3 months 2 weeks ago
தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 : மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் தடைகளைத் தாண்டிய புத்தகங்கள் – 20 | வில்லியம் கோல்டிங் (William Golding) எழுதிய ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (Lord of the Flies) நாவல் மூர்க்கத் தீவில் மொய்க்கும் ஈக்கள் அ. குமரேசன் ஒரு இலக்கியப் புனைவின் நோக்கத்தை சரியாகப் புரிந்துகொள்ளாமல், அல்லது அது முன்வைக்கும் விமர்சனங்களைப் பரிசீலிக்க மனமில்லாமல் அதைத் தாக்குவது ஒரு சமூக மூர்க்கம்தான், அதைப் புறக்கணிப்பது ஒரு அரசியல் வன்முறைதான். ஆனால், ஒரு புத்தகம் மனிதர்களின் இயற்கையான குணமே மூர்க்கம்தான் என்று கூறுகிறது; ஒழுங்குபடுத்தும் அரசியல் விதிகளையும் மத நெறிகளையும் கொச்சைப்படுத்துகிறது; வன்முறைகளை நியாயப்படுத்துகிறது; நம்பிக்கையின்மையைப் போதிக்கிறது என்றெல்லாம் கூறி அதற்குத் தடை விதிக்கப்பட்டது. குறிப்பாகப் பள்ளி மாணவர்களும் இளைஞர்களும் அதைப் படிக்கக்கூடாது என்று அவர்களின் கைகளுக்குச் செல்ல விடாமல் தடுக்கப்பட்டது. 1954ஆம் ஆண்டில் வெளியோன ‘லார்ட் ஆஃப் தி ஃபிளைஸ்’ (ஈக்களின் எசமான் – Lord of the Flies) நாவல் இந்த மூர்க்கத் தடைகளை மீறி வாசகர்களின் கைகளுக்குச் சென்றது. அதை எழுதியவர் வில்லியம் கோல்டிங் (1911–1993). அவரது இலக்கியப் பங்களிப்புக்காக 1983ஆம் ஆண்டில் நோபல் பரிசு வழங்கப்பட்டது. அதற்கான தகுதியை உறுதிப்படுத்தியதில் இந்த நாவலுக்கும் சிறப்பான பங்கிருந்தது. அதற்கு முன் ‘ரைட்ஸ் ஆஃப் பாஸேஜ்’ (பயணவழிச் சடங்குகள்) என்ற நாவலுக்காக புக்கர் பரிசு கிடைத்தது. இவற்றுடன் ‘தி இன்ஹெரிட்டர்ஸ்’ (வாரிசுகள்), ‘பின்ச்செர் மார்ட்டின்’ (இது இந்த நாவலில் மையக் கதாபாத்திரத்தின் பெயர்) உள்ளிட்ட படைப்புகளும் சேர்ந்தே நோபல் விருதுக்குரிய இடத்தை நிறுவின. படைப்பாளிக்கொரு பின்னணி வில்லியம் கோல்டிங் (William Golding) இங்கிலாந்தின் கார்ன்வால் நகரில் பிறந்தவரான வில்லியம் கோல்டிங் (William Golding) ஒரு நாவல் புனைவாளர், கவிஞர், நாடகாசிரியர். அவரது தந்தை ஒரு பகுத்தறிவாளர், அறிவியலாளர், அரசியல் இயக்க ஈடுபாட்டாளர். தாய் அனைத்துப் பெண்களுக்குமான வாக்குரிமைக்காகப் போராடிய களச் செயல்பாட்டாளர். கோல்டிங் பல்கலைக்கழகப் படிப்பு முடிந்ததும் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார். இரண்டாம் உலகப் போரின்போது அன்றைய கட்டாய ராணுவ சேவைச் சட்டத்தின்படி கடற்படையில் சேர்க்கப்பட்டு களத்திற்கு அனுப்பப்பட்டார். வளர்ந்த குடும்பச் சூழலிருந்து மாற்றுச் சிந்தனைகளையும், கட்டாயக் கடற்படைப் பணியிலிருந்து போரின் மோசமான விளைவுகளையும், பள்ளி ஆசிரியர் அனுபவத்திலிருந்து இளையோரின் குண இயல்புகளையும் கூர்மையாக உள்வாங்கினார். மனித வாழ்க்கையும், தத்துவக் கண்ணோட்டமும் சார்ந்த படைப்புகளை உருவாக்கியதில் இந்தப் பின்னணிகளுக்கும் அனுபவங்களுக்கும் அடிப்படையான பங்கிருந்தது என்று இலக்கிய உலகினர் குறிப்பிடுகின்றனர். தடைகளையும் கெடுபிடிகளையும் வென்ற அந்த நாவல் இன்று சிறந்ததொரு குறியீட்டுச் சித்தரிப்பாக, தத்துவப் படைப்பாக, அரசியல் புனைவாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. ஈக்களின் எசமான் எந்தப் ஈக்களைப் பறக்க விடுகிறது? எந்த எசமானை நடமாடவிடுகிறது? தீவில் சிக்கிய சின்னப் பையன்கள் இரண்டாம் உலகப் போர் பின்னணியில், அணுகுண்டுத் தாக்குதல்கள் வெடிக்கும் அபாயத்தில், பிரிட்டிஷ் அரசு பள்ளிச் சிறுவர்களை ஒரு விமானத்தில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்கு வெளியேற்றுகிறது. ஒரு பள்ளியின் மாணவர்கள் செல்லும் விமானம் விபத்துக்கு உள்ளாகி ஆளரவமற்ற, அழகானதொரு தீவில் விழுகிறது. உடன் பயணித்த ஆசிரியர்கள், விமானப் பணியாளர்கள் உள்பட பெரியவர்கள் அனைவரும் உயிரிழக்க, தப்பிப் பிழைக்கிறவர்கள் 6 முதல் 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்கள் மட்டுமே. என்ன செய்வது என்று கலங்கும் சிறுவர்களுக்கு, ஓரளவு முதிர்ச்சியுள்ளவனான ராஃப் தலைமைப் பொறுப்பேற்கிறான். முதலில் அனைவருக்குமிடையே ஒரு நாகரிகத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்ட முயலும் ராஃப், ஒரு சங்கை எடுத்து ஊதி, சிறுவர்களைக் கூட்டி கூட்டம் நடத்துகிறான். அப்போது பகுத்தறிவு கொண்ட, ஆனால் உடல் சார்ந்த இயலாமை உள்ளவனான பிக்கி, ஒரு நாகரிக சமூகத்தில் ஒவ்வொருவருக்குமான கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம் இருக்க வேண்டுமென வலியுறுத்துகிறான். இருவரும் இணைந்து தீவில் ஒரு கட்டுப்பாடான சமுதாயத்தை உருவாக்க முயல்கின்றனர். தீவிலிருந்து தப்பிப்பதற்காக, கடலில் செல்லும் கப்பல்களின் கவனத்தை ஈர்க்க ஒரு சமிக்கை நெருப்பைத் தொடர்ச்சியாக எரிய வைக்க முடிவு செய்கிறார்கள். பிக்கி அணிந்துள்ள கண்ணாடியைப் பயன்படுத்தி, சூரிய ஒளியைக் குவித்து நெருப்பு மூட்டுகிறார்கள். பள்ளியில் பாடகர் குழு தலைவனாக இருந்தவனான ஜாக் மெரிடியூ அடங்காத அதிகாரப் பசி கொண்டவன். விலங்குகளிளை வேட்டையாடிக் கொல்வதில் ஆர்வமுள்ள அவனால் ‘ராஃப் தலைமையை சகித்துக்கொள்ள முடியவில்லை. சமிக்கை நெருப்பை எரிய வைப்பதை விட, காட்டுப் பன்றிகளை வேட்டையாடி உணவாகச் சுடுவதே முக்கியம் என அவன் வாதிடுகிறான். சிறுவர்களில் அதிகமானோர் அவனுடைய குழுவில் சேர்கின்றனர். பன்றிகளை வேட்டையாடுவதில் அவர்கள் மனிதத் தன்மையற்ற வன்மமும் மூர்க்கமும் மிக்க ரசனையை வளர்த்துக் கொள்கின்றனர். கொடூர விலங்கு பயம் தீவில் ஒரு கொடூரமான மிருகம் இருக்கிறது என்ற அச்சம் சிறுவர்களுக்கிடையே பரவுகிறது. முதலில் அது ஒரு கற்பனையாகத்தான் இருந்தது என்றாலும் படிப்படியாக அந்த அச்சம் உண்மையானது என்ற கவலை தொற்றுகிறது. ஜாக் அவர்களின் பீதியை சாதகமாக்கிக்கொண்டு, தன்னால்தான் எல்லோரையும் காப்பாற்ற முடியும் என்று சொல்லி, ராஃபிடமிருந்து அதிகாரத்தைப் பறிக்க முயல்கிறான். ஒரு வேட்டைக்காரன் போலத் தனது முகத்தில் வண்ணக் கோடுகள் வரைந்து மிரளவைக்கும் சடங்குகளை நடத்துகிறான். சமிக்கை நெருப்புப் பராமரிப்பை விட்டுவிட்டு, ஜாக் குழுவினர் வேட்டையாடுவதில் அதிக கவனம் செலுத்துகின்றனர். தீவுக்கு அருகாமையில் வரும் ஒரு கப்பல், அந்த நெருப்பு அணைந்துவிட்டதால், மக்கள் இருப்பதற்கான சமிக்கை கிடைக்காத நிலையில் திரும்பிவிடுகிறது. இது நாகரிகத்தோடு அணுகும் ராஃப், வன்மம் நிறைந்த ஜாக் இருவருக்கும் இடையே பெரும் மோதலை ஏற்படுத்துகிறது. பகுத்தறிவுள்ள பிக்கி, ஆன்மீகச் சிந்தனை கொண்ட சைமன் என சிலர் மட்டுமே இப்போது ராஃப் குழுவில் நிற்கின்றனர். “கொடூர விலங்கு என்பது வெளியே இல்லை, நம் மனதில்தான் இருக்கிறது,” என உணரும் சைமன் அதைப் பிற சிறுவர்களிடம் சொல்கிறான். “எனக்குள்ளேயும் அந்தக் கொடிய விலங்கு இருக்கிறது,” என்ற பொருளில் பேசுகிறான்.. ஆனால் அவன்தான் அந்தக் கொடூர விலங்கு என்று தவறாகப் புரிந்து கொள்ளும் ஜாக் குழுவினர் அவனை ஈவிரக்கமின்றித் தாக்கிக் கொல்கின்றனர். இப்படியாகப் போகும் கதையில், சிலர் மட்டுமே எஞ்சியிருக்க, பிக்கி சங்கை ஊதி மீண்டும் சிறுவர்களை ஒன்றுகூட்டிப் பகுத்தறிவுடன் பேச முயல்கிறான். அதை ஏற்க முடியாத ஜாக் குழுவினர் ஒரு பாறையை உருட்டி அவனையும் கொல்கின்றனர். நாகரிகத்தின் முழு அழிவையும், அநாகரிக வன்மத்தின் வெற்றியையும் குறிப்பது போல, அந்த ஒற்றுமைச் சங்கு உடைந்து நொறுங்குகிறது. இப்போது தனியாக விடப்படுகிறான் ராஃப். அவனை வேட்டையாட முயல்கிறது கும்பல். அவனைச் சுற்றிலும் நெருப்பைப் பற்ற வைக்கிறது. உயிரைப் பணயம் வைத்து ஓடுகிறான். குழுவினர் துரத்துகின்றனர். இறுதியாகக் கடற்கரையை வந்தடைகிறவனை அங்கே முகாமிட்டிருக்கும் கடற்படைத் தலைவர் மீட்கிறார். சிறுவர்களின் தோற்றத்தைக் கண்டு அதிர்ச்சியடையும் அவர், தீவில் நடந்த அட்டூழியங்களைக் கேட்டு உறைந்து போகிறார். அவரைக் கண்டதும் ராஃப், ஜாக் உள்பட எல்லோரும் மறுபடி சிறுவர்களாக மாறி அழத் தொடங்குகிறார்கள். எசமான் யாரெனில்… எஞ்சிய சிறுவர்கள் மீட்கப்படுவது ஆறுதல் அளிக்கிறது. ஆனால், அவர்களை மீட்பவரே ஒரு போர்க் கப்பலின் தலைவர்தான். பெரியவர்களின் உலகம் ஏற்கெனவே வேறு வகையான வன்முறை அரசியலால் கட்டப்பட்டிருப்பதைக் கதை உணர்த்துகிறது என்று திறனாய்வாளர்கள் கூறுகிறார்கள். உலகப் போரின் பின்னணியில் எழுதப்பட்ட இந்த நாவல் ஆயுதமோகிகள் மானுட மாண்புகளைப் பாதுகாக்கத் தவறிய குற்றவாளிகளே என்று சாடுகிறது. போர் வேண்டாம் எனும் இலக்கியக் குரலாக ஒலிக்கிறது. ஆதியில் மனிதர்கள் மூர்க்கத்தனமாக இருந்தார்கள் (இன்றும் கூட அப்படித்தானே இருக்கிறார்கள்!), படிப்படியாக மாறினார்கள் என்பது உண்மை. அந்த மாற்றத்தைத்தான் நாகரிகம் என்று கூறுகிறோம் என்பதும் உண்மை. அந்த நாகரிகத்தின் காவல் இல்லாமல் போகுமானால், மனிதப் பரிணாமத்தின் மாண்புகள் மறையும், புதைந்து போன தீமைகள் மேலெழும் என்ற எச்சரிக்கைச் சங்கையும் இந்த நாவல் ஊதுகிறது என இணையவழித் திறனாய்வுகள் மூலம் அறிய முடிகிறது. அழுகிப்போன பொருள்களின் மீது ஈக்கள் மொய்க்கும். நாவலில், தரையில் ஊன்றப்பட்ட ஒரு குச்சியில் செருகப்பட்டிருக்கும் ஒரு பன்றித் தலையை ஈக்கள் மொய்க்கின்றன. ஈக்களைப் போல தீமைகள் எங்கும் பரவியிருப்பதைச் சொல்ல முயல்கிறது நாவல். சுயநலமும் வன்மமும் குடியேறிய மனம்தான் அந்த ஈக்களின் எசமான். ஏன் சிறுவர்கள்? ஏன் ஆண்கள்? தீவுக் காட்டுக்குள் சில வழிபாட்டு முறைகளைத் தொடங்குவதாகச் சித்தரித்திருப்பதும், சைமனின் கருத்து ஏற்கப்படாததும் மதத்தின் தோல்வியைக் குறிக்கின்றன, ஆகவேதான், போர் மோக அரசியல் சிந்தனையாளர்களோடு, மதவாதிகளும் இந்த நாவலை எதிர்த்தார்கள் போல! வாழ்க்கை அனுபவத்தின் பிரதிநிதிகளான பெரியவர்களின் வழிகாட்டலும், பாலினத் துணைகளான பெண்களும் இல்லாதபோது மூர்க்கத்தின் இருண்மையில் மூழ்க நேரிடும் எனக் காட்டுவதே ஆண்கள் மட்டுமே உள்ள அந்தக் கூட்டம். அதே போல், இத்தனை தலைமுறைகள் கடந்தும் மனிதர்கள் இன்னும் முதிர்ச்சி பெறவில்லை என்பதன் வெளிப்பாடுதான் காட்டாட்சி செய்வோர் சிறுவர்கள் என்ற சித்தரிப்பு. இந்த நாவல் இரண்டு முறை திரைப்படமாக வந்திருக்கிறது. 1963இல் பிரிட்டன் தயாரிப்பபாகக் கறுப்பு வெள்ளையில் வந்த முதல் படம் நாவலுக்கு நெருக்கமாக இருக்கிறது என்ற வரவேற்பைப் பெற்றது. 1990இல் ஹாலிவுட் தயாரிப்பாக, இங்கிலாந்துச் சிறுவர்களை அமெரிக்கர்களாக மாற்றிச் சித்தரித்த பல வண்ணப் படம், நாவலின் ஆழத்தைத் தொடத் தவறிவிட்டது என்ற விமர்சனத்தைப் பெற்றது. இந்த இரண்டு படங்களுமே நாவல் மீது ஆர்வத்தை ஏற்படுத்தின. படக்கதைப் புத்தகம், கார்ட்டூன் படம் என்ற வடிவங்களையும் இந்த நாவல் எடுத்திருக்கிறது. ஆக்கிரமிப்புப் போர் தொடுப்பவர்களைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்துகிற நாவல், தீங்குகளுக்குத் தீர்வு காணப் போராடுகிற சக்திகள் பற்றி எதுவும் சொல்லவில்லையே என்ற கருத்தும் பகிரப்படுகிறது. இலக்கிய ஆக்கத்தில் அப்படியெல்லாம் சொல்லிக்கொண்டிருக்க வேண்டியதில்லை என்ற கருத்தும் முன்வைக்கப்படுகிறது. இந்த இரு கருத்துகளின் “போர்” நிற்காமல் தொடரும்தான் இல்லையா! https://bookday.in/books-beyond-obstacles-20-about-william-goldings-lord-of-the-flies-written-by-a-kumaresan/
3 months 2 weeks ago
சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02 அத்தியாயம் 2 - நகுலேஸ்வரம் மற்றும் கோணேஸ்வரத்தில் உள்ள பண்டைய தொடர்புகள் மறுநாள் காலை, சூரியன், அனலியின் வீட்டிற்கு அருகில் இருந்த யாழ்ப்பாணக் குளத்தின் மீது உதயமாகி, வானத்தை காவி மற்றும் ரோஜா நிறங்களில் குளிப்பாட்டியது. ஆரனும் அனலியும் கீரிமலையை நோக்கி ஒன்றாகப் பயணித்தனர். அங்கு, காலத்தால் முந்திய வழிபாட்டுத் தலங்களில் ஒன்றான, தீர்த்தத் திருத்தலமான நகுலேஸ்வரம் கோயில் பெருமையுடன் நின்றது. இத்திருத்தலத்தின் தல விருட்சமாகக் கல்லால மரமும் [பல ஆலமரங்களைப் போல அல்லாமல், கல்லால மரத்திற்கு விழுதுகள் இல்லை. இது ஒரு அரிய வகை மரமாகும்], தீர்த்தமாக கீரிமலையும் விளங்குகின்றது. போத்துக்கீசியரால் இடிக்கப்பட்ட இந்த ஆலயம் மூன்று பிரகாரங்களுடன் [இந்துக் கோவில்களில் கருவறை அல்லது மூலஸ்தானத்தைச் சுற்றியுள்ள சுற்றுப்பாதை அல்லது மதில் பகுதி] ஐந்து கோபுரங்களும் உடைய பெரிய ஆலயமாக இருந்தது. கி.பி 1621 இல் யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றிய போத்துக்கீசர் நல்லூர்க் கந்தசுவாமி கோயில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில், நகுலேசுவரம் ஆகிய ஆலயங்களை இடித்தழித்தனர் என்பது வரலாறாகும். மல்லிகை மற்றும் கடல் உப்பு கலந்த நறுமணத்தால் காற்று நிரம்பியிருந்தது. அங்கே யாத்ரீகர்கள் [பயணிகள்] வெறுங்காலுடன் நடந்து, சிவனிடம் பிரார்த்தனை செய்தனர். புனித கீரிமலை தீர்த்தக் கேணி அருகே ஆரன் குளிர்ந்த நீரைத் தொடக் குனிந்து, “இந்த நீரூற்று கூட நினைவாற்றலைக் கொண்டுள்ளது என்று சொல்கிறார்கள், இல்லையா?” என்றான். அனலி (சிரித்துக்கொண்டே): “ஆம். புராணக்கதைகள் முனிவர்களும் மன்னர்களும் இங்கு நீராடியதாகக் கூறுகின்றன. அது மட்டும் அல்ல, தட்சிண கைலாச புராணம் யாழ்ப்பாணத் திருநாகுலேஸ்வரத்தைக் குறித்து, “வடகைலாசத்தில் சிவன் எவ்வாறு நிலைபெற்றானோ, அதுபோல் தென்கடலோரத் தலங்களில் நாகுலேஸ்வரத்தில் அவன் அருளுருவாகத் திகழ்கிறான்.” என்று சொல்வதுடன், அந்த புராணத்தின் படி, நாககுலர் வழிபட்ட சிவலிங்கம் தான் இன்றைய திருநாகுலேஸ்வரம் ஆகும். இதனால் தான், இத்தலம் தட்சிண கைலாசம் (தென் கைலாசம்) என்று போற்றப்படுவதுடன், அத்தகைய புராணக் குறிப்பினால், யாழ்ப்பாணம் மட்டும் ஒரு நகரமல்ல, பண்டைய சைவ மரபின் உயிரோடு வாழும் சாட்சியம் என உணரலாம் என்று ஒரு விரிவுரையை ஆரனுக்கு நடத்தினாள். ஆரன் தண்ணீரைப் பார்த்தான். ஒரு கணம், அவன் தனது பிரதிபலிப்பை மட்டுமல்ல, தனக்கு முன் இருந்த எண்ணற்ற தலைமுறையினரையும் - போர்வீரர்கள், கவிஞர்கள், துறவிகள் - ஒரு காலத்தில் அவன் நின்ற இடத்தில் நின்றதையும் காண்பதாக உணர்ந்தான். பின்னர், அவர்கள் திருகோணமலைக்கு நீண்ட பயணம் சென்றனர், அங்கு கடல் முடிவில்லாமல் நீண்டு, கருப்பு பாறைகளில் மோதியது. கோணேஸ்வரம் கோயில் சுவாமி பாறையில் [Swami Rock / Kōṇāmalai] ஒரு ரத்தினம் போல உயர்ந்து, அதன் கோபுரம் வானத்தை முத்தமிட்டது. அனலி, மென்மையான தொனியில், “இந்தக் கோயிலும் ஒரு காலத்தில் தட்சிண கைலாசம் [Dakshina Kailasam], அதாவது தெற்கு கைலாசம் என்று அழைக்கப்பட்டது. 17 ஆம் நூற்றாண்டில் போர்த்துக்கேயர்கள் இதை அழிப்பதற்கு நீண்ட காலத்திற்கு முன்பே அது இருந்தது என்பது வரலாறு. 7 ஆம் நூற்றாண்டில், இந்த ஆலயத்தைப் புகழ்ந்து, பெருமையை பறைசாற்றி, திருஞானசம்பந்தர் ஒரு நீண்ட தேவாரம் பாடினார் எனறால், அதற்கு பல நூறு ஆண்டுகளுக்கு முன்பே அது இருந்தது தெரியவருகிறது. ஆனால் இடிக்கப்பட்ட பிறகும், அதன் ஆன்மாவை அடக்கம் செய்ய அவர்களால் முடியவில்லை.” என்றாள். அதன் பின், அனலி அதில் ஒரு தேவாரத்தை ஆரனுக்கு படித்துக் காட்டினாள். நிரைகழ லரவஞ் சிலம்பொலி யலம்பும் நிமலர்நீ றணிதிரு மேனி வரைகெழு மகளோர் பாகமாப் புணர்ந்த வடிவினர் கொடியணி விடையர் கரைகெழு சந்துங் காரகிற் பிளவு மளப்பருங் கனமணி வரன்றிக் குரைகட லோத நித்திலங் கொழிக்குங் கோணமா மலையமர்ந் தாரே. "தட்சிண கைலாசம்" என்பது பல கோயில்களைக் குறிக்கும் ஒரு பெயர், இது "தென் கைலாசம்" என்று பொருள்படும். கேரளாவில் உள்ள செங்கல் மகேஸ்வரம் சிவபார்வதி கோயில், ஆந்திர நாட்டில் உள்ள திருக்காளஹஸ்தி மற்றும் தமிழகத்தில் உள்ள திருச்சிராப்பள்ளி, இலங்கையில் உள்ள திருகோணமலை போன்ற பல்வேறு இடங்களுக்கு இந்தப் பெயர் வழங்கப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆரன்: “அப்படியானால் கற்களை உடைத்து கடலுக்குள் விழுத்தினாலும், அந்த இடத்தின் ஆன்மா இன்னும் அங்கு உயிர்வாழ்கிறது?” ஆச்சரியமாகக் கேட்டான் அனலி (அவனது கண்களைப் பார்த்து): “நம்மைப் போலவே. நம் மக்கள் நிலங்கள், வீடுகள், உயிர்களை இழந்துள்ளனர். ஆனால் தமிழ் ஈழத்தின் ஆன்மா இன்னும் சுவாசிக்கிறது. அதனால்த்தான் புலம்பெயர்ந்தோர், குறைந்தது விடுமுறையிலாவது, திரும்பி வர வேண்டும். உலகிற்கு நாம் அழிக்கப்படவில்லை என்பதை நினைவூட்டுவதற்காக.” என்றாள். "ஆரன், இது உடைக்கப்பட்டது முதல் தடவை அல்ல, முப்பத்து ஏழாவது அத்தியாயம் / மகாசேன மன்னன் (பொ.பி. 277 - 304) என்ற மகாவம்சத்தின் பகுதியில், [40,41] மன்னர் மணிஹிரா-விகாரையும் கட்டினார், மேலும் மூன்று விகாரையும் நிறுவினார். பிராமண கடவுள்கள் அமைந்த ஆலயங்களை அழித்தார்:- கோகன்ன ஆலயம், எரகாவில்லை என்ற இடத்தில் இன்னும் ஒரு ஆலயம், மூன்றாவதாக, பிராமணர்களின் கிராமமான கலந்தனில் இருந்த ஆலயம் என்கிறது. இங்கு கொடுக்கப்பட்ட துணை-விளக்க உரையின் படி [According to the Tika] கோகன்ன அல்லது கோகர்ணம் - ஆலயம், கிழக்கு கடலோரம் அமைந்த ஒன்று என விளக்கம் கொடுக்கப்படுகிறது. அது மேலும் 'இலங்ககை தீவு முழுவதும், புத்தரின் கோட்பாட்டை, நம்பாதவரர்களின் ஆலயங்களை அழித்த பின் அவர் நிறுவினார் என்கிறது. அதாவது சிவலிங்கம் மற்றும் அது போல் என மேலும் ஒரு துணை விளக்கம் கொடுக்கப்பட்டும் உள்ளது. எனவே அங்கு குறிக்கப்பட்ட கிழக்கு கரையோரம் அமைந்த சிவன் கோவில் கோணேஸ்வரமாகவே இருக்கலாம். அதாவது கி பி இரண்டாம் மூன்றாம் நூற்றாண்டிலும் இது இருந்துள்ளது மட்டும் அல்ல , அது அழிக்கப்பட்டதும் தெரிய வருகிறது" என்று மேலதிக விளக்கத்தை அனலி கூறினாள். ஆரன், அவளின் அந்த வார்த்தைகள் தனக்குள் ஆழமாக ஏதோ ஒன்றைத் தூண்டுவதை உணர்ந்தான். 1983 இல் ஏற்பட்ட கொழும்பு இனக்கலவரத்தால், அந்தக் கொடுமையை நேராக பார்த்து, அதில் இருந்து ஒருவாறு தப்பி, சரக்கு கப்பலில், தம் தம் பெற்றோருடன் யாழ் போனபின், இலங்கையை விட்டு நிரந்தரமாக கனடா போய், அதன்பின் இன்றும் விடுதலையிலாவது திரும்பி வரத் துணியாத தனது பெற்றோரையும், பாட்டி, பாட்டாக்களையும் அவன் நினைத்தான். இப்போது அவன் புரிந்துகொண்டான் - வெளிநாட்டில் வாழ்ந்து துக்கப்படுவது போதாது. உண்மையான நினைவுச் செயல் - திரும்பி திரும்பி வருவது, இங்கே நின்று நிலத்திற்கு மீண்டும் உயிர் ஊதுவது. சுவாமி பாறையின் விளிம்பில் அவர்கள் ஒன்றாக நின்றபோது, கீழே உள்ள கடல் ஒரு நித்திய சாட்சியைப் போல கர்ஜித்தது. ஆரன்: “அனலி, இந்தக் கடல் பேசுவதை நீ எப்போதாவது உணர்ந்தாயா?” அனலி (லேசாகச் சிரித்தபடி): "இந்தக் கடல் வெறும் நீல நிறம் மட்டுமல்ல .... அது நினைவுகளால் நிரம்பியுள்ளது ... ஒவ்வொரு அலையும் ஒரு காலத்தில் இழந்த ஒன்றைத் திருப்பித் தருகிறது — ஒரு பண்டைய வரலாறு - நமது முன்னோர்களின் குரல்கள் - நம் இதயங்களுக்குள் ஆழமாகப் புதைந்திருக்கும் காதல் .... ஆமாம், அவை கரையில் நின்று ஒரு நொடிக்கேனும் எங்களைத் தழுவும். மீண்டும் அலை பின்வாங்கினாலும், அந்த நொடியின் அர்த்தம் நித்தியமாகவே நம்முள் வாழ்கிறது.” அவள் அவன் முகத்தை நெருக்கமாக பார்த்துக்கொண்டு, தன் இரு கைகளையும் நீட்டினாள். அவன், அவள் கையைத் தொட்டபோது, அவனுக்கு மண்ணின் நெருப்பைத் தொட்டது போல் இருந்தது. அது வெப்பமாகவும் அதேநேரம் நிதானமாகவும், ஆழ்வேர்கள் போல இந்தத் தீவின் உள்ளத்தோடு இணைந்திருந்தது. அந்தத் தொடுதலின் நொடியில், அவன் இனி அந்நியன் அல்ல, பாரம்பரியத்தின் சிதைந்த துணுக்குகளைத் தேடும் அலைந்து திரியும் அகதி மகனும் அல்ல. ‘இது என் நிலம், இது என் மூச்சு, இது என் வீடு என முதல் முதல் உணர்ந்தான். என்றாலும் அவன் அனலியின் தந்தைக்கு கொடுத்த வாக்குறுதியை மறக்கவில்லை. கரையை தொட்ட அலைகள், அடுத்தகணம் திரும்பிப் போவதுபோல, மெதுவாக கொஞ்சம் விலகி நின்றான். அங்கே ராவணனின் சிலை, சுவாமி பாறையின் விளிம்பில், அவர்களைப் பார்த்துக்கொண்டு நின்றது. ஆரனுக்கும் அனலிக்கும் - அந்த இரண்டு ஆன்மாக்களுக்கும் - இடையிலான தொடர்பு, சிதறடிக்கப்பட்ட மக்களுக்கும் அவர்களின் பண்டைய தாயகத்திற்கும் இடையிலான தொடர்புக்கும் மேலாக பின்னிப் பிணைந்திருப்பதாக இருவரும் உணர்ந்தாலும், எனோ, வெளிப்படையாக, குறிப்பாக ஆரன் காட்டிக் கொள்ளவில்லை. திருகோணமலை கோணேஸ்வரம் கோவிலில், காடுகள், மலைகள் மற்றும் உள்நாட்டில் உள்ள கிராமங்களுக்குப் பின்னால், மாலை சூரியன் மறைந்தது. அப்பொழுது அலைகள் மீது தங்க ஒளி விழுந்து, உருகிய செம்பு போல அவற்றை வரைந்தது. ஆரன், அனலியின் அருகில் குன்றின் மீது நின்று, முடிவில்லா கடலைப் பார்த்தான். "உனக்குத் தெரியுமா ஆரன்," என்று அவள் மெதுவாகச் சொன்னாள், "இங்கிருந்து, கப்பல்கள் ஒரு காலத்தில் தமிழகம், கம்போடியா, சீனாவுக்குக் கூடப் பயணித்தன. இந்தக் கடல் வர்த்தகத்தை மட்டுமல்ல, நாகரிகங்களுக்கிடையில் காதல் கடிதங்களையும் கொண்டு சென்றது." என்று அனலி, தனது சக்கர தோடு கழுத்தைத் தொட, சடை பின்னல் அவிழ்ந்து விழ, சலங்கைக் கால் இசை எழுப்ப, மென்மையான புன்னகையுடன் கூறினாள். அவன் அவளை, அவள் தலை முதல் கால் வரை ஏறிட்டுப் பார்த்தான். முதல் முறையாக, அனலி அவன் கண்களில் ஒரு பிரகாசத்தைக் பார்த்தாள். அவள் இதயம் மகிழ்ச்சியில் நடுங்கியது. என்றாலும், வெளியே எந்த உணர்வையும் காட்டாமல், வெறும் ஒரு வழிகாட்டிபோல, “ஆரன் ... என் அப்பா உனக்கு வரலாறு கற்பிக்க என்னை அனுப்பினார். ஆனால் அதற்கு பதிலாக ... நான் உன்னுடன் ஒரு புதிய கதையை எழுதுகிறேன் என்று நினைக்கிறேன்.” என்று எதோ ஒன்றைச் சொல்லாமல் சொன்னாள். ஆரனின் குரல் கிட்டத்தட்ட உடைந்தது. “அனலி, நான் என் வேர்களைத் தேடித்தான் இங்கு வந்தேன். ஆனால் அது இப்ப நீயும் தான் அதில் ஒன்று என்ற உணர்வு அரும்புகிறது. என்னால் அதை இனியும் மறைக்க முடியவில்லை" என்று அவளைத் தன் மார்பில் அணைத்தான். அவள் கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அது சோகம் அல்ல - ஆழமான, இனிமையான, ஆனால் பயமுறுத்தும் மகிழ்ச்சி ஒன்று. அப்பா என்ன சொல்வாரென்று ! அவள் தனக்குள் கிசுகிசுத்தாள், “இந்தப் பயணத்தில் நான் என்ன கற்றுக்கொண்டேன் என்று அப்பா என்னிடம் கேட்டால், நான் சொல்வேன் - நம் நிலம் உயிருடன் இருக்கிறது, என் இதயமும் கூட ... " ஆரன் மெதுவாக தன் கைகளை எடுத்தான். ஆனால், அவள் விலகவில்லை. தெய்வங்கள் தாங்களாகவே தங்கள் ஆசீர்வாதத்தை வழங்குவது போல், தொலைவில் கோயில் மணிகள் ஒலித்தன. அந்த மணி ஓசையிலும், அனலியின் தந்தையின் வார்த்தைகளும் சேர்ந்து ஒலித்தன. "அனலி, ஆரன் நான் உங்களை நம்புகிறேன், நீங்கள் இருவரும் எங்கள் நிலத்தின் வரலாற்றைக் - கற்றுக்கொடுக்க - கற்றுக்கொள்ள - போகிறீர்கள், அந்த பொறுப்பு இருக்கட்டும்" ஆனால், அவர்கள் ஒன்றாகப் பயணித்தபோது - கோயில்களில் கதைகளைப் பகிர்ந்து கொண்டபோது, கடற்கரைகளில் நடந்தபோது, இழப்பு, புலம்பெயர்வு, மற்றும் நம்பிக்கை பற்றிப் பேசும்போது - அவர்கள் தங்களுக்குள் ஆழமான இன்னும் ஒன்றையும் கண்டுபிடித்தனர். வாழ்க்கை ஓடத்தில் நீயும் நானும் வாடாத மலராய் இருக்க மாட்டோமா வாலிபம் தந்த காதல் மோகம் வாசனை வீசி எம்மை அணைக்காதா? மொழியும் உணர்வும் பின்னிய பந்தம் விழியில் பேசிய அன்புச் சொந்தம் வழியொன்றில் மலர்ந்த காதல் சந்தம் அழிவற்ற அன்பின் ஆனந்தம் ஆகாதோ? நம்பிக்கை நட்பாக மாறியது. நட்பு நெருக்கமாக மாறியது. மெதுவாக, அவர்கள் இருவருமே திட்டமிடாமல், காதல் மலர்ந்தது. ஆனால் அதை எல்லை தாண்டாமல், வெளியே காட்டாமல் பார்த்துக்கொண்டனர். நல்ல காலம், அக்காவின் மகள் வந்தது அதற்கு பெரும் உதவியாக, ஒரு காவலாக இருந்தது. நன்றி [கந்தையா தில்லைவிநாயகலிங்கம், அத்தியடி, யாழ்ப்பாணம்] பகுதி: 03 தொடரும் துளி/DROP: 1929 [சிறு கதை - 191 / "காதல், நம்பிக்கை மற்றும் வேர்கள் வழியாக ஒரு தாய்நாட்டுப் பயணம்" / பகுதி: 02] https://www.facebook.com/groups/978753388866632/posts/32698811869767371/?
3 months 2 weeks ago
தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை இலங்கைக்கு அனுப்புகிறது !
06 Dec, 2025 | 02:03 PM

'டித்வா' புயலால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் மண்சரிவுகளால் கடுமையாக பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு உதவுவதற்காக தமிழக அரசு பெருந்தொகையான நிவாரணப் பொருட்களை அனுப்புகிறது.
டித்வா புயலின் தாக்கத்தால் இலங்கையின் பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், அங்குள்ள மக்களுக்கு உடனடி உதவி அளிக்கும் நோக்கில் தமிழக அரசு இந்த நிவாரணப் பொருட்களை அனுப்பியுள்ளது.
மருத்துவப் பொருட்கள், குடிநீர், உலர் உணவுப் பொருட்கள், தங்கும் கூடாரங்கள், போர்வைகள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் அடங்கிய இந்த நிவாரணக் கப்பல், தமிழக அரசின் ஒருங்கிணைப்பில் இலங்கை நோக்கி அனுப்பப்பட்டுள்ளது.
இலங்கையில் ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில் அங்குள்ள மக்களை ஆதரிக்கும் விதமாக, இரு நாடுகளின் நட்புறவையும் மனிதாபிமான உணர்வையும் வலுப்படுத்தும் இந்த உதவி நடவடிக்கை, பரவலாக பாராட்டப்படுகிறது.
இந்த பேரிடரில் உயிரிழந்தோருக்கு, தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், ஆழ்ந்த அனுதாபத்தையும் இரங்கலையும் தெரிவித்திருந்தார்.
மேலும், இலங்கை மக்களின் துயரைத் துடைக்க தமிழக அரசு முழுமையான உதவிகளை மேற்கொள்ளும் என்றும், உணவு மற்றும் மருத்துவப் பொருட்கள் உள்ளிட்ட நிவாரணங்களை அனுப்ப ஆணையிட்டார்.
அதனடிப்படையில், சென்னை மற்றும் தூத்துக்குடி துறைமுகங்களில் இருந்து இன்று சனிக்கிழமை ( 6) இலங்கை நோக்கி பெரிய அளவில் நிவாரணப் பொருட்கள் அனுப்பி வைக்கப்பட்டன.
சென்னையில் இருந்து அனுப்பும் கப்பலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் கொடியசைத்து அனுப்பினார்.
புயலால் பாதிக்கப்பட்ட இலங்கை மக்களுக்கு தமிழக அரசு சார்பில் 950 தொன் நிவாரணப் பொருட்கள் அனுப்பப்பட்டுள்ளது.
தமிழக அரசு, தேவையான அளவு கூடுதல் நிவாரண உதவிகளையும் வழங்க தயார் நிலையில் இருப்பதாக அரச வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
https://www.virakesari.lk/article/232604
3 months 2 weeks ago
மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை! "கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார்; அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு 10,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க வேண்டும்," என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார். மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், "இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் எந்த அரசும் முன்னெடுக்காத, இயற்கை அனர்த்தம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளார். அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பானதொரு பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன். மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பல வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால், அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான சூழல் உருவாகும். வெள்ளம் வடிந்தோடும் காலகட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழ்நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி, வாகரை போன்ற பிரதேசங்களில் சில இடங்கள் இவ்வாறு உள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தையடுத்து, சுமார் 25-26க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்துள்ளன. இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் சுனாமியின் போது விட்ட பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. சுனாமிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டதன் ஊடாகப் போக்குவரத்து மிகவும் இலகுவானது. ஆனால், இன்னும் மேலதிகமாகப் பல பாலங்களை அமைப்பதற்கு நாம் திட்டங்களை முன்வைத்திருந்தால், அவற்றையும் அமைத்திருக்க முடியும். ஆகவே, தயவுசெய்து எதிர்காலத்தில் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில், வெளிநாடுகளுடன் கைகோர்த்து உதவிகளைப் பெற்று, மாவட்டத்தில் அனர்த்தங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மாவட்ட ரீதியாக ஆராய்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் சரியான திட்டங்களை முன்வைத்து, நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எதிர்கால வெள்ளத்தைத் தடுக்க முடியும். இயற்கை அனர்த்தம் நடக்கப்போவது பற்றிய செய்தி பலருக்கு முன்கூட்டியே தெரியும். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறிப்பிட்ட வாரத்திற்கு முன்னரே சிலவற்றை நாம் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், பாராளுமன்றத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பாகச் சரியாகப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, அதற்குரிய நிர்வாகச் செயல்வடிவத்தை மேற்கொண்டிருந்தால் சில பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும். அனர்த்தத்தின் போது, அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைக் குறித்து நாம் ஏனோதானோவென்று பேசுவது நாகரிகமான செயல் அல்ல. அனர்த்தத்தின் போது அதனை நிர்வகிப்பதற்கும், தடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் ஊடாகத்தான் எதிர்கால அனர்த்தத்தைத் தடுக்க முடியும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும். அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சில விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. வீண்விரயமற்ற செயற்பாடுகளை நாம் கௌரவிக்கின்றோம். ஜனாதிபதி நேரடியாக எல்லா மாவட்டங்களுக்கும் கள விஜயம் மேற்கொண்டு செயற்படுவது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும். இந்த விடயங்களை அரசாங்க அதிபர் முதல் மாவட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த அனர்த்தத்திற்கு உதவி செய்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வரும் வெளிநாடுகளின் உதவியை ஏன் பயன்படுத்த முடியாது? எனவே, சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் முதல் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வரை சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள். ஆகவே, எம்மால் ஏன் செய்ய முடியாது என்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு, வெளிநாட்டுத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் இயற்கை அனர்த்தத்தைத் தடுப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், சரியான திட்டங்களை முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார். https://adaderanatamil.lk/news/cmitspwea02fro29nbsd8g1ox
3 months 2 weeks ago
மட்டக்களப்பிற்கு 10,000 கோடி நிதி ஒதுக்குமாறும் கோரிக்கை!

"கடந்த காலங்களில் எந்தவொரு அரசாங்கமும் முன்னெடுக்காத செயற்திட்டங்களை இயற்கை அனர்த்தம் தொடர்பாக ஜனாதிபதி செயல்படுத்தியுள்ளார்; அதனை வாழ்த்துகிறோம். அதேவேளை, மட்டக்களப்பு மாவட்டத்தில் எதிர்காலத்தில் வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டத்திற்கு 10,000 கோடி ரூபா நிதியை ஒதுக்க வேண்டும்," என கிழக்கு மாகாண சபையின் முன்னாள் உறுப்பினரும் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் சிரேஷ்ட உறுப்பினருமான இரா. துரைரெட்ணம் ஜனாதிபதியிடம் பகிரங்க வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மட்டக்களப்பு வாவிக்கரையிலுள்ள ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சி காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,
"இலங்கையின் புதிய அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், கடந்த காலத்தில் எந்த அரசும் முன்னெடுக்காத, இயற்கை அனர்த்தம் தொடர்பான ஆக்கபூர்வமான நடவடிக்கைகளை ஜனாதிபதி துரிதப்படுத்தியுள்ளார்.
அதேபோல, மட்டக்களப்பு மாவட்டத்திலும் இந்த இயற்கை அனர்த்தம் தொடர்பாக அரசாங்க அதிபர், திணைக்களத் தலைவர்கள், பிரதேச செயலாளர்கள் மற்றும் பிரதேச செயலகத்தோடு தொடர்புடைய மக்கள் பிரதிநிதிகள் உள்ளிட்ட அனைவரும் சிறப்பானதொரு பணியை ஆற்றியதற்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
மட்டக்களப்பு மாவட்டத்தில் நிதி ஒதுக்கப்படும் பட்சத்தில் பல வெள்ள அனர்த்தங்களைத் தவிர்க்க முடியும். மட்டக்களப்பு மாவட்டத்திற்கு எதிர்கால வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்காகத் திட்டமிடப்பட்டு, கிட்டத்தட்ட 10,000 கோடிக்கும் அதிகமான நிதி ஒதுக்கப்பட்டால், அரைவாசிக்கு மேற்பட்ட வெள்ள அனர்த்தங்களைத் தவிர்ப்பதற்கான சூழல் உருவாகும்.
வெள்ளம் வடிந்தோடும் காலகட்டத்தில் சில கிராமங்கள் முழுமையாகத் தாழ்நிலைக்குச் செல்கின்றன. குறிப்பாக செங்கலடி, வெல்லாவெளி, வாகரை போன்ற பிரதேசங்களில் சில இடங்கள் இவ்வாறு உள்ளன. தற்போது நாட்டில் ஏற்பட்டுள்ள அனர்த்தத்தையடுத்து, சுமார் 25-26க்கும் மேற்பட்ட நாடுகள் வெள்ள அனர்த்த நிவாரணத்திற்காகத் தங்களால் இயன்ற பங்களிப்பைச் செய்வதற்கு முன்வந்துள்ளன.
இந்தத் தருணத்தைப் பயன்படுத்தி, வெள்ள அனர்த்தத்தைத் தவிர்ப்பதற்கான திட்டங்களை வகுத்து, அதற்கான நிதியைப் பெறுவதற்கான நடவடிக்கைகளை மாவட்ட அரசியல்வாதிகள், மக்கள் பிரதிநிதிகள் மற்றும் அதிகாரிகள் மேற்கொள்ள வேண்டும்.
கடந்த காலத்தில் சுனாமியின் போது விட்ட பிழையை நாம் மீண்டும் விடக்கூடாது. சுனாமிக்குப் பின்னர் மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பாலங்கள் புதிதாக நிர்மாணிக்கப்பட்டன. அந்தப் பாலங்கள் அமைக்கப்பட்டதன் ஊடாகப் போக்குவரத்து மிகவும் இலகுவானது. ஆனால், இன்னும் மேலதிகமாகப் பல பாலங்களை அமைப்பதற்கு நாம் திட்டங்களை முன்வைத்திருந்தால், அவற்றையும் அமைத்திருக்க முடியும்.
ஆகவே, தயவுசெய்து எதிர்காலத்தில் வெள்ளத்தைத் தடுத்து நிறுத்தக்கூடிய வகையில், வெளிநாடுகளுடன் கைகோர்த்து உதவிகளைப் பெற்று, மாவட்டத்தில் அனர்த்தங்களைத் தடுப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். பிரதேச செயலகங்கள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் ஊடாக மாவட்ட ரீதியாக ஆராய்ந்து, நீர்ப்பாசனத் திணைக்களம் மற்றும் விவசாயத் திணைக்களத்தின் மூலம் சரியான திட்டங்களை முன்வைத்து, நிதியை ஒதுக்கீடு செய்வதன் மூலம் எதிர்கால வெள்ளத்தைத் தடுக்க முடியும்.
இயற்கை அனர்த்தம் நடக்கப்போவது பற்றிய செய்தி பலருக்கு முன்கூட்டியே தெரியும். புதிய தொழில்நுட்பத்தின் உதவியுடன் குறிப்பிட்ட வாரத்திற்கு முன்னரே சிலவற்றை நாம் தீர்மானிக்க முடியும். அந்த வகையில், பாராளுமன்றத்தில் இயற்கை அனர்த்தம் தொடர்பாகச் சரியாகப் பிரேரணைகளைச் சமர்ப்பித்து, அதற்குரிய நிர்வாகச் செயல்வடிவத்தை மேற்கொண்டிருந்தால் சில பாதிப்புகளைத் தவிர்த்திருக்க முடியும்.
அனர்த்தத்தின் போது, அதனால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களைக் குறித்து நாம் ஏனோதானோவென்று பேசுவது நாகரிகமான செயல் அல்ல. அனர்த்தத்தின் போது அதனை நிர்வகிப்பதற்கும், தடுப்பதற்கும் நாம் அனைவரும் ஒன்று சேர்ந்து செயற்படுவதன் ஊடாகத்தான் எதிர்கால அனர்த்தத்தைத் தடுக்க முடியும் என்பதை மக்கள் பிரதிநிதிகள் புரிந்து கொள்ள வேண்டும்.
அரசாங்கத்தைப் பொறுத்தவரையில், சில விடயங்களில் முன்னேற்றகரமான செயற்பாடுகள் காணப்படுகின்றன. வீண்விரயமற்ற செயற்பாடுகளை நாம் கௌரவிக்கின்றோம். ஜனாதிபதி நேரடியாக எல்லா மாவட்டங்களுக்கும் கள விஜயம் மேற்கொண்டு செயற்படுவது ஒரு முன்னேற்றகரமான விடயமாகும்.
இந்த விடயங்களை அரசாங்க அதிபர் முதல் மாவட்ட திணைக்களத் தலைவர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் வரை சரியாகப் புரிந்துகொண்டு, இந்த அனர்த்தத்திற்கு உதவி செய்வதற்காகப் போட்டி போட்டுக்கொண்டு வரும் வெளிநாடுகளின் உதவியை ஏன் பயன்படுத்த முடியாது?
எனவே, சரியான திட்டங்களை வகுக்க வேண்டும். இங்கே ஆளும் தரப்பைச் சேர்ந்த பிரதிநிதிகள், அமைப்பாளர்கள், உள்ளூராட்சி மன்றத் தலைவர்கள் முதல் அரசாங்க அதிபர் மற்றும் திணைக்களத் தலைவர்கள் வரை சிறப்பான சேவையை மக்களுக்கு வழங்கியிருந்தார்கள்.
ஆகவே, எம்மால் ஏன் செய்ய முடியாது என்ற விடயத்தைக் கவனத்தில் கொண்டு, வெளிநாட்டுத் திட்டங்களைச் சரியாகப் பயன்படுத்தி, குறைந்தபட்சம் இயற்கை அனர்த்தத்தைத் தடுப்பதற்கான நிதியை ஒதுக்கீடு செய்வதற்கும், சரியான திட்டங்களை முன்வைக்கவும் நடவடிக்கை எடுக்குமாறு நான் வினயமாகக் கேட்டுக்கொள்கிறேன்," என்றார்.
https://adaderanatamil.lk/news/cmitspwea02fro29nbsd8g1ox