
பட மூலாதாரம்,NASA
கட்டுரை தகவல்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஒன்பது மாதங்களைக் கழித்த அமெரிக்க விண்வெளி வீரர்கள் சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் பத்திரமாக பூமிக்குத் திரும்பியுள்ளனர். அவர்கள் இந்திய நேரப்படி செவ்வாய்கிழமை காலை 10.35 மணிக்கு சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்டு புதன்கிழமை அதிகாலை 3.30 மணிக்கு பூமி வந்தடைந்தனர்.
அமெரிக்காவின் தனியார் விண்வெளி நிறுவனமான ஸ்பேஸ்எக்ஸ்-இன் டிராகன் விண்கலத்தில் மொத்தம் 17 மணிநேரம் அவர்கள் பயணம் செய்துள்ளனர்.
ஆனால், ரஷ்யாவின் 'சோயுஸ்' விண்கலனால், அதே சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து விண்வெளி வீரர்களை ஏற்றிக் கொண்டு மூன்று மணிநேரத்தில் பூமிக்கு வந்தடைய முடியும்.
ஒரே இடத்திலிருந்து புறப்படும் இரண்டு விண்கலன்களுக்கு இடையே பயண நேரத்தில் ஏன் 14 மணி நேர வித்தியாசம் உள்ளது?
விண்கலன் பூமிக்குத் திரும்பும் நேரத்தை எவை தீர்மானிக்கின்றன?
விண்வெளிப் பயணங்கள் இயற்பியல் விதிகளை அடிப்படையாகக் கொண்டவை. விண்வெளியில் இருந்து பூமிக்குத் திரும்பும்போது, விண்கலன்கள் விண்வெளியில் இருந்து நேரடியாகக் கீழே இறங்கி விடுவதில்லை.
அவர்கள் மெதுவாக வர வேண்டும், பத்திரமாகத் தரையிறங்க வேண்டும். இதற்குத் தேவையான நேரம் என்பது விண்கலத்தின் வடிவம், தரையிறங்கப் பயன்படுத்தும் தொழில்நுட்பங்கள் ஆகியவற்றைப் பொருத்து அமையும்.
டிராகன் மற்றும் சோயுஸ் விண்கலன்கள் இருவேறு தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவதால் சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து வெளியேறுவது முதல் தரையிறங்குவதை வரை வெவ்வேறு கால அவகாசங்களை இரு விண்கலன்களும் கொண்டுள்ளன.
சோயுஸ் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?

பட மூலாதாரம்,NASA
ரஷ்யாவின் சோயுஸ் விண்கலம் 1960களில் வடிவமைக்கப்பட்டது. விண்வெளி வீரர்களை விரைவாக பூமிக்குக் கொண்டு வரும் சிறிய கடினமான விண்கலன் வடிவத்தைக் கொண்டது. இதில் அதிகபட்சமாக ஒரு நேரத்தில் மூன்று பேர் மட்டுமே பயணம் செய்யலாம்.
சர்வதேச விண்வெளி நிலையத்தில் இருந்து புறப்பட்ட பிறகு, அந்த விண்கலன் செங்குத்தான பாதையில் பூமியை நோக்கிப் பயணிக்கும். அதன் மூலம், மூன்றே மணிநேரத்தில் விண்வெளி வீரர்களை பூமியில் தரையிறக்கிவிடும்.
"கஜகஸ்தானில் உள்ள புல்வெளிப் பரப்பில் தரையிறங்குவது மிகவும் விரைவாக மூன்றரை மணிநேரத்துக்கு உள்ளாக நடைபெறும் நிகழ்வு," என்று ஐரோப்பிய விண்வெளி மையம் சோயுஸ் விண்கலன் குறித்துக் கூறுகிறது.
சோயுஸ் விண்கலனில் உள்ள மூன்று பகுதிகளில் இரண்டு பகுதிகள் பூமிக்குள் நுழையும்போது எரிந்துவிடும். ஒரு பகுதி மட்டுமே தரையிறங்கும். தரையிறங்குவதற்கு 15 நிமிடங்கள் முன்பாக நான்கு பாராசூட்கள் விரியும்.
முதலில் இரண்டு பாராசூட்கள் விரியும். பிறகு பெரிதாக உள்ள மூன்றாவது பாராசூட் விரியும். இதன் மூலம் விண்கலனின் வேகம் நொடிக்கு 230 மீட்டர் என்பதில் இருந்து நொடிக்கு 80 மீட்டர் என்று குறையும்.
கடைசியாக நான்காவது பாராசூட் விரியும். இது மூன்றாவது பாராசூட்டைவிட 40 மடங்கு பெரியது. விண்கலன் நேராகத் தரையிறங்கும் வகையில் அதன் சாய்வு சரி செய்யப்படும். மேலும் விண்கலனின் வேகம் நொடிக்கு 7.3 மீட்டராகக் குறைக்கப்படும்.
இருப்பினும், இதுவும் தரையிறங்கப் பாதுகாப்பற்ற அதிக வேகம்தான். அதைக் குறைப்பதற்காக, தரையிறங்குவதற்கு ஒரு நொடி முன்பாக, விண்கலனின் அடிப்பகுதியில் இரண்டு இயந்திரங்கள் எரியத் தொடங்கும். இவை விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும்.
சோயுஸ் விண்கலன் தரையிறங்கும்போது என்ன ஆகும்?

பட மூலாதாரம்,NASA
படக்குறிப்பு, சுனிதா வில்லியம்ஸ், புட்ச் வில்மோர் பூமிக்குத் திரும்பிய டிராகன் விண்கலன் கடலில் இறங்கிய காட்சி
சோயுஸ் தனது இயந்திரங்களை எரியூட்டி வேகத்தைக் குறைத்து, பூமியின் சுற்றுவட்டப் பாதையில் இருந்து விலகுகிறது. பிறகு பூமியின் வளிமண்டலத்துக்குள் செங்குத்தான கோணத்தில் நுழையும்.
செங்குத்தாக உள்ளே நுழையும்போது, காற்றின் எதிர்ப்புவிசை காரணமாக அதிவேகமாக வந்து கொண்டிருக்கும் விண்கலனின் வேகம் குறைக்கப்படும்.
இந்தச் செயல் அதிக வெப்பம் மற்றும் விசைகளை விண்கலத்தின் மீது உருவாக்கும். இந்த வெப்பத்திலிருந்து விண்வெளி வீரர்களைப் பாதுகாக்க வெப்பப் பாதுகாப்பான் உதவும். ஆனால் அந்தப் பாதுகாப்பான்கள் ஈர்ப்பு விசையைவிடப் பல மடங்கு வலுவான சக்தியை எதிர்கொள்ளும்.
வளிமண்டலம், விண்கலனின் வேகத்தைக் குறைத்த பிறகு, சோயுஸ் தனது பாராசூட்களை விரிக்கத் தொடங்கும். இது விண்கலனின் வேகத்தை மேலும் குறைக்கும். சோயுஸ் விண்கலனைப் பொறுத்தவரை, அதன் சாதகமான அம்சம் அதன் வேகம். விண்வெளி கதிர்வீச்சு மற்றும் குறைந்த ஈர்ப்பு விசையின் தாக்கத்தை விண்வெளி வீரர்கள் குறைவான நேரமே அனுபவிக்க வேண்டியிருக்கும். ஆனால், அதன் தரையிறக்கம் மிகக் கடுமையாக இருக்கும்.

பட மூலாதாரம்,EUROPEAN SPACE AGENCY
படக்குறிப்பு, சோயுஸ் விண்கலன் தரையிறங்கும் நிகழ்வு
டிராகன் விண்கலன் எந்தக் கோணத்தில் பூமிக்கு திரும்பும்?
ஏழு பேரை ஏற்றிச் செல்லும் வகையிலான டிராகன் விண்கலம் தரையிறங்குவதில் வேறு மாதிரியான அணுகுமுறையைக் கொண்டுள்ளது. பூமிக்குத் திரும்பும்போது வேகமான, செங்குத்தான பயணத்திற்குப் பதிலாக, மெதுவாக, படிப்படியான பயணத்தை அது மேற்கொள்கிறது.
பாதுகாப்பு மற்றும் வசதியை முன்னிலைப்படுத்தி, பூமிக்குத் திரும்பும் பயணம் வடிவமைக்கப்பட்டுள்ளது. டிராகன் விண்கலன் தனது சுற்றுவட்டப் பாதையைச் சரி செய்ய மட்டுமே பல மணிநேரம் எடுத்துக் கொள்ளும். டிராகன் விண்கலனில் உள்ள 16 டிராகோ த்ரஸ்டர்கள் எனும் இயந்திரங்கள் இதைச் செய்யும். இதனால் திட்டத்தைக் கட்டுப்படுத்துவோர் தரையிறங்குதலின்போது சீரான நிலைமைகள் இருப்பதை உறுதிசெய்ய உதவுகிறது.
சோயுஸ் விண்கலன் போலன்றி, டிராகன் விண்கலன் பூமியின் வளிமண்டலத்திற்குள் மீண்டும் நுழையும்போது சாய்வான கோணத்தில் இருக்கும். இதனால், வளிமண்டலத்தை எதிர்கொள்ளும்போது உருவாகும் வெப்பம் பரவலாகவும், நீண்ட நேரமும் கிடைக்கும். இதன் மூலம் விண்வெளி வீரர்கள் மீதான தாக்கம் குறைவாக இருக்கும். அதோடு, விண்கலன் தனது வேகத்தை மெதுவாகக் குறைத்துக் கொள்ளும்.
வளிமண்டலத்திற்குள் நுழைந்த பிறகு விண்கலனை நிலையாக வைத்துக் கொள்ள இரண்டு பெரிய பாராசூட்கள் உள்ளன. இது தவிர, தரையிறங்குவதற்கு முன்பாக விண்கலனின் வேகத்தைக் குறைக்க நான்கு பாராசூட்கள் உள்ளன.
தரையிறங்குதல் உத்தியில் உள்ள வேறுபாடுகள் என்ன?

பட மூலாதாரம்,NASA
சோயுஸ் விண்கலன் நிலபரப்பில் தரையிறங்கும், ஆனால் ட்ராகன் கடல் மீது தரையிறங்கும். சோயுஸ் வழக்கமாக ரஷ்ய எல்லைக்கு அருகில் உள்ள கஜகஸ்தான் நாட்டின் பரந்த புல்வெளிகளில் தரையிறங்கும்.
டிராகன், கடலின் நிலைமைகளைக் கணக்கில் எடுத்துக் கொண்டு, அமெரிக்காவின் ப்ளோரிடா மாகாணத்திற்கு அருகிலுள்ள கடல் பரப்பில் தரையிறங்கும்.
நிலத்தில் அல்லாமல் நீரில் தரையிறங்குவதற்கு அதிக ஏற்பாடுகள் தேவைப்படும். கடலில் இருந்து விண்கலனையும் விண்வெளி வீரர்களையும் மீட்பதற்கு நிறைய ஏற்பாடுகள் தேவை.
தண்ணீரில் விண்கலன் எங்கு தரையிறங்கும் என்று கணிக்கப்படுகிறதோ அதற்கு அருகில் படகுகளில் மீட்புக் குழுவினர் தயார் நிலையில் இருக்க வேண்டும்.
அவர்கள் விண்கலனுக்கு அருகில் வந்து, விண்கலன் மீது ஏதேனும் நச்சுக் கதிர்கள் இருக்கின்றனவா என்று சோதனை செய்ய வேண்டும். பிறகு விண்கலனை அருகிலுள்ள மீட்புத் தளத்திற்குக் கொண்டு சென்று, அங்கு வைத்து விண்வெளி வீரர்களை வெளியே கொண்டுவர வேண்டும். தரையிறங்கும் இடத்தின் மீது அதிக கட்டுப்பாட்டைக் கொண்டிருக்க முடியும் என்பதே இதன் சாதகமான அம்சம்.
- இது, பிபிசிக்காக கலெக்டிவ் நியூஸ்ரூம் வெளியீடு
https://www.bbc.com/tamil/articles/cedl4635d19o