ஊர்ப்புதினம்

வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது!

1 month 3 weeks ago

வேலணையில் வாள்வெட்டு ; 10 நாள்களின் பின் பிரதான சந்தேக நபர் கைது!

10 Sep, 2025 | 11:03 AM

image

அண்மையில் வேலணை பகுதியில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் தேடப்பட்டு வந்த நிலையில்,  பிரதான சந்தேக நபரை  10 நாள்களின் பின்னர் செவ்வாய்க்கிழமை (09) கைது செய்துள்ளதாக  ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த மாதம் 31 ஆம் திகதியன்று வேலணை அராலி சந்திக்கு அண்மையில் காரில் சென்ற ஒருவரை பட்டா ரக வாகனத்தில் சென்ற குழு ஒன்று வழிமறித்து வாளால் வெட்டி கடுங்காயங்களுக்கு உள்ளாக்கிவிட்டுச் தப்பிச் சென்றிருந்தது.

கடும் காயமுற்ற நபர் யாழ். போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில் குறித்த வாள் வெட்டுடன் தொடருடைய குழுவை பொலிஸார் தேடி  தீவிர விசாரணை நடவடிக்கை ஆரம்பித்தனர். 

இந்நிலையில் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் ஊர்காவற்றுறை பொலிஸ் அதிகாரி  தலைமையிலான அணியினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதேநேரம் குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய ஏனைய நபர்களும் விரைவில் கைதுசெய்யப்படுவர் என தெரிவித்த ஊர்காவற்றுறை பொலிஸார் கைதான பிரதான  சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் ஊர்காவற்றுறை நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டு சட்ட நடவடிக்கைக்கு உள்ளாக்கப்படுவார் என்றும் தெரிவித்தனர்.

https://www.virakesari.lk/article/224701

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை - இலங்கை தமிழரசு கட்சி

1 month 3 weeks ago

வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

வெளிநாட்டு அமைச்சர் விஜித ஹேரத் கடந்த 08 ஆம் திகதி ஜெனீவாவில் நடைபெற்ற ஐ. நா. மனித உரிமைகள் பேரவையின் 60 ஆவது அமர்வில் வெளியிட்ட அறிக்கைக்கு இலங்கை தமிழரசு கட்சி சார்பில் அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளனர். 

அந்த அறிக்கையில் தெரிவித்ததாவது, 

பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கம் தொடர்பான பல முக்கிய கரிசனைகளுக்கு அரசாங்கம் இன்னும் பதிலளிக்கவில்லை என்பதில் எமது ஆழ்ந்த ஏமாற்றத்தை இங்கு பதிவு செய்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்றபோது பல வாக்குறுதிகளை வழங்கியது. எனினும், ஜனாதிபதி தேர்தல் முடிவுற்று ஒரு முழு ஆண்டு ஆன பின்னும், அந்த வாக்குறுதிகளை நிறைவேற்றும் முதல்படி கூட இன்னும் எடுக்கப்படவில்லை. 

அமைச்சர் தேசிய ஒற்றுமை மற்றும் நல்லிணக்கத்தை வலுப்படுத்தல் நாட்டின் அபிவிருத்திக்கு அவசியம் எனக் கூறினாலும், எளிதில் செய்யக்கூடியவை கூட முயற்சிகள்கூட இன்னமும் மேற்கொள்ளப்படவில்லை. பல உறுதிமொழிகள் வழங்கப்பட்ட போதிலும், பயங்கரவாதத் தடுப்புச் சட்டம் (PTA) இன்னும் நீக்கப்படவில்லை. 

PTAக்கு மாற்றாக எந்த புதிய சட்டமும் கொண்டு வரமாட்டோம் என்ற உறுதியான நிலைப்பாட்டை அரசாங்கம் எடுத்திருந்த போதிலும், தற்போது அமைச்சர் புதிய பயங்கரவாதத்திற்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படும் என அறிவித்துள்ளார் என்பது வருத்தத்திற்குரியது. 

PTA சட்ட நீக்கம் செய்யப்படும் வரை அதன் பயன்பாட்டில் தற்காலிகமான தடை (moratorium) வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளும், உறுதிமொழிகளும் இருந்தும், அது தொடர்ந்தும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதேபோன்று, நிகழ்நிலைக் காப்புச் சட்டம் (Online Safety Act) சட்ட நீக்கம் செய்ய எந்த நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. 

வெளிநாட்டு நடவடிக்கைகள் தேசிய செயல்முறைகளில் பிளவுகளையும் அபாயத்தையும் ஏற்படுத்தும் என அமைச்சர் கூறியுள்ளதும், இலங்கை பொறுப்புக்கூறல் செயற்றிட்டத்துக்கு (Sri Lanka Accountability Project) எதிர்ப்பு தெரிவித்துள்ளதும் மிகவும் கண்டனத்துக்குரியது. ஆயுதப் போராட்டம் முடிவடைந்து பதினாறு ஆண்டுகள் ஆன போதும் , எந்த உள்ளக பொறுப்புக்கூறல் பொறிமுறைகளும் இன்னமும் உருவாக்கப்படவில்லை. 

இந்த சூழலில், பாதிக்கப்பட்டவர்கள் சர்வதேச ஈடுபாட்டை நாடுவதைத் தவிர வேறுவழியில்லை. யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் 240 எலும்புக்கூடுகள் இன்றுவரை கண்டுபிடிக்கப்பட்டுள்ள. இவை சட்டத்துக்கு புறம்பான கொலைகளாக இருப்பினும் இங்கு கிடைக்கப்பட்ட சான்றுகள் தொடர்பாக அமைச்சர் எதுவும் குறிப்பிடவில்லை. 

இந்த உயிரிழப்புகளை அடையாளம் காண உள்ளூர் நிபுணத்துவம் இல்லாதது நிதர்சனமான உண்மை. இருந்தும், அரசாங்கம் சர்வதேச உதவியை இன்னமும் கோரவில்லை, மனிதப் புதைகுழிகள், வலிந்து காணாமலாக்கப்படுதல் போன்ற பல விடயங்களிலும் இதே நிலை தொடர்கிறது. 

அதிகாரப் பகிர்வு குறித்து மீண்டும் வலியுறுத்தியதற்கும், தமிழ் சமூகத்தின் அவாவான சமத்துவம், நீதி, மாண்பு, சமாதானம் ஆகியவற்றுக்காக ஆதரவு வழங்கியதற்கும் இந்திய அரசாங்கத்திற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறோம். 

இந்தியா, மாகாண சபைத் தேர்தல்கள் விரைவில் நடத்தப்பட வேண்டும் என்றும், அதிகாரப் பகிர்வு அர்த்தமுள்ளதாக இருக்க வேண்டும் என்றும் அழைத்துள்ளது. 

மாறாக, இலங்கை அரசாங்கம் தன் எழுத்திலான பதிலில், எல்லை நிர்ணயிப்பு செயல்முறை முடிந்த பிறகு மட்டுமே மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்ற நிலை எடுத்துள்ளது. இது பல ஆண்டுகள் தேர்தலை தள்ளிவைக்கும் எண்ணப்பாட்டை காட்டுகிறது. வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் பேசும் மக்களுக்கு அரசாங்கம் அளித்த வாக்குறுதியை மீறி, அவர்களின் வாக்குரிமையை தொடர்ந்து உதாசீனப்படுதலை காட்டி நிற்கிறது. 

எமது பாராளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் முன்வைத்த தனி நபர் சட்டமூலத்தினை அரசாங்கம் உடனடியாக ஒப்புதல் வழங்கி, மாகாண சபைத் தேர்தலை உடனடியாக நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

https://adaderanatamil.lk/news/cmfditfvp00c8o29nu5z6jjya

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

1 month 3 weeks ago

நேபாளத்தில் உள்ள இலங்கையர்களுக்கு விசேட அறிவித்தல்!

422555504.jpeg

நேபாளத்தில் எதிர்கொள்ளப்படும் அரசியல் கலரவ சூழ்நிலையின் பின்னணியில் அங்கு வாழும் இலங்கையர்களுக்கு வெளிவிவகார அமைச்சு விசேட அறிவித்தல் ஒன்றை விடுத்துள்ளது.

நேபாளத்தில் நிலவும் தற்போதைய சூழ்நிலையைக் கருத்திற் கொண்டு நேபாளத்தில் வசிக்கும் இலங்கையர்கள் தங்கள் தங்குமிடங்களை விட்டு வெளியேற வேண்டாம் என்று வெளிவிவகார அமைச்சின் அறிக்கை வலியுறுத்தியுள்ளது.

அத்துடன் நேபாளத்தில் உள்ள இலங்கையர்கள் அந்நாட்டில் உள்ள இலங்கை தூதரக அதிகாரிகளை 10977- 9851048653 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக 24 மணி நேரமும் தொடர்பு கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தண்ணீர் மற்றும் உலர் உணவுப் பொருட்களை எப்போதும் தங்களிடம் வைத்திருக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருந்துகளைப் பயன்படுத்துபவர்கள் அவற்றை எப்போதும் தங்களிடம் வைத்திருக்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேபாளத்தில் 99 இலங்கையர்கள் உள்ளனர், அதில் தூதரக ஊழியர்கள் உட்பட 22 மாணவர்கள் உள்ளனர்.

 அதே நேரம் நேபாளத்தில் ஏற்பட்டுள்ள அரசியல் போராட்டத்தினால் இலங்கையர்கள் யாரும் காயமடைந்ததாக இதுவரை தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

https://newuthayan.com/article/நேபாளத்தில்_உள்ள_இலங்கையர்களுக்கு_விசேட_அறிவித்தல்!

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க! - உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து

1 month 3 weeks ago

பயங்கரவாதத் தடைச்சட்டத்தை நீக்கி தனிநபர் பாதுகாப்பை உறுதிசெய்க!

உறுப்பு நாடுகள் ஐ.நா.வில் வலியுறுத்து

807273820.jpeg



இலங்கையில் தனிநபர்களை இலக்குவைப்பதற்குப் பயன்படுத்தப்படும் பயங்கரவாதத் தடைச்சட்டம் நீக்கப்படவேண்டும் என்று பிரிட்டன், நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து, அவுஸ்திரேலியா உள்ளிட்ட உறுப்பு நாடுகள் வலியுறுத்தியுள்ளன.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60ஆவது கூட்டத்தொடர் ஜெனீவாவில் நேற்றுமுன்தினம் ஆரம்பமானது. இதில் இலங்கை தொடர்பான அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. தொடர்ந்து அறிக்கைமீதான விவாதம் நடைபெற்றது.

இதன்போது, தேசிய நல்லிணக்கத்தையும், பொறுப்புக்கூறல் மற்றும் நீதியை உறுதிப்படுத்துவதற்கான உள்ளகக் கட்டமைப்புகளின் இயலுமையையும் கட்டியெழுப்புவதில் இலங்கை அரசாங்கம் கொண்டிருக்கும் அர்ப்பணிப்புடன் கூடிய கடப்பாட்டைப் பெரிதும் வரவேற்கின்றோம்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மற்றும் பொருளாதார அபிவிருத்திச் செயற்றிட்டங்களையும் பாராட்டுகின்றோம். இலங்கையில் நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளுக்கு அவசியமான ஒத்துழைப்புகளை வழங்குவதற்கு நாம் தயார் என்று ஜப்பான் தெரிவித்தது.

நாட்டின் மனித உரிமைகள் நிலைவரத்தை மேம்படுத்துவதில் அரசாங்கம் கொண்டிருக்கும் கடப்பாட்டைப் பாராட்டுகின்றோம். மனிதப்புதைகுழி அகழ்வு நடவடிக்கைகள் சர்வதேச நியமங்களுக்கு அமைவாக முன்னெடுக்கப்பட வேண்டியது அவசியம். சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சிறுபான்மையின மக்களை இலக்குவைத்து ஒடுக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றன.

பயங்கரவாதத்தடைச்சட்டம் நீக்கப்படும் என்று வாக்குறுதியளிக்கப்பட்ட போதிலும், இன்னமும் அந்தச் சட்டம் நீக்கப்படாமை அதிருப்தி தருகின்றது என்று பிரிட்டன் தெரிவித்தது. மனித உரிமைகளை மேம்படுத்துவதற்கும், நல்லிணக்கத்தைக் கட்டியெழுப்புவதற்கும். நிலை மாறுகால நீதியை உறுதி செய்வதற்கும் இலங்கையால் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகளுக்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்கத்தயார். நபர்களைத் தன்னிச்சையாகக் கைது செய்வதற்கும், தடுத்துவைப்பதற்கும் பயன்படுத்தப்படும் பயங்கர வாதத்தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும்.

நிகழ்நிலைக்காப்புச்சட்டம் திருத்தியமைக்கப்படவேண்டும் என்று அவுஸ்திரேலியா தெரிவித்தது. நியூஸிலாந்து, சுவிட்ஸர்லாந்து மற்றும் மொன்டெனேக்ரோ ஆகிய நாடுகள் இலங்கையில் உண்மை, நீதி மற்றும் பொறுப்புக்கூறல் என்பன உறுதிப்படுத்தப்பட வேண்டியது அவசியம் எனவும். சட்டத்தின் ஆட்சிநிலை நாட்டப்படவேண்டும் எனவும் வலியுறுத்தின.

https://newuthayan.com/article/பயங்கரவாதத்_தடைச்சட்டத்தை_நீக்கி_தனிநபர்_பாதுகாப்பை_உறுதிசெய்க!

சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

1 month 3 weeks ago

சர்ச்சையை கிளப்பிய கடற்றொழில் அமைச்சரின் கடல் அட்டைப் பண்ணை கருத்து!

32663586.jpeg

கடல் அட்டை பண்ணை தொடர்பில் கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ள கருத்து, அவர் தொடர்பிலான சர்ச்சைக்குரிய கேள்விகளை எழுப்புவதாக மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.

யாழ்ப்பாணம் - குருநகர் பகுதியில் கடல் அட்டைப் பண்ணையாளர்களுடனான கலந்துரையாடலின் அவர் தெரிவித்த கருத்தே இவ்வாறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

அதாவது, கடல் அட்டைப் பண்ணை எல்லோருக்கும் வழங்குவோம் பயப்பட வேண்டாம் எனவும் நீங்கள் ஒன்றரை ஏக்கர் பண்ணை வைத்திருந்தால் அரை ஏக்கருக்கு அரசாங்கத்திற்கு பணம் கட்டினால் போதும் எனவும் அமைச்சர் தெரிவித்துள்ளார்.

கடந்த ஆட்சி காலங்களில் கடல் அட்டை பண்ணைகளுக்கு எதிராக சந்திரசேகரன் கருத்து தெரிவித்து வந்தார்.

தற்போது அமைச்சராக உள்ள நிலையில் சட்ட விரோதமாக கடல் அட்டை பண்ணைகளை மேற்கொண்டு வருகின்றவர்களை பாதுகாக்கும் பொருட்டு அரசாங்கத்துக்கு நட்டத்தை ஏற்படுத்தும் வகையில் கருத்து தெரிவித்தமையை காணக்கூடியதாக உள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் சீன நிறுவனம் ஒன்றின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணம் - அரியாலைப் பகுதியில் கடல் அட்டை உற்பத்தி நிலையம் ஆரம்பிக்கப்பட்ட நிலையில் அது பல்வேறு சர்ச்சைகளை ஏற்படுத்தியது.

இவ்வாறான ஒரு நிலையில் ஆழம் குறைந்த யாழ்குடா கடற் பரப்பில் பாரம்பரிய மீன் பிடியை நம்பி பல கடற்றொழில் மக்கள் வாழ்ந்து வரும் நிலையில் கடல் அட்ட பண்ணைகளை மீள ஏக்கர் கணக்கில் வழங்க முற்படுவது கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரத்தை அழித்து பல் தேசிய கம்பனிகளை ஊக்குவிக்கும் செயற்பாடா என மக்கள் கேள்வி எழுப்பியுள்ளளதாக கூறப்படுகிறது.

https://newuthayan.com/article/சர்ச்சையை_கிளப்பிய_கடற்றொழில்_அமைச்சரின்_கடல்_அட்டைப்_பண்ணை_கருத்து!

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

1 month 3 weeks ago

New-Project-131.jpg?resize=750%2C375&ssl

கடந்த ஆண்டில் 350 பொலிஸ் அதிகாரிகள் இடைநீக்கம்!

கடந்த ஆண்டில் சுமார் 350 பொலிஸ் அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.

பொலிஸ் துறையை அரசியலற்றதாக்கும் நடவடிக்கையின் ஒரு பகுதியாக, சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்ட அதிகாரிகள் குழு ஒன்று இவ்வாறு இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளதாக அவர் கூறுகிறார்.

களுத்துறை பொலிஸ் பயிற்சி கல்லூரியில் நடைபெற்ற பயிற்சி பொலிஸ் அதிகாரிகள் குழுவிற்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைக் குறிப்பிட்டார்.

இதவேளை இந்த நிகழ்வில் பேசிய பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பொலிஸ் சேவைக்குள் நீதியான அதிகாரிகள் குழுவை உருவாக்குவதே தனது முதன்மையான நோக்கம் என்று கூறினார்.

https://athavannews.com/2025/1446603

இலங்கைக்கு கடத்த இருந்த சுமார் ஒரு தொன் எடை கொண்ட காய்ந்த இஞ்சி வாகனத்துடன் பறிமுதல்:

1 month 3 weeks ago

written by admin August 10, 2025

Mandabam.jpeg?fit=1170%2C659&ssl=1

மண்டபம் அடுத்து வேதாளை கடற்கரையில் இருந்து சட்டவிரோதமான முறையில் நாட்டுப்படகில் இலங்கைக்கு  கடத்த இருந்த சுமார் ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) சரக்கு வாகனத்துடன் மரைன் காவற்துறையினர் நேற்று சனிக்கிழமை (09.08.25) இரவு  பறிமுதல் செய்து மண்டபம் சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் அடுத்த வேதாளை கடற்கரையில் மண்டபம் மரைன் காவற்துறையினர்   ரோந்து பணியில் ஈடுபட்ட போது இலங்கைக்கு கடத்துவதற்காக   வாகனத்தில் கொண்டு வரப்பட்ட 35 மூட்டைகளில் சுமார்  ஒரு டன் எடை கொண்ட சுக்கு (காய்ந்த இஞ்சி) பறிமுதல் செய்து மண்டபம் மரைன் காவல் நிலையத்திற்கு எடுத்து சென்றனர்.

மேலும் பறிமுதல் செய்யப்பட்ட சுக்கின் மதிப்பு பல  லட்சம் இருக்கலாம் எனவும் கைப்பற்றப்பட்ட சரக்கு வாகனத்தின் பதிவு எண் கொண்டு தப்பி ஓடிய மர்ம நபர்கள் தீவிரமாக தேடி வருவதாக மரைன் காவற்துறையினர்  தெரிவித்துள்ளனர்.

மரைன் காவற்துறையினர்  பறிமுதல் செய்யப்பட்ட சுக்கு மற்றும் சரக்கு வாகனம் இரண்டையும் மண்டபத்தில் உள்ள சுங்கத்துறை அலுவலகத்தில் ஒப்படைத்தனர் 


https://globaltamilnews.net/2025/219048/

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது - கே.கோடீஸ்வரன்

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 05:24 PM

image

(எம்.ஆர்.எம் வசீம், இராஜதுரை ஹஷான்)

கல்முனை வடக்கு பிரதேச செயலகத்துக்கென தனியாக நடத்த வேண்டிய ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை கல்முனை பிரதேச செயலகத்துடன் இணைத்து நடத்துவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது அவ்வாறு ஒன்றாக ஒருங்கிணைப்பு குழு கூட்டம் நடத்தப்படுவதை தமிழ் மக்களுக்கு செய்யும் துரோகமாகவே கருதப்படும் என்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் அம்பாறை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கே.கோடீஸ்வரன் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (09) நடைபெற்ற இலங்கைக்கும், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கும்  இடையிலான பல்துறை ஒப்பந்தம்  தொடர்பான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினை விடயத்தில் அதற்கென தனியாக 30 வருடங்களாக பிரதேச ஒருங்கிணைப்பு தலைவர் நியமிக்கப்பட்டிருந்தார். இப்போது பிரதி அமைச்சர் வசந்த பியதிச நியமிக்கப்பட்டுள்ளார். இது வரவேற்கதக்க விடயமே. ஆனால் இன்று வடக்கு பிரதேச செயலகத்தின் ஒருங்கிணைப்பு கூட்டம் இதுவரை நடைபெறவில்லை.  

கல்முனை பிரதேச செயலகத்துடன் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தையும் சேர்த்து ஒரு ஒருங்கிணைப்பு குழு கூட்டதை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது எந்த வகையில் நியாயமாகும்.

இவ்வளவு காலமும் நடந்த இரண்டு ஒருங்கிணைப்பு குழு கூட்டத் நிறுத்தி விட்டு இப்போது இரண்டு பிரதேச  செயலகங்களை சேர்த்து ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தை நடத்துவது ஆரிய மோசடிக்கு தள்ளப்படக்கூடிய மற்றும் பெரிய பிளவுக்கு தள்ளப்படக்கூடிய காரணமாக இருக்கப் போகின்றது.

மீண்டும் மீண்டும் இவ்வாறான பிளவுகள் ஏற்படுவதற்கு இந்த அரசாங்கம் காரணமாக இருக்கக் கூடாது. நிதி ஒதுக்கீடு உள்ளிட்ட ஏனைய விடயங்கள் இந்த வடக்கு பிரதேச செயலகம் ஊடாகவே இடம்பெற்று வந்தது. இப்போது இரண்டையும் சேர்த்து இரண்டு சமூகங்களுக்கு இடையில் பிரிவினையை ஏற்படுத்துவதற்கு முயற்சிக்கின்றீர்கள்.

அங்கு தேசிய மக்கள் சக்தியினருக்கு அதிக அளவில் வாக்குகளை வழங்கி இருந்தனர் ஆனால் இன்று அந்த தமிழர்கள் வெட்கி தலைகுனிந்து இருக்கின்றார்கள். தலைவரை நியமித்தும் அந்தப் பிரதேச செயலக குழு கூட்டங்கள் நடைபெறாமல் இருக்கின்றது.

 இதை நாங்கள் எதிர்க்கின்றோம் வன்மையாக கண்டிக்கின்றோம். இலங்கை வரலாற்றில் எப்போதும் நடக்காத வகையில் நீங்கள் இரண்டு பிரதேச செயல்களையும் இணைத்து வைக்கின்றீர்கள்.

இது வடக்கு செயலகப் பிரதேசத்தில் வாழும் தமிழ் மக்களுக்கு செய்கின்ற துரோகமாகவே நாங்கள் பார்க்கின்றோம். இதனை இந்த அரசாங்கம் தடுத்து நிறுத்த வேண்டும் என்று இந்த சபையில் நான் கேட்டுக்கொள்கிறேன்  என்றார்.

https://www.virakesari.lk/article/224659

வடக்கு மாகாணத்தின் சவால்களைத் தீர்ப்பதற்கு வித்தியாசமான அணுகுமுறையை பின்பற்றவேண்டும் - வடக்கு மாகாண ஆளுநர் வேதநாயகன்

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 01:01 PM

image

(எம்.நியூட்டன்)

வடக்கு மாகாணத்திலுள்ள ஒவ்வொரு பிள்ளைகளினதும் அடிப்படை உரிமைகளையும் அவர்களது தேவைகளையும் வசதிகளையும் உறுதிப்படுத்தவேண்டியது எங்கள் அனைவரினதும் பொறுப்பாகும். அதேநேரம் அவர்களுக்கான உதவிகளைச் செய்வதற்கு பலர் தன்னார்வமாக தயாராக உள்ளபோதும் அது ஒருங்கிணைந்த ஒழுங்கமைக்கப்பட்ட கட்டமைப்பின் ஊடாக கிடைக்கப்பெறுவதற்குரிய ஏற்பாடுகளை நாம் துரிதமாகச் செய்யவேண்டியிருக்கின்றது என வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தெரிவித்தார்.

இந்தியத் துணைத்தூதரகமும், போலோ ஆய்வகமும் இணைந்து 'போசாக்கு ஊட்டச்சத்து ஆரோக்கியம் மற்றும் ஆரம்பகால கற்றல் குறித்த உலகளாவிய கருத்தரங்கு – ஒரு குழந்தையின் எதிர்காலத்துக்கான இணைப்பு' என்னும் தலைப்பில் யாழ்ப்பாணம் திருவள்ளுவர் கலாசார மண்டபத்தில்  செவ்வாய்க்கிழமை காலை (09) இந்தியாவிலிருந்து வருகை தந்த கல்வி உளவியாளரும் சிறுவர் உரிமைக்கான நிபுணருமான கலாநிதி சரண்யா ஜெய்குமார் தலைமையில் நடைபெற்றது. 

இதில் கலந்து கொண்டு ஆளுநர் உரையாற்றுகையில் , வடக்கு மாகாணத்தை நாட்டின் ஏனைய மாகாணங்களிலிருந்து வித்தியாசப்படுத்தி நோக்க வேண்டும்.

மிக நீண்ட நெடிய போரால் பாதிக்கப்பட்ட மாகாணம் என்ற நோக்கு நிலையிலேயே அணுகவேண்டும். இந்த மாகாணத்தின் குழந்தைகள் போரால் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள்.

பல குடும்பங்கள் தங்கள் குடும்பத்தின் வருமானமீட்டுபவர்களை பறிகொடுத்திருக்கின்றார்கள்.

இந்தப் பின்னணிகளையும் கருதிலெடுத்தே எமது பிள்ளைகளின் எதிர்காலத்தை நாம் வடிவமைக்கவேண்டியிருக்கின்றது.

கல்விக்கு வறுமை ஒருபோதும் தடையாக இருக்கக் கூடாது. அதற்காகத்தான் அரசாங்கம் பல்வேறு உதவிகளைச் செய்து வருகின்றது. ஆனால் பிள்ளைகள் கல்வியைப் பெற்றுக் கொள்வதற்கு குடும்பச் சூழல் செல்வாக்குச் செலுத்துகின்றது.

மீள்குடியமர்ந்த குடும்பங்கள் இன்னமும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்கு முழுமையாகத் திரும்பவில்லை. அதேபோல பல்வேறு பாதிப்புக்களை எதிர்கொண்ட எதிர்கொண்டு இருக்கின்ற குடும்பங்களின் பிள்ளைகள் பாடசாலைக்குச் செல்லுமா என்பது கேள்விக்குறியே? 

அதேநேரம் வடக்கு மாகாணத்தில் யாழ்ப்பாண மாவட்டம் தவிர்ந்த ஏனைய 4 மாவட்டங்களிலும் தனிமைப்படுத்தப்பட்ட பல கிராமங்கள் இருக்கின்றன. அங்கு பிள்ளைகளும் குறைவு. அதனால் அங்குள்ள பாடசாலைகள் - ஆரம்பப் பாடசாலைகள் மூடப்படுகின்றன.

அந்தப் பிள்ளைகளுக்கு பல கிலோ மீற்றர் தூரம் பயணித்து கல்வியைப் பெற்றுக்கொள்வதற்கான இயலுமையும் குறைவு. அனைவருக்கும் சம வாய்ப்பு என்பது அந்தப் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை. இதை மாற்றியமைப்பதற்கு அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும். 

போர் உள்ளிட்ட பல்வேறு காரணிகளால் எங்கள் பிள்ளைகள் தங்கள் பெற்றோர்களை இழந்திருக்கின்றார்கள். அவர்கள் பேரன் அல்லது பேர்த்தியின் அரவணைப்பில்தான் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். அவர்களின் எதிர்காலம் மற்றும் பாதுகாப்புக் குறித்தும் நாம் கவனம் செலுத்தவேண்டியவர்களாக இருக்கின்றோம். 

எனவேதான் வடக்கு மாகாணத்தை ஏனைய மாகாணங்களிலிருந்து தனித்துவமான கோணத்தில் நோக்க வேண்டும் என்பதைக் குறிப்பிட்டிருந்தேன்.

எமது மாகாணத்தின் இந்தச் சவால்களைத் தீர்ப்பதற்கும் நாம் வித்தியாசமான அணுகுமுறையையே பின்பற்றவேண்டியிருக்கும். எனவே அதற்கு இந்தக் கருத்தரங்கு உதவியாக இருக்கும்  என்றார் .  

இந்த நிகழ்வில் இந்தியத் துணைத்தூதுவர் சாய்முரளி, யாழ். மாவட்டச் செயலர் ம.பிரதீபன் ஆகியோரும் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பேராசிரியர்கள், விரிவுரையாளர்கள், தேசியக் கல்வியற் கல்லூரி ஆசிரியர்கள், மாணவர்கள், அரச அதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டார்கள்.

IMG-20250909-WA0025.jpg

IMG-20250909-WA0022.jpg

IMG-20250909-WA0027.jpg

https://www.virakesari.lk/article/224618

மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு!

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 04:50 PM

image

மட்டக்களப்பு தலைமையாக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மட்டக்களப்பு நகரில் மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவுப் பொருட்களை தயாரித்து விற்பனை செய்த பிரபல ஹோட்டல் ஒன்றை இரு தினங்களுக்கு  மூடி சீல் வைத்து மூடுமாறு மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.சுதர்சனி உத்தரவிட்டுள்ளார் 

மட்டக்களப்பு நகரிலுள்ள குறித்த உணவு விற்பனை நிலையத்தின் மீது பொதுமக்கள் கொடுத்த புகாரின் அடிப்படையில் மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் எஸ் முரளீஸ்வரனின் பணிப்புரையின் பேரில் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் இ டாக்டர் இ.உதயகுமாரின் வழிகாட்டலில் கோட்டைமுனை பொது  சுகாதார பரிசோதகர் ரி. மிதுன்ராஜ் தலைமையிலான பொது சுகாதார பரிசோதகர்கள் குறித்த ஹோட்டலை சுற்றி வளைத்து தேடுதல் நடத்தியபோது மனிதபாவனைக்கு உதவாத பெருமளவிலான உணவுப் பொருள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன 

மனித நுகர்விற்கு பொருத்தமற்ற முறையில் உணவு தயாரித்தல், மனித பாவனைக்கு உதவாத உணவுப் பொருட்களை விற்பனை செய்தல் உட்பட ஐந்து குற்றச்சாட்டுகளின் மீது குறித்த ஹோட்டல் மீது மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள் வழக்கு தாக்கல் மேற்கொண்ட போது குறித்த ஹோட்டல் உரிமையாளருக்கு 45 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டதுடன் இருதினங்களுக்கு ஹோட்டலை சீல் வைத்து மூடுமாறும் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ சுதர்ஷினி உத்தரவிட்டார் 

நீதிமன்ற உத்தரவின் பேரில் குறித்த ஹோட்டல் பொது சுகாதார பரிசோதகர்களினால் நேற்று மிலை(8)சீல் வைத்து மூடப்பட்டுள்ளது. 

இரு தினங்களின் பின்னர் ஹோட்டல் உரிமையாளர் ஹோட்டலினை தூய்மைப்படுத்தி மனித நுகர்விற்கு பொருத்தமான முறையில் உணவு தயாரிக்கும் இடமாக மாற்றி அமைத்தால் மீண்டும் ஹோட்டலை திறப்பதற்கான அனுமதியை பொதுச் சுகாதார பரிசோதவர்கள் வழங்குவார்கள் என கோட்டைமுனை பொது சுகாதார பரிசோதகர் ரி.மிதுன்ராஜ் மேலும் தெரிவித்தார்.

குறித்த ஹோட்டல் உரிமையாளர் மீதான வழக்கு எது வரும் 12ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.


மட்டக்களப்பில் பிரபல ஹோட்டலுக்கு நீதிமன்ற உத்தரவின் பேரில் சீல் வைப்பு! பெருமளவு பழுதடைந்த உணவுப் பொருட்களும் மீட்பு! | Virakesari.lk

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார்

1 month 3 weeks ago

9 Sep, 2025 | 05:25 PM

image

ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கான மூலப்பொருள் அடங்கிய இரு கொள்கலன்கள் சுங்கத்திலிருந்து விடுவிக்கப்பட்டமைக்கு மேல் மாகாண வடக்கு குற்றபிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே  காரணம் என சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டுள்ள தகவல்கள் உண்மைக்குப் புறம்பானவை என பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

நாட்டில் பேசுபொருளாக மாறியுள்ள இவ்விடயம் தொடர்பில் நேற்று திங்கட்கிழமை (08) பொலிஸ் ஊடகப்பிரிவு வெளியிட்டிருந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டிருப்பதாவது,

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபடுபவர்களும் பாதாள உலக குழுவை சேர்ந்த மனுதின பத்மசிரி பெரேரா என்னும் கேல்பத்தர பத்மே  மற்றும் கமென்டோ சலிந்த உள்ளிட்ட ஐந்து சந்தேகநபர்கள் இந்தோனேசிய பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு கடந்த ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி நாடிற்கு அழைத்துவரப்பட்டனர்.

இந்நிலையில் குறித்த நபர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணையை அடுத்து, நாட்டினுள் ஐஸ் போதைப்பொருள் தயாரிப்புக்கு அவசியமான மூலப்பொருளான ஒருவகை இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்கள் கொண்டுவரப்பட்டமை மற்றும் மித்தெனிய பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டமை உள்ளிட்ட தகவல்கள் தெரியவந்தது.

அதற்கமைய மித்தெனிய பகுதியிலிருந்து  போதைப்பொருள் தயாரிப்புக்கான இரசாயனமும் மீட்கப்பட்டது. இவ்விடயம் தொடர்பில் பொலிஸார் விரிவான விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் சர்வதேச புலனாய்வு பிரிவு ஏற்கனவே தகவல் அளித்திருந்த போதும், சிவப்பு அடையாளமிடப்பட்ட இரசாயனம் அடங்கிய இரு கொள்கலன்களை மேல் மாகாண வடக்கு குற்றப்பிரிவு பணிப்பாளரும் உதவி பொலிஸ்  அத்தியட்சகருமான ரொஹான் ஒலுகலவே விடுவித்ததாக சமூக வலத்தளங்களில் உண்மைக்குப்புறம்பான கருத்துகள் பகிரப்பட்டுள்ளன.

இதுபோன்ற தேவையற்ற வதந்திகளால் விசாரணை அதிகாரிகள் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளதுடன்  விசாரணைகளுக்கும் இடையூறு ஏற்படுகின்றது. ஆகையால் விசாரணைகள் தொடர்பில் உண்மைக்குப் புறம்பான  தகவல்களை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து பொதுமக்களின்  கவனத்தை திசைதிருப்ப முயலும் நபர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.

போதைப்பொருள் அடங்கிய கொள்கலன்கள் விடுவிப்பு பொய்யான தகவல்களை பகிரவேண்டாம் - பொலிஸார் | Virakesari.lk

யாழில் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் கிழ் குளங்கள் தூர்வார நடவடிக்கை

1 month 3 weeks ago

Published By: Digital Desk 1

09 Sep, 2025 | 12:32 PM

image

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் : அதற்கான பொறிமுறை உருவாக்குவது தொடர்பில்   கலந்துரையாடல் இடம்பெற்றது.

யாழ். மாவட்டத்திலுள்ள குளங்களை தொடர்ச்சியாக தூர்வாருவது தொடர்பான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும், பரீட்சார்த்தமாக தூர்வாருதலை உடனடியாக நடைமுறைப்படுத்தவது தொடர்பாகவும் ஆராயும் கலந்துரையாடல் வடக்கு மாகாண  ஆளுநர் நா.வேதநாயகன்  தலைமையில்  திங்கட்கிழமை(நேற்று)  நடைபெற்றது. 

யாழ்ப்பாணத்தின் நிலத்தடி நீரைப் பாதுகாக்கும் செயன்முறையின் ஒரு பகுதியாக குளங்கள் தூர்வாரப்படவேண்டும் என்றும் அதற்கான பொறிமுறை தொடர்பில் ஆராய்வதே கலந்துரையாடலின் நோக்கம் என குறிப்பிட்ட ஆளுநர் அது தொடர்பில் துறைசார் அதிகாரிகளிடமிருந்து ஆலோசனைகளை எதிர்பார்ப்பதாக  தெரிவித்தார் . 

குளத்தை தூர்வாருதல் தொடர்பான பொறிமுறை நீண்ட காலத்தைக் கொண்டதாகக் காணப்படுவதாகவும், இதனால் தன்னார்வலர்கள் இந்த முயற்சியில் பங்கெடுக்க வந்தாலும் அவர்களும் சலிப்படைவதாகவும், கலந்துரையாடலில் சுட்டிக்காட்டப்பட்டது.

அத்துடன் அரசாங்க நிதியில்லாமல் இதைச் செயற்படுத்துவதற்கு பல்வேறு நிதி வழங்கும் தரப்புக்கள் தயாராக இருந்தாலும் அனுமதிக்கான பொறிமுறை சிக்கலுக்குரியதாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது.

மேலும், இன்னும் சில வாரங்களில் மழை காலம் ஆரம்பித்தால் இந்தப் பணிகளை தொடர முடியாது என்றும், ஏற்கனவே அனுமதி கோரப்பட்ட கந்தரோடை குளத்தையாவது தூர்வாருவதற்கான அனுமதிகள் உடனே வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.

கந்தரோடை குளத்தை தூர்வாருவதற்கான அனுமதி வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களத்தால் உடனடியாக வழங்கப்படும் என்றும், அகழப்படும் மண்ணை கொண்டு செல்வதற்கான அனுமதி பிரதேச செயலாளரால் வழங்கப்படும் எனவும் இந்தப் பணியை விரைவாக ஆரம்பித்து குளங்கள் தூர்வாருதல் தொடர்பில் தன்னார்வலர்களுக்கு நம்பிக்கையை ஏற்படுத்துவதற்கும் கலந்துரையாடலில் முடிவு செய்யப்பட்டது. 

யாழ். மாவட்டத்தில் கமநல சேவைகள் திணைக்களத்தின் கீழேயே அதிகளவு குளங்கள் உள்ள நிலையில் அவற்றின் கீழ் தூர்வாருவதற்கு உடனடியாக அனுமதிகள் வழங்கக் கூடியவற்றுக்கு அனுமதி வழங்குமாறும் ஏனையவற்றை தூர்வாருவதற்கான முன்னுரிமைப் பட்டியலை தயாரித்து உரிய நியாயப்படுத்தலுடன் தலைமையகத்துக்கு அனுப்புமாறும் கலந்துரையாடலின் போது ஆலோசனை வழங்கப்பட்டது. 

மேலும் வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளரின் கீழ், குளங்களை தூர்வாருதலுடன் தொடர்புடைய சகல திணைக்களங்களையும் ஒருங்கிணைத்து கலந்துரையாடலை நடத்தி இதற்கான நிரந்தரப் பொறிமுறையை உருவாக்குமாறும் ஆளுநர் பணிப்புரை விடுத்தார். 

இந்தக் கலந்துரையாடலில், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், யாழ்ப்பாண மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர், வடக்கு மாகாண நீர்பாசனத் திணைக்களப் பணிப்பாளர், கமநலசேவைகள் உதவி ஆணையாளர், பிரதி விவசாயப் பணிப்பாளர், நீர்பாசனப் பொறியியலாளர்கள், குளங்களைத் தூர்வாரும் செயற்பாடுகளை ஒருங்கிணைக்கும் தன்னார்வலர்கள் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/224612

புதையல் தோண்டுதல்; கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேருக்கு விளக்கமறியல் நீடிப்பு!

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 10:54 AM

image

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் உட்பட 9 பேரை  செப்டெம்பர் 22 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்குமாறு அநுராதபுரம் நீதவான் நீதிமன்றம் நேற்று திங்கட்கிழமை (08) உத்தரவிட்டுள்ளது. 

கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் இணைந்து அநுராதபுரம்,  சிராவஸ்திபுர,  திம்பிரிகடவல பகுதியில் உள்ள தேவாலயம் ஒன்றுக்குள் அத்துமீறி நுழைந்து புதையல் தோண்டிய சம்பவத்துக்கு உதவி செய்த குற்றச்சாட்டில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபரின் மனைவி உட்பட 8 பேர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

இதனையடுத்து பொலிஸாரால் மேற்கொள்ளப்பட்ட மேலதிக விசாரணைகளில் கொழும்பு மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர்  குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 25 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள 9 பேரும் நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டதையடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/224607

யாழில் வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் படுகாயம்!

1 month 3 weeks ago

09 Sep, 2025 | 01:03 PM

image

யாழ்ப்பாணம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட கலட்டிச் சந்தியில் இன்று செவ்வாய்க்கிழமை (08) காலை இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதலில் இளைஞன் ஒருவர் படுகாயமடைந்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருகையில்,

ஹையேஸ் ரக வாகனத்தில் வந்த கும்பல் ஒன்று, மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞன் ஒருவனை மோதி விழுத்திவிட்டு அந்த இளைஞன் மீது வாள்வெட்டு தாக்குதலை நடாத்திவிட்டு அங்கிருந்து தப்பிச் சென்றது.

இந்நிலையில் கோண்டாவில் பகுதியைச் சேர்ந்த இளைஞன் படுகாயமடைந்த நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாணம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://www.virakesari.lk/article/224620

பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்!

1 month 3 weeks ago

150129123753_lanka_parliament__512x288_e

பாதாள உலக குழுவுடன் தொடர்பு- வெளியாகவுள்ள முன்னாள் அமைச்சர்களின் பெயர்கள்!

ஒழுங்கமைக்கப்பட்ட பாதாள உலக குற்றக் கும்பல்களுடன் தொடர்புகளை வைத்திருந்த முன்னாள் அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிற உயர் மட்ட நபர்களின் பட்டியலை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை, இது தொடர்பில் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவும் விரைவில் அவையில் அறிக்கையொன்றை வெளியிட திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1446497

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்!

1 month 3 weeks ago

New-Project-118.jpg?resize=600%2C300&ssl

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகள் (ரத்து) தொடர்பில் உயர் நீதிமன்றின் தீர்மானம்!

முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை ரத்து செய்வதற்கான சட்டமூலத்தின் எந்தவொரு சரத்தும் அரசியலமைப்பின் எந்தவொரு விதிகளுக்கும் முரணானது அல்ல என உயர் நீதிமன்றம் விளக்கம் அளித்துள்ளது.

இன்றைய சபை அமர்வின் ஆரம்பத்தில் சபாநாயகர் வைத்தியர் ஜகத் விக்ரமரத்ன உயர் நீதிமன்றத்தின் விளக்கத்தை அறிவித்தார்.

இதன்படி குறித்த சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என்றும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளதாக சபாநாயகர் இன்று அறிவித்தார்.

https://athavannews.com/2025/1446489

இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

1 month 3 weeks ago

New-Project-110.jpg?resize=750%2C375&ssl

இந்த ஆண்டு வீதி விபத்துக்களினால் 1,870 பேர் உயிரிழப்பு!

இந்த ஆண்டு ஜனவரி 1 முதல் செப்டம்பர் 4 வரை நடந்த 1,757 வீதி விபத்துகளில் நாடு முழுவதும் மொத்தம் 1,870 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

போக்குவரத்துக்கு பொறுப்பான பிரதிப் பொலிஸ்மா அதிபர் இந்திக ஹபுகொட இந்த தகவலை வெளிப்படுத்தியுள்ளார்.

வீதி விபத்துகளால் தினமும் சுமார் ஏழு முதல் எட்டு பேர் உயிரிழப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

எனவே, வாகன சாரதிகள், பாதசாரிகள் மற்றும் பயணிகள் உட்பட அனைத்து வீதிப் பயனர்களும் போக்குவரத்து சட்டங்களை அவசியம் பின்பற்ற வேண்டும்.

விபத்துகளின் எண்ணிக்கையைக் குறைக்க சுய ஒழுக்கத்துடன், அவதானத்துடனும் செயல்பட வேண்டும் என்றும் அவர் கூறினார்.

https://athavannews.com/2025/1446451

மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!

1 month 3 weeks ago

மட்டுநகரில் வெள்ளைக்கொடிகள்..!சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35ஆவது ஆண்டு நினைவு!

Vhg செப்டம்பர் 09, 2025

AVvXsEh9O4CXe5rxVPw5l7iy6yL6RXeKwQoUuLA2vbWBMb7TPv0jiwq9gLsLqSiv095q-Ulj6uTV_kiWRyBlaIhzQxwySBg5ySTAgGfbZo1GF-COSJMo-wLRNu-7B5WJ3UEBrGZDmHzSmRNXG5BYwApkI3lk2P5AC3vyWtfHvDLkEONiT0I0sh3ISTWtqxqO4_FD

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35, ம் ஆண்டு நினைவு இன்று(09/09/2025)ஆம் திகதி இந்த தமிழினப்படுகொலையை நினைவு கூர்ந்து  மட்டக்களப்பு மாநகரபகுதி எங்கும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட சத்துருக்கொண்டான் படுகொலை 09(/09/1990)ல் இடம்பெற்றது.

Y

இலங்கை இராணுவமும், முஷ்லிம் ஊர்காவல் படையினரும் இணைந்து மேற்கொண்ட கூட்டுப்படுகொலைகளில் இதுவும் ஒன்றாகும்.

https://www.battinatham.com/2025/09/35.html

கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

1 month 3 weeks ago

கைது செய்யப்பட்ட கே.பி.யுடன் தனித்து உரையாடிய கோத்தா!

1696690696.jpeg

பொன்சேகா வெளியிடும் தகவல்கள்
 
மலேசியாப் பொலிஸாரே கே.பி.யைக் கைது செய்தனர். இலங்கைக்கு கொண்டுவரப்படும் வரை அவர் கே.பி என்பது எமக்குத் தெரியாது என்று முன்னாள் இராணுவத்தளபதி பீல்ட்மார்ஷல் சரத்பொன்சேகா தெரிவித்துள்ளார்.

கோத்தாபய ராஜபக்ச கே.பி.யை வீட்டுக்கு வரவழைத்தே உரையாடினார். அவர் வசம் இருந்த புலிகளின் பணம், கப்பல்களுக்கு என்ன நடந்தது என்பதற்கு ராஜபக்சக்களும் பொறுப்புக்கூற வேண்டும் என்றும் பொன்சேகா தெரிவித்துள்ளார்.

அவர்மேலும் தெரிவிக்கையில், கே.பி.யை மலேசியப் பொலிஸாரே கைது செய்தனர். அது பற்றி நாம் அறிந்திருக்கவில்லை. இலங்கையால் தேடப்படும் நபரொருவர் எம்மிடம் உள்ளார். குழுவொன்றை அனுப்பினால் ஒப்படைக்கலாம் என மலேசியாவில் இருந்து எமக்குத் தெரியப்படுத்தப்பட்டது. இதற்கமைய நால்வரடங்கிய சி.ஐ.டி குழு அங்கு சென்றது. அந்தக் குழுவுடன் மலேசியா வில்இருந்தும் குழுவொன்றும் வந்தது. கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்கிய பின்னரே, கைதுசெய்யப்பட்ட வர் கே.பி என்ற தகவலை அவர்கள் வெளியிட்டனர். கோத்தாபய ராஜபக்ச என்ன செய்தார்? 24 மணி நேரத்துக்குள் கே.பி.யை வீட்டுக்கு அழைத்தார். தனியாகப் பேச்சு நடத்தினார். அப்போது கே.பி. வசம்தான் புலிகளின் நிதி, கப்பல்கள் இருந்தன. ஒரு மாதத்துக்குப் பின்னர் கேபி விடுவிக்கப்பட் டார். அப்போது நான் இராணு வத்தில் இருக்கவில்லை. கே.பி வசம் இருந்த பணத்துக்கு என்ன நடந்தது? அவை அரசுடமையாக்கப்படவில்லை. கேபியுடன் இவர்கள் தான் (ராஜபக்சக்கள்) கலந்துரையாடினார்கள். என்ன நடந்தது என்பது அவர்களுக்குதான் தெரியும். எனவே, இதற்கு பொறுப்புக்கூறவேண்டும் என்றார்.

https://newuthayan.com/article/கைது_செய்யப்பட்ட_கே.பி.யுடன்_தனித்து_உரையாடிய_கோத்தா!

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

1 month 3 weeks ago

இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து பிரித்தானியா  அறிக்கை வெளியிட்டது!

adminSeptember 9, 2025

UK-Human.jpg?fit=650%2C433&ssl=1

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஐக்கிய இராச்சியம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த அறிக்கையை மனித உரிமைகளுக்கான பிரித்தானிய உயர் ஆணையர் எலினோர் சாண்டர்ஸ் முன்வைத்துள்ளார்.

இலங்கைக்கு ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர் ஆணையர் பயணம் செய்தமைக்கும், ஆணையர் வெளியிட்ட அறிக்கைக்கும் எலினோர் சாண்டர்ஸ் தனது அறிக்கையின் மூலம் நன்றி தெரிவித்துள்ளார்.

இலங்கையில் அடையாளம் காணப்பட்டுள்ள மனிதப் புதைகுழிகள் குறித்த விசாரணை மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும், சர்வதேச தரத்தின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் பிரித்தானியா வலியுறுத்துகிறது.

பயங்கரவாதத் தடுப்புச் சட்டத்தை ரத்து செய்யத் தவறுவதன் மூலம் அடிப்படை சுதந்திரங்களை கட்டுப்படுத்த சட்டம் தொடர்ந்து பயன்படுத்தப்படுவது குறித்தும் இந்த அறிக்கையில் கவலை வெளியிடப்பட்டுள்ளது.

மோதல் தொடர்பான பாலியல் வன்முறையில் இனப் பாகுபாடு ஒழிப்புக்கான ஐ.நா அலுவலகத்தின் (ORAC) பணியை பிரித்தானியா ஊக்குவிப்பதுடன், இந்தப் பிரச்சினையை முன்னுரிமையாகக் கையாள வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது.

இந்தப் பிரச்சினைகளில் இலங்கை அரசாங்கத்துடன் திறம்பட ஈடுபடுவதற்கான தனது விருப்பத்தை மீண்டும் உறுதிப்படுத்துவதாக பிரித்தானியா தனது அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளது.

இதற்கிடையில், கனடா, மலாவி, மொண்டெனேகுரோ, வடக்கு மாசிடோனியா மற்றும் ஐக்கிய இராச்சியம் ஆகிய நாடுகளின் முக்கிய குழுவும் நேற்று ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமைகள் நிலைமை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டது.

ஐ.நா.வுக்கான பிரித்தானியாவின் நிரந்தர பிரதிநிதி குமார் அய்யர் தொடர்புடைய அறிக்கையை வெளியிட்டார், மேலும் வெளியுறவு அமைச்சர் விஜித ஹெரத்தின் வருகைக்கும் நன்றி தெரிவித்தார்.

மனித உரிமைகள், பொறுப்புக்கூறல், நல்லிணக்கம், நல்லாட்சி மற்றும் அரசியலமைப்பு சீர்திருத்தம் ஆகியவற்றிற்கான அதன் உறுதிப்பாட்டை அர்த்தமுள்ள நடவடிக்கையாக மாற்ற இலங்கை அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்க விரும்புவதாகவும் அவர் கூறினார்.

ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 60வது அமர்வு நேற்று சுவிட்சர்லாந்தின் ஜெனீவாவில் தொடங்கியது.

அமர்வில் பேசிய வெளியுறவு அமைச்சர் விஜித ஹேரத், நாட்டில் மனித உரிமை மீறல்களை விசாரிக்க முன்மொழியப்பட்ட எந்தவொரு வெளிப்புற தலையீடு அல்லது பொறிமுறையையும் இலங்கை நிராகரிப்பதாகக் கூறினார்.https://globaltamilnews.net/2025/220202/

Checked
Mon, 11/03/2025 - 11:42
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr