ஊர்ப்புதினம்

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு

2 months 1 week ago

pm.jpg?resize=745%2C375&ssl=1

தரம் 6 சர்ச்சைக்குரிய பாடம் நீக்கம்; பிரதமர் அறிவிப்பு.

சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்ட தரம் 6 ஆங்கிலப் பாடப்புத்தகத்தில் உள்ள குறிப்பிட்ட பாடத்தை நீக்குவதற்கு தேசிய கல்வி நிறுவகத்தின் கல்வி ஆலோசனைக் குழு அனுமதி வழங்கியுள்ளது.

இதற்கான அனுமதி நேற்று (06) வழங்கப்பட்டதாகக் கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

இன்று புதன்கிழமை பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

https://athavannews.com/2026/1458645

குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

2 months 1 week ago

குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை மாதிரியை நடைமுறைப்படுத்துவதற்கு அமைச்சரவை அனுமதி

Published By: Digital Desk 3

06 Jan, 2026 | 05:35 PM

image

அரச வைத்தியசாலைகளில் தற்போது குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகள் காணப்பட்டாலும், அதிகரித்துவரும் சிகிச்சைக்கான கேள்விகளைப் பூர்த்தி செய்வதற்கு தற்போதுள்ள வசதிகள் போதுமானதாக இல்லையென அவதானிக்கப்பட்டுள்ளது. 

அதனால், சிறுநீரக நோயாளிகள் எதிர்கொள்கின்ற சிரமங்களைக் கருத்தில் கொண்டு, குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்கான தேவை அடையாளங் காணப்பட்டுள்ளது. அதற்காக தற்போது கண்டி தேசிய வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்ற முறை மூலம் பெற்றுக்கொண்டுள்ள அனுபவங்களின் அடிப்படையில், அடையாளங்காணப்பட்டுள்ள அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புக்கு அரச – தனியார் பங்குடமை முறையின் கீழ் பொருத்தமான மாதிரியைக் கண்டறிவதற்கு சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு திட்டமிட்டுள்ளது. 

இவ் உத்தேச முறையின் கீழ் குருதிக் கூழ்மப்பிரிப்பு இயந்திரம், வடிகட்டி சுத்திகரிப்பு தொகுதி, தேவையான பயன்பாட்டுப் பொருட்கள், தொழிற்பாடு மற்றும் பராமரிப்புக்களை தனியார் பங்காளர்கள் மூலம் முழுமையான நிதியிட்டு முகாமைத்துவம் செய்வதற்கும், முழுமையான சிகிச்சைக் கண்காணிப்பை பேணி அரசு உட்கட்டமைப்பு வசதிகளை வழங்குவதற்கும் எதிர்பார்க்கின்றது. 

அதற்கமைய, தெரிவு செய்யப்பட்ட அரச வைத்தியசாலைகளில் குருதிக் கூழ்மப்பிரிப்புச் சேவைகளை விரிவாக்கம் செய்வதற்காக அரச – தனியார் பங்குடமை முறையை நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்துள்ள யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/235377

பாம்புக்கடிக்கு இலக்கான கிளிநொச்சி இளைஞன் உயிரிழப்பு

2 months 1 week ago

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

Jan 6, 2026 - 06:51 PM

பாம்புக்கடிக்கு இலக்கான இளைஞன் உயிரிழப்பு

கிளிநொச்சி, கல்மடு நகர் பகுதியில் இன்று (06) ஆலய வளாகத்தில் சிரமதானப் பணியில் ஈடுபட்டிருந்த இளைஞர் ஒருவர் பாம்பு கடிக்கு இலக்காகிப் பரிதாபகரமாக உயிரிழந்துள்ளார். 

சம்பவத்தில் அதே பகுதியைச் சேர்ந்த 23 வயதுடைய ஶ்ரீகாந்தன் கிருசிகன் என்ற இளைஞனே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 

பாம்பு கடிக்கு இலக்கான இளைஞனை உடனடியாக தர்மபுரம் வைத்தியசாலைக்குக் கொண்டு சென்ற போதிலும், அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக வைத்தியர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். 

இதனைத் தொடர்ந்து, குறித்த இளைஞனின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கிளிநொச்சி பொது வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

-கிளிநொச்சி நிருபர் சப்தன்-

https://adaderanatamil.lk/news/cmk2mbebd03m2o29nss7x03f8

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

2 months 1 week ago

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

Jan 6, 2026 - 07:42 PM

போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பது தேசியப் பொறுப்பு: ஜனாதிபதி

நாட்டின் பௌதீக வளர்ச்சியைப் போன்று சமூகத்தின் நலன் மற்றும் ஸ்திரத்தன்மை மிகவும் முக்கியம் என்றும், தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழித்து, நாட்டின் எதிர்கால சந்ததியினரை இந்த அழிவிலிருந்து மீட்டெடுக்க அனைவரும் தங்கள் பொறுப்புகளை நிறைவேற்ற வேண்டும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க வலியுறுத்தினார். 

தேசிய பேரழிவாக மாறியுள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை இந்நாட்டிலிருந்து ஒழிப்பதற்காக உருவாக்கப்பட்ட "முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாட்டு சபையின் மூன்றாவது அமர்வு, மூன்று நிகாயாக்களின் மகா சங்கத்தினர் உள்ளிட்ட மதத் தலைவர்களின் பங்கேற்புடன் இன்று (06) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றபோதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இவ்வாறு தெரிவித்தார். 

நாடு முழுவதும் போதைப்பொருள் விநியோகத்தை ஒழித்தல், சோதனை நடவடிக்கைகளை விரிவுபடுத்துதல், இதற்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு அளித்தல், போதைப்பொருள் பயன்பாட்டைத் தடுப்பதை நோக்கமாகக் கொண்ட வேலைத் திட்டங்களை செயல்படுத்துதல் மற்றும் போதைப்பொருட்களுக்கு எதிராக சமூகத்தை வலுப்படுத்துதல் உள்ளிட்ட பன்முக அணுகுமுறையின் மூலம் நாட்டில் பரவலாக உள்ள போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிக்கும் நோக்கத்துடன் "போதைப்பொருள் அற்ற நாடு - மகிழ்ச்சியான நாளை" என்ற தொனிப்பொருளின் கீழ் “ அகன்று செல்-முழு நாடுமே ஒன்றாக” தேசிய செயற்பாடு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. 

போதைப்பொருள் வர்த்தகர்கள் மற்றும் விநியோகஸ்தர்களுக்கு எதிராக பாரிய சமூக தாக்கத்தையும் அழுத்தத்தையும் ஏற்படுத்தவும், போதைப்பொருள் பயன்படுத்துபவர்களுக்கு புனர்வாழ்வு அளிக்கவும் அரசாங்கம், பாதுகாப்புப் பிரிவுகள், சிவில் அமைப்புகள் மற்றும் அனைத்து பிரஜைகளையும் ஒன்றிணைத்து, ஒரு தேசிய முன்னணியாக இது செயல்படுகிறது. 

போதைப்பொருள் தொடர்பாக தற்போது இடம்பெறும் சோதனை நடவடிக்கைகள், கைதுகள் மற்றும் புனர்வாழ்வு செயல்பாட்டின் முன்னேற்றம் குறித்து இங்கு விரிவாக கலந்துரையாடப்பட்டதுடன், இதற்காக அர்ப்பணிப்புடன் செயல்படும் அனைத்து நிறுவனங்கள், அதிகாரிகள் மற்றும் பொது மக்களுக்கு ஜனாதிபதி தனது நன்றியைத் தெரிவித்தார். 

2025.01.01 முதல் 2026.01.05 வரையிலான காலப்பகுதியில், 1,821.174kg ஹெரோயின், 3,865.710kg ஐஸ், 17,189.377kg கஞ்சா, 38.958kg கோக்கேய்ன் மற்றும் 4,049,569 போதை மாத்திரைகள் கைப்பற்றப்பட்டுள்ளதாக இதன்போது சுட்டிக்காட்டப்பட்டது. 

கடந்த கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டபடி, கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களை உடனடியாக அழிப்பது தொடர்பான புதிய சட்டங்களை வகுப்பதற்கான பணிகளின் முன்னேற்றம் குறித்து குழுவின் கவனத்திற்கு கொண்டுவரப்பட்டதுடன் அந்த நடவடிக்கைகளை விரைவுபடுத்துமாறு ஜனாதிபதி சம்பந்தப்பட்ட பிரிவினருக்கு அறிவுறுத்தினார். 

தற்போது கைப்பற்றப்பட்டுள்ள போதைப்பொருட்களை அழிப்பது தொடர்பான முன்னேற்றம் குறித்தும் கலந்துரையாடப்பட்டது. 

போதைக்கு அடிமையானவர்களின் சமூகத் தகவல்களைக் கண்டறிவதன் அவசியம் மற்றும் அது தொடர்பான தரவுகளைச் சேகரிக்க கணக்கெடுப்பை நடத்துவது குறித்தும் இங்கு கலந்துரையாடப்பட்டது. 

இந்த தேசிய வேலைத்திட்டத்தை பரவலாக செயல்படுத்துவதற்காக கல்வி நிறுவனங்கள், அரச நிறுவனங்கள், தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மற்றும் கலைத்துறையில் செயற்படும் அமைப்புகள் உட்பட அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைக்கும் ஒரு வலுவான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

மேலும், கிராமத்திற்கும் மத வழிபாட்டுத் தலங்களுக்கும் இடையிலான தொடர்பைப் பயன்படுத்தி, மதத் தலைவர்களின் பங்கேற்புடன் பொது விழிப்புணர்வு திட்டங்களை செயல்படுத்துவது குறித்தும் இதன்போது கலந்துரையாடப்பட்டது.

https://adaderanatamil.lk/news/cmk2o5kqn03m4o29nmhhusdv5

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்று முதல் உணவை வழங்கும் சிறப்பு திட்டம்

2 months 1 week ago

Published By: Vishnu

06 Jan, 2026 | 04:52 AM

image

(செ. சுபதர்ஷனி)

அரச மருத்துவமனைகளில் தங்கியிருந்து சிகிச்சைப் பெறும் நோயாளிகளுக்குத் தரமான மற்றும் சுவையான உணவை வழங்கும் சிறப்புத் திட்டம் இன்று திங்கட்கிழமை (6) முதல் மஹரகம தேசிய புற்றுநோய் வைத்தியசாலையில் நடைமுறைப்படுத்தப்பட உள்ளதாகச் சுகாதார அமைச்சு அறிவித்துள்ளது.

முதன்முறையாக, அரச மருத்துவமனை ஒன்றில் நோயாளிகளுக்கு உயர்தரமான, ஊட்டச்சத்து மிக்க மற்றும் கவர்ச்சிகரமான முறையில் உணவு வழங்கும் விசேட வேலைத்திட்டம் திங்கட்கிழமை (6) மகரகம அபேக்ஷா வைத்தியசாலையில் ஆரம்பமாகிறது. அரச மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு வழங்கப்படும் உணவு மற்றும் அவர்களுக்கு உணவளிக்கும் முறை ஆகியவற்றில் மாற்றத்தைக் கொண்டுவரும் நோக்கில் இந்தத் திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

அதற்கமைய நோயாளர்களுக்குச் சுவையான மற்றும் தரமான உணவை வழங்குவது அவசியம். மஹரகம தேசிய புற்றுநோய் மருத்துவமனையில் ஆரம்பிக்கப்படவுள்ள இந்த முன்னோடித் திட்டம், எதிர்காலத்தில் நாட்டின் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் நடைமுறைப்படுத்தச் சுகாதார அமைச்சு எதிர்பார்த்துள்ளது. மருத்துவமனையின் சமையலறை நவீனமயப்படுத்தப்பட்டு, ஒரே நேரத்தில் 2,000 பேருக்கு உணவு சமைக்கக்கூடிய சகல நவீன வசதிகளும் கொண்ட சமையலறை அபேக்ஷா மருத்துவமனையில் உருவாக்கப்பட்டுள்ளதுடன் 'உணவு மற்றும் பானங்கள் பிரிவு' எனப் புதிய பெயர் வழங்கப்பட்டுள்ளது.

சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்த முன்னோடித் திட்டம் ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது. அதற்கமைய சோறு, கறி, காய்கறிகள் என அனைத்தும் ஒன்றாகக் கலக்கப்படாமல், ஒவ்வொன்றையும் தனித்தனியாக வைக்கும் வசதி கொண்ட விசேட தட்டுகளில் உணவு வழங்கப்படும். இது நோயாளிகளுக்கு உணவின் மீது விருப்பத்தையும் மனநிறைவையும் ஏற்படுத்தும் என ஊட்டச்சத்து நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் திட்டத்தின் ஒருங்கிணைப்பாளர் வைத்தியர் சஜித மல்லவாரச்சி கருத்துத் தெரிவிக்கையில், "வீட்டு உணவுக்கு நிகரான அல்லது அதைவிட மேலான ஊட்டச்சத்து மிக்க உணவை வழங்குவதே எமது நோக்கம். சரியான ஊட்டச்சத்து மூலம் நோயாளிகளின் உடல் உபாதைகளைக் குறைக்க முடியும்" என்றார்.

மஹரகம புற்றுநோய் வைத்தியசாலையில் இன்று முதல் உணவை வழங்கும் சிறப்பு திட்டம் | Virakesari.lk

வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

2 months 1 week ago

06 Jan, 2026 | 02:30 PM

image

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. 

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

45949__1_.jpg

45950__1_.jpg

வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள் | Virakesari.lk

மட்டக்களப்பில மீண்டும் பருவமழை ; 2025 ஆம் ஆண்டில் 1863.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு

2 months 1 week ago

06 Jan, 2026 | 03:26 PM

image

வடகீழ் பருவப் பெயற்சி மழை வீழ்ச்சி மட்டக்களப்பு மாவட்டத்தில் மீண்டும் பொழியத்துவங்கியுள்ளது. கடந்த வருடம் இறுதி வரையில் பெய்து வந்த மழை வீழ்ச்சி கடந்தவாரம் சற்று ஓய்ந்திருந்த இந்நிலையில் செவ்வாய்கிழமை (06) அதிகாலை முதல் பலத்த மழை பெய்து வருவதை அவானிக்க முடிகின்றது.

இந்நிலையில் மட்டக்களப்பு நகரில் 39.5 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் நவகிரிப்பகுதியில் 55 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும்,

தும்பங்கேணிப்பகுதியில் 36 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உன்னிச்சைப்பகுதியில் 33 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் உறுகாமம் பகுதியில் 26 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், மைலம்பாவெளி பகுதியில் 31 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும் வாகரைபகுதியில் 38 மில்லிமீற்றர் மழைவீழ்ச்சியும், கல்முனைபகுதியில் 19.5 மில்லி மீற்றர் மழைவீழ்ச்சியும் செவ்வாய்கிழமை காலை 8.30 மணிவரையில் கடந்த 24 மணித்தியாலங்களில் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளதாகவும், கடந்த 2025 வருடம் முழுவதும் 1863.4 மழைவீழ்ச்சி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், மட்டக்களப்பு வானநிலைய அவதான நிலையம் தெரிவித்துள்ளது.

இந்நிலையில் மட்டக்களப்பில் அமைந்துள் மிகப்பிரதான குளங்களின் நீர்மட்டங்களும் வெகுவாக உயர்ந்துள்ளன. அந்த வகையில் உன்னிச்சைக் குளத்தின் நீர்மட்டம் 30அடி 3அங்குலம், நவகிரிக் குளத்தின் நீர்மட்டம் 28அடி 8அங்குலம், தும்பற்கேணிக் குளம் 15அடி,  உறுகாமம் குளத்தின் நீரமட்டம் 13அடி 9அங்குலம், வாகனேரிக்குளத்தின் நீர்மட்டம் 17அடி 2அங்குலம், கட்டுமுறிவுக்குளத்தின் நீரமட்டம் 11அடி 7அங்குலம், கித்துள்வெவக் குளத்தின் நீர்மட்டம் 11அடி 7அங்குலம், வெலிக்காக்கண்டிய குளத்தின் நீர்மட்டம் 13அடி 5அங்குலம்,  வடமுனைக்குளத்தின் நீர்மட்டம் 12அடி 6அங்குலமாக உயர்ந்துள்ளதாக அக்குளங்களுக்குப் பொறுப்பான நீர்ப்பாசனப் பொறியியலாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் களுவாஞ்சிகுடி, வெல்லாவெளி, பட்டிப்பளை, வவுணதீவு, உள்ளிட்ட பல பிரதேசங்களிலுள்ள கிராமியக் குளங்கள் முற்றாக நிரம்பியுள்ளன.

இதேவேளை  முறையான வடிகான் வசதியின்மையால் கிராமங்களிலுள்ள உள்வீதிகள், மற்றும் குடியிருப்புக்களிலும் வெள்ள நீர் தேங்கியுள்ளதனால் மக்களும் பெரும் சிரமங்களை எதிர் கொண்டு வருவதையும் காணமுடிகின்றது.

pho_malai__14_.png

pho_malai__13_.png

மட்டக்களப்பில மீண்டும் பருவமழை ; 2025 ஆம் ஆண்டில் 1863.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவு | Virakesari.lk

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை

2 months 1 week ago

06 Jan, 2026 | 06:55 PM

image

(துரைநாயகம் சஞ்சீவன்)

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னாரைச் சேர்ந்த ராஜினி கோரிக்கை விடுக்கின்றார். 

இது தொடர்பில் நேற்று (5) மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்துவிட்டு இந்திய ஊடகங்களிடம் தனது நிலை தொடர்பாக தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், 

தாங்கள் தங்கவைக்கப்பட்டுள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் போதியளவு அடிப்படை மற்றும் உணவு வசதிகள் இல்லாததால் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறு மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும் இதுவரை தம்மை அனுப்பி வைக்காததால் மிகுந்த அவதிப்பட்டு வருவதாகவும் இந்த விடயத்தில் இலங்கை ஜனாதிபதி உதவவேண்டும் எனவும் கோரிக்கை விடுக்கின்றார். 

02f37115-8f91-4aaf-bd3b-510b2f5ebcd9.jpg

இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடியின் காரணமாக 2023ஆம் ஆண்டு மே மாதம் மன்னாரில் இருந்து கடல்வழியாக இந்தியாவிற்கு சென்று இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் வசித்து வந்த மன்னார் மாவட்டத்தைச் சேர்ந்த ஜிம்ஸ்ரிக்  அவரது மனைவி கிறிஸ்ரபேல் ராஜினி குடும்பத்தினர் தம்மை மீள இலங்கைக்கு அனுப்புமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர். 

தங்களுடன் தங்கியிருந்த 13 குடும்பங்களில் 9 குடும்பங்கள் சட்டவிரோதமான முறையில் பணம் செலுத்தி படகில் இலங்கைக்கு மீண்டும் சென்றுள்ளதாகவும் தம்மிடம் படகில் செல்வதற்கு போதியளவு பண வசதி இல்லாத காரணத்தினால் தங்களால் செல்ல முடியாமல் உள்ளதாகவும் ராஜினி தெரிவித்தார்.

அத்துடன் இந்தியாவில் தங்களால் தொடர்ந்து வசிக்க முடியாதுள்ளதாகவும் தங்களை சொந்த நாட்டுக்கு அனுப்புமாறும் இந்திய ஊடகங்களிடம் மேலும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடி காரணமாக கடந்த 2022 மார்ச் மாதம் 20ஆம் திகதியிலிருந்து 300க்கும் மேற்பட்ட இலங்கை தமிழர்கள் தனுஷ்கோடி கடல் வழியாக தமிழகத்திற்குள் அகதிகளாக வரத் தொடங்கியதாகவும் தமிழகத்திற்கு அகதிகளாக வந்த இலங்கைத் தமிழர்களை தமிழக அரசு மண்டபம் இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைத்து அவர்களுக்கு உணவு மற்றும் அடிப்படை வசதிகளை செய்து கொடுத்து வந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.

10a8fbba-3245-45c0-9552-4790d9fd6a87.jpg

இலங்கைக்கு தங்களை மீள அனுப்புமாறு இந்திய முகாமில் வசிக்கும் மன்னார் பெண் கோரிக்கை | Virakesari.lk

யாழில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 4 சந்தேக நபர்கள் கைது!

2 months 1 week ago

யாழ்ப்பாணம் மத்திய பேருந்து நிலையம் மற்றும் நாயன்மார்கட்டு பகுதியில் மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போது, சட்டவிரோதமாக விற்பனை செய்யப்பட்ட  860 போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இலங்கை கடற்படை மற்றும் யாழ். பொலிஸ் விசேட அதிரடிப்படையுடன் இணைந்து நேற்று திங்கட்கிழமை (5) மேற்கொள்ளப்பட்ட விசேட சோதனை நடவடிக்கையின்போதே இந்த கைது இடம்பெற்றுள்ளது.

இதன்போது கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள் ஓட்டமாவடி, சங்கானை, நல்லூர் மற்றும் கொய்யாத்தோட்டம் பகுதிகளைச் சேர்ந்த  22 முதல் 29 வயதுக்குட்பட்டவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

மேலும், கைது செய்யப்பட்ட சந்தேக நபர்கள், போதை மாத்திரைகள் மற்றும் மோட்டார் சைக்கிளுடன் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

WhatsApp_Image_2026-01-06_at_16.22.12.jp

20.jpg

யாழில் சட்டவிரோத போதை மாத்திரைகளுடன் 4 சந்தேக நபர்கள் கைது! | Virakesari.lk

மன்னார் தீவின் நுழைவாயிலில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர், ஏன் சர்ச்சை ஆனது?

2 months 1 week ago

இலங்கையில் ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் ஏன் சர்ச்சை ஆனது?

இலங்கை மன்னார் பகுதியில்  ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம்,SMU

படக்குறிப்பு,இலங்கையில் வைக்கப்பட்ட பேனரில் உள்ள புகைப்படம்

கட்டுரை தகவல்

  • ரஞ்சன் அருண் பிரசாத்

  • பிபிசி தமிழுக்காக

  • ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

இலங்கையின் மன்னார் தீவையும், இந்தியாவின் ராமேஸ்வரத்தையும் இணைக்கும் வகையில் அமைந்துள்ள மணல் திட்டுக்களை ராமாயணத்துடன் தொடர்பு படுத்துவது குறித்து இலங்கையில் சர்ச்சை எழுந்துள்ளது.

இலங்கையின் மன்னார் தீவுக்கும் இந்தியாவின் ராமேஸ்வரம் தீவுக்கும் இடையில் உள்ள கடல் பகுதியில் தொடர்ச்சியாக மணல் திட்டுகள் உள்ளன. இதனை இந்துக்கள் ராமர் பாலம் என அழைக்கின்றனர். வேறு சிலர் ஆதாமின் பாலம் எனவும் குறிப்பிடுகின்றனர்.

இந்த நிலையில், இலங்கையின் சுற்றுலாத் துறை அமைச்சின் கீழ் இயங்கும் சுற்றுலா அதிகார சபையினால் மன்னார் தீவின் நுழைவாயில் பகுதியில் வைக்கப்பட்டுள்ள அறிவிப்புப் பலகையொன்றில் இந்து கடவுள்களின் உருவப் படங்கள் காட்சிப் படுத்தப்பட்டதை அடுத்தே இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

இந்த அறிவிப்புப் பலகையில் ராமர், ஹனுமான் ஆகியோரின் உருவப் படங்கள் இடம்பெற்றுள்ளன. சுற்றுலா அதிகார சபையின் வட மாகாண அலுவலகத்தினால் இந்த அறிவிப்புப் பலகை சமீபத்தில் காட்சிப்படுத்தப்பட்டது.

ராமர் பாலமாக இந்துக்களால் கருதப்படும் இந்தப் பகுதி வரலாற்று முக்கியத்துவமும் சூழல் முக்கியத்துவமும் கொண்ட இடமாகக் கருதப்படுகிறது.

ராவணன் சீதையை இலங்கைக்குக் கடத்தி வந்ததன் பின்னர், இலங்கைக்கு வந்த சீதையை மீட்பதற்காக ராமர் தலைமையிலான படையினர் செல்வதற்காக அனுமன் ஒரு பாலத்தை அமைத்ததாக ராமாயணம் கூறுகிறது. இந்த மணல் திட்டுக்களே அந்தப் பாலம் என இந்துக்கள் கருதுகின்றனர்.

ஆனால், இதனை ஆதாமின் பாலம் என்றே சில தரப்பினர் தொடர்ந்து குறிப்பிட்டு வருகின்றனர்.

ஆனால், இந்த அறிவிப்புப் பலகை, இந்து மதத்தை அடிப்படையாகக் கொண்டு வைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை அந்த இடத்திலிருந்து அகற்ற வேண்டும் என்றும் மன்னாரைச் சேர்ந்த கிறிஸ்தவ மத குருமார்கள் கோரியுள்ளனர்.

இலங்கை மன்னார் பகுதியில்  ராமர், ஹனுமான் படங்களுடன் வைக்கப்பட்ட பேனர் சர்ச்சையானது ஏன்?

பட மூலாதாரம்,SMU

இந்து சமயக் கடவுள்களின் படங்களைத் தாங்கியுள்ள இந்த பெயர்ப் பலகை மன்னாரின் மத நல்லிணக்கத்தைப் பாதிக்கிறது என மன்னார் புனித செபஸ்தியார் பேராலயத்தின் மன்னார் மறைக் கோட்ட முதல்வர் பி.கிறிஸ்துநாயகம் தெரிவித்துள்ளார்.

மன்னார் நகர சபைக்கு பி. கிறிஸ்துநாயகம் எழுதியுள்ள கடிதத்தில் இதனை குறிப்பிட்டுள்ளார். இது மதங்களுக்கு இடையிலான ஒற்றுமையைச் சீர்குலைத்து குழப்பத்தையும் தோற்றுவிப்பதாக உள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்தப் பெயர்ப் பலகை தொடர்பாக பொதுமக்கள் தமது அதிருப்தியையும் எதிர்ப்பையும் தினமும் தமக்குத் தெரிவித்து வருவதாகவும் அவர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே மன்னாரிலுள்ள அனைத்து மத மக்களின் நன்மையையும் கருதி, இந்த பெயர் பலகையை இந்த இடத்திலிருந்து நீக்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பி. கிறிஸ்துநாயகம் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

சச்சிதானந்தன்

பட மூலாதாரம்,MARAVANPULLAVU SACHCHITHANANTHAN

படக்குறிப்பு,சச்சிதானந்தன்

'அகற்ற கூடாது'

ஆனால், மன்னார் நகர நுழைவாயிலில் காட்சிப் படுத்தப்பட்டுள்ள இந்த அறிவிப்புப் பலகையை அகற்றக்கூடாது என இலங்கை சிவசேனை அமைப்பின் தலைவர் க. சச்சிதானந்தன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக பிபிசியிடம் பேசிய அவர், "ராமருக்கும் மன்னாருக்கும் தொடர்பு இருக்கிறது. அவர்கள் வந்திறங்கியது மன்னார் தீவில்தான். திரும்பி போனதும் மன்னார் தீவிலிருந்துதான். இது தொடர்பான இலக்கிய பதிவுகள் இருக்கின்றன. இலக்கிய பதிவுகளின்படி, ராமர் மன்னார் தீவில் வந்திறங்கினார். பின்னர் சீதையையும் கூட்டிக்கொண்டு ராமேஸ்வரம் போனார். தமிழர்களை சமய அடிப்படையில் பிளவுபடுத்துகிற வேலையை இப்போது மன்னார் கத்தோலிக்கர்கள் செய்துக்கொண்டிருக்கின்றார்கள்" என்று தெரிவித்தார்.

மணல் திட்டு

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மணல் திட்டுகளின் புகைப்படம்

கடிதம் எழுதியவர் என்ன சொல்கிறார்?

க.சச்சிதானந்தனின் கருத்து குறித்தும் கடிதம் எழுதப்பட்டமைக்கான காரணம் குறித்தும் பி.கிறிஸ்துநாயகத்திடம் பிபிசி கேட்டபோது, "மன்னார் நகரத்திற்குள் வருகின்ற நுழைவாயிலில் இருக்கின்ற படியினால், அது சில வேளைகளில் மற்ற மதத்தவர்களை புண்படுத்தலாம். அதனால், அந்த இடத்திலிருந்து எடுங்கள் என்று மாத்திரமே சொல்லப்பட்டிருக்கின்றது. அதை வேறு இடத்தில் வைக்கலாம். அதில் எந்தவொரு பிரச்னையும் இல்லை. தலைமன்னாரில் வைக்கலாம் அல்லது வேறு எங்கேயும் வைக்கலாம். நுழைவாயில் என்ற படியால் மாத்திரமே இந்த கடிதம் எழுதப்பட்டது. அதைவிடுத்து, ஏனைய மதங்களை புண்படுத்தும் வகையிலான நோக்கம் என்னிடம் இருக்கவில்லை." என்று தெரிவித்தார்.

சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க

பட மூலாதாரம்,RUWAN RANASINGHE

படக்குறிப்பு,சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்க

அரசாங்கம் என்ன சொல்கின்றது?

மன்னார் நகர் நுழைவாயிலில் காட்சிப்படுத்தப்பட்டுள்ள படம் தொடர்பில் எழுந்துள்ள பிரச்னை குறித்து பிபிசி தமிழ், சுற்றுலாத்துறை பிரதி அமைச்சர் ருவன் ரணசிங்கவை தொடர்புக் கொண்டு வினவியது.

மதங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை பாதுகாக்கும் வகையில் இந்த பிரச்னை தொடர்பில் தாம் தலையீடு செய்து பிரச்னையை தீர்க்க உடனடி நடவடிக்கை எடுப்பதாக அவர் தெரிவித்தார்.

"சமூகத்தில் இவ்வாறு சர்ச்சைகளை எழுப்பும் சம்பவங்கள் நிகழும் பட்சத்தில், அந்த குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்த தயாராகவுள்ளோம். சமயத் தலைவர்கள், சமூகத்திலுள்ள முக்கியஸ்தர்கள் உள்ளிட்டோருடன் கலந்துரையாடல்களை நடத்தி சிறந்ததொரு தீர்வை எடுக்க வேண்டும். உரிய குழுக்களுடன் கலந்துரையாடல்களை நடத்தி, அனைத்து மதங்களையும் பாதுகாக்கும் விதத்தில் இந்த பிரச்னையை தீர்த்து வைக்க நாங்கள் தலையீடு செய்வோம்" என பிரதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இவ்வாறான பிரச்னைகள் தொடர்ச்சியாக வரும் சந்தர்ப்பத்தில் சுற்றலாத்துறைக்கு பாதிப்புக்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதா என கேட்டபோது, ''அப்படியான பிரச்னைகளுக்கு வாய்ப்பில்லை'' என்றார் ருவன் ரணசிங்க.

"நாங்கள் மிகுந்த தெளிவான சிந்தனையுடன் சுற்றுலாத் துறையை மேம்படுத்தி வருகின்றோம். இந்திய சுற்றுலா பயணிகளுக்கு இதனூடாக எந்தவித பிரச்னையும் ஏற்படாது. யாழ்ப்பாணம், மன்னார், நுவரெலியாவின் சீதை அம்மன் கோவில், ராவணனின் இடங்கள் ஆகிய இடங்களுக்கு இந்திய சுற்றுலாப் பயணிகள் பயணம் செய்கின்றார்கள். அதில் எந்தவித பிரச்னையும் இல்லை'' என ருவன் ரணசிங்க தெரிவிக்கின்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/ckgx3l0zg47o

வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

2 months 1 week ago

வடமராட்சி கிழக்கு கடற் பகுதியில் இறந்த நிலையில் கரை ஒதுங்கும் ஆமைகள்

06 Jan, 2026 | 02:30 PM

image

வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் சில நாட்களாக ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி வருகின்றன. அந்தவகையில் செவ்வாய்க்கிழமை (06) ஆமையின் இறந்த உடல்கள் கரையொதுங்கிய உள்ளன. 

கடலின் சீற்றம் காரணமாக கடல் கொந்தளிப்பாக காணப்படுவதால் காயமடைந்த ஆமைகள் உயிரிழந்து கரை ஒதுங்குவதாக அப்பகுதி மீனவர்கள் தெரிவிக்கின்றனர்.

ஆமைகளை பிடிப்பதும், இறைச்சிக்காக பயன்படுத்துவதும் சட்டவிரோதம் என்பதால் கரையொதுங்கிய ஆமைகள் துர்நாற்றம் வீசக்கூடிய நிலையிலும் உருக்குலைந்து காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  

45949__1_.jpg

45950__1_.jpg

https://www.virakesari.lk/article/235346

ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

2 months 1 week ago

ஐ.எம்.எப். வரையறைகளுக்குள் அத்தியாவசிய தேவைகளுக்கு முன்னுரிமை – ஜனாதிபதி

Published By: Vishnu

06 Jan, 2026 | 05:05 AM

image

சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின்  வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13 சதவீதம் மாத்திரமே செலவிட முடியும். அதில் குறைந்தபட்சம் 4% மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும். அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தற்போதுள்ள நிதி வரையறைகளுக்குள், தேசிய முன்னுரிமைகளை அடையாளம் கண்டு,மக்களின் நலனுக்காக அதிகபட்ச செயல்திறனுடன் அந்த நிதி ஒதுக்கீடுகளைப் பயன்படுத்துவது, அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பொறுப்பாகும் என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.

மூலதனச் செலவாக எவ்வளவு நிதி ஒதுக்கப்பட்டாலும், உகந்த முறையில் அவற்றை செலவழித்து தேவையான நிதி மற்றும் பௌதீக முன்னேற்றத்தை அடைய கடந்தகால அரச பொறிமுறை தவறியதால், இந்நாட்டு மக்கள் பல அபிவிருத்தி வாய்ப்புகளை இழந்துள்ளனர் என்றும் ஜனாதிபதி சுட்டிக்காட்டியுள்ளார்.

அமைச்சுகளின் செயலாளர்களுடன் ஜனாதிபதி அலுவலகத்தில் திங்கட்கிழமை (05) முற்பகல்  நடைபெற்ற கலந்துரையாடலின் போதே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இதனைத் தெரிவித்தார்.

இங்கு உரையாற்றிய ஜனாதிபதி, சர்வதேச நாணய நிதியத்துடன் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட நீடிக்கப்பட்ட கடன் வசதியின்  வரையறைகளின்படி, தேசிய உற்பத்தியில் 13மூ மாத்திரமே செலவிட முடியும்.அதில் குறைந்தபட்சம் 4மூ மூலதனச் செலவாக ஒதுக்கப்பட வேண்டும்.அதன்படி, 'நாட்டின் அத்தியாவசியத் தேவைகளுக்கு முன்னுரிமை அளித்தல்' என்ற அடிப்படையில் அமைச்சுகளுக்கு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

நாட்டின் பிரதான முதலீட்டாளர் அரசாங்கம் என்ற வகையில், மூலதனச் செலவினங்களுக்காக இந்த ஆண்டு வரவு செலவுத்திட்டத்தில் 1400 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கு மேலதிகமாக, டித்வா சூறாவளியால் ஏற்பட்ட சேதங்களை சீர்செய்வதற்காக கூடுதலாக 500 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது.

ஒதுக்கப்பட்ட நிதியை முறையாக நிர்வகிப்பதன் மூலம் எதிர்பார்க்கும் பௌதீக முன்னேற்றத்தை அடைவதே அமைச்சுகளின் செயலாளர்களுக்கு உள்ள முதன்மைப் பொறுப்பு.முன்மொழியப்பட்ட திட்டங்களைச் செயல்படுத்தத் தவறினால் மக்களுக்குக் கிடைக்க வேண்டிய நன்மைகள் அதன் ஊடாக இழக்கப்படும் என்று குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டில் அமைச்சு மட்டத்தில் செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ள வேலைத்திட்டங்கள் மற்றும் ஒதுக்கப்பட்டுள்ள நிதிகளை பயன்படுத்தல் குறித்தும் இதன்போது தனித்தனியாக விடயங்கள் முன்வைக்கப்பட்டன.ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,மற்றும் அனைத்து அமைச்சுகளின் செயலாளர்கள் உட்பட நிதி அமைச்சின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://www.virakesari.lk/article/235325

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

2 months 1 week ago

வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம், பாதையை விடுவிக்குமாறு ஆளுனருக்கு கடிதம்!

%E0%AE%B5%E0%AF%86%E0%AE%9F%E0%AF%81%E0%

வவுனியா நெடுங்கேணி வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்திற்கான நிலம் மற்றும் பாதையை விடுவித்து தருமாறு வடக்கு மாகாண ஆளுனர் நா.வேதநாயனுக்கு இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் கடிதம் மூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.

வவுனியா வடக்கு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள வரலாற்று தொண்மைமிக்க வெடுக்குநாறிமலை ஆதி லிங்கேஸ்வரர் ஆலயத்தின் வழிபாட்டு செயற்பாடுகளுக்காக ஆலயம் அமைந்துள்ள பகுதியின் ஒரு ஏக்கர் காணியினை ஆலயத்திற்கு விடுவித்து தருமாறு ஆலய அறங்காவலர் சபையினர் தன்னிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக ப.சத்தியலிங்கம் குறிப்பிட்டுள்ளார்.

அத்துடன் ஆலயத்திற்கு செல்லும் பாதையினை வவுனியா வடக்கு பிரதேசசபைக்கு விடுவித்து தரும் பட்சத்தில் குறித்த பாதையினை தம்மால் புனரமைக்க முடியுமென வவுனியா வடக்கு பிரதேசசபையினரும் தெரிவித்துள்ளனர்.

எனவேஇவ்விடயத்தில் நேரடியாக தலையீடு செய்து, வரலாற்று தொண்மைமிக்க ஆலயத்திற்கான காணி மற்றும் பாதையினை மிகவிரைவாக விடுவித்துத் தருமாறு நாடாளுமன்ற உறுப்பினர் ப.சத்தியலிங்கம் ஆளுநரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

https://akkinikkunchu.com/?p=355085

10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது

2 months 1 week ago

10 மில்லியன் ரூபா மோசடி - மட்டக்களப்பை சேர்ந்த இளைஞனும் யுவதியும் கைது

By Batticaloa


சமூக ஊடகங்களில் ‘டயலொக் மெகா வாசனா’ என்ற போலி அதிஸ்டலாப சீட்டு மூலம் பொதுமக்களை ஏமாற்றி 10 மில்லியன் ரூபா மோசடி செய்த குற்றச்சாட்டில் இரண்டு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுத் துறையின் (CID) வடக்குப் பிரிவின் அதிகாரிகளால் ஆணொருவரும் பெண்ணொருவரும் நேற்று திங்கட்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.

29 வயதுடைய சந்தேக நபர்கள் இருவரும் மட்டக்களப்பைச் சேர்ந்தவர்கள் பொலிஸார் தெரிவித்துன்னளர்.

சம்பவம் குறித்து குற்றப் புலனாய்வுத் துறையின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்

https://www.battinews.com/2026/01/10_6.html

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம்

2 months 1 week ago

மாகாணசபைத் தேர்தல் தொடர்பான நகர்வுகள் : நாடாளுமன்ற சபை அமர்வு இன்று ஆரம்பம்

06 January 2026

1767664708_7087515_hirunews.jpg

2026 ஆம் ஆண்டுக்கான முதலாவது நாடாளுமன்ற அமர்வு இன்று(06) நடைபெறவுள்ளது. 

அதன்படி, இந்த வாரத்திற்கான நாடாளுமன்ற அமர்வு இன்று முதல் எதிர்வரும் 09 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இன்று முற்பகல் 9.30 மணிக்கு நாடாளுமன்ற சபை அமர்வு ஆரம்பிக்கப்படவுள்ளது. 

அதனையடுத்து, முற்பகல் 11.30 மணி முதல் பிற்பகல் 3.30 மணி வரை கடற்றொழில் சார்ந்த விடயங்களும், கடற்றொழிலாளர் ஓய்வூதிய சமூகப் பாதுகாப்பு குறித்த விடயங்களும் விவாதத்துக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளன. 

அத்துடன், மாகாண சபைத் தேர்தல் எந்த முறைமையின் கீழ் நடத்தப்பட வேண்டும் என்பதை ஆராய்வதற்கான குழுவை நியமிப்பதற்கான பிரேரணையும் சபையில் சமர்பிக்கப்படவுள்ளது. 

அந்தக் குழு மாகாண சபை தேர்தல் தொடர்பான முன்மொழிவுகளையும், விதப்புரைகளையும் சமர்ப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://hirunews.lk/tm/439271/progress-regarding-the-provincial-council-elections-parliamentary-session-begins-today

“500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை”

2 months 1 week ago

“500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை”

இலங்கை பொலிஸ் துறையில் ஊழல் மற்றும் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களைத் தடுப்பதற்காக எடுத்துவரும் தொடர்ச்சியான முயற்சிகளின் ஒரு பகுதியாக, நூற்றுக்கணக்கான அதிகாரிகளுக்கு எதிராக ஒழுங்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரிய தெரிவித்தார்.

அதன்படி, போதைப்பொருள் தொடர்பான குற்றங்களில் ஈடுபட்டதற்காக சுமார் 500 பொலிஸ் அதிகாரிகள் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும், தவறு உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து இந்த அதிகாரிகளில் பலர் சேவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாகவும்  குறிப்பிட்டார்.

பஹலகம பொலிஸ் பயிற்சிக் கல்லூரியில் பயிற்சி அதிகாரிகளுக்கான பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்ட பொலிஸ்மா அதிபர் ஜெனரல் பிரியந்த வீரசூரியஇந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். 

மேலும் அவர் கூறியுள்ளதாவது, நேர்மையை நிலைநிறுத்தவும், தங்களுக்கு வழங்கப்பட்ட அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்வதைத் தவிர்க்கவும் அவர் அதிகாரிகளை வலியுறுத்தினார், பொலிஸ் துறைக்கு வழங்கப்பட்ட அதிகாரங்கள் ஏனைய பொது ஊழியர்களுக்கு வழங்கப்படுவதை விட மிக அதிகம், அத்துடன், அவை பொது நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

இந்த அதிகாரங்களை நீங்கள் தவறாகப் பயன்படுத்தினால் பாரிய விளைவுகளை எதிர்கொள்ள நேரிடுவதுடன், படைக்குள் ஒழுக்கம் மற்றும் பொறுப்புக்கூறலின் முக்கியத்துவத்தை பெறவேண்டும்

மேலும், பொலிஸ் துறையில் தற்போது 31,000 அதிகாரிகள் பற்றாக்குறை இருப்பதாகவும், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்குள் 40,000 ஆக உயரும் என்றும் கூறினார். இதை நிவர்த்தி செய்ய, இந்த ஆண்டு 10,000 புதிய அதிகாரிகளை ஆட்சேர்ப்பு செய்வது ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.

https://www.tamilmirror.lk/செய்திகள்/500-பொலிஸ்-அதிகாரிகள்-மீது-ஒழுக்காற்று-நடவடிக்கை/175-370632

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

2 months 1 week ago

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

Jan 6, 2026 - 10:21 AM

கதிர்காம ஆலயத் தங்கத்தை விற்கத் தீர்மானித்தது ஏன்?

கதிர்காம ஆலயத்தின் பொறுப்பிலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதியை விற்பனை செய்யத் தீர்மானித்தமைக்கான காரணம் குறித்து கதிர்காம ஆலயத்தின் பஸ்நாயக்க நிலமே திலின மதுசங்க தெளிவுபடுத்தினார். 

மொனராகலை மாவட்ட பொது வைத்தியசாலையில் கண்காணிப்பு விஜயமொன்றில் கலந்துகொண்ட போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

"சமீபத்தில் ஏற்பட்ட வெள்ளத்தினால் கதிர்காம ஆலயத்திலுள்ள தங்கக் கையிருப்பில் ஒரு பகுதி நீரில் சிக்கியது. அவ்வாறு தங்கம் நீரில் சிக்கும் போது, ஏதேனும் ஒரு காரணத்தினால் அந்த தங்கம் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டால் அதற்கு யார் பொறுப்பு கூறுவது? அதனால்தான் நான் இந்த முடிவை எடுத்தேன். 

இவ்வேளையில் அரசாங்கமும் பெரும் சிரமத்திற்கு உள்ளாகக்கூடும் என்பதால், அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்படும் ஏனைய திட்டங்களுக்கு உதவவே நாம் எதிர்பார்த்தோம். மாறாக இது அரசாங்கத்துடனான ஒரு டீலோ அல்லது ஜனாதிபதியுடனான டீலோ அல்ல. அப்படி இல்லை. ஜனாதிபதி குறைந்தபட்சம் என்னிடம் இதிலிருந்து உதவி செய்யுமாறு கோரிக்கை கூட விடுக்கவில்லை. 

தங்கத்தை சரியான முறையில் விற்பனை செய்வேன், அதற்கான 100 வீத பொறுப்பை நான் ஏற்கிறேன். இந்தத் தங்கத்தை குறைந்த விலைக்கு விற்க இடமளிக்க மாட்டேன். 100 வீதம் சரியான விலைக்கே விற்கப்படும். அது குறித்து சமூக ஊடகங்கள் ஊடாக நான் அறிவிப்பேன். 

விற்பனை விலை, விற்பனை செய்வதாயின், பௌத்த விவகார ஆணையாளரின் அனுமதியுடன் விற்பனை செய்வதாயின், அதனை 100 வீதம் வெளிப்படைத்தன்மையுடன் செய்ய நான் எதிர்பார்க்கிறேன். எந்த வகையிலும் மோசடி செய்ய நான் எதிர்பார்க்கவில்லை. 

நான் ஆலயத்தின் சொத்துக்களை அபகரிக்க முயற்சிப்பதாக யாராவது கூறினால், கடந்த நான்கு வருடங்களிலும் எனக்கு கிடைக்கும் பாதுகாவலர் கொடுப்பனவையோ, எந்தவொரு ஊதியத்தையோ நான் விஷ்ணு ஆலயத்திலிருந்து இதுவரை பெறவில்லை. நான் கதிர்காம ஆலயத்திலிருந்தும் பெறமாட்டேன்," என அவர் மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmk243gm703kno29n8ihcpciv

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

2 months 1 week ago

Drink.jpg?resize=750%2C375&ssl=1

சட்டவிரோத மதுபானம் அருந்திய ஐவர் உயிரிழப்பு!

வென்னப்புவ – மாரவில பகுதியில் சட்டவிரோத மதுபானத்தை அருந்தியதாகக் கூறப்படும் சம்பவத்தில் குறைந்தது ஐந்து பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சட்டவிரோத மதுபானம் அருந்தி இறந்ததாக சந்தேகிக்கப்படும் மூன்று நபர்களின் உடல்கள் அப்பகுதியில் உள்ள ஒரு வீட்டிற்குள் கண்டெடுக்கப்பட்டதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.

மேலும், ஆபத்தான நிலையில் இருந்த மேலும் இருவர் சிகிச்சைக்காக வென்னப்புவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.

ஆனால் பின்னர்  அவர்கள் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

மரணத்திற்கான சரியான காரணம் மற்றும் சந்தேகிக்கப்படும் சட்டவிரோத மதுபானத்தின் மூலத்தைக் கண்டறிய மாரவில பொலிஸார் சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

https://athavannews.com/2026/1458531

வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

2 months 1 week ago

New-Project-21.jpg?resize=750%2C375&ssl=

வெனிசுலாவின் நிலைமை குறித்து இலங்கை அதிகாரப்பூர்வ அறிக்கை!

வெனிசுலாவில் அண்மைய முன்னேற்றங்கள் குறித்து இலங்கை அரசாங்கம் ஆழ்ந்த கவலை கொண்டுள்ளதுடன், நிலைமையை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாக வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில், 

பலாத்காரத்தைப் பயன்படுத்துவதைத் தடை செய்தல், தலையிடாமை, சர்வதேச மோதல்களுக்கு அமைதியான தீர்வு காணுதல் மற்றும் நாடுகளின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாடு போன்ற சர்வதேச சட்டம் மற்றும் ஐ.நா. சாசனத்தின் கொள்கைகளை மதிக்க வேண்டியதன் அவசியத்தை இலங்கை அரசாங்கம் வலியுறுத்தியது. 

வெனிசுலா மக்களின் பாதுகாப்பு மற்றும் நல்வாழ்வு மற்றும் பிராந்தியத்தின் ஸ்திரத்தன்மைக்கு இலங்கை மிகுந்த முக்கியத்துவம் அளிக்கிறது.

மேலும் பதற்றத்தைக் குறைத்தல் மற்றும் உரையாடல் மூலம் அமைதியான தீர்வுக்கு முன்னுரிமை அளிக்க அனைத்து தரப்பினரையும் அழைக்கிறது.

இந்த முக்கியமான கட்டத்தில், ஐக்கிய நாடுகள் சபையும் அதன் உறுப்புகளான ஐ.நா. பாதுகாப்பு பேரவையிலும் இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொண்டு, வெனிசுலா மக்களின் பாதுகாப்பு, நல்வாழ்வு மற்றும் இறையாண்மை உரிமைகளைக் கருத்தில் கொண்டு அமைதியான தீர்வை நோக்கிச் செயல்படுவது முக்கியம் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458491

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

2 months 1 week ago

loan.jpg?resize=750%2C375&ssl=1

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்க்க புதிய சட்டமூலம்!

நுண்நிதி கடன்கள் தொடர்பான பிரச்சினைகளைத் தீர்ப்பதற்காக புதிய சட்டமூலம் ஒன்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி தெரிவித்துள்ளார்.

நுண்நிதி கடன்களைப் பெற்ற சுமார் 200 பெண்கள் இப்போது தற்கொலை செய்து கொண்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

கொழும்பில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் நிபுணராச்சி இவ்வாறு தெரிவித்தார்.

இதேவேளை, கொழும்பு பங்குச் சந்தையின் பெயர் மற்றும் லோகோவை (இலட்சினை) தவறாகப் பயன்படுத்தி மில்லியன் கணக்கான ரூபாய் மோசடி செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

போலியான மொபைல் செயலி மூலம் இந்த மோசடி நடந்துள்ளதாக கொழும்பு பங்குச் சந்தையின் சிரேஷ்ட துணைத் தலைவர் நிரோஷன் விஜேசுந்தர தெரிவித்தார்.

இந்த விவகாரம் தொடர்பாக குற்றப் புலனாய்வுத் துறை ஏற்கனவே விசாரணைகளைத் தொடங்கியுள்ளது.

மேலும் இந்த மோசடி கடந்த ஆண்டு நவம்பர் முதல் நடந்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எனவே, கொழும்பு பங்குச் சந்தையில் முதலீடு செய்யும் போது வைப்பாளர்கள் மிகவும் கவனமாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1458518

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr