ஊர்ப்புதினம்

மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கான எச்சரிக்கை

1 month 3 weeks ago

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஆபத்தான வகையில் மேலதிக பாகங்கள் பொருத்தப்பட்ட வாகனங்களுக்கு எதிராக நாளை முதல் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என போக்குவரத்து பிரதியமைச்சர் வைத்தியர் பிரியந்த குணசேன தெரிவித்துள்ளார்.

பல்வேறு ஒலிகளுடன், பல வண்ணங்களில் நின்று நின்று ஔிரும் மின் விளக்குகளுடன் பயணிக்கும் வாகனங்கள் குறித்து விசேட கவனம் செலுத்தப்படும் என போக்குவரத்து பிரதி அமைச்சர் வைத்தியர் பிரசன்ன குணசேன தமது பேஸ்புக் பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடந்த வியாழக்கிழமை எல்ல-வெல்லவாய வீதியின் 24வது மைல்கல் அருகே எதிரே வந்த சொகுசு ஜீப்பின் பின்புறத்தில் பேருந்து மோதி, வீதியில் அமைக்கப்பட்டிருந்த பாதுகாப்பு இரும்பு வேலியை உடைத்து சுமார் 1000 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானது.

தங்காலை நகர சபையின் ஊழியர்களும் அவர்களது உறவினர்களும் பயணித்த பேருந்து ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

32 பேர் பயணித்த இந்த பேருந்தில் 15 பேர் உயிரிழந்தனர்.

காயமடைந்தவர்களில் 13 பேர் இன்னும் பதுளை போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

https://adaderanatamil.lk/news/cmf9etj1b0097qplp6ki6piq6

தம்பலகாமத்தில் பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் பலி!

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 01:51 PM

image

திருகோணமலை தம்பலகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முள்ளிப்பொத்பொத்தானை, 09ம் கொலனி, சதாம் நகர் பிள்ளையார் கோயிலில் இடம்பெற்ற திருவிழா ஊர்வலத்தின் போது பட்டாசு வெடித்ததில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் நேற்றிரவு சனிக்கிழமை (06) இடம் பெற்றுள்ளது. 

இவ்வாறு உயிரிழந்த குடும்பஸ்தர் அதே  பகுதியில் வசித்து வரும் மூன்று பிள்ளைகளின் தந்தையான 45 வயதுடைய  நபர் உயிரிழந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது ஊர்வலத்தின் போது பட்டாசு கொளுத்திய நிலையில் ஒரு பட்டாசு வெடிக்காத நிலையில் உள்ளதை கண்டு அதனை காலால் தடவிய போது பட்டாசு வெடித்துள்ளதாக ஆரம்ப கட்ட விசாரனையில் தெரியவந்துள்ளது. 

 உயிரிழந்தவரின் சடலம் தற்போது தம்பலகாமம் பிரதேச வைத்தியசாலையில்  வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் தம்பலகாமம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/224433

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடக மோசடிகள் – பொலிஸார் எச்சரிக்கை

1 month 3 weeks ago

Published By: Digital Desk 1

07 Sep, 2025 | 03:33 PM

image

வங்கித் தகவல்களைப் பயன்படுத்தி சமூக ஊடகங்களினூடாக மோசடிகளில் ஈடுபடுவோருக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளதுள்ளனர்.

வங்கியின் சார்பாக பரிசுகளை வழங்குவதாக பொய்யாகக் கூறும் மோசடி செய்தியொன்று தற்போது சமூக ஊடகங்களில் பரவி வருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்தச் செய்தி பொதுமக்களை ஏமாற்றுவதற்காக வடிவமைக்கப்பட்ட ஒரு மோசடியின் பகுதி என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.

இந்த மோசடி தனிப்பட்ட தகவல்களைத் திருடவும், கையடக்கத் தொலைபேசியிலுள்ள மென்பொருளை சேதப்படுத்தவும் வடிவமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்தப் பிரச்சினை தொடர்பாக தங்கள் அமைப்புக்கு ஏராளமான முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக இலங்கை கணினி அவசரகால பதிலளிப்பு குழுவின் (SLCERT) தலைமை தகவல் பாதுகாப்பு அதிகாரி நிரோஷ் ஆனந்த தெரிவித்துள்ளார்.

கையடக்க தொலைபேசிகள் மூலம் வங்கி நடவடிக்கைகளை மேற்கொள்ளும் நபர்கள் இதுபோன்ற மோசடி செய்திகள் குறித்து எச்சரிக்கையாக இருக்க வேண்டும் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/224449

கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை

1 month 3 weeks ago

கூட்டாட்சி அரசியல் முறைமை பற்றி இலங்கை அரசியல்வாதிகளுக்குத் தெளிவூட்டல் : சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் நடவடிக்கை

07 Sep, 2025 | 11:11 AM

image

(நா.தனுஜா)

இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளைப் பிரதிநிதித்துவப்படுத்தும் உறுப்பினர்கள் 13 பேரை சுவிட்ஸர்லாந்துக்கு அழைத்துச்சென்று, அந்நாட்டின் கூட்டாட்சி அரசியல் முறைமை மற்றும் தேசிய ஒருமைப்பாடு வலுவாக்கம் என்பன பற்றி விளக்கமளிப்பதற்கு நடவடிக்கை எடுத்திருக்கும் அந்நாட்டு அரசாங்கம், அரசியல் மறுசீரமைப்பை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் இலங்கைக்கு இந்நகர்வு பெரிதும் பயனுள்ளதாக அமையும் என நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் 2026 ஆம் ஆண்டுடன் இலங்கைக்கும் சுவிட்ஸர்லாந்துக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள் ஆரம்பமாகி 70 வருடங்கள் நிறைவடைகின்றன. அதனை முன்னிட்டு இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்துடன் கூட்டிணைந்து சுவிட்ஸர்லாந்து அரசாங்கம் மேற்படி செயலமர்வை ஏற்பாடு செய்துள்ளது.

இம்மாதம் 14 - 21 ஆம் திகதி வரை சுவிட்ஸர்லாந்தில் நடைபெறவுள்ள இச்செயலமர்வில் பங்கேற்பதற்கு இலங்கையின் ஆளும் மற்றும் எதிர்க்கட்சிகளுக்கு அந்நாட்டின் வெளிவிவகாரங்களுக்கான கூட்டாட்சித் திணைக்களத்தின் சமாதானம் மற்றும் மனித உரிமைகள் பிரிவின் செயலாளரால்  அழைப்புவிடுக்கப்பட்டுள்ளது.

அதனையடுத்து அக்கட்சிகளால் உறுதிப்படுத்தப்பட்டதன் அடிப்படையில் தேசிய மக்கள் சக்தியின் சார்பில் கிராமிய அபிவிருத்தி, சமூகப்பாதுகாப்பு மற்றும் சமூக மேம்பாட்டு அமைச்சரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்தின் தலைவருமான கலாநிதி உபாலி பன்னிலகே, தேசிய ஒருமைப்பாட்டு பிரதி அமைச்சர் முனீர் முலஃப்பர், பாராளுமன்ற உறுப்பினரும் இலங்கை - சுவிட்ஸர்லாந்து பாராளுமன்ற நட்புறவு சங்கத்ததின் செயலாளர் சந்திம ஹெட்டியாராச்சி, பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளருமான கலாநிதி நிஹால் அபேசிங்க, பாராளுமன்ற உறுப்பினர்களான நிலாந்தி கொட்டஹச்சி மற்றும் சமன்மலி குணசிங்க ஆகியோரும் பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவலவும், இலங்கைத் தமிழரசுக்கட்சியின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் மருத்துவர் பத்மநாதன் சத்தியலிங்கமும், அகில இலங்கைத் தமிழ் காங்கிரஸின் சார்பில் பாராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும், ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தலதா அத்துகோரளவும், ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டணியின் சார்பில் அதன் ஊடகப்பேச்சாளர் சுரேஷ் பிரேமசந்திரனும், மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர் டபிள்யூ.ரி.சி.பத்மா மஞ்சுளவும், தேசிய மக்கள் சக்தியின் உறுப்பினரும் யாழ்.மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருக்கான ஒருங்கிணைப்பு செயலாளருமான கபிலன் சுந்தரமூர்த்தியும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

சுவிட்ஸர்லாந்தில் 8 நாட்கள் நடைபெறவுள்ள இச்செயலமர்வின்போது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமை மற்றும் இருதரப்பு உறவுகள், சுவிட்ஸர்லாந்தின் கூட்டாட்சி முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்ளல் ஆகிய தலைப்புக்களில் இலங்கை அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கு விரிவான தெளிவூட்டல்கள் வழங்கப்படவிருப்பதுடன் முக்கிய கட்டமைப்புக்களுக்கான கள விஜயங்கள் மற்றும் உயர்மட்ட சந்திப்புக்கள் என்பனவும் இடம்பெறவுள்ளன.

இச்செயலமர்வானது சுவிட்ஸர்லாந்தின் அரசியல் முறைமையை ஆழமாகப் புரிந்துகொள்வதற்கும், ஆக்கபூர்வமான கலந்துரையாடல்களில் ஈடுபடுவதற்குமான வாய்ப்பை இலங்கை அரசியல்வாதிகளுக்கு வழங்கும் என நம்பிக்கை வெளியிட்டுள்ள இலங்கைக்கான சுவிட்ஸர்லாந்து தூதுவர் சிரி வோல்ற், இலங்கை அரசியல் மறுசீரமைப்புக்களை மேற்கொள்வதற்கு உத்தேசித்திருக்கும் தற்போதைய சூழ்நிலையில் சுவிஸ் அரசியல் முறைமையின் முக்கிய கூறுகளை உள்வாங்குவதற்கும், பல்லின மற்றும் பன்மொழி சமூகங்களுக்கு மத்தியில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்புவது குறித்து அறிந்துகொள்வதற்கும் இது உதவும் எனத் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/224431

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

1 month 3 weeks ago

மேய்ச்சல் நிலத்தை பெற்றுத்தர துரித நடவடிக்கை வேண்டும்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

தங்களின் போராட்டம் இரண்டு வருடங்கள் கடக்கவுள்ள போதிலும் தமக்கான தீர்வுகள் இதுவரை கிடைக்கவில்லை என மயிலத்தமடு, மாதவனை மேய்ச்சல் நில பண்ணையாளர்கள் தெரிவித்துள்ளனர். 

எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் நேற்று (6) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டுள்ளனர். 

மயிலத்தமடு மாதவனை பண்ணையாளர்களின் அறவழிப் போராட்டத்தின் இரண்டு வருடம் எதிர்வரும் 15ஆம் திகதியுடன் பூர்த்தியடைகின்றது. 

எனினும் இந்த அறவழிப் போராட்டத்தில் அடைந்த நன்மைகள் குறைவு. மேய்ச்சல் தரைக்காக. ஒதுக்கப்பட்ட 3025 ஹெக்டயர் நிலப்பரப்பு இன்னும் தீர்மானிக்கப்படவில்லை. பின்னர் 3000 ஏக்கர் தருவோம் என கூறப்பட்ட போதிலும் இன்னமும் அதற்கான எந்த பதிவும் இடம்பெறவில்லை. 

இந்த இரண்டு வருடத்திற்கான பூர்த்தியை முன்னிட்டு எங்களுடைய போராட்டம் அரசாங்கத்திற்கு ஒரு அழுத்தத்தை கொடுக்கும் என நினைக்கின்றோம் 

கால்நடைகளினால் நாங்கள் மட்டும் பயனடையவில்லை. அரசாங்கத்திற்கும் இதனால் வருமானம் வருகிறது. 

எனவே கால்நடைகளுக்கான மேய்ச்சல் தரையினை பெற்றுக்கொடுக்க அரசாங்கம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில் ஈடுபட்டு வரும் பண்ணையாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

-மட்டக்களப்பு நிருபர் கிருஷ்ணகுமார்-

https://adaderanatamil.lk/news/cmf96frfb0092qplpb12op5d2

விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்

1 month 3 weeks ago

விஜித ஹேரத் ஜெனிவாவுக்கு பயணமானார்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெளிவிவகாரம், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் இன்று (07) காலை 06.45 மணியளவில் ஜெனீவாவிற்கு புறப்பட்டுச் சென்றுள்ளார். 

நாளை (08) ஆரம்பமாகும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 வது அமர்வில் கலந்து கொள்வதற்காக அவர் புறப்பட்டுச் சென்றுள்ளார். 

இலங்கை அரசாங்கத்தின் சார்பாக அமைச்சர் விஜித ஹேரத் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் விசேட அறிக்கை ஒன்றை வெளியிட உள்ளார். 

இந்த விஜயத்தின் போது, ஜெனீவாவில் பல உயர்மட்ட இராஜதந்திரிகளுடன் அமைச்சர் விஜித ஹேரத் இருதரப்பு கலந்துரையாடல்களை நடத்த உள்ளார். 

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர் ஸ்தானிகர் வோல்கர் டர்க் மற்றும் அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையேயான விசேட சந்திப்பொன்றும் இதன்போது நடைபெற உள்ளது. 

வோல்கர் டர்க்கின் இலங்கை விஜயத்திற்குப் பிறகும், தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் கழித்தும் நடைபெறும் இந்த மாநாட்டில், மனித உரிமைகளைப் பாதுகாப்பது தொடர்பாக புதிய அரசாங்கத்தால் எடுக்கப்பட்ட நடவடிக்கைகள், முன்னேற்றம் மற்றும் எதிர்காலத் திட்டங்களை முன்வைக்க முடியும். 

இந்த ஆண்டு மனித உரிமைகள் கூட்டத் தொடரில் அமைச்சர் விஜித ஹேரத்துடன், வெளிவிவகார அமைச்சின் ஐக்கிய நாடுகள் சபை மற்றும் மனித உரிமைகள் பணிப்பாளர் நாயகம் தயானி மெண்டிஸும் பங்கேற்கவுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmf98vnf100a2o29nty78ym4a

சமூகங்களை துருவமயப்படுத்தும் சர்வதேச பொறிமுறைகளை ஏற்கோம்; ஐ.நா மனித உரிமை பேரவைக்கு அறிவித்தது இலங்கை

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 09:59 AM

image

(நா.தனுஜா)

எந்தவொரு வெளியக பொறிமுறையும் தற்போது தேசிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டுவரும் நல்லிணக்க முயற்சிகளுக்கு இடையூறாக அமைவதுடன், அவை சமூகங்களை துருவமயப்படுத்தும். எனவே  சர்வதேச பொறிமுறைகள் தொடர்பான உயர்ஸ்தானிகரின் பரிந்துரைகளை ஒருபோது ஏற்க முடியாது என இலங்கை அரசாங்கம் அறிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் நாளைய தினம் ஆரம்பமாகவுள்ள நிலையில், இலங்கையின் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கினால் அண்மையில் வெளியிடப்பட்ட எழுத்துமூல அறிக்கையில் இலங்கையில் ஆட்சிபீடமேறிய அரசாங்கங்கள் சர்வதேச மனித உரிமைகள் நியமனங்களுக்கு அமைவான சுயாதீனமானதும், நியாயமானதுமான பொறுப்புக்கூறல் செயன்முறையை ஸ்தாபிப்பதற்கு தவறியிருக்கின்றன.

இந்நிலையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்திவதற்கு ஏதுவாக பாதிக்கப்பட்ட மற்றும் சர்வதேச சமூகத்தின் நம்பிக்கையை வென்றெடுக்க ஆக்கப்பூர்வமான செயன்முறையை நோக்கி அரசாங்கம் நகர வேண்டும் என வலியுறுத்தப்பட்டிருந்தது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் உள்வாங்கப்பட்டிருந்த கரிசணைகளுக்கு பதிலளித்து, ஜெனீவாவில் உள்ள ஐ.நாவுக்கான இலங்கையின் நிரந்தர வதிவிட அலுவலகத்தினால் அனுப்பி வைக்கப்பட்டிருக்கும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ள முக்கிய விடயங்கள் வருமாறு,

நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாடு, நல்லிணக்க செயன்முறையை வலுப்படுத்துதல், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கம், ஊழல் ஒழிப்பு, நிகழ்நிலை காப்புச் சட்டம் திருத்தம் போன்ற விடயங்களில் முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து  கடந்த ஜுன் மாதம் நாட்டுக்கு வருகைதந்திருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்குக்கு விளக்கப்பட்டது.

அதேபோன்று காணாமல் போனோர் பற்றிய அலுவலகம், இழப்பீட்டுக்கான அலுவலகம், தேசிய ஒருமைப்பாடு மற்றும் நல்லிணக்க அலுவலகம் போன்ற கட்டமைப்புக்களின் சுயாதீனத்தன்மையை உறுதிப்படுத்துவதன் ஊடாகவும் அவற்றுக்கு அவசியமான நிதி மற்றும் மனித வளங்களை ஒதுக்கீடு செய்வதன் ஊடாகவும் உள்ளக நல்லிணக்க பொறிமுறைகள் வலுப்படுத்தப்படுகின்றன.

அத்தோடு தற்போது முன்னெடுக்கப்பட்டுவரும் சகல தரப்பினருடனான கலந்துரையாடல்கள் மற்றும் சட்ட உருவாக்கத்தை தொடர்ந்து உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு ஸ்தாபிக்கப்படும். பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் வகையில் சுயாதீன வழக்குத் தொடுநர் அலுவலகமும் நிறுவப்படும். பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை இம்மாதம் அளவில் வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது.

உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் இலங்கை நிலைமாற்றத்துக்கு வழிவகுக்க கூடிய மறுசீரமைப்புக்களை மேற்கொள்ள வேண்டுமென வலியுறுத்தப்பட்டுள்ளது. அதற்கான வாய்ப்பை பயன்படுத்துவதற்குரிய சந்தர்ப்பத்தை வழங்குமாறும் இலங்கையர்களின் உரிமைகள் மற்றும் நலன்களை மேம்படுத்துவதற்கு இடமளிக்குமாறும் ஐ.நா மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்திடமும் மனித உரிமைகள் பேரவையிடமும் கோருகிறோம். 

எந்தவொரு வெளியக பொறிமுறைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் தேசிய முயற்சிகளுக்கு இடையூறாகவே அமையும் என்பதையும் அவை சமூகங்களை துருவமயப்படுத்தும் என்பதையும் அவதானித்துள்ளோம். எனவே உயர்ஸ்தானிகரின் அறிக்கையில் சர்வதேச நடவடிக்கைகள் தொடர்பில் உள்வாங்கப்பட்டுள்ள முடிவுரையையும் பரிந்துரையையும் இலங்கையினால் ஏற்றுக்கொள்ள முடியாது.

இன, மத, வர்க்க பேதங்களின் அடிப்படையிலான பிளவுகளோ அல்லது ஒடுக்குமுறைகளோ அற்ற, பல்லினத்தன்மையை கொண்டாடக்கூடிய நாட்டை கட்டியெழுப்புவதற்கான அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டையும் மக்கள் ஆணையையும் அரசாங்கம் கொண்டிருக்கிறது. இலங்கையில் இனவாதமோ, தீவிரவாதமோ தலைத்தூக்குவதற்கு அரசாங்கம் ஒருபோதும் இடமளிக்காது என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224416

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

1 month 3 weeks ago

Arrested-Heroin.jpg?resize=750%2C375&ssl

இலங்கையின் பாதாள உலகக் குழுத் தலைவர் ஓமானில் கைது!

இலங்கையைச் சேர்ந்த பாதாள உலகக் குழுத் தலைவரான ‘மிதிகம சூட்டி’ என அழைக்கப்படும் பிரபாத் மதுஷங்க ஓமானில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.

தென்னிலங்கையில் செயற்படுகின்ற பாதாள உலகக் குழுவின் தலைவர் எனவும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல் வலையமைப்பின் உறுப்பினர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன், அவர், தற்போது பொலிஸ் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள ஹரக் கட்டாவுடன் நெருங்கிய தொடர்புகளை கொண்டிருந்ததாகவும் சந்தேகம் வெளியிடப்பட்டுள்ளது.

முதலில் டுபாய்க்கு தப்பிச்சென்று அதன் பின்னர் ஓமானில் உள்ள சொகுசு விடுதியில் தங்கியிருந்த மதுஷங்கவை ஓமான் பொலிஸார் கைது செய்துள்ளனர்.

https://athavannews.com/2025/1446294

போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷக்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை - நாமல்

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 11:07 AM

image

(இராஜதுரை ஹஷான்)

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை. சட்டவிரோத செயற்பாடுகளுக்கு துணைபோகவில்லை. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம்.நுவரெலியாவில் நடத்திச் செல்லப்பட்ட ஐஸ் போதைப்பொருள் நிலையத்தின் இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் வெளிப்படுத்த வேண்டும். சமூக வலைத்தளங்களில் முன்வைக்கும் குற்றச்சாட்டை முழுமையாக நிராகரிக்கிறோம் என்று ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில்  சனிக்கிழமை (06) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, 

ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் தொடர்பில்  பொலிஸார் மாறுப்பட்ட விடயங்களை குறிப்பிட்டுள்ளனர்.முறையான விசாரணைகளை பொலிஸார் மேற்கொள்ள வேண்டும். கட்சி மட்டத்தில் அந்த உறுப்பினரின் உறுப்புரிமை நீக்கப்பட்டுள்ளது. அரசியல் பழிவாங்கலில்லாமல் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஒழுக்கமாகவே நாங்கள் செயற்படுகிறோம்.கட்சியின் எவரேனும் உறுப்பினர் ஒழுக்கமற்ற வகையில் செயற்பட்டால் அவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். தனது அரசியல் நிலைப்பாட்டுக்கு இந்த சம்பவத்தை அரசாங்கம் பயன்படுத்திக் கொள்ள கூடாது. நடுநிலையான விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் மாத்திரமே உண்மை வெளிவரும்,நியாயம் கிடைக்கும்.

உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல் சம்பவத்தில் தமது பொறுப்பை சரிவர செய்யவில்லை என்று குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள். பொறுப்பற்ற வகையில் செயற்பட்டதற்கான பொறுப்பினை அவர்கள் ஏற்காமல் அதனையும் பிறிதொரு தரப்பினர் மீது சுமத்துகிறார்கள்.

சுங்கத்தில் இருந்து எவ்வித பரிசோதனைகளுமின்றி விடுவிக்கப்பட்ட கொள்கலன்கள் தொடர்பில் பொலிஸாருக்கு மூன்கூட்டியதாகவே தகவல்கள் கிடைத்திருந்ததா, வெளிநாட்டு புலனாய்வு பிரிவு இந்த கொள்கலன்கள் தொடர்பில் ஏதேனும் அறிவித்திருந்ததா, நுவரெலியா பகுதியில் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி நிலையம் நடத்திச் செல்லப்பட்டுள்ளதாக தற்போது குறிப்பிடப்படுகிறது. இந்த இடம் யாருக்கு சொந்தமானது என்பதை அரசாங்கம் பகிரங்கப்படுத்த வேண்டும். இலங்கையை போதைப்பொருள் மையமாக மாற்றியமைக்க வேண்டாம் என்று அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்கிறோம். 

எமது கரங்களில் இரத்தக்கறை படியவில்லை.சட்டவிரோத செயற்பாடுகளுக்கு நாங்கள் ஒருபோதும் துணைபோகவில்லை.ஆகவே நாங்கள் திணறபோவதில்லை என்று அரசாங்கத்திடம் குறிப்பிட்டுக்கொள்கிறோம்.முறையான மற்றும் நடுநிலையான விசாரணைகளை மேற்கொண்டு உண்மையை வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கு உண்டு. போதைப்பொருள் வியாபாரத்தை ராஜபக்ஷர்கள் மீது சுமத்த இடமளிக்க போவதில்லை. உண்மையை வெளிப்படுத்தும் வரை அரசாங்கத்துக்கு அழுத்தம் பிரயோகிப்போம் என்றார்.

https://www.virakesari.lk/article/224424

உள்ளக விசாரணைகளின் பொறுப்பாளராக சர்வதேசம் இருக்க முடியாது : வெள்ளைக்கொடி மாத்திரமல்ல அனைத்தும் விசாரிக்கப்படும் - பிரதமர் ஹரிணி

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 12:05 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன. இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனை உலகிற்க வெளிப்படுத்தியுள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

மேலும் இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ளவும், விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டுமே தவிர அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க முடியாது. முதலில் ஜெனிவா சக்கரத்தில் இருந்து விடுப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

வீரகேசரி வாரவெளியீட்டுக்கு வழங்கிய விசேட செவ்வியிலேயே பிரதமர் ஹரிணி அமரசூரிய மேற்கண்டவாறு கூறினார். அவர் மேலும் குறிப்பிடுகையில்,

உண்மையிலேயே உறுதிமொழிகள் நிறைவேற்றப்படாமையினால் தான் ஜெனிவா குற்றச்சாட்டுக்களும் நெருக்கடிகளும் வலுப்பெற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவைக்கு சென்று, வெறும் அறிக்கைகளை சமர்பித்து வந்துள்ளார்களே தவிர அங்கு வழங்கும் உறுதிமொழிகளை உள்நாட்டில் நிறைவேற்றுவதில் ஆர்வம் செலுத்தவில்லை.

ஜெனிவாவில் மனித உரிமைகள் அமர்வுகள் நடக்கும் போது இலங்கையிலிருந்து செல்லும் தரப்பு அறிக்கையை சமர்பித்து விட்டு நாடு திரும்பியதும் அதனை மறந்து விடுகின்றனர். மறுபடியும் ஜெனிவா அமர்வுகள் ஆரம்பிக்கும் போது தான் வழங்கிய உறுதிமொழிகளும் அறிக்கையும் அவர்களின் நினைவுக்கு வருகிறது.  இதுவரை காலமும்  இவ்வாறானதொரு நிலைமையே நாட்டில் இருந்துள்ளது.

சர்வதேசத்துடன் தொடர்புப்பட்ட விடயங்களாக இவற்கை கருதும் போது இதுவொரு தவறான அணுகுமுறையாகும். ஜெனிவா மனித உரிமைகள் விடயத்தில் வழங்கிய உறுதிமொழிகளை நிறைவேற்றுவது, கொள்கை ரீதியாக செயல்படுவது என்பது தொடர்பில் அரசாங்கம் ஏற்கனவே தீர்மானங்களை எடுத்துள்ளது. உதாரணமாக செம்மணி மனித புதைக்குழி உட்பட பல சம்பவங்கள் குறித்து விசாhரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. ஊடகங்களை அழைத்து சென்று அந்த விசாரணைகளை பிரசாரம் செய்ய வேண்டிய தேவை இல்லை.

மறுபுறம் வலிந்து காணாமலாக்கப்பட்டவர்களின் விசாரணைகளும் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. எந்தவொரு விசாரணைக்கும் அரசாங்கம் தடையாக இருக்க வில்லை என்பதை அனைவரும் புரிந்துக்கொள்ள வேண்டும். மனித உரிமைகள் சார்ந்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் ஆதாரங்கள் இருப்பின் முறைப்பாடு செய்யலாம். சுயாதீனமான விசாரணைகள் முன்னெடுக்கப்படும். ஆகவே யாரையும் பாதுகாப்பதற்காக அரசாங்கம் கடமைப்பட்டில்லை.

அது மாத்திரமன்றி ஜெனிவா குற்றச்சாட்டுகளுக்கு அப்பால் மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றுவதே அரசாங்கத்தின் முதன்மையான கடமையாக உள்ளது. எனவே ஜெனிவா சக்கரத்தில் இருந்து முதலில் வெளிவர வேண்டும்.  பொறுப்புக்கூறல் விசாரணகளை முன்னெடுப்பது ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவையை திருப்திப்படுத்துவதற்காகவோ அல்லது மகிழ்விப்பதற்காகவோ அல்ல. மாறாக எமக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதற்கே கடமைப்பட்டுள்ளோம். விசேடமாக இந்த அரசாங்கம் அவர்களுக்கு உரியது என்பதை பாதிக்கப்பட்ட மக்கள் உணர வேண்டும். 

தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் அனைத்து விசாரணைகளும் முன்னெடுக்கப்படும். இதுவே எமது நிலைப்பாடாகும். ஆனால் இதுவரைக் காலமும்  அந்த விசாரணைகள் இடம்பெறவில்லை என்பது வேறு ஒரு விடயமாகும். செம்மணி மனித புதைக்குழி மாத்திரம் அல்ல வேறு பல மனித புதைக்குழிகள் குறித்து விசாரணைகள் இடம்பெறுகின்றன.

இந்த விசாரணைகள் ஊடாக பக்கச்சார்பின்றி நேர்மையாக அரசாங்கத்தினால் செயல்பட முடியும் என்பதனையும் , எந்தவொரு விசாரணையையும் முன்னெடுக்க முடியும் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளோம்.  இந்த விசாரணைகளுக்கு தேவையான தொழில்நுட்ப ஒத்துழைப்புகளை தேவைக்கு ஏற்ப சர்வதேசத்திடமிருந்து பெற்றுக்கொள்ள முடியும். ஆனால் விசாரணை பொறிமுறைக்கு பொறுப்பானவர்களாக இலங்கை இருக்க வேண்டும். மாறாக அந்த பொறுப்பில் சர்வதேசம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டை நாங்கள் நிராகரிக்கின்றோம். 

எனவே ஜெனிவா குற்றச்சாட்டுக்களில் நிபுணத்துவ ஒத்துழைப்புகளை சர்வதேசத்திடம் இருந்து பெற்றுக்கொள்ளவும் வெளிப்படைத்தன்மையுடன் செயல்படவும் தயராகவே உள்ளோம். ஆனால் விசாரணைகளின் பொறுப்பாளர்களாக இலங்கை இருக்கும். வெள்ளைக்கொடி மாத்திரமல்ல  முன்னெடுக்கப்பட வேண்டிய எந்தவொரு விசாரணைகளுக்கும் அரசாங்கம் தடையாக இருக்காது என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224415

ஐ.நா. வில் தீர்மானம் கொண்டுவரப்பட்டால் இலங்கைக்கு ஆதரவாக செயல்படுங்கள் - பன்னாடுகளிடம் அரசாங்கம் கோரிக்கை

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 08:26 AM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக அனைத்துலக நாடுகளும் செயல்பட வேண்டும். குறிப்பாக ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள அரசாங்கம், இம்முறை ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை என்றும் குறிப்பிட்டுள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது மீளாய்வு கூட்டத்தொடர் நாளை திங்கட்கிழமை (07) ஆரம்பிக்கப்பட உள்ள நிலையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் தலைமையிலான இலங்கை பிரதிநிதிகள் குழு இன்று ஞாயிற்றுக்கிழமை ஜெனிவா சென்றுள்ளது.

அத்துடன் பிரித்தானியா, கனடா, மலாவி, மொண்டினீக்ரோ, மற்றும் வடக்கு மசிடோனியா ஆகிய நாடுகளை உள்ளடக்கிய இலங்கைக்கான கேந்திரியக் குழு  (Core Group on Sri Lanka)   ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் செப்டம்பர் அமர்வில் ஒரு புதிய தீர்மானத்தை முன்வைக்கவுள்ளது.

இந்த புதிய தீர்மானம், ஏற்கனவே உள்ள தீர்மானங்களை விட, மென்மையான நிலைப்பாட்டைக் கொண்டிருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 51/1 தீர்மானத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டம்  (Sri Lanka Accountability Project) என்ற பொறிமுறையை தொடர்ந்தும் முன்னெடுத்துச் செல்வதே இதன் பிரதான நோக்கமாக இருக்கும்.

இருப்பினும் ஜெனிவா விடயத்தை மையப்படுத்தி இலங்கையின் நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தும் வகையில், வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் கொழும்பில் பன்னாட்டு இராஜதந்திரிகளை சந்தித்து கலந்துரையாடி இருந்தார்.

இதன் போது அனைத்து இன மக்கள் வாழும் பகுதிகளிலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் வெற்றிப்பெற்றுள்ளது. வடக்கு, கிழக்கு மற்றும் மலையகம் என அனைத்து சிறுபான்மை இன மக்களின் நம்பிக்கையை வெற்றிக்கொண்ட அரசாங்கமாகவே இலங்கையின் தற்போதைய ஆட்சி உள்ளது.

அனைத்து இன மக்களின் பாதுகாப்பு, மனித உரிமைகள் மற்றும் ஜனநாயகம் என்பவற்றை உறுதி செய்வதில் முழுவதுமாக ஈடுப்பாட்டுடன் தீர்மானங்களை எடுத்து வருகின்றோம். இதன் பிரகாரம் நடைமுறையில் உள்ள பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் நிழ்நிலை பாதுகாப்பு சட்டம் என்பவற்றை இரத்து செய்வதற்கும் தீர்மானம் எடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.

அதேபோன்னு நாட்டில் மக்கள் ஆணையை உறுதி செய்வதற்காக உரிய நேரத்தில் தேர்தல்களை நடத்தி வருகிறோம். மாகாண சபை தேர்தல் கூடிய விரைவில் நடத்தப்படும். வன்முறைகள் அற்ற தேர்தல்கள் இடம்பெறுவதற்கு தேவையான சட்ட ஒழுங்குகளை நடைமுறைப்படுத்தி வருகின்றோம்.

கடந்த 11 மாதங்களாக எவ்வித பாரதூரமான மனித உரிமைகள் மீறல்களும் நாட்டில் இடம்பெறவில்லை. காணாமல் போனோர் அலுவலகம், இழப்பீடுகளுக்கான அலுவலகம், தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்க அலுவலகம் ஆகிய வற்றின் செயல்பாடுகளை வலுப்படுத்தியுள்ளோம்.

எனவே இலங்கைக்கு எதிராக ஜெனிவா மனித உரிமைகள் பேரவையில் தீர்மானம் கொண்டுவரப்படுமாயின், அதற்க எதிராக நட்புகள் செயல்பட வேண்டும். குறிப்பாக இலங்கையின் ஆட்சி மாற்றத்தின் பின்னர் ஏற்பட்டுள்ள சாதகமான சூழலை கருத்தில் கொண்டு இலங்கைக்கு ஆதரவான நிலைப்பாட்டில் இருந்து நட்பு நாடுகள் அறிக்கை வெளியிட வேண்டும்.

எவ்வாறாயினும் ஜெனிவாவில் இலங்கைக்கு எதிராக தீர்மானம் ஒன்று முன்வைக்கப்படும் என்றோ வாக்கெடுப்பு நடத்தப்படும் என்றோ நம்பவில்லை. அவ்வாறானதொரு சூழல் வந்தால் ஆதரவாக இருக்க வேண்டும் என்பதே எமது கோரிக்கையாகும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/224407

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம்: செஞ்சிலுவை சங்கத்தின் பங்கேற்பை இலங்கை கோரியிருப்பதாகத் தகவல்

1 month 3 weeks ago

07 Sep, 2025 | 11:08 AM

image

(நா.தனுஜா)

செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி அரசாங்கம் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுத்திருப்பதாகவும், அதற்கமைய இச்செயன்முறையில் செஞ்சிலுவை சங்கம் வெகுவிரைவில் பங்கேற்கும் எனவும் அறியமுடிகிறது.

செம்மணி சித்துபாத்தி மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகள் தொடர்ந்து 45 ஆவது நாளாக சனிக்கிழமையும் முன்னெடுக்கப்பட்டன. அதன்படி இதுவரையான காலப்பகுதியில் மொத்தமாக 240 எலும்புக்கூடுகள் அடையாளம் காணப்பட்டிருப்பதுடன், அவற்றில் 239 எலும்புக்கூடுகள் முழுமையாக அகழ்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தைப் பொறுத்தமட்டில் அகழ்வுப்பணிகளை முன்னெடுப்பதற்கு அவசியமான நிதியைப் பெற்றுக்கொடுத்தல், கண்காணிப்பு மற்றும் ஆவணப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்ளல் உள்ளிட்ட விடயங்களில் காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் அதன் பங்களிப்பினை வழங்கிவருகிறது.

அதுமாத்திரமன்றி செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் அண்மையில் முக்கிய வெளிப்படுத்தல்களைச் செய்திருந்த மரணதண்டனைக்கைதி லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவை சிறைச்சாலைக்கு சென்று சந்தித்த காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின், அவரிடம் விடயங்களைக் கேட்டறிந்துகொண்டனர்.

இவ்வாறானதொரு பின்னணியில் மனிதப்புதைகுழிகள் விவகாரத்தைக் கையாள்வதில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்துக்கு நீண்டகால அனுபவமும், முறையான நிபுணத்துவமும் உள்ள போதிலும், அரசாங்கம் அல்லது அங்கீகரிக்கப்பட்ட கட்டமைப்புக்களால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்படாததன் காரணமாக குறிப்பாக செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கவில்லை.

இந்நிலையில் அண்மையில் செம்மணி மனிதப்புதைகுழி விவகாரத்தில் அகழ்வு மற்றும் பகுப்பாய்வு நடவடிக்கைகளில் சர்வதேச செஞ்சிலுவை சங்கத்தின் நிபுணத்துவத்தைக்கோரி காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் வேண்டுகோளுக்கு அமைவாக நீதியமைச்சினால் உத்தியோகபூர்வமாக அழைப்புவிடுக்கப்பட்டிருப்பதாக அறியமுடிகிறது. அதுமாத்திரமன்றி மேற்படி வேண்டுகோளுக்கு இணங்க, இச்செயன்முறையில் வெகுவிரைவில் செஞ்சிலுவை சங்கம் பங்கேற்கும் எனவும் நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

https://www.virakesari.lk/article/224426

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம் - விஜித ஹேரத்

1 month 3 weeks ago

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

September 6, 2025 8:00 pm

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்

பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை குறித்து வெளிநாட்டு இராஜதந்திரிகளுடனான சந்திப்பில் எடுத்துரைத்துள்ள வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் உறுதியளித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது கூட்டத்தொடர் எதிர்வரும் திங்கட்கிழமை ஆரம்பமாகவுள்ளது. இந்நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை (2) கொழும்பில் அமைந்துள்ள வெளிவிவகார அமைச்சில் சர்வதேச நாடுகளின் இராஜதந்திரிகளை சந்தித்த அமைச்சர் விஜித ஹேரத் மனித உரிமைகள்சார் விடயங்களில் அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்டுள்ள சமகால நகர்வுகள் குறித்தும், அவற்றில் அடையப்பட்டுள்ள முன்னேற்றங்கள் குறித்தும் விளக்கமளித்தார்.

அதன்படி புதிய அரசாங்கம் என்ற ரீதியில் நாட்டின் மனித உரிமைகள் நிலவரத்தை மேம்படுத்தும் நோக்கில் மாறுபட்ட பல நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருப்பதாகவும், அவற்றின் மூலம் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றங்கள் அடையப்பட்டிருப்பதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.

குறிப்பாக வட, கிழக்கு மாகாணங்களில் வாழும் தமிழ் மக்களுக்கு பல்வேறு பிரச்சினைகள் காணப்படுவதாகவும், அவற்றுக்குரிய தீர்வைப் பெற்றுக்கொடுப்பதிலும், பொருளாதாரப் பிரச்சினைகளுக்கான தீர்வுகளின் ஊடாக நிலையான அமைதி மற்றும் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதிலும் தாம் உறுதியாக இருப்பதாகவும் அவர் எடுத்துரைத்தார்.

அதேபோன்று பயங்கரவாத தடைச் சட்டத்தை நீக்குவதற்கு முன்னெடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை, நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மறுசீரமைப்பதற்கான நகர்வுகள், ஊழல் ஒழிப்பு செயற்றிட்டம், கிளீன் ஸ்ரீலங்கா செயற்றிட்டம், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மற்றும் இழப்பீட்டுக்கான அலுவலகம் என்பன உள்ளடங்கலாக உள்ளகக் கட்டமைப்புக்களின் சமகால முன்னேற்றங்கள், சுயாதீன வழக்குத்தொடுனர் அலுவலகத்தை ஸ்தாபிப்பதற்கான தீர்மானம் உள்ளிட்ட நகர்வுகள் பற்றியும் அமைச்சர் விஜித ஹேரத் இராஜதந்திரிகளுக்கு விளக்கமளித்தார்.

தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுத்து நல்லிணக்கத்தை கட்டியெழுப்புவோம்!

https://oruvan.com/we-will-provide-solutions-to-the-problems-of-the-tamil-people-and-build-reconciliation/

மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை

1 month 3 weeks ago

மன்னாரில் பாலியல் துஷ்பிரயோக வழக்கில் சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை

06 Sep, 2025 | 05:19 PM

image

மன்னாரில்  16 வயதுக்கு குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் ஒரே குடும்பத்தை சேர்ந்த சகோதரர்கள் இருவருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதித்து மன்னார் மேல் நீதிமன்ற நீதிபதி கடந்த வியாழக்கிழமை  (04)  தீர்ப்பளித்தார்.

குற்றத்தின் பாரதூர தன்மை, பாதிக்கப்பட சிறுமியின் நிலை, மேலும்  இவ்வாறான குற்றங்கள்  இடம் பெறாமல் இருக்க வேண்டும் என்ற தன் அடிப்படையில் சட்ட ஏற்பாடுகளுக்கு அமைவாக இந்த தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 

7 வருட கடூழிய சிறைத் தண்டனைக்கு மேலதிகமாக தண்டப்பணமும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு 5 லட்சம் ரூபாய்  நஷ்ட ஈட்டு தொகையும் வழங்க தீர்ப்பளிக்கப்பட்டது.

இதில் சகோதரர் குறித்த வயது குறைந்த சிறுமியை பாலியல் துஷ்பிரயோகம் செய்ய உதவி புரிந்தமைக்காக இரண்டாம் எதிரிக்கு அதே தண்டனை அதாவது 7 ஆண்டு கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

வழக்கு தொடுனர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் மற்றும் சிவஸ்கந்தஶ்ரீ ஆகியோர் வழக்கை நெறிப்படுத்தி இருந்தனர்.

வழக்கு தொடுநர் தரப்பில் வழக்கு நியாயமான சந்தேகத்திற்கு அப்பால் நிரூபிக்கப்பட்டதால் குற்றவாளிகளுக்கு கடூழிய சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/224391

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!

1 month 3 weeks ago

download-1-5.jpg?resize=290%2C174&ssl=1

ஜெனீவா மனித உரிமைகள் அறிக்கைக்கு இலங்கையின் பதில்!

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையினால் இலங்கைக்கு எதிராக வெளியிடப்பட்ட 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை அரசாங்கம் ஏற்றுக்கொள்ளவில்லை என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெரிவித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கை தொடர்பாக மனித உரிமை பேரவையின் ஆணையளரினால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.

குறித்த மனித உரிமை பேரவையின் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

குறிப்பாக மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இந்த தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது.

மனித உரிமைகள் பேரவையின் 57 இன் கீழ் 1 தீர்மானம், வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை அரசாங்கம் சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமை பேரவையின் ஆணையாளர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப்
பேணி வருவதாகவும் ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.

எனவே இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரிக்கை விடுத்துள்ளது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள இலங்கைக்கான நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.

https://athavannews.com/2025/1446291

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

1 month 3 weeks ago

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

சனி, 06 செப்டம்பர் 2025 11:13 AM

செம்மணியில் 1500 சதுர அடிக்குள் 230க்கும் அதிகமான என்புக்கூடுகள் மீட்பு

செம்மணி புதைகுழி அகழ்வு பணிகளின் போது, சுமார் 1500 சதுர அடி நிலப்பரப்பில் இருந்து 231 மனித என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளன.

செம்மணி மனித புதைகுழி அகழ்வு பணிகளின் போது , அகழ்வாய்த்தளம் - 1 மற்றும் அகழ்வாய்வு தளம் - 02 என அகழ்வுப்பணிகள் முன்னெடுக்கப்பட்டது.

அதன் போது அகழ்வாய்த்தளம் - 01 புதைகுழியில் கட்டம் கட்டமாக 54 நாட்களாக , அண்ணளவாக 30 அடி அகலமும் 50 அடி நீளமும் , 05 அடி ஆழத்திலும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டது. அதன் போது குறித்த புதைகுழியில் இருந்து 231 என்புக்கூட்டு தொகுதிகள் அகழ்ந்து எடுக்கப்பட்டுள்ளது.

குறித்த புதைகுழியில் ஒன்றன் மேல் ஒன்றாகவும் குவியல் ஆகவும், அமர்ந்த நிலையிலும் என சிறுவர் , சிசுக்கள் உள்ளிட்டவர்களின் என்புக்கூடுகளும் அடையாளம் கண்டு மீட்கப்பட்டிருந்தன.

அதேவேளை அகழ்வாய்வுத் தளம் - 02 இல்  மேற்கொள்ளப்பட்ட அகழ்வு பணிகளில் 09 என்புக்கூடுகள் மீட்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://jaffnazone.com/news/50440

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

1 month 3 weeks ago

அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி இந்தியாவில் இருந்து வந்த விடுதலை நீர்!

1581307342.jpg

சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் விடுதலையை வலியுறுத்தி காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

தமிழர் தாயகமான வடக்கு - கிழக்கு பகுதிகளில் கடந்த நாட்களில் விடுதலை நீர் சேகரிக்கப்பட்டது. 

அந்தவகையில் அரசியல் கைதிகளின் விடுதலைக்கு வலுச்சேர்க்கும் முகமாக புலம்பெயர் தேசங்களில் இருந்தும் இந்த விடுதலை நீர் சேகரிப்பு இடம்பெற்று வருகிறது.

அதனடிப்படையில் நேற்றையதினம் (04) காசி உட்பட இந்தியாவின் பல தீர்த்தங்களில் இருந்து புனித நீர் எடுத்து வரப்பட்டு விடுதலை நீர் சேகரிப்பு பானையில் சேமிக்கப்பட்டது. 

இந்த நீர் சேகரிப்பு நிகழ்வானது சிவகுரு ஆதீனத்தில் நடைபெற்றது.

இந்த விடுதலை நீர் சேகரிப்பு நிகழ்வில் தவத்திரு வேலன் சுவாமிகள், காணாமல் ஆக்கப்பட்டோரது உறவுகள் சங்கத்தினர், அரசியல் கைதிகளின் உறவுகள், குரல் அற்றவர்களின் குரல் அமைப்பினர், தென்னிந்தியாவில் இருந்து வருகை தந்த உறவுகள், யாழ்ப்பாணம் மற்றும் கிழக்கு பல்கலைக்கழக மாணவர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

https://newuthayan.com/article/அரசியல்_கைதிகளின்_விடுதலையை_வலியுறுத்தி_இந்தியாவில்_இருந்து_வந்த_விடுதலை_நீர்!

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

1 month 3 weeks ago

யாழ். பல்கலை வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேல் நியமனம்

யாழ். பல்கலைக்கழக வேந்தராகப் பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நியமித்துள்ளார்.

இதற்கான எழுத்து மூலமான கடிதம், ஓகஸ்ட் 27ஆம் திகதியிடப்பட்டு ஜனாதிபதியின் செயலாளர் குமநாயக்கவினால் வழங்கப்பட்டுள்ளது.

அடுத்த ஐந்து ஆண்டுகளுக்கு இந்தப் பதவியை பேராசிரியர் ராஜரட்ணம் குமாரவடிவேலு வகிப்பார்.

பேராதனைப் பல்கலைக்கழகத்தில் 1966-1970 ஆம் ஆண்டு பயின்ற குமாரவடிவேல் பௌதீகத் துறையில் முதல் தர சிறப்புப் பட்டம் பெற்றவர்.

பிரிஸ்டல் பல்கலைக்கழகத்தில் 1975 இல் கலாநிதிப் பட்டம் பெற்ற அவர் 1976 முதல் யாழ் பல்கலைக்கழகத்தில் பணியாற்றியவர்.

2006 - 2007 ஆம் ஆண்டுகளில், மிக நெருக்கடியான காலகட்டத்தில், யாழ். பல்கலைக்கழக பதில் துணைவேந்தராகப் பொறுப்போடு சிறப்புப் பணியாற்றியவர் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

2015 முதல் 2020 வரை அவர் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உறுப்பினராகவும் அவர் பணி புரிந்தவர்.

பல்கலைக்கழக முன்னாள் சட்ட விரிவுரையாளர் சட்டத்தரணி கு.குருபரனின் தந்தை இவர் என்பதும் குறிப்பிடத்தக்கது. R

https://www.tamilmirror.lk/செய்திகள்/யாழ்-பல்கலை-வேந்தராகப்-பேராசிரியர்-ராஜரட்ணம்-குமாரவடிவேல்-நியமனம்/175-364092

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

1 month 3 weeks ago

மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை!

adminSeptember 6, 2025

UN-Human.jpg?fit=900%2C487&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் அறிக்கைக்கு, ஜெனீவாவிலுள்ள இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் பதிலளித்துள்ளது.

இந்தப் பதிலில், குறித்த அறிக்கையின் அடிப்படையாக அமைந்த மனித உரிமைகள் பேரவையின் 57/1 தீர்மானத்தை இலங்கை ஏற்றுக்கொள்ளவில்லை என்பதை இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் தெளிவுபடுத்தியுள்ளது.

மேலும், இத்தீர்மானத்தின் கீழ் செயல்படுத்தப்படும் இலங்கை பொறுப்புக்கூறல் திட்டத்தை இலங்கை தொடர்ந்து எதிர்ப்பதாகவும் உறுதிப்படுத்தியுள்ளது

இதுபோன்ற வெளிப்புறத் திட்டங்கள், குறிப்பாக உள்நாட்டு நல்லிணக்க முயற்சிகளுக்கு தீங்கு விளைவிக்கக் கூடியவை என இலங்கை சுட்டிக்காட்டியுள்ளது.

மனித உரிமைகள் உயர் ஆணையர் அலுவலகத்துடனும், அதன் நிரந்தர மனித உரிமைகள் பொறிமுறைகளுடனும் இலங்கை நெருக்கமான ஒத்துழைப்பைப் பேணி வருவதாகவும் தெரிவித்துள்ளது.

இதனால், இலங்கை தொடர்பான மனித உரிமைகள் உயர் ஆணையாளரின் இறுதி அறிக்கை துல்லியமாகவும், சமநிலையுடனும், நிலைமையைப் பிரதிபலிக்கும் வகையில் சமர்ப்பிக்கப்பட வேண்டும் என இலங்கையின் பிரதிநிதித்துவ அலுவலகம் கோரியுள்ளது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைமையை மேம்படுத்த இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட நடவடிக்கைகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகள் குறித்து, ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை நிரந்தரப் பிரதிநிதித்துவ அலுவலகம் விவரித்துள்ளது.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை https://globaltamilnews.net/2025/220156/

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

1 month 3 weeks ago

1707751-gunshoot.jpg?resize=750%2C375&ss

12 மணித்தியாலங்களில் 04 துப்பாக்கிச்சூட்டு சம்பவங்கள் பதிவு!

நாட்டில் கடந்த 12 மணித்தியாலங்களில் பல்வேறு பகுதிகளிலும் இடம்பெற்ற 4 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் பதிவாகியுள்ளன.

மஹாவத்தை, கிராண்ட்பாஸ் பகுதியில் நேற்றிரவு ஒருவர் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிசூட்டில் அவர் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

இதேவேளை, பஞ்சிகாவத்தை பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார்.

இந்நிலையில் , நீர்கொழும்பு பகுதியில் ஒரு வீட்டின் மீது அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிதாரிகளால் துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்ட நிலையில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.

இதேவேளை, பாணந்துறை, அலுபோமுல்ல பகுதியில் ஒரு கடையில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் துப்பாக்கிச் சூடு நடத்திய நிலையில் உயிரிழப்புகள் எதுவும் இல்லை.

https://athavannews.com/2025/1446263

Checked
Mon, 11/03/2025 - 08:42
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr