புதிய பதிவுகள்2

யாழ். பலாவி விமான நிலைய 2 ஆவது கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடமிருந்து பெறுவதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது - ஸ்ரீதரன்

1 month 1 week ago
20 AUG, 2025 | 04:03 PM (எம்.ஆர்.எம் வசீம்,இராஜதுரை ஹஷான்) யாழ். பாலாவி விமான நிலையத்தின் புனரமைப்புப்பணிகள் 6 மாத காலத்திற்குள் முழுமைப்படுத்தப்படும் என அரசாங்கத்தால் உறுதியளிக்கப்பட்டு ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ளன. இருப்பினும் எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் ஏன் இதுவரை நடைமுறைப்படுத்தப்படாமல் இருக்கின்றது. விமான நிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்றும் இலங்கை தமிழரசுக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ். சிறீதரன் கேள்வியெழுப்பினார். பாராளுமன்றத்தில் புதன்கிழமை (20) நடைபெற்ற அமர்வின் போது நிலையியல் கட்டளை 27/ 2இன் கீழ் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரிடம் மேற்கண்டவாறு கேள்வியெழுப்பினார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, இரண்டாம் உலகப்போரின் போது பிரித்தானிய வான்படையின் பயன்பாட்டுக்காக உருவாக்கப்பட்ட இலங்கையின் இரண்டாவது பன்னாட்டு விமான நிலையமான யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமான நிலையம் வரலாற்றுப் பாரம்பரியம் மிக்க வடக்கு - கிழக்கின் அடையாளமாக பார்க்கப்படுகிறது. இவ்விமான நிலையம் ஊடாகவே எயார்சிலோன் நிறுவனத்தின் முதலாவது விமானப் பயணம் இரத்மலானையிலிருந்து சென்னைக்கு நடத்தப்பட்டது. அதன் பின்னர் பலாலி விமான நிலையத்திலிருந்து சென்னை, திருச்சி, மதுரை ஆகிய தென்னிந்திய நகரங்களுக்கும் கொழும்புக்கும் விமானசேவை ஆரம்பிக்கப்பட்டு பின்னரான போர்க்காலச் சூழலில் பயணிகள் சேவை மட்டுப்படுத்தப்பட்டிருந்தது. போருக்குப் பின்னரான காலப்பகுதியில் இந்திய அரசின் நிதியுதவியில் முதற்கட்ட அபிவிருத்தி மேற்கொள்ளப்பட்டு தற்போது இவ்விமான நிலையம் மீளியக்கப்பட்டு வருகின்றபோதும், தற்போது பயன்பாட்டிலுள்ள விமான ஓடுபாதையை மேலும் ஒரு கிலோ மீற்றர் நீளத்திற்கு விரிவாக்கும் பட்சத்தில், ஏ-320 ரக விமானம் உள்ளிட்ட ஆகக்குறைந்தது 180 பயணிகளை ஏற்றக் கூடிய விமானங்கள் பலாலி விமான நிலையத்துக்கு நேரடியாக வந்து தரையிறங்கும் நிலையை உருவாக்கி, அதன்மூலம், புலம்பெயர்ந்தோரும், வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் இந்த விமானநிலையம் ஊடாக வருகை தருவதற்கான வாய்ப்புகளை அதிகரிக்க முடியும். குறிப்பாக, பெரிய ரக விமானங்கள் செயற்படத் தொடங்கினால் பயணிகள் கொண்டுவரக் கூடிய பொதிகளின் அளவு 15 கிலோவில் இருந்து 30 கிலோவாக அதிகரிக்கப்படும். இதனால் வடக்கு - கிழக்கிற்கு வருகைதரும் வெளிநாட்டவர்களின் தெரிவாக பலாலி விமானநிலையமே முன்னுரிமை பெறும். இதன்மூலம் வடக்கு,கிழக்கு மாகாணங்கள் வளர்ச்சியடைவதுடன் நாட்டின் வருமானமும் அதிகரிக்கப்படும். அதேவேளை, வடக்கு கிழக்கிலுள்ள வரலாற்றுத் தொன்மை மிகு ஆலயங்களை தரிசிக்க பெருமளவு இந்திய சுற்றுலா பயணிகள் வருகை தருவதற்கான வாய்ப்புகளும் ஏற்படுத்தப்படும். இவ்வாறான பின்னணியில் பலாலி சர்வதேச விமான நிலையத்தின் இரண்டாம்கட்ட அபிவிருத்தி காலம் தாழ்த்தப்படுவதற்கான காரணம் என்ன? மேற்குறித்த அடிப்படையில் விமான நிலையத்தின் சேவைப்பரப்பை விரிவாக்குவதன் மூலம் புலம்பெயர் மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளின் வருகையை அதிகரிப்பதற்கான திட்டங்கள் எவையேனும் அரசிடம் உள்ளதா? அமைச்சர் கடந்த 2025.03.30ஆம் திகதி தாங்கள் யாழ்ப்பாணம் பலாலி சர்வதேச விமானநிலையத்திற்கு வருகைதந்த போது, ஆறுமாத காலத்திற்குள் இவ்விமானநிலையத்தின் புனரமைப்புப் பணிகள் முழுமைப்படுத்தப்படும் என உறுதியளித்து ஐந்து மாதங்கள் நிறைவடைந்துள்ள போதும், அதுசார்ந்த எந்தவொரு முன்னேற்றகரமான செயற்பாடுகளும் இதுவரை ஏன் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பதை அறித்தர முடியுமா? வடக்கு-கிழக்கு அபிவிருத்தியில் பெரும் பங்கு வகிக்கும் இந்திய நாட்டின் உதவியுடனேயே இந்த விமான நிலையத்தின் முதற்கட்ட அபிவிருத்திப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. அதற்காக இந்திய அரசால் வழங்கப்பட்ட நிதியுதவி எவ்வளவு என்பதையும், இரண்டாம்கட்ட அபிவிருத்திக்கு தேவைப்படும் நிதிப்பெறுமதி எவ்வளவு என்பதையும், இரண்டாம் கட்ட அபிவிருத்திக்கான நிதியை இந்தியாவிடம் பெற்றுக்கொள்வதில் அரசாங்கத்திற்கு என்ன தடை உள்ளது என்பதையும் அமைச்சர் தெரிவிப்பாரா?, அவ்வாறு எந்தத் தடைகளும் இல்லையெனில் பலாலி விமானநிலையத்தின் இரண்டாம் கட்ட அபிவிருத்திப் பணிகள் எப்போது ஆரம்பிக்கப்பட்டு எப்போது முடிவுறுத்தப்படும் என்பதை அமைச்சர் இச்சபைக்கு அறிவிப்பாரா? பலாலி விமான நிலையத்தின் விரிவாக்கத்திற்காக சுவீகரிக்கப்பட்ட காணிகளின் உரிமையாளர்களுக்கு இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளதா என்பதை தெரிவிக்கலாமா? ஆமெனில், இதுவரை எத்தனை பேருக்கு எவ்வளவு தொகை இழப்பீடு வழங்கப்பட்டுள்ளது என்பதையும் இன்றுவரை இழப்பீட்டுத் தொகை வழங்கப்படாதவர்கள் எத்தனை பேர், அவர்களுக்கான இழப்பீடு வழங்கப்படாமைக்கான காரணம் என்ன என்பதை அமைச்சர் அறிவிப்பாரா? என்றார். https://www.virakesari.lk/article/222946

ஹர்த்தால்: தனிநபர்களின் தோல்வியும், சமூகங்களின் வெற்றியும்!

1 month 1 week ago
அதைவிட பெரும் காமெடி..கல்முனையில் சுமந்திர தேசிக்காய் வால்கள் ஏழு மணிக்கே தொலைபேசியும் கையுமாக திரிந்திருக்கின்றனர் கடைகள் எல்லாம் சாத்தப்பட்டு ஹர்த்தால் நடைபெறுவதாக காட்ட ... இங்கே கடைகள் பத்து மணியும் தாண்டித்தான் திறப்பினம். சுமந்திரன் என்றாலே சுத்துமாத்து சுத்துமாத்து என்றாலே சுமந்திரன் இரண்டுமே ஒன்றுக்கொன்று சளைத்ததில்லை

காசா நகர் தாக்குதலின் ஆரம்ப கட்டங்கள் துவங்கியுள்ளதாக இஸ்ரேல் ராணுவம் அறிவிப்பு

1 month 1 week ago
காஸாவில் தரைவழித் தாக்குதல் தொடக்கம் - நகரை முழுவதும் கைப்பற்ற நடவடிக்கை பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் தரை வழித் தாக்குதலை தொடங்கியது இஸ்ரேல் ராணுவம். கட்டுரை தகவல் டேவிட் க்ரிட்டன் & கேப்ரியலா போமிராய் பிபிசி செய்தியாளர் 4 மணி நேரங்களுக்கு முன்னர் காஸா நகரை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர தரைவழி தாக்குதலுக்கான முதற்கட்ட நடவடிக்கையை தொடங்கியுள்ளதாக இஸ்ரேலிய ராணுவம் தெரிவித்துள்ளது. ஏற்கனவே அதன் புறநகர் பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாகவும் தெரிவித்துள்ளது. சைதூன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் தரைவழி தாக்குதல் நடத்த இஸ்ரேலிய படைகள் ஏற்கனவே நுழைந்துவிட்டதாக ராணுவ செய்தித் தொடர்பாளர் தெரிவித்துள்ளார். மேலும் கடந்த செவ்வாய்க்கிழமை அன்று பாதுகாப்புத் துறை அமைச்சர் இஸ்ரேல் கட்ஸின் ஒப்புதல்படி தாக்குதலுக்கான அடித்தளம் அமைப்பதே நோக்கம் எனவும் தெரிவித்துள்ளார். செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர். அதன்பின் தற்போது உள்ள படையினர் விடுவிக்கப்படவுள்ளனர். அப்பாவி மக்கள் மீது போர் தொடுப்பதற்காக இஸ்ரேல் சண்டை நிறுத்தத்தை தடுப்பதாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளதாக ராய்ட்டர்ஸ் செய்தி முகமை குறிப்பிட்டுள்ளது. காஸா நகரை இஸ்ரேல் கைப்பற்றி வருவதால், லட்சக்கணக்கான பாலத்தீனர்கள் காஸாவில் இருந்து வெளியேறி தெற்கு காஸாவில் உள்ள முகாவிற்குச் செல்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலிய கூட்டாளிகள் பலரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர். "இது இருதரப்பு மக்களுக்கும் பேரழிவையே ஏற்படுத்தும், மேலும் முழு பிராந்தியத்திலும் நிரந்தரமாக போர் சூழல் ஏற்படும் அபாயம் உள்ளது." என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ராங் தெரிவித்துள்ளார். "மேலும் இடம்பெயரும் சூழல், தீவிரமடையும் விரோதப் போக்கு ஆகியவை காஸாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மேலும் மோசமாக்கும் அபாயம் உள்ளது" என சர்வதேச ரெட் கிராஸ் சங்கம் (ICRC) தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் தொடர்பாக ஹமாஸ் உடனான மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து, முழு காஸா நகரையும் கைப்பற்றும் முடிவை அறிவித்தது இஸ்ரேல் அரசு. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, செப்டம்பரில் 60,000 ரிசர்வ் படையினர் வரவழைக்கப்படுகின்றனர். நேற்று (ஆகஸ்ட் 21) தொலைக்காட்சி பேட்டி ஒன்றில் பேசிய இஸ்ரேல் பாதுகாப்புப் படைகளின் (IDF) செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எஃபி டெஃப்ரின், 22 மாதப் போருக்குப் பிறகு ஹமாஸ் தாக்குதலுக்கு உள்ளாகி, பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார். "காஸா நகரில் ஹமாஸுக்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் மேலும் ஆழப்படுத்துவோம் எனவும் நிலத்திற்கு மேலும், கீழும் பயங்கரவாத உள்கட்டமைப்பிற்கு ஏற்படும் சேதத்தை நாங்கள் ஆழப்படுத்துவோம், மேலும் மக்கள் ஹமாஸைச் சார்ந்திருப்பதைத் துண்டிப்போம்." எனவும் அவர் தெரிவித்தார். ஆனால் இஸ்ரேல் பாதுகாப்புப் படை தாக்குதலை தொடங்க காத்திருக்கவில்லை என டெஃப்ரின் கூறினார். "நாங்கள் ஏற்கனவே முதற்கட்ட தாக்குதலை தொடங்கிவிட்டோம். காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளன" "சைதூன் சுற்றுப்புறத்தில் 2 படைப்பிரிவுகள் பதுங்கி தரைவழித் தாக்குதல் நடத்தினர். சமீபத்தில் இங்கு ஆயுதங்களுடன் கூடிய ஒரு சுரங்கப்பாதையை கண்டுபிடித்தனர். மேலும் மூன்றாவது படைப்பிரிவு ஜபாலியா பகுதியில் செயல்பட்டு வருகின்றனர்" என அவர் தெரிவித்தார். மக்களுக்கு பாதிப்பு ஏற்படுவதை குறைக்கும் வகையில், காஸாவில் இருந்து அவர்கள் வெளியேறுமாறு எச்சரிக்கப்படுவார்கள் எனவும் அவர் கூறினார். சைதூன் மற்றும் சப்ரா சுற்றுவட்டாரப் பகுதிகளில் நிலைமை மிகவும் ஆபத்தானதாக இருப்பதாக காஸாவின் ஹமாஸ் நடத்தும் சிவில் பாதுகாப்பு அமைப்பின் செய்தித் தொடர்பாளர் மஹ்மூத் பஸ்ஸல் செவ்வாயன்று AFP செய்தி நிறுவனத்திடம் கூறினார். பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவின் புறநகர்ப் பகுதிகள் IDF கட்டுப்பாட்டுக்குள் உள்ளதாக டெஃப்ரின் கூறினார் நேற்று இஸ்ரேலிய படை நடத்திய தாக்குதலில் இந்தப் பகுதியில் 25 பேர் உயிரிழந்ததாக அந்த செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. காசா நகருக்கு மேற்கே உள்ள ஷாதி அகதிகள் முகாமின் பத்ர் பகுதியில் உள்ள வீடு குண்டுவீச்சுக்கு உள்ளானதில் 3 குழந்தைகள் மற்றும் அவர்களது பெற்றோரும் இதில் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. காஸாவில் ஹமாஸால் சிறைபிடிக்கப்பட்டுள்ள 50 பணையக்கைதிகளுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாமல் இருக்க அனைத்து முயற்சிகளையும் IDF மேற்கொள்வதாக டெஃப்ரின் தெரிவித்தார். இதில் 20 பேர் உயிருடன் இருப்பதாக நம்பப்படுகிறது. இவர்கள் இந்த தரைவழி தாக்குதலில் பாதிக்கப்படக்கூடும் என இவர்களின் குடும்பத்தினர் அஞ்சுகின்றனர். காஸாவில் ராணுவ நடவடிக்கைகள் தீவிரமடைந்தால், பாலத்தீன மக்கள் மற்றும் பணயக்கைதிகள் என இருவருக்கும் பேரழிவு ஏற்படும் என்று ICRC எச்சரித்தது. "மாதக் கணக்கில் நடைபெறும் தொடர் விரோதப் போக்குகள் மற்றும் தொடர்ச்சியான இடப்பெயர்வுகள் ஆகியவற்றால் காஸா மக்கள் சோர்வடைந்துள்ளனர்." "அவர்களுக்குத் தேவையானது அதிக அழுத்தம் அல்ல, நிவாரணம். அதிக பயம் அல்ல, சுவாசிக்க ஒரு வாய்ப்பு. அவர்கள் கண்ணியமாக வாழ அத்தியாவசியமான உணவு, மருத்துவம் மற்றும் சுகாதாரப் பொருட்கள், சுத்தமான நீர் மற்றும் பாதுகாப்பான தங்குமிடம் ஆகியவைதான்" என இந்த அறிக்கை கூறுகிறது. மேலும் "ராணுவத்தின் இந்த கூடுதல் தாக்குதல், பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும், பல குடும்பங்களை பிரிக்கும், மனிதாபிமான நெருக்கடிக்கான அச்சுறுத்தலை ஏற்படுத்தும். பணையக்கைதிகளின் உயிரும் ஆபத்தில் வைக்கப்படும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனடி சண்டை நிறுத்தத்தை கோரியுள்ளது. மேலும் காஸா முழுவதும் உடனடியாக மனிதாபிமான உதவிகளை தடையின்றியும் கொண்டு செல்லவும் இந்த அறிக்கை வலியுறுத்தியுள்ளது. கத்தார் மற்றும் எகிப்து மத்தியஸ்தர்கள் சண்டை நிறுத்தத்தைக் கொண்டு வர முயற்சித்து வருகின்றன. 60 நாட்கள் சண்டை நிறுத்தம் மற்றும் பணயக்கைதிகளில் பாதி பேரை விடுவிப்பதற்கான புதிய திட்டத்தை முன்வைத்துள்ளன. இதை திங்ட்கிழமையன்று ஏற்றுக்கொண்டதாக ஹமாஸ் தெரிவித்துள்ளது. பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். இது குறித்து இஸ்ரேல் எந்த அதிகாரப்பூர்வ பதிலையும் சமர்ப்பிக்கவில்லை. ஆனால் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்கும் ஒரு விரிவான ஒப்பந்தத்தைக் கோருவதாகவும் , பாதி பேரை விடுதலை செய்யும் ஒப்பந்தத்தை இனி ஏற்கப்போவதில்லை என்றும் இஸ்ரேலிய அதிகாரிகள் செவ்வாய்க்கிழமையன்று தெரிவித்தனர். "இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு மத்தியஸ்தர்களின் சண்டை நிறுத்த முடிவை புறக்கணித்ததாக ஹமாஸ் குற்றம் சாட்டியுள்ளது. மேலும் அவர் எந்தவொரு ஒப்பந்தத்திற்கும் தடையாக இருப்பவர் என்றும் விமர்சித்துள்ளது" என ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் மேற்கோள் காட்டியுள்ளது. 2023 அக்டோபர் 7ஆம் தேதியன்று தெற்கு இஸ்ரேல் மீது ஹமாஸ் தலைமையிலான தாக்குதலில் சுமார் 1,200 பேர் கொல்லப்பட்டனர், மேலும் 251 பேர் பிணைக்கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். இதற்குப் பதிலளிக்கும் விதமாக ஹமாஸ் மீது இஸ்ரேல் ராணுவ நடவடிக்கையைத் தொடங்கியது. அப்பகுதியின் சுகாதாரத்துறை அமைச்சரின் கூற்றுப்படி, காஸாவில் இதுவரை 62,122 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அமைச்சகத்தின் இந்த உயிரிழப்பு எண்ணிக்கை மற்றும் புள்ளி விவரங்களை ஐ.நா மற்றும் பிற நாடுகள் மேற்கோள் காட்டுகின்றன. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gj467wnk6o

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

1 month 1 week ago
த.வெ.க மாநாட்டில் எம்.ஜி.ஆர், அண்ணா படங்கள் - விஜய் சொல்ல வரும் அரசியல் செய்தி என்ன? பட மூலாதாரம், TVK/X கட்டுரை தகவல் நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் விஜயின் தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் இன்று (ஆக. 21) நடைபெறவுள்ளது. இந்த மாநாட்டு மேடையின் உச்சியில், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர்கள் அண்ணா மற்றும் எம்ஜிஆருடன் விஜய் இருப்பது போன்ற கட்-அவுட் அமைக்கப்பட்டுள்ளது பேசுபொருளாகியுள்ளது. அந்த கட்-அவுட்டில் 'வரலாறு' திரும்புகிறது என எழுதப்பட்டுள்ளது. 1967, 1977க்கு இடையே 2026 என்றும் அதில் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசியல் வரலாற்றின் போக்கையே மாற்றியது என, 1967, 1977ல் நடந்த சட்டமன்ற தேர்தல்களை குறிப்பிடலாம். இந்த சட்டமன்ற தேர்தல்களில் தமிழ்நாட்டின் இரு முக்கிய தலைவர்களான அண்ணா, எம்ஜிஆர் இருவரும் மாநிலத்தில் அதற்கு முன்பிருந்த அரசியல் களச்சூழலை மாற்றி வெற்றியை தனதாக்கிக்கொண்டனர். இதேபோன்று, 2026ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலிலும் மாற்றம் நிகழும் என்பதே தவெகவின் எண்ணமாக இருக்கிறது. கட்-அவுட்டில் அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன்? இதற்கு முன்பு, 1967, 1977ல் ஆட்சி மாற்றம் நிகழ்ந்தது எப்படி, ஏன் என்பதை தெரிந்துகொள்வது அவசியம். அரசியல் பயணத்தில் அண்ணா தன் தலைவராக பின்தொடர்ந்த பெரியாருடன் 1949ம் ஆண்டு ஜூன் மாதம் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டைத் தொடர்ந்து, திராவிடர் கழகத்திலிருந்து விலகினார். அதே ஆண்டிலேயே தன் ஆதரவாளர்கள் பலருடன் இணைந்து திராவிடர் முன்னேற்றக் கழகத்தைத் தொடங்குகிறார். செப்டம்பர் 18, 1949 அன்று சென்னை, ராயபுரத்தில் உள்ள ராபின்சன் பூங்காவில் கொட்டும் மழைக்கு நடுவே திமுகவின் முதல் பொதுக்கூட்டம் நடைபெற்றது. பட மூலாதாரம், TWITTER 1949ல் அண்ணா திமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பாகவே, திராவிட இயக்க அரசியலில் மிக்க அனுபவம் வாய்ந்தவராக திகழ்ந்தார். திராவிட இயக்க கொள்கைகளை பல மேடைகளில் நின்று எடுத்துரைத்திருக்கிறார். 1930களில் நடைபெற்ற இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களில் முன்னணியில் நின்றார். காங்கிரஸ் கட்சி மற்றும் ஆட்சி மீதான விமர்சனங்களை மக்களிடத்தில் எடுத்துச் சென்றார். திமுகவை ஆரம்பித்த பிறகும், தேர்தல் அரசியலில் அண்ணா உடனேயே இறங்கிவிடவில்லை. ஆட்சி, அதிகாரத்தை நோக்கிய தன் பயணத்தை மிகுந்த கவனத்துடனேயே எடுத்துவைத்தார் எனலாம். சுதந்திர இந்தியாவின் முதல் பொதுத் தேர்தல் 1952ம் ஆண்டில் நடைபெற்றபோது, திமுக அந்த தேர்தலில் போட்டியிடவில்லை. மாறாக, "அந்த தேர்தலில் கம்யூனிஸ்டுகளையும் காங்கிரஸ் அல்லாத நாணயமுள்ள திறமைசாலிகளான முற்போக்குக் கருத்தினரையும் ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது." என திராவிட இயக்க வரலாறு எனும் புத்தகத்தில் குறிப்பிடுகிறார், எழுத்தாளர் ஆர். முத்துக்குமார். அடுத்ததாக, 1957ல் நடைபெற்ற பொதுத் தேர்தலில், திமுக சார்பில் 15 பேர் சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்றனர், அக்கட்சி 2 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி பெற்றது. அதன்பின், 1962 தேர்தலில் காங்கிரஸ் ஆட்சிக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள், வேலையில்லாத் திண்டாட்டம், பணவீக்கம், விலைவாசி உயர்வு என பொதுமக்களை பாதிக்கும் பல விஷயங்களை முன்னிறுத்தி திமுக தேர்தலை சந்தித்தது. 1962 பொதுத் தேர்தலில் திமுக சார்பில் 142 பேரும் நாடாளுமன்ற தேர்தலில் 18 பேரும் நிறுத்தப்பட்டனர். இந்த தேர்தலுக்கு முன்பாகவே திமுகவில் ஐம்பெரும் தலைவர்களில் ஒருவராக இருந்த ஈ.வெ.கி. சம்பத் அக்கட்சியிலிருந்து வெளியேறி, தமிழ் தேசியக் கட்சி எனும் கட்சியை ஆரம்பித்திருந்தார். 1962 தேர்தலில் திமுக 50 சட்டமன்ற தொகுதிகளை கைப்பற்றியிருந்தது. அதாவது, கடந்த தேர்தலில் பெற்ற இடங்களைவிட மூன்று மடங்குக்கும் அதிகமான இடங்கள். அதோடு மட்டுமல்லாமல், நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர்கள் 7 பேர் வெற்றி பெற்றனர். ஆனால், அந்த தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட அண்ணா தோல்வியை தழுவினார். எனவே, அண்ணா மாநிலங்களவை உறுப்பினரானார். இவ்வாறாக, திமுகவின் 1967 சட்டமன்ற தேர்தல் வெற்றிக்கு அதற்கு முந்தைய தேர்தல்கள் ஒரு முன்னோட்டமாக அமைந்தன. 1967 தேர்தல் வெற்றி 1967 தேர்தல் தமிழக அரசியலில் திருப்புமுனை தேர்தலாக அமைந்தது. இந்த தேர்தலில் 'ரூபாய்க்கு மூன்று படி அரிசி லட்சியம்; ஒரு படி அரிசி நிச்சயம்' என்ற முக்கிய வாக்குறுதியை முன்வைத்து தேர்தல் களம் கண்டார் அண்ணா. முந்தைய தேர்தல்களில் படிப்படியாக வெற்றி பெற்றாலும், இத்தேர்தலில் கூட்டணி அமைத்தே திமுக களம் கண்டது. சுதந்திரா கட்சி (ராஜாஜி), ஃபார்வர்டு பிளாக், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, முஸ்லிம் லீக், பிரஜா சோஷலிஸ்ட் கட்சி, தமிழரசுக் கழகம் (மா.பொ.சி), நாம் தமிழர் (சி. பா. ஆதித்தனார்) உள்ளிட்ட பல கட்சிகளுடன் இணைந்து அந்த தேர்தலை திமுக எதிர்கொண்டது. திமுக 173 இடங்களில் போட்டியிட்டது. காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் வேட்பாளர்களை நிறுத்தியும் 49 இடங்களை மட்டுமே வென்றது. தனது சொந்தத் தொகுதியான விருதுநகரில் காமராஜர் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசனிடம் தோற்றார். திமுக அந்த தேர்தலில் 138 இடங்களில் வெற்றி பெற்று ஆட்சியமைத்தது. 1967 மார்ச் மாதம் முதலமைச்சர் அண்ணா தலைமையிலான அமைச்சரவை பொறுப்பேற்றது. 1949ல் திமுகவை தொடங்கிய பின் அண்ணா ஆட்சியில் அமர 18 ஆண்டுகள் ஆகின. பட மூலாதாரம், GNANAM படக்குறிப்பு, வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு அண்ணா அமைத்த கூட்டணி 1967ல் அண்ணா வெற்றி பெற்றது எப்படி என மூத்த பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணனிடம் கேட்டோம். "1967 இருந்த அரசியல் களச்சூழல், தொடர்ச்சியாக 20 ஆண்டுகளாக காங்கிரஸ் ஆட்சி இருந்ததால் மக்கள் மத்தியில் இருந்த அதிருப்தி ஆகியவை முக்கிய காரணங்களாக இருந்தன. எளிய மக்களை அந்த சமயத்தில் காங்கிரஸ் சென்றடையவில்லை. திமுக கட்சியாக இருப்பதற்கு முன்பாகவே கொள்கைகளை மக்களிடத்தில் சேர்த்ததால், வெகுஜன மக்களின் ஆதரவு கிடைத்தது" என்றார். அண்ணா அமைத்த கூட்டணியும் வெற்றிக்குக் காரணம் என அவர் குறிப்பிடுகிறார். "அண்ணா ஓர் பரந்த கூட்டணியை அமைத்தார், மா.பொ.சி, ராஜாஜி என மாற்று கொள்கை கொண்டவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி அமைத்தார். ராஜாஜிக்கு காமராஜரை எதிர்க்க வேண்டும் என்ற நோக்கம் இருந்தது. இப்படி காங்கிரஸுக்கு எதிரானவர்களை ஒன்றிணைத்து தேர்தலை எதிர்கொண்டார்." என்றார் சாவித்திரி கண்ணன். "அன்றைக்கு இருந்த அரசியல் சூழலில் தமிழ்நாட்டு அரசியலில் ஒரு தெளிவான மாற்றத்தைக் கொண்டு வந்த இயக்கமாக திமுக இருந்தது. தேசிய கட்சி அல்லாத ஒரு மாநில கட்சி பெற்ற முதல் வெற்றியாக அது அமைந்தது" என்கிறார், அரசியல் விமர்சகரும் ஓய்வுபெற்ற அரசியல் அறிவியல் துறை பேராசிரியருமான ராமு மணிவண்ணன் எம்ஜிஆரின் அரசியல் பயணம் இதேபோன்று, எம்.ஜி.ஆரின் பயணமும் நீண்டதாகவே உள்ளது. அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களுடன் நட்பு கொண்டிருந்த எம்.ஜி.ஆர்., 1950களின் தொடக்கத்திலேயே திமுகவில் இணைந்தார். தன்னுடைய திரைப்படங்களில் திராவிட இயக்கம், திமுகவின் கொள்கைகளை பேசினார். திமுகவுக்காக அப்போதிலிருந்து தேர்தல்களில் பணியாற்றியுள்ளார். குறிப்பாக 1967 தேர்தலில் மின்னல் வேகத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டதாகவும் ஒரே நாளில் 30-40 பொதுக்கூட்டங்களில் எம்ஜிஆர் கலந்துகொண்டதாகவும் தன் புத்தகத்தில் குறிப்பிடுகிறார் எழுத்தாளர் ஆர். முத்துக்குமார். அதன் விளைவாக, தேர்தல் வெற்றிக்குப் பிறகு எம்.ஜி.ஆருக்கு சட்டமன்ற மேலவை உறுப்பினர் பதவியை வழங்கினார் அண்ணா. பட மூலாதாரம், MGR FAN CLUB படக்குறிப்பு, எம்ஜிஆர் அதிமுகவை தொடங்கி 5 ஆண்டுகளில் ஆட்சியை பிடித்தார் அண்ணாவின் மறைவுக்குப் பிறகு 1969ம் ஆண்டில் திமுகவின் பொருளாளராக நியமிக்கப்பட்டார் எம்ஜிஆர். இதன்பின், கட்சியின் வரவு-செலவுகள் குறித்து எம்ஜிஆர் எழுப்பிய கேள்விகளால் அவருக்கும் கருணாநிதிக்கும் இடையே பிளவு ஏற்பட்டது. அதன்பின், 1972ல் அதிமுகவை தொடங்கினார். கட்சி தொடங்கி சில மாதங்களிலேயே திண்டுக்கல் நாடாளுமன்ற தொகுதிக்கு 1973ம் ஆண்டு நடைபெற்ற இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் நிறுத்தப்பட்ட மாயத்தேவர் 2,60,930 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதிமுகவின் முதல் வெற்றியாக அது அமைந்தது. அப்போதைய பிரதமர் இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடி நிலையை வெளிப்படையாக ஆதரித்த எம்ஜிஆர், 1977ல் அறிவிக்கப்பட்ட நாடாளுமன்ற தேர்தலில் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளுடன் இணைந்து தேர்தலை எதிர்கொண்டார். 20 தொகுதிகளில் அதிமுக, 16 தொகுதிகளில் காங்கிரஸ், 3 தொகுதிகளில் கம்யூனிஸ்ட் கட்சி போட்டியிட்டன. இந்த கூட்டணி தமிழகத்தில் பெரும் வெற்றியை பெற்றது. அதிமுக 18, காங்கிரஸ் 14, இந்திய கம்யூனிஸ்ட் கட்சி 3 இடங்களிலும் வெற்றியை பெற்றன. அதன்பின் நடைபெற்ற 1977 சட்டமன்ற தேர்தலில், அதிமுக கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, இந்திய யூனியன் முஸ்லீம் லீக் ஆகிய கட்சிகள் இணைந்தன. கடந்த முறை போன்று சட்டமன்ற தேர்தலில் எம்ஜிஆர் காங்கிரஸுடன் கூட்டணி அமைக்கவில்லை. தேர்தல் முடிவில், அ.தி.மு.க. மட்டும் 130 இடங்களைப் பிடித்திருந்தது. அதன் கூட்டணிக் கட்சியான சி.பி.எம். 12 தொகுதிகளைப் பிடித்தது. கட்சி தொடங்கி ஐந்து ஆண்டுகளிலேயே எம்ஜிஆர் ஆட்சியைப் பிடித்தார். எம்ஜிஆர் வெற்றி பெற்றது எப்படி? "கருணாநிதியின் தன்னிச்சையான முடிவுகள், திமுக ஆட்சி மீதான அதிருப்தி எம்ஜிஆர் முன்னெடுத்த திமுகவுக்கு எதிரான ஊழல் குற்றச்சாட்டுகள் ஆகியவை இந்த தேர்தலில் எடுபட்டன. அதிமுகவை ஆரம்பிப்பதற்கு முன்பு பல காலம் திமுகவில் பயணித்தார், பல பொறுப்புகளை வகித்தார் எம்ஜிஆர். அரசியல் மேடைகளில் பிரசாரம் செய்தார். புதிதாக அவர் அரசியலுக்கு வரவில்லை. அதற்கான அங்கீகாரம் தான் 1977ல் எம்ஜிஆருக்கு கிடைத்த வெற்றி." என்கிறார் பத்திரிகையாளர் சாவித்திரி கண்ணன். 1977ல் எம்ஜிஆர் பெற்ற வெற்றி குறித்து பேசிய முனைவர் ராமு மணிவண்ணன், "திமுகவில் இருந்தபோது அக்கட்சிக்காக உழைத்த பிரதான அடையாளம் எம்ஜிஆர். திமுகவுடன் அவருக்கு ஏற்பட்ட பிளவு கொள்கை ரீதியானதாக மட்டுமல்லாமல், ஆளுமை ரீதியானதாகவும் இருந்ததால் அவருடை தனிப்பட்ட அரசியல் முன்னெடுப்பு இருந்தது. இதனால், தனிநபர் அடையாளத்தை முன்னிறுத்தும் அரசியல் சூழல் தமிழகத்தில் உருவானது." என குறிப்பிடுகிறார். பட மூலாதாரம், TVK விஜய் சொல்ல வரும் செய்தி என்ன? தற்போது 2026 தேர்தலுக்கு அண்ணா, எம்ஜிஆரை விஜய் முன்னிறுத்துவது ஏன் என கேட்டபோது, "விஜய் எந்த அரசியல் பின்னணியும் இல்லாமல் வருகிறார். அதனால் 1967, 1977ல் இருந்த சூழலுடன் அவரை பொறுத்திப் பார்க்க முடியாது. எம்ஜி ஆரின் அரசியல் வாரிசாக தான் உருவாக வேண்டும் என்ற எண்ணம் அவருக்கு இருக்கிறது." என்றார் அவர். விஜயிடம் இதன் மூலம் எந்த அரசியல் செய்தியும் இல்லை என தான் கருதுவதாகக் கூறுகிறார் முனைவர் ராமு மணிவண்ணன். "1967, 1977-ஐ முன்னிறுத்துவதற்கு என்ன காரணம் என கேட்டால், அவரிடமிருந்து எந்த அரசியல் செய்தியும் இல்லை என்பதால்தான். வலிமையான, ஆழமான கருத்துகளோ, புதிய அரசியல் பார்வையோ அவரிடம் இல்லை. பழைய பிம்பத்தை தன் அடையாளமாகப் பயன்படுத்தி வருகிறார். புதிய சிந்தனைகளை சொல்லி அடையாளப்படுத்தும் ஆழமான அரசியல் நிலைப்பாடு அவரிடம் இல்லை. புதிதாக அரசியலுக்கு வருபவர்கள் முன்பே வெற்றி பெற்றவர்களைத்தான் கையில் எடுப்பார்கள். தன்னையும் அவர்களோடு சேர்ந்து அடையாளப்படுத்திக்கொள்வார்கள். அது மக்கள் மத்தியில் ஆதரவை பெறுவதற்கான விளம்பர உத்தியாக உள்ளது. ஆனால், அந்த விளம்பரத்துக்கான விலை என்ன என்பது தேர்தல் முடிவில் தெரியும். " - என்றார் முனைவர் ராமு மணிவண்ணன். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cp3e23kwl52o

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

1 month 1 week ago
வணக்கம் வாத்தியார் . ......... ! ஆண் : யார் அந்த நிலவு ஏன் இந்தக் கனவு யாரோ சொல்ல யாரோ என்று யாரோ வந்த உறவு காலம் செய்த கோலம் இங்கு நான் வந்த வரவு ஆண் : மாலையும் மஞ்சளும் மாறியதே ஒரு சோதனை மஞ்சம் நெஞ்சம் வாடுவதே பெரும் வேதனை தெய்வமே யாரிடம் யாரை நீ தந்தாயோ உன் கோவில் தீபம் மாறியதை நீ அறிவாயோ ஹோ……ஓ……கோயில் தீபம் மாறியாதை நீ அறிவாயோ ஆண் : ஆடிய நாடகம் முடிவதில்லை ஒரு நாளிலே அங்கும் இங்கும் சாந்தியில்லை சிலர் வாழ்விலே தெய்வமே யாருடன் மேடையில் நீ நின்றாயோ இன்று யாரை யாராய் நேரினிலே நீ கண்டாயோ ஹோ….ஓ….ஹோ…..ஹோஹோஹஓஹோ…. ஹோ…..ஹோஹஓஹோ…...... ! --- யார் அந்த நிலவு ---

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

1 month 1 week ago
நல்லூரானின் தேருக்கு அகவை 61 நல்லூர்க் கந்தசுவாமியார் இன்று ஏறிவந்த தேரின் வரலாறு! நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் புதிய தேர் ஒன்று செய்து முடிக்கவேண்டுமென்ற ஆவல் காலஞ்சென்ற அறங் காவலர் அவர்கள் மனதிற் குடிகொண்டது. புதிய தேர் உருவத்திலும் அமைப்பிலும் பழையதேரை ஒத்ததாயிருக்க வேண்டும் என்பது அறங்காவலரின் ஆசையாகும். இத்தகைய சித்திரத் தேரை அமைத்தற்குப் பல்லாற்றானும் திறமை வாய்ந்த சிற்பாச்சாரி திருவிடை மருதூர், இரா.கோவிந்தராஜா ஆச்சாரியரே என உணர்ந்த அறங்காவலர் அவர்கள் அதனை உருவாக்கும் பொறுப்பினை அவர்களிடமே ஒப்படைத்தார்கள். தேர்த் திருப்பணியும் நன்னாளில் ஆரம்ப மாயிற்று. திரு.இரா.கோவிந்தராஜா ஆச்சாரியவர்கள் தமக்கு உதவி புரிய நான்கு உதவியாளரை இந்தியாவிலிருந்தே கூட்டிக் கொண்டு வந்தார்கள். இவர்களுக்கு உள்ளூர்த் தொழிலாளர்களும் உதவி புரிந்தனர். ஒரு வருடத்துக்குள் புதிய தேர் உருவாயிற்று. புதிய சித்திரத் தேரினை ஒரு வருடத்துக்குள் உருவாக்கி வெள்ளோட்டத்தையும் நிறைவேற்றுவதில் கண்ணுங் கருத்து மாக இருந்தார் அறங்காவலர் குகஸ்ரீ ஷண்முகதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். இவருக்குப் பின்னணியில் நின்று தேரின் உறுப்புக்கள் உருவாக்கப்படும்போதும் வர்ணங்கள் பூசப்படும் போதும் ஆலோசனை கூறி நேரடியாகக் கண்காணித்து வந்தவர் அறங்காவலரின் அருமைச் சகோதரர் குகஸ்ரீ குமாரதாஸ் மாப்பாண முதலியார் அவர்கள். புதிய தேர் உருவாகுவதற்குத் தேவையான மரங்களை வவுனியாக் காட்டிலிருந்து தெரிந்தெடுத்து நல்லூருக்குக் கொண்டு வருவதில் வவுனியா முன்னால் உருவாகுவதற்குத் எம்.பி.திரு.செ. சுந்தரலிங்கம் அவர்கள் பேருதவி புரிந்தார்கள். அறங்காவலர் விடுத்த வேண்டுகோட் கிணங்கி முருக பக்தர்கள் மனமுவந்து தாராளமாகப் பண உதவி புரிந்தார்கள். ஆகவே அறங்காவலர், சிற்பாச்சாரியர், அன்பர் யாவரும் பக்தியுடன் இத்திருப்பணியில் ஈடுபட்டதன் பயனாகப் புதிய தேர் உருவாயிற்று. 1964ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 20ஆந் திகதி புதிய தேரின் வெள்ளோட்டம் வெற்றியாக நிறைவேறியதைக் கண்டு அறங்காவலர் அவர்கள் அளப்பரும் மகிழ்ச்சியடைந்தார்கள். நல்லூர்க் கந்தனின் திருப்பணி அவன் அருளால் நிறைவேறியது கண்டு அவன் பொன்னார் திருவடிகளைத் திரிகரண சுத்தியுடன் தொழுதார்கள். தமது உள்ளத்தில் மேலிட்டு நின்ற ஆசை நிறைவேறியது கண்டு முருகனைத் தொழுது அதனை உருவாக்கிய சிற்பாச்சாரியருக்கும் உதவியாளருக்கும் சன்மானம் வழங்கி நிதி உதவிபுரிந்த அன்பர்களுக்கும் தம் நன்றியைச் செலுத்தினார்கள். இத்தேர் உருவாகுவதற்கு ஏறக்குறைய ஒன்றேகால் லட்சம் ரூபா பிடித்திருக்கும் எனக் கூறலாம். 1964ஆம் ஆண்டு ஆவணி மாதம் தேர்த்திருவிழாவிலன்று நல்லூர்க் கந்தன், இப்புதிய சித்திரத் தேரில் ஆரோகணித்துப் பவனிவந்து பக்தர்களுக்குக் காட்சி கொடுத்தருளினார். ஆதாரம் - இலங்கையின் புராதன சைவாலயங்கள் நல்லூர் கந்தசுவாமி குல. சபாநாதன் குமரன் புத்தக இல்லம். Babu Babugi

நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா!

1 month 1 week ago
நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழா! வரலாற்றுச் சிறப்புமிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலயத்தின் தேர்திருவிழாவான, இன்று முருகப்பெருமான் வள்ளி தெய்வானை சமேதரராய் தேரில் ஆரோகணித்து பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்தார். இன்றைய தேர்த்திருவிழாவை காண்பதற்காக, நாட்டின் பல பாகங்களிலிருந்தும் குறிப்பாக வெளிநாடுகளிலிருந்தும் பல்லாயிரக்கணக்கான அடியவர்கள் வருகை தந்திருந்தனர். ஆயிரக்கணக்கான அடியவர்கள் அங்க பிரதட்சணம் செய்தும், நூற்றுக்கணக்கானவர்கள் காவடிகள் எடுத்தும் கற்பூர சட்டிகள் ஏந்தியும், சிதறு தேங்காய் உடைத்தும் தமது நேர்த்திக் கடன்களை நிறைவேற்றி வருகின்றனர். நல்லூர் கந்தனின் வருடாந்த மகோற்சவம் கடந்த 29ஆம் திகதி கொடியேற்றத்துடன் ஆரம்பமாகியிருந்தது. இன்று தேர் திருவிழா இடம்பெற்றதுடன் நாளைய தினம் காலை தீர்த்தோற்சவம் நடைபெறவுள்ளதுடன், மாலை கொடியிறக்கம் நடைபெறவுள்ளது. நல்லூர் தேர் திருவிழாவை முன்னிட்டு யாழ். மாவட்ட பாடசாலைகளுக்கு இன்று விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443995

பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு!

1 month 1 week ago
பொது மக்களின் உதவியை நாடும் பயங்கரவாத புலனாய்வுப் பிரிவு! தாக்குதல் ஒன்றை நடத்தத் திட்டமிட்டு ஆயுதங்களை மறைத்து வைத்திருந்த மூன்று தமிழ் இளைஞர்களைக் கைது செய்ய, பயங்கரவாத புலனாய்வு பிரிவு பொதுமக்களின் உதவியை நாடியுள்ளது. ஜூலை 21 ஆம் திகதி கிரிபத்கொடையில் முச்சக்கர வண்டியில் பயணித்த ஒரு இளைஞர் ஒருவர் T-56 ஆயுதத்துடன் கைது செய்யப்பட்டார். விசாரணையில், அவர்கள் தாக்குதல் ஒன்றை மேற்கொள்ளத் தீர்மானித்திருந்தமை அம்பலமானது. அத்துடன் குறித்த தாக்குதலை மேற்கொள்வதற்கு வவுனியாவில் உள்ள ஒரு வீட்டில் மறைத்து வைக்கப்பட்ட கைக்குண்டுகளையும் பொலிஸார் கண்டுபிடித்தனர். குறித்த கைக்குண்டுகளை கொழும்புக்கு கொண்டு அவர்கள் வரத் திட்டமிட்டிருந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில் குறித்த கைக்குண்டுகளை மறைத்து வைத்திருந்த மூவரின் தகவல்களையும் புலனாய்வு பிரிவு தற்போது வெளிப்படுத்தியுள்ளது. குறித்த மூவர் பற்றிய தகவல் தெரிந்தால் 0718591966 அல்லது 0718596150 என்ற தொலைபேசி இலக்கங்களினூடாக தொடர்பு கொண்டு புலனாய்வு பிரிவுக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. சந்தேக நபர்கள் தொடர்பான விபரங்கள் பின்வருமாறு சந்தேக நபர்களின் விவரங்கள் ஜீவராசா சுஜீபன் (30 வயது) முகவரி – காந்தி நகர், நேரியக்குளம், வவுனியா, N.A. இலக்கம் – 950554215V இளங்கோ இசைவிதன் (வயது – 27) முகவரி – எண். 379, பிளாக் 03, மானிக் பண்ணை, செட்டிகுளம், N.H. இலக்கம் – 199836210402 மகேந்திரன் யோகராசா (வயது – 27) முகவரி – அராலி மேற்கு, வடுக்கோட்டை NIC இலக்கம் – 981633881V தெரிவிக்க வேண்டிய தொலைபேசி எண்கள் OIC – பயங்கரவாத எதிர்ப்பு மற்றும் புலனாய்வுப் பிரிவு – 071-8591966 OIC புலனாய்வுப் பிரிவு 071-8596150 https://athavannews.com/2025/1444048

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

1 month 1 week ago
தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..? தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ளன. இதனால் அரசியல் கட்சிகள் தங்களது தேர்தல் வியூகங்களை வகுத்து, தீவிர களப்பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். அந்தவகையில் 2026 சட்டமன்ற தேர்தல்தான் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக்கழகம் சந்திக்கும் முதல் தேர்தல் ஆகும். எனவே முதல் தேர்தலிலேயே முத்திரை பதிக்க அக்கட்சி தீவிர முயற்சி எடுத்து வருகிறது. அக்கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி அருகே கடந்த ஆண்டு நடந்தது. 2-வது மாநில மாநாடு இன்று (வியாழக்கிழமை) மதுரையில் பிரமாண்டமாக நடக்கிறது. இதற்காக மதுரையில், தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் பாரபத்தி பகுதியில் 506 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டு உள்ளன. மாநாட்டு மேடையின் உச்சியில் ‘வாகை சூடும் வரலாறு திரும்புகிறது‘ என்று குறிப்பிட்டு அண்ணா, எம்.ஜி.ஆர்.இ விஜய் படங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் மாநாட்டில் 2 லட்சம் தொண்டர்கள் பங்கேற்கும் வகையில் இருக்கைகள் போடப்பட்டுள்ளன. தொண்டர்களை நடந்து சென்று விஜய் பார்க்கும் வகையில்,சுமார் 300 மீட்டர் தூரத்திற்கு ‘ரேம்ப் வாக்’ நடைமேடை அமைக்கப்பட்டுள்ளது. அதன் இருபுறமும், 40-க்கும் மேற்பட்ட போக்கஸ் விளக்குகள் பொருத்தப்பட்டு உள்ளன. விஜய் மேடையில் நடந்து வரும் போது, முதல் அடுக்கில் பவுன்சர்கள்,2-வது அடுக்கில் பொலிஸார் என இரண்டடுக்கு பாதுகாப்பு ஏற்பாடும் தயார் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. ……. இந்நிலையில் இன்று காலையிலேயே ஏராளமான தொண்டர்கள் மாநாட்டு மேடைக்கு முன்பாகத் திரண்டுள்ளனர். வெளியூர்களிலிருந்து வருகை தந்த தொண்டர்கள், தங்களுக்குத் தேவையான குடிநீர் மற்றும் உணவுப் பொதிகள் போன்றவற்றைத் தாங்களே கொண்டு வந்துள்ளனர். மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகன நிறுத்தும் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் தொண்டர்கள் அமர்வதற்கு 60 பகுதிகள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பகுதிகளிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவுப் பொதிகள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் பொலிஸார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. …. இந்நிலையில் இந்த மாபெரும் மாநாட்டில் தன் மீதான விமர்சனங்கள் உள்ளிட்டவற்றிற்கு பதிலடி கொடுக்கும் வகையில் விஜய் பேச்சு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய அளவில் எந்த ஒரு அரசியல் கட்சி மாநாடும் இதுவரை நடந்திராத வகையில் நாடே திரும்பி பார்க்கும் மாநாடாக இந்த மாநாடு இருக்கும் என்று தவெகவினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443978

காசாவை கைப்பற்றும் திட்டத்திற்கு இஸ்ரேல் ஒப்புதல்; 60,000 ரிசர்வ் வீரர்களுக்கு அழைப்பு!

1 month 1 week ago
காசா மீதான தாக்குதலில் முதல் கட்டங்களை ஆரம்பித்த இஸ்ரேல்! காசா நகரம் முழுவதையும் கைப்பற்றி ஆக்கிரமிக்க திட்டமிட்ட தரைவழித் தாக்குதலின் முதற்கட்ட நடவடிக்கைகளை இஸ்ரேலிய இராணுவம் தொடங்கியுள்ளதாகவும், அதன் புறநகர்ப் பகுதிகளில் ஏற்கனவே தங்கள் கட்டுப்பாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. தாக்குதலுக்கான அடித்தளத்தை அமைப்பதற்காக ஜெய்டவுன் மற்றும் ஜபாலியா பகுதிகளில் படைகள் ஏற்கனவே செயல்பட்டு வருவதாக இஸ்ரேலிய இராணுவ செய்தித் தொடர்பாளர் ஒருவர் கூறியுள்ளார். இதற்கு பாதுகாப்பு அமைச்சர் இஸ்ரேல் காட்ஸ் செவ்வாயன்று (20) ஒப்புதல் அளித்தார். குறித்த ஒப்புதல் இந்த வார இறுதியில் பாதுகாப்பு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்படும். செப்டம்பர் மாத தொடக்கத்தில் சுமார் 60,000 ரிசர்வ் படையினர் இந்த நடவடிக்கைக்காக பணியில் உள்ள வீரர்களை விடுவிப்பதற்காக அழைக்கப்படுவார்கள். இதனிடையே, இஸ்ரேலின் ஆக்கிரமிக்கும் திட்டத்திற்கான ஏற்பாடுகள் தொடங்கப்படுவதால், காசா நகரில் உள்ள இலட்சக்கணக்கான பாலஸ்தீனியர்கள் வெளியேறி தெற்கு காசாவில் உள்ள தங்குமிடங்களுக்குச் செல்ல உத்தரவிடப்படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இஸ்ரேலின் பல நட்பு நாடுகள் அதன் திட்டத்தைக் கண்டித்துள்ளன. இதற்கிடையில், சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் (ICRC) மேலும் இடம்பெயர்வு மற்றும் விரோதப் போக்கு தீவிரமடைதல் காசாவின் 2.1 மில்லியன் மக்களுக்கு “ஏற்கனவே பேரழிவு தரும் சூழ்நிலையை மோசமாக்கும்” என்று கூறியது. கடந்த மாதம் ஹமாஸுடனான போர் நிறுத்தம், பணயக்கைதிகள் விடுதலை ஒப்பந்தம் குறித்து மறைமுகப் பேச்சுவார்த்தைகள் முறிந்ததைத் தொடர்ந்து இஸ்ரேல் அரசாங்கம் முழு காசா பகுதியையும் கைப்பற்றும் நோக்கத்தை அறிவித்தமையும் குறிப்பிடத்தக்கது. https://athavannews.com/2025/1443970

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

1 month 1 week ago
காதலில் துறவி ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் நாரதரின் அறிவுரையின் படி , திரௌபதி பாண்டவர்கள் ஒவ்வொருவருடனும் ஒரு வருடம் சுழற்சி முறையில் இருப்பாள் என்றும் இதை மீறுபவர்கள் ஒரு வருடம் தலைமறைவாய் இருக்க வேண்டுமென்ற விதிமுறைக்கு ஒத்துக்கொண்டனர். ஒரு நாள் , மாலைவேளையில் ஒரு பிராமணர் அர்ஜுனன் இடம் வந்து திருடப்பட்ட அவரது பசுக்களை மீட்டு தருமாறு கேட்டுக் கொண்டார். அப்பொழுது அர்ஜுனனின் ஆயுதங்கள் யுதிஷ்டரரின் வீட்டில் இருந்தன. அவர்களது சுழற்சி முறைப்படி, திரௌபதி அப்பொழுது யுதிஷ்டிரருடன் இருந்தாள். அதனால் அர்ஜுனன் தயங்கினான். இருந்தும், அந்த பிராமணர் திரும்ப திரும்ப வேண்டியதால் யுதிஷ்டரரின் வீட்டிற்கு சென்று ஆயுதங்களை எடுத்துக் கொண்டு திருடப்பட்ட பசுக்களை மீது தந்தான். அதன்பின், தர்மரிடம், ” அண்ணா ! நாம் ஏற்றுக்கொண்ட விதிமுறையை நான் மீறிவிட்டேன். எனவே , நான் நிபந்தனையை காப்பாற்ற, ஒரு வருடம் புனித யாத்திரை செல்கிறேன்” எனக் கூறினான். தர்மரோ, அந்த சூழ்நிலை இந்த விதிமீறலுக்கு இடம் அளித்தது. எனவே பார்த்தனின் தவறு இதில் எதுவும் இல்லை என கூறினார். ஆனாலும், தான் சொன்னதை நிறைவேற்றுவதில் உறுதியாக இருந்தான் அவன். அங்கிருந்து பாரதம் முழுக்க வலம் வரத் துவங்கினான். முதலில் கிழக்குக் கடற்கரையோரமாக தனது யாத்திரையைத் துவங்கி பாரதத்தின் தென்கோடி முனையை அடைந்தான். அங்கிருந்து மேற்குக் கடற்கரையோரம் பிரயாணித்து துவாரகையை அடைந்தான். அங்கு வந்தவுடன் சுபத்ரையின் நினைவு வந்தது. அழகான துணிச்சலான பெண் ஆன சுபத்திரையை சந்திக்க ஆவல் கொண்டான். உடல் முழுதும் சாம்பல் பூசிக்கொண்டு துறவியாய் அங்கிருந்த கோவில் ஒன்றில் தவம் செய்யத் துவங்கினான். விரைவில் நகரம் முழுவதும் புதிதாய் வந்துள்ள யதியை பற்றிய செய்தி பரவியது. ஸ்ரீ கிருஷ்ணருக்கு இந்த செய்தி வந்தவுடன் யதியின் அடையாளங்களைக் கொண்டு அது யாத்திரையில் இருக்கும் அர்ஜுனன் என புரிந்துக் கொண்டார். மேலும், சுபத்திரையின் கவனத்தை தன் பால் ஈர்க்கவே இதை செய்கிறான் எனவும் புரிந்து கொண்டார். அர்ஜுனனை நேரில் சந்தித்து அவனின் உண்மை நோக்கத்தை அறிந்து கொண்டார். சுபத்திரையை அர்ஜுனன் மேல் காதல் கொள்ள செய்யவேண்டும் என இருவரும் திட்டமிட்டனர். ஷத்ரியர்களிடையே பெண்ணின் விருப்பத்தை கொண்டு கல்யாணம் செய்து கொள்வது பழக்கத்தில் இருந்த ஒன்றாகும். துவாரகை வந்துள்ள யதியை பற்றிய நல்ல செய்திகளாக பலராமனின் காதுகளை எட்டுமாறு செய்தார் கிருஷ்ணர். இவர்களின் சதி ஆலோசனை பற்றி ஏதும் அறியாத பலராமனோ , யதியின் அறிவிலும் தேஜஸிலும் கவரப்பட்டு , சுபத்ராவின் தோட்டத்தில் தங்கவும், அவரது தேவைகளை கவனிக்கவும் சுபத்ராவை பணித்தான். இதற்கு கிருஷ்ணர் பலத்த எதிர்ப்பை தெரிவித்தார். இளம் வயதுடைய ஆணையும் பெண்ணையும் ஒன்றாக தங்க அனுமதிப்பது தவறு என அவர் சொல்ல, பலராமரோ கிருஷ்ணர் எதிர்பார்த்தவாறே அதை ஏற்றுக் கொள்ளவில்லை. விரைவிலேயே , எது நடக்கவேண்டுமோ அது நடந்தது. வந்திருக்கும் யதி, அர்ஜுனன்தான் என்பதை சுபத்ரா அறிந்து கொண்டாள். அர்ஜுனன், சுபத்ரையின் கனவுக் காதலன். விரைவில் இருவரும் காதலிக்கத் துவங்க , நாடகம் அடுத்த கட்டத்தை அதாவது திருமணத்தை நோக்கி நகர்ந்தது. இந்த விஷயத்தில் கிருஷ்ணர் உதவிக்கு வந்தார். பலராமரை அவர் குடும்பத்துடன் அருகில் இருந்த தீவில் நடைப்பெற்ற 15 நாள் பூஜைக்கு அழைத்து சென்றார். உடல்நலமின்மையை காரணம் காட்டி சுபத்ரா மட்டும் பின்தங்கினாள். அவர்கள் அங்கிருந்து சென்ற பன்னிரெண்டாம் நாள் நல்ல முகூர்த்த தினமாய் அமைந்தது. ஸ்ரீ கிருஷ்ணர் விட்டு சென்ற தேரில் சுபத்ரையுடன் அர்ஜுனன் அங்கிருந்து கிளம்பினான். யதி யாரென்றும் அதன் பின் நடந்தவையும் கேள்விப்பட்ட பலராமன் மிகுந்த கோபத்துக்கு உள்ளானார். ஆனால், ஸ்ரீ கிருஷ்ணரின் பேச்சை மீறி இருவரையும் ஒரே இடத்தில தங்க அனுமதித்தது பலராமன் அல்லவா ? இப்பொழுது அவர் யாரை குற்றம் சொல்ல இயலும் ? இடும்பவனம் & இடும்பி ஒருமுறை கௌரவர்களின் சதியில் இருந்து தப்பி, யார் கண்ணுக்கும் படாமல் வெகு தூரம் சென்றனர். பீமன் தனது ஒரு தோளில் அன்னை குந்தியை சுமந்து சென்றான். மற்றொரு தோளில் தனது சகோதரர்களில் ஒருவனை மாற்றி மாற்றி சுமந்து சென்றான். நீண்ட தூரம் சென்ற பிறகு ஒரு அடர்ந்த வனத்தை அடைந்தனர். அருகிலேயே நீர் நிறைந்த தாமரை குளம் ஒன்றும் இருந்ததால் அங்கே ஓய்வெடுக்க முடிவு செய்தனர். நீண்ட தூரம் அனைவரையும் சுமந்து வந்ததால் களைத்திருந்த பீமன், குளத்தில் களைப்பு தீர நீராடி வந்த பொழுது, அவனது தாயும் சகோதரர்களும் களைப்பில் உறங்கி இருந்தனர். அவர்களை எழுப்பி குளத்தில் இருந்து நீரை தாமரை இலைகளில் கொண்டு வந்து தந்து பருக செய்தவன் மீண்டும் அவர்களை தூங்க சொல்லி அவர்களுக்கு காவலாக அமர்ந்து கொண்டான். அந்த வனமானது கொடிய ராக்ஷஷனான இடும்பனுக்கு சொந்தமான இடும்பவனம் ஆகும். இடும்பனுக்கு நர மாமிசம் மிகவும் பிடித்தமான ஒன்றாகும். எப்பொழுதெல்லாம் அந்த வனத்தில் மனிதர்கள் நுழைகிறார்களோ அப்பொழுதெல்லாம் அவர்களை அடித்து சாப்பிடுவது அவனுக்கு பிடித்த ஒன்றாகும். இப்பொழுதும் பாண்டவர்கள் நுழைந்தவுடன் மனித வாசனை அவனுக்கு வந்தது. உடனே தனது தங்கையான இடும்பியிடம் ” தங்கையே ! எனக்கு உணவின் வாசனை அடிக்கிறது. கண்டிப்பாய் இந்த காட்டில் மனிதர்கள் நுழைந்திருக்க வேண்டும். நீ உடனடியாக சென்று அவர்களை பிடித்து வா ! இன்று விருந்தை நாம் மகிழ்வுடன் உண்போம் !” எனக் கூறினான். அங்கிருந்து வந்த இடும்பி பாண்டவர்களை பார்த்தாள் . பார்த்தவுடன் அவர்களின் கருணை ததும்பும் முகம் அவளை ஈர்த்தது. அவர்களுக்கு காவலாய் அமர்ந்திருந்த நன்கு பலம் பொருந்திய ஓநாய் போன்ற உடலைக் கொண்டிருந்த பீமனையும் பார்த்தாள். அவனைப் பார்த்தவுடன் அவன் பால் ஈர்க்கப்பட்ட இடும்பி, அவர்களை உணவாக அவள் அண்ணனிடம் கொண்டு செல்லும் எண்ணத்தை மறந்தாள். பீமன் தன்னை பார்க்கவேண்டும் என்ற எண்ணத்துடன் அழகிய பெண் வடிவத்தை எடுத்து அவன் அருகே சென்றாள் . பீமனும் அவளைப் பார்த்தவுடன் அவள் மேல் காதல் கொண்டான். அவளை பார்த்து ” அழகிய பெண்ணே ! நீ யார் ” என வினவினான். அவள் திரும்ப அவனிடம் ” முதலில் நீங்கள் யார் என நான் அறிந்து கொள்ளலாமா ? அங்கே மலர் போல் உறங்கும் அழகிய பெண்மணி யார் ? யாரிந்த இளம் வாலிபர்கள் ?” என கேட்டாள். ” நான் பீமன் , அரசன் பாண்டுவின் மகன். அங்கே இருப்பவர்கள் என் சகோதரர்கள் . என் மூத்த சகோதரனும் என் இளைய சகோதரர்களும். அது என் அம்மா . நீ தேவதையா ?” என பதில் உரைத்தான் பீமன். அதற்கு இடும்பி ” என் பெயர் இடும்பி, இந்த காட்டை ஆளும் இடும்பனின் சகோதரி. அவன் உன்னை கண்டால் உன்னை தின்றுவிடுவான். உன்னை என்னால் இழக்க இயலாது. உங்கள் அனைவரையும் நான் காப்பாற்ற விரும்புகிறேன். உங்கள் எல்லோரையும் அந்த மலை சிகரத்துக்கு தூக்கி சென்றுவிட்டால் உங்களை அவனால் கண்டுபிடிக்க இயலாது ” என காதல் வேகத்தில் கூறினாள். ” என்னைப் பற்றி அவ்வளவு தாழ்வாக எண்ணாதே பெண்ணே ! உன் அண்ணன் வரட்டும் அவனை நான் கொல்கிறேன் ” என்று பெருமிதத்துடன் கூறினான். விரைவில் பசியினால் பொறுமை இழந்த இடும்பனின் கர்ஜனை கேட்டது. அதைக் கேட்டவுடன் இடும்பி நடுக்கத்துடன் குந்தி அருகே சென்று அமர்ந்து கொண்டாள். மரத்தின் பின்னிருந்து வந்த இடும்பன், தன் தங்கை அழகிய உருவம் எடுத்து மனிதர்களுடன் அமர்ந்திருப்பதை பார்த்தவுடன் கோபம் கொண்டான். பீமன் அவனை சண்டைக்கு அழைத்தான். உடனே இருவருக்கும் இடையே மிக கடுமையான சண்டை துவங்கியது. அந்த சப்தத்தில், உறங்கி கொண்டிருந்த குந்தியும் மற்ற சகோதரர்களும் விழித்துக் கொண்டனர். தன்னருகே அமர்ந்திருந்த இடும்பியிடம் அவளை பற்றி கேட்டு வியப்படைந்தாள் குந்தி. யுதிஷ்டிரன் பீமனிடம் ” சண்டையை வளர்த்துக் கொண்டே செல்லாதே ! இரவு கவிழ்ந்தவுடன் ராக்ஷர்களின் பலம் அதிகமாகி விடும் ” எனக் கூறினான். உடனே பீமன், இடும்பனை தன்னுடைய பலம் வாய்ந்த கைகளால் உருத்தெரியாமல் நசுக்கி எறிந்தான். அதன் பின், பாண்டவர்களும், குந்தியும் தங்கள் பயணத்தை தொடர முடிவு செய்து அங்கிருந்து கிளம்பினார்கள். வேறு வழித் தெரியாத இடும்பியும் அவர்களை பின் தொடர்ந்தாள் . இதைக் கண்ட குந்தி ” மகளே ! நீ என் எங்களைப் பின் தொடர்கிறாய் ” என வினவினாள். இடும்பி நாணத்துடன் பீமனை பார்த்து பின் ” நீங்கள் அவருடைய அம்மா ..” என கூற, குந்தி பீமனை அவன் மனதில் இருப்பதை சொல்ல சொன்னாள் . மிக பெரிய உருவம் கொண்ட பீமன், வெட்கத்துடன் தரையை பார்த்தும் தன் புன்னகையை மறைக்கவும் முயன்றான். விரைவில் ஒரு அழகிய இடத்தை அடைந்தனர் அவர்கள். அங்கே இடும்பி அவர்கள் தங்க ஒரு குடிசை நிர்மாணித்தாள் . அதன் பின், பீமன் இடும்பியை மணந்து அங்கே மகிழ்வாக வாழ்ந்தனர். மகன் பிறந்தவுடன் அவனுக்கு ” கடோத்கஜன்” என பெயரிட்டு அவனை தாயுடன் விட்டுவிட்டு தங்கள் பயணத்தை தொடர்ந்தனர். பழிக்கு பழி அரக்கு மாளிகை தீயில் இருந்து தப்பிய பாண்டவர்கள் ஏகசக்கரம் என்ற நகரில் பிராமணர்களாக வேடம் பூண்டு ஒரு பிராமணரின் வீட்டில் தலைமறைவாக வாழ்ந்து வந்தனர் . தினமும் அந்நகரத்தில் பிக்ஷை எடுத்து உண்டு வந்தனர் . அத்தகைய சமயத்தில் ஒரு நாள் , சகோதரர்கள் நால்வரும் பிக்ஷை எடுக்க வெளியே சென்றிருக்கையில் பீமன் மட்டும் தன் தாய் குந்தியுடன் வீட்டில் இருந்தான் . அப்பொழுது அந்த வீட்டின் உரிமையாளரின் பகுதியில் எதோ குழப்பமான விவாதம் நடப்பது அவர்கள் காதில் விழுந்தது . “அன்பே! நீ கூறுவதுபடி , நீ எங்களை விட்டு பிரிந்து சென்றால் நான் என்ன செய்வேன்? நம் குழந்தைகள் என்ன செய்வார்கள்? நம் சிறு மகளை நாம் காப்பாற்ற வேண்டும். மேலும் , நம் குலத்தையும் காப்பாற்ற வேண்டும்.” என அந்த வீட்டின் உரிமையாளர் தன் மனைவியிடம் கூறினார் . “நாதா! நான் போய்தான் ஆக வேண்டும். நீங்கள் செல்ல நான் அனுமதிக்க இயலாது. கணவன் இல்லாமல் , குழந்தைகளை எப்படி ஒரு பெண் பாதுகாக்க இயலும் ? மேலும் , அப்பாவி குழந்தைகள் தந்தை இல்லாமல் எங்ஙனம் வளர்வார்கள்? எனக்கு இறப்பை பற்றிய எந்த கவலையோ பயமோ இல்லை. நான் இறந்த பிறகு நீங்கள் மீண்டும் திருமணம் செய்து கொண்டு குழந்தைகளை கவனமாக வளருங்கள்” என்று அவருடைய மனைவி பதில் கூறினாள். இதைக் கேட்ட அவர்களின் சிறு பெண் ” நான் சிறு பெண்தான் . இருந்தாலும் , நான் சொல்வதை இருவரும் கேளுங்கள் . நீங்கள் இறந்துவிட்டால், சிறு குழந்தைகளான நானும் என் தம்பியும் என்ன செய்வோம்? என்னை செல்ல நீங்கள் அனுமதித்தால் , உங்கள் பிரச்சினைகள் அனைத்தும் தீர்ந்து விடும்” என கூறினாள். இதைக் கேட்ட பெற்றோர் இருவரும் அவளை அனைத்துக் கொண்டனர் . நடப்பதை எல்லாம் பார்த்துக் கொண்டிருந்த அவர்களின் சிறு மகன் கையில் ஒரு தடி எடுத்துக் கொண்டு வந்து ” ஏன் எல்லாரும் அழுகிறீர்கள்? யாரும் பயப்பட வேண்டாம். நான் சென்று அந்த அரக்கனை கொன்று விடுவேன் ” என கூறியதைக் கேட்டு அந்த துயரமான நிலையிலும் அனைவரும் சிரித்தனர் . அந்த சமயத்தில் அங்கே வந்த குந்தி ” நீங்கள் எதைப் பற்றி பேசுகிறீர்கள் என நான் அறிந்து கொள்ளலாமா ? ” என வினவினாள். “சகோதரி ! பகாசுரன் என்ற அசுரன் பதிமூன்று வருடங்களுக்கு முன்பு இங்கு வந்து இந்த நகரின் ராஜாவை கொன்று நகரைக் கைப்பற்றிக் கொண்டான் . பின், வெறி கொண்டவனாய் நகரத்தில் இருக்கும் மக்களை கொல்ல துவங்கினான் . அவனது அராஜகத்தை சமாளிக்க முடியாத மக்கள் அவனுடன் ஒரு ஒப்பந்தம் செய்து கொண்டனர் . அதன்படி , ஒவ்வொரு வாரமும் , வண்டி நிறைய உணவுப் பொருட்களுடன் ஒரு மனிதரை அனுப்புவதாய் ஒத்துக் கொண்டனர். அதன்படி , ஒவ்வொரு வாரமும் ஒவ்வொரு குடும்பத்தில் இருந்து ஒருவர் உணவு கொண்டு செல்லவேண்டும் . அந்த உணவுடன் , உணவு எடுத்து செல்லும் நபரையும் பகாசுரன் விழுங்கி விடுவான் . இந்த வாரம் உணவு எடுத்து செல்ல வேண்டியது எங்கள் குடும்பத்தின் முறை. “ ” மக்களை காப்பாற்ற வலிமையான அரசரோ இளைஞர்களோ இல்லாதபட்சத்தில் வலிமையற்ற சாதாரண மனிதர்களாகிய நாங்கள் என்ன செய்ய? ஒருவரை ஒருவர் பிரிந்து வாழ முடியாத எங்களால் என்ன செய்ய முடியும்? பேசாமல் , நாங்கள் நால்வருமே அவனுக்கு உணவாக செல்லலாம் என முடிவெடுத்திருக்கிறோம்” என அவர் நிலைமையை குந்திக்கு விளக்கினார் . “சகோதரரே! நீங்கள் கவலைப்பட வேண்டாம். எனக்கு ஐந்து மகன்கள் . அவர்களில் ஒருவன் இந்த முறை அசுரனுக்கு உணவெடுத்து செல்லட்டும் ” என குந்தி கூற அதை அந்த பிராமணர் மறுத்தார் . “என்னுடைய மகன் பீமன் மிகவும் பலம் பொருந்தியவன் . ஏற்கெனவே அவன் பல அசுரர்களுடன் சண்டையிட்டு அவர்களை கொன்றிருக்கிறான். எனவே நீங்கள் அதை எண்ணி பயப்பட வேண்டாம். உங்களுக்கு பதில் அவன் செல்வான்” என குந்தி உறுதி அளித்தாள். குந்தியின் உத்தரவின் படி இரண்டு வண்டிகள் நிறைய உணவுப் பொருட்களுடன் பகாசுரன் இருந்த குகை நோக்கி சென்றான் பீமன் . அந்த குகையை அடைந்தவுடன் வண்டியை நிறுத்திய பீமன் வண்டியில் இருந்த உணவுப் பொருட்களை சாப்பிடத் துவங்கினான் . பகாசுரனுடன் சண்டையிடும் பொழுது அந்த உணவு கீழே விழுந்து வீணாகிவிடும். மேலும், அவனைக் கொன்றவுடன் குளிக்காமல் உண்ண இயலாது என அவ்வாறு செய்தான் . உணவின் சுவை நாசியில் ஏற தன் குகையில் இருந்து வெளிவந்த பகாசுரன் , தனக்கான உணவுப் பொருட்களை மானிடன் ஒருவன் உண்பதைக் கண்டு கோபம் கொண்டு தாக்கத் துவங்கினான் . துவக்கத்தில் , அவனது தாக்குதலை கண்டுகொள்ளாத பீமன், ஒரு கையால் உணவருந்திக் கொண்டே மறு கை கொண்டு அசுரனுடன் சண்டையிட்டான் . உணவுகளை முழுவதும் உண்ட பின் , அங்கிருந்த மரத்தைப் பிடுங்கி அசுரனை தாக்க பதிலுக்கு அசுரன் எறிந்த கற்களை விளையாட்டாக தடுத்தான் . பின் பகாசுரனை தூக்கி தரையில் எறிந்து கொன்று அந்நகர மக்களுக்கு விடுதலை தந்தான் . https://solvanam.com/2025/02/09/காதலில்-துறவி/

NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும் — கருணாகரன் —

1 month 1 week ago
NPP + தமிழ் பேசும் கட்சிகள்-பொறுப்பும் கூட்டுப் பொறுப்பும் August 20, 2025 — கருணாகரன் — ‘வரலாற்றில் ஒரு மாற்றுத் தரப்பு‘என்ற அறிவிப்போடும் அடையாளத்தோடும் அதிகாரத்தில் – ஆட்சியில் இருக்கிறது NPP. அது மாற்றுத் தரப்பா, இல்லையா? அது பிரகடனப்படுத்தியதைப் போலமுறைமை மாற்றத்தை (System change) மெய்யாகவே நடைமுறைப்படுத்துகிறதா? தன்னுடைய ஆட்சிக்காலத்தில் மாற்றங்களை நிச்சயமாகச் செய்யுமா? செய்யாதா? NPP சுயாதீனமாக இயங்கக்கூடியதாக இருக்கிறதா? அல்லது அதை JVP கட்டுப்படுத்தித் தன்னுடையபிடியில் வைத்திருக்கிறதா? அல்லது NPP யும் ஏனைய ஆட்சியாளர்களைப்போலத்தான்இயங்குகின்றதா; சிந்திக்கின்றதா? அதை மீறிச்செயற்படுமா? என்ற சந்தேகங்கள், விமர்சனங்கள், விவாதங்கள் எல்லாம் எல்லோருக்கும் உண்டு. ஆனாலும் ஆட்சியில் (அதிகாரத்தில்) பெரும்பான்மை பலத்தோடு NPP யே இருக்கிறது என்பது ஏற்றுக் கொள்ளவேண்டிய – மறுக்க முடியாத – உண்மை. இந்த உண்மையிலிருந்தே நாம் விடயங்களை அணுக வேண்டும். இந்த உண்மையை ஏற்றுக்கொண்டபடியால்தான் இந்தியா பல வழிகளிலும் NPP அரசாங்கத்தோடு ஒத்துழைக்கிறது. அநுர குமார திசநாயக்கவுக்கு புதுடெல்லி அளித்த உற்சாகமான வரவேற்பிலிருந்து இதைப் புரிந்துகொள்ள முடியும். இந்தியா மட்டுமல்ல, சீனா, மேற்குலக நாடுகள், அரபுதேசங்கள் எல்லாம் NPP அரசாங்கத்துடன் சீரானஉறவையே கொண்டிருக்கின்றன. IMF, ADB என சர்வதேச நிதி நிறுவனங்களும் UN போன்ற சர்வதேச அமைப்புகளும் NPP ஆட்சியுடன் இணைந்தே பயணிக்கின்றன. விருப்பமோ விருப்பமில்லையோ மக்களால் தெரிவு செய்யப்பட்ட தரப்புத்தான் ஆட்சியிலிருக்கும். அந்தத் தரப்புடன்தான் தொடர்பு கொள்ள முடியும். அதனோடு இணைந்தே எதையும் செய்ய முடியும். பெரும்பான்மை மக்கள் (இந்தப்பெரும்பான்மை வேறு. சிங்கள மக்கள் மட்டுமல்ல, தமிழ்பேசும் மக்களிலும் கணிசமானவர்கள்) NPP யையே ஆட்சியமைப்பதற்குத் தெரிவு செய்துள்ளனர். ஆகவே அந்த மக்களுடைய தெரிவின் அடிப்படையிலே, அதற்கு மதிப்பளித்தே இந்தத் தரப்புகள் எல்லாம் NPP ஆட்சியுடன் தொடர்புறுகின்றன; தம்முடைய வேலைகளைச் செய்கின்றன. இதைத் தவிர்க்க முடியாது. இங்கே இந்தத் தரப்புகள் கவனத்திற் கொள்வது, தம்முடைய தொடர்பைப் பேணுவதையும் தம்முடைய வேலைகளைச் செய்வதையும் பற்றியே. இதற்காக NPP அரசாங்கத்தை – ஆட்சியிலிருக்கும் தரப்பை -எப்படிக் கையாள்வது என்பதையே சிந்திக்கின்றன. அதற்கப்பால் எதைப்பற்றியும் அவை சிந்திக்கவில்லை. ஆனால், தமிழ் பேசும் தரப்புகளோ தமக்கு முன்னே உள்ள துலக்கமான உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்து கொள்ள முடியாமல் உள்ளன. அல்லது அதை மறுக்கின்றன. அதனால் உண்மைக்கும் யதார்த்தத்துக்கும் மாறாகவே சிந்திக்கின்றன; செயற்படுகின்றன. என்பதால்தான் NPP ஐ எதிர்ச்சக்தியாகவே பிரகடனப்படுத்தி வைத்துக்கொண்டு, அதனுடன் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கின்றன. இதில் வேடிக்கை என்னவென்றால், இதற்கு முன்னிருந்த இனவாதத் தரப்புகளான UNP, SLFP, SLPP போன்றவற்றோடு இணங்கியும் பிணங்கியும் உறவைக் கொண்ட கட்சிகள், NPP யோடு மட்டும் விலக்கம் கொள்கின்றன. ஒப்பீட்டளவில் UNP, SLFP, SLPP ஆகியவற்றை விட NPP இனவாதக் கட்சியல்ல. மட்டுமல்ல, முன்றேற்றச் சிந்தனைகளையும் ஊழல் எதிர்ப்பையும் அதிகாரக் குறைப்பையும் கொண்ட சக்தி. சுருக்கமாகச் சொன்னால், மற்றவற்றை விட நெருக்கம் கொள்ளக்கூடிய தரப்பு – சக்தி. என்பதால்தான் தமிழ், முஸ்லிம், மலையக மக்கள் NPP க்கு தங்களுடைய ஆதரவை வழங்கியுள்ளனர். சிங்கள மக்களும் கூட மாற்றத்தைக் குறித்த நம்பிக்கையை NPP மீதே வைத்துள்ளனர். என்பதால்தான் அவர்கள் NPP க்குப் பேராதரவை வழங்கினர். இங்கே பிரச்சினை என்னவென்றால், மக்களின் உணர்வுக்கும் தெரிவுக்கும் வெளியே – மாறாக தமிழ், முஸ்லிம், மலைகக் கட்சிகள் நிற்கின்றன. காரணம், இவற்றின் அரசியல் இருப்புக்கு NPP சவாலை உருவாக்கியதே. இதை பாராளுமன்றத் தேர்தலுக்குப் பின்வந்த உள்ளுராட்சி மன்றத் தேர்தலை எதிர்கொண்ட விதமும் அதற்குப் பின் சபைகளை அமைக்கும்போது இந்தத் தமிழ்பேசும் கட்சிகள் நடந்து கொண்ட முறையும் தெளிவாகவே வெளிப்படுத்தின. இதனால் அரசாங்கத்துக்கு (ஆட்சிக்கு) முற்றிலும் வெளியிலேயே தமிழ்பேசும் தரப்புகள் நிற்கின்றன. அரசாங்கத்துக்கு வெளியே என்பதை, ‘அரசாங்கத்தை எந்த நிலையிலும் தொடர்பு கொள்ளமுடியாத நிலையில்‘ என்றுபொருள் கொள்ள வேண்டும். இங்கே ஒரு ஆழமான உண்மையை உணருவது அவசியம். சுதந்திர இலங்கையில் முதற்தடவையாக இப்போதுதான் தமிழ்பேசும் தரப்புகள் முற்றாகவே ஆட்சிக்கு வெளியே நிற்கின்றன. இதற்கு முன்பெல்லாம் எப்படியாவது சில கட்சிகள் ஆட்சியில் பங்கேற்கும். அது சரியானதா பிழையானதா என்பதல்ல இங்கே உள்ள விடயம். இங்கே கவனத்திற்குரியது, அப்படிச் சிலகட்சிகளாவது அரசாங்கத்தோடு (ஆட்சித்தரப்போடு) இணைந்து நின்றதால் – பங்கேற்றதால் – அந்தந்தச் சமூகங்கள் முழுச்சுமையிலிருந்து அல்லது முழுமையான நெருக்கடியிலிருந்து தப்பியிருந்தன. இப்போது தமிழ்பேசும் தரப்புகள் மொத்தமாக வெளியே – ஆட்சித்தரப்புக்கு எதிராக நிற்பதால், ஒட்டுமொத்தத் தமிழ்பேசும் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் கேள்விக்குள்ளாகியுள்ளன. NPP எந்தளவுக்கு நியாயத்தோடும்விட்டுக் கொடுப்போடும் நடந்து கொள்ளுமோ அதைப்பொறுத்தே இந்தச் சமூகங்களின் நலன்களும் உரிமைகளும் பேணப்படும். இதில் NPP யில் உள்ள தமிழ்பேசும் பாராளுமன்ற உறுப்பினர்களும் NPP ஐ ஆதரிக்கும் தமிழ்பேசும் சமூகத்திலுள்ள நபர்களும் ஏதாவது செல்வாக்கைச் செலுத்தினால் சற்றுக் கூடுதலாக ஏதாவது நடக்கலாம். ஆனால், அதற்குரிய வல்லமையை அவர்களிடம் காணமுடியவில்லை. ஆகவே தமிழ்பேசும் சமூகங்களைச் சேர்ந்த பிரதிநிதிகளும் கட்சிகளும் NPP யுடன் கொள்ளும் தொடர்பும் உறவும் அதைக் கையாளும் முறையுமே இந்தச் சமூகங்களின் வெற்றி தோல்விகளைத் தீர்மானிக்கும். ஆனால், NPP ஐக் கையாளத்தெரியாமலே – அதற்கான வல்லமை இல்லாமலேயே தமிழ்பேசும் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் உள்ளன. (இதே நிலையிற்தான் NPP யும் உள்ளது. இதைப்பற்றிப் பின்னர் சற்றுவிரிவாகப் பார்க்கலாம்). ஆக, தமக்கு முன்னே உள்ள உண்மையையும் யதார்த்தத்தையும் புரிந்துகொள்ளத் தவறினால் அல்லது புரிந்து கொள்ள முடியாமல் போனால் அது எதிர்மறையான விளைவுகளையே உண்டாக்கும். இதுவே தமிழரின் அரசியலில் தொடர்ச்சியாக நடந்து கொண்டிருக்கிறது. இந்தியாவுடன் விடுதலைப்புலிகள் பகைத்துக்கொண்டதும் இலங்கை அரசுடன் தமிழ்த்தேசியவாதக் கட்சிகள் தொடர்ச்சியாகவே எதிர்ப்பு அரசியலை மேற்கொள்வதும் இவ்வாறான கையாள்கையின் தவறுகளாலேயே. “இலங்கையின் ஆட்சியாளர்கள் இனவாதத்துக்கு அப்பால் எப்போது சிந்தித்தனர்? இனவாதத்துக்கு வெளியே வருவதற்கு யார் தயாராக இருந்தனர்? அப்படி யாராவது வந்திருந்தால் அதை வரவேற்றிருப்போமே!” என்று யாரும் இதற்குப் பதில் அளிக்கக் கூடும். இலங்கையின் சிக்கலான இனத்துவ அரசியற் சூழலில், இனவாதமும் மதவாதமும் பின்னிப் பிணைந்திருக்கும் ஆட்சி முறையில், இந்தியாவும் தமிழ்நாடும் எப்போதும் தமிழர்களுக்கு ஆதரவாக உள்ளது. ஆகவே தமிழர்களை விட தாம் சிறுபான்மையினர் என்று சிந்திக்கும் தாழ்வுணர்ச்சியைக் கொண்ட சிங்களத் தரப்பிடமிருந்து முழு நிறைவான அதிகாரப் பகிர்வை உடனடியாக எதிர்பார்க்க முடியாது. எங்களுடைய கோரிக்கைகள் நியாயமானவையாக இருக்கலாம். அரசியல் யதார்த்தத்தின்படி அந்த நியாயத்தை படிப்படியாகவே உணரச் செய்ய முடியும். படிப்படியாகவே வென்றெடுக்க முடியும். அதற்கு முடிவற்ற அரசியல் வேலைத்திட்டங்களும் கூர்மையான நுண்திறனும் வலிமையான உத்திகளும் உச்ச நிதானமும் தேவை. முகப்புத்தகத்திலும் சமூக வலைத்தளங்களிலும் அள்ளிச் சொரியும் குப்பைகளால் அதைச் செய்யவே முடியாது. அரசியலில் ‘கையாள்கை‘ என்ற சொல்லை Handling, Diplomacy, Strategy என்றே கொள்ளவேண்டும். இவை அனைத்தும் கலந்ததாகவே ‘கையாள்கை‘யின் செயற்பாட்டுத் தன்மை இருக்கும். தமிழரின் அரசியலில் ‘கையாள்கை‘ என்பது படுதோல்வியான விசயம். இப்பொழுது இந்தச் சுழிக்குள் மலையக, முஸ்லிம் கட்சிகளும் சிக்கியுள்ளன. இதற்குக்காரணம், தேசியம் (Nationalism) என்பதை இவை தவறாகப் புரிந்துகொண்டு, அதை இனவாதமாக(Racism) மடைமாற்றம்(Metamorphosis) செய்திருப்பதேயாகும். இந்தத் தவறை நீண்டகாலமாவே செய்தது தமிழ்த்தரப்பே. பின்னாளில் இதில் முஸ்லிம், மலையகச் சக்திகளும் இணைந்து கொண்டன. என்பதால்தான் இவற்றினால் அரசோடு பேசவே முடியாதிருக்கிறது. இதனால் இப்பொழுது அனைத்தும் எதிர்நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளன. இதை அந்தக் கட்சியின் தலைவர்கள் மறுக்கலாம். ஆனால், உண்மை இதுதான். காலம் கடந்து இதை அவர்கள் புரிந்து கொள்வார்கள். இங்கே இன்னொரு கடினமான – அவசியமான உண்மையைக் கவனிக்க வேண்டும். NPP என்பது தனியே ஆட்சியை நடத்தும் தரப்போ கட்சியோ மட்டுமல்ல. அது பெரும்பான்மையான மக்களின் தரப்பாகும். முந்திய ஆட்சித்தரப்புகளைப் போலன்றி, தமிழ், முஸ்லிம், மலையக மக்களின் செல்வாக்கையும் (ஆதரவையும்) பெற்ற தரப்பாக உள்ளது. அத்துடன் பாராளுமன்றத்தில் அது அறுதிப் பெரும்பான்மையையும் கொண்டுள்ளது. அதுதான் சர்வதேச சமூகத்தின் பாதியுமாகும். எப்படியென்றால், அரசாங்கத்தைக் கடந்து எந்த வெளிச்சக்தியும் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாது. அப்படித் தலையிட்டாலும் அதற்கு வரையறைகள் உண்டு. ஆகவே NPP யுடன் அல்லது அரசாங்கத்துடன் எதிர்த்து நிற்பதோ விலகி நிற்பதோ சர்வதேச சமூகத்தோடும் விலகி நிற்பதாகவே யதார்த்தத்தில் அமையும். அரசாங்கத்தை – ஆட்சித்தரப்பைப் பகைத்துக் கொண்டு வெளிச்சமூகம் அரசுக்குவெளியே நிற்கும் தமிழ்பேசும் தரப்போடு உருப்படியான எந்தவேலைகளையும் செய்யாது. வேண்டுமானால் வழமையைப் போலச்சம்பிரதாயமாக அவ்வப்போது சந்திப்புகளைச் செய்யலாம். ஏதாவது உரையாடலாம். நடைமுறையில் அவற்றினால் எந்தப் பயனும் குறிப்பிடக்கூடிய நன்மைகளும் கிட்டாது. கடந்த காலச் சந்திப்புகளும் படமெடுப்புகளும் இதைத் தெளிவாகவே உணர்த்துகின்றன. ஆகவே NPP யின் ஆட்சியை எதிர்த்து நிற்பதென்பது, ஒரேநேரத்தில் அரசாங்கம், வெளிச்சமூகம், பெரும்பான்மை மக்கள் ஆகிய மூன்று தரப்பையும் எதிர்த்து நிற்பதாகும். அப்படியென்றால், NPP என்னசெய்தாலும், எப்படிச்செயற்பட்டாலும் அதைக்கண்மூடித்தனமாக – எந்தவிதமான நிபந்தனையும் இல்லாமல் ஏற்றுக் கொள்வதா? என்ற கேள்வியை ஒரு குண்டாக யாரும் தூக்கிப் போடலாம். NPP இன்னும் பொறுப்புக் கூறும் ஒரு ஆட்சித் தரப்பாகமாறவில்லை என்பது உண்மையே. அப்படிமாறியிருந்தால், ஏற்கனவே சொல்லப்பட்டதைப்போல, அரசாங்கத்தை நிர்வகிக்கும் – ஆட்சியை நடத்தும் – தரப்பு, மாற்றங்களைச் செய்ய விரும்பும் தரப்பு, மக்கள் நலனை முன்னிறுத்தும் தரப்பு, பன்மைத்துவத்தை அங்கீகரிக்கும் தரப்பு, பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண விரும்பும் தரப்பு, ஒட்டுமொத்தமாக ஒரு மாற்றுச்சக்தி என NPP பொதுவாகக்கருதப்படுவதால் தமிழ்பேசும் தரப்புகளை – தமிழ்பேசும்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகளை NPP இணக்கமான முறையில் அணுகியிருக்கவேண்டும். ஏனென்றால் NPP இப்பொழுது ஒரு அணியோ கட்சியோ அல்ல. அது ஆட்சியிலிருக்கும் தரப்பு. ஆட்சியிலிருக்கும் தரப்பு அதற்குரிய பொறுப்போடும் கடமைகளோடும் கண்ணியத்தோடும் இருக்கவேண்டும். அது கட்சி ஒன்றைப்போல விருப்பு வெறுப்பு, லாப நட்டக் கணக்குப் பார்த்துச்செயற்படக் கூடாது. கட்சியாகச்சுருங்கிச் செயற்பட முடியாது. ஏற்கனவே ஆட்சியிலிருந்த ஐ.தே.க, சுதந்திரக் கட்சி, பொதுஜன பெரமுன போன்றவை அப்படித் தவறாக (கட்சியாக) செயற்பட்டதன் விளைவே கடந்தகாலத் துன்பியல் வரலாறும் இலங்கையின் வீழ்ச்சியுமாகும். இந்தப்படிப்பினைகளிலிருந்து NPP உண்மையாகவே எதையாவது படித்திருந்தால், அதுகட்சி என்ற உணர்விலிருந்துவிடுபட்டு, பொறுப்புடைய அரசாங்கத் தரப்பாகவே தான் உள்ளேன் என்று கருதிச்செயற்படும். தன்னுடைய பொறுப்புக் கூறலை, இணக்க நடவடிக்கைளை, மாற்றத்துக்கான செயற்பாடுகளை, தீர்வுக்கான முயற்சிகளை ஆரம்பிக்கும். இங்கும் ஒரு வேடிக்கையான – துயரமான உண்மையை நாம் கவனிக்க வேண்டும். அதிகாரத்துக்கு வருவதற்கு முன், தமிழரசுக் கட்சி, முஸ்லிம் காங்கிரஸ், தமிழ் முற்போக்குக் கூட்டணி போன்றவற்றோடு சிநேகபூர்வமான உறவைக் கொண்டிருந்த அநுரவும் NPP யும் ஆட்சி பீடமேறியபின் எதிர்மனோபாவத்தோடு அணுகும் நிலை தோன்றியுள்ளது. அப்படித்தான் ஆட்சி அமைப்பதற்கு முன், நட்புடன் கைகுலுக்கிய மேற்படி தரப்புகள் இப்பொழுது முகத்தை மறுவளமாகத் திருப்பிக் கொண்டுள்ளன. இந்த முட்டாள்தனத்தை (அறியாமையை) என்னவென்று சொல்வது? ஆகவே இந்த இருளிலிருந்து ஒவ்வொரு தரப்பும் விலகி, ஒளியை நோக்கிப் பயணிக்க வேண்டும். இதில் கூடுதல் பொறுப்பு அரசாங்கத்தை நிர்வகிக்கும் NPP க்கு உண்டு. பொறுப்புக் கூறல் என்பது பிரச்சினைகளுக்குத் தீர்வைக்காண்பதற்கான, காயங்களை ஆற்றக் கூடிய, எதிர் முகாம்களை இணக்கத்துக்குக் கொண்டுவரக்கூடிய, அனைவருக்கும் நம்பிக்கை அளிக்கக்கூடிய சிறப்பான ஒரு முன்னாரம்ப நடவடிக்கையாகும். (Accountability is a great first step towards finding solutions to problems, healing wounds, bringing opposing camps to reconciliation, and giving hope to all). அப்படிப் பொறுப்புக் கூறும் தரப்பாக, பிரச்சினைகளைத் தீர்க்க விரும்பும் தரப்பாக NPP செயற்படுமாக இருந்தால், அது எத்தகைய அரசியல் தவறுகளைத் தமிழ்பேசும் தரப்புகள் விட்டாலும் அதைக் கடந்து, அவற்றைச்சுமுகமாக்க முயன்றிருக்கும். இந்த ஓராண்டு ஆட்சிக்காலத்துள் அனைத்துத் தமிழ்பேசும் தரப்போடும் குறைந்தபட்சம் ஒரு சம்பிரதாயபூர்வமான சந்திப்பையாவது மேற்கொண்டிருக்கும். அதாவது பொருத்தமான அணுகுமுறையின் மூலம் தமிழ்பேசும் தரப்புகளைக் கையாண்டிருக்கும். அதில் வெற்றி கொண்டிருக்கும். ஒரு மாற்றுச் சக்தியானால் அதுவே நிகழ்ந்திருக்க வேண்டியது. NPP யின் அழைப்பையும் நல்லெண்ண முயற்சிகளையும் தமிழ்பேசும் தரப்புகள் புறக்கணித்தால் அல்லது தவிர்த்தால் அது NPP க்கே மதிப்பைக் கூட்டும். பதிலாக தமிழ்பேசும் தரப்புகளுக்கு நெருக்கடியை உண்டாக்கும். குறிப்பாக அரசாங்கத்தின் அழைப்பையும் நல்லெண்ணத்தையும் ஏன் புறக்கணிக்கிறீர்கள் என்ற கேள்வியை மக்களிடம் எழுப்பும். இப்பொழுது கூட இரண்டுதரப்புக்கும் (அரசாங்கம் {NPP} – தமிழ்பேசும் தரப்புகள்) காலம்கடந்து விடவில்லை. பரஸ்பரம் இரண்டு தரப்பும் சுமுகம் கொள்வதற்கான வழிகளைத்தேடலாம். NPP ஏற்றுக்கொள்ளவே முடியாத சக்தி என்றால், ஐ.தே.கவை அல்லது சு.கவை அல்லது பெரமுனவை அல்லது ஐக்கியமக்கள் சக்தியை ஏற்றுக்கொள்ளப்போகிறீர்களா? இவைதானே முன்பு ஆட்சியில் இருந்தன. இவற்றோடு குறைந்தளவிலேனும் உரையாடப்பட்டது. உறவாடப்பட்டது. ஏற்பட்ட விளைவு? ஐ.தே.க, சு.க, பெரமுன, ஐக்கியமக்கள் சக்தி போன்றவற்றை விட NPP ஆபத்தானதா? NPP தவறு என்றால் அடுத்ததெரிவு என்ன? அதைப்போல தமிழ் பேசும் சக்திகளைப் புறக்கணித்துவிட்டு, இந்த நாட்டில் எத்தகைய தீர்வை எட்ட முடியும்? எத்தகைய முன்னேற்றத்தை உருவாக்கலாம்? இந்த நாட்டில் மாற்றம் வேண்டும் என்றால், அது தனியே NPP யால் மட்டும் நிறைவேறக் கூடியதல்ல. அனைத்துத் தரப்பினதும் அனைத்துச் சமூகங்களினதும் பங்களிப்புடன்தான் ஏற்படக்கூடியது. அதற்கான கதவுகளை (வாசல்களை) திறக்கவேண்டிய பொறுப்பு Responsibility (கடப்பாடு – Obligation) அனைவருக்கும் உண்டு. “ஆயிரம் உண்டிங்கு ஜாதி – எனில் அன்னியர் வந்து புகல் என்ன நீதி? – ஓர் தாயின் வயிற்றில் பிறந்தோர் – தம்முள் சண்டைசெய் தாலும் சகோதரர் அன்றோ?“ பாரதி பாடல் சொல்கின்ற இந்த உண்மையைப் புரிந்து கொள்ளவேண்டும். இலங்கைச் சமூகங்கள் தங்களுக்கிடையில் இணக்கம் கொள்ளவில்லை என்றால், ஒருங்கிணையவில்லை என்றால். இலங்கையில் பன்மைத்தன்மைக்கான இடமில்லை என்றால், அந்திய சக்திகள்(வெளியார்) (The forces of darkness – outsider) ஆதிக்கம் செய்யவே வழியேற்படும். அது இலங்கையை வெளியாரிடம் அடிமைப்படுத்துவதாகவே அமையும். என்ன செய்யப்போகிறோம்? https://arangamnews.com/?p=12262

உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எதிர்கொள்ளுமளவுக்கு இலங்கை பலம் வாய்ந்த நாடல்ல - மைத்திரிபால

1 month 1 week ago
”4/21 சூத்திரதாரியை எல்லோருக்கும் தெரியும்,ஆனால் அவரை ஒன்றும் செய்ய முடியாது” 2019 ஈஸ்டர் ஞாயிறு குண்டுவெடிப்புக்குப் பின்னணியில் உள்ள மூளையாகச் செயல்படும் நபரை எதிர்கொள்ள இலங்கை சக்தியற்றது என்று முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கூறினார். அந்த நபர் அரசாங்கங்கள், இராணுவம் மற்றும் உளவுத்துறை நிறுவனங்களுக்கு நன்கு தெரிந்தவர் என்றும், ஆனால் அவரை அடைய முடியாது என்றும் அவர் கூறினார். இலங்கை மன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் உரையாற்றிய முன்னாள் ஜனாதிபதி, கொடிய தாக்குதல்களின் மூளையாகச் செயல்பட்டவரைக் கண்டுபிடிக்க அதிகாரிகள் துடித்துக் கொண்டிருந்தாலும், உண்மையை பொதுமக்களுக்கு எளிதில் வெளிப்படுத்த முடியாது என்று கூறினார். “அது எப்படி நடந்தது என்பது பற்றி நான் சிஐடியிடம் எல்லாவற்றையும் சொல்லிவிட்டேன். ஆனால் அதில் எதையும் பொதுமக்களுக்கு வெளியிட முடியாது. மூளையாகச் செயல்படுபவரைக் கண்டுபிடிக்க அனைவரும் துடிக்கிறார்கள், ஆனால் உண்மை என்னவென்றால் – அது யார் என்பது அவர்களுக்கு ஏற்கனவே தெரியும். ஒவ்வொரு அரசாங்கத்திற்கும், இராணுவத்திற்கும், உளவுத்துறைக்கும் தெரியும். மூளையாகச் செயல்படுபவர் எங்கே இருக்கிறார் என்பதை நாம் சொல்ல முடியும் என்றாலும், அவர்களை நாம் எதிர்கொள்ள முடியாது,” என்று சிறிசேன கூறினார். “கடுமையான குற்றங்கள் நடந்துள்ளன – சில வேண்டுமென்றே திட்டமிடப்பட்டன. இந்தத் திட்டங்கள் எனது பெயரை சேற்றில் இழுத்து, எனது அரசாங்கத்தை நாசமாக்கி, எனது கட்சியை அழித்துவிட்டன,” என்று அவர் கூறினார். முன்னாள் ஜனாதிபதி புவிசார் அரசியல் மற்றும் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் சமீபத்தில் கையெழுத்தான பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஒரு புதிய சிந்தனைக் குழுவைத் தொடங்கி வைக்கும் போது கருத்து தெரிவித்தார். https://akkinikkunchu.com/?p=337732
Checked
Tue, 09/30/2025 - 00:51
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed