ஊர்ப்புதினம்

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம் ; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

1 month 1 week ago

அநுரவின் ஆட்சியிலும் மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் முன்னேற்றமில்லை; மனித உரிமைகள் கண்காணிப்பகம் விசனம்; 2024-25இல் பயங்கரவாதத் தடைச் சட்டப் பிரயோகம் அதிகரித்ததாகவும் சுட்டிக்காட்டு

05 Feb, 2026 | 05:45 PM

image

(நா.தனுஜா)

பொருளாதார ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதற்கும், பொதுச்சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நிலவும் சமத்துவமின்மைக்குத் தீர்வுகாண்பதற்கும் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கத்தினால் குறிப்பிடத்தக்க சில முயற்சிகள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், மனித உரிமைகள்சார் கடப்பாடுகளை நடைமுறைப்படுத்துவதில் மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான முன்னேற்றமே எட்டப்பட்டுள்ளது என மனித உரிமைகள் கண்காணிப்பகம் சுட்டிக்காட்டியுள்ளது.

2025 ஆம் ஆண்டு உலகளாவிய ரீதியில் ஒவ்வொரு நாடுகளினதும் மனித உரிமைகள் நிலைவரம் தொடர்பில் மனித உரிமைகள் கண்காணிப்பகத்தினால் வெளியிடப்பட்டுள்ள விரிவான அறிக்கையில் இலங்கை தொடர்பில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:

இலங்கை தொடர்பில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் அலுவலகத்தினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், இலங்கையில் பதிவான தன்னிச்சையான தடுத்துவைப்புகள், பொலிஸ்காவலின் கீழான சித்திரவதைகள் மற்றும் உயிரிழப்புக்கள் என்பன பற்றிய விபரங்கள் உள்ளடக்கப்பட்டிருப்பதுடன், கடந்தகால மீறல்களுக்குக் காரணமாக அமைந்த கட்டமைப்பு ரீதியான நிலைவரங்கள் இன்னமும் தொடர்வதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. கடந்தகால மீறல்களால் பாதிக்கப்பட்டவர்கள், அவர்களது குடும்பத்தினர் மற்றும் மனித உரிமைகள் செயற்பாட்டாளர்கள் உள்ளிட்டோர் பாதுகாப்புத்தரப்பினரின் தொடர் அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுத்துவருவதுடன், குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் பெரும்பாலும் அரச அதிகாரிகளினாலேயே காணி உரிமைகள் மற்றும் மத உரிமைகள் என்பன மீறப்படுகின்றன.

அதேவேளை 1983 - 2009 ஆம் ஆண்டு வரை நடைபெற்ற ஆயுதப்போராட்டத்தின்போது நிகழ்த்தப்பட்ட மிகமோசமான போர்க்குற்றங்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதிசெய்வதற்கு அரசாங்கங்கள் தவறியிருக்கின்றன. தேசிய நல்லிணக்கம் சார்ந்த வாக்குறுதிகளின் இடையே, தமிழ் மற்றும் முஸ்லிம் சமூகங்கள் மத்தியில் நம்பிக்கையைக் கட்டியெழுப்புவதற்கு அநுரகுமார திசாநாயக்க அரசாங்கம் மிகச்சொற்ப விடயங்களையே செய்திருக்கிறது.

அதேபோன்று சுயாதீன வழக்குத்தொடுநர் அலுவலகத்தை ஸ்தாபித்தல், பயங்கரவாதத்தடைச்சட்டத்தை நீக்குதல் மற்றும் நிகழ்நிலைக்காப்புச்சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ளல் என்பன உள்ளடங்கலாக சட்ட மறுசீரமைப்புக்கள் தொடர்பில் அரசாங்கத்தினால் வழங்கப்பட்ட வாக்குறுதிகளும் இன்னமும் நிறைவேற்றப்படவில்லை. அதுமாத்திரமன்றி இலங்கையின் குற்றவியல் தண்டனைச்சட்டக்கோவையின் பிரகாரம் ஓரினச்சேர்க்கை மற்றும் அதுசார்ந்த நடவடிக்கைகள் குற்றமாக்கப்பட்டுள்ளன.

உலக உணவுத்திட்டத்தின் தரவுகளின் பிரகாரம் மூன்றில் ஒன்று பங்கு சிறுவர்கள் மந்தபோசணையினால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். பெரும் எண்ணிக்கையான குடும்பங்கள் கல்வி மற்றும் சுகாதாரம் உள்ளிட்ட தமது உரிமைகளை அனுபவிப்பதற்கு அவசியமான பொருட்கள், சேவைகளைப் பெற்றுக்கொள்வதில் நெருக்கடிகளுக்கு முகங்கொடுத்திருக்கின்றன. அநுரகுமார திசாநாயக்க அரசாங்கத்தில் சமூகப்பாதுகாப்பு செலவினங்கள் மிகக்குறைந்த மட்டத்திலேயே பேணப்படுவதனால், பல்வேறு உரிமைகள் பாதிக்கப்பட்டுள்ளன. சர்வதேச நாணய நிதியத்தின் செயற்திட்டத்துக்கு அமைவாக அரசாங்கத்தினால் நடைமுறைப்படுத்தப்படும் கொள்கைகள், ஏற்கனவே நலிவுற்ற நிலையில் இருக்கும் மக்கள் மீதான நிதியியல் மீட்சி சார்ந்த அழுத்தங்களை மேலும் தீவிரப்படுத்தியுள்ளது.

இருப்பினும் ஊழலை முறியடிப்பதில் ஓரளவு முன்னேற்றம் அடையப்பட்டிருக்கிறது. குறிப்பாக அரச நிதியின் முறைகேடான பயன்பாட்டுக்காக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கைதுசெய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அடுத்ததாக இலங்கை அரசாங்கத்துக்கும் தமிழீழ விடுதலைப்புலிகள் இயக்கத்துக்கும் இடையில் இடம்பெற்ற 26 வருடகால யுத்தத்தில் சுமார் 100,000 க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இக்காலப்பகுதியில் அரச படையினர் சித்திரவதைகள், சட்டவிரோதப் படுகொலைகள், பாலியல் வன்புணர்வு, பாலியல் வன்முறைகள், வலிந்து காணாமலாக்கல் மற்றும் பொதுமக்கள் மீதான ஒடுக்குமுறைத் தாக்குதல்கள் உள்ளிட்ட மிகமோசமான மீறல்களில் ஈடுபட்டனர். அதேபோன்று தற்கொலைக்குண்டுத்தாக்குதல், பொதுமக்களுக்கு எதிரான தாக்குதல்கள் மற்றும் சிறுவர் போராளிகள் உள்ளிட்ட மீறல்களில் விடுதலைப்புலிகள் இயக்கமும் ஈடுபட்டது.

இம்மீறல்கள் தொடர்பில் நீதியை நிலைநாட்டுவதற்கான நம்பத்தகுந்த உள்ளகப்பொறிமுறைகள் இன்மை மற்றும் பாதிக்கப்பட்ட சில சமூகங்களுக்கு எதிராகத் தற்போதும் தொடரும் ஒடுக்குமுறைகள் என்பவற்றின் காரணமாக இலங்கை தொடர்பான பொறுப்புக்கூறல் செயற்திட்டத்தை மேலும் இரு வருடங்களுக்குத் தொடர்வதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானத்தை செயற்பாட்டாளர்கள் பலரும் வரவேற்றிருந்தனர். இந்தக் குற்றங்களை புதியதொரு உள்ளகப்பொறிமுறையின் ஊடாக அணுகுவதாக அரசாங்கம் வாக்குறுதி அளித்திருந்த போதிலும், அதுபற்றிய விபரங்கள் எதனையும் அறிவிக்கவில்லை. அதேவேளை மறுபுறம் பாதிக்கப்பட்ட தரப்பினர் மற்றும் அவர்களது குடும்பத்தினர் உள்ளகப்பொறிமுறைகள் தொடர்பில் தமது நம்பிக்கையீனத்தை அல்லது மட்டுப்படுத்தப்பட்ட அளவிலான நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். மனித உரிமை மீறல்கள் மற்றும் போர்க்குற்றங்கள் தொடர்பில் ஆராய்வதற்காக முன்னைய அரசாங்கங்களினால் குறைந்தபட்சம் சுமார் 10 ஆணைக்குழுக்கள் நிறுவப்பட்ட போதிலும், அவை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படுவதற்கோ அல்லது வலிந்து காணாமலாக்கப்பட்டோர் தொடர்பான உண்மைகள் வெளிப்படுத்தப்படுவதற்கோ வழிவகுக்கவில்லை.

அதுமாத்திரமன்றி 2019 ஆம் ஆண்டு இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறுதினப் பயங்கரவாதத்தாக்குதல்களுக்கு அரசு உடந்தையாக செயற்பட்டதாக சில தரப்பினரால் முன்வைக்கப்பட்ட கருத்துக்களை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க ஆதரித்திருப்பினும், அத்தாக்குதல்கள் தொடர்பில் அரசாங்கம் இன்னமும் நம்பத்தகுந்த விசாரணைகளை முன்னெடுக்கவில்லை. தண்டனைகளிலிருந்து விடுபடும் போக்கு வலுவடைந்தமையானது மீறல்கள் தொடர்வதற்கு இடமளித்தது.

அத்தோடு மனிதப்புதைகுழிகள் தொடர்பில் செயற்திறன்மிக்க விசாரணைகளை முன்னெடுப்பதற்கு அவசியமான போதிய தொழில்நுட்ப வசதிகள் அரசாங்கத்திடம் இல்லை. அதேவேளை கடந்த காலங்களில் நிலவிய அரசியல் தன்முனைப்பின்மையானது இதுபற்றிய விசாரணைகள் மழுங்கடிக்கப்படுவதற்குக் காரணமாக அமைந்தது. அதன் அர்த்தம் எந்தவொரு எலும்புக்கூடும் யாருடையவை எனக் கண்டறியப்படவோ அல்லது ஏனைய ஆதாரங்கள் முறையாகப் பேணப்படவோ இல்லை.

மேலும் நீண்டகால யுத்தத்தினால் வெகுவாகப் பாதிக்கப்பட்ட வடக்கு, கிழக்கு மாகாணங்களில் நீதிக்காகப் போராடும் பாதிக்கப்பட்டோரின் குடும்பத்தினர் மற்றும் சிவில் சமூக செயற்பாட்டாளர்களை பொலிஸார் மற்றும் புலனாய்வுப்பிரிவினர் தொடர்ச்சியாகக் கண்காணித்தும், அவர்களுக்கு எதிராக ஒடுக்குமுறைகளைப் பிரயோகித்தும் வருகின்றனர்.

அதேவேளை பயங்கரவாதத்தடைச்சட்டத்தை முற்றாக நீக்குவதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வாக்குறுதி அளிக்கப்பட்டிருந்த போதிலும், கடந்த காலங்களில் அச்சட்டத்தின் பிரயோகம் வெகுவாக அதிகரித்துள்ளது. குறிப்பாக 2024 ஆம் ஆண்டு 38 வழக்குகளிலும், 2025 ஆம் ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் மாத்திரம் 49 வழக்குகளிலும் பொலிஸாரால் பயங்கரவாதத்தடைச்சட்டம் பிரயோகிக்கப்பட்டிருக்கிறது என அவ்வறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

https://www.virakesari.lk/article/237930

புத்தளம் - மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்

1 month 1 week ago

புத்தளம்-மன்னார் வீதியில் அணை கட்டும் திட்டம் மீது எச்சரிக்கை – ரிஷாத் பதியுதீன்

05 Feb, 2026 | 05:32 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

புத்தளம் -மன்னார் வீதியில் பாரிய அணை ஒன்றை கட்டுவதற்கு அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது. அது நிறைவேற்றப்பட்டால் அந்த பாதை நிரந்தரமாக மூடப்படும் அபாயம் இருக்கிறது. தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் அந்த தவறான தீர்மானத்தை கைவிட வேண்டும். இல்லாவிட்டால் அது நாட்டில் பாரிய அழிவை ஏற்படுத்திவிடும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் ரிஷாத் பதியுதீன் தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) இடம்பெற்ற கொள்கல நிலையத் தொழிற்படுத்துநர்களுக்கு உரிமமளித்தல் சட்டமூலம் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு தொடர்ந்து உரையாற்றுகையில்,

புத்தளம் -மன்னார் வீதி 100 வருடம் பழைமைவாய்ந்த வீதி அதிகாரசபைக்கு சொந்தமானதாகும். நான் அமைச்சராக இருந்தபோது அந்த பாதையை மக்கள் பாவனைக்காக திறந்துவைத்தேன். என்றாலும் காலப்போக்கில் இந்த பகுதியில் இருக்கும் ஒருசில சிங்கள மக்கள் அந்த பாதையை மூடிவிடுமாறு தெரிவித்து வழக்கு தொடுத்தார்கள். அந்த வழக்கில் பிரதிவாதியாக வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், விடயத்துக்கு பொறுப்பாக இருந்த அமைச்சர் பசில் ராஜபக்ஷ் மற்றும் அந்த பிரதேச அமைச்சர் என்றவகையில் எனது பெயரும் தெரிவிக்கப்பட்டிருந்தது.நாங்கள் எல்லோரும் அந்த வழக்குக்கு முகம்கொடுத்துவந்தாேம்.

மஹிந்த ராஜபக்ஷ் மைத்திரிபால சிறிசேன ஆகியோர் ஜனாதிபதிகளாக இருந்த காலத்தில் இந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, அந்த பாதை பொது மக்கள் பயன்படுத்திய பாதை அதற்கு இடமளிக்க வேண்டும் என்ற நிலைப்பாட்டிலே அன்று வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம், வீதி அதிகாரசபை இருந்தன. கோட்டாபய ராஜபக்ஷ்வின் காலத்தில் அந்த பாதையில் பயணிக்க முடியாமல் இருந்ததால் அந்த பாதை மூடப்பட்டது. இந்த பாதை யாழ்ப்பாணத்தில் இருந்து கொழும்புக்கு பயணிக்க 100 கிலோ மீட்டர் குறைவாகும். மன்னாரில் இருந்து புத்தளத்துக்கு வருகின்றபோது 100 கிலோ மீட்டர் குறைவு.

இவ்வாறான நிலையில் இந்த பாதையை மூடிவிடுவதற்கு எந்த ஜனாதிபதிகளின் காலத்திலும் இணக்கம் தெரிவிக்காத நிலையில் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ் இருக்கும் வன ஜீவராசிகள், வன இலாகா திணைக்களம் நீதிமன்றத்துக்கு சென்று, வழக்கு தொடுத்த துராேகிகளுடன் இணைந்து, நாங்கள் இந்த வழக்குகளுடன் உடன்படுகிறோம். அதனால் இந்த வழக்கை விடுவியுங்கள் என நீதிமன்றில் சென்று தெரிவித்திருக்கிறது. இது நியாயமான நடவடிக்கையல்ல.

முஸ்லிம் மக்கள் இந்த அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வைத்திருக்கிறது. இனவாதமில்லாத அரசாங்கம் என்றே நாங்கள் தெரிவித்து வருகிறோம். அப்படிப்பட்ட அரசாங்கம் இந்த பாதையை நிரந்தமாக மூடிவிடுவதற்கு நடவடிக்கை எடுக்கும் என்றிருந்தால், அந்த துராேகத்தனத்தை எங்களால் பார்த்துக்கொண்டிருக்க முடியாது. அநுரகுமார திஸாநாயக்க அன்று மன்னாருக்கு வந்து, தான் ஜனாதிபதியாக தெரிவானால் மன்னார் புத்தளம் பாதையை திறந்துவிடுவதாக தெரிவித்திருந்தார். இது முஸ்லிம்களுக்கு மாத்திரம் சொந்தமான பாதையல்ல. இந்த நாட்டுக்கான பாதை. விலங்குகளை பாதுகாப்பதாக தெரிவித்து மக்களை கஷ்டப்படுத்துகின்ற ஒரு முடிவை அரசாங்கம் எடுக்கக்கூடாது.

நாங்கள் தனிநாடு கேட்கவில்லை. எங்களது மண்ணுக்கு செல்வதற்கான பாதையை திறந்து தருமாறே கேட்கிறேம். அரசாங்கத்தில் தமிழ் பேசும் உறுப்பினர்கள் இரு்கிறீர்கள். தமிழ், முஸ்லிம் மக்களை நாங்கள் பார்ப்போம் என்று சொல்கிறீர்கள். ஆனால் வடக்கு கிழக்கு தமிழ், சிங்கள முஸ்லிம் மக்களுக்கான வரப்பிரசாதமே இந்த பாதை. அதனால் இந்த பாதைய மூடிவிட எடுத்த முடிவை அரசாங்கம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237920

2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

1 month 1 week ago

2026ல் 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள்; பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் - பிரதமர் ஹரிணி அமரசூரிய

05 Feb, 2026 | 02:53 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)

2026 ஆம் ஆ ண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன் என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய வலியுறுத்தினார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (05) நடைபெற்ற அமர்வின் போது எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

இலவச கல்வி குறித்து எதிர்க்கட்சித் தலைவர் அக்கறை கொண்டுள்ளதையிட்டு பெரும் மகிழ்ச்சியடைகிறேன். எதிர்க்கட்சித் தலைவர் கடந்த காலங்களில் இவ்வாறான கொள்கையை கொண்டிருக்கவில்லை. தற்போது மாற்றமடைந்துள்ளதையிட்டு அவருக்கு நன்றித் தெரிவித்துக் கொள்கிறேன்.

சமூக வலைத்தளங்களில் வெளியாகும் போலிச் செய்திகள் மற்றும் வதந்திகளுக்கு முன்னுரிமை வழங்கி கேள்விகளை கேட்க வேண்டாம் என்று எதிர்க்கட்சித் தலைவரிடம் தயவுடன் கேட்டுக் கொள்கிறேன்.ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பீடத்தை மூடுவதற்கும், கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகத்தை மூடுவதற்கும் எவ்வித நடவடிக்கைகளும் எடுக்கப்படவில்லை.

முறையான வழிமுறைகள் மற்றும் வளங்கள் இல்லாமலேயே கம்பஹா விக்கிரமராராச்சி பல்கலைக்கழகம் உருவாக்கப்பட்டது. இதனால் அங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தான் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.இது குறித்து ஆராய்வதற்கு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு உரிய நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

இந்த ஆண்டு முதற்கட்டமாக 1500 பாடசாலைகளுக்கு ஸ்மார்ட் பலகைகள் வழங்குவதற்குரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஸ்மார்ட் பலகைகளுக்காக பெற்றோரிடம் பணம் சேகரிக்க வேண்டாம் என்று சுற்றறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. ஆகவே பணம் சேகரிக்கும் நடவடிக்கைகளை நிறுத்துங்கள் என்று பகிரங்கமாக குறிப்பிட்டுக் கொள்கிறேன்.

https://www.virakesari.lk/article/237890

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

1 month 1 week ago

க .பொ.த சாதாரண தரப் பரீட்சையை பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குக் தயார் - கல்வி அமைச்சர்

05 Feb, 2026 | 05:35 PM

image

(எம்.ஆர்.எம்.வசீம்,இராஜதுரை ஹஷான்)

2025 ஆண்டுக்கான க .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர் என கல்வி மற்றும் பிரதமர் அமைச்சருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் வியாழக்கிழமை (5) நடைபெற்ற அமர்வில் வாய்மூல விடைக்கான வினாக்கள் வேளையின் போது பாராளுமன்ற உறுப்பினர் காதர் மஸ்தான் முன்வைத்த கேள்விகளுக்கு பதிலளிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,

பாடசாலை மாணவர்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்ற அரசாங்கத்தின் கொள்கை ரீதியான முடிவுகளின்படி பல்வேறு திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. பாடப்புத்தகங்கள், சீருடைகள் மற்றும் 'சுரக்ஷா' காப்புறுதி என்பவற்றை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

மேலதிகமாக,6-13 தரங்களில் பயிலும் மாணவிகளுக்குத் தேவையான சானிட்டரி நாப்கின் கொள்வனவு செய்ய வவுச்சர்கள் வழங்கப்பட்டுள்ளன. ஆரம்பப் பாடசாலை மாணவர்களுக்கு மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியடைந்த 'அஸ்வெசும' நன்மைகளைப் பெறாத மாணவர்களுக்கு நிதி உதவி வழங்கப்பட்டுள்ளது. கல்வி அமைச்சு இதனை மேலும் விரிவுபடுத்துவதற்காகத் தேவையான தரவுகளைத் திரட்டி வருகின்றது.

2025 ஆண்டுக்கான .பொ.த சாதாரண தரப் பரீட்சையைப் பெப்ரவரி 17 முதல் 26 வரை நடத்துவதற்குத் தயாராக உள்ளோம். இக்காலப்பகுதி ரமழான் பெருநாள் காலப்பகுதியாக இருப்பினும், அது பரீட்சையை நடத்துவதற்குத் தடையாக இருக்காது எனச் சம்பந்தப்பட்ட தரப்பினர் அறிவித்துள்ளனர்.

புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் க.பொ.த உயர்தரப் பரீட்சைகளை ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் மாதத்திற்கு முன்னதாகவும் , க.பொ.த சாதாரண தரப் பரீட்சையை டிசம்பர் மாதத்திலும் நடத்துவதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 2026ஆம் ஆண்டிலிருந்து உரிய கால அட்டவணைப்படி பரீட்சைகளை நடத்த முயற்சித்து வருகிறோம் என்றார்.

https://www.virakesari.lk/article/237927

தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

1 month 1 week ago

தனியார் பேருந்துத் துறையின் 30 ஆண்டு சட்டச் சிக்கலுக்கு தீர்வு – அமைச்சர் பிமல் ரத்நாயக்க

05 Feb, 2026 | 02:52 PM

image

நாட்டின் தனியார் பேருந்துத் தொழில்துறையினர் கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக எதிர்கொண்டு வந்த மிகப்பாரிய சட்டச் சிக்கலுக்குத் தீர்வு காணப்பட்டுள்ளதாக போக்குவரத்து நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.

இதற்கமைய, 2026 ஜனவரி 17ஆம் திகதியிடப்பட்ட 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ள பயணிகள் சேவை அனுமதிப்பத்திர ஒழுங்குவிதிகள் இதற்கான அவசியமான சட்ட ஏற்பாடுகளை வழங்குகின்றன. இந்த புதிய விதிமுறைகளின் கீழ் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவினால் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை இரு தரப்பினரும் பூர்த்தி செய்யும் பட்சத்தில் பேருந்து உரிமையாளர்கள் தமது போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை மற்றுமொருவருக்கு சட்டபூர்வமாக கைமாற்ற முடியும் என அவர் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

போக்குவரத்து அமைச்சின் காரியாலயத்தில் நேற்று (05) நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக அவர் மேலும் விளக்குகையில்

1991ஆம் ஆண்டின் 38ஆம் இலக்க தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தின் கீழ் போக்குவரத்து அனுமதிப்பத்திரங்களை வைத்திருப்பவர்கள் அவற்றை சட்டபூர்வமாக வேறொருவருக்கு மாற்ற முடியாது. கடந்த 30 வருடங்களுக்கு மேலாக நிலவி வந்த சட்டதிட்டங்களின்படி ஒருவருக்கு வழங்கப்பட்ட பேருந்து அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக வேறொருவருக்குப் பெயரிடவோ அல்லது விற்பனை செய்யவோ முடியாது இருந்தது.

இதனால் பேருந்து உரிமையாளர்கள் இத்தொழிலிலிருந்து விலகும்போதும் பேருந்தை விற்பனை செய்யும்போதும் அந்த அனுமதிப்பத்திரத்தை மாற்ற முடியாமல் பெரும் அசௌகரியங்களுக்கு உள்ளாகினர்.

இதன் விளைவாக திரைமறைவில் பல்வேறு சட்டவிரோத முறைகள் ஊடாக அனுமதிப்பத்திரங்கள் கைமாற்றப்பட்டு வந்தன. உண்மையான உரிமையாளர் ஒருவராகவும் தொழிலை நடத்துபவர் வேறொருவராகவும் இருந்தமையால் இத்துறையில் ஒழுக்கத்தைப் பேணுவதில் பாரிய சவால்கள் காணப்பட்டன.

பேருந்து உரிமையாளர் சங்கங்களுடன் நாம் நடத்திய தொடர்ச்சியான பேச்சுவார்த்தைகளின் அடிப்படையில் அவர்களது பிரதான கோரிக்கையான அனுமதிப்பத்திர மாற்றத்திற்கு சட்ட அங்கீகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டது. இதற்கமைய 2026 ஜூன் மாதம் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுச் சட்டத்தில் திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டு தற்போது 2471/68 இலக்க அதிவிசேட வர்த்தமானி ஊடாக அதற்கான சட்ட ரீதியான அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இனிவரும் காலங்களில் உரிய நிபந்தனைகளின் கீழ் எவரும் தமது அனுமதிப்பத்திரத்தை சட்டபூர்வமாக மற்றுமொருவருக்குப் பெயரிட முடியும்.

இனிவரும் காலங்களில் இத்துறைக்குள் நுழைவதற்கு அரசியல் செல்வாக்குகளோ தனிப்பட்ட அறிமுகங்களோ அல்லது கடிதங்களோ அவசியமில்லை. எவரும் பகிரங்க கேள்விப்பத்திர நடைமுறைகளைப் பின்பற்றி இத்தொழிலுக்கு வர முடியும். ஊழல் மற்றும் மோசடிகளற்ற ஒரு போக்குவரத்து சேவையை உருவாக்குவதே எமது இலக்காகும்.

குறிப்பாக நவீன தொழில்நுட்ப அறிவைக் கொண்ட இளைஞர்கள் மற்றும் புதிய முதலீட்டாளர்கள் இத்துறைக்கு வர வேண்டும் என நாம் எதிர்பார்க்கின்றோம். இந்த புதிய சட்ட நடைமுறையானது இலங்கையின் பயணிகள் போக்குவரத்துத் துறையில் ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என நான் நம்புகின்றேன். என அமைச்சர் பிமல் ரத்நாயக்க மேலும் தெரிவித்தார்.

https://www.virakesari.lk/article/237889

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்

1 month 1 week ago

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல்

நாட்டில் கடந்த சில ஆண்டுகளாக முதலாம் ஆண்டுக்கு அனுமதிக்கப்படும் மாணவர்களின் எண்ணிக்கையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.

குறித்த விபரம் தொகைமதிப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் வெளியிட்டுள்ள புள்ளிவிபர அறிக்கைகளின் (2023-2025) தரவுகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையின் அரச பாடசாலைகளில் பயிலும் மொத்த மாணவர்களின் எண்ணிக்கை கடந்த மூன்று ஆண்டுகளில் குறிப்பிடத்தக்க வீழ்ச்சியைச் சந்தித்துள்ளது.

ஆரம்பக் கட்ட அனுமதி

2023 ஆம் ஆண்டில் 3,882,688 ஆக இருந்த மொத்த மாணவர் எண்ணிக்கை, 2024 இல் 3,816,234 ஆகவும், 2025 இல் 3,747,544 ஆகவும் குறைந்துள்ளது.

முதலாம் தர மாணவர் அனுமதியில் வீழ்ச்சி – புள்ளிவிபரத்தில் அதிர்ச்சி தகவல் | Fall In First Year Student Admissions Moe

இது 2023 முதல் 2025 வரையிலான காலப்பகுதியில் சுமார் 3.48 சதவீத ஒட்டுமொத்த வீழ்ச்சியாகும். பாலின ரீதியாகப் பார்க்கும்போது, மாணவர்களின் விகிதம் 49.5% ஆகவும் மாணவிகளின் விகிதம் 50.5% ஆகவும் அனைத்து ஆண்டுகளிலும் நிலையாகக் காணப்படுகிறது.

முதலாம் தர அனுமதி - ஒரு பெரும் சரிவு பாடசாலைகளின் ஆரம்பக் கட்ட அனுமதியில் பாரிய வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதை தரவுகள் உறுதிப்படுத்துகின்றன.

2023 இல் 287,639 ஆக இருந்த முதலாம் தர மாணவர் சேர்க்கை, 2025 இல் 266,281 ஆகக் குறைந்துள்ளது. இது சுமார் 7.42 சதவீத பாரிய வீழ்ச்சியாகும்.

குறிப்பாக, மாகாணப் பாடசாலைகளில் முதலாம் தர அனுமதி 260,845 இலிருந்து 239,714 ஆகக் குறைந்துள்ளது.

மாவட்ட ரீதியிலான மாணவர் அனுமதி மாற்றங்கள் அதிக மாணவர் சனத்தொகையைக் கொண்ட மாவட்டங்களில் மாணவர் எண்ணிக்கை கணிசமாகக் குறைந்துள்ளதைக் காணமுடிகிறது.

https://ibctamil.com/article/fall-in-first-year-student-admissions-moe-1770278171

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!

1 month 1 week ago

மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு விஜயம்!

05 Feb, 2026 | 11:13 AM

image

 (ஸ்டெப்னி கொட்பிறி)

மக்கள் விடுதலை முன்னணியின் (JVP) பொதுச் செயலாளர் டில்வின் சில்வா தலைமையிலான குழு இந்தியாவுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

“இந்திய கலாசார உறவுகளுக்கான சபை”யின் விசேட அழைப்பின் பேரில் டில்வின் சில்வா தலைமையிலான  குழு இன்று வியாழக்கிழமை (5) இந்தியாவின் புதுடில்லி நோக்கி உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டுள்ளது.

இந்த குழு இந்தியாவின் குஜராத் மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களுக்கும் விஜயம் றே்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

அத்துடன், அந்தந்த மாநிலங்களின் முதலமைச்சர்களுடன் விசேட கலந்துரையாடல்களை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

மேலும், இந்த குழு, இந்தியாவின் விவசாயம், கைத்தொழில் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சி தொடர்பான முக்கிய இடங்களை பார்வையிடவுள்ளமை குறிப்பிடத்தக்கது. 

இந்த விஜயத்தில் மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் தோழர் டில்வின் சில்வாவுடன் அனைத்து நிறுவன ஊழியர் சங்கத்தின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி ஜானக அதிகாரி, பாராளுமன்ற உறுப்பினர் கிட்ணன் செல்வராஜ், பாராளுமன்ற உறுப்பினர் இளங்குமரன் கருணாநாதன், மக்கள் விடுதலை முன்னணியின் ஊடகப் பிரிவு பிரதிநிதி ஹேமதிலக கமகே மற்றும் மக்கள் விடுதலை முன்னணியின் சர்வதேச குழு உறுப்பினர் சட்டத்தரணி கல்பனா மதுஷானீ ஆகிய தோழர் கலந்துகொண்டுள்ளனர்.

https://www.virakesari.lk/article/237855

நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி

1 month 1 week ago

நாடக நடிகர்களைப்போல செயற்படும் ஆட்சியாளர்கள்; தமிழர்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பதாலேயே போராட்டங்களும் வலுப்பெறுகின்றன - ரவிகரன் எம்.பி

Published By: Vishnu

05 Feb, 2026 | 04:38 AM

image

ஆட்சியாளர்கள் தமிழ் மக்களுக்கு பாரிய உதவிகளைச் செய்வதாக நாடகநடிகர்களைப்போல் ஒருபுறம் செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழ் மக்கள்மீது பல்வேறு வழிகளிலும் அடக்குமுறைகளைப் பிரையோகிப்பதாக வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

அந்தவகையில் ஆட்சியாளர்களின் தமிழ் மக்கள் மீதான அடக்குமுறைகள் வலுப்பெறுவதனாலேயே, அடக்குமுறைகளுக்கு எதிரான தமிழ் மக்களின் போராட்டங்களும் வலுப்பெறுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் தெரிவித்துள்ளார்.

இலங்கையின் சுதந்திரநாளினை கரிநாளாகப் பிரகடனப்படுத்தி கிளிநொச்சியில் 04.02.2026 புதன்கிழமை இடம்பெற்ற ஆர்ப்பாட்டப் பேரணியில் பங்கேற்று ஊடகங்களுக்கு கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன்போது அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்,

இலங்கையின் சுதந்திரநாள் தமிழர்களுக்கு கரிநாள் என்ற தொனிப்பொருளில் வருடாவருடம் இதேநாளில் எமது போராட்டம் தொடர்சியாக இடம்பெற்றுவருகின்றது.

இலங்கையின் ஆட்சியாளர்கள் கடந்த 1948ஆம் ஆண்டிலிருந்து தமிழ் மக்களையும் இந்த நாட்டின் பிரஜைகளாகக் கருதி அதிகாரங்களை முறையாகப் பகிர்ந்தளித்தாருந்தால் இவ்வாறான போராட்டங்களே இடம்பெற்றிருக்காது.

ஆனால் நாட்டின் ஆட்சியாளர்கள் அனைவரும் வடக்கு கிழக்கு தமிழர் தாயகப்பரப்புக்களில் தமிழ் மக்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்பது, திட்டமிட்ட சிங்களக்குடியேற்றங்களை மேற்கொள்வது, பௌத்த விகாரைகள் மற்றும் புத்தர் சிலைகளை அமைப்பது, வடக்கு கிழக்கு கடற்றொழிலாளர்களின் வாழ்வாதாரங்களைச் சூறையாடுவதென அனைத்து வழிகளிலும் தமிழ் மக்கள் மீது அடக்குமுறைகளை பிரையோகித்துவந்தனர்.

இவ்வாறு தமிழர்கள் மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்பட்டதற்கு எதிராக கடந்த காலங்களில் எம்மவர்கள் அகிம்சைவழியில் போராட்டங்களை மேற்கொண்டதுடன், அந்த அகிம்சைவழிப் போராட்டங்கள் பயனற்றுப்போன நிலையில் எமது இளையோர் ஆயுதங்களை ஏந்திப் போராடவேண்டிய நிலை ஏற்பட்டது.

குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒரு புள்ளிவிபரத்தை இச்சந்தர்ப்பத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன். தமிழீழ விடுதலைப்புலிகளின் காலத்தில் 222006 ஏக்கர் காணிகளே வனவளத்திணைக்களத்திடம் காணப்பட்டது. ஆனால் தற்போது வனவளத்திணைக்களத்திடம் 432000 ஏக்கருக்கும் மேற்பட்ட ஏக்கர் நிலங்கள் வன இலாகாவிடம் மாத்திரமுள்ளன.

குறிப்பாக்தமிழர் தாயகப் பரப்புகளில் யுத்தம் மௌனிக்கப்பட்ட பிற்பாடு வனவளத் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம், தொல்லியல் திணைக்களம், மகாவலி அதிகாரசபை, படையினர் உள்ளிட அரச இயந்திரங்களைப் பயன்படுத்தி மிகப்பாரிய அளவில் தமிழர்களின் பூர்வீக நிலங்களை ஆக்கிரமிப்புச் செய்யும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன.

எமக்கு நிலமில்லையேல் எமக்கு எதுவுமில்லை. தமிழர்களின் நிலங்கள் இவ்வாறு ஆக்கிரமிக்கப்பட்டால் அந்த நிலங்களுக்குரிய தமிழ் மக்கள் எங்கு போவது.

தமிழர்களுக்கு உதவிகளைச்செய்கின்றோமென ஆட்சியாளர்கள் ஒருபுறம் நாடக நடிகர்களைப்போல செயற்பட்டுக்கொண்டு, மறுபுறம் தமிழர்களின் காணிகளை ஆட்சியாளர்கள் கபளீகரம் செய்கின்றனர்.

எமது கடற்பரப்புக்களில் எமது கடற்றொழிலாளர்கள் சுதந்திரமாக கடற்றொழில் செயற்பாடுகளை மேற்கொள்ளமுடியாத நிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துகின்றனர்.

நில அபகரிப்புக்களின்மூலம் எமது தமிழ் மக்கள் சுதந்திரமாக விவசாயத்தை மேற்கொள்ளமுடியாதநிலையை ஆட்சியாளர்கள் ஏற்படுத்துவதுடன், கால்நடை வளர்ப்பாளர்களுக்குரிய மேச்சல் தரைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதால் கால் நடைவளர்ப்பாளர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

சிறையில் வாடும் தமிழ் அரசியல் கைதிகளை விடுவிப்பது தொடர்பில் ஆட்சியாளர்கள் உரிய கவனஞ்செலுத்துவதில்லை.

இறுதிக்கட்டப் போரின்போது இராணுவத்திடம் கையளிக்கப்பட்டும், கடத்தப்பட்டும் வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை வழங்குவதிலிருந்து ஆட்சியாளர்கள் தொடர்ந்தும் தவறிவருகின்றனர்.

இவ்வாறாக வடக்குக் கிழக்குத் தமிழர் தாயகத்தில் வாழும் எமது தமிழ் மக்கள் பல்வேறு வழிகளிலும் ஆட்சியாளர்களால் துன்பப்படுகின்றனர்.

தற்போது தமிழர்தாயகப் பரப்பில் பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் தீவிரப்படுத்தப்படுகின்றன. குறிப்பாக முல்லைத்தீவு மாவட்டத்தில் பாரிய அளவில் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

ஏற்கனவே தமிழர் தாயகப்பரப்பில் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களில் இவ்வாறான திட்டமிடப்பட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டன. இவ்வாறு அங்கு திட்டமிட்டு சிங்களக்குடியேற்றங்களை ஏற்படுத்தியதன்மூலம் அம்பாறை மற்றும் திருகோணமலை மாவட்டங்களை பெரும்பான்மையினத்தவர்களின் ஆதிக்கத்தின்கீழ் தற்போது ஆட்சியாளர் கொண்டுவந்துள்ளனர்.

ஆட்சியாளர்களின் திட்டமிட்ட பெரும்பான்மையினக் குடியேற்றங்களின் அடுத்தகட்ட செயற்பாடுகள் முல்லைத்தீவு மற்றும் மன்னார் மாவட்டங்களை நோக்கி நகர்கின்றன.

எனவே இவ்வாறாக தமிழர்களுக்கு ஆட்சியாளர்களால் அநீதி இழைக்கப்படும்போது நாம் அதற்கெதிராக நீதிக்குரல் எழுப்பாமல் இருக்கமுடியாது.

இவ்வாறு தமிழர்கள்மீது ஆட்சியாளர்கள் அடக்குமுறைகளைப் பிரயோகிக்கும்போது, இலங்கையின் சுதந்திரதினக் கொண்டாட்டங்களில் தமிழர்களால் எவ்வாறு பங்கேற்கமுடியும்.

ஆட்சியாளர்கள் தமிழ் மக்கள் மீது இவ்வாறாக அடக்குமுறைகளை பிரயோகிக்கின்றபோது, தமிழ் மக்கள் அதற்கெதிராக போராடுவதற்காக வீதிக்கு இறங்கவேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எனவே ஆட்சியாளர்கள் தமிழர்களை இந்தநாட்டில் சுதந்திரமாக வாழ்வதற்கு இடமளிக்கவேண்டும்.

ஆட்சியாளர்களால் இவ்வாறு பலவழிகளிலும் தமிழர்கள்மீது அடக்குமுறைகள் பிரயோகிக்கப்படுகின்றநிலையில், சிலஅமைச்சர்கள் வேடிக்கையான கருத்துக்களைத் தெரிவித்துவருகின்றனர். தமிழ் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதாகவும், உதவிகளைச் செய்வதாகவும் பாரிய பொய்களைக் கூறிவருகின்றனர்.

தமிழர் தாயகப்பரப்பிலுள்ள தமிழ் மக்கள் இலங்கையின் சுதந்திர தினத்தைக் கொண்டாடும் நிலையில் இல்லை. எனவே தமிழ் மக்களுக்குரிய அதிகாரங்களைப் பகிர்ந்தளியுங்கள். தமிழர்களுக்கு ஒரு அர்த்தமுள்ள அரசியல் தீர்வைவழங்க முன்வாருங்கள். உரிமைகளை வழங்குங்கள். கடந்தகாலத்தில் தமிழ் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகளுக்கு நீதியை வழங்குங்கள். தமிழ் மக்களை இந்தநாட்டில் சுதந்திரமாகவாழவிடுங்கள்.

இந்தநாட்டில் தமிழ் மக்கள் சுதந்திரமாக இல்லை. ஆட்சியாளர்களால் அடக்குமுறைகளுக்கு உள்ளாக்கப்படுகின்றார்கள் என்பதாலேயே இலங்கையின் சுதந்திரநாளை கரிநாளாக பிரகடனப்படுத்தி வடக்கிலும் கிழக்கிலும் தமிழ் மக்களால் வீதியில் இறங்கி இவ்வாறான மாபெரும் கவனயீர்ப்பு ஆர்ப்பாட்டப் பேரணிகள் முன்னெடுக்கப்படுகின்றன.

வடக்கு, கிழக்கு தமிழர்தாயகப் பரப்பில் தமிழ் மக்கள் தமக்குரிய அதிகாரங்கள், உரிமைகளுடன் எப்போது தன்நிறைவுபெற்று சுதந்திரமாக வாழ்கின்றார்களோ அன்று தான் தமிழ் மக்களுக்கு சுதந்திரநாள் - என்றார்.

https://www.virakesari.lk/article/237840

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

1 month 1 week ago

New-Project-15.jpg?resize=750%2C375&ssl=

புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சி இன்று ஆரம்பம்!

வரலாற்று சிறப்பு மிக்க தேவ்னி மோரி புத்த பெருமானின் புனித சின்னங்களின் கண்காட்சியானது இன்றைய தினம் (05) ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தலைமையில் ஹுணுபிட்டி கங்காராம விகாரையில் ஆரம்பமாகவுள்ளது.

இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திகதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இதற்கு தேவையான வசதிகளும், ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

கடந்த ஆண்டு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை விஜயத்தின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் நடத்தப்பட்ட கலந்துரையாடலின் விளைவாக, பிரதமர் மோடியின் தலையீட்டின் கீழ் இந்திய அரசாங்கத்தின் முழு அனுசரணையுடன் இலங்கைக்குக் கொண்டுவரப்பட்ட “ புத்த பெருமானின் புனித சின்னங்கள்” தரிசனத்தின் ஆரம்ப நிகழ்வைக் குறிக்கும் வகையில் புத்த பெருமானின் புனித சின்னங்களுக்கு நேற்று (04) பிற்பகல் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

Image

Image

Image

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த இடமான குஜராத்தின் அரவல்லி மாவட்டத்தில் உள்ள வரலாற்று சிறப்புமிக்க தேவ்னி மோரி தொல்பொருள் தளத்தில் உள்ள புத்த மடாலய வளாகத்தில் உள்ள ஸ்தூபியின் அருகே 1960 ஆம் ஆண்டுகளில் நடத்தப்பட்ட தொல்பொருள் அகழ்வாராய்ச்சியின் போது இந்த புனிதச் சின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.

அந்த இடத்தில் இரண்டு புனிதச் சின்ன கலசங்கள் கண்டெடுக்கப்பட்டதுடன், அவற்றில் ஒன்றில் இந்த புத்த பெருமானின் புனித சின்னங்கள் கிடைத்தன. 

அங்கு காணப்பட்ட கலசத்தில் உள்ள கல்வெட்டு, “புத்த பெருமானின் புனிதச் சின்னங்கள் வைக்கப்பட்ட இடம்” என்று எழுதப்பட்டிருந்தமை, இவற்றின் புனிதத்தை மேலும் உறுதிப்படுத்தும் வலுவான சான்றாகும்.

Image

இந்தியாவின் பரோதா அருங்காட்சியகத்தில் மிகவும் பாதுகாப்பாக வைக்கப்பட்டிருந்த இந்தப் புனிதச் சின்னங்கள், இதுவரை இந்தியாவிற்கு வெளியே கொண்டு செல்லப்படவில்லை என்பதுடன், இலங்கை மக்கள் இந்த புனிதச் சின்னங்களை தங்கள் கண்களால் பார்த்து வழிபடும் வாய்ப்புக் கிடைத்திருப்பது இதுவே முதல் முறை ஆகும்.

கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக புனிதச் சின்னங்கள் நேற்று (04) பிற்பகல் இந்நாட்டிற்கு கொண்டு வரப்பட்டதுடன், அங்கு சிறப்பு மத வழிபாடுகள் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், புனிதச் சின்னங்கள் ஹுணுபிட்டி கங்காராம விகாரைக்கு கொண்டு செல்லப்பட்டன.

பின்னர், மகா சங்கத்தினரின் ஆசிர்வாதங்களுக்கு மத்தியில், புத்த பெருமானின் புனித சின்னங்கள் தரிசன நிகழ்வை ஆரம்பித்து வைத்து, புனித சின்னங்களுக்கு ஜனாதிபதி முதல் மலர் அஞ்சலி செலுத்தி வழிபட்டார்.

அதன்படி, இன்று (05) காலை முதல் பெப்ரவரி 11 ஆம் திதி வரை ஏழு நாட்கள், 24 மணி நேரமும், வரலாற்று சிறப்புமிக்க ஹுணுபிட்டி, கங்காராம விகாரையில் இந்த புனித சின்னங்களை இந்நாட்டு மக்கள் தங்கள் கண்களால் கண்டு வழிபடும் வாய்ப்புக் கிடைக்கவுள்ளதுடன், இதற்கு தேவையான வசதிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்திய-இலங்கை நட்பை வலுப்படுத்தும் இந்த சிறப்பு நிகழ்வைக் குறிக்கும் வகையில், குஜராத் மாநில ஆளுநர் கலாநிதி தேவ்விரத்திற்கு ஜனாதிபதி விசேட நினைவுப் பரிசையும் இதன்போது வழங்கினார்.

ஹுணுபிட்டி, கங்காராம விகாரையின் விகாராதிபதி வண. கலாநிதி கிரிந்தே அஸ்ஸஜி நாயக்க தேரர்,  சிறப்பு நினைவுப் பரிசொன்றையும் ஜனாதிபதிக்கு கையளித்தார்.

வரலாற்று சிறப்புமிக்க தெவ்னி மோரி புனித சின்னங்களை இந்நாட்டிற்கு தரிசனத்திற்காக கொண்டு வருதல் தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் (MoU) புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி மற்றும் இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே ஆகியோருக்கு இடையே பரிமாற்றப்பட்டது.

சியம் மகா நிகாயவின் மல்வத்து தரப்பின் அநுநாயக்க வண. திம்புல்கும்புரே விமலதம்ம அநுநாயக்க தேரர் தலைமையிலான மகா சங்கத்தினர் மற்றும் சர்வதேச பௌத்த சம்மேளனத்தின் பொதுச் செயலாளர் Shartse Khensur Rinpoche Jangchup Choeden தேரர், இந்தியாவிலிருந்து வருகை தந்த மதிப்பிற்குரிய மகா சங்கத்தினர், புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, பொதுநிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் சந்தன அபேரத்ன, சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ உள்ளிட்ட அமைச்சர்கள், இலங்கைக்கான இந்திய பதில் உயர் ஸ்தானிகர் சத்யாஞ்சல் பாண்டே, உட்பட இந்திய அரசாங்கத்தின் விசேட பிரதிநிதிகள், ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயக்க, அமைச்சுகளின் செயலாளர்கள், பொலிஸ்மா அதிபர் பிரியந்த வீரசூரிய, பாதுகாப்புப் படைகளின் பிரதிநிதிகள் உட்பட பலர் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.

https://athavannews.com/2026/1463278

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

1 month 1 week ago

அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் அரசியல் தீர்வு உள்வாங்கப்படுவது அவசியம் - கலாநிதி குமாரவடிவேல் குருபரன்

04 Feb, 2026 | 06:23 PM

image

(நா.தனுஜா)

தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும் என கலாநிதி குமாரவடிவேல் குருபரன் சுட்டிக்காட்டியுள்ளார்.

தற்போது புதிய அரசியலமைப்பு உருவாக்கம் முக்கிய பேசுபொருளாக மாறியிருக்கும் நிலையில், அப்புதிய அரசியலமைப்புக்கான ஒரு மாதிரி வரைவை உருவாக்குவதற்காக தேசிய ரீதியில் நம்பகத்தன்மை வாய்ந்ததும், தொழில்நுட்ப ரீதியாக உறுதியானதும், உண்மையிலேயே சகலரையும் உள்ளடக்கியதுமான ஓர் அணுகுமுறையை நிறுவும் நோக்கில் 'வன் டெக்ஸ்ட் இனிஸியேட்டிவ்' (One Text Initiative) எனும் அமைப்பினால் செவ்வாய்க்கிழமை (3) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு கலந்துரையாடல் செயன்முறையொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டது. அதுமாத்திரமன்றி இதுபற்றிய தகவல்களைப் பகிர்வதுடன், கருத்தாடல்களைக் கட்டியெழுப்பும் நோக்கில் citizen's constitution.lk என்ற இணையத்தளமும் அங்குரார்ப்பணம் செய்துவைக்கப்பட்டது.

இந்நிகழ்வில் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறை குறித்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துரைக்கையிலேயே குருபரன் மேற்கண்டவாறு தெரிவித்தார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:

அரசியலமைப்பு மறுசீரமைப்பு தொடர்பான கலந்துரையாடல்கள் 2022 ஆம் ஆண்டு உருவான 'அரகலய' மக்கள் எழுச்சிப்போராட்டத்தின் பின்னரேயே தீவிரமடைந்திருக்கின்றன. இருப்பினும் அதன் பின்னரான தேர்தல்களில் வாக்களித்த தமிழ்மக்கள், தமக்கான அரசியல் தீர்வுக்கு முன்னுரிமையளித்து, அதனைப் பிரதிபலிக்கும் வகையிலேயே வாக்களித்திருக்கிறார்கள்.

அந்தவகையில் தற்போது பேசப்படும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு செயன்முறையில் தமிழர் இனப்பிரச்சினைக்கான அரசியல் தீர்வு நிச்சயமாக உள்வாங்கப்படவேண்டும். அன்றேல் அந்த அரசியலமைப்பிலிருந்து ஒரு சமூகம் வெளித்தள்ளப்பட்டுவிடும்.

அதேபோன்று இலங்கை ஒரு பல்லின அரசு என்பதை நாமனைவரும் ஏற்றுக்கொண்டிருக்கிறோமா என்ற கேள்விக்கான பதிலைக் கண்டறியவேண்டும். அதனூடாக மாத்திரமே சகலரையும் உள்ளடக்கிய அர்த்தமுள்ள அரசியலமைப்பை உருவாக்கமுடியும்.

அதுமாத்திரமன்றி அரசியலமைப்பில் சில சொற்பதங்களை உள்ளடக்கிவிட்டு, அதனை சிங்களவர்களுக்கு ஒருவிதமாகவும், தமிழர்களுக்குப் பிறிதொரு விதமாகவும் கூறி சமாளிக்கமுடியாது. அதனடிப்படையிலேயே கடந்த காலங்களில் 'ஒருமித்த நாடு' மற்றும் 'ஏக்கிய இராச்சிய' உள்ளிட்ட சொற்பதங்கள் தொடர்பான தர்க்கங்கள் உருவாகின.

தற்போது பெரும்பான்மைப்பலத்துடன் ஆட்சிபீடம் ஏறியிருக்கும் இந்தப் புதிய அரசாங்கத்துக்கு, சகலரும் ஏற்றுக்கொள்ளக்கூடியவாறான அரசியலமைப்பை உருவாக்குவதற்கும், அதனை அனைத்து மக்களையும் ஏற்றுக்கொள்ளச்செய்வதற்குமான பெருவாய்ப்பு காணப்படுகின்றது. அவ்வாய்ப்பு உரியமுறையில் பயன்படுத்தப்படவேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237833

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா

1 month 1 week ago

இன விகிதாசாரத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் சிறுபான்மை மக்களுக்கும் பகிரப்பட வேண்டும் - மேயர் அதாவுல்லா

05 Feb, 2026 | 09:52 AM

image

(ஏ.எல்.நிப்றாஸ்)

நாடு சுதந்திரமடைந்து நாம் இன்று 78 வருடங்களைக் கொண்டாடுகின்ற போதிலும் மக்கள் குறிப்பாக சிறுபான்மைச் சமூகங்கள் பல்வேறு காரணங்களினால் இன்னும் முழுமையான சுதந்திரத்தை அனுபவிக்கவில்லை என்று தேசிய காங்கிரஸ் கட்சியின் தலைவரும் அக்கரைப்பற்று மாநகர மேயருமான ஏ.எல்.எம். அதாவுல்லா தெரிவித்தார்.

மூவின மக்களும் இணைந்து காலனித்துவ சக்திகளிடம் இருந்து மீட்டெடுத்த நாட்டின் வளங்கள் சரியான முறையில் பகிரப்படவில்லை. மக்களுக்கு உண்மையான சுதந்திரத்தை உணரச் செய்வது அவசியம்.

இதன் ஒரு அங்கமாக நாட்டின் இன விகிதாசாரத்திற்கு அமைவாக அனைத்து வளங்களும் பகிரப்பட வேண்டும் என்றும் அவர் சொன்னார்.

அக்கரைப்பற்றில் நேற்று புதன்கிழமை (4) இடம்பெற்ற சுதந்திரதின நிகழ்வில் உரையாற்றிய மேயர் அதாவுல்லா மேலும் கூறுகையில்

இலங்கையின் வளங்களை கொள்ளையிடுவதற்காக காலனித்துவாதிகள் நாட்டுக்குள் வந்தனர். மூவின சமூகங்களும் ஒன்றுபட்டு போராடி சுதந்திரத்தை பெற்றோம்.

ஆனால் சுதந்திரம் கிடைத்த பிறகும் இலங்கையின் வளங்கள் மீது வெளிநாட்டுச் சக்திகள் குறியாக உள்ளன என்பதை நாம் மறந்து விடக் கூடாது.

இலங்கை தன்னகத்தே எல்லா வளங்களையும் வைத்துக் கொண்டு வெளிநாடுகளிடம் எல்லாவற்றுக்கும் கையேந்துகின்ற பாணியிலான ஒரு பொருளாதார கொள்கையை கடைப்பிடிக்கக் கூடாது. நமது வளங்கள் சரியாக பராமரிக்கப்பட்டுரூபவ் உள்நாட்டுப் பொருளாதாரம் மேம்படுத்தப்பட வேண்டும்.

இப்போது மூன்றாவது உலகப் போர் வெடித்துவிடுமோ என்ற அச்சர் அனைவருக்கும் ஏற்பட்டுள்ளது.

எனவே யுத்தமொன்று ஏற்பட்டு அதன் விளைவாக இலங்கை தனிமைப்படுத்தப்பட்டு, மீண்டுமொரு பொருளாதார வீழ்ச்சிக்கு ஆளாகிவிடாமல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை இந்த அரசாங்கம் மேற்கொள்ள வேண்டும்.

வளங்கள் சரியான முறையில் பராமரிக்கப்பட்டு அவற்றில் இருந்து உச்சபட்ச பலனைப் பெறுவதற்கு இரு மொழிகளை பேசும் நான்கு இன மக்களும் முன்னிற்க வேண்டும். மிக முக்கியமாக இன விகிதாரசத்திற்கு ஏற்ப நாட்டின் வளங்கள் இனிமேலாவது பகிரப்பட வேண்டும். அப்போதுதான் சிறுபான்மை மக்கள் சுதந்திரத்தின் பரிணாமங்களை உணர்வார்கள் என்றார்.

https://www.virakesari.lk/article/237856

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!

1 month 1 week ago

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன பதவியேற்பு!

05 FEB, 2026 | 12:08 PM

thumb_large_336133947_940223833670621_58

இலங்கையின் முதலாவது பெண் கணக்காய்வாளர் நாயகமாக சமுதிகா ஜயரத்ன இன்று வியாழக்கிழமை (05) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

நாட்டின் 42வது கணக்காய்வாளர் நாயகமாக நியமிக்கப்பட்ட அவர், இந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்ட முதல் பெண் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://www.virakesari.lk/article/237871

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

1 month 1 week ago

இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளும் ஜனாதிபதி!

செய்திகள்

image?url=https%3A%2F%2Fada-derana-tamil

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இம்மாதம் இறுதியில் இந்தியாவிற்கான உத்தியோகப்பூர்வ விஜயம் ஒன்றை மேற்கொள்ளவுள்ளார். 

டெல்லியில் நடைபெறவுள்ள 'AI Impact' உச்சிமாநாட்டில் கலந்துகொள்வதற்காகவே அவர் இந்த விஜயத்தை முன்னெடுக்கவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. 

இந்த விடயத்தை இந்தியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகர் மஹிஷினி கொலன்னே உறுதிப்படுத்தியுள்ளார்.

https://adaderanatamil.lk/news/cml92e02104tuo29n0fquk4up

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

1 month 1 week ago

கிளிநொச்சியில் குளவி கொட்டு: 39 மாணவர்கள் பாதிப்பு

image_ec997cd199.jpg

மு.தமிழ்ச்செல்வன்

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் குளவி கொட்டுக்கு இலக்கான 39 மாணவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

கிளிநொச்சி மகா வித்தியாலயத்தில் வியாழக்கிழமை (05)  காலை 8.30 மணியளவில் குளவி  கூடு கலைந்து மாணவர்கள்  குளவி கொட்டுக்குள்ளாகியத்தில் 39 மாணவர்களும் சில ஆசிரியர்களும்  கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சுமார் 2000 மாணவர்கள் வரை கல்வி கற்கும் பாடசாலை காணப்பட்ட பெரிய குளவி கூடு ஒன்று  கலைந்துள்ளது. வருடாந்த இல்ல மெய்வல்லுனர் போட்டிக்கான பயிற்சிகளுக்கு  மாணவர்கள் தயாராகிக் கொண்டிருந்த நிலையில் இச் சம்பவம்  இடம்பெற்றுள்ளது.

 இதன் போது பாடசாலை அதிபர், ஆசிரியர்கள்,  மாணவர் தலைவர்கள் ஏனைய மாணவர்களை பாதுகாப்பாக பாடசாலை வளாகத்தை விட்டு வெளியேற்றியுள்ளனர்.

  பின்னர் மாணவர்கள் அனைவரும் கிளிநொச்சி ரோட்ரிக்கோ மைதானத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதோடு, பாதிக்கப்பட்ட மாணவர்கள்   நோயாளர் காவு வண்டியில் கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

குளவி கூட்டின் ஆபத்து குறித்தும்  அதை அகற்ற வேண்டும்  என்று  இரண்டு மாதங்களுக்கு முன்னர் பாடசாலை நிர்வாக சம்பந்தப்பட்ட தரப்பினர்களுக்கு எழுத்து மூலம் கோரிக்கை விடுக்கப்பட்ட போதும் இது தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்பட்டு இருக்கவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.  

https://www.tamilmirror.lk/செய்திகள்/கிளிநொச்சியில்-குளவி-கொட்டு-39-மாணவர்கள்-பாதிப்பு/175-372041

தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

1 month 1 week ago

யாழில் முன்னெடுக்கப்பட்ட தியாகி நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல்!

05 Feb, 2026 | 10:55 AM

image

தமிழ்த் தேசியப் பற்றாளர் தியாகி திருமலை நடராஜனின் 69 வது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு தாயக நினைவேந்தல் பணிமனையால் யாழ்ப்பாணத்தில் நேற்று புதன்கிழமை (04) மாலை அனுஸ்டிக்கப்பட்டது.

04.02.1957 அன்று இலங்கையின் ஒன்பதாவது சுதந்திர தின நாளன்று தனிச் சிங்களச் சட்டத்தை எதிர்த்து தமிழர் தேசமெங்கும் சிறீலங்காவின் சுதந்திரதினத்தை தமிழர்கள் கரிநாளாக பகிஸ்கரித்தனர்.

திருமலையில் உயரமாக பறக்கவிடப்பட்டிருந்த சிங்கக்கொடியை அகற்றி கறுப்புக் கொடியைக் கட்டமுயன்ற இனப்பற்றும் தேசப்பற்றும் நிரம்பிய 22 வயது இளைஞரான தியாகி நடராஜன், சிங்கள அரச படைகளால் சுட்டு படுகொலை செய்யப்பட்டார்.

அவர் தேசியக் கொடியுடன் மண்ணில் வீழ்ந்து மாய்ந்த நிகழ்வு அன்று வடக்கு கிழக்கு தமிழர் தாயகத்தையே உலுக்கியது.

அகிம்சைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி நடராஜன் படுகொலை செய்யப்பட்டபோது தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரனுக்கு அகவை 3.

1957, பெப்ரவரி 4,ம் திகதி இலங்கை சுதந்திரம் அடைந்து சரியாக ஒன்பதாவது ஆண்டில் முதல் தமிழ்த் தேசிய விடுதலை உணர்வுடன் சிங்கள அரச படைகளின்  துப்பாக்கி சூட்டில் பலியான திருகோணமலை மண் தந்த வீரப்புதல்வன் தியாகி நடராஜனின் 69,வது ஆண்டு நினைவு நாள் அனுஸ்டிப்பு யாழ்ப்பாணத்தில் உள்ள தாயக நினைவேந்தல்  பணிமனையில் நடைபெற்றது. 

இந்நிகழ்வில் தாயக நினைவேந்தல் குழுவினர் மற்றும் தமிழ்த் தேசிய பற்றாளர்கள் என அனைவரும் கலந்து கொண்டு தியாகி நடராஜன் அவர்களின் உருவப்படத்திற்கு பொதுச்சுடர் ஏற்றி மலர் அஞ்சலி செய்து மாலை அணிவித்து கருத்துரைகள் வழங்கியிருந்தனர்.

IMG-20260205-WA0026.jpg

IMG-20260205-WA0024.jpg

IMG-20260205-WA0013.jpg

IMG-20260205-WA0014.jpg

IMG-20260205-WA0032.jpg

IMG-20260205-WA0010.jpg

IMG-20260205-WA0011.jpg

IMG-20260205-WA0000.jpg

https://www.virakesari.lk/article/237865

அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர

1 month 1 week ago

அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது ; இதற்கு பெரும்பான்மையின மக்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தவேண்டும் - சரத் வீரசேகர

04 Feb, 2026 | 06:13 PM

image

(இராஜதுரை ஹஷான்)

நாட்டின் 78ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது விடுதலை புலிகள் தமிழ் புலம்பெயர் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா? சுதந்திர தின நிகழ்வில் யுத்தத்தை வெற்றிகொண்ட இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் சரத் வீரசேகர குற்றஞ்சாட்டினார்.

கொழும்பில் புதன்கிழமை (04) கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போது மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது,

இலங்கையை ஆக்கிரமிப்பதற்கு வரலாற்று காலங்களில் மேற்கொண்ட ஆக்கிரமிப்புக்களை சிங்கள மன்னர்களும், தலைவர்களும் தோற்கடித்து நாட்டை பாதுகாத்தார்கள். 1948 ஆம் ஆண்டு காலணித்துவ ஆட்சியில் இருந்து நாடு முழுமையாக சுதந்திரமடைந்தது.

நாட்டின் ஒற்றையாட்சிக்கு எதிராகவே விடுதலை புலிகள் அமைப்பினர் ஆயுதமேந்தி போராடினார்கள். 30 ஆண்டுகால போராட்டத்தின் பின்னர் 29 ஆயிரம் இராணுவத்தினர் தமது உரிமை தியாகம் செய்து நாட்டை பாதுகாத்தனர். 2009 ஆம் ஆண்டு விடுதலை புலிகள் அமைப்பு தோற்கடிக்கப்பட்டு நாடு இரண்டாவது தடவையாக சுதந்திரமடைந்தது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இராணுவத்தினருக்கும், தேசியத்துக்கும் முன்னுரிமை வழங்கி நாட்டை ஆட்சி செய்தார். ஆனால் ஜனாதிபதி அநுரகுமார திசநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளுக்காகவே செயற்படுகிறார்.

78 ஆவது சுதந்திர தினம் தேசியத்துக்காக கொண்டாடப்பட்டதா அல்லது புலம்பெயர் விடுதலை புலிகள் அமைப்புகளுக்காக கொண்டாடப்பட்டதா என்ற சந்தேகம் காணப்படுகிறது.

2009 ஆம் ஆண்டு யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த போது பயன்படுத்தப்பட்ட பீரங்கிகள், மற்றும் போர் வாகனங்கள் சுதந்திர தினத்தில் காட்சிப்படுத்தப்படவில்லை.

அதேபோல் யுத்தத்தை முடிவுக்கு கொண்டு வந்த இராணுவத்தினர் பெருமைப்படுத்தப்படவில்லை. அரசாங்கம் இராணுவத்துக்கு எதிராகவே செயற்படுகிறது. இதற்கு பெரும்பான்மையின மக்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்த வேண்டும் என்றார்.

https://www.virakesari.lk/article/237826

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை

1 month 1 week ago

04 Feb, 2026 | 10:01 AM

image

மன்னார் நகர சபை எல்லைக்குள் நீண்டகாலமாக இயங்கி வந்த வெதுப்பகம் ஒன்றில் முகம் சுளிக்கும் அளவுக்கு சுகாதார சீர்கேடுகள் நிறைந்து காணப்பட்ட நிலையில் சுகாதாரத்துறை வெதுப்பகத்தின் மீது பல்வேறு பிரிவுகளில் சட்ட நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

மன்னார் பொது சுகாதார வைத்திய அதிகாரி பணிமனை வைத்திய அதிகாரி ரூபன் லெம்பேட்  மற்றும் அதிகாரிகள் மன்னார் நகரசபை சுகாதார உத்தியோகத்தர் இணைந்து மேற்கொண்ட ஆய்வு நடவடிக்கையின் போது மேற்குறித்த வெதுப்பகம் சுகாதார சீர்கேட்டுடன் பல நாட்கள் இயங்கி வந்தது கண்டறியப்பட்டது. 

குறித்த வெதுப்பகம் உரிய அனுமதி இல்லாமல் இயங்கி வந்தமை அத்துடன் வெதுப்பக ஊழியர்கள் மருத்துவ சான்றிதழ் இன்றி பணியாற்றியமை கண்டறியப்பட்டதை தொடர்ந்து உணவகம் முழுவதும் சுகாதாரத் துறையினர் பார்வையிட்டனர்.

அதில் பழுதடைந்த பாண்கள் களஞ்சியப்படுத்தப்பட்டிருந்தமை,சுகாதாரமற்ற முறையில் பாண்கள் தயாரிக்கப்பட்டிருந்தமை,எலி நடமாட்டம் அதிகளவில் காணப்பட்டமை,உணவுகளில் பல்லி எச்சம் காணப்பட்டமை உணவு பொருட்களில் தூசுகள் கணப்பட்டமை உள்ளடங்களாக பல்வேறு சுகாதார குறைபாடுகள் கண்டறியப்பட்டது.

இதனை தொடர்ந்து சுகாதார துறையினர் குறித்த வெதுப்பகம் மற்றும் வெதுப்பக ஊழியர்கள் மீது பல்வேறு பிரிவுகளில் வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

d8e8dd73-b629-4859-aa23-cc70fdceaadc__1_

e9743888-4b7f-48a5-83ff-3ae7bb326f9f.jpe

மன்னாரில் பணிசில் பல்லி எச்சம் ; வெதுப்பகம் ஒன்றின் மீது சுகாதாரத்துறை நடவடிக்கை | Virakesari.lk

ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி

1 month 1 week ago

04 Feb, 2026 | 10:34 AM

image

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புளியங்குளம்  அலகரை பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை (03) இடம்பெற்ற துயரச் சம்பவத்தில், மின்சாரம் தாக்கியதில் 5 வயது சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ஒட்டுசுட்டான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புளியங்குளம் அலகரை கிராமத்தைச் சேர்ந்த  5 வயதுடைய சிறுவனே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, 

குறித்த சிறுவன் தனது அம்மம்மாவுடன் புல் வெட்டுவதற்காக சென்றிருந்த நிலையில், அந்தப் பகுதியில் யானைகளைத் தடுப்பதற்காக சட்டவிரோதமாக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிறுவனின் கழுத்து சிக்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இதன் காரணமாக சிறுவன் மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்.

பின்னர் அவசரமாக ஒட்டுசுட்டான் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட போதிலும், வைத்தியசாலையில் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதைத் தொடர்ந்து, சிறுவனின் உடலம் மேலதிக சட்டவைத்திய விசாரணைகளுக்காக ஒட்டுசுட்டான் வைத்தியசாலையிலிருந்து முல்லைத்தீவு மாவட்ட வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டு, பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பாக, குறித்த காணியில் சட்டவிரோதமாக மின்சார வேலியை அமைத்த காணி உரிமையாளர் ஒட்டுசுட்டான் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளதுடன், மேலதிக விசாரணைகளை ஒட்டுசுட்டான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

ஒட்டுசுட்டான் பகுதியில் சட்டவிரோத மின்சார வேலியில் சிக்கி 5 வயது சிறுவன் பலி | Virakesari.lk

புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன!

1 month 1 week ago

04 Feb, 2026 | 03:44 PM

image

இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள தேவனிமோரி  தொல்பொருள் தளத்தில் கண்டெடுக்கப்பட்ட புனித  தாதுக்கள்  கொழும்பு கங்காராம விகாரைக்கு இன்று புதன்கிழமை (04) கொண்டுவரப்பட்டுள்ளன.

இந்த புனித  தாதுக்கள் இன்று முதல் 11 ஆம் திகதி வரை பொதுமக்களின் வழிபாட்டிற்காக காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. 

இது இரு நாடுகளுக்கும் இடையிலான ஆன்மீக மற்றும் கலாச்சார பிணைப்பை மேலும் வலுப்படுத்தும் ஒரு முக்கிய நிகழ்வாகும்.

இந்த புனித தாதுக்களுடன் குஜராத் மாநில ஆளுநர் ஸ்ரீ ஆச்சார்யா தேவ்வ்ரத் மற்றும் குஜராத் துணை முதலமைச்சர் ஸ்ரீ ஹர்ஷ் சங்கவி ஆகியோர் தலைமையிலான இந்திய தூதுக்குழுவினரும் இலங்கைக்கு வருகை தந்தனர்.

இந்த புனித தாதுக்கள் பெப்ரவரி 11 ஆம் திகதி மீண்டும் இந்தியாவுக்கு கொண்டு செல்லப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

626945807_1197675829206170_7339631689589

627124585_1197675879206165_6990676533264


புனித தாதுக்கள் இந்தியாவிலிருந்து இலங்கைக்கு கொண்டுவரப்பட்டன! | Virakesari.lk

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு

1 month 1 week ago

04 Feb, 2026 | 05:55 PM

image

“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” எனும் தொனிப்பொருளின் கீழ் காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைகளை வென்றெடுப்பதை நோக்கமாகக் கொண்ட மாநாடும் மாநாட்டு பிரகடனம் வெளியீடும் இன்று புதன்கிழமை  (04) ஹட்டன் கிருஸ்ணபவான் மண்டபத்தில் நடைபெற்றது.

சமூக நீதிக்கான மலையக வெகுஜன அமைப்பு, சம உரிமை இயக்கம் ஆகியன இணைந்து இந்த மாநாட்டை ஏற்பாடு செய்திருந்தன.

இதன்போது காணி வீட்டுரிமை, மாத சம்பளம், குடியுரிமை உள்ளிட்ட உரிமைக்கான பிரகடனமும் வெளியிட்டு வைக்கப்பட்டது.

இந்த மாநாட்டில் பெண்கள்  இயக்கத்தின் நிரோஷா குருகே, தொழிலாளர் போராட்ட மையத்தின்  சுகதா நந்த, மலையகத் தமிழ்ப் பெண்களின் சார்பில் ஞானதேவி, மலைநாட்டு மக்களின் நில உரிமைக்கான இயக்கத்தின் சார்பில் கணேஷ் கணேசமூர்த்தி, சம உரிமை இயக்கத்தின் அழைப்பாளர் இந்திரானந்த, மாநாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சிகள் மற்றும் அமைப்புகளின் சார்பில் மகேந்திரன், பெண்கள் விடுதலைக்கான இயக்கத்தின் சார்பில் பிரசாதினி,  மக்கள் போராட்ட இயக்கத்தின் தேசிய ஒருங்கிணைப்பாளர் வசந்த முதலிகே ஆகியோருடன் சமுக செயற்பாட்டளர்கள், சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் என பலரும் கலந்துகொண்டனர்.

Screenshot_20260204-141707__1_.jpg

IMG_20260204_142551_0.jpg

IMG_20260204_142957_2.jpg

Screenshot_20260204-141917__1_.jpg


“மலையக தமிழ் மக்களே, வெல்லும் வரை போராடுவோம்” என்ற தொனிப்பொருளில் ஹட்டனில் மக்கள் மாநாடு | Virakesari.lk

Checked
Wed, 03/18/2026 - 04:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr