ஊர்ப்புதினம்

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

2 months ago

‘Rebuilding Sri Lanka’ தேசிய வேலைத்திட்டம் நாளை ஆரம்பம்

12 Jan, 2026 | 03:29 PM

image

நாட்டை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்தை திறம்பட வழிநடத்துவதற்காக செயல்படுத்தப்பட்டு வரும்  ‘Rebuilding Sri Lanka’  தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, ஜனவரி 13 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில்  கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டப வளாக லோட்டஸ் அரங்கில் நடைபெற உள்ளது.

உயிரிழப்புகள் , தனியார் மற்றும் அரச சொத்துக்களுக்கு ஏற்பட்ட சேதம் உட்பட இலங்கையின் அனைத்துப் பிரதேசங்களையும் பாதித்த டித்வா சூறாவளிஅனர்த்தத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீட்பு நடவடிக்கைகளுக்காக உயர் மட்ட, நன்கு ஒருங்கிணைந்த தேசிய மீட்பு பொறிமுறையின் விரைவான மற்றும் அவசரத் தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ‘Rebuilding Sri Lanka’  வேலைத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 

நாட்டின் மீள்கட்டமைப்புத் திட்டத்திற்கு தற்போது மூன்று மூலோபாய அணுகுமுறைகளின் கீழ் நிதியளிக்கப்படுகிறது. அதன்போது, முக்கியத்துவத்தின் அடிப்படையில் மீள் ஒழுங்கமைப்பு (Re-purposing) செய்முறையின் கீழ் தற்போது செயல்படுத்தப்படும் அபிவிருத்தித் திட்டங்களிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட திட்டங்களின் நோக்கங்களை மாற்றி செயற்படுத்தல், மறு ஒதுக்கீட்டின் (Re-allocating) கீழ் நிதி முகாமைத்துவச் சட்டத்தின் விதிகளின் அடிப்படையில் வரவுசெலவுத்திட்ட ஒதுக்கீடுகளுக்கு மேலதிகமான தொகையை ஒதுக்குதல் என்பன மேற்கொள்ளப்படுகின்றன.

அதன்படி, 2026 ஆம் ஆண்டிற்காக 500 பில்லியன் ரூபா குறைநிரப்புப் பிரேரணை முன்வைப்பு மற்றும்  ‘Rebuilding Sri Lanka’  நிதியத்தின் மூலம் உள்நாட்டு, வெளிநாட்டு, அரச மற்றும் தனியார் நன்கொடையாளர்களின் ஆதரவு பெறப்படும்.

இந்த செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று ‘Rebuilding Sri Lanka’ திட்டத்தின் மூலோபாய தலைமைத்துவம், ஒருங்கிணைப்பு, நிறுவன அணுகுமுறை மற்றும் மேற்பார்வை ஆகியவற்றிற்கு பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில், அமைச்சர்கள் மற்றும் அரச அதிகாரிகள் உட்பட 25 உறுப்பினர்களைக் கொண்ட ஜனாதிபதி செயலணியை ஜனாதிபதி அண்மையில் நிறுவினார்.

இதன் மூலம் அடிப்படைத் தேவைகள், சுகாதாரம் மற்றும் சுகாதாரப் பாதுகாப்பை மீண்டும் நிறுவுதல், அடிப்படை உட்கட்டமைப்பு வசதிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், வாழ்வாதாரங்கள் மற்றும் சொத்துக்களை போதுமான அளவு அதிகரித்தல், உள்நாட்டு பொருளாதாரத்தை மீட்டெடுத்தல், டிஜிட்டல் தரவு கட்டமைப்புகள் மற்றும் தீர்மானங்களை எடுப்பதற்கு ஆதரவளிக்கும் பொறிமுறைகளை நிறுவுதல், தொடர்பாடல் மற்றும் பங்குதாரர் உறவுகளை மேம்படுத்துதல் ஆகிய மீள்கட்டமைப்பு நடவடிக்கைகளின் ஒட்டுமொத்த வழிகாட்டல், மூலோபாய முடிவெடுத்தல், அமைச்சுகளுக்கு இடையேயான பிரச்சினைகளைத் தீர்த்தல், முக்கிய நிதியளித்தல் மற்றும் மீட்பு மற்றும் மீள்கட்டமைப்பில் முடிவெடுத்தல்களுக்கு வழிகாட்டல் என்பன  மேற்கொள்ளப்படும். 

மேலும், பிரதான குழுவின் முடிவுகளை செயல்படுத்தல், மேற்பார்வை செய்தல் மற்றும் முன்னேற்றத்தைக் கண்காணிக்க, தொடர்புடைய துறைசார் அமைச்சரின் தலைமையில் பின்வரும் உப குழுக்களும் நிறுவப்பட உள்ளன.

அதன்படி,

1.  இயற்கை அனர்த்தத்தினால் ஏற்பட்ட பௌதீக, பொருளாதார மற்றும் சமூக தாக்கங்கள் குறித்த தரவுகளைச் சேகரித்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் மதிப்பீடு செய்வதற்கான, அனர்த்தத்தின் பின்னரான மதிப்பீட்டுக் குழு.

2. போக்குவரத்து, மின்சாரம், நீர், நீர்ப்பாசனம், சுகாதாரம், கல்வி மற்றும் தொலைத்தொடர்பு உள்ளிட்ட பாதிக்கப்பட்ட உட்கட்டமைப்பு வசதிகளைப் புனரமைத்தல் மற்றும் மறுசீரமைத்தல் ஆகியவற்றின் போது வளங்களை ஒருங்கிணைத்தல் மற்றும் தரநிலைகளை உறுதிப்படுத்துவதற்கான பொது உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பதற்கான குழு.

3.   மீளமைப்புத் திட்டத்தின் அடிப்படையில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்காக சேதமடைந்த வீடுகளைப் புனரமைத்தல் அல்லது புதிய வீடுகளை நிர்மாணிப்பதற்கான பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கான வீட்டு நிர்மாண மீளமைப்பு குழு.

4. வாழ்வாதாரங்கள் மற்றும் வர்த்தகங்களை விரைவாக ஸ்திரப்படுத்துவதற்கு ஆதரவு வழங்குதல், பிரதான விநியோகச் சங்கிலிகளை மீண்டும் கட்டியெழுப்புதல், நிதிச் சேவைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல் மற்றும் பொருளாதார வாய்ப்புகளை விருத்தி செய்வதற்கான உள்ளூர் பொருளாதாரம் மற்றும் வாழ்வாதாரங்களை மீட்டெடுப்பதற்கான குழு.

5. கல்வி, சுகாதாரம், நீர், சுகாதார பாதுகாப்பு மற்றும் நலன்புரி உதவிகள் உள்ளிட்ட அத்தியாவசிய சமூக சேவைகளை மீட்டெடுப்பதை ஒருங்கிணைப்பதற்கான  சமூக உட்கட்டமைப்பு வசதிகளை மீட்டெடுப்பது தொடர்பான குழு. 

6.  நிதி திரட்டுதல், வரவு செலவுத் திட்டமிடல், நன்கொடையாளர்களை ஒருங்கிணைத்தல் மற்றும் ‘Rebuilding Sri Lanka’ நிதியத்தை அரசாங்கத்தின் நிதிப் பாதுகாப்புக் கொள்கைக் கட்டமைப்புக்குள் வெளிப்படைத்தன்மையுடன் பயன்படுத்துவதற்காக நிதி மற்றும் நிதியுதவிக் குழு.

7. அனர்த்த காலத்திற்குப் பின்னரான புனர்வாழ்வு மற்றும் மீளமைப்புத் தேவைகளை முன்னுரிமை அடிப்படையில் தீர்மானித்தல், மீளமைப்புத் திட்ட உத்திகளை வழிநடத்துதல் மற்றும் நவீன தொழில்நுட்பத்துடனான தகவல் கட்டமைப்புகளை நிறுவுவதற்கான  தரவு மற்றும் தகவல் கட்டமைப்புகள் தொடர்பான குழு.

8.  மறுசீரமைப்பு மற்றும் மீளமைப்புத் திட்டங்கள் குறித்த மக்கள் தொடர்பாடல், விழிப்புணர்வு மற்றும் பங்குதாரர் தொடர்புகளை ஒருங்கிணைப்பதற்கான மக்கள் தொடர்பாடல் குழு.

https://www.virakesari.lk/article/235838

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்துறைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல்

2 months ago

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்துறைக்கு உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்கள் வழங்கல்

12 Jan, 2026 | 01:19 PM

image

அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்க திணைக்களத்திற்கு,  02 உயர் தொழில்நுட்ப ஸ்கேனர்களை வழங்கப்பட்டுள்ளது.

காங்கேசன்துறை துறைமுகத்தில்  திங்கட்கிழமை (12) காலை குறித்த நிகழ்வு இடம்பெற்றது.

அதன்போது, அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் மேத்யூ டக்வொர்த்,  இலங்கை சுங்க இயக்குநர் ஜெனரல் சீவலி அருகோடவிடம் ஸ்கேனர்கள் அதிகாரப்பூர்வமாக ஒப்படைத்தார்.

நிகழ்வில், சுங்க இயக்குநர் ஜெனரல் பால் எட்வர்ட்ஸ்,  அவுஸ்திரேலிய தூதரக அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர். 

யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையம் மற்றும் காங்கேசன்துறை துறைமுகத்தில் பயன்படுத்துவதற்காக அவுஸ்திரேலிய எல்லைப் படையினரால் இலங்கை சுங்கத்திடம் குறித்த 02 ஸ்கேனர்களும் வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

IMG_3462.jpeg

IMG_3408.jpeg

IMG_3408.jpeg

IMG_3448__1_.jpeg

IMG_3455.jpeg

https://www.virakesari.lk/article/235822

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை

2 months ago

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணைக்கு தமிழரசு கட்சி ஆதரவில்லை

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

கல்வி அமைச்சரும் நாட்டின் பிரதமருமான ஹரிணி அமரசூரியவுக்கு எதிராக கொண்டுவரப்படவுள்ள நம்பிக்கையில்லா பிரேரணைக்கு இலங்கை தமிழரசுக் கட்சி ஆதரவளிக்காது என அதன் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். 

அவர் இந்த விடயம் தொடர்பில் ஊடகங்களுக்கு தெரிவித்துள்ளதாவது, 

பிரதமர் பதவியில் இருந்தும், கல்வி அமைச்சர் பதவியில் இருந்தும் ஹரிணி அமரசூரியவை பதவி நீக்கம் செய்வதற்காக எதிர்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் நம்பிக்கையில்லா பிரேரணை ஒன்றை கொண்டு வருவதுடன் அதற்கான கையெழுத்தையும் சேகரித்து வருகின்றனர். 

எனினும் அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் இலங்கை தமிழரசுக் கட்சி கையெழுத்திடாது என தெரிவித்துள்ளார். 

ஹரிணி அமரசூரிய பெண் பிரதமர் என்ற அடிப்படையிலும், அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பான சரியான ஆதாரங்களை எவரும் வௌியிடாமை ஆகிய காரணங்களுக்காக அந்த நம்பிக்கையில்லா பிரேரணையில் எமது கட்சியினர் கையெழுத்திடவில்லை என தெரிவித்தார். 

சர்ச்சைக்குரிய அந்த கற்றல் தொகுதி நீக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள போதிலும், அதற்காக அவரை பதவி நீங்கக் கோருவதை ஒரு அரசியல் ரீதியான பழிவாங்கலாகவே தமது கட்சி கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 

இது தொடர்பில் பாராளுமன்ற குழுக்கூட்டத்திலும் கட்சியின் தலைமையுடன் கலந்துரையாடியுள்ளோம். 

எனவே அந்த நம்பிக்கையில்லா பிரேரணை எதிர்வரும் காலத்தில் பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டாலும் அந்த பிரேரணைக்கு ஆதரவாகவும், பிரதமருக்கு எதிராகவும் எமது கட்சி வாக்களிப்பதில் சாத்தியமில்லை என தெரிவித்துள்ளார். 

நாட்டிற்கு புதிய கல்வி சீர்த்திருத்தம் ஒன்று அவசியமானதாகும். உலக நாடுகளில் ஆரம்ப கல்விக்கு வழங்கப்படும் முக்கியத்துவம் இலங்கையில் இல்லை. 

இலங்கையில் ஆரம்பக் கல்வி பின்னடைவாகவே உள்ளது. 

தமிழ் மக்களின் பிரச்சினைகளை கையாளுவதில் அரசாங்கத்தின் மீது பல்வேறு விமர்சனங்கள் உள்ளன. 

எனினும் தனிப்பட்ட ரீதியில் பெண் ஒருவருக்கு எதிராக முன்னெடுக்கப்படும் அவதூறுகளில் நாம் பங்காளிகளாக மாற முடியாது என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார். https://adaderanatamil.lk/news/cmkat23ub03swo29nw0u30de6

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

2 months ago

sdfdf.jpg?resize=750%2C341&ssl=1

கச்சத்தீவு திருவிழாவிற்கான ஆலோசனைக் கூட்டத்தை புறக்கணித்த மீனவர்கள்.!

கச்சதீவில் புனித அந்தோனியார் ஆலயம் பெரும் திருவிழாவிற்கான ஏற்பாட்டு கூட்டத்தை பாரம்பரிய விசை படகு மீனவர்கள் இன்று புறக்கணித்துள்ளனர்.

குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

1974  ஆண்டின் கச்சத்திவு ஒப்பந்த அடிப்படையில் பாரம்பரிய மீனவர்கள் நாட்டுப்படகுகளில் கச்சத்திவு திருவிழாவிற்கு சென்று தமது நேர்த்திக்கடன் செய்வதற்கான உடன்பாடு இருந்து வந்த நிலையில் சில வருடங்களாக கச்சத்தீவு திருவிழா வணிக ரீதியாக விசைப்படகுகளில் கட்டணம் அறவீடு  செய்து சுற்றுலா பயணிகளை அழைத்துச் சென்று ஒரு வணிக சுற்றுலா பயணமாக மாற்றப்பட்டுள்ளதாகவும், இதனால் தாம் பாரம்பரிய நாட்டு படகில் கச்சதீவு திருவிழாவிற்கு செல்வதற்கு அரசாங்கம் ஏற்பாடு செய்து தரவேண்டும் என்று தெரிவித்தே இன்று இராமேஸ்வரம் புனித சூசையப்பர் ஆலயத்தில் இடம் பெற்ற கச்சதீவு திருவிழா ஏற்பாட்டு கூட்டித்தை புறக்கணித்துள்ளனர்.

சில வருடங்களுக்கு முன்னர் நாட்டு படகுகளில் கச்சதீவு திருவிழாவிற்கு நாட்டு படகுகள் செல்வதற்கு அனுமதி மறுக்க பட்டிருந்த நிலையில் உச்ச நீதி மன்றத்தை நாடி 1974 ம் ஆண்டின் ஒப்பந்த பிரகாரம் நாட்டு படகில் கச்சதீவு அந்தோனியார் திருவிழாவிற்கு செல்லலாம் என்ற அனுமதியை பெற்றிருந்தனர்.

ஆனாலும்  எதிர்வரும்  பிப்ரவரி 27ஆம் திகதி நடைபெறவுள்ள திருவிழாவிற்கு தமது நாட்டு படகில் செல்வதற்கு அனுமதிக்க வேண்டும் என்றே இன்று புறக்கணித்தனர்.

https://athavannews.com/2026/1459476

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு

2 months ago

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு

Jan 12, 2026 - 07:55 AM

நுரைச்சோலையின் மின் பிறப்பாக்கி ஒன்று வழமைக்கு

பராமரிப்பு பணிகள் காரணமாக தற்காலிகமாக செயலிழக்கச் செய்யப்பட்டிருந்த நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்தின் மின் பிறப்பாக்கி ஒன்று மீண்டும் வழமைக்கு கொண்டுவரப்பட்டுள்ளது. 

எவ்வாறாயினும், அந்த மின் பிறப்பாக்கி மூலம் உற்பத்தி செய்யப்படும் மின்சாரம் இதுவரையில் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்படவில்லை என்பதுடன், எதிர்வரும் சில தினங்களுக்குள் அதனை தேசிய மின் கட்டமைப்பில் இணைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்படுகின்றது. 

நுரைச்சோலை மின் உற்பத்தி நிலையத்திலுள்ள 3 மின் பிறப்பாக்கிகள் மூலம் தேசிய மின் கட்டமைப்புக்கு 900 மெகாவோட் மின்சாரம் விநியோகிக்கப்படும் நிலையில், தற்போது ஒரு மின் பிறப்பாக்கியின் ஊடாக மாத்திரமே தேசிய மின் கட்டமைப்புக்கு மின்சாரம் வழங்கப்பட்டு வருகின்றது. 

இதேவேளை, மற்றுமொரு மின் பிறப்பாக்கி இன்னும் செயலிழந்த நிலையிலேயே உள்ளதோடு, அதனை மீண்டும் வழமைக்குக் கொண்டுவருவதற்கான பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் குறிப்பிடப்படுகின்றது.

https://adaderanatamil.lk/news/cmkajj25o03sio29nahjma7hd

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்

2 months ago

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்

Jan 12, 2026 - 07:29 AM

வாகன உரிமை மாற்றத்திற்கும் TIN இலக்கம் கட்டாயம்

வாகனங்களின் உரிமையை மாற்றும் போது, வரி செலுத்துவோர் அடையாள இலக்கம் எனப்படும் "TIN இலக்கம்" தற்போது கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் அறிவித்துள்ளது. 

இதற்கான சட்ட நடைமுறைகள் கடந்த ஜனவரி மாதம் 5 ஆம் திகதி முதல் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக அதன் ஆணையாளர் நாயகம் கமல் அமரசிங்க குறிப்பிட்டுள்ளார். 

இதுவரை காலமும் புதிய வாகனங்களை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தில் பதிவு செய்வதற்கு மாத்திரமே TIN இலக்கம் கட்டாயமாக்கப்பட்டிருந்தது. 

எனினும், இந்த ஆண்டு முதல் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட வாகனங்களின் உரிமையை மாற்றும் போதும் அது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. 

மோட்டார் சைக்கிள்கள், கை உழவு இயந்திரங்கள், டிரக்டர்கள் மற்றும் முச்சக்கர வண்டிகள் தவிர்ந்த ஏனைய அனைத்து மோட்டார் வாகனங்களுக்கும் இது பொருந்தும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

வாகனப் பதிவு அல்லது உரிமை மாற்றத்தின் போது, புதிய உரிமையாளரின் தேசிய அடையாள அட்டை இலக்கம் மற்றும் TIN இலக்கம் ஆகியவற்றை மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் தரவு அமைப்பில் உள்ளீடு செய்தல் வேண்டும். 

இந்தச் சட்டத்தை இரண்டு ஆண்டுகளுக்கு முன்பே அமுல்படுத்த திட்டமிடப்பட்டிருந்த போதிலும், பல சந்தர்ப்பங்களில் அது ஒத்திவைக்கப்பட்டதாக மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cmkailmsc03sho29nug9qsbu1

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

2 months ago

கல்வி சீர்திருத்தத்திற்கு எதிர்ப்பு: விமல் வீரவன்ச சத்தியாக்கிரக போராட்டம்!

Published By: Digital Desk 1

12 Jan, 2026 | 11:06 AM

image

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச இன்று திங்கட்கிழமை (12) காலை சத்தியாக்கிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

புதிய கல்வி மறுசீரமைப்புக்கு எதிர்ப்பு தெரிவித்து பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை பதவி விலகுமாறு வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

இசுருபாயவில் உள்ள  கல்வி அமைச்சின் முன் இந்தப் போராட்டம் நடைபெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/235812

முல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமாக ஊடுருவும் அநுர!

2 months ago

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம்.

யாழ் கிளிநொச்சி மாவட்டத்தில் 3 ஆசனங்கள் வன்னி மாவட்டம் மற்றும் கரைதுறைப்பற்று பிரதேச சபைபையும் கைப்பற்றியுள்ளனர்.

தற்போது கரைதுறைப்பற்று பலநோக்கு கூட்டுறவு சங்கத்தையும் தேசிய மக்கள் சக்தி கைப்பற்றியுள்ளது.

நாடும் அநுரவோடு ஊர் எங்களோடு என்று தேர்தல் காலங்களில் கூறிக்கொண்டிருந்தனர்.

ஆனால் தற்போது ஊரும் அநுரவோடு செல்வதை காணக்கூடியதாகவுள்ளது.

இந்த விடயங்கள் தொடர்பில் ஆராய்கின்றது நாட்டு நடப்பு நிகழ்ச்சி..

Tamilwin
No image previewமுல்லைத்தீவையும் விட்டு வைக்காமல் தமிழர் பகுதிக்குள் ஆழமா...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்காவால் தான் ஒட்டுமொத்த அரசாங்கமும் ஓடிக்கொண்டிருக்கின்றனர் என்று கூறலாம். யாழ் கிளிநொச்சி ம...

இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

2 months ago

இந்திய உதவியின் கீழ் வடக்கு ரயில் பாதைகள் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

Published By: Digital Desk 3

11 Jan, 2026 | 05:26 PM

image

'தித்வா' (Ditwah) சூறாவளியினால் பாரியளவில் சேதமடைந்த வடக்கு மற்றும் தலைமன்னார் ரயில் மார்க்கத்தை புனரமைக்கும் பணிகள் இன்று இன்று ஞாயிற்றுக்கிழமை (11) ஆரம்பிக்கப்பட்டதாக ரயில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

மஹோ ரயில் நிலையத்தில் இன்றைய தினம்  காலை புனரமைப்புப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டது.

இந்திய அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட 05 மில்லியன் அமெரிக்க டொலர்  நிதி உதவியின் கீழ் இந்தப் பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

https://www.virakesari.lk/article/235774

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

2 months ago

இந்திய உதவித் திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்பட்ட முதல் பெய்லி பாலம் திறப்பு

Published By: Digital Desk 3

11 Jan, 2026 | 05:16 PM

image

100 அடி நீள பெய்லி பாலத்தை இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதிஅமைச்சர் பிரசன்ன குணசேன மற்றும் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனவிரத்ன ஆகியோர் சனிக்கிழமை (10) திறந்து வைத்தனர். 

இந்த நிகழ்வில் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் விஜேரத்னவும் கலந்து கொண்டார். 

இலங்கையின் மத்திய மாகாணத்திற்கும் ஊவா மாகாணத்திற்கும் இடையிலான ஒரு முக்கிய நில இணைப்பை மீட்டெடுக்கும் வகையில், கண்டி-ரானலை வீதியில் உள்ள B-492 வீதியில் இந்திய இராணுவத்தின் 19வது பொறியாளர் படைப்பிரிவால் இந்தப் பாலம் அமைக்கப்பட்டது. 

தித்வாவுக்குப் பின்னர் மீள் கட்டமைப்புக்கான இந்தியாவின் 450 மில்லியன் அமெரிக்க டொலர் உதவித் தொகுப்பின் கீழ் திட்டங்களை செயல்படுத்துவதற்கான தொடக்கத்தை இது குறிக்கிறது. 

2025 டிசம்பர் 22 மற்றும்  -23 அன்று இந்திய வெளிவிவகார அமைச்சர்  எஸ். ஜெய்சங்கர் வருகையின் போது இந்தத் திட்டம் அறிவிக்கப்பட்ட மூன்று வாரங்களுக்குள் செயல்படுத்தல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் நாட்களில் ஏனைய பகுதிகளிலும் திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

6.jpg

1.jpg

5.jpg

4.jpg

7.jpg

3.jpg

2.jpg

https://www.virakesari.lk/article/235773

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில்

2 months ago

சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை மாகாணசபைகள் முறைமை தொடர்வது அவசியம் - திலித் ஜயவீரவின் கருத்துக்கு சி.வி.விக்கினேஸ்வரன் பதில்

11 Jan, 2026 | 01:51 PM

image

(நா.தனுஜா)

இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது. தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம். ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று தமிழ்மக்கள் கூட்டணியின் தலைவரும், வடமாகாண முன்னாள் முதலமைச்சருமான சி.வி.விக்கினேஸ்வரன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று எனப் பாராளுமன்ற உறுப்பினர் திலித் ஜயவீர கூறியிருப்பது பற்றி தனது நிலைப்பாட்டைத் தெளிவுபடுத்தியிருக்கும் சி.வி.விக்னேஸ்வரன், மேலும் கூறியிருப்பதாவது,

சட்டத்தரணியும், பெருவர்த்தகருமான திலித் ஜயவீரவை நான் பெரிதும் மதிக்கின்றேன். அவர் அண்மைய காலத்திலேயே அரசியலுக்குள் பிரவேசித்தார். அதுமாத்திரமன்றி அவர் ஒரு தேசியவாதி என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. நாம் எமது மக்கள் குறித்து அதிகம் சிந்திப்பதைப் போன்று, அவர் அவரது மக்கள் குறித்து அதிகம் சிந்திக்கிறார்.

இருப்பினும் அவரது சிங்களத் தேசியவாதமும் எமது தமிழ்த்தேசியவாதத்தைப் போன்றதே என்பதை ஏற்க அவர் மறந்துவிட்டார். தனது சிங்கள மக்களுக்காக சிந்திக்கும் உரிமை அவருக்கு உண்டு.

இருப்பினும் இந்த ஒட்டுமொத்த நாடும் சிங்கள மக்களால் சூழ்ந்ததல்ல. இலங்கையில் பௌத்த மதம் அறிமுகமாவதற்கு முன்னரேயே வட, கிழக்கு மாகாணங்களில் வாழ்ந்த மக்கள் தமிழ்மொழியையே பேசினர். இந்நாட்டில் 3000 ஆண்டுகளுக்கும் மேலாக தமிழ்மொழி பேசும் மக்கள் வாழ்ந்துவருவதாக பேராசிரியர் இந்திரபாலா கூறுகிறார்.

இலங்கைக்கு மாகாணசபைகள் முறைமை பொருத்தமானதன்று என திலித் ஜயவீர கூறுவாராயின், இலங்கையில் அத்தகையதோர் மாற்றத்தைத் தோற்றுவிப்பதற்குத் தூண்டுதலாக அமைந்த அடிப்படைக்காரணிகள் குறித்து அவர் அறியவில்லை என்றே கருதவேண்டியிருக்கிறது.

உண்மையில் மாகாணசபைகள் ஒட்டுமொத்த இலங்கைக்குமான கட்டமைப்பாக அறிமுகப்படுத்தப்பட்ட முறைமை அல்ல. மாறாக வட, கிழக்கு மாகாணங்களுக்கான சுயாட்சியை வழங்கும் வகையில் அரசியலமைப்பின் ஊடாக வடிவமைக்கப்பட்ட முறைமையே அதுவாகும்.

எனவே வெறுமனே மாகாணசபைகள் முறைமை இலங்கைக்குக் பொருத்தமானதல்ல எனக் கூறுவதற்கு முன்னர், நாட்டின் கடந்தகால மற்றும் அண்மைய வரலாற்றை திலித் ஜயவீர நன்கு அறிந்துகொள்ளவேண்டும். தெற்குக்கு மாகாணசபைகள் அவசியமற்றதாக இருக்கலாம்.

ஆனால் ஒரு சமஷ்டி அரசியலமைப்பு உருவாக்கப்படும் வரை அல்லது அரசியலமைப்புத் திருத்தங்கள் ஊடாக வட, கிழக்கு மக்களுக்கான சுயாட்சி உறுதிப்படுத்தப்படும் வரை மாகாணசபைகள் முறைமை நிச்சயமாக நடைமுறையில் இருக்கவேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

https://www.virakesari.lk/article/235743

இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர்

2 months ago

இந்தோ - பசிபிக் மூலோபாய இலக்குகளுடன் இலங்கை வரும் புதிய அமெரிக்க தூதுவர்

11 Jan, 2026 | 12:38 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவராக சுமார் நான்கு ஆண்டுகள் பணியாற்றிய ஜூலி சங், எதிர்வரும் வெள்ளிக்கிழமையுடன் பதவிக்காலத்தை முடித்துக்கொண்டு கொழும்பிலிருந்து விடைபெறுகிறார். இதனைத் தொடர்ந்து, அமெரிக்காவின் சிரேஷ்ட இராஜதந்திரி எரிக் மேயர் புதிய தூதுவராகக் கடமைகளைப் பொறுப்பேற்க உள்ளார்.

இலங்கைக்கான தூதுவராக நியமனம் பெறுவற்கு முன்னர், அமெரிக்க வெளியுறவுச் சேவையின் சிரேஷ்ட உறுப்பினரான எரிக் மேயர், தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கான பிரிவின் சிரேஷ்ட அதிகாரியாகப் பணியாற்றினார்.

ஆப்கானிஸ்தான், பங்காளதேசம், பூட்டான், இந்தியா, கஜகஸ்தான், கிர்கிஸ்தான், மாலைத்தீவுகள், நேபாளம், பாக்கிஸ்தான், இலங்கை, தஜிகிஸ்தான், துர்க்மெனிஸ்தான் மற்றும் உஸ்பெகிஸ்தான் ஆகிய நாடுகள் உள்ளடங்கிய இப்பிராந்தியத்தில் அமெரிக்க நிர்வாகத்தின் கொள்கை முன்னுரிமைகளை ஒருங்கிணைப்பதற்கும், கண்காணிப்பதற்கும் அவர் பொறுப்பு வகித்தார்.

தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களில் ஆழமான அனுபவம் கொண்ட எரிக் மேயர், வாஷிங்டனின் இந்தோ-பசிபிக் மூலோபாயத்தில் இலங்கையை ஒரு முக்கியமான மையப்புள்ளியாகக் கருதுகிறார்.

சமீபத்தில் அமெரிக்க செனட் சபையின் வெளியுறவு உறவுகள் குழுவின் முன்னிலையில் தெளிப்படுத்திய அவர், தனது பதவிக்காலத்தில் அமெரிக்கா முன்னுரிமை அளிக்கவுள்ள முக்கிய விடயங்கள் குறித்துத் தெளிவுபடுத்தினார். எரிக் மேயரின் வருகையானது, இலங்கை பொருளாதார நெருக்கடி மற்றும் 'தித்வா' சூறாவளி பாதிப்புகளில் இருந்து மீண்டு வரும் ஒரு முக்கியமான காலப்பகுதியில் அமைகிறது.

குறிப்பாக, இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் சீனாவின் வளர்ந்து வரும் செல்வாக்கை எதிர்கொள்வதிலும், இலங்கையின் கடல்சார் பாதுகாப்பை உறுதிப்படுத்துவதிலும் அமெரிக்கா தீவிர கவனம் செலுத்தும் என்பதை அவர் கோடிட்டுக் காட்டியுள்ளார். உலகின் கச்சா எண்ணெய் போக்குவரத்தில் மூன்றில் இரண்டு பங்கு இலங்கையின் கடல்வழியாகவே செல்கிறது. எனவே, சுதந்திரமான மற்றும் திறந்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்தைப் பேணுவதற்கு இலங்கையுடனான பாதுகாப்பு ஒத்துழைப்பு அவசியமானது என மேயர் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கையின் பொருளாதார சுதந்திரம் அதன் தேசிய இறையாண்மையுடன் நேரடித் தொடர்புடையது எனக் குறிப்பிட்டுள்ள அவர், சர்வதேச நாணய நிதியத்தின் திட்டங்களுடன் இணைந்த பொருளாதாரச் சீர்திருத்தங்களைத் தொடர கொழும்பை ஊக்குவிக்கப்போவதாகத் தெரிவித்துள்ளார்.

குறிப்பாக, கொழும்பு துறைமுகத்தின் விரிவாக்கத் திட்டங்கள் இலங்கையை பிராந்திய பொருளாதாரத்தின் தலைமையாக மாற்றும் வல்லமை கொண்டவை என்றும், இது அமெரிக்க முதலீட்டாளர்களுக்குப் புதிய வாய்ப்புகளைத் திறக்கும் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சீனாவின் கடன் பொறி மற்றும் உள்கட்டமைப்புத் திட்டங்கள் குறித்து சர்வதேச அளவில் எழுந்துள்ள விமர்சனங்களைச் சுட்டிக்காட்டிய செனட் குழுவினருக்குப் பதிலளித்த அவர், இலங்கை தனது துறைமுகங்கள் மீதான முழுமையான இறையாண்மையைப் பேணுவதை அமெரிக்கா உறுதி செய்யும் என்றார்.

ஜூலி சங்கின் பதவிக்காலத்தில் வலுப்படுத்தப்பட்ட பாதுகாப்புப் பங்களிப்பு, கல்வி மற்றும் கலாசார உறவுகளை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்வதே தனது நோக்கம் என எரிக் மேயர் தெரிவித்துள்ளார்.

ஏற்கனவே சூறாவளி நிவாரணப் பணிகளுக்காக 2 மில்லியன் டொலர்களை அமெரிக்கா ஒதுக்கியுள்ள நிலையில், எதிர்காலத்தில் கடல்சார் பாதுகப்பு, சட்ட அமுலாக்கக் கூட்டுறவு மற்றும் துறைமுகப் பாதுகாப்பு ஆகிய துறைகளில் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் பலப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

https://www.virakesari.lk/article/235739

புலம் பெயர் தமிழர்களின் காணி தடையின்றி முன்னெடுக்கலாம்; ஏற்பாடுகள் காணப்படுவதாக பதிவாளர் திணைக்களம் அறிவிப்பு

2 months ago

புலம் பெயர் தமிழர்களின் காணி தடையின்றி முன்னெடுக்கலாம்; ஏற்பாடுகள் காணப்படுவதாக பதிவாளர் திணைக்களம் அறிவிப்பு

11 Jan, 2026 | 12:38 PM

image

(எம்.மனோசித்ரா)

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை. வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியுமென பதிவாளர் திணைக்களம் தெரிவித்தது.

பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது. இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது, 

புலம் பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் தமிழ் மக்கள், உள்நாட்டிலுள்ள அவர்களது காணிகளை விற்பதற்கோ அல்லது வேறொருவரது பெயருக்கு மாற்றுவதற்கோ எவ்வித தடையும் இல்லை.

வழக்கறிஞர் பத்திரத்தின் ஊடாக அதற்குரிய நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும். காணிகளைப் பதிவு செய்வதிலும் எவ்விதத் தடையும் இல்லை.

வெளிநாடுகளிலுள்ள அந்த மக்களுக்காக உள்நாட்டிலுள்ளவர்கள் காணியொன்றைக் கொள்வனவு செய்வதாயின் காணிப் பதிவு சட்டத்தின் கீழ் காணி விற்பவர் வாங்குபவர் என இருவரும் கையெழுத்திட வேண்டும்.

விற்பவர் உள்நாட்டிலும், காணியைக் கொள்வனவு செய்பவர் வெளிநாட்டிலும் இருப்பாராயின் அவர் எழுத்து மூலம் ஒரு கடிதம் வழங்குவாராயின் அதுவே போதுமானது.

வெளிநாடுகளிலுள்ள இலங்கையர்கள் அங்கிருந்தவாறே காணியைக் கொள்வனவு செய்வதில் எவ்வித மாற்றமும் இல்லை. மேலும் நபரொருவர் தனது காணி தொடர்பில் பிரிதொருவர் போலியான ஆவணமொன்றை தயாரிப்பதாகக் கருதினால், அதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகளையும் செய்து கொள்ள முடியும். குறித்த காணிக்கு தடையுத்தரவு விண்ணப்பம்  போடப்பட்டால் அதன் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

https://www.virakesari.lk/article/235738

சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ

2 months ago

சீன ஆய்வுக் கப்பல்களுக்கான தடை நீங்குமா? - முக்கிய இராஜதந்திர நகர்வுடன் கொழும்பு வருகிறார் வோங் யீ

11 Jan, 2026 | 12:30 PM

image

(லியோ நிரோஷ தர்ஷன்)

சீன வெளியுறவு அமைச்சர் வோங் யீ தனது ஆப்பிரிக்கப் பயணத்தை முடித்துக்கொண்டு நாடு திரும்பும் வழியில், நாளை மறுநாள் செவ்வாய்க்கிழமை இலங்கைக்கு உத்தியோகப்பூர்வ விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார். கடந்த 36 ஆண்டுகளாக சீன வெளியுறவு அமைச்சர்கள் தங்களது ஆண்டின் முதல் வெளிநாட்டுப் பயணத்தை ஆப்பிரிக்க நாடுகளுக்கே மேற்கொண்டு வரும் மரபைத் தொடர்ந்து, எத்தியோப்பியா, சோமாலியா, தான்சானியா மற்றும் லெசோதோ ஆகிய நாடுகளுக்கான பயணத்தை முடித்துக்கொண்டு அவர் கொழும்பு வரவுள்ளார்.

2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்திற்குப் பிறகு வோங் யீ இலங்கைக்கு மேற்கொள்ளும் மிக முக்கியமான விஜயமாக இது பார்க்கப்படுவதுடன், 'தித்வா' சூறாவளியால் பாதிக்கப்பட்டுள்ள இலங்கையின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகச் சீனாவினால் அறிவிக்கப்படவுள்ள விசேட நிதி உதவித் திட்டம் குறித்து பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தனது இரண்டு நாள் பயணத்தின் போது, வோங் யீ ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் ஹரிணி அமரசூரிய மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் ஆகியோரைச் சந்தித்துப் பேசவுள்ளார். மேலும், மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா உள்ளிட்ட அரசாங்கத்தின் முக்கிய பிரமுகர்களுடன் அவர் விசேட கலந்துரையாடல்களை முன்னெடுக்கவுள்ளார்.

குறிப்பாக, இலங்கை – சீன சுதந்திர வர்த்தக ஒப்பந்தம் மற்றும் உத்தேச ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் போன்ற நீண்டகாலமாகத் தாமதிக்கப்பட்டு வரும் திட்டங்கள் குறித்து இந்த விஜயத்தின் போது விரிவாகக் கவனம் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இருப்பினும், சீன ஆய்வுக் கப்பல்கள் இலங்கைக்கு வருவதற்கு விதிக்கப்பட்டுள்ள தடைகள் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவில் நீண்டகால நெருக்கடியாக நீடிக்கிறது. புதிய முதலீட்டுத் திட்டங்களை அறிவிப்பதில் சீனா காட்டி வரும் பின்னடிப்புகளுக்கு இந்தக் கப்பல் விவகாரமே பிரதான காரணமாகக் கருதப்படும் நிலையில், வோங் யீயின் வருகையின் போது இவ்விடயம் குறித்து எத்தகைய இணக்கப்பாடுகள் எட்டப்படும் என்பது அரசியல் ரீதியாகப் பெரும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

அண்மையில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உயர்மட்டக் குழுவினர் ஜே.வி.பி தலைமையகத்திற்குச் சென்று பேச்சுவார்த்தைகளை நடத்தியுள்ள நிலையில், புதிய அரசியல் சூழலில் சீனாவின் 15 ஆவது ஐந்தாண்டுத் திட்டத்தின் ஒரு பகுதியாக இலங்கைக்கான உதவிகளை உறுதிப்படுத்துவதே இந்த விஜயத்தின் பிரதான நோக்கமாகக் கருதப்படுகிறது.

https://www.virakesari.lk/article/235736

மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு

2 months ago

மலையகத் தமிழ் மக்களின் மீள் கட்டுமான பணிகளில் மாற்றாந்தாய் மனப்பாங்கு - அரசாங்கத்தின் மீது மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவு குற்றச்சாட்டு

11 Jan, 2026 | 12:20 PM

image

தித்வா சூறாவளியினால் பாதிக்கப்பட்ட மலையகத் தமிழ் மக்களின் நிவாரணம் மற்றும் மீள் கட்டுமானப் பணிகளில் அரசாங்கம் மாற்றாந்தாய் மனப்பாங்குடன் செயல்படுவதாக மலையக மீள் கட்டமைப்புக்கான சிவில் சமூகக் கூட்டிணைவின் சிரேஷ்ட உறுப்பினர் ஜூவரட்ணம் சுரேஷ் குற்றம் சாட்டியுள்ளார்.

கொழும்பு மருதானையில் அமைந்துள்ள சமூக சமய மையத்தில்  நேற்று முன்தினம் வெள்ளிக்கிழமை (09) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றம் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்,

நாட்டின் ஏனைய பகுதிகளில் மீளமைப்புப் பணிகள் வேகமெடுத்துள்ள போதிலும், இடம் பெயர்ந்தவர்களில் 99 சதவீதமானோர் தங்கியுள்ள மலையகத்தின் ஐந்து மாவட்டங்களில்  அத்தகைய முன்னேற்றம் காணப்படவில்லை. ஏற்கனவே நிலவும் சமூக- பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் காரணமாக இம்மக்கள் அனர்த்தங்களினால் மிக மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசாங்கம் அறிவித்துள்ள நிவாரணத் திட்டங்களை அணுகுவதில் போதிய கொள்கைத் தெளிவின்மை, நில உரிமைகள் தொடர்பான சிக்கல்கள் மற்றும் நிர்வாக அதிகாரிகளின் அனுபவக்குறைவு போன்றவை பெரும் தடையாக இருக்கின்றது.

குறிப்பாக, ஜனாதிபதியால் அறிவிக்கப்பட்ட நிலத்திற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் மற்றும் வீடமைப்பிற்கான ஐம்பது இலட்சம் ரூபாய் நிதியுதவியை மக்கள் பெற்றுக்கொள்வதற்கான பொறிமுறையை உடனடியாகத் தெளிவுபடுத்துவதோடு, நிலங்களை அடையாளம் காண்பதற்கும் புனரமைப்புப் பணிகளைக் கண்காணிப்பதற்கும் பல்தரப்புப் பிரதிநிதிகளைக் கொண்ட குழுவொன்றை ஜனாதிபதி நியமிக்க வேண்டும்.

மேலும், தோட்ட நிறுவனங்கள் போன்ற இடைத்தரகர்களைத் தவிர்த்து அரசாங்கம் நேரடியாக நிவாரணங்களை வழங்க வேண்டும். இந்திய வீடமைப்புத் திட்டத்தைப் பாதிக்கப்பட்டுள்ள அனைவருக்கும் பாகுபாடின்றி வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட மக்களை மீண்டும் அபாயகரமான இடங்களுக்குத் தள்ளாமல் அவர்களைத் தேசிய நீரோட்டத்தில் இணைக்கும் வகையில் பாதுகாப்பான நில உரிமையுடன் கூடிய நிரந்தரத் தீர்வுகளை வழங்க வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/235734

Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

2 months ago

Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு

11 Jan, 2026 | 11:37 AM

image

முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களின் முறையான தரப்படுத்தலுக்கு எதிர்காலத்தில் தர நிர்ணயங்களை அறிமுகப்படுத்துவதும், முன்னிளம் பருவ ஆசிரியர்களின் தொழில்முறை திறனை மேம்படுத்த தேசிய அளவிலான பயிற்சி திட்டங்களை ஏற்பாடு செய்யும் நோக்கத்திலும் செயல்படுத்தப்படும் “பாதுகாப்பான சிறுவர் உலகம் -  படைப்பாற்றல் மிக்க எதிர்கால தலைமுறை Clean Sri Lanka - STEP UP முன்னிளம் பருவ அபிவிருத்தி தேசிய வேலைத்திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வு, நடைபெற்றது.

நேற்று சனிக்கிழமை (10)  முற்பகல் அலரி மாளிகையில் பிரதமரும் கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தலைமையில் நடைபெற்றது.

அரசாங்கத்தின் "வளமான நாடு - அழகான வாழ்க்கை" எண்ணக்கருவை நனவாக்கும் வகையில், சிறுவர்களின் பாதுகாப்பிற்காக Clean Sri Lanka வேலைத்திட்டத்துடன் இணைந்து, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சு, கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு உள்ளிட்ட பல நிறுவனங்கள் இணைந்து இந்த தேசிய வேலைத்திட்டத்தை செயல்படுத்துகின்றது. 

சுகாதார ஊக்குவிப்பு பணியகம் மற்றும் யுனிசெஃப் ஆகியவற்றுடன் இணைந்து 900  முன்னிளம் பருவ அபிவிருத்தி மையங்களுக்கு சிறுவர்களின் அடையாளம் காணப்பட்ட பத்து ஆளுமைகளை வளர்ப்பதற்காக வடிவமைக்கப்பட்ட கற்றல் கருவிகள் மற்றும் சிறப்பு வள கருவிகளும் இங்கு விநியோகிக்கப்பட்டன.

சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ, மகளிர் மற்றும் சிறுவர் அலுவல்கள் அமைச்சர் சரோஜா போல்ராஜ், பாராளுமன்ற உறுப்பினர் வைத்தியர் நஜித் இந்திக்க, ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க,  ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் (நிதி மற்றும் பொருளாதார அலுவல்கள்) ஜி.எம்.ஆர்.டி. அபோன்சு, ஜனாதிபதியின் மேலதிக செயலாளர்  எஸ்.பி.சி. சுகீஸ்வர ஆகியோருடன் மாகாண ஆளுநர்களும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் வருகை தந்த முன்னிளம் பருவ அபிவிருத்தி  மையங்களைச் சேர்ந்த முன்பள்ளி ஆசிரியர்கள் உட்பட ஏராளமானோர் இந்நிகழ்வில் இணைந்திருந்தனர்.

WhatsApp_Image_2026-01-11_at_07.02.38.jp

WhatsApp_Image_2026-01-11_at_07.02.55.jp

WhatsApp_Image_2026-01-11_at_07.02.36__1

WhatsApp_Image_2026-01-11_at_07.02.35__1

WhatsApp_Image_2026-01-11_at_07.02.36.jp

WhatsApp_Image_2026-01-11_at_07.02.35__1

WhatsApp_Image_2026-01-11_at_07.02.32__1

WhatsApp_Image_2026-01-11_at_07.02.31__1

WhatsApp_Image_2026-01-11_at_07.02.31.jp

https://www.virakesari.lk/article/235729

2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல்

2 months ago

2,200 பேருக்கு ‘காணாமல் போனோருக்கான’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது - பதிவாளர் திணைக்களம் தகவல்

11 Jan, 2026 | 04:12 PM

image

(எம்.மனோசித்ரா)

யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010 மற்றும் 2016ஆம் ஆண்டுகளில் இந்த சட்ட திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் சுமார் 2,200 காணாமல் போனோருக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளதாகவும், எனினும் 2016ஆம் ஆண்டு மரண சான்றிதழ் வழங்கும் சட்ட திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதழ்களே வழங்கப்பட்டதாகவும் பதிவாளர் திணைக்களம் மேலும் தெரிவித்தது.

பதிவாளர் திணைக்கள ஆணையாளர் நாயகம் சசிதேவி ஜலதீபன் தலைமையில் திணைக்களத்தின் பல்வேறு விடயம் சார் அதிகாரிகள் வீரகேசரியுடன் விசேட கலந்துரையாடலொன்றை முன்னெடுத்திருந்தனர். இதன் போதே இவ்விடயம் தொடர்பில் தெரிவிக்கப்பட்டது.

இது குறித்து மேலும் தெரிவிக்கப்பட்டதாவது :

யுத்தத்தில் காணாமல் போனோருக்கான மரண சான்றிதழ் வழங்குவதற்கான செயற்திட்டத்தின் போது, வழமையான மரண சான்றிதழ் வழங்கும் சட்டத்தில் சில திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2010இல் இந்த திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

2010ஆம் ஆண்டு 10ஆம் இலக்க மரணங்களைப் பதிவு செய்தல் தற்காலிக ஏற்பாடுகள் சட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. 2016ஆம் ஆண்டு இந்த சட்டத்தில் மீண்டும் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 2016ஆம் ஆண்டு 16ஆம் இலக்க தற்காலிக ஏற்பாடுகள் மரணங்களைப் பதிவு செய்தல் சட்ட திருத்தம் அக்காலப்பகுதியில் அறிமுகப்படுத்தப்பட்டது.

இந்த இரு தற்காலிக சட்ட ஏற்பாடுகளுக்கமைய, யுத்தத்தின் போது மாத்திரமின்றி, இயற்கை மரணம், யுத்த மோதல்கள், சிவில் கலவரங்கள் உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கப்பட்டன. 2016ஆம் ஆண்டு திருத்தத்துக்கு முன்னர் காணாமல் போனோருக்கு மரண சான்றிதலே வழங்கப்பட்டது. எனினும் அதன் பின்னர் சட்ட திருத்தத்தின் ஊடாக காணாமல் போனமைக்கான சான்றிதழ் (Certificate of Absence) வழங்கும் செயற்திட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இவ்வாறு காணாமல் போனமைக்கான சான்றிதழ் அறிமுகப்படுத்தப்பட்ட அதேவேளை, காணாமல் போனோர் தொடர்பான அலுவலகமும் 2016இல் நிறுவப்பட்டது.

சட்ட திருத்தத்துக்கமைய காணாமல் போனோர் தொடர்பான அலுவலகத்தின் பரிந்துரைக்கமைய பதிவாளர் திணைக்களத்தினால் காணாமல் போனமைக்கான சான்றிதழை வழங்க முடியும். வழமையான மரண சான்று பதிவு சட்டத்தின் கீழ் மரணத்தைப் பதிவு செய்வதற்கு மரணித்த நபர் தொடர்பில் தகவல்களை வழங்குவதற்கு, அதனை உறுதிப்படுத்துவதற்கு நபரெர்ருவர் முன்னிலையாக வேண்டும்.

விண்ணப்பதாரர் விண்ணப்பத்தை சமர்ப்பித்த பின்னர் அது குறித்து விசாரணைகளை முன்னெடுத்து மரண சான்றிதழ் வெளியிடப்படும். அந்த வகையில் 2016ஆம் ஆண்டு சட்ட திருத்தத்தின் பின்னர் இதுவரையில் 2,200க்கும் மேற்பட்டோருக்கு காணாமல் போனமைக்கான சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

இவற்றில் சுமார் 300ஐ தவிர ஏனைய அனைத்தும் யுத்த காலத்தில் வடக்கு, கிழக்கில் காணாமல் போனோருக்கு வழங்கப்பட்டுள்ளது. இவற்றுடன் இராணுவ மரணங்களும் பிரத்தியேகமாக பதிவு செய்யப்பட்டுள்ளன. 1951ஆம் ஆண்டு 17ஆம் இலக்க சட்டத்தின் 39 - 4 ஆ உறுப்புரைக்கமைய அவசர கால சட்டத்தின் கீழ் மரண பதிவு தொடர்பில் பதிவாளர் நாயகத்துக்கு விசேட அதிகாரம் உரித்தாக்கப்பட்டுள்ளது. அதற்கமைய 24,808 இராணுவ மரணங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

(1990-12-12 முதல் 2017-05-29 வரை) காணாமல் போனோர் அலுவலகம் ஸ்தாபிக்கப்பட்டதன் பின்னர் பதிவாளர் நாயகம் திணைக்களத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட வேண்டும். எனினும் காணாமல் போனோர் அலுவலகம் மக்கள் மத்தியில் சென்று விசாரணைகளை முன்னெடுத்து காணாமல் போனோர் குறித்த பதிவுகளை மேற்கொள்ளும். அதனை அடிப்படையாகக் கொண்டு பதிவாளர் நாயகம் திணைக்களத்தால் சான்றிதழ் வழங்கப்படும்.

இதன் போது காணாமல் போனோர் அலுவலகத்தின் அறிக்கையை அடிப்படையாகக் கொண்டு ஒப்பு நோக்கும் போது எமது திணைக்களத்துக்கு நபர்கள் வருவதில் குறைபாடுகள் காணப்படுகின்றமை இனங்காணப்பட்டுள்ளது. அதாவது அவர்களது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள எண்ணிக்கைக்கமைய எம்மால் சான்றிதழ்கள் வழங்கப்படாமை இனங்காணப்பட்டுள்ளது.

இந்த இடைவெளியை நிரப்புவதற்காக காணாமல் போனோர் அலுவலகம் நடமாடும் சேவையை முன்னெடுக்கும் போது, எமது திணைக்களத்தின் பதிவாளர் அதிகாரியொருவர் அங்கு சேவையில் இணைக்கப்பட்டு பதிவு செய்யும் வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

அடுத்த ஆண்டில் காணாமல் போனோர் அலுவலகம் - பதிவாளர் திணைக்களத்துக்கிடையில் காணாமல் போனோர் தொடர்பான தகவல்களுக்கிடையிலான இடைவெளியை இனங்கண்டு அதனை சமப்படுத்துவதற்கான திட்டமிடல் தயாரிக்கப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/235767

பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!

2 months 1 week ago

Screenshot-2026-01-11-150106.jpg?resize=

பிணையில் விடுதலையான டக்ளஸ் தேவானந்தா கங்காராம விகாராதிபதியிடம் ஆசி பெற்றார்!

கொழும்பு கங்காராம விகாராதிபதி கலாநிதி வண. கிருந்தே அஸ்ஸாஜி நாயக்க தேரரை மரியாதை நிமிர்த்தம் இன்று சந்தித்து கலந்துரையாடிய செயலாளர் நாயகம் தோழர் டக்ளஸ் தேவானந்தா, விகாரதிபதியின் ஆசிகளையும் பெற்றுக் கொண்டார்.

இதன்போது, “பல்வேறு சவால்களையும் கடந்து வந்த நீங்கள், எதிர்காலத்தினை நம்பிக்கையுடன் எதிர்கொள்ள வேண்டும் எனவும் இந்த நாட்டிலே நியாயமான முறையில் சிந்திக்கின்ற தமிழ், சிங்கள, முஸ்லிம் மக்கள் மத்தியில் உங்களின் அரசியல் செயற்பாடுகள் தொடர்பாக உயர்ந்த அபிப்பிராயம் இருப்பதை அவதானிக்க முடிகின்றது” என்றும் விகாராதிபதி தெரிவித்தார்.

மேலும், திட்டமிடப்பட்ட காரணங்களுக்காக அவதூறு பரப்புகின்றவர்கள் தொடர்பாக அலட்டிக் கொள்ளாமல் மக்கள் நலன் சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும், டக்ளஸ் தேவானந்தா அவர்களின் அரசியல் செயற்பாடுகளை தொடர்ந்தும் நாட்டு மக்கள் எதிர்பார்ப்பதாகவும் குறித்த சந்திப்பின்போது விகாராதிபதி தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

https://athavannews.com/2026/1459396

தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

2 months 1 week ago

New-Project-33.jpg?resize=600%2C300&ssl=

தைப்பொங்கல் தினத்தில் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

தைப்பொங்கல் தினமான எதிர்வரும் 15ஆம் திகதி யாழ்ப்பாணத்திற்கு வருகை தரவுள்ள ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்றவுள்ளார்.

யாழ்ப்பாணத்திற்கு வருகை தரும் ஜனாதிபதி , 15ஆம் திகதி மதியம் 2 மணியளவில் வேலணை தெற்கு ஸ்ரீ சுப்பிரமணியம் சுவாமி கோவில் முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

பின்னர் அங்கிருந்து மானிப்பாய் மருதடி விநாயகர் ஆலய முன்றலில் நடைபெறும் பொங்கல் நிகழ்வில் மாலை 4 மணியளவில் கலந்து கொள்ளவுள்ளார்.

மறுநாள் 16ஆம் திகதி காலை 09 மணிக்கு மீசாலை ஆரம்ப பாடசாலையில் வீட்டு திட்ட பயனாளிகளுக்கான காசோலை வழங்கும் நிகழ்வில் கலந்து கொள்வார்.

பின்னர் மதியம் 2 மணியளவில் கொக்குவில் தொழிநுட்ப கல்லூரி மைதானத்தில் “முழு நாடும் ஒன்றாக .. ” போதைப்பொருள் ஒழிப்புக்கான தேசிய செயற்பாட்டு நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளார்.

https://athavannews.com/2026/1459391

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

2 months 1 week ago

download-23.jpg?resize=300%2C168&ssl=1

ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் அறிமுகம்!

பறக்கும் ட்ரோன் (Drone) விமானங்களை ஒழுங்குபடுத்துவதற்காக முறையான வேலைத்திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படவுள்ளதாக சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது குறித்து அந்த அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் கெப்டன் தமிந்த ரம்புக்வெல்ல கருத்து வெளியிட்டுள்ளார்.

இதன்போது வணிக ரீதியான பெறுமதி கொண்ட அனைத்து ட்ரோன் விமானங்களும் கட்டாயம் பதிவு செய்யப்பட வேண்டும் எனத் தெரிவித்தார்.

இதேவேளை, சிவில் விமானப் போக்குவரத்து அதிகாரசபை இந்த ட்ரோன் விமானங்களை ஒழுங்குபடுத்தும் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றது எனவும் இதில் மனிதர்களை ஏற்றிச் செல்லும் ட்ரோன்கள் மற்றும் ஆளில்லா ட்ரோன்கள் என இரண்டு பிரிவுகள் உள்ளன. இவை முறையாக வானில் பறக்கவிடப்படுவதற்கான ஒழுங்குவிதிகளை நாம் அறிமுகப்படுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் இந்த ஆண்டிலிருந்து அவற்றை அமுல்படுத்தத் தீர்மானித்துளளதாகவும் 250 கிராமிற்கும் குறைவான எடையுடைய ‘விளையாட்டுப் பொருள்’ (Toy) வகையைச் சேர்ந்த ட்ரோன்களை நாம் ஒழுங்குபடுத்தப் போவதில்லை எனவும் ஆனால், 250 கிராமிற்கு மேற்பட்ட அல்லது வணிக ரீதியாகப் பயன்படுத்தப்படும் ட்ரோன்களை நாம் கட்டாயம் ஒழுங்குபடுத்த வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, அவற்றை இறக்குமதி செய்வதற்கும் தனியான ஒழுங்குவிதிகள் காணப்படுகின்ற நிலையில் அதற்கமையச் ட்ரான் பயன்பாட்டாளர்கள் செயற்பட முடியும் எனவும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2026/1459342

Checked
Wed, 03/18/2026 - 07:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr