விளையாட்டுத் திடல்

யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார்

5 hours 17 minutes ago

யாழ். மத்திய அணி வீரர் நிதர்சன் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்து வரலாறு படைத்தார்

Published By: Vishnu

17 Mar, 2026 | 08:37 PM

image

(நெவில் அன்தனி)

இலங்கை பாடசாலைகள் கிரிக்கெட் சங்கத்தினால் நடத்தப்பட்டுவரும் இரண்டாம் பிரிவு பி அடுக்கு கிரிக்கெட் போட்டி ஒன்றில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி வீரர் ஜேசுதாசன் நிதர்சன் இரட்டைச் சதம் குவித்து சாதனை படைத்தார்.

நீர்கொழும்பு புனித பேதுருவானவர் கல்லூரி அணிக்கு எதிராக யாழ். மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் தனது அணி மிகவும் இக்கட்டான நிலையில் இருந்தபோது 9ஆம் இலக்க வீரராக களம் புகுந்த நிதர்சன், எதிரணி பந்துவீச்சாளர்களை சிதறடித்து இரட்டைச் சதம் குவித்தார்.

இதன் மூலம் இரண்டாம் பிரிவுக்கான பி அடுக்கு பாடசாலை கிரிக்கெட் போட்டி ஒன்றில் 9ஆம் இலக்கத்தில் இரட்டைச் சதம் குவித்த முதலாவது வீரர் என்ற அரிய சாதனையை நிலைநாட்டினார்.

அத்துடன் இந்த சாதனையை நிலைநாட்டிய முதலாவது வட மாகாண வீரர் என்ற பெருமையையும் நிதர்சன் பெற்றுக்கொண்டார்.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய யாழ். மத்திய கல்லூரி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 369 ஓட்டங்களைக் குவித்தது.

போட்டியின் ஒரு கட்டத்தில் யாழ். மத்திய கல்லூரி அணி 8 விக்கெட்களை இழந்து 168 ஓட்டங்களைப் பெற்று திக்குமுக்காடிக்கொண்டிருந்தது.

அந்த சந்தர்ப்பத்தில் 9ஆம் இலக்க வீரராக களம் நுழைந்த நிதர்சன், அசாத்திய திறமையுடன் துடுப்பெடுத்தாடி நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணியின் பந்துவீச்சாளர்களை விளாசி அடித்து இரட்டைச் சதம் குவித்தார்.

ஜேசுதாசன் நிதர்சன் 119 பந்துகளை எதிர்கொண்டு 23 பவுண்டறிகள், 12 சிக்ஸ்களுடன் 200 ஓட்டங்களைக் குவித்து அசத்தினார்.

அத்துடன் 9ஆவது விக்கெட்டில் பத்மகுமாரன் நவிந்தனுடன் பெறுமதிமிக்க 196 ஓட்டங்களை நிதர்சன் பகிர்ந்தமை விசேட அம்சமாகும்.

நவிந்தன் 48 ஓட்டங்களைப் பெற்றார்.

ஜேசதாசன் நிதர்சன் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவராவார். மாங்குளம் மத்திய கல்லூரியில் கல்வி பயின்ற நிதர்சன், யாழ். இந்து கல்லூரியின் பழைய மாணவர்கள் சங்கத்தின் லண்டன் கிளையினரின் புலமைப் பரிசில் திட்டத்தின் கீழ் யாழ். மத்திய கல்லூரியில் இரண்டு வருடங்களுக்கு முன்னர் இணைந்து கல்வி பயின்று வருகின்றார்.

அப் போட்டியில் நீர்கொழும்பு புனித பேதுருவானவர் அணி முதல் இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 78 ஓட்டங்களையும் பலோ ஒன்னில் இரண்டாவது இன்னிங்ஸில் சகல விக்கெட்களையும் இழந்து 126 ஓட்டங்களையும் பெற்றது.

எண்ணிக்கை சுருக்கம்

யாழ். மத்திய கல்லூரி 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 369 (ஜேசுதாசன் நிதர்சன் 200, பத்மகுமாரன் நவிந்தன் 48, கபிலன் அமலன் 27, யசிறு ஜனஞ்சய 87 - 5 விக்., அப்துல் ரஹுமான் 169 - 4 விக்.)

நீர்கொழும்பு புனித பேதுருவானவர் 1ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 78 (சுபசன் டிலூக்க 33, முரளி திசோன் 17 - 3 விக்., அன்ரன்ரேஷான் அபிஷேக் 43 - 3 விக்., வெலன்டைன் ஹெரிஸ் 7 - 2 விக்.)

புனித பேதுருவானவர் (பலோ ஒன்) 2ஆவது இன்: சகலரும் ஆட்டம் இழந்து 126 (ரேஷான் லீமா 53, அப்துல் ரஹுமான் 21, முரளி திசோன் 67 - 8 விக்., ஜெயசீலன் ஜெனோஷன் 17 - 2 விக்.)

https://www.virakesari.lk/article/241232

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை

2 days 7 hours ago

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை

image_b8b72dce40.jpg

  அழகன் கனகராஜ்

இலங்கைத் தீவின் மூலை முடுக்குகளிலெல்லாம் எதிரொலிக்கும் ஒரே உணர்வு 'கிரிக்கெட்'. 1996-ஆம் ஆண்டு லாகூர் மைதானத்தில் அர்ஜுன ரணதுங்கவின் படை உலகக் கிண்ணத்தை ஏந்திய அந்தத் தருணம், ஒரு சிறிய தீவை உலக வரைபடத்தில் ஜொலிக்க வைத்தது. அன்று முதல் இன்று வரை, இலங்கை கிரிக்கெட் பல உச்சங்களையும் சரிவுகளையும் கண்டுள்ளது.

இலங்கை கிரிக்கெட்டின் அத்திவாரம் மிக வலிமையானது. சனத் ஜயசூரியவின் அதிரடி, அரவிந்த டி சில்வாவின் நேர்த்தி, முத்தையா முரளிதரனின் மாயாஜால சுழல் என ஒவ்வொரு ஜாம்பவான்களும் உலக கிரிக்கெட்டைத் திரும்பிப் பார்க்க வைத்தனர். பின்னரான காலத்தில் குமார் சங்கக்கார, மஹேல ஜயவர்தன ஆகியோரின் அபாரமான துடுப்பாட்டமும், லசித் மாலிங்கவின் துல்லியமான 'யார்க்கர்' பந்துகளும் இலங்கையை ஒரு தவிர்க்க முடியாத சக்தியாக மாற்றின.

2014-ஆம் ஆண்டு நாம் வென்ற டி20 உலகக் கிண்ணம், அந்தப் பொற்காலத்தின் இறுதி மகுடமாக அமைந்தது.

தற்போதைய சவால்கள்: தடுமாற்றம் எங்கே?

கடந்த சில வருடங்களாக இலங்கை அணி ஒருவித இடைமாற்றக் காலத்தைக் (Transition Period) கடந்து வருகிறது. அனுபவம் வாய்ந்த வீரர்கள் ஓய்வு பெற்ற பிறகு, அந்த இடங்களை நிரப்பக் கூடிய நிலையான வீரர்கள் கிடைக்காதது ஒரு பெரும் பின்னடைவு.

  • ஸ்திரமற்ற துடுப்பாட்டம்: பல போட்டிகளில் வெற்றியின் விளிம்பு வரை சென்று, கடைசி நேரத்தில் விக்கெட்டுகளைப் பறிகொடுக்கும் நிலை தொடர்கிறது.

  • நிர்வாகச் சிக்கல்கள்: கிரிக்கெட் சபையின் நிர்வாக மாற்றங்கள் மற்றும் பயிற்சிக் கட்டமைப்பில் நிலவும் சில குறைபாடுகள் வீரர்களின் மனநிலையைப் பாதிப்பதாக விமர்சனங்கள் எழுகின்றன.

  • ஒழுக்கக் கட்டுப்பாடுகள்: மைதானத்திற்கு வெளியேயான சில வீரர்களின் ஒழுக்கமின்மைச் சம்பவங்களும் அணியின் நற்பெயருக்குக் களங்கம் விளைவித்தன.

எதிர்காலம்: நம்பிக்கையளிக்கும் இளம் குருத்துக்கள்

இருப்பினும், இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை. சமீபத்திய போட்டிகளில் இளம் வீரர்களின் எழுச்சி புதிய நம்பிக்கையைத் தந்துள்ளது.

  • பந்துவீச்சு பலம்: மதீஷ பத்திரண போன்ற வேகப்பந்து வீச்சாளர்களும், வனிந்து ஹஸரங்க போன்ற சுழற்பந்து வீச்சாளர்களும் உலகத்தரம் வாய்ந்த லீக் போட்டிகளில் முத்திரை பதித்து வருகின்றனர்.

  • ஆசியக் கிண்ண வெற்றி: 2022-இல் இலங்கை அணி ஆசியக் கிண்ணத்தை வென்றது, எத்தகைய சவாலையும் முறியடித்து எம்மால் மீண்டெழ முடியும் என்பதற்கான சான்றாகும்.

வெற்றிக்கான பாதை என்ன?

எதிர்காலத்தில் மீண்டும் ஒருமுறை உலகக் கிண்ணத்தை ஏந்த வேண்டுமானால், நாம் சில அடிப்படை மாற்றங்களைச் செய்ய வேண்டும்:

  1. உள்நாட்டு கிரிக்கெட் கட்டமைப்பு: பாடசாலை மட்டத்திலிருந்தே திறமையான வீரர்களைக் கண்டறிந்து, அவர்களுக்குத் சர்வதேசத் தரத்திலான பயிற்சிகளை வழங்க வேண்டும்.

  2. மனவலிமை (Mental Toughness): இக்கட்டான சூழலில் பதற்றமின்றி விளையாடும் மனப்பக்குவத்தை இளம் வீரர்களுக்குப் பயிற்சியாளர்கள் வழங்க வேண்டும்.

  3. நிலையான தலைமைத்துவம்: அடிக்கடி அணித்தலைவர்களை மாற்றாது, ஒரு நீண்டகாலத் திட்டத்துடன் அணியைக் கட்டியெழுப்ப வேண்டும்.

இலங்கை கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு அல்ல; அது எமது மக்களின் அடையாளம். கடந்த காலத்தின் புகழையும், தற்போதைய திறமைகளையும் சரியாக ஒருங்கிணைத்தால், 'சிங்கச் சொப்பனமாக' இலங்கை அணி மீண்டும் உலக அரங்கில் கர்ஜிக்கும் என்பதில் ஐயமில்லை.

இலங்கை கிரிக்கெட்டின் எதிர்காலம் இருண்டதாகத் தெரியவில்லை

கங்குலியின் "ஒரு சதம் போதாது (A Century Is Not Enough)" என்ற நூலில் இருந்து முக்கிய தருணங்கள்!

3 days 6 hours ago

இந்திய அணி பாகிஸ்தான் சென்றிருந்த போது முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • ரஷித் ஷகூர்

  • மூத்த விளையாட்டு செய்தியாளர், கராச்சி

  • 14 மார்ச் 2026, 02:54 GMT

    புதுப்பிக்கப்பட்டது 7 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 7 நிமிடங்கள்

பாகிஸ்தானின் முன்னாள் பிரதமரும் 1992 உலகக் கோப்பை வெற்றி பெற்ற அணியின் கேப்டனுமான இம்ரான் கான் தற்போது சிறையில் இருக்கிறார். சிறையில் அவரது கண் பார்வை பாதிக்கப்பட்டிருப்பதாக வெளியான செய்தி கிரிக்கெட் உலகிலும் பலரையும் கவலையில் ஆழ்த்தியது.

இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று குரல் எழுப்பியவர்களில் இந்தியாவின் முன்னாள் கேப்டன்களான சுனில் கவாஸ்கர் மற்றும் கபில் தேவ் உள்ளிட்ட14 முன்னாள் கிரிக்கெட் கேப்டன்களும் அடங்குவர். இதில் பெரும்பாலானவர்கள் இம்ரான் கானுடன் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் விளையாடியவர்கள்.

கவாஸ்கரும், கபில் தேவும் இம்ரான் கானுடன் விளையாடியவர்கள் இருவருக்கும் இம்ரான் கானிடம் ஆழமான பிணைப்பு இருக்கிறது. இந்தியாவின் மற்றொரு முன்னாள் கேப்டன் சௌரவ் கங்குலிக்கும் இம்ரான் கானிடம் தனி பிணைப்பு இருக்கிறது.

கங்குலி கிரிக்கெட் மைதானத்தில் ஒருபோதும் இம்ரான் கானை எதிர்கொண்டதில்லை என்றாலும், அவர் மீது மனதில் எப்போதும் மரியாதை வைத்திருக்கிறார். அதனால்தான் இம்ரான் கானின் உடல்நிலை குறித்து அவரும் கவலை வெளிப்படுத்தினார்.

சிறையில் இருக்கும் இம்ரான் கானுக்கு சிறந்த சிகிச்சை கிடைக்க வேண்டும் என்று கங்குலி பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியிருக்கிறது.

"அவர் பாகிஸ்தானின் பிரதமராக இருந்தவர்; கேப்டனாக பாகிஸ்தான் கிரிக்கெட்டை உலக வரைபடத்தில் முக்கியமான இடத்தில் நிறுத்தியவர்" என்று கங்குலி குறிப்பிட்டிருந்தார்.

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,கங்குலியின் கருத்துப்படி, இம்ரான் கானின் ஒரு சாதாரண ஆலோசனை அவரது சிந்தனையையே மாற்றிவிட்டது (கோப்புப் படம்)

வாழ்க்கையையே மாற்றிய ஒரு சந்திப்பு

கங்குலி தனது "ஒரு சதம் போதாது (A Century Is Not Enough)" என்ற நூலில் இம்ரான் கானுடனான தனது சந்திப்பையும், அவர் சொன்ன அந்த விலைமதிப்பற்ற வார்த்தைகளையும் விரிவாக எழுதியிருக்கிறார்.

அதில் அவர், "ஈடன் கார்டன் மைதானத்தில் இம்ரான் கான் பந்து வீசியதை பார்த்திருக்கிறேன். அவரது போட்டிகளை தொலைக்காட்சியில் மிகவும் கவனமாகப் பார்ப்பேன்; அவரைப் பற்றி எது கிடைத்தாலும் வாசித்துவிடுவேன். 1997-ஆம் ஆண்டு லண்டனில் உள்ள இந்திய தூதரகம் நடத்திய விருந்தில்தான் இம்ரான் கானை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது. நான் மிகவும் உற்சாகமாக இருந்தேன்." எனக் குறிப்பிட்டுள்ளார்.

அந்த நேரம் கங்குலியின் வாழ்க்கையில் மிகவும் கஷ்டமான காலகட்டம். டொரான்டோ தொடரில் விளையாடும் அணியிலிருந்து நீக்கப்பட்டிருந்ததால் மிகவும் சோகத்தில் இருந்தார். பின்னர் கயானா டெஸ்ட் போட்டியிலும் சேர்க்கப்படாதது அவரது காயத்தில் உப்பைத் தடவியது போல்தான் இருந்தது.

வெஸ்ட் இண்டீஸில் பார்படோஸை தவிர மற்ற போட்டிகளில் நன்றாக விளையாடியிருந்தும், கடைசி டெஸ்டில் ஒரு கூடுதல் பந்துவீச்சாளருக்காக அவரை அணியிலிருந்து நீக்கினார்கள். பேட்டிங் மற்றும் பவுலிங் என இரண்டிலும் தான் பயனுள்ளதாக இருப்பதாக கங்குலி நம்பியிருந்தார்.

அணியிலிருந்து தான் நீக்கப்பட்ட முடிவை ஏற்றுக்கொள்வது மிகவும் கஷ்டமாக இருந்தது என்கிறார் கங்குலி. அவர் அப்போது ஒரு புதிய மற்றும் அனுபவமற்ற கிரிக்கெட் வீரராக இருந்தததும் அதற்கு ஒரு காரணமாக இருக்கலாம். ஆனால் இம்ரான் கானுடனான சந்திப்பும் உரையாடலும் அவரது மனதை மாற்றியது.

இதுகுறித்து கங்குலி ,"இம்ரான் கானின் பேச்சு மிகவும் நேர்மையாகவும் நட்புடனும் இருந்தது. அவர் என்னிடம், 'உன் பேட்டிங்கை பார்த்தேன், நன்றாக விளையாடுகிறாய்' என்று சொன்னார். அந்த அன்பான வார்த்தைகள் என்னுள் இருந்த தயக்கத்தை போக்கின. அவர் சொன்னதை கவனமாகக் கேட்டேன். அவர் சொன்னதை என்னால் ஒருபோதும் மறக்கவே முடியாது", என்று எழுதியுள்ளார் .

கங்குலியின் கூற்றுப்படி, இம்ரான் கான் அவரிடம் சொன்ன வார்த்தைகள்; "நீ உயரப் பறக்க வேண்டும். வானில் உயரப் பறக்கும்போது இருண்ட மேகங்களை பார்க்கிறாய் என்றால், அதை சமாளிக்க ஒரே வழி இன்னும் உயரப் பறப்பதுதான். நானும் அணியிலிருந்து வெளியே இருந்திருக்கிறேன். அதனால் அது எப்படி இருக்கும் என்று எனக்குத் தெரியும். உன் எதிராளி பின்தங்கி விடும் அளவுக்கு உயரப் பறக்க வேண்டும். அதுவே உன் பிரச்னைக்கு தீர்வு."

இம்ரான் கானின் வார்த்தைகளும் அதன் அர்த்தங்களும் மிகவும் எளிமையானவை எனக் கூறும் கங்குலி, ஆனால் அவர் அந்த கருத்துகளை மிகுந்த நம்பிக்கையுடன் வெளிப்படுத்தினார். இந்த வார்த்தைகளால் தான் மிகவும் ஈர்க்கப்பட்டதாகவும் அவை தனக்கு புத்துயிர் ஊட்டியதாகவும் கூறுகிறார் கங்குலி.

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தனது வாழ்க்கைப் பயணத்தில் பாகிஸ்தான் அணிக்கு எதிராகச் சவுரவ் கங்குலி சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளார் (கோப்புப் படம்).

அதற்கு சில மாதங்கள் கழித்து நடந்த தொடரில் கங்குலி நாட்டின் ஹீரோவாக மாறினார். அந்த தொடரில் 222 ரன்களும் 15 விக்கெட்டுகளும் எடுத்தார். அந்தத் தொடரை 4-1 என்கிற வென்றது மட்டுமல்ல, அது இம்ரான் கானின் சொந்த நாடான பாகிஸ்தானுக்கு எதிரானது என்பதைக் குறிப்பிடுவதும் இங்கே முக்கியமாகிறது.

அந்த தொடரில் கங்குலி தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் "ஆட்ட நாயகன் (Player of the Match)" விருது வென்றார். கங்குலியைத் தவிர வேறு எந்த வீரரும் தொடர்ந்து நான்கு ஒருநாள் போட்டிகளில் இந்த விருதை வென்றதில்லை.

அதே தொடரின் மூன்றாவது ஒருநாள் போட்டியில் 10 ஓவர்களில் 16 ரன்களுக்கு 5 விக்கெட் எடுத்தார் கங்குலி. பாகிஸ்தானுக்கு எதிரான ஒருநாள் போட்டிகளில் இந்திய பந்துவீச்சாளரின் சிறந்த பந்துவீச்சாக இது உள்ளது.

இம்ரான் கானின் வார்த்தைகள் உண்மையிலேயே ஒரு மாயாஜாலம் என்றும் அதற்காக அவருக்கு அமைதியாக நன்றி சொன்னதாகவும் தனது புத்தகத்தில் தெரிவிக்கிறார் கங்குலி.

நிச்சயமற்ற நிலையில் தடுமாறிக் கொண்டிருந்த ஒரு இளம் கிரிக்கெட்டருக்கு, கிரிக்கெட்டை மட்டுமல்ல வாழ்க்கையையே பார்க்கும் புதிய கண்ணோட்டம் கிட்டியது.

சவுரவ் கங்குலி உடனான இரண்டாவது சந்திப்பு 2004-ஆம் இந்திய அணி பாகிஸ்தான் சென்ற போது நடந்தது. தனது வீட்டுக்கு உணவருந்த வருமாறு இம்ரான் கான் அவரை அழைத்திருந்தார், அவரின் விருந்தோம்பலால் மிகவும் ஈர்க்கப்பட்டார் கங்குலி.

2005-ஆம் ஆண்டு கங்குலியின் கிரிக்கெட் வாழ்க்கையில் மோசமான காலகட்டமாக அமைந்தது. மோசமான ஃபார்ம் காரணமாக கேப்டன் பதவி பறிக்கப்பட்டதோடு அணியிலும் தன்னுடைய இடத்தை இழந்தார். அவர் இந்திய அணிக்கு திரும்பியதில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் ஜாகீர் அப்பாஸ் முக்கியப் பங்கு வகித்தார்.

ஜாகீர் அப்பாஸின் உதவி

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சவுரவ் கங்குலியின் கருத்துப்படி, ஜாகீர் அப்பாஸின் ஆலோசனை வேகப்பந்து வீச்சாளர்களுக்கு எதிராக விளையாடுவதற்குப் பெரிதும் உதவியது (ஜாகீர் அப்பாஸ்- கோப்புப் படம்)

2006-இல் நார்தாம்ப்டன்ஷையர் அணிக்காக கவுன்டி கிரிக்கெட் விளையாடினார் கங்குலி. அப்போது அவர் தனது பேட்டிங் நுட்பத்தில் சில சிக்கல்களைச் சந்தித்து வந்தார். இதனால் வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்வதில் கஷ்டப்பட்டார்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான் அவர் ஜாகீர் அப்பாஸை சந்திக்கிறார். அவரை மரியாதையாக 'ஸி பாய்' என அழைக்கிறார்.

"ஸி பாய் தனது விரிவான அனுபவத்தால் என் பிரச்னையை தீர்த்தார். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ளும் போது நேராக நிற்க சொன்னார். பக்கவாட்டில் திரும்பாமல் மார்போடு நேரே நின்று விளையாட சொன்னார். என் கிரிப்பும் (grip) தானாக மாறியது."

"பேட்டிங் நிலை மாறியதை தகவமைத்துக் கொள்ள சிரமமாக இருந்தாலும் போகப்போக நான் மிகவும் வசதியாக உணர்ந்தேன். வேகப்பந்து வீச்சாளர்களை எதிர்கொள்ள நிறைய நேரம் கிடைத்தது, அதனைத் தொடர்ந்தவை எனது வாழ்நாளின் சிறந்த நாட்கள், அதற்கு ஸி பாய்க்கு நன்றி சொல்லிக் கொள்கிறேன்" என கங்குலி தனது புத்தகத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சலீம் மாலிக்கின் அச்சுறுத்தல்

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,சவுரவ் கங்குலி தனது பந்துவீச்சால் சலீம் மாலிக்கை இக்கட்டான நிலைக்கு உள்ளாக்கினார் (கோப்புப் படம்).

இந்தியா - பாகிஸ்தான் போட்டிகள் எப்போதும் விவாதப் பொருளாகவே இருக்கும். களத்துக்கு வெளியே நட்பும் மகிழ்ச்சியான தருணங்களும் இருந்தாலும் களத்தில் எதிரணி ஆதிக்கம் செலுத்த யாரும் விரும்புவதில்லை. ஸ்லெட்ஜிங் கடுமையாகவே இருக்கும்.

டொரான்டோ ஒருநாள் தொடரில் மொயின் கான் விக்கெட் கீப்பர் பொசிஷனில் நின்று கொண்டே தொடர்ந்து ஸ்லெட்ஜ் செய்தார்; சலீம் மாலிக் இன்னும் ஒரு படி மேலே போனார்.

இரண்டாவது போட்டியில் சலீம் மாலிக்கை கங்குலி அவுட் செய்திருந்தார். மூன்றாவது போட்டியில் கங்குலி பேட்டிங்கிற்கு வரும்போது சலீம் மாலிக் அவரிடம் வந்து மிரட்டல் தொனியில், "இன்று உன் பந்துவீச்சை அடித்தாடுவேன். நீ ஆச்சரியப்பட்டு போவாய்." என்று கூறினார். அந்தப் போட்டியில் கங்குலி சலீம் மாலிக்கை மீண்டும் அவுட் செய்தார்.

"அப்போது நான் இளம் வீரன், சலீம் மாலிக் பாகிஸ்தானின் ஸ்டார் பேட்ஸ்மேன் — அவருக்கு பதில் சொல்லும் தைரியம் எனக்கு இல்லை" என்றார் கங்குலி.

அதே தொடரில் பாகிஸ்தான் கேப்டன் ரமீஸ் ராஜாவையும் கங்குலி ஆட்டமிழக்கச் செய்திருந்தார். "பாகிஸ்தான் அணியிலிருந்து நான் வெளியேற்றப்பட்டதற்கு நீ தான் காரணம்," என ரமிஸ் ராஜா நகைப்புடன் கங்குலியிடம் தெரிவித்துள்ளார்.

முஷரஃப் செய்த டெலிபோனால் கங்குலி அஞ்சியது ஏன்?

பர்வேஸ் முஷரஃப், கங்குலி - இம்ரான் கான், ஜாகீர் அப்பாஸ், பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஒருமுறை பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த சவுரவ் கங்குலிக்கு, அன்றைய அதிபர் பர்வேஸ் முஷாரப் தொலைபேசியில் அழைத்து அறிவுரை வழங்கினார். (கோப்புப் படம்)

2004-இல் இந்திய அணி பாகிஸ்தான் சுற்றுப்பயணம் சென்றிருந்த போது அணிக்கு பலத்த பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. லாகூர் ஹோட்டல் ஒரு கோட்டை போலவே இருந்தது என கங்குலி குறிப்பிடுகிறார்.

ஆனால் இந்திய அணி கேப்டன் நள்ளிரவில் அந்த கோட்டையை தாண்டி நண்பர்களுடன் சாகசம் செய்ய சென்றார் என்று யாரேனும் நினைத்துப் பார்க்க முடியுமா?

சவுரவ் கங்குலி அதைத்தான் செய்தார். பாதுகாப்பு விதிகளை மீறுகிறோம் எனத் தெரிந்தும் அதைச் செய்தார். அந்த சூழலில் இருந்து விலகி இருக்க வேண்டும் என அவர் விரும்பினார்.

"ஒருநாள் தொடரில் வரலாற்றுக்குரிய வெற்றி பெற்ற மகிழ்ச்சியில் இருந்தேன். கேட்ச் பிடிக்க முயன்றபோது எனக்கு காயமும் ஏற்பட்டது., மூன்று வாரம் ஓய்வெடுக்க மருத்துவர் சொன்னார். ஆனால் எனது மனநிலை நன்றாக இருந்தது. கொல்கத்தாவிலிருந்து வந்த நண்பர்களை பார்த்து மிகவும் மகிழ்ச்சியாக இருந்தேன்" என்று எழுதியிருக்கிறார் கங்குலி.

"ஒரு இரவு நண்பர்களுடன் வெளியே போக முடிவு செய்தேன். நாங்கள் வெளியே செல்வதை பாதுகாப்பு அதிகாரியிடம் சொல்லவில்லை, சொன்னால் போகவே விட மாட்டார்கள். அணி மேலாளர் ரத்னாகர் ஷெட்டியிடம் மட்டும் கூறிவிட்டு வெளியே சென்றேன். அமைதியாக பின் வாசல் வழியாகச் சென்றேன். என்னை யாரும் அடையாளம் காணக்கூடாது என்பதற்காக நழுவி, தொப்பி போட்டு முகத்தை மறைத்துக் கொண்டு கிளம்பினேன்." என்று கூறுகிறார்.

"குவாலியர்மண்டியின் பிரபலமான ஃபுட் ஸ்ட்ரீட் தான் எங்களின் இலக்காக இருந்தது. கபாப், தந்தூரி உணவு எங்களுக்காக காத்திருந்தது. ஆனால் திறந்த வெளியில் யாராவது அடையாளம் கண்டுபிடித்து விடுவார்கள் என்ற பயமும் இருந்தது. ஒருவர் என்னிடம் வந்து, "நீங்கள் சவுரவ் கங்குலியா?" என்று கேட்டார். ஆனால் நான் மறுத்தேன். அந்த நபர் ஏமாற்றத்துடன் சொன்னார், "ஆனால் நீங்கள் சவுரவ் கங்குலி மாதிரியே இருக்கிறீர்கள்!" எனக் கூறினார் என்று கங்குலி தெரிவிக்கிறார்.

இதைப் பற்றி மேலும் குறிப்பிட்ட அவர், "நாங்கள் எல்லோரும் சிரிப்பை அடக்க மிகவும் சிரமப்பட்டோம். இதற்கிடையே இன்னொருவர் வந்து 'சார், நீங்கள் இங்கு வந்துள்ளீர்களா? உங்கள் அணி என்ன சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது' என்று கூறினார். நான் அவரைத் தவிர்க்க முயற்சித்தேன். ஆனால் அவர் தலையை அசைத்துவிட்டு நடந்து சென்றார்."

"நாங்கள் சாப்பிட்டு முடிக்கும் தருணத்தில் பத்திரிகையாளர் ராஜ்தீப் சர்தேசாய் என்னை அடையாளம் கண்டார். அவர் அப்போதைய இந்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துடன் அங்கே வந்திருந்தார். அவர் என்னைக் கண்டதும், "சவுரவ்! சவுரவ்!" என்று கூவ ஆரம்பித்தார். நான் சிக்கலில் இருக்கிறேன் என்பதை உணர்ந்தேன். இந்திய அணி கேப்டன் 'ஃபுட் ஸ்ட்ரீட்டில்' இருக்கிறார் என அனைவருக்கும் தெரிந்துபோனது."

"அனைத்து திசைகளிலிருந்தும் மக்கள் கூட ஆரம்பித்துவிட்டனர். கடைசி கபாப் சாப்பிட்டுக் கொண்டிருந்தேன், நிலைமை இவ்வளவு வேகமாக மாறும் என்று எதிர்பார்க்கவில்லை. பணம் கொடுத்துவிட்டு செல்ல முயன்றேன். ஆனால் கடைக்காரர் வாங்கவே மறுத்தார்."

"ஒரு போலீஸ்காரர் எங்களை காருக்கு அழைத்துச் சென்றார். ஹோட்டலுக்கு திரும்பும்போது ஒரு பைக் வேகமாக பின்தொடர்ந்தது. கண்ணாடியை கீழே இறக்க சொன்னார். என் உடன் வந்தவர்கள் மறுத்தனர். ஆனால் நான் கண்ணாடியை இறக்கினேன். அந்த நபர் கை நீட்டி சொன்னார்: "நான் ஃபுட் ஸ்ட்ரீட்டில் கடை வைத்திருக்கிறேன். உங்களின் மிகப்பெரிய ரசிகன் நான்!' எனக் கூறினார்"

மறுநாள் காலை, அணி மேலாளரிடம் நடந்தவற்றை கங்குலி ஒப்புக்கொண்டார். ஆனால் அதற்குப் பிறகு நடந்தது அவரையே அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது.

"அறைக்கு திரும்பியதும் போன் அடித்தது. போன் எடுத்தேன் — அதிபர் பர்வேஸ் முஷாரஃப்பின் அலுவலகத்தில் இருந்து அழைப்பு! அதிபர் என்னுடன் பேச இருப்பதாக சொன்னார்கள். நான் திகைத்துப் போனேன். ஏன் பாகிஸ்தான் அதிபர் இந்திய கேப்டனிடம் பேசவேண்டும் என்று தெரியவில்லை."

"முஷாரஃப் அமைதியாகவும் தெளிவாகவும் சொன்னார்: 'அடுத்த முறை வெளியே போக வேண்டும் என்றால் பாதுகாப்பு அதிகாரிகளிடம் சொல்லுங்கள். உரிய ஏற்பாட்டை நாங்கள் செய்கிறோம். ஆனால் தயவுசெய்து இதுபோன்ற சாகசங்களில் ஈடுபடாதீர்கள்.' என்றார். எனக்கு அசௌகரியமாக இருந்தது. வாசிம் அக்ரமின் ஸ்விங் பந்துகளை எதிர்கொண்டதை விட, முஷாரஃப்பின் அந்த அழைப்பு என்னை அதிகமாக பயமுறுத்தியது!"

பதினைந்து ஆண்டுகள் கழித்து பாகிஸ்தானுக்குச் சென்றிருந்த சவுரவ் கங்குலியின் அணி ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளில் சிறப்பாக விளையாடியிருந்தது. ஒருநாள் தொடரை 3-2 என்கிற கணக்கிலும் டெஸ்ட் தொடரை 2-1 என்கிற கணக்கிலும் இந்திய அணி வென்றது.

சில ஆண்டுகளுக்கு முன்பு 2004 தொடர் பற்றிய தனது சிறந்த நினைவுகளையும் பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் இன்சமாம் உல்-ஹக் உடனான தனது நட்பைப் பற்றியும் ஆஜ் தக் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசியிருந்தார்.

"நான் ஒரு கிரிக்கெட்டராக இன்சமாம் உல்-ஹக்கின் ரசிகர் என்றாலும் அதை விடவும் அவருடைய குணங்கள் எனக்கு மிகவும் பிடிக்கும்." என அதில் குறிப்பிட்டிருந்தார்.

இன்சமாம் உல்-ஹக்கும் கங்குலியுடனான தனது நினைவுகளைப் பகிர்ந்து கொண்டார். "2005 தொடருக்கு முன்பாக ஒரு விளம்பரத்துக்காக கொல்கத்தா சென்றிருந்தேன். நான் கொல்கத்தாவில் தங்கியிருந்த ஒட்டுமொத்த நேரமும் ஒரு விடுதியில் தங்கியிருந்தேன். ஆனால் எனக்கு உணவு கங்குலியின் வீட்டிலிருந்து வந்தது. கங்குலியின் விருந்தோம்பலை என்னால் எப்போதும் மறக்க முடியாது." என்றார்.

2007இல் கங்குலி தனது கரியரின் இறுதிக் கட்டத்தில் இருந்த போது பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் சிறப்பாக பெர்ஃபார்ம் செய்திருந்தார்.

மூன்று டெஸ்ட் போட்டிகளில் 89 சராசரியில் 534 ரன்கள் எடுத்தார். அந்தத் தொடரின் அதிக ரன்கள் எடுத்த வீரர் கங்குலி தான். 239 ரன்கள் என்ற அவரது ஒரே இரட்டை சதம் மற்றும் டெஸ்ட் கிரிக்கெட்டிலேயே தனது சிறந்த ஸ்கோரை அந்தத் தொடரில் எடுத்திருந்தார்.

https://www.bbc.com/tamil/articles/c4g78e7vz1yo

'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன்!

4 days 4 hours ago

பாகிஸ்தான் வீரரை வாங்கிய சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் ஏன் விவாதிக்கப்படுகிறார்?

சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images

படக்குறிப்பு,சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் சமூக வலைதளங்களில் விமர்சனங்களை எதிர்கொண்டு வருகிறார்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

'தி ஹண்ட்ரட்' தொடருக்கான ஏலத்தில் பாகிஸ்தான் சுழற்பந்து வீச்சாளர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியுள்ளது, ஆனால் அதன்பிறகு சமூக வலைதளங்களில் இந்திய கிரிக்கெட் ரசிகர்களிடமிருந்து கடுமையான எதிர்வினைகள் எழுந்துள்ளன.

ரசிகர்கள் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறனை டிரோல் செய்து வருகின்றனர்.

இந்தப் போட்டி பிரிட்டனில் நடைபெறுகிறது, இதில் இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் அடங்கும்.

பிப்ரவரி மாதத்தில், 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதை இந்தியர்களுக்குச் சொந்தமான நான்கு அணிகளும் பரிசீலிக்கவில்லை என்று செய்திகள் வெளியாகின. இந்தியா - பாகிஸ்தான் இடையே நிலவி வரும் பதற்றம் இதற்கு காரணமாக இருந்தது.

இதையடுத்து, வீரர்களை வாங்கும் போது எந்தவிதமான பாகுபாடும் காட்ட வேண்டாம் என்று இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் (ஈசிபி) எட்டு அணிகளுக்கும் கோரிக்கை விடுத்திருந்தது.

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை வாங்கியதற்கு ஈசிபி-யின் இந்தக் கோரிக்கையே முக்கிய காரணமாகக் கருதப்படுகிறது.

சன் குழுமம் ஐபிஎல் அணியான சன்ரைசர்ஸ் ஹைதராபாத்தை வைத்துள்ளது. 'தி ஹண்ட்ரட்' லீக்கில் உள்ள சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியும் இந்த குழுமத்திற்குச் சொந்தமானது.

அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

பட மூலாதாரம்,ADEL SENNA/AFP via Getty Images

படக்குறிப்பு,அப்ரார் அகமது சுமார் 2.3 கோடி ரூபாய்க்குச் சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியால் வாங்கப்பட்டார்.

அப்ரார் மார்ச் 12 அன்று நடைபெற்ற ஏலத்தில் வாங்கப்பட்டார்

வியாழக்கிழமை, மார்ச் 12 அன்று நடைபெற்ற 'தி ஹண்ட்ரட்' ஏலத்தில் சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி ஆகியோர் அப்ரார் அகமதுவை ஏலத்தில் எடுத்தனர்.

சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி அப்ரார் அகமதுவை 1,90,000 பவுண்டுகளுக்கு (சுமார் 2.30 கோடி ரூபாய்) வாங்கியது.

இதற்குப் பிறகு, இந்திய சமூக வலைதளங்களில் காவ்யா மாறன் கடுமையாக டிரோல் செய்யப்பட்டு வருகிறார்.

சர்ச்சை முற்றியதை அடுத்து, சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணியின் எக்ஸ் கணக்கும் முடக்கப்பட்டுள்ளது.

அப்ராரைத் தவிர, பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் ஹாரிஸ் ரவூப்பும் 'தி ஹண்ட்ரட்' ஏலத்திற்காகத் தனது பெயரைப் பதிவு செய்திருந்தார், ஆனால் அவரை எந்த அணியும் வாங்கவில்லை.

இரு நாடுகளுக்கும் இடையிலான பதற்றம் காரணமாக 2009 முதல் இந்தியன் பிரீமியர் லீக்கில் பாகிஸ்தான் வீரர்கள் விளையாடவில்லை.

காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் (Ex) கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

பட மூலாதாரம்,ANI

படக்குறிப்பு,காவ்யா மாறனின் 'சன்ரைசர்ஸ் லீட்ஸ்' அணியின் எக்ஸ் கணக்கு முடக்கப்பட்டுள்ளது.

சமூக வலைதளங்களில் என்ன சொல்கிறார்கள்?

"தி ஸ்கின் டாக்டர்" என்ற பெயரிலான எக்ஸ் பயனர் ஒருவர், இந்தியருக்குச் சொந்தமான ஒரு நிறுவனம் அதன் வெளிநாட்டு கிரிக்கெட் லீக்கிற்காக பாகிஸ்தான் வீரர் அப்ரார் அகமதுவுடன் ஒப்பந்தம் செய்துள்ளது, இது இந்தியாவை பகிரங்கமாக எள்ளி நகையாடியுள்ளது என்று எழுதியுள்ளார்.

''இந்தியாவில் அனுமதி இல்லை என்பதால் மட்டுமே அவர்கள் பாகிஸ்தானியர்களை எடுப்பதில்லை. தடை நீக்கப்பட்ட கணமே, யோசிக்காமல் அவர்களை எடுப்பார்கள்'' என்றும் குறிப்பிட்டுள்ளார்.

அப்ரார் அகமது இந்திய ராணுவத்தை அவமதித்ததாகவும் அதையெல்லாம் மீறி காவ்யா மாறன் மற்றும் சன்ரைசர்ஸ் அணி அவரை 'தி ஹண்ட்ரட் லீக்கில்' வாங்கியுள்ளனர் எனவும் பயனர்கள் கூறி வருகின்றனர்.

ஆனந்த் கிருஷ்ணா என்ற பயனர், காவ்யா மாறன் அப்ரார் அகமதுவை வாங்கியதை விட அவமானகரமானது எதுவும் இருக்க முடியாது என்று எழுதியுள்ளார்.

சன்ரைசர்ஸ் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி சொன்னது என்ன?

மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி.

பட மூலாதாரம்,John Phillips - ECB/ECB via Getty Images

படக்குறிப்பு,மார்ச் 12 அன்று லண்டனில் நடைபெற்ற 'தி ஹண்டிரட்' ஏலத்தின் போது சன்ரைசர்ஸ் லீட்ஸ் உரிமையாளர் காவ்யா மாறன் மற்றும் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி.

சன்ரைசர்ஸ் லீட்ஸ் தலைமைப் பயிற்சியாளர் டேனியல் வெட்டோரி பிபிசி ஸ்போர்ட்ஸிடம், "அப்ராரின் பந்துவீச்சில் நிறைய நுணுக்கங்கள் உள்ளன, மேலும் பல உள்ளூர் வீரர்கள் அவரை இதற்கு முன் பார்த்திருக்க வாய்ப்பில்லை," என தெரிவித்தார்.

பாகிஸ்தான் வீரர்கள் தொடர்பான ஊகங்கள் குறித்துத் தான் அறிந்திருப்பதாகக் கூறிய வெட்டோரி, ஆனால் ஏலத்தில் எந்த வீரரையும் கண்டு கொள்ளவேண்டாம் என தமக்கு எந்த அறிவுறுத்தலும் வரவில்லை என்றார்.

"கிடைக்கக்கூடிய ஒவ்வொரு வீரரையும் கருத்தில் கொண்டே நாங்கள் ஏலத்திற்கு வந்தோம். சர்வதேச அணிகளிலிருந்து பல சிறந்த சுழற்பந்து வீச்சாளர்கள் வாய்ப்பில் இருந்தனர், ஆனால் அப்ரார் தான் எங்களின் முன்னுரிமையாக இருந்தார்," என அவர் தெரிவித்தார்.

சர்ச்சை எப்போது தொடங்கியது?

பிப்ரவரி 21 அன்று, இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் 'தி ஹண்ட்ரட்' லீக் ஏலத்தில் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை வாங்குவதில்லை என்ற முடிவை பரிசீலித்து வருவதாகச் செய்திகள் வெளியாகின.

இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியத்தின்(ஈசிபி) தலைமை நிர்வாகி ரிச்சர்ட் கோல்ட் கடந்த ஆண்டு கூறுகையில், 'தி ஹண்ட்ரட்' போட்டியில் "அனைத்து நாடுகளிலிருந்தும் வீரர்கள்" தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்று தான் எதிர்பார்ப்பதாகவும், "பாகுபாடு எதிர்ப்பு கொள்கைகள்" நடைமுறையில் இருப்பதாகவும் கூறியிருந்தார்.

ஈசிபி செய்தித் தொடர்பாளர் ஒருவர்,''தி ஹண்ட்ரட் உலகம் முழுவதிலுமிருந்து வரும் வீரர், வீராங்கனைகளை வரவேற்கிறது, மேலும் எட்டு அணிகளும் இதைக் கருத்தில் கொள்ளும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்." என்றார்.

இந்தியர்களுக்குச் சொந்தமான அணிகள் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்களை ஏலத்தில் வாங்காது என்ற செய்திகளுக்கு முன்னாள் கிரிக்கெட் வீரர் மைக்கேல் வாகன் எதிர்வினையாற்றியிருந்தார்.

இந்த விவகாரத்தில் இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் கிரிக்கெட் வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்திய அவர், இது போன்ற ஒரு விஷயம் நடக்க அனுமதிக்கக் கூடாது என்றார்.

மைக்கேல் வாகன் தனது சமூக வலைதள தளமான எக்ஸ்-இல், "நாட்டின் அனைத்து மக்களையும் ஒன்றிணைக்கும் ஒரு விளையாட்டில் இது போன்ற விஷயங்களை அனுமதிக்க முடியாது" என்று எழுதியிருந்தார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cjen8kg9evxo

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?

4 days 5 hours ago

15ஆவது இந்துக்களின் சமர்: யாழ். இந்துவின் கடந்த வருட வெற்றிக்கு பதிலடி கொடுக்குமா இந்து கொழும்பு?

Published By: Vishnu

13 Mar, 2026 | 01:26 AM

image

(நெவில் அன்தனி)

யாழ்ப்பாணத்தில் கடந்த வருடம் நடைபெற்ற இந்துக்களின் சமர் 14ஆவது அத்தியாயத்தில் அடைந்த தோல்விக்கு பதிலடி கொடுத்து அத் தோல்வியை நிவர்த்திசெய்யும் குறிக்கோளுடன் இராமநாதன் தேஷ்கர் தலைமையில் இந்து கல்லூரி கொழும்பு அணியும் தொடர்ச்சியான வெற்றிக்கு குறிவைத்து கடந்த வருட நாயகன் எஸ். சுபர்னன் தலைமையில் யாழ். இந்து கல்லூரி அணியும் 15ஆவது அத்தியாயத்தில் களம் இறங்கவுள்ளன.

இந்த இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 15ஆவது இந்துக்களின் சமர் இலங்கையின் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் விளையாட்டரங்கு பி. சரவணமுத்து (சரா) ஓவல் விளையாட்டரங்கில் வெள்ளிக்கிழமையும் சனிக்கிழமையும் (13ஆம், 14ஆம் திகதிகள்) நடைபெறவுள்ளது.

இந்த இரண்டு அணிகளுக்கும் இடையிலான அங்குரார்ப்பண ஒருநாள் கிரிக்கெட் போட்டி 16ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இப் போட்டிக்கு ஜனசக்தி இன்சூரன்ஸ் பிறைவேட் லிமிட்டெட் கம்பனி தொடர்ச்சியாக 4ஆவது வருடமாக அனுசரணை வழங்குவதுடன் இப் போட்டி ஜனசக்தி லைவ் இந்துக்களின் சமர் என அழைக்கப்படுகிறது.

இலங்கை பாடசாலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டி வரலாற்றில் இந்துக்களின் சமர் தனித்துவம் மிக்க போட்டியாக கருதப்படுகிறது.

ஏனெனில் இரண்டு மாகாணங்களைச் சேர்ந்த பாடசாலைகள் பங்குபற்றும் ஒரே ஒரு மாபெரும் கிரிக்கெட் இதுவாகும்.

வடக்கு மற்றும் தெற்கு கலாசாரங்களைப் பகிர்ந்துகொள்ள இப் போட்டி வழிவகுப்பதுடன் மாகாணங்களுக்கு இடையிலான ஒற்றுமையின் அடையாமாகவும் இது அமைகின்றது.

இது வெறுமனே கிரிக்கெட் போட்டியுடன் நின்று விடாமல் நட்பு, சகோதரத்துவம் ஆகியவற்றைப் பகிர்ந்துகொள்ளும் ஒரு நிகழ்வாகவும் அமைகின்றது.

jaffna_hindu.jpg

வழமைபோல் இரண்டு கல்லூரிகளினதும் மாணவர்களுக்கு இடையிலான சொல்லாடல் (விவாதம்) போட்டியும் நடைபெறவுள்ளது.

இந்த வருடம் இந்து கல்லூரி கொழும்பு தனது 75ஆவது ஆண்டு நிறைவை கொண்டாடுவதால் இரண்டு கல்லூரிகளுக்கு இடையிலான கால்பந்தாட்டப் போட்டியும் பழைய மாணவர்களுக்கு இடையிலான கிரிக்கெட் போட்டியும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

75ஆவது ஆண்டு விழாவை இந்துக்களின் சமர் வெற்றியுடன் கொண்டாடும் வகையில், இந்து கல்லூரி கொழும்பு அணி பல்வேறு வியூகங்களைப் பிரயோகிக்க உள்ளதாக அறியக் கிடைக்கிறது.

யாழ். மத்திய கல்லூரியின் முன்னாள் அணித் தலைவரும் தேசிய அணியில் இடம்பெற்றவருமான தமிழ் யூனியன் அணியின் சுழல்பந்துவீச்சாளர் விஜயகாந்த் வியாஸ்காந்த், சரா ஓவல் ஆடுகளத்தின் தன்மை குறித்து இந்து கொழும்பு கல்லூரி அணிக்கு சில முக்கிய குறிப்புகளை வழங்கியுள்ளார்.

hingu_colombo_and_jaffna_hindu_captains.

இந்து கல்லூரி கொழும்பு அணி முகாமைத்துவத்தினரின் அழைப்பின் பேரிலேயே வியாஸ்காந்த் குறிப்புகளை வழங்கி அணி வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.

இதுவரை நடந்து முடிந்த 14 இந்துக்களின் சமர்களில் யாழ். இந்து கல்லூரி 4 வெற்றிகளையும் இந்து கல்லூரி கொழும்பு 3 வெற்றிகளையும் ஈட்டியுள்ளன. ஏனைய போட்டிகள் வெற்றிதோல்வியின்றி முடிவடைந்தன.

இந்த வருட போட்டியின் ஆரம்ப விழாவுக்கு விளையாட்டுத்துறை அபிவிருத்தித் திணைக்கள பணிப்பாளர்நாயகம் எஸ். அர்ச்சுதன், பிரதம விருந்தினராகவும் 1996 உலக சம்பியன் இலங்கை அணியின் உப தலைவர் அரவிந்த டி சில்வா, ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் கௌரவ பொருளாளர் சுஜீவ கரலியத்த ஆகியோர் சிறப்பு அதிதிகளாகவும் கலந்துகொள்ளவுள்ளனர்.

அணிகள் விபரம்

யாழ். இந்து கல்லூரி: எஸ். சுபர்னன் (தலைவர்), எஸ். ஹரிகரன் (உப தலைவர்), ரி. பிரேமிகன், ஆர். ஆதித்தியன் (விக்கெட் காப்பாளர்), என். நிருஜன், கே. நிதீஸ், எஸ். அபிவர்னன், எஸ். சிவகஜீசன், எஸ். செல்வஜன், ரி. பிரீதிகன், ஜீ. லக்சிகன், எம். டனிலாஷ், ஜெ. பவானன், எஸ். அஷ்வின், பி. அனிஷ், ஜீ. செந்தூரன். தலைமைப் பயிற்றுநர்: எஸ். அலன்ராஜ். உதவி பயிற்றுநர்கள்: டி. ஜோய் ஆகாஸ், ஆர். நியூட்டன்.

இந்து கல்லூரி கொழும்பு: ஆர். தேஷ்கர் (தலைவர்), எம். அபிஷேக் (உப தலைவர்), எஸ். மிதுஷேகன் (விக்கெட் காப்பாளர்), எஸ். ஹர்ஷ, கே. யஷுராஜன், ரி. சந்தோஷ், ஜீ. தூயவன், ரி. யாதவ், எஸ். சதுர்ஷன், எஸ். சர்விஷ், வி. யுவராஜ், எஸ். ஆகாஷ், ஆர். அகிலேஷ், வி. அபினேஷ், எஸ். சபேஷன், ஆர். தக்ஷேஸ். பயிற்றுநர்: எஸ். கோபிநாத், உதவி பயிற்றுநர்கள்: பி. ஷஷிதரன், சி. ஜேசன்.

https://www.virakesari.lk/article/240832

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

1 week ago

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

Mar 9, 2026 - 06:56 PM

இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக கேரி கிர்ஸ்டன் நியமனம்

இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் புதிய தலைமைப் பயிற்சியாளராக, தென்னாப்பிரிக்க அணியின் முன்னாள் வீரரும் புகழ்பெற்ற பயிற்சியாளருமான கேரி கிர்ஸ்டன் (Gary Kirsten) நியமிக்கப்பட்டுள்ளார்.

சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனம் அறிக்கை ஒன்றை வௌியிட்டு இதனைத் தெரிவித்துள்ளது.

இந்த நியமனம் 2026 ஏப்ரல் 15 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வரும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர் இரண்டு ஆண்டுகள் அந்தப் பதவியில் நீடிப்பார்.

கேரி கிர்ஸ்டன் இதற்கு முன்னர் இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக (2008-2011) பணியாற்றி, 2011 இல் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல வழிகாட்டினார்.

மேலும், தென்னாப்பிரிக்க அணியின் பயிற்சியாளராக (2011-2013) இருந்தபோது, அந்த அணியை அனைத்து வகையான போட்டிகளிலும் முதலிடத்திற்கு இட்டுச் சென்றார்.

2026 ஐசிசி (ICC) ஆண்கள் டி20 உலகக் கிண்ணத்தின் போது நமீபியா கிரிக்கெட் அணியின் ஆலோசகராகப் பணியாற்றினார்.

1993 முதல் 2004 வரையிலான தனது சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கையில், டெஸ்ட் மற்றும் ஒருநாள் போட்டிகளில் மொத்தம் 14,087 ஓட்டங்களைக் குவித்துள்ளார். இதில் 21 டெஸ்ட் சதங்களும் 13 ஒருநாள் சதங்களும் அடங்கும்.

2027 ஆம் ஆண்டு தென்னாப்பிரிக்கா, நமீபியா மற்றும் சிம்பாப்வே ஆகிய நாடுகளில் நடைபெறவுள்ள ஐசிசி ஆண்கள் உலகக் கிண்ணப் போட்டிகளுக்கு இலங்கை அணியைத் தயார்படுத்துவதே இவரின் முதன்மையான பொறுப்பாகும்.

தேசிய உயர் செயல்திறன் மையத்தின் கட்டமைப்பை மறுசீரமைக்கும் சிறிலங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் முயற்சியின் ஒரு பகுதியாக இந்த நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmmj7rwwu000b356pf2bvzz4g

109 ஆவது பொன் அணிகளின் சமர்

1 week 2 days ago

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை

Published By: Digital Desk 3

08 Mar, 2026 | 10:58 AM

image

இலங்கையின் வட பகுதியில் பிரசித்திபெற்ற பாடாசலைகள் மாபெரும் கிரிக்கெட் போட்டிகளில் ஒன்றான யாழ். புனித பத்திரிசியார் அணிக்கும் வட்டுகோட்டை யாழ்ப்பாணம் கல்லூரிக்கும் இடையிலான 109ஆவது பொன் அணிகளின் சமர் இம் மாதம் 12, 13, 14ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.

இலங்கையின் முன்னணி இணைப்பு நிறுவனமான டயலொக் ஆசிஆட்டா பிஎல்சி இப் போட்டிக்கு பிரதான அனுசரணை வழங்குவதுடன் இந்த வருடம் வட்டக்கோட்டை யாழ்ப்பாணம் கல்லூரி மைதானத்தில் பொன் அணிகளின் சமர் நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கு ஸ்ரீலங்கா கிரிக்கெட், டோக்கியோ சிமென்ட் நிறுவனம் ஆகியன இணை அனுசரணை வழங்குகின்றன.

இந்தப் போட்டி தொடர்பாக தெளிவுபடுத்தும் ஊடகவியலாளர் சந்திப்பானது யாழ்ப்பாணம் கல்லூரியில் கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

ஊடக சந்திப்பில் கலந்துகொண்டவர்கள் கருத்து தெரிவிக்கையில்,

பலவிதமான இடையூறுகளுக்கும் மத்தியில் இந்த போட்டியினை தொடர்ச்சியாக நடாத்தி வருவதாகவும் இந்த இரண்டு பாடசாலைகளும் நட்பில் பிணைந்திருப்பதாகவும் கூறினர்.

பொன் அணிகளின் மாபெரும் கிரிக்கெட் போட்டியைத் தொடர்ந்து இரண்டு கல்லூரிகளுக்கும் இடையிலான 50 ஓவர் கிரிக்கெட் போட்டியம் ரி20 கிரிக்கெட் போட்டியும் நடைபெறும்.

இந்த போட்டியை கண்டுகளிப்பதற்கு புலம்பெயர்ந்து வாழ்கின்ற இரண்டு பாடசாலைகளினதும் உறவுகளும் வருகைதந்து சிறப்பிக்கவுள்ளனர். எனவே அனைவரும் இந்த போட்டியில் கலந்து கொண்டு சிறப்பிக்க வேண்டும் என ஏற்பாட்டாளர்கள் மேலும் தெரிவித்தனர்.

இது இவ்வாறிருக்க, வட பகுதியில் பொன் அணிகளின் சமருக்கு அனுசரணை வழங்குவதையிட்டு பெருமை அடைவதாக டயலொக் ஆசிஆட்டா பிரதிநிதி தெரிவித்தார்.

இந்த ஊடக சந்திப்பின்போது அணிகள் அறிமுகம், வீரர்கள் அறிமுகம் மற்றும் வீரர்களுக்கான சீருடைகள் வழங்கல் என்பன இடம்பெற்றன.

20260306_174921.jpg

20260306_175232.jpg

IMG-20260307-WA0000.jpg

IMG-20260307-WA0007.jpg

IMG-20260307-WA0002.jpg

IMG-20260307-WA0005.jpg

20260306_181329.jpg

20260306_181329_2_.jpg

புனித பத்திரிசியார் - யாழ்ப்பாணம் கல்லூரி மோதும் பொன் அணிகளின் சமருக்கு டயலொக் அனுசரணை

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

2 weeks ago

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

Published By: Digital Desk 3

03 Mar, 2026 | 05:13 PM

image

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தையும் கண்டியைச் சேர்ந்த சிரேஷ்ட சட்டத்தரணியுமான எஸ்.கே. சங்கக்கார காலமானதாக குடும்பத்தினர் தெரிவித்தனர்.

சட்டத்தரணியும், கண்டியில் மதிப்புமிக்க சட்ட நிபுணராகவும் அறியப்பட்ட சங்கக்கார, தனது தொழில்முறை பணிகளால் சமூகத்தில் பெரும் மதிப்பைப் பெற்றிருந்தார்.

அன்னாரது உடல் கண்டியில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இறுதிச்சடங்கு 2026 மார்ச் 4 ஆம் திகதி மாலை 6.00 மணிக்கு கண்டி மஹியாவ சேமக்காலையில் நடைபெறவுள்ளது. அன்னாரின் உடல் மாலை 4.30 மணிக்கு இல்லத்திலிருந்து எடுத்துச் செல்லப்படும் எனவும் குடும்பத்தினர் அறிவித்துள்ளனர்.

இலங்கை கிரிக்கெட் ஜாம்பவான் குமார் சங்கக்கரவின் தந்தை காலமானார்

யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

2 weeks ago

New-Project-18.jpg?resize=600%2C300&ssl=

யாழ் மத்திய கல்லூரி – யாழ் பரியோவான் கல்லூரி மோதும் வடக்கின் போர் விரைவில் !

யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மற்றும் யாழ்ப்பாணம் பரியோவான் கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான “வடக்கின் போர்” என்றழைக்கப்படும் மாபெரும் துடுப்பாட்டப் போட்டி மார்ச் 5ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.

இந்த துடுப்பாட்ட போட்டி இம் மாதம் (மார்ச்) 119வது முறையாக நடத்தப்பட உள்ளது.

119வது போட்டியானது 2026 மார்ச் 5, 6 மற்றும் 7ஆந் திகதிளில் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் நடைபெறவுள்ளது.

தொடர்ந்து, 23வது மட்டுப்படுத்தப்பட்ட பந்து வீச்சுக்கான (50 ஓவர்கள்) போட்டி 2026 மார்ச் 14ஆந் திகதியன்று புனித பரியோவான் கல்லூரி மைதானத்தில் நடைபெறும்.

வரலாற்றுப் பாரம்பரியம் கொண்ட முதலாவது வடக்கின் போர் 1904 ஆம் ஆண்டில் நடைபெற்றது.

இதுவரை இடம்பெற்ற 118 போட்டிகளில், புனித பரியோவான் கல்லூரி 40 போட்டிகளிலும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி 29 போட்டிகளிலும் வெற்றி பெற்றுள்ளன. அத்துடன், 41 போட்டிகள் வெற்றி தோல்வியின்றி நிறைடைந்தன.

மேலும், 07 போட்டிகளுக்கான முடிவுகள் கிடைக்கப்பெறவில்லை என்பதுடன் ஒரு போட்டி இடையில் கைவிடப்பட்டது.

https://athavannews.com/2026/1466970

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

2 weeks 3 days ago

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

Feb 28, 2026 - 08:33 AM

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரில் பாகிஸ்தானுக்கு எதிராக பல்லேகலவில் இன்று (28) நடைபெறவுள்ள போட்டியே, இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜயசூரிய பயிற்சியாளராகப் பணியாற்றும் கடைசிப் போட்டியாகும்.

இம்முறை இருபதுக்கு 20 உலகக் கிண்ணத் தொடரின் பின்னர் தான் பதவியிலிருந்து விலகவுள்ளதாக ஜயசூரிய இத்தொடர் ஆரம்பமாவதற்கு முன்னரே உறுதிப்படுத்தியிருந்ததுடன், அந்தத் தீர்மானத்தில் அவர் இதுவரை எந்த மாற்றமும் செய்யவில்லை.

பதவி விலகல் தீர்மானம் குறித்து 'அத தெரண' விடுத்த வினவலுக்குப் பதிலளித்த அவர், தனது தலைமைப் பயிற்சியாளர் ஒப்பந்தக் காலம் மேலும் எஞ்சியிருந்த போதிலும், அந்தப் பதவியில் தொடர்ந்து நீடிக்கும் எண்ணம் தமக்கு இல்லை என்று கூறியுள்ளார்.

2024 ஜூலை மாதம் இந்தியாவிற்கு எதிரான தொடரின் போது இடைக்காலப் பயிற்சியாளராகப் பொறுப்பேற்ற ஜயசூரிய, அதே ஆண்டின் இறுதியில் முழுநேர தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டார்.

ஜயசூரியவின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்காலத்தில், இலங்கை அணி அனைத்து வகையான போட்டிகளிலும் 74 போட்டிகளில் விளையாடியுள்ளதுடன், அதில் 34 வெற்றிகளையும் 38 தோல்விகளையும் பதிவு செய்துள்ளது.

அத்துடன், 2 போட்டிகள் எவ்வித முடிவுகளுமின்றி நிறைவடைந்துள்ளன.

தலைமைப் பயிற்சியாளர் பதவியிலிருந்து இன்று விடைபெறுகிறார் சனத்!

பத்தாவது ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் - 2026

2 weeks 6 days ago

இலங்கை - இங்கிலாந்து போட்டியுடன் 2026 மகளிர் ரி20 உலகக் கிண்ணம் ஆரம்பம்

25 Feb, 2026 | 03:18 PM

image

(நெவில் அன்தனி)

இங்கிலாந்தில் இந்த வருடம் நடைபெறவுள்ள பத்தாவது  ஐசிசி மகளிர் ரி20 உலகக் கிண்ண அத்தியாயம் இலங்கைக்கும் இங்கிலாந்துக்கும் இடையில் எஜ்பெஸ்டனில் ஜூன் 12ஆம் திகதி நடைபெறவுள்ள போட்டியுடன் ஆரம்பமாகவுள்ளது.

download.png

இந்த வருடம் 12 அணிகள் இரண்டு குழுக்களில் பங்குபற்றவுள்ளன.

அவுஸ்திரேலியா, தென் ஆபிரிக்கா, இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், நெதர்லாந்து ஆகியன ஒரு குழுவிலும் மேற்கிந்தியத் தீவுகள், இங்கிலாந்து, நடப்பு சம்பியன் நியூஸிலாந்து, இலங்கை, அயர்லாந்து, ஸ்கொட்லாந்து ஆகியன மற்றைய குழுவிலும் விளையாடவுள்ளன.

இரண்டு குழுக்களுக்குமான முதல் சுற்று லீக் போட்டிகள் நிறைவில் முதல் இரண்டு இடங்களைப் பெறும் அணிகள் அரை இறுதிகளில் விளையாட தகுதிபெறும்.

லீக் போட்டிகள் ஜூன் 12 முதல் ஜூன் 28 வரை நடைபெறும்.

முதலாவது அரை இறுதிப் போட்டி தி ஓவல் மைதானத்தில் ஜூன் 30ஆம் திகதியும் இரண்டாவது அரை இறுதிப் போட்டி ஜூலை 2ஆம் திகதியும் நடைபெறும்.

இறுதிப் போட்டி ஜூலை 5ஆம் திகதி தி லோர்ட்ஸ் கிரிக்கெட் விளையாட்டரங்கில் நடைபெறும்.

download__1_.png

இலங்கையின் போட்டி விபரங்கள்

ஜுன் 12: எதிர் இங்கிலாந்து - எஜ்பெஸ்டன்

ஜூன் 16: எதிர் நியூஸிலாந்து - ஹெம்ப்ஷயர் பௌல்

ஜூன் 21: எதிர் மேற்கிந்தியத் தீவுகள் - ப்றிஸ்டன் கவுன்டி மைதானம்

ஜூன் 23: எதிர் அயர்லாந்து - ப்றிஸ்டன் கவுன்டி மைதானம்

ஜூன் 26: எதிர் ஸ்கொட்லாந்து - ஓல்ட் ட்ரஃபர்ட்

https://www.virakesari.lk/article/239554

மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

3 weeks 1 day ago

மகளிர் ஆசிய கிண்ணம் எழுச்சி நட்சத்திரங்கள் ரி20 கிரிக்கெட்: பங்களாதேஷை வீழ்த்தி இந்தியா சம்பியனானது

23 Feb, 2026 | 04:26 PM

image

(நெவில் அன்தனி)

ஹொங்கொங் தலைநகர் பாங்கொக்கில் நடைபெற்றுவந்த 8 அணிகளுக்கு இடையிலான மகளிர் ஆசிய கிண்ண எழுச்சி நட்சத்திரங்கள் (ரைசிங் ஸ்டார்ஸ்) கிரிக்கெட் தொடரில் இந்தியா சம்பியனானது.

பாங்கொக் தேர்ட்தாய் கிரிக்கெட் மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை (22) நடைபெற்ற இறுதிப் போட்டியில் பங்களாதேஷை எதிர்த்தாடிய இந்தியா 46 ஓட்டங்களால் வெற்றிபெற்று சம்பியனானது.

தேஜல் ஹசாப்னிஸ், அணித் தலைவர் ராதா யாதவ் ஆகிய இருவரும் திறமையாகத் துடுப்பெடுத்தாடி 5ஆவது விக்கெட்டில் பகிர்ந்த 69 ஓட்ட இணைப்பாட்டம் இந்தியாவின் வெற்றிக்கு வித்திட்டது.

அத்துடன் ப்ரேமா ராவத், தனுஜா கன்வார் ஆகியோரின் துல்லியமான பந்துவீச்சுகளும் இந்தியாவின் வெற்றியில் முக்கிய பங்காற்றின.

இறுதிப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இந்தியா 20 ஓவர்களில் 7 விக்கெட்களை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்றது.

துடுப்பாட்டத்தில் தேஜல் ஹசாப்னிஸ் 51 ஓட்டங்களையும் ராதா யாதவ் 36 ஓட்டங்களையும் பெற்றனர்.

பந்துவீச்சில் பாஹிமா காத்துன் 25 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களை வீழ்த்தினார்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் 19.1 ஓவர்களில் சகல விக்கெட்களையும் இழந்து 88 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

துடுப்பாட்டத்தில் ஷமிமா சுல்தான மாத்திரம் ஓரளவு திறமையை வெளிப்படுத்தி அதிகபட்சமாக 20 ஓட்டங்களைப் பெற்றார்.

பந்துவீச்சில் ப்ரேமா ராவத் 12 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்களையும் தனுஜா கன்வார் 11 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் சோனியா மெந்தியா 21 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் கைப்பற்றினர்.

ஆட்டநாயகி: தேஜல் ஹசப்னிஸ்.

women_asia_cup_rising_stars_india_champs

https://www.virakesari.lk/article/239384

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

3 weeks 3 days ago

பதும் நிசங்கா: "இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு இவர் கையில்"

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • வித்யுத் சிவராமகிருஷ்ணன்

  • முன்னாள் கிரிக்கெட் வீரர்

  • 50 நிமிடங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 4 நிமிடங்கள்

2026 டி20 உலகக் கோப்பையில் இலங்கையின் சூப்பர் 8 பிரிவு ஆட்டங்கள் பிப்ரவரி 22 முதல் தொடங்குகிறது. குரூப் சுற்றில் ஓரளவு சிறப்பாக செயல்பட்ட இலங்கை அணி அடுத்ததாக அரையிறுதியைக் குறிவைக்கும். ஆனால், அது சாத்தியமா?

மெல்ல சூடுபிடிக்கும் இங்கிலாந்து, எப்போதும் இந்த ஃபார்மட்டில் சிறப்பாக ஆடும் நியூசிலாந்து, எப்போது எப்படி ஆடும் என்று தெரியாத பாகிஸ்தான் என 3 பெரும் சவால்களை அவர்கள் எதிர்கொள்ளவேண்டியிருக்கிறது. அதில் 2 போட்டிகளை வெல்வது கடினமானது தான் என்றாலும், அது முடியாத காரியம் ஒன்றுமல்ல.

அவர்களின் சுழற்பந்துவீச்சு சிறப்பாக செயல்பட்டுக்கொண்டிருக்கிறது. டுனித் வெல்லாலகே, தஷுன் ஹேமந்தா போன்ற ஸ்பின்னர்கள் ஆடுகளத்தை சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்கிறார்கள். வேகப்பந்துவீச்சாளர் சமீராவும் சிறப்பாக பந்துவீசிவருகிறார். முன்னணி வீரர்கள் சிலர் காயத்தால் அவதிப்பட்டாலும், ஒவ்வொரு போட்டியிலும் ஒன்றிரண்டு பௌலர்கள் ஆட்டத்தைக் கட்டுக்குள் கொண்டுவர உதவி விடுகிறார்கள்.

அதனால், என்னைப் பொறுத்தவரை இலங்கையின் அரையிறுதி வாய்ப்பு அவர்களின் பேட்டிங் எப்படி இருக்கிறது என்பதைப் பொறுத்தே அமையும். அதிலும் குறிப்பாக பிராகசமாக ஜொலித்துக்கொண்டிருக்கும் பதும் நிசங்காவின் ஆட்டம் இந்தப் போட்டிகளில் எப்படி இருக்கிறதோ அதன்படியே அவர்களின் வாய்ப்பு இருக்கும்.

இந்த 27 வயது வலது கை பேட்டர் என்னை நன்கு கவர்ந்துவிட்டார். அவரது ஆட்டத்தை ஒவ்வொரு முறையும் நான் ரசித்துப் பார்த்துக்கொண்டிருக்கிறேன். அதை அவர் சீராகக் கொடுத்து அசத்திக்கொண்டே இருக்கிறார்.

வெற்றிடத்தை நிரப்பும் நிசங்கா

1990-களின் பிற்பகுதிக்குப் பிறகு இலங்கை அணி பல தரமான பேட்டர்களை உருவாக்கியது. அரவிந்தா டி சில்வா, சனத் ஜெயசூர்யா, மார்வன் அட்டபட்டு, குமார் சங்கக்காரா, மஹேலா ஜெயவர்தனா, திலகரத்னே தில்ஷன், ஏஞ்சலோ மேத்யூஸ், தினேஷ் சந்திமல் என பல தரமான பேட்டர்களை உருவாக்கியிருக்கிறார்கள். டி20, ஒருநாள், டெஸ்ட் என எந்த ஃபார்மட்டாக இருக்கட்டும் அதில் சிறப்பாக செயல்படக்கூடிய பல பேட்டர்கள் வந்தனர். 1996 உலகக் கோப்பை ஃபைனலில் டி சில்வா அடித்துத் தொடங்கிவைத்தார்.... அதன்பிறகு அவர்கள் ஓயவேயில்லை.

ஆனால், கடந்த சில ஆண்டுகளில் அவர்களால் அப்படி தரமான பேட்டர்களை உருவாக்க முடியவில்லை. நிறைய திறமையான வீரர்களைப் பார்த்தோம். ஆனால், அவர்களால் பெரிய அளவு சோபிக்க முடியவில்லை.

இப்போது பதும் நிசங்கா அந்த வெற்றிடத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறார். அவர் அனைத்து ஃபார்மட்களிலும் சிறப்பாக விளையாடுகிறார். எளிதாக ரன் சேர்க்கிறார். வழக்கமான பாணியில் தான் பேட்டிங் செய்கிறார். நல்ல ஸ்டைல் இருக்கிறது. அற்புதமான டெக்னிக் இருக்கிறது. என்னைப் பொறுத்தவரை அடுத்த சில ஆண்டுகளில் அவர் மிகப் பெரிய பேட்டராக வரப்போகிறார்.

ஒருநாள், டி20 போட்டிகளில் மட்டுமல்ல டெஸ்ட் போட்டிகளிலும் அவர் பெரும் தாக்கம் ஏற்படுத்தப்போகிறார். அதற்கு ஏற்ற சுபாவம் அவருக்கு இயற்கையாகவே இருக்கிறது. நல்ல 'கிளாஸான' வீரராக இருக்கிறார். அதுமட்டுமல்லாமல், பொறுப்புணர்வோடு ஆடுகிறார். அணிக்காக ஆட்டத்தை முடித்துக்கொடுக்கவேண்டும் என்று நினைக்கிறேன். ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் ஒரு முழுமையான வீரராக அவர் இருக்கிறார். இப்பொழுதே அவர் ஒரு முக்கிய வீரராக உருவெடுத்துக்கொண்டிருக்கிறார். அடுத்த 10 ஆண்டுகளில் அவர் ஒரு ஜாம்பவானாகவே மாறியிருப்பார் என்பது என் கருத்து.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

விழிப்புணர்வு நிறைந்த ஆட்டம்

கடந்த சில ஆண்டுகளாக ஒரு விஷயத்தை நாம் பார்த்துக்கொண்டிருக்கிறோம். ஒருநாள் மற்றும் டி20 ஃபார்மட்டில் சோபிக்கவேண்டும் என்பதால், அதற்கேற்ப வீரர்கள் தங்கள் ஆட்ட முறையை மாற்றிக்கொள்கிறார்கள். ஆனால், நிசங்காவிடம் அவ்வளவு மாற்றங்கள் இல்லை. வழக்கமான, சரியான கிரிக்கெட் ஷாட்கள் ஆடுகிறார். கிரீஸில் அதிகம் அவர் நகர்வதில்லை. இடைவெளிகளை சரியாகப் பிடித்து அதைப் பயன்படுத்தி ஸ்கோர் செய்கிறார். இந்த முறையில் விளையாடியே டி20 கிரிக்கெட்டில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் அவர் விளையாடுகிறார்.

இந்த ஃபார்மட்டில் நீங்கள் சுழன்று சுழன்று ஆடவேண்டிய அவசியம் இல்லை என்பதை இது சொல்கிறது. பவர்பிளேவில் ஃபீல்டர்கள் 30 யார்ட் வட்டத்துக்குள் நிற்கும்போது சரியான ஷாட்களை, சரியான இடைவெளியைப் பார்த்து அடிக்கும்போது நிச்சயம் ரன் சேர்க்க முடியும். ஆனால், டி20 என்று வரும்போது இதையெல்லாம் சொல்வது எளிதாக இருக்கும். ஆனால், களத்தில் இருக்கும்போது பெரிய ஷாட்கள் அடிக்கவேண்டும் என்ற உந்துதல் ஏற்படும். ஆனால், அந்த மனநிலையை அடக்கி ஒரு நிலைத்தன்மையை தன் ஆட்டத்தில் நிசங்கா காட்டுகிறார்.

ஒருசில வீரர்கள் பவர்பிளேவில் அதிரடி காட்டுவார்கள். ஆனால், அவர்களால் மிடில் ஓவர்களில் தாக்கம் ஏற்படுத்த முடியாது. ஆனால், நிசங்கா அந்த இரண்டு பகுதிகளுக்கும் ஏற்றவாறு தன்னை தகவமைத்துக்கொள்கிறார். பவர்பிளேவில் 150+ ஸ்டிரைக் ரேட்டில் ஆடுபவர், மிடில் ஓவர்களில் நீட்டித்து நிற்கிறார். அதிகம் ஓடுகிறார். அப்படியும் 130 - 140 என்ற ஸ்டிரைக் ரேட்டில் ஆடிடுகிறார். அதனால், விக்கெட் வீழ்ச்சியைத் தடுப்பதோடு மட்டுமல்லாமல் ரன்ரேட்டையும் அவர் சீராக வைத்திருக்க உதவுகிறார்.

கிரீஸில் அவருடைய கால் உறுதியாக இருக்கிறது. தலை உறுதியாக இருக்கிறது. நல்ல 'பேலன்ஸ்' இருக்கிறது. அதேபோல், ஆட்டத்தைப் பற்றிய விழிப்புணர்வு இன்னும் சிறப்பாக இருக்கிறது. ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து, எதிரணி பௌலர்கள் யார் என்பதை அறிந்து அதற்கேற்றதுபோல் தன் அணுகுமுறை அவர் தேர்வு செய்கிறார். மிகச் சிறந்த பேட்டர்கள் அதைத்தான் செய்வார்கள். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் எப்போதுமே ஒரு படி முன்னே இருப்பார்கள். பதும் நிசங்கா தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்தில் அதைக் காட்டியிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொறுப்பை உணர்ந்து ஆடும் திறன்

அவருக்குத் தன் முக்கியத்துவம் தெரிந்திருக்கிறது. 'நான் தான் இன்னிங்ஸை ஓப்பன் செய்கிறேன். நல்ல தொடக்கமும் கொடுக்கவேண்டும், வேகமாகவும் ஆடவேண்டும், அதேசமயம் நிலைத்தும் நிற்கவேண்டும்' என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அது மிகவும் கடினமான விஷயம். ஆனால், தன் கரியரின் ஆரம்ப காலகட்டத்திலேயே அவர் அதை சிறப்பாகச் செய்துகொண்டிருக்கிறார்.

கடந்த ஆண்டு நடந்த ஆசிய கோப்பை தொடரில் (டி20 ஃபார்மட்) இந்தியாவுக்கு எதிராக நிசங்கா ஒரு சதம் அடித்தார். அந்தப் போட்டி கூட டை ஆகி, சூப்பர் ஓவரில் இந்தியா வெற்றி பெறும். அந்த ஆட்டம் இன்னும் என் கண்ணுக்குள் இருக்கிறது.

துபையில் நடந்த அந்தப் போட்டியில் முதலில் பேட் செய்து இந்தியா 202 ரன்கள் அடித்தது. அந்தப் போட்டியின் வர்ணனையில் இருந்த நான், அந்த ஆடுகளத்தில் அந்த ஸ்கோரையெல்லாம் சேஸ் செய்யவே முடியாது என்று நினைத்திருந்தேன். ஆனால், நிசங்கா வந்து ஆடிய விதம் பிரம்மிப்பாக இருந்தது. தொடக்க வீரராக இறங்கிய அவர், கடைசி வரை போராடி இலங்கையை வெற்றிக்கு அருகில் அழைத்துச் சென்றார். கடைசி ஓவரின் முதல் பந்தில் அவர் ஆட்டமிழக்க, இலங்கையும் 202 ரன்கள் தான் எடுத்தது. ஒருவேளை நிசங்கா ஆட்டமிழக்காமல் இருந்திருந்தால், அவர் இலங்கையை வெற்றி பெறவே வைத்திருக்கலாம்.

அது ஏதோ ஒருநாளோடு முடிந்துவிடவில்லை. தொடர்ச்சியாக பல சிறப்பான செயல்பாடுகளைக் கொடுத்தார் நிசங்கா. அதை தற்போது இந்த உலகக் கோப்பையிலும் அவர் தொடர்ந்துகொண்டிருக்கிறார்.

பதும் நிசங்கா - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

பொதுவாக இந்திய ஆடுகளங்கள் சற்று கடினமானவை. பந்து பேட்டுக்கு நன்கு வரும். பேட்டிங் செய்ய ஏதுவாக இருக்கும். பவுண்டரி எல்லையும் சற்று சிறியது தான். பவர்பிளேவில் அடித்து நொறுக்கலாம். ஆனால், இலங்கையில் அப்படியில்லை. ஆடுகளங்கள் சற்று ஈரப்பதம் கொண்டவையாக இருக்கும். பந்து நின்று வரும். அங்கு பவுண்டரி எல்லைகள் பெரிதாக இருக்கும். பிரேமதேசா போன்ற மைதானமெல்லாம் மிகவும் பெரியது. அங்கு ஸ்கோர் செய்வது அவ்வளவு எளிதான காரியம் இல்லை. ஆனால், நிசங்கா அதை செய்திருக்கிறார்.

அவர் ஃபிட்னஸ் மிகவும் சிறப்பாக இருக்கிறது. அதனால் ஓடியும் அதிக ரன்கள் எடுத்துவிடுகிறார். நான் முன்பே ஆட்ட விழிப்புணர்வு பற்றி சொல்லியிருந்தேன்... மைதானம் பெரிதாக இருந்தால் அதற்கேற்ப ஆடுகிறார். சிறிதான மைதானம் என்றால் எதிரணி பௌலர்கள் மீது ஆதிக்கம் செலுத்துகிறார். தன் அணியின் மிகமுக்கிய பேட்டராக விளங்குகிறார்.

நிசங்காவுக்கு உறுதுணையாக இருக்கப்போவது யார்?

என்னைப் பொறுத்தவரை இலங்கை அணி சூப்பர் 8 சுற்றில் சிறப்பாகச் செய்யவேண்டும் என்றால் அதற்கு நிசங்காவின் பங்களிப்பு மிகவும் முக்கியம். ஏனெனில், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் என சவால் கொடுக்கக்கூடிய அணிகளோடு இலங்கை விளையாடப்போகிறது. அவர் கொடுக்கக்கூடிய தொடக்கம் இலங்கை அணிக்கு மிகவும் முக்கியம்.

அதேசமயம் அவர் ஒருவரையே பெரும்பாலும் சார்ந்திருப்பது அவருக்கும் நெருக்கடியை ஏற்படுத்திவிடும். அதனால் அவருக்கு உறுதுணையாக மற்ற வீரர்களும் பங்களிக்கவேண்டும். பவன் ரத்நாயகே இந்த உலகக் கோப்பையில் நன்றாக ஆடுகிறார். அச்சமில்லாமல் அதிரடியைக் காட்டுகிறார். ஆனால், மற்ற வீரர்களிடமிருந்தும் அந்த பங்களிப்பு வரவேண்டும்.

குசல் பெரேரா, குசல் மெண்டிஸ் போன்ற வீரர்கள் அந்த உறுதுணையான ஆட்டத்தைக் கொடுக்கவேண்டும். எல்லோரும் 20-30 ரன்கள் எடுக்கிறார்கள். ஆனால், அதை பெரிய இன்னிங்ஸாக அவர்கள் மாற்றத் தொடங்கவேண்டும். அப்படிச் செய்யும்போது அது நிசங்காவின் நெருக்கடியைக் குறைத்து, இன்னும் சிறப்பான செயல்பாட்டை அவரிடத்திருந்து கொண்டுவரும். அது அணிக்கும் பேருதவியாக மாறும்.

இந்த முக்கியமான கட்டத்தில் இலங்கை வீரர்கள் பெரிதாக யோசிக்காமல் அச்சமற்ற ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினால் நிச்சயம் இலங்கை அரையிறுதியைப் பற்றி கனவு காணலாம்.

(இந்தக் கட்டுரையை எழுதிய வித்யுத் சிவராமகிருஷ்ணன், தமிழ்நாடு, சென்னை சூப்பர் கிங்ஸ் அணிகளுக்காக விளையாடியிருக்கிறார். 2000-ல் அண்டர் 19 உலகக் கோப்பையை வென்ற இந்திய அணியில் இவர் இடம்பெற்றிருந்தார். தற்போது வர்ணனையாளராக இருக்கிறார்.)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/crrx741l8lyo

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

3 weeks 4 days ago

2024-ல் தகுதி கூட பெறாத ஜிம்பாப்வே இன்று சாம்பியன்களை வீழ்த்திய கதை

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

கட்டுரை தகவல்

  • பிரதீப் கிருஷ்ணா

  • பிபிசி தமிழ்

  • 20 பிப்ரவரி 2026, 11:21 GMT

    புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர்

  • வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

நடந்து கொண்டிருக்கும் டி20 உலகக் கோப்பையில் அநேக ரசிகர்களின் கவனத்தை ஈர்த்திருக்கும் அணி ஜிம்பாப்வே.

யாரும் எதிர்பாராத வகையில் ஆஸ்திரேலியாவை வீழ்த்திய அந்த அணி, பின்னர் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறியது.

வியாழக்கிழமை நடந்த கடைசி லீக் சுற்றுப் போட்டியில் இலங்கையையும் வீழ்த்தி பி பிரிவில் முதலிடம் பெற்று அசத்தியிருக்கிறது அந்த அணி.

2024 டி20 உலகக் கோப்பையில் 20 அணிகள் பங்கேற்றபோதும் ஜிம்பாப்வே அணியால் அதற்குத் தகுதி பெற முடியவில்லை. அப்படி தடுமாறிக்கொண்டிருந்த அந்த அணி, அடுத்தடுத்து இரு முன்னாள் உலக சாம்பியன்களை வீழ்த்தியிருப்பது கிரிக்கெட் வட்டாரத்தில் தற்போது பெரும் பேசுபொருளாகியிருக்கிறது.

இதை வெறும் எழுச்சிக் கதையாக மட்டுமே பார்த்திட முடியாது. ஏனெனில், அவர்கள் இப்படியான வெற்றிகள் பெறுவதோ, பெரிய அணிகளாகக் கருதப்படுபவர்களுக்கு அதிர்ச்சியளிப்பதோ, உலகக் கோப்பையின் அடுத்து சுற்றுக்கு முன்னேறுவதோ இது முதல் முறை அல்ல.

1983 உலகக் கோப்பையில் முதல் முறையாக ஜிம்பாப்வே சர்வதேச அரங்கில் பங்கேற்றது. முதல் போட்டியிலேயே ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது அந்த அணி. இந்தியாவையும் உலகக் கோப்பையில் வீழ்த்தியிருக்கிறார்கள். இரண்டு முறை இந்திய அணியை டெஸ்ட் போட்டிகளிலும் தோற்கடித்திருக்கிறார்கள்.

அடுத்தடுத்து இரு உலகக் கோப்பைகளில் சூப்பர் 6 சுற்றுக்குள் நுழைந்த அணி ஜிம்பாப்வே.

இருந்தபோதிலும் அவர்கள் 20 அணிகள் பங்கேற்ற உலகக் கோப்பைக்குத் தகுதி பெறாமல் போனதுமே பெரும் செய்திதான்.

இவ்வளவு ஏன், அந்த அணிக்கு ஐசிசி தடையே விதித்திருந்தது.

இப்படி ஏற்றமும், முன்னேற்றமும் நிறைந்ததுதான் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் கதை.

கடந்த 3 தசாப்தங்களில் அவர்கள் சிகரத்துக்கு அருகேயும் சென்றிருக்கிறார்கள், பாதாளத்துக்குள்ளும் குதித்திருக்கிறார்கள்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

தொடக்க காலமும், பெரும் எழுச்சியும்

1980-ல் சுதந்திரம் பெற்ற ஜிம்பாப்வே, 1983-ம் ஆண்டுக்கான உலகக் கோப்பைக்குள் தகுதிச் சுற்றை வென்றதன் மூலம் நுழைந்தது.

முதல் போட்டியிலேயே அந்த அணி பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவை வீழ்த்தி அதிர்ச்சி ஏற்படுத்தியது. இந்திய அணியின் பயிற்சியாளராக இருந்த டங்கன் ஃபிளெட்சர்தான் அப்போது ஜிம்பாப்வே அணியின் கேப்டன். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான அந்த வெற்றியின் காரணகர்த்தாவும் இவர்தான்.

அந்த வெற்றியோடு தொடங்கியிருந்தாலும், ஜிம்பாப்வேவால் மற்ற அணிகளுக்கு இணையாக செயல்பட முடியவில்லை. அந்தத் தொடரின் மற்ற ஐந்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1987 உலகக் கோப்பையில் அனைத்து போட்டிகளிலும் தோற்றார்கள். 1992-ல் இங்கிலாந்தை மட்டும் வென்றார்கள். அடுத்த உலகக் கோப்பையில் அவர்களை விடப் பலம் குறைந்த அணியாகக் கருதப்பட்ட கென்யாவை மட்டும் வீழ்த்தினார்கள்.

இப்படித்தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் தொடக்க காலம் இருந்தது. இதற்கிடையே அவர்கள் 1992-ல் டெஸ்ட் அந்தஸ்து பெற்றிருந்தார்கள்.

1990-களின் பிற்பகுதியில் ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் பொற்காலம் தொடங்கியது. 1995-ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் இன்னிங்ஸ் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே. அதன்பிறகு தொடர்ச்சியாக பல குறிப்பிடத்தகுந்த வெற்றிகளை அந்த அணி ஈட்டியது.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,1999 உலகக் கோப்பையில் இந்தியாவுக்கு எதிராக 3 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது ஜிம்பாப்வே

இந்தியாவுக்கு சவால்

ஏண்டி ஃப்ளார், கிரான்ட் ஃப்ளார், ஹீத் ஸ்ட்ரீக், ஏண்டி பிளிக்னாட், டேவ் ஹூடன், அலிஸ்டர் கேம்பெல், ஹென்றி ஒலாங்கா போன்ற வீரர்கள் உலகத்தர செயல்பாடுகளைக் கொடுக்கத் தொடங்கினார்கள்.

பாகிஸ்தானுக்கு எதிரான அந்த டெஸ்ட் வெற்றியில் ஃப்ளார் சகோதரர்கள் இருவருமே சதமடித்தார்கள். ஆண்டி ஃப்ளார் சர்வதேச டெஸ்ட் தரவரிசையில் முதலிடத்துக்கே முன்னேறினார். அப்படிப்பட்ட திறமையான இந்த வீரர்களின் சீரான செயல்பாடுகள் ஜிம்பாப்வே அணியை முன்னணி அணிகளோடு போட்டியிட வைத்தது.

1998-ல் இந்தியாவுக்கு எதிராக நடந்த ஒரேயொரு டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்று தங்களின் சிறந்த செயல்பாட்டைத் தொடர்ந்தது ஜிம்பாப்வே. ஹராரேவில் நடந்த அந்தப் போட்டியை 61 ரன்களில் வென்ற அந்த அணி, அடுத்த மாதம் பாகிஸ்தானுக்குச் சென்று 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 1-0 என வென்றது.

அதற்கடுத்து, 1999 உலகக் கோப்பையில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது ஜிம்பாப்வே. குரூப் சுற்றில் இந்தியாவை 3 ரன்களில் வீழ்த்தியது அந்த அணி. தங்கள் கடைசி குரூப் சுற்றுப் போட்டியில் தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி அடுத்த சுற்றுக்கு முன்னேறியது. விளைவாக இங்கிலாந்தும், நடப்பு சாம்பியன் இலங்கையும் முதல் சுற்றோடு வெளியேறின.

2001-ல் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் நடந்த டெஸ்ட் போட்டியை வென்று, 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை சமன் செய்தது ஜிம்பாப்வே. இது, பலம் வாய்ந்த ஆஸ்திரேலியாவுக்கு எதிராகப் பெற்ற புகழ்பெற்ற தொடர் வெற்றிக்குப் பிறகு கங்குலி தலைமையிலான இந்திய அணி கலந்துகொண்ட அடுத்த டெஸ்ட் தொடர். அப்படியொரு ஃபார்மில் இருந்த இந்தியாவுக்கு சரிசமமாக சவால் கொடுத்தது ஜிம்பாப்வே.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,2001-ம் ஆண்டு ஐசிசி டெஸ்ட் தரவரிசையில் நம்பர் 1 இடத்தைப் பிடித்தார் ஏண்டி ஃப்ளார்

தேசத்தின் வீழ்ச்சி... கிரிக்கெட்டின் வீழ்ச்சி

ஜிம்பாப்வே கிரிக்கெட் மெல்ல எழுச்சி பெற்றுக்கொண்டிருந்த காலகட்டத்தில் அந்த தேசத்தின் நிலை மோசமாகிக்கொண்டிருந்ததது. அந்நாட்டின் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை சந்திக்க, பல்வேறு பிரச்னைகள் அரங்கேறின. அந்தக் காலகட்டத்தில் கிரிக்கெட் அணியின் தேர்வில் அரசியல் தலையீடு இருப்பதாகவும் வீரர்கள் குற்றம் சாட்டியிருந்தார்கள்.

இந்நிலையில் தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே மற்றும் கென்யாவில் 2003 உலகக் கோப்பை நடந்தது.

அப்போது அதிபர் ராபர்ட் முகாபேவின் ஜிம்பாப்வே மீது பலரின் பார்வையும் பட்டது. பாதுகாப்பு காரணங்களுக்காக இங்கிலாந்து அணி ஜிம்பாப்வே செல்ல மறுத்தது. போட்டிகளின்போது ஜிம்பாப்வே வீரர்கள் ஆண்டி ஃப்ளார் மற்றும் ஹென்றி ஒலாங்கா ஆகியோர் கறுப்புப் பட்டை அணிந்து விளையாடியது மேலும் அந்நாட்டின் சூழ்நிலை மீது வெளிச்சம் பாய்ச்சியது. ஜனநாயகத்தின் மரணத்தை உணர்த்துவதற்காக அவர்கள் அதைச் செய்ததாகக் கூறினார்கள்.

"வறுமை, வேலையின்மை, எச்ஐவி தொற்று என பல்வேறு விஷயங்களால் நாடு பாதிக்கப்பட்டிருக்கிறது. அடுத்த சில மாதங்களில் லட்சக்கணக்கான ஜிம்பாப்வே மக்கள் மரணமடையலாம். இனவெறி வெறுப்பு பேச்சுகளைக் கேட்க முடிகிறது. இதை கண்டுகொள்ளாமல் இருப்பது கடினம்" என்று அவர்கள் இருவரும் இணைந்து அப்போது அறிக்கை வெளியிட்டிருந்தார்கள்.

இதன் காரணமாக அவர்கள் இருவரும் கிரிக்கெட்டை விட்டும் நாட்டை விட்டும் வெளியேறவேண்டிய நிலையே ஏற்பட்டது.

இதன்பிறகு ஜிம்பாப்வே அணியில் இட ஒதுக்கீடு குறித்து பல ஆண்டுகளாக நடந்துவந்த விவாதம் 2004-ல் உச்சம் அடைந்தது. அதன் விளைவாக கேப்டன் ஹீத் ஸ்ட்ரீக் பதவி நீக்கம் செய்யப்பட, அது வீரர்களிடைய எதிர்மறையான வரவேற்பைப் பெற்றது. பத்துக்கும் மேற்பட்ட வீரர்கள் போட்டியில் விளையாட மறுத்தார்கள்.

புதிய கேப்டனான தைபுவும் அவர் தலைமையிலான இரண்டாம் கட்ட அணியும் நெருக்கடியான சூழ்நிலையை சமாளிக்கத் தடுமாறினார்கள்.

தொடர் தடுமாற்றங்கள் காரணமாக அந்த அணி டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் விலகிக்கொண்டது. அதேசமயம் ஜிம்பாப்வேவின் உள்ளூர் கிரிக்கெட்டும் பாதிக்கத் தொடங்கியது. அவர்களின் முதல் தரத் தொடரான லோகன் கப் 2005/06 சீசனில் நடக்கவேயில்லை. இதற்கு மத்தியில் பங்கேற்ற தொடர்களிலெல்லாம் பெரும்பாலும் தோல்வியே சந்தித்தது ஜிம்பாப்வே.

அரசியல் தலையீடும், ஐசிசி தடையும்

அடுத்த சில ஆண்டுகள் ஜிம்பாப்வே கிரிக்கெட் எழுச்சி பெறத் தடுமாறவே செய்தது. அவ்வப்போது குறிப்பிடத்தக்க சில வெற்றிகளை அந்த அணி பெற்றது. ஆனால், அதை அவர்களால் தொடர்ச்சியாகப் பெற முடியவில்லை. 2007 டி20 உலகக் கோப்பையில் அந்த அணி ஆஸ்திரேலியாவை வீழ்த்தியது. ஆனாலும், அவர்களால் அடுத்த சுற்றுக்குக் கூட முன்னேற முடியவில்லை.

2005-ம் ஆண்டுக்குப் பிறகு 2011-ல் தான் அவர்கள் டெஸ்ட் போட்டியில் விளையாடினார்கள். 2019 ஒருநாள் உலகக் கோப்பைக்குத் தகுதி பெறவும் அந்த அணி தவறியது.

இந்நிலையில் 2019-ல் அந்த அணியின் கிரிக்கெட் இன்னொரு பெரும் பிரச்னையை சந்தித்தது. அந்த அணியை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் சஸ்பெண்ட் செய்தது.

கிரிக்கெட் நிர்வாகத்தில் அரசின் தலையீடு இருக்கக்கூடாது என்ற விதிமுறையை ஜிம்பாப்வே உறுதி செய்யத் தவறியதாக கூறி இத்தடை விதிக்கப்பட்டது

அந்தத் தடை விரைவில் நீக்கப்பட்டிருந்தாலும், அந்தக் காலகட்டத்தில் நடந்த 2021 டி20 உலகக் கோப்பைக்கான தகுதிச் சுற்றில் அந்த அணியால் பங்கேற்க முடியவில்லை.

நம்பிக்கை தந்திருக்கும் 2026 உலகக் கோப்பை

இப்படியாக பல ஆண்டு காலப் போராட்டத்துக்குப் பிறகு மறுபடியும் ஜிம்பாப்வே அணி குறிப்பிடத்தக்க ஒரு செயல்பாட்டைத் தற்போது கொடுத்துக்கொண்டிருக்கிறது.

சிகந்தர் ராஸா, கிரீம் கிரெமெர் போன்ற சீனியர்கள் முன்நின்று வழிநடத்த பிரயன் பென்னட், தடிவானஷே மருமானி போன்ற வீரர்கள் தைரியமான ஆட்டத்தை வெளிப்படுத்த ஜிம்பாப்வே தற்போது பெரிய அணிகளுக்கு சவாலளிக்கிறது.

அவர்களின் வெற்றி பற்றி இஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ நிகழ்ச்சியில் பேசிய இந்திய அணியின் முன்னாள் பேட்டிங் பயிற்சியாளர் சஞ்சய் பங்கர், "அவர்கள் சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறவேண்டும் என்பதை மட்டும் இலக்காகக் கொண்டிருக்கவில்லை. அவர்கள் இன்னும் பெரிய இலக்கு வைத்திருக்கிறார்கள். பெரிய தாக்கம் ஏற்படுத்தவேண்டும் என்ற நோக்கில் வந்திருக்கிறார்கள்" என்றார்.

கேப்டன் சிகந்தர் ராஸா தன்னுடைய போராட்ட குணத்தை அணி வீரர்களுக்கும் செலுத்தியிருப்பதாக அவர் கூறினார்.

தங்கள் போட்டிகள் அனைத்தையும் இலங்கையில் ஆடியது ஜிம்பாப்வே அணி. அங்கு சுழற்பந்துவீச்சுக்கே ஒத்துழைப்பு அதிகமாக இருக்கும். ஆனால், அந்த ஆடுகளங்களில் தங்கள் வேகப்பந்துவீச்சாளர்கள் மூலம் பெரும் தாக்கம் ஏற்படுத்தியிருக்கிறது ஜிம்பாப்வே. ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில், ஜிம்பாப்வே வேகப்பந்துவீச்சாளர் பிளெஸிங் முசர்பானி 17 ரன்கள் மட்டுமே கொடுத்து 4 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜிம்பாப்வே அணியின் செயல்பாடு அந்நாட்டு ரசிகர்களுக்கு பெரும் நம்பிக்கையைக் கொடுத்திருக்கிறது

ஜிம்பாப்வே அணி சூழ்நிலையைப் பற்றி யோசித்து அதில் சறுக்கிவிடாமல், தங்கள் பலத்தை உணர்ந்து விளையாடியிருப்பதாகக் கூறினார் சஞ்சய் பங்கர்.

"என்னைப் பொறுத்தவரை எந்தவொரு ஆடுகளத்திலும் எல்லா விதமான திறமைக்கும் இடம் இருக்கிறது. ஜிம்பாப்வே அதைத்தான் செய்திருக்கிறது. அவர்கள் இலங்கை ஆடுகளத்தை நினைத்து அதற்கேற்று செயல்படாதது நல்ல விஷயம்" என்று கூறினார்.

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான ஜிம்பாப்வேவின் வெற்றி பற்றி பிபிசி தமிழிடம் பேசிய வர்ணனையாளர் பகவதி பிரசாத், "ஜிம்பாப்வே அணிக்கு சரியான திட்டம் இருந்தது. அவர்கள் பெரிய பவுண்டரிகளில் ஆஸ்திரேலிய பேட்டர்களுக்குப் பொறிவைத்தனர். 'ஹார்ட் லென்த்'களில் சரியாகப் பந்துவீசினார்கள். அந்த சரியான திட்டமிடல் தான் அவர்களுக்கு வெற்றியைப் பெற்றுத் தந்தது" என்று கூறினார்.

ஜிம்பாப்வே கிரிக்கெட்டின் வீழ்ச்சியும் எழுச்சியும் - டி20 உலகக் கோப்பை

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இந்த உலகக் கோப்பையில் 3 இன்னிங்ஸ்களில் 9 விக்கெட்டுகள் வீழ்த்தியிருக்கிறார் பிளெஸிங் முசர்பானி

சூப்பர் 8 சுற்றில் என்ன எதிர்பார்க்கலாம்?

பி பிரிவில் முதலிடம் பிடித்த ஜிம்பாப்வே அணி தற்போது சூப்பர் 8 சுற்றில் முதல் பிரிவில் இடம்பெற்றுள்ளது. இதில் மேற்கிந்திய தீவுகள், இந்தியா மற்றும் தென்னாப்பிரிக்க அணிகள் இடம்பெற்றிருக்கின்றன.

மேலும், இந்த உலகக் கோப்பையில் இதுவரை இலங்கையில் மட்டுமே விளையாடியிருந்த ஜிம்பாப்வே, இந்த 3 போட்டிகளையும் இந்தியாவில் விளையாடவேண்டும். அதனால், இந்திய ஆடுகளங்களுக்கு அந்த அணி எப்படி தகவமைத்துக்கொள்கிறது என்பது முக்கியம் என்றும் சஞ்சய் பங்கர் கூறியிருந்தார்.

பொதுவாக ஓர் அணி இரண்டு பெரிய அணிகளை அடுத்தடுத்து வீழ்த்துகிறது என்றால் அதை அதிர்ஷ்டமாகவோ, அதிர்ச்சியாகவோ பார்க்க முடியாது. அதுவும், கடைசி வரை பரபரப்பாகவெல்லாம் செல்லாமல் நிதானமாக ஆடி வென்றிருக்கிறார்கள். இதற்கு மேலும் தாங்கள் இலக்கு வைத்திருப்பதாகக் கூறுகிறார்கள். அதனால், ஜிம்பாப்வே சூப்பர் 8 சுற்றிலும் பெரும் தாக்கம் ஏற்படுத்துமா என்பதை பார்க்க வேண்டும்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cpd84xd6w91o

இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

1 month ago

இத்தாலி குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தருணங்கள் - புகைப்படத் தொகுப்பு

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Christian Petersen

படக்குறிப்பு,ஸ்டெல்வியோ ஆல்பைன் ஸ்கீயிங் மையத்தில் ஆண்களுக்கான ஒருங்கிணைந்த ஸ்லாலோம் போட்டியில் பங்கேற்ற அமெரிக்காவின் ரிவர் ராடமஸ். (பிப்ரவரி 9)

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 3 நிமிடங்கள்

இத்தாலியின் மிலன், கார்டினா நகரங்களில், 25வது குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறுகின்றன. பிப்ரவரி 6ஆம் தேதி தொடங்கிய இப்போட்டிகள், 22ஆம் தேதி நிறைவு பெறுகின்றன.

இந்த 25வது குளிர்கால ஒலிம்பிக்கில் 90 நாடுகளைச் சேர்ந்த சுமார் 3,000 விளையாட்டு வீரர்கள், 116 பதக்கங்களுக்காக போட்டியிடுகிறார்கள்.

இதில் இந்திய அணியும் கலந்துகொள்கிறது. இந்தியா சார்பில் ஆரிஃப் முகமது கான், ஸ்டான்சின் லுண்டப் ஆகிய இருவர் குளிர்கால ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் 1924 ஆம் ஆண்டு பிரான்சில் தொடங்கியதிலிருந்து, இதில் அதிக வெற்றிகளைப் பெற்ற நாடு நார்வே ஆகும்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் அதிக பதக்கங்களை வென்ற நாடு என்ற சாதனையை நார்வே மொத்தம் 405 பதக்கங்களுடன் பதிவு செய்துள்ளது. இதில் அதிக தங்கப் பதக்கங்களும் (148) அடங்கும்.

இந்த முறையும், 8 தங்கப் பதக்கங்கள் உள்பட 18 பதக்கங்களுடன் நார்வே முன்னிலையில் உள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,பிப்ரவரி 6, இத்தாலியில் நடைபெற்ற 2026 குளிர்கால ஒலிம்பிக் தொடக்க விழாவில், ஆரிஃப் முகமது கான் இந்தியாவின் கொடியை ஏந்திச் சென்றார்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Elsa

படக்குறிப்பு,தொடக்க விழாவில் அமெரிக்க இசைக் கலைஞர் மரியா கேரி

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Matthias Hangst

படக்குறிப்பு,இத்தாலியின் சான் சிரோவில் நடைபெற்ற தொடக்க விழாவின் போது ஒலிம்பிக் வளையங்களிலிருந்து வெடித்த பட்டாசுகள்.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,David Ramos

படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் ஃப்ரீஸ்டைல் ஸ்கையிங் மொகல்ஸ் போட்டியில் பங்கேற்ற ஆஸ்திரேலியாவின் ஜகாரா அந்தோணி. (பிப்ரவரி 7)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Getty Images

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Jared C. Tilton

படக்குறிப்பு,மிலானோ சாண்டா கியுலியா ஐஸ் ஹாக்கி அரங்கில், கனடாவுக்கு எதிரான போட்டிக்கு முன்பு ஆலோசனையில் அமெரிக்காவின் ஐஸ் ஹாக்கி அணி. (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Hector Vivas

படக்குறிப்பு,லிவிக்னோ ஏர் பார்க்கில் நடைபெறும் ஆண்களுக்கான ஃப்ரீஸ்கை ஸ்லோப்ஸ்டைல் இறுதிப் போட்டியில் பங்கேற்ற நார்வேயின் பிர்க் ரூட் (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Alex Slitz

படக்குறிப்பு,பிரிடாஸ்ஸோ ஸ்கை ஜம்பிங் ஸ்டேடியத்தில் கலப்பு அணி சோதனைச் சுற்றில் போட்டியிட்ட சீனாவின் கிவு சாங் (பிப்ரவரி 10)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Michael Reaves

படக்குறிப்பு,லிவிக்னோ ஸ்னோ பார்க்கில் அமெரிக்காவின் குளோய் கிம்மிற்கு ஆதரவாக ஜாக்கெட் அணிந்து, ராப்பர் மற்றும் அமெரிக்க அணியின் கௌரவ பயிற்சியாளர் ஸ்னூப் டாக், பெண்கள் ஸ்னோபோர்டு ஹாஃப்-பைப் இறுதிப் போட்டியைப் பார்க்கிறார். (பிப்ரவரி 12)

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,AFP via Getty Images

படக்குறிப்பு,தன்னுடைய பிரத்யேக தலைக்கவசத்தை அணிய அனுமதிக்கப்பட்டால் மட்டுமே போட்டியிடுவேன் என்று கூறியதை அடுத்து, விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் போட்டியிட தடை விதிக்கப்பட்டுள்ளது.

யுக்ரேன் மீதான ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பிற்குப் பிறகு சக விளையாட்டு வீரர்கள் கொல்லப்பட்டதை சித்தரிக்கும் தலைக்கவசம் அணிந்திருந்ததால், யுக்ரேனைச் சேர்ந்த விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் குளிர்கால ஒலிம்பிக்கில் இருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டார். இது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குளிர்கால ஒலிம்பிக் போட்டிகள், இத்தாலி

பட மூலாதாரம்,Richard Heathcote

படக்குறிப்பு,தகுதி நீக்கம் செய்யப்படுவதற்கு முன்பு, பயிற்சியில் யுக்ரேனின் விளாடிஸ்லாவ் ஹெராஸ்கெவிச் (பிப்ரவரி 11)

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cly0kp38y9do

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

1 month ago

'நிறுத்தி' பந்து வீசும் பாகிஸ்தான் வீரர் பற்றி விவாதம் - இந்தியாவுக்கு எதிராக துருப்புச் சீட்டாக இருப்பாரா?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் உஸ்மான் தாரிக் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தி நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே கொடுத்தார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

2 மணி நேரங்களுக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 5 நிமிடங்கள்

'அவர் என்ன செய்தார் என்பதை இந்தியாவால் கூட புரிந்துகொள்ள முடியாது.'

'இது இந்தியாவுக்கு எதிரான துருப்புச் சீட்டாக இருக்கும்.'

பாகிஸ்தான் மற்றும் அமெரிக்கா இடையிலான டி20 உலகக் கோப்பை போட்டியின் போது, இந்தியத் தொலைக்காட்சி சேனல் ஒன்றில் போட்டி குறித்த நிகழ்ச்சியில் இப்படி பேசப்பட்டது. இந்த விவாதம், பாகிஸ்தான் பந்துவீச்சாளர் உஸ்மான் தாரிக்கை பற்றியது. இவருடைய தனித்துவமான பந்துவீச்சு முறை இதற்கு முன்பே விவாதத்திற்குள்ளாகியுள்ளது.

கடந்த செவ்வாய்கிழமை நடைபெற்ற போட்டியில் அமெரிக்காவை 32 ரன்கள் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணி தோற்கடித்தது. இந்தப் போட்டியில் உஸ்மான் தாரிக் நான்கு ஓவர்களில் 27 ரன்கள் மட்டுமே விட்டுக்கொடுத்து மூன்று விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

அந்தப் போட்டியின் காட்சிகள் இந்தியாவில் சமூக ஊடகங்களில் வேகமாகப் பரவின.

அதனைத் தொடர்ந்து, உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து சில சமூக ஊடகப் பயனர்கள் கேள்வி எழுப்பினர்.

உஸ்மான் ஓடிவந்து நிறுத்தி பின்பு பந்து வீசும் விதம், விதிகளின்படி ஏற்றுக்கொள்ளத்தக்கதா என்றும் மற்றவர்கள் கேள்வி எழுப்பினர்.

இருப்பினும் இந்த முழு விவாதத்திற்கும் மத்தியில், இந்திய முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ரவிச்சந்திரன் அஸ்வின், உஸ்மான் தாரிக்குக்கு ஆதரவாகப் பேசியுள்ளார்.

அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,அஸ்வின், உஸ்மான் தாரிக்கை ஆதரித்துள்ளார்.

இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் என்ன சொல்கிறார்கள்?

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி என்ற சமூக வலைதள பயனர், உஸ்மானின் பந்துவீச்சில் அமெரிக்க பேட்ஸ்மேன் ஒருவர் ஆட்டமிழக்கும் வீடியோவை எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில், உஸ்மான் பந்தை வீசுவதற்கு முன்பு ஒரு கணம் நிற்பது காணப்படுகிறது.

''ஆக்ஷன் ஒகே. ஆனால் நிறுத்துவது? அதுவும் பந்தை வீச வேண்டிய தருணத்தில் அவ்வாறு செய்வதா? இதை தொடரக்கூடாது'' என்று அந்த வீடியோ குறித்து ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி பதிவிட்டுள்ளார்.

ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியின் பதிவை மறுப்பதிவிட்டு எழுதிய அஸ்வின்,'' ''ஒரு பேட்ஸ்மேன் எந்த பக்கத்தில் வேண்டுமானாலும் நின்று அடிக்கலாம். இப்படி செய்வதற்கு முன்பு அம்பையரிடமோ, பந்துவீச்சாளரிடமோ சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. ஆனால், ஒரு பந்துவீச்சாளர் விஷயத்தில் மட்டும் விதி கடுமையாக இருக்கிறது. அம்பையரிடம் சொல்லாமல் நடுவில் கையை மாற்றி பந்து வீசக் கூடாது. இந்த விதிதான் முதலில் மாற்றப்பட வேண்டும்," என்று எழுதியுள்ளார்.

உஸ்மான் தாரிக்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,உஸ்மான் தாரிக்

இதற்கிடையில், இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான ஆகாஷ் சோப்ரா ஒரு வீடியோவில், பாகிஸ்தானின் சுழற்பந்து வீச்சு வலிமையானது என்று விவரித்ததுடன், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது என்று கூறியுள்ளார்.

"உஸ்மானின் பந்துவீச்சு முறை சுவாரஸ்யமானது. நீங்கள் டிவி பார்த்துக் கொண்டிருக்கும்போது திடீரென்று யாரோ ஒருவர் நிறுத்துவது போல் இது உணர்வைத் தருகிறது. அவர் நிறுத்திவிட்டு பின்னர் பந்து வீசுகிறார். அதேபோல் மெதுவாகப் பந்து வீசுகிறார். இதில் எந்தப் பிரச்னையும் இருப்பதாக நான் நினைக்கவில்லை. இது சரியானதுதான். நீங்கள் நிறுத்தி பந்து வீசலாம். அதைப் பற்றி எந்த விதியும் இல்லை. மேலும் அவர் வீசும் மெதுவான பந்துகளில் கூட, முழங்கை மடங்குவது இல்லை," என்றார்.

ஆனால், கையை வளைக்காமல் பந்தின் வேகத்தை 20 முதல் 25 கிலோமீட்டர் வரை அதிகரிக்க முடியுமா என்ற கேள்வியையும் ஆகாஷ் சோப்ரா எழுப்பினார்.

இந்த விவாதம் தீவிரமடைந்த நிலையில், அஸ்வின் எக்ஸ் தளத்தில் மற்றொரு நீண்ட கருத்தைப் பதிவிட்டார்.

அதில் அவர், "முதலில், பந்துவீச்சு முறை சரியா இல்லையா என்பதை ஐசிசி பந்துவீச்சு சோதனை மையத்தில் மட்டுமே சோதிக்க முடியும்," என்று கூறினார்.

"இரண்டாவதாக, 15-டிகிரி விதி உள்ளது. அதன்படி, பந்துவீச்சாளர் தனது முழங்கையை 15 டிகிரி வரை நேராக்கலாம். மேலும், பந்துவீச்சாளர் 15 டிகிரியில் பந்து வீசுகிறாரா இல்லையா என்பதை மைதானத்தில் இருக்கும் நடுவர் தீர்மானிப்பது சாத்தியமற்றது."

மேலும், "இதற்கு ஒரே தீர்வு, போட்டி நடக்கும் நேரத்திலேயே சோதனை கருவியை அறிமுகப்படுத்துவதுதான். இது ஒரு தெளிவற்ற விஷயம், இந்தத் தெளிவற்ற விஷயத்தைப் பயன்படுத்தி யாரோ ஒருவர் ஆதாயம் அடைகிறார்கள் என்று குற்றம் சாட்டுவது தவறு.

கிரீஸுக்குள் பந்து வீசும்போது நிறுத்துவது சட்டப்பூர்வமானதா இல்லையா என்ற கேள்வியைப் பொறுத்தவரை, அது அவருடைய வழக்கமான பந்துவீச்சு முறை என்பதால் அது முற்றிலும் சட்டப்பூர்வமானது என்றே நான் நம்புகிறேன்," என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

உஸ்மானின் இந்த பந்து வீச்சு பாகிஸ்தானுக்கு மிகவும் முக்கியமானது என்று மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் இயன் பிஷப் வர்ணித்துள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,இயன் பிஷப்

உஸ்மான் தாரிக் தனது பந்துவீச்சு பற்றி கூறியது என்ன?

சுமார் ஒரு வருடத்திற்கு முன்பு, உஸ்மான் தாரிக் அளித்த பேட்டி ஒன்றில், தனது பந்துவீச்சு முறை சாதாரணமாகத் தெரிவதில்லை, ஏனெனில் தனக்கு 'இரண்டு முழங்கைகள்' உள்ளன என்று கூறியிருந்தார்.

தனது பந்துவீச்சு முறை குறித்து ஆட்சேபனைகள் எழுப்பப்பட்டபோது, தான் மருத்துவரிடம் சென்று தனது இரு கைகளையும் பரிசோதித்ததாக அவர் கூறினார்.

அவரது உடல் அமைப்பு ஒரு சாதாரண மனிதரிடமிருந்து வேறுபட்டது என்கிறார் உஸ்மான் தாரிக்.

மேலும், "இது பிறப்பிலிருந்தே இருக்கிறது, இரண்டு முழங்கைகள் இருப்பதால், என்னால் என் கைகளை நேராக்க முடியாது," என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதற்கிடையில், கடந்த ஆண்டு மே 7-ம் தேதி பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் வெளியிட்ட அறிக்கையில், உஸ்மான் தாரிக் லாகூரில் உள்ள பயோமெக்கானிக்ஸ் ஆய்வகத்தில் சோதனைக்கு உட்படுத்தப்பட்டார் என்றும், அங்கு அவரது பந்துவீச்சு முறை அங்கீகரிக்கப்பட்டது என்றும் தெரிவித்தது.

தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,தாரிக் பந்து வீச்சு தொடர்பான அடுத்தடுத்த சோதனைகளில் தேர்ச்சி பெற்றுள்ளார்.

பேட்ஸ்மேன்களுக்கு இந்த ஆட்டம் எவ்வளவு ஆபத்தானது?

அமெரிக்காவுக்கு எதிரான போட்டியில் பாகிஸ்தான் வெற்றி பெற்ற பிறகு ஈஎஸ்பிஎன் (ESPN) தளத்தில் நடைபெற்ற விவாதத்தின் போது, மேற்கிந்திய தீவுகள் அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரரும் வர்ணனையாளருமான இயன் பிஷப், உஸ்மான் தாரிக்கின் பந்துவீச்சு முறை குறித்து பேசினார்.

"அவர் வெவ்வேறு கோணங்களில் பந்து வீசுகிறார். அவர் ரவுண்ட் ஆர்ம் முறையிலும், பின்னர் ஓவர் தி டாப் முறையிலும் வீசுகிறார். இது உங்களுக்கு வெவ்வேறு அளவிலான பவுன்ஸ்களை வழங்குகிறது. ஆனால் அதைவிட முக்கியமாக, அவர் பந்து வீசுவதற்கு முன்பு நிறுத்தி, பேட்ஸ்மேன் எங்கே நகரக்கூடும் அல்லது அவர் என்ன ஷாட் ஆடக்கூடும் என்பதைப் பார்க்க அவருடைய கால்களைக் கவனிக்கிறார். பின்னர் அவர் பந்தை வீசும்போது, அது பேட்ஸ்மேனின் செயல்பாட்டைத் தடுக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது," என்றார்.

அந்தச் சிறிய நிறுத்தம் தான் பந்துவீச்சாளருக்கு பேட்ஸ்மேனை விட முன்னிலை கொடுக்கிறது என்று இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சபா கரீம் அதே விவாதத்தில் கூறினார்.

"ஏனெனில், இது அவருக்கு வெவ்வேறு மாற்றங்களை முயற்சிப்பதற்கான சுதந்திரத்தை அளிக்கிறது. கடந்த சில போட்டிகளில் நாம் பார்த்தது என்னவென்றால், அவர் (உஸ்மான்) சிறந்த மற்றும் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களைக் கூட ஆட்டமிழக்கச் செய்வதில் வெற்றி பெற்றுள்ளார். இந்த உலகக் கோப்பையில் பாகிஸ்தானுக்கு அவரது தனித்துவமான பந்துவீச்சு முறை மிகவும் முக்கியமானதாக அமையலாம்," என்றார்.

விதிகள் என்ன?

இதுகுறித்த அம்சங்களைப் புரிந்துகொள்வதற்காக, லாகூர் மேலாண்மை அறிவியல் பல்கலைக்கழகத்தின் பயோமெக்கானிக்ஸ் நிபுணர் பேராசிரியர் முகமது ஓவைஸுடன் பிபிசி உருது பேசியது.

கடந்த காலங்களில், பந்துவீச்சாளர்களின் பந்துவீச்சு முறையைச் சோதிப்பதற்காகப் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பேராசிரியர் ஓவைஸைப் பணியமர்த்தியுள்ளது.

"பந்து வீசும்போது நிறுத்துவதைப் பொறுத்தவரை, அதில் எந்தப் பிரச்னையும் இல்லை, பந்து வீசும்போது முழங்கை கோணத்தின் மாற்றம் 15 டிகிரிக்கு மேல் இருக்கக்கூடாது. முழங்கையில் ஏற்படும் மாற்றம் 15 டிகிரி அல்லது அதற்குக் குறைவாக இருந்தால், அந்தப் பந்து செல்லுபடியாகும் எனக் கருதப்படும்," என்றார்.

"ஒரு பந்துவீச்சாளர் நிறுத்தி பந்து வீசினால், அப்போதும் அதே விதிகள் பொருந்தும் என்பது உறுதி. ஐ.சி.சி விதிகளில் நிறுத்தி பந்து வீசுவது குறித்து எந்த விதிமுறையும் இல்லை, 15 டிகிரி சாய்வு பற்றி மட்டுமே பேசுகிறது," என்றார்.

"சில நேரங்களில் ஒரு பந்துவீச்சாளரின் கை அமைப்பு இயற்கையாகவே அதிக நெகிழ்வுத்தன்மையைக் கொண்டிருக்கும். எனவே, வெறும் கண்ணால் பார்க்கும்போது, பந்துவீச்சாளர் பந்தை எறிகிறார் , அதாவது தவறான முறையில் பந்து வீசுகிறார் என்று தோன்றலாம். இருப்பினும், ஐ.சி.சி கேமராக்கள் மூலம் அளவிடப்பட்டு ஆய்வு செய்யப்படும்போது, அது 'சக்கிங்' வகையின் கீழ் வராது. அந்தச் சோதனையில் பந்துவீச்சாளர் தவறாக வீசுவது நிரூபிக்கப்படாமல் போக முற்றிலும் வாய்ப்புள்ளது," என்றார்.

உஸ்மான் தாரிக்கின் பின்னணி

ஈஎஸ்பிஎன் கிரிக்இன்ஃபோ தகவலின்படி, உஸ்மான் தாரிக் நவம்பர் 2023-இல் பாகிஸ்தான் தேசிய டி20 கோப்பை போட்டியில் அறிமுகமானார். அவர் 2024-இல் பிஎஸ்எல் தொடரிலும் பங்கேற்றார், ஆனால் பெரிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை.

ஆனால், 2024-25 காலப்பகுதியில், அவர் உள்நாட்டு கிரிக்கெட்டில் சிறப்பான முறையில் மீண்டும் விளையாடத் தொடங்கி, 15 போட்டிகளில் 22 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இருப்பினும், இந்தக் காலக்கட்டத்தில் அவரது பந்துவீச்சு முறை குறித்து இரண்டு புகார்கள் வந்தன. முதல் முறை 2024 பிஎஸ்எல் தொடரின் போது புகார் எழுந்தது.

ஆனால், லாகூர் தேசிய கிரிக்கெட் அகாடமியில் நடத்தப்பட்ட சோதனைக்குப் பிறகு, அவர் தேர்ச்சி பெற்றார் மற்றும் அவரது பந்துவீச்சு தொடர்ந்தது.

அடுத்த பிஎஸ்எல் தொடரிலும் அவர் மீது மீண்டும் ஒரு புகார் அளிக்கப்பட்டது, ஆனால் அதைத் தொடர்ந்து நடந்த விசாரணையிலும் அவர் தேர்ச்சி பெற்றார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/c626jnllrn5o

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

1 month ago

இந்திய வீரர்களின் பேட்டில் கூடுதலாக ஒரு ரப்பர் அடுக்கா? இலங்கை வீரர் தனது பேச்சு பற்றி விளக்கம்

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ஒரு மணி நேரத்துக்கு முன்னர்

வாசிக்கும் நேரம்: 2 நிமிடங்கள்

இந்திய பேட்டர்கள் பயன்படுத்தும் பேட் பற்றி இலங்கை கிரிக்கெட் வீரர் பானுகா ராஜபக்ச தெரிவித்த கருத்தால் சர்ச்சை எழுந்துள்ள நிலையில், அதுகுறித்து ஒரு நேர்காணலின் போது அவர் விளக்கம் அளித்துள்ளார்.

"இந்திய கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் பேட் மற்ற கிரிக்கெட் வீரர்கள் பயன்படுத்தும் மட்டைகளை விட சிறந்த தரம் வாய்ந்தது, அவற்றின் மீது ரப்பர் அடுக்கு இருப்பது போல் தெரிகிறது" என்று பானுகா ராஜபக்ச கூறியதாக நியூஸ்வயர் ஊடகம் கூறியிருந்தது.

"எனது சமீபத்திய நேர்காணல் குறித்து தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் சொன்னது தவறாகப் புரிந்து கொள்ளப்பட்டுள்ளது. மொழிபெயர்ப்புப் பிழை காரணமாக திரிக்கப்பட்டிருக்கலாம். இந்திய பேட்டர்களைப் பாராட்டுவதே எனது நோக்கமாக இருந்தது. இந்திய கிரிக்கெட் மிகவும் முன்னேறியுள்ளது. அவர்களின் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் அவர்களின் உபகரணங்கள் அனைத்தும் உயர்தரமானவை. அவர்களின் பேட் உற்பத்தியாளர்கள் உலகத் தரம் வாய்ந்தவர்கள். இந்திய கிரிக்கெட் வீரர்கள் மீது எனக்கு மரியாதை மட்டுமே உள்ளது." என்று அவர் விளக்கம் அளித்துள்ளார்.

ராஜபக்சவின் தெளிவுபடுத்தல் குறித்து நியூஸ்வயர் ஊடகம் விரிவாக எழுதியுள்ளது.

இலங்கை பேட்டர் பானுக ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டை 'மிகவும் முன்னேறிய' அணி என்று வர்ணித்து, அதன் கட்டமைப்பு, உள்கட்டமைப்பு மற்றும் உபகரணங்களின் தரத்தைப் பற்றி குறிப்பிட்டதாக நியூஸ்வயர் குறிப்பிட்டுள்ளது.

இந்திய பேட்டர்களின் பவர்-ஹிட்டிங் திறன் மற்றும் அவர்கள் பயன்படுத்தும் மட்டைகளைப் பற்றி அவர் பேசிய முந்தைய பேச்சு சர்ச்சையை ஏற்படுத்திய பிறகு அவரிடம் இருந்து இந்த விளக்கம் வந்துள்ளது.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

ராஜபக்ச கூறியது என்ன?

ஹரி டிவி பத்திரிகையாளர் லஹிரு முதலிகேவிடம் பேசிய ராஜபக்சே, "இந்திய பேட்டர்கள் அதிக சக்தியை உருவாக்கும் பேட்களைப் பயன்படுத்துவதாகத் தெரிகிறது. பேட் மீது கூடுதல் ரப்பர் அடுக்கு இருப்பது போல் அவர்கள் உணர்கிறார்கள்" என்று கூறியிருந்தார்.

தனது தனிப்பட்ட அனுபவத்தின் அடிப்படையில், "இவை சில சிறப்பு வகை வில்லோ மரத்தால் செய்யப்பட்டிருக்கலாம்" என்று அவர் கூறினார்.

"இந்திய வீரர்களின் மட்டை நம்மிடம் உள்ள சிறந்த மட்டைகளை விட மிகச் சிறந்தவை. இது எப்படி சாத்தியம் என்று எனக்குப் புரியவில்லை. மற்றவர்களால் இந்த மட்டைகளை வாங்கக்கூட முடியாது. அனைத்து வீரர்களுக்கும் இது தெரியும்" என்று அவர் கூறியிருந்தார்.

"இது முட்டாள்தனமாகத் தோன்றலாம், ஆனால் நேர்மையாகச் சொன்னால், நான் அப்படித்தான் உணர்கிறேன்" என்று அவர் கூறினார்.

அதே நேர்காணலில் பேசிய ஐபிஎல் முன்னாள் வீரர் ராஜபக்ச, இந்திய கிரிக்கெட்டின் வலுவான பேட்டிங் கலாசாரத்தையும், உலகின் சிறந்த டி20 லீக் என்று அவர் வர்ணித்த இந்தியன் பிரீமியர் லீக்கையும் பாராட்டினார். இந்திய கிரிக்கெட்டில் திறமையான வீரர்கள் தொடர்ந்து உருவாகி வருவதற்கு இதுவே காரணம் என்றும் அவர் கூறினார்.

பானுகா ராஜபக்ச, இந்திய வீரர்கள் பேட் பற்றிய கருத்தால் சர்ச்சை, இலங்கை வீரர் பானுகா ராஜபக்ச

பட மூலாதாரம்,Getty Images

பானுகா ராஜபக்ச யார்?

  • பானுகா ராஜபக்ச ஒரு இடது கை பேட்ஸ்மேன் மற்றும் வலது கை மித வேகப்பந்து வீச்சாளர் ஆவார்.

  • 2022ஆம் ஆண்டு ஐபிஎல்லில் பஞ்சாப் கிங்ஸ் அணிக்காக விளையாடியுள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் அவர் ஐந்து ஒருநாள் போட்டிகளில் 17.80 சராசரியுடன் 89 ரன் எடுத்துள்ளார்.

  • சர்வதேச கிரிக்கெட்டில் 45 டி20 போட்டிகளில் 744 ரன் எடுத்துள்ளார். அவரது சராசரி 22.54 ரன்னாகவும் ஸ்ட்ரைக் ரேட் 130.52 ஆகவும் உள்ளது.

https://www.bbc.com/tamil/articles/cqlgvwedgd5o

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

1 month 1 week ago

சூப்பர் ஓவரும் 'டை' எனில் ஆட்டத்தின் முடிவு என்ன? விதி, அட்டவணை உள்பட டி20 உலகக்கோப்பை முழு விவரம்

டி20 உலகக்கோப்பை - முழு விவரம்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஜோஸ் பட்லர் (இடது), ஜஸ்பிரித் பும்ரா (நடுவில்) டிராவிஸ் ஹெட் (வலது)

7 பிப்ரவரி 2026

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள 2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கோப்பை இன்று தொடங்குகிறது.

2024-ல் கரீபியன் மற்றும் அமெரிக்காவில் நடந்த உலகக் கோப்பைத் தொடரில் பட்டம் வென்ற இந்தியா நடப்பு சாம்பியனாக இந்தத் தொடருக்குள் நுழைகிறது.

சொந்த மண்ணில் எப்போதுமே வலுவான அணியாகக் திகழக் கூடிய இந்திய அணி கோப்பையை வெல்லும் வாய்ப்புள்ள முன்னணி அணிகளில் ஒன்றாக திகழ்கிறது. டி20 கிரிக்கெட்டின் கணிக்க முடியாத தன்மை இந்த தொடரை மேலும் சுவாரஸ்யமானதாக மாற்றுகிறது.

இந்த டி20 உலகக் கோப்பை தொடர் பற்றிய முழு விவரமும் இங்கே தரப்பட்டுள்ளன.

டி20 உலகக் கோப்பை-2026 அட்டவணை

டி20 ஆடவர் உலகக் கோப்பை தொடரில் பிப்ரவரி 7-ஆம் தேதி கொழும்பு நகரில் நடக்கும் முதல் போட்டியில் பாகிஸ்தான் மற்றும் நெதர்லாந்து அணிகள் மோதுகின்றன.

தொடக்க நாளில் நடைபெறவுள்ள மூன்று போட்டிகளில் இதுவும் ஒன்றாகும்.

மற்ற போட்டிகளில் ஒன்றில் வெஸ்ட் இண்டீஸ் - ஸ்காட்லாந்து அணிகளும், மற்றொன்றில் இந்தியா - அமெரிக்கா ஆகிய அணிகளும் மோதுகின்றன.

ஐந்து அணிகள் கொண்ட நான்கு பிரிவுகளை உள்ளடக்கிய 20 அணிகளுக்கான முதல் கட்ட லீக் சுற்று ஆட்டங்கள் பிப்ரவரி 20-ஆம் தேதி வரை தொடரும். இறுதி நாளைத் தவிர மற்ற நாட்களில் தினசரி மூன்று போட்டிகள் நடைபெறும். இறுதி நாளில் மட்டும் ஒரு போட்டி நடைபெறும்.

அதனைத் தொடர்ந்து சூப்பர் 8 சுற்றுப் போட்டிகள் தினசரி ஒன்று அல்லது இரண்டு போட்டிகள் நடைபெறும்.

மார்ச் 4 மற்றும் 5 ஆகிய தேதிகளில் அரையிறுதிப் போட்டிகள் நடைபெறும்.

இறுதிப் போட்டி மார்ச் 8-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஆமதாபாத்தில் நடைபெறும்.

டி20 ஆடவர் உலகக்கோப்பைக்கான வடிவம் என்ன?

டி20 ஆடவர் உலகக் கோப்பை, 2024 ஆம் ஆண்டில் பயன்படுத்தப்பட்ட அதே வடிவத்தையே பின்பற்றுகிறது. அந்த தொடர், 20 அணிகள் பங்கேற்ற மிகப் பெரிய தொடராக அமைந்தது.

லீக் சுற்று ஆட்டங்களில் ஒவ்வொரு அணியும் நான்கு போட்டிகளில் விளையாடும். தங்கள் பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் சூப்பர் 8 சுற்றுக்கு முன்னேறும்.

இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறவுள்ள சூப்பர் 8 சுற்றில், தலா நான்கு அணிகள் கொண்ட இரண்டு குழுக்கள் இருக்கும்.

சூப்பர் 8 சுற்றில் அணிகளின் இடம் லீக் சுற்றில் பெற்ற புள்ளிகள் அடிப்படையில் அல்லாமல், அவற்றின் தர வரிசையைப் பொருத்தே அமையும்.

உதாரணமாக, ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் சூப்பர் 8 சுற்றுக்குத் தகுதி பெறுவதாக எடுத்துக் கொள்வோம். அப்படியானால், ஆஸ்திரேலியா, இந்தியா, தென்னாப்பிரிக்கா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் முதல் குழுவிலும், இங்கிலாந்து, நியூசிலாந்து, பாகிஸ்தான் மற்றும் இலங்கை ஆகிய நாடுகள் இரண்டாம் குழுவிலும் இடம்பெறும்.

சூப்பர் 8 சுற்றில் தங்கள் குழுவில் முதலிரு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும்.

அரையிறுதியைப் பொருத்தவரை, சூப்பர் 8 சுற்றில் ஒவ்வொரு குழுவிலும் முதலிடம் பிடித்த அணி, மற்றொரு குழுவில் இரண்டாம் இடம் பிடித்த அணியுடன் மோதும்.

லீக் மற்றும் சூப்பர் 8 ஆகிய இரு கட்டங்களிலும் ஒரு போட்டியில் வெற்றி பெறும் அணிக்கு இரண்டு புள்ளிகள் வழங்கப்படும். ஒரு போட்டி முழுமையாக நடக்காத பட்சத்தில், இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்படும். தோற்கும் அணிக்கு புள்ளிகள் கிடையாது.

டி20 உலகக் கோப்பையில் எந்தெந்த அணிகள் போட்டியிடுகின்றன?

டெஸ்ட் அந்தஸ்து பெற்ற அனைத்து 12 நாடுகளும் இந்த தொடரில் விளையாடுகின்றன. ஜிம்பாப்வே அணி தகுதிச்சுற்று மூலம் உள்ளே நுழைந்தது.

இத்தாலி இந்தத் தொடரில் முதன்முறையாக அறிமுகமாகிறது. அதேசமயம் கனடா 2014-க்குப் பிறகு தனது முதல் சர்வதேச தொடரில் பங்கேற்கிறது.

வங்கதேசத்திற்குப் பதிலாக ஸ்காட்லாந்து கடைசி நேரத்தில் சேர்க்கப்பட்டது. இந்தியா மற்றும் வங்கதேசம் இடையே அதிகரித்து வரும் பதற்றங்களுக்கு மத்தியில், பாதுகாப்பு காரணங்களால் தங்கள் போட்டிகளை இலங்கையில் நடத்த வேண்டும் என்ற வங்கதேசத்தின் கோரிக்கையை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) நிராகரித்ததால், வங்கதேசம் இந்தத் தொடரிலிருந்து விலகியது.

தகுதி பெறாத அணிகளில் மிக சிறந்த தரவரிசையில் இருந்த ஸ்காட்லாந்து, 'குழு சி' பிரிவில் வங்கதேசத்தின் இடத்தைப் பிடித்துள்ளது.

பாகிஸ்தானும் தொடரை முழுமையாகப் புறக்கணிக்கப் பரிசீலித்தது, ஆனால் பிப்ரவரி 15-ஆம் தேதி இந்தியாவுக்கு எதிரான போட்டியைத் தவிர, மற்ற போட்டிகளில் விளையாட அந்நாட்டு அரசு முடிவு செய்துள்ளது. இந்த முடிவின் தாக்கம் குறித்து ஐசிசி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.

டி20 உலகக்கோப்பையில் பங்கேற்கும் 20 அணிகள் பின்வரும் நான்கு குழுக்களாகப் பிரிக்கப்பட்டுள்ளன:

குழு A: இந்தியா, நமீபியா, நெதர்லாந்து, பாகிஸ்தான், அமெரிக்கா

குழு B: ஆஸ்திரேலியா, அயர்லாந்து, ஓமன், இலங்கை, ஜிம்பாப்வே

குழு C: இங்கிலாந்து, இத்தாலி, நேபாளம், ஸ்காட்லாந்து, வெஸ்ட் இண்டீஸ்

குழு D: ஆப்கானிஸ்தான், கனடா, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ்

2026 டி20 உலகக்கோப்பை எந்தெந்த மைதானங்களில் நடக்கிறது?

இந்தியா மற்றும் இலங்கையில் உள்ள எட்டு மைதானங்கள் போட்டிகளுக்காகப் பயன்படுத்தப்படுகின்றன.

இந்தியாவில் ஐந்தும், இலங்கையில் மூன்றும் இதில் அடங்கும்.

இந்தியாவில், கொல்கத்தாவில் உள்ள ஈடன் கார்டன்ஸ், மும்பையில் உள்ள வான்கடே மைதானம், சென்னையில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் மைதானம், ஆமதாபாத்தில் உள்ள நரேந்திர மோதி மைதானம் மற்றும் டெல்லியில் உள்ள அருண் ஜெட்லி மைதானம் ஆகியவை போட்டிகளை நடத்தும்.

இலங்கையில் கொழும்புவில் உள்ள ஆர்.பிரேமதாசா மைதானம் மற்றும் சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானம், மற்றும் பல்லேகல கிரிக்கெட் மைதானம் ஆகிய இடங்களில் போட்டிகள் நடைபெறவுள்ளன.

1,32,000 ரசிகர்கள் அமரக்கூடிய உலகிலேயே மிகப்பெரிய கிரிக்கெட் மைதானமான நரேந்திர மோதி மைதானத்தில் இறுதிப் போட்டியை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் மட்டும் அந்தப் போட்டி கொழும்புக்கு மாற்றப்படும்.

டி20 உலகக்கோப்பைக்கான விதிகள் என்ன?

  • இந்த போட்டி டி20 வடிவில் நடைபெறுகிறது.

  • இரு அணிகளும் தலா 20 ஓவர்கள் விளையாடும்.

  • ஆனால், ஒரு அணி முன்பே ஆல்-அவுட் ஆகிவிட்டால் அல்லது இரண்டாவது பேட்டிங் செய்யும் அணி இலக்கை முன்பே எட்டிவிட்டால், போட்டி 20 ஓவர்களுக்கு முன்பே முடிவடையும்.

  • ஒவ்வொரு இன்னிங்சும் ஆறு ஓவர் பவர்பிளேயுடன் தொடங்கும். அந்த நேரத்தில் ஃபீல்டிங் வியூகம் வகுக்க தனி கட்டுப்பாடுகள் உள்ளன.

  • போட்டிகள் மூன்று மணிநேரம் 10 நிமிடங்கள் நீடிக்கும். ஒவ்வொரு இன்னிங்சுக்கும் ஒரு மணிநேரம் 25 நிமிடங்கள் ஒதுக்கப்படும். 20 நிமிட இடைவேளை அளிக்கப்படும்.

  • லிமிடெட் ஓவர் கிரிக்கெட்டில் 'ஸ்டாப்-கிளாக்' முறை உள்ளது. இதன் பொருள் ஒரு ஓவர் முடிந்த 60 வினாடிகளுக்குள் பந்துவீசும் அணி அடுத்த ஓவரை வீசத் தயாராக இருக்க வேண்டும்.

  • 20 ஓவர்களுக்குப் பிறகு இரண்டு அணிகளும் எடுத்த ரன்கள் சமமாக இருந்தால், போட்டி சூப்பர் ஓவர் முறைக்குச் செல்லும் (ஒவ்வொரு அணியும் தலா 6 பந்துகளை எதிர்கொள்ளும் - அதிக ரன் எடுக்கும் அணி வெற்றி பெறும்).

  • அதுவும் டையில் முடிந்தால், ஒருவருக்கு வெற்றி கிடைக்கும் வரை சூப்பர் ஓவர் முறையில் ஆட்டம் தொடர்ந்து விளையாடப்படும்.

  • குழு போட்டிகளில், ஒவ்வொரு அணியும் குறைந்தது 5 ஓவர்கள் விளையாடியிருந்தால் மட்டுமே ஆட்டத்தில் முடிவு எட்டப்படும். ஆனால் அரையிறுதி மற்றும் இறுதிப் போட்டிகளில், அதுவே 10 ஓவராக இருக்கும்.

  • வானிலை காரணமாக அந்த கட்டத்திற்குப் பிறகு போட்டி நிறுத்தப்பட்டால், வெற்றியாளரைத் தீர்மானிக்க டிஎல்எஸ் (டக்வொர்த் லூயிஸ் ஸ்டெர்ன் முறை) முறை பயன்படுத்தப்படும்.

  • நாக்-அவுட் போட்டிகளுக்கான கூடுதல் நேரம் மற்றும் ரிசர்வ் டே தொடர்பான விதிகளை ஐசிசி இன்னும் வெளியிடவில்லை.

  • பாகிஸ்தான் அரையிறுதிக்கு முன்னேறினால், முதல் அரையிறுதி நடைபெறும் இடமாக கொல்கத்தாவிற்குப் பதிலாக கொழும்பு பிரேமதாசா மைதானம் மாற்றப்படும்.

  • ஒருவேளை பாகிஸ்தான் தகுதி பெற்றால் இறுதிப் போட்டியும் ஆமதாபாத் நகரில் இருந்து மாற்றப்படும்.

முந்தைய டி20 உலகக்கோப்பை சாம்பியன்கள் விவரம்

இதுவரை ஒன்பது டி20 ஆடவர் உலகக் கோப்பைகளில் ஆறு வெற்றியாளர்கள் உள்ளனர்.

அந்த பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது.

  • 2007 - இந்தியா

  • 2009 - பாகிஸ்தான்

  • 2010 - இங்கிலாந்து

  • 2012 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2014 - இலங்கை

  • 2016 - வெஸ்ட் இண்டீஸ்

  • 2021 - ஆஸ்திரேலியா

  • 2022 - இங்கிலாந்து

  • 2024 - இந்தியா

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cwygy9j4g8yo

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

1 month 1 week ago

மகளிர் பிரீமியர் லீக் கோப்பையை வென்றது ஆர்சிபி - ஜெமிமாவின் கனவைத் தகர்த்த ஸ்மிரிதி மந்தனா

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,மகளிர் பிரீமியர் லீக்கில் ஆர்சிபி அணிக்கு இது இரண்டாவது கோப்பை ஆகும்.

3 மணி நேரங்களுக்கு முன்னர்

2026 மகளிர் பிரீமியர் லீக்கின் (WPL) இறுதிப் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி டெல்லி கேபிடல்ஸ் அணியை வீழ்த்தி இரண்டாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

குஜராத் மாநிலம், வதோதராவில் நேற்று (பிப்ரவரி 5) நடைபெற்ற இறுதிப் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த டெல்லி கேபிடல்ஸ் அணி, 204 ரன்கள் எடுக்க வேண்டுமென்ற இலக்கை ஆர்சிபி அணிக்கு நிர்ணயித்திருந்தது.

ஆர்சிபி கேப்டன் ஸ்மிருதி மந்தனாவின் 87 ரன்களும், ஜார்ஜியா வோல்லின் 79 ரன்களும் அந்த அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற உதவியது. குறிப்பாக ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

இது மகளிர் பிரீமியர் லீக்கின் நான்காவது சீசன். டெல்லி கேபிடல்ஸ் அணி நான்கு முறையும் இறுதிப் போட்டிக்கு முன்னேறியது, ஆனால் சாம்பியன் பட்டத்தை வெல்லத் தவறிவிட்டது.

மும்பை இந்தியன்ஸ் மகளிர் பிரீமியர் லீக்கின் முதல் மற்றும் மூன்றாவது சீசன்களை வென்றது, அதே சமயம் ஆர்சிபி இரண்டாவது மற்றும் நான்காவது சீசன்களை வென்றுள்ளது. ஐபிஎல் கோப்பை உட்பட, கடந்த மூன்று ஆண்டுகளில் மூன்றாவது கோப்பையை ஆர்சிபி அணி வென்றுள்ளது.

டாஸ் வென்ற ஆர்சிபி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் 57 ரன்கள் எடுத்தார்

வதோதராவில் உள்ள பிசிஏ மைதானத்தில் நடைபெற்ற இந்த இறுதிப் போட்டியில், ஆர்சிபி டாஸ் வென்று முதலில் பந்து வீசத் தேர்வு செய்தது.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் லிசெல் லீ மற்றும் ஷாஃபாலி வெர்மா தொடக்க வீராங்கனைகளாக களமிறங்கினர். சிறப்பாக விளையாடிய இந்த ஜோடி முதல் விக்கெட்டுக்கு 49 ரன்களை சேர்த்தது. ஐந்தாவது ஓவரில் ஷாஃபாலி வெர்மா, அருந்ததி ரெட்டி பந்தில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

சிறப்பாக ஆடி வந்த லிசெல் லீ, 7வது ஓவரில் ஆட்டமிழந்தார். 3 சிக்ஸர்கள், 3 பவுண்டரிகளுடன் அவர் 30 பந்துகளில் 37 ரன்கள் குவித்தார்.

அதன் பின்னர், டெல்லி கேபிடல்ஸ் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ்- லாரா வால்வார்ட் ஜோடி அதிரடியாக ஆடி அணியின் ஸ்கோரை உயர்த்தியது.

37 பந்துகளில் 8 பவுண்டரிகளுடன் 57 ரன்கள் எடுத்த ஜெமிமா ரோட்ரிக்ஸ் 15வது ஓவரில் ஆட்டமிழந்தார். லாரா வால்வார்ட் 25 பந்துகளில் 44 ரன்கள் எடுத்து இறுதி ஓவரில் ஆட்டமிழந்தார். சினெல் ஹென்றி 15 பந்துகளில் 35 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார்.

டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 203 ரன்களை எடுத்தது. 204 ரன்கள் எடுத்தால் வெற்றி என்று களமிறங்கியது ஆர்சிபி.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர்.

ஆர்சிபியின் தொடக்க வீராங்கனைகளாக கிரேஸ் ஹாரிஸ் மற்றும் ஸ்மிருதி மந்தனா களமிறங்கினர். 2வது ஓவரில் 9 ரன்கள் மட்டுமே எடுத்து கிரேஸ் ஆட்டமிழக்க ஆர்சிபி அணிக்கு அதுவொரு அதிர்ச்சியான தொடக்கமாகவே இருந்தது.

அடுத்து ஜார்ஜியா வோல் களமிறங்கினர். இறுதிப்போட்டி என்பதை கவனத்தில் கொண்டு, ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் ஜோடி மிகச்சிறப்பாகவே விளையாடியது. 2வது ஓவரில் 9 ரன்களுக்கு 1 விக்கெட் என்ற நிலையில் இருந்த ஆர்சிபி அணி, 2வது விக்கெட்டை 16வது ஓவரில் தான் இழந்தது.

ஸ்மிருதி மந்தனா- ஜார்ஜியா வோல் 92 பந்துகளில் 165 ரன்கள் குவித்தனர். 54 பந்துகளில் 14 பவுண்டரிகளுடன் 79 ரன்கள் எடுத்த ஜார்ஜியா வோல், 16வது ஓவரில் மின்னு மணி பந்தில் ஆட்டமிழந்தார்.

41 பந்துகளில், 12 பவுண்டரிகள் 3 சிக்ஸர்களுடன் 87 ரன்கள் குவித்த ஸ்மிருதி மந்தனா, 18வது ஓவரில் சினெல் ஹென்றி வீசிய பந்தில் ஆட்டமிழந்தார்.

மகளிர் பிரீமியர் லீக் 2026, ஆர்சிபி, டெல்லி கேபிடல்ஸ்

பட மூலாதாரம்,Getty Images

படக்குறிப்பு,ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா

ஆர்சிபி அணி 19.4 ஓவர்களில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் எடுத்து வெற்றிபெற்றது. ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனாவுக்கு 'பிளேயர் ஆப் தி மேட்ச்' விருது வழங்கப்பட்டது.

மகளிர் பிரீமியர் லீக்கின் நான்கு சீசன்களிலும், டெல்லி கேபிடல்ஸ் அணி நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளது, இருப்பினும் அந்த அணி இதுவரை கோப்பையை வெல்லவில்லை.

டெல்லி கேபிடல்ஸ் அணியின் கேப்டன் ஜெமிமா ரோட்ரிக்ஸ் மற்றும் ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா ஆகியோர் நெருங்கிய தோழிகளாகக் கருதப்படுகிறார்கள், இருவரும் மும்பையைச் சேர்ந்தவர்கள்.

இருவரும் தங்கள் அணிக்காக மிகச் சிறப்பாக விளையாடினார்கள், ஆனால் தனது அணியை முதல் முறையாக சாம்பியனாக்க வேண்டுமென்ற ஜெமிமாவின் கனவை அவரது தோழி ஸ்மிருதி மந்தனா தகர்த்துவிட்டார்.

வெற்றிக்குப் பிறகு ஆர்சிபி அணியின் கேப்டன் ஸ்மிருதி மந்தனா, "இறுதிப் போட்டியில் 200 ரன்களுக்கு மேல் சேஸ் செய்கிறோம் எனும்போது, நிச்சயமாக ஒரு அழுத்தத்தை உணர்ந்தோம். பேட்டிங் செய்வதற்கு ஏற்ற பிட்ச் இது. எங்களது அணியினர் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினர். ஆர்சிபி ரசிகர்கள் தான் எங்களோடு எப்போதும் உடன் நிற்கிறார்கள், இதுபோல ஒரு ரசிகர் கூட்டத்தை பார்க்க முடியாது. இந்த வெற்றி அவர்களுக்கானது" என்று கூறினார்.

- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு

https://www.bbc.com/tamil/articles/cg7ylx0ymyxo

Checked
Tue, 03/17/2026 - 19:17
விளையாட்டுத் திடல் Latest Topics
Subscribe to விளையாட்டுத் திடல் feed