புதிய பதிவுகள்2

’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ - சுரேன் ராகவன்

3 months 2 weeks ago
’பகிடிவதைக்கு 12 ஆண்டுகள் சிறைத் தண்டனை’ பகிடிவதைகள் தொடர்பான குற்றங்கள் நிரூபிக்கப்பட்டால், சந்தேகநபர் ஒருவருக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்குவதற்கான சட்ட ஏற்பாடுகள் உள்ளன என்று உயர்கல்வி இராஜாங்க அமைச்சர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில், " பல்கலைக்கழகங்களுக்கு உள்வாங்கப்படும் புதிய மாணவர்களை இலக்கு வைத்து புரியப்படும் பகிடிவதைகள் தொடர்பில் சட்டரீதியான கவனம் செலுத்தப்படும். கடந்த வருடத்தில் கிடைக்கப்பெற்ற 80 இற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதையுடன் தொடர்புடையனவாக கருத முடியாது. அதேநேரம், பகிடிவதை தொடர்பான முறைப்பாடுகளுக்கு சுமார் 12 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனை வழங்கப்படக்கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே, பல்கலைக்கழக மாணவர்கள் தமக்கு வழங்கப்பட்டுள்ள சுதந்திரத்தை உரிய வகையில் பயன்படுத்த வேண்டும் என்பதுடன் எதிர்கால நலனை சிந்தித்து செயற்பட வேண்டும்." - என்றார். (a) https://www.tamilmirror.lk/செய்திகள்/பகிடிவதைக்கு-12-ஆண்டுகள்-சிறைத்-தண்டனை/175-332310

மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள்

3 months 2 weeks ago
மோனாலிசா ஓவியம் மீது சூப் வீசிய பெண்கள் 16-ம் நூற்றாண்டில் ஓவியர் லியோனார்டோ டா வின்சியால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் பிரான்ஸின் தலைநகர், பாரிசில் உள்ள லூவ்ரே அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், உலக புகழ்பெற்ற மோனா லிசா ஓவியத்தின் மீது பெண் போராட்டக்காரர்கள் சூப்பை ஊற்றியுள்ளனர். துப்பாக்கி குண்டுகள் துளைக்காத கண்ணாடிக்கு பின்னால் பத்திரமாக மோனா லிசா ஓவியம் வைக்கப்பட்டு இருப்பதால் இந்த சம்பவத்தால் பாதிப்புகள் எதுவும் ஏற்படவில்லை என அருங்காட்சியகம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக வெளியான வீடியோவில் உணவு அக்கறை என்ற எழுத்துகள் பொறிக்கப்பட்ட ஆடை அணிந்து வந்த இரண்டு பெண்கள் ஓவியத்தின் மீது சூப் ஊற்றியுள்ளனர். மேலும், தாக்குதலுக்கு பிறகு ஓவியத்தின் முன் நின்று கொண்டு 'ஆரோக்கியமான மற்றும் நிலையான உணவு' உரிமை வேண்டும் என்றும், நமது விவசாய முறை நோய்வாய்ப்பட்டு விட்டது என்றும் தெரிவித்துள்ளனர். தாக்குதல் நடந்தவுடன் அருங்காட்சியக பொறுப்பாளர்கள் ஓவியத்தை கருப்பு துணி கொண்டு மூடினர். ஓவியர் லியோனார்டோ டா வின்சி அவர்களால் வரையப்பட்ட புகழ்பெற்ற மோனா லிசா ஓவியம் இதற்கு முன்பாக பலமுறை சேதப்படுத்தப்பட்டதும், ஒருமுறை திருடப்பட்டு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. https://www.tamilmirror.lk/உலக-செய்திகள்/மோனா-லிசா-ஓவியம்-மீது-சூப்-வீசிய-பெண்கள்/50-332327

ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி சிறீதரன் கடிதம்!

3 months 2 weeks ago
ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் விடுதலை செய்யப்பட்டோரை இலங்கைக்கு அனுப்பக்கோரி நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் கடிதம்! யோகி. மறைந்த இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தியின் கொலைவழக்கில் கைதுசெய்யப்பட்டு, 32 வருட சிறைத்தண்டனையின் பின் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் 11ஆம் திகதி இந்திய உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க நடவடிக்கை எடுக்குமாறு கோரி, தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். இதுதொடர்பில் சாந்தனின் தாயாரால் தனக்கு சமர்ப்பிக்கப்பட்ட கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள் காட்டி அவரால் அனுப்பிவைக்கப்பட்டுள்ள கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது; 32 ஆண்டுகால சிறைத்தண்டனையின் பின்னர் உச்ச நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டு ஒரு வருடம் கடந்துள்ள நிலையில், அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கைப் பிரஜைகளான சாந்தன், முருகன், ரொபேட்பயஸ், ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் நால்வரும் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளார்கள் என்பதை தாங்கள் கரிசனையோடு அணுகுவீர்கள் என எதிர்பார்க்கிறேன். தனது இளமைக்காலம் முழுவதையும்; சிறையில் கழித்து, முதுமைக்காலத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரகப் பாதிப்பு, கல்லீரல் பாதிப்பு என்பவற்றால் மிகக்கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள சாந்தன், தற்போது சென்னை மருத்துவமனையின் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் கடந்த 33 ஆண்டுகளாகத் தனது மகனைக் காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார், 77 வயது நிரம்பிய தனது முதுமை நிலையில் ஒருதடவையாவது தனது மகனை நேரில் பார்வையிட வேண்டும் எனவும், அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவனசெய்யுமாறும் மிக உருக்கமான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். தமிழக முதல்வராகப் பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதீத கரிசனை கொண்டிருக்கும் தாங்கள், இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்ப்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும், அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பைக் கருத்திற்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க ஆவனசெய்யுமாறு தங்களைத் தயவுடன் கேட்டுக்கொள்கின்றேன். – என்றார். (ச) https://newuthayan.com/article/ராஜீவ்_காந்தியின்_கொலைவழக்கில்_விடுதலை_செய்யப்பட்டோரை_இலங்கைக்கு_அனுப்பக்கோரி

கருத்துச் சுதந்திரமா?  அது கிரிமினல் குற்றம்

3 months 2 weeks ago
கருத்துச் சுதந்திரமா? அது கிரிமினல் குற்றம் சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அரசாங்கத்தால் அவசரமாக முன்மொழியப்பட்ட நிகழ்நிலைக் காப்புச் சட்டமூலத்தின் ஆபத்துக்களை ஊடக அமைப்புகளும் சிவில் சமூகச் செயற்பாட்டாளர்களும் சுட்டிக்காட்டியபோதும், ரணில் விக்கிரமசிங்க அரசாங்கம் அதனைச் செவிமடுக்கும் நிலையில் இல்லை என்பது தெளிவாகத் தெரிகிறது. இலங்கை ஒற்றையாட்சி அரசியலமைப்பின் 12 (1) ஆவது சரத்தை வெவ்வேறு வழிகளில் மீறுவதற்கு இடமளிக்கக்கூடும் என்று ஊடக அமைப்புகள் எச்சரித்துள்ளன. இணையப் பாதுகாப்பு எனப்படும் நிகழ்நிலைக் காப்புச் சட்டத்தை மீறும் ஒருவர் கிரிமினல் குற்றவாளியாகக் கருதப்படும் ஆபத்தும் உண்டு. கருத்துச் சுதந்திர மீறல் என்பது கிரிமினல் குற்றச்சாட்டாக நிரூபிக்கப்பட்டால், ஒருவருக்கு ஆகக் குறைந்தது இருபது வருடங்கள் வரை சிறைத் தண்டனை வழங்க முடியும். செய்தி அல்லது ஒரு தகவல் தவறான முறையில் வெளியிடப்பட்டிருந்தால் அதனைத் திருத்துவதற்கு அல்லது தண்டிப்பதற்கு வேறு வழிகள் உண்டு. ஆனால் இச் சட்ட மூலம் எந்த ஒரு சாதாரண பொதுமகனும் சிந்திப்பதைத் தடுக்கிறது. நிகழ்நிலை காப்பு நகல் சட்டமூலம் (Online Safety Bill) அரச வர்த்தமானியில் சென்ற வருடம் ஓகஸ்ட் மாதம் வெளியிடப்பட்டிருந்தது. இந்த நகல் சட்ட மூலத்துக்கு எதிராகச் சுமார் நாற்பத்து ஐந்து மனுக்கள் இலங்கை ஒற்றையாட்சி உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அவற்றைப் பரிசீலனைக்கு உட்படுத்தியிருந்த நீதியரசர்கள் சில திருத்தங்களோடு நாடாளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மையோடு நிறைவேற்ற முடியும் என்று சபாநாயகருக்கு அறிவித்திருந்தனர். ஆனால் 23 ஆம் திகதி புதன்கிழமை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டு நிறைவேற்றப்பட்ட குறித்த நகல் சட்டமூலத்தில் உயர் நீதிமன்றத்தின் பரிந்துரைகள் சேர்க்கப்படவில்லை. அதுபற்றி விவாதிக்கவும் இல்லை. எதிர்க்கட்சிகள் முன்வைத்த திருத்தங்களும் ஏற்றுக் கொள்ளப்படாமல் இச் சட்டமூலம் வாக்கெடுப்புக்கு விடப்பட்டு 46 மேலதிக வாக்குகளினால் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது. இச் சட்டம் குறித்து ஊடகவியலாளர்கள், சமூகவலைத்தள செயற்பாட்டாளர்கள் மாத்திரமல்ல வர்த்தகர்களும் அரசசார்பற்ற நிறுவனங்களும் அச்சமடைந்துள்ளன. மூன்று வருடங்கள் பதவிக்காலம் கொண்ட ஐந்து பேர் கொண்ட Online Safety Commission எனப்படும் நிகழ்நிலை காப்பு ஆணைக்குழு ஒன்றை அமைத்துச் சில தொடர்பாடல்களை தடை செய்வது இதன் பிரதான நோக்கமாகும். ஐந்து உறுப்பினர்களின் எண்ணிக்கை தேவைகளைப் பொறுத்து மேலும் அதிகரிக்கப்படலாம். ஆணைக்குழு உறுப்பினர்களை ஜனாதிபதியே நியமிப்பார். தடை செய்யப்பட்ட நோக்கங்களுக்காக நிகழ்நிலை கணக்குகள் (Online Account) மற்றும் போலி நிகழ்நிலை கணக்குகளை பயன்படுத்துவதை தடுப்பது உள்ளிட்ட சில விடயங்கள் இந்த நகல் சட்டமூலத்தில் குறிப்பிடப்பட்டுள்ளன. போலி நிகழ்நிலை கணக்குகள் குறிப்பாக முகநூல், ரூவிற்றர் போன்ற சமூகவலைத்தளங்களை ஒருவர் போலியாக வைத்திருப்பதாக இந்த ஆணைக்கு கருதினால் அல்லது முறைப்பாடு கிடைத்தால் அந்தக் கணக்குகள் தடை செய்யப்படும். ஆனால் உண்மையான முகநூல் கணக்கு ஒன்றையும் அரசியல் நோக்கில் இந்த ஆணைக்குழு போலியானது எனக் கூறித் தடை செய்யலாம் என்று ஊடக அமைப்புகள் அச்சம் வெளியிட்டுள்ளன. ஏனெனில் பிரதான ஊடகங்களில் வெளியிட முடியாத பல விடயங்களை குறிப்பாக அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் அரசியல்சார்ந்த உயர் அதிகாரிகள், அமைச்சர்கள், மற்றும் அரசாங்கத்துக்கு விசுவாசமானவர்கள் மேற்கொள்ளும் ஊழல் மற்றும் அதிகாரத் துஸ் பிரயோகங்களை சமூகவலைத்தளங்கள் வெளிப்படுத்துகின்றன. இதனால் குறித்த சமூகவலைத்தளக் கணக்குகளை இந்த ஆணைக்குழு அரசியல் நோக்கில் திட்டமிட்டுத் தடுக்கக்கூடிய ஏற்பாடுகள் இச் சட்ட மூலத்தில் உண்டு என்பது பகிரங்கமாகும். ஆணைக்குழுவின் உறுப்பினர்கள் தகவல் தொழில்நுட்பவியல், சட்டம், ஆட்சி, சமூக சேவைகள், ஊடகவியல், விஞ்ஞானம் மற்றும் தொழில்நுட்பவியல் அல்லது முகாமைத்துவ துறைகளின் ஒன்றில் அல்லது அதற்கு மேற்பட்டவற்றில் தகைமைகள் மற்றும் அனுபவத்தைக் கொண்டவர்களாக இருப்பர். இவ்வாறு நிபுணர்களைக் கொண்ட குறித்த ஆணைக்குழு பிரதான செய்தி ஊடகம் ஒன்றில் வெளியான செய்தி ஒன்றினால் பாதிக்கப்பட்ட அல்லது அரசாங்கத்தால் தடை செய்யப்பட்ட அறிக்கையை வெளியிட்ட நபருக்கு (ஊடகவியலாளருக்கு) அல்லது அவற்றுடன் தொடர்புடைய நபர்களுக்கு எச்சரிக்கை உத்தரவுகளை இந்த ஆணைக்குழு வழங்கும் அதிகாரத்தைக் கொண்டுள்ளது. இந்த எச்சரிக்கைக்கு எதிராக குறித்த செய்தியாளர் அல்லது குறித்த சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர் எந்த ஒரு நடவடிக்கையையும் எடுக்க இயலாது. அத்துடன் பாதிக்கப்பட்டுள்ள நபர்கள், அத்தகைய தடை செய்யப்பட்ட அறிக்கையிடலுக்கு பதிலளிப்பதற்கான வாய்ப்பை வழங்குமாறு பணிப்புரை வழங்கவும் முடியும். சமூக வலைத்தளங்களில் பொய்யான கூற்றுகளை அறிவிக்கின்ற நபர்களுக்கு அத்தகைய கூற்றுகள் அறிவிக்கப்படுவதை நிறுத்துமாறு அறிவுறுத்தவும், பணிப்புரை வழங்கவும் தடை செய்யப்பட்ட கூற்றொன்றைக் கொண்டுள்ள நிகழ்நிலை அமைவிடமொன்றுக்குள் (online location) இந்த ஆணைக்குழு உறுப்பினர்கள் பிரவேசித்து விசாரணை நடத்தும் சந்தர்ப்பத்தைப் பெற்றிருக்கின்றனர். அல்லது அத்தகைய நிகழ்நிலை அமைவிடத்தில் இருந்து தடை செய்யப்பட்ட கூற்றை அகற்றுவதற்கு எவரேனும் இணைய சேவை வழங்குநர்களுக்கு அல்லது இணைய இடையீட்டாளர்களுக்கு அறிவித்தல்களை வழங்கவும் நீதிமன்றத்தை அவமதிக்கும் அல்லது நீதித்துறையின் அதிகாரம் மற்றும் பக்கசார்பின்மையின் பேணுகைக்கு பாதகமாகவுள்ள எவையேனும் தொடர்பாடல்களை நீதிமன்றத்தின் கவனத்திற்கு கொண்டு செல்லவும் ஆணைக்குழு உறுப்பினர்களுக்கு அதிகாரம் வழங்கப்படவுள்ளது. இந்த ஐந்து பேர் கொண்ட ஆணைக்குழுவிற்கு எதிராக எந்தவிதமான சிவில் அல்லது குற்றவியல் வழக்கொன்றைத் தொடுக்க முடியாது. இணையத்தளத்தின் ஊடாக முன்னெடுக்கப்படுகின்ற பல்வேறு செயற்பாடுகள் இந்த நகல் சட்டமூலத்தில் குற்றங்களாக குறிப்பிடப்பட்டுள்ளன. இலங்கைக்குள் இடம்பெறுகின்ற சம்பவங்கள் தொடர்பாக பொய்யான கூற்றுக்களை பகிர்தல், நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையிலான பொய்யான அறிவிப்புகளை செய்தல், கலகத்தை ஏற்படுத்துவதற்காக பொய்யான கூற்றுகள் மூலம் அநாவசியமான முறையில் ஆத்திரமூட்டுதல், பொய்யான கூற்றொன்றின் மூலம் மதக்கூட்டம் ஒன்றைக் குழப்புதல், மத உணர்வுகளை புண்படுத்த வேண்டும் என்ற திடமான உள்நோக்கத்துடன் போலியான கூற்றுகளை பகிர்தல், மோசடி செய்தல், ஆள் மாறாட்டம் செய்து ஏமாற்றுதல், அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் உள்நோக்கத்துடன் பொய் கூற்றுகளின் மூலம் வேண்டுமென்றே நிந்தை செய்தல், கலகத்தை அல்லது அரசாங்கத்திற்கு எதிரான குற்றமொன்றை ஏற்படுத்தும் உள்நோக்கத்துடன் பொய்யான அறிவிப்புகளை பரப்புதல், துன்புறுத்தல்களை மேற்கொள்வதற்கான சம்பவங்கள் தொடர்பான கூற்றுகளை தொடர்பாடல் செய்தல் குற்றங்களாகும். அத்துடன் சிறுவர் துஸ்பிரயோகம், தவறொன்றைச் செய்வதற்காக தன்னியக்கச் செய் நிரல்களை உருவாக்குதல் அல்லது மாற்றுதல், ஆணைக்குழுவினால் வழங்கப்பட்ட பணிப்புரையுடன் இணங்கி செயற்படத் தவறுதல் என்பன இந்த சட்டத்தின் கீழ் பாரிய குற்றங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன. இந்த சட்டத்தின் கீழ் தவறிழைக்கும் ஒருவருக்கு விளக்கமறியல் உத்தரவை பிறப்பிக்க, அபராதம் விதிக்க அல்லது குறித்த இரண்டு தண்டனைகளையும் ஒரே தடவையில் விதிக்க முடியும் எனவும் இ;ச் சட்டமூலம் தெளிவாகக் கூறுகின்றது. இதேபோன்றதொரு சட்ட அமைப்பு பிரித்தானியாவில் கடந்த யூலை மாதம் நடைமுறைப்படுத்தப்பட்டது. ஆனால் கடந்த நான்கு வருடங்களாக பொதுமக்கள். ஊடகத்துறையினர், சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்கள் என பலரோடும் கலந்துரையாடியே சட்டம் பிரித்தானிய நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது. எவருக்கும் பாதிப்பில்லாத வகையில் அதேநேரம் இணையப் பாதுகாப்புக்கு ஏற்ற முறையிலும் சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களின் உரிமைகளையும் கருத்துச் சுதந்திரத்தையும் பாதிக்காத முறையில் சட்டம் இயற்றப்பட்டிருக்கின்றது. ஆனால் இலங்கைத்தீவில் இச் சட்டமூலம் உருவாக்கப்பட்டபோது எவருடனும் கலந்துரையாடப்படவில்லை. குறிப்பிட்ட சில சட்டத்தரணிகளும் சட்டமா அதிபர் திணைக்களமும் இச் சட்ட மூலத்தை தயாரித்திருக்கின்றன. அத்தோடு உயர் நீதிமன்றம் கூட இதனை அங்கீகரித்திருக்கிறது. குறிப்பிட்ட சில சரத்துக்களில் மாத்திரம் நாடாளுமன்றத்தில் திருத்தம் செய்ய வேண்டுமென உயர் நீதிமன்றம் சபாநாயகருக்கு அறிவுறுத்தியிருக்கிறது. நாடாளுமன்றத்தின் அங்கீகாரத்துக்காக எதிர்வரும் 23 ஆம் திகதி புதன்கிழமை சமர்ப்பிக்கப்பட்டாலும் ஐந்துபேர் கொண்ட ஆணைக்குழுவை நியமிக்க நாடாளுமன்றத்துக்கு அதிகாரம் வழங்கப்படுமா அல்லது ஜனாதிபதிக்கு தன்னிச்சையாக நியமிக்கும் அதிகாரம் வழங்கப்படுமா என்பது குறித்து இதுவரை எவருக்குமே தெரியாது. உயர் நீதிமன்ற அறிவுறுத்தல்களின் பிரகாரம் திருத்தங்களைச் செய்வதற்குக் கூட நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட குழு அமைக்கப்படவில்லை என எதிர்க்கட்சிகள் குற்றம் சுமத்துகின்றன. போர் நடைபெற்ற 2009 மே மாதம் வரையும் சமூகவலைத்தளங்கள் இலங்கைத்தீவில் பெரியளவில் இயங்கவில்லை. ஆனால் ஊடகங்களைக் கட்டுப்படுத்த குறிப்பாக தமிழ் ஊடகங்களையும் தமிழ் ஊடகவியலாளர்களையும் கட்டுப்படுத்த மிகக் கடுமையான முறையில் பயங்கரவாத தடைச் சட்டத்தை அரசாங்கம் வடக்குக் கிழக்கில் நடைமுறைப்படுத்தியிருந்தது. தமிழ் ஊடகத்துறை விவகாரத்தைக் கையாள இராணுவமும் புலனாய்வுத் துறையும் தன்னிச்சையாகவும் செயற்பட்டிருந்தது. இதுவரை தமிழ் ஊடகத்துறையைச் சேர்ந்த 39 பேர் கொல்லப்பட்டுள்ளனர். ஊடக நிறுவனங்கள் பல தடவைகள் குண்டு வீசித் தாக்கப்பட்டிருக்கின்றன. 1981 ஆம் ஆண்டு யாழ் பொது நூலகம் எரிக்கப்பட்ட நாளில் இருந்து இன்று வரையும் தமிழர்களின் கருத்துச் சுதந்திரத்தை இலங்கை அரசாங்கம் கிரிமினல் குற்றமாகவே ஓரக் கண்ணால் பார்க்கிறது. ஆனால் தற்போதுதான் சிங்கள ஊடகத்துறையும், சிங்கள சிவில் சமூக அமைப்புகளும், சிங்கள சமூகவலைத்தளச் செயற்பாட்டாளர்களும் கருத்துச் சுத்தந்திரத்தைக் கிரிமினல் குற்றமாகக் கருதக்கூடிய அளவுக்குச் சட்டங்களை இயற்ற முடியுமா என்று கேள்வி எழுப்பி அச்சமடைகின்றனர். அதேநேரம் மட்டக்களப்பு மயிலத்தமடுமாதவனை கூளாவடி குளத்துவெட்டை பகுதிகளில் அத்துமீறிப் பயிர் செய்கையிலீடுபடும் சிங்கள விவசாயிகள், இராணுவத்தின் ஒத்துழைப்புடன் போடப்பட்ட மின்வேலிகளில் சிக்கி உயிரிழக்கும் பசுமாடுகள் பற்றிய செய்திகளை வெளியிட சிங்கள ஆங்கில ஊடகங்கள் வெளியிட மறுக்கின்றன. அவ்வாறு வெளியிட்டாலும் சிங்கள விவசாயிகளைத் தடுக்கும் தமிழ்ப் பயங்கரவாதிகள் என்றே குறிப்பிடுகின்றன. ஆகவே இச் சட்டமூலத்தை கருத்துச் சுதந்திரத்துக்கு எதிரான கிரிமினல் குற்றம் என்றால், தமிழர்கள் விடயத்தில் சிங்கள ஊடகத்துறையினர் கையாளும் செய்தியிடல் முறையும் கிரிமினல் குற்றமல்லவா? போர்க் காலத்தில் சில சிங்கள ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டதை மறுப்பதற்கில்லை. அவ்வாறு முற்போக்காகச் சிந்திக்கக் கூடிய சிங்கள ஊடகவியலாளர்கள் தற்போது மிகவும் அரிதாகவே உள்ளனர். http://www.samakalam.com/கருத்துச்-சுதந்திரமா-அ/

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
கம்பகவிற்கு நான் சென்றபோது எனது அக்காவும் கொழும்பிலிருந்து வந்திருந்தார். சித்தியின் வீட்டில் மதிய உணவை உட்கொண்டுவிட்டு பிற்பகலில் கொழும்பிற்குக் கிளம்பினோம். வத்தளையில் அக்கா இறங்கிக்கொள்ள நான் கொட்டகேனவுக்கு வந்து சேர்ந்தேன். அன்றிரவு ஜெயரட்ணம் கொழும்பில் உள்ள ஹொட்டேல் ஒன்றில் தங்க ஏற்பாடு செய்திருந்தான். மறுநாள், மார்கழி 1 ஆம் திகதி அவனுடைய பிறந்தநாள். கொழும்பில் தன்னுடைய‌ நண்பர் ஒருவரது திருமணத்திற்காக வந்திருந்த அவன் என்னையும் அன்றிரவு தன்னுடன் ஹோட்டலில் தங்குமாறு அழைத்திருந்தான். இரவு 8 மணியளவில் ஹொட்டேலுக்குச் சென்றேன். கிங்ஸ்பெரி என்று அழைக்கப்படும் ஐந்து நட்சத்திர விடுதி அது. 2019 ஈஸ்ட்டர் குண்டுத் தாக்குதலில் தாக்கப்பட்ட விடுதிகளில் ஒன்று. அறையில் சிறிதுநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு இரவுணவிற்காக‌ சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். பல்வேறான உணவுவைகள். விரும்பியதைக் கூச்சமின்றி எடுத்துச் சாப்பிடக்கூடிய வசதி. உண்டு கொண்டிருக்கும் போது அங்கு கடமையாற்றும் பலர் நண்பனிடம் வந்து மரியாதையாகப் பேசுவதும் சுகம் விசாரிப்பதும் தெரிந்தது. அடிக்கடி இங்கு வந்துபோகிறான் என்பதும் புரிந்தது. உணவருந்திக்கொண்டே சுற்றுமுற்றும் நோட்டம் விட்டேன். சுமார் 200 அல்லது 250 விருந்தினர்கள் அங்கு உணவருந்திக்கொண்டிருந்தார்கள். பெரும்பாலானவர்கள் சிங்களவர்கள். ஒரு சில முஸ்லீம் குடும்பங்களும் அங்கிருந்தன. தமிழ்நாட்டைச் சேர்ந்த தமிழர்கள் சிலர் குழுவாக வந்திருந்தனர். இரவுச் சாப்பாடு ஒருவருக்கு 7500 இலங்கை ரூபாய்கள். இலங்கையில் சாதாரண தொழில் செய்யும் ஒருவருக்கு ஒருவேளைச் சாப்பாட்டிற்கு இவ்வளவு தொகை செலுத்துவதென்பது நினைத்துப் பார்க்கமுடியாத விடயம். ஆனாலும், பலர் அங்கே இருந்தனர். சுமார் 9:30 அல்லது 10 மணியளவில் மீண்டும் அறைக்கு வந்தோம். பல்கனியில் இருந்தபடி காலிவீதியின் போக்குவரத்தைப் பார்த்துக்கொண்டே பேசினோம். இரவு 12 மணிவரை இருந்து நண்பனுக்கு பிறந்தநாள் வாழ்த்துச் சொல்லி, அறையில் இருந்த கேக்கினை சிறிது வெட்டி உண்டுவிட்டு தூங்கிப்போனேம். முதலாம் திகதி காலை 7 மணிக்கு தூக்கம் கலைந்து எழுந்து, வழமைபோல நண்பனுக்கு முன்னர் காலைக்கடன் கழித்து, நண்பன் ஆயத்தமாகியதும் கீழே இருக்கும் உடற்பயிற்சிக் கூடத்திற்குச் சென்று முப்பது நிமிடம் உடற்பயிற்சியில் ஈடுபட்டு, குளித்துவிட்டு காலையுணவிற்கு மறுபடியும் சிற்றுண்டிச்சாலைக்குச் சென்றோம். நண்பனது பிறந்தநாள் குறித்து அங்கு பணிபுரிபவர்கள் நன்கு அறிந்தே இருந்தார்கள். ஆளாளுக்கு வந்து வாழ்த்துச் சொல்லிச் சென்றார்கள். நாம் காலையுணவை உட்கொண்டு முடித்ததும் தாமே தயாரித்து வைத்திருந்த பிறந்தநாள் கேக்கினை கொண்டுவந்து, சுற்றிநின்று சிலர் வாழ்த்துப்பாட, நண்பன் கேக்கினை வெட்டினான். அங்கும் சில புகைப்படங்களை எடுத்துக்கொண்டோம். சிறிதுநேரம் அறைக்குச் சென்று பேசிவிட்டு அவனிடமிருந்து விடைபெற்று நான் கொட்டகேனவுக்குப் போனேன். மறுநாள்ப் பயணம். கொழும்பில் சில பொருட்களை வாங்கவேண்டி இருந்தமையினால், பிற்பகலில் கொட்டகேனவை சுற்றி வலம் வந்தேன். இரவானதும் நான் தங்கியிருந்த உறவினர்கள் வீட்டில் சிலநேரம் பேசிக்கொண்டிருந்துவிட்டு 10 மணியளவில் குட்டித்தூக்கம் ஒன்றிற்காக முயன்றேன், தோல்வியில் முயற்சி முடிந்தது. அதிகாலை 3 மணிக்கு விமானம். விமான நிலையத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கு முன்னராவது நிற்கவேண்டும் என்பதால் 12 மணியளவில் வீட்டிலிருந்து கிளம்பினோம். சுங்கப் பகுதியில் பிரச்சினை ஏதும் இருக்கவில்லை. கூடவந்த சித்தப்பாவிற்கு சைகை காட்டி வழியனுப்பிவைத்து விட்டு தில்லிக்குச் செல்லும் இந்தியன் எயர்லைன் விமான அலுவலகம் நோக்கி நடக்கத் தொடங்கினேன்

ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் - செய்திகள்

3 months 2 weeks ago
ஐசிசி 19 வயதின் கீழ் உலகக் கிண்ணத்தில் ஆஸி.யிடம் இலங்கைக்கு முதலாவது தோல்வி Published By: DIGITAL DESK 3 29 JAN, 2024 | 11:15 AM (நெவில் அன்தனி) தென் ஆபிரிக்காவில் நடைபெற்றுவரும் ஐசிசி 19 வயதுக்குட்பட்ட உலகக் கிண்ண கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் சி குழுவில் இடம்பெறும் இலங்கை முதலாவது தோல்வியைத் தழுவியது. அவுஸ்திரேலியாவுக்கு எதிராக கிம்பர்லியில் ஞாயிற்றுக்கிழமை (28) நடைபெற்ற போட்டியில் 6 விக்கெட்களால் இலங்கை தோல்வி அடைந்தது. இலங்கை இதுவரை பங்குபற்றிய 3 லீக் போட்டிகளிலும் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தவறியதுடன் 208 ஓட்டங்களையே (49.5 ஓவர்களில்) அதிகப்பட்ச மொத்த எண்ணிக்கையாக அவுஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பெற்றது. இலங்கை துடுப்பாட்டத்தில் ஒவ்வொரு போட்டியிலும் யாராவது ஒரு வீரர் மாத்திரமே 50க்கும் மேற்பட்ட ஓட்டங்களைப் பெறுகிறார். ஏனையவர்கள் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காதது இலங்கை அணிக்கு தாக்கத்தை ஏற்படுத்துவதாக அமைகிறது. அவுஸ்திரேலியாவுடனான போட்டியிலும் தினுர கலுபஹன மாத்திரமே திறமையாகத் துடுப்பெடுத்தாடி அரைச் சதம் குவித்தார். ஆரம்ப வீரர் புலிந்து பெரேரா தொடர்ந்து துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காததுடன் இன்றைய போட்டியில் ஓட்டம் பெறாமல் ஆட்டம் இழந்தார். அணித் தலைவர் சினேத் ஜயவர்தன (16), சுப்புன் வடுகே (17) ஆகிய இருவரும் மிகவும் நிதானத்துடன் 47 ஓட்டங்களைப் பகிர்ந்து அணிக்கு ஓரளவு தெம்பை ஊட்டினர். தொடர்ந்து ரவிஷான் டி சில்வாவுடன் 4ஆவது விக்கெட்டில் 46 ஓட்டங்களையும் ருசந்த கமகேயுடன் 5ஆவது விக்கெட்டில் 44 ஓட்டங்களையும் தினுர கலுபஹன பகிர்ந்து அணியை ஒரளவு நல்ல நிலையில் இட்டார். ஆனால், இந்த மூவரும் 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் ஆட்டம் இழந்தனர். ரவிஷான் டி சில்வா 30 ஓட்டங்களையும் ருசந்த கமகே 10 ஓட்டங்களையும் பெற்றனர். தினுர கலுபஹன 78 பந்துகளில் 6 பவுண்டறிகள், 3 சிக்ஸ்கள் உட்பட 64 ஓட்டங்களைப் பெற்றனர். மத்திய வரிசையில் ஷாருஜன் சண்முகநாதன் 21 ஓட்டங்களைப் பெற்று கடைசியாக ஆட்டம் இழந்தார். பந்துவீச்சில் கெலம் விட்லர் 28 ஓட்டங்களக்கு 3 விக்கெட்களையும் மாஹ்லி பியடமன் 30 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் டொம் கெம்பெல் 47 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர். பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலியா 48.5 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து 211 ஓட்டங்களைப் பெற்று வெற்றியீட்டியது. ஹெரி டிக்சன் (49), சாம் கொன்ஸ்டாஸ் (23) ஆகிய இருவரும் 71 ஓட்டங்களைப் பகிர்ந்து சிறந்த ஆரம்பத்தை இட்டுக்கொடுத்தனர். எனினும், அவர்கள் இருவரைத் தொடர்ந்து மேலும் இருவர் குறைந்த எண்ணிக்கைகளுடன் ஆட்டம் இழந்தனர். (129 - 4 விக்.) ஆனால், ரெயான் ஹிக்ஸ், டொம் கெம்பெல் ஆகிய இருவரும் பிரிக்கப்படாத 5ஆவது விக்கெட்டில் 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியின் வெற்றியை உறுதிசெய்தனர். ரெயான் ஹிக்ஸ் 77 ஓட்டங்களுடனும் டொம் கெம்பெல் 33 ஓட்டங்களுடனும் ஆட்டம் இழக்காதிருந்தனர். பந்துவீச்சில் விஷ்வா லஹிரு 24 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களைக் கைப்பற்றினார். https://www.virakesari.lk/article/175030

இரண்டாம் பயணம்

3 months 2 weeks ago
யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பிற்கான புகையிரதப் பயணம் சுவாரசியமாக அமைந்திருந்தது. பல விடயங்கள் குறித்து அலசினோம். பாடசாலை நாட்கள், நண்பர்கள், தொழில், பிள்ளைகள் என்று பல விடயங்கள். நானும் அதே புகையிரதத்தில் ஜெயரட்ணத்துடன் கொழும்பு செல்கிறேன் என்று அவரது மனைவிக்கு தெரிந்திருந்தமையினால் எனக்கும் சேர்த்து மதிய உணவு கொடுத்துவிடப்பட்டிருந்தது. சோறு, கோழிக்கறி, முட்டை, உருளைக்கிழங்கு என்று அருமையான வீட்டுச் சாப்பாடு. பேசிக்கொண்டே சாப்பிட்டு முடித்தோம். எனது தாயாரின் தங்கைகளில் ஒருவர் கம்பகவில் வாழ்ந்து வருகிறார். 80 களில் கிழக்கின் சிங்களக் குடியேற்றக்கிராமமான வெலிக்கந்தைக்கு தொழில் நிமித்தம் சென்றவேளை அங்கு அவருடன் பணிபுரிந்த அநுராதபுரத்தைச் சேர்ந்த சிங்களவர் ஒருவரை எனது சித்தி காதலித்து திருமணம் முடித்திருந்தார். வீட்டில் கடுமையான எதிர்ப்பு இருந்தபொழுதிலும் அவர் தனது முடிவை மாற்றிக்கொள்ளவில்லை. சித்தியின் கணவர் சுதந்திரக் கட்சியின் தீவிர ஆதரவாளர். சிறிமா முதல் சந்திரிக்கா வரை அனைத்து சுதந்திரக் கட்சித் தலைவர்களையும் தீவிரமாக ஆதரித்து வந்தவர். சந்திரிக்கா ஆட்சியில் இருந்தகாலத்தில் அவர் குறித்துப் பேசும்போது மரியாதையாக "மேடம்" என்றே பேசுவார். அவ்வளவு விசுவாசம். 80 களின் பிற்பகுதியிலும் 90 களின் ஆரம்பப்பகுதியிலும் சித்தியும் கணவரும் பதவிய, மண‌லாறு (வலிஓய), அத்தாவட்டுனுவெவ, சம்பத்நுவர ஆகிய சிங்களக் குடியேற்றங்களில் மகாவலி அபிவிருத்தித் திட்டத்தின் கீழ் வேலை செய்து வந்தார்கள். அவர்களுக்கு ஒரு மகனும் பிறந்தான். சித்தியின் கணவர் தனது மகனை சிங்கள பெளத்தனாக வளர்ப்பதில் மிகுந்த கவனம் செலுத்தினார். எக்காரணம் கொண்டு அவன் தனது தாய்வீட்டாருடன் நெருங்கிப் பழகுவதை அவர் விரும்பவில்லை. மேலும், இனப்பிரச்சினை தொடர்பான சிங்களவர்களின் நிலைப்பாட்டினை அவனுக்குப் புரியவைப்பதிலும் அவர் வெற்றி கண்டிருந்தார். இதில் சித்தியின் சொல்லிற்கு எந்தப் பெறுமதியும் இருக்கவில்லை. அவர்களின் குடும்பம் தொடர்ச்சியாக சிங்களப் பகுதிகளிலேயே வாழ்ந்துவந்ததனால், சித்தியும் நாளடைவில் தன்னை ஒரு சிங்களப் பெண்ணாகவே அடையாளப்படுத்திக்கொண்டார். குடியேற்றக்கிராமங்களில் வாழ்ந்துவந்ததனால் இராணுவத்தினருடனான பழக்கமும், அப்பகுதிகள் மீதான புலிகளின் தாக்குதல்கள் தொடர்பான அனுபவமும் அவர்களுக்கு இருந்தது. நாம் 90 களின் ஆரம்பத்தில் கொழும்பிற்கு வந்ததையடுத்து சித்தியும் கொழும்பு மகாவலி அபிவிருத்திச் சபை அலுவலகத்திற்கு மாற்றலாகி வர சித்தியின் கணவரோ கஹட்டகஸ்டிகிலிய எனும் அநுராதபுரக் கிராமங்களில் ஒன்றில் கிராம சேவகராக பணியாற்றி வரலானார். சித்தியுடன் அவரது மகனும் கொழும்பில் எங்களுடன் தங்கிப் படித்துவந்தான். விடுமுறைகளுக்கு அநுராதபுரம் சென்று வரும்வேளை எனக்கும் சித்தியின் மகனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்படும். எல்லையோரக் கிராமங்களில் நடக்கும் மோதல்களில் புலிகளைக் கொன்றுவிட்டோம், ஆயுதங்களைக் கைப்பற்றிவிட்டோம் என்று அரசதரப்புச் செய்திகளை அப்படியே உண்மையென்று நம்பி என்னுடன் வந்து வாதாடுவான். வயதில் சிறியவனான அவனிடம் நான் தேவையற்ற விதமாக அரசியல் பேசுவதாக சித்தி என்னைக் கடிந்துகொள்வதுண்டு. "நீங்கள் அவனுக்கு உண்மையைச் சொல்லி வளர்த்திருந்தால் அவன் இப்படிப் பேசமாட்டான்" என்று நான் கூறுவேன். ஆனால், அவரால் அதனைச் செய்யமுடியாது என்பது எனக்குத் தெரியும். ஆனால், காலப்போக்கில் சித்தியின் கணவரின் அதிதீவிர சிங்கள பெளத்த இனவாதம் மெளனித்துப் போனது, குறைந்தது அப்படிக் காட்டிக்கொண்டார். எனது தாயாரின் சகோதரர்கள் அவரது குடும்பத்திற்குப் பெருமளவு பண உதவிகளைச் செய்திருந்தனர். அதுமட்டுமல்லாமல் அவரது மருத்துவச் செலவுகளுக்கும் அவர்களே உதவிசெய்துவந்தனர். ஆகவே, தனது கடும்போக்கு அரசியலை எம்முடன் பேசுவதைத் தவிர்க்கத் தொடங்கினார். ஆனால் மகனோ அவரைவிடவும் மிகத்தீவிரமான சிங்களத் தேசியவாதியாக மாறிப்போனான். எனது தாயாரின் சகோதரர்கள் வெளிநாட்டிலிருந்து அவர்களைப் பார்க்கச் செல்லும் சந்தர்ப்பங்களில் மனம் புண்படும் விதமாக அரசியல் பேசியிருக்கிறான். சில முறை அவன் அப்படிப் பேசுவதை அவனது தந்தையே தடுத்து, "யாருடன் பேசுகிறாய் என்பதை மனதில் வைத்துக்கொள்" என்று கூறிய சந்தர்ப்பங்களும் இருந்திருக்கின்றன. அவர்களே இப்போது கம்பகவில் வசித்து வருகிறார்கள். சிட்னியிலிருந்து கிளம்பும்போது சித்தியின் கணவருக்குச் சுகமில்லை என்று கேள்விப்பட்டேன். சரி, இவ்வளவு தூரம் வந்துவிட்டேன், அவரையும் ஒருமுறை பார்த்துவிட்டே வரலாம் என்று எண்ணி ஜெயரட்ணத்திடம் விடைபெற்றுக்கொண்டு கம்பகவை புகையிரதம் அடைந்தபோது இறங்கிக்கொண்டேன். புகையிரத நிலையத்திலிருந்து அரைமணிநேர பஸ் பயணம், பின்னர் ஓட்டோவில் பத்துநிமிடம் என்று பயணித்து சித்தியின் வீட்டை அடைந்தேன். 2018 இல் பார்த்ததுபோல சித்தி இருந்தார். ஆனால் கணவரோ சற்றுச் சுகயீனமுற்று இருப்பது தெரிந்தது. சில வருடங்களுக்கு முன்னர் வீட்டில் ஏற்பட்ட விபத்தொன்றினால் நடக்க அவஸ்த்தைப்பட்டுக்கொண்டிருந்தார். என்னைக் கண்டதும் வரவேற்றார். ஊர்ப்புதினங்கள், தொழில், வாழ்க்கை என்று சில விடயங்கள் குறித்துப் பேசினோம். அரசியல் கடுகளவேனும் வெளியில் வரவில்லை. அதை அவரே தவிர்ப்பதுபோலத் தோன்றியது எனக்கு. மகன் திருமணம் முடித்து வேறு இடத்தில் வசித்துவருகிறான் என்று தெரிந்தது. தம்மை அடிக்கடி வந்து பார்ப்பதையே மகன் தவிர்க்கிறான் என்கிற கவலை அவர்கள் இருவரிடத்திலும் இருக்கிறது. விடைபெற்று வரும்போது என்னைக் கட்டியணைத்து வழியனுப்பினார் சித்தியின் கணவர். சிலவேளை தனது மகனை நினைத்து அவர் ஏங்கியிருக்கலாம். தனிப்பட்ட ரீதியில் அவருடன் எனக்கு மனக்கஸ்ட்டம் ஏதுமில்லை. நான் எதிர்ப்பது அவரது தீவிர சிங்கள பெளத்த மனநிலையினைத்தான். 40 வருட திருமணவாழ்வில் சிங்களவரான அவருக்கு தமிழர் தரப்பு நியாயத்தை சித்தியினால் எடுத்துக்கூறமுடியாமைக்காக அவர்மீது சற்று ஏமாற்றும் இற்றைவரை இருந்தே வருகிறது.

ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்

3 months 2 weeks ago
ஜோபைடன் பலவீனமானவர் திறமையற்றவர்; பிரச்சாரங்களில் டிரம்ப்; அமெரிக்க பயங்கரவாத தாக்குதல்களை எதிர்கொள்வதாகவும் தெரிவிப்பு Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 03:29 PM cnn அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பலவீனமானவர், திறமையற்றவர் என்ற வாதத்தை முன்வைத்துவரும் முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் வெளிநாடுகளிலும் உள்நாட்டிலும் நிலைமை அமெரிக்காவின் கட்டுப்பாட்டை மீறி செல்கின்றது எனவும் தெரிவித்துவருகின்றார். அமெரிக்கா தன்னை காப்பாற்றுவதற்கு அவசியமான வலுவான நபராக டிரம்ப் தன்னை முன்னிறுத்திவருகின்றார். நெவெஸ்டாவில் ஆற்றிய உரையில் பைடனின் எல்லை கொள்கைகளை டிரம்ப் கடுமையாக சாடியுள்ளார். இதன் காரணமாக எந்நேரத்திலும் தேசிய பாதுகாப்பு பேரழிவொன்று இடம்பெறலாம் என டிரம்ப் தெரிவித்துள்ளார். கடந்த மூன்று வருடங்களில் இடம்பெற்ற விடயங்களால் அமெரிக்காவில் பாரிய பயங்கரவாத தாக்குதலிற்கான ஆபத்துள்ளது பல தாக்குதல்கள் இடம்பெறலாம் எனவும் டிரம்ப் எச்சரித்துள்ளார். இதேவேளை மத்திய கிழக்கில் மூன்று அமெரிக்க படையினர் கொல்லப்பட்ட விடயத்தையும் முன்னாள் ஜனாதிபதி தனக்கு சாதகமாக பயன்படுத்த முயல்கின்றார். இதற்கான காரணம் பைடன் என குற்றம்சாட்டியுள்ள டிரம்ப் பைடனின் போதிய வலிமையின்மையே இதற்கு காரணம் என அவர் தெரிவித்துள்ளார். நான் வெள்ளை மாளிகையில் இருந்திருந்தால் தற்போதைய யுத்தங்கள் ஒருபோதும் இடம்பெற்றிருக்காது என குறிப்பிட்டுள்ள அவர் உலகம் முழுவதும் அமைதி நிலவியிருக்கும் ஆனால் தற்போது நாங்கள் மூன்றாம் உலக யுத்தத்தின் விளிம்பில் நிற்கின்றோம் எனவும் தெரிவித்துள்ளார். https://www.virakesari.lk/article/175068

பித்தப்பை புற்றுநோய்

3 months 2 weeks ago
பித்தப்பை புற்றுநோய்: எந்தெந்த அறிகுறிகளை அலட்சியம் செய்யக்கூடாது? யாருக்கு வரும் வாய்ப்பு அதிகம்? பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பித்தப்பை புற்றுநோய் அரிதானது. ஆரம்பக் கட்டத்தில் பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்பட்டால், குணப்படுத்துவதற்கான வாய்ப்புகள் அதிகம். ஆனால் பெரும்பாலான பித்தப்பை புற்றுநோய்கள் தாமதமான கட்டத்தில் கண்டறியப்படுகின்றன, அப்போது நோயை சமாளிப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவு. இந்தியாவின் வடக்கு மற்றும் கிழக்கு பகுதிகளிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது. இதற்கான காரணம் என்ன? பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள், சிகிச்சைகள் குறித்த தகவல்களை சென்னை ஓமந்தூரார் பன்னோக்கு மருத்துவமனையின் புற்றுநோய் அறுவை சிகிச்சை பேராசிரியர் மருத்துவர் டி.சுரேஷ்குமார் மற்றும் ஐஐடி மெட்ராஸ் பகுதிநேர பேராசிரியரும் அடையாறு புற்றுநோய் மருத்துவமனையில் பணிபுரிந்த மருத்துவருமான டி.ராஜ்குமார் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டனர். பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயின் அறிகுறிகள் என்ன? பித்தப்பை புற்றுநோய் என்பது பித்தைப்பையில் உருவாகும் செல்களின் வழக்கத்துக்கு மாறான வளர்ச்சியாகும். “எல்லாருக்கும் இல்லை என்றாலும், சிலருக்கு வயிற்று பகுதியில் வலி இருக்கும். வயிறு உப்பசம், போதிய செரிமானம் இருக்காது. சிலருக்கு, பித்தநீர் வெளியேறுவதை தடுக்கும் வகையில் ஏற்படும் obstructive jaundice ஏற்படலாம். இந்த வகையான மஞ்சள் காமாலை ஏற்பட்டால், பித்தப்பை புற்றுநோய்க்கான பரிசோதனை செய்யப்படும்” என்று பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறைகளை விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார். பித்தப்பை புற்றுநோயின் முக்கிய அறிகுறிகள் வயிற்று வலி, குறிப்பாக வயிற்றின் மேல் வலது பகுதியில் வயிற்று உப்பசம் எடை குறைப்பதற்கான முயற்சிகள் எடுக்காமலே எடை குறைவது மஞ்சள் காமாலை: தோல் மற்றும் கண்களின் வெள்ளை பகுதியில் மஞ்சள் நிறமாற்றம் பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பையின் செயல்பாடுகள் என்ன? பித்தப்பை என்பது நமது வயிற்றின் வலது பக்கத்தில், கல்லீரலுக்குக் கீழே உள்ள ஒரு சிறிய, பேரிக்காய் வடிவ உறுப்பு ஆகும். இது சுமார் 3 அங்குல நீளமுடையது. பித்தப்பை கல்லீரலால் உற்பத்தி செய்யப்படும் செரிமான திரவமான பித்தத்தை சேமிக்கிறது. பித்தம் என்பது கல்லீரல் உற்பத்தி செய்யும் திரவமாகும். பித்தநீர் முக்கியமாக கொழுப்பு, பிலிரூபின் மற்றும் பித்த உப்புகளின் கலவையாகும். உணவில் உள்ள கொழுப்புகளை செரிமானம் செய்ய இந்த திரவம் உதவுகிறது. பித்தப்பை சுமார் 50 மில்லி லிட்டர் பித்தத்தை சேமித்து வைக்கிறது. நமது சிறுகுடலில் கொழுப்புள்ள உணவு இருக்கும்போது, பித்தப்பை பித்தத்தை வெளியிடுகிறது. பித்த கொழுப்பை உடைத்து சிறிய துண்டுகளாக மாற்றுகிறது, இது சிறு குடலில் உள்ள கொழுப்பைக் கொண்ட உணவை உறிஞ்சுவதை எளிதாக்குகிறது. நாம் சாப்பிட்ட பிறகு, சுருங்கிய பலூன் போல, நமது பித்தப்பை காலியாக இருக்கும். அது மீண்டும் நிரப்பப்படுவதற்காக காத்திருக்கும். பித்தப்பை மற்ற செரிமான உறுப்புகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. பித்த நாளங்கள் கல்லீரலில் இருந்து சிறுகுடலுக்கு பித்தத்தை கொண்டு செல்லும் குழாய் அமைப்பு. பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயை எளிதில் கண்டறிய முடியாததற்கு என்ன காரணம்? பித்தப்பை புற்றுநோய்க்கான அறிகுறிகள், இந்த நோய்க்கு மட்டுமல்லாமல், மற்ற செரிமான பிரச்சனைகளுக்கும் ஏற்படும் பொதுவான அறிகுறிகளாகும். இருப்பினும், இந்த அறிகுறிகள் நீடித்து நிலைத்திருந்தால் அல்லது மோசமடைந்தால், அவை புற்றுநோயாக இருக்க வாய்ப்புண்டு. “பித்தைப்பை புற்றுநோயை பொதுவாக முற்றிய நிலையிலேயே கண்டறிய முடிகிறது. ஏனென்றால், ஆரம்ப நிலையில் எந்த அறிகுறிகளும் இருக்காது. அறிகுறிகள் தென்படும் போது, அது அருகில் உள்ள கல்லீரல், பித்தநீர் குழாய், நெரிகட்டு ஆகியவற்றில் பரவியிருக்கும். அப்போது தான் வயிற்று வலி அல்லது மஞ்சள் காமாலை ஏற்படும். வட மாநிலங்களில் மஞ்சள் காமாலை என்றாலே பித்தப்பை புற்றுநோய் என்று கருதப்படும்” என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார். பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் சுரேஷ்குமார் பித்தப்பை புற்றுநோய் ஏன் இந்தியாவின் வட மாநிலங்களில் அதிகமாக உள்ளது? பித்தப்பை புற்றுநோய் இந்தியாவின் தென் மற்றும் மேற்கு மாநிலங்களில் அரிதானதாக இருக்கிறது. ஆனால் வட இந்தியாவில் அதிகமாக உள்ளது. இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வுகளின் படி, வட இந்தியாவை விட தென் இந்தியாவில் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் விகிதம் 10 மடங்கு குறைவாக உள்ளது. உதாரணமாக சென்னையில் ஒரு லட்சத்தில் 0.8 பெண்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. ஆனால் டெல்லியில், ஒரு லட்சத்தில், 8.9 பெண்கள் பித்தப்பை புற்றுநோய் ஏற்படுகிறது. இது ஏன் என்று விளக்குகிறார் புற்றுநோய் மருத்துவர் டி ராஜ்குமார். “ சிந்து, கங்கை சமவெளி பகுதிகளான வடக்கு மற்றும் கிழக்கு பகுதியிலேயே பித்தப்பை புற்றுநோய் அதிகம் காணப்படுகிறது. இதற்கான காரணத்தை அறுதியிட்டு கூற முடியாது. அங்குள்ள நீர் மாசுபாடு காரணமா என்று ஆய்வுகள் நடத்தப்படுகின்றன. தரமான குடிநீர் இல்லாத பகுதிகளில் டைஃபாய்டு நோய் ஏற்படும். அந்த நோய்க்கு காரணமான பாக்டீரியா, சில நேரம் உடலில் தங்கி பித்தப்பைக்குள் நுழையவும் வாய்ப்பு இருக்கிறது” என்கின்றார். உலகில் தென் அமெரிக்காவில் சிலி நாட்டுக்கு அடுத்த படியாக இந்தியாவில் தான் பித்தப்பை புற்றுநோய் அதிகமாக உள்ளது. ஒரு லட்சம் பேரில் 10-12 பேருக்கு பித்தப்பை புற்றுநோய் கண்டறியப்படுகிறது என்று மேலும் கூறுகிறார். பட மூலாதாரம்,புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார் பித்தப்பை புற்றுநோய் யாருக்கெல்லாம் ஏற்பட அதிக வாய்ப்பு உண்டு? எடை கூடுதலாக இருப்பவர்கள், புகைப்பிடிப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம். செரிமான பிரச்னைகள் உள்ளவர்களும் கவனமாக இருக்க வேண்டும். பொதுவாக நார்சத்து குறைவாக எடுத்துக் கொள்பவர்கள், மலச்சிக்கல் கொண்டவர்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவை உட்கொள்பவர்களுக்கு இந்த புற்றுநோய் ஏற்பட வாய்ப்பு அதிகம். பித்தப்பை கற்களுக்கும் பித்தப்பை புற்றுநோய்க்கும் தொடர்பு உள்ளதா? பித்தப்பையில் கல் இருப்பவர்களுக்கு பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகம் உண்டு என்கிறார் புற்றுநோய் மருத்துவர் ராஜ்குமார். “ஆனால், இந்தியாவில் பித்தப்பை கல் உருவாகும் நபர்களின் எண்ணிக்கை, பித்தப்பை புற்றுநோய் ஏற்படுபவர்களின் எண்ணிக்கையை விட மிக அதிகம். எனவே பித்தப்பை கல் இருப்பவர்கள் அனைவருக்கும் பித்தப்பை புற்றுநோய் ஏற்படும் என்று கூற முடியாது. எனினும், கல் இருப்பவர்களுக்கு புற்றுநோய் ஏற்படும் வாய்ப்பு அதிகம் உள்ளது. மேலும், ஆண்களை விட பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் அதிகம் ஏற்படுகிறது.” என்றார். பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களுக்கே பித்தப்பை புற்றுநோய் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பது ஏன்? “ஏனெனில் பெண்களுக்கு தான் பித்தப்பை கற்கள் அதிகமாக ஏற்படுகின்றன. எனவே பித்தப்பை புற்றுநோய் ஏற்படுவதும் ஆண்களை விட பெண்களுக்கே அதிகமாக உள்ளது. பெண்களுக்கு ஏன் பித்தப்பை கற்கள் அதிகம் ஏற்படுகின்றன என்று உறுதியாக கூற முடியாது. எனினும் மாதவிடாய் முடிந்த காலத்தில் எடை கூடுதல், உணவுப்பழக்கம், உடல் பருமன் ஆகியவை காரணங்களாக இருக்கலாம் என்று கருதப்படுகிறது” என்று விளக்குகிறார் மருத்துவர் சுரேஷ்குமார். பட மூலாதாரம்,GETTY IMAGES பித்தப்பை புற்றுநோயை எப்படி கண்டறியலாம்? “அல்ட்ரா சவுண்ட், எம் ஆர் ஐ மூலமே இதை கண்டறிய முடியும். அல்ட்ரா சவுண்ட் மூலம் பித்தப்பையில் ஏதோ மாற்றம் இருக்கிறது என தெரியும். எம் ஆர் ஐ செய்தால் என்ன பாதிப்பு என்பது தெரியும். அதை விட பெட் ஸ்கேன் செய்து மிக துல்லியமாக பாதிப்பின் தன்மை மற்றும் வீரியம் தெரியும்” என்கிறார் மருத்துவர் ராஜ்குமார். பித்தப்பை புற்றுநோய்க்கான சிகிச்சை என்ன? பித்தப்பை புற்றுநோயிலிருந்து முழுமையாக குணமடைய ஒரே தீர்வு பித்தப்பையை அறுவை சிகிச்சை மூலம் அகற்றுவது தான். ஆனால் அது எல்லாருக்கும் எல்லா நேரத்திலும் சாத்தியம் இல்லை என்கிறார் மருத்துவர் சுரேஷ் குமார். “ஆரம்ப நிலையில் கண்டறிந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை மூலம் புற்றுநோயிலிருந்து காப்பாற்ற முடியும். புற்றுநோய்க்கான சிகிச்சை என்பது புற்றுநோய் கண்டறியப்பட்ட இடம் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகள் சிலவற்றையும் முழுவதுமாக நீக்கிட வேண்டும். பித்தப்பையில் ஆரம்ப நிலை புற்றுநோய் கண்டறிப்பட்டால், பித்தப்பை முழுவதுமாகவும் அதை சுற்றியுள்ள 2 செ.மீ அளவில் இருக்கும் திசுக்கள் எல்லாவற்றையும் நீக்கிட வேண்டும். எனவே பித்தப்பையை அகற்றும் போது அருகில் உள்ள கல்லீரலின் ஒரு பகுதியும் அகற்றப்படும்” என்கிறார். பித்தப்பை கல் இருப்பவர்கள் சிலருக்கு வலி இருக்கும், சிலருக்கு இருக்காது. அப்படி வலி இருந்தால், பித்தப்பையை முழுவதுமாக நீக்குவது புற்றுநோய் ஆபத்திலிருந்து தப்பிக்க வழி வகுக்கும் என்றும் கூறுகிறார். பித்தப்பை இல்லாமல் வாழ முடியுமா? பித்தப்பை இல்லாமல் வாழ முடியும், ஆனால் அது செரிமான சிக்கல்களை ஏற்படுத்தும். “பித்தப்பை நீக்கம் செய்யப்பட்டால், கல்லீரல் உற்பத்தி செய்யும் பித்தம், பித்தப்பையில் சேமிக்கப்படாமல் நேரடியாக சிறுகுடலில் வெளியிடப்படுகிறது. இதன் விளைவாக, கொழுப்பை செரிமானம் செய்வதில் சில பிரச்னைகள் இருக்கலாம். எனினும் சில எளிய உணவு கட்டுப்பாடுகள் மூலம் சமாளிக்கக் கூடியது ஆகும். பித்தப்பையை நீக்கும் போது, கல்லீரலின் ஒரு பகுதியும் வெட்டி எடுக்கப்படும். அதன் காரணமாகவும் தினசரி வாழ்க்கையை மேற்கொள்ள எந்த தடையும் கிடையாது.” என்கிறார் மருத்துவர் சுரேஷ்குமார். https://www.bbc.com/tamil/articles/c0d71yd31k2o

நிகழ்நிலை காப்புச் சட்டமூலம் : 224 உறுப்பினர்கள் எதிராக வாக்களிக்க வேண்டும் - சிவில் அமைப்பினர் கூட்டாக வலியுறுத்தல்

3 months 2 weeks ago
நிகழ்நிலை காப்புச்சட்ட மூலத்தால் சீனாவைப் போன்ற நிலைமையே ஏற்படும் - ஹிருணிகா Published By: VISHNU 29 JAN, 2024 | 08:39 PM (எம்.மனோசித்ரா) நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் சீனாவைப் போன்ற நிலைமையே எமக்கும் ஏற்படும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திர தெரிவித்தார். கொழும்பிலுள்ள எதிர்க்கட்சி தலைவர் அலுவலகத்தில் திங்கட்கிழமை (29) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், அரசாங்கத்தினால் நிறைவேற்றப்பட்டுள்ள நிகழ்நிலை காப்பு சட்டத்துக்கு எதிர்ப்பினைத் தெரிவித்து சமூக வலைத்தள நிறுவனங்கள், கூகுள் மற்றும் யாஹூ போன்ற நிறுவனங்கள் இலங்கைக்கு சேவை வழங்குவதிலிருந்து விலகினால் என்னவாகும் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். சீனாவைப் போன்ற நிலைமையே இலங்கையிலும் ஏற்படவுள்ளது. எனவே இளைஞர்கள் இதற்கு எதிராக குரல் கொடுப்பதற்கு முன்வர வேண்டும். எதிர்காலத்தில் இளம் தலைமுறையினர் இதனால் பெரும் பாதிப்புக்களை எதிர்கொள்ள நேரிடும். சமூக வலைத்தளங்கள் தொடர்பில் ஏற்கனவே நாட்டில் நடைமுறையிலுள்ள சட்டமே போதுமானது. எனவே புதிதாக எந்த சட்டங்களையும் நடைமுறைப்படுத்த வேண்டிய தேவையில்லை. விஷ்வ புத்த உட்பட மதங்களை நிந்தித்ததாகக் கூறி கைது செய்யப்பட்டவர்கள் பைத்தியக்காரர்களாவர். எனவே அவர்களுக்கு பிரதான ஊடகங்கள் முக்கியத்துவமளித்தமை தேவைற்ற ஒரு விடயமாகும். இவை அனைத்தும் அரசாங்கத்தின் திட்டத்துக்கமைய அரங்கேற்றப்படும் நாடகமாகும். அண்மையில் நிமல் லன்சா உள்ளிட்ட குழுவினர் ரணிலுக்கான பிரசாரத்தை ஆரம்பித்துள்ளனர். பாராளுமன்றத் தேர்தல் விரைவில் இடம்பெறும் என இதனை அடிப்படையாகக் கொண்டு ஊகிக்க முடியும். இலங்கையானது ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பழைய அங்கத்துவ நாடாகும். அவ்வாறிருக்கையில் யுக்திய சுற்றி வளைப்புக்களை நிறுத்துமாறு ஐ.நா. விடுத்துள்ள கோரிக்கையை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை என்று அமைச்சர் டிரான் அலஸ் கூறுகின்றார். இவ்வாறு முட்டாள்தனமாக பேசும் இவர்களை தும்புத்தடியால் அடித்து துரத்த வேண்டும் என்றார். https://www.virakesari.lk/article/175098

சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்ப வேண்டுகோள்

3 months 2 weeks ago
சாந்தனின் தாயாரின் கடிதத்தை மேற்கோள்காட்டி தமிழக முதல்வருக்கு சிறீதரன் கடிதம் - சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்கு அனுப்பிவைக்க வேண்டுகோள் Published By: RAJEEBAN 29 JAN, 2024 | 08:55 PM ராஜீவ் காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு விடுதலை செய்யப்பட்டுள்ள இலங்கை தமிழர்களை விடுவிக்குமாறு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு, சாந்தனின் தாயாரின் கோரிக்கைக் கடிதத்தை மேற்கோள்காட்டி நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் கடிதம் ஒன்றை அனுப்பிவைத்துள்ளார். கடிதத்தில் அவர் தெரிவித்துள்ளதாவது மறைந்த பாரதப்பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் கைதுசெய்யப்பட்டு 32 வருடங்கள் சிறைத்தண்டனையின் பின்னர் கடந்த 2022-11-11 அன்று இந்திய உச்சநீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்ட சாந்தன் அவர்களின் தாயாரால் எனக்கு சமர்ப்பிக்கப்பட்டுள்ள உருக்கம் நிறைந்த கோரிக்கை கடிதம் மீதான தங்களின் கரிசனையையும் கவனத்தையும் கோரிநிற்கின்றேன். 32 வருடகால சிறைத்தண்டனையின் பின்னர் நீதிமன்றத்தினால் விடுதலை செய்யப்பட்டு ஒருவருடம் கடந்துள்ள நிலையில் அவ்வழக்கிலிருந்து விடுதலையான இலங்கை பிரஜைகளான சாந்தன் முருகன் ரொபேர்ட் பயஸ் ஜெயக்குமார் ஆகிய நால்வரையும் இலங்கைக்கு வரவழைப்பதற்கு மேற்கொள்ளப்பட்ட எந்த முயற்சிகளும் பலனளிக்காததால் இன்றுவரை அவர்கள் திருச்சி சிறப்புமுகாமில் தடுத்துவைக்கப்பட்டுள்ளனர் என்பதை கரிசனையோடு தெரிவித்துக்கொள்ளவிரும்புகின்றேன். இந்நிலையில் தனது இளமைக்காலம் முழுவதையும் சிறையில் கழித்து முதுமைக்காலம் முழுவதையும் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தக்கூடிய சிறுநீரக கல்லீரல் பாதிப்பினால் மிகக்கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள சாந்தன் தற்போது மருத்துவமனையில் தீவிரசிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார். கடந்த 33 ஆண்டுகளாக தனது மகனை காணாது பரிதவித்திருக்கும் சாந்தனின் தாயார் தனது 77 வயதில் மகனை ஒருதடவையாவது நேரில் பார்வையிடவேண்டும் எனவும் அவரை இலங்கைக்கு வரவழைக்க ஆவண செய்யுமாறும் உருக்கமான வேண்டுகோளை விடுத்துள்ளார். தமிழக முதல்வராக பொறுப்பேற்றதிலிருந்து ஈழத்தமிழர்கள் விடயத்தில் அதிக கரிசனை கொண்டு செயற்பட்டுவரும் நீங்கள் இவ்விடயத்தை மனிதாபிமான அடிப்படையில் அணுகி நோய்வாய்பட்டிருக்கும் சாந்தனின் உடல்நிலை கருதியும் அவரது குடும்பத்தினரின் உணர்வுநிலைப்பட்ட எதிர்பார்ப்பை கருத்தில்கொண்டும் சாந்தன் உள்ளிட்ட நால்வரையும் இலங்கைக்குஅனுப்பிவைக்க ஆவண செய்யவேண்டும் என கேட்டுக்கொள்கின்றேன். https://www.virakesari.lk/article/175107

ஜோர்தான் சிரியா எல்லையில் அமெரிக்க இராணுவம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் 3 பேர் பலி 30 பேர் காயம்

3 months 2 weeks ago
அமெரிக்க படைத்தளம் மீது ட்ரோன் தாக்குதல் - பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி? பட மூலாதாரம்,PLANET LABS/AP படக்குறிப்பு, தாக்குதலுக்குள்ளான அமெரிக்க படைத்தளம் கட்டுரை தகவல் எழுதியவர், எமிலி மெக்கார்வே பதவி, பிபிசி நியூஸ் 29 ஜனவரி 2024 சிரியாவுடனான ஜோர்டான் எல்லையில் அமெரிக்க ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட ட்ரோன் தாக்குதலில் தாங்கள் ஈடுபடவில்லை என இரான் மறுத்துள்ளது. இந்த தாக்குதலில் அமெரிக்க படையை சேர்ந்த மூவர் உயிரிழந்தனர். பத்துக்கும் மேற்பட்டோர் காயமடைந்த இந்த தாக்குதலுக்கு, “இரானிய ஆதரவு பெற்ற தீவிர ஆயுதக் குழுக்கள்” மீது அமெரிக்கா குற்றம்சாட்டியிருந்தது. “நாங்கள் இதற்கு பதிலடி கொடுப்போம்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அக்டோபர் 7-ம் தேதி இஸ்ரேல் மீது ஹமாஸ் நடத்திய தாக்குதலைத் தொடர்ந்து, காஸாவில் போர் தொடங்கியதிலிருந்து இந்த பிராந்தியத்தில் அமெரிக்க துருப்புகள் தாக்குதலில் கொல்லப்படுவது இதுவே முதன்முறை. இந்த பிராந்தியத்தில் அமெரிக்க ராணுவ முகாம்கள் மீது ஏற்கனவே தாக்குதல்கள் நடத்தப்பட்டிருந்தாலும் கடந்த ஞாயிற்றுக்கிழமைக்கு (ஜன. 28) முந்தைய தாக்குதல்கள் வரை உயிரிழப்புகள் ஏதும் நிகழ்ந்ததில்லை என அமெரிக்க ராணுவம் தெரிவித்துள்ளது. இராக்கை சேர்ந்த அமைப்பு பொறுப்பேற்பு இராக்கில் செயல்பட்டு வரும் இஸ்லாமிக் ரெசிஸ்டன்ஸ் எனும் இஸ்லாமிய எதிர்ப்பு அமைப்பு இத்தாக்குதலுக்கு பொறுப்பேற்றுள்ளது. இராக்கில் செயல்பட்டு வரும் சில இரானிய ஆயுதக்குழுக்களை உள்ளடக்கிய இந்த கூட்டமைப்பு, 2023-ம் ஆண்டின் இறுதியில் உருவானது. சமீப வாரங்களாக அமெரிக்க படைகளின் மீது நடத்தப்பட்ட மற்ற தாக்குதல்களுக்கும் இந்த அமைப்பு பொறுப்பேற்றுள்ளது. அந்த அமைப்பு வெளியிட்ட அறிக்கையில், சிரியாவில் உள்ள மூன்று அமெரிக்க ராணுவ முகாம்களை தாங்கள் குறி வைத்ததாக தெரிவித்துள்ளது. அவை, ஷடாடி, டன்ஃப், ரக்பன் ஆகியவை ஆகும். ரக்பன் சிரியாவின் எல்லையில் ஜோர்டான் பகுதியில் உள்ளது. மத்திய தரைக்கடலில் இஸ்ரேலிய எண்ணெய் நிறுவனத்தையும் தாங்கள் குறி வைத்ததாக அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. பாதுகாப்பை மீறி தந்திரமாக தாக்கியது எப்படி? அமெரிக்காவில் செயல்பட்டு வரும் சிபிஎஸ் ஊடகம், அமெரிக்க முகாமின் டவர் 22-ல் காலை வேளையில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்ட போது, அமெரிக்க படையினர் உறங்குவதற்கான குடியிருப்புப் பகுதியில் இருந்ததாக தெரிவித்துள்ளது. அமெரிக்க ட்ரோன் ஒன்று ராணுவ முகாமுக்குத் திரும்பிக் கொண்டிருந்த அதே நேரத்தில், "மிகவும் தாழ்வாகவும் மிக மெதுவாகவும்" அந்த ட்ரோன் வந்ததாக அமெரிக்க பாதுகாப்பு அதிகாரி ஒருவர் கூறினார். அமெரிக்க ஆளில்லா விமானத்தை சுட்டு வீழ்த்தாமல் இருக்க வான் பாதுகாப்பு அமைப்பின் தானாக எச்சரிக்கும் சாதனங்கள் அணைக்கப்பட்டதாக அந்த அதிகாரி கூறினார். இதனால், அந்த ராணுவ முகாமில் ட்ரோன் தாக்குதல் குறித்து துருப்புகளுக்கு எந்த எச்சரிக்கையும் இல்லை. இந்த தாக்குதலைக் கண்டித்துள்ள இராக் அரசாங்கம், மத்திய கிழக்கில் இத்தகைய "வன்முறை சுழற்சியை நிறுத்த" அழைப்பு விடுத்துள்ளது. இராக் அரசாங்க செய்தித் தொடர்பாளர் பாஸ்ஸெம் அல்-அவாடி, "பிராந்தியத்தில் மேலும் பின்விளைவுகளைத் தடுக்கவும் மோதல் அதிகரிப்பதைத் தடுக்கவும் அடிப்படை விதிகளை நிறுவுவதில் ஒத்துழைக்க" தயாராக இருப்பதாகக் கூறினார். ”இந்த தாக்குதலில் தொடர்புடையவர்கள் பொறுப்பேற்க வேண்டும்” என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். திங்களன்று (ஜன. 29) வெள்ளை மாளிகையின் தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி, இத்தாக்குதலுக்கு அமெரிக்கா பதிலடி கொடுக்க விரும்பினாலும், ஆனால் இரான் அல்லது பிராந்தியத்துடன் ஒரு பரந்த போரை விரும்பவில்லை என்றும் தெரிவித்தார். ஜோர்டானில் அமெரிக்க துருப்புகளை குறிவைக்க ட்ரோன் பயன்படுத்தப்பட்டதாக தங்கள் நிர்வாகம் நம்புவதாக கிர்பி கூறினார். தாக்குதலுக்குக் காரணமான ஆயுதக் குழுக்களை ஆதரிப்பதாக, அமெரிக்கா மற்றும் பிரிட்டனின் குற்றச்சாட்டுகளை இரான் மறுத்தது. இரானின் வெளியுறவு அமைச்சக செய்தித் தொடர்பாளர் நாசர் கனானி, "பாலத்தீனர்களையோ அல்லது அவர்களின் சொந்த நாடுகளையோ பாதுகாக்க எதிர்ப்பு குழுக்கள் முடிவெடுப்பதில் தாங்கள் பங்கேற்கவில்லை" என்றார். இரானுடன் இணைந்த பிராந்திய ஆயுதக் குழுக்கள் தங்கள் சொந்த விருப்பப்படி அமெரிக்காவுக்கு பதிலளிப்பதாக இரானின் உளவுத்துறை அமைச்சர் இஸ்மாயில் காதிப் கூறினார். அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் லாயிட் ஆஸ்டின் மற்றும் பிற அதிகாரிகளால் ஞாயிற்றுக்கிழமை காலை நடைபெற்ற தாக்குதல் குறித்து ஜோ பைடனுக்கு தெரிவிக்கப்பட்டதாக வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது. "இந்த வெறுக்கத்தக்க மற்றும் முற்றிலும் அநியாயமான தாக்குதலில் போர் வீரர்களை இழந்ததற்காக துக்கப்படுவதில், ஜில் பைடனும் (அமெரிக்காவின் முதல் பெண்மணி) நானும் நாடு முழுவதும் உள்ள அமெரிக்கர்களுடன் இணைந்து கொள்கிறோம்" என்று ஜோ பைடன் அறிக்கையில் தெரிவித்துள்ளார் கொல்லப்பட்ட மற்றும் காயமடைந்த படையினரின் பெயர்கள் இன்னும் வெளியிடப்படவில்லை. இத்தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த பிரிட்டன் பிரதமர் ரிஷி சூனக், இந்த பிராந்தியத்தில் பதற்றத்தைத் தணிக்கும் பணிகளை இரான் தொடர வேண்டும்” என்று வலியுறுத்தினார். ”பிராந்தியத்தில் ஸ்திரத்தன்மை மற்றும் அமைதியைக் கொண்டு வருவதற்கு நாங்கள் எங்கள் கூட்டாளிகளுடன் உறுதியாக நிற்கிறோம்," என்று அவர் கூறினார். "இந்த தாக்குதல் சிரியா மற்றும் இராக்கில் இயங்கும் தீவிர இரான் ஆதரவு ஆயுதக் குழுக்களால் நடத்தப்பட்டது" என்று நம்புவதாக பிரிட்டன் கூறியுள்ளது. குறைந்தது 34 ராணுவ வீரர்கள் பரிசோதனை செய்யப்பட்டு வருவதாகவும், காயமடைந்த சில வீரர்கள் மேல் சிகிச்சையில் உள்ளதாகவும் அமெரிக்க அதிகாரிகள் தெரிவித்தனர். பட மூலாதாரம்,GETTY IMAGES சிரிய எல்லைக்கு அருகில் ஜோர்டானின் வடகிழக்குப் பகுதியில் உள்ள ரக்பனில் உள்ள தளத்தின் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்தார். அதற்கு அமெரிக்க அதிகாரிகள் சூட்டிய பெயர் டவர் 22 என்பதாகும். இராக் மற்றும் சிரியாவில் உள்ள அமெரிக்க தளங்கள் அக்டோபர் 17 முதல் குறைந்தது 97 முறை தாக்கப்பட்டதாக அமெரிக்க அதிகாரிகள் கடந்த டிசம்பர் மாதம் தெரிவித்தனர். கடந்த மாதம், வடக்கு இராக்கில் இரானுடன் இணைந்த குழுக்களுக்கு எதிராக, அமெரிக்கா வான்வழித் தாக்குதல்களை நடத்தியது. முன்னதாக ஜனவரியில், பாக்தாத்தில் அமெரிக்க பதிலடித் தாக்குதல் ஒன்றில், அமெரிக்க படையினர் மீதான தாக்குதல்களுக்குப் பின்னால் இருந்ததாகக் குற்றம்சாட்டப்பட்ட ஒரு ஆயுதக்குழு தலைவர் கொல்லப்பட்டார். ஏபிசி ஊடகத்தில் ஞாயிற்றுக்கிழமை காலை ஒளிபரப்பப்பட்ட முன்பதிவு செய்யப்பட்ட நேர்காணலில், பாதுகாப்புப் படை உயரதிகாரி சி.க்யூ. பிரௌன் இப்பகுதியில் "மோதலை விரிவுபடுத்தக்கூடாது" என்பதே அமெரிக்காவின் நோக்கம் என்று கூறினார். https://www.bbc.com/tamil/articles/cq579n1ynero

வவுனியா நகரில் பெண்ணின் சடலம் மீட்பு

3 months 2 weeks ago
Published By: DIGITAL DESK 3 30 JAN, 2024 | 09:46 AM வவுனியா குருமன்காடு காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றிலிருந்து பெண் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (30) காலை மீட்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மேலும் தெரியவருவாதவது, வவுனியா காளி கோவில் வீதியில் உள்ள வீடொன்றின் கிணற்றில் 29 வயதுடைய ஜெனிற்றா என்ற இளம் குடும்ப பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். குறித்த பெண்ணின் கணவர் வெளிநாட்டில் வசித்து வருவதாகவும் இந்நிலையில் கணவருடைய குடும்பத்தினருடன் தனது 7 வயது மகனுடன் வசித்து வந்த நிலையிலேயே இச்சம்பவம் இடம்பெற்றுள்ளது. இதேவேளை குறித்த பெண் கடந்த வாரமும் தனது மகனுடன் கிணற்றில் வீழ்ந்து தற்கொலைக்கு முயன்றதாகவும் சத்தம் கேட்டு அயலவர்கள் மீட்டெடுத்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்த சம்பவம் தொடர்பான மரணவிசாரணையை திடீர் மரண விசாரணை அதிகாரி சுரேந்திர சேகரன் மேற்கொண்டு வருவதுடன் வவுனியா பொலிஸாரும் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். https://www.virakesari.lk/article/175112

சீனாவில் ரூ.30 லட்சம் கோடி கடனால் 'எவர்கிராண்டே' மூடல் - சீன பொருளாதாரத்திற்கு என்ன அச்சுறுத்தல்?

3 months 2 weeks ago
பட மூலாதாரம்,GETTY IMAGES 29 ஜனவரி 2024 கடனில் சிக்கித் தவிக்கும் சீன நிறுவனமான எவர்கிராண்டே நிறுவனத்தை கலைக்க ஹாங்காங்க் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சிக்கலில் உள்ள இந்த கட்டுமான நிறுவனம் அதன் கடன்களை அடைப்பதற்கான திட்டத்தை உருவாக்க பலமுறை தவறியதை அடுத்து, நீதிபதி லிண்டா சான் இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார். இந்நிறுவனம் சுமார் 30 லட்சம் கோடி ரூபாய் ($325bn - £256bn) அளவுக்கு கடன் உள்ளிட்ட நிதி சார்ந்த நெருக்கடியில் சீனாவின் ரியல் எஸ்டேட் துறையில் செயல்பட்டு வந்தது. உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில் அதன் பொருளாதாரத்தில் கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதத்தை பிடித்துள்ளது இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எவர்கிராண்டே கடனில் மூழ்கிய போது அது உலக நிதிச் சந்தைகளில் அதிர்ச்சி அலைகளை உருவாக்கியது. எவர்கிராண்டே நிறுவனம் என்ன தொழில் செய்கிறது? தொழிலதிபர் ஹுய் கா யான் 1996 இல் தெற்கு சீனாவின் குவாங்சோவில் ஹெங்டா குழுமம் என்று அழைக்கப்பட்ட எவர்கிராண்டே நிறுவனத்தை நிறுவினார். இந்த நிறுவனத்தின் இணையதளத்தில், எவர்கிராண்டே ரியல் எஸ்டேட் குழுமம், சீனா முழுவதும் 280க்கும் மேற்பட்ட நகரங்களில் 1,300க்கும் மேற்பட்ட திட்டங்களை மேற்கொண்டு வந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. பரந்த அளவில் செயல்படும் எவர்கிராண்டே, ரியல் எஸ்டேட் தொழிலை மேற்கொள்கிறது என்றில்லாமல் பிற தொழில்களையும் செய்துவந்தது. ரியல் எஸ்டேட் தொழிலைத் தவிர, மின்சார கார் உற்பத்தி முதல் உணவு மற்றும் பானங்கள் தயாரிப்பு வரை பல தொழில்களை இந்நிறுவனம் செய்துவந்தது. நாட்டின் மிகப்பெரிய கால்பந்து அணிகளில் ஒன்றான குவாங்சோ எஃப்சியில் கூட இந்நிறுவனம் குறிப்பிடும்படியான ஒரு பங்கைக் கொண்டுள்ளது. ஹுய் ஒரு காலத்தில் ஆசியாவின் மிகப் பெரிய பணக்காரராக இருந்தார். அவருடைய சொத்து மதிப்பு சுமார் 3.5 லட்சம் கோடி ($42.5bn -£34.8bn) ரூபாயாக இருந்தது என ஃபோர்ப்ஸ் மதிப்பிட்டுள்ளது. ஆனால் அதன்பின்னர் எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தொடர்ந்து அதிகரித்ததால் அவரது சொத்து மதிப்பு சரிந்துள்ளது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சீனாவின் நான்ஜிங் நகரில் எவர்கிராண்டே நிறுவனத்தால் கட்டப்பட்ட குடியிருப்பு வளாகம். எவர்கிராண்டே ஏன் சிக்கலில் சிக்கியது? எவர்கிராண்டே சுமார் 25 லட்சம் கோடி ($300bn) ரூபாய்க்கும் அதிகமான கடன் வாங்குவதன் மூலம் சீனாவின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றாக மாறுவதற்கு தீவிரமாக முயற்சித்தது. இதற்கிடையே, 2020 ஆம் ஆண்டில், பெரிய ரியல் எஸ்டேட் நிறுவனங்கள் கடன் பெறுவதைக் கட்டுப்படுத்த சீனா புதிய விதிகளை அறிமுகப்படுத்தியது. இந்த புதிய விதிகளின் காரணமாக எவர்கிராண்டே தனது சொத்துகளை மிகவும் குறைந்த விலைக்கு விற்கவேண்டிய நிலை ஏற்பட்டது. ஏற்கெனவே அந்நிறுவனம் கடன் வாங்கத் திட்டமிட்டிருந்த தொகைகளைப் பெறமுடியாத சூழ்நிலையில், மிகவும் குறைந்த விலைக்கு சொத்துகளை விற்று அதன் மூலம் கிடைத்த வருவாயைக் கொண்டு அந்த நிறுவனம் இயங்கத் தொடங்கியது. இப்போது கடன்களுக்கான வட்டியை அடைக்க முடியாமல் இந்நிறுவனம் திணறி வருகிறது. இந்த நிச்சயமற்ற தன்மையால் கடந்த மூன்று ஆண்டுகளில் எவர்கிராண்டேயின் பங்குகள் 99% அளவுக்கு மதிப்பை இழந்துள்ளன. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்நிறுவனம் நியூயார்க்கில் திவாலானதாக அறிவிக்க கோரி விண்ணப்பித்தது. கடனாளர்களுடன் பல பில்லியன் டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தத்தில் வேலை செய்ததால், அதன் அமெரிக்க சொத்துகளைப் பாதுகாக்கும் முயற்சியில் இந்நடவடிக்கையை நிறுவனம் மேற்கொண்டது. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, உலகின் இரண்டாவது பெரிய பொருளாதார நாடான சீனாவில், கட்டுமானத் துறை ஏறத்தாழ 25 சதவிகிதம் இடம்பெற்றுள்ளது. எவர்கிராண்டே வீழ்ச்சியால் சீன பொருளாதாரத்திற்கு என்ன பாதிப்பு? எவர்கிராண்டேவின் பிரச்னைகள் தீவிரமாக இருப்பதற்கு பல காரணங்கள் உள்ளன. முதலாவதாக, கட்டுமானப் பணிகளைத் தெடங்குவதற்கு முன்பே பலர் அந்நிறுவனத்திடம் இருந்து சொத்துகளை வாங்குவதற்காக முன்பதிவு செய்து பெரும் தொகைகளைச் செலுத்தினர். தற்போது இந்நிறுவனம் சிதைந்துவிட்டால், அவர்கள் செலுத்திய வைப்புத்தொகையை இழக்க நேரிடும். எவர்கிராண்டேவுடன் வணிகம் செய்யும் நிறுவனங்களும் உள்ளன. எவர்கிராண்டேவின் வீழ்ந்தால், கட்டுமானம் மற்றும் வடிவமைப்பு நிறுவனங்கள் மற்றும் பொருட்கள் வழங்குபவர்கள் என பல நிறுவனங்கள் பெரும் இழப்பை சந்திக்கும் அபாயத்தில் உள்ளன. இது அந்நிறுவனங்களை திவால் நிலைக்கு தள்ளும். மூன்றாவதாக, சீனாவின் நிதி அமைப்பில் ஏற்படக் கூடிய பாதிப்பு: எவர்கிராண்டே சரிந்தால், வங்கிகள் மற்றும் பிற கடன் வழங்குபவர்கள் குறைவாகக் கடன் கொடுக்க நிர்பந்திக்கப்படும் அபாயம் உள்ளது. குறைந்த வட்டியில் கடன் வாங்குவதற்கு பல நிறுவனங்கள் போராடும் போது, இது கடன் நெருக்கடியாக மாறும். கடன் நெருக்கடி என்பது உலகின் இரண்டாவது பெரிய பொருளாதாரத்தைக் கொண்டிருக்கும் சீனாவுக்கு மிகவும் மோசமான செய்தியாக இருக்கும். ஏனெனில் கடன் வாங்க முடியாத நிறுவனங்கள் வளர்ச்சியடைவது மிகவும் கடினம். மேலும் சில சந்தர்ப்பங்களில் தொடர்ந்து செயல்பட முடியாத நிலை ஏற்படலாம். இது போன்ற சூழ்நிலை காரணமாக வெளிநாட்டு முதலீட்டாளர்கள் தங்கள் பணத்தை முதலீடு செய்யத் தகுந்த நாடு சீனா இல்லை என்று கருதும் நிலைக்குத் தள்ளலாம். https://www.bbc.com/tamil/articles/c29k38jr64yo

அரசியல் புரட்சியொன்றை ஏற்படுத்த பரந்தளவிலான கூட்டணி அமைக்க நடவடிக்கை - சம்பிக்க

3 months 2 weeks ago
29 JAN, 2024 | 08:48 PM (எம்.ஆர்.எம்.வசீம்) நாட்டில் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்தும் நோக்கில் தரம்மிக்க குழுவினருடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி அமைக்க கலந்துரையாடி வருகிறோம். எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் அந்த குழுவில் உள்ள பொருத்தமான ஒருவரையே வேட்பாளராக களமிறக்க திட்டமிட்டுள்ளோம் என பாராளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க தெரிவித்தார். அரசியல் ரீதியில் எதிர்காலத்தில் மேற்கொள்ள திட்டமிட்டிருக்கும் நடவடிக்கை தொடர்பில் குறிப்பிடுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், நாட்டில் அரசியல் புரட்சி ஒன்றை ஏற்படுத்த நாங்கள் தயாராக இருக்கிறோம். ஏனெனில் நாட்டை வங்குராேத்து அடையச் செய்த குழுவினரை ஜனநாயக ரீதியில் வீட்டுக்கு அனுப்ப நாட்டு மக்கள் தயாராகி உள்ளனர். அதனால் அரசியல் மாற்றம் ஒன்றை ஏற்படுத்த தகுதிவாய்ந்தவர்களுடன் பரந்துபட்ட அரசியல் கூட்டணி ஒன்றை அமைக்க தற்போது நாங்கள் கலந்துரையாடி வருகிறோம். அத்துடன் எமது பரந்துபட்ட கூட்டணியை பாராளுமன்றத்தில் இருப்பவர்களும் பாராளுமன்றத்துக்கு வெளியில் இருப்பவர்களையும் இணைத்துக்கொண்டு கூட்டணி ஒன்றை எதிர்வரும் காலத்தில் கட்டியெழுப்புவோம். இந்த கூட்டணியில் இருக்கும் மிகவும் பொருத்தமான வேட்பாளரை நாங்கள் ஜனாதிபதி வேட்பாளராக களமிறக்குவோம். அதேபோன்று பாெருத்தமான வேட்பாளர் குழுவொன்றை பாராளுமன்ற தேர்தலுக்கு நாங்கள் முன்வைப்போம். அத்துடன் மக்கள் பாரிய பொருளாதார நெருக்கடியில் இருந்து வருகின்றனர். அரசாங்கம் பாரியளவிலான வரி சுமையை மக்கள் மீது சுமத்தி இருக்கிறது. எந்தவித தேடிப்பார்ப்பும் இல்லாமலும் முறையான திட்டமிடல் இல்லாமலும் டின் இலக்கம் ஒன்றின் ஊடாக மக்களை வரி முறைமைக்கு உள்வாங்கிக்கொண்டிருக்கிறது. மேலும் அரசாங்கம் கடந்த வாரம் நிகழ்சிலை காப்புச் சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டது. நாட்டின் பொருளாதாரத்தை முன்னேற்றுவதற்காக அதிக சந்தர்ப்பம் இருப்பது இணையவழி சேவை எனும் டிஜிடல் சேவை மூலமாகும். சமூவலைத்தளங்களை ஒழுங்குபடுத்தப்போவதாக தெரிவித்து, அரசாங்கம் நாட்டுக்கும் நாட்டின் பொருளாதாரத்துக்கும் மரண அடியை வழங்கி இருக்கிறது. சமூகவலைத்தளம் ஊடாக சேறுபூசும் நடவடிக்கைகள் இடம்பெறுவது உண்மை என்றாலும் அதனை மேற்கொள்ள வழிவகுத்த பிரிவினரே சட்ட திட்டங்களை கொண்டுவருவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளனர். இணையவழி சேவை வழங்கும் நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துகொள்ளாமல் அரசாங்கம் நினைத்த பிரகாரம் சட்ட திட்டங்களை கொண்டுவந்துள்ளதால் இணையவழி நேவை வழங்கும் நிறுவனங்கள் தங்களின் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர். முழு உலகிலும் இணையவழி சேவைகளில் வரி அறவிடப்படுவது 6 நாடுகளிலாகும். அதில் இலங்கையும் ஒன்றாகும். அத்துடன் தற்போது அமுலில் உள்ள பயங்கரவாத தடுப்புச்சட்டத்தை துஷ்பிரயோகம் செய்து பாராளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்வதற்கு அரசியல் குண்டர்கள் செயற்பட்ட நிலையில், எதிர்வரும் காலத்தில் புதிய பயங்கரவாத எதிர்ப்பு சட்டமூலத்தை பாராளுமன்றத்தில் அனுமதித்துக்கொண்டு, அரசாங்கத்தின் பிரதான எதிர்பார்ப்பாக இருப்பது அரசாங்கத்துக்கு எதிரான தொழிற்சங்க செயற்பாட்டாளர்கள், சமூக செயற்பாட்டாளர்கள் மற்றும் சாதாரண மக்களை அடக்குவதாகும் என்றார். https://www.virakesari.lk/article/175083
Checked
Fri, 05/17/2024 - 00:15
கருத்துக்களம் - All Activity
Subscribe to புதிய பதிவுகள்2 feed