புதிய பதிவுகள்2

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 2 weeks ago
ம்ம்ம்… கேள்விக்கு பதில் இல்லை … அருண், வருண் என்ந் திசை திருப்ப மட்டுமே முடிகிறது. கேள்வி மீண்டும் ஒரு தரம்

இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்த ஐநா அறிக்கையாளருக்கு எதிராக தடைகள் - அமெரிக்கா அறிவிப்பு

2 months 2 weeks ago
குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் - அமெரிக்காவின் தடை குறித்து ஐநா அறிக்கையாளர் Published By: RAJEEBAN 11 JUL, 2025 | 12:35 PM குரலற்றவர்களிற்காக குரல்கொடுப்பவர்களை வலிமைமிக்கவர்கள் தண்டிப்பது வலிமையின் அடையாளம் அல்ல குற்ற உணர்வின் அடையாளம் என இஸ்ரேலின் நடவடிக்கைகளை கண்டித்தமைக்காக அமெரிக்காவின் தடையை எதிர்நோக்கியுள்ள ஐக்கிய நாடுகளின் விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் தெரிவித்துள்ளார். சமூக ஊடகபதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். நாங்கள் ஒன்றாக நிமிர்ந்துநிற்போம் என தெரிவித்துள்ள அவர் காசா எதிர்கொண்டுள்ள நெருக்கடி குறித்து கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுத்துள்ளார். அனைவரினது கண்களும் தொடர்ந்தும் பிள்ளைகள் பட்டினி காரணமாக தாய்மாரின் கரங்களில் உயிரிழக்கும் - உணவு தேடும் போது அவர்களின் தந்தைமாரும் சகோதரர்களும் குண்டுவீச்சில் துண்டுதுண்டாக்கப்படும் காசா மீது இருக்கவேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ள பிரான்செஸ்கா மிடில் ஈஸ்ட் ஐயின் நிகழ்ச்சியில் கருத்து தெரிவிக்கையில் நான் யாரையோ பதற்றமடையச்செய்திருக்கின்றேன் போல தோன்றுகின்றது, நான் இங்கு பேசிக்கொண்டிருக்கும் போது காசாவில் மக்கள் மரணித்துக்கொண்டிருக்கின்றார்கள். ஐக்கிய நாடுகளால் அதனை நிறுத்த முடியாமல் உள்ளது என்பதே எனது கரிசனை என குறிப்பிட்டுள்ளார். காசாமீதான இஸ்ரேலின் நடவடிக்கைகளை கடுமையாக விமர்சித்து வந்த ஐக்கியநாடுகள் அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிசிற்கு எதிராக அமெரிக்கா தடைகளை விதித்துள்ளது. அமெரிக்கர்கள் இஸ்ரேலியர்களிற்கு எதிராக ஐசிசி முன்னெடுத்துள்ள நடவடிக்கைகளிற்கு ஆதரவளிக்கும் விதத்தில் செயற்பட்டமைக்காக பிரான்செஸ்காவிற்கு எதிராக தடைகளை விதிப்பதாக அமெரிக்க இராஜாங்க செயலாளர் மார்க்கோ ரூபியோ தெரிவித்துள்ளார். ஐநா அறிக்கையாளராக செயற்படுவதற்கு பிரான்செஸ்கா பொருத்தமற்றவர் என அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தினால் தேடப்படும் இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெட்டன்யாகு தங்களது வான்பரப்பினை பயன்படுத்துவதற்கு அனுமதித்தது ஏன்? என இத்தாலி, கிரேக்கம், பிரான்ஸ் ஆகிய நாடுகள் தெளிவுபடுத்தவேண்டும் என ஐநாவின் பாலஸ்தீனத்திற்கான விசேட அறிக்கையாளர் பிரான்செஸ்கா அல்பெனிஸ் நேற்று வேண்டுகோள் விடுத்திருந்தார். ஐசிசி தேடும் பெஞ்சமின் நெட்டன்யாகுவிற்கு தங்கள் வான்பரப்பை பயன்படுத்துவதற்கும் பாதுகாப்பாக பயணிப்பதற்கும் இத்தாலி பிரான்ஸ் கிரேக்கம் ஆகிய நாடுகள் அனுமளியளித்தது ஏன் என்பதை தெளிவுபடுத்தவேண்டும் என சமூக ஊடக பதிவில் தெரிவித்துள்ள அவர் நெட்டன்யாகுவை கைதுசெய்யவேண்டிய கடப்பாட்டை இந்த நாடுகள் கொண்டுள்ளன என தெரிவித்திருந்தார். சர்வதேச சட்ட ஒழுங்கை மீறும் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையும் அதனை பலவீனப்படுத்தும் அவர்களுக்கும் அனைவருக்கும் ஆபத்தை ஏற்படுத்தும் என்பதை பிரான்ஸ், கிரேக்க, இத்தாலி மக்கள் அறிந்திருக்கவேண்டும் என அவர் தெரிவித்திருந்தார். https://www.virakesari.lk/article/219717

இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடியில் ஈடுபடும் இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்

2 months 2 weeks ago
யாழ். நெடுந்தீவில் தமிழக மீனவர்கள் கைது 13 JUL, 2025 | 02:24 PM இலங்கை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து கடற்தொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 07 தமிழக மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை கடற்படையினர் கடலில் மேற்கொண்ட சுற்றுக்காவல் நடவடிக்கையின் போது, நெடுந்தீவை அண்டிய கடற்பரப்பில் மீன் பிடியில் ஈடுபட்டிருந்த தமிழக மீனவர்களை கைது செய்தனர். அதன்போது அவர்களின் படகினையும் கடற்படையினர் கைப்பற்றினர். கைதான மீனவர்களையும், படகினையும் மயிலிட்டி துறைமுகத்திற்கு கொண்டு சென்ற கடற்படையினர், மீனவர்களை மேலதிக ச‌‌ட்ட நடவடிக்கைக்காக கடற்தொழிலில் நீரியல் வளத்துறை அதிகாரிகளிடம் கையளித்துள்ளனர். https://www.virakesari.lk/article/219867

இறுதி யுத்தத்தில் மீறப்பட்ட மனிதாபிமானச் சட்டம் - நீதிமன்றத்தை நாடவுள்ள சிங்கள சட்டத்தரணி!

2 months 2 weeks ago
சட்டத்தரணி தனுக ரணஞ்சக கஹந்தகமகே யும் காணாமல் ஆக்கப்படுவாரா அல்லது உண்மையை தென்னிலங்கைக்கு தெளிவு படுத்துவாரா?

ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு!

2 months 2 weeks ago
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் மெக்ஸிக்கோவிற்கு 30 % வரி! ட்ரம்ப்பின் புதிய அறிவிப்பு! மெக்ஸிக்கோ மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதியாக ட்ரம்ப் பதவியேற்றது முதல் பரஸ்பர வரிவிதிப்பு என்ற பெயரில் பல்வேறு நாடுகளுக்கு வரி விதித்து வருகிறார். இந்த நிலையில் எதிர்வரும் ஒகஸ்ட் 1ம் திகதி முதல் மெக்ஸிக்கோ, மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கு 30 % வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் நேற்று (12) அறிவித்துள்ளார். மேலும், ஐரோப்பிய ஒன்றிய தலைவர் உர்சுலா வான் டெர் லேயனுக்கு(Ursula von der Leyen) எழுதிய கடிதத்தில் ஐரோப்பிய ஒன்றியத்துடனான தொடர்ச்சியான வர்த்தக பற்றாக்குறைகள் விரக்தியை ஏற்படுத்துகிறது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். https://athavannews.com/2025/1438958

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

2 months 2 weeks ago
விமானத்தின் குறைபாட்டை 7 ஆண்டுக்கு முன்பே சுட்டிக்காட்டிய அமெரிக்காவின் எஃப்ஏஏ - நிபுணர்கள் கூறுவது என்ன? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் விஜயானந்த் ஆறுமுகம் பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் ஆமதாபாத் விமான விபத்து குறித்த முதல் கட்ட விசாரணை அறிக்கையை ஜூலை 12-ஆம் தேதி இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ளது. விமானம் புறப்பட்ட சில விநாடிகளில் விமானத்தின் இரு எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளும் கட் ஆஃப் நிலைக்குச் சென்றதாக அதில் கூறப்பட்டுள்ளது. இவ்வாறு நடப்பதற்கு வாய்ப்புள்ளதாக 2018 ஆம் ஆண்டிலேயே அமெரிக்காவின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் பரிந்துரை செய்துள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர். அது என்ன பரிந்துரை? ஆமதாபாத் விமான விபத்துக்கு அதுதான் காரணமா? முதற்கட்ட அறிக்கை கூறுவது என்ன? பட மூலாதாரம்,UGC படக்குறிப்பு, ஏர் இந்தியா ஏஐ 171 விமானத்தின் கேப்டன் சுமித் சபர்வால் (இடது), இணை விமானி க்ளைவ் குந்தர் (வலது) குஜராத் மாநிலம், ஆமதாபாத்தில் இருந்து ஜூன் 12-ஆம் தேதி லண்டன் புறப்பட்ட ஏர் இந்தியாவின் ஏஐ 171 விமானம், பறக்கத் தொடங்கிய சில விநாடிகளில் விபத்தில் சிக்கியது. விமான நிலையத்தின் அருகில் உள்ள மருத்துவக் கல்லூரி வளாகத்தில் விமானம் விழுந்து நொறுங்கியதில் அதில் இருந்த 241 பேர் உள்பட கிட்டத்தட்ட 260 பேர் உயிரிழந்தனர். விமானத்தில் இருந்தவர்களில் விஸ்வாஸ்குமார் ரமேஷ் என்ற பிரிட்டிஷ் குடிமகன் மட்டும் உயிர் பிழைத்தார். விபத்து நடந்து ஒரு மாதம் நிறைவடைந்துள்ள நிலையில், இந்திய விமான விபத்து புலனாய்வு பணியகம் முதற்கட்ட விசாரணை அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதில், விமானத்துக்கு எரிபொருளை வழங்குவதற்கான சுவிட்சுகள், இயக்க (RUN) என்ற நிலையில் இருந்து கட் ஆஃப் (CutOff) நிலைக்குச் சென்றதால், இரு என்ஜின்களுக்கும் எரிபொருள் செல்வது தடைப்பட்டதாகக் கூறப்பட்டுள்ளது. இதனால் இரு என்ஜின்களும் செயல்படாமல் போனதாக முதற்கட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமான விபத்து பிற்பகல் 1.40 மணியளவில் நடந்துள்ள நிலையில், காலை 11.17 மணியில் இருந்து என்ன நடந்தது என்பது குறித்த விவரம் வெளியாகியுள்ளது. ஏர் இந்தியா விமானம் கிளம்புவதற்கு முன்பு விமானத்தை இயக்குவதற்கு விமானிகள் தகுதியானவர்களா என்பதற்கான சோதனைகள் நடத்தப்பட்டன. சுவாசப் பகுப்பாய்வு சோதனையில், அவர்கள் விமானத்தை இயக்கத் தகுதியானவர்கள் எனக் கண்டறியப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் மாதிரிகளும் திருப்திகரமாக உள்ளதாகக் கண்டறியப்பட்டுள்ளதாக அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. விமானிகளின் அறையில், 'ஏன் துண்டித்தீர்கள்? (எரிபொருள் சுவிட்ச்)' என விமானி கேட்ட போது, 'நான் அணைக்கவில்லை' என்று மற்றொரு விமானி கூறியுள்ளார். ஆனால், அடுத்த சில விநாடிகளில் கட்டுப்பாட்டை இழந்த விமானம, கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. விமானத்தில் இரண்டு என்ஜின்களின் கட் ஆஃப் நேரத்துக்கு இடையில் ஒரு விநாடி நேரம் இருந்துள்ளது. எரிபொருள் விநியோகம் தடைபட்டதால், வேகம் குறையத் தொடங்கியதாக விமான புலனாய்வு பணியகம் வெளியிட்டுள்ள 15 பக்க முதல் கட்ட விசாரணை அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 'திட்டமிட்டு செய்யவில்லை, ஆனால்?' படக்குறிப்பு, எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என்கிறார் அசோக் ராஜா. "ஏஏஐபி வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, கட் ஆஃப் சுவிட்ச் தொடர்பாக விமானிகள் பேசியது குறித்து கூறப்பட்டுள்ளது. அந்த வகையில், திட்டமிட்டு இதனைச் செய்திருப்பதற்கான வாய்ப்புகள் இல்லை" எனக் கூறுகிறார், திருச்சியை சேர்ந்த முன்னாள் விமானி அசோக் ராஜா. "விபத்துக்குள்ளான விமானத்தை இயக்கிய விமானிகளுக்கு மனநல ரீதியாக எந்தப் பிரச்னையும் இல்லை" என்பது முன்பே உறுதிப்படுத்தப்பட்டிருப்பதாக கூறும் அவர், "விமானம் கிளம்புவதற்கு முன்பு அவர் எவ்வளவு அனுபவம் வாய்ந்த விமானியாக இருந்தாலும் எரிபொருள் உள்பட அனைத்தும் சரியாக உள்ளதா என்பதை வாய் விட்டுக் கூற வேண்டும்" எனக் குறிப்பிட்டார். தொடர்ந்து பிபிசி தமிழிடம் பேசிய அசோக் ராஜா, "அமெரிக்காவை சேர்ந்த போயிங் நிறுவனம் இந்த விமானங்களை தயாரித்துள்ளது. இதற்கு அந்நாட்டின் பெடரல் ஏவியேஷன் அட்மினிஸ்ட்ரேஷன் (FAA)) ஒப்புதல் வழங்குகிறது. 2018 ஆம் ஆண்டு போயிங் விமானத்தின் தொழில்நுட்ப பிரச்னைகள் தொடர்பான சில பரிந்துரைகளை எஃப்ஏஏ வழங்கியுள்ளது" எனக் கூறுகிறார். 2018 ஆம் ஆண்டு பரிந்துரை என்ன? '787 ட்ரீம்லைனர் விமானங்களில் எரிபொருள் கட் ஆஃப் வால்வுகளில் தொழில்நுட்ப சிக்கல்கள் வரலாம்' எனவும் அது சரியாக உள்ளதாக என்பதை ஆய்வு செய்ய வேண்டும் எனவும் எஃப்ஏஏ பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. "அது கட்டாயம் என்பதாகக் குறிப்பிடாமல் பரிந்துரை என்ற அடிப்படையில் முன்வைக்கப்பட்டதால் யாரும் அதனை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை" எனக் கூறுகிறார் அசோக் ராஜா. "இது விதிமீறல் என்பதாக எடுத்துக் கொள்ள முடியாது என்றாலும் போயிங் விமானம் தொடர்பான இந்தப் பரிந்துரையை செயல்படுத்தியிருக்கலாம்" எனக் கூறும் அசோக் ராஜா, "எலக்ட்ரிக்கல் மற்றும் மென்பொருளில் பிரச்னை ஏற்பட்டிருப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன" எனக் குறிப்பிட்டார். 2018 ஆம் ஆண்டு அமெரிக்காவின் எஃப்ஏஏ (FAA) அளித்துள்ள பரிந்துரையில், போயிங் நிறுவனத்துக்கு விமானத்தை இயக்குகிறவர்களிடம் இருந்து கிடைத்த அறிக்கையின்படி, எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகளின் லாக்கிங் சிஸ்டம் குறித்துக் கூறப்பட்டுள்ளது. விமானத்தின் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சுகள், விமானத்தின் கட்டுப்பாட்டு அறையில் (Flight deck) அமைக்கப்பட்டு, என்ஜினுக்கு எரிபொருளை வழங்கவும் துண்டிக்கவும் செய்ய விமானியால் கையாளப்படுகிறது. இதில் கவனக்குறைவு நேரிடுவதைத் தடுக்கும் வகையில் லாக்கிங் சிஸ்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. லாக்கிங் சிஸ்டம் செயல்படாவிட்டால் என்ன நடக்கும்? 'லாக்கிங் சிஸ்டம் சரிவர செயல்படாவிட்டால், ரன் மற்றும் கட் ஆஃப் நிலைகளுக்கு ஆகிய 2 நிலைகளுக்கு இடையே எரிபொருள் சுவிட்சை மாற்றலாம். இதில் கவனக்குறைவுக்கான சாத்தியக் கூறுகள் உள்ளன. இதனால் விமானத்தின் இயந்திரம் நிறுத்தப்படுவது போன்ற எதிர்பாராத விளைவுகள் ஏற்படலாம்' என எஃப்ஏஏ எச்சரித்துள்ளது. 'விமான உரிமையாளர்களும் அதனை இயக்கும் விமானிகளும் எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சின் லாக்கிங் சிஸ்டத்தை ஆய்வு செய்து அதன் தன்மையை உறுதி செய்ய வேண்டும்' எனவும் எஃப்ஏஏ அளித்துள்ள பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது. 'ஒத்துப் போகும் அறிக்கை' 'தரையில் விமானம் இருக்கும் போது எரிபொருள் கட்டுப்பாட்டு சுவிட்சை உயர்த்தாமல் (Lift) இரண்டு நிலைகளுக்கு இடையில் நகர்த்த முடியுமா எனப் பார்க்க வேண்டும். சுவிட்சை உயர்த்தாமல் நகர்த்த முடிந்தால் லாக்கிங் சிஸ்டம் துண்டிக்கப்பட்டிருப்பதை உணர்த்தும் என்பதால் சுவிட்சை மாற்ற வேண்டும்' எனவும் எஃப்ஏஏ தெரிவித்துள்ளது. இதனை மேற்காள் காட்டிப் பேசிய முன்னாள் விமானி அசோக் ராஜா, "இரண்டு விமானிகளுக்கு நடுவில் கட் ஆஃப் வால்வு இருக்கும். அது கைதவறி அணைக்கும் அளவுக்கு இருக்காது. அதற்கான வாய்ப்புகளே இல்லை" எனக் கூறுகிறார். "கடந்த காலங்களில் விமானத்தின் இயக்கம் முழுவதும் கைகளால் கையாளப்பட்டன. அதாவது நேரடியாக மெக்கானிக்கல் செயல்பாடு இருக்கும். தற்போது எலக்ட்ரானிக் முறையில் கையாளப்படுகின்றன" எனவும் அசோக் ராஜா குறிப்பிட்டார். எஃப்ஏஏ கூறிய பரிந்துரைகளுடன் விமான விபத்து தொடர்பான இந்திய விமான புலனாய்வு பணியகத்தின் முதற்கட்ட அறிக்கையும் ஒத்துப் போவதாக தான் கருதுவதாகவும் அவர் குறிப்பிட்டார். 'பரிந்துரை தான், கட்டாயம் இல்லை' படக்குறிப்பு, விமானத்தின் மென்பொருளில் கோளாறு ஏற்பட்டிருக்க வாய்ப்பில்லை. எலக்ட்ரிகல் பிரச்னை ஏற்பட்டிருக்கலாம் எனக் கூறுகிறார் பேராசிரியர் எஸ்.குருசாமி. "எஃப்ஏஏ கூறிய அம்சங்களில் (Special Airworthiness Information Bulletins (SAIB) 'கட்டாயம்' என இல்லாவிட்டால் அதை விமானங்களின் உரிமையாளர்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை" என்கிறார், அசோக் ராஜா. விமானத்தின் எலக்ட்ரிகல் வயர்களில் ஏற்பட்ட பிரச்னை காரணமாக தன்னிச்சையாக எரிபொருள் கட் ஆஃப் ஏற்பட்டிருக்கலாம் எனவும் இறுதிக்கட்ட அறிக்கை வெளிவரும்போது முழு விவரங்களும் தெரியவரும் எனவும் அவர் தெரிவித்தார். இதே கருத்தை பிபிசி தமிழிடம் முன்வைத்த கோவை நேரு ஏரோநாட்டிக்ஸ் அண்ட் அப்ளைடு சயின்ஸ் கல்லூரியின் பேராசிரியர் எஸ்.குருசாமி, ""இரண்டு சுவிட்சுகளும் வெவ்வேறு மின் இணைப்புகள் மூலம் செயல்படும். அப்படித் தான் விமானம் வடிமைக்கப்பட்டிருக்கும். தவறுதலாக இதை அணைப்பதற்கு வாய்ப்பில்லை. இரண்டு என்ஜின்களுக்கும் தனித்தனி எரிபொருள் அமைப்புகள் உள்ளன" என்கிறார். "ஒன்று ஆஃப் செய்யப்பட்டாலும் மற்றொன்று கட் ஆஃப் ஆக வேண்டிய அவசியம் இல்லை" எனக் கூறும் அவர், "இதற்கு மனித தவறு காரணமா? தொழில்நுட்ப கோளாறு காரணமா என்பது முழு அறிக்கை வரும்போது தெரியவரும்" என்றார். - இது பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c939eqgd9zno

குருக்கள் மடத்தில் வெட்டியும், சுட்டும் கொல்லப்பட்ட முஸ்லிம்களின் புதைகுழி வழக்கில் நகர்த்தல் பத்திரம்

2 months 2 weeks ago
இதில் குற்றம் சொன்ன ஒருவரை சாதி பெயர் ? சொல்லி முகநூலில் ஏசுகிறார்கள்.அந்த shot பார்த்தேன் மோசமான செயல்

எயார் இந்தியா விமான விபத்துக்கான காரணம் குறித்த அறிக்கை வெளியானது !

2 months 2 weeks ago
ஓம் தமிழ் யுரியுப்பர்கள் விமானம் விபத்து பற்றி தங்களது கற்பனை கதைகளை தொடர்ந்து விட முடியவில்லையே என்ற கவலை தான் ஆனாலும் விடுவது இல்லை என்று சிங்கல அடியான் ஒரு வீடியோ போட்டிருக்கின்றாராம் வேண்டும் என்றே செய்யபட்ட தவறு விமான விபத்து - தலைப்பு. காணொளி பார்க்கவில்லை

திருச்சி சிறப்பு முகாமில் உண்ணாவிரதப்போராட்டம் - தமிழ்நாடு அரசு விரைந்து நடவடிக்கை எடுக்கவேண்டும் - வேல்முருகன்

2 months 2 weeks ago
திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிப்பு - பழ.நெடுமாறன் 13 JUL, 2025 | 12:20 PM திருச்சி முகாமில் காலவரையற்ற உண்ணாவிரத போராட்டம் நடத்தும் இலங்கை தமிழர் நவநாதனின் உடல் நலம் பாதிக்கப்பட்டுள்ளதால் தமிழக முதல்வர் தலையிட்டு நடவடிக்கை எடுக்குமாறு உலக தமிழர் பேரமைப்பின் தலைவர் பழ.நெடுமாறன் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழகத்துக்கு அகதியாக வந்த இலங்கை தமிழர் நவநாதனை எந்த காரணமும் கூறாமல் போலீஸார் கைது செய்து திருச்சி சிறப்பு முகாமில் அடைத்துள்ளனர். இதற்கு எதிராக திருச்சி சிறப்பு முகாமில் அவர் கடந்த 8 நாட்களாக காலவரையற்ற உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் அவரது உடல்நிலை சீர்கேடு அடைந்துள்ளது. இந்த பிரச்சினையில் முதல்வர் ஸ்டாலின் தலையிட்டு நவநாதனை உடனடியாக விடுவித்து மருத்துவமனையில் அனுமதிக்க முன்வருமாறு வேண்டிக் கொள்கிறேன். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/219855

உள்ளேன் ஐயா... : டாப்பு; வருகைப் பதிவேடு

2 months 2 weeks ago
வணக்கம் வாத்தியார் . .......... ! ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சிரிப்பு வருது சிரிப்பு வருது சிரிக்க சிரிக்க சிரிப்பு வருது ஆண் : சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது சின்ன மனுசன் பெரிய மனுசன் செயலை பார்த்து சிரிப்பு வருது ஆண் : ஹா ஹா ஹா ஹா மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு மேடையேறி பேசும்போது ஆறு போல பேச்சு ஆண் : கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு கீழ இறங்கி பேகும்போது சொன்னதெல்லாம் போச்சு ஆண் : காச எடுத்து நீட்டு கழுத பாடும் பாட்டு ஆச வார்த்தை காட்டு உனக்கும் கூட ஓட்டு ஆண் : உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு உள்ள பணத்தை பூட்டி வச்சி கள்ளன் வேசம் போடு ஆண் : ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஒளிஞ்சி மறைஞ்சி ஆட்டம் போட்டு உத்தமன் போல பேசு ஆண் : நல்ல குணத்த மாத்து கள்ள பணத்த ஏத்து நல்ல நேரம் பார்த்து நண்பனையே மாத்து ஆண் : ஹா ஹா ஹா ஹா ........... ! --- சிரிப்பு வருது சிரிப்பு வருது ---

செம்மணிக்குள் புதைக்கப்பட்ட உண்மைகள் வெளிவருமா ? நிலாந்தன்.

2 months 2 weeks ago
செம்மணிக்கு நீதி? அணையா விளக்கு போராட்டம் மனித உரிமைகள் ஆணையாளரை செம்மணி வளைவுக்கு கொண்டு வந்தது. போராட்டதின் கோரிக்கைகள் அடங்கிய பட்டயத்தை அவர் பெற்றுக்கொண்டார். அக்கோரிக்கைகளில் முதலாவதாகக் காணப்படுவது,செம்மணியும் உட்பட மனிதப் புதைகுழிகளை அகழ்ந்து ஆராயும் பொழுது ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளர் அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருக்கிறது. ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துள் இயங்கும் ஓர் அலுவலகமானது இலங்கையை பொறுப்புக்கூறவைப்பதற்கு தேவையான சான்றுகளையும் சாட்சிகளையும் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக சேகரித்து வருகிறது. அந்த அலுவலகத்தின் மேற்பார்வையையும் நிபுணத்துவ உதவியையும் கேட்டிருப்பதன்மூலம் அணையா விளக்கு போராட்டமானது மனிதப் புதைகுழிகள் தொடர்பான விசாரணைகளுக்கு அனைத்துலக பொறிமுறையையும் நிபுணத்துவத்தையும் கோரி நிற்கின்றது. அதாவது, உள்நாட்டு பொறிமுறையை நம்பவில்லை என்று பொருள். ஐநாவில் 2021ஆம் ஆண்டிலிருந்து தொடங்கி சுமார் நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அந்த அலுவலகம் ஐநா மனிதஉரிமைகள் ஆணையாளரின் அலுவலகத்துக்குள் இயங்கிக் கொண்டிருக்கிறது. அதன் பெயர் “ஸ்ரீலங்காவை பொறுப்பு கூற வைப்பதற்கான நிகழ்ச்சி திட்டம்”(OSLAP) இதன்படி சான்றுகளையும் சாட்சிகளையும் அவர்கள் சேகரித்து வருகிறார்கள்.ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் இலங்கைக்குள் வருவதற்கு இன்றுவரை விசா வழங்கப்படவில்லை.ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய வருகைக்குப்பின் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்களுக்கு விசா வழங்கப்படுமா ? ஆனால் தன்னுடைய இலங்கை வருகையின் இறுதியில் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் ஊடகங்கள் மத்தியில் ஆற்றிய உரையில் என்ன சொன்னவர் தெரியமா? “இறுதியிலும் இறுதியாக இது இலங்கை அரசின் பொறுப்பாகும், அதோடு,இந்த முன்னெடுப்பு இலங்கையின் தேசிய உடமை என்பது முக்கியம்.மேலும் இது சர்வதேச வழிமுறைகளால்,உதவிகளால் பூர்த்தி செய்யப்படலாம்,”அதாவது அவருடைய உத்தியோகபூர்வ நிலைப்பாட்டில்,அவர் உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவது பற்றியே பேசுகிறார்.அப்படியானால் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு மேலாக ஐநாவில் இயங்கிவரும் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் அந்த அலுவலகத்தின் பொருள் என்ன?அது உள்நாட்டுப் பொறிமுறையைப் பலப்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட ஒன்றா?ஆனால் அந்த அலுவலகத்தைச் சேர்ந்தவர்கள் நாட்டுக்குள் வர விசா இல்லையே? சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கான அந்த அலுவலகத்தில் அடிப்படைப் பலவீனங்கள் உண்டு.இப்படி ஒரு பொறிமுறை உருவாக்கப்படவிருக்கிறது என்பதனை ஊகிகித்து 2021 ஆம் ஆண்டு ஜெனிவா கூட்டத்தொடரை முன்னிட்டு சிவில் சமூகங்கள் தமிழ்த்தேசிய நிலைப்பாட்டைக் கொண்ட கட்சிகளை ஒன்றிணைத்தன.மூன்று கூட்டங்களை தொடர்ச்சியாக நடத்தியதன் விளைவாக ஒரு கூட்டுக்கடிதம் 2021 ஜனவரி மாதம் ஐநாவுக்கு எழுதப்பட்டது. அந்தக் கடிதத்தில் இரண்டு முக்கிய விடயங்கள் கேட்கப்பட்டன.ஒன்று, பொறுப்புக் கூறலை ஐநா. மனித உரிமைகள் பேரவையிடமிருந்து ஐநா பொதுச் சபை எடுத்துக் கொள்ள வேண்டும்.அதைப் பின்னர் அனைத்துலக குற்றவியல் நீதிமன்றங்களிடம் பாரப்படுத்த வேண்டும்.இரண்டாவது கோரிக்கை, மேற்சொன்ன பொறிமுறையானது குறிப்பிட்ட காலஎல்லைக்குள் அதன் செயற்பாடுகளை முடிக்கும் விதத்தில் வினைத்திறன் மிக்கதாக இருக்க வேண்டும்.அந்த பொறிமுறைக்குரிய செயற்படு காலத்தை 6 மாதங்கள் அல்லது ஒரு ஆண்டாகக் குறைக்கும்படி கஜேந்திரகுமார் வலியுறுத்தினார்.அக்கூட்டுக் கடிதம் அனுப்பப்பட்ட பின் தமிழரசுக் கட்சி அந்தக் கடிதத்திற்கு எதிரான செயற்பாடுகளில் ஈடுபட்டதாக தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி அப்பொழுது குற்றஞ்சாட்டியது. அக்கூட்டத் தொடரின் முடிவில் நிறைவேற்றப்பட்ட ஐநா தீர்மானம் 46/1 இன்படி ஒரு பொறிமுறை அதுதான் மேற்படி அலுவலகம் (OSLAP) உருவாக்கப்பட்டது. ஆனால் அது தமிழ்த் தரப்பு கேட்டிருந்த ஒரு பொறிமுறை அல்ல.அதில் பின்வரும் அடிப்படைப் பலவீனங்கள் இருந்தன. முதலாவதாக,அது ஐநா மனித உரிமைகள் ஆணையாளருடைய அலுவலகத்துக்கு உள்ளே இயங்கும் ஒரு நிகழ்ச்சி திட்டம்தான். அதாவது கூட்டுக் கடிதத்தில் கேட்டதுபோல பொறுப்புக்கூறலை அவர்கள் மனிதஉரிமைகள் பேரவைக்கு வெளியே கொண்டு போகவில்லை. இரண்டாவது அதற்கு ஆறு மாத அல்லது ஒரு வருட கால நிர்ணயம் செய்து அதன் நடவடிக்கைகள் வேகப்படுத்தப்படவில்லை. பதிலாக இன்றுவரை அது இயங்குகின்றது.இப்படித்தான் இருக்கிறது தமிழ் மக்கள் பிரதிநிதிகள் கூட்டாக முன்வைக்கும் கோரிக்கைகளுக்கு ஐநாவின் பதில் வினை. அது தமிழ் மக்கள் கேட்டதை விட,எதிர்பார்த்ததைவிட பலவீனமான ஒரு பொறிமுறை என்ற போதிலும் அப்பொறிமுறையைச் சேர்ந்த அலுவலர்கள் நாட்டுக்குள் வந்து சாட்சிகளையும் சான்றுகளையும் சேகரிப்பதற்கும் உறுதிப்படுத்துவதற்கும் கடந்த நான்கு ஆண்டுகளாக இலங்கை அரசாங்கங்கள் விசா வழங்கவில்லை. இப்படிப்பட்டதோர் அரசியல் மற்றும் ராஜதந்திர பின்னணிக்குள் ஐநா மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை மீது அழுத்தங்களளைப் பிரயோகிக்கும் விதத்தில் வார்த்தைகளைப் பிரயோகிக்காமல் விட்டது, அவருடைய அலுவலகத்துக்குள் இயங்கும் அந்தப் பொறிமுறையை அவரே பலவீனப்படுத்துவதாக அமையுமா? அது ஒரு பலவீனமான கட்டமைப்புத்தான். எனினும் அந்த அலுவலகமானது நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்துக்குள்ள அனைத்துலகப் பரிமாணத்தை மேலும் பலப்படுத்தியிருக்கிறது.ஏனென்றால் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பது என்பது இப்பொழுது ஓர் அனைத்துலக நடைமுறையாக மாற்றப்பட்டிருக்கிறது.எனவே சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிக்கும் விடயத்தில் தமிழ்மக்கள் அனைத்துலக சமூகத்தின் ஆதரவைப் பெறுவதற்குத் தேவையான அனைத்துலக நிலைமைகள் இப்பொழுது ஒப்பீட்டளவில் பலமாக உள்ளன. மேலும் அந்த அலுவலகம் சேகரித்துவரும் சான்றுகள் மற்றும் சாட்சியங்களின் அடிப்படையில்தான் அண்மை ஆண்டுகளில் அமெரிக்காவிலும் கனடாவிலும் பிரித்தானியாவிலும் குறிப்பிட்ட சில படைப் பிரதானிகளுக்கும் படை அலுவலர்களுக்கும் எதிராகப் பயணத்தடைகள் விதிக்கப்பட்டுள்ளன. இங்கேயும் தமிழ்த் தரப்பு நோக்கு நிலையில் இருந்து ஒரு கேள்வி உண்டு. அந்தப் படைப்பிரதானிகள் தாங்களாக அதைச் செய்யவில்லை அவர்களுக்கு உத்தரவிட்ட,அதற்கு வேண்டிய அரசியல் தீர்மானத்தை எடுத்த,அரசுக் கட்டமைப்பு உண்டு.அந்தக் கட்டமைப்பைக் குற்றஞ்சாட்டும் ஒரு நிலை இன்று வரை ஐநாவிலோ அல்லது மேற்கு நாடுகளின் ராஜதந்திர வட்டாரங்கள் மத்தியிலோ ஏற்படவில்லை. அதாவது இனப்படுகொலையைச் செய்தது ஒரு அரசுக் கட்டமைப்பு.இன அழிப்பு என்பது அந்த அரசுக் கட்டமைப்பின் கொள்கையாக இருந்தது என்ற அடிப்படையில் அந்த அரசுக் கட்டமைப்பைத் தான் விசாரிக்க வேண்டும்.அதற்கு எதிராகத்தான் நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தமிழ் தரப்பு கேட்கின்றது.ஆனால் அப்படி ஒரு வளர்ச்சி ஐநாவிலும் ஏற்படவில்லை,மேற்கு நாடுகளின் கொள்கை வகுப்பாளர்கள் மத்தியிலும் ஏற்படவில்லை. எனினும் நீதிக்கான தமிழ் மக்களின் போராட்டத்தில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு கட்டமைப்பு அது தமிழ் மக்கள் கேட்டதை விடப் பலவீனமானது என்ற போதிலும் அனைத்துலக அளவில் ஏற்றுக்கொள்ளப்பட்டது என்பது ஒரு முன்னேற்றம்தான். இப்படிப்பட்டதோர் பின்னணியில்தான்,செம்மணியும் உள்ளிட்ட எல்லா விடயங்களிலும் தமிழ்மக்கள் தமது சக்திக்கேற்ப சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கும் பகுப்பாய்வு செய்வதற்கும் DNA பரிசோதனைகளைச் செய்வதற்கும் பொருத்தமான கட்டமைப்புகளை உருவாக்க வேண்டியுள்ளது.செம்மணி தொடர்பில் மட்டுமல்ல தமிழ் மக்களிடம் பெரும்பாலான விடயங்களில் விஞ்ஞான பூர்வமாகத் தொகுக்கப்பட்ட தரவுகள் உண்டா? தன்னை பலிகடா ஆக்கிய தனது உயர் அதிகாரிகளுக்கு எதிராக ஒரு ராணுவ சார்ஜன் சொன்ன சாட்சியத்தை வைத்துதான் செம்மணியில் நானூறுக்கும் குறையாத உடல்கள் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.இந்த விடயத்தில் செம்மணியில் எத்தனை பேர் புதைக்கப்பட்டார்கள் என்பதனை அதற்குரிய துறைசார் நிபுணர்கள் கண்டுபிடிக்கட்டும்.அதேசமயம்,செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகின்ற அப்பகுதியைச் சேர்ந்தவர்கள் தொடர்பான தரவுகளைத் திரட்டவேண்டியது தமிழ் மக்களுடைய பொறுப்பு.அவ்வாறான தரவுகளைத் திரட்டும் கட்டமைப்புகள் எத்தனை தமிழ் மக்கள் மத்தியில் உண்டு? ஆயுத மோதல்கள் முடிவுக்கு வந்து 16 ஆண்டுகளின் பின்னரும், மிகப் பலமான ஒரு புலம்பெயர்ந்த சமூகத்தைக் கொண்டிருந்த போதிலும், தமிழர்களால் ஏன் அவ்வாறான தரவுகளைத் திரட்டும் பொதுக் கட்டமைப்புக்களை உருவாக்க முடியாதிருக்கிறது?குறைந்தபட்சம் டிஜிட்டல் பரப்பிலாவது அவ்வாறு ஒரு பொதுவான தகவல்திரட்டும் வேலையைத் தொடங்கலாம்.இதுவிடயத்தில் அனைத்துலக அங்கீகாரத்தைப் பெற்ற மனிதஉரிமைகள் தகவல் பகுப்பாய்வு அமைப்பின் (Human Rights Data Analysis Group: HRDAG) நிபுணத்துவ உதவியைக் கேட்கலாம். இன அழிப்புக்கு எதிரான நீதியைக் கோரும் போராட்டம் என்று கடந்த பதினாறு ஆண்டுகளாகச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.நீதிக்கான போராட்டத்தை எங்கேயிருந்து தொடங்க வேண்டும்? குற்றச் செயல்களை, குற்றவாளிகளை நிரூபிப்பதற்குத் தேவையான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் அதைத் தொடங்கவேண்டும்.அதற்குரிய கட்டமைப்புகள் எத்தனை தமிழ்மக்கள் மத்தியில் உண்டு ? போர்க்காலத்தில் காணாமல் ஆக்கப்பட்டவர்கள் அல்லது கைது செய்யப்பட்டவர்கள் தொடர்பான விடையங்களை இப்பொழுதும் ஞாபகத்தில் வைத்திருக்கும் உறவினர்கள் கிராமங்கள் தோறும் உண்டு. அவ்வாறு உறவினர்கள் தந்த தகவல்களின் அடிப்படையில்தான் செம்மணிக்கு அருகே நாவற்குழியில் 1996ஆம் ஆண்டு ஒரு சுற்றிவளைப்பின்போது கைது செய்யப்பட்டுக் காணாமல் ஆக்கப்பட்ட 24தமிழர்களுக்கு நீதி கேட்டு ஒரு வழக்கு அரச சார்பற்ற நிறுவனம் ஒன்றினால் தொடுக்கப்பட்டது.அந்த வழக்கின் விளைவாகத்தான் அந்த வழக்கை முன்னெடுத்த சட்டவாளர் கலாநிதி குருபரனுக்கு எதிராக நிர்ப்பந்தங்கள் பிரயோகிக்கப்பட்டு முடிவில் அவர் பல்கலைக்கழகத்தில் இருந்து நீங்கினார். நாட்டை விட்டும் சிறிது காலம் விலகியிருந்தார்.இப்பொழுது அந்த வழக்கு ஒரு தென்னிலங்கை சட்டவாளரால் முன்னெடுக்கப்படுகின்றது. நிலைமாறு கால நீதியின் கீழ் உள்நாட்டு நிதியின் விரிவை பரிசோதிக்க முற்படும் வழக்குகளில் அதுவும் ஒன்று. உள்நாட்டுப் பொறி முறையே பொருத்தமானது என்று கூறும் அரசாங்கத்துக்கும் உள்நாட்டுப் பொதுமுறையை அனைத்துலக தராதரத்துக்கு பலப்படுத்த வேண்டும் என்று கூறும் ஐநா அதிகாரிகளுக்கும் உள்நாட்டுப் பொறிமுறையின் இயலாமையை நிரூபிக்கத் தேவையான வழக்குகளைத் தமிழ் மக்கள் தொடுக்கலாம். கிரிசாந்தியின் விடயத்தில் அப்போது இருந்த அரசாங்கம் தான் நீதியாக நடந்து கொள்வதாகக் காட்டிக்கொள்ள முற்பட்டதன் விளைவாக,அதனால் தண்டிக்கப்பட்ட ஒரு படை ஆள் அரசுக்கு எதிராக வாக்குமூலம் வழங்கினார்.அந்த வாக்குமூலம்தான் செம்மணியை வெளியே கொண்டு வந்தது. எனவே உள்நாட்டு நீதியின் விரிவைப் பரிசோதிப்பதற்கும் உள்நாட்டு நீதியின் போதாமைகளை உணர்த்துவதற்கும் வழக்குகளைத் தொடுப்பதற்கு சட்டச் செயற்பாட்டாளர்கள் முன்வர வேண்டும்.தமிழ் மக்கள் மத்தியில் அதற்கு தேவையான எத்தனை சட்டச் செயற்பாட்டு அமைப்புக்கள் உண்டு? தமிழ் சட்டவாளர்கள் அரசியல்வாதிகளாக இருக்கிறார்கள்.அரசியல் செயல்பாட்டாளர்களாக மனிதஉரிமை செயற்பாட்டாளர்களாக இருக்கிறார்கள். ஆனால் சட்டச் செயற்பாட்டு மையங்கள் என்று பார்த்தால் மிகக்குறைவு. கொழும்பை மையமாகக் கொண்ட சட்டவாளர் ரட்ணவேலும் அவருடைய அணியும் செம்மணியில் நிற்கிறார்கள்.இந்த விவகாரத்தில் மட்டுமல்ல சரணடைந்தபின் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் வழக்குகளையும் பெருமளவுக்கு ரட்ணவேல்தான் கையாண்டு வருகிறார்.அவருடைய மனித உரிமைக்கும் அபிவிருத்திக்குமான மையம் தமிழ்மக்கள் மத்தியில் உள்ள போற்றுதலுக்குரிய சட்டச் செயற்பாட்டு அமைப்பாகும். அதனால்தான் கடந்த ஜனாதிபதித் தேர்தலின் போது,தமிழ்ப் பொது வேட்பாளரைத் தெரிவு செய்யும் சந்திப்பில் முதலில் பரிசீலிக்கப்பட்டது சட்டத்தரணி ரட்ணவேல்தான்.ஆனால் அவர் அதற்கு மறுத்துவிட்டார்.பொது வேட்பாளருக்காக உழைத்த மக்கள் அமைப்போடு சிவில்சமூக செயற்பாட்டாளராகிய சட்டத்தரணி புவிதரன் இணைந்து வேலை செய்தார். குருபரன் சில குறிப்பிட்ட உதவிகளைச் செய்தார்.எனினும் தமிழ் மக்கள் மத்தியில் குறிப்பிட்டுச் செல்லக்கூடிய சட்ட உதவி மையங்கள்,சட்டச் செயற்பாட்டு மையங்கள் எத்தனை உண்டு? இத்தனைக்கும் நீதி கேட்டுப் போராடும் ஒரு மக்கள் கூட்டம். நீதிக்கான போராட்டம் என்பது குற்றம் தொடர்பான தகவல்களைத் திரட்டுவதில் இருந்துதான் தொடங்குகின்றது.அதற்கு வேண்டிய கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதன்மூலம் முதற்கட்டமாக உள்நாட்டு நீதியின் விரிவை பரிசோதிப்பதற்கான வழக்குகளைத் தொடுக்கலாம்.உள்நாட்டு நீதியின் போதாமை நிருபிக்கப்படும்போது அனைத்துலக நீதிப் பொறிமுறைக்கான தேவை மேலும் நிரூபிக்கப்படும்.அனைத்துலக அளவில் சான்றுகளையும் சாட்சிகளையும் சேகரிப்பதற்கான ஒரு அலுவலகம்-அது பலவீனமானது என்ற போதிலும்-ஓர் அனைத்துலக யதார்த்தமாக மாறியிருக்கிறது.அது தமிழ் மக்களுக்குப் பலமானது. தமிழ் மக்கள் நீதிக்காகப் போராடுகிறோம் என்று கூறிக்கொண்டு கற்பனையில் திளைக்காமல் கட்டமைப்பு சார்ந்து சிந்திக்க வேண்டும்.முதலில் விஞ்ஞானபூர்வமாகத் தகவல்களைத் திரட்டும் தளங்களைத் திறக்க வேண்டும். இரண்டாவதாக,சட்டச் செயற்பாட்டு அமைப்புகளை உருவாக்க வேண்டும். தமிழ் மக்கள் கட்டமைப்புச் சார்ந்து சிந்திக்க வேண்டும்.கட்டமைப்புகளை உருவாக்க வேண்டும்.அதாவது தேசத்தைக் கட்டியெழுப்பத் தேவையான கட்டமைப்புகள். https://www.nillanthan.com/7526/
Checked
Sat, 09/27/2025 - 12:23
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed