ஊர்ப்புதினம்

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது - செல்வம் அடைக்கலநாதன்

4 hours 12 minutes ago

புதிய அரசும் சிங்கள தேசியவாதத்தையே பேசுகிறது selvam-1.jpg

தமிழ் கட்சிகளின் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருப்பதை தேர்தலின் பின்னர் பார்க்கமுடியும் என்பதுடன் அனுர அரசாங்கமும் சிங்களதேசிய வாதத்தையே பின்தொடர்வதாக முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் வன்னிமாவட்ட ஜனநாயக தமிழ்த்தேசிய கூட்டணியின் வேட்பாளருமான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

இன்று வியாழக்கிழமை (31) வவுனியாவில் அமைந்துள்ள அவரது அலுவலகத்தில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர் ,

தமிழ்கட்சிகள் ஒற்றுமை தொடர்பாக காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் வெளியிடப்பட்டுள்ள ஆதங்கம் உண்மையானது. அதனை நாம் ஏற்றுக்கொள்கின்றோம்.

இந்த தேர்தலில் தமிழ்கட்சிகளாகிய நாம் அனைவரும் ஒரு பொதுச்சின்னத்தின் கீழே போட்டியிடுவோம் என்று முயற்சிகளை எடுத்திருந்தோம். அது சாத்தியப்படவில்லை.

எனவே அது மனவேதனையை அழிக்கிறது.இருப்பினும் நாம் ஐந்து கட்சிகள் தற்போது ஒன்றாக இருக்கிறோம். ஏனையவர்களையும் உள்ளேகொண்டுவருவதற்கான முயற்சிகளை தொடர்ந்தும் செய்வோம்.

தேர்தலின் பின்னராவது தமிழ்கட்சிகள் இணைந்துசெல்வதற்கான வாய்ப்புக்கள் உருவாக்கப்படவேண்டும்.

அத்துடன் தேர்தலின் பின்னர் ஒற்றுமையை விரும்பாதவர்கள் மீது மக்களின் கோபம் பிரதிபலித்திருக்கும்.

அவ்வாறு மக்கள் பாடம் புகட்டும் போது ஒற்றுமையினை ஏற்ப்படுத்துவதற்கான சந்தர்ப்பங்கள் ஏற்ப்படலாம்.எனவே மக்களின் விருப்பத்திற்கு மாறாக செயற்ப்படுபவர்களை அவர்களே பார்த்துக்கொள்வார்கள்.

கடந்த அரசாங்கத்தில் அரச ஊழியர்களுக்கான சம்பள உயர்வு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் இந்த அரசாங்கமும் புதிய ஜனாதிபதியும் அது தொடர்பான கருத்துக்களை கூறமறுக்கின்றனர்.

எனவே அரச ஊழியர்களுக்கு அதிகரிக்கப்படவுள்ளதாக சொல்லப்பட்ட ஊதியம் கூட்டப்படவேண்டும். எமது கட்சி இதற்காக தொடர்ந்தும் குரல்கொடுக்கும்.

பாராளுமன்றத்தேர்தலில் ஆசனங்களை கூடுதலாக எடுக்கவேண்டும் என்பதை நோக்கமாக கொண்டே ஊழல் விசாரணைகள் ஆரம்பிக்கப்படும் என அரசால் காட்டப்பட்டுகிறது.

அத்துடன் மாகாணசபை முறைமையை ஒழிக்கவேண்டும் என்பது இந்த அரசாங்கத்தின் குரலாக உள்ளது.குறிப்பாக பயங்கரவாத தடைச்சட்டத்தை ஒழிக்கவேண்டும் என்று குரல் கொடுத்தவர்கள் இவர்களே. ஆனால் அதனை நீக்குவதற்கான சூழலில் அவர்கள் இருப்பதுபோல தெரியவில்லை.

இடதுசாரித்துவத்தினை அடித்தளமாக கொண்டு உருவாக்கப்பட்ட மக்கள் விடுதலை முன்னணி இன்று சிங்களதேசிய வாதத்தோடு இணைந்து செயற்படுகின்றது.

அந்தவகையில் திடமான ஒரு அரசாங்கம் அமைவதற்கான வாய்ப்புக்கள் குறைவாகவே இருக்கும்.

எனவேநாம் 11 ஆசனங்களை பெறும் போது அதிகாரம் மிக்கவர்களாக இருப்போம்.இம்முறை தமிழ்த்தரப்பை புறந்தள்ளி புதிய அரசாங்கத்தை அமைக்க முடியாது. அதனை நிர்ணயிக்கின்ற சக்தியாக தமிழ்த்தரப்பு இருக்கும் என்றார்.
 

 

https://akkinikkunchu.com/?p=297479

பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை - ரணில்

8 hours 11 minutes ago

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

இலங்கை மக்களில் நூற்றுக்கு 58 வீதமானவர்கள் பாராளுமன்ற முறையை அனுமதித்துள்ள நிலையில் பாராளுமன்றம் திருடர்களின் குகை என தெரிவிப்பதற்கு பெரும்பான்மை இல்லாத ஜனாதிபதிக்கு எந்த உரிமையும் இல்லை. சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே பாராளுமன்ற முறைமையை பாதுகாத்துக்கொள்ள முடியும் என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

மாத்தளை மாவட்டத்தில் போட்டியிடும் புதிய ஜனநாயக முன்னணி வேட்பாளர்களை ஆதரித்து புதன்கிழமை (30) தம்புள்ளையில் இடம்பெற்ற தேர்தல் பிரசாரக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இடம்பெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆரம்பமாக பாராளுமன்றத்தை பாதுகாத்துக்கொள்ள வேண்டும். பாராளுமன்றத்தில் நூறுவீதம் வழங்குமாறு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவிக்கிறார். நூற்றுக்கு 42வீதம் உள்ளவருக்கு நூற்றுக்கு நூறுவீதம் எவ்வாறு வழங்க முடியும். அநுரகுமார எங்கு கணிதம் கற்றார் என எனக்கு தெரியாது.

ஆரம்ப காலத்தில் கம்யூனிஸ் நாடுகள் தேர்தல் நடத்தின. எதிர்க்கட்சியை நீக்கிவிட்டு தங்களின் பங்கை அதிகரித்துக்கொண்டார்கள். அவ்வாறான முறையை எங்களுக்கு செய்ய முடியாது. நூற்றுக்கு 42 வீதம் என்றால் அந்த கணக்குதான் அதனைவிட குறைந்தாலும் அதிகரிக்கப்போவதில்லை. 

எமது நாட்டின் அரசியலமைப்பின் மூன்றாம் நான்காம் உறுப்புரையின் கீழ் இறையாண்மை இருப்பது மக்களுக்காகும். வாக்கு அதிகாரம் அதில் ஒரு பகுதி. ஜனாதிபதி தேர்தலில் தான் விரும்பும் வேட்பாளருக்கு வாக்களித்து வாக்குரிமையை பெற்றுக்கொள்கிறோம். பாராளுமன்ற தேர்தலில் தான் விரும்பும் கட்சிக்கு வாக்களித்த பின்னர், மூன்று விருப்பு வாக்கு இருக்கிறது. ஐராேப்பிய நாடுகள் பலவற்றில் இந்த முறைமை இருக்கிறது.

ஆனால் திசைகாட்டி சொலவது என்ன? கட்சிக்கு வாக்களிக்குமாறு தெரிவிக்கிறார்கள். ஆனால் விருப்பு வாக்கு தொடர்பில் எதுவும் தெரிவிப்பதில்லை. இதன் மூலம் அவர்கள் மறைமுகமாக தெரிவிப்பது, கட்சியை தெரிவு செய்யும் அதிகாரத்தை மக்களுக்கு வழங்குகிறோம். வேட்பாளர்களை தெரிவு செய்யும் அதிகாரத்தை டில்வின் சில்வாவுக்கும் அரசியல் சபைக்கும் எடுத்துக்கொள்கிறார்கள்.

இது ஜனநாயகமா? வேட்பாளரை தெரிவு செய்யும் மக்கள் ஆணையை டில்வின் சில்வா எவ்வாறு எடுத்துக்கொள்ள முடியும். பாராளுமன்றத்துக்கு சென்று தங்களை பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு முடியுமான நபர்கள் தொடர்பில் மக்களுக்கே தெரியும்.

அத்துடன் பாராளுமன்றம் திருடர்களின் குகை என்கிறார்கள். அவ்வாறு தெரிவிப்பதற்கு அநுரகுமாரவுக்கு உரிமை வழங்கியது யார்.? அவர்களின் வீதம் நூற்றுக்கு 42 வீதமாகும். பாராளுமன்றம் தொடர்பில் நம்பிக்கை இருப்பதாக நூற்றுக்கு 58 வீதமான மக்கள் தெரிவிக்கிறார்கள். பாராளுமன்றத்தில் கை வைப்பதற்கு திசைகாட்டிக்கு இருக்கும் உரிமை என்ன? ஜனாதிபதியை நிர்வகிப்பது பாராளுமன்றமாகும். அவ்வாறான ஒரு இடத்தை திருடர்களின் குகை என ஜனாதிபதி எவ்வாறு தெரிவிக்க முடியும்.

2023 ஆம் ஆண்டு ஜூலை மாதம்  முன்னாள் சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வலவுக்கு எதிராக காவிந்த ஜயவர்த்தன  பாராளுமன்றத்தில் ஒரு பிரேரணையை முன்வைத்தார். ஆனால் அதன் பின்னர் அவர் ஓகஸ்ட் 31ஆம் திகதி கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிராக உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை வழக்கு தாக்கல் செய்தார். இவர் திருடரா இல்லையா? என்பதை வழக்கு மூலம் முடிவு செய்ய வேண்டும்.

கெஹலிய ரம்புக்வெல்லவுக்கு எதிரான பாராளுமன்ற விவாதத்தை நிறுத்த நாங்கள் நடவடிக்கை எடுக்கவில்லை.  உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பின்னர் எமக்கு தீர்மானமொன்றை எடுக்க முடியும் என்றே நாங்கள் தெரிவித்தோம். உயர் நீதிமன்ற தீர்ப்பின் பின்னர்  இந்த விவாதத்தை நடத்தலாம் என்று கூறியிருந்தோம். அது சட்ட ரீதியிலான முறையாகும்.

ஏதாவது ஒரு சம்பவம் தொடர்பில் நீதிமன்றத்துக்கு சென்றால் பாராளுமன்றம் அந்த தீர்ப்புக்கு அமையவே நடவடிக்கை எடுக்கிறது. அதற்கு மத்தியில் சட்டமா அதிபர் கெஹலிய ரம்புக்வெலவுக்கு எதிராக  வழக்கு தொடுத்தார். யாருக்கு எதிராக வழக்கு தொடுத்தீர்கள் என எனக்கு கேட்டிருக்கலாம். ஆனால் நான் எதுவும் செய்ய முற்படவில்லை.

மேலும் முன்னாள் ஜனாதிபதிகளின் வீடுகளை நீக்குவதாக தெரிவிக்கிறார்கள். எனக்கு அதில் எந்த பிரச்சினையும் இல்லை. நான் இருப்பது அரச வீட்டில் அல்ல. இவர்கள் தெரிவிப்பது போல் எனது கஜு சாப்பாடு, எனது பாதுகாப்பு அதிகாரிகளுக்கு வழங்கிய 16 குடைகளை வழங்குவதை நிறுத்துவது போன்ற விடயங்களால் 120 கோடி மீதமாகி இருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்கவை வீட்டில் இருந்து அகற்றுவதற்கு இவர்கள் எதற்காக முற்படுகிறார்கள்? அவரின் கனவரை கொலை செய்தது மக்கள் விடுதலை முன்னணியாகும். யுத்தத்தை முடிவுக்கு கொண்டுவந்ததால் மஹிந்த ராஜபக்ஷ்வின் பாதுகாப்பு தொடர்பில் கவனம் செலுத்த வேண்டும். மற்றவர்களின் சிறப்புரிமைகளை அவ்வாறே வழங்குங்கள். எனது விடயங்களை நீக்கிவிடுங்கள்.

பாராளுமன்றத்துக்கு கை வைப்பதற்கு செல்ல வேண்டாம் என்றே நான் தெரிவிக்கிறேன். அவ்வாறு செயவதாக இருந்தால் மக்கள் அபிப்பிராய வாக்கெடுப்பு நடத்த வேண்டும். எனவே அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும். அரச ஊழியர்களுக்கான சம்பளத்தை அதிகரிக்க வேண்டும்.

தேர்தலில் சிலிண்டருக்கு வாக்களித்தால் மாத்திரமே இந்த பாராளுமன்ற முறையை பாதுகாக்க முடியும். எமது முறைமையின் பிரகாரம் பாராளுமன்றத்தில் ஆளும் கட்சியிலும் எதிர்க்கட்சியிலும் அனுபவமுள்ளவர்கள் மற்றும் பழையவர்களும் இருக்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/197604

பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை

9 hours 22 minutes ago

2024 ஆம் ஆண்டில் இதுவரை தரப் பரிசோதனையில் தோல்வியடைந்த மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்டவை இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை என்று சுகாதார அமைச்சகத்தின் மருத்துவப் பொருட்கள் பிரிவு தெரிவித்துள்ளது.

தர சோதனையில் தோல்வியடைந்த 71 மருந்துகளில், சுமார் 39 மருந்துகள் இந்தியாவில் தயாரிக்கப்பட்டவை, பத்து மருந்துகள் உள்நாட்டில் தயாரிக்கப்பட்டவை, மற்றவை சீனா, கென்யா, பாகிஸ்தான், ஜப்பான் மற்றும் பங்களாதேஷ் போன்ற நாடுகளில் இருந்து வந்தவை.

இதுகுறித்து ஆங்கில ஊடகமொன்றுக்கு கருத்து தெரிவித்த சுகாதார அமைச்சின் மூத்த அதிகாரி ஒருவர், இந்தியா உலகின் முன்னணி மருந்து உற்பத்தியாளர்களில் ஒருவர் என்றும், இந்தியாவில் தயாரிக்கப்படும் மருந்துகளில் தரக் குறைபாடு ஏற்படுவது சாதாரண நிகழ்வு என்றும் கூறினார்.

“எனினும், தரமற்ற மருந்து எதுவும் சந்தையில் இல்லை என்பதை உறுதி செய்கிறோம்,” என்றும் அவர் உறுதிப்படுத்தினார்.

தரப் பரிசோதனையில் தோல்வியடைந்ததாகக் கண்டறியப்பட்ட மருந்துகளில், சில திரும்ப அனுப்பிவைக்கப்பட்டுள்ளன. அல்லது நிறுத்தப்பட்டுள்ளன.

https://thinakkural.lk/article/311396

மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?: புதுடில்லி செல்லும் அரச உயர்மட்ட குழு

14 hours 10 minutes ago

மன்னார் காற்றாலையை அமைக்கும் அதானியின் திட்டம் கைவிடப்படுமா?
Oruvan

இந்தியாவின் அதானி நிறுவனத்துடன் ஏற்படுத்திக்கொண்ட ஒப்பந்தத்தின் பிரகாரம் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையத்தை நிர்மாணிக்கும் பணி தொடர்பில கலந்துரையாடல்களை நடத்த எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. 

கடந்த அரசாங்கத்தின் காலத்தில் மன்னாரில் காற்றாலை மின்னுற்பத்தி நிலையமொன்றை அமைப்பதற்கான இணக்கப்பாடுகள் எட்டப்பட்டு ஆரம்பகட்ட பணிகளும் முன்னெடுக்கப்பட்டன. இத்திட்டத்தின் ஊடாக 250 மெகாவாட் மின்சாரத்தை உற்பத்தி செய்வதற்கு இணக்கப்பாடுகள் எட்டப்பட்டிருந்தன. 

என்றாலும், இத்திட்டத்துக்கு கடுமையான எதிர்ப்புகள் வெளியாகியிருந்ததுடன், தற்போதைய அரசாங்கமும் இத்திட்டத்தை மீள் பரிசீலனை செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. 

கடந்த 10ஆம் திகதி இதுதொடர்பிலான அரசாங்கத்தின் நிலைப்பாட்டை சட்டமா அதிபர் உயர் நீதிமன்றத்திற்கு அறிவித்தும் இருந்தார்.

காற்றாலை மின்னுற்பத்தி திட்டத்திற்கு கடந்த அமைச்சரவை வழங்கிய அனுமதியை வலுவற்றதாக்கும் உத்தரவை பிறப்பிக்குமாறு கோரி வனஜீவராசிகள், இயற்கை வளங்கள் பாதுகாப்பு சங்கம், சுற்றுச்சூழல் நீதிக்கான மையம் உள்ளிட்ட சில தரப்பினரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனு பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே சட்டமா அதிபர் திட்டத்தை மறுசீரமைக்கும் அரசாங்கத்தின் தீர்மானத்தை உயர்நீதிமன்றத்துக்குத் தெரியப்படுத்தியிருந்தார். 

இலங்கை அரசாங்கம் மற்றும் இந்தியாவின் அதானி நிறுவனத்திற்கு இடையே காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் குறித்து ஏற்படுத்திக்கொள்ளப்பட்டுள்ள உடன்படிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ள விடயங்கள் தொடர்பில் பொதுத் தேர்தலுக்கு முன்னர் அரசாங்கம் கலந்துரையாடலை நடத்த உள்ளது. 

பொதுத் தேர்தலின் பின்னர் நியமிக்கப்படவுள்ள புதிய அமைச்சரவையில் திட்டம் குறித்து இறுதி முடிவு எடுக்கப்பட உள்ளது. 

இந்த நிலையில், காற்றாலை மின்னுற்பத்தி திட்டம் தொடர்பில் கலந்துரையாடல்களை நடத்த இலங்கை அரசாங்கத்துக்கு புதுடில்லியில் இருந்து அழைப்பு கிடைக்கப்பெற்றுள்ளது. அதன் பிரகாரம் எதிர்வரும் ஜனவரி மாதம் இலங்கை அரசாங்கத்தின் உயர்மட்ட குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளதாக அரச தரப்பு செய்திகள் தெரிவிக்கின்றன.

 

https://oruvan.com/sri-lanka/2024/10/30/will-adanis-plan-to-set-up-mannar-wind-farm-be-shelved

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது

14 hours 11 minutes ago

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் வெளியானது DTNA.jpg

ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் தேர்தல் விஞ்ஞாபனம் இன்று வெளியிடப்பட்டது.

இன்று பிற்பகல் யாழ்ப்பாணத்தில் உள்ள தனியார் விருந்தினர் விடுதி ஒன்றில், ஜனநாயக தமிழ்த் தேசிய கூட்டணியின் யாழ் மாவட்ட முதன்மை வேட்பாளர் தர்மலிங்கம் சித்தார்த்தன் தலைமையில் குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

நிகழ்வில் கூட்டணியின் வேட்பாளர்களான சுரேஸ் பிரேமச்சந்திரன், எம்.கே.சிவாஜிலிங்கம், குருசுவாமி சுரேந்திரன், சி.வேந்தன், பா.கஜதீபன் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்ததோடு, கட்சியின் முதன்மை பெண் வேட்பாளரான சசிகலா ரவிராஜ்ஜீம் கலந்து கொண்டிருந்தார்.

இம்முறை , ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணியில் யாழ் மாவட்டத்தை பிரதிநிதித்துவப்படுத்தி சசிகலா ரவிராஜ் போட்டியிடுவதோடு, தமிழர்களின் வாழ்வில் மாற்றங்கள் ஏற்படவும் , சாந்தி , சமாதானம் , தன்னாட்சி உரிமையுடன் ,ஒற்றுமையுடன் அனைவரும் ஒன்றாக வாழ நாளைய தினம் பிறக்கவுள்ள தீப திருநாளாம் தீபாவளி நன்னாள் அனைவருக்கும் சிறப்பானதொரு நாளாக அமைய வேண்டும் என்றும் சசிகலா ரவிராஜ் வாழ்த்துக்களையும் தெரிவித்திருந்தார்.

 

https://akkinikkunchu.com/?p=297413

காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்!

14 hours 16 minutes ago

காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள்!
1173506503.jpg

நாகபட்டினம் காங்கேசன்துறை கப்பல் சேவை தொடர்பில் தொடர்ச்சியாக மக்கள் பல்வேறு விதமான குற்றாச்சாட்டுக்களை முன்வைத்து வருகின்ற நிலையில் காங்கேசன்துறை சுங்கத்தில் ஊழல் செயற்பாடுகள் இடம் பெறுவதுடன் மக்களை திட்டமிட்டு தாமதப்படுத்தும்  செயற்பாடுகளிலும் சுங்க அதிகாரிகள் ஈடுபடுவதாகவும் மக்கள் குற்றம் சுமத்தி உள்ளனர்

காங்கேசன்துறை சுங்கத்தில் இரண்டு கருமபீடங்கள் மாத்திரமே காணப்படுவதாகவும் இந்தியாவில் இருந்து வரும் பயணிகளிடம் நீண்ட நேர விசாரணைகள் மேற்கொள்வதாகவும் நபர் ஒருவருக்கு 35 தொடக்கம் 40 நிமிடம் வரை விசாரணை செயற்பாடுகளில் ஈடுபடுவதாகவும் பாதிக்கப்பட்ட பயணிகள் தெரிவிக்கின்றனர்

அடிப்படை வசதிகள் அற்ற அமர்வதற்கு கதிரைகள் கூட அற்ற காத்திருக்கும் பகுதியில் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய தேவை காணப்படுவதாகவும் மலசல கூட வசதிகள் கூட ஒழுங்குபடுத்தப்படவில்லை எனவும்  சில பொருட்களுக்கு அதிக அளவில் வரி விதிப்பதாகவும் வரியில் பாதி அளவிலான தொகைக்கே பற்று சீட்டு வழங்குவதாகவும் மீதி தொகைக்கு பற்றுசீட்டு வழங்குவதில்லை எனவும் பயணிகள் குற்றம் சுமத்தி வருகின்றனர்.[ ஒ ]

 

https://newuthayan.com/article/காங்கேசன்துறை_சுங்கத்தில்_ஊழல்_செயற்பாடுகள்!

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது

14 hours 18 minutes ago

அமைச்சர்களுக்கு கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது
adminOctober 31, 2024
anura-kumara-dissanayake.jpg

அமைச்சர்கள் கொழும்பில் இருந்து செயற்படுவதை விட சமூகங்களுக்குள் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை எடுத்துரைத்த ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க ,  அமைச்சர்களுக்கு  எதிர்வரும் காலங்களில்   கொழும்பில் வீடுகள் வழங்கப்பட மாட்டாது  எனவும் வறுமையை ஒழிப்பதிலேயே  அரசாங்கத்தின் முதன்மை கவனம் செலுத்தப்படும் எனவும் தொிவித்துள்ளாா்.    மாத்தறையில் இடம்பெற்ற மக்கள் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனைத் தொிவித்துள்ளாா்.

மேலும் தங்களுக்கு மக்களுடன் நேரடியாக இணைக்கும் அரசாங்கம் தேவை  எனத் தொிவித்த அவா்  தலைவர்கள் தொலைதூரத்தில் இருப்பதை விட உள்ளூர் பிரச்சினைகளை தீர்க்க தங்கள் மாவட்டங்களில் பணியாற்ற வேண்டும் எனவும்  வலியுறுத்தினார்.

நவம்பர் 14 க்குப் பிறகு புதிய அமைச்சரவை மற்றும் அரசாங்கத்தை நிறுவுவதற்கான திட்டங்களை   வெளிப்படுத்திய ஜனாதிபதி “இந்த அரசாங்கம் தனது பணிகளைச் செய்வதற்கு கிராமங்களைச் சென்றடைய வேண்டும் எனவும்  கிராமப்புறங்களில் வறுமையை அகற்றுவதே  தன்  முன்னால் உள்ள மிக முக்கியமான பணி  எனவும் ஜனாதிபதி   மேலும்  குறிப்பிட்டாா்.

 

 

https://globaltamilnews.net/2024/207923/

முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி!

16 hours 34 minutes ago
முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி! முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகள் இரத்து குறித்து ரணில் கேள்வி!

முன்னாள் ஜனாதிபதிகளுக்கு வழங்கப்பட்ட சலுகைகளை இரத்து செய்யக்கூடாது என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், முன்னாள் ஜனாதிபதிகளான சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மற்றும் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருக்கு வழங்கப்பட்ட சலுகைகளை அரசாங்கம் நீக்கியதன் காரணம் என்ன என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

சந்திரிக்காவின் கணவரின் கொலையுடன் மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி.) தொடர்புபட்டுள்ளது. அவருக்கும் குண்டுவெடிப்பினால் கண்ணில் காயம் ஏற்பட்டுள்ளது.

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எனக்கு ஒருபோதும் ஆதரவளிக்கவில்லை. மைத்திரிபால சிறிசேனவை ஆதரிப்பதற்காக மட்டுமே நாங்கள் ஒன்றிணைந்து செயற்பட்டுள்ளோம்.

அதேநேரம், மகிந்த ராஜபக்ஷ, மக்கள் மத்தியில் தனது செல்வாக்கை இழந்தமை வேறு விடயம், எனினும் அவர் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்தமையினை கருத்திற் கொண்டு அவரின் பாதுகாப்பை கருத்தில் கொள்ள வேண்டும்.

தமக்கு எவ்வித சலுகைகளும் தேவையில்லை எனவும், எனினும் ஏனைய ஜனாதிபதிகளின் பாதுகாப்பு தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

https://athavannews.com/2024/1406596

எமது கட்சிக்கும், லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை – நாம் ப‌ல‌மான‌ வேட்பாள‌ர்க‌ளை முன்னிறுத்தி வெற்றியை நோக்கி செல்வதால் எரிச்ச‌லில் எம் கட்சியை பற்றி பொய்க‌ளை ப‌ர‌ப்புகிறார்க‌ள் ; முபாரக் மெளலவி

16 hours 46 minutes ago
0 Less than a minute

wp-content/uploads/2024/10/Picsart_24-10-31_11-55-15-628-780x922.jpg

 

ஜ‌ன‌நாய‌க‌ ஐக்கிய‌ காங்கிர‌ஸ் க‌ட்சிக்கும் லைக்கா மொபைல் நிறுவ‌ன‌த்துக்கும் எந்த‌ ச‌ம்ப‌ந்த‌மும் இல்லை என‌ ஐக்கிய‌ ஜ‌ன‌நாய‌க‌ குர‌ல் க‌ட்சியின் ச‌பாப‌தியும் ஸ்தாப‌க‌ த‌லைவ‌ருமான‌  முபாற‌க் ம‌ஜீத் முப்தி தெரிவித்தார்.

அவ‌ர் மேலும் தெரிவித்த‌தாவ‌து,


எம‌து க‌ட்சியை லைக்கா நிறுவ‌ன‌ம் வாங்கியுள்ள‌து என‌ ப‌ல‌ரும் குற்ற‌ம் சாட்டுகிறார்க‌ள்..எம‌து க‌ட்சிக்கும் லைக்காவுக்கும் ச‌ம்ப‌ந்த‌ம் இல்லை. எம‌து க‌ட்சியின் நிர்வாக‌த்தில் லைக்காவின் உரிமையாள‌ர் அங்க‌த்த‌வ‌ராக‌ இல்லை.

அத்துட‌ன் முன்னாள‌ பாராளும‌ன்ற‌ உறுப்பின‌ராகிய‌ ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் எம‌து க‌ட்சியின் நிர்வாக‌ ச‌பையின் ஏகோபித்த‌ அனும‌தியுட‌ன் த‌லைவ‌ராக‌ நிய‌மிக்க‌ப்ப‌ட்டார்.

இது தேர்த‌ல் கால‌ம் என்ப‌தால் அவ‌ர‌து நிய‌ம‌ன‌ம் ப‌ற்றி தேர்த‌ல் திணைக்க‌ள‌ம் தேர்த‌ல் முடிவுற்ற‌ பின் அறிவிப்பார்க‌ள்.

ர‌ஞ்ச‌ன் ராம‌நாய‌க்க‌ அவ‌ர்க‌ள் ல‌ஞ்ச‌ம், க‌ள‌வு இல்லாத‌ அர‌சிய‌ல்வாதி என்ப‌தை முழு நாடும் அறியும்.

எம‌து க‌ட்சியின் முத‌லாவ‌து பாராளும‌ன்ற‌ தேர்த‌லிலேயே ஒன்ப‌து மாவ‌ட்ட‌ங்க‌ளில் ப‌ல‌மான‌ வேட்பாள‌ர்க‌ளை போட்டிருப்ப‌தாலும் அவ‌ர்க‌ளில் ப‌ல‌ர் வெற்றியை நோக்கி செல்வ‌தாலும் ஏற்ப‌ட்ட‌ எரிச்ச‌ல் கார‌ண‌மாக‌ எம‌து க‌ட்சி ப‌ற்றி பொய்க‌ளை ப‌ர‌ப்புகிறார்க‌ள் என‌ முபாற‌க் முப்தி தெரிவித்துள்ளார்.

https://madawalaenews.com/7297.html

இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

17 hours 23 minutes ago
இலங்கைக்கான புதிய சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்! இலங்கைக்கான புதிய விமான சேவையை ஆரம்பித்த என்டர் ஏர்!

போலந்தில் இயங்கும் மிகப்பெரிய தனியார் விமான நிறுவனமான என்டர் ஏர் (Enter Air), இலங்கைக்கும் போலாந்துக்கும் இடையிலான புதிய விமான சேவையை ஆரம்பித்துள்ளது.

வார்சா – கொழும்பு இடையிலான இந்த புதிய விமான சேவை எதிர்வரும் 2025 மார்ச் இறுதி வரை தொடர்ந்து இயங்கும் என என்டர் ஏர் கூறியுள்ளது.

இது இரு நாடுகளுக்கும் இடையிலான பயண மற்றும் சுற்றுலா இணைப்புகளை மேம்படுத்துவதை நோக்காகக் கொண்டுள்ளது.

அதன் முதல் விமானமானது நேற்றைய தினம் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தை (BIA)வந்தடைந்தது.

விமானம் விமான நிலையத்தில் தரையிறங்கியதும், அதற்கு நீர் வணக்கம் செலுத்தப்பட்டதுடன், இலங்கை சுற்றுலாத்துறையால் ஏற்பாடு செய்யப்பட்ட பாரம்பரிய நடன நிகழ்ச்சி மூலம் அதில் பயணம் மேற்கொண்டு நாட்டுக்கு வருகை தந்த பயணிகள் அன்புடன் வரவேற்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2024/1406590

ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

17 hours 34 minutes ago
Anura Kumara Dissanayake ஜனாதிபதியின் தீபாவளி வாழ்த்துச் செய்தி!

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

தீபாவளி தினத்தை முன்னிட்டு அவர் விடுத்துள்ள வாழ்த்துச் செய்திலேயே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அந்த செய்தியில் அவர் மேலும் கூறியிருப்பதாவது,

இருள் நீங்கி ஒளிமயமாவதை அடையாளப்படுத்தும் முகமாக உலக வாழ் இந்து பக்தர்களால் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படுகிறது.

சுதந்திரத்திற்கு பின்னர் இருளிலிருந்து வெளிச்சத்தை தேடிவந்த இலங்கை மக்கள் தற்போது புதிய எதிர்பார்ப்புக்களை சுமந்துக்கொண்டிருக்கின்றனர்.

இது மக்களின் பல வருட எதிர்பார்ப்பாகும். இத்தனை நாட்களாக இலங்கையை ஆட்சி செய்தவர்களால் முடக்கி வைக்கப்பட்டிருந்த பொதுமக்களின் எதிர்பார்ப்புக்களை மலரச் செய்யும் மாற்றத்துக்கான யுகத்தை நாம் ஆரம்பித்துள்ளோம்.

தீபாவளிக் கொண்டாட்டத்திற்கு பல காரணங்கள் உள்ளன. 14 வருட வனவாசத்தின் பின்னர் இராமர், இலட்சுமனர், சீதை பிராட்டி மீண்டும் அயோத்திக்கு வருகை தந்தமை மற்றும் கிருஷ்ண பகவான் நரகாசுரனை அழித்தமையை நினைவுகூறும் விதமாக இந்த பண்டிகை கொண்டாடப்படுகிறது.

அஞ்ஞானத்தின் இருளை போக்க மெய்ஞானத்தின் ஒளியினால் மட்டுமே முடியும் என்ற தொனியில் தீபங்களை ஏற்றி இலங்கையர்களாக புதிய புரட்சிக்கு வழிவகுப்பதாக இம்முறை தீபாவளி பண்டிகையை கொண்டாடுவோம் என மக்களிடம் கேட்டுகொள்கிறேன்.

கலாசார பல்வகைத்தன்மையின் அழகை மெருகூட்டும் வகையில், ஒருவருக்கொருவர் கௌரவம், ஏற்றுக்கொள்ளல் மற்றும் சகோதரத்துவம் என்பவற்றுக்காக கரங்களை நீட்டுவோம்.

பிரித்து வலுவிழக்கச் செய்யப்பட்ட இலங்கை தேசத்தை பிளவுபடாமல் வலுவாக முன்னோக்கிக் கொண்டுச் செல்ல வேண்டிய காலம் உதயமாகியுள்ளது.
அநீதி,வேறுபாடுகள், பிளவுபடுத்தல், வெறுப்புப் பேச்சுகள், வன்முறைகள் என்பதை முழுமையாக துடைத்தெறிந்து சமூகத்தில் வரப்பிரசாதங்களை பெற்றுக்கொள்வோர் மற்றும் வரப்பிரசாதங்கள் கிடைக்காதவர்கள் என்ற வேறுபாடுகளை முழுமையாக இல்லாது செய்ய முன்வருவோம்.

அவ்வறான, இரக்கம் கொண்ட ஒரு புதிய கலாசார இருப்பை உருவாக்க முன்வருமாறு அனைத்து மக்களுக்கும் அழைப்பு விடுக்கிறேன். இந்தத் தீபாவளியில், வளமான நாடு மற்றும் அழகான வாழ்க்கை என்ற நமது எதிர்பார்ப்பு நனவாக வேண்டுமானால், அதற்கான கலாசார, அரசியல் ரீதியான மனப்பாங்கு மாற்றமும் அவசியமாகும்.

தீபாவளி தினத்தில் அனைத்து வீடுகளிலும், நகரங்களிலும் ஏற்றப்படும் ஆயிரக்கணக்கிலான விளக்கு ஒளிகள் அனைவரினதும் மனங்களில் நட்புறவு மற்றும் ஞானத்தின் ஒளியை பரவச் செய்வதாக அமையட்டும் என பிரார்த்திப்பதோடு இலங்கைவாழ் இந்து பக்தர்களுக்கு தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவிக்கிறேன் என்றார்.

https://athavannews.com/2024/1406558

மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை

17 hours 36 minutes ago
மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை மத்திய கிழக்கில் உள்ள இலங்கையர்களை அழைத்து வர நடவடிக்கை.

மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பொது முகாமையாளரான சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறியுள்ளார்.

இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், மத்திய கிழக்கு நாடுகளில் இடம்பெற்றுவரும் யுத்த நிலை காரணமாக அங்குள்ள இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக நடவடிக்கை எடுத்து வருவதாகக் குறிப்பிட்டார்.

மேலும், அங்குள்ள இலங்கையர் யாருக்காவது நாட்டுக்கு வரவேண்டிய தேவை ஏற்பட்டால் அவர்களை நாட்டுக்கு அழைத்துவர நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இஸ்ரேல், லெபனான் நாடுகளுக்கிடையில் இடம்பெற்று வரும் மோதல் காரணமாக அங்கு தொழிலுக்கு சென்றிருக்கும் இலங்கையர்களின் பாதுகாப்பு தொடர்பாக தொடர்ந்தும் தூதரங்களுடன் கலந்துரையாடி நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இலங்கையர்கள் யாருக்கும் இதுவரை எந்த பாதிப்பும் இல்லை என்ற தமக்கு தகவல் கிடைத்திருப்பதாகவுதம் அவர் குறிப்பிட்டுள்ளார்.

லெபனானில் 7 ஆயிரம் பேர் வரையான இலங்கையர்கள் உள்ளார்கள் என்றும், இந்த வருடம் ஒக்டோபர் 29 ஆம் திகதிவரை ஆயிரத்து 116 பேர் லெபனானுக்கு தொழில் நிமித்தம் சென்றுள்ளனர் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

எனினும் தற்போது அங்கு இடம்பெறும் யுத்த நிலைமை காரணமாக லெபனானுக்கான பயணத்தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், இதனால்  தொழில் பதிவுகள் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த நிலைமை சீராகும் வரை தொழில் நிமித்தம் இலங்கையர்களை அனுப்புவதையும் நிறுத்தியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

அதேநேரம், வெளிநாடுகளில் தொழில் புரியும் இலங்கையர்கள் நாட்டுக்கு டொலர் அனுப்புவதை ஊக்குவிக்கும் வகையில் அவர்களுக்கு பல்வேறு நிவாரண திட்டங்கள் கடந்த காலங்களில் அறிமுகப்பட்டுள்ளதாகவும் அது, தொழில் அமைச்சுடன் இணைந்தே இது செயற்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2024/1406575

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது - கஜேந்திரகுமார்

1 day 3 hours ago
ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை இழைத்துவிடக்கூடாது
October 30, 2024
 

ஒற்றை ஆட்சி அரசியலமைப்புக்கு ஆதரவளிக்கின்ற வரலாற்றுத் தவறினை தமிழ் மக்கள் இழைத்துவிடக் கூடாது. அதற்கு எதிராகப் போராடக் கூடிய கட்சியாகிய தமிழ்த் தேசிய முன்னணிக்கு வாக்களித்து அக்கட்சியைப் பலப்படுத்த வேண்டுமென தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.

ஞாயிற்றுக் கிழமை (27.10) மன்னார் நகரசபை கலாச்சார மண்டபத்தில் மாலை 3.30 மணியளவில் இடம்பெற்ற பிரச்சாரக் கூட்டத்திற் கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் தெரிவிக்கையில்

‘இலங்கையின் புதிய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கா தமிழ் மக்களுடைய இனப் பிரச்சினையை தீர்ப்பதற்காகத் தாங்கள் ஒரு புதிய அரசியலமைப்பை கொண்டு வர இருப்பதாகச் சர்வதேச மட்டத்திற்குக் கூறியுள்ளார்.’

‘அந்த அரசியலமைப்பு 2015 ஆம் ஆண்டு. மைத்திரிபால சிறிசேன ரனில் விக்ரமசிங்க அவர்களுடைய காலப்பகுதியிலே. நல்லாட்சி அரசாங்கம் முன்னெடுத்த ஒரு புதிய அரசியலமைப்புக்கான முயற்சி.’

‘அந்த காலகட்டத்திலே அந்த முயற்சிலே ஒரு இடைக்கால அறிக்கை வெளியிடப்பட்டு ஸ்தம்பிக்கபட்டது காரணம் அப்போதிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமர் ரனில் விக்கிரமசிங்காவை பதவி நீக்கம் செய்து மஹிந்த ராஜபக்சவை பிரதமர் ஆக்கினார்.’

‘அந்த பிரச்சனை உச்ச நீதிமன்றத்திற்கு கொண்டு செல்லப்பட்டு உச்ச நீதிமன்றம் ரணில் விக்ரகமசிங்காவின் பதவிநீக்கம் பிழை என்று தீர்ப்பளித்து மீண்டும் அவர் பிரதமர் ஆனார். ஆனால் அந்த குழப்பம் நடைபெற்றதற்குப் பிற்பாடு அந்த புதிய அரசியலமைப்பிற்கான முயற்சியை முடிவுக்கு கொண்டுவர முடியவில்லை.

ஆகவே இன்று ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டிருக்கிற அனுர குமார திசாநாயக்கா மிகத் தெளிவாக எந்தவிதமான சந்தேகத்திற்கும் இடம் அளிக்காமல் அந்த 2015 ஆம் ஆண்டில் ஆரம்பிக்கப்பட்ட அந்த முயற்சியைத் தான் முடிவுக்கு கொண்டு வர இருப்பதாகக் கூறியுள்ளார்.’

‘இதிலே நாங்கள் தெளிவாக பார்க்கக் கூடியது. அந்த இடைக்கால அறிக்கை தமிழ் மக்களுக்கு. ஏற்றுக்கொள்ளக் கூடிய ஒரு அரசியலமைப்பு அறிமுகப்படுத்துகிறதா இல்லையா என்று.’

‘அந்த இடைக்கால அறிக்கையை நீங்கள் எடுத்துப் பார்த்தால் அறிக்கையினுடைய முன்னுரையாக அன்றைய ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பாராளுமன்றத்தில்
பாராளுமன்றத்தை ஒரு அரசியல் நிர்ணய சபையாகப் பிரகடனப்படுத்தப்பட்ட போது அதிலே செய்த முதலாவது உரையைத்தான் அதனுடன் அவர்கள் இணைத்து இருக்கிறார்கள்.’

‘காரணம் அதுதான் அந்த முயற்சியினுடைய நோக்கத்தை குறிக்கின்ற. ஒரு பேச்சு. அந்தச் சட்டத்தினுடைய இலக்கு என்ன என்பதைத் தெளிவுபடுத்துவதற்கு ஒரு அறிமுகம் என்பது இருக்கும்.

அந்த வகையிலே இந்த புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான ஒரு முயற்சியிலே மைத்திரிபால சிறிசேனவுடைய பேச்சை தான். முன்னுரையாக அவர்கள் அதிலே இணைத்தார்கள்.’

‘அந்த முன்னுரையில் மைத்திரிபால சிறிசேன தெளிவாகக் கூறுகின்றார் இலங்கை ஒரு ஒற்றை ஆட்சி நாடு. இலங்கையினுடைய இன்றைய அரசியல் அமைப்பு மாத்திரம் அல்ல. கடந்த மூன்று அரசியலமைப்புகளும் ஒற்றை ஆட்சி அரசியல் அமைப்பாக தான் இருந்துள்ளதென்று.’ ‘இன்று அந்த ஒற்றையாட்சி முறைமையைத்தான் புதிய ஜனாதிபதி நிறைவேற்ற இருக்கின்றார்.’

‘அதுதான் தமிழ் மக்களுக்கு இருக்கக்கூடிய மிகப்பெரிய சவால் அதை எதிர்ப்பதாக இருந்தால் அதை செய்யக்கூடிய செய்ய தயாராக இருக்கின்ற ஒரே ஒரு அணி சைக்கிள் சின்னத்தில் போட்டியிடுகிற தமிழ் தேசிய மக்கள் முன்னணி மட்டுமே

அவ்வாறு நிகழ வேண்டும் என்றால் வடகிழக்கிலே சைக்கிள் சின்னம் குறைந்தது 10 ஆசனங்களை பெற வேண்டும். 18 ஆசனங்களில் 10 என்றால் மட்டுமே பெரும்பான்மை. அதற்காக வன்னி தேர்தல் மாவட்டத்தில் குறைந்தது இரண்டு ஆசனங்களைச் சைக்கிள் கட்சி பெற வேண்டும். ‘

‘வன்னித் தேர்தல் தொகுதியிலே இரண்டு பாராளுமன்ற உறுப்பினர்களை நாங்கள் தெரிவு செய்தே ஆக வேண்டும். வன்னியிலே தெரிவு செய்யப்படும் ஆறு பாராளுமன்ற உறுப்பினர்களில் நாலு பேர் தமிழ் பாராளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த நான்கு பேரில் இரண்டு பேர் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பிரதிநிதிகளாக இருந்தால் மட்டுமே. ஒற்றை ஆட்சியை எதிர்க்கக் கூடிய பலத்தோடு நம்முடைய அணி பாராளுமன்றத்திற்கு செல்லும். அது ஒரு சாதாரண விடயம் அல்ல.’

‘நாங்கள் வெறுமனே தேர்தலில் போட்டியிட்டு எத்தனையோ ஆசனங்களை வென்று இருக்கிறோம் என்று புகழ் பாடுகின்ற ஒரு அமைப்பு அல்ல. எங்களுக்கு என்று ஒரு இலக்கு இருக்கிறது. அந்த இலக்கை நோக்கி பயணிக்கிற ஒரு அமைப்பாக தான் நாங்கள் செயற்பட்டு வருகிறோம்.

அந்த இரண்டு ஆசனங்களை உறுதிப்படுத்துவதாக இருந்தால் மன்னார் மாவட்டம் தமிழ் தேசிய மக்கள் முன்னணிக்கு அந்த பாராளுமன்ற உறுப்பினரைத் தெரிவு செய்தே ஆக வேண்டும். இதுவரைக்கும் இந்த மண்ணிலே சாதிக்காத ஒரு விடயத்தை தமிழ் இனத்துக்காக நாம் சாதித்தே ஆகவேண்டுமென்று அவர் மேலும் தெரிவித்தார்.

குறித்த கூட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் பொதுச் செயலாரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான செல்வராசா. கஜேந்திரன் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்ட அமைப்பாளர் ஜோன்சன் ஆசிரியர் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் மன்னார் மாவட்டச் செயளாளர் விக்ரர் தற்குரூஸ் மற்றும் அக்கட்சியின் மன்னார் வேட்பாளர் சோமநாதன் பிரசாத் உட்பட அனைத்து வேட்பாளர்கள் மற்றும் பொதுமக்கள் எனப்பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

(வாஸ் கூஞ்ஞ)
 

https://www.supeedsam.com/208415/

 

ஜே.வி.பி இன் இனவாதப்போக்கை உணர்ந்தே தமிழர்கள் அவர்களை நிராகரித்தனர் - தமிழ்த்தேசிய தலைவர்கள் தெரிவிப்பு

1 day 5 hours ago

image

(நா.தனுஜா)

தேசிய மக்கள் சக்தியின் ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்திருப்பதாலேயே தமிழ் மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவருவதாகச் சுட்டிக்காட்டியிருக்கும் தமிழ்த்தேசிய தலைவர்கள், பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பான அவர்களது தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களை கண்திறக்கச்செய்வதாக அமையும் எனத் தெரிவித்துள்ளனர்.

நாட்டில் நடைமுறையில் இருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் முற்றாக நீக்கப்படவேண்டும் என தேசிய மற்றும் சர்வதேச தரப்புக்களால் தொடர்ச்சியாக வலியுறுத்தப்பட்டுவரும் நிலையில், செவ்வாய்க்கிழமை (29) இதுபற்றி எழுப்பப்பட்ட கேள்விக்குப் பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் விஜித்த ஹேரத், 'பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குவது குறித்து தற்போது ஆராயப்படவில்லை.

அது உள்ளவாறே தொடர்ந்து நடைமுறையில் இருந்தாலும், அச்சட்டம் தவறான முறையில் பயன்படுத்தப்படுவது தடுக்கப்படும். அடுத்துவரும் புதிய பாராளுமன்றத்தில் இச்சட்டம் தொடர்பில் திருத்தங்களை முன்மொழிந்து, அவை பாராளுமன்றத்தினால் ஏற்றுக்கொள்ளப்படும் பட்சத்தில் மாத்திரமே பயங்கரவாதத்தடைச்சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்படும்' எனத் தெரிவித்துள்ளார்.

கடும் எதிர்ப்பைத் தோற்றுவித்திருக்கும் அவரது இக்கருத்து தொடர்பில் தனது நிலைப்பாட்டை வெளிப்படுத்தியிருக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், 'தேசிய மக்கள் சக்தி இற்றைவரை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை ஒழிப்போம் என்ற தெளிவான நிலைப்பாட்டை எடுத்துவந்திருக்கிறது.

அச்சட்டத்தை ஒழிப்போம் என்ற வாக்குறுதியை தேசிய மக்கள் சக்தி அதன் தேர்தல் விஞ்ஞாபனத்தில் மாத்திரம் வழங்கவில்லை. மாறாக இச்சட்டத்தை ஒழிப்பதாக தேசிய மக்கள் சக்தியினால் உறுதியாகத் தீர்மானிக்கப்பட்ட பல்வேறு நிகழ்வுகளில் நான் கலந்துகொண்டு பேசியிருக்கிறேன். ஆனால் இப்போது அந்த நிலைப்பாட்டிலிருந்து வழுக்கத்தொடங்கிவிட்டார்கள்' என விசனம் வெளியிட்டிருக்கிறார்.

அதேபோன்று புதிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகக்கூறி ஆட்சிபீடமேறிய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம், தற்போது அதற் எதிர்மாறாகவே செயற்பட்டுவருவதாக சுட்டிக்காட்டிய தமிழ்த்தேசிய மக்கள் முன்னணியின் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான கஜேந்திரகுமார் பொன்னம்பலம், அவர்களது ஆழமான இனவாதப்போக்கை உணர்ந்து தான் தமிழ்மக்கள் அவர்களைத் தொடர்ச்சியாக நிராகரித்துவந்திருப்பதாகத் தெரிவித்தார்.

அதுமாத்திரமன்றி பயங்கரவாதத்தடைச்சட்டம் தொடர்பில் தேசிய மக்கள் சக்தியின் தற்போதைய நிலைப்பாடு தெற்கில் வாழும் சிங்கள மக்களைக் கண்திறக்கச்செய்யும் வகையில் அமைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். 

அதேவேளை இதனை தாம் முன்னரேயே எதிர்பார்த்ததாகத் சுட்டிக்காட்டிய புளொட் தலைவரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை தீர்மானம், காணி விடுவிப்பு, பயங்கரவாதத்தடைச்சட்டம் என்பன உள்ளடங்கலாக சகல விடயங்களிலும் கடந்தகால அரசாங்கங்கள் எவ்வாறு செயற்பட்டனவோ, அதே வழியில் செயற்படுவதற்கே தேசிய மக்கள் சக்தி முற்படுவதாகவும், எனவே இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை என்றும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/197545

தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? - அங்கஜன்

1 day 5 hours ago

image

தலைவரின் கூட்டமைப்பையே சிதைத்தவர்களால் தமிழ் மக்களின் நலன் பற்றிச் சிந்திக்க இயலுமா? என ஜனநாயக தேசிய கூட்டணியின் முதன்மை வேட்பாளர் அங்கஜன் இராமநாதன் கேள்வி எழுப்பியுள்ளார்.

பாராளுமன்ற தேர்தலுக்கான மக்கள் சந்திப்புகளில் ஈடுபட்டுள்ள அவர், இது தொடர்பாக மேலும் அவர் கருத்துத் தெரிவிக்கையில்;

எம் மக்கள் அரசியல் ரீதியாகவும் தலைநிமிர்ந்து தன்மானத்துடன் நிற்க வேண்டும் என்றால் தமிழர்கள் மத்தியில் காணப்படும் ஒற்றுமையே பலம் என அவர் அன்றே கணித்து தமிழ்க் கட்சிகளை ஒன்றிணைப்பதில் அதிக கவனம் செலுத்தினார்.

ஆனால் இன்று எம் தமிழ் தலைமைகள் எமக்காக உயிர் தியாகம் செய்தவர்களை மறந்து தமது சுயலாபத்திற்காக ஆளுக்கோர் பக்கம் நீயா? நானா? எனப் பிரிந்து நிற்கின்றனர்.

தமிழ் மக்களுக்காக தீர்வுகளை பெற்றுக் கொடுக்கும் என அனைவரும் நம்பி இருந்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இன்று பிளவடைய இடமின்றி உள்ள போதிலும் மேலும் பிளவடைவதற்கான வாய்ப்புக்கள் கண்ணூடாக தெரிகின்றன.

வீடாக இருந்த அந்த ஒற்றைச் சின்னம் இன்று சைக்கிள்,மான்,மாம்பழம் ,சங்கு என பிளவடைந்து மக்களுடைய எதிர்பார்ப்பிலும் மண் அள்ளிப் போட்டுள்ளது.

மக்களுக்காக ஒன்றுபட இயலாதவர்கள் எப்படி மக்களுக்கான தீர்வினைப் பெற்றுக் கொடுப்பார்கள்? என மேலும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

IMG-20241030-WA0097.jpg

IMG-20241030-WA0098.jpg

https://www.virakesari.lk/article/197529

தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றியணையவில்லை ; வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கம்!

1 day 5 hours ago
image

தமிழ் அரசியல் வாதிகள் ஒன்றிணையாமல் ஆசனங்களை பெறுவதை மாத்திரம் நோக்கமாக கொண்டுசெயற்ப்படுவதாக வடகிழக்கு வலிந்துகாணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினர் தெரிவித்துள்ளனர்.  

குறித்த சங்கத்தினரால் வவுனியா பழையபேருந்து நிலையப்பகுதியில் இன்று செவ்வாய்க்கிழமை (30) ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.  

அதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர்கள் இவ்வாறு தெரிவித்தனர்.  

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்கள்,   

இம்முறை தேர்தலில் வடகிழக்கு மாகாணத்தில் உள்ள தமிழ் வேட்பாளர்கள் பேரம்பேசக்கூடிய ஒருசக்தியாக மக்களின் நன்மை கருதி ஒன்றிணையவில்லை.  

ஆசனங்களை பெறுவதனை மாத்திரம் நோக்கமாக கொண்டு ஏட்டிக்கு போட்டியாக தனித்தனியாக தேர்தலில் நிற்கின்றனர். இப்படி நின்று யாருக்காக நீங்கள் கதைக்கப்போகின்றீர்கள்.  

நீங்கள் ஒரு அணியாக எப்போதாவது திரண்டிருக்கிறீர்களா? உங்களுக்குள்ளேயே போட்டியிட்டு குழப்பங்களை ஏற்ப்படுத்தி கட்சிகளை பிளவுபடுத்தி தமிழ்த்தேசியத்தையே இன்று இல்லாது செய்துள்ளனர்.   

பாதிக்கப்பட்ட தமிழ்மக்களை ஒன்றிணைத்து கலந்துரையாடி ஒற்றுமையாக எப்போது பயணித்துள்ளீர்கள்.   

இந்த தேர்தலில் அதிகரித்துள்ள சின்னங்களால் தமிழ் மக்கள் குழப்பநிலையை அடைந்துள்ளனர். சங்கு, வீடு சுயேட்சை, சைக்கிள் என்று பலகட்சிகள், பல சுயேட்சை குழுக்கள் போட்டியிடுகின்றது.   

இதனால் அரசியலை பற்றியே தெரியாதவர்கள் எல்லாம் பாராளுமன்றம் செல்லக்கூடிய நிலமையே இன்று ஏற்ப்பட்டுள்ளது.   

வடக்கில்12 ஆசனங்களை பெறுவதற்காக 800 ற்கும் மேற்ப்பட்டவர்கள் களம் இறங்கியுள்ளனர். இவர்களுக்கு யார் வாக்களிப்பது. நண்பர்கள் உறவினர்கள் வாக்களித்தால் அந்த வாக்குகள் சிதறடிக்கப்படும் நிலையே காணப்படுகின்றது.  

இதன் மூலம் சிங்கள கட்சிகள் ஆசனங்களை கைப்பற்றும் நிலைமையினை நீங்களே உருவாக்கப்பார்க்கின்றீர்கள்.   

பணத்தை ஏன் இவ்வாறு வீணடிக்கிறீர்கள் அதனை மக்களுக்கு வழங்குங்கள். நீங்கள் மாற்றத்தை உருவாக்குவோம் என்று கூறிவிட்டு  இன்னும் கீழ் நிலைக்கே மக்களை தள்ளப்போகின்றீர்கள் என்று தெரிவித்தனர்.

IMG_20241030_103633.jpg

IMG_20241030_103607.jpg

IMG_20241030_103922.jpg

c88df71d-5dbc-42e4-8e19-5d67731dd8b7.jpg

https://www.virakesari.lk/article/197506

சம்பள உயர்வு குறித்து அறிவிக்க முன் நிதியமைச்சின் அனுமதி தேவையில்லை : பிரதமர் ஹரினி அரசமைப்பு குறித்து எங்கு கற்றார் ? - ரணில்

1 day 6 hours ago
image

பிரதமர் ஹரிணி அமரசூரியவிற்கு இலங்கையின் அரசமைப்பு பற்றி ஏதாவது தெரியுமா? என முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கேள்வி எழுப்பியுள்ளார். தீர்மானங்களை எடுப்பதற்கு அமைச்சரவைக்கு அரச அதிகாரிகளின் அனுமதி அவசியமில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

முன்னைய அமைச்சரவை உரிய நடைமுறைகளை பின்பற்றாமலே அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிக்க தீர்மானித்தது என பிரதமர் தெரிவித்துள்ளமை குறித்தே ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அரசாங்க ஊழியர்களின் சம்பளங்களை அதிகரிப்பதற்கு திறைசேரி நிதியமைச்சின் அதிகாரிகளின் சம்மதத்தை முன்னைய அரசாங்கம் பெறவில்லை என ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார், அமைச்சரவை இயங்குவதற்கு அவர்களின் அனுமதி அவசரம் என அவர் தெரிவிக்கின்றார். நீங்கள் எங்கிருந்து அரசமைப்பினை கற்றீர்கள் என ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையே நாட்டை ஆள்கின்றது  அரசமைப்பின் எந்த இடத்திலும் அதிகாரிகள் பற்றி குறிப்பிடவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

அரசமைப்பு குறித்து அறியவேண்டுமென்றால் என்னிடம் வாருங்கள் நான் உதவுகின்றேன் என அவர் தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/197497

உத்தியோகபூர்வ வாசஸ்தலங்களை வைத்திருக்கும் முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

1 day 6 hours ago

இதுவரை தமது உத்தியோகபூர்வ இல்லங்களை மீள ஒப்படைக்காத முன்னாள் அமைச்சர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளதாக பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிவித்துள்ளது.

இந்த நடவடிக்கைகள் அரசாங்க வீட்டுவசதிகளை நிர்வகிக்கும் விதிமுறைகளுக்கு இணங்குவதாக அமைச்சகத்தின் மூத்த அதிகாரி ஒருவர் உறுதிப்படுத்தினார். கடந்த ஆட்சியில் அமைச்சர்களுக்கு வழங்கப்பட்ட 28 குடியிருப்புகளில் 12 வீடுகள் திரும்ப வழங்கப்படாமல் உள்ளன.

வீடுகள் திரும்ப ஒப்படைக்கப்படுவதற்கு முன்னர் மின்சாரம் மற்றும் தண்ணீர் உள்ளிட்ட அனைத்து பயன்பாட்டுக் கட்டணங்களும் அகற்றப்படுவதை உறுதிசெய்யவும் அமைச்சகம் அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.

https://thinakkural.lk/article/311356

கிழக்கு கடலில் கரை ஒதுங்கும் ஒருவகை மீன்கள்

1 day 6 hours ago

image

கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு மாவட்டத்தின் பல இடங்களில் ஒருவகை மீனினம் கடலிலிருந்து செவ்வாய்கிழமை (29) மாலை வேளையிலிருந்து கரை ஒதுங்குகின்றன.

களுதாவளை, தேற்றாத்தீவு, செட்டிபாளையும், மாங்காடு, குருக்கள்மடம் உள்ளிட்ட பல இடங்களிலும் இவ்வாறு மீன்கள் கரை ஒதுகுவதை அப்பகுதி கடற்றொழிலாழர்கள் அவதானித்துள்ளனர்.

சிறிய அவளவிலான கறுப்பு நிற மீனினமே இவ்வாறு கரை ஒதுங்கி கடங்கரையில் இறந்து கிடக்கின்றன.

pho_fish__6_.png

pho_fish__10_.png

pho_fish__7_.png

https://www.virakesari.lk/article/197494

வைத்தியர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து மன்னார் நீதிமன்றத்தில் முற்படுத்த நீதவான் உத்தரவு

1 day 6 hours ago

image

மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலையாகாத  சாவகச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் வைத்திய அத்தியட்சகர் இராமநாதன் அர்ச்சுனாவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த நீதவான் பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையினுல் அத்துமீறி நுழைந்தமை மற்றும் நிர்வாக செயல்பாடுகளுக்கு தடை ஏற்படுத்தியமை தொடர்பாக வைத்தியர் அர்ச்சுனாவிற்கு எதிராக மன்னார் நீதிமன்றத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட குறித்த வைத்தியர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டார்.

பின்னர் இரண்டு சரீர பிணையில் குறித்த வைத்தியர் விடுவிக்கப்பட்டார்.

இந்நிலையில் வைத்தியர் அர்ச்சுனாவின்  வழக்கு விசாரணைகள் புதன்கிழமை (30) மன்னார் நீதிமன்றத்தில் இடம்பெற்ற நிலையில் அவர் மன்றில் முன்னிலையாக வில்லை. மேலும் இரண்டு பிணைதாரர் களில் ஒருவர் மாத்திரமே மன்றில் முன்னிலையாகி இருந்தார்.

இதன்போது விசாரணைகளை மேற்கொண்ட மன்னார் நீதவான் வைத்தியர் அர்ச்சுனா மற்றும் பினையாளி ஆகிய இருவரையும் கைது செய்து மன்றில் முன்னிலை யாக்குமாறு பொலிஸாருக்கு உத்தரவிட்டார்.

குறித்த வழக்கு விசாரணை எதிர்வரும் நவம்பர் மாதம் 27ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட உள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/197546

Checked
Thu, 10/31/2024 - 22:18
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr