்று நிலைப்பாடுதான் அதன் மீதான நம்பிக்கை அதிகரிக்கக் காரணமான முக்கிய காரணிகளில் ஒன்றாகும். தேர்தலில் ஆதரவைப் பெறுவதற்காக பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களின் நலன்களில் கவனம் செலுத்தாமல், மத அடையாளங்களில் பெரிதும் நம்பியிருந்த முந்தைய தேர்தல் பிரச்சாரங்களைப் போலல்லாமல், NPP இன் 2024 பிரச்சாரம் அத்தகைய விமர்சனப் போக்கிலிருந்து விலகிக் காணப்பட்டது. இது அனைவரையும் உள்ளடக்கிய, வரவேற்கத்தக்க அரசியல் கலாச்சாரத்தை நோக்கிய சாதகமான மாற்றத்தைக் குறிக்கின்றது. ஒரு காலத்தில் தேர்தலின்போது வாக்காளர்களைக் கவர்ந்த பிளவை ஏற்படுத்தும் சொற்பிரயோகங்கள் முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது 2024 இல் பெருமளவில் குறைந்து போயிருந்தன.

இந்த மாற்றம் மத சுதந்திரத்திற்கு மிகவும் உகந்த சூழலுக்கான தொனியை அமைக்க உதவியுள்ளதுடன், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு (HRCSL) போன்ற முக்கிய அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயல்படவும் பயனுள்ள தலையீடுகளை மேற்கொள்ளவும் உதவுகின்றது. HRCSL மத சுதந்திரம் தொடர்பான பிரச்சினைகளில் அதிக கவனம் செலுத்திவருவதுடன் மத சுதந்திரத்தை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட அரச தலையீடுகளையும் கண்காணித்து வருகின்றது. உதாரணமாக, 2024 ஜூன் மாதம் திருகோணமலை சாஹிரா கல்லூரியில் காதுகளை மூடும் வகையில் ஆடை அணிந்திருந்தமை காரணமாக 70 மாணவர்களின் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள் நிறுத்தி வைக்கப்பட்டதை ஆணைக்குழு விசாரித்தது. கண்காணிப்பாளர்கள் பாரபட்சமாக நடந்து கொண்டமை விசாரணையில் தெரியவர முடிவுகளை நிறுத்தி வைக்கும் முடிவு நியாயமற்றது எனத் தெரிவித்தது. மார்ச் 2018 இல் இடம்பெற்ற திகன கலவரம் தொடர்பான விசாரணை குறித்த அறிக்கையையும் 2025 செப்டம்பரில் HRCSL வெளியிட்டது. அந்த நேரத்தில் சமூக ஊடகங்கள் குறிப்பாக/ பேஸ்புக் மூலம் பரப்பப்பட்ட தவறான தகவலும் வெறுப்புப் பேச்சும் முஸ்லிம் சமூகத்திற்கு எதிரான வன்முறையைத் தீவிரப்படுத்தியதில் கொண்டிருந்த பங்கினை இந்த அறிக்கை விரிவாகக் குறிப்பிட்டுள்ளது.

சட்டங்கள், கொள்கைகள் மற்றும் மத சுதந்திரம்

நாட்டின் நிர்வாகத்துடன் தொடர்புடைய பல முக்கிய சட்டங்கள் மத சுதந்திரத்தைப் பாதிக்கின்றன அல்லது அதனால் பாதிக்கப்படுகின்றன. அத்துடன், ஏனைய அடிப்படை உரிமைகளிலும் இவை தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இத்தாக்கத்தை சட்டம் எப்படி உருவாக்கப்பட்டுள்ளது அல்லது அந்தச் சட்டத்தின் விதிகள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதில் காணலாம்.

தண்டனைச் சட்டக்கோவை, 2007ஆம் ஆண்டின் சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கை சட்டம் (ICCPR சட்டம்), 1979ஆம் ஆண்டின் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA), மற்றும் சமீபத்திய 2024 ஆம் ஆண்டின் ஒன்லைன் பாதுகாப்புச் சட்டம் (OSA) ஆகியவை அத்தகைய சட்டங்களின் ஒரு தொகுப்பாகும். இச்சட்டங்கள் பொதுமக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்டதாகத் தோன்றினாலும், அவற்றில் உபயோகிக்கப்பட்டுள்ள பரவலான மற்றும் தெளிவற்ற சொற்கள் அவற்றைத் தவறாகப் பயன்படுத்த வழிவகுத்துள்ளன. பெரும்பாலும் சிறுபான்மை சமூகங்களை அநியாயமாகக் குறிவைக்கும் முறையில் அமைகின்றன.

சர்வதேச சிவில் மற்றும் அரசியல் உரிமைகள் உடன்படிக்கையை இலங்கை அங்கீகரித்துடன், தேசியச் சட்டத்தில் இன்னும் அங்கீகரிக்கப்படாத சில ICCPR பிரிவுகளுக்கு உள்நாட்டு சட்டரீதியான அமல்படுத்தலை வழங்கும் நோக்கில் ICCPR சட்டத்தையும் இயற்றியது. தண்டனைச் சட்டக்கோவை மற்றும் ICCPR சட்டத்தில் உள்ள விதிகள் மதத்தை அவமதிப்பதாகக் கருதக்கூடிய வெளிப்பாடுகளைக் குற்றமாக்குவதன் மூலம் மத உணர்வுக்கு சிறப்பு பாதுகாப்பை வழங்குகின்றன என விமர்சகர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். இவை “நிந்தனைக்கு எதிரான நடைமுறைத் தடையை” உருவாக்குவதாக விபரிக்கப்பட்டுள்ளன. இத்தகைய கட்டுப்பாடுகளின் பரந்த நோக்கம், தேவை மற்றும் விகிதாசாரத்தின் சர்வதேச அளவுகோல்களைப் பூர்த்திசெய்யாமல் அளவுக்கு மீறிய தணிக்கையை ஏற்படுத்தும் ஆபத்தை விளைவிக்கின்றது. 2024 மே மாதத்தில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ICCPR சட்டத்தின் பிரிவு 3 இன் தவறான பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. திருகோணமலையில் நினைவேந்தல் நிகழ்வொன்றில் ஈடுபட்டதற்காக நான்கு பேர் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டது மற்றும் காவல்துறை அதிகாரி ஒருவர் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகக் கூறப்படுவது தொடர்பாக அதன் பயன்பாட்டைச் சுட்டிக்காட்டியது. ICCPR சட்டத்தின் தவறான பயன்பாடு குறித்த நிலைப்பாட்டை ஆணைக்குழு மீண்டும் 2025 மே மாதம் வலியுறுத்தியது. மே மாதத்தில் வடக்கு மற்றும் கிழக்கில் அமைதியான நினைவேந்தல் நிகழ்வுகளை குற்றமாக்குவதையோ தடுப்பதையோ பொலிஸார் நிறுத்த வேண்டும் என்றும், அதற்குப் பதிலாக அவற்றை அரசியலமைப்பு மற்றும் இழப்பீட்டுச் சட்டத்தின் கீழ் தமிழ் சமூகத்திற்குக் கிடைக்க வேண்டிய சட்டப்பூர்வ உரிமைகளாக முறையாக அங்கீகரித்து பாதுகாக்க வேண்டும் என்றும் பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்தது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகியவை குறிப்பிடத்தக்க கட்டுப்பாடுகளை விதிக்கின்றன. பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பிற்போக்குத்தனமான விதிகளைக் கொண்டிருப்பதாகவும் இன – மதக் குழுக்களைத் தேர்ந்தெடுத்துக் குறிவைப்பதாகவும் நீண்ட காலமாக விமர்சிக்கப்படுகின்றது. பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்வதற்கான அரசாங்க உறுதிமொழிகள் இருந்தபோதிலும், அது கைதுகள் மற்றும் தடுப்புக்காவல்களுக்கு தொடர்ந்து பயன்படுத்தப்படுவதாக 2025 ஆகஸ்ட் மாதம் ஐ. நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கைக்கு விஜயம் செய்தபோது குறிப்பிட்டார். அதைத் தற்காலிகமாக தடைசெய்யுமாறும் அவர் அரசாங்கத்தைக் கேட்டுக் கொண்டார். அதற்கு முன்னர், 2025 ஏப்ரல் மாதத்தில் ஐரோப்பிய ஒன்றியம் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் மற்றும் OSA ஆகிய இரு சட்டங்கள் குறித்து கவலைகளை எழுப்பியிருந்தது. இச்சட்டங்கள் வர்த்தகத்துடன் தொடர்புடைய முடிவுகளில் கவனத்தில் கொள்ளப்படுகின்றன என்பதையும், குறிப்பாக GSP+ வரிச்சலுகை திட்டத்தில் தொடர்ந்து தகுதி பெறுவதில் பாதிப்பை ஏற்படுத்தும் எனவும் எச்சரித்திருந்தது. அதிகரித்து வரும் சர்வதேச அழுத்தத்திற்குப் பதிலளிக்கும் விதமாக, NPP அரசாங்கம் செப்டம்பர் 2025 இல் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் ரத்து செய்யப்படும் என்று அறிவித்தது. இந்த அறிவிப்பு நாடாளுமன்றத்திலும் ஜெனிவாவில் உள்ள ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது அமர்விலும் உத்தியோகபூர்வமாக வெளியிடப்பட்டது.

ஒன்லைன் பாதுகாப்புச் சட்டத்தாலும் இதேபோன்ற கேள்விகள் எழுந்துள்ளன. OSA இன் பிரிவு 16 இல் மத உணர்வுகளைச் சீற்றப்படுத்தும் நோக்கத்துடன் ஒரு குழுவின் மத நம்பிக்கைகளை அவமதிக்கும் அல்லது அவமதிக்க முயற்சிக்கும் எந்தவொரு தவறான அறிக்கையையும் ஒன்லைனில் வெளியிடுவது குற்றமாக வரையறுக்கப்படுகின்றது. ஆயினும், அந்த நோக்கம் எவ்வாறு நிரூபிக்கப்படும் என்பதற்கான தெளிவான அளவுகோல்களைச் சட்டம் வழங்கவில்லை. அதேபோன்று, பிரிவு 15, தவறான அறிக்கைகள் மூலம் சட்டபூர்வமான மதக் கூட்டங்களுக்கு இடையூறு விளைவிப்பதைக் குற்றமாகக் கருதுகின்றது. இவ்வாறு தெளிவில்லாமல், மிகவும் விரிவாக எழுதப்பட்ட விதிகள், சட்டபூர்வமான கருத்து வெளிப்பாட்டைக் கட்டுப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. பிரிவு 16 ஐ ரத்து செய்வது உட்பட சட்டத்தில் திருத்தங்களை NPP அரசாங்கம் முன்மொழிந்துள்ளது. மேலும், ஆகஸ்ட் 2025 இல் பொதுமக்களின் ஆலோசனைக்காக OSA ஐ முன்வைத்துள்ளமை அனைவரையும் உள்ளடக்கிய அணுகுமுறையைக் குறிக்கின்றது.

பாலின சமத்துவச் சட்டமூலத்தின் சிறப்புத் தீர்மானம் கடந்த ஆண்டு நிகழ்ந்த மற்றொரு முக்கியமான முன்னேற்றம் ஆகும். மத சுதந்திரம் அல்லது நம்பிக்கையை மேம்படுத்துவதாகக் கூறப்படும் சில விதிகள் மற்றும் கொள்கைகள் சில நேரங்களில் கருத்துச் சுதந்திரம் மற்றும் பாலின சமத்துவம் போன்ற பிற உரிமைகளை மீறுவதற்கு எவ்வாறு பங்களித்துள்ளன என்பதை இது நிரூபித்தது. இந்தச் சட்டமூலம் ஏப்ரல் 17, 2024 அன்று வர்த்தமானியில் வெளியிடப்பட்டது. அதைத் தொடர்ந்து மே மாதம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. சட்டமூலத்தில் மதம் வெளிப்படையாகக் குறிப்பிடப்படவில்லை என்றாலும், இது வேகமாக மத சுதந்திரம் குறித்த விவாதங்களின் மையப் புள்ளியாக மாறியது. இது இயற்றப்பட்டால், மதப் பணிகளில் இணைய விரும்புவோரின் சேர்க்கையில் மத நிறுவனங்கள் (சாசனம், மடங்கள், பிக்கு பல்கலைக்கழகங்கள், பிரிவேனாக்கள், தேவாலயங்கள் மற்றும் பள்ளிவாசல்கள் உட்பட) பாலின அடிப்படையிலான அளவுகோல்களைப் பயன்படுத்துவதைத் தடுக்கும் என்று மனுதாரர்கள் வாதிட்டனர். உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு பாலினத்திற்கு அப்பாற்பட்டு, ஓரினச்சேர்க்கையைக் குற்றமற்றதாக்குதல் மற்றும் ஒரே பாலினத் திருமணத்தைச் சட்டப்பூர்வமாக்குதல் போன்ற தொடர்புடைய பிரச்சினைகளுக்கும் நீட்டிக்கப்பட்டது. இந்தச் சட்டமூலம் ஏற்கனவேயுள்ள மத போதனைகள் மற்றும் நடைமுறைகளுடன் முரண்படும் என்று நீதிமன்றம் குறிப்பிட்டது. இறுதியில், இந்தச் சட்டமூலம் அரசியலமைப்பின் உறுப்புரை 10 (சிந்தனை, மனசாட்சி மற்றும் மத சுதந்திரம்) மற்றும் உறுப்புரை 14(1)(உ) (மதம் அல்லது நம்பிக்கையின் வெளிப்பாடு) ஆகியவற்றை மீறுவதாகக் கூறியது. பௌத்தத்தைப் பொறுத்தவரை, “முதன்மையான இடம்” என்று கூறும் உறுப்புரை 9 ஐ மீறுவதாக நீதிமன்றம் மேலும் கண்டறிந்தது.

தொல்பொருள் பாதுகாப்பிடங்கள் மற்றும் வழிபாட்டுத் தலங்கள் தொடர்பான சர்ச்சைகள்

அண்மைக் காலங்களில் வவுனியாவில் உள்ள வெடுக்குநாரி மற்றும் முல்லைத்தீவில் உள்ள குருந்தூர்மலை போன்ற மதத் தலங்களில் ஏற்பட்ட சம்பவங்கள் உள்ளூர் இந்து சமூகங்களிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளன. 2018ஆம் ஆண்டில் இந்த இரண்டு இடங்களும் தொல்பொருள் முக்கியத்துவம் வாய்ந்த இடங்களாகக் குறிப்பிடப்பட்டதுடன், அடுத்தடுத்த ஆண்டுகளில் தொல்பொருள் திணைக்களம், இராணுவம் மற்றும் பௌத்தத் துறவிகள் ஆகியோரின் செயல்பாடுகள் இங்கு அதிகரித்தன. தொல்பொருள் கட்டளைச் சட்டம் மற்றும் தொடர்புடைய சட்டங்கள் இது போன்ற சந்தர்ப்பங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டன. அவை சிறுபான்மை சமூகங்களைக் குறிவைத்து மத சுதந்திரப் பாதுகாப்பைக் குறைத்து மதிப்பிடுகின்றன. வழிபாட்டுத் தலங்கள் அமைந்துள்ள காணிகள் அல்லது கலாச்சார முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் தொடர்பான பல விதிகள், குறிப்பாக 1940 ஆம் ஆண்டின் 9 ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவுகள் 6, 8, 18 மற்றும் 31 ஆகியவை இன – தேசியவாத நிகழ்ச்சி நிரல்களை முன்னெடுக்க இலக்கு வைக்கப்பட்ட முறையில் பயன்படுத்தப்பட்டுள்ளன. மார்ச் 2024 இல் வெடுக்குநாரி மலையில் வழிபாடுகளில் ஈடுபட முயன்ற பல இந்து பக்தர்கள் மற்றும் பூசாரிகள் கைது செய்யப்பட்டனர். இது அந்த இடத்தில் மீண்டும் பதற்றத்தை ஏற்படுத்தி, போராட்டங்களுக்கு வழிவகுத்தது. ஜூன் 2025 இல் ஒரு முக்கியமான நீதிமன்றத் தீர்ப்பில், குருந்தூர்மலையைச் சேதப்படுத்திய குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட தமிழ் விவசாயிகளை முல்லைத்தீவு நீதிமன்றம் விடுவித்தது. வழக்கு விசாரணையின் போது, சர்ச்சைக்குரிய காணி தொல்பொருள் திணைக்களத்திற்குச் சொந்தமானது என்று அறிவித்து எந்த வர்த்தமானி அறிவிப்பும் வெளியிடப்படவில்லை என்பதை அரசாங்கம் ஒப்புக்கொண்டதாகக் கூறப்படுகின்றது. இதன் விளைவாக, விவசாயிகள் மீதான வழக்குத் தள்ளுபடி செய்யப்பட்டு, அவர்கள் விடுவிக்கப்பட்டனர். பல ஆண்டுகளாக அரசாங்கத்தின் ஆதரவுடன் அந்தப் பகுதியில் தொல்பொருள் தளமாகக் கருதி செயல்பாடுகள் இடம்பெற்று வந்தபோதிலும், சட்டப்பூர்வ அறிவிப்பு இல்லாததால் சர்ச்சைக்குரிய நிலத்தின் குறைந்தபட்சம் ஒரு பகுதிக்கேனும் திணைக்களத்திடம் முறையான உரிமை இல்லை.

இதேபோன்று, அம்பாறையில் உள்ள முள்ளிக்குளம் மலையில் தொல்பொருள் திணைக்களம் 1940ஆம் ஆண்டின் 9ஆம் இல. தொல்பொருள் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) 15 மற்றும் 16ஆம் பிரிவுகளைப் பயன்படுத்தி நிலத்தை தொல்பொருள் தளமாகக் கோரியது. இதன் மூலம் உள்ளூர் முஸ்லிம் சமூகம் மீண்டும் அப்பகுதியில் விவசாயத்தைத் தொடங்குவதைத் தடுத்தது. தொல்பொருள் கட்டளைச் சட்டத்திற்கு கூடுதலாக நகர்ப்புற மேம்பாட்டுப் பகுதிகளை வர்த்தமானியில் வெளியிடுவதற்கு மட்டுமே அங்கீகாரம் அளிக்கும் 1946ஆம் ஆண்டின் 13ஆம் இல. நகர மற்றும் கிராமிய நிர்மாணக் கட்டளைச் சட்டத்தின் (திருத்தப்பட்ட) பிரிவு 6(2) வடக்கு மற்றும் கிழக்கில் புத்த விகாரைகளைக் நிர்மாணிப்பதற்கு உதவும் வகையில் “புனிதப் பகுதிகள்” என்று அறிவிக்கத் தவறாகப் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதுபோன்ற சூழ்நிலைகளில், இந்த மாகாணங்களில் உள்ள உள்ளூர் நீதிமன்றங்கள், சில சமயங்களில் இத்தகைய இன – தேசியவாத உந்துதல்களைத் தடுக்க முயற்சித்துள்ளன. இருப்பினும், நீதித்துறை அதன் பங்கை நிறைவேற்றினாலும் கூட அமுலாக்கம் நிச்சயமற்றதாகவே உள்ளது. நீதிமன்ற உத்தரவுகளைப் புறக்கணிப்பது நீதிமன்ற அவமதிப்பு ஆகும். ஆனால், அவற்றை நடைமுறைப்படுத்துவது அரச இயந்திரத்தைப் பொறுத்தது ஆகும். இது பெரும்பாலும் பௌத்த மதகுருமார்கள் மற்றும் இராணுவத்துடன் நெருங்கிய இணக்கத்துடன் செயல்படுகின்றது. இக்குறிப்பிட்ட நடவடிக்கைகளுக்கு அப்பால், 1950ஆம் ஆண்டின் 9ஆம் இல. காணி கையகப்படுத்தல் சட்டம், உயர் பாதுகாப்பு வலயங்களை அறிவிக்க அனுமதிக்கும் அவசரகால விதிமுறைகள், 1979ஆம் ஆண்டின் 23ஆம் இல. மகாவலி அதிகாரசபை சட்டம் மற்றும் 2005ஆம் ஆண்டின் 38ஆம் இல. சுற்றுலாச் சட்டம் போன்ற காணி தொடர்பான சட்டங்களும் இம்முயற்சிகளுக்கு துணையாகப் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை அனைத்தும் ஒன்றாகச் சேர்ந்து நிலம் கையகப்படுத்தலுக்கான பொதுவான கட்டமைப்பை உருவாக்குவதுடன், அரசாங்கம் தன்னிச்சையாக முடிவெடுக்கும் வகையில் அதிக அதிகாரத்தை வழங்குவதுடன் மக்களுக்கு குறைவான அதிகாரத்தை வழங்கி சமமற்ற நிலையைத் தோற்றுவிக்கின்றது.

இந்த நடவடிக்கை சமூக மட்டத்தில் சாதகமான குழுக்களுக்கு அதிகாரம் அளித்துள்ளது. அங்கு சிறுபான்மை மதக் குழுக்களுக்கு எதிரான விரோதம் பெரும்பாலும் உள்ளூர்வாசிகளால் தூண்டப்பட்டு, மறைமுகமாகவோ அல்லது நேரடியாகவோ அரச அதிகாரிகளால் ஆதரிக்கப்படுகின்றது. சுவிசேஷ மற்றும் சுயாதீன தேவாலயங்கள், அதேபோன்று இந்து சமூகங்கள் அடிக்கடி இலக்கு வைக்கப்படுகின்றன. மத வழிபாட்டுத் தலங்களைப் பதிவு செய்வதைச் சுற்றியுள்ள தெளிவின்மை அதிருப்திக்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். இலங்கைச் சட்டம் அத்தகைய பதிவைக் கட்டாயப்படுத்தவில்லை என்றாலும், ஒன்றுகூடுவதைத் தடுக்க உள்ளூர் அதிகாரிகள் தெளிவற்ற வரையறுக்கப்பட்ட விதிகளைப் பயன்படுத்தியுள்ளனர். புத்த சாசனம், மத மற்றும் கலாச்சார விவகார அமைச்சினால் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள், 2008, 2011 (2012 இல் ரத்து செய்யப்பட்டது) மற்றும் 2022 இல் புதிய மதத் தலங்களை நிர்மாணிப்பதற்கு அமைச்சின் ஒப்புதல் தேவை என்பதை அறிமுகப்படுத்தின. இந்தச் சுற்றறிக்கைகளின் தேர்ந்தெடுக்கப்பட்ட அமுலாக்கம் பெரும்பாலும் கிறிஸ்தவர்களையும் அவர்களின் வழிபாட்டுத் தலங்களை நிர்மாணிக்கும் உரிமையையும் கட்டுப்படுத்தியுள்ளது.

இலங்கையில் நிறுவப்பட்ட சபாத் இல்லம் எனப்படும் யூத மத நிலையங்கள் கவனிக்கப்பட வேண்டியவை. அவை சர்ச்சையில் சிக்கியிருந்தாலும், அரசாங்கத்தின் பாதுகாப்பால் அவை பயனடைந்துள்ளன. அண்மையில் சுதந்திர பாலஸ்தீன இயக்கத்தின் உறுப்பினர்கள் துன்புறுத்தப்பட்டதுடன் பயங்கரவாதப் புலனாய்வுப் பிரிவால் விசாரணைக்கு அழைக்கப்பட்ட சூழலில் இது நிகழ்ந்துள்ளது. மேலும் ‘இஸ்ரேலுக்கு எதிரானது’ எனக் கருதப்படும் செயற்பாடுகளில் ஈடுபட்ட பிரஜைகளுக்கு எதிராகப் பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் பயன்படுத்தப்பட்டுள்ளது.

அதிகரித்து வரும் இந்து தேசியவாதக் குழுக்களின் செயல்பாடுகள்

முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடும்போது தேசிய அளவில் சிங்கள – பௌத்த தேசியவாத விமர்சனங்கள் குறைந்துள்ள நிலையில், அடிமட்ட அளவில் இந்து கடும்போக்கு குழுக்களின் செயல்பாடுகளில் குறிப்பிடத்தக்க அதிகரிப்பு காணப்படுகின்றது. வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் கிறிஸ்தவ மற்றும் முஸ்லிம் சமூகங்களுக்கு எதிராக துண்டுப் பிரசுரங்களை விநியோகிப்பதிலும் போராட்டங்களை ஏற்பாடு செய்வதிலும் சிவசேனை மற்றும் ருத்ர சேனா போன்ற அமைப்புகள் தீவிர பங்காற்றியுள்ளன. இக்குழுக்கள் பெரும்பாலும் கட்டாய மதமாற்றம் மற்றும் பசுவதை தொடர்பான பிரச்சினைகளில் கிறிஸ்தவர்களையும் முஸ்லிம்களையும் குறிவைக்கின்றன. இக்குழுக்கள் இந்து வழிபாட்டு நடைமுறைகள் தொடர்பில் பயிற்சி நடவடிக்கைகளை முன்னெடுப்பதன் மூலமும், இந்து இளைஞர்களுடன் கூட்டங்களை நடத்துவதன் மூலமும் உள்ளூர் மக்களின் கவனத்தை ஈர்க்க முயற்சிக்கின்றன.

ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனங்கள்

கடந்த ஆண்டில் ஊடகங்களில் பிரிவினைவாத விமர்சனம் வீழ்ச்சியின் அறிகுறிகளைக் காட்டியுள்ளது. குறிப்பாகத் தேர்தல்களின்போது இந்நிலைமை காணப்பட்டது. இது இன – மதக் குழுக்களைக் குறிவைக்கும் தீங்கு விளைவிக்கும் விமர்சனம் குறிப்பிடத்தக்களவில் குறைந்திருப்பதைப் பிரதிபலித்தது. இருப்பினும், இந்த ஒட்டுமொத்த சரிவுக்கு மத்தியில், குறிப்பாக முஸ்லிம்களைத் தொடர்ந்து குறிவைக்கும் நிலைப்பாடு தொடர்கின்றது. மதமாற்றம் மூலம் மக்கள் தொகை மாற்றம் குறித்த ஆழமான அச்சங்களைப் ஏற்படுத்தும் கதைகள், இஸ்லாமிய பழக்கவழக்கங்களை அரக்கத்தனமாகச் சித்தரித்தல் மற்றும் இஸ்லாத்தை பயங்கரவாதத்துடன் தொடர்புபடுத்துதல் போன்றவை மூலம் முஸ்லிம் சமூகத்தவர்கள் ஒன்லைனில் அதிகம் குறிவைக்கப்படுகின்றனர். இந்த விமர்சனம், காசா மீதான இஸ்ரேலின் போர் மற்றும் ரோஹிங்கியா அகதிகள் நெருக்கடி உள்ளிட்ட உலகளாவிய சம்பவங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன. இவை உள்ளூரில் முஸ்லிம் எதிர்ப்பு உணர்வைத் தூண்டின. 2024ஆம் ஆண்டில் ஜனாதிபதித் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு தமிழர்கள் மற்றும் முஸ்லிம்களுக்கு எதிரான ஒன்லைன் விமர்சனங்கள் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரித்தன. வடக்கு மற்றும் கிழக்கில் வாக்களிக்கும் முறைகள் குறித்த விவாதங்கள் இன – மத அடிப்படையில் வேகமாக வடிவமைக்கப்பட்டன.

மத மாற்றங்கள் குறித்து தொடரும் விவாதம்

இலங்கையில் மதமாற்றம் குறித்து பேச்சிலும் விவாதத்திலும் இரண்டு முக்கியமான கண்ணோட்டங்கள் நீண்டகாலமாக உள்ளன. சமூக மட்டத்தில், மத மாற்றத்திற்கு எதிராக ஆழமாக வேரூன்றிய கலாச்சாரம் மற்றும் சமூகச் சார்பு உள்ளது. குறிப்பாக சில சுயாதீன அல்லது சுவிஷேச கிறிஸ்தவக் குழுக்கள் மதம் மாற்ற முயலும்போது இந்த எதிர்ப்பு மேலும் வலுப்பெறுகின்றது. பிப்ரவரி 2025 இல் NCEASL வெளியிட்ட அறிக்கையின்படி, நாடு முழுவதும் கிறிஸ்தவக் குழுக்களுக்கு எதிராக பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவற்றில் பெரும்பாலானவை மத மாற்றம் அடிப்படையிலான அச்சங்கள் காரணமாக ஏற்பட்டவை. மதமாற்றம் பெரும்பாலும் கட்டாயப்படுத்தப்பட்டதாகவோ சூழ்ச்சியாகவோ சித்தரிக்கப்படுகின்றது. இது பயத்தை ஏற்படுத்துகின்றது. மத மாற்றம் தொடர்பான இலங்கையின் சட்டப் பாதுகாப்புகளும் தெளிவற்றவை. அரசியலமைப்பின் உறுப்புரை 14(1)(உ)இ தனிப்பட்ட முறையில் அல்லது பொதுவில், தனியாக அல்லது மற்றவர்களுடன் இணைந்து, வழிபாடு, அனுசரிப்பு மற்றும் கற்பித்தலில் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “வெளிப்படுத்தும் உரிமையை” உத்தரவாதம் செய்தாலும், இலங்கைச் சட்டம் ஒருவரின் மதம் அல்லது நம்பிக்கையை “பிரச்சாரம் செய்யும் உரிமையை” அடிப்படை உரிமையாக அங்கீகரிக்கவில்லை. இருப்பினும், கருவலகஸ்வெவ விதானலேகே ஸ்வர்ண மஞ்சுளா மற்றும் பலர் எதிர் புஷ்பகுமார, கெகிராவா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி மற்றும் பலர் (2018) மற்றும் எம். ஏ. எஸ். கல்யாணி டி சில்வா மற்றும் பலர் எதிர் எஸ்.ஜே.பி. சுவாரிஸ் மற்றும் பலர் (2025) ஆகிய சமீபத்திய இரண்டு வழக்குகளில் உச்ச நீதிமன்றம் பிரச்சாரம் செய்வது குற்றமாகக் கருதப்படமாட்டாது எனத் தெளிவுபடுத்தியுள்ளது.

மறுபுறம், சில சுவிசேஷ மற்றும் சுயாதீன கிறிஸ்தவ சமூகங்களிடம் காணப்படும் வற்புறுத்தலான மற்றும் கலாச்சார ரீதியாக உணர்ச்சியற்றதாகக் கருதப்படும் மதமாற்ற நடைமுறைகள் தொடர்ந்து பதற்றங்களைத் தூண்டுகின்றன. சில சந்தர்ப்பங்களில் ஏனைய மதக் குழுக்களுடன் சமூகங்களுக்கு இடையேயான மோதல்களையும் கிறிஸ்தவ சமூகத்திற்குள் சமூகங்களுக்கு உள்ளேயான மோதல்களையும் தூண்டுகின்றன. தேசிய சமாதானப் பேரவையின் 2024 கணக்கெடுப்பின்படி, அதில் பதிலளித்த பௌத்த, இந்து மற்றும் ரோமன் கத்தோலிக்கச் சமூகங்களைச் சேர்ந்தவர்களில் 50% அதிகமானோர் மதமாற்ற நடைமுறைக்கு முதன்மையாக சில கிறிஸ்தவக் குழுக்களே பொறுப்பு என்றும், இந்த நடைமுறை பெரும்பாலும் அவர்களின் மதத்தை எதிர்மறையாகப் பாதிக்கும் விதத்தில் நடைபெறுகின்றது என்றும் அடையாளம் காண்கின்றனர். அவர்களது பிரச்சார முறைகள் சமூகங்களுக்கு இடையேயான மற்றும் சமூகங்களுக்கு உள்ளேயான மோதலுக்கு வழிவகுக்கின்றது என்பதை இது குறிக்கின்றது.

சமீபத்திய ஆய்வுகளும் அதைத் தொடர்ந்துவரும் முன்னேற்றங்களும் நேர்மறையான முன்னேற்றத்தைக் குறிப்பதுடன், தொடர்ந்து வரும் ஆண்டுகளில் மேலும் பல முன்னேற்றங்களுக்கான வாய்ப்பைச் சுட்டிக் காட்டினாலும் பல முக்கியப் பிரச்சினைகளுக்கும் போக்குகளுக்கும் மதச் சமூகங்கள் அரசாங்கம் மற்றும் சிவில் சமூகம் உள்ளிட்ட அனைத்து முக்கிய பங்குதாரர்களின் நெருக்கமான கவனம் தேவைப்படுகின்றது. மதம் அல்லது நம்பிக்கைக்கான சுதந்திரத்தை மதிக்கும் பன்முகச் சூழலை ஊக்குவிப்பதற்கு சமூக உறுப்பினர்களிடையே நடத்தைகள் மற்றும் அணுகுமுறைகளை வளர்ப்பதில் மதத் தலைவர்கள், மத நிறுவனங்கள் மற்றும் மத அடிப்படையிலான அமைப்புகள் சமூக மட்டத்தில் தனித்துவமான நிலையில் உள்ளன. உதாரணமாக, கலாச்சார ரீதியாகவும் சுற்றுச்சூழலுக்கு உகந்த வழிபாட்டு நடைமுறைகளை ஊக்குவிப்பது சில மதக் குழுக்களின் சர்ச்சைக்குரிய பிரச்சார முறைகள் தொடர்பான கவலைகளைத் தீர்க்க உதவும். கூடுதலாக, ஏனைய மதக் குழுக்களைக் குறிவைக்கும் சித்தாந்தங்களுக்கு பூஜ்ஜிய சகிப்புத்தன்மை அணுகுமுறையை ஏற்றுக்கொள்வது சமூகத்தில் கடும்போக்கு மத அமைப்புகளின் எழுச்சியை ஊக்கப்படுத்தாது.

இனங்களுக்கு இடையேயான பதற்றங்களைத் தூண்டிவிட்ட நீண்டகால கவலைகளைத் தீர்க்க NPP விருப்பம் காட்டுவது ஊக்கமளிக்கின்றது. ஆனால், தொடர்ச்சியான சவால்களைத் தீர்க்க இன்னும் அதிகமாகச் செய்ய வேண்டும். அனைத்து சமூகங்களுக்கும் மத சுதந்திரத்தை வலுப்படுத்துவதற்கு, குறிப்பாக சிறுபான்மையினரைக் குறிவைக்கும் ஒரு கருவியாகப் பயன்படுத்தப்படும் சட்டத்தைச் சீர்திருத்துவதில் முன்முயற்சியுடன் கூடிய நடவடிக்கை தேவைப்படும். இத்தகைய சீர்திருத்தங்கள் மாற்றத்திற்கான உத்வேகத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல், பன்மைத்துவத்திற்கு உகந்த நீண்டகால அரசியல் சூழலை உருவாக்கவும் உதவும். சட்டங்களின் பிற்போக்கான பயன்பாடு மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசு நடவடிக்கைகளால் நீண்டகாலமாகப் பாதிக்கப்பட்ட சமூகங்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு அவை ஒரு முக்கியமான முன்னுதாரணத்தைத் தரும். கடந்த கால அரசாங்கங்களின் நடவடிக்கைகளால் பிளவு மற்றும் பாகுபாடு பெரும்பாலும் ஆழமாக வேரூன்றி சட்டபூர்வமாக்கப்பட்டுள்ள சமூக மட்டத்தில் இந்த நடவடிக்கைகள் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன. நம்பிக்கையை மீண்டும் கட்டியெழுப்புவதற்கும் தற்போதைய மற்றும் எதிர்கால சந்ததியின் மத சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கும் இந்தப் போக்குகளை மாற்றியமைப்பது அவசியமாகும்.

2024 ஆம் ஆண்டில் இலங்கையில் மத சுதந்திரத்தின் நிலைப்பாடு மற்றும் 2025 ஆம் ஆண்டில் சமூக – அரசியல் முன்னேற்றங்கள் குறித்து இலங்கை தேசிய கிறிஸ்தவ சுவிசேஷக் கூட்டணி வெளியிட்ட அறிக்கையை இக்கட்டுரை அடிப்படையாகக் கொண்டுள்ளது.

ஜோவிட்டா அருளானந்தம்
யனித்ரா குமரகுரு
அம்மாரா நிலாப்தீன்

https://maatram.org/articles/12431

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்   — வீரகத்தி தனபாலசிங்கம் — 

2 months ago

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

November 24, 2025

திருகோணமலை புத்தர்சிலை சர்ச்சையும் எதிரணியின் பெரும்பான்மை இனவாத அணிதிரட்டல் நாட்டமும்

  — வீரகத்தி தனபாலசிங்கம் — 

திருகோணமலையில் கடந்த வாரம் புத்தர் சிலை தொடர்பாக மூண்ட சர்ச்சையை கையாளுவதற்கு தேசிய மக்கள் சக்தி அரசாங்கம்  கடைப்பிடித்த அணுகுமுறையும் அதற்கு  எதிரணி அரசியல் கட்சிகள் வெளிக்காட்டிய எதிர்வினையும் இதுகாலவரையில் இனவாத மற்றும் மதவாத அரசியலின் விளைவாக நாடும் மக்களும் அனுபவித்த அவலங்களில் இருந்து தென்னிலங்கை அரசியல் சமுதாயம் எந்தவிதமான படிப்பினையையும் பெறவில்லை என்பதை பிரகாசமாக வெளிக்காட்டியிருக்கிறது.. 

இலங்கையில் இனவாதமும் மதத்தீவிரவாதமும் மீண்டும் தலையெடுக்க ஒருபோதும்  அனுமதிக்கப்போவதில்லை என்ற அரசாங்கத்தின் நிலைப்பாடு எதிர்நோக்கக்கூடிய சவால்களையும் அரசியலில் மீண்டெழுவதற்கு எதிரணி கட்சிகள் பெரும்பான்மை இனவாத அணிதிரட்லை செய்வதற்கு கிடைக்கக்கூடிய எந்தவொரு சந்தர்ப்பத்தையும் பயன்படுத்தத் தவறப்போவதில்லை என்பதையும்  திருகோணமலை சம்பவம்  எமக்கு உணர்த்தியது. 

திருகோணமலை கடற்கரையோரமாக அமைந்திருக்கும் ஸ்ரீ சம்புத்த போதி ரஜமகா விகாரை வளாகத்தில் நவம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை இரவோடிரவாக வைக்கப்பட்ட புத்தர்சிலையை பிக்குமாரின் எதிர்ப்புக்கு மத்தியில் பொலிசார் அகற்றினர் என்ற போதிலும், மறுநாள் திங்கட்கிழமை நண்பகல் அந்த சிலை அதே இடத்தில் பொலிசாரின் பாதுகாப்புடன் வைக்கப்பட்டு பௌத்த மத  நிகழ்வுகள் இடம்பெற்றன. 

இரவில் புத்தர் சிலைக்கு எவராவது சேதம் விளைவித்துவிடக்கூடும் என்ற காரணத்தினாலேயே  பாதுகாப்பு கருதி அதை அகற்றியதாகவும் மீண்டும் அதே இடத்தில் அந்த சிலை வைக்கப்படும் என்றும் பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால பாராளுமன்றத்தில் அன்றைய தினம் முன்கூட்டியே  அறிவித்திருந்தார். 

புத்தர் சிலை அகற்றப்பட்ட வேளையில்  விகாரை வளாகத்தில் இடம்பெற்ற குழப்பநிலையை பயன்படுத்தி இலங்கையில் பௌத்த மதத்துக்கு பேராபத்து ஏற்பட்டிருக்கிறது  என்பதைப் போன்று எதிரணி கட்சிகள் பாராளுமன்றத்துக்கு உள்ளேயும் வெளியேயும் ஆவேசமாகக் குரலெழுப்பின. இந்து அல்லது கிறிஸ்துவ சிலை ஒன்று அது வைக்கப்பட்டிருந்த இடத்தில் இருந்து பொலிசாரினால் அகற்றப்பட்டிருந்தால் இத்தகைய அமர்க்களம் ஏற்பட்டிருக்குமா என்ற கேள்விக்கான பதிலை நாம் சொல்லித்தான் எவரும் தெரிந்துகொள்ள வேண்டியதில்லை.

பாராளுமன்றத்தில் நவம்பர் 18 ஆம் திகதி திருகோணமலை சம்பவங்கள் குறித்து பேசிய ஜனாதிபதி அநுர குமார திசநாயக்க மத வழிபாட்டுத் தலத்தை அமைப்பது தொடர்பிலானதாக இந்த சர்ச்சை தோன்றுகின்ற போதிலும், வேறு கதையும் அதற்குள் இருப்பதாக கூறினார். சம்பவங்கள் குறித்து பாதுகாப்பு செயலாளரிடம் அறிக்கை ஒன்றைக் கோரியிருப்பதாக தெரிவித்த ஜனாதிபதி, அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தை நியாயப்படுத்துவதற்கு வேறு எந்த விவகாரமும் கிடைக்கவில்லை என்பதால் எதிரணியினர் இனவாதத்தை தூண்டிவிடுவதற்கு புத்தர் சிலை சர்ச்சையை பயன்படுத்துவதில் நாட்டம் காட்டுகிறார்கள் என்றும் அதற்கு ஒருபோதும் இடமளிக்கப்போவதில்லை என்றும் குறிப்பிட்டார். அவரைப் பொறுத்தவரை, நீதிமன்றம் உத்தரவைப் பிறப்பித்திருக்கும் நிலையில், அந்த சர்ச்சை முடிவுக்கு வந்துவிட்டது. 

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் தொல்லியல் முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள் என்று தாங்கள் கருதுகின்ற இடங்களில் மாத்திரமல்ல, பெளத்தர்கள் வசிக்காத இடங்களிலும்  கூட பிக்குமாரில் ஒரு பிரிவினர் புத்தர் சிலைகளை இரவோடிரவாக கொண்டுவந்து வைப்பதும் பிறகு படிப்படியாக அரசாங்கங்களின் அனுசரணையுடன் விகாரைகளை கட்டியெழுப்புவதும்  புதிய ஒரு விடயம் அல்ல. சம்பந்தப்பட்ட பகுதிகளின் மக்களிடமிருந்து எதிர்ப்புகள் கிளம்புகின்ற   வேளைகளில்  அரச இயந்திரம் சட்டவிரோதமானது என்று அந்த மக்கள் குற்றஞ்சாட்டுகின்ற  நடவடிக்கைகளுக்கு  துணைபோவதே நடைமுறையாக இருந்துவருகிறது. 

திருகோணமலையில் புத்தர் சிலை அகற்றப்பட்ட இடத்திலேயே மீண்டும் பொலிசாரின் உதவியுடன் அது  கொண்டு வந்து வைக்கப்பட்ட சம்பவத்தையும்  அதற்கு அரசாங்கத் தரப்பில் அளிக்கப்பட்ட  விளக்கத்தையும் மேற்கூறிய வழமையான நடைமுறையே  தொடருகின்றது என்பதற்கான சான்றாக ஏன் கருதமுடியாது என்பதற்கு ஜனாதிபதியும் அரசாங்க தலைவர்களும் மாத்திரமே பதில் கூற வேண்டும். 

எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச உட்பட எதிரணி அரசியல்வாதிகள் புத்தர் சிலை சர்ச்சை தொடர்பாக கருத்து வெளியிட்டபோது இலங்கையின் அரசியலமைப்பில் பௌத்த மதத்துக்கு முதன்மையான முன்னுரிமை கொடுக்கப்பட்டிருப்பதை  அடிக்கடி  சுட்டிக்காட்டியதை காணக்கூடியதாக இருந்தது. 

ஆனால், அந்த முன்னுரிமையை  பிக்குமாரில் ஒரு பிரிவினர்  அல்லது மதவாத அடிப்படையில் சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை ஏற்படுத்த முயற்சிக்கும் சக்திகள் தங்களின்  சட்டவிரோதமான அல்லது பௌத்த தர்மத்துக்கு மாறான நடவடிக்கைகளை நியாயப்படுத்த தவறான முறையில் கேடயமாகப்  பயன்படுத்துவதை எவ்வாறு அனுமதிக்க முடியும்?  தாங்கள் எதைச் செய்தாலும் அரசாங்கம் தட்டிக்கேட்க முடியாது என்ற எண்ணத்தை மகாசங்கத்தின் ஒரு கணிசமான பிரிவினர் வளர்த்துக் கொண்டிருக்கிறார்கள்.

பெளத்த மதத்துடன் தொடர்புடைய சகல பணிகளையும் முன்னெடுப்பதில் பிக்குமாருக்கு இருக்கும் சுதந்திரத்தில் தலையீடு செய்வதற்கு எவருக்கும் உரிமை கிடையாது என்று கூறும் பிரேமதாச பௌத்த மதத்தின் அடிப்படைக் கோட்பாடுகளுக்கு முரணான அடாத்தான நடவடிக்கைகளில் பிக்குமாரில் சில பிரிவினர் ஈடுபட்ட எத்தனை சம்பவங்களை பகிரங்கமாக கண்டனம் செய்தார் என்ற கேள்வியை கேட்காமல் இருக்க முடியவில்லை. 

பௌத்த மதத்துக்கு அரசியலமைப்பு வழங்கியிருக்கும்  முன்னுரிமையை சட்டத்தின் ஆட்சிக்கு சவால் விடுக்கக்கூடிய வகையிலான நடவடிக்கைகளுக்கு  பிக்குமாரில் ஒரு பிரிவினர் பயன்படுத்துகிறார்கள் என்பது வெளிப்படையானது. 

கடந்த காலத்தில் முஸ்லிம் சமூகத்துக்கு எதிரான வன்முறைகளுக்கு தலைமை தாங்கியவர் என்று அறியப்பட்ட பிரச்சினைக்குரிய  பிக்கு ஒருவர்  புத்தர் சிலை சர்ச்சைக்கு பிறகு  கடந்த வாரம் திருகோணமலைக்கு சென்று சமூகங்களுக்கு இடையில் குரோதங்களை தூண்டும் வகையில் பேசியிருப்பதுடன் அரசாங்கத்துக்கு சாவாலும் விடுத்திருக்கிறார்.  இஸ்லாமிய மதத்தை நிந்தனை செய்யும் விதத்தில் பேசியதாக நீதிமன்றத்தினால் குற்றவாளியாகக் காணப்பட்ட அவர் திருகோணமலை சர்ச்சையில் தன்னை ஈடுபடுத்துவதில் வலிந்து நாட்டம் காட்டுகிறார். 

பெரும்பான்மையான சிங்கள பௌத்த மக்கள் இத்தகைய பிக்குமாரின் முறைகேடான செயற்பாடுகளை ஆதரிப்பதில்லை என்று கூறப்படுகிறது. ஆனால், அவற்றை அவர்கள்  எதிர்ப்பதுமில்லை என்பது துரதிர்ஷ்டவசமானது. கெடுதி செய்பவர்களினால் அல்ல, அந்த கெடுதியை தடுக்க எதையும் செய்யாமல் இருப்பவர்களினாலேயே உலகம் ஆபத்தானதாக இருக்கிறது என்ற அறிவியல் மேதை அல்பேர்ட் அயன்ஸ்டீனின் கூற்று நினைவுக்கு வருகிறது. கெட்டவர்களின் வெறுப்பு  பேச்சுக்களுக்கும் செயல்களுக்காகவும் மாத்திரமல்ல, நல்லவர்களின் மௌனத்துக்காகவும் இந்த தலைமுறையில் நாம் பச்சாதபப்பட வேண்டியவர்களாக இருக்கிறோம் என்று அமெரிக்க கறுப்பின தலைவர் மார்டின் லூதர் கிங் கூறினார்.

சிறுபான்மைச் சமூகங்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் இலங்கைக்கு ஒன்றும் புதியதல்ல.  அது இலங்கையின் பெரும்பான்மை இனவாத அரசியலுடன் சமாந்தரமாக வளர்ச்சி கண்ட அருவருக்கத்தக்க ஒரு போக்காகும். ஆனால், சகல சமூகங்களுக்கும் அழிவை ஏற்படுத்திய மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு பின்னரும் கூட, தென்னிலங்கை அரசியல் சமுதாயம் சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளை ஏற்றுக் கொள்ளத் தவறுவதே  பெரும் கவலைக்குரியதாக இருக்கிறது.

அரசியலில் பெரும் செல்வாக்கைச் செலுத்துவதற்கு பௌத்த மதகுருமார் நாட்டம் காட்டுவதே இலங்கையில் பல பிரச்சினைகளுக்கு தீர்வுகளைக் காணமுடியாமல் இருப்பதற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாகும். பிக்குமார் நேரடியாக அரசியலில் ஈடுபட்டு தேர்தல்களில் போட்டியிடுகிறார்கள். அவர்களின் செயல்கள் புத்தபெருமானின் அடிப்படைப் போதனைகளுக்கு முரணானதாக இருந்தாலும் கூட, நேரடி அரசியலில் ஈடுபடுவதில் இருந்து அவர்களை தடுக்க மகாநாயக்கர்களினால்  கூட முடியாமல் இருக்கிறது. இலங்கையில் பௌத்தம் நடைமுறையில் ஒரு அரசியல் மதமாக மாற்றப்பட்டுவிட்டது. 

தென்னிலங்கை அரசியல் வரலாற்றில்  பெளத்த மதகுருமாரின் செல்வாக்கு பெருமளவுக்கு எதிர்மறையான விளைவுகளையே ஏற்படுத்தியிருக்கிறது. இன்று தமிழர்களின் அரசியலிலும் முன்னென்றும் இல்லாத வகையில் மதவாதம் ஊடுருவுகின்ற போக்கை  காணக்கூடியதாக இருக்கிறது. இந்தியாவின் ‘ இந்துத்வா’ அரசியலின் செல்வாக்கே இதற்கு காரணம் எனலாம். சிங்களவர்களாக இருந்தாலென்ன, தமிழர்களாக இருந்தாலென்ன இலங்கைச் சமூகம் அரசியலில் இருந்து மதத்தைப் பிரிக்காவிட்டால் இலங்கைக்கு எதிர்காலம் இல்லை.

ஜனாதிபதி திசநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் வெறுமனே  சகல குடிமக்களையும் சமத்துவமாக நடத்துவதே தங்களின் கொள்கை என்று கூறிக்கொண்டிருந்தால் மாத்திரம் போதாது. கடந்த காலத்தில் அரசாங்கங்கள் கடைப்பிடித்த பாகுபாடான கொள்கைகள் மற்றும் அடக்குமுறைகளின் விளைவாக சிறுபான்மைச் சமூகங்கள் அனுபவிக்கின்ற பிரத்தியேகமான பிரச்சினைகளை  போக்குவதற்கு நடவடிக்கைகளை எடுப்பதில் அக்கறை காட்டினால் மாத்திரமே  சமத்துவமான குடிமக்கள் என்ற உணர்வை அந்த மக்கள் மத்தியில்  படிப்படியாக ஏற்படுத்த முடியும். 

சாந்தமே உருவான புத்தர் சிலையை ஆக்கிரமிப்பின் ஒரு கருவியாக சிறுபான்மைச் சமூகங்கள் நோக்குகின்ற துரதிர்ஷ்டவசமான  நிலைவரத்தை மாற்றியமைக்க வேண்டியதும் அரசாங்கம் தீர்வுகாண வேண்டிய அந்த பிரத்தியேகமான பிரச்சினைகளில் ஒன்று. 

அரசாங்கத்துக்கு எதிரான பிரசாரங்களுக்கு இனவாதத்தையும் மதவாதத்தையும் பயன்படுத்துவதில் எதிரணி கட்சிகள் கொண்டிருக்கும் நாட்டத்தை திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை வெளிக்காட்டியிருக்கிறது. தங்களது தவறான ஆட்சிமுறையையும் ஊழல் மற்றும் அதிகார துஷ்பிரயோகங்களையும்   மறைப்பதற்காக பெரும்பான்மை இனவாத அணிதிரட்டலை தீவிரமாக முன்னெடுத்த முன்னைய ஆட்சியாளர்கள் பொருளாதார ரீதியில் நாட்டை வங்குரோத்து அடையச் செய்ததை நாட்டு மக்கள் மறந்துவிடக்கூடாது. மீண்டும் 

அத்தகைய அணிதிரட்டலை அனுமதித்தால்  தொடர்ந்தும் அதே  பிரச்சினைகளுடனேயே  இலங்கையர்கள் வாழவேண்டியிருக்கும். 

https://arangamnews.com/?p=12455

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை; பிறப்புறுப்பு சிதைப்பினால் 230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு

2 months ago

உலகளவில் 736 மில்லியன் பெண்கள் மீது பாலியல் வன்முறை ; பிறப்புறுப்பு சிதைப்பினால்  230 மில்லியனுக்கும் அதிக பெண்கள், சிறுமிகள் பாதிப்பு - பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் அதிர்ச்சித் தகவல்

25 Nov, 2025 | 11:23 AM

image

லகளவில் சுமார் மூன்று பெண்களில் ஒருவர், அல்லது 736 மில்லியன் பெண்கள், பாலியல் வன்முறையை அனுபவித்து வருகின்றனர். உலகில் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர் என்று சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் தெரிவித்துள்ளார். 

அத்துடன் அவர், 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர் என்றும் தகவல் தெரிவித்துள்ளார். 

இந்த ஆண்டு நவம்பர் 2ஆம் திகதி தொடக்கம் டிசம்பர் 10ஆம் திகதி வரையான பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு எதிரான 16 நாட்களில் அர்த்தபூர்வமான செயற்பாடுகளில் ஈடுபட்டுவரும் சமூக செயற்பாட்டாளர் மற்றும் பால்நிலை சமத்துவ நிபுணர் வே. வீரசிங்கம் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் வன்முறை தொடர்பில் மேலும் கூறுகையில்,

cfcd29a8-6d20-412c-addd-d5956cf14f89.jpg

பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளினால் பொதுவாக மனிதர்கள் அனைவருமே ஏதோ ஒரு வகையில் பாதிப்படைகின்றனர்.

பால்நிலை  அடிப்படையிலான வன்முறை (GBV) தனிநபர்கள், குடும்பங்கள், சமூகங்கள் மற்றும் ஒட்டுமொத்த சமூகத்தையும் பாதிக்கும், பேரழிவு தரும் மற்றும்  நீண்ட கால பாதகமான  விளைவுகளைக் கொண்டுள்ளது. இந்த விளைவுகள் உடல் ரீதியாகவும் உளவியல் ரீதியாகவும் சமூக ரீதியாகவும் பொருளாதார ரீதியாகவும் இருக்கலாம். மேலும், கடுமையான சந்தர்ப்பங்களில் மரணத்துக்கும் வழிவகுக்கும்.

பொதுவாக சமூகத்தால் கட்டமைக்கப்பட்ட விதிமுறைகள், கட்டுப்பாடுகள், சட்ட திட்டங்கள், அதிகார கட்டமைப்பாட்டுக்கள், சமய சம்பிரதாய நம்பிக்கைகள் மற்றும் பாரபட்சங்கள் இவ்வாறானவை வன்முறைகளுக்கு அடிப்படை காரணங்களாக இருக்கின்றன.

சமூகத்தில் பாதிப்புறும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ள பெண்கள், சிறுமிகள் மற்றும் சிறுவர்கள் அதிகளவில்  பால்நிலை அடிப்படையிலான வன்முறைக்கு உள்ளாக்கப்படுகின்றனர்.

உலகளவில் பால்நிலை  அடிப்படையிலான வன்முறை தொடர்பான சில முக்கிய தரவுகள் குறிப்பிடவேண்டும்.

உலகளவில்  அண்ணளவாக மூன்று பெண்களில் ஒருவர், அல்லது உலகளவில் 736 மில்லியன் பேர் நெருங்கிய துணைவர், துணைவர் அல்லாத  நபரால் அல்லது இருவராலும் உடல் ரீதியான அல்லது பாலியல் வன்முறையை அனுபவித்துள்ளனர். இந்த புள்ளிவிபரம் இரண்டு தசாப்தங்களாக பெரும்பாலும் மாறாமல் உள்ளது.

பெண் கொலை : 2023ஆம் ஆண்டின் தரவுகளின்படி, உலகளவில் சுமார் 51,100 பெண்கள் நெருங்கிய துணைவர்களாலோ அல்லது பிற குடும்ப உறுப்பினர்களாலோ வேண்டுமென்றே கொல்லப்பட்டுள்ளனர். இது சராசரியாக ஒரு மணி நேரத்துக்கு 5க்கும் மேற்பட்ட பெண்கள் அல்லது சிறுமிகள் தங்கள் குடும்பத்தில் உள்ள ஒருவரால் கொல்லப்படுவதற்கு சமமான தரவாகிறது.

குழந்தை திருமணம்: ஒவ்வோர் ஆண்டும் 18 வயதுக்கு முன்பே 12 மில்லியன் பெண்கள் அல்லது நிமிடத்துக்கு சுமார் 23 பெண்கள் திருமணம் செய்துகொள்கிறார்கள் அல்லது திருமணம் செய்து கொடுக்கப்படுகிறார்கள். மேலும், இந்த பெண்கள்  வீட்டு வன்முறைக்கு அதிக ஆபத்தை எதிர்கொள்கின்றனர்.

பெண் பிறப்புறுப்பு சிதைப்பு (FGM) : இன்று உயிருடன் இருக்கும் 230 மில்லியனுக்கும் அதிகமான பெண்கள் மற்றும் சிறுமிகள் பெண் பிறப்புறுப்பு சிதைப்புக்கு உட்பட்டுள்ளனர். இது 31 நாடுகளில்  அதிகமாக செய்யப்படுகிறது.

வன்முறையை அனுபவிக்கும் பெண்களில் 40% க்கும் குறைவானவர்களே ஏதாவது சில  வகையான உதவிகளை நாடுகிறார்கள். மிகக் குறைவானவர்களே காவல்துறை அல்லது சுகாதார சேவைகள் போன்ற முறையான நிறுவனங்களை அணுகுகிறார்கள். பெரும்பாலும் பயம் மற்றும் களங்கம் காரணமாக இவர்கள் இதனை யாரிடமும் கூறுவதில்லை.

மோதல், மனிதாபிமான நெருக்கடிகள், காலநிலை மாற்றம் மற்றும் COVID-19 தொற்றுநோய் ஆகியவை பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் அபாயத்தையும் பரவலையும் அதிகப்படுத்தியுள்ளன. இந்த சூழ்நிலைகளில் பெண்கள் அதிக விகிதாசாரத்தில்  பாதிக்கப்படுகின்றனர்.

பால்நிலை அடிப்படையிலான வன்முறை தனிநபர்களுக்கும் சமூகத்திற்கும் குறிப்பிடத்தக்க செலவுகளை ஏற்படுத்தியுள்ளது. உதாரணமாக, ஐரோப்பிய ஒன்றியத்தில் பால்நிலை அடிப்படையிலான வன்முறையின் ஆண்டு செலவு EUR 366 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

விசேட தேவையுடைய பெண்கள், பழங்குடி பெண்கள் மற்றும் மோதல்களால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வசிக்கும் பெண்கள்  அதிகமாக இத்தகைய வன்முறைக்கு முகங்கொடுக்கின்றனர்.

60%க்கும் மேற்பட்ட நாடுகளில் இன்னும் சம்மதத்தின் அடிப்படையில் பாலியல் பலாத்கார  சட்டங்கள் இல்லை. மேலும், உலகின் பெண் சனத்தொகையில் பாதிக்கும் குறைவானவர்கள் சைபர் துன்புறுத்தலுக்கு எதிரான சட்டங்களால் பாதுகாக்கப்படுகிறார்கள்.

சமூகத்தின் எல்லா பிரிவினரும் இந்த பால்நிலை அடிப்படையிலான வன்முறைகளுக்கு எதிர்வினை ஆற்றவேண்டியது கட்டாயமாக உள்ளது. விசேடமாக  ஆண்களும் சிறுவர்களும் தீங்கு விளைவிக்கும் ஆணாதிக்க விதிமுறைகள் மற்றும் அமைப்புகளுக்கு சவால்விடுவதன் மூலம் பெண்கள் மற்றும் சிறுமிகளுக்கு எதிரான வன்முறையைத் தடுப்பதிலும் முடிவுக்குக் கொண்டுவருவதிலும் சுறுசுறுப்பான மற்றும் பொறுப்புணர்வுள்ள பங்காளிகளாக மாற வேண்டும் என்று நான் எல்லா அன்னைகளுக்கும் சிறுவர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றேன்.

வன்முறை என்பது மனித உரிமைகளை மீறுவதாகும்: பால்நிலை அடிப்படையிலான வன்முறை (GBV) என்பது ஒரு பரவலான மனித உரிமைகள் பிரச்சினை என்றும் அது வாழ்க்கையின் இயற்கையான, இயல்பான அல்லது தவிர்க்க முடியாத பகுதி அல்ல என்றும்; அதை நிறுத்த முடியும், நிறுத்தவேண்டும் என்றும் நாம் நமது நண்பர்கள், சமூக வட்டங்களில், நமது முகநூல் மற்றும் சமூக வலைத்தளங்களிலும் நாம் பிரச்சாரம் செய்வோம் என அழைப்பு விடுக்கின்றேன்.

ஆண்கள் ஒரு அடி முன்வைக்க வேண்டும் : "எல்லா ஆண்களும்" வன்முறையில் ஈடுபடுவதில்லை என்பதை ஒப்புக்கொண்டாலும், பால்நிலை அடிப்படையிலான வன்முறையை  இயல்பாக்கப்பட்ட  நிலையிலேயே உலகில் அனைத்து ஆண்களும் வாழ்கிறார்கள் என்றும், இதனால் இந்த வன்முறையை முடிவுக்கு கொண்டு வரும் தீர்வின் ஒரு பகுதியாக இருக்க நம் அனைத்து ஆண்களுக்கும் பொறுப்பு உள்ளது.

நாம் நமக்கும் சமூகத்துக்கும் தீங்கு விளைவிக்கும் ஆண்மைத்துவ சிந்தனைகள், எண்ணக்கருக்கள், நம்பிக்கைகளுக்கு சவால் செய்வோம் : ஆண்மைத்துவம் என்பதே  வன்முறை, ஆதிக்கம் செலுத்தும் மற்றும் கட்டுப்படுத்தும் வரையறைகளை  கொண்டிருப்பதுதான்  என்ற விடயங்களை விமர்சன ரீதியாக ஆராய்ந்து நிராகரித்து, அதற்கு பதிலாக கவனிப்பு, இரக்கம் மற்றும் ஒத்துழைப்பு போன்ற மதிப்புகளைத் தழுவ (உள்வாங்க)வேண்டியதன் அவசியம்  நமது செய்தியின் மையக்கூறு ஆகும்.

பெண்ணிய இயக்கங்களை, சிந்தனைகளை  ஆதரிப்போம் : ஆண்களும் சிறுவர்களும் பாலியல் அடிப்படையிலான வன்முறையை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான போராட்டத்தை வழிநடத்தும் பெண்ணிய அமைப்புகள் மற்றும் பெண்ணிய இயக்கங்களின் பொறுப்புள்ள பங்காளியாக இருக்க நாம் நமது ஆண் நண்பர்கள் மற்றும் பங்காளர்களுடனான  உரையாடலை  ஊக்குவிப்போம்.

அனைத்து மட்டங்களிலும் செயற்படுவோம் : நாம் எம்முடன் தொடர்புபட்ட  தனிநபர், சமூகம் மற்றும் அமைப்பு ரீதியான எல்லா மட்டங்களிலும்  நடவடிக்கை எடுக்க முன்வருவோம்.  இதில்  பாலியல் ரீதியிலான வன்முறைகளில் இருந்து தப்பிப் பிழைத்தவர்களுக்கு நீதியை உறுதி செய்யும் மற்றும் வன்முறையின் மூல காரணங்களை நிவர்த்தி செய்யும் வலுவான சட்டங்கள், கொள்கைகள் மற்றும் நிறுவனங்களை ஆதரித்து வாதாடலும் அடங்கும்.

பார்த்தும் பாராதிருக்கும், கேட்டும் கேளாதிருக்கும் மௌனத்தைக் கலைப்போம் : துஷ்பிரயோகத்திற்கு எதிராகப் பேசவும், துஷ்பிரயோகம் செய்பவர்களை நிராகரிக்கவும், புகாரளிக்கவும், வன்முறையைத் தவிர்க்கவோ அல்லது சாக்குப்போக்கு சொல்லவோ கூடாது என்று நாம் நமது ஆண் சகாக்கள் மற்றும் நண்பர்களை ஊக்குவிப்போம். இதனூடாக நாம் ஒரு அடி எடுத்து வைத்து பால்நிலை அடிப்படையிலான வன்முறையை முடிவுறுத்துவோம் என்று தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/231371

அமைதியை தவிர வேறு வழியில்லை - லக்ஸ்மன்

2 months ago

அமைதியை தவிர வேறு வழியில்லை

லக்ஸ்மன்

இனவாதமும் பௌத்த மேலாதிக்கமுமே ஆரம்பத்திலிருந்து இலங்கையின் இன
முரண்பாடுகளுக்கும் பெரும்பாலான பிரச்சினைகளுக்கும் மூல காரணம் என்பது
எல்லோருக்கும் வெளிப்படையாகத் தெரிந்ததே. இருந்தாலும் அதனை வெளிப்படையாக ஏற்றுக் கொள்வதற்கு அவர்களுக்கும் 
துணிச்சல் இல்லை.

அதனாலேயே சுதந்திரமடைந்து 80 வருடங்களாகின்ற போதிலும், நிம்மதியற்ற இலங்கையே இருந்து வருகிறது.கடந்த வாரத்தில் உருவான திருமலை புத்தர் சிலை விவகாரத்தில் கருத்துவெளியிட்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “பிக்குகளைக் கொண்டே முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தனா தமிழ் மக்களுக்கெதிராக அரசியல் செய்தார்.

திருகோணமலைப் பகுதியில் பிரதிஸ்ட்டை செய்யப்பட்ட புத்தர் சிலை
அகற்றப்பட்டமை தேசியப் பிரச்சினை ஆகவே சிலையை அதே இதத்தில்
வைக்கவேண்டும்” என்று தெரிவித்திருந்தார். 

இந்தக் கருத்தைத் தவறான கருத்தாகச் சுட்டிய பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் அவர், தமிழ் மக்களிடம் மன்னிப்புக் கோரவேண்டும் என்று கூறியிருந்தார்.

மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி
அரசாங்கத்தின் “இந்த நாட்டில் இனிமேலும் இன, மத வாதங்களுக்கு இடமில்லை. இனவாதிகளை சட்டம் சும்மா விடமாட்டாது.

இருக்கின்ற சட்டங்கள் போதாது என்றால் மேலும் சட்டங்களைக் கொண்டு வந்து இனவாதிகளை அடக்குவோம்” என்ற கருத்துக்கு சஜித்தின் கருத்து நேர் எதிரானது. திருகோணமலை புத்தர் சிலை விவகாரமானது தங்களால் சரியாகக் கையாளப்பட்டதாகவும் இனவாதிகளின் முயற்சிகள் முறியடிக்கப்பட்டதாகவும் தற்போது கதைகள் உலாவ விடப்படுகின்றன. 

ஆனால், யார் முயற்சி செய்தாலும் அதன் பலாபலன் தமக்கே கிடைக்க வேண்டும் என்கிற முறைமையைத் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் கையாண்டிருப்பதையே காணமுடிகிறது. 

வடக்கு கிழக்கானது தமது பாரம்பரிய தாயகம் என்று சொல்கின்ற தமிழர்களின் பிரதேசத்துக்குள்ளேயே இருக்கின்ற திருகோணமலையில் இந்த அரசாங்கத்தின் காலத்துக்குள் மாத்திரமல்ல கடந்த அரசாங்கங்களின் ஆட்சிக் காலங்களிலும் புத்தர் சிலைகள் பல முளைத்ததும் விகாரைகள் கட்டப்பட்டதும் நடைபெற்றே இருக்கிறது. ஆனால், அவற்றினை மக்கள் விடுதலை முன்னணி எதிர்த்ததில்லை.

அதே நேரத்தில், இந்தச் சிலை விவகாரத்தினைப் பார்த்தால், உள்ளுராட்சிச் சபைகள் அதிகாரத்தில் இருக்கின்ற வேளையில் திருகோணமலை நகர 
சபையின் எல்லைக்குள் இந்தச் சிலை அனுமதியின்றி நிறுவப்பட்டிருக்கிறது.
சட்டத்திற்கு முரணான நடவடிக்கை உள்ளூர் அரசியல்வாதிகள், பொலிஸாரின் கவனத்திற்கும் கொண்டு வரப்பட்டபோது  புத்தர் சிலை இரவோடிரவாக அகற்றப்பட்டிருக்கிறது.

அதனை அறிந்த தமிழ் மக்கள் சிறிது மகிழ்ச்சியடைந்தனர்.  அந்த மகிழ்ச்சி திருப்தியாக மாற்றமடைவதற்கு முன்னரே பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால பாதுகாப்பு காரணங்களுக்காகவே புத்தர் சிலை அகற்றப்பட்டது. அகற்றியவர்களால் மீண்டும் அதே இடத்தில் நிறுவப்படும் என்று நாடாளுமன்றத்தில் அறிவித்ததும் ஏமாற்றமாகிப் போனது. அவ்வாறானால் இப்போது அச்சிலை சட்டரீதியாகநிறுவப்பட்டிருப்பதாகவே கொள்ளலாம்.

அதே நேரத்தில், புத்தர் சிலை விடயத்தில் தமிழ், முஸ்லிம் மக்களுக்குத் தொடர்பில்லை என்று திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜெயந்தி போதிவர்த்தன விகாரையின் விகாராதிபதி கல்யாண வங்ச திஸ்ஸ தேரர் தெரிவித்திருந்தார்.

இந்தச் சிலை விவகாரத்தில் தமிழ் மக்கள் அக்கறையில்லாமல் இருக்கின்ற வேளையிலும் கூட அவர்களை இதற்குள் இழுத்துவிடும் செயற்பாடு நடைபெற்றிருக்கிறது என்பதனை இது காட்டுகிறது. அதே நேரத்தில், தமிழ் மக்களிடம் இருக்கின்ற ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட்டோம் அவர்கள் பார்த்துக் கொள்ளட்டும் என்கிற அசட்டை மனோநிலை இந்த விடயத்தில் தமிழ் மக்களின் கவனக் குறைவுக்குக் காரணமாக இருக்கலாம்.

அதற்கு ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அல்லது ஜனாதிபதியின் கடந்த கால வார்த்தைகள் மீது கொண்ட நம்பிக்கை காரணமாக இருக்கலாம். ஆனால் அகற்றப்பட்ட சிலை மீண்டும் சட்ட ரீதியாகவே நிறுவப்பட்டமையானது சிறுபான்மை மக்கள் மத்தியில் கவலையையே ஏற்படுத்தியிருக்கிறது. 

பொலிசாரால் அகற்றப்பட்ட அந்த சிலை  அரசாங்க ஆசீர்வாதத்துடன் மீண்டும் அங்கு நிறுவப்பட்டமையானது எதனையும் சட்டரீதியாகச் செய்யுங்கள் என்று ஒரு தகவலை இனவாதிகளுக்குக்கொடுத்திருக்கிறது எனலாம். எதிர்க்கட்சித் தலைவர் சஜீத் பிரேமதாசா  அரசியலமைப்பின் இரண்டாவது சரத்தைச் சுட்டிக்காட்டிப் பேசுகிறார். இனவாதம், மதவாதம் இனி இல்லை என்று சொன்ன தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சர் பாதுகாப்பு காரணங்களுக்காகவே சிலை அகற்றப்பட்டதாகக் கூறி அதனை மீண்டும் நிறுவச் செய்கிறார்.  

இது சஜித்தின் கருத்தை ஆதரித்து ஏற்றுக் கொண்டதாகவே பார்க்கப்படுகிறது.
மற்றொருவகையில் பார்த்தால், சிங்கள பௌத்த பேரினவாதத்திற்கு அரசாங்கம் அடிபணிந்தே சிலையை மீண்டும் நிறுவியிருக்கிறது என்று கொள்ளமுடியும். அதே நேரத்தில் அரசாங்கத்தின் கொள்கை தோற்றுவிட்டது.

இனவாதிகள் வெற்றிபெற்றிருக்கிறார் என்றும் கொள்ள முடிகிறது. மாறாக, சட்டரீதியற்ற முறையில் நிறுவப்பட்ட சிலையை பொலிஸார் அகற்றினர்.

அதற்கெதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று சட்டம், ஒழுங்கை நிலைநாட்டவேண்டிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் வாதாடியிருந்தால் அரசாங்கம் சொன்னதையே செய்கிறது என்று கொள்ள முடியும். ஆனால், நடைபெற்றிருப்பதோ வேறொன்று. 

அத்துடன், மகிந்த கூட்டணியுடன் தொடர்புடையதே இந்த புத்தர் சிலை. அவர்களுடைய தரப்பினரே இந்தக் காரியத்தை நடத்தினர். பொதுஜன பெரமுன, ஐக்கிய தேசியக் கட்சி உள்ளிட்ட கட்சிகளின் ஏற்பாட்டில் நுகேகொடவில் நடைபெறவிருந்த பேரணிக்கு ஆதரவு திரட்டும் வகையில் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

அந்தவகையில், எதிர்க்கட்சிகளின் இன, மதவாத சதி அரசியல் இது என்று 
கூறும் அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகள் சரியானதா என்ற கேள்வி சிறுபான்மை மக்கள் மத்தியில் உருவாகியிருக்கிறது.

கடந்த காலத்தில் இனவாத அரசியலையே செய்து கொண்டிருந்த ஜே.வி.பி. தேசிய மக்கள் சக்தியாகத் தன்னை மாற்றிக்கொண்டபோது, முற்று முழுதாக மாறி விட்டது. என்று மனோநிலையை முழுமையாக மாற்றிக்கொள்ள முனைகின்ற தமிழ், முஸ்லிம் சிறுபான்மை மக்களும், தமிழ் மக்களின் உரிமை பற்றிச் சிந்திக்கின்ற சிறுதொகைச் சிங்கள மக்களும் இதிலிருந்தேனும் பாடம் 
கற்றுக்கொள்ள வேண்டும். 

அதே நேரத்தில், ஒரு தலைமையின் கீழ் ஒரு கட்டளையாளரின் கீழ் மாத்திரமே தேசிய மக்கள் சக்தி இயங்க, செயற்பட வேண்டும் என்கிற நெறிமுறைக் கட்டுப்பாடுகள் அரசாங்கத்துக்குள் இருக்கிறதா? என்கிற கேள்வியை  அவர்கள் கேட்டுக் கொள்ளவும் வேண்டும்.

அவ்வாறானால், பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைக் கொண்டுள்ள இடதுசாரிச் சிந்தனையாளர்களாக தம்மைக் காட்டிக்கொள்ள முனைகின்ற அரசாங்கம் பௌத்த மேலாத்திக்க வாதத்துக்குள் இருந்து வெளியில் வந்ததாக அறிவித்துக் கொள்வதற்குக் கிடைத்த வாய்ப்பினை தவறவிட்டிருக்கிறது, வீணடித்து விட்டது.

அவ்வாறானால், அது அரசாங்கத்தின் இயலாமையால் நடைபெற்றதா?, பலவீனமானதாக அரசாங்கம் இருக்கிறதா? என்பதே இப்போது ஆராயப்பட வேண்டும். இலங்கையைப் பொறுத்தவரையில் பௌத்த 
தேசியவாதம், தமிழ்த் தேசியவாதம், இஸ்லாமியத் தேசியவாதம் என தங்கள் தங்கள் நிலைப்பாடுகளைக் கொண்டிருக்கின்ற சமூகங்கள் ஒவ்வொரு இனத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபடவே செய்கின்றனர்.

ஆனால், சிங்களவர்களை அனுசரிக்கின்ற நிலைப்பாட்டைக் கொண்டிருந்தால் நாட்டில் வாழ முடியும் தங்களது இனத்தை நிலைநிறுத்திக் கொள்ள முடியும் என்ற கொள்கையை எடுத்துக் கொள்வதில் தமிழர்களுக்கு மனோநிலை இடம் கொடுப்பதில்லை.

இவ்வாறான நிலையில்தான் தங்களது தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியிலேயே முடிந்த கொண்டிருக்கின்ற சூழலை உணர்ந்து வெளிப்படுத்தப்பட்ட தோரணைகளைக் கண்ணுற்று தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்திருந்தனர். எது எவ்வாறானாலும், தமிழ் மக்கள் தங்களது இந்த முடிவினைத் தவறென்று எடுத்துக் கொள்வார்களா?, அப்படியே விட்டுவிடுவோம் என்று கொள்வார்களா? என்பது காலத்தின் கையில் விடப்பட்டதே.

இருந்தாலும், வடக்குக் கிழக்கில் நடைபெற்ற இனப் பரம்பல் குறைப்பு நடவடிக்கைகள், சிங்கள மயமாக்கல் குடியேற்றங்கள், பௌத்த மேலாதிக்க செயற்பாடுகள், தொல்பொருள் ஆதிக்கங்கள் நிறுத்தப்படப் போவதில்லை 
என்பதனை மீண்டும் ஒருமுறை திடமாக உறுதிப்படுத்திய சம்பவமாகத் திருமலை சிலை நிறுவலைக் கொள்ளமுடியும் என்பதே நிச்சயம்.

ஆனாலும், ஆயுதத்தை ஆயுதத்தால் அணுகுகின்ற, இனவாதத்தை, இனவாதத்தால் அணுகுகின்ற நிலைப்பாடுகள் வலுத்துவருகின்ற  இன்றைய சூழலில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்திற்கு வேறுவழியுமில்லை என்று அமைதியடைந்து கொள்வதைத் தவிர வேறு வழியில்லை.

புத்தர் திருகோணமலையின் கடற்கரையோரப் பாதுகாப்பு வலயத்தில் தற்காலிகமாகக் குடியேற்றப்படவில்லை அவர் நிரந்தரமாகவே அமர்த்தப்பட்டார். அங்கு விரைவில் விகாரையும் அமையும் என்பது உண்மையானாலும், தமிழர்களைப் பொறுத்தமட்டில். இப்போது போன்று அப்போதும் அமைதியாகவே இருப்பர்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/அமைதியை-தவிர-வேறு-வழியில்லை/91-368414

அரசும் அரசாங்கமும்

2 months ago

அரசும் அரசாங்கமும்

sudumanal

budha.jpg?w=1024

அரசாங்கம் (government), என்பதும் அரசு (state) என்பதும் ஒன்றல்ல. தமிழ் ஊடகங்கள் அதை மாத்தி மாத்திப் பாவிப்பதால் பலரும் குழப்பமடைகிறார்கள். அரசின் நிகழ்ச்சி நிரலை மக்களிடம் கொண்டுசென்று செயற்படுத்தும் முக்கியமான நிர்வாக அலகுதான் அரசாங்கம். அரசாங்கத்துக்கும் அதன் தலைவர் அல்லது ஜனாதிபதிக்கும் அதிகாரங்கள் இருக்கிறதுதான். அவர்களுக்கான பலமாக அரசியல் யாப்பும் இருக்கிறது. அதன் எல்லைக்குள் அவர்கள் செயற்படுகிறபோது எந்தச் சிக்கலும் அரசு(state) க்கு இருப்பதில்லை. மக்கள் எழுச்சியும்கூட அப்படித்தான் கையாளப்படுகிறது.

அரசின் இனவாதத்தை செவ்வனே செயற்படுத்திய ராஜபக்ச பரம்பரையை ஆட்டங்காணச் செய்த காலிமுகத் திடல் போராட்டத்தின் போது ராஜபக்சக்களை கைவிட அரசு தயாராக இருந்தது. புதிதாக அந்த இடத்தை நிரப்ப அரசியல்வாதிகள் உண்டு என அரசுக்குத் தெரியும். அரசமாளிகையை முற்றுகையிட்டு உள்ளே புகுந்து விளையாடுற எல்லைவரை -தனது இராணுவத்தை வாபஸ் பெறச் செய்து- போராட்டக்காரரை அனுமதித்தது. தொலைக்காட்சியின் முன்னால் அமர்ந்திருந்து அந்தக் காட்சிகளை அவர்கள் பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் இதே போராட்டக்காரர்கள் பாராளுமன்றத்தினுள் புக முயற்சித்த நேரத்தில், அந்த வன்முறை இயந்திரங்கள் கடுமையான தடுப்புகளைப் போட்டு வீரியமாக எதிர்கொண்டன. அதையும் உடைத்து அன்று போராட்டக்காரர் பாராளுமன்றத்தினுள் உள்நுழைந்திருந்தால் ஒரு படுகொலையோடு அந்தப் போராட்டம் முடிவடைந்திருக்கும் சாத்தியமே இருந்தது.

அரசாங்கங்கங்கள் தேர்தலின் மூலம் மாறலாம். அரசு கட்டமைப்பு அரசாங்க மாற்றத்தோடு சேர்ந்து மாறாது. அது தனது தொடர்ச்சியை பேணியபடி இருக்கும். அரசு என்பது புலப்படும் மற்றும் புலப்படாத (visible & invisible) கட்டமைப்பைக் கொண்டது. அதன் வன்முறை இயந்திரங்களான இராணும் பொலிஸ், உளவுப்படை, நீதிமன்றம் போன்றவை புலப்படும் நிலையில் உள்ளவை. அரசின்; கருத்தியல் என்பது புலப்படாத நிலையில் இருப்பது. இந்த நிறுவனங்களில் பதவி மாற்றங்களை அரசாங்கம் நிகழ்த்தலாம். இந்த சில்லறை மாற்றங்கள் அரச கட்டுமானத்தையோ அதன் கருத்தியலையோ மாற்றாது. இலங்கையில் எல்லா அரசாங்கங்களும் அரச கட்டுமானத்தைப் போலவே அரச கருத்தியலையும் கையாள்வதில் இதுவரை பிசகின்றி சேர்ந்தே நடந்திருக்கின்றன.

இந்த முட்டுச் சந்தியில்தான் என்.பி.பி அரசாங்கமும் விடப்பட்டிருக்கிறது. இதுவரையான அரசாங்கங்கள் இனவாதத்தைப் பேசிப் பேசியே ஆட்சியை அமைக்க இலகுவான வழியாக அதைத் தேர்ந்தெடுத்தார்கள். அரச கட்டுமானத்தின் கருத்தியல் பௌத்த மேலாதிக்கமாக கண்ணுக்குப் புலப்படாத அதிகாரத்துடன் செயற்பட்டு வருகிறது. ஓர் அரசின் மிக முக்கிய அங்கங்கள் மக்கள் திரளும், நிலமும், கருத்தியல் நிறுவனங்களும், வன்முறை இயந்திரங்களும் ஆகும். இவை எல்லாவற்றையும் நிர்வகிக்கும் நிறுவனமாக அரசாங்கம் இருக்கிறது என்றபோதும், அரசாங்கமானது அரசின் அதிகாரத்தை தடாலடியாக மீறிச் செயற்படுவது என்பது இலகுவானதல்ல.

அரசு தனது மக்கள் திரளை ஒன்றிணைத்து இந்த மீறல்களை சுலபமாக எதிர்கொள்ள கருத்தியல் ஆயுதத்தை பயன்படுத்தும். இலங்கையைப் பொறுத்தவரை பெரும்பான்மையானவரை அதாவது சிங்கள மக்களை மொழி மற்றும் (பௌத்த) மத அடிப்படையில் ஒன்றிணைக்க இலகுவாக இருக்கிறது. சிங்கள மக்களில் மிகப் பெரும்பாலானோரும் பௌத்த மதத்தை கடைப்பிடிப்பது இன்னும் அதிகார சக்திகளுக்கு இலகுவாகப் போயிருக்கிறது. எனவே இனவாதம் என்பது மொழி, இனம் என்ற இரண்டு தளங்களிலும் செழிப்பாக இருக்கிறது. மொழியைப் பொறுத்தவரை “இலங்கையில் மட்டுமே சிங்கள மொழி இருக்கிறது. தமிழ் அப்படியல்ல. இந்தியாவில் பல கோடி தமிழர்கள் இருக்கிறார்கள். எனவே சிங்கள மொழியைக் காப்பாற்ற வேண்டிய வரலாற்றுக் கடமை எமக்கு உண்டு” என கிளம்ப ஒரு கருத்தியல் தளம் உருவாக்கப்பட்டிருக்கிறது.

இலகுவாக மாறா நிலையிலுள்ள அரச கட்டுமானத்தை மாறும் நிலையிலுள்ள அரசாங்கங்கள் கையாள்வதற்கு அரசியல் யாப்புத்தான் ஒரு பாதையை திறந்து வைத்திருக்கிறது. இந்த அணுகுமுறைக்கு மக்கள் நலன்மேல் அக்கறையுடைய ஓர் அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தோடு தன்னை முதலில் நிரூபிக்க வேண்டியிருக்கிறது. இன்றைய என்பிபி அரசாங்கம் இந்த வெற்றியைப் பெற்றிருக்கிறது. ஆனால் என்பிபி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருந்தும், அரசியல் சட்டத்தில் கைவைக்க தயங்குவதற்கான ஒரே காரணம் அரச வடிவத்தின் சிங்கள பௌத்த மேலாதிக்க கருத்தியல் வடிவம்தான். நீருக்குள் இறங்காமல் நீச்சல் பழக முடியாது. காலம் தேவைப்படலாம். முயற்சி அதைவிட முக்கியம் என்பதை என்பிபி அரசாங்கத்துக்கு சொல்லிவைக்கலாம்.

70 வருட இனவாத கருத்தியலில் கட்டப்பட்டு தொடர்ச்சியுறும் அரசாங்க பாரம்பரியத்திலிருந்து, தாம் சொல்வதுபோல தம்மை என்பிபி யினர் எவ்வாறு முறித்துக் கொள்ளப் போகிறார்கள். இதை அவர்கள் நேர்மையாக முன்வைக்கும் பட்சத்தில், அது அவர்களிடமிருந்து செயல் வடிவத்தைக் கோருகிறது. இனவாதமற்ற, மதவாதமற்ற ஓர் நாட்டை கட்டியமைப்போம் என்ற அவர்களின் குரல் மீது நம்பிக்கை வைத்து மக்கள் வாக்களித்தார்கள். இந்தக் குரலையும் மேவிய என்பிபி யின் குரலானது ஊழலையும் போதைவலையமைப்பையும் தகர்த்து இல்லாமலாக்குவோம் என்பது. அதுவே இன்று நடைமுறையில் பரபரப்பாக செயற்படுகிறது. இனவாத ஒழிப்புக்கான நடைமுறையல்ல.

அதிகாரப் பகிர்வு என்பது பற்றி பேசவே தயங்குகிற சூழல் அவர்களது. “சட்டம் எல்லோருக்கும் பொதுவானது, எல்லோரும் சம உரிமை கொண்ட மக்கள், எல்லா பிரதேசங்களும் சமமாக அபிவிருத்தி செய்யப்பட வேண்டும்” என்றெல்லாம் பொதுமையாகப் பேசுவது அரச இனவாதக் கட்டமைப்புக்கோ அதன் கருத்தியல் நிறுவனங்களுக்கோ எந்த அச்சத்தையும் விளைவிக்காது. இவற்றை நடைமுறைப் படுத்துகிறபோது தான், அவர்கள் சட்டையைக் கொழுவிக் கொண்டு களமாடப் புறப்படுவார்கள்.

உண்மையில் என்பிபி தான் பேசுபவற்றை நடைமுறையாக்க தயாராகுமானால், சிங்கள முற்போக்கு சக்திகளோடு தமிழ் முஸ்லிம் மலையக மக்களும் அதற்கு உந்துதலாகவும் ஆதரவாகவும் செயற்பட வேண்டும். அல்லது அரசாங்கத்தை படிப்படியாக இனவாதத்துக்கு எதிரான செயல் வடிவத்துள் தள்ள அழுத்தம் கொடுக்க வேண்டும். அதை எதிர்நிலையில் நின்று செய்வது சாத்தியமில்லை. வெளியில் அரசாங்கத்தை மீண்டும் இனவாத அலகால் கௌவிப் பிடிக்க அலையும் வல்லூறுகள் இந்த 70 வருடமும் மாறிமாறி ஆட்சி நடத்திய இனவாதிகள் என்பதை கவனம் கொள்ள வேண்டும். இதற்கான பக்குவமோ, முதிர்ச்சியோ, அரசியல் சிந்தனையோ, அணுகுமுறையோ தமிழ் முஸ்லிம் மலையக கட்சிகளுக்குக் கிடையாது. அவர்களுக்கு அரசியல் என்பது பழக்க தோசம். அது பேரினவாதத்தை எதிர்க்கும் சிறுபான்மை (எதிர்)இனவாத மனக்கட்டமைப்பிலிருந்து எழுவது. அதுவே திருகோணமலை புத்தர் விவகாரத்தில் என்பிபி தமிழ் எம்பிக்களை பதவி விலக வேண்டும் என பழுத்த தமிழ் அரசியல்வாதியான சுமந்திரனை சொல்ல வைக்கிறது. இனப்படுகொலையை செயற்படுத்திய மகிந்த பரம்பரையோடு ஒத்துழைக்கக் கூட தயாராக இருக்கிறார்கள் அவர்கள். நாட்டின் இனவாத பிரச்சினையை இவர்கள் அணுகுகிற அழகு இது.

எனவே என்பிபி அரசாங்கம் அதிகாரப் பகிர்வு குறித்தான விடயத்துக்கு மட்டுமல்ல, இந்த பௌாத்த மேலாதிக்க நடவடிக்கைகளை கட்டுப்படுத்தவும் அரசியல்யாப்பில் திருத்தங்களை கொண்டுவர முயல வேண்டும். இவ்வாறான பிரச்சினைகளை சட்ட நுணுக்கங்கள் மூலம் வரையறுக்க வேண்டும். உதாரணமாக சுவிஸில்ஒரு ஊரில் ஒரு பாதையை போட அல்லது பாலத்தைக் கட்டக் கூட அந்த பிரதேச மக்களிடம் வாக்கெடுப்பின் மூலம் அபிப்பிராயம் பெறப்படுகிறது. அதை அங்கீகரிக்கவோ மறுக்கவோ அந்த மக்களுக்கு உரிமை இருக்கிறது. அதை மீறி அரசாங்கம் செயற்படாது. இவ்வாறான நடைமுறை மூலம் காணி ஆக்கிரமிப்புகள் புத்தர் பயிரிடல் என்பவற்றை -இன மத எல்லையைத் தாண்டி- சட்ட ரீதியில் அணுக முடியும்.

இதற்கு மதச் சார்பின்மையான அரசாங்கமாக இருத்தல் முக்கியமானது. மதம் எளிய மனிதர்களுக்கான ஆத்ம பலத்தைத் தரலாம். ஆனால் அதுவே ஆன்மீக நிலையிலிருந்து அதிகார நிலைக்கு மாறுகிறபோது பெரும் ஆபத்து நிகழ்கிறது. அதே எளிய மக்களை அதன் கருத்தியலால் ஒன்றிணைத்து மனிதவிரோத செயல்களை செய்ய முடிகிறது. இந்தியாவில் சங்கிகளும், இலங்கை மியன்மார் போன்ற இடங்களில் காவிகளையும் இந்த போர்க்களங்களில் காண முடியும். எனவே அரச கட்டமைப்பின் கருத்தியலாக இருக்கும் பௌத்த மேலாதிக்க கருத்தியலை என்பிபி அரசாங்கள் அரசியல் சட்ட திருத்தங்களினூடாக அணுக தயாராக வேண்டும். அதற்கு என்பிபி தயாராக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமனானது. தயாராகுமெனின், அதற்கு பக்கபலமாக தமிழ் முஸ்லிம் மலையக அரசியல்வாதிகளும் மக்களும், சிங்கள முற்போக்குவாதிகளும் செயற்பட வேண்டும். இச் சந்தர்ப்பத்தை அவர்கள் தவறவிடக் கூடாது.

பலஸ்தீனப் பிரச்சினை குறித்து மட்டுமல்ல, ட்றம்பின் வரிப்போர், நெத்தன்யாகுவின் மனிதவிரோதம் என்பவற்றுக்கு எதிராக உலக நாடுகளில் பலவற்றிலும் இளஞ் சந்ததி சளைக்காத போராட்டங்களையும் குரலையும் எழுப்பி வருகிறது. அவளவுக்கு அரசியல் விழிப்புணர்ச்சி இளைஞர் சமூகத்திடம் மேலோங்குகிற உலக சூழல் தோன்றியிருக்கிறது. ஆனால் இவளவு காலமாக தொடர்ச்சியுறும் மக்கள் விரோத இனவாத செயற்பாடுகளை எதிர்க்க சிங்கள சமூகம் உட்பட எல்லா இன இளஞ் சந்ததிகளும் தயாராக இருக்கிறதா? இருக்குமெனின், இலங்கையில் இனவாதத்தை பலவீனமாக்கும் மாற்றத்தை நிகழ்த்த அரசாங்கங்கள் மறுபுறத்தில் நிர்ப்பந்திக்கப்படும் இயங்குநிலை உருவாகும். இதில் தமிழ் முஸ்லிம் மலையக மக்களுக்கும் பங்கு உண்டு என்பது மட்டுமல்ல முக்கியமாக, இளஞ் சந்ததியிடம் சிந்தனை மாற்றம் செழுமையுறுவதும் அவசியமானது.

சுதந்திரம் கிடைத்த நாளிலிருந்து இனவாதத்தால் கட்டமைக்கப்பட்ட அரச வடிவமும் அதை செவ்வனே செய்து இனவாத்தை வளர்த்துவிட்ட அரசாங்கங்களும் என தொடர்ந்த இரு கட்சிகளின் மேலாதிக்க பாரம்பரியத்துக்கு வெளியே மூன்றாவது கட்சியாக ஜேவிபி யை மேலே கொணர்ந்ததும் இளஞ் சந்ததியின் காலிமுகத் திடல் போராட்டம்தான் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. அவ்வாறு மேல்நிலைக்குக் கொண்டுவரப்பட்ட ஒரு வரலாற்று முறிவை பழங்கஞ்சி அரசியலால் அணுக முடியாது. இந்த அரசாங்கத்தை கவிழ்க்க முற்படும் இனவாத கும்பலோடு கூட்டுச் சேரும் அரசியல் களங்கள் நிராகரிக்கப்பட வேண்டியது.

https://sudumanal.com/2025/11/18/அரசும்-அரசாங்கமும்/#more-7497

நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்

2 months ago

நீரில் மிதக்கும் பனிக்கட்டி? - நிலாந்தன்

G6EJEbsWQAAbdliccccc-1024x683.jpg

அரசியல் கைதி ஆனந்த சுதாகரனின் மாமியார், கடந்த புதன்கிழமை,கிளிநொச்சி ஆஸ்பத்திரியில் இயற்கை எய்தினார். ஆனந்த சுதாகரனின் பிரிவினால் நோயாளியாகிய அவருடைய மனைவி 2018ஆம் ஆண்டு இயற்கை எய்தினார். அவருடைய தாயார் கமலாதான் பேரப்பிள்ளைகளைப் பராமரித்து வந்தார். அவரும் இப்பொழுது இறந்து விட்டார். ஆனந்த சுதாகரன் 17 ஆண்டுகளாகச் சிறை வைக்கப்பட்டிருக்கிறார்.

ஆனால் தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான திருமதி.லக்மாலி அண்மையில் கொழும்பில் நடந்த ஊடக விவாத நிகழ்ச்சியொன்றில் பின்வருமாறு வாதிட்டதை முகநூல் பதிவொன்றில் காண முடிந்தது. ”சிறையில் இருப்பவர்கள் அரசியல் கைதிகள் அல்லர். நீதிமன்றினால் தண்டிக்கப்பட்ட குற்றவாளிகள். தலதா மாளிகை சம்பவம் உட்பட பாரிய குற்றச் சம்பவங்களுடன் தொடர்புபட்டவர்கள். தமிழ் மக்கள் இதனை விளங்கிக் கொண்டுதான் இப்போது எமது அரசாங்கத்தை ஆதரிக்கின்றனர். ”

சிறையில் இருப்பவர்கள் தண்டிக்கப்பட்ட கைதிகள் என்று கூறுவதன்மூலம் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் என்று லக்மாலி கூறுகிறார். அதாவது பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் அவர்கள் குற்றவாளிகளாகக் காணப்பட்டு தண்டிக்கப்பட்டவர்கள் என்று பொருள்.

பயங்கரவாதத் தடைச் சட்டத்தை நீக்கப் போவதாக கடந்த ஜெனிவா கூட்டத் தொடருக்கு முன்பாக அரசாங்கம் அறிவித்தது. ஆனால் இன்றுவரையிலும் அதை அவர்கள் செய்யவில்லை. இப்பொழுது அந்தச் சட்டத்தைத் திருத்தி ஒரு புதிய சட்டத்தைக் கொண்டு வரப் போவதாக அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

பயங்கரவாதத் தடைச் சட்டம் எனப்படுவது தமிழ் மக்களின் அரசியல் எதிர்ப்பை பயங்கரவாதமாக சட்ட வியாக்கியானம் செய்து சம்பந்தப்பட்டவர்களைக் கைது செய்வதற்கான ஒரு சட்டச்சூழலை எப்பொழுதும் பேணுவது. அதாவது தமிழ்மக்களின் எதிர்ப்பை பயங்கரவாதமாகச் சித்தரிக்கக்கூடிய வாய்ப்புகளை எப்பொழுதும் பேணுவது. இந்தவிடயத்தில் கடந்த காலங்களில் இலங்கைத்தீவை ஆண்டு வந்த மேட்டுக்குடி அரசியல்வாதிகளின் அதே அணுகுமுறையைதான் தேசிய மக்கள் சக்தியும் கொண்டிருக்கிறது என்று எடுத்துக் கொள்ளலாமா?

அரசியல் கைதிகளின் விடயத்தில் மட்டுமல்ல, பயங்கரவாதத் தடைச் சட்டத்தை அகற்றுவதில் மட்டுமல்ல, தொல்லியல் விவகாரங்களுக்கான ஆலோசனைக் குழுவை நியமித்தபோது மட்டுமல்ல, திடீரென்று முளைக்கும் புத்தர் சிலைகளைக் கையாளும் விடயத்திலும் என்.பி.பி அரசாங்கமானது முன்னைய மேட்டுக்குடி அரசியல்வாதிகளைப் போலவே சிந்திக்கிறது என்பதைத்தான் கடந்த வாரம் திருக்கோணமலையில் நடந்த புத்தர் சிலை விவகாரம் நமக்குக் காட்டுகிறதா ?

திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் எனப்படுவது சிலையிலிருந்து தொடங்கவில்லை. அது அந்தச் சிலை வைக்கப்பட்ட காணிக்குள் ஏற்கனவே அமைக்கப்பட்டு இருந்த ஒரு ரெஸ்ரோரண்டில் இருந்து தொடங்குகிறது. அந்த ரெஸ்ரோரன்ட் சட்டவிரோதமாக கட்டப்பட்டிருக்கிறது என்று அதில் சம்பந்தப்பட்ட திணைக்களங்களும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் தரப்புகளும் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்க முயற்சித்த ஒரு பின்னணியில், கடந்த வாரத்துக்கு முதல் வாரம் அந்த ரெஸ்ரோரண்டின் மையப் பகுதியை வைத்துக்கொண்டு ஏனைய பகுதிகளை அகற்றுவதற்கு அங்கிருந்த பௌத்த மதகுரு ஒப்புக்கொண்டார்.

ஆனால் அவர் ஒப்புக்கொண்டபடி நடக்காமல் அந்த விடயத்தை உணர்ச்சிகரமான விதத்தில் திசைதிருப்பும் நோக்கத்தோடு புத்தர் சிலையை உள்ளே கொண்டு வந்திருக்கிறார். அதாவது சட்டவிரோதக் கட்டுமானம் ஒன்றை அகற்றுவதைத் தவிர்ப்பதற்கு புத்தர் சிலை ஒரு திசை திருப்பும் கருவியாகப் பயன்படுத்தப்பட்டிருக்கிறது. அது சட்டவிரோதமானது என்பதனால்தான் போலீசார் முதலில் அதனை அகற்றினார்கள். ஆனால் அதே போலீசார் அந்த சிலையை மீண்டும் கொண்டு வந்து வைத்திருக்கிறார்கள். அப்படியென்றால் போலீசார் சட்டவிரோதமான ஒரு சிலையை சட்டபூர்வமானது ஆக்கியிருக்கிறார்களா?

புத்தர் சிலைக்கு ஒரு சட்டம்; தமிழ் மக்களுக்கு இன்னொரு சட்டம். ஏற்கனவே திருமலை மறை மாவட்டத்தின் ஆயர் இதுபோன்ற விடையங்களை முன்வைத்துத்தான் இலங்கைத் தீவில் இரண்டு சட்டங்கள் இருக்கின்றனவா என்று கேட்டிருந்தார்.

புத்தர் சிலை வைக்கப்பட்டிருக்கும் காணிக்குள் காணப்படும் ரெஸ்ரோரண்டை அகற்ற வேண்டும் என்று போராடி வருபவர்களில் இப்பொழுது தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினராக இருக்கும் ரொஷான் அக்கீமனவும் ஒருவர். அந்த வளவிலிருந்து குறிப்பிட்ட கட்டுமானத்தை அகற்றக்கோரி போராடியவர்கள் மத்தியில் அவர் முன்பு காணப்பட்டார். ஆனால் இப்பொழுது எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்கப் பார்க்கிறார். அவர் மட்டுமல்ல திருகோணமலையில் இருந்து தெரிவு செய்யப்பட்ட தமிழ் நாடாளுமன்ற உறுப்பினரும் உதவி வெளிவிவகார அமைச்சருமாகிய அருண் ஹேமச்சந்திரவும் எல்லாத் தரப்புக்களையும் சமாளிக்க முயல்கிறார்.

அவர் பதவி விலக வேண்டும் என்று சுமந்திரன் கேட்கிறார். ஆனால் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பும் சஜித் பிரேமதாசவுக்கு ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டவர் சுமந்திரன். அதற்குப் பிராயசித்தமாக அவரும் தன் பொறுப்புகளைத் துறக்க வேண்டும்.

2015இல் ஆட்சிக்கு வந்த ரணில் மைத்திரி அரசாங்கத்தில் சஜித் பிரேமதாசவின் பொறுப்பின் கீழ்தான் புத்தசாசன அமைச்சு காணப்பட்டது. அக்காலகட்டத்தில்தான் தையிட்டியில் விகாரையைக் கட்டத் தொடங்கினார்கள். நாடு முழுவதும் ஆயிரம் விகாரைகளைக் கட்டுவதற்கு 500 மில்லியன் ரூபாயை ஒதுக்குவோம் என்று சிங்கள மக்களுக்கு வாக்குறுதி அளித்தவர்களில் சஜித்தும் ஒருவர். எனவே அப்படிப்பட்ட சஜித்தை ஜனாதிபதித் தேர்தலில் ஆதரிக்குமாறு கேட்ட சுமந்திரன் இப்பொழுது அருண் ஹேமச்சந்திர ராஜினாமாச் செய்ய வேண்டும் என்று கேட்கிறார்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் தனக்கு முன்னிருந்த ஆட்சிகளில் இருந்து தன்னை வேறுபடுத்திக் காட்டும்போது சுட்டிக்காட்டும் வேறுபாடுகளில் ஒன்று, தாங்கள் இனவாதத்துக்கு தலைமை தாங்கவில்லை என்பது. ஆனால் இக்கட்டுரையில் ஏற்கனவே கூறப்பட்டதுபோல,அரசியல் கைதிகள், பயங்கரவாதத் தடைச் சட்டம், தொல்லியல் விவகார ஆலோசனைக் குழு,புத்தர் சிலைகள் போன்ற விடயங்களில் இந்த அரசாங்கத்துக்கும் முன்னைய அரசாங்கங்களுக்கும் இடையில் வித்தியாசங்கள் உண்டா?

புத்தர் சிலையை வைத்து எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கிளப்புகின்றன அதன் மூலம் நுகேகொடவில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு ஆட்களை திரட்டும் உணர்ச்சிகரமான அரசியல் சூழலை உருவாக்க முயற்சிக்கின்றன என்று அரசாங்கம் எதிர்க்கட்சிகளைக் குற்றம் சாட்டியது.

எதிர்க்கட்சிகளை இனவாதக் கட்சிகள் அல்லது இனவாதத்தை வைத்துப் பிழைத்த கட்சிகள் என்று குற்றச்சாட்டும் இந்த அரசாங்கமானது,தான் இனவாதி அல்ல என்பதனை நிரூபிப்பதற்கு கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தில் என்ன செய்திருக்கிறது ?

தாங்கள் இனவாதிகள் அல்ல என்று கூறிக் கொண்டிருந்தால் மட்டும் போதாது. நடைமுறையில் தாங்கள் இனவாதத்திற்கு எதிரானவர்கள் என்பதை நிரூபிக்கத் தேவையான அர்ப்பணிப்பும் துணிச்சலும் அவர்களிடம் உண்டா என்பதுதான் இப்பொழுதுள்ள கேள்வி.

facebook_1763556166480_73968906832939502

இனவாதிகள் தலையெடுக்கக்கூடாது என்றால் இந்த அரசாங்கத்தை எப்படியாவது பாதுகாக்கவேண்டும். இந்த அரசாங்கம் தோல்வியுற்றால் இனவாதிகள் மீண்டும் தலையெடுத்து விடுவார்கள் என்று அரசாங்கத்தை ஆதரிப்பவர்கள், குறிப்பாக யாழ்.பல்கலைக்கழகத்தில் உள்ள சில விரிவுரையாளர்கள் கூறுகிறார்கள்.

ஆனால் இது ஒன்றும் புதிய தர்க்கம் அல்ல. இந்த நாட்டை இதுவரையிலும் ஆண்ட இனவாதக் கட்சிகள் மத்தியில் ஒப்பீட்டளவில் லிபரல்களாகத் தோன்றும் பலரும் அப்படித்தான் கூறிவந்தார்கள். அதாவது இனவாதத்தை தோற்கடிப்பதற்கு குறிப்பிட்ட லிபரல் அரசாங்கத்தைப் பாதுகாக்க வேண்டும் என்று. ஆனால்,யதார்த்தத்தில் என்ன நடந்தது என்றால்,வெளிப்படையான இனவாதத்துக்கு எதிராக முகமூடி அணிந்த இனவாதம் தன்னைத் தற்காத்துக் கொள்ளும் ஒரு தந்திரமாகவே அது காணப்பட்டது. இதன் மூலம் முகமூடி அணிந்த இனவாதம் தமிழ்,முஸ்லிம் வாக்குகளையும் கைப்பற்றிக் கொண்டது.

“அரகலய” போராட்டம் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியில் அந்தப் போராட்டத்தின் பின்னணியில் நின்ற அமைப்புகளில் ஒன்றாகிய முன்னிலை சோசிலிச கட்சியின் தலைவராகிய குமார் குணரட்ணத்தோடு உரையாடக் கிடைத்தது. சுமார் 5 மணித்தியால உரையாடல். அந்த உரையாடலின் ஒரு கட்டத்தில் அவர் சொன்னார்,தமிழ் மக்களை ஒரு தேசிய இனமாக ஏற்றுக் கொள்ள முடியாது; சமஸ்டியை ஒரு வெளிப்படையான தீர்வாக முன்வைக்க முடியாது என்ற பொருள்பட. நாங்கள் இதை வெளிப்படையாக உங்களுக்குச் சொல்கிறோம். ஆனால் ஜேவிபி அதை வெளியில் சொல்லாமல் அரசியல் செய்கிறது. அவர்கள் அதை வெளிப்படையாகச் சொன்னால் தென்னிலங்கையில் அவர்கள் தோற்கடிக்கப்பட்டு விடுவார்கள் என்று.

இந்த விடையத்தில் முன்னைய லிபரல் அரசாங்கங்களைப் போலவே என்பிபியும் இனவாதத்தை எதிர்த்துத் தியாகம் செய்யத் தயாரில்லை என்பதைத்தான் கடந்த ஓராண்டுக்கு மேலான அவர்களுடைய ஆட்சிக் காலம் நிரூபித்திருக்கிறது. அதாவது இனவாதத்தை எதிர்த்து நின்று அழிய அவர்கள் தயாராக இல்லை. மாறாக இனவாதம் அருட்டப்பட்டுவிடும் என்று கூறி தமிழ் எதிர்ப்பைத் தணிக்கப் பார்ப்பார்கள். இதைத்தான் லிபரல் இனவாதிகளும் செய்கிறார்கள்; சில வெளிநாட்டுத் தூதரகங்களும் செய்கின்றன.

சந்திரிகா “வெண்தாமரை” இயக்கத்தைத் தொடங்கி சமாதானத்துக்கு சிங்கள மக்களைத் தயார்படுத்தப் போவதாகக் கூறினார். ஆனால் அந்த இயக்கம் நடைமுறையில் படையினருக்கும் படையினரின் குடும்பங்களுக்கும் தொண்டு செய்யும் ஒரியக்கமாகவே மாறியது.

என்பிபியின் அடித்தளமாகக் காணப்படும் ஜேவிபியில் உறுப்பினராக இருந்து, பின்னர் விலகிச் சென்ற ஒருவர் கூறுவார், ”மஹிந்த ராஜபக்ஷ வெளிப்படையான இனவாதி. ஆனால் ஜேவிபி சமூக நீதியின் பின் பதுங்கும் இனவாதி”என்று. இக்கூற்று பிழையானது என்பதை நிரூபிப்பதற்குக் கிடைத்த கடந்த ஓராண்டுக்கு மேலான காலத்தை ஜேவிபி பயன்படுத்தவில்லை. எனவே இதற்கு முன்பு ஆட்சிசெய்த லிபரல் முகமூடி அணிந்த, ஆனால் இனவாதத்துக்கே தலைமை தாங்கிய ஆட்சியாளர்களைப் போலவே என்பிபியும் அதே குட்டையில் ஊறிய மட்டைதானா ?

எனது நண்பர் ஒருவர் யாழ்ப்பாணத்தின் சில புத்திஜீவிகளைப்பற்றிச் சொல்லும்போது ஒர் உதாரணத்தை எடுத்துக்காட்டுவார். ”நீரில் மிதக்கும் பனிக்கட்டிகள்” என்று. அதாவது அவர்களும் யாழ்ப்பாணிகள்தான். ஆனால் தங்களை முற்போக்கானவர்களாகக் காட்டிக்கொண்டு கொஞ்சம் மேலே மிதப்பார்கள். நீரில் மிதக்கும் பனிக்கட்டியைப் போல. ஆனால் பனிக்கட்டியும் நீரும் அடிப்படையில் ஒரே பண்பிலிருந்து வந்தவைதான். இது இப்பொழுது என்பிபிக்கும் பொருந்துமா?

https://www.nillanthan.com/7950/

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

2 months ago

Sajith-Namal.jpg?resize=550%2C310&ssl=1

நுகேகொட பேரணி:- சஜித்தா நாமலா ? நிலாந்தன்.

அந்த வெள்ளிக்கிழமை நுகேகொடவில் எதிர்க்கட்சிகள் ஒருங்கிணைத்த ஆர்ப்பாட்டம் ஒப்பீட்டளவில் வெற்றிகரமானது. கடந்த 14 மாதங்களாக அமுங்கிக் கிடந்த எதிர்கட்சிகள் இனி தெம்போடு நடமாடும். 14 மாதங்களாக அரசாங்கம் எதிர்க்கட்சிகளை தற்காப்பு நிலைக்கு தள்ளியிருந்தது. ஆனால் இப்பொழுது எதிர்க்கட்சிகள் அரசாங்கத்தை திருப்பித் தாக்கும் நிலைக்கு படிப்படியாக முன்னேறி வருவதனை அந்த ஆர்ப்பாட்டம் காட்டியதா?.

எதிர்க்கட்சிகளுக்கு இடையே ஒற்றுமை இல்லாதபடியால்தான் தேசிய மக்கள் சக்தி கடந்த தேர்தல்களில் பெரிய வெற்றிகளைப் பெறமுடிந்தது.தமிழ் பிரதேசங்களிலும் இதுதான் நடந்தது. எதிர்க்கட்சிகளுக்கு இடையே தலைமைப் போட்டி. அது இப்பொழுதும் உண்டு.ஆனால் ஊழலுக்கு எதிராகவும் போதைப்பொருள் கட்டமைப்புக்கு எதிராகவும் பாதாள உலகக் கும்பல்களுக்கு எதிராகவும் அரசாங்கம் முன்னெடுத்த திட்டவட்டமான விட்டுக்கொடுப்பற்ற நடவடிக்கைகளின் விளைவாக எதிர்க்கட்சிகள் உஷாரடைந்து விட்டன.

இது ஒரு கட்டத்தில் தங்களுடைய மடியில் கை வைக்கும் என்ற நிலை தோன்றிய போது அவர்கள் ஒன்றாகினார்கள்.ஏனென்றால் பாதாள உலகம், போதைப் பொருள் வாணிபம், ஊழல்வாதிகள் என்று எல்லாவிதமான குற்றச் செயல்களையும் செய்துவிட்டு இனவாதத்தின் பின் பதுங்கும் அரசியல்வாதிகள் எதிர்க்கட்சிகள் மத்தியில் அதிகம்.அதன் பொருள்,ஜேவிபி இனவாதம் இல்லாதது, பரிசுத்தமானது என்பது அல்ல. ஆனால் கடந்த பல தசாப்தங்களாக இலங்கைத்  தீவை  ஆட்சி செய்து வந்தது எதிர்க்கட்சிகளில் இருப்பவர்கள்தான். தேசிய மக்கள் சக்தி ஆட்சியைக் கைப்பற்றியது கடந்த ஆண்டில்தான். எனவே ஆட்சியில் இருந்த அரசாங்கங்கள் என்ற அடிப்படையில் இந்த ஆட்சிக்கு முன் நிகழ்த்த பல குற்றச் செயல்களுக்கும் எதிர்க்கட்சிகள்தான் அதிகமாகப் பொறுப்பேற்க வேண்டி இருக்கும்.அரசாங்கத்தின் ஊழல் மற்றும் போதைப்பொருள் வாணிபத்திற்கு எதிரான நடவடிக்கைகள் எதிர்க்கட்சி அரசியல்வாதிகளை நெருங்கத் தொடங்கியதன் விளைவாகவும் முன்னாள் ஜனாதிபதியாகிய ரணிலைப் போன்றவர்கள் கைது செய்யப்படும் ஒரு நிலைமை தோன்றிய பின்னரும் எதிர்க்கட்சிகள் உஷாரடைந்தன.அதன் விளைவுதான் நுகேகொட பேரணி.

பேரணி நடக்கவிருந்த பாதைகளில் மின்கம்பங்களில் ஆங்காங்கே புற் கட்டுக்கள் கட்டப்பட்டிருந்தன.அதன் பொருள் மாடுகள் அதாவது மந்தைகள் அந்த வழியாக வரப்போகின்றன என்பதுதான்.மேலும் கூட்டத்தில் ஏற்பாட்டாளர்கள் உயரத்தில் பொருத்தி வைத்திருந்த ஒலிபெருக்கிகளையும் போலீசார் அகற்றினார்கள்.அப்பொழுது உயர்தரப் பரீட்சை நடந்து கொண்டிருந்தது. கடந்த திங்கட்கிழமைதான் அந்த பரீட்சை முடிந்தது. எனவே பரீட்சையில் படிக்கும் பிள்ளைகளுக்கு அந்த ஒலி பெருக்கிகள் தொந்தரவாக இருக்கும் என்ற ஒரு பொருத்தமான காரணத்தை போலீசார் கூறினார்கள்.

எனினும்,எல்லாவற்றையும் தாண்டி எதிர்க் கட்சிகள் ஆயிரக்கணக்கானவர்களை அந்த இடத்துக்கு கொண்டுவந்தன.கடந்த 14 மாதங்களிலும் எதிர்க் கட்சிகள் தங்களை அவ்வாறு ஒருங்கிணைத்தது இதுதான் முதல் தடவை.ரணில் விக்கிரமசிங்க அங்கே இருக்கவில்லை. அவர் ஆர்ப்பாட்டம் நடந்த அன்று இந்தியாவிற்குச் சென்று விட்டார்.ஆனால் அவருடைய கட்சிக்காரர்கள் கலந்து கொண்டார்கள். மஹிந்த வரவில்லை. அவர்களுடைய எதிர்கால வாரிசு நாமல் முன்னணியில் நின்றார். ஒரு வகையில் அது நாமலின் எழுச்சியைக் காட்டிய கூட்டம். அதை மனோ கணேசன் தனது  முகநூல் பக்கத்தில் “சஜித் பலத்தைக் காட்டும்வரை நாமல்தான் எதிர்க்கட்சித் தலைவர்” என்று  எழுதியிருந்தார்.

எதிர்க்கட்சிகள் மத்தியில் தலைமைத்துவப் போட்டி உண்டு. அதுதான் கடந்த ஆண்டு தேசிய மக்கள் சக்தி பெற்ற பிரம்மாண்டமான வெற்றிகளுக்கு ஒரு காரணம். இப்பொழுதும் அதே போட்டி உண்டு. நுகேகொட பேரணியில் நாமல் முன்னிலைக்கு வந்து விட்டார்.அவருடைய தோற்றம்,நடை உடை பாவனை எல்லாவற்றிலும் அவ்வாறு எதிர்க்கட்சிகளுக்கு தலைமை தாங்கும் ஆர்வம் தெரிந்தது. ஆனால் தகப்பனைப் போல தோற்ற மிடுக்கும் சன்னமான குரலும் அவருக்கு இல்லை.

அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் திரண்டிருக்கின்றன என்பதுதான் உண்மை. அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அவர்களை ஒன்று திரளுமாறு நிர்பந்தித்திருக்கிறது என்பதுதான் உண்மை. ஆனால் எதிர்க்கட்சிகள் தாங்கள் ஒரு பலமான அணியாகத் திரள வேண்டும் என்று திட்டமிட்டு இதைச் செய்யவில்லை. ஏனென்றால் இப்பொழுதும் அங்கே தலைமைப் பிரச்சினை உண்டு. யாரை யார் தலைவராக ஏற்றுக்கொள்வது என்ற “ஈகோ”க்கள் உண்டு. அரசாங்கத்துக்கு எதிரான தற்காப்புக் கூட்டுத்தான் அது.எதிர்காலத்தில் ஒன்றாக நின்று ஆட்சி அமைக்கும் கூட்டு என்று கூற முடியாது.

திருகோணமலை புத்தர் சிலையை வைத்து இனவாதத்தைக் கிளப்பி சேகரித்த சனத்தொகையும் அங்கே உண்டு.அந்தப் புத்தர் சிலை விடயத்தில் பெரும்பாலான எதிர்க்கட்சிகள் இனவாதத்தைக் கக்கின.அதில் சஜித் முக்கியமானவர்.அந்தச் சிலை விடயம் எதிர்க்கட்சிகளை தமிழ் மக்களுக்கு அம்பலப்படுத்தி விட்டது.

ஆனால் திருகோணமலை புத்தர் எதிர்க்கட்சிகளை மட்டும் அம்பலப்படுத்தவில்லை. அரசாங்கத்தையும் சேர்த்து அம்பலப்படுத்தி விட்டார். சட்டவிரோதமாக நிறுவப்பட்ட ஒரு ரெஸ்ரோரண்டை அகற்றாமல் விடுவதற்காக உள்ளே கொண்டுவரப்பட்ட புத்தரை அரசாங்கம் முதலில் தெளிவான முடிவெடுத்து அகற்றியது.ஆனால் இனவாதத்துக்கு பயந்து பின்வாங்கியது.அந்த விடயத்தில் சிலையை மீண்டும் அதே இடத்தில் வைத்ததன்மூலம் அரசாங்கமும் தமிழ் மக்கள் மத்தியில் அம்பலப்பட்டு விட்டது.

நுகேகொட பேரணியில்  தென்பகுதியில் உள்ள தமிழர்கள் உதிரிகளாகக் கலந்து கொண்டார்கள்.ஆனால் வடக்குக்  கிழக்கிலிருந்து தமிழ்த் தேசியக் கட்சிகள் எவையும் அங்கே போகவில்லை. தமிழ் மக்கள் அந்த ஆர்ப்பாட்டத்தை தங்களுக்கு உரியதாகக் கருதவில்லை என்பதைத்தான் அது காட்டியது.

நாமல் ராஜபக்ச சில வாரங்களுக்கு முன் சுமந்திரனை சந்தித்து தமது ஆர்ப்பாட்டத்திற்கு ஆதரவு தருமாறு கேட்டிருந்தார். ஆனால் தமிழரசுக் கட்சி அதற்கு மறுத்துவிட்டது.மறுக்கத்தான் வேண்டும். ஏனென்றால் திருமலைச் சிலை விவகாரம் நாமலையும் ஏனைய எதிர்க்கட்சிகளையும் அம்பலப்படுத்தியிருந்த ஒரு பின்னணியில்,அந்த ஆர்ப்பாட்டத்தில் தமிழரசுக் கட்சி கலந்து கொண்டு இருந்திருந்தால் அது தமிழ் மக்களைக் காட்டிக் கொடுப்பதாக இருந்திருக்கும்.

நுகேகொட   பேரணியில் தமிழ் மக்கள் கலந்து கொள்ளாமல் விட்டதற்கு காரணம் அரசாங்கத்தை தமிழ் மக்கள் எதிர்க்க விரும்பவில்லை என்பதனால் அல்ல.தமிழ் மக்கள் எதிர்க்கட்சிகளை ஆதரிக்க விரும்பவில்லை என்பதனால்தான். இதில் எதிர்க்கட்சிகளுக்கு கூர்மையான ஒரு செய்தி உண்டு. திருமலை புத்தர் சிலையின் பின்னணியில் தமிழ் மக்கள்  எதிர்க்கட்சிகளின் மீது கோபமாக இருக்கிறார்கள்.

ஆனால் இதே எதிர்க்கட்சிகளில் ஒன்று ஆகிய ஐக்கிய மக்கள் சக்திக்கு அதாவது சஜித்துக்கு ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று சுமந்திரன் கேட்டிருந்தார். இப்பொழுது சஜித் யார் என்பதை திருமலைப்  புத்தர் காட்டிவிட்டார்.தமிழ் வாக்குகளை சஜித்துக்குச் சாய்த்துக் கொடுத்த சுமந்திரனையும் அவர் அம்பலப்படுத்தி விட்டார். கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்தை ஆதரித்த சுமந்திரன்  கிட்டத்தட்ட 14 மாத கால இடைவெளிக்குள் நுகேகொட பேரணியில் சஜித்தை  ஆதரிக்கவில்லை.

நுகேகொட ஆர்ப்பாட்டம் நடக்கவிருந்த ஒரு காலச் சூழலில்,கடந்த புதன்கிழமை, தமிழரசுக் கட்சி ஜனாதிபதியை சந்தித்தது. அந்த சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சிதான்.அந்தச் சந்திப்பில் இனப் பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளும் உட்பட பல்வேறு விடயங்கள் பேசப்பட்டிருக்கின்றன. குறிப்பாக, ஒரு புதிய யாப்பை உருவாக்கும் விடயத்தில் ஏற்கனவே 2015ல் இருந்து தொடங்கி 2019வரையிலும் உரையாடப்பட்ட இடைக்கால வரைபை முழுமைப்படுத்துவது என்று அங்கே உரையாடப்பட்டிருக்கிறது. சுமந்திரன் தனது  “எக்ஸ்” பக்கத்தில்  அதுதொடர்பாகப் பதிவிட்டிருந்தார்.அதாவது ரணில்-மைத்திரி அரசாங்கத்தின் காலத்தில் உருவாக்கப்பட்ட “எக்கிய ராஜ்ய” என்று அழைக்கப்படுகின்ற அந்த இடைக்கால வரைபை அதன் அடுத்தடுத்த கட்டங்களுக்கு வளர்த்துச் சென்று ஒரு புதிய யாப்பைத் தயாரிப்பதுதான் சுமந்திரனின் நோக்கமாகத் தெரிகிறது.

ஆனால், கஜேந்திரகுமார் அது ஒற்றை ஆட்சிப் பண்புடைய ஒரு தீர்வு என்று விமர்சிக்கின்றார். அனுர அரசாங்கத்தோடு தமிழரசுக் கட்சி பேசவிருக்கும் தீர்வுத் திட்டம் அதுதானா என்ற கேள்வி இப்பொழுது வலிமையாக மேலெழுகிறது.

அவ்வாறு பேசப்பட்ட காலம் எதுவென்று பார்த்தால், நுகேகொட ஆர்ப்பாட்டம் நடப்பதற்கு சில நாட்களுக்கு முன்.அதன்மூலம் தமிழரசுக் கட்சி எதிர்க்கட்சிகளை நோக்கி தான் வரவில்லை என்பதனை சூசகமாக தெரிவிக்க முற்பட்டதா? அந்தச் சந்திப்புக்கான அழைப்பை விடுத்தது தமிழரசுக் கட்சி. ஆனால் சந்திப்புக்கான நேரத்தை ஒதுக்கியது அரசாங்கம்.நுகேகொட ஆர்ப்பாட்டத்திற்குச் சில நாட்களுக்கு முன்னதாக அவ்வாறு நேரத்தை ஒதுக்கிக் கொடுத்து,அந்தச் சந்திப்பின் மூலம்,அரசாங்கம் எதிர்க்கட்சிகளுக்கு மறைமுகமாக ஒரு செய்தியை வெளிப்படுத்த விரும்பியிருக்கலாம். தமிழரசுக் கட்சியும் அவ்வாறு விரும்பியதா?

கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மக்கள் சஜித்தை ஆதரிக்க வேண்டும் என்று கேட்ட அதே சுமந்திரன் இப்பொழுது அனுரவோடு சேர்ந்து  தீர்வுக்கான பேச்சுக்களில் இறங்கப் போகிறாரா?கடந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் சஜித்துக்கு வாக்களிக்குமாறு தமிழ் மக்களைக் கேட்டது தவறு என்பதனை திருமலை புத்தர் நிரூபித்து விட்டார்.அன்றைக்கு சஜித்துக்கு வாக்களித்த தமிழ் மக்களை சஜித் திருமலை புத்தர் விடயத்தில் ஏமாற்றி விட்டார்.

நுகேகொட பேரணியில் தமிழ்மக்கள் விலகி நின்றமை அரசாங்கத்திற்குச் சாதகமானது.ஆனால் அதனை இனப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் அரசாங்கத்தின் முயற்சிகளை அல்லது திருமலை புத்தர் சிலை விடயத்தில் அரசாங்கத்தின் தளம்பலான முடிவுகளை தமிழ் மக்கள் ஏற்றுக்  கொண்டதாக வியாக்கியானம் செய்ய முடியாது.

https://athavannews.com/2025/1453627

திருகோணமலை புத்தர் சிலை சர்ச்சை - பௌத்த விகாரையை தமிழர்கள் எதிர்ப்பது ஏன்?

2 months 1 week ago

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, திருகோணமலையில் பௌத்த விகாரை நிர்மாணிப்பது தொடர்பாக பாரிய சர்ச்சை எழுந்துள்ளது.

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கை திருகோணமலை நகரிலுள்ள கடற்கரையோரத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட விவகாரம், நாட்டில் இன்றும் பாரிய சர்ச்சையை தோற்றுவித்துள்ளது.

பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்திய நிலையில், அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளாலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் திருகோணமலை நகரம் அமைந்துள்ளது.

திருகோணமலை நகரில் கடந்த 16ம் தேதி காலை கரையோர பகுதியில் திடீரென ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் உள்ளிட்ட சில பௌத்த பக்தர்கள் விகாரையொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டியிருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, அந்த இடத்தில் புத்தர் சிலையொன்று பிரதிஷ்டை செய்யப்பட்ட நிலையில், இந்த விடயம் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

திருகோணமலை கரையோர பகுதியில் நிர்மாணிக்கப்படுகின்ற விகாரையானது சட்டவிரோதமானது என, கரையோர பாதுகாப்பு திணைக்களம், போலீஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்திருந்தனர்.

அத்துடன், இந்த விகாரை நிர்மாணிக்கப்படுவதற்கு கரையோர பாதுகாப்பு திணைக்களம் மாத்திரமன்றி, தமிழர்களும் கடும் எதிர்ப்பை வெளியிட்டனர்.

'தமிழர் பகுதிகளில் சிங்கள ஆக்கிரமிப்புகளை மேற்கொள்ளும் நோக்கில்' பௌத்த விகாரைகள் நிர்மாணிக்கப்பட்டு வருவதாக, தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்திருந்தனர்.

இந்த நிலையில், கரையோர பாதுகாப்பு திணைக்களம் செய்த முறைப்பாடு குறித்து, போலீஸ் அதிகாரிகள், விகாரையின் விகாராதிபதிக்கு (தலைமை பிக்கு) அறிவித்திருந்தனர்.

எனினும், தமது நடவடிக்கையானது சட்டவிரோதமானது அல்லவெனவும், தம்மால் விகாரையின் நிர்மாணப் பணிகளை நிறுத்த முடியாது எனவும் விகாரையின் பிக்குகள் போலீஸாருக்கு தெரிவித்திருந்தனர்.

அதனைத் தொடர்ந்து, இந்த விகாரை நிர்மாணிக்கப்படுகின்றமையானது சட்டவிரோதமானது என தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட பலர் அரசாங்கத்திற்கு அறிவித்திருந்தனர்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

இந்த நிலையில், திருகோணமலையில் நிர்மாணிக்கப்பட்டு வந்த பௌத்த விகாரையில் பிரதிஷ்டை செய்யப்பட்டிருந்த புத்தர் சிலையை போலீஸார் அங்கிருந்து அப்புறப்படுத்த அதேநாள் இரவு நடவடிக்கை எடுக்கப்பட்டது.

போலீஸார் குவிக்கப்பட்டு, புத்தரின் சிலை அங்கிருந்து அகற்றப்பட்டதுடன், அந்த புத்தர் சிலை திருகோணமலை கரையோர போலீஸ் நிலையத்திற்கு எடுத்து செல்லப்பட்டது.

இதன்போது பௌத்த பிக்குகளுக்கும், போலீஸாருக்கும் இடையில் கடும் வாக்குவாதம் இடம்பெற்றதுடன், கைக்கலப்புகளும் இடம்பெற்றிருந்தன.

இந்த கைகலப்பில் இரண்டு பௌத்த பிக்குகள் காயமடைந்து, மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இந்த சம்பவம் நாட்டில் பாரிய சர்ச்சையை தோற்றுவித்திருந்தது.

புத்தரின் சிலையை கைது செய்த முதல் ஆட்சியாளராக தற்போதைய ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க வரலாற்றில் இடம்பிடித்துள்ளதாக பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

புத்தர் சிலை கைது செய்யப்படுவதானது, புத்த பெருமானே கைது செய்யப்பட்டமைக்கு சமமானது என அனைத்து பௌத்த மக்களும் கவலையடைந்த ஒரு சம்பவமாகும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

படக்குறிப்பு, புத்தர் சிலையை போலீஸார் எடுத்துச் சென்றபோது பௌத்த பிக்குகளுக்கும் போலீஸாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது

ஏன் புத்தர் சிலையை போலீஸார் எடுத்து சென்றனர்?

திருகோணமலை பகுதியில் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என கிடைக்கப் பெற்ற தகவலுக்கு அமையவே தாம் புத்தர் சிலையை அப்புறப்படுத்தியதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

நாடாளுமன்றத்தில் விசேட உரையொன்றை நிகழ்த்திய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

''பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படுத்தப்படும் என்று போலீஸாருக்கு தகவல் கிடைத்தது. அதன்படி, அந்த இடத்திலிருந்து புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டது." என தெரிவித்தார்.

மீண்டும் அந்த புத்தர் சிலையை அந்த விகாரையில் பிரதிஷ்டை செய்யுமாறு தாங்கள் போலீஸாருக்கு ஆலோசனை வழங்கியதாக கூறிய அவர், அன்றைய தினத்திலிருந்து முறையான பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

"அந்த இடத்தில் சிற்றுண்டிசாலையொன்று நடத்திச் செல்லப்படுவதாக முன்னர் கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் போலீஸ் நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவு செய்யப்பட்டிருந்தது. அந்த விடயம் தொடர்பில் நீதிமன்ற நடவடிக்கைகளை எடுக்க போலீஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர். இதுகுறித்து நீதிமன்றத்திற்கு விடயங்கள் தெளிவுப்படுத்தப்படவுள்ளன. நீதிமன்றத்தினால் வழங்கப்படும் தீர்ப்புக்கு அமைய நடவடிக்கை எடுக்கப்படும்.'' என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்தார்.

எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SJB MEDIA

படக்குறிப்பு, எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ

எதிர்கட்சிகள் வெளியிட்ட எதிர்ப்பு

புத்தர் சிலை அப்புறப்படுத்தப்பட்டு, பதற்றம் ஏற்பட்டமை குறித்து எதிர்கட்சிகள் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றன.

இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருக்கும் நபர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே இதனை பார்ப்பதாக எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார்.

''இவ்வாறு செயற்படுவதன் ஊடாக இனவாதத்தை தூண்டுவதற்கு பார்த்துக்கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான பிரவேசத்தை வழங்கும் நடவடிக்கையாகவே பார்க்க முடிகின்றது. நள்ளிரவில் போலீஸாரை அனுப்பி விகாரையொன்றுக்குள் நடைபெறுகின்ற அபிவிருத்தி பணிக்கு போலீஸார் எப்படி தலையீடு செய்வது?" என அவர் கேள்வியெழுப்பினார்.

இந்த விடயம் தொடர்பில் கருத்துக்களை முன்வைக்க நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர முயற்சித்த போது, அதற்கு சபாநாயகர் சந்தர்ப்பத்தை வழங்காதமையானது, தவறான செயற்பாடு என கூறிய சஜித், ஜனநாயகத்தை இல்லாது செய்வதற்கு சபாநாயகர் ஆசனத்திலிருந்து செய்யும் இந்த நடவடிக்கையை தயவு செய்து நிறுத்துங்கள் என குறிப்பிட்டார்.

புத்தர் சிலை அகற்றப்பட்ட விவகாரத்தை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம் என்பதுடன், அரசாங்கம் இதற்கு தலையீடு செய்து நியாயத்தை பெற்றுக்கொடுக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ நாடாளுமன்றத்தில் அரசாங்கத்திடம் கேட்டுக்கொண்டுள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SLPP MEDIA

படக்குறிப்பு, நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ

''புத்தர் சிலையின் பாதுகாப்புக்காக பிரதிஷ்டை செய்யப்பட்ட சிலை கொண்டு செல்லப்பட்டதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவிக்கின்றார். பாதுகாப்புக்காக புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்படும் போது, போலீஸாரின் தாக்குதலுக்கு இலக்காகி, இரண்டு பௌத்த பிக்குகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். புத்தர் சிலையின் பாதுகாப்புக்காகவா புத்தர் சிலை வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது பிக்குகளின் பாதுகாப்புக்காகவா வெளியில் கொண்டு செல்லப்பட்டது. அல்லது போலீஸாரிடமிருந்து பாதுகாத்துக்கொள்வதற்காகவா என்று கேள்வி எமக்குள் எழுகின்றது." என்றார் நாமல் ராஜபக்ச.

1951ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 2004ம் ஆண்டு புனித பூமியாக பிரகடனப்படுத்திய கிழக்கு மாகாணத்தின் மிகவும் பழைமை வாய்ந்த பௌத்த விகாரையாக இந்த விகாரை காணப்பட்டது எனக்கூறிய நாமல், "இதனை இனவாத பிரச்னையாக மாற்ற வேண்டாம். நீங்கள் தலையீடு செய்து, அரசாங்கத்தின் நிலைப்பாட்டை குறிப்பிட்டு இரண்டு தரப்பினரையும் அழைத்து கலந்துரையாடல்களை நடத்துங்கள். அதனூடாக நியாயத்தை பெற்றுக்கொடுங்கள். இது இனவாத பிரச்னையாக மாறிவிட வாய்ப்புள்ளது. இதற்கு தலையீடு செய்யுமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கின்றேன்'' என கூறினார்.

யுத்தம் இடம்பெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த சின்னங்களை விடுதலை புலிகள் அழிக்கவில்லை என்றும், சட்டவிரோதமான செயற்பாடுகளுக்கு இடமளிக்கக்கூடாது எனவும் இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SHANAKIYAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராசமாணிக்கம் சாணக்கியன்

''பௌத்த மதத்திற்கு முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளதாக எதிர்கட்சித் தலைவர் தெரிவித்திருந்தார். பௌத்த மதமோ, எந்த மதமோ சட்டவிரோத செயற்பாடுகளுக்கு அனுமதி வழங்கக்கூடாது. அது நானாக இருந்தாலும் சரி, பௌத்த துறவியாக இருந்தாலும் சரி. திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமான விகாரை புதிதாக உருவெடுத்தது. இது சட்டவிரோதமானது, நிறுத்துவார்கள் என நம்பியிருந்தோம். சிலையை பாதுகாப்பதற்காக அகற்றப்பட்டதாக அமைச்சர் கூறியிருந்தார். 30 வருடம் யுத்தம் நடைபெற்ற காலத்தில் கூட வடக்கு கிழக்கில் பௌத்த மதத்தோடு சம்பந்தப்பட்ட ஒரு சின்னம் கூட விடுதலைப் புலிகளினால் கூட அழிக்கப்படவில்லை. தமிழ் மக்கள் இரவோடு இரவாக சென்று சிலைகளை உடைக்கின்ற மக்கள் அல்ல'" என்றார் ராசமாணிக்கம்.

திருகோணமலை சம்பவத்தின் ஊடாக தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும், முந்தைய அரசாங்கத்தை போலவே ஒரு இனவாத, சிங்கள பௌத்த பேரினவாத அரசாங்கம் என்பதை நிறுவியுள்ளது என இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவொன்றை வெளியிட்டுள்ளார்.

அமைச்சர் ஆனந்த விஜயபால, திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

படக்குறிப்பு, அமைச்சர் ஆனந்த விஜயபால

''அமைச்சர் ஆனந்த விஜயபாலவும் தேசிய மக்கள் சக்தி அரசும் பேரினவாத சக்திகளின் அழுத்தங்களுக்கு ஏற்ப செயல்படுவதை காண்கிறோம். அமைச்சரின் கட்டளைப்படி திருகோணமலை கடற்கரையில் சட்டவிரோதமாக அமைக்கப்பட்ட சிலை போலீஸாரினால் அகற்றப்பட்ட போது, அரசாங்கம் இனவாத எண்ணமில்லாமல் சரியாக நடந்து கொள்கிறது என்று சிலர் நினைத்தார்கள். ஆனால் அப்படியல்ல என்பதை சில மணி நேரத்துக்குள்ளேயே அமைச்சர் நாடாளுமன்றத்தில் வெளிப்படுத்தினார்." என்றார் சுமந்திரன்.

இலங்கை தமிழரசு கட்சி, பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன், திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், SUMANTHIRAN

படக்குறிப்பு, இலங்கை தமிழரசு கட்சியின் பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன்

பழைமை வாய்ந்த விகாரை என தகவல்

திருகோணமலையில் நிர்மாணிப்பதற்காக அடிக்கல் நாட்டப்பட்ட குறித்த இடமானது, பழமையான விகாரைக்கு சொந்தமான ஆவணங்களை கொண்டுள்ள விகாரை என விகாரையின் நிர்மாணப் பணிகளை மேற்கொள்ளும் பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை என்ற பெயரில் இந்த விகாரை பதிவு செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

திருகோணமலை கோட்டை வீதியிலுள்ள இந்த விகாரையானது, 1951ம் ஆண்டு புத்தசாசன திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளமைக்கான ஆவணங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

இந்த இடத்தில் நடத்தி செல்லப்பட்ட பௌத்த அறநெறி பாடசாலை, சுனாமி அனர்த்தத்தில் அழிவடைந்துள்ளதாக கூறப்படுகின்றது.

இவ்வாறு அழிவடைந்த இடத்திலேயே புதிதாக தாம் விகாரையை நிர்மாணிக்க நடவடிக்கை எடுத்து வருவதாக நிர்மாணப்பணிகளை ஆரம்பித்துள்ள பௌத்த பிக்குகள் தெரிவித்துள்ளனர்.

இந்த விகாரைக்கு மஹிந்த ராஜபக்ஸ ஜனாதிபதியாக இருந்த காலத்தில், அதற்கான உறுதிப் பத்திரத்தை வழங்கியுள்ளதாகவும் பிக்குகள் கூறி வருகின்றனர்.

இந்த நிலையில், குறித்த இடத்தில் தனிநபர் ஒருவரினால் விகாரையின் அனுமதியுடன் உணவகமொன்று அமைக்கப்பட்டு நடத்திச் செல்லப்படுகின்றது. இந்த உணவகத்தின் ஊடாக கிடைக்கின்ற வருமானத்தில் 25 வீதத்தை விகாரைக்கு வழங்க வேண்டும் என்ற நிபந்தனையின் அடிப்படையிலேயே இந்த உணவகம் நடத்திச் செல்லப்படுகின்றது.

கரையோர பாதுகாப்பு திணைக்களத்திற்கு சொந்தமான இடத்தில் உணவகம் சட்டவிரோதமாக அமைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தே, உணவகத்தை முதலில் அகற்றுமாறு கூறப்பட்டிருந்தது. எனினும், தாம் உரிய அனுமதியை பெற்று இந்த உணவகத்தை நடத்தி வருவதாக உணவகத்தின் உரிமையாளர் குறிப்பிட்டிருந்தார்.

உணவகத்தை அகற்றுவதற்கு கால அவகாசம் வழங்கப்பட்டிருந்த பின்னணியிலேயே, திடீரென விகாரையை நிர்மாணிக்கும் நோக்கில் புத்தர் சிலையொன்று அந்த இடத்தில் பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

திருகோணமலை,  புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், ANANATHA WIJAYAPALA

மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்ட புத்தர் சிலை

திருகோணமலை போலீஸாரினால் தமது பொறுப்புக்கு எடுக்கப்பட்ட புத்தர் சிலை, அடுத்த தினமே போலீஸ் பாதுகாப்புக்கு மத்தியில் போலீஸாரின் கைகளிலேயே கொண்டு வரப்பட்டு மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

பௌத்த சமய வழிபாடுகளுக்கு அமைய இந்த புத்தர் சிலை மீண்டும் பிரதிஷ்டை செய்யப்பட்டது.

அப்போது அங்கு ஒன்று திரண்ட பௌத்த பிக்குகள் மற்றும் பௌத்த மக்கள் தமது சமய நடைமுறைகளை பின்பற்றி, போலீஸாரின் ஒத்துழைப்புடன் புத்தர் சிலையை மீண்டும் பிரதிஷ்டை செய்தனர்.

நீதிமன்றம் என்ன சொல்கின்றது?

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரை தொடர்பில் எழுந்த பதற்ற நிலைமையை, சமாதானமான முறையில் தீர்த்துக்கொள்ள வேண்டும் என மேன்முறையீட்டு நீதிமன்றம் நவ. 19 அன்று தெரிவித்தது.

இந்த மனு மீதான விசாரணைகளை டிசம்பர் மாதம் 16ம் தேதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளவுள்ளதாகவும் நீதிமன்றம் அறிவித்தது.

விகாரையின் விகாராதிபதி திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரரினால் மனுவொன்று மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

திருகோணமலை ஸ்ரீ சம்புத்த ஜயந்தி போதிராஜா விகாரையின் ஒரு பகுதியை அப்புறப்படுத்துமாறு கரையோர பாதுகாப்பு திணைக்களத்தினால் விடுக்கப்பட்டுள்ள அறிவிப்பை, செயற்படுத்துவதனை தவிர்க்கும் வகையில் கட்டளையொன்றை பிறப்பிக்குமாறு கோரியே இந்த மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விசாரணை நிறைவடையும் வரை, பிரதேசத்தின் அமைதியை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் குழாம், உரிய திணைக்களங்களுக்கு அறிவித்துள்ளது.

ஜனாதிபதி என்ன சொல்கின்றார்?

திருகோணமலையில் புத்தர் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்ட இடத்தில் மதஸ்தலமொன்றை அமைப்பதைப் போன்றே, அதற்குப் பின்னால் மற்றொரு விவகாரமும் இருப்பது தெளிவாக தெரிகின்றது என ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.

குறித்த இடத்தில் பிக்குவுக்கு சொந்தமான காணியொன்று இருந்த போதிலும், மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடமொன்று இருக்கவில்லை எனவும் அவர் இதன்போது குறிப்பிட்டிருந்தார்.

திருகோணமலை, புத்தர் சிலை பிரதிஷ்டை, இலங்கை, சிங்களர்கள், இலங்கை தமிழர்கள், மதம், பெளத்த மதம், பௌத்த பிக்குகள்

பட மூலாதாரம், RAMESH

''இந்த புத்தர் சிலை பாதுகாப்புக்காகவே போலீஸுக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீஸ் நிலையத்திலுள்ள பதிவேட்டில் தெளிவாகவுள்ளது. புத்தர் சிலை மீண்டும் அந்த இடத்திற்கு கொண்டு வரப்பட்டு, அதற்கு தேவையான பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இப்போது அந்த பிரச்னை நீதிமன்றத்தில் உள்ளது." என்றார் ஜனாதிபதி அநுர.

அதற்கு முன், அரசாங்க அதிபர் அலுவலகத்தில் ஒரு கலந்துரையாடல் நடைபெற்றதாகவும் 2014ம் ஆண்டு குறித்த காணிக்கு அனுமதிப்பத்திரம் வழங்கப்பட்டுள்ளது, ஆனால் தற்போது இந்த இடம் விகாரையாக அழைக்கப்பட்ட போதும் அண்மைக் காலங்களில் இந்த இடம் விகாரையாகப் பயன்படுத்தப்படாமல் ஒரு உணவகமாகவே பயன்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

"உணவகத்தில் சட்டவிரோத நிர்மாணப் பணிகள் இருப்பதால் சட்டவிரோத நிர்மாணங்களை அகற்ற கடலோர பாதுகாப்புத் திணைக்களம் உத்தரவு பிறப்பித்திருந்தது. அந்த உத்தரவுக்கு எதிராக சுற்றாடல் அமைச்சிற்கு மேல்முறையீடு செய்யப்பட்டது. இதை அகற்ற வேண்டும் என்ற நிலைப்பாட்டை சுற்றாடல் அமைச்சின் செயலாளர் தெரிவித்திருந்தார். அதன் பின்னர், போலீஸ் மற்றும் நகர அபிவிருத்தி அதிகார சபையுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலில், தங்களுக்கு மேலும் ஒரு வார கால அவகாசம் வேண்டும் என்றும், மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்குச் செல்ல எதிர்பார்ப்பதாகவும் பிக்குகள் தெரிவித்திருந்தனர். அந்தக் கால அவகாசம் 14ம் தேதியுடன்; முடிவடைந்தது." என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த இடத்தில் பிக்குவுக்கு உரித்தான காணியொன்று இருந்தது என்றும், ஆனால் மத அனுஷ்டானங்கள் மேற்கொள்ளும் இடம் இருக்கவில்லை, அதுதான் உண்மையான நிலைமை என கூறிய அநுர, "சம்பந்தப்பட்ட விவகாரத்திற்குப் பிறகு, அரசாங்க அதிபர் அலுவலகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலில், முறையான அளவீடு செய்ய, கடலோர பாதுகாப்புத் திணைக்களத்திற்கு வழங்கவும் விகாரைக்குச் சொந்தமான காணியை தனித்தனியாக பெயரிட்டு வழங்கவும் உடன்பாடு எட்டப்பட்டது." என்றார்.

ஆனால் பழைய வழக்கின் பிரகாரம் இங்கு புதிய நிர்மாணப் பணிகள் எதுவும் செய்யக்கூடாது எனவும் ஏற்கெனவே உள்ள நிர்மாணங்களை அகற்றக்கூடாது எனவும் நீதிமன்ற உத்தரவு வழங்கப்பட்டிருந்ததை சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, "நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப் பிறகு, விகாரைக்குச் சொந்தமான காணி ஒதுக்கப்பட்ட பிறகு தொடர்புடைய பணிகளை முன்னெடுக்கலாம் என்று கூறப்பட்டிருந்தது. அதன்படி, இந்தப் பிரச்சினை தற்போது நிறைவடைந்து விட்டது" என்றார்.

இனவாதத்திற்கு இனி ஒருபோதும் இடமளிக்கப்படாது எனவும் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க இதன்போது சுட்டிக்காட்டியிருந்தார்.

''சந்தர்ப்பவாதக் குழுக்களால் மேற்கொள்ளப்படும் தீ வைப்பு தான் தற்போது நடந்திருக்கிறது . ஆனால் நாங்கள் இனவாதத்தை அனுமதிக்க மாட்டோம். நான் மட்டுமல்ல, இந்த நாட்டின் பௌத்த மக்களும் அதை அனுமதிக்க மாட்டார்கள். இந்த நாட்டின் இந்து, முஸ்லிம் மற்றும் கத்தோலிக்க மக்கள் அதை அனுமதிக்க மாட்டார்கள். எனவே, இந்த நாட்டில் பழைய இனவாத நாடகங்களை யாராவது மீண்டும் உயிர்ப்பிக்க முயன்றால், அது இறந்த வரலாற்றில் மட்டுமே இருக்கும்.'' எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cx2n24qrwp7o

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும் — கருணாகரன் —

2 months 1 week ago

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

November 17, 2025

மாவீரர் நாள்: கேள்விகளும் பதிலும்

— கருணாகரன் —

ஈழப்போராட்டம் எதிர்பார்த்த விடுதலையையும் அரசியல் முன்னேற்றத்தையும் தராமல் முடிந்து விட்டது. இதுபெருந்துயரமே. ஆனால், அது உண்டாக்கிய நினைவலைகள் ஓயவில்லை. எந்தப்போராட்டத்திலும் இத்தகைய நிலையிருக்கும். அதில் ஒன்று, போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை ஈகம் செய்த வீரர்களின் நினைவாகும். அதைத்தமிழ் மக்கள் மாவீரர்நாளாக ஒவ்வாரு ஆண்டும் நவம்பர் 27 இல் நினைவு கூருகிறார்கள். 

இது தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கம் உருவாக்கிய மரபாகும். இந்த மரபு இன்று விடுதலைப்புலிகள் இயக்கம் நடைமுறையில் இல்லாத போதும், உலகங்கும் உள்ள தமிழ் மக்களால் தொடரப்படுகிறது. இது வியப்புக்குரிய ஒன்று. ஏனென்றால், குறித்த இயக்கம் இல்லாத போதும் அந்த இயக்கத்தினால் உருவாக்கப்பட்ட ஒரு நடைமுறையை மக்கள் பின்பற்றுகிறார்கள் – தொடருகிறார்கள். இதற்குக் காரணங்கள் சில உண்டு. 

1.  தங்களுடைய விடுதலைக்காகப் போரடி மரணத்தைத் தழுவிய போராளிகள் பற்றிய உணர்வும் மதிப்பும் மக்களிடம் நீங்காமல் உள்ளது. இதனால் அவர்களை எப்படியும் நினைவு கொள்ள வேண்டும் என்ற உணர்வு மக்களில் பெரும்பாலானவர்களிடம்உண்டு. மாவீரர் நிகழ்வுகளின் அடிப்படைகளில் ஒன்று இதுவாகும். 

2.  இன்னொரு தரப்பினருக்கு ஒரு வகையில் இதுவொரு குற்றவுணர்ச்சியும் கூட. வாழும் வயதில், தங்களுடைய இளமையை போராட்டத்துக்கென அர்ப்பணித்துச் செயற்பட்டு, இறுதியில் மரணத்தையும் தழுவிக் கொண்ட போராளிகளை நினைக்கும்போது, தங்களுக்காகப் போராடியவர்கள் சாவடைந்துவிட்டனர். ஆனால், நாமோ எல்லாவற்றைக் கடந்தும் வாழ்ந்து கொண்டிருக்கிறோம் என்ற குற்றவுணர்ச்சி இவர்களைக் குடைந்து கொண்டேயிருக்கிறது. இதை நீக்குவதற்கு குறைந்தபட்சம் இத்தகைய நினைவு கூருதல்களைச் செய்து தங்களை ஆற்றுப்படுத்திக் கொள்கிறார்கள். அதனால், குறைந்த பட்சம் இந்த நிகழ்விலேனும் பங்கு பற்றவேண்டும் என்று எண்ணுகிறார்கள். 

3.  போராடி மரணத்தைத்தழுவிக் கொண்டோரின் பெற்றோர், உறவினர், நண்பர்கள், சக தோழதோழியரால் நினைவு கொள்ளப்படுதல். இது கூடி வாழ்ந்தவர்களை அஞ்சலித்தல் என்பதாகும். இவர்கள் நேர்மையான முறையில் அஞ்சலி செலுத்துகின்றனர். 

4.  அரசியற் காரணங்களுக்காக அல்லது தங்களுடைய அரசியல் நலனுக்காக மாவீரர் என்ற பெயரைப் பயன்படுத்திக்கொள்வதும் மாவீரர் நாள் நிகழ்வுகளை நடத்துவதும் அதில் பங்கேற்பதுமாக நடப்பது. அதாவது, இவர்களால் மக்களுக்கெனத் தியாகம் எதையும் செய்யமுடியாது. தம்மை அர்ப்பணித்து தேசத்துக்கான பணிகளைச் செய்வதற்கும் இயலாது. மற்றவர்களின் தியாகங்களைக் கூறி, பிழைக்க மட்டுமே முடியும். அடிப்படையில் இது ஒரு பிழைப்புவாத அரசியலாகும். 

5.  இந்த மரணங்களின் பெறுமதி எத்தகையது? இப்படி நினைவு கொள்வதன் அடிப்படைகள் என்ன? இவ்வாறு நினைவு கொள்வதன் மூலமாக நாம் எடுத்துக் கொள்ளும் அரசியல் தொடர்ச்சியும் வளர்ச்சியும் எவ்வாறானது? நினைவுகொள்ளப்படும் (நினைவுகூரப்படும்) மறைந்த வீரர்களுடைய கனவுகளை எப்படி நிஜமாக்குவது- நிறைவேற்றுவது? உண்மையான நினைவுகூருதல் என்பது என்ன? அது எவ்வாறு அமைய வேண்டும்? என்பதைப் பற்றிய கேள்விகளோ சிந்தனையோ எதுவுமே இல்லாமல், ஏதோ நடக்கிறது. அதில் நாமும் சேர்ந்து நிற்போம் என்ற மாதிரிக் கலந்து கொள்வது.  

இதுபோலப் பல காரணங்கள் உண்டு. 

இவ்வாறான காரணங்களால்தான் வெவ்வேறு அணிகளால் அல்லது பல அணிகளால் மாவீரர்நாள் கொண்டாடப்படுகிறது – அனுஸ்டிக்கப்படுகிறது. அவரவர் தத்தமது தேவைகளுக்காக மாவீரர் நாளைக் கொண்டாடுகின்ற – அனுஸ்டிக்கின்ற – ஒரு நிலை உருவாகியுள்ளது. அதாவது இது உருவாகிய தேவையும் சூழலும்வேறு. இன்று பின்பற்றப்படும் தேவையும் சூழலும் வேறு. 

ஈழப்போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை மதித்துப் போற்றவேண்டும் என்றால், அவர்களுடைய கனவுகளுக்கும் நடைமுறைகளுக்கும் நேர்மையாக – விசுவாசமாக இருக்க வேண்டும். இதனுடைய அர்த்தம், அவர்கள் கொண்டிருந்த அதே அரசியலை இன்றும் மேற்கொள்வது என்பதல்ல. அது நடைமுறைச் சாத்தியமும் இல்லை. அந்த அரசியல் நிலைப்பாடு இன்றைய காலத்துக்குப் பொருத்தமானதும் அல்ல. ஆனால், தாம் தேர்வுசெய்கின்ற அல்லது பிரகடனப்படுத்துகின்ற அரசியலுக்காக – அதை நடைமுறைப்படுத்துவதற்காகத் தங்களை முழுமையாக அர்ப்பணிக்கும் பண்பாடும் உளநிலையும் துணிச்சலும் இருக்கவேண்டும். அதுவே நேர்மையானது. அதையே நாம், தம்மை அர்ப்பணித்த போராளிகளுக்குச் செய்கின்ற நேர்மையான மதிப்பார்ந்த அஞ்சலியாகும். அவ்வாறில்லை என்றால், அவர்களுடைய பெயரைவைத்துப் பிழைக்கும் பிழைப்புவாத அரசியலைச் செய்வதாகவே அமையும். 

இதேவேளை, அனைத்து இயக்கப்போராளிகளுக்கும் என ஒரு பொது நாளினைத் தெரிவுசெய்ய வேண்டும் என்ற கோரிக்கையையும் நாம் இந்த இடத்தில் இணைத்துப் பார்ப்பது பொருத்தமாகும். ஏனென்றால், ஈழ விடுதலைக்காகப் போராடி, மரணத்தைத் தழுவியவர்கள் அனைவரும் மதிப்புக்குரியவர்களே. அப்படியாயின் அவர்கள் அனைவரையும் உள்ளடக்கி, ஒரேநாளில் நினைவு கொள்ளலாம். அது விடுதலைப் புலிகளின் மாவீர்ர் நாளான நவம்பர் 27 ஆகவும் இருக்கலாம். அல்லது பிறிதொரு நாளாகவும் இருக்கலாம். அப்படி ஒரு பொதுநாள் ஏற்றுக்கொள்ளப்படுமாக இருந்தால், அது அரசியல் ரீதியாகவும் நினைவு கூரலின் அடிப்படையிலும் சிறியதொரு முன்னேற்றத்தைத் தரக் கூடும்.  

இதற்கும் அப்பால் இந்த நினைவுகூரல் இப்பொழுது – அதாவது எந்த இயக்கமும் ஆயுதம் தாங்கிய போராட்டத்தில் இல்லாத சூழலில் – நடப்பதற்கான காரணத்தை நாம் அர்த்தமாக்குவதாக இருந்தால், அதைக் குறித்து ஆழமாகச்சிந்திக்க வேண்டும். அப்படிச் சிந்திக்கும்போதுதான் இந்தச்சடங்குத்தனமான, சம்பிரதாயமான நினைவு கூரல் என்ற அர்த்தக் குறைவான நடைமுறை மாறி, புதியபோக்கொன்று அர்த்தபூர்வமாக விளையும். 

1989 இல் மாவீர்ர் நாளை விடுதலைப் புலிகள் இயக்கம் மரணத்த போராளிகளை நினைவுகூரும் விதமாக அனுஸ்டிக்கத்தொடங்கியது. அதற்காக அது தன்னுடைய அமைப்பிலிருந்து முதல் சாவடைந்த போராளியான சத்தியநாதன் என்ற சங்கர் மரணித்த நவம்பர் 27 ஆம் நாளையும் அந்த நேரத்தையும் தேர்வு செய்தது. அதுவே இப்பொழுது மாவீரர் நாளாக பின்பற்றப்பட்டு வருகிறது. 

விடுதலைப் புலிகளின் வளர்ச்சியும் அது தேர்ந்தெடுத்த ஆயுதப்போராட்ட வடிவமும் நேரடியாகவே ஒரு யுத்தத்தை விரித்தது. அப்படி விரிவடைந்த யுத்தம், பல நூற்றுக் கணக்கில் ஏன் சில சந்தர்ப்பங்களில் ஆயிரக்கணக்கிலான போராளிகளின் உயிரைக்கோரியது. இப்படி பல நூறு பேர் யுத்த களத்தில் மடியும்போது, அது மக்களிடையே ஒரு பெரும்கலக்கத்தையும் கேள்வியையும் எழுப்பக் கூடும். முடிவற்ற சாவு என்பது இழப்பு உணர்வையே ஏற்படுத்தக் கூடியது. அரசியல் தீர்வோ, யுத்த முடிவோ அல்லாமல் யுத்தம் நீண்டு செல்லும்போது இந்த உணர்வு மேலும் அதிகரிக்கும். அதுவும் ஈழத்தமிழர்கள் ஒரு சிறிய இனம்மட்டுமல்ல, சிறிய பிரதேசத்திற்குள்ளேயே வாழ்கின்றவர்கள் என்பதால் அதிகரித்த மரணங்களை போராட்டத்தில் சந்திக்கும் போது, அது மக்களின் உளநிலையில் குழப்பங்களையும் போராட்டத்தைத் தொடர்வதில் தயக்கத்தையும் உண்டாக்கும். இப்படியே இந்த யுத்தம் சென்றுகொண்டிருந்தால், கூடிச்செல்லும் மரணங்களைக் குறித்த கேள்விகளும் தயக்கமும் குழப்பமும் எழுந்து போராட்டத்துக்கு எதிரான மக்கள் அலையாக – இயக்கத்துக்க எதிரானபோக்காக மாறக் கூடும் என்று சிந்திக்கப்பட்டதன் விளைவே, மாவீரர்நாளாகும். 

களத்தில் மடிந்த போராளிகளை மகத்தான வீர்ர்களாக, வரலாற்று நாயகர்களாக, விடுதலையின் வித்துகளாக, மண்ணின் முத்துகளாக சித்திரிப்பதன் மூலம் உங்களுடைய பிள்ளையோ கணவரோ, சகோதரரோ வெறுமனே சாவைத் தழுவிக்கொள்ளவில்லை. அவர்களுடைய சாவுக்கொரு மகத்துவமும் பெறுமதியும் உண்டு. அதற்கொரு வரலாற்று முக்கியத்துவம் உள்ளது என்ற உணர்வு நிலையைக் கட்டமைப்பது. இதற்கு தமிழ் வரலாற்றிலிருந்து வீர மரணத்தைத் தழுவிக்கொள்ளும் பெருமிதப் பாடல்கள்(சங்க இலக்கியம்) உதவின. இதைப் புலிகளின் ஆதரவுப்புலவர்களும் பேராசிரியர்களும் தமிழ்மொழி அறிஞர்களும் நிறைவேற்றி உதவினர். புறநானூற்றுப் பாடல்களில் வரும் நடுகல் பண்பாடு, முறத்தினால் புலியை விரட்டிய பெண், நெற்றியில் வீரத்திலகமிட்டுப் போர்க்களத்துக்கு அனுப்பிய அன்னை போன்ற கதையாடல்கள் விடுதலைப்புலிகளின் ஊடகங்களில் மீட்டெடுத்துப் புதுமைப்படுத்தப்பட்டன. 

இதன்மூலம்  சாவடையும் போராளிகளுடைய உறவுகளுக்கும் தோழர்களுக்கும் ஒருவிதமாக ஆறுதலையும் அவர்கள் திருப்திப்பட்டுக் கொள்ளும் அளவுக்கு நிறைவையும் கொடுப்பதாக உணர வைப்பதாகும். அதாவது இந்தச் சாவுகளுக்கு அர்த்தமும் பெறுமதியும் உண்டென நம்பவைப்பது. 

இத்தகையதொரு வரலாற்றுக்காரணம், போராடும் அல்லது போர் செய்யும் தரப்புக்கு அவசியம் தேவை. இதையே இன்னொரு பரிமாணத்தில் – இன்னொரு கோணத்தில் அரசும்செய்தது. அது படைகளின் உளநிலையையும் அவர்களுடைய உறவுகளின் உளத்தை ஆற்றுப்படுத்தவுமாக. இதை இலங்கை அரசு மட்டுமல்ல, உலகளாவிய அளவில் அனைத்து அரசுகளும் செய்கின்றன. போரில் பலியாகும் வீரர்களைப் போற்றி, தேசிய வீரர்களாக மகத்துவப்படுத்தும் உத்தி இது. ஆனால், அந்த வீரர்கள் இன்னொரு தளத்தில் – எதிர்த்தரப்பில் – அழிவையும் சேதங்களையும் உண்டாக்கியோராகவே இருப்பர். இது பற்றித் தனியாகச் சிந்திக்கவேண்டும்.

இன்று சூழல் முற்றாகவே மாறி உள்ளது. இது போர் முடிந்து 15 ஆண்டுகளுக்கும் மேலாகிய சூழல். விடுதலையைப் பெற்றுத்தரும் என்று நம்பப்பட்ட போராட்டம் அதற்கு மாறான விதத்தில் பெரும் பின்னடைவோடு முடிந்திருக்கும் காலம். போராட்டத்தில் வெற்றிகிட்டும் என்ற எதிர்பார்ப்புகளும் நம்பிக்கைகளும் இல்லாதொழிந்த சூழல். என்பதால் இப்பொழுது புதிய அரசியல் முன்னெடுப்புகளும் அதற்கான வழிமுறைகளும் கண்டறியப்பட வேண்டிய நிலை. இந்தச் சூழலில், கடந்த காலத்தின் அரசியல் அடையாளங்களையும் நடைமுறைகளையும் பின்பற்றும்போது, அதை எத்தகைய அடிப்படையில் பின்பற்றுவது? அதனுடையபெறுமதி என்ன? அதற்கான இன்றைய தேவை என்ன? உணர்வைத் திருப்திப்படுத்தத்தான் நம்முடைய அரசியல் பயன்படுத்தப்படுகிறதா? அல்லது மரணித்த வீரர்களின் கனவுக்கு நேர்மையாகவும் விசுவாசமாகவும் அறிவுபூர்வமாகச் செயற்பட்டு, விடுதலையை நோக்கிய அரசியலை முன்னகர்த்துவதா? என்ற கேள்விகள் எழுகின்றன. 

இப்பொழுது மாவீரர் நிகழ்வுகளை நடத்தும்போது அல்லது போராட்டத்தில் உயிர்நீத்தவர்களை நினைவுகூரும்போது நாம் மனதிற்கொள்ள வேண்டியது, எதிர்கால அரசியலைக் குறித்த சிந்தனைகளை, வெற்றிகரமான செயல் வடிவமாக்குவது எப்படி என்பதாகவே இருக்க வேண்டும். அதையே ஒவ்வொரு போராளியும், மரணித்த ஒவ்வொரு வீரரும் தங்களுடைய கனவாக, விருப்பாகக் கொண்டிருந்தனர். 

அப்படியாயின் இதனை எவ்விதம் முன்னெடுப்பது? யார் முன்னெடுப்பது? என்றகேள்விகள் மேலும் எழுகின்றன. ஏனென்றால், ஒவ்வொருவரும் ஒவ்வொரு தரப்பும் தாம் சொல்வதே சரி. அதுவே நிஜம் என்றே முடிவற்று வாதிடப்படுகிறது. இந்தச் சூழலில் எத்தகைய நிலைப்பாட்டை, எத்தகைய கருத்து நிலையை ஏற்றுக் கொள்வது? அல்லது எந்தத் தரப்பை அங்கீகரிப்பது என்ற குழப்பம் மக்களுக்கு உண்டு. 

முதலில் நடைமுறை ரீதியாகச் சாத்தியப்படக் கூடிய அரசியலை முன்னெடுப்பவர்களையே மக்கள் ஆதரிக்க வேண்டும். அவர்களே வெற்றியின் நாயகர்கள். அவர்களே பொறுப்பான முறையில் சிந்திக்கிறார்கள். அவர்களுக்கே மக்களுடைய வலியும் சுமையும் புரிகிறது. அவற்றைக் குறித்து அவர்களே ஆழமாக உணர்கிறார்கள். அவர்களுக்கே பிராந்திய, சர்வதேச அரசியல், பொருளாதார அசைவுகளைப் பற்றிய – அவற்றின் யதார்த்தத்தைப் பற்றிய புரிதல் உண்டு. என்பதால் அவர்களே மரணித்த வீர்களின் கனவுக்கு விசுவாசமாக உள்ளனர். ஒப்பீட்டளவில் அவர்களே இதற்கு நேர்மையாளர்கள். இவற்றைப்பற்றி அக்கறைப் படாமல் வெறும் வார்த்தைகளால் மாண்டவீரர்களைப் போற்றிப்புகழ்பவர்கள், அந்த வீரர்களையும் அவர்களுடைய கனவையும் தமது அரசியல் நலக்கு மட்டுமே பயன்படுத்திக் கொள்கிறார்கள். எனவே இவர்கள் மாவீரர்களுக்கு, அவர்களை நினைவு கூருதலுக்கு எதிரானவர்களாகும். 

என்பதால், இந்தக் கயவர்களை எதிர்த்து, நடைமுறைச் சாத்தியமான வழிமுறையில் சிந்திப்பவர்களின் –  செயற்படுவோரின் வழியில்திரள்வதும் அந்தப் போக்கைப்பலப்படுத்துவதும் அவசியமாகும். அதுவே மாவீரர்களுக்கு அல்லதுபோராட்டத்தில் மரணத்ததோழர்களுக்கு செலுத்தும்உண்மையான அஞ்சலியாகும்.  

அதேவேளை மாவீர்ர்களைப் போற்றுகிறோம் என்று சொல்லிக்கொண்டு, அந்த வீரர்களின் கனவுக்கும் உணர்வுக்கும் மாறாக உள்ளோர் வியாபாரிகள், வரலாற்று மூடர்கள், எதிரிகள், சமூக – மக்கள் விரோதிகள் என்பதை மக்களுக்குத் தெளிவுறச் சொல்ல வேண்டும். இவர்களை எதிர்ப்பதும் அம்பலப்படுத்துவதும் மாவீரர்களுக்கு செய்கின்ற அஞ்சலி. அவர்களுக்குச் செலுத்துகின்ற மதிப்பாகும்.

என்பதால் வரலாறு, ஒரு மாறுதலுக்கான காலக்கட்டத்தில் நின்று இந்தக் கேள்விகளை – இந்தச் சிந்தனையை எழுப்புகிறது. நாம் என்ன செய்யப்போகிறோம்? என்ன செய்து கொண்டிருக்கிறோம் என்பதை.  

ஆகவே விடுதலைப் புலிகள் இயக்கம் இல்லாத சூழலில் அவர்களால் முன்னெடுக்கப்பட்டுவந்த மாவீரர் நாள், இன்றைய சூழலில் எத்தகைய பெறுமானத்துக்குரியது? அதனுடைய எதிர்கால விளைச்சல் என்னவாக இருக்கவேண்டும்? ஒரு காலகட்டத்து விடுதலைப் போராளிகள் என்று கருதப்பட்டோரின் கனவுகளுக்கு இன்று எத்தகைய மதிப்பு வழங்கப்படுகிறது? இதை நாம் எப்படிச் சீராக்கி முன்னெடுப்பது? என்பதே இந்த மாவீர்ர் நாள் சிந்தனைகளாகவும் நடைமுறைகளுக்கான கேள்விகளாகவும் இருக்கட்டும். 

https://arangamnews.com/?p=12440

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

2 months 1 week ago

கொள்கைகளுக்காக அஞ்சலிப்போம்

லக்ஸ்மன்

“எமது நாட்டு மக்களின் நீண்ட கால கனவாகக் காணப்பட்ட தேசிய ஒற்றுமையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்பு உருவாகியுள்ளது. அரசியல் ரீதியாக எமக்கு பல நிலைப்பாடுகள் இருக்கலாம். ஆனால், இனி இந்த நாட்டில் இனவாத அரசியலுக்கு
இடமில்லை.

எந்த விதத்திலும் மதவாதச் செயற்பாடுகள் எழுச்சி பெறுவதற்கும்
இடமளியோம். நாம் போதுமென்ற அளவில் இனவாதத்தினால் பாதிப்பைக் கண்டிருக்கிறோம்.

ஆறுகள் நிறைய கண்ணீரை கண்டிருக்கிறோம். இன்று நாட்டில் ஒவ்வொருவர் இடையிலும் குரோதமும் சந்தேகமும் அதிகளவில் வலுப்பெற்றுள்ளது.
பொருளாதாரம், ஜனநாயகம் என்று பல வகையில் இருக்கலாம்.

ஆனால், இனி எவரும் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக இனவாத, மதவாத போராட்டங்களை முன்னெடுக்க இடமளியோம் என்று உறுதியளிக்கிறேன்” என்று ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க தனது முதலாவது அக்கிராசன உரையில்  தெரிவித்திருந்தார்.

அது அவருடைய பொது நிலைப்பாடாகும். ஆனால், அதில், உட்பொதிகை வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் போராட்டமாகவே இருந்தது. இலங்கையைப் பொறுத்தவரையில் கார்த்திகை மாதம் மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டு அவர்கள் அன்னியராக்கப்பட்டமை, ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் நினைவு போன்ற பல விடயங்களுக்கு முக்கியமானது.

தமிழர்களைப் பொறுத்தவரையில், இது மாவீரர் வாரம். ஆனால், பாதுகாப்புத் தரப்பினர் இதனை மாவீரர் மாதமாகவே கொள்வார்கள். கார்த்திகை தொடங்கினாலே தகவல்களைச் சேகரிப்பார்கள்,

வடக்கு, கிழக்கில் எந்த அமைப்பு, தனிப்பட்ட நபர்கள், யாரெல்லாம் மாவீரர் தினத்துக்கான செயற்பாடுகளில் ஈடுபடுகிறார்கள் என்ற தகவல்களைத் திரட்டுவார்கள். கடந்த வருடங்களில் செயற்பட்டவர்களைக் கண்காணிப்பார்கள். இது வழமையாகவே நடைபெற்று வருகின்ற விடயம்.

யுத்த காலத்தில் பாதுகாப்புத் தரப்பினர் மிகுந்த அச்சத்துடன், இந்த
வேலையைச் செய்து கொண்டிருந்தனர். ஏனெனில், புலிகள் எங்கு வருவார்கள்,
எப்போது தாக்குதல் நடத்துவார்கள் என்ற அச்சம். அதே நேரத்தில், புலிகளின்
பகுதிகளுக்கு தமிழ் மக்கள் செல்லும் போதும், திரும்பும் போதும்
அவர்களுக்கும் விசாரணைகள், கைது, மரண அச்சங்கள் இருந்தன.

ஆனால், யுத்தம் மௌனத்திற்கு வந்த பின்னர் இருந்த ஒவ்வொரு ஆட்சியிலும் ஒவ்வொரு விதமாக நிலைமை இருந்து வந்தது. 2009இல் விடுதலைப் புலிகளுடனான ஆயுத யுத்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்த மஹிந்த ராஜபக்‌ஷவின் ஆட்சிக் காலத்தில் மாவீரர் நிகழ்வுகளுக்கான செயற்பாடுகள் தமிழர்களின் பிரதேசங்களில் குதிரைக் கொம்பாகவே இருந்தது.

தடை உத்தரவுகள், மிரட்டல்கள், அச்சுறுத்தல்கள், நெருக்கடிகள், கைதுகளாக இருந்தன. அவற்றினையும் மீறி, ரகசியமாக நிகழ்வுகள் ஒருவாறு நடந்து விட்டாலும், அதன் பின்னரும் கைதுகள், விசாரணைகள் நடைபெற்றிருந்தன. பின் மைத்திரிபால சிறிசேன, ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் நல்லாட்சி அரசாங்க காலத்தில் நிலைமை சற்று மாறியிருந்தாலும், முழுமையாக இருக்கவில்லை.

அதன் பின்னர் வந்த கோட்டாபய ராஜபக்‌ஷவின் அரசாங்கத்தில் நிலைமை தலைகீழாக மாறியது. அப்போது, கொவிட்- கொரானா காரணமாக காட்டப்பட்டு கைதுகள், நெருக்குதல்கள் நீதிமன்ற தடைய உத்தரவுகள் இருந்தன. பின்னர் உருவான ரணில் விக்ரமசிங்கவின் ஆட்சிக் காலத்திலும் பாதுகாப்புத் தரப்பினர் தமிழ் மக்களுக்குச் சாதகமான வேறு முறைகளைக் கையாண்டிருந்தனர்.

இப்போது, கடந்த காலத்தில் நாட்டைக் கைப்பற்ற இரண்டு முறை ஆயதக் கிளர்ச்சியில் ஈடுபட்டு தோற்றுப்போன, தமது தலைவர் உட்பட பலரையும் பலிகொடுத்த ஒரு போராட்ட இயக்கமான மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தலைமையிலான தேசிய மக்கள் சக்தியின் ஆட்சிக்காலம்.

கடந்த வருடம் ஆட்சி பீடம் ஏறியபோது, கொஞ்சம் பாதுகாப்புத் தரப்பினருடைய பிரச்சினைகள் இருந்தாலும், இவ்வருடம் கெடுபிடிகள் எதுவுமின்றி மாவீரர் தினத்துக்குரிய ஏற்பாடுகள் வடக்குக் கிழக்கில் நடைபெறுகின்றன. 
ஆனால், சிறியளவுக்கான அச்சத்தினைத் தமிழர்கள் வைத்துக் கொண்டே இருக்கிறார்கள்.

ஒரு நம்பிக்கை மாத்திரம் அவர்களிடம் இப்போது இருக்கிறது. ஜே.வி.பியின் கார்த்திகை வீரர்கள் தின நிகழ்வு. கடந்த 13ஆம் திகதி கொழும்பு
விகாரமகாதேவி திறந்தவெளி அரங்கில் ஜே.வி.பியின் 36ஆவது கார்த்திகை வீரர்கள் நினைவேந்தல் நடைபெற்றது. இதில் அக் கட்சியின் தலைவர் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க மலர் அஞ்சலி செலுத்தினார்.

ஒரு போராட்ட இயக்கத்தின் கொள்கைக்காக மரணித்தவர்களுக்கு அஞ்சலி செலுத்துவது ஒரு உளப்பூர்வமான நிறைவுதான் அதனை ஒவ்வொரு வருடத்திலும் உணர்பவர் அவர். அந்தவகையில், தங்களுடைய கொள்கைகளுக்காக மணரத்தைத் தழுவிக் கொண்ட மாவீரர்களை வடக்கு, கிழக்கு தமிழ் மக்கள் நினைவு கூருகின்ற ஆத்மார்த்த முன்வருதலானது மாவீரர் தினமாகும். 

ஆனால், எழுச்சிமிகு நாளாக வடக்கு கிழக்கில் நிகழ்வெடுக்கப்படுகின்ற இந்த மாவீரர் வாரத்தில் தமிழர்களின் அரசியல் தரப்புகள் கொண்டுள்ள நிகழ்ச்சி நிரல்களால் பிரச்சினைகள் எழுந்துவருவது தமிழ் மக்கள் மத்தியில் கவலைகளையும், குழப்பங்களையும் உருவாக்கி வருகிறது.

வடக்கு, கிழக்கு தமிழ் மக்களின் சுயநிர்ணய உரிமைப் போராட்டத்தில் பல்வேறு முக்கியப்படுத்தல்கள், நினைவுபடுத்தல்கள், கௌரவிப்புகள் இருந்து வருகின்றன. முக்கியமாக அன்னை பூபதி, தியாகி திலிபன் ஆகியோர் இந்திய இராணுவத்திற்கெதிராக உண்ணா நோன்பிருந்து தங்களது உயிர்;களைத் தியாகம் செய்திருந்தார்கள். 

இப்போது அவர்களுடைய தியாகங்கள் நம்மவர்களாலேயே எள்ளிநகையாடுகின்ற அளவுக்கு நிலைமை மாறியிருக்கிறது.வடக்கு, கிழக்கு மக்களின் தேசிய நிகழ்வுகளாக உணர்வுப்பூர்வமாக அனுஷ்டிக்கப்படவேண்டிய நிகழ்வுகள் அரசியல் போட்டியும், தனிப்பட்ட சுய லாபங்களுக்கானதாக மாறி வருகின்றன. தனிப்பட்ட கோபதாபங்கள், வெறுப்புகளைத் தமிழ்த் தேசியத்திற்குப் பாதிப்பு ஏற்படுத்தும் விடயங்களாகப் பயன்படுத்துகின்றனர். சிலவேளைகளில் இது தமிழ்த் தேசியத்தைப் பாதிக்கின்ற விடயங்களாக உணராமல் இவ்வாறு நடைபெறுகின்றதாகக்கூடக் கொள்ளலாம். 
அதேநேரத்தில், தமிழர்களின் அரசியல் மயப்படுத்தலில் உள்ள குறைபாடுகள் காரணமாகவே உருவாகியிருக்கின்றன என்றும் கொள்ளலாம்.

தமிழர்களின் ஆயுதப் போராட்டம் முள்ளிவாய்க்காலில் புதைக்கப்பட்ட தினமாக நினைவு கூரப்படுகின்ற மே-18 நிகழ்வுகளும் அரசியல் சுய லாபத்திற்காக நடத்தப்படுகின்ற ஒன்றாகக் காட்சிப்படுத்தப்பட்டு வருகின்றது.

அது மக்களை அரசியல் மயப்படுத்தாதிருப்பதன் பலாபலனே. அதே நேரத்தில் தமிழ் மக்களின் சுய நிர்ணயப் போராட்டமானது ஏன் தொடங்கப்பட்டது, அதன் அரசியல் வரலாறு என்ன, பட்டறிவுகள் எவ்வாறானது. அதன் பாதிப்புகள் எத்தகையது.

அதற்கானஅடுத்த கட்டம் என்ன, உலக மயமாதலால் எவ்வாறான விளைவுகள் தமிழர்களின் போராட்டத்திற்கு ஏற்படும் போன்ற விடயங்கள் சரியான முறையில் அடுத்த தலைமுறையினருக்குக் கடத்தப்பட்டதா, கடத்தப்படுகிறதா?, அதற்கான வேலைத்திட்டங்கள் செய்யப்படுகின்றனவா போன்றவைகள் ஆராயப்படவில்லை. அதனாலேயே தமிழர்களுக்கான அரசியலை செய்யவென புறப்பட்டவர்கள், கட்சிகளும்கூட தமக்கென ஒவ்வொரு வழிகளில் சென்று கொண்டிருப்பதற்கான காரணமாகும். ஆனால், தமிழ் மக்களைப் பொறுத்தவரையில் கடந்த காலங்களின் அரசியல் வரலாறுகளிலிருந்து மாற்றத்தினை ஏற்படுத்துகின்ற மாதமாக இந்த கார்த்திகை மாதம் இருக்க வேண்டும் என்பது எதிர்பார்ப்பாகும்.

இந்தஎதிர்பார்ப்பு நிறைவேறுவதற்கான அரசியலைச் முன் நகர்த்துவதற்குத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள் முயலாமல் இருப்பது உண்மையிலேயே அவர்களின் இயலாமையாகக்கூட இருக்கலாம்.

தமிழ் மக்கள் எதிர்பார்க்கின்ற தீர்வினை நிச்சயப்படுத்துவதற்கான செயற்பாடுகளை முன்னெடுப்பவர்களாகத் தமிழ்த் தேசிய அரசியல்வாதிகள், கட்சிகள் மாறாதவரையில் தமிழ் மக்களின் அரசியல் அபிலாசையான சுயநிர்ணய உரிமை என்கிற இலக்கு நிறைவேறப்போவதில்லை. 

இதற்காக தமிழ்த் தேசிய அரசியலைச்செய்துவருகின்ற தமிழ் அரசியல்வாதிகள் தங்களுக்குள் உள்ள விட்டுக்கொடுக்க முடியாத விடயங்களைப் பொதுக் கலந்துரையாடல்களுக்குட்படுத்தி தமிழ்த் தேசியத்துக்கான பொது நிலைப்பாட்டுக்கு வருதலே சிறப்பாகும்.

நாட்டுக்குள் சிங்கள மக்களிடம் காணப்படுகின்ற புலிகளின் மீளுருவாக்கம் நடைபெற்றுவிடும் மீண்டும் ஒரு ஆயுதப் போராட்டம் தொடங்கிவிடும், மாவீரர் தினம் அதற்கான வழியைத் தோற்றுவித்துவிடும் என்ற அச்சம் தமிழ் மக்கள்மா வீரர் நினைவுகூரலை நடத்துவதில் தடைகளை ஏற்படுத்துவதாக இருந்து
வருகிறது.

அதற்கு வடக்கு கிழக்கில் இருக்கின்ற பாதுகாப்புத் தரப்பினரும் ஒருவித காரணமாகும். இவ்வாறான சூழலை உருவாக்குவதற்கான எந்தவித ஏதுக்களும் இல்லையானாலும் ஆரம்பத்திலிருந்தான அவர்களின் அச்சம் அதனைச் செய்யத் தூண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

ஆனாலும், அதற்காக அவர்கள் முன்வைக்கப்படுகின்ற காரணங்கள் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் புறம்பானதாக இருப்பது வேடிக்கை. மொத்தத்தில், ஆயதக்கிளர்ச்சியில் ஈடுபட்டு மோசமான முறையில் அடக்கப்பட்டுத் தோற்றுப் போய் அரசியல்வழியில் நாட்டைக் கைப்பற்றியிருக்கின்ற ஜே.விபி. கைக்கொண்ட மக்களை அரசியல்மயப்படுத்தும் செயற்பாடு தமிழ்களுக்கும் முன்னுதாரணமாகும். இந்த அரசியல் மயப்படுத்தலை செய்யாதவரையில் தமிழர்களின் அரசியல் அபிலாசை ஒருபோதும் நிறைவேறப்போவதில்லை.

இதற்கான உறுதிபூணலை இந்தக் கார்த்திகையிலேனும் தமிழ் அரசியல் தரப்பினர் மேற்கொண்டாக வேண்டும். இதுவே கொண்ட கொள்கைக்காக உயிர்நீத்த ஒவ்வொருவருக்கும் செய்கின்ற சரியான அஞ்சலியாக இருக்கும்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/கொள்கைகளுக்காக-அஞ்சலிப்போம்/91-368071

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும்

2 months 1 week ago

இந்தியாவுக்கு பாக்கு நீரிணை நிரந்தர எதிரி. சிங்கள பௌத்த அரசுக்கு பாக்கு நீரிணை நிரந்தர நண்பன், அது வரமும் சாபமும் கலந்த நண்பன் அல்லது அமிர்தமும் நஞ்சும் நிறைந்த நண்பன் அல்லது அமுதமும் நஞ்சும் கலந்த நண்பன். ஈழத் தமிழருக்கு பாக்கு நீரிணை அரை நண்பன்.

அமிர்தம் என்பது தேவர்கள் அருந்துவதாக கூறப்படும் ஒரு புராண உணவு. அமுதம் என்பது ஈயத்தை தங்கமாக மாற்றும் அழியாமையைக் தரும் ஒரு கற்பனைத் திரவம். இங்கு நஞ்சை கழைந்து அமிர்தத்தை கடைந்தெடுக்கும் அரசியல் வித்தை சிங்கள தலைவர்களுக்கு தெரியும்.

இந்திய அரசுக்கு பாக்கு நீரிணை எப்போதும் அதன் முழு எதிரியாய் உள்ளது. ஆதலாற்தான் தனுஷ்கோடி -- தலைமன்னார் தரைப்பாலத்தை அமைப்பதன் வாயிலாக அந்தப் பாக்கு நீரிணையை தனது நண்பனாக்க இந்தியா முயல்கிறது. சிங்களவிற்கு வெள்ளிடை மலையென ஒன்று தெரியும்.

பாக்கு நீரிணை

அதாவது அந்தப் பாக்கு நீரிணைதான் இந்தியாவின் தொடர் நிலப்பரப்பிலிருந்து இலங்கையை பிரித்து ஒரு தீவாக்கியது. இதன் மூலம் பாக்கு நீரிணைதான் இலங்கையை ஒரு நாடாக்கியது. அதுதான் இலங்கையை ஒரு தனி அரசாக்கியது. இந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தத்துக்கு ஒரு வரம்.

பௌத்தம் பிறந்த இந்தியாவிலேயே இந்து மதப் பிரிவுகளினால் பௌத்தம் அழிக்கப்பட்ட போதிலும் பௌத்தம் புகுந்த இலங்கைத் தீவில் அந்தப் பாக்கு நீரிணையால் அந்த பௌத்தமும் பௌத்த அரசும் பாதுகாக்கப்படுகிறது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஒருவேளை கிமு 3 ஆம் நூற்றாண்டில் இந்தியாவிலிருந்து இந்திய பேரரச ஆதிக்க விருத்தியின் ஒரு வடிவமாக பௌத்தம் இலங்கைக்கு சமாதானபூர்வமாக கொண்டுவரப்பட்ட போதிலும் அனுராதாபுரம் மன்னன் தீசன் மௌரியப் பேரரசர் அசோகத் சக்கரவர்த்தியின் கட்டளைப்படி மீள் முடி தரிக்கப்பட்டார் என்று மகாவம்சம் கூறுகிறது.

மேலும் சக்கரவர்த்தி அசோகரின் பட்டப்பெயரான "தேவநம்பிய" என்பது தீசனுக்கான முடிக்குரிய பேராக்கப்பட்டு தீசன் தேவநம்பிய தீசன் என அரச பட்டப் பெயர் சூட்டப்பட்டார். இது இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் தெளிவான அரசியல் வடிவம்.

ஆயினும் சிங்கள அரச பௌத்த சமூக உருவாக்கமானது இலங்கை அனுராதபுரத்தில் தோன்றி வளர்ந்து வந்த ஒரு அரச சமூக வளர்ச்சியின் கழுத்தில் ஒரு கூரிய இந்திய ஆதிக்க வாளாக பௌத்தம் இலங்கையை அணுகிய போது அனுராதபுரத்தில் முகிழ்ந்து எழுந்து வந்த உயர அரச குழாம் கழுத்துக்கு ஓங்கப்பட்ட அந்த வாளை தமது தலைக்கும் நெஞ்சுக்குமான கவசமாக மாற்றிக் கொண்டனர். இது ஒரு பொழுதில் நிகழ்ந்தது அல்ல.

பௌத்த அரச பண்பாடு

தொடர் வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இவ்வாறு முகிழ்ந்தெழுந்து. இந்நிலையில் சிங்கள அரசு, பௌத்த மகா சங்க நிறுவனம், பொதுமக்கள் என அனைவரையும் ஒன்று திரட்டிய ஒரு வடிவமாய் சிங்கள பௌத்த அரச பண்பாட்டு வாழ்வு முதிர்ச்சி அடைந்தது. அரசை பௌத்த நிறுவனத்தினாலும் மக்களாலும் என ஒன்றுடன் ஒன்றாய் மூன்றையும் திரட்டி எடுத்தனர்.

சிங்கள பௌத்த இலங்கை அரசு என்பதன் தெளிவான திரட்சி பெற்ற வடிவம். மேற்படி மூன்றுக்கும் அச்சாணியாயும் அரணாயும் விளங்குவது பாக்கு நீரிணையாகும். இந்தியாவிலிருந்து இலங்கையை பிரித்து பாதுகாப்பு அளிக்கும் இந்த பாக்கு நீரிணை என்ற அரணை எப்படி ஒரு பாலத்தின் மூலம் இந்தியாவோடு இணைக்கத் தயாராகுவார்கள்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

ஆனால் அப்பக் கோப்பைத் தமிழ் அரசியல் தலைவர்களுக்கு பாக்கு நீரிணை என்ற மந்திர வித்தை இன்னும் தெரிந்து கொள்ளப்பட்டதாய் இல்லை. ஒருவேளை அவர்கள் அதைத் தெரிந்து கொள்ள விரும்புவதும் இல்லை, அப்படி ஒரு பொருள் இருப்பதாக திரும்பி பார்ப்பதும் இல்லை.

வானத்து வெள்ளியை அண்ணாந்து பார்த்துக் கொண்டு, பாம்பு புதருக்குள் காலூன்றி நடக்கும் நிலையிற்தான் தமிழ் அரசியல் தலைவர்களின் அரசியல் போக்கு உண்டு. பாலம் கட்டுவது தொடர்பாக புத்திசாலித்தனமான சிங்கள தலைவனை கேட்டால் அதற்கு "ஆம்" என்று பதில் சொல்வான், ஆனால் பாலம் கட்டமாட்டான். ஆம் என்று சொல்வதற்கு காரணம் தூணேறிய சிங்கமாக ஒருபுறமும் காராம் பசுவாக மறுபுறமும் உள்ள இந்தியாவின் முன் அதன் கவனத்தை ஈர்ந்து ஆடிப் பாடிப் பால் கறப்பதற்கு.

அதேவேளை பாலம் கட்டுவது பற்றி ஒரு அடிமட்ட சாதாரண சிக்கள மகனிடம் கேட்டால் கட்டவேண்டாம் என்று சொல்லுவான் கட்டவிடவும் விட மாட்டான். சிங்கள புத்திசாலியின் "ஆம்" என்ற தந்திரம் துணேறிய சிங்கத்தை திசை திருப்பவும் உதவும் காராம் பசுவில் பால் கறக்கவும் உதவும்.

வைஷ்ணவ கடவுளாகக் கொள்ளப்படும் இராமபிரானின் ஆணைப்படி இலங்கை மீது படையெடுப்பதற்காக தலைமன்னாருக்கும் தனுஷ்கோடிக்கும் இடையே ஹனுமானால் கட்டப்பட்டது இராமர் பாலம் என்கிறது இதிகாசம். "சிங்களத் தீவினிற்கோர் பாலம் அமைப்போம்" என்றார் இந்திய தேசிய கவிஞர் பாரதியார். எனவே மத நம்பிக்கையின் படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்தியா எதிர் பார்க்கிறது.

இலங்கைக்கு ஒரு பாலம்

இந்திய தேசிய சிந்தனையின்படியும் இலங்கைக்கு ஒரு பாலம் அமைக்க வேண்டும் என்று இந்திய தேசியம் எதிர்பார்க்கிறது. முழு இந்தியாவையும் கூடவே அத்துடன் இலங்கைத்தீவையும் ஒருங்கிணைக்க வேண்டும் என்பதே "சிந்து நதியின் மிசை நிலவினிலே ..." என்று தொடங்கும் பாரதியாரின் கவிதை ஆகும்.

சிங்கள பௌத்த அரசையும் சிங்கள பௌத்த மதத்தையும் பொறுத்தவரை பாக்குநீரிணை சிங்கள பௌத்த அரசுக்கு ஓர் அரணாகும். பாக்கு நீரிணைதான் புவியியல் ரீதியாக இந்தியாவுடன் இருந்துவந்த நிலத் தொடரைத் துண்டித்து இலங்கையை ஒரு தீவாயும், ஒரு நாடாயும், ஒரு தனியரசாயும் ஆக்கியது.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

பௌத்தம் பிறந்த இந்தியாவில் அது இந்து மதப் பிரிவுகளால் இந்தியாவை விட்டு துரத்தப்பட்ட போது இலங்கை என்ற தீவிற்தான் அது தரித்துப் பாதுகாக்கப்பட கூடியதாக இருந்தது. அந்த வகையில் பாக்கு நீரிணை சிங்கள பௌத்தர்களுக்கு ஒரு வரமும் கொடையுமாகும்.

அதேவேளை பாக்கு நீரிணையின் ஒரு புறத்தில் ஈழத் தமிழரும் அதன் மறுபுறத்தில் தமிழகத் தமிழரும் வாழ்ந்து வரும் நிலையில் ஈழத் தமிழருக்கும் தமிழக தமிழருக்கும் இடையேயான உறவை சிங்கள பௌத்த அரசு கசப்புடன் பார்த்து வருவதுடன் அத்தகய கசப்பினதும் பயத்தினதும் பின்னணியில் சிங்கள பௌத்த அரசு ஈழத் தமிழரை இனப்படுகொலை செய்து வருகின்றது என்பதும் கண்கூடு.

மேலும் ஈழத் தமிழரை இந்திய ஆதிக்க படர்ச்சியின் கருவிகளாகவும் இந்திய அரசின் ஆதிக்க படர்ச்சிக்கான ஓர் ஏதுவாகவும் ஈழத் தமிழரை சிங்கள அறிஞர்களும், வரலாற்றாளர்களும், தலைவர்களும், பௌத்த மத நிறுவனமும் ஆழமாக நம்பியும், கருதியும் வருகின்றனர்.

கூடவே கி.மு 3 ஆம் நூற்றாண்டில் வட இந்தியாவிலிருந்து இலங்கைக்கு வந்த பௌத்தமும் இந்திய பேரரச ஆதிக்கப் படர்ச்சியின் ஒரு பகுதியாகவே நிகழ்ந்ததை சிங்கள பௌத்த தரப்பினர் உணரத் தவறவில்லை. இந்த வகையில் ஒட்டுமொத்த இந்திய ஆதிக்க பரவலை பெரிதும் தடுப்பதற்கு இயற்கையாக காணப்படும் பாக்கு நிரிணையை ஒரு வரமாகவே கருதும் சிங்கள பௌத்த தரப்பினர் செயற்கையாக 23 கிலோ மீட்டர் தொலைவுக்கு ஒரு தரைவழிப் பாலம் அமைக்கப்படுவதை ஒரு போதும் விரும்ப மாட்டார்கள்.

ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் 

சிங்களவரின் கண்ணில் இராமர் கட்டிய பாலம் இலங்கை மீதான இந்தியாவின் படையெடுப்புகானது. இந்துமா கடலின் மையத்தில் இந்தியாவுக்கு மிக அருகில் அமைந்துள்ள இலங்கைதீவு வெளி வல்லரசுகளின் ஆதிக்கத்துக்கோ அன்றி செல்வாக்குக்கோ உள்ளாகும் போது இந்தியாவை பெரிதும் பாதிக்கும் என்ற நிலையில் ஒரு பாலம் அமைப்பதன் மூலம் வெளி வல்லரசுகளுக்கான வாய்ப்பை துண்டித்து விடலாம் என இந்திய அரசு நம்புகிறது.

இத்தகைய பின்னணியில் மேற்படி பாலம் அமைப்பது பற்றிய அவாவும் கற்பனையும் இந்திய தரப்பில் எழுவது இயல்பு. அதன்படி இந்தியா அதற்கான முயற்சிகளை கற்பனை கலந்த ரசனையுடன் மேற்கொள்கிறது.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்தியாவுக்கு பயணம் மேற்கொண்ட இலங்கை ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேற்படி பாலம் கட்டுவதற்கான வாக்குறுதிகளை வானளாவ நட்சத்திரங்கள் என பறக்க விட்டார்.

தலைமன்னார் - தனுஷ்கோடி தரைப்பாலம் சாத்தியமா! கற்பனையும் யதார்த்தமும் | Is The Thalaimannar Dhanushkodi Flyover Feasible

நிச்சயம் அவருக்குத் தெரியும் தான் புளுகுப் பெட்டிகளை அவிழ்த்து விடுகிறேன் என்பது. அவருக்கு இருந்த அரசியல் நெருக்கடியில் இந்தியாவின் வாயில் அல்வாவை வைத்து காராம் பசுவிடமிருந்து கறக்க வேண்டியவற்றை கறப்பதற்காக அப்படி அவர் இந்திய மண்ணில் நின்று செயல்பட்டார்.

தொடர்ந்து இலங்கை இந்திய அமைச்சர்கள் மட்டத்திலான கலந்து உரையாடல்களும் கருத்து பரிமாற்றங்களும் திட்டமிடல் பணிகளும் இடம்பெற்றன.

ஆசிய வங்கியில் இதற்காக இந்திய அரசு 22 ஆயிரம் கோடி ரூபாக்களைக் கடன் கோரியும் இருந்தது. அந்தளவுக்கு திட்டம் நடைமுறை சார்ந்து இந்திய தரப்பில் நம்பிக்கை உடன் மேற்கொள்ளப்பட்டது.

சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அதிகாரத்தில் உள்ளஒரு புத்திசாலியிடம் கேட்டால் அவன் பாலம் அமைக்க "ஓம்" என்று சொல்வான், ஆனால் கட்டமாட்டான். ஓர் அப்பாவின் சிங்களமகனை கேட்டால் அவன் பாலம் கட்ட வேண்டாம் என்று சொல்லுவான்.

இங்கு புத்திசாலியோ அப்பாவியோ இருவரும் பாலம் கட்ட மாட்டார்கள் என்பது உறுதி. இதில் ரணில் முதலாவது தரத்தைச் சேர்ந்தவர். இதுதான் சிங்கள பௌத்த யதார்த்த நிலை. சிங்கள தரப்பை பொறுத்தவரையில் அரசனோ ஆண்டியோ, ஞானியோ பாமரனோ எவரும் பாலம் கட்டுவதில்லை என்பதில் உறுதியானவர்கள்.

இந்நிலையில் இப்போது பதவி இருக்கும் ஜேவிபி தலைமையிலான அரசாங்கம் ஒருபோதும் இந்தப் பாலத்தை கட்ட மாட்டாது. கட்டப்பட உள்ளதாக இருப்பது கற்பனை; கட்டப்படாமல் இருக்கப் போவதே யதார்த்தம்.

https://tamilwin.com/article/is-the-thalaimannar-dhanushkodi-flyover-feasible-1763327912

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

2 months 1 week ago

சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் சொல்லும் செய்தி!

*** *** ***

*மேற்கு - ஐரோப்பிய அரசியல் கோட்பாடுகளை விட, சீன அரசியல் கோட்பாடுகள் மேலெழும் சூழல்...

*ஜனநாயகம் - யதார்த்த அரசியல் - என்ற ஏமாற்றை விடவும் சீன ஜனநாயகம் மேல் என்ற உணர்வு...

** *** ******

மேற்கு நாடுகள் எழுதி வைத்த ”ஜனநாயக கோட்பாடு”, ”சட்டத்தின் ஆட்சி” ”அரச இறைமைக் கோட்பாடு என்பற்கு மாறாக கம்யூனிஸ்ட் கொள்கையை பின்பற்றி வரும் சீனா, இன்று உலகத்துக்குப் பெரும் சவலாக மாறியுள்ளது.

”நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தேரணையில் இயங்கும் அமெரிக்காவும் அதன் தோழமை நாடுகளுக்கும், ”ஜனநாயகம்” - ”சட்ட ஆட்சி” என்றால் என்ன என்பதை, சீனா காண்பித்துள்ளது.

இப்போது அதனை நூலாக வெளியிடுவதன் ஊடாக, எதிர்காலத்தில் மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் அரசியல் கோட்பாடுகளுக்குப் பதிலாக சீன அரசியல் கோட்பாடுகளை மாணவர்கள் கற்கும் நிலை தோன்றும் என்பதில் ஐயமில்லை.

ஏன் உலகமே அதனை ஏற்கக் கூடிய சாத்தியங்களும் வரலாம்.

ஏனெனில் --

டொனால்ட் ட்ரம்ப், இஸ்ரேலிய ஜனாதிபதி நெதன்யாகு ஆகியோர் உள்ளிட்ட சில உலகத் தலைவர்களின் அட்டகாசம் - மிரட்டல் போன்ற செயல்கள், சீன அரசியல் கோட்பாட்டுக்கு மாணவர்களை தள்ளக் கூடிய ஏது நிலை தெரிகிறது.

நேர்மையான கம்யூனிஸ்ட் கொள்கையை சீனா பின்பற்றவில்லை என்று பலரும் குற்றச்சாட்டலாம்.

ஆனால் --

அக் குற்றச்சாட்டுகளைக் கடந்து, சீனா இன்று உலக வளர்ச்சியில் பல முன்னேற்றங்களையும், ஒழுங்கு முறையான அரசியல் நடைமுறைகளையும் (Orderly Political Procedures) அறிமுகப்படுத்தி - நியாயப்படுத்தி உலகத்துக்குக் கற்பிதம் செய்துள்ளது எனலாம்.

இது சிலருக்கு கசப்பாக இருக்கும். ஆனால் அது தான் உண்மை.

சீனாவில் கட்சிக்குள் அரசு - அரசுக்குள் கட்சி என்ற தன்மை உண்டு. ஆனால், ஒரு கட்சி ஆட்சி முறைமை (System) தான் சிறந்தது போல் தெரிகிறது.

ஏனெனில் ---

ஜனநாயம் - மாற்றுக் கருத்து - யதார்த்த அரசியல் - அபிவிருத்தி அரசியல் என்று ஏமாற்றி, ஈழத்தமிழ் இனம் போன்ற தேசிய இனங்களை மேற்கு - ஐரோப்பிய நாடுகள் கைவிடுகின்றன.

இலங்கை போன்ற இன ஒடுக்கல் அரசுகளுக்கு ஒத்தூதுகின்றன.

அத்துடன் ---

புவிசார் அரசியல் என்ற போர்வையில், தமது அரசியல் - பொருளாதார நலன்களுக்கு மாத்திரம் முக்கியத்துவம் கொடுக்கின்றன. இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல.

அதேநேரம் --

சீன ஒடுக்குமுறை இல்லை என்று கூறவும் முடியாது. புவிசார் அரசியல் போட்டியை, சீனா பயன்படுத்தி வருகிறது என்பதையும் மறுக்க இயலாது...

ஆனால் --

மேற்கு - ஐரோப்பிய நாடுகளின் ஓரங்கட்டலை விட அல்லது “நான் சொல்வதை நீ செய்” என்ற அதிகாரத் தோரணையை விடவும், சீனாவின் ஒரு கட்சி ஆட்சி முறைமை சிறந்தது என்ற எண்ணம் உருவாகின்றது.

அதேநேரம் ---

கம்யூனிஸ்ட் கொள்கையுடை பலர் சந்தர்ப்பவாதிகள் என்ற கருத்து உண்டு.

குறிப்பாக --

இலங்கையில் ஒழுங்கான கம்யூனிஸ்ட்கள் இல்லை. இடதுசாரிகளும் அப்படித்தான்...ஜேவிபி அதற்கு சிறந்த உதாரணம்...

அதேநேரம் --

சீன கம்யூனிஸ்ட் ஒரு வகையான முதலாளித்துவ சாயல் கொண்டது என்ற கருத்தும் உண்டு.

ஆனால் --

கம்யூனிஸ்ட் என்பதை தவிர்த்து, சீன ”அரசியல் கோட்பாடுகள்” என்று நோக்கினால், ”சீன ஜனநாயகம்”, ”சீன இறைமை” என்பது சிறப்பான மாற்றம் என்ற சிந்தனை எழுலாம்.

ஆகவே --

சீன அரசியல் முறைமை (Political System) ஆபத்தா அல்லது நன்மையா என்பதை காலம் சொல்லும்...

இப்போது சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” என்ற நூல் பற்றிய செய்திக்கு வருவோம் ---

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் (Communist Party of China - CPC) மத்தியக் குழுப் பொதுச் செயலாளர், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், எழுதிய “சட்டத்தின் ஆட்சி” (Rule of Law) என்ற மேற்படி நூல் பீஜிங்க நகரில் வெளியிடப்பட்டுள்ளது.

2012 ஆண்டு டிசம்பர் மாதம் முதல் 2025 ஆம் ஆண்டு பெ்பரவரி மாதம் வரையிலான சட்டத்தின் ஆட்சியில் ஜி ஜின்பிங் எழுதிய கட்டுரைகள், உரைகள் ஆகியவற்றின் மிக முக்கியமான மற்றும் அடிப்படையான படைப்பியல் கருத்துக்கள் 69 பகுதிகளாக தொகுக்கப்பட்டுள்ளது.

இந்த நூல் சீன பண்புகளுடன் கூடிய சோசலிச சட்டத்தின் அமைப்பை வளர்ப்பதற்கும், சட்டத்தின் கீழ் ஒரு சோசலிச நாடாக சீனாவை உருவாக்குவதற்கும், புதிய வகிபாகத்தில் சட்ட அடிப்படையிலான நிர்வாகத்தை தொடர்ந்து வகுப்பதற்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமையவுள்ளது.

இதனை 'குளோபல்ரைம்ஸ்' என்ற (globaltimes) சீன அரச ஆங்கில செய்தி ஊடகம் இன்று ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளது.

சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய குழுவின் கட்சி வரலாறு - இலக்கிய நிறுவனத்தால் இந்த நூல் தொகுக்கப்பட்டு வெளியிடப்பட்டுள்ளது.

1953 ஆம் ஆண்டு பிறந்த ஜி ஜின்பிங், சீன கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராகவும், மத்திய இராணுவ ஆணைக்குழு தலைவராகவும், 2012 ஆம் ஆண்டு முதல் சீனாவின் மூத்த அரசியல் தலைவராகவும் விளங்கினார்.

2013 ஆண்டு முதல், ஜி ஜின்பிங், சீனாவின் ஜனாதிபதி பதவியை வகிக்கிறார்.

ஐந்தாவது தலைமுறை சீனத் தலைமையின் உறுப்பினராக, சீன மக்கள் குடியரசு நிறுவப்பட்ட பின்னர் பிறந்த முதல் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் ஜி ஜின்பிங் என்பது குறிப்பிடத்தக்கது.

பத்திரிகையாளர்

நிக்ஸன்

கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.

2 months 1 week ago

THIRUMA.jpg?resize=750%2C375&ssl=1

கட்சிகளுக்கிடையிலான சண்டைக்குள் சிக்கிய திருமாவின் யாழ் வருகை: நிலாந்தன்.

திருமாவளவனின் யாழ் வருகை பரவலாக வாதப் பிரதிவாதங்களை கிளப்பியுள்ளது. ஆனால் அவர் யாழ்ப்பாணத்துக்கு வருகை தருவது இதுதான் முதல் தடவை அல்ல. அதுவும் தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் நிகழ்வில் கலந்து கொள்வதற்காக வந்திருப்பது இதுதான் முதல் தடவை அல்ல. இந்த மேடையில் அவர் பேசுவதும் இதுதான் முதல் தடவை அல்ல. ஏற்கனவே 2018 ஆம் ஆண்டு கார்த்திகை மாதம் இதே நிகழ்வுக்காக அவர் வந்திருந்தார்;பேசினார். அப்பொழுது வராத எதிர்ப்பு இப்பொழுது வர காரணம் என்ன ?

இறுதிக்கட்டப் போரின்போது கலைஞர் கருணாநிதி தமிழகத்தின் கொந்தளிப்பை மடைமாற்றி விட்டதாக ஈழத் தமிழர்களில் பெரும்பாலானவர்கள் நம்புகிறார்கள். அதன்பின் அதாவது 2009 மே மாதத்திற்குப் பின் தமிழகத்தில் இருந்து வந்த தூதுக்குழுவில் திருமாவளவன் இடம்பெற்றது தவறு என்றும் ஈழத்தமிழர்கள் நம்புகிறார்கள்.அதனால் அவரை விமர்சிக்கிறார்கள்.

இந்த விமர்சனங்களின் பின்னணியில்தான் ஈழத் தமிழர்களில் ஒரு பகுதியினர் திமுகவின் மீதும் திருமாவளவனின் மீதும் தொடர்ச்சியாகக் கோபத்தோடு காணப்படுகிறார்கள்.எனினும்,கடந்த 2018ஆம் ஆண்டு அவர் வருகை தந்தபோது காட்டப்படாத அளவு எதிர்ப்பு ஏன் இந்த முறை காட்டப்படுகிறது?

திருமாவை ஊருக்கு அழைத்தது தமிழ்த் தேசியப் பசுமை இயக்கம்.அது இப்பொழுது தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியோடு உறவாக இருக்கிறது.தமிழ்த் தேசியப் பேரவை என்ற கூட்டுக்குள் பசுமை இயக்கமும் ஓர் அங்கம். எனவே திருமாவை முன்வைத்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியை தாக்குவதற்கு இது ஒரு சந்தர்ப்பமாகப் பயன்படுத்தப்படுகிறது.

இதற்குப் பிரதான காரணம் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் அரசியல் பாரம்பரியம்தான்.அக்கட்சியானது தொடக்கத்தில் இருந்தே தன்னை பெருமளவுக்கு தூய்மைவாத கட்சியாகவும் தீவிர தேசியவாத கட்சியாகவும் தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் நேரடி வாரிசாகவும் காட்டிக்கொண்டது. ஏனைய கட்சிகளை அவர்கள் இந்த அளவுகோல்களின் ஊடாகத்தான் அளந்தார்கள்.எனவே அக்கட்சியோடு கூட்டில் இருக்கும் ஐங்கரநேசன் திருமாவை அழைத்தபோது அக்கட்சியை அடிப்பதற்கு இதை ஒரு சந்தர்ப்பமாக கட்சியின் எதிரிகள் பயன்படுத்துகிறார்கள். 2018இல் திருமா யாழ்ப்பாணம் வந்தபோது இந்த அளவு விமர்சனங்கள் ஏழவில்லை.

அப்பொழுது ஐங்கரன்நேசனை யாரும் அவமரியாதையாக விமர்சிக்கவில்ல்லை.ஆனால் இப்பொழுது திருமாவோடு சேர்த்து ஐங்கரன் நேசனும் விமர்சிக்கப்படுகிறார்;அவமதிக்கப்படுகிறார்.தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியும் விமர்சிக்கப்படுகிறது.அப்படிப் பார்த்தால் இந்த விமர்சனங்களின் பின்னணியில் தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடு உண்டு.

இப்படிப்பட்ட ஒரு விமர்சனச் சூழலை உற்பத்தி செய்ததில் தமிழ்த் தேசியமக்கள் முன்னணிக்கும் பெரிய பங்கு உண்டு.அக்கட்சி தன்னுடைய அரசியல் எதிரிகளைத் தாறுமாறாக விமர்சிக்கும் பண்பைக் கொண்ட ஒரு கட்சி.ஏன் என்னையும்கூட அவர்கள் மிகக் கீழ்த்தரமாக விமர்சித்திருக்கிறார்கள். தமது அரசியல் எதிரிகளை துரோகிகள் ஆக்கியது அந்த கட்சிதான். தமிழ்த் தேசிய அரசியலில் தூய்மைவாத அளவுகோல்களை வைத்துக்கொண்டு தமது அரசியல் எதிரிகளை தமது தராசுகளால் நிறுத்த கட்சி அது. இப்பொழுது சமூக வலைத்தளங்களைப் பார்த்தால் ஒன்றை விளங்கிக் கொள்ளலாம். திருமாவின் யாழ் வருகையை விமர்சிக்கும் ஒரு பகுதியினர் அந்த விமர்சனங்களை யாருடைய பார்வைக்கு முன் வைக்கின்றார்கள்? ஏற்கனவே தூய்மைவாத தமிழ் தேசிய அளவுகோல்களை வைத்துக்கொண்டு மற்றவர்களை விமர்சித்த கட்சியின் ஆதரவாளர்கள் அல்லது செயற்பாட்டாளர்களை நோக்கித்தான்.

அதுமட்டுமல்ல,இப்பொழுது அதாவது அந்தக் கட்சியின் செயலாளர் திருமாவின் கூட்டத்தில் பிரசன்னமான பின்னரும்கூட,அக்கட்சியைச் சேர்ந்த உறுப்பினர்கள் சிலர் திருமாவையும் ஐங்கரநேசனையும் விமர்சிக்கக் காணலாம்.அக்கட்சியோடு தொடர்ச்சியாக செயல்பட்டு வருகின்ற கிராமிய உழைப்பாளர் சங்கத்தைச் சேர்ந்தவரும்கூட திருமாவை, ஐங்கரநேசனை கடுமையாக விமர்சிக்கக் காணலாம்.

எனவே இப்பொழுது தெளிவாக ஒரு சித்திரம் கிடைக்கிறது. தமிழ்த் தேசிய கட்சிகளுக்கு இடையிலான முரண்பாடுகள் திருமாவின் யாழ் வருகை மீது பிரதிபலிப்புகளை ஏற்படுத்துகின்றன என்பதுதான் இங்குள்ள அடிப்படை உண்மை.

அதேசமயம் 2009 க்குப் பின் மஹிந்த ராஜபக்சவை திருமா சந்தித்தது கைகுலுக்கியது தொடர்பில் அவர் ஏற்கனவே ஒரு தன்னிலை விளக்கம் வழங்கியிருக்கிறார். ஆனால் ஒருபகுதி ஈழத் தமிழர்கள் அந்தத் தன்னிலை விளக்கத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதும் தெரிகிறது. தமிழகத்தில் உள்ள ஈழ அபிமானிகளில், ஈழ உணர்வாளர்களில் மிக நீண்ட காலம் ஈழப்போருடன் தொடர்புற்றவர்களில் திருமாவும் ஒருவர்.மாணவராக இருந்ததில் தொடங்கி ஒரு கட்சித் தலைவராக வளர்ந்து,நாடாளுமன்ற உறுப்பினராக வந்தது வரையிலும் அவர் ஈழப் போரோடு நெருக்கமான உறவைக் கொண்டிருந்தார்.விடுதலைப் புலிகள் இயக்கம் அவரை மிகவும் மதித்து கௌரவமாக நடத்தியது.ஆனால் அந்த இயக்கம் போரில் தோற்கடிக்கப்பட்ட பின்,அதைத் தோற்கடித்த தரப்புடன் அவர் கைகுலுக்கியது தொடர்பில் அந்த இயக்கத்தின் ஆதரவாளர்கள் மத்தியிலும் பொதுவாக தமிழ் மக்கள் மத்தியிலும் விமர்சனங்கள் உண்டு.

ஆனால் அதற்குப் பின்னரும் முன்னரைப் போலவே அவர் ஈழத் தமிழர்களின் அரசியல் நிலைப்பாடுகளோடு தோளோடு தோள் நிற்கிறார்.எனவே,அவர் மீது விமர்சனங்களை முன்வைக்கும்போது திருமா ஒரு நேச சக்தியா அல்லது பகை சக்தியா என்ற தெளிவு ஈழத் தமிழர்களிடம் இருக்க வேண்டும்.ஒரு நேச சக்தியை விமர்சிப்பது வேறு. பகைவரை விமர்சிப்பது வேறு. இந்த விடயத்தில் ஈழத் தமிழர்கள் தெளிவாக இருக்க வேண்டும்.திருமா தமிழகத்தில் லட்சக்கணக்கான மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துபவர்.அப்படித்தான் திராவிடக் கட்சிகளும்.இந்தக் கட்சிகளை விமர்சிக்கும்போது இந்த கட்சிகள் யாரைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனவோ அந்த எட்டுக் கோடி மக்களையும் புண்படுத்தாமல் கவனமாக விமர்சிக்க வேண்டும்.

நீரிணையால் பிரிக்கப்பட்ட ஒரே இனத்தவர்கள் தமிழ்நாட்டு மக்களும் ஈழத் தமிழர்களும்.புவியியல் அமைவிடம் காரணமாக சில வேறுபாடுகள் இருக்கலாம்.ஆனால் உலகில் ஈழத் தமிழர்களுக்கு இனத்தால்,மொழியால், பண்பாட்டால்,இன்னபிற விடையங்களால் கிட்ட இருக்கும் மக்கள் அவர்கள்தான். ஈழப் போராட்டத்தின் போது இருபதற்கும் குறைாதவர்கள் தமிழகத்தில் தீக்குளித்திருக்கிறார்கள். உலகில் வேறு எங்கும் நடந்திராத ஒரு விடயம் அது.தீக்குளிப்பது என்பது சாதாரணமானது அல்ல.தன்னையே அழிப்பது. அயலில் வாழும் தனது மக்கள் கூட்டத்திற்காக தம்மையே அழித்திருக்கிறார்கள்.அதுவும் தீயில் கருகி இறப்பது என்பது எவ்வளவு கொடுமையானது? சாதாரணமாக, சமைக்கும்போது அடுப்பு நெருப்புப் பட்டாலே எப்படித் துடிக்கிறோம்?.உலகில் வேறு எந்த மக்கள் கூட்டமும் அவ்வாறு கடலால் பிரிக்கப்பட்ட இன்னொரு மக்கள் கூட்டத்திற்காக அப்படிப்பட்ட தியாகத்தைச் செய்தது இல்லை.எனவே தமிழ் நாட்டு மக்களை எப்பொழுதும் ஈழத் தமிழர்கள் மதிக்க வேண்டும். கட்சிகள் தங்களுடைய கட்சி அரசியலைச் செய்யும். ஏன் ஈழத்தமிழ் கட்சிகள் செய்யாத திருகுதாளங்களா? ஆனால் தமிழக மக்களை ஈழத் தமிழர்கள் என்றென்றும் மதிக்க வேண்டும்.

இந்த அடிப்படையில்தான் தமிழகத்தை அணுக வேண்டும்.தமிழக மக்கள் மீதுள்ள அளவு கடந்த மதிப்பின் காரணமாக அவர்களுடைய தலைவர்களை விமர்சிக்கும் போது அடிப்படை நாகரீகத்தைப் பேணவேண்டும்.

அதுமட்டுமல்ல அரசு இல்லாத தமிழ் மக்களுக்கு அயலில் உள்ள அரசு.அதுவும் பேரரசு இந்தியாதான்.இந்தியாவின் கொள்கை வகுப்பாளர்களை ஆசைப்பதற்கு ஈழத் தமிழர்களுக்குள்ள ஒரே நொதியம் தமிழ் நாடுதான்.

மேலும்,இப்பொழுது தமிழ் மக்களின் அரசியல் பெருமளவுக்கு ஐநா மைய அரசியலாகவே காணப்படுகிறது. அண்மையில் ஐநா தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழ் மக்கள் அந்த தீர்மானம் தங்களை ஏமாற்றி விட்டது என்று கடும் கோபமாக இருக்கிறார்கள். அந்தத் தீர்மானத்தை தமிழர்களுக்கு என்றுகூறி முன்நகார்த்திய நாடு எது? பிரித்தானியா. பிரித்தானியா முதலாவது கட்ட ஈழப் போரில் யாரோடு நின்றது? இலங்கை அரசாங்கத்தோடு நின்றது. தமிழ் மக்களுக்கு எதிரான போரில் இலங்கை அரசாங்கத்துக்கு எல்லா உதவிகளையும் பிரித்தானியா செய்தது. ஆயுத தளபாடங்கள், ஆலோசனைகள் மட்டுமல்ல, பிரித்தானிய கூலிப் படைகளும் களத்தில் இறக்கப்பட்டன. ஈழத் தமிழர்களை ஆட்சி செய்த மூன்று குடியேற்றவாத நாடுகளில் பிரித்தானியாவும் ஒன்று.அரசோடு இருந்த தமிழ் மக்களை அரசற்ற மக்களாக மதிப்பிறக்கியதில் பிரித்தானியாவுக்கும் பங்கு உண்டு.அதோடு முன்கூறியது போல முதலாம் கட்ட ஈழப்போரில் இனஅழிப்பைச் செய்த அரசாங்கத்தை ஆதரித்த நாடுதான் பிரித்தானியா.

ஆனால் அதற்காக ஐநாவில் பிரித்தானியாவின் தலைமையில் தீர்மானம் கொண்டுவரப்படுவதை ஈழத் தமிழர்கள் எதிர்க்கிறார்களா? இல்லை. அதுதான் அரசியல்.அரசு இல்லாத தமிழ் மக்கள் அரசுகளை அரவணைத்தால்தான் இலங்கை அரசாங்கத்தின் மீது அழுத்தங்களைப் பிரயோகிக்கலாம். எல்லா இனப்பிரச்சினைகளும் சாராம்சத்தில் அனைத்துலகப் பிரச்சினைகள்தான். அவற்றுக்கு அனைத்துலகத் தீர்வுதான் உண்டு.எனவே ஈழத் தமிழர்கள் அரசுகளை அரவணைக்க வேண்டும்.

மேற்கு நாடுகளை,ஜநாவைக் கையாள்வதற்கு புலம்பெயர்ந்த தமிழர்கள் நொதிக்க வேண்டும்.இந்திய அரசைக் கையாள்வதற்கு,தமிழ் நாட்டு மக்கள் நொதிக்க வேண்டும்.எனவே ஈழத்தமிழர்கள் தமிழகத்தைப் பக்குவமாகக் கையாள வேண்டும்.

உலகிலேயே முதலாவது இன அழிப்புக்கு எதிரான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது தமிழகத்தில்தான்.உலகின் மிகப்பெரிய தமிழ்ச் சட்டமன்றம் அது. அதுபோலவே உலகில் இன அழிப்பு நினைவுச் சின்னங்களை தமிழர்கள் ஏனைய புலம்பெயர்ந்த நாடுகளில் நிறுவ முன்பு முதலாவது நினைவுச் சின்னம் உருவாக்கப்பட்டது தஞ்சாவூரில்தான்.தமிழகத்தில்தான். எனவே தமிழகத்தை ஈழத் தமிழர்கள் பக்குவமாகக் கையாள வேண்டும். அரசு இல்லாத ஒரு மக்கள் கூட்டம் எவ்வளவுக்கு எவ்வளவு நண்பர்களைச் சம்பாதிக்கின்றதோ,அவ்வளவுக்கு அவ்வளவு அனைத்துலக அரங்கில் பலமாக நிற்கும்.

திருமாவின் உறவு தொடர்பான விடயம் தனிய,தமிழ் உணர்வோடு சம்பந்தப்பட்டது மட்டுமல்ல. அதைவிட ஆழமான பொருளில் இந்தியாவைக் கையாளுவது தொடர்பான ஒரு வெளியுறவு விவகாரமுந்தான்.தமிழ்த் தேசியக் கட்சிகளுக்கு இடையிலான போட்டியும் மோதல் நிலையும் வெளியுறவுக் கொள்கை சம்பந்தப்பட்ட ஒரு விடயத்தில் பிரதிபலிப்புகளை ஏற்படுத்துவது என்பது தமிழ்மக்கள் ஒரு தேசமாகத் திரள முடியாமல் தத்தளிக்கிறார்கள் என்பதைத்தான் காட்டுகிறது.

https://athavannews.com/2025/1452869

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

2 months 1 week ago

தீர்வுக்கு வழி ? கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் நடந்த ஒரு நிகழ்வு - நிலாந்தன்

1002543278-1024x576.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாணத்தில் டில்கோ விருந்தினர் விடுதியில் ஒரு நிகழ்வு ஒழுங்கு செய்யப்பட்டது. கலாநிதி குருபரனை பணிப்பாளராகக் கொண்ட சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான யாழ்ப்பாண கற்கை நிலை யத்தால் அந்த நிகழ்வு ஒழுங்குசெய்யப்பட்டது. இலங்கையில் உள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தின் நிதி அனுசரணையோடு நடத்தப்பட்ட அந்த நிகழ்வில் 230க்கும் குறையாதவர்கள் பங்குபற்றினார்கள். பொதுவாக அது போன்ற நிகழ்வுகளில் அவ்வளவு தொகையினர் பங்குபற்றுவது குறைவு. ஆனால் அன்று மண்டபம் நிறைந்திருந்தது.

மூன்றரை மணித்தியாலங்களுக்கு மேல் நடந்த அந்த நிகழ்வில், நான்கு அம்சங்கள் இருந்தன. முதலாவது மேற்சொன்ன  சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையத்தை அறிமுகப்படுத்துவது. இரண்டாவது, இனப்பிரச்சினை தொடர்பில் இலங்கைத் தீவில் இதுவரையிலும் இரண்டு சமூகங்களுக்கு இடையில் எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகள் சம்பந்தப்பட்ட ஆவணங்களைச் சேகரிக்கும் டிஜிட்டல் தளத்தை அங்கு அறிமுகப்படுத்தியது. மூன்றாவது, மூத்த சட்டச் செயற்பாட்டாளர்,சட்டத்தரணி  ரட்ணவேல் அவர்களுடைய உரை. நான்காவது,நான்கு தமிழ்த் தேசிய கட்சிகளின் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்ட ஒரு நிகழ்வு.

நிகழ்வுக்கு தலைமை தாங்கிய குருபரன் அங்கு கூறியதுபோல தமிழ்த் தேசியப் பரப்பில் அவ்வாறான ஒரு சட்டச் செயற்பாட்டு  நிறுவனம் உருவாக்கப்படுவது என்பது முக்கியமானது. தேச  நிர்மாணத்தின் ஒரு பகுதி அது. தேசத்தை நிர்மாணிக்கத் தேவையான நிறுவனங்களை உருவாக்குவது. எவ்வளவுக்கு எவ்வளவு நிறுவன உருவாக்கிகள் ஒரு சமூகத்தில் தோன்றுகிறார்களோ அவ்வளவுக்கு அவ்வளவு அந்த சமூகம் திரட்சியுறும்;நொதிக்கும்; கூர்ப்படையும்.

அங்கு அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிற்றல் ஆவணக் காப்பகத்தில் இரண்டு பகுதிகள் உண்டு. முதலாவது இனப்பிரச்சினை தொடர்பில் இதுவரை தமிழ்த் தரப்பால் முன்வைக்கப்பட்ட முன்மொழிவுகளின் தொகுப்பு.இரண்டாவது பொறுப்புக்கூறல், நல்லிணக்கம் என்பவற்றோடு தொடர்புடைய வழக்கு ஏடுகளை ஆவணப்படுத்துவது.

சட்டத்துக்கும் கொள்கைகளுக்குமான கற்கை நிலையமும் “நூலகம்” நிறுவனமும் இணைந்து மேற்படி ஆவணங்களைச் சேகரித்து ஆவணப்படுத்தியுள்ள்ளன. இதுவும் தேச நிர்மாணத்தில் ஒரு பகுதிதான். அந்த நிகழ்வில் நூலகம் நிறுவனத்தின் பிரதிநிதியும் உரை நிகழ்த்தினார். அது ஒரு முழுமையான தொகுப்பு இல்லை என்றும் அதில் ஈடுபாடு கொண்டவர்கள் தமது பங்களிபின்மூலம் அதை முழுமைப்படுத்த  வேண்டும் என்றும்  அங்கு கூறப்பட்டது.

1921ஆம் ஆண்டில் இருந்து இன்றுவரையிலுமான சுமார் 104ஆண்டு காலப்பகுதியில்  தமிழ்த் தரப்பால் முன் வைக்கப்பட்ட அரசியலமைப்பு யோசனைகளும் இனப்பிரச்சினையோடு தொடர்புடைய உடன்படிக்கைகளும்,ஆவணங்களும்   அங்கே எண்ணிம வடிவத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதிக்குரிய அந்த ஆவணங்களைத் தொகுத்துப் பார்க்கும்போது ஓர் அடிப்படைக் கேள்வி எழுகிறது. தமிழ் மக்கள் ஏன் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமது அபிலாசைகளை அடைய முடியாமல் இருக்கிறார்கள்?

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலாக தமிழ் தலைவர்கள் சரியாகவோ பிழையாகவோ பொருத்தமாகவோ,பொருத்தம் இன்றியோ ஏதோ ஒரு தீர்வு முன்மொழிவை முன்வைத்து சிங்களத் தலைவர்களோடு பேசியிருக்கிறார்கள். ஏதோ ஒர் இணக்கத்துக்கு வந்திருக்கிறார்கள். ஆவணங்களில் கையெழுத்திட்டு இருக்கிறார்கள். அதன்மூலம்,தமிழ்மக்கள் இந்தச் சிறிய தீவுக்குள் எப்பொழுதும் ஒரு தேசிய இனமாக ஏனைய இனங்களுடன் இணைந்து வாழ்வதற்குத் தயாராக இருந்திருக்கிறார்கள் என்பது அந்த ஆவணங்களைத் தொகுத்து பார்க்கும் பொழுது தோன்றுகிறது. தமிழ்த் தரப்பு தீர்வுக்குத் தயாரில்லை;அது பகல் கனவுகளை தீர்வு மேசையில் வைக்கின்றது; அந்தப் பகல் கனவுகளை அடைவதற்காக முயற்சிக்கின்றது; யதார்த்தமாகச் சிந்திப்பதில்லை; அதைவிட முக்கியமாக தமிழ்த் தரப்பு ஒன்றாக இணைந்து தீர்வு முன்மொழிவுகளை மேசையில் வைப்பதில்லை…போன்ற பல்வேறு விதமான குற்றச்சாட்டுகளுக்கும் அந்த ஆவணத் தொகுப்பில் பதில் உண்டு.

தமிழ்மக்கள் ஒரு நூற்றாண்டுக்கு மேலாக இலங்கைத் தீவில் இணைந்து வாழும் விருப்பத்தை வெளிப்படுத்தும் விதத்தில் தீர்வு முன்மொழிவுகளை முன் வைத்துக் கொண்டிருக்கிறார்கள். ஆயுதப் போராட்ட காலகட்டத்திலும்கூட திம்பு கோட்பாட்டில் தொடங்கி இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை வரையிலும் தமிழ்மக்கள் தீர்வு முன்மொழிவுகளை வைத்திருக்கிறார்கள். ஆனால் கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் அந்தத் தீர்வு முன்மொழிவுகளில் பெரும்பாலானவற்றை நிராகரித்தது அல்லது உடன்படிக்கைகளை முறித்துக் கொண்டது அல்லது வாக்குறுதிகளை முறித்துக் கொண்டது சிங்களத் தலைவர்கள்தான். ஆயுதப் போராட்ட காலகட்டத்தில் சில யுத்த நிறுத்தங்களை முறித்ததற்காக தமிழ்த் தரப்பின் மீது குற்றச்சாட்டுகள் வைக்கப்படலாம். ஆனால் தமிழ்மக்கள் தீர்வுக்குத் தயாரில்லை அல்லது தமிழ் மக்கள் பேச்சுவார்த்தைகளில் விசுவாசமாக இல்லை அல்லது தமிழ் மக்கள் பகல் கனவுகளை பேச்சுவார்த்தை மேசையில் வைக்கின்றார்கள் என்ற குற்றச்சாட்டுக்கள் முழுவதும் உண்மையானவை அல்ல என்பதனை அந்த ஆவணத் தொகுப்பு எடுத்துக்கூறுகிறது.

மேலும் அந்த ஆவணத் தொகுப்புக்கூடாக ஒரு விடயம் துலக்கமாக வெளித் தெரிகிறது. அந்த விடயத்தை அங்கு பேசிய தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரக்குமாரும் சுட்டிக்காட்டினார்.”இனப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கு ஸ்ரீலங்கா அரசாங்கத்தை இணங்க வைப்பதில் கணிசமான தூரத்துக்கு எடுத்துச்சென்ற ஓர் ஆவணம் இந்திய-இலங்கை  உடன்படிக்கை” என்று கஜன் சொன்னார். இதுவரையிலுமான இனப்பிரச்சினைக்கான தீர்வு முயற்சிகளில், சிங்கள பௌத்த அரசு கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி என்பது இந்திய இலங்கை உடன்படிக்கையின் கீழான பதின்மூன்றாவது திருத்தம்தான். சிங்கள பௌத்த அரச கட்டமைப்பின் ஒற்றை ஆட்சி பண்பை அது உடைக்கவில்லை என்ற காரணத்தால்தான் அந்த 13ஆவது திருத்தம் அங்கே இணைக்கப்பட்டது என்றும் கஜன் சுட்டிக்காட்டினார். அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்புக்குள், யாப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே தீர்வு முயற்சி அதுதான். ஆனால் அதுவும் கூட்டாட்சி பண்புடையது அல்ல.

1002543308.jpg

1002543302.jpg

இங்கு முக்கியமாகக் கவனிக்கப்பட வேண்டியது என்னவென்றால்,அந்தத் தீர்வு முயற்சி அதாவது இந்திய-இலங்கை உடன்படிக்கைக்கு கீழான 13ஆவது திருத்தம் என்பது எத்தகைய ஓர் அரசியல் சூழலில் யாப்புக்குள் இணைக்கப்பட்டது என்பதுதான். ஒருபுறம் தமிழ் மக்களின் ஆயுதப் போராட்டம். இன்னொரு புறம் இந்தியப் பேரரசின் ராணுவ அழுத்தம்.

13வது திருத்தம் எனப்படுவது ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தின் விளைவு. அதேசமயம் இந்திய-இலங்கை உடன்படிக்கையின் கீழ் இந்திய அமைதி காக்கும் படையின் பிரசன்னத்தின் பின்னணியில்தான் அதுவும் சாத்தியமாகியது. அதுமட்டுமல்ல அந்தத் தீர்வில் தமிழ்மக்கள் கையெழுத்திடவில்லை. இலங்கையும் இந்தியாவும்தான் கையெழுத்திட்டன.

அதாவது கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இனப்பிரச்சினை தொடர்பில் உருவாக்கப்பட்ட தீர்வுகளில் சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பின் யாப்புக்குள் உள்வாங்கப்பட்ட ஒரே தீர்வு அதுதான். ஆனால் அதையும் 38ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ச்சியாக வந்த இலங்கை அரசாங்கங்கள் அமுல்படுத்தவில்லை மட்டுமல்ல, அந்தத் தீர்வை எப்படி மேலும் தோலிருக்கச் சுளை பிடுங்கலாம் என்றுதான் சிந்தித்துச் செயல்பட்டிருக்கின்றன.

அதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால் நிறைவேற்று அதிகாரமுடைய ஜனாதிபதி முறைமையின் கீழ் கடந்த நான்கு தசாப்த காலத்துக்குள் உருவாக்கப்பட்ட ஒரு தீர்வு அது. ஆனால் அந்தத் தீர்வை அதாவது யாப்பின் அந்தப் பகுதியை நிறைவேற்றாமல் விடுவதற்குத்தான் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரங்கள் பயன்படுத்தப்பட்டிருக்கின்றன என்பதுதான் கடந்த சுமார் நான்கு தசாப்த கால வரலாறு.

கடந்த ஒரு நூற்றாண்டுக்கு மேலான காலப்பகுதியில் இலங்கைத் தீவில் இனப் பிரச்சினைக்காக எழுதிக் கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளில் இரண்டே இரண்டு உடன்படிக்கைகள்தான் ஒப்பீட்டளவில் நீண்டகாலம் நின்று நிலைத்தன.

ஒன்று,இந்திய-இலங்கை உடன்படிக்கை.மற்றது, பிரபாகரன்-ரணில் உடன்படிக்கை. இரண்டு உடன்படிக்கைகளிலும் மூன்றாவது தரப்பின் பிரசன்னம் இருந்தது. இந்திய-இலங்கை உடன்படிக்கையின் பின்னணியில் இந்திய அமைதிகாக்கும் படை நாட்டுக்குள் இறக்கப்பட்டது. நோர்வேயின் அனுசரணையுடனான சமாதான முயற்சிகளில் ஸ்கண்டிநேவிய யுத்த நிறுத்தக் கண்காணிப்பு குழு நாட்டுக்குள் நின்றது.

இந்த இரண்டையும் தவிர மூன்றாவதாகக் கூறக்கூடியது ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் இதில் ஐநா,அழுத்தத்தைப் பிரயோகிக்கின்ற அல்லது கண்காணிக்கின்ற ஒரு தரப்பாகச் செயற்படவில்லை. அதனால்தான் நிலைமாறு கால நீதியானது சுமந்திரன் கூறுவதுபோல”தோற்றுப்போன பரிசோதனையாக” முடிந்தது. அதைத் தோற்கடித்தது தமிழர்கள் அல்ல, சிங்களத் தரப்புத்தான்.

எனவே இப்பொழுது ஒரு தெளிவான சித்திரம் கிடைக்கிறது. தமிழ் மக்கள் போராடியதால்தான், பிராந்தியப் பேரரசாகிய இந்தியாவின் தலையீட்டினால்தான் பதின்மூன்றாவது திருத்தம்கூட சாத்தியமாகியது. தமிழ் மக்கள் போராடவில்லை என்றால் அதுவும் கிடைத்திருக்காது.

thumb_large_8-cccc.jpg

கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோ விருந்தினர் விடுதியில் நடந்த சந்திப்பில் உரை நிகழ்த்திய சித்தார்த்தன் ஒரு விடயத்தைத் தெளிவாகச் சொன்னார். அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்களத் தலைவரும் தமிழ் மக்களுக்குத்  தீர்வைத் தர மாட்டார்கள் என்று. குறிப்பாக பிராந்தியங்களின் ஒன்றியம் என்ற தீர்வை முன்வைத்த சந்திரிக்கா 2009க்குப்பின் இந்திய ஊடகம் ஒன்றினால் நேர்காணப்பட்டபோது, என்ன சொன்னார் என்பதனை அவர் சுட்டிக்காட்டினார். பேட்டி கண்டவர் கேட்கின்றார், ”இப்பொழுது உங்களுக்குச்  சந்தர்ப்பம் தரப்பட்டால் நீங்கள் முன்பு முன்வைத்த அந்த முன்மொழிவை நிறைவேறுவீர்களா?” என்று. அதற்குச் சந்திரிக்கா கூருகிறார் “Perhaps less”-“பெரும்பாலும் இல்லை”என்ற பொருள்பட.ஏனென்றால் இப்பொழுது விடுதலைப்புலிகள் இயக்கம் இல்லை என்பதால் என்றும்  கூறியுள்ளார்.

மேலும் சித்தார்த்தன் ஒரு விடயத்தைச் சொன்னார். நிலைமாறு கால நீதியின் கீழ், புதிய யாப்பு ஒன்றை உருவாக்குவதற்காக உழைத்தபோது, உருவாக்கப்பட்ட குழுக்களில் ஒன்றில் அவரும் அங்கம் வகித்தார். அக்காலகட்டத்தில் சம்பந்தர் அடிக்கடி தமிழ் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்குவார். “அடுத்த தீபாவளிக்குத் தீர்வு அடுத்த வருஷப்பிறப்புக்குத் தீர்வு” என்று சம்பந்தர் அடிக்கடி நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை தமிழ் மக்களுக்கு வழங்கி வந்தார். ஒருமுறை சித்தார்த்தன் இதுதொடர்பாக சம்பந்தரிடம் கேட்டிருக்கிறார். எதற்காக அப்படிக் கூறுகிறீர்கள்? இதில் நாங்களும் சம்பந்தப்பட்டிருப்பதனால் மக்கள் எங்களிடமும் கேட்கிறார்கள், என்று. அதற்கு சம்பந்தர் சொன்னாராம், “இந்த யாப்புருவாக்க முயற்சியில் தமிழ்த் தரப்பின் பிரதிநிதியாக நான் ஈடுபட்டு வருகிறேன். இந்த முயற்சி வெற்றி பெறாது என்று நானே  சொன்னால், பிறகு எதற்கு  அதில் நான் ஈடுபடுகிறேன் என்று மக்கள் கேட்பார்கள். எனவே நான் மக்களுக்கு நம்பிக்கையூட்டும் வாக்குறுதிகளை வழங்க வேண்டியுள்ளது” என்ற பொருள்பட.

இதைச் சொன்ன சித்தார்த்தன் மேலும் ஒரு விடயத்தைச் சொன்னார், அந்த முயற்சி வெற்றி பெறாது என்பது சம்பந்தருக்கும் தெரியும் என்று. அதாவது சம்பந்தர் தமிழ் மக்களுக்குத் தொடர்ச்சியாகப்  பொய்யான வாக்குறுதிகளை வழங்கி வந்திருக்கிறார். இதை இன்னும் கூர்மையான வார்த்தைகளில் சொன்னால், சம்பந்தர் தனது மக்களுக்கு உண்மையைச் சொல்லவில்லை.

மூன்றாவது தரப்பின் அழுத்தம் இல்லாமல் சிங்கள பௌத்த அரசுக் கட்டமைப்பு ஒரு தீர்வை நோக்கி வளையாது என்பதனை புதிய யாப்பை உருவாக்கும் முயற்சிகள் நடந்து கொண்டிருந்த காலகட்டத்தில், 2016இல், மன்னாரில், ஆயர் இல்லத்துக்கு அருகே நடந்த,”தடம் மாறும்  தமிழ்த்தேசியம்?”என்ற கருத்தரங்கில், நான் சம்பந்தருக்குச் சுட்டிக்காட்டினேன். அப்பொழுது சம்பந்தர் என்னை நோக்கி, தலையைச் சாய்த்து, மண்டைக்கண்ணால் பார்த்துக்கொண்டு அழுத்தம் திருத்தமான குரலில் சொன்னார் “சிங்களத் தலைவர்கள் ஒரு தீர்வைத் தர மாட்டார்கள் என்று கூறுவது வரண்ட வாதம்; வறட்டு வாதம்” என்று. ஆனால் எது வறண்ட வாதம் என்பதனை வரலாறு நிரூபித்தது. தந்தை செல்வா கலையரங்கின் கூரை பதிந்த அறைக்குள் சம்பந்தரின் உடல் தனித்துவிடப்பட்ட இரவில் வரலாறு தான்  ஒரு கண்டிப்பான கிழவி என்பதை நிரூபித்தது.

எனவே ஒரு நூற்றாண்டுக்கு மேலாகக் கற்றுக்கொண்ட பாடம் என்னவென்றால், சித்தார்த்தன் கூறுவதுபோல, இப்போதுள்ள அனுரவும் உட்பட எந்த ஒரு சிங்கள தலைவரும் தமிழ் மக்களுக்குத் தாமாக முன்வந்து தீர்வைத் தர மாட்டார்கள் என்பதுதான். கஜேந்திரக்குமார் அங்கே சுட்டிக்காட்டியதுபோல,சிங்கள பௌத்த ஒற்றையாட்சி அரசுக் கட்டமைப்புக்குள் இணைக்கப்பட்ட ஒரே ஒரு தீர்வு 13ஆ வது திருத்தம்தான். அதுகூட தமிழ்மக்களின் இரத்தத்தால் வரையப்பட்டது; இந்திய பேரரசின் அழுத்தம் இருந்தது.

எனவே தமிழ் மக்கள் போராடவில்லை என்றால்,மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லையென்றால் தமிழ் மக்களுக்கு இனியும் தீர்வு கிடைக்காது.

இந்த இடத்தில்,கடந்த ஞாயிற்றுக்கிழமை டில்கோவில் கூடிய கட்சிகளும் உட்பட எல்லாத் தமிழ்த் தேசியக் கட்சிகளும் அரசியல் செயற்பாட்டாளர்களும் இரண்டு முக்கிய கேள்விகளுக்குப் பதில் கூற வேண்டும். முதலாவது கேள்வி, சமஸ்ரியை அடைவதற்கு தமிழ்க் கட்சிகளின் வழி வரைபடம் என்ன? இந்தக் கேள்வியை சில ஆண்டுகளுக்கு முன் விக்னேஸ்வரன் அப்பாவித்தனமாக கேட்டிருந்தார். அவரிடம் அதற்குப் பதில் இல்லை என்பதனால் அப்படிக் கேட்டிருந்தார்.

இரண்டாவது கேள்வி. மூன்றாவது தரப்பு ஒன்றின் அழுத்தம் இல்லாமல் இனப்பிரச்சினைக்குத் தீர்வு இல்லை என்பதே ஒரு நூற்றாண்டு காலமாக  கற்றுக்கொண்ட பாடம். அப்படியென்றால் அந்த மூன்றாவது தரப்பை அணைத்து எடுப்பதற்கு தமிழ் மக்களிடம் உள்ள வழிவரைபடம் என்ன?

https://www.nillanthan.com/7931/

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

2 months 1 week ago

மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு?

Veeragathy Thanabalasingham

on November 14, 2025

TNPF-against-13A-13.jpeg?resize=1200%2C5

Photo, Tamil Guardian

அரசியல் கட்சிகளின் கூட்டணிகள் உருவாகுவதற்கு அரசியல் நிர்ப்பந்தங்களே காரணம். இலங்கை தமிழரசு கட்சிக்கு அவ்வாறு எத்தகைய நிர்ப்பந்தம் தற்போது ஏற்பட்டதோ தெரியவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதற்கு அதன் தலைவர்கள் கடந்த வாரம் விருப்பத்தை வெளிப்படுத்தியதை காணக்கூடியதாக இருந்தது.

வவுனியா நகரில் நவம்பர் 5ஆம் திகதி தமிழரசு கட்சியின் மத்தியகுழு கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்கள் மத்தியில் கட்சியின் தலைவர் சி.வி.கே. சிவஞானம் சகிதம் உரையாற்றிய பொதுச் செயலாளர் எம்.ஏ.சுமந்திரன் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு தங்களது கட்சியின் நிலைப்பாட்டை தெரியப்படுத்தியிருப்பதாகவும் அவர்கள் அதற்கு இணங்கி வந்தால் மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படமுடியும் என்றும் கூறினார்.

அரசாங்கத்தின் வரவு – செலவு திட்டம் மீதான விவாதத்தில் தமிழரசு கட்சியின் நாடாளுமன்றக்குழு எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பது குறித்தும் வேறு விவகாரங்கள் தொடர்பாகவும் மத்திய குழு கூட்டத்தில் பிரதானமாக ஆராயப்பட்டது என்று கூறிய சுமந்திரன் முதன்மையான தமிழ் அரசியல் கட்சி என்ற வகையில் தமிழரசு கட்சி மற்றைய தமிழ் கட்சிகளுடன் இணைந்து செயற்படுவதற்கு அழைப்பு விடுப்பது என்று தீர்மானிக்கப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.

முன்னர் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பில் அங்கம் வகித்த கட்சிகளான தமீழீழ விடுதலை இயக்கம் (ரெலோ), ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி (ஈ.பி.ஆர்.எல்.எவ்.) மற்றும் தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (புளொட்) ஆகியவையும் வேறு சில குழுக்களுமே ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியாக மூன்று வருடங்களுக்கும் அதிகமான காலமாக இயங்கிவருகின்றன. அவற்றின் தலைவர்களை நோக்கியே சுமந்திரன் இந்த அழைப்பை விடுத்திருக்கிறார்.

ஜனநாயக தமிழ்த்  தேசியக் கூட்டணியின் தலைவர்களுடன் தலைவர் சிவஞானமும் தானும் ஏற்கெனவே கலந்துரையாடியிருப்பதாகவும் தாங்கள் தெரிவித்த நிலைப்பாடுகளை அவர்கள் ஏற்றுக் கொண்டால் முன்னரைப் போன்று தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பாக இணைந்து செயற்படுவதற்கு வாய்ப்பு இருக்கிறது என்றும் கூறிய சுமந்திரன் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடனும் இது தொடர்பாக பேசலாமா என்று மத்திய குழுவில் ஆராயப்பட்டதாகவும் தெரிவித்தார்.

இந்த அழைப்பை உடனடியாகவே வரவேற்ற ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியின் பேச்சாளரான சுரேஷ் பிரேமச்சந்திரன் மீண்டும் இணைந்து செயற்படுவதற்கு தமிழரசு கட்சி முன்வைத்திருக்கும் முன்னிபந்தனைகள் எவை என்று தங்களுக்குத் தெரியவில்லை என்றும் இரு தரப்பினரும் இதுவரையில் உத்தியோகபூர்வமாக எந்தவிதமான பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என்றும் குறிப்பிட்டார். பேச்சுவார்த்தைக்கு முன்னதாக நிபந்தனைகளை விதிப்பது ஏற்புடைதல்ல என்றும் அவர் கூறினார்.

ஜனநாயக தமிழ்த் தேசியக்  கூட்டணி ஐந்து கட்சிகளை உள்ளடக்கிய அமைப்பாக இயங்கி வருகிறது. தனியான யாப்பையும் சின்னத்தையும் கொண்டிருக்கும் அந்தக் கூட்டணி தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அங்கீகரிக்கப்பட்டதாகவும் இருக்கிறது. அதேவேளை, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியுடன் ஏற்கெனவே புரிந்துணர்வு உடன்படிக்கை ஒன்றின் அடிப்படையில் அந்தக் கூட்டணி  செயற்பட்டு வருகிறது.

ஆனால், அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தம் முழுமையாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் மாகாண சபைகள் முறைமை பாதுகாக்கப்பட வேண்டும் என்றும் ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணி கொண்டிருக்கும் நிலைப்பாடு காரணமாக தமிழ் தேசிய மக்கள் முன்னணி அசௌகரியத்தை வெளிப்படுத்தியிருக்கிறது. தமிழரசு கட்சியின் அழைப்பை பிரேமச்சந்திரன் வரவேற்றிருப்பது இரு தரப்பினருக்கும் இடையிலான புரிந்துணர்வை மேலும் கேள்விக்கு உள்ளாக்குகிறது.

அதேவேளை, இணைந்து செயற்படுவதற்கான பேச்சுவார்த்தைக்கு தமிழரசு கட்சி முன்னிபந்தனைகளை விதிப்பது ஏற்புடையது அல்ல என்று கூறிய பிரேமச்சந்திரன் எதிர்கால தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எத்தகையதாக இருக்க வேண்டும் என்பது குறித்து தெரிவித்த கருத்துக்கள் உண்மையில் முன்னிபந்தனைகள் போன்றே அமைந்திருக்கின்றன. முன்னைய கூட்டமைப்பில் தங்களுக்கு ஏற்பட்ட அனுபவத்தின் அடிப்படையில் அந்தக் கருத்துக்களை அவர் முன்வைத்திருக்கிறார் என்பது வெளிப்படையானது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முன்னர் அங்கீகரிக்கப்பட்ட அமைப்பாகவோ அல்லது எந்தவிதமான யாப்பையும் கொண்டதாகவோ இருக்கவில்லை. மீண்டும் தமிழ்த் தேசியக்  கூட்டமைப்பாக இயங்க வேண்டுமானால் அதற்கென்று தனியான யாப்பு ஒன்று உருவாக்கப்பட வேண்டும் என்பதுடன் அங்கத்துவ கட்சிகளின் தனித்துவத்தைப் பேணக்கூடியதாக இருக்க வேண்டும். தங்களை முதன்மையான அல்லது தலைமைத்துவ கட்சி என்று தமிழரசு கட்சி அழைத்துக்கொள்வதாக இருந்தாலும் கூட, சகல அங்கத்துவக் கட்சிகளையும் அரவணைத்து மெய்யாகவே புரிந்துணர்வுடன் கூட்டாகச் செயற்படுகின்ற அணுகுமுறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்று பிரேமச்சந்திரன் யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்கள் மகாநாட்டில் தெரிவித்தார்.

காலஞ்சென்ற மூத்த தமிழ்த் தலைவர் இராஜவரோதயம் சம்பந்தன் தலைமையில் 2001ஆம் ஆண்டின் பிற்பகுதியில் அமைக்கப்பட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு போர்க் காலத்தில் சுயாதீனமான முடிவுகளை எடுத்துச் செயற்பட முடியவில்லை. அதற்கான காரணம் புரிந்து கொள்ளக்கூடியதே. விடுதலை புலிகள் இயக்கமே இலங்கை தமிழ் மக்களின் ஏக பிரதிநிதிகள் என்று நாடாளுமன்றத்திலும் வெளியுலகிலும் குரல் கொடுப்பதற்காக அமைக்கப்பட்ட ஒரு இயக்கம் போன்றே கூட்டமைப்பு செயற்பட்டது.

உள்நாட்டுப்போரின் முடிவுக்குப் பிறகு தமிழ் மக்கள் மத்தியில் கட்டுறுதியான அரசியல் சமுதாயம் ஒன்று இல்லாத சூழ்நிலையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை தமிழ் மக்களின் பலம் பொருந்திய ஒரு ஜனநாயக அரசியல் இயக்கமாக கட்டியெழுப்புவதற்கு சம்பந்தன் உட்பட தமிழ் அரசியல்வாதிகள் தவறியது குறித்து கடுமையான விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன.

கஜேந்திரகுமாரின் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் 2010 ஏப்ரல் பொதுத்தேர்தலின்போது கூட்டமைப்பில் இருந்து வெளியேறியது. பிரேமச்சந்திரன் தலைமையிலான ஈ.பி.ஆர்.எல்.எவ். 2015 ஆகஸ்ட் பொதுத் தேர்தலின்போது கூட்டமைப்பில் போட்டியிட்ட போதிலும், 2017ஆம் ஆண்டு அதிலிருந்து வெளியேறியது. இரு கட்சிகளும் வெளியேற்றத்துக்கான தங்கள் தரப்பு காரணங்களை முன்வைத்தன என்ற போதிலும், தேர்தல் அரசியலும் அதற்கு ஒருகாரணி.

கூட்டமைப்பில் இருந்து புளொட்டும் ரெலோவும் 2022ஆம் ஆண்டு வெளியேறின. உள்ளூராட்சி தேர்தல்கள் கலப்பு தேர்தல் முறையில் நடத்தப்படுவதன் காரணமாக கூட்டமைப்பின் அங்கத்துவ கட்சிகள் தனித்தனியாக போட்டியிட்டால் கணிசமான  ஆசனங்களைக் கைப்பற்றலாம் என்றும் தேர்தலுக்கு பிறகு உள்ளூராட்சி சபைகளின் நிருவாகங்களை கூட்டாக அமைக்க அது வசதியாக இருக்கும் என்றும் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை அவ்விரு கட்சிகளும் ஆட்சேபித்தன.

ஆனால், ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்சவின் அரசாங்க காலத்தில் உள்ளூராட்சி தேர்தல்கள் நடைபெறவில்லை. இறுதியாக தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே கடந்த மேமாதத்தில் அந்த தேர்தல்களை நடத்தியது. பல்வேறு அணிகளாகப் பிரிந்து நின்று போட்டியிட்ட தமிழ்க் கட்சிகள் உள்ளூராட்சி நிர்வாகங்களை அமைப்பதில் வடக்கிலும் கிழக்கிலும் எவ்வாறு நடந்துகொண்டன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. தற்போது அரசாங்கம் மாகாண சபை தேர்தல்களை அடுத்த வருடத்தில் நடத்துமா இல்லையா என்ற கேள்வி  எழுந்திருப்பதற்கு மத்தியில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக மீண்டும் செயற்படுவதற்கான விருப்பத்தை தமிழரசு கட்சி வெளிப்படுத்தியிருக்கிறது.

சகல தமிழ்க் கட்சிகளையும் இணைத்து செயற்பட வேண்டிய அவசியத்தை வலியுறுத்தியிருக்கும் சுமந்திரன் தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு தொடர்பாக தமிழ்க் கட்சிகள் ஒரே நிலைப்பாட்டை முன்வைக்குமா என்ற கேள்வி எழுந்திருப்பதாக கூறியிருக்கிறார். கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்திடம் தமிழரசு கட்சி முன்வைத்த யோசனையை மற்றைய தமிழ்க் கட்சிகளுக்கு காண்பிக்கத் தீர்மானித்திருப்பதாகவும் அந்த யோசனைகள் தொடர்பில் அவர்கள் இணங்கிவந்தால் அதை பொதுநிலைப்பாடாக அரசாங்கத்திடம் சமர்ப்பிக்க முடியும் என்றும் அவர் கூறியிருக்கிறார்.

சகல தமிழ்க் கட்சிகளையும் ஒரு குடையின் கீழ் கொண்டுவருவது நடைமுறையில் ஒருபோதும் சாத்தியமில்லை. ஆனால், பெரும்பான்மையான கட்சிகளை அரவணைத்து மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இயங்குவதாக இருந்தாலும் கூட, கடந்த காலத்தில் கூட்டமைப்புக்குள் முரண்பாடுகளை தோற்றுவித்த காரணிகள் மீண்டும் தலைகாட்டாமல் இருப்பதை உறுதி செய்வது முக்கியமானதாகும்.

பிரேமச்சந்திரன் தெரிவித்த கருத்துக்கள் குறித்து தமிழரசு கட்சியின் தலைவர்களிடமிருந்து உடனடியாக பிரதிபலிப்பு எதுவும் வரவில்லை. அவர்களும் கடந்த காலத்தின் கூட்டமைப்பு அனுபவங்களை கருத்தில் எடுத்து மீண்டும் அநாவசியமான முரண்பாடுகள் தோன்றாமல் இருப்பதை உறுதிசெய்துகொள்ள வேண்டியது அவசியமாகும். மற்றைய தமிழ்க் கட்சிகளைப் பொறுத்தவரை, தமிழரசு கட்சி மேலாண்மை செலுத்தும் மனோபாவத்துடன் நடந்துகொள்கிறது என்பதே பிரதானமான முறைப்பாடாக இருந்து வந்தது.

எது எவ்வாறிருந்தாலும், மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக செயற்படுவதில் தமிழரசு கட்சிக்கு ஏற்பட்டிருக்கும் ஆர்வமும் அதற்கு ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணி தரப்பில் இருந்து வெளிப்படுத்தப்பட்டிருக்கும் நேர்மறையான பிரதிபலிப்பும் நிச்சயமாக வரவேற்கப்பட வேண்டியவை. ஒன்றிணைந்து செயற்படுவது தொடர்பிலான பேச்சுவார்த்தைகளை தமிழ்க் கட்சிகளின் தலைவர்கள் காலந்தாழ்த்தாமல் விரைவில் தொடங்க வேண்டும்.

தமிழ்க் கட்சிகள் பல்வேறு அணிகளாகச் சிதறியிருப்பதால் தங்களது பிரச்சினைகளுக்குத் தீர்வுகளைக் காண்பதற்கான அணுகுமுறைகளைப் பொறுத்தவரை ஒருமித்த நிலைப்பாடுகளை எடுக்க முடியாமல் இருக்கிறது என்று தமிழ் மக்கள் நீண்ட நாட்களாகவே கவலையடைந்திருக்கிறார்கள். கடந்த பாராளுமன்ற தேர்தலில் வடக்கிலும் கிழக்கிலும் தேசிய மக்கள் சக்திக்கு அவர்கள் பெருமளவில் வாக்களித்ததற்கான காரணங்களில் அதுவும் ஒன்று.

போரின் முடிவுக்குப் பின்னரான காலப்பகுதியில் சர்வதேச மற்றும் உள்நாட்டு நிலைவரங்கள் வேண்டி நிற்பதற்கு ஏற்றமுறையில் விவேகமானதும் நடைமுறைச் சாத்தியமானதுமான அரசியல் அணுகுமுறைகளை கடைப்பிடிப்பதில் தமிழ்க் கட்சிகள் அக்கறை காட்டவில்லை என்பது தமிழ் மக்களின் முக்கியமான மனக்குறை. வெறுமனே ஒன்றிணைந்து செயற்படுவது மாத்திரம் போதுமானதல்ல. நீண்டகால அரசியல் இலக்குகளைப் பற்றி மாத்திரம் பேசிக் கொண்டிருக்காமல் தமிழ் மக்களின் உடனடிப் பிரச்சினைகளை கையாளுவதிலும் கவனம் செலுத்த வேண்டும்.

சுமந்திரன் கூறிய தகவல்களின் பிரகாரம் நோக்கும்போது தமிழ்க் கட்சிகள் ஒருங்கிணைந்து தேசிய இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு யோசனையை முன்வைப்பதே மீண்டும் தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக செயற்பட வேண்டும் என்ற அக்கறையின் அடிப்படை நோக்கம் என்று தெரிகிறது. சகல தமிழ்க் கட்சிகளுமே ஒற்றையாட்சியை எதிர்ப்பதுடன் சமஷ்டி முறையின் அடிப்படையிலான அரசியல்  தீர்வு ஒன்றையே தங்களது கொள்கையாகவும் கொண்டிருக்கின்றன. அதனால் ஒருமித்த நிலைப்பாட்டை முன்வைப்பதில் எந்த பிரச்சினையும் எழுவதற்கில்லை.

அரசாங்கம் புதிய அரசியலமைப்பு வரைவுச் செயன்முறையை முன்னெடுக்கும்போது இனப்பிரச்சினைக்கான தீர்வு யோசனையை தமிழ்க்கட்சிகள் ஒன்றிணைந்து முன்வைப்பதற்கு புறம்பாக, அதற்கு முன்னரான காலப்பகுதியில் இடைக்காலத் தீர்வு தொடர்பில் குறிப்பாக, மாகாண சபைகள் முறைமையை பயன்படுத்துவதிலும் கருத்தொருமிப்புடன் செயற்பட வேண்டும்.

மாகாண சபைகள் முறையைப் பாதுகாக்க வேண்டும் என்று தமிழ்க்கட்சிகள் பலவற்றின் மத்தியில் அண்மைக்காலமாக அதிகரித்துவரும் அக்கறை மீண்டும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்ற தமிழரசு கட்சியின் விருப்பத்துக்கு வலுச்சேர்ப்பதாக அமையும். மாகாண சபை தேர்தல்களை விரைவாக நடத்தவும் அரசியலமைப்புக்கான 13ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தவும் அரசாங்கத்துக்கு நெருக்குதலைக் கொடுக்கக்கூடிய வெகுஜன ஜனநாயக அரசியல் இயக்கத்தை உடனடியாக முன்னெடுப்பது பரந்தளவில் தமிழ்க் கட்சிகளும் குழுக்களும் ஓரணியில் வருவதற்கு பெரும் உத்வேகத்தைக் கொடுக்கும். நடைமுறைச் சாத்தியமான இடைக்காலத்  தீர்வுகளைப் பற்றி அக்கறைப்படாத எதிர்மறையான அரசியல் கலாசாரத்துக்கு தமிழர் அரசியல் சமுதாயம் விடைகொடுக்க வேண்டும்.

வீரகத்தி தனபாலசிங்கம்

https://maatram.org/articles/12419

2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள்

2 months 2 weeks ago

2024 குடித்தொகை மதிப்பீடு: மலையக மக்களை மையப்படுத்தி ஒரு சில அவதானிப்புகள்

Estate-workers_2.jpg?resize=1200%2C550&s

Photo, THE HINDU

மலையகத் தமிழர்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 ஆண்டுகள் நிறைவுற்ற (மலையகம் 200) வரலாற்று நிகழ்வின் பின்னர், அவர்களின் இருப்பு ஒரு பாரிய சனத்தொகைப் புதிரை (Population Puzzle) எதிர்கொண்டுள்ளது. 2012ஆம் ஆண்டு குடித்தொகைக் கணிப்பீட்டுடன் ஒப்பிடும்போது, 2024ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகளின்படி, மலையக மக்களின் குடித்தொகை, தீவிரமாக வீழ்ச்சியடைந்துள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. அந்த வகையில் இக்கட்டுரையானது குடித்தொகை வீழ்ச்சிக்கான காரணங்களையும், அது மலையகத் தமிழ்ச் சமூகத்தின் தேசிய அடையாள கட்டுமானம், அரசியல் பேரம் பேசும் சக்தி மற்றும் அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றின் மீது ஏற்படுத்தும் ஆழமான தாக்கங்களை ஆராய முற்படுகின்றது. இக்கட்டுரை குடிசன மதிப்பீட்டுத் திணைக்களத்தின் தரவுகள், ஊடக அறிக்கைகள், சமூக ஊடக செய்திகள், மற்றும் கட்டுரையாசிரியர்கள் தனிப்பட்டத் தொடர்புகளைக் கொண்டு மலையகத்தின் சிவில் சமூக செயற்பாட்டாளர்கள், இளைஞர்கள், அரச அதிகாரிகள் மற்றும் வேறும் பலருடன் மேற்கொண்ட கலந்துரையாடல்களின் மூலம் கிடைக்கப்பெற்ற தரவுகள் என்பவற்றினை அடிப்படையாகக் கொண்டு எழுதப்பட்டுள்ளது. இக்கட்டுரையில் முன்வைக்கப்பட்டுள்ள விடயங்கள் வாத பிரதிவாதங்களுக்கு உட்படுத்தக்கூடியவையாகும்.

சனத்தொகை கணிப்பீடு என்பது ஒரு நாட்டின் சமூகப் பொருளாதார அபிவிருத்தி குறித்த திட்டங்களை தீட்டுவதற்கு அதற்கு அவசியமான நிதி மற்றும் பௌதீக வளங்களை ஒதுக்கீடு செய்வதற்கு பெரிதும் அவசியமாகும். குடிசன மதிப்பீட்டின் மூலமே அரசாங்கம் சமூக (கல்வி, சுகாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து, குடிநீர், பாதைகள், வறுமை ஒழிப்புத்திட்டங்கள்) பொருளாதார நிலை மற்றும் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் என்பவற்றினை அறிந்துக்கொண்டு அதற்கேற்ப கொள்கைத் திட்டங்கள் தீட்டுகிறது. குடிசன மதிப்பீட்டு தரவுகளை அடிப்படையாகக் கொண்டே மாவட்ட ரீதியான நாடாளுமன்ற ஆசன ஒதுக்கீடுகள் இடம்பெறுகின்றன. குடித்தொகை வளர்ச்சி குறைந்த மாவட்டத்திற்கு நாடாளுமன்ற ஆசனம் குறைக்கப்பட்டு அது அதிக குடித்தொகை வளர்ச்சியினைக் கொண்ட மாவட்டத்திற்கு வழங்கப்படுகின்றது. இவ்யதார்த்தத்தினை விளங்கிக்கொண்டே மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியினை நோக்க வேண்டும்.

இலங்கை மலையகத் தமிழ் மக்களின் குடித்தொகை குறித்த வரலாற்று ரீதியான பார்வை

19ஆம் நூற்றாண்டின் ஆரம்ப காலப்பகுதியில் (1820களிலிருந்து) தேயிலைத் தோட்டப் பயிர்ச்செய்கைக்காக பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் மலையகத் தமிழர்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்குக் அழைத்துவரப்பட்டனர். 1948ஆம் ஆண்டு வரை இவர்கள் பருவகால தொழிலாளர்களாகக் காணப்பட்டனர். குறிப்பாக இந்தியாவில் இருந்து வருவதும் செல்வதுமாக இருந்தனர். ஆகவே, அரசாங்கத்தின் மக்கள் தொகைக் கணிப்பீட்டில் இவர்கள் இலங்கையில் வாழ்ந்ததாகக் குறிப்பிடப்பட்டுள்ளப்போதும் இச்சமூகத்தின் இன அடையாளம் மற்றும் மக்கள் தொகைப் பதிவு என்பன வரலாற்று ரீதியாக ஒழுங்கான முறையில் இடம்பெறவில்லை.

ஆரம்பகால மக்கள் தொகைக் கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளித் தமிழர்கள் எவ்வாறு வகைப்படுத்தப்பட்டனர் என்பதில் தெளிவின்மை இருந்தது. 1881ஆம் ஆண்டு முதல் 1901ஆம் ஆண்டு வரையிலான மூன்று கணிப்பீடுகளில், இந்திய வம்சாவளி மலையகத் தமிழர்கள் இலங்கைத் தமிழர்கள் என்ற வகைப்பாட்டின் கீழேயே கணிப்பிடப்பட்டிருந்தனர். 1911ஆம் ஆண்டு முதல் சனத்தொகை கணிப்பீட்டில் இவர்கள் இந்திய வம்சாவளித் தமிழர்கள் என்றே அடையாளப்படுத்தப்பட்டு வருகின்றனர். அண்மைக்காலங்களில் மலையகத் தமிழர் என்ற அடையாள கருத்தாடல் மற்றும் அதனுடன் இணைந்த போராட்டங்கள் தீவிரமாக எழுச்சிப்பெற்றதன் காரணமாக, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இந்தியத் தமிழர் மற்றும் மலையகத் தமிழர் (இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர்) என்ற இரு சொற்பதங்களும் உள்வாங்கப்பட்டுள்ளன.

1911ஆம் ஆண்டுக்குப் பிந்தைய மக்கள் தொகைக் கணிப்பீடுகளில் இந்திய வம்சாவளித் தமிழ் மக்களின் நிலையினை பின்வரும் அட்டவணையில் காணலாம்.

அட்டவணை 1: இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் சனத்தொகைப் பரம்பல் (1911–2012)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of. Census and Statistics, General Report 1981 & Census of Population and Housing Sri Lanka, 2012)

சனத்தொகைக் குறைவின் மிக முக்கியமான புறக்காரணி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில் ஏற்பட்ட இருதரப்பு ஒப்பந்தங்களே ஆகும். 1971ஆம் ஆண்டின் பின்னர் 1984ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் (1964) மற்றும் இந்திரா-சிறிமா ஒப்பந்தம் (1974) காரணமாக 446,338 பேர் இந்தியாவிற்குத் திரும்பினர். இந்தக் கட்டாய வெளியேற்றத்தின் விவரம் அட்டவணையில் காட்டப்பட்டுள்ளது.

அட்டவணை 2; தாயகம் திரும்பிய இந்திய வம்சாவளித் தமிழ் மக்கள் (1971–1984)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of.Census and Statistics General Report 1981 & Central Bank of Srilanka, Economic and Social statistics -1992)

மலையகத் தமிழரின் மக்கள் தொகை பெருக்கம்: ஓர் ஒடுக்கப்பட்ட இனத்தின் மந்த வளர்ச்சி

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்களிடையே மக்கள் தொகை பெருக்க வீதம் இலங்கையின் ஏனைய சமூகங்களுடனும், தேசிய சராசரியுடனும் ஒப்பிடுகையில் மிகவும் குறைந்த நிலையிலேயே காணப்படுகின்றது. இதற்கு மலையக மக்களின் சமூக பொருளாதார நிலை தொடர்ந்தும் மோசமான நிலையில் காணப்படுதல், தொடர்ச்சியான நிறுவனமயப்படுத்தப்பட்ட பாகுபாடுகள், ஒதுக்கல்கள் போன்ற காரணிகளும் செல்வாக்கு செலுத்தியிருக்கலாம்.

மலையக மக்களின் குடித்தொகை வளர்ச்சி வீதமானது (வருடாந்த சராசரி) நீண்டகால வரலாற்றில் ஏனைய இனங்களுடன் ஒப்பிடும்போது குறைவாகவே இருந்துள்ளது. 1911 முதல் 1981 வரையிலான காலப்பகுதியின் வளர்ச்சி வீகிதம் மற்றும் 1981 முதல் 2012 வரையிலான மொத்த பெருக்கம் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த யதார்த்தம் உறுதிப்படுத்தப்படுகிறது. இதனை அட்டவணை மூன்றில் காணலாம்.

அட்டவணை 3: இனங்களிடையேயான வளர்ச்சி வீதம் (வருடாந்த சராசரி)

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: Dept.of.Census and Statistics, 1981 ரூ 2012 அறிக்கைகள்)

இச்சமூகத்தின் வளர்ச்சி அளவு 1946 – 1953 காலப்பகுதியில் 3.16 ஆக அதிகரித்துக் காணப்பட்டமைக்கு, அக்காலப்பகுதியில் இந்தியாவிலிருந்து சற்று அதிகரித்த தொழிலாளர் வருகையே காரணமாகும். 1971 – 1981 காலப்பகுதியில் இந்தியத் தமிழர்களின் வளர்ச்சி வீதம் -3.83 என்ற கடுமையான எதிர்மறை நிலையை அடைந்தது. இதற்குக் காரணம், சிறிமா-சாஸ்திரி ஒப்பந்தம் போன்ற அரசியல் உடன்படிக்கைகளினால் பெரும் எண்ணிக்கையிலானோர் தாயகம் திரும்பியமையே பிரதான காரணமாகும்.

1981 தொடக்கம் 2012 வரையான 31 வருட காலப்பகுதியில் தேசிய ரீதியில் மொத்தமாக 37.1 வளர்ச்சி காணப்பட்டபோதிலும், மலையக மக்களின் வளர்ச்சி 9.2 ஆக மட்டுமே காணப்பட்டுள்ளது. இது தேசிய சராசரியைவிட மிகவும் குறைவாகும். இதன் இறுதி விளைவாக, இலங்கை சுதந்திரமடைந்த காலப்பகுதியின் பின்னர் (1953), சிங்கள பெரும்பான்மையினரை அடுத்து இரண்டாவது நிலையில் இருந்த இச்சமூகம், 1963 முதல் 1971 வரை மூன்றாம் நிலையிலும், தற்போது நான்காவது நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.

மலையக மக்களின் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்குக் காரணமாக குறைந்த வாழ்க்கைத்தரம், பொருளாதார நெருக்கடி மற்றும் அதிகரித்துள்ள நகரங்களை நோக்கிய குடிப்பெயர்வுகளும் காரணமாக உள்ளது. இவை தவிர்ந்த, உள்ளார்ந்த உயிரியல் மற்றும் சமூக – ஆரோக்கியக் காரணிகளும் முக்கியமானவை. இவற்றைவிட, 1990 களில் இருந்து பெருந்தோட்டப் பகுதிகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த திட்டமிட்ட குடும்பக் கட்டுப்பாட்டுத் நடவடிக்கைகள் குறைந்த சனத்தொகை வளர்ச்சி வீதத்திற்கு முக்கியமானதோர் காரணமாகும். இது தொடர்பாக தேசிய சர்வதேசிய ரீதியாக ஆய்வுகள் இடம்பெற்றுள்ளன. இலங்கை அரசாங்கம் பெருந்தோட்டக் கம்பனிகளின் உதவியுடன் கட்டாய குடும்பக்கட்டுப்பாட்டுத் திட்டத்தினை முன்னெடுத்தது. நாட்டின் ஏனைய பிரிவினர்களுடன் 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு சனத்தொகை வளர்ச்சியினை ஒப்பிடும் போது, 2024ஆம் ஆண்டு மலையகத்தில் 27 விகித சனத்தொகை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. இது மிகவும் அதிகமாகும். இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை 18 விகிதத்தினாலும் முஸ்லிம்களின் குடித்தொகை 20 விகிதத்தினாலும் அதிகரித்துள்ளது.

இச்சமூகத்துப் பெண்கள் பின்வரும் கடுமையான சூழலை எதிர்கொள்கின்றனர்.

  • வறுமை மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு.

  • சுத்திகரிக்கப்பட்ட நீர் வசதி போதிய அளவில் இல்லாமை.

  • சுகாதாரம் தொடர்பான போதிய முற்காப்பு அறிவின்மை.

  • போதிய வீட்டு வசதி இல்லாமை.

  • கடுமையான தொழில் சூழல்.

  • பாலியல் மற்றும் மீள் உற்பத்தி சுகாதாரம் (sexual and reproductive health) தொடர்பான போதிய விழிப்புணர்வின்மை

பெருந்தோட்ட மக்களது ஆரோக்கியம் தொடர்பாகக் கிடைக்கக்கூடிய சிசு மரண வீதம் (Infant Mortality Rate) மற்றும் இரத்தச் சோகை (Anaemia) பற்றிய தகவல்கள், இச்சமூகத்தினரின் குறைவான வாழ்க்கைத்தரத்தின் நிலையை வலுவூட்டுகின்றன. தோட்டப்புறங்களில் சிசு மரண வீதம் தேசிய சராசரியை விட அதிகமாகவும், ஊட்டச்சத்துக் குறைபாடு, எடை குறைந்து பிள்ளைகளின் பிறப்பு என்பன தேசிய சராசரியை விட இரண்டு மடங்கிற்கு மேலாகவும் காணப்படுவதைக் காட்டுகிறது. இவ்வாறான பின்தங்கிய வாழ்க்கைத்தர நிலைமைகள் காரணமாகவே இனப்பெருக்கம் குறைந்து, அம்மக்களின் மக்கள் தொகை பெருக்கத்தில் தாக்கம் ஏற்பட்டுள்ளது. இது குறித்த கலந்துரையாடல்கள் மற்றும் விழிப்புணர்வு என்பன அவசியமாகும். இத்தகைய வேலைத்திட்டங்களை நுவரெலியா மாவட்டத்தில் மாத்திரம் மட்டுப்படுத்தாமல் ஏனைய மாவட்டங்களிலும் மேற்கொள்ள வேண்டும். இத்தகைய வேலைத் திட்டங்களை தற்போது ஒரு சில அரச சார்பற்ற நிறுவனங்கள் மாத்திரமே மேற்கொண்டு வருகின்றன.

2024 சனத்தொகை கணக்கெடுப்பு மீதான பார்வை

2024ஆம் ஆண்டு சனத்தொகை கணிப்பீடு இன அடிப்படையில் ஏற்படுத்தியுள்ள மாற்றங்களை பின்வரும் அட்டவணை தெளிவாகக் காட்டுகிறது.

அட்டவணை 4 : இனரீதிக்கு ஏற்ப சனத்தொகை மற்றும் வருடாந்த சராசரி அதிகரிப்பு விகிதம் 2012 மற்றும் 2024

Screenshot-2025-11-12-101308.png?resize=

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

2012ஆம் ஆண்டில் 839,504 ஆக இருந்த இந்தியத் தமிழர்/ மலையகத் தமிழர் எண்ணிக்கை, 2024 இல் 600,360 ஆகக் குறைந்துள்ளது. அதாவது, சுமார் 239,144 பேர் குறைந்துள்ளனர். மொத்த மக்கள் தொகையில் இவர்களின் வீதம் 4.1 லிருந்து 2.8 ஆகச் சரிந்துள்ளது.

மலையக மக்களின் வருடாந்த சராசரி அதிகரிப்பு வீதம் -2.6 ஆகக் காணப்படுகின்றது. இது இயற்கையான வீழ்ச்சியாகக் கருத முடியாது. மாறாக இதில் பல்வேறு காரணிகள் செல்வாக்கு செலுத்துகின்றன. மறுபுறமாக,  இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 11.1 லிருந்து 12.3 ஆக அதிகரித்துள்ளதுடன், அவர்களின் வருட சராசரி அதிகரிப்பு வீதம் 1.3 ஆக உள்ளது. இது, மலையக மக்களின் வீழ்ச்சியும், இலங்கைத் தமிழர்களின் வளர்ச்சியும் ஒன்றோடு ஒன்று தொடர்புடையது என்ற வாதத்தினை வலுப்படுத்துகிறது.

அட்டவணை 5 : மாவட்டம் மற்றும் இனத்தொகுதிக்கு ஏற்ப சனத்தொகையின் பரம்பல் 2012 மற்றும் 2024

Screenshot-2025-11-12-102145.png?resize=

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

மலையக மக்கள் இலங்கைத் தமிழராகப் பதிவு செய்யப்பட்டிருப்பதன் மிகத் தெளிவான ஆதாரத்தை, அவர்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களின் இன விகித மாற்றங்கள் மூலம் காணலாம். மேலுள்ள அட்டவணையில் பதுளை, கண்டி, மாத்தளை, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களில் மலையக மக்களின் குடித்தொகை சடுதியாக வீழ்ச்சியடைந்திருப்பதனையும் அதனோடு இணைந்த வகையில் இலங்கைத் தமிழர்களின் குடித்தொகை பெரியளவில் வளர்ச்சிக்கண்டிருப்பதனையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், கொழும்பு மாட்டத்தில் சுமார் 300,000 இலட்சம் தமிழர்கள் (இலங்கை மற்றும் மலையகத் தமிழர்கள்) வாழுகின்றார்கள். ஆயினும், கணிப்பீட்டுத் தரவுகளைப் பார்க்கும் போது இவ்விரு சமூகத்தின் குடித்தொகையிலும் எந்த ஒரு பெரிய மாற்றமும் ஏற்படவில்லை என்பதனை அடையாளம் காண முடிகின்றது. இது குறித்த தரவுகளையும் தேட வேண்டும். ஏனைய மாவட்டங்களில் இலங்கை மற்றும் மலையகத் தமிழர்களின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்களை கொழும்பு மாவட்ட நிலைமையுடன் ஒப்பிடும் போது இது ஒரு புதிராகக் காணப்படுகின்றது.

அட்டவணை 6: மலையக மாவட்டங்களில் சனத்தொகைப் பரம்பல் மாற்றம் (2012 – 2024)

Table_page-0002-e1762923850193.jpg?resiz

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

இந்தத் தரவுகளை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது, மலையக மக்களின் புவியியல் மையமான நுவரெலியாவில், மலையகத் தமிழரின் செறிவு 53.1 லிருந்து 50.0 ஆகக் குறைந்திருக்கும் அதேவேளையில், இலங்கைத் தமிழரின் எண்ணிக்கை 4.6 லிருந்து 8.3 ஆகக் கிட்டத்தட்ட இருமடங்காக அதிகரித்துள்ளது. பதுளை மாவட்டத்தில் மலையக மக்கள் 18.5 லிருந்து 11.0 ஆகக் குறைந்துள்ள நிலையில், இலங்கைத் தமிழர் வீதம் 2.7 லிருந்து 9.4 ஆக சுமார் நான்கு மடங்காக அதிகரித்துள்ளது. இந்தப் போக்கு மலையக மாவட்டத்தில் வசிக்கும் மலையக மக்கள், இலங்கைத் தமிழர் என்று பதிவு செய்துள்ளமையையே வெளிப்படுத்துகிறது.

இங்கு சிந்திக்க வேண்டிய விடயம் யாதெனில், மலையக மக்கள் தன்னார்வ அடிப்படையில் இலங்கைத் தழிழர்கள் எனப் பதிவு செய்தார்களா அல்லது கணக்கெடுப்பு அதிகாரிகள் தமது சுய விருப்பத்தின் பெயரில் பதிவு செய்தார்களா என்பதாகும். இது குறித்த தகவல்களை தேடுவதன் மூலம் கணக்கெடுப்பு செயன்முறையில் காணப்பட்ட குறைப்பாடுகளை வெளிக்கொண்டுவர முடியும். பின்வரும் அட்டவணை மலையகத் தமிழர்களின் குடித்தொகை வீழ்ச்சியினை ஏனைய சமூகங்களில் ஏற்பட்டுள்ள வளர்ச்சியுடன் ஒப்பிட்டுக் காட்டுகின்றது.

அட்டவணை 7: இலங்கையின் குடித்தொகைக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள மாற்றங்கள் அமைப்பு – 2012 மற்றும் 2024ஆம் ஆண்டு மதிப்பீடுகள் குறித்த ஒப்பீடு

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

ஆதாரம்: Dept.of.Census and Statistics, 2024

கணக்கெடுப்பு நடைமுறை மீதான விமர்சனங்கள்

சனத்தொகை வீழ்ச்சியின் அடிப்படை ஒரு புறம் சமூக, பொருளாதார இடம்பெயர்வு, மலையகச் சமூகத்தில் ஏற்பட்டுள்ள கட்டமைப்பு ரீதியான மாற்றங்கள், குறைந்த வாழ்க்கைத்தரம், இலங்கைத் தமிழர் என்ற அடையாளத்தின் மீதான விருப்பம் என்றாலும், இத்தீவிர வீழ்ச்சிக்கு கணக்கெடுப்பு நடைமுறையில் ஏற்பட்ட குறைபாடுகளும் காரணமாக இருக்கலாம் என்றவாறான  விமர்சனங்கள் எழுகின்றன. 1981ஆம் ஆண்டு கணக்கெடுப்பில், சுமார் 213,000 மலையகத் தமிழ் மக்கள் குடியுரிமை பெற்றதன் காரணமாக தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருப்பது அதிகாரபூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆகவே, 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் இன அடையாளம் குறித்த போதிய அறிவுறுத்தல்கள் கணக்கெடுப்பு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டதா என்ற கேள்வி எழுகிறது. இரண்டு பிரதான தமிழ் சமூகங்கள் இந்த நாட்டில் வாழுகின்றனர். அவர்கள் வரலாறு, பண்பாடு, என்பவற்றில் அடிப்படையான வேறுபாடுகளைக் கொண்டவர்கள். இவ் யதார்த்தங்களை எந்தளவுக்கு அதிகாரிகள் புரிந்துக்கொண்டு கணிப்பீட்டினை நடாத்தினார்கள் என்பது இங்குள்ள பிரச்சினையாகும். பொதுவில் அதிகாரிகள் இனம் என்ற விடயத்தினைப் பற்றி எந்த விடயத்தினையும் கேட்கவில்லை என்ற குற்றச்சாட்டும் உண்டு. மாறாக அதிகாரிகள் தாமாகவே இன அடையாளத்தினை பதிவு செய்துள்ளனர். சில இடங்களில் மலையக மக்கள் அடையாளத்தினை வலியுறுத்திக் கேட்டு தம்மை மலையகத் தமிழர் என பதிவு செய்யுமாறு கோரியுள்ளனர்.

கணிப்பீட்டு அதிகாரிகள் தோட்டப்புறங்களுக்குச் செல்லும்பொழுது, பெரும்பாலானவர்கள் வீடுகளில் இருப்பதில்லை. பொதுவில் தோட்டங்களில் இந்நிலைமையினை அவதானிக்கலாம். தொழில், கல்வி மற்றும் விவசாயம் போன்ற காரணங்களினால் வீட்டில் எவரும் இருப்பதில்லை. ஒரு சில முதியோர்கள் மாத்திரமே இருப்பார்கள். அவர்களுக்கு சனத்தொகை கணிப்பீடு மற்றும் இன அடையாளம் குறித்த புரிதல் இருப்பதில்லை. இத்தகைய சூழ்நிலையில் கணிப்பீடு எந்தளவுக்கு சரியாக இடம்பெற்றிருக்கும் என்ற சந்தேகம் ஏற்படுகின்றது. இன்று தோட்டங்களில் இருந்து ஓய்வுப்பெற்றவர்களும் நாட் சம்பளத்துக்காக வேறு தோட்டங்களுக்குத் தொழிலுக்குச் செல்கின்றார்கள். அத்தகையோரின் தொகை 50,000 க்கு மேற்பட்டதாகும். அவர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை. ஆகவே, தோட்டங்களுக்குள் வாழுகின்ற பெரும் எண்ணிக்கையிலானோர் கணிப்பீட்டில் முறையாக உள்வாங்கப்படவில்லை என்ற வாதத்தினை முன்வைக்கலாம்.

மேலும், கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற மாட்டங்களில் 50,000க்கு மேற்பட்ட மலையக இளைஞர் யுவதிகள் தற்காலிகமாகத் தொழில் செய்து வருகின்றனர். இவர்கள் பெரும்பாலும் திங்கள் முதல் சனிக்கிழமை வரை தொழிலுக்கு செல்பவர்கள். ஆகவே, இவர்கள் முறையாக கணிப்பீட்டுக்குள் உங்வாங்கப்பட்டார்களா என்பது பிறிதொரு கேள்வியாகும். அத்துடன், மலையகத் தமிழ்ச் சமூகத்தைச் சார்ந்த பெரும் எண்ணிக்கையிலானோர் கொழும்பு மற்றும் கம்பஹா போன்ற நகரங்களில் தொழில் நிமித்தம் தற்காலிக வாடகை வீடுகளில் குடும்பமாக வாழ்ந்து வருகின்றார்கள். இவர்களின் எண்ணிக்கை குறித்த சரியான தகவல் இல்லாவிட்டாலும், இவர்கள் எந்தளவுக்கு முழுமையாக கணிப்பீட்டில் உள்வாங்கப்பட்டார்கள் என்ற நியாயமான சந்தேகம் எழுகின்றது. இவற்றையெல்லாம் அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தோட்டங்களுக்குள்ளும் அதற்கு வெளியில் பல்வேறு நகரங்களிலும் வாழும் சுமார் 150,000க்கு மேற்பட்ட மலையகத் தமிழர்கள் கணிப்பீட்டில் உள்வாங்கப்படவில்லை என்ற அனுமானத்துக்கு வரலாம். ஆயினும், இது குறித்த முழுமையான ஆய்வுகள் மற்றும் தரவு தேடல்கள் அவசியமாகும். அதனை காலம் தாழ்த்தாமல் மேற்கொள்ள வேண்டும். அதன் மூலம் குடித்தொகைக் கணிப்பீட்டில் நடந்துள்ள குறைப்பாடுகளை ஆதாரபூர்வமாக முன்வைக்க முடியும். இத்தகைய நாடுதழுவிய கணிப்பீடுகளில் புள்ளிவிபர ரீதியாக 5 விகிதமான தவறுகள் இடம்பெறலாம். அது புள்ளிவிபர ரீதியாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆயினும், மலையகத்தில் கணிப்பீட்டு செயன்முறையில் அதிகளவிலான தவறுகள் இடம்பெற்றிருப்பதனை அறிய முடிகிறது. இது வேண்டுமென்றே இடம்பெற்றதா அல்லது தற்செயலாக இடம்பெற்றதா என்பதே இங்குள்ள சந்தேகமாகும்.

மேலும், மலையக மக்களைப் பொறுத்தவரை, அவர்கள் ஒருபுறம் இலங்கைத் தமிழ்ச் சமூகத்துடன் அதிக ஒருங்கிணைவை (Integration) அடைந்து வருவதாலும், மறுபுறம் ‘மலையகத் தமிழர்’’ என்ற அடையாளம் தோட்டப்புறப் பாகுபாடு (Estate Stigma) மற்றும் குறைவான வாழ்க்கைத்தரத்தைச் சுட்டுவதாலும், மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்ய விருப்பம் காட்டியிருக்கலாம். தென் மாகாணத்தில் பல இடங்களில் மலையகத் தமிழர்கள் தமது அடையாளத்தினை இழந்து சிங்களவர்களாகவே முற்றிலும் மாறியுள்ளனர்.

இவற்றைவிட, தோட்டங்களுக்கு வெளியில் நகர்ப்புறங்களில் வாழும் மலையகத் தமிழர்களை  கணிப்பீட்டாளர்கள், ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்ய ஊக்குவித்திருக்கலாம். இதற்கு நியாயமான காரணமும் உண்டு. போருக்குப் பின்னர் பதவிக்கு வந்த இலங்கை அரசாங்கங்கள் முஸ்லிம் மக்களை இலக்கு வைக்க ஆரம்பித்தன. இது உயிர்த்த தாக்குதலுக்குப் பின்னர் உச்சத்தினை அடைந்தது. அதன் பின்னர் முஸ்லிம் மக்களுக்கு எதிரான பிரசாரங்கள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டன. இத்தகைய பிரசாரங்களை சிங்கள பௌத்த தேசியவாத அமைப்புக்கள் மேற்கொண்டன. முஸ்லிம் சமூகத்தினை தீவிரவாதிகளாக சித்தரிக்க முயன்றனர். இவை முஸ்லிம் சமூகத்தின் வளர்ச்சியினை பொறுக்க முடியாமல் மேற்கொண்ட செயற்பாடுகளாகும். இன்றளவில் சிங்கள மக்களில் பெரும்பாலானோரிடம் முஸ்லிம் எதிர்ப்பு மனப்பாங்கு எல்லா மட்டங்களிலும் காணப்படுகின்றது. அரச அதிகாரிகளிடமும் உண்டு. முஸ்லிம் சமூகத்தின் சனத்தொகை வளர்ச்சிப் பற்றிய அச்ச உணர்வு சிங்கள மக்கள் மத்தியில் பொதுவாகவே காணப்படுகின்றது. இப்பின்புலத்தில் இலங்கைத் தமிழர்களை சனத்தொகை வரிசையில் இரண்டாவது இடத்தில் தொடர்ந்தும் தக்க வைப்பதற்கான முயற்சியில் மலையகத் தமிழர்களையும் இலங்கை தமிழர் என்ற வகைப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்கான முயற்சியாகவும் இதனை நோக்கலாம். இது ஒரு அனுமான ரீதியான வாதம் மட்டுமே ஆகும். இது தொடர்பான கலந்துரையாடல்கள் மற்றும் முறையான தேடல்கள் அவசியமாகும்.

மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சி (4.1 லிருந்து 2.8 ஆக) என்பது வெறுமனே புள்ளிவிவர ரீதியான சரிவு அல்ல, அது மலையகத் தேசியம் என்ற கருத்தாக்கத்தின் அரசியல் இருப்பு மீதான பலமான அச்சுறுத்தலாகும். இந்த வீழ்ச்சி, எதிர்கால தேர்தல் எல்லை நிர்ணயத்தின்போது மலையகப் பிரதேசங்களுக்கான நாடாளுமன்ற மற்றும் மாகாண சபை ஆசனங்களை இழக்கும் ஆபத்தை அதிகரிக்கிறது. இன அடையாள மாற்றம் என்பது கௌரவமான வாழ்வு மற்றும் சமத்துவத்துக்கான மலையக மக்களின் உளவியல் தேடலின் பிரதிபலிப்பாகும். ஆனால், இந்த மாற்றம் மலையக மக்களின் தனித்துவமான அரசியல் அதிகாரத்தைக் கரைத்து, அவர்களைப் பெரிய சமூக நீரோட்டத்தில் இணைக்கும் முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

இம்முறை கணக்கெடுப்பை மேற்கொண்ட நடைமுறைகள் மற்றும் செயல்முறைகள் மீதான பரவலான விமர்சனங்கள், இந்தப் புள்ளிவிவரங்களின் நம்பகத்தன்மையைக் கேள்விக் குள்ளாக்குகின்றன. குறிப்பாக, அடையாளப் பதிவு குறித்த தெளிவின்மை, டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு மற்றும் கணிப்பீட்டாளரின் சுய அனுமானங்கள் ஆகியவை மலையக மக்களின் சனத்தொகை சரிவுக்குக் காரணமாக இருக்கலாம் என்ற வலுவான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. பல இடங்களில் மலையகத் தமிழர் என்ற இன அடையாளத் தெரிவினை கணக்கெடுப்பு அதிகாரிகள் மலையக மக்களிடம் குறிப்பிடவில்லை. இலங்கைத் தமிழர் மற்றும் இந்தியத் தமிழர் என்ற இரு அடையாளங்கள் மாத்திரமே கணக்கெடுப்பின்போது குறிப்பிடப்பட்டுள்ளது. ஆகவே, தாம் இனியும் இந்தியத் தமிழர் இல்லை, இலங்கையில்தான் பிறப்பு முதல் வாழுகின்றோம் என்ற எண்ணத்தில் இலங்கைத் தமிழர் என்று குறிப்பிட்டிருப்பதற்கான வாய்ப்புக்கள் அதிகம்.

2024ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பில் கணிப்பீட்டாளர்கள் வீடுகளுக்கு வருகை தராமல் தரவுகளைச் சேகரித்தனர் என்ற குற்றச்சாட்டு பரவலாக முன்வைக்கப்படுகிறது. பல பிரதேசங்களில், குறிப்பாக தோட்டப் புறங்கள் மற்றும் நகர்ப்புறங்களில் உள்ள குடியிருப்புகளுக்கு, அரச ஊழியர்கள் முறையாக வருகை தரவில்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படை நோக்கமே, களத்தில் உள்ள உண்மையான எண்ணிக்கையையும், நிலையையும் பதிவு செய்வதுதான். கள விஜயங்கள் இன்றித் தரவுகள் சேகரிக்கப்படும்போது, அந்தப் பதிவின் துல்லியத்தன்மை பாதிக்கப்படுகிறது. இலத்திரனியல் சாதனங்கள் ஊடாகத் தரவுகள் சேகரிக்கப்பட்ட போது, தகவல் வழங்கும் குடியிருப்பாளர்களுக்குத் தாங்கள் வழங்கிய தகவல்கள் சரியாகப் பதிவு செய்யப்பட்டுள்ளதா, குறிப்பாக இன அடையாளம் எப்படிக் குறிக்கப்பட்டுள்ளது என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளப் போதுமான வாய்ப்பு வழங்கவில்லை. சில இடங்களில் கணிப்பீட்டு அதிகாரிகள் தமது உதவியாளர்கள் மூலம் தகவல்களை சேகரித்துள்ளனர். அவர்களுக்கு இது தொடர்பான எந்தப் பயிற்சியும்  வழங்கப்படவில்லை. இப்படியான இடங்களில் இன அடையாளம் குறித்த சரியான தரவுகள் பதிவு செய்யப்பட்டிருக்க மாட்டாது.

மறுபுறம் மலையக மக்களின் சனத்தொகை வீழ்ச்சியில் மிக முக்கியமான காரணி, மலையக மக்களிடையே காணப்படும் இன அடையாளத் தெளிவின்மையே ஆகும். இந்திய வம்சாவளித் தமிழர்கள் நீண்ட போராட்டத்தின் பின்னர் குடியுரிமை பெற்றாலும், அவர்களின் இன அடையாளம் (மலையகத் தமிழர்) மற்றும் குடியுரிமை நிலை (இலங்கை பிரஜை) ஆகியன தொடர்பாக மக்கள் மத்தியில் இன்னும் தெளிவான புரிதல் இல்லை. ஆகவே, தமது அடையாளத்தை ‘மலையகத் தமிழர்’ எனப் பதிவுசெய்ய வேண்டிய அவசியத்தை உணராமல், வெறுமனே ‘இலங்கைத் தமிழர்’ என்ற பிரிவின் கீழ் தம்மைப் பதிவுசெய்ய இணங்கியிருக்கலாம்.

அடையாள குழப்பம் மற்றும் குடியிருப்பாளர்களின் குறைந்த கல்வித் தகைமையைப் பயன்படுத்திக் கொண்டு, கணிப்பீட்டாளர்கள் தாமாகவே இம்மக்களுக்கான தகவல்களை அனுமானித்து பதிவு செய்திருக்கவும் கூடும் என்ற விமர்சனமும் எழுகிறது. குடியுரிமை பெற்ற அனைவரும் இலங்கைத் தமிழரே என்ற பொதுவான புரிதலின் அடிப்படையில், பல மலையக மக்கள் ‘இலங்கைத் தமிழர்’ எனப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆகவே, மலையகத்தில் ஏற்பட்டுள்ள சனத்தொகை வீழ்ச்சி என்பது வெறும் பிறப்பு விகிதக் குறைவு மட்டுமல்ல மாறாக வறுமை, காணியுரிமை மறுப்பு, மற்றும் சமூகப் பாகுபாடு ஆகியவற்றின் காரணமாகவும், நகர்ப்புறங்களை நோக்கிய தொழில் மற்றும் கல்வி நிமிர்த்தமான இடம்பெயர்வு என்பவற்றினாலும் இடம்பெற்றவை ஆகும். நகர்ப்புறங்களில் குடியேறும் மலையக இளைஞர்கள், சமூக அங்கீகாரத்தைப் பெறுவதற்காகவும், தனிப்பட்ட நன்மைகளுக்காகவும் தங்களைத் ‘இலங்கைத் தமிழர்’ என்ற அடையாளத்தினை விரும்பியிருக்கலாம். அதேபோல் இம்முறை சனத்தொகை கணக்கெடுப்பு இடம்பெற்ற விதம், அரச அதிகாரிகளின் அலட்சியப் போக்கு, திட்டமிட்ட புறக்கணிப்பு என்பவற்றாலும் மலையக மக்களின் சனத்தொகை, பாரியளவிலான ஒரு வீழ்ச்சியை பதிவு செய்துள்ளது என்பதனை அனுமானிக்க முடிகின்றது.

மலையக மக்களின் மாவட்ட ரீதியான பரம்பல்

இந்திய வம்சாவளி மலையகத் தமிழ் மக்கள் இலங்கையில் 25 மாவட்டங்களிலும் பரவி வாழ்ந்தாலும், அவர்களின் சமூக, அரசியல் மற்றும் கலாசார இருப்பு என்பது வரலாற்று ரீதியாக நுவரெலியா, பதுளை, கண்டி, இரத்தினபுரி போன்ற பெருந்தோட்ட மாவட்டங்களையே மையமாகக் கொண்டிருந்தது. இந்த புவியியல் மையமே ‘மலையகத் தேசியம்’ என்ற கருத்தாக்கத்தின் அடித்தளமாகும். ஆனால், 2012 மற்றும் 2024 ஆம் ஆண்டுக்கான சனத்தொகை கணிப்பீட்டுத் தரவுகள், இந்த மையமானது மிக விரைவாகவும், கூர்மையாகவும் சிதைந்து வருவதைப் படம்பிடித்துக் காட்டுகின்றன. இலங்கையில் சுமார் 1,350,000 மலையகத் தமிழர்கள் வாழுகின்றனர் என்பதனை கடந்த காலங்களில் இடம்பெற்ற சில மதிப்பீடுகள் எடுத்துக்காட்டுகின்றன. இது எந்த வகையிலும் 2024ஆம் ஆண்டு கணிப்பீட்டில் வெளிப்படவில்லை.

அட்டவணை 8: பிரதான மலையக மாவட்டங்களில் இனப்பரம்பல் மாற்றம்

%E0%AE%85%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9F%E0%

(ஆதாரம்: மாவட்டங்கள் மற்றும் இனத்தொகையின் விபரப்பரம்பல், 2012 மற்றும் 2024)

பெருந்தோட்ட மாவட்டங்களை விட்டு வடக்கு, கிழக்கு மற்றும் ஏனைய மாவட்டங்களுக்குக் குடிபெயர்ந்தவர்களின் அடுத்த பரம்பரையினர், அப்பிரதேசங்களின் வாழ்க்கை முறை மற்றும் கலாசார செல்வாக்கிற்கு உட்பட்டு , குடித்தொகை கணிப்பீடு போன்ற உத்தியோகபூர்வ நடவடிக்கைகளில் பெருமளவுக்குத் தம்மை இலங்கைத் தமிழர்கள் என்றே பதிந்து கொள்கின்றனர். இந்த மனப்போக்கு, மலையகத் தமிழர் என்ற அடையாளத்துடன் இணைந்த சமூகப் பாகுபாடு (Social Stigma) மற்றும் குறைந்த வாழ்க்கைத்தரத்தின் தாக்கத்திலிருந்து விடுபடுவதற்கான உளவியல் தேடலின் வெளிப்பாடாகும். இன்னொரு பக்கம் இத்தகைய மாற்றத்திற்கான நாட்டம் மலையக மக்களின் துயர் தோய்ந்த வரலாற்றுடனும் பிணைந்துள்ளது.

நுவரெலியா மாவட்டத்தில் பாரிய வீழ்ச்சியொன்று ஏற்படாமைக்குக் காரணம் இங்கு கணிப்பீட்டுப் பணியில் ஈடுபட்டவர்களில் பெரும்பான்மையானோர் மலையகச் சமூகத்தினை சேர்ந்தவர்கள் ஆகும். ஆகவே, அவர்களுக்கு இன அடையாளம் குறித்து புரிதல் காணப்பட்டது. அதன் காரணமாக மலையகத் தமிழர்களிள் அடையாளம் சரியாகப் பதிவுசெய்யப்பட்டுள்ளது. அத்துடன், மலையகத் தமிழர் என்ற அடையாளத்தினை மையப்படுத்திய அதிகளவிலான கலந்துரையாடல்கள் கடந்து இரண்டு வருடங்களுக்கு மேலாக நுவரெலியா மாவட்டத்திலேயே இடம்பெற்றது. இவை மலையகத் தமிழர் என்ற அடையாளம் குறித்த பெரியளவிலான புரிதலை ஏற்படுத்தியது. ஆனால், இப்போக்கினை ஏனைய மாவட்டங்களில் காண முடியவில்லை.

மேலும் Gen Z என அழைக்கப்படுகின்ற இளம் தலைமுறையினர் (2010க்குப் பின்னர் பிறந்தவர்கள் – சமூக ஊடகங்களுடன் இவர்கள் வாழ்க்கை பிணைக்கப்பட்டுள்ளது) தம்மை மலையகத் தமிழர் என அடையாளப்படுத்துவதில் பெரிய விருப்பம் காட்டுவதில்லை என்பதனை பல செயலமர்வுகளில் அவதானிக்க முடிந்தது. இதனை நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியில் அதிகம் காண முடியும். இம்மன நிலையும் சனத்தொகை வீழ்ச்சிக்கு ஒரு காரணமாகும்.

எனவே, 2024ஆம் ஆண்டின் சனத்தொகைக் கணக்கெடுப்புத் தரவுகள், மலையக மக்கள் தமது சமூக அநீதிகளுக்கான போராட்டத்தை இழந்திருப்பதையும், அரசியல் அதிகாரத்தை இழக்கும் அபாயத்தில் இருப்பதையும் சுட்டிக்காட்டும் ஒரு புள்ளிவிவர எச்சரிக்கையாக (statistical warning) அமைந்துள்ளது.

மலையகத் தேசியத்தின் அரசியல் நெருக்கடி

சனத்தொகை வீழ்ச்சியின் நேரடி மற்றும் மிக ஆபத்தான விளைவு, மலையக மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை இழப்பதாகும். இலங்கையின் தேர்தல் சட்டங்களின்படி, ஒரு குறிப்பிட்ட பகுதியின் சனத்தொகை மற்றும் வாக்காளர் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற மற்றும் மாகாண சபைத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம் செய்யப்படுகிறது. மலையக மக்களின் மைய மாவட்டங்களான நுவரெலியா, பதுளை, கண்டி போன்ற பகுதிகளில் அவர்களின் சதவீதச் செறிவு குறைந்துள்ளதால், இது, மலையக மக்களின் சுயாதீனமான அரசியல் பலத்தையும், பேரம் பேசும் சக்தியையும் ஒட்டுமொத்தமாகப் பலவீனப்படுத்தும்.

மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழர் எனப் பதிவு செய்திருந்தாலும், இலங்கையின் தேர்தல் சட்டங்களில் ‘இன அடிப்படையிலான’ பிரதிநிதித்துவப் பாதுகாப்புகள் பல இடங்களில் இல்லை. இதனால், எண்ணிக்கை அளவில் அவர்கள் அருகிலுள்ள பெரும்பான்மை சமூகங்களுடன் கலக்க நேரிடும்போது, அவர்களின் தனித்துவமான அரசியல் அபிலாசைகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் வாய்ப்பு குறைந்துவிடும். சனத்தொகை வீழ்ச்சி தொடர்ந்தால், மலையக மக்களின் அரசியல் குரல் மேலும் விளிம்பு நிலைக்குத் தள்ளப்பட்டு, தேசிய ரீதியாக முடிவெடுக்கும் தளங்களில் அவர்களின் சமூக மற்றும் பொருளாதாரப் பிரச்சினைகள் கவனத்தைப் பெறாமல் போகும் நிலை ஏற்படும்.

சனத்தொகை வீழ்ச்சி மற்றும் இன அடையாள மாற்றம் போன்ற நெருக்கடிகளை மலையக அரசியல் தலைமைத்துவம் எவ்வாறு கையாண்டது என்பது விமர்சனத்திற்கு உரியதாகும். சனத்தொகை வீழ்ச்சி ஒரு பாரிய அரசியல் நெருக்கடி என்பதை மலையக அரசியல் கட்சிகள் பலர் அங்கீகரித்திருந்தாலும், அதற்குப் பதிலளிக்கும் விதத்தில் நீண்டகால மற்றும் உறுதியான கொள்கைத் திட்டங்களை வகுக்கவில்லை என்ற விமர்சனம் உண்டு. அரசியல்வாதிகளால் மேற்கொள்ளப்பட்ட வீட்டுத் திட்டங்கள் மற்றும் குறைந்தபட்ச  சம்பள அதிகரிப்புக் கோரிக்கைகள் போன்றவை வரவேற்கத்தக்கவை என்றாலும், அவை மலையக மக்களின் இடம்பெயர்வுக்கு அடிப்படையான காரணங்களான சமூகப் பாகுபாடு, காணி உரிமை மறுப்பு மற்றும் கல்வி வாய்ப்புகளின் போதாமை ஆகியவற்றைத் தீர்க்கும் முழுமையான தீர்வுகளாக அமையவில்லை. அரசாங்கத்தின் வீட்டு வசதித் திட்டங்கள், மக்களுக்குத் தனி வீடுகளை வழங்கிய போதிலும், தோட்டப்புறங்களை விட்டு நகர்ப்புறங்களுக்கு இடம்பெயர்வதைத் தடுக்க போதுமானதாக இல்லை. இது, அரசியல் தலைமைத்துவம் சனத்தொகை நெருக்கடியின் ஆழமான சமூகவியல் காரணிகளைப் புரிந்துகொள்ளத் தவறியதைக் காட்டுகிறது.

அதேபோல் மலையக மக்கள் தம்மை இலங்கைத் தமிழராகப் பதிவுசெய்து கொண்டமை குறித்து மலையக அரசியல் தலைவர்கள் வெளிப்படையான விவாதங்களை நடத்தவில்லை. இது, அடையாள மாற்றத்தை தவிர்க்க முடியாத ஒன்றாக ஏற்றுக்கொண்டதன் விளைவா அல்லது வாக்கு வங்கி மீதான அச்சமா என்ற கேள்வி எழுகிறது. சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் பரம்பல் சிதைவு ஆகியவை மலையக மக்களின் மிக முக்கிய மூலதனமான நிலம் மற்றும் காணி உரிமை மீதான அச்சுறுத்தல்களை மேலும் அதிகரிக்கின்றன.

தோட்டப்புறங்களில் மலையக மக்களின் சனத்தொகை குறையும்போது, தோட்ட நிலங்களை பெருந்தோட்ட நிர்வாகம் அல்லது ஏனைய இனக்குழுமத்தைச் சார்ந்தவர்கள் ஆக்கிரமிப்பு செய்வதற்கு வாய்ப்பு உருவாகிறது. சட்ட ரீதியற்ற காணி ஆக்கிரமிப்புகள் (Land Encroachment) பெருந்தோட்டப் பகுதிகளில் நீண்ட காலமாக இருக்கும் பிரச்சினை ஆகும். காணி உரிமைக்கான போராட்டம், மலையக மக்களின் ஒருமித்த பலத்தின் மூலமே வெற்றிபெற முடியும். ஆனால், சனத்தொகை குறைந்து, மக்கள் சிதறுண்டு போகும்போது, உரிமைக்கான போராட்டங்களை முன்னெடுக்கும் சமூகத் திரட்சியும், பலமும் வெகுவாகக் குறைந்துவிடும்.

மலையக மக்களின் தேசியம் என்பது,  நிலத்துடன் பிணைந்துள்ளது. மக்கள் தொகை குறைந்து, அந்த நிலப்பரப்புகள் கைவிடப்படும்போது, மலையக தேசியம் அதன் புவியியல் அடித்தளத்தை இழக்கிறது. இது, அவர்களின் வரலாற்றையும், உரிமைக் கோரிக்கைகளையும் எதிர்காலத்தில் பலவீனப்படுத்தக்கூடும்.

அடையாள மாற்றம் என்பது அரசியல் மட்டுமல்ல, கலாசார இழப்பும் கூட. சிவில் சமூக அமைப்புகள் மற்றும் சமூகச் செயற்பாட்டாளர்கள் மலையகத்தின் தனித்துவமான கலாசாரம் மற்றும் பண்பாடு ஆகியவற்றை ஆவணப்படுத்துவதன் மூலமும், மீட்டெடுப்பதன் மூலமும், புவியியல் மையத்தை இழந்தாலும் தேசியத்தின் கலாசார ஆழத்தை (Cultural Depth) பாதுகாக்க முடியும். எனினும், இந்தக் கலாசார முயற்சிகள் பொருளாதாரப் பிரச்சினைகளுக்கு நிரந்தரத் தீர்வைக் கொண்டுவரப் போதுமானதல்ல. மேலும் மலையகத் தேசியம் என்பது உணர்வுபூர்வமான அடையாளமாக இருக்கிறதா அல்லது அடித்தள மக்களின் உடனடி பொருளாதார மற்றும் சமூக தேவைகளை நிவர்த்தி செய்வதற்கான கருவியாக இருக்கிறதா என்ற கேள்வி முக்கியமானதாகும்.

உண்மையான மலையகத் தேசியம் என்பது, வெறும் உணர்வு அல்ல. அது, மலையக மக்களின் ஒடுக்கப்பட்ட வர்க்க இருப்பை (Oppressed Class Existence) அடையாளம் கண்டு, அவர்களின் பொருளாதாரச் சமத்துவத்தையும், கண்ணியமான வாழ்வையும் உறுதிப்படுத்துவதற்கான ஒரு கருவியாகப் பயன்படுத்தப்பட வேண்டும். இல்லையெனில், பாகுபாட்டோடு வாழும் மக்கள், தேசிய உணர்வை விட நடைமுறைத் தேவைகளையே முன்னிலைப்படுத்துவார்கள்.

சனத்தொகை வீழ்ச்சி மற்றும் புவியியல் மையம் சிதைவுறும் இந்த நெருக்கடியான சூழலில், மலையக தேசியமானது தனது மையத்தைப் பாதுகாப்பதை விட, புதிய பரிணாமத்தை (New Transition) நோக்கிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. மலையகத் தேசியம் இனி, பொதுவான ஒடுக்கப்பட்ட வர்க்க உணர்வுடைய (Common Oppressed Class Consciousness) அடையாளமாக நிலைநிறுத்தப்பட வேண்டும். தோட்டப்புறங்களில் வாழும் தொழிலாளர்களும், நகர்ப்புறங்களில் கூலி வேலை செய்யும் தொழிலாளர்களும், வெளிநாடுகளில் வீட்டுப் பணி செய்யும் பெண்களும் ஒரே மாதிரியான வர்க்க ஒடுக்குமுறையையும், சமூகப் பாகுபாட்டையும் எதிர்கொள்கின்றனர். இந்த ஒடுக்குமுறையின் அடிப்படையில் தேசியம் மீளக் கட்டமைக்கப்பட வேண்டும்.

மலையக மக்கள் இலங்கைத் தமிழர்களாக தம்மை பதிவு செய்தமைக்கான காரணங்களை ஆய்வு ரீதியாக கண்டுப்பிடிக்க வேண்டும். அவர்கள் மத்தியில் மலையக அடையாள உணர்வினைக் கட்டியெழுப்ப அவசியமான வேலைத்திட்டங்களை வகுக்க வேண்டும். இது 2034ஆம் ஆண்டு இடம்பெறவிருக்கும் குடித்தொகை கணிப்பீட்டில் மலையக மக்களின் சனத்தொகையினை பாதுகாக்க உதவும். குடித்தொகை வீழ்ச்சி சமூக அபிவிருத்திக்கான அரசாங்க நிதி மற்றும் வள ஒதுக்கீடுகளில் எதிர்மறையான தாக்கத்தினை ஏற்படுத்தும் என்பதனை நாம் மனங்கொள்ள வேண்டும். மேலும், எதிர்காலத்தில் அரசாங்கத் தொழில் வாய்ப்புகளுக்கு கோட்டா முறை அறிமுகப்படுத்தப்பட்டால், இதில் போதிய வாய்ப்பு மலையக மக்களுக்கு கிடைக்கப்போவதில்லை. இந்நிலை அரசியல் பிரதிநிதித்துவத்திலும் ஏற்படலாம்.

இங்குள்ள பிறிதொரு முரண்நிலை யாதெனில், வருடாந்தம் வாக்காளர் விகிதம் மலையகத்தில் அதிகரித்து செல்கின்றது, ஆனால் சனத்தொகையில் எவ்வாறு பாரிய வீழ்ச்சி ஏற்பட்டு வருகிறன்றது. வாக்காளர் பதிவில் மலையகத்தில் பெரியளவிலான விழிப்புணர்வு மற்றும் கரிசனை ஏற்பட்டுள்ளது. அதற்கு வாக்குரிமையுடன் இணைந்த பல நன்மைகளும் காரணமாகும். ஆகவே, வாக்குப்பதிவில் காட்டும் ஆர்வத்தினை ஏன் குடிசன மதிப்பீட்டில் மலையக மக்கள் காட்டவில்லை என்ற கேள்வியும் எழுகின்றது. அத்துடன், பெருந்தோட்ட மனித வள அபிவிருத்தி நிதியத்தின் புள்ளிவிபரங்களுடன் அரசாங்கத்தின் குடித்தொகைக் கணிப்பீட்டு முடிவுகள் முரண்படுகின்றது. ஆகவே, குடித்தொகை குறித்த அரசாங்கத்தின் வேறுப்பட்ட தரவுகளை சேகரித்து இந்த முரண்நிலையைத் தீர்க்க வேண்டும்.

இருப்புக்கான நெருக்கடியும் எதிர்கால கொள்கைத் தெரிவுகளும்

மலையக மக்களின் சனத்தொகைப் பெருக்க வீதம் தேசிய சராசரியை விடக் குறைவாக இருப்பதற்கும், இடம்பெயர்வு அதிகரிப்பதற்கும் அடிப்படை காரணம், இலங்கை அரசின் கட்டமைப்பு ரீதியான அநீதியே ஆகும். ஆகவே, மலையக மக்கள் சம உரிமைகளுடன் சம பிரஜைகளாக வாழ்வதற்கான கொள்கைத் திட்டங்களை (காணியுரிமை, வீடு, கல்வி, சுகாதாரம், வேதனம், போக்குவரத்து உட்பட) அரசாங்கம் வகுக்க வேண்டும். இதற்கு நீண்டகாலமாக பரப்புரை செய்து வருகின்ற நியாயமான பாராபட்சக் கொள்கை (policy of positive discrimination) அல்லது குறைதீர் நடவடிக்கை (affirmative action) ஒன்றினை உருவாக்க வேண்டும்.

இத்தகைய நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ளத் தவறினால், மலையக மக்கள் மீதான அரசு கட்டமைப்பின் புறக்கணிப்பே சனத்தொகை வீழ்ச்சிக்குக் காரணம் என்ற விமர்சனத்தை அரசு தொடர்ந்து எதிர்கொள்ளும்.

மலையகத் தேசியத்தின் எதிர்காலப் பாதை, அதன் புவியியல் மையத்தை இழந்தாலும், அதன் வர்க்க உணர்வு (Class Consciousness) மற்றும் சிவில் சமூகத்தின் போராட்டத் திறன் ஆகியவற்றிலேயே தங்கியுள்ளது. தேசியம் என்பது இனி நுவரெலியாவை மையப்படுத்தாமல், இலங்கையிலும், வெளிநாட்டிலும் பரவி வாழும் ஒடுக்கப்பட்ட மலையக வர்க்கத்தை இணைக்கும் ஒரு கலாசார  – அரசியல் அடையாளமாக மாற வேண்டும். சனத்தொகை வீழ்ச்சிக்கு எதிரான இந்தப் போராட்டம், வெறுமனே எண்ணிக்கையைப் பாதுகாப்பதற்கானதல்ல. அது கௌரவமான வாழ்வுக்கான உரிமையையும், சமூக நீதியையும் நிலைநாட்டுவதற்கான இறுதிக்கட்டப் போராட்டமும் ஆகும்.

Ramesh-Arul-e1762925694515.jpg?resize=20அருள் கார்க்கி கலாநிதி ரமேஷ் ராமசாமி

https://maatram.org/articles/12402

மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது?

2 months 2 weeks ago

மனிதாபிமானத்தின் தராசில் இனவழிப்பும் இனச் சுத்திகரிப்பும்: எது கனமானது?

20201128_ASP002_0-ezgif.com-avif-to-jpg-

Photo, THE ECONOMIST

இனவழிப்பு (Genocide) – இன சுத்திகரிப்பு (Ethnic Cleansing) இரு வார்த்தைகளில் உள்ள நுண்ணரசியல் குறித்து விளங்கிக்கொள்ள வேண்டியதொரு புள்ளியில் இன்று நாம் இருப்பதாகத் தோன்றுகின்றது.

ஓர் இன, மத அல்லது சமூகக்குழுவை முழுமையாக அழித்துவிடும் நோக்கத்துடன் திட்டமிட்டு செய்யப்படும் கொலைகள் இனவழிப்பு எனப்படுகின்றது. இது பல்வேறு முறைகளில் முன்னெடுக்கப்படலாம். கொலைகள், பாலியல் வன்முறைகள், மொழி மற்றும் கலாசார ஒழிப்புக்கள் இதனுள் உள்ளடங்கும். இது சர்வதேச சட்டத்தின் கீழ் (1948 UN Genocide Convention) தெளிவாக வரையறுக்கப்பட்டுள்ளதொரு குற்றமாகும். இதன் ஒரே நோக்கு குறிப்பிட்ட குழுமத்தினை அழிப்பது மட்டுமே.

ஆனால், இன சுத்திகரிப்பு என்பது ஒரு குறிப்பிட்ட பௌதீக சூழமைவுக்குள் இருந்து நீக்குவது அல்லது வெளியேற்றுவது. இது சர்வதேச சட்டத்தில் தனிக்குற்றமாக வரையறுக்கப்படவில்லை. ஆனால், போர்க்குற்றங்கள் அல்லது மனிதத்தன்மைக்கெதிரான குற்றங்கள் (Crimes against humanity) என கருதப்படுகின்றது. இது கட்டாய இடப்பெயர்வுகள், வீடுகளை எரிப்பது, அச்சுறுத்துவது, சொத்துப்பறிமுதல் செய்வது போன்ற செயற்பாடுகளின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்றது. இதன் இறுதி விளைவு நில அமைப்பிலிருந்து நீக்கப்படுவது மட்டுமே.

அழிக்கப்படுவதற்கும் அகற்றப்படுவதற்கும் வேறுபாடும் அதன் கனதிகளும் இவற்றின் பின்னுள்ள அரசியல் நிரல்களும் வேறானவை. இதனை நாம் சில வரலாற்று நிகழ்வுகள் மூலம் ஒப்பிட்டுப் பார்க்கலாம்.

இனவழிப்பு

1. ஹாலோகாஸ்ட் (Holocaust) – ஜேர்மனி (1939 -1945)

யூத இனத்தினை முற்றிலுமாக அழிக்கும் நோக்குடன் அடால்ப் ஹிட்லர் தலைமையிலான நாசி ஆட்சியில் சுமார் ஆறு மில்லியன் யூதர்கள் திட்டமிட்ட முறையில் கொல்லப்பட்டனர். இதன் ஒரே நோக்கம் யூத இனத்தினை உலகத்திலிருந்தே அழித்தொழிப்பதே. இது திடீரென முன்னெடுப்பட்ட வன்முறையல்ல. திட்டமிட்டு செய்யப்பட்ட பாரதூரமானதொரு செயற்பாடு. இச்செயற்பாடு மூன்று கட்டமாக முன்னெடுக்கப்பட்டது.

முதலாவதாக, யூத மக்களுக்கு எதிரான சட்டங்கள் நியூரெம்பர்க் சட்டங்கள் (Holocaust 1935) இயற்றப்பட்டன. குடியுரிமை பறிக்கப்பட்டது. கல்வி, வேலை மற்றும் சொத்துரிமைகள் நீக்கப்பட்டன. இரண்டாவது கட்டமாக யூதமக்கள் சிறைப்பிடிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டனர். Ghettos என்றழைக்கப்படும் மூடிய சுவர் அடைப்புக்குள் மக்கள் சிறைப்பிடிக்கப்பட்டார்கள். இங்கு பசிப்பட்டினி, உணவுக்குறைவு, நோய்கள், இயலாமைகளுடன் மக்கள் போராடி இறந்தனர். மூன்றாவது கட்டமாக 1941 முதல் “யூத பிரச்சினைக்கான இறுதித்தீர்வு (Final Solution to the Jewish Question) எனும் திட்டத்தின் கீழ் வலுக்கட்டாய முகாம்கள் மற்றும் அழிப்பு முகாம்கள் எனும் சிறைமுகாம்களுக்கு (Concentration and Extermination Camps) யூதமக்களை கொண்டு சென்று விஷவாயு செலுத்தியும் பலவித சித்ரவதைகள் செய்தும் கொத்தாக கொன்றொழித்தனர். இந்த வரலாற்றுச் சம்பவம் இனவழிப்பிற்கானதொரு முக்கிய உதாரணம். இங்கு எதிர்பார்க்கப்பட்ட விளைவு ஒன்றுதான், அது யூதர்களை அழித்தல் மட்டுமே.

2. ருவாண்டா இனவழிப்பு (Rwanda Genocide -1994)

மத்திய ஆபிரிக்க நாட்டின் சிறியதொரு நாடான ருவண்டாவில் இரு முக்கிய இனக்குழுக்கள் இருந்தனர். இவர்களுள் பெரும்பான்மையினர் ஹூட்டு இனத்தவர்,  சிறுபான்மையினர் துத்சி இனத்தவர்கள். இரு இனங்களுக்குள்ளும் அரசியல் மற்றும் சமூக மோதல்கள் காலங்காலமாக தொடர்ந்து வந்த நிலையில் சுமார் 8 லட்சம் துத்சி இனத்தவர்கள் வெறும் 100 நாட்களுக்குள் கொல்லப்பட்டனர். பல இலட்சம் பெண்கள் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டனர். குழந்தைகள் உணவின்மையினால் இறந்தன. பல்லாயிரக்கணக்கானோர் அங்கவீனர்களாயினர். 20ஆம் நூற்றாண்டில் நிகழ்த்தப்பட்டதொரு பாரிய இனவழிப்பாக இது கருதப்படுகின்றது. இங்கு துத்சி இனத்தவர்கள் முற்றாக அழிக்கப்படுவதே நோக்காக இருந்துள்ளது.

இனச்சுத்திகரிப்பு (Ethnic Cleansing)

1. பொஸ்னியா – யூகோஸ்லாவிய போர் (1992- 1995)

பொஸ்னியாவில் சர்ப்படைகள் முஸ்லீம் போஸ்னியர்களை தங்களுடைய நிலப்பகுதியில் இருந்து வெளியேற்றினர். இதன் போது சொத்துக்கள் அழிக்கப்பட்டன. மக்கள் பலவந்தமாக அகற்றப்பட்டனர். பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர்.  “சர்ப் இனப்பகுதி” எனும் தூய இன நிலப்பரப்பினை உருவாக்குவதே இதன் முக்கிய நோக்கமாக இருந்தது.

2. மியன்மார் – ரோஹிங்கியா பிரச்சினை (2017 முதல்)

ரோஹிங்கியா முஸ்லிம்கள் மீது மியன்மார் இராணுவம் பல தாக்குதல்களையும் சொத்தழிப்புக்களையும் முன்னெடுத்தனர். மியன்மார் நாட்டின் பகுதிகளிலிருந்து ரோஹிங்கியா முஸ்லிம்கள் பலவந்தமாக வெளியேற்றப்பட்டனர். அவர்களை தங்களுடைய பிரதேசங்களில் இருந்து வெளியேற்றுவதே இங்கு பிரதான நோக்கமாக இருக்கிறது.

இலங்கை: ஈழப்போரும் இனவழிப்பு – இனசுத்திகரிப்பும்

இலங்கை உள்நாட்டுப்போர் அல்லது ஈழப்போர் என்பது மூன்று தசாப்தகாலமாக நீடித்ததொரு ஆயுத மோதலாகும். இது பெரும்பாலும் பேரினவாத அரசு – தமிழீழ விடுதலைப்புலிகள் இடையேயானது என்றாலும் இதன் வரலாற்று நிகழ்வுகளிலும் முரண்பாடுகளிலும் முஸ்லிம்களுக்கும் வகிபங்கு உண்டென்பதும் மலையக மக்களும் பாதிப்புற்றுள்ளார்கள் என்பதும் மறுக்க முடியாதது.

  • 1948 இல் “Ceylon Citizenship Act” என்ற சட்டம் இயற்றப்பட்ட போது சுமார் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட மலையகத் தமிழர்கள் குடியுரிமையற்றவர்களாக்கப்பட்டனர். இதனால் வாக்குரிமை, சுகாதாரம், கல்வி, வேலைவாய்ப்புக்கள் எல்லாவற்றினையும் இழந்தனர். நேரடியான வன்முறைகள் இன்றி நிகழ்த்தப்பட்ட இவ்வன்முறையை கட்டமைக்கப்பட்ட ரீதியில் அல்லது வடிவமைக்கப்பட்ட முறையில் அரசு முன்னெடுத்தது. சட்டங்கள், நிர்வாக முறை, பொருளாதார கொள்கைகள், கல்வி திட்டங்களிலிருந்து ஒரு இனத்தினை படிப்படியாக நீக்கி சமூக பொருளாதார ரீதியில் ஒதுக்கிவைக்கப்பட்டனர். இதனை கட்டமைக்கப்பட்ட ரீதியிலான இனச்சுத்திகரிப்பு (Structural Ethnic Cleansing) என குறிப்பிடலாம். இலங்கையின் முதலாவது இனசுத்திகரிப்பு நிகழ்வாக இது சுட்டிக்காட்டப்படுகின்றது.

  • இவ்வாறு நிறுவமைக்கப்பட்ட இனச்சுத்திகரிப்புக்குள்ளாக்கப்பட்டவர்கள் 1954 – Nehru – Kotelawala Pact மற்றும் 1964 – Sirimavo – Shastri Pact மூலம் பெரும்பாலானவர்கள் இந்தியாவிற்கு பலவந்தமாக அனுப்பப்பட்டனர். இதன் மூலம் மலையகத் தமிழர்களுள் பெரும் இனக்குழுவினர் நாட்டிலிருந்து வெளியேற்றப்பட்டமை சட்டரீதியான இனச்சுத்திகரிப்பாகும் (Legal Ethnic Cleansing).

  • 1983 இல் யாழில் இராணுவத்தின் மீது முன்னெடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு பழிவாங்கலாக பேரினவாத வன்முறைக்குழுக்களால் கொழும்பு, கண்டி, களுத்துறை, மாத்தளை போன்ற நகரங்களிலிருந்த தமிழர்கள் மீது வன்முறை நிகழ்த்தப்பட்டது. “கறுப்பு ஜுலை” கலவரம் என வர்ணிக்கப்படுகின்ற இக்கலவரத்தில் பல்லாயிரக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டதுடன் சொத்துக்களும் தீக்கிரையாக்கப்பட்டன. பல நூற்றுக்கனக்கான பெண்கள் பாலியல் வன்முறைகளுக்குட்படுத்தப்பட்டனர். கொழும்பு வெலிக்கடை சிறைச்சாலையில் 53 தமிழ் அரசியல் கைதிகள் கொல்லப்பட்டனர். மனித உரிமை அமைப்புக்களின் அறிக்கைகளின்படி 3000 இற்கும் மேற்பட்டவர்கள் கொல்லப்பட்டதாகவும் 150,000 ற்கும் மேற்பட்ட தமிழர்கள் தம்முடைய வீடுகளை, சொத்துக்களை இழந்ததாகவும் குறிப்பிடப்படுகின்றன. இச்சம்பவம் இனவழிப்புக்குள்ளும் அடங்கும் அதேவேளை இனரீதியாக வெளியேற்றப்பட்டமை இனசுத்திகரிப்பிற்குள்ளும் அடங்கும்.

  • 1990 – கிழக்குப் படுகொலைகள் (Eastern Massacres)

1987 இல் இந்திய அமைதிப்படைகள் (IPKF) இலங்கையை விட்டு வெளியேறிய பின்னர் அரச படைகளுக்கும் தமிழீழ விடுதலைப்பு லிகளுக்குமான மோதல்கள் மீண்டும் தீவிரமடைந்தன. 1990 இல் இரு தரப்பிற்குமிடையில் சமாதான ஒப்பந்தம் முறிவடைந்ததுடன் இரண்டாம் கட்ட உள்நாட்டு – ஈழப்போர் மீண்டும் வெடித்தது. இந்தப் போர் முதலில் கிழக்கு மாகாணங்களில் ஆரம்பமானது. இதன் உச்சகட்டமாக திருகோணமலை, மட்டக்களப்பு, அம்பாறை போன்ற இடங்களிலுள்ள கிராமங்களில் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் கொல்லப்பட்டனர். இவர்களுள் நூற்றுக்கணக்கான குழந்தைகளும் அடங்குவர். அத்துடன், பல பெண்களும் பாலியல் வன்முறைக்கு உட்படுத்தப்பட்டனர். இரவோடிரவாக சொத்துக்கள் சூறையாடப்பட்டன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களுடைய நிலங்கள், சொத்துக்கள் அபகரிக்கப்பட்டன. இந்த கட்டமைக்கப்பட்ட படுகொலைகளை இராணுவத்தினருடன் இணைந்து ஊர்காவற் படையினரும் முன்னெடுத்தமை மேற்கோள்காட்டத்தக்கது. இங்கு இனம் சார்ந்து அக்குழுமங்களை அழிப்பதே நோக்காக இருந்துள்ளது. எனவே, இதனை இனவழிப்பு என குறிப்பிட முடியும். அதாவது, பேரினவாதமும் முஸ்லிம் ஊர்காவல்படையும் தமிழர்களுக்கெதிராக முன்னெடுத்த இனவழிப்பு. இங்கு சாதாரண முஸ்லிம் மக்களும் கொல்லப்பட்டனர். ஆயினும், கொல்லப்பட்ட அப்பாவி தமிழ் மக்களுடன் ஒப்பிடும் போது ஒப்பீட்டளவில் மிக குறைவானதே.

  • 1990 – வடக்கு முஸ்லிம் வெளியேற்றம்

1990ஆம் ஆண்டு தமிழீழப் புலிகளினால் யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் பகுதிகளிலிருந்து முஸ்லிம் மக்கள் இரவோடிரவாக வெளியேற்றப்பட்டனர். 24 மணிநேரத்திற்குள் தங்களது இடங்களை விட்டு வெளியேற வேண்டும் என்கின்ற புலிகளின் உத்தரவின் அடிப்படையில் மக்கள் வெளியேறினர். இவர்களது உடைமைகள் விட்டுச்செல்லப்பட்டன. இன்றும் பல தசாப்தங்களாக இவர்கள் தம்முடைய சொந்த இடத்திற்கு செல்லமுடியாதொரு நிலை காணப்படுகின்றது. இலங்கைக்குள் புலிகளால் நிகழ்த்தப்பட்ட பாரியதொரு இனசுத்திகரிப்பாக இந்த வடக்கு முஸ்லிம்கள் வெளியேற்றத்தைக் குறிப்பிடலாம். இவ் இனசுத்திகரிப்பின் போது ஏறத்தாழ 75,000 முஸ்லிம் மக்கள் வெளியேற்றப்பட்டதாக அறிக்கைகள் குறிப்பிடுகின்றன.

  • 2009 இறுதி யுத்தம்

2008 முதல் 2009 வரை அப்போதிருந்த மஹிந்த அரசினால் கட்டமைக்கப்பட்ட முறையில் மேற்கொள்ளப்பட்ட இனவழிப்பின் ஓர் பாரிய பகுதியாக இறுதியுத்தம் பார்க்கப்படுகின்றது. மனிதாபிமானமற்ற முறையில் மேற்கொள்ளப்பட்ட இத்தாக்குதலில் பல இலட்சம் தமிழ் மக்கள் கொல்லப்பட்டதுடன் பல்லாயிரக்கணக்கான சிறுவர்களும் கொல்லப்பட்டனர். நூற்றுக்கணக்கான தமிழ்ப் பெண்கள், சிறுமிகள், போராளிகள் பாலியல் வன்முறைக்குட்படுத்தப்பட்டனர். இன்று வரை சர்வதேச விசாரணைகள் கண்துடைப்பாக இடம்பெறுவதுடன் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதி இன்றும் மறுக்கப்பட்டுக்கொண்டே இருக்கின்றது. 2009 இல் இலங்கை அரசு போர் முடிவிற்கு வந்துவிட்டது என பகிரங்கமாக அறிவித்திருந்த போதும் அதன் பின்னர் அபிவிருத்திகளை மேற்கொள்கின்ற போதும் வலிந்து காணாமலாகப்பட்டவர்கள், அரசியல் கைதிகள், முன்னாள் போராளிகள், நிர்வாகத்தில் மறுக்கப்படுகின்ற உரிமைகள் என உள்ளக நீதிக்கான பயணம் தொடர்ந்துகொண்டே இருக்கின்றது. அத்துடன் மொழி, கலாசார சுத்திகரிப்புக்களுக்கும் முகங்கொடுத்து வருகின்றனர்.

  • 2019 – உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள்

இந்தத்தாக்குதல்கள் கத்தோலிக்க – கிறிஸ்தவ ஆலயங்களை/ மக்களை இலக்கு வைத்தே நிகழ்த்தப்பட்டுள்ளன. இன ரீதியாக நோக்குமிடத்தில் தமிழ் மற்றும் சிங்கள இனத்தவர்கள் உயிரிழந்துள்ளனர். எனவே, குறிப்பிட்ட இன மத ரீதியாக தாக்குதல் எனும் போதும் தற்கொலை குண்டுவெடிப்புக்கள் என்பதன் இறுதி விளைவு உயிர்களை அழிப்பது என்பதன் அடிப்படையிலும் இதுவும் இனவழிப்பு நிகழ்வே. கூடவே மதரீதியான சுத்திகரிப்பு (Religious Ethnic Cleansing) என்றும் அடையாளப்படுத்தலாம்.

போருக்கு பின்னரான நீதி கோரல்களும் மனிதஉரிமைச் செயற்பாடுகளும்

2009 இற்கு பின்னர் நாடளாவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்டதும் மக்களை உள்ளீர்த்து கட்டமைக்கப்பட்ட நிகழ்வாக அரகலயவினை குறிப்பிடலாம். ஆனால், இப்போராட்டத்தின் பின்னுள்ளதும் போராடியவர்களின் பின்னுள்ளதுமான நுண்ணரசியல் மிகவும் முக்கியமானது.

2021 – 2022 பொருளாதார நெருக்கடி வந்த போது மக்கள் தம்முடைய அன்றாட தேவைகளைக் கூட சமாளிக்க முடியாமல் வீதிக்கு இறங்கி போராடினர். ஆனால், போரியல் காலத்தில் வடக்கு – கிழக்கு மக்களும், 1948 இல் இருந்து மலையக மக்களும் இதே பொருளாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தனர், இன்றும் எதிர்கொள்கின்றனர். ஆனால், இக்கால கட்டங்களில் மௌனமாயிருந்த பெரும்பான்மையினர் தம்மை நோக்கி திரும்பிய போது சிறுபான்மையினரையும் இணைத்துக்கொண்டு இந்நெருக்கடியினை பொதுமைப்படுத்தி வீதிக்கிறங்கி போராடினர் என்பது மேற்கோள் காட்டத்தக்கது. அதேவேளை போர்காலத்தில் சில மனிதாபிமானவர்களும், சிங்கள ஊடகவியலாளர்களும், மனித உரிமைச் செயற்பாட்டாளர்களும் சிறுபான்மையினருக்கு குரல்கொடுத்தனர் என்பது உண்மையே. ஆயினும், “நாட்டுமக்கள்” வீதிக்கு இறங்கியது அம்பு தம்மை நோக்கி திரும்பிய போதுதான் என்பது குறிப்பிடத்தக்கது.

2009 யுத்தம் முடிவுக்கு வந்ததாக அறிவித்த போது பால்சோறு கொடுத்து கொண்டாடிய அதே தென் இலங்கை 2022 இல் “முள்ளிவாய்க்கால் நினைவு”களை விளக்கேற்றி அணுசரித்ததும் இங்கு சுட்டிக்காட்டப்பட வேண்டியதொன்றாகும். ஒருவேளை தென்னிலங்கையானது சிறுபான்மையினரின் வலிகளை உணர்ந்துவிட்டது என்று மக்கள் நினைத்திருந்தால் அதுவும் பொய்த்துப்போனமை இங்கு சுட்டிக்காட்டப்படவேண்டியதொன்று.

தமிழீழ விடுதலைப்புலிகளை எவ்வாறு போர் வரலாற்றில் இருந்து விலத்திட முடியாதோ அதேயளவு புலியெதிர்பாளர்களது வகிபங்கினையும் போர் காலத்திலும் போருக்கு பிந்திய காலகட்டத்திலும் நாம் தவிர்த்திட முடியாது. இயக்கம் இருந்த போது துப்பாக்கி முனைகளுக்கு பயந்தொளிந்து திரிந்தவர்கள் 2009 இற்குப் பின்னர் எவ்வாறு தம்முடைய நியாயங்களை முன்வைக்கவும் எதிர்தரப்பு முடக்கபட்ட நிலையில் தம் விவாதங்களையும் தனிப்பட்ட காழ்ப்புணர்வுகளையும் பொதுமைப்படுத்தினார்கள் என்பதும் வரலாற்றின் படிகளே. புலிகளை விமர்சிக்கும் போது அவர்கள் தம் குரல்களை நசுக்கினார்கள் என்று மேற்கோள் காட்டியவர்கள் பின்னர் தம்முடைய “புலியெதிர்ப்பு வாதத்தினை” எவ்வாறு அரசியலாக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பது மிகவும் காத்திரமானதொரு தளத்தில் விமர்சிக்கப்பட வேண்டியடிதொரு விடயம்.

வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் குறித்து விடுதலைப் புலிகளின் தரப்பு பகிரங்கமாக மன்னிப்பினை கோரியது. எனினும், அரசினால் ஆயுதமளிக்கப்பட்டு “ஊர்காவற்படை” உருவாக்கப்பட்டு எல்லைக்கிராமங்களின் “பாதுகாப்பிற்காக” என்று நிறுத்தப்பட்டவர்கள் அப்பாவி தமிழர்களையும் அவர்களுக்கு உதவியளித்த அப்பாவி முஸ்லிம்களையும் கொன்றொழித்தது பற்றி பேசிக்கொள்வதில்லை. எந்தவொரு கட்டமைப்பும் சமூகத்தில் ஆயுதமேந்தும் போது அவ்வினம் சார் பக்கபலம் இல்லாதிருப்பதில்லை. தெரிந்தோ தெரியாமலோ இவை நிகழ்த்தப்பட்டாகத்தான் வேண்டும். இதற்கு நிறுவல்கள் தேவையில்லை. இதனடிப்படையிலேயே தமிழ் அப்பாவி இளைஞர்கள் பலர் புலிகளுக்கு உதவினார்கள் என்று கொல்லப்பட்டுள்ளார்கள், அரசியல் கைதிகளாக்கப்பட்டுள்ளார்கள். இன்று பகிரங்கமாக விடுதலைப்புலிகளில் முஸ்லிம் பிரதிநிதிகளும் இருந்தார்கள் என்று கண்காட்சி நடாத்தும் மனித உரிமைச் செயற்பாட்டாளர்கள், ஊர்காவற்படையிலும் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தார்கள் என்று ஒத்துக்கொண்டு பொறுப்புக்கூறல்களை முன்னெடுக்கத் தயாராகவுள்ளார்களா?

காத்தான்குடி பள்ளிவாசல் தாக்குதல் குறித்து பரவலாக பேசும் கிழக்கு முஸ்லிம் பிரதிநிதிகளும், மனிதவுரிமை ஆர்வலர்களும் கிழக்கில் நிகழ்த்தப்பட்ட ஏனைய படுகொலைகள் பற்றி ஏன் ஒப்பீட்டளவில் பரவலாக பேசுவதில்லை. (இங்கு “ஒப்பீட்டளவில்” என்பது கவனிக்கப்படவேண்டியதொரு சொல்லாடல்) இன்று வரை காத்தான்குடி பள்ளிவாசல்கள், மதரஸாக்களில் நினைவுகூறல் நினைவுகளில் பரப்படுகின்ற இன காழ்ப்புணர்வுகள் ஆர்வலர்களின் காதினை அடையாமை வியப்பானதே.

இவ்வருடம் முஸ்லிம்கள் வடக்கிலிருந்து வெளியேற்றப்பட்ட 35ஆவது வருடங்களை நினைவு கூரும் வகையில் பல்வேறு நிகழ்வுகள் ஒழுங்குசெய்யப்பட்டிருந்தன. ஒரு இனத்தின் வலிநிறைந்த பக்கத்தினை நினைவுகூருவதில் குற்றமில்லை. எனினும், இவ் நினைவுகூரல் குறித்த நிகழ்வுகளில் சில விடயங்கள் ஊன்றி கவனிக்கப்பட வேண்டியன. முக்கியமாக தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பில் முஸ்லிம் பிரதிநிதிகள் இருந்தமை பகிரங்கமாக மேற்கோள்காட்டப்பட்டுள்ளது, முஸ்லிம் இனத்தவர்களுள் சிலர் காட்டிக்கொடுத்தார்கள் என்பது பகிரங்கமாக மேற்கோள் காட்டப்பட்டுள்ளது, அடுத்தது வடக்கு முஸ்லிம் வெளியேற்றம் இடப்பெயர்வல்ல “இனச் சுத்திகரிப்பு” என மேற்கோள் காட்டப்பட்டுள்ளது. இதனை பகிரங்கமாக மேற்கோள் காட்டியுள்ளவர்கள் மனித உரிமை செயற்பாட்டாளர்களும், பெண்ணியவாதிகளுமே. எனினும் மலையகத்திலும், கிழக்கிலும் கட்டமைக்கப்பட்ட ஏனைய “இன சுத்திகரிப்பு”, “இனவழிப்பு”, “பாலியல் வன்முறை” குறித்து இவர்கள் நினைவுகூராமை பெரும் முரண்நகையானதே.

ஒருவேளை மனித உரிமையாளர்கள் இதயசுத்தியுடனும் மனித உரிமைக்காகவும்தான் போராடுகின்றார்கள் எனின் ஏன் புலிகளால் மட்டும் நிகழ்த்தப்பட்ட அதேவேளை புலிகள் அமைப்பினாலேயே பகிரங்கமாக மன்னிப்பு கோரப்பட்டதொரு விடயத்தினை மட்டும் தூக்கிப்பிடிக்கின்றார்கள் என்கின்ற வினா உங்களுக்குள் எழும்பவில்லையா? ‘மனிதம்’ தான் பின்னுள்ளது என்றால் வருடாவருடம் நினைவுகூரப்படுகின்ற சத்துருக்கொண்டான் படுகொலை, வீரமுனை படுகொலைகள் மற்றும் இன்னபிற படுகொலைகள் குறித்து ஏன் இவர்கள் நினைவுகூறுவதில்லை அல்லது விமர்சிப்பதில்லை. ‘பாசிசம்’, ‘இன சுத்திகரிப்பு’ என்கின்ற சொல்லாடல்கள்களை மட்டும் மேற்கோள் காட்டி புலிகளை விமர்சிக்கும் இவ் ஆர்வலர்கள் ஏன் ஏனையவர்கள் நிகழ்த்தியவை பற்றி பேசிக்கொல்வதில்லை.

இன சுத்திகரிப்பு என்பதற்கும் இனவழிப்பு என்பதற்கும் பாரிய வேறுபாடு, விளைவுகள் அடிப்படையில் உண்டு. அவ்வாறிருக்கும் போது “இன சுத்திகரிப்பினை தூக்கிப்பிடிக்கும் ஆர்வலர்கள் இனவழிப்பினை குறித்தும் ஒப்பீட்டளவில் கனதியான இனவழிப்பின் விளைவுகள் குறித்தும் கண்டுகொள்ளாமல் போவது ‘புலிகள்’ சம்மந்தப்படாமல் இருப்பதாலா அல்லது கிழக்கில் கொலைகள் நிகழ்த்தப்பட்டதால் அதனை குறித்து பேசும் போது முஸ்லிம்களை பகைக்க வேண்டியிருக்கும் என்பதாலா? அல்லது பெரும்பான்மையின் அரசியல் நிரலின் கீழ் தம்முடைய அரசியல் பங்களிப்பினை உறுதிப்படுத்தி கொள்கின்ற அரசியலா? என்பது சிந்திக்க வேண்டியதொன்றாகின்றது.

வடக்கு முஸ்லிம்களின் வெளியேற்றம் தமிழ்த்தேசியத்தின் வடக்கை தமிழ்த்தேசமாக்கும் தன்மை என வாதிடும் ஆர்வலர்களும் எழுத்தாளர்களும் கிழக்கில் கொல்லப்பட்ட அப்பாவி தமிழர்களின் பின்னுள்ள “கிழக்கு முஸ்லிம்களுக்கானது” என்கின்ற இன அரசியல் நிகழ்ச்சி நிரலை கண்டுகொள்ளாமல் கடப்பதேன்? வடக்கில் நிகழ்ந்தது இன சுத்திகரிப்புதான். ஆனால், கிழக்கில் நிகழ்த்தப்பட்டது இனவழிப்பு. உங்களளவில் எது கனதியானது?

போருக்கு பின்னரான சூழமைவில் மக்களின் மனவடுக்களை ஆற்றுப்படுத்தி அடுத்த கட்டத்திற்கு வழிநடாத்த வேண்டிய பொறுப்புள்ளவர்கள் ஒவ்வொரு வருடமும் குறிப்பிட்ட முக்கிய தினங்களில் மக்களிடையே “வார்த்தை அரசியல்” செய்வதும் தம்முடைய எதிர்ப்புக்களை நியாயப்படுத்த குறிப்பிட்ட இனத்தவர்களுக்காக வருடாவருடம் கண்ணீர் வடிப்பதும் மிகவும் தெளிந்த சிந்தனையுடன் அனுகப்படவேண்டியது என்பதை இத்தனை இழப்பிற்கு பின்னராவது மக்கள் புரிந்துகொள்வார்களா? அதற்கான சித்தனை தளம் உள்ளதா என்பதே போருக்கு பின்னர் 16 வருடங்கள் கடந்த நிலையிலும் தமிழ் – முஸ்லிம் – மலையக மக்களிடம் முன்வைக்கப்பட வேண்டிய வினாவாகின்றது.

Shine_Verticle_Keshayinie-Edmund-e176283கேஷாயினி எட்மண்ட்

https://maatram.org/articles/12397

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

2 months 2 weeks ago

நுகேகொடை கூட்டம் எதிர்க்கட்சியினருக்கு கை கொடுக்குமா

எம்.எஸ்.எம்.ஐயூப்

சில எதிர்க்கட்சிகள் இம் மாதம் 21 ஆம் திகதி நுகேகொடையில் நடத்தவிருக்கும் அரச எதிர்ப்பு கூட்டத்தின் நோக்கத்தை மாற்றிக்கொண்டுள்ளதாக தெரிகிறது.

ஆரம்பத்தில் அக்கட்சிகள் அரசாங்கத்தின் அடக்குமுறைக்கு எதிராக தாம் இந்தக் கூட்டத்தை நடத்துவதாக தெரிவித்தன. அரசாங்கம் அரசியலமைப்பு ரீதியான சர்வாதிகார ஆட்சியை நடத்தி வருவதாகவும் தனிக்கட்சி ஆட்சியை நிறுவ முயல்வதாகவும் குற்றஞ்சாட்டின.

பொதுப் பணத்தில் பிரித்தானியாவுக்கு தனிப்பட்ட பயணம்  ஒன்றை மேற்கொண்டதாக குற்றஞ்சாட்டி பொலிஸார் கடந்த ஓகஸ்ட் மாதம் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை கைது செய்தனர்.

இதனை அடுத்து முன்னாள் ஜனாதிபதிகளினதும் அவர்களின் விதவைகளினதும் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்கு கடந்த செப்டம்பர் மாதம் சட்டம் ஒன்று நிறைவேற்றப்பட்டது. அதன் விளைவாக முன்னாள் ஜனாதிபதிகள் அரச விடுதிகளில் இருந்து வெளியேற நேர்ந்தது.

இதனை அடுத்தே அரசாங்கம் அடக்குமுறையை கட்டவிழ்த்துவிட்டு இருப்பதாக எதிர்க்கட்சிகள் கூறுகின்றன. ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்ததற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்போவதாகவும் அவை கூறின. அரசாங்கத்துக்கு எதிராக எதிர்க்கட்சிகள் 1000 எதிர்ப்புக் கூட்டங்கள் சத்தியாகிரகங்கள் போன்றவற்றை நடத்தவிருப்பதாக ரணில் விக்ரமசிங்க அறிவித்தார்.

எதிர்க்கட்சிகள் நுகேகொடையில் நடத்தவிருக்கும் கூட்டம்  ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்‌ஷவை பிரபல்யப்படுத்தும் கூட்டமாகவே தெரிகிறது.

எவ்வாராயினும் இப்போது கூட்டம் நடத்தவிருக்கும் எதிர்க்கட்சிக் குழுவினர் தம்மை கூட்டு எதிர்க்கட்சி என்றே அழைக்கின்றனர். 2015 ஆம் ஆண்டு மஹிந்த ராஜபக்‌ஷஜனாதிபதித் தேர்தலில் தோல்வியடைந்த போது இந்தப் பெயரிலேயே அவரது ஆதரவாளர்கள் ஐக்கிய தேசியக் கட்சி  தலைமையிலான புதிய அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர்.

அவர்களும் நுகேகொடையிலேயே  தமது முதலாவது எதிர்ப்புக் கூட்டத்தை நடத்தினர்.அந்த எதிர்ப்பு அன்று சிறிது காலத்துக்குள்ளேயே மாபெரும் அலையாக மாறி மூன்றாண்டுகளில் அதாவது 2018 ஆம் ஆண்டு நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் ஐ.தே.கவை படுதோல்வி அடையச்செய்தது.

ஆனால், பழைய பெயரில் பழைய இடத்தில் கூட்டம் நடத்தினாலும் இம்முறை இந்த கூட்டு எதிர்க்கட்சி பாரிய எதிர்ப்பு அலையாக மாறும் சாத்தியம் இல்லை என்றே தெரிகிறது. பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி, இந்த கூட்டு எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்காமையே அதற்கு முக்கிய காரணமாகும்.

2015 ஆம் ஆண்டு நுகேகொடையில் கூட்டம் நடத்தும் போது ஆளும் கட்சியான ஐ.தே.கவைப் பார்க்கிலும் எதிர்க்கட்சியான மஹிந்த ராஜபக்‌ஷ தலைமை தாங்கிய ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி பலம் வாய்ந்த கட்சியாக இருந்தது. ஐ.தே.க சிறுபான்மை அரசாங்கமொன்றை நடத்தியது.

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத் தேர்தலில் ஐ.தே.க வெற்றி பெற்றாலும் அதற்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை பலம் கிடைக்கவில்லை. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அரசாங்கத்திற்கு வெளியே இருந்து வழங்கிய ஆதரவினாலேயே அரசாங்கத்தை  ஐ.தே.க  நடத்தியது.

இன்று நிலைமை முற்றிலும் வேறுபட்டதாக இருக்கிறது. இன்று ஆளும் தேசிய மக்கள் சக்தி, விகிதாசார முறைப்படி தனியாக மூன்றில் இரண்டுக்கு மேலான பாராளுமன்ற ஆசனங்களைப் (159 ஆசனங்களை) பெற்று பலமான நிலையில் இருக்கிறது. கடந்த மே மாதம் நடைபெற்ற உள்ளூராட்சி மன்றத் தேர்தல்களில் தேசிய மக்கள் சக்திக்கு சற்று பின்னடைவு ஏற்பட்டாலும் இன்றும் நாட்டில் மிகவும் பலம் வாய்ந்த கட்சி, தேசிய மக்கள் சக்தியாகும்.

நுகேகொடை கூட்டத்துக்கான கூட்டு எதிர்க்கட்சியின் பிரதான சுலோகமான அடக்குமுறை என்பது தமக்கே பாதகமாக அமையக்கூடும் என்று அக்கட்சிகள் இப்போது உணர்வதாக தெரிகிறது.

ஏனெனில், இந்தக் கூட்டத்தை நடத்தப் போகும் ஐ.தே.க., ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி மற்றும் அம்முன்னணிக்குள் இருந்தவர்களின் ஆட்சிக் காலங்கள் மிகக் கொடூரமான அடக்குமுறை நிறைந்த காலங்கள் என்பதை மறைக்கவோ, மறுக்கவோ முடியாது.

1977 முதல் 1994 ஆம் ஆண்டு வரையிலான ஐ.தே.க., ஆட்சியின் கீழ் வடக்கில் இடம்பெற்ற அடக்குமுறையே இனப்பிரச்சினையை ஆயுதப் போராக மாற்றியது. இலங்கை வரலாற்றில் நடைபெற்ற மிகவும் ஊழல் நிறைந்த தேர்தல் 1982 ஆம் ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலாகும். அதே ஆண்டு நடைபெற்ற சர்வஜன வாக்கெடுப்பு இலங்கை வரலாற்றில் மிக மோசமான ஊழல் நிறைந்த வாக்கெடுப்பாகும்.

அக்காலத்தில் முதன்முதலாக அரசியல் ஆதரவு பெற்ற பாதாள உலக கோஷ்டிகள் உருவாகின. கோணவல சுனில் மற்றும் சொத்தி உபாலி போன்ற குண்டர்கள் தனியான ஆட்சியை நடத்தி வந்தனர். அக்காலத்தில் பியகம, மஹியங்கனை மற்றும் கெக்கிராவ போன்ற பகுதிகள் எதிர்க்கட்சிகளுக்கு ‘தடை செய்யப்பட்ட’ பிரதேசங்களாக இருந்தன.

1983 ஆம் ஆண்டு நாடெங்கிலும் தமிழர்களுக்கு எதிராக குண்டர்கள் ஏவி விடப்பட்டனர். எவ்வித காரணமும் இன்றி மக்கள் விடுதலை முன்னணி உள்ளிட்ட மூன்று கட்சிகள் தடை செய்யப்பட்டன. அக்கால அடக்குமுறையை பற்றி ஒரு புத்தகத்தையே எழுதலாம். அந்த ஐ.தே.கவே இப்போது ஐ.தே.க என்றும் ஐக்கிய மக்கள் சக்தி என்றும் பிரிந்து செயல்படுகின்றன.

இதனை அடுத்து பதவிக்கு வந்த சந்திரிகா குமாரதுங்கவின் காலத்தில் குமார் பொன்னம்பலம் கொல்லப்பட்டார். பெத்தகான சஞ்சீவ என்ற பாதாள உலக குண்டன் ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவில் சேர்க்கப்பட்டு இருந்தான். அக்காலத்திலும் களனி மற்றும் ஆனமடுவ போன்ற பகுதிகளில் எதிர்க்கட்சியினருக்கு தலையைக் காட்ட முடியாத நிலை ஏற்பட்டது. ஊடகவியலாளர்களான மயில்வாகனம் நிமலராஜன் மற்றும் சிவராம் ஆகியோர் சந்திரிகாவின் ஆட்சிக் காலத்திலேயே கொல்லப்பட்டனர்.

மஹிந்த ராஜபக்‌ஷவின் காலத்தில் லசந்த விக்ரமதுங்க, நடேசன் மற்றும் சுகிர்த்தராஜன் போன்ற பல ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டனர். உதயன், சிரச மற்றும் சியத்த ஆகிய ஊடக நிறுவனங்கள் தீயிடப்பட்டன. பெருமளவான ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டனர். அரசாங்கத்தை கடுமையாக விமர்சித்த நடராஜா ரவிராஜ், ஜோசப் பரராஜசிங்கம் மற்றும் தியாகராசா மகேஸ்வரன் போன்ற பாராளுமன்ற உறுப்பினர்கள் கொல்லப்பட்டனர்.

அந்த மஹிந்த ராஜபக்‌ஷவே இப்போது ஸ்ரீ லங்கா பொதுஜன முன்னணயின் தலைவராகவும் இருக்கிறார்.தேசிய மக்கள் சக்தியின் தலைமையிலான அரசாங்கத்தின் கீழ் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறவில்லை. எனவே நுகேகொடையில் கூட்டம் நடத்தவிருக்கும் கட்சிகள் அடக்குமுறை என்ற சுலோகத்தை வாபஸ் பெற்றிருக்கின்றன போலும். 

தே.ம.ச.,வுக்கு அதன் தேர்தல் வாக்குறுதிகளை நினைவூட்ட பொருத்தமான மாதம் இம் மாதமாகும். ஆனால், நாட்டை வங்குரோத்து நிலைக்கு தள்ளிய கடந்த  கால ஆளும் கட்சிகளுக்கு அதற்காக தார்மிக உரிமை இருக்கிறதா? என்ற கேள்வியை எழுப்ப வேண்டியுள்ளது. 

அந்த வகையில் அரசாங்கத்தை விமர்சிக்கும் தார்மிக உரிமை வாக்களித்த மக்களுக்கு இருக்கிறது.  உண்மையிலேயே அரசாங்கம் அதன் சகல வாக்குறுதிகளையும் நிறைவேற்றாவிட்டாலும் சில முக்கிய விடயங்களை சாதித்துள்ளது. அதில் ஒன்று அரசியல் மட்டத்தில் ஊழலை ஒழித்தமையாகும்.

ஆளும் கட்சியில் ஊழல்வாதிகள் அறவே இல்லை என்ற உத்தரவாதத்தை வழங்க எவராலும் முடியாது. ஆனால் அவ்வாறு ஆளும் கட்சியில் ஊழல் பேர்வழிகள் இருந்து அம்பலமானால் நிச்சயமாக அரசாங்கத்தின் தலைவர்கள் அவர்களை பாதுகாக்காது  வெளியேற்றுவார்கள் என்றொரு நம்பிக்கை மக்களிடையே ஏற்பட்டுள்ளது. இது முன்னொருபோதும் காணாத நிலைமையாகும்.

போதைப் பொருட்களுக்கு எதிரான அரசாங்கத்தின் போராட்டமும் நேர்மையானதாக தெரிகிறது.அத்தோடு வங்குரோத்து நிலையை அடைந்த நாட்டை மீட்க சர்வதேச நாணய நிதியம் கடுமையான நிபந்தனைகளுடன் திட்டம் ஒன்றை வகுத்துக் கொடுத்தது. அதனை ரணில் விக்ரமசிங்க செயல்படுத்தினார்.

ஆனால், அவர் ஊழலை கட்டுப்படுத்தவில்லை. அவரது காலத்திலும் ஊழல் மலிந்து இருந்தமை அண்மையில் ‘கோப்’ குழுவின் விசாரணை ஒன்றின் போது தெரியவந்தது.

தே.ம.ச., தலைவர் அனுரகுமார திசாநாயக்க சர்வதேச நாணய நிதியத்தின் திட்டத்தை எதிர்பார்த்ததை விட சிறப்பாக செயல்படுத்துகிறார். அரச நிதி நிலைமை பலமாக இருப்பதை இம்முறை வரவு -செலவு திட்ட விவாதத்தின் போது எதிர்க்கட்சியினரும் ஏற்றுக்கொண்டனர். நாளை நிலைமை எவ்வாறு அமையும் என்ற உத்தரவாதத்தை வழங்க முடியாவிட்டாலும்.

இப்போதைக்கு அரசாங்கத்தின் ஒரு வருட சாதனையை பாராட்டலாம்.

https://www.tamilmirror.lk/சிறப்பு-கட்டுரைகள்/நுகேகொடை-கூட்டம்-எதிர்க்கட்சியினருக்கு-கை-கொடுக்குமா/91-367849

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்” — கருணாகரன் —

2 months 2 weeks ago

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

November 9, 2025

தனபாலசிங்கத்தின் “தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்”

— கருணாகரன் —

தமிழ்த் தேசியவாத அரசியலுக்கு எதிராக NPP யின் எழுச்சி உருவாக்கியிருக்கும்  நெருக்கடிச் சூழலில் ‘தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம்’ என்ற நூலினை ‘தினக்குரல்’ பத்திரிகையின் ஆசிரியப் பொறுப்பு உட்பட ஊடகத்துறையின் முக்கிய பொறுப்பிலிருந்த மூத்த பத்திரிகையாளர் திரு. வீரகத்தி தனபாலசிங்கம் எழுதியிருக்கிறார். இந்த நூலில் எட்டுக் கட்டுரைகள் உள்ளன. 

இந்த எட்டுக் கட்டுரைகளில் ஏழு கட்டுரைகளும் தமிழ்த்தேசியவாத அரசியலின் இருப்பு, அதனுடைய எதிர்காலம் குறித்த கேள்விகளை ஆதாரமாக முன்வைத்துப் பேசினாலும் இலங்கைத்தீவின் இனப்பிரச்சினை, கடந்த கால ஆட்சியாளர்களின் தவறுகள், தமிழ்த் தலைமைகளின் தீர்க்கதரிசனமற்ற அரசியல் பார்வை, யதார்த்த அரசியலை ஏற்றுக் கொள்ளத் தயங்குவதால் தமிழ்த்தேசியவாத அரசியலாளர்களும் மக்களும் சந்திக்கின்ற பின்னடைவுகள், மாகாணசபை முறையின் அவசியம், அரசியலமைப்பைத் திருத்தும்போது கவனிக்க வேண்டிய விடயங்கள், ஆட்சியிலிருக்கும் NPP அரசாங்கத்தின் பொறுப்புகள் எனப் பலவற்றையும் பேசுகின்றன. 

இவற்றைப் பற்றி வரலாற்று ஆதாரங்களை முன்வைத்து ஆராய்கிறார் தனபாலசிங்கம். ஒரு கட்டுரை மட்டும் மறைந்த தமிழ்த் தலைவர் இரா. சம்பந்தனுடைய அரசியல் வகிபாகம் பற்றியது. அதுவும் ஒரு வகையில் தமிழ்த்தேசியவாத அரசியலைப் பற்றிப் பேசுவதான். 

எழுந்தமானமாகவோ தன்னுடைய விருப்பு – வெறுப்பு நிலையிலிருந்தோ எதையும் பேச விழையாமல், வரலாற்று நிதர்சனங்களின் ஊடாக, யதார்த்த பூர்வமாக எல்லாவற்றையும் அணுகுவது இந்த நூலின் முக்கியத்துவமாகும். தனபாலசிங்கத்தின் முக்கியத்துவமும் இதுவே. 

இந்த நூலைப் பற்றி ஒரே வரியில் சொல்வதென்றால், ‘எல்லாப் பக்கமும் கூருள்ள ஆயுதமொன்றைப் போல இந்த நூல் உள்ளது’ எனலாம். அதனால் எல்லாத் தரப்பினருக்கும் விழுகிறது பாரபட்சமில்லாத அடி. கூடவே எல்லோருடைய பொறுப்புகளும் சுட்டிக்காட்டப்பட்டு நியாயமான முறையில் உணர்த்தப்படுகிறது. அதாவது, கடுமையான விமர்சனம். சிநேகபூர்வமான சுட்டிக் காட்டுதல்கள்.

இவை சமகாலத்தை மையப்படுத்திப் பேசினாலும் இலங்கைத்தீவின் அரசியல் நிலவரத்தையும் வரலாற்றையும் யதார்த்தப் பார்வையோடு, தேவைக்கேற்ப முன்பின்னாகப் பேசி, உண்மைகளைக் கண்டறிய விளைகின்றன. முழுமையாக நோக்கினால், இலங்கைத்தீவின் இனச்சிக்கலுக்குப் பொருத்தமான தீர்வைக் காண்பதையும் தமிழ்ச் சமூகம் பொருத்தமான அரசியலை முன்னெடுக்க வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்துகின்றது எனலாம்.  

என்பதால் இன்றைய அரசியலாளர்களும் மக்களும் இந்த நூலைப் படிக்க வேண்டியது அவசியமாகிறது. நூலில் உள்ள கட்டுரைகள் சொல்ல விளைகின்ற விடயங்களைத் தொகுத்துப் பார்க்கலாம்.

1.   ‘கறுப்பு ஜூலைக்குப் பிறகு 42 வருடங்கள்’ என்ற முதலாவது கட்டுரை, இந்தக் காலப் பகுதியில் மிகப் பெரிய உள்நாட்டுப்போர் நடந்து முடிந்து விட்டது. பேரழிவுகளில் நாடு சிக்கி மீண்டுள்ளது. பல்லாயிரக்கணக்கான மக்கள் அனைத்துச் சமூகங்களிலும் பலியாகியுள்ளனர். பொருளாதாரம் முற்றாகவே பின்னடைவு நிலைக்குள்ளாகியிருக்கிறது. அரசியல் ரீதியாக (மனித உரிமைகள் மற்றும் தீர்வு விவகாரங்களில்) சர்வதேச தலையீடுகளும் பொருளாதார ஆக்கிரமிப்புகளும் நிகழும் நிலை உருவாகியுள்ளது. இப்படியெல்லாம் இருந்தும் இன்னும் சிங்கள மக்களுடைய – சிங்கள அதிகார வர்க்கத்தினுடைய உள நிலையில் மாற்றத்துக்கான அறிகுறியைக் காணவில்லை; படிப்பினையைப் பெறவில்லை என்று கவலை தெரிவிக்கிறது. தீர்வுக்கான அரசியல் வரைவை உருவாக்குவதில் அனைத்து ஆட்சியாளர்களுக்கும் உள்ள தடுமாற்றத்தையும் அர்ப்பணிப்பற்ற தன்மையையும் சொல்கிறது.

முக்கியமாக 1983 இல் நடைபெற்ற வன்முறைச் சூழலை, அன்றைய அரசியல் சக்தியாக இருந்த UNP யும்  அதனுடைய தலைமையான ஜே. ஆர். ஜெயவர்த்தனாவும்  மேற்கொண்ட அரசியல் தவறுகளை – மேலாதிக்கச் செயற்பாடுகளை – இனவாத அணுகுமுறையை தனபாலசிங்கம் ஆதாரபூர்வமான எடுகோள்களோடு முன்வைத்துள்ளார். இது மூத்தவர்களுக்கு நினைவூட்டலையும் இளைய தலைமுறையினருக்கு கடந்த கால வரலாற்றுச் சூழலைப் பற்றிய புரிதலையும் ஏற்படுத்துகிறது. 

2.   13 ஆவது திருத்தத்தை தமிழர்கள் என்ன  செய்யப்போகிறார்கள்? என்பது பற்றிய கட்டுரை சற்றுச் சுவாரசியமானது. அத்துடன் நியாயமான கேள்வியையும் எழுப்புகிறது. இலங்கையின் இனப்பிரச்சினைக்கும் தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாஷைக்கும் இடையில் சிக்குப்பட்டிருப்பது 13 ஆவது திருத்தத்தின் அடிப்படையிலான  மாகாணசபை முறைமை ஆகும். ஆனால், தற்போதுள்ள சூழலில் மட்டுமல்ல, அரசியல் தீர்வுக்காக முன்னெடுக்கப்பட்ட அல்லது உரிமைக்கான போராட்டத்தின் பின்னர் மிஞ்சியிருப்பது இது ஒன்றேயாகும். இது தொடர்பாக சிங்களத் தரப்பிலும் ஏற்பும் மறுப்புமான நிலைப்பாடுகள் உண்டு. தமிழ்த்தரப்பிலும் அப்படித்தான் நிலைமை. இந்த நிலையில் இதை ஏற்றுக் கொள்வதில் தமிழ் மக்கள் எத்தகைய நிலைப்பாட்டுடன் உள்ளனர்? என்பதே தனபாலசிங்கத்தின் கேள்வியாகும். இந்தக் கேள்வியை அவர் இந்தியாவினதும் சர்வதேச சமூகத்தினதும் இலங்கை இனப்பிரச்சினையின் அணுமுறை தொடர்பான ஈடுபாட்டு எல்லைகளின் அனுபவங்களை முன்வைத்தே எழுப்புகிறார். என்பதால் இது முதன்மையான உரையாடலுக்கு உரிய ஒன்றாக உள்ளது. 

3.   தமிழ்த்தேசியவாத அரசியலின் எதிர்காலம் பற்றிய கேள்வியை எழுப்பும் மையக்கட்டுரை இது. தேசிய மக்கள் சக்தி (NPP) யின் எழுச்சியும் அது ஆட்சியைக் கைப்பற்றியதும் வடக்குக் கிழக்கில் அதற்கு ஏற்பட்டுள்ள செல்வாக்கும் இன்னும் அதற்கு இந்தப் பிராந்தியத்தில் உள்ள கவர்ச்சியும் அல்லது ஈர்ப்பும் தமிழ்த் தேசியவாத அரசியலை நெருக்கடிக்குள்ளாக்கியுள்ளதா? என்பதே கட்டுரையின் சாரம். தேசிய இனப்பிரச்சினைக்கு NPP யிடம் உருப்படியான – வெளிப்படையான தீர்வைக் காண முடியவில்லை என்றாலும் சனங்கள் (தமிழ் மக்கள்) NPP யையும் அநுரகுமார திசநாயக்கவையும் தமக்கு நெருக்கமாகவே உணர்கிறார்கள். இதனை எதிர்கொள்வதற்கு தமிழ்த்தேசியக் கட்சிகள் தவிக்கின்றன. இவ்வளவுக்கும் NPP இனப்பிரச்சினைக்கு எத்தகைய தீர்வை, எந்தக் காலப்பகுதிக்குள் முன்வைப்பது என்பதைப் பற்றி எந்தப் பதிலும் சொல்லாமலே NPP தேர்தலில் பெரிய வெற்றியைப் பெற்றிருக்கிறது. இதனால்  கடுமையானதொரு நிலைப்பாட்டை தமிழ்க்கட்சிகள் இனவாதப் போக்கில் எடுத்திருக்கின்றன என்கிறார் தனபாலசிங்கம். இது மேலும் நெருக்கடிகளைக் கொடுக்கும் ஒன்றாகவே மாறும். உண்மையான காரணம், தமிழ்த்தேசியவாதக் கட்சிகளில் தமிழ் மக்களுக்கு ஏற்பட்ட நிறைவின்மையே காரணம். அதைக் கண்டறிவதுதான் முக்கியமானது என்பது அவருடைய வாதம். இந்தக் கட்டுரையாளரின் கருத்தும் அதுதான். முக்கியமாக ‘பெரும்பான்மைச் சிங்கள மக்களின் 

ஒத்துழைப்பு இல்லாமல் இலங்கைக்குள் அரசியல் தீர்வு சாத்தியமில்லை என்ற உண்மையை தமிழ் மக்களுக்குப் புரிய வைப்பதில் தமிழ் அரசியல்வாதிகள் அக்கறைப்படவில்லை என்ற கவலைய்யும் – குற்றச்சாட்டையும் முன்வைக்கிறார் தனம்.

4.   இலங்கைத் தமிழர் அரசியலில் சம்பந்தனின் வகிபாகத்தைப் பற்றிய கட்டுரை இது. சம்பந்தன், தமிழ்த் தலைவராகவும் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் பதவி வகித்தவர். இரண்டு நிலையிலும் அவருடைய பாத்திரம் எவ்வாறிருந்தது? எத்தகைய பங்களிப்பைக் கொண்டிருந்தார் என்பதைப் பற்றி ஆராயப்படுகிறது. ஏறக்குறைய 60 ஆண்டுகாலம் அரசியலில் அனுபவமுடையவரான சம்பந்தன், 15 ஆண்டுகள் தமிழ்த் தலைவராகவும் ஐந்து ஆண்டுகள் இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவராகவும் இருந்திருக்கிறார். சம்பந்தனுடைய தலைமைத்துவக் காலகட்டமானது, தமிழர்கள் ஆயுதந்தாங்கிய விடுதலைப்போராட்டத்தில் தோல்வியைத் தழுவிய சூழலைக் கொண்டது. அதாவது மிகக் கடினமான காலத்தில் – வெற்றிக் களிப்போடு இருந்த சிங்களத் தலைமைகளோடு, தமிழ் மக்களின் உரிமைசார் அரசியலைக் கையாள வேண்டியிருந்தது என்கிறார் தனபாலசிங்கம். ஒரு பத்திரிகை ஆசிரியராக தனக்கு வாய்த்த அரசியல் உறவுகளை அடிப்படையாக வைத்து இந்த விடயங்களை அவர் நோக்குகின்றார். 

சம்பந்தனுடைய அரசியற் தலைமைத்துவத்தை தமிழ் மக்களில் ஒருசாரார் நிறைவின்மையாகப் பார்க்கின்றபோதும், அவர் தன் வாழ்நாளில் பாராளுமன்றத்திலும் வெளியிலும் வெளிநாட்டுப் பிரதிநிதிகளிடத்திலும் தமிழ் மக்களுடைய பிரச்சினைகளையும் இலங்கை அரசின் தவறான போக்குகளையும் எந்தச் சமரசமும் இல்லாமலே வெளிப்படுத்தி வந்திருக்கிறார். சில சந்தர்ப்பங்களில் அவர் கடுந்தொனியில் கூட அவற்றைச் சொல்லியிருக்கிறார். ஒரு மிதவாத தலைவர் என்ற அடிப்படையில் அவருடைய எல்லைகள் மட்டுப்பட்டன என்பதை நினைவூட்டுகிறார் தனபாலசிங்கம். ஆனால், என்னதான் விமர்சனங்கள் இருந்தாலும் சம்பந்தன் இருந்தவரையில் அவர் தமிழர்களின் தலைவர் என்ற ஒரு அடையாளத்தையும் உணர்வையும் ஏற்படுத்தியிருந்தார். சம்பந்தனுக்குப் பிறகு அப்படி ஒரு அடையாளம் தமிழ் அரசியற் பரப்பில் இல்லாமற் போயுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டி, சம்பந்தனுடைய முக்கியத்துவத்தை – அவருடைய இருப்பின்மையை உணர்த்துகிறார். 

5.   இது மிகச் சவாலுக்குரிய – இன்றைய சமகால ஆட்சியாளர்களுடைய அரசியல் யாப்பு, இனப்பிரச்சினைக்கான தீர்வு குறித்ததாக உள்ளது. இனப்பிரச்சினையைக் கையாளும் நிலைப்பாட்டில் மாற்றம் இல்லையென்றால், புதிய அரசியல் கலாச்சாரம் என்பது அர்த்தமற்றது என்பதை ஆராய்ந்து நிறுவுகிறது இந்தக் கட்டுரை. NPP அதிகாரத்தில் இருப்பதால் ‘இனவாத அரசியல்வாதிகள் தேர்தல்களில் போட்டியிடாமல் அரசியலில் இருந்தே ஒதுங்கியிருப்பதாகக் கருதக் கூடாது. அப்படிக் கருதவும் முடியாது. இதை இனவாத அரசியலின் முடிவாகவும் அமைந்து விடப்போவதில்லை.  பதிலாக பெரும்பான்மை இன மக்கள் மத்தியில் சிறுபான்மைத் தேசிய இனங்களின் அரசியல் அபிலாஷைகளுக்கு எதிராக விதைக்கப்பட்டிருக்கும் நச்சுத்தனமான சிந்தனைகள் தோற்கடிக்கப்பட வேண்டும். அப்போதுதான் ஒரு சரியான அரசியல் யாப்பும் இனப்பிரச்சினைக்கான தீர்வை நோக்கிய செயற்பாட்டுத் துணிவும் ஏற்படும் என நிறுவப்படுகிறது. இது அதற்குப் பொருத்தமான – வாய்ப்பாக அமைந்த காலம். இதனை அரசாங்கமும் பிற சக்திகளும் தமிழ்ச் சமூகமும் இழக்கக் கூடாது என்பதே கட்டுரையின் தொனியாகும். 

6.   சமகால நிலவரத்தை முன்வைத்து, தமிழ்த்தேசியவாத சக்திகள் எத்தகைய முடிவுகளை – தீர்மானங்களை எடுக்க வேண்டும். தேசிய மக்கள் சக்தி குறுகிய கால ஆட்சிக்குள் படித்துக் கொண்ட பாடங்கள் என்ன? என்பனவற்றை நடந்து முடிந்த உள்ளுராட்சித் தேர்தலை அடிப்படையாக வைத்து, ஒரு கண்ணோட்டமாக எழுதப்பட்டுள்ளது. குறிப்பாகத் தமிழரசுக்கட்சி கவனிக்க வேண்டிய விடயங்கள் அழுத்தம் கொடுத்து எழுதப்பட்டுள்ளன. பாராளுமன்றத் தேர்தலை விட உள்ளுராட்சித் தேர்தலில் தமிழ்த்தேசியவாத சக்திகளின் இருப்புச் சற்று உறுதிப்படுத்தப்பட்டாலும் தலைக்கு மேலே தொங்கும் கத்தி அகலவில்லை. தேசிய மக்கள் சக்தி உள்ளுராட்சித் தேர்தலிலும் வலுவான இடத்தில் – இரண்டாவது இடத்தில்தான் உள்ளனது என்பதை ஆதாரப்படுத்தி, நிலைமைகளைப் புரிந்து கொள்ளுங்கள் என்று தமிழ்த் தரப்பை எச்சரிக்கிறார். 

7.   இதுவும் சமகாலத்தையொட்டியதொரு கட்டுரையே. சுமந்திரன் (தமிழரசுக் கட்சி) ஏற்பாடு செய்த ஆகஸ்ட் 2025 ஹர்த்தாலின் சாதக பாதகத்தை ஆராய்ந்து பார்க்கும் தனபாலசிங்கம், ஒரு பொதுக்கோரிக்கை எப்படி அமைய வேண்டும். ஒரு போராட்ட முன்னெடுப்பு எப்படி இருக்க வேண்டும். வெற்றியைப் பெற வேண்டும் என்றால் அதற்கு ஏனையோருடைய பங்களிப்புகள் என்ன? அவற்றை எப்படிக் கோருவது? பலவீனப்பட்டுள்ள தரப்பை (தமிழ் மக்களை) மேலும் பலவீனப்படுத்தும் அடிப்படையிலான போராட்ட அறிவிப்பு – போராட்ட எதிர்ப்பு நிலைப்பாடுகள் விரும்பத்தகாதவை என்று வலியுறுத்திப் பேசுகிறார். ஒரு ஊடகவியலாளரின் கோபமும் நிதானமும் இதில் தெளிவாகவே புலப்படுகிறது.

8.   இறுதிக் கட்டுரை முக்கியமானது, புதிய அரசியலமைப்பின் நோக்கம் என்னவாக இருக்க வேண்டும்? என்ற கேள்வியை எழுப்பி ஆரம்பிக்கிறது. இது அநேகமாக அரசாங்கத்தரப்பையே கூடுதலாகக் கவனத்தில் எடுத்துப் பேசுகிறது. முக்கியமாக ஆட்சியிலிருக்கும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் பொறுப்புகளைப் பற்றிச் சொல்லப்படுகிறது. கடந்த கால ஆட்சியாளரின் தடுமாற்றங்கள்,  இனத்துவ நோக்கு, அரசியல் வறுமை, ஊழல் போன்று இந்த ஆட்சித் தரப்பும் தவறுகளையே பராமரிக்குமாக இருந்தால், அது நாட்டை மேலும் பலவீனப்படுத்திப் பாதிப்பை உண்டாக்கும் என்று சொல்கிறது. ‘அதிகாரப் பரவலாக்கம் ஆட்சி முறையில் சகல சமூகங்களின் பங்கேற்பையும் உறுதி செய்வதற்கான ஒரு வழிமுறையே தவிர, தேசிய ஒருமைப்பாட்டுக்கான அச்சுறுத்தல் இல்லை‘ என்று மிக ஆழமான ஒரு உண்மையை எடுத்துரைத்துள்ளார் தனபாலசிங்கம். ‘இலங்கையில் அமைதியும் சமூகங்கள் பரஸ்பர மதிப்புடன் வாழ்கின்ற சூழ்நிலையும் ஏற்பட வேண்டுமானால், நாட்டின் பன்முகத் தன்மையைப் பிரதிபலிக்கக் கூடிய புதிய அரசியலமைப்பை உருவாக்க வேண்டும். இது தொடக்கத்துக்கான நேரம். அதை வீணாக்கக் கூடாது‘ என்று முடிக்கிறார்.

எனவே மேற்படி எட்டுக் கட்டுரைகளும் இனமுரண் அரசியலின் தீய விளைவுகள், இனப்பிரச்சினைக்கான தீர்வின் அவசியம், அதற்கான வழிமுறைகள், அவற்றை முன்னெடுக்கும் பொறுப்புகள், சமூகங்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடங்கள், இந்தியாவின் நிலைப்பாடு, அதன் எல்லை அல்லது மாறிவரும் பிராந்திய அரசியற் சூழல், தமிழ் மக்களின் சர்வதேசக் கற்பனை, ஒரு நாடு இரு தேசம் என்ற மிகுவிருப்பம், யதார்த்தத்துக்கும் கற்பனைக்கும் இடையில் தத்தளிக்கும் தமிழ் மக்கள், தமிழ்த்தேசியவாத அரசியற் சக்திகளின் பலவீனம், அதைக் களைய வேண்டிய அவசியம், இனவாத அரசியலில் இதுவரையில் மன்னிப்பே கோராத ஐ.தே.க மற்றும் அதனுடைய தலைமைகள், தமிழ்க் கட்சிகளின் ஐக்கியமும் பலவீனங்களும், புலம்பெயர் தமிழர்களின் அரசியல் ஈடுபாடும் யதார்த்தமும், தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்கும் தரப்பின் அறிவாற்றல், விவேகம், செயற்றிறன், கோட்பாட்டுப் பயில்கை – கோட்பாட்டு வலிமை, ஜனநாயக அடித்தளம் எனப் பலவற்றை இந்த எட்டுக் கட்டுரைகளிலும் வைத்துப் பேசப்படுகிறது. முக்கியமாகத் தேர்வு செய்யப்பட வேண்டிய – தேவையான விடயங்களை அழுத்தம் கொடுத்துப் பேசுகிறது இந்த நூல். அதேவேளை சிறுபிள்ளைத்தனமான அரசியல் புரிதல்களையும் விமர்சிக்கிறது. குறிப்பாக புலம் பெயர் தமிழர்களுடைய முதலீடுகளுக்கு அரசாங்கம் இடமளித்தால், இலங்கையின் பொருளாதாரப் பிரச்சினைக்குத் தீர்வு கிடைக்கும் என்ற எளிய சூத்திரத்தைத் தமிழ்த் தரப்பு வைத்திருக்கிறது என்பது சிரிப்புக்குரிய சங்கதி அல்லவா! புலம்பெயர் மக்களுடைய முதலீடுகளுக்கு இடமளிக்கப்பட வேண்டும். ஆனால், அதனால் இலங்கையின் பொருளாதார நெருக்கடி தீரும் என்ற கற்பனைகள் செல்லுபடியற்றவை. அதைப்போலவே, மக்களுடைய தேவைகள் என்பது அரசியல் உரிமைப் பிரச்சினை மட்டுமல்ல, பல்வேறுபட்ட தேவைகளுக்குரியது. குறிப்பாக மேல் வர்க்கத்தின் பிரச்சினையும் உணர்தலும் வேறு. அதனால் அதற்குரிய நிலைப்பாடுகளும் வேறாகவே இருக்கும். அடிநிலை மக்களின் உணர்வும் தேவைகளும் பிரச்சினைகளும் வேறு. அவர்களுடைய நிலைப்பாடுகளும் வேறானவை. இதைப் புரிந்து கொள்ள  வேண்டும். 

ஆகவே எல்லாவற்றையும் தொகுத்து நோக்கினால், சமகால அரசியல் முன்னெடுப்பாளர்களுக்குரியதொரு கையேடு. பொதுமக்கள் நிதானமான முறையில் சமகால – எதிர்கால அரசியலைத் தெளிவு கொள்வதற்கொரு வழிகாட்டி ஏடு. 

ஒரு ஊடகவியலாளராகவும் அரசியல் நோக்கராகவும் நேர்நிலை நின்று பகுப்பாய்வைச் செய்திருக்கிறார் தனபாலசிங்கம், பொருத்தமான முன்வைப்புகளையும் வைத்துள்ளார். ஆனால், இலங்கைத்தீவில் முஸ்லிம்களும் மலையகத் தமிழர்களும் உள்ளனர். அனைத்துத் தீர்வும் அவர்களையும் உள்ளடக்கியதே. அவற்றையும் இணைத்துப் பேசியிருக்க வேண்டும். பன்மைத்துவத்தைப் பற்றிப பேசுவதென்பது, அனைவரையும் உள்ளடக்கியதே. யாரையும் விட்டு விடுவதல்ல. 

https://arangamnews.com/?p=12433

Checked
Thu, 01/29/2026 - 00:31
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed