நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
நா. ஆணையாளர் செம்மணியில் அஞ்சலி செலுத்தியது தவறு; விமல் வீரவன்ச கடும் கோபம்
விடுதலைப் புலிகளின் நிலைப்பாட்டை கொண்ட குழுக்களின் தேவையின்படி அறிக்கையை தயாரித்து அதன்மூலம் அரசாங்கத்திற்கு நெருக்குதல்களை கொடுக்கும் நோக்கத்திலேயே ஐ.நா. மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்தார் என்று தேசிய சுதந்திர முன்னணி தலைவர் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.
தேசிய சுதந்திர முன்னணி தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே வீரவன்ச இவ்வாறு கூறினார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் வோல்கர் டேர்க் இலங்கைக்கு வருகை தந்திருந்தார். இவ்வாறான மனித உரிமைகள் ஆணையாளர் ஒருவர் இலங்கை வருகின்றார் என்றால் அது இலங்கை தொடர்பில் தீர்மானமிக்க தீர்மானங்களை எடுக்க முன்னரானதாகவே இருக்கும். எடுக்கும் தீர்மானங்கள் தொடர்பில் நியாயத்தை காட்டுவதற்காகவே வருகை தருக்கின்றனர். நாங்கள் இலங்கை சென்றோம், அங்குள்ளவர்களை சந்தித்து கலந்துரையாடினோம் அதன்படி அறிக்கையை வெளியிடுகின்றோம் என்று கூறும் வகையிலேயே வருகின்றனர்.
இவ்வாறுதான் 2013ஆம் ஆண்டில் நவநீதம்பிள்ளை வருகை தந்தார். அவர் பிரிவினைவாத நிலைப்பாடுகளை கொண்டவர்களை மட்டுமே சந்தித்தார். பின்னர் செயிட் அல் ஹுசேன் இலங்கை வந்தார். அவரும் சகல தரப்பினருடனும் பேசவில்லை. இனவாத பிரிவினைவாத குழுவினரை சந்தித்து இறுதியில் அவர்களுக்கு தேவையானவாறே அறிக்கையை தயாரித்தார். அதேபோன்ற சம்பிரதாயத்தை பின்பற்றியே வோல்கர் டேர்க் வந்துள்ளார்.
அவர் யாழ்ப்பாணத்திற்கு சென்று உயிரிழந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார். அப்படியென்றால் இவர் எப்படி நடுநிலையானவராக இருந்திருக்க முடியும். வடக்கில் இறந்த இராணுவம் மற்றும் பொலிஸாரின் உடல்கள் இல்லையா? அவர்கள் புதைக்கப்பட்ட புதைகுழிகள் இல்லையா? அவர் செம்மணியில் உள்ள புதைகுழியென்று கூறப்படும் இடத்திற்கு சென்றிருந்தார். அங்கே விடுதலைப் புலிகளின் கொடிகளுடனேயே அங்கிருந்தவர்கள் கலந்து கொண்டிருந்தனர். அவ்விடத்திற்கு சென்று ஆணையாளர் மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன், மத நிகழ்விலும் கலந்துகொண்டார்.
மனித உரிமைகள் ஆணையாளர் இலங்கை வந்திருந்த போது அவரை சந்திப்பதற்காக பல்வேறு தரப்பினரும் அனுமதி கோரினர். முன்னாள் இராணுவ பிரதானியொருவரும் சந்திப்பதற்கு அனுமதி கோரியிருந்தார். வெளிநாட்டு பயணத் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையிலேயே அந்த இராணுவ பிரதானி அவரை சந்திக்க கோரியிருந்தார். ஆனால் அவருக்கு அனுமதி வழங்கப்படவில்லை. அதேபோன்று சில சட்டத்தரணிகள் குழுவும் கோரிக்கை விடுத்திருந்தது. அத்துடன் தேசிய அமைப்புகள் சிலவும் அவரை சந்திக்க கோரிக்கை விடுத்திருந்தன. ஆனால் அதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படவில்லை.
எனினும் விடுதலைப் புலிகள் பயங்கரவாதத்தின் நிலைப்பாட்டுடன் இப்போதும் செயற்படும் தரப்பினருடன் மட்டுமே சந்தித்து கலந்துரையாடியுள்ளார். இதன்படி ஜெனிவா மனித உரிமைகள் ஆணையாளர் விடுதலைப் புலி ஆதரவாளர்களின் தேவையின்படி தயாரிக்கப்பட்ட அறிக்கையில் இலங்கை அரசாங்கத்தை நெருக்குவதற்காகவே இலங்கை வருகை தந்துள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
அதேபோன்று ஜே.வி.பி செயலாளர் ரில்வின் சில்வாவையும் ஆணையாளர் சந்தித்துள்ளார். இதன்படி விடுதலைப் புலி ஆதரவு குழுக்களுக்கு மேலதிகமாக ஜே.வி.பி செயலாளரை சந்தித்துள்ளார். அங்கே என்ன பேசியுள்ளார் என்று தெரியவில்லை.
இதேவேளை செம்மணி புதைக்குழியில் உள்ள மனித எலும்புகூடுகள் யாருடையது என்று இதுவரையில் உறுதிப்படுத்தப்படவில்லை. சிலவேளை அவை விடுதலைப் புலிகளால் கொலை செய்யப்பட்ட தமிழர்களுடையதாகவோ, இராணுவத்தினருடையதோ, யுத்தத்தில் இறந்த விடுதலைப்புலிகளினதோ அல்லது பொலிஸாரினதோ எலும்புகூடுகளாக இருக்கலாம். அவை யாருடையது என்று உறுதிப்படுத்தப்படாதிருக்கையில் அது தமிழ் மக்களுடையது என்றும், இது மனித உரிமை குற்றம் என்றும் கூறி அது தொடர்பான பரிந்துரைகளுக்கு முயற்சிக்கப்படுகின்றது.
அதேபோன்று உண்மைகளை கண்டறியும் ஆணைக்குழுவை அமைப்பது தொடர்பிலும் கூறப்படுகின்றது. ஆனால் தெற்கு ஆபிரிகா ஆணைக்குழு போன்றது அல்ல. யுத்தத்திற்கு உத்தரவிட்ட அதிகாரிகளை சிக்க வைப்பதற்கான ஆணைக்குழுவாகவே இருக்கும். அத்துடன் சுயாதீன குற்றப்பத்திரிகை அலுவலகமும் அவ்வாறே இருக்கப் போகின்றது.
ஐநா மனித உரிமைகள் ஆணையாளரின் வருகை இதனை அடிப்படையாக கொண்டதாகவே இருந்துள்ளது. அவர் நடுநிலைதாரிகளை சந்திக்காது விடுதலைப் புலிகள் ஆதரவாளர்களையே சந்தித்துள்ளார். இதன்படி அறிக்கைகள் தயாரிக்கப்படும். இங்கு வந்து அவருக்கு உயிரிழந்தவர்களை நினைவு கூருவதற்கான கடமை கிடையாது. அதனை இந்த அரசாங்கத்தால் தடுக்க முடியாது போயுள்ளது. மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு சுயாதீனமாக இங்கே செயற்படுவதற்கு இடமளிக்கப்பட்டுள்ளது. அவரின் விஜயம் தொடர்பிலோ, அவர் கூறிய விடயங்கள் தொடர்பிலோ அரசாங்கம் எதுவும் கூறாமல் இருப்பது ஏன் என்றும் புரியவில்லை என்றார்.