ஊர்ப்புதினம்

என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த

5 days 4 hours ago

என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த

Mar 12, 2026 - 03:42 PM -

0

என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும் - மகிந்த

மத்திய கிழக்கில் நிலவும் யுத்த நிலைமை காரணமாக இலங்கையின் எதிர்காலத்திற்குப் பாரிய தாக்கம் ஏற்படும் என முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

திஸ்ஸமஹாராமயில் உள்ள விகாரை ஒன்றில் வழிபாடுகளில் ஈடுபட்டதன் பின்னர் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளிக்கும் போதே அவர் இதனைத் தெரிவித்தார். 

கேள்வி: தற்போதைய அரசாங்கம் பௌத்த சாசனத்திற்கு ஆற்றும் சேவை குறித்து உங்களது கருத்து என்ன? 

பதில்: ஏதேனும் சேவை செய்கிறார்களா? 

கேள்வி: பௌத்த சாசனத்தை இரண்டாம் பட்சமாகக் கருதும் நிலை காணப்படுகிறது. உங்கள் காலத்தில் எப்படி மதிப்பளிக்கப்பட்டது? 

பதில்: மிக உயர்வாக மதித்தோம். இப்போது அப்படிச் செய்கிறார்களா என்பது கேள்வியே. 

கேள்வி: உங்கள் காலத்தில் இருந்த புலனாய்வுப் பிரிவு அதிகாரி ஒருவர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இது குறித்து உங்கள் கருத்து என்ன? 

பதில்: அவர் ஆற்றிய சேவையைப் பாராட்ட வேண்டுமே தவிர, சிறையில் அடைக்கக் கூடாது. இது சிறையில் அடைக்கும் காலமல்ல. 

கேள்வி: தற்போது சர்வதேசப் போரொன்று நடைபெற்று வருகின்றது. இன்னும் சிறிது காலம் இந்தப் போர் தொடர்ந்தால் நாட்டின் எதிர்காலம் என்னவாகும் என நினைக்கிறீர்கள்? 

பதில்: பிரச்சினை ஏற்படும் தானே. நாட்டிற்கு, நாட்டின் எதிர்காலத்திற்குப் பிரச்சினை ஏற்படும். 

கேள்வி: நாட்டின் தற்போதைய நிலை குறித்து என்ன நினைக்கிறீர்கள்? 

பதில்: அரசாங்கம் செய்வதைப் பற்றிச் சொல்வதற்கு ஒன்றுமில்லை. என்னைவிட மக்களுக்கு நன்றாகத் தெரியும்.

https://adaderanatamil.lk/news/cmmnb4386000l356p5a3lobgd

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு

5 days 4 hours ago

அல்லைப்பிட்டி சிறுவன் உயிரிழப்பு: விசாரணை சி.ஐ.டிக்கு மாற்ற நீதிமன்ற உத்தரவு

Published By: Vishnu

12 Mar, 2026 | 08:28 PM

image

அல்லைப்பிட்டியில் பொலிசரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி சிறுவன் உயிரிழந்த சம்பவம் தொடர்பிலான விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்ற புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அல்லைப்பிட்டி பகுதியில் கடந்த பெப்ரவரி மாதம் 10ஆம் திகதி அதிகாலை வேளை பயணித்த ஹயஸ் ரக வாகனத்தை பொலிஸார் வழிமறித்த போது பொலிசாரின் கட்டளையை மீறி சென்ற வாகனத்தின் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி பிரயோகத்தில் வாகன சாரதியான 17 வயது சிறுவன் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளான்.

குறித்த சம்பவம் தொடர்பிலான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் வியாழக்கிழமை (12) விசாரணைக்கு எடுத்து கொள்ளப்பட்டது.

அதன்போது , உயிரிழந்த சிறுவனின் குடும்பத்தினர் சார்பாக ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற சட்டத்தரணிகள் 06க்கும் மேற்பட்டோர் மன்றில் முன்னியாகி, சிறுவனின் கொலை தொடர்பில் யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்படும் விசாரணைகளில் திருப்தி இல்லை என மன்றில் சுட்டிக்காட்டி , வழக்கு விசாரணைகளை கொழும்பில் உள்ள குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினரிடம் கையளிக்க வேண்டும் என மன்றில் சமர்ப்பணங்களை முன் வைத்தனர்.

அதற்கு பொலிஸ் தரப்பில் கடுமையான ஆட்சேபனைகள் தெரிவிக்கப்பட்டன. அதனால் கடுமையான வாத பிரதிவாதங்களை அடுத்து விசாரணைகளை கொழும்பு குற்றத்தடுப்பு புலனாய்வு பிரிவினருக்கு மாற்றுமாறு மன்று உத்தரவிட்டது.

அதேவேளை இன்றைய வழக்கு விசாரணைகளின் போது, பொலிஸ் உயர் அதிகாரிகள் , பொலிஸ் திணைக்கள சட்டத்தரணிகள் , என 20க்கும் மேற்பட்டோர் நீதிமன்றுக்கு சமூகமளித்திருந்தனர்.

அத்துடன் இன்றைய வழக்கு விசாரணையின் போது, சம்பவத்துடன் தொடர்புடைய வாகனத்தினுள் இருந்து துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது ஒன்றினை மீட்டதாக பொலிஸார் மன்றில் தெரிவித்தனர்.

சம்பவ தினத்தன்று தடயவியல் பொலிஸாரினால் மீட்கப்படாத துப்பாக்கி ரவையின் வெற்றுக்கோது தற்போது மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுவது சந்தேகத்திற்கு உரியது என பாதிக்கப்பட்டவர்கள் நலன் சார்ந்து மன்றில் முன்னியான சட்டத்தரணிகள் கடும் ஆட்சேபனையை மன்றில் தெரிவித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதேவேளை குறித்த துப்பாக்கி சூட்டு சம்பவத்துடன் தொடர்புடைய குற்றச்சாட்டில் சம்பவம் நடைபெற்று ஒரு மாத கால பகுதி கடந்தும் எவரும் கைது செய்யப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/240827

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

5 days 11 hours ago

New-Project-11-2.jpg?resize=750%2C375&ss

தெற்கு கடலில் தடுத்து நிறுத்தப்பட்ட படகில் 10 பில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருள்!

தெற்கு கடற்பகுதியில் இலங்கை கடற்படையினரால் தடுத்து நிறுத்தப்பட்ட பல நாள் மீன்பிடிக் கப்பல், பல பில்லியன் ரூபாய் பெறுமதியான போதைப்பொருட்களையும், ஆயுதங்களையும் கொண்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டதாக பாதுகாப்பு பிரதி அமைச்சர் அருணா ஜெயசேகர தெரிவித்தார்.

அந்தக் கப்பல் சுமார் 600 கிலோ கிராம் ஹெரோயின் மற்றும் படிக மெத்தம்பேட்டமைன் (ஐஸ்) ஆகியவற்றைக் கொண்டு சென்றதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதன் பெறுமதி 10 பில்லியன் ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கையின் போது கடற்படை வீரர்கள் எட்டு கைத்துப்பாக்கிகள், இரண்டு T-56 தாக்குதல் துப்பாக்கிகள் மற்றும் ஒரு M16 துப்பாக்கி, வெடிமருந்துகள் மற்றும் மெகசின்களை மீட்டுள்ளனர்.

படகில் இருந்த மொத்தம் 10 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையின் தெற்கே உள்ள சர்வதேச கடற்பரப்பில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கையைத் தொடர்ந்து, கைப்பற்றப்பட்ட, பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொட்கள் மற்றும் வெடிமருந்துகளுடன் கைதான சந்தேக நபர்கள் டிகக்கோவிட்ட மீன்பிடி துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

சந்தேகத்திற்குரிய போதைப்பொருள் கடத்தல் நடவடிக்கை குறித்து அதிகாரிகள் மேலும் விசாரணைகளைத் தொடங்கியுள்ளனர்.

https://athavannews.com/2026/1468144

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி; 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது - வடக்கு ஆளுநர் 11 Mar, 2026 | 07:18 PM

5 days 13 hours ago

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்தி ; 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே வடக்கு மாகாணம் உள்ளது - வடக்கு ஆளுநர் 

11 Mar, 2026 | 07:18 PM

image

(எம்.நியூட்டன்)

இலங்கையின் மொத்த தேசிய உற்பத்திக்கு வளமான வடக்கு மாகாணத்தின் பங்களிப்பானது தற்போது 4.5 சதவீதமாகக் கடைசி மட்டத்திலேயே காணப்படுகிறது. எதிர்வரும் சில ஆண்டுகளில் இப்பங்களிப்பை ஆகக்குறைந்தது 10 சதவீதமாக உயர்த்துவதற்கான இலக்கை நோக்கி நாம் தற்போது தீவிரமாகப் பணியாற்றத் தொடங்கியுள்ளோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தால் ஏற்பாடு செய்யப்பட்ட 'வடக்கு மாகாண தொழில்முனைவோர் விருதுகள் - 2025' வழங்கும் விழா, மன்றத்தின் தலைவர் கு.வசீகரன் தலைமையில்  செவ்வாய்க்கிழமை (10) கொக்குவிலுள்ள செல்வாபலஸில் நடைபெற்றது.

இந்நிகழ்வில் கலந்துகொண்டு விருதுகளை வழங்கிவைத்து உரையாற்றியபோது தெரிவித்தார்.

 ஆளுநர் மேலும் தெரிவிக்கையில்:

IMG-20260311-WA0011.jpg

வடக்கு மாகாணத்தின் தொலைநோக்குப் பார்வை மற்றும் தாங்குதிறன் ஆகியவற்றைக் கொண்டாடும் இந்த விசேட நிகழ்வில் பங்கேற்பதில் நான் பெருமையடைகின்றேன். எழுச்சிபெறும் வடக்கு மாகாணத்தின் வாழும் சாட்சிகளாகத் திகழும் வெற்றியாளர்களைக் கொண்டாடும் ஒரு பெருவிழாவாகவே இது அமைந்துள்ளது. 

புதிய விடயங்களை உருவாக்குவதற்கும், புத்தாக்கங்களைப் புகுத்துவதற்கும், சிறந்த தலைமைத்துவத்தை வழங்குவதற்கும் தொழில்முனைவோராகிய உங்களுக்கு இருக்கும் தைரியத்தை நாம் மனதாரக் கௌரவிக்கின்றோம்.

தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் இந்நிகழ்வில் பங்கேற்றுள்ளமையானது, பிராந்திய சுபீட்சத்தின் மீதான எமது கூட்டு அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகின்றது. வடக்கு மாகாணம் முழுவதும் சிறிய மற்றும் நடுத்தர தொழில்முயற்சிகளை மேம்படுத்துவதிலும், உள்ளூர் வர்த்தகங்கள் செழித்தோங்குவதற்கான அடிப்படை உட்கட்டமைப்புகளை வழங்குவதிலும் அதிகார சபையின் அசைக்க முடியாத ஆதரவு மிக முக்கியமானது.

தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் நெருக்கமான ஒருங்கிணைப்புடன் நடைபெறும் இந்த விருது வழங்கும் விழாவானது, ஒரு மூலோபாயக் கூட்டாண்மையின் ஊடாக நாம் எதனையும் சாதிக்க முடியும் என்பதற்கான சிறந்த சான்றாகும். ஆளுமை விருத்தி, நிலைபேறான வளர்ச்சி மற்றும் உள்ளூர், உலகளாவிய சந்தைகளில் போட்டியிடுவதற்குத் தேவையான வளங்களை எமது தொழில்முனைவோருக்கு இணைத்துக்கொடுக்கும் ஒரு முக்கிய பாலமாக இது அமைந்துள்ளது.

IMG-20260311-WA0005.jpg

இன்று விருதுகளை வென்றவர்களே, நீங்கள்தான் எமது பொருளாதார எதிர்காலத்தின் சிற்பிகள். யாழ்ப்பாண சர்வதேச வர்த்தகச் சந்தை போன்ற முன்னெடுப்புகள், யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றம் மற்றும் தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபை ஆகியவற்றின் தொடர்ச்சியான ஆதரவுடன் நீங்கள் அடைந்துள்ள வெற்றியானது, அடுத்த தலைமுறையினரின் இலட்சியங்களுக்குப் பெரும் உந்துசக்தியாக அமையும்.

இலங்கைத் தீவின் செழிப்பான பொருளாதார மையமாக ஒருகாலத்தில் விளங்கிய வடக்கு மாகாணத்தின் வரலாற்றுப் பெருமையை நீங்கள் மீண்டும் நிலைநாட்டுகின்றீர்கள் என்பதை நினைவில் கொள்ளுங்கள். உங்களின் ஆற்றல் மீது எமக்கு முழுமையான நம்பிக்கை உள்ளதுடன், உங்களின் ஒவ்வொரு நகர்விலும் நாம் உங்களுக்குத் துணையாக நிற்போம் என உறுதியளிக்கின்றேன்,' என்றார்.

இவ்விசேட நிகழ்வில், யாழ்ப்பாணத்துக்கான இந்தியத் துணைத் தூதுவர் ஸ்ரீ சாய்முரளி, தேசிய தொழில்முயற்சிகள் அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்ஸ்மன் அபயசேகர, யாழ்ப்பாணம் வர்த்தக மற்றும் கைத்தொழில் மன்றத்தின் பிரதிநிதிகள், தொழில்முனைவோர் மற்றும் துறைசார் அதிகாரிகள் எனப் பலரும் பங்கேற்றிருந்தனர்.

IMG-20260311-WA0004.jpg

IMG-20260311-WA0008.jpg

https://www.virakesari.lk/article/240747

இலங்கையில் மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு!

5 days 13 hours ago

இலங்கையில் மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு!

Mar 12, 2026 - 10:20 AM

இலங்கையில் மிரட்டும் எலி காய்ச்சல்: 1,800 பேர் பாதிப்பு!

இலங்கையில் இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் சுமார் 1,800 எலி காய்ச்சல் நோயாளர்கள் பதிவாகியுள்ளதாக தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சுகாதார மேம்பாட்டு பணியகத்தில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த விசேட வைத்திய நிபுணர் துஷானி தாபரேரா இதனை தெரிவித்தார்.

“இலங்கையில் இரண்டாவதாக அதிகளவில் பதிவாகும் தொற்றுநோய் எலி காய்ச்சல் ஆகும். ஆண்டுதோறும் சுமார் 13,000 நோயாளர்கள் தொற்றுநோயியல் பிரிவுக்கு அறிக்கையிடப்படுகின்றனர். இது இதைவிட அதிகமாகவும் இருக்கக்கூடும். கடந்த சில ஆண்டுகளாக 100 முதல் 200 மரணங்கள் வரை பதிவாகின. 2024 ஆம் ஆண்டில் 300 மரணங்கள் பதிவாகின. 2025 ஆம் ஆண்டில் அந்த மரணங்கள் 200 க்கும் குறைவாகக் குறைந்தன. 2026 ஆம் ஆண்டில் 1,800 நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

காலி, மாத்தறை, களுத்துறை, இரத்தினபுரி, கேகாலை மற்றும் மொனராகலை ஆகிய பகுதிகளில் இந்நோய் அதிகளவில் பதிவாகியுள்ளது. அதேநேரம் குருநாகல், கம்பஹா மற்றும் கொழும்பு போன்ற பகுதிகளில் நெற்பயிர்ச் செய்கை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுமாயின் அல்லது அவதான நிலைமைகள் காணப்படுமாயின் அங்கிருந்தும் நோயாளர்கள் பதிவாகின்றனர்.”

அந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட விசேட வைத்திய நிபுணர் கோலித ஜயசுந்தர, எலி காய்ச்சல் அறிகுறிகள் குறித்து பின்வருமாறு விளக்கமளித்தார்:

"காய்ச்சல் சாதாரணமாக மூன்று முதல் ஐந்து நாட்களுக்கு இடையில் இருக்கும். இங்கு நோயாளியின் மிக முக்கியமான விஷயம் என்னவென்றால் 'வரலாறு' ஆகும். இவர் எங்கே சென்றார் என்பது போன்ற விடயங்கள் அவை. நோயைக் கண்டறிவதற்கு நோயாளியின் வரலாறு பற்றித் தெரிந்துகொள்வது மிகவும் முக்கியமானது. வயிறு வலிக்கும், வாந்தி வரும். கடுமையான தலைவலி இருக்கும். மூட்டு வலி வரும். தசை வலிக்கும். அதற்கு மேலதிகமாக, முதல் மூன்று நாட்களுக்குப் பின்னரும் காய்ச்சல் இருக்குமானால், ஒரு வைத்தியரை அணுகி அது குறித்து ஒரு முடிவுக்கு வருவது முக்கியமானது. நோய் தாமதமானால், சிறுநீரகங்கள், நுரையீரல் ஆகியவை பிரதானமாகப் பாதிப்படையும். அதற்கு மேலதிகமாக மூளைக்குக் கூட பாதிப்பு ஏற்பட்டு மரணம் சம்பவிப்பதற்கும் இடமுண்டு."

https://adaderanatamil.lk/news/cmmmznzvq0009356pzpnri1t0

நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!

5 days 15 hours ago

நிதித் துஸ்பிரயோகம் – வடக்கு ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக முறைப்பாடு!

adminMarch 11, 2026

வடமாகாண ஆளுநர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக நிதிக்குற்ற புலனாய்வு பிரிவில் வேலணை பிரதேச சபை உறுப்பினர் முறைப்பாடு செய்துள்ளார்.

வேலணையை சுற்றுலா வலயமாக அபிவிருத்தி செய்யும் நோக்குடன் 2016ஆம் ஆண்டு மண்டைதீவில் 77 மில்லியன் ரூபாய் நிதியில் “எக்கோ ரூரிசம்” திட்டம் ஆரம்பிக்கப்பட்டது.

உரிய முறையிலான திட்டமிடல் இல்லாமை உள்ளிட்ட பல காரணங்களால் அந்த திட்டம் தோல்வியடைந்தது. அத்துடன் 50 மில்லியன் ரூபாய் பெறுமதியான பொருட்கள் பாவனை இன்றி அழிந்து போயுள்ளன என குறித்த திட்டத்திற்கு எதிராக பல்வேறு தரப்பினரும் குற்றம் சாட்டியுள்ளனர்.

இந்நிலையில் குறித்த திட்டத்தில் ஊழல் மோசடிகள் இடம்பெற்றுள்ளன எனவும் , அரச நிதி வீண் விரயம் செய்யப்பட்டுள்ளதாகவும் , அதற்கு அப்போதைய யாழ் மாவட்ட செயலர் நா.வேதநாயகன் (தற்போதைய வடமாகாண ஆளுநர்), அந்த திட்டம் நடைமுறைப்படுத்திய கால பகுதியில் வேலணை பிரதேச செயலர்களாக கடமையாற்றிய தெ.சுகுணரதி மற்றும் ஆ. சோதிநாதன் ஆகிய மூவருக்கும் எதிராகவே முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

https://globaltamilnews.net/2026/230329/

வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு! மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!

5 days 15 hours ago

வடமராட்சியில் மருமகனின் வெறியாட்டம் – மாமி உயிரிழப்பு!

மாமன் ஆபத்தான நிலையில் . மனைவி பிள்ளைகள் அருந்தப்பு!

adminMarch 12, 2026

யாழ்ப்பாணத்தில் குடும்ப தகராறு காரணமாக மாமியை வெட்டி படுகொலை செய்ததுடன் , மாமனாரையும் வெட்டி படுகாயங்களுக்கு உள்ளாக்கிய அரச உத்தியோகஸ்தரை காவற்துறையினர் கைது செய்துள்ளனர்.

வடமராட்சியில் நேற்றைய தினம் புதன்கிழமை (11.03.26) நடைபெற்ற குறித்த சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது,

கரவெட்டி பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் குடும்ப தகராறு காரணமாக நேற்றைய தினம் மாலை கரவெட்டியில் உள்ள தனது வீட்டில், தனது இரண்டு பிள்ளைகளையும் ஒரு அறையில் பூட்டி வைத்து , மனைவி மீது தாக்குதல் மேற்கொண்டு, மனைவியை கத்தியால் குத்த முனைந்த வேளை , மனைவி, கணவனை கீழே தள்ளி விழுத்தி விட்டு , அறையில் இருந்த இரண்டு பிள்ளைகளையும் மீட்டுக்கொண்டு , வீட்டில் இருந்து தப்பியோடி அருகில் இருந்த கடையொன்றினுள் தஞ்சம் புகுந்துள்ளனர்.

அந்நிலையில், மனைவி, பிள்ளைகளை அழைத்துக்கொண்டு மந்திகை பகுதியில் உள்ள தனது தாய் வீட்டிற்கே சென்று இருப்பார் என்ற எண்ணத்தில் , மனைவியின் தாய் வீட்டிற்கு சென்றவர் , அங்கே தனிமையில் இருந்த மனைவியின் தாயாருடன் தர்க்கப்பட்டு, அவரை வாளினால் வெட்டி படுகொலை செய்துள்ளார்.

பின்னர் அங்கிருந்து வெளியே வந்து அப்பகுதிகளில் தேடுதல்களை நடத்தியுள்ளார். அதன் போது, வீட்டில் இருந்து சற்று தொலைவில் உள்ள பழச்சாறு கடையொன்றில் மனைவியின் தந்தை நிற்பதனை அவதானித்து , அங்கு சென்று அவர் மீது மூர்க்கத்தனமாக வாள் வெட்டினை மேற்கொண்டுள்ளார்.

அதன் போது அங்கிருந்தவர்கள் அவரை மடக்கி பிடிக்க முற்பட்ட வேளை அங்கிருந்து தப்பி சென்றார். அதனை அடுத்து , அங்கிருந்தவர்கள் படுகாயமடைந்தவரை மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் அனுமதித்த நிலையில் , மேலதிக சிகிச்சைக்காக யாழ் . போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

சம்பவம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொண்ட பருத்தித்துறை காவற்துறையினர் வடமராட்சி பிரதேச செயலகத்தின் அபிவிருத்தி உத்தியோகஸ்தரான படுகொலையானவரின் மருமகனை கைது செய்து காவல் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

சம்பவத்தில் யோகராசா சரஸ்வதி (வயது 67) என்பவரே உயிரிழந்ததுடன், அவரது கணவனான காசிப்பிள்ளை யோகராசா படுகாயமடைந்த நிலையில், வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

https://globaltamilnews.net/2026/230357/

புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!

5 days 17 hours ago

புற்றுநோயால் அரசியல் கைதியின் சகோதரி மரணம்!

--- --- ---

*சாகும் போதாவது, தலைமாட்டில் இருக்க வேண்டும் என ஜனாதிபதியிடம் மன்றாட்டமாக கேட்டிருந்தார்

--- --- ---

கிழக்கு மாகாணம் திருகோணமலை தோப்பூர்-மூதுரைச் சேர்ந்த, கதிர்காமத்தம்பி சிவகுமார் என்ற அரசியல் கைதியின் சகோதரியான சுப்பிரமணியம் கமலாதேவி, புற்றுநோயினால், இன்று வியாழக்கிழமை உயிரிழந்தார்.

சிவகுமார் என்ற அரசியல் 31 வருடங்கள் தொடர்சியாக கொழும்பு மகசீன் சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளார்.

உயிரிழந்த சிவகுமாரின் சகோதரியான, கமலாதேவி தான் இறப்பதற்கு முன்னர், தனது சகோதரனை பார்க்க வேண்டும் என கேட்டிருக்கிறார்.

தான் உயிரிழக்கும்போது தனது சகோதரன், தன் தலைமாட்டில் இருக்க வேண்டும் எனவும் ஜனாதிபதியிடம் உருக்கமாக கோரியிருக்கிறார்.

இந்த நிலையில் 11.3.2026 இன்று வியாழக்கிழமை தனது 79வது வயதில் உயிரிழந்துள்ளார்.

புற்றுநோயுடன் போராடி நீண்ட நாட்களாக படுக்கை நோயாளியாக இருந்து மரணமடைந்த கமலாதேவியின் இறுதிச் சடங்கில், அரசியல் கைதி சிவகுமார் பங்குபற்ற அரசாங்கம் ஏற்பாடு செய்யுமா? சிவகுமார் விடுதலை செய்யப்படுவாரா?

அ.நிக்ஸன்-

பத்திரிகையாளர்-

https://www.facebook.com/reel/2431631630599524/?fs=e&mibextid=wwXIfr&fs=e

யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!

6 days 4 hours ago

யாழில் நயினாதீவு பகுதியில் ஐயர்களுக்கிடையில் நடந்த சண்டை ஒரு ஐயர் வாள் வெட்டில் பலி..!

யாழ்ப்பாணம் நயினாதீவில் இரு இந்துக் குருக்கள் மாருக்கிடையிலான சண்டை வாள் வெட்டில் முடிந்த நிலையில் ஒரு குருக்கள் உயிரிழந்தார்.

குறித்த சம்பவம் இன்று (9) மாலை நயினாதீவில் இடம்பெற்றுள்ளது.

யாழ்ப்பாணம் நயினாதிவு வீரகத்தி வினாயகர் ஆலய பூசகருக்கும் நாவலப்பிட்டியிலிருந்து தொழில் நிமிர்த்தம் தொழில் நிமித்தம் யினாதீவுக்கு சென்றிருந்த குருக்களுக்குமிடையில் ஏற்பட்ட தொழில் தகராறே வாள்வெட்டுவரை சென்று கொலையில் முடிந்துள்ளது.

நயினாதீவு வீரகத்தி விநாயகர் ஆலய பூசகருகரது வாள் வெட்டிலேயே நாவலப்பிட்டியிலிருந்து சென்ற பூசாரி பலியாகியுள்ளார்.

உயிரிழந்தவர் நாவலப்பிட்டியாச் சேர்ந்த 40 வயதான கிருஷ்ணகுமார் எனும் குருக்களே என தெரிவிக்கப்டுகிறது வழமையாக அவர் அங்கு தொழில் நிமிர்த்தம் சென்று வருபவர் என தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

https://yarlvasal.lk/?p=92893

பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - மணிலாவில் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவிப்பு

6 days 5 hours ago

பெண்களின் ‘ஊதியமற்ற’ உழைப்பு பொருளாதாரத்திற்கு அளப்பரிய பங்களிப்பை வழங்குகின்றது - பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய மணிலாவில் தெரிவிப்பு

Published By: Digital Desk 3

11 Mar, 2026 | 12:58 PM

image

பெண்கள் குடும்பத்திற்காக ஆற்றுகின்ற, எனினும் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத ‘ஊதியமற்ற’ வீட்டுப் பணிகள், குடும்பத்திற்கும் தேசிய பொருளாதாரத்திற்கும் பாரிய பங்களிப்பை வழங்குகின்றன என்பதைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பிலிப்பைன்ஸின் மணிலா நகரில் அமைந்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் (ADB) தலைமையகத்தில் இன்று (மார்ச் 10) நடைபெற்ற சர்வதேச மகளிர் தின விழாவில் முதன்மை உரை நிகழ்த்திய போதே பிரதமர் இதனைத் தெரிவித்தார்.

பெண்களின் பணிகளை உரிய முறையில் இனங்கண்டு அதனை அங்கீகரிப்பதன் முக்கியத்துவத்தைச் சுட்டிக்காட்டிய பிரதமர், பெண்களைப் பொருளாதார நடவடிக்கைகளில் முழுமையாகப் பங்கெடுக்கச் செய்யக்கூடிய பெண் நேய கொள்கைகள் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டங்களின் அவசியத்தையும் இங்கு வலியுறுத்தினார். இத்துறையில் காணப்படும் தடைகளை நீக்குவதற்கு அரசாங்கங்களும் சர்வதேச அமைப்புகளும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமெனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

பெண்கள் மற்றும் பெண் பிள்ளைகளை வலுவூட்டுவதற்குத் தரமான கல்வியை வழங்குவது அவசியமானது எனவும், இலங்கை எப்போதும் கல்விக்கு முன்னுரிமை அளித்து வருவதாகவும் பிரதமர் நினைவு கூர்ந்தார்.

குறிப்பாக, தீர்மானம் எடுக்கும் மட்டத்திலான அரசியல் செயல்முறைகளில் பெண்கள் உள்வாங்கப்படுதல், வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்களிப்பை அதிகரித்தல் மற்றும் சமவாய்ப்புகளைக் கொண்ட கல்வி முறையைப் பேணுதல் ஆகியன நிலையானதும் நீதியானதுமான அபிவிருத்திக்கு அவசியமானவை என்பதைப் பிரதமர் வலியுறுத்தினார்.

WhatsApp_Image_2026-03-11_at_12.38.48_PM

பெண் தலைமைத்துவம் மற்றும் பெண் வலுவூட்டலுக்காகப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய ஆற்றிவரும் விசேட அர்ப்பணிப்பைப் பாராட்டி, அவருக்கு "ஷிரீன் லத்தீப் பெண் தலைமைத்துவ விருது" (Shireen Lateef Women’s Leadership Award) வழங்கி வைக்கப்பட்டது.

இந்த விழா ஆசிய அபிவிருத்தி வங்கியின் தலைவர் உள்ளிட்ட சிரேஷ்ட நிர்வாகத்தினர், வெளிநாட்டுத் தூதுவர்கள் மற்றும் அபிவிருத்திப் பங்காளிகள் எனப் பலரின் பங்கேற்புடன்  நடைபெற்றது.

https://www.virakesari.lk/article/240708

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

6 days 6 hours ago

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

Mar 11, 2026 - 11:38 AM

மின் கட்டணத்தை 100% அதிகரிக்க நேரிடும்: NTNSP தலைவர் எச்சரிக்கை

வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள மின்சார சபை தொழிற்சங்கங்கள் 40% சம்பள உயர்வை கோருவதாகவும், அந்த கோரிக்கையை நிறைவேற்றினால் மின்சாரக் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்றும் NTNSP தனியார் நிறுவனத்தின் தலைவர் நுசித் குமாரதுங்க தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது: 

தொழிற்சங்கங்கள் முன்வைத்த 64 கோரிக்கைகளில் 62 கோரிக்கைகளுக்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இதில் 59 கோரிக்கைகள் ஆரம்பக் கட்டத்திலேயே நிர்வாகத்தினால் வழங்கப்பட்டன. எஞ்சிய 5 கோரிக்கைகளில் 3 விடயங்கள் குறித்து அமைச்சருடன் கலந்துரையாடி தீர்மானம் எடுக்கப்பட்டது. தற்போது நிலுவையிலுள்ள இறுதி இரண்டு கோரிக்கைகள் குறித்து ஜனாதிபதியுடன் பேச்சுவார்த்தை நடத்த வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. 

இலங்கை மின்சார சபை வழங்கிய அதே போனஸ் கொடுப்பனவை வழங்க இணக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன், சம்பளத்துடன் மேலதிக கொடுப்பனவாக 11,000 ரூபாவும், வாழ்க்கைச் செலவு கொடுப்பனவையும் சேர்த்து சராசரியாக 17,000 ரூபா வழங்கப்படுகின்றது. 

40% சம்பள உயர்வு என்பது மாதத்திற்கு 1.8 பில்லியன் ரூபா மேலதிக செலவாகும், இது ஆண்டொன்றுக்கு 22 பில்லியன் ரூபாவாகும். 2025 டிசம்பர் 31 ஆம் திகதி நிலவரப்படி மின்சார சபையின் நட்டம் 35 பில்லியன் ரூபாவாக உள்ளது. இந்த நிலையில் சம்பளத்தை உயர்த்தினால், மக்கள் மற்றும் தொழிற்சாலைகள் மீது சுமையை ஏற்றி மின் கட்டணத்தை 100% அதிகரிக்க வேண்டியிருக்கும். 

2024 ஓகஸ்ட் முதல் நிலவிய 25% சம்பள முரண்பாடு களையப்பட்டுள்ளது. உயர் அதிகாரிகள் ஏற்கனவே 25% உயர்வைப் பெற்றிருந்த நிலையில், கீழ்நிலை ஊழியர்களுக்கு 7% - 10% மாத்திரமே கிடைத்திருந்தது. இது 2025 ஜனவரி 1 முதல் சீர்செய்யப்பட்டது. தற்போது இச்சலுகையை 2024 ஜனவரி முதல் அமுல்படுத்தக் கோருகின்றனர். இது அமைச்சரவை தீர்மானம் என்பதால், இது குறித்து ஜனாதிபதியுடன் பேசுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

அனைத்து கோரிக்கைகளுக்கும் தீர்வு வழங்கப்பட்டுள்ள நிலையில், எதற்காக இந்த வேலைநிறுத்தம் தொடர்கிறது என்பது புரியவில்லை என அவர் மேலும் குறிப்பிட்டார்.

https://adaderanatamil.lk/news/cmmlmade0000e356p07g1jutt

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

6 days 8 hours ago

IMG-20260311-WA0063.jpg?resize=750%2C375

யாழ்.தென்மராட்சியில் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்: நால்வர் கைது: இரு மோட்டார் சைக்கிள்கள் மீட்பு!

யாழ்.தென்மராட்சி பிரதேசத்தில் ஆயுதங்கள் தாங்கிய குழுவினரால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்த சம்பவங்கள் இன்று(11) அதிகாலை 1.00 மணிக்கும் 2.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இடம்பெற்றுள்ளன.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஒரு வீட்டின் மீதும்,கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 4 வீடுகள் மீதும் குறித்த ஆயுதக் குழுவினர் தாக்குதல்கள் மேற்கொண்டுள்ளனர்.

சாவகச்சேரி பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை மேற்கு, வங்களா வீதியிலுள்ள வீடொன்றில் புகுந்த ஆயுதக்குழுவினர் வீட்டிலிருந்த பொருட்களை அடித்துச் சேதப்படுத்தியுள்ளனர்.

மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட மீசாலை தட்டான்குளம்
வீதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டுகள் வீசி தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.

இதன்போது வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதோடு,மினிபஸ் ஒன்றும், மோட்டார் சைக்கிள் ஒன்றும் எரிக்கப்பட்டுள்ளன.

மேலும், கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை வடக்கு ஞானவைரவர் வீதியிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கு தாக்குதல்களை மேற்கொண்டுள்ளனர்.

இதன்போது வீட்டிலிருந்த பொருட்களுக்கு சேதம் விளைவிக்கப்பட்டதேடு
இளைஞர் ஒருவர் வாளால் வெட்டிக் காயப்படுத்தப்பட்டுள்ளார்.

அதனையடுத்து கொடிகாமம் பொலிஸ் பிரிவிலுள்ள மீசாலை, வடக்குக் கிழக்கு ஊரொல்லையிலுள்ள வீடொன்றிற்குள் புகுந்த குழுவினர் அங்கிருந்த இரண்டு கார்கள், பட்டா ரக வாகனம் மற்றும் மோட்டார் சைக்கிள் ஒன்றையும் அடித்து நெருக்கியுள்ளனர்.

இதன்போது கிராமத்து இளைஞர்களால் தாக்குதல் மேற்கொண்டவர்களில் 4 பேர் பிடிக்கப்பட்டனர்.

ஏனையவர்கள் தப்பியோடிய நிலையில், அவர்கள் விட்டுச் சென்ற இரண்டு மோட்டார் சைக்கிள், இரண்டு வாள்கள் மற்றும் கொட்டன்கள் பொலிஸாரால் மீட்க்கப்பட்டுள்ளன.

சம்பவ இடங்களுக்கு வருகை தந்த தடவியல் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

https://athavannews.com/2026/1468030

மக்களுக்கு பாதுகாப்பான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து - ஜனாதிபதி

6 days 9 hours ago

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, செயற்திறனான மற்றும் தொடர்ச்சியான பொதுப் போக்குவரத்து  கட்டமைப்பைக் கட்டியெழுப்புவதே எமது எதிர்பார்ப்பு - ஜனாதிபதி

Published By: Vishnu

11 Mar, 2026 | 06:31 AM

image

மக்களுக்கு வசதியான, பாதுகாப்பான, வினைத்திறனான,தொடர்ச்சியான மற்றும் ஒரு பலமான பொதுப் போக்குவரத்து கட்டமைப்பை நிறுவுவதே அரசாங்கத்தின் எதிர்பார்ப்பு என்றும், அதற்காக அரசாங்கம் தற்போது தேசியக் கொள்கை ஒன்றை உருவாக்கி வருவதாகவும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்தார்.

உரிய தரத்துடனான புதிய பஸ்களைச் சேவையில் இணைப்பதற்கும், பழைய பஸ்களைப் படிப்படியாக போக்குவரத்து கட்டமைப்பிலிருந்து நீக்குவதற்குமான திட்டங்களை அரசாங்கம் தற்போது தயாரித்து வருவதாகச் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, இது ஒரே தடவையில் மேற்கொள்ளக் கூடியதல்ல என்றாலும், சில ஆண்டுகள் திட்டமிட்ட முறையில் செயல்படுவதன் மூலம் அரசாங்கத்தின் பிரதான இலக்கான தரமான பஸ் சேவையை நாட்டு மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க முடியும் எனக் குறிப்பிட்டார்.

நாட்டின் அனைத்து மாவட்டங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் வகையில் இலங்கை போக்குவரத்துச் சபைக்கு புதிதாக நியமிக்கப்பட்ட 199 சாரதிகளுக்கும் 342 நடத்துநர்களுக்குமான நியமனக் கடிதங்களை வழங்கும் நிகழ்வு செவ்வாய்க்கிழமை (10) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்றது. இந்த நிகழ்வில் கலந்துகொண்ட போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.இலங்கை செய்திகள்

நியமனக் கடிதங்கள் வழங்குவதை அடையாளப்படுத்தும் வகையில் ஜனாதிபதியினால் சிலருக்கு நியமனக் கடிதங்கள் வழங்கப்பட்டன.

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் கடந்த காலத்தில் இந்நாட்டு மக்கள் கொண்டிருந்த ஆழமான பிணைப்பை நினைவு கூர்ந்த ஜனாதிபதி, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் பல்வேறு முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக வீழ்ச்சியடைந்த இ.போ.சபையை மீண்டும் ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவையாகக் கட்டியெழுப்ப இன்று நியமனம் பெற்ற அனைவரும் தமது பொறுப்புகளை நிறைவேற்றுவார்கள் என ஜனாதிபதி நம்பிக்கை தெரிவித்ததோடு புதிய நியமனம் பெற்றவர்கள் அனைவருக்கும் தனது வாழ்த்துகளைத் தெரிவித்தார்.

இங்கு மேலும் உரையாற்றிய ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க:

இலங்கை போக்குவரத்துச் சபையுடன் நமது நாட்டு மக்களுக்கு பயணங்களுக்கு அப்பாற்பட்ட ஒரு கலாச்சார ரீதியான பிணைப்பு உள்ளது. இன்று சாரதிகளாகவும் நடத்துநர்களாகவும் நீங்கள் இணைவது அத்தகைய வரலாற்றைக் கொண்ட, மக்களுடன் நெருக்கமான தொடர்பைப் பேணிவந்த ஒரு சேவைக்காகும். அதேபோல், இ.போ.சபையை தற்போதுள்ள நிலையிலிருந்து உயர்நிலைக்குக் கொண்டு வர வேண்டும் என நான் கருதுகிறேன். அது தொழில்நுட்ப ரீதியாக மட்டுமல்ல, அந்த பஸ்களில் பணிபுரியும் சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் மக்களுடன் மிகவும் நெருக்கமாகவும், அன்பாகவும், அவர்களின் பாதுகாப்பு குறித்துச் சிந்தித்தும் செயல்படும் புதியதொரு நிலைக்கு உயர்த்தப்பட வேண்டும். எனவே, இதில் இணையும் உங்களால் இ.போ.சபைக்குள் புதிய கலாச்சாரத்தைக் கொண்டு செல்ல முடியும் என நான் நினைக்கிறேன்.

சிறந்த வரலாற்றைக் கொண்டிருந்த இ.போ.சபை, பிற்காலத்தில் அரசியல் நியமனங்கள் மற்றும் முறையற்ற கொடுக்கல் வாங்கல்கள் காரணமாக அழிவை நோக்கிச் சென்றது. சில அரசியல் அதிகாரங்களின் அதிகாரத்தை பரப்புவதற்கு இந்த நிறுவனம் பயன்படுத்தப்பட்டது. இதனால் இ.போ.சபை மீது மக்கள் கொண்டிருந்த பிணைப்பைச் சீர்குலைக்க இந்த அசிங்கமான அரசியல் கலாச்சாரம் காரணமாக அமைந்தது என நான் கருதுகிறேன். அதேபோல், நவீன உலகில் ஏற்பட்ட தொழில்நுட்ப மாற்றங்களுக்கு ஏற்ப மாற்றங்களைச் செய்ய முடியாமல் போனதும் மக்களுக்கும் இ.போ.சபைக்கும் இடையிலான உறவு வீழ்ச்சியடையக் காரணமாக அமைந்தது.

நாட்டிற்கு ஒரு வலுவான பொதுப் போக்குவரத்துச் சேவை அவசியம் என்பதில் இன்று நாம் அரசாங்கம் என்ற ரீதியில் உறுதியான கொள்கையில் இருக்கிறோம். இதற்குப் பல பிரதான காரணங்கள் உள்ளன. இன்றும் நமது நாட்டில் ஒரு குடும்பத்தின் வருமானத்தில் போக்குவரத்திற்காகச் செலவிடப்படும் தொகை அதிகமாக உள்ளது.

அதேபோல், பொதுப் போக்குவரத்துச் சேவையில் வினைத்திறனான மற்றும் தொடர்ச்சியான சேவையைப் பெற முடியுமா என்பதில் மக்களுக்குச் சந்தேகம் உள்ளது. அந்தச் சந்தேகம் காரணமாகத் தமது போக்குவரத்துத் தேவைகளைத் தாமே பூர்த்தி செய்துகொள்ள மக்கள் தனிப்பட்ட ரீதியில் மோட்டார் சைக்கிள் அல்லது சிறிய காரை வாங்க முயற்சிக்கிறார்கள்.

இதன் காரணமாகத் தமது வருமானத்தில் பெரும் பகுதியை இந்தப் போக்குவரத்துத் தேவைகளுக்காகச் செலவிட வேண்டியுள்ளது. இறுதியில் பார்த்தால், அவர்கள் வேலைக்குச் செல்வதற்கான செலவைத் தேடுவதற்காகவே வேலை செய்திருக்கிறார்கள். எனவே, மக்கள் போக்குவரத்திற்காகச் செலவிடும் சுமையைக் குறைக்க வேண்டும். மக்களுக்குச் சுமையாக அமையாத போக்குவரத்துச் சேவையை நாம் உருவாக்க வேண்டும்.

அதேபோல், நாம் பெருமளவிலான வாகனங்களை இறக்குமதி செய்கிறோம். அதற்காக இறக்குமதிச் செலவில் பெரும் தொகையைச் செலவிடுகிறோம். பொதுப் போக்குவரத்தை வலுவாக மேம்படுத்தினால், வாகன இறக்குமதிக்கான செலவை கணிசமாகக் குறைக்க முடியும் என நான் நம்புகிறேன். இது பொருளாதார ரீதியாக மிகவும் முக்கியமானது.

மேலும், சுற்றுச் சுழலில் ஏற்படும் காற்று மாசடைவிற்கு இந்த வாகனங்களிலிருந்து வெளியேறும் நச்சுப் புகையும் ஒரு காரணமாக உள்ளது. சுற்றாடலில் வெளியேற்றப்படும் நச்சுப் புகையின் அளவைக் குறைப்பது குறித்து இன்று உலகம் முழுவதுமே கவனம் செலுத்தப்பட்டுள்ளது. எமது எதிர்கால சந்ததியினருக்காக இந்தச் சுற்றாடலைப் பாதுகாக்க வேண்டும்.

இன்று நகர்ப்புற நெரிசல் ஒரு பிரதான பிரச்சினையாக உள்ளது. வீதியில் எவ்வளவு மனித நேரங்கள் வீணாகின்றன? இதனைப் பொருளாதார ரீதியாகக் கணக்கிட்டால் பொருளாதாரத்திற்குப் பெரும் இழப்பு ஏற்படுவதை உணரலாம். எனவே, போக்குவரத்து நெரிசலைக் குறைப்பதற்கும் பொதுப் போக்குவரத்து அமைப்பை மேம்படுத்துவது மிகவும் அவசியம். இவ்வாறான வலுவான பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை உருவாக்குவதே எமது எதிர்பார்ப்பாகும்.

பொதுப் போக்குவரத்துக் கட்டமைப்பை மேம்படுத்துவது குறித்த எண்ணக் கருக்களை உருவாக்குவதில் பயனில்லை. மக்களுக்கு அந்தச் சேவை முறையாகக் கிடைக்க வேண்டும். அதேபோல் வசதியான போக்குவரத்துச் சேவை அவசியமானது. இதற்காகவே நாம் தற்போது பஸ்கள் தொடர்பில் தேசியக் கொள்கை ஒன்றைத் தயாரித்து வருகிறோம். மக்களுக்கு வசதியான சேவை தேவை என்பதால், நினைத்தவாறு பஸ்களை சேவையில் ஈடுபடுத்தி பயணிகளை நெரிசலில் ஏற்றிச் சென்றால், நாம் பொதுப் போக்குவரத்து தொடர்பில் எந்தளவு முயற்சி எடுத்தாலும் பயனில்லை, மக்கள் அதிலிருந்து தூரமாகிவிடுவார்கள்.

எனவே, எந்த வகையான பஸ்கள் வீதியில் சேவையில் ஈடுபட வேண்டும் என்பது குறித்து நாம் தேசியக் கொள்கையை உருவாக்குகிறோம். இதனை ஒரே நேரத்தில் செய்ய முடியாது. முழு பஸ் இருப்பையும் அகற்றிவிட்டுப் புதிய பஸ்களை ஒரே நேரத்தில் கொள்வனவு செய்யும் வசதி எம்மிடம் இல்லை. எனினும், புதிதாக இணைக்கப்படும் பஸ்கள் தரமானவையாக இருக்க வேண்டும் என்பதோடு, பழைய பஸ்கள் படிப்படியாக நீக்கப்பட வேண்டும். இதனைச் சில ஆண்டுகள் திட்டமிட்டபடி செய்தால், முழு பஸ் இருப்பையும் தரமானதாக மாற்ற முடியும். இது எமது பிரதான இலக்காகும்.

அதேபோல், பஸ்கள் எவ்வளவு வசதியுள்ளதாக இருந்தாலும், அந்த பஸ்ஸை ஓட்டும் சாரதி மற்றும் நடத்துநரின் நடத்தை சரியாக இல்லாவிட்டால் பயனில்லை. ஏனெனில், பஸ்ஸில் பயணம் செய்யும் அனைத்து மக்களின் உயிரும் அவரது கைகளிலேயே உள்ளது. எனவே, எவர் வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பஸ்ஸை ஓட்ட அரசாங்கம் என்ற ரீதியில் நாம் இடமளிக்கக் கூடாது. சில பஸ் நிறுவனங்களின் உரிமையாளர்கள் எனக் கூறிக்கொள்பவர்கள் இதற்கு எதிராகச் சில கருத்துக்களைக் கூறியிருந்தனர். எனினும், நாம் இந்தத் திட்டங்களைச் செயல்படுத்துவோம்.

ஒவ்வொரு பிரஜையும் தமது உயிரின் மீது நம்பிக்கையுடன் பஸ்ஸில் ஏறுகிறார்கள். உயிருக்கு ஆபத்தான சூழ்நிலை ஏற்பட்டால், யாரும் தமது பிள்ளையை பொது போக்குவரத்தில் பயணிக்க அனுமதிக்க மாட்டார்கள். பொதுப் போக்குவரத்து கட்டமைப்பு தொடர்பில் நம்பிக்கையை ஏற்படுத்த வேண்டுமாயின், தற்போதைய நிலைமையை மாற்ற வேண்டும். போதைப்பொருள் பயன்படுத்திய நிலையில் எவருக்கும் பஸ்ஸை செலுத்த அனுமதிக்கப்படக்கூடாது. இது தொடர்பாக தேவையான சட்டங்கள், பரிசோதனைகள் போன்ற அனைத்தும் மேற்கொள்ளப்படுகின்றன. எனவே, சாரதிகள் மற்றும் நடத்துனர்களின் நடத்தை சிறந்த தரத்திற்கு கொண்டு வரப்பட வேண்டும்.

மேலும், செயல்திறனை அதிகரிக்க வேண்டும். ஒவ்வொருவரும் தமது பயண இடத்தை விரைவாக அடைய எதிர்பார்க்கிறார்கள். எனவே, செயல்திறனை உருவாக்க வேண்டும். பயண இடத்தை குறித்த நேரத்தில் அடைய வேண்டும். மேலும், தொடர்ச்சி மிகவும் முக்கியம். இல்லையெனில், அன்றாட வாழ்க்கை சீர்குலைந்துவிடும். எனவே, வசதியான, செயல்திறனான மற்றும் தொடர்ச்சியான பொது போக்குவரத்து சேவையை வழங்குவதே எமது எதிர்பார்ப்பு. இதற்காக, வசதியான பஸ் கட்டமைப்பை நிறுவி, இந்த மாதம் அதைத் தொடங்க நாம் எதிர்பார்க்கிறோம். இந்த மாதம், ஜப்பான் அரசாங்கத்திடமிருந்து 08 புதிய பஸ் வண்டிகளைப் பெறவுள்ளோம். இதற்கு மேலதிகமாக, ஆகஸ்ட் மற்றும் செப்டெம்பர் மாதங்களுக்குள் நாம் கொள்வனவு செய்த பஸ்கள் கிடைக்கவுள்ளன.

அதன்படி, புதிய நிறுவனத்தின் மூலம் பயணிகளின் வசதியான போக்குவரத்திற்கு ஏற்ற பஸ்களின் தொகுப்பை நாங்கள் உருவாக்கி வருகிறோம். பழைய பஸ்களின் தொகுப்பை நகரங்களிலிருந்து படிப்படியாக அகற்றத் தொடங்குகிறோம். முக்கிய நகரங்களில் குறுகிய பயணங்களுக்கு பஸ்களின் தொகுப்பை உருவாக்கி, பழைய பஸ்களை படிப்படியாக சேவையிலிருந்து அகற்றி வருகிறோம். இதை ஒரே நேரத்தில் செய்ய முடியாது.

மேலும், பிரஜைகளுக்கு வழங்கப்படும் சேவை மிகவும் முக்கியமானது. எனவே, அரசாங்கமாக, சிறந்த சேவையை வழங்க நாம் உறுதிபூண்டுள்ளோம். இருப்பினும், இந்த சேவையை முழுமையாக தனியார் துறைக்கு விட்டால், அவர்களிடையே ஒரு ஏகபோகம் உருவாகும். எனவே, இதை முழுமையாக கைவிடக்கூடாது. ஆனால், நாம் முறையான முகாமைத்துவ கட்டமைப்பை உருவாக்குவது அவசியம்.

இது அரசாங்க பங்களிப்பு மற்றும் தனியார் துறை பங்களிப்புடன், நாம் எதிர்பார்க்கும் பணிகளுக்குத் தேவையான ஒழுங்குமுறையுடன், பாதுகாப்பான, வசதியான, நிலையான, திறமையான பொது-தனியார் கூட்டாண்மையாக மாற்றப்பட வேண்டும்.

21,000 தனியார் பஸ்கள் இருந்தபோது, 19,000 உரிமையாளர்கள் இருந்தனர். பஸ் சேவை என்பது ஒரு தொழிற்துறை என்பதைவிட அது சுயதொழிலாக மாறிவிட்டது. எனவே, தரமான சேவையைப் பெறுவது சாத்தியமில்லை. போட்டி அதிகம். இன்று, அதிக மக்கள் இல்லாத நேரங்களில் சேவை வழங்கப்படுவதில்லை.

இது நம் நாட்டின் கலாசார வாழ்க்கையையும் பாதித்துள்ளது. இன்று, 9.30 மணிக்கு திரைப்படத்தைப் பார்த்துவிட்டு கிராமத்திற்குச் செல்ல பஸ் இல்லை. அதன்படி, அது ஒரு சேவை இடத்திலிருந்து இலாபம் ஈட்டும் இடமாக மாற்றப்பட்டுள்ளது. தனிப்பட்ட உரிமையாளர்கள், பல்வேறு ஊழியர்கள் மற்றும் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட பஸ்கள் இதற்கு வழிவகுத்தன.

எனவே, ஒரு அரசாங்கத்தின் பொறுப்பு சிறந்த, தரமான பொது போக்குவரத்தை உருவாக்குவதாகும். அதற்காக, நாம் மாகாண முறைமைக்குச் செல்ல வேண்டும் என்று நம்புகிறோம். உரிமையாளர்கள் தமது பஸ்களை வலயங்களில் நிறுவப்படும் பஸ் நிறுவனங்களுடன் இணைக்கலாம். அந்த நிறுவனம் தொடர்ச்சியான சேவையை வழங்க வேண்டும். அந்த வலயம் நட்டத்தில் இயங்கினால், அரசாங்கம் அதற்கு மானியம் வழங்க முடியும்.

சிறந்த போக்குவரத்து சேவைகளை வழங்க இதுபோன்ற ஒரு திட்டத்தை நாம் பின்பற்ற வேண்டும். நாம் ஒருபோதும் போக்குவரத்து சேவைகளை இலாப-நட்டக் கணக்கில் வைத்து அளவிட தயாராக இல்லை. இதை ஒரு சேவையாக நாங்கள் அளவிடுகிறோம். இந்த வழியில், நட்டம் ஏற்படும் கிராமப்புற வீதிகளுக்கு போக்குவரத்து சேவைகளை வழங்க இந்த வரவு செலவுத்திட்டத்தில் சுமார் 2000 மில்லியன்களை ஒதுக்கியுள்ளோம்.

செயற்திறனான போக்குவரத்து சேவையின் நன்மைகள் வெளிப்புற பொருளாதாரத்தில் உணரப்படுகின்றன. நமது பணிபுரியும் ஊழியர்கள் திறமையான பணியிடத்திற்குச் சென்றார்களா? அந்த சேவைகள் மற்றும் தயாரிப்புகளிலிருந்துதான் பொருளாதாரம் இலாபம் ஈட்டுகிறது மற்றும் இழக்கிறது. நமது பொருளாதாரமும் மக்களின் வாழ்க்கையும் சிறந்த சேவையின் அடிப்படையில் மேம்படுத்தப்படுகின்றன. எனவே, ஒரு அரசாங்கமாக நமது எதிர்பார்ப்பு அதற்குத் தேவையான போக்குவரத்து சேவையை உருவாக்குவதாகும்.

போக்குவரத்து சேவையை வலுப்படுத்த நமக்கு ஒரு நல்ல மற்றும் திறமையான அரசியல் அதிகாரம் தேவை. இந்த போக்குவரத்து சேவையை திறம்படச் செய்ய எங்கள் அமைச்சரும் இரண்டு பிரதி அமைச்சர்களும் மிகச் சிறப்பாகச் செயல்படுகிறார்கள். தொலைதூர கிராமங்களில் பஸ்கள் இயக்கப்படுவது குறித்து உங்களிடம் கேட்கப்படும் நேரங்கள் இருக்கும் என்று நான் நினைக்கிறேன். இந்தத் துறையை மேம்படுத்துவதில் மிகவும் ஆர்வமுள்ள ஒரு நல்ல அரசியல் அதிகாரம் உள்ளது. இந்த மாற்றத்தை அடைவதில் இது மிகவும் முக்கியமானது.

அதே போன்று எங்களிடம் மிகச் சிறந்த அதிகாரிகள் குழு ஒன்று உள்ளது. பல்வேறு காலக்கட்டங்களில் வெவ்வேறு பிரச்சினைகள் இருந்திருக்கலாம். ஆனால், நாம் எதனையும் கடந்த காலத்தைக் கொண்டு மதிப்பிடுவதில்லை. தற்போதைய அவர்களின் செயல்பாடு நல்லதா அல்லது கெட்டதா என்பதன் அடிப்படையிலேயே நாம் முடிவுகளை எடுக்கிறோம். எம்மால் கடந்த காலத்தைப் புரிந்துகொள்ள முடியும். கேள்விப்பட்ட விடயங்களை வைத்து நாம் எவரையும் எடைபோடுவதில்லை. எனவே, எமது அதிகாரிகள் குழு தற்காலத்தில் இதற்காக அணிதிரண்டு பணியாற்றுவார்கள் என்று நாம் நம்புகிறோம்.

குறிப்பாக, இன்று இலங்கை போக்குவரத்து சபையில் இணையும் உங்களுக்கும் பெரும் பொறுப்பு உள்ளது. இந்த நிறுவனம் குறித்து நிலவும் மிகவும் மோசமான கலாசாரத்தை எங்காவது ஒரு புள்ளியில் மாற்றியமைக்க வேண்டும். அந்த கலாசாரத்தை வெறும் பேச்சுகளாலோ, அறிக்கைகளாலோ அல்லது ஆவணங்களாலோ மட்டும் மாற்றிவிட முடியாது.அது செயல்பாட்டின் மூலமே சாத்தியமாகும். இங்குள்ள நீங்கள் அனைவரும் இலங்கை போக்குவரத்து சபைக்கு ஒரு புதிய அணுகுமுறையைக் கொண்டு வருவீர்கள் என நம்பி, உங்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இலங்கை போக்குவரத்து சபை பிரதம நிறைவேற்று அதிகாரி எம்.ஏ.என். தம்மிக ரத்நாயக்க

நாட்டின் அரச போக்குவரத்துச் சேவையை சிறந்த நிலைக்குக் கொண்டு செல்ல முயற்சிக்கும் நிறுவனம் இலங்கை போக்குவரத்து சபை ஆகும். ஒரு காலத்தில் 'மக்கள்மயப்படுத்தப்பட்ட போக்குவரத்துச் சேவை' என்றும், மற்றுமொரு காலத்தில் 'கொத்தணி பஸ் நிறுவனங்கள்' என்றும் பல்வேறு கட்டமைப்புகளைக் கொண்டிருந்த இந்த நிறுவனம், பல கடினமான பயணங்களுக்குப் பிறகு, 2026 ஆம் ஆண்டளவில் மீண்டும் தலைதூக்கும் ஒரு போக்குவரத்து நிறுவனமாக மாறியுள்ளது.

எனினும், உங்கள் அனைவரினதும் கவனத்திற்கு ஒரு விடயத்தைக் கூற வேண்டும். இலங்கைபோக்குவரத்து சபையிடம் தற்போது 7,130 பஸ்கள் உள்ளன. அவற்றில், 10 ஆண்டுகளுக்கும் பழமையான பஸ்களின் எண்ணிக்கை 70% க்கும் அதிகமாகும். அதில் 3,848 பஸ்கள் 12 ஆண்டுகளுக்கும் மேலானவை. தற்போதைய அரசாங்கம், இலங்கை போக்குவரத்து சபையை மேம்படுத்தி, மிகவும் தரமான சேவையை வழங்குவதற்கான திட்டங்களை வகுத்துச் செயல்படுத்தி வருகின்றது.

போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க, நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் எரங்க குணசேகர, பாராளுமன்ற உறுப்பினர்களான பிரகீத் மதுரங்க, சந்தன சூரியஆராச்சி, தனுஷ்க ரங்கநாத், இலங்கை போக்குவரத்து சபையின் தலைவர் ஜீவக பிரசன்ன புரசிங்க மற்றும் போக்குவரத்து அமைச்சு மற்றும் இலங்கை போக்குவரத்து சபையின் சிரேஷ்ட அதிகாரிகள் இந்த நிகழ்வில் கலந்துகொண்டனர்.

https://www.virakesari.lk/article/240681

இலங்கையில் எரிவாயு விலை அதிகரிப்பு

6 days 9 hours ago

லிட்ரோ எரிவாயு விலை ரூ.300 ஆல் உயர்த்தப்பட்டது

Published By: Vishnu

10 Mar, 2026 | 10:30 PM

image

இன்று 10ஆம் திகதி செவ்வாய்க்கிழமை நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையை அதிகரிப்பதாக நிறுவனம் அறிவித்துள்ளது.

அதன்படி, 12.5 கிலோகிராம் வீட்டு எரிவாயு சிலிண்டரின் விலை ரூ.300 ஆல் அதிகரிக்கப்படும், மேலும் அதன் புதிய விலை ரூ.3990 ஆக இருக்கும்.

https://www.virakesari.lk/article/240666

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

6 days 9 hours ago

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

Mar 10, 2026 - 06:52 PM

கொழும்பில் கூடும் 300-க்கும் மேற்பட்ட சர்வதேச தோல் நோய் நிபுணர்கள்

வெப்பமண்டல நாடுகளின் தோல் நோய்கள் குறித்த 2வது சர்வதேச நிபுணத்துவ மாநாடு நாளை (11) முதல் மார்ச் 14 ஆம் திகதி வரை இலங்கையில் நடைபெறவுள்ளது.

இந்த மாநாடு குறித்து கருத்துத் தெரிவித்த இலங்கை தோல் நோயியல் மற்றும் அழகியல் மருத்துவ நிபுணர்கள் கல்லூரியின் தலைவரும், இந்த சர்வதேச மாநாட்டின் தலைவருமான தோல் நோய் விசேட வைத்திய நிபுணர் நயனா மதரசிங்க, இந்த மாநாடு முழு உலகினதும் கவனத்தை ஈர்க்கும் ஒரு நிகழ்வாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

கொழும்பில் நடைபெறவுள்ள இந்த சர்வதேச மாநாட்டில் தோல் நோயியல் துறையைச் சேர்ந்த 342 வெளிநாட்டுப் பிரதிநிதிகளும் நிபுணர்களும் கலந்துகொள்ளவுள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அத்துடன், இம்மாநாட்டின் போது 45 வெளிநாட்டு வளவாளர்கள் தோல் நோயியல் துறையின் புதிய போக்குகள் மற்றும் கண்டுபிடிப்புகள் குறித்து விரிவுரைகளை நிகழ்த்தவுள்ளனர். அதேவேளை, இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்தி 150 தோல் நோய் நிபுணர்களும் வளவாளர்களும் இதில் பங்கேற்கவுள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmmkn22630014356pygzvp3v2

விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை

6 days 9 hours ago

விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்குக - அரசாங்கத்திடம் மனோ கணேசன் கோரிக்கை

10 Mar, 2026 | 05:28 PM

image

(க.சிவலிங்கமூர்த்தி)

மத்திய கிழக்கு போர்ச் சூழல் தீவிரமடைவதற்கு முன்னரே இலங்கையில் மின்சாரக் கட்டணம் மற்றும் எரிபொருள் விலை உயர்வு குறித்து எச்சரிக்கப்பட்டிருந்த நிலையில், தற்போது ஏற்பட்டுள்ள பாரிய விலை உயர்வுகள் சாதாரண மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு சீர்குலைத்துள்ளதாகவும் விலையேற்றத்தால் வாழ்வாதாரத்தை இழந்துள்ள தோட்டத் தொழிலாளர்களுக்கு மண்ணெண்ணெய், கோதுமை மாவை மானிய விலையில் வழங்க வேண்டும் என தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவர் மனோ கணேசன் கோரிக்கை விடுத்துள்ளார்.

வெ்வாய்க்கிழமை (10) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,

மின்சாரம் மற்றும் எரிபொருள் விலையேற்றம் என்பது வெறும் இரண்டு துறைகளுடன் மட்டும் நின்றுவிடப் போவதில்லை. இது உணவுப் பொருட்கள், அத்தியாவசிய மருந்துகள் மற்றும் போக்குவரத்துச் செலவுகள் என அனைத்திலும் ஒரு சங்கிலித் தொடரான விலையேற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

குறிப்பாக, ஏற்கனவே பொருளாதார ரீதியாகப் நலிவடைந்துள்ள மலையகப் பெருந்தோட்டத் தொழிலாளர்கள், இந்தத் திடீர் விலை உயர்வுகளால் சொல்லொணாத் துயரங்களை எதிர்நோக்கியுள்ளனர். கடந்த காலப் பேரிடர்களின் போது ஜனாதிபதியால் வாக்குறுதி அளிக்கப்பட்ட நிவாரணங்கள் கூட இன்னும் முழுமையாக இம்மக்களைச் சென்றடையவில்லை என்பது கவலைக்குரிய விடயமாகும்.

தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில், தோட்டத் தொழிலாளர்களின் அன்றாட இருப்பை உறுதிப்படுத்த அரசாங்கம் உடனடியாக விசேட நிவாரணப் பொதியொன்றை அறிமுகப்படுத்த வேண்டும். சமையல் மற்றும் ஏனைய தேவைகளுக்காகப் பெருந்தோட்டப் பகுதிகளில் வசிக்கும் அனைத்துக் குடும்பங்களுக்கும் மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்கப்பட வேண்டும்.

அத்துடன், மலையக மக்களின் பிரதான உணவுத் தேவையான கோதுமை மாவை சலுகை விலையில் தடையின்றி விநியோகிப்பதற்கும் தற்போதைய தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த நிவாரணங்கள் எவ்வித பாகுபாடுமின்றி, தோட்டங்களில் வசிக்கும் அனைத்துத் தொழிலாளர் மற்றும் தொழிலாளர் அல்லாத குடும்பங்களுக்கும் சென்றடைவதை மாவட்ட மற்றும் பிரதேச செயலர்கள் ஊடாக அரசாங்கம் உறுதிப்படுத்த வேண்டும்.

நிவாரணப் பொதிகளுக்கு அப்பால், தோட்டத் தொழிலாளர்களின் நீண்டகாலப் பிரச்சினையான காணி உரிமைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதே தற்போதைய தேவையாகும். பெருந்தோட்டங்களில் வாழும் ஒவ்வொரு குடும்பத்திற்கும் வசிப்பிடத்திற்காகக் குறைந்தது 10 பேர்ச் காணியையாவது சட்டப்பூர்வமாக ஒதுக்கித் தர வேண்டும். இது மக்களின் எதிர்காலத்தின் மீதான நம்பிக்கையை வலுப்படுத்தும்.

இதற்காகத் தற்போது நடைமுறையிலுள்ள காணி குத்தகைச் சட்டங்களில் தேவையான திருத்தங்களைப் பாராளுமன்றத்தில் கொண்டு வர வேண்டும். இத்தகைய மக்கள் நலன் சார்ந்த சட்டத் திருத்தங்களுக்குத் தமிழ் முற்போக்குக் கூட்டணி மாத்திரமன்றி, ஏனைய எதிர்க்கட்சிகளும் முழுமையான ஆதரவை வழங்கத் தயாராக இருக்கின்றன. எனவே, அரசாங்கம் மேலும் காலம் தாழ்த்தாது இந்த காணி உரிமையினை வழங்கும் திட்டத்தை நடைமுறைப்படுத்த முன்வர வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/240648

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

6 days 15 hours ago

iris-1.jpg?resize=750%2C375&ssl=1

84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய அதிகாரிகளிடம் ஒப்படைக்க உத்தரவு!

காலி தேசிய வைத்தியசாலையில் இரண்டு நடமாடும் குளிர்பதனப் பெட்டிகளில் வைக்கப்பட்டுள்ள 84 ஈரானிய மாலுமிகளின் உடல்களை ஈரானிய தூதரக அதிகாரிகளிடம் ஒப்படைக்குமாறு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 

காலி தலைமை நீதிவான் சமீர தொடங்கொட இன்று (11) காலை காலி தேசிய வைத்தியசாலையின் பணிப்பாளருக்கு இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

காலி துறைமுக பொலிஸார் காலி தலைமை நீதிவான் நீதிமன்றத்திற்கு விடுத்த கோரிக்கையை அடுத்து நீதிவான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.

மார்ச் 4 அன்று இலங்கை கடல் எல்லைக்கு அருகே, அமெரிக்க நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று ஈரானிய போர்க்கப்பலான ஐரிஸ் தேனா மீது தாக்குதல் நடத்திய அதை மூழ்கடித்தது.

இந்தியா நடத்திய பன்னாட்டு கடற்படைப் பயிற்சிகளில் இருந்து கப்பல் திரும்பிக் கொண்டிருந்தபோது, சர்வதேச கடல் பகுதியில் எச்சரிக்கை இல்லாமல் இந்தத் தாக்குதல் நடந்தது.

மத்திய கிழக்கிலிருந்து ஆயிரக்கணக்கான கிலோமீட்டர் தொலைவில் நடந்த இந்தப் படுகொலை, ஈரானுக்கு எதிரான வொஷிங்டனின் தீவிரமடைந்து வரும் போரின் ஒரு பகுதியாகும். 

தாக்குதலின் பின்னர் மூழ்கத் தொடங்கிய ஈரானியக் கப்பலில் இருந்து அதிகாலை 4 மணி மற்றும் 5 மணி என இரண்டு அவசர அழைப்புகளுக்கு இலங்கை கடற்படை பதிலளித்து, உயிர் பிழைத்த 32 பேரை மீட்டனர், அவர்கள் சிகிச்சைக்காக காலியில் உள்ள கராபிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். 

பின்னர் கடற்படை மூழ்கிய கப்பலில் இருந்து டஜன் கணக்கான மாலுமிகளின் உடல்களை மீட்டது.

மார்ச் 4 ஆம் திகதி 208 பணியாளர்களைக் கொண்ட இரண்டாவது ஈரானிய கடற்படைக் கப்பலான ஐரிஸ் புஷேர், கொழும்பு துறைமுகத்திற்குள் நுழைய அனுமதி கோரி இலங்கை வெளியுறவு அமைச்சுக்கு ஒரு செய்தியை அனுப்பியது. 

ஆரம்பத்தில் கோரிக்கையை நிராகரித்த பின்னர் பதட்டமடைந்த இலங்கை அரசாங்கம், தொடர்ச்சியான இராஜதந்திர பேச்சுவார்த்தைகளுக்குப் பின்னர் மார்ச் 5 ஆம் திகதி கப்பலை கொழும்பு துறைமுகத்திற்குள் அனுமதித்தது. 

அதன் பணியாளர்கள் இறக்கிவிடப்பட்டு, கப்பல் நாட்டின் மறுபக்கத்தில் உள்ள திருகோணமலை துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டமையும் குறிப்படத்தக்கது.

https://athavannews.com/2026/1467891

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

6 days 15 hours ago

New-Project-3-5.jpg?resize=750%2C375&ssl

உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பு!

இன்று (11) நள்ளிரவு முதல் உணவுப் பொருட்களின் விலைகள் அதிகரிப்பதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

அதன்படி, சாதாரண தேநீர் 5 ரூபாவாலும், பால் தேநீர் மற்றும் சிற்றுண்டிகள் 10 ரூபாவாலும் அதிகரிக்கப்படவுள்ளது.

மேலும், பிரைட் ரைஸ் மற்றும் கொத்துரொட்டி ஆகியவை 25 ரூபாவாலும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சமையல் எரிவாயு சிலிண்டர்களின் விலை அதிகரிப்பே இந்த தீர்மானத்துக்கு காரணம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1467902

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

6 days 15 hours ago

New-Project-29.jpg?resize=600%2C300&ssl=

யாழ் போதனா வைத்தியசாலையில் இரத்தவங்கியில் தட்டுப்பாடு!

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால் , இரத்த வங்கி ஆபத்தான நிலையில் உள்ளதாக இரத்த வங்கியினர் தெரிவித்துள்ளனர்.

அது தொடர்பில் அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை இரத்த வங்கியில் எல்லா வகை இரத்தத்திற்கும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

எமது இரத்த வங்கியில் 330 பைந்த் குருதி இருக்க வேண்டும், ஆனால் தற்போது இருக்கும் குருதியின் அளவு 192 பைந்த் ஆகும்.

இது எமது இரத்த வங்கியைப் பொறுத்த வரையில் மிகவும் ஆபத்தான நிலையாகும், இதனால் நோயாளர்களுக்கு தேவையான குருதியை விநியோகிக்க முடியாத நிலையில் இருக்கின்றோம்.

இரத்ததான முகாம்கள் ஏற்பாடு செய்யப்பட்டு குருதி சேகரிக்கப்பட்டாலும் நாளாந்தம் விநியோகிக்கப்படும் குருதியின் அளவு அதிகரித்து செல்கின்றது, இரத்த வங்கியில் நேரடியாக வந்து இரத்தம் கொடுக்கும் குருதிக்கொடையாளர்களுக்கும் தொலைபேசி வாயிலாக அழைப்புக்களை விடுத்தும் வருகின்ற கொடையாளர்களின் எண்ணிக்கையும் குறைவாகவே காணப்படுகின்றது.

அத்துடன் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் தினமும் குருதியை பெற்றே நோயாளர்களுக்கு தேவையான குருதியை வழங்குகின்றோம்.

தற்போது அவர்களிடமும் குருதியின் இருப்பு குறைவடைந்துள்ளதினால் ஏனைய இரத்த வங்கிகளிடமிருந்தும் குருதியை பெற முடியாத இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.

எதிர்வரும் நாட்களில் இந்த நிலைமை மேலும் மோசமடையலாம். ஆகவே சனசமூக நிலையங்கள், விளையாட்டுக் கழகங்கள், பொது அமைப்புகள், திணைக்களங்கள், பாடசாலைகள், பல்கலைக் கழக மாணவர் அமைப்புகள், ஏனைய கல்வி நிறுவனங்கள் தங்கள் தங்கள் இடங்களில் இரத்த தான முகாம்களை ஒழுங்கு செய்து எம்முடன் தொடர்பு கொள்ளும் பட்சத்தில் உங்கள் இடத்திற்கு வருகை தந்து குருதி சேகரிக்கும் பணியை நாம் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம்.

அத்துடன் தனி நபர்கள் எமது இரத்த வங்கிக்கு நேரடியாக காலை 8.00 மணியிலிருந்து பி.ப 7.00 மணிவரை சமூகம் கொடுத்து இரத்த தானம் செய்வதன் மூலம் குருதி தட்டுப்பாட்டை ஓரளவு நிவர்த்தி செய்யலாம்.

ஆகவே இவ் இக்கட்டான நிலையை கருத்தில் கொண்டு இளைஞர், யுவதிகள் இரத்த தானம் செய்வதற்கு முன்வந்து எமது உயிர்காக்கும் பணிக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தொடர்புகளுக்கு: 0212223063, 0772105375 எனும் தொலைபேசி இலக்கங்களுடன் தொடர்பு கொள்ளவும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

https://athavannews.com/2026/1467888

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை

6 days 16 hours ago

யாழ்.பல்கலை கறுப்பு கொடி விவகாரம் - துணைவேந்தர் , பதிவாளரிடம் 3 மணி நேர விசாரணை

adminMarch 10, 2026

சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி கறுப்பு கொடியேற்றியமை தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு கடந்த பெப்ரவரி மாதம் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பல்கலைக்கழக நிர்வாகத்திற்கு பணித்திருந்தது.  அதனைத் தொடர்ந்து, பல்கலைக்கழகத்தின் இன நல்லிணக்கப் பிரிவுக்குப் பொறுப்பான பேராசிரியர், மாணவர் ஒழுக்காற்று அதிகாரி மற்றும் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி ஆகியோரைக் கொண்ட குழுவொன்று விசாரணைகளை முன்னெடுத்தது. குறித்த விசாரணை அறிக்கையானது பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்கப்பட்டது.

விசாரணைகளின் அடிப்படையில் கறுப்பு கொடியேற்றிய சம்பவத்துடன் நேரடியாகத் தொடர்புடையதாக 2 மாணவிகள் உள்ளிட்ட  30 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாணவர்களிடம் பல்கலைக்கழக மட்டத்தில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளின் போது, சிறுபான்மைத் தமிழ் மக்களின் அபிலாஷைகளுக்கு உரிய மதிப்பு வழங்கப்படாத வரை இலங்கையின் சுதந்திரதினம் தமிழர்களுக்கு உகந்த நாளல்ல என்பதை வெளிப்படுத்தவே இந்தச்செயலில் ஈடுபட்டதாக மாணவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் தற்போது கொடியேற்றப்பட்ட சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவினர் விசாரணைகளை முன்னெடுத்துள்ள நிலையில்,  இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை  பல்கலைக்கழகத்தினுள் தமது வாகனத்தில் சென்று துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை முன்னெடுத்து வாக்கு மூலங்களை பதிவு செய்துள்ளனர்.

காவல்துறையினா் வாகனத்துடன் பல்கலைக்கழக வளாகத்தினுள் சென்று , பல்கலைக்கழகத்தினுள் வைத்து துணைவேந்தர் மற்றும் பதிவாளர் ஆகியோரிடம் சுமார் 3 மணி நேரம் விசாரணைகளை மேற்கொண்டு வாக்கு மூலங்களை பெற்றுக்கொண்டமை தொடர்பில் மாணவர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

அதேவேளை சுதந்திர தினத்தன்று தேசிய கொடியை இறக்கி , கறுப்பு கொடியேற்றும் போது எடுக்கப்பட்ட காணொளிகளின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதுடன், அந்நேரம் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டிருந்த பல்கலைக்கழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் உள்ளிட்டவர்களிடமும் , அடையாளம் காணப்பட்ட சில மாணவர்களிடமும் விசாரணைகளை முன்னெடுத்து , வாக்கு மூலங்களை பதிவு செய்ய குற்றத்தடுப்பு பிரிவினர் நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

https://globaltamilnews.net/2026/230304/

Checked
Tue, 03/17/2026 - 19:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr