புதிய பதிவுகள்2

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
துன்பம் நேர்கையில் யாழெடுத்து நீ இன்பம் சேர்க்க மாட்டாயா. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் நஞ்சாகும். யாழ்களமும் முன்பு அதிகமாக இன்பம் சேர்த்து விட்டதோ? அதனால்தான் வினை வந்ததோ??.🤔

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
எனது சகோதரர்கள், அவர்களின் நண்பர்கள் எல்லாம் யாழ்ப்பாணத்திலிருந்து இடம்பெயர்ந்து போய் வன்னியிற்தான் படித்து கல்விப்பொதுத்தராதரம் சாதாரணத்தில் சித்தியெய்தி உயர்தரம் போனார்கள். அவ்வாறே அங்கு பாடசாலைகளும் நடந்தன. அவரவர் தாம் அறிந்ததை வைத்து சிங்களத்திற்கு வெள்ளை அடிக்கிறார்கள். தாய்மொழிப்பற்று அது. அதற்காக நாங்கள் வரிஞ்சு கட்டிக்கொண்டு நிற்கத் தேவையில்லை. தமிழ்ப்பிள்ளைகள் படிக்கக் கூடாது என்பதற்காகவும் எதிர்கால சந்ததியை அழிக்க வேண்டுமென்றும் பாடசாலைகள், கோவில்கள், வைத்தியசாலைகள் என்று திரும்பிய இடமெல்லாம் கொட்டினவர்கள் தான். இருந்தாலும் பிள்ளைகள் படித்து பல்கலைக்கழகமும் போயிருக்கிறார்கள்.

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
எல்லாம் ஜியோ ரூட் விட்ட கட்சினால் வந்த வினை! தெரியாமலா சொன்னார்கள் catches win Matches என்று!! அந்த ஒரு கேட்ச் இந்த மட்சை மட்டுமல்லாமல் தொடரையே மாற்றிவிட்டது!

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months ago
வணக்கம் வாத்தியார் ........... ! ஆண் : எந்த ஊர் என்றவனே இருந்த ஊரை சொல்லவா அந்த ஊர் நீயும் கூட அறிந்த ஊர் அல்லவா ஆண் : உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் உடலூரில் வாழ்ந்திருந்தேன் உறவூரில் மிதந்திருந்தேன் ஆண் : கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் கருவூரில் குடி புகுந்தேன் மண்ணூரில் விழுந்து விட்டேன் ஆண் : கண்ணூரில் தவழ்ந்திருந்தேன் கையூரில் வளர்ந்திருந்தேன் காலூரில் நடந்து வந்தேன் காளையூர் வந்துவிட்டேன் ஆண் : வேலூரைப் பார்த்து விட்டேன் விழியூரில் கலந்து விட்டேன் பாலுறும் பருவமெனும் பட்டணத்தில் குடி புகுந்தேன் ஆண் : காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் காதலூர் காட்டியவள் காட்டூரில் விட்டுவிட்டாள் ஆண் : கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன் கன்னியூர் மறந்தவுடன் கடலூரில் விழுந்துவிட்டேன்! ஆண் : பள்ளத்தூர் தன்னில் என்னை பரிதவிக்க விட்டு விட்டு மேட்டூரில் அந்த மங்கை மேலேறி நின்று கொண்டாள் ஆண் : கீழுரில் வாழ்வதற்கும் கிளிமொழியாள் இல்லையடா மேலூர் போவதற்கு வேளை வரவில்லையடா ......... ! --- எந்த ஊர் என்றவனே ---

புனர்வாழ்வு பெற்ற விடுதலைப் புலி உறுப்பினர் கொழும்பில் துப்பாக்கியுடன் கைது

2 months ago
என்ன இணையவன் உங்களுக்கு தமிழ் புரிதலில் ஏதாவது பிரச்சனை இருக்கிறதா அல்லது ஒரு சிலர்தான் கருத்து எழுதவேண்டும் என்று நினைக்கிறீர்களா? மொரட்டுவ எந்திரிக்கும், கிளிநொச்சி கால்நடைக்கும் என்ன வித்தியாசம் கண்டீர்கள்? அவர்கள் செய்ததெல்லாம் சரி என நிறுவத்தான் இங்கு சிலரை இறக்கியிருக்கிறார்களே!!

வவுணதீவில் மறைந்த இரா.சம்பந்தனின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி

2 months ago
Published By: VISHNU 28 JUL, 2025 | 06:06 AM மறைந்த கட்சியின் தலைவர் இரா.சம்பந்தன் ஐயாவின் ஓராண்டு நினைவு வணக்க அஞ்சலி நிகழ்வு வவுணதீவில் இலங்கைத் தமிழ் அரசுக் கட்சி வவுணதீவுப் பிரதேச கிளையின் ஏற்பாட்டில் 27ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. வணக்க அஞ்சலி நிகழ்வில் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், மட்டு மாநகர முதல்வர், பிரதிமுதல்வர், பிரதேச சபை தவிசாளர்கள், பிரதிதவிசாளர்கள், பிரதேச சபை உறுப்பினர்கள், கட்சி அங்கத்தவர்கள் என பலரும் கலந்துகொண்டு மறைந்த பெருந்தலைவருக்கு நினைவு அஞ்சலி செலுத்தினர் இதன் போது தீபச்சுடர், மலரஞ்சலி, நினைவுப்பேருரை போன்றன நிகழ்வுகள் இடம்பெற்றது. https://www.virakesari.lk/article/221120

கங்கைகொண்ட சோழபுரத்தில் ராஜேந்திர சோழன் அமைத்த பிரமாண்ட ஏரி தற்போது எப்படி உள்ளது? பிபிசி கள ஆய்வு

2 months ago
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் முரளிதரன் காசி விஸ்வநாதன் பிபிசி தமிழ் 27 ஜூலை 2025 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் ராஜேந்திர சோழன் தனது புதிய தலைநகரமான கங்கை கொண்ட சோழபுரத்திற்கு குடிநீர் ஆதாரமாக ஒரு பிரமாண்டமான ஏரியை உருவாக்கினார். திருவாலங்காடு செப்பேடுகளில்கூட குறிக்கப்படும் அந்த ஏரியின் நிலை என்ன? அரசர்கள் புதிதாக ஒரு நகரத்தை உருவாக்கும் போது, அந்நகரம் ஆற்றங்கரையில் அமைக்கப்படும் அல்லது நகரம் அமைக்கும் போதே வேறு வகையில் குடிநீர் ஆதாரம் இருப்பது உறுதி செய்யப்படும். ராஜேந்திர சோழன் நீர்வளமிக்க தஞ்சாவூரை விட்டுவிட்டு, அங்கிருந்து சுமார் 50 கி.மீ. தூரத்தில் ஒரு வறண்ட பகுதியில் தனக்கான புதிய தலைநகரத்தை உருவாக்கினார். அப்போது, தனது புதிய தலைநகருக்கு நீராதாரமாக இருக்க வேண்டுமென அவரால் உருவாக்கப்பட்டதுதான் சோழ கங்கம் என்ற ஏரி. கி.பி. 1014ஆம் ஆண்டில் சோழப் பேரரசின் மன்னராக முடிசூட்டிக் கொண்ட ராஜேந்திர சோழன், தான் ஆட்சிக்கு வந்து சுமார் பத்து-பதினோரு ஆண்டுகளுக்குப் பிறகு சோழர் தலைநகரை தஞ்சாவூரில் இருந்து மாற்ற விரும்பினார். அதன்படி, தஞ்சாவூரில் இருந்து சுமார் 50 கி.மீ. தொலைவில் தனது தலைநகரத்தை உருவாக்க முடிவு செய்தார். அந்தத் தலைநகரம், கங்கை கொண்டபுரம், கங்காபுரம் உள்ளிட்ட பல பெயர்களால் அழைக்கப்பட்ட கங்கை கொண்ட சோழபுரம். இந்த இடம் தற்போது அரியலூர் மாவட்டத்தில் இருக்கிறது. இந்தப் புதிய தலைநகரத்தில், ஒரு மிகப்பெரிய அரண்மனை கட்டப்பட்டது. தஞ்சை பெரிய கோவிலைப் போலவே கங்கை கொண்ட சோழீச்சரம் என்ற பெயரில் மிகப்பெரிய கோவில் ஒன்று உருவாக்கப்பட்டது. அகழி, கோட்டைச் சுவருடன் கூடிய இந்த நகரம் 1,900 மீட்டர் நீளமும் 1,350 மீட்டர் அகலமும் உடையதாக இருந்தது. ஆனால், இந்தப் பகுதி தஞ்சையைப் போன்ற நீர்வளத்துடன் இருக்கவில்லை. ஆகவே, இந்த நகருக்கென ஒரு மிகப்பெரிய ஏரியை உருவாக்கினார் ராஜேந்திர சோழன். இந்த ஏரி, கங்கை கொண்ட சோழீச்சரம் கோவிலில் இருந்து சில கி.மீ. தூரத்தில் வெட்டப்பட்டது. இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்று பெயரிடப்பட்டது. தற்போது இந்த ஏரி பொன்னேரி எனக் குறிப்பிடப்படுகிறது. இந்த ஏரி கட்டப்பட்ட காலத்தில் இதன் கரைகள் தெற்கு - வடக்காக 14 முதல் 16 மைல் நீளத்திற்கும் அகலம் சுமார் 4 மைல் நீளத்திற்கும் இருந்ததாக வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிடுகின்றனர். படக்குறிப்பு, ராஜேந்திர சோழன் உருவாக்கிய சோழ கங்கம் ஏரி இன்று... இவ்வளவு பெரிய ஏரிக்கான நீரைக் கொண்டு வர, கொள்ளிடத்தில் இருந்து ஒரு கால்வாயும் வெள்ளாற்றில் இருந்து ஒரு கால்வாயும் வெட்டப்பட்டதாகத் தனது 'ராஜேந்திர சோழன்' நூலில் மா. ராசமாணிக்கனார் குறிப்பிடுகிறார். இந்த சோழ கங்கம் ஏரியின் வடிகாலாகத்தான் தற்போதும் மிகப்பெரிய ஏரியாக விளங்கும் வீராணம் ஏரியே இருந்ததாக தனது 'பிற்காலச் சோழர்கள்' நூலில் குறிப்பிடுகிறார் தி.வை. சதாசிவ பண்டாரத்தார். கங்கைச் சமவெளி மீதான தனது வெற்றிகளைக் குறிக்கும் விதமாக இந்த ஏரிக்கு சோழ கங்கம் என்ற பெயரை ராஜேந்திர சோழன் சூட்டியிருக்கலாம். திருவாலங்காட்டுச் செப்பேடுகளில் உள்ள சமஸ்கிருத குறிப்புகள், இதை 'கங்கா - ஜலமயம் ஜெயஸ்தம்பம்', அதாவது 'நீர்மயமான வெற்றித் தூண்' எனக் குறிப்பிடுகின்றன. திருவாலங்காட்டு செப்பேடுகளில் சமஸ்கிருதத்தில் எழுதப்பட்ட 124வது வரியில் "சோளங் கங்கமிதி க்யாத்யா பிரதீதந் நிஜமண்டலே/ கங்கா ஜலமயந் தேவோ ஜயஸ்தம்பம் வியதத்த ஸ:" எனக் குறிப்பிடப்படுகிறது. அதாவது, "தனது மண்டலத்தில் சோழ கங்கம் என்ற பெயருடையதும் கங்கா நீரால் ஆனதுமான ஜயஸ்தம்பத்தை ராஜேந்திரன் நிறுவினான்" என்கிறது இந்தப் பாடல். ஷார்ட் வீடியோ Play video, "சிங்க வடிவிலான சோழர் கால கிணறு - சிறப்பம்சம் என்ன?", கால அளவு 1,07 01:07 காணொளிக் குறிப்பு, கே.ஏ. நீலகண்ட சாஸ்திரியின் 'சோழர்கள்' நூல், இந்த ஏரி குறித்து விரிவான தகவல்களைத் தருகிறது. 1855ஆம் ஆண்டில் வெளியான 'ஸ்தல சஞ்சிகை' ஒன்றை மேற்கோள் காட்டி அந்தத் தகவல்களை அவர் அளித்துள்ளார். "உடையார்பாளையம் தாலுகாவில் வடக்கு-தெற்காக 16 மைல் நீளத்திற்கு ஒரு கரை இருக்கிறது. இதில் வலிமை வாய்ந்த பெரிய கலிங்குகள் இருக்கின்றன. இது முற்காலத்தில் இந்தியாவிலேயே பெரிய நீர்த்தேக்கங்களில் ஒன்றாக இருந்திருக்க வேண்டும். இந்தப் பெரிய குளம் அல்லது ஏரிக்கு கொள்ளிடம் ஆற்றில் இருந்து ஒரு கால்வாய் வழியாகத் தண்ணீர் வந்தது. 60 மைல் நீளமுள்ள இந்தக் கால்வாய், அதனுடைய தென் கோடியில் இந்த ஏரிக்குள் நுழைகிறது. இதுவே இந்த ஏரிக்கு முக்கியமான நீர்வரத்து வழி" என்று அந்த நூலில் கூறப்பட்டுள்ளது. அதோடு, "ஏரியின் வட பகுதியில் நுழையும் ஒரு சிறு கால்வாய் வெள்ளாற்றின் நீரையும் இங்கே கொண்டு வருகிறது. இந்த இரண்டு கால்வாய்களின் அடிச்சுவடுகள் இன்றும் உள்ளன. இந்த ஏரி தூர்ந்துவிட்டதால் பல ஆண்டுகளாக அது எவ்விடத்திலும் பயன்படவில்லை. அந்த ஏரியின் நடுப்பகுதி முழுவதும் உயர்ந்த அடர்த்தியான புதர்களும் குறுங்காடுகளும் நிறைந்து பாழாகிவிட்டது. இந்த ஏரி படையெடுத்து வந்த ஒரு படையினர் வேண்டுமென்றே செய்த ஒரு கொடுஞ்செயலால் அழிந்துவிட்டதாக தலைமுறைதலைமுறையாகச் சொல்லப்படுகிறது" என்றும் நீலகண்ட சாஸ்திரி குறிப்பிட்டுள்ளார். சோழர்கள் நூலின்படி, ஏரியின் தென் கோடியில் காடு சூழ்ந்த ஒரு கிராமம், கங்கை கொண்டபுரம் என்ற பெயரால் இருந்து வருகிறது. அதன் சுற்றுப்புறத்தில் மிகப்பெரிய அளவினதும் அரிய வேலைப்பாடு உடையதுமாகிய ஒரு கோவில் இருக்கிறது. "அதற்கு அருகே காடு சூழப்பட்ட ஒரு பகுதியில் பழைய கட்டடங்களின் எஞ்சிய பகுதிகள் உள்ளன. மலைமேடுகள் போலவும் குவியல்கள் போலவும் உள்ள இவை பழங்காலத்து பாபிலோனை நினைவுபடுத்துகின்றன. மிகப் பரந்த பகுதியில் அழகிய அரண்மனை ஒன்று இருந்தது எனவும் அதன் பல்வேறு பகுதிகள்தான் இடிபாடுகளாகக் காட்சியளிக்கின்றன எனவும் கிராமத்தில் உள்ள முதியோர் கூறுகிறார்கள். இந்த அரண்மனை இருந்த காலத்தில் கங்கை கொண்டபுரம், முடியுடைய மன்னர் ஒருவரின் செல்வமும் செழிப்பும் நிறைந்த தலைநகராக விளங்கியது.." பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கங்கை கொண்ட சோழீஸ்வரம் கோவில் இப்போது ஒற்றையடிப் பாதைகூட இல்லாத காடாக காட்சி தரும் பகுதியில் மைல்கணக்கான பெரும்பரப்புக்கு இந்த ஏரி பெரும் வளத்தை வாரி வழங்கியதாக நீலகண்ட சாஸ்திரி எழுதியுள்ளார். இந்த மாபெரும் ஏரியை மீண்டும் நிர்மாணிக்க வேண்டும் என அடிக்கடி பேசப்பட்டு வந்துள்ளது. ஆனால், பல்வேறு காரணங்களால் இந்தத் திட்டம் செயல்படுத்தப்படாமல் நிறுத்தி வைக்கப்பட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார். "எதிர்காலத்தில் எப்போதாவது இது நிறைவேற்றப்படும். ஆனால், அதுவரை இந்தப் பகுதி காடாகத்தான் இருக்கும். இங்கே இருக்கிற ஒரு சில கிராமவாசிகள் அந்த ஏரியின் பழங்காலக் கரையை முன்காலத்துப் பேரரசர்களின் மிகப்பெரிய முயற்சியின் சின்னமாகச் சுட்டிக்காட்டுவார்கள்" என்கிறது அந்த நூல். மேலே உள்ள குறிப்புகள் எழுதப்பட்டு சுமார் 170 ஆண்டுகள் ஆகிவிட்டன. இருந்தபோதும் இந்த ஏரி, இன்னமும் தூர்ந்துபோன நிலையிலேயே இருக்கிறது. ஷார்ட் வீடியோ Play video, "ராஜேந்திர சோழன் கட்டிய சோழ கங்கம் ஏரி", கால அளவு 1,20 01:20 காணொளிக் குறிப்பு, "இந்த ஏரிக்கான நீர் வரத்துக் கால்வாய் 60 மைல் தூரத்திற்கு அந்தக் காலத்திலேயே வெட்டப்பட்டுள்ளது" என்கிறார் கங்கை கொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் நிறுவன அறங்காவலரான ஆர்.கோமகன். ஆக்கிரமிப்புகளை அகற்றி அந்தக் கால்வாயை இப்போதும் புதுப்பிக்க முடியும் எனக் கூறும் அவர், அதன் மூலம் கொள்ளிடத்தின் நீரை மீண்டும் இங்கே நிரப்ப முடியும் என்று வலியுறுத்துகிறார். இந்த ஏரி ஒரு பொறியியல் அற்புதம் என்கிறார் கோமகன். "இந்த ஏரியில் இருந்து நீர் வெளியேறும் பகுதிகளில் வண்டலை தக்க வைக்கும் ஓர் அமைப்பு இருந்தது. இதில் சேரும் வண்டல் பிறகு சேறோடும் துளை வழியாகவும், பிறகு நீரோடும் துளை வழியாகவும் செல்லும். இந்த வண்டல் கலந்து வரும் நீர் வயல்களில் படிந்து வயல்களை வளமாக்கும்." ஆனால், "இப்போது ஏரியின் பெரும்பகுதி இல்லாமல் போய்விட்டது என்று 1855ஆம் ஆண்டு வெளிவந்த கெஸட்டியர்களிலேயே இந்த ஏரி கைவிடப்பட்டு இருப்பதாக குறிப்பிட்டுள்ளது. அதனால், அதற்கு முன்பே இந்த ஏரி அழிந்திருக்க வேண்டும்" என்கிறார் ஆர். கோமகன். இப்போது இந்த ஏரியைப் புதுப்பிக்கப் போவதாக தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தற்போது 700 ஏக்கர் பரப்பளவுடன் இருக்கும் இந்த ஏரியின் கரைகளைப் பலப்படுத்துவதோடு, 15 கிலோமீட்டர் நீளமுள்ள உபரிநீர் வழிக் கால்வாய்களை புனரமைப்பது, 38 கிலோமீட்டர் நீளமுள்ள வரத்து வாய்க்கால்களைத் தூர்வாருவது ஆகிய பணிகளை மேற்கொள்ளப் போவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் இந்த ஏரியைச் சுற்றியுள்ள 1,374 ஏக்கர் நிலங்கள் பாசன வசதியைப் பெறும் என்கிறது தமிழ்நாடு அரசு. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c3wn6404xe4o

இங்கிலாந்து இந்திய டெஸ்ட் கிரிக்கெட் தொடர்

2 months ago
பிராட்மேன், கோலியை சமன் செய்த கில்: பெருஞ்சுவராய் எழுந்து அணியை காத்த சுந்தர் - ஜடேஜா பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் தினேஷ் குமார் பிபிசி தமிழுக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் அடுத்து என்ன நிகழப் போகிறது என்று தெரியாத மர்மம்தான் டெஸ்ட் கிரிக்கெட்டை இன்னும் சாகாமல் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. ஐபிஎல் தொடரின் வெற்றிக்கு பிறகு உலகம் முழுக்க எத்தனையோ டி20 லீக் தொடர்கள் முளைத்துவிட்டன. ஆனால், சமபலம் வாய்ந்த இரு அணிகள் மல்லுக்கட்டும் டெஸ்ட் போட்டியின் சுவாரஸ்யத்தை மட்டும், அவற்றால் இதுவரை விஞ்ச முடியவில்லை என்பதுதான் உண்மை. வரலாற்றை திரும்பிப் பார்க்கையில், நெருக்கடியின் போதுதான் இந்திய அணி, தனது உச்சபட்ச கிரிக்கெட்டை விளையாடியிருக்கிறது என்பதை பார்க்க முடியும். 2001 ஈடன் கார்டன்ஸ் டெஸ்டில் லக்ஷ்மண்–டிராவிட் இணையின் சாகசத்தை இன்றும் பேசிக் கொண்டிருக்கிறோம். 2021 சிட்னி டெஸ்டில், விஹாரி–அஸ்வின் இணையின் போராட்டம் வரலாற்றின் ஓரங்கமாகிவிட்டது அந்த வரிசையில், மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியும், சுந்தர்–ஜடேஜா இணையின் விடாப்பிடியான சதங்களும் காலம் கடந்தும் பேசப்படும். இந்த டெஸ்டில் இந்தியா வென்றிருந்தால் கூட, அது இவ்வளவு தாக்கத்தை ஏற்படுத்தியிருக்காது. வெற்றியை எளிதாக கொண்டாடிவிட்டு கடந்து சென்றிருப்போம். கிட்டத்தட்ட கைவிட்டுப் போன ஒரு டெஸ்டில், 142 ஓவர்கள் தாக்குப்பிடித்து விளையாடி, இந்திய அணி தோல்வியை தவிர்த்ததுதான், இந்த டெஸ்டை ஒரு கிளாசிக்காக மாற்றிவிட்டது. அதுவும் எப்படிப்பட்ட ஓர் அணியை வைத்து, இதை நிகழ்த்திக் காட்டியிருக்கிறோம் என்பதும் இந்த டிராவை ஒரு மகத்தான அனுபவமாக மாற்றியுள்ளது. மோசமான அணித்தேர்வு, ரிஷப் பந்த் காயம், தொடரில் 2–1 என பின்னிலை, கடைசி இன்னிங்ஸில் அவலமான தொடக்கம் (0–2). இத்தனை பின்னடைவுகளுக்கு பிறகு இன்னிங்ஸை தொடங்கிய ராகுல்–கில் இணை, கடைசி நாளில் இந்திய அணிக்கு நம்பிக்கையான தொடக்கத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சுப்மன் கில் மற்றும் கே.எல். ராகுல் இணை லார்ட்ஸ் டெஸ்டில் சதத்தின் மேல் கண்வைத்து கவனத்தை தொலைத்த, ராகுல் முதல் 1 மணி நேரம் கடுமையான போராட்டத்தை வெளிப்படுத்தினார். புதிய பந்தை எடுக்கும் வரை, டாசனுடன் சேர்ந்து கேப்டன் ஸ்டோக்ஸ் பந்துவீசியது பாராட்டத்தக்க நகர்வு. தனது முன்னணி வேகப்பந்து வீச்சாளர்களின் நலனுக்காக, பஞ்சு போல மாறியிருந்த பழைய பந்தில் தனது முழு சக்தியையும் இறக்கி, பந்துவீச துணிந்தார். வெற்றி தோல்விகளை கடந்து, ஸ்டோக்ஸ் ஏன் உலகின் தலைசிறந்த கேப்டனாக கொண்டாடப்படுகிறார் என்பதற்கு இந்த தன்னலமற்ற தலைமைத்துவம்தான் காரணம். உண்மையில், நேற்று ஸ்டோக்ஸ் முழு உடற்தகுதியிலும் இல்லை. ஒவ்வொரு பந்தையும் வீசி முடித்த பிறகு, தோளை பிடித்துக்கொண்டு வலியில் துடித்ததை பார்க்க முடிந்தது. ஆனாலும், உயிரைக் கொடுத்து வீசி, சதத்தை நெருங்கிக் கொண்டிருந்த ராகுல் விக்கெட்டை கைப்பற்றினார். சதத்தை தவறவிட்டாலும் ராகுலின் ஆட்டம், இந்தியாவுக்கு ஒரு வலுவான அடித்தளத்தை ஏற்படுத்தி கொடுத்தது. சிறந்த இன்னிங்ஸை விளையாடிய சுந்தர் ராகுல் விக்கெட்டை கைப்பற்றியது ஒரு அற்புதமான பந்து. ஷார்ட் ஆஃப் த லெந்த்தில் வீசப்பட்ட பந்து, இவ்வளவு தாழ்வாக உள்ளே நுழைந்து கால்காப்பை தாக்கும் என கனவிலும் ராகுல் நினைத்திருக்க மாட்டார். அதற்கு முந்தைய பந்து, கிட்டத்தட்ட அதே லெந்த்தில் இருந்து அதீதமாக எகிறியது ராகுலின் மனதில் நின்றிருக்கக் கூடும். ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. ராகுல் ஆட்டமிழந்த பிறகு கேப்டன் கில்லுடன் கைக்கோர்த்த சுந்தர், டெஸ்ட் கிரிக்கெட்டில் தனது ஆகச்சிறந்த இன்னிங்ஸை விளையாடினார். இடக்கை பேட்ஸ்மேனான சுந்தருக்கு எதிராக ஆடுகளத்தில் உள்ள சொரசொரப்பை பயன்படுத்தி டாசன் வீசினார். இதைத் தடுக்கும் விதமாக, டாசன் பந்தில் சுந்தருக்கு ஸ்ட்ரைக் கொடுக்காமல் கில்லே பெரும்பாலான பந்துகளை விளையாடினார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, ஸ்டோக்ஸ் பந்துவீசும் போது ஒவ்வொரு பந்திலும் விக்கெட்டுக்கு வாய்ப்பிருப்பது போலவே தெரிந்தது. இந்திய டெஸ்டில் கில் பக்கம் அதிர்ஷ்டம் இருக்கிறது என்றுதான் சொல்ல வேண்டும். நான்காம் நாளில் 41 ரன்களில் கில் கொடுத்த கேட்ச் வாய்ப்பை டாசன் தவறவிட்டார். நேற்று ஸ்டோக்ஸ் பந்தில் 81 ரன்களில் இருந்தபோது கவர் திசையில் கொடுத்து வாய்ப்பை, போப் கோட்டைவிட்டார். இதை சரியாக பயன்படுத்திக்கொண்ட கில், இந்த தொடரின் நான்காவது சதத்தை விளாசினார். இதன்மூலம், ஒரு டெஸ்ட் தொடரில் அதிக சதங்கள்(4) குவித்த கவாஸ்கர், கோலி சாதனையை சமன்செய்தார். இங்கிலாந்து மண்ணில் ஒரு தொடரில் அதிக சதங்கள் எடுத்த பிராட்மேனின் சாதனையையும் கில் சமன் செய்தார். சதத்தை எட்டிய பிறகு ஏற்பட்ட கவனச்சிதறலில், ஆர்ச்சர் பந்துவீச்சில் வெளியே சென்ற பந்துக்கு பேட்டை நீட்டி கில் ஆட்டமிழந்தார். பொதுவாக ஆர்ச்சர், வலக்கை பேட்ஸ்மேனுக்கு உள்ளேதான் பந்தை எடுத்துக்கொண்டு வருவார். ஆனால், அந்தப் பந்தை தனது மணிக்கட்டை பயன்படுத்தி வெளியே கொண்டுசென்றார். அதை கில் கொஞ்சமும் எதிர்பார்த்திருக்க மாட்டார். சரணடையாத இந்திய அணி கில் விக்கெட்டுக்கு பிறகு, இந்தியா எளிதில் சரணடையும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், சுந்தர்–ஜடேஜா இணை, எவ்வித தவறுக்கும் இடம்கொடுக்காமல் மிகக் கவனமாக விளையாடி, ஒவ்வொரு அரைமணி நேரமாக ஆட்டத்தை நகர்த்தி சென்றது. வாஷிங்டன் சுந்தர், ஒரு டாப் ஆர்டர் பேட்ஸ்மேன் போலவே அபாரமான டெக்னிக்குடன் இங்கிலாந்தின் பவுன்சர் வியூகத்தை சமாளித்து விளையாடினார். ஸ்டோக்ஸ் பந்தில் அவர் பறக்கவிட்ட சிக்ஸர், 2021 பிரிஸ்பன் டெஸ்டில் கம்மின்ஸ் பந்தில் அடித்த ஹூக் ஷாட்டை ஞாபகப்படுத்தியது. அப்போதிருந்தே தொடர்ச்சியாக வாய்ப்புகளை ஏற்படுத்தி கொடுத்து, சுந்தரை வளர்த்தெடுத்திருக்க வேண்டும். ஆனால், இந்திய அணி நிர்வாகம் அவருடைய திறமையை அங்கீகரித்ததாக தெரியவில்லை. இன்று கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார். உயரமான பேட்ஸ்மேன் என்பதால் உடலையும் கால்களையும் நன்றாக நீட்டி, சுழற்பந்து வீச்சையும் பிரமாதமாக விளையாடுகிறார். பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடுமையாக போராடி, அவ்வப்போது கிடைத்த சொற்ப வாய்ப்புகளை கொண்டு, தன்னை நிரூபித்திருக்கிறார் வாஷிங்டன் சுந்தர் இந்த தொடரில், இந்தியாவின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான ஜடேஜா, நேற்று புதிய சாதனை ஒன்றை படைத்தார். இங்கிலாந்து மண்ணில் 6 அல்லது அதற்கும் கீழான வரையில் பேட் செய்து, 9 முறை ஐம்பது ரன்களுக்கு மேல் கடந்த எதிரணி வீரர் என்ற கேரி சோபர்ஸ் சாதனையை சமன்செய்தார். இந்த தொடர் முழுக்கவே இரண்டாவது இன்னிங்ஸ்களில் ஜடேஜாவை இங்கிலாந்து அணியால் ஆட்டமிழக்க செய்யமுடியவில்லை என்பது அவர் எப்படிப்பட்ட ஃபார்மில் இருக்கிறார் என்பதற்கு சான்று. ஆனாலும், ஆங்கில ஊடகங்கள் ஸ்டோக்ஸ் பெயரைத் தான் தொடர்ந்து உச்சரிக்கின்றன. இந்திய டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் மிகவும் குறைத்து மதிப்பிடப்பட்ட வீரர்களில், ஜடேஜா முதலிடம் பிடிக்க வாய்ப்புள்ளது. சுந்தர்–ஜடேஜா பார்ட்னர்ஷிப்பை உடைக்க முடியாத இயலாமையால் இங்கிலாந்து அணியினர் வாய்ச்சவடாலில் இறங்கினர். முதலில் ஸ்கோரை சமன் செய்து, இன்னிங்ஸ் தோல்வியை வாய்ப்பில்லாமல் ஆக்கிய பிறகு, நம்பிக்கையுடன் அவர்கள் அடித்து விளையாட தொடங்கினர். இந்திய மகளிர் செஸ் உலகில் புதிய வரலாறு: உலகக்கோப்பை பைனலில் 2 இந்தியர்கள் பலப்பரீட்சை வரலாறு மீண்டும் திரும்புமா? சாதனைகள் அரங்கேறிய நாளில் கணிப்புகளை பொய்யாக்கிய இந்திய ஜோடி தமிழக வீரர் ஜெகதீசன் அனுபவமுள்ள இஷான் கிஷனை தாண்டி இந்திய அணியில் இடம்பிடித்தது எப்படி? இன்றும் வாடகை வீட்டில் வசிக்கும் இந்த சிஎஸ்கே வீரர் இந்திய அணிக்காக சாதிப்பாரா? அவர்கள் இருவரின் நேர்மறையான ஆட்டம், இங்கிலாந்து அணியின் நம்பிக்கையை உடைத்தது. ஒருகட்டத்தில் ஆட்டத்தை முடித்துக் கொள்வோம் என ஸ்டோக்ஸ் இறங்கிவந்து கேட்டபோது, இந்திய கேப்டன் கில் இசைவு தெரிவிக்கவில்லை. சுந்தரும் ஜடேஜாவும் சதத்தை நெருங்கிக் கொண்டிருந்தது ஒரு காரணமாக இருந்த போதும், இந்திய அணிக்கு வேறு வியூகமும் இருந்தது. ஏற்கெனவே, உடல் சோர்வில் இருக்கும் இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் மேலும் பந்துவீசி ஓய்ந்து போகட்டும் என இந்தியா நினைத்திருக்கலாம். இந்தியாவின் மறுப்பு, ஸ்டோக்ஸ் உள்பட இங்கிலாந்து அணி வீரர்களுக்கு கோபத்தை ஏற்படுத்தியது. டெஸ்ட் கிரிக்கெட்டில் பாவ புண்ணியம் பார்க்க முடியாது என்பதை பாடிலைன் பந்துவீச்சை கண்டுபிடித்த இங்கிலாந்து அணி எப்படி மறந்தது என தெரியவில்லை. சுந்தர்–ஜடேஜா இணை, 334 பந்துகள் தாக்குப்பிடித்து விளையாடி, 203 ரன்களை குவித்தது, இருவரும் சதம் அடித்தனர். லார்ட்ஸ் டெஸ்டில் ஜடேஜாவுக்கு ஏற்பட்ட மன வருத்தத்துக்கு ஆறுதலாக இந்த சதம் நிச்சயம் அமைந்திருக்கும். ஓவல் டெஸ்ட், இன்னும் இரண்டு நாள்களில் தொடங்கவுள்ள நிலையில், இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர்கள் களைத்துப் போயுள்ளனர். பும்ரா உள்பட இந்தியாவின் அனைத்து வேகப்பந்து வீச்சாளர்களும் முழு உடற்தகுதியில் உள்ளனர். இந்தியா 2-1 என தொடரில் பின்தங்கி இருந்தாலும், மான்செஸ்டர் டெஸ்டில் இந்தியா விளையாடிய விதம், உளவியல் ரீதியாக இந்திய அணிக்கு ஒரு எழுச்சியை கொடுத்துள்ளது. ஓவல் டெஸ்டில் இன்னொரு ரோலர் கோஸ்டர் ரைடுக்கு தயாராவோம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c2kzdgd7zjxo

கள் போதைப் பொருளா அல்லது உணவுப்பொருளா? குழந்தைகளும் அதை குடிக்கலாமா?

2 months ago
உண்மையான தகவல் தந்தமைக்கு நன்றி யஸ்ரின் அவர்களே!🙏 1980ல் நான் பிறந்த மண்ணை விட்டுப் பறந்துவிட்டேன். எனக்கு குடியகல அனுமதி தந்தவர்கள் அம்மாளுக்குத் தர மறுத்துவிட்டார்கள் அதனால் தப்பிவிட்டேன் என எண்ணுகிறேன்.🤔

மாரீசன் விமர்சனம்: மீண்டும் இணைந்த வடிவேலு, ஃபகத் ஃபாசில் - படம் எப்படி இருக்கிறது?

2 months ago
மாரீசன் : விமர்சனம்! 26 Jul 2025, 4:58 PM திரைக்கதை ‘ட்ரீட்மெண்டை’ மாற்றியமைத்திருக்கலாம்..! ‘சூப்பரா நடிக்குறாங்க’ என்று சொல்லக்கூடிய இரண்டு நடிப்புக்கலைஞர்கள் ஒரே பிரேமில் தோன்றினால் எப்படியிருக்கும்? அதற்கு ரசிகர்கள் தரும் வரவேற்பு எப்படிப்பட்டதாக அமையும்? அது போன்ற எதிர்பார்ப்பினை உருவாக்கியது ‘மாரீசன்’ படத்தில் வடிவேலுவும் பகத் பாசிலும் இணைந்து நடிக்கின்றனர் என்ற தகவல். டீசர், ட்ரெய்லர் போன்றவற்றைத் தந்து அந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்திய அப்படம் தற்போது தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ஆர்.பி.சௌத்ரி இதனைத் தயாரித்திருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி இப்படத்தின் கதை திரைக்கதை வசனத்தை அமைக்க, சுதீஷ் சங்கர் இயக்கியிருக்கிறார். யுவன்சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். சரி, எதிர்பார்ப்பினைப் பூர்த்தி செய்கிற வகையில் ‘மாரீசன்’ உள்ளதா? எதிர்பாராத சந்திப்பு! எதிரும்புதிருமான இரண்டு மனிதர்கள். இருவருக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை. ஆனால், இருவரும் ஒன்றாகச் சில மணி நேரங்கள், நாட்கள் பயணிக்க நேர்கிறது. அந்தப் பயணத்தின்போது இருவரும் ஒருவரையொருவர் புரிந்துகொண்டார்களா? அவர்களது எதிர்பாராத சந்திப்பு நடக்கக் காரணமானது எது? இதற்கான பதில்கள் எப்படிப்பட்டவையாக இருக்கும் என்பதே ‘மாரீசன்’ படத்தின் கதையாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு, சிலரது மனங்களில் விரிந்திருக்கும். கிட்டத்தட்ட அப்படியொரு புள்ளியில் தொடங்கி மேற்சொன்னவாறே திரையில் கதை விரிகிறது. ஆனால், அது உண்மையல்ல என்று சொல்கிறது இடைவேளைப் பகுதி. ‘மாயமான்’ போன்று தோற்றமளிக்கிற மேற்சொன்ன கதைக்குப் பின்னால் இருக்கும் உண்மை என்ன? ஒன்றாகப் பயணிக்கிற அந்த இருவரில் யார் உண்மையைச் சொல்கிறார்? யார் உண்மையை மறைக்கிறார்? இருவரில் யார் நல்லவர் என்று பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது இரண்டாம் பாதி. இந்தக் கதையில் அல்சைமர்ஸ் எனும் மறதி நோயில் அவதிப்படுகிற வேலாயுதம் பிள்ளை எனும் நபராக நமக்கு அறிமுகமாகிறார் வடிவேலு. அவரைத் தற்செயலாகச் சந்திக்கிற ஒரு திருடனாக, தயாளன் எனும் பாத்திரத்தில் தோன்றியிருக்கிறார் பகத் பாசில். இப்போது, ‘மாரீசன்’ படம் குறித்த ஒரு சித்திரம் மனதுக்குள் தானாக மேலெழும். ஏதோ ஒரு விஷயம் இதில் மறைந்திருப்பதாக அல்லது சொல்லாமல் தவிர்க்கப்பட்டதாக உணர வைக்கும். அது, இரண்டாம் பாதியில் பிளாஷ்பேக் ஆகச் சொல்லப்பட்டிருக்கிறது. முழுமையாகப் படத்தைக் கண்டபிறகு, முதல் பாதியுடன் இரண்டாம் பாதியைப் பொருத்திப் பார்க்க முடிந்தவர்களுக்கு இப்படைப்பு பிடித்துப் போகும். ‘மாரீசன்’னின் பலமாகவும் பலவீனமாகவும் அதுவே இருக்கிறது. ’கொஞ்சம்’ வித்தியாசமான அனுபவம்! ‘மாரீசன்’ படம் குறித்துச் சிலாகித்தாலும், இகழ்ந்தாலும் அதில் இருக்கிற சில அம்சங்கள் பற்றிக் குறிப்பிட வேண்டியிருக்கும். அவற்றில் சில ‘ஸ்பாய்லர்’களாகவும் இருக்கக்கூடும். அது வேண்டாமே என்பவர்கள் இந்த இடத்தில் நின்றுகொள்ளலாம். அல்சைமர்ஸ் நோயால் அவதிப்படுகிற ஒரு பாத்திரம், அதனை ஏமாற்ற முனைகிற இன்னொரு பாத்திரம். இவற்றைக் கொண்டு நகைச்சுவையையும் செண்டிமெண்ட்டையும் வாரி இறைத்திருக்க முடியும். ஆனால், எழுத்தாக்கம் செய்திருக்கும் கிருஷ்ணமூர்த்தி இரண்டையுமே மிகக் குறைந்த அளவில் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். வெள்ளைத்தாளில் ஆங்காங்கே எழுதுகோலை நகர்த்திச் சில புள்ளிகளை இட்டு, அந்த புள்ளிகளைக் கூர்ந்து கவனித்தால் ஒரு வரைபடம் தென்படுவதாகத் திரைக்கதை அமைத்திருக்கிறார். அப்படியொரு உத்தியைச் செயல்படுத்தும்போது, திரைக்கதையில் அப்புள்ளிகளை அழுத்தமாகத் தெரியுமாறு பதிக்க வேண்டும். இரண்டாம் பாதியை முதல் பாதியோடு சரியாகப் பொருந்துகிற வகையில் திரைக்கதை ட்ரீட்மெண்டை அமைத்திருக்க வேண்டும். அந்த மாற்றத்தைச் செய்யத் தவறியிருக்கிறது கிருஷ்ணமூர்த்தி மற்றும் இயக்குனர் சுதீஷ் சங்கர் கூட்டணி. அதேநேரத்தில், வழக்கமானதொரு கதை சொல்லலைத் தவிர்த்திருக்கின்றனர். கொஞ்சம் முயன்றிருந்தால், இதனைப் பரபரப்புமிக்க ‘காமெடி ஆக்‌ஷன் த்ரில்லர்’ ஆகவும் மாற்றியிருக்க முடியும். அவ்வாறு ஆக்கியிருந்தால், இப்படம் டாம்க்ரூஸ், ஜேமி பாக்ஸ் நடித்த ஆங்கிலப் படமான ‘கொலேட்டரல்’ போன்றதொரு அனுபவத்தைத் தந்திருக்கும். ஒளிப்பதிவாளர் கலைச்செல்வன் சிவாஜி, தயாரிப்பு வடிவமைப்பாளர் பங்கலான், படத்தொகுப்பாளர் ஸ்ரீஜித் சாரங்க் உள்ளிட்ட தொழில்நுட்பக் கலைஞர்களின் ஒருங்கிணைத்து தான் விரும்பியவாறு திரையில் கதை சொல்லியிருக்கிறார் இயக்குனர் சுதீஷ் சங்கர். ’ஃபா ஃபா’ மற்றும் ‘மாரீசா சும்மா கிடைக்குமா சுகுமாரி’ பாடல்கள் சட்டென்று ஈர்க்கின்றன. அதைவிடப் பல மடங்கு உழைப்பைப் பின்னணி இசையில் கொட்டியிருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. இந்தப் படத்தில் பகத் பாசில் ’மிக இயல்பாக’த் தோன்றியிருக்கிறார். அதுவே வடிவேலுவின் பாத்திரம் ‘புதிரானது’ என்ற எண்ணத்தை மனதின் அடியாழத்தில் ஏற்படுத்தும். அதற்கேற்ப, அவரும் ‘மிகச்சரியாக’ நடித்திருக்கிறார். இவர்களது நடிப்பு ‘அபாரமாக’ இருப்பதாலேயே முதல் பாதி மெதுவாக நகர்வது நமக்கு அயர்ச்சியைத் தருவதில்லை. இரண்டாம் பாதியில் அவர்களது நடிப்பு ‘வழக்கமான தமிழ் சினிமா நாயர்களையே’ முன்னிறுத்துகிறது. அது மட்டுமே நமக்கு ஏமாற்றம் தருகிறது. இதர பாத்திரங்களில் நடித்திருக்கிற சித்தாரா, கோவை சரளா, பி.எல்.தேனப்பன், லிவிங்ஸ்டன், ரேணுகா, சரவண சுப்பையா, கிருஷ்ணா, டெலிபோன் ராஜா ஆகியோருக்குச் சரியான முக்கியத்துவம் தரப்படவில்லை. அதனைக் கொஞ்சம் உற்றுநோக்கியிருக்கலாம். இந்தக் கதையில் பகத் பாசிலும் வடிவேலுவும் சேர்ந்து பயணிக்காவிட்டால்தான் என்ன என்ற கேள்விக்கான பதிலாக விவேக் பிரசன்னா பாத்திரம் நுழைக்கப்பட்டிருக்கிறது. அவர் அதனைக் கவனமாகத் திரையில் வெளிப்படுத்தியிருக்கிறார். கிருஷ்ணமூர்த்தி – சுதீஷ் சங்கர் கூட்டணியானது ‘மாரீசன்’னில் பகத் பாசிலையும் வடிவேலுவையும் ஒரே பிரேமில் காட்டி, அவர்களது செம்மையான நடிப்புத் திறமையைக் காட்ட முனைந்திருக்கிறது. அதில் வெற்றி கண்டிருக்கிறது. அதேநேரத்தில், தமிழ் திரை வரலாற்றில் இடம்பெறுகிற ஒரு ‘காம்போ’வாக, அதற்கேற்ற நேர்த்தியான கதை சொல்லல் கொண்டதாக ஆக்கியிருந்தால் ‘மாரீசன்’ படத்தின் உயரம் பல மடங்கு மேலேறியிருக்கும். அதனைச் செய்யாமல் விட்டதனால், ‘கொஞ்சம் வித்தியாசமான திரையனுபவம்’ என்ற எல்லையோடு நின்றிருக்கிறது ‘மாரீசன்’. வடிவேலு, பகத் பாசில் ரசிகர்களுக்கு இது ஏமாற்றம் அளிக்கத்தான் செய்யும்..! https://minnambalam.com/vadivelu-fafa-maareesan-review-july-25/

மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் இராணுவநடவடிக்கை நிறுத்தம் - இஸ்ரேலிய இராணுவம் அறிவிப்பு

2 months ago
27 JUL, 2025 | 11:50 AM மனிதாபிமான நோக்கங்களிற்காக காசாவின் சில பகுதிகளில் மூலோபாய அடிப்படையிலான இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என இஸ்ரேலிய இராணுவம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலிய இராணுவம் நடவடிக்கையில் ஈடுபடாத அல்மவாசி, டெய்ர் அல் பலா, காசா நகரம் ஆகியபகுதிகளில் மறுஅறிவித்தல்வரும் வரை இராணுவ நடவடிக்கை நிறுத்தம் கடைப்பிடிக்கப்படும் என தெரிவித்துள்ள இஸ்ரேலிய இராணுவம் ஐநா மற்றும் சர்வதேச அமைப்புகளுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் இந்த தீர்மானத்தை எடுத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளது. காசா பள்ளத்தாக்கில் மனிதாபிமான பொருட்களையும் மருந்துகளையும் விநியோகிக்கும் ஐநாவினதும் ஏனைய மனிதாபிமான அமைப்புகளினதும் வாகனத்தொடரணி பயணிப்பதற்கான பாதுகாப்பான வழிகள் குறித்து அறிவிக்கப்படும் எனவும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/221055

எனது மரணச்சடங்கு.🖤

2 months ago
உணர்வுபூர்வமான அருமையான பதிவு என்பதில் எவ்வித ஐயமும் இல்லை. 'எனது மரணச் சடங்கு' என்று தலைப்பிட்டதால் நான் எழுதியதைப் போல அல்லது என் மகள் எழுதியதைப் போல அமைந்திருக்குமோ என்று நினைத்தேன் - மற்றவர்கள் உலகை நமது கண்ணாடி அணிந்து பார்ப்பது வேடிக்கையானது என்று தெரிந்தும் கூட. இருப்பினும் எங்கள் எழுத்துகளையும் கீழே இணைத்துள்ளேன் : https://www.facebook.com/share/p/16mRbucbQJ/

இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில்

2 months ago
இஸ்ரேலிய படையினரால் தடுத்துவைக்கப்பட்டுள்ள காசா மருத்துவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கின்றது - பெருமளவு சுகாதார பணியாளர்களும் சிறைகளில் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:38 AM காசாவை சேர்ந்த 28 மருத்துவர்கள் இஸ்ரேலிய சிறைச்சாலைகளில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள பாலஸ்தீனத்தை சேர்ந்த சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு அவர்களில் எட்டு பேர் அறுவை சிகிச்சை எலும்பியல் சிகிச்சை தீவிரசிகிச்சை குழந்தைநோயியல் மருத்துவம் இருதயவியல் போன்றவற்றில் நீண்டகால அனுபவம்மிக்க மருத்துவ ஆலோசகர்களாக பணியாற்றியவர்கள் என தெரிவித்துள்ளது. இவர்களில் 21 பேர் 400நாட்களிற்கு மேலாக தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பு ஜூலைமாதத்தின் பின்னர் மூன்று மருத்துவசுகாதார பணியாளர்களை இஸ்ரேல் கைதுசெய்துள்ளது என தெரிவித்துள்ளது. கைதுசெய்யப்பட்டுள்ளவர்களிற்கு எதிராக இஸ்ரேல் இதுவரை எந்தவொரு குற்றச்சாட்டையும் சுமத்தவில்லை என பாலஸ்தீன அமைப்பு தெரிவித்துள்ளது. பலசுகாதார மருத்துவ பணியாளர்கள் அவர்கள் பணியாற்றிக்கொண்டிருந்த பகுதிகளில் வைத்து இஸ்ரேலிய படையினரால் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்துள்ள சுகாதார பணியாளர்கள் கண்காணிப்பு அமைப்பின் இயக்குநர் முவத் அல்செர் இவர்களை வெளியுலக தொடர்பின்றி பல மாதங்களாக தடுத்துவைத்துள்ளனர் என குறிப்பிட்டுள்ளார். அவர்களிற்கு அவசியமான மருத்துவ சிகிச்சைகளை இஸ்ரேல் மறுக்கின்றது,அவர்கள் மிகமோசமான விதத்தில் தடுத்துவைக்கப்பட்டுள்ளதால் பெரும் துன்பங்களை அனுபவிக்கின்றனர் என தெரிவித்துள்ள அவர் சட்டவிரோதமாக தடுத்துவைக்கபட்டுள்ள மருத்துவர்கள் மருத்துவசுகாதார பணியாளர்களை விடுதலை செய்யவேண்டு;ம் என இஸ்ரேல் வலியுறுத்தவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார். மருத்துவமனைகள் தொடர்ந்து இயங்குவதில் பெரும் போராட்டத்தை எதிர்கொண்டுள்ள அதேவேளை காசாவில் மருத்துவ ஊழியர்கள் மத்தியில் அதிகரித்துவரும் பசிபட்டினி ஊட்டச்சத்து குறைபாடு காயமடைந்தவர்களிற்கு மருத்துவகிசிச்சைவழங்க முடியாத அளவிற்கு அவர்களை பலவீனப்படுத்தியுள்ளது என மருத்துவர்கள் கார்டியனிடமும்,புலனாய்வு இதழியலிற்கான அராபிய செய்தியாளர்கள் அமைப்பிடமும் தெரிவித்துள்ளனர். கடந்த பெப்ரவரியில் தடுத்துவைக்கப்பட்டிருந்த பின்னர் விடுதலை செய்யப்பட்ட மருத்துவர்கள் தெரிவித்த தகவல்களை கார்டியன் வெளியிட்டிருந்தது.அவர்கள் தாங்கள்தாக்கப்பட்டதாக சித்திரவதை செய்யப்பட்டதாக தெரிவித்தனர். இஸ்ரேலிய படையினரால் தொடர்ந்தும் தடுத்துவைக்கப்பட்டுள்ளவர்களில் காசாவின் வடபகுதியில் உள்ள கமால் அத்வான் மருத்துவனையின் இயக்குநர் மருத்துவர் ஹ_சாம் அபு சபியாவும் ஒருவர்.அவர் கடந்த டிசம்பரில் கைதுசெய்யப்பட்டார். அவர் தாக்கப்பட்டு சித்திரவதை செய்யப்படுகின்றார், அவரது உடல்நிலை மோசமடைகின்றது என இந்த வாரம் அவரது சட்டத்தரணிகள் ஸ்கைநியுசிற்கு தெரிவித்திருந்தனர். https://www.virakesari.lk/article/221129

குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம்

2 months ago
குழந்தைகளை கொல்லும் இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு வருவதற்கு இலவச வீசாவா? கொழும்பில் இன்று ஆர்ப்பாட்டம் Published By: RAJEEBAN 28 JUL, 2025 | 10:57 AM இஸ்ரேலிய படையினர் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு அவர்களிற்கு இலவச வீசாவை வழங்குவது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருவதாக தெரிவித்துள்ள சுதந்திர பாலஸ்தீன இயக்கம் இதற்கு எதிராக இன்று வெளிவிவகார அமைச்சின் முன்னால் மாலை நான்கு மணிக்கு ஆர்ப்பாட்டமொன்றில் ஈடுபடவுள்ளது. இது குறித்து சுதந்திர பாலஸ்தீன இயக்கம் மேலும் தெரிவித்துள்ளதாவது காசாவில் அப்பாவி சிறுவர்கள் மீது குண்டுவீசி ,சுட்டுக்கொலை செய்த இஸ்ரேலிய இராணுவீரர்களிற்கு இலங்கைக்கு விஜயம் மேற்கொள்வதற்கு இலவசவீசாவை வழங்கும் திட்டமொன்றை முன்னெடுப்பது குறித்து அரசாங்கம் ஆராய்ந்துவருகின்றது. இலங்கை அரசாங்கம் சுற்றுலாத்துறையின் அபிவிருத்திக்காக இதனை செய்வதாக தெரிவித்தாலும் அது ஒரு பொய் குழந்தைகளை கொலைசெய்யும் சாகசபிரியர்களுடன் நேரத்தை செலவிடுவதற்கு எந்தசுற்றுலாப்பயணியும் விரும்பவில்லை. இந்த இஸ்ரேலிய படைவீராகள் மிகவும் ஆபத்தான மனோநிலையில் உள்ளனர்.அவர்களின் மதிப்பு மிக்க குணங்களான சுற்றுலாவிற்கு செல்லும் நாடுகளில் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்நாட்டவர்களிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் குணங்கள் குறித்து உலகின் பல பகுதிகளில் இருந்து தகவல்கள் வெளியாகியுள்ளன. இலங்கையில் மாத்திரமல்லாமல் வேறு பல நாடுகளில் இஸ்ரேலிய சுற்றுலாப்பயணிகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபடுவதாகவும் உள்நாட்டு கலாச்சாரங்களை மதிப்பதில்லை எனவும் குற்றச்சாட்டுகள் வெளியாகியுள்ளன. இவ்வாறான மனிதாபிமானமற்ற சிந்தனையாளர்கள் எங்களின் பெறுமதியான சுற்றுலாத்துறையை அழிப்பதை தடுத்து நிறுத்துவோம். https://www.virakesari.lk/article/221131

தீர்மானத்தை மீறி நல்லூர் ஆலயத்திற்கு மணல் விநியோகம் - பொதுமக்கள் குற்றச்சாட்டு!

2 months ago
மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன! நல்லூர் பெரும் திருவிழாவுக்கு என இம்முறை எடுத்து வரும் மணலை பேணிப் பாதுகாத்து தொடர்ச்சியாக பயன்படுத்துமாறு யாழ்ப்பாணம் மாநகர சபையிடம் யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன் கோரிக்கை விடுத்துள்ளார். நல்லூர் பெரும் திருவிழாவுக்கு மணலினை எடுத்து வருவது தொடர்பாக ஏற்பட்ட சர்ச்சை குறித்து விளக்கமளிக்கும் போது அவர் இதனை தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், எதிர்வரும் 29 ஆம் திகதி ஆரம்பமாக உள்ள நல்லூர் பெரும் திருவிழாவுக்கான மணல் கோரிக்கை யாழ்ப்பாணம் மாநகர சபையால் எமக்கு முன்வைக்கப்பட்டது. அந்தக் கோரிக்கையை மருதங்கேணி பிரதேச செயலரிடம் முன்வைத்த போது, பிரதேச செயலர் அங்குள்ள சமூகமட்ட அமைப்பினருடன் தொடர்பு கொண்டு கலந்துரையாடலை மேற்கொண்டு கோரிக்கையை முன்வைத்த போது அவர்கள் அதற்கு மறுப்பு தெரிவித்தனர். இருந்த போதும் நாகர்கோவில் மேற்கு பிரதேசத்தை சேர்ந்த விளையாட்டு கழகம் அதற்குரிய அனுமதியை வழங்கியபோது, வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் அந்த கோரிக்கை முன்வைக்கப்பட்ட நிலையில் அதற்குரிய அனுமதி எம்மால் பெற்றுக் கொள்ள முடியவில்லை. அதனைத் தொடர்ந்தும் சமூகமட்ட அமைப்புகளுடன் கலந்துரையாடலை தொடர்ச்சியாக மேற்கொண்ட போதும் எவரும் அதற்குரிய சம்மதத்தை தெரிவிக்காத நிலையில் தனிநபர் ஒருவர் அரச காணியிலிருந்து மண்ணை பெற்று விநியோகிப்பதற்கான கோரிக்கையை முன் வைத்திருந்தார். அந்த கோரிக்கையானது எம்மால் யாழ்ப்பாணத்தில் உள்ள கனியவளத் திணைக்களத்திடம் முன்வைக்கப்பட்ட நிலையில் அது கொழும்புத் தலைமையகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது தொடர்பாக அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகரனும் சுற்றாடற்துறை அமைச்சருடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு அதற்குரிய வசதியை எனக்கு ஏற்படுத்தித் தந்தார். இது தொடர்பாக சுற்றாடத்துறை அமைச்சருக்கு நான் தெளிவான விளக்கத்தை வழங்கினேன். அதனைத் தொடர்ந்து கனியவளத் திணைக்களத்திற்கு பொறுப்பாக இருக்கின்ற பணிப்பாளர் நாயகத்துடனும் தொலைபேசியில் உரையாடி இந்த விடயங்கள் தொடர்பில் தெளிவூட்டலை வழங்கியதன் அடிப்படையில் இதற்கான அனுமதியானது கொழும்பு தலைமையகத்தில் இருந்து யாழ்ப்பாணம் கனியவளத் திணைக்களத்திற்கு கிடைக்கப்பெற்றது. அதன் அடிப்படையில் நல்லூர் பெருந்திருவிழாவிற்கான மணல் விநியோகத்திற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றன. இருப்பினும் அங்கு இருக்கின்ற சமூகமட்ட அமைப்புகள் அதற்கு எதிர்ப்பினை வெளியிட்டு இருக்கிறார்கள். இருந்த போதிலும் நாங்கள் இம்முறை யாழ்ப்பாணம் மாநகர சபையிடம், இம்முறைக்கு மணல் கிடைக்கப் பெற்றால் அந்த மணலை தொடர்ந்தும் அடுத்த திருவிழாவுக்கு பயன்படுத்தக்கூடிய வகையில் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை முன்வைத்திருக்கின்றோம் என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmdmlu0d601q4qp4kyrzg80nq

கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம்

2 months ago
கட்சிகளை விட தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்ப்பதுவே முக்கியம் காட்சிகளுக்கு அப்பால் தமிழ் மக்களின் இன விடுதலைக்கு நாங்கள் என்ன செய்யப் போகின்றோம் என்று இருக்கக்கூடிய சூழ்நிலையில், மிக நீண்ட போராட்டத்திற்கு பிற்பாடு புதிய ஒரு அரசாங்கத்தின் நிழலுக்குள் தள்ளப்பட்டிருக்கின்றோம் என ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், அந்தப் புதிய அரசாங்கம் ஆயிரம் வாக்குறுதிகளை கொடுத்து வந்திருந்தாலும் கூட இன்று அந்த வாக்குறுதிகளின் அடிப்படையில் ஏதாவது நடைபெறுகின்றதா? தமிழ் மக்களின் எதிர்காலம் என்ன என்ற கேள்விகளுக்கு நாங்கள் பதில் கண்டுபிடிக்க வேண்டி இருக்கின்றது. மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொண்டிருக்கின்ற இந்த அரசாங்கமானது தமிழ் மக்களது அபிலாஷைகளை பூர்த்தி செய்யுமென்றோ, வாக்குறுதிகள் அளித்தபடி எமது பிரச்சினைகளை தீர்ப்பார்களென்றோ நாங்கள் முழுமையாக எதிர்பார்க்க முடியாது. அவர்கள் ஆட்சிக்கு வந்து 10 மாதங்கள் நிறைவடைகின்ற சூழ்நிலையில் தமிழ் மக்கள் தொடர்பாக அவர்கள் கொடுத்த எந்த வாக்குறுதிகளையும் நிறைவேற்றவில்லை. பயங்கரவாத தடைச் சட்டமாக இருக்கலாம், மாகாண சபை தேர்தலாக இருக்கலாம், காணிகள் விடுவிப்பாக இருக்கலாம், காணாமல் ஆக்கப்பட்டோருக்கான தீர்வாக இருக்கலாம் எந்த பிரச்சினைகளுக்கும் அவர்கள் தீர்வினை வழங்கவில்லை. அடுத்த வருடம் தேர்தல் வரும் என நாங்கள் இப்போதும் ஒரு கனவு உலகில் சஞ்சரித்துக் கொண்டிருக்கின்றோம். மாகாண சபை அமைச்சர் சொல்வார் delimitation commission (எல்லை நிர்ணய) ஒன்றை நியமித்து அதற்குப் பின்னர் தான் நாங்கள் இந்த மாகாண சபை தேர்தலை நடத்தப் போகின்றோம் என்று. பிமல் ரத்நாயக்க என்ற அமைச்சர் கூறுவார் அடுத்த வருட ஆரம்பத்தில் தேர்தல் நடக்கும் என்று. ஜனாதிபதி அமைச்சர்களை பேசவிட்டு அவர் மௌனமாக இருப்பார். முன்னைய அரசாங்கங்கள் செய்த அனைத்தும் தற்போதும் தொடர்ந்து கொண்டிருக்கின்றன. முல்லைத்தீவு, வவுனியாவில் சிங்கள குடியேற்றங்களாக இருக்கலாம், அல்லது புதிய பௌத்த ஆலயங்கள் உருவாக்குவதாக இருக்கலாம், அது அல்லது தொடர்பான இராணுவத்தின் நடவடிக்கைகளாக இருக்கலாம் எதுவும் நிறுத்தப்படவில்லை. ஒரு சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை நிறுவுவதற்கான அனைத்து விடயங்களையும் இந்த அரசு தொடர்ந்து செய்து கொண்டிருக்கின்றது. உலகத்திலேயே மிகவும் பெருமளவிலான பலம்பொருந்திய கடற்படை, விமானப்படை, காலாட்படை என பல படையணிகளை கொண்டு தமிழ் மக்களுக்கான விடுதலைப் போராட்டத்தை நடாத்தி இப்போது நாங்கள் பாராளுமன்றத்தில் எங்களுக்கு இருக்கின்ற ஆசனங்கள் ஊடாக அரசாங்கத்துடன் பேச முடியுமா என்ற நிலைமைக்குள் வந்திருக்கின்றோம். அந்தப் பெரிய படையணிகள் இருக்கும் போதே அரசாங்கம் எந்த அளவு பின்நின்றது என்று யோசிக்கும் பொழுது, இப்போது நாங்கள் அரசாங்கத்துடன் பேச வேண்டுமாக இருந்தால் தமிழ் மக்களோ தமிழ் கட்சிகளோ சிதறுண்டு நின்று எதனையும் சாதிக்க முடியாது. எது பெரிய கட்சி எது சிறிய காட்சி என்பது அல்ல இங்கு விடயம். நாங்கள் அனைவரும் ஒன்று திரண்டு நின்று தமிழ் மக்களின் கோரிக்கைக்கு குரல் கொடுக்கப் போகின்றோமா? அல்லது நாங்கள் பெரிய கட்சி சிறிய என்று பேசப்போகின்றோமா என்பதுதான் விடயம். இவ்வளவு பெரிய போராட்டங்கள், இழப்பிற்கு பிற்பாடு குறைந்த பட்சம் தமிழ் மக்களுக்கு ஏதாவது பெற்றுக் கொடுக்கப் போகின்றோமா இல்லையா என்பது தான் இங்கு இருக்கின்ற கேள்வி. ஆகவே அந்தக் கேள்விக்கு பதில் தேடுவது தான் முக்கிய விடயமாக இருக்க வேண்டுமே தவிர நாங்கள் பலங்களைப் பற்றி பேசிக் கொண்டிருப்பது முக்கியமான விடயமாக இருக்க முடியாது என தெரிவித்தார். https://adaderanatamil.lk/news/cmdmmtjga01q8qp4k9aju2e63

அவசர மருத்துவ உதவி தேவைப்படும் சிறுவர்களை காசாவிலிருந்து பிரிட்டன் கொண்டு செல்ல திட்டம் - பிரதமர் கெய்ர் ஸ்டார்மெர்

2 months ago
காசாவில் இஸ்ரேலின் தொடர் குண்டுதாக்குதலால் முற்றிலும் அழிக்கப்பட்ட அல்லது தற்காலிகமாக செயலிழந்திருக்கும் வைத்தியசாலைகளை மீண்டும் புனரமைத்து அல்லது அதற்குப்பதிலாக தற்காலிக வைத்திய முகாம்களை நிறுவி அதன் மூலம் காசாவில் உள்ள சிறுவர்களுக்கு வேண்டிய உடனடி வைத்திய சேவைகளை மேலை நாடுகள் வழங்க வேண்டும். அதை விடுத்து அங்குள்ள குழந்தைகளையும் சிறுவர்களையும் தங்கள் தங்கள் நாடுகளுக்கு அழைத்து சென்று மருத்துவ உதவி வழங்க முன்வருவது காசாவில் இருந்து பலஸ்தீனியர்களை முற்றாக வெளியேற்றவேண்டும் என்ற இஸ்ரேலினதும் அமெரிக்காவினதும் நோக்கத்தை விரைந்து செயல்படுத்தும் திட்டத்துக்கு மறைமுகமாக முண்டு கொடுப்பதாகும். இப்படி பார்த்தால் காசாவில் உள்ள அனைத்து குழந்தைகளையும் தான் பிரிட்டனுக்கு கொண்டுசெல்லவேண்டிவரும். சிகிச்சை முடிந்தவுடன் அந்த குழந்தைகளை எங்கே கொண்டு சென்று விடுவார்கள். பிரிட்டனின் இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டால் இன்னும் சில மாதங்களில் காசா பிரதேசம் சன நடமாட்டம் அற்ற ஒரு நிலமாக மாறப்போவது உறுதி. குழந்தைகளை வெளியேற்றும்போது அவர்களுடன் அவர்களது தாய்மார்கள் அல்லது முழு குடும்பமோ கூட வெழியேறுவது தடுக்கமுடியாது. பாலஸ்தீன மக்களை கொன்றுகுவித்து அவர்களுக்கு அன்றாட வாழ்க்கையை சீரழிக்கும் போர் நடவடிக்கைகளை இருதரப்பும் முதலில் கைவிட வேண்டும். அதற்கு சர்வதேச நாடுகள் ஒற்றுமையுடன் முன்வந்து ஒரு தீர்வினை முன்வைத்து செயலாற்றவேண்டும்.
Checked
Sun, 09/28/2025 - 15:40
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed