விளையாட்டுத் திடல்

19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார்

3 months ago

சிம்பாவே, நபீபியா நாட்டில் நடைபெற இருக்கும் 19 வயதுக்குட்பட்ட வீரர்கள் விளையாடும் உலககிண்ண துடுப்பாட்ட போட்டியில் அவுஸ்திரேலியா அணியில் நிதேஷ் சாமுவேல் என்ற ஈழத்து வம்சாவளி தமிழர் தெரிவு செய்யப்பட்டுள்ளார். இவரின் பெற்றோர் யாழ்ப்பாணத்தினை பிறப்பிடமாக கொண்டவர்கள்.

https://www.icc-cricket.com/news/peake-to-lead-as-australia-unveil-under-19-world-cup-squad

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

3 months 1 week ago

தமிழ் யூனியன் வீரர்கள் ஷாருஜன், வியாஸ்காந்த் அபார ஆற்றல்கள்

Published By: Digital Desk 3 09 Dec, 2025 | 03:16 PM

image

(நெவில் அன்தனி)

ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தினால் (SLC) நடத்தப்பட்டுவரும் முதல்தர கழகங்களுக்கு இடையிலான மேஜர் லீக் கிரிக்கெட் 2025-26 ஆரம்பப் போட்டியில் தமிழ் யூனியன் வீரர்களான சண்முகநாதன் ஷாருஜன் துடுப்பாட்டத்திலும் விஜயகாந்த் வியாஸ்காந்த் பந்துவீச்சிலும் திறமையை வெளிப்படுத்தி அசத்தினர்.

தமிழ் யூனியன் அண்ட் அத்லெட்டிக்ஸ் க்ளப் அணிக்காக இந்த வருடத்திலிருந்து முழுமையாக விளையாட ஒப்பந்தமாகியுள்ள 19 வயதுடைய சண்முகநாதன் ஷாருஜன் அக் கழகத்துக்கான தனது முதலாவது போட்டியிலேயே முதல் தர கிரிக்கெட்டுக்கான சதத்தைக் குவித்து பலத்த பாராட்டைப் பெற்றார்.

இதில் விசேஷம் என்னவென்றால், ஷாருஜன் தனது முன்னாள் கழகமான பதுரெலியா விளையாட்டுக் கழகத்திற்கு எதிராக கன்னி சதத்தைக் குவித்தாகும்.

தொலைக்காட்சி நேர்முக வர்ணனையாளர் மறைந்த டோனி க்ரெய்கினால் 'லிட்ல் சங்கா' (குட்டி சங்கா) என வருணிக்கப்பட்ட சண்முகநாதன் ஷாருஜன் இப்போது அந்தப் பெயரை மெய்ப்பிக்கும் வகையில் துடுப்பாட்டத்தில் பிரகாசிக்கத் தொடங்கியுள்ளார்.

எஸ்எஸ்சி மைதானத்தில் 2011ஆம் ஆண்டு நடைபெற்ற அவுஸ்திரேலியாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான டெஸ்ட் கிரிக்கெட் போட்டியின்போது ஷாருஜனுக்கு இந்தப் புனைப்பெயரை எதேச்சையாக டோனி க்ரெய்க் சூட்டினார்.

அவுஸ்ரேலிய துடுப்பாட்ட வீரர் பிலிப் ஹயூஸ் துடுப்பெடுத்தாடிக்கொண்டிருந்தபோது எஸ்எஸ்சி மைதானத்தின் பார்வையாளர் பகுதியில் ஷாருஜன் ஒரு துடுப்பைக் கொண்டு (Bat) விதவிதமான அடிகளை செய்து கொண்டிருந்தார். அப்போது தொலைக்காட்சி கமராவில் 5 வயது சிறுவனின் துடுப்பாட்ட பாணியும் காட்டப்பட்டது. அந்த சந்தர்ப்பத்தில்தான் சிறுவன் ஷாருஜனின் துடுப்பாட்ட பாணியைப் பார்த்து இரசித்த டோனி க்ரெய்க் அவருக்கு 'லிட்ல் சங்கா' என்ற புனைப்பெயரை சூட்டினார்.

இப்போது தமிழ் யூனியன் கழகத்திற்காக தனது 19ஆவது வயதில் விளையாடிவரும் சண்முகநாதன் ஷாருஜன் சதம் குவித்து அதனை மெய்ப்பித்து வருகிறார்.

sharujan_taking_runs_with_his_partner.jp

கொட்டாஞ்சேனை புனித ஆசீர்வாதப்பர் கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவரான சன்முகநாதன் ஷாருஜன், வார இறுதியில் சிசிசி மைதானத்தில் நடைபெற்ற பதுரெலியா கழகத்துக்கு எதிரான பி குழு  போட்டியில் மிகுந்த அனுபவசாலிபோல் 230 பந்துகளை எதிர்கொண்டு 7 பவுண்டறிகள், 3 சிக்ஸ்களுடன் 123 ஓட்டங்களைக் குவித்தார்.

இந்த வருடம் மேஜர் லீக் கிரிக்கெட் போட்டிகள் யாவும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தீர்மானத்திற்கு அமைய நடுநிலையான மைதானங்களில் நடைபெற்றுவருகின்றன.

ஒரு கட்டத்தில் தமிழ் யூனியன் கழகம் 5 விக்கெட்களை இழந்து 112 ஓட்டங்களை மாத்திரம் பெற்று மிக மோசமான நிலையில் இருந்தது.

ஆனால், பொறுப்புணர்வுடனும் நிதானத்துடனும் துடுப்பெடுத்தாடிய ஷாருஜன், 3 சிறந்த இணைப்பாட்டங்கள் உட்பட கடைசி 5 விக்கெட்களில் மொத்தமாக 235 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியைப் பலப்படுத்தினார்.

51 ஓட்டங்களைப் பெற்ற சச்சித்த ஜயதிலக்கவுடன் 6ஆவது விக்கெட்டில் 97 ஓட்டங்களையும் 35 ஓட்டங்களைப் பெற்ற தரிந்து ரத்நாயக்கவுடன் 8ஆவது விக்கெட்டில் 63 ஓட்டங்களையும் 21 ஓட்டங்களைப் பெற்ற கலன பெரேராவுடன் 9ஆவது விக்கெட்டில் 54 ஓட்டங்களையும் கொண்ட சிறந்த இணைப்பாட்டங்களை ஏற்படுத்தி அணியை பலமான நிலையில் இட்ட ஷாருஜன் கடைசி வீரராக ஆட்டம் இழந்தார்.

இதன் பலனாக தமிழ் யூனியன் முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 347 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு முதலாவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா விளையாட்டுக் கழகம் சகல விக்கெட்களையும் இழந்து 205 ஓட்டங்களைப் பெற்றது.

யாழ். மத்திய கல்லூரி கிரிக்கெட் அணியின் முன்னாள் தலைவர் விஜயகாந்த் வியாஸ்காந்த் மிகத் துல்லியமாக பந்துவீசி 4 ஓட்டமற்ற ஓவர்கள் உட்பட 19 ஓவர்களில் 41 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை வீழ்த்தினார்.

இந்தப் போட்டியில் 2ஆவது இன்னிங்ஸில் 9 விக்கெட்களை இழந்து 97 ஓட்டங்களைப் பெற்றிருந்தபோது தமிழ் யூனியன் தனது துடுப்பாட்டத்தை நிறுத்திக்கொண்டது.

240 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு 2ஆவது இன்னிங்ஸில் துடுப்பெடுத்தாடிய பதுரெலியா கழகம் திங்கட்கிழமை (08) மாலை ஆட்டம் முடிவுக்கு வந்தபோது 2 விக்கெட்களை இழந்து 56 ஓட்டங்ளைப் பெற்றிருந்தது.

இப் போட்டி வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தபோதிலும் முதல் இன்னிங்ஸுக்கான வெற்றிப் புள்ளிகளை தமிழ் யூனியன் பெற்றுக்கொண்டது. 

https://www.virakesari.lk/article/232873

பீபா(FIFA) உலகக் கிண்ணம் 2026 - செய்திகள்

3 months 1 week ago

வரலாற்றில் மிகப் பெரிய பீபா உலகக் கிண்ணத்துக்கான அணிகளுக்குரிய பகிரங்க குலுக்கல் இன்று

05 Dec, 2025 | 08:17 PM

image

(நெவில் அன்தனி)

கால்பந்தாட்ட வரலாற்றில் முதல் தடவையாக 48 நாடுகள் பங்குபற்றும் மிகப் பெரிய FIFA உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டி அமெரிக்க கண்டத்தில் அடுத்த வருடம் நடைபெறவுள்ளது.

உலகக் கிண்ணப் போட்டிக்கான அணிகளைக் குழுநிலைப் படுத்தும் பகிரங்க குலுக்கல் வொஷிங்டன் டிசியில் அமைந்துள்ள கென்னடி நிலையத்தில் இன்று வெள்ளிக்கிழமை (05) இரவு நடைபெறவுள்ளது.

1_flags_of_canada_mexico_and_usa.png

ஐக்கிய அமெரிக்கா, கனடா, மெக்சிகோ ஆகிய மூன்று நாடுகள் கூட்டாக  உலகக் கிண்ண கால்பந்தாட்ட சுற்றுப் போட்டியை நடத்தவுள்ளன.

உலகக் கிண்ண கால்பந்தாட்ட வரலாற்றில் மூன்று நாடுகள் கூட்டு சேர்ந்து நடத்துவது இதுவே முதல் தடவையாகும்.

2002 உலகக் கிண்ணப்  போட்டியை ஜப்பான், தென் கொரியா ஆகிய இரண்டு நாடுகள் கூட்டாக நடத்தியிருந்தன. அதுவே கூட்டாக நடத்தப்பட்ட முதலாவது உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டியாகும்.

நான்கு ஜாடிகளில் தலா 12 நாடுகள்

உலகக் கிண்ணப் போட்டியில் விளையாட இதுவரை 42 நாடுகள் தகுதிபெற்றுள்ளதுடன் இன்னும் 6 நாடுகள் தகுதிபெறவுள்ளன.

இந்த 48 நாடுகளும் நான்கு ஜாடிகளில் நிரல்படுத்தல் பிரகாரம் இடம்பெறுகின்றன.

3_fifa_draw_procedere..jpg

ஜாடி 1: கனடா, மெக்சிகோ, ஐக்கிய அமெரிக்கா (இந்த மூன்றும் கூட்டு வரவேற்பு நாடுகள்), ஸ்பெய்ன், நடப்பு உலக சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரான்ஸ், இங்கிலாந்து, பிறேஸில், போர்த்துக்கல், நெதர்லாந்து, பெல்ஜியம், ஜேர்மனி.

ஜாடி 2: குரோஷியா, மொரோக்கோ, கொலம்பியா, உருகுவே, சுவிட்சர்லாந்து, ஜப்பான், செனகல், ஈரான், தென் கொரியா, ஈக்வடோர், ஆஸ்திரியா, அவுஸ்திரேலியா.


ஜாடி 3: நோர்வே, பனாமா, எகிப்து, அல்ஜீரியா, ஸ்கொட்லாந்து, பரகுவே, டியூனிசியா, கோட் டி'ஐவொயர் (ஐவரி கோஸ்ட்), உஸ்பெகிஸ்தான், கத்தார், சவூதி அரேபியா, தென் ஆபிரிக்கா.

ஜாடி 4: ஜோர்தான், கபோ வேர்டே, கானா, கியூராகாவோ, ஹெய்ட்டி, நியூஸிலாந்து, ஐரோப்பிய ப்ளே ஓவ் ஏ, பி, சி, டி, FIFA ப்ளே ஓவ் சுற்றுப் போட்டி 1, 2.

ஜாடி 1இல் இடம்பெறும் 12 அணிகளும் A இலிருந்து L வரை 12 குழுக்களில் முதல் அணிகளாக குலுக்கல் மூலம் நிரல்படுத்தப்படும்.

4_fifa_word_cup_qualified_teams.png

2026 உலகக் கிண்ணப் போட்டிகளை முன்னின்று நடத்தும் வரவேற்பு நாடுகள் என்ற வகையில் ஜாடி 1இல் (Pot 1) இடம்பெறும் மெக்சிகோ, கனடா, ஐக்கிய அமெரிக்கா ஆகியன வெவ்வேறு நிறங்களிலான பந்துகளைக் கொண்டு முதல் அணிகளாக நிரல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மூன்று அணிகளும் ஏ 1 - மெக்சிகோ (பச்சை பந்து), பி 1 - கனடா (சிவப்பு பந்து), டி 1 - ஐக்கிய அமெரிக்கா (நீல பந்து) என நிரல்படுத்தப்படும்.

ஜாடி 2இல் இடம்பெறும் அணிகள் 12 குழுக்களில் 2ஆவது அணிகளாகவும் ஜாடி 3இல் இடம்பெறும் அணிகள் 3ஆவது அணிகளாகவும் ஜாடி 4இல் இடம்பெறும் அணிகள் 4ஆவது அணிகளாகவும் குலுக்கல் மூலம் தெரிவு செய்யப்படும்.

சம அளவிலான போட்டித் தன்மை  

சம அளவிலான போட்டித் தன்மையை உறுதிப்படுத்தும் வகையில் அரை இறுதிகளுக்கு நான்கு வெவ்வேறு குழுக்களிலிருந்து அணிகள் தெரிவாகும்.

அதாவது பீபா தரவரசையில் முதல் இரண்டு இடங்களில் இருக்கும் ஸ்பெய்ன், ஆர்ஜன்டீனா ஆகியன ஒரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக  (Top half and Bottom half) விளையாடும்.  அதேபோன்று தரவரிசையில் 3ஆம், 4ஆம் இடங்களில் உள்ள பிரான்ஸ், இங்கிலாந்து ஆகியன மற்றொரு பகுதியில் மேல் பாதி மற்றும் கீழ் பாதியாக விளையாடும். 

5_pathway_for_fifa_groupings.png

இந்த அணிகள் தத்தம் குழுக்களில் முதலிடத்தைப் பெற்றால் அரை இறதிவரை ஒன்றை ஒன்று எதிர்கொள்ள மாட்டாது.

12 குழுக்களில் நடத்தப்படும் உலகக் கிண்ணப் போட்டியில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைத் தவிர்ந்த ஏனைய கூட்டு சம்மேளனங்களை சேர்ந்த இரண்டு அணிகள் ஒரு குழுவில் இடம்பெறாது என கொள்கை அளவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஐரோப்பிய நாடுகளுக்கு இது பொருந்தாது.


ஏனெனில் ஐக்கிய ஐரோப்பிய கால்பந்தாட்ட சங்கத்தைப் பிரதிநிதித்தவப்படுத்தும் 16 அணிகள் உலகக் கிண்ணத்தில் விளையாடவுள்ளன. அதேவேளை, ஒரே குழுவில் இரண்டு ஐரோப்பிய அணிகளுக்கு மேல் இடம்பெறாது.

பீபா உலகக் கிண்ண குலுக்கலில் பங்குபற்றும் உலகத் தலைவர்கள்

வொஷிங்டன் டி சி கென்னடி நிலையத்தில் இலங்கை நேரப்படி இன்று இரவு 10.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ள 42 அணிகளுக்கான பகிரங்க குலுக்கலின் போது வரவேற்பு நாடுகளின் தலைவர்கள் உட்பட இன்னும் பல நாடுகளின் தலைவர்கள் பங்குபற்றுவர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

6_pm_of_canada_march_carney.jpg

7_mexico_president_claudia.png

8_us_president_donald_trump...JPG

கனடா பிரதமர் மார்க் கார்னி, மெக்சிகோ ஜனாதிபதி குளோடியா ஷெய்ன்போம், அமெரிக்க ஜனாதிபதி டொனல்ட் ட்ரம்ப் ஆகிய மூவரும் இறுதி குலுக்கலின்போது அரங்கில் பிரசன்னமாகி இருப்பர்.

உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறவுள்ள 16 நகரங்களில் உள்ள இலட்சக்கணக்கான இரசிகர்களிடம் போட்டிகளைக் கண்டு களிக்க வருகை தருமாறு மூன்று தலைவர்களும் அழைப்பு விடுக்கவுள்ளனர்.

அத்துடன் கால்பந்தாட்ட கூட்டு சம்மேளனங்களின் தலைவர்கள் உட்பட பிரதிநிதிகளும் கலந்து இன்றைய வைபவத்தில் பங்குபற்றவுள்ளனர்.

ஈரான் கால்பந்தாட்ட சங்கத் தலைவருக்கு விசா மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும் இந்த சங்கத்தைச் சேர்ந்த நான்கு பிரதிநிதிகள் ஏற்கனவே அமெரிக்கா சென்றுள்ளதாக அறியக்கிடைக்கிறது.

பீபா உலகக் கிண்ணம் 2026

பீகா உலகக் கிண்ணப் போட்டிகள் 2026 ஜூன் 11ஆம் திகதி முதல் ஜூலை 19ஆம் திகதிவரை நடைபெறும்.

72 குழுநிலைப் போட்டிகள், இறுதிப் போட்டி மற்றும் 3ஆம் இடத்துக்கான போட்டிகள் உட்பட 32 நொக் அவுட் போட்டிகளுளுடன் மொத்தம் 104 போட்டிகள் நடைபெறும்.

உலகக் கிண்ண கால்பந்தாட்டத்தை மூன்றாவது தடவையாக அரங்கேற்றவுள்ள மெக்சிக்கோ முதலாவது போட்டியை ஜூன் 11ஆம் திகதி தனது அணியின் பங்கேற்புடன் மெக்சிகோ சிட்டி விளையாட்டரங்கில் அரங்கேற்றும்.

மெக்சிகோவில் மொத்தம் 13 போட்டிகள் நடத்தப்படும்.

கனடா முதல் தடவையாக உலகக் கிண்ணப் போட்டிகளை நடத்துகின்றது. அந்த நாட்டிலும் 13 போட்டிகள் நடத்தப்படும். கனடா தனது ஆரம்பப் போட்டியை டொரொன்டோ விளையாட்டரங்கில் ஜூன் 12ஆம் திகதி நடத்தும்.

ஐக்கிய அமெரிக்காவில் மொத்தம் 78 போட்டிகள் நடைபெறும். ஐக்கிய அமெரிக்காவின் ஆரம்பப் போட்டி லொஸ் ஏஞ்சலிஸில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறும்.

9_new_york_new_jersey.jpg

உலக சம்பியனைத் தீர்மானிக்கும் மாபெரும் இறுதிப் போட்டி நியூ யோர்க் நியூ ஜேர்சி விளையாட்டரங்கில் ஜூலை 19ஆம் திகதி அரங்கேற்றப்படும்.

இப் போட்டிகளை முன்னிட்டு 60 இலட்சம் டிக்கெட்கள் விற்பனை செய்யப்படவுள்ளதுடன் அவற்றில் 2 இலட்சம் டிக்கெட்கள் ஏற்கனவே விற்றுத் தீர்ந்துவிட்டன.

2_fifa_world_cup_2026.png

10_fifa_world_cup_2026_players.png

https://www.virakesari.lk/article/232570

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

3 months 1 week ago

வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களுக்கான விருதுகளை மொண்டோ டுப்லான்டிஸ், சிட்னி மெக்லோலின் வென்றனர்

02 Dec, 2025 | 03:11 PM

image

(நெவில் அன்தனி)

சர்வதேச மெய்வல்லுநர் அரங்கில் உலக சம்பியன்களான மொண்டோ டுப்லான்டிஸ் மற்றும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் ஆகிய இருவரும் இந்த வருடம் நிலைநாட்டிய சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் அவர்கள் இருவரையும் வருடத்தின் அதிசிறந்த மெய்வல்லுநர்களாக வேர்ல்ட் அத்லெட்டிக்ஸ் (உலக மெய்வல்லுநர் நிறுவனம்) தெரிவுசெய்து உயர் விருதுகளை வழங்கியது.

1222.PNG

மொனோக்கோவில் ஞாயிற்றுக்கிழமை இரவு நடைபெற்ற உலக மெய்வல்லுநர் விருது விhழவின்போது இந்த உயர் விருதுகளுடன் இன்னும் சில விருதுகள் வழங்கப்பட்டன.

சுவடு, மைதானம், மற்றும் வெளிக்களம் ஆகிய மூன்று பிரிவுகளில் ஆண், பெண் இருபாலாரிலும் ஆறு பேர் வருடத்தின் சிறந்த மெய்வல்லுநர் விருதுளை வென்றெடுத்துள்ளனர்.

அவர்களில் கோலூன்றிப் பாய்தலில் தனது சொந்த உலக சாதனையை இந்த வருடம் நான்கு தடவைகள் புதுப்பித்த சுவீடனின்  கோலூனறிப் பாய்தல் ஜாம்பவான் ஆர்மண்ட் (மொண்டோ) கஸ்டவ் டுப்லான்டிஸ் வருடத்தின் அதிசிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த விருதை டுப்லான்டிஸ் மூன்றாவது தடவையாக வென்றெடுத்துள்ளமை விசேட அம்சமாகும்.

கடந்த ஐந்து வருடங்களாக சரவ்தேச அரங்கில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் அசாத்திய திறமையை வெளிப்படுத்தி வரும் டுப்லான்டிஸ், 2014ஆம் ஆண்டு பிரான்ஸ் வீரர் ரெனோல்ட் லெவிலெனி நிலைநாட்டிய 6.16 மீற்றர் உலக சாதனையை போலந்தில் 2020 இல் நடைபெற்ற மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.17 மீற்றர் உயரம் தாவியதன் மூலம் முறியடித்து புதிய உலக சாதனை நிலைநாட்டி இருந்தார்.

அன்றிலிருந்து ஒவ்வொரு சென்றி மீற்றரால் தனது சொந்த உலக சாதனையை புதுப்பித்துவரும் டுப்லான்டிஸ், கடந்த செப்டெம்பர் மாதம் வரை 13 தடவைகள் தனது சொந்த சாதனையைப் புதுப்பித்துள்ளார்.

கடைசியாக ஜப்பான், டோக்கியோ தேசிய விளையாட்டரங்கில் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 6.30 மீற்றர் உயரத்தைத் தாவி ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் உலக சாதனை நிலைநாட்டினார்.

வருடத்தின் அதிசிறந்த சிறந்த ஆண் மெய்வல்லுநர் விருதுடன் இந்த வருடம் ஆண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் டுப்லான்டிஸ் வென்றெடுத்தார்.

duplantis_and_maclauglin_lavrone.jpg

பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் மீண்டும் உலக சம்பியனான ஐக்கிய அமெரிக்க வீராங்கனை சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன், வருடத்தின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை தனதாக்கிக்கொண்டார்.

ஜப்பானில் செப்டெம்பர் மாதம் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் போட்டியில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்ட நிகழ்ச்சியை 47.78 செக்கன்களில் நிறைவுசெய்து 42 வருடங்களாக நீடித்த போட்டி சாதனையை மெக்லோலின் - லெவ்ரோன் முறிடித்து தங்கப் பதக்கத்தை வென்றிருந்தார்.

அத்துடன் அப் போட்டியில் வட அமெரிக்க, மத்திய அமெரிக்க மற்றும் கரிபியன் மெய்வல்லுநர் சங்க சாதனையையும் மெக்லோலின் - லெவ்ரோன் முறியடித்தார்.

அதன் மூலம் உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப் வரலாற்றில் பெண்களுக்கான 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் இரண்டாவது அதிசிறந்த நேரப் பெறுதியை அவர் பதிவுசெய்தார்.

டோக்கியோ 2020 ஒலிம்பிக் விளையாட்டு விழாவிலும் பாரிஸ் 2024 ஒலிம்பிக் விளையாட்டு விழாவி லும்   400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டிகளில் தங்கப் பதக்கங்களை சுவீகரித்த 26 வயதுடைய மெக்லோலின் - லெவ்ரோன் தற்போது 400 மீற்றர் ஓட்டப் போட்டியில் அசத்தி வருகிறார்.

இயூஜினில் 2022இல் நடைபெற்ற உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் 400 மீற்றர் சட்டவேலி இறுதி ஓட்டப் போட்டியை 50.68 செக்கன்களில் நிறைவுசெய்து உலக சாதனை நிலைநாட்டியிருந்தார்.

இந்த சாதனை அந்த வருடத்துக்கான உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை அவருக்கு வென்றுகொடுத்திருந்தது.

அதன் பின்னர் 400 மீற்றர் சட்டவேலி ஓட்டப் போட்டியிலிருந்து ஒதுங்கி வெறும் 400 மீற்றர் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிவரும் மெக்லோலின் - லெவ்ரோன் இந்த வருடம் டோக்கிய உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் வெற்றிபெற்றதன் மூலம் இரண்டாவது தடவையாய உலகின் அதிசிறந்த பெண் மெய்வல்லுநர் விருதை வென்றெடுத்தார்.

இந்த வருடம் பெண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதையும் சிட்னி மெக்லோலின் - லெவ்ரோன் வென்றெடுத்தார்.

nicola_olylagers.jpg

emmanuel.jpg

பெண்களுக்கான மைதான போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை அவுஸ்திரேலியாவின் நிக்கோலா ஒலிஸ்லேஜர்ஸ் வென்றெடுத்தார்.

ஆண்களுக்கான சுவட்டு போட்டிகளில் அதிசிறந்த மெய்வல்லுநர் விருதை கென்ய வீரர் இம்மானுவேல் வனியொயன்யி வென்றெடுத்தார்.

maria_peres.jpg

sabastian_sawe.jpg

வருடத்தின் அதிசிறந்த வெளிக்கள பெண் மெய்வல்லுநராக ஸ்பெய்ன் வீராங்கனை மரியா பெரெஸ் தெரிவானதுடன் ஆண் மெய்வல்லுநராக கென்ய வீரர் செபஸ்டியன் சோவ் தெரிவானார்.

rising_stars_ed_serem_and_zang_giale.jpg

பெண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீராங்கனை விருதை சீன வீராங்கனை ஸாங் ஜியேல் வென்றெடுத்தார்.

ஆண்களில் வளர்ந்துவரும் நட்சத்திர வீரர் விருதை கென்ய வீரர் எட்மண்ட் சேரம் வென்றெடுத்தார்.

https://www.virakesari.lk/article/232249

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்

3 months 2 weeks ago

ஒருநாள் கிரிக்கெட்டில் அதிக சிக்ஸ்கள், ஷஹித் அப்றிடியின் 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்தார்.

Published By: Vishnu

30 Nov, 2025 | 10:06 PM

image

(நெவில் அன்தனி)

தென் ஆபிரிக்காவுக்கு எதிராக ரன்ச்சி சர்வதேச விளையாட்டரங்கில் ஞாயிற்றுக்கிழமை (30) நடைபெற்ற முதலாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியின் போது பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடியின் அதிக சிக்ஸ்களுக்கான 15 வருட சாதனையை ரோஹித் ஷர்மா முறியடித்து புதிய சாதனை நிலைநாட்டினார்.

அப் போட்டியில் 3 சிக்ஸ்களை அடித்த ரோஹித் ஷர்மா சர்வதேச ஒருநாள் கிரிக்கெட்டில் 352ஆவது சிக்ஸை அடித்து அதிக சிக்ஸ்கள் குவித்த வீரர் என்ற சாதனையை நிலைநாட்டினார்.

இதன் மூலம் பாகிஸ்தான் வீரர் ஷஹித் அப்றிடிக்கு 15 வருடங்கள் சொந்தமாக இருந்த 351 சிக்ஸ்கள் என்ற சாதனை ரோஹித் ஷர்மாவினால் முறியடிக்கப்பட்டது.

தென் ஆபிரிக்காவுடனான அப் போட்டியில் ரோஹித் ஷர்மா 57 ஓட்டங்களைப் பெற்றார்.

https://www.virakesari.lk/article/232088

Checked
Tue, 03/17/2026 - 19:17
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed