அரசியல் அலசல்

பம்மாத்து - சுப.சோமசுந்தரம்

3 months 2 weeks ago

பம்மாத்து

(Pretensions)

- சுப.சோமசுந்தரம்

               உலகில் பம்மாத்து அல்லது பாசாங்கிற்கு எக்காலத்தும் பஞ்சம் இருந்ததில்லை. இவற்றில் நன்மை விளையும் பம்மாத்தும் உண்டு - பொய்மையும் வாய்மையிடத்த என்பது போல. யானறிந்து தமிழ்நாட்டிற்கு நன்மை விளைவித்த ஒரு தலைசிறந்த பம்மாத்து, நான் பெரிதும் போற்றும் அறிஞர் அண்ணா அவர்கள் திருமூலரை எடுத்தாண்டு "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பறைசாற்றியது. சமூகத்திற்காகப் போராடுவதை மட்டுமே குறிக்கோளாய்க் கொண்ட திராவிடர் கழகத்தில் இயங்கிய அண்ணாவும் அவர்தம் தம்பிமார் சிலரும், மக்களுக்கான திட்டங்களை இயற்றுவது ஆட்சி அதிகாரத்தைக் கைப்பற்றினால் மட்டுமே கைகூடும் என்ற உயரிய நோக்கத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தைத் தோற்றுவித்துக் களம் கண்டனர். மக்களிடம் தேர்தல் வாக்குக்காக கையேந்தும்போது சமரசம் எனும் தீமைக்குள் வந்துதானே ஆக வேண்டும் ? கையேந்தாத பெரியார், "கடவுளை நம்புகிறவன் முட்டாள்" என்று முழங்கும் போது, கையேந்திய அண்ணா, "ஒன்றே குலம் ஒருவனே தேவன்" என்று பம்மிக் கொண்டார். மக்களுக்காக அதே மக்களிடம் பம்மிக் கொண்டார். அவ்வாறு பம்முகிற ஒவ்வொரு தருணத்திலும், "ஆனால் எனக்குத் தெரியும் அந்த ஒரு தேவனும் கிடையாது" என்று அண்ணா தமக்குள் முணுமுணுத்திருப்பார் என்பதை அண்ணாவை அறிந்தவர் அறிவர். அந்தப் பம்மாத்தில் மக்களுக்கு நன்மைகள் விளைந்தன என்பதை அறிவார்ந்தோர் அறிவர்.

               பெரியார் மற்றும் பெரும்பாலான திராவிட கழகத்தினரைத் தவிர்த்து ஏனைய திராவிட இயக்கங்களிலும், இடதுசாரி இயக்கங்களிலும் நமக்குத் தெரிந்த ஒரு பிம்மாத்து உண்டு; அதாவது, நமக்குப் பம்மாத்தாகத் தோன்றுகிற ஒன்று உண்டு. அது "நாங்கள் பார்ப்பனியத்தை எதிர்க்கிறோமே தவிர பார்ப்பனர்களை அல்ல" என்பதுவேயாம். பார்ப்பனியத்தை உச்சி முதல் உள்ளங்கால் வரை எதிர்க்கும் பார்ப்பனர்கள் விரல் விட்டு எண்ணக்கூடிய அளவில் இருக்கலாம். விதிவிலக்குகள் விதி யாது என்பதைச் சொல்பவைதாமே ! அவ்விதிவிலக்குகள் பார்ப்பனியத்தை உதறியவர்கள்; எனவே அவர்கள் பார்ப்பனர் அல்லர் என்று சொல்லிவிட்டுப் போக வேண்டியதுதானே ?முடிவு செய்துவிட்டு நியாயங்களைத் தேடிக் கற்பிதம் செய்ய அறிவு ஜீவிகளுக்குச் சொல்லியா தர வேண்டும் ? பெரியார் வேறு எந்த சாதிக்காரர்களையும் விமர்சிக்கவில்லையே !

              மேற்கூறியது போலவே திராவிட இயக்கத்தினர் மற்றும் இடதுசாரிகள், "நாங்கள் இந்திய எதிர்க்கவில்லை; இந்தித் திணிப்பையே எதிர்க்கிறோம்" என்பதுவும். நீங்கள் வேறு எந்த மொழியையும் எதிர்க்கவில்லை என்பது புரிந்து கொள்ளக் கூடியதே ! ஆனால் ராஜஸ்தானி, போஜ்புரி, மைதிலி, அவந்தி என்று எத்தனையோ மொழிகளைத் தின்று செரித்து விட்டு, அடுத்து மராத்தி, ஒரியா, பெங்காலி என்று காவு கொள்ளத் துடிக்கும் இந்தியை எப்படி எதிர்க்காமல் இருக்க முடியும் ?

            நமது பம்மாத்து ஜோடிகளில் அடுத்து வருபவை காங்கிரசும் இடதுசாரிக் கட்சிகளும். தமிழ்நாட்டில் (தமிழகத்தில் என்று நம்மைப் பேச விடாமல், எழுத விடாமல் செய்த ஒரு கிராதகனை என்னவென்று சொல்வது !) இந்தி எதிர்ப்புப் போராட்டம் கொளுந்து விட்டு எரிந்த அறுபதுகளில் ஒன்றிய அரசான காங்கிரஸ் பணிந்தது. "இந்தி பேசாத மாநில மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழியாகத் திகழும்" என்று அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேரு உத்தரவாதம் அளித்ததன் பேரிலேயே போராட்டத் தீ அணைந்தது. இடதுசாரிகள் தங்களது அகில இந்திய மாநாடுகளில் மொழி பற்றிய விவாதங்களில், 'தமிழ்நாட்டு மக்கள் விரும்பும் வரை ஆங்கிலமே இணைப்பு மொழி, மற்றபடி இந்தியே இணைப்பு மொழி' என்ற நிலைப்பாடு கொள்வது வழக்கம். "மக்கள் விரும்பும் வரை" என்பதன் பொருள் "நாங்கள் விரும்பவில்லை; என்றாவது ஒரு நாள் நீங்கள் ஏற்பீர்கள். அதுவரை நாங்கள் அடக்கி வாசிப்போம்" என்பதே !. இது ஒரு சூளுரை அல்லது கெக்கலிப்பு. தேசியம் எனும் நீரோடையில் கரைந்து போன கட்சிகளுக்கு இந்தப் பிரச்சினை எப்போதும் உண்டு. அந்நீரோடையில் மூழ்காமல் நீந்தக் கற்றுக் கொண்ட எங்களுக்கு என்ன பிரச்சினை ? காங்கிரஸ் தேசியத்தில் கரைந்தது என்றால், இடதுசாரிகள் ஒரு படி மேலே போய் உலகவியத்தில் கரைந்தவர்கள். நேற்றைய சோவியத் யூனியனில் பெரும்பான்மையின ரஷ்ய மொழியின் தாக்குதலினால் பல சிறுபான்மையின மொழிகள் தொலைந்து போனதை லாவகமாகக் கடந்து வந்தவர்கள் ஆயிற்றே ! அது நமக்குத் தான் ரணம்; வர்க்கப் போராட்டத்தில் அவர்களுக்கு அதெல்லாம் சாதா'ரணம்' தோழர்  !தமிழ்நாட்டில் அன்றைக்குப் போராடிய மக்களிடம் காங்கிரசின் சமரசம் என்பது "உங்களுக்கு இனி இந்தி கிடையாது" என்பதாகத்தானே இருக்க முடியும் ? "நீ செத்த பின்பு பார்த்துக் கொள்கிறேன்" என்பது சமரசமா ? மும்மொழித் திட்டத்தைப் பொறுத்தமட்டில் தமிழ்நாடு விலக்களிக்கப்பட வேண்டும் என்பதுதானே இடதுசாரிகளின் மண்ணுக்கேற்ற மார்க்சியமாய் அமையும் ? அப்படி விலக்கு அளிக்கப்பட்டாலும் பாஜக அடாவடித்தனமாய் ஜம்மு - காஷ்மீருக்கான சட்டப்பிரிவு 370 ஐ நீக்கியதைப் போல பின்னர் வரும் அரசுகள் நடந்து கொள்ளா என்பதற்கு உத்திரவாதம் இல்லைதான். ஆனால் சொல்லும்போதே 'தற்காலிகமாக' என்று பொருள்படச் சொல்வது ஒரு பம்மாத்து வேலை. இப்போது தமிழ்நாட்டில் உள்ள மக்களுக்கு எதிராகத்தான் நீங்கள் சிந்திக்கிறீர்கள் என்று பொருள்.

               இப்போது ஒன்றியத்தில் உள்ள பாசிச பாஜக அரசு புதிய கல்விக் கொள்கை என்ற பெயரில் மும்மொழித் திட்டத்தை முன்வைத்து விட்டு, "மும்மொழித் திட்டம் என்றுதானே சொன்னோம் ? இந்தி படி என்று எங்கே சொன்னோம் ?" என்று சொல்வதுதான் உலக மகா பம்மாத்து. ஒரு திரைப்படத்தில் வருவது போல, "நீ எப்படியெல்லாம் டைப் டைப்பா முழியை மாத்துவே !" என்று எங்களுக்குத் தெரியாதா ? நான் கேரளாவில் வேலை கிடைத்துச் சென்றால், தேவை அடிப்படையில் அப்போது மலையாளம் தெரிந்து கொள்வேன். அதுவரை நான் என் மொழியையும், வெளியுலக இணைப்பு மற்றும் கணினி பயன்பாட்டிற்காக நமது அடிமை வரலாறு நமக்களித்த வரமான ஆங்கிலத்தையும் படிப்பேன். நீ உன் மொழியையும் ஆங்கிலத்தையும் படி. அப்போது மொழியில் கூட சமநீதி, சமூக நீதி எல்லாம் உருவாகுமே !

            எனவே உலகீரே ! மக்கள் நலனுக்காக பம்மாத்து அரசியல் செய்ய வேண்டுமென்றால், அறிஞர் அண்ணா போன்றோரிடம் படித்துவிட்டு வாருங்கள். அப்புறம் பேசுவோம்.

பின் குறிப்பு : "ஒன்றே குலம் ஒருவனே தேவன்",  "யாதும் ஊரே யாவரும் கேளிர்" என்பவற்றிற்கு மாற்றுச் சிந்தனையை  ச.தமிழ்ச்செல்வன், தொ.பரமசிவன் ஆகியோரிடம் வாசித்த நினைவு. பழம் பாடல்களின் அவ்வரிகள் இன்று தமிழனின் பெருமையாகக் கொண்டாடப்படுவதை அவர்கள் மறுதலிக்கவில்லை. எனினும் அவர்கள் மாற்றுச் சிந்தனையைப் பதிவிடாமலும் விடவில்லை. அந்த அடிப்படையில் அக்காலச் சமூக, அரசியல் சூழல் கருதி மக்கள் நலனுக்காக திருமூலர், கணியன் பூங்குன்றனார் ஆகியோரின் பம்மாத்தாக அவ்வரிகளைப் பார்க்கலாமோ எனத் தோன்றுகிறது. இப்பார்வை நம் கற்பனையாகவே இருக்கலாம். பல நேரங்களில் கற்பனையும் ரசனைக்குரியதுதானே !

           பேரரசுகள் மருத நிலங்களைச் சுற்றியே தோன்றியிருக்கும். நிலவுடமைச் சமூகங்களும் அங்கேதான் உருவாகி அமைந்திருக்க முடியும். அவர்களுக்கான உழைக்கும் வர்க்கத்தினர் குறிஞ்சி, முல்லை நிலங்களில் இருந்தே வந்திருப்பர் அல்லது கொண்டு வரப்பட்டிருப்பர். தன் நிலத்தில் தன் சாமியை விட்டு வந்திருப்பவன் கொண்ட ஏக்கம் தீர, "இங்குள்ள சாமியும் உன் சாமிதானய்யா" என்று அவனை ஆற்றுப்படுத்துவதே "ஒன்றே குலம் ஒருவனே தேவ"னாய் முகிழ்த்திருக்கலாம். அன்றைய தேவைக்கேற்ப, பன்முகத்தன்மையை உடைத்து ஓர்மையை உருவாக்கும் பம்மாத்தாக (அன்றைய பாசிசம் எனக் கொள்ளலாமா ?") இதனைப் பார்க்கலாமோ ! மேலும் அவனது நிலத்தில் சாமியின் அருகிலிருந்து பிடி மண் எடுத்து வந்து அவன் புலம்பெயர்ந்த இடத்தில் அதே சாமியை உருவாக்கும் வழக்கம் அப்போது உருவாகியிருக்கும் அல்லது உருவாக்கப்பட்டிருக்கும். அதேபோல் வந்த இடத்துடன் அவன் மனம் ஒன்றியிருக்கச் செய்ய "யாதும் ஊரே யாவரும் கேளிர்" !

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

3 months 2 weeks ago

15 வருடங்களின் பின்னர் ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைக்கு எதிரான புதிய உத்தி

பட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்பங்களும் இனஅழிப்பு விசாரணை மூடி மறைப்புகளும்

கொலைகளுக்கான நீதி் விசாரணையைவிடவும் புலிகளுக்கு எதிரான போருக்கு முக்கியத்துவம் வழங்கிய அநுர

பதிப்பு: 2025 மார்ச் 17 18:29

புலம்: வவுனியா, ஈழம்

புதுப்பிப்பு: மார்ச் 17 22:53

main photomain photomain photo

போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டிருப்பதன் பின்னணியில் பல காரண - காரியங்கள் உண்டு. இதனை மூன்று வகையாக நோக்கலாம். ஒன்று முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுக்கு பட்டலந்த வதை முகாமுடன் இருந்த தொடர்பு. இரண்டாவது, ரணில் விக்கிரமசிங்கவை ஜனநாயகவாதி எனவும் இனப் பிரச்சினைக்கு அவரால்தான் தீர்வை முன்வைக்க முடியும் என்றும் நம்புகின்ற மற்றும் அவருக்காக பிரச்சாரம் செய்கின்ற தமிழர்களின் மன நிலை பற்றியது.
 

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்

மூன்றாவது, 1994 இல் இருந்து 2004 ஆம் ஆண்டு வரை சந்திரிகாவுக்கும் 2005 இல் இருந்து 2009 வரை மகிந்தவுக்கும் ஆதரவு வழங்கி தேன்நிலவை அனுபவித்த காலத்தில் இந்த 'பட்டலந்த ' வதை முகாம் பற்றிய அறிக்கையை ஜேவிபி ஏன் கோரவில்லை என்ற சந்தேகங்கள்.

இதில் முதலாவது காரணத்தை நோக்கினால்,

1988- 89 ஆண்டுகளில் பிரேமதாச ஜனாதிபதியாக இருந்தபோது ரணில் அமைச்சராக இருந்தவர். பாதுகாப்பு அமைச்சராக ரஞ்சன் விஜேரட்ன இருந்தார். 'பட்டலந்த' வதை முகாமில் ஆயுதக் களஞ்சியப் பொறுப்பதிகாரியாக இருந்த ஓய்வு பெற்ற பொலிஸ் பரிசோதகர் ஏ. பீ. கருணாரத்ன அப்போது முகாமில் நடந்த ஈவிரக்கமற்ற கொலைகள் பற்றி ஊடகங்களுக்கு வழங்கிய நேர்காணலில் பகிரங்கமாகக் கூறியிருக்கிறார்.

குறிப்பாக சட்டத்தரணி விஜயதாஸ லியனாரச்சி கொடூரமாக கொலை செய்யப்பட்டமை பற்றி அவர் அந்த நேர்காணலில் விபரித்துள்ளார்.

சட்டத்தரணி விஜயதாச குற்றுயிராக இருந்த நிலையில் முகாமுக்கு ஒரு வாகனத்தில் ஜனாதிபதி ரணசிங்க பிரேமதாசவும், ரணில் விக்கிரமசிங்கவும் வந்து சென்றதாக அவர் கூறுகிறார்.

ஆகவே, இப் படுகொலைகளுக்கு அப்போதைய ஐக்கிய தேசியக் கட்சி காரணம் என்பதும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு தொடர்பு இருந்தது என்பதும் வெளிப்படையான ஒன்று. அதுவும் ரணிலின் இச் செயற்பாடுகள் பற்றி கடந்த 30 வருடங்களில் நாடாளுமன்றத்தில் சிங்கள உறுப்பினர்கள் பலரும் ஆதாரங்களுடன் சுட்டியிருக்கின்றனர். 1990 களில் நாடாளுமன்றத்தில் 'பட்டலந்த' என்ற பட்டப் பெயரும் ரணிலுக்கு இருந்தது.

இப் பின்னணியில் இரண்டாவது காரணத்தை நோக்கினால்,

இந்த ரணில் விக்கிரமசிங்கவை 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் வெற்றி பெறவிடாமல் விடுதலைப் புலிகள் தடுத்துவிட்டதாகவும், இனப்பிரச்சினைக்குரிய தீர்வை ரணில்தான் வழங்கக்கூடியவர் எனவும், முற்போக்குத் தமிழர்கள் பலரும், நுனி நாக்கில் ஆங்கிலம் பேசும் மாற்றுக் கருத்தாளர்கள் எனப்படுவோரும் திட்டித் தீர்த்து ரணிலை புனிதராக்கினர்.

ரணில் 2002 ஆம் ஆண்டு பிரதமராக இருந்தபோது நோர்வேயின் ஏற்பாட்டில் இடம்பெற்ற சமாதானப் பேச்சில் புலிகளுக்கு எதிராக சர்வதேச அரங்கில் ரணில் மேற்கொண்ட இரகசிய காய்நகர்த்தல்களை அறிந்துகொண்ட பின்புலத்தில்தான் ரணிலை 2005 இல் புலிகள் ஜனாதிபதியாக்க விரும்பியிருக்கவில்லை என்பது நிதர்சனம்.

இதன் காரண காரியத்தோடு தான் ரணில் ஒரு 'நரி' என 2006 ஆம் ஆண்டு அன்ரன் பாலசிங்கம் லண்டனில் நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டியிருந்தார்.

1990 களில் நாடாளுமன்றத்தில் ரணிலுக்கு 'பட்டலந்த' என்று பட்டப் பெயர் வைத்திருந்த சிங்கள உறுப்பினர்கள் பலரும் 2009 ஆம் ஆண்டுக்குப் பிற்பட்ட காலத்தில் ரணிலை நரி என்றும் அவ்வப்போது உச்சரித்திருந்தனர். ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள்தான் ரணில் ஒரு நரி என்று பகிரங்கமாக குற்றம் சுமத்தினர்.

அதேநேரம், 2015 ஆம் ஆண்டு மைத்திரி - ரணில் அரசாங்கத்தை நல்லாட்சி என்றும் ரணில்தான் தமிழர்களின் அரசியல் உரிமைகளை வழங்கும் நாயகன் என்றும் சட்டத்தரணி சுமந்திரன் தம்பட்டம் அடித்த காலமும் உண்டு.

இந்த வரலாற்றோடு மேற்படி மூன்றாவது காரணத்தைச் சற்றுப் பின்னோக்கி ஆராய்வோம்.

17 வருடங்களின் பின்னர் 1994 ஆம் ஆண்டு பதவிக்கு வந்த சந்திரிகா தலைமையிலான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மையப்படுத்திய பொதுஜன ஐக்கிய முன்னணி அரசாங்கம், 'பட்டலந்த ' வதை முகாம் மாத்திரமல்ல, 'சூரியவெ' படுகொலை உள்ளிட்ட ஜேவிபிக்கு எதிரான பல கொலைகளை விசாரணை நடத்துவதாக உறுதியளித்திருந்தது.

சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது

போரை நிறுத்தி புலிகளுடன் சமாதானப் பேச்சு நடத்தப்படும் என்றும் அப்போது சந்திரிகா மார் தட்டியிருந்தார். 1993 ஆம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெற்ற மேல் மாகாண சபைத் தேர்தலில் முதலமைச்சர் வேட்பாளராகப் போட்டியிட்டிருந்த சந்திரிகா, ஐக்கிய தேசியக் கட்சியின் ஆட்சியில் நடந்த கொலைகள், அட்டூழியங்கள் அனைத்தையும் அக்குவேறு ஆணிவேறாகக் காண்பித்தார்.

தோ்தலில் வெற்றி பெற்று முதலமைச்சராகப் பதவியேற்ற சந்திரிகா பின்னர் பிரதமராகவும் சில மாதங்களில் ஜனாதிபதியாகவும் பதவியேற்றார். அதாவது, முதன் முறையாக அரசியலில் ஈடுபட்டு 18 மாதங்களில் மேல் மாகாண சபை முதலமைச்சர், பின்னர் பிரதமர் அதன் பின்னர் நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதியாகவும் பதவியேற்றார்.

அதன்போது ஜேவிபி சந்திரிகாவுக்கு ஆதரவு கொடுத்தது. ஜேவிபியும் 1994 இல் முதன் முறையாக ஜனநாயக வழியில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டது. தேசியப் பட்டியல் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக பதவியேற்ற நிஹால் கலப்பத்தி சந்திரிகா அரசாங்கத்துக்கு ஆதரவு கொடுத்திருந்தார்.

நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறையை ஒழிக்க வேண்டும் என்றும் சந்திரிகாவுக்கு அவர் நிபந்தனை விதித்திருந்தார்.

அதேநேரம், தேர்தல் பிரச்சாரங்களின் போது உறுதியளித்தபடி புலிகளுடன் சமாதானப் பேச்சையும் சந்திரிகா ஆரம்பித்தார். ஆனாலும், பேச்சுகள் முறிவடைந்து 1995 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் மூன்றாம் கட்ட ஈழப்போர் ஆரம்பமானது. இந்தப் போருக்கு ஜேவிபி முழு ஆதரவு வழங்கியது.

ஆனால், நிஹால் கலப்பத்தி சந்திரிகாவிடம் முன்வைத்த நிபந்தனைகளுக்கு நடந்தது என்ன? பட்டலந்த வதை முகாம் பற்றி மாத்திரமே சந்திரிகா விசாரணை நடத்தினார். ஆனால் அறிக்கை சமர்ப்பிக்கப்படவில்லை. குற்றவாளிகள் தண்டிக்கப்படவுமில்லை. அத்துடன், நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி ஆட்சி முறை ஒழிக்கப்படவுமில்லை.

நிஹால் கலப்பத்தி ஆதரவை விலக்கிக் கொண்டார். 1995 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்டு அங்கு பல கொலைகள் நடந்தன. 1996 இல் கிரிசாந்தி குமாரசுவாமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டு கொல்லப்பட்டார். 600 இற்கும் அதிகமான தமிழ் இளைஞர்கள் - பெண்கள் கொல்லப்பட்டு செம்மனியில் புதைக்கப்பட்டுள்ளதாக கிரிசாந்தியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்திய இராணுவ சிப்பாய் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் வாக்குமூலம் வழங்கியிருந்தார்.

கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுக்கு எதிராகப் பல திட்டமிடப்பட்ட படுகொலைகள் சித்திரவதைகள் நடந்தன. குறிப்பாக மட்டக்களப்பில் குடும்பப் பெண் ஒருவரின் அந்தரங்க உறுப்பில் கிரனேட் வீசப்பட்டு நடந்த கோரக் கொலைகள் அன்று சர்வதேச ஊடகங்களில் பரபரப்பாக பேசப்பட்டிருந்தன.

ஆனால், சந்திரிகாவின் அரசாங்கத்தில் நடைபெற்ற இக் கொலைகள் பற்றியெல்லாம் ஜேவிபி அன்று வாய் திறக்கவில்லை. பட்டலந்த வதை முகாம் பற்றி விசாரணை நடத்தி அறிக்கையை சமர்ப்பிக்க விரும்பாத சந்திரிகா பற்றி அன்று ஜேவிபி எதுவுமே பேசவில்லை. மாறாக புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று அழுத்தங்களுடன் மாத்திரமே சந்திரிகாவின் அரசாங்கத்துக்கு ஜேவிபி ஆதரவு வழங்கியது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது.

இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார். அத்துடன் பிரித்தானியாவில் தலைமறைவாக வாழ்ந்து கொண்டிருந்த ஜேவிபி தலைவர் சோமவன்ச அமரசிங்கவுக்கு இலங்கை வருவதற்கு சந்திரிகா அனுமதியும் வழங்கினார்.

1988 ஆம் ஆண்டு இலங்கையை விட்டுத் தப்பிச் சென்ற சோமவன்ச அமரசிங்க 2000 ஆம் ஆண்டு கொழும்புக்கு வந்து நடத்திய முதலாவது செய்தியாளர் மாநாடு கல்கிசை ஹோட்டேலில் நடைபெற்றது. அங்கு செய்தியாளர்களுக்கு விளக்கமளித்த சோமவன்ச ஐம்பதாயிரம் சிங்கள இளைஞர்களைத் திரட்டி புலிகளுக்கு எதிரான போருக்கு அனுப்புவேன் என்று உறுதியளித்திருந்தார்.

தேர்தல் பிரச்சார மேடைகளில் அவர் புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த வேண்டும் என்று முழங்கியிருந்தார்.. இதனால் எட்டு நாடாளுமன்ற உறுப்பினர்களை ஜேவிபி பெற்றது. ஜேவிபியின் ஆதரவுடன் சந்திரிகா நற்சான்றிதழ் என்ற பெயரில் அரசாங்கத்தை அமைத்திருந்தார். ஆனால், இந்த ஆட்சியில் கூட பட்டலந்த வதை முகாம் தொடர்பான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு ஜே.வி.பி சந்திரிகாவுக்கு அழுத்தம் கொடுக்கவில்லை. இருந்தாலும் இந்த அரசாங்கமும் கவிழ்ந்து 2001 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற்றது.

அக் காலத்தில்தான் நோர்வேயின் சமாதான முயற்சியும் ஆரம்பிக்கப்பட்டது. தேர்தல் பிரச்சாரங்களில் நோர்வேயின் சமாதான முயற்சிக்கு கடும் எதிர்ப்பு வெளியிட்ட ஜேவிபி, பட்டலந்த வதை முகாம் உட்பட தங்களுக்கு எதிராக 1970 களிலும் 1988 -89 ஆம் ஆண்டுகளிலும் இலங்கை இராணுவம் புரிந்த படுகொலைகள் தொடர்பாக பேசாமல், விடுதலைப் புலிகளுக்கு எதிரான பிரச்சாரங்களை மாத்திரமே முன்னெடுத்திருந்தது.

2000 ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரஃப், 'நுவா' எனப்படும் தேசிய ஐக்கிய முன்னணி என்ற கட்சியை உருவாக்கி அதில் சிங்கள - தமிழ் முஸ்லிம் உறுப்பினர்கள் அனைவரையும் போட்டியிட வைத்தார். ஒரு தேசியக் கட்சியாக அஷ்ரஃப் தனது கட்சியைக் காண்பித்திருந்தார். இது சந்திரிகாவுக்குப் பெரும் சவாலாக மாறியது. இதனால், 2000 ஆம் ஆண்டு தேர்தலில் ஜேவியின் முழு ஒத்துழைப்பை சந்திரிகா பெற்றார்

இதனால் ஜேவிபிக்கு 16 ஆசனங்கள் கிடைத்தன. ஆனாலும், ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சியை மையப்படுத்திய ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தை அமைத்தது.

சந்திரிகா ஜனாதிபதியாக இருக்க ரணில் பிரதமராக இருந்தார். அரசாங்கம் வேறு கட்சியாகவும் ஜனாதிபதி மற்றொரு கட்சியாகவும் முதன் முதலில் மாறுபட்ட ஆட்சி முறை ஒன்று இலங்கைத்தீவில் உருவானது.

இச் சூழலில்தான் நோர்வேயின் ஏற்பாட்டுடன் சந்திரிகா ஆரம்பித்த சமாதான முயற்சியை ரணில் முழுமைப்படுத்தினார். 2002 ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இலங்கை அரசாங்கமும் புலிகளும் புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திட்டன. இதற்கு கடும் எதிர்ப்பை வெளியிட்ட ஜேவிபி பௌத்த பிக்குமாரின் ஒத்துழைப்புடன் கொழும்பில் தொடர் போராட்டங்களை நடத்தியிருந்தது. சந்திரிகா ஜனாதிபதியாக இருந்து கொண்டு ஜேவிபிக்கு மறைமுக ஆதரவு வழங்கினார்.

ஜேவிபியின் எதிர்ப்பை காண்பித்து நோர்வேயின் சமாதான முயற்சிகளில் பல இடர்பாடுகளை சந்திரிகா உருவாக்கினார். ரணில் விக்கிரமசிங்கவும் சந்திரிகாவின் எதிர்ப்புகளை மேற்கோள் காண்பித்து பேச்சுவார்த்தை மேசையில் புலிகளின் நியாயமான கோரிக்கைகள் பலவற்றை தட்டிக்கழித்தார். அதாவது, தமிழர்களின் அரசியல் அபிலாசைகள் நிறைவேற்றப்படுவதை தடுக்க சந்திரிகாவின் எதிர்ப்பை ஒரு உத்தியாகப் பயன்படுத்தினார் ரணில்.

இந்த இழுபறியில் தான் 2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக இடை நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது.

இந்த இழுபறி நிலையினால் ரணிலின் அரசாங்கத்தை சந்திரிகா கலைத்தார். இதனால் 2004 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீண்டும் நாடாளுமன்றத் தேர்தல் நடத்தப்பட்டது. நோர்வேயின் சமாதான முயற்சிக்கு எதிராகவே ஜேவிபியும் சந்திரிகா தலைமையிலான ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பும் பிரச்சாரங்களை மேற்கொண்டிருந்தன.

சந்திரிகாவின் வெற்றிலைச் சின்னத்தில் கூட்டுச் சேர்ந்து தேர்தலில் போட்டியிட்டதால் ஜேவிபிக்கு 39 ஆசனங்கள் கிடைத்தன. சந்திரிகா அமைத்த அரசாங்கத்தில் தற்போதைய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க விவசாய அமைச்சராக பதவி வகித்திருந்தார்.

ஆனால், அந்த அரசாங்கத்தில் கூட 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பான அறிக்கை யை ஜேவிபி கோரவில்லை. மாறாக நோர்வேயை சமாதான முயற்சியில் இருந்து வெளியேற்ற வேண்டும் என்பதே ஜேவிபியின் ஒரேயொரு இலக்காக இருந்தது.

2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் வெற்றிக் கடுமையாக உழைத்த ஜேவிபி புலிகளுக்கு எதிரான போரை தீவிரப்படுத்த கடும் அழுத்தங்களைக் கொடுத்தது.

ஆக புலிகளை இல்லாதொழிக்க வேண்டும் என்ற இலக்கு மாத்திரமே ஜேவிபிக்கு 1994 இல் இருந்து 2009 மே மாதம் வரை இருந்தது என்பது இங்கே கண்கூடு.

எனவே, இந்த வரலாற்றுப் பின்னணியில் இனவாதத்தை மூலதனமாக்கி 2024 ஆண்டு செப்டம்பர் மாதம் 159 என்ற அறுதிப் பெரும்பான்மை ஆசனங்களுடன் ஆட்சியமைத்துள்ள ஜேவிபியின் முகத் தோற்றமான தேசிய மக்கள் சக்தி, பட்டலந்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்திருக்கிறது.

உண்மையில் பாதிக்கப்பட்ட ஜேவிபி உறுப்பினர்கள் - ஆதரவாளர்கள் மற்றும் சாதாரண சிங்களப் பொதுமக்களுக்கு நீதியைப் பெற்றுக் கொடுப்பதற்காவே என்று சிங்கள மக்கள் நம்பலாம். ஆனால் நோக்கம் அதுவல்ல.

இதை மூன்று வகைப்படுத்தலாம்

ஒன்று, இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை வேண்டும் என்ற தமிழர்களின் கோரிக்கைகளை மடைமாற்றி எண்பது வருட அரசியல் போராட்டத்தை இலங்கைத்தீவின் உள்ளக விவகாரமாக மாற்றுவது.

2003 ஆம் ஆண்டு பாதுகாப்பு அமைச்சு உட்பட மூன்று முக்கிய அமைச்சுக்களை சந்திரிகா ரணிலின் அரசாங்கத்திடம் இருந்து கையகப்படுத்தினார். இதனால் கொழும்பில் அரசியல் நெருக்கடி ஏற்பட்டது. சமாதான பேச்சுக்கள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டன. சுந்திரிகாவின் இச் செயற்பாட்டுக்கு ஜேவிபி பின்னணியாக இருந்தது

இரண்டாவது, இலங்கையின் மூத்த சிங்கள அரசியல்வாதிகள் சிலரையும் இலங்கை இராணுவ உயர் அதிகாரிகள் சிலரையும் தண்டித்தால் போதும் என்ற மனப்பாங்குடன் செயற்பட்டு இலங்கை ஒற்றை அரசு என்ற கட்டமைப்பு நியாயமானது நீதியானது என்ற எண்ணப்பாட்டை சர்வதேசத்துக்கு வெளிப்படுத்துவது.

மூன்றாவது, ரணில் - சஜித் பிரேமதாச ஆகியோர் எதிர்காலத்தில் கூட்டுச் சேர்ந்து மீண்டும் ஐக்கிய தேசியக் கட்சியாக அல்லது புதிய அரசியல் அணியாகச் செயற்படுவதை தடுப்பது.

ஆகவே "மாற்றம்" "சோசலிசம்" என்று மார் தட்டிக் கொண்டு ஆட்சிக்கு வந்த ஜேவிபி, இரண்டு விடயங்களை புரிந்து கொள்ள வேண்டும்

ஒன்று - ஈழத்தமிழர்களின் அரசியல் விடுதலைப் போராட்டத்தையும் அதற்காக நடந்த 30 வருட போரில் தமிழர்கள் கொல்லப்பட்டமை, சித்தரவதை செய்யப்பட்டமை என்பது இன அழிப்பின் வெளிப்பாடு. தமிழர்களின் மரபு அடையாளங்கள், கலாசாரங்கள் கூட 2009 ஆம் ஆண்டு மே மாதத்துக்குப் பின்னரான சூழலிலும் அழிக்கப்பட்டு வருகின்றன.

இரண்டாவது - பட்டலந்த வதை முகாம் உட்பட பல வதை முகாம்களில் ஜேவிபி உறுப்பினா்கள்- ஆதரவாளர்கள் கொல்லப்பட்டமை சித்திரவதை செய்யப்பட்டமை என்பது ஒரு இனத்துக்குள் நடந்த கொலைகள்.

அது இன அழிப்பு அல்ல. இக் கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்று இதுவரையும் எந்தவொரு சர்வதேச நாடுகளும் சர்வதேச அமைப்புகளும் கூறவேயில்லை.

ஆனால் ஈழத்தமிழர்கள் மீது இலங்கை இராணுவம் நடத்திய படு கொலைகள் சர்வதேசக் குற்றங்கள் என்றே ஜெனிவா மனித உரிமைச் சபையின் அறிக்கைகள் கூறியிருக்கின்றன. போர்க்குற்ற விசாரணை அவசியம் என்று ஐ.நா அறிக்கைகளிலும், சர்வதேச நீதி விசாரணை அவசியம் என்றும் பல சர்வதேச நாடுகளும் கூட சுட்டிக்காட்டியுமிருக்கின்றன.

இன அழிப்பு என தமிழர்கள் கோரினாலும் இன்னமும் அதனை சர்வதேச நாடுகள் ஏற்றுக் கொள்ளவில்லை. இருந்தாலும் கனடா போன்ற சில சா்வதேச நாடுகள் இன அழிப்பு என்பது பற்றி பரிசீலிக்கிக்கின்றன.

எனவே பட்டலந்த படுகொலைகள் சர்வதேசக் குற்றமா என்பதை ஜேபிவிதான் கூற வேண்டும்.

ஆகவே, மேலும் இரண்டு விடயங்களை ஜேவிபி புரிந்துகொள்ள வேண்டும்.

ஒன்று - பட்டலந்த வதை முகாம் அறிக்கையை மாத்திரம் நாடாளுமன்றத்தில் சமா்ப்பித்து அதனை வெறும் பேசுபொருளாக சித்தரிக்க முயற்சிக்கும் நகர்வு என்பது ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்படும் மிகப் பெரும் அரசியல் அநீதி.

இரண்டாவது - பட்டலந்த முகாம் அறிக்கையை உள்ளூராட்சி சபை தேர்தல் பிரச்சாரங்களுக்கு பயன்படுத்தினால், பெரும்பான்மையாக வாக்களித்த சிங்கள மக்களுக்கு இழைக்கப்படும் பெரும் துரோகமாகும்.

ஆகவே, கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக பட்டலந்த முகாம் அறிக்கை மாறலாம். இந்த இடத்தில் தமிழ்த் தேசியக் கட்சிகளின் பலவீனங்களும் இலங்கை ஒற்றையாட்சி அரசின் தேர்தல் வியூகங்களுக்குள் மாத்திரம் மூழ்கியிருப்பது மிக மிக ஆபத்தானது. புதிய இளம் தலைமுறை இந்த வரலாறுகளை நன்கு கற்றுக்கொள்ள வேண்டும்.

2009 இற்குப் பின்னரான சூழலில் ரணில் - ராஜபக்ச தற்போது அநுரகுமார என்று மாறி மாறி ஆதரவு வழங்கி வரும், வழங்க முற்படும் தமிழரசுக் கட்சிக்கும் கட்சிகளாக இயங்கும் சில முன்னாள் ஈழ விடுதலை இயக்கங்களுக்கும், சில புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்கும் இக் கட்டுரை சமர்ப்பணம்.


கூர்மை - koormai.com
No image previewபட்டலந்த முகாம் அறிக்கையை, ஜேவிபி கேட்கத் தவறிய சந்தர்ப்ப...
போர்க்குற்றம் தொடர்பாக சர்வதேச விசாரணை என்றும், இன அழிப்புக்கான சர்வதேச நீதி விசாரணை அவசியம் எனவும் ஈழத்தமிழ் அமைப்புகள் பேசி வரும் நிலையில், 'பட்டலந்த' வதை முகாம் தொடர்பாக இலங்கை ஒற்றையாட்சி நாடாள...

தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண உள்ளூராட்சி தேர்தல்களில் பெரிய வெற்றியை பெறுமா?

3 months 2 weeks ago

16 MAR, 2025 | 03:31 PM

image

டி.பி.எஸ். ஜெயராஜ் 

"தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் வெற்றி பெற்று நிருவாகங்களை அமைக்கும்."  கடந்த வியாழக்கிழமை (மார்ச் 13)  யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர்கள் கிளப்பிய கேள்விகளுக்கு பதிலளித்தபோது கடற்தொழில், நீர்வள அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் மிகுந்த நம்பிக்கையுடன் கூறினார். எதிர்வரும் உள்ளூராட்சி தேர்தல்களில் போட்டியிடவிருக்கும் தேசிய மககள் சக்தி வேட்பாளர்களின் கட்டுப்பணத்தை செலுத்துவதற்காக அவர் யாழ்ப்பாணம் தேர்தல் செயலகத்துக்கு சென்றிருந்தார். அவருடன் தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் மூவரும் பிரதேச அமைப்பாளர்களுடன் கூட இருந்தனர்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் முக்கியமான ஆள் அமைச்சர் சந்திரசேகர் என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. பதுளை மாவட்டத்தின் பண்டாரவளையை சேர்ந்தவராக இருந்தாலும், சந்திரசேகரிடம் யாழ்ப்பாணத்தில் அரசியல் விவகாரங்களை  யேற்பார்வை செய்து ஒருங்கிணைக்கும் பொறுப்பு ஒப்படைக்கப்பட்டிருக்கிறது. அவரே யாழ்ப்பாணம், கிளிநொச்சி நிருவாக  மாவட்டங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராகவும் இருக்கிறார். இந்த இரு மாவட்டங்களையும் உள்ளடக்கியதே யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டமாகும். சந்திரசேகர் தேசிய மக்கள் சக்தியின் தேசிய பட்டியல் பாராளுமன்ற உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.

தேர்தல்களில் போட்டியிடும் சகல அரசியல் கட்சிகளும் வேட்பாளர்களும் குறிப்பாக  ஊடகங்களுடன் பேசும்போது வெற்றியில் நம்பிக்கையை வெளிப்படுத்தவதாக தெரிகிறது. தேர்தல் வெற்றி மீதான நம்பிக்கை அரசியல்வாதிகளுக்கு  சாசுவதமாக பீறியெழும். அது வழமையாக எதிர்பார்க்கப்படுவதே. நூற்றுக்கணக்கான வாக்குகளைப் பெற இயலாத வேட்பாளர்களும் கூட தேர்தலுக்கு முன்னதாக தங்களுக்கு வெற்றி நிச்சயம் என்று தம்பட்டம் அடிப்பார்கள். யதார்த்தமாக நோக்கும்போது தேர்தல்கள் இடம்பெறுவதற்கு முன்னதாக தாங்கள் வெற்றி பெறுமாட்டார்கள்  என்று எந்த வேட்பாளரும் கூறுவார்கள் என்று எதிர்பார்க்கமுடியாது. தேர்தலில் தோல்வியடைந்த பின்னரும் கூட பலர் தங்களுடன் போட்டியிட்டவர்கள் வாக்கு மோசடிகளில் ஈடுபட்டதாக அல்லது வாக்குகள் எண்ணும் செயன்முறைகளில் தலையீடு செய்ததாக குற்றஞ்சாட்டி ஆர்ப்பாட்டம் செய்வார்கள்.

இந்த பின்புலத்தில் பார்க்கும்போது, ஜனதா விமுக்தி பெரமுன (ஜே.வி.பி. ) தலைமையிலான தேசிய மக்கள் சக்தி சந்திரசேகர் எதிர்வு கூறுவதைப் போன்று உண்மையில் பெரிய வெற்றியை பெறுமா அல்லது அவரது நம்பிக்கை நடைமுறைக்கு ஒத்துவராதா என்ற கேள்வி எழுகிறது. ஒரு வருடத்துக்கு முன்னர் சந்திரசேகர் இவ்வாறு கூறியிருந்தால், அவர் கேலி செய்யப்பட்டிருப்பார். தேசிய மக்கள் சக்தி போன்ற சிங்கள ஆதிக்கத்திலான ஒரு தேசியக்கட்சி யாழ்ப்பாணத்தில் சகல உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றக்கூடியதாக இருக்கும் என்பது நம்பமுடியாதது.

ஆனால், கடந்த வருடத்தைய பாராளுமன்ற தேர்தல் முடிவுகள் நிலைவரத்தை முற்றாக மாற்றிவிட்டது. குறிப்பிடத்தக்க ஒரு அரசியல் திருப்பமாக யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தி பெரும்பாலான வாக்குகளைப் பெற்றது.  போனஸ்  ஆசனம் ஒன்றுக்கும் அது  உரித்துடையதாக இருந்தது. அதனால் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாண மாவட்டத்தில் மூன்று பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றது. அதற்கு அங்கு 80, 830 ( 24. 85 சதவீதம் ) வாக்குகள் கிடைத்தன. இலங்கை தமிழரசு கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி மற்றும் அகில இலங்கை தமிழ் காங்கிரஸ் போன்ற தமிழ்த் தேசியவாத கட்சிகளை விடவும் தேசிய மக்கள் சக்தி கூடுதல் வாக்குகளைப் பெற்றது. இந்த கட்சிகளுக்கு முறையே  63, 327 ( 19.47 சதவீதம்), 22,513(6.92 சதவீதம் ), 27, 986 (8.60 சதவீதம்)  வாக்குகள் மாத்திரமே கிடைத்தன.

தேசிய மக்கள் சக்தியின் மூன்று எம்.பி.க்கள்

யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவு செய்யப்பட்ட மூன்று தேசிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களில் மிகவும் கூடுதலான வாக்குகள் கருணானந்தன் இளங்குமரனுக்கே கிடைத்தன. அவருக்கு 32, 102 விருப்பு வாக்குகள் கிடைத்தன. தென்மராட்சி பிராந்தியத்தின்  உசனை சொந்த இடமாகக் கொண்ட  இலங்கை மின்சார சபையின் முன்னாள் ஊழியரான அவர் தற்போது யாழ்ப்பாணம் மாநகரசபை எல்லைக்குள் வசிக்கிறார். ஐந்து வருடக்களாக தேசிய மககள் சக்தியின் முழுநேரச் செயற்பாட்டாளராக இருந்துவரும் இளங்குமரன் பாராளுமன்ற தேர்தலில் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் பிரதான வேட்பாளராக களமிறங்கினார்.

யாழ்ம்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து இரண்டாவதாக தெரிவான வைத்தியர் சண்முகநாதன் ஸ்ரீபவானந்தராஜாவுக்கு 20, 430 விருப்பு வாக்குகள் கிடைத்தன. முப்பது வருடங்களுக்கும் கூடுதலான காலமாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய அவர் அண்மையில் பிரதி் பணிப்பாளராக ஓய்வு பெற்றார். 

தேசிய மக்கள் சக்தியின் மூன்றாவது பாராளுமன்ற உறுப்பினரான ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவனுக்குை17, 579 விருப்பு வாக்குகள் கிடைத்தன யாழ்ப்பாணத்தில் அவர் நன்கு பெயர்பெற்ற தனியார் கல்வி நிறுவனம் ஒன்றை நடத்திவருகிறார். ரஜீவன் அண்மைக்காலம் வரை இலங்கை தமிழரசு கட்சியின் தீவிர ஆதரவாளராக இருந்தவர். கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு சில மாதங்கள் முன்னதாக தனது அரசியல் விசுவாசத்தை மாற்றிக்கொண்ட அவர் அநுரா குமாரவுக்காக பிரசாரங்களில் ஈடுபட்டார்.

சந்திரசேகர்

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM.

யாழ்ப்பணத்தில் தேசிய மக்கள் சக்தியின் வெற்றியின் சிற்பி அதன் மாவட்ட அமைப்பாளரான இராமலிங்கம் சந்திரசேகரேயாவார். அவர் ஜே.வி.பி.யின் மத்தியகுழுவிலும் தேசிய மக்கள் சக்தியின் தேசிய நிறைவேற்றுக் குழுவிலும் உறுப்பினராக இருக்கிறார். ஜே.வி.பி.யின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பிரான அவர், இந்த தடவை தேசிய மக்கள் சக்தியின் தேசியப்பட்டியல் உறுப்பினராக நியமிக்கப்பட்டு  அநுரா குமார திசாநாயக்கவின் அமைச்சரவையில் கடற்தொழில் அமைச்சராக இணைத்துக் கொள்ளப்ட்டார்.

ஜே.வி.பி.யின் அமைப்பாளர் என்ற வகையில் சந்திரசேகர்  யாழ்ப்பாணத்தில் பல வருடக்கள் பணியாற்றியிருக்கிறார். தமிழ்ப் பத்திரிகைகள், தொலைக்காட்சி சேவைகள் மற்றும் செல்வாக்குமிக்க யூரியூபர்களுடன் நெருக்கமான உறவை வளர்த்துக் கொண்ட அவர் பல நிகழ்ச்சிகளில் பங்கேற்றார்.  விவசாயிகள், மீனவர்கள், மருத்துவத்துறை அதிகாரிகள், பணியாளர்கள், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணியாளர்கள் போன்ற யாழ்ப்பாணச் சமூகத்தின்  பல பிரிவினரையும் அணிதிரட்டிய அவர்  தேசிய மக்கள் சக்தியின் அணிகளுக்குள்   அவர்களை இணைத்துக் கொண்டார். யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினர்களின் எண்ணிக்கையை சந்திரசேகர் பரவலாக்கினார் என்பது முக்கியமாக கவனிக்கத்தக்கது. அவர்களில் இலட்சிய நோக்குடன் கூடிய சில படித்த இளைஞர்களும் அடங்குவர்.

யாழ்ப்பாண மாவட்டத்துக்கான தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்கள் பட்டியலை  அநுராாகுமார, பிமால் இரத்நாயக்க, விஜித ஹேரத் ஆகியோருடன் ஆலோசனை கலந்து சந்திரசேகர் இறுதி செய்தார். முன்னதாக,  2024 செப்டெம்பர் ஜனாதிபதி தேர்தலில் யாழ்ப்பாண மாவட்டத்தில்  அநுரா குமாரவுக்கு சுமார் 27,000 வாக்குகள் மாத்திரமே கிடைத்தது. ஆனால், பாராளுமன்ற தேர்தலில் அந்த எண்ணிக்கை சுமார் மூன்று மடங்காக அதிகரித்தது.

இந்த வாக்குகள் எங்கிருந்து வந்தன?  தமிழரசு கட்சி,  தமிழ் காங்கிரஸ், ரெலோ, ஈ.பி.டி.பி., ஈ.பி.ஆர்.எல்.எவ். மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி போன்ற அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களினால் பெறப்பட்ட வாக்குகளில் காணப்பட்ட வீழ்ச்சியை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது தேசிய மக்கள் சக்திக்கு இந்த கட்சிகள் சகலதிலும் இருந்தும் புதிய வாக்காளர்களிடம் இருந்தும் வாக்குகள் வந்து சேர்ந்தன என்று தோன்றியது. தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த வாக்குகளில்  ஒரு  கணிசமானவை பெண்களினாலும் இளைஞர்களினாலும் போடப்பட்டவையாகும்.

யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்திக்கு கிடைத்த  மிகவும் கூடுதலான தபால்மூல வாக்குகள் அரசாங்க ஊழியர்கள் மத்தியில் அதற்கு இருக்கும் ஆதரவை வெளிக்காட்டின. மேலும், யாழ்ப்பாணத்தில் உள்ள 11 தேர்தல் தொகுதிகளில் எட்டு தொகுதிகளில் தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்தது. நல்லூர், கோப்பாய், மானிப்பாய், காங்கேசன்துறை, உடுப்பிட்டி, வட்டுக்கோட்டை, யாழ்ப்பாணம் மற்றும்  பருத்தித்துறை ஆகிய தொகுதிகளில் ' திசைகாட்டி ' முதலாவதாக வந்தது. ஏனைய கட்சிகளினால் மூன்று தொகுதிகளில் மாத்திரமே வெற்றி பெறக்கூடியதாக இருந்தது. ஊர்காவற்துறை (ஈ.பி.டி.பி.), கிளிநொச்சி ( தமிழரசு கட்சி ), சாவகச்சேரி ( சுயேச்சைக்குழு 17) ஆகியவையே அந்த தொகுதிகளாகும்.

அநுரா குமார திசாநாயக்க

WhatsApp_Image_2025-03-16_at_1.22.32_PM_

அநுரா குமார திசாநாயக்க 2024 செப்டெம்பரில் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டார். அவர் தேர்தலில் முதலாவதாக வந்தார், ஆனால் 42.31 சதவீதமான வாக்குகளையே பெறக்கூடியதாக இருந்தது. இரண்டாவதாக வந்த சஜித் பிரேமதாசவுக்கு 32.76 சதவீதமான வாக்குகள் கிடைத்தன. இலங்கையின் ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் வெற்றிபெற்ற வேட்பாளரினால் பெரும்பான்மையான வாக்குகளைப் பெறமுடியாத சந்தர்ப்பமாக 2024 ஜனாதிபதி தேர்தல் அமைந்தது. அதனால் ஏனைய வாக்காளர்களின் வாக்குகள் நீக்கப்பட்டு இரண்டாவது சுற்று வாக்கு எண்ணிக்கையில் இரண்டாவது விருப்பு வாக்கு கணக்கில் எடுக்கப்பட்டது. இதில் அநுரா 55.89 சதவீதமான வாக்குகளைப் பெற்று ஜனாதிபதியாக தெரிவானார்.

அநுராவின் ஜனாதிபதி தேர்தல் செயற்பாடு தடுமாற்றமானதாக இருந்த போதிலும், பிறகு ஒரு அரசியல் அதிசயம் நிகழ்ந்தது. அநுரா தனது கட்சியின் பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களை தலைமை தாங்கி முன்னெடுத்தார். ஜனாதிபதியாக அவர் நாடுபூராவும் பயணம் செய்து தேசிய மக்கள் சக்தியின் வேட்பாளர்களுக்காக வாக்குக் கேட்டார். அலை திரும்பியது. நாட்டை ஒரு அநுரா அலை சூழ்ந்து கொண்டது. பாராளுமன்றத்தில் 159 ஆசனங்களை கைப்பற்றி தேசிய மக்கள் சக்தி சாதனை படைத்தது.

அநுரா அலை

தமிழ்த் தேசியவாத கோட்டையான யாழ்ப்பாணம் அநுரா அலையின் கீழ் சென்றது. 25 சதவீதமான வாக்குகளைப் பெற்ற தேசிய மக்கள் சக்திக்கு யாழ்ப்பாணத்தின் ஆறு ஆசனங்களில்  மூன்று ஆசனங்கள் கிடைத்தன. தேர்தல் முடிவுகள் தேசிய மக்கள் சக்தியைக் குதூகலிக்க வைத்தன. யாழ்ப்பாண வெற்றி ஒரு மகுடச்சாதனை என்று பல தலைவர்கள் வர்ணித்தனர். தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக் கிரீடத்தில் யாழ்ப்பாண முடிவுகள் ஒரு அணிகலனாக அமைந்தன. அதை யாழ்ப்பாணத்தில் தமிழ்த் தேசியவாதத்தின்  முடிவு என்றும் கூட சில அவதானிகள் எதிர்வு கூறினர்.

இந்த பின்னணியிலேயே, யாழ்ப்பாணத்தில் உள்ளூராட்சி தேர்தல்களில் தேசிய மக்கள் சக்தியினால் மகத்தான வெற்றியைப் பெறமுடியும் என்று அமைச்சர் சந்திரசேகர்  அதிவிசேடமான  நம்பிக்கையைக் கொண்டவராக இருக்கிறார். யாழ்ப்பாண மாவட்டத்தில் ஒரு மாநகரசபை, மூன்று நகரசபைகள் மற்றும் பதின்மூன்று பிரதேச சபைகள் இருக்கின்றன. எல்லாமாக பதினேழு உள்ளூராட்சி சபைகள். பாராளுமன்ற தேர்தலில்  யாழ்ப்பாண மாவட்டத்தில் உள்ள பத்து  தொகுதிகளில் எட்டு தொகுதிகளில்  தேசிய மக்கள் சக்தி முதலாவதாக வந்ததால், உள்ளூராட்சி தேர்தல்களில் ஒரு முற்றுமுழுதான  வெற்றி சாத்தியம் என்று தோன்றலாம்.

தேசிய மக்கள் சக்திக்கு நெருக்கமான தகவலறிந்த வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் கருத்துக்களின் பிரகாரம் யாழ்ப்பாணத்தில் அந்த கட்சியின் மக்கள் செல்வாக்கு குறையவில்லை என்று தெரிகிறது. அதற்கு ஆதரவு பெருகியிருக்கிறது என்று அவர்கள் கூறுகிறார்கள். தேசிய மக்கள் சக்தி தற்போது ஆளும் கட்சியாக இருப்பதால், யாழ்ப்பாண மக்கள் அதிகாரத்தில் உள்ள கட்சியுடன் சேர்ந்துகொண்டால் அலுவல்களைச் செய்வித்துக்கொள்ள முடியும் என்ற நம்பிக்கையில் அதற்கு வாக்களிக்க விரும்புவர். அரசாங்கத்தின் புதிய பட்ஜெட் வடக்கிற்கு ஓரளவு தாராளமாக நிதி ஒதுக்கீடுகளைச் செய்திருக்கிறது. நடைமுறைச் சாத்தியமாகச் சிந்திக்கும் யாழ்ப்பாண தமிழர்கள் தேசிய மக்கள் சக்தியின் 'வண்டிலில்' தொங்கிக் கொண்டுபோவது சிறந்தது என்று விளங்கிக்கொள்வர்.

வல்வெட்டித்துறை 

அநுரா அலை யாழ்ப்பாணத்தில் தணிந்துவிடவில்லை என்று தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் உணருகின்றன. அநுரா அண்மையில்  யாழ்ப்பாணத்துக்கு செய்த விஜயம் அதற்கு சான்று என்று அவர்கள் கூறுகிறார்கள். வல்வெட்டித்துறையிலும் மிருசுவிலிலும் இடம்பெற்ற வெற்றிகரமான பொதுக்கூட்டங்களை அவர்கள் சுட்டிக்காட்டுகிறார்கள். சாதாரண மக்கள் அநுரா மீது தன்னியல்பாகவே அன்பை வெளிப்படுத்தினார்கள். வல்வெட்டித்துறையில் நடைபெற்ற வெற்றிகரமான கூட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு நிகழ்வு என்று இந்த தேசிய மக்கள் சக்தி வட்டாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன. 

வல்வெட்டித்துறை விடுதலை புலிகள் இயக்கத்தின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் மற்றும் அந்த இயக்கத்தின் முக்கிய தலைலர்களின் சொந்த ஊராகும். ஆயுதமேந்திய தமிழ்த் தீவிரவாதத்தின் தொட்டில் என்று வல்வெட்டித்துறை கருதப்படுகிறது. அந்த ஊரில் தேசிய மக்கள் சக்தியினால் வெற்றிகரமான ஒரு கூட்டத்தை நடத்தக்கூடியதாக இருந்தமை  உண்மையில் அதன் செல்வாக்கு வளருவதன் ஒரு அறிகுறியாகும் என்று இந்த வட்டாரங்கள் கூறுகின்றன.

உறுதிமொழியும் செயற்பாடும்

தேசிய மக்கள் சக்திக்குள் நம்பிக்கை நிலவுகின்ற போதிலும், உள்ளூராட்சி தேர்தல்களில் யாழ்ப்பாண மக்களின் போதுமான  ஆதரவை கட்சியினால் பெறக்கூடியதாக இருக்குமா என்று சந்தேகமும் இருக்கிறது. உறுதிமொழிக்கும் செயற்பாட்டுக்கும் இடையிலான வெளியே இதற்கு பிரதான காரணமாகும். பாராளுமன்ற தேர்தல் பிரசாரங்களின்போது பொதுவில் தேசிய மக்கள் சக்தியும் குறிப்பாக அநுராவும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கினார்கள். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படும், சகல தமிழ் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்படுவார்கள், காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை கையாளப்படும், இராணுவத்தினர் கையகப்படுத்திய காணிகள் அவற்றுக்கு உரித்தானவர்களிடம் மீண்டும் கையளிக்கப்படும், பாதுகாப்பு படைகளின் முகாம்களும் வீதிச்சோதனை நிலையங்களும் குறைக்கப்படும், உயர்பாதுகாப்பு வலயங்கள் என்று பிரகடனப்படுத்தப்பட்ட இடங்களும் வீதிகளும் குறைக்கப்படும் என்றெல்லாம் வாக்குறுதிகள் அள்ளிவீசப்பட்டன.

இவற்றில் எந்த வாக்குறுதியும் நிறைவேற்றப்படவில்லை. ஒரு சில வீதிச்சோதனை நிலையங்களும் முகாம்களும் மூடப்பட்டன. ஒரு சில வீதிகள் பொதுமக்களின் பாவனைக்காக மீண்டும் திறந்துவிடப்பட்டன. முக்கியமான எந்த காரியமும் இடம்பெறவில்லை. அரசியல் கைதிகளை விடுதலை செயதல்,  காணாமலாக்கப்பட்டவர்கள் தொடர்பான பிரச்சினை, காணிகளை திருப்பிக் கையளித்தல் போன்ற விவகாரங்களில் நடைமுறைச் சாத்தியமான முறையில் முன்னோக்கிய செயற்பாடு எதையும் காணக்கூடியதாக இல்லை. அரசியல் கைதிகள் விவகாரத்தைப் பொறுத்தவரை, நீதியமைச்சர் இப்போது அரசியல் கைதிகள் என்று எவரும் இல்லை என்று கூறுகிறார். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்படமாட்டாது என்றும் அரசாங்கம் கூறுகிறது.

இன்னொரு கசப்பான விடயம் அதிகாரப்பரவலாக்கல் மற்றும் புதிய அரசியலமைப்பு தொடர்பானதாகும். புதிய அரசியலமைப்பு ஒன்று  கொண்டுவரப்படும் வரை மாகாணசபைகள் தொடர்ந்து இருக்கும்  என்று தேசிய மக்கள் சக்தி கூறுகின்றது. ஆனால், புதிய அரசியலமைப்பைக் கொண்டுவரும் திட்டம் இப்போது பின்போடப்பட்டிருக்கிறது. ஜனாதிபதி திசாநாயக்க இந்தியாவுக்கு மேற்கொண்ட முதலாவது உத்தியோகபூர்வ விஜயத்தின் இறுதில் இரு நாடுகளும் வெளியிட்ட கூட்டறிக்கையில் அதிகாரப்பரவலாக்கம் பற்றியோ அல்லது மாகாணசபைகள் பற்றியோ எந்த குறிப்பும் இடம்பெறாதிருப்பதை உறுதிசெய்யக்கூடியதாக அவரால் இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியை நம்பவைக்க இயலுமாக இருந்தது.

இந்திய மீனவர்களின் அத்துமீறல்

இலங்கை கடற்பரப்பில் இந்திய மீனவர்களில் அத்துமீறில் தொடர்ந்து உறுத்திக்கொண்டிருக்கும் ஒரு முக்கிய பிரச்சினையாகும். இந்திய மீனவர்களின் படகுகள்  வருவதையும் அவர்கள் இழுவைப்படகுகளை பயன்படுத்தி மீன்பிடியில் ஈடுபடுவதையும் தடுத்து நிறுத்துவதாக 2024 தேர்தல் பிரசாரங்களின்போது சந்திரசேகரும் அநுரா குமார திசாநாயக்கவும் விசேடமாக வாக்குறுதிகளை வழங்கினார்கள். 

ஆனால்,  இதுவரையில் அர்த்தமுடைய நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை. இந்திய படகுகள் பெரும் எண்ணிக்கையில் வந்து வடபகுதி கடலில் தொடர்ந்து இழுவைப்படகுகள் மூலமாக மீன்பிடியில் ஈடுபடுகின்றன. இந்திய மீனவர்களை இடைக்கிடை கைதுசெய்து அவர்களி்ன் படகுகளையும் கைப்பற்றும் நடவடிக்கைகளை இலங்கை கடற்படை தொடர்ந்து மேற்கொள்கிறது. ஆனால், சில நாட்களுக்கு பிறகு 'மனிதாபிமான அடிப்படையில்' அந்த மீனவர்கள் விடுவிக்கப்படுகிறார்கள். 'சட்டவிரோத மீன்பிடியை' முடிவுக்கு கொண்டுவருவதற்கு உருப்படியான எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இந்திய இழுவைப்படகுகள் மற்றும் சட்டவிரோத மீன்பிடி தொடர்பாக வடபகுதி மீனவர்களுக்கு ஏற்பட்டிருக்கும் அதிருப்தி வளர்ந்து வருவது  தேசிய  மக்கள் சக்தி அரசாங்கத்துக்கு ஒரு பிரச்சினையாகலாம். வடபகுதி மீனவர் சமூகத்தைச் சேர்ந்த பெருமளவானோர் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்தார்கள். கரையோரப்பகுதி மக்களிடம் தமிழ் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்களன  வாக்குக் கேட்கச் சென்றபோது அவர்களுக்கு வாக்களிக்கப் போவதில்லை என்று அந்த மக்கள் முத்துக்கு நேரே கூறினார்கள்."நாங்கள் இந்த தடவை ஜே.வி.பி.க்கே வாக்களிக்கப் போகிறோம். ஏனென்றால் இந்திய மீனவர்களின் அத்துமீறலை முடிவுக்கு கொண்டுவரக்கூடிய ஒரே கட்சி ஜே வி.பி.யே என்று நாம் நம்புகிறோம்"  என்று அவர்கள் கூறினார்கள். அவர்களில் பலர் இப்போது ஏமாற்றமடைந்து விட்டார்கள். "கதையே தவிர காரியம் எதுவும் இல்லாத" ஒரு கட்சியாக ஜே வி.பி. இப்போது பலராலும் நோக்கப்படுகிறது.

இது தவிர, யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆற்றல் மற்றும் நடத்தைகள் தொடர்பில் மக்கள் மத்தியில் பெரும் ஏமாற்றம் காணப்படுகிறது. யாழ்ப்பாண வெற்றியை தங்களது கிரீடத்தில் உள்ள அணிகலன் என்று தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் கொக்கரித்துக் கொண்டு திரிகிறார்கள். ஆனால், யாழ்ப்பாணத்தில் இருந்து தெரிவான மூவரும் செயற்திறன் இல்லாதவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் பாராளுமன்றத்தில் பேசுவது அபூர்வம். அவ்வாறு அபூர்வமாகப் பேசுகின்ற சந்தர்ப்பங்களிலும் கூட மக்களைப் பாதிக்கின்ற பிரச்சினைகளைப் பற்றி எதையும் கூறுவதை காணமுடியவில்லை. அந்த மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களையும் அவர்களுக்கு வாக்களித்த மக்களால் சந்திக்க  முடியாமல் இருக்கிறது. அவர்களிடம் மக்கள் பிரச்சினை கிளப்பும்போது "இந்த விவகாரத்தில் எமது கட்சியின் தலைமைத்துவம் மாத்திரமே தீர்மானம் எடுக்கமுடியும்" என்று ஒரு பதிலை கைவசம் வைத்திருக்கிறார்கள்.

இந்த நிகழ்வுப் போக்குகள் எல்லாம் யாழ்ப்பாணத்தில் திசைகாட்டிக்கு வாக்களித்த மக்கள்  சலிப்படைந்து போகிறார்கள் என்பதை வெளிக்காட்டுகின்றன. ஆனால்,  இந்த அதிருப்திப் போக்கு ஒரு தொடக்கமா இல்லையா என்பது தெளிவாகத் தெரியவில்லை. அது ஒரு தொடக்கமாக இருந்தால்  வாக்களிப்பில் தேசிய மக்கள் சக்திக்கு எதிராக மக்கள் பெருமளவில் திரும்பவதற்கு வாய்ப்பு குறைவு. ஆனால் இந்த அதிருப்தி ஆழமானதாக வளருமானால்  யாழ்ப்பாணத்தில் உள்ள பதினேழு உள்ளூராட்சி சபைகளையும் கைப்பற்றும் அமைச்சர் சந்திரசேகரின் எதிர்பார்ப்பும் நம்பிக்கையும் வெறும் பகற்கனவாக மாத்திரமே இருக்க முடியும்.

இருந்தாலும், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்தில் இருக்கிறது என்ற உண்மையை கருத்தில் எடுத்தே ஆகவேண்டும். செல்வாக்கான இடத்தை தேடியோடும் அருவருப்பான பேர்வழிகளுக்கு அது ஒரு காந்தம் போனறு இருக்கும்.  அதிகாரத்தில் இருக்கும் அரசாங்கத்துடன் தங்களை இணைத்துக் கொள்ளவே பலரும் விரும்புவர். ஆனால், தேசிய மக்கள் சக்தியில் இணைகின்ற அல்லது  ஆதரிக்கின்ற அந்த சந்தர்ப்பவாத பேர்வழிகளினால் பெருமளவில் வாக்குகளைக் கொண்டுவர முடியுமா என்பது மிகவும் சந்தேகமே.

எண்கணிதக் காரணி

எண்கணிதக் காரணியை கருத்தில் எடுக்கவேண்டியதும் மிகவும் முக்கியமானதாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற ஆசனங்களில் அரைவாசியைக் கைப்பற்றியதன் மூலமாக தேசிய மக்கள் சக்தி மிகச்சிறந்த வெற்றயைப்  பெற்றது. ஆனால், அது பெற்ற வாக்குகள் நான்கில் ஒரு பங்கிற்கு சமமானது மாத்திரமே. அநுரா அலை  தேசிய மக்கள் சக்திக்கு வாக்குகளைக் கவர்ந்தாலும் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளிக்கப்பட்ட வாக்குகளில் நான்கில் மூன்று பங்கு ஏனைய கட்சிகளுக்கும் சுயேச்சைக் குழுக்களுக்குமே சென்றது என்பதை ஏற்றுக்கொண்டேயாக வேண்டும். இந்த கட்சிகளிலும் சுயேச்சைக் குழுக்களிலும் பெரும்பாலானவறனறை "தமிழ்த் தேசியவாத அமைப்புகள்" என்று வகைப்படுத்த முடியும்.

அதனால், தமிழ்த் தேசியவாத கட்சிகளினாலும்  குழுக்களினாலும் ஒரு வகையான ஐக்கியத்தை  ஏற்படுத்தி இரண்டு அல்லது மூன்று கூட்டணிகளாக தேர்தலில் களமிறங்க முடியுமாக இருந்தால் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் வாய்ப்புகள் குறைவானதாகவே இருக்க முடியும். அவ்வாறு நடந்தால் தமிழ்த் தேசாயவாத கட்சிகளும்  கூட்டணிகளும் தேசிய மக்கள் சக்தியை விடவும் உயர்வான செயற்பாட்டை வெளிக்காட்டுவதற்கான வாய்ப்புக்களுக்கு இடமிருக்கிறது. தவிரவும், தமிழ்த் தேசியவாதத்தின் கோட்டையான யாழ்ப்பாணத்தில் சிங்கள தேசியக் கட்சி ஒன்று முதலாவதாக வந்தது குறித்து குறிப்பிட்ட சில வட்டாரங்கள் கவலைப்படுகின்றன.

தமிழ்த் தேசியவாத கட்சிகள்

அதனால், தமிழ்த் தேசியவாதக்கட்சிகள் திருப்பித்தாக்கி அநுரா அலையைப் பின்வாங்கச் செய்வதற்கான ஒரு சாத்தியப்பாடு இருக்கிறது. இது தமிழ்த் தேசாயவாதக் கட்சிகளினால் எந்தளவு ஐக்கியத்தைச் சாதிக்கக்கூடியதாக இருக்கும் என்பதிலேயே தங்கியிருக்கிறது. பல்வேறு கூட்டங்களும்  கலந்துரையாடல்களும் நடைபெற்று வந்திருக்கிறது. ஆனால், இதுவரையில் அவற்றினால் பயன் கிட்டவில்லை. ஐக்கியம் சாத்தியமாகாமல் போனாலும் கூட, தேர்தல் பிரசாரங்களின்போது தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் ஒன்றை ஒன்று தாக்குவதைத் தவிர்த்து தேசிய மக்கள் சக்தியை தனியொரு இலக்காகக் கொண்டு தாக்குவதற்கான ஏற்பாடொன்றைச் செய்துகொள்ள முடியும்.

மேலும், தமிழ்த் தேசியவாத கட்சிகள் தேர்தலில் தேசிய மக்கள் சக்தியை தோற்கடிக்க வேண்டுமானால் புதிய, நடைமுறைச் சாத்தியமானதும் கற்பனைத் திறனுடையதுமான கொள்கைகளை அவை வகுக்க வேண்டும். பழைய கொள்கைகளையே தொடர்ந்தும் பின்பற்றிக்  கொண்டிருப்பது எதிர்பார்க்கப்படும் பயன்விளைவுகளைத் தராது. தேசிய மக்கள் சக்தியின் வெற்றிக்கான அடிப்படைக் காரணம் மக்கள் மத்தியில் காணப்பட்ட மாற்றுத்துக்கான அவாவேயாகும் என்பதை  நினைவிற்கொள்ள வேண்டியது அவசியமாகும்.

தமிழ்த் தேசியவாதக் கட்சிகள் தேசிய மக்கள் சக்தியைத் தோற்கடிக்க வேண்டுமானால் இந்த முதன்மையான காரணியை கருத்தூன்றிக் கவனத்துக்கு எடுக்கவேண்டும். தங்களது தற்போதைய கொள்கைகள் மற்றும் அணுகுமுறைகளினால் தேசிய மக்கள் சக்தியிடமிருந்து வாக்காளர்களை கவரக்கூடியதாக இருக்குமா என்பதை தமிழ்த் தேசியவாத கட்சிகள் தங்களைத் தாங்களே கேட்கவேண்டும்.

உள்ளூராட்சி தேர்தல்முறை 

உள்ளூராட்சி சபைகளுக்கென்று தேர்தல் முறையொன்று இருக்கிறது. 60 சதவீதமான ஆசனங்கள் வட்டாரங்கள் மூலமாகவும் 40 சதவீதமான ஆசனங்கள் விகிதாசாரப் பிரதிநிதித்துவ முறையின் மூலமும் தெரிவு செய்யப்படுவதே அந்த முறையாகும். இந்த தேர்தல் முறையின் விளைவாக 2018  பெப்ரவரி  தேர்தல்களுக்கு பிறகு அரசியல் கட்சிகளினால் உள்ளூராட்சி சபைகளில் ஒரு தெளிவான பெரும்பான்மையைப் பெறமுடியாத சூழ்நிலை ஏற்பட்டது.

தமிழரசு கட்சி, ரெலோ, புளொட் ஆகியவற்றை உள்ளடக்கிய தமிழ் தேசிய கூட்டமைப்பினால் அது 2018 ஆம் ஆண்டில் போட்டியிட்ட  48 உள்ளூராட்சி சபைகளில் மூன்று சபைகளில் மாத்திரமே பெரும்பான்மைப் பலத்தைப் பெறக்கூடியதாக இருந்தது. 

அதனால் தேசிய மக்கள் சக்தி உள்ளூராட்சி சபை ஒன்றில் கூடுதலான வாக்குகளைப் பெற்றாலும் தெளிவான பெரும்பானமைப் பலத்தை பெறமுடியாத சூழ்நிலை தோன்றுவதற்கான சகல சாத்தியப்பாடுகளும் இருக்கின்றன. அத்தகைய சூழ்நிலையில், உள்ளூராட்சி சபைகளில் நிருவாகங்களை அமைப்பதற்காக தமிழ்க் கட்சிகள் ஒன்றிணைந்து செயற்படுவதன் மூலம் தேசிய மக்கள் சக்தியை ஓரங்கட்டக் கூடியதாக இருக்கும்.

https://www.virakesari.lk/article/209374

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

3 months 2 weeks ago

அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்? — வீரகத்தி தனபாலசிங்கம் —

March 17, 2025

புலம்பெயர் இலங்கை தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் வாழும் மூத்த பத்திரிகையாளரும் சிறந்த அரசியல் ஆய்வாளர்களில் ஒருவருமான டி.பி.எஸ். ஜெயராஜ்  அண்மைக் காலத்தில்  எழுதிய கட்டுரைகள் சிலவற்றின் தமிழ் மொழிபெயர்ப்பு ஒரு நூலாக வெளிவந்திருக்கிறது.

தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரா குமார திசாநாயக்க கடந்த வருடம் செப்டெம்பரில் இலங்கையின் ஜனாதிபதியாக பதவியேற்ற பிறகு அவரது ஆரம்பகால வாழ்க்கை மற்றும் அரசியல் எழுச்சி குறித்து ஆறு கட்டுரைகளையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி வடக்கு, கிழக்கு மாகாணங்களில் பெற்ற வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த வெற்றி குறித்து மூன்று கட்டுரைகளையும் ஜெயராஜ் எழுதியிருந்தார். அவற்றின் இந்த மொழிபெயர்ப்பு நூலுக்கு  ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம் ; இலங்கையின் முதலாவது இடதுசாரி ஜனாதிபதி அநுரா குமார திசாநாயக்க’ என்று  தலைப்பு. 

இத்தகையதொரு நூல் வெளிவரப்போகிறது என்று முன்கூட்டியே அறிந்துகொண்ட — ஜெயராஜின் எழுத்துக்களை பற்றி நன்கு தெரிந்த அரசியல் ஆர்வலர்களும் ஊடகவியலாளர்களும் அவர் இலங்கையில் ஏற்பட்ட ஆட்சிமாற்றம் குறித்து  மார்க்சியப் பார்வையில் வர்க்க அடிப்படையிலான ஆய்வு ஒன்றைச் செய்து  எழுதியிருக்கிறாரா என்று பதிப்பாளர்களிடம் வினவினார்கள். கொழும்பு தமிழ்ச்சங்க மண்டபத்தில் கடந்த ஞாயிற்றுக்கிழமை (9/3) மாலை  நடைபெற்ற நூல் வெளியீட்டு நிகழ்விலும் அந்த கேள்வி எழுந்தது. குறிப்பாக, அங்கு உரையாற்றிய சமூக, அரசியல் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளரான சுவஸ்திகா அருலிங்கம் அந்த விடயம் குறித்து ஒரு வகையான விமர்சன அடிப்படையில்  கருத்து வெளியிட்டார்.

திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்று அதிகாரத்துக்கு வந்ததையும் பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மகத்தான வெற்றிபெற்று அரசாங்கத்தை அமைத்ததையும் அரசியல் அதிகாரத்தின் ஒரு வர்க்க மாற்றமாக  கருதமுடியாது என்று அவர் கூறினார். தன்னை ஒரு  இடதுசாரி என்று  அடையாளப்படுத்திக்கொண்டு உரையாற்றிய அவர், தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு  வந்திருப்பதை இலங்கையில் முதலாளி வர்க்கத்தை தோற்கடித்து தொளிலாளி வர்க்கம் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றியதாக வியாக்கியானம் செய்தலாகாது என்று கூறிவைக்கவே விரும்பினார் என்று தெரிகிறது. நூலின் தலைப்பே இந்த குழப்ப நிலைக்கு காரணமாகும். 

 ‘அரசியல் அதிகாரத்தின் வர்க்க மாற்றம்’  என்ற தலைப்புடன்  நூல் வெளிவரவிருக்கிறது என்று ஜெயராஜுக்கு அறிவிக்கப்பட்டபோது அவர் தான் அவ்வாறு எந்தவிதமான  வர்க்கக் கண்ணோட்டத்தில்  திசாநாயக்கவினதும் தேசிய மக்கள் சக்தியினதும் எழுச்சியை பார்க்கவில்லை என்றும்  அத்தகைய தலைப்பு தன்னை ஒரு அசௌகரியத்துக்கு உள்ளாக்கிவிடக்கூடும் என்றும்  கூறினார். ஜெயராயை பொறுத்தவரை ‘அநுரா குமார திசாநாயக்கவின் வாழ்வும் அரசியல் எழுச்சியும்’  என்பதே நூலுக்கு பொருத்தமான தலைப்பு. 

‘அநுரா குமார திசாநாயக்க இலங்கை வானில் ஒரு இடதுசாரி நட்சத்திரம்’ என்ற தலைப்பிலான முதலாவது கட்டுரையில் ஜெயராஜ்  ஜனாதிபதியின் எழுச்சி பற்றிய தனது பார்வையை பின்வருமாறு முன்வைக்கிறார்; 

“அநுரா குமார திசாநாயக்க ஜனாதிபதி தேர்தலில் வெற்றிபெற்ற நாளில் இருந்து சர்வதேச ஊடகங்கள் (மேற்கத்தைய மற்றும் இந்திய ஊடகங்கள்) அவரை மார்க்சிஸ்ட், லெனினிஸ்ட், நவ மார்க்சிஸ்ட், இடதுசாரி, மத்திய இடது அரசியல்வாதி என்று பலவாறாக வர்ணித்து வருகின்றன. சில இந்திய விமர்சகர்கள் அவருக்கு ‘இந்திய விரோதி’ என்றும் ‘தமிழர் விரோதி’ என்றும் நேர்மையற்ற முறையில் நாமகரணம் சூட்டுகின்றனர். எனது நோக்கில் திசாநாயக்க நிச்சயமாக இடதுசாரிக் கோட்பாடுகளுக்கு தன்னை அர்ப்பணித்த ஒரு இடதுசாரி. ஆனால், பாரம்பரிய அர்த்தத்தில் அவரை ஒரு மார்க்சிஸ்ட் என்று அழைக்கமுடியுமா என்பது சந்தேகமே.

“டொனால்ட் ட்ரம்ப் என்ற பேர்வழி வெள்ளை மாளிகையை அசிங்கப்படுத்துவதற்கு முன்னதாக அந்தக் காலத்தில் அமெரிக்க ஜனாதிபதிகள் பரவலாக பெருமளவுக்கு மதிக்கப்பட்டனர். பல அமெரிக்க ஜனாதிபதிகளின் வாழ்க்கைச் சரிதைகள் வாசித்துச் சுவைக்கப்பட்டன. பலர் ஆபிரகாம் லிங்கனையே சிறந்த அமெரிக்க ஜனாதிபதியாக நோக்குவர். அடிமை  முறையை ஒழிப்பதற்கும் அடிமைகளின் தளைகளை அறுத்து அவர்களை விடுவிப்பதற்கும் உள்நாட்டுப்போர் ஒன்றையே நடத்துமளவுக்கு அவர் சென்றார்.

“லிங்கன் மிகவும் எளிமையான பின்புலத்தைக் கொண்ட ஒரு மனிதர். அமெரிக்காவின் அதியுயர்ந்த பதவிக்கு அவரின் உயர்வு’ மரக்கொட்டகையில் இருந்து வெள்ளை மாளிகைக்கான ஒரு கதை’ என்று அழைக்கப்படும். அதே போன்றே திசாநாயக்கவும் கூட இலங்கையின் முதல் குடிமகனாக வந்திருக்கும் ஒரு சாதாரண மனிதரே. அவரின் உயர்வையும் கூட ‘மண் வீட்டில் இருந்து ஜனாதிபதி மாளிகைக்கு வந்த காவியம்’ என்று வர்ணிக்க முடியும்.”

இலங்கையில் இதுகாலவரையில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக பதவி வகித்தவர்களில் ரணசிங்க பிரேமதாசவையும் மைத்திரிபால சிறிசேனவையும் தவிர, மற்றையவர்கள் சகலரும் பாரம்பரியமான அரசியல் அதிகார உயர்வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாகவே இருந்தனர். பிரேமதாசவும் சிறிசேனவும் கூட அந்த உயர்வர்க்கத்தை பிரதிநிதித்துவப்படுத்தி வந்திருக்கும ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் மூலமாகவே ஜனாதிபதியாக வந்தனர்.  

அதை அடிப்படையாகக் கொண்டு நோக்கும்போது அந்த அதிகார வர்க்கத்தையும் அதைப் பிரதிநிதித்துவம் செய்யும் கட்சிகளையும் சாராத ஒருவரான, அதுவும் ஒரு காலத்தில் அதிகாரத்தைக் கைப்பற்றுவதற்காக ஆயுதக்கிளர்ச்சிகளை நடத்திய இடதுசாரி கட்சியொன்றின் இன்றைய தலைவரான  திசாநாயக்க ஜனாதிபதியாக வந்ததில் ஒரு தரம்சார்ந்த மாற்றம் (Qualitative Change )  இருக்கிறது. அதை விளங்கிக்கொள்வதில் எவருக்கும் சிரமம் இருக்க முடியாது.  தன்னை ஒரு மார்க்சிய — லெனினியவாதி என்று திசாநாயக்க தற்போது வெளிப்படையாக அடையாளப்படுத்திக்கொள்கிறாரோ இல்லையோ அது வேறு விடயம். 

ஆனால், இடதுசாரி இயக்கம் ஒன்றைச் சேர்ந்த —  ஒரு காலத்தில் ஆட்சியதிகாரத்துக்கு மாத்திரமல்ல, அரசியலிலும் கூட மிகவும்  உயர்ந்த இடத்துக்கு வருவது குறித்து நினைத்துப் பார்த்திருக்க  முடியாத ஒரு எளிமையான குடும்பப் பின்புலத்தைக் கொண்ட அவர் நாட்டின் அதியுயர்ந்த பதவிக்கு மக்களால் தெரிவாகக் கூடியதாக இருந்ததை ஒரு வித்தியாசமான கோணத்தில் பார்த்தே ஜெயராஜின் நூலுக்கு அந்த தலைப்பை வெளியீட்டாளர்கள் கொடுத்திருக்கிறார்கள் என்று தெரிகிறது. 

திசாநாயக்க ஒரு இடதுசாரிக் கிளர்ச்சி  மூலமாக ஆட்சிக்கு வரவில்லை. மூன்று வருடங்களுக்கு முன்னர் ஏற்பட்ட  படுமோசமான பொருளாதார நெருக்கடியை அடுத்து அன்றைய ஆட்சியாளர்களுக்கு எதிராக இலங்கை வரலாறு முன்னென்றும் கண்டிராத வகையில் மக்கள் வீதிகளில் இறங்கி கிளர்ச்சி செய்தார்கள். ஆரம்பக்கட்டங்களில் அந்த கிளர்ச்சியில் ஒரு அமைதி வழியிலான அரசியல் புரட்சியின் பரிமாணங்கள் தென்பட்டன. தெற்காசிய பிராந்தியத்தில் முதன் முதலாக மக்கள் கிளர்ச்சி ஒரு அரசாங்கத்தை தூக்கியெறிந்த முதல் சந்தர்ப்பமாக  ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவின் வீழ்ச்சி அமைந்தது. 

கடந்த வருடம் ஆகஸ்டில் பங்களாதேஷ் பிரதமர் ஷேய்க் ஹசீனாவை நாட்டை விட்டு விரட்டிய கிளர்ச்சிக்காரர்களுக்கு இலங்கையின் கிளர்ச்சி நிச்சயமாக  ஒரு முன்னுதாரணமாக இருந்திருக்கும் என்பதில் சந்தேகமில்லை. ஆனால்,   பங்களாதேஷில் கிளர்ச்சிக்காரர்களின்  பக்கம் நின்ற அரசாங்க சார்பற்ற தொண்டர் நிறுவனம் ஒன்றின் தலைவரான முஹமட் யூனுஸ் இடைக்கால தலைவராக வந்ததைப் போன்று,  கோட்டாபய  நாட்டை விட்டு தப்பியோடிய பிறகு  கிளர்ச்சிக்காரர்கள் ஆட்சிக்கு வரவில்லை. அறகலய கிளர்ச்சியின் முன்னரங்கத்தில் நின்ற செயற்பாட்டாளர்கள் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டபோது மக்கள் அவர்களை கருத்தில் எடுக்கவில்லை என்பது கவனிக்கத்தக்கது. 

அறகலய கிளர்சியின் விளைவாக நாட்டு மக்கள் மத்தியில் பாரம்பரிய அரசியல் அதிகார வர்க்கத்துக்கும் அதை பிரதிநிதித்துவப்படுத்திய அரசியல் கட்சிகளுக்கும்  எதிராக மக்கள் மத்தியில் வளர்ந்த உணர்வுகளை மிகவும் விவேகமான  முறையில் பயன்படுத்தி திசாநாயக்கவினால் ஜனாதிபதியாகவும் தேசிய மக்கள் சக்தியினால் ஆளும் கட்சியாகவும் வரமுடிந்தது. இதை  தொழிலாளர் வர்க்கம் இடதுசாரி இயக்கம் ஒன்றின் தலைமையில் அதிகாரத்துக்கு வந்திருப்பதாக எவரும்  கூறவில்லை. ஜனாதிபதியோ அல்லது தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களில் எவருமோ கூட  அவ்வாறு கூறவில்லை. 

இடதுசாரிகளினால் இலங்கையில் ஒருபோதும் அதிகாரத்துக்கு வரமுடியவில்லையே என்று ஆதங்கப்பட்டுக் கொண்டிருந்த இடதுசாரி செயற்பாட்டாளர்கள் மற்றும்  ஆதரவாளர்களில்  ஒரு  பிரிவினர் தேசிய மக்கள் சக்தி அதிகாரத்துக்கு வந்ததை அடுத்து தங்களுக்குள் திருப்திப் பட்டுக்கொண்டார்கள். 

ஆனால், முன்னர் ஆட்சியதிகாரத்தில் இருந்தவர்களை விடவும் வேறுபட்ட சமூகப் பின்னணியுடனான அதிகப் பெரும்பான்மையானவர்களைக் கொண்டதாக இன்றைய அரசாங்கம் இருக்கிறது. இதை கடந்த வருடம் ஜனாதிபதி தேர்தலுக்கு பிறகு எழுதிய கட்டுரை ஒன்றில் இலங்கையின் முக்கியமான அரசியல் நிபுணரான  பேராசிரியர் ஜெயதேவ உயன்கொட மிகவும் தெளிவான முறையில் விளக்கியிருந்தார்.

“இலங்கையின் புதிய ஜனாதிபதியாக அநுரா குமார திசாநாயக்க பதவியேற்ற நிகழ்வு வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த புதிய தொடக்கம் ஒன்றை குறித்து நிற்கிறது. அரசியல் அதிகாரத்தின் வர்க்கத் தளங்களில் ஒரு திடீர் நகர்வை அடையாளப்படுத்துவதாக அந்த தொடக்கம் அமைகிறது. அதாவது கொழும்பை மையமாகக் கொண்ட — மேற்கத்தைய பாணி வாழ்க்கை முறையைப் பின்பற்றும் வசதிபடைத்த ஒரு சிறிய எண்ணிக்கையான  பிரிவினரிடம் இருந்து அதிகாரத் தளங்கள் உயர் வர்க்கத்தைச் சாராத  சமூக சக்திகளின் கூட்டணி ஒன்றுக்கு நகர்ந்திருக்கிறது. 

“காலனித்துவ ஆட்சியாளர்களிடம் இருந்து சுதந்திரமடைந்த நாளில் இருந்து இலங்கையின் ஜனநாயகம் அரசியல் அதிகாரத்தில் உயர் வர்க்கத்தவர்களின் இடையறாத தொடர்ச்சியை உத்தரவாதம் செய்திருந்தது என்றால், இப்போது அது கடந்த காலத்தில் இருந்து ஒரு விலகலை ஏற்படுத்தியிருக்கிறது ;  அது ஜனநாயகத்தினாலும் சுதந்திரமானதும் நேர்மையானதுமான தேர்தல்களினாலும் அவ்வப்போது தோற்றுவிக்கப்படக் கூடிய ஒரு வியத்தகு தருணமாகும்.

“குறிப்பாக, தேர்தல் முடிவுகள் அமைதியான — இரத்தம் சிந்தாத அதிகார மாற்றத்தைக் குறித்து நிற்கிறது. சுமார் ஏழு தசாப்தங்களாக வசதிபடைத்த சமூக வர்க்கங்களின் பிறப்புரிமை போன்று நிலைத்திருந்த ஊழல்தனமானதும் நாட்பட்டுப் போனதுமான அரசாங்க முறைமை ஒன்றை முழுவதுமாக மாற்றியமைப்பதற்கான  வாக்குறுதியுடன் புதிய ஜனாதிபதி தனது மக்கள் ஆணையைப் பெற்றிருக்கிறார். நிறுவனமயப்படுத்தப்பட்டிருந்த அரசியல் அதிகாரத்தின் மீதான வர்க்க ஏகபோகம் ஜனநாயகத்தின் ஊடாக பொதுமக்களினாலேயே இப்போது தகர்க்கப்பட்டிருக்கிறது” என்று பேராசிரியர் உயன்கொட எழுதினார்.

‘ அறகலய ‘ மக்கள் கிளர்ச்சி ‘ முறைமை  மாற்றத்தையும்’ புதிய அரசியல் கலாசாரத்தையும் வேண்டி நின்றது. அந்த சுலோகங்களை தனது கையில் எடுத்துக் கொண்டு தேர்தல்களைச் சந்தித்த  ஜனாதாபதி திசாநாயக்கவிடம் ‘மெய்யான மாற்றம் ‘  ஒன்றுக்கு வழிவகுக்கக்கூடிய ‘புதிய தொடக்கம்’  ஒன்றையே மக்கள் எதிர்பார்த்தார்கள். நாட்டை ஆட்சிசெய்ய வேண்டியவர்கள் யார் என்பதை தீர்மானிப்பதில்  வழமைக்கு மாறான தீவிர மாற்றத்தைச் செய்ததன் மூலமாக அந்த புதிய தொடக்கத்தை நோக்கிய  திசையில் முதலாவது அடியை இலங்கை மக்கள் எடுத்துக் கொடுத்தார்கள். 

ஆனால், முறைமை மாற்றம் என்பதையும் புதிய கலாசாரம் என்பதையும்  மக்கள் மாத்திரமல்ல, தேசிய மக்கள் சக்தியின் தலைவர்களும் கூட எவ்வாறானதாக விளங்கி வைத்திருக்கிறார்கள் என்பது தொடர்பில் சந்தேகம் எழக்கூடியதாக கடந்த ஆறு மாதகால அரசியல் மற்றும் ஆட்சிமுறை நிகழ்வுப் போக்குகள் அமைந்திருக்கின்றன. 

இலங்கையில் புதிய அரசியல்  கலாசாரம் என்பது வெறுமனே ஊழல் முறைகேடுகளும்  அதிகார துஷ்பிரயோகமும்  இல்லாத ஆட்சிமுறை என்று மாத்திரம் அர்த்தப்பட்டுவிடாது. சகல சமூகங்களையும் அவலத்துக்கு உட்படுத்திய  மூன்று தசாப்தகால உள்நாட்டுப் போருக்கு வழிவகுத்த தேசிய இனப்பிரச்சினைக்கு நியாயபூர்வமான அரசியல் இணக்கத் தீர்வொன்றைக்  காணவேண்டிய தேவையை தென்னிலங்கை மக்கள் உணரக்கூடிய சூழ்நிலை ஒன்றை உருவாக்குவதும் அந்த புதிய அரசியல் கலாசாரத்தின் தவிர்க்க முடியாத ஒரு அங்கமாக இருக்க வேண்டும்.

சிறுபான்மைச் சமூகங்களின் நியாயபூர்வமான அரசியல் அபிலாசைகளையும் மனக்குறைகளையும் ஏற்றுக்கொள்கின்ற மனநிலை தென்னிலங்கை அரசியல் சமுதாயத்துக்கு ஏற்படாத பட்சத்தில் புதிய கலாசாரம் என்பதில் எந்தவிதமான அர்த்தமும் இருக்கப்போவதில்லை. இதை  தேசிய மக்கள் சக்தியின் தலைவர்கள் புரிந்துகொண்டதற்கான எந்த அறிகுறியையும் கடந்த ஆறு மாதங்களில் காணமுடியவில்லை. 

பழைய அரசியல் அதிகார வர்க்கத்துக்கு காலங்காலமாக சேவை செய்த அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு பழைய ஒழுங்கை மாற்றுவதை  நோக்கிய செயற்பாடுகளை ஒரு இடதுசாரிக் கட்சி முன்னெடுப்பதில் உள்ள சிரமங்களை ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தியின் குறிப்பாக ஜே வி.பி.யின் தலைவர்களும் இதுவரையில் விளங்கிக் கொண்டிருப்பார்கள். 

உயர் சமூக வர்க்கங்களைச் சாராத பிரதிநிதிகள் என்ற வகையில் ஜனாதிபதி திசாநாயக்கவும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமும் மாற்றத்தை வேண்டி நிற்கும் சகல சமூகங்களையும் சேர்ந்த மக்களின் எதிர்பார்ப்புகளையும் உணர்வுகளையும் மதித்துச் செயற்படக்கூடிய ஆட்சியாளர்களாக தங்களால் மாறமுடியும் என்பதை இதுவரையான செயற்பாடுகள் மூலமாக எந்தளவுக்கு நிரூபித்திருக்கிறார்கள் என்ற முக்கியமான ஒரு கேள்வி இருக்கிறது.

https://arangamnews.com/?p=11905

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை! - நிலாந்தன்

3 months 2 weeks ago

ஊருக்கும் வெட்கமில்லை! உலகுக்கும் வெட்கமில்லை! ரணிலுக்கும் வெட்கமில்லை!- நிலாந்தன்

adminMarch 16, 2025

ranil-wickremesinghe-al-jazeera.jpg

சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள்,அவர்கள் யுத்த வெற்றிவாதிகளாக இருந்தாலும் சரி, அல்லது லிபரல் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, அல்லது சமூக நீதி முகமூடி அல்லது மாற்றத்தின் முகமூடி அணிந்தவர்களாக இருந்தாலும் சரி, யாருமே தமிழ் மக்களுக்கோ அல்லது இறந்த காலத்துக்கோ பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதைத்தான் இப்பொழுது நடந்து கொண்டிருக்கும் ஐநாவின் 58ஆவது கூட்டத் தொடர் உணர்த்துகின்றது. ஐநா கூட்டத்தொடரில்,கடந்த மாதம் 25ஆம் திகதி,தேசிய மக்கள் சக்தியின் வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத் ஆற்றிய உரையில் ஐநாவின் பொறுப்புக் கூறலுக்கான பன்னாட்டு நிகழ்ச்சித் திட்டத்தை நிராகரித்திருந்தார். ”சிறீலங்கா பொறுப்புக் கூறலுக்கான நிகழ்ச்சித்திட்டம்”(Sri Lanka accountability project) எனப்படும் அப்பொறிமுறையானது கடந்த 2021ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலிருந்து செயற்பட்டு வருகின்றது. போர்க்களத்தில் நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பான சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு பலவீனமான ஆனால் பன்னாட்டுப் பொறிமுறை அதுவாகும்.

தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் பன்னாட்டுப் பொறிமுறையை நிராகரித்து ஒன்பது நாட்களின் பின், ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வாய் மூல அறிக்கை வெளிவந்து நான்கு நாட்களின் பின், ரணில் விக்கிரமசிங்கவின் அல்ஜசீரா நிகழ்ச்சி வெளிவந்திருக்கிறது. அந்த நிகழ்ச்சியும் சிங்களத் தலைவர்கள் யாராயிருந்தாலும் குற்றங்களுக்குப் பொறுப்புக்குகூற மாட்டார்கள் என்பதைத்தான் உலகத்துக்கு எடுத்துக் கூறியுள்ளது.

ஜெனிவா கூட்டத்தொடர் நடந்து கொண்டிருக்கும் ஒரு பின்னணியில் மேற்படி காணொளி வெளிவந்திருக்கிறது. ஏற்கனவே ஈஸ்டர் குண்டு வெடிப்பு தொடர்பான ஒப்புதல் வாக்குமூலம் அடங்கிய காணொளி உள்ளடங்களாக ‘சனல் நாலு’ காணொளிகள் இவ்வாறு ஐநா கூட்டத் தொடர்கள் நடந்து கொண்டிருந்த காலப்பகுதியிலேயே வெளிவந்தனை என்பதையும் இங்கு தொகுத்துக் கவனிக்கவேண்டும். தேசிய மக்கள்சக்தி அரசாங்கத்துக்கு மறைமுகமாக அழுத்தங்களைப் பிரயோகிக்கும் உள்நோக்கங்கள் இதில் உண்டா என்றும் பார்க்க வேண்டும். கடந்த 15ஆண்டுகளிலும் இவ்வாறு பிரயோகிக்கப்பட்ட அழுத்தங்களின் விளைவாக தமிழ்மக்களுக்கு என்ன கிடைத்தது என்பதையும் தொகுத்துப் பார்க்கவேண்டும்.

இனி அந்தக் காணொளிக்குள் நுழைவோம். முதலில்,அந்த நிகழ்ச்சி எவ்வாறு கட்டமைக்கப்பட்டது என்பதைப் பார்க்க வேண்டும். அது ஒரு நேர்காணல் என்பதைவிடவும் குறுக்கு விசாரணையாகவே பெருமளவுக்கு அமைந்திருந்தது. மஹ்தி ஹசன் நன்கு வீட்டுவேலை செய்துகொண்டு வந்திருந்தார். விரல் நுனியில் தகவல்களை வைத்திருந்தார். வீட்டுவேலை செய்யாமல் கேள்வி கேட்கப்போகும் ஊடகவியலாளர்கள் அவரிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். அது புலம் பெயர்ந்த தமிழர்கள் பலமாக உள்ள ஒரு களம். புலம்பெயர்ந்த தமிழர்களை எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்று தெரிந்திருந்தும் ரணில் அநாயாசமாகப் போய் மாட்டிக் கொண்டார். இனி எந்த ஒரு சிங்களத் தலைவரும் இப்படிப்பட்ட நிகழ்ச்சிக்கு போவதற்கு முன் ஒன்றுக்கு பலதடவை யோசித்து முடிவெடுக்க வேண்டிய ஒரு நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியிருக்கும் நிகழ்ச்சி அது. ஒரு விதத்தில் புலம்பெயர்ந்த தமிழ்ச் சமூகத்தின் பலத்தையும் அது காட்டியது.

ரணிலைச் சுற்றிவளைக்கும் கேள்விகள். அவர் கதைத்துக் கொண்டிருக்கும் பொழுதே மஹ்தி ஹசன் குறுக்கே பாய்ந்து கேள்விகளைக் கேட்கிறார். சில இடங்களில் ரணில் கூறும் பதில்களைப் பொருட்படுத்தாமலேயே கடந்து போகிறார். சில பதில்களுக்கு மறுத்தான்களை அனாயசமாகத் தூக்கிப்போட்டு விட்டுப் போகிறார். அந்த நிகழ்ச்சி முழுவதிலும் மஹ்தி ஹசன் ஒரு குறுக்கு விசாரணை செய்யும் அதிகாரியின் தோரணையிலேயே பெருமளவுக்கு நடந்து கொண்டார். அந்த நிகழ்ச்சிக்கு கிடைத்த கவர்ச்சியும் அதுதான். தமிழ்த் தரப்பு அதை கொண்டாடுவதற்கு பிரதான காரணங்களில் அதுவும் ஒன்று.

ஆனால் மஹ்தி ஹசன் எவ்வளவுதான் சுற்றிவளைத்தாலும் ரணில் பெருமளவுக்கு உணர்ச்சிவசப்படவில்லை என்பதனை பலரும் கவனிக்கத் தவறுகிறார்கள். ரணில் வெகு ‘கூலாக’ பதில் கூறுகிறார். அவருடைய சிறிய தொந்தியில் வழுகும் கழுத்துப்பட்டியை இடைக்கிடை சரிசெய்து நேராக்கியபடி மிகவும் ‘கூலாக’அவர் பதில் கூறுகிறார். ஒரு இடத்தில் மஹ்தி ஹசனைப் பார்த்து “பொறுமையை இழக்காதீர்கள்”என்று சொல்லுகிறார். அதை அவர் மஹ்தி ஹசனுக்குச் சொன்னாரா? அல்லது தனக்குத் தானே சொன்னாரா?

அவர் கூறும் பதில்களில் பல இக்கட்டுரையின் நோக்கு நிலையில், அதாவது தமிழ் நோக்கு நிலையில் மோசமானவை. ஆனால் ரணில் முக்கியமான இடங்களில் மிகவும் கூலாகப் பதில் சொல்லுகிறார். சிரித்துக் கொண்டே தன்னை காந்தியோடு ஒப்பிடுகிறார். சிரித்துக்கொண்டே இலங்கை ஒரு வன்முறை இல்லாத நாடு என்று கூறுகிறார். சிரித்துக்கொண்டே சில கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாது என்று கூறுகிறார்.

அதே சமயம் அவர் சொன்ன பதில்கள் பலவற்றிலிருந்து உலக சமூகமும் குறிப்பாக ஐநா ஒரு தெளிவான செய்தியைப் பெறக்கூடியதாக இருந்தது. அது என்னவென்றால், சிங்களபௌத்த அரசுத் தலைவர்கள் யாராக இருந்தாலும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பதுதான்.

2015ஆம் ஆண்டு பொறுப்புக் கூறலுக்கான ஐநாவின் தீர்மானத்திற்கு இணையனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்கதான். நிலைமாறு கால நீதிக்கான அந்த தீர்மானத்துக்கு ரணில்-மைத்திரி அரசாங்கம் இணை அனுசரணை வழங்கியது. அதற்கு முன்னரும் பின்னரும் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானங்களுக்கு எந்த ஒரு இலங்கை அரசாங்கமும் இணை அனுசரனை வழங்கவில்லை. மட்டுமல்ல,அந்த தீர்மானங்களுக்கு எதிராகவே காணப்பட்டன. ஆனால் ஒரே ஒரு தீர்மானம்,அதுவும் பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம்,அதற்கு இணை அனுசரணை வழங்கிய ஒரே ஒரு தலைவர்,ஒரு பகிரங்க நிகழ்வில் வைத்துப் பொறுப்புக்கூறத் தயாரில்லை என்பதனை வெளிப்படுத்துகிறார். அப்படியென்றால் ஐநாவில் இலங்கை அரசாங்கம் வழங்கிய இணை அனுசரணைக்குப் பொருள் என்ன?

பான் கி மூன் கேட்டுக் கொண்டதற்கு இணங்க மஹிந்த விசாரணைக் குழுக்களை உருவாக்கினார். ஆனால் அவை உண்மையைக் கண்டுபிடிக்கவில்லை. அல்லது அவை கண்டுபிடித்த அற்ப உண்மைகளையும் கூட மகிந்த ஏற்றுக்கொள்ளவில்லை. ஆனால் ரணில் அதைவிட ஒருபடி மேலே சென்று ஒரு தீர்மானத்துக்கு இணை அனுசரணை வழங்கினார். அதுவும் இலங்கைத் தீவில் நிலைமாறுகால நீதியை ஸ்தாபிப்பதற்கான அதாவது பொறுப்புக் கூறலுக்கான தீர்மானம். ஆனால் அவரும் அந்தத் தீர்மானத்துக்கு விசுவாசமாக இருக்கவில்லை. ஐநாவைப் பேய்க் காட்டுவதற்காகத்தான் அவர் அவ்வாறு இணை அனுசரனை வழங்கினார் என்பதைத்தான் அந்த நிகழ்ச்சி வெளிப்படுத்தியது.

ஆனால் அதற்காக அவர் வெட்கப்படவில்லை.என்பதுதான் இங்குள்ள பயங்கரமாகும்.

ஜேவிபியின் இரண்டாவது ஆயுதப் போராட்டத்தின்போது சிங்கள மக்கள் சித்திரவதை செய்யப்பட்ட, கொல்லப்பட்ட குற்றச்சாட்டுகள் தொடர்பாகவும் சரி,தமிழ் மக்களுக்கு எதிராக நிகழ்ந்த இன அழிப்புக் குற்றச்சாட்டுகளுக்கும் சரி,ஈஸ்டர் குண்டு வெடிப்புத் தொடர்பான குற்றச்சாட்டுகளுக்கும் சரி,அவர் பொறுப்புக்கூறத் தயாராக இருக்கவில்லை.பொறுப்பற்ற தனமாகப் பதில் சொன்னார்.

இலங்கைத்தீவின் வரலாற்றில் ஒரு முன்னாள் அரசத் தலைவர் அதுபோல எங்கேயும் அவமானப்படுத்தப்பட்டதாக எனக்கு நினைவில்லை. ’உன்னுடைய வயதை விட என்னுடைய அரசியல் வாழ்வின் காலம் அதிகமானது’ என்று ரணில் சிரித்துக் கொண்டு செல்லலாம். ஆனால் அவ்வளவு அனுபவசாலியான அவர் அதுபோல வேறு எங்கேயும் அவமானப்படவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

அதாவது சிங்களபௌத்த அரசுக் கட்டமைப்பை அம்பலப்படுத்திய ஆகப் பிந்திய நிகழ்ச்சி அது. சிங்கள பௌத்த அரசு தலைவர்கள் தமிழ் மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்; கொல்லப்பட்ட சிங்கள மக்களுக்கும் பொறுப்பு கூற மாட்டார்கள்;முஸ்லிம்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள்;மட்டுமல்ல சிங்களக் கத்தோலிக்கர்களுக்கும் பொறுப்புக்கூற மாட்டார்கள் என்பது அங்கே தெளிவாகத் தெரிந்தது.
எல்லாக் குற்றங்களையும் செய்துவிட்டு அல்லது குற்றவாளிகளைக் காப்பாற்றிக் கொண்டு கூலாக அவர் சொன்ன பதில்கள் யாவும், இனஅழிப்புச் செய்தவர்களையும் தமது அரசியல் வெற்றிகளுக்காக முஸ்லிம் மக்களை பலியிட்டவர்களையும் அவர் பாதுகாக்கிறார் இன்று நம்பப் போதுமானவைகளாக இருந்தன. அதாவது குற்றங்களைப் பாதுகாக்கும் குற்ற மயப்பட்ட ஒரு அரசுக் கட்டமைப்புக்கு அவர் தலைவராக இருந்திருக்கிறார் என்பதை அவர் வெளிப்படுத்தினாரா?

மகா சங்கத்துக்கு விசுவாசமாக அவர் கூறிய பதிலில் தன்னை ஒரு சிங்கள பௌத்தனாகப் பிரகடனப்படுத்துகிறார். அங்கே அவருடைய லிபரல் முகமூடி பாரதூரமாகக் கிழிகிறது. ஆனால் அவர் கூலாகப் பதில் கூறுகிறார்.

இதில் தமிழ் மக்களுக்குப் புதிதாக எதுவும் இல்லை. ஏனென்றால் ரணிலைப் பற்றி ஏற்கனவே தமிழ்மக்கள் மத்தியில் மிகப்பலமான ஒரு படிமம் உண்டு. அன்ரன் பாலசிங்கம் அவரை நரி என்று அழைத்ததை தமிழர்களில் பெரும்பாலானவர்கள் திரும்பத்திரும்ப மேற்கோள் காட்டுவது அந்த அடிப்படையில்தான். எனவே ரணில் யார் என்பது தமிழ் மக்களுக்குத் தெரியும்.

ஆனால் இங்குள்ள கேள்வி என்னவென்றால் ரணிலோடு இணைந்து நல்லாட்சிக் காலகட்டத்தில் அதாவது 2015 இல் இருந்து 18 வரையிலுமான காலப்பகுதியில், நிலைமாறு கால நீதிக்காக உழைத்த தமிழ்ப் பிரதிநிதிகள் இருக்கிறார்களே, அவர்கள் இதற்கு என்ன பதில் சொல்லப் போகிறார்கள்?

அவர்கள் ரணிலை மட்டும் பாதுகாக்கவில்லை,கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது சஜித்தையும் பாதுகாத்தார்கள்.சஜித்தும் ரணிலைப்போலதான்.கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் நடந்து கொண்டிருந்த அதே காலப்பகுதியில்தான் ஐநா கூட்டத் தொடரும் நடந்தது.அப்பொழுது சஜித் ஐநா தீர்மானங்களுக்கு எதிரான நிலைப்பாட்டைத்தான் கொண்டிருந்தார்.ரணில் மட்டுமல்ல சஜித்தும் பொறுப்புக்கூறத் தயார் இல்லை. அதுவும் ஜனாதிபதித் தேர்தலில் அவர் தமிழ் வாக்குகளை எதிர்பார்த்துக் கொண்டிருந்த அதே காலகட்டத்தில்தான் பொறுப்புக்கூறல் தொடர்பில் பன்னாட்டு பொறிமுறைகளுக்கு எதிராகத் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருந்தார். இது நல்லூர் கிட்டுப் பூங்காவில் நடந்த,பொது வேட்பாளருக்கான கடைசிப் பிரச்சார கூட்டத்தில்,மேடையில் வைத்துப் பகிரங்கமாகச் சுட்டிக்காட்டப்பட்டது.

ஆனால் தமிழ்மக்களின் வாக்குகளை சுமந்திரன் சஜித்துக்கு வாங்கி கொடுத்தார்.தேசத் திரட்சிக்காக,பொது வேட்பாளராக நிறுத்தப்பட்ட அரிய நேத்திரனை சுமந்திரனுக்கு விசுவாசமான மத்திய குழு கட்சியை விட்டு நீக்கியிருக்கிறது. அதாவது சிங்களத் தலைவர்கள் இறந்த காலத்துக்கு பொறுப்புக்கூறத் தயார் இல்லை. தமிழ் மக்களின் வாக்குகளை அவர்களுக்குச் சாய்த்துக் கொடுக்கும் தமிழ்த் தலைவர்களும் தமிழ்மக்களுக்குப் பொறுப்புக்கூறத் தயாரில்லை.

https://globaltamilnews.net/2025/213515/

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்!

3 months 2 weeks ago

Courtesy: I.V. Mahasenan

கடந்தவாரம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதிஏறத்தாழ ஐந்து தசாப்த அரசியல் வரலாற்றை பகிரும் ரணில் விக்ரமசிங்க, சர்வதேச ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலே, இலங்கை அரசியலில் கொதிநிலை விவாதத்தை உருவாக்கி உள்ளது.

குறிப்பாக ரணிலின் சலனம், இலங்கையின் வன்முறை அரசியல் கலாசாரத்தை பொது வெளியில் தோலுரிப்பதாக அமைந்திருந்தது. மறுதலையாக ரணில் தனது இராஜதந்திர உரையாடலால் இலங்கையை சர்வதேச அரங்கில் பாதுகாத்துள்ளார் என்ற வாதங்களும் ஒரு சிலரால் முன்வைக்கப்படுகின்றது.

எனினும் நேர்காணல் வெளியானதைத் தொடர்ந்து, ரணிலின் அவசரமான ஊடக சந்திப்பில் புலி, பூச்சாண்டி மற்றும் பௌத்த சங்கங்களிடம் சரணாகதி உரையாடல்கள், தனது சலனத்தை ஏற்றுக்கொண்டுள்ளதாகவே அமைந்திருந்தது. இந்நிலையில் நேர்காணலில் ஊடகவியலாளரால் முன்வைத்த பட்டலந்த வதைமுகாம் விவாகரம் தென்னிலங்கை அரசியலில் முதன்மையை பெற்றுள்ளது.

ரணிலின் நேர்காணல் 

மாறாக ஈழத்தமிழர்கள் ரணிலின் சலனமான நிலைமைகளை இரசித்ததுடன் கடந்து சென்றுள்ளார்கள். இக்கட்டுரை பட்டலந்த விவகாரம் முக்கியத்துவம் பெறுமளவிற்கு, ரணில் விக்ரமசிங்கவின் உரையாடலில் காணப்பட்ட இனப்படுகொலை சாட்சியங்கள் போதிய கவனத்தை பெறாமைக்கான அரசியல் பலவீனங்களை அடையாளங் காண்பதாகவே உருவாக்கப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

கடந்த மார்ச்-06அன்று அல் ஜசீரா (Al Jazeera) எனும் சர்வதேச ஊடகத்தில் இலங்கையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் நேர்காணல் ஒன்று ஒளிபரப்பப்பட்டது.

குறித்த நிகழ்ச்சியில் ரணிலிற்கு வழங்கப்பட்ட அறிமுகத்தை பதிவு செய்வதே, இலங்கை அரசியலில் அவரின் முக்கியத்துவத்தையும், ஈழத்தமிழர் மீதான இலங்கை அரசாங்கங்களின் ஒடுக்குமுறையில் அவரின் சாட்சியத்தின் முக்கியத்துவத்தையும் புரிந்து கொள்ள இலகுவானதாக அமையும். ‘ரணில் விக்ரமசிங்க, இலங்கை அரச நிறுவன ஆதரவாளராகவே பார்க்கப்பட்டுள்ளார்.

ஒருமுறை ஜனாதிபதியாகவும் ஆறு முறை பிரதமராகவும் நிதி, தொழில் அறிவியல், தொழில்நுட்பம், கல்வி, இளைஞர் விவகாரங்கள் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சராகவும் வெளிநாட்டலுவல்கள் பிரதி அமைச்சராகவும் 1977ஆம் ஆண்டு முதல் இலங்கை அரச நிறுவனத்தின் அனைத்து பதவிகளையும் வகித்துள்ளார்.

இத்தகையதொரு இலங்கை அரச நிறுவன ஆதரவாளர், இலங்கை அரச நிறுவனத்தின் பலவீனங்களை ஏற்றுக்கொள்வது, அதனூடாக மேற்கொள்ளப்பட்ட வன்முறைகளை ஏற்றுக் கொள்வதும் உயர்வான வாக்குமூலமாகும். குறித்த நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் ரணில் பதிலளிக்க முடியாத நிலையில் சலனப்பட்டார். ஒரு சந்தர்ப்பத்தில் ரணில் இலங்கையை வன்முறையற்ற நாடாக குறிப்பிட்டிருந்தார்.

உள்நாட்டுப் போர் 

‘ஹிமாலய குன்றிலிருந்து நாம் வன்முறையற்ற ஒரு நாடாகும்’ என்றவாறு குறிப்பிட்டிருந்தார். அதற்கு குறுக்கிட்ட நேர்காணல் செய்பவர், ‘நீங்கள் 26 வருடங்கள் நீடித்த உள்நாட்டுப் போரின் பின்னணியில் ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததை பற்றி கூறுங்கள்’ என்றவாறு வினா எனுப்பினார். ‘பதில் சொல்லப் போவதில்லை’ என ரணில் மறுதலித்திருந்தார்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

இவ்வாறே உள்நாட்டு போரில் பாதிக்கப்பட்டவர்களுக்கான நீதி பற்றி எழுப்பப்பட்ட கேள்விகளுக்கும், பதில் வழங்க மறுத்திருந்தார். இது வெளிப்படையாக இலங்கை அரசாங்கங்களின் பொறுப்புக்கூறலற்ற தன்மையையே வெளிப்படுத்தியிருந்தது. மேலும் பார்வையாளர் தரப்பிலிருந்து 2009ஆம் இறுதிக்கட்ட போரில் இலங்கை அரச இயந்திரம் வைத்தியசாலைகள் மீது குண்டு வீசியது தொடர்பில் கேள்வி எழுப்பப்பட்டது.

ஆரம்பத்தில் நிராகரித்த போதிலும், பார்வையாளர்களிடம் ஏற்பட்ட கூச்சலை தொடர்ந்து வைத்தியசாலைகள் மீதான தாக்குதலை ரணில் ஏற்றுக்கொண்டார். ‘முள்ளிவாய்க்காலில் மருத்துவமனைகள் குறித்த குற்றச்சாட்டுகள் வந்துள்ளன. மற்ற சில சம்பவங்களை விசாரணை செய்தோம். கொலைகள் நடந்த சில சந்தர்ப்பங்களில் விமானப்படையின் நடவடிக்கைகள் குறித்து நடவடிக்கை எடுக்கப்பட்டது.

ஆனால், மருத்துவமனைகள் மீது திட்டமிட்ட தாக்குதல்கள் நடத்தப்பட்டன என்று கூற முடியாது. போரின் இறுதிக்கட்டத்தில் சில பிரச்சினைகள் இருந்தன, அதனை மறுக்க மாட்டேன்’ என முன்பின் முரணாக கருத்துரைத்தார். ரணிலின் அல் ஜசீரா நேர்காணல், ஒருவகையில் ஈழத்தமிழர்களின் சர்வதேச நீதிவிசாரணைகளை நியாயப்படுத்துவதுடன், முன்னாள் ஜனாதிபதி ரணிலை இனப்படுகொலையின் சாட்சியமாக்கியுள்ளது.

எனினும் இத்தகையதொரு விளைவுசார் அரசியலை ஈழத்தமிழரசியலில் அவதானிக்க முடியவில்லை. சமுக வலைத்தளங்களில் மீம்ஸ்களாவும் (Memes - போன்மி), பதிவுகளாகவும் (Status) தமிழ் இளையோர்களின் ஆதங்கமே உயர்ந்தபட்ச விளைவுகளாக அமைகின்றன. அப்பதிவுகள் கடலலையில் இழுத்தடிக்கப்படும் பொருட்கள் போல் புதிய அலையில் இன்னொரு பொருளை காவிச்சென்று விடுகிறன.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

அரசியல் விளைவுகளை அறுவடை செய்ய வேண்டிய தமிழ் அரசியல் தரப்பின் உரைகளில் ரணிலின் நேர்காணலும் ஈழத்தமிழர்களின் நலன்களும் போதிய உள்ளடக்கத்தை பெறவில்லை. தமிழ் அரசியல்வாதிகளிடையே ரணில் தொடர்பிலான கடந்த கால விசுவாசம் நிலை பெற்றுள்ளதையே உணர முடிகின்றது. தமிழ் அரசியல் தரப்பிடமிருந்து காத்திரமான எதிர்வினைகள் ரணில் நேர்காணலில் வழங்கிய வாக்குமூலத்துக்கு கிடைக்கப்பெறவில்லை.

குறைந்தபட்சம் நேர்காணலில் ரணில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தொடர்பில் கூறிய கருத்திற்கு கூட அவர்கள் எதிர்வினையாற்றியிருக்கவில்லை.

இதுவொரு வகையில் ரணிலின் கருத்தை ஏற்பதாகவே அமைகிறது. 2022ஆம் ஆண்டு நாடாளுமன்ற உறுப்பினர்களால் ஜனாதிபதியை தெரிவு செய்கையில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பு டலஸ் அழகப்பெருமவையே ஆதரித்திருந்தது. இரகசிய வாக்கெடுப்பில் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் பலரும் தமக்கே வாக்களித்ததாக அன்றைய காலப்பகுதியில் ரணில் குறிப்பிட்டிருந்தார். அதே கருத்தை அல் ஜசீரா நேர்காணலிலும் குறிப்பிட்டிருந்தார்.

‘முக்கியமான தமிழ் உறுப்பினர்களில் சிலரும் எனக்கு வாக்களித்தனர். நாடாளுமன்ற உறுப்பினர்களில் பாதி பேர் டலஸ் அழகப்பெருமவிற்கு வாக்களித்தனர். மற்றவர்கள் எனக்கு வாக்களித்தனர்’ எனத் தெரிவித்திருந்தார். ரணிலின் கருத்து பிழையெனில் உறுப்பினர்கள் நிராகரித்திருக்க வேண்டும். நிராகரிப்பற்ற நிலை ஏற்பதாவே அமைகின்றது.

இத்தகைய உறவின் பின்னணியிலேயே ரணிலின் வாக்குமூலங்களை முன்னிறுத்தி உரையாடி, அவரை நெருக்குவாரத்துக்கு தள்ள தமிழ் கட்சிகள் விரும்பவில்லை. தமிழ்த் தேசிய கூட்டமைப்பாக இயங்கிய கட்சிகளும் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியத்துக்கு விசுவாசமாக செயற்படுபவர்களாயின், ரணிலின் நேர்காணல் கருத்துக்கு எதிர்வினையாற்றிருக்க வேண்டியது அவசியமாகும்.

 ரணில்-மைத்திரி

2015-2019ஆம் ஆண்டு காலப்பகுதியில் ரணில்-மைத்திரி தேசிய அரசாங்கத்தோடு இதயத்தால் ஒப்பந்தம் மேற்கொண்டு காதல் கொண்டிருந்தார்கள். தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் மறைந்த தலைவர் இரா.சம்பந்தனது எதிர்க்கட்சி தலைவர் பதவி என்பது கௌரவ பதவியாகவே காணப்பட்டது. செயற்பாட்டில் அரசாங்க விசுவாசத்தையே வெளிப்படுத்தினார்கள்.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

ரணிலுடன் இணைந்து ஜ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை அரசாங்கத்துக்கான கால அவகாசத்துக்கான ஆதரவை வழங்கினார்கள். சர்வதேச அரங்கில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தினார்கள். அவ்வாறே 2024ஆம் ஆண்டு காலப்பகுதியில் இன்றைய தமிழரசுக் கட்சியின் பதில் செயலாளர், ‘2005 ஆண்டில் ரணிலின் பயணத்துக்கு வடக்கு மக்கள் தடையாக இருந்திருக்கலாம். அதை அவர்கள் இப்போதாவது வருத்தத்துடன் நினைவு கூர்வார்கள்’ என ஆதங்கப்பட்டிருந்தார்.

இத்தகைய செயற்பாடுகளும் உரைகளும் ரணில் மீதான தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நம்பிக்கையையே எடுத்துக்காட்டுகிறது. எனினும் ரணில், நேர்காணலில் பல சந்தர்ப்பங்களில் உள்நாட்டு போரின் அழிவுகளுக்காக தமிழ் மக்களுக்கு பொறுப்பு கூறல் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விகளை நிராகரித்திருந்தார்.

இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பு கடந்த காலங்களில் ரணிலின் பொறுப்புக்கூறல் மீது நம்பிக்கையை வெளிப்படுத்தி, கூட்டாக செயற்பட்டமையின் ஏமாற்றத்தையே குறிக்கிறது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் ஏமாற்றம் என்பது அவர்களின் பின்னால் திரட்டப்பட்ட தமிழ் மக்களை ஏமாற்றும் செயலாகும்.

ஒற்றையாட்சி 

தமிழ் மக்களை ரணிலின் பின்னால் அழைத்து சென்ற தமிழரசு கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் கட்சிகள் ரணிலின் பொறுப்புக்கூறலற்ற செயலை கண்டிப்பது தார்மீக கடமையாகும். எனினும் அக்கட்சிகளிடமிருந்து அத்தகைய எந்தவொரு எதிர்வினையும் வரவில்லை. இது தமிழரசுக்கட்சி தலைமையிலான தமிழ்த்தேசிய கூட்டமைப்பாக செயற்பட்ட கட்சிகளும் ரணிலுடன் இணைந்து தமிழ் மக்களை ஏமாற்றியுள்ளார்கள் என்பதையே வெளிப்படுத்துகிறது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

மேலும், தமிழ் அரசியல் கட்சிகள் யாவும் தேர்தல் மைய கட்சிகளாகவே உள்ளன. இலங்கையின் ஒற்றையாட்சி அரச நிர்வாக கட்டமைப்பை விமர்சித்துக்கொண்டு, அவ்வொற்றையாட்சி நிர்வாக கட்டமைப்பில் கதிரைகளை நிரப்புவதை இலக்காக கொண்டே செயற்படுகின்றார்கள். மாறாக தமிழ் மக்கள் விடுதலைக்காக போராடும் தேசிய இனமாக, ஓர் இயக்கமாக செயற்படும் மனநிலையில் இல்லை.

சமகாலத்தில் உள்ளூராட்சி தேர்தலுக்கான அறிவிப்பை தென்னிலங்கை அரசாங்கம் விடுத்துள்ள நிலையில், அதற்கு இழுபட்டு இயங்கும் நிலையிலேயே உள்ளனர். அதற்கான கூட்டுக்களை உருவாக்குவதிலேயே முனைப்பாக உள்ளார்கள். மாறாக ரணிலின் நேரலையில் இனப்படுகொலையின் சாட்சியமாக அளிக்கப்பட்ட வாக்குமூலங்களை முன்னிறுத்தி அரசியல் செய்யக்கூடிய சிந்தனை இல்லை.

சமுகவலைத்தளங்களில் இளையோர்களிடம் உருவாகிய ஆதங்கத்திற்கு கூட தமிழ் அரசியல் கட்சிகள் வினையாற்ற தயாராக இல்லை. இது தமிழ் மக்களிடமிருந்து கட்சிகள் விலகியுள்ளமையை உணர்த்துகின்றது. இவ்விலகிலே பொதுத்தேர்தலின் வீழ்ச்சிக்கு காரணமாகியது.

வீழ்ச்சியிலிருந்து படிப்பினையை கற்காதவர்களாய், அதேநிலையில் உள்ளூராட்சி சபை தேர்தல்களை எதிர்கொள்வதும் தமிழ் கட்சிகளின் தோல்வியையே எதிர்வு கூறுகிறது. ஜனநாயக அரசியல் நீரோட்டத்தில் தேர்தல் அரசியல் பிழையான உத்தியாக கருத முடியாது. எனினும் விடுதலைக்காக போராடும் தேசிய இனத்தின் அரசியல் போராட்டத்தில் தேர்தல் அரசியல் மாத்திரமே உத்தியாக கருத முடியாது. தேர்தல் அரசியல் ஒரு பகுதியே ஆகும். தமிழ் அரசியல் கட்சிகள் அவ்வாறானதொரு போக்குடன் இயங்குவதில்லை.

சர்வதேச விசாரணையை கோரும் ஈழத்தமிழர்களிற்கு, சர்வதேச ஊடகமொன்றில் முன்னாள் ஜனாதிபதிக்கான நெருக்கீடு என்பது சாதகமானதாகும். சர்வதேச அரங்கில் வாக்குமூலமாக முன்னிறுத்தக்கூடிய பொறியாக காணப்படுகின்றது. எனினும் ஈழத்தமிழரசியலுடன் சர்வதேச தொடர்பு காணப்படுகின்றதா என்பதை சிந்திக்க வேண்டிய தேவை காணப்படுகின்றது. தேசிய இனங்கள் சர்வதேச உறவை பேண முடியாதென விலகிட முடியாது. மேற்காசியாவில் குர்துகள் அமெரிக்காவின் ஆதரவை பெற்றுள்ளார்கள்.

பலஸ்தீனிய ஹமாஸ் அணியினர் ஈரான் மற்றும் அதுசார் அணியின் ஆதரவை பெற்றுள்ளார்கள். சர்வதேச உறவு என்பது அணிசேர்க்கையும் அதுசார்ந்த கூட்டு செயற்பாடுகளுமேயாகும். ஈழத்தமிழர்களிற்கு அவ்வாறான, நிலையான சர்வதேச ஆதரவு தளம் சேர்க்கப்பட்டுள்ளதா என்பதை சிந்திக்க வேண்டியுள்ளது. புலம்பெயர் தமிழர்களின் செயற்பாட்டால், தமது வாக்கு பலத்தால் அரசாங்கங்களில் தலையிட்டு, ஈழத்தமிழருக்கு சாதகமான சில தீர்மானங்களை மேற்கொண்டுள்ள போதிலும், அவை நிலையான வெளியுறவுக் கொள்கையாக அரச நிகழ்ச்சி நிரலுக்குள் இணைக்க முடியவில்லை.

பட்டலந்த வதைமுகாம்

சர்வதேச அரசியலில் எந்த ஒரு நிலையான ஆதரவையும் உருவாக்காமலேயே, வாய் வீச்சளவில் ஈழத்தமிழ் அரசியல் தரப்பினர், சர்வதேச விசாரணையையும் சர்வதேச நம்பிக்கையையும் வெளிப்படுத்தி வருகின்றார்கள். இது வெறுமனவே அவர்களின் கட்சி அரசியல் நலன் சார்ந்த விடயமாகவே அமைகின்றது. மாறாக தமிழ் மக்களுக்கான தேசிய விடுதலைக்கான வாய்ப்புக்களை உருவாக்குவதாக இல்லை.

கிடைக்கும் வாய்ப்புக்களையே தமிழ் கட்சிகள் தொடருவதில்லை. எனினும் தென்னிலங்கை அரசாங்கம் நேர்காணலில் தமக்கு சாதகமானவற்றை தூக்கி, நேர்காணலின் இலக்கை பட்டலந்த விவகாரத்துக்குள் சுருக்கியுள்ளது. தொடர்ந்து 25 வருடங்கள் கிடப்பில் போடப்பட்ட பட்டலந்த வதைமுகாம் தொடர்பான விசாரணைக்குழுவின் அறிக்கை தூசி தட்டப்பட்டுள்ளது.

தென்னிலங்கை அரசியலில் பட்டலந்த பெற்ற வெளிச்சமும் ஈழத்தமிழர் அரசியல் பலவீனத்தால் வலுவிழந்த இனப்படுகொலை வாக்குமூலமும்! | Batalandha Issue Ranil Article In Tamil

தென்னிலங்கை அரசியலில் பூதாகரமான விவாதத்தை உருவாக்கிருந்தது. குறித்த அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பது தொடர்பில் அமைச்சரவை தீர்மானமும் மேற்கொள்ளப்பட்டிருந்தது. இதுவொருவகையில் நேர்காணலில் இலங்கை அரசிற்கு ஏற்பட்ட நெருக்கடியை தளர்த்து போகச் செய்யும் தென்னிலங்கை செயற்பாடாகவே அமைகின்றது.

நேர்காணலில் இலங்கை தொடர்பாக சர்வதேச ரீதியில் பேசுபொருளாகிய ஈஸ்டர் குண்டு தாக்குதல் மற்றும் உள்நாட்டு போரின் விளைவுகளுக்கான பொறுப்புக்கூறல் என்பனவே பிரதானமாகியது. அவற்றிற்கு இலங்கை அரசே பொறுப்புக்கூற வேண்டியுள்ளது. அதனடிப்படையில் இவ்விடயங்கள் மையப் பேசுபொருளாகுவது சமகால அரசாங்கத்திற்கும் நெருக்கடியை ஏற்படுத்துவதாகும். ஆதலாலேயே தென்னிலங்கை அரசாங்கம் தம்மை பாதுகாத்து கொள்ள, நேர்காணலை ரணில் மீது குற்றச்சாட்டை முன்னிறுத்தி பட்டலந்த விவகாரத்துக்குள் மாத்திரம் சுருக்கியுள்ளனர்.

எனினும் இதுவும் நிலையான முடிவை நோக்கி நகரப்போவதில்லை. பட்டலந்த விவகாரத்துக்கான முடிவு, ஈழத்தமிழர்களின் நீதிக்கோரிக்கையை வலுப்படுத்தக்கூடிய வாய்ப்பை உருவாக்கும். ஆதலால் தென்னிலங்கை அரசாங்கம் அதனை தீர்க்கமான முடிவுக்குள் நகர்த்தப் போவதில்லை என்பதே நிதர்சனம். தமிழ் அரசியல் கட்சிகள் ரணிலுக்கான விசுவாசத்திலிருந்து வெளியே வந்து, தமிழ் மக்களுக்கான விசுவாசத்துடன் பட்டலந்த விவகாரத்திற்கான தீர்வை பெற உந்துவது அவசியமானதாகும்.

எனவே, ரணில் விக்கிரமசிங்க அல் ஜசீராவிற்கு வழங்கிய நேர்காணல் சமுக வலைத்தளங்களில் இளையோர்களால் கொண்டாடப்பட்ட அளவிற்கு, தமிழ் அரசியல் கட்சிகளால் முதன்மைப்படுத்தப்பட்டிருக்கவில்லை. சர்வதேச விசாரணை எனும் கோரிக்கையை வலியுறுத்தும் அரசியல் கட்சிகள், சர்வதேச ஊடகமொன்றில் தமிழ் மக்களுக்கு சார்பாக கிடைக்கப்பெற்ற வாக்குமூலத்தை பலப்படுத்த எத்தகைய நடவடிக்கைகளையும் எடுத்திருக்கவில்லை.

இது ஈழத்தமிழர் நலன் சார்ந்த அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டை கேள்விக்குட்படுத்துவதாகவே அமைகின்றது. தமிழ்த் தேசிய முலாம் பூசப்பட்ட அரசியல் கட்சிகள் தமிழ் மக்களின் மனங்களை புரிந்து கொண்டு தமிழ் மக்களுக்கான அரசியலை செய்யாது, தென்னிலங்கை எஜமான்களை குளிர்விப்பதாகவும் - தமது அதிகார நலன்களுக்காவும் - குடும்ப கௌரவத்திற்காகவும் அரசியல் செய்யின், ஈழத்தமிழர்களின் அரசியல் எதிர்காலம் சூனியமாகவே அமையக்கூடியதாகும்.  

https://tamilwin.com/

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

3 months 2 weeks ago

தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டில் CTC-யும், முன்னாள் தலைவரும் ஒரே கோட்டிலா?

CTC-BANNER-960x564.png

கனடியத் தமிழரின்  குரல் எனத் தம்மை நியாயப்படுத்துவதில், கனடியத் தமிழர் பேரவை (பேரவை / CTC) தனது இருப்பின் பெரும்பகுதியைச் செலவழித்து வருகிறது.  ஆனால் அதன் நடவடிக்கைகள் அதற்கு முரணாக அமைந்துள்ளன என்ற குற்றச்சாட்டு மீண்டும் மீண்டும் எழுகிறது.

பின்வரும் விடயங்களில் CTC குறித்த கேள்விகள் உள்ளன:

1) தமிழர் உரிமைகளுக்காகப் போராடுவதாகப் பொது வெளியில் கூறிக் கொண்டாலும், முக்கிய விடயங்களில் மௌனம் காக்கும் தனது நிலைப்பாட்டை CTC மாற்றவில்லை,

2) தமிழர்களின் துயரங்களுக்குக் காரணமான இலங்கை அரசாங்கத்துடன் பேரவை தொடர்ந்து நெருக்கமான தொடர்பைப்  பேணி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது,

3) தமிழ் மக்களுக்கு எதிராக இழைக்கப்படும் அநீதிகளுக்கு நீதி கோரும் பொறிமுறைகளில் இருந்து CTC பின் தங்கியுள்ளது.

இந்த முரண்பாடுகள் கனடிய, தாயக, உலகத் தமிழர் சமூகத்தினால் கவனிக்கப்படாமல் இல்லை. ஈழத் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட  அநீதிகளுக்கு நீதியைப் பெற்றுக் கொடுக்க வேண்டும் என்ற கனடிய தமிழர்களின் அபிலாஷைகளைப்  பிரதிபலிக்கத்   தவறிய குற்றச்சாட்டுகளையும் CTC நீண்ட காலமாக தொடர்ந்து எதிர்கொண்டு வருகிறது.

புதிய நெருக்கடி நிலை

CTC இதுவரை காலமும் இல்லாத கடுமையான நெருக்கடி நிலை ஒன்றை இப்போது எதிர்கொள்கிறது. பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம் அனுப்பிய மின்னஞ்சல் ஒன்றின் அடிப்படையில் இருந்து சமீபத்திய சர்ச்சை உருவாகிறது.

raj-2-219x300.jpg

பேரவையின் முன்னாள் தலைவரும் மூத்த ஆலோசகருமான ராஜ் தவரட்ணசிங்கம்

கனடா முழுவதும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான அரசியல்வாதிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள இந்த மின்னஞ்சல், தமிழ் இனப்படுகொலை, தமிழ் மரபுத் திங்கள்  அங்கீகாரங்களையும், இவற்றுக்காக முன்னின்று செயற்பட்ட கனடியத்  தமிழ் அரசியல்வாதிகளையும், தமிழ்ச் சமூகச்  செயற்பாட்டாளர்களையும் கடுமையாகத் தாக்கியுள்ளது.  இந்த மின்னஞ்சல் பிரதி ஒன்றை “தேசியம்” பெற்றுள்ளது.

(இந்த மின்னஞ்சல் வாசகர்களின் பார்வைக்கு இங்கு இணைக்கப்பட்டுள்ளது)

Strengthening Canada Through Unity and Understanding

குறிப்பிட்ட மின்னஞ்சலின் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துக்கள் என ராஜ் தவரட்ணசிங்கம் வலியுறுத்துகின்றார்.  ஆனால், தனது நீண்ட பதவிக் காலத்தில்  பேரவைக்குள் ஒரு முக்கிய முடிவெடுக்கும் சக்தியாகச்  செயற்பட்ட பின்னணியில், அவர் தனது கருத்தையும் பேரவையின் கருத்தையும் வேறுபடுத்த முனைவது ஓர் அப்பட்டமான முரணாகும்.

மின்னஞ்சல் உள்ளடக்கம் தனது தனிப்பட்ட கருத்துகள் என ராஜ் தவரட்ணசிங்கம் கூறுவது எவ்வாறு உண்மையாக இருக்க முடியும்?  இந்தக்  கருத்துகள் எப்போதாவது பேரவையின் சொந்த நிலைப்பாட்டிலிருந்து உண்மையிலேயே வேறுபட்டு இருந்தனவா?

தமிழர்களின் முக்கிய அரசியல் விடயங்களில் தீர்க்கமாகச் செயற்படத் தவறியதற்காக பேரவை நீண்டகாலமாகக் குற்றச்சாட்டுகளை எதிர்கொண்டு வருகிறது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை  CTC பல ஆண்டுகளாக மறுத்துவந்தது . இறுதியாக May 2024 இல், ஒரு சுருக்கமான, அடையாள அறிக்கை மூலம் மாத்திரமே தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்ததை ஏற்றுக்கொள்வதாக முதல் தடவையாக CTC தெரிவித்தது. இது மிகவும் தாமதமானது எனப்  பலராலும் பரவலாக விமர்சிக்கப்பட்டது.

பேரவை, ஸ்ரீலங்கா அரச அதிகாரிகளுடன் கொண்டிருக்கும் தொடர்பு குறித்தும் கடுமையான கேள்விகளையும் விமர்சனங்களையும் எதிர்கொள்கிறது. கனடாவுக்கான இலங்கைத் தூதரக அதிகாரிகளுடன் நிகழ்வுகளில் பங்கேற்பது, தமது நிகழ்வுகளுக்கு இலங்கைத் தூதரக அதிகாரிகளை விருந்தினர்களாக அழைப்பது, தமிழ் இனப்படுகொலை விடயத்தில் அதன் மௌனம், கனடிய உள் விவகாரங்களில் இலங்கையின், வெளிநாடுகளின் தலையீடு (Foreign interference) குறித்து உறுதியான நிலைப்பாட்டை எடுக்கத் தவறியது உட்பட்ட விடயங்களில் பேரவையின் நகர்வுகள் குற்றச்சாட்டுகளை எதிர்கொள்கின்றன.

இந்நிலையில் , பேரவையின் மூத்த பிரமுகர்களுள் ஒருவரான ராஜ் தவரட்ணசிங்கத்தின் தமிழர் விரோத நிலைப்பாட்டின் வெளிப்பாடு, தமிழர் மத்தியில் நீண்ட காலமாக இருந்த கவலைகளையும் விமர்சனங்களையும் முன்னெப்போதும் இல்லாத அளவில் அபாயகரமானதாக்கியுள்ளது.

பல ஆண்டுகளாக, பேரவை தமிழ் கனடியருக்கான பெரும் சக்தியாக தன்னை சுயபிரகடனம் செய்துவந்துள்ளது. அதே நேரத்தில் முக்கிய விடயங்களில் தெளிவான நிலைப்பாடுகளை எடுக்க அது மறுத்து வருகிறது. தமிழர்களின் துயரங்களுக்குக்  காரணமானவர்களைக் கேள்விக்குட்படுத்தவும், பொறுப்புக்கூறலை வலியுறுத்தவும் அது தவறியுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தமிழ்ச் சமூகத்திடமிருந்து பேரவையை, தூர விலக்கியது மட்டுமல்லாமல், அதன் தலைமை மீது பரவலான அவ நம்பிக்கைக்கும் வழிவகுத்தது.

இமாலயப் பிரகடம் – மகிந்த ராஜபக்ச சந்திப்பு – பதவி விலகல்

இவற்றின் வெளிப்படையானதும் தெளிவானதுமான  உதாரணங்களுள் ஒன்று April 27 2023 அன்று நிகழ்ந்தது. உலகத் தமிழர் பேரவையின் (GTF) தலைமையிலான இமாலயப் பிரகடனத்தில் ராஜ் தவரட்ணசிங்கம் GTF-இன் அங்கத்துவ அமைப்பாக விளங்கிய பேரவையின் சார்பாக ஒப்பமிட்டார். இந்தப் பிரகடனம் தமிழர்களின் அரசியல் ஈடுபாட்டை நோக்கிய ஒரு முதல் படியாக பேரவையினால் நியாயப்படுத்தப்பட்டு விளக்கமளிக்கப்பட்டது.

Himalaya Declaration, with signatories

ஆனால் அது கனடாவிலும் தாயகத்திலும் ஏனைய நாடுகளிலும் கடுமையான கண்டனங்களை எதிர்கொண்டது.

இந்தப் பிரகடனம் குறித்து ஈழத் தமிழருடன் பேரவை கலந்தாலோசிக்கவில்லை. தவிரவும், தமிழருக்கு எதிராக இழைக்கப்படும் மனித உரிமை மீறல்கள், போர்க் குற்றங்கள், மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள், தமிழ் இனப்படுகொலை போன்ற விடயங்களில் மௌனம் காத்துள்ளது.

சில மாதங்களின் பின்னர், ராஜ் தவரட்ணசிங்கம் இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் நிற்கும் ஒளிப்படம் ஒன்று வெளியானது. பேரவை இந்த ஒளிப்படத்தை, “பெருமையுடன்” தனது சமூக வலைத்தளத்தில் வெளியிட்டது. மகிந்த ராஜபக்ச, தமிழர்களுக்கு எதிரான போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக பரவலாகக் குற்றம் சாட்டப்பட்டவர்.

Himalaya-Declaration-and-CTC.jpeg

வெளியான ராஜ் தவரட்ணசிங்கம் – இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச ஒளிப்படம்

மகிந்த ராஜபக்ச, அவரது சகோதரர் கோத்தாபய ராஜபக்ச உட்பட நான்கு பேர் கனடாவினுள்  நுழைய கனடிய அரசாங்கம் January 2023-இல் தடை விதித்தது. இலங்கைத்தீவின் இறுதி யுத்த காலத்தின் போது இவர்கள் இருவரும் முறையே ஜனாதிபதியாகவும் பாதுகாப்பு அமைச்சராகவும் இருந்தனர். மேலும் கனடாவில் உள்ள இவர்களின் சொத்துகள், நிதிச் செயற்பாடுகள் முடக்கப்படும் எனவும் கனடிய அரசாங்கம் அறிவித்தது. இவர்கள் தமிழருக்கு எதிரான மனித உரிமை மீறலில் ஈடுபட்டதாக இந்த முடிவு குறித்து கனடிய அரசாங்கம் அறிவித்தது.

இந்தத் தடை உத்தரவு அறிவிக்கப்பட்ட சில மாதங்களில் மகிந்த ராஜபக்சவைச் சந்திக்கவும், அவரோடு புகைப்படம் எடுக்கவும் முடிவெடுக்கப்பட்டது.  இதற்கு கடும் எதிர்ப்புக் கிளம்பியது. ஸ்ரீலங்காவின் அரச தலைமையுடன் தொடர்புகளைப் பேணுவதற்கு ஆதரவாக, நீதியை ஓரங்கட்டும் ஓர் இராஜதந்திரச் சூழ்ச்சியாகத் தோன்றிய பேரவையின் இந்த முயற்சியைக் கனடாவிலும் புலம்பெயர்ந்த நாடுகளிலும் உள்ள தமிழர் கண்டித்தனர்.

தனது தவற்றை ஏற்றுக் கொள்வதற்குப் பதிலாக, CTC ஆரம்பத்தில் தன்னை நியாயப்படுத்தியது. எதிர்ப்புகள் தொடர்ந்தாலும் கூட, இராஜதந்திர ஈடுபாட்டின் அவசியம் இது என தனது தவற்றுக்கு பேரவை நியாயம் கற்பித்தது. தொடர்ச்சியான நீண்ட சமூக அழுத்தத்தின்  பின்னர், உலகத் தமிழர் பேரவையில் இருந்து CTC தன்னை விலக்கிக் கொள்வதாக அறிவித்தது.

Himalaya-Declaration-withrowal-1024x374.

இவற்றின் பின்னணியில் ராஜ் தவரட்ணசிங்கம் தனது ஆலோசகர் பதவியில் இருந்து விலகினார். ஆனால் அவரது பதவி விலகல் பொது வெளியில் இருந்த மையக் கேள்விக்கு எந்த வகையிலும் பதிலளிக்கவில்லை.

இது பேரவையின் கடந்த காலத் தவறுகளை ஏற்றுக்கொண்டு திருந்த முயற்சிக்கும் ஓர் உண்மையான நகர்வா? அல்லது பேரவையை மேலும் விமர்சனங்களில் இருந்து பாதுகாப்பதற்கான ஒரு மூலோபாய நடவடிக்கையா?

தமிழர் தெருவிழாவும் சமூகத்தின் எதிர்வினையும்

தமிழ் அரசியல் விடயங்களை CTC கையாண்ட விதம் மற்றொரு சவாலை August 2024 இல் எதிர்கொண்டது.

தமிழினப் படுகொலை நினைவுச்சின்னம் அமைப்பதைத் தடுக்குமாறு Brampton நகர முதல்வர் Patrick Brown-க்கு Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo, May 3, 2024-இல்  கடிதம் ஒன்றை அனுப்பினார். கனடிய அரசாங்கம் இதற்கு உரிய முறையில் பதிலளித்தது. கனடாவின் உள்  விவகாரங்களில் வெளிநாடுகளின்  தலையீட்டுக்கு எதிரான உறுதியான நிலைப்பாட்டை எடுத்த கனடியப் பிரதமர் Justin Trudeau இதன் தீவிரத்தை ஒப்புக்கொண்டார். கனடிய வெளிவிவகார அமைச்சர் Mélanie Joly தனது கண்டனத்தையும் பதிவு செய்தார். இந்த நடவடிக்கையை வெளிநாட்டுத் தலையீடு எனக் கண்டித்த Patrick Brown, கனடியத்  தமிழர் பக்கம் உறுதியாக நின்றார்.

இலங்கை அரசாங்கத்துடன் சமாதான முன்னெடுப்புகளில் ஈடுபட்டு வருகின்றது என்ற குற்றச்சாட்டுகளை பேரவை சந்தேகத்துக்கு  இடமின்றி நிராகரித்தது. ஆனால் பேரவையுடன் இணைந்து இமாலயப் பிரகடன வேலைத் திட்டங்கள் உட்பட  நல்லிணக்க முயற்சிகள் இடம்பெறுவதாக இலங்கைத் தூதரகம் தனது கடிதத்தில் உறுதிப்படுத்தியது. தூதரகத்தின் இந்தக் கூற்றை CTC கண்டிக்கவும் இல்லை – நிராகரிக்கவும் இல்லை. ‘தேசியம்’ பெற்றுக்கொண்ட  இந்தக்  கடிதத்தின் பிரதி இங்கு இணைக்கப்படுகிறது.

LETTER TO PATRICK BROWN

கனடியத் தமிழர் சமூகம், பேரவையின் இந்த கேள்விக்குறியான  முடிவை அன்றும் அவதானித்தது – இன்றும் அவதானிக்கிறது.

CTC முன்னெடுக்கும் வருடாந்தக் கலை நிகழ்வான,  ‘தமிழர் தெருவிழா – 2024’ காலத்தில், சமூகத்தின் குமுறல்கள் பெரும் கொந்தளிப்பாக வெளிப்பட்டது. கனடாவின் உள்  விவகாரங்களில் இலங்கையின் தலையீடு குறித்த பேரவையின் மௌனம், இமாலயப் பிரகடனத்தில் அதன் கடந்த கால ஈடுபாடு, தமிழ் இனப்படுகொலைக்கு நியாயம் கோரத் தவறியது  உட்பட்ட விடயங்களைக்  கண்டித்து ஆர்ப்பாட்டக்காரர்கள் Markham வீதியில் தெருவிழாவின் இரு தினங்களும் ஆர்ப்பாட்டங்களில்  ஈடுபட்டனர்.

இந்த எதிர்ப்பைக் கட்டுப்படுத்தும் வகையில், தெருவிழாவின் ஆரம்ப நிகழ்வில் CTC தலைவர்  குமார் ரட்ணம்   பகிரங்க மன்னிப்புக்  கோரினார். ஆனால் அந்த அறிக்கை பேரவை மீது மக்கள் நம்பிக்கையை மீள் உறுதி செய்யத் தவறிவிட்டது. கலைஞர்கள் பலர் நிகழ்ச்சியில் கலந்து கொள்வதைப் புறக்கணித்தனர். முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், மக்களில் ஒரு சிறு பகுதியினர் மாத்திரம் கலந்து கொண்டனர். ஒரு காலத்தில் பேரவையின் முதன்மையான கொண்டாட்டமாக இருந்த நிகழ்வு இம்முறை நிராகரிப்பின் பகிரங்க சாட்சியாக மாறியது.

Video Player

00:00

01:13

தமது கடந்த காலத் தவறுகளுக்கு CTC-யின் தலைவர் குமார் ரட்ணம் பகிரங்க மன்னிப்புக் கோரிய போதிலும், மாற்றத்தைப் பிரதிபலிக்கும் ஆக்கபூர்வமான செயற்பாடுகளை CTC இதுவரை முன்னெடுக்கவில்லை. நிர்வாக மறுசீரமைப்பு, தமிழ் இனப் படுகொலைக்கான நீதி கோரல், வெளிப்படைத் தன்மை, மக்கள் தொடர்பு, ஊடகத் தொடர்பு என அனைத்து விடயங்களிலும் CTC தனது முன்னைய நிலைப்பாட்டையே கடைபிடித்து வருகிறது. எனவே, CTC மக்களுக்கான, மக்கள்மயப்படுத்தப்பட்ட அமைப்பாக இயங்கத் தயாரில்லை என்பதையே  தனது இறுமாப்பான நிலைப்பாடுகள் மூலம் மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறது.

கனடிய அரசியல்வாதிகளுக்கான ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், தமிழருக்கு எதிரான நிலைப்பாட்டின் உச்சக்கட்டமாக வெளிப்பட்டுள்ளது. இது இனப்படுகொலைக்கான அங்கீகாரத்தை மறுக்கிறது, தமிழர் பாரம்பரியத்தை இழிவுபடுத்துகிறது, மேலும் கனடியத் தமிழ் அரசியல்வாதிகளை அவமதிக்கிறது.

இந்நிலையில் ஒரு முக்கிய கேள்வி எழுகிறது:  ராஜ் தவரட்ணசிங்கம் எவ்வாறு பேரவையின் தலைவராகவும், அதன் ஆலோசகராகவும் இத்தனை காலம் பதவி வகித்தார்?

இவ்வாறான முக்கியமான விடயங்களில் பேரவை தொடந்தும் தோல்வியடைந்த நிலையில் ராஜ் தவரட்ணசிங்கத்தின் அழுத்தமும் செல்வாக்கும் பேரவைக்குள் எவ்வாறு தாக்கம் செலுத்தியது என்பதே பெரும் கேள்வி.

வெளிவராத ஆலோசனை!

தமிழர் தெரு விழாவைத் தொடர்ந்து, CTC உள்ளகச் சீர்திருத்தத்தை உறுதியளித்தது. ஒரு சமூக ஆலோசனை முயற்சியை அறிவித்தது. அதிக வெளிப்படைத்தன்மை, நிர்வாகச் சீர்திருத்தங்கள் பொறுப்புக்கூறலுக்கான புதுப்பிக்கப்பட்ட அர்ப்பணிப்பு ஆகியவற்றை உறுதியளித்தது. இந்த ஆலோசனையின் முடிவுகளை விவரிக்கும் அறிக்கை February  2025-இல் வெளியிடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது.

இந்த கட்டுரை March மாதம் வரையப்படுகிறது. இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடப்படவில்லை. எந்தக் கண்டுபிடிப்புகளும் பகிரப்படவில்லை. இந்த ஆலோசனை ஓர்  இணைய மூலக் கணக்கெடுப்புக்குச் சமமாக இருப்பதால், இதன் மூலம் வெளியாகும் எந்த ஒரு கண்டுபிடிப்பும் எந்த ஒரு நம்பகத் தன்மையையும் கொண்டிருக்காது.

பலருக்கும் இவை ஒன்றும் ஆச்சரியமான விடயங்கள் இல்லை. இந்த ஆலோசனை ஒருபோதும் உண்மையான மாற்றத்தை உருவாக்கும் நோக்கம் கொண்டதல்ல என்பது இந்தக் கட்டுரையாளர் உள்ளிட்ட விமர்சகர்களின் வாதமாகும்.  மாறாக இது தமது இன்றைய நிலையைத் தக்க வைத்துக் கொண்டு பொதுமக்கள் கோபத்தைத் தணிப்பதற்கான ஒரு  யுத்தியாகும்.

இந்த ஆலோசனைகள் முறையானதாக இருந்தால், அவற்றின் முடிவுகள் எங்கே?

இந்த விடயம் குறித்து “தேசியம்” சார்பாக வினவிய பின்பே, முதல் தடவையாக March இறுதிப் பகுதியில் குறிப்பிட அறிக்கை வெளியாகும் என பேரவை பதில் அளித்தது.

பரபரப்பை ஏற்படுத்திய சர்ச்சை

இந்தப் பின்னணியில், ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல், வெந்த புண்ணில் வேல் பாய்ச்சியுள்ளது.  தமிழ் இனப்படுகொலை நிகழ்ந்தது என்பதை அவர் நிராகரிப்பதும், தமிழ் மரபுத்  திங்கள் அங்கீகாரத்தைக்  கண்டனம் செய்ததும், தமிழ் இனப்படுகொலை அறிவூட்டல் வாரத்தை கேள்விக்கு உட்படுத்தியதும் பேரவையை அதன் நீண்டகாலத் தலைவர்களுள் ஒருவரின் சர்ச்சையான தமிழர் விரோதப் போக்கான கருத்துகளுக்குப் பதிலளிக்க வேண்டிய சங்கடமான நிலைக்குத் தள்ளியுள்ளது.

 

raj-1-225x300.jpg

பேரவையின் நிகழ்வொன்றில் ராஜ் தவரட்ணசிங்கம்

இந்தக் கட்டுரையாளர், ராஜ் தவரட்ணசிங்கத்தின் குறிப்பிட்ட மின்னஞ்சலில் உள்ளடக்கத்தை முழுமையாகக் கண்டிக்கிறார். பேரவையின்  முழுமையான தலைமைத்துவ மாற்றங்களுக்கு அழைப்பு விடுக்கிறார்.  ராஜ் தவரட்ணசிங்கத்தின் கருத்துகள் ஒரு தனி மனிதனின் கருத்துகள் இல்லை. மாறாக கனடியத் தமிழரின் நலன்களில் இருந்து தூர விலகி நிற்கும் ஒரு தனியார் குழுமத்தின் நிலைப்பாடாகும். இதை பல உதாரணங்கள் உறுதிப்படுத்துகின்றன.

மௌனம், மழுப்பல், நம்பிக்கை சிதைவு: நுண்ணாய்வுக்குள் பேரவையின் பதில்கள்

சமூக நம்பிக்கையின் மீது கட்டமைக்கப்பட்ட ஓர்  அமைப்பு, சமூகத்தின் கேள்விகளுக்கு மௌனத்தால் பதிலளிப்பது அதிகம் ஆபத்தானது என்பது நடைமுறை அடிப்படை. “கனடியத் தமிழர்களின் குரல்” என தம்மைப் பிரகடனப்படுத்தும் பேரவை, சமூகம் எதிர்கொள்ளும் மிக முக்கியமான பிரச்சினைகள் பலவற்றுக்கு தொடர்ந்து மௌனம் காத்து வருகிறது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சலின் உள்ளடக்கம் உட்பட பேரவை குறித்த சமூகத்தின் பல கேள்விகளுக்கு “தேசியம்”, CTC இடம் முன்வைத்து. நேரடிச் செவ்விக்கான அழைப்புக்கு பேரவை சாதகமாகப் பதில் அளிக்காவிட்டாலும், தேசியத்துடன் இரண்டு மின்னஞ்சல் கேள்வி – பதில் பரிமாற்றத்தில் CTC பங்கெடுத்தது. இதில் தலைமை, முடிவெடுத்தல், பொறுப்புக் கூறல் குறித்த பல கேள்விகளை CTC மீண்டும் மீண்டும் திசை திருப்பியது, தவிர்த்தது அல்லது முற்றிலுமாகப்  புறக்கணித்தது.

இனப்படுகொலையை அங்கீகரிப்பதில் பேரவையின் நிலைப்பாடு விடயத்தில் நீண்டகாலமாக மௌனம் காப்பது ஏன்? என “தேசியம்” கேள்வி எழுப்பியபோது, முதலில் வெறுமனே  சமீபத்திய அறிக்கை ஒன்றை CTC தனது பதிலாகச் சுட்டிக்காட்டியது. ஒரு சமூகத்துக்காகக்  குரல் எழுப்பும் நேர்மையான பரப்புரைக்குத்  தேவை தொடர்ச்சியே தவிர, தெருவிழா நிராகரிப்பின் முன்னதான அழுத்தத்தின் கீழ் எதிர்வினையாற்றும் அறிவிப்புகள் அல்ல. மேலும் அடையாள ஒப்புதலைத் தாண்டி எடுக்கப்பட்டுள்ள உறுதியான நடவடிக்கைகள் குறித்துக்  கேள்வி எழுப்பிய போது, 15 ஆண்டுகளாக பேரவை, மனித உரிமைகள், இனப்படுகொலை அங்கீகாரத்துக்காக வாதிடுவதில் தீவிரமாக ஈடுபட்டுள்ளது என பதில் அளித்தது. இது உண்மைக்கு புறம்பானதாகும்.

தமிழ் இனப்படுகொலை என்ற பதத்தை எழுத்திலோ, பேச்சிலோ பயன்படுத்துவதில்லை என்ற நிலைப்பாட்டை CTC கொண்டுள்ளது என அதன் முன்னாள் தலைவர் சிவன் இளங்கோ February 2024 இல் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தெளிவுபடுத்தியிருந்தார். உண்மையோ, பொய்யோ பேரவை தனது நிலைபாட்டில் உறுதித்தன்மையைப்  பேணமுடியவில்லை என்பது இந்த விடயத்தில்  மீண்டும் உறுதியாகிறது. அதனைக் கண்டிக்க வேண்டிய பேரவை, ஏன் மௌனத்தைப் பரிசளிக்கிறது? முன்னர் குறிப்பிட்டதைப் போல, ஒரு கேள்விக்கு இரண்டு வெவ்வேறு விடயங்கள் உண்மையாக இருக்க முடியாது.

கனடாவின் உள்நாட்டு விவகாரங்களில் இலங்கையின் வெளிநாட்டுத் தலையீடு குறித்துக் கேள்வி எழுப்பிய போது, அது குறித்த கரிசனையை பேரவை நிராகரித்தது. இதுபோன்ற விடயங்கள் மத்திய அரசாங்கத்தின் அதிகார வரம்பின் கீழ் வருவதாக பேரவை நியாயம் கற்பித்தது. அதனால் இந்த விடயங்களில் தலையிடமுடியாது என தமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தியது. ஆனால் CTC நீண்ட காலமாக மத்திய அரசின் மேற்பார்வையின் கீழ் வரும் விவகாரங்களில் உரிமை எடுத்துக் கொண்டமைக்கான சாற்றுகள் அதிகம் உள்ளன. அகதிகள் உரிமைகள் முதல் சர்வதேச விவகாரங்கள் வரை அதற்கான உதாரணங்கள் விரிவடைகின்றன. ஆனாலும், தமிழ் கனடியர்களை நேரடியாக பாதிக்கும் ஒரு விடயமான இலங்கை அரசின் வெளிநாட்டுத் தலையீடு குறித்து தெளிவான ஒரு நிலைப்பாட்டை எடுக்க பேரவை தயக்கம் காட்டுவது ஏன்? என்ற கேள்வியை “தேசியம்” மீண்டும் முன்வைத்தது: மீண்டும், அதற்கு பேரவையிடம் பதில் இல்லை.

CTC-யின் கனடியத் தமிழர் சமூகம் குறித்த ஈடுபாட்டை விரும்பாத நிலை, இலங்கை அரசாங்கத்துடனான அதன் உறவுகள் வரை நீண்டுள்ளது. கனடா – ரொறன்ரோவுக்கான இலங்கைத் துணைத் தூதர் Thusara Rodrigo போன்றவர்களுடன் அதன் உறவு குறித்து வினவிய போது, பேரவைக்கு அது போன்ற  எந்த ஒரு தொடர்பும் இல்லை என திட்டவட்டமாக மறுத்தது. ஆயினும்  SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் (SJV Chelvanayakam Memorial Lecture), Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo கலந்து கொண்டிருந்தார்.

CJV-1024x473.jpg

CTC ஏற்பாடு செய்த SJV  செல்வநாயகம் ஞாபகார்த்த நிகழ்வில் Toronto-வில் உள்ள இலங்கைத் துணைத் தூதுவர் Thushara Rodrigo

CTC ஏற்பாடு செய்த இந்த நிகழ்விலும் ஏனைய சில நிகழ்வுகளிலும் பேரவையின் உறுப்பினர்களுடன் Thushara Rodrigo ஒளிப்படம் எடுத்துக் கொண்டார். பேரவை கூறுவதைப் போல் இரு தரப்பினருக்கும் இடையில் உண்மையில் எந்த உறவும் இல்லை என்றால், இலங்கைத் தூதரகம் அதன் நல்லிணக்க முயற்சிகளை நியாயப்படுத்த ஏன் CTC-யின் பெயரைப் பயன்படுத்துகிறது? இங்கு “தேசியம்” மீண்டும் முன்வைத்த கேள்வி: இந்த நிகழ்வுகளுக்கு Thushara Rodrigo-வை அழைத்தது யார்? முன்னைய பல கேள்விகள் போல் CTC இதற்கும் பதில் கூற மறுத்து விட்டது.

ராஜ் தவரட்ணசிங்கத்தின் மின்னஞ்சல் சர்ச்சையைப் பேரவை கையாண்ட விதமும் இதே பாணியைப் பின்பற்றியது. அந்த மின்னஞ்சல் தமிழர்களுக்கு எதிரானதா? என “தேசியம்” மீண்டும், மீண்டும் கேள்வி எழுப்பியது. “அது, அவரது தனிப்பட்ட கருத்து” என CTC நிராகரித்தது. ஆனால் பேரவையின் அனைத்துப் படிமுறைகளையும்  அறிந்த, முன்னாள் தலைவர், மூத்த ஆலோசகர் என பதவிகளை வகித்த ஒருவரிடமிருந்து வெளியாகும் கருத்துகள் தனிப்பட்ட ஒருவரின் கருத்தாக வகைப்படுத்தப்படுவதில்லை. மேலும், இந்த “மின்னஞ்சலை நீங்கள்  கண்டிக்கிறீர்களா இல்லையா?” என மீண்டும் வற்புறுத்தியபோது,  CTC மீண்டும் மௌனம் காத்தது. இந்த விடயங்களில் பேரவையின் நிலைப்பாடு ராஜ் தவரட்ணசிங்கத்தின் நிலைப்பாட்டிலிருந்து எவ்வாறு வேறுபடுகிறது எனக் கேள்வி எழுப்பிய போது, மீண்டும் CTC எந்த விளக்கத்தையும் வழங்கவில்லை.

இமாலயப் பிரகடன விடயத்தில்; யார் முடிவுகளை எடுத்தார்கள்?, யார் உரையாடல்களில் பங்கேற்றார்கள்?, யாருடன் கலந்தாலோசிக்கப்பட்டது? என்பதற்கு CTC பதிலளிக்க மறுத்து விட்டது . ராஜ் தவரட்ணசிங்கம் இந்தச் செயல்முறையில் ஈடுபட்டிருந்தார், பேரவைக்கு உடனுக்குடன் விபரங்களை வழங்கினார் என்பதை உறுதிப்படுத்தும் சான்றுகள் பல உள்ளன. அதற்குப் பதிலாக,”ஏற்கனவே எமது நிலைப்பாட்டைத்  தெளிவுபடுத்தி விட்டோம்” எனக் கூறியதுடன், “ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் முன்வைப்பது  உண்மைகளை மாற்றாது” என பேரவை தேசியத்திடம் வலியுறுத்தியது. இதில் மறைந்திருக்கும் உண்மை என்னவெனில், ஒரு போதும் இதில் உண்மை வெளியாகவில்லை என்பதாகும். தொடர்ந்து கேள்விகளைத்  திசை திருப்புவதனால்; பதில்கள் உண்மையாகப் போவதில்லை. ஒரு விடயத்தில் இருந்து விலகி நிற்பது என்பது அதைத் தெளிவுபடுத்துவது அல்ல.  இந்த செயற்பாடுகளை  யார் அங்கீகரித்தார்கள், என்பதை CTC கூற மறுத்தால், இவற்றின் தவறுகளுக்கு  யார் பொறுப்பேற்பார்கள்?

அண்மைய காலத்தில் CTC தலைமைத்துவத்தின் மிக வெளிப்படையான தோல்வி தெருவிழா 2024-இல் வெளிச்சத்துக்கு வந்தது.  முன்னைய ஆண்டுகளில் பரவலாகக் கொண்டாடப்பட்ட நிகழ்வு – இம்முறை பலராலும் நிராகரிக்கப்பட்டு – சமூக நிராகரிப்பின் உதாரணமாக மாறியது. இதனால் அங்கு சாவடி அமைத்த விற்பனையாளர்கள் பெரும் நிதி இழப்பை எதிர்கொண்டனர். அவர்கள் பணத்தைத் திரும்பத் தருமாறு  கோரியபோது, Toronto காவல்துறையினர் மூலம் அவர்களுக்குப் பதிலளிக்க முடிவு செய்தது பேரவை.  இதில் சமூகத்தின்  அக்கறைகளை நிவர்த்தி செய்ய என்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன என “தேசியம்” கேள்வி எழுப்பிய போது, CTC “ஒப்பந்தக் கடமைகளை” (Contractual obligations) பூர்த்தி செய்ததாக மாத்திரம் கூறியது. அதிகாரத்துவப் பாணியிலான இந்தப் பதில், நம்பிக்கை, பொறுப்புக்கூறல் ஆகியவற்றின் அடிப்படையில் அமைய வேண்டிய தெருவிழாவின் கட்டமைப்பைக்  கேள்விக்குள்ளாக்குகிறது. விற்பனையாளர்களுக்கு எந்தத் தீர்வையும் வழங்காமல் தவிர்ப்பதற்கான எண்ணம் முன்னரே பேரவையினால் திட்டமிடப்பட்டதா?  என வினவியபோது, CTC மீண்டும் பதிலளிக்கவில்லை. ஏனைய கேள்விகள் போல், தெளிவாக ஆம் அல்லது இல்லை என்று விடை தரக்கூடிய பின்வரும் கேள்வியை “தேசியம்” முன்வைத்தது. “CTC எந்த விற்பனையாளர்களுக்கும் பணத்தை மீள வழங்கியுள்ளதா?”. பேரவை அதற்குப் பதிலளிக்கவில்லை.

பேரவைக்கும் தேசியத்துக்கும் இடையிலான நீண்ட இரண்டு கேள்வி பதில் மின்னஞ்சல்  பரிமாற்றம் நியாயத் தன்மையின் அடிப்படையிலும், நடுநிலை, நெறிமுறை இதழியல் கோட்பாட்டிலும், CTC-யின் பதில்கள் நியாயமாகவும், துல்லியமாகவும் பிரதிநிதித்துவப்படுத்தப்படுவதை உறுதி செய்யும் வகையில் இங்கு முழுமையாக வழங்கப்படுகிறது. பேரவையின் நிலைப்பாடுகள் எந்த வகையிலும் தவறாகச் சித்தரிக்கப்படாமல் வெளியிடப்படுவதை இந்த நடைமுறை  உறுதி செய்யும் என தேசியம் நம்புகிறது. மேலும் ஒரு தொகுப்புக் கேள்விகள் தேசியத்தால் பேரவையிடம் முன்வைக்கப்பட்டுள்ளன.  அவற்றுக்கான பதில்களும் கிடைக்கப்பெறும் போது இங்கு இணைக்கப்படும்.

EMAIL EXCHANGE BETWEEN THESIYAM AND CANADIAN TAMIL CONGRESS

பேரவையின் தமிழர் சமூகத்துடனான இந்த நெருக்கடியின் மையத்தில் இருப்பது வெறும் நிர்வாகத்தின் தோல்வி மட்டுமல்ல; மாறாக நம்பிக்கைத் துரோகமாகும் என்பதை உறுதியாகக்  கூறலாம். CTC தன்னை தமிழ்க் கனடியர்களின் பிரதிநிதியாக நிலை நிறுத்துகிறது, இருப்பினும் ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும், அது பிரதிநிதித்துவப்படுத்துவதாகக் கூறும் அதே சமூகத்தின் நியாயமான கவலைகளுக்குச்  செவிசாய்க்கத்  தொடர்ந்து மறுத்து வருகிறது  முக்கிய விடயங்களில் அழுத்தம் கொடுக்கப்படும் போது, பேரவை உள்ளடக்கம் இல்லாத பதில்களால்,  அல்லது நிராகரிப்புகளால், அல்லது வெளிப்படையான மௌனத்துடன் கடந்து செல்கிறது. ஆனால் மௌனம் நடுநிலையானதல்ல என்ற கசப்பான உண்மையை இந்தச்  சந்தர்ப்பத்தில் பேரவையின் நிர்வாகக் கட்டமைப்பின் கவனத்துக்குக் கொண்டு வர  இந்தக் கட்டுரையாளர் விரும்புகிறார். மௌனம் பொறுப்புகளில் இருந்து தப்பிப்பதற்கான தேர்வாகும். ஒரு சமூக அமைப்பு தனது செயல்களுக்குப் பதிலளிக்க மறுக்கும்போது, சமூகத்தின் கரிசனையும், தொடர் கேள்விகளும் கொள்கை பற்றியதாக இல்லாமல் நேர்மைத்தன்மை  குறித்ததாக மாறும் அபாயம் உள்ளது. பேரவையின் விடயத்திலும் இன்றைய நிலை இதுதான்.

பேரவையின் எதிர்காலம் என்ன?   

பல ஆண்டுகளாக, CTC கனடிய தமிழர்களின் முதன்மை அரசியல் குரலாகத் தன்னை நிலைநிறுத்த முயன்றுவருகிறது. ஆனால் வளர்ந்து வரும் அதிருப்தி, மறுசீரமைப்புக்கான வலியுறுத்தல்கள் அதிகரித்து வருவதால், அதன் தகுதி இப்போது கேள்விக்குறியாகியுள்ளது.

1) பேரவை தனது கடந்த காலத் தவறுகளை ஒப்புக்கொள்ளுமா?

2) வெளிப்படைத் தன்மையின் அடிப்படையில் அதன் நம்பகத்தன்மையை மீண்டும் கட்டியெழுப்ப முடியுமா?

3) சமூகத்தின், மாற்றத்துக்கான தொடர் கோரிக்கைகளை அது தொடர்ந்து புறக்கணிக்குமா?

4) பேரவையின் உறுப்புரிமையை யார் பெறவேண்டும் என்ற முடிவைத்  தன்னிச்சையாகச் சில தனிநபர்கள் தொடர்ந்தும் மேற்கொள்வார்களா?

5) CTC குறித்த அண்மைக்காலத் தொடர் குற்றச்சாட்டுகளின் பின்னணியில் இவை  நிகழ்ந்த காலப்பகுதியில் பேரவையைத் தனிமனித ஆளுமைக்குள் கட்டுபடுத்தி வைத்துள்ளதான குற்றச்சாட்டை  எதிர்கொள்ளும் நிர்வாகப் பணிப்பாளர் டான்டன் துரைராஜா,  அனைத்துத் தவறுகளுக்கும் பொறுப்பேற்றுப் பதவி  விலகுவாரா?

இந்தப் பின்னணியில், CTC அடையாளம் அற்று நீர்த்துப் போகுமா என்பதை வரும் வாரங்களும் மாதங்களும் தீர்மானிக்கும்!

https://thesiyamnation.com/41151/

 

இலங்கதாஸ் பத்மநாதன்

ராமநாதன் அர்ச்சுனா என்னும் விசச்செடி..

3 months 2 weeks ago

யாழ்ப்பாணம் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனா அண்மையில் மலையகத் தமிழர்களை “கப்பலில் வந்தவர்கள்” எனவும், வடக்கு முஸ்லிம்களை “இவங்கள விரட்டினது தவறு; இவங்கள இங்கே வைச்சு சீமெந்து பூசி இருக்க வேணும்” எனவும் கூறியுள்ளார்...(இதைவிட நிறைய இனவாதத்தை அவர் வீடியோக்களில் கக்கி உள்ளார்.. அவர் முகநூலில் இன்றும் உள்ளன..) இவ்வாறான கருத்துக்கள் சமூகத்தில் இனவாதத்தை ஊக்குவிக்கும் அபாயம் உள்ளது...

மலையக தமிழர்கள் மற்றும் வடக்கு முஸ்லிம்கள் பற்றிய மேற்சொன்ன கருத்துக்கள் கடைந்தெடுக்கப்பட்ட இனவாதம்... அருவருப்பான வார்த்தைகள்... தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் விரோதத்தை உண்டாக்கும் காரியம்...

மலையகத்தமிழர்களை வடகிழக்கு தமிழர்களிடம் இருந்து அந்நியப்படுத்தும் அயோக்கியத்தனம் மற்றும் முஸ்லிம்கள் மீது ஏற்படுத்தப்பட்ட ஒரு வரலாற்றுக் காயத்தை மீண்டும் கிண்டி சுயஇன்பம் தேடும் சைக்கோத்தனம்…

பாதிக்கப்பட்ட ஒரு இனம் எதை வேண்டுமானாலும் பேசலாம் என்கிற ஒரு அசட்டு உற்சாகம் பைத்தியக்காரத்தனமானது... இது தனிப்பட்ட ஒருவருடைய கருத்து என்று கடந்து போக முடியாது, மாறாக, விரும்பியோ விரும்பாமலோ யாழ்ப்பாணத் தமிழர்களை பாராளுமன்றத்தில் பிரிதிநிதிப்படுத்துகிற ஒரு பைத்தியக்காற பாராளுமன்ற உறுப்பினருடைய வார்த்தைகள் இவை…

அர்ச்சுனாவின் இக்கருத்துக்கள் சமூக ஊடகங்களில் கடும் விமர்சனங்களை ஏற்படுத்தியுள்ளது... பலர் இவரது கருத்துக்களை இனவாத பிதற்றல்கள் எனக் கண்டித்து வருகின்றனர்... இது தமிழர் சமூகத்துக்குள் இனவாத எண்ணங்களை வெளிப்படுத்துவதோடு, முஸ்லிம் மலையக தமிழ் சமூகத்துடன் உள்ள உறவுகளை பாதிக்கும் அபாயமும் உள்ளது…

சிங்களவர்களையோ, இஸ்லாமியர்களையோ ‘இனவாதிகள்’ என்று நாம் கூறும் போது ‘நாம் ஒருபோதும் இனவாதிகளாக இருந்ததில்லையா?’ என்கிற ஒரு கேள்வியை நம்மிடம் கேட்டுப்பார்க்கவேண்டும்…

இனவாத கருத்துக்களை எதிர்கொள்ளும் போது, அவற்றை கண்டித்து, சமூகத்தில் நல்லிணக்கத்தை பேணுவது முக்கியம்... அர்ச்சுனாவின் கருத்துக்கள் இதற்கு புறம்பாக உள்ளதால, அவற்றை பொதுவெளியில் கண்டிப்பது சமூகத்தின் அறச்செயலாகும்…

இவ்வாறான வெறுப்புக்கருத்துக்கள் சமூகத்தில் பிரிவினையை ஏற்படுத்தக்கூடியவை... அவை இனங்களுக்கிடையிலான நல்லுறவுகளை பாதிக்கக்கூடும்... எனவே, சமூகத்தில் அமைதி மற்றும் ஒற்றுமையை பேண, இவ்வாறான கருத்துக்களை கண்டிப்பது அவசியம்...

இப்படிப்பட்ட அயோக்கியர்களின்,படித்த முட்டாள்களின் இனவாத பிதற்றல்களை கண்டும் காணாமலும் இருப்பது ஆபத்தானது... காரணம் மக்கள் இதை ஏற்றுக்கொண்டார்கள் என்கிற ஒரு முட்டாள்தனமான முடிவுக்கு இப்படி வாந்தி எடுத்து வைப்பவர்கள் வந்துவிடுவார்கள்... வந்துவிடுகிறார்கள்... ஆதலால், குறைந்தபட்சம் இவற்றைப் பொதுவெளியில் கண்டிப்பது ஒரு அறம் கொண்ட சமூகமாக முக்கியமானது...

இந்த பைத்தியக்காறனுக்கு எல்லாம் ஒரு காலத்தில் பாராளுமன்றம் போக ஆதரவாக எழுதினேன் என்பதை நினைத்து வெட்கமும் வேதனையும் அடைகிறேன்..

இந்த கடைந்தெடுத்த அயோக்கியனுக்கு யாழ் இணைய சமூகமும் தன் கண்டனங்களை தெரிவிக்கவேண்டும்..

—-—

தேசப்படத்தில் மட்டும் இந்திய - இலங்கை கடல் எல்லை

3 months 2 weeks ago

வங்கையூரான்

பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக்கி வருகின்ற நெருக்கடிகள் தொடர்பான விடயங்களை தரவுகள், தகவல்களை ஆதாரமாகக் கொண்டு அரசினை மிக கடுமையாக சாடி திணறடித்துள்ளார். முக்கியமாக இந்திய மீனவர்களின் ஆக்கிரமிப்பு மற்றும் கொக்கிளாய், நாயாற்றில் தென்பகுதி மீனவர்களின் ஆக்கிரமிப்பு தொடர்பாக கடுமையான சீற்றத்தை வெளிப்படுத்தியிருப்பதுடன், படை அதிகாரிகளின் துணையுடன் தமிழரின் பாரம்பரிய பகுதிகளான கொக்கிளாய், நாயாற்றுப்பகுதி முழுமையாக ஆக்கிரமிக்கப்பட்டு அங்கு நிரந்தர சிங்கள மீன்பிடிக் குடியிருப்புகளாக ஆக்கப்படுவதை எதிர்த்தும் குரல் எழுப்பியிருக்கிறார்.

மேலும் மயிலிட்டி துறைமுகத்தின் அபிவிருத்தி, தென்பகுதி ஆழ்கடல் பன்னாட் கல மீன்பிடி மீனவர்களின் பயன்பாட்டுக்குரிய ஒன்றாகவும் வடக்கு மீனவர்கள் அதனைப் பயன்படுத்த முடியாத நிலை காணப்படுவதாகவும் குறிப்பிட்டதுடன், வடக்கே பரந்த ஆழ்கடல் இருந்தும் அதனைப் பயன்படுத்துவதற்கான உட்கட்டுமான வசதிகள் முக்கியமாக பலநாட் கலங்களுக்கான முதலீட்டு வசதியின்மை, துறைமுகம், பயிற்சி, மற்றும் உபகரணங்கள் வசதிகள் ஏற்படுத்திக் கொடுக்கப்படாதுள்ளமை குறித்தும் தமது ஆதங்கத்தை வெளிப்படுத்தியிருந்தார்.

வடகரையோரத்தில் அடுக்கடுக்காக படைமுகாம்களை வைத்துக்கொண்டு இந்திய மீனவர்களின் ஊடுருவலையோ போதைவஸ்து கடத்தலையோ அவர்களால் தடுக்கமுடியாத கையறு நிலையில் இருப்பது குறித்தும் தமது ஆதங்கத்தினை வெளிப்படுத்தியிருந்தார். இதனால் திணறிப்போயிருந்த அரசு சார்பிலே கடற்றொழில் அமைச்சர் வடக்கு மீனவர்களின் நம்பிக்கையை காப்போம் எனவும் வைத்துள்ள நம்பிக்கைக்கு கடுகளவேனும் தீங்கு விளைவிக்கமாட்டோம் எனவும் ஒப்பாரி வைத்திருக்கிறார்.

தவிர அமைச்சர் பிமல் ரத்நாயக்கா, இந்தியாவை நோக்கி வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பின் எல்லை தாண்டி மேற்கொள்ளும் சட்டபூர்வமற்ற மீன்பிடியினை தடுக்க உதவ வேண்டுமெனவும் மன்றாடியிருக்கின்றார். வடக்கு என்.பி.பி. தமிழ் உறுப்பனர்களோ, வன்னி உறுப்பினர்களோ வாய் பிளந்து கொட்டாவி விடும் நிலைதான். மீனவர் துன்பம் குறித்து எந்தக் கவலையும் அவர்களுக்கு கிடையாது. ஈழத் தமிழர் விடயத்தில் இந்தியாவினுடைய நிலைப்பாடு புரியாத ஒன்றல்ல, அவர்களை நம்பமுடியாது.

எமது கோரிக்கை

நாம் சிறிலங்கா அரசிடம் கோருவது என்னவெனில், அரசு வடக்கு மீனவர்களுக்கு நல்லது செய்ய விரும்பினால் முதலில் உள்ளூர் இழுவைமடித் தொழில் தடையினை நடைமுறைப்படுத்திக் காட்ட வேண்டும் என்பதுதான். 2017 ல் இழுவைமடி உள்ளூரில் தடையென சட்டம் இயற்றியிருந்தது. ஆனால் இதுவரை அது அமுற்படுத்தப்படவில்லை. முதலில் அச்சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். பல தடவைகள் இது குறித்து பேசியும் செவிடன் காதில் ஊதிய சங்கு போலவே நிலைமை உள்ளது.

மேலும் கண்டல் கிளைகளையும் மரக்குற்றிகளையும் வெட்டி கடற்பகுதிகளில் அதனை அமிழ்த்தி மீனை ஒருங்குசேர விட்டு வெடிகளை அதன் மீதும் பவளப்பாறைத் தொடர்கள் மீதும் வீசி எறிந்து மீன்களை வேட்டையாடுவதையும் நிறுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். கரையில் படையினர் பார்த்திருக்க டைனமெட் வெடி வைத்து மீன்களைக் கொல்லும் நாசகார செயற்பாடுகளையும், கடலில் நிலையாக நிறுத்தப்பட்டுள்ள நூற்றுக்கணக்கிலான கம்பிப்பொறி வலைகளை அகற்றி சிற்றளவு மீன்பிடியாளர்களின் மீன்பிடிச் செயல்பாடுகளுக்கும் பாதுகாப்பு வழங்குவதையும் உறுதிப்படுத்த வேண்டும்.

மேலும், முல்லைத்தீவு மாவட்டத்தில் போரின்போது பலாத்காரமாக வெளியேற்றப்பட்ட மக்கள் மீளவும் சொந்த இடம் திரும்பி தமது மீன்பிடிச் செயற்பாடுகளை சுதந்திரமாக மேற்கொள்ள நடவடிக்கை எடுக்க வேண்டும். இடம்பெயர்ந்து வரும் தென்பகுதி மீனவர்களை படையினரின் உதவியுடன் நிரந்தர குடியிருப்புக்களை அமைப்பது, அவ்விடங்களில் பிக்குகளை கொண்டு விகாரைகளை அமைப்பது போன்ற இழிவான, அருவருப்பான செயற்பாடுகளை முன்னெடுப்பது வெறுக்கத்தக்கது.ஏற்றுக் கொள்ளவும் முடியாதது.

மேலும், கரையோரங்களில் அடுக்கி வைக்கப்பட்டுள்ள படை முகாம்களால் மீனவர்களுக்கு எந்த நன்மைகளும் கிடையாது என்பதை உறுதிபடக் கூறிவைக்க விரும்புகின்றோம். தேசிய பாதுகாப்புக்கென பெருமளவு நிதியினை ஒதுக்கீடு செய்து படையினரை நிலைகொள்ள வைப்பதைத் தவிர தேசிய பாதுகாப்பிற்கு பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி வருகின்ற கஞ்சாக் கடத்தலைக் கூட கட்டுப்படுத்த முடியவில்லையே?

மனித புதைகுழிகளும் பெளத்தர்களே இல்லாத இடங்களிலும் படைமுகாம்களிலும் துப்பாக்கி முனையிலே விகாரைகளை கட்டி அருவருப்பை ஊட்டியதும் தவிர, காத்திரமான அபிவிருத்தி திட்டங்கள் எவற்றையும் வடக்கில் காணோம்.

தேசப்படத்தில் மட்டுமே சர்வதேச கடல் எல்லை

வடக்கிலே பாக்கு நீரிணை, பாக்கு குடா, மன்னார் குடா ஆகிய பாரம்பரிய கடல்கள் பெரும்பாலும் தமிழ்நாட்டு மீனவர்கள் வசமே உள்ளன. இதை ஊடறுத்தே 1974, 76 களில் இந்திய – இலங்கை எல்லைக்கோடு வரையப்பட்டது. கச்சதீவு அன்றைய பாரதப் பிரதமரின்( இந்திரா காந்தி) ஆலோசனையின் பிரகாரம் இலங்கை பிரதமரின் ( சிறிமாவோ) விருப்பிற்கிணங்க இலங்கைக்கு விட்டுக் கொடுக்கப்பட்டதாக நம்பப்படுகிறது.

ஆயினும் ஐம்பது வருடங்களாக கச்சதீவில் வடக்கு தமிழர் அடைந்த நன்மை எவையுமே இல்லை. இருந்தென்ன இல்லாமல் போனால் என்ன. எல்லாமே ஒன்றுதான். கச்சதீவும் ஐந்து மைல் சுற்றாடல் பரப்பு கடல் பகுதியும் மீனவர்களுக்காக குத்தகைக்குத் தேவையென ஓர் கோரிக்கை இந்திய தரப்பில் (பேராசிரியர் சூரியநாராயன்) ஓர் கருத்து முன்னர் முன்வைக்கப்பட்டது. பாக்கு கடலில் இந்திய மீனவர்களுக்கு மீன்பிடிக்க அனுமதிப்பது வடக்கு கடலில் சவப்பெட்டிகளை மிதக்க விடுவதற்குச் சமம்.

புதுக்கோட்டை, நாகபட்டின மீனவர்களின் தளமாக பாக்கு நீரிணை மற்றும் முல்லைத்தீவு கடற் பகுதியும், இராமேஸ்வர மீனவர்களின் பகுதிகளாக பாக்கு குடா கடலும், தூத்துக்குடி மீனவர்களுக்கான பகுதியாக மன்னார் குடாக்களும் பறிபோயுள்ளன. ஏறத்தாழ வடக்கு கடல் முழுவதும் பறிபோயுள்ளது. இலங்கை – இந்திய சர்வதேச கடல் எல்லைக்கோடு தேசப்படத்தில் மட்டுமே உள்ளது. நடைமுறையில் அந்த எல்லைக் கோடானது வடக்கு கரையோரமாக இப்போது தள்ளப்பட்டிருக்கிறது. சர்வதேச கடற் சட்டம் இங்கு செல்லுபடியாகாத ஓர் விடயமாகவே உள்ளது. இந்திய மீனவர்களுக்கு கச்சதீவு அமைவிடம் எது, எல்லைக்கோடு எது என்பது நன்றாகத் தெரியும். ஆனால் தெரியாது என்பதே இந்தியாவின் நிலை.

Thinakkural.lk
No image previewதேசப்படத்தில் மட்டும் இந்திய-இலங்கை கடல் எல்லை
வங்கையூரான் பாராளுமன்றில் கடற்றொழில் தொடர்பான விவாதங்கள் சூடாக நடைபெற்று வருகிறது. பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம், வடக்கு – கிழக்கு மீனவர்கள், குறிப்பாக வடபகுதி மீனவர்கள் எதிர்நோக...
Checked
Thu, 07/03/2025 - 12:01
அரசியல் அலசல் Latest Topics
Subscribe to அரசியல் அலசல் feed