புதிய பதிவுகள்2

தவெகவின் 2ஆவது மாநில மாநாடு: விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?

1 month ago
த.வெ.க. மாநாட்டில் தூக்கி வீசப்பட்டது யார்? - போட்டி போடும் 2 இளைஞர்கள் பட மூலாதாரம், X/@TVKITWingOfficial படக்குறிப்பு, மதுரையில் ஆகஸ்ட் 21ஆம் தேதி தவெகவின் 2வது மாநில மாநாடு நடைபெற்றது. கட்டுரை தகவல் முரளிதரன் காசிவிஸ்வநாதன் பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டில் கட்சித் தலைவர் விஜய்யை நெருங்க முற்பட்டு, பவுன்சர்களால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில் தற்போது வேறொருவர் தானே தூக்கியெறியப்பட்டதாகக் கூறுகிறார். மதுரையில் நடந்த தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் விஜய்யின் ராம்ப் வாக்கின்போது, அவரை நெருங்க முயன்றதால் தூக்கியெறியப்பட்டதாக ஏற்கனவே ஒரு இளைஞர் புகார் கூறிய நிலையில், தற்போது வேறு ஒரு இளைஞர் தான்தான் தூக்கியெறியப்பட்டதாகக் கூறியிருக்கிறார். மதுரை மாவட்டம் பாரபத்தியில் ஆகஸ்ட் 21ஆம் தேதியன்று தமிழக வெற்றிக் கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெற்றது. மாநாட்டில் அக்கட்சியின் தலைவர் விஜய் நடந்து வருவதற்கான நடைபாதை ஒன்று அமைக்கப்பட்டது. அந்த நடைபாதையில் விஜய் நடந்துசெல்லும்போது பாதுகாப்பிற்காக சில பவுன்சர்கள் வந்தனர். கூட்டத்திற்கு வந்தவர்கள் அந்த நடைபாதையை நெருங்கிவிடாதபடி ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. ஆனால், அதையும் மீறி சில இளைஞர்கள் அந்த நடைபாதையில் ஏறினர். அப்போது விஜய்யுடன் வந்த பவுன்சர்கள் அவர்களைத் தூக்கி கீழே வீசினர். இந்தக் காட்சிகள் தொலைக்காட்சிகளில் நேரலையாகவே ஒளிபரப்பாயின. இதற்குப் பிறகு, 'அவ்வாறு தூக்கி வீசப்படும் நபர் என்னுடைய மகன் தான்' எனக் கூறி, குன்னம் தாலுகாவில் உள்ள பெரியம்மாபாளையம் கிராமத்தைச் சேர்ந்த சந்தோஷம் என்பவர், ஊடகங்களுக்குப் பேட்டியளித்தார். ஆனால், இதனை சந்தோஷத்தின் மகன் சரத்குமார் மறுத்தார். திடீர் திருப்பமாக ஆகஸ்ட் 26ஆம் தேதியன்று பெரம்பலூர் காவல் துறை கூடுதல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சந்தோஷமும் அவரது மகன் சரத்குமாரும் புகார் ஒன்றை அளித்தனர். அந்தப் புகாரில், பவுன்சர்கள் தன்னைத் தூக்கியெறிந்ததால் தனது "மார்பு மற்றும் வலது விலா எலும்பில் அடிபட்டு வலி அதிகமாகிவிட்டது. தற்போது மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வருகிறேன். தனக்கு யாருமே உதவிக்கு வராததால் விஜய் மீதும் பாதுகாப்புக்கு வந்த பவுன்சர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும்' எனக் குறிப்பிட்டிருந்தார். படக்குறிப்பு, குன்னம் காவல்நிலையத்தில் சரத்குமார் புகார் அளித்தார். முதலில் கூறியதை மாற்றிப் பேசியது ஏன் என ஊடகங்கள் கேட்டபோது, "கட்சிக்குக் கெட்ட பெயர் ஏற்பட்டுவிடக் கூடாது என்பதால் அமைதியாக இருந்தேன். பவுன்சர்களால் தூக்கி வீசப்பட்டது நான் தான்" எனக் கூறினார். சரத்குமார் அளித்த புகாரின்பேரில் குன்னம் காவல்நிலையத்தில் த.வெ.க. தலைவர் விஜய், அடையாளம் தெரியாத பவுன்சர்கள் என பத்து பேர் மீது மூன்று பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருந்தது. பிறகு அந்த வழக்கு மதுரை மாவட்டம் கூடகோவில் காவல் நிலையத்திற்கு மாற்றப்பட்டது. இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் பெரம்பலூர் மாவட்டச் செயலாளர் சிவகுமாரிடம் கேட்டபோது, "சரத்குமார் என்பவர் எதற்காக இப்படிச் சொல்கிறார் என்பதே தெரியவில்லை. அவர் ஒரு வீடியோவில் மாநாட்டிற்கு 9 மணிக்கு வந்ததாகச் சொல்கிறார். அவர் ரயிலில் சென்றிருக்கிறார். அரியலூரில் இருந்து அந்த ரயிலே காலை 9 மணிக்குத்தான் வரும். இதிலிருந்தே அவர் சொல்வது பொய் என்பதை உணர்ந்துகொள்ளலாம். அவருடைய தாயார் வீடியோவில் பேசியதும் நான் இவரைத் தொடர்புகொண்டு பேசினேன். அப்போது அந்த வீடியோவில் இருப்பது நான் இல்லை என்றுதான் கூறினார். இப்போது மாற்றிச் சொல்கிறார்" என்கிறார் சிவகுமார். இந்த நிலையில், மேலும் ஒரு திருப்பமாக கள்ளக்குறிச்சி மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் தாலுகாவைச் சேர்ந்த அஜய் என்பவர் தனது இன்ஸ்டாகிராாம் பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அந்த வீடியோவில், "தூக்கிவீசப்பட்ட இளைஞர் நான் தான், பவுன்சர்கள் தூக்கி வீசியவுடன் கம்பியைப் பிடித்து கொள்வேன், எனக்கு ஒன்றும் ஆகவில்லை" எனக் கூறியிருந்தார். பட மூலாதாரம், TVK படக்குறிப்பு, அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான் என்கிறார் அஜய் இது குறித்து அஜய்யிடம் பிபிசி கேட்டபோது, "மதுரை மாநாட்டில் ராம்ப்பில் ஏறியதும் பவுன்சர்கள் என்னைத்தான் தூக்கிப் போட்டார்கள். ஆனால், எதிர்க்கட்சிகளின் தூண்டுதலால் தேவையில்லாமல் விஜய் மீது புகார் கொடுத்தார்கள். யார் வேண்டுமானாலும் நேரில் வந்தால் அது நான்தான் என நிரூபிப்பேன். அந்த நபர் சொல்வது பொய்" என்று தெரிவித்தார். ஆனால், ராம்பில் ஏற முயன்ற பலர் இதுபோல தூக்கிவீசப்பட்ட நிலையில், அப்படி தூக்கிவீசப்பட்ட நபர்களில் சரத்குமாரும் ஒருவராக இருக்கலாம் அல்லவா என அஜய்யிடம் கேட்டபோது, அப்படியிருப்பதற்கு வாய்ப்பில்லை என்கிறார். "அந்த ராம்ப்பின் அந்த இடத்தில் இருப்பது நான்தான். வீடியோவில் இருப்பதும் நான்தான். வேறொருவர் இருந்ததாகச் சொல்வது பொய்" என்கிறார் அஜய். இப்போது சரத்குமார் அளித்த புகார் மதுரைக்கு மாற்றப்பட்டிருப்பதால் அம்மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரையும் சரத்குமார் சந்தித்திருக்கிறார். இது குறித்துப் பேசுவதற்காக சரத்குமாரைத் தொடர்புகொண்டபோது, அவர் அழைப்புகளை ஏற்கவில்லை. அவருடன் அங்கே சென்ற இந்தியத் தொழிலாளர் கட்சியைச் சேர்ந்த ஈஸ்வரனிடம் இது குறித்துக் கேட்டபோது சரத்குமார் ஊடகங்களிடம் பேச தயங்குவதாகத் தெரிவித்தார். "நாங்கள் தொழிலாளர்களுக்காக கட்சி நடத்துகிறோம். சரத்குமாரின் தாயார் கட்டடத் தொழிலாளர் என்பதால் அவர் எங்கள் கட்சியில் உறுப்பினராக இருக்கிறார். சரத்குமார் பிஎஸ்சி ஹோட்டல் மேனேஜ்மென்ட் படித்திருக்கிறார். அவர் அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருக்கிறார். இந்த நிலையில், இதுபோல வீடியோ வெளியானதும், அவருடைய தாயார் இது குறித்து வீடியோவில் பேசினார். ஆனால் சரத்குமார் அதனை மறுத்தார். இதையடுத்து நான் சரத்குமாரைத் தொடர்பு கொண்டு பேசினேன். கட்சியில் கெட்ட பெயர் வந்துவிடும் என்பதால் அப்படிப் பேசியதாகத் தெரிவித்தார். இதற்குப் பிறகு அவருடைய தாயாரும் பாட்டியும் அழுதுகொண்டேயிருந்தார்கள். பிறகு அவரே முன்வந்து தான்தான் தூக்கிவீசப்பட்டது என்பதை ஒப்புக்கொண்டார். பிறகு பெரம்பலூரில் புகார் கொடுத்தோம். வழக்கு மதுரைக்கு மாற்றப்பட்டு, எஃப்ஐஆர் பதிவுசெய்யப்பட்டது. இதனால், மதுரைக்கும் சென்று எஸ்பியைச் சந்தித்தோம்" என்றார் ஈஸ்வரன். ஆனால், தற்போது அஜய் என்பவர் தான்தான் தூக்கிவீசப்பட்டதாகத் தெரிவித்திருப்பது குறித்துக் கேட்டபோது, "சரத்குமாரிடம் கேட்டபோது, ராம்ப்பில் ஓடியது தான் அல்ல என்றாலும் தூக்கி வீசியது தன்னைத்தான் என்கிறார். அஜய் என்பவர் நிறைய நண்பர்களோடு சென்றதால் அவரிடம் நிறைய வீடியோக்களும் புகைப்படங்களும் இருக்கின்றன. சரத்குமாரிடம் இல்லை. அப்படியே அஜய் சொல்வது சரி என்று வைத்துக்கொண்டாலும், அவரைத் தூக்கி வீசியதும் தவறுதானே?" என்கிறார் ஈஸ்வரன். இது தொடர்பாக போராட்டம் நடத்த காவல்துறையிடம் அனுமதி கோரியிருப்பதாகவும் ஈஸ்வரன் தெரிவித்தார். இது குறித்து தமிழக வெற்றிக் கழகத்தின் துணை பொதுச் செயலாளர் சி.டி.ஆர். நிர்மல்குமாரிடம் கேட்டபோது, "முதலில் புகார் சொன்ன அந்த இளைஞர் தகவல்களை மாற்றி மாற்றிச் சொல்கிறார். அவரிடம் போதுமான ஆதாரங்கள் இல்லை. இருந்தும் எவ்வித முகாந்திரமும் இன்றி காவல்துறை வழக்குப் பதிவுசெய்திருக்கிறது. இப்போது வேறு ஒரு இளைஞர் அது தான்தான் எனக் கூறியிருக்கிறார். வழக்கைப் பதிவுசெய்வதற்கு முன்பாகவே, இதுகுறித்து முழுமையாக விசாரித்திருக்க வேண்டும்" என்கிறார் சி.டி.ஆர். நிர்மல்குமார். இது தொடர்பாக பேசுவதற்கு மதுரை மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளரைத் தொடர்புகொள்ள மேற்கொண்ட முயற்சிகள் பலனளிக்கவில்லை. - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy5p63r2y66o

பருத்தித்துறை பிரதேச சபை ஏல்லைக்குள் பொலித்தீனுக்கு தடை

1 month ago
29 Aug, 2025 | 04:29 PM பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு வெள்ளிக்கிழமை (29) சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது. இதில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அந்தவகையில் 9ஆம் மாதத்தினை பன விதை நடுகை மாதமாக பிரகடனப்படுத்தப்பட்டு 10000/- பனை விதைகள் நாட்ட தீர்மானிக்கப்பட்டது. சபை எல்லைக்குள் மூன்று மாதத்திற்குள் பொலித்தீன் பாவனையை முற்றாக கட்டுப்படுத்துவதென்று தீர்மானிக்கப்பட்டது. சபை வீதிகளை ஊரிக்களி மண் பயன்படுத்தி அமைப்பதென்று தீர்மானிக்கப்பட்டது. உக்காத கழிவு பொருட்களை பருத்தித்துறை பிரதேச சபைக்குட்பட்ட இடத்தில் கொட்டுவதற்கு அனுமதி கோரப்பட்ட நிலையில் மூன்று மாத காலங்களுக்கு சுழற்சி முறையில் அனுமதி கொடுப்பதாகவும் ஒரு உழவு இயந்திர பெட்டி குப்பைக்கு ரூபா 5000 அறவிடுவதாகவும் தீர்மானிக்கப்பட்டது. சபை அமர்வில் 20 உறுப்பினர்களில் 18 உறுப்பினர்கள் கலந்துகொண்டிருந்தனர். https://www.virakesari.lk/article/223713

அதிவேக நெடுஞ்சாலைகளில் பின் இருக்கை சீட் பெல்ட் கட்டாயம் – போக்குவரத்து அமைச்சகம்

1 month ago
அதிவேக நெடுஞ்சாலை பஸ்களில் பயணிகளுக்கு ஆசனப்பட்டி கட்டாயம் – பிமல் ரத்நாயக்க 29 Aug, 2025 | 04:23 PM அதிவேக நெடுஞ்சாலையில் பயணிகள் போக்குவரத்து பஸ்களில் செல்லும் பயணிகளுக்கு ஆசனப் பட்டி அணிவதைக் கட்டாயமாக்கும் வர்த்தமானி அறிவித்தல் இம்மாதம் 31 ஆம் திகதி வெளியிடப்படவுள்ளதாக போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சரும், பாராளுமன்ற சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழு அமைச்சரும் சபை முதல்வருமான பிமல் ரத்நாயக்க தலைமையில் அண்மையில் பாராளுமன்றத்தில் கூடிய போதே அவர் இதனைத் தெரிவித்தார். இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர், 'கிளீன் ஸ்ரீலங்கா' திட்டத்தின் ஒரு முக்கிய அம்சமாக இதனை நடைமுறைப்படுத்துவதாகச் சுட்டிக்காட்டினார். அத்துடன், அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பாடசாலை பஸ்கள், அலுவலக சேவைப் போக்குவரத்து பஸ்கள், சுற்றுலா பஸ்கள் மற்றும் ஏனைய பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகளைப் பொருத்துவதற்கு சுமார் 3 மாத கால அவகாசம் வழங்கப்படும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார். குறிப்பாக, சுமார் 2,000 ரூபாவாக இருந்த ஆசனப் பாட்டிகளின் விலை தற்போது 5,000 முதல் 7,000 ரூபா வரை அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும், இது நுகர்வோர் சேவைகள் அதிகாரசபையினால் பரிசீலனை செய்யப்பட வேண்டும் என்றும் அமைச்சர் தெரிவித்தார். நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவது தொடர்பாக மக்களின் கருத்துகள் கேட்கப்பட்டதாகவும், இது குறித்து அண்ணளவாக அனைவரும் தமது விருப்பத்தைத் தெரிவித்ததாகவும் அமைச்சர் இதன்போது சுட்டிக்காட்டியதுடன், அதனால் எதிர்காலத்தில் நீண்ட தூர சேவை பஸ்களுக்கும் ஆசனப் பட்டிகள் அணிவதைக் கட்டாயமாக்குவதற்குத் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார். விசேடமாக Citra Innovation Lab நிறுவனத்தின் ஊடாக இந்தக் கருத்துக்கணிப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதுடன், இதில் பயணிகள், சாரதிகள் மற்றும் தனியார் பஸ் உரிமையாளர்கள் உள்ளிட்ட 2100 பேரிடம் தரவுகள் சேகரிக்கப்பட்டுள்ளன. அது சம்பந்தமான அறிக்கையொன்றை அந்த நிறுவனம் வழங்கியுள்ளதாகவும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். அத்துடன், தேவையான சட்டத் திருத்தங்களைச் செய்து, அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனங்கள் நுழையும்போது வாகன உதிரிப் பாகங்களின் தரத்தைப் பரிசோதித்து புள்ளிகள் வழங்கும் முறையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்ததுடன் அதற்கான வர்த்தமானி அறிவித்தல் எதிர்காலத்தில் வெளியிடப்படும் என்றும் குறிப்பிட்டார். அத்துடன், வாகனங்களின் டயர்கள் தேவையான தரத்தில் இல்லாவிட்டால், அதிவேக நெடுஞ்சாலைக்குள் வாகனத்தை நுழைய அனுமதிக்கப்பட மாட்டாது என்றும் அவர் குறிப்பிட்டார். முச்சக்கர வண்டிகள், வான்கள் உட்பட தனியார் போக்குவரத்துத் துறையின் சாரதிகளுக்காக நலன்புரி நிதியமொன்றை உருவாக்குவதற்கான பணிகள் தற்போது நிறைவடைந்துள்ளதாகவும், இது தொடர்பான சட்டமூலம் எதிர்காலத்தில் பாராளுமன்றத்தின் அங்கீகாரத்திற்காக சமர்ப்பிக்கப்படும் என்றும் அமைச்சர் இங்கு தெரிவித்தார். நீண்ட தூர சேவை மற்றும் அதிவேக நெடுஞ்சாலையில் பயணிக்கும் பஸ்களின் நிறுத்துமிடம் தொடர்பான தேவையான வேலைத்திட்டமொன்றை தயாரிப்பதில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாகவும் இதன்போது குழு சுட்டிக்காட்டியது. அத்துடன், புகையிரத சேவையை நவீனமயமாக்குவது தொடர்பான தேவையான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும், துறைமுகங்கள் தொடர்பான தேவையான நவீனமயமாக்குவதற்கான யோசனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிப்பதற்கும் இரண்டு உப குழுக்களை நியமிப்பதும், அவற்றுக்கு உறுப்பினர்களை நியமிப்பதும் இதன்போது இடம்பெற்றது. இதற்கு மேலதிகமாக, கடவத்தை - மீரிகம அதிவேக நெடுஞ்சாலையை நிர்மாணிக்கும் பணிகள் செப்டம்பர் மாதம் முதல் ஆரம்பிப்பது மற்றும் நிர்மாணிக்கும் பணிகளை நிறைவு செய்வது தொடர்பிலும் இங்கு கலந்துரையாடப்பட்டது. அத்துடன், பாராளுமன்ற உறுப்பினர்கள் எழுப்பிய விடயங்கள் தொடர்பாகவும் குழுவில் கலந்துரையாடப்பட்டு, பரிந்துரைகள் வழங்கப்பட்டன. இந்தக் குழுக் கூட்டத்தில் பாராளுமன்ற உறுப்பினர்களும் அரச அதிகாரிகள் பலரும் இணைந்திருந்தனர். https://www.virakesari.lk/article/223712

"போட்டியாளர் அல்ல , கூட்டாளி" - மோதியின் பயணம் குறித்து சீன ஊடகங்கள் எழுதுவது என்ன?

1 month ago
பட மூலாதாரம், Reuters 58 நிமிடங்களுக்கு முன்னர் பிரதமர் நரேந்திர மோதி ஆகஸ்ட் 31, செப்டம்பர் 1 என இரண்டு நாட்கள் சீனாவுக்கு பயணம் மேற்கொள்கிறார். அங்கு நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO)மாநாட்டில் அவர் பங்கேற்பார். கூடுதல் வரிவிதிப்புகள் காரணமாக அமெரிக்காவுடனான இந்தியாவின் உறவுகளில் பதற்றம் நிலவும் நேரத்தில் பிரதமர் மோதியின் சீனப் பயணம் கவனிக்கப்படுகிறது. ஐந்து ஆண்டுகளில் இந்தியா மற்றும் சீனாவுக்கு இடையிலான உறவுகள் மிகவும் பதற்றமான நிலையில் இருந்தன. ஆனால் சமீபத்தில் இரு நாடுகளும் தங்கள் பிரச்னைகளைத் தீர்க்க பேச்சுவார்த்தை நடத்த முயற்சிக்கின்றனர். மாறிவரும் புவிசார் அரசியல் சூழலில், குறிப்பாக டிரம்பின் 'வரிவிதிப்பு போருக்கு'ப் பிறகு, இந்த புதிய இராஜதந்திர செயல்பாடு உள்ளது. இதுபோன்ற சூழ்நிலையில், பிரதமர் நரேந்திர மோதியின் வருகையை சீன ஊடகங்கள் எந்தக் கண்ணோட்டத்தில் பார்க்கின்றன என்பதை காணலாம். மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவம் "சீன வெளியுறவு அமைச்சர் வாங்யியின் கடந்த வார இந்திய பயணம், மோதியின் வருகைக்கான தயாரிப்பாக பரவலாகப் பார்க்கப்படுகிறது" என்று சீனாவின் அரசு செய்தித்தாளான 'சீனா டெய்லி' எழுதியுள்ளது. உலகளாவிய நிலைமையைச் சமாளிக்க சீனாவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான ஒத்துழைப்பு முக்கியமானது என்று அந்நாளிதழ் எழுதியுள்ளது. குறிப்பாக அமெரிக்காவின் ஒருதலைப்பட்சமான அழுத்தம் காரணமாக, சுதந்திர வர்த்தகம் மற்றும் சர்வதேச ஒழுங்கிற்கு சவால்கள் அதிகரித்து வருவதாக குறிப்பிட்டுள்ளதோடு, அமெரிக்காவின் வரிவிதிப்பு அழுத்தத்திலிருந்து தப்பிக்க முடியாது என்ற உண்மையை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டியிருக்கிறது என்று சீனா டெய்லி எழுதுகிறது. "ரஷ்யாவிலிருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்தாததால் இந்தியா அமெரிக்காவுடன் மோதல் சூழ்நிலையில் சிக்கியது. அதன் பிறகு இந்தியா மூலோபாய சுயாட்சியின் முக்கியத்துவத்தை உணர்ந்துள்ளது." சீனாவை ஒரு போட்டியாளராகவோ அல்லது அச்சுறுத்தலாகவோ பார்ப்பதற்குப் பதிலாக, இந்தியா அதை ஒரு கூட்டாளியாகவும் அதன் உயர்தர வளர்ச்சியை ஒரு வாய்ப்பாகவும் பார்க்க வேண்டும் என்றும் அந்த நாளிதழ் எழுதியுள்ளது. பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, மோதியின் பயணத்திற்கு முன்னோட்டமாக சீன வெளியுறவு அமைச்சரின் இந்திய வருகை இருந்தது ஹாங்காங் பாப்டிஸ்ட் பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் அர்ஜுன் சாட்டர்ஜி 'சீனா டெய்லி'யில் எழுதிய ஒரு கட்டுரையில், பிரதமர் மோதி பங்கேற்கும் தியான்ஜினில் நடைபெறும் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு உச்சிமாநாட்டின் மீது இப்போது அனைவரின் பார்வையும் இருப்பதாகக் கூறியுள்ளார். டிரம்பின் வரிவிதிப்புகளுக்குப் பிறகு சீனா இந்தியாவுடன் ஒற்றுமையைக் காட்டியுள்ளது என கூறும் அவர், அமெரிக்க நடவடிக்கையை அச்சுறுத்தும் செயலாக சீனா கருதுவதாகவும் எழுதுகிறார். இந்தியா தனது விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பால்வளத் துறையின் நலன்களில் சமரசம் செய்யாது என்று பிரதமர் மோதி தெளிவுபடுத்தியுள்ளதாகவும் அவர் கூறுகிறார். பசுமை விவசாயம், குறிப்பாக நைட்ரஜன் பயன்பாட்டு திறன், இந்தியாவும் சீனாவும் வேகமாகச் செயல்படும் ஒரு பகுதி என்று அர்ஜுன் சாட்டர்ஜி குறிப்பிடுகிறார். இது சுற்றுச்சூழல் மற்றும் பொருளாதார ரீதியாக ஒரு சிறந்த படியாக இருக்கும் என்பது அவரது கூற்றாக உள்ளது.. இணைப்பு, இரு நாடுகளுக்கும் இடையே மக்களின் பயணம், விவசாயம் அல்லாத வர்த்தகம் மற்றும் சுற்றுச்சூழல் கூட்டாண்மை ஆகியவற்றில் தியான்ஜின் உச்சிமாநாட்டில் ஏதேனும் ஒப்பந்தம் ஏற்பட்டால், ஆசியாவின் இரண்டு பெரிய பொருளாதாரங்களுக்கு இடையிலான போட்டி இருந்தபோதிலும் இது நடைமுறை ஒத்துழைப்புக்கான ஒரு வழியாக இருக்கலாம் என்று அவர் எழுதுகிறார். அமெரிக்கா, சீனா என இரண்டையும் சமாளிக்கும் முயற்சி அரசு செய்தி நிறுவனமான சின்ஹுவா (Xinhua) மற்றும் வேறு சில நிறுவனங்களின் செய்திகள், பிரதமர் மோதியின் வருகையை நேரடியாகக் குறிப்பிடவில்லை என்றாலும், அவை இந்தியாவுக்கு எதிரான அமெரிக்க வரிகள் குறித்த பிரச்னையை விவாதிக்கின்றன. ஆகஸ்ட் 27 முதல் இந்திய ஏற்றுமதிகளில் அமெரிக்கா கூடுதலாக 25 சதவீத 'அபராத வரி' விதித்துள்ளதை 'சின்ஹுவா' செய்தி குறிப்பிடுகிறது. இதன் காரணமாக, இந்தியாவின் மீதான வரி 50 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு ரஷ்யாவிலிருந்து எண்ணெய் இறக்குமதி செய்வதே காரணம் என்று அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. இதன் காரணமாக, சுமார் 48 பில்லியன் டாலர் மதிப்புள்ள இந்தியாவின் ஏற்றுமதி பாதிக்கப்படும். சிறு வணிகர்கள், விவசாயிகள் மற்றும் கால்நடை வளர்ப்பவர்களின் நலன்கள் பாதுகாக்கப்படும் என்றும், இந்தியா எந்த அழுத்தத்தையும் தாங்கும் என்றும் பிரதமர் நரேந்திர மோதி கூறியுள்ளார். ஜிஎஸ்டியில் விரைவான சீர்திருத்தங்களை அவர் அறிவித்துள்ளார். மறுபுறம், இந்தியா-அமெரிக்க வர்த்தக பேச்சுவார்த்தைகளின் அடுத்த சுற்று ஸ்தம்பித்துள்ளது பட மூலாதாரம், Getty Images அதே நேரத்தில், தேசியவாத செய்தி வலைத்தளமான 'குவாஞ்சா' (Guancha), 'சீனாவுடனான உறவுகளை மேம்படுத்துவதன் மூலம் அமெரிக்காவுடனான தனது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க இந்தியா விரும்புகிறது என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்' என்று எழுதியுள்ளது. "மோதி கடந்த ஆண்டு முதல் தனது அமெரிக்க சார்பு கொள்கையை சமநிலைப்படுத்த முயற்சித்து வருகிறார், ஆனால் அவர் சீனா மற்றும் ரஷ்யாவுடன் எவ்வளவு தூரம் செல்வார் என்பது தெளிவாகத் தெரியவில்லை." இந்தியா ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (SCO) மற்றும் Quad இரண்டிலும் ஒரு பகுதியாக இருந்த போதிலும், எந்த ஒரு குழுவுடனும் கட்டுப்பட்டு இயங்க மறுக்கிறது. ஆயினும்கூட, கூட்டு அறிக்கையில் கையெழுத்திடாதது மற்றும் ஆங்கிலத்தை வேலை மொழியாக மாற்றக் கோருவது என ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பில் பல சந்தர்ப்பங்களில் சீனா மற்றும் ரஷ்யாவுக் முயற்சிகளுக்கு இந்தியா சவாலாக இருந்திருக்கிறது. குவாஞ்சாவில் வெளியிடப்பட்ட செய்தி, "இந்தியா 'இரு தரப்புடனும் விளையாடும்' கொள்கையுடன் அமெரிக்காவிற்கும் சீனாவிற்கும் இடையில் சமநிலையை பராமரிக்க முயற்சிக்கிறது. இருப்பினும், டிரம்ப் 2.0 சகாப்தத்தில் இந்த சமநிலை கடினமாகி வருகிறது." என கூறுகிறது. இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/c1ejxn7n7l8o

குட்டிக் கதைகள்.

1 month ago
🌷கரிசக்காட்டுப்பூவே🌷 செல்வன் சௌந்தரராஜ் ·rdoeopsStn072c81a558u406ai89ghuahg1h3a6617 i76f3guumaggg4628 · ஒரு பெரிய மனிதன். இந்த உலகத்தில் மிகவும் வசதியாக வாழ்ந்தான். ஒரு நாள் அவன் உலக வாழ்க்கையை முடித்துக் கொண்டு சொர்க்கத்துக்குப் போனான். அங்கே போன பிறகுதான் தெரிந்தது, சொர்க்கத்தின் வாசல் கதவு மூடி இருந்தது. மூடிய கதவின் முன்னால் போய் நின்றான். ‘‘இங்கே யாருமே இல்லையா?’’ என்று உரக்கக் கத்தினான். பதில் இல்லை. ‘‘நான் ஒரு பெரிய மனிதன் வந்திருக்கிறேன். கதவைத் திறந்து விடு’’. சற்று நேரத்தில் சித்ரகுப்தன் அங்கே வந்தான். உடனே இந்தப் பெரிய மனிதன், தனது சட்டைப்பையிலிருந்து பத்து ரூபாய் நோட்டை எடுத்து அவன் கையில் திணித்தான். ‘‘இந்தா... இதை வெச்சுக்கோ, சீக்கிரம் கதவைத் திற... நான் உள்ளே போகணும்’’. சித்ரகுப்தன் சிரித்தான். ‘‘இதெல்லாம் உங்கள் பூலோக நடைமுறைகள், லஞ்சம் கொடுக்கறது, கதவைத் திறக்கச் சொல்றது... அதெல்லாம் இங்கே ஒண்ணும் எடுபடாது’’. ‘‘அப்படின்னா நான் எப்படி உள்ளே வர்றது?’’ ‘‘சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு கொண்டு வந்திருக்கியா?’’ ‘‘அனுமதிச் சீட்டா? அது எங்கே கிடைக்கும், சொல். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை. வாங்கிக்கலாம்.’’ ‘‘அதைக் காசு கொடுத்து வாங்க முடியாது’’. ‘‘வேறே எப்படி வாங்கறது?’’ ‘‘அடுத்தவர்களுக்கு ஏதாவது உதவி செஞ்சாத்தான் அது கிடைக்கும்.’’ ‘‘என்ன சொல்றே நீ?’’ ‘‘பூலோகத்துலே நீ செய்யுற புண்ணிய காரியங்கள் தான் சொர்க்கத்துலே நுழையறதுக்கான அனுமதிச் சீட்டு’’. ‘‘இப்ப நான் உள்ளே வர என்ன வழி?’’ ‘‘பூலோகத்துலே நீ யாருக்காவது... ஏதாவது உதவி செஞ்சிருக்கியா?’’ பெரிய மனிதன் ரொம்ப நேரம் யோசித்தான். பிறகு சொன்னான்: ‘‘ஒரு முறை ஒரு கிழவிக்கு 10 காசு தானம் கொடுத்திருக்கேன். அப்புறம் இன்னொரு நாள் ஓர் அநாதைப் பையனுக்கு ஐந்து காசு கொடுத்திருக்கேன்.’’ ‘‘கொஞ்சம் பொறு’’ என்று சொல்லிவிட்டு சித்ரகுப்தன் உள்ளே போனான். கொஞ்ச நேரம் கழித்து வெளியே வந்தான். ‘‘உள்ளே போய் சொர்க்கத்தின் தலைவர்கிட்டே உனது கதையைச் சொன்னேன். அவர் உடனே உத்தரவு போட்டுட்டார்’’. ‘‘என்ன உத்தரவு?’’ ‘‘அந்தப் பதினஞ்சு காசை உன்கிட்டே திருப்பிக் கொடுத்துடச் சொன்னார்’’. ‘‘அப்புறம்?’’ ‘‘உன்னை நரகத்துக்கே அனுப்பி வச்சுடச் சொன்னார்’’. பெரிய மனிதன் மயங்கி விழுந்தான். ஆன்மிக உலகில் பயணம் செய்கிறவர்கள் புரிந்து கொள்ள வேண்டிய ஒரு முக்கியமான பாடம் இது . காசு கொடுத்து சொர்க்கத்தை வாங்க முடியாது. ஆனால், கருணையைக் கொடுத்து அதைச் சுலபமாக வாங்க முடியும். #நன்றி : தென்கச்சி கோ.சுவாமிநாதன்......!

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
😂"ஆதாரங்கள் இல்லாத உண்மை" - இப்படியொரு தமிழ் சொற்றொடர் இன்று தான் அறிகிறேன். சரியாகத் தேடிப் பார்த்தீர்களா? 2011 இல் லிபியப் பிரச்சினை நடந்து கொண்டிருந்த போது புரின் "ஆட்சியில்" இருக்கவில்லையா? தொடர்ந்து அதிபராக இருக்க அந்த நேரத்தில் ரஷ்ய அரசியலமைப்பு இடம் கொடுக்காமையால், தன் அல்லக்கை மெட்வெடேவை அதிபராக்கி விட்டு, புரின் பிரதமராக ஆட்சி நடத்திக் கொண்டிருந்தாரே? பின்னர் 2012 இல் மீண்டும் அதிபராகியவுடன், அரசியமைப்பையும் மாற்றினார்.

யாழ். நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்டோரது வழக்கு : தீர்ப்புக்கான திகதி அறிவிப்பு!

1 month ago
யாழ். மேல் நீதிமன்றத்தில் 1996இல் நாவற்குழியில் காணாமல் ஆக்கப்பட்ட 22 பேருக்கான ஆட்கொணர்வு மனு தாக்கல் 29 Aug, 2025 | 04:22 PM கடந்த 1996 ஆம் ஆண்டு நாவற்குழி பகுதியில் இராணுவத்தினரால் முன்னெடுக்கப்பட்ட சுற்றிவளைப்பின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்ட 22பேர் தொடர்பான ஆட்கொணர்வு மனு யாழ். மேல் நீதிமன்றத்தில் வெள்ளிக்கிழமை (29) தாக்கல் செய்யப்பட்டது. சம்பவம் நடைபெற்ற பகுதியானது சாவகச்சேரி நீதிமன்றத்தின் நியாயாதிக்க எல்லைக்குள் உட்படுவதால் குறித்த வழக்கு சாவச்சேரி நீதிமான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு விசாரணைகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில் குறித்த வழக்கானது தீர்ப்புக்காக வெள்ளிக்கிழமை (29) திகதியிடப்பட்டது. இருப்பினும் நீதிவான் விடுமுறையில் இருந்த காரணத்தினால் வருகின்ற ஆகஸ்ட் மாதம் 28ஆம் திகதி குறித்த வழக்கு தீர்ப்புக்காக திகதியிடப்பட்டுள்ளது. https://www.virakesari.lk/article/223711

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
வைத்தியசாலையிலிருந்து வீடு திரும்பினார் ரணில் விக்ரமசிங்க! 29 Aug, 2025 | 04:17 PM கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று வெள்ளிக்கிழமை (29) மீண்டும் வீடு திரும்பியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. வைத்தியசாலையிலிருந்து வெளியேறினாலும் ரணில் விக்ரமசிங்க வீட்டில் தொடர்ந்து ஓய்வு எடுக்க வேண்டும் என வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். அத்துடன், ரணில் விக்ரமசிங்கவின் உடல்நிலை குறித்து அவரது குடும்ப வைத்தியர் கண்காணிப்புடன் இருத்தல் வேண்டும் எனவும் வைத்தியர்கள் ஆலோசனை வழங்கியுள்ளனர். ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக இருந்த காலத்தில், தனது மனைவியான பேராசிரியர் மைத்ரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டனுக்கு தனிப்பட்ட விஜயம் செய்வதற்காக அரச நிதியை தவறாகப் பயன்படுத்திய குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் ஆகஸ்ட் 22 ஆம் திகதி பிற்பகல் கைது செய்யப்பட்ட நிலையில் கொழும்பு கோட்டை நீதிவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் அவரை ஆகஸ்ட் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதனையடுத்து, உயர் இரத்த அழுத்தம் மற்றும் அதிக சர்க்கரை அளவு காரணமாக மருத்துவ ஆலோசனையின் பேரில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் உடல்நலக்குறைவு காரணமாக கொழும்பு தேசிய வைத்தியசாலையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். பின்னர், ரணில் விக்ரமசிங்க உடல்நலக்குறைவு காரணமாக நீதிமன்ற உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 26 ஆம் திகதி பிணையில் விடுதலை செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223710

ரஷ்யாவிலுள்ள அணுமின் நிலையம் மீது உக்ரேன் ட்ரோன் தாக்குதல்!

1 month ago
நான் அவதானித்த வரை, நீங்கள் சில மனவியல்/சமூகவியல் தொடர்பான கலைச் சொற்களை எடுத்து வைத்திருக்கிறீர்கள். பின்னர், பொருத்தமேயில்லாத இடங்களில் அந்தச் சொற்களை இணைத்துத் தொடுத்து கருத்துக்களை எழுதுகிறீர்கள்! இதுவல்லவா நேர் கோட்டில் செல்லும் குதிரையின் குணம்😂? நீங்கள் எழுதியிருக்கும் இந்தக் கருத்துக்கும்,நாம் உரையாடிக் கொண்டிருக்கும் நாசிகள், நவநாசிகள் செய்யும் அறப் பிறழ்வுகளைச் சுட்டிக் காட்டுவதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது என்று உங்களுக்கு மட்டுமே புரியும், எனக்கு எதுவும் பிரியவில்லை!

இலங்கை மத்திய வங்கி 75 ஆம் ஆண்டு நிறைவு : புதிய 2000 ரூபா நினைவு நாணயத் தாள் ஜனாதிபதியிடம் கையளிப்பு

1 month ago
29 Aug, 2025 | 02:51 PM இலங்கை மத்திய வங்கியின் 75 ஆவது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் வெளியிடப்பட்ட 2000 ரூபாய் புதிய நினைவு நாணயத் தாள், மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்கவினால் வெள்ளிக்கிழமை (29) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவிடம் கையளிக்கப்பட்டன. புழக்கத்திற்கான நினைவு நாணயத்தாளாக இது வெளியிடப்பட்டுள்ளதுடன், இந்த நாணயத்தாள் இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்ட 5 ஆவது நினைவு நாணயத்தாள் ஆகும். தேசிய அபிவிருத்திக்கான அடித்தளமாக பொருளாதார ஸ்திரத்தன்மையை மேம்படுத்துவதற்கான மத்திய வங்கியின் தொடர்ச்சியான அர்ப்பணிப்பை பிரதிபலிக்கும் வகையில், "சுபீட்சத்திற்கான ஸ்திரத்தன்மை" என்ற என்ற ஆண்டு நிறைவு தொனிப்பொருளுக்கு ஏற்ப இந்த நாணயத்தாள் வெளியிடப்பட்டுள்ளது. ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, இலங்கை மத்திய வங்கியின் சிரேஷ்ட பிரதி ஆளுநர் கே.எம்.ஏ.என். தௌலகல, உதவி ஆளுநர் கே.ஜி.பி. சிறிகுமார, நாணயத் திணைக்களத்தின் ஆளுநர் பீ.டீ.ஆர். தயானந்த ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். https://www.virakesari.lk/article/223698

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

1 month ago
எல்லோருக்கும் தெரிந்த விடயங்கள் தான் என்றாலும் கருணாகரன் எழுதியிருக்கிறார். இனி கருணாகரனுக்கு இருக்குது சிறி அடிப்பொடிகளின் பூசை😂! ஊடக வெளிச்சம் பாயும் விடயங்களில், கடைசியாக உள் நுழைந்து இலவச விளம்பரம் தேடும் சிறிதரன் பா.உ, முன்னர் ஒரு தடவையும் மொக்கேனப் பட்டிருக்கிறார். கிளிநொச்சியில் ஒரு ஊழல் பிரமுகரால் மிரட்டப் பட்ட பெண் வைத்தியருக்கு ஆதரவாகப் பேசி தொலைபேசி எடுத்த சிறிதரன் பா.உ வின் உரையாடல் வெளியே யாராலோ ஊடகங்களுக்குக் கசிந்தது. இதனால், கோபம் கொண்ட சிறிதரன் பா.உ, தன் பாராளுமன்ற உரை நேரத்தை பெண் மருத்துவர் மீது விசாரணை வேண்டுமென்று கேட்டு உரையாற்றியதன் மூலம், தனக்கு முக்கியமானது எதுவென அப்பவே வெளிக்காட்டியிருந்தார்!

சீன இராணுவ அணிவகுப்பில் புட்டின், பிற தலைவர்களுடன் கிம்மும் இணைகிறார்!

1 month ago
பெய்ஜிங் ராணுவ பேரணியில் பங்கேற்கும் புதின், கிம் ஜாங் உன் - அமெரிக்காவுக்கு சீனா சொல்லும் செய்தி என்ன? பட மூலாதாரம், Getty Images கட்டுரை தகவல் லாரா பிக்கர் சீன செய்தியாளர், பிபிசி நியூஸ் 29 ஆகஸ்ட் 2025, 08:11 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் வட கொரியத் தலைவர் கிம் ஜாங் உன், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஷி ஜின்பிங் ஆகியோர் பெய்ஜிங்கின் மையத்தில் நடக்கவுள்ள ராணுவ அணிவகுப்பில் ஒன்றாக பங்கேற்பது ஒரு மிகப் பெரிய தருணமாக இருக்கும். இது ஷி ஜின்பிங்கிற்கு ஒரு முக்கியமான ராஜதந்திர வெற்றியாகவும் அமையும். சீன அதிபர் நீண்ட காலமாக உலகிற்கு பெய்ஜிங்கின் வலிமையை வெளிப்படுத்த முயற்சி செய்து வருகிறார். அவர் தன்னை உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரமாக மட்டுமின்றி, வலுவான ராஜதந்திரியாகவும் நிறுவிக்கொள்ள விரும்புகிறார். டிரம்பின் வரிக்குவரி யுத்தம் உலகம் முழுவதும் பொருளாதார உறவுகளை சீர்குலைத்து வரும் நிலையில், சீனா ஒரு நிலையான வர்த்தகப் பங்காளி என்று அவர் முன்வைக்கிறார். யுக்ரேன் போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு, ரஷ்ய அதிபர் புதினுடன் ஒரு ஒப்பந்தத்தை எட்டுவதில் அமெரிக்க அதிபர் வெகு தொலைவில் உள்ளார். இந்நிலையில், ஷி ஜின்பிங் புதினை பெய்ஜிங்கிற்கு வரவேற்கத் தயாராகி வருகிறார். திடீரென அறிவிக்கப்பட்ட கிம் வருகையும் முக்கியத்துவம் குறைந்தது அல்ல. கடந்த வாரம் தென் கொரிய அதிபருடனான‌ சந்திப்பின் போது அமெரிக்க அதிபர்‌ டிரம்ப்‌,‌ தான் கிம் ஜாங் உன்னை மீண்டும் சந்திக்க விரும்புவதாகக் கூறினார். பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் மற்றும் வட கொரிய தலைவர் கிம் ஜான் உன் சந்திப்பு 2019-ல் நடைபெற்றது. இந்த சந்திப்பு ஜின்பிங்கிற்கு ஏன் முக்கியம்? உலகில் தனிமைப்படுத்தப்பட்ட சர்வாதிகாரியுடனான டிரம்பின் முந்தைய ராஜதந்திர முயற்சிகளில் எந்த முடிவும் எட்டவில்லை. உலக கவனத்தை ஈர்த்த இரண்டு உச்சிமாநாடுகள் நடந்தாலும், எந்த உறுதியான முன்னேற்றமும் அடையப்படவில்லை. இப்போது டிரம்ப் மீண்டும் முயற்சி செய்ய விரும்புவதாக சமிக்ஞை காட்டுகிறார். இதற்கிடையில், இந்த முழு ஆட்டத்தையும் தீர்மானிக்கும் சக்தி தன்னிடம்தான் இருப்பதாக சீன அதிபர் சமிக்ஞை செய்கிகிறார். கிம், புதின் இருவரிடமும் அவருக்கு உள்ள செல்வாக்கு ஒரு வரம்பிற்குட்பட்டது என்றாலும், எந்தவொரு ஒப்பந்தம் இறுதியாவதிலும் அவரின் முக்கியத்துவம் நிரூபணமாகலாம். செப்டம்பர் 3ஆம் தேதி அணிவகுப்பில் சீனா தன்னுடைய ராணுவ வலிமையை வெளிக்காட்டும். இரண்டாம் உலகப் போரில் ஜப்பான் சரணடைந்த 80வது ஆண்டு நிறைவை நினைவுகூரும் வகையில் இந்த நிகழ்வு நடக்கிறது. அப்போதுதான் சீனாவின் சில பகுதிகளில் ஜப்பானின் ஆக்கிரமிப்பு முடிவுக்கு வந்தது. ஆனால் இந்த கொண்டாட்டத்தை ஷி ஜின்பிங் வேறு ஏதோவொன்றைக் வெளிக்காட்டுவதற்காக பயன்படுத்துகிறார். இந்த நிகழ்வு நடக்கும் நேரமும் முக்கியமானது. அக்டோபர் இறுதியில் டிரம்ப் அந்த பிராந்தியத்திற்கு வரக்கூடும் என்றும், அப்போது ஷி ஜின்பிங்கைச் சந்திக்க அவர் தயாராக இருப்பதாகவும் வெள்ளை மாளிகை கூறியிருந்தது. நீண்ட காலமாக எதிர்பார்க்கப்படும் வரி பற்றிய ஒப்பந்தம், அமெரிக்காவில் டிக்டாக் விற்பனை, யுக்ரேன் போர் நிறுத்தம் அல்லது தீர்வுக்கு புதினை சம்மதிக்க வைக்க சீனாவால் முடியுமா என்ற கேள்வி உட்பட பல பிரச்னைகள் பற்றி அவர்கள் விவாதிக்கலாம். பட மூலாதாரம், Getty Images இப்போது ஷி ஜின்பிங் கிம் மற்றும் புதின் இருவரையும் சந்திப்பதன் மூலம், தாம் ஓரங்கட்டப்பட்டு விட்டதாக டிரம்புடன் பேசுகையில் அவர் உணர மாட்டார். உண்மையில், இரு தலைவர்களுடனும் அவருக்கு நெருங்கிய உறவு இருப்பதால், அமெரிக்க அதிபரிடம் இல்லாத பல தகவல்கள் அவரிடம் இருக்கக்கூடும். ரஷ்யா, வட கொரியா இரண்டும் மேற்கத்திய உலகின் பார்வையில் தனிமைப்படுத்தப்பட்டதாகக் கருதப்படுகின்றன. புதினை விட கிம் அவரது ஆயுதத் திட்டத்தின் காரணமாக நீண்ட காலமாகவே மேற்கு நாடுகளின் இலக்காக ஆனவர். யுக்ரேன் மீதான ரஷ்யாவின் தாக்குதலுக்கு அவர் ஆதரவு அளித்த பின்னர் அவருக்கு எதிரான கண்டனங்கள் மீண்டும் கூடுதலாகின. இப்படிப்பட்ட சூழலில், பெய்ஜிங்கில் இருந்து வந்திருக்கும் அழைப்பு கிம்முக்கு ஒரு பெரிய‌ சாதகமாகும். கடைசியாக ஒரு வட கொரியத் தலைவர் சீனாவின் ராணுவ அணிவகுப்பில் பங்கேற்றது 1959-ல்தான். 2019-ல் சீனா-வட கொரியா உறவுகளின் 70வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் இரு தலைவர்கள் சந்தித்த பின்னர் ஷி, கிம்முக்கு இடையில் வெளிப்படையான சந்திப்புகள் குறைவாகவே நடந்துள்ளன. 2018-ல் ட்ரம்ப் உடனான உச்சிமாநாட்டு பேச்சுவார்த்தைக்கு முன்னதாக கிம் ஜாங் உனின் முதல் வெளிநாட்டுப் பயணமும் பெய்ஜிங்கிற்குத்தான், அப்போது அவர் பியாங்யோங் அணுசக்தித் திட்டத்தைப் பற்றி விவாதிக்கச் சென்றார். இது சீனாவிற்கு நன்மையா? பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் டிரம்ப் உடனான சந்திப்புக்கு முன்பாக, ரஷ்ய, வட கொரிய நாட்டுத் தலைவர்களை சீன அதிபர் சந்திப்பது அவருக்கு சாதகமாக அமையலாம். சமீபத்திய ஆண்டுகளில், ரஷ்யா-வட கொரியா கூட்டணியிலிருந்து ஷி ஜின்பிங் கிட்டத்தட்ட தனித்து நிற்பதாக தோன்றியது. அது சீனா பங்கேற்க விரும்பாத கூட்டணியாக இருக்கலாம். யுக்ரேன் போரில் நடுநிலைமை வகிக்க சீனா வெளிப்படையாக முயற்சித்தது. அமைதியான தீர்வுக்காக முறையிட்டது. ஆனால் அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் போரில் ரஷ்யாவிற்கு ஆயுதங்களும்,‌ உதிரிபாகங்களும் சீனா வழங்குவதாக குற்றம் சாட்டின. புதினுடனான கிம்மின் நெருக்கம் சீனா-வட கொரியா இடையிலான உறவுகளை சிதைத்துவிட்டது என்று சிலர் ஊகித்தனர். ஆனால் அடுத்த வாரம் கிம்மின் பெய்ஜிங் வருகை இந்த அனுமானம் தவறு என்பதை நிரூபிக்கிறது. வட கொரியத் தலைவர் எளிதில் கைவிட முடியாத உறவு‌ சீனாவுடனானது. அவர்களது பொருளாதாரம் சீனாவை பெரிதும் சார்ந்துள்ளது, அவர்களது உணவு இறக்குமதியில் சுமார் 90 சதவிகிதத்தை சீனாவே வழங்குகிறது, புதின் மற்றும் ஜின்பிங்குடன் மட்டுமின்றி, இந்தோனீசியா, இரான் மற்றும் பிற நாடுகளின் தலைவர்களுடன் ஒரே மேடையில் நிற்பது கிம்முக்கு கூடுதல் நியாயத்தை அளிக்கிறது. ஷி ஜின்பிங்கைப் பொருத்தவரை, டொனால்ட் டிரம்ப் உடனான சாத்தியமான பேச்சுவார்த்தைகளுக்கு முன்னதாக இது ஒரு ராஜதந்திர நடவடிக்கையாகும். ஒரு அதீத வரி, வர்த்தகப் போரைத் தவிர்த்து ஒப்பந்தத்தை எட்டுவதற்கு அமெரிக்கா-சீனா பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருக்கின்றன. மீண்டும் 90 நாள் இடைநிறுத்தம் நடைமுறையில் உள்ளது, ஆனால் நேரம் குறைந்து கொண்டே வருகிறது. பேச்சுவார்த்தைகளின் போது ஜின்பிங் தரப்பு வலுவாக இருக்க வேண்டும். அவரிடம் கொடுப்பதற்கு பல விஷயங்கள் உள்ளன. டிரம்ப் கிம் ஜாங் உன்னை சந்திக்க முயற்சித்த போது, சீனா அவருக்கு உதவியது. ஷி ஜின்பிங் மீண்டும் அந்த உதவியைச் செய்ய முடியுமா? இன்னும் முக்கியமான கேள்வி என்னவென்றால், யுக்ரேன் போரை முடிவுக்கு கொண்டுவருவதில் சீனாவால் என்ன பாத்திரம் வகிக்க முடியும். மேலும் மிகப்பெரிய கேள்வி என்னவென்றால்: ஷி ஜின்பிங், புதின், கிம் மற்றும் டொனால்ட் டிரம்ப் ஆகியோர் சந்திப்பது சாத்தியமா? - இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு https://www.bbc.com/tamil/articles/cy98z9veld9o

முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைது

1 month ago
வணக்கம் ஐயா, இரண்டு விடயங்களும், அதாவது சட்டத்தின் கடமை அல்லது பழிவாங்கல் எதுவாயினும்; தமிழருக்கு இதில் ஒரு நல்விளைவும் கிடையாது. சட்டவாட்சிக்குரிய விட்டுக்கொடுப்பற்ற அரசு தனது அரசென அனுர நிறுவ முயல்கிறார். அவளவுதான். எங்கள் ஊடகங்களும் ஆய்வுகளும் புல்லரிக்கிறது. வெள்ளைநரியள் வெட்கமற்றவைதான். ஆனால், இவர்கள் வெட்கப்பட வாய்பில்லைத்தான். சுரண்டிக்கொழுத்துச் சுகம்கண்டோரல்லவா? நட்பார்ந்த நன்றியுடன் நொச்சி

கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்!

1 month ago
கிளிநொச்சி மாவட்ட எம்பி குறித்து அப்பகுதியின் செய்தியாளரின் விமர்சனம்! August 28, 2025 — கருணாகரன் — அரசியல் மோசடிகள் பலவிதமானவை. அத்தகைய மோசடிகளை, தவறுகளை, குற்றங்களை இழைத்தவர்கள் எல்லாம் இலங்கையில் தண்டனை பெறும் காலமொன்று உருவாகியுள்ளது. ‘அரகலய‘ என்ற மக்கள் எழுச்சி உருவாக்கிய வெற்றிகளில் இதுவும் ஒன்று. அதுவே ஆட்சிமாற்றம், அரசியல் மாற்றங்களைக் கொண்டு வந்தது. அத்தகைய விழிப்புணர்வும் எழுச்சியும் தமிழ்ச் சமூகத்திலும் நிகழ வேண்டும். நிகழும். அப்படி நிகழ்ந்தால்தான் மோசடிக்காரர்களும் பிற்போக்கானோரும் சமூக விரோதிகளும் விலக்கப்படுவார்கள், தண்டனைக்குள்ளாக்கப்படுவர். தமிழ்த் தரப்பில் அரசியல் ரீதியான விமர்சனங்களுக்கு உள்ளாகிவருபவர் சிவஞானம் சிறிதரன். எத்தகைய கூச்சமும் தயக்கமும் இல்லாமல் தன் நெஞ்சறியப் பொய் சொல்வதிலிருந்து அடாத்தாக நடப்பது, ஏமாற்றுவது, மோசடி செய்வது எல்லாமே அவருக்குப் பெருங்கலை என்று பார்ப்பவர்களும் உண்டு. இதைப் பற்றிய கடுமையான விமர்சனங்கள் ஆயிரமாக இருந்தாலும் அதில் இதுவரையில் அவர் வெற்றிகளையே பெற்றுள்ளார். அதொரு தீராச் சுவையாக மாறியுள்ளது. அதனால் அதையே அவர் தொடர்ந்தும் செய்து கொண்டிருக்கிறார். அந்தச் சுவை அவரை எல்லை கடந்து செல்ல வைக்கிறது என்று பார்க்கப்படுகின்றது. இதற்கு ஏராளம் உதாரணங்கள் உண்டு. எளிய – அண்மைய உதாரணம், கிளிநொச்சி மாவட்ட பொது மருத்துவமனையின் பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவுக்கு (25.08.2025) சென்று, அதனுடைய இயங்கு நிலை பற்றிப் பேசியிருப்பதாகும். ஒரு பாராளுமன்ற உறுப்பினர் என்ற வகையில் அதைச் செய்வதற்கு அவருக்கு உரிமையும் தகுதியும் உண்டு. ஆனால், அதை அவர் செய்திருக்க வேண்டியது நேற்றல்ல. அதற்கு முன்பாகவே செய்திருக்கவேண்டும். அதற்கு முன்பு என்றால், பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு உருவாக்கப்பட்டு (திறந்து வைக்கப்பட்டு) ஓராண்டாகிய பின்னரும் அது இயங்காமலே உள்ளது. மட்டுமல்ல, பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு இயங்காமல் இருப்பதைக் காரணம் காட்டி, அந்தப் பிரிவிலுள்ள சில உபகரணங்களை பிற மருத்துவனைகளுக்கு இடமாற்றும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அப்போதெல்லாம் சிறிதரன் இதைப்பற்றிப் பேச முன்வரவேயில்லை. அதைப் பற்றி அவருக்கும் தெரியாது. அவருடைய ஆட்களுக்கும் தெரியாது. அவர்களுக்கு அதைப்பற்றியெல்லாம் அக்கறையே இல்லை. இந்த நிலையில் மருத்துமனையின் நோயாளர் நலன்புரிச் சங்கம் 05.06.2025 இல் வடமாகாண ஆளுநர் நா. வேதநாயகனைச் சந்தித்து இந்தப் பிரிவின் நிலைமையை விளக்கிப் பேசியிருந்தது. அத்துடன் கண் சிகிச்சைக்குரிய நிபுணர் இல்லை என்பதையும் சுட்டிக் காட்டியிருந்தது. மட்டுமல்ல, Medical ward பற்றாக்குறையையும் எடுத்து விளக்கியது. பெண் நோயியல் மற்றும் மகப்பேற்றுச் சிறப்புப் பிரிவு புதிய தொகுதியில் இயங்கத் தொடங்கினால், தற்போது இயங்கிக் கொண்டிருக்கும் மகப்பேற்று விடுதிகளை Medical ward களுக்கு வழங்க முடியும் என்பதையும் எடுத்துக் கூறியது. இதனை அடுத்து, ஆளுநர் அடுத்த வாரமே கிளிநொச்சி மாவட்டப் பொதுமருத்துவமனைக்கு நேரிற் சென்று குறித்த பிரிவைப் பார்வையிட்டு, பணிப்பாளருடனும் பேசியிருந்தார். கூடவே வடமாகாண சுகாதார செயலாளரும் பார்வையிட்டிருந்தார். ஆனாலும் நிலைமைகளில் உடனடிச் செயற்பாட்டு விளைவு கிட்டியிருக்கவில்லை. அல்லது தாமதங்கள் ஏற்பட்டன. அதற்குரிய தயார்ப்படுத்தல்களை அவர்கள் மேற்கொண்டிருக்கக் கூடும். செயற்பாடுகள் தாமதமடைய பிரச்சினைகள் வேறு விதமாக மாறத் தொடங்கின. ஏற்கனவே இயங்கி வருகின்ற மகப்பேற்றுப் பிரிவின் கட்டில்களே உக்கிச் சிதைவடைந்த கட்டத்துக்கு வந்திருந்தன. அத்துடன். கண் சிகிச்சை மற்றும் அறுவைச் சிகிச்சைப் பிரிவு போன்றவற்றுக்கும் நிபுணர்கள் இல்லாமல் அதுவும் இயங்கா நிலைக்குள்ளாகி, நோயாளர்கள் சிரமங்களை எதிர்கொள்ளத் தொடங்கினர். இந்த நிலையில் நோயாளர் நலன்புரிச் சங்கம் தவிர்க்க முடியாமல் நோயாளரின் நிலை நின்று செயற்பட வேண்டிய கட்டத்துக்குத் தள்ளப்பட்டது. ஆகவே இவற்றை இயங்க வைப்பதற்கான அழுத்தங்களை – ஊக்கத்தை அளிக்க வேண்டும் என நோயாளர் நலன்புரிச் சங்கம் பல்வேறு தரப்புகளோடும் பேசி தொடர்ந்தும் முயற்சிகளை எடுக்கத் தொடங்கியது. அதேவேளை இதற்கான அழுத்தப் போராட்டமொன்றை 29.98.2025 வெள்ளிக்கிழமை காலை நடத்துவதற்குத் தீர்மானித்து, அதற்கான ஊடகவியலாளர் சந்திப்பை 22.08.2025 இல் நடத்தியது. இந்தச் செய்தி அன்று இணையத் தளங்களிலும் மறுநாள் பத்திரிகைகளிலும் வெளியாகியிருந்தது. அத்துடன், இந்தப் போராட்டத்துக்கு மக்களின், மாவட்ட பொது அமைப்புகளின் ஒத்துழைப்பைக் கோரும் பிரசுரமொன்றையும் அச்சிட்டு விநியோகித்திருந்தது. திட்டமிட்டபடி அழுத்தப் போராட்டத்துக்கான ஏற்பாடுகளும் நடந்து கொண்டிருக்கின்றன. இதேவேளை மறுபக்கத்தில் இந்தப் பிரிவை இயங்க வைப்பதற்கான சிறப்புக் கூட்டமொன்றை 25.08.2025 பி.ப 5.00 மணிக்கு வடமாகாண ஆளுநர் ஏற்பாடு செய்திருந்தார். மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர், யாழ் பல்கலைக்கழக மருத்துவத்துறைத் தலைவர், யாழ் போதானா மருத்துவமனைப் பணிப்பாளர், மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், குறித்த பிரிவுகளுக்கான சிறப்பு மருத்துவ நிபுணர் அணி, கிளிநொச்சி மாவட்டப் பொது மருத்துவமனைப் பணிப்பாளர், கிளிநொச்சிப் பிராந்திய சுகாதர சேவைகள் பணிப்பாளர் போன்ற பல்வேறு தரப்பினருடன் நடத்துவதற்கு இந்த ஏற்பாட்டை அவர் செய்திருந்தார். இந்த நிலையில்தான் (இந்தத் தகவல்களை எல்லாம் எப்படியோ அறிந்து கொண்ட) சிறிதரன், திடீரென விழித்துக் கொண்டவராக மாவட்டப் பொதுமருத்துவமனைக்குச் சென்று (25.08.2025) குறித்த பிரிவைப் பார்வையிட்டு, இயங்க வைப்பது பற்றிப் பேசுவதாகப் படங் காட்டியிருக்கிறார். அதாவது தானே இந்த பெண் நோயியல் சிறப்பு மகப்பேற்றுப் பிரிவை இயங்க வைப்பதற்கான நடவடிக்கையை மேற்கொள்கிறேன். தன்னுடைய முயற்சியின் விளைவாகத்தான் இனிமேற் காரியங்கள் எல்லாம் நடக்கப்போகின்றன என்ற விதமாக. இது தொடர்பாக சிறிதரனின் ஊடகப் பிரிவு வெளியிட்டுள்ள அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள விடயங்கள்… சிறிதரனே முதன்முதலாக மின்சாரத்தைக் கண்டு பிடித்தவர், சிறிதரனே அவரே இந்தப் பூமியில் அதியற்புதமான விடயங்களை எல்லாம் செய்து கொண்டிருப்பவர் என்ற றேஞ்சில் உள்ளது. இது எவ்வளவு சிரிப்புகிடமானது? எத்தனை பெரிய ஏமாற்று? என்னமாதிரியான கோமாளித்தனம்? பெரிய அரசியல் மோசடி? எத்தகைய சிறுமை? இதொன்றும் சிறிதரனுக்குப் புதியது இல்லை. அவர் ஆசிரியராகக் கற்பித்தகாலத்திலிருந்தே இப்படித்தான் நடந்து கொண்டிருக்கிறார் என்கின்றனர் அவருடன் கூடப் பணியாற்றியவர்கள். அதனால்தான் அவரால் ஒரு சிறந்த ஆசிரியராக எந்த மாணவராலும் எந்தப் பாடசாலையினாலும் நினைவு கூர முடியவில்லை எனவும் வாதிடுகின்றனர். அரசியலில் ஈடுபடத் தொடங்கிய பிறகு சிறிதரன் சொன்ன, சொல்லி வரும் பொய்களும் செய்த, செய்து வரும் ஏமாற்றுகள் அதிகம். இங்கே பிரச்சினை அதுவல்ல. ஏனென்றால் சிறீதரன் அப்படித்தான் (இவ்வாறான குணங்களுடன்தான்) இருக்கிறார். இருக்கப்போகிறார். அவருடைய ருசியும் வழியும் அதுவாகும். ஆனால் 2010 இலிருந்து இப்போது வரையான 15ஆண்டுகள், (நான்கு தடவை) பாராளுமன்றப் பிரதிநிதியாக இருப்பவர், தான் பிரதிநிதித்துவம் செய்து வருவதாகக் கூறும் கிளிநொச்சி மாவட்டத்தின் முன்னேற்றத்துக்கு ஆற்றிய சிறப்பான பங்களிப்பு என்ன? கல்வித்துறையில் – மருத்துவத்துறையில் – விவசாய மேம்பாட்டுக்கு – சூழல் விருத்திக்கும் சூழல் பாதுகாப்புக்கும் – கடற்றொழில் விருத்திக்கு – பனை தென்னை வளத் தொழிலுக்கும் தொழிலாளர் நலனுக்கும் – பெண் தலைமைத்துவக் குடும்பத்தினரின் வாழ்க்கை உயர்வுக்கு -மாற்றுத் திறனாளிகளின் எதிர்காலத்துக்கு – விடுதலைப் புலிகளின் போராளிகளாகச் செயற்பட்டு – இன்று சிரமமான வாழ்க்கைச் சூழலை எதிர்கொண்டிருப்பவர்களின் வாழ்க்கைக்கு – பிிரதேசங்களின் அபிவிருத்திக்கு – இளைய தலைமுறையினரின் திறன் விருத்தி, தொழில் வாய்ப்புகளுக்கு – பண்பாட்டு வளர்ச்சிக்கு – வரலாற்றுத்துறைக்கு – இலக்கிய மேம்பாட்டுக்கு – சமூக வளர்ச்சிக்கு – இதில் எத்தகைய பங்களிப்புகளையும் வழங்கியதாகக் குறிப்பிட முடியாத நிலையில்தான் அவருடைய பிரதிநிதித்துவச் சிறப்பு உள்ளது. ஏற்கனவே பதவியில் இருந்த முருகேசு சந்திரகுமார், விஜயகலா மகேஸ்வரன், மாவை சேனாதிராஜா, அங்கயன் ராமநாதன், மனோ கணேசன், திகாம்பரம் போன்றோரின் நிதி ஒதுக்கீடு, செயற்திட்டங்களை தன்னுடைய வேலையாகவும் முயற்சியின் விளைவாகவும் கிடைத்ததாகவோ நடைபெற்றதாகவோ காட்டுவதே அவருடைய தந்திரோபாயமாக இருந்தது. மற்றும்படி சுயமாகச் சிந்தித்து, சரியாக ஒரு திட்டத்தை இனங்கண்டு, அதைச் செயலாக்கமாக மாற்றுவதற்கு அர்ப்பணிப்போடு சிறிதரனோ அவருடைய அணியினரோ முயற்சித்ததே இல்லை. அவர்களுடைய அரசியல் முதலீடுகளும் செயற்பாடுகளும் வாய்ப்பேச்சிலும் முகநூல் வம்பளப்பிலுமே கழிந்தது. சிறிதரனின் செல்வாக்குக்கு உட்பட்ட பிரதேச சபைகளினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திப் பணிகள்தான் குறித்துச் சொல்லக் கூடியன. அவற்றில் பல இயங்கா நிலைக்குத் தள்ளப்பட்டு விட்டன. அவற்றில் ஒன்று, ஆனையிறவு சந்தை வளாத்தில் நிர்மாணிக்கப்பட்ட கடைத்தொகுதிகள். மற்றது, பூநகரி வாடியடியில் கட்டி இடிக்கப்பட்ட சந்தை. அடுத்தது, கரடிப்போக்குச் சந்தியில் மாற்றுத் திறனாளிகள், முன்னாள் போராளிகளுக்கான உதவி என்ற பேரில் கட்டி இடிக்கப்பட்ட கடைகள். இப்படியே சொல்லிக் கொண்டு போகலாம். ஆனால், எங்காவது, எவராவது ஒரு பிரச்சினையைப் பற்றிப் பேசினால் அங்கே ஓடோடிப்போய் தானே அதைப் பார்த்துச் சீர்ப்படுத்துகின்றவராக நிற்கிறார்; தோற்றம் காட்ட முற்படுகிறார். (இதற்காக சிலர் கையாட்களாக இருக்கிறார்கள் என்பதை இன்னொரு சந்தர்ப்பத்தில் காட்டலாம். அப்படியானவர்கள்தான் சிறிதரன் போன்றவர்களைக் காப்பாற்றுவதற்கும் தொடர்ந்து தீங்குகள் நடப்பதற்கும் காரணமானவர்கள். இதில் ஆசிரியராக இருப்பர் தொடக்கம் பல்வேறு நிலைகளில் உள்ளவர்கள் உண்டு). இது ஏன்? பதிலாக தானாகவே ஒன்றைக் கண்டு பிடிக்கவோ, ஒன்றைப் புதிதாகத் திட்டமிடவோ, ஒரு விடயத்தைச் செய்து முடிக்கவோ அவராலும் அவருடைய ஆதரவாளர்களாலும் முடியாதிருப்பது ஏன்? கிளிநொச்சி மாவட்டத்தில் அதி கூடிய காலம் தொடர்ச்சியாக பாராளுமன்ற உறுப்பினராகப் பதவி வகித்துக் கொண்டிருப்பவர் சிறிதரன். இந்தப் பதினைந்து ஆண்டு காலப்பகுதியில் எவ்வளவு சிறப்பான திட்டங்களை அறிமுகப்படுத்தி – உருவாக்கி வெற்றியடையச் செய்திருக்க முடியும்! குறைந்த பட்சமாக இரண்டு படை முகாம்களையாவது விலக்குவதற்குப் போராடியிருக்கலாம். அல்லது உண்மையைப் பேசி, சமூகங்களின் நல்லிணக்கத்தைப் பேணி, மக்களுடைய பிரச்சினைகளைக் கேட்டறிந்து அவற்றுக்கான தீர்வைக் காண முயற்சித்திருக்கலாம். தான் படித்த, படிப்பித்த, வாழ்ந்த கிளிநொச்சி மாவட்டம் போரினால் முற்றாகவே அழிந்தது. அதை மீளக் கட்டியெழுப்பவும் அங்கே கல்வியை மேம்படுத்தவும் உழைத்திருக்கலாம். அப்படியெல்லாம் சிறிதரன் செயற்படவும் இல்லை. முயற்சிக்கவும் இல்லை. இன்னும் சொல்லப்போனால் எல்லாவற்றையும் குழப்பிப் பாழ்படுத்தினார். அமைப்புகளையும் மக்களையும் தன்னுடைய அரசியலுக்காகப் பிளவுபடுத்தினார். எழுத்தாளர்கள், இலக்கியவாதிகள், வர்த்தகர்கள் தொடக்கம் கோயில்களின் நிர்வாகம், கூட்டுறவு அமைப்புகள், விவசாய அமைப்புகள் எனச் சகலவற்றையும் பிளவுபட வைத்திருக்கிறார். கிளிநொச்சிக்கு வெளியே முல்லைத்தீவு, வவுனியா, மன்னார், யாழ்ப்பாணம் போன்ற அயல் மாவட்டங்களில் இந்த நோயில்லை. அங்கும் மாற்றுக் கருத்தாளர்கள், மாற்று அரசியற் சிந்தனையுடையோர், மறு அரசியற் தரப்பினர், அவற்றின் ஆதரவாளர்கள், மாற்று அணிகள் எல்லாம் உண்டு. ஆனால், அங்கே ஒரு ஜனநாயக அடிப்படை பேணப்படுவதுண்டு. விழுமியங்களுக்கான மதிப்புண்டு. கிளிநொச்சியில் அதெல்லாம் குழிதோண்டிப் புதைக்கப்பட்டாயிற்று. இங்கே பிரதேச சபைகளின் நூலகங்களில் கூட சாதி பார்ப்பதைப்போல வேறுபாடுகள் காட்டப்படுகின்றன. இதற்கு ஒத்து ஊதும் நிர்வாக அதிகாரிகள் இருக்கிறார்கள் என்பது மிகக் கவலைக்குரியது. இதைக்குறித்து யாராவது கேள்வி எழுப்பினால் அவர்களை அவதூறு செய்து அடக்குவதற்கு முற்பட்டார் சிறிதரன். இதற்காக அவர் தன்னோடு ஒரு மூன்றாந்தரமான அணியொன்றை உருவாக்கியும் வைத்திருந்தார்; வைத்திருக்கிறார். இதெல்லாம் அவர் மீதான குற்றச்சாட்டுகளோ விமர்சனங்களோ மட்டுமல்ல, அவரைக் குறித்த உண்மையான விவரங்களாகும். இப்படியானவரை எப்படி தமிழரசுக் கட்சி தன்னுடைய அரசியற் பயணத்தில் அனுமதித்திருக்கிறது? சிறிதரனை மக்கள் ஆதரிப்பதால், தமிழரசுக் கட்சி அதற்கு – அந்த மக்கள் தெரிவுக்கு மதிப்பளித்து அனுமதித்துள்ளது – அதனால் அவரைக் கட்சியில் வைத்திருக்கிறது என்று சுமந்திரனோ அல்லது தமிழரசுக் கட்சியைச் சேர்ந்த வேறு எவருமோ சொல்லலாம். கோட்டபாய ராஜபக்ஸவையும் மக்கள்தான் ஆதரித்தனர். மேர்வின் சில்வாவையும் விமல் வீரவன்ஸவையும்தான் ஆதரித்தனர். வாக்களித்தனர். அதற்காக அவர்கள் எல்லாம் சரியாகச் செயற்படும் ஆட்களா? மெய்யாகவே நாட்டுக்கும் சமூகத்துக்கும் நன்மையைத் தரக்கூடிய நபர்களா? சிறிதரனை முதன்மைப்படுத்தி மேடைகளில் ஏற்றிப் போற்றும் எழுத்தாளர்கள் இதைக்குறித்தெல்லாம் என்ன விளக்கம் சொல்ல முடியும்? இவர்கள் தாம் கொண்டுள்ள நெருக்கத்தைப் பயன்படுத்தி, சிறிதரனை நெறிப்படுத்தலாம். பயனுள்ள பணிகளைச் செய்விக்கலாம். அந்தப் பொறுப்பு அவர்களுக்குண்டு. அல்லது அவரிடம் இவற்றைக் குறித்துக் கேள்விகளை எழுப்ப வேண்டும். எழுத்தாளர்கள், கவிஞர்கள், கலைஞர்கள் சமூகத்தின் பிரதிநிதிகளாவர். ஒரு வகையில் சமூகத்தை வழிப்படுத்துகின்றவர்கள், பண்படுத்துகின்றவர்கள். சமூக விமர்சனத்தை அடிப்படையாகக் கொண்டோர். என்பதால் இவர்களுக்கெல்லாம் இதில் பொறுப்புண்டு. சிறிதரனை ஆதரிக்கும் அமைப்புகள், உத்தியோகத்தர்கள், அதிகாரிகள், பிரமுகர்கள் எல்லோரும் இதைக் குறித்தெல்லாம் என்ன சொல்லப் போகிறார்கள்? ஆனால் ஒன்று, இவர்கள் எல்லோரும் இந்தத் தீமைக்கு – தவறுக்கு – ஏமாற்றுக்குப் பொறுப்பாளிகள்… அப்படி இவர்கள் பொறுப்பெடுக்கத் தவறினால் இந்தத் தவறுகள் பெருகிச் செல்லும். ஏற்கனவே கிளிநொச்சி மாவட்டம் அனைத்து நிலைகளிலும் மிகப் பின்தங்கியே உள்ளது. தவறுகளின் விளைவே அதுவாகும். அரசியற் பழிவாங்கல்களும் தனக்கு வேண்டியவர்களுக்குச் சார்பான நடவடிக்கைகளும் சமூகத்தையும் மாவட்டத்தையும் பின்தள்ளியுள்ளது. வேண்டுமானால் பழிவாங்கப்பட்டோரின் பட்டியலை சமர்ப்பிக்க முடியும். புலிகளின் பெயரைப் பயன்படுத்தி, மாவீரர்களின் தியாகத்தைச் சொல்லி அரசியல் லாபத்தை அறுவடை செய்கின்ற சிறிதரன் தரப்பு, மாவீர்கள் குடும்பங்களுக்கு ஆற்றிய பங்களிப்புகள் என்ன? புலிகளின் செயற்பாடுகளில், அவர்கள் உருவாக்கிய விழுமியங்களில் எவற்றைப் பின்பற்றுகின்றனர்? குறைந்த பட்சம் நான்கு இடங்களில் மரங்களையாவது உருப்படியாக நட்டிருக்கின்றனரா? பதிலாக மணலை அகழ்ந்தெடுப்பதும் மரங்களை – காடுகளை அழிப்பதும் சூழலைக் கெடுப்பதுமே நிகழ்த்தப்படுகின்றன. போதாக்குறைக்கு கிளிநொச்சியில் உள்ள சனத்தொகை ஒரு லட்சத்து எண்பது ஆயிரம். கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மதுச்சாலைகளின் எண்ணிக்கை 20 க்கு மேல். இதைக்குறித்து ஒரு சொல் சிறிதரன் இதுவரையில் வெளியே பேசியதில்லை. பல பொதுக்காணிகள் (அரச காணிகள்) வசதி, அதிகாரம் படைத்தோரால் அபகரிக்கப்பட்டுள்ளன. இவற்றைப் பற்றி மக்கள் பிரதிநிதி, மண் பற்றாளன் வாய் திறப்பதே இல்லை. இவையெல்லாம் சிறிதரனின் கோட்டைக்குள்தான் நடக்கின்றன. ஆனால், சிங்கம் கண்மூடித் தூங்குகிறது. (தொடரும்) https://arangamnews.com/?p=12284

உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி

1 month ago
உக்ரேன் மீது ரஷ்யா தாக்குதல் - 23 பேர் பலி 29 Aug, 2025 | 08:48 AM உக்ரேன், ரஷ்யா இடையேயான போர் நீடித்து வருகிறது. இந்த போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இதனிடையே, இந்த போரை முடிவுக்கு கொண்டுவர அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். ஆனாலும், போர் தொடர்ந்து நீடித்து வருகிறது. இந்நிலையில், உக்ரேன் மீது ரஷ்யா நேற்று தாக்குதல் நடத்தியது. உக்ரேன் தலைநகர் கீவ் உள்பட பல்வேறு பகுதிகள் மீது ரஷ்யா ட்ரோன், ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 23 பேர் உயிரிழந்தனர். மேலும், 48 பேர் படுகாயமடைந்தனர். ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிரிட்டிஷ் அலுவலகங்கள் சேதமடைந்தன. https://www.virakesari.lk/article/223650

காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதி கோரி 30ஆம் திகதி வடக்கு, கிழக்கில் போராட்டம் ஏற்பாடு

1 month ago
வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினம் : வட, கிழக்கில் நாளை பாரிய கவனயீர்ப்பு போராட்டங்கள் 29 Aug, 2025 | 09:20 AM (நா.தனுஜா) வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு நாளை (30) சனிக்கிழமை வட, கிழக்கு மாகாணங்களில் பாரிய கவனயீர்ப்புப்போராட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளன. வருடாந்தம் ஓகஸ்ட் மாதம் 30 ஆம் திகதி வலிந்து காணாமலாக்கப்படல்களால் பாதிக்கப்பட்டோருக்கான சர்வதேச தினமாகப் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. அதனை முன்னிட்டு வட, கிழக்கு வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளின் சங்கத்தினால் வருடாந்தம் வட, கிழக்கு மாகாணங்களில் கவனயீர்ப்புப்போராட்டம் முன்னெடுக்கப்படும். அதன் நீட்சியாக இம்முறையும் வலிந்து காணாமலாக்கப்பட்டோரின் உறவுகளால் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய 5 மாவட்டங்களை உள்ளடக்கி வடக்கிலும் மட்டக்களப்பு, திருகோணமலை மற்றும் அம்பாறை ஆகிய 3 மாவட்டங்களை உள்ளடக்கி கிழக்கிலும் தனித்தனியாக இருவேறு கவனயீர்ப்புப்போராட்டங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இது இவ்வாறிருக்க தெற்கைத் தளமாகக்கொண்டு இயங்கிவரும் பிரிட்டோ பெர்னாண்டோ தலைமையிலான காணாமல்போனோர் குடும்ப ஒன்றியத்தின் பிரதிநிதிகள், தமது கோரிக்கைகள் அடங்கிய மகஜரை பிரதமர் ஹரினி அமரசூரியவிடமும், நீதியமைச்சிடமும், காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்திடமும் கொழும்பிலுள்ள சர்வதேச நாடுகளின் தூதரகங்கள் மற்றும் உயர்ஸ்தானிகரகங்களிடமும் இன்றைய தினம் கையளிக்கவுள்ளனர். மேலும் காணாமல்போனோர் விவகாரத்தின் தற்போதைய நிலைவரம் குறித்துத் தெளிவுபடுத்தும் வகையில் காணாமல்போனோர் அலுவலகத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வொன்றும் இன்று அலரி மாளிகையில் நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது. https://www.virakesari.lk/article/223654

கிளிநொச்சியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு

1 month ago
கிளிநொச்சியில் விபத்து - இரு இளைஞர்கள் உயிரிழப்பு 29 Aug, 2025 | 10:52 AM கிளிநொச்சி ஏ-09 வீதியின் பரந்தன் விவசாயப் பண்ணைக்கும் கரடிப்போக்கு சந்திக்கும் அண்மித்த பகுதியல் டிப்பர் வாகனம், பஸ் மற்றும் மோட்டார் சைக்கிள் என்பன ஒன்றின் பின்னால் ஒன்று மோதி இடம்பெற்ற விபத்தில் இரு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். யாழ்ப்பாணத்திலிருந்து இன்று வெள்ளிக்கிழமை (29) அதிகாலை 5.15 மணிக்கு கண்டி நோக்கி பயணித்த பஸ் ஒன்றுடன் பின்னால் வந்த டிப்பர் வாகனம் மோதி, அதே திசையில் பின்னால் சட்டவிரோத கசிப்பினை கொண்டு வந்த மோட்டார் சைக்கிள் மீது மோதி விபத்து எற்பட்டுள்ளது. இந்த விபத்தில் மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு இளைஞர்களும் உயிரிழந்துள்ளனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் கிளிநொச்சி மாவட்ட பொது வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பில் கிளிநொச்சி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர். https://www.virakesari.lk/article/223656
Checked
Tue, 09/30/2025 - 12:54
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed