புதிய பதிவுகள்2

யாழில் நூலகம் ஒன்றை திறந்த ரில்வின் சில்வா

3 weeks 1 day ago
இது அவர்களின் அலுவலகம் என்றபடியால் பாதுகாப்பார்கள். அடுத்த விடுமுறைக்கு போகும்போது ஆறுதலாக அமர்ந்து புத்தகங்களை வாசிக்கலாம். நீங்கள் பக்கத்தில் இருப்பதால் சாரத்தோடு போகலாம்.

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

3 weeks 1 day ago
இவன் எல்லாம் பிடிபட்டால்.... பிணை கேட்க ICU ல் படுத்து கிடநது நாடகம் ஆட வெளிக்கிடுவாங்கள்... Ice Production family. 😂 உண்மை உரைகல்

பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு.

3 weeks 1 day ago
பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி தயார் என ரஷ்யா அறிவிப்பு. பெருங்குடல் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசி, பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாக ரஷ்யாவின் மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பு தெரிவித்துள்ளது. சமீபத்தில் ரஷ்ய விஞ்ஞானிகள் புற்றுநோய்க்கு எதிரான தடுப்பூசியை உருவாக்கும் முயற்சியின் இறுதிக்கட்டத்தில் உள்ளதாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் அறிவித்திருந்தார். பல ஆண்டுகளாக நடந்த ஆராய்ச்சியின் முடிவுகள் கடந்த 3 ஆண்டுகளாக மருத்துவ பரிசோதனையில் இருந்தது எனவும் தற்போது இந்த ஊசி பயன்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளதாகவும் விரைவில் அரசின் ஒப்புதலுக்கு பின்னர் பயன்பாட்டுக்கு வரும் எனவும் ரஷ்ய மத்திய மருந்து மற்றும் உயிரியல் முகவரக அமைப்பின் தலைவர் வெர்னிகோ கோவோர்ட்சோவா (Vernika Govortsova) தெரிவித்துள்ளார். இதேவேளை, இந்த தடுப்பூசி பாதுகாப்பானது என்பது ஆய்வுகளில் தெரியவந்துள்ளதாகவும் புற்றுநோய்க்கு எதிராக வேலை செய்கிறது எனவும் மேலும் பல புற்றுநோய்களுக்கு தடுப்பு மருந்துகளை கண்டுபிடிக்கும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார். https://athavannews.com/2025/1446390

யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை! - 12 பேர் பாதிப்பு

3 weeks 1 day ago
08 Sep, 2025 | 06:21 PM யாழ்ப்பாணத்தில் வீசிய பலத்த காற்றுடன் கூடிய மழை காரணமாக 12 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக யாழ்ப்பாணம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் பிரதிப் பணிப்பாளர் ரி.என்.சூரியராஜா தெரிவித்துள்ளார். அந்த வகையில், வேலணை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. அதேபோல உடுவில் பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் வீடு ஒன்று பகுதியளவில் சேதமடைந்துள்ளது. மேலும், தெல்லிப்பழை பிரதேச செயலர் பிரிவில் ஒரு குடும்பத்தை சேர்ந்த நால்வர் பாதிக்கப்பட்டுள்ளதுடன் அங்கும் ஒரு வீடு பகுதியளவில் சேதமடைந்துள்ளது. இதேவேளை திடீரென வீசிய புயல் காற்றினால் செல்வச் சந்நிதி ஆலயத் திருவிழாவிற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கடைகளின் கூரைகள் தூக்கி வீசப்பட்டன. இதனால் வியாபாரிகள் மிகுந்த சிரமத்தை எதிர்கொண்டனர். யாழில் பலத்த காற்றுடன் கூடிய மழை! - 12 பேர் பாதிப்பு | Virakesari.lk

யாழில் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டும்

3 weeks 1 day ago
யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார். செய்தி குறிப்பொன்றை வௌியிட்டு அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயின் பரம்பல் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் யாழ் மாவட்டத்தில் 937 டெங்கு நோயாளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர். இந்த வருடத்தில் யாழ் மாவட்டத்தில் டெங்கு நோய் காரணமாக எந்தவொரு இறப்பும் பதிவு செய்யப்படவில்லை. யாழ் மாவட்டத்தில் பருவ மழைக்காலம் ஆரம்பிக்க இருப்பதால் டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை தீவிரப்படுத்த வேண்டியுள்ளது. டெங்கு கட்டுப்பாட்டு நடவடிக்கைகளை மாவட்ட மட்டத்தில் ஒருங்கிணைக்கும் நோக்குடன் கடந்த செப்டெம்பர் 4ம் திகதி மாவட்ட டெங்கு கட்டுப்பாட்டுக்குழுக் கூட்டம் இடம் பெற்றது. இதன் அடுத்த கட்டமாக பிரதேச செயலாளர் தலைமையில் பிரதேச டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் , கிராமசேவையாளர் தலைமையில் கிராம மட்ட டெங்கு கட்டுப்பாட்டு குழுக் கூட்டங்களும் எதிர்வரும் செப்டெம்பர் 08ம் திகதி முதல் 12ம் திகதி வரையிலான காலப்பகுதியில் இடம்பெறும். பொதுமக்கள் மத்தியில் டெங்கு கட்டுப்பாட்டு பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் பல்வேறு நிறுவனங்களிலும் டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் ஏற்பாடு செய்யப்படவுள்ளன. யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 14ம் திகதி சகல வணக்கத்தலங்களிலும் , 15ம் திகதி சகல அரச நிறுவனங்களிலும் , 16ம், 17ம் திகதிகளில் சகல பாடசாலைகளிலும் இந்த டெங்கு விழிப்புணர்வு நிகழ்வுகள் இடம்பெறும். இதனைத் தொடர்ந்து யாழ் மாவட்டத்தில் எதிர்வரும் செப்டெம்பர் 22ம் திகதி முதல் 24ம் திகதி வரையிலான மூன்று தினங்களும் விசேட டெங்கு கட்டுப்பாட்டு தினங்களாக பிரகடனப்படுத்தப்படுகின்றன. இந்த காலப்பகுதியில் சகல வீடுகளிலும், வேலைத்தலங்களிலும், கல்வி நிறுவனங்களிலும் வர்த்தக நிலையங்களிலும், பொது இடங்களிலும் டெங்கு நுளம்புகள் உற்பத்தியாகும் இடங்களை அழிக்கும் சிரமதானப்பணி ஏற்பாடு செய்யப்படவேண்டும். இக்காலப் பகுதியில் சுகாதார வைத்திய அதிகாரிகளின் ஏற்பாட்டில் மேற்பார்வைக்குழுக்கள் வீடுகளையும் , வேலைத்தலங்களையும் , கல்வி நிறுவனங்களையும் , வர்த்தக நிலையங்களையும் பார்வையிடுவர். இக்குழுக்களில் சுகாதார திணைக்கள, பிரதேச செயலக , உள்ளூராட்சி மன்ற மற்றும் பொலிஸ் உத்தியோகத்தர்கள் பங்குபற்றுவர் எனவே யாழ் மாவட்டத்தில் டெங்கு நோயைக் கட்டுப்படுத்த ஒத்துழைப்பு வழங்குமாறு அனைவரிடமும் கோரிக்கை விடுப்பதாக பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கலாநிதி ஆ. கேதீஸ்வரன் குறிப்பிட்டுள்ளார். -யாழ். நிருபர் பிரதீபன்- https://adaderanatamil.lk/news/cmfat3qgx009qqplpo0zf89ka

இலங்கையில் ஐஸ் போதைப்பொருள் தொழிற்சாலை; விசாரணைகள் தீவிரம்!

3 weeks 1 day ago
“கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி; சம்பத் மனம்பேரியை பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரிக்க அனுமதி! 08 Sep, 2025 | 11:01 AM “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்தி தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரியை 7 நாட்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைத்து விசாரணை செய்ய மேல்மாகாண வடக்கு பொலிஸ் குற்றப் புலனாய்வு பிரிவுக்கு வலஸ்முல்ல நீதவான் நீதிமன்றம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (07) அனுமதி வழங்கியுள்ளது. மித்தெனியவில் உள்ள காணி ஒன்றில் கடந்த வெள்ளிக்கிழமை (05) மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போது, “கெஹெல்பத்தர பத்மே”வின் ஐஸ் போதைப்பொருள் உற்பத்திக்கு பயன்படுத்தப்படும் 50 ஆயிரம் கிராம் இரசாயனங்கள் கண்டுபிடிக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸாரால் நடத்தப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி கடந்த சனிக்கிழமை (06) கைதுசெய்யப்பட்டார். கைதுசெய்யப்பட்ட முன்னாள் பிரதேச சபை உறுப்பினர் சம்பத் மனம்பேரி நேற்றைய தினம் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்தோனேசியாவில் குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகள் மற்றும் இந்தோனேசியா பொலிஸாரால் 7 நாட்களாக மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பு நடவடிக்கையின் போது “கெஹெல்பத்தர பத்மே”, “கொமாண்டோ சலிந்த” மற்றும் “பாணந்துறை நிலங்க” உள்ளிட்ட 6 பேர் அடங்கிய பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 27 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டது. இதனையடுத்து “கெஹெல்பத்தார பத்மே” உள்ளிட்ட ஐந்து பேர் கொண்ட பாதாள உலக கும்பல் ஆகஸ்ட் மாதம் 31 ஆம் திகதி இலங்கைக்கு நாடு கடத்தப்பட்தையடுத்து அவர்கள் பொலிஸ் தடுப்பு காவலில் வைக்கப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/224503

'வாரத்திற்கு 2 அல்லது 3 பேர் மரணம்' - இந்த கிராமத்தில் என்ன நடக்கிறது? தலித் மக்கள் அச்சம்

3 weeks 1 day ago
படக்குறிப்பு, "கிராமத்தின் நிலைமை அச்சமாக இருப்பதாக" கூறுகிறார் சீதம்மா கட்டுரை தகவல் கரிகிபட்டி உமாகாந்த் பிபிசிக்காக 8 செப்டெம்பர் 2025, 03:14 GMT புதுப்பிக்கப்பட்டது 3 மணி நேரங்களுக்கு முன்னர் ஆந்திர பிரதேசத்தின் குண்டூருக்கு அருகேயுள்ள துரகபளம் எனும் கிராமத்தில் அடுத்தடுத்து நிகழும் திடீர் மரணங்கள் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது, குறிப்பாக இந்த மரணங்களால் அங்குள்ள தலித் சமூகத்தினர் கலங்கிப் போயுள்ளனர். குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி கூறுகையில், அந்த கிராமத்தில் எஸ்சி காலனியைச் சேர்ந்த 29 பேர், கடந்த ஐந்து மாதங்களில் உயிரிழந்துள்ளதாக தெரிவித்தார். எனினும், இந்த எண்ணிக்கை இன்னும் அதிகமாக இருக்கலாம் என கிராமத்தினர் கூறுகின்றனர். படக்குறிப்பு, அரசு மருத்துவ முகாம் அமைத்துள்ளது, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்து வருகிறது இதுதொடர்பான தங்கள் கவலைகளை பிபிசியிடம் எஸ்சி காலனி பகுதியை சேர்ந்த மக்கள் வெளிப்படுத்தியுள்ளனர். ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அவர்கள் தெரிவித்தனர். இவர்களுள் இளைஞர்கள் முதல் மூத்த குடிமக்கள் வரை அடங்குவர். இதுதொடர்பாக, சில தினங்களுக்கு முன்பு அரசு கருத்து தெரிவித்தது. கிராமத்தில் மருத்துவ முகாம் அமைத்து, அனைவருக்கும் ரத்தப் பரிசோதனை செய்தது. காய்ச்சல் உள்ளிட்ட அறிகுறி கொண்டவர்கள் மருத்துவமனைகளுக்கு சிகிச்சைக்காக அனுப்பப்படுகின்றனர். பட மூலாதாரம், x.com/ncbn படக்குறிப்பு, ஆந்திர பிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு 'ஒரு வாரத்தில் கண்டறியப்படும்' - முதலமைச்சர் சந்திரபாபு துரகபளம் கிராமத்தில் நிலவும் தற்போதைய சூழலை சுகாதார அவசரநிலையாக கருதி நடவடிக்கை எடுக்குமாறு, ஆந்திரபிரதேச முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார். சுகாதார அமைச்சர் சத்யகுமார் மற்றும் அதிகாரிகளுடன் அமராவதியில் அவசர கூட்டம் ஒன்றையும் அவர் நடத்தியுள்ளார். அந்த கிராமத்தில் உள்ள அனைவருக்கும் 42 விதமான மருத்துவப் பரிசோதனைகளை நடத்த சந்திரபாபு உத்தரவிட்டுள்ளார். மரணத்தை ஏற்படுத்தும் நோய் என்ன என்பதை ஒரு வாரத்தில் கண்டறிய அறிகுறிகள் குறித்து தீவிர ஆய்வு மேற்கொள்ளுமாறும் அவர் உத்தரவிட்டுள்ளார். அந்த கிராமத்தில் யாரும் சமைக்க வேண்டாம் என்றும் எவ்வித உணவை உட்கொள்வதோ அல்லது நீரை பருகுவதோ கூடாது என முதலமைச்சர் கேட்டுக் கொண்டுள்ளார். இன்னும் சில நாட்களுக்கு அங்குள்ள மக்களுக்கு மூன்று வேளை உணவு வழங்குமாறு அதிகாரிகளுக்கு அவர் அறிவுறுத்தியுள்ளார். படக்குறிப்பு, தனியார் மருத்துவமனையில் பரிசோதித்த போது தன் தாயின் சிறுநீரகங்கள் செயலிழந்துவிட்டது என்று கூறப்பட்டதாக துரகபளம் கிராமத்தை சேர்ந்த விஜயராமராஜு கூறுகிறார் 'திடீரென இறந்தனர்' - கிராம மக்கள் "இரு மாதங்களுக்கு முன்பு என் அம்மாவுக்கு வயிற்றுக்கோளாறு ஏற்பட்டது, அவரை உள்ளூர் மருத்துவர் ஒருவரிடம் அழைத்துச் சென்றேன், அவர் லேசான காய்ச்சல் தான் எனக்கூறி சில மருந்துகளை வழங்கினார். அதன்பின்னும் சரியாகாததால், அவரை குண்டூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன். என் அம்மாவுக்கு தொற்று ஏற்பட்டிருந்தது, சிறுநீரகங்கள் செயலிழந்தன. உடனடியாக அவருக்கு டயாலிசிஸ் செய்ய வேண்டியிருந்தது. அதற்கு 50,000 ரூபாய் செலவாகும். பணம் அதிகம் தேவைப்பட்டதால், அவரை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றேன், அங்கு அவர் மாரடைப்பால் உயிரிழந்தார். இவையனைத்தும் சில நாட்களிலேயே நடந்து முடிந்துவிட்டன," என துரகபளம் எஸ்சி காலனியை சேர்ந்த விஜயராமராஜு பிபிசியிடம் கூறினார். படக்குறிப்பு, கடந்த 5 மாதங்களில் துரகபளம் கிராமத்தை சேர்ந்த 29 பேர் உயிரிழந்ததாக, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி தெரிவித்தார் "என் கணவரை அனுமதித்த பிறகு மருத்துவமனைக்கு சென்றோம், அவருக்கு தொடர்ந்து சிகிச்சைகள் வழங்கப்பட்டன. ஆனால், அனுமதிக்கப்பட்ட ஒரு வாரத்துக்குள்ளேயே அவர் உயிரிழந்தார். அதன்பின், எங்கள் கிராமத்தில் பலரும் இறந்தனர். எனக்கும் உடல்நிலை சரியில்லை. கிராமத்தின் நிலையை கண்டு எனக்கு அச்சமாக இருக்கிறது," என, துரகபளத்தை சேர்ந்த தலித் பெண் குமாரி தன் கவலைகளை பிபிசியிடம் தெரிவித்தார். "கிராமத்தில் வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்று பேர் இறக்கின்றனர், என்னுடைய தம்பியும் இறந்துவிட்டார். ஏன் இப்படி நடக்கிறதென தெரியவில்லை. இது மிகவும் அச்சமாக இருக்கிறது," என எஸ்சி காலனியை சேர்ந்த சீதம்மா பிபிசியிடம் தெரிவித்தார். குழந்தைகளுக்கு காய்ச்சல் எஸ்சி காலனியில் உள்ள பலரும் காய்ச்சல், மூட்டு வலி மற்றும் மற்ற பிரச்னைகளுடன் மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். துரகபளம் எஸ்சி காலனியில் 230 வீடுகள் உள்ளன, தலித் சமூகத்தை சேர்ந்த சுமார் ஆயிரம் பேர் இங்கு வசிக்கின்றனர். "கடந்த இரண்டு மாதங்களாக, எங்கள் கிராமத்தில் உள்ள அனைவரும் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். சிலர் இறந்துள்ளனர். நான்காம் வகுப்பு படிக்கும் என் மகனுக்கு காய்ச்சல் ஏற்பட்டதால், வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளிக்கிறோம்," என அக்கிராமத்தை சேர்ந்த அனுஷா கூறுகிறார். "இங்கு நிலவும் சூழலால் எனக்கு மிகவும் கவலையாக இருக்கிறது." என அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, குண்டூர் மாவட்ட ஆட்சியர் நாகலஷ்மி துரகபளம் கிராமத்தில் இத்தகைய திடீர் இறப்புகளை தொடர்ந்து, கிராம தேவாலயத்தில் சில தினங்களுக்கு முன்பு அரசு மருத்துவ முகாம் நடத்தியது. சுகாதார அமைச்சர் சத்யகுமார், துறை ஆணையர் வீரபாண்டியன், மாவட்ட ஆட்சியர் நாகலட்சுமி மற்றும் பல்வேறு துறைகளை சேர்ந்த அதிகாரிகள் கிராமத்தில் ஆய்வு செய்தனர். மருத்துவப் பணியாளர்கள் பரிசோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர், கிராம மக்கள் பலரும் ஏன் திடீரென மருத்துவமனைகளில் அனுமதிக்கப்படுகின்றனர் என்பது குறித்து அறிய ரத்த மாதிரிகளை சேகரித்து வருகின்றனர். குண்டூர் மாவட்ட மற்றும் சுகாதார துறை அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், துரகபளம் கிராமத்துக்கென தனியே செல்போன் செயலி ஒன்று உருவாக்கப்பட்டுள்ளதாகவும், அதில் சுகாதார ரீதியிலான தகவல்கள் பதிவு செய்யப்படுவதாகவும் கூறினார். படக்குறிப்பு, முன்னாள் கிராம பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் தண்ணீர் மாசுபாடு காரணமா? முன்னாள் பஞ்சாயத்து தலைவர் நக்கா ஸ்ரீநிவாஸ் உட்பட கிராமத்தினர் பலரும், சில ஆண்டுகளாக அக்கிராமத்தில், குறிப்பாக தலித் மக்கள் வசிக்கும் பகுதியில் அருகிலுள்ள குவாரியிலுள்ள குளம் ஒன்றிலிருந்து விநியோகிக்கப்படும் தண்ணீர் மாசடைந்திருப்பதாகவும் அதனாலேயே தற்போதைய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கின்றனர். "திறந்த குவாரியில் உள்ள குளத்திலிருந்து தண்ணீர் எடுப்பது பெரும் தவறு. அந்த மாசடைந்த தண்ணீரை பயன்படுத்தியதாலேயே இச்சூழல் ஏற்பட்டதாக நாங்கள் நம்புகிறோம்," என ஸ்ரீநிவாஸ் பிபிசியிடம் தெரிவித்தார். இந்த குற்றச்சாட்டு குறித்து பிபிசியிடம் பேசிய மண்டல மேம்பாட்டு அதிகாரி (MPDO) ஸ்ரீநிவாஸ் கூறுகையில், "அந்த தண்ணீர் இப்போது பயன்படுத்தப்படுவது இல்லை" என்றார். குவாரியில் உள்ள குளத்திலிருந்து அக்கிராமத்துக்கு தண்ணீர் விநியோகிக்கப்படுவது சுமார் ஆறு மாதங்களுக்கு முன்பே நிறுத்தப்பட்டுவிட்டதாகவும் தற்போது கிராம மக்கள் ஆழ்துளை கிணற்றின் மூலம் தண்ணீர் எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். படக்குறிப்பு, பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு 'மதுவும் காரணமாக இருக்கலாம்': எம்எல்ஏ பிரதிபாடு எம்எல்ஏ பர்லா ரமஞ்ஜனெயலு பிபிசியிடம் கூறுகையில், ஆரம்பத்தில் இந்த இறப்புகள் ஆல்கஹாலால் ஏற்பட்டதாக நம்பப்பட்டதாகவும் எனினும் பரிசோதனை முடிவுகளுக்குப் பின்னரே உண்மையான காரணம் தெரியவரும் என்றும் அவர் கூறினார். "கிராமத்தில் உள்ள சிலர் மதுவுக்கு அடிமையானவர்கள், அதிகமாக குடிப்பார்கள். தற்போது நிறுத்தப்பட்டு விட்டாலும், மலிவான மதுபானங்கள் முன்பு இங்கு கிடைத்தன. முன்பு அதை குடித்ததன் விளைவுகள் இப்போது தெரியலாம்." என அவர் கூறினார். "இந்த கிராமத்தில் 5,600 பேர் இருந்தால், எல்லோருமா பாதிக்கப்பட்டுள்ளனர்? சிலர் மட்டுமே பாதித்திருப்பதால், அது மதுவினால் கூட இருக்கலாம். மருத்துவப் பரிசோதனைகளுக்குப் பின்னரே காரணம் தெரியவரும்," என அவர் தெரிவித்தார்., படக்குறிப்பு, சுகாதார ஆணையர் வீர பாண்டியன் 'அறிக்கை வருவதற்கு முன்பு கூற முடியாது' - சுகாதார ஆணையர் சுகாதார ஆணையர் வீர பாண்டியன் ஊடகங்களிடம் கூறுகையில், அனைத்து கோணங்களிலும் இதுகுறித்து விசாரித்து வருவதாகவும் தண்ணீர் மாசுபாடு அல்லது ஆல்கஹால் காரணமா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பதையும் விசாரித்துவருவதாகவும் கூறினார். "பரிசோதனை முடிவுகள் வருவதற்கு முன்பு வரை எதையும் தெளிவாக கூற முடியாது. இறந்த 29 பேரில் 8 பேர் பெண்கள். தண்ணீரை பரிசோதித்ததில் அதில் எந்த மாசுபாடும் இல்லை என தெரியவந்துள்ளது. எனவே இறுதி அறிக்கை வருவதற்கு முன்னால் நம்மால் முடிவுக்கு வர முடியாது," என அவர் தெரிவித்தார். பட மூலாதாரம், Kalyan படக்குறிப்பு, புர்கோல்டெரியா சூடோமல்லெய் எனும் மோசமான பாக்டீரியா தொற்று காரணமாக இருக்கலாம் என, மருத்துவர் கல்யாண் நம்புகிறார் மருத்துவர்கள் கூறுவது என்ன? குண்டூரில் உள்ள தோல் மருத்துவர் கல்யாண், துரகபளத்தை சேர்ந்த இரு நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளார். புர்கோல்டெரியா சூடோமல்லெய் (Burkholderia pseudomallei) எனப்படும் பாக்டீரியாவால் ஏற்படும் ஆபத்தான தொற்றாக கருதப்படும் மெலியோய்டோசிஸ் அவர்களுக்கு ஏற்பட்டதாக தெரிவித்தார். ரத்தத்தில் பாக்டீரியா தொற்று உள்ளதா என்பதை பரிசோதித்ததில் இது தெரியவந்ததாக கூறினார். கல்யாண் கூறுகையில், நீரிழிவு, கல்லீரல் மற்றும் சிறுநீரகம் போன்ற நாள்பட்ட நோய்களை கொண்டவர்களுக்கே இது அதிகமாக ஏற்படும் என அவர் தெரிவித்தார். காய்ச்சல், இருமல், மூட்டு வலி போன்ற அறிகுறிகள் இருந்து, அது காசநோய் இல்லை என்பது தெரியவந்தால், அவர்களுக்கு இந்த தொற்று இருக்கிறதா என்பதை பரிசோதிக்க வேண்டும். தன்னிடம் வந்த இரு நோயாளிகளில் ஒருவருக்கு தொற்று மோசமானதால் இறந்ததாக அவர் கூறினார். எனினும், குண்டூர் மாவட்ட மருத்துவ மற்றும் சுகாதார அதிகாரி விஜயலஷ்மி பிபிசியிடம் கூறுகையில், 29 பேரின் ரத்தப் பரிசோதனையில் மெலியோய்டோசிஸ் உறுதி செய்யப்படவில்லை என தெரிவித்தார். 'ஆராய குழு': அமைச்சர் சத்யகுமார் துரகபளத்தில் ஏற்படும் இந்த திடீர் இறப்புகளை அடையாளம் காண்பதிலும் அதுகுறித்து உயர் அதிகாரிகளிடம் தெரியப்படுவதிலும் தாமதம் இருந்தது உண்மைதான் என அமைச்சர் சத்யகுமார் ஒப்புக்கொள்கிறார். கிராமத்துக்கு சென்றபோது ஊடகங்களிடம் பேசிய அவர், இத்தகைய தகவல் குறைபாட்டுக்கான காரணம் குறித்து முழுமையான விசாரணை நடத்தப்படும் என கூறினார். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c4gvmv2ele4o

யாழ்.கள உறவு.... அஜீவன் காலமானார்.

3 weeks 1 day ago
நன்றி தமிழ் சிறி அண்ணா யாழ் இணையத்திற்கும் எனக்குமான தொடர்பு குறைந்து கொண்டே போகிறது ஆனால் அந்த நாளில் யாழிணையத்தில் இணைந்த பலர் முகநூலில் ஒரு சில சந்திப்புக்களின் படங்களைக் கண்டு தொடர்பு கொள்வார்கள் அப்போது இருந்த புனைப்பெயரான முனிவர் ஜீ சொன்னால் அது நீதானாடா என்ற கேள்வியுடன் நண்பராக பழகி கொண்டதுதான் அஜிவன் அண்ணையின் நட்பு இறந்த செய்தி முகநூலில் தான் கண்டேன் ஆனால் அதற்கு முதல் கிழமையில் ராஜன் ஆஸ்பத்திரில இருக்கன் மூச்சு விட முடியல நுரையீரல் பிரச்சினை என சொன்னார். படங்களையும் அனுப்பி இருந்தார். ஆழ்ந்த இரங்கல்கள் அஜிவன் அண்ணா அநேகமாக சிலருடன் நட்புக்காகவாது யாழ் நண்பர்களுடன் பேசி வருகிறேன் நலன் விசாரிப்பு நாளைக்கு எது வேண்டுமானாலும் நடக்கலாம் எதையும் கொன்டு செல்ல போவதில்லை அவரவர் நினைவுகளையாவது சுமந்து கொள்ளலாம் . அழைப்பின் வரிசையில் எல்லோரும் ............................................ யாழ் நண்பர்கள் அனைவரும் நலமாக இருங்கள் இருக்க இறைவனை பிரார்த்திக்கின்றேன். J.Rajah

பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு ஒருமுறை - மஹாபாரத கதைகளின் தொகுப்பு

3 weeks 1 day ago
கொக்கென நினைத்தாயோ ? ஆங்கில மூலம் : யமுனா ஹர்ஷவர்தன் தமிழாக்கம் : கார்த்திக் பாண்டவர்கள் வனத்தில் வசித்து வந்த காலத்தில் அவர்களை சந்திக்க ரிஷி மார்கண்டேயர் அங்கே வந்தார். அப்பொழுது அவரிடம் யுதிஷ்டிரன் பெண்களை பற்றி உயர்வாக பேசினான். அந்த சமயத்தில் அவர்களுக்கு மார்க்கண்டேயர் ஒரு கதையைக் கூறினார். முன்னொரு காலத்தில் கௌசிகன் என்றொரு ப்ராமண பிரம்மச்சாரி வசித்து வந்தார். கடுமையான விரதங்கள் மூலம் தனது பிரம்மச்சரியத்தை காத்து வந்தார். ஒருநாள் மரத்தடியில் அவர் த்யானத்தில் இருந்த பொழுது அங்கே பறந்த கொக்கு ஒன்று அவரது தலையில் எச்சமிட்டது. அதனால் கோபமடைந்த கௌசிகன் கோபத்துடன் எரித்து விடும் எண்ணத்துடன் அதை பார்த்தார். அடுத்த நொடி அந்த கொக்கு எரிந்து சாம்பலானது. தான் நினைத்தது உடனே பலித்ததை எண்ணி பெருமை அடைந்தார். அடுத்த நாள், தனது தினசரி வழக்கப்படி பிக்ஷை எடுக்க சென்றார். அவர் சென்ற வீட்டுப் பெண்மணி, தனது வீட்டு வேலையில் ஈடுபட்டிருந்ததனால் அவரைக் காத்திருக்க சொன்னாள். அவள் வேலையை முடிக்கும் தருணத்தில் அவளது கணவன் வந்து விட அவனை கவனிக்க சென்று விட்டாள். அவனுக்கு உணவளித்தப் பின், கௌசிகனுக்கு பிக்ஷை இட வந்தாள். வெகுநேரம் காத்திருந்ததால் கோபமடைந்த கௌசிகன் அவளை கோபமாய் பார்க்க அவளோ ” நீ கோபத்துடன் பார்த்தால் எரிந்து விட நான் என்ன கொக்கா? நான் எனது தர்மத்தை சரியாக கடைப்பிடிக்கும் பெண்” என்றுக் கூறினாள். தான் கொக்கை எரித்தது இவளுக்கு எவ்வாறு தெரிந்தது என கௌசிகனுக்கு ஆச்சர்யம். அதைக் கண்ட அந்த பெண் “பார்த்தால் கற்றறிந்தவர் போல் இருக்கிறீர்கள். ஆனால் , எது தர்மம் என அறியாமல் உள்ளீர்களே? உண்மையான தர்மத்தை பற்றி அறிந்து கொள்ள வேண்டுமென்றால் பக்கத்துக்கு நகரத்தில் வசிக்கும் தர்மவியாதரை சென்று சந்தியுங்கள்” எனக் கூறினாள். வியப்புடன் நகரத்திற்கு சென்ற கௌசிகனுக்கு அடுத்த ஆச்சர்யம் காத்திருந்தது. தனிமையான குடிலில் தவம் செய்து கொண்டிருக்கும் ஒருவரை எதிர்ப்பார்த்து சென்றவருக்கு தர்மவியாதர் கசாப்பு தொழில் செய்பவர் என தெரிந்ததும் அவர் என்ன தர்மத்தை தமக்கு சொல்லி விட முடியும் என்ற யோசனை தோன்றியது. கௌசிகனை கண்டதும் “தர்மம் அறிந்த பெண்மணி அனுப்பியவர்தானே தாங்கள்? சற்று காத்திருங்கள். என் வேலையை முடித்துவிட்டு வருகிறேன்” எனக் கூறி தனது வேலையை கவனிக்க துவங்கினார். மீண்டும் ஆச்சரியப்பட்ட கௌசிகன் அவருக்காக காத்திருந்தார். தன் வேலையை முடித்துக்கொண்டு கௌசிகனை அழைத்துக்கொண்டு தனது வீட்டுக்கு சென்றார் தர்மவியாதர். அங்கே சென்றும் எதுவும் கூறாமல் , அங்கே இருந்த அவரது வயதான பெற்றோருக்கு பணிவிடை செய்யத் துவங்கினார். அதுவரை தன்னைப் பற்றி மட்டும் எண்ணி வந்த கௌசிகனுக்கு உண்மையான தர்மம் என்னவென்று புரிந்தது. தனது வீட்டிற்கு திரும்பியவர் தனது பெற்றோரை கவனிக்கத் துவங்கினார். தங்கக் கூண்டில் இருந்து விடுதலை வனவாசத்தின் பொழுது ஒருமுறை ரிஷி விபாண்டகர் வசித்த ஆசிரமத்தின் வழியாக சென்றனர் பாண்டவர்கள். அப்பொழுது அவர்களுக்கு விபாண்டகரின் மகனான ரிஷி ரிஷ்யஸ்ருங்கரை பாரிய கதையை லோமேஸர் அவர்களுக்கு கூறினார். விபாண்டகர், தன் மகனுடன் துறவிகளுக்கு உண்டான வாழ்வை வசித்து வந்தார். பொதுமக்களிடம் இருந்து மிகவும் தள்ளி தனியாக வசித்து வந்த காரணத்தினால் ரிஷ்யஸ்ருங்கர் மற்ற யாருடனும் பழகியதே இல்லை. தன் தந்தையிடம் இருந்து கற்று தேர்ந்த ஞானத்துடன், பிரம்மச்சரிய வாழ்வை கடைப்பிடித்ததால் உண்டான தூய்மை மற்றும் புனிதத்தினால் அவர் மிக அதிக சக்தி உடையவராக இருந்தார். அருகில் இருந்த அங்க தேசத்தில் ஒரு முறை கடுமையான வறட்சி ஏற்பட்டு அதனால் பஞ்சம் உண்டானது. அங்க தேச அரசனான ரோமபாதா, கற்றறிந்த ஞானிகளிடம் இதற்கு தீர்வை கேக்க, அவர்கள் ரிஷ்யஸ்ருங்கரை நாட்டுக்கு வரவழைக்க சொன்னார்கள். ரிஷ்யஸ்ருங்கர் எங்கு சென்றாலும் அங்கே மழை வரும். எனவே அவரை எப்பாடுபட்டாவது அழைத்து வர கூறினார்கள். அதன் பின், ரிஷ்யஸ்ருங்கரை அழைத்து வர ரோமபாதா திட்டம் தீட்டினான். நாட்டின் மிக சிறந்த அழகிகளை அழைத்து ரிஷ்யஸ்ருங்கரை தன் நாட்டுக்கு அழைத்துவர உத்தரவிட்டான். உத்தரவுக்கு கட்டுப்பட மறுத்தால் அரசனின் கோபத்திற்கு உள்ளாக நேரிடலாம். அதே நேரத்தில், அதற்கு கட்டுப்பட்டு ரிஷியிடம் சென்றால் அவர் சபிக்க நேரிடலாம். எனவே பயந்து கொண்டே தகுந்த திட்டம் தீட்டினர் அந்த அழகிகள். ஒரு மிகப் பெரிய படகொன்றை தோட்டங்கள் நிறைந்த ஆசிரமம் போல அலங்கரித்து ரிஷ்யஸ்ருங்கரின் ஆசிரமம் அருகே கொண்டு சென்றனர். அந்த நேரத்தில் ரிஷி விபாண்டகர் எங்கோ வெளியே சென்றிருக்க, அதை உபயோகப்படுத்திக் கொண்ட அழகி தன்னை ஒரு இளம் பெண் துறவி போல் உருமாற்றிக் கொண்டு ரிஷ்யஸ்ருங்கரை காண சென்றாள். அது நாள் வரை , வேறு மனிதரையே பார்த்து அறியாத ரிஷ்யஸ்ருங்கர், அந்த இளம் துறவியை பார்த்தவுடன் மயங்கினார். அதை பயன்படுத்திக் கொண்டவள் ஆசை வார்த்தைகளாலும், மலர்களாலும் தன் தொடுகையாலும் அவரை தன் வசப்படுத்திவிட்டு அங்கிருந்து அகன்றாள். சிறிது நேரம் கழித்து தன் ஆசிரமம் திரும்பிய விபாண்டகர் எப்பொழுதும் தெளிந்து இருக்கும் தன் மகனின் முகமானாது இப்பொழுது குழம்பி எதோ ஒன்றில் மயங்கி இருப்பது போல் இருப்பதைக் கண்டு, ரிஷ்யஸ்ருங்கரிடம் என்ன நடந்தது என விசாரித்தார். நடந்ததை உள்ளவாறு அவர் விவரிக்க, கோபம் கொண்ட விபாண்டகர் அந்த இளம் பெண் துறவியை தேடி காடு முழுவதும் சுற்றினார். ஆனாலும் அவள் அகப்படவில்லை. சிலநாள் கழித்து விபாண்டகர் ஆசிரமத்தில் இல்லாத சமயத்தில் மீண்டும் அந்த படகு அங்கே வந்தது. இம்முறை ரிஷ்யஸ்ருங்கர் படகில் அந்தப் பெண்ணுடன் பேசிக் கொண்டிருந்த சமயத்திலேயே படகை அங்கிருந்து நகர்த்தி சென்றனர். அந்தப் படகு அங்க தேசத்தில் நுழைந்து, ரிஷ்யஸ்ருங்கர் கரையிலே காலடி வைத்தவுடன் நாடு முழுவதும் மழை பெய்து மண்ணை நனைத்தது. ரிஷ்யஸ்ருங்கருக்கு ராஜ உபச்சாரம் தந்து கௌரவித்த ரோமபாதா, தன் மகள் சாந்தாவையும் அவருக்கு மணம் செய்து வைத்தான். நடந்ததை அறிந்த விபாண்டகர் கோபத்துடன் அங்க தேசத்தை நோக்கி சென்றார். இதை முன்பே எதிர்பார்த்திருந்த அரசன், அவர் வரும் வழியில் அவருக்கு உபசாரங்கள் செய்வித்து மனம் குளிர்விக்க ஏற்பாடுகள் செய்திருந்தான். கோபத்துடன் தன் பயணத்தை துவங்கிய ரிஷி , அவனின் உபச்சாரங்களால் மனம் குளிர்ந்தார். தன் அரண்மனைக்கு வந்த ரிஷி விபாண்டகரை அவருக்கு உரிய மரியாதைகள் செய்வித்து நடந்ததை அவருக்கு விளக்கினான் ரோமபாதா. பின், மணமக்களை ஆசிர்வதித்த விபாண்டகர், ஆண் குழந்தை பிறக்கும் வரை அரணமனையில் இருந்துவிட்டு அதன் பின் ஆசிரமம் திரும்ப ரிஷ்யஸ்ருங்கருக்கு உத்தரவிட்டார். அவர்களுக்கு ஆண் மகவு பிறந்ததும் கானகம் சென்ற தம்பதியர், அதன் பின் துறவு வாழ்க்கை வாழ்ந்தனர். https://solvanam.com/2025/03/23/கொக்கென-நினைத்தாயோ/

உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்!

3 weeks 1 day ago
உக்ரேன் போர் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் அமெரிக்கா விஜயம்! உக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான வழிகள் குறித்து விவாதிக்க ஐரோப்பிய தலைவர்கள் திங்கள் அல்லது செவ்வாய்க்கிழமை அமெரிக்காவிற்கு வருகை தருவார்கள் என்று டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனும் “விரைவில்” பேசுவேன் என்றும், மொஸ்கோ மீது இரண்டாம் கட்டத் தடைகளை விதிக்க தனது நிர்வாகம் தயாராக இருப்பதாகவும் அமெரிக்க ஜனாதிபதி மேலும் தெரிவித்தார். மேலும் ஐரோப்பிய நாடுகள் ரஷ்ய எரிசக்தியை வாங்குவதை நிறுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார். ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்யும் நாடுகள் மீது இரண்டாம் நிலை வரிகளை விதிக்கும் ட்ரம்பின் திட்டங்களையும் ஜெலென்ஸ்கி வரவேற்றார். உக்ரேன் மீதான முழு அளவிலான படையெடுப்பு 2022 மார்ச் மாதம் தொடங்கியதிலிருந்து ரஷ்யா சுமார் $985 பில்லியன் (£729 பில்லியன்) எண்ணெய் மற்றும் எரிவாயுவை விற்றுள்ளது என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மிகப்பெரிய கொள்முதல் நாடுகள் சீனாவும் இந்தியாவும் ஆகும். ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்ய எரிசக்தி கொள்முதலை வியத்தகு முறையில் குறைத்துள்ளது – ஆனால் முழுமையாக நிறுத்தப்படவில்லை. ஜூன் மாதத்தில், 2027 ஆம் ஆண்டுக்குள் பிரஸ்ஸல்ஸ் அனைத்து கொள்முதலையும் நிறுத்துவதற்கான திட்டங்களை வகுத்தது. கடந்த மாதம், ரஷ்ய எண்ணெயை தொடர்ந்து வாங்குவதற்கான பதிலடியாக, இந்தியாவிலிருந்து வரும் பொருட்களுக்கு அமெரிக்கா 50% வரிகளை விதித்தது. எனினும் இந்திய அரசாங்கம், தனது மக்களின் பொருளாதார நலன்களுக்காக எண்ணெய் வாங்குவதில் “சிறந்த ஒப்பந்தத்தை” தொடர்ந்து பின்பற்றுவதாகக் கூறியுள்ளது. கடந்த வாரம் பெய்ஜிங்கில் நடந்த ஒரு கூட்டத்தில் சீனாவிற்கு எரிவாயு விநியோகத்தை அதிகரிப்பதாக ரஷ்யா கூறியது. இதனிடையே, கடந்த மாதம் அலாஸ்காவில் ட்ரம்ப் மற்றும் புட்டின் உச்சிமாநாடு நடத்தியதிலிருந்து ரஷ்யா உக்ரேன் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. https://akkinikkunchu.com/?p=340055

மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?;  உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம்

3 weeks 1 day ago
மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானத்திலும் மனிதப் புதைகுழியா?; உறுதிப்படுத்த வேண்டும் என்கிறது காணாமல் போனோர் அலுவலகம் மண்டைதீவு சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்படும்போது அந்தப் பகுதியில் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்பது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என காணாமல் போனோர் பற்றிய அலுவலகத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் சட்டத்தரணி ஜெகநாதன் தற்பரன் தெரிவித்தார். சமகால நிலைமைகள் தொடர்பாக ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இதனை தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் வட பிராந்தியத்தில் தனது செயற்பாடுகளை ஆரம்பிக்கும் போது மண்டைதீவு மனித புதைகுழி தொடர்பாக கிடைத்த முறைப்பாட்டுக்கமைய பொலிஸாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு காணாமல் போனோர் பற்றிய அலுவலகம் மேற்படி பகுதிக்கு சென்றது அந்தப் பகுதி சந்தேகத்துக்கிடமாக இருக்கின்றபடியால் அதனை துரிதமாக அகழ்வாராய்ச்சி செய்ய வேண்டும் என்ற கோரிக்கையை 2019 ஆம் ஆண்டிலேயே நாம் விடுத்திருந்தோம். அந்த விடயம் பொருளாதார சிக்கல் கொரோனாவுக்கு பிறகு தற்போது தலை தூக்கி இருக்கிறது. மண்டைதீவில் சர்வதேச கிரிக்கெட் மைதானம் அமைக்கப்பட இருக்கின்ற நிலையில் அந்த இடத்தில் அது திறக்கப்படுகிறதோ என்ற அச்ச சூழ்நிலை காரணமாக அந்த விவகாரம் மேற்கிளம்பியுள்ளது. இந்த விடயப் பரப்புகளில் எங்கள் கரிசனை அதிகமாக இருக்கும். மைதானம் அமைக்கப்படுவதாக இருந்தால் சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்களோ மனித எலும்புக்கூடுகளோ இல்லை என்ற உறுதிப்பாடு இருக்க வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு. அதன் பின்னரே இந்த மைதானம் அமைக்கப்பட வேண்டும்.அந்தப் பகுதி அந்த இடத்தில் இருக்குமாக இருந்தால் சம்பந்தப்பட்ட வழக்கு வரும் போது காணாமல் போனோர் பற்றிய அலுவலம் அதனை முன்வைக்கும் – என்றார். https://akkinikkunchu.com/?p=340073

செம்மணி மனிதப்படுகொலை : புதிய தகவல்கள் வெளிப்படுத்துவேன் - சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி

3 weeks 2 days ago
Published By: Vishnu 08 Sep, 2025 | 03:05 AM (நா.தனுஜா) செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகக் குறிப்பிட்டு கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் பிரதான குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பளிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷவின் மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு மீண்டும் ஒரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். பாடசாலை மாணவி கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கில் நீதிமன்றத்தினால் பிரதான குற்றவாளியாகப் பெயரிடப்பட்டு, மரண தண்டனை விதிக்கப்பட்ட லான்ஸ் கோப்ரல் சோமரத்ன ராஜபக்ஷ, அப்படுகொலை குறித்தும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் குறித்தும் தன்னிடம் கூறிய விடயங்களை உள்ளடக்கியும், இவ்விவகாரம் தொடர்பில் மீண்டும் சுயாதீன விசாரணையைக் கோரியும் அவரது மனைவி எஸ்.சி.விஜேவிக்ரம 10.07.2025 எனும் திகதியிடப்பட்ட கடிதமொன்றை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு அனுப்பிவைத்திருந்தர்ர. அவற்றின் பிரதிகள் பிரதமர் ஹரினி அமரசூரிய மற்றும் நீதியமைச்சர் ஹர்ஷன நாணயக்கார ஆகியோருக்கும் அனுப்பிவைக்கப்பட்டிருந்தன. அக்கடிதத்தில் 7 ஆம் இராணுவக் காலாட்படைத் தலைமையகத்தில் படுகொலை செய்யப்பட்டு செம்மணி சோதனைச்சாவடிக்குக் கொண்டுவரப்பட்ட கிருஷாந்தி குமாரசுவாமியினதும், அவரது குடும்பத்தினரினதும் சடலங்களை கப்டன் லலித் ஹேவாகேயின் ஆணைக்கு அமைவாகப் புதைத்ததைத் தவிர தனது கணவர் வேறெந்தக் குற்றத்தையும் புரியவில்லை எனவும், செம்மணி மனிதப்புதைகுழி விவகாரம் தொடர்பில் சர்வதேச விசாரணையொன்று முன்னெடுக்கப்படும் பட்சத்தில் அதில் சாட்சியமளிப்பதற்கு சோமரத்ன ராஜபக்ஷ தயாராக இருப்பதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது. அதனைத்தொடர்ந்து சோமரத்ன ராஜபக்ஷ மேலும் பல வெளிப்படுத்தல்களைச் செய்திருந்தார். இவ்வாறானதொரு பின்னணியில் கடந்த ஜுலை மாதம் ஜனாதிபதிக்கு அனுப்பிவைக்கப்பட்ட கடிதம் தொடர்பில் இதுவரையில் எந்தவொரு பதிலும் கிட்டாததன் காரணமாக, சோமரத்ன ராஜபக்ஷ மீண்டும் தனது மனைவியின் ஊடாக கடந்த வாரம் ஜனாதிபதிக்கு மற்றுமொரு கடிதத்தை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை விவகாரத்தில் தனது வகிபாகம், தான் உள்ளடங்கலாக மரண தண்டனை விதிக்கப்பட்ட ஏனைய 5 இராணுவத்தினரும் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்டமை, இவ்விவகாரத்தில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவின் வகிபாகம் என்பன உள்ளடங்கலாக சோமரத்ன ராஜபக்ஷவினால் ஏற்கனவே அனுப்பிவைக்கப்பட்ட கடிதத்திலும், முன்னைய வெளிப்படுத்தல்களிலும் குறிப்பிட்டிருந்த விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன. அதேபோன்று செம்மணி மனிதப்படுகொலை தொடர்பில் இதுவரையில் வெளிப்படுத்தாத விடயங்களை சகல ஊடகங்களுக்கும், சர்வதேச சமூகத்துக்கும், நீதித்துறைக்கும் வெளிப்படுத்துமாறு தனது கணவரான சோமரத்ன ராஜபக்ஷ வழங்கிய ஆலோசனைக்கு அமைவாக அவ்வெளிப்படுத்தல்களைச் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கவிருப்பதாகவும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமாத்திரமன்றி 1996 ஆம் ஆண்டில் வடக்கில் இடம்பெற்ற செம்மணி மனிதப்படுகொலை, வடக்கில் சித்திரவதைக்கூடங்கள் நடாத்தப்பட்ட விதம், அவற்றுடன் தொடர்புடைய இராணுவ உயரதிகாரிகள் தொடக்கம் ஜனாதிபதி வரை அவற்றை செயற்படுத்திய சகல அதிகாரிகளினதும் பெயர் விபரங்கள் போன்றவற்றை இந்நாட்டு மக்கள் தெரிந்துகொள்ளக்கூடியவகையில் வெளிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் இவ்விவகாரம் தொடர்பில் விசேட ஜனாதிபதி ஆணைக்குழுவொன்றை நியமித்து விசாரணைகளை முன்னெடுக்குமாறும், சம்பந்தப்பட்ட சகல அதிகாரிகளையும் சட்டத்தின்முன் நிறுத்துமாறும், பாதிக்கப்பட்ட யாழ் மக்களுக்கான நீதியை நிலைநாட்டுமாறும் அக்கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/224486

சென்னை உள்பட உலகம் முழுவதும் சந்திர கிரகணம் எப்படி தெரிந்தது?

3 weeks 2 days ago
பட மூலாதாரம், AAMIR QURESHI/AFP via Getty Images படக்குறிப்பு, பாகிஸ்தானின் இஸ்லாமாபாத் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் இது. நிலவின் மேற்பரப்பில் உள்ள பள்ளங்கள் அடர் சிவப்பு நிறத்தில் இருப்பதை இந்த புகைப்படம் அழகாக காட்சிப்படுத்தியுள்ளது. 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியா உள்பட உலகின் பல்வேறு பகுதிகளில் உள்ள வானியல் ஆர்வலர்கள் ஒரு முழு சந்திர கிரகணத்தின் போது முழு நிலவும் செந்நிறமாக காட்சியளிக்கும் ஒரு அழகான காட்சியை நேற்று இரவு கண்டு ரசித்தனர். பூமியின் நிழலில் கடந்து செல்லும் போது, நிலவு ஆழமான சிவப்பு நிறத்தில் காட்சியளிக்கும், இது 'பிளட் மூன்' அல்லது "ரத்த நிலவு" என்று அழைக்கப்படும் கவர்ச்சிகரமான தோற்றத்தில் காணப்படும். பூமியின் வளிமண்டலத்தின் வழியாக சூரிய ஒளி செல்லும்போது நீல ஒளியை வடிகட்டி, சிவப்பு ஒளி நிலவை நோக்கி வளைக்கப்படுவதால் இது ஏற்படுகிறது. சூரியனிலிருந்து பூமிக்கு எதிர் பக்கத்தில் நிலவு வரும்போது முழு நிலவு அல்லது பெளர்ணமி ஏற்படுகிறது. அப்போது நம்மை நோக்கி இருக்கும் நிலவின் முழு பக்கமும் ஒளிரும். இந்திய நேரப்படி இரவு 9:57 மணிக்கு பூமியின் நிழல் நிலவின் மீது விழ தொடங்கியது. இரவு 11:01 மணிக்கு பூமியின் நிழல் நிலவு முழுவதையும் மறைத்த்து, முழு சந்திர கிரகணம் தோன்றியது. அப்போது நிலவு செந்நிறமாக தோன்ற ஆரம்பித்தது. இந்தக் காட்சி இந்தியா, பாகிஸ்தான், சீனா, ரஷ்யா, டென்மார்க், எகிப்து, என உலகின் பல்வேறு நாடுகளில் தெரிந்தது. எனினும் லண்டன் உள்ளிட்ட சில பகுதிகளில் வானிலை காரணமாக சந்திர கிரகணத்தை காண முடியாமல் மக்கள் ஏமாற்றம் அடைந்தனர். பட மூலாதாரம், PTI படக்குறிப்பு, தமிழ்நாட்டில் சென்னையில் நேற்று இரவு தெரிந்த சந்திர கிரகணம். பட மூலாதாரம், MADS CLAUS RASMUSSEN/Ritzau Scanpix/AFP via Getty Images படக்குறிப்பு, டென்மார்க் நாட்டின் தலைநகர் கோபன்ஹேகனில் முழு சந்திர கிரகணத்தை மக்கள் கூடி கண்டு ரசித்தனர். பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, ரஷ்யாவின் செயின்ட் பீட்டர்ஸ்பர்க் பகுதியில் மக்கள் பார்வைக்கு தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, சுவிட்சர்லாந்து நாட்டின் போட்டன்ஸ் பகுதியில் ஒரு தேவாலய கோபுரத்துக்கு மேலே தெரியும் சந்திர கிரகணம் பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரேலியாவின் தலைநகர் சிட்னி நகரின் வானில் தென்பட்ட சந்திர கிரகணத்தின் காட்சி. பட மூலாதாரம், EPA படக்குறிப்பு, தென் ஆப்பிரிகாவில் ஜோஹனஸ்பர்க் நகரில் தெரிந்த சந்திர கிரகணம் பட மூலாதாரம், Reuters படக்குறிப்பு, எகிப்து தலைநகர் கெய்ரோவில் அடர் செந்நிறத்தில் தெரிந்த நிலவு. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவில் நேற்று மாலை வானில் தெரிந்த சந்திர கிரகணம். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/ceq2xpd272go

நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்!

3 weeks 2 days ago
நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக தமிழ் நீதியரசர் நியமனம்! உயர்நீதிமன்ற நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா நீதிச்சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவால் நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் பிரதம நீதியரசர் ஜனாதிபதி சட்டத்தரணி முர்து பெர்னாண்டோ சேவையில் இருந்து ஓய்வுப்பெற்றதை தொடர்ந்து ஏற்பட்ட பதவி வெற்றிடத்துக்கு இவர் நியமிக்கப்பட்டுள்ளார். உயர்நீதிமன்ற நீதியரசர், ஜனாதிபதி சட்டத்தரணி எஸ்.துரைராஜா 1988 ஆம் ஆண்டு சட்டத்தரணியாக பதவியேற்றார். அதனைத் தொடர்ந்து 1989 ஆம் ஆண்டு அரச தரப்பு சட்டத்தரணியாக இணைந்துக் கொண்டார். அதன்பின்னர் மேலதிக சொலிட்டர் ஜெனராலாக பதவிக்கு நியமிக்கப்பட்டார். 2016 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதியால் எஸ்.துரைராஜா ஜனாதிபதி சட்டத்தரணியாக நியமிக்கப்பட்டு அதே ஆண்டு மேன்முறையீட்டு நீதியரசராக நியமிக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 2019 ஆம் ஆண்டு உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கப்பட்ட நிலையில் தற்போது நீதிச் சேவைகள் ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://newuthayan.com/article/நீதிச்_சேவைகள்_ஆணைக்குழுவின்_உறுப்பினராக_தமிழ்_நீதியரசர்_நியமனம்!

பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரின் கைதால் ஒரு சில அரசியல்வாதிகள் கலக்கம் - வசந்த சமரசிங்க

3 weeks 2 days ago
Published By: Vishnu 08 Sep, 2025 | 02:51 AM (இராஜதுரை ஹஷான்) பாதாள குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள் என வர்த்தகத்துறை மற்றும் உணவு பாதுகாப்பு அமைச்சர் வசந்த சமரசிங்க தெரிவித்தார். கொழும்பில் ஞாயிற்றுக்கிழமை (7) நடைபெற்ற நிகழ்வில் கலந்துக்கொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, ஊழல்வாதிகளுக்கு சட்டத்தின் ஊடாக நடவடிக்கை எடுக்கும் போது எதிர்க்கட்சிகள் அனைத்தும் தற்போது ஒன்றிணைந்துள்ளன. எதிர்க்கட்சிகளின் உறுப்பினர்கள் அனைவரும் நண்பர்கள் என்பதை நாட்டு மக்கள் இதனூடாக விளங்கிக் கொள்ள வேண்டும்.இவர்கள் ஆட்சியில் இருந்தால் அவர்களின் நண்பர்களான ஊழல்வாதிகள் அனைவரும் பாதுகாக்கப்படுவார்கள். ஊழல் மோசடியினால் தான் இந்த நாடு வங்குரோத்து நிலையடைந்தது. ஆகவே ஊழல்வாதிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கும் போது அதனை அரசியல்பழிவாங்கள் என்று எவ்வாறு குறிப்பிடுவது. பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினரை கைது செய்தவுடன் ஒருசில அரசியல்வாதிகள் கலக்கமடைந்துள்ளார்கள்.இதனையும் அரசியல் பழிவாங்கல் என்று எதிர்க்கட்சியினர் குறிப்பிடாமல் இருப்பது ஆச்சரியத்துக்குரியது. போதைப்பொருள் வியாபாரத்துக்கும்,அரசியல்வாதிகளுக்கும் இடையில் தொடர்புள்ளது என்பதை நாட்டு மக்கள் வெகுவிரைவில் உறுதியாக அறிந்துக்கொள்வார்கள்.கடந்த அரசாங்கங்களின் அரச அனுசரணையில் பாதாள குழுக்கள் மற்றும் போதைப்பொருள் வர்த்தகர்கள் பாதுகாக்கப்பட்டார்கள். பாதாளக் குழுக்களின் முன்னிலை தரப்பினர் கைது செய்யப்பட்டு அவர்களினால் வெளிப்படுத்தப்படும் விடயங்களால் ஜனாதிபதி கனவு காண்பவர்கள் தற்போது அச்சமடைந்துள்ளார்கள்.இவர்கள் தான் கடந்த காலங்களில் பாதாளக்குழுக்களை போசித்தார்கள்.அதன் விளைவையே நாடு இன்று எதிர்கொள்கிறது என்றார். https://www.virakesari.lk/article/224484

இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம்

3 weeks 2 days ago
இன்று முதல் கடுமையாகும் போக்குவரத்து சட்டம் செய்திகள் போக்குவரத்து சட்டம் இன்று (08) முதல் கடுமையாக அமுல்படுத்தப்படும் என போக்குவரத்து அமைச்சு அறிவித்துள்ளது. இதற்காக வாகனங்களை சோதனை செய்ய நாடு முழுவதும் பொலிஸ் அதிகாரிகள் பணியில் ஈடுபடுத்தப்படுவார்கள் என போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன சுட்டிக்காட்டியுள்ளார். போக்குவரத்திற்கு தகுதியற்ற வாகனங்கள் மற்றும் வண்ணங்கள் மாற்றப்பட்ட வாகனங்கள் குறித்தும் இதன்போது சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அத்துடன், வெவ்வேறு வண்ணங்களில் கூடுதல் விளக்குகளுடன் இயங்கும் வாகனங்கள், வாகனங்களின் முன், பின் மற்றும் இரு பகுதிகளின் சித்திர வடிவமைப்புகள் மற்றும் விளம்பரங்கள் பிரசுரித்தல் மற்றும் சட்டவிரோத மேலதிக உதிரி பாகங்கள் தொடர்பிலும் சோதனை செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. அதிக சத்தம் எழுப்பும் ஒலிப்பான் மற்றும் அதிக சத்தம் எழுப்பும் சைலன்சர்கள் கொண்ட வாகனங்கள் தொடர்பாக இன்று முதல் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்த பொலிஸாருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக போக்குவரத்து பிரதியமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்தார். https://www.samakalam.com/இன்று-முதல்-கடுமையாகும்/

ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை!

3 weeks 2 days ago
ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் தீர்மானம் எடுக்கவில்லை! adminSeptember 8, 2025 ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றம் செல்வது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் எடுக்கவில்லை என ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலையில், முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்தில் அங்கம் வகிப்பாரானால், அது நாட்டுக்கு நல்லது என்றும் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்க நாடாளுமன்றத்துக்கு செல்வதாக இருந்தால், சரியான நேரம், காலம் பார்த்து அறிவிப்பார். ஆனால், இதுதொடர்பில் எந்த கலந்துரையாடலும் தற்போதுவரை இடம்பெறவில்லை எனவும் ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் ருவன் விஜேவர்தன தெரிவித்துள்ளார். https://globaltamilnews.net/2025/220197/

ரஷ்யா - உக்ரைன் போர் செய்திகள்

3 weeks 2 days ago
ரஷ்யா vs யுக்ரேன்: அதிநவீன ஆயுதங்களை தேடும் போர்க்களத்தில் எதிரியை ஏமாற்றும் 'பழைய தந்திரம்' பட மூலாதாரம், Na Chasi படக்குறிப்பு, ரேடார்கள், கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் உள்ளிட்ட அனைத்தும் போலியாக இருக்கலாம். கட்டுரை தகவல் விட்டலி ஷெவ்சென்கோ பிபிசி செய்தியாளர் 7 செப்டெம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 2023ஆம் ஆண்டு ஜூன் மாதம் ரஷ்ய போருக்கு ஆதரவான சமூக ஊடகங்களில் ஒரு வீடியோ பரவியது. அது யுக்ரேனிய டாங்கிகளை ட்ரோன் மூலம் தாக்கி வெடிக்கச் செய்யும் வீடியோதான் அது. ஆனால் ரஷ்யா, யுக்ரேன் இடையிலான போர் நாம் காண்பதைப் போல இல்லை. இந்த வீடியோவிற்குப் பிறகு யுக்ரேன் ஒரு வீடியோவை வெளியிட்டது. அதில் சேதமடைந்த டாங்கியை, ராணுவ வீரர் ஒருவர் சிரித்தபடி காண்பித்து " எனது மர டாங்கியை உடைத்துவிட்டனர்" எனக் கூறுகிறார். அங்கிருந்த டாங்கி ரஷ்யாவை குழப்புவதற்காக யுக்ரேன் படைகள் ஏற்பாடு செய்த பலகையால் ஆன ஏமாற்றுவேலை ஆகும். எதிரிகளை ஏமாற்றி வெடிபொருட்கள், அவர்களின் நேரம் மற்றும் முயற்சியை வீணாக்குவதற்காக யுக்ரேன் மற்றும் ரஷ்யா என இருநாடுகளும் ஆயிரக்கணக்கான போலி ராணுவ மாதிரிகளை வடிவமத்துள்ளதைப் போலவே இதுவும் ஒரு உத்தியாகும். சிறிய ரேடார்கள் மற்றும் கையெறி குண்டுகள், ஜீப்புகள், லாரிகள், டாங்கிகள் வீரர்கள் என கிட்டத்தட்ட அங்கிருக்கும் அனைத்தும் போலியாக இருக்கலாம். இந்த போலி மாதிரிகள் பெரும்பாலும் தட்டையான பொதிகளாகவோ, ஊதக்கூடிய பலூன் போன்றவையாகவோ, 2D அல்லது ரேடியோ அலைகளை பிரதிபலிப்பதன் மூலம் ஒரு டாங்கியின் ரேடார் மாயை என உருவாக்கப்பட்டிருக்கலாம். ஒருவேளை யுக்ரேனில் ஒரு ஆயுதத்தை செலுத்தினால் அதில் பாதிக்கப்படுவதில் பாதி இந்த போலி மாதிரிகளாகவே இருக்கும். பலூன் பீரங்கிகள் பட மூலாதாரம், Back and alive படக்குறிப்பு, M777 ஹோவிட்சர் பீரங்கி மிகவும் பிரபலமானதாகும். யுக்ரேன் ராணுவம் பயன்படுத்துவதும் போலிகளிலேயே பிரிட்டிஷ் தயாரித்த M777 ஹோவிட்சர் பீரங்கிதான் மிகவும் பிரபலமானதாகும். மேற்கத்திய நட்பு நாடுகள், 150-க்கும் மேற்பட்ட எளிதில் கையாளக்கூடிய பீரங்கிகளை யுக்ரேனுக்கு வழங்கியதாக நம்பப்படுகிறது. இது யுக்ரேனிய வீரர்களால் 'மூன்று கோடாரிகள்' என அழைக்கப்படுகிறது. யுக்ரேனிய ராணுவம் பயன்படுத்தும் பல ஆயுதங்களைப்போலவே, இந்த போலி மாதிரிகளையும் தன்னார்வலர்கள் தயாரித்துக் கொடுத்து உதவிவருகிறார்கள். நா சாஸி (Na Chasi) என்ற தன்னார்வ அமைப்பு மட்டும் யுக்ரேனிய ராணுவத்திற்கு சுமார் 160 மாடல் M777-களை வழங்கியுள்ளதாக ரஸ்லன் க்ளிமென்கோ கூறுகிறார். இவற்றை ஒன்றுசேர்க்க பெரிய கருவிகள் எதுவும் தேவைப்படாது. 2 பேர் சேர்ந்து மூன்றே நிமிடங்களில் இதை தயார் செய்துவிட முடியும் என்பதே இவர்களை மிகவும் பிரபலமாக காட்டுவதாக க்ளிமென்கோ தெரிவித்துள்ளார். "எத்தனை பொருட்களை வழங்குகிறோம் என்பது முக்கியமில்லை. அவையனைத்தும் நல்ல காரியத்திற்காகவே பயன்படுத்தப்படுகின்றன" என அவர் பிபிசியிடம் கூறினார். ரியாக்டிவ்னா போஷ்டா என்ற மற்றொரு தன்னார்வ அமைப்பைச் சேர்ந்த பாவ்லோ நரோஷ்னி, பொதுவாக ஒரே சமயத்தில் 10 முதல் 15 M777 பீரங்கிகளை தயாரிப்போம் என தெரிவித்தார். ரியாக்டிவ்னா போஷ்டாவின் மாதிரிகள் பொதுவாக பலகையில் செய்யப்படுகின்றன. இவை 500 முதல் 600 டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.44,000 முதல் ரூ.52,000 வரை) மதிப்பு கொண்டவை. ரஷ்யா அடிக்கடி 35,000 டாலர் மதிப்புள்ள லான்செட் காமிகாஸ் (Lancet kamikaze) ட்ரோன்கள் மூலம்தான் குறிவைக்கும். "இப்போது நீங்களே கணக்கிட்டுப் பாருங்கள்" என நரோஷ்னி கூறுகிறார். ட்லோயா என அழைக்கப்படும் அவரின் ஒரு M777 போலி பீரங்கி ஓராண்டுக்கும் மேலாக தரைப்படையில் உழைத்துள்ளது. இது 14 லான்செட் ட்ரோன்களை எதிர்கொண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். ஒவ்வொரு முறையும் யுக்ரேன் படைகள் இதை டேப் போட்டு ஒட்டியோ அல்லது ஸ்க்ரூக்களை மாற்றியே மீண்டும் செயல்படுத்துவார்கள் என அவர் கூறினார். சக்கரங்களின் தடம் மற்றும் போலி கழிவறைகள் பட மூலாதாரம், Apate படக்குறிப்பு, ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. இந்த போலி மாதிரிகள் எப்படி வரிசைப்படுத்தப்படுகின்றன என்பது மிகவும் முக்கியம். எதிரிகளை ஏமாற்றி அவர்களை தாக்குதலை தொடரத் தூண்டுவதற்கு உண்மையான ராணுவ நிலைகளைப் போலவே இருக்கவேண்டும். அதனால் வாகனங்களின் சக்கரங்களின் தடம், கழிவறைகள் போன்றவை அச்சுஅசலாக இருக்கவேண்டும். இதனால் எதிரிகள் மட்டுமல்ல அதிகாரிகளும் கூட சில சமயங்களில் ஏமாந்துவிடுவார்கள். இதுபோன்ற மாதிரிகளால் அதிகாரி ஒருவர் ஏமாந்ததற்கான உதாரணமும் எங்களிடம் உள்ளது. அவர் "பீரங்கிகளை வரிசைப்படுத்த யார் உத்தரவிட்டது? M777 பீரங்கிகளை எங்கிருந்து வாங்கினீர்கள்?" எனக் கேட்டதாக யுக்ரேனின் 33வது பிரிக்கப்பட்ட இயந்திரமயமாக்கப்பட்ட படைப்பிரிவைச் சேர்ந்த அதிகாரி ஒருவர் கூறினார். இவர் இன்னொரு உத்தியையும் குறிப்பிடுகிறார். அது என்னவென்றால் உண்மையான போர்க்களத்தில் பயன்படுத்தப்பட்ட பிறகு உண்மையான பீரங்கிகளை உடனடியாக அகற்றிவிட்டு அதற்கு பதிலாக போலியானதை மாற்றிவிடுவார்களாம். "இவர்கள் எதிரிகளை ஏமாற்றி, அவர்களின் விலையுயர்ந்த உபகரணங்களை ஒன்றுமே இல்லாத போலிகளிடம் வீணடையச் செய்வதில் வல்லவர்கள். இதுபோல நமக்கு நிறைய தேவை" என்கிறார். ரஷ்யாவிடமும் விலையுயர்ந்த மற்றும் பல்வேறு ரகங்களில் போலி மாதிரிகள் உள்ளன. ரஷ்யாவின் சமீபத்திய வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ட்ரோன்களில் பெரும்பாலானவை மலிவான மாதிரிகள் என யுக்ரேனிய ராணுவம் கூறுகிறது. "இது இப்போது 50-50 என உள்ளது. 50% உண்மையான ட்ரோன்களும், 50% மாதிரிகளுமாக உள்ளன. "எங்கள் வான் பாதுகாப்புகளை முறியடித்து, விலையுயர்ந்த ஏவுகணையைப் பயன்படுத்தி மலிவான ட்ரோனை சுட்டு வீழ்த்த நம்மை ஏமாற்றுவதே அவர்களின் குறிக்கோள்" என யுக்ரேனிய விமானப்படை செய்தித் தொடர்பாளர் யூரி இஹ்னாட் கூறுகிறார். சில நேரங்களில், இது பள்ளி மாணவர்களால் ஒன்றாக இணைக்கப்பட்டதைப்போல தோன்றும் ஒரு பலகை மாதிரியாகவும் இருக்கும். பட மூலாதாரம், People's Front Novosibirsk படக்குறிப்பு, போரில் போலி மாதிரிகளை வைப்பது ஒன்றும் புதிது கிடையாது. இது வானில் இருக்கும்போது, யுக்ரேனிய ரேடார் மூலம் பார்க்கையில் உண்மையான ராணுவ ட்ரோன்களைப் போலவே இருக்கும் என கர்னர் இன்ஹாட் கூறுகிறார். ரஸ்பல் என்ற ரஷ்ய நிறுவனம் வான்வழி மற்றும் செயற்கைக்கோள் கண்காணிப்பை ஏமாற்றும் வகையில் 2D மாதிரிகளை தயாரிக்கிறது. இது எஞ்சின் வெப்பம், ரேடியோ சிக்னல்கள், வாக்கி-டாக்கி, பிரதிபலிப்பான் என எதிரிகளை ஏமாற்ற அனைத்தையும் போலியாக வடிவமைக்கிறது. உண்மையில் ராணுவ வீரர்களும் போலியாக வடிவமைக்கப்படுகின்றனர். நோவோசிபிர்ஸ்கில் உள்ள ரஷ்ய ஆதரவு பெற்ற மக்களைக் கொண்ட தன்னார்வலர்கள், ராணுவ சீருடை அணிந்திருக்கும் போலி வீரர்களை உருவாக்குகிறார்கள். யுக்ரேனின் வெப்ப கேமராக்களை ஏமாற்ற, மனித உடலின் வெப்பத்தைப் பிரதிபலிக்கும் வகையில், ஜாக்கெட்டுகளுக்கு அடியில் டம்மிகளின் உடல்களைச் சுற்றி வெப்பமூட்டும் கம்பிகளைச் சுற்றி வைக்கின்றனர். ஆனால், போரில் இந்த போலி மாதிரிகளை வைக்கும் யோசனை ஒன்றும் புதிது கிடையாது. டி-டே (D-Day) சமயத்தில்கூட எதிரிகளை திசைதிருப்புவதற்காக இங்கிலாந்து, ராணுவ படைகள், டாங்கிகள், விமானங்கள் என அனைத்தையும் முழுக்க முழுக்க போலியாக வடிவமைத்திருந்தது. களத்தின் உண்மையான நிலவரத்தை மறைப்பதற்காக இந்த உத்தி கையாளப்பட்டது. மேலும் எதிரிகளை ஆச்சர்யப்படுத்த நட்பு நாடுகளை ஆயத்தப்படுத்தவும் பயன்படுத்தப்படுகிறது. இரண்டாம் உலகப்போருக்கு பிறகு ராணுவ தொழில்நுட்பம் பெரிதும் வளர்ச்சியடைந்துள்ளது. உதாரணமாக போர்க்களத்தில் பயன்படுத்தப்படும் ட்ரோன்களும் தானியங்கி கருவிகளும் பெரிய கண்டுபிடிப்புகளாக உள்ளன. ஆனால், என்னதான் புதுப்புது ஆயுதங்களை பயன்படுத்தினாலும், இதுதான் தந்திரமாக உள்ளது. மிகச்சிறிய பொம்மை போன்ற ஒன்று கூட போரில் மிகப்பெரிய பங்காற்ற முடியும். - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cly02422gpqo
Checked
Wed, 10/01/2025 - 03:59
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed