ஊர்ப்புதினம்

சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி தரணிக்குள மக்கள் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டம்

2 hours 28 minutes ago

Published By: VISHNU   19 APR, 2024 | 08:36 PM

image
 

அண்மையில் வவுனியாவில் உயிரிழந்த சிறுமியின் மரணத்திற்கு நீதி கோரி வெள்ளிக்கிழமை (19) தரணிக்குளம் கிராம மக்களினால் ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_20240419_133153.jpg

கடந்த 17ம் திகதி தரணிக்குளம் கிராமத்தில் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் 17 வயதுடைய சிறுமியின் சடலம் மீட்கப்பட்டிருந்தத நிலையில், வெள்ளிக்கிழமை (19) இறுதி கிரியைகள் இடம்பெற இருந்த வேளை சிறுமியின் இறப்பில் சந்தேகம் இருப்பதாக தெரிவித்து சிறுமியின் வீட்டிற்கு முன்பாக கிராம மக்கள் மற்றும் உறவினர்களால் ஆர்ப்பாட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.

IMG_20240419_132709.jpg

அத்தோடு குறித்த சிறுமியின் மரணத்திற்கு சிறிய தந்தையாரே காரணம் எனவும் தெரிவித்து மாபெரும் போராட்டத்தினை முன்னெடுத்ததுடன் மரணித்த சிறுமியின் வீட்டில் இருந்து பேரணியாக ஈச்சங்குளம் பொலிஸ் நிலையத்திற்கு சென்று பொலிஸ் நிலையத்தையும் முற்றுகையிட்டதுடன் வீதியை மறித்தும் ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டனர்.

IMG_20240419_130631.jpg

இதன் போது சிறுமியின் கொலைக்கு நீதி வேண்டும், பெண் பிள்ளைகளுக்கு பாதுகாப்பு வேண்டும், சதுமிதாவின் மரணத்திற்கு நீதி வேண்டும், போன்ற பதாதைகளை தாங்கியவாறும் கசிப்பு மற்றும் போதைவஸ்தை இல்லாமல் செய், நீதி வேண்டும் நீதி வேண்டும் மரணித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என்ற கோசங்களை எழுப்பியவாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

IMG_20240419_112545.jpg

ஒரு மணித்தியாலம் வரை இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் காரணமாக தாண்டிக்குளம், இரணைஇலுப்பைக்குள வீதி போக்குவரத்தானது தடைப்பட்ட மையால் அவ்வீதியின் ஊடக பயணம் செய்யும் மக்கள் பாதிப்புக்குள்ளாகினர்.

இதன்போது கருத்து தெரிவித்த ஆர்ப்பாட்டக்காரர்கள்,

IMG_20240419_125645.jpg

போதைப்பொருள் பாவனையாலே  இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளது. நாங்களும் வேலைக்கு சென்று 6 மணி போல் வரும் போது எங்களிற்கு பாதுகாப்பு இல்லை. தற்போது சதுமிதாவிற்கு நடந்த பிரச்சனைதான் இன்னொரு சிறுமிக்கும் நடைபெறும். 

IMG_20240419_124559.jpg

குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும். 18 வயதிற்குட்பட்ட குறித்த சிறுமியினை துஸ்பிரயோகம் செய்தமையாலே மன ரீதியாக பாதிக்கப்பட்டிருக்கலாம். அத்துடன் குறித்த சிறுமியினை சிறிய தந்தையாரே துஸ்பிரயோகம் செய்துள்ளார் என தெரிவித்த ஆர்ப்பாட்டகாரர்கள்  குறித்த சிறுமியின் மரணத்திற்கு நீதி வேண்டும் என தெரிவித்தார்.

IMG_20240419_123405.jpg

ஏற்கனவே சந்தேக பேரில் சிறுமியின் சிறியதந்தையினை ஈச்சங்குளம் பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், கைது செய்யப்பட்ட நபரினை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்துவதாகவும், இச்சம்பவத்துடன் தொடர்புடைய ஏனையவர்கள் ஐயும் கைது செய்வதாகவும் பொலிஸார் தெரிவித்ததையடுத்து ஆர்ப்பாட்டகாரர்கள் கலைந்த சென்றனர்.

IMG_20240419_120845.jpg

IMG_20240419_112225.jpg

https://www.virakesari.lk/article/181483

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் குறித்து சர்வதேச விசாரணை அவசியம் - சமூகம் மற்றும் மத நிலையம் வேண்டுகோள் - முக்கிய சூத்திரதாரியை கண்டுபிடிக்க சர்வதேச உதவியை பெறவேண்டும் என தெரிவிப்பு

2 hours 48 minutes ago

Published By: RAJEEBAN    19 APR, 2024 | 05:53 PM

image
 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில்  சர்வதேச விசாரணைகளை முன்னெடுக்கவேண்டும் என  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி குழு வேண்டுகோள் விடுத்துள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் இன்னமும் நீதிக்காக காத்திருத்தல்  பொருளாதார சமூக கலாச்சார  பொருளாதார சட்ட கண்ணோட்டம் என்ற அறிக்கையை இன்று வெளியிட்டுள்ள  சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி இந்த அறிக்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த சர்வதேச விசாரணையை கோரியுள்ளது.

சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி அமைப்பு மேலும் தெரிவித்துள்ளதாவது

easter_sunday__attack22.jpg

உயிர்த்த ஞாயிறு படுகொலைகளை இலங்கையில் யுத்தத்தின் பின்னர்  தேவாலயங்களையும்  ஹோட்டல்களையும் இலக்குவைத்து இடம்பெற்ற மிகவும் பயங்கரமான வெளிப்படையான  சம்பவம் என குறிப்பிடலாம்.

அதன் மூலம் ஏற்பட்ட பேரழிவை நாங்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

ஐந்து வருடங்களின் பின்னர் இன்னமும் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதி கிடைக்கவில்லை.

இதன் காரணமாக  உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்டவர்களிற்கான  நீதியை நிலைநாட்டுவதற்கு அவசியமான சில பரிந்துரைகளை முன்வைக்கின்றோம்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அனைத்து  நீதிமன்ற வழக்குகளையும் துரிதப்படுத்தவேண்டும்.

சர்வதேச விசாரணைகளை மேற்கொண்டு  தாக்குதலிற்கு காரணமானவர்களிற்கு எதிராக வழக்குதாக்கல் செய்யவேண்டும்  குறிப்பாக சூத்திரதாரிகளிற்கு எதிராக .

உயிர்த்த ஞாயிறுதாக்குதல் காரணமாக பாதிக்கப்பட்ட அனைவருக்கும் போதியளவு  இழப்பீடு துரிதமாக சென்றடைவதை உறுதி செய்யவேண்டும்.

உயர்நீதிமன்றம்  நஸ்டஈடுவழங்குமாறு உத்தரவிட்டவர்கள்  அந்த இழப்பீட்டை உடனடியாக வழங்குவதை உறுதி செய்யவேண்டும்.

உயிர்த்தஞாயிறுதாக்குதலில் நிலாந்த ஜெயவர்த்தனவின் தொடர்புகுறித்து  உரிய குற்றவியல் விசாரணையை முன்னெடுக்கவேண்டும்.

உயிர்த்த ஞாயிறு தொடர்பான அனைத்து அறிக்கைகளையும் பகிரங்கப்படுத்தவேண்டும்

உயிர்த்த ஞாயிறு தாக்குதல்  ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அனைத்து பரிந்துரைகளும் நடைமுறைப்படுத்துவதை உறுதி செய்யவேண்டும்.

இதேவேளை 

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் இடம்பெற்று ஐந்து வருடங்களாகின்றன தாமதிக்கப்பட்ட நீதி மறுக்கப்பட்ட நீதி என தெரிவித்த சமூகம் மற்றும் மத நிலையத்தின் ஆராய்ச்சி பிரிவின் சுரேன் பெரேரா இன்னமும் பொறுப்புக்கூறல் இடம்பெறவில்லை என குறிப்பிட்டார்.

உள்நாட்டு பொறிமுறைகள் தோல்வியடைந்துவிட்டதால் சர்வதேச பொறிமுறைகள் அவசியமாக உள்ளன என குறிப்பிட்ட அவர்  நீதியை பெற்றுக்கொள்வதற்காக சர்வதேச  பொறிமுறைகளை நாடும் நோக்கம் உள்ளதாகவும் குறிப்பிட்டார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களிற்கு நீதியை பெற்றுக்கொள்வதற்காக கலப்பு பொறிமுறை  ஒன்று உகந்ததாகயிருக்கும் எனவும் அவர் தெரிவித்தார்.

முக்கிய  சூத்திரதாரியை கண்டுபிடிப்பதற்கு  சர்வதேச அமைப்புகளின் உதவியை கோhரவேண்டும் எனவும் குறிப்பிட்ட அவர் தற்போதைய ஜனாதிபதி ஸ்கொட்லாண்ட் யார்டின் உதவி குறித்து குறிப்பிட்டுவந்துள்ளதை சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/181475

பாடசாலைகளுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கும் பணி ஆரம்பம்

3 hours 5 minutes ago

Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 03:55 PM

image
 

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் பணிப்புரைக்கமைய பாடசாலை மாணவர்களுக்கு போசாக்குள்ள உணவு வழங்கும் நிகழ்ச்சித் திட்டத்திற்காக உலக உணவுத் திட்டத்தின் மூலம் பாடசாலைகளுக்கு வழங்கப்படும் செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice) விநியோகம் இன்று வெள்ளிக்கிழமை (19) வெயங்கொட உணவு களஞ்சிய வளாகத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

பாடசாலை மாணவர்களிடையே இரும்புச் சத்து குறைபாட்டைக் குறைக்கும் நோக்கில், பாடசாலை உணவுக்கு செறிவூட்டப்பட்ட அரிசி (Fortified Rice)  வழங்கப்படுவதுடன், ஜனாதிபதி செயலகத்தின் கீழுள்ள உலக உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம் எம்.எச்.ஏ.எம்.ரிப்லானின் மேற்பார்வையில் இந்த விநியோக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.

இதன்படி, முதற்கட்டமாக மாகாண மட்டத்தில் உள்ள பாடசாலைகளுக்கு 735 மெற்றிக் தொன் அரிசி வழங்கும் நடவடிக்கை இன்று ஆரம்பமானதுடன் நாளையும் (20) இந்தப் பணிகள் தொடரும். சம்பந்தப்பட்ட மாகாண கல்வித் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பொது சுகாதார பரிசோதகர்களின்  கண்காணிப்பின் கீழ்  பாடசாலைகளுக்கு அரிசி விநியோகிக்கப்படுகிறது.

இதேவேளை, மே 19ஆம் திகதி பாடசாலை புதிய  தவணை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர், 378.835 மெற்றிக் தொன் பருப்பு, 412.08 மெற்றிக் தொன் சூரியகாந்தி சமையல் எண்ணெய், 300 மெற்றிக் தொன் பேரீச்சம்பழங்கள் பாடசாலைகளுக்கு விநியோகிக்கப்படும் என உலகக் உணவுத் திட்டத்திற்கான கூட்டுச் செயலகத்தின் பணிப்பாளர் நாயகம்  எம்.எச்.ஏ.எம்.ரிப்லான் தெரிவித்தார்.

நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கு பாடசாலையில் ஒருவேளை உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடும் முன்னர், தினமும் காலை 7.30 மணி முதல் 8.30 மணி வரை  காலை உணவு வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் ஊடாக"ஆரோக்கியமான சுறுசுறுப்பான  மாணவர் தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை உ யர்த்த பங்களித்தல்,  மற்றும் உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புதல் ஆகிய அடிப்படை நோக்கங்களை  நிறைவேற்ற எதிர்பார்க்கப்படுகிறது.

9134 அரச பாடசாலைகளிலும், 100 இற்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் உள்ள அனைத்து ஆரம்ப வகுப்பு மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த ஆண்டு பாடசாலை உணவுத் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.

இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்க விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட பல அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

https://www.virakesari.lk/article/181467

யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு!

4 hours 1 minute ago

யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு!

இனியபாரதி.

யாழ்ப்பாணம் காங்கேசன்துறை பொலிஸாரினால் பிராந்திய உயிர்காப்பு நீச்சல் பிரிவு ஸ்தாபிக்கப்பட்டு இன்று வெள்ளிக்கிழமை(19) வடக்கு மாகாண பிரதிப் பொலிஸ்மா அதிபர் திலக்.சி.ஏ.தனபாலவினால்  திறந்து வைக்கப்பட்டது.

கடற்கரையில் குளிக்கும் போது, விளையாட்டுக்களில் ஈடுபடும்போது உயிர் இறப்பு மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படாது தடுக்கும் வகையில் குறித்த பிரிவு செயற்படவுள்ளது.

இதன்போது குறித்த பகுதியில் குற்றச்செயல்களை கட்டுப்படுத்தும் வகையில் பொலிஸ் காவலரணும் திறந்து வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் காங்கேசன்துறை பிராந்திய மூத்த பொலிஸ் அத்தியட்சகர், உதவி பொலிஸ் அத்தியட்சகர்கள், காங்கேசன்துறை பிராந்திய பொலிஸ் நிலையங்களின் பொறுப்பதிகாரிகள், பொலிஸ் உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்துகொண்டனர். (ச)

யாழில் திறந்து வைக்கப்பட்ட உயிர்காப்பு நீச்சல் பிரிவு! (newuthayan.com)

யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு!

4 hours 2 minutes ago

(இனியபாரதி) 
யாழ்ப்பாணம் போதனா மருத்துவமனையில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைக்கப்பட்டதாக உறவினர்கள் குற்றச்சாட்டு தெரிவித்தனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக (18)இன்று யாழ் ஊடக அமையத்தில் நடத்திய ஊட சந்திப்பில் சத்ர சிகிச்சையின் போது இருந்த பெண்ணின் தாயார் மற்றும் சகோதரர் விடயம் தொடர்பாக கருத்து தெரிவித்தனர்

யாழ் போதனா  மருத்துவமனையில் இதய சத்திரசிகிச்சை  மேற்கொள்ளப்பட்ட சுரேஸ்குமார் பாக்கியச்செல்வி வயது 44 ஜெயபுரம் தெற்கு பல்லவராயன்கட்டு என்ற குடும்பப் பெண் கடந்த 08 திகதி நடைபெற்ற இதயச் சத்திரசிகிச்சையின் போது உயிரிழந்துள்ளார்.

தவறுதலான முறையில் சத்திரசிகிச்சை நடைபெற்றதாகவும் உறவினர்கள்  குற்றச் சாட்டுகின்றனர்.

அரச  மருத்துவமனையில் சத்திர சிகிச்சைகாக பணம் கேட்டதாகவும் குற்றச்சாட்டுகின்றனர்.இவ்வாறான இந்தச் சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் எனவும் கோரிக்கை விடுத்தனர்.

அத்தோடு இறந்த பெண் கணவனால் கைவிடப்பட்ட மிகவும் வறுமையான பெண் என உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.(ப)

யாழ் போதனாவில் இதய சத்திர சிகிச்சையின் போது தவறிழைப்பு:உறவினர் குற்றச்சாட்டு! (newuthayan.com)

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ; கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்

4 hours 4 minutes ago

வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்!

(மாதவன்)

செம்மணியில் துடுப்பாட்ட மைதானம் அமையின் அயற்கிராமங்கள் வெள்ளத்தில் மூழ்கும் ;
கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும் - பொ. ஐங்கரநேசன் எச்சரிக்கை!

செம்மணியில் முன்னர் உப்பளம் இருந்த பகுதியில் சர்வதேசத் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான பகீரத முயற்சியில் நகர அபிவிருத்தி அதிகாரசபை ஈடுபட்டுள்ளது. ஏற்கனவே செம்மணியில் கட்டுமானங்களை மேற்கொள்வதற்குப் பல்வேறு தரப்பினராலும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டபோது வடக்கு மாகாணசபை அவற்றை நிராகரித்திருந்தது.

தற்போது  வடக்கு மாகாணசபையில் மக்கள் பிரதிநிதித்துவம் இல்லாத நிலையில் செம்மணியில் சர்வதேசத்தரத்தில் துடுப்பாட்ட மைதானம் ஒன்றை அமைப்பதற்கான முயற்சிகள் சாதக பாதகங்களை ஆராயாது முடுக்கிவிடப்பட்டுள்ளன.

செம்மணியில் இத் துடுப்பாட்ட மைதானம் அமைந்தால் அயற்பிரதேசங்கள் மாரியில் வெள்ளத்தில் மூழ்கும் அபாயமும், கோடையில் கடும் நீர்ப்பஞ்சத்துக்கு ஆளாகும் அபாயமும் நேரிடும் என்று தமிழ்த் தேசியப் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் எச்சரித்துள்ளார்.

செம்மணியில் சர்வதேசத் தரத்திலான துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளமை தொடர்பாக பொ.ஐங்கரநேசன் விடுத்துள்ள ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு எச்சரித்துள்ளார்.

அந்த அறிக்கையில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
செம்மணி உப்பளப்பகுதி குடா நாட்டின் பிரதான கடல் நீரேரிகளில் ஒன்றான உப்பாற்றுக் கடல் நீரேரியை அண்டிய தாழ்வான ஈரநிலம் ஆகும். வெளிப்பார்வைக்கு முக்கியத்துவமற்ற வெட்டவெளியாகத் தென்படும் இப் பகுதி  சூழலியல்ரீதியாக இன்றிமையாத பங்களிப்புகளை வழங்கி வருகிறது. மாரியில் சுற்றயல் கிராமங்களில் இருந்து வரும் வெள்ள நீரைத்தேக்கி வைத்து  நிலத்தடி நீர் மட்டத்தைப் பேணுவதோடு, நிலம் உவராவதையும் தடுக்கிறது.

கூடவே, மேலதிகநீரைக் குடாநாட்டின் இன்னுமொரு கடல்நீரேரியான யாழ்ப்பாணக் கடல் நீரேரிவழியாகக் கடலுக்குள் அனுப்புவதன் மூலம் குடியிருப்புகளையும் வயல் நிலங்களையும் வெள்ளத்தில் மூழ்காமல் பாதுகாக்கவும் செய்கிறது.

அபிவிருத்தி முதலீட்டாளர்களின் வசதிகளையும் நலன்களையும் மாத்திரமே கருத்திற் கொள்வதாயின் அது நிலைபேறானதாக ஒருபோதும் அமையாது. அபிவிருத்தியில் சுற்றுச்சூழலினதும், அது சார்ந்த சமூகத்தினதும், நலன்கள் முன்னுரிமை பெறும்போதே அது நீடித்த – நிலையான - அபிவிருத்தியாக அமையும்.

அந்த வகையில் யாழ் நகரின் நுழைவாசல் என்பதற்காக மாத்திரமே செம்மணியில் துடுப்பாட்ட மைதானத்தை அமைப்பதற்கு முற்படுவது எவ்வகையிலும் ஏற்புடையது அல்ல. இதனை இதுவரையில் அபிவிருத்திகள் எதனையும் காணாத தீவகத்தின் பகுதிகளில் ஒன்றில்  நிறுவுவதே சாலச்சிறந்தது ஆகும். என்றும் தெரிவித்துள்ளார்.(ப)

வெள்ளத்தில் மூழ்கும் கிராமம்:கோடையில் கடும் நீர்ப்பஞ்சமும் ஏற்படும்! (newuthayan.com)

போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும் பொலிஸாருக்கும் தொடர்பு - ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு

6 hours 13 minutes ago

Published By: DIGITAL DESK 3   19 APR, 2024 | 02:36 PM

image
 

(எம்.நியூட்டன்)

போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் பெரிய முதலையை பிடியுங்கள். பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக மக்கள் தெரிவிக்கிறார்கள் என மாவட்ட ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டது.

யாழ். மாவட்ட செயலக ஒருங்கிணைப்பு குழு கூட்டம்  அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா மற்றும் வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் ஆகியோரது இணைத்தலைமையில் இன்று வியாழக்கிழமை (19) நடைபெற்றது.

இதன்போது, பொலிஸாரால் போதைப்பெருள் கடத்தல் தொடர்பில் கருத்துகள் முன்வைக்கப்பட்டது. குறிப்பாக ஹெரோயின் தற்போது கிடைப்பதில்லை. அதற்கு பதிலாக மனநிலை பாதிக்கப்பட்டவர்களுக்கு பயன்படுத்தப்படும் மருந்து வில்லைகளே பயன்படுத்தி வருகிறார்கள். இது தொடர்பாக மன்னாரில் சிலரை கைது செய்து சட்ட நடவடிக்கைக்குட்படுத்தியுள்ளோம்.

மேலும், கஞ்சா போதைப்பொருள் இந்தியாவில் இருந்தே வடபகுதிக்கு கடத்தப்படுகிறது. இங்கிருந்தே  தென் மாகாணங்களுக்கு கடத்தப்படுகிறது. இது தொடர்பில் பல ஆய்வுகள் விசாரணைகள் மேற்கொண்டுவருகிறோம். சிலரை கைது செய்யக்கூடியதாக இருக்கிறது. பெரும்புள்ளிகள் அகப்படவில்லை. எனினும், தொடர் நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றோம். பொதுமக்கள் ஒத்துழைப்பு தேவைப்படுகிறது என பொலிஸார் தெரிவித்தனர். 

குறித்த விடயம் தொடர்பில்  பொது அமைப்புகள் சார்பில் கலந்து கொண்டிருந்த நபர்  கருத்து தெரிவிக்கையில், சில கிராம் கணக்கில் வைத்திருப்பவர்களையே கைது செய்துள்ளார்கள். பெரும் முதலைகள் எவரும் கைது செய்யப்படவில்லை. அப்பாவிகளை கைது செய்து விட்டு கைது செய்கிறோம் என கூறகூடாது. போதைப்பொருள் கடத்தல் காரர்களுக்கும்  பொலிஸாருக்கும் தொடர்பு இருப்பதாக பொதுமக்கள் தரப்பில் கதைகள் வருகிறது. எனவே பொலிஸார் அவதானமாக செயல்பட்டு வடக்கில் போதைப்பொருளை தடுப்பதற்கு  பொலிஸார் பூரண ஒத்துழைப்பை தரவேண்டும் என தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/181451

1700 ரூபா சம்பளம் கொடு – கொழும்பில் ஆர்ப்பாட்டம்!

6 hours 33 minutes ago
up-news.jpg

பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு நாளாந்த சம்பளமாக 1700 ரூபாவை வழங்குமாறு வலியுறுத்தி, இலங்கை தொழிலாளர் காங்கிரஸினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக இன்று முற்பகல் இடம்பெற்றது.

கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக முற்பகல் 11 மணிக்கு இந்த ஆர்ப்பாட்டம் ஆரம்பமானது. இந்த ஆர்ப்பாட்டத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தேசிய அமைப்பாளர் சக்திவேல் உள்ளிட்ட கட்சியின் ஆதரவாளர்கள் பங்கேற்றனர்.

மலையகப் பகுதிகளிலிருந்து தோட்டத்தொழிலாளர்கள் கொழும்பிற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.

https://thinakkural.lk/article/299640

யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

11 hours 4 minutes ago
annai-poopathi-750x375.jpg யாழில் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல்.

தியாகத்தாய் அன்னை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தலின் இறுதிநாள் நினைவுதிம் யாழ்ப்பாணத்தில் இன்று அனுஷ்டிக்கப்பட்டது.

தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் நல்லூரில் அமைந்துள்ள தியாக தீபம் திலிபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக இவ் நினைவேந்தல் நடைபெற்றது.

அன்ணை பூபதியின் 36 ஆம் ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு மற்றும் புலம்பெயர் தேசங்களிலும் நடைபெற்று வருகின்றது. இதன் அங்கமாகக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்ப்பாண தலைமை அலுவலகத்தில் நினைவுநாள் தொடர்ச்சியாக அனுஷ்டிக்கப்பட்டு வந்ததுடன் இறுதிநாள் நிகழ்விற்காக ஊர்திப் பவணியொன்றும் இங்கிருந்து மட்டக்களப்பிற்கு சென்றிருந்தது.

இதன் தொடராக நினைவுநாளின் இறுதிநாளான இன்று அக் கட்சியின் ஏற்பாட்டில் நல்லூரில் கொட்டகை அமைத்து நினைவேந்தல் அனுஷ்டிக்கப்பட்டது.

இதன் போது பொதுச்சுடர் ஏற்றி மலர்மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலி செலுத்தப்பட்டது. இந்நிகழ்வில் அரசியல் கட்சி உறுப்பினர்கள் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1378867

அவசரத்தனங்களும் குழப்பங்களும்...

11 hours 46 minutes ago

ஜனாதிபதித் தேர்தல் களம் தெற்கைவிட இம்முறை தமிழர் தாயகப் பிரதேசத்திலும் சூடுபிடிக்கத் தொடங்கியிருக்கின்றது. போரின் பின்னரான அனைத்து ஜனாதிபதித் தேர்தல்களிலும் தென்னிலங்கை வேட்பாளர்களை ஆதரித்த தமிழ் மக்கள் இம்முறை அத்தகைய நிலைப்பாட்டை எடுப்பதற்குத் தயங்குவதும், தமிழ்ப் பொது வேட்பாளரை நோக்கி தமிழர்கள் அணிதிரட்டப்படுவதாலும் ஜனாதிபதித் தேர்தல் விவகாரம் பேசுபொருளாகியிருக்கின்றது. ஜனாதிபதித் தேர்தலில் தமிழ்ப்பொது வேட்பாளர் களமிறக்கப்படுவது தென்னிலங்கை கட்சிகளைப்போன்று தமிழ்த்தேசியக் கட்சியைச் சேர்ந்த சிலருக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதே நேரம் இந்தப் பொதுவேட்பாளர் விவகாரத்தை குழப்பியடிப்பதற்கான சதி முயற்சியும் முன்னெடுக்கப்படுவதாக குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. தமிழ் மக்கள் கூட்டணியின் நாடாளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரனின் செயற்பாடுகள் தொடர்பில் பலத்த சந்தேகங்கள் எழுப்பப்படுகின்றன. கொள்கைத் தளம்பலான ஒருவர் இந்த விடயங்களை முன்னின்று செயற்படுத்துவதாகச் சொல்லிக்கொள்ளும் போது சந்தேகங்கள் எழுவது இயல்பானதே. பொதுவேட்பாளர் விவகாரத்தை ஆதரிப்பதாகக் காட்டிக்கொண்டு அதைக் குழப்பியடிப்பது தான் அவரது இலக்கா என்ற கேள்வியும் எழுகின்றது. ஏனெனில் அவரின் நடவடிக்கைகள் அப்படியானவையாகத்தான் அமைந்திருக்கின்றன.

ஜனநாயக தமிழ்த் தேசியக் கூட்டணியே, ஜனாதிபதித் தேர்தலில் பொதுவேட்பாளரைக் களமிறக்கும் யோசனையை முன்வைத்தது. அது தொடர்பில் பல தரப்புகளையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தது. இதேகாலப் பகுதியில் விக்னேஸ்வரன், ‘ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நாட்டுக்கு நல்லது செய்கிறார். அவரைத்தான் ஆதரிப்பேன்' என்று அறிக்கைவிட்டார். பின்னர் ரணில் ஏமாற்றிவிட்டார் என்று சொன்னார். திடீரென பொதுவேட்பாளர் விவகாரம் தொடர்பில் கூட்டத்தை ஒழுங்குபடுத்தினார். அது தொடர்பில் அறிக்கைகள் விடுத்தார். இந்த விவகாரத்தை முன்னெடுத்த தரப்புகளுடன் எந்தவொரு சந்திப்பையும் நடத்தாமல் தான்தோன்றித்தனமாக விக்னேஸ்வரன் விடயங்களைக் கையாள்கின்றார். இது தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரத்தை எதிர்க்கும் தரப்புகளுக்கு வாய்ப்பாக அமைந்திருக்கின்றது.

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்புமனு கோரப்பட்ட பின்னர் தமிழ்ப்பொதுவேட்பாளர் யார் என்பதைப் பகிரங்கப்படுத்தலாம். விக்னேஸ்வரன் பொறுமை காக்கவேண்டும். இலங்கையிலுள்ள தமிழ்மொழி பேசும் அனைவரும் ஆதரிக்கக்கூடிய ஜனரஞ்சகமான தலைவர் ஒருவராக இருக்கவேண்டும். அப்படிப்பட்டண்டும். ஒருவரையே தமிழ்ப்பொதுவேட்பாளராக களமிறக்க வேண்டும். தமிழ்ப்பொதுவேட்பாளர் என்பது ஒரு அரசியல் தீர்மானம். எப்படி வட்டுக்கோட்டைத் தீர்மானம் காலம் கடந்தும் நிலைத்து நிற்கின்றதோ அதே போன்று தமிழ்ப்பொதுவேட்பாளர் விவகாரமும் அமையவேண்டும். நாடு முழுவதிலிருந்தும் ஆகக் குறைந்தது 15 லட்சம் வாக்குகளையாவது அவர் திரட்டிக்கொள்ளக் கூடியவராக இருக்கவேண்டும்.

முஸ்லிம் மற்றும் மலையக சமூகங்களின் அரசியல் தலைவர்கள் தென்னிலங்கை தரப்புகளுடன் ஒட்டிக் கொண்டிருந்து அமைச்சுப் பதவியை பெறுபவர்கள். அவர்கள் எந்தளவு தூரம் பொதுவேட்பாளர் விவகாரத்துடன் ஒத்துழைத்துச் செயற்படுவார்கள் என்பது கேள்விக்குறியானது. இவ்வாறான சூழலில் அனைத்துத் தரப்புகளுடனும் அவதானமாகவும் - நிதானமாகவும் கலந்துரையாடல் நடத்தவேண்டும். அதைவிடுத்து விக்னேஸ்வரன் போல, மின்னஞ்சலில் போதிய அவகாச மின்றி அழைப்பு அனுப்பிவிட்டு கலந்துரையாடல் நடத்த கூடாது. விக்னேஸ்வரன் தலைமை தாங்கிய எந்தவொரு விடயமும் நேர்சீராக நடைபெறவில்லை. மாகாண சபையாக இருக்கலாம் அல்லது தமிழ்மக்கள் பேரவை என்ற சிவில் அமைப்பாக இருக்கலாம் அல்லது அவரது கட்சியாக இருக்கலாம். எங்குமே அவர் ஒரே கொள்கையோடு இயங்காமையால் கடைசியில் அவையெல்லாமே குழப்பத்துக்குள் சிக்கி, செயற்றிறனை இழந்ததைக் கண்முன்னே பார்த்தோம். அப்படிப்பட்ட ஒருவர் தனது அவசரத்தனமான நடவடிக்கைகளால் தீர்க்கமான அரசியல் முடிவை குழப்பியடித்துவிடக்கூடாது என்பதே மக்களின் ஆதங்கம்.

(16. 04.2024-உதயன் பத்திரிகை)

 

https://newuthayan.com/article/அவசரத்தனங்களும்_குழப்பங்களும்...

இனநலனா! ஒற்றுமையா!!!

11 hours 49 minutes ago

இலங்கையில் தமிழர்களுக்கு மாத்திரமல்லாமல் முஸ்லிம்களுக்கும் தாய்மொழி தமிழ்தான். இதனாலேயே தமிழர்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் தந்தை செல்வா ஈடுபட்டார். இதனால் 'தமிழ்பேசும் மக்கள்' என்ற சொல்லை தந்தை செல்வா பாவிக்கத்தொடங்கினார். இலங்கை சுதந்திரமடைந்த காலம் தொட்டு இரு தரப்பு அரசியல்வாதிகளும் தமிழ் முஸ்லிம் ஒற்றுமை பற்றிப் பேசி வருகின்றனர். தமிழ்த் தேசிய அரசியல்வாதிகளும் பல விட்டுக்கொடுப்புகளைச் செய்து தமிழ் முஸ்லிம் ஒற்றுமையை கட்டியெழுப்ப அன்றிலிருந்து இன்று வரை பாடுபட்டு வருகின்றனர். ஆனால் முஸ்லிம்களோ மொழிரீதியான பிணைப்பைக் கணக்கிலேயே எடுப்பதில்லை. அவர்கள் எப்போதுமே தம்மைத் தனியான இனமாக முன்னிறுத்துவதிலும், தமது நலன்களைப் பெற்றுக்கொள்வதிலுமே கண்ணும் கருத்துமாக இருக்கின்றனர். ஒரு சிறுபான்மை இனம் என்ற அடிப்படையில், முஸ்லிம்கள் தமது நலன்களை முன்னுரிமைப்படுத்திச் செயற்படுவதில் எவ்விதத் தவறுமில்லை என்று தமிழர்கள் கடந்துசென்றுவிடலாம். ஆனால், ஒரே மொழியைப்பேசிக்கொண்டு, சகோதர இனம் என்று சொல்லிக்கொண்டு, தமிழர்களை ஒடுக்கும் செயற்பாடுகளை முஸ்லிம்கள் மேற்கொள்வதைத்தான் ஜீரணிக்க முடியாமல் இருக்கின்றது. குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் கல் முனையில் முஸ்லிம்கள் தமிழர்களின் இருப்பை கேள்விக்குறியாக்கும் செயற்பாடுகளை காலாதிகாலமாக மேற்கொண்டு வருகின்றனர். இதனால் கல்முனைத் தமிழர்கள் சாட்சிக்காரனின் காலில் வீழ்வதை விட சண்டைக்காரனின் காலில் வீழ்வதே மேல் என்ற நிலைப்பாட்டுக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.

இலங்கைத்தீவை நிர்வகிப்பதற்கு 256 பிரதேச செயலர் பிரிவுகள் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த 256 பிரதேச செயலகங்களின் ஊடாக அந்தந்தப் பிரதேசத்துக்குரிய மக்கள் தமது தேவைகளை பூர்த்தி செய்து வருகின்றனர். இப்படிப்பட்டநிலையில், கல்முனைப் பிரதேச செயலர் பிரிவில் முஸ்லிம் பிரதேச செயலர்களே தொடர்ச்சியாக நியமிக்கப்பட்டு வந்தனர், வருகின்றனர். இவர்கள் முஸ்லிம்களுக்குச் சார்பாக நடந்து கொள்வதாக தமிழர்கள் தொடர்ச்சியாகக் குற்றஞ்சாட்டி வந்தனர். இதனால் கல்முனை பிரதேச செயலர் பிரிவு 1989 ஆம் ஆண்டு முஸ்லிம் பிரிவு, தமிழ்ப் பிரிவு என இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இவ்வாறு கல்முனைப் பிரதேச செயலர் பிரிவு இரண்டாகப் பிரிக்கப்பட்டபோது முஸ்லிம் பிரதேச செயலர் பிரிவு முழு அதிகாரத்துடன் செயற்படத் தொடங்கியது. தமிழ்ப் பிரிவுக்கு முழுமையான அதிகாரங்களை வழங்க விடாமல் முஸ்லிம் அரசியல்வாதிகள் ஆட்சியாளர்களுக்கு சிங்களவர்கள் அழுத்தம்கொடுத்தனர், இப்போதும் அதே அழுத்தத்தைக் கொடுத்து வருகின்றனர். கல்முனை தமிழ்ப் பிரிவு பிரதேச செயலகம் 'உதவி அரசாங்க அதிபர் பிரிவு' என்றே இன்றுவரை அழைக்கப்பட்டு வருகிறது. இதன்மூலம் அதன் அதிகாரங்கள் மட்டுப்படுத்தப்பட்டுள்ளமையை உள்ளார்ந்தமாக உணரலாம்.

தமிழ்ப் பிரிவுக்குரிய காணி, நிதி போன்ற விடயங்கள் முஸ்லிம் பிரிவின் கீழேயே உள்ளன. இலங்கை அரசியலில் பௌத்த பிக்குகள் தான் தீர்மானிக்கும் சக்தியாக விளங்குகின்றனர். அப்படியிருந்தும் ஞானசார தேரராலோ, சுமணரத்ன தேரராலோ கல்முனை தமிழ் பிரதேச செயலர் பிரிவை தரமுயர்த்த முடியவில்லை.சுமணரத்ன தேரர், ஞானசாரதேரர் ஆகியோரை விட முஸ்லிம் அரசியல்வாதிகளின் செல்வாக்கு கொழும்பு அரசியலில் கூடுதலான தாக்கம் செலுத்துகிறது என்பதே யதார்த்தம்.

கல்முனைப் பிரதேச செயலக தமிழ்ப் பிரிவை பூரண அதிகாரமுள்ள பிரதேச செயலகமாக தரமுயர்த்தக்கோரி கடந்த 35 வருடங்களாக கல்முனைத் தமிழர்கள் பல்வேறு சாத்வீகப் போராட்டங்களை முன்னெடுத்திருந்தனர். எனினும் இன்றுவரை கல்முனை தமிழர்களுக்கு நீதி கிட்டவில்லை. இந்த வருடமும் தமிழ்ப் புத்தாண்டை கல்முனைத் தமிழர்கள் கரிநாளாக அனுஷ்டித்தனர். இந்த நிமிடம் வரை கொட்டும் மழைக்கு மத்தியிலும் கல்முனைத் தமிழர்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இறுதியாக நடைபெற்ற மாகாணசபைத் தேர்தலிலும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கிழக்கு மாகாணத்தில் கூடுதலான ஆசனங்களைப் பெற்றிருந்தும், கிழக்கு மாகாண முதலமைச்சர் பதவியை முஸ்லிம் காங்கிரஸுக்கு தாரைவார்த்துக்கொடுத்தது. கிழக்கு மாகாண சபை கலைக்கப்பட்டதும் முதலமைச்சர் அஹமட் நஷீர் ‘வடக்கையும் கிழக்கையும் இணைப்பதற்கு தான் ஒருபோதும் அனுமதிக்கமாட்டேன்' என்று அறிக்கைவிட்டு, தமிழர்களின் அடிப்படைக்கோரிக்கையையே நிராகரித்தார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பால் பதவிக்கு வந்த முதலமைச்சரான நஷீர் யுத்தம் நடைபெற்ற காலத்திலும் யுத்தம் முடிந்த பின்னரும் தமிழர்களுக்கு கிடைக்கவேண்டிய வேலை வாய்ப்புகள், உயர்கல்வி வசதிகள் போன்றவற்றை தமிழ்மொழியை பேசுகின்ற காரணத்தால் முஸ்லிம்கள் தட்டிப்பறித்து வருகின்றனர் என்றொரு குற்றச்சாட்டு பொதுவாக உண்டு. ஆனால், ஒரு பிரதேச செயலகத்தைக் கூட தரமுயர்த்த அனுமதிக்காமல், இன்னொரு சிறுபான்மையினரின் அடிப்படை உரிமைகளைக் கூடவா தட்டிப்பறிப்பார்கள்? தமிழ் அரசியல்வாதிகள் தீர்க்கமான ஒரு முடிவெடுக்கவேண்டிய தருணம் வந்து விட்டது. தமிழ் - முஸ்லிம் ஒற்றுமை என்றைக்கும் இருக்கத்தான் வேண்டும். ஆனால் அதைச் சொல்லிச் சொல்லியே முஸ்லிம்கள் எல் லாவற்றையும் பறித்தெடுக்க, நாம் மட்டும் இலவு காத்த கிளிகளாக ஏமாந்து கொண்டே இருக்கிறோம். இனியும் அவ்வாறான விட்டுக்கொடுப்புகளுக்கு இடமளிக்காமல், முதலில் தமிழர் நலன் அதன்பின்னரே தமிழ்-முஸ்லிம் ஒற்றுமை என்ற நிலைப்பாட்டுக்கு தமிழ்மக்களும், தமிழ் அரசியல்வாதிகளும் வரவேண்டும். அப்போதுதான் எஞ்சியவற்றையாவது இழக்காமல் காக்க முடியும்.

(17. 04.2024-உதயன் பத்திரிகை)

 

https://newuthayan.com/article/இனநலனா!_ஒற்றுமையா!!!

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு!

12 hours 46 minutes ago

யாழ்.பல்கலையின் பொன்விழாவை முன்னிட்டு ஆய்வு மாநாடு!
adminApril 18, 2024
univercity-if-jaffna.jpg

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் யாழ்ப்பாண வளாகம் எனும் பெயரில் இலங்கைப் பல்கலைக்கழகத்தின் ஒரு அங்கமாக ஆரம்பிக்கப்பட்டு இவ்வருடத்துடன் ஐம்பதாண்டைப் பூர்த்தி செய்து பொன்விழாக் காண்கின்றது.

அதனை முன்னிட்டு முதலாவது சர்வதேச கல்வியியல் ஆய்வுமாநாட்டை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் உயர்பட்டப்படிப்புக்கள் பீடமும் கலைப்பீடத்தைச் சேர்ந்த கல்வியியல் துறையும் இணைந்து ஒழுங்கமைத்துள்ளன.

‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வடக்கு மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் கருப்பொருளில் இம்மாநாடு திட்டமிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத் துணைவேந்தர் பேராசிரியர்.சி.சிறிசற்குணராசா தலைமையிலும் உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் மற்றும் கலைப் பீடாதிபதி பேராசிரியர்.சி.ரகுராம் ஆகியோரின் இணைத்தலைமையிலும் இவ் ஆய்வுமாநாடு அரங்கேறவுள்ளது.

கல்வியியல் துறைத் தலைவர் கலாநிதி.ஆ.நித்திலவர்ணண் மாநாட்டின் இணைப்பாளராகச் செயற்படுகின்றார்.

வட மாகாண கல்வி அமைச்சின் செயலாளர் ம.பற்றிக் டிரஞ்சன் மற்றும் வட மாகாணக் கல்விப் பணிப்பாளர் தி.ஜோன் குயின்ரஸ் ஆகியோர் இந்நிகழ்வில் சிறப்பு விருந்தாளர்களாகக் கலந்துகொள்கின்றனர்.

எதிர்வரும் 20ம் திகதி சனிக்கிழமையும் 21ம் திகதி ஞாயிற்றுக்கிழமையும் காலை மற்றும் மாலை அமர்வுகள் எனத் திட்டமிடப்பட்டுள்ள இம்மாநாட்டின் காலை அமர்வுகள் கைலாசபதி கலையரங்கிலும் மாலை அமர்வுகள் உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்திலும் நடைபெறவுள்ளன.

சனிக்கிழமை நடைபெறவுள்ள அங்குரார்ப்பண நிகழ்வில் திறவுகோல் உரையினை கொழும்புப் பல்கலைக்கழக கல்வியியல் பீட கல்வி உளவியல் இருக்கைப் பேராசிரியர் மஞ்சுளா விதாணபத்திரண நிகழ்த்தவுள்ளார்.

‘வாண்மைத்துவ விருத்திக்கான ஆய்வு மைய புத்தாக்கங்கள்: வடக்கு இலங்கையின் ஆசிரியர் கல்விக்கான தந்திரோபாய அணுகுமுறை’ எனும் தலைப்பில் இவ் உரை நிகழவிருக்கின்றது.

திறவுகோல் உரையினைத் தொடர்ந்து மாநாட்டின் கருப்பொருளை மையப்படுத்திய மையக்கருத்துரைகள் இடம்பெறவுள்ளன.

இக்கருத்தரங்கிற்கு உயர்பட்டப்படிப்புக்கள் பீடப் பீடாதிபதி பேராசிரியர்.செ.கண்ணதாசன் தலைமைதாங்கவுள்ளார்.

‘இலங்கையின் ஆரம்ப பிள்ளைப்பருவக் கல்வியை முறைமைப்படுத்தல் – சவால்களும் பிரச்சனைகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர்.தி.முகுந்தனும், ‘வட மாகாணக் கல்வியின் சமகால உள சமூக நிலைமைகள்’ எனும் தலைப்பில் உளமருத்துவ நிபுணர் சி.சிவதாசும், ‘இலங்கையின் பாடசாலைக் கலைத்திட்டத்தின் சவால்களும் புதிய போக்குகளும்’ எனும் தலைப்பில் திறந்த பல்கலைக்கழக கல்வியியல் பீடப் பேராசிரியர் எவ்.எம்.நவாஸ்தீனும், ‘சட்டத் தீர்மானங்களை அறிவிப்பதில் கல்வியியல் ஆய்வுகளின் தேவைகள்’ எனும் தலைப்பில் களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி ஜே.பி.ஏ.ரஞ்சித்குமாரும் உரையாற்றவுள்ளனர்.

ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ள இரண்டாம் நாள் நிகழ்வுகளுக்கு யாழ்ப்பாணப் பல்கலைக்கழக கல்வியியல் துறைப் பேராசிரியர் ஜெயலக்சுமி இராசநாயகம் தலைமை தாங்கவுள்ளார்.

இந் நிகழ்வில் திறவுகோல் உரையை தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழக கல்வியியல் மற்றும் மேலாண்மைத் துறைத் தலைவர் பேராசிரியர் கு.சின்னப்பன் ‘தமிழ் கற்பித்தலில் புதிய போக்குகள்’ எனும் தலைப்பில் நிகழ்த்தவுள்ளார்.

அதனைத் தொடர்ந்து ‘நாளையை வலுப்படுத்தல் – கல்வியின் போக்குகளும் அவற்றை புரிந்துகொள்ளவும் உள்வாங்கவும் வட மாகாணத்தின் இயலுமைகள்’ எனும் தலைப்பில் கலைப்பீடப் பீடாதிபதி பேராசிரியர் சி.ரகுராம் தலைமையில் திறந்த புலமைத்துவக் கலந்துரையாடல் இடம்பெறவுள்ளது.

இக்கலந்துரையாடலில் ஓய்வுபெற்ற வலயக் கல்விப்பணிப்பாளரும் அதிபருமாகிய என்.தெய்வேந்திரராஜா, கல்வியியல் ஆய்வாளரும் அகவிழி மற்றும் ஆசிரியம் சஞ்சிகைகளின் ஆசிரியருமான தெ.மதுசூதனன், தேசிய கல்வி நிறுவன விரிவுரையாளர் ஐ.கைலாசபதி, கிளிநொச்சி விவேகானந்தா வித்தியாலய அதிபர் ஜெய மாணிக்கவாசகர், இலங்கை பரீட்சைகள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஜீவராணி புனிதா, யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி அதிபர் இ.செந்தில்மாறன், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகக் கல்லூரியின் முன்னாள் பணிப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் திட்ட முகாமையாளருமாகிய ஜே. ஜூட் வோல்ற்றன் மற்றும் கிளிநொச்சி வடக்கு கல்வி வலய தொழில் வழிகாட்டல் அலுவலர் சு.வீரசுதாகரன் ஆகியோர் பங்குபற்றவுள்ளனர்.

பார்வையாளர்களின் வினாக்களுக்கும் விடையளிக்கும் நிகழ்வாகவும் இக் கலந்துரையாடல் திட்டமிடப்பட்டுள்ளது.

‘வடக்கு மாகாணப் பாடசாலைகளின் வெற்றிகளும் பின்னடைவுகளும்’, ‘பாடசாலைகளும் சமூகமும் – எங்கு நாம் நிற்கின்றோம் – முன்னோக்கிப் போவதற்கான வழிகள்’, ‘எதிர்பார்க்கப்படும் கற்றல் பேறுகளை அளவிடுதல்’, மற்றும் ‘கல்வியும் வேலைவாய்ப்பும் – சந்தர்ப்பங்களும் சவால்களும்’ எனும் தலைப்புக்களில் இக்கலந்துரையாடல் கட்டமைக்கப்பட்டுள்ளது. கலந்துரையாடலின் கருத்துச்செறிவுகளை மாநாடு நிறைவுபெற்ற பின்னர் கொள்கை ஆவணமாக வெளியிட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இரண்டு நாள்களும் மாலை அமர்வுகள் பலாலி வீதியில் அமைந்துள்ள உயர்பட்டப்படிப்புக்கள் பீடத்தில் நடைபெறும். இரண்டு நாள் மாலை அமர்வுகளிலும் தலா நாற்பத்து நான்கு ஆய்வுக் கட்டுரைகள் பல்வேறு தலைப்புக்களிலும் சமர்ப்பிக்கப்படவுள்ளன.

பல்கலைக்கழகங்களின் ஆய்வு மாணவர்கள், விரிவுரையாளர்கள், கல்வியியல் கல்லூரிகள் மற்றும் ஆசிரிய பயிற்சிக் கலாசாலை ஆசிரியக் கல்வியலாளர்கள், கல்வி நிர்வாகிகள், பாடசாலை அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் என பன்முகப்படுத்தப்பட்ட ஆய்வாளர்களினால் பல்வேறு தலைப்புக்களில் ஆய்வுக் கட்டுரைகள் முன்வைக்கப்படவுள்ளன

 

https://globaltamilnews.net/2024/201875/

கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடினால் அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயார் - சந்திமா விஜேகுணவர்த்தன

13 hours 44 minutes ago

Published By: VISHNU   19 APR, 2024 | 02:01 AM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கைக்கு சொந்தமான கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்றத்தை நாடுவதாக இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார். அவ்வாறானதொரு நிலை ஏற்பட்டால் அதற்கு முகம்கொடுப்பதற்கு நாங்களும் தயார். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு போதுமான ஆதாரங்கள் எம்மிடமிருக்கின்றன என இலங்கை மனித நேய கட்சியின் தலைவியும் பேராசிரியருமான சந்திமா விஜேகுணவர்த்தன தெரிவித்தார்.

இலங்கை மனிதநேய கட்சி தலைமையகத்தில் வியாழக்கிழமை (18) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

இதுதொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

இந்தியாவில் தேர்தல் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழ் நாட்டு மீனவர்களின் வாக்குகளை பெற்றுக்கொள்ளும் நோக்கில் அங்குள்ள அரசியல்வாதிகள் கச்சதீவு விவகாரத்தை கையில் எடுத்துக்கொண்டு பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். தேர்தல் காலம் வரும்போது இந்தியாவை பாெறுத்தவரை இது வழமையான விடயமாகும். இந்திய பிரதமரும் கச்சதீவு விடயமாக மிகவும் தீவிரமாக தேர்தல் மேடையில் உரையாற்றி இருக்கிறார்.

குறிப்பாக கச்சதீவு இந்தியாவுக்கு சொந்தமானது. அதனை இலங்கைக்கு வழங்கியது வரலாற்று தவறு. அதனால் கச்சதீவை இந்தியாவுக்கு மீண்டும் பெற்றுக்கொள்ள நடவடிக்கை எடுப்போம். முடியாவிட்டால் நெதர்லாந்தில் இருக்கும் சர்வதேச நீதிமன்றத்தை நாடுவோம் எனவும் இந்திய பிரதமர் தெரிவித்திருக்கிறார்.

285 ஏக்கர் பரப்பளவைக்கொண்ட  கச்சதீவு இலங்கை,, இந்திய மீனவர்கள் கடற்றொழில் செய்வதற்கு அப்பால், இந்த பூமிக்குள் பல பெருமதிவாந்த வேறு விடயங்கள் இருக்கின்றன. அதனால்தான் இந்திய அரசியல்வாதிகள் கச்சதீவை எப்படியாவது தங்களுக்கு சொந்தமாக்கிக்கொள்ள முயற்சித்து வருகின்றனர். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கு  தேவையான வரலாற்று ஆதாரங்கள் எம்மிடம் இருக்கின்றன. 

அதனால் கச்சதீவை பெற்றுக்கொள்ள இந்தியா சர்வதேச நீதிமன்ற்ததை நாடுமாக இருந்தால், அதற்கு முகம்கொடுக்க நாங்களும் தயாராக வேண்டும். கச்சதீவு இலங்கைக்கு சொந்தமானது என்பதற்கான ஆதாரங்களை சர்வதேச நீதிமன்றத்துக்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுப்போம். கச்சதீவு விவகாரத்தால் இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இருந்துவரும் உறவில் பாதிப்பு ஏற்படக்கூடாது.இந்த விடயத்தில் இந்தியாவுடன் முரண்பட்டுக்கொள்ள நாங்கள் தயார் இல்லை. இந்தியா அயல் நாடாக இருந்துகொண்டு எமக்கு பாரிய உதவிகளை செய்துவருகிறது. குறிப்பாக கொவிட் காலத்தில் இந்திய அரசாங்கத்தின் உதவிகளை எங்களால் ஒருபோதும் மறந்துவிட முடியாது. அந்த நன்றி எப்போதும் எங்களிடம் இருக்கிறது.

இருந்தாலும் கச்சதீவு விவகாரம் என்பது எமது உரிமை சார்ந்த விடயம். அதனை எங்களால் விட்டுக்கொடுக்க முடியாது. இந்திய அரசியல்வாதிகள் தங்களின் தேர்தல் பிரசாரத்திற்கே இந்த விடயத்தை கையில் எடுத்துக்கொள்கின்றனர். தேர்தல் முடிவடைந்த பின்னர் அந்த விடயத்தை மறந்துவிடுவார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/181410

இலங்கையில் தமது சேவை வழங்கலை இணைத்தது டயலொக் - எயார்டெல்

13 hours 56 minutes ago

Published By: VISHNU   19 APR, 2024 | 02:19 AM

image

(நா.தனுஜா)

டயலொக் அக்ஸியாட்டா மற்றும் பார்டி எயார்டெல் லிமிடெட் ஆகிய நிறுவனங்கள் இலங்கையில் அவற்றின் செயற்பாடுகளை இணைந்து முன்னெடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ளன.

 இவ்வொப்பந்தத்தின் பிரகாரம் எயார்டெல் லங்காவின் 100 சதவீத பங்குகளை டயலொக் கொள்வனவு செய்யும் அதேவேளை, அதற்குப் பதிலாக இதுவரையில் மொத்தமாக விநியோகிக்கப்பட்ட பங்குகளில் 10.355 சதவீத பெறுமதியுடைய சாதாரண வாக்குரிமை பங்குகளை எயார்டெலுக்கு வழங்கும். 

இதுகுறித்து தெளிவுபடுத்தி நேற்றைய தினம் ஊடக அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் டயலொக் நிறுவனம், நாடளாவிய ரீதியில் தொலைத்தொடர்பு சேவையை மேம்படுத்துவதை இலக்காகக்கொண்டு முன்னெடுக்கப்படும் இந்த இணைப்புக்கு இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழு அனுமதியளித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது.

 அதுமாத்திரமன்றி இந்நடவடிக்கையானது போலியான தொலைத்தொடர்பு உட்கட்டமைப்பு செயன்முறைகளைக் கட்டுப்படுத்துவதற்கும், தொழில்நுட்பத்துறையில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதற்கும், வேகமான வலையமைப்பு இணைப்பை விரிவுபடுத்துவதற்கும், செலவினங்களைக் குறைப்பதற்கும், செயற்பாட்டு வினைத்திறனை அதிகரிப்பதற்கும் உதவும் எனவும் டயலொக் நிறுவனம் நம்பிக்கை வெளியிட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/181412

யாழ்ப்பாணத்தில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் உயிரிழப்பு!

13 hours 59 minutes ago

Published By: VISHNU    18 APR, 2024 | 10:24 PM

image

வலிப்பு ஏற்பட்ட நிலையில் கிணற்றில் விழுந்த இளம் குடும்பப் பெண் ஒருவர் புதன்கிழமை (17) உயிரிழந்துள்ளார். இதன்போது மாதகல் - சகாயபுரம் பகுதியைச் சேர்ந்த பிரதீபன் நித்தியா (வயது 37) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

குறித்த பெண்ணுக்கு வலிப்பு நோய் உள்ளது. இந்நிலையில் புதன்கிழமை (17) பிற்பகல் 6.30 மணியளவில் வீட்டு கிணற்றில் இருந்து சடலமாக மீட்கப்பட்டார். பின்னர் சடலம் தெல்லிப்பழை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டு, அங்கிருந்து யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

சடலம் மீதான மரண விசாரணைகளை திடீர் மரண விசாரணை அதிகாரி ஆ.ஜெயபாலசிங்கம் மேற்கொண்டார். உடற்கூற்று பரிசோதனைகளின் பின்னர் சடலம் வியாழக்கிழமை (18) உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இரண்டு பிள்ளைகளின் தாயான இவர் வலி.தென்மேற்கு பிரதேச சபையின் பண்டத்தரிப்பு உப அலுவலகத்தில் அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமை புரிந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/181408

யாழ். ஒருங்கிணைப்பு கூட்டத்தில் கனரக வாகன போக்குவரத்து குறித்து முக்கிய அறிவிப்பு!

1 day 3 hours ago
news-123.jpg

யாழ் மாவட்டத்தில் பாடசாலை ஆரம்பமாகும் மற்றும் நிறைவடையும் நேரத்தில் பாடசாலை சூழலில் கனரக வாகனங்கள் போக்குவரத்தில் ஈடுபடுவதற்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது.

யாழ் மாவட்ட செயலகத்தில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தலைமையில் இன்று (18) நடைபெற்ற ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்திலேயே உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

முன்பதாக, பிரதான வீதிகளில் பாடசாலை நேரங்களில் குறித்த கனரக வாகனங்கள் வேகமாகவும் வீதி விதிமுறைகளை மீறி பயணிப்பதால் மாணவர்கள் விபத்துக்களை எதிர் நோக்குவதாக குற்றம் சாட்டப்பட்டிருந்தது.

இந்நிலையிலேயே குறித்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதேவேளை போட்டி போட்டு அரச மற்றும் தனியார் பேருந்துகளால் வீதியில் பயணிப்பதால் பொதுமக்கள் அசௌகரியங்களுக்கு முகம் கொடுப்பதாகவும் உரிய தரப்பினர் பொறுப்புணர்வுடன் செயற்பட வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் இவ்வாறு அசமந்தமாக செயற்படும் தரப்பினரை உரிய நடவடிக்கைகளுக்கு உட்படுத்த வேண்டும் எனவும் பொலிசாருக்கு அறிவுறுத்தியுள்ளமை சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/299532

யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.!

1 day 3 hours ago

மாதவன்.

யாழ்ப்பாணம் மணிக்கூட்டு கோபுரம் தொடக்கம் பண்ணை வரையான பகுதியை தூய்மையான சுற்றுலா வலையமாக்கும்  கலந்துரையாடல் யாழிலுள் உள்ள தனியார் விடுதியில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடலின் போது கோடீஸ்வரன் றுசாங்கன் கருத்து தெரிவிக்கையில்;
யாழ்ப்பாண மாநகரத்தின் சுற்றுலாத்துறையை மேம்படுத்துவதற்கு ஏற்கனவே பல திட்டங்கள் வகுக்கப்பட்ட நிலையில் தற்போது அவை நடைமுறைப்படுத்தும் செயற்பாடுகள் இடம்பெற்று வருகின்றன.

அதன் முன்னேற்பாடாக உள்ளூர் சுற்றுலா ஊக்குவிப்பாளர்களுடன் இணைந்து மாநகரத்தின் சுற்றுலா துறையை அபிவிருத்தி செய்வதற்கும் வினை திறனாக செயல்படுத்துவதற்குமான கலந்துரையாடலாக பார்க்கிறேன்.

நாட்டின்  சுற்றுலா துறையை மேம்படுத்தும் தேவைப்பாடு அதிகரித்துள்ள நிலையில் யாழ். மாநகரமும் அத்தகைய செயல்பாட்டை முன்னெடுத்து வருகிறது. கடந்த 30ஆம் திகதி பூஜ்ஜிய கழிவு விழிப்புணர்வு ஊர்வலம் மற்றும்  யாழ். ஆரோக்கிய பவனி இடம்பெற்றது.

யாழ்ப்பாண மாநகரத்தில் அடையாளப்படுத்தப்பட்ட பொது நூலகம், விளையாட்டு மைதானம் மற்றும் அதன் சுற்றுவட்ட பகுதிகளை தூய்மையாக்கும் சுற்றுலா அபிவிருத்தியில் ஈடுபடுத்தி அதன் மூலம் மாநகரத்தின் இயங்கு நிலை செலவினங்களை பெறும் முயற்சி தயாரிக்கப்பட்டு வருகிறது .

ஆகவே யாழ்ப்பாண மாநகரத்தை தூய்மை ஆரோக்கியமான சுற்றுலா நகராக நகர் உருவாக்குவதற்கு யாழ். மாநகரசபை தனது முழுமையான பங்களிப்பை வழங்கும் என அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கலந்துரையாடலில் நகர அபிவிருத்தி அதிகார சபையின் பிரதிப் பணிப்பாளர் கவிதா சிகரம் நிறுவனத்தின் நிறைவேற்று பணிப்பாளர் கோடீஸ்வரன் றுசாங்கன்  மற்றும் தனியார் விருந்தினர் விடுதிகளின் உரிமையாளர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர். (ச)

யாழ். நகரின் சுற்றுலாத்துறை தொடர்பில் முக்கிய கலந்துரையாடல்.! (newuthayan.com)

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை

1 day 3 hours ago

Published By: DIGITAL DESK 3

18 APR, 2024 | 11:56 AM
image
 

7 இலட்சம் சுற்றுலா பயணிகள் வருகை என்ற மைல்கல்லை இலங்கை 14  வாரங்களில் கடந்துள்ளது.

ஜனவரி மாதம் முதலாம் திகதி முதல் ஏப்ரல் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதிக்குள் மொத்தம்  718,315 சுற்றுலா பயணிகள் நாட்டிற்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபையின்  தரவுகள் சுட்டிக்காட்டுகின்றன.

ஏப்ரல் மாதத்தின் முதல் 15 நாட்களில் 82,531 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளனர். இது நாட்டுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் வளர்ச்சி வேகம் சீராக இருப்பதை காட்டுகிறது.

ஒரு வருடத்திற்கு முன்பு நாளாந்த சுற்றுலா பயணிகளின் வருகை 3000 ஆக குறைந்து இருந்த நிலையில், தற்போது ஏப்ரல் மாத்தில் 5,502 ஆக அதிகரித்துள்ளது.

ஏப்ரல் மாதத்தில் 168,539 ற்கும் 182,724 ற்கும் இடையில் சுற்றுலாப் பயணிகள் வருகையை இலங்கை இலக்காகக் கொண்டுள்ளது.

இந்த இலக்கை அடைய நாளாந்தம் சராசரியாக 5,617 முதல் 6,090 வரை சுற்றுலாப் பயணிகள் வருகை தரவேண்டும்.

தற்போதைய வருகையின் வேகம் இலங்கை மாதத்திற்கான வருகை இலக்கின் கீழ் எல்லையை எட்டக்கூடும் என்பதைக் காட்டுகிறது.

சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரித்தால் கடந்த ஆண்டு  ஏப்ரல் மாதம்  பதிவு செய்யப்பட்ட 105,498 சுற்றுலா பயணிகளின் வருகையை நாடு விஞ்சும். 

2018 ஆம் ஆண்டில் சுற்றுலா பயணகளின் வருகையை நாடு  அடைய மேம்பட்ட வேகம் தேவை.

ஏப்ரல் மாத்தில் 17 சதவீதமான சுற்றுலா பயணிகள்  இந்தியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

11 சதவீதமான சுற்றுலா பயணிகள்  பிரித்தானியாவிலிருந்து வருகை தந்துள்ளனர்.

ஐக்கிய இராச்சியம் தனது பிரஜைகளுக்காக வெளியிட்டுள்ள இலங்கைக்கான பயண ஆலோசனையை (Travel Advisory) தளர்த்தியுள்ளமையினால் அதிக எண்ணிக்கையிலான சுற்றுலாப் பயணிகளின் வருகை எதிர்பார்க்கப்படுகிறது.

10 சதவீதமான சுற்றுலா பயணிகள்  ரஷ்காவிலிருந்து  வருகை தந்துள்ளனர்.

ஜெர்மனி, பிரான்ஸ், அவுஸ்திரேலியா மற்றும் சீனா ஆகிய நாடுகள் தரவரிசையில் நான்காவது, ஐந்தாவது, ஆறாவது மற்றும் ஏழாவது இடங்களைப் பிடித்துள்ளன.

14 வாரங்களில் 7 இலட்சம் சுற்றுலாப் பயணிகள் இலங்கை வருகை | Virakesari.lk

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு!

1 day 3 hours ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 03:43 PM
image
 

கடந்த வருடங்களில் அதிகளவில் உயிரிழப்புக்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணம் மாரடைப்பு என சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

அத்தோடு, 2010 ஆம் ஆண்டு முதல் 2020 ஆம் ஆண்டு வரையிலும் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு பிரதான காரணமும் மாரடைப்பு என்று சுகாதார திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.

அதுமட்டுமன்றி, மாரடைப்பு ஏற்படுவதற்கு பிரதான காரணங்களாக ஆரோக்கியமற்ற உணவு பழக்கங்கள், உடல்  உறுப்புகளின் செயற்பாடுகள் பற்றிய கவனமின்மை, புகையிலை , போதைப்பொருள் பாவனை மற்றும் மன அழுத்தம் உள்ளிட்ட காரணங்களினால் மாரடைப்பு ஏற்படுவதாகவும்  சுகாதாரத் துறை திணைக்களம் சுட்டிகாட்டியுள்ளது. 

 

இலங்கையில் அதிகளவில் மரணங்கள் ஏற்பட்டமைக்கு காரணம் மாரடைப்பு! | Virakesari.lk

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி

1 day 3 hours ago

Published By: DIGITAL DESK 7

18 APR, 2024 | 05:21 PM
image
 

( எம்.நியூட்டன்)

யாழ்ப்பாணத்தில் இருந்து நள்ளிரவு வேளை சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கொண்டு செல்லப்படுவதாக மக்கள் என்னிடம் முறையிட்டுள்ளார்கள் இது தொடர்பில் மக்களால் முறையிடப்பட்ட இடங்களை பார்வையிட்டபோது அங்கு 20 முதல் 25 அடிவரை அகழப்பட்டு இருக்கிறது.

அவ்வாறு  அகழப்பட்ட சுண்ணகற்கள் பிறிதொரு இடத்திற்கு கொண்டு சென்று சேர்த்த பின்னர் நள்ளிரவு வேளை  திருகோணமலைக்கு கொண்டுசெல்லப்படுகிறது.

இந்த செயற்பாட்டிற்கு யார் அனுமதி வழங்கியது?   கற்களை அகழ்வதற்கு எந்த திணைக்களம் பொறுப்பு கூறுவது இராணுவம், பொலிஸாரின் அனுமதியுடன் இது நடைபொறுகிறதா? யார் தான்  பொறுப்பு கூறுவது?

12,14 கன்ரர், டிப்பர் வாகனங்களில்  கற்களை கொண்டு செல்கிறார்கள்.  நள்ளிரவில் இந்த வேலைகளை செய்வதால் இரவு கடமையில் நிற்கும் பொலிஸார் இராணுவத்தினர் இதனை கொண்டு செல்வதற்கு அனுமதி வழங்கிறார்களா?

ஒருங்கிணைப்பு   குழு கூட்டத்தில் வடக்கு மாகாண ஆளுநர் இணைத்தலைவர்களில் ஒருவராகிருக்கிறார்.  அமைச்சரும் இணைத்தலைவர்களில் ஒருவராக இருக்கிறார்.

எனவே இந்த விடயத்தில் யாரால் இந்த செயற்பாடு நடைபெறுகிறது. இதனை நிறுத்துவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்றார்.

இதன்போது வடக்கு மாகாண ஆளுநர் பொலிஸார் இராணுவத்தினரிடம் இவை தொடர்பில் நள்ளிரவு வேளை கடமையில் இருக்கின்றபோது வீதியில் செல்லும் கனரக வாகனம், டிப்பர் வாகனங்களை சேதனைக்குட்படுத்தி உரிய அனுமதிகளை சோதனை செய்து அறிக்கை சமர்ப்பிக்க உத்தரவிட்டார்.

யாழில் நள்ளிரவில் சுண்ணகற்கள் அகழ்ந்து எடுக்கப்பட்டு திருகோணமலைக்கு கடத்தப்படுகிறதா ? சிறிதரன் ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் கேள்வி | Virakesari.lk

Checked
Fri, 04/19/2024 - 17:40
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr