தமிழகச் செய்திகள்

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

3 months 2 weeks ago

stalin-fe.jpg?resize=593%2C354&ssl=1

தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி! – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

உத்தியோகபூர்வ பயணமாக ஜெர்மனிக்கு விஜயம் மேற்கொண்டுள்ள தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், “தமிழ்நாடுதான் இந்தியாவின் ஜெர்மனி” எனக் குறிப்பிட்டார்.

தொழில் முதலீடுகளை ஈர்க்கும் நோக்கில் ஜெர்மனிக்கு சென்றுள்ள அவர், TNRising ஜெர்மனி முதலீட்டு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றினார்.

இதன்போது, தமிழ்நாடு இந்தியாவில் இரண்டாவது பெரிய பொருளாதாரம் கொண்ட மாநிலமாகவும், அதிகளவிலான தொழிற்சாலைகள், திறமையான மனிதவளங்கள் மற்றும் உயர் நகர்மயமடைந்த மாநிலமாகவும் இருப்பதை விளக்கினார்.

இந்த மாநாட்டில், 3,819 கோடிஇந்திய ரூபாய்  மதிப்பிலான 23 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன.

இதன் மூலம் 9,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகள் உருவாகும் என தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்த ஜெர்மனி பயணத்தில் மொத்தம் 7,020 கோடி இந்திய ரூபாய் மதிப்பிலான 26 ஒப்பந்தங்கள், 15,000க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதாகவும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸ்டாலின் தனது உரையில், ஜெர்மனியின் தொழில் நுணுக்கம், புதுப்பிப்பு திறன், கலையுணர்வு ஆகியவை தமிழ்நாட்டை ஈர்த்துள்ளது எனவும், “Made in Germany” தரச்சின்னமாக இருப்பது போலவே, “Made in Tamil Nadu” என்பதும் உலகளவில் தரத்திற்கான அடையாளமாக உருவாகிக் கொண்டிருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அத்துடன் BMW, Daimler, Mercedes-Benz, Siemens, Bosch உள்ளிட்ட பல்வேறு ஜெர்மன் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் ஏற்கெனவே வெற்றிகரமாக செயற்பட்டு வருகின்றது எனவும் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் மோட்டார் வாகனங்கள், மின்சார வாகனங்கள், மின்னணு உற்பத்தி, தோல் மற்றும் ஆடைத் தொழில், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற துறைகளில் முன்னேற்றம் கண்டுள்ளதாகவும்  அவர் குறிப்பிட்டார்.

தமிழகத்தில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கவும், வெளிநாட்டு முதலீடுகளை ஈர்க்கவும் தமிழக அரசு தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1445675

சென்னையில் மேகவெடிப்பால் கொட்டித் தீர்த்த மழை : எதிர்பாராத வானிலை நிகழ்வுகளுக்கு என்ன காரணம்?

3 months 2 weeks ago

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

கட்டுரை தகவல்

  • முரளிதரன் காசிவிஸ்வநாதன்

  • பிபிசி தமிழ்

  • 3 மணி நேரங்களுக்கு முன்னர்

சனிக்கிழமையன்று இரவில் சென்னையின் மணலியிலும் அதனை ஒட்டியுள்ள சில பகுதிகளிலும் திடீரென பெரும் மழைபெய்திருக்கிறது. மணலியில் பெய்த மழைக்கு மேகவெடிப்பே காரணம் என சென்னை வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. என்ன நடந்தது?

சனிக்கிழமையன்று இரவில் சென்னை நகரின் பல பகுதிகளில் திடீரென மழை கொட்டித் தீர்த்தது. மணலி போன்ற பகுதிகளில் மேகவெடிப்பு நடந்ததாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

தென் மேற்குப் பருவமழை இந்தியா முழுவதும் தற்போது தீவிரமடைந்திருக்கிறது. தமிழ்நாட்டில் தென் மேற்குப் பருவமழை காலகட்டத்தில் பெரிய அளவில் மழை பெய்யாது என்றாலும் வெப்பச் சலனத்தால் ஆங்காங்கே மழை பெய்வது வழக்கம். அதைப் போலவே சில நாட்களுக்கு ஒரு முறை மழை பெய்துவந்தது.

இந்த நிலையில் சனிக்கிழமையன்று (ஆகஸ்ட் 30) இரவு சென்னை முழுவதும் இடியுடன் கூடிய மழை பரவலாகப் பெய்தது. குறிப்பாக சென்னையின் வடபகுதியில் மழையின் தீவிரம் அதிகமாக இருந்தது. அன்று இரவு 11 முதல் 12 மணிவரை பல இடங்களில் மழை கொட்டித் தீர்த்தது. இந்த மழை தொடர்பாக சென்னை வானிலை ஆய்வுமையம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் அன்று இரவில் மூன்று இடங்களில் அதிதீவிர கன மழையும் எட்டு இடங்களில் தீவிர கனமழையும் 28 இடங்களில் கனமழையும் பதிவானது.

மணலி, மணலி புதுநகர், விம்கோ நகர் ஆகிய இடங்களில் அதிதீவிர கனமழை பதிவானதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்தது. இருபத்தி நான்கு மணி நேரத்தில் மணலியில் 27.15 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 25.56 செ.மீ மழையும் விம்கோ நகரில் 22.86 செ.மீ. மழையும் பதிவானது.

மணலியிலும் விம்கோ நகரிலும் 'மேகவெடிப்பு'

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

ஒரு மணி நேரத்திற்குள் 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவுக்குள் 10 செ.மீ. மழை பெய்வதை, 'மேகவெடிப்பு' நிகழ்வாக இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது. இதுபோன்ற 'மேகவெடிப்பு' நிகழ்வு ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று இரவில் ஆறு இடங்களில் பதிவானதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

மணலியில் இரவு பத்து மணியிலிருந்து 11 மணிக்குள் 10.6 செ.மீ. மழை பதிவானது. 11 மணியிலிருந்து 12 மணிக்குள் விம்கோ நகரில் 15.72 செ.மீ. மழை பதிவானது. கொரட்டூரில் 13.71 செ.மீ. மழையும் மணலியில் 12.6 செ.மீ. மழையும் மணலி புதுநகரில் 10.32 செ.மீ. மழையும் பதிவானது. இந்த 'மேகவெடிப்பு' நிகழ்வுகளிலேயே மிகத் தீவிரமான நிகழ்வு விம்கோ நகரில் நிகழ்ந்ததாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இந்தத் தீவிர மழைப்பொழிவு நிகழ்வின் காரணமாக, ஃப்ராங்க்ஃபர்ட், மங்களூரு, புதுதில்லி ஆகிய இடங்களில் இருந்து அன்று இரவில் சென்னையில் தரையிறங்க வேண்டிய விமானங்கள் பெங்களூருவுக்குத் திருப்பிவிடப்பட்டன.

"தென்மேற்குப் பருவமழையைப் பொறுத்தவரை தமிழ்நாடு மழை மறைவுப் பிரதேசத்தில் இருக்கிறது. ஆகவே, தென்மேற்கு பருவக் காற்றால் இங்கே மழைபெய்வதில்லை. மாறாக, வெப்பச் சலனத்தின் காரணமாகத்தான் மழை பெய்யும். அதாவது, கடல் பகுதியில் வெப்பம் அதிகரித்து, காற்றில் ஈரப்பதம் அதிகரிக்கும். இது மழைக்கு வழிவகுக்கிறது.

சனிக்கிழமையன்று நடந்ததைப் போல 'மேக வெடிப்பு' நிகழ முக்கியக் காரணம், மேகங்களின் நகர்வு மெதுவாக இருப்பது அல்லது அதே இடத்தில் நின்றுவிடுவதுதான். மழை பெய்துகொண்டிருக்கும் மேகம், அங்கேயே நின்றுவிட்டால், அவை கொட்டித்தீர்த்துவிடும். சென்னை போன்ற நகரங்களில் நகர்ப் புறங்களில் வெப்பம் அதிகமாக இருக்கும். ஆகவே மேகங்கள் நகர்ந்து புறநகர்ப் பகுதியை அடையும்போது மழை பெய்வது அதிகரிக்கும். அதுதான் இப்போது நடந்திருக்கிறது" என்கிறார் சுயாதீன வானிலை ஆய்வாளரான ஸ்ரீகாந்த்.

சென்னையில் இதற்கு முன்பும் இதுபோல பல தருணங்களில் மழை பெய்திருப்பதைச் சுட்டிக்காட்டும் அவர், மேக வெடிப்பிற்கு வெவ்வேறு காரணங்கள் இருக்கின்றன என்கிறார். முன்பே கூறியதைப் போல, சென்னை போன்ற நகரங்களில் வெப்பச்சலனத்தால் மழை உருவாகும்போது மேகங்கள் ஒரே இடத்தில் நின்றுவிடுவது ஒரு காரணம். அடுத்ததாக, புயல் வீசும்போது அது வேகமாகக் கரையைக் கடக்காவிட்டாலும் இது போன்ற தீவிர மழைப் பொழிவு நிகழும் என்கிறார் அவர். "2023ஆம் ஆண்டில் மிக்ஜாம் புயல் வீசிய தருணத்தில் இப்படி நடந்தது. புயல் உடனடியாக கடந்துசெல்லாமல் ஒரே இடத்தில் நின்றுவிட்டது. இதனால், பெரிய அளவில் மழைகொட்டித்தீர்த்தது" என்கிறார் ஸ்ரீகாந்த்.

மலைப் பிரதேசங்களைப் பொறுத்தவரை மேகங்கள் இரண்டு மலை முகடுகளுக்குள் சிக்கிக்கொண்டுவிடும். அப்போது அந்த இடத்தில் மேகவெடிப்பு நிகழும் என்கிறார் அவர்.

மேகவெடிப்புகள் அதிகரிக்கின்றனவா?

சென்னை, மழை, மணலி, விம்கோநகர், மேகவெடிப்பு, பருவமழை , தென்மேற்கு பருவமழை

பட மூலாதாரம், Getty Images

படக்குறிப்பு, கோப்புப்படம்

இதற்கிடையில் மேகவெடிப்பு நிகழும்போக்கு இந்தியாவில் அதிகரிக்கவில்லையென இந்திய வானிலை ஆய்வுமையம் தெரிவித்திருக்கிறது. புதுதில்லியில் ஞாயிற்றுக்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசிய இந்திய வானிலை ஆய்வு மைய்யத்தின் இயக்குநர் ஜெனரல் மிருத்யுஞ்சய் மொஹபத்ரா, கடந்த சில ஆண்டுகளில் இந்தியாவில் மேகவெடிப்பு நகழ்வுகள் அதிகரிக்கவில்லையென கூறினார். ஆனாலும், சிறு மேகவெடிப்புகள் (mini-cloudbursts) அதிகரித்துள்ளன என்கிறார் அவர். அதாவது, ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்வதை சிறு மேகவெடிப்பு என இந்திய வானிலை ஆய்வு மையம் வகைப்படுத்துகிறது.

மேகவெடிப்பு நிகழ்வுகளைப் பொறுத்தவரை, 1969லிருந்து 2015ஆம் ஆண்டிற்குள் 28 முறை மேகவெடிப்பு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாக புனேவில் உள்ள இந்தியன் இன்ஸ்ட்டிடியூட் ஆஃப் ட்ரோபிகல் மீட்டராலஜியின் ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. ஆனால், 2015ஆம் ஆண்டிற்குப் பிந்தைய புள்ளிவிவரங்கள் இதில் இல்லை என மிருத்யுஞ்சய் தெரிவித்திருக்கிறார். சென்னையில் நடந்த நிகழ்வைப் பற்றிப் பேசிய அவர், "சில பிராந்தியங்களில் இதுபோன்ற நிகழ்வுகளை வகைப்படுத்துவது கடினமாக உள்ளது. காரணம், அந்த இடங்களில் வானிலை மையங்கள் இல்லை" என்றார் அவர்.

மிருத்யுஞ்சய் வேறொரு பிரச்சனையையும் சுட்டிக்காட்டுகிறார். அதாவது, இதுபோன்ற தீவிர மழைப்பொழிவுகளைக் கணிப்பது கடினம் என்கிறார். "செயற்கைக்கோள் படத்தை வைத்து, தீவிரமாக மழைபெய்யலாம் என சில மணி நேரங்களுக்கு முன்பாகச் சொல்ல முடியும். ஆனால், மேகவெடிப்பாக இருக்குமா என்பதைக் கணிக்க முடியாது" என்கிறார் அவர்.

அவர் கூறுவதைப்போலவே, ஆகஸ்ட் 30ஆம் தேதியன்று சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட வானிலை முன்னறிவிப்பு பற்றிய செய்திக் குறிப்பில், "இன்று (30-08-2025): வானம் ஓரளவு மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒருசில பகுதிகளில், லேசான / மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது" என்று மட்டுமே குறிப்பிடப்பட்டிருந்தது. மேலும் அன்று இரவு பத்தரை மணியளவில் வெளியிட்ட முன்னெச்சரிக்கையிலும், மிதமானது முதல் கனமழைவரை பெய்யலாம் என்றே கூறப்பட்டிருந்தது.

இந்திய வானிலை ஆய்வு மையத்தைப் பொறுத்தவரை, 20 கி.மீ. - 30 கி.மீ. சுற்றளவில் ஒரு மணி நேரத்தில் 10 செ.மீ.க்கு மேல் மழை பெய்தால், அதனை மேகவெடிப்பாக கருதுகிறது. ஆனால், '2-5 செ.மீ. மழைக்கே நிலச்சரிவு ஏற்படலாம்' என்பதை தற்போதைய செய்தியாளர் சந்திப்பில் சுட்டிக்காட்டியிருக்கிறார் மிருத்யுஞ்சய். "இமயமலைப் பகுதியில் ஒரு இடத்தில் ஒரு மணி நேரத்தில் 5 செ.மீக்கு மேல் மழை பெய்தாலே அது நிலச்சரிவை ஏற்படுத்தும் அபாயம் இருக்கிறது. லே போன்ற பகுதிகளில் ஒரு மணி நேரத்தில் 2 செ.மீக்கு மேல் பெய்தாலே அதனை மேக வெடிப்பாகக் கருதி முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும்" என்கிறார் ஸ்ரீகாந்த்.

தென்மேற்கு பருவமழைக் காலமான செப்டம்பர் மாதத்தில் வழக்கத்தைவிட 9 சதவீதம் அதிக மழை பெய்ய வாய்ப்பிருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. தென்னிந்தியப் பகுதியில் ஆகஸ்ட் மாதத்தில் 25 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. இந்த அளவுக்கு மழை பெய்வது, 2001ஆம் ஆண்டிலிருந்து மூன்றாவது முறையாகும். ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் இந்தியா முழுவதும் 700க்கும் மேற்பட்ட தீவிர மழைப் பொழிவு நிகழ்வுகள் பதிவாகியிருப்பதாகவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.

இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/czjmrr3n3m9o

பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம்

3 months 2 weeks ago

பதவி சண்டை: மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டம்

31 Aug 2025, 2:27 PM

Minnambalam-35-Picsart-AiImageEnhancer-1

மதுரை ஆதீனத்திற்கு எதிராக இளைய ஆதீனம் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

தென்னிந்தியாவில் உள்ள பழமையான சைவ மடங்களில் ஒன்று மதுரை ஆதீனம்.மதுரை ஆதீனத்தின் 293வது பீடாதிபதியாக 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23 ஆம் தேதி ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஞானசம்பந்த தேசிக சுவாமிகள், பொறுப்பேற்றார்.

இவர் அவ்வப்போது சர்ச்சைக்குரிய கருத்துகளை முன் வைத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தது. இந்நிலையில் மதுரை ஆதீனத்திற்கு எதிராக மறைந்த அருணகிரிநாதரின் நினைவிடத்தில் இளைய ஆதீனம் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டுள்ளார்.

அடுத்த ஆதீனத்தை தேர்ந்தெடுப்பதில் தற்போதைய ஆதீனம்  தன்னிச்சையாகச்  செயல்படுவதாக அவர் குற்றம் சாட்டி உள்ளது தற்போது பேசுபொருளாகி உள்ளது.

ஏற்கனவே மதுரை ஆதீனம் தன் மீது கொலை முயற்சி நடத்தப்பட்டதாகக் கூறிய நிலையில் மத மோதலை தூண்டும் நோக்கத்தில் கருத்து தெரிவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

https://minnambalam.com/hunger-strike-against-madurai-atheenam/

Checked
Sun, 12/21/2025 - 08:36
தமிழகச் செய்திகள் Latest Topics
Subscribe to தமிழகச் செய்திகள் feed