ஊர்ப்புதினம்

வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில்: ரவிகரன் எம்.பி

3 months 3 weeks ago

வனஇலாகாவின் ஆக்கிரமிப்பால் வன்னிமக்கள் நிர்க்கதியில்: ரவிகரன் எம்.பி
January 4, 2025

 

வன்னியில் வனவளத் திணைக்களத்தின் அத்துமீறிய அபகரிப்புக்காரணமாக தமிழ் மக்கள் தமது பூர்வீக குடியிருப்புக்காணிகளையும், பூர்வீக விவசாய வாழ்வாதாரக் காணிகளையும் இழந்து நிர்க்கதியாக்கப்பட்டுள்ளதாக  நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியதுடன், வனஇலாவின் இச்செயற்பாட்டுக்கு தனது கடுமையான எதிர்ப்பினையும் வெளியிட்டார்.

மன்னார் – மடு பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழுக்கூட்டம் 03.01.2025  நேற்று இடம்பெற்றது. குறித்த கூட்டத்தில் மடு பிரதேசசெயலகப் பகுதிக்குட்பட்ட சோதிநகர், இரணைஇலுப்பைக்குளம், மழுவராயர் கட்டையடம்பன், கரையார் கட்டினகுளம் உள்ளிட்ட பகுதிகளில் வனவளத் திணைக்களம் மக்களுக்குரிய பெருமளவான காணிகளை அபகரித்துள்ளதாக கிராமமட்ட பொதுஅமைப்புக்களால் தெரிவிக்கப்பட்டது.

இதன்போதே நாடாளுமன்ற உறுப்பினர் இவ்வாறு தனது கடுமையான எதிர்ப்பினை வெளியிட்டுள்ளார். அங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், வனவளத் திணைக்களத்தின் அபகரிப்பு நிலமைகள் தொடர்பில் ஒவ்வொரு அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்கழுக் கூட்டங்களிலும் பேசுகின்றோம்.

வனவளத் திணைக்களத்தின் எல்லைமீறிய அபகரிப்பிற்கு முல்லைத்தீவு மாவட்டத்தின் விபரமொன்றை இதில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2009ஆம் ஆண்டிற்கு முன்னர் 2,22006ஏக்கர் நிலங்களே வனவளத் திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருந்தது. இந் நிலையில் 2009ஆம் ஆண்டிற்குப் பிற்பாடு 4,35000ஏக்கர் நிலம் தற்போது வனவளத்திணைக்களத்தின் கட்டுப்பாட்டிலிருக்கின்றது.

இவ்வாறாக மிகப்பாரிய அபகரிப்புக்களை தமிழர் தாயகப் பகுதியெங்கும் வனவளத் திணைக்களம் மேற்கொண்டுவருகின்றது. இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்ட காணிகள் அனைத்தும் எமது மூதாதையர்களுடைய பூர்வீக காணிகளாகும். வனவளத்திணைக்களம் பிரதேசசெயலருக்கோ, கிராமஅலுவலருக்கோ, கிராம மக்களுக்கோ எவ்வித அறிவிப்புக்களையும் செய்யாது தான்தோன்றித்தனமாக எல்லைக்கற்களையிட்டு இவ்வாறு மக்களுடைய பூர்வீக காணிகளை ஆக்கிரமிப்புச்செய்கின்றது.

எமது தமிழ்மக்கள் கடந்தகாலங்களில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலைகாரணமாக தமது இடப்பெயர்வைச் சந்தித்திருந்தனர். குறிப்பாக கடந்த 1983ஆம் ஆண்டுகாலப்பகுதியில்கூட பல தமிழ் கிராமங்கள் இடப்பெயர்வைச் சந்தித்தன. இவ்வாறு இடப்பெயர்வினைச் சந்தித்த மக்கள், 2010ஆண்டிற்குப் பிற்பாடே தமது இடங்களில் மீள்குடியமர்த்தப்பட்டனர். தற்போதும் மீள்குடியேற்றம் செய்ரப்படாத கிராமங்களும் இருக்கின்றன. இவ்வாறு மக்கள் நீண்டகால இடப்பெயர்வைச் சந்தித்ததால், மக்கள் பயன்படுத்திய, மக்கள் குடியிருந்த காணிகள் தற்போது பற்றைக்காடுகளாக காட்சியளிக்கின்றன.

இவ்வாறு பற்றைக்காடுகளாக காணப்படுகின்ற எமது மக்களின் பூர்வீகக்காணிகளை வனவளத்திணைக்களம் ஆக்கிரமிப்புச்செய்கின்றது. நாட்டில் காடுகள் உருவாக்கப்படவேண்டும்தான். அதற்காக வன்னியிலிருக்கும் எமது மக்களின் பூர்வீககாணிகளை அபகரித்து நாட்டிற்கான ஒட்டுமொத்த காட்டையும் உருவாக்க முயற்ச்சிக்கக்கூடாது.

எமது மக்களின் பூர்வீக விவசாய வாழ்வாதாரக்காணிகளும் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டிருக்கின்றன. இதன்மூலம் எமது மக்களின் வாழ்வாதாரத்திற்கு வனவளத்திணைக்களம் முட்டுக்கட்டையாக இருந்துவருகின்றது. இதுமாத்திரமின்றி படையினர், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல்திணைக்களம் என அனைத்து அரச கட்டமைப்புக்களாலும் இவ்வாறு எமது மக்களின் பூர்வீகக்காணிகள் அபகரிக்கப்படுகின்றன.

இந்த அரச கட்டமைப்புக்கள் எமது நிலங்களை ஆக்கிரமிக்கின்ற வேலைகளை மாத்திரமே கச்சிதமாக மேற்கொண்டுவருகின்றனவேதவிர வேறெதுவுமில்லை. தென்பகுதிகளில் இவ்வாறான நிலமைகள் இல்லை. வடக்கு, கிழக்கிலேயே இவ்வாறு மக்களின் காணிகள் ஆக்கிரமிக்கப்பட்டு எமது மக்கள் நிர்க்கதியாக்கப்படுகின்றனர்.

வன்னி என்பது கடந்தகாலங்களில் விவசாயத்தில் சிறந்து விளங்கிய பகுதியாகக் காணப்பட்டது. ஆனால் தற்போது மக்களின் விவசாயக் காணிகள் அனைத்தும் வனவளத் திணைக்களத்தாலும், ஏனைய அரசதிணைக்களங்களாலும் பறிக்கப்பட்டநிலையில், மக்கள் விவசாயம் செய்யமுடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே புதிதாகப் பொறுப்பேற்றுள்ள இந்த அரசாங்கம் தமிழ் மக்களுடைய காணிகள் அந்த மக்களுக்கே கிடைப்பதற்குரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவேண்டும் – என்றார்

 

https://www.ilakku.org/the-people-of-vanni-are-in-misery-due-to-the-encroachment-of-the-forest-department-ravikaran-mp/

இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!

3 months 3 weeks ago

இளங்குமரன் MPக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடு!

தேசிய மக்கள் சக்தியின் யாழ்ப்பாணம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் கே.இளங்குமரனுக்கு எதிராக யாழ்ப்பாணம் காவல்நிலையத்தில் முறைப்பாடொன்று பதிவுசெய்யப்பட்டுள்ளது. 

சட்டவிரோதமாக சுண்ணக்கல் ஏற்றிச் சென்றதாகக் கூறப்படும் வர்த்தக நிலையமொன்றின் வாகனமொன்று, நேற்று முன்தினம் இரவு நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரனால் இடைமறிக்கப்பட்டு சாவகச்சேரி காவல்நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டிருந்தது. 

இந்தநிலையில், தமது வர்த்தக நிறுவனம் சட்டரீதியாகவே சுண்ணக்கல் வியாபாரத்தில் ஈடுபடுவதாகவும், நாடாளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் தமக்கும், தமது நிறுவனத்துக்கும் அபகீர்த்தியை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் ஊடக சந்திப்பொன்றை ஏற்பாடு செய்து தெரிவித்துள்ளார். 

அத்துடன் இந்த சம்பவம் குறித்து யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் தாம் முறைப்பாடு ஒன்றைப் பதிவு செய்ததாகவும் அவர் தெரிவித்தார். 

இந்தநிலையில், குறித்த முறைப்பாடு தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்துள்ளதாக யாழ்ப்பாணம் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

 

https://www.hirunews.lk/tamil/392659/இளங்குமரன்-mpக்கு-எதிராக-யாழ்ப்பாணம்-காவல்நிலையத்தில்-முறைப்பாடு

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்!

3 months 3 weeks ago

 

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து அதிகாரிகளை நியமிக்க தீர்மானம் – எழும் கடும் எதிர்ப்புகள்!
246897786.jpg

நாடாளுமன்ற பதவிகளுக்கு வெளியிலிருந்து  உயர் அதிகாரிகளை நியமிக்கும் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு நாடாளுமன்ற ஊழியர்களிடமிருந்து கடும் எதிர்ப்பு எழுந்துள்ளதாக நாடாளுமன்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.

பொதுவாக , தற்போது பணிபுரியும் அதிகாரிகளின் பதவி உயர்வு முறைக்கேற்பவே அதிகாரிகளுக்கான பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

இவ்வாறு, வெளியிலிருந்து ஆட்களை பணிக்கு அமர்த்துவதால் நீண்டகாலமாக சேவை புரியும் அதிகாரிகளுக்கு பாரிய அநீதி இழைக்கப்படுவதாக நாடாளுமன்றத்தில் அநேகமானோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

நாடாளுமன்றத்தின் அரச நிர்வாக சேவையின் உயர் பதவிகளுக்கு இவ்வாறு ஆட்சேர்ப்பு செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில், நாடாளுமன்ற உயர் அதிகாரிகளின் கலந்துரையாடலில் இவ்விடயம் தொடர்பில் விரிவாகப் பேசப்பட்டது

பொருளாதார பிரச்சினைகளை கருத்திற் கொண்டு நாடாளுமன்ற ஊழியர்களுக்கான விடுமுறை கொடுப்பனவை நிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.

இதற்கு ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த கொடுப்பனவு பல ஆண்டுகளாக ஊழியர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

https://newuthayan.com/article/நாடாளுமன்ற_பதவிகளுக்கு_வெளியிலிருந்து_அதிகாரிகளை_நியமிக்க_தீர்மானம்_–_எழும்_கடும்_எதிர்ப்புகள்!

 

 

வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது

3 months 3 weeks ago

வடமாகாணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது
adminJanuary 4, 2025
 
6-1170x780.jpg

 

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள்  முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும்   தென்பகுதியில் உள்ள  தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல  சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட  மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும் என வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் தெரிவித்துள்ளார்.

யாழ் மாவட்ட கூட்டுறவு சபை  மற்றும் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியும் இணைந்து தந்தை செல்வா ஞாபகார்த்த மண்டபத்தில் கால்நடை வளர்ப்பாளர்கள்,  விவசாய உற்பத்தியாளர்கள் மற்றும் சுயதொழில் முயற்சியாளர்களுடன் “உற்பத்தி கூட்டுறவு சங்கங்களின் உற்பத்தி திறனை அதிகரித்து கிராமிய மற்றும்  பிராந்திய பொருளாதாரத்தை மேம்படுத்துதல்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.

அதில் வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியின் தலைவர் கலாநிதி அகிலன் கதிர்காமர் யாழ் மாவட்ட கூட்டுறவு சபையின் தலைவர் க.மகாதேவன் மற்றும்  யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன்  ஆகீயோர் சிறப்புரையாற்றினார்கள்.

கிராமிய பொருளாதாரத்தின் முக்கியத்துவத்தை விளக்கி அகிலன் கதிர்காமர் உரையாற்றுகையில்,

பன்மைத்துவ வருமானம் பற்றியும் குறிப்பிட்டு இருந்தார். 1977 ஆம் ஆண்டு இலங்கையில் திறந்த பொருளாதார கொள்கையானது அமுல்படுத்தப்பட்ட போது உள்ளூர் உற்பத்திகள் குறைவடைந்து இறக்குமதிகள் அதிகரித்தமையினால் கிராமிய பொருளாதாரம் படிப்படியாக வீழ்ச்சி அடைந்தது.

கிராமிய பொருளாதாரமானது தனியே கால்நடை வளர்ப்பு துறை,  விவசாயம் துறை,  பனை தென்னை வள அபிவிருத்தி என பிரித்து பார்க்க முடியாது என்றும் எல்லா துறையையும் சேர்த்து தான் கிராமிய அபிவிருத்தி  ஏற்படுத்தமுடியும்.

பன்மைத்துவ வருமானமானது பண அடிப்படையாகவும் பொருள் அடிப்படையாகவும் வரும் வருமானங்கள் ஆகும். கிராமபுறங்களின்   நிதி நிலைமையை மேம்படுத்துதல் மற்றும் வாழ்வாரத்தை பன்முகப்படுத்தலுக்கு பன்மைத்துவ வருமானம் இன்றியமையாதது.

வடக்கு மாகாணத்தில் உள்ள மக்களின் வாழ்க்கை தேவையை பூர்த்தி செய்யக்கூடிய அளவான பாலனாது வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்றது. ஆனால் தரமான பால் உற்பத்தி திறன் மற்றும் பெறுமதிசேர் உற்பத்தி மையங்கள் இல்லாமையினால் பெருமளவு பாலானது தென்பகுதியில் உள்ள தனியார் நிறுவனங்களினால்  கொள்வனவு செய்து பெறுமதி சேர் உற்பத்தி பொருட்களாக அதிக விலையில் மீளவும் சந்தையில் விற்பனை செய்யப்படுகின்றது

வடபகுதியில் தனியார் நிறுவனங்களினால் 160 தொடக்கம் 170 ரூபாய்க்கு கொள்வனவு செய்யப்படும் பாலானது பதப்படுத்தப்பட்ட பெட்டி பாலாக 580 ரூபாய்க்கு நவீன அங்காடிகளில் விற்பனை செய்யப்படுகின்றது. இச் செயற்பாட்டு பொறிமுறையில்   யாருடைய உழைப்பு யாருடைய இழப்பு  யாருக்கு இலாபம் என மக்கள் சிந்திக்க வேண்டும் என்றார்.

அதேவேளை பால் உற்பத்தியின் தன்னிறைவான இறைமையை பற்றிய  விளக்கிய அகிலன் கதிர்காமர் பால்சார் உற்பத்தியில் தனியார்ஆதிக்கம் பற்றியும் விளக்கியிருந்தார்.

மேலும், உணவு இறைமையானது உணவு பாதுகாப்பில் இருந்து  வித்தியாசப்பட்டது எனவும் உணவு இறைமை என்பது அந்தந்த பிரதேசத்தில் அந்தந்த மக்களுக்கு பொருத்தமான மற்றும் தேவையான உணவை அந்தப் பிரதேசத்தில் உற்பத்தி செய்துவிற்பனை செய்தல். உணவு இறைமை உணவு பாதுகாப்பை உறுதி செய்யும்

பால்சார் உற்பத்தியில் தனியாரது ஆதிக்கமானது கிராமிய மட்டத்தில் பால் உற்பத்தியின் வளர்ச்சியிலும்  தன்னிறைவான  பொருளாதாரத்திலும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது. எமது நாட்டின் பால் இறைமையானது நியூசிலாந்தில் இருக்கின்ற தனியார் கம்பெனியிடம்  இருக்கின்றது.

எமது உள்ளூர் பால்பண்ணையாளர்கள், கூட்டுறவு சங்கங்களுக்கு முன்னுரிமை அளித்து பால் பெறுமதி சேர் உணவு உற்பத்திய உற்பத்தி செய்து பாதுகாப்பான முறையில் பதப்படுத்தி நுகர்வதற்கான ஆற்றலை வடமாகாணத்தில் உருவாக்குவதன் மூலம் வடமாகணத்தின் பால் இறைமை பூர்த்தி செய்ய முடியும்

தேசிய மட்டத்தில் சாதகமான பார்வையானது மாகாண மட்டத்திலும் கிராம மட்டத்திலும் கூட்டுறவு துறைக்கான வாய்ப்பபை தற்போது  ஏற்படுத்தி உள்ளது. ஆட்சி மாற்றமானது பல முயற்சிகளுக்கும் பல வாய்ப்புகளும் வழிவகுக்கின்றது.  சிறந்த ஒரு வருட  திட்டமிடலானது பத்து வருட கால அபிவிருத்திக் வித்திடும்

பால் உற்பத்தியில் புரட்சிகரமான மாற்றத்தை ஏற்படுத்துவதன் மூலம் நமது வடமாகணத்தின் பால் இறைமையை கைப்பற்ற முடியும்

வடக்கு மாகாணத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற பால் வட மாகாணத்திற்குள்  முழுமையாக பயன்படுத்த வேண்டும் என்றும்   தென்பகுதியில் உள்ள  தனியார் துறையுடன் போட்டி போடக்கூடிய பல  சிறந்த தரமான பால் உற்பத்தி மையங்கள் வட  மாகாணத்தில் கூட்டுறவு துறையினூடாக உருவாக்கப்பட வேண்டும்.

காலநிலைகளுக்கு ஏற்ப பால் உற்பத்தியானது மாறுபடும். வருடம் முழுவதும்  பால் தன்னிறைவை பூர்த்தி செய்கின்ற   வினைத்திறனான தரமான பலவிதமான  பெறுமதி அதிகரிப்புத்து திட்டங்களை கூட்டுறவு துறையினூடாக முன்னெடுக்க வேண்டும்.

பால் உற்பத்தியில் நாலு தொடக்கம் ஆறு மாடுகள் வைத்திருக்கும் பண்ணியாளர்களை சிறந்தவினைத்திறனான பண்ணையாளர்கள். சிறு பண்ணையார்களுக்கு  தேவையான உள்ளீடுகளை ஏற்படுத்தி கொடுப்பதன் மூலம்  வினைத்திறனான பண்ணையாளர்கள் ஆக்க முடியும்.

சிறந்த  தரமான பால் உற்பத்தி மையங்களை உருவாக்குவதற்கான விஷேட நிபுணத்துவம் பெற்ற பயிற்சியாளர்களை வரவழைத்து வடக்கு கூட்டுறவு அபிவிருத்தி வங்கியானது பயிற்சி நெறிகளை வழங்கி வருகின்றது. இச்செற்பாட்டை மேலும் முன்னெடுத்துச் செல்லும்.

பால் பண்ணையாளர்களுக்கு உற்பத்தி செலவுகளை கணித்து நியாயமான லாபத்தில் பாலுக்கான கொடுப்பனவு வழங்கப்பட வேண்டும். எமது எதிர்கால சந்ததிகளின்  ஆரோக்கியத்தை பேணுவதற்காக நுகர்வோருக்கு கணிசமான விலைக்கு பாலானது விற்கப்பட வேண்டும் .

வடமாகணத்தில் தற்போது பால் யுத்தம் நடைபெறுகின்றது. தென் பகுதியிலிந்நது யுத்தமானது வவுனியா மன்னர் கிளிநொச்சி யாழ்ப்பாணம் என முன்நகர்கின்றது. வடமாகணத்தில் பால்புரட்சியை  மேற்கொள்வதற்கு ஒவ்வொரு கால்நடை வளர்ப்பு கூட்டுறவு சங்கங்களும் ஒரு கூட்டு இயக்கமாக இணைந்து பால் யுத்தத்துக்கு தயாராக  வேண்டும் .

தற்போதைய வடமாகண ஆளுநர் நா.வேதநாயகன் கூட்டுறவின் நண்பர். இக் கலந்துரையாடலின் அடுத்த கட்ட முன் நகர்வாக கால்நடை பிரதிநிதிகளையும் கால்நடை வளர்ப்புதுறையில் தொடர்புடைய  திணைக்களங்களையும்   ஒன்றிணைந்து ஆளுநர் உடன் இன்னும் ஒரு கலந்துரையாடலினை ஒழுங்கமைக்க உள்ளோம் என தெரிவித்தார்.

யாழ் மாவட்ட கூட்டுறவு சபை  தலைவர் வடமாகணத்தில் தரமான பால் உற்பத்தி மையங்கள் வடக்கு கூட்டமைப்பு வங்கியின் தலைவர் அகிலன் கதிர்காமர்  தலைமையிலும் அனுசரணையுடனும்   உருவாக்கப்பட வேண்டும்  எனவும் வேண்டுகோளை முன் வைத்தார்.

யாழ் மாவட்ட கால்நடை வளர்ப்போர் கூட்டுறவு சங்க சமாச் தலைவர் திரு ஸ்டீபன் கால்நடைகளை வளர்ப்பதற்கு பண்ணையாளர்கள் பல சவால்களை எதிர்கொண்டு வருகின்றனர்  எனவும் கால்நடை தீவனப் பிரச்சினைகளுக்காக பதப்படுத்தப்பட்ட பசுந்தீவனங்களை(Silage) உற்பத்தி நடவடிக்கைகள் வங்கியானது முன்னெடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்

 

பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்

3 months 3 weeks ago
பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல் பசிலுக்கு அமெரிக்காவில் பாரிய சொத்துக்கள் உள்ளன – வாக்குமூலம் வழங்கிய விமல்.

முன்னாள் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் பாரிய அளவிலான சொத்துகள் உள்ளன. அவை தொடர்பில் அரசாங்கம் உரிய விசாரணைகளை ஆரம்பிக்குமாக இருந்தால் மேலும் தகவல்களை வழங்க தயாராக இருப்பதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும் தேசிய சுதந்திர முன்னணியின் தலைவருமான விமல் வீரவங்ச தெரிவித்தார்.

அமெரிக்காவில் உள்ள பசில் ராஜபகச்வின் சொத்துக்கள் குறித்து கடந்த காலத்தில் விமல் வீரவங்ச வெளியிட்டிருந்த கருத்து தொடர்பில் குற்றப்புலனாய்வு பிரிவு இன்று அவரிடம் வாக்குமூலமொன்றை பெற்றிருந்தது.

வாக்குமூலத்தை அளித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், பசில் ராஜபக்சவுக்கு அமெரிக்காவில் இருக்கும் சொத்துகள் தொடர்பில் நான் வெளியிட்டிருந்த கருத்துகள் குறித்து வாக்குமூலமொன்றை பெற வேண்டுமென குற்றப்புலனாய் பிரிவு அழைத்திருந்தது. என்னிடம் உள்ள தகவல்களை அவர்களிடம் வழங்கியுள்ளேன்.

அமெரிக்காவில் எந்தவொரு பணியும் புரியாத பசில் ராஜபக்சவுக்கு எவ்வாறு அங்கு பாரிய அளவிலான சொத்துக்கள் இருக்க முடியும். அவரது மகன் மற்றும் உறவினர்கள் சிலரது பெயரிலும் சொத்துக்கள் உள்ளன.

இந்த அரசாங்கம் உண்மையான ஊழல், மோசடியாளர்கள் குறித்து விசாரணைகள் செய்வதாக எமக்கு தெரியவில்லை. தற்போது பசில் ராஜபக்சவின் சொத்துக்கள் தொடர்பில் தகவல்களை பெற்றுள்ளனர்.

அவர் இரட்டை குடியுரிமை கொண்டவர் என்பதால் விசாரணைகளை துரிதமாக ஆரம்பிக்க முடியும்.
இந்த விடயத்தில் அரசாங்கம் உண்மையான விசாரணைகளை ஆரம்பித்தால் எம்மிடம் மேலதிக தகவல்கள் இருந்தால் அதனை வழங்க முடியும் என்றார்.

https://athavannews.com/2025/1415095

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு - ஜெகதீஸ்வரன் எம்.பி.

3 months 3 weeks ago

கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டில் இருந்த காணி விடுவிப்பு - ஜெகதீஸ்வரன் எம்.பி. 04 Jan, 2025 | 11:04 AM
image

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் பகுதியில் பொலிஸாரின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த காணி ஒன்றினை விடுவிப்பதற்கு உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய மக்கள் சக்தியின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ம.ஜெகதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்ததாவது,

வவுனியா வடக்கு, கனகராயன்குளம் தெற்கு கிராம அபிவிருத்திச் சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்று 2009 ஆண்டுக்கு பின் பொலிஸாரால் பயன்படுத்தப்பட்டு வந்தது.

குறித்த காணியை விடுவிக்க அப் பகுதி மக்கள் பல தடவைகள் முயன்றும் அது பயனளிக்கவில்லை.

இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற வவுனியா வடக்கு பிரதேச செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.

இதனையடுத்து, வவுனியா மாவட்ட செயலக அபிவிருத்திக் குழுக் கூட்டத்தில் குறித்த விடயம் பிரஸ்தாபிக்கப்பட்டதையடுத்து வவுனியாவிற்கு திடீர் விஜயம் மேற்கொண்ட பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சருடனும், பிரதி பொலிஸ்மா அதிபருடனும் இவ்விடயம் குறித்து கலந்துரையாடியிருந்தோம்.

இதனையடுத்து, குறித்த காணியினை உடனடியாக விடுவிக்க வன்னி பிரதி பொலிஸ் மா அதிபர் பொலிஸாருக்கு அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். இதனால் இக் காணி உடனடியாக விடுவிக்கப்படுகிறது என்றார். 
 

https://www.virakesari.lk/article/202932

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம் - சுமந்திரன்

3 months 3 weeks ago

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்
தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் புதிய அரசியலமைப்பை ஆதரிப்போம்

தமிழ் மக்களின் அரசியல் அபிலாஷைகளை நிறைவேற்றினால் மாத்திரமே புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான பூரண ஆதரவை வழங்க முடியும் என இலங்கை தமிழரசுக் கட்சியின் ஊடகப் பேச்சாளர், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் வெளிப்படுத்தியுள்ளார்.

அதிகாரப் பகிர்வு மற்றும் நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழித்தல் என்பன புதிய அரசியலமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தலைமையிலான தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதாக உறுதியளித்துள்ள நிலையில் அதற்கான பணிகளை விரைவில் ஆரம்பிப்பதாக அறிவித்துள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

புதிய அரசியலமைப்பு தயாரிப்பதை தற்போதைய அரசாங்கம் உடனடியாக ஆரம்பிக்க வேண்டும் எனவும் எம்.ஏ. சுமந்திரன் வலியுறுத்தியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தில் புதிய அரசியலமைப்பை தயாரிப்பதற்கான கலந்துரையாடல் கூட்டங்கள் அதிகளவானவற்றில் அப்போதைய மக்கள் விடுதலை முன்னணியின் உறுப்பினர்களும் கலந்துக்கொண்ட நிலையில் பொதுத் தேர்தலின் பின்னர் மூன்று சந்தர்ப்பங்களில் தான் ஜனாதிபதியை சந்தித்ததாகவும் அதன்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவித்தார்.

எவ்வாறாயினும்,புதிய அரசியலமைப்பு தொடர்பான தனது கட்சியின் உத்தியோகபூர்வ நிலைப்பாட்டை அதற்கான பணிகளை ஆரம்பித்ததன் பின்னரே அறிவிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
 

https://oruvan.com/we-will-support-the-new-constitution-if-it-fulfills-the-political-aspirations-of-the-tamil-people/

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!

3 months 3 weeks ago

முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றியவர் விளக்கமறியலில்!

முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் வீட்டிற்கு முன்பாக 2021ஆம் ஆண்டு இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் உயிரிழந்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேகநபர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

முன்னதாக இந்த சம்பவம் தொடர்பில் முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் மெய் பாதுகாவலர் ஒருவர் கைது செய்யப்பட்டார். 

எனினும் பாதிக்கப்பட்ட தரப்பினர் நீதிமன்றில் முன்வைத்த சமர்ப்பணங்களுக்கு அமைய, குறித்த சம்பவம் தொடர்பான விசாரணைகள் குற்றத்தடுப்பு பிரிவினருக்கு மாற்றப்பட்டது. 

இந்தநிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளுக்கு அமைய, முன்னாள் இராஜாங்க அமைச்சர் எஸ்.வியாழேந்திரனின் சாரதியாக பணியாற்றிய ஒருவர் நேற்று கைது செய்யப்பட்டுள்ளார். 

சந்தேகநபர் மட்டக்களப்பு நீதவான் நீதிமன்றில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் அவரை எதிர்வரும் 17ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

 

https://www.hirunews.lk/tamil/392602/முன்னாள்-இராஜாங்க-அமைச்சர்-வியாழேந்திரனின்-சாரதியாக-பணியாற்றியவர்-விளக்கமறியலில்

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து எடுக்கப்பட்ட தீர்மானம்

3 months 3 weeks ago

 

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

January 3, 2025  09:56 pm

மன்னார் காற்றாலை மின் உற்பத்தி குறித்து இன்று எடுக்கப்பட்ட தீர்மானம்

மன்னார் பகுதியில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வருகின்ற காற்றாலை மின் உற்பத்தி மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவை உடனடியாக தற்காலிகமாக நிறுத்தப்பட வேண்டும் மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதோடு, குறித்த அறிவிப்பை ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்க  விடுத்துள்ளார்.

மன்னார்  பிரதேச ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் இன்று (03) பிற்பகல் 2 மணியளவில் மன்னார் பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.

குறித்த கூட்டத்தில் மன்னார் ரயில் போக்குவரத்து சேவைகள், திண்மக் கழிவு  அகற்றுதலில் உள்ள சிக்கல்கள், காற்றாலை மின்சார திட்டம், மற்றும் கனியவள மண்ணகழ்வு போன்ற பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்பட்டது.

இதன்போது சபையில் சலசலப்பு ஏற்பட்டது. இலங்கை மின்சார சபையினால் மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த காற்றாலை திட்டத்தினை விளக்குவதற்கு அத்திட்டத்தின் முகாமையாளர்  முயன்ற போது கிராம மட்ட பிரதிநிதிகள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் ஒன்று சேர்ந்து பாரிய எதிர்ப்பை வெளிப்படுத்தினர்.

இதன்போது, காற்றாலை மற்றும் கனிய மணல் அகழ்வு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் மக்கள் விரும்பாத ஒரு செயற்பாட்டினை தொடர்ந்ததும் முன்னெடுக்க முடியாது .

எனவே இந்த திட்டங்களை தற்காலிகமாக நிறுத்தி வைக்க இந்த கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

எனவே இந்த காற்றாலை திட்டம் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும் என்று தெரிவித்தார்.

மேலும் இந்த நடவடிக்கை தொடருமாயின் மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள நேரிடும். 

எனவே அதை நிறுத்துவது சிறந்தது. மேலும் எதிர் வருகின்ற மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் குறித்த விடயங்கள் குறித்து மீள் பரிசீலனை செய்யப்படும் என அவர் தெரிவித்தார்.

மன்னார் பிரதேச செயலாளர் எம்.பிரதீப்  ஏற்பாட்டில் மாவட்ட  அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களான செல்வம் அடைக்கலநாதன், ரிஷாட் பதியுதீன், துரைராசா ரவிகரன், மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், செல்லத்தம்பி திலகநாதன் ஆகியோர் கலந்து கொண்டதோடு, சகல திணைக்கள தலைவர்கள், பொது அமைப்புகளின் பிரதிநிதிகள்  கிராம மட்ட பிரதிநிதிகள், மீனவ அமைப்புகளின் பிரதிநிதிகள் சிவில் சமூகத் தலைவர்கள் மற்றும் மதத் தலைவர் கலந்து கொண்டனர்.

மேலும் மன்னார் நகர சபையினால் அகழ்வு செய்யப்படுகின்ற மனித மற்றும் திண்மக்கழிவுகள் பாப்பாமோட்டை இல் உள்ள நிலையத்தில் சேகரிக்கப்பட்டு வந்த நிலையில்,குறித்த நடவடிக்கைக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட சட்ட நடவடிக்கை காரணமாக நீண்ட காலமாக மன்னார் நகர சபையினால் உரிய முறையில் கழிவு அகற்றும் நடவடிக்கை முன்னெடுக்க முடியாத நிலை காணப்பட்ட போதிலும் தற்போது மனித கழிவுகள் அகற்றப்பட்டு குறித்த நிலையத்தில் சேகரிக்க நீதி மன்றத்தினால் அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளது.

எனினும் திண்ம கழிவுகளை அகழ்வு செய்கின்ற போதும் அதை கொட்டுவதற்கு உரிய இடம் இல்லை என மன்னார் நகர சபையின் செயலாளரினால் மன்னார் பிரதேச ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் முன் வைக்கப்பட்டது. 

 

https://tamil.adaderana.lk/news.php?nid=198258

 

காரைநகர் படகு தள திட்டம்; இந்தியா-இலங்கை இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்

3 months 3 weeks ago

இலங்கையின் வடக்கு மாகாணத்தில் உள்ள காரைநகர் படகுத் தளத்தை புனரமைப்பதற்காக இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்று கையெழுத்தாகியுள்ளது.

இந்திய அரசாங்கத்தின் 290 மில்லியன் ரூபாய் மானிய உதவியுடன் இந்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.

இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2024 டிசம்பர் 16ஆம் திகதியன்று இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஸ் ஜா மற்றும் அப்போதைய இந்தியாவிற்கான  இலங்கை உயர் ஸ்தானிகர் க்சேணுகா திரேனி செனிவிரத்ன ஆகியோரால் கையெழுத்திடப்பட்டு பரிமாறிக் கொள்ளப்பட்டது.

இதன்படி, இலங்கையின் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சகத்தின் கீழ், காரைநகர் படகுத் தளத்தை புனரமைக்க இந்தத் திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகரகம் அறிக்கை ஒன்றில் தெரிவித்துள்ளது.

இந்தத் திட்டம், தொழிற்சாலை, இயந்திரங்கள், உபகரணங்கள், பொருட்கள், சேவைகள் போன்றவற்றை நிறுவுதல் உள்ளிட்ட குடிமைப் பணிகள் மற்றும் கொள்முதல் ஆகியவற்றை உள்ளடக்கியுள்ளது.

இத்திட்டம் முழுமையாக செயல்பாட்டுக்கு வந்ததும், புனரமைக்கப்பட்ட படகுத் தளம், உள்ளூர் கடற்றொழிலாளர்களின் வாழ்வாதார வாய்ப்புகளை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும், படகுத் தளத்தைச் சுற்றியுள்ள சிறிய நிறுவனங்கள் உட்பட அந்தப்பகுதியில் அதிக வேலை வாய்ப்புகளை உருவாக்கும், அத்துடன் தரமான மீன்வளப் பொருட்களின் விநியோகத்தை மேம்படுத்த உதவும் என்றும் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

https://thinakkural.lk/article/314318

யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!

3 months 3 weeks ago

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாக காற்றுமாசு உயர்வடைந்திருந்த நிலையில், அது தற்போது கட்டுப்பாட்டுக்குள் வந்துள்ளது என்று மத்திய சுற்றாடல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் மத்திய சுற்றாடல் அதிகாரசபையின் பணிப்பாளர் நாயகம் மேலும் தெரிவித்ததாவது:
நீதிமன்ற உத்தரவுக்கு அமைய மத்திய சுற்றாடல் அதிகாரசபையால் வளித்தரக் கண்காணிப்பு மேற்கொள்ளப்பட்டது. நவம்பர் மாதம் 28ஆம் திகதி யாழ்ப்பாணத்தில் காற்றுமாசு நிலை (சுட்டெண்) அதிகளவில் ஏற்பட்டிருந்த நிலையில், டிசெம்பர் மாதம் 2ஆம் திகதிமுதல் நிலைமை மெல்லமெல்ல இயல்புக்குத் திரும்புகின்றது.

காற்றின் வடிவம் மாறி வீசுகின்றபோது (மாறுபட்ட சுழற்சி நிலை) அயல் நாடுகளில் இருந்து மாசுத் துணிக்கைகள் அதிகளவில் எடுத்து வரப்படுகின்றன. இலங்கையில் அண்மையில் ஏற்பட்ட சீரற்ற காலநிலையே காற்றுமாசை அதிகப்படுத்தியிருந்த நிலையில், தற்போது நிலைமை கட்டுக்குள் வருகின்றது.

காற்றின் வழித்தரச் சுட்டெண் 50க்கு உட்பட்டதாக இருந்தால் அது ஆரோக்கியமான நிலையாகக் காணப்படும். 50 தொடக்கம் 100 வரை ஓரளவு பாதிப்பு நிலையாகவும், 100 தொடக்கம் 150 வரை கர்ப்பிணிப் பெண்கள், முதியவர்கள் மற்றும் சிறுவர்களை பாதிக்கும் நிலையாகவும் காணப்படும். இலங்கையில் இத்தகைய காற்றுமாசே ஏற்பட்டிருந்தது.

காற்றுமாசு அதிகரிக்கின்றபோது, அதனை எதிர்கொண்டு மக்களை சுகாதார நிலையில் பேணிப் பாதுகாக்க சர்வதேச நிறுவனங்கள், தேசிய நிறுவனங்களுடன் இணைந்து நாம் பணியாற்றுகின்றோம். மேலும் வளியின் தரத்தைக் கண்காணிக்க வளித்தர உணரிகளை மையமாக வைத்து செயற்பாடுகளை மேற்கொள்கின்றோம் - என்றார்.  (ப)

யாழ்ப்பாணத்தில் காற்று மாசு கட்டுக்குள்!

மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல

3 months 3 weeks ago
03 Jan, 2025 | 03:43 PM
image
 

(எம்.மனோசித்ரா)

நாட்டு மக்களின் 76 ஆண்டு கால சாபம் குறித்து பேசிய தேசிய மக்கள் சக்தியே இன்று மக்களுக்கு பெரும் சாபமாகியிருக்கிறது.

100 நாட்களில் அரிசியின் விலையை நூறு ரூபாவால் அதிகரிக்கச் செய்திருக்கிறது. 24 மணித்தியாலங்களில் செய்து காட்டுவதாகக் கூறிய விடயங்களில் ஒன்றையேனும் 100 நாட்கள் கடந்தும் இந்த அரசாங்கம் நிறைவேற்றவில்லை என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜே.சி.அலவத்துவல தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (3) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

76 ஆண்டுகளின் பின்னர் இம்முறை அதிக விலையில் பாற்சோற்றை உண்ணவேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டிருக்கிறோம். இந்த அரசாங்கம் பதவியேற்கும்போது 170 ரூபாவாகக் காணப்பட்ட சிவப்பரிசியின் விலை தற்போது 280 ரூபா வரை உயர்வடைந்துள்ளது.

100 நாட்களில் அரிசியின் விலை 100 ரூபாவால் அதிகரிக்கப்பட்டுள்ளது. இதற்காக இந்த அரசாங்கம் வெட்கப்பட வேண்டும். 

இறக்குமதி செய்யப்படும் அரிசிக்கு அறவிடப்படும் 65 ரூபா வரியைக் குறைத்து, உள்நாட்டு சந்தையில் போட்டித்தன்மையை ஏற்படுத்தி குறைந்த விலையில் மக்களுக்கு அரிசியை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

அரசாங்கம் மக்களை பாதுகாப்பதற்கு பதிலாக அரிசி ஆலை உரிமையாளர்களை பாதுகாத்துக்கொண்டிருக்கிறது.

விலை சூத்திரம் இருந்தால் அரசாங்கம் என்ற ஒன்று எதற்கு என கேள்வியெழுப்பிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, இவ்வாண்டிலிருந்து எரிபொருளுக்கான வரியைக் குறைத்து மக்களுக்கு நிவாரண விலையில் அதனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்துகிறோம்.

தமது பிரச்சினைகளுக்கு தீர்வு கிட்டும் என்று எதிர்பார்த்த மக்கள் இன்று அமைச்சர்களின் பிரச்சினைகளைக் கேட்டுக்கொண்டிருக்கின்றனர். மக்கள் இதற்காக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வழங்கவில்லை.

விரைவில் ஐக்கிய மக்கள் சக்தியை மறுசீரமைத்து பாராளுமன்றத்திலும் பாராளுமன்றத்துக்கு வெளியிலும் மக்களுக்கான சேவையை ஆற்றுவோம் என்றார். 

மக்களுக்கு பெரும் சாபமாகியுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் - ஜே.சி.அலவத்துவல | Virakesari.lk

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் - இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்!

3 months 3 weeks ago

நெடுந்தீவு கடற்பரப்பில்  இந்திய அத்து மீறிய ரோலர் படகுகளை  தடுத்து நிறுத்துவதற்கு இயலாது விட்டால் எம்மை வேறொரு பிரதேசத்திற்கு மாற்றி விட்டு நெடுந்தீவை இந்தியாவுக்கு வழங்கி விடுங்கள் என நெடுந்தீவு இளம்பிறை கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்கத்தின் தலைவரும் சமாச பிரதிநிதியுமான சத்தியாம்பிள்ளை தோமாஸ் தெரிவித்தார்.

வெள்ளிக்கிழமை (3) யாழ்ப்பாணம் மாவட்ட கடற்தொழிலாளர் கூட்டுறவு சங்க சமாசத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். 

அவர் மேலும் தெரிவிக்கையில், நெடுந்தீவு கடற்பரப்பில் பல வருட காலமாக இந்தியா அத்து மீறிய இழுவை படகுகளினால் எமது மீனவர்கள் பாரிய இன்னல்களை அனுபவித்து வருகின்றனர்.

கடந்த 29 ஆம் திகதியும் இந்தியா அத்துமீறிய இழுவைப் படகுகளினால், எமது 30 மீனவர்களின் சுமார் நாற்பதாயிரம் ரூபாய் பெறுமதியான வலைகள் அறுத்துச் செல்லப்பட்டுள்ளது.

எமது மீனவர்கள் தமது வாழ்வாதாரத்தை கொண்டு செல்ல முடியாத அளவிற்கு இந்திய ரோலர்களினால் துன்பங்களை அனுபவித்து வருகின்றனர். 

முன்னாள் கடற் தொழில் அமைச்சர் இந்தியா ரோலர்களை கட்டுப்படுத்துவதற்கு இந்தியாவில் பேச்சு வர்த்தை நடத்தினார் தோல்வியில் முடிவடைந்தது. கச்சதீவில் இருநாட்டு மீனவர்களையும் அழைத்து பேசினார் தோல்வியில் முடிவடைந்தது. 

இவ்வாறு இந்திய மீனவர்களை கட்டுப்படுத்துவதற்கு மேற்கொண்ட அனைத்து பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிவடைந்தால் நாம் என்ன செய்வது. 

ஆகவே நெடுந்தீவில் இருந்து கொண்டு எமது வாழ்வாதார தொழிலை செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்காவிட்டால்  எம்மை வாழ்வதற்கு ஏற்ற ஒரு இடத்துக்கு மாற்றிவிட்டு இந்தியாவுக்கு  நெடுந்தீவை ஒப்படையுங்கள் எங்களை வாழ விடுங்கள் என அவர் மேலும் தெரிவித்தார்.

இந்திய ரோலரைக் கட்டுப்படுத்துங்கள் - இல்லையேல் நெடுந்தீவை இந்தியாக்கு வழங்குங்கள்! | Virakesari.lk

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்ற கோரி கவனயீர்ப்பு போராட்டம்

3 months 3 weeks ago

Published By: DIGITAL DESK 3

03 JAN, 2025 | 02:25 PM
image
 

வித்தியானந்த கல்லூரி அதிபரினை இடமாற்றம் செய்யக்கோரி பழையமாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்களால் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்று இன்று வெள்ளிக்கிழமை (03) காலை முன்னெடுக்கப்பட்டிருந்தது.

முல்லைத்தீவு -  முள்ளியவளை வித்தியானந்தா கல்லூரி அதிபர் கல்லூரியின் வளர்ச்சியை சீர்குலைப்பதாகவும், மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு தடையாக இருப்பதாகவும், அவரை உடனடியாக இடமாற்றம் செய்யக்கோரி பழைய மாணவர் சங்கம், பாடசாலை அபிவிருத்திச்சங்கம், பெற்றோர்கள் இணைந்து இன்றையதினம் காலை 7.30 மணியளவில் பாடசாலை நுழைவாயிலில் போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG-20250103-WA0067.jpg

குறித்த போராட்டமானது 14 ஆசிரியர்களுக்கு அண்மையில் அவர்களுக்கான பதிலீடு இன்றி, தனிப்பட்ட பழிவாங்கல் நோக்கில், இடமாற்றத்திற்கு சிபாரிசு செய்தமை, இவரது பொறுப்பற்ற வார்த்தை பிரயோகங்கள், தனிப்பட்ட பழிவாங்கல்கள் காரணமாக இவர் பாடசாலையை பொறுப்பேற்கும் போது இருந்த ஆசிரியர்கள் எண்ணிக்கையில் பாரிய வீழ்ச்சி (83 ஆசிரியர்களிலிருந்து 63 ஆக வீழ்ச்சியடைந்துள்ளது) ஏற்பட்டுள்ளது. 

இவரால் பாடசாலையின் ஏனைய ஊழியர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டு பாடசாலையின் அகச்சூழல் சீரின்றியும், பாதுகாப்பின்றியும் உள்ளது. பாடசாலை சொத்துகளை பாதுகாப்பது மற்றும் அது தொடர்பான வெளிப்படை தன்மை இல்லாது உள்ளது. (தொழில்நுட்ப ஆய்வுகூட பொருட்கள் காணாமல் போனமை தொடர்பில் கல்வித்திணைக்கள விசாரணைகள் நடைபெறுகின்றன) அதிபர் மீதான நிதிமோசடி விசாரணைகள் நடைபெற்று வருகின்றது.

IMG-20250103-WA0052_1_.jpg

குறித்த விடயங்கள் தொடர்பாக அதிபருடன் பல தடவைகள் SDS/ OBA இணைந்து நடத்திய கலந்துரையாடல்களில் மேற்கொண்ட தீர்மானங்கள், ஆலோசனைகள் எதனையும் கருத்தில் கொள்ளாமல் தான்தோன்றிதனமான அதிபரின் செயற்பாடுகளால் மாணவர் கல்வி பாதிக்கப்படுகிறது. 

குறிப்பாக உயர்தர மாணவர்களுக்கு சில பாடங்களுக்கு பொருத்தமான பாடம் கற்பிக்கும் ஆசிரியர்கள் இல்லை. பல பாட வேளைகளில் வகுப்புகள் நடைபெறுவதில்லை. இவ்வாறான காரணங்களாளே குறித்த போராட்டம் இன்றையதினம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

குறித்த அதிபர் தொடர்பான விடயங்கள் இரு செயலாளர்களாலும் வலயகல்விபணிப்பாளர், செயலாளர் கல்வி அமைச்சு, பிரதிக் கல்விப்பணிப்பாளர் - தேசிய பாடசாலை, கல்வி அமைச்சு என்பவற்றிற்கு நேரிலும், தொலைபேசியிலும், கடிதம் மூலமும் தெரிவித்தும் எவ்வித நடவடிக்கையும் இதுவரை மேற்கொள்ளப்படாத நிலையிலே குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டிருந்தது.

IMG-20250103-WA0094.jpg

போராட்ட இடத்திற்கு சென்ற அரசாங்க அதிபர் அ.உமாமகேஸ்வரன் குறித்த போராட்டத்திற்கான காரணங்களை கேட்டறிந்திருந்தார். அதன்பின்னர் போராட்டத்திற்கான  காரணம் தொடர்பான  மகஜர்  அரச அதிபரிடம் கையளிக்கப்பட்டிருந்தது. அதன் பின்னர் இது ஒரு தேசிய பாடசாலை ஆகையினால் மாகாணத்திற்கு மட்டுப்படுத்தப்பட்ட அதிகாரம் தான் இருக்கின்றது. எனவே மத்திய அரசின் கல்வி அமைச்சின் செயலாளருக்கு இந்த மகஜரை  அனுப்புவதாகவும், அதன் பிரதியை சம்பந்தப்பட்ட அரச அலுவலகங்களுக்கு வழங்கி இதற்குரிய நடவடிக்கையினை மேற்கொள்வதாகவும் அரசாங்க அதிபர் இதன்போது தெரிவித்திருந்தார்.

குறித்த போராட்டத்தில் பாடசாலை அபிவிருத்திச்சங்கத்தினர், பெற்றோர்கள், பழையமாணவர்கள், நலன்விரும்பிகள் என பலரும் கலந்து கொண்டிருந்தனர்.

IMG-20250103-WA0049.jpg

https://www.virakesari.lk/article/202876

சீனாவில் புதிய வைரஸ் பரவல் - இலங்கை எச்சரிக்கை நிலையில்

3 months 3 weeks ago
03 JAN, 2025 | 03:17 PM
image
 

சீனாவில் பரவிவரும் புதிய வைரஸ் தொடர்பில் இலங்கை  எச்சரிக்கை நிலையில் உள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவு தெரிவித்துள்ளது.

சீனாவில் காணப்படும் நிலைமையை உன்னிப்பாக அவதானிப்பதாக தெரிவித்துள்ள சுகாதார அமைச்சு சீனாவில் பரவும் புதிய வைரஸ் குறித்து தகவல்கள் கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.

சீனாவில் காணப்படும் நிலைமை குறித்து முழுமையாக ஆராய்ந்த பின்னர் மேலதிக தகவல்களை பொதுமக்களிற்கு வழங்கவுள்ளதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

https://www.virakesari.lk/article/202887

Checked
Fri, 04/25/2025 - 09:17
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr