ஊர்ப்புதினம்

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமனம்

4 days 4 hours ago

மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன்  நியமனம்

Published By: Vishnu

13 Mar, 2026 | 07:16 PM

image

புதிய மேல் நீதிமன்ற நீதிபதியாக எஸ். சதீஸ்தரன் நியமிக்கப்பட்டுள்ளார்.

இதற்கான நியமனக் கடிதத்தை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க 13ஆம் திகதி வெள்ளிக்கிழமை முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் வைத்து எஸ். சதீஸ்தரனிடம் வழங்கினார்.

நீதித்துறை சேவையில் விசேட தர அதிகாரியான எஸ். சதீஸ்தரன், சாவகச்சேரி மாவட்ட நீதிபதியாகவும் பணியாற்றியுள்ளார்.

https://www.virakesari.lk/article/240904

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

4 days 4 hours ago

தாதியர் சேவைப் பயிற்சிக்கு 2918 பேருக்கு புதிய நியமனங்கள்

13 Mar, 2026 | 05:26 PM

image

(செ.சுபதர்ஷனி)

இலங்கையின் சுகாதாரத் துறையில் நிலவும் மனித வளப் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, பொதுமக்களுக்கு தரமான சுகாதார சேவையை உறுதிப்படுத்தும் நோக்கில், 2,918 புதிய மாணவ தாதியர்களைப் பயிற்சிக்காக இணைத்துக்கொள்ள சுகாதார அமைச்சு தீர்மானித்துள்ளது.

நாட்டின் சுகாதாரக் கட்டமைப்பை வலுப்படுத்தும் இந்த வேலைத்திட்டத்தின் கீழ், தெரிவு செய்யப்பட்ட பயிலுநர்களுக்கான நியமனக் கடிதங்கள் வழங்கும் உத்தியோகபூர்வ நிகழ்வு (14) சனிக்கிழமை அலரி மாளிகையில் நடைபெறவுள்ளது.

சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ மற்றும் சுகாதார பிரதி அமைச்சர் ஹன்சக்க விஜேமுனி ஆகியோரின் தலைமையில் இந்நிகழ்வு இடம்பெறவுள்ளது.

2025ஆம் ஆண்டுக்கான தாதியர் பயிற்சிக்காக, 2022ஆம் ஆண்டு அணியிலிருந்து, தகுதிகளின் அடிப்படையில் சுமார் 2,918 விண்ணப்பதாரிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கான பயிற்சி நியமனக் கடிதங்களே இதன்போது வழங்கி வைக்கப்படவுள்ளன.

https://www.virakesari.lk/article/240903

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

4 days 4 hours ago

இலங்கையில் 4-ல் ஒரு பங்கு மக்கள் வறுமையின் பிடியில்: கிராமப்புறங்களே அதிகம் பாதிப்பு - அமைச்சர் உபாலி பன்னிலகே

Published By: Digital Desk 1

13 Mar, 2026 | 03:37 PM

image

இலங்கை மொத்த சனத்தொகையில் நான்கில் ஒரு பங்கு மக்கள் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளதாக கிராமிய அபிவிருத்தி, சமூக பாதுகாப்பு மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சு தெரிவித்துள்ளது.

இலங்கையில் வறுமையினால் பாதிக்கப்பட்டுள்ளவர்களில் சுமார் 80 சதவீதமானோர் கிராமப்புறங்களில் வசிப்பதாக விடயப்பரப்புக்கு பொறுப்பான அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

எனவே, வறுமையை ஒழிப்பதற்கான ஆரம்பக்கட்ட நடவடிக்கைகள் கிராம மட்டத்திலிருந்தே ஆரம்பிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

ஒவ்வொரு கிராம உத்தியோகத்தர் பிரிவுகளிலும் நிலவும் வறுமைக்கான உண்மையான காரணங்களை கண்டறிந்து, சமூக அபிவிருத்தி சபையின் பிரதிநிதிகளுடன் இணைந்து முறையான அபிவிருத்தித் திட்டங்களை வகுக்க வேண்டும் என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

தற்போது மத்திய கிழக்கில் நிலவும் போர் சூழல் காரணமாக உலகப் பொருளாதாரத்தில் பாரிய தாக்கம் ஏற்பட்டுள்ள போதிலும், இலங்கைக்கு அதன் பாதிப்பு குறைவாகவே காணப்படுவதாக அமைச்சர் குறிப்பிட்டார்.Geographic Reference

கடந்த 15 மாத காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரத்தை பலப்படுத்துவதற்கு எடுக்கப்பட்ட காத்திரமான நடவடிக்கைகளே இதற்கு காரணமாகும்.

அவ்வாறு பொருளாதாரத்தை சீர்செய்யாமல் இருந்திருந்தால், நாடு மீண்டும் ஒரு வரிசை யுகத்திற்கு தள்ளப்பட்டிருக்கும் என அமைச்சர் உபாலி பன்னிலகே தெரிவித்துள்ளார்.

https://www.virakesari.lk/article/240883

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

4 days 4 hours ago

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற அவசர சந்திப்பு

Mar 13, 2026 - 04:41 PM

ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளைப் பெற  அவசர சந்திப்பு

இலங்கைக்கான ரஷ்ய தூதுவர் லெவன் எஸ். ஜகார்யன் (Levan S. Dzhagaryan) மற்றும் வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலாத்துறை அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோருக்கு இடையிலான அவசர சந்திப்பொன்று இன்று (13) நண்பகல் அமைச்சில் நடைபெற்றது. 

மத்திய கிழக்கு மோதல்கள் காரணமாக எரிபொருள் விநியோகக் கட்டமைப்பில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளுக்கு தீர்வாக, ரஷ்ய எண்ணெயைக் கொள்வனவு செய்ய விதிக்கப்பட்டிருந்த தடைகள் நீக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது. 

அதற்கமைய, இலங்கையின் எரிபொருள் விநியோகத்தை தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஒரு கட்டமாக, ரஷ்ய எரிபொருளைப் பெற்றுக்கொள்வது குறித்து வெளிவிவகார அமைச்சர், ரஷ்ய தூதுவருடன் கலந்துரையாடினார். 

இலங்கையின் இந்தக் கோரிக்கையை உடனடியாக ரஷ்ய அரசாங்கத்திற்கு அறிவிக்கத் தூதுவர் இதன்போது சம்மதம் தெரிவித்தார். 

அத்துடன், சம்பந்தப்பட்ட நிறுவனங்களுடன் ஒருங்கிணைந்து இதற்குத் தேவையான ஏற்பாடுகளைச் செய்து தருவதாகவும் அவர் உறுதியளித்தார். 

இந்தக் கலந்துரையாடலின் போது, இலங்கைக்குத் தேவைப்படும் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் ரஷ்யாவின் ஆதரவு கிடைக்கும் என ரஷ்ய தூதுவர் சுட்டிக்காட்டினார். 

இச்சந்திப்பில் தொழிலாளர், நிதி மற்றும் திட்டமிடல் பிரதி அமைச்சர் அனில் ஜயந்த, இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி. ஜே. ராஜகருணா, அமைச்சின் செயலாளர்கள் மற்றும் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

https://adaderanatamil.lk/news/cmmosqqu30005356peck1lcwx

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர்

4 days 4 hours ago

உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் - பிரதமர்

13 Mar, 2026 | 01:32 PM

image

நாட்டைக் கட்டியெழுப்புவதாயின் கல்விக்கான முதலீடுகளை ஊக்குவித்து, சிறந்த மனிதவளத்தை உருவாக்க வேண்டும் என்பதே அரசாங்கத்தின் திடமான நம்பிக்கையாகும் எனவும், இந்தப் புலமைப்பரிசில் திட்டமானது நாட்டின் எதிர்காலப் பாதையைத் தீர்மானிக்கும் ஒரு மைல்கல்லாகும் எனவும் பிரதமர் தெரிவித்தார்.

2024ஆம் ஆண்டு கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் அதியுயர் சித்தி பெற்ற மாணவர்களுக்கு, உலகின் முன்னணிப் பல்கலைக்கழகங்களில் இளமானிப் பட்டப்படிப்பை மேற்கொள்வதற்கான வாய்ப்பை வழங்கும் புலமைப்பரிசில் திட்டத்தின் ஆரம்ப விழாவில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார். இந்நிகழ்வு வியாழக்கிழமை 12 அன்று இசுருபாயவிலுள்ள கல்வி அமைச்சு வளாகத்தில் நடைபெற்றது.

இச்செயற்திட்டத்திற்காக 4,001 மில்லியன் ரூபாய் முதலீடு செய்ய எதிர்பார்க்கப்படுகிறது. 2025 முதல் 2033 வரையான காலப்பகுதிக்குள் மொத்தம் 200 மாணவர்களுக்குப் புலமைப்பரிசில்களை வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக, 2025/26 கல்வியாண்டிற்காக 32 மாணவர்கள் ஏற்கனவே தெரிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுள் 9 மாணவர்கள் ஆஸ்திரேலியாவின் சிட்னி, மெல்பர்ன், மொனாஷ் மற்றும் நியூசிலாந்தின் ஓக்லண்ட் போன்ற உலகின் தலைசிறந்த பல்கலைக்கழகங்களில் ஏற்கனவே இணைந்துள்ளனர்.

மாணவர்கள் உலகத் தரவரிசையில் (QS, THE அல்லது ARWU) முதல் 500 இடங்களுக்குள் உள்ள பல்கலைக்கழகங்களிலேயே பயில வேண்டும் என்பது கட்டாய நிபந்தனையாகும்.

தெரிவு செய்யப்படும் ஒரு மாணவருக்காக ஆண்டொன்றுக்கு அதிகபட்சமாக 20 மில்லியன் ரூபாய் வீதம், நான்கு வருட முழுமையான பட்டப்படிப்புக் காலத்திற்காக 80 மில்லியன் ரூபாய் (ரூ. 80,000,000) நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.

நிகழ்வில் மேலும் கருத்துத் தெரிவித்த பிரதமர்,

கல்வி அமைச்சு என்ற ரீதியில் இன்று நாம் அனைவரும் மகிழ்ச்சியடைய வேண்டிய நாள். எமது கொள்கைப் பிரகடனத்தில் வழங்கிய வாக்குறுதியின் முதற்கட்டமாகவே உயர்தரத்தில் அதியுயர் சித்தி பெற்ற 32 மாணவர்களுக்கு இந்த வெளிநாட்டுப் புலமைப்பரிசில்கள் வழங்கப்படுகின்றன. இத்திட்டத்தை உருவாக்குவது இலகுவானதாக இருக்கவில்லை; மாணவர் தெரிவு, வெளிப்படைத்தன்மை மற்றும் பல்கலைக்கழகங்களின் தரம் போன்ற விடயங்கள் குறித்து நாம் மிக விரிவாக ஆராய்ந்தோம்.

இது ஒரு சாதாரண புலமைப்பரிசில் திட்டம் அல்ல, இது எமது நாட்டின் எதிர்கால நோக்கை வரையறுக்கும் ஒரு செயற்திட்டமாகும். இதன் மூலம் உலகின் மிகச்சிறந்த பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்கான வாய்ப்பினை மாணவர்கள் பெற்றுக்கொள்கின்றனர்.

எனவே, இத்திட்டத்திற்காகத் தெரிவு செய்யப்படுபவர்களிடம் கல்விசார் திறமைகளுக்கு மேலதிகமாகத் தலைமைத்துவப் பண்புகள், ஆளுமை மற்றும் சவால்களை எதிர்கொள்ளும் மனோதிடம் போன்ற குணாதிசயங்களும் இருக்க வேண்டியது அவசியமாகும்.

நமது நாட்டை முன்னேற்ற வேண்டுமாயின் நாட்டில் சிறந்த பிரஜைகள் உருவாக வேண்டும். சிங்கப்பூர், சீனா, மலேசியா போன்ற நாடுகள் மனிதவள அபிவிருத்தியில் முதலீடு செய்து முன்னோக்கிச் சென்றமையினாலேயே இன்று உலக அரங்கில் முன்னிலையில் திகழ்கின்றன. அதே பாதையை நாமும் பின்பற்ற வேண்டும்.

நீங்கள் வெறும் பட்டதாரிகளாக மாத்திரம் திரும்பி வராது, சமூக மாற்றத்தை ஏற்படுத்தக் கூடிய, ஒட்டுமொத்த சமூகத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டில் ஓர் அங்கமாகத் திகழ வேண்டும் என்பதே எனது நம்பிக்கையும் எதிர்பார்ப்பும் ஆகும். இது ஒரு நீண்டகால முதலீடாகும். உங்களின் ஆளுமை மூலம் மற்றுமொரு மாணவருக்கு உதவுதல், மற்றவர்களை வழிநடத்துதல் போன்ற தலைமைத்துவப் பண்புகளை நாங்கள் உங்களிடம் எதிர்பார்க்கிறோம்.

காலநிலை மாற்றங்கள், கலாசார வேறுபாடுகள், உறவினர்களைப் பிரிந்திருத்தல் போன்ற சவால்களை எதிர்கொள்ள நேரிட்ட போதிலும், தனது பயணத்தைக் கைவிடப் போவதில்லை என்ற உறுதிப்பாட்டை நீங்கள் ஏற்படுத்திக்கொள்ள வேண்டும். அத்தகைய அனைத்துச் சவால்களையும் உங்களது தலைமைத்துவப் பண்புகளை வளர்த்துக்கொள்வதற்காகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும்.

கடினமான அனுபவங்களையும் ஒரு வாய்ப்பாக மாற்றிக்கொள்ள முயற்சிக்க வேண்டும். புதிய கலாசாரங்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் புதிய விடயங்களைக் கற்றுக்கொண்டு, அவற்றை நமது நாட்டை மீளக்கட்டியெழுப்பப் பயன்படுத்தும் புதிய சிந்தனையாளர்களாக உருவெடுங்கள்.

இயன்றவரை புதிய அனுபவங்களைப் பெற்றுக்கொள்ள முயற்சி செய்யுங்கள். தொடர்பாடல் திறன், மற்றவர்களின் உணர்வுகளை மதித்தல், குழுக்களை வழிநடத்துதல் மற்றும் பிறரைப் புரிந்துகொள்ளுதல் போன்ற ஆற்றல்களை வளர்த்துக்கொள்ளுங்கள்.

அதன் மூலமே நாம் உங்களிடமிருந்து எதிர்பார்க்கும் அந்தப் பாரிய தாக்கத்தை இந்த நாட்டிற்குப் பெற்றுக்கொள்ள முடியும். உங்களை நாம் ஒருபோதும் தனிமைப்படுத்தி விடமாட்டோம். எந்தவொரு நெருக்கடியான சூழ்நிலையிலும் உங்களுக்காகத் தலையிட நாம் தயாராக இருக்கிறோம். தூதரகங்கள் ஊடாக அவசியமான ஒருங்கிணைப்புப் பணிகளை முன்னெடுக்கவும் நாம் உறுதுணையாக இருப்போம்.

நாட்டை ஒரு சமூக மாற்றத்தை நோக்கி இட்டுச் செல்ல வேண்டுமாயின், அது நம் அனைவரினதும் கூட்டுத் தலையீட்டின் மூலமாகவும், ஒருவரையொருவர் பாதுகாப்பதன் மூலமுமே சாத்தியமாகும். இலங்கையை மாத்திரமன்றி, முழு உலகையுமே மக்கள் நலன்சார்ந்த பாதையில் வழிநடத்தக்கூடிய தலைவர்களை நாம் உருவாக்க வேண்டும், எனத் தெரிவித்தார்.

இந்நிகழ்வில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனவிரத்ன, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவேவ மற்றும் அமைச்சின் அதிகாரிகள், மாணவர்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/240871

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு விசேட வைத்திய நிபுணர் அறிவுறுத்தல்

4 days 5 hours ago

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

Mar 13, 2026 - 08:30 PM

பாடசாலை விளையாட்டுப் போட்டிகள் - அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

தற்போதைய வெப்பமான வானிலைக்கு மத்தியில் நடத்தப்படும் பாடசாலை விளையாட்டு நிகழ்வுகளின் போது மிகவும் அவதானத்துடன் செயற்படுவது அவசியம் என கொழும்பு, சீமாட்டி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் சுவாச நோய்கள் தொடர்பான விசேட வைத்திய நிபுணர் சன்ன டி சில்வா தெரிவித்துள்ளார். 

வெப்பமான வானிலையினால் ஏற்படும் சுகாதார அபாயங்களைக் குறைப்பது எப்படி மற்றும் விளையாட்டு நிகழ்வுகளை ஏற்பாடு செய்யும் போது கவனிக்க வேண்டிய விடயங்கள் குறித்து பொதுமக்களுக்குத் தெளிவுபடுத்தும் நோக்கில், இன்று (13) பிற்பகல் சுகாதார மற்றும் ஊடக அமைச்சின் பிரதான கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு அவர் இதனைக் குறிப்பிட்டார். 

இதன்போது கருத்துத் தெரிவித்த வைத்திய நிபுணர், பாடசாலை விளையாட்டு நடவடிக்கைகளின் போது இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு விளையாட்டுப் போட்டிகளைக் குறைத்தல், மாணவர்களுக்குத் தொடர்ச்சியான ஓய்வு வழங்குதல், பிள்ளைகளைக் குளிர்ச்சியான இடங்களில் தங்கவைத்தல் மற்றும் நீர் அல்லது உப்பு கலந்த பானங்களை வழங்குதல் மிகவும் முக்கியமானது எனத் தெரிவித்தார். 

அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 

"தற்போது நிலவும் இந்த நிலைமையின் பாதிப்புகளைக் குறைத்துக்கொள்ளவும், சூழ்நிலையை அடையாளம் கண்டறிந்து தேவையான சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்ளவும் முன்வருவது மிகவும் அவசியம். குறிப்பாகப் பாடசாலைகளில் காலை மற்றும் பகல் வேளைகளிலேயே விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்படுகின்றன. கடும் வெயில் நிலவும் காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரையான காலப்பகுதியில் இவ்வாறான செயற்பாடுகளை முடிந்தவரை குறைத்துக்கொள்வதும், பிள்ளைகளுக்கு அடிக்கடி ஓய்வு வழங்குவதும் முக்கியமாகும். 

பிள்ளைகள் தொடர்ச்சியாக விளையாட விரும்புவார்கள், ஆனால் அதனை ஒருபோதும் அனுமதிக்கக் கூடாது; இடைவேளை அவசியம். விளையாட்டிற்கு இடையே அவர்களுக்கு ஓய்வு வழங்கி, நிழலான அல்லது குளிர்ச்சியான இடங்களில் அவர்களைத் தங்கவைப்பதோடு அதிகளவு நீர் மற்றும் ஆரோக்கியமான பானங்களை வழங்க வேண்டும். இதனைச் செய்யத் தவறினால் உடல் வெப்பம் அதிகரித்து மயக்கம், சோர்வு போன்ற சிக்கல்கள் ஏற்படலாம். அத்துடன் தசைப்பிடிப்பு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 

இந்த அறிகுறிகளைக் கண்டுகொள்ளாமல் விட்டால், உடல் வெப்பம் மேலும் அதிகரித்து 'வெப்ப அதிர்ச்சி' (Heat Stroke) போன்ற உயிருக்கு ஆபத்தான சிக்கலான நிலைக்கு இட்டுச் செல்லும். ஒரு பிள்ளைக்கு மயக்கம், சோர்வு, தலைச்சுற்றல் அல்லது குழப்பமான நிலை ஏற்பட்டால், உடனடியாக அவரை வெயில் உள்ள இடத்திலிருந்து அகற்றி குளிர்ச்சியான இடத்திற்கு அழைத்துச் செல்லுங்கள். நீர் அருந்த முடியுமானால் அதனை வழங்கவும். நிலைமை தொடருமானால் தாமதிக்காது அருகிலுள்ள அரச வைத்தியசாலைக்கு அழைத்துச் செல்வது அவசியமாகும்" எனத் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmmp0wgbg000b356pg8cd32a8

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

4 days 8 hours ago

MediaFile-30.webp?resize=750%2C375&ssl=1

இலங்கையின் நிலத்தடிக்குள் ஒளிந்திருந்த மாபெரும் அதிசயம்!

தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையினால் பிட்டபெத்தர பொலிஸ் நிலையத்திற்கு அருகில் மேற்கொள்ளப்பட்ட ஆழ்துளைக் கிணறு அகழ்வின் போது, இலங்கையின் மிகப்பெரிய நிலத்தடி நீர் ஆதாரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

தென் மாகாணத்திற்குப் பொறுப்பான புவியியலாளர் இந்திரஜித் கமகே இந்த விடயத்தை தெரிவித்துள்ளார்.

ஒரு நிமிடத்திற்கு 10,000 லீற்றர் தொடர்ச்சியான நீர்வரத்தைக் கொண்ட நீர் ஊற்று ஒன்று இலங்கையில் கண்டறியப்பட்ட முதலாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

இதற்கு முன்னர் இலங்கையில் கண்டறியப்பட்ட மிகப்பெரிய நீர் ஆதாரம் மடு பகுதியில் அமைந்திருந்தது. அதன் நீர்வரத்து ஒரு நிமிடத்திற்கு 7,000 லீற்றராகக் காணப்பட்டது.

பாறை அடுக்குகளை ஆய்வு செய்து, அந்த அடுக்குகளுக்கு இடையிலான இடைவெளிகள் ஊடாக நிலத்தடி நீர் இருக்கும் இடங்களை நவீன தொழில்நுட்பக் கருவிகள் மூலம் இனங்கண்ட பின்னரே இந்த அகழ்வுப் பணி முன்னெடுக்கப்பட்டது.

இதன் மூலம் பிட்டபெத்தர, மொரவக்க மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் நீர்த்தட்டுப்பாட்டினால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு எதிர்காலத்தில் குடிநீரை விநியோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தேசிய நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபை தெரிவித்துள்ளது.

https://athavannews.com/2026/1468315

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

4 days 13 hours ago

யாழில் சட்டவிரோத இந்திய செய்மதித் தொலைக்காட்சி நிலையங்கள் முற்றுகை!

13 Mar, 2026 | 10:32 AM

image

யாழ்ப்பாணத்தில் சட்டவிரோதமான முறையில் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்து வந்த பல வணிக நிலையங்களை பொலிஸார் முற்றுகையிட்டுள்ளதுடன், பெருமளவிலான உபகரணங்களையும் கைப்பற்றியுள்ளனர்.

இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழுவின்  விசேட அறிவுறுத்தலுக்கு அமைய, நேற்று வியாழக்கிழமை (12) இந்தச் சோதனை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டன.

இலங்கையில் அனுமதியின்றி இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளை விற்பனை செய்பவர்கள் மற்றும் அதனைப் பயன்படுத்துபவர்களுக்கு எதிராகக் கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்குமாறு வழங்கப்பட்ட உத்தரவின் பேரில் யாழ்ப்பாண பொலிஸார் இந்தச் சுற்றிவளைப்பை மேற்கொண்டனர்.

இலங்கைக்குள் இந்திய செய்மதித் தொலைக்காட்சி சேவைகளைப் பார்ப்பதோ அல்லது அதற்காகப் பணம் செலுத்துவதோ தண்டனைக்குரிய குற்றமாகும் என அதிகாரிகள் மீண்டும் வலியுறுத்தியுள்ளனர்.

குறிப்பாக, சன் டைரக்ட்,வீடியோகான்,டாடா பிளே,டிஷ் டிவி போன்ற  சேவைகள் சட்டவிரோதமாக நாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு விற்பனை செய்யப்படுவதாகக் கண்டறியப்பட்டுள்ளது.

இவ்வாறான சட்டவிரோதச் சேவைகள் ஊடாக, இலங்கையிலிருந்து மில்லியன் கணக்கான ரூபா பணம் உத்தியோகபூர்வமற்ற வழிகளில் இந்தியாவிற்குப் பரிமாறப்படுவதாகவும், இதனால் நாட்டின் அந்நியச் செலாவணிக்கு பாதிப்பு ஏற்படுவதாகவும் அதிகாரிகள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

இந்தச் சேவைகளை விற்பனை செய்யும் வர்த்தக நிலையங்களை மாத்திரமன்றி, அவற்றை வீடுகளில் பயன்படுத்தும் நபர்களையும் அடையாளம் கண்டு அவர்களுக்கு எதிராகவும் சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறைப்படுத்தல் ஆணைக்குழு பொலிஸாருக்குப் பணித்துள்ளது. இதற்கமைய, யாழ்ப்பாணத்தின் ஏனைய பகுதிகளிலும் இவ்வாறான சோதனைகள் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/240858

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

4 days 13 hours ago

யாழ். பழைய பூங்கா உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானம்: இடைக்காலத் தடையை நீடித்தது மேல் நீதிமன்றம்

adminMarch 13, 2026

TamilNews2-32.png?fit=540%2C720&ssl=1

 

 
யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு அமைப்பதற்கான கட்டுமான பணிகளுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை தொடர்ந்து நீடிக்க மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இரண்டு நீதிபதிகளை கொண்ட அமர்வு நேற்றைய தினம் (வியாழக்கிழமை) இந்த உத்தரவை வழங்கியுள்ளது.

யாழ்ப்பாணம் பழைய பூங்காவில் உள்ளக விளையாட்டு அரங்கு ஒன்றை அமைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைக்கு எதிராக யாழ்ப்பாணம் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது. அந்த வழக்கை விசாரித்த மாவட்ட நீதிமன்றம் முதலில் இரண்டு வாரங்களுக்கு இடைக்காலத் தடை உத்தரவை வழங்கியிருந்தது. ஆனால், அந்த இரண்டு வார காலம் நிறைவடைந்த பின்னர், இடைக்காலத் தடை உத்தரவை நீடிக்காமல் நீதிமன்றம் கட்டளை வழங்கியது.

இதற்கு எதிராக மனுதாரர்கள் சார்பில் வடக்கு மாகாண மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றத்தில் மேன்முறையீடும் மீளாய்வு மனுவும் தாக்கல் செய்யப்பட்டன. இந்த மனுக்களை ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் சமர்ப்பித்து வாதாடியிருந்தார்.

இந்த நிலையில், மேன்முறையீடு மற்றும் மீளாய்வு மனுக்கள் மீதான விசாரணை முடியும் வரை உள்ளக விளையாட்டு அரங்கு கட்டுமானத்திற்கு எதிரான இடைக்காலத் தடை தொடர்ந்து அமலில் இருக்கும் என மேன்முறையீட்டுக்கான மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மேலும், மீளாய்வு மனுவுக்கு பதில் மனுத் தாக்கல் செய்ய வாய்ப்பு வழங்கப்பட்டு, வழக்கு எதிர்வரும் ஏப்ரல் 30ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. அன்றைய தினம் மேன்முறையீட்டு மனுவை தொடர்ந்து விசாரணைக்கு எடுத்துக்கொள்ள வேண்டுமா என்பது குறித்து நீதிமன்றம் தீர்மானிக்கவுள்ளது.

https://globaltamilnews.net/2026/230417/

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

4 days 15 hours ago

MediaFile-25.webp?resize=750%2C375&ssl=1

செம்மணி புதைகுழி விசாரணை – மூன்றாம் கட்ட அகழ்வு ஏப்ரல் 20ல்!

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று (12) யாழ். நீதவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது, புதைகுழியை சூழவுள்ள பகுதிகளை வாரத்தில் இரண்டு தினங்கள் சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் துப்பரவு பணிகளை முன்னெடுக்க வேண்டும் என நல்லூர் பிரதேச சபைக்கு மன்று கட்டளையிட்டுள்ளது.

அத்துடன் புதைகுழி பகுதியில் அகழ்வு பணிகளில் ஈடுபடுவர்களுக்காக மற்றும் பொருட்களை வைப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த தற்காலிக கொட்டகைகள் டித்வா புயல், அதனை தொடர்ந்து யாழில் பெய்த பருவ மழை காரணமாக சேதமடைந்துள்ளன.

அவற்றினை அங்கிருந்து அகற்றி, புதிய கொட்டகைகளை அமைக்கவும், அகழ்வு பணிகளுக்கான தளபாடங்களை கடந்த அகழ்வு பணிகளுக்கு ஏற்பாடு செய்தது போன்று நல்லூர் பிரதேச சபை இம்முறையும் தளபாட வசதிகளுக்கு ஏற்பாடு செய்ய மன்று கட்டளையிட்டது.

புதைக்குழி பகுதிக்கு நேரில் சென்று கள தரிசிப்பை மேற்கொள்வது என்றும் மன்றில் தீர்மானிக்கப்பட்டதற்கு அமைய நீதவான் எஸ்.லெனின்குமார், சட்ட வைத்திய அதிகாரி எஸ்.பிரணவன், சட்டத்தரணிகளான நிரஞ்சன், ரணித்தா, நல்லூர் பிரதே சபை செயலாளர் உள்ளிட்டோர் நேரில் சென்று புதைகுழியை பார்வையிட்டனர்.

அதன்போது புதைகுழிக்குள் தற்போதும் நீர் தேங்கி நிற்பதனால் எதிர்வரும் 28 ஆம் திகதி சட்ட வைத்திய அதிகாரியின் நேரடி கண்காணிப்பில் நீரினை வெளியேற்றும் நடவடிக்கைகளை முன்னெடுப்பது என்றும், ஏப்ரல் மாதம் 08 ஆம் திகதி குறித்த வழக்கு நீதிமன்றில் எடுக்கப்படும் எனவும், ஏப்ரல் 20 ஆம் திகதி மூன்றாம் கட்ட அகழ்வு பணிகளை முன்னெடுப்பது எனவும் திகதிகள் இடப்பட்டன.

https://athavannews.com/2026/1468255

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

4 days 15 hours ago

vasantha.jpg?resize=750%2C375&ssl=1

“Work from home” தற்போது அவசியமில்லை – அரசாங்கம் தெரிவிப்பு!

மத்திய கிழக்கு மோதல்களால் உலகளாவிய நெருக்கடி ஏற்பட்டாலும், தற்போது நாட்டில் வீட்டிலிருந்து வேலை செய்வது (Working from home) அவசியமில்லை என்று வர்த்தக, வணிப உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க நேற்று (12) தெரிவித்துள்ளார்.

அரசாங்கம் முன்னேற்றங்களை உன்னிப்பாகக் கண்காணித்து வருவதாகவும், நிலைமை மோசமடைந்தால், பொது மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு வீட்டிலிருந்து வேலை செய்யும் ஏற்பாடுகளை அறிமுகப்படுத்துவது குறித்து பரிசீலிப்பதாகவும் அமைச்சர் கூறினார்.

இந்த மோதல் உலகளாவிய விநியோகச் சங்கிலிகளை சீர்குலைத்து, கப்பல் செலவுகளை அதிகரித்து, சர்வதேச சந்தைகளில் அத்தியாவசியப் பொருட்களின் விலைகளை உயர்த்தியுள்ளது.

குறிப்பாக உலகளாவிய எண்ணெய் மற்றும் எரிவாயு விலைகள் இதனால் உயர்ந்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

எரிபொருள் விலைகள் ஏற்கனவே உள்ளூரில் சரிசெய்யப்பட்டிருந்தாலும், ஏப்ரல் மாதத்திற்குள் புதிய ஏற்றுமதிகள் அதிக விலையில் வரும்போது மேலும் அதிகரிப்பு ஏற்படக்கூடும் என்றும் அமைச்சர் எச்சரித்தார்.

சில தனியார் எரிவாயு விநியோகஸ்தர்கள் விலைகளை அதிகரிக்க முயற்சித்ததாகவும், ஆனால் அரசாங்கம் நிலைமையைக் கண்காணித்து விலை நிலைத்தன்மையைப் பராமரிக்க நடவடிக்கை எடுத்து வருவதாகவும் அவர் மேலும் கூறினார்.

உலகளாவிய மோதல்கள் பற்றிய செய்திகள் வெளிவந்தவுடன் எரிபொருள் நிலையங்களில் நீண்ட வரிசைகள் பெரும்பாலும் உருவாகின்றன என்பதைக் குறிப்பிட்டு, பீதியடைந்து வாங்குவதைத் தவிர்க்கவும், வளங்களை பொறுப்புடன் பயன்படுத்தவும் அவர் பொதுமக்களை வலியுறுத்தினார்.

https://athavannews.com/2026/1468239

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

4 days 15 hours ago

New-Project-1-12.jpg?resize=750%2C375&ss

இந்த ஆண்டின் மிகப்பெரிய போதைப்பொருள் பறிமுதல்!

இலங்கை கடற்படையினரால் நேற்று டிக்கோவிட்ட மீன்பிடித் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பலில் இருந்து 478 கிலோ கிராம் படிக மெத்தம்பேட்டமைன் (ICE) மற்றும் 176 கிலோ கிராம் ஹெரோயின் உள்ளிட்ட மொத்தம் 654 கிலோ கிராம் போதைப்பொருள் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

நாட்டின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட பின்னர், போதைப்பொருள் மற்றும் ஆயுதங்களை கொண்டு சென்றதாக சந்தேகிக்கப்படும் இரண்டு பல நாள் மீன்பிடி இழுவை படகுகள் நேற்று (12) டிக்கோவிட்ட துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டன.

தெற்கு கடற்கரைக்கு அப்பால் கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட இரண்டு இழுவைப் படகுகளில் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருள் கையிருப்பின் பெறுமதி ரூ. 10 பில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது என்று பாதுகாப்பு பிரதி அமைச்சர் மேஜர் ஜெனரல் அருண ஜெயசேகர நேற்று உறுதிப்படுத்தினார்.

இதற்கிடையில், இரண்டு படகுகளிலும் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்களையும் கடற்படையினர் கைது செய்தனர்.

இலங்கையின் தெற்கே சர்வதேச கடற்பரப்பில் நீண்ட தூர கடற்படைக் கப்பல்களைப் பயன்படுத்தி மேற்கொள்ளப்பட்ட சிறப்பு கடற்படை நடவடிக்கையின் போது சந்தேகத்திற்கிடமான இழுவைப் படகுகள் அடையாளம் காணப்பட்டன.

ஒரு இழுவைப் படகைத் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, 600 கிலோ கிராம்களுக்கு மேல் எடையுள்ள போதைப்பொருள் இருப்பதாக சந்தேகிக்கப்படும் ஏராளமான சாக்குப்பைகளை கடற்படை வீரர்கள் கண்டுபிடித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மேலும், அதே கப்பலில் இருந்து எட்டு கைத்துப்பாக்கிகள், மெகசின்கள், இரண்டு T-56 துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி ஆகியவற்றை கடற்படை மீட்டது.

M16 துப்பாக்கி என்பது பொதுவாக பாதுகாப்புப் படைகளின் சிறப்பு உறுப்பினர்களால் மட்டுமே பயன்படுத்தப்படும் ஒரு ஆயுதம் என்று கூறப்படுகிறது.

கைது செய்யப்பட்ட இரண்டாவது பல நாள் மீன்பிடி இழுவைப் படகு, ஏனைய படகிற்கு கண்காணிப்பு மற்றும் உதவியை வழங்கியதாக சந்தேகிக்கப்படுகிறது.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் தென் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இரண்டு மீன்பிடி படகுகளும் சந்தேக நபர்களும் நேற்று டிக்கோவிட்ட மீன்வளத் துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டனர்.

இந்த ஆண்டு இதுவரை பறிமுதல் செய்யப்பட்ட மிகப்பெரிய அளவிலான போதைப்பொருள் இதுவென்று இலங்கை கடற்படை கூறியுள்ளது.

https://athavannews.com/2026/1468249

ஈழத்தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

4 days 15 hours ago

இந்தியக் குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்கு அதனை வழங்குங்கள்; நாடு திரும்புவோர் கைது செய்யப்படுவதைத் தடுப்பதற்கு அரசுக்கு அழுத்தம் வழங்குங்கள் - இந்திய அரசிடம் சுமந்திரன் வலியுறுத்தல்

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:50 AM

image

(நா.தனுஜா)

இந்தியாவிலேயே மூன்று தசாப்தங்களுக்கும் மேலாக வாழ்ந்து, அங்கேயே குடியுரிமை பெற விரும்பும் ஈழத்தமிழ் அகதிகளுக்குக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்கும் அதேவேளை, மீண்டும் நாடு திரும்ப விரும்பும் அகதிகள் இலங்கை அதிகாரிகளால் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்குமாறு இலங்கை அரசாங்கத்துக்கு உரிய அழுத்தங்களை வழங்கவேண்டும் என இலங்கைத் தமிழரசுக்கட்சியின் பொதுச்செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

இந்திய சட்டத்தரணிகள் சங்கத்தின் அழைப்பின்பேரில் கடந்த வார இறுதியில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் இந்தியா சென்ற குழுவில் அங்கம் வகித்த ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், அங்கு வேறு பல சந்திப்புக்களிலும் பங்கேற்றார்.

அதன்படி புதுடில்லியில் உள்ள டாக்டர் அம்பேத்கர் சர்வதேச நிறுவனத்தின் நாளந்தா மண்டபத்தில் புதன்கிழமை (11) நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கென ஆர்.கே.ராதாகிருஷ்ணனால் இயக்கப்பட்ட 'முகமில்லா மனிதர்கள்: இந்தியாவில் தமிழ் அகதிகளின் பயணம்' எனும் தலைப்பில் ஆவணத்திரைப்படமொன்று திரையிடப்பட்டது. அத்திரையிடல் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே சுமந்திரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

இலங்கையிலிருந்து இந்தியாவுக்கு இடம்பெயர்ந்த எமது ஈழத்தமிழ் அகதிகள் மீண்டும் நாட்டுக்குத் திரும்பவேண்டும் என்பதும், தாயகத்தை வலுப்படுத்தவேண்டும் என்பதுமே எமது எதிர்பார்ப்பாகும். ஆனால் சுமார் மூன்று தசாப்தங்களுக்கும் மேல் இந்தியாவில் வாழும் எமது உறவுகளும், இந்தியாவிலேயே பிறந்து, வளர்ந்து, வாழ்ந்துவரும் அடுத்த தலைமுறையினரும் அந்த மண்ணிலேயே குடியுரிமை பெற்று கௌரவமாக வாழவேண்டும் என்று விரும்பினால், அதனை எம்மால் மறுதலிக்கமுடியாது. மாறாக அதற்கு முழுமையான ஒத்துழைப்பு வழங்குவதுதான் முறையானதாகும்.

ஆகவே அவர்களது விருப்பத்துக்கு ஏற்ப இந்த விடயத்தில் தாயகம் திரும்பவும் அல்லது இந்திய மண்ணிலேயே குடியுரிமை பெறுவதற்கும் அவர்களுக்கு அவசியமான வசதிகளைச் செய்துகொடுப்பது தான் நியாயமானதாகும்.

அதேவேளை பலர் மீண்டும் தாயகம் திரும்புவதற்கு நாட்டம் கொண்டிருக்கின்றனர். எனினும் அவர்கள் தாயகம் திரும்பும்போது, முன்னர் சட்டவிரோதமாக நாட்டைவிட்டு வெளியேறினர் என்ற காரணத்தைக் குறிப்பிட்டு, அவர்கள் தாயகம் திரும்புகையில் அவ்வப்போது கைதுசெய்யப்படும் சம்பவங்கள் பதிவாகி வருகின்றன.

அவ்வாறு மீண்டும் நாடு திரும்பும் அகதிகள் கைதுசெய்யப்படுவதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அரசாங்கம் முன்னெடுக்கவேண்டும். இருப்பினும் அதனைச் செய்யாமல் இலங்கை அரசாங்கம் இழுத்தடிப்பதனால், ஐக்கிய நாடுகள் அகதிகள் முகவரகமும் ஈழத்தமிழ் அகதிகளைத் தாயகத்துக்குத் திருப்பி அனுப்பிவைக்கும் நடவடிக்கைகளை இடைநிறுத்தி வைத்திருக்கிறது எனச் சுட்டிக்காட்டினார்.

https://www.virakesari.lk/article/240839

உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகள்: தவறு செய்யாதவர்கள் அஞ்சத் தேவையில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

4 days 15 hours ago

உயிர்த்த ஞாயிறு தின விசாரணைகள்: தவறு செய்யாதவர்கள் அஞ்சத் தேவையில்லை - பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:44 AM

image

(எம்.மனோசித்ரா)

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பிரதி அமைச்சர் சுனில் வட்டகல தெரிவித்துள்ளார்.

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை அரசியல் வட்டாரங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், விசாரணைகளை குழப்ப நினைப்பவர்களுக்கு மத்தியில் அரசாங்கம் சட்டத்தை முறையாக அமுல்படுத்தி வருவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

12ஆம் திகதி வியாழக்கிழமை மொனராகலை மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலொன்றில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைத் தெரிவித்தார்.

அவர் மேலும் குறிப்பிடுகையில்,

புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பிரதானி கைது செய்யப்பட்டமை பெரும்பாலான அரசியல்வாதிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆனால் அதற்கான காரணம் என்ன என எமக்குத் தெரியாது. நாம் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த விசாரணைகளையே முன்னெடுத்துக் கொண்டிருக்கின்றோம். இந்த விசாரணைகளுக்கு ஒத்துழைப்புக்களை வழங்குவதை விடுத்து, வெளியில் அவற்றை குழப்பும் வகையில் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றனர்.

தம்மீது எவ்வித தவறும் இல்லை என்றால், எவரும் பதற்றமடையத் தேவையில்லை. இந்த விசாரணைகளை முடிந்தளவு துரிதமாக நிறைவு செய்வதற்கு அரசாங்கமும் நீதி அமைச்சும் தீர்மானித்திருக்கிறது. எனவே தான் தினந்தோரும் உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல்கள் குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படுகின்றன. மறுபுறம் வங்குரோத்தடைந்த எதிர்க்கட்சிகள் கூச்சலிட்டுக் கொண்டிருக்கின்றன.

நாம் எவ்வித பாகுபாடும் இன்றி கட்சி பேதமின்றி அரசியலமைப்பின் 12 (01) உறுப்புரையை சரியாகப் பயன்படுத்தும் முறையான அரசாங்கமாக செயற்படுகின்றோம். இது ஜனாதிபதி தலைமைத்துவம் வகிக்கும் தேசிய மட்டத்திலான வேலைத்திட்டமாகும். இந்நாட்களில் எமது கடற்பரப்பை அண்மித்த பகுதிகளில் பாரியளவிலான பெருந்தொகை போதைப்பொருட்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. அவை தொடர்பான சட்ட நடவடிக்கைகள் எவ்வித தடையும் இன்றி முன்னெடுக்கப்படும்.

அந்த வகையில் போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன. கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் முறையாக அழிக்கப்படுவதில்லை என்றும், எனவே அவை சமூக மயப்படுத்தப்படுவதாகவும் விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றனர். இது தொடர்பில் ஜனாதிபதி தலைமையில் கலந்துரையாடப்பட்டு, அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்ட நீதி அமைச்சின் உறுப்பினர்களை உள்ளடக்கிய குழுவின் ஊடாக ஆராயப்பட்டு வருகிறது.

அதற்கமைய மாதிரிக்காக மாத்திரம் சிறிய தொகையை வைத்துக் கொண்டு எஞ்சியவற்றை உடனடியாக அழிப்பதற்கான நடவடிக்கை குறித்து அந்த குழு அவதானம் செலுத்தி வருகின்றது. அதேபோன்று ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்து வழக்கு தொடர முடியுமா என்ற பிரச்சினையும் காணப்பட்டது. எனவே தான் அது குறித்த சட்டத்திலும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு, ஆழ் கடலில் கைப்பற்றப்படும் போதைப்பொருட்கள் குறித்தும் வழக்கு தொடுத்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன என்றார்.

https://www.virakesari.lk/article/240838

கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம்

4 days 15 hours ago

கிவுல் ஓயா திட்டம்: வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழுவில் கலந்துரையாட தீர்மானம்

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:28 AM

image

(இராஜதுரை ஹஷான்)

கிவுல் ஓயா திட்டம் தொடர்பில் பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கலந்துரையாடி இணக்கப்பாடொன்றை எட்டியதன் பின்னர் அவ்விடயம் குறித்து வவுனியா மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் கலந்துரையாடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.

வவுனியா, மன்னார், முல்லைத்தீவு ஆகிய மாவட்டங்கள் சார்ந்த நீரியல் வளங்களுடன் தொடர்புடைய விவகாரங்கள் குறித்து ஆராயும் கூட்டம் கமத்தொழில், கால்நடை வளங்கள், காணி மற்றும் நீர்ப்பாசனத்துறை அமைச்சர் கே.டி.லால் காந்த தலைமையில் வியாழக்கிழமை (12) வவுனியாவில் நடைபெறவுள்ளது.

இந்த கூட்டத்தில் கலந்துக்கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் பி.சத்தியலிங்கம், கடந்த அரசாங்கம் மடு சரணாலயத்தை, மடு தேசிய பூங்காவாக மாற்றியமைத்ததால் ஏற்பட்ட சிக்கல்கள் மற்றும் பிரச்சினைகள் குறித்து கேள்வியெழுப்பியுள்ளார்.

மடு தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்ட பகுதியில் மக்கள் வசிக்கின்ற நிலையில் அங்கு காட்டு யானைகளின் தொல்லை காணப்படுகிறது.காட்டு பாதை வழியாக பாடசாலை மாணவர்கள் பாடசாலைக்கு செல்வதால் அவர்களின் பாதுகாப்பு குறித்து அச்சநிலை காணப்படுகிறது.

மாந்தை மேற்கு பிரதேச சபையின் அனுமதியுடன் இந்த பாதையை துப்பரவு செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்ட போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறாக செயற்படுகிறது. அரச நிறுவனத்தின் ஒரு தீர்மானத்துக்கு, பிறிதொரு திணைக்களம் தடையேற்படுத்துகிறது. இதனால் மக்கள் தான் அசௌகரியங்களுக்கு உள்ளாகியுள்ளார்கள் என பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன் வவுனியா –மடு வரையான பாதையில் 22 கிலோமீற்றர் பாதையை செப்பனிடுவதற்கான பணிகளை வீதி அபிவிருத்தி அதிகாரசபை புதன்கிழமை (11) முன்னெடுத்த போது வனவளத்துறை திணைக்களம் அதற்கு இடையூறு விளைவித்துள்ளது. இதனால் அந்த பணிகளும் தற்போது இடைநிறுத்தப்பட்டுள்ளன.

சரணாலயமாக இருந்த ஒருபகுதியை தேசிய பூங்காவாக அறிவித்ததால் நடைமுறையில் இவ்வாறான பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. மக்கள் வாழும் பகுதிகளில் கூட எவ்வித அபிவிருத்திகளையும் முன்னெடுக்க முடியாத நிலை காணப்படுகிறது. அனைத்துக்கும் வனவளத்துறை திணைக்களத்திடம் அனுமதி கோர வேண்டிய நிலை காணப்படுகிறது என்றும் அதிருப்தி வெளிப்படுத்தியுள்ளார்.

இதற்கு பதிலளித்த விவசாயம், காணி மற்றும் நீர்பாசனத்துறை அமைச்சர் லால் காந்த, இந்த விடயங்கள் ஏற்றுக்கொள்ள கூடியதே, மக்களின் அடிப்படை பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதற்கு முன்னுரிமை வழங்க வேண்டும் . ஆகவே நடைமுறையில் தோற்றம் பெற்றுள்ள பிரச்சினைகளுக்கு தற்காலிக தீர்வையேனும் முன்வையுங்கள் என்று வனவளத்துறை திணைக்களத்துக்கு அறிவுறுத்தியுள்ளார். இதற்கு வனவளத்துறை திணைக்கள அதிகாரிகள் இணக்கம் தெரிவித்துள்ளனர்.

இதன்போது கருத்து தெரிவித்த பாராளுமன்ற உறுப்பினர் பி. சத்தியலிங்கம், இவ்வாறான தற்காலிக தீர்வுகள் பிரச்சினைகளுக்கு முழுமையான தீர்வாக எப்போதும் அமையாது. கொள்கை ரீதியில் தீர்மானங்களை எடுங்கள் அதுவே நிலையானதாக இருக்கும் என்று வலியுறுத்தியுள்ளார்.

இந்த கூட்டத்தில் கிவுல் ஓயா திட்டம் மற்றும் அதனுடனான சிக்கல்கள் குறித்து கலந்துரையாடப்படவில்லை. நேரம் போதாத காரணத்தால் இந்த விடயம் குறித்து அவதானம் செலுத்தப்படவில்லை என்று குறிப்பிடப்படுகிறது. பாராளுமன்ற குழுக்கள் ஊடாக கிவுல்ஓயா திட்டம் குறித்து ஒரு இணக்கப்பாட்டை எட்டி அதனை அபிவிருத்திக்குழு கூட்டத்தில் கலந்துரையாட தீர்மானிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/240836

நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 200 கிலோவுக்கு அண்ணளவான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு

4 days 16 hours ago

நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த நிலையில் சுமார் 200 கிலோவுக்கு அண்ணளவான போதைப்பொருள் இன்று தீயிட்டு அழிப்பு

Published By: Vishnu

13 Mar, 2026 | 05:22 AM

image

(செ.சுபதர்ஷனி)

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் முன்னெடுக்கப்பட்ட பல்வேறு சுற்றிவளைப்பு நடவடிக்கைகளின் போது கைப்பற்றப்பட்டு, நீதிமன்ற விசாரணைகள் நிறைவடைந்த சுமார் 200 கிலோ கிராமுக்கு அண்ணளவான போதைப்பொருள் வெள்ளிக்கிழமை (13) காலை வனாத்தவில்லு பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலையில் வைத்து அழிக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

கொழும்பு மேல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த வழக்கு விசாரணைகள் யாவும் நிறைவடைந்ததை அடுத்து, நீதிமன்ற உத்தரவிற்கமைய இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்போது 40 கிலோ 533 கிராம் ஹெரோயின், 132 கிலோ 79 கிராம் கெத்தின் போதைப்பொருள், 55 கிராம் கொக்கெய்ன் மற்றும் 3,482 போதை மாத்திரைகள் என்பன இவ்வாறு தகனம் செய்யப்படவுள்ளன.

இந்த பாரியளவான போதைப்பொருள் இன்று (13) காலை 6.00 மணியளவில் கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் இருந்து பலத்த பாதுகாப்புடன் புத்தளம், வனாத்தவில்லு - லொக்டோவத்த பகுதியில் அமைந்துள்ள விசேட தகன உலைக்கு கொண்டு செல்லப்படவுள்ளது. காலை 9.00 மணியளவில் குறித்த இடத்தில் போதைப்பொருட்களை அழிப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்தும் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கொழும்பு மேல் நீதிமன்ற வளாகத்தில் வைத்து பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவு அதிகாரிகளால் குறித்த போதைப்பொருள் தொகுதியைப் பொறுப்பேற்கும் நிகழ்வை அறிக்கையிட ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று, வනාத்தவில்லு லැக்டோவத்த பகுதியில் போதைப்பொருள் அழிக்கப்படும் நிகழ்வை அறிக்கையிடுவதற்காக அந்தந்த பிரதேச ஊடகவியலாளர்களை ஈடுபடுத்துவதற்கான ஏற்பாடுகளையும் மேற்கொள்ளுமாறு பொலிஸ் ஊடகப் பிரிவு கேட்டுக்கொண்டுள்ளது.

https://www.virakesari.lk/article/240835

“காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி

4 days 16 hours ago

“காயங்களைத் தாண்டி” காபி மேசை நூல் வெளியீடு – இலங்கையில் தொழுநோய் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் முயற்சி

Published By: Vishnu

13 Mar, 2026 | 01:30 AM

image

Alliance Development Trust (ADT) நிறுவனம் தயாரித்த “Beyond the Scars” (காயங்களைத் தாண்டி) என்ற காபி மேசை நூல், கொழும்பு நகர மையத்தில் அமைந்துள்ள Courtyard by Marriott Colombo City Centre ஹோட்டலின் Sapphire Hall மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்வில் வெளியிடப்பட்டது. இந்த நிகழ்வில் வளர்ச்சி கூட்டாளர்கள், சுகாதாரத் துறை நிபுணர்கள், ஊடகப் பிரதிநிதிகள் மற்றும் சமூக செயற்பாட்டாளர்கள் கலந்து கொண்டனர்.

WhatsApp_Image_2026-03-12_at_21.01.38.jp

நிகழ்வின் முக்கிய அம்சமாக, சுய உதவி குழு உறுப்பினர்களான இரண்டு பெண்கள் தங்களது உண்மை வாழ்க்கை அனுபவங்களை பகிர்ந்து கொண்டனர். இவர்களில் ஒருவரின் கணவர் தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; அவர் மொரட்டுவை, எகொடாவுயானா பகுதியில் நடைபெறும் Egodauyana சுய உதவி குழு கூட்டங்களை வழிநடத்தி வருகிறார். தனது குடும்பத்திற்கும் சமூகத்திற்கும் துணையாக இருந்து எதிர்கொண்ட அனுபவங்களை அவர் பகிர்ந்தார்.

WhatsApp_Image_2026-03-12_at_21.01.40.jp

மற்றொரு உறுப்பினர் நேரடியாக தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்; நரம்பு சேதம் மற்றும் மன அழுத்தத்தையும் எதிர்கொண்டுள்ளார். தன்னுடைய போராட்டங்களையும் மீட்பு பயணத்தையும் அவர் தைரியமாக பகிர்ந்தார். இவர்களின் உறுதி, தைரியம் மற்றும் விடாமுயற்சி நிறைந்த அனுபவங்கள் நிகழ்வில் கலந்து கொண்டோரின் மனதில் ஆழமான தாக்கத்தை ஏற்படுத்தின.

WhatsApp_Image_2026-03-12_at_21.01.41.jp

இந்த நிகழ்வில், இவ்விரு சுய உதவி குழு உறுப்பினர்களும் முதன்மை விருந்தினர்களாக கௌரவிக்கப்பட்டனர். NCEASL நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. கோட்ப்ரி யோகாராஜா அவர்களால் காபி மேசை நூலின் முதல் பிரதிகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.

WhatsApp_Image_2026-03-12_at_21.01.388.j

இந்த வெளியீடு, தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களின் உறுதி, மரியாதை மற்றும் நம்பிக்கை நிறைந்த கதைகளை வெளிப்படுத்துவதோடு, அவர்கள் இன்னும் எதிர்கொள்ளும் சமூக குற்றப்பரப்பு மற்றும் பாகுபாடு குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது. இந்த காபி மேசை நூல் LKR 6,000 என்ற விலையில் வாங்குவதற்கு கிடைக்கப்பெற்றது.

WhatsApp_Image_2026-03-12_at_21.01.411.j

தேசிய கணக்கீடுகளின்படி, இலங்கையில் ஆண்டுதோறும் சுமார் 1,300 புதிய தொழுநோய் சம்பவங்கள் பதிவாகின்றன. உடல் பாதிப்புகளுக்கு மேலாக சமூக புறக்கணிப்பும் பலருக்கு இன்னும் சவாலாக உள்ளது.

நிகழ்வில் உரையாற்றிய ADT பிரதிநிதிகள், தொழுநோயை எதிர்கொள்ள மருத்துவ சிகிச்சை மட்டுமல்லாமல், சமூக ஆதரவு, விழிப்புணர்வு மற்றும் உட்சேர்க்கை முக்கியமானவை என வலியுறுத்தினர்.

நிகழ்வின் இறுதியில், பங்கேற்பாளர்கள் ADT நிறுவனத்தின் பணிக்கு Goodwill Ambassadors ஆக இணைந்து விழிப்புணர்வு முயற்சிகளை ஆதரிக்க அழைக்கப்பட்டனர். பலர் இதில் பங்கேற்க ஆர்வம் தெரிவித்தனர்.

தொழுநோய் என்பது சுகாதாரப் பிரச்சினை மட்டுமல்ல; அது ஒரு சமூக நீதி தொடர்பான பிரச்சினையும் ஆகும். இந்த வெளியீட்டின் மூலம் குற்றப்பரப்பையும் பாகுபாடுகளையும் அனுபவித்தவர்களின் குரல்களையும் கதைகளையும் சமூகத்திற்கு கொண்டு செல்ல விரும்புகிறோம்,” என ADT பிரதிநிதிகள் தெரிவித்தனர்.

இந்த காபி மேசை நூல், உண்மை வாழ்க்கை கதைகள், புகைப்படங்கள் மற்றும் அனுபவங்களை இணைத்து, சமூகங்களில் அதிகமான புரிதலும் கருணையும் உருவாக்கும் நோக்கத்துடன் தயாரிக்கப்பட்டுள்ளது.

நிகழ்வு விருந்தினர்கள் இடையிலான கலந்துரையாடலுடன் நிறைவடைந்தது. தொழுநோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவை வலுப்படுத்தவும், தொழுநோயற்ற இலங்கை என்ற இலக்கை அடையவும் கூட்டுப்பணியை மேம்படுத்துவது குறித்து கருத்துகள் பகிரப்பட்டன.

Alliance Development Trust (ADT) பற்றி

Alliance Development Trust என்பது இலங்கையில் செயல்படும் அபிவிருத்தி நிறுவனம் ஆகும். சுகாதாரம், சமூக பாதுகாப்பு மற்றும் உள்ளடக்கிய அபிவிருத்தி முயற்சிகள் மூலம் பாதிக்கப்படும் சமூகங்களை வலுப்படுத்துவதற்காக ADT பல்வேறு திட்டங்களை முன்னெடுத்து வருகிறது.

https://www.virakesari.lk/article/240831

https://www.adtlanka.org/

அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர்

5 days 3 hours ago

அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் - பலாங்கொட கஸ்ஸப தேரர் 

12 Mar, 2026 | 05:31 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்)

வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ வீட்டுக்கு செல்லவேண்டிய நிலை ஏற்பட்டது. அந்த நிலையே அநுர குமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்குச் செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என பலாங்கொட கஸ்ஸப தேரர் தெரிவித்தர்.

திருகோணமலை பெளத்த விகாரை வளாகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.

அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,

இலங்கை மின்சாரசபை சில தினங்களுக்கு முன்னர் இறுதிப்பயணம் சென்றது முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னாள் அமைச்சர் காஞ்சன விஜேசேகரவுடன் இணைந்து மின்சாரசபையை.இல்லாமலாக்கச் செய்ய நடவடிக்கை எடுத்தபோது, மின்சார சபை சட்டத்தை வாபஸ் பெற்றுக்கொள்ளுமாறு தெரிவித்து 2024 ஜுன் மாதம் 6ஆம் திகதி நாங்கள் மேற்கொண்ட எதிர்ப்பு நடவடிக்கையின்போது என்னை பாராளுமன்றத்துக்கு முன்னால் கைதுசெய்தார்கள். அதனால் இலங்கை அரசாங்கத்துக்கு சொந்தமான வளம் ஒன்றை வெளிநாட்டு அல்லது உள்நாட்டு தனியார் நிறுவனம் ஒன்றுக்கு விற்பனை செய்வதற்கு எதிர்ப்பு தெரிவிக்க எங்களுக்கு உரிமை இருக்கிறது.

நாடொன்றின் மின்சார சபையானது உயிர் நாடியாகும். அதனை நூறுவீதம் தனியார் மயப்படுத்துவதற்கு தேரர்கள் என்றவகையில் நாங்கள் எதிர்ப்பு. தனியார் பயப்படுத்துவதாக இருந்தால் அதிக பங்குகளை அரசாங்கத்தின் கீழ் வைத்துக்கொண்டே வழங்க வேண்டும். தற்போதும் இலங்கை மின்சாரசபையை 6 பகுதிகளாக பிரித்து வழங்கப்பட்டிருக்கிறது. ஆனால் மின்சாரசபை தற்போதும் அரசாங்கத்துக்கு உரித்தானது என அந்த நிறுவனங்களின் தலைவர்கள் தெரிவிக்கின்றனர். இது மறைமுகமாக மேற்கொள்ளப்படும் நடவடிக்கை என்பது எங்களுக்கு தெரியும். ஏனெனில் இந்த மின்சாரசபை சட்டம் தொடர்பில் நாங்கள் ஆரம்பத்தில் இருந்து ஆராய்ந்து வருகிறோம்.

இலங்கை மின்சாரசபையை தனியார் மயப்படுத்த இடமளிக்கப்போவதில்லை என தெரிவித்து எங்களுடன் இணைந்து போராட்டம் மேற்கொண்டவர்கள் தற்போது அதிகாரத்துக்கு வந்த பின்னர் அரச வளங்களை விற்பனை செய்து வருகின்றனர்.இவ்வாறான நிலையில் நாடு இருக்கும்போது, மக்கள் தொடர்ந்து இதனை பார்த்துக்கொண்டிருக்கிறதா என மக்களை கேட்கிறோம். குறிப்பாக மின்சாரசபையை 6 பங்குகளாக பிரித்து விற்பனை செய்வதன் மூலம் இவர்கள் இதனை லாபமீட்டும் நிறுவனமாக மாற்றியமைப்பதற்கு இவ்வாறு மேற்கொள்வதாக தெரிவித்திருப்பதை நாங்கள் நம்பப்போவதில்லை. லாபமீட்டும் நிறுவனமாக மாற்றுவதாக இருந்தால், ஏன் 6 பகுதிகளாக பிரிக்க வேண்டும் என கேட்கிறேம்.

மேலும் இந்த நிறுவனங்களின் தலைவர்களுக்கு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் பணம் வழங்கினால் அவர்கள் இவர்களின் பொறியில் சிக்கமாட்டார்களா? அதனால் வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரால் இவர்களுக்கு கோடிக்கணக்கில் பணம் வழங்கினால், எமது வலுசக்தி துறைக்கு என்ன நடக்கும். ஏனெனில் இவர்களின் நோக்கம் லாபமீட்டுவதாகும்.

எனவே வலுசக்தி காரணமாகவே கோட்டாபய ராஜபக்ஷ்வுக்கும் வீட்டுக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதை ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். மின்சாரம் துண்டிக்கப்பட்டு, மக்கள் எரிவாயு, எரிபொருளுக்கு வரிசையில் நிற்கவேண்டிய நிலை ஏற்பட்டதன் பின்னரே மக்கள் வீதிக்கிறங்கி போராட்டம் நடத்தினார்கள். அந்த நிலையே அநுரகுமார திஸாநாயக்கவுக்கும் ஏற்படும். அதனால் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மற்றும் அரசாங்கம் வீட்டுக்கு செல்ல இப்போதே தயாராக இருக்குமாறு தெரிவிக்கிறோம். ஏனெனில் நாடு தற்போது பயணிக்கும் போக்கை பார்க்கும்போது எங்களுக்கு நம்பமுடியாமல் இருக்கிறது.

2022 மக்கள் போராட்டத்தின் எஞ்சிய பகுதியை பூரணப்படுத்தவே வெளிநாட்டு புலனாய்வு சக்திகள் தற்போது செயற்பட்டு வருகின்றன. ஜனாதிபதி அநுரகுமார இந்தியாவுடன் ஒப்பந்தம் செய்து, இந்தியாவை நம்பினாலும் இலங்கையின் பின்னால் குத்தியே ஈரான் கப்பலை இலங்கைக்கு அனுப்பி அமெரிக்காவுடன் செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, இலங்கையை இந்த யுத்தத்துடன் நேரடி மோதலுக்கு இட்டுச்செல்லவே இந்தியா முயற்சித்தது. என்றாலும் அதிர்ஷ்டவசமாக அது அவ்வாறு இடம்பெறவில்லை. ஆனாலும் அமெரிக்காவும் ஈரானும் எங்களுடன் வைராக்கித்துடனே இருக்கின்றன.

அதனால் அரசாங்கம் உடனடியாக புலனாய்வு துறையை பலப்படுத்தி செயற்படுத்த வேண்டும். அரசாங்கத்துக்கு என்ன செய்ய வேண்டும் என தெரியாமல் இருக்கிறது. அதனால் எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/240813

இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

5 days 4 hours ago

இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

Mar 12, 2026 - 05:29 PM

இந்தியாவிடம் எரிபொருள் கோரிய இலங்கை

இலங்கை, பங்களாதேஷ் மற்றும் மாலைத்தீவு ஆகிய நாடுகள் இந்தியாவிடம் இருந்து எரிபொருளை கோரியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது. 

இது குறித்து தற்போது பரிசீலித்து வருவதாக இந்திய வெளிவிவகார அமைச்சின் ஊடகப்பேச்சாளர் ரந்தீர் ஜெய்ஸ்வால் தெரிவித்தார். 

இந்தியா சுத்திகரிக்கப்பட்ட பெற்றோலிய பொருட்களை அண்டை நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யும் முக்கிய ஏற்றுமதியாளர்களில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

https://adaderanatamil.lk/news/cmmney4p1000r356p8t73d1nw

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு!

5 days 4 hours ago

முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு ரவிகரன் எம்.பி நேரடி விஜயம்: ஆளணிப் பற்றாக்குறை குறித்து ஆராய்வு!

12 Mar, 2026 | 03:27 PM

image

முல்லைத்தீவு பிரதேச வைத்தியசாலைக்கு இன்று வியாழக்கிழமை (12) நேரடியாகச் சென்ற வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன், அங்கு நிலவும் பல்வேறு குறைபாடுகள் குறித்துக் கேட்டறிந்ததுடன் அவற்றினை நேரில் பார்வையிட்டார்.

வைத்தியசாலையின் நோயாளர்கள் மற்றும் மருத்துவர் உள்ளிட்ட தரப்பினருடன் கலந்துரையாடிய நாடாளுமன்ற உறுப்பினர், அங்குள்ள தேவைகள் குறித்து விரிவாக ஆராய்ந்தார்.

வைத்தியசாலையில் அபிவிருத்தி உத்தியோகத்தர், சிற்றுழியர்கள் மற்றும் மருத்துவர்கள் உள்ளிட்ட ஆளணித் தேவைகள் பெருமளவில் காணப்படுவதாக இதன்போது மருத்துவ அதிகாரியால் நாடாளுமன்ற உறுப்பினரின் கவனத்திற்குக் கொண்டுவரப்பட்டது. இவ்வாறான ஆளணி வெற்றிடங்கள் நிலவுவதால், பொதுமக்களுக்கு வினைத்திறனான மருத்துவச் சேவையை வழங்குவதில் பாரிய சிக்கல்கள் எதிர்நோக்கப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

வைத்தியசாலையின் சில அறைகளில் மின்சார இணைப்புகள் சீரற்ற நிலையில் காணப்படுவதால், அந்த அறைகளைப் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளமையும் இதன்போது கண்டறியப்பட்டது.

வைத்தியசாலையில் நிலவும் இக்குறைபாடுகளைச் சீர்செய்வது தொடர்பில் தாம் உரிய முறையில் கவனம் செலுத்துவதாகப் பாராளுமன்ற உறுப்பினர் இதன்போது உறுதியளித்தார். அத்துடன், வைத்தியசாலையின் வளர்ச்சிப் பணிகளை முன்னெடுப்பதற்காகத் தகுந்த 'நலன்புரிச் சங்கம்' ஒன்றினை விரைவாக உருவாக்குமாறு மருத்துவ அதிகாரியிடம் அவர் வலியுறுத்தினார். அதற்கு இணக்கம் தெரிவித்த மருத்துவ அதிகாரி, விரைவில் அதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.

இந்தக் களவிஜயத்தின் போது கரைதுறைப்பற்று பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினர்களான மகாதேவா குணசிங்கராசா, தொம்மைப்பிள்ளை பவுள்ராஜ் மற்றும் ஞானதாஸ் ஜூட்சன் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.

IMG-20260312-WA0004.jpg

IMG-20260312-WA0007.jpg

IMG-20260312-WA0042.jpg

IMG-20260312-WA0084.jpg

https://www.virakesari.lk/article/240795

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr