புதிய பதிவுகள்2

ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது!

3 months 3 weeks ago
ஒன்றரை வருடமாக நீதித்துறையை ஏமாற்றிய போலி சட்டத்தரணி கைது! கணேமுல்ல சஞ்ஜீவ கொலைசம்பவத்தின் முக்கிய சந்தேகநபரான இஷாரா செவ்வந்தியை போன்று மாறுவேடமணிந்து மட்டக்களப்பு நீதிமன்றத்துக்குள் ஆண் சட்டத்தரணிகள் அணியும் ஆடையை அணிந்து ஏமாற்றி நுழைந்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளதுடன் தடுப்பு காவலில் தொடர்ந்து விசாரணைகள் இடம்பெறுவதாக மேலும் தெரிவித்துள்ளனர். போலியான சட்டத்தரணியான குறித்த நபர் சட்ட ரீதியான உதவிகளை பெற்று தருவதாக கோரி பலபேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளமையும் தெரியவந்துள்ளது. குறித்த சந்தேக நபர் கடந்த 08ஆம் திகதி ஒந்தாச்சி மடத்தில் வைத்து கைது செய்துள்ளதாக பொலிசார் தெரிவித்ததுடன் இந்த சம்பவம் சட்டத்தரணிகள், மற்றும் பொதுமக்கள் மத்தியில் பாரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மட்டக்களப்பில் பெண் ஒருவர் வீட்டில் தங்க ஆபரணங்கள் திருட்டு போன சம்பவம் தொடர்பாக மீட்கப்பட்ட ஆபரணங்களை நீதிமன்றில் இருந்து மீளப் பெறுவது தொடர்பாக, மட்டக்களப்பு நீதிமன்றில் இடம்பெற்றுவரும் வழக்கு விசாரணைக்கு வாதாடுவதற்காக சட்டத்தரணி ஒருவரை தேடிய நிலையில் அவருக்கு அறிமுகமான ஒருவர், இந்த போலியான சட்டதரணியின் தொலைபேசி இலக்கத்தை பெண்ணிற்கு வழங்கியுள்ளார். இதனை தொடர்ந்து போலியான சட்டத்தரணி இந்த வழக்கிற்காக 2 இலட்சம் ரூபாவினை பெண்ணிடம் கோரியுள்ளார். குறித்த பெண் சம்மதித்து அவருக்கு முற்பணமாக ஒரு இலட்சம் ரூபாவை வழங்கியுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். இந்நிலையில் கடந்த 06ஆம் திகதி வழக்கு விசாரணைக்காக குறித்த பெண் மற்றும் போலி சட்டத்தரணி ஆகியோர், நீதிமன்றத்திற்கு சென்றுள்ள நிலையில் ஏற்கனவே வழக்கிற்கு ஆஜராகிய சட்டத்தரணி இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து அவரை அங்கிருந்து பதிவாளர் காரியாலயத்துக்கு அழைத்துச் சென்று இவர் சட்டத்தரணியா? என உறுதிப்படுத்துமாறு கோரியுள்ளார். அதனையடுத்து நீதிமன்ற பதிவாளர் போலி சட்டத்தரணியிடம் அடையாள அட்டையை கோரியபோது அவர் தனது வாகனத்தில் இருப்பதாக முதலில் குறிப்பிட்டுள்ளார். பின்னர் அங்கிருந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதிக்கு சென்று தனது வாகனத்தை எடுத்துக்கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளார். இதனை தொடர்ந்து இந்த போலி சட்டத்தரணி தொடர்பாக நீதவானின் கவனத்திற்கு கொண்டு வந்ததையடுத்து பொலிசாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டது. கடந்த ஒன்றரை வருடங்களுக்கு மேலாக சட்டத்தரணி போல நீதிமன்றத்திற்குள் தனது வாகனத்துடன் உள்நுழைந்து சட்டத்தரணிகள் வாகனம் நிறுத்தும் பகுதியில் தனது வாகனத்தை நிறுத்தி நீதிமன்ற வளாகத்திற்குள் நடமாடி வந்துள்ளதாகவும் பொலிசாரின் ஆரம்பக்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனை தொடர்ந்து சட்டத்தரணி என அடையாளப்படுத்தும் போலி வருகை அட்டை மற்றும் இறப்பர் முத்திரை, சட்டத்தரணி என வாகனத்துக்கு அடையாளப்படுத்தி ஒட்டப்படும் ஸ்டிக்கர், கறுப்பு கழுத்துப்பட்டி, கோட் சூட், மற்றம் வழக்குகளுக்கு தேவையான 16 ஆவணங்கள் என்பன மீட்கப்பட்டுள்ளன. இந்நிலையில் கைது செய்துள்ள சந்தேக நபரை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிசார் தெரிவித்தனர். https://athavannews.com/2025/1452408

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

3 months 3 weeks ago
பி,பி.சி. தமிழ் வானொலியும்... முழுக்க முழுக்க இந்திய புலனாய்வுத் துறை "றோ" வின் ஆட்களால் நிரம்பி வழிவதால்... ஒட்டு மொத்தமாக அவர்களை பதவி விலக்கி, புதியவர்களை தேர்ந்து எடுக்க வேண்டும். இலங்கைத் தமிழர் சம்பந்தமாக... பி.பி.சி தமிழ் வானொலி பொய் செய்திகளை மட்டுமே சொல்லி வந்துள்ளது. இதனால் ஈழத்தமிழர் அதன் மீது உள்ள நம்பிக்கையை இழந்து விட்டனர்.

பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா!

3 months 3 weeks ago
பனோரமா ஆவணப்பட சர்ச்சை: பிபிசி பணிப்பாளர் நாயகம், செய்தி பொறுப்பாசிரியர் இருவரும் இராஜினாமா! 10 Nov, 2025 | 11:20 AM பனோரமா ஆவணப்படம் டொனால்ட் டிரம்பின் உரையைத் தவறாகத் திருத்தியதாக எழுந்த கடும் விமர்சனத்தையடுத்து, பிபிசியின் பணிப்பாளர் நாயகம் டிம் டேவி மற்றும் செய்தி பொறுப்பாசிரியர் டெபோரா டர்னஸ் ஆகியோர் இராஜினாமா செய்துள்ளனர். ஐந்து ஆண்டுகளாக பதவி வகித்த டேவி, பொது ஒளிபரப்பாளரைச் சூழ்ந்த தொடர்ச்சியான சர்ச்சைகள் மற்றும் சார்பு குற்றச்சாட்டுகளால் அதிக அழுத்தத்துக்கு உட்பட்டிருந்தார். தி டெலிகிராப் திங்களன்று வெளிவந்த பிபிசி உள்குறிப்பின் விபரங்களை வெளியிட்டது. அதில் பனோரமா நிகழ்ச்சி டொனால்ட் டிரம்பின் உரையின் இரண்டு தனித்தனி பகுதிகளை ஒன்றாக சேர்த்து திருத்தியதாக கூறப்பட்டுள்ளது. இதனால் ஜனவரி 2021இல் நடந்த கெப்பிடல் ஹில் கலவரத்தை ஊக்குவிப்பதைப் போல காணொளி தோன்றியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்த இராஜினாமாக்கள் பிபிசியில் தேவையான மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என இங்கிலாந்து அரசியல் தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்ததோடு, மேலும், டொனால்ட் டிரம்ப் இந்த முடிவை வரவேற்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது. https://www.virakesari.lk/article/229969

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

3 months 3 weeks ago
தமிழர்களுக்கான அதிகாரப் பரவலாக்கம் நல்லிணக்கத்திற்கு வழிவகுக்கும்; ஜஸ்டின் பொய்லட் 10 Nov, 2025 | 01:28 PM இலங்கையில் நல்லிணக்கத்துக்கும் பொறுப்புக் கூறுதலுக்கும் புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என இலங்கைக்கான சுவிஸ் தூதரகத்தின் அரசியல் விவகாரங்களுக்கு பொறுப்பான முதன்மைச் செயலர் ஜஸ்டின் பொய்லட் தெரிவித்தார். ஞாயிற்றுக்கிழமை (09) யாழில் உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்ற சட்டத்துக்கும் மனித உரிமைக்குமான கற்கை நிலையத்தின் ஏற்பாட்டில் இடம்பெற்ற அரசியல் தீர்வும் பொறப்புக் கூறலும் என்ற ஆவண காப்பக அறிமுக நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில், இலங்கையில் நல்லிணக்கமும் ஸ்த்திரத்தன்மை ஏற்பாடுவதற்கு அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியமாக என்ற நிலையில் தமிழ் மக்களுக்கான அதிகார பகிர்வு நல்லிணக்கத்துக்கு வலுச்சேர்க்கும். இனங்களுக்கு இடையில் ஏற்படுகின்ற நல்லிணக்கம் அமைதி மற்றும் வன்முறை ஏற்ற சூழலை உருவாக்குவதோடு நாட்டின் அரசியல் ஸ்த்திரத் தன்மையை பலப்படுத்தும். ஆகவே இனங்களுக்கு இடையில் கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான சம்பவங்கள் இனியும் ஏற்படாமல் இருக்க நல்லிணக்கத்தை கட்டி எழுப்புவதற்கு புதிய அரசியல் யாப்பு சீர்திருத்தம் அவசியம் என நம்புகிறேன் என்றார். https://www.virakesari.lk/article/229984

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

3 months 3 weeks ago
யாழ். நெடுந்தீவில் கைதான 29 இந்திய மீனவர்களுக்கும் ஊர்காவற்றுறை நீதிமன்றம் அளித்த தீர்ப்பு 10 Nov, 2025 | 02:56 PM யாழ்ப்பாணம், நெடுந்தீவு கடற்பரப்பில் செப்டெம்பர் 28 மற்றும் ஒக்டோபர் 9ஆம் திகதிகளில் இரு படகுகளுடன் கைதுசெய்யப்பட்ட 29 இந்திய மீனவர்களின் வழக்கு திங்கட்கிழமை (10) ஊர்காவற்றுறை நீதிமன்றத்தில் இடம்பெற்றது. இதன்போது சிறைச்சாலை உத்தியோகத்தர்களால் மீனவர்கள் நீதிமன்றத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இவ்வழக்கினை ஆராய்ந்த நீதவான் 26 மீனவர்களுக்கும் 6 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2 வருட சிறைத்தண்டனை வழங்கி தீர்ப்பளித்தார். அத்துடன் இரு படகுகளையும் செலுத்தியவர்களுக்கும் ஒரு படகு உரிமையாளருக்கும் 6 மாத கட்டாய சிறைத்தண்டனையும் ஒவ்வொருவருக்கும் தலா 4 மில்லியன் அபராத தொகையை செலுத்துமாறும் அதனை செலுத்தத் தவறும் பட்சத்தில் மேலும் 3 மாதங்கள் சிறைத்தண்டனையை அனுபவிக்கவேண்டும் எனவும் தீர்ப்பளிக்கப்பட்டது. https://www.virakesari.lk/article/229990

பிலிப்பைன்சை தாக்கும் அடுத்தடுத்த சூறாவளிகள்

3 months 3 weeks ago
பிலிப்பைன்ஸில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இருவர் பலி; 14 இலட்சம் மக்கள் இடம்பெயர்வு! 10 Nov, 2025 | 11:41 AM பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதியில் பங்-வோங் சூறாவளி தாக்கியதில் இதுவரை 14 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதுடன் இருவர் உயிரிழந்ததாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. பங்-வோங் சூறாவளி மணித்தியாலத்திற்கு 185 கி.மீ முதல் 230 கி.மீ வரை வீசியதால் பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளில் வாழும் ஒரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸில் பாரிய சேதத்தையும் உயிரிழப்புகளையும் ஏற்படுத்திய கல்மேகி புயலுக்குப் பிறகு, தற்போது பங்-வோங் சூறாவளி தாக்கி வருகிறது. கல்மேகி புயல் தாக்கியதில் பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாமில் அதிகளவானோர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது. பிலிப்பைன்ஸின் கிழக்கு கடற்கரையோர பகுதிகளை தாக்கிய பங்-வோங் சூறாவளி ஞாயிற்றுக்கிழமை (9) இரவு லூசோன் தீவின் அரோரா மாகாணத்தின் கரையைக் கடந்தது. இதன் காரணமாக லூசோன் தீவின் பல பகுதிகளில் வாழும் மக்களுக்கு கடுமையான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. https://www.virakesari.lk/article/229965

வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளர் சடலமாக மீட்பு

3 months 3 weeks ago
10 Nov, 2025 | 03:43 PM மன்னார் - யாழ்ப்பாணம் பிரதான வீதியில் அமைந்துள்ள சிப்பியாறு பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை (10) காலை சடலம் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சடலமாக மீட்கப்பட்டவர் வடக்கு மாகாண முன்னாள் கல்விப் பணிப்பாளராகவும், இலங்கை கல்வி வெளியீட்டுப் பிரிவின் பணிப்பாளராகவும் கடமையாற்றிய திருஞானம் ஜோன் குயின்ரஸ் என்ற 60 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளார். இன்று காலை தனது வாகனத்தில் பாம்பு வழிகாட்டி அந்தோனியார் ஆலயத்திற்கு வருகை தந்து வழிபாட்டில் ஈடுபட்டபோது இவர் உயிரிழந்திருக்கலாம் என தெரியவருகிறது. சடலத்தை கண்ட ஆலய நிர்வாகத்தினர் இலுப்பைக்கடவை பொலிஸாருக்கு தகவல் வழங்கிய நிலையில் சம்பவ இடத்துக்கு வருகை தந்த பொலிஸார் சடலத்தை பார்வையிட்டனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் திடீர் மரண விசாரணை அதிகாரி பீ.பிரபானந்தன் சடலத்தை பார்வையிட்டார். பின்னர் மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சடலத்தை மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்க உத்தரவிட்டார். https://www.virakesari.lk/article/229994

உக்ரேனிய பண்ணை ஏற்றுமதி மீதான கட்டுப்பாடுகளை நீக்குமாறு ஹங்கேரி, ஸ்லோவாக்கியா மற்றும் போலந்தை ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்துகிறது.

3 months 3 weeks ago
தனியே ஈயூ பாராளுமன்றில் உள்ள சீட் எண்ணிக்கையை வைத்து மட்டும் ஜேர்மனிதான் ஈயூ என்பது சரியல்ல. இந்த பாராளுமன்றம் தனியே சட்ட ஆக்க சபை மட்டுமே. அதிகார பலம் European Council (ஒவ்வொரு நாட்டின் தலைவர்களும் அங்கத்தவர், 27), Council of the European Union (அந்த துறைசார் 27 அமைச்சர்களின் கூட்டு) ஆகியவற்றிடமே உள்ளது. இந்த பாராளுமன்றில் கூட அங்கத்தவர் நாடுகள் அடிப்படையில் ஒருமித்து செயல்படுவதில்லை. உதாரணமாக AfD, நேஷனல் புரொண்ட், UKIP, போன்ற அதி வலதுசாரிகள் தம் நாடுகளில் இருந்து வரும் ஏனைய கட்சிகளுடன் ஒன்றாக இணைந்து பயணிக்கா. மாறாக தமக்குள் ஒன்றான ஒரு பிணைப்பை உருவாக்கி extreme right wing block என செயல்படுவார்கள். ஜேர்மனி பொருளாதார பலம் காரணமாக ஈயூவில் பெரும் செல்வாக்கு செலுத்துகிறது. பிரெக்சிற்க்கு முன் இதை பேலன்ஸ் செய்த யூகே யும் இப்போ இல்லை என்பதால், பிரான்ஸ்சுன் ஜேர்மனியோடு சேர்ந்தே 50+ ஆண்டுகளாக பயணிப்பதால் ஜேர்மனியின் கை ஈயுவில் மேலும் ஓங்கி உள்ளதே ஒழிய, பாராளுமன்ற அங்கத்தவர் எண்ணிக்கையால் அல்ல.

"அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English

3 months 3 weeks ago
எனது அறிவார்ந்த தேடல்: 1314 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 42] [This detailed Tamil article is based on the unfinished historical book 'History of Sri Lanka' by my late friend, Mr. Kandiah Easwaran, a civil engineer. The English summary below is his own version. / இந்த விரிவான தமிழ் கட்டுரை, எனது மறைந்த நண்பர், பொறியியலாளர் திரு. கந்தையா ஈஸ்வரன் எழுதிய முடிக்கப்படாத "இலங்கை வரலாறு" என்ற புத்தகத்தை அடிப்படையாகக் கொண்டது. கீழே உள்ள ஆங்கிலச் சுருக்கம் அவரது சொந்தப் பதிப்பாகும்.] பகுதி: 42 / பின் இணைப்பு - தீபவம்சம் / 'தகனத்திற்குப் பிறகு, எஞ்சியிருக்கும் எலும்புகளை, அந்த பண்டைய காலத்தில் 84,000 பகுதிகளாகப் பிரிக்க முடியுமா?' தீபவம்சத்தில், மிக நீண்ட காலம் வாழ்ந்து நான்கு முன்னால் புத்தர்களிடம் உடனிருந்த கொண்ட, ஒரு பெரிய நாகாவைப் [great Naga] பற்றியும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தப் பெரிய நாகர், தங்கச் சங்கிலி அணிந்து, அசோகரைப் பார்க்க வந்தான். இவர் நான்கு புத்தர்களை சந்தித்து, அதன் பிறகு, அசோகரைச் சந்திக்கும் வரை வாழ்ந்தார் என்பதில் இருந்து, இது முற்றிலும் ஒரு புராணக்கதை என்று தெரிகிறது. என்றாலும், நாகர்கள் இலங்கையிலிருந்து மகத வரையிலும், வடக்கே ஆப்கானிஸ்தானிலும் கூட வாழ்ந்தனர் என்பதை இந்தத் தகவல் ஒப்புக் கொள்கிறது. அது மட்டும் அல்ல, புத்த மதம் சித்தார்த்த கௌதமருக்கு பிறகே தோன்றியது, அப்படி என்றால் அவருக்கு முன்னைய மூன்று புத்தர்களையும் [?] புத்தர் என்று அழைப்பதின் காரணம் என்ன? எனக்குப் புரியவில்லை? அசோகர் தனது முடிசூட்டுக்கு மூன்று ஆண்டுகளுக்குப் பிறகு, [6-18] புத்த மதத்திற்கு மாறினார். அவர் அதற்கு முன், பசண்டா, அதாவது, புத்த மதம் அற்ற ஒரு மதத்தைப் பின்பற்றினார். [Pasanda religion / "Pasanda" in this context refers to heretical or non-Buddhist religious sects, often used in Pali and Sanskrit literature to describe different ascetic or Brahmanical traditions. / "பசண்டா" என்பது புத்தமதமற்ற மதப் பிரிவுகளைக் குறிக்கிறது, இது பாளி மற்றும் சமஸ்கிருத இலக்கியங்களில் வெவ்வேறு துறவி அல்லது பிராமண மரபுகளை விவரிக்கப் பயன்படுத்தப்படுகிறது.]. இந்த "பசண்டா" 6-24 இல் கூறப்பட்டுள்ளது. பல்வேறு சமயங்களைக் அல்லது கொள்கைகளைக் பின்தொடரும் பலரை அழைத்து, உண்மையான கோட்பாட்டைக் கண்டறிய அவர்களிடம் அசோகர் விசாரித்தார். ஆனால் எல்லோரும் அவரை நம்பிக்கைப்படுத்த தவறிவிட்டனர். அவ்வேளை, அசோகன் ஒரு இளம் அலைந்து திரிந்த சந்நியாசியை அல்லது ஒரு அருகதர் துறவியை [நிக்ரோதாவைக் / Nigrodha] கண்டு, அவனைத் தன் அரண்மனைக்குள் அழைத்து வந்தார். அருகதர் (Arhat or Arahant) என்பதற்கு, ஆன்மீக ஞான ஒளி (நிர்வாணம்) அடைவதற்கு மிகவும் தகுதியானவர் (one who is worthy) அல்லது மிகச் சரியான மனிதர் என்று தேரவாத பௌத்தப்பிரிவு கருத்து கூறுகிறது. அசோகர், தான் இதுவரை தேடிக்கொண்டு இருந்த, மரியாதைக்குரியவராக அந்த அருகதர் துறவியை மதிப்பிட்டார். அதனால், விரைவில், அவன், அசோகரின் ஆன்மீக வழிகாட்டி ஆனான். கோட்பாட்டில் 84,000 பிரிவுகள் இருப்பதாக அசோகர் அவனிடம் இருந்து அறிந்து கொண்டார். எனவே, ஒவ்வொரு நகரத்திலும் கோட்பாட்டின் ஒவ்வொரு பிரிவுக்கும் ஒன்று வீதம், 84,000 மடங்களைக் கட்ட அசோகர் முடிவு செய்தார். அது மட்டும் அல்ல இந்த 84,000 மடங்கள் மூன்று ஆண்டுகளில் கட்டப்பட்டன; சராசரியாக ஒரு நாளைக்கு எழுபத்தேழு மடங்கள்? அந்த பண்டைய நாட்களில் இந்த விகிதத்தை அடைவது மிகவும் சாத்தியமற்றது? ஆகவே தான், இது ஒரு உண்மையான, எளிமையான புராணமாக இருக்க வேண்டும் என்று நம்புகிறேன். இந்த புராணக்கதை பின்வருமாறு கூறப்பட்டுள்ளது. அதாவது, புத்தர் தகனம் செய்யப்பட்டபோது, புத்தரின் தாதுக்களைப் (relics) பெறுவதற்கான உரிமைக்கான உரிமைகோரல்கள் மற்றும் எதிர் உரிமைகோரல்கள் இருந்தன, மேலும் மன்னர்கள் தங்கள் கோரிக்கைகளை இராணுவத்துடன் ஆதரிக்கத் தயாராக இருந்தனர். இங்கு புத்தரின் நினைவுச்சின்னங்கள் என்பது, கௌதம புத்தரின் மரணத்திற்குப் பிறகு (பரிநிர்வாணம்) அவருடன் தொடர்புடைய உடல் எச்சங்கள் ஆகும். அதாவது, அப்போது, அங்கிருந்த துரோணன் என்னும் பார்ப்பனன், அவர்களை அமைதிப்படுத்தி, புத்த தாதுவைப் பல இடங்களுக்கு அனுப்பினால், அத்தாதுக்களின் மேல் சேதியங்களை அமைத்துக் கொண்டாடுவார்கள்; அதனால் பகவன் புத்தருடைய புகழும் பெருமையும் உலகெங்கும் பரவும் என்று பரிந்து பேசி, எச்சங்களை எட்டுப் பகுதிகளாகப் பிரித்து உரிமை கோருபவர்களுக்கு கொடுத்தார். ஒரு பகட்டான, ஆடம்பர விழாவுடன் நினைவுச் சின்னங்களை அவர்கள் தங்கள் தங்கள் நாடுகளுக்கு எடுத்துச் சென்று ஸ்தூபிகளில் பதித்துள்ளனர். இது 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums'' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 2 இல் இது விவரிக்கப்பட்டுள்ளது. அசோகர் 84,000 மடங்களைக் கட்ட முடிவு செய்தபோது, அவர் மீண்டும் நிலத்தை அகழ்ந்து, முன்பு நிலத்தின் கீழ் புதைத்த ஏழு இடங்களில் இருந்து நினைவுச்சின்னங்களைப் பெற்றார். என்றாலும் நாகர்கள் வசம் இருந்த எட்டாவது புத்தரின் தாதுப் பகுதியை அவரால் பெற முடியவில்லை. ஆனால், பேரரசர் அசோகா தோல்வியுற்ற அந்த எட்டாவது புத்தரின் தாதுவை, துட்டகாமினி, நாகரின் பாதாள உலகத்திலிருந்து பெற்றதாக மகாவம்சம் பெருமையாக கூறுகிறது. இது சம்பந்தமாக மகாவம்சத்தின் முப்பத்தொன்றாம் அத்தியாயத்தைப் பார்க்கவும். மேலும், 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' என்ற புத்தகத்தின் அத்தியாயம் 1-ன் பக்கம் 5-ல், 'பாளி மரபுப்படி, சாம்பலோ அல்லது புகைக் கரியோ இல்லாமல், தகனம் செய்தபின், எலும்பு துண்டுகள் தவிர, எதுவும் எஞ்சியிருக்கவில்லை' [‘According to Pali tradition nothing was left after the cremation except of bits of bone, without any ashes or soot’] என்று கூறப்பட்டுள்ளது. அந்த நேரத்தில் எலும்புகளை 84,000 பகுதிகளாகப் பிரிக்கும் தொழில்நுட்பம் இருந்திருக்காது, ஒருவேளை இப்போது கூட இன்னும் சாத்தியமில்லை என்றே நம்புகிறேன். அதுவும் முதலில் எட்டு பகுதிகளாகப் பிரித்து [இது கட்டாயம் சாத்தியம்], அதில் புதைத்த ஏழு பகுதிகளை, 200 ஆண்டுகளுக்குப் பின் தோண்டி எடுத்து?, அவையை 84,000 சம பகுதிகளாகப் பிரிக்கப்பட்டது என்பது ஏற்கக்கூடியதாகத் தெரியவில்லை? உங்களுக்கு இதற்கு ஏற்ற விடைகள் இருக்குமாயின் சொல்லுங்கள். Part: 42 / Appendix – Dipavamsa / 'Is possible to divide the bit of bones, left after the cremation into 84,000 portions at that time, probably even now?' It is also mentioned about the great Naga who lived for very long and have attended to four former Buddhas. This great Naga, wearing gold chain, came to see Asoka. This is purely a legend, but, however, acknowledges that Nagas were living from Lanka to as far as Magadha, even further north to Afghanistan. Asoka converted to Buddhist faith three years after his coronation, 6-18. He followed Pasanda religion prior to that, 6-24. Asoka invited many people from various followings, and questioned them to find the true doctrine. All failed to convince him. Asoka happened to see young Nigrodha, and brought him inside his palace. He assessed him to be a venerable one whom he was searching for. He became the spiritual guide of Asoka. Asoka learnt from Nigrodha that there were 84,000 sections in the doctrine. Asoka decided to construct 84,000 monasteries, one for each sections of the Faith in each town. These monasteries were constructed in three years; on average about seventy seven monasteries a day. This rate is quite impossible to achieve in those days, and it must be a pure and simple legend. The Dipavamsa is missing a point in the legend of Asoka building 84,000 monasteries widely believed in India. See the page 6 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' in this regard, and the legend is as follows. When Buddha was cremated, there were claims and counter claims to the right of receive the relics of the Buddha, and the kings were ready to back up their claims with armies. A Brahman named Drona interceded and divided the remains into eight portions to the eight claimants. They took the relic in reliquaries with pomp and pageantry to their countries and enshrined in Stupas. This is detailed in the chapter 2 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums'. When Asoka decided to construct 84,000 monasteries, he re-excavated and obtained the relics from seven locations. He was unable to obtain the portion which was in the possession of the Nagas. Mahavamsa states that Dutthagamani was able to obtain this relic portion from the Naga’s underworld to subtly indicate that Dutthagamani succeeded where the Emperor Asoka failed. See the chapter thirty one of the Mahavamsa in this regard. Furthermore, it is stated in the page 5 of the Chapter 1 of the Reference 'Gandharan Buddhist Reliquaries By David Jongward, Elizebeth Errington, Richard Saloman and Stefans Baums' that ‘According to Pali tradition nothing was left after the cremation except of bits of bone, without any ashes or soot’. The technology must not have been there to divide the bit of bones into 84,000 portions at that time, probably not possible even now. நன்றி Thanks [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] [Kandiah Thillaivinayagalingam, Athiady, Jaffna] பகுதி / Part: 43 தொடரும் / Will follow துளி/DROP: 1896 ["அறிவியல் நோக்கில் 'இலங்கையின் காலவரிசைப்படி நிகழ்வுகளை பதிவு செய்த பண்டைய இலங்கை நூல்களில் [நாளாகமம்களில்]' ஒரு பார்வை" / "A look at 'Lanka chronicles' from a scientific perspective" / In Tamil & English / பகுதி Part: 42 https://www.facebook.com/groups/978753388866632/posts/32297430556572173/?

மாணவர்களிடம் தலைமைத்துவ பண்புகளை வளர்த்தல் மிகத் தேவையானது - வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன்

3 months 3 weeks ago
அந்த பெருமை கல்வி என்றால் ரியூசன் தான் என்று உங்களை பிடித்து ரியூசனுக்கு அனுப்பாத உங்கள் அப்பா அம்மா மற்றும் உங்களையும் சேர்தது என்று நம்புகின்றேன்.

அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு !

3 months 3 weeks ago
அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு ! adminNovember 10, 2025 த்தின் ஒழுங்கமைப்பில் “அரசியற் தீர்வும் – பொறுப்புக் கூறலும் : ஓர் எண்ணிம ஆவணக் காப்பக அறிமுக நிகழ்வு” மற்றும் நாட்டிசட்டத்துக்கும் கொள்ளைகளுக்குமான யாழ்ப்பாணக் கற்கை மையன் தற்போதைய முக்கியத்துவம் வாய்ந்த அரசியல் தீர்வு மற்றும் பொறுப்புக் கூறல் தொடர்பான கலந்துரையாடல் நேற்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை யாழில். உள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இடம்பெற்றது. நிகழ்வில் மூத்த சட்டத்தரணி திரு. K.S இரத்தினவேல் சிறப்புரையாற்றி இருந்தார். தொடர்ந்து “தற்போதைய சூழலில் அரசியலமைப்புக்கேட்டின் அரசியல் தீர்வு பற்றித் தமிழரின் அணுகுமுறை எவ்வாறு இருக்க வேண்டும்?” என்ற தலைப்பில், தமிழ் அரசியல் தலைவர்கள் பங்கேற்ற கலந்துரையாடலும் இடம்பெற்றது. குறித்த கடலந்துரையடலில். நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் சிவஞானம் சிறீதரன், நாடாளுமன்ற முன்னாள் உறுப்பினர்களான தருமலிங்கம் சித்தார்த்தன் மற்றும் சுரேஷ் பிரேமச்சந்திரன் ஆகியோர் பங்கேற்றனர். கலந்துரையாடலை , சட்டத்தரணி கலாநிதி. குமாரவடிவேல் குருபரன் நெறியாள்கை செய்திருந்தார். நிகழ்வில் சுவிசர்லாந்து தூதரக முதன்மைச் செயலாளர் ஐஸ்ரின், தமிழ்த் தேசிய பசுமை இயக்கத் தலைவர். பொ.ஐங்கரநேசன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினான சிவாஜிலிங்கம், செ.கஜேந்திரன், தமிழ்த் தேசிய அரசியற் கட்சிகளின் உறுப்பினர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், பொதுமக்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளனர். https://globaltamilnews.net/2025/222489/

பாலியல் கல்வி குறித்து விளக்கிய பிரதமர்

3 months 3 weeks ago
Nov 10, 2025 - 07:11 AM பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தல்களை தவிர்க்க பிள்ளைகளுக்கு வயதுக்கு ஏற்ற பாலியல் கல்வி முறையை அறிமுகப்படுத்த வேண்டும் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவின் தலைமையில் புதிய கல்விச் சீர்திருத்தங்கள் குறித்து கண்டி மாவட்ட மக்கள் பிரதிநிதிகளுக்கு அறிவுறுத்தும் நிகழ்ச்சி இடம்பெற்றது. இந்நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். இது தொடர்பான திட்டங்களைத் தயாரிப்பதற்கு நிபுணர்களின் பரிந்துரைகள் மற்றும் ஆலோசனைகளைப் பெற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் இதன்போது கூறினார். அங்கு மேலும் உரையாற்றிய பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, "6 ஆம் தரத்திற்காக, வயதுக்கு ஏற்ற வகையில் ஒரு புத்தகத்தை நாங்கள் தயாரித்துள்ளோம். பாலியல் கல்வி வழங்கப்பட வேண்டும் என்று சுகாதார அமைச்சு, குறிப்பாகக் குடும்பநல சுகாதாரப் பிரிவு தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றது. நம் நாட்டில் பாலியல் துஷ்பிரயோகம் மற்றும் துன்புறுத்தலுக்குக் பிள்ளைகள் உள்ளாகும் போக்கு அதிகரித்து வருவதால், இதிலிருந்து பாதுகாக்க பிள்ளைகளுக்கு இது பற்றி கற்பிக்க வேண்டும் என்று குடும்பநல சுகாதாரப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சு தொடர்ந்து எங்களிடம் கூறி வருகின்றன. அதேபோல், இது ஒரு பாரதூரமான பிரச்சினை என்று சிறுவர் பாதுகாப்பு அதிகார சபையும் எங்களிடம் கூறியுள்ளது. தங்களது உடலைப் பாதுகாத்துக்கொள்வது குறித்துக் பிள்ளைகளுக்கு அறிவுறுத்தப்பட வேண்டும் என்றும் கூறியுள்ளது. இது குறித்து அந்தந்த அமைச்சுக்கள் மற்றும் அதிகார சபைகளுடன் நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அவர்களின் பரிந்துரைகள் வழங்கப்பட்டு வருகின்றன. எந்த வயதில், எவ்வாறு, எப்போது இதை அறிமுகப்படுத்துவது என்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை. இந்தக் கலந்துரையாடல்களின்படி, பிள்ளைகளுக்குத் தங்களைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய விதம் மற்றும் தங்களது உடலில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து வயதுக்கு ஏற்ற வகையில் சரியான கல்வி கிடைக்க வேண்டும் என்று நாங்கள் கருதுகிறோம். இந்தக் விடயங்களை நாங்கள் சுகாதாரத் துறையின் நிபுணர்களின் ஆலோசனையின்படியே செய்வோம்." என்றார். https://adaderanatamil.lk/news/cmhsh7ru101hoo29nfs3hi79x

அமெரிக்காவிடம் எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் சௌதி திட்டம் பற்றி இஸ்ரேல் கவலை ஏன்?

3 months 3 weeks ago
பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, மே 2025-இல் எடுக்கப்பட்ட இந்தப் படத்தில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் செளதி இளவரசர் முகமது பின் சல்மான். கட்டுரை தகவல் நஸ்ரின் ஹாதூம் பிபிசி உருது செய்தியாளர் 9 நவம்பர் 2025 புதுப்பிக்கப்பட்டது 23 நிமிடங்களுக்கு முன்னர் அமெரிக்கா மற்றும் செளதி அரேபியா இடையேயான உறவுகளில், பாதுகாப்பு ஒப்பந்தங்கள் மற்றும் இஸ்ரேலுடன் உறவுகளை ஏற்படுத்துவது போன்ற பல முக்கியமான பிரச்னைகள் மீண்டும் மீண்டும் விவாதத்திற்கு வந்துள்ளன. செளதி இளவரசர் முகமது பின் சல்மான் விரைவில் அமெரிக்கா செல்ல உள்ள நிலையில் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும் விவகாரம் மீண்டும் எழுந்துள்ளது. இது குறித்து இரண்டு தகவல்கள் வெளிவந்துள்ளன. முதலாவதாக, அமெரிக்கப் பாதுகாப்புத் துறை அமைச்சகம் பல பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்த ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இரண்டாவதாக, இந்த ஒப்பந்தத்தின் கீழ் செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து 48 விமானங்களை வாங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எஃப்-35 ஒப்பந்தம் குறித்து அறிந்த அதிகாரிகளை மேற்கோள் காட்டி ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனம் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளது. எஃப்-35, அமெரிக்க நாடாளுமன்றம் மற்றும் செளதி அரேபியா ஆனால், இந்த ஒப்பந்தத்திற்கான பாதை இப்போதைக்கு தெளிவாக இல்லை, இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய, அமெரிக்க அரசு, அமெரிக்க அதிபர் மற்றும் நாடாளுமன்றம் ஆகிய மூன்று தரப்பினரின் ஒப்புதலும் அவசியம். செளதி எழுத்தாளர் முபாரக் அல்-அத்தியா கூறுகையில், இதுபோன்ற ஒப்பந்தங்களுக்கு, சட்டப்படி அமெரிக்க அரசு மட்டுமின்றி நாடாளுமன்றத்தின் அனுமதியும் பெற வேண்டும் என்பதை செளதி அரேபியா புரிந்து கொண்டுள்ளது. அவர் பிபிசி உருதுவிடம் பேசுகையில், இந்த விவகாரத்தில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், நாடாளுமன்றத்தை இணங்க வைக்க முடிந்தால் மட்டுமே, ஒப்பந்தத்தை அவர் முன்னெடுத்துச் செல்ல முடியும் என்று கூறினார். இந்த ஒப்பந்தம் தொடர்பாக, ஜனநாயக கட்சியினர் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் செளதி அரேபியா-இஸ்ரேல் உறவுகளை இயல்பு நிலைக்குக் கொண்டுவர அழுத்தம் கொடுப்பார்கள் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை அங்கீகரிக்கச் சட்டப்பூர்வ நடவடிக்கையை எடுத்துள்ளார், ஏனெனில் அவர் செளதி அரேபியாவை ஒரு உத்தி ரீதியான கூட்டாளியாகக் கருதுகிறார், எனவே அதன் பாதுகாப்புத் தேவைகளைப் பூர்த்தி செய்வது அமெரிக்க வெளியுறவுக் கொள்கையின் கீழ் அவசியம் என்றும் அவர் நம்புகிறார். செளதி அரேபியாவின் பாதுகாப்புக் கோரிக்கைகளைப் பூர்த்தி செய்ய அமெரிக்கா மறுத்தால், சீனா மற்றும் ரஷ்யா போன்ற அமெரிக்காவின் எதிரிகளை செளதி அரேபியா நாடக்கூடும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் பல சந்தர்ப்பங்களில் கவலை தெரிவித்துள்ளார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். செளதி அரேபியா மீண்டும் மீண்டும் போர் விமானங்களுடன் சேர்த்து, மற்ற வகையான ராணுவ மற்றும் பாதுகாப்பு உபகரணங்களை வாங்குவது பற்றிப் பேசியுள்ளது என்று அல்-அத்தியா விளக்கினார். பட மூலாதாரம், SAUL LOEB/AFP via Getty Images படக்குறிப்பு, செளதி அரேபியா அமெரிக்காவிடமிருந்து எஃப் 35 போர் விமானங்களை வாங்க விரும்புகிறது. இந்த ஒப்பந்தம் குறித்த இஸ்ரேலின் கவலை இந்த ஒப்பந்தம் நிறைவேறினால், அது அமெரிக்காவின் வெளியுறவுக் கொள்கையில் ஒரு முக்கிய மாற்றத்தைக் குறிக்கும். இதன் பொருள் மத்திய கிழக்கில் இஸ்ரேலின் ராணுவ சக்திக்குச் சவால் ஏற்பட வாய்ப்புள்ளது. இருப்பினும், செளதி அரேபியாவுடனான இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் ராணுவ மேலாதிக்கம் இந்தப் பிராந்தியத்தில் நீடிக்கும் வகையில் நிபந்தனைகளும் கட்டுப்பாடுகளும் சேர்க்கப்படலாம். டிரம்ப் இந்த ஒப்பந்தத்தை இறுதி செய்ய விரும்புகிறார், ஏனெனில் செளதி தலைமையின் நோக்கங்களை அவர் புரிந்துகொள்கிறார். செளதி அரேபியாவின் இலக்கு அதன் எல்லைகளின் பாதுகாப்பைத் தாண்டி இல்லை என்று டிரம்ப் நம்புகிறார் என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். இந்தப் பிராந்தியத்தில் உள்ள அதன் சில அண்டை நாடுகளைப் போலல்லாமல், செளதி அரேபியாவுக்கு விரிவாக்க விருப்பங்கள் இல்லை என்பதையும் அதிபர் டிரம்ப் அறிவார் என்று அல்-அத்தியா கூறுகிறார். அமெரிக்கா செளதி அரேபியாவுக்கு எஃப்-35 போர் விமானங்களை விற்பதை இஸ்ரேல் விரும்பவில்லை என்று நிபுணர்கள் கூறுகின்றனர். இஸ்ரேலிய ஊடக செய்திகளின்படி, மத்திய கிழக்கில் உள்ள மற்ற நாடுகளுடன் அதன் உறவுகள் இயல்புக்குத் திரும்பவில்லை என்றால், இதுபோன்ற ஒரு ஒப்பந்தம் எதிர்காலத்தில் இஸ்ரேலின் பாதுகாப்புக்கு ஒரு தீவிர அச்சுறுத்தலை உருவாக்கலாம். ஆனால், செளதி அரேபியாவைப் பொறுத்தவரை, இப்போது அது அரபு நாடுகள் விவகாரத்தில் அதன் கொள்கைகள் மற்றும் கடமைகளை மாற்ற விரும்பவில்லை என்றும் முபாரக் அல்-அத்தியா நம்புகிறார். இதில் ஒரு முக்கியமான பிரச்னை பாலத்தீனம் ஆகும், 1967ஆம் ஆண்டு எல்லைகளின் அடிப்படையில் ஒரு சுதந்திர பாலத்தீன தேசம் உருவாக்கப்பட வேண்டும் என்று செளதி அரேபியா நம்புகிறது. மத்திய கிழக்கின் எதிர்காலம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தைக்கும் இதுவே அடிப்படை நிபந்தனையாகும். செளதி அரேபியா எஃப்-35 போர் ஜெட் தொழில்நுட்பத்தை ரஷ்யா, சீனா அல்லது இரானுடன் பகிர்ந்து கொள்ளலாம் என்று இஸ்ரேல் அஞ்சுகிறது என்று அல்-அத்தியா கூறுகிறார். அப்படி நடந்தால், இரான் பாதுகாப்பு விஷயத்தில் ஒரு படி முன்னேறி அதற்கு எதிராக இஸ்ரேலின் மேலாதிக்கம் குறைந்துவிடும். இதற்கு முன்னர், 2020 ஆம் ஆண்டிலும் இதேபோன்ற கவலை எழுந்தது, அப்போது அமெரிக்கா ஆபிரகாம் ஒப்பந்தங்களின் (Abraham Accords) கீழ் ஐக்கிய அரபு அமீரகத்திற்கு (UAE) எஃப்-35 விமானங்களை விற்கவிருந்தது. இருப்பினும், அந்த நேரத்தில் ஒப்பந்தம் முன்னேற முடியவில்லை. அந்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகளில், விமானங்களின் செயல்பாடுகள் குறித்து அமெரிக்கா பல கட்டுப்பாடுகளை விதித்தது, இதில் விமானங்களைப் பயன்படுத்துவதற்கான நிபந்தனைகளும் அடங்கும். சீனாவுடன் ஐக்கிய அரபு அமீரகம் கொண்டுள்ள ஆழமான உறவுகள் காரணமாகத் தொழில்நுட்பப் பரிமாற்றம் நடந்துவிடுமோ என்று அமெரிக்கா கவலைப்பட்டது. செளதி-அமெரிக்கா உறவுகளின் திசை மாறுமா? டிரம்ப் தனது இரண்டாவது பதவிக் காலத்தில் செளதி அரேபியாவுக்கான ஆயுத ஒப்பந்தங்களுக்கு கதவுகளைத் திறந்தார். இந்த ஆண்டு மே மாதம், அமெரிக்காவும் செளதி அரேபியாவும் ஒரு முக்கியப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன, இது அமெரிக்க வரலாற்றில் மிகப்பெரிய பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தமாக விவரிக்கப்பட்டது. டிரம்பின் செளதி பயணத்தின்போது இந்த ஒப்பந்தம் கையெழுத்தானது. டிரம்ப் செளதி அரேபியா, கத்தார் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம் ஆகிய மூன்று நாடுகளுக்குப் பயணம் மேற்கொண்டிருந்தார். வெள்ளை மாளிகை வழங்கிய தகவலின்படி, அமெரிக்கா செளதி அரேபியாவுடன் 600 பில்லியன் டாலர் மதிப்புள்ள ஒரு விரிவான ஒப்பந்தத்தைச் செய்தது. 142 பில்லியன் டாலர் மதிப்புள்ள பாதுகாப்பு ஒப்பந்தம் இந்த விரிவான ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாகும். இதன் கீழ் அது அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்கும். எனினும், எஃப்-35 போர் விமான ஒப்பந்தத்தின் உண்மையான சோதனை அமெரிக்க நாடாளுமன்றத்தின் அரங்குகளில் தான் நடக்க உள்ளது. செளதி இளவரசர் மற்றும் டிரம்ப் நிர்வாகத்தின் கீழ் செளதி-அமெரிக்க உறவுகளில் உள்ள ஒரு சிறப்பு என்னவென்றால், அனைத்துக் கோப்புகளும் இரு தரப்பினராலும் விவாதிக்கப்படுகின்றன. மேலும் கருத்து வேறுபாடுகள் உறவுக்குத் தடையாக மாறுவதற்கு அனுமதிக்கப்படுவதில்லை என்று முபாரக் அல்-அத்தியா கூறுகிறார். செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தின் நோக்கம் ஆயுத ஒப்பந்தத்தை இறுதி செய்வது அல்ல, மாறாக இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல் மற்றும் பொருளாதார உறவை ஆழப்படுத்துவதே இதன் முக்கிய நோக்கம் என்றும் அவர் கூறுகிறார். இந்தக் காலக்கட்டத்தில் பாதுகாப்பு ஒப்பந்தங்கள் குறித்து விவாதிக்கப்படும் என்பது வெளிப்படையானது. செளதி அரேபியா பற்றி முபாரக் அல்-அத்தியா கூறுகையில், அது எஃப்-35 போர் விமானங்களுடன் சேர்த்து, பிற விருப்பங்களை அடிப்படையாகக் கொண்ட ஒரு பாதுகாப்பு கொள்கையை ஏற்றுக்கொள்கிறது, என்று கூறினார். செளதி இளவரசரின் அமெரிக்கப் பயணத்தில் எஃப்-35 பற்றிய விவாதம் முக்கியமானது, ஆனால் அது உறவுகளை நிர்ணயம் செய்யும் முக்கிய காரணி அல்ல என்று அவர் கூறுகிறார். போர் விமானமா அல்லது பாதுகாப்பு உத்தரவாதமா? பட மூலாதாரம், Win McNamee/Getty Images படக்குறிப்பு, எஃப்-35 போர் விமானங்களை செளதி அரேபியாவுக்கு விற்க டிரம்ப் நிர்வாகம் அமெரிக்க நாடாளுமன்ற ஒப்புதலை பெறவேண்டும் செளதி அரேபியா, அமெரிக்காவிடமிருந்து எஃப்-35 போர் விமானங்களை வாங்க உறுதிபூண்டுள்ளது என்பதில் சந்தேகமில்லை. ஆனால். எந்தவிதமான தாக்குதல் நடந்தாலும் செளதி அரேபியாவை பாதுகாக்கும் வகையில் அமெரிக்காவுடன் ஒரு விரிவான பாதுகாப்பு ஒப்பந்தத்தை செய்துகொள்வதில் அதன் கவனம் இருக்கிறது. அண்மையில், அமெரிக்கா-கத்தார் பாதுகாப்பு ஒப்பந்தத்தை அமெரிக்கா அறிவித்தது. இதன் கீழ் கத்தார் மீதான எந்தவொரு தாக்குதலும் அமெரிக்காவின் "அமைதி மற்றும் பாதுகாப்புக்கு" அச்சுறுத்தலாகக் கருதப்படும் என்று கூறப்பட்டது. இந்த ஒப்பந்தம் அதிபரின் 'செயலாக்க உத்தரவாக' வெளியிடப்பட்டது, அதாவது அமெரிக்க அதிபர் மாறினால் இதைத் திருத்தலாம் அல்லது ரத்து செய்யலாம். கத்தாருடனான ஒப்பந்தம் சட்டரீதியாக கட்டாயமாக அமலாக்கக்கூடிய பாதுகாப்பு ஒப்பந்தம் அல்ல, இதற்கு அமெரிக்க நாடாளுமன்றத்தின் ஒப்புதலும் தேவையில்லை. செளதி அரேபியாவின் முன் உள்ள மிகப்பெரிய சவால் இப்போது இதுதான்: அதன் பாதுகாப்பை உறுதிபடுத்த, கத்தாரைப் போல அமெரிக்க நிர்வாகத்தில் ஏற்படும் மாற்றங்களுடன் இணைக்கப்பட்டுள்ள ஓர் ஒப்பந்தத்தை அது ஏற்றுக்கொள்ளுமா? அல்லது அமெரிக்காவில் அதிபர் மாறினாலும் அதன் பாதுகாப்பு உத்தரவாதத்தை பாதிக்காத வகையில், அமெரிக்காவிடம் ஒரு திடமான சட்டரீதியான பாதுகாப்பு ஒப்பந்தத்திற்காக அழுத்தம் கொடுக்குமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cze623487jno

அஸ்வெசும கொடுப்பனவு தொடர்பில் வௌியான முக்கிய தகவல்

3 months 3 weeks ago
அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு நடவடிக்கை முன்னெடுப்பு - நலன்புரி நன்மைகள் சபை Published By: Vishnu 10 Nov, 2025 | 03:17 AM (இராஜதுரை ஹஷான்) அஸ்வெசும வருடாந்த தகவல் புதுப்பிப்பு தற்சமயம் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 2023ஆம் ஆண்டில் அஸ்வெசுமவில் முதன் முறையாகப் பதிவுசெய்து தற்போது கொடுப்பனவுகளைப் பெறும் மற்றும் பெறாத குடும்பங்கள் மற்றும் தனிநபர்கள் இந்த புதுப்பிப்பை மேற்கொள்ள வேண்டும் என்று நலன்புரி நன்மைகள் சபை குறிப்பிட்டுள்ளது. எவ்வாறாயினும் 2024 ஆம் ஆண்டில் மனக்குறைகளை தெரிவித்த விண்ணப்பதாரர்களுக்குத் தகவல்களை புதுப்பிக்க வேண்டிய கட்டாயமில்லை என்றும்,அதற்குக் காரணம், அந்த விண்ணப்பதாரர்கள் ஏற்கனவே தகவல் ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளனர் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. மேலும்,தகவல்களை மீண்டும் உறுதிப்படுத்தும் போது குடும்ப உறுப்பினர்களின் தேசிய அடையாள அட்டை மற்றும் செயற்படக் கூடிய கையடக்கத் தொலைபேசி இலக்கம் என்பன இருப்பது அத்தியாவசியமாகும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. இணைய இணைப்புள்ள கணினி அல்லது ஸ்மார்ட் கையடக்கத் தொலைபேசி மூலம் https://eservices.wbb.gov.lk என்ற இணைய முகவரிக்குச் சென்று, தாளில் குறிப்பிடப்பட்டுள்ள தமது HH இலக்கம் மற்றும் தேசிய அடையாள அட்டை இலக்கத்தைப் பயன்படுத்தித் தகவல் முறைமைக்குள் உட்பிரவேசித்து, தகவல் உறுதிப்படுத்தல் மெனுவிற்குச் சென்று குடும்பத் தகவல்களை உள்ளிடலாம். அவ்வாறு இல்லையெனில், பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுத் தகவல் பிரிவுக்குச் செல்வதன் மூலமாகவோ அல்லது கிராம உத்தியோகத்தர் ஊடாக ஆண்டுத் தகவல் புதுப்பிப்பு விண்ணப்பப் படிவத்தை பிரதேச செயலகத்தின் நலன்புரி கொடுப்பனவுப் பிரிவில் சமர்ப்பிக்கலாம். அதன்படி, அஸ்வெசுமவின் முதல் கட்டத்தில் உள்ள அனைத்துக் குடும்பங்களும் தனிநபர்களும் தகவல் புதுப்பித்தலில் பங்கேற்பது கட்டாயமாகும் என்றும், பங்கேற்காத குடும்பங்களும் தனிநபர்களும் அடுத்த ஆண்டில் அஸ்வெசும கொடுப்பனவுக்குத் தகுதியற்றவர்களாகக் கருதப்படுவார்கள் என்றும் நலன்புரி நன்மைகள் சபை தெரிவித்துள்ளது. https://www.virakesari.lk/article/229946

2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று!

3 months 3 weeks ago
2026 வரவு செலவு திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று! 2026 வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான இரண்டாம் நாள் விவாதம் இன்று (10) இடம்பெறுகிறது. 2026 வரவு செலவுத் திட்டம் கடந்த வெள்ளிக்கிழமை ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட நிலையில் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் சனிக்கிழமை ஆரம்பமானது. அதன்படி, விவாதம் 6 நாட்கள் நடைபெறவுள்ளதுடன், அதற்கான வாக்கெடுப்பு நவம்பர் 14ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் தெரிவித்துள்ளது. 2026 வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு அல்லது குழு நிலை விவாதம் நவம்பர் மாதம் 15ஆம் திகதி முதல் 17 நாட்களுக்கு இடம்பெற்றதன் பின்னர், வரவு செலவுத் திட்டத்தின் மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு டிசம்பர் மாதம் 05ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு நடைபெறவுள்ளது. வரவு செலவுத் திட்டக் காலப்பகுதியில் அரசாங்க விடுமுறை நாட்கள் மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் தவிர ஏனைய ஒவ்வொரு நாளும் வரவு செலவுத் திட்ட விவாதம் நடத்தப்படவுள்ளதாகப் நாடாளுமன்ற தொடர்பாடல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது. https://athavannews.com/2025/1452400
Checked
Mon, 03/02/2026 - 02:16
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed