28 Nov, 2025 | 05:42 PM

(இராஜதுரை ஹஷான்)
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் ஏற்பட்டுள்ள பாதிப்புக்களினால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிமடைந்துள்ளன. மலையகத்துக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், கொழும்பு கோட்டை புகையிரத நிலையத்தில் இருந்து சேவையில் ஈடுபடும் தூர பிரதேச புகையிரத சேவைகள் அனைத்தும் மறு அறிவித்தல் விடுக்கும் வரையில் இடைநிறுத்தப்பட்டுள்ளன. அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
பேருந்து சேவைகள்
இவ்வாறான நிலையில் கொழும்பில் இருந்து வடக்கு,கிழக்கு உட்பட தூர பிரதேசங்களுக்குமான பேருந்து சேவைகள் அனைத்தும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. வெள்ளநீர் அபாயம் மற்றும் மண்சரிவு அபாயம் இல்லாத பகுதிகளில் மாத்திம் குறுந்தூர போக்குவரத்து சேவையில் ஈடுபடுவோம் என தனியார் பேருந்து உரிமையாளர் சங்கத்தின் தலைவர் கெமுனு விஜேரத்ன தெரிவித்தார்.
புகையிரத சேவைகள் பாதிப்பு
நேற்று காலையில் இருந்து சகல புகையிரத வீதிகளின் புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளதாக புகையிரத திணைக்களம் அறிவித்துள்ளது.
புகையிரத பாதைகளில் மண்மேடு சரிந்து விழல், மரங்கள் முறிந்து விழுதல் தீவிரமடைந்துள்ளதால் பொது பயணிகளின் பாதுகாப்பை கருத்திற் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாக புகையிரத திணைக்களத்தின் மேலதிக பொதுமுகாமையாளர் சந்திரசேன பண்டார தெரிவித்துள்ளார்.
மண்சரிவு அபாயத்தினால் மலையகத்துக்கான புகையிரத சேவை முற்றாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.மண்சரிவினால் மலையக புகையிரத பாதைகள் மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில், பாதைகளை சீர் செய்து மீள சேவையை ஆரம்பிக்கும் தினத்தை நிச்சயமாக குறிப்பிட முடியாது. காலநிலை இயல்பு நிலைக்கு திரும்பியதன் பின்னரே புனரமைப்பு பணிகளை மேற்கொள்ள முடியும் என்று புகையிரத திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
அதேபோல் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் கிழக்கு புகையிரத வீதியில் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு ஆகிய தூர பிரதேசங்களுக்கான புகையிரத சேவை இடைநிறுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் மறுஅறிவித்தல் விடுக்கும் வரையில் புகையிரத பொதுகள் விநியோக சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
நேற்று முன்தினம் கொழும்பில் இருந்து காங்கேசன்துறை நோக்கிச் சென்ற புகையிரதம் அவசர அனர்த்த நிலை காரணமாக குருநாகல் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது.அதேபோல் காங்கேசன்துறை புகையிரத நிலையத்தில் இருந்து கொழும்பு கோட்டை புகையிரத நிலையம் நோக்கிச் சென்ற புகையிரதம் அநுராதபுரம் புகையிரத நிலையத்தில் இடைநிறுத்தப்பட்டுள்ளது. வெள்ளப்பெருக்கு காரணமாக வடக்குக்கான புகையிரத சேவை முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளது.
அநுதாரபுரம் புகையிரத நிலையத்தில் சுமார் 400 பயணிகள் நேற்று முன்தினம் இரவு இருந்துள்ளதுடன், அநுராதபுரம் நகர சபையின் ஊடாக அவர்களுக்கான வசதிகள் வழங்கப்பட்டுள்ளன.அதேபோல் குருநாகல் புகையிரத நிலையத்தில் இருந்து அரச போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்தில் உரிய இடங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
குறுந்தூர புகையிரத சேவைகள் வரையறுக்கப்பட்ட வகையில் ஆரம்பம்
அத்தியாவசிய தேவைகளை கருத்திற் கொண்டு நேற்று மாலையில் இருந்து களனிவெளி புகையிரத வீதி,பிரதான புகையிரத வீதி (மீரிகம),கரையோர பகுதி(அளுத்கம,காலி,)புகையிரத சேவைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
புத்தளம் புகையிரத வீதி,மற்றும் வடக்கு புகையிரத வீதிக்கான சகல புகையிரத சேவைகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன.
பொதுபயணிகள் பெரும் சௌகரியம்
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலைக்கு மத்தியில் பயணம் செய்வதை இயலுமான வகையில் தவிர்த்துக் கொள்ளுமாறு அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
பொதுபோக்குவரத்து சேவைகள் இடைநிறுத்தப்பட்டதால் பொதுபயணிகள் பெரும் அசௌகரியங்களை எதிர்கொண்டுள்ளார்கள்.
நாட்டில் நிலவும் சீரற்ற காலநிலையால் போக்குவரத்து சேவைகள் முழுமையாக ஸ்தம்பிதம் | Virakesari.lk