புதிய பதிவுகள்2

கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி

1 month 2 weeks ago
கொக்கிளாய் புல்மோட்டை இணைப்புப்பாலத்துக்கு 2026 பட்ஜெட்டில் நிதி ஒதுக்கீடு - ஜனாதிபதி உறுதி Published By: Vishnu 15 Aug, 2025 | 02:25 AM முல்லைத்தீவு மாவட்டத்தின் கொக்கிளாயையும், திருகோணமலை மாவட்டத்தின் புல்மோட்டையையும் இணைக்கும் பாலத்தை அமைக்குமாறு வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இந்நிலையில் குறித்த பாலத்தினை அமைப்பதற்கு எதிர்வரும் 2026ஆம் ஆண்டிற்குரிய வரவுசெலவு திட்டத்தில் நிதிஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் அவர்களிடம் உறுதியளித்துள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் புதன்கிழமை (13.08.2025) இடம்பெற்ற சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் குறித்த கோரிக்கையை ஜனாதிபதியிடம் முன்வைத்திருந்த நிலையிலேயே ஜனாதிபதி மேற்கண்டவாறு உறுயளித்துள்ளார். மேலும் இப்பாலம் அமைக்கப்பட்டால் வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கான போக்குவரத்து இலகுவாக்கப்படுவதுடன், சுற்றுலாத்துறையும் மேம்படும் என இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் ஜனாதிபதிக்கு இந்தப் பாலத்தை அமைக்க வேண்டியதன் முக்கியத்துவத்தை எடுத்துக்கூறியதையடுத்து, இப்பாலத்தை அமைப்பதற்கு அடுத்த வரவுசெலவுத்திட்டத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்படுமென ஜனாதிபதி உறுதியளித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/222581

மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம்

1 month 2 weeks ago
மன்னார் சூழல் பாதிப்புக்கு எதிரான போராட்டத்திற்கு முழு ஆதரவு – சி.வி.கே. சிவஞானம் Published By: VISHNU 15 AUG, 2025 | 03:19 AM மன்னாரில் மக்களின் வாழ்வியலை பாதிக்கும் காற்றாலை மின் உற்பத்தி,கனிய மணல் அகழ்வு போன்றவற்றிற்கு எதிராக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற போராட்டத்திற்கு இலங்கை தமிழரசு கட்சி பூரண ஆதரவை வழங்கும் என அக்கட்சியின் தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். மன்னாரில் மக்களின் எதிர்ப்பை மீறி முன்னெடுக்கப்பட்டு வரும் காற்றாலை மின் கோபுரம் அமைக்கும் நடவடிக்கை மற்றும் கனிய மணல் அகழ்வு போன்றவற்றிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் தொடர்ச்சியாக மன்னார் பஜார் பகுதியில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் வியாழக்கிழமை (14) காலை 12 வது நாளாக முன்னெடுக்கப்பட்டு வருகின்ற மக்களின் எழுச்சி போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் மேலும் தெரிவிக்கையில்,,,, மன்னார் தீவில் இயற்கைச் சூழலில் வாழ்கின்ற மக்களின் வாழ்வியலை பாதிக்கின்ற வகையில் முன்னெடுக்கப்படுகின்ற காற்றாலை மின் உற்பத்தி, கனிய மணல் அகழ்வு ஆகியவை தொடருமானால் மன்னார் பிரதேசத்தினுடைய வாழ்வியல் சூழல் மிகவும் பாதிக்கப்படும் என்பதை வெளிப்படுத்தி இப்போராட்டம் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. தற்போது இடம்பெற்று வருகின்ற போராட்டம் அமைதியான முறையில் ஜனநாயக ரீதியில் இடம்பெற்று வருகின்றது. இப்போராட்டம் வெற்றியளிக்க வேண்டும். இப்போராட்டம் குறித்து ஜனாதிபதியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. மீளாய்வின் அடிப்படையில் மக்களின் கோரிக்கைகள் முழுமையாக ஏற்றுக் கொள்ளப்பட்டு, இயற்கையுடன் கூடிய மன்னார் அழிவிலிருந்து பாதுகாக்க அரசாங்கம் உரிய சூழலை ஏற்படுத்தி கொடுக்கும் என்பதை நாங்கள் எதிர்பார்க்கின்றோம். அந்த வகையிலே மக்களினுடைய போராட்டம் வெற்றி அளிக்க வேண்டும் என்பதை இலங்கை தமிழரசுக்கட்சியின் தலைவர் என்கின்ற வகையில் எனது ஆதரவையும்,இலங்கை தமிழரசுக்கட்சியின் முழுமையான ஆதரவையும் இப்போராட்டத்திற்கு தெரிவித்துக் கொள்கிறேன்.என அவர் மேலும் தெரிவித்தார். மன்னாரில் குறித்த போராட்டம் தொடர்ச்சியாக இடம்பெற்று வருகின்ற நிலையில் புதன்கிழமை (13) மாலை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் மேற்கொள்ளப்பட்ட இறுதி முடிவுகள் தொடர்பாக உரிய அதிகாரிகள் போராட்டக்காரர்களுக்கு அறிவிக்கப்படாத நிலையில் குறித்த போராட்டம் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் இடம்பெற்ற குறித்த 12 வது நாள் போராட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் கலந்து கொண்டிருந்தார். https://www.virakesari.lk/article/222583

முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர்

1 month 2 weeks ago
முத்தையன்கட்டு சம்பவம் - ஹர்த்தாலிற்கு அவசியமில்லை . அனைத்து மாவட்டங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் நிகழ்கின்றன - பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் Published By: Rajeeban 15 Aug, 2025 | 10:37 AM முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலிற்கான தேவையில்லை என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜயபால மோர்னிங்கிற்கு தெரிவித்துள்ளார். முத்தையன்கட்டு சம்பவம் தொடர்பில் ஹர்த்தாலை முன்னெடுக்கவுள்ளதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்,ஆனால் அதற்கான தேவையில்லை என அமைச்சர் தெரிவித்துள்ளார். அந்த சம்பவத்துடன் தொடர்புடைய தனிநபர்கள் கைதுசெய்யப்பட்டு விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ளனர்,ஹர்த்தால் என்றாலும் சரி இல்லாவிட்டாலும் எங்களால் வேறு எதனையும் செய்ய முடியாது என பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் தெரிவித்துள்ளார். நாங்கள் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையிலேயே அடுத்த கட்ட நடவடிக்கையை எடுப்போம், ஹர்த்தால் போராட்டத்தில் ஈடுபடுவது அர்த்தமற்றது என அவர் தெரிவித்துள்ளார். ஏனைய மாகாணங்களிலும் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன, ஆனால் அதற்காக அங்கே எவரும் ஹர்த்தாலில் ஈடுபடவில்லை என தெரிவித்துள்ள பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் நாங்கள் இந்த சம்பவத்தினை இன மத அடிப்படையில் பார்க்ககூடாது,குற்றங்கள் இடம்பெற்றால் பொலிஸார் அதற்கு காரணமானவர்களிற்கு எதிராக அவர்களின் பின்னணியை கருத்தில் கொள்ளாமல் நடவடிக்கை எடுப்பார்கள்,கடந்த சில மாதங்களாக நாங்கள் இதனையே செய்கின்றோம் என்பதை நிரூபித்துள்ளோம் என அமைச்சர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/222594

யாழ்ப்பாணம் சர்வதேச புத்தகத் திருவிழா 2025!

1 month 2 weeks ago
யாழ் சர்வதேச புத்தகத் திருவிழா இன்று ஆரம்பம் 15 August 2025 யாழ்ப்பாணம் - சர்வதேச புத்தகத் திருவிழா இன்று (15) ஆரம்பமாகவுள்ளது. தொழில்துறை மன்றத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கும் சர்வதேச புத்தகத் திருவிழா இம்முறை இரண்டாவது தடவையாக நடத்தப்படுகிறது. அதற்கமைய, இன்று (15) முதல் நாளை மறுதினம் (17) வரை யாழ்ப்பாணம் திருவள்ளுவர் பண்பாட்டு மையத்தில் இந்த புத்தகத் திருவிழா நடைபெறவுள்ளது. இம்முறையும் நாடு முழுவதிலுமிருந்து பல முன்னணி புத்தக நிறுவனங்கள் இந்த நிகழ்வில் கலந்துகொள்ள உள்ளன. சிறந்த தரம் வாய்ந்த புத்தகங்கள், பல்வேறு தலைப்புகளின் கீழ் சிறப்பு விலைக்கழிவுகளுடன் இங்கு விற்பனை செய்யப்படவுள்ளன. சர்வதேச புத்தகத் திருவிழாவில் பல்வேறு அறிவுசார் மற்றும் கலை நிகழ்வுகளும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://hirunews.lk/tm/414671/jaffna-international-book-festival-begins-today

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

1 month 2 weeks ago
குறிப்பாக ட்ரம்பிற்கு இந்த ப்பெச்சுவார்த்தை மிக முக்கியமான ஒன்றாக இருக்கலாம், ட்ரம்பிற்கு மட்டுமல்ல அமெரிக்க அரசிற்கும் இந்த பேச்சுவார்த்தை ஒரு முக்கியமான ஒன்றாக இருக்கலாம், அமெரிக்க பாதுகாப்பு பெருமளவில் ஆசிய நாடுகளில் தங்கியுள்ள நிலையில் ஒரு புறம் திட்டமிடாத வரிப்போரின் தாக்கம் இருக்கும் நிலையில் இந்த போரை தொடர்ந்தால் அமெரிக்காவின் பாதுகாப்பு நிலை கேள்விக்குள்ளாகலாம் அதனால் ஒரு புறம் ஐரோப்பிய நாடுகளை சமாதானப்படுத்திக்கொண்டு மறுபுறம் ஈழப்பிரியன் கூறுவது இரஸ்சியாவிற்கு சாதகமான தீர்வினை எட்டுவதற்கு அதிகமான வாய்ப்புள்ளதனை மறுக்கமுடியாதுதான்.

ட்ரம்ப்பும் , புட்டினும் சந்திப்பது உறுதி

1 month 2 weeks ago
அது உண்மையில் ஒரு புத்திசாலித்தனமான முடிவுதான், ஆனால் தற்போது உடனடி போர் நிறுத்தம் கொண்டுவரப்பட வேண்டும், பின்னர் பேச்சுவார்த்தை தொடரலாம் எனவும் உக்கிரேனின் இடங்கள் தொடர்பிலான விட்டுக்கொடுப்பினை உக்கிரேனே தீர்மானிக்க வேண்டும் என கூறப்படுகிறது, உக்கிரேன் சட்டத்திற்கு அமைவாக ஒரு வாக்கெடுப்பின் மூலமே அது தீர்மானிக்கப்படவேண்டும். பேச்சுவார்த்தையில் தீர்வு ஏற்படுவதனை செலன்ஸ்கி விரும்பவில்லை என தெரிகிறது, நிரந்தர தீர்வு ஏற்படும் பட்சத்தில் ஒரு தேர்தலை எதிர்கொள்ளவேண்டிய நிலையினை செலன்ஸ்கி விரும்பவில்லை போல தெரிகிறது, போரை தொடர்வதில் ஐரோப்பிய ஒன்றியம் ஆர்வம் காட்டுகிறது. பிரான்ஸ் அதிபர், உக்கிரேன் நேட்டோவில் அங்கம் பெறாது ஆனால் பாதுகாப்பு உறுதி வழங்கப்படும் எனும் ஒரு கர்த்தினை முன்வைத்துள்ளார், இது அமெரிக்க பிரசன்னம் உக்கிரேனில் ஏற்படுவதற்கான ஐரோப்பிய நாடுகளின் விருப்பாக இருக்கலாம். இந்த பேச்சுவார்த்தையில் இரஸ்சியாவிற்கு இழப்பதற்கு எதுவுமில்லை, அலாஸ்கா கனிமங்களை வழங்குவது மற்றும் போயிங் உதிர்ப்பாகங்கலை இரஸ்சியா பெறுவது பற்றிய விடயங்கள் இரஸ்சியாவிற்கு இலாபகரமற்ற அமெரிக்காவிற்கு மட்டும் இலாபமான முயற்சி, இந்த பேச்சுவார்த்தை முறிந்தால் இரஸ்சியா விரும்பும் விடயங்கள் கிடைக்காவிட்டால் இரஸ்சியா இந்த பேச்சுவார்த்தையில் இருந்து விலகிவிடும். அமெரிக்கா அதன் பின்னர் பொருளாதார தடையினை போடலாம் நீண்ட தூர ஏவுகணைகள் வழங்கலாம் ஆனால் போரின் போக்கினை மாற்ற முடியாது. இது ஒன்றும் இரஸ்சியாவிற்கு புதிய விடயமல்ல, ஆனால் இந்த சமாதான பேச்சுவார்த்தை சாதகமாக அமைந்தால் இரஸ்சியாவிற்கு இலாபம் உண்டு அதனால் இரஸ்சியாவிற்கு இந்த் பேச்சினால் இழப்பதற்கு எதுவுமில்லை ஆனால் அடையகூடிய இலாபம் உண்டு மறுதரப்பிற்கு இந்த பேச்சுவார்த்தையால் எந்த இலாபமும் இல்லை ஆனால் இழப்பு மட்டுமே உண்டு. ஆனால் ஒரு விதி விலக்கு செலன்ஸ்கி மட்டுமே.🤣

சொக்லேட்டை திருடிய முதியவர் அடித்துக் கொலை

1 month 2 weeks ago
இலங்கை போன்ற வளரும் நாடுகள் கட்டிடங்களாலும் வீதிகளாலும் வளர்வதே வளர்ச்சியாகும் என்ற சிந்தனாவால், ஏழை மக்கள் பெருகிவரும்நிலை. பாவம் ஒரு மூதாளர் செய்தது தவறேயானபோதும், மரண தண்டனை கொடுக்கும் அளவு சென்றிருப்பது பெரும் துயரமாகும். பொதுவுடமைத் தத்துவார்த்த கொள்கைவழி ஆட்சி வந்தாலும் இனவாதநோய்த்தொற்றில் இருக்கும்வரை மக்களின் பசி பட்டிணி மாறப்போவதில்லை. முன்னைய ஆட்சிகளின் தொடர்ச்சியே இந்த ஆட்சியுமாகும் நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி!

1 month 2 weeks ago
இலங்கையில் கஞ்சா பயிரிட வெளிநாட்டவர்களுக்கு அனுமதி! Vhg ஆகஸ்ட் 13, 2025 இலங்கை அரசாங்கம் முதல் முறையாக, வெளிநாட்டு முதலீட்டாளர்கள் கஞ்சா பயிரிட அனுமதித்துள்ளது. இதன் முதன்மை நோக்கம் மருந்து உற்பத்தி மற்றும் ஆராய்ச்சி நோக்கங்களுக்காகப் பிரத்தியேகமாகப் பயன்படுத்தப்படும் கஞ்சா சார்ந்த பொருட்களை ஏற்றுமதி செய்வதன் மூலம், நாட்டிற்கு குறிப்பிடத்தக்க அந்நியச் செலாவணியை ஈட்டுவதாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. 7 வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அனுமதி இந்தத் திட்டத்திற்காகச் சமர்ப்பிக்கப்பட்ட 37 விண்ணப்பங்களில், தகுதிவாய்ந்த 7 வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு, அவர்களுக்கு 6 மாத காலத்திற்கான தற்காலிக அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இந்தக் காலகட்டத்தில் அவர்களின் திட்டங்கள் எவ்வாறு செயல்படுத்தப்படுகின்றன என்பதைப் பொறுத்து எதிர்காலத்தில் பயிர்செய்கை காலம் நீட்டிக்கப்படும். இந்தத் திட்டத்தைத் தொடங்க, ஒரு முதலீட்டாளர் குறைந்தபட்சம் 5 மில்லியன் அமெரிக்க டொலர்களை ஆரம்ப முதலீடாகச் செய்ய வேண்டும். மேலும் இலங்கை மத்திய வங்கியில் 2 மில்லியன் அமெரிக்க டொலர் பத்திரத்தை வைப்பு செய்வது கட்டாயமாகும். இந்தத் தகவலை ஆயுர்வேதத் திணைக்களத்தின் முன்னாள் ஆணையாளர் நாயகம் டொக்டர் தம்மிக்க அபேகுணவர்தன உறுதிப்படுத்தியுள்ளார். இந்தப் பயிர்ச் செய்கைக்காக மீரிகம பகுதியில் 64 ஏக்கர் பரப்பளவு ஒதுக்கப்பட்டுள்ளது. இலங்கையின் சட்டங்கள் மற்றும் விதிமுறைகளின்படி கடுமையான பாதுகாப்பு நடவடிக்கைகளின் கீழ் இந்தப் பயிர்ச்செய்கை மேற்கொள்ளப்படவுள்ளது. அதன்படி, பயிர்செய்கை செய்யப்பட்ட நிலத்தைச் சுற்றி வலுவான பாதுகாப்பு வேலி அமைப்பதோடு மட்டுமல்லாமல், விசேட அதிரடிப்படை மற்றும் இலங்கை காவல்துறையிடமிருந்து பாதுகாப்பைப் பெறுவதும் கட்டாயமாகும். இந்தத் திட்டத்தின் மூலம் வளர்க்கப்படும் கஞ்சா இலங்கையில் பயன்படுத்தப்படாமல் முழுவதுமாக ஏற்றுமதி செய்யப்பட வேண்டும். அதோடு கஞ்சா செடியின் எந்தப் பகுதியையும் (விதைகள், இலைகள், வேர்கள்) வெளிப்புறச் சூழலுக்கு வெளியிடாமல் அழிக்க சட்டங்களும் விதிமுறைகளும் விதிக்கப்பட்டுள்ளன. இலங்கை முதலீட்டுச் சபை, பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சு, சுற்றாடல் அமைச்சு மற்றும் ஆயுர்வேதத் துறை உள்ளிட்ட பல அரச நிறுவனங்கள் இந்தத் திட்டத்தை மேற்பார்வையிட இணைந்து செயல்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. https://www.battinatham.com/2025/08/blog-post_324.html

தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.!

1 month 2 weeks ago
தமிழர் பகுதியில் விடுவிக்கப்படும் முக்கிய மாவீரர் துயிலுமில்லம்.! Vhg ஆகஸ்ட் 14, 2025 மட்டக்களப்பு வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்லம் உள்ள காணியின் ஒரு பகுதியை விடுவிப்பதற்கு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் (Ananda Wijepala) பங்குபற்றுதலுடன் நேற்று (13.08.205) இடம்பெற்ற மட்டக்களப்பு மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. வவுணதீவு - தாண்டியடி மாவீரர் துயிலுமில்ல காணியில் விசேட அதிரடிப்படை முகாம் அமைந்திருக்கிறது என்றும், அந்த காணியினை விடுவித்து மக்கள், அஞ்சலி செலுத்துவதற்கு ஏற்றவகையில் மாற்றியமைத்து வழங்குமாறும் நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் இதன்போது கோரியிருந்தார். எனினும், அந்த காணியினுள் நிரந்தரக் கட்டடங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும், அவ்வாறு துயிலுமில்லம் இருந்ததிற்கான அடையாளங்கள் இல்லையென்றும், விசேட அதிரடிப்படை முகாமின் அதிகாரி ஒருவர் இதன்போது சுட்டிக் காட்டியுள்ளார். இதற்குப் பதிலளித்த நாடாளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன், முழுமையாக இல்லாவிட்டாலும் குறித்த காணியில் மாவீரர்களுக்கு வணக்கம் செலுத்துவதற்கு ஒருபகுதியினை விடுவிக்குமாறு கோரியுள்ளார். இதன்படி, நேரடியாக கள விஜயம் மேற்கொண்டு காணியின் ஒருபகுதியினை விடுவிப்பதாக பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதன்போது தெரிவித்துள்ளார். https://www.battinatham.com/2025/08/blog-post_458.html

‘கூலி’ விமர்சனம்

1 month 2 weeks ago
விமர்சனம் : கூலி! 14 Aug 2025, 5:18 PM எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ததா ‘கூலி’? ’ஆயிரம் கோடி வசூலை நிச்சயம் தமிழ் திரையுலகில் இருந்து நிகழ்த்தும்’ என்ற எதிர்பார்ப்பைப் பெருக்கியது ரஜினிகாந்த், லோகேஷ் கனகராஜ் காம்பினேஷனில் உருவான ‘கூலி’. அனிருத்தின் இசை, கிரிஷ் கங்காதரனின் ஒளிப்பதிவு மற்றும் சத்யராஜ், உபேந்திரா, சௌபின் ஷாஹிர், நாகார்ஜுனா, அமீர்கான், ஷ்ருதிஹாசனின் இருப்பு எனப் பல அம்சங்கள் அதற்குத் துணை நின்றன. மிகுந்த எதிர்பார்ப்பை உருவாக்கிய ‘கூலி’, இன்று (ஆகஸ்ட் 14) தியேட்டர்களில் வெளியாகியிருக்கிறது. ‘கூலி’ எப்படி இருக்கிறது? ரசிகர்களின் எதிர்பார்ப்பு என்னவானது? பழிக்குப் பழி! விசாகப்பட்டினம் துறைமுகத்தில் கடத்தல் வேலைகளைச் செய்து வருகிறார் சைமன் (நாகார்ஜுனா). அவரிடத்தில் வேலை செய்யும் கூலியாட்களில் காவல் துறையைச் சேர்ந்த உளவாளிகள் இருப்பதாகத் தகவல் தெரியும்போதெல்லாம், அவர்களைக் கண்டறிந்து கொடூரமாகக் கொல்கிறார் அடியாள் தயாள் (சௌஃபின் ஷாஹிர்). ஒருநாள் தங்கள் தொழிலுக்கு எவ்விதத்திலும் சம்பந்தமில்லாதவரான ராஜசேகர் (சத்யராஜ்) என்பவரை நாடுகிறது சைமன் கும்பல். அதனைச் செய்யாவிட்டால், அவரது மூன்று மகள்களையும் கொலை செய்வதாக மிரட்டுகிறது. அதனால், வேறு வழியில்லாமல் அவர்கள் செய்கிற குற்றங்களுக்குத் துணையாக இருக்கிறார் ராஜசேகர். இந்த நிலையில், திடீரென்று ராஜசேகர் மரணமடைகிறார். இந்தத் தகவல் சென்னையில் இருக்கும் அவரது உயிர் நண்பரான தேவாவுக்குத் தெரிய வருகிறது. ராஜசேகரின் இறுதிச்சடங்குகளில் தேவா கலந்துகொள்வதை, அவரது மூத்த மகள் ப்ரீத்தி ஏற்கவில்லை. ‘நீங்க ஏன் இங்க வந்தீங்க’ என்று அவரை விரட்டுகிறார். ஆனால், அதே தேவா ப்ரீத்திக்கு உதவிக்கரம் நீட்டுகிற சூழல் உருவாகிறது. ராஜசேகர் கொலை செய்யப்பட்டார் என்ற உண்மையைக் கண்டறிகிறார் தேவா. அவர் சைமனிடத்தில் வேலை செய்தார் என்பதை அறிந்து, ப்ரீத்தி உடன் துறைமுகத்திற்குச் செல்கிறார். அங்கு தயாளின் இன்னொரு முகம் அவருக்குத் தெரிய வருகிறது. அதன்பிறகு என்ன ஆனது? நண்பனைக் கொன்றவரைத் தேவா கண்டறிந்தாரா? இது போன்ற பல கேள்விகளுக்குப் பதிலளிக்கிறது ‘கூலி’யின் மீதி. ’நண்பனைக் கொன்றவரைப் பழி வாங்காமல் விட மாட்டேன்’ என்று எதிரியின் கோட்டைக்குள் நுழைகிற ஒரு ஐம்பது ப்ளஸ்களில் இருக்கிற ஒரு ‘முன்னாள்’ கூலியின் ‘ஆக்‌ஷன் எபிசோடு’ தான் இப்படத்தின் ஆதார மையம். பெரிதாக பஞ்ச் டயலாக்குகள், ஹீரோவுக்கான காதல் காட்சிகள், காமெடி ட்ரூப் கலாட்டாக்கள் இல்லாமல், சீரியசாக கதை சொல்கிற பாணியில் இப்படத்தின் காட்சியாக்கத்தை அமைத்திருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். ஆக்‌ஷன் படம் எனில் சஸ்பென்ஸ் அல்லது சர்ப்ரைஸ் ஆகச் சில விஷயங்கள் சொல்லப்படும். இதிலும் அப்படியொரு விஷயம் இருக்கிறது. அது ‘ஊமை விழிகள்’, ‘எல்லாமே என் காதலி’, ‘காக்கிசட்டை’ எனப் பல படங்களில் நாம் பார்த்ததுதான்.. படத்திற்கு ‘ஏ’ சான்றிதழ் கிடைக்கவும் அதுவே காரணமாக உள்ளது. ரஜினியின் ‘கெட்டப்’! வழக்கமாக லோகேஷ் கனகராஜ் படங்களில் காட்சியாக்கம் ‘புதிதாக ஏதோ ஒன்றை’க் கண்ட உணர்வை ஏற்படுத்தும். விஎஃப்எக்ஸும் டிஐயும் அதில் முக்கியப் பங்கு வகிக்கும். இதிலும் அப்படியே. ஒளிப்பதிவாளர் கிரிஷ் கங்காதரன், படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், தயாரிப்பு வடிவமைப்பாளர் சதிஸ்குமார், ஸ்டண்ட் இயக்குனர்கள் அன்பறிவ் எனப் பல தொழில்நுட்பக் கலைஞர்களின் பங்களிப்பு அதனைச் சாதித்திருக்கிறது. அனிருத்தின் இசையில் ‘சிக்குடு’, ‘மோனிகா’ பாடல்கள் எளிதாக ஈர்க்கின்றன. பின்னணி இசை சில காட்சிகளில் பிரமாண்டத்தை உணர வைக்கிறது; ஆனாலும் பல இடங்களில் இரைச்சல் அதிகம். இப்படத்தின் எழுத்தாக்கத்தைச் சந்துரு அன்பழகனோடு இணைந்து கையாண்டிருக்கிறார் இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இப்படத்திலும் கிளாசிக் திரையிசைப் பாடல்களைப் புகுத்துகிற வேலையைச் செய்திருக்கிறார் இயக்குனர். ‘வா வா பக்கம் வா’ என ‘தங்கமகன்’ படத்தின் பாடல் ஒலிக்கிற அந்த இடைவேளைக்கு முன்பான காட்சி மண்டைக்குள் ‘ஜிவ்வ்..’வென்ற உணர்வை ஏற்படுத்துகிறது. போலவே, இடைவேளை ‘ப்ளாக்’கில் ரஜினியின் ஸ்டைலான நடிப்பு அசத்தல். அதேநேரத்தில், ‘இதேமாதிரி படம் முழுக்க விஷயங்களைக் கொட்டினா இன்னாவாம்’ என்று ரசிகர்கள் புலம்புகிற வகையில் இதர காட்சிகள் இருக்கின்றன. அந்த காட்சிகளைக் காண்கிறபோது வேறு கதாசிரியர்கள், திரைக்கதையாசிரியர்களின் பங்களிப்பைப் பெறலாமே என்ற எண்ணம் மனதில் விஸ்வரூபம் எடுக்கிறது. நட்சத்திர அந்தஸ்து உள்ள நாயகர்களைத் திரையில் காட்டுகிறபோது, முந்தைய படங்களில் அவர்களுக்கு வரவேற்பைப் பெற்றுத் தந்த விஷயங்களையும் தொட்டுச் சென்றாக வேண்டும். அதோடு தனது கதை சொல்லலையும் இணைத்து சமநிலையை உருவாக்குவதில் தடுமாறியிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். சுமார் 45 ஆண்டுகளுக்கும் மேலாக முன்னணியில் இருக்கிற ஒரு நாயகனாக ரஜினியின் ஸ்டைல், ஆக்‌ஷன் பில்டப் எல்லாம் வழக்கமானதாக அமைந்திருக்கின்றன. அவற்றைத் தாண்டி, மிகச்சில இடங்களில் அவரது நடிப்பு சிரிக்க வைக்கிறது. ஒரு ‘பவர்ஹவுஸ்’ ஆக படத்தைத் தாங்கி நிற்கிறது. இந்த படத்தில் வில்லன்கள் என்று சிலர் வந்து போகின்றனர். அவர்களில் இயக்குனர் முதன்மையாக முன்னிறுத்துவது ‘கிங்’ என்று தெலுங்கு சினிமா ரசிகர்களால் அழைக்கப்படும் நாகார்ஜுனா. ஆனால், அவர் சண்டையிடும்போது ‘வில்லனாக’ நம் கண்களுக்கு தெரிவதே இல்லை. அது இப்படத்தின் தலையாய ‘மைனஸ்’களில் ஒன்று. தனது இருப்பால் அந்தக் குறையைச் சமன் செய்திருக்கிறார் மலையாள நடிகர் சௌபின் ஷாஹிர். ‘தயாள்’ ஆக வந்து மிரட்டியிருக்கிறார். ரக்‌ஷிதா ராம், கண்ணா ரவி வருகிற காட்சிகள் புதிதாக இல்லை; அதேநேரத்தில், அவை சில ரசிகர்களை ‘கூஸ்பம்ஸ்’ ஆக்குகின்றன என்பதை மறுக்க முடியாது. சத்யராஜுக்கு இதில் பெரிதாகக் காட்சிகள் இல்லை. அதேநேரத்தில், கதையின் அச்சாணிப் பாத்திரமாக வந்து போயிருக்கிறார். ஷ்ருதிஹாசன் இப்படத்தில் ஆங்காங்கே வருகிறார். அவரது சோகமே உருவான பாவனைகள் நம்மை அயர்ச்சியுறச் செய்கின்றன. உபேந்திரா, அமீர்கான் இருவரும் ‘கேமியோ’வாக வந்து ‘கைத்தட்டல்’களை அள்ள முயற்சித்திருக்கின்றனர். இரண்டாமவர் அதனை எளிதாகச் சாதித்திருக்கிறார். இதுபோக மகேஷ் மஞ்ச்ரேகர், சார்லி, பாபுராஜ், காளி வெங்கட், தமிழ், ரிஷிகாந்த், திலீபன், ரொபா மோனிகா, மோனிஷா ப்ளெஸ்ஸி, மாறன் எனச் சிலர் இப்படத்தில் உண்டு. அவர்களது காட்சிகளில் பெரிதாக அதிருப்தி இல்லை. அதேநேரத்தில், அவர்களில் பலருக்குத் தனித்துவமான பாத்திர வார்ப்பு அமையாதது ‘மைனஸ்’ தான். ரசிகர்களை எதிர்பார்ப்பில் ஆழ்த்திய ‘பிளாஷ்பேக்’ காட்சிகள் அதிகமாக இடம்பெறாதது, ரஜினி – சத்யராஜ் நட்பு பிணைப்பைத் திறம்படக் காட்டாதது, இதற்கு முன்பான ‘லோ.க.’ படங்களில் உள்ள சில விஷயங்கள் இதிலும் ‘ரிப்பீட்’ ஆகியிருப்பது என ‘கூலி’யில் சில குறைகளைப் பட்டியலிட முடியும். அவற்றைக் கடந்து ‘ஓகே’ எனும்படியான திரையனுபவத்தைத் தருகிறது இப்படம். ’ஆஹா..’, ‘ஓஹோ..’ எனப் புகழும்படியாக ‘கூலி’யை உருவாக்கியிருந்தால், ரஜினியின் ஐம்பதாண்டு காலத் திரைப் பங்களிப்பை இன்னும் ‘அபாரமாக’ கொண்டாடலாம்.. அந்த வாய்ப்பினைத் தவறவிட்டிருக்கிறார் லோகேஷ் கனகராஜ். ஏற்கனவே சொன்னது போல, ‘ஆயிரம் கோடி வசூல்’ இலக்கை எட்டுகிற ரேஸில் ‘கூலி’ அடைகிற இடம் என்ன என்பது இன்னும் சில நாட்களில் தெரிந்துவிடும். ஒருவேளை அந்த இலக்கு இல்லாமல் களமிறங்கியிருந்தால் கூட வெற்றி எளிதாக வாய்த்திருக்குமோ என்ற எண்ணத்தை ஏற்படுத்தியிருக்கிறது இப்படம் தருகிற திரையனுபவம்..! https://minnambalam.com/rajinikanth-coolie-movie-review/
Checked
Mon, 09/29/2025 - 15:50
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed