ஊர்ப்புதினம்

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

2 months 2 weeks ago

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

Dec 30, 2025 - 11:05 PM

ஜோன்ஸ்டனை தேடி 5 பொலிஸ் குழுக்கள் களத்தில்

சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. 

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார். 

இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjsvbkx103beo29n1jsw22ox

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை

2 months 2 weeks ago

பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தைத் திரும்பப் பெறக் கோரி நீதி அமைச்சில் கோரிக்கை

30 Dec, 2025 | 04:45 PM

image

இன்று நீதி அமைச்சில் ஒன்றுதிரண்ட இலங்கையின் சமூகச் செயல்பாட்டாளர்கள் மற்றும் சிவில் சமூக உறுப்பினர்கள், அரசாங்கத்தினால் முன்மொழியப்பட்டுள்ள புதிய "பயங்கரவாதத்திலிருந்து அரசைப் பாதுகாப்பதற்கான சட்டமூலம்" (PSTA) குறித்துத் தமது ஆழ்ந்த கவலையையும் எதிர்ப்பையும் வெளிப்படுத்தினர்.

தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதற்குப் பதிலாக, அதனை மேலும் வலுப்படுத்தும் ஒரு அடக்குமுறை கருவியாகவே இந்தப் புதிய சட்டமூலம் அமைந்துள்ளதாக அவர்கள் குற்றம் சுமத்தினர். இந்தச் சட்டமானது குடிமக்களின் அடிப்படை உரிமைகள், பேச்சுச் சுதந்திரம், தனிமனித உரிமை மற்றும் ஜனநாயகம் ஆகியவற்றைத் தீவிரமாகப் பாதிக்கும் அபாயத்தை உருவாக்குவதாக அவர்கள் சுட்டிக்காட்டினர்.

குறிப்பாக, இந்தப் புதிய சட்டமூலத்தின் மூலம் நிறைவேற்று அதிகாரத்திற்கு அதீத அதிகாரங்கள் வழங்கப்படுவதாகவும், சாதாரண கருத்து வெளிப்பாடுகள் கூட "பயங்கரவாதம்" எனக் குற்றம் சாட்டப்பட வாய்ப்புள்ளதாகவும் அவர்கள் கவலை தெரிவித்தனர்.

மேலும், அமைப்புகளைத் தடை செய்தல், ஊரடங்கு மற்றும் நடமாட்டக் கட்டுப்பாடுகள் போன்ற அதிகாரங்கள் இதன் மூலம் விரிவுபடுத்தப்படுவதாகவும் அவர்கள் குறிப்பிட்டனர்.

இந்தச் சூழலில், பயங்கரவாதத் தடைச் சட்டத்தை (PTA) நீக்குவதாக வழங்கிய வாக்குறுதியை அரசாங்கம் உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்றும், இந்தப் புதிய சட்டமூலத்தை நிபந்தனையின்றித் திரும்பப் பெற வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர். மேலும், இத்தகைய சட்டத்தின் அவசியம் குறித்துப் பொதுமக்களுடன் கலந்தாலோசித்து ஒரு வெள்ளை அறிக்கையை வெளியிட வேண்டும் எனவும், அதுவரை PTA சட்டத்தின் பயன்பாட்டை நிறுத்தி வைத்து தற்காலிகத் தடையை (Moratorium) நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதன் போது சமூக செயற்பாட்டாளர் ராஜ்குமார் ராஜீவ் காந்த் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்திருந்தார்.

https://www.virakesari.lk/article/234775

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

2 months 2 weeks ago

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

Dec 30, 2025 - 12:40 PM

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் மகன் கைது

முன்னாள் அமைச்சர் ஜோன்சன் பெர்னாண்டோவின் மகன் ஜொஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிக்குற்ற விசாரணை பிரிவினால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சதொசவுக்கு சொந்தமான லொறி மற்றும் மேலும் சில வாகனங்களை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர். 

அதேநேரம் சம்பளம் மற்றும் கொடுப்பனவு வழங்கப்பட்ட சந்தர்ப்பத்திலும் முறைக்கேடுகள் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

https://adaderanatamil.lk/news/cmjs8znxs03a9o29ndhg8ar4l

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

2 months 2 weeks ago

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

Dec 30, 2025 - 03:47 PM

தோட்டப் பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை அமைக்க தீர்மானம்

தோட்டப் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்து, மாணவர்களின் கல்வித் தரத்தை மேம்படுத்தும் நோக்கில் தெரிவு செய்யப்பட்ட 14 பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. 

மத்திய, ஊவா, சப்பரகமுவ, மேல், தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள தேயிலை மற்றும் இறப்பர் தோட்டப் பகுதிகளில் தற்போது 864 பாடசாலைகள் இயங்கி வருகின்றன. 

இப்பாடசாலைகளில் பெரும்பாலானவை நகரங்களிலிருந்து மிகத் தூரமான மற்றும் அசாத்தியமான பிரதேசங்களில் அமைந்துள்ளதால், அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் அங்கு சென்று கடமையாற்றுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொள்கின்றனர். 

முறையான தங்குமிட வசதிகள் இல்லாமையால் இப்பாடசாலைகளில் குறிப்பாக இரண்டாம் நிலை வகுப்புகளில் பாரிய ஆசிரியர் பற்றாக்குறை நிலவுகிறது. 

இதன் காரணமாக க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சைகளில் ஏனைய அரச பாடசாலைகளுடன் ஒப்பிடுகையில் இப்பகுதி மாணவர்களின் தேர்ச்சி மட்டம் மிகவும் குறைவாகக் காணப்படுகிறது. 

இவ்விளைவினால் தோட்டப்புற இளைஞர் தலைமுறையினர் திறனற்ற தொழிலாளர்களாக மாறும் அவலநிலை ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலைமையைக் கருத்திற் கொண்டு, தோட்டப் பாடசாலைகளின் மனிதவளம் மற்றும் பௌதீக வளங்களை அதிகரிக்க வேண்டியது அவசியமெனக் கண்டறியப்பட்டுள்ளது. 

அதற்கமைய, முதற்கட்டமாக 14 தெரிவு செய்யப்பட்ட பாடசாலைகளில் ஆசிரியர் விடுதிகளை நிர்மாணிப்பதற்கான திட்டத்தை அந்தந்த மாகாண சபைகள் ஊடாக நடைமுறைப்படுத்தத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சராக பிரதமர் சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை தனது அங்கீகாரத்தை வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmjsfo5dg03ano29n4ncre58i

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!

2 months 2 weeks ago

முல்லைத்தீவு ஓய்வு பெற்ற அதிபருக்கு எதிரான முறைப்பாடு - நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை!!

30 Dec, 2025 | 10:02 AM

image

முல்லைத்தீவு  வலயப் பாடசாலை ஒன்றின்  அதிபராக கடமையாற்றி ஓய்வு பெற்றுள்ள அதிபர் ஒருவரின் ஓய்வூதியத்தை நிறுத்தி வைக்குமாறு அவரின் முறைகேடான மற்றும் ஊழல் மிக்க செயற்பாடுகளை முன்னிலைப்படுத்தி பிரதமர் அலுவலகத்திற்கு அனுப்பி வைத்த முறைப்பாட்டை  கல்வி அமைச்சிற்கு கையளித்து நடவடிக்கை எடுக்குமாறு பிரதமர் செயலகம் பணிப்புரை வழங்கியுள்ளது.

பிரதமர் செயலகத்தின் மூத்த உதவிச் செயலாளர் T. ஸ்ரீமன்ன மேற்கண்ட முறைப்பாட்டை 12.12.2025 ஆம் இலக்க கடிதம் மூலம் கல்வி அமைச்சுக்கு பாரப்படுத்தி உள்ளார்.

மேற்குறித்த அதிபர் அரச சட்டதிட்டங்களை மீறி சமூக ஊடகங்கள் வாயிலாக நிதி திரட்டியதும் மற்றும் பாடசாலையுடன் தொடர்பு இல்லாத பாடசாலையின் பெயரில் இயங்கும் நிதியம் ஒன்றிற்கு நிதி அனுசரணை வழங்குமாறு கோரிய கடிதம் போன்றன குற்றச்சாட்டுகளாக பிரதமர் அலுவலகத்தில் முன்வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/234717

மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்

2 months 2 weeks ago

மலையகப் பாதைகளில் குவியும் மண்சரிவு மண்: சமூக சிக்கலாக மாறும் அபாயம்

30 Dec, 2025 | 03:51 PM

image

மலையகப் பிரதேசங்களில் மண்சரிவு  காரணமாகக் குவிந்துள்ள மண் ஒரு சமூகப்பிரச்சினையாக மாறி வருகிறது. கடந்த அனர்த்தின் போது ஏற்பட்ட பல்வேறு மண்சரிவுகள் காரணமாக  நுவரெலியா மாவட்டத்தில் மட்டும் பாதைகளில் இருந்து  நான்கு இலட்சம்  கியுபிக் மண்  அகற்றப்படுள்ளதாக நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினர் மஞ்சுல சுரவீர ஆரச்சி தெரிவித்தார்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மற்றும் மதகதண வீதி அபிவிருத்தி அதிகார சபை என்பவற்றால் இவை அகற்றப்பட்டுள்ளன.

அதே நேரம் இவற்றை அப்புறபப்டுத்தி கொட்டுவதற்குஇடமில்லாது காணப்படுகிறது. பொருத்த மற்ற இடங்களில் கொட்டப்பட்டால் அவை மீண்டும் நீரினால் கழுவப்பட்டு அல்லது மீண்டும் மண் அரிப்பு ஏற்பட்டு நீர் நிரைகளில் சேரக்கூடும். அப்படியாயின் நீர் நிலைகளின் ஆழம் குறைந்து சிறிய மழைக்குக் கூட வௌ்ளப் பெருக்குகள் ஏற்பட வாய்ப்பு உண்டு.

எனவே அவற்றை மீளப்பயன்படுத்தும் முறையொன்று கண்டு பிடிக்கப்படாவிட்டால் இன்னும் சொற்ப காலத்தில் சுற்றாடல் பிரச்சினையாக மாறி பின்னர் அது சமூகப்பிரசசினையாக இடமுண்டு என்றார்.

https://www.virakesari.lk/article/234753

பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள்; வவுனியாவில் போராட்டம்

2 months 2 weeks ago

பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளை நிறுத்துங்கள் ; வவுனியாவில் போராட்டம்

30 Dec, 2025 | 02:19 PM

image

வவுனியாவில் வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் பழைய பேருந்து நிலையத்திற்கு முன்பாக கண்டன ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது.

தையிட்டியில் ஜனநாயக ரீதியாக போராடியவர்கள் கைதுசெய்யப்பட்டமைக்கு கண்டனம் தெரிவித்தும்,  வவுனியா உட்பட வடகிழக்கில் புதிதாக அமைக்கப்படும் விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் இவ் ஆர்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதன்போது கருத்து தெரிவித்த அவர்கள், 

சட்டவிரோதமாக தையிட்டியில் அமைக்கப்பட்ட விகாரைக்கு எதிராக ஜனநாயக ரீதியில் போராடியவர்கள் மிலேச்சத்தனமாக கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

ஒரு மதகுரு என்று கூட பாராமல் மோசமான முறையில் வேலன் சுவாமி நடாத்தப்பட்டிருந்தார். இது தமிழ்மக்கள் மீதானஒரு அடக்குமுறை செயற்பாடாகவே உள்ளது. 

வடக்கில் குருந்தூர்மலை, வெடுக்குநாறிமலை, தையிட்டி, தற்போது வவுனியா கல்லுமலை என்பன ஆக்கிரமிப்பு செயற்பாடுகளால் பாதிக்கப்பட்டுள்ளது. 

பௌத்த துறவிகளே இப்படியான கலவரங்கள் ஏற்ப்படுவதற்கு தூண்டுகோலாக உள்ளனர். எனவே மறுக்கப்படும் எமது உரிமைகளை அடைவதற்காக நாம் தொடர்ச்சியாக போராட்டங்களை செய்வோம். என்றனர்.

IMG_20251230_113825.jpg

IMG_20251230_114145.jpg

IMG_20251230_113637.jpg

IMG_20251230_113738.jpg

https://www.virakesari.lk/article/234747

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும் - சஜித் பிரேமதாச

2 months 2 weeks ago

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

Dec 30, 2025 - 03:20 PM

அரசு வாக்குறுதி அளித்த நிவாரணங்களை பெற்றுக் கொடுக்க வேண்டும்

இந்த டித்வா சூறாவளி ஏற்பட்ட சமயத்திலும் அதற்குப் பின்னரும், பாராளுமன்றத்திலும் அதற்கு வெளியேயும், மக்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை முன்வைத்து அவற்றை முன்னெடுப்போம் என்று அரசாங்கமும் ஜனாதிபதியும் பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்தனர். ஆனால் அவ்வாறு வாக்குறுதியளித்த சலுகைகள், நிவாரணங்கள், அவற்றுக்குத் தேவையான வளங்கள் மற்றும் நிதிகளைப் பெற்றுக் கொடுப்பதில் அரசாங்கம் தோல்வி கண்டுள்ளது. ஒரு தகரத் துண்டு அடிபட்டுச் சென்றாலும் அதற்கும் 10 இலட்சம் ரூபா தருவோம் என்று உறுதியளித்த அரசாங்கம், முழுமையாக சேதமடைந்த வீடுகளுக்கு தருவோம் என்று உறுதியளித்த 50 இலட்சம் ரூபாயையோ, அல்லது வாழத் தகுதியற்ற காணிகளுக்குப் பெற்றுத் தருவோம் என்று உறுதியளித்த மாற்றுக் காணிகளையோ அரசாங்கம் இன்னும் பெற்றுக் கொடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றன. 

இது பாரதூரமான விடயம். டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையுடன் விளையாட வேண்டாம் என்று அரசாங்கத்திடம் நாம் கேட்டுக்கொள்கிறோம். பாதிக்கப்பட்ட மக்களுக்கு அறிவிக்கப்பட்டபடி சகல நிவாரணங்களையும் வழங்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். 

டித்வா சூறாவளியினால் சேதமடைந்த வைத்தியசாலைக் கட்டமைப்பை மீள் நிர்மாணம் செய்யும் நோக்கில், ஐக்கிய மக்கள் சக்தியினால் முன்னெடுக்கப்பட்டு வரும் மூச்சுத் திட்டத்தின் கீழ் வைத்தியசாலைகளுக்குத் தேவையான மருந்துப் பொருட்கள் மற்றும் வைத்தியசாலை உபகரணங்கள் வழங்கி வைக்கப்பட்டு வருகின்றன. இதன் தொடரில் மற்றுமொரு கட்டமாக அநுராதபுரம் மாவட்டம், ராஜாங்கனய யாய 11 பிரதேச வைத்தியசாலைக்கு 28 இலட்சம் ரூபா மதிப்புள்ள வைத்தியசாலை உபகரணங்களை வழங்கி வைக்கும் நிகழ்வு இன்று இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இவ்வாறு தெரிவித்தார். அநுராதபுர மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட தரப்பினர் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்தனர். 

நகரங்கள் மற்றும் கிராமங்களுக்கு நான் இவ்வாறு பயணம் செய்யும் வேளைகளில், தொழிலதிபர்கள் மற்றும் தொழில்முனைவோருடன் பேசிய சந்தர்ப்பங்களில், அவர்களின் கடன்களை அறவிடும் நடவடிக்ககளை நிறுத்துவதாக ஊடகங்கள் வாயிலாக அரச தரப்பினர் அறிவித்த செய்திகளை நடைமுறையில் காண முடியாதுள்ளதை தெரிந்து கொண்டேன். அரசாங்கம் இவற்றை ஊடகங்கள் மூலம் பொறுப்புடனே விளம்பரப்படுத்தியது. தொழில்முனைவோர், தொழிலதிபர்களுக்கு, நுண், சிறிய மற்றும் நடுத்தர தொழில்முனைவோருக்கு, விவசாய சமூகத்தினருக்குப் பெற்றுத் தருவோம் என்ற இழப்பீடுகளை அரசாங்கம் உரியவாறு பெற்றுக் கொடுக்க வேண்டும். இந்த போகத்தில் விவசாயம் சரியாக செய்யப்படாவிட்டால், உணவு நெருக்கடியும் ஏற்படும். எனவே அனைவர் குறித்தும் சிந்தித்து, இந்த விடயத்தை பரந்த கண்ணோட்டத்தில் நோக்கி, அறிவித்த நிவாரணங்களை உரிய தரப்புக்கு பெற்றுக் கொடுக்க அரசாங்கம் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்தார். 

வாக்குறுதியளித்த நிவாரணங்களை மக்களுக்கு வழங்காவிட்டால், மக்கள் சார்பாக நாம் சட்ட ரீதியிலான நடவடிக்கைக்குச் செல்வோம். 

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்டவர்களின் உரிமைகளைப் பாதுகாப்பதற்கு ஐக்கிய மக்கள் சக்தி சட்டக் குழுவொன்றை ஸ்தாபிக்கவுள்ளது. வர்த்தமானி அறிவித்தல்கள், பாராளுமன்றத்தில் ஆற்றிய உரைகளில் வாக்குறுதியளித்த விடயங்கள், ஏனைய சந்தர்ப்பங்களில் ஆற்றிய உரைகள், தெரிவித்த கருத்துக்கள் ஊடாக வாக்குறுதியளித்த, அறிவிப்புச் செய்த நிவாரணங்களைப் பெற்றுக் கொடுக்கும் வரை, இந்த வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் வரை, ஐக்கிய மக்கள் சக்தி இந்த பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவாக முன்நிற்கும். இந்த உரிமைகள் மக்களின் மனித மற்றும் அடிப்படை உரிமைகளாகும், ஆகையால் மக்கள் இவற்றைப் பெறும் வரை எதிர்க்கட்சி போராடும். இந்த நிவாரணம், சுயதொழில் செய்பவர்கள் முதல் அனைவருக்கும் வழங்கப்பட வேண்டும். 

வாக்குறுதியளிக்கப்பட்ட நிவாரணம் வழங்கப்படுவது போல, இந்த நிவாரணத் தொகைகளை குறைக்கக் கூடாது. அரசாங்கம் பொய் சொல்லாமல் இதனைச் செய்ய வேண்டும். இந்த நிவாரணங்கள் மக்களுக்கு கிடைக்கும் வரை எதிர்க்கட்சி கண்காணித்துக் கொண்டே இருக்கும். அவ்வாறே, எதிர்க்கட்சி என்ற வகையில், ஐக்கிய மக்கள் சக்தி மக்களுக்குப் பெற்றுக் கொடுக்க முடியுமான அனைத்து உதவிகளையும் ஒத்தாசைகளையும் பெற்றுக் கொடுக்க நடவடிக்கை எடுக்கும் என்றும் எதிர்க்கட்சித் தலைவர் இங்கு மேலும் தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjsephjz03amo29nh9e6dysp

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

2 months 2 weeks ago

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

Dec 30, 2025 - 11:44 AM

IMF பிரதிநிதிகள் குழு அடுத்த வருட ஆரம்பத்தில் நாட்டிற்கு

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் குழு அடுத்த வருடத்தின் முற்பகுதியில் இலங்கைக்கு வருகை தரவுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தினால் வழங்கப்படும் நீடிக்கப்பட்ட நிதி வசதி தொடர்பான ஐந்தாவது மீளாய்வு குறித்து கலந்துரையாடுவதற்காகவே அந்த குழு விஜயம் செய்யவுள்ளது. 

ஐந்தாவது மீளாய்வு ஏற்கனவே நிறைவடைந்துள்ளதுடன், அதற்கு அனுமதி வழங்குவதற்காக சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்று சபை டிசம்பர் 15 ஆம் திகதி கூடவிருந்தது. 

எனினும், டித்வா புயலுக்கு பின்னர் அவசர நிதியுதவிக்காக இலங்கை விடுத்த கோரிக்கைக்கு அமைய, அந்தக் கூட்டத்தை ஒத்திவைக்க சர்வதேச நாணய நிதியம் தீர்மானித்தமை குறிப்பிடத்தக்கது.

https://adaderanatamil.lk/news/cmjs6zdv803a4o29n4syz1a8r

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

2 months 2 weeks ago

archuna.jpg?resize=750%2C375&ssl=1

இராமநாதன் அர்ச்சுனாவுக்கு கொலை மிரட்டல் – நடவடிக்கை எடுக்காத பொலிஸார் மீது குற்றச்சாட்டு!

யாழ்.மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னரே தனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் ஆனால் இதுவரையில் பொலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் அர்ச்சுனா குற்றம் சுமத்தியுள்ளார்.

எனவே பொலிசார் தகுந்த நடவடிக்கை எடுக்காவிட்டால் 15 தோட்டாக்களுடன் தனக்கு வழங்கப்பட்டுள்ள ஆயுதத்தை பயன்படுத்தவேண்டிய தேவை ஏற்படும் என ராமநாதன் அர்ச்சுனா மேலும் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து மேலும் கருத்து தெரிவித்த ராமநாதன் அர்ச்சுனா,

யாழ் மாவட்ட அபிவிருந்த்தி ஒருங்கிணைப்பு குழுக் கூட்டத்திற்கு செல்வதற்கு முன்னர் எனக்கு கொலை மிரட்டல் விடுக்கப்பட்டது.

அது தொடர்பாக நான் பொலிஸாரிடம் தெரிவித்தேன்.

ஆனால் பொலிசார் அதனை முறையாக விசாரணை செய்யவில்லை.

கொலை மிரட்டல் விடுத்தவர்களை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு எப்போது விசாரணைக்கு வரமுடியும் என கேட்டிருந்தனர்.

அவர்கள் கிறிஸ்மஸ் உள்ளதாகல் தற்போது வரமுடியாது என கூறியிருந்தனர்.

எவவே அவர்களை 19ஆம் திகதி வருமாறு பொலிசார் கூறியிருந்தனர்.

கொலை மிட்டல் விடுக்கப்பட்டுள்ள எனக்கு நீதி கிடைக்கவில்லை.

மாறாக நான் யாரையாவது தவறுதலாக அழைத்து பேசியிருந்தால்.

பொலிசார் உடனடியாக என்னை கைது செய்திருப்பார்கள்.

வீதியிலுள்ள மஞ்சள் கோட்டில் என் வாகனத்தை நிறுத்தியதற்காக
நான் கைது செய்யப்பட்டேன்.

தேசிய மக்கள் சக்தி எம்.பி.க்கு இவ்வாறு கொலை மிரட்டல் விடுக்கப்படடிருந்தால்
பொலிசார் உடனடியாக நடவடிக்கை எடுத்திருப்பாகர்கள்.

கஞ்சாவை பறிமுதல் செய்யச் சென்ற அப்பாவி பொலிஸ் அதிகாரிக்கு
இன்று என்ன நடந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.

ஆனால் நான் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும்
எனக்கு பதினைந்து தோட்டாக்கள் கொண்ட ஆயுதம் வழங்கப்பட்டுள்ளது.
நாங்கள் நாட்டைக் கட்டியெழுப்ப வந்துள்ளோம், மக்களைக் கொல்ல முடியாது.
ஜனாதிபதி அனுரகுமார மக்களைக் கொல்லச் சொல்கிறாரா…

யாராவது என்னிடம் வந்து என்னைக் கொல்லப்போகிறேன் என கூறினால்
பொலிசாரிடம்தான் நான் முறையிடுவேன்.

நான் அனுரகுமாரவிடம் போன் செய்து சொன்னேன்.

சட்டம் அமல்படுத்தப்படவில்லை என.. அவர் ஆனந்த விஜேபாலனாயவிடம் கூறினார்.
ஆனாலும் சட்டம் அமல்படுத்தப்படவில்லை.

இந்த நிலை தொடர்ந்தால் பின்னர், நான் சுட வேண்டியிருக்கும்… ஊழல் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள
யாழ்ப்பாணத்தில் உள்ள ஒரு மருத்துவமனையில் பணிபுரியும்
மருத்துவரைக் காப்பாற்ற சுகாதார அமைச்சர் நளிந்த ஜெயதிஸ்ஸ இப்போது மிகவும் முயற்சி செய்கிறார்…
வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இதற்கு உதவுகிறார்கள்.

அவர்களுக்கு அரசாங்கத்தின் ஆதரவு உள்ளது,
எனவே அவர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என தெரிவித்தார்.

https://athavannews.com/2025/1457659

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

2 months 2 weeks ago

New-Project-170.jpg?resize=750%2C375&ssl

யாழில் 4 கிலோ கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் கைது!

யாழ்ப்பாணத்தில் 04 கிலோ கிராம் கஞ்சாவுடன் பிரதேச சபை உறுப்பினர் ஒருவர் கைது செய்யப்பட்டார்.

யாழ்ப்பாண மாவட்ட குற்றத்தடுப்பு பிரிவு பொலிஸாருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய சங்கிலியன் பூங்கா அருகில் இன்றைய தினம் அதிகாலை குறித்த நபர் கைது செய்யப்பட்டார்.

வரணி பகுதியைச் சேர்ந்த நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டார்.

சந்தேக நபரிடம் நடத்தப்பட்ட விசாரணையில் வெளிநாட்டில் இருந்து வரும் ஒப்பந்தத்துக்கமைய போதைப்பொருளை கையளிப்பதாக பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார்.

மேலதிக விசாரணைகளுக்கு பின்னர் சந்தேக நபரை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1457695

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் !

2 months 2 weeks ago

unnamed-2.jpg?resize=750%2C375&ssl=1

காணாமல் ஆக்கப்பட்ட மகனைத் தேடிய தந்தை மரணம் !

வவுனியாவில் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைத் தேடிவந்த தந்தைஒருவர் சுகவீனம் காரணமாக மரணமடைந்துள்ளார்.

வவுனியா சின்னத்தம்பனை நேரியகுளம் பகுதியை சேர்ந்த 69 வயதுடைய வையாபுரி சந்திரன் எனும் தந்தை ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

இவரது மகனான ஜெயகாந்தன் கடந்த 2008ஆம் ஆண்டு காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.

அவரைத்தேடி வவுனியாவில் முன்னெடுக்கப்பட்டுவரும் போராட்டங்களில் குறித்த தந்தை கலந்து கொண்டு தனது மகனை கண்டுபிடித்து தர போராடியிருந்தார்.

இந்நிலையில் மகனை காணாமலேயே அவர் மரணமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2025/1457707

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

2 months 2 weeks ago

MediaFile-11.jpeg?resize=750%2C375&ssl=1

விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள டக்ளஸ் தேவாநந்தா சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதி!

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தா உடல் நலகுறைபாடு காரணமாக தற்போது மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில்  அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட பாதுகாப்புக்காக வழங்கப்பட்ட துப்பாக்கியை பாதாள உலகக் குழுவினரிடம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கடந்த 26 ஆம் திகதி கைது செய்யப்பட்டார்

கடந்த 2019 ஆம் ஆண்டு, திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டிருந்த ‘மாகந்துரே மதூஷிடம்’ மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவின் தனிப்பட்ட பாவனைக்காக இராணுவத்தால் சட்டப்பூர்வமாக வழங்கப்பட்டிருந்த பிஸ்டல் ரக துப்பாக்கி ஒன்று கைப்பற்றப்பட்டது.

இந்த துப்பாக்கி கடந்த 2001 ஆம் ஆண்டு தனிப்பட்ட பயன்பாட்டிற்காக ராணுவத்தினரால் டக்ளஸ் தேவாநந்தாவிற்கு வழங்கப்பட்டிருந்தது

குறித்த துப்பாக்கி, வெலிவேரிய பகுதியில் உள்ள ஒரு பாலத்திற்கு அருகிலுள்ள பற்றைக்காட்டுப் பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் மீட்கப்பட்டிருந்தது.

இது தொடர்பான விசாரணைகளின் பின்னணியில் முன்னாள் அமைச்சர் வாக்குமூலம் வழங்குவதற்காக குற்றப்புலனாய்வு பிரிவுக்கு சென்றிருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.

மேலும் டக்ளஸ் தேவானந்தாவிடம் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கொலை விசாரணைப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்திருந்த நிலையில் 72 மணித்தியால தடுப்புக்காவல் உத்தரவும் பெறப்பட்டிருந்தது

பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் இந்த உத்தரவு பெறப்படதாக பொலிஸார் தெரிவித்தனர்.

அத்துடன் டக்ளஸ் தேவானந்தாவிற்கு வழங்கப்பட்ட 1500 க்கும் மேற்பட்ட ரி-56 ரக துப்பாக்கிக்கு பயன்படுத்தப்படும் தோட்டாக்கள் மற்றும் 100க்கும் மேற்பட்ட 9 மில்லிமீட்டர் தோட்டாக்கள் தொடர்பாக தற்போது குற்றப் புலனாய்வு திணைக்களத்தினால் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதேவேளை டக்ளஸ் தேவானந்தா கடந்த 28 ஆம் திகதி கம்பஹா மேலதிக நீதவானிடம் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் 2026 ஜனவரி மாதம் 9 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்

எனினும் அவர் தற்போது உடல்நல குறைபாடு காரணமாக மஹர சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

https://athavannews.com/2025/1457743

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு

2 months 2 weeks ago

பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு

Dec 29, 2025 - 03:03 PM

பாதிக்கப்பட்ட  குடும்பங்களுக்கு நிவாரணம் பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனு

மலையகத்தில் பாதிக்கப்பட்ட 1,641 குடும்பங்களை இனங்கண்டு அவர்களுக்கான நிவாரணத்தை பெற்றுக்கொடுக்க ஜனாதிபதிக்கு மனுவொன்றை அனுப்புவதற்காக பேரிடர் நிவாரண செயலணி செயற்பட்டு வருகிறது. 

இதற்கான கலந்துரையாடல் ஒன்று நேற்று (28) ஹட்டனில் நடைபெற்றது. 

டித்வா புயல் நாடாளவிய ரீதியில் பாரிய பாதிப்புக்களை ஏற்படுத்தியுள்ளது. 

இதில் மலையகத்தில் 127 பேர் பலியாகி 16 பேர் காணாமல் போய் உள்ளனர். இதில் 6 பேர் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவகின்றனர். 

இந்நிலையில் பெருந்தோட்டப் பகுதியில் 1,641 வீடுகள் சேதமடைந்துள்ளதுடன் 593 வீடுகள் முற்றாக சேதமடைந்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில், அவர்களுக்கு இன்னமும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் நிவாரணங்கள் முழுமையாக கிடைக்கவில்லை. 

அரசாங்கத்தின் அறிவித்தல் படி 4 இலட்சத்து 56 ஆயிரம் பேர் நிவாரணங்களை பெறுவதற்கு தகுதி பெற்றுள்ளதாகவும் அதில் 3 இலட்சத்து 72 ஆயிரம் பேருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

இது 82 சதவீத எனவும், 4 இலட்சத்து 672 பேர் 50 ஆயிரம் ரூபாய் நிவாரணத்திற்கு தகுதியுடையவர்களாகவும் அதில் 3,262 பேருக்கான நிவாரணம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. 

இந்த நிவாரணத்தினை பெற்றுக்கொள்வதற்காக பெரும்பாலான தோட்ட மக்கள் விண்ணப்பித்த போதிலும் ஒரு சில செயலகங்களில் விண்ணப்பப்படிவம் கூட ஏற்றுக்கொள்ளப்படவில்லை. 

இதற்கு பிரதான காரணம் அவர்களுக்கு நில உரிமை இல்லாமையும் அவர்கள் தொடர்பான விபரங்கள் தோட்ட முகாமையாளரிடம் பெற்றுக்கொள்ள வேண்டிய நிலை காணப்படுவதனால் இந்த நிவாரணங்கள் பெறுவது தொடர்பான சிக்கல்கள் காணப்படுவதாகவும் குறிப்பிடப்படுகின்றது. 

எனவே, இது குறித்து பேரிடர் நிவாரண செயலணி கண்டி, நுவரெலியா, பதுளை, மாத்தளை, இரத்தினபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் கலந்துரையாடல்களை மேற்கொண்டு உண்மையாக பாதிக்கப்பட்டவர்களின் விபரங்களை திரட்டி மாவட்ட செயலாளர் ஊடாக ஜனாதிபதிக்கு அனுப்புவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளதாகவும் இந்த செயலணியின் ஏற்பாட்டாளர் ஜீவன் ராஜேந்திரன் தெரிவித்தார். 

பாதிப்பு என்று வரும் போது அனைவருக்கும் பாகுபாடின்றி செயப்பட வேண்டியது பொறுப்பு வாய்ந்தவர்களின் கடமை என்றும் இதன் போது பலரும் சுட்டிக்காட்டியுள்ளனர்.

-மலையக நிருபர் சுந்தரலிங்கம்-

https://adaderanatamil.lk/news/cmjqynuc10397o29nehtzeuow

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

2 months 2 weeks ago

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

Dec 29, 2025 - 01:02 PM

போதையில் வாகனம் செலுத்தினால் குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை

இனிவரும் காலங்களில் மதுபோதையில் மற்றும் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராக, போக்குவரத்துச் சட்டங்களுக்கு மேலதிகமாகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்கப்படும் எனப் போக்குவரத்து நிர்வாகம் மற்றும் வீதி பாதுகாப்புப் பொறுப்பதிகாரி பிரதி பொலிஸ் மா அதிபர் டபிள்யூ. ஜி. ஜே. சேனாதீர தெரிவித்துள்ளார். 

இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். 

கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே இந்த விபத்துக்களுக்குப் பிரதான காரணம் எனக் குறிப்பிட்ட அவர், இனிவரும் காலங்களில் இத்தகைய விபத்துக்களின் போது போக்குவரத்துச் சட்டங்களுக்குப் மேலதிகமாக குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் உத்தரவிட்டுள்ளதாகவும் தெரிவித்தார். 

இது குறித்து அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்: 

"கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டில் வீதி விபத்துக்கள் 271 ஆல் அதிகரித்துள்ளன. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 317 ஆல் அதிகரித்துள்ளது. இருப்பினும், பாரிய விபத்துக்களின் எண்ணிக்கையில் ஓரளவு வீழ்ச்சி காணப்படுகிறது. 

குறிப்பாக, சாரதிகளின் கவனக்குறைவு மற்றும் அஜாக்கிரதையான செயற்பாடுகளே இந்த விபத்துக்கள் அதிகரிப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளன. 

நாளாந்த விபத்துக்களை ஆராயும் போது, பாதசாரிகளே அதிகளவில் விபத்துக்களுக்குள்ளாகின்றனர். 

வருடாந்த விபத்துக்களில் 31 சதவீதமானவை பாதசாரிகள் தொடர்பானவையாகும். அதேபோல் மோட்டார் சைக்கிள் ஓட்டுநர்கள் பின்னால் அமர்ந்து பயணப்பவர்கள் மற்றும் முச்சக்கர வண்டி சாரதிகளும் அதிகளவில் விபத்துக்களுக்கு முகம் கொடுக்கின்றனர். 

பல விபத்துக்களுக்குப் போதைப்பொருள் மற்றும் மதுப்பாவனையே காரணமாகிறது என்பதைத் தெரிவிக்க விரும்புகிறோம். 

இதற்கமைய, இனிவரும் காலங்களில் மதுபோதையில், போதைப்பொருள் பாவித்துக் கவனக்குறைவாக வாகனம் செலுத்துபவர்களுக்கு எதிராகக் குற்றவியல் சட்டத்தின் கீழும் நடவடிக்கை எடுக்குமாறு பொலிஸ் மா அதிபர் பணிப்புரை விடுத்துள்ளார்" என்றார்.

https://adaderanatamil.lk/news/cmjqublue038to29nasfq1twg

டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

2 months 2 weeks ago

டக்ளஸூக்கு உயிராபத்து ; பாதுகாப்பு வழங்க அழுத்தம் - முன்னாள் ஆளுநர் சுரேன் ராகவன்

29 Dec, 2025 | 03:26 PM

image

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் தெரிவித்தார்.

கொழும்பில் அமைந்துள்ள ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இன்று திங்கட்கிழமை (29) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் பொழுது முன்னாள் ஆளுநரும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சர்வதேச விவகாரங்களுக்கான ஆலோசகரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அரசியல் குழு உறுப்பினருமான சுரேன் ராகவன் இவ்வாறு கருத்து தெரிவித்தார். 

தொடர்ந்தும் அவர் கருத்து தெரிவிக்கையில் ,

ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியின் கூட்டாட்சிகளில் முக்கிய பங்கு வகித்தவர்களில் ஒருவரான முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தற்பொழுது மகர சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

ஆனால் அங்கு ஆயிரம் கைதிகள் மட்டுமே அனுமதிக்க பட வேண்டிய போதும் மூவாயிரத்துக்கும் அதிகமான கைதிகள் ஏற்கனவே அனுமதிக்கப்பட்டிருப்பதாக சொல்லப்படுகின்றது.

ஆகவே முன்னர் பல தடவைகள் எதிரிகளாலும், எதிர்க்கட்சிகளாலும் உயிர் ஆபத்துக்களை எதிர்கொண்ட ஒருவராவார், அவருக்கான பாதுகாப்பை அரசாங்கம் உறுதி செய்ய வேண்டும் என நாங்கள்  கேட்டுக்கொள்கின்றோம் என்றார்.

https://www.virakesari.lk/article/234674

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

2 months 2 weeks ago

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் யாழ். மாவட்ட அமைப்பாளராக சபா குகதாஸ்

%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் 12வது தேசிய மாநாட்டை 2026 தை 24 மற்றும் 25ஆம் திகதிகளில் நடாத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டது.

இந்நிலையில் அதற்கு முன்பாக வடக்கு, கிழக்கு மாகாணங்களின் எட்டு மாவட்டங்களிலும் 225 பொதுக்குழு உறுப்பினர்கள், மாவட்ட அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்களை தெரிவு செய்வதற்குமான தெரிவுக் கூட்டங்கள் இடம்பெற்று வருகிறது.

இந்நிலையில் நேற்று, யாழ். மாவட்ட உறுப்பினர்கள் மற்றும் மாவட்ட அமைப்பாளரை தெரிவு செய்யும் கூட்டம் கச்சேரியடியில் உள்ள மண்டபத்தில் நடைபெற்றது.

அந்தவகையில் யாழ். மாவட்ட அமைப்பாளராக முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர் சபா குகதாஸ் மாவட்ட செயற்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டார். அத்துடன் பொதுக்குழு உறுப்பினர்களாக 45 பேர் தெரிவாகினர்.

கட்சியின் பிரதான பொறுப்புக்களில் மாற்றங்களை ஏற்படுத்தி இளையவர்களுக்கு வழிவிடும் வகையில் 12 வது மாநாடு அமையவுள்ளதாக ரெலோ கட்சி தெரிவித்துள்ளது.

https://akkinikkunchu.com/?p=354091

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி

2 months 2 weeks ago

பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனம்! ஜனாதிபதி அதிரடி

29 December 2025

மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள் உள்ளிட்ட பல்வேறு சேவைகளை அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தி அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மின்சார விநியோகம் தொடர்பான அனைத்து சேவைகள், எரிபொருள், பெற்றோலிய உற்பத்திப் பொருட்கள், எரிவாயு விநியோகம் அல்லது பகிர்ந்தளிப்பு உள்ளிட்ட பல்வேறு சேவைகள் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

அத்தியாவசிய பொதுச் சேவைகள் சட்டத்தின் விதிகளுக்கமைய, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவினால் இந்த வர்த்தமானி வெளியிடப்பட்டுள்ளது. 

இதன்படி, மருத்துவமனைகள், பராமரிப்பு நிலையங்கள், மருந்தகங்கள் மற்றும் இதுபோன்ற நிறுவனங்களில் நோயாளர்களைப் பராமரித்தல், அனுமதித்தல், பாதுகாத்தல், உணவளித்தல் மற்றும் சிகிச்சையளித்தல் தொடர்பான அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

நோயாளர் காவு வண்டி சேவைகள், பயணிகள் அல்லது பொருட்கள் போக்குவரத்துக்கான பொது போக்குவரத்து சேவைகள், நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புடன் தொடர்புடைய அனைத்து சேவைகள். 

உணவு மற்றும் அத்தியாவசியப் பொருட்களை வழங்குதல், பாதுகாத்தல் மற்றும் விநியோகித்தல் தொடர்பான சேவைகள், அனைத்து மாவட்ட செயலகங்கள், பிரதேச செயலகங்கள் மற்றும் களமட்ட அதிகாரிகளால் ஆற்றப்பட வேண்டிய அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன. 

இலங்கை மத்திய வங்கி உட்பட அனைத்து அரச வங்கிகள் மற்றும் காப்புறுதி சேவைகள், உள்ளூராட்சி நிறுவனங்களினால் முன்னெடுக்கப்படும் நீர் வழங்கல், மின்சாரம், கழிவுநீர் அகற்றும் முறைமை, தீயணைப்பு, கழிவு சுத்திகரிப்பு மற்றும் குப்பை அகற்றுதல் உள்ளிட்ட அனைத்து சேவைகளும் அத்தியாவசிய சேவைகளாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளன.

https://hirunews.lk/tm/438053/various-services-declared-as-essential-services-president-takes-action

நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம்

2 months 2 weeks ago

நாங்கள் சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? - சி.வீ.கே.சிவஞானம்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

இலங்கை தமிழ் அரசுக் கட்சி சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி நாங்கள் பேசாமல் விடுவோமா என இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் சி.வீ.கே.சிவஞானம் கேள்வி எழுப்பியதுடன் இந்திய வெளியுறவு நாங்கள் அதனை வலியுறுத்தினேன் என தெரிவித்தார். 

சமகால நிலைமைகள் தொடர்பாக சி.வீ.கே.சிவஞானம் நேற்று (28) நடத்திய ஊடக சந்திப்பில் இவ்விடயத்தை தெரிவித்தார். 

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில், 

இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருடனான சந்திப்பில் அமைச்சரிடம் மகஜர் கையளிக்கப்படவில்லை எனவும் உயர்ஸ்தானிகரிடமே மகஜர் கையளிக்கப்பட்டதாக கஜேந்திரகுமார் தெரிவித்திருந்தார். 

இவ்வாறான சந்திப்புக்களில் அமைச்சர் மகஜரை கையேற்பதில்லை என்ற இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் அறிவுத்தலுக்கமைய இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவிடம் மகஜர் கையளிக்கப்பட்டது. 

இந்த சந்திப்பின் அடிப்படை நோக்கம், தேவையற்ற கால தமாதமாகியுள்ள மாகாண சபைத் தேர்தலை நடத்த இலங்கை அரசாங்கத்திற்கு இந்தியா வலியுறுத்த வேண்டும் என்பதே ஆகும். மாகாண சபை தேர்தலை நடத்த நானும் ஏனையவர்களும் வலியுறுத்தினோம். 

சமஷ்டியை பற்றி நாங்கள் பேசவில்லை என்று கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்து ஆச்சரியமளிக்கிறது. 

கலந்துரையாடலை ஆரம்பித்து நானே. கலந்துரையாடலின் இறுதியில் சமஸ்டியை பற்றி பேசினோம். பல விடயங்களை பேசினோம். சந்திப்பு முடியுற தருணத்தில் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு நாம் முன்வைத்த கடிதத்தின் நோக்கத்தை மீண்டும் ஜெய்சங்கருக்கு தெளிவுபடுத்தினோம். 

மாகாண சபையை பொறுத்தவரை இந்தியா இலங்கையுடன் செய்த ஒப்பந்தம் மூலமே அது உருவானது. வயிற்றில் பிறந்த பிள்ளை என சொல்லவில்லை. இந்தியாவின் சிந்தனையில் வந்த பிள்ளை என்றேன். அதை வலியுறுத்தவே மகஜரும் கையளித்தோம். 

அதேபோல குறித்த சந்திப்பில் எமது இறுதி இலக்கும் நோக்கும் கூட்டாட்சி சமஷ்டி தான் என்பதை தெரிவித்தோம். மகஜரில் இந்த விடயம் இருக்கிறது. 

நாங்கள் பொய் சொன்னதாக கஜேந்திரகுமார் பொன்னம்பலம் சொல்கிறார். நான் உண்மையை தான் கூறுகிறேன். சந்திப்பில் பங்கேற்ற ஏனைய கட்சித்தலைவர்கள் இதை தெளிவுபடுத்துமாறு வலியுறுத்தினார்கள். 

சர்வதேச ரீதியில் எமது இலக்கை அடைவதற்கான ஆதரவு தேவை. இந்தியா இதற்கு உதவ வேண்டும் என சந்திப்பில் சொன்னோம். நான் சொன்னது பொய் என்றால் இந்தியா மறுதலிக்கும். இராஜதந்திரிகள் எல்லாவற்றுக்கும் பதில் சொல்ல மாட்டார்கள். செயலிலேயே அதை செய்வார்கள். 

நாங்கள் சமஸ்டி கட்சி, ஆகவே சமஷ்டியை பற்றி பேசாமல் விடுவோமா? நாங்கள் சந்திப்பின் பின்பகுதியில் அதனை வலியுறுத்தினேன். 

13 ஆம் திருத்தம் ஒற்றையாட்சிக்குள் முடங்கி போடும் என சொல்லிப்போட்டு கஜேந்திரகுமார் மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவதாக சொல்கிறார். இது சுய முரண்பாடு. 

மாகாண சபை முறைமை தீர்வு என்றோ முழுமையாக ஏற்கிறோம் என்றோ ஒரு காலத்திலும் தமிழ் அரசுக் கட்சி சொன்னதில்லை. உண்மைக்கு புறம்பான முறையில் பேசுவது அரசியல் ஜனநாயகத்துக்கு முரண். 

மன்னாரில் இருக்க கூடிய சூரிய சக்தி அமைப்பதில் பாகிஸ்தானை சேர்ந்த 40 பேர் பணியில் ஈடுபடுவது என்பதையும் நாங்கள் சந்திப்பின் போது தெரிவித்தோம் என தெரிவித்தார்.

https://adaderanatamil.lk/news/cmjqnqcyt0384o29nw0ca1xjh

சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!

2 months 2 weeks ago

சிறந்த சுற்றுலா இடங்களில் இலங்கை!

அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த இடங்களின் பட்டியலில் இலங்கை ஐந்தாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இந்தப் பட்டியலில் ஜப்பானின் புஜி மலை முதலிடத்தில் உள்ளதுடன், அதைத் தொடர்ந்து பிலிப்பைன்ஸின் பலவான், டோக்கியோ மற்றும் தென் கொரியாவின் சியோல் ஆகிய நகரங்கள் உள்ளன.

அணுகுவதற்கான வசதி, உள்ளூர் விலைகள், சுற்றுலாத் தலங்கள், கலாச்சாரம் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் விருப்பம் ஆகிய காரணிகளைக் கருத்திற்கொண்டு தரவு பகுப்பாய்வு மூலம் இந்தத் தரவரிசை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையில் உள்ள மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் பண்டைய இடிபாடுகள், பல பிரபலமான ஆசிய சுற்றுலாத் தலங்களில் காணப்படும் அதிகப்படியான சுற்றுலாப் பயணிகளின் நெரிசல் இன்றி இருப்பது இங்கு சிறப்பாக மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

“இந்தியாவின் தெற்கு முனையில் அமைந்துள்ள தீவு நாடான இலங்கை, ஆசியாவின் மிகவும் பிரபலமான சுற்றுலாத் தலங்கள், மழைக்காடுகள், கடற்கரைகள் மற்றும் இடிபாடுகளைக் கொண்டுள்ளது. 

இலங்கையில் 26 தேசிய பூங்காக்கள் உள்ளன, அவற்றில் பல யானைகள், சிறுத்தைகள் மற்றும் கரடிகளைப் பார்ப்பதற்கான சபாரி பயணங்களுக்குப் பொருத்தமானவை. 

இதற்கிடையில், 600 அடி உயரக் கோட்டையான சிகிரியா மற்றும் பொலன்னறுவையின் விகாரைகள், கோயில்கள் போன்ற பண்டைய இடங்கள் அதன் ஈர்ப்பை மேலும் அதிகரிக்கின்றன. 

தென்னை மரங்களால் சூழப்பட்ட பொன்னிறக் கடற்கரைகள், அமைதியான விடுமுறையைத் தேடுபவர்களுக்கு வெகு தொலைவில் இல்லை” என அந்த அறிக்கையில் இலங்கை குறித்துக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய அமெரிக்காவின் ‘U.S. News & World Report’ அறிக்கையின்படி, 2026 ஆம் ஆண்டில் ஆசியாவில் சுற்றுலா செல்வதற்குச் சிறந்த 20 இடங்கள் இதோ:

புஜி மலை, ஜப்பான் 

டோக்கியோ, ஜப்பான் 

பலவான், பிலிப்பைன்ஸ் 

சியோல், தென் கொரியா 

இலங்கை 

சியாங் மாய், தாய்லாந்து 

பூட்டான் 

ஹனோய், வியட்நாம் 

பாலி, இந்தோனேசியா 

புக்கெட், தாய்லாந்து 

கியோட்டோ, ஜப்பான் 

சீயாம் ரீப் 

ஒசாகா, ஜப்பான் 

கோலாலம்பூர், மலேசியா 

ஹொங்கொங் 

மாலைத்தீவு 

சிங்கப்பூர் 

ஜெய்ப்பூர், இந்தியா 

லென்காவி, மலேசியா 

ஆக்ரா, இந்தியா

https://www.samakalam.com/சிறந்த-சுற்றுலா-இடங்களில/

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr