Aggregator
ஒரு தலை ராகம்
ஒரு தலை ராகம்
..........................
ஒரு மன மாற்றத்திற்காக அறையை இருட்டாக்கி, முறுக்கு டப்பாவை கையில் வைத்துக்கொண்டு, வசதியாக சாய்ந்தபடி, மனதிற்கு பிடித்த படம் யூ ட்யூபில் பார்க்கத் தொடங்கினேன்...
1980 ல் வெளி வந்த டி.ராஜேந்தரின் படம்...
கதாநாயகி ரூபா அற்புதமான தேர்வு...மிகக் குறைந்த வசனம்தான் அவருக்கு படம் நெடுகிலும்... பேசமுடியாத வசனங்களை பேசும் கண்களால் அப்படியே நம்முன் கொட்டுகிறார்... அந்த அகன்ற கரிய விழிகள்தான் எத்தனை உணர்வுகளை படம் முழுதும் பேசிக் கொண்டே போகிறது...படம் முழுவதிற்கும் இரு முறை தான் சிரித்திரிப்பார்...
அவர் கட்டியிருந்த அத்தனை காட்டன் சேலைகளும் அவ்வளவு அழகு...
கதாநாயகன் சங்கர் அந்த காலத்தில் எங்களுக்கெல்லாம் ஹீரோ.
இந்தத் திரைப்படம் வெளி வந்த உடன் எத்தனை இளம்பெண்கள் அவர் மேல் காதற்வயப்பட்டார்கள் என நன்கறிவேன்...
சோகத்தை வெளிக் காண்பிக்கும் நடிப்பில் பின்னி எடுக்கிறார்... ஆனால் அந்த கால பெல்பாட்டமும், காதை மறைத்த தலை முடி அலங்காரமும், நெஞ்சில் பேன்ட்டை டக் இன் செய்யும் விதம்தான் கொஞ்சம் சிரிப்பு மூட்டியது...
ஒவ்வொரு நடிகரும், நடிகையும், சந்திரசேகராகட்டும், உஷாவாகட்டும், ரவீந்தராகட்டும், தியாகுவாகட்டும், தன் கதாபாத்திரத்தை செவ்வனே செதுக்கியிருந்தார்கள்...
80 களில் இருபாலார் படிக்கும் கல்லூரியை அப்படியே கண்முன் நிறுத்தினார்கள்...
எனக்கு நான் படித்த சிவகங்கை மன்னர் கல்லூரி, எங்கள் தோழிகள், கூட படித்த மாணவர்கள் என நினைவு சுழற்றி அடித்துக் கொண்டே இருந்தது..
வசனங்கள்...நோ சான்ஸ்...அவ்வளவு அருமை...இப்போதைய பெரும்பான்மையான படங்களில் தேவையில்லாத நேரத்தில் வண்டி வண்டியாக நடிகர்கள் வசனம் பேசுகிறார்களே?
கதாநாயகன் கோவிலில் பக்கத்தில் நிற்கிறான்.. அவனுடன் பேச முடியாத நிலை..தங்கை அருகிலிருக்கிறாள்...எண்ணெய் கிண்ணத்தை தவற விடுகிறாள்...
" எண்ணயவே (என்னய) கொட்டிட்டேன்...திருப்பி அள்ள முடியல" என்கிறாள் அவன் உணரும் வகையில்...
நாயகிடம் நாயகன் என்னைக் காதலிக்கிறாயா எனக் கேட்க பதிலுரைக்காமல் மவுனமாக அங்கிருந்து அகல்கிறாள்... அவன், அவள் , தோழி என மற்றொரு சந்தர்ப்பத்தில் ஒன்றிருக்கையில் தோழியிடம் அவன் சொல்கிறான்" கேட்காத கேள்விக்கு நீங்க பதில் சொல்றீங்க...கேட்ட கேள்விக்கே சிலர் பதில் சொல்ல மாட்டேங்கறாங்க" அப்போது சுழற்றி சுழற்றி ரூபாவின் விழிகள் நர்த்தனமாடும் பாருங்கள்...மிக அழகு அக்காட்சி, வசனம் அத்தனையும்...
இறுதி காட்சி...நாயகி நாயகனிடம் தன் மனதிற்குள் பொத்தி வைத்திருந்த காதலைப் பேசித் தீர்க்க வேண்டுமென நெடும் போராட்டத்திற்கு பின் கல்லூரி முடிந்த மறுநாள் முடிவெடுத்து கிளம்புகிறாள்..
அவள் மிகவும் அக்கறையுடன் தன்னை அலங்கரித்து கொள்வதை கவலை கலந்த வெறுப்புடன் தாய் பார்க்கிறாள்..
நாயகியின் அம்மா
" காலைல எழுந்திரிச்ச, குளிச்ச, பேசாம போய்ட்ருக்க? எங்க போற?"
"பேசத்தான் போறேன்" நாயகி..
"என்னடி உளர்ற?" அம்மா
"உளறலம்மா இப்பத்தான் நிதானமா பேசறேன்" நாயகி..
இந்த இடத்தில் என்னையும் மீறி வசன அபாரத்திற்கு கரங்கொட்டி மகிழ்ந்தேன்...
வசன கர்த்தாக்கள் படத்தை நகர்த்தும் விதம்தான் படத்திற்கு அழகூட்டும் என்பேன் நான்...
பாட்டுக்கள் அத்தனையும் தேனினிமை....
என்ன பொருட்சுவை... என்ன காட்சிப் பொருத்தம்...
"ஏதேதோ ராகம் எந்நாளும் பாடும்
அழையாதார் வாசல் தலை வைத்து ஓடும்" வாசமில்லா மலரிது பாடலில்..
"கிணற்றுக்குள் வாழும் தவளையை போல மனதுக்குள் ஆடும் ஆசைகள் கோடி" கடவுள் வாழும் கோவிலிலே பாடலில்..
'வெறும் நாரில் கரம் கொண்டு பூமாலை தொடுக்கிறேன்..
வெறும் காற்றில் உளி கொண்டு சிலை ஒன்றை வடிக்கிறேன்" குழந்தை பாடும் தாலாட்டு பாடலில்..
மிகைப்படுத்தப் பட்ட சண்டைக் காட்சிகள் இல்லை...
அபத்தமான வசனங்கள் இல்லை...
நகைச்சுவை என்ற பெயரில் முகஞ்சுளிக்க வைக்கும் தனித்தடம் இல்லை...
அழகு, யதார்த்தம், இயல்பு, இவையன்றி வேறேதும் இல்லை...
ஆனால் படம் முடிந்த வுடன் மனம் முழுதும் சோகம் கவ்வியது..
80 களில் பட்டையை கிளப்பிய படம்...200 நாட்கள் தாண்டி ஓடிய படம்...
Hats off ராஜேந்தர் சார்...
இதே போல் இன்னுமொரு அழகான படம் கொடுங்களேன்...