ஊர்ப்புதினம்

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு, கிழக்கு, மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்

3 months ago

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம் - அருட்தந்தை சத்திவேல்

12 Dec, 2025 | 05:15 PM

image

மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என சமூக நீதிக்கான செயற்பாட்டாளரும், அரசியல் கைதிகளை விடுதலை  செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளருமான  அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.

இவரால் கடந்த வெள்ளிக்கிழமை (05)  வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார். அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எல்லா கோயில் காணிகளிலும், எல்லா சிதம்பரத்து காணிகளிலும், எல்லா தர்ம காணிகளிலும் மலையக மக்களை குடியேற்றி அவர்களை காப்பாற்ற வேண்டும். அவர்கள் இங்கு வந்தால் விவசாயத்தில் செழிப்பாகும் என இயற்கை பேரிடருக்கு முகம் கொடுத்து நிர்க்கதிக்கு உள்ளாகியுள்ள மலையக மக்கள் விடயத்தில் அவசர உணர்வு பூர்வமான கருத்தினை வெளியிட்டு இருக்கிறார் சிவ பூமி அறக்கட்டளை தலைவர் கலாநிதி. ஆறு. திருமுகம் திருமுருகன். 

ஐயாவின் உணர்வு பூர்வமான உளவெளிபாட்டுக்கு மலையக சமூக ஆய்வு மையம் நன்றி கூறுகின்றது. இவ்வாறான உணர்வுபூர்வமான கருத்தினை தமிழ் முற்போக்கு கூட்டணி தலைவரும் வெளிப்படுத்தி இருந்தார். மலையக மக்களின் நிலையினை இன சுத்திகரிப்பு மற்றும் இன அழிப்பிற்கு உள்ளாகி வரும் மக்களின் நீண்டகால பாதுகாப்பு கருதி அரசியல் அறவியலில் நின்று கூட்டாக முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதே எமது கருத்து நிலைப்பாடு.

மலையக மக்களும் 1948க்கு பின்னர் திட்டமிட்ட இன அழிப்பிற்க்கும், இன சுத்திகரிப்பிற்கும் உள்ளாகி நாளாந்தம் சிதைவுகளையே சந்தித்தவரும் ஒரு தேசிய இனமாகும். தற்போதைய இக்கட்டான சூழ்நிலையில் தேசிய மக்கள் சக்தியின் தலைவரும், தற்போதைய ஜனாதிபதியுமான அனுரகுமார திசாநாயக்க  மலையகத்தில் வீடற்றிருக்கும் 1,50,000 பேருக்கு கொடுப்பதற்கு போதுமான காணி மலையகத்தில் இல்லை என்பதை மீண்டும் மீண்டும் கூறத் தொடங்கி இருக்கின்றார்.

இது அவர்களின் நீண்ட கால அரசியல் சித்தாந்தம். அதுவே சிங்கள பௌத்த கருத்தியலுமாகும். தற்போது அவர்கள் பேரிடர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி மலையக மக்களை சிதைக்க முயல்வதை இன அழிப்பிற்கும் இன படுகொலைக்குப் முகம் கொடுக்கும் சமூகமாக அதனை தடுத்து நிறுத்துவதற்கும் அவர்களின் எதிர்கால அரசியல் பாதுகாப்பினையும் கருதி கலந்துரையாடல்களை மேற்கொள்ளல் வேண்டும்.

மலையக மக்கள் நாட்டின் சனத்தொகையில் இரண்டாம் இடத்தில் இருந்த போது அவர்களின் அரசியல் எழுச்சிக்கு பயந்து 1948 ஆம் சமூகத்தின் வாக்குகளை பறித்ததோடு மட்டும் நின்று விடாது இந்தியாவின் அயல் நாடுகளுடன் அரசியல் உறவில் ஏற்பட்டிருந்த விரிசலை தனக்கு அதனை சாதகமாக்கி 1964 ல் பல லட்சம் மலையகத்தவர்களை நாட்டை விட்டே வெளியேற்றும் ஒப்பந்தத்தை (சிரிமா-சாஸ்திரி) சிறிமாவோ பண்டாரநாயக்கா மேற்கொண்டார். இது இரு நாடுகளும் இணைந்து நடாத்திய முதலாவது இனப்படுகொலை என்றே அடையாளப்படுத்தல்.

அதே சிறிமாவோ பண்டார நாயக்க தமது 1970- 77 ஆட்சி காலகட்டத்தில் தோட்டங்களை அரசுடைமையாக்குவதாக கூறி சிங்களமயமாக்கி பல தோட்டங்களில் சிங்கள குடியேற்றங்களை உருவாக்கி; உழைக்கும் தொழிலாளர் வர்க்கத்தை அவர்களின் வாழ்விடத்தில் இருந்து சிங்கள காடையர்களைக் கொண்டு அடித்து துரத்த இடமளித்த வரலாறும் உண்டு.

மேலும் நாட்டின் பொருளாதார சீர்திருத்த செயல் திட்டத்தினை முன்னெடுத்து மலையத்தவர்களை பட்டிணி சாவிற்குள் தள்ளி கொலை செய்ததையும் மறக்க முடியாது.இதனால் பல ஆயிரம் குடும்பங்கள் உயிர் பாதுகாப்பு தேடி சுயமாகவும், காந்திய வழிகாட்டலோடும் வடக்கு மற்றும் கிழக்கு சென்று குடியேறினர். இதனையே சிங்கள பௌத்தமும் விரும்பியது.

அடுத்து வந்த ஐக்கிய தேசிய கட்சி ஆட்சி காலத்தில் திறந்த பொருளாதாரம் மற்றும் அபிவிருத்தி எனும் பேரில் மலையகத்தவர் வாழுடங்கள் சூறையாடப்பட்டு அவ் அவ்விடங்களில் இருந்து மலையக மக்கள் வெளியேற்றப்பட்டனர். 

அவர்கள் காலத்தில் நடந்த திட்டமிட்ட இனவாத வன் செயலின் காரணமாக பாதிக்கப்பட்டோர் வடக்கு கிழக்கிற்கும், இந்தியாவிற்கும் சென்றனர். மலையகத்தை அபிவிருத்தி திட்டத்திற்குள் கொண்டுவராது, பெருந்தோட்டத் தொழிலுக்கு அப்பால் தொழில் வாய்ப்பினை உருவாக்காது, கல்வி, சுகாதாரத் துறைகளை மேம்படுத்தாது கைவிட்டதால் ஆயிரக்கணக்கானோர் மலையகத்தை விட்டு தற்காலிகமாகவும் நிரந்தரமாகவும் தினமும் வெளியேறிவருகின்றனர். இதிலே மௌன மகிழ்வு காண்பது சிங்கள பௌத்த பேரினவாதமே. 

அதுமட்டுமல்ல கடந்த காலங்களில் மலையக மக்களுக்கு காணி கொடுப்பதாக கூறிய எந்த பேரினவாத ஆட்சியாளர்களும் அதனை கொடுப்பதற்கு துணியவில்லை. அரசியலுக்காக வீடுகளைக் கட்டி சலுகை மாயைக்குள் அவர்களை தள்ளி தேர்தல் அரசியலையே முன்னெடுத்தனர். வீட்டுக்குரிய உரிமை முழுமையாக இதுவரை கொடுக்காது இருப்பதும் காணி உரிமை நிரந்தரமாக அவர்களுக்கு கிடைக்கக் கூடாது எனும் மனநிலையிலாகும்.

மலையக மக்கள் தமக்கே உரிய இன அடையாளங்களை பாதுகாப்பு தேசிய இனமாக வளர்ந்து நிற்கும் சூழ்நிலையில் அவர்கள் தங்களது கடும் உழைப்பாலும் உயிர்த்தியாகத்தாலும் உருவாக்கிய மலையகம் எனும் தேசத்தில் வாழ்வதே அவர்களுக்கான அரசியல் பாதுகாப்பாகும்.

தற்போது நிகழ்ந்திருக்கும் இயற்கை பேரிடர் இக்கட்டான சூழலை பயன்படுத்தி மலையக மக்களின் நில உரிமையை தட்டி பறிக்கும் செயல்பாட்டுக்கு நேரடியாகவோ மறைமுகமாகவோ எவரும் துணை போகக்கூடாது.

நாட்டில் வடகிழக்கு தமிழர்களும், மலையகத் தமிழர்களும் இந்துக்கள் அல்லது சைவர்கள் என்பதற்காக இதுவரை ஒடுக்கப்படவுமில்லை படுகொலை செய்யப்பட்டவுமில்லை. தமிழர்கள் என்பதற்காகவே நாம் தொடர்ந்து ஒடுக்கப்படுகின்றோம். அழிக்கப்படுகின்றோம்.நில பறிப்பிற்கு உள்ளாகின்றோம். இதற்கு எதிராக கூட்டு அரசியல் செயல்பாடு என்பது அவரவர் நிலத்தில் அவரவரது அடையாளங்களோடு அரசியல் கௌரவத்தோடு வாழ்வதற்கான சூழலை உருவாக்குவதாகும்.

இயற்கை அனர்த்தத்தை பயன்படுத்தி ஆட்சியாளர்கள் மலையக மக்களை வேறு இடங்களில் குடியமர்த்துக்கு எடுக்கும் முயற்சிக்கு எந்த வகையிலும் எவரும் இடமளிக்காத இருப்பதோடு அவர்களின் அரசியல் பாதுகாப்பு மிகு எதிர்காலம் கருதி மலையகத்துக்குள்ளேயே அவர்களின் வாழ்வியலை உறுதிபடுத்த வடக்கு கிழக்கு மலையகமாக ஒன்றுபடுவோம். மலையகமே மலையக மக்களின் தாயகம். அங்கு சலுகைகளோடு மட்டுமல்ல மண்ணுரிமையோடு வாழ்வதே அரசியல் கௌரவம் என்று தெரிவித்துள்ளார். 

https://www.virakesari.lk/article/233198

பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை

3 months ago

பேரிடரின் பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருக்க இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கத்தின் ஆலோசனை

Published By: Digital Desk 3

12 Dec, 2025 | 02:05 PM

image

மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், பேரிடர்களை வென்று முன்னேறலாம் என இலங்கை உளநல வைத்தியர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

பேரிடர்களுக்கு பின்னர் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதற்கு உதவும் விடயங்கள் மற்றும் தவிர்க்க வேண்டியவை பற்றி இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இதனைக் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை உள வைத்தியர்கள் சங்கம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

வரலாறு முழுவதும், பல்வேறு பேரிடர்களை எதிர் கொண்டு நாம் ஒரு வலிமையான தேசமாக உருவெடுத்துள்ளோம். கடந்த சில தசாப்தங்களாக நாம் சுனாமி, நீண்ட கால உள்நாட்டு யுத்தம், உயிர்த்த ஞாயிறு தாக்குதல், கொவிட் தொற்றுநோய், பொருளாதார நெருக்கடி போன்ற பல இயற்கை மற்றும் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட பேரிடர்களை எதிர் கொண்டுள்ளோம்.

ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் நாம் மீண்டெழுந்து ஒருவருக் கொருவர் ஆதரவளித்து, நமது தேசத்தை வலுவாக மீண்டும் கட்டியெழுப்பினோம். ஒருவருக்கொருவர் உதவுதல், தேவைப்படுபவர்களுக்கு செவி சாய்ப்பதன் மூலமும், இன்றைய நெருக்கடியையும் நமது வளர்ச்சிக்கான வாய்ப்பாக மாற்ற முனைவோம். பாதுகாப்பான வீடுகள் மற்றும் வீதிகளை மட்டுமல்ல, வலுவான, புரிந்துணர்வுடைய நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கான வாய்ப்பாக இதைப் பயன்படுத்துவோம்.

பேரிடர்களுக்கு பின்னர் நீங்கள் மன அழுத்தம், கவலை, கோபம், பயம், பதட் டம், குழப்பம் போன்ற உணர்வுகளை அனுபவிப்பது முற்றிலும் இயல்பானது. உங்கள் மனதை அமைதியாகவும் ஆரோக்கியமாகவும் வைத்திருப்பதன் மூலம், நீங்கள் பேரிடர் தாக்கங்களை வென்று முன்னேறலாம்.

உதவும் விடயங்கள்

1. உங்கள் பலங்கள் மற்றும் சிறிய, நிர்வகிக்கக்கூடிய விடயங்களில் கவனம் செலுத்துங்கள்:

சுத்தம் செய்தல், ஆவணங்களை ஒழுங்குபடுத்துதல், உறவினர்களின் சுகம் விசாரித்தல், அண்டை வீட்டாருடன் இணைதல் மற்றும் தன்னார்வத் தொண்டு செய்தல் ஆகியவை கட்டுப்பாட்டு உணர்வை அளிக்கும். இப்படியான சிறிய படிகள் மீட்சிக்கு வழிவகுக்கும்.

2. மற்றவருடன் தொடர்பில் இருங்கள்

பாதிக்கப்படக்கூடிய குழுக்களைக் கவனியுங்கள்: மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களை நாம் ஆதரிக்கும்போது, முழு தேசமும் வலு வடைகிறது. கர்ப்பிணித் தாய்மார்கள், சிறு குழந்தைகளைக் கொண்ட தாய்மார்கள், முதியவர்கள் (குறிப்பாக தனியாக வசிப்பவர்கள்), உதவி தேவைப்படக் கூடிய குறைபாடுகள் உள்ளவர்கள், கூடுதல் சவால்களை எதிர்கொள்ளக்கூடிய சமூக உதவி பயனாளிகள், நீண்டகால நோய் அல்லது மனநோய் நிலைமைகள் உள்ள அனைவரையும் கவனியுங்கள்

3. சிறுவர்களை ஆறுதல்படுத்துங்கள்

சிறுவர்களின் அன்றாட செயற்பாடுகளை முடிந்தவரை இயல்பாக வைத்திருப்பது முக்கியம். இன்றைய சூழ்நிலையை அவர்களுக்கு விளங்கக் கூடிய வகையில் எளிமையான அனைவரின் வார்த்தைகளில் பாதுகாப்பையும் விளக்குங்கள். பெரியவர்கள் உறுதி செய்வதில் கடினமாக உழைக்கிறார்கள் என்பதை அவர்களுக்கு நினைவூட்டுங்கள்.

4. ஆன்மீக மற்றும் கலாச்சார நடைமுறைகள் நன்மை பயக்கும்

பிரார்த்தனைகள், தியானம், கலாச்சார சடங்குகள் மற்றும் சமூகக் கூட்டங்கள் என்பன மனதிற்கு பாதுகாப்பு மற்றும் ஆறுதல் உணர்வை அளிக்கும்.

5. வழக்கமான மருந்துகளைத் தொடரவும்

நீங்கள் ஒரு நீண்ட காலநோய் ஒன்று க்கு சிகிச்சை எடுத்துக்கொண்டிருந்தால், அதற்கான தினசரி மருந்துகளை தொடர் ந்து தவறாமல் எடுத்துக் கொள்ளுங்கள். இதற்கு உங்கள் அருகிலுள்ள வைத்தியர் அல்லது வைத்தியசாலையின் உதவியை நாடுங்கள்.

தவிர்க்க வேண்டியவை

1. துயரமளிக்கும் செய்திகளைப் பார்ப்பது

அதிகமாக துயரமளிக்கும் செய்தி களைப் பார்ப்பது அல்லது கேட்பது பயத்தை அதிகரிக்கும். அதிகாரபூர்வமான அரசு மற்றும் சரிபார்க்கப்பட்ட செய்தி ஆதாரங்களை மட்டுமே நம்புங்கள்

2. தகவல்களைப் பகிரும்போது பொறுப்பாக இருங்கள்:

வதந்திகளைத் தவிர்க்க வும்: சரிபார்க்கப்படாத தகவல்கள், தனிப்பட்ட தரவு, அடையாளம் காணக்கூடிய தகவல்கள் மற்றும் துயரமளிக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்களைப் மற்றவருக்குப் பகிர்வதைத் தவிர்க்கவும்

3. மது மற்றும் போதைப்பொருட்களைத் தவிர்க்கவும்

பிரச்சினைகளைச் சமாளிக்க மது மற்றும் போதைப்பொருட்களை நாடுவதைத் தவிர்க்கவும். அவை பின்னர் பெரிய பிரச்சினைகளுக்கு வழிவகுக்கும். தேவைப்பட்டால் விரைவாக அதற்கான தொழில்முறை உதவியை நாடுங்கள். நீங்கள் ஏற்கனவே மது மற்றும் போதைப் பொருட்களுக்கு அடிமையாகி இருந்தால், அவற்றிலிருந்து விடுபட இதுவே சிறந்த நேரமாக இருக்கலாம்.

4. பேரிடர் சூழ்நிலையைப் தனிப்பட்ட நலத்துக்காக தவறாகப் பயன்படுத்திக் கொள்ளாதீர்கள்:

எந்தவொரு பேரனர்த்தத்திலும், மன அழுத்தம், தூக்கமின்மை, பதட்டம், அமைதியின்மை மற்றும் துன்பகரமான உணர்ச்சிகளை யார் வேண்டுமானாலும் அனுபவிக்கலாம். அத்தகைய நேரங்களில் உதவியை நாட தயங்காதீர்கள். ஒருவர் உதவியை நாடுவது என்பது பலவீனத்தின் அல்ல, மாறாக அவரிலுள்ள பலத்தின் அடையாளம். தேசிய மனநல உதவி எண் 1926 க்கு தொலைபேசியில் அழைப்பை மேற்கொள்வதன் மூலம் வாரத்தில் 7 நாட்களும் 24 மணி நேர இலவச ஆலோசனை மற்றும் ஆதரவைப் பெறலாம். அத்துடன் நாட்டில் உள்ள எந்தவொரு வைத்தியசாலை மூலமாகவும் உங்களுக்கான மனநல சேவைகளைப் பெறலாம்.

இந்த கடினமான நேரத்தில், பேரனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு தனிநபர்கள், குடும்பங்கள் மற்றும் சமூகங்களை ஆதரிப்பதில் இலங்கை உளவைத்தியர்கள் சங்கமாக, நாம் உறுதியாக இருக்கிறோம்.

“நாம் ஒன்றாக மீண்டெழுந்திடுவோம்!" வலிமையாகவும், உறுதியுடனும்

https://www.virakesari.lk/article/233174

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

3 months ago

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

Dec 12, 2025 - 12:50 PM

200 மில்லியன் டொலரை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி அனுமதி

இலங்கையின் மிகப்பெரிய பல்நோக்கு நீர் வள அபிவிருத்தித் திட்டமான மகாவலி அபிவிருத்தித் திட்டத்திற்கு ஆதரவளிப்பதற்காக, ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) 200 மில்லியன் டொலர் கடன் வசதியை அனுமதித்துள்ளது. 

இந்த அபிவிருத்தித் திட்டத்தின் ஊடாக மகாவலி ஆற்றின் மேலதிக நீரை இலங்கையின் வடக்கு மற்றும் வடமேல் மாகாணங்களின் வறண்ட பிரதேசங்களுக்குத் திருப்புவதே இதன் முதன்மை நோக்கமாகும். 

இந்த மகாவலி நீர் பாதுகாப்பு முதலீட்டுத் திட்டத்தின் இரண்டாம் கட்டத் திட்டம், விவசாயத்துறையின் தாங்குதிறனை வலுப்படுத்துதல் மற்றும் உணவுப் பாதுகாப்பை மேம்படுத்துவதன் மூலம் வடமத்திய மாகாணத்தில் உள்ள 35,600 க்கும் மேற்பட்ட விவசாயக் குடும்பங்களுக்கு நேரடிப் பயன்களைப் பெற்றுத்தரும் என ஆசிய அபிவிருத்தி வங்கி மேலும் குறிப்பிட்டுள்ளது. 

இத்திட்டத்திற்கான ஒருங்கிணைந்த இணை நிதியளிப்பு முயற்சிக்கு ஆசிய அபிவிருத்தி வங்கி தலைமை தாங்குகின்றது. 

இதன் மூலம் ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவிக்கு மேலதிகமாக, சர்வதேச அபிவிருத்திக்கான ஒபெக் (OPEC) நிதியத்திலிருந்து 60 மில்லியன் டொலர்களையும், விவசாய அபிவிருத்திக்கான சர்வதேச நிதியத்திலிருந்து (IFAD) 42 மில்லியன் டொலர்களையும் திரட்ட எதிர்பார்க்கப்படுகிறது.

https://adaderanatamil.lk/news/cmj2jf20a02nyo29nnz93ycm3

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர்

3 months ago

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை : துறை சார்ந்தோருடன் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன - அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலைய பணிப்பாளர் நாயகம்

12 Dec, 2025 | 03:46 PM

image

(எம்.மனோசித்ரா)

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. அதற்கமைய சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககள் எடுக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பணிப்பாளர் நாயகம் சம்பத் கொட்டுவேகொட தெரிவித்தார்.

கொழும்பிலுள்ள அரசாங்க தகவல் திணைக்களத்தில் வெள்ளிக்கிழமை (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டில் இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,

இந்தியா, பாக்கிஸ்தான், ஐக்கிய அரபு இராச்சியம், சீனா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளிலிருந்து விசேட குழுக்கள் நாட்டுக்கு வந்து மீட்பு பணிகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றனர். இவை தவிர மேலும் பல நாடுகளிடமிருந்து நிவாரண உதவிகளும் கிடைக்கப் பெறுகின்றன. இந்தியா, துருக்கி, பங்களாதேஷ், இஸ்ரேல், ஜப்பான், ரஷ்யா உள்ளிட்ட நாடுகளிடமிருந்து பாரிய நிவாரண உதவிகள் கிடைக்கப் பெற்றுள்ளன.

வடகீழ் பருவப் பெயர்ச்சி காலநிலை மேலும் வலுப்பெறுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ள நிலையில், அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையமானது சம்பந்தப்பட்ட சகல துறையினருடனும் கலந்துரையாடி முன்னாயத்த நடவடிக்கைககளை முன்னெடுத்துள்ளது. வடக்கு மாகாணத்தில் வழமைக்கு மாறாக அதிகூடிய மழைவீழ்ச்சி பதிவாகக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

அதேபோன்று வடமத்திய, கிழக்கு, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களில் வழமையை அண்மித்தளவில் மழை வீழ்ச்சி பதிவாகக் கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மேல் மற்றும் தென் மாகாணங்களில் வழமையை விடக் குறைவான மழை வீழ்ச்சி பதிவாகும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த எதிர்வு கூறல்களுக்கமைய சகல முன்னாயத்த நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

தித்வா புயலின் போது பதிவான அதிகூடிய மழைவீழ்ச்சி காரணமாக மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளது. நீர்த்தேக்கங்களிலும் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. எனவே சிறியளவிலான மழை வீழ்ச்சி கூட பாரிய தாக்கங்களை ஏற்படுத்தக் கூடும். எனவே மக்கள் இது குறித்து அவதானத்துடன் செயற்பட வேண்டும். மண் ஈரப்பதன் அதிகரித்துள்ளதால் சிறிய மழை வீழ்ச்சியின் போது கூட மண்சரிவுகள், கற்பாறைப் பிறழ்வுகள் ஏற்படலாம்.

எவ்வாறிருப்பினும் முப்படையினர் உள்ளிட்ட சிவில் பாதுகாப்பு துறையினர் தயார் நிலையிலேயே உள்ளனர். கடந்த 30 ஆண்டுகளாக வடகீழ் பருவ பெயர்ச்சியின் போது பதிவாகிய மழை வீழ்ச்சியின் அளவை அடிப்படையாகக் கொண்டே வளிமண்டலவியல் திணைக்களம் இந்த எதிர்வு கூறலை முன்வைத்துள்ளது. குறிப்பாக டிசம்பர் மற்றும் ஜனவரியில் காற்றழுத்த தாழ்வு பிரதேசம் காற்றழுத்த மையமாகவோ, சூறாவளியாகவோ வலுப்பெறக் கூடிய நிலைமை காணப்படுவதாகவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. அவ்வாறான நிலைமை ஏற்பட்ட தற்போதுள்ள காலநிலையில் மாற்றங்கள் ஏற்படும். அவை தொடர்பில் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தொடர்ந்தும் மக்களை தெளிவுபடுத்தும் என்றார். 

https://www.virakesari.lk/article/233189

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

3 months ago

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

Dec 12, 2025 - 04:53 PM

அனர்த்த நிவாரணம் கோருபவர்கள் மனசாட்சியுடன் நடந்து கொள்ளுங்கள்!

"இயற்கைப் பாதிப்பு எவருக்கும் ஏற்படலாம். எனினும், தவறான முறையில் பெறப்படும் நிவாரணம் எவருக்கும் பயனாக அமையாது. எனவே, நிவாரணம் கோருபவர்கள் தங்கள் மனசாட்சிக்கு அமையக் கோரிக்கைகளை முன்வைக்க வேண்டும். ஏனைய மாவட்டங்களுடன் ஒப்பிடும்போது மட்டக்களப்பில் பாதிப்பு குறைவு என்பதால், எங்களை விடவும் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மக்களுடன் ஒப்பிட்டுப் பார்த்து நாம் நன்றியுள்ளவர்களாக இருக்க வேண்டும்" என மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் ஜே.எஸ். அருள்ராஜ் தெரிவித்தார். 

மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் காரியாலயத்தில் இன்று (12) ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். 

அவர் மேலும் கூறுகையில்: 

"மட்டக்களப்பு மாவட்டத்தில் ஏற்பட்ட அனர்த்தத்தின் போது 12 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த 37 ஆயிரம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்தத்தினால் மாவட்டத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், எமது மாவட்டத்தைச் சேர்ந்த மேலும் இருவர் வவுனியா மாவட்டத்தில் உயிரிழந்துள்ளனர். அத்துடன், 11 வீடுகள் முழுமையாகவும், 1,946 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளன. 

அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வீடுகளைச் சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட 25 ஆயிரம் ரூபா கொடுப்பனவு, நேற்று மாலை வரை 6,238 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது. கடந்த கால அனர்த்தங்களின் போது இடம்பெயர்ந்து முகாம்களிலோ அல்லது உறவினர் வீடுகளிலோ தங்கியிருந்தவர்களுக்குக் கூடுதலாக நிவாரணம் வழங்கப்பட்டது. 

கிராம உத்தியோகத்தர்கள் அவர்கள் தொடர்பான விபரங்களை முதலில் சேகரித்து அனுப்பினர். தற்போது அரசாங்கம் அனைவருக்கும் நிவாரணம் வழங்க வேண்டும் என்ற அறிவுறுத்தலுக்கு அமைவாக விபரங்களைப் பரிசீலிக்க வேண்டியுள்ளது. அதேவேளை, பாதிக்கப்பட்ட உற்பத்தியாளர்கள், தொழில் முயற்சியாளர்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வருகின்றன. அதற்கான கொடுப்பனவுகளும் விரைவாக வழங்கப்படும். 

பாதிக்கப்பட்ட எவரும் விடுபடக்கூடாது என்பதில் நாம் உறுதியாக உள்ளோம். அதேசமயம், பாதிக்கப்படாதவர்கள் இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி நிவாரணங்களைப் பெற முயற்சிப்பதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும். 

அனர்த்த நேரத்தில் கிராம உத்தியோகத்தர்கள், இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் அரச உத்தியோகத்தர்கள் உங்களுக்கு உதவி செய்யக் காத்திருந்தனர். எனவே, உங்கள் கோரிக்கை நியாயமாக இருந்தால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும்" என்றார்.

-மட்டக்களப்பு நிருபர் சரவணன்-

https://adaderanatamil.lk/news/cmj2s3kdy02oco29nn86h2swi

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

3 months ago

Screenshot-2025-12-12-120141.jpg?resize=

இந்திய இழுவைப் படகுகளைத் தடுக்கக் கோரி யாழில் பாரிய போராட்டம்!

எல்லை தாண்டி வரும் இந்திய மீனவர்களின் சட்டவிரோத இழுவைப் படகுகளைத் தடுத்து நிறுத்துமாறு இலங்கை அரசாங்கத்தை வலியுறுத்தி யாழ் மாவட்ட கடற்றொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் உள்ள கடற்றொழில் மற்றும் நீரியல் வளத் திணைக்களம் முன்பாக இன்று காலை 9 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இதேவேளை, போராட்டம் காரணமாக பண்ணை சுற்றுவட்டப் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படடுள்ளது.

நீண்ட காலமாக இந்திய மீனவர்கள் இலங்கையின் வடக்குக் கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து இழுவைப் படகு மீன்பிடியில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதேவேளை, இதனைக் கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறு கோரி வடக்கு மீனவ அமைப்புகள் தொடர் போராட்டங்களை முன்னெடுத்த போதிலும், அரசாங்கம் இது தொடர்பில் இதுவரை எந்த நடவடிக்கையும் எதையும் மேற்கொள்ளவில்லை என மீனவர்கள் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இதனால் தமது கடல் வளங்கள் சூறையாடப்படுவதாகவும், தமது வாழ்வாதாரம் முடக்கப்படுவதாகவும் தெரிவிக்கும் மீனவர்கள், தமக்கு நிரந்தரத் தீர்வு வேண்டும் எனக் கோரியே நூற்றுக்கணக்கானோர் ஒன்றிணைந்து இன்று இந்தப் போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.

https://athavannews.com/2025/1456107

நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய ‘டித்வா’ புயலுடன் 1,241 மண் சரிவுகள்!; அவை தொடர்பான செய்மதிப் படங்கள் வெளியிடும் தகவல்கள்

3 months ago

நாட்டை பேரழிவுக்குள் தள்ளிய ‘டித்வா’ புயலுடன் 1,241 மண் சரிவுகள்!; அவை தொடர்பான செய்மதிப் படங்கள் வெளியிடும் தகவல்கள்

home.jpg

டித்வா புயலின் போதான சீரற்ற காலநிலை காலத்தில் நாட்டில் மலையக பகுதிகளில் 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளதாக செய்மதிப் படங்களின் ஊடாக தெரியவந்துள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.

அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இதனை கூறினார்.

இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கூறுவதன்படி டித்வா புயலை தொடர்ந்து நாட்டில் இடம்பெற்ற பேரழிவுகள் தொடர்பான செய்மதி படங்களுக்கமைய சிறிய மற்றும் பாரியளவிலான 1241 மண்சரிவுகள் இடம்பெற்றுள்ளன. கடந்த 10, 20 வருடங்களில்கூட மொத்தமாக இந்தளவுக்கு மண்சரிவுகள் கிடையாது. இந்த மண்சரிவுகளில் அதிகமானவை கண்டி மாவட்டத்திலேயே பதிவாகியுள்ளன. இந்தளவுக்கு பேரனர்த்தம் நடந்துள்ளது. சூறாவளியின் பயண பாதை மாறியதாலும், நாட்டுக்குள் பல மணித்தியாலங்கள் இருந்தமையினாலும் பேரனர்த்தங்கள் நடந்துள்ளன. கடந்த காலங்களில் நடந்த அனர்த்தங்களுடன் இதனை ஒப்பிட முடியாது. அந்தளவுக்கு பேரழிவுகளை ஏற்படுத்தியுள்ளது.

https://akkinikkunchu.com/?p=352151

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

3 months ago

லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம்!

11 Dec, 2025 | 05:20 PM

image

பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான பெறுகைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது.

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

முதுகெலும்பு சார்ந்த சத்திரசிகிச்சைகளில் முதுகெலும்பை உறுதியாகப் பேணுவதற்கும், தொடர்புபடுத்தலை விருத்தி செய்வதற்கும், முதுகெலும்பு சார்ந்த இயலாமைகள்/ விகாரமடைந்துள்ள நிலைமைகளுடன் செயலாற்றுவதற்கும், என்பு முறிவு மற்றும் ரியூமர் இற்கான சிகிச்சையளிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் பொலிஎக்யியல் எம்ஆர்ஐ இணக்க (டயிடேனியம்ஃகொபோல்ட் - குறோம்) லம்பர் பெடிகல் துருவிகள் 48 இனை விநியோகிப்பதற்கான விநியோகிப்பதற்கான சர்வதேச போட்டி விலைமுறிகள் கோரப்பட்டுள்ளதுடன், அதற்காக 03 விலைமனுக்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

உயர்மட்ட நிரந்தரப் பெறுகைக் குழுவின் விதந்துரைகளின் அடிப்படையில் கணிசமான பதிலளிப்புக்களை வழங்கிய ஒரோயொரு விலைமனுதாரரான இலங்கையின் யுvenierr Pharma (Pvt) Ltd. (Manufacturer : Miraclus Orthotech (Pvt) Ltd. India) இற்கு வழங்குவதற்காக சுகாதாரம் மற்றும் வெகுசன ஊடக அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://www.virakesari.lk/article/233105

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

3 months ago

மன்னார் மற்றும் முள்ளிக்குளம் பிரதேசங்களில் 50 மெகாவாற்று காற்றாலை மின்சார நிலையங்களை நிறுவ அமைச்சரவை அனுமதி

11 Dec, 2025 | 05:27 PM

image

மன்னார், முள்ளிக்குளம் பிரதேசத்தில் தலா 50 மெகாவாற்று காற்றாலை மின்சார உற்பத்தி நிலையங்கள் 2 நிறுவுவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. 

2025.12.10 அன்று இடம்பெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எட்டப்பட்ட அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாடு வியாழக்கிழமை ( 11 டிசம்பர் 2025) ஊடக அமைச்சில் இடம்பெற்றது.

இதன் போதே இந்த அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது.

2030 ஆண்டளவில் நாட்டுக்கான மின்சார வழங்கலின் 70மூ மீள்புதுப்பிக்கத்தக்க வலுசக்தி மூலங்களிலிருந்து பூர்த்தி செய்யும் குறிக்கோளை அடைவதற்கான அரசின் விரிவான திட்டத்துக்கமைய 20 ஆண்டு தொழிற்பாட்டு காலப்பகுதியில் நிர்மாணித்தல், உரித்தை கொண்டிருத்தல் மற்றும் அமுல்படுத்துதல் அடிப்படையில் 100 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்திப் பூங்கா (தலா 50 மெகாவாற்று கொண்ட 02 மின்னுற்பத்தி நிலையங்கள்) திட்டத்தை அமுல்படுத்துவதற்காக தனியார் துறையின் ஆர்வமுள்ள அபிவிருத்தியாளர்களிடமிருந்து முன்மொழிவுகளை கோருவதற்காக 2025-02-10 திகதி அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

அதற்கமைய, சர்வதேச போட்டி விலைமனுக் கோரல் முறைமையை பின்பற்றி மேற்குறித்த திட்டத்தை அமுல்படுத்துவதற்கான முன்மொழிவு கோரப்பட்டு, ஏழு பேர் (7) தமது திட்ட முன்மொழிவுகளைச் சமர்ப்பித்துள்ளார்கள்.

மேற்குறித்த முன்மொழிவுகளை மதிப்பீடு செய்த பின்னர், அமைச்சரவையால் நியமிக்கப்பட்ட பேச்சுவார்த்தை உடன்பாட்டு குழுவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள விதந்துரைகளின் அடிப்படையில் Consortium of Vidullanka PLC & David Pieris Motor Company (Lanka) Limited kw;Wk; Wind Force PLC  ஆகியவற்றுக்கு மேற்குறித்த இரண்டு (2) 50 மெகாவாற்று காற்றாலை மின்னுற்பத்தி வசதிகளை நிறுவுவதற்கான ஒப்பந்தத்தை வழங்குவதற்காக வலுசக்தி அமைச்சர் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியது.

https://www.virakesari.lk/article/233107

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

3 months ago

யாழில் நிலவும் சீரற்ற கால நிலை - சென்னை விமானம் தரையிறங்காது மீண்டும் திரும்பியது

11 Dec, 2025 | 09:24 PM

image

யாழ்ப்பாணத்தில் நிலவும் சீரற்ற காலநிலையில் , சென்னையில் இருந்து வந்த விமானம் யாழ்ப்பாணத்தில் தரையிறங்க முடியாது மீண்டும் சென்னைக்கு திரும்பியுள்ளது .

யாழ்ப்பாணத்தில் நேற்றைய தினம் புதன்கிழமை முதல் சீரற்ற கால நிலை நிலவி வருகிறது. இந்நிலையில் சென்னையில் இருந்து யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தை நோக்கி புறப்பட்ட விமானம் யாழ்ப்பாணத்தை அண்மித்த நிலையில் வானில் நிலவிய கடுமையான மோக மூட்டத்தால் , சென்னைக்கு மீள திரும்பியதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேவேளை, கொழும்பில் இருந்து வடமாகாணத்திற்கான நிவாரண பொதிகளை ஏற்றி வரும் அமெரிக்க விமானம் இன்றைய தினம் வியாழக்கிழமையும் யாழ்ப்பாணத்திற்கு வருகை தந்து நிவாரண பொருட்களை கையளித்து சென்றமை குறிப்பிடத்தக்கது. 

https://www.virakesari.lk/article/233116

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்!

3 months ago

உலகளாவிய ரீதியில் முதல் முறையாக டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகம்!

11 Dec, 2025 | 04:19 PM

image

( செ.சுபதர்ஷனி)

நாட்டில்  டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள  5 மாவட்டங்களை பிரதான கேந்திர நிலையமாகக் கொண்டு சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவால், டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இலங்கை செஞ்சிலுவைச் சங்கம், சர்வதேச செஞ்சிலுவை சங்கம், செம்பிறை சங்கங்கள் மற்றும் சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு ஆகியன இணைந்து  டெங்கு ஒழிப்புக்கான இலகுப்படுத்தப்பட்ட ஆரம்ப செயல்திட்டத்தை வியாழக்கிழமை (11) கொழும்பில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைத்தது. 

இந்தத் திட்டமானது, டெங்கு ஒழிப்பை மையமாகக் கொண்ட உலகளாவிய முதலாவது ஆரம்ப செயல்திட்டமாகும்.

அனர்த்தங்களுக்கு எதிர்வினையாற்றும் நிலையிலிருந்து உயிர்களைக் காக்கும் முன்கூட்டிய பொதுச் சுகாதார நடவடிக்கைக்கு சமூகத்தை பழக்கப்படுத்துவதை பிரதான நோக்கமாகக் கொண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. டெங்கு நோய் இலங்கையில் ஒரு குறிப்பிடத்தக்க பொதுச் சுகாதார சவாலாக உள்ளது.

நாட்டில் பருவகால மழை மற்றும் அண்மையில் பதிவான `தித்வா' சூறாவளி போன்ற வானிலை மாற்றங்களின் போது அதிகளவான மழைவீழ்ச்சி பதிவாவதை காணமுடிகிறது.

அவ்வாறன மழைக்காலங்களின் பின்னர் நுளம்புகள் பெருகி, பாரிய நோய் தொற்றாக பரவும் அபாயம் உள்ளது. ஆகையால் டெங்கு தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதற்கு முன்னரே உரிய நடைமுறைகளை பின்பற்றுவதன் மூலம், உயிர்களைப் பாதுகாப்பதுடன், சமூகத்தில் பாதிப்பைக் குறைத்து அதிக ஆபத்துள்ள பகுதிகளில் நோயைக் கட்டுப்படுத்த முடியும்.

தற்போது தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு மற்றும் சுகாதார அமைச்சின் கீழ் உருவாக்கப்பட்டுள்ள இந்த இரண்டு வருட புதிய திட்டம் 2025 ஜூலை முதல் 2027 ஜுன் மாதம் வரை செயற்படுத்தப்பட உள்ளது.

குறிப்பாக டெங்கு அபாயம் மிக்க பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ள கொழும்பு, கம்பஹா, களுத்துறை, யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய  ஐந்து மாவட்டங்களை பிரதானக் கேந்திர நிலையங்களாகக் கொண்டு  செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.

அப்பகுதியில் உள்ள வீடுகள் நிறுவனங்கள், பாடசாலைகள் என தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளில் செயற்பாட்டு ரீதியான தெளிவூட்டல் நடவடிக்கைகள் பரவலாக முன்னெடுக்கப்பட உள்ளன.

https://www.virakesari.lk/article/233091

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!

3 months ago

யாழில். 13 வயது சிறுமியை வீட்டு வேலைக்கு அழைத்து சென்று துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கியவருக்கு விளக்கமறியல்!

11 Dec, 2025 | 04:18 PM

image

வீட்டு வேலைகளுக்கு என 13 வயது சிறுமியை அழைத்து சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்த குடும்பஸ்தர் கைது செய்யப்பட்டு , நீதிமன்ற உத்தரவில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார். 

யாழ்ப்பாணம் சங்கானை பகுதியை சேர்ந்த நபர் ஒருவர் 13 வயது சிறுமியை தனது வீட்டு வேலைக்கு என சிறுமியின் பெற்றோரிடமிருந்து சிறுமியை நீண்ட காலமாக அழைத்து சென்று வந்துள்ளார்.

வீட்டுக்கு அழைத்து செல்லும் நபர் சிறுமியை துஸ்பிரயோகத்திற்கு உள்ளாக்கி வந்துள்ளார். 

இது தொடர்பில் மானிப்பாய் பொலிஸாருக்கு தகவல் கிடைக்கப்பெற்றதை அடுத்து , விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார் குறித்த நபரை கைது செய்து விசாரணைகளை முன்னெடுத்த பின்னர் மல்லாகம் நீதவான் நீதிமன்றில் முற்படுத்தியதை அடுத்து , அவரை 14 நாட்களுக்கு விளக்கமறியலில் வைக்குமாறு மன்று உத்தரவிட்டது. 

அதேவேளை பாதிக்கப்பட்ட சிறுமியை , வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தி, அறிக்கையை மன்றில் சமர்ப்பிக்குமாறு பொலிஸாருக்கு மன்று கட்டளையிட்டுள்ளது. 

https://www.virakesari.lk/article/233090

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

3 months ago

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

Dec 11, 2025 - 12:22 PM

இலங்கை வந்துள்ள அமெரிக்க உயர் மட்ட பிரதிநிதி

அரசியல் விவகாரங்களுக்கான இராஜாங்க துணைச் செயலாளரான அலிஸன் ஹூக்கர் இன்று (11) இலங்கை வந்துள்ளார். 

பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தல், பாதுகாப்பு ஒத்துழைப்பை பலப்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதார மற்றும் கடல்சார் இறையாண்மையை ஆதரித்தல் போன்றவற்றில் கவனம் செலுத்தும் பல்வேறு இருதரப்பு விடயங்கள் குறித்து கலந்துரையாடுவதற்காக துணைச் செயலாளர் ஹூக்கர் இலங்கையைச் சேர்ந்த பிரதிநிதிகளைச் சந்தித்து கலந்துரையாடவுள்ளார். 

பிராந்திய பாதுகாப்பு, பொருளாதார வளர்ச்சி மற்றும் எமது மக்களின் செழிப்பு ஆகியவற்றிற்கான பரஸ்பர உறுதிப்பாட்டில் வேரூன்றிய ஒரு வலுவான மற்றும் நீடித்த பங்காண்மையினை அமெரிக்காவும் இலங்கையும் பகிர்ந்துகொள்கின்றன. 

இராணுவ, வர்த்தக மற்றும் கடல்சார் பாதுகாப்பு ஆகிய விடயங்களில் நெருக்கமான ஒத்துழைப்பின் ஊடாக, சுதந்திரமான, திறந்த மற்றும் மீண்டெழும் தன்மை கொண்ட ஒரு இந்தோ-பசுபிக் பிராந்தியத்தினை மேம்படுத்துவதற்காக இலங்கையும், அமெரிக்காவும் இணைந்து பணியாற்றுகிறது. 

எமது மூலோபாய பங்காண்மையினை நாங்கள் தொடர்ந்து கட்டியெழுப்பும்போது, டித்வா புயலின் பேரழிவுகரமான தாக்கங்களுக்கான பதிலளிப்பு நடவடிக்கைகளை இலங்கை மக்கள் மேற்கொள்ளும் இவ்வேளையில் அமெரிக்கா அவர்களுடன் துணை நிற்கிறது. 

எமது இரு நாடுகளுக்கும் இருக்கின்ற உடனடி சவால்கள் மற்றும் நீண்டகால வாய்ப்புகள் ஆகிய இரண்டு விடயங்களையும் எதிர்கொள்வதற்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதற்கு நாங்கள் உறுதிபூண்டுள்ளோம். 

அமெரிக்க-இலங்கை பங்காண்மைக்கான எமது தொடர்ச்சியான உறுதிப்பாட்டினை இது பிரதிபலிப்பதாகவும் இலங்கைக்கான அமெரிக்க தூதரகம் அறிவித்துள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj12z9bu02mko29n8zljzo4i

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!

3 months ago

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கள வைத்திய சேவை!

11 Dec, 2025 | 03:55 PM

image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணுவத்தால் கண்டி - மஹியங்கனை பகுதியில் கள வைத்திய சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.

இந்திய இராணுவத்தின் கள வைத்திய சேவைகளை சுகாதார பிரதி அமைச்சர் முதிதா ஹன்சக விஜேமுனி மற்றும் சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சின் செயலாளர் அனில் ஜாசிங்க ஆகியோர் கண்டிக்கு நெரில் சென்று பார்வையிட்டுள்ளனர்.

வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்காக இந்திய இராணும் வழங்கும் சேவைகளுக்கு சுகாதார பிரதி அமைச்சரும் செயலாளரும் பாராட்டை தெரிவித்துள்ளனர். 

577060860_1156923859948034_5535537328047

596677947_1156923773281376_8868256245309

596800835_1156923793281374_8705610046611

https://www.virakesari.lk/article/233087

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்​கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம்

3 months ago

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம்

Dec 11, 2025 - 04:12 PM

நாட்டை மீள கட்டியெழுப்புவதற்கான ஜனாதிபதியின் யோசனைக்கு அங்கீகாரம்

சேதமடைந்த உட்கட்டமைப்பு வசதிகளை விரைவாககட்டியெழுப்புவதற்காக அவ்வாறான உட்கட்டமைப்பு வசதிகள் விடயப்பரப்பு தொடர்பான வெளிநாட்டுநிதியின் கீழ் தற்போது அமுல்படுத்தப்படும் அவசர பதில்வினையாற்றல் கூறுகளை இயங்கு நிலைக்கு கொண்டு வருவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி சமர்ப்பித்த இந்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

https://adaderanatamil.lk/news/cmj1b7iq702n1o29ny4ps7xtm

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

3 months ago

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

Dec 11, 2025 - 09:18 AM

நிவாரண உதவிக்காக அமெரிக்க விமானத்தில் தெரண வடக்கு நோக்கி

சீரற்ற காலநிலை காரணமாக வடக்கில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை தாங்கிய அமெரிக்க விமானப் படையின் C-130J சூப்பர் ஹேர்குலிஸ் விமானம் மூலம் 'அத தெரண' குழுவினர் வடக்கு நோக்கிப் புறப்பட்டனர். 

குறித்த விமான யாழ்ப்பாண சர்வதேச விமான நிலையத்தை இன்னும் சற்று நேரத்தில் சென்றடையவுள்ளது. 

மோசமான வானிலை காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட மனுசத் தெரண - டயலொக் நிவாரண நடவடிக்கை இன்றும் (11) 14வது நாளாகத் தொடர்கிறது. 

இந்நேரம் வரை நாட்டின் பல பகுதிகளை உள்ளடக்கி உதவிகள் விநியோகிக்கப்பட்டுள்ளன. 

அதன்படி, வட மாகாணத்தில் இதுவரை செல்வதற்கு கடினமாக இருந்த இடங்களுக்கு மனுசத் தெரண நிவாரணப் பொருட்களை எடுத்துக்கொண்டு இந்தச் சிறப்பு அமெரிக்க விமானம் புறப்பட்டுள்ளது. 

வெளிநாடுகளில் வசிக்கும் இலங்கையர்கள், தூதரகங்கள் மற்றும் காருண்யம் மிக்க மக்களால் மனுசத் தெரணவிற்கு வழங்கப்பட்ட நன்கொடைகள் இன்று வடக்கின் மக்களுக்கு விநியோகிக்கப்பட உள்ளன.

https://adaderanatamil.lk/news/cmj0werr402mdo29nmz9rm555

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

3 months ago

Udaya-Gammanpila-1.jpg?resize=750%2C375&

யாழிற்கு வழங்கப்பட்ட நிவாரண நிதிகளில் மோசடி – கண்டுபிடித்து விட்டதாக தெரிவிக்கும் – உதய கம்மன்பில !

வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை சுத்தம் செய்வதற்காக அரசாங்கத்தில் வழங்கப்படுகின்ற 25ஆயிரம் ரூபா கொடுப்பனவுகள் தொடர்பாக யாழ். மாவட்டத்தில் மோசடி இடம்பெற்றுள்ளதாகவும் எனவே அரசாங்கம் அதற்கு எதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும் என பிவித்துறு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

டித்வா சூறாவளி அனர்த்ததினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் தொடர்பாக யாழ் மாவட்ட செயலாளரினால் விடுக்கப்பட்ட அறிக்கையின் படி நெடுந்தீவில் 1216 வீடுகள் சேதமடைந்துள்ளதாகவும் அதனை புனரமைப்பதற்காக 304 லட்சம் ரூபா தேவைப்படுவதாகவும் குறிப்பிடப்பட்டிருந்தது.

ஆனால் 2025 மக்கள் கணக்கெடுப்பு தரவிகளின் பிரகாரம் நெடுந்தீவில் 893 வீடுகள் மாத்திரமே உள்ளன.

எனவே அந்த எண்ணிக்கை நவம்பர் மாதத்தில் 1216 ஆக அதிகரித்தது எவ்வாறு? என்ற பாரிய சந்தேக எழுகிறது.

அதேபோல் வேலனை பிரதேச செயலக பகுதியில் 4379 வீடுகள் உள்ளதாக மக்கள் தொகை கண புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன ஆனால் அங்கு அனர்த்தத்தில் 544 வீடுகளே சேதமடைந்துள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

ஊர்காவற்றுறையில் 3527 வீடுகளில் 668 வீடுக்ள மாத்திரமே சேதமடைந்துள்ளன.

நல்லூர் பிரதேச செயலக பிரிவில் 18ஆயிரத்து 617 வீடுகளில் 791 மாத்திரமே சேதமடைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏனைய பிரதேச செயலக பகுதிகளிலும் பகுதியளவில் அல்லது சிறியளவிலேயே வீடுகள் சேதமடைந்துள்ளன.

ஆனால் மக்கள் தொகை குறைவாக காணப்படும் நெடுந்தீவில் இவ்வாறு அதிகரித்தமைக்கு காரணம் என்ன?

இந்த விடயம் தொடர்பாக மாவட்ட செயலாளர் கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

மக்கள் நிதியை கொள்ளையிடும் சம்பவங்கள் தொடர்பாக சந்தேகம் எழுகிறது.

உண்மையிலேயே இந்ததரவு பிரதேச செயலாளரினால் வெளிப்படுத்தப்பட்டிருந்தால். மாவட்ட செயலாளர்கள் உள்ளிட்ட அதிகாரிகள் அது தொடர்பாக கவனம் செலுத்தியிருக்க வேண்டும்.

அவர்களுக்கு அந்த பொறுப்பு உள்ளது.

எனவே இது ஒரு மோசடி செயல் என தற்போது அம்பலமாகியுள்ளது.
இந்த ஊழுலை கண்டுபிடித்துள்ளோம்.

ஊழலுக்கு எதிரான அரசாங்கம் என ஆட்சிக்கு வந்தவர்களிடம் நாம் இதனை ஒப்படைக்கின்றோம்.

பொதுமக்கள் நிதியை கொள்ளையடிக்க தயாராகும் அரச அதிகாரிகள் தொடர்பாகவும் அவதானம் செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி உள்ளிட்ட அரசாங்கத்திடம் இது தொடர்பாக கோரிக்கை விடுக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

https://athavannews.com/2025/1455912

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

3 months ago

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

Mano ShangarDecember 11, 2025 10:54 am 0

வடக்கு கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைக்கின்றோம் – சுமந்திரன் அறிவிப்பு

“வடக்கு, கிழக்கில் குடியேற மலையக உறவுகளை பாசத்துடன் அழைப்பதாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பொதுச்செயலாளர் எம்.ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

தனது முகநூல் பதிவொன்றில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

“ கடந்த வாரம் கண்டி, கம்பளைக்கு உங்களோடு சென்ற போது மலையகத்தில் இருந்து வடக்கு கிழக்கிற்கு வந்து குடியேறுமாறு எமது தமிழ் உறவுகளை அழைப்பதற்குத் தயாராகவே வந்தோம்.

ஆனால் நீங்களும் அவர்களும் அதற்கான விருப்பத்தைத் தெரிவிக்கும் வரை பகிரங்கமாக அதைச் சொல்வதைத் தவிர்த்திருந்தோம்.

இப்போது அரசியல் தலைவர்கள் மட்டுமல்ல, மக்களும் அதை விரும்புவதாகச் சொல்கிறார்கள் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.

மிகுந்த பாசத்தோடு மனதார உங்களை வரவேற்கிறோம். ஏற்கனவே எம்மில் பலர் தங்கள் சொந்த நிலங்களைக் கொடுப்பதற்கு முன்வந்துள்ளார்கள்.

அதே போல் அரச காணிகளையும் வாழ்விடங்களுக்கும் பயிர்ச் செய்கை, தோட்டம் போன்றவற்றிற்கும் பெற்றுத் தர எம்மால் முடிந்த முயற்சிகளை செய்து கொடுப்போம்.” எனவும் சுமந்திரன் தனது முகநூல் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

முன்னதாக அரசு பாதுகாப்பான காணி தர மறுத்தால் வடக்கு, கிழக்கில் குடியேற மலையக மக்கள் விருப்பம் என நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தெரிவித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

https://oruvan.com/we-cordially-invite-the-hill-country-people-to-settle-in-the-north-and-east-sumanthirans-announcement/

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு

3 months ago

தீவகங்களுக்கு பாதுகாப்பான மீன்பிடித்துறைமுகங்கள் - இளங்குமரன் உறுதியளிப்பு

11 Dec, 2025 | 12:34 PM

image

குறிகட்டுவான் மற்றும் நயினாதீவு பகுதிகளில் உள்ள கடற்றொழிலாளர்களின் படகுகள் சேதமின்றி பாதுகாப்பாக நிறுத்தி வைக்கப்படுவதற்கான ஏற்பாடுகள் செய்து தரப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் க. இளங்குமரன் அப்பகுதி கடற்தொழிலாளர்களுக்கு உறுதி அளித்துள்ளார். 

குறிகாட்டுவான் மற்றும் நயினாதீவு கடற்தொழிலாளர்களை நேற்று புதன்கிழமை (10)  நாடாளுமன்ற உறுப்பினர் சந்தித்து கலந்துரையாடிய போதே , அவ்வாறு தெரிவித்தார். 

இந்த சந்திப்பில்அப்பகுதி கடற்தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் நடைமுறை சவால்கள், தேவையான அடிப்படை வசதிகள், பாதுகாப்பான துறைமுக நிலைமை ஆகியவை குறித்து விவாதிக்கப்பட்டதோடு, தகுந்த தீர்வுகளை விரைவாக பெற்று தருவேன் என நாடாளுமன்ற உறுப்பினர் உறுதி அளித்தார்

https://www.virakesari.lk/article/233057

யாரும் தனயாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர்

3 months ago

ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும் – அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நுவரெலியா விஜயத்தின் போது, பாதிக்கப்பட்ட மக்களிடம் தெரிவிப்பு

11 Dec, 2025 | 11:46 AM

image

அண்மையில் நுவரெலியா மாவட்டத்தில் ஏற்பட்ட கடும் மழை, வெள்ளம் மற்றும் மண்சரிவு காரணமாக பல குடும்பங்கள் தங்களது வீடுகளை விட்டு வெளியேறி பாதுகாப்பு மையங்களில் தங்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த கடுமையான அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை கடற்றொழில் மற்றும் நீரியல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நேரில் சென்று பார்வையிட்டார்.

அங்கு தற்காலிக தங்குமிடங்களில் தங்கவைக்கப்பட்டிருந்த குடும்பங்களையும் குழந்தைகளையும் நேரில் சந்தித்து, அவர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களையும் கவலைகளையும் கேட்டறிந்தார்.

பாதிக்கப்பட்ட குடும்பங்களுடன் நடந்த உரையாடல்களின் போது, அனர்த்தத்தின் தாக்கத்தையும், மக்களின் மனநிலையையும் மிகத் தீவிரமாக வெளிப்படுத்தின. பாதுகாப்பு மையத்தில் இருந்த ஒரு தாய், தன் குழந்தையை அணைத்தபடி பகிர்ந்த கவலையும், சிறுவர்கள் கண்களில் தெரிந்த பயமும், நிலைமையின் ஆழமான பாதிப்பை வெளிப்படுத்தின.

“நாங்கள் மீண்டும் எப்போது வீட்டிற்குத் திரும்ப முடியும்?” என்ற ஒரு எளிய, ஆனால் வலிமையான கேள்வி, அங்கிருந்த அனைவரின் மனதையும் நெகிழச் செய்ததாக அமைச்சர் தெரிவித்தார். அந்த ஒரு கேள்வியிலேயே மக்கள் எதிர்கொள்ளும் துயரமும் அச்சமும் ஒட்டுமொத்தமாக பிரதிபலித்தது.

அமைச்சர் சந்திரசேகர், மக்களின் இந்த வேதனையை உடனடி நடவடிக்கைகள் மூலம் குறைப்பது அரசாங்கத்தின் மிக முக்கியமான பொறுப்பாகும் என்று வலியுறுத்தினார். பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரண உதவிகள் தாமதம் இன்றி கிடைக்கச் செய்வதற்காக மாவட்டச் செயலாளர், கிராமஅதிகாரிகள் மற்றும் பிற சம்பந்தப்பட்ட துறைகளுடன் கூடி ஆலோசனைகள் நடத்தப்பட்டதாகவும், உணவு, மருந்து, உலர் உணவு, உடைகள் போன்ற அவசியமான பொருட்கள் அனைத்தும் கிடைப்பதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

அதே நேரத்தில், சேதமடைந்த வீடுகள், ஆபத்தான மலைச்சரிவுகள், தாழ்வான நிலப்பகுதிகள் போன்றவை பற்றிய தொழில்நுட்ப மதிப்பீடுகள் மேற்கொள்ளப்பட்டு, மக்கள் மீண்டும் தங்கள் வீடுகளுக்கு பாதுகாப்பாகத் திரும்பக்கூடிய நிலை ஏற்படுத்துவதற்கான மறுசீரமைப்பு திட்டங்கள் உருவாக்கப்பட்டு வருகின்றன. பாதிக்கப்பட்ட பகுதிகளில் உளவியல் ஆதரவு, குழந்தைகள் பாதுகாப்பு, மருத்துவ பராமரிப்பு ஆகியவை கூடுதல் கவனத்துடன் முன்னெடுக்கப்படுகின்றன.

“ஒரு குடும்பமும் தனியாக இந்த துயரத்தைக் கடக்க வேண்டியதில்லை; அவர்கள் மீண்டும் நம்பிக்கையுடன் வாழ்வைத் தொடங்கும் வரை அரசாங்கத்தின் ஆதரவு தொடர்ந்து வழங்கப்படும்,” என அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் உறுதியளித்தார்.

நுவரெலியாவில் ஏற்பட்ட இந்த இயற்கை அனர்த்தம் மக்களின் வாழ்க்கையை பெரிதும் பாதித்துள்ள நிலையிலும், அவர்கள் மீண்டும் நிம்மதியான வாழ்க்கைக்குத் திரும்புவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் அரசின் பொறுப்புடன் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.

IMG_5784.jpg

IMG_5778.jpg

IMG_5813.jpg

IMG_5759.jpg

IMG_5759__1_.jpg

IMG_5813.jpg

https://www.virakesari.lk/article/233045

Checked
Tue, 03/17/2026 - 22:21
ஊர்ப் புதினம் Latest Topics
Subscribe to ஊர்ப்புதினம் feed
texte-feed
sqdgvsqfqsg vdgvdgvv qdsbrzbvzrbvzr