ஊர்ப்புதினம்

கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

2 months 1 week ago
kanja.jpg?resize=300,168&ssl=1 கஞ்சா பயிர்செய்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

இலங்கையில்  கஞ்சா பயிர்செய்கை மற்றும் ஏற்றுமதி தொடர்பாக அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இதேவேளை வெளிநாட்டு முதலீட்டாளர்களை அழைக்கும் செயற்பாடுகள் எதிர்காலத்தில் இலங்கை முதலீட்டு சபை ஊடாக மேற்கொள்ளப்படும் எனவும் சுற்றுலாத்துறை இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

பயிற்சியை நிறைவு செய்த 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படுவர்!

2 months 1 week ago

வைத்தியர் பற்றாக்குறைக்கு தீர்வாக எதிர்வரும் மார்ச் மாதம் மேலும் 1,300 வைத்தியர்கள் அரச வைத்தியசாலைகளுக்கு நியமிக்கப்படவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

இவர்கள்  தற்போது பயிற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளனர் என்றும்  வருவதாக சுகாதார அமைச்சு  செயலாளர் விசேட வைத்தியர் பாலித மஹிபால கூறியுள்ளார்.

இதேவேளை, கடந்த வாரம் பயிற்சியை  முடித்த  590 பேர்,   பற்றாக்குறை  காணப்படும் அரச வைத்தியசாலைகளுக்கு  நியமிக்கப்பட்டுள்ளதாகவும் செயலாளர் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/175694

புலிகளும் கூட்டமைப்பினருமே இலங்கையை நாசமாக்கினர்

2 months 1 week ago

கூறுகிறார் மஹிந்த அமரவீர! 

புலிகளுடன் இணைந்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் இந்த நாட்டை நாசமாக்கியது. அதை ஒருபோதும் மறந்து விடக்கூடாது என்று கூறியுள்ளார் அமைச்சர் மஹிந்த அமரவீர.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த நாட்டை ஆளாவிட்டாலும் நாட்டை நாசமாக்கிய ஒரு கட்சியாகும். தற்போது ஜனநாயகப் போர்வையைப் போர்த்துக் கொண்டு வந்திருந்தாலும் படுகொலைகளுடன் தொடர்புடைய ஒரு கட்சியாகும்.

புலிகளுடன் இணைந்து நாட்டில் பேரழிவுகளை ஏற்படுத்தினார்கள். இது இரகசியம் அல்ல. ரில்லியன் கணக்கான சொத்துகள் அழிக்கப்பட்டன.
நாட்டின் பொருளாதாரம் பின்னோக்கி இழுக்கப்பட்டது. அதை மறந்துவிடக் கூடாது. ஜே.வி.பி.யும் அவ்வாறு தான். இப்போது நாடாளுமன்ற சிற்றுண்டிச்சாலையிலேயே நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஒன்றிணைகின்றனர். அதைப் போன்று நாட்டை மீட்கவும் ஒன்றிணைய வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார். (ஏ) 

https://newuthayan.com/article/புலிகளும்_கூட்டமைப்பினருமே_இலங்கையை_நாசமாக்கினர்.

 

இந்த சங்கியை என்ன செய்வது , நாசமாக்கிய பிக்கு மார்களை விடுத்து .

ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் – ஹரீன்!

2 months 1 week ago
ஒக்டோபரில் ஜனாதிபதி தேர்தல் – ஹரீன்!

எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் வாரத்தில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் என நம்புவதாக சுற்றுலா மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சர் ஹரின் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த அமைச்சர் இதனை தெரிவித்தார்.

ஒக்டோபர் 14ஆம் திகதிக்குள் புதிய ஜனாதிபதியை தெரிவு செய்ய வேண்டும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

அத்துடன், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நிச்சயமாக போட்டியிடுவார் எனவும் அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

 

https://thinakkural.lk/article/290694

கொலைச் சம்பவங்களில் படையினருக்கும் தொடர்பு

2 months 1 week ago

கட்டுப்பாடுகளை விதிக்கத் தீர்மானம்!  (ஆதவன்)

பாதாள உலகக்குழுக்களால் மேற் கொள்ளப்படும் கொலைகளுடன் சேவையில் ஈடுபட்டுள்ள பாதுகாப்புப்படை உறுப்பினர்களுக்குத் தொடர்பு உள்ளமை தெரியவந்துள்ளதை அடுத்து, படை முகாம்களில் இருந்து துப்பாக்கிகளை வெளியில் எடுத்துச் செல்வது தொடர்பாகக் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன என்று கூறப்படுகின்றது. ஆயுதக் களஞ்சியத்துக்குப் பொறுப்பாளர்களை நியமிக்கும் போது, அவர்கள் தொடர்பாகக் கூடுதல் கண்காணிப்பு மேற்கொள்ளப்படுவதுடன் அவர்களின் நடத்தைகள் தொடர்பில் கடுமையான பரிசோதனைகள் நடத்தப்படுகின்றன என்றும், சைபர் கண்காணிப்பு முறை ஊடாகப் படையினரின் சந்தேகத்துக்குரிய செயல்கள் கண்காணிக்கப்படுகின்றன என்றும் தகவல் வெளியாகியுள்ளது.
அண்மையில் நடந்த கொலைச் சம்பவங்களுடன் சம்பந்தப்பட்டுள்ளனர் என்று கூறப்படும் படையினர், பொருளாதார சிரமங்கள் மற்றும் போதைப்பொருளுக்கு அடிமையாகி உள்ளதன் காரணமாகவே பாதாள உலகக்குழுக்களுடன் தொடர்புபட்டுச் செயற்பட்டுள்ளனர் என்பது தெரியவந்துள்ளது. (ஏ) 

https://newuthayan.com/article/கொலைச்_சம்பவங்களில்_படையினருக்கும்_தொடர்பு

கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையின் பலப்பிரயோகம் – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!

2 months 1 week ago
கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தில் காவற்துறையின் பலப்பிரயோகம் – சர்வதேச மன்னிப்புச்சபை கண்டனம்!
adminFebruary 6, 2024
kilistudent-Police.jpg?fit=816%2C533&ssl

இலங்கையின் 76 சுதந்திரதினத்தன்று அமைதியான முறையில் ஆர்ப்பாட்டத்தை மேற்கொண்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் சட்டவிரோத பலத்தை பயன்படுத்தியது குறித்தும் கடந்த சில வாரங்களாக நாட்டின் பல பாகங்களில் ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரான ஒடுக்குமுறை குறித்தும் கரிசனை கொண்டுள்ளதாக சர்வதேச மன்னிப்புச்சபையின் தென்னாசியாவிற்கான பிரிவு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சியில் அமைதியான முறையில் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபட்டவர்களிற்கு எதிராக காவற்துறையினர் கண்ணீர்புகைப்பிரயோகத்தை மேற்கொண்டதுடன் நீர்த்தாரை புகைபிரயோகத்தையும் மேற்கொண்டனர். ஆர்ப்பாட்டக்காரர்களை வீதிகளில் இழுத்துச்சென்றனர். யாழ்பல்கலைகழக மாணவர்கள் சிலரை கைதுசெய்தனர் எனவும் தெரிவித்துள்ள சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை அதிகாரிகள் உடனடியாக ஆர்ப்பாட்டக்காரர்களிற்கு எதிரானஇந்த கடுமையான நடவடிக்கைகளை அச்சுறுத்தல்கள் மிரட்டல்கள் பழிவாங்கல்களை நிறுத்தவேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்துள்ளது.

 

https://globaltamilnews.net/2024/200389/

 

அமைச்சரவையில் கெஹலிய அவுட்

2 months 1 week ago

அமைச்சர் கெஹலிய ரம்புக்வெலவை அமைச்சரவையில் இருந்து நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் கவனம் செலுத்தியுள்ளது என்று தெரியவருகின்றது. முன்னாள் சுகாதார அமைச்சராக இருந்த கெஹலிய ரம்புக்வெல தற்போது சுற்றாடல் அமைச்சராகப் பதவி வகிக்கின்றார். சுகாதார அமைச்சராகக் கடமையாற்றிய காலத்தில் தரமற்ற மருந்துப் பொருள்களை இறக்குமதி செய்த சம்பவம் தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட விசாரணையின் பிரகாரம் குற்றப்புலனாய்வு பணிமனை கடந்த 2ஆம் திகதி கெஹலியவைக் கைது செய்திருந்தது.
கடந்த மூன்றாம் திகதி நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட கெஹலிய ரம்புக்வெலவை எதிர்வரும் 15 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு மாளிகாகந்த நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
மோசடிச் சம்பவம் தொடர்பில் விளக்கமறியலில் உள்ள ஒருவரைத் தொடர்ந்தும் அமைச்சரவையில் வைத்திருப்பதன் மூலம் நாட்டுக்கு அபகீர்த்தி ஏற்படக்கூடும் என்று பல்வேறு தரப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன. அதையடுத்து அமைச்சர் பதவியில் இருந்து கெஹலிய ரம்புக்வெலவை நீக்குவது தொடர்பில் அரசாங்கத்தின் உயர்மட்டம் தீவிர கவனம் செலுத்தியுள்ளது என்று உயர்மட்ட அரசாங்க வட்டாரங்களில் இருந்து தகவல் கசிந்துள்ளது. (ஏ) 

 

https://newuthayan.com/article/அமைச்சரவையில்_கெஹலிய_அவுட்

யாழ். வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் தொடர்ச்சியாக இறந்து கரையொதுங்கும் ஆமைகள்!

2 months 1 week ago

Published By: VISHNU   06 FEB, 2024 | 06:15 AM

image

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கடற்பரப்பில் அண்மைக்காலமாக இறந்தநிலையில் ஆமைகள் சில கரையொதுங்கிவருகின்றன.

இந்த நிலையில் கட்டைக்காட்டு கடற்கரையில் திங்கட்கிழமை (5) இறந்த நிலையில் இரண்டு ஆமைகள் கரையொதுங்கியுள்ளன.

கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகளே இவ்வாறு தொடர்ச்சியாக இறந்து தமது பிரதேசத்தில் அதிகளவு கரையொதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

https://www.virakesari.lk/article/175669

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்திற்கு கடும் எதிர்ப்பு - அழுத்தங்கள் - திருத்தங்களை மேற்கொள்வதில் அரசாங்கம் தீவிரம்

2 months 1 week ago

Published By: RAJEEBAN   06 FEB, 2024 | 10:33 AM

image

நிகழ்நிலை பாதுகாப்பு சட்டத்தினால் டிஜிட்டல் பொருளாதாரத்திற்கு ஏற்படக்கூடிய பாதிப்புகள் குறித்து அதனுடன் தொடர்புபட்டவர்கள் கடும் கரிசனைகளை தொடர்ந்தும் வெளியிட்டு வருகின்ற சூழ்நிலையில்; புதிய சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்வதற்கான நடவடிக்கைகளில் அரசாங்கம் ஈடுபட்டுள்ளது.

சபாநாயகர் மகிந்தயாப்பா அபயவர்த்தன சமீபத்தில் அந்த சட்டமூலத்திற்கு தனது அங்கீகாரத்தை வழங்கினார்.

புதிய சட்டம் கருத்து சுதந்திரத்திற்கு ஆபத்தை ஏற்படுத்துகின்றது எதிர்காலத்தில் டிஜிட்டல் பொருளாதாரத்தில் தாக்கத்தை ஏற்படுத்தும் என தொழில்துறை வல்லுனர்கள் உட்பட பல தரப்பினர் கரிசனைகளை வெளியிட்டுள்ள போதிலும் அரசாங்கம் புதிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றியது.

புதிய சட்டம் தடைசெய்யப்பட்ட அறிக்கைகளை வெளியிட்டவர்கள் அல்லது அந்த அறிக்கைகளை வெளியிடுவதற்காக பயன்படுத்தப்பட்ட  தளத்தின் உரிமையாளர்கள் இணையசேவைவழங்குநர்கள்  போன்றவர்களிற்கு எதிராக உத்தரவுகளை வழங்கக்கூடிய அதிகாரம் படைத்த ஆணைக்குழுவை உருவாக்குவதற்கான அதிகாரத்தை வழங்குகின்றது.

இலங்கையில் தடைசெய்யப்பட்ட அறிக்கை வெளியான பகுதிக்கான இணையசேவையை நிறுத்துமாறு இணையசேவை வழங்குநர்கள் அல்லது இணைய இடைஅமைப்புகளிற்கு உத்தரவிடும் அதிகாரம் இந்த ஆணைக்குழுவிற்குள்ளது.

இதேவேளை  அரசாங்கத்தின் புதிய சட்டம் குறித்த கரிசனைகளும் விமர்சனங்களும் கண்டனங்களும் தொடர்ந்து வெளியாகும் நிலையில் புதிய திருத்தங்களை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சின் அதிகாரியொருவர் இரண்டுவாரங்களில் இவற்றை அமைச்சரவையின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கவுள்ளதாக தெரிவித்துள்ளார்.

கூகுள் டுவிட்டர் யாகு மெட்டா அமேசன் போன்ற சர்வதேச தொழில்நுட்ப நிறுவனங்களுடன் கலந்துரையாடலை அரசாங்கம் மேற்கொண்டுள்ளது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையின் அங்கீகாரத்தின் பின்னர் புதிய திருத்தங்களை உள்வாங்கும் நடவடிக்கைகளை நாங்கள் முன்னெடுப்போம் என அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175683

யாழில் கல்வி அமைச்சரின் பங்கேற்புடன் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம்

2 months 1 week ago
05 Feb, 2024 | 09:14 PM
image
 

வடக்கு மாகாணத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பான மீளாய்வு கூட்டம், கல்வி அமைச்சர் கலாநிதி சுசில் பிரேமஜயந்தவின் பங்கேற்புடன், யாழ் மத்திய கல்லூரியில் திங்கட்கிழமை (05)  நடைபெற்றது.

வடக்கு மாகாணத்தில் யாழ் மாவட்டத்தின் கல்வி அபிவிருத்தி தொடர்பிலேயே இன்றைய கூட்டத்தில் கலந்துரையாடப்பட்டது . 

அந்தவகையில், கடந்த ஐந்து வருடங்களில் யாழ் மாவட்ட மாணவர்கள், தரம் ஐந்து, சாதாரண மற்றும் உயர் தரங்களில் பெற்றுக்கொண்ட பெறுபேறுகளின் அடிப்படையில், ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடுகையில் யாழ் மாவட்டத்தில் சிறந்த முன்னேற்றங்கள் ஏற்பட்டுள்ளதாக கல்வி அமைச்சின் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

எனினும் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களை சேர்ந்த மாணவர்களின் கல்வி நிலை தொடர்பில் அதிக கரிசனை செலுத்த வேண்டியுள்ளதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டனர்.  

இந்நிலையில், வடக்கு மாகாணத்தில் கல்வித்துறையில் காணப்படும் சிக்கல்கள் தொடர்பில் வடக்கு மாகாண பிரதம செயலாளர் எஸ்.எம். சமன் பந்துளசேன விடயங்களை தெளிவுப்படுத்தினார்.

அதிபர்கள் நியமனத்தில் எழுந்த சிக்கல்கள், ஆசிரியர் இடமாற்றங்களில் காணப்படும் சிக்கல்கள், தளபாட வசதிகள் இன்மை உள்ளிட்ட பல விடயங்கள் தொடர்பில் இதன் போது  தெளிவுப்படுத்தினார்.

இந்நிகழ்வில், நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன், மத்திய அமைச்சின் உயர் அதிகாரிகள், மாகாண அமைச்சின் அதிகாரிகள், கல்வித்துறைசார் உத்தியோகஸ்தர்கள், அதிபர்கள், ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது . 

0__7_.jpg

0__1_.jpg

0__2_.jpg

https://www.virakesari.lk/article/175638

இந்தியா பறந்தார் அனுரகுமார!

2 months 1 week ago

இந்தியா பறந்தார் அனுரகுமார! 

 

தேசிய மக்கள் சக்தி கட்சியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க உள்ளிட்ட நால்வர் இந்தியாவிற்கு விஜயம் செய்துள்ளனர்.

இந்திய அரசாங்கத்தின் அழைப்பின் பிரகாரம் இந்த விஜயம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் மற்றும் மேலும் இருவரும் இன்று (05) காலை புதுடில்லிக்கு பயணித்ததாக "அத தெரண" செய்தியாளர் தெரிவித்தார்.

தேசிய மக்கள் கட்சி முதலில் மக்கள் விடுதலை முன்னணியினால் கட்டமைக்கப்பட்டதுடன், அந்தக் கட்சி முன்பு இந்தியாவுக்கு எதிரான கொள்கையைப் பின்பற்றியது.

இந்திய-இலங்கை சமாதான உடன்படிக்கையின் போது, மக்கள் விடுதலை முன்னணி வெளிப்படையாகவே அதற்கு எதிராக செயல்பட்டு இந்திய விரிவாக்கத்திற்கு எதிரான ஒரு சித்தாந்தத்தை வழிநடத்தியது.

இந்தியாவின் தலையீட்டுடன் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்ட 13வது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் இலங்கையில் மாகாண சபை முறைமை கொண்டுவரப்படுவதற்கு மக்கள் விடுதலை முன்னணியும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது.

கட்சிக்கு உறுப்பினர்கள் சேர்க்கப்படும் போது அவர்களுக்கு நடத்தப்பட்ட ஐந்து வகுப்புகளில் இந்திய விஸ்தரிப்புவாதம் பற்றி கற்பிக்கப்பட்டது என்று தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், சிறந்த தொலைநோக்கு பார்வையுடன் இந்தியாவுடன் செயற்பட தேசிய மக்கள் சக்தி தயாராக இருப்பதாக ஜே.வி.பியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க முன்னர் தெரிவித்திருந்தார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக களமிறங்க அனுரகுமார திஸாநாயக்க தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
 

https://tamil.adaderana.lk/news.php?nid=183638

யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

2 months 1 week ago
sarath-weerasekara_3.jpg?resize=400,266& யாழ் தமிழர்களுக்கு சுதந்திரம் கிடைத்துவிட்டது : சரத் வீரசேகர!

யாழ்ப்பாணத்தில் தேசியக் கொடிய ஏந்தியவாறு பொதுமக்கள் சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர தெரிவித்தார்.

யாழ்ப்பாணத்தில இடம்பெற்ற சுதந்திர தின கொண்டாட்டத்தில் கலந்துகொண்ட பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். இவ்விடயம் தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்த வருடம் யாழ்ப்பாண நகரில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் தேசிய கொடியினை ஏந்தியவாறு இலங்கை 76 ஆவது சுதந்திர தினத்தை கொண்டாடியமை வரவேற்கத்தக்க விடயம்.

யுத்தம் முடிவடைந்த பின்னர் தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தை சந்தோஷமாக கொண்டாடி வருகின்றமை அனைவரும் அறிந்த விடயம்.

இதுவே யாழ்ப்பாண தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்த நாளாக இருக்கும் என நான் நினைக்கின்றேன். அதாவது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் சுதந்திரமாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை நான் நேரில் பார்வையிட்டேன். அதுதான் உண்மையான நல்லிணக்கம்.

ஆனால் தமிழ் மக்களின் இந்த சுதந்திரமான நிலைமையினை குழப்புவதற்கு ஒரு பிரிவினர் குழப்பத்தினை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

வடக்கில் தற்பொழுது பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு மக்கள் நிம்மதியாக சுதந்திர தினத்தை கொண்டாடியதை வரவேற்கின்றேன்” என சரத் வீரசேகர மேலும் தெரிவித்தார்.

https://athavannews.com/2024/1368400

இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

2 months 1 week ago
Immunoglobulin.jpg?resize=750,375&ssl=1 இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியால் எயிட்ஸ் ஏற்படக்கூடிய அபாயம்!

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை பயன்படுத்தி சிகிச்சை பெற்றுக்கொண்டவர்களுக்கு எயிட்ஸ் போன்ற நோய்கள் ஏற்படக்கூடிய அபாயம் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், இந்த தடுப்பூசியைப் பயன்படுத்தி சிகிச்சையைப் பெற்றுக்கொண்டவர்கள் தொடர்பாக விசாரணைகளை ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாக குறிப்பிடப்படுகிறது.

தரம் குறைந்த இமியுனோகுளோபியுலின் தடுப்பூசியை இறக்குமதி செய்த விவகாரம் தொடர்பாக கடந்த 2 ஆம் திகதி முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வல்ல கைது செய்யப்பட்டார்.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு வாக்குமூலம் வழங்க வந்திருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இவருக்கு எதிர்வரும் 15 ஆம் திகதிவரை விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த தடுப்பூசிகளுக்குள் ஒருவகை பக்டீரியா காணப்படுவதாக அரச இரசாயன பகுப்பாய்வு திணைக்களம் மேற்கொண்ட பரிசோதனை மூலம் கண்டறியப்பட்டுள்ளது.

மேலும் இந்த தடுப்பூசி மருந்து விநியோகம் செய்யப்பட்ட தகவல்கள் மருத்துவ விநியோக பிரிவிடம் காணப்படுவதாகவும் விநியோகிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில் விசாரணை முன்னெடுக்கப்பட உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2024/1368433

அரச எதிர்ப்பு நிலையை ஒடுக்கச் சட்ட ஏற்பாடுகள்

2 months 1 week ago

பயங்கரவாத எதிர்ப்புச்சட்டம் தொடர்பில் சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டு! (ஆதவன்)

ஆர்ப்பாட்டங்கள், எதிர்ப்புகள் உட்பட அரசாங்கத்தின் கொள்கையுடன் உடன் படமறுக்கும் மக்களின் நடவடிக்கைகளை பயங்கரவாத முத்திரை குத்தி நசுக்குவதற்கான சட்ட ஏற்பாடுகளே உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் உள்ளன என்று உயர்நீதிமன்றத்தில் சட்டத்தரணிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
உத்தேச பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவுக்கு எதிரான மனுக்கள் மீதான விசாரணை உயர் நீதிமன்றத்தில் கடந்த வெள்ளிக்கிழமை இடம்பெற்றன. இதன்போது பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவில் உள்ளடக்கப்பட்டுள்ள சட்ட ஏற்பாடுகளின் பாதகத்தன்மைகள் தொடர்பில் சட்டத்தரணிகளால் உயர் நீதிமன்றத்தின் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டது.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர், செயலாளர் சார்பில் முன்னிலையாகிய சட்டத்தரணி சாலிய பீரிஸ், "புதிதாகக் கொண்டுவரப்படவுள்ள பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தில் பயங்கரவாதத்துக்கான வரைவிலணக்கம் பரந்துபட்டதாகக் காணப்படுகின்றது. இதன் காரணமாக அரசாங்கத் தின் நிலைப்பாடுகள் கொள்கைகளுடன் உடன்பட மறுப்பவர்கள் கைது செய்யப்பட்டு புதிய பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கீழ் தடுத்து வைக்கப்படும் நிலை ஏற்படலாம்" என்று சுட்டிக்காட்டினார்.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டவரைவின் கீழ், தனிப்பட்ட சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்கான அவசியமான ஏற்பாடுகள் எதுவும் இல்லை என்றும் சாலிய பீரிஸ் தன் சமர்ப்பணத்தை முன்வைத்தார்.

 

https://newuthayan.com/article/அரச_எதிர்ப்பு_நிலையை_ஒடுக்கச்_சட்ட_ஏற்பாடுக

காவல்துறையால் மிலேச்சத்தனமாக தாக்கப்பட்ட பல்கலைக்கழக மாணவன்;

2 months 1 week ago

யாழ். பல்கலைக்கழக மாணவன் மீது வட்டுக்கோட்டை காவல்துறையினர் இன்று திங்கட்கிழமை காலை(05) தாக்கிய நிலையில் அடி தாங்கமுடியாது காவல் நிலையத்தினை விட்டு ஓடி வந்த மாணவன் உயிரை காப்பாற்றுமாறு கோரி மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றினை பதிவு செய்துள்ளார்.

இது குறித்து மேலும் தெரியவருவதாவது;
வட்டுக்கோட்டை கோட்டை காடு பகுதியினை சேர்ந்த கருணாகரன் நிதர்ஷன் எனும் 27 வயதான இளைஞன் தனது கற்றல் நடவடிக்கைகளுக்காக இன்று காலை யாழ். பல்கலைக்கழககத்திற்கு தனது வீட்டிலிருந்து சென்றுள்ளார்.

இந்நிலையில் சித்தன்கேணி எரிபொருள் நிரப்பு நிலையத்திற்கு சென்றுவிட்டு மீள திரும்பி வந்த பொழுது வட்டு இந்து கல்லூரிக்கு அண்மையாக நின்ற காவல்துறையினர் வழிமறித்துள்ளனர். வழிமறித்த காவல்துறையினர் நாம் மறித்த பொழுது எதற்காக நிற்காது சென்றாய் என கேட்டனர். இந்நிலையில் போக்குவரத்து காவல்துறையினர் இல்லை என்ற அடிப்படையில் அவசரமாக சென்றேன் என கூறினேன் இந்நிலையில் திடீரென அங்குவந்த மேலதிக சிவில் உடைதரித்த காவல்துறையினர் வீதியில் வைத்து சரமாரியாக தாக்கினர் .இதனை காணொலியும் எடுத்தேன். இந்நிலையில் தொலைபேசியினையும் பறித்து என்னை காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

தொடர்ந்து அறை ஒன்றினுள் ஆறு காவல்துறையினர் காலை விரித்து தலைகீழாக தூக்கி அடித்தனர். அடித்து கொண்டு தொலைபேசியில் உள்ள காணொலியை அழிப்பதற்கு தொலைபேசி கடவுச்சொல்லை கேட்டனர். நான் மறுத்தேன் மறுத்த பொழுது தொடர்ச்சியாக தாக்குதல் நடாத்தினர். போக்குவரத்து விதிகளை மீறியிருந்தால் எனக்கு தண்டம் விதியுங்கள் இல்லை நீதிமன்றம் அனுப்புங்கள் என கூறியும் அடித்தனர். இதனையடுத்து எனக்கு சுவாசம் உள்ளெடுக்க பிரச்சினை ஏற்பட்டது. இதனையடுத்து உடனடியாக என்னை வெளியில் கொண்டு வந்து அமர்த்தினர். அமர்த்திய பொழுது வீதியில் என்னை அடித்து செய்தி கேட்டு தாயார் வருகை தந்தார் . இந்நிலையில் அடிக்கு பயந்து இருந்த என்னை மீண்டும் தாக்குவதாக கூறிய நிலையில் பயத்தில் ஓடி வந்து விட்டேன்.
தற்பொழுது மனித உரிமை ஆணைக்குழுவில் முறைப்பாட்டினை பதிவு செய்கின்றேன். இன்னுமொரு அலெக்சாக என்னை வட்டுக்கோட்டை காவல்துறையினர் கொன்றாலும் என்ற பயத்திலேயே ஓடி வந்தேன். எனக்கு ஏதும் நடந்தால் வட்டுக்கோட்டை காவல்துறையினரே முழுமையான பொறுப்பினையும் ஏற்க வேண்டும் என தெரிவித்தார்.

இதேவேளை மாணவனின் ஆணுறுப்பு, கால்  உட்பட பல இடங்களில் அடிகாயங்கள் ஏற்பட்ட நிலையில் தொடர்ந்து மாணவன் மருத்துவமனையில் அனுமதிக்கபடவுள்ளார். (ச)

https://newuthayan.com/article/யாழ்._பல்கலைக்கழக_மாணவன்_மீது_காவல்துறையின்_மிலேச்சத்தனமான_தாக்குதல்;

தரம் குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்வதற்காக மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை ஏற்படுத்தினார் கெஹெலிய – பிரதி சொலிசிட்டர் ஜெனரல்

2 months 1 week ago

Published By: RAJEEBAN   05 FEB, 2024 | 08:10 AM

image

மருந்து தட்டுப்பாடு குறித்த போலியான அச்சத்தை அமைச்சரவையில் ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை இறக்குமதி செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

2022 மே 30 ம் திகதி மருந்து தட்டுப்பாடு காரணமாக நாட்டின் சுகாதார துறை மூன்று வாரங்களிற்குள் வீழ்ச்சியடையும் என அமைச்சரவையில் அச்சத்தை ஏற்படுத்திய முன்னாள் அமைச்சர் அதனை பயன்படுத்தி தரம்குறைந்த மருந்துகளை அரசாங்க மருத்துவமனைக்கு விநியோகம் செய்தார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் மாளிகாகந்த நீதவான் முன்னிலையில் தெரிவித்துள்ளார்.

இந்திய கடன் உதவியில் எஞ்சியிருந்த நிதியை கூடிய விரைவில் பயன்படுத்துவதற்கான பொறிமுறையொன்றை வகுக்குமாறு அவர் விடுத்த வேண்டுகோளை அரசமருந்தாக்கல் கூட்டுத்தாபனம் ஏற்றுக்கொள்ள மறுத்ததை தொடர்ந்தே சந்தேக நபர் இவ்வாறு நடந்துகொண்டார் என பிரதிசொலிசிட்டர் ஜெனரல் தெரிவித்துள்ளார்.

இதேவேளை தன்முன்னிலையில் சமர்ப்பிக்கப்பட்ட விடயங்களை கருத்தில்எடுத்த நீதவான் இந்திய கடன் உதவியை பயன்படுத்தி இறக்குமதி செய்யப்பட்ட அனைத்து மருந்துகள் குறித்தும் உள்ளுர் மருந்து விற்பனையாளர் விநியோகித்த மருந்துகள் குறித்தும் (இந்த நிறுவனமே தரங்குறைந்த மருந்துகளை விற்பனை செய்த குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளது தரம்குறைந்த இம்யுனோகுளோபலின் மருந்தினால் பொதுமக்களிற்கு ஏற்படக்கூடிய ஆபத்துக்கள் குறித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறு உத்தரவிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/175576

இலங்கையுடனான கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளது – சுதந்திர தினத்துக்கான செய்தியில் அன்டனி பிளிங்கென்

2 months 1 week ago

Published By: RAJEEBAN   04 FEB, 2024 | 06:13 PM

image

இலங்கையுடன் கடல்சார் பொருளாதார உறவுகளை அமெரிக்கா மேலும் ஆழமாக்கவுள்ளதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் அன்டனி பிளிங்கென் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் 76வது சுதந்திரதினத்தையோட்டி இலங்கை மக்களிற்கான வாழ்த்துச்செய்தியில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இலங்கைக்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான வலுவான கூட்டு என்பது பகிரப்பட்ட விழுமியங்கள் ஜனநாயகத்திற்கான அர்ப்பணிப்பு சுதந்திரமான வெளிப்படையான பாதுகாப்பான இந்தோ பசுபிக் போன்றவற்றை அடிப்படையாக கொண்டது என தெரிவித்துள்ள அன்டனி பிளிங்கென் எங்கள் உறவு பாதுகாப்பு ஒத்துழைப்பு பரஸ்பரம் நன்மை பயக்கும் வர்த்தகம் மற்றும் முதலீடு அத்துடன் கல்விபரிமாற்றங்கள் அறிவியல் கூட்டாண்மைகளால் வளர்க்கப்படும் மக்களிடையேயான உறவுகளை அடிப்படையாக கொண்டது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் வருடங்களில் இந்தோபசுபிக்கின் சகாக்கள் என்ற அடிப்படையில் நாங்கள் இலங்கையுடனான பொருளாதார கடல்சார் உறவுகளை மேலும் வலுப்படுத்துவோம் காலநிலை நெருக்கடி மற்றும் எங்களின் கரிசனைக்குரிய ஏனைய விடயங்களிற்கு தீர்வை காணமுயல்வோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/175560

இலங்கையின் வான், கடல், தேச எல்லையை பாதுகாக்க அமெரிக்காவின் அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பு

2 months 1 week ago
04 FEB, 2024 | 05:36 PM
image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கையின் வான், கடல் தேச எல்லைகளை கண்காணிக்க கூடிய அதிநவீன கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க முன்வந்துள்ளது.

விமான நிலையங்கள் மற்றும் துறைமுகங்கள் ஊடான நபர்களின் வருகைகளை கண்காணிப்பது போன்று, வான் மற்றும் கடல் எல்லைகளில் மீதான மீறல்கள் மற்றும் ஊடுறுவல்களை இந்த நவீன கண்காணிப்பு கட்டமைப்பு ஊடாக உடனடி தகவல்களை பெற முடியும்.

இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்க தினைக்களத்தின் பாதுகாப்பு துறைசார்ந்த அதிகாரிகளுக்கும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சாகல ரத்நாயக்க மற்றும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ் ஆகியோருக்கும் இடையில் ஜனாதிபதி செயலகத்தில் விசேட கலந்துரையாடல் இடம்பெற்றது. இதன் போதே குறித்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு வழங்க அமெரிக்க அதிகாரிகள் விருப்பம் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த எல்லை பாதுகாப்பு மற்றும் கண்காணிப்பு கட்டமைப்பை இலங்கைக்கு இலவசமாக வழங்குவது குறித்து இருதரப்பினருக்கும் இடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.

அமெரிக்கா வழங்க உள்ள உத்தேச பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக இலங்கைக்குள் நுழையும் அல்லது வெளியேறும் அனைத்து நபர்கள் தொடர்பிலும் தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும். அதே போன்று உலகளாவிய தீவிரவாத செயல்பாடுகளுடன் தொடர்புடைய நபர்கள் மற்றும் திட்டமிட்ட குற்றங்களுடன் தொடர்புடைய குழுக்கள் தொடர்பான தகவல்கள் இந்த கண்காணிப்பு கட்டமைப்புக்குள் காணப்படுகின்றமையினால் அவர்கள் இலங்கை எல்லையை எவ்வழியில் கடந்தாலும் கண்காணிக்க முடியும்.

மேலும் ஏதேனும் குற்றம் புரிந்து நாட்டை விட்டு தப்பித்து செல்ல முற்படுபவர்களையும் இந்த கண்காணிப்பு கட்டமைப்பின் ஊடாக அடையாளம் காண முடியும். எவ்வறாயினும் அமெரிக்கா இலங்கைக்கு வழங்க உத்தேசித்துள்ள குறித்த அதி நவீன எல்லை பாதுகாப்பு கண்காணிப்பு கட்டமைப்பை பயன்பாட்டிற்கு கொண்டு வருவது தொடர்பில் அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.

https://www.virakesari.lk/article/175516

இலங்கையில் புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

2 months 1 week ago

நாட்டில் நாளாந்தம் 106 புதிய புற்றுநோயாளிகள் கண்டறியப்படுவதாக புற்றுநோய் நிபுணர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
இன்று உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு அந்த அமைப்பு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வருடத்தில் மாத்திரம் ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறுவர்கள் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், கடந்த 3 தசாப்தங்களில் உலகெங்கிலும் 50 வயதுக்குட்பட்டவர்களிடையே புதிதாகப் பதிவாகியுள்ள புற்றுநோயாளிகளின் எண்ணிக்கை 80 சதவீதம் அதிகரித்துள்ளது என்று அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/290516

தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வட மாகாண அரச சாரதிகள் அறிவிப்பு

2 months 1 week ago
04 FEB, 2024 | 05:45 PM
image
 

எதிர்வரும் 5ஆம் திகதி தொடக்கம் 10ஆம் திகதி வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக வடக்கு மாகாண அரச சாரதிகள் அறிவித்துள்ளனர். 

யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (4) நடாத்திய ஊடக சந்திப்பின் போதே வடக்கு மாகாண அரச சாரதிகள் சங்க பிரதிநிதிகள் இவ்வாறு தெரிவித்தனர். இது தொடர்பில் வடமாகாண அரச சாரதிகள் சங்கத்தினர்  அறிக்கை ஒன்றினையும் வெளியிட்டுள்ளனர்.

அந்த அறிக்கையில்,

வடக்கு மாகாண சபையின் இணைந்த சேவை உத்தியோகத்தர்களுக்கான வருடாந்த இடமாற்றம் - 2024 தொடர்பாக, கடந்த ஐந்து வருடங்களாக தடைப்பட்டிருந்த சாரதிகளின் இடமாற்றமானது கடந்த வருடம் பிரதிப்பிரதம செயலாளரினால் (நிர்வாகம்) விண்ணப்பம் கோரப்பட்டு இடமாற்ற பட்டியலும் வெளியிடப்பட்டிருந்தது.இருந்த போதிலும் ஆளுநரின் கோரிக்கைக்கு இணங்க இடமாற்றம் நிறுத்தப்பட்டுள்ளது.

குறித்த விடயத்தினை சுட்டிக்காட்டி 04.01.2024 தொடக்கம் 10.01.2024 வரையான ஏழு நாட்களும் 17.01.2024 தொடக்கம் 30.01.2024 வரையான 14 நாட்களும் கால அவகாசம் வழங்கி எமது இடமாற்றத்தினை நடைமுறைப்படுத்துமாறு பிரதிப் பிரதம செயலாளரினை கடிதம் மூலம் கேட்டிருந்தோம். குறித்த காலப்பகுதிக்குள் இடமாற்றம் நடைமுறைக்கு வராதவிடத்து 05.02.2024 தொடக்கம் 10.02.2024 வரை தொடர் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபடவுள்ளோம் என தெரிவித்தோம்.

ஜனாதிபதி மற்றும் பிரதமர் , அரச சேவையில் 05 வருடங்களுக்கு ஒருமுறை அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் இடமாற்றம் வழங்குவதன் ஊடாக நாட்டில் இலஞ்சம் ஊழல் அற்ற வினைத்திறனான நிர்வாகத்தினை கட்டமைக்க முடியுமென்று உறுதிபடக் கூறியுள்ள போதிலும் சில பொறுப்பற்ற அதிகாரிகளின் செயற்பாடுகள் காரணமாக இடமாற்றம் நிறுத்தப்படுவது கவலையளிக்கின்றது.

எனவே எமது இடமாற்ற உரிமையினையும் தாபன விதிக்கோவையினையும் நடைமுறைபடுத்த வலியுறுத்தியே இத்தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடவுள்ளோம் குறித்த போராட்டமானது எதிர்வரும் திங்கட்கிழமை காலை 8 மணியளவில் ஆளுநர் செயலகத்திற்கு அருகில் ஆரம்பிக்கப்பட்டு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பதுடன் தொடர்ந்து பிரதம செயலாளர் அலுவலகத்திற்கு பேரணியாக சென்று மகஜர் கையளிப்பு இடம்பெறும்.

அத்தோடு 10.02.2024 வரை தொடர்ச்சியான தொழிற்சங்க போராட்டம் இடம்பெறும் என்பதனை அறியத்தருவதோடு அனைவரினதும் ஆதரவினை வேண்டி நிற்கின்றோம். - என்றுள்ளது.

https://www.virakesari.lk/article/175531

Checked
Tue, 04/16/2024 - 20:20
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr